மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

மிதவாதப்-பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

பெண்ணடிமையின் காரணங்கள்

            பதினெட்டாம் ஐரோப்பாவிலும் முதன் முதலாகத் தோன்றிய பெண்ணியக் கருத்துக்கள், மிதவாதப் பெண்ணியம் என்னும் பிரிவில் அடங்கும். பிரான்சு நாட்டில் உருப்பெற்ற சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்களும், அமெரிக்காவில் சுதந்திரம், தன்னாட்சி என்ற கருத்துக்கள் வலுப்பெற்றதன்மூலம் விளைந்த அமெரிக்கப் போரும், தனிமனிதனுக்குச் சுதந்திரமும், முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியவை.

            அவை, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சில பிறப்புரிமைகள் உள்ளன. அவை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுதல் வேண்டும்’ என வலியுறுத்தின. சுதந்திரம் என்ற மதிப்பு, எல்லா மதிப்புகளையும்விட மேலானது என்ற கருத்து அக்காலத்தில் மேலோங்கி நின்றது. ஆயின், இச்சுதந்திர எழுச்சி தோன்றிய ஆரம்ப காலத்தில் இவ்வுரிமைகள் அனைத்து மத, இன, வர்க்கத்தைச் சார்ந்த ஆண் மக்களுக்கு மட்டுமே தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை பெண்களுக்கும் தேவை என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. இதற்குச் சில முக்கியக் காரணங்கள் இருந்தன.

முதலாவது, பெண்கள் ஆண்களைவிட பகுத்தறிவுத் திறனில் குறைந்தவர்கள் என்ற கருத்து அக்கால மக்களிடையே நிலைத்திருந்தது. அதனால் அவர்கள் மனிதர்கள் என்ற தகுதியைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் கருதினர்.

            இரண்டாவது காரணம், பெண்கள் முதலில், ‘பெண்கள்’ என்ற மதிப்புக்களின் அடிப்படையில்தான் உணரப்படுகின்றனர். பின்புதான், ‘மனிதர்கள்’ என்ற அடிப்படையில் உணரப்படுகின்றனர். அதனால் பெண்கள் அவர்களுக்குரிய தனியான திறமைகளின் அடிப்படையில் உணரப்படவில்லை. ஆனால், ஆண்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் உணரப்படுகின்றனர். இவ்வாறான கருத்துக்களும், நம்பிக்கைகளும் பெண்களுக்குத் தனிமனித சுதந்திரம் தேவை என்று நினைப்பதற்கே இடங்கொடுக்காதவாறு தடை செய்தன.

நூற்றாண்டில் அமெரிக்காவிலும், மிதவாதப் பெண்ணியத்தில் மனிதர்களைப் பற்றிய இரண்டு கருத்துக்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஒன்று, காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திறமை; இரண்டாவது, தனிமனித சுதந்திரம். முதல் கருத்தின்படி பெண்களுக்கும் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவுத்திறன் உள்ளது என்ற கருத்து மிதவாதப் பெண்ணியவாதிகளால் விவாதங்களின் மூலம் விளக்கப்பட்டது. இரண்டாவது, பெண்ணும் ஆணைப்போல் ஒரு தனி நபர் என்பதாகும். பெண் ஆணின் போகப்பொருள் அன்று என்ற கருத்தும் நிறுவப்பட்டது. அதனால் ஆணைச் சார்ந்து பெண் வாழும் நிலை மாறி, அவளுக்குத் தனிமனித உரிமைகளும், சுதந்திரமும் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான சமூகச் சூழலில், ஆரம்பகால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களுக்குத் தனிமனிதப் பிறப்புரிமைகளைக் கோரினர். இவர்கள், அக்கால கட்டங்களில் தீவிரமடைந்திருந்த சமத்துவம், மக்களாட்சி முதலிய தனிமனித சுதந்திரக் கருத்துக்களுக்கும், நடைமுறையில் பெண்கள் அடிமைகளாக எவ்வித சுதந்திரமுமின்றி உள்ள இடையில் நடத்தப்படுவதற்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினர். ஆரம்ப காலகட்டத்தில் 1792-இல் மேரி உல்ஸ்டோன் கிராப்ட் எழுதிய ‘பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்’, 1848- இல் செனாகாபால்ஸ் பேரவையின் அரசியலமைப்பு, 1869-இல் ஜான் ஸ்டூலட் மில்லின் படைப்பான ‘பெண்கள் அடிமையைப் பற்றி’ முதலிய படைப்புக்கள் இக்கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.

ஆரம்ப கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியமான இடம் குடும்பமே என வலியுறுத்தினர். இவர்கள் ஆண் பெண் இருபாலருக்கிடையே வழக்கத்திலுள்ள வேலைப் பங்கீடுகளை எதிர்க்கவில்லை. ஆயின், இவ்விரண்டு வேலைகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது; இரண்டும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

மிதவாதப் பெண்ணியவாதிகள் சமூகத்தில் பெண்கள் தாழ்நிலை அடைந்திருப்பதற்குச் சமூகத்தில் நிலவிவரும் சில குறைபாடுகளே காரணம் என்று கருதினர். அதனால் அவற்றைச் சில சீர்திருத்தங்களின்மூலம் சரிசெய்துவிட முடியும் என்று நம்பினர். அவர்கள் கருத்துப்படி, இம்மாற்றங்களுக்குப் புரட்சிகள் எதுவும் தேவையில்லை. மேலும் புரட்சி என்பது தற்பொழுது சமூகத்தில் நிலவிவரும் சுதந்திரத்தையும் அழித்துவிடும் என்று அச்சமுற்றனர்.


            பெண்களின் தாழ்நிலையை மாற்ற அவர்கள் காட்டிய வழிகள் சில. அவற்றில் முக்கியமானது, பெண்களுக்கு உரிமைகள் அளிக்க வகை செய்யும் சட்டச் சீர்திருத்தங்கள் ஆகும். ஏனெனில் பெண்ககளின் தாழ்நிலைக்கு அக்காலத்தில் அவர்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டங்கள் கிடையாது. இவ்வாறான உரிமைகளில் முக்கியமாக அளிக்க வேண்டியது சொத்துரிமையும், பொது (Civil) உரிமையும் ஆகும்.

மேலும், திருமணம் என்பது உள்ள உடன்பாடாகக் மனைவியருக்கிடையே கணவன் கருதப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பெண்கள் தங்கள் உரிமைகளை உணருமாறு அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டுமென்றும், பெண்களைப் பற்றி சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களைப் பற்றிய நல்ல கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இம்மாற்றங்களை அவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, பொது மக்களுக்குப் புதுக் கருத்துக்களைக் கல்வியின் மூலமும், மக்கள் தொடர்புச் சாதனங்களின் மூலமும் பரப்புவது, சட்டத்தைப் பயன்படுத்துவது முதலிய வழிமுறைகளின் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்பினர்.

கற்பழிக்கப்பட்ட பெண்கள், கொடுமைகளுக்குள்ளான
பெண்கள், அபலைகள் முதலியோருக்கு ஆதரவு இல்லங்களையும் அவர்கள் நடத்தினர். குழந்தைகள் காப்பகங்களும் செயற்பட்டன. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தன்னை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டுமென்பது அவர்களது நோக்கமாகும்.

பிற்கால மிதவாதப் பெண்ணியம்

பிற்கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் நல்லியல்புகள் என்று சமூகம் சித்தரிக்கும் இயல்புகள் அவர்களை 
வீட்டிற்குள் சிறைப்படுத்தி, அவர்களுடைய ஆற்றல்கள், உந்துதல்கள் இவைகள் வெளிப்படாதவாறு அடக்கி, அவர்களுடைய சுய மதிப்பைக் கெடுக்கின்றது என்று கருத்துத் தெரிவித்தனர். இதை அவர்கள் ‘பெண்மை என்னும் மாயை’ என அடித்துக் கூறினர். இந்நிலைமாறப் பெண்கள் தங்களை அர்த்தமுள்ள வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம், தாய்மை இவற்றுடன் வாழ்க்கைப் பணியையும் இணைத்துப் புதுவிதமான வாழ்க்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் விரும்பினர். இது ஒரு பெண்ணின் முக்கியமான இடம் குடும்பமே என்ற ஆரம்பகாலப் பெண்ணியக் கருத்தினின்றும் வேறுபட்டு நிற்கின்றது.

மிதவாதப் பெண்ணியத்தின் குறைபாடுகள்


            மிதவாதப் பெண்ணியம் ஒரு சீர்திருத்தவாதம். இது வர்க்க, இன, பால்சார்ந்த அடக்குமுறைகள் பெண் இனத்தை நசுக்குவதைப் பற்றி ஆராய முற்படவில்லை. மேலும், இது பெண் இனத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆணாதிக்க மதிப்புகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒப்புக் கொள்கின்றது. அதனால் பெண்களின் தாழ்மை நிலை பற்றிய சரியான விளக்கங்களைக் கொடுக்கத் தவறிவிட்டது.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here