Monday, July 21, 2025
Home Blog Page 33

கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

இலக்கியங்கள் மனித மனங்களைப் பிரதிபலிக்கின்றன. ஒருவனது நடைமுறை வாழ்க்கையில் அமையும் நிகழ்வுகள் (இன்பம், துன்பம், வாழ்க்கைச்சிக்கல்) அவனது இலக்கியப் படைப்பிலும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, இது கவிஞனின் மன அழுத்தம். கற்பனை, அனுபவம் போன்றவற்றினால் எழும் ஆளுமையின் வெளிப்பாடாகும். கம்பர் வடமொழி இராமாயணததைத் தழுவித் தமிழில் கம்பராமாயணம் என்ற கதை நூலை இயற்றினார். அதில் எண்ணற்ற காட்சி நிகழ்வுகள் தோன்றினாலும் இக்கதையின் திருப்பு முனையாக அமைவது மந்தரை சூழ்ச்சிப்படலம். கைகேயி சூழ்வினைப் படலம் ஆகிய இரண்டும் ஆகும். இவ் இரண்டு படலத்திலும் கூனியின் மனத்தையும் கூனியால் பாதிக்கப்படும் கைகேயின் மனத்தையும் பற்றிக் கூறுகின்றது. கூனி, கைகேயின் மன உணர்ச்சிகளை உளவியல் அறிஞர் சிக்மன்ஃபிராய்டின் “உளவியல் கோட்பாடு” அடிப்படையில் ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

மந்தரைச் சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப்படலம் : கதைச்சுருக்கம்

இராமன் சிறுவயதாக இருக்கும் போது கூனியின் வளைந்த முதுகில் மண்உருண்டையை அம்பாகச் செய்து எறிகின்றான். அடிவாங்கிய கூனி அவன்மீது மிகுந்த சினம் கொண்டு அவனைப் பழிவாங்க நினைக்கிறாள். ஆனால், கூனி ஒரு வேலைக்காரியாக இருப்பதினால் அரச மகனான இராமனை நேரடியாக வஞ்சித்துக் கொள்ள முடியவில்லை. தசரத மன்னன்பரதன் கோசாம்பி (தாய் பிறந்த கேகய மன்னன் நாட்டிற்கு) நாட்டிற்குச் சென்றிருந்தபோது இராமனுக்கே முடிசூட்டு விழா ஏற்பாடு செய்கின்றான்.

“ஏவின வள்ளுவர் இராமன் நாளையே

              பூமகள் கெழுநனாய்ப் புனையும் மௌவிஇக்” (கம்.பாடல்:33)

என்று கூறி மக்களுக்கு முடிசூட்டும் நிகழ்வை அறிவிக்கின்றனர். தெளிந்த சிந்தனையிலும், நாளை இராமன் முடிசூட்டப் போகிறான் என்ற மன மகிழ்ச்சியில் உறங்கிக் கொண்டிருந்த கைகேயிடம் கூனி செல்கிறாள். கொடிய விடமுள்ள பாம்பு (இராகு) மதியை விழுங்க வரும்போது ஒளியை வீசுவதைப் போல, உனக்குப் பெரிய துன்பக்கட்டம் நெருங்கி வரும் போதும் கவலைப்படாமல் உறங்குகிறாய் என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி எதிரிகளை அழிக்கும் வில்லைக் கையிலேந்திய என்மக்கள் செம்மையாக இருக்கும் போது என்கென்ன கவலை. உலக வேதத்தை ஒத்த இராமனைப் பெற்ற எனக்குத் துன்பமா? என்கிறாள். இவ் மந்தரை கைகேயிடம் நீ செல்வம் இழக்கப் போகிறாய். இராமனுக்கு முடிசூட்டுவதனால் நின்மகன் பரதன் பயனற்றுப் போகிறான், தசரதன் நெடுங்காட்டிற்குள் பரதனை அனுப்பியதன் சூழ்ச்சி இப்பொழுதாவது அறிந்துகொள். பரதனுக்குக் கிடைக்க வேண்டிய பதவி (அரசுரிமை) புல்லில் கொட்டிய அமுதம் போல பயனற்றுப் போயிற்றே என்று சினத்துடன் உரைக்கின்றாள்.

மேலும், உன் மீது பகை கொண்டு துன்புறுத்தாவிட்டாலும் மனம் நோகும்படி தொடர்ந்து துன்பத்தை உண்டாக்குவர். இது மட்டுமன்றி உன்னிடம் இரங்கி வந்தவர்களுக்குப் பிச்சைக்கொடுக்க முடியால் கோசலையிடம் “தா” என்று இரங்கி நிற்பாயா? இலலை உன் தந்தைக்கும் சீதையின் தந்தைக்கும் போர் நேருமானால் இராமன் உனக்கு உதவி செய்வானா? மனைவிக்கு உதவி செய்வானா என்பதை அறிந்து செயல்படு என்கிறாள் கூனி. அதற்குக் கைகேயி தூயசிந்தனை திரிந்து, நல்லருள் துறந்தாள். இரக்கம் இன்மை எல்லாம் கெடநின்றாள். அப்போது கூனியை விருப்பத்துடன் பார்த்து நீ என்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறாய், என்மகன் முடிசூட்ட வழிசொல் என்கிறாள் கைகேயி. அதற்கு கூனி தசரத மன்னன் விரும்பித்தந்த இரண்டு வரத்தையும் பெற்றுக்கொள். இரண்டு வரங்களில் ஒன்றினால் அரசாட்சியைப் பெற்றுக் கொண்டு, மற்றொன்றின் மூலம் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டில் திரியும் படியும் செய் என்றாள்.

தசரதன் துவண்ட நிலையில் படுத்துக்கிடக்கும் கைகேயின் உடலைத் தூக்க அவள் தசரதன் கையை விலக்கி எதுவும் பேசாமல் தரையில் விழுகிறாள். உன்னை இந்த நிலைக்கு ஆட்படுத்தியது யார் சொல், இப்போதே கொன்று விடுகிறேன் என்கிறான் தசரதன். என்மீது உமக்குக் கருணை இருக்கிறதா? என்கிறாள் கைகேயி. உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். விரும்பியதைக் கேள். இது உன் மகன் இராமன் மீது சத்தியம் என்கிறான். அதற்கு அவள் முன்பு அளிக்கவிருந்த இரண்டு வரங்கள் எனக்கு வேண்டும் என்கிறாள். இரண்டு வரங்களில் ஒன்று என்மகன் பரதன் நாடாள வேண்டும், சீதையின் கணவனாகிய இராமன் காடாளவேண்டும் என்கிறாள். இதைக் கேட்ட தசரதன் இவளைவிட தீயவள் இவ்வுலகில் இருக்க முடியாது என்று எண்ணிமடிந்து விழுகின்றான், அழுகின்றான், புலம்புகின்றான். கைகேயி கண்டு கொள்ள வில்லை. தசரதன் அவளிடம் நீ சிந்தனை செய்து கொல்கிறாயா? இல்லை உன்னை தூண்டி விட்டார்களா? என்கிறான். அதற்கு, அவள் நீ வரங்களைத் தரவில்லை என்றால் மடிந்து சாகப்போகிறேன். அவ்வாறு செய்தால் பழி உன் மீதுதான் வரும் என்கிறாள். உன்மகன் பரதன் நாடாளட்டும். ஆனால், என் மகன் இராமன் காட்டிற்குச் சென்றால் அவனைப் பார்க்காது இறந்து விடுவேன் உன் எண்ணத்தை மாற்றிக்கொள் என்று காலில் விழுந்து கெஞ்சிக்கேட்கிறான் தசரதன். வரங்களைக் கொடுத்து நிறைவேற்றாதிருப்பது என்னநியதி என்கிறாள். தசரதன் எது கூறியும் கைகேயி தன்முடிவிலிருந்து விலகாமலிருந்தாள். தசரதன் “ஈந்தேன் ஈந்தேன்” என்று கூறி வரங்களைக் கொடுக்கின்றான். இதன் படி இராமன் காட்டிற்குச் சென்றான் என்பது கதையாகும்.

சிக்மன்ஃபிராய்டின் உளவியல் கோட்பாடு

 ஃபிராய்டு மனித மன அமைப்பினை மூன்று பிரிவுகளைக் கொண்டதாக விளக்குகிறார். அவை இச்சை உணர்ச்சி, தன் முனைப்பு, பண்பாட்டுணர்ச்சி என்பவையாகும். இச்சை உணர்ச்சி என்பது மனிதன் பிறக்கும் போதிலிருந்தே இருப்பது; பிறப்பிலேயே பெற்றுக்கொண்டது ஆகும். இச்சை உணர்ச்சி வேறு எதனையும் பொருட்படுத்தாது; தனது தேவையை உடலின் துணையோடு தீர்த்துக்கொள்ள முனையக் கூடியது. கருத்துச் சொல்வது எனின் இச்சை உணர்ச்சி என்னும் பகுதியில்தான் மனிதனின் அடிப்படையான உணர்வுகள் உறைந்துள்ளன. இங்கிருந்துதான் `அவை மனித உடல், செயல்பாடுகள் வழி வெளிப்படுகின்றன.

பண்பாட்டுணர்ச்சி என்பது புறஉலகின் பண்பாட்டுப் பகுதியாகும். இதுவே, பண்பாட்டில் காணப்படும் சட்டம், ஒழுங்கு பற்றி விதிமுறைகள் ஆகும். இதற்கு நேர் எதிரானது இச்சையுணாச்சி பண்பாட்டுணர்ச்சி தொடர்ந்து இச்சையுணர்ச்சியினைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும். அதனை, முழுமையாகத் தடைசெய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாத போதிலும் தொடர்ந்து இச்சையுணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கும்.

இச்சை உணர்ச்சிக்கும் பண்பாட்டுணர்ச்சிக்கும் இடையே பாலமாக அமைவது தன் முனைப்பு ஆகும். இது பண்பாட்டுணர்ச்சியைக் (சமூக ஒழுங்கு, விதிமுறைகள்) காரணம் காட்டி இச்சையுணர்ச்சியைத் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு இச்சையுணர்ச்சியிலான இயல்பான, கட்டுப்பாடற்ற செயல்பாட்டைப் பண்பாட்டுணர்ச்சி மூர்க்கமாக எதிர்க்கும். இவ்விரண்டுக்கும் இடையே தன்முனைப்பு செயல்பட்டு இச்சையுணர்ச்சி அதன் முழு வீச்சோடும் பரிமாணத்தோடும் எழாமல் தடுக்கும்” (உஷா நம்பூதிரிபாடு சா.பிலவேந்திரன் கட்டுரையிலிருந்து, 2003),

சிக்மன் ஃபிராய்டு குறிப்பிடும் அமுக்கப்பட்ட உணர்வுகள் என்பது பாலியல் உணர்வுகளை மட்டும் குறிப்பதன்று. அது பண்பாட்டில் காணப்படும் எல்லா வகையான அமுக்கப்பட்ட உணர்வுகளையும் குறிக்கிறது என்கிறார். இதனையே நலங்கிள்ளி “காமயிச்சை என்பது வெறும் உடல்சார்ந்த பாலியல் தினவு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. இது முதன்மை நிலையில் மனம் சார்ந்த உணர்வு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என (1999-2000) குறிப்பிடுகிறார்.

அமுக்கப்பட்ட உணர்வுகள் எப்போதும் கனவுகளாக மட்டுமல்லாமல் “மாறுவேட வடிவிலேயோ, அரைகுறை மாறுவேட வடிவிலேயோ ஆசைகள் கனவாகலாம். அமுக்கப்பட்ட எண்ணங்கள் தணிக்கை செய்யப்பட்டுக் கனவாக வெளிப்படுகையில் அடையாளங்கண்டு கொள்ள இயலா வடிவில் வெளிப்படவதோடு மட்டுமன்றி பண்பாட்டிற்கு இசைவான வகையில் திட்டமிட்ட அமைப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்” என பிராய்டின் கருத்தைப் பிலவேந்திரன் எடுத்துரைக்கின்றார் (2003, எண்.22).

இக் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டுள்ள “கூனி கைகேயி ஆகிய இருவர்களுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் பண்பாட்டு அடிப்படையில அமுக்கப்பட்ட உணர்வு ஒன்று வெளிப்படும் விதத்தைக் காணலாம்.

இக்கதையின் மையப்பொருள் இராமன் முடிசூட்டப்படாமல் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். இந்நிகழ்விற்கான காரணம் இராமன் கூனியின் வளைந்த முதுகில் மண் உருண்டையால் அடித்ததாகும். தவறு செய்த இராமனைக் கூனி உடனடியாகத் தண்டித்திருக்கலாம். ஆனால், அவள் அவ்வாறு செய்யவில்லை. அவள் கொண்டிருந்த இந்த தண்டனை என்ற எண்ணத்தை மனதின் இச்சை உணர்ச்சி எனலாம். இவ்வாறு அவள் இராமனைத் தண்டிக்காமலிருந்ததிற்குக் காணரங்கள் பல உண்டு. அவன் அரசப் பரம்பரையைச் சார்ந்தவன். அரச பரம்பரையைச் சார்ந்த ஒருவரை அவரது தொழிலாளி தண்டித்தல் கூடாது என்பது பண்பாட்டு விதியாகும். இந்த பண்பாட்டு விதியைப் பண்பாட்டுணர்ச்சி எனலாம். இந்த பண்பாட்டு விதியின் அடிப்படையிலேயே கூனியின் தன்முனைப்புச் செயல்பட்டு அது, கூனி இராமனைத் தண்டிப்பதைத் தடுத்தது. ஆனால், இந்த உணர்வு கூனியின் மனதில் பதிந்துகிடந்தது. ஒருவரது அமுக்கப்பட்ட எண்ணம் பிற வழக்காறுகளின் வழியாக வெளிபப்டும் என்பது ஃபிராயிடியத் தத்துவத்தின் அடிப்படையாகும். அதன்படி கூனியின் மனதிலுள்ள இராமனைத் தண்டிக்க வேண்டும் என்ற இச்சை உணர்ச்சி அதற்கான நேரத்தை எதிர்பர்த்துக் கொண்டிருந்தது. அது இராமனின் முடிசூட்டு விழாவின்போது கைகேயி உடனான கருத்தாடலாக மாறியது. அதாவது, கூனி கைகேயியுடன் கலந்து பேசி அவளது எண்ணத்தை மாற்றியமைக்கிறாள். அப்போது கூனியின் தன்முனைப்பு குறைந்து இச்சை உணர்ச்சி செயல்படத் தூண்டுகிறது. இதன் விளைவே இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டதாகும். அதாவத, கூனியின் இச்சை உணர்ச்சி செயல்பாட்டை இக்கதையாடல் எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

எழுதிகச் சாங்கியம்

நன்னெறி உணர்த்தும் உவமைகள்

மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் அனுபவத்தை முன்னிறுத்தியே நடைபெறும். ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும் மனிதன் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே அனுபவிக்கின்றான். தன்னுடைய வாழ்நாளில் இன்பத்தை மட்டும் நுகரும் மனிதன் சில நேரங்களில் தீயவைக்கும் அடிமையாகிறான். அப்பொழுது அவனை திருத்த வேண்டியுள்ளது. அதற்காக எழுதப்பட்டதுதான் அறநூல்கள். அறநூல்கள் அறத்தை வலியுறுத்தி மனிதனை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல உதவுகின்றன. மனித சமுதாயம் நல்லன்புடன் வாழ வேண்டுமாயின் அங்கு சான்றோர்களும் அறநூல்களும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி நூலினை இவ்வாய்வுக்கட்டுரைக்கு எடுத்தாளப்பட்டுள்ளது.

            நன்னெறி வெண்பா நாற்பதும் அரிய நீதிக்கருத்துக்களைச் சொல்லியுள்ளன. அப்பாடல்களில் பொதிந்து கிடக்கின்ற உவமைநலனை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிவப்பிரகாச சுவாமிகள்

            காஞ்சிபுரம் வேளாளர் மரபினருக்குக் குருக்களாக இருந்த குமாரசாமி தேசிகர்க்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசர். இவருக்கு வேலையர், கருணையர் என்னும் இளைய சகோதரர்கள் இருவரும், ஞானாம்பிகை என்னும் தங்கையும் இருந்தனர். சிவப்பிரகாசர் இளம் வயதிலேயே தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கியதோடு கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு நிலையை மேற்கொண்டிருந்தார். தாமிரபரணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டார்.

            அண்ணாமலை ரெட்டியார் சிவப்பிரகாசருக்கு அளித்த முன்னூறு பவுனையும் ஆசிரியர் தம்பிரான் அவர்களுக்குக் காணிக்கையாக வைத்து உபசரித்தார். ஆனால் ஆசிரியரோ அவற்றை ஏற்காமல், ‘இது எனக்கு வேண்டியதில்லை. புலவர்களை இகழும் செருக்குடைய புலவர் ஒருவர் திருச்செந்தூரில் உள்ளார். அவரது செருக்கை அடக்கி, என்னை வந்து வணங்கச் செய்வதே நீ எனக்கு தரும் காணிக்கையாகும்’ என்றார் தம்பிரான். சுpவப்பிரகாசரும் அதற்கு இணங்க உடனே திருச்செந்தூர் சென்று முருகபெருமானைத் தரிசித்தார். கோவிலில் வலம் வருகையில் செருக்குடைய புலவர் எதிர்ப்பட்டார். அவரிடம், நாம் இருவரும் நீரோட்ட யமகம் (உதடு ஒட்டாமல் பாடப்படும் ஒரு வகை பாவகை) பாடுவோம். வுpரைவாகப் பாடி முடித்தவர்க்கு இயலாதவர் அடிமையாக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாடத்தொடங்கினார் சிவப்பிரகாசர். நீரோட்ட யமக அந்தாதியாக முருகக்கடவுள் மீது முப்பது  கட்டளைக் கலித்துறை பாடி முடித்துவிட்டார். அதுவரை ஒரு செய்யுள் கூட பாடாமல் விழித்துக்கொண்டிருந்த செருக்குடைய புலவர், நான் அடிமையானேன் எனக் கூறி சிவப்பிரகாசரை வணங்கினார். அவரை அழைத்து வந்து தம் ஆசிரியர் தம்பிரானிடம் அடிமை ஆக்கினார். ஆசிரியரும் சிவப்பிரகாசரைப் போற்றி வாழ்த்தினார்.

            சிவப்பிரகாச சுவாமிகள் நன்னெறி, நால்வர் நால்மணிமாலை, திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்கப்பரிபாஷை, சதமணிமாலை, வேதாந்த சூடாமணி, சிந்தாந்த சிகாமணி, பிரபுலிங்க லீலை, பழமலை அந்தாதி, பிட்சாடண நவமணி மாலை, கொச்சகக் கலிப்பா, சிவநாம மகிமை, இஷ்டலிங்க அபிஷேக மாலை, நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, சோணசைல மாலை முதலான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினோறாம் நூற்றாண்டு ஆகும். இவர் தம் முப்பத்திரண்டாம் வயதில் சிவபாதம் அடைந்தார்.

உவமை – விளக்கம்

            தண்டி உரையாசிரியர் உவமை என்ற சொல்லிற்கு உவமானம் என்றும் உவமேயம் என்றும் கூறுகிறார். ஆங்கிலத்தில் சிமிலி என்பர். தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை ஏதேனும் ஒரு வகையில் ஒப்பிட்டு காண்பது உவமை எனப்படும். “உவமை என்பது ஒரு கருத்தை விளக்குதல் இது ஒரு சிறந்த முறை”1 என கோதண்டபாணி பிள்ளை அவர்கள் கூறுகிறார். உவமைகள் இரு சொற்களைக் கொண்ட தொகைச்சொல்லாக அமையும். முதலில் நிற்கும் சொல் உவமையாகவும் அடுத்து நிற்கும் சொல் உவமிக்கப்படும் பொருளாகவும் கொள்ளப்படும். உவம உருபுகள் இன்றியும் உவமைப்பொருளை உணர்த்தும். கவிஞன் தான் காணும் பொருளுக்கு உவமையை வெளிப்படுத்த எண்ணுகிறான். அப்பொருளின் உயர்வைக் காட்டிட அதனினும் உயர்ந்த பொருளையே உவமையாகவும் சொல்லுகின்றான். உவமையானது பொருளை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். “தமிழ் இலக்கிய மரபைப் பொறுத்தவரையில் உவமை என்றால் உருவகம், உள்ளுறை, இறைச்சி என்பனவும் அடங்குகிறது”2 என்கிறார் ரா.சீனிவாசன். தொகை உவமம், விரி உவமம் என இருவகைப்படுத்தலாம். தொகை உவமம் என்பது மறைந்து வருவன. விரி உவமம் என்பது உவமை உருபில் உள்ள  பொதுத்தன்மையும் விரித்துக் கூறப்படுவது ஆகும்.

தொல்காப்பியத்தில் உவமைகள்

            தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் உவமை இயல் என்னும் பகுதியில் உவமையின் இலக்கணத்தைச் சுட்டியுள்ளார். உவமை என்பது பொருளின் தன்மையை விளக்கிச்செல்வது என்கிறார் தொல்காப்பியர்.

                                    வினைபயன் மெய்உரு என்ற நான்கே

                                    வகைபெற வந்த உவமைத் தோற்றம்” (தொல்.உவமயியல்.நூ.1)

            வினை, பயன், மெய், உரு ஆகியவைகள் பொருளின் தன்மையை எடுத்துக்கூறுகின்றன என்கிறார். வினை உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை தொழில் அடிப்படையில் அமைய வேண்டும். பயன் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நன்மை, தீமை போன்ற பயன்களின் அடிப்படையில் அமைய வேண்டும். மெய் உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை அளவு, வடிவு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். உரு உவமை என்பது உவமையிலும் பொருளிலும் அமையும் பொதுத்தன்மை நிறம், பண்பு போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். தண்டியலங்காரத்தில் உவமையைப் பற்றி,

                                    பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

                                    ஒன்றும் பலவும் பொருளோடு பொருள்புணர்ந்து

            ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டி.பொருளணியியல்.நூ.30)

            பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகாவும் பலவாகவும் வரும் பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமை ஆகும். தொல்காப்பியர் கூறிய வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கையும் தண்டியலங்கார ஆசிரியர் பண்பு, தொழில், பயன் என மூன்றில் அடக்கிக் கொண்டார். “உவம உருபுகள் பெயர், வினை, இடைச்சொற்கள் ஆகிய அனைத்துமாக வருகின்றன”3 என்கிறார் ரா.சீனிவாசன். தொல்காப்பியரின் கூற்றிக்கிணங்க நன்னெறியில் உவமை ஆராயப்படுகின்றன.

பசுவின் பாலை கறப்பது போல

            தனக்கு உதவி புரியாதவரிடம் ஒரு உதவி பெற விரும்பினால் கன்றைக்கொண்டு பசுவின் பாலை கறப்பது போல அவருக்கு வேண்டியவரை அவரிடம் அனுப்பி அந்த உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது நன்னெறிப்பாடல்.

                                    கன்றினால் கொள்ப கறந்து” (நன்னெறி.3)

            இங்கு கறந்து என்பது தொழிலைக் குறித்து வந்தமையால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலில் ஒருவருடைய மனதை அறிதல் பற்றியக் குறிப்பு வருவதால் குணம் தன்மையையுடைய உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மழையாகப் பொழிவது போல

            கடல்நீரை மேகம் கொண்டு சென்று மழையாகப் பொழிவது போல, பிறருக்கு உதாவாதவர்களுடைய பெருஞ்செல்வத்தை யார் எடுத்து அனுபவிக்pறாரோ அவர் தம்முடையதாகவே பாவிப்பார்.

                                    பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு” (நன்னெறி.4)

            கடல்நீர் ஆவியாகி மேகமாய் பரவி மழையாகப் பொழிந்து மக்களுக்குப் பயனை அளிக்கிறது. யாருக்கும் பயன்படாத செல்வமும் மக்களுக்குப் பயன்பட்டு இன்பத்தை அளிக்கிறது. இப்பாட்டில் பயன் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உமிநீங்கிப் பழமை போல்

            நெல்லின் உமி சிறிது நீங்கி, மறுபடியும் இணைந்தாலும் முளைக்கும் வலிமையை இழந்து விடும். அதுபோல, நெருங்கிய நண்பர்கள் இருவர் வேற்றுமையால் பிரிந்து மீண்டும் கூடிய போதிலும் அந்த நட்பானது முன்புபோல் நெருக்கமாக இருக்காது.

                                    நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்” (நன்னெறி.5)

            நெல்லில் இருந்து உமி நீங்கி இருப்பது தொழில் நிமித்தமாக அமைந்தது. தொழிலைச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நண்பர்களின் பிரிவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்களின் குண நலன்களைக் கூறிச்சென்றதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளது.

கண் இரண்டும் ஒன்றையே காண்பது போல

            இரண்டு கண்களும் சேர்ந்து ஒரு பொருளினைப் பார்ப்பது போல, அன்புள்ள கணவனும் மனைவியும் வேற்றுமை இன்றி நல்ல காரியத்தையே செய்வார்கள்.

                                    கண்இரண்டும் ஒன்றையே காண்” (நன்னெறி.6)

             உடலில் உள்ள பாகமான கண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொள்ளும் குணம் போல

            வெள்ளத்தைக் கரைபோட்டுத் தடுப்பது அரியதா? அல்லது கரையை உடைத்து விடுவது அரியதா? சீறி எழுகின்ற கோபத்தை அடக்கிக்கொள்ளும் குணமே அரியதாகும்.

                                    கொள்ளும் குணமே குணம் என்க –வெள்ளம்” (நன்னெறி.8)

            மனிதர்கள் கோபத்தைக் குறைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கோபமானது சில சூழ்நிலைகளில் மனிதனை அழித்துவிடக்கூடியது. அலைகடலில் எழுகின்ற வெள்ளத்தை விட கோபம் கொடியது என்கிறார் ஆசிரியர் சிவப்பிரகாசர். கோபம் என்கிற குணத்தை சொல்லுவதால் உரு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் இருளைப் போக்குவது போல்

            சந்திரன் தன்னுடைய களங்கத்தை நீக்கிக் கொள்ள நினையாமல் வானத்திலே நின்று உலகின் இருளைப் போக்குவது போல், மேன்மை மிக்கவர் தன் துன்பத்தைப் பெரியதாகக் கருதாமல் பிறருக்கு நேரிட்ட துன்பத்தை நீக்குவார்.

                                    நிறை இருளை நீக்கும் மேல் நின்று” (நன்னெறி.10)

                                    “கலையளவு நின்ற கதிர்” (நன்னெறி.13)

            சான்றோர்கள் தன்னுடைய துன்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பிறருக்காகவே வாழ்வர். நிலவைப் போல, தான் எவ்வளவுதான் தேய்ந்து போய் மீண்டும் புதியதாய் பிறந்தாலும் மக்களுக்கு வெளிச்சத்தைத் தருவதை நிறுத்துவதில்லை. நிலவின் வடிவத்தை சொன்னதால் மெய் உவமையும், சான்றோர்களின் குணத்தோடு மக்களுக்கு ஆற்றும் பயனைச் சொல்லியுள்ளதால் பயன் உவமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடல்நீர் உப்பங்கழியிலும் பாய்வது போல

            கடலானது தன்னை அடுத்துள்ள உப்பங்கழியிலும் சென்று பாய்வது போல, மென்மையானவர்கள் தம்மைச் சார்ந்தவர்கள் தாழ்ந்து இருப்பினும் தங்களைப் பெரிதாகக் கருதாமல் அவர்கள் இருக்குமிடம் சென்று அவர்களுடைய துன்பத்தை நீக்குவார்கள்.

                                    கழியினும் செல்லாதோ கடல்” (நன்னெறி.16)

            கடல் நீரானது உப்பங்கழிலும் சென்று பாய்ந்தது தொழிலைக் குறித்தது. அதனால் வினை உவமையும், மேன்மையானவர்கள் தாழ்ந்தவர்களுக்கு உதவி செய்வதால் பயன் உவமையும் வந்துள்ளது.

நெருப்பில் இட்ட நெய் போல

            முற்றிய நோயினால் வேதனையுறும் பிற அங்கங்களைப் பார்த்துக் கண்ணானது கலங்குவது போல, உயர் குணம் உடையோர் மற்றவர்களின் நோயைக் கண்டு தமக்கு வந்த நோய் எனக் கருதி நெருப்பில் இட்ட நெய் போல உருகுவர்.

            பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்” (நன்னெறி.20)

            மனிதனின் அங்கங்கள் மற்றும் கண் பற்றி கூறுவதால் மெய் உவமையும் சான்றோரின் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

ஆகாயகங்கையின் பெருக்கு அடங்கி விடுவது போல

            சிவபெருமானின் சடாமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் பெருக்கு அடங்கிவிடுவது போல, எழுத்தின் உண்மைப்பொருளை உணராதவர்களின் கல்வி அறிவானது உண்மைப் பொருளை அறிந்தவர் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

                        ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்” (நன்னெறி.21)

            ஆகாயகங்கையின் பெருக்கு, கல்வியின் அறிவு என்கிற தொழில் சம்பந்தமான கருத்துக்களைச் சொல்லி செல்வதால் வினை உவமை வந்துள்ளது.

எறும்பு ஊற கல் தேய்வது போல

            எறும்புகள் ஊர்வதனால் கல் தேய்வது போல பெண்களுடன் ஆண்கள் பேசிப்பழகி வந்தாலும்கூட தவத்தினால் பெற்ற மன உறுதியானது நாளடைவில் தளர்ந்து விடும்.

                                    எறும்பு ஊரக் கல் குழியுமே” (நன்னெறி.23)

            தவத்தினால் பெற்ற மனஉறுதி என்னும் செயலை வலியுறுத்திச் சொல்லுவதனால் வினை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேப்பம் பழம் போல

            சேழிப்பான சோலையில் வண்டுகள் மலர்ப்படுக்கையை விரும்பிச் செல்லும். காக்கைகளோ வேப்பம் பழத்தைத் தேடி ஓடுவது போல், ஒருவரிடம் நற்குணங்கள் இருந்த போதிலும் அற்பர்கள் குற்றங்களையே எடுத்துக் கூறிக்கொண்டிருப்பார்கள்.

            சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றே” (நன்னெறி.24)

            காக்கையின் தொழில் வேப்பம் பழத்தை நாடிச்செல்வது. அதனால் வினை உவமையும் குணங்கள், குற்றங்கள் பற்றி உரைப்பதால் உரு உவமையும் சொல்லப்பட்டுள்ளன.

நன்னெறியில் பிற உவமைகள்

            நன்னெறியில் இன்னும் சில உவமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவைகள்,

  • தெப்பத்தில் வைக்கப்பட்ட கடினமான பொருளும் எளிதாவது போல – கடினம், எளிமை என்கிற அளவினைச் சுட்டியுள்ளதால் மெய் உவமை பயின்று வந்துள்ளது. (நன்னெறி.25)
  • கடினமான தின்பண்டங்களை பற்கள் மென்று நாவுக்கு சுவை அளிப்பது போல – சுவை என்கிற பண்பை உணர்த்துவதால் உரு உவமை வந்துள்ளது. (நன்னெறி.27)
  • வானத்தில் உள்ள மான், பூமியில் உள்ள புலியைக் கண்ட பயப்படாதது போல – மான், புலி என்கிற வடிவத்தைச் சொல்வதால் மெய் உவமையும், பயம்கொள்ளாமை என்பது தொழிலைக் குறித்து நின்றதால் வினை உவமையும் பெற்று வந்துள்ளன.  (நன்னெறி.29)
  • கொம்பின் அடியை கை தடுத்து ஏற்றுக்கொள்வது போல – உடல் உறுப்பின் கை என வந்துள்ளதால் மெய் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. (நன்னெறி.31)
  • கதவுக்கு தாழ்ப்பாள் இல்லாதது போல – கதவு என்கிற வடிவத்தைப் பற்றிக் கூறுவதால் மெய் உவமை வந்துள்ளது. (நன்னெறி.32)
  • பூவானது மலர்ந்த அன்றே மணம் தந்து பின் கெடுவது போல – பூ, மணம், எனப் பண்பை உணர்த்துவதால் உரு உவமையும், கெடுதல் என்பதைக் கொண்டு தொழில் உவமையும் பயின்று வந்துள்ளன. (நன்னெறி.39)
  • ஆபரணங்கள் அணிந்த மன்னர், அணியாத அறிஞரைப் போல – மன்னர், அறிஞர் ஆகிய இருவரை ஒப்புமைப் படுத்தியதால் மெய் உவமை சொல்லப்பட்டுள்ளது. (நன்னெறி.40)

முடிவுரை

            சுவப்பிரகாச சுவாமிகள் அருளிய வெண்பாக்கள் அனைத்தும் இனிமையானவைகள். படிக்கத் தூண்டும் அமுதசுரபி. ஓவ்வொரு பாடலிலும் அழகான கருத்துக்களைப் பதித்து எடுத்தியம்பியுள்ளார். அவர்தம் பாடல்களின் அதிகப்படியான உவமைகள் கையாண்டிருக்கிறார். உவமைகள் கூறாத கவிஞன் நல்லதொரு இலக்கியத்தை படைக்க முடியாது என்பார்கள். தொல்காப்பியரின் வழிநின்று வினை, பயன், மெய், உரு என்கிற நான்கின் அடிப்படையில் உவமைகள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளேன். ஒருசிலப்பாடல்களில் இரண்டு வகையான உவமைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான உவமைப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தை வளர்க்கும்.

சான்றெண் விளக்கம்

1.முதற்குறள் உவமை, கு.கோதண்டபாணி பிள்ளை, பாரி நிலையம், சென்னை- 1, முதற்பதிப்பு-1956,ப.5

2.சங்க இலக்கியத்தில் உவமைகள், டாக்டர் ரா.சீனிவாசன், அணியகம், சென்னை -30, ப.9

3.மேலது.ப.55

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

எப்போதும் துணைநிற்பது நம்பிக்கை

வாழ்க்கையில் முன்னேற உதவும் கை நம்பிக்கை. மனிதனுக்கு எத்தனை உறவுகள் கைக்கொடுத்தாலும், அவையெல்லாம் உடன்நிற்கும். ஆனால் நம்பிக்கை மட்டுமே இறக்கும்வரை துணைநிற்கும். இலக்கை அடைவதற்கு முதலில் எண்ணம் உதிக்க வேண்டும். அடிக்கடி தோன்றினால் அது ஆசையாக மாறும். ஆசை மீண்டும் மீண்டும் தோன்றினால் அது திட்டமாக மாறுகிறது. திட்டம் கனவாக மாறி அதுவே செயலாக மாறினால் இவை இலக்கை அடைவதற்கான ஏணிப்படிகள் என்று கூறலாம்.

      உழைத்தால் மட்டுமே ஒன்றைச் சாதனையாக மாற்ற முடியும். சிலருக்குச் செயல்களைச் செய்வதில் அச்சம் ஏற்படும். அந்தப் பயமே அவர்களுக்குத் தடையாக இருக்கும். கோடிக்கணக்காகச் செலவுசெய்து கப்பலைக் கட்டுவது கடலில் செல்வதற்காகவே. அது மூழ்கிவிடுமோ என்று பயந்து கொண்டே கரையில் வைத்திருந்தால் எப்படி சாத்தியமாகும். கடலில் புயல் போன்றவற்றால் கப்பலைக் காக்க நங்கூரம் இட்டு வைத்துக்கொள்ளலாமே தவிர பயம் இருக்கக்கூடாது. இருந்தால் இலக்கை நோக்கி ஒரு அடியைக்கூட எடுத்து வைக்க இயலாது.

நீங்கள் இருக்கிறீர்களா? வாழ்கிறீர்களா?

           நீங்கள் சமுதாயத்தில் பார்த்தீர்களேயானால் பலர் விலங்குகளைப் போல உயிருடன் இருப்பார்கள். சிலர்மட்டுமே வாழ்வார்கள். உயிருடன் இருப்பது என்றால் மீன் பிடிப்பவர்கள் கடலில் செல்லும்போது பாய்மரக்கப்பலில் பாய் ஒன்றை விரித்துக் கட்டி விடுவார்கள், அது காற்று எந்தத் திசைநோக்கி தள்ளுகிறதோ அந்தத் திசையில் காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல செல்லும். மீனவர்களும் எந்தவித சலனமும் இல்லாமல் மீன்களைப் பிடித்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அவ்வாறே பலர் வாழ்க்கை செல்லும் திசையில் தானும் சென்று முடிந்ததைச் சம்பாதித்து உண்டுஉறங்கி காலத்தையும் முடித்துவிடுவர். இதையே “இருப்பது” என்று கூறப்படுகிறது. வாழ்வது என்பது இலக்கை ஏற்படுத்திக்கொண்டு அடைவதற்கு ஏற்படும் தடைகளை நீக்கி எதிர் நீச்சலிட்டு தான் நினைப்பதைப் போல சமுதாயத்தை மாற்றி ஆக்கத்தை புரிபவர்களே வாழ்பவர்கள் என்று கருதப்படுவார்கள். எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழவேண்டுமே தவிர ஏதோ வாழ்க்கை போனபோக்கில் தானும்சென்று பிறவியை வீணாக்கக்கூடாது.

