தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.
தெளிவான சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனுபவ வெளிப்பாடுகளை சிறப்புற சிறுகதைகளாக்கித் தருவதில் வல்லமையுள்ளவராகத் தெரிகிறார். அலுவலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட சங்கடங்களை அத்துமீறல் கதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் எனக்குப் பிடித்தது பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இருப்பது. கார்குழலி உதாரணம். அதே போல ஒரு சராசரி அப்பாவின் மனநிலை, அவரின் இழப்பு, அவர் சார்ந்து குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றிச் சொல்லிச் செல்கிறது அப்பா கதை. மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமானது.. ஒரு தாய்க்கு கொள்ளி போடாத மகன்.. மருமகனையே கொள்ளிப் போடச்சொல்லும்உறவுகள்…யதார்த்தமானகதை.
நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் அனுபவங்களின் தொகுப்பாகவும் இவரின் கதைகள் அமைந்துள்ளன. ஈரமற்ற மனித மனங்களைக் காணும்போது தனக்குள் துடிக்கவும், ஏக்கமுறவும் ஒருத்தி…தாகத்துக்கு தண்ணீர் தராமல் நின்ற மக்களின் நடுவே இறந்துபோன உயிரைப் பற்றிப் பேசும் கதையாய் ஈரம் கதை எழுதப்பட்டிருக்கிறது. உடைந்து போன கலசங்கள் நல்ல கதை. வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரது வாழ்வுநிலை பற்றிப் பேசும் கதை ஏகாந்தம்… உண்மைக்கதை போன்றுள்ளது. கதையை நகர்த்தும் பாணியும் மனதில்ஏதோ ஒன்றை உணர்த்திச் செல்கிறது. சொரியலாக ஆங்காங்கே பிரசுரமான கதைகளை வாசித்திருந்தாலும், தொகுப்பாக இணைத்து வாசிக்கையில் கதைகளின் சிறப்பு உணரப்படும் என்றே கருதுகிறேன். கட்டுரை, விமர்சனங்கள் என இவர் எழுதியிருந்தாலும் கதைகளில் காட்டும் ஆர்வம் நம்மையும் உடன் இருத்தி அழைத்துச்செல்லும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் எளிமையான உரைநடை, கதைசொல்லும்பாங்கு ‘இது எனது கதை.. என்னை அல்லது எங்களைப் பற்றிய கதைகள் என ஒவ்வொரு கதைகளும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அவைதான் கதாசிரியருக்குக் கிடைத்த கிடைக்கப்போகும் வெற்றியுமாகும். தான் காணும் மாந்தர்களை உள்வாங்கி அசைபோட்டு, அசைபோட்டு பாத்திரங்களாக்கி கதைகள் எழுதும்போது அவைகள் அல்லது அக்கதாபாத்திரங்கள் நம்முள் ஒருவராக மாற்றி பாதிப்பையும் நமக்குத் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது. சமகால வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துத் தந்திருக்கிறார்.
சினிமாத்தனம் இல்லை. திருமணத்தில் நல்ல துணை வாய்த்தால் வாழ்வு சிறக்கும். இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும். துன்பம் தொடரும். கடைக்குட்டி கதையின் பாத்திரங்கள் கிராமத்து மனிதர்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆரவாரமில்லாமல் கதைநகர்கிறது.. அநேக கிராமத்து பெண்களின் வாழ்க்கை, அவர்களின் திருமணவாழ்க்கை, புகுந்த இடத்தில் முகம் கொடுக்கின்ற வேதனைகள் கணவனின் நோய்.. யாவற்றையும் எப்படி எதிர்கொள்கிறாள் எனச் சொல்லும் கதைகடைசிப்பிறவி.’வீட்டில் அடுப்பு எரியாவிட்டாலும் நான்தான் காரணமா? ஆண்கள் எதற்குமே காரணம் ஆகமாட்டீர்களா? தொட்டதெற்கெல்லாம் பெண்ணைத்தான் இந்தச் சமூதாயம் குறைசொல்லுமா? இப்படிக் கணவனிடம் கேட்டாலும் சமூகத்தைப் பார்த்து கேட்டது போலிருந்தது. உரையாடல்கள் அளவாக இருப்பினும் மனதை தொட்டுச்செல்கிறது. சிந்திக்காத சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் பல சோகங்கள் அளவிற்கு அதிகமாகத் திணிக்கப்படுகிறதோ?
ஆசிரியர் மீதான காதலை சொல்லமுடியாமல்.. தனக்குள் அரும்பிய காதலால் பாடங்களில் அதீத கவனம் செலுத்தியவள்.. தனக்காக அவன் இல்லை என்றானதும் உடைந்துபோகும் மாணவியின் கதை(கானல்நீர்) அழகியலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சிறந்த கதைசொல்லியென ஒவ்வொரு கதையினூடாகவும் நிருபிக்கிறார் ஆசிரியர். கிராமத்தில் சில நம்பிக்கைகள் இன்னும் இருக்கின்றன. மூடநம்பிகைகளே அவை என கடந்து சென்றாலும் கணத்தில் அதன்மீதான பார்வை நம்மையறியாமலேயே வந்து தங்கிக்கொள்வதை குளியலறை விபத்துகள் கதையில் அருமையாகச் சொல்கிறார். குளவிகூடு கட்டினால் நன்மை பயக்கும் என்பதை நமது பாட்டிமார் சொல்வார்கள் எனினும் பல தடவைகள் நிராகரித்திருக்கிறோம். எதிர்பாராமல் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தேறுகையில் அகமகிழ்ந்து போகிறோம். அதுதான்.. அப்படித்தான் என்றே நினைப்போம். கதையின் நாயகியின் நிலையிலும் பொருத்திப் பார்க்கையில் சரியோவென(குளவிகூடுகட்டினால்..) நினைக்கத்தோன்றுகிறது.
ஆசிரியரின் கல்வி, வாசிப்பனுபவம், பயிற்சி நிறையப் பெற்றிருப்பதினால் தான் எடுத்தாண்ட கதைக் கருவை அழகுற சிறுகதையாக்குவதில் வல்லமை பெற்றிருப்பது அனைத்துக் கதைகளிலும்காண்கிறோம். தனக்கொரு நியாயம் மற்றவர்க்கொரு நியாயம் கற்பிப்பவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பதற்கு இளம்பரிதி பாத்திரம் உதாரணம். ஆண் மனைவியை இழந்தால் மறுமணம் பற்றிப் பேசுபவர்கள் பெண் விதவையானால் மறுத்துப் பேசுபவர்களும் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறார்கள்தான்.மேலும் தன்மீதான குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லாமல் மனைவி மீதே கோபப்படும் இளம்பரிதி இந்தச் சமூகத்தின் இன்னொரு பிரகிருதி (சமத்துவம்).
காதலித்துத் திருமணம் செய்திருந்தும், வேலைக்குப் போகாத, மனைவியின் சுகதுக்கங்களில் துணையாக இல்லாத கணவனிடமிருந்து விலகிச்செல்லும் சூழல் அல்லது தீர்மானம் எடுக்கும் கமலிகாவின் முடிவும் சரியெனவே பட்டது. இன்றும் வேலைக்குப் போகும் பெண்களின் மனஉளைச்சல்கள் எழுத்தில் சொல்லிவிடமுடியாதுதான். ‘இனிமேல் என்னால் எல்லாம் வேலைக்குப் போகமுடியாது. முன்னாடி மாதிரியில்ல..இப்ப எனக்கு உடம்புக்கு முடியல. நான் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்காத..குடும்பத்தை நீதான்பாத்துக்கணும்.’ கமலிகாவின் இறுதி மனநிலையின் மாற்றத்திற்குக் காரணமாயிற்று. கமலிகா போன்றவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் எனலாம்(சில்லாட்டை).
அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் கதைசொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது. பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியிருக்கிறார். தவம் கதையிலும் தன்வாழ்வை, கடமையைத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் பெண் அதுவே சரியான முடிவுதான் என மனஉறுதிகொண்டு செயல்படுவது சூழலின் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என உணரமுடிகிறது. துன்பங்கள் நேர்கையில் மனதும் ஒரு கணத்தில் உறுதியுடன் செயல்பட்டு விடவும் கூடும். அக்கணத்தில் அதுவே சரியெனவும் உறுதிகொள்ளவும் வைத்துவிடுவது இயல்பே. ஒவ்வொரு கதைகளிலும் இழையோடும் பாசம், காதல், காமம் சாராத அன்பு, அந்நியோன்யம், விரிசல் வந்துவிடாதபடி குடும்ப உறவை நேர்த்தியாக இணைத்து நகர்த்தியபடி ஒவ்வொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. கணவன் இருக்கும் போதே பொட்டிட்டு ஒரு புகைப்படம் எடுக்க விரும்பிமுடியாமல் இறந்து போகும் தாய்…ஆச்சியுடன் ஐஸ்கிறீம் வாங்கி நட்பாய் வாழும் கயல்விழியும் மனதினை வசீகரிக்கிறது.
