Sunday, July 20, 2025
Home Blog Page 34

எட்டுத்தொகையில் அறம்

முன்னுரை

  பண்டைத் தமிழ் நாகரீகத்தினையும், சிறந்த சிந்தனையின் ஊற்றாகவும் விளங்குவது சங்க இலக்கியங்களே.  அத்தகைய  சங்க இலக்கியங்களை மூன்றாகப் பகுத்தனர் நம் முன்னோர்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,பதினெண்கீழ்கணக்கு.  இவற்றில் முன்னிரண்டும் சங்க காலத்தது, மற்றொன்று சங்கம் மருவிய காலத்தது.

                                    ‘கல் தோன்றி மண்தோன்றா காலத்தே

                                    முன் தோன்றியது நம் மூத்தத் தமிழ்குடி’

என்னும் கூற்றிலிருந்து நம் தமிழ் மொழியானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருத்தல் வேண்டும்.  பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் சாதி மத பேதமின்றி வாழ்ந்தனர் என்பதற்கு அடையாளம், அவர்கள் அகம் புறம் என்று பிரித்துக் கொண்டு ஆங்காங்கே குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.  அதன் பின் தாங்கள் வாழ்ந்து வந்த இடங்களை ஐந்திணைகளாகப் பகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.  திணை என்றால் எழுக்கம் என்பது பொருள்.  அதற்கேற்ப சங்கத் தமிழர்கள் புறவொழுக்கத்தோடு அக வொழுக்கத்தையும் கடைபிடித்து ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு மாறாமல் வாழ்ந்து வந்தனர்.  அத்தகைய அறவொழுக்கத்தினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

நற்றிணையில் அறம்:

            தலைவி தலைவனிடத்து குறையே கண்டாலும், அக்குறையை வெளிப்படையாகக் கூறாமல் நயமாக தோழியிடம் கூறுகிறாள்.

                                    “பகல் எரி சுடரின் மேனி சாயவும்,

                                     பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்

                                     எனக்கு நீ உரையாயாயினை: நினக்கு யான்

                                     உயிர் பகுத்தனன் மாண்பினன் ஆகலின்”1

குறிஞ்சித் திணையில் தோழிக்கு தலைவி அறத்தோடு நிற்றல்; என்னும் துறையில் அமைந்துள்ளது இப்பாடல்.  பாங்கியற் கூட்டத்தில் தலைமகளின் குறையைத் தீர்ப்பதற்கு தோழி முற்படுகின்றாள்.  ஆதனால் அவள் தலைவியிடம் ‘நின் மேனி வாடிற்று: நெற்றி ஒளி குன்றிற்று ஆனால் அவற்றின் காரணத்தை நீ உரைக்கவில்லை.  ஆயினும் நான் அறிவேன் என்கிறாள்.  ஆதற்குத் தலைவி அதற்காக நீ வருத்தப்படாதே தினைப்புனத்தில் தலைவன் என் முதுகை அணைத்தான் அதனால் அவ்வாறு இருக்கிறேன் என்று தோழியிடம் நயமாகக் கூறி தன் ஒழுக்கம் குன்றாதவாறு அறத்தோடு றிற்கின்றாள். 

தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்றாலும் தலைவியின் மேல் கொண்ட காதலால் தலைவியிடம் சேர நினைக்கின்றான்.  அப்பொழுது தலைவி ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று பயந்து விருந்தினனை வீட்டிற்கு அழைத்து வருகின்றான். 

“தடமருப்பு எருமை மடநடைக் குழவி

                                     தூண் தொறும்  யாத்த கான் தகு நல் இல்,

                                     கொடுங்குழைப் பெய்த செழுஞசெய் பேழை

                                     சிறுதாழ் குழை பெய்த மெல் விரல் சேப்ப”2

தன் கைகள் சிவக்க தலைவி அட்டில் சமைக்கிறாள்.  தலைவன் விருந்தொடு வருகின்றான்.  தலைவன் மீது இருக்கும் கோபத்தை விருந்தினர் முன் காட்டக் கூடாது என்பதற்காக தலைவி தன் அழகிய முல்லை போன்ற எயிறு காட்டி சிரிக்கின்றாள்.  தன் குடும்பத்தில் நடப்பது பிறருக்கு தெரியக் கூடாது என்பதற்காக தலைவி அவ்வாறு நடந்து கொள்கின்றாள்.

குறுந்தொகையில் அறம்

            குறுகிய அடிகளை உடையதாயினும் வாழ்க்கைக்குத் தேவையான செறிந்தக் கருத்துக்களை தருவதனால் சங்க இலக்கியத்தில் குநற்தொகையை ‘நல்ல குறுந்தொகை’ என்று கூறினர் சங்கத் தமிழர்.  குறிஞ்சி நிலத்தில் வாழும் குரங்குகள் கூட பிரிவினைத் தாங்காது அப்படிப்பட்ட இரவுப் பொழுதில் தலைவன் தலைவியை சந்திக்க நினைப்பது தவறு என தோழித் தலைவிக்கு மறுப்பு தெரிவிப்பதிலிருந்து அவர்களின்  ஒழுக்கம் இங்கு புலப்படுகிறது.

                                    “கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,

                                     கைம்மை உய்யாக் காமர் மந்தி 

                                     கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,

                                     ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து – உயிர் செகுக்கும்

                                     சாரல் நாட!  நடுநாள்

                                     வாரல்: வழியோ! வருந்தும் யாமே!”3

இருளில் தாவுதலையுடைய ஆண் குரங்கு, சாவினை அடைந்ததாக,கணவன் இல்லாமல் வருந்தும் கைம்மை வாழ்வினை பொறாது, தன் கணவனால் விரும்பப்பட்ட பெண் குரங்கு, தன் தொழிலை இனிக் கற்க வேண்டாத தன்னுடையக் குட்டிகளை சுற்றத்தாரிடம் அடைக்கலப்படுத்தி, உயர்நத மலைப்பக்கத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும்.  வுpலங்குகள் கூட அறத்தொடு நிற்கும் நாட்டுக்குத் தலைவனே இரவுக்குறியில் தலைவியை சந்திப்பது தவறல்லவா? ஏன்று  தலைவனிடம் மறுத்துக் கூறுகிறாள்.

            தன் தாய் வீட்டில் பாலும் சோறும் உண்டத் தலைவி, தன் கணவன் வீட்டில் நடந்து கொள்ளும் விதம் நம் தமிழர் பண்பாட்டின் உயர்வினை விளக்கிக்அ காட்டுகிறது. 

                                    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,

                                     கழுவுறு கலிங்கம்  கழாஅது உடீஇ

                                     குவளை உண்கண் குய்ப்புகைக் கழுமத்

                                     தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

  இனிது’ எனக் கணவன் உண்டலின்

                                     நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒன்னுதல் முகனே”4

தலைவி இல்லறம் நிகழ்த்தும் சிறப்பினை நேரில் கண்டறிந்து வந்த செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியின் அடிசில் ஆக்கும் திறமும் தலைவனின் அன்போடு இயைந்த பாராட்டு மொழிகளும் அப்புகழ் மொழிகளால் தலைவி செருக்கு கொள்ளாது அகத்தே மகிழும் அரிய பண்பு செவிலியால் கண்டறியப்பட்டது தெற்றென விளங்கும்.

ஐங்குநூற்றில் அறம்:

            தலைவன் தலைவியை மணந்து கொள்வேன் என்று உறுதி கூறி தலைவன் பொருள் தேட செல்வதும், தோழி தாயிடம் வந்து அறத்தொடு நிற்றலும் ‘அஞ்சாதே’ தலைவன் திரும்புவான் இது உறுதி என தோழி தாயிடம் உரைக்கின்றாள்

                                    “அன்னை, வாழி! வேண்டு அன்னை!புன்னையொடு

                                     ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன்

                                     இவட்கு அமைந்ததனால் தானே;

                                     துனக்கு அமைந்தன்று, இவன் மாமைக் கவினே”5

தலைவியின் கற்புக்கு எவ்வித பங்கமும் நேரவில்லை.  தலைவன் தலைவியை கைவிடான் இனி தலைவனுக்கே உரியது என எடுத்துக் கூறுகிறாள்.

            வினையின் காரணமாக நீங்கிச் செல்லும் தலைவன் தான் வருவதாக கூறிச் சென்ற கார்ப்பருவம் வருவதற்கு முன்னதாக வந்தமையை,

                                    “ஆர் குரல் எழிலி அழி துளி சிதறிக்

                                     கார் தொடங்கின்றால், காமர் புறவே;

                                     வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்

                                     தாழ் இருங்கூந்தல்! வம்மதி விரைந்தே”6

கார் பருவத்தில் சொல்லச் சென்றான் தலைவன்.  ஆனால் அதன் வரவுக்கு முன்னரே வந்தான்.  தன் காதலியோடு புறவிற்குச் சென்றான்; அப்பொழுது கார்பருவம் வந்தது; அது கண்டு மகிழ்ந்து, தான் முன்னரே வந்தமைத் தோன்றக் காதலியிடம் இவ்வாறு கூறினான்.  தலைவன் சொன்ன சொல் தவறாமல் நடந்து கொண்ட முறை இப்பாடலின் வழி அறியப்படுகிறது.

அகம் கூறும் அறம்

            பொருள்  தேடச் சென்றத் தலைமகன் இடையில் தலைவி நினைவு வர தன் நெஞ்சை ஆற்றுப்படுத்துகிறான் .

                                    “அகல்வாய் வானம் மால் இருள் பரப்ப,

                                     பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு

                                     சினவல் போகி புன்கண் மாலை,

                                     அந்த நடுகல் ஆள் என உதைத்த

                                     கான யானை கதுவாய் வள் உகிர்”7

காட்டு யானையானது பாலை வழியில் உள்ள நடுகல்லை ஆள் என நினைத்த உதைத்தமையால் வளவிய பெருநகம் சிதைவுற்று பனை நுங்கின் தோடு போல முறிந்து வீழும்; அருளிலாக் கொடுமையுடைய ஆரலைக் கள்வர் கொள்ளைக் கொள்வதற்குப் பதுங்கிக் கிடக்கும் இடத்தே காட்டின் கொடுமையால் வருவார் போவார் இன்மையால் தம் வறுமையை நீக்குவாரைக் காணமாட்டாத இடமான கொடிய சுரவழி அம்மாலைக் காலத்தே நின்று தலைவியை நினைத்துத் தலைவன் வருந்துகின்றான்.

            குடும்ப வாழ்க்கையில் மட்டுமன்றி, அரசியலிலும் மக்களைப் பேணிக்காப்பதிலும் தமிழர்க்கு நிகர் தமிழர்தான் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.  அதில் புறநானூறு பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம் இதனுள் தமிழகத்தின கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திய புரவலர்கள் புலவர்களை போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும், மன்னர் தம் மானப் பண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த் திணவுற்று அறமுறைப் பிறழாது போர் புரிந்து, மார்பில் வேலேற்ற மைந்துடை காளையரின் வீரப் பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்கள் பிறவும் புறநானூற்றில் மிக அழகுற எடுத்துரைக்ப் பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் போருக்குச் செல்லும் அரசர்களு; அறத்தோடு நடந்துகொள்ளும் முறைமை இங்கு குறிப்பிடத் தக்கது.

                                    “ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்

                                     பெண்டிரும் பிணியுடையீரும், பேணி, பேணித்

                                     தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

                                     பொன் பொல் புதல்வர் பெறாஅதீரும்,

                                     எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சோமின் என”8

இப்பாடலில் ‘அறத்தின் நெறியின்படி பெருவழுதியின் இயல்பினை கூறுகிறார்.

முடிவுரை

            இவ்வாறாக சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் மக்களின் வாழ்க்கையை தெற்றென விளக்கும் கருத்துக் கவூலங்களாக விளங்குகின்றன.  ‘ஓரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் எட்டுத்தொகையில் அகம் புறம் இவை இரண்டிலும் திணை பிரித்து அதற்கேற்ப மக்கள் வாழ்ந்தனர்.  அகத்திணை அன்பின் ஐந்திணையில் மனையியல் வாழ்க்கைப் பற்றியும், புறத்திணையை பன்னிரெண்டாகப் பிரித்து அரசியல் வாழ்க்கையையும் விளக்கி மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்னும் அறச்சிந்தனைணைத் தூண்டுவதாக அமைந்தள்ளது போற்றுதற்குரியது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி

           உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை

           செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

            ஓசூர் – 635 126

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

‘மொழி நம் விழி’ என்று பேராசிரியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அதுபோல நம் கண்ணின் கருமணியை இமை எவ்வாறு மென்மையாகப் பாதுகாக்கின்றதோ அவ்வாறு நாமும் நம் மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். காரணம், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் தமிழுக்கும் உயரிய மேன்மைகளும் பெருமைகளும் உண்டு. அதனை எடுத்துரைக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளோம். மொழியுணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உதிரத்தில் ஊறியிருக்க வேண்டியவை. மொழியை இகழ்ந்தால் அவனுடைய இனத்தை இகழ்ந்ததற்குச் சமமாகும். ஆகவே, மொழி வாயிலாக மனித இனத்தின் மாண்புகளை அடையாளம் காணலாம். இதன் அடிப்படையில் ‘தொன் மொழியாம் தமிழ் மொழியின்’ சிறப்புகளை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

இந்திய மொழிகள்

                இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்களைச் சார்ந்த 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும், இந்தியாவில் மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன எனவும் இந்தியாவை மொழிகளின் ‘அருங்காட்சியகம்;’ எனவும் பேராசிரியர் அ. அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். மொழியியலாளர்கள் இந்தியாவில் வழங்கும் மொழிகளை நால்வகை மொழிக்குடும்பங்களுள் அடக்குவர். அதனை,

1. இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்

2.திராவிட மொழிக் குடும்பம்

            3.ஆஸ்திரோ ஆசிய மொழிக்குடும்பம்

             4.சீனோ – திபெத்திய மொழிக்குடும்பம்

இவ்வகையினுள் இந்தோ – ஆரிய மொழிகளே இந்தியாவில் வழங்கி வருவதைக் காண்கிறோம். சமஸ்கிருதம், இந்தி, உருது, வங்காளம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, மைதிலி, இராஜஸ்தானி, அஸ்ஸாமி, காஷ்மிரி முதலிய மொழிகள் இவ்வகையினவாகும். ஆஸ்திரோ – ஆசிய மொழிக்குடும்பத்தின் கிளையாகிய முண்டா மொழிகள்  இந்தியாவில் வழங்குகின்றன. சந்தாலி, முண்டாளி, ஹோ, கொற்கு போன்ற மொழிகளும் இவ்வகையே சாரும். இவைபோன்று இந்தியாவில் வழங்குகின்ற திராவிட மொழிகள் துளு, படகா, கன்னடம், இருளா, கொடகு, கோடா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி பெங்கோ, முண்டா, கொலாமி, நாயக்கி, பர்ஜி, கடபா, ஒல்லாரி, சில்லூர்,குருக், மால்டோ, பிராகுயி போன்றவையாகும். மேலும், நேபாளி மணிப்புரி முதலிய மொழிகள் இந்தியாவில் வழங்குகின்றன. இவை சீனோ – திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளாகும், ஆனால், தமிழ் மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவையாக அமைந்திருப்பது சிறப்புக்குரியவொன்றாகும். இம்மொழிக்குரிய சிறப்பியல்புகளை இனிவரும் பகுதிகளில் காணலாம்.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

                தொன்மைச் சிறப்பாலும் இலக்கிய வகைமைச் சிறப்பாலும் தனித்தன்மையாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் தனித்து நிற்கும் ஒரே மொழி தமிழ்மொழி, இம்மொழி உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளிலேயே ‘பன்னாட்டு மொழி’ என்ற தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மொழிதான் என்பதை அனைவரும் அறிந்தவொன்றே. மேலும், அதுமட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக நடைமுறையில் இருந்து வருகின்றது. உலக மொழிகளில் எழுந்த முதல் மொழி மற்றும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் திகழ்வதையும் இங்கு அறியத்தக்கதாகும். தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் இலத்தின் கிரேக்கம், முதலியன போலத் தமிழ்மொழியும் உயர்தனிச் செம்மொழி என்பதனை நிறுவியுள்ளார். மேலும், இவரைப் போல் “எடுக்க எடுக்க குறையாதது கொடுக்க கொடுக்க மாளாதது நம் தமிழ் மொழியின் வளம் – வல்லமை தமிழ் இனியது அழகியல் ஆற்றல் மிக்கது, சொற்செறிவும் பொருட் செறிவும் நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது அது தொன்மையானது தூயது” என்று 1967-இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் உண்மையை இன்றும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

                அண்ணா எடுத்துரைப்பதற்கு முன்பே 15.03.1951-ஆம் நாளன்று சாகித்திய அகாதெமியின் தொடக்க மாநாட்டில் மத்தியில் மத்திய அரசின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த திரு. மௌலானா அபுல்கலாம் ஆசாத் உரையாற்றும் போது ‘தமிழ் வளமான, தொன்மையான இலக்கிங்களைப் பெற்றுள்ளது. தமிழ் உண்மையாகவே ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம். மேலும், தொல்காப்பியத்தில் தமிழ் என்னும் சொல்லாட்சி ‘தமிழென் கிளவியும் அதனோரற்றே’ (எழுத்து-386) என்னும் நூற்பாவில் இடம்பெற்றுள்ளதை உணரலாம்.

தமிழ் என்ற சொல்லில் ‘த’- வல்லினமும் மி – மெல்லினமும் ழ் – இடையினமும் ஆகிய மூவின எழுத்துச் சேர்க்கை தமிழ் ஆயிற்று என்பர். மேலும், உலகில் தோன்றிய மொழி தமிழ், மாந்தன் பேசிய முதல் மொழி தமிழ், தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் உலக மொழிகட்கு வேராகவும் இருப்பது, ‘முதல் மொழியாகவும், மொழிக்குடும்பத்திற்கும் உலகக் கிளை மொழிகளுக்குத் தாயாகவும் அமைந்த மொழி தமிழாகும். உலக மொழிகள் ஐயாயிரத்துள்ளும் வேர்ச்சொல் காண்பதற்கு எளிதாகவும், மிகுதியாகவும் இடம் தரும் மொழியும் தமிழே. அஃது இயன் மொழி ஆதலால் பெரும்பான்மை சொற்களின் வேர் வடிவை அல்லது வேர் உறுப்பை இன்றும் தாங்கி நிற்கிறது’ என்கிறார் பாவாணர். மனோன்மணியம் சுந்தரனாரும்,

‘சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

என்றும்,

‘கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்’

‘உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல அயிடினும்’

என்றும் புகழ்ந்து பாடியிருப்பதன் மூலம் நம் மொழியின் ஆழத்தை உணர்கிறோம்.

                தமிழ் இலக்கியம் கி.மு நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்களைக் கொண்டு வானளாவி வளர்ந்திருந்த நிலையைக் காண்கிறோம். அதோடு, உலகிலேயே தமிழை பக்தியின் மொழி என்று தனிநாயக அடிகளார் குறிப்பிடுவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். மேலும், வடமொழியான பாணிணியத்திற்கும் முற்பட்ட தொல்காப்பியம் உலகின் முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. பொருள் இலக்கணம் உலகில் வேறுமொழிகளில் காணப்படாத ஒன்று. தமிழ் இலக்கியத்தின் காலத்தை நிர்ணயிப்பது கடினம் என்று இந்தியக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’

என்று பிங்கல நிகண்டு இயம்பும்.

‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே’

என்ற கம்பன் தொடரில் தமிழ் இனிமை என்ற பொருளில் எடுத்தாளப்படுகிறது. மேலும், தன்னேரில்லாத தமிழ், என்றும்

                                        ‘இருந்தமிழே  உன்னால் இருந்தேன்  இமையோர்

                                         விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’

என்று தமிழ் விடு தூது தமிழின் பெருமையைப் பகர்கின்றது. மேலும்,

‘தமிழுக்கும் அமுதென்று பேர்’

என்றும் பாரதிதாசன் பைந்தமிழ் இனிமையைப் பறைசாற்றுகிறார். அதுமட்டுமல்லாமல், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றும்,

                                      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச் சொல்லே’

என்றும்,

                                     ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

                                            இனிதாவது எங்கும் காணோம்’

என்று பாரதியார் எடுத்தியம்புவதையும் காணலாம். இச்சான்றுகளைக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழிலக்கியங்களில் மொழியின் சிறப்பியல்புகள்

                மக்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உலகளாவிய பண்பாட்டு எண்ணம் தமிழ் இனத்திற்கே உரியதாகும். எனவேதான்,

‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ (புறம். 92)

என்று கணியன் பூங்குன்றனார் குறிப்பிடுகிறார். மேலும்,

‘பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’

என்ற சங்கப் பாடல் உயர்வு தாழ்வு இன்றி மக்கள் அனைவரும் ஒன்றே என்ற வாழ்வியல் சிந்தனையை உணர்த்துகின்றது. மேலும், புறநானூற்று (204 ஆம் பாடல்) எனக்குக் கொடுத்திடு என்று இரத்தல் இழிந்தன்று, அவ்வாறு கேட்டார்க்குக் கொடுக்க மாட்டேன் எனக் கூறி மறுத்தல் அவ்விரத்தலைவிட இழிந்தன்று ஒருவன் இரப்பதற்கு முன்பாகவே அவன் குறிப்பை முகத்திலிருந்து அறிந்துகொண்டு இதனைக் கொள்க எனக் கொடுத்தல் உயர்ந்தது. அவ்வாறு கொடுக்கும்போது இரவலர் அதனைக் கொள்ளேன் என மறுத்தல் அக்கொடைச் செயலைக் காட்டிலும் உயர்ந்தது என்று இரத்தலுக்கு மிக அழகான கருத்தை முன்வைத்திருப்பது எந்த மொழியிலும் இருக்காது ஒன்று என்றே கூறலாம்.

                குறுந்தொகையில், ஒருவர்மீது வைத்திருக்கின்ற நட்பு குறித்து சொல்லும்போது நிலத்தைவிட அகலமானது, வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது என்ற சிந்தனையாழம் மிக்க பாடல் எந்தவொரு இலக்கியத்திலும் இல்லை என்றே கூறலாம். இதனை,

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல் ……….

………. நாடனொடு நட்பே’ (குறுந் – 03)

என்ற பாடல் உணர்த்தி நிற்கின்றது. மேலும்,

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி’

என்று புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடுகிறது.

‘கற்கை நன்றே கற்கை நன்றே’

பிச்சை புகினும் கற்கை நன்றே’

எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என்று வெற்றி வேற்கையில் அதிவீரராம பாண்டியன் கூறியிருப்பது மேன்மை தரக்கூடியதாகும். மேலும், முரசு கட்டிலில் ஏறிய மோசிகீரனாரை வாளால் வெட்டிக் கொல்லாது கவரி எடுத்து வீசினான் சேரமான் காவலன் இரும்பொறை. இதைப்போன்று அரிதிற்பெற்ற நெல்லிகனி ‘நெடுநாள் வாழச் செய்வது’ என்பதை அறிந்த அதியமான் தானுண்ணாது ஒளவைக்களித்துத் தமிழ் வளர்க்கச் செய்தான். மேலும், குமணன் எனும் புலவரின் வறுமையைப் போக்க தன் தலையையும் கொடுக்க முன் வந்தான். இத்தகைய சங்க இலக்கியச் செய்திகள் தமிழ்ப் புலமையும் புலவர்களின் பெருமையையும் போற்றுவனவாக அமைந்திருப்பதை இதன் தெளிவாக அறிகின்றோம்.

                மேலும், சிலப்பதிகாரம் வழக்குரைக் காதையில் இகதலில்லாத சிறப்பினை உடையவரான இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயரினைத் தீர்த்தவன் சிபி சக்கரவர்த்தி, அவனல்லாமலும் கடைவாயில் மணியின் நாவானது அசையப் பசுவின் கடைக் கண்களினின்றும் வடிந்த கண்ணீர் தன் நெஞ்சினைச் சுடத் தானே பெறுதற்கரிய புதல்வனைத் தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவன் மனுநீதிச்சோழன் என்று எல்லா உயிரும் சமம் என நினைத்து நீதி வழங்கிய மன்னர்கள் இருந்தார்கள் என்று வேற்றுமொழி இலக்கியத்திலும் இல்லாத செய்தியை நம்  செம்மொழிச் சிலம்பின் கண்ணகி பாத்திர வழி அறியலாம்.

இந்திய மொழிகள் அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்:

பிறமொழி அறிஞர்களின் கூற்று

                அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி, கால்டுவெல், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், மாக்ஸ் முல்லர், ஹிராஸ் பாதிரியார், ஸ்காட் எலியட் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களை நோக்கும்போது தமிழ்மொழியின் உன்னதத்தை தமிழ்நாட்டினர் உணரும் வகையில் கூறியிருப்பதை எண்ணத்தக்கதாகும்.