தன்னம்பிக்கை வேண்டும்

        நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மைதான் செய்கிறீர்கள் என்றால் அந்த நற்செயல் வெற்றி அடையும். இது தின்னமாகும். வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை வேண்டும். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது வரும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இன்று இரவு மனிதர்களால் உறங்கச் செல்ல முடியும். நாளை என்பது வராமலும் போகலாம். ஆனால் மனதில் காலையில் இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கும். அதைப்போலவே நீங்கள் கொண்ட இலட்சியத்திலும் நம்பிக்கை வேண்டும்.

          ஒரு ஊரில் பாட்டி ஒருவர் தன்பேத்தியுடன் வாழ்ந்து வந்தார். அப்போது எட்டுவயது பேத்திக்குக் கதை ஒன்று கூறினார். “ஒரு நாட்டில் இராஜ்யம் இழந்த ராஜா மகன் இருந்தான். அவனுடைய அம்மா ராணி வீடுவீடாகச் சென்று உழைத்த பணத்தை சந்தையில் கொடுத்து விட்டு பூனைக்குட்டியைக் கொள்முதல் செய்தான். கோபம் கொண்ட ராணி தன் தாய்வீடு போகத்  தனியாக விடப்பட்டான். பேத்தி கேள்வி கேட்டாள், “பாட்டி இப்படிகூடவா ஒருவன் இருப்பான்” கதை தடைபட்டது. அந்த எட்டுவயது பிஞ்சு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. பல வருடங்கள் சென்று தானும் வாழ்க்கை என்ற சந்தையில் எல்லாவற்றையும் இழந்து விட்டு, “இப்ப தெரியுது பாட்டி அப்படி ஒரு ராஜகுமாரன் இருந்திருப்பான்” என்றாள் பேத்தி. கதை தொடர்ந்தது “சொன்னா நம்பனும் பூனைக்குட்டி மாயமோதிரம் தர அசடு ராஜாவானான்” என்று கதையை முடித்தாள் பாட்டி. அது மாயமோதிரம் அல்ல. தனக்கான நம்பிக்கை என்று மனதில் நினைத்தாள் அப்பெண். மீண்டும் எழுந்து விடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் போதும் இழந்தவற்றையெல்லாம் பெற்றுவிடலாம்.

கற்றுக்கொள்ளும் மனோபாவம்

        இந்த உலகில் மற்றவரைப் போல பிறந்து வளர்ந்து இறக்காமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மிகவும் துணையாக நிற்பது நம்பிக்கை ஆகும். ஒருவருக்கு தன்மீது நம்பிக்கை வரவில்லை என்றால் அவருக்கு பல இன்னல்களும் துன்பங்களும் ஏற்பட்டு அவநம்பிக்கையை உண்டாக்கி இருக்கும். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களில் எழுபது சதவிகிதம் உங்களால் ஏற்படுபவையே. மீதி முப்பது சதவிகிதம் மற்றவர்களால் ஏற்படுகின்றன. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவரவர் செயல்பாடுகளே அவர்களுக்குத் துன்பம் தருகின்றன. தான் என்ற அகந்தையும் ஒரு காரணமாகலாம். இந்தக் குணம் கொண்டவர்களால் எதையும் சரிவர கற்றுக்கொள்ள இயலாது. கற்றுக்கொண்டால்தான் ஒரு செயலை செவ்வனே செய்ய முடியும். தனக்கு தெரியாதவற்றை மற்றவரிடம் கற்றுக்கொள்ளும் பணிவான தன்மை வேண்டும். அவ்வாறு அல்லாமல் இவனிடம் நான் கற்றுக்கொள்வதா? என்ற ஆணவம் இருந்தால் அது எதையும் கற்றுக்கொள்ள விடாது. தலையில் கனம் ஏறி தீயவற்றைச் செய்யத் தூண்டும். இந்தச் சூழலில் இலக்கை அடைவது என்பது ஒருபோதும் நடவாது. எனவே தான் என்ற எண்ணத்தை நீக்க வேண்டும். முதலில் உங்களை நீங்கள் மதிக்க வேண்டும். அவ்வாறு மதிப்பு வரவேண்டும் என்றால் பல நல்ல செயல்களை உங்களுக்கோ அல்லது சேர்ந்த மற்றவர்களுக்கோ செய்திருக்க வேண்டும். ஒருவர் தன்னை மதிக்க தெரிந்துகொண்டால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் நன்மைகளையே விளைவிக்கும். தன்னை மதிக்க தெரிந்த ஒருவரால் தீமைகளைச் செய்ய முடியாது. இவ்வாறு உங்களை மாற்றிக்கொண்டால் உங்கள் மீது நம்பிக்கை தானாகவே பிறக்கும். தடைகள் வந்தாலும் இடையில் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

           தேசத்தந்தை மகாத்மா தமது அகிம்சை போராட்டத்தையும் சத்தியாக்கிரகத்தையும் சிலகாலம் ஒத்திவைக்க நேரிட்டது. ஆனால் தகுந்தகாலம் வந்ததும் மீண்டும் தொடரப்பட்டு வெற்றி பெற்றது. அது மகாத்மா காந்தியின் நம்பிக்கை. எத்தனைமுறை கீழே விழுந்தாலும் எழக்கூடிய நம்பிக்கை. இதுவே சாதிப்பதற்கான தன்னம்பிக்கை.

நம்பிக்கை தரும் ஆற்றல்

        அம்மன் கோவிலில் நடக்கும் விழாக்களைப் பார்த்திருப்பீர்கள் இறுதி நாளன்று பூ மிதித்தல் என்ற ஒன்று நடத்துவார்கள். பூ மிதித்தல் என்பது பூவை மிதிப்பது அல்ல. அது நெருப்பு அம்மன் கோவிலில் முன்பாகச் சுமார் இரண்டு அடி ஆழத்தில் ஐந்து மீட்டர் தூரத்தில் குழியைத் தோண்டுவார்கள், அதில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு மரக்கட்டைகளையும் விறகுகளையும் போட்டு எரிப்பார்கள்.

அது எரிந்து நெருப்பு கனகன என்று அனல் பறக்கும். மாலை வரை அது கனென்று கொண்டே இருக்கும். மாலை ஐந்து மணி அளவில் பெண்களும் ஆண்களும் குறிப்பிட்ட நாட்களில் விரதமிருந்து தண்ணீர் ஊற்றிகொண்டு அந்த நெருப்பில் நடப்பார்கள். இது எப்படி சாத்தியம்? ஸ்டவ் பற்ற வைக்கும் போதும் ஊதுபத்தி கொழுத்தும் போதும் சிறிது  தீப்பட்டால் கூட சூட்டு கொப்புளங்கள் போடவைக்கும். எவ்வாறு? அதன் மீது நடக்கும் போது நெருப்பு சுடவில்லை? காரணம் நம்பிக்கை. அம்மனுக்காகத் தீ மிதிக்கின்றோம் அது ஒன்றும் சுடாது என்று அந்த மக்களுக்கு மனதில் உள்ள நம்பிக்கை. கவனியுங்கள் இது எவ்வளவு பெரிய அசைக்க முடியாத நம்பிக்கை. அறிவியல் ஆய்வுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஒரு மனிதனின் நம்பிக்கை என்பது காட்டையும் நாட்டையும் எரிக்கும். நெருப்பால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வாறு இருக்கும் போது உங்களின் நம்பிக்கை உறுதியாக இருந்தால் மற்ற தடைகள் எல்லாம் தவிடுபொடி ஆகாதா? சிந்தித்து பாருங்கள்.

விடா முயற்சி

           தன்கையே தனக்குதவி என்பதை விட நம்பிக்கையே தனக்கு துணை என்று கூறலாம். நீங்கள்தான் என்ற அகந்தையை நீக்கி பணிவான மனநிலை கொண்டு மற்றவர்களிடம் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு சாதிக்க ஒரு இலக்கை ஏற்படுத்தி அதனை அடைய பல போராட்டங்களை எதிர் கொண்டு பொறுமையைக் கடைபிடித்து உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் வானமும் தொட்டுவிடும் தூரம்தான்.

ஹோண்டா பைக் பார்த்திருப்பீர்கள் அதை உருவாக்கியவர் ஹோண்டா என்பவர் ஆவார். அவருக்கு சிறு வயதிலேயே மோட்டார் இஞ்சினைச் சிறிது மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு பிறகு அவர் அந்தச் சூழ்நிலையை அடைந்ததும், பணத்தைச் செலவுசெய்து இஞ்சினை மாற்றி ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால் யாரும் அவரை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவரின் பேச்சைக்கூட யாரும் செவிமடுக்கவில்லை. இவரும் சலைக்காமல் நம்பிக்கையுடன் பலமாதங்கள் நடந்தார். இறுதியாக ஒரு கம்பெனியில் பார்க்கலாம் என்று கூறினார்கள். பின்னர் அவ்செயல்பாட்டைப் பயன்படுத்தி பார்ப்பதற்குச் சில மாதங்கள் ஓடின. ஒரு கம்பெனி இவரின் இஞ்சினுக்குப் பச்சைக்கொடி காட்டியது. உடனே கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அந்த இஞ்சினைத் தயாரிக்கிறார். பெருமளவில் பொருள் இழப்பு ஏற்பட்டு மூடப்பட்டது. வேறு ஊருக்கு சென்று வீடுவாசல் என்று எல்லாவற்றையும் விற்று மீண்டும் கம்பெனியைத் தொடங்குகிறார். சில ஆண்டுகள் கடந்தன. தீ விபத்து ஏற்பட்டு கம்பெனி முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. ஆனாலும் அவர் மனம் தளராமல் நம்பிக்கையுடன் சில ஆண்டுகளில் மீண்டும் கம்பெனி ஆரம்பித்து நடத்தி வெற்றிபெற்றார் ஹோண்டா. எனவேதான் உலகத்திற்கு ஹோண்டா பைக் கிடைத்தது. இது விடா முயற்சி.

பதறிய நாக்கினால் நட்பு கெடும். விடாமுயற்சியால் தாழ்மை கெட்டு மேன்மையுறும்.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

விஜய் வித்யாலாயா கல்லூரி, தர்மபுரி.

முள் செடி (விஷ முள்)- நிமிடக்கதை

நான் சின்னவயதில் இருக்கும்போது ஒரு விஷ முள் செடிகூட தென்படவில்லை. ஆனால், இப்போது எல்லா இடத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டது ஏரியில் இச்செடி வானுயர வளர்ந்து ஏரியின் அழகை கெடுத்துவிட்டது.

                சராசரி ஒரு செடிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டால் இந்தச் செடிக்கு மட்டும் இருபது லிட்டர் தண்ணிர் தேவைப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டு எங்குமே வறட்சி காணப்படுகிறது. மழையும் குறைந்துவிட்டது. எல்லோருடைய வீட்டிலும் எரிவாயு இருப்பதால் அடுப்பெறிக்க விறகு வெட்டுவதில்லை.

                நான் அரசாங்க அதிகாரிகளிடம் பேசினேன். அதை, அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நியாயவிலை கடையில் உள்ள தகவல் பலகையில் செய்தி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அது, ஏரியில் இருக்கின்ற முள்செடிகளை வீட்டிற்கு ஐந்து செடிகள் வேரோடு பிடுங்கினால் நியாயவிலைக் கடையில் ஒரு அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு மா, பலா, வாழைக்கன்றும் அதனுடன், ஒரு தென்னங்கன்றும் கொடுக்கப்படும் என்றும், எரிவாயு இருப்பு இல்லாததனால் இரண்டு மாதம் வழங்கப்படமாட்டாது என்றும் செய்தி இருந்தது. இந்தச் செய்தி ஊர் முழுக்கக் காட்டுத் தீப்போல் பரவியது.

                உடனே ஏரியில் கத்தி, கடப்பாரை, மண்வெட்டியோடு ஊர் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ஏரியைச் சுத்தப்படுத்திவிட்டனர். கொடுத்தக் கன்றுக்கு மழை வரும் வரை வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு ஐந்து குடம் தண்ணிர், லாரியில் கொண்டுவந்து தரப்பட்டது.

                இப்போது மரங்கள் வளர்ந்து பலன் தருகின்றன. மழை தவறாமல் பெய்கின்றது. விவசாயம் நல்லபடியாக நடக்கின்றது. ஊரைப் பார்த்தால் நந்தவனம்போல் காட்சியளிக்கிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

மறக்க முடியுமா (சிறுகதை)

நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

தமிழ்த்துறை,

ஓசூர் – 635 130

9952779278

விடுதலைப் பண்ணையம்

கொங்குப் பகுதிகளில் வழக்கில் உள்ள நிலமேலாண்மை முறைகளில் விடுதலைப் பண்ணையம் எனப்படும் வாரத்திற்கு விடுதல் குறித்து சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் சேகரித்த தரவுகளைக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

அதிக அளவு நிலம் வைத்திருக்கும் ஒரு சில நில உரிமையாளர்கள் ஆட்கள் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, நிர்வாகம் செய்ய இயலாமை போன்ற காரணங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படுவதுண்டு. இத்தகைய சூழலில் விவசாயம் செய்யத் தெரிந்தவரிடம் தன்னுடைய நிலத்தைப் பயிர் செய்வதற்காக அனுமதி அளிக்கின்றனர். அவ்வாறு அனுமதியளிக்கும்போது குத்தகைக்கு விடுதல், போகியத்திற்கு விடுதல், வாரத்திற்கு விடுதல் போன்ற ஒப்பந்த முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

குத்தகை முறை என்பது கால அளவினை அடிப்படையாகக் கொண்டு பயிர் செய்வதற்காக அனுமதித்தல் ஆகும். இம்முறையில் குறைந்தது மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை நிலத்தை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக் காலம் முடியும் வரை இலாபம் ஏற்பட்டாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் குத்தகைத் தொகையினை வருடா வருடம் கொடுத்து விடவேண்டும். விவசாயி தனது நிலத்தின் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட அளவுத் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு விவசாயம் செய்ய அனுமதிப்பதைப் “போகியத்திற்கு விடுதல்” என்கின்றனர். முன்பணத்தைத் திருப்பித் தரும் வரை நிலத்தில் பயிர் செய்கின்றார். போகியத்திற்காக வாங்கிய பணத்திற்கு விவசாயி வட்டி கொடுப்பதில்லை.

நில உரிமையாளர் ஒரு பருவ காலத்திற்கு மட்டும் தன் நிலத்தை விவசாயம் செய்யத் தெரிந்தவர்களிடம் விடுகின்றார். இவ்வாறு விடுவதை “வாரத்திற்கு விடுதல்” என்கின்றனர். இதை “விடுதலைப் பண்ணையம்” என்றும் கூறுகின்றனர்.

தானியம். அதனை பயிர்செய்தால் பூமி குளிர்ச்சி அடையும் என்பது பொள் ளாச்சி மக்களின் நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. சிறந்த நிலமேலாண்மை ஆகும். நிலத்தின் தரம் கெட்டுவிடாமல் இருக்க கொங்கு மக்கள் பயிர்ச் சுழற்றி முறையைக் கடைப்பிடித்தனர். தீர்வளம் குறைந்த மேட்டு நிலங்களில் கம்பு, ராகி, சோளம், தட்டை, பாசிப்பயிறு போன்ற தானிய வகைகளை ஒன்றைமாற்றி ஒன்று எனப்பயிரிட்டு நிலத்தின் சத்தைச் சமன் செய்து வந்துள்ளனர். வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களைப் பயிர்செய்யும் பொழுது என்று நட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு வாழையின் இடையே வெங்காயம், தட்டை போன்ற குறைந்த கால பயிர்களையும் பயிர் செய்து வந்துள்ளனர்.

நில மேலாண்மை

வைகாசி மாதம் பூமியின் மேல் பகுதி மட்டுமல்லாது அடிப் பகுதியும் சூடாக இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் பூமியின் அடியில் ஈரப்பதம் இருக்கும். நிலத்தை நெல் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக ஆக்கப் பத்து உழவு ஓட்ட வேண்டும். பிறவகைத் தானியங்களை விதைக்க நான்கு முதல் ஆறு உழவு போதும். ‘அதிர ஓடினால் முதிர விளையும்’ என்பது கொங்கு வட்டாரப் பழமொழி. நிலம் அதிரும்படியாக மாடுகளை ஓட விட்டால், தானியங்கள் நன்கு முதிர்ந்து விளையும் என்பது இதன் பொருள்.

அதாவது நெல்விளையும் வயல்களில் விதைப்பதற்கு முன்பாக 12 நாட்கள் குளம்போல் நீரைத்தேக்கி மண்ணை நன்றாக வறவிட்டு விடு வார்கள். தேக்கிய நீரில் எருக்கஞ் செடிகளையும் ஆமணக்குச் செடிகளையும் போடுவார்கள். நீரில் ஊறிய அச்செடிகள் அழுகும். ஆறு நாட்களுக்குப் பிறகு ஊறிய அக்களத்தில் பத்து இருபது மாடுகளை விரட்டி விரட்டி ஓட விடுவார்கள். காளை மாடுகளை இவ்வாறு ஓடவிடும் பொழுது அச்சத்தால் அம்மாடுகள் சிறுநீரையும் சாணத்தையும் கழித்துக்கொண்டே ஓடும். குளத்தில் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த எருக்கள் மற்றும் ஆமணக்குச் செடிகளின் மீது மாடுகளின் கழிவுகளும் விழுந்து, மாடுகளின் கால்களில் மிதிபட்டு மண் மிருதுவாகி உரங்களும் அதனுடன் நன்கு கலந்துவிடும்.

