A Comparative study of SunyaSampashanai in Thirumantram and Pooranam concept in Vethathiriyam| S.Gnanasambandan

திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூர
Abstract
          SunyaSampashan is a symbol in the Siddha tradition. Delivering the message they were trying to convey. Guru’s blessing is necessary to understand its meaning. Thirumoolar gives 70 hymns entitled SunyaSampashanai in the ninth Tantra of the Thirumantram. These hymns with yogic techniques indicate attaining God through yoga, attaining perfection and attaining rapture. Similarly, Vedatri Maharishi explains this state in Vethathiriyam philosophy as Pooranam. And calling this nothingness and pure space, this self-directed and compressed itself expanded into atoms, PanchaBuddhas, multi-living beings and eventually blossomed into man in the state of mind. This is the history of the universe, says Vethathiri. When man stands in morals and practices penance in the way of yoga, his soul merges with God in the primordial realm of purity. Attains bliss. This is what Vethathiri explains as Mukti and perfection.
Key Words: Shunyam, Nothingless, Absolute Space – Pooranam: Fullness, Abundance, all the whole.
“திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூரணமும் ஓர் ஒப்பீடு”
ஆய்வுச் சுருக்கம்
          சித்தர்களின் நெறியில் சூன்ய சம்பாஷனை என்பது ஒரு குறியீடு. பரிபாஷையாக தாங்கள் கூறவந்த செய்தியை உரைப்பது. இதன் பொருளை விளங்கிக் கொள்ள குருவின் உபதேசம் அவசியம். திருமந்திரத்தில் ஒன்பதாம் தந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் திருமூலர் 70 பாடல்களைத் தருகிறார். யோக நுட்பங்களுடன் அமைந்த இப்பாடல்கள் யோகத்தின் வழியாக இறைவனை அடைதல், முழுமை பெறுதல், பேரானந்தநிலை எய்துதல் என்பதைக் குறிப்பதாக அமைகிறது. அதுபோலவே வேதாத்திரியத் தத்துவத்தில் இந்த நிலையினைப் பூரணம் எனும் பொருளில் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும் இதனை ஒன்றுமில்லாத ஒன்று என்றும் சுத்தவெளி என்றும் இதுவே தன்னைத்தானே இயக்கி இறுக்கிக்கொண்டு அணுக்களாகவும், பஞ்சப் பூதங்களாகவும், பல்லுயிர்களாகவும் விரிந்து மனம் என்ற நிலையில், இறுதியில் மனிதனாக மலர்ந்தது. இதுவே பிரபஞ்சச் சரித்திரம் என்கிறார் வேதாத்திரி. மனிதன் ஒழுக்க நெறியில் நின்று யோகத்தின் வழியில் தவம் பயின்று, அதிலேயே நிலைத்துப் பூரணம் என்ற நிலையில் அவனது ஆன்மா ஆதிநிலையான சுத்தவெளியில் இறைநிலையுடன் ஒன்றிக் கலக்கிறது. பேரின்பநிலையை அடைகிறது. இதுவே முக்தி எனவும், முழுமைப்பேறு எனவும் வேதாத்திரி மகரிஷி பூரணநிலையினை விளக்குகிறார்.
முன்னுரை
     உயர்ஞானப் பொருளைப் பக்குவப்பட்ட உயிர்களுக்கு அறிவிக்கும் முகமாக உள்முகமாக சிந்திக்கத் தூண்டி, நிஷ்டையில் கூடுவதற்கு வழிவகுக்கும்படி அமைந்துள்ளது. திருமந்திரத்தில் தத்துவ நுட்பங்கள் புதைந்துள்ள ஞானச் சக்கரம்
சூன்ய சம்பாஷனை என்பது
🌻குறியீட்டு மொழி,
🌻மறைபொருள்
🌻புதைபொருள், ஆழ்பொருள்
🌻உட்பொருள் கூற்று
🌻இரக்கமற்ற மொழி
🌻இரகசிய மொழி
🌻இரட்டை மொழி
🌻உறங்கும் மொழி
🌻சந்தி மொழி – சந்தியா மொழி
🌻கமுக்க மொழி
🌻திரையிட்ட மொழி
🌻தலைகீழ் மொழி
🌻மயக்குமொழி
🌻முரண்பாட்டு மொழி
    திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் – ஒன்பதாம் தந்திரத்தில் 22 தலைப்புகளில் 17ஆவது தலைப்பில் 70 பாடல்கள் சூன்ய சம்பாஷனை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. சூன்ய சம்பாஷனை என்பது மறைபொருள் கூற்று என்று சில பதிப்புகளில் வேறு வேறாக குறிப்பிடப்படுகிறது. எனினும் ஞானப்பொருளை மறைவாகப் பேசுவது என்ற விளக்கமும் உரைக்கப்பட்டுள்ளது. சூன்ய சம்பாஷனையில் சூன்யம் என்றால் என்ன? சூன்யம் என்பது வெட்டவெளி, சுட்டவெளி என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுவே சும்மா – சிதாகாசம் – சொல் இறந்த தூவெளி – வேதாந்த வெளி – பாழ் என்று சித்தர்களால் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. வேதாத்திரி மகரிஷி சுத்தவெளி சூன்யம், இருள் என்று பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்ற அந்தநிலை பூரணம் எனவும் அந்த நிலையை அடைவதே நமது முழுமைநிலை, முக்தி என்கிறார்.
மறைபொருள் கூற்று
       மறைபொருள் கூற்று என்பது கூறவந்த கருத்தைப் புதைபொருளாகக் கூறி மேலோட்டமாக, சாதாரணப் பொருளைக் கூறுவது. ஞானியர், மகான்கள் ஞானப் பொருளை நேரடியாகச்க் கூறாமல் மறைத்துக் கூறினர். இது சித்தர்களின் நெறிகளில் ஒன்றாகும். வேதமரபினர், வைதிக மரபினர், சித்தர்கள், சமயத் தத்துவங்களை நேரடியாக சீடருக்கு  கூறமாட்டார்கள். தீட்சையில் முறையிலே உட்பொருளாக உரைப்பார்கள். காரணம் பக்குவப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும் பின்னர் அதைப் பின்பற்ற முடியும் என்பதால் திருமந்திரத்தில் திருமூலர் பல பாடல்கள் மறைபொருளாகப் கூறியுள்ளார்.       
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே (திருமந்.2251)
    உலகப்பொருள் நாட்டம் கொண்டவர்க்கு இறையாற்றல் புலப்படுவதில்லை என்பதை மரத்தால் செய்யப்பட்ட யானையைக் கொண்டு விளக்க முற்படுகிறார் திருமூலர். “சூன்ய சம்பாஷனை” என்ற தலைப்பில் உள்ள 70 பாடல்களில் முதல் 12 பாடல்களில் மனம் அறிவில் அடங்க நல்ல எண்ணங்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். சிற்றின்பம் நாடாது, இந்திரிய வழி செல்லாது உடலில் கலந்துள்ள இறைவனை உணர்ந்து ஒளிநிலை பெற தீமை, பகை, சமன் செய்ய முயல வேண்டும். ஞானத்தால் இறைவனை அடைதலுக்கு 14 பாடல்களையும் மீதம் உள்ள 56 பாடல்களில் சகஸ்ரார தளத்தை அடைந்து பேரின்பநிலை பெறவேண்டும் என்பதை வெளிப்படையாக வலியுறுத்துகிறார்.
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசை பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் பொன் ஆமே         (திருமந்.2869)
      உலக இன்பத்தில் சூழ்ந்து கயல் மீனைக் காண்பவர் பிறவிக்கு மீண்டும் மீண்டும் உட்படுபவர். சிவமாகிய முயலை அடைய விரும்பி சரியை, கிரியை, யோகம், ஞானம் நெறிகளில் படிப்படியாக முயலுகின்றவர் பக்குவ நிலையினைப் பெற்று ஞானத்தால் இறைவனை அடைவர். எனவே “சூன்ய சம்பாஷனை” என்பது சூன்யமாகிய வெட்ட வெளியைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. எனவே மறைபொருள் கூற்று என்பதைவிட சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பே பொருத்தமாக அமைகிறது என்கிறார் முனைவர் சுடலி தியாகராஜன் தமது “பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம்” எனும் நூலில்*.
அமிர்தம் பருகல்
     சகஸ்ரார தளத்தில் அமிர்தம் பருகுதலை பல இடங்களில் மறைபொருளாக “சூனய சம்பாஷனையாக” திருமந்திரத்தில் குறிக்கப்படுகின்றன.
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித் தின்பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாரே (திருமந்.2847)
    மனத்தை வைராக்கியமாகக் கொண்ட மூங்கில் முளையில் எழுந்த வேம்பில் பொருந்தியுள்ள முதுகுதண்டைப் பனைமரத்தோடு ஒப்பிடுகிறார். முதுகுத் தண்டின்கீழ் குண்டலினியாகிய பாம்பைத் தலைஉச்சியில் எழுப்பி அமுதம் உண்பாரின்றி வேம்பு பயன் தராது என்பதைத் திருமூலர் சூன்ய சம்பாஷனையாக கூறுகின்றார்.
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முளைமேல் அமிர்தம் பொழிய வைத்தானே திருமந்.2842)
     புருவமத்தித் தியானத்தின் விளைவு உச்சந்தலையாகிய சகஸ்ரார தளத்தை எய்தும். அப்போது அங்கே உள்ள சுரப்பிகள் புதுவகை நீரைச் சுரக்கும். அதைத் திருமூலரும் அமுது என்கிறார்.
உண்ணீர் அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர் சமாதி யமர்ந்து தீராநலங்
கண்ஆற்றோடே சென்று கால்வழி மாறுமே (திருமந்.882)
      உண்ணீர் அமுதம் என்பது காயத்துள் ஊறும் அமிர்தம் ஆகும். அதுபோல தாமரை என்று இங்கு சகஸ்ரார தளத்தையும், கால்வழி என்பது காற்றாகிய மூச்சையும் (வாசியோகம்) திருமூலர் மறைபொருளாக விளக்குகிறார்.
வள்ளலாரின் வெட்ட வெளி அனுபவம்
      வெட்டவெளி பற்றியும் வெளியில் கிட்டும் சுகானுபவம் பற்றியம் வள்ளலார் தம் அருட்பெருஞ்சோதி அகவலில் உரைக்கின்றார். *பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், சுடலி தியாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்.90
🪔தன்னுள் தன்னை அறியச் செய்வதால் தனிவெளி என்றும்,
🪔ஞானப் பேரின்பம் நல்குவதால் ஞானசுகோதய வெளி என்றும்,
🪔மெய்ப் பொருள் தரிசனம் கிட்டுவதால் ஆனந்தவெளி என்றும்,
🪔ஞானயோகம் காட்டும் யோகானந்தத் திருவெளி என்றும்,  வள்ளல்பெருமான் குறிப்பிடுகின்றார்.
       சிதாகாசம் எனப்படும் வெட்டவெளியில் ஆன்மாவைக் கலந்து மரணமிலப் பெருவாழ்வைக் காண்பதே சித்தர்களின் குறிக்கோள். அத்தகு கலப்பே பேரின்பம். சிதாகாசம் மெய்வெளியை அடைவதற்கு ஆன்மா பக்குவம் பெற வேண்டும். மெய்ப்பொருளாகிய இறைவனோடு இரண்டறக் கலக்க ஆன்மா சமநிலை பெறவேண்டும். ஞானவழியில் யோக வழியில் இத்தகு சாயுச்சிய நிலை அடைவதையே ஆன்ம பயணத்தின் முடிவாக சித்தர்கள் கருதுகின்றனர்.
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி அக்கச்சி மயில் குயிலாச்சுதடி
-திருவருட்பா 6ஆம் திருமுறை, 129 அருட்காட்சி (2211)
       வள்ளல்பெருமான் தலை உச்சியில் திகழும் இந்த அமுத ஊறலை நாதாந்த இன்பமாக காண்கிறார். விந்துவாகிய மயில் தலை உச்சியில் விளங்கும்போது அமிர்தம் சுரக்கும்.  அதனால் விந்துவாகிய மயில் நடனமாடும்.  பின்னர் அந்த மயிலே குயிலாக நாதமாக மாறும்.  விந்து தத்துவ அனுபவம் நாத தத்துவ அனுபவமாக விளைவதுதான் மயில் குயிலாச்சுதடி என்பதாகும் எனத் தவத்திரு ஊரன் அடிகள் தமது சன்மார்க்க விருத்தியில் விளக்குகிறார்.
உச்சிக்குள் அமர்ந்த உயர் வாழ்வு
ஊன் கொண்ட தேகத்திலே உச்சி மீதினிலே
நான் கண்ட நடனமதை நண்பர்களே சொல்லுகிறேன்
மான் கண்ட வேகத்திலே மருளுகின்ற நடையதுபோல்
நான் கண்ட நடனமதை நண்பர்களே சொல்லுகிறேன். (ஞா.க.1477)
     வேதாத்திரி மகரிஷி துரிய தவத்தில் ஆழ்ந்து இருக்கும்போது தாம் பெற்ற அனுபவத்தை நடனமாக ஆனந்த நிலையாக அடைந்த பேறுஎன்கிறார்.
ஔவைக்குறளில் அமிர்த தாரை என்னும் பரிபாஷை
ஆனகலசத் தமிர்தத்தை அறிந்து உண்ணில்
போனகம் வேண்டா மற்போம் (அவ்.குறள் – அமுதத் தாரணை பாடல் எண்.4)
     தலைஉச்சியில் சுரக்கும் கலச அமிர்தத்தை உண்ணும்போது சாப்பாடு என்பது தேவையற்றதாகி விடுகிறது. யோகியர்கள் உலகில் கிடைக்கும் உணவைப் பொருட்படுத்துவதில்லை.  இந்த அமிர்தம் தைலத் தாரையாக உச்சியிலிருந்து நாவுக்கு வந்து எட்டுவதால் அது அவர்களுக்குப் பசியையும் தூக்கத்தையும் அகற்றிப் பரம ஆனந்தத்தை உண்டுபண்ணுகிறது. வெளியிலிருந்து ஏற்கப்படும் உணவுகள் சிலவற்றை உடல் ஏற்றுக்கொள்வதில்லை  அப்போது அது துன்பத்தை ஏற்படுத்தும்.  ஆனால் உள்ளிருந்து ஊறும் அமிர்தம் செரிமானம் என்ற ஒன்றில்லாத காரணத்தால் உயிரையும் உடலையும் நன்றாகப் பேணுகிறது. ஆகவே யோகியர்கள் முழுநிலவு அன்று பௌர்னமி தவம் இயற்றும்போது சந்திர மண்டலத்தில் ஊறும் அமிர்தத்தை உண்டு நீண்ட நாட்கள் உணவின்றி யோக நிலையில் நிலைத்து இருப்பார்கள் என்கின்றனர் சித்தர் ஆய்வாளர்கள்.
மேலையமிர் தமிதை விலங்காமற் றனுண்ணில்
காலனை வஞ்சிக்கலாம் (அவ்.குறள் – அமுதத் தாரணை பாடல் எண்.7)
    சிரசில் விளையும் அமிர்தத்தை ஒழியாமல் உண்டால் காலனை வஞ்சிக்கலாம்.  அதனால்தான் திருக்கடவூர் தலத்தின் இறைவர் மூலவர் அமிர்தகடேஸ்வரர் என்றும், அவர் காலனைக் காலால் உதைத்தல் என்பது இறப்பினைத் தவிர்த்து இளமையோடு எப்போதும் இருக்கும் நிலை.
தலைகீழ் மொழி (சந்தி மொழி)
     பேரா.டி.என்.கணபதி தமது சித்தர்களின் குறியீட்டு மொழியும் திருமூலரின் சூன்ய சம்பாஷனையும் என்ற நூலில் குறிப்பிடுவதாவதுசித்தர்களின் சூன்ய சம்பாஷனையை உலட்பாம்ஸி – தலைகீழ் மொழி (சந்தி மொழி) என்கிறார்.
உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆகும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே (திருமந்.869)
      தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என்பது மணிபூரகத்தில் உதித்து எழும் சோதியாகிய அக்கினியை தலைஉச்சியாகிய சிரசில் ஏற்றும் மந்திரவித்தையை அறிந்தவர் இல்லை. அப்படி அறிந்தால் தலை உச்சியில் தோன்றும் சிவஒளியின் முன் சீவ ஒளி கலப்புறும். சிவனுக்கு முன் சீவன் கலப்புறும் நிலை.