‘உலகம் தோன்றிய முதன் முதலில் பேசப்பட்ட மொழி தமிழாகத்தான் இருந்திருக்க வேண்டும்’ என்கிறார் அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி. இவரைப் போல் ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் ‘திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியால் நிலைபெற்று விளங்கும் தமிழ் என்றும் ‘தமிழ் மொழி’ செம்மொழியே’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘தமிழ் மொழி பழமை மிகுந்த சிறப்பு வாய்ந்த மொழி’ என்று அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தமிழின் தொன்மையினைச் சிறப்புகளைத் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

                ‘மதுரமான மொழி என்று வால்மீகியார் தமிழை வாயார புகழ்வதைப்போல தமிழுக்கு நிகர் வேறு மொழி கிடையாது’ என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார். மேலும், பிரிட்டானிகா கலை களஞ்சியம், இந்திய மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ் இலக்கியம் எனக் குறிப்பிடுவதைக் காணலாம். ‘சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன’ என ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுவது போற்றத்தக்கதாகும். ஸ்காட் எலியட் என்பவர் ‘தமிழ்நாடு லெமூரியாவில் இருந்தபோது எகிப்து நாடு நீருள் இருந்தது’ என்கிறார். எனவே எகிப்து தோன்றுவதற்கு முன்பே தமிழ்நாடு தோன்றியிருக்கவேண்டும் என்பார். மேலும், சமுத்திர குப்தனின் அமைச்சனாகிய சாணக்கியர் தான் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பாண்டிய நாட்டின் தலைநகராகிய கபாடபுரத்தினை ‘பாண்டியக் கபாடம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அசோகரின் கல்வெட்டுக்களிலும், தமிழ் நாட்டைப்பற்றி அதிலும் சிறப்பாக மூவேந்தர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கி.மு 150-இல் வாழ்ந்த பதஞ்சலி என்பாரும் காஞ்சிபுரத்தைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிறமொழி இலக்கியங்களில் தமிழின் தாக்கம்

                தமிழர்களின் தலை சிறந்த பண்பாடாகக் கருதப்படும் பொங்கல் திருநாளைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் பிறநாட்டு இலக்கியங்களிலும் இடம்பெற்றிருப்பதை இக்கட்டுரை வாயிலாக அறியலாம். அதாவது, சங்க இலக்கியங்களுக்கும் மன்யோசு போன்ற ஜப்பானியக் காதல் பாடல்களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகள் தொடக்க நிலையில் உள்ளன என்றும், ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிற்கும் தமிழகப் பொங்கல் திருவிழாவிற்கும் உள்ள ஒற்றுமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சேர வேந்தன் பாரதப் போhரில் படை வீரர்களுக்கு உணவு கொடுத்தான் என்று புறநானூறும், பதிற்றுப்பத்தும் கூறுகின்றன. சுமித்திரா, பர்மா போன்ற கீழை நாடுகளில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் தமிழர் திருவிழாக்களைப் போன்று நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கோவில்களில் திருப்பாவை அங்கு நடைபெறும் திருமணங்களும் தமிழர் திருமண முறைப்படியே நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாலையில் தமிழர் கிரேக்க, உரோம் நாடுகளோடு வணிகம் நடத்தினர் என்பதை அறிகிறோம். கி.மு.10 ஆம் நூற்றாண்டின் அரசனாகியவர்களைப் பொருட்களும் தமிழ் நாட்டுக் கப்பல்கள் மூலம் கொண்டு செயல்பட்டன. கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயில் தோகைகளும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவிற்குக் கடல் வழியாகச் சென்றன. கிரேக்க நாட்டிற்கு இஞ்சியும் மிளகும் சென்றன. ரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் அந்நாட்டுடன் தமிழ்நாட்டிற்குக் கடல் வணிக உறவு இருந்தது. அக்காலத்து ரோம் நாயணங்கள் தமிழ் நாட்டின்  புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. ரோமர்கள் தமிழ் நாட்டு முத்துகளையும் யானைத் தந்தங்களையும், மெல்லிய ஆடைகளையும் பெற்று மகிழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிகின்றோம்.

                திருக்குறளை இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும், ஜெர்மன் மொழியில் கிராலும், பிரெஞ்சு மொழியில் ஏரியலும், வடமொழியில் அப்பாதீட்சிதரும் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சாலைட்சரின் திருக்குறளைப் போல் அறிவார்ந்த அறநெறிகளைத் தாங்கிய இலக்கியம் உலக இலக்கியங்களில் எங்கும் இல்லை என்ற கருத்து தமிழின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், தமிழ்மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகின் வேறு எங்கனும் இல்லையென்று மேனாட்டறிஞர்களாகிய பெஸ்கி மற்றும் போப் போன்றோர் வியந்து மொழிவதையும் இங்கு எண்ணத்தக்கது.

                புராண இதிகாசங்களிலும் மொழி சார்ந்த பதிவுகள் காணப்படுகிறது. குறிப்பாக, வடமொழியின் முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே ‘முத்து’ முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. மேலும், தருமனின் இராசூய யாகத்திற்குத் தமிழ் மூவேந்தரும் வந்திருந்தனர் என்றும், திரௌபதியின் சுயம்வரத்திற்குப் பாண்டியன் வந்தான் என்றும், அருச்சுனன் பாண்டிய இளவரசி சித்திரங் கதையை மணந்தான் என்றும் மகாபாரதம் பகர்கின்றது. கி.மு. 5 ஆம் அண்டில் தோன்றிய      வால்மீகி இராமாணயத்தில் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் பேசப்படுகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு

உலக மொழிகள் எத்தனையோ இருந்த போதிலும் ‘ழ’ என்னும் ஒலியன் தமிழ், மலையாளம் ஆகிய இரு திராவிட மொழிகளில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. தமிழுக்கே உரிய சொற்கள் பிற மொழிகளில் கலந்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது. அவற்றில் குறிப்பிட்ட சொற்களை மட்டும் கீழ்க்காணும் அட்டவணை வாயிலாக அறியலாம்.

சொற்கள் தமிழ் மலையாளம்      கன்னடம் பாஜி
உப்புஉப்புசுப்பு
பன்றிபன்றி பன்னி
செவி செவி செவி  
ஈ (கொடு) 
தான் தான் தான்
பால்    பால்  பால் 
இரண்டு இரண்டு இரண்டு
நான் நான் நான்
நாம் நாம் நாம்
திராவிட மொழிகளின் ஒலியன்கள்

இக்கட்டுரையின் வாயிலாகத் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளையும், இந்திய மொழி அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு ஆகியவற்றை அறியமுடிகின்றது. இதன் மூலம் தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழின் மேன்மையையும் அதன் தரத்தையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.

துணை நின்ற நூல்கள்

 1. தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1998

 2. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1903

 3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியாருக்குநல்லாருரையும், உ.வே.சா

   நிலையம், சென்னை,

 4. புறநானூறு மூலமும் உரையும், பதிப்பாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 

   சென்னை, 2004

 5. தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, நாமக்கல்.

 6. தமிழ் இலக்கிய வரலாறு, அ. ஜெயம், ஜனகா பதிப்பகம், சென்னை,

 7. தமிழ் இலக்கிய வரலாறு, ச. ஈஸ்வரன், நிர்மலா பதிப்பகம், சென்னை.

 8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் ஜி.ஜான்சாமுவேல், மாதவி பதிப்பகம்,

   சென்னை, 1975.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 109

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

மக்கள் தங்களின் அறிவு நுட்பத்தினால் தேவைக்கு ஏற்ப பல வகையான தூய்மை செய்யும் பொருட்களைக் கண்டுபிடித்தனர். ஆவற்றைத் துடைப்பம், விளக்குமாறு, சீமாறு போன்ற பெயர்கள் வைத்தனர். இச்சீமாறு பல இன மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தனக்கென தனிப் பண்பாட்டைக் கொண்ட கொங்கு பகுதி மக்களிடையேயும் சீமாறு பயன்பாடு காணப்படுகிறது. கொங்கு மக்கள் தூய்மை செய்ய துடையப்பம், விளக்குமாறு, சீமாறு, நாகிரிஞ்சி மாறு, விராலிமாறு, பூந்துடைப்பம் போன்ற பல வகைகளைப் பயன்படுத்துகின்றனர். இச்சீமாறு தூய்மை செய்வதோடு அவர்களது பண்பாட்டில் பெறும் இடம் குறித்து இவ்வாய்வு எடுத்துரைக்க முற்படுகின்றது.

சீமாறு – விளக்கம்

சீவங்குச்சி + மாறு = சீமாறு என்பதாகும். சீவங்குச்சி என்பது தென்னை ஓலையிலிலருந்து எடுக்கப்படுவதாகும். மாறு என்பது அசுத்தத்தைத் தூய்மையாக மாற்றக் கூடியது. அதாவது சீவங்குச்சியால் அசுத்தத்தை மாற்றும் கருவி சிமாறு என்று பொருள் கொள்ளலாம். இச்சீமாறே விளக்குமாறு என்று கூறுகின்றனர்.இச்சீமாறைக் கொண்டு வீடு, வாசல், தானியம் போன்ற வற்றைத் தூய்மை செய்கின்றனர். தூய்மை செய்யும் துடைப்பதிற்கு ஊகந்தாள், தென்னை நரம்பு, ஈர்த்தோலை முதலியவற்றால் குப்பை, துசுமுதலிய விலக்கச் சேர்த்த பொருள்களின் கற்றை என்று அபிதானசிந்தாமணி கூறுகின்றது.

திருநெல்வேலி பகுதியில் இச்சீமாற்றை ‘வாரியல்’ என்று குறிப்பிடுகின்றனர். கொங்கு பகுதியில் வாழும் தெலுங்கு மொழிபேசும் மக்கள் தென்னம் பர்க்க என்றும், கன்னட மொழி பேசக்கூடியவர்கள் தென்னம் பர்கோ என்றும் கூறுகின்றனர்.

சீமாறின் அமைப்பும் தயாரிப்பு முறைகளும்

            கொங்கு பகுதியில் உள்ள சீமாறு குறைந்தது ஐம்பத்தைந்து செ.மீ நீளமும் நான்கு செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. இந்த சீமாறை தென்னை ஓலையிலிருந்தே தயாரிக்கின்றனர். தென்னை மரத்தின் ஓலையை மட்டை என்கின்றனர். மட்டையின் இரண்டு பக்கமுள்ள நீளமாக உள்ள ஓலையை சோவை என்றும் அந்தச் சோவையின் மையப்பகுதியில் உள்ள நரம்பைச் சீவங்குச்சி, தென்னங்குச்சி, ஈக்குக் குச்சி என்றும் கூறுகின்றனர். இந்தச் சீவங்குச்சியைக் கொண்டே சீமாறு தயாரிக்கின்றனர்.

தென்னை மரத்திலிருந்து தானே பழுத்து விழும்மட்டைசீமாறு தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். விழும் மட்டையில் பழுது இல்லாத மட்டையைக் கூரிய ஊசி கொண்டு சோவையையும் சீவங்குச்சியையும் பிரித்தெடுக்கின்றனர். ஒரு மட்டையை முழுவதும் பிரித்தப் பிறகு ஒவ்வொரு சீவங்குச்சியையும் மட்டையிலிருந்து தனித்தனியாக பிடுங்கி ஒன்றாகச் சேர்க்கின்றனர். அவற்றை ஒன்றானகச் சேர்த்துத் தற்காலிகமாகத் தென்னை சோவையாலே கட்டுகின்றனர். இதே போன்று மற்றொரு மட்டையிலிருந்தும் சீவங்குச்சியைப் பிரித்தெடுக்கின்றனர். மட்டையின் தளவுப்பகுதி சோவை நீளம் குறைவாக இருப்பதினால் நற்பது செமீ. நீளத்திற்கு உள்ள தளவு மட்டையின் சீவங்குச்சியைப் பயன் படுத்துவதில்லை.

            சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிடுங்கியப் பகுதியை அடிப்பகுதி என்றும், சோவையின் விளிம்புப் பகுதியைத் தளவு(நுனி)ப் பகுதி என்றும் கூறுகின்றனர். இரண்டு மட்டையிலிருந்து சேகரித்தச் சீவங்குச்சிகளை அடிப்பகுதியில் அரையடி(பதினைந்து செ.மீ) இடைடிவெளி விட்டு இறுக்கி கட்டுகின்றனர். கட்டுவதற்காக வலுவான கட்டுக்கொடி(மெல்லியதான கொடி), பனை மட்மையின் நரம்பாகிய அகினி, சரடு, பிளாஷ்டிக் கயிறுகள் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒர் சீமாறு தயாரிக்க இரண்டு மணிநேரம் தேவைப்படுவதாகக் கூறுகின்றனர்.

ஒருசிலர் சீவங்குச்சியை மட்டையிலிருந்து பிரித்தெடுக்க அரிவாள்மணை, கத்தி போன்ற கருவிகளையும் பயன்படுத்துவதுண்டு. பழுத்த மட்டை மட்டுமின்றி பச்சை (இளம்) மட்டையிலும் சீமாறு தயாரிக்கின்றனர். பச்சை மட்டையால் தயாரிக்கப்படும் சீமாற்றை வீடு கூட்டமட்டும் பயன்படுத்துகின்றனர். சீவங்குச்சிகளைப் பிரித்தெடுத்த மட்டையையும், சோவையையும் அடுப்பெரிக்கப் பயன் படுத்துகின்றனர். பச்சைமட்டையாக இருந்தால் காய்ந்தபிறகு பயன்படுத்துகின்றனர்.

சீமாறு தயாரிப்பவர்கள்

சீமாறுதயாரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். வீட்டுவேலை, விளைநிலத்து வேலை இல்லாத பொழுதும் ஆடு மாடு மேய்கின்ற பொழுதும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் சீமாறு தயாரிக்கின்றனர்.

ஒரு முறை சீமாறு தயாரிக்கத் தொடங்கினால் குறைந்தது ஒரு வருடத்திற்குத் தேவையான நான்கு ஐந்து (தேவையைப் பொருத்து)சீமாறுகளைத் தயாரித்து வைத்துக்கொள்கின்றனர். தயாரித்தச் சீமாறுகளை மழையில் நனைந்து விடாமலும், வெயிலில் படாமலும் வீட்டினுள்(எளிதில் மற்றவர் கண்ணில் படாததது போன்று)மறைவாகப் பாதுகாக்கின்றனர். சீமாறின் தேவை ஏற்படும் பொழுது மட்டும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்துகின்றனர்.

தென்னைமரம் இல்லாதவர்கள் தென்னை மரம் வைத்திருப்பவர்களிடம் சென்று மட்டையை வாங்கிக்கொள்கின்றனர். கொடுக்கும் மட்டைக்கு உரிமையாளர் தொகை ஏதும் எதிர்பார்ப்பதில்லை. ஒரு சீமாறு தயாரிக்கம் அளவே கொடுப்பர். ஆதிக மட்டைகள் கேட்பின் தொகைக்காகக் கொடுக்கின்றனர்.தற்போது கடைகளில் விலைக்கு விற்கின்றனர். ஒரு சீமாறின் விலை பதினைந்து முதல் இருபது வரை விற்பனை செய்கின்றனர்.

சீவக்கட்டை

கூட்டிக் கூட்டித் தேய்ந்து போன சீமாறைச் ‘சீவக்கட்டை’ என்று கூறுகின்றனர். அதாவது ஐம்பது, அறுபது செ.மீ நீளமுள்ள சீமாறு தேய்ந்து முப்பது,முப்பத்தைந்து செ.மீட்டற்கும் குறைவானதைக் குறிக்கும். இச்சீவக்கடைடையை ஆடு அடைக்கும் இடமாகிய பட்டியைக் கூட்டவும், மாடுகட்டும் கட்டுதாரியைக் கூட்டவும் பயன்படுத்துகின்றனர். தற்போது ஒரு சிலர் கழிவறைகளைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

கட்டுத்தாரியைக் கூட்டும் பொழுது பாதி சீவகட்டை தரையில் படும்படி பிடித்து அழுத்திக் கூட்டுகின்றனர்.  அவ்வாறு அழுத்திக் கூட்டும்;பொழுதே கட்டுத்தாரி தூய்மை அடைகிறது. சாய்வாக அழுத்திக் கூட்டுவதைப் ‘படுக்குப்போட்டு கூட்டுதல்’ என்று கூறுகின்றனர். அதே மாற்றை நேராக பிடித்தும் கூட்டுவதும் உண்டு. இவ்வாறு செய்தால் மாடுகள் தின்றது போக மீதித் தீனியை அரித்து எடுக்க எளிதாக அமைகிறது என்கின்றனர்.

ஆடுகள் அல்லது மாடுகளை அடைக்கும் இடத்தில் குப்பைகள் மிகுந்து இருக்கும். அவ்விடத்தைப் புதுசீமாறில் அகற்றும் பொழுது தூய்மையாக்அகற்ற முடிவதில்லை. தேய்ந்த சீமாறாக இருப்பின் எளிதில் அதிகமானக் குப்பைகளைக் கூட்டமுடிகிறது.

வீடு கூட்டுதல்

வீடு கூட்டுவதற்கும் ஒருசிலர் சீமாறையே பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது. வீடு கூட்டுவதற்குப் பச்சை மட்டையில் தயாரித்தச் சீமாறையே பெரும்பான்மையோர் பயன்படுத்துகின்றனர். இளம் மட்டையால் தயாரிக்கும் சீமாறு என்பதினால் வீடு கூட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. ஆனால் இச்சீமாறைக் கொண்டு களம், கட்டுதாரி முதலியவற்றைக் கூட்ட பயன்படுத்த முடிவதில்லை. கூட்டினாலும் பழுத்த மட்டையில் கூட்டுவது போல் இருப்பதில்லை என்கின்றனர்.

பொதுவாக வாசல், களம், கட்டுத்தாரிவீடு போன்றவற்றை கூட்டும் பொழுது சீமாறை ஒரு கையாலே பிடித்து கூட்டுகின்றனர். அதிகப் பரப்பளவுஎன்றால் இரு கைகளாலும் கூட்டுகின்றனர். ஒருசிலர் இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி கூட்டுவதுண்டு.

உணவகங்களில் சீமாறு

உணவகங்களில் சீமாறு பயன்படுத்துகின்றனர். உணவகங்களில் தோசை, புரோட்டா போன்ற உணவு தயாரிக்கும் போது சீமாறு பயன்படுகிறது.  தோசை கல்லில் எண்ணெய் துடவுவதற்கும் அக்கல்லில் நீர் தெளித்துக் கூட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். சிறிய தோசைக் கல்லாக இருந்தால் அதில் துணி கொண்டு எண்ணெய் தேய்க்க எளிதாக இருக்கின்றது. பெரிய கல்லாக இருப்பதனால் சீமாறு தான் எளிதாக இருக்கின்றது என்கின்றனர். இதில் வீடு வாசல் கூட்டும் மாறு அளவிற்கு அதிக சீவங்குச்சிகளைப் பயன்படுத்துவதில்லை. சீமாறில் கால்பங்கு அளவு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தச் சீமாறைக் குப்பைகளைக் கூட்ட பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர்.

நம்பிம்பிக்கைகள்

சீமாறு தொடர்பான நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது. அதாவது சீமாறின் மீது தவறுதலாகக் கூட கால் படக்கூடாது. கால்பட்டால் உடனே அதை தொட்டு வணங்க வேண்டும். சீமாறைத் தாண்டிச் செல்வது கூடாது. தவறுதலாகத் தாண்டிச் சென்றுவிட்டால் மீண்டும் ஒரு முறை கடந்து சந்த பக்கமிருந்து சீமாறைத் தாண்டவேண்டும். அவ்வாறு செய்தால் செய்த குற்றம் விலகும். சீமாறைக் கூட்டிய பிறகு அடிப்பகுதியோ, தளவுப் பகுதியோ தரையில் இருப்பது போன்று நிற்கவைக்கக் கூடாது. உறவினர்கள் வரும்பொழுது அவர்களின் பார்வையில் சீமாறு படுவது போன்று வைக்கக் கூடாது. இதுபோன்ற தவறுகளைச் செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்குத் துன்பம் நேரிடும் எனக் கருதுகின்றனர்.

மேலும் வீட்டின் வாசற்படியின் குறுக்கே சீமாறை வைத்தால் வீட்டிற்கு வரும் செல்வம் திரும்பிச் சென்றுவிடும் என்றும், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வீடு வாசல் போன்றவற்றைக் கூட்டினால் வீட்டில் உள்ள செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர். சீமாறை லட்சுமியாகக் கருதுகின்றனர்.

சீர் வரிசைகளில் சீமாறு இடம்பெறுவதில்லை. திருமணமான பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் சீமாறு கொடுப்பதில்லை என்கின்றனர். இதுபோன்ற நம்பிக்கைகள் மக்களிடையே காணமுடிகிறது.

தீய ஆவிகளை விரட்டுதல்

உறங்கிக் கொண்டிருக்கும் குழுந்தையின் தொட்டிலுக்கு அடியிலும், பேய் ஓட்டவும் சீமாறு பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் ஒருசில நேரங்களில் இடைவிடாது அழுது கொண்டே இருப்பர். சிறிது நேரத்திற்கு ஒருமுறை அழத்தொடங்கும் சரியாக உறங்காது. இதற்குத் தீய ஆவிகளே காரணம் எனக் கருதுகின்றனர். அது போன்ற சமயங்களில் குழந்தை உறங்கும் தொட்டிலுக்கு அருகிலோ, குழந்தைப் படுத்திருக்கும் இடத்தின் தலைப் பகுதிக்கு அருகிலோ சீமாறை வைப்பதுண்டு. அவ்வாறு செய்தால் குழந்தை அழுவதில்லை எனக் கூறுகின்றனர். அதாவது தீய ஆவிகளை விரட்டும் ஆற்றல் சீமாறுக்கு உண்டு என நம்புகின்றனர்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் உறங்கும் போது ஒருசில நாட்களில் தீயகனவு தோன்றும். அதுபோன் சமயங்களில் சீமாறைத் தலைக்கருகில் வைத்து உறங்குகின்றனர். ஓரிரு நாட்களுக்குப் பிறகு தீயகனவு நின்ற சீமாறைப் பயன்படுத்துவதில்லை. வாசல் கூட்டும் கூட்டும் சீமாறே தொட்டில், கட்டில் இவற்றின் அடியில் பயன்படுத்துகின்றனர்.

தீய ஆவிகள் யாரேனும் ஒருவரைப் பற்றிக் கொள்வதுண்டு. அவ்வாறு பற்றிக் கொள்ளும் ஆவிகளைப் பேய் என்கின்றனர். அந்தப் பேயை அவர் உடலிலிருந்து அகற்ற சீமாறாலே அவரை அடிக்கின்றனர். அவரை அடித்தால் பேய் பயந்து ஓடிவிடும் என்கின்றனர். இவ்வாறு ஒருவரை சீமாற்றால் அடிக்கும் போது பேய்க்குத்தான் வலிஏற்படும் பேய்பிடித்தவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.

திருஷ்டி கழித்தல்

கண்திருஷ்டி தொடர்பான நம்பிக்கைகளும் கொங்கு பகுதி மக்களிடையே காணப்படுகின்றன. அதாவது குழந்தைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய்களினால் உடல் நலகுறைவு ஏற்படுவதுண்டு. அப்போது மருத்துவச்செலவு செய்தும் உடல் குணமடையவில்லையெனில் அதை கண்திஷ்டி என்கின்றனர். இதனை ‘கல்லடிப்பட்டாலும் கண்ணடிப்படக் கூடாது என்று கூறுகின்றனர். கண்திருஷ்டியல் உடல் நலம் குறைவு ஏற்படுவதுண்டு. அக்குழந்தையை மாலை நேரத்தில் கிழக்கு நோக்கி அமரச்செய்கின்றனர். பிறகு சீமாறைத் தொட்டு வணங்கி சீமாறின் மையப்பகுதியைப்பிடித்து வலது கையால் எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி திருஷ்டி பட்டவர்களின் முகத்திற்கு முன்பாக முப்பது செ.மீ இடைவெளியில் பிடித்துச் சுழற்றுகின்றனர். சுழற்றும் போது வலபுறமும், இடபுறமும் மாற்றி மாற்றி மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் சுழுற்றுகின்றனர். இவ்வாறு செய்தாய் கண்திருஷ்டி விலகும் எனக்கூறுகின்றனர்.

இரண்டுவயது குழந்தை முதல் நாற்பது, ஐம்பது வயது வரை உள்ளவர்களுக்கும் இது போன்று திருஷ்டி சுழற்றும் வழக்கம் உள்ளது.இத்திருஷ்டியைத் திருமணமான, வயதான பெண்களே சுழற்றிக் கழிக்கின்றனர். ஒருசில பெண்கள் தங்களுக்குள் திருஷ்டி ஏற்பட்டிருந்தாலும் அவர்களே சீமாறை தங்கள் முகத்திற்கு முன்பு சுழற்றிக்கொள்கின்றனர்.

குழந்தைகளுக்குத் திருஷ்டி கழித்தவுடன் அச்சீமாற்றிலிருந்து நான்கு, ஐந்து குச்சிகளை பிடுங்கிக் கொள்கின்றனர். அக்குச்சிகளை வீட்டிற்கு வெளியே ஏதேனும் ஒரு ஓரமாகத் தீமூட்டி அதில் குச்சிகளை ஒன்று சேர்த்து நான்கு ஐந்து துண்டுகளாக்கிப் போடுகின்றனர். இவ்வாறு செய்தால் கண்திருஷ்டி விலகும் என்கின்றனர்.

வாக்குக்கேட்டல்

            சகுனம் பார்ப்பதை வாக்குக் கேட்டல் என்று கூறுகின்றனர். அதில் சீமாறு மூலம் வாக்குக் கேட்கும் மரபும் காணப்படுகின்றது. வாக்குக் கேட்கும் பொழுது சீமாறைத் தொட்டு வணங்கி எடுத்துக் கொள்கின்றனர். சீமாறின் அடிப்பகுதி தரையை நோக்கியபடியும் தளவுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு பிடித்துக் கொள்கின்றனர். பிடித்துக் கொண்ட சீமாறினுள் குத்துமதிப்பாக அதாவது பத்தில் ஒருபங்கு இருக்குமளவு  கைவிரல்களினால் பிரித்துக்கொள்கின்றனர். பிரித்தப் பகுதியில் ஒரு விகிதம் இருக்கும் சீமாறின் குச்சிகளை இரண்டு இரண்டாகச் சேர்த்து எண்ணுகின்றனர். அவ்வாறு பிரிக்கும் பொழுது ஒற்றைக் குச்சித் தனியாகவோ அல்லது இரண்டு குச்சிகள் சேர்ந்தோ வரும். ஒற்றைக்குச்சி வந்தால் ‘வாக்கு’க் கொடுத்துள்ளது என்கின்றனர். அதே இரண்டுக்குச்சிகள் சேர்ந்து வந்தால் ‘கட்டிடுச்சி’ எனக் கூறுகின்றனர். அதாவது வாக்கு கொடுத்தல் என்பது எண்ணிய நிகழ்வு தடையின்றி நடைபெறும் என்றும் கட்டிடுச்சி என்பது திட்டமிட்ட நிகழ்வு தடைபடும் என்பதையும் உணர்த்துகின்றது.

இவ்வாறு வாக்குக் கேட்பது இரவு நேரங்கிளல் பார்ப்பதில்லை. இரவு நேரங்களில் பார்ப்பின் தவறாந வாக்கைக் கொடுத்துவிடுவதாகக் கருதுகின்றனர். இச்சீமாறினால் வாக்குக் கேட்கும் மரபு வயதானப் பெண்களிடம் மிகுதியாகக் காணப்படுகின்றது.

சடங்குகளில் சீமாறு

சீமாறு தூய்மை செய்யும் கருவியாக மட்டுமின்றி மக்கள் நிகழ்த்தும் சடங்குகளிலும் இடம் பெறுகின்றது. பூப்பெய்தியப் பெண்ணுக்கு அருகாமையிலும், மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் போதும் இறப்புச் சடங்கின்போதும் சீமாறைப் பயன்படுத்துகின்றர்.

பூப்பெய்தியப் பெண்ணை பூப்பெய்திய நாளிரிருந்து ஐந்து நாட்களோ, ஏழுநாடகளுக்குப் பிறகோ வீட்டினுள் அனுமதிப்பர். அதுவரை அப்பெண் அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீட்டின் வெளியிலேயே இருக்கின்றாள்.(ஒருசிலர் வீட்டின் ஒரு மூலையிலோ தங்கவைக்கின்றனர்) அந்த இடத்தில் அப்பொண்ணின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் சீமாறை வைக்கின்றனர். பூப்புச்சடங்கு முடிந்ததும் சீமாற்றை எப்போதும் போலப் பயன்படுத்துகின்றனர்.

பூப்பெய்தியப் பெண்ணை தீய ஆவிகள் எளிதில் பற்றிக்கொள்ளும். ஆதை தடுக்குச் சீமாறை வைப்பதாக் கூறுகின்றனர். சீமாறை வைத்தால் பெண்ணிடம் வராமல் விலகிச்சென்றுவிடும் என்கின்றனர்.

மழை இல்லாத காலங்களில் மழைவேண்டி மழைக்கஞ்சி எடுக்கும் வழக்கம் உள்ளது. மழைக்கஞ்சி எடுத்து முடித்தபிறகு சீமாறு, முறம் போன்றவற்றைச் சுடுகாட்டில் எறிந்துவிடுகின்றனர். இவ்வாறு செய்தால் மழைவரும் என நம்புகின்றனர்.

இறப்புச் சடங்கின்போது சீமாறு தாண்டுதல் நிகழ்வு உள்ளது. ஒருவர் உடலுக்குக் கொல்லிவைத்தவர் வீட்டிற்குள் நுழையும் போது சீமாறைத் தாண்டிச் செல்லவேண்டும் என்கின்றனர். அதற்காகக் கொல்லி வைத்தவர் வீட்டிற்கு வரும் முன்பே சடங்க நிகழ்த்துபவர்கலில் ஒருவர் வீட்டு வாசலில் சீமாறின் அடிப்பகுதி இடப்பக்கமும் தளவுப்பகுதி வலது பக்கமும் இருக்கும்படி வைத்திருக்கின்றனர். கொல்லிவைத்தவர் அந்தச் சீமாறைத் தாண்டியபிறகே வீட்டினுள் நுழைகின்றனர். அவ்வாறு தாண்டிச் சென்றால் துன்பம் விலகும் இல்லையெனில் வீட்டில் உள்ள அனைவருக்கும் துன்பம் ஏற்படும் எனக்கருதுகின்றனர்.

விளையாட்டில் சீவங்குச்சி

விளையாட்டில் சீவங்குச்சிகளைப் பயன்படுத்தி விளையாடும் மரபு கிராமபுற குழந்தைகளிடம் காணப்படுகின்றது. இவ்வாறு விளையாடும் விளையாட்டை நூறாங்குச்சி, அலுங்காங்குச்சி என்றும் கூறுகின்றனர். இவ்விளையாட்டை இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் விளையாடுவர்.

சீமாற்றிலிருந்து தேவைக்கேற்ப இரண்டு குச்சிகளைத் தனியாக எடுத்துக்கொள்கின்றனர். அக்;குச்சிகளை மூன்று செ.மீ அளவில் பத்துக் குச்சிகளை உடைத்துக்கொள்கின்றனர். ஏழு செ.மீ அளவில் ஒரு குச்சியை உடைத்து விளையாடுகின்றனர். சீவங்குச்சியின் நீளம் விளையாடுபவர்களைப் பொருத்தே அமைகின்றது. இந்த விளையாட்டில் ஒரு குச்சியை எடுக்கும் பொழுது மற்ற குச்சிகள் நகராமல் இருக்கவேண்டும். நகர்ந்தால் தோற்றதாகக் கணக்கில் கொள்ளப்படும். இந்த விளையாட்டு சிறுவர்களிடம் பொறுமையையும் கூர்மையான சிந்தனையையும் உருவாக்கும் விதமாக அமைத்திருக்கிறது எனலாம்.

சீமாறு பிஞ்சிடும்

 சீமாறு தொடர்பான வாய்மொழி வழக்காறுகள் பெண்களிடையே காணமுடிகிறது. அதாவது ஏதேனும் ஒரு சூழலில் ஒர் ஆண் ஒரு பெண்ணிடம் அவள் விருப்பம் இன்றி தவறான வார்ததைப் பேசியோ, தவறுதலாக நடக்க முற்படுவதுண்டு. அதுபோன்ற சமயத்தில் அந்நப் பெண் ‘சீமாறு பிஞ்சிடும்’ என்று கூறுகின்றனர். சீமாறு பிஞ்சிடும் என்ற சொல் சீமாற்றாலே அடித்துவிடுவேன் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வழக்காறைப் பெண்களே பயன்படுத்துகின்றனர். பெரும்பாண்மையும் இவ்வாறு சொல்வதுண்டு ஆனால் செய்வதில்லை என்கின்றனர்.

சீமாறின் செயல் அசுத்தத்தைப் போக்குவதாகும். தீய எண்ணம் கொண்டவனைச் சீமாறால் அடித்தால் அசுத்தம் விலகுவதைப் போல் அவன் மனதில் உள்ள அசுத்தமும் விலகும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி தீய எண்ணம் கொண்டவனை ஒரு அருத்தமாகவே கருதுவதையும் குறிக்கிறது.

தொகுப்புரை

கொங்கு பகுதி வாழ்மக்கள் தங்களிடம் உள்ள தென்னை மட்டையும், தங்களிடம் உள்ள சிறு பொருட்களின் உதவியாலும் சீமாறு தயாரிக்கின்றனர். சீமாறு தயாரித்தச் சூழல் மாற்றம் பெற்றுக்கடைகளில் பணத்திற்கு வாங்கும் நிலையுள்ளது. தற்போது செயற்கையாகப் பிளாஷ்டிக் மூலம் சீமாறு தயாரிக்கின்றனர். நம்பிக்கைகள்யாவும் அவர்களின் வாழ்க்கைச் செழுமையடைய கடைபிடிக்கப்படுவதையும் காணமுடிகின்றது. பூப்புச்சடங்கு, மழைக்கஞ்சி எடுத்தல், இறப்புச்சடங்குகளில் சீமாறைப்பயன்படுத்துகின்றனர். பெண்களிடம் அதைசார்ந்த வழக்காறுகளும் காணமுடிகிறது.

தகவளாலர் பட்டியல்

1.          ப. சுப்பரமணியம் 63 பியூசி நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், நாமக்கல்

2.          பார்வதி 37 பி.காம் வடவள்ளி கோவை

3.          கை.மகேஷ்வரி 33 பி.காம் வடவள்ளி கோவை

4.          கை.பாப்பாத்தி 50 இல்லை ஆத்தூர் சேலம்

5.          வா.கலையரசி 26 பி.எஸ்சி. பிஎட் ஆத்தூர் சேலம்

6.          வெ.புவனேஷ்வரி 33 எம்.ஏ. எம்.ஃபில், கிருஷ்ணகிரி

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

k.shivatamil@gmail.com

சிறுதாயம் விளையாட்டு

நாட்டுப்புற கலைகளுள் குறிப்பிடும்படியாக உடல் மற்றும் ஆரோக்கியத்தினை வளர்ப்பதில் மிக முக்கிய இடம் விளையாட்டிற்கு உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளுள் உடல் சார்ந்த விளையாட்டுகள் மூளை சார்ந்த விளையாட்டுகளில் மகளிர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறன் சார்ந்த நாட்டுப்புற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். சங்க காலத்தில் இருந்தே பல்வகை விளையாட்டுகளை மகளிர் விளையாடி வருகின்றனர். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தற்காலத்தில் விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம், இயந்திரமயமான வாழ்க்கையும், பொருளாதார நெருக்கடியும், தொலைக்காட்சியும் ஆகும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியன இயல்பாகவே கிடைத்தன. அதனால், மகளிர் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர். இந்நிலையில் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினர், ஆனால், இன்றைய சூழலில் கணவன், மனைவி என்ற நிலைப்பாட்டில் கணவனின் வருமானத்தோடு மட்டுமல்லாமல் மனைவியின் வருமானமும் தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக, மகளிர் தங்களுடைய குடும்பத்தைக் காப்பதற்குத் தொழிலை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையிலான நேரம் குறுகுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சூழலில் விளையாட்டுகள் தேய்ந்து போகின்றன.

நாட்டுப்புற மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். நாட்டுப்புற விளையாட்டுகளுள் சிறுதாயம் விளையாட்டு கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நாட்டுப்புற மக்களிடையே விளையாடப்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு, பெண்களால் விளையாடப்பட்டு வருகின்றது. இது தாயாட்டத்திலிருந்து மாறுபட்டது. இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டை தாயம் விளையாட்டு என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்படுகின்றது. இவ்விளையாட்டு, ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனியே இரண்டு பிரிவினரும் விளையாடும் விளையாட்டாக இருக்கின்றது.           

            சிறுதாயக்கட்டத்திற்கு இவ்விளையாட்டு எதிரெதிரே இருவரும் அமர்ந்து புளியாங்கொட்டைகளை தெரித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் கட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

சிறுதாயக்கட்டம்

            நான்கு மையப்பகுதியை மலைகளாக வைத்துக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த கட்டத்தின் மையப்பகுதி இரண்டு பேருக்கும் பொதுவான பகுதியாகும். இதைப் பழமலை என்கிறோம். ஒரு பக்கத்திற்கு ஐந்து கட்டங்கள் விதமாக முதலில் ஆறு கோடுகளும், குறுக்க வாட்டில் ஆறு கோடுகளும் இருக்கும். குறுக்கில் ஐந்து கட்டங்களையும் நெடுக்கில் ஐந்து கட்டங்களையும் வரையறுத்துக்கொள்கின்றனர்.

சிறுதாயம் கட்டம் வரைய பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாடப்படும் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கட்டத்தை வரைந்துக் கொள்கின்றனர். கட்டத்தை வரைவதற்குக் கோவை இலை, சுண்ணாம் கட்டி தீச்சட்டி ஓடு, செம்மண் கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுதாயம் விளையாடுவோர் நேரம்

            சிறுதாயம் விளையாட்டில் இரண்டு நபர்கள் பங்கெடுத்துக்கொள்வர். இந்த விளையாட்டைப் பெண்கள் மட்டும் விளையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் சிறுவர்களும் ஆடவர்களும் விளையாடுவதுண்டு. இவ்விளையாட்டுப் பகலிலும் இரவு நேரங்களிலும் ஓய்வான நேரத்தில் விளையாடப்படுகிறது.

விளையாட்டுக்களம்

            வேலைக்குச் செல்லும் மகளிர் ஓய்வு நேரங்களிலும், தோட்ட வேலைசெய்யும் நேரங்களிலும், கழனியில் வேலை செய்யும் நேரங்களிலும், மரங்களின் நிழலிலும், மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகளிர் பாறைகளின் மேற்புறத்திலும் கட்டங்கள் வரைந்து விளையாடுகின்றனர். பெரும்பாலும் வீட்டின் உள்ளே பெண்கள் இவ்விளையாட்டை விளையாடுகின்றனர்.

சிறுதாயாட்டத்திற்குப் பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெண்மையாகும் வரை இக்கொட்டைகளைக் கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பர். “ஒரு சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வதும் உண்டு. நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடப்படுவதும் விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வர்.”1

            இவ்விளையாட்டில் கொட்டைகளின் வெண்மைப்பகுதி மேல் நோக்கி இருப்பதை வைத்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். நான்கு காய்களும் வெண்மையாகத் தெரிந்தால் அது நான்காகக் கணக்கிடப்படுகின்றன. அதுவே, நான்கு கொட்டைகளும் கவிழ்ந்து கருப்புப் பகுதி தெரிந்தால் எட்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

எருக்கம் பூ

            புளியங்கொட்டை இல்லாத, கிடைக்காத சூழ்நிலையில், விளையாட்டிற்கு எருக்கன் பூவைப் பயன்படத்துவதுண்டு. எருக்கன் செடியில் மொட்டின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் பூ பகுதியைக் கொண்டு விளையாடுகின்றனர்.

            எருக்கம் பூவைப் பயன்டுத்தும்போது விளையாட்டில் பூ செங்குத்தாக இருப்பதையும் சாய்ந்து விழுந்து இருப்பதையும் வைத்துக் கணக்கிடுகின்றனர்.

            விளையாடும்பொதுது நான்கு பூவும் செங்குத்தாக இருந்தால் எட்டுஎனவும், நான்கு பூவும் சாய்ந்திருந்தால் அதை நான்கு எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். மூன்று பூ செங்குத்தாக நின்றால் மூன்று எனவும், ஒன்று இரண்டு பூ செங்குத்தாக இருப்பின் இரண்டு, ஒன்று எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு எருக்கன் பூவை வைத்து விளையாடப்படுகின்றது.

“புளியங்கொட்டை இல்லாத சூழ்நிலையில் விளையாட்டிற்கு எருக்கம் பூவைப் பயன்படுத்தப்படுகின்றது. புளியங்கொட்டை இருந்தால் புளியங்கொட்டையையே பயன்படுத்துவர்.”2

விளையாட்டில் காயை நகர்த்துவதற்குப் பயன்படும் பொருட்கள்

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாயாட்டத்தை விளையாடுவதற்கு, புளியங்கொட்டை, புன்னைக்கொட்டை, கரிசட்டி ஓடு, எருக்கன்பூ இவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். கட்டத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப நகர்த்திச் செல்ல, சில பொருட்களைப் பயன்படுத்துவதுண்டு. அதாவது, அடையாளக் குறிப்புகளுக்காகத் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் சில கற்கள் விதைகள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று போலவே நான்கு பொருட்களையும் சேர்க்கின்றனர் எதிர் அணியும் அதே போன்று ஒரே மாதிரியாகச் சேகரிக்கின்றனர். ஆனால், இரண்டு அணியினரும் ஒரே வகையான பொருளைத் தேர்வு செய்வதில்லை. ஒருவர் பெரிய கற்களைப் பயன்படுத்தினால் எதிரணியினர் சிறிய கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

தாயம் விளையாடும் முறை

சிறுதாயம் விளையாட்டை விளையாடும்பொழுது இரண்டுபேர் இணைந்துதான் விளையாடத்தொடங்குகின்றனர். அவ்வாறு விளையாடும்போது கட்டத்தின் எதிர்ரெதிரே புறமாக ஒருவருக்கு ஒருவராக அமர்ந்துகொண்டு விளையாடத்தொடங்குவர். அவர்களுள் யார் முதலில் விளையாட்டைத் தொடங்குவது என ஒருமனதாகப் பேசி முடிவெடுத்து, நீ முதலில் தொடங்கு என்று சொல்லி, விளையாட்டைத் தொடங்குவர். அவ்வாறு தொடங்கும்போது முதலில் விளையாடக்கூடிய நபர் எருக்கன் பூ, அல்லது புளியங்கொட்டைகளைக் கொண்டு விளையாடும்போது அதில் என்ன எண்ணிக்கை விழுகிறதோ அந்த எண்ணிக்கையில் காயைக் கட்டத்தில் நகர்த்தத் தொடங்குகிறார்கள்.

 ஒரு நபர் நான்கு காய்கள் வீதம், கட்டத்திற்குள் வைத்திருப்பர். நான்கு என எண்ணிக்கை விழுந்தால் இரண்டு காய்களையும், நான்கு காய்களும் கருப்பாக விழுந்தால் நான்கு காய்களையும் கட்டத்தில் இறக்குகின்றனர். அதற்குமேல் ஒன்று விழுந்தால் ஒன்று என்றும், இரண்டு, மூன்று என எண்ணிக்கை விழுந்தால் முறையே காய்களை இறக்குகின்றனர். அந்தக் கட்டத்தில் உள்ளிருக்கும் காய்களை நகர்த்தத்தொடங்கியவுடன் நான்கு என எண் விழுந்தால் நான்கு கட்டங்களையும், எட்டு விழுந்தால் எட்டு கட்டங்களையும் கடந்து செல்கின்றன.

சிறுதாயம் விளையாட்டு முறைகளில் தாய் மலையில் காய் வெட்டப்படாது. இரண்டு அணியினருடைய காய்களை வெட்டுக்கட்டங்கள், மறு ஆட்டம் (அ) கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, தொக்கை பழம் எடுக்கும் மலை எனப்பல நிலைகள் கையாளப்படுகின்றன.”3 என்பதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது.

தாய்மலை

தாய்மலை என்பது, கட்டத்திற்குள் நகர்த்தத் தொடங்கும் இடங்களைக் குறிக்கும். இம்மலையைக் ‘காய் இறக்கும் மலை’ என்றும், முதல் ‘தாய் மலை’ என்றும் அழைப்பர்.”4 எட்டு, நான்கு எண்ணிக்கை விழுந்தவுடன் கட்டத்திற்கு வெளியே வைத்திருக்கக்கூடிய நான்கு கற்களுள் இரண்டு கல்லை (அ) நான்கு கல்லை, தாய் மலையில் வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து விழக்கூடிய ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கை அடிப்படைக்கேற்ப அந்தக் காயைக் கட்டத்தில் நகர்த்துகின்றனர். இரு அணியினரும் 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ஆகிய கட்டங்களில் காய்களை நகர்த்தி வெட்டிக்கொள்ளலாம்.

1.ஆவது மலை, 5 ஆவது மலை, 9.ஆவது மலை, 13.ஆவது மலைகள் தவிர, வெளிக்கட்டங்களில் காய்கள் நின்றால், எதிரணியினர் எண்ணிக்கை அடிப்படையில் காய்களை வெட்டுகின்றனர். வெட்டுவது என்பது இரு அணியினருக்கும் பொதுவானது, அதேப்போல் உள் கட்டங்களுள் உள்ள 25 ஆவது கட்டமான பழம்மலை தவிர, மற்ற கட்டங்களில் காய்களை வெட்டுவர்.

மறுஆட்டம் (அ) கையாட்டம்

நான்கு, எட்டு, ஒன்று எண்ணிக்கை விழுந்தால், அதற்குக் கையாட்டம் என்று பெயர். இதை விளையாடுபவர் காய்களை குலுக்கிப்போட்டு மீண்டும் விளையாடுவர்”5

வெட்டாட்டம்

எதிரணியினரின் காய்களுள் ஏதாவது ஒரு காயை வெட்டுவர். இதற்கு ‘வெட்டாட்டம்’ என்று பெயர். இந்த வெட்டாட்டத்தில் மறுபடியும் புளியங்கொட்டைகளைக் குழுக்கிப் போடுவர். இது மறுமுறை விளையாட மீண்டும் வாய்ப்புத் தருவதாகும்.

கோடிமலை

            தாய் மலையிலிருந்து காய்களை இறக்கிக் கட்டத்தில் நகர்த்திக் கொண்டு வரும்பொழுது, 13 ஆவது மலையைக் ‘கோடிமலை’ என்று அழைக்கின்றனர். இம்மலையில் காய்கள் இருந்தால், பழம் எடுப்பதற்கு உரிய மலையாகவே கோடி மலை கருதப்படுகிறது. இதற்கு நிரம்பி விட்டது என்று பொருள்”6 இது வாய்மொழிச்செய்தியாகும்.

வெளிகட்ட தொக்கை

வெளிகட்டங்களான 14 ஆவது 15 ஆவது 16 ஆவது கட்டங்களில் காய் நின்றால் தொக்கை என்று கூறுகின்றனர். இக்கட்டங்களில் இருக்கும் காய்கள், உள்கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், எதிரணியினருடைய காய்களை வெட்டினால் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

உள்கட்டத்தொக்கை (அ) பழம் எடுக்கும் மலை

இம்மலையை ‘வெற்றிமலை’ என்றும் ‘பழம் எடுக்கும் மலை’ என்றும் அழைக்கின்றனர். 24 ஆவது கட்டத்தில் காய் நிற்கும்போது தொக்கை என்பர். தாயம் போட்டுத் தொக்கையில் உள்ள காய்களைப் பழமெடுப்பர். இரு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னும் பழமாகினாலும், இறுதியில் எந்த அணியினர் முதலில் பழம் எடுக்கிறார்களோ? அவர்களே வெற்றிபெற்றவர் ஆவார்.

விளையாட்டின் விதிமுறைகள்

சிறுதாயாட்டத்தை நான்குபேர் விளையாடும் பொழுது இரண்டுபேர் விளையாடுவது போலவே, விளையாடலாம் என்பது விளையாட்டின் விதிமுறை. காய் வீசுவது மட்டும் சுழற்சி அடிப்படையில் வந்து கொண்டிருக்கையில், அதில் ஒரே அணியில் இருப்பவர்கள் அவர்களுக்குரிய காயை நகர்த்தி;க் கொள்ளவேண்டும் என்பது விதிமுறையாகும்.”7

            விளையாடுபவர்கள், ஆட்டத்தில் காய்களைப் பயன்படுத்தும்போது, காய்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. அதேப்போல கற்கள் என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.

            சிறுதாயாட்டத்தில், புளியங்கொட்டையை விளையாடும் களத்தில் போடும் பொழுது ஒன்று விழுந்தால் ஒரு தாயமாகும். ஒரு தாயத்திற்கு ஒரு காயை மட்டும் தாய் மலையில் இறக்குதல் வேண்டும் என்பது விளையாட்டின் நெறிமுறையாகும். ஆனால், எட்டு, நான்கு எண்ணிக்கையில் விழுந்தால் விளையாட்டில் காய்களின் நகர்வுகளுக்கு மட்டும் இந்த எண்ணிக்கைகளைப் பயன்படுத்துவதுண்டு. குறைவான நேரத்தில் விளையாட்டை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், விளையாட்டில் காயை விளையாட்டுக் களத்தில் குலுக்கிப் போடும்போது நான்கும் எட்டும் விழுந்தால் நான்கிற்கு ஒரு காயையும், எட்டிற்கு இரண்டு காய்களையும் தாய்மலையிலிருந்து இறக்கவேண்டும்.

முதலில் கொட்டையை விளையாட்டுக்களத்தில் குலுக்கிப்போட்டு நான்கு, எட்டு தாயம் விழும் எண்ணிக்கையில் காய்களை, முதல் மலையில் இறக்கினால், எதிரணியினர் ஒன்பதாவது மலையில் காய்களை இறக்க வேண்டும் என்பது விதிமுறை.

முன் கட்டத்தில் சுற்றி வந்து ஏதாவது ஒரு காய், பழம் எடுக்கும் மலையில் தொக்கையில் உட்கார்ந்து விடும். தொக்கையில் உட்கார்ந்த காயைத் தாயம் போட்டுத்தான் பழமாக்க முடியும். மற்ற எந்த எண்கள் விழுந்தாலும் தொக்கையிலிருந்து பழம் எடுக்க முடியாது. எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும் என்பது விதிமுறை.

எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே, உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும். ஒருவருடைய காயை, வெட்டி விட்டுத் தன் காய்களை உள்கட்டத்தில் கொண்டு சென்று விட்டால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஒவ்வொரு காய்களையும் அடுக்கி பிடித்துக் கீழே போடக் கூடாது. அப்படி கீழே போட்டு விழும் எண்ணிக்கைக்குக் காய்களைக் கட்டத்திற்கு நகர்த்தமாட்டார்கள் என்பது விதிமுறை.

விட்டுக் கொடுத்தல்

            ஒரு சில நேரங்களில் நட்பு ரீதியில் எதிரணியினரும் வெற்றி பெறட்டும் என்னும் நோக்கில், காய்களை வெட்டுபவர், வெட்டாமல் போவதும் உண்டு.

சமூகப் பின்புலம்

சிறுதாயாட்டம் விளையாடும் பெண்களின் உறவு முறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விளையாட்டை வீட்டின் அருகாமையிலேயே விளையாடுகின்றனர். நெருங்கிய உறவு முறைக்காரர்கள் மட்டும் வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்றனர். அதேப்போல் ஆண்கள் வீதியிலும், பொது இடங்களிலும் பல விளையாட்டுகளை விளையாடுகின்றனர். ஆனால், பெண்கள் அது போன்று விளையாடுவதில்லை. அதாவது, சமூகத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுந்த மகாபாரதத்தில் ஆணாதிக்கத்தை மையப்படுத்தி நாடு, நகரம், ஊர் எல்லாவற்றையும் தாயக் கட்டையை உருட்டி இழந்ததை இந்த விளையாட்டுப் புலப்படுத்துகின்றது. ஆனால், சிறுதாயாட்டத்தில் பொருளையோ, பிறவற்றையோ வைத்து விளையாடுவதில்லை என்பதும், கால மாற்றம், சமுதாய மாற்றத்திற்கான விழிப்பாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

குடும்பத்தை நர்வாகம் செய்வதில் பெண்ணின் பங்கு அளப்பரியாதாகும். பெண் சமுதாயம் தாயாட்டத்தினை விளையாடுவதற்குப் பொதுவிடங்களைத் தவிர்ப்பது என்பது, இதைச் சூதாட்டம் என்ற நிலையில் பார்க்கப்படும் கண்ணோட்டமாகும். ஆனால், கட்டையை உருட்டுவதை விட பெரும்பாலும் புளியங்கொட்டையைக் கொண்டு விளையாடும் சிறுதாய விளையாட்டையே பெண்கள் விரும்பி விளையாடுகின்றனர். புளியங்கொட்டைகளைப் பயன்படுத்துதல் குடும்பத்தை நிர்வாகிக்கும் முறையினை உணர்த்துகிறது. கணவன், குழந்தைகள், மாமியார், மாமனார் ஆகியோரை நிர்வகிக்கும் பொறுப்பினை வளர்க்கின்றது.

சிற்றூர்ப் பகுதியில் வாழும் மக்கள் உழவுத்தொழிலையும் பிற தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தொழில்களில் ஈடுபடுவதால் உழைத்துக் களைப்பைப் போக்கும் ஓய்வான நேரங்களில் அவர்கள் குழுவாக இருந்து இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, அக்கா ஆகியோர் சேர்ந்து விளையாடுவது குடும்ப உறவுகளைப் பேணிக்காக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 குடும்ப உறவுகளோடு கட்டங்களைப் போட்டுத் தனித்தனியாக விளையாடும் பொழுது, அந்த உறவு முறைகளில் ஏற்படும் உறவினைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டில் பொருளையோ? பணத்தையோ வைத்து விளையாடுவதில்லை. ஆனால், அன்புக்கு மட்டும் ஏங்கி விளையாடப்படும் இவ்விளையாட்டுப் பொழுது போக்கு விளையாட்டாகவே நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு விதமான வழக்குச் சொற்களைச் சொல்லி விளையாடுகின்ற முறையையும் இவ்விளையாட்டில் பார்க்க முடிகிறது. கூழோ? கஞ்சியோ? தண்ணீரோ? வந்த உறவுக்காரர்களுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு விளையாட்டைத் தொடங்கும் முறையானது, பகுத்துயிர் வாழ்தலும், பல்லுயிர் ஓம்புதலுமாகிய விருந்தோம்பலைப் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

விளையாட்டின் நன்மைகள்

சிறுதாயாட்டமானது பெண்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நுட்பமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதற்கு இந்த விளையாட்டு உதவி புரிகின்றது. குடும்ப உறவு முறைகளைப் பேணிக் காக்கும் பொருட்களான புளியாங்கொட்டையும் எருக்கம்பூவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இனக்குழு சமுதாயத்தில் சிறுதாயாட்டம் பெரும்பாலும் முல்லை நிலத்து விளையாட்டாகவே இருக்கிறது. இந்த விளையாட்டுப் பெண்களின் குடம்பத்தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்தள்ளது.

சிறுதாயாட்டத்தில் வாழ்க்கை தத்துவம்

யார் எங்கு ஆரம்பித்தாலும் இறுதியில் சேர வேண்டியது ஓர் இடம்தான் என்பதை உணர்த்தும் விதமாகச் சிறுதாயம் விளையாட்டு அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதும், உதைப்பதும், வீழ்த்துவதும், ஒன்று சேர்வதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைக் கொள்வதும், நான் போராட வேண்டும், நீ போராட வேண்டும், என இப்படி இரண்டு பேரும் ஓரிடத்தில் வாழ்க்கையை நிறைவு செய்வதுமான வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துகிறது. இந்தப் போராட்டத்தில் எந்தக் காயும் வெட்டப்படலாம். காய்கள் மாட்டிக் கொள்ளாமல் வெற்றிபெறுவதே மகிழ்ச்சியான செய்தியாகும்.

முடிவுரை

சிறுதாயாட்டம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மகளிர் விளையாடும் விளையாட்டாகவே உள்ளது. இவ்விளையாட்டுப் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் விளையாடப்படுகின்றது. சிறுதாயாட்டத்திற்குப் புளியங்கொட்டைகள் அல்லது எருக்கம் பூக்களை விளையாட்டுக்களத்தில்; கீழே போட்டுப் பயன்படுத்துகின்றனர். தாய்மலை, மறுஆட்டம், கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, வெளிகட்ட தொக்கை, உள்கட்ட தொக்கை, தொக்கைபழம் எடுக்கும் மலை என்ற நிலைகளில் கிருஷ்ணகிரி  வட்டாரத்தில் சிறுதாயாட்டம் முறை அமைந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி வட்டாரத்தில்  மாறுபட்டிருப்பதை அறிய முடிகிறது. மகளிர் சமுகப் பின்புலத்தோடுதான் சிறுதாயாட்டத்தை விளையாடுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்து மகளிர் தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களோடு மட்டும்தான் விளையாடுகின்ற முறையை இந்த விளையாட்டில் பார்க்க முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.          நேர்க்காணல் பச்சையம்மாள் (24), மத்தினேரி, தேதி 10.4.15

2.          நேர்க்காணல் தமிழரசி (17), இராமபுரம், 2.05.15

3.          நேர்க்காணல் கண்ணம்மா (36), திம்மாபுரம், 4.5.14

4.          நேர்க்காணல் உமா (18), ஏரிக்கொல்லை, 22.04.15

5.          நேர்க்காணல் இரஞ்சிதா (30), செம்படமுத்தூர், 18.6.16

6.          நேர்க்காணல் பாஞ்சாலை (50), மாதேப்பட்டி 6.6.15

7.          நேர்க்காணல் சங்கீதா (22), செம்படமுத்தூர், 8.6.16

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்-635130.

அலைபேசி எண் : 9943259247

மின்னஞ்சல் : aathmalingam1977@gmail.com

நற்றிணைக் காட்டும் யானைகளும் உணர்ச்சி மிகு வாழ்க்கையும்

உலகத்தில் வாழும் ஐந்தறிவு உயிர்களில் யானையும் ஒன்று.  பெரிய உருவமும் அதிக எடையும் கொண்ட விலங்கு.  நிலத்தில் வாழும் மனிதர்களைத் தவிர்த்து யானைகள் மிக நீண்ட காலம் உயிர் வாழக் கூடியதாகும்.  யானைகளைப் பொறுத்தவரைத் தனியாக இருப்பதில்லை.  கூட்டமாகவே வாழ்கின்றன.  தனியாக இருக்கும் யானை மதம் பிடித்து அலைந்து திரியும் என்பார்கள். யானையினங்கள் கடுமையான உழைப்பாளியாகவும், குடும்ப வாழ்க்கையில் உணர்வு மிக்கதாகவும், அறிவுச்சார்ந்த நிலைகளில் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிப் புரியும் வகையில் யானையினங்கள் இருந்து வருகின்றது.  சங்க இலக்கியத்தில் குறிஞ்சி நில விலங்கான யானைகள் நற்றிணைப் பாடல்களின் வாயிலாக நோக்கும் போது உணர்ச்சி மிகு வாழ்க்கையினை நடத்துகிறது எனலாம்.

பெருங்களிறும் மடப்பிடியும்

          சங்க இலக்கியத்தில் யானையைப் பற்றியச் செய்திகளும் அவைகளின் வாழ்க்கை முறையினைப் பற்றியும் நிறையக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  யானை, வேழம், களிறு, பிடி, கலபம், மாதகம், கைமா, உம்பல், வாரணம், அசனாவதி, அத்தி, அத்தினி,அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆணை, இயம், இரதி, குஞ்சரம், இராசகுஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, கரி, அஞ்சனம் போன்ற பலப் பெயர்கள் யானையைக் குறிக்க சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஆண் யானையைக் களிறு என்றும் பெண் யானையைப் பிடி என்றும்  குட்டியைக் கன்று என்றும் சொல்வர்.  வீரம் மிகுந்த ஆண் யானையை களிற்று யானை என்று கூறுவர்.  இங்கு களிறு என்பதும் யானை என்பதும் ஒரே பொருளில் வருவதைக் காணலாம்.  ஒரு வேளை களிறு என்பது யானை இனங்களில் ஒரு பெயராக அக்காலத்தில் குறித்து வந்திருக்கலாம்.  இவையன்றி களிறு என்பதற்கு வீரம் என்ற பொருள்படவும் அமைந்து, அதனால் வீரம் மிகுந்த யானையைக் களிறு என்று அழைத்திருக்க வாய்ப்பு உண்டு.  பின்னாளில் அதுவே களிற்றுயானை என புலவர்கள் சொல்லியிருப்பார்கள்.  பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை இருக்க வேண்டுமென பெரியோர்கள் சொல்லுவார்கள்.  அதனால்தான் பெண் யானையை மடப்பிடி என்று புலவர்கள் அழைத்திருப்பது வியக்கத்தக்கது.  ஆக பெண் யானைகளுக்கு மடம் என்ற பண்பு இருந்திருக்கிறது என அறியமுடிகிறது.

நற்றிணையில் யானை

          வெண்கோட்டு யானை, வயக்களிறு, பெருங்களிறு, வேழம், மா, பைங்கண் யானை, பரும யானை, ஒருத்தல், மடப்பிடி, புகர்முகவேழம் என நன்றினைப் பாடல்களில் குறிக்கப்படுகிறது.

          “இருந்செறு ஆடிய கொடுங்கவுள், இயவாய்,

          மாரி யானையின் மருங்குல் தீண்டி”  (நற்:141:1-2)

          செம்மை நிறமுடைய தலையையும், வளைந்த கொடுமை தன்மையுள்ள துதிக்கைகளை உடையனவும், ஏந்திய தந்தங்களை கொண்டதும், அகன்ற வாயையும் உடைய கரிய மேகம் போல் இருக்கும் யானைகள் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும் யானைகள் மதத்தால் செருக்குண்டு கடிய சினமும் வலிமையையும் உடையது (நற்-103) என நன்றிணைப்  பாடல் குறிப்பிடுகின்றது.

உணவும் வாழிடமும்

          யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும்.  இவை மூங்கில் மற்றும் கரும்பு போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.  யானைகள் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன.  நற்றிணைப் பாடல் ஒன்றில்,

          “சூல் முதிர் மடப்பிடி, நான் மேயல் ஆரும்” (நற்.116:5)

          கருவுற்ற ஒரு பெண் யானையானது தன்னுடைய பசியைப் போக்க மூங்கிலின் கொழுத்த முளைப்பகுதியை ஒடித்து தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டதாம் என கூறுகிறது.  அதைப்போல பசியால் வருந்திய மென்மையான தலையை உடைய பிடி வருந்தமுற்று நின்றதாம்.  அதனைக்கண்ட பெரியகளிற்று யானையானது பக்கத்தில் இருக்கும் ஓமை மரத்தை முறித்து அதனுடையப் பட்டையை தன் பிடிக்கு உணவாகக் கொடுத்ததாம் (137,279) குழியில் ஊறிய நீரை யானையினம் சென்று உண்ணுதல் (240), நன்றாக உண்ட யானைகள் இத்தி மரத்தின் நிழலில் வந்து உறங்குகிறது (162) என நன்றிணைப் பாடல்கள் கூறுகின்றது. நன்கு வளர்ந்த  யானைகள் நாள் ஒன்றுக்கு  140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கின்றன என ஆய்வு குறிப்பிடுகிறது.  தற்போது காடுகளை அழித்து நகரங்கள் உருவாக்கப்படுவதால் தாவர உண்ணிகளான யானைகளுக்கு உணவுகள் கிடைப்பது அரியதாகிறது. மனிதர்களின் வேளாண்மை விரிவாக்கத்திற்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர்.  காடுகளில் வாழ்ந்து வரக் கூடிய யானைகள் எங்கே செல்வது எனத் தெரியாமல் காடுகளாய் இருந்து மாற்றிய விவசாய நிலங்களை அழிக்கிறது.  மனிதர்களையும் முரட்டுத்தனமாகத் தாக்குகிறது. இதனால் மனிதர்களால் யானைகள் கொல்லப்படுகின்றன.  யானைகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும் போது யானைகள் எங்கு செல்லும்.  இவ்வாறான யானைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முரண்பாடுகளால் ஆண்றொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாக ஆய்வு கூறுகின்றது. யானைகள் தனக்குத் தேவையான செடி, கொடி, பட்டை போன்ற தாவர உண்ணிகள் கிடைக்கப்பெறாததால் தான் ஊருக்குள் வந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் நாசப்படுத்தியும் விடுகின்றன என்பதை அறியலாம்.

உடலமைப்பு

          பெரும்வாரியான யானையினங்கள் ஆப்பிரிக்கக்காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.  பெரிய உருவம், தந்தம், துதிக்கை, சிறிய கண், நீண்டக் காதுகள், புடைத்த நெற்றி மேடுகள், நான்கு கால்கள், சிறிய வால் என யானையின் உடலமைப்பு அமைந்திருக்கும்.  ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகள் உருவத்தில் பெரியவையாக இருக்கும்.

(i) தும்பிக்கை

          யானைக்குக் தும்பிக்கைப் போன்று மனிதனுக்கு நம்பிக்கை வேண்டும் எனும் பழமொழி நம்மிடையே உண்டு.  அதுபோல யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கையே ஆகும்.  நற்றிணையில்,

          “இரும் பிணர்க் தடக்கை நீட்டி, நீர் நொண்டு

          பெருங்கை யானை பிடி எதிர் ஓடும்”  (நற்.186:2-3)

          நீர் சேருகின்ற இடத்தில் யானையானது தனது நீண்ட துதிக்கையால் தண்ணீரை உண்டது என்கிறது இப்பாடல்.  மேலும் வலிமை மிகுந்த நீண்ட துதிக்கையைக் கொண்டது யானை (நற்.194),யானைகள் தும்பிக்கையின் நுனியால்தான் மூச்சு விடுகின்றன (நற்.253), யானையின் தும்பிக்கைகள் தினைக்கதிர்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன(நற்.344). யானைகளின் தும்பிக்கைகள் 40,000 தசைகளாலும்; எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியதுமாகவே அமைந்திருக்கிறது.  தும்பிக்கையின் உதவியால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்கமுடியும்.  உணவு உண்ணுவதற்கும், பகை விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு வளையமாகவே தும்பிக்கை அமைகின்றது.

(ii) தந்தங்கள்

          யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன.  இவைகளுக்கு யானைக்கோடு என்று பெயர்.  இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டும் தான் தந்தம் உண்டு.  பெண் யானைகளுக்கு தந்தம் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்க காட்டு யானைகளுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து யானைகளுக்கும் தந்தம் உண்டு.  இந்தத் தந்தமே யானையின் கடைவாய் பற்களின் வளர்ச்சிதான் இப்படி நீண்டு இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

          யானைகளின் தந்தங்கள் 10 அடி வரை வளரக் கூடியதாகும்.  90 கிலோ கிராம் எடை வரை இருக்குமாம்.  யானையின் தந்தத்திற்கு மக்களிடத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு. யானையின் தந்தத்தை வெட்டி அணிகலன்களாகவும், கதவு, நாற்காலி, படுக்கைக் கால்;கள் எனச் செய்து கொள்வதனால் மக்கள் தந்தத்திற்கு பெருமளவு பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.  நற்றிணையில்,

          “புலியொடு பொருத புண் கூர் யானை

          நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்” (நற்;.65:5-6)

          புலியுடன் சண்டையிட்ட யானையானது தோற்று ஓடியது.  அதைக் கண்ட கானவர்கள் அம்பெய்தி அந்த யானையைக் கொன்றனர்.  யானையின் தந்தத்தை கானவர்கள் எடுத்தார்கள் என ஆசிரியர் கூறுகின்றார்.  இறந்த யானையின் தந்தத்தை எடுத்து பாறையின் மீது காய வைத்தார்கள் என்றும் நகங்களை ஊனின்றுப் பிரித்து எடுத்தார்களாம் கானவர்கள் (நற்.114) என்றும், யானையின் ஒற்றைத் தந்தத்திற்கு அருவியின் நீரை உவமையாகவும் சுட்டப்படுகிறது (நற்.24). மனிதர்களின் சுயநலத்திற்காக யானைகள் கொல்லப்பட்டுப் தந்தங்கள் களவாடப்பட்டு வருகின்றன.

(iii) காதுகள்

          யானைகள் நன்குப் பெரிய அகன்ற மடல் போன்;ற காதுகளைக் கொண்டுள்ளன.  யானையினுடைய செவியானது ஆம்பல் இலைப் போன்று அகலமாக உள்ளது என,

          “முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை” (நற்.230:1)

          நற்றிணைப் பாடல் கூறுகின்றது.  தாமரை இலைப்போல் யானையின் காதுகள் உள்ளன (நற்.310:2)என்றும், முறம் போன்ற பெரிய காதுகளை உடையது யானைகள் என உவமையாகக் கூறப்படுகின்றன.  யானையின் உடலில் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக காதுகள் பெரியதாக இயற்கை அமைத்திருக்கிறது.  காதுகளை அசைத்து காற்று குளிர்விக்கப்பட்டு உடலினுள் வைக்கப்படுகிறது.  அதனால் தான் யானைகள் எப்போதும் தன் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

(iv) கால்களும் தோலும்

          யானைகள் வலிமையான கால்களைக் கொண்டுள்ளன.  தன் உடல் எடையை தாங்குவதற்கேற்பச் செங்குத்தான கால்களும், அகன்றப் பாதங்களும் பெற்றுள்ளன.  இளைப்பாறுதலைத் தவிர மற்ற நேரங்களில் அமருவதில்லை.  தண்ணீரில் யானைகள் நன்றாக நீந்தக் கூடியவை.  யானையின் தோல் மிகவும் தடிப்பானது. தோலின் தடிமன் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் அளவுடன் உள்ளதாக இருக்கும்.  யானைகள் தன் தோல்களின் மூலம் உணர்வு திறனை வளர்த்துக் கொள்கின்றது.

(v)அறிவாற்றலும் புலன் உணர்வும்

விலங்கு இனங்களில் யானையின் மூளையே பெரியதாகும்.  யானைகள் நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டது.  அவை மட்டுமல்லாமல் யானையினுடைய கண்கள் சிறியவையாக இருப்பதால் கிட்டப்பார்வையைக் கொண்டது.  அதனால் கேட்கும் திறனையும், மோப்பத் திறனையும் அதிகமாகப் பெற்றுள்ளன.

          “களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடுநீறு” (நற். 302:7)

மக்கள் நடந்துச் செல்லக் கூடிய சுர வழியிலே யானைகள் ஒன்றோடு ஒன்று கால்களால் உதைத்து விளையாடியதால் அவ்விடமானது புழுதி நிறைந்துக் காணப்பட்டது என நற்றினைக் கூறுகின்றது. வெளிநாடுகளில் யானைகளுக்கு இடையில் கால்பந்து விளையாட்டை வைத்து வெற்றிப் பெற்ற யானைகளுக்குப் பரிசு வழங்குவதை நாம் தொலைக்காட்சியில் கண்டிருப்போம்.  அதைப் போல செக்குடியரசு நாட்டில் பராகுவே நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆசியாவைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் யானை 12 ஓவியங்களை வரைந்திருக்கிறது.  அவ்வோவியங்களை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் (21.09.2012,ப.16) வெளியிடப்பட்டுள்ளது.  யானைகள் தண்னுணர்வு கொண்டவை.  தன்னையும், தன் இனத்தையும் விரைவில் அறிந்து கொள்ளும். யானைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என  நற்றினைக் கூறுகிறது.

                             “சிறு கண்யானைப் பெருங் கை ஈர் இனம்

                          குளவித் தன் இயம் குழையத் தீண்டி” (நற்.232:1-2)

          சிறியக் கண்ணையும், பெரிய கையையும் உடைய ஆண், பெண் யானைகள் பச்சை நிறமுடைய வயல்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் குளத்திலே குளிக்குமாம்.  அப்போது ஊடலின் காரணமாக இரு யானைகளும் மலை வாழையை உண்ணாது ஊடலைப் போக்க வழியைத் தேடிக் கொண்டிருக்குமாம்.  ஊடல் தீர்ந்தவுடன் பலா மரத்தினுடைய இனியப் பழத்தை உண்டு மகிழ்ந்ததாம்.  இப்படி உணர்வு மிக்க யானைகள் பல வாழ்ந்து வந்திருக்கிறது.

உணர்ச்சி மிகு வாழ்க்கை

    யானைகள் எப்போதும் தன் குடும்பத்துடன் சேர்ந்தே வாழும் பழக்கமுடையது. தன் குடும்பத்தில் வாழும் பிடிக்கும், கன்றுக்கும் பாதுகாப்பாக ஆண் யானைகள் இருந்து வருகின்றன.  சில நேரங்களில் மனிதர்களைப் போலவே அன்பைக் காட்டுவதில் ஒப்பற்றதாக யானைகள் விளங்குகின்றது.  கன்றுடன் பிடி நீருக்காக வந்து நின்றன. (நற்.105:4) என்றும்,

                              “பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப பத்தர்

                          புன் தலை மடப்பிடி கன்றொரு ஆர.” (நற். 92:6-7)

  பசுக்களுக்காக வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியிலே, களிற்றுயானையானது தன்னுடைய பிடியும், கன்றும் தண்ணீர் நிறைய உண்ணுமாறு செய்து தாகத்தைத் தீர்த்ததாம். பெண் யானையுடன் ஆண் யானையானது மிகுந்த விருப்பமுடன் சேர்ந்தது (317) என்றும், பிடியானது மிகுந்த வலியுடன் கன்று ஈனுகிறது.  பிடியின் வலியைப் பொறுக்க மாட்டாத ஆண் யானையானது வெளியே வந்து காத்து நின்றதாம்.  கன்று பிறந்தவுடன் கலங்கிய கண்ணீருடன் தன் பிடியையும்  கன்றையும் பார்த்தது(399:6-7) என்றும், கன்றை ஈன்ற பிடி பசியால் துடித்தது.

ஆண்யானை உணவுக்காகத் திணையைக் கவரச் சென்றது (393:2-4) பிறந்த இளம் கன்றுகள் தன் உடலை வேங்கை மரத்திலே தேய்த்துக் கொண்டதாம் (362:7) உணவுக்காக வெளியேச் சென்றிருந்த ஆண் யானை திரும்பி வந்து பார்க்கும் போது பெண் யானை இல்லாமல் போகவே; மனம் பயம் கண்டு பிளிருமாம் (317:1) ஒரு வேளை பெண் யானை இறந்தால், அவற்றைத் தாங்கிக் கொள்ளாத ஆண்யானையானது திணைக் காட்டிற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது (108:2) போன்றச் செய்திகள் நற்றிணையில் யானைகள் குடும்பம் நடத்தும் பாங்கினைச் சுட்டுகின்றது.  மனிதர்களுக்கு நிகராக அன்பு காட்டி உணர்ச்சி மிகுந்த வாழ்க்கையினை வாழ்ந்துக்கொண்டிருக்கிறது யானைகள் என்பதை அறியலாம்.

தொன்றுத் தொட்டு வரும் பகை

          நற்றிணையில் யானைக்கு பெரும்பகையாக புலியே இருந்து வருகின்றது.  கன்றுடைய வேழம் புலிக்கு பயந்து குட்டியைக் காத்து நின்றதாம். (நற்.85:5) யானையைப் பார்த்து புலி அஞ்சி ஓடியது (நற்.217:2) எனவும், சங்க இலக்கியங்களில் குறும்.141:4-5, 343:1-3, மலைபடு.307-309 கலி.38:6-7, 42:1-2, 48:1-7, 49:1-2, 52:1-4,  அகம்.332: 2-9 போன்ற செய்யுள்களில் யானையானது புலியைத் தாக்கிக் கொன்றச் செய்தி இடம் பெறுகின்றது. நற்றிணையில்,

                   தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்

                 கொன்ற யானைக் செங் கோடு கழாஅ.” (நற்.247:1-2)

          வலிமை மிகப் பெற்றுள்ள யானை தொன்றுதொட்டு வரும் பகையினால் சினந்து புலியைக் கொன்றதாம், நுழைய முடியாத குகையிடத்தில் யானை கரும்புலியைத் தாக்கிக் கொன்றது (நற்.151:2-3) போன்றச் செய்திகள் யானைக்கும் புலிக்கும் உள்ள தொடர்பை நினைவுப்படுத்துகின்றது. பல சிங்கங்கள் சேர்ந்து தனித்து வந்த யானையைக் கொல்லும்.  ஆனால், இதுவும் அரியதாகவே காணப்படுகிறது.  சங்க காலத்தில் புலிகளுக்கும் யானைகளுக்கும் சண்டை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் பொதுவாக யானைகளை எந்தவொரு விலங்கும் வேட்டையாடுவதில்லை.