நீர் வற்றத் தொடங்கும் பொழுது ஏறு பூட்டி உழ ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே நன்கு மண்ணோடு கலந்துவிட்ட செடிகளும், கழிவுகளும் உழத் தொடங்கியதும் மேல்மண் அடியில் சென்று, அடிமண் மேலே வரும். இப்படிச் செய்வதால் நிலம் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்துக் கொள்கிறது. பத்து உழவு ஓட்டினால்தான் நிலம் பூ போன்று மென்மையாக ஆகும்.

நெல்வயல் எப்பொழுதும் கால் வைத்தால் புதைந்து போகக் கூடிய அளவிற்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாற்றை மாற்றி நடும்பொழுது விரலால் நிலத்தைக் குத்தி அந்த ஓட்டையில் நான்கு ஐந்து நெல் நாற்றுகளை நடமுடியும். நாற்று உழுது உழுது மென்மையாகச் செய்கிறார்கள்.

விதைப்பிற்காக உழுது நிலத்தைச் சமன்செய்யப் பரம்புப்பலகை என்னும் பலகையைப் படுக்கை வாக்கில் நிறுத்தி அதன் இரு ஓரங்களிலும் இரு இரும்பு வளையங்களை அமைத்து அந்த வளையத்தைக் கயிற்றின் ஒரு முளையுடன் இணைத்து மறுமுனையை மாட்டின் நுகத்துடன் இணைத்து விடுவார்கள். அந்தப் பரம்புப்பலகையின் மேல் ஏறி ஒருவர் நின்றுகொள்ள மாடு அந்தப்பலகையை நிலம் முழுவதும் இழுத்துச்செல்லும் அப் பொழுது நிலம் சமம் ஆகும்.

உரம் போடும் முறை

உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு என்ற நிலமேலாண்மையில், உழுது பயிரிட்ட நிலத்திற்கு ஏற்ற உரத்தை இடுவது மிக அவசியம். நிலத்திற்கு உரமாக ஆட்டுப்புளுக்கை, மாட்டுச்சாணம், எருக்கஞ்செடி, ஆமணக்குச்செடி, அடுப்புச்சாம்பல், குப்பைமண் ஆகியவற்றையே பயன்படுத்தியுள்ளனர். செடிகளில் பூச்சி விழுந்தால் கோமியத்தையோ, சூளைச் சாம்பலையோ செடிகளின் மீது தெளித்தும், போட்டும் அவற்றை அழித்துள்ளனர். நிலத்திற்கு உரம் போடப் பட்டிபோடுதல் என்ற முறையைக் கையாண்டுள்ளனர்.

அதாவது ஐம்பது முதல் நூறு ஈடுகளை விதைப்பிற்கு முன்பாக நிலத்தில் பரம்புப்பட்டி அமைத்து இரவு முழுவதும் விட்டுவிடுவார்கள். ஆட்டுப்புழுக்கையும் சிறுநீரும் நிலத்திற்கு உரமாகும். ஆட்டைப் போன்றே மாடுகளையும் பட்டி போடுவார்கள். நிலத்தின் அள வைப் பொறுத்துப் பட்டி போடுதல் மாதக்கணக்கில் நீடிக்கும் இவ்வாறு நிலத்தின் பயனைப் பல தலைமுறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் இயற்கை உரங்களை இட்டுப் பாதுகாத்து வந்தனர்.

 முப்பது வருடங்களுக்கு முன்புவரை நெல் வயல்களுக்குப் பன்றியின் கழிவுகளை இடும் வழக்கம் இப்பகுதியில் இருந்துள்ளது. இரசாயன உரங்களின் வருகைக்குப் பின்பும் கூட இப்பகுதி மக்கள் நிலத்திற்கு இயற்கை உரங்களையே அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

நினைவுகூறல்

மாடுகளை ஓடவிட்டு நிலத்தைப் பக்குவப்படுத்தியதன் அடையாளமாகவும் பட்டி அமைத்து உரம்போட்டதன் அடையாள மாகவும் இன்றும் மாட்டுப்பொங்கல் அன்று பட்டி நோம்பி கொண்டாடப் படுகிறது. பட்டி நோம்பி அன்று அவரவர் தோட்டத்தின் மையப்பகுதியில் மூங்கில் பிளாச்சி கரும்பு, வாழை, மா இலை, முக்கத்தான் கொடி போன்ற வற்றால் பட்டி அமைக்கின்றனர். அந்தப்பட்டிக்குள் ஐந்து பானைகளை வைத்துப் பொங்கல் வைத்து அதற்கு முன்பாகச் சிறுகுழியை வெட்டி அதில் மாட்டின் சாணம் கரைத்த நீரை ஊற்றுகின்றனர். பொங்கல் பொங்கியதும். அந்தக் குழிக்குள் மாட்டை விரட்டி விட்டுப் பட்டியைச் சுற்றிவரச் செய்கின்றனர்.

தற்பொழுது உடல் உழைப்பிற்குப் போதிய வலிமையின்மை காரணமாகவும் நீர்ப் பற்றாக்குறை காரணமாகவும் பொள்ளாச்சி வட்டாரத்தின் பெரும் பகுதி தோப்புகளாகவும் மாறிவிட்டன. நெல்வயல் களில் காட்டி வந்த நிலமேலாண்மையை இப்பொழுது தென்னங் கன்றுகளை நடுவதில் காட்டுகின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நிலத்தை ஒரு தாய் பிள்ளையைப் பராமரிப்பது போல் பராமரித்து வந்தார்கள். எந்தப் பட்டத்தில் எதை விதைக்க வேண்டும் விதைக்கும் விதைக்கு ஏற்ப எத்தனை முறை உழ வேண்டும் என்பதில் மிகுந்த அனுபவம் உடையவர் களாக இருந்தனர், நிலம் உழுதிருப்பதைப் பார்த்தே இந்நிலத்தில் விளையும் தானியம் எத்தகையது என்பதை முடிவு செய்கின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நில மேலாண்மையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

எழுதிகச் சாங்கியம்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல், பெய, நூற்பா ]) என்பார் தொல்காப்பியர். அதே போன்று மனித இனம் நிகழ்த்தும் எல்லாச்சடங்களும் பண்பாட்டுப்பொருள் குறித்தனவையாகும் ‘சடங்கு’ என்பது குறிப்பிட்ட இடத்தில் (களம்) குறிப்பிட்டகாலத்தில் எவரைக் கொண்டு எவருடன் சேர்ந்து செய்ய வேண்டும் என நனவுநிலையில் (Con scious) நிகழ்த்தப்படுவதாகும் என்கிறார் அலெக்சாண்டர் (1978, 1982), “சடங்குகள் சில குழல்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக இவை கூட்டுத்தன்மை வாய்ந்தவை (Collective) சமூகம் சார்ந்தவை (Social) ஆகும்” (பக்தவத்சலபாரதி, டிசம்பர் 2002).

கொங்கு நாடு மலைகளினாலும் ஆறுகளினாலும் சூழப்பட்ட நிலப்பகுதியாகும் இப்பகுதியில் வேளாளர், கைக்கோளர், வன்னியா, நாவிதர், ஏகாலி1, ஆசாரி, குயவர், சக்கிலியர் போன்ற பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் கொங்கு நாட்டுக் கவுண்டர்கள். இவர்களது முதன்மைத்தொழில் வேளாண்மை ஆகும். இவர்கள் நடத்தும் சாங்கியங்களில் ஒன்று ‘எழுதிகச் சாங்கியம்’ ஆகும்.2 இது சுமங்கலிப் பெண்ணிற்குச் செய்யப்படும் ஒரு சடங்காகும். அதாவது சுமங்கலிப் பெண்ணினுடைய குழந்தையின் திருமணத்திற்கு முன் இச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது.

எழுதிகம் பெயர்க்காரணம்

‘எழுதிங்கள்’ என்ற சொல்லின் திரிபு ‘எழுதிகம்’ எனலாம் ஏழு + திங்கள் = எழுதிங்கள் ஆகும். ‘ஏழு’ என்பது எண்ணையும் ‘திங்கள்’ என்பது மாதத்தையும் குறிக்கிறது. இச்சாங்கியம் ஏழு மாதம் விரதம் இருந்து செய்வதினால் ‘எழுதிங்கள் சாங்கியம்’ எனப்பெயர் பெற்றது எனலாம். தற்போது பௌர்ணமி நாளன்று மட்டும் விரதமிருந்து எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துகின்றனர். எழுதிகம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரதம் இருப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.

எழுதிகச் சாங்கியம் நிகழ்த்துபவர்கள்

புடவைக்காரர்3, சாங்கியக்காரம்மாள்4 ஆகிய இருவரும் சாங்கியம் கொங்கு நாட்டுப்புறவியல் செய்ய தகுதிப் பெற்றவர்கள் ஒவ்வொருபிரிவிலும் அந்தப்பிரிவினரே சாங்கியம் செய்கின்றனர். இச்சாங்கிய நிகழ்த்துதலில் நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோரும் கவுண்டர்களின் பங்கேற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சாங்கியப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாவிதருக்கு ‘பேழைக் கூடை5 தூக்கும் பணியும், ஏகாலி ‘பந்தம்6 பிடிக்கும் பணியும், சக்கிலியருக்கு சாங்கியப் பெண்ணிற்குச் செருப்பு அணிவிக்கும் பணியும் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சாங்கியம் இவர்களின் துணையோடு ‘பெண்’7 ணின் தாய் வீட்டில், இரவு நேரத்தில் நிகழ்த்தப்படுகிறது.

எழுதிகச்சாங்கியம் நிகழ்த்தும் முறை

ஒரு பெண்ணிற்கு அப்பெண்ணின் தாய்வீட்டார் எழுதிகச் சாங்கியம் செய்ய முடிவு செய்கின்றனர். நல்லநாள் அறிந்து இச்செய்தியைப் பெண்ணின் புகுந்தவீட்டிற்குத் தெரிவிக்கின்றனர். தாய்வீட்டார் சாங்கியப் பெண்ணிற்கும் அவளது குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுக்கின்றனர். புடவைக்காரர், சாங்கியகாரம்மா, நாவிதர், ஏகாலி, சக்கிலியர் ஆகியோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து இச் செய்தியை அறிவிக்கின்றனர்.

சாங்கியம் நிகழும் இடத்தில் ‘முகூர்த்தக்கால்”8 இட்டு பந்தல் போடுகின்றனர். அவ்விடத்தை மெழுகிக் கோலம் போட்டு அதற்குப் புற்று மண்ணால் கரைக்கட்டுகின்றனர் குழவிக்கல், உரல், ‘நுவத்தடி9, கோடாலி10 போன்றப் பொருட்களைச் சேகரிக்கின்றனர். தாய் வீட்டிலிருந்து யாரேனும் ஒருவர் பெண் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வருகின்றனர். பெண் வீட்டு உறவிளரும், தாய்வீட்டு உறவினரும் சாங்கிய நிகழ்விடத்திற்கு வருகின்றனர்.

வீட்டினுள்ளும் சாங்கியம் நிகழும் பந்தலடியிலும் விளக்கேற்றுகின்றனர். புடவைக்காரர் பந்தலடியில் விளக்கிற்கருகில் சாணிப் பிள்ளையாருக்கு அருகம்புல் குத்திவைக்கின்றார். அதன் மீது மஞ்சளும் பூவும் தூவுகின்றனர். சாங்கியக்காரம்மாள் சமைக்கப்பட்ட பச்சரிசிச் சோற்றில் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்து ஒன்பது உருண்டைகளாகப் பிரிக்கின்றார். கம்பு மாவினால் ஆன கொழுக்கட்டையைத் தயார் செய்கின்றனர். சுருப்பட்டி பதித்து வைத்துத் தினை மாவினை ‘பிரிமனை11 மீது வைக்கின்றனர். நாவிதர் ‘விரிக்கட்டு12 மூட்டையை வீட்டினுள் போடுகின்றார். கோடாலிக்குச் சிகப்புத் துணிக் கட்டுகின்றார். உரல், நுவத்தடி, கோடாலி மற்றும் பாத்திரங்களுக்குத் திருநீறு, சந்தனம், சிகப்பு பொட்டுகளை வைக்கின்றார். புடவைக்காரர் அரசு இலை, ‘மஞ்சள் கோம்பு”13 இரண்டையும் மஞ்சள் கலந்த வெள்ளை நூலில் சுட்டுகின்றார். நாவிதர் ஒவ்வொரு பாத்திரத்திற்கும். ஒவ்வொரு பொருளுக்கும் அரசு இலை மஞ்சள் கொம்பாலாள கயிற்றைக் கட்டுகின்றார். ஏகாலி ‘பந்தம்’ பிடித்துக்கொண்டிருக்கிறார்.

வீட்டினுள் போடப்பட்டிருக்கும் விரிக்கட்டின் மீது சுமங்கலிப் பெண்ணையும் அவளது தோழியையும் அமரச்செய்து பின்னர் அவர்களை ‘விரிக்கட்டிலிருந்து’ சாங்கிய நிகழ்விடத்திற்கு அழைத்து ‘முக்காலியில்14 கிழக்குப் பார்த்து அமரவைக்கின்றனர். புடவைக்காரர் சோற்றில் நெய்கலந்து பிசைந்து அவர்களுக்குப் பொட்டு வைக்கிறார். கற்பூரம் காட்டிய பிறகு அதைக்கையால் ‘வழித்து’த் தள்ளிவிடுகிறார். பின்னர் ‘சருவுசட்டி’15 யைப் பெண்ணின் தலைக்கு மேல்பிடித்து ஒரு செம்புத் தண்ணீரை மூன்றுமுறை ஊற்றுகின்றார். புடவைக்காரர் செய்ததைப்போல் இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் அந்தப் பெண்ணிற்குச் செய்கின்றனர். பின் பெண்ணிற்குச் சாம்பிராணிக் கரண்டியில் நெய்ப்புகைக் காட்டுகின்றனர். பிறகு மூன்று செஞ்சோற்று உருண்டைகளைப் புடவைக்காரர் பெண்ணிற்குச் சுற்றிப்போடுகின்றார். நாவிதர் ‘புளியாக்கை”16 யைப் பெண்ணின் தலைமேல் பிடிக்க புடவைக்காரர் அது வழியாக நீர் ஊற்றுகின்றார். நீர் ஊற்றியதும் நாவிதர் புளியாக்கையைப் பெண்ணின் உடல் வழியாக கீழே இறக்குகின்றார். இதே போன்று இரண்டு சாங்கியக்காரம்மாக்களும் செய்கின்றனர். இறுதியாக நாவிதர் மூன்று புளியாக்கையையும் பிய்த்துப் போடுகின்றார். புடவைக்காரரும், சாங்கியக்காரம்மாக்களும் பெண்ணின் முகத்தில் மஞ்சள் பூசுகின்றனர். பிறகு பெண்ணின் தலையில் மூன்று செம்புத்தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்பு அப்பெண் குளித்துவிட்டு ஏகாலி கொடுத்த பழைய சீலையைக் கட்டிக்கொள்கிறாள். இப்பழைய சீலை ‘வண்ணான் மாத்து’ என அழைக்கப்படுகிறது.

“தோழி”17 சாங்கியக்காரம்மாளுடன் நுவத்தடி மீது குதிகால் படும்படி நிற்கிறாள். மற்றொரு சாங்கியகாரம்மா பெண்ணிற்கு சிசுப்பை (குங்குமம்) இடது நெற்றியிலிருந்து வலது நெற்றி வரை பூசுகின்றார். புடவைக்காரர் பெண்ணின் தொண்டைப் பகுதியில் நெய்விடுகிறார். அது தொப்புளை நோக்கி வரும்போது சாங்கியகாரம்மா துடைத்து விடுகின்றார். அதேபோன்று முதுகு தண்டுவடத்தின் மேல் பகுதியில் நெய்விடுகின்றனர். தண்டு வடத்தின் கீழ் பகுதிக்கு வரும்போது துடைத்து விடுகின்றார்.

பெண் ஒரு குழந்தையையும், தோழி ஒரு குழவிக்கல்லையும் இடுப்பில் வைத்துக்கொண்டு சாங்கியப் பந்தலைச் சுற்றி வருகின்றனர். மூன்றாவது சுற்றில் பெண் உரலை உதைத்துத் தள்ளிவிட்டு ‘விரிக்கட்டில்! தோழியுடன் அமர்கிறாள். சாங்கியக்காரம்மா இருவரிடமிருந்து குழந்தையையும், குழவிக்கல்லையும் பெற்றுக் கொள்கின்றனர். பெண், தோழி, சாங்கியகாரம்மாவில் ஒருவர் ஆகிய மூவரும் மீண்டும் நுவத்தடியில் அமருகின்றனர். மூவருக்கும் வாழைஇலை போட்டு கொழுக்கட்டையைப் பரிமாறுகின்றனர் கொழுக்கட்டையை உண்டு விரதம் முடிந்ததும் பெண் குளிக்கச் செல்கிறாள்.

ஏகாலி விரித்த துணியில் சாங்கியக்காரம்மாவில் ஒருவர் ஒரு செம்புத் தண்ணீர், தேங்காய், பழம் ஆகியனவற்றை வைத்து முக்காலியில் அமருகின்றார்.தாய் வீட்டார் சீர்வரிசைகளை அவர்முன் வைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை நாவிதரின் மனைவி உரக்கக் கூறுகின்றார் பெண் சீர்வரிசைகளைப் பெற்றுக் கொள்கின்றாள். பிரிமனையின் மீது கருப்பட்டியைப் பொதித்து வைத்த தினை மாவுருண்டையை பேழைக் கூடையில் நாவிதர் எடுத்து வைக்கின்றார். சிகப்புத் துணி சுற்றிய கோடாரியால் பெண், புடவைக்காரர், சாங்கியகாரம்மாக்கள், நாவிதர் ஆகிய ஐவர் சேர்ந்து தினைமாவினைத் துண்டாக்குகின்றனர். துண்டான மாவை ‘ஏகாலி’ துணியோடு எடுத்து வைத்துக் கொள்கின்றார். பெண் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது சக்கிலியர் அவருக்குச் செருப்பு அணிவிக்கிறார். தாய் வீட்டார் பெண்ணை மீண்டும் அவளது கணவன் வீட்டில் சேர்க்கின்றனர். அடுத்தநாள் பெண் வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்கின்றனர். இதுவே எழுதிகம் நடைபெறும் முறையாகும்.

நம்பிக்கைகள்

எழுதிகச்சாங்கியம் செய்து கொள்ளவில்லை என்றால் குலம் விருத்தியடையாது. எழுதிக நிகழ்வில் நெய்விடும்போது நேராகவராமல் பக்க வாட்டில் சென்றாலும், தினைமாவில் இருக்கும் கருப்பட்டி ‘வேத்திருந்தாலும்”18 அப்பெண்ணிற்கும், அக்குலத்திற்கும் துன்பம் நேரிடும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும், இச்சாங்கியம் செய்து கொண்ட பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும், குழந்தை பெற இயலாத பெண் இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது. என்றும் கருதுகின்றனர்.

ஆய்வுப்பார்வை

எழுதிகச் சாங்கியத்தில் நிகழ்த்தப்படும் உரல் உதைத்தல், தினைமாவுபிளத்தல், குழந்தையைத் தூக்கிச் சுற்றுதல் போன்ற நிகழ்வில் குறியீட்டுத் தன்மைகள் காணப்படுகின்றன. பிராய்டின் உளப்பகுப்பாய்வு நோக்கில் உரலும், உலக்கையும் பெண்குறி, ஆண்குறிகளாகவும் இரண்டும் இணைவது உடலுறவாகவும் கருதப்படுகின்றது. இக்கருத்தின்படி இச்சாங்கியத்தில் உரலை உதைத்துத் தள்ளுதல் என்பது ஆணும் பெண்ணும் உடலுறவுக்கொள்வதை கட்டுப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

தினைமாவினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ள சுருப்பட்டி பெண்ணின் கருப்பையில் கருவாக வளரும் குழந்தையின் குறியீடு பேற்றினைத் தடை செய்வதாகக் கொள்ளலாம். இக்கருத்தினை எழுதிகச் சாங்கியம் செய்து கொண்ட பெண்கள் குழந்தைப்பேறு அடையக் கூடாது என்பது இச்சாங்கியத்தின் மீதான விதி இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

இப்பெண்களே இச்சமுதாயத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளை நிகழ்த்தும் தகுதி கொண்டவர்கள் எனச் சமூகம் இவர்களுக்கு ஒரு தகுதியை வழங்கினாலும் கணவனை இழந்தவளோ, குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்ணோ இச்சாங்கியம் செய்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு பெண் கருத்தரிப்பு செய்வதைத் தடைசெய்வதாக உள்ளது. அதாவது, எழுதிகச் சாங்கியம் என்பது கொங்கு நாட்டுக் கவுண்டர்களின் ஒரு தனிப்பட்ட வாழ்வியல் சடங்காக இருந்தாலும் அது ஒரு பெண்ணின் குழந்தைப் பேற்றினைத் தடைசெய்வதாக அமைந்துள்ளது எனலாம் இது ஒரு பெண்ணிற்கு குறிப்பிட்டதொரு சமூகத் தகுதியை வெளிப்படையாக வழங்குவதன் மூலம் கருத்தடையை மறைமுகமாகப் பொதிந்து வைத்துள்ளது எனலாம்.

அடிக்குறிப்புகள்

1.‘ஏகாலி’ என்பது வண்ணாரைக் குறிப்பதாகும்.

2. ‘சாங்கியம்’ என்பது சடங்கு என்பதைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல்லாகும்.

3. புடவைக்காரர், புடவைக்குரிய சாங்கியத்தைச் செய்து அவ்இனத்தின் ஆணைக் குறிப்பது. கொண்ட

4. சாங்கியகாரம்மாள், எழுதிகச் சாங்கியம் செய்துகொண்டு, சாங்கியம் செய்யும் அவ்வினத்தின் பெண்ணைக் குறிக்கும்.

5.பேழைக்கூடை என்பது மூங்கில் சிம்பால் செய்யப்பட்ட ‘ப’ வடிவான கூடையாகும். இது நாவிதர் வீட்டில் மட்டுமே இருக்கும்.

6. ‘பந்தம்’ என்பது துணியைச் சாணியில் நனைத்துச் சுற்றி வைத்துள்ள குச்சியாகும். அந்தத் துணியில் நெருப்பைப் பற்ற வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பார். இவ்வாறு செய்வதினால் இரவில் நிகழ்த்தும் ‘சடங்குகளுக்கு வெகுநேரம் வெளிச்சம் தருகின்றது.

7. ‘பெண்’ எழுதிகச் சாங்கியம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக கையாளப்படுகின்றது.

8. ‘முகூர்த்தக்கால்’ – பந்தல் போட முதல் குச்சியில், நவதானியத்தை மஞ்சள் துணியில் கட்டி கற்பூரம் காட்டி நடுவதைக் குறிக்கிறது.

9. ‘நுவத்தடி’ ஏரில் இரண்டு மாட்டையும் இணைக்கும் மொத்தமான கொங்கு நாட்டுப்புறவியல் குச்சியாகும்.

10. ‘கோடாலி’ மரத்தை வெட்டும் இரும்புக் கருவியாகும்.

11. பிரிமனை பானை போன்ற பாத்திரங்களை விழாமல் பாதுகாக்கப் பயன்படுகிறது. இது வைக்கோலினால் ஆன வட்டவடிவான வளையமாகும்.

12,’விரிக்கட்டு’ வைக்கோல் மூட்டை

13.மஞ்சள் கிழங்கை ‘மஞ்சள்கோம்பு’ என்று கூறுவர்.

14.’மூக்காலி’ மூன்று கால்களைக் கொண்ட இருக்கையாகும்.

15. ‘சருவுசட்டி’ – வட்ட வடிவமான செம்புப் பாத்திரமாகும்.

16.’புளியாக்கை’ புளியங்குச்சியை வட்டவடிவமாகக் கட்டி அதைச் சுற்றி புளியமர இலையைக் கட்டியிருப்பது.

17. பெண்ணின் சகோதரனின் மனைவி ‘தோழி’ என்று கூறப்படுகிறது.

18. ‘வேத்தல்’ இயல்புநிலைமாறி குழைந்த நிலையைக் குறிக்கிறது.

துணைநூற்பட்டியல்

1. ‘தொல்காப்பியம்’ ச.வே.சுப்பிரமணியம் உரை

2. பக்தவத்சல பாரதி ‘தமிழர்மானிடவியல்”, 2002.

தகவலாளர்கள்

 1. ஆறுமுகம், 45, நாவிதர், திம்நாயக்கன்பட்டிஇராசிபுரம் (வ)நாமக்கல்,

 2.பெருமாயி.37. க/பெ. ஆறுமுகம், நாவிதர், திம்நாயக்கன்பட்டி இராசிபுரம் (வ), நாமக்கல்.

3. பெரியசாமி கவுண்டர், 60, புடவைக்காரர், மல்லியகரை (அஞ்) ஆத்தூர்’ (வ) சேலம்.

4. இரா. குணசேகர்,40, கவுண்டர், ஐய்யர்தோட்டம், அரசநத்தம் (அஞ்)) மல்லியகரை, ஆத்தூர் (வ) சேலம்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

www.kelviyumpathilum.com

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

உங்களுடைய இடற்பாடுகளைக் கையாள கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால் அடுத்து இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இலட்சியத்தை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு மாறினால் அவை இலட்சியங்கள் அல்ல. ஆசைகளே ஆகும். அடையும்வரை மாறாமல் இருப்பவையே இலட்சியம் ஆகும். அவ்வாறான இலக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடைவதற்கு எவ்வகையான அவமானங்களும், புறக்கணிப்புகளும் துரோகங்களும் விளைந்தாலும் நீங்கள் செல்லும் பாதையிலிருந்து விலகாதீர்கள். திடமனத்துடன் போராடுங்கள். கடினப்பட்டு தேடும் எதுவும் நிலைத்திருக்கும். எளிமையாகக் கிடைப்பவை வந்த மாயத்தில் சென்று விடும். அது பொருளாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. இதுவே நியதி. நீங்கள் கொண்டிருக்கும் இலக்கால் உங்களுக்கோ உங்களின் சமுதாயத்திற்கோ நன்மை விளைப்பதாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதில் நீரில் மூழ்கியவன் மூச்சுவிட, வெளியே வருவதற்கு எவ்வளவு வேகமாக செயல்படுகிறானோ அந்த வேகத்துடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

நெருப்பில் இட்ட சொர்ணம் ஜொலிக்கும்

      ஒரு இலக்கை அடைவதற்கு பல வகைகளில் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். சிலரின் பகையைப் பெறவேண்டி வரும். சில உறவுகள் நீங்கி செல்லக்கூடும். பலர் கேளியாகப் பேசக்கூடும். சிலரின் விமர்சனங்கள் உங்களின் மனதிடத்தையே ஆட்டம் காணச்செய்யும். இவையெல்லாம் நடக்கும். ஆனால் உங்களின் இலட்சிய பாதையிலிருந்து மனம், எப்போதும் விலகாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நீங்கள் பயணித்தால் நெருப்பில் இட்ட சொர்ணம் போல நீங்களும் மிளிரலாம். இதில் ஐயமில்லை.

       கிராமப்புறங்களில் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் சமைப்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவார்கள். அடுப்பில் வைக்கப்பட்ட விறகு எரிந்து கரியாக மாறிவிடும். அந்த அடுப்புக்கரியும் உலகில் விலையுயர்ந்த வைரமும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். இரண்டும் கார்பன்தான். ஒருநாள் இந்த இரண்டும் சந்திக்க நேர்ந்தது. கரி வைரத்திடம் கேட்டது! “நாம் இருவரும் ஒரே இனம்தான். ஆனால் நீ மட்டும் எவ்வாறு ஜொலிக்கிறாய்? மனிதர்கள் எல்லோரும் உன்னை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். உன்னை பெறுவதற்கு நிறைய உழைக்கிறார்கள். ஆனால் என்னுடைய நிலை மிகவும் தாழ்மையாக உள்ளது. என்னை அள்ளி குப்பையில் கொட்டுகிறார்கள் இதற்கு என்ன காரணம்?” வைரம் கூறியது, “நான் இந்த பூமியில் நிலநடுக்கம் போன்றவற்றால் உள்ளே அழுத்தப்பட்டு, பூமியின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு அழுத்தத்தால் நெருக்கப்பட்டு ஒராண்டு, இரண்டாண்டுகளல்ல பலஆயிரம் வருடங்கள் அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு பொறுமையாக உள்ளேயே இருந்தேன். எனக்கு கொடுக்கபட்ட எல்லாவகையான இடற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு இருந்ததால் என்உடல் இறுகி திடமாக மாறிவிட்டது. மனிதர்களால் தோண்டி எடுக்கப்பட்டுப் பூமியின் மேல் வந்து தீட்டப்பட்டு அழகாக ஜொலித்ததால் அடுப்புக்கரியாக இருந்த நான் வைரம் என்ற பெயரைப் பெற்றேன்” என்று கூறியது. எல்லாவற்றையும் தாங்கும் மனோதிடம், எதிர்கொள்ளும் தின்மை மனதிற்கு வேண்டும். அப்போதுதான் வரலாறு படைக்க இயலும்.

முன்னேற்றம் உங்கள் கையில்

        இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும். முன்னேற்றம் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பது மேலான பேச்சு ஆகும். பேசுதல் என்பது ஒரு கலை. மற்றவரிடம் தண்மையாகப் பேச வேண்டும். தான்என்ற அகங்காரத்துடனோ வேண்டாத வெறுப்பாகவோ, அதிகாரத்துடனோ, பேசினால் அநதச் செயல் அங்கு நடைபெறாது. தங்களின் முகபாவனை பேச்சு என்பது மற்றவரை கவனிக்க செய்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நீங்கள் தொடங்கும் செயல் முடியும். உங்களின் பணிவான பேச்சு எவ்விடம் தேவையோ அவ்விடத்தில் பண்புடனே பேசுங்கள். அதற்கு நன்றாக மனதை பக்குவம் செய்து கொள்ளுங்கள். இதுவே இலக்கை அடைவதற்கான நடைமுறை என்பதில் தெளிவாகுங்கள்.

வாயில் இருக்கிறது வழி

           ஒரு பொன் மொழி உண்டு “நீ எப்போதெல்லாம் உன் வாயை திறக்கிறாயோ அப்போதெல்லாம் உன் மனதை திறக்கிறாய்” என்று கூறுவதுண்டு. பேச்சு என்பது தெளிவாகத் தேவையான சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை அன்னைத்தெரசா அவர்கள் தான்நடத்தும் குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டுவதற்காகச் செல்வந்தர் ஒருவரை காணச்சென்றார். அப்போது அந்தச் செல்வந்தர் எவ்வகையான மனநிலையில் இருந்தாரோ! தெரியவில்லை. தெரசா அவர்கள், செல்வந்தரிடம் தமக்கு நிதயுதவி செய்யுமாறு கேட்டார் அப்போது அவர் “ஒன்றுமில்லை போ” என்று கூறினார். ஆனாலும் அன்னை அவர்கள் அந்த இடம்விட்டு நகரவில்லை. செல்வந்தரை காணவந்த சிலரும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். செல்லாமல் நின்று கொண்டிருந்த அன்னை அவர்களைப் பார்த்து “நீ இன்னும் போகவில்லையா”  என்று அதட்டினார்.  “ஏதேனும் உதவி செய்யுங்கள்”என்று அன்னை கேட்டபோது, “இந்தா பெற்றுக்கொள்” என்று அவர் அன்னையின் மீது காரி உமிழ்ந்தார். அதை தன் கைகளில் ஏந்தி கொண்டு “ஐயா இதை நான் பெற்றுக்கொள்கிறேன் பசியுடன் இருக்கும் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்” என்றார். இதைக்கேட்டவுடன் அந்தச் செல்வந்தரின் மனம் மாறியது. அவரே அன்னையைப் பாராட்டி அதிகமான நிதியைக் கொடுத்து உதவினார். இவ்வாறு தான் எடுத்துக்கொண்ட செயலை எவை நேர்ந்தாலும் செவ்வனே செய்து முடிக்கும் மனதிடம் வேண்டும். பேச்சுத் தின்மைவேண்டும். பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தனை செய்து கொள்ள வேண்டும். ஆனாலும் சிந்தித்த எல்லாவற்றையும் பேசி விடக்கூடாது. பேச்சு என்பது ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும்.

       உங்களுடைய மனம் இலக்கை அடைவதில் பிடிவாதமாக இருந்தால் உங்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் செயல்பட தொடங்கும். உங்களின் மூளையும் ஒளி பெற்றதைப் போன்று உணரும். இரவில் தூங்கவும் தோன்றாது. மனம் சோம்பலையும் வென்றுவிடும். உடல் பசியையும் பொருட்படுத்தாது. உங்களின் மூளை, மனம், உடல், ஆன்மா என்று எல்லாவற்றிலும் இலக்கை அடையும் வேகம் இரண்டறக் கலந்துவிடும். பின்னர் ஒவ்வொன்றும் ஒன்றை நோக்கியே பயணிக்கும். இந்த நிலையை  அடைந்துவிட்டால் நீங்கள் இலச்சியத்தை அடைவதை உங்களால்கூட தடுக்க இயலாது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணருங்கள்.

     உங்கள் இலக்கில் மனம் வையுங்கள். வரலாறு படைப்பவர்கள் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

முன்னுரை

இந்த ஆய்வுக் கட்டுரை நற்றிணையில் வருகின்ற முல்லைத்திணைப் பாடல்கள் மட்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவற்றில் தலைவன் கூற்றில் வருகின்றப் பாடல்கள் மட்டும் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறன. மொத்தம் தலைவன் கூற்று பாடல்கள் பதிமூன்று (21,42,59,81,139,142,161,169,221,142,321,371,374) ஆகும்.

இக்கட்டுரையில் தலைவன் தலைவியின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுதல், மழையை வாழ்த்துதல், முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறுதல், விருந்து செய்தல், குரல கேட்டல், வருந்துதல், நம்பிக்கைகள் வேட்டுவர் வாழ்க்கை, இடையர் வாழ்க்கை போன்றவைகள் கூறப்படுகிறது.

அன்பை வெளிக்காட்டுதல்

இவற்றில் வினைமுடிந்து வீட்டிற்கு வரும் போது வழியில் நடக்கும் நிகழ்வைப் பார்த்தத் தலைவனுக்குத் தலைவி மீது அன்பு வெளிப்படுகிறது. அவை, கானக்கோழி, நாங்கூழ்ப் புழுவைக் கவரும் அப்புழுவைக் கொன்று தன்பெடைக்கு ஊட்ட வேண்டும் பெருமையோடு அப்பெடையை நோக்கும் நிலையை உவ்விடத்தில் காண்பாயாக (21) என்றும், கார்ப்பருவம் தொடங்கியது. மடப்பத்தையுடைய பிணைமான் நீங்கி பெயரும் களர்நிலத்தில் மருண்டு விழிக்கும் கண்களுடைய தன் கூட்டத்தினின்று தவறி விலகி ஓடும். அதனை நீங்காத விருப்பமுடைய நெஞ்சத்துடன் சென்று தேடும் ஆண்மானை உவ்விடத்தில் காண்க (242) என்றும் தேரபாகனுக்கு கூறி விரைவாக தேரை செலுத்துக என்று தலைவன் கூறினான்.

மழையை வாழ்த்துதல்

இதில் தலைவன் வினைமுற்றி வந்த பள்ளிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது. அதாவது தலைவியுடன் முயங்கி, அவள் நலனை இனிதாக நுகர்ந்த தலைவன் கார்ப்பருவத்தில் பெய்கின்ற மழையை நோக்கி “மேகமே உதவி புரிந்தனை நீ உலகத்துக்கு ஆதாரமாகப் பலரும் தொழும்படி மலைச்சிகரங்களில் நின்று உலவுவாயாக” என வாழ்த்தினான்(139). மழையினால் ஏற்படும் குளிரச்சியால் தலைவன் தலைவியை தழுவி கிடந்தனன் என்றும் கார்ப்பருவம் வரும் முன்னவே வினைவே. வினைமுடித்து மீண்டனன் என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது.

முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி

மழைப் பெய்ததால் உண்டான தவளைகளின் ஒலிகளால் நம் தேர்மணிக்குரலைத் தலைவன் அறியவில்லை. உடனே நான் வருவது குறித்து தெரிவிப்பீர் என ஏவலரை ஏவினேன். அவர்கள் சென்று அறிவிக்கவே, அவள் நீராடி தன்னை புனைந்து கொள்ளும் நான் செல்லவும் அவள் என்னை அணைத்து மகிழ்ந்து நிலைமுன் நிகழ்ந்தது அது மறத்தற்கரியது (142). அதனால் தேரை விரைவாக ஓட்டுமாறு பாகனை வேண்டுதல் இந்தப் பாடல் முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது.

விருந்து செய்தல்

பூண்கள் தாழ்ந்த மார்பில் பொருந்தி இருக்கும் அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீ சீதறி விழும்படி அழுதவண்ணம் இருப்பவள், அழகிய மாமை நிறம் பொருந்திய காதலி நம்மைக் கண்டவுடன் ( தன் அவலம் நீங்கி) நமக்கு விருந்து செய்யும் விருப்பத்துடன் சமையல் அறைக்குள் புகுவாள் உரிய விருந்தை வருந்தி ஆக்கி களைப்படைந்த நிலையில் மகிழ்ச்சி மிகுந்த முகத்தினாய் நகையைக் கொண்டு நாம் என விளங்குவாள். அந்த நகை முகம் காணும் பொருட்டு விரைவாகத் தேரைச் செலுத்து என்று தேர்பாகனுக்கும் (81), வழியிடைக் கண்டாரிடம் புதியவர்களுக்கும் (374) தலைவன் கூறுதல்.

குரல் கேட்டல்

பாகனே! நம் காதலி தன் புதல்வன் துயிலுமிடம் அடைந்து எந்தையே வருக! என்று கூறும் மொழியைக் கேட்டு மகிழும் வண்ணம் தேரை விரைந்து செலுத்துக (21) என்று மகிழ்ந்துரைத்தான் தலைவன். இதனை,

பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஓல்கி

வந்தீக எந்தை என்னும்

ம்தீம் கிளவி கேட்கும் நாமே”

என்ற பாடலடியாகும்.

வருந்துதல்

தலைவி மாலைப் பொழுதிலே. நாம் இல்லாமையினால் வெறுமையாக இருக்கும் மனையைப் பார்த்து வருந்தி நிற்பாள் (321) என்றும், மேகம் மழைத் தொடங்கிற்று நம் காதலி இதனைக் கண்டு அழத் தொடங்கியிருப்பாள் ஆயர்தல்லோசை அவள் அழகையை மிகுவிக்கும் (371) என்றும் தேரை வினவாகச் செலுத்துக் என்று தலைவன் தேர்ப்பாகவிடம் கூறினாள்.

நம்பிக்கைகள்

தலைவன் நம் வரவை காக்கை புட்கள் முன்னரேச் சென்று அறிவித்தனவோ(161) என்று தேர்ப்பாகனுக்கும் நாம் தலைவியைப் பிரிந்ததனால் உண்டாகும் துன்பம் தீர இப்போது நாம் வருவதனை நம் மாலையின்கண் உள்ள சுவரிடத்தில் உள்ள பல்லி பலப்படியாக இயம்பி அறிவுறுத்துமோ (169) என்று தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறினான். இப்பாடல்களின் மூலம் அக்கால மக்களின் நம்பிக்கைகள் வெளிப்படுகிறது.

வேட்டுவர் வாழ்க்கை

காட்டில் உடும்பைக் கொன்று, வரிதத தவளையை அகழ்ந்தெடுத்தும்; நெடிய கோடுகளைக் கொண்ட புற்றுகளை வெட்டி ஆண்டுறையும் ஈசலகளை மண்ணைத் தோண்டி எடுத்தும் பகலில் முயலை வேட்டையாடியும் வாழும் வேட்டுவன் இரவின்கண் தன் அழகியத் தோளில் சுமந்து வந்து பல்வேறு வகைப்பட்ட பண்டங்களைப் பொதிந்த மூட்டையுடனே ஏனையக் கருவிகளையும் வீட்டியிலேயேப் போட்டுவிட்டு மறந்து மிகுதியான பருகியக் கள்ளின் மயக்கத்தில் செருக்குற்று கிடப்பான் (39) என்பது அறியமுடிகிறது.

இடையர் வாழ்க்கை

மழைக் காலத்தின் இறுதிநாளில் பால் விலைக் கூறும் இடையன் கையில் பலவாகியப் காலிட்டுப் பின்னிய உறியுடன், தீக்கடைக்கோல் முதலானக் கருவிகள் பலவற்றை இட்ட தோற்பையினையும், ஒருசேர சுருட்டி கட்டினான் அவற்றை பனையோலைப் பாயோடுச் சேர்த்துக் கட்டி முதுகில் சுமந்து சென்றான். நுண்ணியப் பல நாதிவலைகள் அவனுடைய உடம்பில் ஒரு பகுதியை நனைத்தன. கையில் இருந்த கோலை ஊன்றி அதனிடம் ஒரு காலை ஊன்றியவனாய் ஒடுங்கி நின்ற அவளிடையன் நாவை மடித்தப்படி ‘வீளை’ ஒலியை எழுப்பினான். அவ்வொலிக் *கேட்ட ஆட்டுக்கூட்டம் வேற்றிடங்களில் திரியாது மயங்கி அவ்வண்ணமே தங்கி நிற்கும் (142) காட்டு பகுதியில் அமைந்துள்ளது தலைவியின் ஊர் என்று தலைவன் பாகனுக்கு கூறுகிறான்.

முல்லையின் நறுமணம் கமலும் மலரை, ஆடுகின்ற தளையையுடைய ஆட்டை மேய்க்கும் வலிய கைகளை உடைய இடையன் இரவிலே கொய்து வெண்மையாபை பனங்குருத்தின் பொழுவுடனே சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிவான் (169) தலைவன் நெஞ்சிற்குச் சொல்லும் போது வெளிப்படுகிறது. மேலேக் கூறியச் செய்திகளைப் பார்க்கும் போது தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

இக்கட்டுரையில் முல்லை நில மக்களின் வாழ்க்கையைக் கூறும்போது பெண்கள் வீட்டில் இருத்தல்,விருந்து செய்தல், புதல்வனைப் பெற்று வளர்த்தல், தலைவனுடன் கூடுதல், தலைவன் இல்லாத போது அவன் வரும் வரையிலும் வருந்தி காத்திருத்தல், இனிமையான குரலில் பேசுதல், விருந்தினர் வரக் காக்கை கரைதல், நினைத்தது பலிக்கச் சுவரிலே பல்லி இயம்புதல் போன்ற நம்பிக்கையும் நம்புதல், ஆண்கள் பொருளீட்டச் செல்லுதல், போருக்குச் செல்லுதல், தலைவியுடன் கூடியிருத்தல்,வேட்டையாடுதல், ஆடுகள் மேய்த்தல், பால் விற்றல், புல்லாங்குழல் ஊதுதல், களைப்பு ஏற்படும் போதும் மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் கள் குடித்தல்,பலவகையான உண்டு வாழ்ந்தார்கள்.தலைவியுடன் சேர்ந்து இருக்கும் போது பொழிகின்ற மழையை வாழ்த்துதல், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தல் தேர்ப்பாகன் தேரை ஓட்டுதல் போன்றவைகள் தலைவன் கூற்றுப்பாடல்களிருந்து வெளிப்படுகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635109.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

அம்மாவிற்காக ஒப்பாரி – கவிதை

பழுத்தப் பழம் அழகாயிருக்கும்

பயன்படாது யாருக்கும்!

மரத்தில் மூப்பு எட்டி

மரணத்தை தொட்டு நிற்கும்!

விவரம் தெரிந்த நாளில்

உதட்டு எச்சில் காய்ந்து

அம்மா என அழுகையில்…

அநாதையாய் உணர்ந்தேன்!

 

சொல்லி அழ யாருமில்லை

சொந்த பந்தங்களும் கூட இல்லை!

 

ஒருநாள்

ஒற்றைச் சடையில் அழகாய் இருந்தாய்…

ஓரக்கண்காட்டி – உன்னை

ஒருத்திக்கு மட்டுமே நானென,

உறவாட வந்தானே… தெரிந்த

ஊர்க்காரி சொன்னாளே!

 

கருவாய் வயிற்றில்

உருவாய் எனைக்கொடுத்து

ஊர்வம்பு பேசிடவும் ஏசிடவும்

ஓடினானே! என் அப்பன் ஓடினானே!!

 

மானம் காத்திட

மசக்கையை மறந்து

துரத்தி அடித்தனரே… உன் பெற்றோர்கள்

துரத்தி அடித்தனரே..!

 

தனியாய் வாழ்ந்து

தடைகள் பல கடந்-தாயே!

 

சாலையில் செல்லும்

சிலரைக் கைக்காட்டி…

அப்பா என்றழைத்த போது

கூனிக்குருகி நின்றாயே!

 

என் அம்மாவே – உன்

இதயத்தை  முள்ளால் கீறி

ஏலம் விட்ட இச்சமூகமே

வெட்கப்படு! வெட்கப்படு!!

 

பெண்ணின் பிறப்பை

பண்பட்ட வாழ்வை

சிதைத்த சமூகமே!

ஒழிந்து போ…

ஒழிந்து போ…

 

பழுத்தப் பழம் அழகாயிருக்கும்

பயன்படாது யாருக்கும்!

மரத்தில் மூப்பு எட்டி

மரணத்தை தொட்டு நிற்கும்!

 

மனதைக் கெடுத்த என் அப்பனும்

மானம் வாங்கிய மக்களும்

மூச்சை அடக்கிய எமனும்

என் ஒப்பாரியை கேள்!

 

கல்வி கற்று

கருத்தாய் நின்று

பணிவாய் வளர்ந்தேனே…

பணியில் உயர்ந்து

பாசத்தோடு ஓடி வருகையில்

உன் இறப்பு செய்தியா

என் செவிகளில் கேட்க வேண்டும்!

 

என் ஒப்பாரி வானைச் சுட

என் ஒப்பாரி பூமியை பிளக்க

நானும் உன்னுடன் கலந்தேனே – அம்மா

நானும் உன்னுடன் கலந்தேனே!!!

கவிஞர் முனைவர் க.லெனின்

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

போட்டியில் ஒருவர்க்குக் கிடைப்பது வெற்றி அல்லது தோல்வியே. வெற்றியால் கிடைப்பது மகிழ்ச்சி. தோல்வியால் கிடைப்பது அனுபவம். வெற்றி பெறுவதைவிட தோல்வியடைந்து பாருங்கள், மனதில் நிறைய சிந்தனைகள் உருவாகும். மூளை சுறுசுறுசுறுப்பு அடையும். ஏன் தோல்வி வந்தது என்று வினா எழும். உங்களால் ஏற்பட்டதா? அல்லது மற்றவர்களால் உண்டானதா? என்னசெய்ய மறந்து விட்டீர்கள்? என்ன செய்திருக்க வேண்டும்? அணுகுமுறை என்ன? எந்த மனப்பக்குவம் அடைய வேண்டும். இன்னும் எவ்வகையான மனப்பயிற்சி வேண்டும்? என்ற இத்தனை வினாக்களும் தோன்றும்.

        மனம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும். வைரஸ் வந்துவிட்டால் கம்ப்யூட்டர் செயலிழந்து நிற்பது போல, உள்ளம் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கும். அந்த நேரத்தில் ஒன்றும் யோசிக்க தோன்றாது. யோசித்தாலும் சரியான தெளிவு ஏற்படாது. எனவே மனம் தெளிவாக அமைதி அடைந்தபிறகு, தோல்விக்கான காரணம் என்ன? நிதானமாக யோசித்தால் உங்களுக்கு எழுந்த எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும்.

தோல்விக்கு நன்றி சொல்லுங்கள்

        தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள் என்ற இந்த வாக்கியம் எப்போதோ படித்த ஞாபகம். இது எவ்வளவு பெரிய அனுபத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது. தோல்விகள் உங்களை மீண்டும் மீண்டும் எழுவதற்கு தூண்டுகிறது. எழச்செய்கிறது. வீழ்ந்தால் எழமுடியும் என்ற நம்பிக்கையை பெறச்செய்கிறது. எனவே ஒருபோதும் தோல்வியை வீழ்ச்சி என்று எண்ணாதீர்கள். அது வீழ்ச்சி அல்ல எழுச்சி ஆகும். நீங்கள் அடையும் உயர்வும் தாழ்வும் உங்களால் ஏற்பட்டவை என்பதை உணருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைத்தால் அது உங்களின் உழைப்பு விடாமுயற்சியால் கிடைக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் சிபாரிசால் கிடைக்கக்கூடாது. அவ்வாறு கிடைத்தால் அது தோல்வியே ஆகும். அந்த மாதிரியான எளிமையாகக் கிடைக்கும் வெற்றிகள் சூரியன் ஒளி பட்டதும் பனி விலகுவது போல அது காணாமல் போய்விடும்.

          நீங்கள் அந்த சவாலை போட்டியை எதிர்கொள்ள அத்தனை முயற்சி செய்தும் தோல்வி கிட்டியது என்றால் அதுவும் நல்ல அனுபவமே. ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவனுக்கு உண்டாகும் பிரச்சனைகளே என்பதை உணருங்கள். எப்போதுமே வெற்றியை நோக்கியே உங்கள் சிந்தனையைச் செலுத்தாமல் தோல்வியால் பல மனிதர்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப்பெறுங்கள். எப்போதுமே நிழலிலேயே இருந்தால் அதன் குளிர்ச்சி தெரியாது. ஆனால் சிறிது வெய்யிலில் சென்று வாருங்கள் நிழலின் அருமையை அப்போது உணர்வீர்கள்.

விழுந்தாலும் எழுந்திருங்கள்

        ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்குக் கூறினார். “நீங்கள் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாலும் பரவாயில்லை. ஆனால், மற்றவர்களைப் பார்த்து எழுதி பெறும் மதிப்பெண்கள் நூறாக இருந்தாலும் அவை உமக்கு வேண்டாம். ஏனென்றால் உமது உழைப்பால் பெற்ற மதிப்பெண்கள் தன்னம்பிக்கையைத் தரும். மற்றவர்களால் வந்தவை மனத்தாழ்ச்சியையே தரும். பெறுவது வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அவை உங்களால் பெற்றவையாக இருக்க வேண்டும்.”என்று கூறினார்.

எனவே நீங்கள் பெறுவது சிறிதளவே என்றாலும் நன்றானதே. மற்றவர்களால் கிடைக்கப்பெறுவது இந்த உலகளவே ஆனாலும், நாளடைவில் அது மனதளவில் உங்களுக்குள்ள தனித்திறனைக் குறைத்துவிடும்.

        தோல்விகள் எந்தப் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன? அவற்றை மீண்டும் வராமல் நீக்குவது எவ்வாறு? என்பதை சிந்தனை செய்ய வேண்டும். ஒரு பிரச்சினைக்கு மூன்று வகையில் தீர்வு காணலாம். ஒன்று, அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு மாற்றியமைப்பது. மூன்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. ஒரு பிரச்சனையை மாறாது என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்க இயலாது என்றால் விட்டுவிடுவது நல்லது. வெற்றியை அடைவது எளிதல்ல. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வதே சிறந்த வெற்றி.

இடர்பாடுகள் இயல்பானவை

            வெற்றியை உங்கள் வாழ்நாளில் நிலை நாட்ட வேண்டுமென்றால் இன்னல்கள், துன்பங்கள், கவலைகள், இழப்புகள், மனக்காயங்கள் என்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தனை வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்து தெளிந்து அதிலிருந்து இதுதான் நடைமுறை என்று மனதை பண்படுத்திக்கொண்டால் மட்டுமே இந்த வெற்றித் தோல்விகளை ஏற்றுக்கொள்ள இயலும்.

         வெளி நாட்டில் வாழ்ந்த ஒரு இளைஞன் சிறு வயதில் நன்றாகப் படித்தான். நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். சிறந்த கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றான். பெற்றவுடன் வெளிநாட்டு கம்பெனி அவனுடைய அறிவுக்குச் சிறந்த வேலையைக் கொடுத்து அதிக ஊதியத்தையும் கொடுத்தது. எனவே அவனுக்கு சிறு வயதிலிருந்தே எல்லாமே கிடைத்தன. திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் நன்றாக வாழ்ந்தான். ஆண்டுகள் சில கடந்தன. ஒரு நாள் நாளிதழில் வெளிவந்த தகவல், அந்த இளைஞன் தன்மனைவி குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுக்கொண்டான். இங்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்த மாணவனுக்கு எல்லா வயதிலும் குறையே இல்லாமல் அனைத்தும் கிடைத்தன. ஆனால் இவ்வாறு நடந்ததற்கு காரணம் என்ன? உண்மையில் என்ன நேர்ந்தது என்றால், அம்மாணவனின் வாழ்க்கையில் தோல்வியே கண்டதில்லை. இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ காரணத்தால் அவனுடைய வேலை பறிபோனது. அதை சமாளிக்க தன்சொந்த வீடு, காரையும் விற்றான். பின்னர் இவற்றை சீரணித்துக்கொள்ள முடியாமல் இவ்வாறு கொலை செய்து விட்டான் என்ற செய்தி கிடைத்தது. கவனியுங்கள்! அந்த இளைஞனுக்கு அவ்வப்போது தோல்விகள் கிடைத்திருந்தால், பல அனுபவங்களைக் கற்றிருப்பான். வாழ்வில் எந்த நிலையையும் சமாளிக்கும் திறனைப் பெற்றிருப்பான். இறப்பு என்பது நேர்ந்திருக்காது. எனவே மனித வாழ்வில் இடர்பாடுகளும் இயல்பானவை என்பதை உணருங்கள்.

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

தடைகளைத் தாண்டுங்கள்

       மனித வாழ்வில் பிரச்சனைகள் என்பவை எல்லா காலக்கட்டங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை சமாளிக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை சுகமானதாகவே காணப்படும். ஒருநாள் என்பது இரவும் பகலும் சேர்ந்தது போல, மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் சேர்ந்தது ஆகும்.

         சிலருக்கு எவற்றை பிரச்சினையாக எடுத்து கொள்வது. சாதாரணமானவை எவை என்ற தெளிவுகூட இருக்காது. சிலருக்கு இடற்பாடுகள் தேடி வரும். சிலருக்கு துன்பங்கள் வரத்தேவை இல்லை. அவர்களே சென்று வரவழைத்துக் கொள்வார்கள். ஒருவர் புகைவண்டியில் பயணம் செய்தார். அவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார். நீங்கள் எங்கு செல்கிறீர்கள். அவர் சென்னையில் தாம்பரம் செல்ல வேண்டும் என்றார். அப்பாடா, இவருக்கு பெருமூச்சு வந்தது. காரணம் இவரும் அந்த இடத்தில்தான் இறங்க வேண்டும். எனவே அவ்விடம் வந்ததும் தனக்கும் கூறுமாறு ஒரு கட்டளையை வைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்பு அடுத்த ஸ்டேஷனில் டிபன் வாங்க வேண்டும் என்று கவலைப்பட்டார். கிடைக்கவில்லை என்றால் என்று வேதனையடைந்தார். ரயில் நிலையம் சென்றதும் அழைத்துப் போக ஆள் வரவில்லை என்றால்? என்று கவலையுற்றார்

இவ்வாறு சிலர் வேதனைப்படுவதையே பழக்கமாகக் கொண்டிருப்பர். அவையே அவர்களுக்கான பிரச்சினைகள். நீங்கள் மனதில் இவ்வாறுதான் நடக்க வேண்டும். இவை கிடைக்க வேண்டும். மற்றவர் இவற்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் போது, எண்ணியபடி அவை நடக்காத பட்சத்தில் பிரச்சனையாகவே தோன்றும். எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்காதபோது உலகில் நடக்கும் எந்தச் செயலும் ஒன்றும் செய்யாது. அது பிரச்சினையாகவும் தோன்றாது. எனவே வெற்றியோ தோல்வியோ எவை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் தெளிந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதே.

இன்னல்கள் தேவைதான்

       சுயநலமாகத் தனது, நான், தான் மட்டும் என்று வாழும் மனித உலகத்தில் இன்னல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. உங்கள் மனதில் எந்தச் செயலையும் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டாம். ஏனென்றால் அவை மாறி நடந்தால் நடத்தப்பட்டால் அது உங்களுக்கு பிரச்சனை ஆகிவிடும். இடர்பாடுகளும் இல்லாத வாழ்க்கை இங்கு எவருக்கும் இல்லை. இது தின்னம் எனும்போது அவற்றை எதிர்கொள்ளும் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே தங்களால் இயலாது என்ற மனநிலையை மாற்றி அவற்றை நிகழ்த்தவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உங்கள் மனம் உணரச்செய்ய வேண்டும். தோல்வியைக் கண்டு துவழாமல் அவற்றை ஏற்றார் போல எவ்வாறு மாற்றி அமைப்பது என்ற சிந்தனை வேண்டும்.

      மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பங்கள், தோல்விகள், இடற்பாடுகளும் இன்னல்களும் இழப்புகளும் நிகழ்ந்தால் மட்டுமே அது முழுமையான வாழ்க்கையாகும். உணவில் அறுசுவை இருந்தால் தான் விருந்து சிறக்கும். அதைப்போல இன்பம் மட்டுமே மனித வாழ்க்கை ஆகாது. அது அரைகுறை வாழ்க்கையே ஆகும். எனவே எல்லாவற்றையும் கடந்து செல்லும் மன திடம் உங்களுடையது என்றால் இச்சமுதாய நாயகன் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

அலமேலு மங்கை

            பார்வதி வீட்டு கல்யாணம். தளைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி அம்மா வந்தவர்களையெல்லாம் வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. பந்தலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள் தேவி.

            தேவி… தேவி… என்று உரக்கக் கத்திக்கொண்டே வெளிப்பந்தலுக்கு வந்தாள் பார்வதி அம்மா. “அம்மா..” என்று கத்தியபடி ஸ்கூல்ல சின்னப்பசங்க கை தூக்கி சொல்லுவாங்களே, அதுபோல் கை தூக்கி சொன்னாள். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க. பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. அவுங்கள போயி நீ கவுனி. நான் இவுங்களப் பாத்துக்கிறேன்” என்றாள். பார்வதி அம்மாவுக்கு எப்போதும் தேவி தன்னுடன் இருந்தா ஆயிரம் யானைகள் கூட இருப்பதாக நினைப்பு. தேவியை   எப்போதும் விட மாட்டா. எப்ப பார்த்தாலும் தேவி.. தேவியின்னு கூப்பிட்டுக்கொண்டே இருப்பாள். ரெண்டு பேத்துக்கும் அப்படியொரு பொருத்தம். பார்வதி அம்மாயின் வீட்டுக்காரர் கூட ஓரிரு முறை கோபப்பட்டிருக்கிறார். “உனக்கு நான் புருசனா… இல்ல தேவி புருசனா” என்று கேட்டே விட்டார். ஆனால் பார்வதி அம்மாவிடமிருந்து மௌனம்தான் பதிலாக வந்தது.

            கல்யாண வீட்டில் மேல் மாடிக்கதவு தட்டப்பட்டது. உள்ளிருந்த ஒருத்தர் கதவை திறந்து என்ன? என்பது போல கேட்டார். “அம்மா உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டு கொடுக்கச்சொன்னாங்க” என்றாள் தேவி. “வாங்க..” என்று கதவை திறந்து விட்டுப்போனார். எப்படியாவது பொண்ணப் பாத்துடனும் என்ற எண்ணம் சித்ராவின் மனதில் இருந்தது. உள்ளே நுழைத்த அவளது கண்கள்  பொண்ணைத்தான் முதலில் தேடியது. அதற்குள் உள்ளேயிருந்தவர்கள் டீ, காபி, கூல்டிரிங்ஸ் என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். “கொண்டு வந்து தரங்க” என்று சொல்லிக்கொண்டே கூட்டத்தின் நடுவே உட்காந்திருக்கும் பொண்ணையும் பார்த்து விட்டாள். பொண்ணு அழகுதான். தம்பிக்கு ஏத்தமாதிரி அழகா இருக்கு என மனதில் நினைத்துக் கொண்டாள். சற்றும் தாமதிக்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய விருந்தினைக் கொடுத்தாள். அப்போது பார்வதி அம்மாவின் கணவனுடைய அண்ணன் சுந்தரமும் அவரது மனைவி பாக்கியமும் காரிலிருந்து வந்திரங்கினார்கள். “வாங்க அக்கா… வாங்க மாமா…” என்று முன்னால் ஓடி வந்து வரவேற்றாள் பார்வதி அம்மாள். அவர்களிடத்தில் ஒரு புன்னகையோடு சின்னதாக உதட்டு சிரிப்பு மட்டுமே வெளிவந்தன. பாக்கியத்திற்கென்ன தன்னோட ரெண்டு பசங்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சுட்டா. பசங்களும் பணமா குவிக்கிறாங்க. எப்பவும் பார்வதி அம்மாவைவிட நான்தான் உசத்தின்னு காமிச்சிப்பா. வீட்டுக்கு வந்த முத மருமகள் நான்தானே. எனக்குதான் எல்லாமே என்று நினைத்து கொண்டிருந்தவள். ஆனால் பார்வதி அம்மா வந்த பிறகு பாக்கியத்தை அவரது மாமியார் கொஞ்சம் மட்டம் தட்டவே ஆரமித்தார். ஆரபத்தில் இந்தச் சண்டையானது ஓரளவுதான் இருந்தது. போகப் போக குடுமிப்புடிச் சண்டையாக மாறி கணவன் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டாள் பாக்கியம். அப்போதிலிருந்தே பார்வதி அம்மாவைக் கண்டாலே பாக்கியத்திற்குப் பிடிக்காது. அவளிடம் யாராவது குழைந்து பேசினால் கூட மூக்கில் வேர்த்து பொங்கி விடுவாள். கல்யாணத்திற்கு போகவே கூடாது என்று சுந்தரத்திடம் சண்டையிட்டாள்.  சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில்தான் இன்று பாக்கியம் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். ஆனாலும் இந்தக் கல்யாணம் நின்னா அவளுக்கு சந்தோசம்தான்.

            கெட்டி மேளம் கொட்டிட திருமணம் அழகாய் முடிந்தது. திருமணம் முடிந்ததோ இல்லையோ எல்லோரும் சாப்பாட்டுக்கு ஓடினார்கள். இது எல்லா திருமணத்திலும் நடக்கக் கூடியதுதான். கல்யாணத்தப் பாத்திட்டு எவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டு வேலைக்கோ அல்லது மற்ற அவசர காரியங்களுக்கோ செல்வார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. கூட்டமாய் சென்று சாப்பாட்டு இலையை நிரப்பினார்கள். முன்னே சென்றவர்கள் இடம் பிடித்தார்கள். பின்னே சென்றவர்கள் அடுத்தப் பந்திக்காக சாப்பிட உட்காந்தவர்களின் பின்னாலே நின்று கொண்டார்கள்.

            ஒரு பக்கம் வரவேற்பு நடைபெற்றது. வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒன்றினை கையில் பிடித்தவாறு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம் என்றும் புகைப்படத்திலும் வீடியோவிலும் பதிவாகி விடவேண்டும் என பல்லை இளித்துக் கொண்டு முகம் காட்டி நின்றார்கள். பரிசுப்பொருட்களும் குவிந்தன. மொய்ப்பணமும் சிறுக சிறுக சேர்ந்து கொண்டிருந்தன. வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு வாயாற வாழ்த்திவிட்டு சென்றார்கள். இரவு நெருங்கினதும் மாப்பிள்ளையும் பொண்ணையும் புது வாழ்க்கை தொடங்கிட அந்த அறைக்குள் அனுப்பினார்கள். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கப்போனாள் பார்வதி அம்மா. கடந்த ஐந்து வாரங்களாக ரயில் வண்டி போல தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஓய்வே இல்லை. இப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. கீழேப் பாய் போட்டு இரண்டு கால்களையும் நீட்டி சுவற்றோடு சாய்ந்து உட்காந்தாள். அவளின் இரண்டு கால்களும் கடுகடுத்தன. முட்டிக்கால் வலியால் தன்னுடைய இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கொடுத்தாள். அப்போதுதான் தேவியின் ஞாபகம் வந்தது. “அடியே… தேவி.. தேவி…” என்று கத்தினாள். அம்மா… என்றபடியே ஓடோடி வந்தாள். பார்வதி அம்மாவின் இரண்டு கால்களையும் நேராக நீட்டிப்போட்டு மென்மையாக அமுக்கினாள் தேவி. தேவியின் அமுக்கும் கைப்பதம் யாருக்கும் வராது என்று எண்ணினாள். அப்படியே சொக்கிப்போய் மெய்மறந்து தேவியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யாரிந்த தேவி? இருபத்தியேழு வருசத்திற்கு முன்னாடி எங்க குலசாமி கோயில்ல ஒத்தையா நின்னிட்டு இருந்தா… ஆமாம்!  எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தை இல்லை. போகாத கோயிலும் இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. பண்ணாத வைத்தியமும் இல்லை. என்கிட்ட குறையா? அவர்கிட்ட குறையா?ன்னு தெரியல. டாக்டரும் ஆளுக்கு ஒரு மாதிரி சொல்லி எங்கள தினமும் சாகடிச்சாங்க. இதுல எங்க மூத்தாரு பொண்டாட்டி பாக்கியம் அக்கா வேற, அப்பப்ப எங்களப்பத்தி குறை சொல்லிகிட்டே இருந்தாங்க… குழந்தை இல்லாததனால மாமியாருக்கு என்மேல வெறுப்பு உண்டாச்சு. என்னோட வீட்டுகாரருக்கு வேறொரு கல்யாணம் பண்ணிடலாமுன்னு பாக்கியம் அக்கா சொன்னப்ப உண்மையிலேயே என் அடிவயிறு கலங்கிடுச்சு. வாழ்க்கையே அர்த்தமற்றதாய் போனமாதிரி உணர்ந்தேன். செத்துடலாமுன்னு கூட நினைச்சேன். அழுது அழுது கண்ணீரும் வறண்டு போச்சு. அப்பதான் எனக்கு அலமேலு மங்கை ஞாபகம் வந்தது. அலமேலு மங்கை எங்க குலசாமி. அம்மா அடிக்கடி சொல்லுவா.. உனக்கு ஏதாவது கஸ்டமுன்னு வந்ததுன்னா நம்ம அலமேலு மங்கையை நினைச்சுக்கோன்னு… அப்பதான் நினைச்சேன் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்த அலுமேலு மங்கையாலதான் முடியுமுன்னு.

அடுத்த நாள் காலையிலேயே நானும் அவரும் அலமேலு மங்கை குலசாமி கோவிலுக்கு கிளம்பினோம். அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில புடவையும், கருகமணி, மூக்குத்தி, கண்ணு, உப்பு என அனைத்தும் எடுத்துட்டு போனோம்.  நேரா போயி அம்மனின் கால்லே விழுந்தேன். “எனக்கு வாழ்க்கை கொடு! ய வயத்துல ஒரு புள்ளய கொடுத்து என்ன வாழ வையி…  உனக்கு  என் உசிரையே தரேன்“ என்று எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மீது சத்தியம் செய்தாள் பார்வதி அம்மா. இப்போது அம்மன் அலமேலு மங்கையின் கண்கள் ருத்தரமாய் சிவந்தது. பூஜைகள் அனைத்தும் முடிந்தன. கோயிலின் பின்பக்க குளக்கரை படிக்கட்டில் பார்வதி அம்மா அவரது கணவரிடம் அழுது கொண்டிருந்தாள். “நான் உன்ன விட்டுட்டு இன்னொருத்தி கூடயெல்லாம் வாழ மாட்டேன் பார்வதி. உன்னை விட என்ன யாரு அன்பா கவனிச்சுப்பா… சொல்லு..! கவலைப்படாத அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்றார். அப்போது அந்தக் குளக்கரை மறுதிசையில் படிக்கட்டு  ஓரத்தில் தண்ணீரில் கால் வைத்தபடியே  பெண்  ஒருத்தி முந்தனையை வாயில் பொத்தியபடி அழுது கொண்டிருந்தாள். “ஏங்க அங்க பாருங்க ஒரு பொண்ணு அழுதுட்டு இருக்கா.. யாருன்னு தெரியலையே… வாங்க போயி கேட்கலாம்” என்று கணவனை இழுத்துக் கொண்டு போனாள்.

“யாரும்மா நீ? இங்க என்ன பன்ற..” என்றாள் பார்வதி அம்மா. அந்தப் பெண்ணின் விசும்பும் சத்தம்தான் அதிகமாய் கேட்டது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் பேசத்தொடங்கினாள். “இந்த ஊருதான். பேரு தேவி. நான் ஒரு அநாதை. என்ன வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இப்ப எங்க போறது, என்ன பன்றதுன்னு தெரியாம உட்காந்திருக்கேன்” என்றாள் அப்பெண். அந்தப் பொண்ணைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. “சரிம்மா… எங்ககூட வந்திரியா? நான் உன்னை பாத்துக்கிறேன்” என்றால். தலையை மட்டும் ஆட்டினாள் அப்பெண்.

அந்த மாதமே பார்வதி அம்மாவின் வயிற்றில் கரு தங்கியது. அவளின் உள்ளத்து உணர்ச்சிக்கு அளவே இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் பறந்தாள். மாமியார் மருமகைளை உள்ளங்கையில் தாங்கினாள். ஆனால் பாக்கியத்திற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. கரு கலைவதற்கு தன்னால் முயன்றதை செய்ய தீர்மானம் செய்து கொண்டாள். இத்தனையிலும் தேவிக்குத்தான் மிக்க மகிழ்ச்சி. அன்று முதல்  பார்வதி அம்மாவை கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள். அவள் பெயர் பார்வதிதான். தேவிதான் அன்பின் மிகுதியால் முதன்முதலாக பார்வதி அம்மா என்றழைத்தாள். அதன்பிறகு அதுவே நிலையாகிப் போனது.

என்னுடைய வயிர் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாக தொடங்கிய காலத்திலிருந்தே தேவிதான் எல்லாமே. என்னை குளிப்பாட்டி வயிற்றை தடவிக் கொடுத்து தூங்க வைப்பதில் இருந்து அவளின் பங்கு அசாத்தியமானது. அதிலும் நான் வாந்தி எடுக்கும் போதும், வயிற்றில் வலி ஏற்படும் நேரத்தில் கூட அவளின் மென்மையான தடவுதலின் எத்தனையோ முறை மெய்மறந்து போயிருக்கிறேன்.  பிரசவ நேரங்களில் கூடவே இருந்தாள். பொறுத்துக்கொள்ள முடியாமல் தொண்டை கிழிய கத்திய போது தேவியின் கையை பற்றியவுடன் ஏதோ வலியில்லாமல் போனதை உணர்ந்தேன். என்னை இழந்து சுகமாய் இருப்பது போல் உணர்வு இருந்தது. அன்று என்னை எவ்வாறு உணர்தேனோ அப்படியே இன்றும் உணர்ந்தேன். பார்வதி அம்மாவுக்கு கண்கள் சொக்கி இமைகள் மூடி தூக்கம் வந்தது.

நான் கொடுத்த மஞ்சள் புடவையோடு குலசாமி  அம்மன் அலமேலு மங்கை நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். நான் அம்மனின் பாதங்களில் விழுந்தேன். அம்மனோ… ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள். நான் என்னவென்று புரியாமல் தவித்தேன்.

“பார்வதி அம்மா… எனக்கு சத்தியம் செய்து கொடுத்ததை வாங்க வந்திருக்கிறேன்”

“என்ன சத்தியம்” புரியாமல் தவித்தாள் பார்வதி அம்மா

“ஆமாம்! கஸ்டம் வரும்போது கடவுளிடம் அதைத் தரறேன்.. இதைத் தரேன்னு சொல்லி நீங்கள் கேட்டதை வாங்கிட்டு போயிரிங்க… எல்லாம் நல்லதா முடிஞ்சவுடனே, எங்ககிட்ட பேசுனதை சொன்னதை அப்படியே மறந்தும் போயிடுறீங்க. நல்லா யோசனை பண்ணிப்பாரு பார்வதி அம்மா”

யோசனையில் ஆழ்ந்தாள். புத்திக்கு செய்த சத்தியம் புரிந்தது. ஆமாம்.. என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“உன் உசிரைக் கொடு.. எனக்கு பலி கொடு… உன் சத்தியத்தை உண்மையாக்கு..” என்றாள் அம்மன் அலமேலு மங்கை.

“இல்ல இப்பத்தான் என் மகனுக்கு கல்யாணம் நடந்திருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ள பேரன் பேத்தியைப் பாத்திருவேன். அப்புறமா நீ என்ன எடுத்துக்க”

“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் உன் கூடவே நான் இருக்கிறது. நீ இப்ப தருவ… அப்ப தருவ…ன்னு..”

“அலமேலு மங்கை அம்மன் என்கூடவே இருக்கா… உண்மையா? அப்படின்னா யாரது?

“நல்லா யோசிச்சுப்பாரு பார்வதி அம்மா”

“ஆமாம்! ஆமாம்! ‘பார்வதி அம்மா’ என்று கூப்பிடும் இக்குரலை இதற்கு முன் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆமாம்! இது தேவியின் குரலா! என்ன தேவியின் குரலா! கொஞ்சமாய் புரிய ஆரமித்தது. கல்யாணத்திற்கு பட்டுப்புடவை எடுக்க துணிக்கடைக்குச் சென்றிருந்தோம். துணிகள் அனைத்தும் எடுத்து முடித்ததும் தேவிக்கும் சேர்த்து புடவை எடுத்தோம். அப்ப தேவி, “பார்வதி அம்மா எனக்கு உன் கையால மஞ்சள் நிறத்துல புடவை எடுத்துக்கொடும்மான்னு கேட்டா”. நானும் எடுத்துக்கொடுத்தேன். கல்யாணத்துல தேவி கட்டியிருந்த சேலையும் குலசாமி அலமேலு மங்கைக்கு முதன்முதலா நான் கொண்டு சென்ற சேலையும் ஒன்னா இருக்கு. அப்படின்னா.. தேவிதான் அலமேலு மங்கையா!

அலமேலு மங்கையின் சிரிப்புச் சத்தம் இந்த பூமியையே அதிர வைத்தது. ஆமாம்! கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ண… இப்ப என்னாச்சு.. பயப்படுறீயா.. நீ கேட்ட மாதிரி ஒரு குழந்தையும் கொடுத்துட்டன். உன் கூடவே இருந்து உன்னையும் குழந்தையும் பாத்துகிட்டன். இப்பதான் உன் பையன் கல்யாணம் முடிஞ்சி புது வாழ்க்கையும் ஆரமிச்சிட்டான்ல்ல. இதுக்கப்புறமும் உன் பின்னாலயே என்னால அலைய முடியாது. நீ சொன்ன மாதிரி உசுரை கொடுத்திரு.. நான் போயிடுறேன்.

“சரிதான். நான் கொடுக்கிறன். ஆனால் என் புள்ளய தினமும் பாத்திட்டு இருக்கனும். அப்படின்னா இப்பவே இந்த உசிரை எடுத்துரு” என்றாள் பார்வதி அம்மா.

அலமேலு மங்கையின் மூக்குத்தி அணிந்த அழகான முகம் ஒளிர்ந்தது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த  பார்வதி அம்மாவின் உடல் நிலத்தில் சரிந்தது. சாந்தி முகூர்த்தத்தில் மணப்பெண்ணின் அடிவயிறு இனித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

http://kelviyumpathilum.com/

தொல்காப்பிய வினா விடைகள் (PG TRB| NET|SLET|TET|TNPSC) – 6

தமிழ் இலக்கிய வினா விடைகள் PG TRB| NET|SLET|TET|TNPSC -3

பெண்ணியக் கோட்பாடுகள்

முன்னுரை

            உலகம் ஆண் பெண் என்னும் இருபாலராருலும் உருவாக்கப்பட்டிருக்கிறது  இரண்டும் சேர்ந்த ஒன்றே உலகம் எனப்படும்.  இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது என்பதனைச் சான்றோர் அறிவர்.  இருப்பினும் பெண் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்றும், ஆணின் கட்டுப்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் பெண்ணின் உணர்வுகளுக்குத் தடை போட்ட சூழலில் தான் பெண்ணியம் தோன்றியது.  தொடக்க காலத்தில் பெண்களுக்குச் சமூகம் பலவகையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.  கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏறும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது.  கணவணை இழந்த பெண்ணுக்கு மொட்டை அடித்து, காவி உடை அணியச் செய்தது.  அத்தோடு மட்டும் நில்லாமல் தனியாகப் பாய் படுக்கை, தனி வட்டில் என கொடுத்து அவர்களை தற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நிலையும் எய்தியது. இந்நிலையை மாற்ற பாரதியார், பெரியார், திரு.வி.க. போன்ற சான்றோர்கள் கைம்மை மணத்தை வலியுறுத்தினர். மேலும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்றும், கல்வி கற்றப் பெண்ணால் தான் தன் ககுடும்பத்தை சரிவர பராமரிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.

பெண்ணிய திறனாய்வும், அணுகுமுறைகளும்

            சமூக எதார்த்தத்தின் மிகப் பெரிய பரப்பளவில் பெண்ணின் நிலை சமூக தத்துவார்த்த வெளியீடுகள் எளிதாக விளக்கியிருக்கின்றனர் என்பதை பெண்ணியத் திறனாய்வுகள் நம்புகின்றன.  ஏங்கெல்லாம் பெண்களின் நிலைப்பாடு விளக்கப்படவில்லையோ அங்கு அவாகளது நிலைப்பாட்டினை பாலியல் ரீதியான விளக்கம் செய்து சிதைத்திருக்கின்றனர்.  1960 – களிலிருந்து இன்றுவரை பெண்ணியம் பலரையும் பலவேறு வழிகளில் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் தோற்றமும், வளர்ச்சியும் வெவ்வேறுபட்ட குறிக்கோள்களை உட்கொண்டதாக இருந்தது.  இந்தியாவில் பெண்கள் சதி, வரதட்சணை, உயிரோடு எரிப்பது, பால்ய விவாகம், பெண்ணைப் பாலியல் பொருளாகக் கையாளுவது, சந்தைப் பொருளாக விளம்பரங்களில் பயன்படுத்துவது,சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அடிமைத்தனம், சுரண்டல்கள் போன்றவைகளால் ஒடுக்கப்படுகின்றார்கள்.

            மற்றுமொரு நிலையில், நிலையில் ஆணாதிக்கச் சமுதாயம் பெண்ணைத் தாயாக, தாய்க் கடவுளாக உயர்வு நவிற்சி நிலையில் கூறி வந்திருக்கிறது.  இது பெண் ஆசி வழங்கக் கூடியவள், செயல்பாட்டு நிலைக்கு உட்படாதவள் என்ற கொள்கைக்கும் சாதகமாக உள்ளது.

பெண்ணியம் சொல்லாட்சி

            ‘பெண்ணியம்’ என்னும் சொல் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைன் கூறுகின்றனர்.  ‘பெண்ணியம்’ என்னும் சொல் ஆங்கிலத்திலுள்ள ‘பெமினிசம்’ என்ற சொல்லிற்கு இணையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  இச்சொல் ஆங்கிலத்திலிருந்து எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதனை,

            “ஆங்கிலத்தில் ‘feminism’ என்று வழங்கும் கலைச்சொல்லையே தமிழில் பெண்ணியம் என்று கூறுகிறோம்.  இந்த ஆங்கிலச்சொல் பெண்ணைக் குறிக்கும்.  இச்சொல் ‘famine’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது.  ‘பெண்’ என்னும் சொல்லுக்கு ‘பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள்’ என்று பொருள்.  பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலினச் சமத்துவக் கோட்பாடுகளையும் குறிப்பிட்டு வருகின்றது.” 1 என்று கூறுகிறார் முத்துச் சிதம்பரம்.

            பெண்ணைப் பல்வேறு நிலைகளிலும் முன்னிறுத்தி அவர்களின் வழியாக சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் பெண்ணியம், பெண்ணியவாதம், பெண்னுரிமை ஏற்பு என்னும் சொற்கள் இதற்குரிய சொற்களாக வழங்கி வருகின்றன என்னும் நோக்கில் ச. முத்துச்சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதலாம்.  மேலும் இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிரேமா கூறுகையில்,

‘feminism’ என்ற ஆங்கிலச் சொல் ‘famine’ என்ற இலத்தீன் சொல்லின் திரிபு ஆகும் .  பெண் என்னும் சொல் பெண்ணுக்குரிய இயல்புகளை உடையவள் என்று கூறப்படும் போது முதலில் பெண்களின் பாலியல் பண்புகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது.  பின்பே பெண்ணின் உரிமையை பேசுவதற்காக குறிப்பிட்ப்பட்டது.”2 என்று கூறுகிறார்.  பொதுவாகப் பெண்ணியம் என்ற சொல்லாட்சியானது ஒரே வகையான கருத்தை எடுத்தியம்புவதாக உள்ளது.  ஆண் – பெண் என்னும் இருபாலரையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், பாலியல் ரீதியான கருத்துக்களை எடுத்தியம்புவதற்காகவும் வரையறுக்கப்பட்டுள்ளது எனலாம்.

            1894 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் முதன் முறையாக இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. 

            “ பெமினிசம் என்ற சொல் பெண்ணின் தேவையை நிறைவேற்ற அவர்கள் சார்பாக வாதாடுவது, போராடுவது”3 என்று பொருளை தந்துள்ளதாக சி.என.;குமாரசாமி கூறியுள்ளார்.  இக்கருத்திற்கு வலுசேர்க்கம் வகையில் சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதியில்,

            feminism என்பதற்கு பெண் உரிமை ஏற்பு கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.”4

            அதாவது, பெண்ணிய இயக்கம் என்பது பெண்களுக்காக போராடும் இயக்கமாகும்.  பெண்ணியத்திற்கு உலகில் உள்ளஅனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியாகவும், முக்காலத்திற்குமுரிய ஒரு விளக்கத்தை கொடுக்க இயலாது.  இதன் விளக்கம் ஒரு சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு இவற்றைப் பற்றிய உணர்வு நோக்கு, செயல் இவைகளைப் பொறுத்து மாறுபடும் என்று கூறுவர்.

பெண்ணியம் விளக்கம்

            உலக மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள், பெண்களது சமூக, பொருளாதார அரசியல் நிலை உலகெங்கும் ஆடவரைக் காட்டிலும் தாழ்வாகவே உள்ளது.  முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவாக இருந்தாலும், பழமைக்குமப் பழமையும், முன்னேற்றத்திற்கு முன்னேற்றமும் ஒருங்கே பெற்றிற்கும் இங்கிலாந்தாக இருந்தாலும், மக்கள் பெருக்கத்திற்கு பெயர் போன சீனாவாக இருந்தாலும், இஸ்லாமிய தேசமாக இருந்தாலும, ஜனநாயக நாடான இந்தியாவாக இருந்தாலும் இவை எல்லா இடங்களிலும் பெண்கள்pன் நிலை மட்டும் இரண்டாமிடத்ததாகவே இருந்து வருகின்றது.  இதை மாற்ற மேற்கொள்ளம் முயற்சிகளே பெண்ணியப் பிறப்பிற்கு வித்தானது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

            “சமூகத்திலும், வேலைதளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும், இந்நிலையை மாற்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளும் பெண்ணியத்தின் பரந்துபட்ட வரையறையாக இப்போதைய நிலையில் கொள்ளலாம்.”5 என்று மொலினா தேன்மொழி கூறும் கூற்று மெய்பித்துக் காட்டுவதாக உள்ளது.

            பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் நிலையினைக் கண்டு அவர்களின் சுதந்திரத்திற்காக ஆண்களும் அவர்களுடன் இணைந்து பாடுபடும் நிலை நிலவி வந்தது என்பதனை மேற்கண்ட ஆசிரியரின கூற்றின் வழியாக இறிய முடிகிறது. மேலும்,

            “பெண்ணியம் பெண்ணின் சமூகத் தகுதி நிலை குறித்து இதுவரையில் எடுத்துரைக்கப்பட்ட இலக்கியத் தரவுகளை மறுபரிசீலனை செய்யப் பெரிதும் உதவியாக இருக்கிறது.”6 என்று அரங்க மல்லிகா அவர்களின் கூற்றிலிருந்து பெண்ணின் தற்போதைய நிலை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

            சுங்க காலத்தில் பெண் எல்லா உரிமைகளையும் பெற்றுத் திகழ்ந்தாள் என்று பழம் பெருமை பேசுபவர்கள் கருத்துரையாடுகின்றார்கள்.  ஆனால் பழைய மரபுகள் பெண்ணை அப்படியொன்றும் பெருமை படுத்தியிருக்கவில்லை.  வேதகாலம் தொட்டு ஒரு தாய், ஆண் மக்களைப் பெற்றதனாலேயே பெருமை படுத்தப்பட்டிருக்கிறாள்.  தாயாண்மைக்  காலத்தில் அவளுடைய கணவனாகிய ஆண்மகனுக்கு முதன்மையாக இருந்ததில்லை.  ஏனென்றால் ஒரு ஆண்மகனைப் பெறும் தாயானவள் அவனை நல்ல பொருப்புள்ளவனாக உருவாக்கக் கடமைபட்டிருக்கிறாள் இக்கருத்தினை வலியுறுத்தவே திரு.வி.க. ஒரு பெண் பிறவி எடுத்ததன் நோக்கமே காமத்திற்கும் அடுப்பூதுதல் போன்ற பணி செய்வதற்கும் மட்டும்; அன்று.  குழந்தைகளைப் பெற்று நல்வழியில் வளர்த்து ஆளாக்கி சான்றோனாக்குவதே அவளின் தலையாயக் கடமையாகும்.     

            “யான் பெண்ணின் வயிற்றில் தோன்றினேன், பெண்ணுக்குள் பிறந்தேன், பெண்ணுடன் வாழ்ந்தேன், என் வாழ்விற்கு நான் தொழும் அன்பு தெய்வம் பெண்ணாகவே இருக்கிறது…”7 என்னும் கருத்து ஈண்டு நோக்கதக்கதாகும்.

பெண்ணடிமைத் தனத்தின் பரிணாமங்கள்

            இந்தியாவில் முதன்முதலில் தாய்வழிச் சமூக அமைப்பு இருந்தாலும், அது நாளடைவில் மாற்றம் பெற்று தந்தை வழிச் சமூகமாக மாற்றம் பெற்றப்பின், குடும்பம், பொருளாதாரம், அரசியல் மதம் என முதன்மையாக சமூக நிறுவனங்கள் அனைத்தையும் ஆண்களே கையப்படுத்தி கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவு தொடங்கினர்.           

காலம் செல்லச் செல்ல பெண்ணடிமையும், ஆண்மேலாதிக்கமும் படிப்படியே தழைத்து, அவற்றின் விளைவுகள் பெண்ணின் சுரண்டல்களின் பல வடிவங்களாய்க் கிளைவிட்டு வளர ஆரம்பித்தன.இதன்விளைவாக பெண்சிசுக்கொலை, இளம் வயது திருமணம், பாலியல் கொடுமைகள், பெண்களைத் தனிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, சமகூலியின்மை, கைம்மை, உடன்கட்டை ஏறுதல் போன்ற பல்வேறு கொடுமைகளுக்கு இந்தியப் பெண்கள் ஆட்படுத்தப்பட்டனர்.  இவ்வாறு ஆட்படுத்தப்பட்ட பெண்களுக்கு உரிமை வழங்குவதில் அரசு காட்டும் ஈடுபாடு பற்றி வாசுகி கூறும் கருத்து ஏற்புடையது.

“ஓர் உயிரின் உரிமையை இன்னொன்று கட்டுப்படுத்தி, அதன் நன்மைகளை தான் பெற முயல்வது உரிமை பறிப்பு ஆகும்.  பேண்ணுரிமையும் அப்படிப்பட்டதே, பெண்ணுக்குரிய உரிமைகளைப் பறித்துவிட்டு அவளுக்கு எந்த அளவுக்கு உரிமை வழங்கலாம் என்று தீர்மானிக்க மாநாடுகள் கூட்டுவது முரண்பாடாக உள்ளது.”8  ஏன்று கூறுகிறார்.

            அன்றைய நாட்களிலிருந்து உலகையே புரட்டிப் போடும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்றிருந்த காலத்திலும், ஒரு பெண்ணுக்கு, வீடு, கணவன், பிள்ளைகள் என்ற நெறியே வாழ்வின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.  பேண்ணின் வாழ்க்கையில் இன்று புதிது புதிதாக முளைத்திருக்கும் சிக்கல்கள் எல்லாமே இந்த மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகின்றன.  தெய்வத்தைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவன் மட்டுமே மேலானவள்.  ஆப்படிப்பட்டக் கணவனை மகிழ்வித்து, அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவனால் பெற்றிருக்கும் வாழ்வுக்கு எவ்வித பங்கமும் வராமல் வாழ்ந்து நன்றிக் கடன் செலுத்தக் கூடியவள் பெண் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றாள்.  

முடிவுரை

            பெண்ணின் சகூகத் தகுதி நிலை என்பது ஆணின் சார்பாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  கல்வி, அரசியல், பொருளாதாரத் துறைகளில் பெண் தனித்து நின்றும், குழுவாகச் சேர்ந்திருந்தும, பொது நிலையிலிருந்தும் ஆற்றக்கூடிய வாழ்க்கைப் பணிப்பகிர்வு ஆணின் குடும்ப முன்னேற்றம் கருதியதாக இருக்கிறது.   பெண்ணிய கோட்பாடுகள் குறித்து பல அறிஞர்கள் மொழிகின்றனர்.  பெண்ணியம் குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறை, சுரண்டல் முறைகளை உணர்ந்து கொய்யவும் பெண்ணியம் தெளிவான விவரங்களை முன் வைக்கிறது எனலாம்.

சான்றெண் விளக்கம்

1.          ச.முத்துச்சிதம்பரம், பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்

2.          இரா.பிரேமா, பெண்ணியம் அணுகுமுறைகள்

3.          சி.என்.குமாரசாமி, பெண்ணிண நோக்கில் பாரதி

4.          MADRAS UNIVERSITY, ENGLISH TAMIL DICTIONARY

5.          மொலினாதென்மொழி(மொ.ஆ) பெண்ணியவாதம், அதன் அவசியம் குறித்த சில கேள்விகள்

6.          ஆரங்க மல்லிகா, தமிழ் இலக்கிமும், பெண்ணியமும்.

7.          திரு.வி.க, பெண்ணின் பெருமை

8.          வாசுகி, பெண்ணியம் பேசலாம் வாங்க.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி

           உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை

           செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

            ஓசூர் – 635 126

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »