Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் முருக நாயனார் புராணம்

முருக நாயனார் புராணம்

முருக நாயனார்

முருக நாயனார்

இறைவர் திருப்பெயர் :ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் :ஸ்ரீ கருந்தார்குழலி

அவதாரத் தலம் :திருப்புகலூர்

முக்தி தலம் : ஆச்சாள்புரம்

குருபூஜை நாள் : வைகாசி – மூலம்

“புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்

மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த

அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்.”


பாடல் விளக்கம்:

            பொழுது விடிவதற்கு முன்பாக எழுந்து, தூய நீரில் மூழ்கிச் சென்று, தம்பெருமானின் திருமுடிமேல் பிறையுலவும் திருச்சடையிடத்து முகையவிழ்ந்து மலர்கின்ற செவ்வி பார்த்து, எடுத்த அளவற்ற மலர்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளில் சேர்ப்பாராய்.

திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம்பெரும் திருத்தலம்! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார்! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார்.

எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார்.


            முருக நாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம் கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.


            இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம் பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார்.


            இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருக நாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருக நாயனாரின் திருமடத்திற்கு திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.


            இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார் , இறைவன் அருளிய பேரொளியிலே திருஞானசம்பந்தர் புகுந்த போது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.


“அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்

விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக்

கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.”


பாடல் விளக்கம்:


பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக அவருடைய திருவடி நிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறியினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார்பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.

சோழநாட்டிலுள்ள திருப்புகலூரில், வேதியர் குலத்தில் பிறந்தவர் முருக நாயனார். சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.


            நாள்தோறும் மரம், கொடி, செடி, நீர் இவைகளில் பூக்கும் மலர்களைப் பறிப்பார். அவைகளைக் கொண்டு மாலைகள் தொடுப்பார். அவற்றை சிவபெருமானுக்குச் சூட்டி வணங்குவார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்.


இவ்வாறு திருத்தொண்டு செய்து வந்த இவர், திருஞான சம்பந்தப் பெருமானுடனும் திருநாவுக்கரசு சுவாமிகளுடனும் நட்பும் பக்தியும் கொண்டிருந்தார். சிவ வழிபாட்டில் வழுவாது நின்ற முருக நாயனார் சிவனடி நிழலில் சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »