கண்ணப்ப நாயனார்‌ புராணம்

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்‌

பொத்தப்பி என்னும்‌ மலைநாட்டில்‌ வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ திண்ணனார்‌. இவர்‌ வேடர்‌ குலத்‌ தலைவராக விளங்கினார்‌.

திண்ணனார்‌ வேட்டையாடுவதில்‌ நிகரற்ற வீரராகத்‌ திகழ்ந்தார்‌. தன் பணியாளர்‌ சிலருடன்‌ காட்டிற்குச்‌ சென்று வேட்டையாடி, விலங்குகளைக்‌ கொன்றார்‌. அதைத்‌ தம்‌ இனத்தவருக்குத்‌ தந்தும்‌ தானும்‌ உண்டும்‌ வாழ்ந்தார்‌.

ஒருநாள்‌ தன்‌ நண்பர்களான காடன்‌, நாணன்‌ என்பவர்களுடன்‌ சேர்ந்து காட்டிற்கு வேட்டையாடச்‌ சென்றார்‌. கொழுத்த பன்றி ஒன்றை வேட்டையாடினார்‌. அவர்கள்‌ நடந்து நடந்து பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்‌. அப்போது அவர்களுக்கு மிகுதியான பசி உண்டானது. திண்ணனார்‌ அப்பன்றியை தீயில்‌ வாட்டும்படி காடனிடம்‌ கூறினார்‌.

அப்போது அருகிலிருந்த மலை திண்ணனாரைக்‌ கவர்ந்தது. அவர்‌ அம்மலைமீது ஏறிச்‌ சென்றார்‌. அவரது முற்பிறவி வாசனையால்‌ அவரை அறியாமல்‌ அவரது கால்கள்‌ சென்றன. அங்கே மரங்களின்‌ நடுவில்‌ சிவலிங்கம்‌ ஒன்றைக்‌ கண்டார்‌. ஏனோ அவரை அறியாமல்‌ பெருமானின்‌ மீது பேரன்பு சுரந்தது.

அச்சிவலிங்கத்தின்‌ மீது சில பூக்களும்‌ இலை தழைகளும்‌ இருந்தன. அதைக்கண்ட திண்ணனார்‌, நாணனிடம்‌ “இந்தக்‌ கொடிய காட்டில்‌ இந்த வேலையை யார்‌ செய்கிறார்கள்‌?” என்று கேட்டார்‌.

நாணனும்‌, ஒரு வேதியர்‌ அவ்வாறு தினமும்‌ செய்து அன்னம் படைப்பதாகக் கூறினான். உடனே திண்ணனார்‌, “இக்காட்டில்‌ தனித்திருக்கும்‌ இவருக்குப்‌ பசிக்காதோ! உடனே இவருக்கு உணவு படைக்க வேண்டும்‌!” என்று கூறியபடி மலையை விட்டு இறங்கினார்‌. அவரது செய்கைகள்‌, நாணனுக்கு வேடிக்கையாக இருந்தது.

மலையை விட்டு இறங்கிய திண்ணனார்‌, காடன் சுட்டு வைத்திருந்த பன்றிக்‌ கறியை எடுத்து சுவைத்துப்‌ பார்த்தார்‌. அதில்‌ நல்ல தசைகளை மட்டும்‌ எடுத்து வைத்தார்‌. பின்‌ பொன்முகலி ஆற்றிற்குச்‌ சென்று நீரை எடுத்து வாயில்‌ அடக்கிக்‌ கொண்டார்‌. நேராக மலைக்கு ஒடினார்‌.

அச்சிவலிங்கத்தின்‌ மீது வாயிலுள்ள நீரை உமிழ்ந்தார்‌. தான்‌ கொண்ட வந்த பன்றிக்கறியை அதன் முன்‌ வைத்தார்‌. நெடுநேரம்‌ சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றார்‌. நாணனும்‌ காடனும்‌ தங்கள்‌ தலைவர்‌ திண்ணனாருக்கு ஏதோ தீவினை தொற்றிக்‌ கொண்டது என்று நினைத்தார்கள்‌. செய்தியை திண்ணனாரின்‌ தந்தையிடம்‌ கூறச்‌ சென்றார்கள்‌.

ஆனால்‌ திண்ணனாரோ அவவிடத்தைவிட்டு அசையவில்லை. இரவில்‌ தனித்திருக்கும்‌ சிவலிங்கத்திற்குக்‌ கொடிய விலங்குகளால்‌ தீங்கு ஏதேனும்‌ நேர்ந்துவிடுமோ என்று அஞ்‌ச இரவு முழுவதும்‌ அவ்விடத்திலேயே நின்றார்‌. மறுநாள்‌ காலையிலேயே மலையை விட்டு இறங்கிச்‌ சென்றார்‌.

காலை வழக்கம்போல்‌ வேதியர்‌ சிவலிங்கத்திற்கு பூசை செய்ய அங்கு வந்தார்‌. லிங்கத்தின்‌ முன்‌ இருந்த மாமிசத்தைப்‌ பார்த்தார்‌. “ஐயோ! இந்தப்‌ பாதகத்தையார்‌ செய்தது! என்று துடித்தார்‌. உடனே அவற்றை அப்புறப்படுத்தினார்‌. சிவலிங்கத்தை நீராட்டி, பூக்கள்‌ சூடி, அன்னம்‌ படைத்தார்‌. பெருமானை வணங்கிவிட்டு அவ்விடம்‌ விட்டுச்‌ சென்றார்‌. அன்றிரவும்‌ திண்ணனார்‌ வந்து, பன்றிக்‌ கறியைப்‌ படைத்தார்‌. மெய்யுருக நின்றார்‌. இவ்வாறு பல நாட்கள்‌ நடைபெற்றது.

ஒருநாள்‌ மனம்‌ பொறுக்காத வேதியர்‌, “சிவபெருமானே! இவ்வாறு மாமிசம்‌ படைக்கும்‌ அடாத செயலைச்‌செய்பவர்‌ யாரோ? இக்கொடிய செயலை நீரே மாற்ற வேண்டும்‌” என்று வேண்டிக்‌ கொண்டார்‌. பின்‌ தன்‌ இல்லம்‌சென்றடைந்தார்‌.

சிவபெருமான்‌ அவ்வேதியரது கனவில்‌ தோன்றினார்‌. “வேதியரே!. எனக்குத்‌ இனமும்‌ இரவில்‌ ஒருவன்‌ வந்து மாமிசம்‌ படைப்பது என்மேலுள்ள அன்பினாலேயே! அவனது அன்பை நீர்காண வேண்டுமென்றால்‌ இன்று இரவு வரவேண்டும்‌. அவன்‌ அறியாதபடி ஒளித்திருந்து கவனிக்க வேண்டும்‌!” என்று சொல்லி அருளினார்‌.

வேதியரும்‌ இரவில்‌ மலைக்குச்‌ சென்று ஒரு மரத்தின்‌ பின்னால்‌ ஒளிந்திருந்தார்‌. வழக்கம்போல்‌ இரவில்‌ மலையை நோக்கி வந்தார்‌ திண்ணனார்‌. வரும்‌ வழியில்‌ அவருக்குச்‌ சில கெட்ட சகுனங்கள்‌ தோன்றின. அவர்‌ மனதில்‌ துயரம்‌ உண்டானது. அவர்‌ நேராக சிவலிங்கத்தின்‌ அருகில்‌ ஒடிவந்தார்‌. அப்போது சிவலிங்கத்தின்‌ ஒரு கண்ணிலிருந்து ரத்தம்‌ வடிந்து கொண்டிருந்தது.

அதைக்கண்ட திண்ணனார்‌ மனம்‌ பதைத்தார்‌. “ஐயோ! இந்த அடாத காரியத்தைச்‌ செய்தவர்‌ யார்‌?” என்று கூறியபடி அங்கும்‌ இங்கும்‌ யாராவது தென்படுகிறார்களா என்று தேடினார்‌. யாரையும்‌ காணவில்லை. உடனே, அவர்‌ கணமும்‌ யோசிக்காமல்‌ தன்‌ அம்பை

எடுத்து தன்‌ ஒரு கண்ணைத்‌ தோண்டி எடுத்தார்‌. சிவபெருமானின்‌ பழுதுபட்ட கண்ணை அகற்றி, அவ்விடத்தில்‌ தன்‌கண்ணைப்‌ பொருத்தினார்‌. ரத்தம்‌ வடிவது நின்றது. திண்ணனார்‌ மனம்‌ கொஞ்சம்‌ சமாதானம்‌ அடைந்தது.

ஆனால்‌ சிறிது நேரத்திலேயே சிவலிங்கத்தின்‌ மறுகண்ணிலிருந்து ரத்தம்‌ வழிந்தது. அதைக்கண்ட திண்ணனார்‌ பதறிப்போனார்‌. உடனே அம்பை எடுத்தார்‌. தன்‌ மறு கண்ணைத்‌ தோண்டி எடுக்க முன்வந்தார்‌. தன்‌ மறுகண்‌ணையும்‌ எடுத்து விட்டால்‌ தனக்குப்‌ பார்வை போய்விடுமே என்பதால்‌, அடையாளத்திற்காக சிவலிங்கத்தின்‌ கண்ணின்‌ மீது தன்‌கால்‌ விரல்களைப்‌ பதித்துக்‌ கொண்டார்‌. பின்‌ அம்பை எடுத்து தன்‌ மறுகண்ணைத்‌ தோண்டி எடுக்க முயன்றார்‌.

அக்கணமே சிவபெருமான்‌, “கண்ணப்பா நில்‌! கண்ணப்பா நில்‌!” என்று அசரீரியாய்‌ ஒலித்தார்‌. திண்ணனாரின்‌ கையைத்‌ தடுத்தார்‌. அத்திருக்காட்சியை, மரத்தின்‌ பின்‌ மறைந்திருந்த வேதியர்‌ கண்டார்‌. திண்ணனார்‌ பெருமான்‌ மீது கொண்டிருந்த பேரன்பை உணர்ந்தார்‌. பெருமகிழ்ச்சி அடைந்தார்‌.

சிவபெருமான்‌ திண்ணனாரிடம்‌, “என்‌ மீது பேரன்பு கொண்டதால்‌ எப்போதும்‌ என்‌ நிழலில்‌ விற்றிருப்பாயாக!” என்று பேரருள்‌ புரிந்தார்‌. இறைவனுக்குக்‌ கண்‌ தந்ததால்‌, இறைவராலேயே ‘கண்ணப்பர்‌’ என்று அழைக்கப்பட அழியாப்‌ பேறு பெற்றார்‌.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here