Shaivism as expressed in Silappadhikaram|Dr.M.Pushpagavalli

சிலப்பதிகாரம் கூறும் சைவ சமய கருத்துகள்
Abstract
          Silappathikaram is one of the five great epics. It is praised as the first in the organizational system of the great epic and is considered to be the most heart-warming. It was composed by the ascetic Ilangovadi of the Samana religion. In this epic, the lands under the rule of the three kings become the setting for the story. It is an epic that tells the life of the people living in those lands. The three main principles mentioned in the Tolkappiyam, namely, the main theme, the main theme, and the main theme, make the literature complete. Even if we compare it with the great epic style of the Dandiyankaram, it upholds the great epic style. On linguistic grounds, it also appears as a lyrical poem with a text. The worldly and poetic aspects are combined to form a folk epic.

 “சிலப்பதிகாரம் கூறும் சைவ சமய கருத்துகள்”

ஆய்வுச்சுருக்கம்
           சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. பெருங்காப்பியம் என்ற அமைப்பியல் முறையில் முதல் நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற சிறப்பிற்குரியது.சமண மதத்தின் வழி துறவு மனம் கொண்ட இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. இத்தமிழ்க் காப்பியத்தில் மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்கள் கதைக் களன்களாகின்றன. அக்களன்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலைக் கூறும் காப்பியமாகிறது. தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற திணைக் கோட்பாட்டு நெறிமுறைகளான முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் இம்மூன்றும் இலக்கியங்களை முழுமையடையச் செய்கின்றன.அந்த வகையியல் முறையிலும் சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்குகிறது. தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய நூற்பாவை வைத்து பொருத்திப் பார்த்தாலும் பெருங்காப்பிய நெறியை அரண் செய்கிறது.மொழியியல் அடிப்படையிலும் உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுளாகக் காட்சியளிக்கிறது. உலக வழக்கும் செய்யுள் வழக்கும் கலந்து மக்கள் காப்பியமாகத் திகழ்கிறது.
திறவுச் சொற்கள் : சிலப்பதிகாரம், சைவ காப்பியம், இல்லறம்,வழிபாடு
முன்னுரை
         சிலப்பதிகாரம் சங்கப்பாக்கள் இயற்றப்பட்ட தமிழ் மண்ணில்தான் காப்பியமாக்கப்பட்டுள்ளது. இக்காப்பியம் முழுவதிலும் தமிழ்ப்பண்பாடு மிளிர்ந்து காணப்படுகின்றது. இலக்கிய வரலாற்று அடிப்படையிலும் அக்கால நிலையினை எடுத்துரைக்கிறது.  முத்தமிழையும் எடுத்துரைக்கும் சிலப்பதிகாரம் தமிழ் மக்கள் மரபுசார் பண்பாட்டினையும், பழக்க வழக்கங்களையும் விரித்துரைக்கிறது. நிலவியல் கூறு அடிப்படையில் ஐந்திணைக்குரிய கோட்பாடுகளும் காணப்படுகின்றன. தமிழ் நிலம் சார்ந்தும் அந்நிலத்தின் கருப்பொருள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள காப்பியத்தில் தமிழும் சைவமும் பிரித்தறியா நிலையில் சைவசமயக் கருத்துக்கள் முழுமையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இதனடிப்படையில் சிலப்பதிகாரம் சைவசமயக் காப்பியம் தமிழ்க்காப்பியம் என்று சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
காப்பிய அமைப்பு
   காப்பியம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் இயலிசை, நாடகப் பொருட்டொடர் நிலைச்செய்யுள் என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். இப்பொருட்தொடரில் உயிர்களின் வாழ்வியல் சூழல் விளக்கம் பெறுகிறது.  சைவ சமயம் வலியுறுத்துவதும் உயிர்ச்சூழலான பஞ்சபூதங்களின் வழி இறையருளைக் காண்பதாகும். பன்னிரு திருமுறைகளில் ஐம்பூதங்களை இறைவனின் மெய்யாக அடியார்கள் வர்ணிக்கின்றனர். இக்கருத்தினை அடியொற்றி சிலப்பதிகாரம் காப்பியத் தொடக்கத்திலே இயற்கையைப் போற்றுகிறது. நிலவையும ;கதிரையும் மாமழையும் நாட்டையும் எடுத்துihக்கிறது.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்
                                                     (சிலப்பதிகாரம் புகார்காண்டம் பா.வரி. 1-4-7)
      என்று உலகத்தில் வாழ்கின்ற உயிர்களின் தோற்றத்திற்கும் வாழ்வதற்கும் ஆதாரமாக விளங்குகின்றஇயற்கையைப் போற்றுகின்ற விதத்தை அறிய முடிகின்றது.              
 வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவனைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயே என் சொல்லி வாழ்த்துவனே” (திருச்சதகம் –5)
       இக்கருத்தினை அடியொற்றி  மாணிக்கவாசகரின் திருவாசகப்பாடல் சான்று பகர்கின்றது.  நூல் அமைப்பியல் முறையில் சைவக்காப்பியமான பெரிய புராணம் போன்று சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முழுமுதற்கடவுளான சிவபெருமானை
 “பிறவா யாக்கைப் பெரியோன்”  
                   (சிலப்பதிகாரம் இந்திரவிழா எடுத்த காதை பா.வரி.170)
          என்று இந்திர விழா எடுத்த காதையில்; ஆதியும் அந்தமும் இல்லாத ஆதிமுதல்வனைக் குறிப்பிடுகின்றது.
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆக என
                      சிலப்பதிகாரம் மனையறம் படுத்தத காதை பாடல்வரி(38– 41)
          என்பதில் ஆதி முதல்வனான சிவபெருமானைப் பெரியோன் என்று பறைசாற்றுவதை அறியமுடிகிறது. காப்பியத்தின் முதன்மைக் கடவுளாகச் சிவபெருமானைச் சுட்டிக்காட்டுகிறது. மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியின் அழகைப் பாராட்டிப் பாடும் வரிகளில் சிவபெருமான் உனக்கு அழகிய நுதலைத் தந்தான் என்று எடுத்துரைக்கிறான். கோவலன் கண்ணகியின் வழிபடுக் கடவுள் சிவபெருமான் என்பது புலனாகிறது.
இல்லற நெறிமுறை
          சமண மதமும், பௌத்தமும் இல்லற வாழ்க்கை, வீடு பேற்றிற்குத்தடை என்று ஒதுக்கின சைவநெறி முறைகளைப் பின்பற்றுபவர்கள் இல்லறத்தை பக்திக்கு வித்து என்று கூறுகின்றனர். இதன் அடிப்படையில் சிலப்பதிகாரம் இல்லற நெறிமுறைகளை பின்பற்றும் காப்பியமாகும். இல்லறத்தின் வழி இறையருளைப் பெறுவதுஎன்பது இல்லறக் கடமைகளைச் செம்மையாக நடத்துவதாகும்.               
 மறப்பரும் கேண்மையோடு அறப்பரிசாரமும்
விருந்து புறந்தரும் பெருந்தான் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
                          (சிலப்பதிகாரம் மனையறம் படுத்தத காதை பா.வரி 85-87)
          என்று மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் திருமணம்,புரிந்து இல்லறக் கடமைகளை  ஆற்றுகின்ற திறம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.அறநெறி உணர்ந்த சான்றோரைப் போற்றுதல்,விருந்து என வந்தவர்க்கு உண்டி கொடுத்து உபசரித்தல் போன்ற நெறிகளைப் பின்பற்றி வாழ்கின்றனர்.இப்பண்பாடு சைவ நெறிமுறையாகும்.சிலப்பதிகாரம் சைவக் காப்பியம் என்பதற்கு அடிப்படை சான்றாதாரமாகும். அப்பூதியடிகள், அமர்நீதி நாயனார், அரிவட்டாயர், மெய்ப்பொருள் நாயனார் போன்ற நாயன்மார்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். புpற நாயன்மார்கள் அறநெறிகளைப் பின்பற்றி வாழ்ந்துவந்ததை திருமுறைகள் சான்றளிக்கின்றன.
          உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் கண்ணகியின் மனையறம் போற்றப்படுகிறது. கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டு முறையில் தன் வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறாள். இல்லறச் செம்மையின் வழி சைவ முறைமைக் காணப்படுகிறது.
வழிபாட்டு முறை
          இறைவழிபாட்டு முறைகளாகச் சமூகத்திற்குத் தொண்டு செய்வதை  சைவசமயம் விளம்புகிறது சிலப்பதிகாரத்தில் குறிஞ்சி, முல்லை நில மக்களின் வழிபாட்டுமுறைகளாககுன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை;நிலம்சார்ந்து எடுத்துரைக்கப்படுகின்றன.துடிக்கூத்தும் குடக்கூத்தும் முருகனுக்குச் சிறந்தனவாக நிகழ்த்தப்படுகின்றன.
 உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச்
சேதம்சிலப்பதிகாரம்     (நாடுகாண் காதை 73 -75 )
          என வெற்றியின் தெய்வமாகக் கொற்றவையை வணங்குகின்றனர் இம்முறை உமையம்மையை வழிபடுவது போல் காணப்படுகிறது. வேட்டுவ வரி கொற்றவைக்காக மறவர் போன்ற மலைவாணரால் நிகழ்த்தப்படுகிறது.
சீர் இயல் பொலிய நீர் அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர் அன்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமயவன் ஆடிய கொடுகாட்டி
ஆடலும் கடலாடு காதை”–
சிலப்பதிகாரம் கடலாடு காதை பா.வரி (38 – 43)
          இப்பாடல்வரி சிவபெருமானின் கொடுகட்டி ஆடிய திறம் பேசப்படுகிறது.சிலம்பு சுட்டும் மக்கள் சிவ வழிபாடு செய்வதை அறியமுடிகிறது. சிலம்பில் 12 ஆம் காதை வேட்டுவ வரி முழுவதும் இக்கூத்து முறை விளக்கப்படுகிறது. குருதிப்பலி பழக்கமும் இருந்ததற்கான சான்றுகள் கூறப்படுகின்றன. இந்திர விழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டுள்ள செய்தி விளக்கப்பட்டுள்ளது. பெண்ணிற்கு கோயில் கட்டி வழிபாடு செய்யும் இறை நெறிமுறை சைவ சமயத்தில் காணப்படுகின்ற வழக்கமாகும். இம்முறையில் கண்ணகிக்கும் கோயில் கட்டி வழிபாடு செய்யப்படுவதை காப்பியம் பறைசாற்றுவது சைவசமயக் கோட்பாடாகும். இதனையே,
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பிலி செய்து காப்புக் கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து
                                 சிலப்பதிகாரம்,நடுகற்காதை பா.வரி 229-232
          கடவுள் மங்கலம் செய்க என ஏவினன் என்று கண்ணகிக்குக் கோயில் கட்டிவழிபாடு செய்ததை அறிய முடிகிறது. சூழ்நிலைக் காரணமாக சமண மதத்தைத் தழுவிக் கொண்ட இளங்கோவடிகளால் எழுதப்பட்ட இக்காப்பியத்தில் சமண மதக் கொள்கைகள் சில இடங்களில் மட்டுமே புகுத்தப்பட்டுள்ளன. அரசாளும் முழுதிறம்கொண்ட இளவலான இளங்கோவடிகளுக்கு அரசு உரிமை என்ற சூழ்நிலையில் அண்ணன் சேரன் செங்குட்டுவன் வாரிசுரிமை அடிப்படையில் பட்டத்திற்கு உரியவனாவான் அம்முறையில் தன்னால் பிறழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்ற மன நிலையில் இளங்கோவடிகள் மதம் மாறி சமண மதத்தைச் சார்ந்து துறவறம் மேற்கொள்கிறார். இச்செம்மை முறையினை பின்பற்றும் மனத்திட்பத்தினை கொடுப்பது சைவமாகும்
              அரசன் செங்கோல் ஆட்சியில் அறநெறிமுறைகளைப் பின்பற்றுவது சைவசமயக் கோட்பாடாகும் சமண சமயம் கூறுகின்ற கொள்கைகளின் அடிப்படையில் சிலப்பதிகாரக் காப்பியம் அமையவில்லை. முற்றிலும் சைவ சமயக்கொள்கைகளைப் பின்பற்றும் காப்பியமாகத் திகழ்கின்றது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்ற கொள்கையில் பாண்டிய மன்னன் தவறான நீதி வழங்கியதற்காக அரசு நீதி தன்னால் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று வருந்தி உயிர்த்துறந்த விதம் நீதியை பின்பற்றும் கொள்கைப் பிடிப்பும், நீதி தவறாத அரசநீதி என்ற முறையில் சைவம் இழையோடியிருப்பதை அறிய முடிகிறது என்பதனையே,
 மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி விழுந்தனனே தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக்”–
                                                        கொலைக்களக்காதை ( 76– 79)
          என்று சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் அந்தணன் மாடலனைச் சந்திக்கின்றனர். மாடலன் அவர்களின் துயரத்தைக் கண்டு இத்துயரத்திற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினை என்று கூறுகின்றார்.           
 இம்மைச் செய்தன நானறி நல்வினை
உம்மை பயன்கொல்ஒரு தனி உழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்து
அடைக்கலக்காதை (பா.வரி 91-94)
          என்பதில் முற்பிறப்பு தீவினையை மாடலன் கூறுவதில் இருந்து அறியலாம். சைவ சித்தாந்தம் வினையை மூன்றாகப் பிரித்துக் காட்டுகிறது. நாம் அனுபவிக்கும் வினையை பிராரந்தம்(நுகர்வினை) என்றும் அனுபவிக்கும் பொழுது உயிர்கள் செய்யும் வினையால் வருவது ஆகாமியம் (வருவினை) என்றும் முற்பலப்பிறவிகளில் செய்த வினைகளில் நாம் துய்க்கப்பட வேண்டிய வினைகளை சஞ்சிதம் (பழவினை) என்றும் கூறுகின்றது. இவ்வுலக வாழ்வில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் முற்பிறவியில்  செய்த வினைக்கு ஏற்றவாறு உயர்வு தாழ்வை அடைகின்றன.
 மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்
ஆடும் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழி
கூடிய கோலத்து ஒருங்குநின்று இயலாது
செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சி ஓர் பொருளுரை ஆதலின்”–
                               தருமதீபிகை ப.-796 பா.எண் (161 -168)
     இப்பாடல்வரிகள் வினைவழி உயிர்பிறப்பெடுக்கும் என்பதை விளம்புகிறது. ஓவ்வொரு உயிரும் தனது கருமாவை பிறவியின் வழி கழித்தே தீர்க்கவேண்டும் என்பதை அறியமுடிகிறது.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகுகின்றேனே
                                                                      திருமந்திரம் – பா.எண் 725
          என்ற சிலப்பதிகாரக் கருத்தினை ஒட்டி திருமந்திரம் உடம்பில் உறையும் உயிர்த்திறத்தை உணர்த்துகிறது. சைவசமயம் இறைக்கோட்பாட்டோடு சமூகத்திற்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைகளையும், அறக்கருத்துக்களையும் இணைத்தே சுட்டிக் காட்டுகிறது.சைவ சமயம் தொன்மையும் நிலைத்தத் தன்மையும் பெற்று பலராலும் பின்பற்றப்படுகிறது. சமுதாயம் அன்போடும்அறச்சிந்தனையோடும் உயிர் இரக்கத்தோடும் செயல்படத் துணை புரிவது சைவ சமயம் என்பது அருளாளர்களின் பாடல்களின் வழி காணலாம். தமிழ் மரபு இல்லறத்தின் வழி முழுமை அடைவதைச் சுட்டுகிறது. சைவ சமயம் இல்லறத்தை வலியுறுத்துகிறது. சூழ்நிலைக் காரணமாக இல்லறத்தை மேற்கொள்ளாத சமண மதத்தைத் தழுவி துறவறம் மேற்கொண்ட படைப்பாளி சமண மதத்தைச் சார்ந்தவராதலால் சமணக் காப்பியமாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
முடிவுரை
          தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் உணர்த்துகிறது.இக்காப்பியத்தில் சைவ நெறிமுறைகளும் வழிபாட்டு முறைகளும் கோட்பாடுகளும் விரவிக் காணப்படுகிறன. மற்ற மதக் கருத்துக்கள் இடையிடையே இடம் பெற்றிருப்பினும் சைவசமயக் கருத்துக்கள்முழுiமையாகக் காணப்படுகிறது. தமிழ் மண்ணில் எழுதப்பட்ட இக்காப்பியத்தில் தமிழ் மக்களின் வாழ்வியலோடு கொள்கைகளும் இடம்பெறுகின்றன என்பதை அறிய முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சிலப்பதிகாரம், உரையாசிரியர், ஞா.மாணிக்கவாசகன், உமா பதிப்பகம், 18, பவளக்காரத்தெரு, சென்னை-1.
2.திருக்குறள், ஞா.தேவநேயப் பாவணார், உரையாசிரியர், வையவி பதிப்பகம், 700. எம்.ஐ.ஜி முதன்மைச்சாலை, சென்னை-42   மு.ப 2010.
3.திருமந்திரம், முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், காசிமடம், மணிவிழா நினைவு வெளியீடு, 20-03-1991
  1. திருவாசகம், தா.ம வெள்ளைவாரணம், காசிமடம் திருப்பனந்தாள்-1994
5.பதினொராந்திருமுறை, சைவ சித்தாந்த மகா சமாஜம், 150, கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, சென்னை
References
1.Silapathigaramm, G.Manikavasagam,Uma Publishers,Chennai,
2.Thirukkural,Devaneyapavanar,Vaiyavi publishers, Chennai,2010
3.Thriumanthiram, Muthukumaraswami Thambiran swamigal, A special ceremony  release book
4.Thruvasagam,vellaivaranam,kaasi madam
5.thirumai -11, Saiva Siddhanta Maha Samaj
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். புஷ்பகவல்லி,
உதவிப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வு மையம்,
ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி,
தூத்துக்குடி.

சிலப்பதிகாரம் கூறும் சைவ சமய கருத்துகள் PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here