கடும் போராளிகள்

          ஆய் அண்டிரன் பல யானைகளை வைத்திருந்தான் (237), போர்க்காலங்களில் விரைந்து நடக்கும் யானைப் படைகள் இருந்து வந்தன (381, 43) காவல் மதிலைப் பலவற்றைச் சிதைக்கும் களிறுப் படைகள் (150)இருந்தன எனச்; செய்திகள் நற்றிணைப் பாடல்கள் கூறுகின்றன.  அக்கால மன்னர்கள் யானையின் மீது ஊர்ந்துக் செல்லவும். போர்க்களத்தில் யானைகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்தார்கள்.

              “பொருத யானை வெண்கோடு கடுப்ப” (நற்.225:2)

முருகக் கடவுளின் வலிமையை ஒத்த சினமுடைய யானையானது போர்களத்திலேப் போரிட்டது. அப்போது அதனுடைய வெண்மையான தந்தம் குருதி படிந்து சிவந்திருக்குமாம்.  அப்படி சிவந்திருந்த குருதிப் படிந்த தந்தத்தை வேங்கை மரத்திலே குத்தி குத்தி துடைத்துக் கொள்ளுமாம் (நற்.202) இப்படி யானைகள் கடும் போராளிகளாக இருந்து வந்தன.

          யானைகளைக் கட்டிக் காப்பவருமான பாகர்கள் சரியான முறையில் உணவுக் கொடுத்தும் நன்றாகப் பாதுகாத்தும் வர வேண்டும்.  ஆனால் பாகர்கள் யானையை துருப்பு முள்ளாலேக் குத்தி துன்புறுத்தி தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வதும் உண்டு.  அக்கால மக்கள் யானையை மதித்தார்கள்.  அதனால்தான் என்னவோ விநாயகர் கடவுளுக்கு யானையின் முகம் இட்டு போற்றி வணங்குகிறார்கள்.  இறைவன் படைத்த அரிய படைப்புகளில் யானையினங்களும் ஒன்று. அவற்றினைப் பாதுகாப்போம்; பாரம்பரியம் காப்போம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தன்னம்பிக்கை கட்டுரை – 2

மனப்பான்மையை உயர்த்துங்கள்

    உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு எது தடையாக உள்ளது? என்பதைக் கவனிக்க வேண்டும். புறத்தடைகள் அல்ல. அகத்தடைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும். மனதில் உள்ள தடைகள் என்ன? எதற்கெடுத்தாலும் ஒரு தயக்கம். இதை நம்மால் செய்ய இயலுமா? இயலாதா? தோல்வியுற்றால் மற்றவர்கள் தம்மை கேலிசெய்வார்கள் கீழ்த்தரமாகப் பேசுவார்கள் என்ற எண்ணம். ஒரு செயல் தன்னால் செய்யப்பட வேண்டும் என்ற நிலையிலும் அதைச்செய்யாமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? என்று பார்ப்பது தன்கடமைகளைத் தட்டிக்கழிப்பது போன்ற எண்ணங்களே அகத்தடைகள் எனக் கூறலாம். இவ்வாறான மனோநிலை நிகழ்ந்தால் தனக்கு நன்றாகத்தெரிந்த செயலைக்கூட செய்வதற்குத் தயக்கம் ஏற்படும். தாழ்ந்த மனோபாவம் எவ்வாறு ஏற்படுகிறது என்று பார்த்தோமானால், சிறுவயதில் உடன் பிறந்தவர்களால், உறவினர்களால், நண்பர்களால், சுற்றியுள்ள சூழ்நிலையால் உண்டாகி இருக்கும். உதாரணமாகப் பெற்றோர்களில் பலர் தனது குழந்தைகளுக்கு எந்தவிதமான செயலையும் செய்ய விடுவதே இல்லை. பற்களைச் சுத்தம் செய்வதிலிருந்து குளிப்பது, பள்ளிக்குச் சென்றுவிட்டு வருவது சமைப்பதுவரை தானே எல்லாவற்றையும் செய்து விடுவார்கள். “இது உனக்கு ஒன்றும் செய்யத்தெரியாது. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிடுவார்கள். குழந்தைகளை ஒன்றும் அறியாதவர்களாக அனுபவம் அற்றவர்களாக வளர்த்து விடுகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வளர்ந்து பொது வாழ்க்கைக்கு செல்லும்போது, உறவினர்களால் நண்பர்களால் மிகவும் தாழ்வாகப் பேசப்பட்டு தனக்கு எதுவும் சரியாகச் செய்ய வரவில்லை. இனி நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேவையற்ற விமர்சனங்களால் நாளடைவில் தானேதன்னை தாழ்வாக எண்ணும் நிலை ஏற்பட்டு விடும். இந்த எண்ணத்தால் மீள முடியாமலும், ஒருசெயலை செய்ய இயலாமலும் தள்ளாடும் நிலை உருவாகிவிடுகிறது.

அனுபவங்களைக் கற்றுக்கொடுங்கள்

          ஒரு குழந்தையிடம், ஒரு செயலைச் செய்யுமாறு தூண்டவேண்டும். அச்செயலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். பலமுறை தவறிவிடும். ஒரு வேலையை செய்யும் போது உன்னால் முடியும் என்று ஊக்குவித்தலில் ஒரு குழந்தை வளர்ந்தால், அது வெற்றியாளனாக மாறும். ஒரு குழந்தைக்கு பென்சில் கூட பெற்றோர்கள் சீவிக்கொடுத்து, நீ சீவினால் முள் உடைந்துவிடும் என்று அதன் திறனை தாழ்மைப்படுத்தும் சூழலில் வளரும் குழந்தை தன்னம்பிக்கை அற்றதாக மாறி அது மற்றவரை நம்பும் தன்னை நம்பாது. தனக்கு ஒன்றுமே செய்ய வராது என்று தன் முயற்சியை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும். இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தை கையாலாகாதவன் என்று சமுதாயத்தால் பேசப்பட்டு மதிப்பில் கடைக்கோடிக்குத் தள்ளப்படுவான்.

     எனவே ஒரு குழந்தையைப் பல விமர்சனங்களுக்கு இடையிலோ, அதிகாரத்தைக் காட்டியோ, வெறுத்து ஒதுக்கும் நிலையிலோ வளர்க்காமல், பல அனுபவங்களைக் கொடுத்து அவற்றின் மூலம் அவர்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டு சமுதாயத்தில் தன்னை முழுமனிதனாக மதிப்புமிக்கவனாக வாழச்செய்ய வேண்டும்.

2.2 உங்களுக்கு உரியதைக் கண்டறியுங்கள்

           காட்டில் வாழும் மிருகங்களில் வீரம்மிக்கது சிங்கமும் சிறுத்தையுமாகும். இந்த மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள பல மிருகங்கள் தம்மை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும். எந்த நிலையிலும் எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற உண்மையை அறிந்தனவோ என்னவோ அந்த மிருகங்கள் தாக்கவரும் மிருகங்களைக் காட்டிலும் வேகமாக ஓடும். அப்போதுதான் அதுபிழைக்கும் இல்லையென்றால் தாக்கப்பட்டுவிடும். சிங்கத்தைவிட மான் வேகமாக ஓடும்; ஓட வேண்டும். இந்தக் காட்டுசூழலில் மிருகங்களில் மிக உயரமான நீண்ட கழுத்தைக் கொண்டது ஒட்டகச்சிவிங்கி. அது கருவுற்றுக் குட்டி ஈனும்போது நின்றுகொண்டே ஈனும். அப்போது அதன் குட்டிக்கு உயரத்திலிருந்து விழுவதால் உடல் அடிபட்டு அந்த வலியால் அது எழந்திருக்காமல் அப்படியே படுத்திருக்கும். அதன் உடல் முழுவதும் குருதி சிவப்பாகக் காணப்படும். இவ்வாறு சிறிதுநேரம் கடந்ததும் தாய் ஒட்டகச்சிவிங்கி தன்காலால் எட்டி உதைக்கும். குட்டி எழும்வரை உதைத்துக் கொண்டே இருக்கும். அந்த அடியின் வலி தாங்கமுடியாமல் குட்டி எழுந்து ஓட ஆரம்பிக்கும். தாய் தன்குட்டியை அழைத்துக்கொண்டு வேறுஇடம் சென்றுவிடும். தாய் அவ்வாறு குட்டியை உதைப்பதற்குக் காரணம், குருதியின் வாசனை சிங்கம் போன்ற வேட்டையாடும் மிருகங்களுக்குத் தெரிந்துவிட்டால் அது குட்டியைத் தின்றுவிடும். குட்டி அந்த ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தாய் வலியை தானே தருகிறது. இவ்வாறு பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குப் பல கடினமான அனுபவங்களைக் கொடுத்திருந்தால், அவர்கள் சமுதாயத்தில் எப்படி நிலைநாட்டி கொள்வது என்பதை கற்றுத் தெளிந்திருப்பார்கள். பெற்றோர்களில் சிலர் தம்குழந்தைகளுடன் மற்றவரை ஒப்பிட்டுப் பேசி இவரை தாழ்த்திப்பேசுவது உன்னால் ஒன்றும் ஆகாது என்று பேசிப்பேசி நம்பவைப்பது. இவையெல்லாம் தாழ்மையான மனோபாவத்திற்கு இட்டுச்செல்கின்றன.

2.3 மனநிலையை மாற்றுங்கள்

         தவறு செய்தால் சரியாகr செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாகக் கவனித்தோமென்றால் தவறு செய்வதும் ஒரு அனுபவமே. நடந்தவை நடந்ததுவிட்டன. சென்ற காலம் திரும்பாது. இனி அந்த தாழ்மையான எண்ணத்திலிருந்து தன்னை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை சிந்தனை செய்யலாம்.

       உங்களை மீட்பதற்கு எந்தக் காரணத்தையும் முன்வைக்காமல் ஆர்வத்துடன் தொடங்குங்கள். முதலில் ஒரு தாளை எடுத்துக்கொண்டு உங்கள் முயற்சிக்கு எவையெல்லாம் தடையாக உள்ளன; எவையெல்லாம் சரியாக உள்ளன என்பதை தனித்தனியாக எழுதுங்கள். தடையாக உள்ள செயல்படுகளை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒன்று மாற்ற முடியாதவை. அடுத்து மாற்றக்கூடியவை. மாற்ற முடியாதவைகளான முகம் கறுப்பாக இருப்பது. காது நீளமாக இருப்பது ஆகும். ஆனால் சிலர் கறுப்பாக இருந்தாலும் கலையான முகத்தைப் பெற்றிருப்பார்கள். சிலர் காதுகள் நீளமாக இருந்தாலும் அழகான கண்களைப் பெற்றிருப்பார்கள். எனவே அழகானவற்றை இறைவன் கொடுத்துள்ளார் என்று உயர்வாகத் தன்மனதில் எடுத்துக்கொள்வதும் கறுப்பாக இருக்கிறோம் என்று தாழ்வாக நினைப்பதும் உங்கள் மனோநிலையில்தான் உள்ளது. இறைவன் படைத்த உங்கள் உறுப்புகளில் இல்லை. இவற்றை உங்களால் மாற்ற இயலாது.

2.4 முடிந்தவற்றை மாற்றுங்கள்

         மாற்றமுடிந்த தடைகள், குணங்கள், செயல்கள், பழக்கங்கள் உங்களிடம் இருக்கும். இவற்றை நீங்கள் முயற்சி செய்தால் மாற்ற முடியும். உதாரணமாக உங்களால் காலையில் ஐந்து மணியளவில் எழுந்திருக்க முடியாது. ஆனால் எழுந்துவிட்டால் அன்று முழுவதுமே உங்கள் செயல்களை ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்வீர்கள். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு இந்தத் தூக்கம் தடையாக உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் இதுவரை ஏழுமணிவரை உறங்கும் நீங்கள் ஒருநாளில் அரைமணி நேரம் முன்னதாக எழுந்து ஒவ்வொரு நாளும் உறங்கும் நேரத்தைக் குறைத்துத் தினமும் அதிகாலை ஐந்துமணிக்கு எழுந்துவிடும் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள். இது உங்களால் மாற்ற முடிந்த தடை.

      ஒவ்வொன்றும் இவ்வாறு உங்களின் முயற்சியால் நீங்கள் செய்யும் செயல்கள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களிடம் எவை குறையாக உள்ளன என்பதைக் காட்டிலும் எவை நிறைவாக உள்ளன என்பதை உணருங்கள்.

2.5 உங்களின் கைவந்த கலை

           நிறைவானவற்றைக் கொண்டு உங்களை எந்த உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை சிந்தனை செய்யுங்கள். அழகான மார்க்கம் ஒன்று புலப்படும். ஒரு காட்டில் பலவகையான மிருகங்கள் வாழ்ந்தன. அந்த மிருகங்களில் உருவத்தில் பெரிதாக இருப்பவை ஒன்றுசேர்ந்து கூட்டம் நடத்தின. யானைகள், சிங்கம், புலி போன்றவை சேர்ந்து பேசி தமது மிருகஇனத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தலாம் என்று முடிவு செய்தன. மற்ற மிருகங்களும் இதற்கு ஒப்புதல் அளித்தன. பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு, கல்வி கற்கப்பட்டு திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அவைகளுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்பட்டன. அவை நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், மரமேறுதல், குழியை பறித்தல், பறத்தல், கூடு கட்டுதல், உயரம் தாண்டுதல், கூவுதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. இவை அனைத்தும் ஏற்கனவே எல்லா மிருகங்களுக்கும் கற்றுத் தரப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

       போட்டிகளில் முதலாவதாக மரம்ஏறும் போட்டி. குரங்குகள் மிக வேகமாக மரம் ஏறிவிட்டன. மற்ற மிருகங்கள் முடியாமல் தோல்வியைத் தழுவின. நீச்சலடிக்கும் போட்டியில் முதலைகளிடம் மற்றவை தோற்றன. குழித்தோண்டும் போட்டியில் பன்றிகள் வெற்றி பெற்றன. குழி தோண்டிய பறவைகளுக்கு இறக்கைகள் முறிந்து விட்டன. பறக்கும் போட்டியில் பருந்துகள் பரிசை வென்றன. மற்றவை தோல்வி அடைந்தன. இவ்வாறு உங்களுக்கு எந்த துறையில் வல்லமை அதிகம் என்று கவனியுங்கள். அதனை எவ்வாறு செய்தால் மற்றவரை விட சிறப்பாகச் செய்ய இயலும் என்பதை உணருங்கள். இல்லை என்றால் பறவைகள் குழிதோண்டி இறக்கைகளை உடைத்துக் கொண்டதைப் போல ஆகிவிடும்.

2.6 உங்களுக்கானதை முயற்சி செய்யுங்கள்

        உங்களுக்கான இடம் எது? துறை எது? என்பதை அறிந்து அதில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள். விடாமல் உழையுங்கள். யாருக்கு எது தகுந்தது? தகுதியானது? என்று ஒன்று உள்ளது. அதைவிடுத்து எல்லாவற்றையும் முயன்று, தோல்வி அடைந்து தன்னை தாழ்த்திக்கொண்டு துன்பப்பட வேண்டாம். இவையெல்லாம் சிந்தனை செய்து தவிர்க்கப்பட வேண்டியவை.

      நீங்கள் சிந்தனைகளை உங்கள் மீது கொண்ட எண்ணங்களை உயர்த்துங்கள். தாழ்மைப்படுத்தும் எண்ணம் மறைந்தோடிவிடும். மனதில் மற்றவர்களைப் பற்றிய எண்ணம் உயர்வானதாக இருக்கலாம். ஆனால், உங்களைத் தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டாம். தன்னை உயர்வாக நினைத்தால் மட்டுமே தன்னம்பிக்கை ஏற்படும். இவனை வெல்ல நான் பிறந்துள்ளேன் என்ற உயர்வான எண்ணம் உருவாகும். எந்த நிலையிலும் இந்த எண்ணம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

         எண்ணங்களை மேன்மைப்படுத்துங்கள். “இந்தச் சமுதாயத்தை நல்ல முறையில் மாற்ற நான் பிறந்துள்ளேன். இந்த நாட்டிற்கு நானே அரசன் நானே சேவகன். இங்கு ஒவ்வொரு மாற்றத்தையும் என்னால் செய்ய முடியும்” என்ற எழுச்சியான எண்ணங்களைக் கொண்டு செயல்களாக மாற்றி பழக்கமாக்கிக் குணமாக மாறினால் நீங்கள் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.

      எனவே மனதின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க உள்ளத்தில் உங்களைப் பற்றிய எண்ணங்களை உயர்த்துங்கள். மற்றவர் மீது நீங்கள் கொண்ட எண்ணத்தை அல்ல.

     வீரத்தின் சிறப்புப் போர் செய்வதில் உள்ளது. உங்களின் உயர்வு மனப்பானமையில் உள்ளது.

ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி

நாலணா சில்லரை (சிறுகதை)

iniyavaikatral.in

 

 அது ஒரு சிறிய வீடு. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டிய இடத்தில் கனகச்சிதமாகவே இருந்தன. வாழைப்பழமும் திராட்சையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைபட்டு கிடந்தன.  அந்த வீட்டில் ஒற்றைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது. கட்டிலின் முன்னால் வெற்று நாற்காலி. ஆனாலும் கட்டிலில் மன இறுக்கத்தோடு படுத்திருந்தார் காசி தாத்தா. கண்களில் வழியும் நீரை துடைத்துக்கொள்ள கூட மனம் வரவில்லை. வழியட்டும் விடு என்று விட்டுருந்தார். வயசில் எப்படியெல்லாம் இருக்க முடியுமோ அப்படியெல்லாம் இருந்தாச்சு. இந்த உலகத்துல என்னன்ன தப்பெல்லாம் பண்ணக்கூடாதோ அதுவெல்லாம் பண்ணியாச்சு. அதனால கல்யாணம் கூட தாமதமாகத்தான் நடந்தது. அவளும் என் கையில ஒரு பொண்ண பெத்துக் கொடுத்துட்டு போய் சேந்துட்டா. என் மனைவி வந்த அப்புறம்தான் நான் என்னையே உணர்ந்தேன். என்ன பன்ன? கடவுள் அதுக்குள்ள அவளை என்கிட்ட இருந்து பறிச்சிக்கிட்டாரு. அவ போனதுல யாருக்கு வருத்தமோ இல்லையோ, கண்டிப்பா எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. நானும் என் மகள் மஞ்சுளாவும் அநாதையாகவே உணர்ந்தோம். என் பொண்ண நல்லா படிக்க வைச்சன். அவ பெரிசான பிறகு கடனவுடன வாங்கி நல்ல இடத்துல கல்யாணமும் பண்ணி வைச்சுட்டேன். மாப்பிள்ள கூட நல்லவருதான். எனக்கு அப்புறம் என்பொண்ண நல்லா வைச்சிப்பாரு என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாச்சு. ஒரு ஆம்பள கொழந்தை இருக்கு. என் பொண்ணு வர போறப்பல்லாம் என்கிட்ட இருக்கிற ஏதாவது ஒன்ன கொடுத்துபுடுவேன். இப்பல்லாம் முன்னமாதிரி வேலைக்கு போவ முடியறதுல்ல. கையிலயும் காசு இல்ல. இங்க ஊருக்காரங்ககிட்ட அப்பப்ப கடன் வாங்கி செலவு பாத்துகிட்டேன். கல்யாண கடன் வேற அப்பப்ப கண்ணு முன்னாலேயே நிக்குது. இன்னிக்கு காலையில வேற கடன் கொடுத்த பைனான்சியர் வீட்டுக்கு முன்னால நின்னு கத்திட்டு போனாரு. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மஞ்சுளா வந்துட்டு போனா… நினைத்துப் பார்க்கிறார் காசி தாத்தா.

“அப்பா… அப்பா….” என்று சொல்லிக்கொண்டே தான் வாங்கி வந்த பழங்களை ஒர் ஓரமாக வைத்தாள் மஞ்சுளா.

“வாம்மா மஞ்சுளா… மாப்பிள்ள எப்படி இருக்காரு? வாடா… வாடா… என் செல்லக்குட்டி” என்று தன்னோட பேரனை தூக்கி தோளோடு சாய்த்துக் கொண்டார் காசி தாத்தா.

“அவரு நல்லாயிருக்காருப்பா… நீங்க எப்படி இருக்கீங்க…” என்றாள் மஞ்சுளா

“ம்ம்… நல்லாயிருக்கம்மா.. ” என் ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

“என்னாப்பா வீடு இப்படி அலங்கோலமா வைச்சிருக்கீங்க” என்று அப்பாவின் பதிலை எதிர்ப்பார்க்காமலே வீட்டை சுத்தப்படுத்த தயாரானாள். அப்பாவின் அழுக்கு துணிகளையும் துவைத்து காயவைத்தாள். கொஞ்சம் அரிசி போட்டு சமைக்கவும் செய்தாள். அதற்குள் பையன் ஆய் போய்விட, காசிதாத்தா அவனை வெளியில் கொண்டுபோய் உட்காந்து பிடித்துக்கொண்டார்.

     “மஞ்சுளா… மஞ்சுளா… குழந்தைக்கு ஆய் கழுவி விடும்மா… என்று காசி தாத்தா மகளை அழைத்தார். மஞ்சுளாவும் மகனை நன்றாக கழுவிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். தந்தையும் மகளும் சாப்பிட அமர்ந்தார்கள்.

     “அப்பா… அப்பா….”

     “என்னம்மா சொல்லு”

     “ஒன்னுமில்ல… உங்க பேரனுக்கு வர வெள்ளிக்கிழமையோட ஒரு வயசாகுது. அத கொண்டாடனுமின்னு அவரு ஆசைப்படரார்”

“அதுக்கென்னமா சந்தோசம்தானே! கொண்டாடிடுவோம்!

“அதுக்கில்லப்பா புகுந்த ஆத்துல நீங்க ஏதாவது பேரனுக்கு நகை போட்டிங்கன்னா நல்லாயிருக்குமின்னு அவர் நினைக்கிறார். அதுமட்டுமில்லாம எனக்கும் அது பெருமைதானப்பா.. அதனால…. இந்தாங்கப்பா பணம். இதவச்சு ஏதாவது நகை எடுத்துட்டு வாங்கப்பா… என்று விக்கி முக்கி சொல்லி முடித்தாள் மஞ்சுளா.

“கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அப்பறம் பொண்ணுகிட்ட காசு பணம் வாங்குறது தப்புமா! எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்க…”.

“உங்க மாப்பிள்ளதான் கொடுத்துட்டு வரச்சொன்னாருப்பா”

“வேணாம்மா நானே பாத்துக்கிறேன்”

“எப்படிப்பா உங்காளால முடியும். சொன்னா புரிஞ்சுக்கோங்கப்பா. புடிவாதம் புடிக்காதிங்க”

“நான் என் பேரனுக்கு பவுணு எடுத்துட்டு வருவேன். பெரிய கேக்கும் வாங்கிட்டு வருவேன். “டே பேராண்டி உன்னோட முத பொறந்தநாள நாம சூப்பரா கொண்டாடிடுவோம். ஏன்னா அடுத்த பொறந்தநாளைக்கு நான் உங்க பாட்டிக்கிட்ட போனாலும் போயிடுவேன்” என்றார்.

“அப்பா அப்படியெல்லாம் சொல்லாதிங்க… நீங்க எனக்கு வேணும்பா… சாப்பிடுங்க” என்றாள்.

     மஞ்சுளா போன பிறகு கட்டிலில் படுத்த காசி தாத்தாவுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. காலையில் கடனுக்காக பைனான்சியர் திட்டியது, இப்போது பேரனுக்கு  பிறந்தநாள் செலவு மனசு குழம்பியிருந்து. வீட்டில் சுத்தமாக காசே இல்லையே! யாரிடம் பணம் கேட்பது. இந்த வயதான கிழவனை நம்பி யார் பணம் கொடுப்பார்கள். தலை கிறுகிறுத்தது.

     அன்று காலையிலேயே காசி தாத்தா எழுந்து கொண்டார். எப்பாடுபட்டாவது காசப் பொரட்டி பேரனுக்கு பவுணு எடுத்துட வேண்டியதுதான். இன்னிக்கு காசுதான் எல்லாமே. பணம் இருந்தாத்தான் மதிப்பு. ஒரு மனுசன் நல்லவனா கெட்டவனான்னு யாரும் பார்ப்பதில்லை. பணம் இருக்கான்னுதா பார்க்கிறாங்க… என்று மனசோடு புலம்பிக்கொண்டே நடையைக் கூட்டினார். கோபாலன் டீக்கடைக்கு வந்து சேர்ந்தார்.

     “தாத்தா டீ போடட்டுமா?” என்று கோபாலன் கேட்டான்.

      “ம்ம்… போடு கோபாலு” என்றார். கோபாலு அப்பா காலத்துல இருந்தே தினமும் இந்த டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடரது காசி தாத்தாவுக்கு வழக்கம். ஒருசில நேரங்களில மறந்துபோய் காசு கொடுக்காம வீடு வரைக்கும் போயிட்டு அப்புறம் ஓடி வந்து கொடுத்துட்டு போவாரு. அதெல்லாம் ஒரு காலம். கையில் சூடான டீ டம்ளரை கொடுத்துவிட்டுப் போனான் கோபாலன்.

     “தம்பி கோபாலு! கொஞ்சம் நில்லுப்பா…”

     “என்ன தாத்தா…”

     “எம்பேரனுக்கு முதபொறந்தநாளு… ஏதாவது செய்யலாமுன்னு இருக்கன். இப்ப என்கிட்ட காசு சுத்தமா இல்ல. இன்னும் ஒரு மாசத்துல நான் குடியிருக்கிற வீட்ட வித்துட்டு மக வீட்டுக்கே போயிடலாமுன்னு தோனுது. அதான் நீ ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்தின்னா… நானு ஒரு மாசத்துக்குள்ள திருப்பிக் கொடுத்துடுவேன் கோபாலு” என்றார் காசி தாத்தா. சிறிது நேரம் மனப்போராட்டத்திற்குப் பிறகு சரி என ஒத்துக்கொண்டான் கோபாலன். கடை உள்ளேச் சென்று வெளியே வந்த கோபாலன் எட்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை காசிதாத்தாவிடம் கொடுத்தான்.

     “தம்பி… நாலாயிரம்தான் இருக்கு! இன்னும் ஒராயிரம் இருந்தா கொடேன். இது பத்தாது தம்பி”

     “தாத்தா என்கிட்ட அவ்வளவுதான் இருக்கு.  இதுகூட சீட்டுக்கு வைச்சிருந்த பணம்தான். நீங்க கேட்டதால கொடுத்தேன். நான் வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே குடித்த டீ டம்ளரை எடுத்தபடியே உள்ளேச் சென்றான் கோபாலன்.

பேரனுக்கு கால்பவுணுக்கு மோதிரம் எடுத்தாச்சு. “மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குள்ள முடிக்கணுமுன்னு பாத்தா மூவாயிரத்து எழுநூறு ஆயிடுச்சி” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மீதி இருக்கிற காசுக்கு பழம், பூ, அழகான பூப்போட்ட சட்டை எல்லாம் எடுத்துட்டு கையில வெறும் ஐந்து ரூபாதான் இருந்தது. இந்தக்காச வச்சிட்டுதான் பொண்ணு ஊருக்கு போவனும். ஊருக்கு போனபின்னாடி திரும்பி வர்ரதுக்கு……. பாத்துக்கலாம்….. போ….. என்று நினைத்துக் கொண்டார்.

அன்று மதியம் நாலு மணிக்கே பஸ் ஸ்டாப்பிற்கு வந்து விட்டார். “இங்கேயிருந்து 12ம் நம்பர் பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே முக்கால் ரூபா ஆகும். அந்தப்பக்கம் 1B  பஸ்ஸ புடிச்சமின்னா ரெண்டே காலுரூபா ஆகும். ஒன்னும் பிரச்சனை இல்ல. பேரனோட பொறந்தநாளுக்கு போயிரலாம்” என்று கணக்கு போட்டுக்கொட்டிருந்தார். பஸ்சு வர்ர திசையே வெறித்துப் பார்த்து சலித்துப் போனார்.  நாம சீக்கிரம் வரும்போது பஸ் லேட்டா வரும். நாம லேட்டா வரும்போது பஸ் சீக்கிரமா வந்துரும். அதுபோலத்தான் அன்னிக்கும் நடந்தது. அந்த ஊருக்கு முன்னால ஊருல ஏதோ சாதி பிரச்சனைனால மக்கள் எல்லோரும் ரோட்டுல வந்து உக்காந்துட்டாங்க. அதனால நாலு பத்துக்கு வரவேண்டிய பஸ் ஐஞ்சரைக்குத்தான் வந்தது. காசி தாத்தாவுக்கு மனசு படபடத்தது.

“ஆறு மணிக்கு பொறந்தநாள கொண்டாடுறோம்ன்னு மஞ்சுளா சொல்லிச்சே. இப்பவே ஐஞ்சரை ஆயிடுச்சி. நாம எப்ப ஊருக்கு பொறதுன்னு தெரியலையே”

அனைவரும் பஸ்ஸில் ஏறினார்கள். காசிதாத்தா தன்னோட கையில் இருக்கிற ஐந்து ரூபாயையும் கையில் பிடித்துக்கொண்டிருந்த கட்டை பையையும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

“எல்லோரும் சில்லரையை கையில் எடுத்துக்கோங்க.. என்கிட்ட சுத்தமா சில்லரையே கிடையாது. ஐஞ்சு ரூபா டிக்கெட்டுக்கு நூறு நூறு ரூபாவா கொடுத்து என்கிட்ட சில்லரை வாங்க நினைக்காதிங்க” என்று கத்திக்கொண்டே  காசிதாத்தாவிடம் வந்தார். கண்டக்டரிடம் மூன்று ரூபாயைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டார்.

கண்டக்டர் டிக்கெட் கொடுத்துவிட்டு “டிக்கெட்… டிக்கெட்… டிக்கெட்…” என்றபடியே பஸ்ஸின் அடுத்தப்பகுதிக்கு செல்ல முயன்றார்.

“கண்டக்டர் தம்பி…. எனக்கு நாலணா சில்லரை பாக்கி இருக்கு தம்பி” என்றார்.

“வெயிட் பண்ணுங்க… நான் என்ன அச்சா அடிக்கிறன். டிக்கெட் கொடுத்துட்டு வந்து தரன்” பேருந்து கொஞ்ச தூரம் சென்றது. ”இப்பவே ஐஞ்சே முக்கால் ஆயிடுச்சி. இன்னேரம் எல்லோரும் வந்திருப்பார்களே! இன்னும் தாத்தா வரலன்னு பேரன் நினைப்பானே! மஞ்சுளாவ அவுங்க வீட்டுல உள்ளவங்க தப்பா பேசுவாங்களே! மாப்பிள்ள என்ன நினைப்பாரு! தெரியலையே…. ஐயோ….இந்த பேருந்து வேற நத்தை போல ஊருதே.

கண்டக்டர் டிக்கெட் எல்லாம் கொடுத்துவிட்டு காசிதாத்தாவை கடந்தார். ”தம்பி என்னோட நாலணா சில்லரை பாக்கி இருக்குபா” என்றார்.

“யோ… பெரியவரே உன்னோட நாலணாவா நான் வச்சிட்டு மாடி வீடா கட்டப்போறேன். இருய்யா தரேன்” என்று கோபத்துடன் காசிதாத்தாவை முறைத்து பார்த்துவிட்டு சென்றான். தற்போது வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்தது. மழை பொத்துக்கொண்டு ஊத்தும் போலிருந்தது. காத்து தூக்கி அடிக்க தயாராகயிருந்தது. பேருந்தில் கூட்டம் கொஞ்சகொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே போனது. பேய் மழை கொட்டியது. பஸ்சிலும் ஆங்காங்கே ஒழுக ஆரமித்தது. அந்தக்காற்றிலும் குளிரிலும் காசிதாத்தாவுக்கு முகம் வேர்த்துதான் போயிருந்தது. சீக்கிரம் பொண்ணு வீட்டுக்கு போவனும். இன்னொருபுறம் கண்டக்டர் கொடுக்குற நாலணா இருந்தாதான் அந்தாண்ட பஸ்ஸ புடிக்க முடியும்.  என்கிட்ட காசு இல்ல… அந்த நாலணா சில்லரை எனக்கு வேணும்முன்னு எப்படி கேட்குறது. வயசும் ஒத்துக்கல. கௌரவம் வேற தடுக்குது. ஆனா கேட்கனுமுன்னுதான் காசிதாத்தா கண்டக்டர்கிட்ட போறார். அதுக்குள்ள அவர் இறங்குற இடமும் வந்திருச்சு.

     “எல்லாரும் இறங்குங்க… எல்லாரும் இறங்குங்க… ”

     கொட்டுற மழையில் படியிலிருந்து ஏறிய ஒருவரை, “யோவ் நில்லுய்யா… இறங்கட்டும். அப்புறம் ஏறிக்குவ… இறங்குய்யா…” ஆனால் அடிக்கிற மழையில அவர் கண்டக்டர் சொன்னத காதுலயே வாங்கிக்கல… அடிச்சு புடிச்சு பஸ்சுல ஏறிக்கிட்டார்.

“கண்டக்டர் தம்பி என்னோட பாக்கி நாலணா சில்லரையை கொடுப்பா.. என்னோட இடம் வந்திருச்சு…”

“யோவ் என்னய்யா உன்னோட ரொம்ப ரோதனையா போச்சு… வயசான காலத்துல என் உயிர வாங்கவே வரீங்களா!”  என்று பையைப் பார்த்துவிட்டு என்கிட்ட நாலணா சில்லரையே இல்ல. அப்புறம் வாங்கிக்கோ… இப்ப கீழ இறங்கு” டிரைவர் ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தான். 

“என்ன அப்பறம் வாங்கிக்கிறதா…. எனக்கு இப்பவே வேணும்” “ஐயோ நாலணா இல்லையன்னா எப்படி ஊருக்கு போறது. முழிக்கிறார் காசி தாத்தா.

“தரமுடியாது… கீழ இறங்குய்யா…” 

“சில்லரைய வாங்காம நான் இந்த இடத்த விட்டு இறங்கமாட்டேன்”

“என்னய்யா போராட்டம் பன்றியா? உன்ன என்ன பன்றன் பாரு” என்று காசி தாத்தாவின் கையைப் பிடித்து பேருந்தில் இருந்து இறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான் கண்டக்டர்.

“ஏப்பா… அவரோட காச கொடுத்தின்னா அவரே இறங்கிடுவாருல்ல” என்று பஸ் கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.

“உனக்கென்ன… உங்க வேலைய மட்டும் பாருங்க… எல்லாம் எனக்கு தெரியும்!

மீண்டும் வலுக்கட்டாயமாக காசிதாத்தாவை வெளியே தள்ள முயன்றான். முடிந்தவரை தம்கட்டிப்பார்த்தார். முடியவில்லை… ஓய்ந்து போனார். படிக்கட்டில் கால் வைத்தவரை கண்டக்டர் ஒரு தள்ளுதள்ளினான். கால் வழுக்கியது. கையில் வைத்திருந்த சில்லரை சிதறியது. பை ஒரு பக்கமாக பறந்தது. நேராக மழைத் தண்ணீர் தேங்கியிருந்த குட்டையில் தலைக்குப்புற விழுந்தார். மழை துளியானது அவரை விழுங்கியது. மனதில் தோன்றிய எண்ணப் போராட்டங்களைக் கண்ணீரோடு சேற்றால் அப்பியிருந்தது. பேருந்து கண்டக்டரின் விசிலுக்கு முன்னே நகர்ந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தலைகொண்டம்மன் கோயில் வழிபாட்டு முறையும் விழாவும் (ஆய்வுக்கட்டுரை)

 
 

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்”

(தொல்.அகத்திணை.நூ.5)

என்று தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களுக்கு திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய நான்கு நிலக்கடவுள்கள் இருந்திருக்கின்றனர் என்கிறார். இறைவழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதிய ஒன்றன்று.  பன்னெடுங் காலத்திற்கும் மனிதன்  தன்னை அச்சுறுத்திய இயற்கையை வணங்கினான். தனக்கு ஊறு விளைவித்த உயிரினங்களைப் பயத்தின் காரணமாகவும் தனக்கு இணக்கமாக இருந்து இறந்த உயிரினங்களை அன்பின் காரணமாகவும் வணங்கினான். இம்முறை வழிபாடு எந்த நூற்றாண்டில் யாரால் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்பது அறிய முடியாத ஒன்று.

     பிற்காலத்தில் மனிதன் தனக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எல்லாம் தன் முதாதையர்கள், போரில் வீரமரணம் அடைந்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள்தான் காரணமென்று நடுகல் வைத்து வழிபட்டான். இவ்வழிபாட்டு முறையே சிறுதெய்வ வழிபாட்டிற்கு கால்கோல் இட்டது எனலாம். இக்கருத்தை மெய்பிக்கும் வகையில் “இயற்கை வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து பல தெய்வ வழிபாட்டுக் கொள்கை ஏற்பட்டது. அதில் கிராமப் பகுதியில் உள்ள அம்மன், மதுரை வீரன், முனியாண்டி, கருப்பண்ணசாமி, காத்தவராயன், ஆரியமாலா, ஆகியோர் சிறுதெய்வங்கள் எனப்பட்டனர். முன்னோர்களின் நினைவாகவே சிறுதெய்வங்கள் அமைக்கப்பட்டன”1 என்று பறைச்சாற்றுகின்றார் அநங்கன். கரகப்பட்டியில் பச்சைநாச்சியம்மன், வேட்டை நாச்சியம்மன், பட்டாளம்மன், செல்லியம்மன், அங்காளம்மன் ஆகிய சிறுதெய்வங்களோடு தலைகொண்ட அம்மனையும் மக்கள் வணங்குகின்றனர். இச்சிறுதெய்வங்களில் தலைகொண்ட அம்மனைப் பற்றிய வரலாறும் வழிபாட்டு முறைகளும் இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

தலைகொண்டம்மன் கோயில் அமைவிடம்

     தலைகொண்டம்மன் கோயில் தர்மபுரி கிருஷ்ணகிரிக்கு இடையில் உள்ள காரிமங்கலம் எனும் இவ்வூரில் இருந்து கிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கரகப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கு திசையில் ஆற்றங்கரையின் மருங்கில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இக்கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது இவ்வழிபாட்டுத்தலம்.

கோயில்அமைப்பு

 
 

வடக்கு வாசல்படியினைக் கொண்டுள்ள தலைகொண்டம்மன் கோயில்   எண்பது அடி அகலமும் நூற்றுபத்து அடி நீளமும் பத்தடி உயரமும் கொண்ட மதில் சுவரை உடையது. இராசகோபுத்திற்கு முன் பலிபீடமும் அம்மனின் சிங்க வாகனமும் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் முதலில் இடது பக்கத்தில் இருப்பது நவகிரக கோயில். அதை அடுத்து இக்கோயிலில் வாழ்ந்து இறந்த பூசாரியின் நினைவிடம் அமைந்துள்ளது. கருவறைக் கோயிலுக்குப் பின் இடபுறத்தில் விநாயகர் கோயிலும் வலது புறத்தில் முருகன் கோயிலும் அமைந்துள்ளது. தென்மேற்கு மூலையில் தலகொண்டான் எனும் ஆண்தெய்வத்திற்கான தனிக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்திற்கும் இராசகோபுரத்திற்கும் இடையில் நான்கு தனித்தனி ஊஞ்சல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பஞ்சலோகத்தால் ஆன அரை அடி உயர அம்மன் சிலையின் ஆகும். இச்சிலைக்குப் பின்னால் ஐந்து அடி உயர மூன்று அம்மன் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் பற்றி மக்களின் கூற்று

     தலகொண்டம்மனின் தாய்வீடு தர்மபுரி பக்கத்தில் உள்ள மூக்கனூர் மலை என்றும், அம்மலைக்குத் தன் கணவனிடம் சொல்லாமல் சென்ற அம்மன் அவர் வருவதற்குமுன் தான்வீடு திரும்ப வேண்டும் என்று குதிரையின் மேல்ஏறி மூக்கனூர் மலையில் இருந்து ஒரேத்தாவு தாவி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறுப்படுகிறது. அந்தளவிற்குத் தன்னுடைய கணவன் மீது பற்றும் பக்தியும் கொண்டவராக இத்தாய் விளங்குகின்றாள். குதிரை குதித்த அந்த அச்சு கோயிலின் பக்கத்தில் பெரியாற்றுப் பாறையில் இன்றளவும் இருக்கின்றது. 

பெயர்க்காரணம்

     தலைகொண்டம்மன் என பெயர் வருவதற்கு மக்களிடையே வாய்மொழிக் கதைகள் பேசப்படுகின்றன. அக்கதை இத்தலப் பெயருக்கான காரணங்களைக் கூறுகின்றது.   தொடக்கக் காலத்தில் அம்மன் என்ற பெயரிலே இருந்த இச்சிறுதெய்வத்தின் சிலையை கள்வன் ஒருவன் களவாடிச் சென்றபோது கண் தெரியாமல் போனது. அதனால் சிலையை அங்கிருந்த வயல்வெளியிலேயே போட்டுவிட்டு சென்று விட்டான். அவற்றை அறியாத விவசாயி ஒருவன் தன் வயல் வரப்பில் அம்மன் சிலை இருப்பது தெரியாமல் வரப்பை வெட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மண்வெட்டி அம்மனின் தலையில் பட்டுவிடுகிறது. பட்டவுடனே இரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அத்தவறைச் செய்த விவசாயின் தலை அப்பொழுதே துண்டாகி விழுந்தது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

     தன் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி தன் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டால் என்னுடைய தலை முடியைத் தருகிறேன் என்பதற்குப் பதிலாக என் தலையையே தருகிறேன் என்று வேண்டிக்கொண்டாளாம். இவள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் அக்குழந்தை வீட்டில் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கின்றாள். பின்னர்தான் அவள் நினைவுக்கு வருகின்றது அவள் வேண்டியது. அதனால் பயந்து போய் எங்கெங்கோ சென்று மறைகின்றாள். மறைந்தாலும் சொன்னதைச் செய்யாத அப்பெண்ணின் தலையை அம்மனே கொய்து எடுத்தார். அவ்வாறு கொய்து எடுத்ததால் அன்று முதலே இவ்வம்மனுக்குத் தலகொண்டம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டாள். இக்கருத்து ஒருவருக்கொருவர் முரண்பாடாக கூறினாலும் தலையை வெட்டிய செய்தி மட்டும் ஒன்றாகவே இருக்கிறது. இதன்மூலம் தலையைக் கொய்து எடுத்ததால் தலைக்கொண்டம்மன் என்ற பெயர் வந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

வழிபடும் இனக்குழுக்கள்

     சமத்துவ சிறுதெய்வ கோயிலுக்குச் சிறந்த சான்றாக விளங்குவது கரகப்பட்டி தலைகொண்டம்மன் கோயில்தான். பெரும்பாண்மையான சிறுதெய்வக் கோயில்கள் ஒருசில இன மக்களுக்கு மட்டும் வழிபடும் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் விளங்குகின்றது. சிறுதெய்வக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தைத் தவிர இதர சாதியினரை உள்ளே நுழைய அனுமதிப்பதுக் கூட கிடையாது. இம்முறைகளுக்கெல்லாம் மாறாக அமைந்துள்ளது இந்த ஒரு கோயில் மட்டும்தான்.

 இக்கோயிலுக்குப் பூசாரியாக வெள்ளாளக்கவுண்டர்கள் இருக்கிறார்கள். இத்தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் வேளாளர், பறையர், வன்னார், ஆகியோர் ஆவார்கள். இக்கோயிலுக்கு உரிமை பூண்டுள்ள கிராமங்கள் மொத்தம் பதினெட்டு ஆகும். இப்பதினெட்டுக் கிராமங்களில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஒன்று கூடிதான் கோயிலுக்குச் சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவையும் எடுப்பர். கோயிலுக்கு முன்னால் இருக்கக்கூடிய ஊஞ்சல் கம்பம் கூட குரவர் இன மக்களால் எடுத்துவரப்பட்டு இரவோடு இரவாக வேண்டுதலின் பொருட்டு நட்டு வைத்துவிட்டு சென்றனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள். 

வழிபடும் முறைகள்

     பெரும்பாண்மையான சிறுதெய்வங்களுக்கு உயிர்பலிடும் முறை வழக்கமான ஒன்றுதான். அதற்கு விதிவிலக்கு அல்ல தலைகொண்டம்மன் கோயில். “தர்மபுரி பகுதியில் இருக்கும் மக்கள் காளிக்கு எருமை கிடாவை பலியிடுகின்றனர். மாரியம்மனுக்கு ஆட்டுக்கிடாவைப் பலியிடுகின்றனர். மற்ற சில சிறுதெய்வங்களுக்கு பன்றிகளைப் பலியிடுகின்றனர்”2 என்கிறார் இரா.இராமகிருஷ்ணன்.

     தலைகொண்டம்மனுக்கு ஆடு, கோழி தவிர வேறெந்த உயிரினங்களையும் பலியிடுவது இல்லை. பசுக்களையும் இளம் காளைகளையும் கோயிலுக்கு நேர்ந்து (நேர்த்திக்கடன்) விட்டாலும் அதை பலிஇடுவது இல்லை. பசு, ஆடு, மாடு, கோழி போன்றவைகளை இக்கோயிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். இக்கோயிலுக்கு நேர்ந்துவிடும் பசுக்களையும் காளைகளையும் இப்பகுதி மக்கள் இறைவியாகவே போற்றி மதிக்கின்றனர். இதற்கு சான்றாக நேர்ந்து விட்ட காளை ஒன்று இறந்து விட்டது. இறந்த காளையை கோயிலுக்கு முன்னால் இருக்க கூடிய இராசகோபுரத்திற்கு அருகில் புதைத்து அதன்மேல் நந்தி சிலையை நிறுவி இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

விழாக்கள்

     மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபடும் முறையே விழாவாகும். அனைத்து முக்கிய தினங்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் கோயிலுக்கு விழா எடுப்பதே சிறப்பு. விழா எடுப்பதற்கு முன் அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுகூடி  முன்னேற்பாடுகள் பற்றியும் விழாவின்போது மேற்கொள்ளப்படும்  செயல்கள், கட்டுபாடுகள், ஆகியவை ஆலோசிக்கப்பட்டு விழா தொடங்குகிறது. இம்மக்கள் கோயிலுக்கு எடுக்கும் விழாவை ‘ஜாத்தரை’ என்கின்றனர். ஜாத்திரை மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும். 

     இதில் ஆண் தெய்வத்திற்கான கரகத்தைப் பறையர்களும், பெண் தெய்வத்திற்கான கரகத்தை வேளாளக் கவுண்டர்களும் எடுக்கின்றனர். இவர்கள் தவிர வேறு சாதியினர் கரகத்தைத் தொடுவது கூட இல்லை.

  • விழாவின் முதல்நாள் வீடுகள், தெருக்கள், கோயில் என அனைத்தும் சுத்தம் செய்து காப்புக் கட்டுகின்றனர். காப்புக் கட்டுபவர் அவ்வூரின் தோட்டியாவார்.
  • இரண்டாம் நாள் மேளதாளத்துடன் இசைக்கருவிகள் முழங்க கரகக்காரரின் வீட்டில் இருக்கும் கரகத்தைக் கரகக்காரரின் துணையோடு கரக கலசம் மற்றும் அம்மனின் வாள், பிரம்பு ஆகிவற்றை எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஆற்றில் சுத்தம் செய்து அக்ரஹாரம் என்னும் ஊரின் மண்டில் (பொதுவிடத்தில்) வைத்து பூசை நடத்துகின்றனர். அதேபோல் ஆண் கரகத்தை ஆண்கரகத்தாரரும் அங்கு வந்து அக்கரகத்தை சேர்கின்றனர்.
  • மூன்றாம் நாள் மாலை ‘மகுமேரி’ என்னும் நிகழ்வு நடைபெறும். ஓவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வேடம் அணிந்து மண்டினை அலங்கரிப்பர். மகுமேரி என்றால் வன்னியர் இனத்தில் ஒரு குடும்ப வகையாறாக்கள் அவர்களின் குல வழக்கப்படி வெவ்வேறு விதமாக வேடமிட்டுக் கொண்டு குறும்பர் பலகை எடுத்தும், பூங்கரகம் எடுத்து வந்தும் சிறப்பு செய்கின்றனர். அப்பொழுதே ஆண் கரகமும் பெண் கரகமும் ஒன்று சேரும் நிகழ்வும் நடைபெறுகின்றன.
  • நான்காம் நாள் செங்கமுத்தம்மன் கோயிலில் ‘சொக்குபுடி சோறு’ சாப்பிட்டக் குதிரை, அம்மன் அருளோடு வேகமாக அம்மனைப் பார்க்க கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடியே வந்து தலைகொண்டம்மன் கோயில் ஊஞ்சலில் உள்ள கரகத்தை நுரைப் பொங்கும் வாயால் முத்தமிட்டு ஊஞ்சலை ஆட்டும். ஆட்டியபின் கரகம் கருவறையில் கொண்டு வைக்கப்படுகின்றது.
  • ஐந்தாம் நாள் கருவறையில் கரகத்தை கரகக்காரர்களின் துணையோடு ஆண்கரகத்தை பறையர்களும், பெண்கரகத்தை வேளாளர்களும் மேளதாளத்துடன் வீட்டிற்கு கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கும்.மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் நடக்கும் நிகழ்வகள் விலங்குகளோடு அப்பகுதி மக்கள் பிணைந்துள்ள நிலையினை எடுத்துக்காட்டுகின்ற. விழாவின் கடைசிநாளன்று வேளாளக் கவுண்டர்களுடைய கூளி ஆட்டம் (எருதாட்டம்) ஆடப்படுகிறது. அதன்தொடர்ச்சியாக வன்னியர்களின் கூளியும்  மண்டை (பொதுவிடம்) அலங்கரிக்கும்.

முடிவுரை

     மக்கள் கூறும் ஊர்ப்பெயர்க் காரணங்களும் வழிபாட்டு முறைகளும் விழாக்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தலைகொண்டம்மன் எனும் சிறுதெய்வம் முன்னொரு காலத்தில் போர்க்கடவுளாகவும் போர் புரிந்து வீர மரணம் அடைந்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

சான்றெண் விளக்கம்

1. அநங்கன், ஆலய வழிபாடு, அழகு பதிபகம், சென்னை – 49,  ப.9

2. இரா.இராமகிருஷ்ணன், தகடூர் நாட்டு திருக்கோவில்கள்,  நாம் தமிழர் பதிப்பகம், சென்னை-5, ப.50

தகவலாளர்கள் பட்டியல்

1.     அமராவதி, வயது – 58, வேளாளக்கவுண்டர், கரகப்பட்டி.

