Abstract
Knowledge is regarded as the greatest wealth of humanity, while ignorance is viewed as the root of poverty and human suffering. According to Vallalar, those who possess wisdom are endowed with every form of prosperity, for knowledge grants not only intellectual ability but also material well-being, moral strength, happiness, and success in life. A knowledgeable person is capable of understanding the future, acting with foresight, and living in harmony with ethical and social values. In contrast, those deprived of knowledge remain truly impoverished, even if they possess wealth, status, opportunities, and worldly resources. Without wisdom, they are unable to utilize these resources meaningfully or attain fulfillment in life. Hence, Vallalar strongly emphasizes that knowledge is indispensable for all human beings, as it alone leads individuals toward self-realization, social progress, and enduring happiness. This study aims to explore and elucidate Vallalar’s philosophical perspectives on knowledge and to analyze how the true purpose and benefits of knowledge should be manifested in individual life and society.
Keywords
Analytical Wisdom – Supreme Divine Consciousness (Arutperunjothi) – Rational Intelligence – Subtle Insight – Grace-Oriented Knowledge and Delusive Knowledge – True Spiritual Enlightenment as the Ultimate Fruit of Knowledge.
“வள்ளலார் வகுத்த அறிவுக் கொள்கை”
ஆய்வுச் சாரம்
அறிவே மக்களுக்குச் செல்வம் அறிவின்மையே வறுமை. அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவுடையவர்க்குத் திறமையுண்டு; செல்வம் உண்டு; வாழ்க்கையில் வெற்றியுண்டு; இன்பம் உண்டு ; எதிர்காலத்தை அறிந்து அதற்கேற்றவாறு நடந்துகொள்ளும் ஆற்றல் உண்டு. அறிவிலார் என்னுடையரேனும் இலர். அறிவிலார்க்கு இடம், பொருள், ஏவல் எல்லாமிருந்தும் பயனில்லை;அவற்றை அநுபவிக்கும் வழியை அறியமாட்டார்கள்; அவர்களுக்குத் திறமையோ, வாழ்க்கையில் வெற்றியோ, இன்பமோ எதுவும் இருக்க முடியாது. இதனால்தான் அறிவு அனைவர்க்கும் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அறிவின் பயன் இப்படியாக வெளிப்பட வேண்டும் என்னும் வள்ளாரின் கொள்கைகளை விளக்கிச் செல்வதே இவ்வாய்வின் நோக்கம்.
கருச் சொற்கள்
ஆராயும் அறிவு – பேரறிவாகிய அருட்பெருஞ்சோதி – பகுத்தறிவு – நுண்ணறிவு – அருள் அறிவும் மருள் அறிவும் – உண்மை ஞானமே அறிவின் பயன்.
முன்னுரை
உலக மக்கள் எல்லோரும் சிந்தனாசக்தியுடையவர்களாகி நுண்ணறிவு பெற்று விளங்குவார்களாயின் உலகம் ஒன்றுபடும். எல்லோரும் சமாதானமாக வாழ்வர்; வீண்சண்டை சச்சரவுகள் நடைபெற வழியில்லை. இந்த உண்மையை ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்திருந்தனர். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ் நூல்களில் காணலாம். தமிழரின் இச்சீரிய கொள்கையையே நமது புரட்சிப் புலவரும், கருணைச் செல்வருமான வள்ளலார் எல்லோரும் விளங்க இனிய பாடல்களின் மூலம் விளக்கியுள்ளார்.
ஆராயும் அறிவு
அறிவிலே பொது அறிவு, சிறப்பறிவு என்று இரண்டுவகை. பொது அறிவு, பசி, தாகம், சரீர இன்பம் இவற்றை உணர்தல், இவற்றைத் தேடுவதிலேயே வாழ்நாளைப் போக்கல். இவ்வறிவு மக்களினம், விலங்கினம், பறவையினம் எல்லாவற்றிற்கும் பொது. இவ்வறிவு உயிருள்ள – நடமாடும் – பிராணிகளிடமெல்லாம்உண்டு. ஆனால் சிறப்பறிவு மக்களுக்கு மட்டிலும் சொந்தம். நல்லது இது ; தீயது இது ; செய்யத் தகுந்தது இது ; செய்யத் தகாதது இது; இதைச் செய்தால் இப்படி முடியும் என்றெல்லாம் சிந்தனை செய்து செயலில் இயங்கும் அறிவே சிறப்பறிவாகும். இந்தச் சிறப்பறிவு படைத்தவர்கள் சிலர்தான். அவர்களால் தான் இவ்வுலகம் இயங்குகிறது; இவ்வுலகம் நாகரிகம் பெற்றிருக்கிறது; இவ்வுலகம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மக்களிடமும் அதாவது பெரும்பாலான மக்களிடம் சிறப்பறிவு இருந்தால் இவ்வுலகம் இன்னும் உயர்ந்த நிலையிலிருக்கும். இந்தச் சிறப்பறிவு – படிப்பினால் – புத்தகப் படிப்பினால் மட்டும் உண்டாவதில்லை. பிறர் சொல்லிக் கொடுப்பதனாலும் வருவதில்லை. தானே உணர்வதனால் வளர்வதாகும். ஓதா விட்டாலும் உலகப் போக்கை உய்ந்துணர்ந்து சிந்தனை செய்வதனால் வருவதாகும். இது பற்றிய வள்ளலார் கருத்து கீழ்வருமாறு
“ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெரும் சோதி”. (திருவருட்பா; 2 அருட்பெருஞ்சோதி அகவல் – 12)
அருட்பெரும் ஜோதி என்பதற்கு இரக்கத்தோடு கூடிய பேரறிவு என்பதே பொருள். வெளிச்சத்தில் எல்லாவற்றையும் காண முடியும். அதுவும் பெரிய வெளிச்சத்தால் காணமுடியாத பொருள் எதுவும் இருக்க முடியாது. ஆதலால்தான் அறிவை ஒளியென்றும், ஜோதி யென்றும், விளக்கென்றும் குறிப்பிடுகிறார் இராமலிங்கர்.”புத்தங்களைப் படிக்காமலே உலக நிலைமையை உணர்ந்துகொள்ளும்படியான அறிவை எனக்களித்தாய், மற்றும் செய்யக்கூடிய செயல்களுக்கெல்லாம் ஆதரவாகவும் இருக்கின்றாய். இரக்கத்தோடு கூடிய பேரறிவாகிய நீதான் இந்த நிலையை எனக்களித்தாய்!” என்பதே மேலே சுட்டியுள்ள அடிகளின் பொருள். இந்தச் சிறப்பறிவை அவர் பாராட்டும் முறை,
“ஏடகத்தே எழுதாத மறைகள் எல்லாம் களித்தே
என் உள்ளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதி
(அருட்பெருஞ்சோதி அகவல்;பெறாப்பேறு; (பா.எண் – 4642)
என்று உண்மையை வெளியிடுகிறார். “ஏடுகளிலே – அதாவது சாத்திரங்களிலே – வேதபுராண இதிகாசங்களிலே எழுதப்படாத இரகசியங்களையெல்லாம் என் உள்ளத்தில் களிப்போடு எழுதச் செய்தாய்; எனக்கே உரிமையாக என் உள்ளத்தில் வளர்ந்திருக்கின்ற அறிவே!” என்பதே இவ்வடிகளின் பொருள். ஆகவே படிப்பதனால் மட்டும் உலக நிகழ்ச்சியை மக்களின் மனோநிலைமையை உலகம் மாறிக்கொண்டு வரும் போக்கை உணர்ந்துகொள்ள முடியாது. சிந்தனா சக்தியால் தான் உலகப் போக்கை உணர்ந்துகொள்ள முடியும் என்று முழக்கஞ் செய்கிறார்.
பேரறிவாகிய அருட்பெருஞ்சோதி
இவ்வுலகில் பேரறிஞராகக் கருதப்படுகிறவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலே தேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றனர். சிலர் அரசியல் துறையிலே வல்லுநர்கள்; சிலர் பொருளாதாரத் துறையிலே தேர்ந்தவர்கள் ; சிலர் கதைகள் கட்டுரைகள் எழுதுவதிலே தேர்ந்தவர்கள்; சிலர் கற்பனைகள் நிறைந்த கவிதைகள் புனைவதிலே அறிஞர்கள்; சிலர் வைத்தியத் துறையிலே வல்லவர்கள் ; சிலர் சிற்பத் துறையிலே சிறந்தவர்கள்; சிலர் விஞ்ஞானத் துறையிலே வித்தகர்கள் என்றிவ்வாறு பலர் தங்கள் தங்கள் துறையிலே இணையற்றவர்களாக விளங்குகின்றனர். ஆயினும் இவர்கள் எல்லோரும் நம் தமிழ்நாட்டுப் பெருந்தகையார் இராமலிங்கம் அவர்கள் கருத்துப்படி பேரறிவு படைத்தவர்கள் அல்லர். இவர்கள் இரக்கத்தோடு கூடிய பேரறிவு படைத்தவர்களாயிருந்தால் உலகினரை ஒன்று சேர்க்க உழைப்பர். உலகத்தினரை ஒரே சமுதாயமாக்க உழைப்பர். உலக ஒற்றுமையைக் கருதுவோர் இக்கூட்டத்தினருள் ஒருவரேனும் இருந்தால் அவர்கள் அருட்பொருஞ்சோதியைக் கண்டவர்கள் என்பதில் ஐயமில்லை.
இந்த இரக்கத்தோடு கூடிய பேரறிவு அதாவது அருட்பெருஞ்சோதியை – யார் பெறமுடியும்? சாதிப்பற்றை விட்டவர்கள் – இனப்பற்றை ஒழித்தவர்கள் – சமயப்பற்றை மறந்தவர்கள் – தேசப்பற்றைக் கூடத் துறந்தவர்கள் தான் பெறமுடியும். தன் சாதியிலே மட்டிலும் பற்றுள்ளவர்கள் மற்ற சாதியினரிடம் அன்புகாட்ட இடமில்லை; தன் இனத்தைப் பெரிதெனக் கூறுபவர்கள் மற்ற இனத்தாரிடம் வெறுப்புக் காட்டுவர் ; தன் சமயத்திலே மட்டும் வெறிகொண்டவர்கள் மற்ற சமயத்தவர்களை வெறுப்பார்கள் ; தன் தேசம் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை படைத்தவர்கள் மற்ற நாட்டினரை அடக்கியாள முயல்வார்கள் இவைகளையெல்லாம் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இத்தகைய பற்றுடையவர்களிடம் இரக்கம் ஏது? பேரறிவு ஏது? இவைகளை விட்டவர்கள் உள்ளத்தில்தான் இரக்கத்துடன் கூடிய பேரறிவு தோன்றும். இக்கருத்தை,
“சமயம் குலம்முதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றி அருட்பொரும் சோதி” (அருட்பெருஞ்சோதி அகவல் 4615 – 293)
என்று விளக்கியிருக்கிறார் இராமலிங்கர்.
பகுத்தறிவு
சிந்தனாசக்தி படைத்தவர்களே இவ்வுலகத்தில் துன்பமில்லாமல் வாழமுடியும் சிந்தனாசக்தியின் மூலம் வளர்ந்த பகுத்தறிவின் வழியில் நடப்பவர்களே உலகத்தில் பயன்பெற்று வாழமுடியும். உலக ஒற்றுமைக்கு மக்கள் ஒரே குலமாக வாழ்வதற்கு, முட்டுக்கட்டைகளாக இருக்கின்ற சாதி, மத, பொருளாதாரச் சண்டைகளைப் பகுத்தறிவுவாதிகளே ஒழிக்க முடியும். பகுத்தறிவின் மூலம் துன்பமில்லாமல் வாழக்கூடிய வழியை அறிந்தவர்கள் தான் இவ்வுலகில் எண்ணிய நன்மைகளையெல்லாம் பெற்று வாழமுடியும். பகுத்தறிவு தான் எண்ணியவற்றையெல்லாம் கொடுக்கும் இயல்புடையது என்றெல்லாம் வீரமுழக்கம் செய்கிறார் வள்ளலார்.
எனைத்தும் துன்பிலா இயல்பளித்து, எண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெரும் சோதி. (அருட்பெருஞ்சோதி அகவல் ; 4615 – 321)
ஆதலால் பகுத்தறிவையே வாழ்க்கைக் கருவியாக உலக மக்கள் கொள்ளவேண்டும் என்பதே நமது தமிழ் வள்ளலாரின் ஆவல். இந்த நிலை உலகில் என்று ஏற்படுகிறதோ அன்றே உலகில் ஒற்றுமை நிலவும். உலக மக்கள் எண்ணிய இன்பங்களையெல்லாம் பெற்று இன்புறுவர் என்பதும் உறுதி. வெறும் பகுத்தறிவு மட்டிலும் போதாது, அது இரக்கத்தோடு கூடிய பகுத்தறிவாக இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. மக்களுக்கு அறிவு வேண்டும். எல்லா மக்களுக்கும் அறிவுவேண்டும். அறிவில்லாதவர்கள் யாரும் இருத்தல் கூடாது ., மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாக இருந்தால் தான் சமூகத்திலே அமைதி நிலவும், கொலை, கொள்ளை, வஞ்சகம், சூது முதலிய தீமைகள் தலைகாட்டாது..ஆதலால் நாடெங்கும் மக்களின் அறிவை வளர்க்கக்கூடிய சாதனங்களை அமைக்க வேண்டும். இது அரசாங்கத்தின் முதற்கடமை .குடிமக்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அரசும் ஆடி, அசைந்து விழுந்துவிடாமல் நன்றாக இயங்கும். மக்கள் அறிவுடையவர்கள் என்பதற்கு அடையளாம் என்ன? அறிவு வளர்ந்திருப்பதன் பயன் என்ன? அறிவு வளர்ந்திருந்தால் நாடு எப்படியிருக்கும்? மக்கள் சமூகம் எப்படியிருக்கும்? இவைகளைச் சிந்திப்பது பகுத்தறிவுடையார் கடமை
நுண்ணறிவு
வள்ளலாரின் இக்கருத்தே பண்டைத் தமிழரின் கருத்தாகும். எழுத்துப் புத்தகங்களைக் கற்றல் ஒரு தொழில்தான். ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழில் துறையில் தேர்ந்திருப்பது போல், சிலர், கவிகளை காவியங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். கல்வி, படிப்பு, கற்றல், படித்தல், ஓதல் முதலிய கல்வியைக் குறிக்கும் சொற்களெல்லாம் தொழிற் பெயர்களாக இருக்கின்றன. இதைக்கொண்டே கல்வியும் ஒரு தொழில்தான் என்பதைக் காணலாம்.செந்நாப் புலவராகிய திருவள்ளுவர் கல்வி வேறு, அறிவுவேறு என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்”(குறள் – 373)
என்பது வள்ளுவர் வாக்கு. எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு நுட்பமான பொருள்களைக் கூறும் நூல்களைக் கற்றிருந்தாலும் அது அறிவாகாது. ஒருவனுடைய இயற்கையறிவே எக்காரியத்திலும் முன்னிற்கும். இதுவே குறளின் கருத்து.அந்த இயற்கை அறிவுதான் சிந்தனாசக்தியென்பது. எந்தப் பொருளைக் கண்டாலும், அந்தப் பொருளின் தன்மையை ஆராய்ந்து அறியவேண்டும். எந்தச் செய்தியைக் கேட்டாலும் அந்தச் செய்தியின் உண்மையைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். இதுவே அறிவு வளர்வதற்கு வழி. இவ்வழியில் தங்கள் அறிவைத் தீட்டிக்கொண்டவர்களே நுண்ணறிவாளர்கள்.
அருள் அறிவும் மருள் அறிவும்
துன்புறும் உயிர்களிடம் இரக்கம் காட்டுவதே அறிவின் பயன். மனித சமூகம் எப்பொழுதும் தனித்து வாழமுடியாது. பல மக்கள் பலதிறப்பட்ட வேலைகளைச் செய்கின்றனர்.பலதிறப்பட்ட தொழில்களே உலகை உருவாக்கி வருகின்றன; மக்களை வாழும்படிச் செய்துவருகின்றன; மக்கள் சமூகத்தை மேலும் மேலும் நாகரிகம் அடையச் செய்து வருகின்றன. இந்த உண்மையை உணராதவர்கள், மதம்,சமூகம், வகுப்பு, இனம் என்ற பேதம் பாராட்டுவர். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொடுமைப்படுத்தும் நிலை மாறவேண்டும். இந்த மாற்றம் எப்பொழுது மனித சமூகத்தில் ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் அறிவு பரிமளிப்பதாக எண்ண முடியும். மனித சமூகத்தை ஒன்றாக நினைக்காத அறிவு அறிவல்ல; அது அறியாமைதான்.
“அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்தமெய்ச் சிவமே”(அருட்பெருஞ்சோதி அகவல் ; 4615 – 488)
இவ்வடிகளை ஊன்றி நோக்கினால் எது அறிவு, எது அறிவின்மை என்பது புலப்படும். இரக்கத்தோடு கூடிய அறிவு ஒன்றுதான் அறிவு, பிற, அறிவு என்று சொல்லப்படுவன எல்லாம் அறிவல்ல, அறியாமைதான். அறிவின் பயனை அறிந்தால் உலகம் தூங்காது ; சோம்பிக் இடக்காது ; உலக மக்கள் உண்மை உணர்வார்கள் ; ஏமாந்திருக்கும் மக்கள் கூட்டம் விழித்தெழும் ; சுரண்டுவோர்க்கு இடங்கொடுக்கமாட்டார்கள் ; எல்லா மக்களும் ஏக்கம் இன்றி வாழ்வர்.
“தூக்கம் தொலைந்து, சூரியன் தோன்றினன்,
ஏக்கம் தொலைத்தேன்”.(திருவருட்பா; திரு உந்தியார் – 4897)
அறிவுபெற்ற ஒவ்வொரு மகனும் சொல்லிக் கொள்ளவேண்டியது இது. “என்னுடைய உறக்கம் ஒழிந்தது, விழிப்படைந்தேன் அறிவுச் சூரியன் உதயமாகிவிட்டான், அவனுடைய வெளிச்சத்தால் என்னை அடிமையாக்கிய தளைகளைக் கண்டறிந்தேன்; அவைகளை அறுத்தெறிந்தேன்; துன்பத்தைத் தொலைத்தேன், விடுதலை பெற்றேன், இன்பத்தை நுகர்கின்றேன்” என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும்.
உண்மை ஞானமே அறிவின் பயன்
கொடுமை செய்தல் கூடாது, எல்லார்க்கும் நலம் செய்தல் வேண்டும் என்று பேசாதார் இல்லை. ஆனால், செய்கையோ வேறு. சீவகாருண்யம் என்று சொல்லிக்கொண்டு எறும்புக்கு அரிசிபோடுகிறார்கள்; காக்கைக்குச் சோறு போடுகின்றனர்; பாம்புக்குப் பால் வார்க்கின்றனர்; சோம்பித் திரியும் பிச்சைக்காரர்களுக்குச் சோறு போடுகின்றனர்; ஆனால், அல்லும் பகலும் உழைக்கும் மக்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. நாள் முழுதும் வயல்களிலும், தோட்டங்களிலும் உழைக்கின்றனர்; பண்டங்களைப் பெருக்குகின்றனர்; அவர்கள் உழைப்பின்றேல் உலகம் இயங்காது. இத்தகைய உழைப்பாளிகளிடம் இரக்கம் காட்டாதவர்கள் எவ்வளவோ பேர். ஆனால் அவர்கள் வெளிஆடம்பரத்திற்காகச் செய்யும் தருமம் பல.அவை தருமம் ஆகுமா? மக்கள் மனத்தில் உள்ள இம்மயக்கம் ஒழியவேண்டும். மயக்கத்தை உண்டாக்கக் கூடிய கருவிகள் ஒழியவேண்டும். மது மயக்கமாவது சில மணிநேரம் இருந்து பிறகு மறைந்துவிடும்; மடமையால் ஏற்பட்ட மயக்கம் எளிதில் தெளியாது.மடமைக்குக் காரணமாக இருக்கும் கருவிகள் பல. இக்கருவிகள் மதத்தின் பேரால் -சட்டங்களின் பெயரால் சாத்திரங்களின் பெயரால் – பழக்கவழக்கங்களின் பெயரால் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஒழிந்தால்தான் உண்மை ஞானம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்; மக்கள் அனைவரும் இன்பத்தை அடைவார்கள்.
“வெவ்வினைக் காடெலாம் வேரோடு வெந்தது;
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது;
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது;
சித்திகள் யாவும் செய்திடத் தந்தது” (அருட்பெருஞ்சோதி அகவல்அருள் அற்புதம் – 4912)
“இவ்வுலகில், கொடுமைகள், தீவினைகள், காடுபோல் மண்டிக் கிடந்தன.அந்தக் கொடுவினைக் காடுகள் இன்று வேரோடு வெந்து சாம்பலாயின. கொடிய பெரிய வஞ்சனைகள் வளர்ந்து கொண்டிருந்தன. அந்த வஞ்சனைகள் இனி வளர்ச்சியடைய முடியாது அழிந்தன. இப்பொழுது உண்மையான அறிவு வந்து விட்டது. அதுவும் நன்றாக அழிக்க முடியாததாக உறுதியாக வளர்ந்துவிட்டது நினைக்கும் செயல்களையெல்லாம் செய்து வெற்றியடையயும் வல்லமையைத் தந்துவிட்டது” இது வள்ளலார்வாய்மொழி, இதுவே அறிவின் பயன்.
முடிவுரை
முதலில் மனதிலே இரக்கத்துடன் வாழ்தல்; இரண்டாவது சோம்பலின்மை; மூன்றாவது கொடுமைகளை அழிப்பது, நான்காவது மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; ஐந்தாவது உண்மையான அறிவுடன் எண்ணிய இன்பங்களைப் பெற்று எல்லா மக்களும் ஒன்றுபட்டு இனிது வாழ்வது என இவையே அறிவின் பயன் எனக் கூறும் வள்ளலார்,
“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்” (குறள் – 430)
எனும் வள்ளுவரின் கருத்தை வலியுறுத்துவதன் வழி, இத்தகைய அறிவின் பயனை மனித சமூகம் பெறவேண்டும் எனும் தன் உள்ளக்கிடக்கையையும் தெளிவுபடுத்துகிறார்.
துணைநூல் பட்டியல்
1. இராமலிங்க அடிகள் (ஆ), திருவருட்பா ஆறாம் திருமுறை, சன்மார்க்க தேசிகன், ஊரன் அடிகள் (ப.ஆ), சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்-607303, தென்னார்க்காடு மாவட்டம்.1989.
2. சாமி சிதம்பரனார் (ஆ), கி.ஜெயக்குமார், ப.சரவணன் (ப.ஆ), வடலூரார் வாய்மொழி, லாவண்யா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை.2002
3.முனைவர் பா.அருள் செல்வி (ஆ), திருவருட்பா நோக்கமும் பயனும், அருள்சோதி, பதிப்பகம், காஞ்சிபுரம், 1999.
முனைவர் ம. தாமரைச் செல்வி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஒருங்கிணைப்பாளர் – பிற மொழிகள் துறை
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் – 2)
மீனம்பாக்கம், சென்னை – 600 061.







