Sunday, July 20, 2025
Home Blog Page 35

சைக்கிளுக்கு ஒருரூபாய் வாடகை

     ஆண்டு-1960. படிப்பறிவு இல்லாத கிராமம். பண்ணையார் முதல்கொண்டு தலையாரி வரை பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற ஊர். அந்த ஊரில் எல்லோரும் அறிவாளிகள். ராத்திரி ஊருசனமெல்லாம் தூங்கிட்டாங்க. எல்லாம் அடங்கி இருட்டாய் இருந்தது அந்த ஊர். நடுசாமத்து வாக்குல மூணு மாசமா இழுத்துக்கிட்ட கிடந்த செல்லம்மா பாட்டி செத்துப்போச்சு. முடியாம கிடந்தப்ப மகன், மகள், பேரக்குழந்தைகள் என எல்லாரும் செல்லம்மா பாட்டிக்கு பாலு ஊத்துனாங்க. ஆனா பாட்டி உசிரு ரொம்ப கெட்டி போல. சாவே நெருங்கல. கடைசியா அந்த கிராமத்துக்காரர் ஒருத்தர் செல்லம்மா பாட்டியோட புருஷன் சன்னாசிய, பால ஊத்த சொன்னாரு. சன்னாசி தாத்தாவும் பால பாதிகூட ஊத்துல பாட்டியோட தலை தொங்கிடுச்சி. ஓ ன்னு பெரிய அழுகுரல் வேற. அங்கிருந்த எல்லோரும் ஒரே நேரத்துல தலையை விரிச்சிப்போட்டுகிட்டு கத்த ஆரமிச்சாங்க. வெளிய இருந்த சொந்தகாரங்களும் “ஐயோ! செல்லம்மா கிழவி செத்துப்போச்சா… பாவம்” என்று மூக்கின் மேல் விரல் வைத்து இழவு வீட்டின் வாசலில் கொஞ்ச நேரம் நிற்கிறார்கள். ஒவ்வொருத்தராக தூக்கம் வரவே களைய ஆரமித்தனர். கூட்டம் களைய களைய அழுகையும் சத்தமும் கொஞ்சகொஞ்சமாக குறைய ஆரமித்தமித்தது. வயசான கிழவி பாரு. கொஞ்ச நாளவே உடம்புக்கு முடியாம இழுத்துகிட்டு கிடந்தது. அந்த கிழவிக்கு பீ மூத்திரம் அள்ளுரதுல மருமக ரெண்டு பேத்துக்கும் ஏகப்பட்ட மனகசப்பு வேற.

     செல்லம்மா கிழவி செத்தது யாருக்கு நன்மையோ இல்லையோ? அந்த வூட்டு மருமகள்கள் ரெண்டு பேத்துக்கும் ஒரே சந்தோசம். ஏன்னா? இனிமேல் பீ மூத்திரத்தை அள்ள வேண்டாம் பாரு அதான். சாகரதுக்கு முன்னாடி அந்த பாட்டி மருமகளுக தான் செத்ததுக்கு அப்புறம் சண்ட போடக்கூடாதுன்னு, தான்கிட்ட இருந்த அறுபது பவுணயும் சரிபாதியா பிரிச்சி கொடுத்திருச்சி. தான் போட்டுருக்கிற எட்டு பவுண். அப்புறம் சன்னாசி தாத்தா கையில கழுத்துல போட்டுருக்கிற மூணு பவுணு. ஆக மொத்தம் பதினோரு பவுணுதான் இப்ப அவங்ககிட்ட இருக்கு. இதுகூட இல்லன்னா அநாத பொணமா போகனுமேன்னுதான் எடுத்து வச்சிருக்கு அந்த கிழவி.

     அந்த செவுத்து ஓரத்துல கழுத்துல போட்டிருந்த துண்ட வாயில வச்சிக்கிட்டு அழுதுகிட்டு இருந்தாரு சன்னாசி தாத்தா. அந்த நேரத்துல தகவல் அறிந்த ஊர் பண்ணையார் வர்ரார். பண்ணையாரை பாத்தவுடனே தேம்பி தேம்பி அழுகிறார் சன்னாசி. பண்ணையாரும் அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்கிறார். பொழுது விடிந்துவிட்டது. செல்லம்மா கிழவி செத்ததை ஊர் சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும். முடிந்தவரை எல்லா ஊருக்கும் சொல்லி அனுப்பியாகிவிட்டது. கடைசியா செல்லம்மா கிழவிக்கு தங்கச்சி ஒருத்திக்கு மட்டும் தகவல் சொல்லனும். யார அனுப்புறதுன்னு பண்ணையார் யோசித்து கொண்டிருந்தார். அப்பதான் அவருக்கு பச்ச மிளகாய் ஞாபகம் வந்தது.

     பேருக்கு ஏத்தமாதிரி காரமாகத்தான் இருப்பான் அவன். அதுகூட அவனுக்கு உண்மையான பேரு இல்ல. மாரிமுத்து என்ற பேருதான் உண்மையான பேரு. அப்பா அம்மா இல்லாதவன். ஒரு காலத்துல கிழவி ஒருத்தி கைக்குழந்தையோட வந்தா. இந்த ஊருலயே தங்கி இவன வளத்துகிட்டு வேலைபாத்தா. இவன் சின்ன வயசா இருக்கும்போது பச்சமிளகாய கடிச்சு கடிச்சு சாப்பிடுவான். கொஞ்சம் கூட காரமே தெரியாது. தண்ணிகூட குடிக்கமாட்டான். அதனால, கூட இருக்குற பசங்க எல்லாம் இவனை பச்சமிளகாய்ன்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க. வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இவனும் அநாதயாயிட்டான். யாரு எந்த வேல சொன்னாலும் செய்வான். கொடுக்குறத வாங்கிக்குவான். அதுலையே திண்ணுக்குவான். இவனப் பாக்கனுமின்னா ஊர் மொக்குல இருக்குற பிள்ளையார் கோயில்ல பாக்கலாம். ஏன்னா? அங்கதான் அப்பஅப்ப அபிஷேகம் நடந்திட்டு இருக்கும். ஏதாவது சாப்பிட கிடைக்கும் என்ற எண்ணம்தான் அவனுக்கு.

     “ஏலே கருப்பா, புள்ளையார் கோயில்ல பச்சமிளகா இருப்பான். நான் வரச்சொன்னதா அவனை வரச்சொல்லு” என்றார் பண்ணையார்.

     “சரிங்கய்யா… உடனே சொல்லிடறேன்” என்றான் கருப்பன்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பச்சமிளகாய் இழவு நடந்த வீட்டிற்கு வந்து விட்டான். பண்ணையாரைக் கண்டவுடன் பயபக்தியோடு அருகில் சென்று நின்று கொண்டான்.  “ஏண்டா பச்சமிளகா நம்ம செல்லம்மா பாட்டியோட தங்கச்சி ஆரியபாளையத்துல வாக்கப்பட்டுருக்கு. அவுங்க குடும்பத்துக்கு இழவு செய்திய சொல்லிட்டு வந்திரு. இந்தா ரெண்டு ரூபாய். ஒரு ரூபாய்க்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கு. இன்னொரு ரூபாய்க்கு சாப்பிட்டுக்கு” என்றார் பண்ணையார்.

“ஐயா, வழி எப்படி போவணும்” என்றான் பச்ச மிளகாய்

“ஏலே கருப்பா, இவகிட்ட ஆரியபாளையத்திற்கு வழிய சொல்ற” என்றார் பண்ணையார்.

பச்சமிளகாய தனியே அழைச்சிட்டு வந்த கருப்பன், “அடேய், நேரா பனியேரிக்கு போய்டு. பனியேரி கரையிலயே போனின்னா மதுரவீரன் கோயில் ஒன்னு வரும். அந்த கோயில்ல இருந்து வடக்கால ஒரு மண்ணு சாலை போகும். அந்த சாலை முடியரப்ப ஒரு தோட்டம் தெரியும். அதான் செல்லம்மா பாட்டியோட தங்கச்சி பாட்டி தோட்டம். அங்கதான் நீ போயி இழவு செய்திய சொல்லனும்” என்றார் கருப்பன்.

“சரிங்கண்ணா அப்படியே செய்திடுரேன்”

“சரி போற வழியில கயறுகாரங்க ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டுட்டு போடா..”

“சரிங்கண்ணா…“

கையில் இருந்த ஒரு ரூபாக்கு கயறுகாரங்க ஹோட்டல்ல முடிந்தவரை நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. அடுத்த ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். சைக்கிளில் பிரேக், காத்து எல்லாம் சரியாக இருக்கா என்று பாத்துக்கொண்டான் பச்சமிளகாய். பனி ஏரியில் செல்லும் போது ஏரியின் அழகை ரசித்துக்கொண்டேப் போனான். இரண்டொரு இடங்களில் மீனவர்கள் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏரிகளின் நடுவில் சுற்றியிருக்கின்ற கருவேலமரங்களை பற்றி எண்ணிக்கொண்டே போனான். தண்ணிக்குள்ள யார் வந்து இந்த கருவேலமரங்களை நட்டிருப்பார்கள்? இந்த மரமானது எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என்று எண்ணிக்கொண்டான்.

மதுரைவீரன் கோயிலை கடக்கும்போது பச்சமிளகாயின் மனசு நடுங்கத்தான் செய்யது. பெரிய பெரிய குதிரைகள், நாய் சிலைகள் என அமர்க்களப்படுத்திருந்தனர். அவன் அதையெல்லாம் புதியதாகப் பார்ப்பவன்போல் பார்த்துக்கொண்டிருந்தான். எப்படியோ இழவு செய்தி சொல்ல வேண்டிய தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான் பச்சமிளகாய்.

 தோட்டத்திற்கு வந்தாச்சு. இழவுச் செய்தியை மட்டும் சொல்லனும்” என்று யாரையோ தேடினான். அங்கு ஒரு பெண்மணி பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவள் தங்கச்சிப்பாட்டிக்கு மருமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க… செல்லம்மா பாட்டி செத்து போச்சுங்க..” என்றான். அந்த பெண்ணிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. மீண்டும் சொன்னான். மீண்டும் எந்தவொரு பதிலும் அப்பெண்ணிடம் இல்லை. அப்போது தோட்டத்தில் இருந்து வேர்த்து வியர்த்தபடி வெயிலுக்கு முக்காடிட்டபடி ஒரு கிழவி வந்தாள். “யாருப்பா நீ?” அந்த பொண்ணு வாய் பேசாது. என்னன்னு என்கிட்ட சொல்லு” என்றாள்.

“செல்லம்மா பாட்டி செத்துப்போச்சி..” என்றான்.

முகம் சுருங்கியது. கைக்கால் வெடவெடத்தது. கண்களில் நீர் அப்பியது. அப்படியே சுருண்டு விழுந்தாள் அக்கிழவி. எல்லோரும் ஓடி வந்தார்கள். அழுகை பெரிதானது. சொந்தகாரங்க எல்லாம் ஒன்னு சேந்தாங்க. மாட்ட வண்டியில பூண்டி உடனே கிளம்பினாங்க. பச்சமிளகாயும் அவுங்க வண்டி பின்னாடியே சைக்கிள்ள போனான்.

     இரவு மணி 6.00 க்கு வீடு போய்ச்சேர்ந்தான் பச்சமிளகாய். செல்லம்மா பாட்டிக்கு நடக்க வேண்டிய அத்தனைச் சடங்குகளும் நன்றாக நடந்து முடிந்தன.  உறவுக்காரங்க எல்லோரும் அவுங்க அவுங்க ஊருக்கு திரும்பி போய்ட்டு இருந்தாங்க. பண்ணையார் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றி சன்னாசி தாத்தாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பச்சமிளகாய் வாசலில் அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

     “என்னாடா பச்சமிளகாய், எங்கடா போயிருந்த பாட்டிக்கு வாக்கரிசி கூட போடலியே” என்றார் பண்ணையார்.

     “ஐயா நீங்கதான இழவுச் செய்தி சொல்ல அனுப்பினிங்க”

     “ஆமாண்டா… அனுப்புனேன். அவுங்களே வந்துட்டு காரியத்த முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டாங்க… நீ என்னாடான்னா இப்பதான வர்ர..”

     “ஐயா, நீங்க கொடுத்த ரெண்டு ரூபாய்ல ஒரு ரூபாய்க்கு நல்லா சாப்பிட்டேன். இன்னொரு ஒரு ரூபாய்க்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இழவு சொல்ல போனேன்”

     “அதுக்கும் நீ தாமதமா வர்ரதுக்கும்  என்ன சம்பந்தம் பச்சமிளகா”

     “எனக்குதானே சைக்கிளே ஓட்டத்தெரியாது! நான் சைக்கிளை தள்ளிகிட்டே போயிட்டு தள்ளிகிட்டே வந்தேன். அதான் தாமதமா ஆயிடுச்சிங்யா…”

“என்ன! உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதா”

“ஆமாங்கய்யா”

“போடா புண்ணாக்கு பயலே… உன்கிட்ட வேலை சொன்னது என் தப்புதான். சரி சைக்கிள் ஓட்டத்தெரியாதுல்ல அப்புறம் எதுக்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டுப் போன”

“பண்ணையார் சொல்லுக்கு மறுவார்த்தை ஏதுங்கய்யா… நீங்கதான சொன்னிங்க ஒரு ரூபாய்க்கு சைக்கிள வாடகைக்கு எடுத்துக்குன்னு அதான்” என்றான் பச்சமிளகாய்.

அவன் திட்டுருறானா இல்ல புகழுறானான்னு தெரியாம முழித்துகொணடிருந்தார் பண்ணையார்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தன்னம்பிக்கை கட்டுரை – 1

     

தன்னம்பிக்கை கட்டுரை
முனைவர் நா.சாரதாமணி

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உலகில் அனைத்தும் வசப்படும் முயற்சி செய்யுங்கள். இந்த வாசகத்தை வாசிக்கும்போது ஒரு வினா எழுகிறது. அது எப்படி எல்லாம் வசப்படும்? அதாவது தூக்கனாங்குருவி அழகாக மாடிவீடு போல தன்கூட்டைக் கட்டும். ஆனால் ஆறறிவு மனிதனால் இயலாது. தேன்கூடு விந்தையான ஒன்று. அதுவும் அந்தத் தேன்ஈக்களால் கட்ட இயலும். இந்த மனிதனால் இயலாது. அதைப்போல, மனிதனால் ஒரு துறையில் சிறப்பாகத் தன்னை நிலைநிறுத்த முடியும். உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனிதனால் வசப்படுத்த முடியும். விடாமுயற்சி செய்யுங்கள்.

     நமது பூமியின் மொத்த பரப்பு என்ன? என்பதையும் அதன் அகலம், உயரம், துருவங்கள், உயர்அழுத்தம் பூகம்பம், எரிமலைகள் என்று எத்தனையோ அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நமது விஞ்ஞானிகள் கண்டு கூறியுள்ளனர்.  ஆனால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும், மனதிற்கு உள்ள ஆற்றலையும் இன்னும் அளவிட்டு கூற இயலவில்லை. ஏனென்றால் அது அளவிடற்கு அப்பாற்பட்டது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சாதனைகள் செய்து மனித சமூகத்தை உயர்த்தப் பிறப்பெடுத்தவர்கள். இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்தால் இந்த உலகம் வசப்படும் என்பதில் ஐயமில்லை.

சாதிப்பதில் தளராதீர்

     மனிதன் பிறப்பு முதல் இறப்பை நோக்கி செல்கிறான். இது அனைவரும் அறிந்ததே. என்றாவது ஒருநாள் பிறந்த குழந்தை வளர்ந்து இறந்தாக வேண்டும். எனவே அதற்கு முன்பே தனக்குப் பிடித்த ஆக்கபூர்வமான ஒன்றை சாதித்தே ஆகவேண்டும். மனிதனால் ஏதாவது ஒரு துறையில் கண்டிப்பாகச் சிறப்பாகச் சாதனை படைக்க முடியும். இது உண்மை. அவ்வாறு சாதிக்க என்ன செய்யலாம்? முதலில் ஒரு மனிதன் தனக்கு என்ன பிடிக்கும், எந்த துறையில் ஆர்வம் அதிகம், என்று தன்னைதானே தெளிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மற்றவர்களின் சம்பாசனைகளை அலசுவது என்றால் மிகவும் விருப்பம். ஆனால் அவ்வாறு மற்றவர்களை கவனித்தால் ஒருபோதும் தன்னைக் கவனிக்க இயலாது. எனவே மனிதன் தம்மை உணர வேண்டும். கவனிக்க வேண்டும். எது குறைவாக உள்ளது என்பதை தெளிய வேண்டும்.

மாற்றும் வழிகள்

     ஒரு மனிதன் முதலில் தன்னைதானே உயர்வாக நினைக்க வேண்டும். இந்நிலை மனதில் வருவதற்கு பல இன்னல்கள், கவலைகள், தடைகள் போன்றவற்றைக் கடந்து மனம் ஓரளவிற்கு பக்குவம் அடைந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் சிலகுறைகள் இருப்பது இயற்கையானதே. எனவே மனிதர்களின் மனதிலும் குறைகள் இருப்பது இயல்பானது இவைதாழ்வுமனப்பான்மை, சட்டென்று கோபம் வருதல், மற்றவரின் முன்பாகப் பேசுவதற்கு தயக்கம்காட்டுதல், போன்றவை அவரவர் வாழ்க்கைச் சூழலின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். அதனை மாற்ற வேண்டும். உங்களை மாற்ற நீங்கள் முயற்சித்தால் மட்டுமே முடியும். உதாரணமாகத் தாவரவியல் வள்ளுநர்கள் தாவரங்களை நன்றாக உற்றுக்நோக்கி கவனிப்பார்கள். சில தாவரங்கள் நன்றாக வளரும் மலர்கள் பெரிதாக இருக்காது. நன்றாக மலரும் ஆனால் அழகான வண்ணத்தில் இருப்பதில்லை. இது குறையாகத் தெரியும்போது அதை நீக்க அழகான பெரிய மனம் கவரும் வண்ணங்களில் பூக்கும் தாவரங்களின் கிளைகளை எடுத்துக் கொண்டு குறையாக உள்ள தாவரத்தில் ஒருகிளையை எடுத்துவிட்டு அதன் இடத்தில் முன்பே எடுத்த வண்ணமலரின் கிளையை ஒட்டி கட்டிவிடுவார்கள். இந்தக் கிளைக்கும் குறை தாவரத்திலிருந்து நீர் உரம் எல்லாம் சேர்ந்து வளர்ந்து அந்தக் குறை நீங்கி நிறைவான வண்ண மலர்களை தரும். ஒரு தாவரத்தில் நிறைவைக் காணவேண்டும் என்று விரும்பும் மனித இனம்தம்மனதிலும் உள்ள குறைகளை நீக்கி நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.

எண்ணம் செயலாக மாறவேண்டும்

      மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை அவனது உடல் மாறிக்கொண்டே உள்ளது. அவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் உங்கள் எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் செயலாக மாறவேண்டும். சிலர் மற்றவரின் விமர்சனங்களால் அழுத்தப்பட்டு, மனம் குழம்பி தன்னுடைய இயல்பானக் குணத்தை அறியாமல் வேறு ஒன்றை தனதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் விதி என்று தன்னைத்தானே நொந்துகொண்டு காலத்தை முடித்துவிடுகின்றனர். தீயவழிகளில் சென்று சமுதாயத்திற்குக் கேடான பல செயல்களைப் புரிந்து தன்னையும் அழிவான பாதைக்கு இழுத்து சென்றுவிடுகின்றனர் இவ்வாறான கேடான எண்ணங்கள் தன்மனதில் இருந்தால் அவற்றை நீக்கிக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.

குறைகளை நீக்குங்கள்

     குறை என்பது எல்லோரிடத்திலும் உள்ளது. உணவில் சேர்க்கும் இஞ்சியின் புறம் நஞ்சு என்பார்கள். எனவே அதன் தோல் நீக்கப்பட வேண்டியது. மாம்பழத்தில் விதையை உண்ண முடியாது. பலாப்பழத்தில் தோல் நீக்கப்பட வேண்டியது. எனவே நீக்கப்பட வேண்டியவை ஆயிரக்கணக்கானவை உள்ளன. என்றாலும் உங்களிடம் பயன்மிக்க திறமைகள் உன்னத குணங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு உங்களின் குறைகளை நிறைகளாக மாற்றுங்கள். இயற்கை, இலையுதிர் காலங்களில் காய்ந்த ஆடையை நீக்கி வசந்தகாலங்களில் பசுமையாகத் துளிர்த்துக் கொள்வதுபோல உங்களை செம்மையாக மாற்றிக்கொள்ளுங்கள். நான் அறிந்த ஒரு சிறுவன், அவன் அம்மாவிடம் கூறுவான் “என்னை எது பயமுறுத்துகிறதோ அதை, அதன் அருகிலேயே சென்று பார்த்துவிட்டு வருவேன். அதன் பின்னர் எனக்கு அச்சம் வராது” என்பான். பயம் உங்களிடமிருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்று.

 மாறாத குறையை நிறையாக மாற்றுங்கள்

சிலநேரங்களில் குறைகளும் உயர்வையே தரும். ஒரு மலைபிரதேசம் அடிவாரத்தில் அழகான கிராமம். அங்கு இளைஞர்களிடையே பல போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் ஓட்டப்பந்தயமும் ஒன்று. ஒட்டப்பந்தயம் என்றால் அது சாதாரணமாக மைதானத்தில் ஓடுவது அல்ல. மலைப்பாதையில் ஓடுவது. அது சுமார் இருநூறு மீட்டர் ஓட்டம். அந்த ஓட்டத்தின் நடுவில் ஐம்பது மீட்டர் தூரம் ஒத்தையடி பாதையாகச் செல்லும். சிறிது தவறினால்கூட மலையிலிருந்து பாதாளத்தில்தான் விழவேண்டும். எழும்பும்கூட கிடைக்காது.

இவ்வாறான பாதையில் ஓடி வெற்றி பெறுபவர்களுக்குப் பலத்த பரிசுகள் காத்திருந்தன. பந்தயத்தின் துவக்கத்தில் ஐம்பதுபேர் ஓட ஆரம்பித்தனர். சிறிது தூரத்தில் இருப்பதுபேர் நின்றுவிட்டனர். மீதம் இருந்தவர்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டு பயந்து இருபதுபேர் நீங்க, மற்ற ஒன்பது பேர், நண்பர்களால் தடுக்கப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தொடக்கம் முதல் இறுதிவரை ஓடிச்சென்று பரிசுகளைத் தட்டிச்சென்றார். எல்லோருக்கும் வியப்பு! பிறகுதான் தெரிந்தது அவர் காது கேளாதவர் என்று. மற்றவர்கள் பிறர் பேச்சைக்கேட்டு பயம் தொற்றிக்கொள்ள போட்டியைத் தவிர்த்தனர். ஆனால் இவர்மட்டும் காது கேளாததால் மற்றவரின் பேச்சு தன்னை ஒன்றும் செய்யாமல் இருந்ததால் இறுதி வரை ஓடி வென்றார். இங்கு அவரின் குறை பயனைத்தந்தது. அதுபோல மற்றவர்கள் செய்யும் விமர்சனங்களால் தாழ்மையான மனப்பான்மையில் இருப்பவர்கள் நம்நாட்டில் அதிகம். எனவே மற்றவர்கள் உங்களை பற்றி கூறுவது உண்மையான கணிப்பு அல்ல. உங்களை பற்றி நீங்கள் தீர்மானிப்பதே சரியான கணிப்பு என்பதை உணருங்கள். உங்களைப் பற்றிய எண்ணம் உங்களுக்கு உயர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் மாற்றுங்கள். எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ, அவன் உலகத்தை அறிந்தவன் என்பர். விதிப்பதற்கு எதுவும் இல்லை. உலகில் மாற்றுவதற்கும், மாறுவதற்கும் நிறைய உள்ளன. எனவே உங்கள் தலைவிதி உங்கள் கையில்தான் உள்ளது. அதை நிறைவாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இறைவன் மனிதஉடலில் குறை உறுப்புகளின் திறனை மற்ற உறுப்பகளில் அமைத்துள்ளான். எனவே குறை உடலில் இல்லை. மனதில்தான் உள்ளது.

ஆசிரியர் : முனைவர் நா.சாரதாமணி

மறக்க முடியுமா (சிறுகதை)

 

நீண்ட நாளுக்குப் பிறகு அவன் வெளியூர் வேலையிலிருந்து தன் ஊருக்கு வந்து மகிழுந்தை எடுத்து மண் சாலையில் புழுதி பறக்க ஓட்டிக்கொண்டு போகும்போது ஆடுகள் தன் எதிரே வந்துக்கொண்டு இருந்தது பக்கமாய் வந்ததும் ஆடுகள் தன்னை கடந்துபோகட்டும் என்று மகிழுந்தை நிறுத்தி சாளரத்தைப் பாதியாக திறந்து வெளியே பார்த்தான். ஆடு மேய்ப்பவளின் ஒரு கையில் குச்சி ஒன்றும், இடுப்பில் இரண்டு வயது குழந்தையை அணைத்தபடி மற்றொரு கையில் தூக்குச் சட்டியும் இருந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை அழுக்காகவும், காதிலும் மூக்கிலும் ஒன்றுமில்லாமலும், நெற்றியில் பொட்டு இல்லாமலும், தலைமுடியில் பூவும் இல்லாமலும் முடியெல்லாம் முகத்தில் விழுந்திந்த முடியைக் குச்சி வைத்திருக்கும் கையாலே சரி செய்துக்கொண்டு அவனைப் பார்த்து விட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு போனாள்.

                பெயர் தான் முல்லைக்கொடி. ஆனால், இலையையும் பூவையும் உதிர்த்துவிட்ட முல்லைக்கொடி போல் அவள் காட்சியளித்தாள்.

                பெயர்தான் மகிழன். ஆனால், முல்லைக்கொடி அவனைக் கடந்துசென்ற பிறகு அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை

                மகிழன் மகிழுந்தை ஓட்டிக்கொண்டு போகையில் அவன் மனதில் பல எண்ணங்கள் திரைபோட்டன பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றின. அவை

                அவன் வெளியூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்து தன் மூன்றக்கு மொட்டை மாடியில் நின்றுக்கொண்டு தொலை தூரக் கருவி தன் ஊரைப் பார்த்தான். ஒரு பக்கம் தென்னந்தோப்பும் நெல் வயல்களும், மறுபக்கம் வாழைத் தோட்டமும் கரும்பு வயல்களும் எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளித்தன அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கையில் மண் சாலை வழியாகத் தன் ஊருக்கு கிழக்குப் பக்கமாக இருக்கின்ற மேட்டு நிலத்தில் ஆடு மேய்ப்பதற்காக இரண்டு பெண்கள் ஆட்டை ஓட்டி வந்தார்கள் அதை தொலைதூரக்கருவியில் பார்த்த பெண்களில் ஒருத்தி அழகென்றால் அவ்வளவு அழகு. ஒரு அழகு இன்னொரு அழகை சுமந்து கொண்டு போவதுபோல் ஆட்டின் பின்னால் வந்தாள். அந்த அழகைப் பார்க்க அவன் மொட்டை மாடியிலிருந்து இறங்கி அவசர அவசரமாக ஓடி வந்து முல்லைக் கொடியைப் பார்ப்பதற்குள் அவள் கடந்துபோய்விட்டாள். ஆனால், மகழனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதயம் சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது போல் அவனுக்குத் தோன்றியது.

                கல்லூரியில் படித்த பெண்களில் இவ்வளவு அழகான பெண்களை நான் பார்த்ததே கிடையாதே. இவள் யாராக இருக்கும் ஆடு மேய்க்கும் குடும்பத்திலா பிறந்திருப்பாள் ச்சே! ச்சே! இருக்காது. அந்த ஊருக்கு விருந்தாளியாக வந்திருப்பாள். அவள் உறவினர்களுடன் ஆடு மேய்ப்பதற்காக வந்திருக்கலாம் என்று தனக்குள் நினைத்தான்.

                அவள் எந்த ஊராக இருக்கும்? எங்கு படிப்பாள்? கம்பன் இராமனின் உடல் அழகை வருணித்ததைவிட, புகழேந்தி தமயந்தியின் அழகை வருணித்ததைவிட இவள் இவ்வளவு அழகாக இருக்கிறாளே! இவள் அழகுக்கு யாரும் நிகரில்லை என்று நினைத்துவிட்டு அவள் மீண்டும் எப்பொழுது வருவாள்? அவளை எப்போது பார்ப்பது? அவள் என் உயிரை குடித்துவிட்டாள் என்று நினைத்து நனைத்து ஓர் இரவு கழிவதற்குள் அவன் பட்ட பாடு எத்தனை எத்தனையோ! மறுநாள் காலையில் முல்லைக்கொடியும், நெய்தலியும் வரும் வழியில் காத்திருந்தான். அவர்கள் ஆடுகளை ஓட்டிவருவதைப் பார்;த்ததும். மகிழன் மனது திருவிழா வைத்ததுபோல இருந்தது.

                அவர்கள் அவனைக் கடந்து சென்றார்கள் அவனுடைய மனம் அவர்களைத் தொடர்ந்து செல்லலாமே! என்றது இருந்தாலும் சிறிது நேரம் கழித்துச் சென்றான். அவர்களிடம் எப்படி பேசுவது என்று தயங்கினான். அவர்களே! என்ன சாமி வேண்டும்என்றார்கள்.

                ஆட்டுப்பால் குடித்தால் உடல் பலம் பெருகும் என்று கூறி எனக்கு ஆட்டுப்பால் வேண்டும் என்றான்.

                சாமி உங்களைப் பார்த்தால் உயர்ந்த குடியில் பிறந்தவர் போல் தெரிகிறதுஎன்றார்கள்.

                பரவாயில்லை உங்களுடைய சோற்றுச் சட்டியின் மூடியில் பால் கறந்து கொடுங்கள்என்றான்.

                ஏ! முல்லைகொடி ஆட்டின் காலை பிடித்தக்கொள். நான் பால் கறக்கிறேன்என்று தோழி நெய்தலி கூறி பாலை கறந்து பூப்போன்ற முல்லைகொடி கையில் கொடுத்தாள்.

                அவனும் வாங்கி பாலைப் பருகினானோ இல்லையோ கண்ணால் அவள் அழகைப் பருகினான்.

                மீண்டும் வருகிறேன்என்று கூறி விட்டு விட்டு வீட்டிற்கு வரும்போது இந்த கிறுக்கின் அழகு என்னைக் கிரக வைக்கிறது. திக்கு முக்காட செய்கிறது. தரைமீது நடக்க முடியாமல் செய்கிறது. தன்னுடைய மனசு கட்டுக்கு அடங்காமல் அவளிடமே ஓடச் செய்கிறது. தினர வைக்கிறது பதரவைக்கிறது. குளிர், காய்ச்சல் வர வைக்கிறது என்று நினைக்கின்றபோதே வீடுவந்து சேர்ந்தான். தன் படுக்கையின் மேல் போர்வையை எடுத்து போர்த்தி படுத்துக்கொண்டான். ஆனால் கண் மூடினாலும் மனசின் கதவு மூடவில்லை.¬

                அவள் மனசுக்குள் இறக்கி அவனுடைய உயிரை குடைகிறாள்!

                அவனுடைய இரவுக்கு வெளிச்சமாக நிலவாய் வந்து  நிற்கிறாள்.

                அவன்  இதயத்தை கூறுபோட்டு விற்கிறாள்.

                பக்கத்தில் அழைத்து பேசாமல் துரத்துகிறாள். அவள் அழகை பயன்படுத்தி அவனை அடிமை யாக்குகிறாள்.

                இப்படிப்பட்ட பெண்னை அவன் நினைகையில் காமன் கெஞ்சிய பிறகும் கண்டுக்கொள்ளாமல் போகின்ற அழகை கொண்டவள் பாரதி கனவில் குயில் பாட்டில் தோன்றிய பெண்ணைவிட இவள் அழகானவள்  என்று நினைத்து மறுநாள் அவளைப் பார்த்ததும் கேட்டுவிட வேண்டும் என்று இரவு முழுக்க உறக்கம் கொள்ளாமல் விழித்திருந்தான் கோழி கூவியதும் மகிழனுக்கு உயிர் வந்ததுபோல் இருந்தது.

                பொழுது விடிந்ததும், அவள் வழக்கம்போல் வரும் வழியில் சென்று அமர்ந்து கொண்டான். ஆனால், அவள் வரவில்லை. அதற்கு பதிலாக அவளுடைய தந்தையார் ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தார்.

                முல்லைகொடிக்கு என்னாச்சோ? ஏதாச்சோ என்று அவன் மனம் படபடத்தது.

                அவன் மகிழுந்தை எடுத்தக்கொண்டு நகரத்திற்கு செல்லலாம் என்று நினைத்து புறப்பட்டான்.

                ஊரை கடப்பதற்கு முன்னாலே அவள் ஒரு பாறை மீது அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். மகிழுந்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவளருகே சென்றான். அவ்வழகின் அருகே நிற்கமுடியாமல் தவித்தான் அவளே என்ன சாமிஎன்று கேட்டாள்.

                மகிழன் தயங்கி, தயங்கி பேச ஆரம்பித்து நான் உன்மீது அன்பு செலுத்தகிறேன். உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்என்று கூறினான்.

                சரி நீங்கள் கேட்டதில் தவறேதும் கிடையாது ஆனால், நாங்கள் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் நீங்களோ! உயர்ந்த குடியைச் சேர்ந்தவர். நாங்கள் ஆடு மாடு மேய்க்கின்றவர்கள். எங்கள் மீது சாணம் கோமியம் போன்ற நாற்றமும் நாங்கள் இருக்கும் இடத்திலும் எப்போதும் வீசுமே! அதுமட்டுமல்லாமல்  ஆடுகள் இறந்து விட்டால் அதை வெட்டி உறவினர்க்குக் கொடுத்துப் போக மீதியை உப்புக்கண்டம் போட்டு பாறை மீது காய வைப்போம் அதை காகம், பருந்து  வந்து  எடுத்தக்கொண்டு  போகாமலிருக்க பறவைகளை ஓட்டுவோம். அதைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன், என்மீது புலால் நாற்றம் வீசுகிறது. ஆகவே உங்களுக்கும், எனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதுஎன்று கூறி மறுத்து விடுகிறான்.

                மேலும் உங்கள் உயர் குடியிலே பிறந்த உங்கள் தந்தையார் கைக்காட்டுகின்ற பெண் ஒருத்தியை மணந்து கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை நல்லாயிருக்கும், நானும் எங்கள் குடியிலேயே பிறந்த ஆடவன் ஒருவனை மணந்து கொள்கிறேன், நீங்கள் வந்த வழியாக போகலாம் என்றாள்.

               முடியாது நீ சம்மதம் சொல் நாம் இரண்டு பேரும் எங்கோ சென்று திருமணம் செய்து கொண்டு ஏதாவது ஒரு வேலை செய்து நிம்மதியாக வாழலாம்என்றான் மகிழன்.

                நாம்  இரண்டு பேரும் நிம்மதியாக வாழலாம். ஆனால், இவ்வூரில் இருக்கின்றவர்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள்என்றாள்.

                அதற்கு மகிழன் ஏன் என்றான்.

                நீங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர் நான் தாழ்ந்த குடியில் பிறந்தவள் நான் உங்களை மயக்கி அழைத்துச் சென்றுவிட்டேன் என்று கூறி  உங்கள் ஆள்முன் எங்கள் ஊரில் இருப்பவர்களை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் கூரையைப் பிரித்தப் போட்டு தீயிடுவர்கள் காதலர்கள் எங்கே? என்று கேட்டு மேலும் கொடுமை செய்வார்கள். நம்மை தேடி வந்து கண்டு பிடித்து உங்கள் தந்தையார், என் மானத்தையே வாங்கி விட்டாயேஎன்று கூறி நம்மை வெட்டி ஆற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ போட்டு விடுவார்கள். அப்படி இல்லையென்றால் உன்னை மட்டும் அழைத்துக்கொண்டு, என்னைக் கொன்று தொடர் வண்டி பாதையில் வீசிவிட்டுச் செல்வார்கள். இதெல்லாம் நமக்குத் தேவையா?

                நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையைரை வேதனையில் தவிக்கவிட்டு விட்டு ஏன் நாம் இன்பத்தைத் தேடிப் போக வேண்டும். ஏதோ எங்கள் ஊரில் உள்ளவர்கள் உங்கள் ஊரின் மேட்டு நிலத்தில் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு போய் மேய்க்கின்றார்கள். உங்கள் ஊரில் உள்ளவர்களும் எங்கள்  ஊரைக் கடந்துதான் போக வேண்டும். நம்முடைய செயலால் இரண்டு ஊர்களுக்கும் சண்டை ஏற்பட்டு காலம் முழுவதும்  தீராத பகையாக இருந்துவிடும். ஆகவே நம் காதல் பொருந்தாதுஎன்று கூறிவிடுகிறாள்.

                அதற்கு மகிழன் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே!என்றான்.

                அதற்கு முல்லைக்கொடி காதலுக்கு உயர்வு தாழ்வு இருக்கிறது நீங்கள் படிச்சவங்க அதனால், புரிந்துகொண்டு புறப்படுங்கள் என்றாள்.

                அவன் நகரத்திற்குப் புறப்படாமல் கனத்த இதயத்தோடு வீட்டிற்கு திரும்பி விட்டான்.

                அவனுடைய காதல் செடி ஒரே நாளில் பூத்துத் குளுங்கி, காய்ந்து கனிக்காமலே காய்ந்து கருகி பட்டுப் போய்விட்டது.

                உலகத்தில் தீயைப் போல் மக்களை அழித்து கொரோனா காய்ச்சல் போல் அவனுடைய காதலை உயர்வு, தாழ்வு என்ற நோய் அழித்தது.

          அவன் இதயத்திலிருந்து அவள் ஏணி இல்லாமலே இறங்கிவிட்டாள்.

                கூட்டுக்குள் இருந்த குஞ்சு இறக்கை முற்றியதும் அந்த கூட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாமல் பறந்து சென்றதை போல் அவனுடைய நெஞ்சங்குழியிலிருந்து முல்லை கொடி பறந்துவிட்டாள்.

                முல்லை கொடி பேசிய ஒவ்வொரு  வார்த்தையும்  அவனை சாட்டையில்லாமல் அடிப்பதுபோல் இருந்தது.

                அவனுடைய வெளிச்சத்திற்கு கருப்பு பூசிவிட்டாள். அவனுடைய வண்ண நிறமாக வானவில் ஒரே நிறமாக மாறிவிட்டது.அங்கு அவ்விருவரும் பேசியது யாருக்கும் தெரியாது. இந்த நினைவுகள் எல்லாம் ஒரு நொடியில் வந்து மறைந்தது. அவனுக்கும் திருமணமாகி இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.அவளுக்கும் திருமணம் நடந்த முதலாண்டே கணவன் நோய்வாய் பட்டு இறந்துவிட்டான்.  அவளுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தால் அவள் கணவன் இல்லாதவள், ஊர் தவறுதலாக பேசும் என்று மகிழன் நினைத்தான்.

   என்னத்தான் காலங்கள் மாறினாலும், அவளை மறக்க முடியுமா? அதனால், ஒவ்வொரு முறையும் அவளை கடக்கும்போதெல்லாம் அவன் இதயத்தின் ஓரத்தில் ஏதோ ஒன்று குத்துவதுபோலே வலிக்கிறது.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

 

விடியலைத் தேடுகிறேன்

பொழுதுபுலர்ந்து விட்டது

♥ விடியலைஇன்னும்

   தேடிக்கொண்டிருக்கிறேன்..

   சாலையோரத்தில்

  அம்மாபிச்சைப் போடு

  என் காதுகளில் ரீங்காரம்

  விடியலைத் தேடுகிறேன்..!

 

       ♥  குட்டிச்சுவரில்

வேலையில்லாப் பட்டதாரிகள்

விடியலைத் தேடுகிறேன்..!

 

      ♥ பூங்காக்களில்

        சிருங்கார ராஜாக்களாக

        சோம்பேறிகள்!

        விடியலைத் தேடுகிறேன்..!

 

      குடிமகன்களின்

மகத்தான வெற்றிகளால்

வீதியிலேப் பிள்ளைகள்..

விடியலைத் தேடுகிறேன்..

 

  ♥   கல்வியை

வியாபாரம் செய்யும்

விகடகவிகள் பலபேர்

படிப்பை அறியத் துடிக்கும்

பாமரச்சிறுவர்கள்கன்னத்தில்

கைவைத்தபடியே

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   குடும்பம் என்ற

கதம்பத்தில்ஒற்றுமையைக்

காணத்துடிக்கின்றேன் !

நீயா.. நானா.. போட்டியில்

விவாகரத்து வாங்கி

வாசலோடு பிரிகிறார்கள் !

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   தொலைந்து போன விடியல்

தூரத்தில் இல்லை

கைக்கு எட்டும் தூரம்தான் !

கண்ணால் கண்டு

கைகளினால் பூட்டிடுவேன்

விடியலை ஒரு நாள் !

 

    ♥    தொலையாமல் இருக்கும்

புன்னகையைத் தொலைத்து

புகைத்துக் கொண்டிராதே

பூமியில் உன் பெயரினைச் சொல்ல

போடு விதையை,

முளைக்கட்டும் மரம்அது

பூப்பூக்கட்டும் கனியாகட்டும்..!

 

  ♥   பம்பரமாய் சுழன்று

வெற்றி பெறுநான்

விடியலைத் தேடுவதை

நிறுத்தி விடுகின்றேன்..!

கவிஞர் முனைவர்.க.லெனின்

ஒரு சிறுவனின் அழுகை

             காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” என்றாள் சந்திரா. கையில் கோத்த பூவை மடக்கி மடக்கி இன்னும் வேகமாகக் கட்டிக்கொண்டிருந்தான் விநாயகம். பெருமாள் கோயிலு வாசல்ல பூ  கட்டி விக்கிற தொழில்தான் விநாயகத்துக்கு. அப்பா அம்மா வயசானவங்க. படிப்பும் ஏறல விநாயகத்துக்கு. அப்பாக்கூட சேர்ந்து பூ  கட்டுற வேலையப் பாத்துகிட்டான். சின்ன வயசுல இருந்து சேத்து வச்ச காசுக்கு முன்னூறு சதுர அடியில ஒரு வீடு கட்டியிருந்தான். நல்ல வீடு இருந்தாதான் பையனுக்கு பொண்ணு கிடைக்கும்ன்னு யாரோ சொன்னங்க… அதான் விநாயகம் வீடு கட்டியிருக்கான். சந்திராவும் படிச்சவ கிடையாது. அப்பா அம்மா இல்ல. சந்திராவோட பாட்டிதான் வளத்திச்சி. விநாயகத்துக்கு தூரத்து சொந்தம்தான் சந்திரா. கிழவி செத்ததுக்குப் போன விநாயகத்தின் அப்பா மாணிக்கம் சந்திராவை தன்னோட மகனுக்குப் பேசிட்டார். கிழவி செத்து மூணு மாசம் கழிச்சி திருமணம் நடந்திச்சு. சந்திராவும் கணவனுக்குத் துணையா தினமும் பூ  கடைக்கு வந்து விநாயகத்துக்கு உதவியா இருப்பா. கொஞ்ச நாள்ல அழகான ஆண் குழந்தைய பெத்தெடுத்தா சந்திரா. இப்ப அவனுக்கு ஆறு வயசாகுது. சந்திரா வீட்டிலிருந்து கிளம்பும்போது “அம்மா புரோட்டா வாங்கியாறியாம்மா?” என்றான். “குட்டி, அப்பாகிட்ட சொல்லி கண்டிப்பா வாங்கியாறேன். என்ன?” என்று சொல்லிவிட்டுதான் கடைக்கு வந்தாள்.

      “என்னங்க… நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கும் ஏதோ நினப்புல இருக்கிங்க? என்னாச்சு…” என்றாள் சந்திரா. தன்னை உணர்ந்தவனாய் “என்ன கேட்ட” என்றான் விநாயகம். “சரியா போச்சு போங்க. நம்ம குட்டி ராத்திரிக்கு வரும்போது புரோட்டா கேட்டான்” “அதுக்கென்ன வாங்கிக்கலாம் சந்திரா” என்றான் விநாயகம்.

      “சரிங்க, நீங்க ஏ ஒரு மாதிரியா இருக்கிங்க?”

      “அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ பூவ நல்லாப் பாத்து கட்டுவியா” என்று முறைத்தான்.

      “உண்மைய சொல்லுங்க. என்னாச்சு?”

      விநாயகத்துக்கு தன்னோட மனைவிகிட்ட எதையும் மறைக்க முடியாதுன்னு தெரியும். “கந்து வட்டிகாரனுக்கு இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள இருநூற்று இருபது ரூபா தரனும். இல்லன்னா நம்ம மானத்த வாங்கி கப்பல்ல ஏத்திருவான். காலையிலிருந்து வியாபாரமே இல்ல. நம்மகிட்ட நூத்தி ஐம்பது ரூபாதான் இருக்கு. பாக்கி எழுபது ரூபாயிக்கு எங்க போவேன்” என்று  புலம்பினான்.

      “என்னங்க சொல்லுறிங்க… இருக்கிறத கொடுத்துட்டு, மீதியை நாளைக்கு கொடுத்துடலாம்ங்க..”

      “அதெல்லாம் அந்த ஆளு ஒத்துக்கமாட்டாரு. கந்து வட்டிக்குப் பணத்த வாங்கிட்டு கட்டுறதுக்கு ரொம்ப சிரமமாயிருக்கு. வாங்குன அசல விட இன்னிக்கு வட்டி அதிகம் கட்டிட்டேன். என்ன பன்றது? வட்டிக்காரர பாத்தாலே எனக்கு வயிறு கலக்குது சந்திரா”

      “என்னங்க இப்படி பேசுறிங்க.. பயப்படாதிங்க! வட்டிக்காரகிட்ட பேசிப்பாக்கலாம். இந்த வருஷம் குட்டிய வேற ஸ்கூல் சேக்கனும். அதுக்கு வேற காசு வேணுமில்லங்க”

      சந்திரா சொல்ல சொல்ல கண்கலங்கியது விநாயகத்துக்கு. மனைவியோட கண்களையே பாத்துக் கொண்டிருந்தான். அவளும் கணவன் கண் கலங்குவதைப் பார்த்தபோது கண்கள் குளமாகியிருந்தன. சடாரென பூக்கடை தூக்கி எறியப்பட்டது. புயலாய் சீறிய பேருந்து பள்ளத்தில் இருந்து ஏறியபோது தன் கட்டுப்பாட்டை இழந்தது. கோயில் ஓரத்தில் உள்ள கடைகளில் மேல் ஏறி நசுக்கியது. கோயில் சுவற்றில் முட்டிமோதி நின்றது அப்பேருந்து. ஓ….ஓ….ஓ…. என்று ஓலக்குரல் எட்டு திசைகளையும் நடுங்க வைத்தது. விநாயகத்தின் தலை மீது பேருந்தின் டையர் நின்று கொண்டிருந்தது. கொஞ்சம் கூட அடையாளம் தெரியாதபடி தலை நசுக்கப்பட்டிருந்தது. சந்திராவின் குடல் வெளியே வந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடையக் கண்கள் மட்டும் இன்னும் விநாயகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தன. கொஞ்ச கொஞ்சமாக சந்திராவின் கண்கள் மூடின. இப்பொழுது மனசு முழுவதும் தன் மகன் குட்டியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

      பற்றி எரிகின்ற சுடுகாட்டின் மணம் எங்கும் பரவியது. மொட்டைத் தலையோடு கையில் கொள்ளிக்கட்டையைப் பிடித்திருந்தான் குட்டி. எதற்காக இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தான் அச்சிறுவன். அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் கொள்ளி வச்சு தலை முழுகினான் குட்டி. தாத்தா மாணிக்கம் பேரனைக் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். பாட்டி கனகு, மகனும் மருமகளும் இருக்கின்ற புகைப்படத்தின் முன்பு தன்னோட மாரிலே அடித்துக்கொண்டு மயங்கி விழுந்தாள். அந்த வீடு இரண்டு மாதமாய் மயனமாய் காட்சியளித்தது.

      “குட்டிக்கு வயசாச்சு. பள்ளிக்கூடம் சேக்கனும்” என்றாள் கனகு பாட்டி.

“ஆமாம் கனகு! ஞாபகமிருக்கு. நம்ம இருக்குற நிலமையில தனியாருல போயி சேக்க முடியாது. அரசாங்க பள்ளிக் கூடத்துல குட்டிய சேக்க வேண்டியதுதான்” என்றார் மாணிக்கம்.

பள்ளிக்கூடம் ஆரம்பமானது. குட்டி நல்ல டிரஸ் போடலன்னாலும் அழுக்கு இல்லாம, கிழிஞ்சல் இல்லாம சட்டைப் போட்டிட்டு போவான். அவனுக்கு இப்ப எல்லாமே தாத்தா பாட்டிதான். இரவு நேரத்துல தூங்கும்போது அம்மா… அம்மா… ன்னு அழுவுவான். கனகு பாட்டிதான் எழுந்து குட்டியை சமாளிப்பாள். ஒருசில ராத்திரியில அவன சமாளிச்சு தூங்க வைக்குறதுக்கு போதும் போதும் என்றாகியிடும். “அம்மா கடைக்கு போயிருக்கா.. இப்ப வந்துருவாடா செல்லம். நீ தூங்குடா குட்டி” என்றெல்லாம் சமாளிப்பாள். பாதி ராத்திரியில எழுந்திரிச்சி மாணிக்கமும் கனகு பாட்டியும் அழுவுவாங்க.

“இந்தப் பையனுக்கு என்னத்தச் சொல்லி புரிய வைக்குறது” என்பார் மாணிக்கம்.

“பாவங்க சின்னப்பையன். அவனுக்கு அப்பா, அம்மா நினப்பு வராதா என்ன? முடிஞ்சவரை சமாளிப்போம். காலம் போகபோக அவனே புரிஞ்சுக்குவான்” என்றாள் கனகு பாட்டி.

மூணு மாசம் கடந்து பொச்சு. ஒருநாளு மாணிக்கம், அவனோட புத்தகங்களை எல்லாம் வாங்கிப் பாத்திட்டு, குட்டி இந்த புக்குல இருக்குற ஒரு பாட்டு ஒன்னு பாடன்” என்றார்.

“குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

       மெல்ல உடலைச் சாய்த்து

  மேலும் கீழும் பார்த்து

 செல்லமாக நடக்கும்

 சின்ன மணி வாத்து”

என்று அழகாய் உடலை ஆட்டி ஆட்டிப் பாடினான் குட்டி. வாரி அணைத்துக் கொண்டார் மாணிக்கம் தாத்தா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பிறகு குட்டி சோகமாயிருந்தான். “என்னாடா குட்டி சோகமாயிருக்க” என்றார் மாணிக்கம். “இல்ல தாத்தா, ஸ்கூல்ல பசங்க எல்லோரும் அவுங்க அவுங்க புத்தகங்களை எல்லாம் பைண்டிங் பண்ணிட்டு வந்திருக்காங்க. அதனால நீயும் என்னோட புக்க பைண்டிங் பண்ணிக்கொடு தாத்தா” என்றான்.

“பைண்டிங் பண்ற அளவுக்கு நம்மகிட்ட காசு கிடையாதுடா குட்டி. அதனால உனக்கு நான் பேப்பர்ல அட்டை போட்டு தரட்டுமா?”

“இல்ல தாத்தா, எனக்கு பைண்டிங்தான் வேணும்” அடம் பிடித்தான் குட்டி.

“என்னங்க, பேரன் ஆசப்படுறான். பைண்டிங் பண்ணிக் கொடுங்க. எப்படியாவது சமாளிச்சுகலாம்” என்று குட்டிக்கு வக்காலத்து வாங்கினாள் கனகு பாட்டி.

பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் தாத்தா வருகின்ற திசையையேப் பார்த்துக் கொண்டிருந்தான் குட்டி. இதோ தாத்தாவும் வந்துவிட்டார். “தாத்தா என்னோட புக்குக்கு பைண்டிங் பண்ணிட்டியா?” என்றான் குட்டி.

“இ.. இல்.. இல்ல..” என்று எச்சில் விழுங்கினார் மாணிக்கம்.

“ஏன் தாத்தா? பைண்டிங் பண்ணல?”

“கடக்காரரு கேக்குற பணம் நம்மகிட்ட குறைச்சலாதான இருக்கு. அதான்! அப்படியே வையி. நாளை காலையில வந்து சொல்றன்னு வந்துட்டன்”

“தாத்தா, நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தா”

மாணிக்கம் – கனகு இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடின. பெரிய மனுசனாட்டம் பேசறான் பாரு என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள் கனகு பாட்டி. அடுத்த நாள் காலையிலையே பைண்டிங் கடைக்கு வந்து விட்டார் மாணிக்கம்.

“என்ன பெரியவரே! நேத்துதான சொன்னன். அதுக்கு கம்மியா யாரும் போட்டுத் தரமாட்டாங்க”

“தம்பி என்னோட பேரன், நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தான்னு” சொல்றான்.

“என்ன பெரியவரே சின்னப்பையன்னு சொன்னிங்க. இப்படி விவரமா பேசுறான்”

“ஆமாம் தம்பி! அவனோட அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்துல செத்துப்போயிட்டாங்க. இப்ப நாங்கதான் பாத்துக்குறோம்”

“அப்பா அம்மா இல்லாத பையனா. சரி! எவ்வளவு கொடுப்பிங்க பெரியவரே!”

மாணிக்கம் தொகையைச் சொன்னதும். “கொஞ்சம் உட்காருங்க கிட்டயிருந்து வாங்கிட்டே போயிடுவீங்க”

சரியென்று அங்கையே அமர்ந்து கொண்டார் மாணிக்கம்.

பைண்டிங் செஞ்ச புக்க பாக்க பாக்க குட்டிக்கு எங்கையோ மிதப்பது போல இருந்தது. புக்க தொறந்து தொறந்து மூக்கால் வாசம் இழுத்தான். புத்தகத்தை நெஞ்சிலே போட்டு அப்படியே உறங்கி விட்டான். அவனுடைய தலை அம்மாவின் மடியில் இருந்தது. குட்டியின் கால் அப்பாவின் மடியில் இருந்தது. அம்மா கதைச் சொல்லிக் கொண்டிருந்தாள். குட்டியும் ம்..ம்.. கொட்டிக்கொண்டிருந்தான்.

அம்மா… அம்மா… என்று கத்தியதில் மாணிக்கமும் கனகுவும் எழுந்து கொண்டார்கள். “குட்டி என்னடா? கனவு ஏதாவது கண்டியா?” என்றாள் கனகு பாட்டி. குட்டியின் அழுகை அன்று அதிகமாகி இருந்தது.

“எனக்கு அம்மா வேணும். எனக்கு அம்மா வேணும்”

அம்மா! உனக்கு புரோட்டா வாங்கியாற கடைக்கு போயிருக்கு”

“நீ பொய் சொல்லுற பாட்டி. நேத்தும் அதையேதான் சொன்ன! இப்பவும் அதையேதான் சொல்ற. ஆனாலும் அம்மாவ நான் இன்னும் பாக்கலியே”

“சரிடா குட்டி! இந்தா பாரு நீ கேட்டல்ல… இதோ உன்னோட புக்கெல்லாம் பைண்டிங் போட்டிருக்கு”

“இந்த பைண்டிங் புக்கு யாருக்கு வேணும். எனக்கு அம்மாதான் வேணும்” என்று சொல்லிய குட்டி தன்னோட கையில் இருந்த புத்தகத்தை தூக்கி எறிந்தான். புத்தகத்தில், குட்டி சேமித்து வைத்திருந்த மயில் தோகை பறந்து போய் அவன் அம்மாவின் புகைப்படத்தில் ஒட்டிக்கொண்டது.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தேங்காய் சுடுதல் நோன்பு

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தோட்டியின் பிள்ளை

    பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். அதிலும் சாவு என்று வந்துவிட்டால் தலையை ஆட்டி உடம்போடு காலும் சேர்த்து முன்னாலையும் பின்னாலையும் சென்று ஆடுவான். கோவிந்தனுடைய கொட்டும் ஆட்டமும் அந்த ஊர் மக்களிடையே ரொம்ப பிரசித்தி. யாராவது அவனிடம் “ஏண்டா கோவிந்தா சாவு வீட்டுகாரங்க ரொம்பவும் துக்கத்துல இருக்காங்க. நீ மட்டும் இப்படி ஆட்டம் போடுறீயே இது நல்லாவா இருக்கு”  என்று கேட்டால், “பிறக்கும்போது எப்படி சந்தோசமா பொறக்குறோமோ அதுபோல இறந்து காட்டுக்கு போற இப்பவும் இவுங்க சந்தோசமா இருக்கணும்” என்று சொல்லுவான். அப்படித்தான் இன்றும் ஆடிக்கொண்டிருக்கின்றான். கால் கட்டை விரல் கட்டப்பட்டு கைகள் விரைத்த நிலையில் தலையில் ஒரு ரூபாய் நாணயத்துடன் பாஞ்சாலைக் கிழவி பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். 

நான்கு தூண்களால் தார்ஸ் போடப்பட்ட நிழற் கூடம். அதாவது யாரோ ஒருவரின் சமாதி. பணம் இருக்கிறவன் பலம் இருக்கிறவன் செத்தும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவன். ஏழைகளோ பிணம் புதைத்த குழிக்குள் மீண்டும் விழுவார்கள். ஊர் தர்மகர்த்தா, மணியார் மற்றும் பாஞ்சாலை கிழவிக்குச் சம்பந்தகார்கள் அமர்ந்திருந்தார்கள். தோட்டி, ஏகாலி, குடிமகன் போன்றோர்கள் அவர்கள் செய்த வேலைக்கு கூலி வாங்குவதற்காகக் காத்திருந்தனர். ஏகாலி ரெண்டு பேர் எட்டு ரூபாய். “தோட்டி எத்தனை பேர்யா?” என்றார் மணியார். “சாமி நாங்க நாலு பேர்” என்றான் கோவிந்தன். இந்தா… என்று ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களையும் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் கொடுத்தார் மணியார். கோவிந்தன் முதலில் கை நீட்டி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். குடிமகன், ஏகாலி ஆகியோர்க்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

     இடுப்பில் கட்டிய துண்டும், குனிந்த முதுகுமாய், இருகைக் கூப்பி வணங்கியபடியே நின்றிருந்தார்கள். “என்ன எல்லாம் முடிஞ்சுதா? போயி அவுங்க அவுங்க வேலையைப் பாருங்க” என்றார் ஊர் தர்மகர்த்தா. தோட்டிகள் நிற்கிற இடத்தில் இருந்து கூச்சல் வருவது மணியாருக்குத் தெரிந்தது. “என்னாடா அங்க…” என்றார் மணியார். “காசு பத்தல… இன்னும் ரெண்டு ரூபா போட்டுக் கொடுங்க சாமி…” என்றான் கோவிந்தன். கண்டிப்பாக அவன் பேசியது அவனுக்கே கேட்டிருக்காது. பயந்து கொண்டே அவ்வளவு மெதுவாகத்தான் சொன்னான். ஆனாலும் மணியாருக்கு கேட்டுருச்சு. “போப்போ… அதெல்லாம் சரியாகத்தான் குடுத்திருக்கு. வேணுமின்னா அடுத்த சாவுக்குப் பாத்துக்கலாம். இங்கையே, மழ பெய்யாம வானம் வெளுத்துகிட்டு நிலமெல்லாம் பொளந்துகிட்டு நிக்குது. இதுல இவனுங்க வேற” என்று கோபமாய் முறைத்துப் பார்த்தார் மணியார். இதற்கு மேல் கோவிந்தன் மறுப்பு பேச முடியாதவனாய் தன் பங்காகிய பத்து ரூபாவையும் ரெண்டு பைசாவையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

     அப்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. அந்தச் சேரியில் தெரு விளக்கு இல்லாததால் எப்பொதும் இருட்டாகவே இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு அலமேலு கதவைத் திறந்தாள். “என்ன பையன் தூங்கிட்டானா?” “ஆமா! மணி இன்னா ஆவுது இன்னுமா முழுச்சிட்டு இருப்பான்” என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அலமேலு. தன்னுடைய மகன் கருப்பையா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான் என்பதை எண்ணிப் பெருமையாய் நினைத்தான் கோவிந்தன். தன் மகனுக்காக வாங்கி வந்த மிட்டாயைத் திட்டு மீது வைத்து விட்டு தூங்கபோனான். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி தன்னோட மகனை நல்லா படிக்க வச்சிடனும். தான்தான் மத்தவங்க முன்னாடி கைக்கட்டி வாய்பொத்தி கூனிக்குறுகி நிக்கிறேன். தான் மகனாச்சும் படிச்சு அரசாங்க வேலைக்குப் போயி தலைநிமிர்ந்து நிக்கனும். யோசனையில் ஆழ்ந்து போனான் கோவிந்தன். இரவு முடிந்து காலையில் சூரியன் உதயமானான்.

     கருப்பையாவுக்கு மீசை முளைத்தது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறான். தன்னுடைய தாய்தந்தையர் காலில் விழுந்து ஆசிப் பெற்றான். அலமேலுவும் கோவிந்தனும் கண்ணீர் மல்க வாழ்த்தினார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ராந்தலை வைத்துக் கொண்டு அந்த வெளிச்சத்திலே படித்தான். அவனுக்காக அவ்வப்போது தூக்கம் வராமல் இருக்க கருப்பு டீயை போட்டுக்கொடுத்தாள் அலமேலு. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டான் கருப்பையா. அடுத்து அவன் மேல்படிப்பு படிக்க வேண்டும். கோவிந்தனின் மனதில் ஆசைகள் இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாதபடி அவனிடம் பணம் இல்லை.

     ஓடினான். அலைந்தான். யார் யாரிடமோ பணம் கேட்டான். தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரின் காலிலும் விழுந்தான். எந்தவொரு வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. கோவிந்தனின் மனதில் எப்பாடுப்பட்டாவது மகனை பெரிய படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இப்போது கோவிந்தனின் நினைவுக்கு தர்மகர்த்தா நினைவில் வந்தார். மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு தர்மகர்த்தாவின் காலில் போய் விழுந்தான். “உங்களுக்கு எல்லாம் எதுக்கு பணம் தரணும். நீங்கல்லாம் படிச்சி என்ன செய்யப் போறீங்க… குடும்பத்தோட வந்து எங்க பட்டியில இருக்கிற எருமை மாடுகளை மேய்ங்கடா” என்று முறைத்துக்கொண்டார். மணியார் காலிலும் விழுந்தாகி விட்டது. ஒரு பிரயோசனமும் இல்லை. சிவந்த கண்களில் நீர் ததும்பியது கோவிந்தனுக்கு. அப்பா மற்றவர்களுடைய காலில் விழுவது கருப்பையாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மனம் வெதும்பினான். மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதா? கடவுளின் படைப்பபில் ஏன் இந்த பாகுபாடு. பணம் படைத்தவன் ஒருபுறம். அடுத்த சாப்பாட்டிற்கே வழி இல்லாத மக்கள் இன்னொரு புறம். இப்படி பாகுபடுத்திப் பார்ப்பதில் இறைவனுக்கு எவ்வளவு சுகம். இதுபோல பிள்ளையின் கண்முன்னால்  பெற்றவன் அடுத்தவருடைய காலை பிடித்து கெஞ்சுவது எவ்வளவு அபத்தம். இறைவனே உன்னை நான் காணவேண்டும். உன்னைப் பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ச்சிக் கடலில் பொங்கி எழுவதற்காக அல்ல. நாக்கு புடிங்கி கீழே தொங்கற மாதிரி ஒரு கேள்வியை கேட்பதற்காகத்தான். அப்பாவின் கண்ணகளில் நீர் ததும்புவதை அதற்கு மேலும் கருப்பையாவால் பார்க்க முடியவில்லை. தலை கவிழ்ந்து முகத்தை திருப்பிக் கொண்டான்.

     அன்று இரவு மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கோவிந்தனின் வீட்டில் மூலைக்கு ஒருவாராய் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்காந்திருந்தனர். “அப்பா நான் படிக்கலை.. உன் கூடவே மோளம் அடிக்க வரேன்” என்று கருப்பையா சொன்னதுதான் தாமதம் எழுந்து வந்து பளார் என்று அறைவிட்டான் கோவிந்தன். “நீ படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். நீ நல்ல இருக்கிறதுக்காக நான் யாரு கால்லயும் விழுவேன்” என்றான்.

வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டு கதவை திறந்தான் கோவிந்தன். சேரி மக்கள் அனைவரும் நின்றிருந்தனர். “ஏலே கோவிந்தா இந்த ரெண்டு மூணு நாளா உன்னை பாத்திட்டுதான் இருக்கேன். ஊர் மக்கள்கிட்ட  தெரிஞ்சவ தெரியாதவகிட்ட எல்லாம் பணம் கேட்குற… இந்த சேரி மக்கள்கிட்ட கேட்கனுமின்னு தோனலியே உனக்கு…” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார். “நம்ம கருப்பையா படிச்சு பெரிய ஆளா வந்தான்னா நமக்குதான பெருமை. அதான் கருப்பையா படிப்புச் செலவை இந்த சேரி மக்கள் அனைவரும் ஏத்துக்கணுமுன்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தா பிடி இந்த பணத்தை…” என்று கொஞ்சம் சேர்த்த பணத்தைக் கொடுத்தார் இன்னொருவர். கோவிந்தனின் கண்ணகளில் இருந்து இப்போதும் கண்ணீர் சிந்தியது. அது அழுது அழுது சிவந்த கண்ணீர் அல்ல. மகிழ்ச்சி பெருக்கில் நனைந்த ஆனந்த கண்ணீர்!

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சாவடி

 
    திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.  இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று அல்லது நான்கு பேர் அமர்ந்திருப்பார்கள். ஊருக்குள் ஏன்? எதற்காகச் செல்கின்றோம்?  யாரை பார்க்கச் செல்கின்றோம்? எப்போது திரும்பி வருவோம் என்று அவர்களிடம் உறுதி பெற்ற பின்னரே செல்லமுடியும். அவர்களிடம் உறுதி பெறவில்லையென்றால் உள்ள அனுமதிக்க மாட்டார்கள். இது அனைத்துக் காரண காரியங்களுக்கும் பொருந்தும். 
 
  சாவடியில் இருப்பவர்கள் வயது முதிர்ந்தவர்களே அதிகம் இருக்கின்றார்கள். தெளிவான பேச்சு. சாமர்த்தியமான பதில் என நம்மை வியக்க வைக்கின்றார்கள். சாவடியில் செய்தித்தாள்கள் உண்டு. அஞ்சல்காரர்களும் சாவடியில் வந்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். யாரேனும் வெளியூருக்குச்  செல்லவிருந்தால் சாவடியில் சொல்லிவிட்டுச் சென்றால் போதும். அவர்களைத் தேடி யார் வந்தாலும் சாவடியில் உள்ளவர்களே பதில் அளித்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.
 
    ஊருக்குள் என்ன நடக்கின்றது என மொத்த தகவலும் சாவடியில் உள்ளோருக்குத் தெரியும். மொத்தத்தில் சாவடி என்பது ஊருக்கு வாசற்படி எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

விளையாட்டு வினை

  

    பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் அக்கல்லூரிக்கு. வழிநெடுக புளிய மரங்கள். மண்ணால் போடப்பட்ட சாலை. கல்லூரியின் குட்டிச்சுவரில் அன்பு யாரையோ எதிர்ப்பார்த்து உட்காந்திருந்தான். கல்லூரிக்கு மாணவர்கள் வருகின்ற திசையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்பு உட்காந்திருந்த பின்பக்கத்தில் இருந்து வினோத் வலது தோளை தட்டியவாறு இடதுபக்கம் வந்து குட்டிச்சுவரின் மீதேறி அமர்ந்தான். “எவன்டா என்ன தட்டினது” என்று வலப்பக்கம் திரும்பிப்பார்த்தான். “என்ன மச்சான் எந்த பிகரை பார்க்க இப்படி டிப்டாப்பா வந்திருக்க” என்றான் வினோத். “அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று இழுத்த இழுவையைக் கண்டு வினோத் புரிந்து கொண்டான். “அந்த மாலதி புள்ளயப் பாக்கத்தானே…” “ஆமா மச்சான்”. “காதல் வேணாமின்னா எவன் கேட்குறான். பட்டாதான் புத்தி வரும்போல.. அது உன்பாடு அன்பு. அது இருக்கட்டும் எங்க ரவியும் கேசவனும்” என்று கேட்க, அவர்கள் இருவரும் சாலையின் மறுப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.

     அன்பு, வினோத், ரவி, கேசவன் நால்வரும் நல்ல நண்பர்கள். ஒரே கல்லூரியில் வெவ்வேறு பிரிவுகளில் மூன்றாம் வருடம் படிக்கிறார்கள். அன்பு பத்தி சொல்லனுமின்னா, நல்ல குண்டு. கருப்பா சுருட்டை முடியோட கடோத்கஜன் மாதிரி இருப்பான். கொஞ்சம் கோபக்காரன். பட்டுன்னு அடிச்சிட்டுதான் பேசுவான். அதனால என்னவோ இவன் கபடி பிளேயர் ஆயிட்டான். அடுத்து வினோத், உயரமா சிவப்பா இருப்பான். இந்த நால்வரில் இவன்தான் கொஞ்சம் அழகு. இவன் வாலிபால் பிளேயர். அடுத்ததா  ரவி மாநிறம். அளவான உடம்பு. உடம்பெல்லாம் ரோமம். இவனுடைய ஒவ்வொரு ரோமமும் பேட்மிட்டன் பெயரைச் சொல்லும். ஆமாங்க! இவன் பேட்மிட்டன் பிளையர். கடைசி ஆள் கேசவன். எல்லாம் எனக்கு தெரியுமுன்னு நினைக்கிற ஆள். மாநிறம்தான். கிரிக்கெட் பிளையர். எப்போதுமே களத்தில தான் மட்டும் நிக்கனுமுன்னு நினைக்கிற ஆளு. இப்படி நாலுபேரும் நாலு விதமான விளையாட்டில் கெட்டிக்கார்கள். அந்த விளையாட்டிற்காக தன்னோட உசிரையே கொடுப்பாங்க. இவுங்க விளையாட்டுப் போலவே ஒவ்வொருத்தரும் மாறுபட்ட குணம் உடையவர்கள். ஒருத்தன் சொன்ன கருத்துக்கு மற்ற மூணு பேரும் எதிர்த்து பேசுவார்கள். ஒருத்தன் ஆமா என்பான். இன்னொருத்தன் இல்ல என்பான். அடுத்தவன் அதற்கு வேறவிதமா பதில் தருவான். கடைசி ஆளு இதெல்லாம் ஒரு மேட்டராடா வேற பேசுங்கடா என்பான். ஆனாலும் இவுங்க நட்புக்குள்ள அவர்களுடைய விளையாட்டுகள் ஒருபோதும் வந்ததில்லை. அதை அவர்களும் அனுமதித்ததில்லை. இவுங்க நாலுபேரும் நல்ல நண்பர்கள்.

     “என்ன ரவி இவ்ளோ லேட்” என்றான் வினோத். “அதற்கு பஸ் வர வழியில பிரேக்டவுன் ஆயிடிச்சுடா மச்சான்” என்றான் கேசவன். “சரி பேச்சைக் குறைச்சிட்டு கிளாஸ்க்கு போகலாம்டா. ஈவினிங் எல்லொரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் முடிச்சிட்டு இதே இடத்தில வந்து சந்திக்கலாம்” என்றான் அன்பு. மாலை நாலு மணிக்கு கல்லூரியில் அனைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. இந்த நண்பர்கள் நாலு பேரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் பன்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்தார்கள். வாலிபால் களம். தோளில் மாட்டிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு ஷீ மாட்டிக்கொண்டான் வினோத். தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டியவாறு எகிறி எகிறி குதித்தான். உடம்பை நான்கு முறுக்காய் முறுக்கிக்கொண்டான். தலையை காலுக்குக் கொண்டுபோய் இரு உள்ளங்கையினையும் நிலத்திலே தொட்டான். ஒரே குதியில் களத்திற்கு வந்து விட்ட வினோத், எதிர்ப்புறத்தில் வேகமாய் வந்து கொண்டிருந்த பந்தினை தட்டியபடியே தன்னோட விளையாடிக் கொண்டிருக்கின்றவனைப் பார்த்து, “என்ன கோச் இன்னும் வரலியா” என்று கேட்டான். “கோச் இன்னிக்கு வரமாட்டாராம்” ஏன்? “அவுங்க அப்பாவுக்கு திடிரென்று நெஞ்சுவலியாம்” தன்னை நோக்கி வந்த பந்தை வெறி வந்தவன்போல் எகிறி ஒரு அடி அடித்தான் வினோத். களத்தில் இருந்து வெளியே வந்து அமைதியாய் உட்கார்ந்து கொண்டான் வினோத். அப்பா மேல உசிரா இருந்தாரு. பாவம் கோச் என்று பரிதாப்பட்டான். கோச்சும் இல்ல. விளையாட மனசும் இல்ல. என்ன பன்றதன்னு யோசித்தான். சரி நண்பர்களைப் பார்க்கப் போவோம் என்று கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

     அது பேட்மிட்டன் களம். வினோத்தின் கால்கள் நின்றன. தன்னோட நண்பன் ரவி எதிர்நொக்கி வருகின்ற அனைத்துப் பந்துகளையும் துவம்சம் செய்து மறுமுனைக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ரவியின் ஆட்டத்தைப் பார்ப்போம் என்று அக்களம் ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். பந்து மாறிமாறி வருவதும், அதை லாவகமாக திருப்பி மெதுவாக அடிப்பதும் பார்த்து ரொம்பவே ரசித்தான் வினோத். தன்னோட வாலிபால் விளையாட்டு போலத்தான் இதுவும். ஆனாலும் ஒரு ஜென்டில் தெரிந்தது வினோத்துக்கு. தன்னை லயித்து அவ்விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மறைந்தான். பயிற்சி ஆட்டமும் முடிவுக்கு வந்தது. “ஹே… வினோத் எப்படா வந்த…” “உன்னோட எதிர்ல இருக்கிறவனோட மூக்குலயே அடிச்சியே அப்பவே வந்துட்டன்”. இருவரும் சிரித்துக் கொண்டனர். “ஏய் ரவி… நீயும் நானும் ஒரு ஐஞ்சு நிமிசம் பேட்மிட்டன் ஆடுவோமாடா…” சிறிது யோசனைக்குப் பிறகு ரவி ஒப்புக்கொண்டான். இந்த நிகழ்வானது எத்தகைய விளைவை தரப்போகிறது என அப்போது ரவிக்கு தெரியவில்லை. இருவரும் மகிழ்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

     குட்டிச் சுவரு. நால்வரும் பயிற்சி முடிந்து வந்து சேர்ந்தார்கள். “டே! கேசவா… நான் இன்னிக்கு ரவியோட சேர்ந்து பேட்மிட்டன் விளையாண்டன்டா… ரொம்ப இன்ரஸ்டா இருந்தது தெரியுமா!” “என்ன வினோத் உன் ஆட்டத்தை விட்டுட்டு அடுத்தவரோட ஆட்டத்துல சேர்ந்துட்ட” என்றான் அன்பு. “இல்ல.. சும்மா விளையாண்டு பாத்தன்” என்றான் வினோத். “விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. நீ உன் விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. மத்தவங்க விளையாட்டுல மூக்கை நுழைச்சி வீணா உடைச்சிக்காதே” என்று கோபத்தோடு முறைத்துக் கொண்டே கூறினான் அன்பு. “டே அன்பு.. நீ சும்மாயிரு. அவன் ஏதோ ஆசையில போயி விளையாண்டிருக்கான். அதுக்குபோய் அவனை திட்டுற…” என்றான் கேசவன். “ஏய் அன்பு நான் விளையாடுற வாலிபால் அக்கான்னா… பேட்மிட்டன் தங்கச்சி மாதிரிடா… இரண்டு ஆட்டமுமே ஒரேமாதிரிதான் இருக்குதுடா… அதான் விளையாண்டேன்” என்றான் வினோத். இத்தனைக்கும் நடுவில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கின மாதிரி ரவி காணப்பட்டான்.

     நண்பர்கள் எப்போதும் போல ஜாலியாக இருந்தார்கள். பயிற்சியின் போது மட்டும் அவரவர் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். மற்ற நேரங்களில் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். ஆனால் வினோத் மட்டும் வாலிபால் பயிற்சி முடிய அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொள்வான். நேராக பேட்மிட்டன் விளையாடுற இடத்துக்குச் சென்று விடுவான். வேடிக்கைப் பார்த்து மகிழ்வான். பயிற்சி முடிந்தவுடன் இவனும் ரவியும் சேர்ந்து விளையாடுவார்கள். காலம் செல்லச் செல்ல வினோத்தும் பயிற்சியில் சேர்க்கப்பட்டு விட்டான். வாலிபால் ஒரு மணிநேரம். பேட்மிட்டன் ஒருமணிநேரம் பயிற்சி என்றானது வினோத்துக்கு.

     பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. பேட்மிட்டன் கோச், ரவியை தன்னோட அறைக்கு அழைத்தார். “என்ன ரவி லிஸ்ட் ரெடி பண்ணிடலாமா? நீயும் கார்த்திக்கும் உள்ள ஆடுங்க. கதிரேசனும் சிவக்குமாரும் வெளிய மாற்று ஆளாக இருக்கட்டும். என்ன ரவி உனக்கு ஓகேவா… என்னாடா நான் கேட்டுகிட்டே இருக்கேன். நீ ஒரு மாதிரியாவே இருக்க..” என்றார் கோச். “அதுவந்து… வந்து… என்று இழுத்தான்” ரவி. “நீ என்னா நினைக்கிறன்னு சொன்னாதான தெரியும்.  சொல்லுப்பா…” “கடந்த ஒரு மாசமா கதிரேசன் சரியாவே பிராக்டிஸ்க்கு வரவே இல்ல. அவன எப்படி கூட்டிட்டு போறது. அதனால என்னோட பிரெண்டு வினோத்த போடுங்க” என்றான் ரவி. என்ன நினைச்சிட்டு இருக்கிற ரவி. நீ நல்லா ஆடுறன்னா, அதுக்காக எதை வேணுமின்னாலும் சொல்லுவியா? என்று கோபமாகக் கத்தினார் கோச். கோச்சின் அதட்டலைக் கேட்டு ரவி பயந்துதான் போனான். ஆனாலும் மனம் எப்படியாவது வினோத்த உள்ள கொண்டு வந்திடனும். அப்பதான் அவனுக்கும் ஒரு சர்ட்டிபிகேட் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டான். அந்த அறை கொஞ்சநேரம் அமைதி நிலவியது.