2.    தலகொண்டான், வயது – 40, பறையர், கரகப்பட்டி

3.   செல்வி, வயது – 60, வன்னியர், கிரியானஅள்ளி

 

 ஆசிரியர் : திரு.இல.பெரியசாமி, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130. 

 

 

தலைகொண்டம்மன் நுழைவாயில்

சங்க இலக்கியத்தில் விழாக்கள் (ஆய்வுக்கட்டுரை)

 

         பண்டையக் காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனதிற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலை முடிந்து வீடு திரும்பியவன், கையில் கிடைத்தப் பொருட்களை வைத்துக்கொண்டு இசைத்தும் ஆடியும் பாடியும் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான். அதுவே பெரியதாகவும், அனைத்து உறவுகளையும் ஒன்று கூட்டி விழாவாகச்  செய்தால் எப்படி இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். விழா நடத்துவதற்கு காரணம் வேண்டுமே! தெய்வத்தின் திருப்பெயரைச் சொல்லி மக்களை அழைத்து விழாக்கொண்டாடினான். புது ஆடை உடுத்தியும், இல்லையென்று வந்தவருக்கு வேண்டியவைகளைக் கொடுத்தும் தன்னுடையக் குலம் இவ்பூவுலகில் நிலைபெறச் செய்தான். “மனிதன் வேட்டையாடினான். ஓய்வாக இருந்தபோது தன் களைப்பைப் போக்க ஆடிப்பாடினான். இதன் பயனாக விழா கொண்டாடி மகிழ்ந்தான். கிழமைக்கு ஒருநாள் விடுமுறை எடுததுக்கொண்டான். சங்ககாலத்தில் தைநீராடல், கார்த்திகை விழா, ஓணவிழா, இந்திரவிழா, உள்ளி விழா, பூந்தொடை விழா முதலிய விழாக்கள் குறிக்கின்றன”1 என்று பா.இறையரசன் குறிப்பிடுகின்றார்.

விழாக்கள் என்றால் என்ன?

          விழவு, சாறு, திருவிழா, பண்டிகை, நோன்பு, திருநாள் என விழாவிற்கு வேறுபெயர்களாகச் சுட்டுவர். “விழாக்கள் உடலுக்கு ஓய்வும், உள்ளத்திற்கு இன்பமும் தரவல்லன. எனவே மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாடுவதால் விழா என்று அழைக்கப்படுகிறது. விழா எனும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தொன்றியது. இதற்கு விருப்பம், பற்று ஆகியபொருள்கள் உள”2 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார். பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் நிகழ்வினை விழா என்கிறோம். விழாக்களைப் பொது விழாக்கள், வழிபாட்டு விழாக்கள் என்று இருவகைப்படுத்தலாம். பொது விழாக்களை ஆண்டுவிழாக்கள், தின விழாக்கள், வாழ்வியல் சார்ந்த விழாக்கள் ( திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா போன்றவைகள்) என வகைப்படுத்தலாம். வழிபாட்டு விழாக்களை தேர்த்திருவிழா, எருது விடும் விழா, குடமுழக்கு விழா எனப் பிரிக்கலாம்.

விழாவும் விருந்தோம்பலும்

          பெரும்பாலான விழாக்கள் ஒற்றைப்படை நாட்களிலே நடைபெற்றன. முதல் நாள் பொங்கல் வைப்பது, இரண்டாம் நாள் கிடா வெட்டி உறவுகளுக்குச் சோறிடுவது, மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழாவினை முடித்து விடுகின்றனர். அக்காலத்தினர் இரவு நேரங்களில் சமைத்தப் பாத்திரிங்களில் ஒரு பிடி சோறையாவது வைப்பர். ஏனெனில் இரவு நேரத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால், இல்லையென்று சொல்லாது உணவிட்டு மகிழ்வார்கள். திருவிழாக்கள் என்பது உறவுகளைக் கூட்டி சோறிடுதலே முக்கிய நோக்காக அமைகின்றது.

கூடி வாழும் பண்பு

          வறுமையின் காரணமாகவும், உறவுகளின் மூலமும் பிரிந்து சென்றவர்கள் கூட திருவிழாக்காலங்களில் சரியான நேரத்திற்கு உள்ளூர்க்கு வந்து விடுகின்றனர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுதலை திருவிழாக்களில் பார்க்க முடியும். விவசாயிகள் மழை வருவதற்கு வெயில் காலத்தில் விழா எடுக்கின்றார்கள்.  பெரும்பாலும் தெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் நடைபெறுவதைக் காணமுடியும். “கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. திருவிழாவிற்கு பொதுமக்கள் பல பகுதியில் இருந்து வந்தனர். அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் ஆகியவை கூறப்படுகிறது”3 என்று பா இறையசரன் கோயில்கள் மூலமே திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார். விழாக்களைப் பொறுத்தவரையில் அரசன் முதல் ஆண்டி வரை மன மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது எனலாம்.

விழாக்களினால் ஏற்படும் நன்மைகள்

1.     அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவாட முடிகிறது

2.     விருந்தோம்பல் பண்பு வெளிப்படல்

3.     நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வு ஒருநிலைப்படுத்தல்

4.     விழாக்களினால் திருமணம் நிச்சயமாதல்

5.     தெய்வங்களுக்கு வழிபாடுகள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்துதல்

ஆகியவைகள் திருவிழாக்காலங்களில் மக்களுக்கு நன்மைகளாக அமைகின்றன. மேலும், விழாக்காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைந்திருக்கும் என்பதை ‘கல்லென விழவு’ என்ற புறநானூற்றுத் தொடரால் ஏற்றுக்கொள்ளலாம். கல் என்பது ஓசையை உணர்த்தும் ஓர் இடைச்சொல்”4 என்று கண்ணப்ப முதலியார் கூறுகின்றார். இக்கட்டுரையில் சங்க இலக்கியங்களில் விழாக்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

சங்ககால திருவிழாக்கள்

சங்க காலத்தில் அழகியக் குடில்களையுடைய சிற்றூரில் எப்பொழுதும் விழாக்களைக் கொண்டாடி மகிழும் ஊராகத் திகழ்ந்தது என்கிறது குறுந்தொகை,

“சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற” (குறும்.41:2)

          இங்கு சாறு என்னும் சொல் விழாவினைக் குறித்தது. சிற்றூர் மட்டும் அல்லாது பல தரப்பட்ட மக்கள் வாழுகின்ற நகரத்திலும் விழாக்களினால் மிகுந்த ஆரவாரம் உண்டானது.

“பேர்ஊர் கொண்ட ஆர்கலி விழவின்

செல்வாம் செல்வாம் என்றி என்று, அன்று இவன்

நல்லோர் நல்ல பலவால் தில்ல” (குறும்.223:1-3)

 

விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால், அவ்விடத்தில் வாழுகின்ற நல்லோர்களைப் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நற்சொற்களைப் பெற்று நம்முடைய வாழ்வு சிறக்க உதவும் என்கிறாள் தலைவி. பண்டையத் தமிழ் மக்கள் விழாக்களை இறைவனைத் தொடர்புப் படுத்தியே நடத்தி வந்தனர். ஏதேனும் ஒரு கடவுளை முன்னிறுத்தியே விழாக்கள் கொண்டாடப்பட்டது. நற்றிணையில், “விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!” (நற்.19:5)

அரும்பு முதிர்ந்த தாழை மரங்களை கொண்டு வந்து விழா நிகழும் இடத்தினை அழகுப்படுத்துவர். அத்தாழை மரங்களின் உள்ள நறுமணம் விழா நடைபெறும் களமெல்லாம் வீசும்.

மகளிர் அலங்கரித்தல்

          விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும்,  நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடையப் பூக்களைப் பறித்து    தலை நிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

“மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்

                   பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

என்கிறார் ஆசிரியர். பெண்கள் அணிகின்ற தழையாடைக்கு அழகு செய்யும் விதமாக நெய்தற் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கின்றனர் (அகம்.70:12). ஊரில் நடைபெறும் விழாவானது எவ்வாறு சிறப்புடன் விளங்குகின்றதோ, அதுபோல் தன்னுடையப் பெண்மையும் சிறப்புடையவனாக விளங்கியது என்கிறாள் தலைவி,

                 “விழவு மேம்பட்ட என் நலனே” (குறும்.125:3-4)

இப்பாடல் வரிகள் மூலம் திருவிழாக்களினால் பெண்களிடைய உண்டாகும் தன்னம்பிக்கை எடுத்தாளப்பட்டுள்ளது.

ஒழிவில்லாத விழாக்கள்

          விழாக்கள் பகல் பொழுதில் நடைபெற்றாலும், இரவு நேரத்தில் நிலவொளியில் ஆடல் பாடல் என பார்ப்பது மிகவும் இனிமையுள்ளதாக தோன்றும். நற்றிணையில்,

                                      “நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,

                                        கலி கெழு மறுகின், விழவு அயரும்மே” (நற்.348:1-4)

மகிழ்வுடன் விழா எடுக்கும் இந்நேரத்தில் நிலவின் ஒளியும், மத்தளத்தின் இசையும் (அகம்.4:14) தலைவிக்கு மிக்க காமத்தை உண்டாக்கின.  தலைவன் இல்லாது இவ்விழாவில் கலந்து கொள்ளுதல் துயரத்தை ஏற்படுத்தியது. ஆகவே கணவன் மனைவி என்று கூட்டகூட்டமாய் திருவிழாவினைக் காண வந்திருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. மாதம் மும்மாரி பொழிந்திருக்கிறது. அக்கால மக்கள் செல்வசெழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். பகைவர்களுக்கு அச்சத்தை தரக்கூடிய பழமை வாய்ந்த இவ்வூர். ஒழிவில்லாத விழாக்களை என்றும் கொண்டுள்ளது என அகநானூறு (115:1) உரைக்கின்றது.

பங்குனி விழா

          தமிழக மக்களிடையே மிக பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழாவாகும். இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,

“உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்

    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

          பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரி பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற தருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.

“பல்பொடி மஞ்ஞை வெல்கொடி உயரிய,

                 ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து” (அகம்.149:15 – 16)

          பாண்டிய மன்னன் ஆட்சி புரிகின்ற மதுரை மாநகரில் கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடையது. அனைத்து வீடுகளிலும் மயில் தோகையினைத் தொங்கவிட்டிருப்பார்கள். இடைவிடாது நடைபெறும் விழாக்களையுடைய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அங்கே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகபெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.

இந்திர விழா

          சங்க காலத்தில் இந்திரவிழா நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் மக்கள்  நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவைகளையே கடவுளாக வணங்கி வந்தனர்.  ஐம்பூதங்களின் தலைவராகவும், இயற்கையின் தெய்வமாகவும் இந்திரனே விளங்கினார். மருதநில கடவுள் இந்திரன் ஆவார். வருடா வருடம் இந்திரனுக்கு விழா எடுத்து கொண்டாடி மகிழ்வது வழக்கமாகிக் கொண்டிருந்தனர். அன்றைய விழாக்களில் சிறந்ததாக இந்திரவிழா கொண்டாப்பட்டது.

“இந்திர விழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

நறுமணம் மிக்க பூக்களைச் சூடிய நடன மங்கையர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழாவில் மக்கள்  கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். கடைகள், வாண வேடிக்கை என களைக்கட்டும். சிலம்பில்,

“கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்

   தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து

               மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலம்பு.5:144-146)

          விழா தொடங்குகிறது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காகக் கொடியேற்றுதல் மரபு. இந்திர விழாவின் போது வச்சிரக்கோட்டத்திலிருந்தும் முரசை கச்சணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றி ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள். விழாவின் தொடக்கம் முடிவு பற்றிய விவரங்களை முரசறைந்து தருநிலைக் கோட்டத்தில் கொடி வானளாவப் பறக்குமாறு ஏற்றப்பட்டது.

காமன் விழா

          இளவேனிற் காலத்தில் நடக்கக்கூடிய விழாவாகும். மன்மதனே காமன் என்று அழைக்கப்படுகிறார்.  காமன் விழா மக்கள் இன்பமாகப் பொழுதை கழிக்கக் கொண்டாடிய ஒரு விழாவாகும். சிற்றூர்களில் மழை வேண்டி மன்மதனுக்கு விழா எடுக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதை அறியலாம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் காமனை வணங்குவதால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. கலித்தொகையில்,

“வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி.35:14)

          நீர் நிறைந்த ஆற்றின் கரையில் குடிக்கொண்டிருக்கும் மன்மதனுக்கு பரத்தையர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழா எடுக்கின்றனர்.  அவ்விழாவில் தலைவனும் கலந்து கொண்டு தன்னுடன் உறவாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

“விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ” ( கலி.30:13)

காமனுக்கு எடுத்த விழாவில் தலைவன் பரத்தையருடன் விளையாடியதை நினைத்து வருத்தம் அடைகின்றாள்.  காமவேளுக்குச் செய்யும் விழாவில் தலைவன் இல்லாத தலைவிக்கு தனிமைத் துயரம் துன்பத்தைக் கொடுத்தது. கலித்தொகையில்,

“காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என” (கலி.29:24)

என்கிறார் ஆசிரியர். “காமன் விழாவை உயர்ந்தவன் விழா, வில்லவன் விழா முதலிய பெயர்களில் கொண்டாடுவதையும், அவ்விழா இளவேனிற் காலத்தில் நடைபெற்றது”5என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார்.

கார்த்திகை விழா

          கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரண திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படும் விழா. சிவபெருமான் திரிபுர அசுரரை கண்டு சிரித்து எரித்ததை நினைவூட்டும் வகையில்  இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். எங்கும் ஒளி பரவி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அகநானூற்றில்,

                                  “அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்

                                   மறுகுவிளக் குறுத்து மாலை நோக்கி” (அகம்.141:8 – 9)

மழை பெய்து ஓய்ந்த சாயங்காலம். வானில் நிறம் மங்கி இரவை நெருங்கிற்று. மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற வீதிகளில் திருவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

                  “பெருவிழா விளக்கும் போலப் பலவுடன்” (அகம்.185:11)

கார்த்திகைத் திருநாளில் இடும் விளக்குகளைப் போல, இலவ மரங்களின் பூக்கள் பூத்திருக்கிறது. இந்நாளில் அறம் செய்வதற்கு நன்னாள். அன்றையத் தினத்தில் விளக்கில் ஏற்றப்பட்ட ஒளியானது வானத்து நட்சத்திர சந்திரனின் ஒளியை விட மிஞ்சி நிற்கும் (நற்.202:910) பாடல் அடிகள் குறிப்பிடுகிறது.

புனல் விழா

          நீர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. நீர் இன்று அமையா உலகம் பொல என நற்றிணை உரைக்கும். மனித தேவையின் மிகவும் இன்றியமையாதன  ஒன்று தண்ணீர்தான். இவ்வுலகமானது வறண்டு விட்டால் நிலத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் மண்ணில் புதைய வேண்டியதுதான். அன்றைய மக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலை ஆடி மகிந்தனர். ஆடிப்பெருக்கின் நாளன்று காவிரி கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.

                                             “மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை

                                              கலிகொள் சுற்றமொடு கரிகால் காண” ( அகம்.376:3-5)

நன்றாக வளர்ந்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றந்தாருடன் ஆரவாரம் மிக்க புனல்விழாவினைக் கண்டு மகிந்தான் என்கிறார் ஆசிரியர். அகநானூற்றில் (222:4-7) மிகுந்த அழகு பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல்விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.

தைத்திருவிழா

          இக்காலத்தில் பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. உழவர்களின் அறுவடை நாளை தைத்திருவிழாவாகக் கொண்டாப்படுகிறது. “மழைப்பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் ஆயமகளிர்கள் விழாச் சிறப்புக்களைப் பற்றி  முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்”6என்கிறார் நா.வானமாமலை. சூரிய பகவானுக்கு நெல்லும் பூவும் இட்டு, ஏர்க்கலப்பை முன்னே பொங்கல் வைத்து இறைவனை வணங்குகின்றனர்.

                                            “நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்

                                            தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், விடியற்காலையில் குளிர்ந்த நீரில் தைத்திங்கள் நோன்பிற்காக  இளமகளிர்கள் நீராடுகின்றார்கள். பாவை நோன்பிற்கும் இவ்வாறு நீராடுதலும் உண்டு.  இவ்வகை நோன்பின் பயனாக பிரிந்து சென்ற தலைவன் மீண்டும் என்னை விரும்பி நாடி வருவான் என தலைவி நம்புகிறாள். தன்னிடம் உள்ளப் பொருளை பிறருக்குக் கொடுத்து உதவுகிறாள் (நற்றிணை.80:7) என்றும், தை்திருநாளில் இறைவனை வழிப்பட்டு நிற்கும் தலைவிக்கு வகைவகையாய் அணிகலன்கள் புனைந்து பொலிவுப்பெற்று   (கலித்தொகை.59:13)  விளங்கினாள்.

முழவு விழா

 முழவு என்பது இசைக்கருவிகளில் ஒன்றாகும். விழாக்காலங்களில் மேளம் அடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடுவார்கள். முழவுக்கருவி விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டதும், வட்டமாகவோ சதுரமாகவோ இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். நெருப்பில் சூடு பறக்கக் காட்டி அடிப்பார்கள். நற்றிணையில்,

                        “முழவு கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220:6)

சிறுவர்கள் பனைமடலில் செய்யப்பட்டக் குதிரையை வீதியில் இழுத்து வருகின்றார்கள். இவ்விளையாட்டு செயலுக்கு முழவு அடித்து ஆடியும் பாடியும் வருகிறார்கள். திருவிழாக்களின் போது அடிக்கின்ற மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் ஆடுவார்கள். அவ்வாட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். முழவு விழா என்பது தனியாக நடைபெறக்கூடியது இல்லை. விழாக்காலங்களில் முழவு இசைக்கப்படும். இந்நிகழ்வானது பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடைபெறும்.

 உள்ளி விழா

          கொங்கு மண்டலத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறுவது உள்ளிவிழா. கொங்கர்கள் இடுப்பில் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்ற விழாவாகும்.

                              “கொங்கர்கள் மணிஅரை யாத்து மறுகின் ஆடும்

                               உள்ளி விழவின் அன்ன” ( அகம்.368:16-18)

என்று அகநானூறு உரைக்கும். இவ்விழாவினைக் காண வந்த மக்களின் ஆரவாரம் மிகப்பெரிது.

வில் விழா

          வெற்றிப்பெற்ற மறவனின் வில்லினை வைத்து கொண்டாடப்படுவது.    இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி வீரத்தைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் வீரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த எண்ணி தெருக்களில் தம்மில் தாம் மாறுபட்டு போர் செய்கிறார்கள். தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் உடையவர்கள் மறவர்கள்.

                                     “மள்ளர் குழிஇய விழவினானும்” (குறும்.31:1)

என்று குறுந்தொகை கூறுகிறது. போரிலே வெற்றி கண்ட வில்லினை சிறப்பிக்கும் பொருட்டு வீரர்கள் கூடி எடுக்கும் விழாவாக அமைந்துள்ளது.

பூந்தொடை விழா

          படைக்கலப் பயிற்சி பெற்று திரும்பிய வீரர்களை அரகேற்றும் விழாவாகும். பெரும் வீரனான தன் மகன் பயிற்சி முடிந்து வீடு திரும்புகிறான். அவனுடைய வெற்றி இவ்வுலகம் காணட்டும் என்று தங்களின் வீடுகளில் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன்னால் பரந்துபட்ட இடத்தில் மணல் பந்தலிட்டு துணங்கைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.

“வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்

   பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன

                தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்.187:7-9)

பயிற்சி காலத்தில் விற்போர், வாட்போர், குதிரையேற்றம், யானையேற்றம், மதிலைக் காத்தலும் அழித்தலும், முன்னின்று சண்டையிடுதல் போன்றவற்றைக் கற்று தெளிந்து வந்தள்ள மழவர்கள் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடினார்கள்.

கோடியர் விழா

          கோடியர் என்போர் கூத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள், விரலியர்கள் என அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விழா நிகழ்த்துகிறார்கள்.

“கோடியர்  விழவு கொள் மூதூர் விறலி பின்றை

முழவன் போல அகப்படத் தழீஇ,” (அகம்.352:4- 6)

என்கிறது அகநானூறு. ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் இணைந்து பழமையான ஓர் ஊரின்கண் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் ஆடுவோர்கள், பாடுவோர்கள், முழவு வாசிப்போர்கள் என அவரவர்களின் திறனை மக்களிடையே வெளிப்படுத்துவார்கள். விழா நேரங்களில் ஆடும் கூத்தர்கள் வெவ்வேறான ஒப்பனைகளுடன் திகழ்வார்கள் என்று புறநானூற்றுப் பாடல் அடிகள் (29:22-23) குறிப்பிடுகின்றன.

ஓணவிழா

          பலம் வாய்ந்த அசுரரை அழித்தும், பொன்னால் செய்த மாலையை அணிந்தும், கருநிறம் உடைய திருமால் பிறந்த திருவோண நட்சத்திர நன்னாளில் ஊரிலுள்ளோர் விழா எடுப்பர். தங்களைத் திருமாலாக நினைத்து அழகுப்படுத்திக்கொண்டு நடனம் புரிவர்.

“கணம் கொள் அவுணர்க கடந்த பொலந்தார்

     மாயோன் மேய ஓண நல் நாள்” (மதுரை.590-591)

என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகத்தப்பெற்றது. அவ்விழாவில் யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கேரள மக்கள் மட்டும் ஓணவிழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் விழாவைப் பற்றியக் குறிப்புகள்

v தழையாடையை உடுத்திய தங்கைமார்கள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் மீன்களை விற்று வருவார்கள். (அகம்.320:3-5)

v “விழவும் மூழ்த்தன்று, முழவும் தூங்கின்று” (நற்.320:1) – ஊரினர் நடத்திய திருவிழாவும் முடிவுற்றது. மத்தளங்களின் ஓசையும் அடங்கிவிட்டது என்று விழா முடிந்த நிகழ்வினை நற்றிணை உரைக்கிறது.

v விழா நடைபெறுவதற்கு முன் முந்நீர் (ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர்) கொண்டு வந்து இறைவனைத் தொழுது, ( புறம்.9:10) பின் தொடங்குவார்கள்.

v குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபட்டு விழா கொண்டாடுகின்றார்கள் என்று புறநானூறு (17:1-4) கூறுகிறது.

v பல சிறப்புகளையுடைய பாசறையில் சிறு சோற்று விழாவினை வீரர்கள் கொண்டாடி மகிந்தார்கள். (புறம்.33:22)

v புறப்புண்ணுக்கு நாணி சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலால் அவ்வூரில் விழாக்களே மக்கள் மறந்து போயினர். ( புறம். 65:1-4)

v போர் தொடங்குவதற்கு முன்னும், போரில் வெற்றிப்பெற்ற பின்பும் விழா எடுப்பார்கள். (புறநானூறு.84:3-5)

v விழாக்காலங்களில் செம்மறி ஆட்டுக்கறியை உண்ணல். (புறம்.96:6)

விழாக்கள் பற்றியச் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன.

முடிவுரை

          வழிபாட்டை முன்னிறுத்தியே விழாக்கள் நடபெறுவதால் ஆங்காங்கே சிறுமாறுபாடு அடைகின்றன. விழாக்களின் தோன்றலே மக்களின் மனம் மகிழ்வுதான். கடன் பெற்றாவது விழாவினை நன்முறையில் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற நாலு பேருக்காவது வயிறு நிரம்ப உணவு கொடுக்க வேண்டும்.  விழாக்காலங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு தன்னிறைவு பெறவும், பிரிந்து சென்ற உறவுகளை மீண்டும் சந்திக்கக் கிடைக்கும் விழாவினை மக்கள் எந்நாளும் வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.

சான்றெண் விளக்கம்

1.     பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, பக்.237-242

2.     கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, பக்.5-6

3.     பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, ப.235

4.     கண்ணப்ப முதலியார், கட்டுரைக்கொத்து, அம்மையப்பர் அகம், சென்னை -7, ப.40

5.     கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, ப.51

6.     நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), NCBH, சென்னை – 98, பக்.14-15

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தேன்மொழியாள் என்கிற தேவதை – சிறுகதை

     நடுசாமம். என்மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. ஜீரோவாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் என் மனைவி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது கள்ள கபடமற்ற முகம். நான்என் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. ஆனாலும் என்னுடய மனம் மட்டும் இப்பவும் பதற்றத்திலே இருந்தது. காற்றாடிசுத்தின வேகத்தில் என் மனைவி தேன்மொழியாளின் நெற்றிப்பொட்டு வகிரில், ஒற்றைவெள்ளை முடி மட்டும் காற்றில் பறந்தது. என்னுடையப்பார்வை அந்த வெண்முடி மேலே இருந்தது. எப்போதுஅந்த வெண்முடி நெற்றி வகிரில் படியும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

     வெண்முடிஎன்னை முறைத்துப் பார்த்தது. கண்களைஉருட்டி கோபக்கணைகளைத் தொடுத்தது. சிலநேரம் சிணுங்கியது, அழுதது, வெறித்தது, அநாதையாய் உணர்ந்தது. எனக்குஎவ்வாறு அந்த வெண்முடியை சமாளிப்பது என்று தெரியவில்லை. எந்த பதிலைக் கூறினால் அவ்வெண்முடி சாந்தமாகும் என்று யூகிப்பதற்கு கூட முடியவில்லை. அந்த ஒற்றை வெண்முடி இன்னும் அடங்காமல் நீள் வாக்கிலேயே ஆடிக்கொண்டிருந்தது. என்னை ஆட்டிக்கொண்டிருந்தது.

     இன்றுமாலை நான் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட் சென்றிருந்தேன். பொருட்களை எல்லாம் வாங்கியபின் பில் கொடுத்துவிட்டு திரும்புகையில்தான் அந்த முகத்தைப் பார்த்தேன். இருபது வயதுடைய சின்னப்பெண் அவள். அதேமுகம்தான். மனம்திக்கென்று நின்றுவிடும் போல் உணர்வு. இதுஎப்படி சாத்தியம். பலவருடங்களுக்கு முன்பு பார்த்த அதே முகம். அதேசிரிப்பு. அதேவயது. என்னுள்என்ன நடக்கிறது. ஒருவேளைஎனக்கு மட்டும் அப்படித் தெரிகிறதா என்ன? என்நாடி நரம்புகளிலும் இரத்த நாளங்களிலும் ஊடுருவிச்சென்ற அந்தப்பெண் இங்கு எப்படி? இவ்வளவுகாலத்திற்குப் பின் கடவுள் எதற்காக என் கண்ணில் காட்ட வேண்டும். அதுவும்அதே வயதில்! ஒருவேளைபிரம்மையாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

அப்போதுதான்பக்கத்தில் இருக்கும் அச்சிறுபெண்ணின் கையைப் பிடித்தப்படி நின்று கொண்டிருந்த என்னவளைக் கண்டேன். அப்போதுபார்த்ததற்கு கொஞ்சம் மாறித்தான் இருக்கிறாள். உடம்பு போட்டுவிட்டது. முகம் உப்பி பூசினார் போன்று இருந்தது. அவளுக்கும்வயசாகியிருந்தது. அவளும் என்னைக் கண்டாள். அந்தச்சின்னப்பெண் மகளாகவோ இல்லை பேத்தியாகவோ கூட இருக்கலாம். ஆனால் என்னவளின் சிறுவயது தோற்றத்தினைப் அப்படியே பெற்றிருந்தாள். என் கண்கள் அவளைப் பார்ப்பதை நிறுத்தவே இல்லை. அவளும்என்னை அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதனால்தான்என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கள் இருவரின் கண்களும் இந்த உலகத்தை நிறுத்தி மெய் மறந்து நின்றுகொண்டிருந்தோம். அந்த கண்கள் என்னை சுட்டெரித்துவிடும் போல் இருந்தது. என்னைஏமாற்றிய கயவனே! உன்னைஎன் இரு கைகளால் கொல்லாமல் விடமாட்டேன் என்றிருந்தது. ஆனாலும் இப்போதும் உன்னை நேசிக்கிறேன். என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்பது போல் இருந்தது. எல்லாவற்றுக்கும்மேலாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அம்மாஅம்மாஎங்கமாபாத்திட்டு இருக்க…”  என்றாள் மகள். எந்தவிதமானபதிலும் அவளிடம் இல்லை. மீண்டும்அவளின் உடம்பைக் குலுக்கி, “அம்மாஅம்மா.. யாரதுஅந்த அங்கிள்?” என்றாள்மகள். என்னவள்மௌனமே பதிலாகத் தந்தாள். கடையில்இருந்து அந்தச் சாலை முடியும் வரை என்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேச் சென்றாள். அவளும்பேசவில்லை. நானும்பேச முற்படவில்லை.

என்ன வெண்முடி என்னால் பன்ன முடியும்? என்அழகான வெண்முடியே உனக்கு துரோகம் இழைக்க நான் விரும்பவில்லை. ஆனாலும் நீ ( மனைவி ) வந்த பிறகு அவளை முற்றிலும் மறந்து போயிருந்தேன். இன்று அவளைச் சந்தித்தப் பிறகு  என் மனம் நடுக்கம் அடைகிறது. நான்யாருக்கு துரோகம் இழைத்திருக்கிறேன்! யாருக்கு உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். காற்றில் இன்னும் அசைந்து கொண்டிருந்தது அந்த வெண்முடி. அதுபடுக்கிற வரை எனக்கு நிம்மதி இல்லை. இதற்குநான் பதில் கூறியே ஆகவேண்டும்.

அப்பா ஒயர்மேன். அப்போஅப்போஊர்ஊராக மாறிக்கொண்டே இருப்பார். அன்றுஅம்மாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அப்பாவுக்குடிரான்ஸ்பர் ஆயிடுச்சி, அதனாலநாங்க முன்னால போறோம். நீஇந்த வாரம் கடைசியில வந்திருடா என்று விலாசத்தை சொன்னார்கள். நான் அம்மா சொன்னதை குறித்துக்கொண்டேன். என்னாடா இதுவேற அப்பப்ப என்று சலிப்பாய் இருந்தது.

வாரக் கடைசியில அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தேன். பேருந்த விட்டு கீழ இறங்கினதும்தான் தெரிந்தது, ஒரேகாடு. அந்தகாட்டுக்குள்ள ஒரு வண்டி ரோடு மட்டும்தான். எனக்கு பக்கென்றது. என்னா பன்றதுன்னு ஒன்னுமே புரியல. அப்போஒரு பெண் அந்த பக்கமா சைக்கிள்ள போய்ட்டு இருந்தா. பாக்கிறதுக்குஅழகா தெரிந்தா. மனசுஅந்த பொண்ணுகிட்ட பேசினா நல்லா இருக்கும்முன்னு தோனிச்சு. அப்பஅங்க முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

என்னங்கபெரியவரே ஊருக்குள்ள எப்படி போறதுஎன்றேன். அவர் கொஞ்சம் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பின்னால  திரும்பிஏலேசுபாசுபா….” என்றார்.

என்னங்கதாத்தாஎன்றாள்அப்பெண். நான்அவளுடைய பெயர் சுபா என்று தெரிந்துகொண்டேன்.

இந்ததம்பி ஊருக்குள்ள போகனுமாம்.  கொஞ்சம் வழிகாட்டிடுமாஎன்றார். அப்பெண்என்னை பார்த்தாள். சிறிது நேரம் கழித்து, “நான்போறேன், பின்னாலேவாஎன்றுசொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளை மிதிக்க ஆரமித்தாள். நான் அவளுக்கு பின்னாலயே நடக்க ஆரமித்தேன். அவளுடைய சைக்கிள் மிதிக்கு என்னால தாக்குப் பிடிக்க முடியல. அப்பெண்ணைநான் தவற விட்டுட்டேன். கிடைச்ச ஒரு வாய்ப்பும் பறிபோயிடுச்சே என்று என்னையே நொந்துகொண்டேன். கொஞ்ச தூரம் அந்த சாலையிலே நடந்து சென்றேன். அவள்அங்கு நின்று கொண்டிருந்தாள்.

என்னங்க…. என்ன இவ்வளவு மெதுவா வாரிங்கஎப்பவீடுப்போய் சேர்றதுஎன்றாள்.

ஏங்கநீங்க சைக்கிள்ள வேகமா போறதுக்கும் நான் நடந்து வரதுக்கும் வித்தியாசம் இருக்குள்ளஅதான்! என்றேன்.

ஏதோ புரிந்தவளாய், “சரி சைக்கிள் கேரியர்ல வந்து உட்கார்என்றாள்.

நானும்கேரியரில் உட்கார்ந்தேன். உட்கார்ந்தவுடன், “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டுஎன்றபாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. அப்படிஒரு வாசம் அப்பெண்ணிடமிருந்து! எனக்காகவேஇவள் பிறந்தவள். கடந்தபிறவில் இவள்தான் என்னுடைய மனைவி. என்னுடையகாதல் தேவதை என்றெல்லாம் மனம் நினைத்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ஏதோ அவள் என்னிடம் பேசியது போல் தோன்றியது. ஆனால்எனக்குதான் ஒன்றுமே கேட்கவேயில்லை. அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போல,

என்னங்கஇங்கையே கீழ இறங்கிக்கோங்கஇதுக்கு மேல ஊருக்குள்ள உங்கள சைக்கிள்ள உட்காரவச்சி கூட்டிட்டுப் போனாஅதுதப்பாயிடும். அதனால இந்த வழியாவே போங்கஊருக்குள்ளபோயிடலாம்என்றுசொன்னாள். நான்அவள் அழகினைப் பருகிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலை அங்கு இருக்கக்கூடிய டவுன்ஷிப்புக்கு சென்றுவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அந்தப்பெண் சரியாக அதே நேரத்தில் வந்தாள். நான்பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தாள். கொஞ்ச தூரம் சென்றவள், பின்னால்என்னை திரும்பிப் பார்த்து

என்னங்கவாங்கசைக்கிள்ளவந்து ஏரிக்கோங்க. நான் ஊருக்குள்ள போய் விட்டிடுரேன்என்றாள். சைக்கிள்ளஉட்கார்ந்தவுடன்தேங்ஸ்என்றவார்த்தை மட்டும் என்னிடமிருந்து வந்தது.

எங்க போய்ட்டு வாரிங்க, என்றகேள்வியில் ஆரமித்து என் ஜாதகத்தையே தெரிந்து கொண்டாள். சும்மாலொட லொடன்னு பேசிட்டே இருந்தாள். எனக்குகொஞ்சம் அறுவையாக இருந்தாலும் அவளுடன் இருப்பது, பேசுவதுஎன சுகமாகத்தான் இருந்தது. மீண்டும்அதே இடத்தில் என்னை இறக்கி விட்டாள். நேற்றுசொன்ன அதே பதிலைத்தான் இன்றும் சொன்னாள். சிரிப்பாய்ரசித்துக்கொண்டேன்.

அடுத்தநாள்மாலை பேருந்து நிறுத்தம். தினமும்நாங்கள் சந்தித்து பேசிக்கொள்வோம் என்று நான் கொஞசம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இன்று என்னுடன் சகஜமாகப் பேசினாள். அவள்பேசுவதே கொஞ்சிப் பேசுவதாக தோன்றியது.

என்னங்கநானே பேசிட்டு இருக்கேன். நீங்கஏதாவது சொல்லுங்கஎன்றுஎன்னை கேட்டாள்.

உங்கபேரு என்ன?”

சுபநித்யராஜேஸ்வரி

சுபா.. நித்யா.. ராஜேஸ்வரி…. என்னங்க நான் எப்படிங்க கூப்பிடுறது

உங்களுக்குஎப்படி கூப்பிடனும்ன்னு தோனுதுா அப்பிடியே கூப்பிடுங்க

சுபாஉங்க கல்லூரி வாழ்க்கை பத்தி சொல்லுங்கஎன்றேன். முதன்முதலில் அவளை சுபா என்று சொன்னதில் இனிப்பு சாப்பிட்டது போன்ற உணர்வு எனக்கு.

நான்ரொம்பெல்லாம் படிக்க மாட்டேன். சுமாராத்தான்படிப்பேன். பிரண்ஸோடநல்லா ஊர் சுத்துவேன். கொஞ்சமா சாப்பிடுவேன். நல்லா பேசுவேன்என்றாள்.

அதான்தெரியுதேஎன்றேன்மெதுவாக..

என்னசொன்னிங்கஎன்றாள்.

நீநல்லா பேசுறஅதுஅழகாயிருக்குஎன்றேன்.

அப்படியா! ஆனா எங்க பாட்டிதான் எப்பவும் என்னை வாயாடி! வாயாடி! வாயாடி! ம்பாங்க

உன்னையேவாயாடின்னு சொல்லுறாங்களா! அந்த கிழவிய போட்டு தள்ளிடலாமா?”

ஐயோ ! வேண்டாம்பாநல்ல கிழவி

சரிஎனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா? கேட்டா ஏதாவது தப்பா எடுத்துகுவாளோன்னு எனக்கே ஒரு பயம்தான். இருந்தாலும்கேட்டேன். அவளின்சம்மதம் பெற்றவுடன்,

இல்லகாலையில அடிக்கிற பவுடர் இன்னும் முகத்துல களையாம அப்படியே இருக்குதே எப்படி?”

எனக்குஎப்பவுமே என்னை அழகு படுத்திகிறது ரொம்ப பிடிக்கும். அப்பஅப்ப முகம் கழுவி பவுடர் போட்டுக்குவேன். அதனால பேக்குல எப்பவும் மேக்கப் திங்ஸ் வச்சிட்டே இருப்பேன்

ம்ம்ம்நீ பெரிய ஆள்தான்அத்துடன்அன்றைய பொழுது முடிந்தது.

அடுத்த நாள், அவளோடுசிறு வகுப்பில் படித்த பெண் ஒருத்தியை சந்தித்தோம். 

 ஹாய் நித்யா எப்படியிருக்க? பாத்து ரொம்பநாளாச்சு?” என்றாள்.

முகம் திருப்பியவளாய் அப்பெண்ணிடம் பேசாமல் சென்றுகொண்டிருந்தாள். நான் ஒன்றும் புரியாமல் சுபாவையே பார்த்துக்கொண்டு அவள் பின்னாடியே ஓடினேன்.

 என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீமாட்டுக்கும் போய்ட்டே இருக்கே…”என்றாள்அப்பெண்.

எயபேரு என்னாடி.. நீஎன்னாடி கூப்பிடுறஎயபேரு நித்யாவா.. என்னோடபேரு சுருக்கிக் கூப்பிடுற உரிமைய உனக்கு யாரு கொடுத்தது. எங்கவீட்டுலயே எம்பேற முழுசாத்தான் கூப்பிடுவாங்க. இல்லன்னா சாமியாட்டம் ஆடிடுவேன். அந்தஉரிமை எம் புருஷனுக்கு மட்டுதான் உண்டுஎன்றுபடபடவென்று பட்டாசாய் வெடித்தாள். அப்பதான் எனக்கு அது தட்டியது. நான்அவளை சுபான்னு கூப்பிட்டா ஒன்னுமே சொல்லுறது இல்லையே என்று தோணிச்சு. என்மேல அவளுக்கு ஏதோ ஒன்னு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். மௌனமாய் மனதில் புன்னகைத்துக் கொண்டேன்.

சாரிப்பாஇனிமேல் சுபநித்யராஜேஸ்வரின்னே கூப்பிடுறேன்என்றாள். சிலவாரங்கள் அப்படியே சென்றன.  எங்களுக்குள் இருக்கிற நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி உரிமையோடு பேசவும், கோபப்படவும், ஒன்னா சந்தோசத்தை அனுபவிக்கவும் செஞ்சோம். அன்றைக்குஅதேபோல சைக்கிள்ள தள்ளிகிட்டே பேசிட்டு வந்துட்டிருந்தோம்.

இன்னிக்குஎங்க காலேஜ்ல நடந்த ஒரு ஜோக்க உங்ககிட்ட சொல்லலாமா?” என்றாள்.

எனக்கும்அவள பேச வச்சி கேட்கிறது ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதனால ம்ம்ம்என்றேன்.

பொண்ணுகளுக்குமுன்னால இருக்கிறது, பசுமாட்டுக்கு பின்னால இருக்கிறது அது என்ன?“ என்றுசிரிச்சுக்கிட்டே கேட்டாள். எனக்குசுருக்கென்று கோபம் தலைக்கேறியது. அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அரைந்தேன்.

என்னாவயசாச்சி உனக்கு, என்னாபேச்சுப் பேசுறஉனக்குவாய்க்கொழுப்பு அதிகம். ஒன்னும்தெரியாத மாதிரி இருந்திட்டு என்னா பேச்சு பேசுறஒன்னும்தெரியாத பாப்பாவாம் போட்டுகிட்டாளாம் தாப்பாவாம்சும்மா சொன்னாங்க

அவள் கன்னத்தில் கை வைத்தபடி கண்களில் நீர் தாரைதாரையாக வந்து கொண்டிருந்தது. அழுகை விம்மலாக மாறியிருந்தது. அவள் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்க ஆரமித்தாள். நானும் பின்னாலயே நடந்தேன். இருவரும்எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் மனசு வலித்தது. நான்யார் அவளை அடிப்பதற்கு? அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று பல யோசனைகள் தூக்கம் கலைந்து துக்கத்தில் மூழ்கியிருந்தேன். அடுத்து வருகின்ற ஒரு வாரமும் அவளுக்காகக் காத்திருந்து காந்திருந்ததுதான் மிச்சம். அவள்வரவே இல்லை. ஒருவேளை கல்லூரி விடுமுறையாக இருக்குமோ! இல்லை, உடம்பு சரியில்லாம இருக்குமாஇல்லன்னாவேற எதாவது பிரச்சனை ஆகியிருக்குமா என்று மனசு பலவாறாக யோசிக்க ஆரமித்தது. அன்னிக்கும்சுபாவுக்காக காத்திருந்தேன். அவள் வருவதாக தெரியவில்லை. அந்த காட்டுப்பகுதியில் நடக்க ஆரமித்தேன். தூரத்தில் யாரோ சைக்கிளில் நிற்பதாக தெரிந்தது. உற்றுகவனித்தேன். ஆமாம்! சுபாதான். எனக்கு கோபம். அதனால்அவளிடம் பேசாமல் தாண்டிச் சென்றேன்.

ம்ம்ம்…. நில்லுங்கஉங்ககிட்டபேசனும்அவள்அழுதாள். அழுகைக்குகாரணம் கேட்டேன்.

நான்உன்னை அடிச்சதுக்காக அழுவுறயா? அப்படின்னாசாரி..சாரிசாரி…”

நான்ஒன்னும் அதுக்காக அழுவுல.. நீங்கஎன்னப் பாத்து அப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டிங்களேநான் என்ன அப்படியா?” என்றுதேம்பினாள். கண்டிப்பாக அன்று அவளை என்ன வார்த்தை சொல்லி திட்டினேன் என்று நிச்சயமாக எனக்கு நினைவு இல்லை. “நீயேசொல்லுஎன்றேன்.

ஒன்னுதெரியாத பாப்பாவாம்…” என்று இழுத்தாள்.

என்னைமன்னிச்சிரு. ஆமாம்! நான்உன்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது. சாரிசாரிசுபா.”

காலேஜ்லபிரண்ஸ்ஸல்லாம் சொல்லிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. அதுல தப்பு எதுவும் இருக்காதுன்னு நினைச்சுதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்புறம் பிரண்ஸ்கிட்ட அதபத்தி கேட்டபோதுதான் என்னை திட்டிடாளுவ.. அத போய் ஆம்பிளைகிட்ட சொல்லுவாங்களான்னு. அப்பதான் எனக்கு புரிஞ்சது. அதுக்குwomen-cow ‘W’ தான் விடைஎன்றுசொன்னாள். விடையைநினைத்து எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒருகேள்விக்கு எப்படியெல்லாம் விடை கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். சிறுதுநேர உரையாடலுக்குப்பின் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

நாளைக்குஉனக்கு பிறந்தநாள். நான் உன்கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு சொல்லனும். அதுநம்ப வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமானது. அதுமட்டுமல்லாமல் உனக்காக சிறப்பு பரிசும் வச்சிருக்கேன்என்றாள் சுபா. எனக்குபொறந்தநாள்ன்னு அப்போதுதான் ஞாபகம் வந்தது. சுத்தமாமறந்து போச்சு.

என்னசொல்லுவ…. என்னபரிசுஇப்பவேசொல்லேன்!” என்றேன். சுபா, என்கிட்டமுகத்தை கொண்டு வந்தாள். அவளுடையஆட்காட்டி விரலோடு நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து என் மூக்கை ஆழத்திப் பிடித்து ஒரு திருகு திருகினாள்.

காத்திருநான் நாளைக்கு சொல்லுறேன் பக்கி…” என்றாள்.

மிருதுவானகைகள் முதன்முதலில் என்னுடைய மூக்கைப் பிடித்து ஆட்டுகிறது. என்ன ஒரு சுகம். மிதப்பதுபோல் உணர்வு. அவளின்கைகளில் இருந்து வந்த வாசம் என்னை கிரங்கடித்தது. அப்படியே கண் மூடி நின்றிருந்தேன். கொஞ்ச தூரம் சென்ற அவள் கூப்பிட்ட பிறகே திரும்பிப்பார்த்தேன். கையசைத்தாள். அவள் அந்த தெருவை கடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். நாளைய கனவோடு வீட்டிற்குச் சென்றேன். வீட்டின்முன் டெம்போ வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அம்மாதான் சொன்னாங்க,

அப்பாவுக்குகும்பகோணத்துல டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. நாளைக்கே அங்க இருக்கனும்ன்னு, நான்பதறினேன். எவ்வளவுகெஞ்சியும் என்னால் அங்கே இருக்க முடியவில்லை. சுபாவின் நினைவுகளோடு அந்த ஊர் எல்லையை கடந்தேன்.

வெண்முடிஎன்னைப் பார்த்து சிரித்தது. மனசுலஇருக்கிறதெல்லாம் கொட்டியாச்சு. மனசும் நிம்மதியாச்சு. திருமணமான இத்தனை வருடங்களில் என் கருவைச் சுமந்தவள். என்உடலோடு உடலாக இருந்தவள். எனக்கொன்றுஆனால் முதலில் துடித்துப்போனவள். எனக்காக அழுபவள். பார்த்துபார்த்து கவனிப்பவள். என் மனைவி தேன்மொழியாள். அவளைத் தவிர இந்த உலகத்தில் யாரும் என்னை சிறப்பாகப் பாத்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன்.  என்உதடுகளை குவித்து மனைவியின் நெற்றி வகிரில் முத்தமிட்டேன். என் முத்த அனலில் வெந்து சாம்பலானது அந்த வெண்முடி. இன்னும்உறங்கிக்கொண்டிருக்கிறாள் தேன்மொழியாள் என்கிற என் காதல் தேவதை.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

மூங்கில் கூடை

        பண்டைய தமிழ்  மக்களில் பெரும்பாலானோர்  மூங்கிலால் செய்யப்பட்ட கூடையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களில் பூக்களைப் பறித்து எடுத்துச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் அன்றாட பணிகளுக்கு முதன்மையானதாகவே இவ்வகையான மூங்கில் கூடைகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. 

            இன்றைய வளரும் தலைமுறையினருக்குப் பிளாஸ்டிக், இரப்பர்,  தோல் ஆகியவற்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய கூடைகள் மிகஎளிதாக கிடைப்பதால் மூங்கில் கூடையை மறந்தே போயுளளனர் எனலாம்.  மூங்கில் கூடையைப் பயன்படுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன.

  • காற்று இடைவெளி இருப்பதால் கூடையில் வைத்திருக்கும் பொருட்கள் காற்றோட்டமான சூழல் ஏற்படும்.
  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்டது என்பதால் நீண்ட நாட்கள் தாங்கும்.
  • நோய்க்கிருமிகளின் ஊடுறுவல் அதிகம் இருக்காது.
  • பார்வைக்கும் அழகாக இருக்கும்.     
  • கூடையின் மேல்பகுதியில் வளைவு இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம். 
  • ஒருவேளை மக்கினாலும் மண்ணுக்கு உரமாக மாறிவிடும்.
இலக்கியத்தில் கூடை பின்னுவோர்
        சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் கூடை பின்னும் தொழில் செய்யும் கம்மியர்களைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன. 
            
    “கைவல் கம்மியன் முடுக்கலின், புரைதீர்ந்து” (நெடுநல்வாடை.85)
 
            கைத்தொழிலில் வல்லமை பெற்ற தச்சர்கள் இடைவெளி தோன்றாமல் பல மரச்செதில்களை ஒன்றாகச் சேர்த்து முடுக்கி மதிலின் வாயிலை உருவாக்க முடியும் என்கிறார் நக்கீரர். கூடையைப் பின்னுகின்றது போலவே இங்கு மதிலின் வாயிலை மூங்கில் குச்சியை ஒன்றோடு ஒன்று சேர்த்து பின்னுதல் வேண்டும் என்கிறார்.  தமிழகக் காடுகளில் மூங்கிலின் வளர்ச்சி அபரிதமானது. இலக்கியங்களில் மூங்கிலைப் பற்றிய குறிப்பகள் பல இடங்களில் காண முடியும். 

     மூங்கிலை வெட்டியும் சீவியும் கூடை பின்னுகின்ற தொழிலாளிகள் இன்றைய தலைமுறையில் கொஞ்சகொஞ்சமாகக் குறைந்து வருகிறார்கள்.  மக்கள் யாரும் மூங்கில் கூடையை விரும்பாததால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக்  குலத்தொழிலை விட்டுவிட்டு பிறதொழில்கள் செய்ய முற்படுகின்றனர். 

  இனியவைக் கற்றலின்   தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்போம்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

உழைப்பு

 

சுறுசுறுப்பாய் ஓடு

சோம்பலை நீக்கு

விடியற்காலையே விழித்திடு!

 

விண்ணை தொட்டிட

எழுவாய் தோழா!

 

எறும்புகளைப் பார்

தனக்கு வேண்டியஉணவைத்

தானே சுமந்து செல்லும்

 

காக்கை குருவிகள் தங்கிட

களம் ஒன்று அமைத்திடுமே

 

உழைக்கும் மனிதனே

உயிராய் நினைப்பான் நாட்டை!

 

ஏறு பிடித்து சேற்றில் உழுதாதான்

சோற்றிலே கைவைத்து உண்ண முடியும்!

 

உழைப்புதான் ஆடவர்க்கு உயிர்

உழைப்புதான் புருஷ லட்சனம்பழமொழியே!

 

சுறுசுறுப்பாய் இரு

சோம்பலை நீக்கி

உழைத்து முன்னேறுவாய்

வாழ்வில் வெற்றி பெறுவாய்

கவிஞர் முனைவர் க.லெனின்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »