அந்திமாலையின் சூரியக் கிரணங்கள் மறையும் நேரம் வானத்தில் பறந்து கொண்டிருந்த கரிச்சான் குருவிகளும் மரங்களில் தங்களின் கூடுகளைத் தேடிப் போகும் பறவையினங்களின் ஒலிகளும் காதுகளில் ரீங்காரமிட்டன. தன்னை மறந்து பின்புறக் கொல்லையில் வந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த மதுவந்திக்கு, மாலையில் வீசிய தென்றல் காற்றும் சேர்ந்து மனதை மயக்கியது. அந்திமந்தாரைப் பூக்களின் மணமும் அடுக்கு மல்லியின் நறுமணமும் மூக்கைத் துளைத்தன.
மதுவந்தி படித்து முடித்து நல்ல கம்பெனியில் கைநிறையச் சம்பாதிக்கிறாள். படிப்பில் சாதித்து முடித்தவளுக்கு மனித மனங்களைப் படிப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதுவும் தன்னுடன் வேலை பார்க்கும் பரமேஸ்வரி அக்காவைப் புரிந்து கொள்வது சற்றுச் சிரமம்தான். அவளிடம் மிகவும் அன்பாகப் பழகும் அவர், திடீரென மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு எரிந்து விழுவார். பின்பு ஒரு வாரத்திற்கு ஏன் என்றே காரணம் தெரியாது. என்னவென்று கேட்டால் ஒண்ணுக்கும் உதவாத காரணத்தைச் சொல்வார். அந்த நேரம் அவளுக்குப் ப்ரமோசன் வந்து சம்பளம் ஏறியிருக்கும்.
மற்ற நேரங்களில் வீட்டில் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்து தருவதும் மாலையில் வடையும் டீயும் வாங்கித் தருவதும் என பணத்தைத் தண்ணியாகச் செலவழிப்பாள். வேண்டாம் என்று மதுவந்தி தடுத்தாலும் விடுவதில்லை. சாப்பிடு, சாப்பிடு என்று தாங்குவார். இது என்ன மாதிரிப் பாசம் என்பதை மதுவந்தியால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவரது வேலைகளில் கடினம் என்று நினைப்பதை எல்லாம் அவளிடம் தந்து,
“மது இதைக் கொஞ்சம் செய்து தறியா? எனக்குக் கொஞ்சம் பிடிபட மாட்டேங்குது”
“சரிக்கா. கொண்டாங்க முடிப்போம்” என்று உடனே செய்து கொடுப்பாள் மதுவந்தி. அவள் செய்து முடித்தவுடன் உடனே ஏதாவது வாங்கித் தருவார். வேண்டாம் என்று எவ்வளவு தடுத்தாலும் விடுவதில்லை. மது ஓரிரு சமயங்களில் இவர் வாங்கிக் கொடுப்பதற்காக வேலை பார்ப்பது போல் தோன்ற தவிர்க்கப் பார்ப்பாள். இது அவளுக்குள் குற்ற உணர்வைக் கொடுக்கும். இன்னொன்று எதற்கெடுத்தாலும் எம்.டியைப் பார்த்தால் மிகவும் குனிந்து அவர் சொன்னதையெல்லாம் ஏற்கும் குணமும் அவருக்குத் தேவைப்படுவதை வாங்கிக் கொடுப்பதிலும் பரமேஸ்வரி அக்கா கில்லாடிதான். எம்.டி இதற்கெல்லாம் மசிகின்ற ரகமில்லை என்பதால் மறுத்துவிடுவார். இதைப் போன்ற பலவற்றில் மகிழ்கின்ற யார் மாட்டினாலும் அவர்களைத் தக்க விதத்தில் கவனித்து தனக்கான ப்ரமோசனையோ, தனக்குத் தேவையான காரியத்தையோ சாதித்துக் கொள்வதில் மும்முரமாய் இருப்பாள் பரமேஸ்வரி.
ஆனால் யார் புதிதாக ஆபிஸிற்கு வந்தாலும் அவர்கள் மேல் அவர் காட்டும் அன்பும் கரிசனமும்,
“பரமேஸ்வரி அக்கா ரொம்ப வெள்ளந்தியா இருக்காங்களே” என்பர். ஆமாம் பரமேஸ்வரி அக்கா உண்மையில் பாவம்தான். அதனால்தான் இருபத்தெட்டு வயதில் தனது குடிகாரக் கணவனைப் பறிகொடுத்துவிட்டு கையில் சின்னக்குழந்தையுடன் தாயின் வீட்டிற்கு வந்தவர் என்பதும், பின்பு டைப் படித்து, ஒரு வழியாக வேலையில் அமர்ந்தவர் என்பதும் அவர் வாயால் கேட்கும்போது பாவமாகத்தான் இருக்கும். இருபத்தெட்டு வயதில் கணவனைப் பறிகொடுப்பது எவ்வளவு கொடுமை என்று நினைத்துக் கொள்வாள் மதுவந்தி. காலம் போகப் போக அவர் மிகவும் சமர்த்தர்தான் இல்லாவிட்டால் மேலதிகாரிகளை காக்கா பிடித்து மகனுக்குத் தனது கம்பெனியிலேயே நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்திருப்பாரா என்று நினைத்தாள் மது.
ஆனால் கம்பெனியில் யாருக்குப் ப்ரமோசன் வந்தாலும் உயர்வு வந்தாலும் அவருக்குக் கிறுக்குப் பிடித்துவிடும். எவ்வளவு நட்பான தோழிகளாக இருந்தாலும் அவரின் வெறுப்பும் அவ்வப்போது வெளிப்பட ஆரம்பிக்கும். நிறைய நகை போட்டு, நல்ல சேலைகட்டி, அவரின் கீழ் உள்ளவர்கள் வந்தால் அவருக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்குத் தீங்கு செய்வதும், உச்சகட்டமாக கரித்துக் கொட்டுவதும் அவரின் வழக்கமாகிப் போனது.
அன்றொரு நாள் மதுவந்தி தனது அத்தை மகளின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு அப்படியே ஆபிஸ் வந்தவளைப் பார்த்த பரமேஸ்வரி,
“மது என்ன இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்க. உனக்கு இந்த சேலை நல்லாயிருக்குப்பா. இங்க வா நகையைப் பார்ப்போம்” என்றார். பக்கத்தில் வந்து நின்ற மதுவந்தியின் கழுத்தில் இருந்த ஆரத்தைத் தொட்டுப் பார்த்தவர்,
“இது எத்தனை பவுன்?” என்று கேட்க,
“ஏழு பவுன்கா” என்ற பதிலில் பொறாமை கொண்டு,
“ம். நல்லாருக்கு” என்றார். மறுநாள் மதுவந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆபிசே வரமுடியாமல் போனது. மதுவந்தியின் தோழி நிலா சொன்னாள் ,
“இந்த பரமேஸ்வரி அக்கா கண்ணு வச்சுடுச்சுன்னு நினைக்கிறேன். அவங்க ஏதாவது வியந்து சொன்னாலே முடியாமப் போயிடுது. நீ சொன்னால் கிண்டல் பண்ணுவ. அவங்க மனதின் பொறாமை அப்படீ” என்றாள். “
போடீ அதெல்லாம் ஒண்ணுமில்ல. திருமண வீட்டில் சாப்பிட்டது ஒத்துக்காம போயிருக்கும்” என்றாள் மதுவந்தி.
இப்படிப் பலமுறை நடந்த செயல்களால் ஆபிஸில் பலரும் பலவாறு பேசிக்கொண்டனர். ஆனால் மனித மனங்களின் தேவையில்லாத எண்ணங்கள் தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கிறதோ என்று நினைத்தாள் மதுவந்தி. இன்னொன்று வாழவேண்டிய வயதில் வாழமுடியாமல் போனதால்தான் மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பரமேஸ்வரி அக்காவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லையோ என்று கூடத்தோன்றியது.
இன்னொரு நாள் கம்பெனியில் ஆடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. எம்.டி மதுவந்தியைக் கூப்பிட்டு ஒரு பைலை எடுத்துவரச் சொன்னார். மது தனது டேபிளுக்குச் சென்று பைலைத் தேடி எடுத்து வைத்துவிட்டு, டீ குடிப்பதற்காக கேண்டீனுக்குச் சென்றாள். டீ குடித்து விட்டு வந்து பார்த்தால் டேபிளில் இருந்த பைல் காணாமல் போய்விட்டிருந்தது. எவ்வளவு தேடியும் பைல் கிடைக்கவில்லை. மதுவந்திக்குக் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது. எம்.டி ஐந்து மணிக்கு வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது? திட்டுவாரே என மனம் பலவாறு சிந்தித்தது.
ஆபிசில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று கேட்டாள். ஒருவரும் எனக்குத் தெரியாது, நான் பார்க்கவில்லை எனச் சொல்ல, பரமேஸ்வரி அக்காவிடமும் மது போய்க் கேட்க, “எனக்குத் தெரியாதும்மா” என்றார். ஐந்து மணிக்கு ஆபிசிற்கு வந்த எம்.டி மதுவைக் கூப்பிட்டனுப்ப,
“சார் பைல டேபிளில் வைத்திருந்தேன் காணல. யார் எடுத்தாங்கன்னும் தெரியல. காலைல எப்படியாவது எடுத்துத்தரேன் சார்” என்றாள். உடனே முகம் மாறிய எம்.டி, “இது உங்களொட பொறுப்பற்ற தன்மையக் காட்டுது மது. ஒரு பைல உங்களால பத்திரமா வச்சுக்க முடியல. நீங்களெல்லாம் என்ன வேலை செய்யறீங்க” என்று கத்த, கையைப் பிசைந்து நின்று கொண்டு கலங்கிய மதுவந்தியை,
“போங்க. நாளைக்காவது பாத்து எடுத்துட்டு வாங்க” என்றார். எம்.டி அறையை விட்டு வெளியே வந்த மதுவந்தி கலங்கிய மனதுடன் தனது இருப்பிடம் நகர்ந்தாள். ஆபிசில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக விடைபெற ஆரம்பித்தனர். இந்த பைல் அப்படி எங்கதான் போயிருக்கும்? யாரோ வேணும்னு எடுத்து வச்சிருப்பாங்களோ, அல்லது பழிவாங்கும் விதமா அப்படிப் பண்ணிருப்பாங்களோ? எனப் பலவாறாக சிந்தனைகள் திக்குத் தெறியாமல் ஓடின.
எதுக்கும் ஆபிசில் இருந்த பியூன் ராமசாமியைக் கேட்போம் என்று நினைத்த மது,
“அண்ணா. நான் கேண்டின் போகும்போது என் சீட்டுக்கு யாராவது வந்தாங்களா? நீங்க எதுவும் பாத்தீங்களா?” என்றாள்.
“ஆமாம்மா. நீங்க கேண்டின் போனப்ப யாரும் சீட்ல இல்ல. பரமேஸ்வரி மேடம் மட்டும் உங்க சீட்டுக்கு வந்தாங்க” என்றான். உடனே தன்னையும் அறியாமல் வியந்து போன மது, அவசரமாக பரமேஸ்வரி அக்காவின் டேபிளுக்குச் சென்று பக்கத்தில் இருந்த பீரோவைத் திறந்தாள். பைல்கள் எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொரு பைலாக எடுத்துப் பார்த்தவள். பைல்களுக்கு இடையில் சொருகப்பட்டிருந்த ஒரு பைலை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள். அதுதான் எடுத்துவைத்திருந்த அதே பைல்தான். அதை எடுத்து தனது பீரோவில் வைத்தவள்,
“அண்ணா பரமேஸ்வரி அக்காட்ட அவங்க பீரோவில் பைல் எடுத்தத சொல்லாதீங்க. கேட்டா எனக்குத் தெரியாதுண்ணு சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்” என்றாள். ராமசாமியும் ஆமோதிக்க, எழுந்து நிம்மதியாக வீட்டுக்குக் கிளம்பினாள்.
பரமேஸ்வரி அக்கா ஏன் இப்படி செய்தாங்க? என்று யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்திருந்தாள் மதுவந்தி. மறுநாள் ஏதேச்சையாகக் கேட்பதுபோல் பரமேஸ்வரியிடம் சென்று,
“அக்கா. நேத்து உங்க பீரோல்லதான் பைல் இருந்தது. எப்படிக்கா? நீங்க எடுத்தீங்களா?” என்ற மதுவந்தியைப் பார்த்து,
“டேய் என்னடா இப்படீ சொல்லிட்ட. நான் போய் பைல எடுப்பனா? சத்தியமா நான் எடுக்கல. யார் எடுத்து வச்சாங்கன்னும் தெரியல. எனக்கென்னமோ நம்ம ரெண்டு பேரும் பழகறதப் பார்த்து சண்டை மூட்டிவிடனும்னு யாரோ செஞ்ச வேலையா இருக்குமோ?”
என்று ஒன்றுமறியாத அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டாள் பரமேஸ்வரி. மதுவந்திக்கு அவளைத் திட்டுவதா, உண்மையில் அவர் சொல்வதுபோல் மற்றவர்கள் செய்திருக்கலாமோ என நொடிப் பொழுது யோசித்தவள், ச்சே இருக்காது, இந்த அக்கா தான் மாட்டக்கூடாது என்பதற்காகப் பொய் சொல்லுகிறாள் என்பது மட்டும் புரிய வெள்ளந்தியாக நடித்த பரமேஸ்வரி அக்காவின் நிஜரூபம் கொடூரமாக விசுவரூபம் எடுப்பதுபோல் மதுவந்திக்குத் தோன்றியது.
சிறுகதையின் ஆசிரியர்
சுந்தரிமணியன்,
புதூர்.