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத் தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழிஅதுவாமே (திருமந்.588)
🪔வீணாத்தண்டு – நடுநாசி – சுழுமுனை
🪔கோணா மனம் – வெளியில் செல்லாத தடுக்கப்பட்ட மனம்
🪔காணாக்கண் – கேளாசெவி – புலன் அடங்கி இருத்தல்
          இதுவே வாழ்நாள் அடைக்கும் வழி. சூன்யம் என்பது ஒன்றுமில்லாமை அன்று. அது பொருள்தன்மையற்றுப் போதல் அது கால இடக் கட்டுப்பாடுகளுக்கு அடங்காத ஒரு திறந்தவெளிப் பரிமாணம். அது காட்சிக்கு அடங்காத நிலை.
எண்களில் குறியீட்டு மொழி
அஞ்செழுத்திலே (1) பிறந்து அஞ்செழுத்திலே (2) வளர்ந்து
அஞ்செழுத்தை (3) ஓதுகின்ற பஞ்ச (4) பூத பாவிகாள்
அஞ்செழுத்தில் (5) ஓரெழுத்தை அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே  (சிவவாக்கியர் . 20)
அஞ்செழுத்து ஐந்து முறை வருகிறது.
முதல் ஐந்து – புலன்கள் 5 அல்லது ஐந்து கோசங்கள்
2ஆவது ஐந்து – பஞ்ச பிராணன்கள்
3ஆவது ஐந்து – பஞ்சாட்சரங்கள்
4ஆவது ஐந்து – ஐந்து பூதங்கள்.
ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பதெழுத்தின் அடைவை யறிந்தபின்
ஐம்பதெழுத்தே அஞ்செழுத்தா மே (திருமந்.2698)
அட்சரங்கள் 50  அமைந்துள்ள இடங்கள்

அட்சரங்கள் 50  அமைந்துள்ள இடங்கள்

🪔மூலாதாரம் –4 அட்சரங்கள்
🪔சுவாதிஸ்டானம் – 6 அட்சரங்கள்
🪔மணிப்பூரகம் – 10 அட்சரங்கள்
🪔அநாகதம் – 12 அட்சரங்கள்
🪔விசுத்தி – 16 அட்சரங்கள்
🪔ஆக்கினை – 2 அட்சரங்கள்
சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் இவை யோகக் காட்சியில் விளங்கும் – சா – வே- போ சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்தி..உலகியலில் காணாத காட்சியை கேட்காத ஒலிகளை யோகானுபவம் தருகிறது என்கிறார் வள்ளலார்.
வேகாத கால் பரம அணுவேயாகும்
வெந்த வெல்லாம் இதன் மோதல் இயக்கத்தால் ஆம்
சாகாத்தலை ஆதிநிலையே அன்றோ
சாத்திரங்கள் கூறுவதைப் புரட்டிப் பாரீர்
போகாப் புனல் அறிவே புத்திக்குள்ளே
புகுந்து புகுந்தே அனைத்தும் போகும் நிற்கும் (ஞா.க.1411)
🪔தலைகால் புரியவில்லை என்பது பிராணன் கால் கட்டைவிரலில் புறப்பட்டு தலை உச்சியில் விளங்குவது (வாசி யோகம்)
🪔விட்டகுறை – பிராணனை இடகலை பிங்கலை வழியாக செலுத்துதல்
🪔தொட்ட குறை – மூலாதாரத்தை தொட்டு சுழுமுனை வழியாக மேலே ஏற்றுதல்.
🪔கூறைஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?தலைஉச்சியாகிய சகஸ்ரார தளத்தில் மனம் அடங்கி நாதமாகிய ஒலியை உணரவல்லார்க்கு சுத்தவெளியாகிய வைகுந்த பதியில் இறைநிலை உணரமாட்டார்.
ஆதி நிலையே சூனியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி
ஒன்றும் இல்லாத ஒன்று இருளாக குறைவிலா நிறைவாக,
பூரணமாக மௌனமாக உள்ளது.
உடலுக்குள் உயிர், உயிர்க்குள் அறிவு என்று உள்ளுணர்ந்து
மனதை அறிவில் ஒடுக்கி நிற்கு நிலையினை போன்றது
அதற்கு முன்னதாக ஏதும் இருந்ததில்லை
எனவே அதனை “ஆதி: என்கிறோம். (ஞா.க.1479)
      பெருவெளியே தெய்வம் என்ற கருத்தும், அந்த வெளியின் தன்மாற்றமே இப்பிரபஞ்சம் என்ற உணர்வும், வேதாத்திரிய இறைத் தத்துவத்தின் சிறப்பு அம்சங்களாகும். அனைவருக்குள்ளும் ஊடுருவி நிற்கின்ற மெய்ப்பொருள் ஒன்றே ஆனதால் ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழவேண்டும் என்பதே வேதாத்திரிய சமுகவியல் சிந்தனையின் அடிப்படையாக அமைகிறது.
பூரண நிலையினைச் சீடருக்கு வாக்கிறந்த உபதேசமாக உரைத்தல்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்
 (பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், மதுரை காண்டம், கடவுள் வாழ்த்துபாடல் 14).
   இங்கே இறைவன் தட்சிணாமூர்த்தியாக சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரண நிலையாக இறைவன் இருக்கிறான். அவனே எல்லாமாகவும் இருக்கிறான். மறைகளுக்கும் அப்பாலும் இருக்கிறான் என்கிறார் திருவிளையாடல் புராணத்தில் தட்சிணாமூர்த்தி துதியினை அருளிய பரஞ்சோதி முனிவர்.
வேதாத்திரியின் சூன்யம் மற்றும் பூரணம் தத்துவம் குறித்த ஒப்பீடுகள்.
திருமந்திரத்தில் யோகத்தின் வழியாக இறைவனை அடைதல், முழுமை பெறுதல், பேரானந்தநிலை எய்துதல் என்பதைச் சூன்யநிலை என்றும், வெட்டவெளி என்றும் திருமூலர் எடுத்துக்காட்டுகிறார்.  அதுபோலவே வேதாத்திரிய தத்துவத்தில் இந்த நிலையினை பூரணம் எனும்பொருளில் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும் இதனை ஒன்றுமில்லாத ஒன்று என்றும் சுத்தவெளி என்றும் இதுவே தன்னைத்தானே இயக்கி இறுக்கிக்கொண்டு அணுக்களாகவும், பஞ்ச பூதங்களாகவும், பல்லுயிர்களாகவும் விரிந்து மனம் என்ற நிலையில் இறுதியில் மனிதனாக மலர்ந்தது. இதுவே பிரபஞ்சத்தன்மாற்றச்சரித்திரம் என்கிறார் வேதாத்திரி. மனிதன் ஒழுக்க நெறியில் நின்று யோகத்தின் வழியில் தவம் பயின்று, அதிலேயே நிலைத்துப் பூரணம் என்ற நிலையில் அவனது ஆன்மா ஆதிநிலையான சுத்தவெளியில் இறைநிலையுடன் ஒன்றிக் கலக்கிறது. பேரின்பநிலையை அடைகிறது. இதுவே முக்தி எனவும், முழுமைப்பேறு எனவும் வேதாத்திரி பூரணநிலையினை விளக்குகிறார்.
சூன்யம் குறித்த மகரிஷி பாடல்கள்
       சூன்யம் உறுதிப்பொருள் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. முன்னர் ஆதி நிலையை உணர்ந்தோர் தோற்றங்கள் அனைத்தும் இயங்கிக்கொண்டு உள்ளன. அதனால் மனமும் இயங்கிக்கொண்டு உள்ளது. மன அலைச்சூழலைக் குறைத்து இயக்க நிலையைக்கழித்தால் மிச்சம் இருக்கும் இருப்பு என்பது பாழ் என்ற வெட்டவெளியாகும். இதுவே சூன்யம், இருள் என்று அழைத்தனர் ஞானியர். இருளாக உள்ள சூன்யம்தான் கோடான கோடி சூரியன், சந்திரன், கோள்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கும் வலிமையான உறுதிப்பொருளாக உள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
சூனியமாம் இருள் ஏதுமற்றதென்றும்
சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நன்று
சூனியமே கோடானுகோடி அண்ட
சூரியன் சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்
சூனியமே வலிமைமிக்க உறுதியாய் நின்று
சொரூப கோடிகளை இறுக்கி இயக்கு தன்றோ?
சூனியத்தை அணு நிலையாய்க் கொண்டு
சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன் (ஞா.க. 1380)
சூனியம் – ஆதிநிலை அறிதல்
       மனிதப் பிறவியின் நோக்கம் தனது ஆதிநிலையை அறிந்து, பேரறிவாகிய தெய்வீகத்தில் தமது சிற்றறிவை இணைத்துக் கொள்வதுதான். ஆறாவது அறிவு பெற்ற மனிதன் பெற வேண்டிய பேறாகிய முழுமைப்பேறாகும். அவ்வாறு தனது ஆதிநிலையை ஒருவர் அறிய எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள், சடப்பொருள்கள், சீவன்கள் ஆகிய தோற்றப் பொருட்களையும், ஐம்புலன் உணர்வுகளையும், ஒவ்வொன்றாக மனதிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அறிவுதான் மிஞ்சும். அந்த அறிவையும் கழித்துவிட்டால் மீதம் இருப்பது இருள், அகண்டம், நிர்விகற்பம், மௌனம் என்கிற ஆதிநிலையான சூன்யம் ஆகும். அறிவு அரூபம், ஆதிநிலையான தெய்வமும் அரூபம். இதுவே ஆதிநிலையை அறியும் வழியாகும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
ஆதிநிலை அறியவென்றால் அறிவைக் கொண்டு
அணுமுதலாய் அண்டபிண்ட தோற்றம் மற்றும்
சோதி, சப்தம், இவையோடு மணங்கள் என்று
சொல்லுலுகின்ற அனைத்தையுமே ஒவ்வொன்றாக
ஊதித்தள்ளி விட்டுவர, கடைசியாக
உனது அறிவே, அதையும் கழித்துவிட்டால்
மீது என்ன? இருள், அண்டம், நிர்விகற்பம்
மௌனமெனும் சூனியமே இதுவே ஆதி (ஞா.க.1377)
 சூனியத்தை எப்படி காணுவது?
 எண்ணுவதால் பார்வையினால் சூனியத்தை
இன்னபடி என அறிய முடிந்திடாது
எண்ணத்தால் யூகித்தே சூனியத்தை
ஏதோ ஒருவாறாக உணரலாகும் (ஞா.க. 1534)
      எண்ணுவதாலேயோ பார்வையாலேயோ சூனிய நிலையாகிய இருப்பு நிலையை இப்படித்தான் உள்ளது என்று மனிதனால் அறியமுடியாது. எண்ணத்தைக் கொண்டு உத்தேசமாகக் கணிக்கும் யூகத்தினால்தான் உணரமுடியும். எண்ணத்தை எண்ணத்தில் லயிக்கச் செய்யும் குண்டலினி தவம் பழகுபவர்கள் எண்ணம், நினைப்பு இன்றி ஒடுங்கி இருக்கும் நிலையில் சூனியத்தை உணர நேரிடலாம் என்கிறார் மகரிஷி.
பூரணம்
      ஒன்றுமில்லாத ஒன்று இருளாக, குறைவில்லா நிறைவாக பூரணமாய் மௌனமாக நிற்கும் நிலையினைப் போன்றது. இதற்கு முன்பாக ஏதும் இல்லாதிருந்ததால் இதனை ஆதிநிலை என்கிறார் வேதாத்திரி.
ஒன்றுமிலலா ஒன்று இருள், பூரணம், மௌனம்
உள்ளுணர்ந்து ஒடுங்கிநிற்கும் நிலையைப் போன்று
ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஆதியில்லை
ஒளி, வெளிச்சம், இயக்கம் அணு அதன் பூரிபபு
ஒன்றுமிலா ஒன்று இந்த நான்கானாலும்
ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தாகும்
ஒன்றுமில்லா ஒன்றின் இரகசியத்தைக் கண்டால்
உண்டு என்பது இல்லை என்பது இரண்டும் ஒக்கும் (ஞா.க.1379)
கடவுள் – பூரணம்
கடவுள் ஒன்றே பூரணமாம் உவமையில்லை
கருத்தொடுங்கில் கருத்தறிந்த நிலையில் மௌனம்
கடவுள், அணு. ஒலி, ஒளி, இறுக்கம் இவையாக உள்ளான்
கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக (ஞா.க.1388)
      கடவுள் என்ற ஒன்றுதான் குறைவில்லா நிறைவானது. பூரணமானது. ஆகவே இதை உவமை காட்டி விளக்க முடியாதது. தவத்தில் ஒடுங்கி உணர்வு நிலையில் மௌனமாக உணர வேண்டும். பூரணம் என்ற சொல்லுக்கு முழுமை என்பதே பொருளாகும். பூரணத்திலிருந்து பூரணத்தைக் கழித்துவிட்டால் மிஞ்சுவது பூஜ்யம்தான். எனவேதான் கண்ணதாசன் பாடல் ஒன்று இதை
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன். 
                        (கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்: வளர்பிறை)
     என்கிறது. பூரணம் இறைநிலையின் அம்சம். தவத்தின் வழியாக மனத்தை ஒடுக்கி இதைக் கண்டிடலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.
தொகுப்புரை
     சித்தர்களின் பரிபாஷை என்ற நெறியில் ஞானப்பேருண்மையினை சீடனுக்கு விளக்கும் சித்தர்நெறியில் திருமூலரும் இறைநிலையினை சூன்யநிலையாக திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனை என்ற தலைப்பில் உணர்த்துகிறார். வெட்டவெளியாகிய சூன்யத்தை யோகத்தின் வழியாக தவநெறிகளை விளக்கி மாணவர் தம்மை மேம்படுத்திக்கொண்டு தம்முள் தாமாக உணர்ந்த ஆனந்த நிலையினை அமுதம் பருகுதல் என்ற வகையில் உணர்த்துகிறார் திருமூலர். வேதாத்திரி மகரிஷியும் தாம் வந்தநிலையே சுத்தவெளியிலிருந்துதான் என்கிறார். அந்தவகையில் சுத்தவெளி சூன்யம், இருள் என்று பலவாறாக பெயரிட்டு அழைக்கப்படுகின்ற அந்தநிலை பூரணம் என்றும் அந்த நிலையை அடைவதே நமது முழுமைநிலை. இதுவே நம்மை நாம் அடையவேண்டிய நிலையுமாகும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இக்கட்டுரையின்வழி திருமூலர் கூறும் ஒன்றுமில்லாத ஒன்றாகிய சூன்யம் என்பதும், எல்லாம் அடங்கியுள்ள பூரணம் என்ற நிலையும் இருப்புநிலையான இறைநிலையின் தன்மையினை உணர்த்துவதே என்பதாம்.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
1.திருமந். திருமந்திரம் பாடல் எண்  (திருமந்திரம் பாடல்களின் எண்கள் திருமந்திரமும் மூலமும் தெளிவுரையும் – பேரா.ஆ.மாணிக்கம், வர்த்தமானன் பதிப்பகம் என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளவையாகும்).
2.அவ்.குறள் அவ்வைக்குறள்
3.சிவ.            சித்தர் சிவவாக்கியர் பாடல்
4.ஞா.க.         ஞானக் களஞ்சியம் (தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி)
துணைநூல் பட்டியல்
1.திருமந்திரம் மூலமும் தெளிவுரையும் – புலவர் அ.மாணிக்கம், வர்த்தமாணன் பதிப்பகம். சென்னை.
2.சித்தர்களின் குறியீட்டு மொழியும் திருமூலரின் சூன்ய சம்பாஷனையும், பேரா டி.என.கணபதி, ரவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.
3.பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், முனைவர் சுடலி தியாகராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.சித்தர் பாடல்கள், ஞா.மணிக்கவாசகன், உமா பதிப்பகம், சென்னை
5.ஔவைக்குறள் மூலமும் ஞான தீபார்த்த உரையும், ப.வடிவேலு செட்டியார், பி.இரத்தின நாயகர் சன்ஸ், சென்னை
6.ஞானக்களஞ்சியம், பாகம் 1- 2, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரி பதிப்பகம், ஈரோடு.
7.திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா ஆறாம் திருமுறை, வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வெளியீடு.
8.திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர், மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
9.சித்தர் தத்துவம், க.நாராயணன், மாரி பதிப்பகம், புதுச்சேரி.
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச.ஞானசம்பந்தன்,
அறங்காவலர்,
வேளச்சேரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை,
சென்னை 600 042.

 

 

திருமந்திரத்தில் சூன்ய சம்பாஷனையும் வேதாத்திரியத்தில் பூரணமும் ஓர் ஒப்பீடு PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here