அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான-அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும். 

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here