Abstract
Marathi literature is recognized as one of the distinctive literary traditions among Indian language literatures, marked by a rich heritage and continuous development. Centered in the state of Maharashtra, this literature has evolved in close association with political history, religious movements, social transformations, the spread of education, and modern intellectual currents. Marathi literature functions not merely as a linguistic expression but also as a social document that reflects the lived experiences, culture, resistance to authority, and reformist aspirations of the people. This research article provides a comprehensive overview of the development of Marathi literature from its origins to the modern period. It examines various phases such as Bhakti literature, the Pandit tradition, political awakening, colonial transformations, modern literary forms, as well as Dalit and feminist writings, each discussed in detail to highlight their contributions to the evolution of Marathi literary discourse.
“மராத்தி இலக்கியம் – ஓர் அறிமுகம்”
முன்னுரை
மராத்தி இலக்கியம் இந்திய மொழி இலக்கியங்களில் தனித்துவமான மரபும் தொடர்ச்சியான வளர்ச்சியும் கொண்ட இலக்கியமாக விளங்குகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த இந்த இலக்கியம், அரசியல் வரலாறு, சமய இயக்கங்கள், சமூக மாற்றங்கள், கல்வி பரவல் மற்றும் நவீன சிந்தனைகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. மராத்தி இலக்கியம் ஒரு மொழியின் இலக்கியமாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, அதிகார எதிர்ப்புணர்வை மற்றும் சீர்திருத்தக் கனவுகளை வெளிப்படுத்தும் சமூக ஆவணமாகவும் செயல்பட்டுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை மராத்தி இலக்கியத்தின் தோற்றம் முதல் நவீன காலம் வரை அதன் வளர்ச்சியை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. பக்தி இலக்கியம், பண்டித மரபு, அரசியல் எழுச்சி, காலனிய கால மாற்றங்கள், நவீன இலக்கிய வடிவங்கள், தலித் மற்றும் பெண்ணிய எழுத்துகள் ஆகிய அனைத்தும் இதில் தனித்தனியாக விவாதிக்கப்படுகின்றன.
மராத்தி மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்
மராத்தி மொழி இந்தோ–ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக மொழியியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இது மகாராஷ்டிரப் பிராகிருதம் மற்றும் அபப்ரஷம் ஆகிய மொழிநிலைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாக உருவானது. ஆரம்பகாலத்தில் மராத்தி வாய்மொழி மரபாகவே இருந்து வந்தது. காலப்போக்கில் அரசியல் அதிகாரம், மத இயக்கங்கள் மற்றும் கல்வி வளர்ச்சி ஆகியவை மொழியின் எழுத்து வடிவ வளர்ச்சிக்கு வழிவகுத்தன. நானேகாட் கல்வெட்டுகள், சடவாகனர் கால நாணயங்கள் பின்னர் யாதவ வம்சத்தின் கல்வெட்டுகள் மராத்தி மொழியின் வரலாற்றுப் பயணத்தை உணர்த்துகின்றன. இவ்வாறான சான்றுகள் மராத்தி மொழி மக்களின் அன்றாட வாழ்வுடன் நெருக்கமாக இணைந்திருந்ததை காட்டுகின்றன.
ஆரம்பகால மராத்தி இலக்கியம் பக்தி இயக்கத்தின் தோற்றம்
13ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இயக்கம் மராத்தி இலக்கிய வளர்ச்சியில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியது. சமஸ்கிருதம் போன்ற உயர்மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து வெளியேறி, பொதுமக்கள் பேசும் மொழியில் இறைநம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இந்த இயக்கத்தின் அடிப்படை.
ஞானேஸ்வர், நாமதேவர், துக்காரம்
ஞானேஸ்வரின் ஞானேஸ்வரி¹ மராத்தி இலக்கியத்தின் அடித்தள நூலாகக் கருதப்படுகிறது. பகவத் கீதையின் கருத்துகளை மராத்தி மொழியில் எளிமையாக விளக்கும் இந்த நூல், சமயத்தையும் மொழியையும் பொதுமக்களுக்கு நெருக்கமாக்கியது. ஞானேஸ்வரின் எழுத்து நடை, தத்துவ ஆழமும் கவித்துவ நயமும் இணைந்ததாக அமைந்துள்ளது. நாமதேவின் அபங்கங்கள் சமூக சமத்துவம் மற்றும் இறைபக்தியை வலியுறுத்துகின்றன. அவர் சமய அனுபவத்தை தனிப்பட்ட ஆன்மிக உணர்வாக மட்டுமல்லாமல் சமூக உணர்வாகவும் வெளிப்படுத்தினார். துக்காராமின் கவிதைகள் மராத்தி பக்தி இலக்கியத்தின் உச்சமாகக் கருதப்படுகின்றன. இவரது பாடல்களில் மனித வாழ்க்கையின் துயரங்களும் நம்பிக்கைகளும் இயல்பாக வெளிப்படுகின்றன. எளிய மொழியில் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்தியதே துக்காரத்தின் தனித்துவமாகும்.
பண்டித இலக்கிய மரபு
பக்தி மரபுடன் இணையாக பண்டித இலக்கிய மரபும் வளர்ந்தது. இந்த மரபில் புராணங்கள், இதிகாசங்கள், சமய விளக்க நூல்கள் ஆகியவை எழுதப்பட்டன. சமஸ்கிருத இலக்கியத்தின் தாக்கம் இருந்தாலும், மராத்தி மொழியின் சொந்த இலக்கிய அடையாளம் இம்மரபில் உருவானது.
மராத்திய அரசியல் மற்றும் இலக்கியம் எழுச்சி
சிவாஜி மகாராஜாவின் காலத்தில் உருவான மராத்திய அரசியல் எழுச்சி இலக்கியத்திலும் பிரதிபலித்தது. வீரரசம், தேசபக்தி மற்றும் சுயமரியாதை உணர்வுகளை வெளிப்படுத்தும் பவாடா பாடல்கள் இந்தக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றன. இவை மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்கின. 19ஆம் நூற்றாண்டில் காலனிய கால மராத்தி இலக்கியம், சமூகத்திலும் இலக்கியத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அச்சுத் தொழில்நுட்பம், மேற்கத்திய கல்வி மற்றும் புதிய சிந்தனைகள் மராத்தி இலக்கியத்தை நவீன திசைக்கு இட்டுச் சென்றன.
உரைநடை வளர்ச்சி
செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் கட்டுரை எழுத்து மரபுகள் இந்தக் காலத்தில் வளர்ந்தன. பாலசாஹெப் ஜாம்பேகர், விஷ்ணுசாஸ்திரி சிப்லுங்கர் போன்றோர் உரைநடையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.
சமூக சீர்திருத்த இலக்கியம்
ஜோதிபா பூலே, கோபால கணேஷ் அகர்கர் போன்றோர் சமூக சீர்திருத்தக் கருத்துகளை தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்தினர். சாதி அமைப்பு, கல்வி, பெண்கள் நிலை போன்ற கருத்துக்கள் இக்கால இலக்கியத்தின் மையமாக இருந்தன.
நவீன மராத்தி கவிதை, நாவல், நாடக இலக்கியம்
20ஆம் நூற்றாண்டில் மராத்தி கவிதைகள் புதிய வடிவங்களையும் புதிய மொழி வெளிப்பாடுகளையும் பெற்றது. கேசவ்சுத், பால்கவி, விந்தா கரந்திகர் போன்றோர் மராத்தி கவிதையை நவீன உணர்வுகளுடன் இணைத்தனர். மராத்தி நாவல்கள் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கும் முக்கிய இலக்கிய வடிவமாக வளர்ந்தது. குடும்ப அமைப்பு, சமூக மாற்றங்கள், மனித உளவியல் போன்றவை நாவல்களில் பேசப்பட்டன. ஹரி நாராயண் ஆப்தே, வி. வி. ஷிர்வாட்கர், பி. எல். தேஷ்பாண்டே ஆகியோர் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்கள் ஆவர். மராத்தி நாடகம் சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகளை மேடையேற்றும் ஊடகமாகச் செயல்பட்டது. விஜய் தெண்டுல்கர் போன்றோர் நவீன மராத்தி நாடகத்திற்கு விமர்சனத் தன்மையையும் சமூகக் கேள்விகளையும் கொண்டு வந்தனர்.
தலித் இலக்கியம்
20ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் மராத்தி தலித் இலக்கியம் ஒரு முக்கிய இலக்கிய இயக்கமாக உருவெடுத்தது. இது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அனுபவங்களையும் மக்களின் எதிர்க்குரலையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த இயக்கம் வெறும் இலக்கியப் போக்காக மட்டுமல்லாமல், சமூக விழிப்புணர்வு மற்றும் சுயமரியாதை உணர்வை வளர்த்த ஒரு பண்பாட்டு இயக்கமாகவும் கருதப்படுகிறது. மராத்தி இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்தின் மையமாக கொண்டு வரப்பட்டன. பாபுராவ் பாகுல், நாம்தேவ் தசால், தயா பவார் போன்றோர் மராத்தி தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் கவிதைகள் மற்றும் சிறுகதைகளில் சாதி ஒடுக்குமுறை, வறுமை, நகர்ப்புற விளிம்பு வாழ்க்கை, கல்வி மறுப்பு போன்ற அனுபவங்கள் அலங்காரமற்ற மொழியில் வெளிப்படுத்தப்படுகின்றன.
பெண்ணிய மராத்தி இலக்கியம்
மராத்தி பெண் எழுத்தாளர்கள் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக பதிவு செய்தனர். குடும்பம், சமூகம் மற்றும் தனிப்பட்ட அடையாளம் போன்றவை இவர்களின் எழுத்துகளில் முக்கியமாக முக்தாபாய், சாவித்ரிபாய் பூலே, மற்றும் தாராபாய் ஷிண்டே ஆகியோர் பெண்ணிய எழுத்துக்களின் முன்னோடியாக திகழ்கின்றனர்.
முடிவுரை
மராத்தி இலக்கியம் அதன் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் கலை, அரசியல், பண்பாடு எனப் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வந்துள்ளது. இம்மாற்றங்களால் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. பக்தி இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை மராத்தி இலக்கியத்தின் வளர்ச்சியானது, இந்திய இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தை வழங்குகிறது.
துணைநூற்பட்டியல்
1. Deshpande, G. S., History of Marathi Literature, Popular Prakashan, Mumbai, 2007.
2.Callewaert, Winand M., The Hagiographies of Namdev, Manohar, New Delhi, 1996.
3.Ranade, R. D., Mysticism in Maharashtra, SUNY Press, Albany, 1983.
4. Zelliot, Eleanor, From Untouchable to Dalit, Manohar, New Delhi, 1992.
5. Tulpule, S. G., Classical Marathi Literature, Popular Prakashan, Mumbai, 1979.
6. Kulkarni, P. V., History of Medieval Marathi Literature, Popular Prakashan, Mumbai, 1993.
7. Rege, Sharmila, Writing Caste/Writing Gender, Zubaan, New Delhi, 2006.
8. Mukherjee, Meenakshi, The Perishable Empire, Oxford University Press, New Delhi, 2000.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சி.காயத்ரி
ஆராய்ச்சி மாணவி
சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்.
நெறியாளர்
முனைவர் தி.சிந்தியா
உதவிப் பேராசிரியர்
சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்.




சி.காயத்ரி