     கோச்சே பேச ஆரமித்தார். “ரவி! வினோத்த நான் தப்பு சொல்லல. வினோத் வாலிபால் பிளையர். அவன எப்படி பேட்மிட்டன்னல சேர்த்துகிறது. அவன் வாலிபால்ல விளையாடட்டும். அவன விட்டுறு. உன்னோட கனவப்பத்தி நெனச்சுப்பாரு ரவி. நீ இதுல ஜெயிச்சா கண்டிப்பா உன்னோட வாழ்க்கையே மாறிடும். என்ன ரவி நான் சொல்லுறது புரியுதா?” என்றார். கொஞ்சநேரம் மெளனித்திருந்தான் ரவி. பிறகு “வினோத்த கண்டிப்பா சேத்துக்கணும்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

     அடுத்தநாள் மாலை பேட்மிட்டன் அலுவலகத்தின் முன்பு தேர்வு வீரர்களின் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அப்பட்டியலில் வினோத் பெயரும் இடம்பெற்றிருந்தது. ரவியின் பின்தோளில் கைவைத்து அழுத்தினார் கோச். “இப்ப திருப்தியா? எனக்கு நம்ம கல்லூரி ஜெயிக்கனும், அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றார்.  நான் கண்டிப்பா ஆடனுமா ரவி என்று மனக்குழப்பத்துடன் கேட்டான் வினோத்.  “ஆமாம்! கண்டிப்பா நீ ஆடனும். நாம ரெண்டு பேரும் ஒன்றா ஜெயிப்போம்” என்றான் ரவி.

     பல்கலைக்கழக போட்டிக்களம். பலக்கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேட்மிட்டன் நடுவர்கள். தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கச் செயலர், மற்றும் ஆட்டத்தை ரசிக்க வந்த ஏராளமான மாணவ மாணவிகள். பாட்டும் சத்தமும் ஒருபுறம். வெற்றி முழக்கங்கள் இன்னொருபுறம். தங்களின் போட்டி உடைகளை அணிந்து தயார் நிலையில் இருந்தார்கள் இரு அணியினரும். போட்டியும் தொடங்கியது. அனல் பறக்கும் போட்டி. யாருக்கு வெற்றி தோல்வி எனக் கணிக்க முடியாதபடி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ரவி மிகவும் ஆக்ரோசத்துடன் பந்தை எதிர் முனையில் திருப்பிக்கொண்டிருந்தான். ரவியின் முகம் சோர்வு அடைந்ததாக தெரியவில்லை. முகமும் வெற்றி நமக்கே என்று சொல்லியது. எதிர் திசையில் வேகமாய் வந்த பந்தினை முன்னால் நின்றிருந்த கார்த்திக், தன்னிடமிருந்து பந்து செல்லக்கூடாது என்று ஒரு காலை ஊன்றி மறுகாலை எகிறி வைத்து பந்தை அடிக்கிறான். எகிறி வைத்தக் கால் நழுவி மண்ணில் தேய முட்டி பிளந்து ரத்தம் கொட்டுகிறது. வலியால் துடிக்கிறான் கார்த்திக். நடுவர் ஆட்டத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்துகின்றார். கார்த்திக்கு முதலுதவி செய்யப்படுகிறது. அடுத்து கார்த்திக்குப் பதிலாக சிவக்குமார் உள்ளே ஆடவருகின்றான். “சிவா நீ போய் உட்காரு. வினோத் உள்ள வாடா…” கோச் குழப்பத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நிற்கிறார். 2011 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி ஆறாவதாக களம் இறங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே களம் இறங்கி சிக்ஸர் அடித்து ஜெயிக்க வைக்கவில்லையா? அதுபோலத்தான் இன்றைக்கும் ஏதாவது நடக்கும் என்று மனதைத் தேத்திக்கொண்டார் கோச்.

     “ரவி எனக்கு பயமா இருக்குடா…” “பயம் இருந்தா ஜெயிக்க முடியாது. நான் உன்னை நம்புறன். சந்தோசமா விளையாடு. ஆனா ஒன்னு மட்டும் நினைவுல வச்சிக்க. நீ முன்னால நில்லு. முடிந்தவரை உனக்கு வர பந்தை அடி. முடியலன்னா விட்டுறு. பின்னால் இருக்குற நான் பாத்துகிறேன். உன்னை பின்னால நிக்கவெச்சன்னா என்னைத் தாண்டி வர்ற பந்தை நீ விட்டுட்டன்னா பாயின்ட்ஸ் நமக்கு குறைஞ்சிரும். என்னா சொல்லுறது புரியுதாடா…” ஏதோ தலையை ஆட்டிக்கொண்டான் வினோத். போட்டியும் தொடங்கப்பட்டது.

     தனக்கு வர்ற பந்தை கவனமாக அடித்து எதிர்முனைக்குத் திருப்பினான் வினோத். வினோத் அடிக்க முடியாமல் விட்ட பந்தினை ரவி அடித்து சரிசெய்து கொண்டான். ஆட்டமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டத்தில் வேகத்தோடு சூடும் பிடிக்க ஆரமித்தது. பார்வையாளர்கள் ஓயாமல் தங்களின் களிப்பினை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ரவி எதிர்முனையில் இருந்து வந்த பந்தினை லாவகமாக திருப்பி அடிக்க, எதிர்முனையில் இருந்த ஒரு பிளையர் அப்பந்தினை மெதுவாக மேல்நோக்கி அடிக்கிறார். பந்து நெட்டுக்குப் பக்கத்தில் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி வருகின்றது. நெட்டுக்குப் பக்கத்தில் முன்னால் நிற்கின்றான் வினோத். “வினோத் உனக்குதான்டா பந்து வருகிறது. பாத்து அடிடா” என்று எச்சரிக்கைப் படுத்துகிறான் ரவி. இப்போது வினோத்துக்கு இக்களம் பேட்மிட்டன் களம் அல்லாமல் வாலிபால் களம் போன்று காட்சியளிக்கிறது. மேலிருந்து வருகின்ற பந்தும் வாலிபாலாக வினோத்துக்குத் தெரிய அவனுள் பெரிய மாற்றம் நிகழ்கிறது. வினோத் நல்ல உயரம். வாலிபாலை எப்படி ஓடி வந்து கட் அடிப்பானோ அதேபோல் இந்த பந்தையும் ஓடிவந்து எகிறி கையை மேலே உயர்த்தி ஓங்கி ஒரு அடி அடிக்கிறான். பந்து நெட்டுக்கு நூல் அளவே இருக்கிற மாதிரி தரையில் லொட் என விழுகிறது. பார்க்க வந்த அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறார்கள். பேட்மிட்டன் சங்க செயலர் “இப்படி ஒரு ஷாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை” என்கிறார். ரவி வினோத்தை கட்டிப்பிடித்து தன்னோட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பார்வையாளர்களின் கரகோஷம் நிற்க நீண்ட நேரம் ஆனது. அன்றையப் போட்டியில் ரவியின் அணி வெற்றியைச் சூடி கோப்பையைக் கைப்பற்றுகிறது.

     பதினைந்து நாள் கழித்து தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்திலிருந்து கடிதம் ஒன்று வரகிறது. அக்கடிதத்தில் தமிழ்நாட்டு அணிக்காக வினோத் அழைக்கப்பட்டிருந்தான். உண்மையான பேட்மிட்டன் பிளையருக்குக் கிடைக்காத வாய்ப்பு வாலிபால் பிளையருக்குக் கிடைத்துவிட்டது. இதை ரவி கேட்டவுடன் கையில் இருந்த பேட்டை தரையில் ஓங்கி அடித்தான். நன்றாக ஆடியும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மனதில் குமுறினான். “ரவி கோவப்படாதடா… வினோத் அடித்த அந்த ஒரு ஷாட்டப் பார்த்துதான் அவனை செலக்ட் பன்னியிருக்காங்கடா…” என்றார் கோச். மனம் தாங்கதவனாய் அறையை விட்டு வெளியேறுகிறான். கல்லூரியின் கடைசி நாள். அதே குட்டிச்சுவரு. வினோத், அன்பு, கேசவன் என மூன்று நண்பர்கள் மட்டும். மூவரும் மாணவர்கள் வருகின்ற திசையில் யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்ககால குறுந்தொழில்கள்

 

இவ்வுலகம் உயிரினங்களால் சூழ்ந்தது. ஒவ்வொரு உயிர்களும் இப்புவியில் வாழ பலப்போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிர்களில் ஆறறிவுள்ளவனாக மனிதர்கள் சுட்டப்படுகிறார்கள். நாடோடியாக வாழ்நத மனிதர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து வாழத்தொடங்கினர். குடும்பமாய் வாழ்ந்த மனிதர்களில் அறிவு மிக்கவனும், சோம்பலை போக்கியவனும், உழைப்பை மேன்மையாகக் கொண்டவனே நல்ஆடவர் என அழைக்கப்பட்டான். ‘வினையே ஆடவர்க்கு உயிரேஎன்ற குறுந்தொகை வரிகளுக்கு ஏற்ப ஆண்மகன் என்பவன் உழைப்புக்கு முன்னுரிமை வழங்கினான்.

தொழிலும் தொழிற் பிரிவுகளும்

மலைகளை உடைத்து காடுகளாக்கியும், வயல்களாக்கியும் பெரும் நிலப்பகுதியை உருவாக்கினான். அப்பகுதிக்கு அவனே தலைவனாகவும் பின்னாளில் அரசனாகவும் முடிசூட்டப்பட்டான். மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறையுள் என தனக்கு வேண்டியதை தானே செய்து பழக்கப்படுத்திக்கொண்டான். அவ்வாறு செய்த வேலைகளில் உழவுத்தொழிலை முன்னிறுத்தியே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டான். ‘சுழன்று ஏற்பின்னது உலகம்என்பார் வள்ளுவர். மனிதர்கள்; பல தொழில்கள் செய்து வந்தாலும் ஏர்த்தொழிலின் பின்னால்தான் இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது. அன்றையச் சூழலில் அரசரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அனைவரும் தனித்தனியே வேலை செய்வதற்கென ஒதுக்கப்பட்டனர். அரசர் கட்டளையிட்ட வேலைகளை தலைமேல் சுமந்து செய்யலாயினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பெருமையாக எண்ணினார்கள். தன்னுடைய வேலையை பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் பொழுது உரிமைக்காகப் போராடி சண்டையிடவும் செய்தனர். பண்டையக் காலத்தில் அரசரால் வகுக்கப்பட்ட வேலைகள் பின்னாளில் அவர்களுடைய சந்ததியினர்களுக்கு தொழில்களாக மாறிப்போயின. “தொழிலில் திறமை பெற தந்தை தொழிலை மகன் ஏற்றதால் பரம்பரைத் தொழில்முறை உருவாகியது1 என்கிறார் பா.இறையரசன். நிலம் அதிகம் உள்ளவன் உழவுத்தொழில் செய்தான். அத்தொழிலுக்கு தகுந்தவாறு மக்களை பயன்படுத்திக்கொண்டான். பொருள் உள்ளவன் உள்நாட்டு வாணிபம் அயல்நாட்டு வாணிபம் செய்து, அதன் மூலம் நிறைய பொருட்களைச் சேர்த்தான். இன்னும் உள்ள சில மக்கள் அரண்மனைகளில் வேலை செய்து வந்தனர். படை வீரர்கள், காவல் காப்பவர்கள், ஊர்மன்ற தலைவர்கள், ஒற்றர்கள் என அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர மக்கள் வாழ்கின்ற பகுதியில் அன்றாடம் நடைபெறக்கூடிய தொழில்களும் இருந்து வந்தன.

            உழவு, வாணிபம், படைவீரர்கள் தவிர சங்ககால மக்களிடையே இருந்து வந்த குறுந்தொழில்களை முன்னிறுத்தியே இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது. நிலவாரியாக தொழில்கள் நடந்து வந்திருப்பினும் மற்றத் தொழில்களுக்கான மக்கள் இருந்து கொண்டு, அவற்றைச் செய்தும் வந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்திலே கூறப்பட்டுள்ள தொழில்களை இங்கு காணலாம்.

தச்சுத்தொழில்

            மரத்தை அறுத்து அதன் மூலம் பொருள்களைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். குறுந்தொகையில்,

                        தச்சன் செய்த சிறுமா வையம்‘ (குறும்.61:1)

            தச்சனால் செய்யப்பட்ட சிறிய தேரினை குதிரைகள் பூட்டியபடி இழுத்துச் செல்லும். குதிரைக் கட்டாத நேரங்களில் சிறுவர்கள் அத்தேரினை இழுத்து விளையாடுவார்கள். “தச்சர்கள் வீடுகட்டுதல், கப்பல், கட்டுமரம், படகு முதலியன கட்டுதல், தேர்களைச் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்2 என்கிறார் டாக்டர் .சுப்ரமண்யன். இதேச் செய்தியை புறநானூற்று ஆசிரியர் கூறுகையில்,

                        எண்தேர் செய்யும் தச்சன்‘ (புறம்.87:3)

            ஒரே நாளில் எட்டு தேர்களைச் செய்து முடிக்கக்கூடிய தச்சன் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது அதியமானுடைய வீரத்தைக் குறிப்பதாக இருந்தாலும் தச்சனுடைய உழைப்பை நமக்கு காட்டுவதாக அமைகின்றது. மேலும், தச்சர்களின் பிள்ளைகள் சிறுதேர்களை உருட்டி விளையாடுதலைப் பற்றி பெரும்பாணாற்றுப்படையிலும் (248), யானையின் தந்தத்தைச் சிறு உளிக்கொண்டு கட்டிலும், இலை வடிவத்தினாலான கால்களும் செய்கின்ற தச்சன் என நெடுநல்வாடையிலும்(118-119), காட்டிற்குச் செல்லும் தச்சன், தனக்கு வேண்டிய பொருளைச் செய்து மகிழ்வர் என புறநானூற்றிலும் (206:1) கண் இமைக்காமல் தச்சனால் செய்யப்பட்ட ஆரக்கால் (புறம்:290:4) கைத்தொழிலில் கைதேர்ந்த தச்சன் மரங்களை அடுக்கி வைத்து வாயில் கதவை செய்தான் (நெடுநல்:83-84) எனச் சங்கப்பாடல்கள் தச்சர் தொழிலைப் பற்றி கூறுகின்றன. “குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நானிலத்தும் முறையே குறவர், ஆயர், உழவர், மீனவர் என நான்கு பிரிவினராய் அமைத்தனர். துணைத்தொழில் புரிந்தோர் தச்சர், குயவர், கம்மியர், கொல்லர், வண்ணார் எனப்பட்டனர்3என்று பா.இறையரசன் குறுந்தொழில்களின் பிரிவுகளைக் குறிப்பிடுகிறார்.

கொல்லர்

            கொல்லர்களில் இரும்புக் கொல்லர், பொற்கொல்லர் எனத் தனித்தனியாக தொழிலை பாகுபடுத்தப்படுகிறது. ஒன்றை அழித்து செய்வதனால் கொல்லுதல் என வந்திருந்து, பிறகு கொல்லன், கொல்லர் என வந்திருக்கலாம். இரும்பு வேலைச் செய்யும் கொல்லர்களைப் (நற்:133) பற்றி கூறுகின்றது. அகநானூற்றில்,

                        நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்

                         குருகு ஊது மதிஉலைப் பிதிர்வின் பொங்கி‘ (அகம்.202:5-6)

            கொல்லன் துருத்தியை மிதித்து ஊதுகின்றான். அப்போது உலைக்களத்திலே தீப்பொறிகள் எங்கும் எழுந்தது என்கிறார். இதேச் செய்தி, இரும்பைப் பயன்படுத்தும் உலைக்களத்திலே இருக்கும் கொல்லன் (புறம்:170:5), வலிய கையையுடைய கொல்லன் இலையுடைய நெடிய வேலை வடித்தான் (புறம்:180:3), கொல்லனுடைய வேலை வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து தருதலே ஆகும் (புறம்:312:3). “போர்ப்படைக்கலங்களை ஆக்கவும் திருத்தவும் கொல்லர் பட்டறைகள் இருந்தன. இப்பட்டறைத் தீயில் இரும்புச் சக்கரங்கள், வீட்டுச் சாமான்கள் முதலியன ஆக்கப்பெற்றன4என கொல்லன் பட்டறைப் பற்றி டாக்டர் .சுப்ரமண்யன் கூறுகிறார். கொல்லன் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறியானது எங்கும் படரும் (நற்:13:5). காலால் மிதித்து துருத்தியை ஊதும் கொல்லன் (பெரும்:207), யானையானது பகைவருடைய மதில்களை அழித்தலால் அதனுடைய முகத்தில் உள்ள பூண்கள் சிதைந்து விடுமாம். அப்பூனை கொல்லன் சம்மட்டியால் வைத்து அடித்து சரிச்செய்வானாம் (பெரும்:437), கொல்லனது உலைக்களத்தில் அம்பை கூர்மையாக்குதல் (குறுந்:12), இரும்;;;;பினைக் காய்ச்சி   அடிக்கும் கொல்லன் (அகம்:72) போன்றவை கொல்லர் வேலை செய்பவர்களுக்கு சான்றாகக் காட்டப்படுகின்றன.

பொற்கொல்லர்

            பொன் வேலைச் செய்யும் கொல்லர்களை பொற்கொல்லர் என அழைக்கப்படுவதுண்டு. நற்றிணைப் பாடல் ஒன்றில்,

                        பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப‘ (நற்.313:2)

            பொற்கொல்லர்கள் பொன் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் இனியதான ஓசைப் பிறக்குமாம் என்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும், பொன்னை விற்பவர்கள் பவளச் செப்பிலே பொன்னைச் சேர்த்து வைத்திருப்பாராம் (அகம்:25:11), குற்றம் இல்லாத பொற்கொல்லன் செய்த பொற்காசுகளும், மேகலையும், மாலையும் (புறம்:353:1) என்றும் சிறப்புடையது என்றும், பொடியுடைய நெருப்பிலே பூக்கள் வடிவம் கொண்ட பொன்(கலி:54:2), பொன்னை உரைத்துப் பார்த்து ஆராய்ந்து அறியும் திறனும் அன்றைய மக்களிடம் இருந்து வந்துள்ளது (நற்:25,3:3), (மதுரை:513) என்பன போன்றவையும், சிலம்பில் பொற் கொல்லனால் மதுரையே அழிந்தது என்பதும் அனைவரும் அறிந்தச் செய்தி ஆகியன சான்றாகக் கொள்ளலாம்.

குயவர்த்தொழில்

            மண்ணைக் கொண்டு பொருள் செய்வோரை குயவர் என்று அழைப்பர். இவர்களுடையத் தொழில் முழுக்க முழுக்க மண்ணை நம்பியே இருந்தது எனலாம். ஐங்குறுநூற்றில்,

                        புதுக் கலத்தன்ன கனிய ஆலம்‘ (ஐங்.303:1)

            ஆலம்பழத்தைப் போன்றும், உருண்டை வடிவாலும் பார்த்துப் பார்த்துச் செய்த குயவன் என ஆசிரியர் கூறுகின்றார். மேலும், மண்ணால் சுடப்பட்ட தாழி   என்னும் பானையை தயிர் ஊற்றி கடையும் போது உடைந்து விட்டதாம் (நற்:84), மண்ணால் நிறைய கலங்கள் செய்யும் குயவன் (புறம்:228:1) தான் மண் வேலை செய்யும் முன்னர்; பலியிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் (நற்:293), ஊரில் நடக்கும் விழாவிற்கு குயவர்கள்தான் வருக வருக என்று அழைப்பார்களாம் (நற்:200) போன்றவையை கூறப்படுகின்றன.

 ஆடை வெளுத்தல்

            துணிகளை துவைத்தல் இவர்களுடைய தொழிலாகக் கருதப்படுகின்றது. இவர்களை காழியர்வண்ணார், புலைத்திவண்ணாத்தி என்று அழைக்கின்றனர். அகநானூற்றிலே,

                        பசைவிரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய

                         பூந்துகில் இமைக்கும், பொலன்காழ் அல்குல்‘ (அகம்.387:6-7)

            உவர் மண்ணை சுமத்தலால் தேய்ந்து போன தலையை உடையவள் வண்ணாத்தி. அவள் கூர்மையான நகத்தினையும், நீண்ட விரல்களையும் கொண்டவள். கஞ்சி போட்டு நீண்ட நேரம் ஊர வைத்து துணியினைத் துவைக்கக்கூடியவள். அவ்வாறு துவைக்கப்பட்ட ஆடையானது அழகியதாக விளங்கும் எனறும்;. அந்தக் காலத்திலே சோப்பு கிடையாது. அதனால் அழுக்கைப் போக்குவதற்காக உவர் மண்ணை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆடைகள் விரைப்பாக இருப்பதற்கு கஞ்சி போட்டு வெளுத்து இருக்கிறார்கள். “சாயம் தோய்த்தல் ஒரு பெருவாரியான கைத்தொழில். நீலச்சாயம் தோய்த்த அரை வேட்டிகளைத் துணி வாங்குவோர் மிகவும் விரும்பினர்5 என டாக்டர் .சுப்ரமண்யன் கூறுகின்றார். வண்ணார்கள் எடுத்த உவர்மண் (அகம்:89:7), உவர்நிலத்தில் கிணறு தோண்டி நாள்தோறும் ஆடையை வெளுப்பவர்கள் (புறம்:311:2), ஆடையை வெளுக்கக்கூடிய வறுமையுற்ற புலைத்தி (நற்:90:3), ஊரில் உள்ள மக்களின் ஆடையை வெளுக்கும் வண்ணாத்தியர்கள் (கலி:72:14), கஞ்சி போட்டு ஆடையை வெளுத்தல் (அகம்:34), ஆடையை வெளுப்பவர்கள் கஞ்சியில் தொய்த்து நீரில் அலசி எடுத்தல் (குறுந்:330), வண்ணார்கள் (அகம்:89) ஆகியவை சான்றுகளாகச் சுட்டப்பெறுகின்றன.

சானைப்பிடிப்போர்

            கூர்மை மலிந்து போன கருவிகளுக்கு மீண்டும் கூர்மைப்படுத்தி தருவோர்களைச் சானைப்பிடிப்போர் என அழைக்கப்படுகிறார்கள். இன்றும் நமது வீதிகள் தோறும் இவர்கள் வருவதைக் காணலாம். அகநானூற்றில்,

                        சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய

                         கல்போல் பிரியலம் என்றசொல்தாம்‘ (அகம்.1:5-6)

            தோல் என்னும் சிறு தொழில் செய்பவன். இவன் சானைக்கல்லில் கொஞ்சம் அரக்கினைச் சேர்த்து அதனோடு தேய்ப்பான். அப்போது கத்தியானது மிகுந்த கூர்மைபெறும். இச்செய்தி அகநானூறு (356,355) – லும் இடம்பெற்றுள்ளது.

முத்துக்குளிப்போரும் சங்கு எடுப்போரும்

            கடலில் உள்ளேச் சென்று சிப்பியைக் கொன்று முத்தை எடுத்து வெளியில் கொடுப்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு கடற்கரையோர அரசவையிலும் இருந்திருக்கிறார்கள். ஐங்குறுநூற்றிலே,

                        திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்

                         தண்ணம் துறைவன் வந்தென‘ (ஐங்.105:2-3)

            முத்துக் குளிப்பார் மூச்சடக்கி அரிதாகக் கொணரத் தக்க முத்துக்களை தலைவனுடைய நாட்டில் அதிகம் இருக்கும் என ஆசிரியர் கூறுகின்றார். அதைப்போல சங்கினையும், முத்தினையும் கடலிலே மூழ்கி எடுப்பார்கள் என மதுரைக்காஞ்சி (135-136) கூறுகின்றது. இச்சங்கும் முத்துக்களும் வாணிபத்தில் சிறந்ததொரு இடத்தில் இருந்து வந்தது எனலாம்.

பூ விற்றல்

            பெண்கள் தலையில் பூச்சூடிக்கொள்வது வழக்கம். நற்காரியங்களுக்கு செல்லும் மகளிர்கள் தலையில் பூ வைக்காமல் செல்வதில்லை. ஒரு மொக்காவது தலையில் இருக்கும். இதனால் ஆங்காங்கே பூக்கடைகள் இருந்தன. மேலும், பூவைப் பறித்து தெருவெங்கும் விற்கும் செய்தியும் இலக்கியத்திலே வந்துள்ளன. அகநானூற்றிலே,

                        பைங்குழைத்தழையர் பழையர் மகளிர்

                         கண்திரள் நீள்அமைக் கடிப்பின்தொகுத்து

                         குன்றகச் சிறுகுடி மறுகுதொறும்மறுகும்‘ (அகம்.331:5-7)

            வெண்மையானப் பூக்களை ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும் தின்னுமாம். தின்றதுபோக மீதியுள்ளப் பூக்களைப் பறித்து தன்னுடையக் கூடையிலேப் போட்டுக் கொண்டாள் எயினமகளிர். பக்கத்தில் உள்ள சிற்றூரில் தெருக்களைச் சுற்றியும் சுழன்றும் பூக்களை விற்பாளாம் என ஆசிரியர் கூறுகின்றார். இச்செய்தி, பூந்தட்டில் கட்டு மணம் வீசுகின்ற நறிய பூவினை உடையவர்கள் (மதுரை:397-398), பூ விற்கும் பெண்(நற்:118), பூக்களோடு சந்தனத்தையும் சேர்த்து விற்றல் (மதுரை:515) சான்றுகளாக இங்கு சுட்டப்படுகின்றன. இன்றும் பூக்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றன. விலையுயர்ந்தாலும் மங்கையர்கள் பூவைச் சூடிக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கம்மியர்

            அணிகலன்களைச் செய்பவர்களை கம்மியர் என்றும் கம்மாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நற்றிணையில்,

                        கைவல்வினைவன் தையுபு சொரிந்த

                         சுரிதக உருவின ஆகிப்பெரிய‘ (நற்.86:5-6)

            கைவினையில் வல்ல கம்மியர்கள். பலவண்ணக் கற்களைக் கட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியினைத் தலைவி அணிந்து கொண்டாள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், செம்பினால் செய்த பானை (நற்:153:2-3), தொழில் வல்லவன் வாளரத்தால் அறுத்து வளையல்கள் செய்யப்பட்டன (நற்:77), (அகம்:345,351) போன்றவை உதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளன.

கிணறு வெட்டுதல்

            கிணறுகள் வெட்டி தண்ணீரைத் தேக்கி அதன் மூலம் குடி தண்ணீர், வயல்களுக்குத் தண்ணீர் போன்றவை சங்க காலத்திலே நடைபெற்று வந்திருக்கின்றன. அகநானூற்றில்,

                        கனைபொறிபிறப்ப நூறி வினைப் படர்ந்து,

                         கல்லுறுத்து இயற்றியவல்உவர்ப்ப படுவல்,

                         பார் உடை மருங்கின்ஊறல் மண்டிய‘ (அகம்.79:2-4)

            வலிமைப் பொருந்திய கையினை உடைய ஆடவர்கள், தோளிலே சோற்று முடிச்சு தொங்க கிணறு வெட்டும் தொழிலுக்குச் செல்வார்கள். தீப்பொறிக் பறக்க பாறைகளை வெட்டி மிக்க உவரையுடைய கிணற்றினைத் தோண்டுவர் என ஆசிரியர் குறிக்கின்றார். அப்போது குந்தாழியால் குழி தோண்டுதல் (அகம்:399) கோசர்கள் பாறையை குடைதல் (அகம்:252) போன்றவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

            மேலும் எண்ணெய் ஆட்டும் செக்கர்களும் சங்ககாலத்தில் இருந்திருக்கிறார்கள். (நற்:328:8-9) என ஆசிரியர் குறிக்கின்றார் கயிறு மேல் நடக்கும் கழைக் கூத்திகளும் இருந்திருக்கிறார்கள் (நற்:95)

புறநூல்களும் பத்துப்பாட்டும் கூறும் தொழில்கள்

            மேற்கூறிய அனைத்து தொழில்களும் எட்டுத்தொகை அக இலக்கியங்களைக் கொண்டு எடுத்தாளப்பட்டவைகள். புறநூல்களிலும் பத்துப்பாட்டு இலக்கியங்களிலும் குறுந்தொழில்கள் பயின்று வந்துள்ளமையை காணமுடிகிறது.  இங்கு தொழில் பெயரும் அதனோடு சேர்த்து பாடல் எண்களின் குறிப்புகளும் தரப்படுகின்றன.

1.         நெசவாளர் மதுரைக்காஞ்சி:521

2.         கட்டில் பின்னுபவர் புறநானூறு:82:3

3.         பிணம் சுடும் புலையர்கள் புறநானூறு:36:19

4.         நீர் இறைக்கும் தொழுவர் மதுரைக்காஞ்சி:89

5.         நெல்லரியும் தொழுவர் புறநானூறு 379:3,209:2,24:1

6.         விறகு விற்போர் புறநானூறு:70:17

7.         பாசவர் எனும் ஆட்டு வணிகர்கள் பதிற்றுப்பத்து:21:9,67:16

8.         கச்சு முடிவோர் மதுரைக்காஞ்சி:513

9.         கட்டடக்கலைஞர் நெடுநல்வாடை:76-78

10.       ஓவியர் நெடுநல்வாடை:110-114,மதுரைக்காஞ்சி:516

சங்ககாலத்தில் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட குழுக்கள் பின்னாளில் குலமாக மாறியது எனலாம். “தொழில் பிரிவினர் காலவோட்டத்தில் குலங்களாய் குடிகளாய் ஆயின6 என பா.இறையரசன் கூறுகின்றார். சாதிகள் பெருகுவதற்கு தொழில்களே காரணமாக இருந்தது என்பது அடிப்படை உண்மை.

முடிவுரை

முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை உட்கார்ந்து கொண்டு அழிப்பவன் மனிதன் அல்லன். சொத்து சேர்த்து வைக்காவிடிலும் தனக்குண்டானச் சோற்றையாவது தான் சம்பாதித்த பணத்தில் சாப்பிடுவது நன்று. நம் நாட்டின் இழிவு என்பது சோம்பேறித்தனமும், பிச்சை எடுப்பதும்தான். அவர்களுக்கு தகுந்த வேலையைக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். இன்று உடல் ஊனமுற்றோர்கள் கூட தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல வேலை என்று ஒன்றும் இல்லை. கிடைத்த வேலையைச் செய்து கொண்டே நல்ல வேலையைத் தேடுதலே சாலச்சிறந்து. இவ்வுலகில் பொய் உரைக்காமலும், மற்றவர் பொருளினை அபகரிக்காமலும், யாரையும் ஏமாற்றாமலும் எந்தவொரு வேலையினைச் செய்தாலும் அத்தொழிலானது மகிழ்ச்சிக்குரியதாகும்.

சான்றெண் விளக்கம்

1.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்பு ஜுலை 1993, .192

2.         சுப்ரமண்யன்,., சங்ககால வாழ்வியல், NCBH சென்னை-98, இரண்டாம் பதிப்பு – 2010, .304

3.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்புஜுலை 1993, .192

4.         சுப்ரமண்யன்,., சங்ககால வாழ்வியல், NCBH சென்னை-98, இரண்டாம் பதிப்பு – 2010, .304

5.         மேலது. .303

6.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்புஜுலை 1993, .192

 

முத்துக்கமலம் மின்னிதழ் – 15.04.2018   வெளிவந்தது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

மணிமேகலை ஒரு சீர்த்திருத்தவாதி

        தொடக்கக் காலத்தில்மனிதன் சமயங்கள் வாயிலாகவே தன்னுடையநம்பிக்கையை வளர்த்து வந்தான். அந்நம்பிக்கைகளுக்கு எந்தவொரு ஊறு விளைவிக்காமல் நடக்கவும்செய்தான். மனிதனின் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும்கதைகளாக வடிக்கத் தொடங்கினான். அந்தக் கதைகளின்போக்கு சிறப்புடையதாக அமையநிறைய வடிவங்களையும், கதாப்பாத்திரங்களின் ஆளுமைத்தன்மையினையும் கொண்டு வந்தான். அக்கதையின் வழியாகதான் நினைக்கின்ற உலகத்துஇயல்புகளை எல்லாம் உருவாக்கி நடமாடச்செய்தான். மக்களுக்கு நல்லவை நடக்கும்என்று நம்பி கற்பனைக்கும் எட்டமுடியாதக் கருத்துக்களைக் கூட  நம்பவைத்தான். அந்த வகையில்காப்பியங்கள் மிகச்சிறப்பான இடத்தைப்பெறுகின்றன. ஐம்பெருங் காப்பியத்தில் மணிமேகலையில்கோவலனுக்கு கிடைத்த தண்டைனையை மாற்றி, கண்ணகியின்கோபம் குறைவுபட, மாதவியின் மானம்காத்து, பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவுஇட்டாள் காவிய நாயகி மணிமேகலை. அம்மணிமேகலைபசிப்பிணி என்னும் பாவியை சுட்டெரித்துவீழ்த்தியச் செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரைவெளிப்படுத்த முயல்கிறது.

மணிமேகலை 

            தன்னுடையப் பழம் பிறப்பினைஅறிந்து கொண்ட மணிமேகலை, அறத்தின் இயல்புகளையும்தத்துவங்களையும் கற்றுக் கொள்வதற்கு தகுதிஅடைந்தவளாய் இப்போது இருக்கின்றாள். மணிமேகலை சிறுகுமாரியாகஇருப்பதனால் சமயக் கொள்கைகளை அடிகளார்கூறமாட்டார்கள். அதனால் உனக்கு வேற்றுருக்கொண்டும், வான் வழியேச் செல்லும் மந்திரத்தையும் அளிக்கின்றது மணிமேகலாத் தெய்வம்.

            புத்த பிரான் அவதரித்தநாளான வைகாசி நாளன்று கோமுகிப்பொய்கையின்று அமுதசுரபி என்னும் ஐயக்கலம்வெளிப்படும். அக்கலமானது ஆபுத்திரன்கையில் இருந்தது. அதில் இடப்பட்டசோறு எடுக்க எடுக்க குறைவுபடாதுவளரும் தன்மையுடையது. இன்றுதான் அமுதசுரபிதோன்றும் நன்னாள் என்று கூறிதீவத்திலகை மணிமேகலையை கோமுகிப்பொய்கைக்கு அழைத்துச் செல்கின்றாள். அப்பொய்கையில் இருந்துதோன்றிய அமுதசுரபியானது மணிமேகலையின்கைகளில் வந்து தங்கியது. அமுதசுரபி தன்கைகளில் புகுந்ததும் மனதில்பெரும் மகிழ்ச்சி அடைந்து புத்தப்பகவானை வணங்கித் துதித்தாள்.

                        குடிப்பிறப் பழிக்கும்விழுப்பங் கொல்லும்

                         பூண்முலைமாதரொடு புறங்கடை நிறுத்தும்

                         பசிப்பிணி  யென்னும் பாவியது தீர்த்தோர்” (மணிமேகலை.11:76-79)

            பசிப்பிணி என்னும் பாவியானவன்குடிப்பெருமையை அழிப்பான். மேன்மையைக் கொல்வான். நாணம்என்ற அணிகலனைக் களைந்து எறிவான். உடலழகையும்அழித்து விடுவான். மனைவி மக்களோடுஅயலான் வீட்டுக்கு நாணாதுபிச்சை எடுக்கச் செய்வான். இவ்வளவு கொடுமைகளைச்செய்யும் கொடும்பாவியை அழிப்பவரைபுகழ வேண்டும். அக்கொடும்பாவியாகியப் பசியைஅழிக்க வந்தவள்தான் மணிமேகலைஆவாள். தன்னுடையப் பாத்திரத்தின் வாயிலாகமக்களின் பசியினைத் தீர்த்து வைக்கிறாள்.

பசியின் கொடுமை

            பசி வந்தால் பத்தும் பறந்துபோகும், பசி ருசி அறியாது என்றபழமொழிகள் கிராமங்களில் சொல்வதுண்டு. பசியின் வலியை அறிந்தவன் மற்றவரின்பசியை நன்கு புரிந்து கொள்வான். திருக்குறளில்,

                        உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

                           சேரா தியல்வதுநாடு” (குறள்.74:4)

            மிகுதியானபசியும், அந்தப் பசியோடு சேர்ந்தநீங்காத நோயும், அழிவைத் தருகின்றபகையும் சேராது ஒரு மனிதன்வாழம் நாடே சிறந்த நாடாகக்கருதப்படுகிறது. பசிப்பிணி இல்லா நாட்டையேவள்ளுவர் விரும்பினார். மணிமேகலைக் காப்பியத்தில்பசியின் கொடுமையை சாத்தனார் அவர்கள்விரிவாகச் சுட்டுகின்றார். பசியின் வலிஅவஅவனுக்கு வந்தால்தான் தெரியும்என்பார்கள். உன்று கொழுத்தவனுக்கு பசியின்கொடுமைப் பற்றி எங்கே தெரியப்போகிறது. மணிமேகலையில் மழையின்மையால் கௌசிகமுனிவன் இறந்து கிடந்த நாய்க்கறியினைஉண்ணுகிறான்.  அதையேஇந்திரனுக்கும் படைக்கவும் செய்கின்றான்.

            பசியானது கௌசிக முனிவனையேஇழி செயல் செய்யத் தூண்டியிருக்கிறது. அப்பசியின் கொடுமை பாமர மக்களைஎன்னச் செய்யத் துண்டாது? உலக அறங்களில்சிறந்தது பிறருடையப் பசியினைப்போக்குவதுதான். பசியைப் போக்கி ஆற்றுவாரேசிறந்தவராகக் கருதப்படுகிறார். “எல்லா ஒழிப்புக்களிலும் உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலைவற்புறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல்வற்புறுத்தும் வேறு நூல் தமிழில்இல்லை. பசியின் கொடுமை மிகப்பெரியது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்றநல்லவை யாவும் பசித் தீமுன் அழிந்தொழியும். எதனைத் துறந்ததுறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசியாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும்”1  என்று .சுப. மாணிக்கம் அவர்கள்பசியின் வலியை உணர்த்தி நிற்கின்றார்.

                        பசிப்பிணி யென்னும் பாவியதுதிர்த்தோர்

                         இசைச்சொலளவைக் கென்னு நிமிராது” (மணிமேகலை.11:80-81)

            சோற்றுக் கொடையும் அக்கொடையாளரின் சிறப்பும் இந்நூலால் பறைச்சாற்றப்படுகின்றன. சோற்றை ஆரூயிர்மருந்து என்றும் அதனை வழங்குவோரைஆருயிர் மருத்துவர் என்றும்சாத்தனார் கூறுகின்றார். பசி என்கிறநோயிலிருந்துதான் ஏனையப் புற நோய்களும்அக நோய்களும் பிறக்கின்றன. உடற்பிணி மருத்துவர்களாலும் அகப்பிணி அறிஞர்களாலும் போக்கப்படுகின்றன.  ஏனைய நோய்களுக்குப் பிறப்பிடமாகப்பசி என்னும் நோய் தோன்றுகிறது.

                        மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

                         உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத் தோரே” (மணிமேகலை.11: 95-96)

            என்று சீத்தலைச் சாத்தனார்அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு தனிமனிதனும் பசியினைப் போக்க பாடுபடுதல்வேண்டும். அதன் ஒழிப்பை அரசும் முதற்கடைமையாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும். ஓருயிர்கூட பசித்துக் கிடத்தல் கூடாதுஎன்று நினைத்தல் வேண்டும். பசிப்பிணி நீங்கபுறப்பிணி நீங்கும். புறப்பிணி நீங்கஅகப்பிணி நீங்கும். மக்கள்களுக்கு அடிப்படையாகத்தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் ஆகியவைஅரசு அமைத்துக் கொடுத்தல் வேண்டும்என்று சாத்தனார் அவர்கள் மணிமேகலையில்பாடுகின்றார்.

                        ஆற்றுநர்க் களிப்போரறவிலை பகர்வோர்

                         ஆற்றாமக்கள் ளரும்பசி களைவோர்

                         மேற்றேயுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை” (மணிமேகலை.11:92-94)

            அறத்தை விலைக் கூறிவிற்கும் அறவணிகர்கள் பொறுத்துக்கொள்ளும் செல்வந்தர்களுக்கு உணவுஅளிப்பார்கள். பசியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மக்களின் பசியினை நீக்குபவர்கள்உண்மையுடையவர்களாக இருப்பார்கள். உண்மையான வாழ்க்கையானதுஅவர்களின் உள்ளம்தான். இந்த உலகத்தில்வாழ்கின்ற உயிர்களுக்கெல்லாம் உணவுகொடுத்து பசியைப் போக்குவோர்தாம் உயிர்கொடுத்தவர்களாகக் கருதப்பெருவார்கள். உணவு கொடுப்பதுதான்உயிர் கொடுப்பதற்குச் சமமாகக்கருதப்படுகின்றது.

                        சோறில்லை என்பார்க்குச் சோறுதருவதுதான்

                         கூறறங்களின்சாற்றுக் கூட்டம்மாவேறேதான்”2

            என்று மணிமேகலை வெண்பாவில்பாரதிதாசன் குறிப்பிடுகின்றார். வயிற்றுக்குச் சோறில்லைஎன்று துன்பம் படுகிறவர்களுக்கு சொறுதந்த உதவுவதுதான் சிறப்பித்துச்சொல்லுகின்ற அறத்தின் தொகுதியாகக் கருதப்படுகிறது. அறங்களின் சாற்றையெல்லாம் கூட்டியகூட்டுத்தான் சோறு தருவது என்றுபாரதிதாசன் கூறுகின்றார்.

சிறைக்கோட்டத்திற்கு உணவுவழங்கல்

            ஒருநாள் சிறைக்கோட்டத்திற்குச் சென்றுஅங்குப் பசியால் வாடிக்கொண்டிருந்தவர்களைக் கண்டுஇன்மொழிகளைக் கூறி அமுதசுரபியிலிருந்து உணவைஅள்ளி அள்ளித் தந்து அவர்களின்பசியினைப் போக்கி உள்ளம் குளிரச்செய்தாள் மணிமேகலை.

                        ஆங்குப் பசியுறு மாருயிர்மாக்களை

                         ஊட்டியபாத்திர மொன்றென வியந்து” (மணிமேகலை.19:45-46)

            மணிமேகலையின் செயலைக் கண்டசிறைக் காவலன் மன்னனிடம் சென்றுநடந்ததை தெரிவித்தான். சோழ மன்னன்தன்னுடைய அரசமாதேவியுடன் சோலையில்வீற்றிருந்தான். நம் நகரத்தில் யானைத்தீ என்னும் கடும் பசியால்உடல் வருந்தி மெலிந்து திரியும்பெண்ணொருத்திக்கு ஒருத்தி தன்னுடையப் பாத்திரத்தில்இருந்து உணவினை எடுத்துக் கொடுத்தாள். அது அள்ள அள்ள குறைவில்லாமல்இருந்தது. அவள் தந்த உணவினை அனைவரும்உண்டு பசி நீங்கினார்கள். மன்னன் மணிமேகலையைஅழைத்து வர உத்திரவிடுகின்றார்.

            ஐயக்கலனைப் பற்றி மன்னர்வினவுகின்றார். உலக அறவியில் ஒருதெய்வம் எனக்கு தந்தது. இது தெய்வத்தன்மைபொருந்தியது. புசியால் வாடும் உயிர்களுக்குஉயிர் தரும் மருந்தான உணவைவற்றாமல் சுரக்கின்ற அமுதசுரபிஇது. இதைக் கொண்டு என்னுடைய கடமையைச்செய்து வருகின்றேன் என்கிறாள்மணிமேகலை.

            மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்ற வழிவகைச் செய்தல்வேண்டும் எனக் கூறுகிறாள். மன்னனும் சிறைப்பட்டோரைஎல்லாம் விடுதலை செய்த அறக்கோட்டமாகமாற்றுகிறேன் என்று உறுதி கூறுகின்றான். முனிவர்கள் அரசரிடம் உம் கொற்றம்சிறக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். பஞ்சமா பாதங்களில் மிகவும்கொடியதாகக் காமமேச் சுட்டப்படுகின்றது. அதை நீக்கிவிட்டால் பொய், கொலை, களவு, கள் எனநான்கும் தானாகவே நீங்கிவிடும் என்கிறார்ஆசிரியர்.

இலக்கியப் பார்வை

பொய், களவு, பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைவிட மிகப்பெரிய நோய்பசியே என்கிறார்கள். அப்பசியினைப் போக்கஅரசாங்கம் வழிவகை செய்தல் வேண்டும். அக்காலத்தில்பசி என்று வந்தவர்களுக்கு உணவுபரிமாறிட அன்னச்சத்திரங்கள் ஆங்காங்குகட்டி வைத்தார்கள். தானத்தில் சிறந்ததுமற்றவர்களுக்கு பசியை ஆற்றும் அன்னதானமேஆகும். சங்ககாலம் முதல் இடைக்காலம்வரை சத்திரங்களும் மடங்களும்மக்களுக்கு சோறு போட்டன. காவிரிபூம்பட்டினத்தில், சோறாக்கிய கொழுங்கஞ்சிஆறு போல் வீதியை நனைத்ததுஎன்று பட்டினப்பாலை உரைக்கிறது. ஆனால் இன்றைக்கு உணவினை காசுக்குபோட்டிப்போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். உழைப்பவனுக்கே அனைத்தும் கிடைக்க வேண்டும்என்கிறார்கள். ஆனால் அவனுக்கு கிடைப்பதுவெறும் கூழோடு கூடிய கஞ்சிமட்டும்தான். நாட்டின் வளர்ச்சி மாணவஇளைஞர்கள் கையில் உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள்பட்டினி கிடந்தால் பாடம்தான் ஏறுமா? புத்திதான்விளையுமா?

                            தனியொருவனுக்கு உணவில்லைஎனில்

                             ஜகத்தினை அழித்திடுவோம்  (பாரதியார் கவிதைகள், பாரதசமுதாயம். பா.2)

என்கிறார் பாரதியார். தனி மனிதனுக்கு உணவில்லைஎனில் இந்த உலகம் எதற்காக? அரசாங்கம்எதற்காக? மானுடம் வெல்லும் என்றுவாய்ப்பேச்சில் மட்டும் இருந்தால் போதாது.

முடிவுரை

அள்ள அள்ளகுறையாத தமிழ் மண்ணில் பிறந்தமக்கள் சோற்றுக்கு வக்கத்தவர்களாக மாறி விட கூடாது. ஆபுத்திரன் கையில்இருந்த அமுதசுரபியானது எத்தனையுகங்கள் ஆனாலும் மணிமேகலை போன்றநல்ல உள்ளங்கள் கைகளில் இருந்து, பசிக்கொடுமையால் வாடி வதங்கிக்கிடக்கும் மனிதர்களுக்குஎப்போதும்  உணவு வழங்கிக்கொண்டிருக்கும்.

சான்றெண் விளக்கம்

1.காப்பியப் பார்வை, .சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, .146

2.மணிமேகலை வெண்பா, பாரதிதாசன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, நூ.113

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »