Abstract
The two novels, Amma Vandhal and Vamsavriksham, intricately portray various social facets such as family structure, traditions, religious beliefs, the status of women, and generational shifts. In Amma Vandhal, the moral codes governing the traditional family unit, the role of the mother, and societal norms are prominently depicted. This novel clearly illustrates the constraints placed upon women’s lives as well as societal expectations regarding them. Vamsavriksham offers a profound chronicle of family traditions and the evolution of mindsets across generations. The conflicts arising between conservatism and modern thought constitute a central theme in this novel. Both novels clearly reflect the socio-cultural fabric of their respective contexts. These two works stand as significant literary texts that demonstrate how a society’s traditional values interact with and undergo changes necessitated by the passage of time.
“அம்மா வந்தாள், வம்சவிருட்சம் நாவல்களில் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகள்”
ஆய்வுச்சுருக்கம்
அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் குடும்ப அமைப்பு, மரபுகள், மத நம்பிக்கைகள், பெண்களின் நிலை, மற்றும் தலைமுறை மாற்றங்கள் போன்ற பல்வேறு சமூக கூறுகளை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன. அம்மா வந்தாள் நாவலில், பாரம்பரிய குடும்ப அமைப்பில் உள்ள ஒழுக்க விதிகள், தாயின் பங்கு, மற்றும் சமுதாயத்தின் நெறிமுறைகள் முக்கியமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இதில், பெண்களின் வாழ்க்கை கட்டுப்பாடுகள் மற்றும் சமூக எதிர்ப்பார்ப்புகள் தெளிவாகக் காட்டப்படுகின்றன. வம்சவிருட்சம் நாவல், குடும்ப மரபு மற்றும் தலைமுறைகளின் சிந்தனை மாற்றங்களை ஆழமாக பதிவு செய்கிறது. பழமைவாதமும் நவீன சிந்தனையும் இடையே உருவாகும் முரண்பாடுகள், இந்த நாவலில் முக்கிய கருப்பொருளாக உள்ளது. நாவல்களில் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. இவ்விரு நாவல்களும் சமூகத்தின் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் காட்டும் முக்கியமான இலக்கியங்களாக விளங்குகின்றன.
முன்னுரை
நாவல்கள் சமூக வாழ்க்கையை ஆழமாகப் பதிவு செய்யும் தன்மை கொண்டவை. குடும்ப அமைப்பு, பெண்களின் நிலை, மரபு மற்றும் நவீன மாற்றங்கள் போன்றவை நாவல்களில் விரிவாக சித்தரிக்கப்படுகின்றன. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் எஸ். எல். பைரப்பாவின் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் அக்கால சமூக வாழ்க்கையையும் பண்பாட்டுச் செய்திகளையும் பதிவு செய்கின்றன. இவ்வாறு இருக்கும் நிலையில் நாவல்களில் இடம்பெறும் சமுதாயப் பண்பாட்டுப் பதிவுகளை ஆய்வு செய்து அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயவியல் திறனாய்வு
இலக்கியங்கள் பெரும்பாலும் சமுதாயத்தை மையமிட்டும் சமுதாயக் காரணிகளை தன்னகத்தே கொண்டும் படைக்கப்படுகின்றன. ஓர் இலக்கியத்தின் வளர்நிலைக்கும் வீழ்ச்சிக்கும் சமுதாயச் செயல்பாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவை எதார்த்தவாத அழகியலை கொண்டுள்ள படைப்புகள் பதிவுசெய்கின்றன. அவற்றிற்கிடையே அமைந்துள்ள உறவினைப் பற்றி ஆராய சமுதாயவியல் திறனாய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. சமுதாயவியல் திறனாய்வில் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக அறிஞர்கள் பலர் கருத்துரைத்துள்ளனர். சான்றாக தே பெர்னால்ட் என்னும் பிரான்சு நாட்டு அறிஞர் இலக்கியம் என்பது சமுதாயத்தின் புலப்பாடு என்று கூறுகிறார். இவ்வாறன வரையறைகளின் வழி இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவு புலனாகிறது.
தமிழில் சமுதாயவியல் திறனாய்வு முயற்சிகள்
இலக்கியத்தை சமுதாய விழுமியங்களின் அடிப்படையில் அணுகுவதென்பது தமிழில் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் ஒரு வழிமுறையாகும். அறிஞர்கள் பலர் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்குமான உறவில் பங்காற்றியுள்ளனர். சமுதாயவியல் திறனாய்வு, மார்க்சிய திறனாய்வு என்று இலக்கியம் குறித்த சமுதாய நோக்கு இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் தலித்தியம், பெண்ணியம், பின் காலணியம் முதலிய திறனாய்வு முறைகளும் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள உறவினை ஆராய்வதாகவே அமைந்துள்ளன. இவ்வாறு இலக்கியம், சமுதாயம் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவினை ஆராய்ந்த அறிஞர்களாக க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோவை ஞானி, தமிழவன், அ.மார்க்ஸ் போன்ற அறிஞர்களைக் குறிப்பிடலாம்.
அம்மா வந்தாள் மற்றும் வம்ச விருட்சம் சமுதாயப் பதிவுகள்
வம்ச விருட்சம் நாவலில் இடம்பெறும் சீனிவாசன் என்ற கதைமாந்தரும் அம்மா வந்தாள் நாவலில் இடம்பெறும் அப்பு என்ற கதைமாந்தரும் வேதம் கற்றவர்களாக காட்டப்படுகின்றனர். வேதம் கற்றல் என்பது பாரம்பரியமாக பிராமணச் சமூகத்திற்கே உரிய கல்வி உரிமையாக கருதப்பட்டதால், இவ்விரு குடும்பங்களும் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவை என்று உய்த்துணர முடிகிறது. மேலும் அப்புவின் தந்தையும் சீனியின் தாத்தாவும் வேதக் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இருப்பது பிராமணச் சமூகத்தின் கல்வி மரபை பதிவு செய்வதாக உள்ளன.
சமுதாயச் சிக்கல்
சமுதாயத்தால் தனிமனிதன் எவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகிறான் என்பதை இந்த இரண்டு நாவல்களும் விளக்குகின்றன. எடுத்துக்காட்டாக அலங்காரத்தம்மாள், இந்து ஆகிய பெண்களின் பாலியல் விருப்பங்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகள் காரணமாக தடைகள் எழுவதை அம்மா வந்தாள் நாவல் பதிவு செய்கிறது. அவ்வாறே நஞ்சுண்ட பண்டிதர் குழந்தைபேறு இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த ஒரு கூத்து கலைஞர் ஷாமதாசர் என்பவர் வாயிலாக தம் மனைவி அச்சம்மாவை கருவுற செய்து நஞ்சுண்ட பண்டிதர் குழந்தைபேறு அடைவதாக வம்சவிருட்சம் நாவலில் கூறப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாலியல் ஒழுகலாறுகளில் சமூகத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைவதும் அவற்றின் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவதும் புலனாகிறது. இவ்விரு நாவல்கள் சமூகத்தில் நிலவிய கட்டுப்பாடுகள் ஒழுக்க விதிகள் மற்றும் அவற்றால் மனித உணர்ச்சிகள் எவ்வாறு சிதைவடைகின்றன என்பதைக் காட்டுகின்றன. குடும்பம் மற்றும் மனித உறவுகளுக்கு இடையே உருவாகும் உணர்ச்சிகள் இவ்விரு நாவல்களிலும் இயல்பாகவே வெளிப்படுகின்றன.
பெண்களின் சிக்கல்
காத்தியாயினி இந்து ஆகிய இரு பெண் கதை மாந்தர்களும் சமூக ரீதியாக ஒத்த தன்மையை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருவருமே கணவனை இழந்த பெண்கள். ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், பெண்களின் மறுமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இரட்டை நிலை இங்கு வெளிப்படுகிறது. இவ்விரு பெண்களும் சமூக கட்டுப்பாடுகளை எதிர்த்து தங்களின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இவை அக்கால சமூகத்தில் பெண்களின் நிலையை உணர்த்தும் முக்கியமான சமூகப் பதிவுகளாக அமைகின்றன.
குடும்பச் சிக்கல்கள்
சதாசிவராயரும் அலங்காரத்தம்மாளும் மரபார்ந்த குடும்ப அமைப்பினைக் கொண்டிருந்த போதும் சமூக ஒழுக்க விதிகளுக்கு எதிரான உறவுகளில் ஈடுபடுகின்றனர். சதாசிவராயர் தன் மனைவி நாகலட்சுமியுடனும் மகனுடனும் வாழ்ந்த போதிலும், தன் வரலாற்று நூல் தொகுப்பில் துணையாக இருந்த கருணாவை மறுமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இத்திருமணம் செய்து கொண்ட போது இரு மனைவிகளுக்கு எதிரான சட்டம் இந்தியாவில் இல்லை. ஆனால், அவர் அவளுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லை. மறுபுறம் அலங்காரத்தம்மாள் சிவசுவுடன் தொடர்பு கொண்டு மூன்று பிள்ளைகளை பெற்றிருந்தாலும், திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்விரு நிகழ்வுகளும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய செயல்களாக காட்டப்பட்டு சமூகத்தில் நிலவிய ஒழுக்க கோட்பாடுகளில் நடைமுறையில் நிலவும் முரண்பாடுகளின் நிலையை பதிவு செய்கின்றன.
முதுமைச் சிக்கல்
தி. ஜானகிராமன் முதியவர்களின் மனநிலையை உணர்ச்சிபூர்வமாக சித்தரிக்கிறார். அம்மா வந்தாள் நாவலில் வயதான தாயின் தனிமை, அன்புக்கான ஏக்கம், குடும்பத்தில் புரிதல் இல்லாமை போன்ற பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. வம்சவிருட்சம் நாவலில் முதியவர்கள் பழைய மரபுகளைப் பிடித்துக் கொள்வதும், இளம் தலைமுறையினருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் போன்றவை சிக்கல்களாகக் காட்டப்படுகின்றது. ஆகவே, இவ்விரு நாவல்களிலும் முதுமை என்பது உடல் பலவீனம் மட்டுமல்ல, மன வேதனை மற்றும் குடும்ப மோதல்களையும் உள்ளடக்கியதாக உள்ளன.
சமுதாயத் தீர்வுகள்
படைப்புகளில் முன்வைக்கப்பட்டுள்ள சமுதாயச் சிக்கல்களுக்கு நாவலாசிரியர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்வுகளை முன்வைத்திருக்கலாம் அல்லது தீர்வுகளை வாசகர்கள் ஊகிக்கும்படி ஆசிரியர் இடம் ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். இத்தகைய தீர்வுகளை சமுதாயத் தீர்வுகள் என்று அழைப்பது மரபு. அம்மா வந்தாள், வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களிலும் சமுதாயத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இரு நாவல்களிலுமே பெண்கள் மீது குடும்பம் என்னும் நிறுவனம் வைக்கும் அழுத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காத்தியாயினி, அலங்காரத்தம்மாள் ஆகிய இருவருமே தங்களின் பாலியல் விருப்பத்திற்கு எதிராக குடும்பத்தினரால் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அலங்காரத்தம்மாளின் மனநிலையை மகன் அப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவள் காசிக்கு சென்று தனிமையில் தன் வாழ்வை நிறைவு செய்வதாக தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே காத்தியாயினி, ராஜா என்பவர் மீது கொண்ட காதலை அவளுடைய குடும்பம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ராஜாவுடன் வாழ்க்கையைத் தொடர நினைத்து அதேசமயம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் உள்ளகிறாள். இறுதியில் காத்தியாயினியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடும்பம் என்னும் நிறுவனம் நாம் நினைப்பதுபோன்று உறுதியான குருதி தொடர்பால் அமைவது அல்ல என்ற உண்மையை உணர்கின்றனர். இவ்வாறு செயற்கையான போலி கவுரவத்திற்கு குடும்ப வாழ்வில் இடமில்லை என்பதை ஒரு தீர்வாக எஸ்.எல். பைரப்பா வம்சவிருட்சம் நாவலில் முன்வைத்துள்ளார்.
அம்மா வந்தாள் மற்றும் வம்சவிருட்சம் ஆகிய இரு நாவல்களும் சமூகக் கட்டுப்பாடுகள் மனிதர்களின் உணர்ச்சிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பெண்களின் மறுமணத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளாமல், ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் இரட்டை நிலை வெளிப்படுகிறது. இதற்கு தீர்வாக ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் சமூகத்தில் வளர வேண்டும். விதவைப் பெண்களின் மறுமணத்தை தவறாக பார்க்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். குடும்பத்தினரும் சமூகமும் பெண்களின் தனிப்பட்ட முடிவுகளை ஆதரிக்க வேண்டும்.
மேலும், ஒழுக்க விதிகள் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் கருவியாக அல்லாமல், பெண்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். திருமணம், மறுமணம் போன்ற விஷயங்களில் சட்டம் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்று, வேலை செய்து பொருளாதா ரீதியில் முன்னேறினால், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும். ஆகவே சமத்துவம், கல்வி, சட்ட விழிப்புணர்வு மற்றும் குடும்ப ஆதரவு ஆகியவை இணைந்தால் சமூகச் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
அம்மா வந்தாள், மற்றும் வம்சவிருட்சம் நாவல்களில் வெளிப்படும் பண்பாட்டுப் பதிவுகள்
பண்பாடு என்ற சொல் மனிதர்களோடு மட்டுமே தொடர்புடையது. மனிதனைப் பிற உயிரினங்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது. மனிதன் மட்டுமே பண்பாட்டை கொண்ட விலங்காவான் என்பர். பரிணாம வரிசையில் மனிதனுக்கு கீழுள்ள வாலில்லாக் குரங்கினங்கள், தேனீக்கள், எறும்புகள், ஆகியவற்றின் வாழ்க்கையில் நெறிப்படுத்தப்பட்ட நடத்தைகள் காணப்படுவதால் பண்பாடு என்ற சொல் மனிதனுக்கு மட்டுமே உரியது என்று கூறுவது பொருத்தமுடையதாக தோன்றவில்லை என்றும் கூறுவர். பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையைக் குறிக்கும் முக்கியமானக் கருத்தாகும். அது மனிதன் கற்றுக்கொள்ளும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அறிவு, கலை, சட்டம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே, பண்பாடு மனித வாழ்வின் முழுமையான வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.
பண்பாடு பிறப்பால் கிடைப்பதல்ல அது சமூகத்தில் வாழும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்படுவது. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மொழி, சடங்கு, பழக்கவழக்கங்கள் மூலம் பரிமாறப்படுகிறது. மேலும், பண்பாடு நிலையானதல்ல, அது காலத்தின்படி மாறிக்கொண்டே இருக்கும். புதிய சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றங்கள் பண்பாட்டை மாற்றுகின்றன. அதே நேரத்தில், பாரம்பரிய அம்சங்களும் தொடர்கின்றன. எனவே பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் அதன் வளர்ச்சியையும் மாற்றத்தையும் புரிந்துகொள்ள உதவும் முக்கிய கூறாகவும் அமைகின்றது.
பண்பாடும் இலக்கியமும்
இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக கிராம வாழ்க்கையைச் சித்தரிக்கும் படைப்புகளில், அங்குள்ள மக்களின் வாழ்வியல் முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை நுட்பமாகப் பதிவு செய்யப்படுகின்றன. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் நிகழ்வுகள், அவர்களின் உணர்வுகள், சமூக உறவுகள் ஆகியவை பண்பாட்டின் பிரதிபலிப்பாக அமைகின்றன. மேலும், மொழி பயன்பாடு, சொற்றொடர்கள், பழமொழிகள் போன்றவை ஒரு சமூகத்தின் அடையாளமாக விளங்குகின்றன. அவை அந்தச் சமூகத்தின் சிந்தனை முறையையும் வாழ்க்கை அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் இலக்கியங்களில் இயல்பாக கலந்து வரும் போது, அது வாசகர்களுக்கு அந்தச் சமூகத்தை நேரடியாக அனுபவிக்கும் உணர்வை வழங்குகின்றது. எனவே, இலக்கியப் படைப்புகள் சமூகத்தின் பண்பாட்டு பதிவுகளாகவும் செயல்படுகின்றன என்பதைக் காணலாம்.
பண்பாட்டுப் பதிவுகள்
வம்ச விருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் பிராமண சமூகத்தின் வாழ்வியல் ஒழுகலாறுகள், பண்பாட்டு ஒழுகலாறுகள், குடும்ப அமைப்பு மற்றும் சமுதாய முரண்பாடு ஆகியவற்றை இயல்பாக பதிவு செய்துள்ளன.
வேதக்கல்வி
வம்சவிருட்சம் நாவலில் சீனிவாச பண்டிதர் வேதக் கல்வியில் சிறந்தவராக காட்டப்படுகிறார். தன் அடுத்த தலைமுறைகளிலும் வேதக் கல்வி தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தம்முடைய பேரனுக்கும் கல்வியை கற்பிக்கிறார். வேத மரபும், குடும்ப மரபு தொடர்ச்சியும் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பிராமண சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. பெண்கள் குடும்பத்திற்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு வாழ வேண்டியவளாக வம்சவிருட்சம் நாவலில் காட்டப்படுகிறனர். காத்தியாயினி கணவனை இழந்த பிறகு சமூக விதிகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறாள். கணவனை இழந்த பெண் என்ற காரணத்தால் அவளது உடை, நடத்தை, ஆசைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அம்மா வந்தாள் நாவலில் கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கையை நேரடியாக காட்டப்படவில்லை. வம்ச விருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் ஒரே விதமான பிராமண சமூகப் பின்னணியை கொண்டிருந்தாலும் பண்பாட்டை பதிவு செய்யும் முறையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன. வம்ச விருட்சம் நாவலில் தாய்மை, குழந்தை பேறு, வம்சத் தொடர்ச்சி, மரணம் ஆகிய யாவும் சடங்குகளுடன் இயைந்தும் மரபை மையமிட்ட ஒன்றாக காட்டப்படுகின்றன. மகனை காக்க தாய் விரதம் இருப்பது, நாக பிரதிஷ்டை போன்ற சடங்குகள் மேற்கொள்வது, வம்ச வளர்ச்சிக்காக சமூக ஒழுக்கங்கள் கடைபிடிக்கப்படுவது, சிரார்த்தங்கள் விதிமுறைப்படி நடத்தப்படுவது போன்றவை அந்த கால பிராமண சமூகத்தின் பண்பாட்டு வாழ்க்கையை தெளிவாக பதிவு செய்கின்றது. இதற்கு மாறாக அம்மா வந்தாள் நாவலில் இத்தகைய சடங்கு சார்ந்த பண்பாடுகள் பெரிதும் இடம்பெறுவதில்லை.
அம்மா வந்தாள் நாவலில் தாய்மை, சடங்குகளால் அல்ல வாழ்க்கை சுமை, பொறுப்பு மற்றும் தியாகம் மூலமாக வெளிப்படுகிறது. குழந்தை பேறு அல்லது வம்ச தொடர்ச்சி போன்ற கருத்துக்கள் சடங்குகளாக அல்லாமல் குடும்ப அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சமூக நிகழ்வாக மட்டுமே வெளிப்படுகிறது. இவ்வாறு வம்சவிருட்சம் நாவல் மரபு மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு பண்பாட்டைப் பதிவு செய்கிறது என்றால், அம்மா வந்தாள் நாவல் சடங்குகளில் இருந்து மாறுபட்டு நடைமுறை வாழ்க்கை சார்ந்த ஒன்றாக பண்பாட்டை எதிர்கொள்கிறது. அம்மா வந்தாள் நாவலில் இடம்பெற்றுள்ள அலங்காரத்தம்மாள் மற்றும் சிவசு ஆகியோருக்கு இடையே அமைந்துள்ள உறவினை இதற்குச் சான்றாகக் கூறலாம். அவ்வாறே அப்பு, இந்து ஆகியோரின் உறவையும் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்வைக்க முடியும். இதன்மூலம் காலப்போக்கில் பிராமணச் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களும் மதிப்பீடுகளின் மாறுபாடுகளும் தெளிவாக உணர்த்தப்படுகின்றன. வம்சவிருட்சம் மற்றும் அம்மா வந்தாள் ஆகிய இரு நாவல்களும் ஒப்பிடப்பட்ட நிலையில் பண்பாட்டு நோக்கில் எஸ். எல். வைரப்பாவின் வம்சவிருட்சம் நாவலை விட தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் நடைமுறை சார்ந்த நோக்கை அதிகம் வற்புறுத்துகின்றது.
முடிவுரை
தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் எஸ். எல். பைரப்பாவின் வம்ச விருட்சம் ஆகிய இவ்விரு நாவல்களும் சமூகக் கட்டுப்பாடுகள், மனித உணர்ச்சிகள் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்களின் நிலை, குடும்ப அமைப்பு, மரபு மற்றும் நவீன மாற்றங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது வம்சவிருட்சம் மரபு சார்ந்த பண்பாட்டை வலியுறுத்த அம்மா வந்தாள் நடைமுறை வாழ்க்கை சார்ந்த அணுகுமுறையை அதிகமாக முன்னிறுத்துகிறது. எனவே இவ்விரு நாவல்களும் சமூக மாற்றங்களையும் மனித உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள துணைபுரியும் முக்கியமான இலக்கிய பனுவல்களாக விளங்குகின்றன.
பார்வை நூல்கள்
1.இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், முனைவர்க.பஞ்சாங்கம், அன்னம் பதிப்பகம்.
2.பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி, மெய்யப்பன் பதிப்பகம்.
3.சமூகவியலும் இலக்கியமும், க.கைலாசபதி, காலச்சுவடு பதிப்பகம்.
4.அம்மா வந்தாள், தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், 2014.
5.வம்சவிருட்சம், எஸ்.எல்.பைரப்பா, தமிழில் – கே.நல்லதம்பி, 2024.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
பை.லட்சுமி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரா – 517426.
நெறியாளர்
முனைவர்.கு.பத்மநாபன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம்,
குப்பம், ஆந்திரா – 517426.




முனைவர் பட்ட ஆய்வாளர்,


