சோம்பலை நெருங்க விடாதீர்கள்

சோம்பலை நெருங்க விடாதீர்கள்

தன்னம்பிக்கை கட்டுரை – 11

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

          உலகில் நீங்கள் சாதிக்க பிறந்தவர் என்றால் சோம்பலை நீக்க வேண்டும். எப்போதும் காலையில் ஆறுமணிக்கு எழும் நீங்கள் அதை ஐந்து மணியாகக்  குறைக்கலாம். அவ்வாறு எழுந்தநாள் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். சுறுசுறுப்பைத் தரும். அந்தக் காலைநேரத்தில் அழகாக இதமாக பாட்டு ஒன்று பாடலாம் என்று தோன்றும். அந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும். பாரதியார் கூறுவார் “இன்று புதிதாய் பிறந்தேன்” என்று. அவ்வாறே நீங்களும் புதிதாகப் பிறந்ததைப் போன்று உணர்வீர்கள். சோம்பலை நெருங்க விடாதீர்கள்

        அடுத்த வாரத்தில் நாலரைமணிக்கு எழப் பழகுங்கள். மனம் மகிழ்ச்சியில் திழைக்கும். அன்று நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அவற்றை பட்டியலிடுங்கள். யாரை பார்க்கவேண்டும்? எத்தனை மணிக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள். எவ்வாறு அவரிடம் உரையாடுவது? என்பதை நிதானமாக யோசித்து பாருங்கள். சில நிமிடங்கள் பிராணாயாமம் செய்யுங்கள். சிறிது தூரம் காலார நடந்து செல்லுங்கள். நல்ல தூய்மையான காற்றைச் சுவாசித்து வாருங்கள். அன்று நீங்கள் சுறுசுறுப்பின் உன்னதத்தைப் பெறுவீர்கள். ஆதலால் அதிகாலையில் எழுந்து பாருங்கள் உங்கள் வெற்றி சிறிது அருகே வந்திருக்கும்.

நற்செயலுக்குப் பிறகு என்பதே இல்லை

        நல்ல செயல்களைj தள்ளிப்போடாதீர். பலர் இதை உணர்வதே இல்லை. எதை எடுத்தாலும் நாளை அப்புறம் பிறகு என்று தள்ளி போட்டுக்கொண்டே இருப்பார்கள். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. இன்று என்பதே உங்களின் கைகளில் உள்ளது. மணித்துளிகள் உயிர் போன்றவை. சென்றால் திரும்பாது. அதனால் எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். நேற்று நடந்தவற்றை நினைத்து கொண்டோ அல்லது எதிர்காலத்தை எண்ணிக்கொண்டோ இருந்தால் நிகழ்காலம் இறந்துவிடும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள். பொன்மொழி ஒன்று கூறுவார்கள், “பிறகு என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்” ஒரு செயலைச் செய்யாமல் தள்ளிப்போடும் மனோபாவம் வந்துவிட்டால் அவர் அதனை முடிக்க இயலாது என்றே கூறலாம். ஒரு செயலைச் செய்யாமல் காரணங்களைச் சொல்பவன் பொய்களைச் சொல்கிறான். ஒரு மணிநேரம்தான் தள்ளிப் போடுகிறோம் என்ற எண்ணம் ஒரு வருடம் தள்ளிப்போடும் மனநிலையை கொண்டு வரும். எந்தச் செயலையும் உடனே இன்றே இப்போதே என்று செய்ய வேண்டுமே தவிர நாளை என்று தள்ளிப்போடாதீர். இவ்வாறு தள்ளிப்போடுவதற்கு காரணம் சோம்பேறித்தனம். தன்னை செயலைச்செய்யாமல் முன்னேற்றத்தைத் தள்ளிப்போடும் சோம்பல் தேவையா? நல்ல பெயரெடுக்க வைக்கும் சுறுசுறுப்பு அவசியமா? எது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

உறக்கத்தைத் தள்ளிவைக்கலாம்

       இராமாயணத்தில் கூறப்படும் நிகழ்வு ஒன்று. மந்தரை என்ற கூனி இராமனின் மீது கொண்ட கோபத்தால், கைகேயிடம் சூழ்ச்சியுடன் பேசுகிறாள். “இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யக்கூடாது. நாட்டை துறந்து அவனை காட்டிற்கு அனுப்ப வேண்டும.” என்று ஏதேதோ பேசி கைகேயியின் மனதை மாற்றிவிடுகிறாள். இதனால் இராமன் காட்டிற்கு அனுப்பப்படுகிறான். செல்லும்போது சீதையும் இலட்சுமணனும் உடன் வருகின்றனர். மூவரும் அயோத்தி நகரத்தை விட்டு நீங்கி கங்கை கரையை அடைகின்றனர். அப்போது அங்குள்ள மக்கள் மனம் கலங்குகின்றனர். அரசாள வேண்டிய இராமன் காட்டிற்குச் செல்கிறானே என்று வேதனைப்பட்டனர். நாளெல்லாம் நடந்து கங்கைக்கரையில் துறவர் தங்கியிருக்கும் இடத்தில் சீதையுடன் இராமன் தங்கியுள்ளார். தம்பி இலட்சுமணன் வெளியில் நின்று அண்ணனுக்குக் காவல் காக்கிறான். நாளெல்லாம் நடந்த களைப்பு. இரவுநேரம் கண்கள் அப்படியே மூடிக்கொள்கின்றன. உடனே இலட்சுமணன் “நித்திரைப் பெண்ணே என்னை விட்டு இப்போது சென்று பதினான்கு ஆண்டுகள் முடித்துவிட்டு மீண்டும் நாங்கள் அயோத்தியை அடைந்தவுடன் வா” என்று இலட்சுமணன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தில் உறங்கக்கூடாது என்று கண்விழித்து காத்தான். எனவே நீங்கள் இலட்சுமணன் போன்று இல்லாவிட்டாலும் உறக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். உறக்கம் என்பது உணவைப் போன்று அளவுடன் இருக்க வேண்டுமே தவிர, அது உங்களை மூழ்கடிக்க்க் கூடாது. சிலர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து களைத்துப்போவார்கள். பாவம் இவர்களின் ஆற்றலும் ஓய்வெடுத்து களைத்துவிடுகிறது என்பதை அறியாதவர்கள்.

இலக்கை குறி வையுங்கள்

       ஒன்றை பெறவேண்டும் என்று மனது  வைத்துவிட்டால் உழைப்பதற்கு நேரம் பார்க்கக்கூடாது. இரவுபகல் என்று பாராமல் உணவு உறக்கம் என்று நினைவில்வராமல் உழைப்பு செயல் முன்னேற்றம் வெற்றி என்றே சிந்தனையில் இருக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் உங்களுக்கு சோம்பலா? என்ன அது என்று கேட்பீர்கள். உமக்கு என்ன தேவை? வெற்றி. அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். ஒரு செயலைச் செய்யும் போது ஓய்வு வேண்டாமா? என்று கேட்கலாம். ஓய்வு வேண்டாம் என்று கூறவில்லை. அந்த நேரத்திலும் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடலாம். வெறுமனே அமர்ந்து கொண்டு இருக்காமல் அந்த நேரத்திலும் உங்களுக்கான யோசனைகளைப் புரட்டிப் பார்க்கலாம்.

       ஒரு இலக்கை நோக்கி அடைய வேண்டும் என்று புறப்பட்டு விட்டாலே போதும் சோம்பல் என்பது காணாமல் ஓடிப்போகும். நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ உங்களுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருந்தாலோ  சோம்பல் என்பது உங்களை ஆட்கொள்ளும். ஒன்று பிடித்த வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் பிடித்தவாறு செய்ய வேண்டும். இல்லையென்றால் சோம்பல்தான் மிஞ்சும். உங்களை திறனற்றவன் என்று பெயரெடுக்க வைக்கும். முன்னேற்றத்திலிருந்து உங்களை மிகவும் தூரத்தில் எறிந்துவிடும். எனவே கவனமாக இருந்து சுறுசுறுப்பை வரவழைத்து வாழ்ந்து பாருங்கள்! இந்த இயற்கை உலகம் உறவுகள் அனைத்தும் உங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று நினைக்கத் தோன்றும். பொழிகின்ற மழை பூக்கின்ற மலர்கள் எல்லாம் உங்களை பார்த்து நேசம் கொள்வதைப்போல உணர்வீர்கள்.

சுறுசுறுப்பு என்பது மனிதனைக் காட்டாறு போல ஓட வைப்பது. பல தோல்விகளை வெற்றிகளாக மாறச்செய்வது. பல மணித்துளிகளை மிச்சப்படுத்துவது. பலரின் வாழ்க்கை தன்மையை மாற்ற வல்லது. எனவே சோம்பலை விரட்டுங்கள் வெற்றிக்கதவுகளைத் திறவுங்கள்.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

4.மாற்றி யோசியுங்கள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here