குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்குலியக் கலய நாயனார்

குங்கிலியக் கலய நாயனார்

    சோழநாட்டிலுள்ள திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் கலயனார் ஆவார். சிவபக்தியில் சிறந்து நின்ற அவர், திருக்கோயிலில் குங்கிலியம் என்னும் வாசனைப் பொருளால் தூபமிட்டு அருந்தொண்டாற்றி வந்தார். அதனால் அவரைக் குங்கிலியக் கலய நாயனார் என்று மக்கள் அழைத்தனர்.

     நாயனாரின் பெருமையை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். கலயனாரின் செல்வம் கரையத் தொடங்கியது. இருப்பினும் தன் நிலங்களை விற்று குங்கிலியத்தூபமிடும் பணியில் வழுவாது நின்றார் நாயனார். நாளடைவில் வறுமையின் கோரப் பிணி அவரது குடும்பத்தை வாட்டியது. உணவிற்கே திண்டாட்டமானது.

        அதைக்கண்ட கலயனாரின் மனைவி, தன் திருமாங்கல்யத்தைக் கழற்றித் தந்தார். அப்பொன்னை விற்று நெல் வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார். நாயனார் திருமாங்கல்யத்தோடு வீதியில் நடந்தார். அப்போது எதிரில் குங்கிலியம் விற்றபடி ஒருவர் வந்தார். நாயனாருக்கு, தன் பசியும் வீட்டிலுள்ளோரின் பசியும் மறந்து போனது.

         நேராகக் குங்கிலியம் விற்பவரிடம் சென்று, தன் மனைவியின் திருமாங்கல்யத்தைக் கொடுத்தார். அதற்குப் பதிலாக குங்கிலியம் பெற்று கோயிலுக்குச் சென்று, மிக்க மகிழ்ச்சியோடு பெருமானுக்குத் தூபமிட்டார்.

         நாயனாரின் குடும்பத்தார் பசியால் உறங்கிப் போயினர். அக்கணம் சிவபிரானது அருளால் நாயனாரின்  செல்வம் நிரம்பியிருப்பதை சிவபிரானும், நாயனாரின் மனைவியார் கனவில் தோன்றிக் கூறினார். நாயனாரின் மனைவி விழித்துப் பார்த்தார். வீடு செல்வத்தால் நிரம்பியிருந்தது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார்.

         கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த நாயனாரின் கனவிலும் தோன்றிய பெருமான் அச்செய்தியைக் கூறினார். நாயனாரும் வீடு திரும்பினார். செல்வங்களைக் கண்டார். கலியானாரும் அவரது மனைவியாரும் சிவனருளை எண்ணி மெய் சிலிர்த்தனர். நாயனார் அச்செல்வத்தைக் கொண்டு, தன் குங்கிலியத் தூபத்தொண்டினையும், அடியவர்க்கு அமுதூட்டும் தொண்டினையும் குறைவறச் செய்து மகிழ்ந்திருந்தார்.

       இவ்வாறிருக்கையில் ஒருநாள் திருப்பனந்தாள் என்னும் ஊரிலுள்ள ஆலயத்தின் சிவலிங்கம் சாய்ந்தது. அதனை நிமிர்த்த பலர் முயன்றும் இயலவில்லை. செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னர் தன் அரண்மனை யானைகளைக் கொண்டுவந்து கயிற்றைக் கட்டி இழுத்தான். இருப்பினும் சிவலிங்கம் நிமிரவில்லை. மன்னன் பெரிதும் வருத்தமுற்றான்.

       மன்னனின் வருத்தத்தைக் கேள்விப்பட்ட கலயனார், திருப்பனந்தாள் சென்றார். சிவலிங்கத்தின் கழுத்திலுள்ள கயிற்றின் மறுமுனையைத் தன் கழுத்தில் கட்டி இழுத்தார். மறுகணமே சிவலிங்கம் நிமிர்ந்தது. மன்னனும் கலயனாரை வணங்கினான். கலயனாரின் பெருமையை ஊரறிய பறைசாற்றினான்.

            திருப்பனந்தாள் விட்டு திருக்கடவூர் திரும்பி தம் அருந் தொண்டினைத் தொடர்ந்தார்கலயனார். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் திருக்கடவூர் வந்தபோது, அவர்களை வணங்கி அமுது படைத்தார். அவ்விரு பெரியோர்களும் நாயனாரை வாழ்த்தினர்.

இவ்வாறு தமது திருத்தொண்டை தவறாது செய்த குங்கிலியக் கலய நாயனார் சிவபதம் சென்றடைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிக..

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here