ஒரு பெண்ணை மகளாகப் பெற்ற பவித்ராவின் மனநிலையும் அவள் சந்தித்த நிகழ்வுகளும்…ஒருவனை தவறாக எடைபோட்டு விட்ட தன்கழிவிரக்கமும்…மகளிடம் சொல்லி ஆறுதல்படுவதும்யதார்த்தம். மாணவி ஒருத்தியின் அன்றாட நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டும் கதை பீதி. வீட்டுவேலைக்குள் அல்லல்படுதல், படிப்பில் ஆர்வமின்மை, சாட்டுச்சொல்லுதல், வீட்டுப்பாடம் செய்யாமல் வருதல் இப்படி நமது பள்ளிக்காலங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது.
இனியன், தென்றல், மரகதம் அம்மாள், பூனைக்குட்டிகள்…இவர்களைச் சுற்றிய கதை (பூனைக்குட்டியும்காதலும்)..பூனைகள் மீதான தென்றலின் காதலும், பூனைகளைக் கண்டாலே வெறுப்பாகும் மரகதம் அம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக பூனைமீது விருப்பம் கொள்வதும்…கடைசியில் பூனைகுட்டிகள் போட்டாதும் தோட்டத்து வீட்டில் கொண்டுபோய் விடச்சொல்ல..தென்றலின் வருத்தம்..அழகான கதை…பூனை உள்ள எல்லா வீடுகளின் நடக்கும் கதையாகக் கூடக் கொள்ளலாம். முகமூடி கதையில் மதுமிதா தனித்துவமானவள். அழகி…மற்றவர்கள் போலல்லாமல் வித்தியாசமாய்த் தெரிந்தாள்..கல்லூரி வாழ்க்கை பிடித்துப் போனாலும் அவளின் தோழிகளைப் போல வாழாது.. அசௌகரியாக உணர்கின்றாள். கல்லூரி வாழ்க்கை பலருக்கு நன்றாக அமையாது போய்விடுவதும், மதுமிதா போன்ற பெண்கள் படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்துவிடுவதும்.. இயல்பான கதை..தன்னை இழந்துவிடாமல் இருந்ததைப்போல… வேலையும் கண்டிப்பு எனும் முகமூடி அணிந்தே வாழப் பழகிக்கொள்ளும் பல மதுமிதாக்களில் ஒருத்தியாகிப் போனவளின் கதை…நன்றாக கருத்தைச் சொல்லும் கதை.
இவரின் கதைகளில் வர்ணனைகள் அதிகமில்லை.. வார்த்தை ஜாலங்கள் விளையாடவில்லை. தோழிகள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் போக சங்கமியும் குடும்பம், வேலை என சங்கமிக்கு..அவளுள் இருந்த கவிதை எழுதும் ஆர்வமும் கணவனுக்காக மௌனமாகிவிட…வேலை பார்க்கும் இடத்தில் அவளின் தோழி தன் தோழர்களுடன் அவள் டைரியில் எழுதி வைத்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி அவளின் பிறந்தநாள் பரிசாகத் தந்துவிட..அவளின் மகிழ்ச்சி மேலிட..நம்மையும் வசீகரிக்கிறாள். தனித்தனியே இதழ்களில் வாசித்திருக்கிறேன். இப்போது நூலாக வரும்போது தொகுத்து வாசிக்க முடிந்திருக்கிறது. வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான் என்பார்கள். இங்கு சோமசுந்தரி அவர்களின் இக்கதைத் தொகுதியை வாசித்ததன் மூலம் எனக்குள் அதிக தாக்கங்களையும், நினைவுகளையும் மீட்ட வைத்திருக்கிறது. நிறைய எழுதல் வேண்டும். புதியதாய் எழுத்துக்கள் வரல்வேண்டும். அவை இலக்கிய உலகிற்குச் செழுமைகள் சேர்க்கவேண்டும்…வாசகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.
நூல் விமர்சனம்
திரு முல்லை அமுதன்
இலண்டன்







