Tuesday, July 22, 2025
Home Blog Page 31

எச்சில் இலை – சிறுகதை

அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும். உடம்பில் உள்ள பனியன், வியர்வையால் நனைந்து போயிருந்தது. சூரியன் மறைவதற்குள் எப்படியாவது அந்த மலைக்கிராமத்திற்குச் சென்றாக வேண்டும். இப்போது சைக்கிளை இன்னும் வேகமாக மிதிக்க ஆரமித்தேன். ஒருநாள் வருவதற்கே நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதே. அவன் எப்படி ஏழு வருஷம் காலையிலும் மாலையிலும் வந்திட்டுப் போனான் என்று நினைக்கும் போதே மனசு கடுத்தது. நான் ஐஞ்சாவது பாஸ் பண்ணேன். ரொம்ப சந்தோசம். பெரிய ஸ்கூலுக்குப் போகப்போறேன்ல்ல.. அப்பாகிட்ட சண்டைப்போட்டு மூன்று ரூபா வாங்கி எல்லாத்துக்கும் மிட்டாய் வாங்கிக்கொடுத்தேன்.  ஒரே ஜாலியா இருக்கும். இப்பெல்லாம் அந்த மாதிரி நிகழ்வே நடக்கிறதுல்ல.  பழைய நினைவுகளை நினைக்கும் போதே மனசு இனித்தது.

கவர்மண்ட் ஸ்கூல் முதல்நாள் ஆறாம் வகுப்பறை. பயபக்தியோடு அமைதியாக அமர்ந்திருந்தேன்.  புது நண்பர்கள். புது இடம் என எல்லாமே எனக்கு வித்தியாசமாய் தோன்றியது. அவரவர்களும் தங்களின் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். மத்தியானம் அவரவர் நண்பர்களோடு சாப்பிடப்போனார்கள். நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். சின்ன வயசில இருந்தே அவ்வளவா எனக்கு நண்பர்கள் கிடையாது. அன்றும் அப்படித்தான். மத்தியான வகுப்புக்குச் சென்றேன். அப்பெல்லாம் ஸ்கூல்ல தரையிலதான் உட்காந்திருப்போம்.  பசங்க வரிசையில ஓரமா போயி உட்காந்தேன்.  கொஞ்ச நேரத்துக்குப் பிறகு  காக்கி டவுசரோடு வெள்ளை சட்டை  வேர்க்க விறுவிறுக்க ஒருத்தன் வந்தான். உள்ள வந்தவன் அந்த வகுப்பறையை ஒருமுறை சுற்றிப்பாரத்தான். என்ன நினைத்தானோ அவன்? வேகமாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் பதிலுக்குச் சிரித்தேன். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நண்பனாகிப்போனான். ஆளு மாநிறமாத்தான் இருப்பான். பேரு வெள்ளையன். அப்பாவித்தனமான  வெள்ளையனை எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. அடுத்தடுத்த ஆறாவது, ஏழாவது எட்டாவது என நானும் வெள்ளையனும்  பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்புதான். அதனால நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாயிட்டோம்.

வகுப்புக்கு தினமும் தாமதமாகத்தான் வருவான். எங்க ஊருக்கு வடக்கு பக்கமா ஒரு பெரிய மலைக்கிராமத்தில்தான் வெள்ளையனின் வீடு இருக்கு. தினமும் அங்கிருந்துதான் சைக்கிள்ள பள்ளிக்கூடத்திற்கு வருவான். நான் அவனுடைய கிராமத்தைப் பத்திக் கேட்டப்ப நிறைய சொல்லுவான். வெள்ளையனுக்கு மலையிலிருந்து வரது போரது எல்லாம் பழகிப்போயிடுச்சி. பத்தாவதுக்குப் பிறகு வெள்ளையன் படிக்கல. குடும்ப சூழ்நிலையா… படிச்சது போதும்ன்னு நினைச்சானா… தெரியவில்லை. அதுக்குப்பிறகு அவனுடைய தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது.  காலம் மாறிப்போச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வெள்ளையனிடமிருந்து போன் வந்தது. வெள்ளையனுக்கு கல்யாணமாம். கண்டிப்பா வரனும்முன்னு சொன்னான். நானும் போவனுமுன்னு முடிவு பண்னேன். இன்னிக்கு எப்படியோ இதுவரையில் வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல கிராமத்தை நெருங்கிடுவன். அப்பத்தான் நினைச்சன், இந்த வெள்ளையன் எப்படித்தான் ஐஞ்சு வருஷமா காலையிலும் மாலையிலும் இந்த மலையேறி இறங்கி வந்திருப்பானோ தெரியல.

சீரியல் பல்பு. வாசலில் இரண்டு பக்கமும் வாழைமரம். ஸ்பீக்கரில் புதுப்பாட்டு. கல்யாண வீட்டிற்குள் நுழைந்தேன். அப்போது வாசலை சாணியால் மெழுகிக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுமிக்க அம்மா.

“அம்மா… நான் வெள்ளையனுடைய பிரண்டு. வெள்ளையன் எங்க?” என்றேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே வெள்ளையனின் குரல் கேட்டு திரும்பினேன்.

“வா கதிர்….. உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷமாச்சு. எப்படி இருக்க.. நல்லா இருக்கியா…” என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். இருவரும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளை அசைப்போட்டு சிரித்துக் கொண்டோம்.  கல்யாண ஏற்பாடுகள் வெகுவாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.   கல்யாணச் சாப்பாட்டுக்கு இலைப்போட்டார்கள். எல்லோரும் போய் அமர்ந்தார்கள். நானும் வெள்ளையனும் கூட அவர்களுடன் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தோம். இலைப்போட்டு தண்ணீர் தெளித்து பசியை விரட்ட ஆவலோடு காத்திருந்தேன். பரந்த இலையில் பாயாசத்தை முதலில் ஊற்றினார்கள். ஊர்ல அப்பா சொல்லுவாறு, “தம்பி… கல்யாணத்த சிக்கனமா முடிக்கனுமுன்னு நினைக்கிறவங்க சாப்பாடு போடும்போது முதல்ல பாயாசத்தைதான் ஊத்தூவாங்க” என்பார். நான் எதுக்கு அப்படி செய்யுறாங்கன்னு கேள்வி கேட்ட போதுதான் எனக்கு விஷியமே புரிய ஆரமித்தது. இனிப்பு சாப்பிட்ட பிற்பாடு சாப்பாடு நிறைய சாப்பிட முடியாது. கல்யாணத்துல சாப்பாடு செலவுதான் அதிகம் வரும். வரவங்களுக்கு சாப்பாடு நல்லா போட்டுட்டா போதும் எதுவும் பேசமாட்டாங்க. சாப்பாடு சரியில்லன்னா அது நொட்டம், இது நொட்டம்முன்னு ஏதாவது புரளி பேசிட்டுருப்பாங்க. இப்படி சாப்பாட்டு செலவை குறைக்கிறதுக்குத்தான் இப்படி பண்ணுவாங்க.  அதனால்தான் இன்றையக் கல்யாண வீடுகளில்கூட இனிப்பை முதலில் இலையில் வைக்கிறார்கள். பாயாசத்தை வாயில் எடுத்து உறிஞ்சிக்கொண்டே அப்பா சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

என்னோடு பந்தியில் உட்காந்தவர்கள் அனைவரும் எழுந்து விட்டார்கள். வெள்ளையனும் சாப்பிட்டு முடித்திருந்தான். நான் வீட்டிலே சாப்பிடுகிற மாதிரி பொறுமையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். “ஏ கதிர் சீக்கிரம் எழுந்தர்றா… எல்லாரும் எழுந்து போயிட்டாங்க…” இப்போது நான் அவசர அவசரமாக சாப்பிட்டேன். அதற்குள் இலை எடுக்கும் அம்மா பக்கத்தில் வந்து விட்டார்கள். என்னுடைய வரிசையில் என் இலையை மட்டும் எடுக்காமல் எனக்காக நின்று கொண்டிருந்தார்கள். “தம்பி பொறுமையா சாப்பிடுங்க… விக்கிக்க போவுது. தண்ணி குடிங்க… நீங்க சாப்பிட்ட பிற்பாடு நான் இலையை எடுத்துக்கிறேன்” என்றாள் அந்த அம்மா. அவர்களிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு புன்னகை செய்தேன். அப்பொழுதுதான் கவனித்தேன், நான் வரும்போது வீட்டை சாணியால் மெழுகிகிட்டு இருந்த அதே அம்மாதான். நான் சாப்பிட்ட எச்சில் இலையை தூக்கி எடுத்த போது எச்சில் ரசமானது அந்தம்மாவின் கைகளை நனைத்தது. ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாது மீண்டும் தன் வேலையை தொடங்க ஆரமித்தார்கள்.

எனக்கு பின்னால் வந்த அனைத்து பந்திகளிலும் அந்தம்மாதான் எச்சில் இலையினை எடுத்தார்கள். எனக்கென்னவோ மனசு ஒருமாதிரியாக இருந்தது. இலையில் ரசமும் பாயாசமும் ஊற்றி உள்ளங்கை நெனைய நாக்கை சுழற்றி நக்கி நக்கி சாப்பிடுவார்கள். அவர்களின் எச்சில் பட்ட இலையை ஒரு பெண் கைவைத்து எடுக்கனுமா? இது தவறு என நினைத்தேன். அதுவும் அந்தம்மாவைப் பார்த்தப்போது  பூ பொட்டு இல்லாமல் விதவை என்றே தோன்றியது. திருமண வேளைகள்  அனைத்தும் முடிந்து நானும் வெள்ளையனும் தனியே அமர்ந்திருந்தோம். பெண் அழைப்பின் போது வெள்ளையன் வழிந்ததைச் சொல்லி அவனை கிண்டலடித்தேன். பேச்சு வாக்கில் எச்சில் இலையை எடுக்கும் அந்தம்மாவைப் பற்றி விசாரித்தேன்.

“எங்க அத்தைதான். பேரு விசாலாட்சி. மாமா ஒரு விபத்துல செத்துட்டாரு. குழந்தையும் இல்ல. பக்கத்து தெருவுலதான் இருக்காங்க…” என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தான்.

“என்னாடா அத்தைன்னு சொல்ற… அவுங்கள போயி எச்சி இலையை எடுக்கச்சொல்லி… இன்னும் அவுங்கள கஷ்டப்படுத்துற… வருபோது கூட குண்டா நிறையா சாணியைக் கரைச்சிட்டு நின்னுட்டு இருந்தாங்க…”

“இல்ல கதிர்.. நாங்கெல்லாம் ஒன்னும் சொல்லல. அவங்களே இழுத்துப்போட்டுட்டு செய்யிறாங்க” என்றான்.

“சொந்த அண்ணன் வீட்டு கல்யாணம். மேம்போக்கா வந்து உட்காந்து இருக்க வேண்டாமா? அப்பப்ப சின்னதா வேலை. இது போதாதா? ” என்றான் கதிர்.

“கதிர்… இது கிராமம். இங்கெல்லாம் இப்படித்தான். ஒரு வீட்டுல விஷேசமுன்னா பக்கத்துல இருக்கிற ஆம்பிளைங்க, பொம்பிளைங்க எல்லாம் வந்து ஒன்னா வேலை செய்வாங்க… சாப்பிடும் போது பாத்தல்ல.. ஆம்பிளைங்க எல்லாம் பந்தி பரிமாறுனாங்க.. . பொம்பளைங்க சமைச்சாங்க…   எங்க பெரிய சித்தி, அத்தை, அக்கா, பக்கத்து வீட்டு மாரியக்கான்னு எல்லாரும் இருந்தாங்கல்ல ”

“சரிதான் வெள்ளையன். எல்லாரும் கலந்து வேலை செய்யிறது நல்லதுதான். நான் அதை சொல்லல. எச்சிஇலையை எடுக்கிறது மட்டும் அந்தம்மாதான செய்யுது. அதைத்தான் சொன்னேன்”

“எச்சில் இலை எடுக்கிறது புண்ணியம். அது வேற யாருக்கும் கிடைக்காது தெரியுமா?. அதெல்லாம் உனக்கு தெரியாது கதிர்.”

“என்னது… புண்ணியமா? அப்படின்னா நீ எடுக்கிறது? இல்லன்னா, நீ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே உங்க சொந்தக்காரங்கள எடுக்க சொல்றது? ஏ புண்ணியத்தை அந்த விசாலாட்சி அம்மா மட்டும் எடுத்துக்கனும். ”

வெள்ளையனிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. யோசனையில் ஆழ்ந்தான். “ நீ என்னோட நல்ல நண்பன். உனக்கு விடிஞ்சா கல்யாணம். நான் உன்னை கோபப்படுத்தனுமுன்னு சொல்லல. என் மனசுக்கு பட்டிச்சி அதான் சொன்னேன்.” என்றான் கதிர்.

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை. மற்ற சில விஷியங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். “தம்பி சீக்கிரம் தூங்கு… காலையில எழுந்திருக்கணும்” என்று வெள்ளையனின்  அம்மா சொல்லிட்டுப் போனாங்க. நாங்க ரெண்டு பேரும் தூங்குவதற்கு கிளம்பினோம். போகிற வழியில்தான் சமையலுக்காக பாக்கு மரத்தால் சதுரமாகக் கட்டி தென்னங்கீற்றை மேலே போட்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் அந்த நேரத்திலும் விறகு அடுப்பால் சோறாக்கியக் கரிப்பாத்திரப்பண்டங்கள் அனைத்தும் சுத்தமாக வௌக்கி வைத்திருப்பதைக் கண்டேன். வெள்ளையன் உள்ளே படுக்கச்சொல்லி விட்டு நான் அந்த அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“அம்மா… நான் வெள்ளையனின் பிரண்டு” என்று விசாலாட்சி அம்மாவிடம் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

கொஞ்ச நேர மௌனத்திற்று பிறகு “எந்த ஊருப்பா” என்றார். நான் பிறந்தது முதல் படித்தது வரை சொன்னேன். நானும் “உங்களப்பத்தி சொல்லுங்கம்மா… நீங்க ஏ எச்சில் இலையை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறது எதுக்கு? உங்களுக்கு துணையா யாரும் இத செய்ய மாட்டாங்களா? நீங்க மட்டும் தனியா செஞ்சிட்டு இருக்கீங்க?” என்றேன்.

“நானும் கல்யாணம் ஆகி ராணி மாதிரி இருந்தேன். புருஷன் செத்ததுக்கு அப்புறம் நல்ல காரியங்களுக்கு முன்ன நிக்கிறதுக்கு எனக்கே கூச்சமாய் இருந்தது. அதுமட்டும் இல்லாம யாராவது எதாவது சொல்லுவாங்களான்னு கூட பயமாவும் இருந்தது. அதனால நானே ஒதுங்கி நிக்க ஆரமிச்சிட்டேன். ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால எங்க நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். சொந்தகாரங்க எல்லோரும் ஒருஒரு வேலையா செஞ்சாங்க. நானும் அவுங்க கூடமாட உதவி செஞ்சேன். கொஞ்ச நேரத்துக்கு பிற்பாடு புழக்கடை பக்கம் வெளிய போலாம்முன்னு போனேன். அங்க என் நாத்தினார்கிட்ட தூரத்து உறவுப்பெண், “என்ன பாஞ்சாலை, தாலி அறுத்தவ கல்யாண வீடுன்னு கூட பார்க்காம அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு திரியரா… நீ சொல்ல மாட்டியா?” என்றாள்.

“என்ன சொல்றது. எங்க வீட்டுக்கார்ரோட தங்கச்சி… அதான்…” என்று பாஞ்சாலை இழுத்தாள்.

“இதெல்லாம் பாத்தா முடியுமா? சொல்லித்தான் ஆகனும். நல்ல விஷேசங்கல்ல கலந்துக்க கூடாது. அப்படியே வந்தாலும் இலை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு ஒதுங்கியே இருந்திட்டு போயிடுனும். இதெல்லாம் தெரியாதா அவளுக்கு?” என்றாள்

பாஞ்சாலை ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். புழக்கடையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நான் மனசு ஒடிஞ்சி போயிட்டேன்.  கொஞ்ச நாளைக்கு எந்தவொரு காரியங்களுக்கும் போகாமதான் இருந்தேன். முக்கியமான விஷேசங்கல்ல மட்டும் கலந்துக்குவேன்.  சரி வேலை ஏதாவது செய்யனுமில்ல… அதனால நானே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரமிச்சேன். கூடமாட இருந்தவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா போயி, நான் மட்டும் தனியா செய்ய ஆரமிச்சிட்டேன்.

அதுக்கப்புறம் நான் விஷேசத்துக்குப் போனாவே, “ இந்தா விசாலாட்சி வந்துட்டா… இனிமே இந்த வேலையெல்லாம் அவளே பாத்துப்பா.” என்றார்கள். எனக்கு இந்த வேலை செய்யுறது கூட கஷ்டமா தெரியல. என்னோட ரத்த உறவுக்கூட யாருமே, விசா… எதுக்கு பண்ணனும், அவ பண்ண மாட்டான்னு ஒருத்தர் கூட எனக்கு வக்காழத்து வாங்க வரல… என்று சொல்லிக்கொண்டே  அழுத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

வெள்ளையன் குடும்பம் மீது எனக்கு கோபம் வந்தது. என்கிட்ட மனசுவிட்டு சொன்னதனால கண்டிப்பா விசாலாட்சி அம்மாவுடைய மனபாரம் குறைஞ்சி இருக்கும். நேரம் ஆனதனால நானும் தூங்க வந்துட்டன். மனசு வலித்தது. கிராமங்களில் பெண்களுக்கு இதுபோன்ற வழக்கம் இருப்பதை அறிந்து நொந்து கொண்டேன். அடுத்தநாள் வெள்ளையனை வாழ்த்தி மொய் எழுதிவிட்டேன். மலை கிராமத்தில் இருந்து சைக்கிளில் விசாலாட்சி அம்மாவின் நினைவோடு பயணமானேன்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

கவுந்தியடிகளும் கருணையும்

மனிதர்கள் வாழும் உலகம் மலைகள், காடுகள், வயல்கள், கடல்கள் என்று பன்முகத்தன்மை கொண்டது. உலகின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. நிலங்களின் வகைகளுக்கேற்பவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பழந்தமிழர் வகைப்படுத்தியுள்ளனர். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்ற கொள்கையும் பழந்தமிழரிடம் காணப்பட்டது. உலகத்தை மங்கலப் பொருளாகத் தமிழர் கருதினர். தமிழ்ப்புலவர்கள்

            உலகம் உவப்ப1

            வையகம் பனிப்ப2

            நனந்தலை உலகம்3

            மூவா முதலா உலகம்4

            உலகெலாம் உணர்ந்து5

            உலகம் யாவையும்6

என்று தங்களுடைய நூலின் தொடக்கத்திலேயே உலகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளனர். ஐந்து வகையான திணைகளையும் நடுவண் ஐந்திணை என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பாகுபாடுகளையும் தொல்காப்பியம் கூறுகிறது. அவற்றுள் முதற்பொருள் என்பது நிலமும், பொழுதும் ஆகும் என்று தொல்காப்பியம் கூறுவதை

”முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்

            இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”7

என்ற நூற்பா உணர்த்துகிறது. காடுகளையுடைய முல்லை நிலத்திற்குக் கடவுளாகத் திருமாலும், மலைகளையுடைய குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாக முருகனும், மிகுதியான நீரையுடைய மருத் நிலத்திற்குக் கடவுளாக இந்திரனும், மணலால் சூழப்பெற்ற செய்தல் நிலத்திற்குக் கடவுளாக வருணனும் இருந்ததைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதனை,

”மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே8

என்ற நூற்பா உணர்த்துகிறது. தொல்காப்பியர் பாலை என்ற நிலத்தைத் தனியாகக் கூறவில்லை. குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்றி வறண்டு போனதே பாலைநிலம் எனப்பட்டது. பாலைத்திணையின் முதற்பொருள், பாலைத்திணையின் அகத்திணை போன்றவற்றைத் தொல்காப்பியர் கூறியிருந்தாலும், நிலத்தை மட்டும் சுட்டவில்லை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலம் ஆகும். மருதநிலக்கடவுள் இந்திரன். உழவர், உழத்தியர் என்று இங்குள்ள மக்கள் அழைக்கப்படுவர். உழிஞைத்திணை மருதத் திணையின் புறத்திணையாக இருப்பதை

”உழிஞை தானே மருதத்துப் புறனே”9  

என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது.

நாடுகாண் காதை

சிலப்பதிகாரம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் ஐந்து திணைகளையும் விவரிக்கும் காப்பியமாக சிலம்பு மிளிர்கிறது.  மருதத்திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலியன சிலப்பதிகாரம் முழவதும் விரிவிக்கிடந்தாலும், நாடுகாண் காதையில் 76 ஆவது அடியிலிருந்து 155 ஆவது அடிவரை மருதத்திணைக் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. கவுந்தியடிகள் மதுரை செல்லும் வழியை கோவலன், கண்ணகியிடம் விவரிப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. கவுந்தியடிகள் ஒரு சமணத்துறவி. எவ்வுயிருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற சமண மதக் கொள்கையை அவர் பின்பற்றுகிறார். சமணத்துறவியர் நடந்து செல்லும்போது வழியை மயிற்பீலியால் தூய்மை செய்தவாறு நடப்பர். கவுந்தியடிகளும் கொல்லாமையைப் பின்பற்றி நாம் எவ்வுயிருக்கும் தீங்கு செய்தல் கூடாது என்று கூறுகிறார்.

            கோவலனே நாம் செல்லும் வழியில் என்னென்ன துன்பங்கள் பல ஏற்படும் என்பதை அறிவாய். வெயிலின் தன்மையைப் பொறுக்காத மெல்லிய இயல்பினை உடையவள் கண்ணகி. இவளுடன் மலர்களையுடைய சோலை வழியே செல்வோம் என்றால், வள்ளிக்கிழங்கு எடுத்த குழிகளில், சண்பக மரங்களின் பூக்களும் தாதுகளும் நிரம்பி இருக்கும். அக்குழிகள் துன்பம் தரும் என்று கூறுகிறார். இதனை,

”பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே

மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்

சண்பக நிறைந்த தாதுசோர் பொங்கர்

பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்

கையறு துன்பங் காட்டினுங் காட்டும்10

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 ”வள்ளிக்கிழங்கினை

கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே11

என்று புறநானூறு உணர்த்துகிறது. அக்குழிகளை விட்டு ஒதுங்கிச்செல்லலாம் என்றால் பலா, தென்னை போன்றவற்றின் பழங்கள் முட்டும். அதை விடுத்து மஞ்சளும் இஞ்சியும் விளையும் பகுதிகளில் நடந்து செல்லலாம் என்றால், பலாவின் விதைகள் பரல் கற்கள் போல் இருக்கும் என்று கூறும் கவுந்தியடிகள் அடுத்து மருத நிலமான வயலைப்பற்றிக்கூறுகிறார்.

ஆற்று நீர்

வயல் வழியாகச் செல்லலாம் என்றால் குளங்களில் உள்ள நீர்நாய்கள் வாளை மீன்களைத் துரத்துவதால் அம்மீன்கள் வயிலில் குறுக்காகப் பாயும் அதைக்கண்டு கண்ணகி அஞ்சுவாள் என்று கூறுவதை,

”வயலுழைப் படர்குவம் எனினே யாங்குப்

பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி

நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை

மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்

கலங்கலு முண்டிக் காரிகை12

என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாளை மீனை குளத்தில் நீர்நாய் துரத்துவதை ஒளவையாரும்

”அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்

வாளை நாளிரை பெறும்13 

என்று குறுந்தொகையில் உணர்த்துகிறார். கரும்புகளில் உள்ள தேன்கூடு அழிந்து, தேன் ஒழுகி அருகில் உள்ள பொய்கையில் கலக்கும். நீர் வேட்கையால் இவள் அந்நீரை உட்கொள்ளவும் கூடும். அந்நீர் அறநூல்களில் விலக்கப்பட்டதால் இதனை உண்ணக்கூடாது என்று கவுந்தி கூறுவதை

”கரும்பிற் தொடுத்த பெருந்தேன் சிதைந்து

சுரம்புகூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்

அடங்கா வேட்கையின் அறிவஞர் எய்திக்

குடங்கையில்  னொண்டு கொள்ளவுங் கூடும்14

என்ற அடிகளால் உணர முடிகிறது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனால் உண்டாக்கப்பெற்ற தேனடையை

”கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும்15

என்று குறுந்தொகையும், தாமரை மலர்களில் உள்ள தேனால் சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேனடையை

”சாந்தில் தொடுத்த தீந்தேன் போல”16

என்று நற்றிணையும் உணர்த்துவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவ்விடத்தை விட்டு அகன்று சென்றால் வயலில் களைபறிப்போர் பறித்துப்போட்ட குவளை மலர்களில் வண்டுகள் இருக்கும். அவ்வண்டுகளை அறியாமல் மிதிக்கவும் கூடும் என்பதை

”குறுநர் இட்ட குவளையம் போதொடு

பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை

நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி

அறியா தடியாங் கிடுதலுங் கூடும்17

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சமணர்கள் தாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள உயிர்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்று சமணத்துறவியாகிய கவுந்தியடிகள் கூறுவதன் மூலம் கொல்லாமையைப் போற்றிய சமணமதத்தின் பெருமையை உணரமுடிகிறது. குவளை மலர்களில் தேனருந்திய வண்டுகள் அம்மலர்களில் உறங்குவதை

”பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப”18

என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. வாய்க்காலின் கரை வழியாகச் சென்றால் புள்ளிகளையுடைய நண்டினையும், நத்தையையும் மிதித்து அவற்றிற்குத் துன்பம் நேரும். அதனால் வயல்களும்,சோலைகளும் அல்லது வேறு வழிகள் இல்லை. அதனால் பிற உயிர்களுக்குத் துன்பம் நேராமல் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கவுந்தியடிகள் கூறுகிறார். இதனை,

”எறிநீர் அடைகரை இயக்கந் தன்னில்

பொறிமாண் அலவனு நந்தும் போற்றாது

ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில்

தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா

வயலுஞ் சோலையும் அல்லது யாங்கணும்

அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை19

என்ற அடிகள் உணர்த்துகின்றன. எவ்வுயிருக்கும் நாம் துன்பம் தருதல் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தை இதன் மூலம் உணர முடிகிறது. நண்டின் உடலில் புள்ளிகள் இருத்தலை,

”தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவன்”20

என்று ஐங்குறுநூறு உணர்த்துகிறது. நண்டுகள் ஈரம் மிகுந்த இடங்களில் தம்முடைய புற்றுக்களை அமைக்கும் என்பதை

”அளைவாழ் அலவன்”21

என்று குறுந்தொகை உணர்த்துவதும் ஒப்பு நோக்கத்தக்கது. பயணத்தின் போது சிறுசிறு உயிரினங்களான வண்டு,நண்டு,நத்தை போன்றவற்றிற்கும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கவுந்தியடிகளின் மன உணர்வு பாராட்டத்தக்கது. எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்ற சமண மதக்கோட்பாட்டை கவுந்தியடிகளின் மன உணர்வின் வழியாக வெளிப்படுவதை  சிலம்பு உணர்த்துகிறது.

சான்றாதாரங்கள்

1.திருமுருகாற்றுப்படை, அடி-1

2.நெடுநல்வாடை, அடி-1

3.நனந்தலை உலகம், அடி-1

4.மூவா முதலா உலகம், சீவக சிந்தாமணி பா-1

5.பெரியபுராணம், பாடல்-1

6.உலகம் யாவையும், பா-1

7.தொல்காப்பியம்,    நூற்பா-950

8.மேலது, நூற்பா-951

9. தொல்காப்பியம், நூற்பா-1010

10. நாடுகாண் காதை, அடி-66

11. புறநானூறு-109

12. நாடுகாண் காதை, அடி-77

13. குறுந்தொகை, பா-364

14. நாடுகாண்காதை, அடி-82

15. குறுந்தொகை, பா-3

16. நற்றிணை-1

17. நாடுகாண் காதை-86

18. திருப்பாவை-3

19. நாடுகாண்காதை, அடி-90

20. ஐங்குறுநூறு, பா-23

21.குறுந்தொகை, பா-35

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

அலைபேசி :9994507627

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

3.தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

பெருந்தாயம் விளையாட்டு – ஒரு பார்வை

            கிருஷ்ணகிரி வட்டாரம் காடுகள் நிறைந்தப் பகுதியாகும். இப்பகுதியில் கால்நடை வளர்ப்புத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலை மேற்கொள்ளும் ஆடவர்கள், வேளாண்மையில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, நாட்டுப்புற விளையாட்டுகளுள் சில விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டைப் பெருந்தாயம் விளையாட்டு என்று கூறுகின்றனர். இவ்விளையாட்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆராயப்படுகின்றது.

பெருந்தாயம் விளையாட்டு

            தமிழ் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளுள் முக்கியமானது தாயம் விளையாட்டு. தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே ஆண்கள் அமர்ந்து, தாயக்கட்டையை உருட்டி விளையாடுவர். இவ்விளையாட்டு ஆண்களுக்குரியது. இவ்விளையாட்டைப் பொழுது போக்கிற்காகவும் விளையாடுகிறார்கள். தற்பொழுது பந்தயம் கட்டியும் விளையாடுகின்றனர். இதைப் பங்காளி விளையாட்டு என்றும், சூது, தாயம் என்றும் கூறப்படுகிறது. தாயம் விளையாட்டுத் தமிழர்களின் மரபு சார்ந்த விளையாட்டாகும். இவ்விளையாட்டுத் தமிழரின் எண்ண ஓட்டத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் பயன்படும் விளையாட்டாகவே திகழ்கிறது.

தாயம் – சொற்பொருள் விளக்கம்

            தாயம் என்ற சொல்லுக்கு அகராதிகள் பின்வருமாறு விளக்கங்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, “தாயமாடுதல் – கவறாடுதல், சூதாடல்”1 என்று செந்தமிழ் அகராதியும், 

                                    “சூதாடு கருவி – தாயக்கட்டை

                                    சூதாடல் – சூது விளையாடல்

                                    சூதாட்டம் – தாயம் விளையாடல்

                                    சூதாட்டம் – கவறு உருட்டியாட்டம்

                                    சூதுகாரன் – சூது விளையாடுபவன்”2

என்றெல்லாம் கதிர்வேற்பிள்ளை அகராதியும் பொருள் தருகிறது.

விளையாட்டுக்களம்

            தாயம் விளையாட்டு ஆண்களுக்குரியது. சில நேரங்களில் வீட்டில் இருக்கும் பெண்களும், வீட்டிற்குள் தரையில் கோடுகளை வரைந்து விளையாடுகிறார்கள். வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் தொழிலாளர்கள், மதிய உணவிற்குப் பின் ஓய்வு நேரங்களில், நிலத்தின் அருகில் இருக்கும் பாறை மீது கட்டங்களை வரைந்து இவ்விளையாட்டினை விளையாடுகின்றனர். சிற்றூர்களில் ஊரின் நடுவே தாயாட்டம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. “ஊரிலுள்ளவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்து ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள தட்டையான கல்லுக்குப் பெயர் சகுனிகல் என்பதாகும். சகுனிக்கல் எனப் பொருள் வரக் காரணம், சகுனி என்பவர் மகாபாரதத்தில் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்தவர். அதனால், தாயாட்டத்தை விளையாடுவதற்குச் சகுனிக்கல் பலகையை அமைத்திருப்பர்”3 என்பது ஆய்வாளர் கருதுகிறார். இது எப்பொழுதும் அழியாத தழும்பாகவே இருக்கக்கூடும். இக்களத்தைச் சுற்றியும் வேப்பமரம், அரசமரம், ஆலமரத்தையும் நிழழுக்காக வளர்ப்பர். இவ்விடத்தில்  பெரியவர்கள், ஆடவர்கள் பகல் பொழுதில் ஓய்வு நேரங்களில் தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

தாயம் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

            பருவச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காடுகளிலும், மலைகளிலும், நிலத்திலும் வளரக்கூடிய மரம், செடிக் கொடிகளில் கிடைக்கப்பெறும் காய்களையும், விதைகளையும் தாயம் விளையாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். “கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுண்டைக்காய், கலாக்காய், புங்கங்கொட்டை, முத்துக்கொட்டை (ஆமணக்கு காய்) சூட்டுக்கொட்டை, வெங்கலிசாங்கல், குண்டுக்கல், ஆட்டுப்புலுக்கை ஆகிய பொருட்களைத் தாயக் கட்டத்தில் நகர்த்துவதற்குக் காய்களாகப் பயன்படுத்துகின்றனர்”4 என்பது களாய்வில் அறியமுடிகிறது.  மேலும், தாயம் விளையாட்டை விளையாடுவதற்கான, கட்டங்களை வரைய கோவை இலை, அவரை இலை, செங்கல், சுண்ணாம்புக்கட்டி, மாவுக்கல் சுண்ணக்கட்டி (சாக்பிஸ்), திருநீறுகட்டி ஆகிய பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருட்கள் அனைத்தும் எளிதாகக் கிடைக்கின்ற பொருட்களாகும். இவ்விளையாட்டிற்கு எல்லா இடத்திலும் மேற்கண்ட பொருட்களைக் கொண்டு வரைவதில்லை. விளையாடும் இடத்தில் மேற்கண்ட பொருட்களுள் எளிதாகக் கிடைக்கும். ஒரு பொருளைக்கொண்டு கட்டத்தை வரைந்து கொள்கின்றனர்.

தாயக்கட்டை வடிவங்கள்

            தாயக் கட்டையைக் கையில் உருட்டி விளையாடுவதற்கு ஏற்ப, வயதிற்கு ஏற்றார் போல பெரியது, சிறியது எனக் கட்டையை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

கட்டம் அமைக்கும் முறை

            தாயம் விளையாட்டை விளையாடுவதற்குக் கட்டம் வரையப்படுகின்றது. தாயம் விளையாடுவதற்குத் தாயக் கட்டையே முதன்மையாகின்றது. முதலில், நடுவில் ஒரு சதுரமாகக் கட்டத்தை வரைந்து கொள்வர். அதனுள் மையப் புள்ளியை வைத்து, நான்கு புறமும் நான்கு செவ்வகங்கள் வரையப்பட்டு, செவ்வகங்களை நீளவாட்டில் மூன்று கட்டங்களாகவும், அகலவாட்டில் ஆறு கட்டங்களாகவும் கோட்டை கட்டத்தைப் போட்டுக்கொள்வார்கள். தாய் மலையில் பெருக்கல் குறியீட்டை செய்து வரைந்து கொள்வர். பின்பு கீழ்மலை, மூலைமலை, கோடிமலைகளில் பெருக்கல் குறியீடுகளை வரைவர்.

தாயம் விளையாடுவோர் எண்ணிக்கை

            தாயம் விளையாட்டில், நபர்களை இரண்டு, நான்கு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் அமர்த்தி, இரு அணியாகப் பிரித்து விளையாடுகின்றனர். ஒற்றை படை எண்ணிக்கையில் அமரக் கூடியவர்கள் ஒரு குழுவாகவும், இரட்டை படை எண்ணிக்கையில் அமரக்கூடியவர்கள் எதிரணியினராகவும் தாயக் கட்டத்தில் அமர்ந்து விளையாடுவர்.

இருவர் விளையாடுதல்

            இருவர் மட்டும் விளையாடும் விளையாட்டை இருவர் விளையாட்டு என்கின்றனர். அதாவது விளையாடும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக அமர்ந்து விளையாடுவதாக இவ்விளையாட்டு அமையும்.

நான்கு பேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு இரண்டு நபர்கள் விகிதம், இரண்டு அணிக்கும் மொத்தம் நான்கு நபர்கள் விளையாடுவர். ஓர் அணியாகவும், மற்றோர் அணியாகவும் அமர்ந்து விளையாடுகின்றனர். அவ்வாறு விளையாடுகின்றபொழுது அணித்தலைவராகவும் செயல்படுவர். இவர்களே கட்டத்தில் உள்ள காயை நகர்த்துகின்றனர். சில சமயம் அவரவர் அணியினரின் அறிவுரையின் பேரில் நகர்த்துகின்றனர்.

ஆறுபேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு மூன்று நபர் வீதம் இரண்டு அணிக்கு ஆறு நபர்கள் விளையாடுகின்றனர். ஒரு குழுவில் உள்ள அணியில் மூன்று நபர்கள் விளையாடும் பொழுது, அவர்களுள் ஒரு நபர் தாயக்கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலைக் கட்டத்தில் காயை இறக்குவர். அதே குழுவில் உள்ள மற்ற இரண்டு நபர்கள் தாயம் போட்டு, முதல் நபர் காயை இறக்கிய கட்டத்தில் அதே மலைக் கட்டத்தில் காயை இறக்குவர்.

            அதேபோல் அணியில் மூன்று நபர்கள் விளையாடும்பொழுது மூன்று நபர்களுள் ஒரு நபர் தாயக் கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலை கட்டத்தில் காயை இறக்குவார்.

பெருந்தாயம் விளையாட்டுக்கு காய்களைப் பயன்படுத்தும் முறை

                        ஒருவர் கட்டையை உருட்டும் போது தாயம் விழுந்தால் மீண்டும் அவரே தொடர்ந்து தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். இதேபோல் ஐந்து, ஆறு, பன்னிரண்டு என்ற எண்ணிக்கை விழுந்தால் மீண்டும் அவரே தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். தாயக் கட்டையை உருட்டும் போது இரண்டு, மூன்று, நான்கு என்று குறைவான எண்கள் விழுந்தால் புள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு காயை நகர்தி விட்டு, எதிரணியினருக்குத் தாயக் கட்டையை விட்டு விட வேண்டும். மறுபடியும் கட்டையை எடுத்து உருட்டக் கூடாது. இது இரு குழுவுக்கும் பொதுவான விதிமுறையாகும்.

விளையாடும் முறை

            இரண்டு அணியினரும் தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே அமர்ந்து விளையாடும் பொழுது முதலில் யார் தாயக் கட்டையை உருட்டுவது என்பது முக்கியமல்ல, முதலில் தாயம் போடுவது யார் என்பதுதான் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒருவர் தாயக் கட்டையை உருட்டியதும் தாயம் (ஒன்று) விழுந்தால்தான் காயைத் தாய் மலையில் இருந்து இறக்கவேண்டும்.

            இரு அணியினரும் தாயம் போட்டு, ஒவ்வொரு காயையும் உரிய மலையில் இறக்கி, வலது புறமாகக் கட்டத்தில் சுற்றி வரவேண்டும். 2,3,4,5,6,12 என்று விழுகின்ற எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டுக் கட்டத்திற்குள் காய்களை முன்னேற்றிக்கொண்டே செல்லும் போது, இரண்டு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, இரு அணியினரின் காய்கள் சந்திக்கும் இடத்தில் வெட்டப்படுகின்றன. ஆனால், இரண்டு அணியினரும் தங்கள் காய்களை வெட்டப்படாமல் பாதுகாத்துத் தாண்டி தாண்டி, வெட்டுக்குக் கொடுக்காமல் விழுகின்ற எண்ணிக்கையைப் பொருத்துத் தந்திரமாகக் கட்டத்திற்குள் காய்களை நகர்த்திக் கொண்டு பழம் எடுக்கின்றனர். ஓர் அணியினர் ஆறு காய்களையும் பழம் எடுத்துவிட்டால், அந்த அணியினர் வெற்றி பெற்றவர்களாவர். எதிர் அணியினர் தோல்வியடைந்தவராவர். தாயம் விளையாடுவதற்கு வரையப்பட்ட கட்டத்தில், வரையப்பட்டுள்ள கட்டங்களுக்கு 1. தாய் மலை அல்லது தாய் வீடு 2. கை துவைதல் அல்லது காய் இறக்குதல் 3. கிழ் மலை 4. மூலை மலை 5. கோடி மலை 6. தொக்கை மலை (அல்லது) பழம் மலை என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன.

1. தாய் மலை (அ) தாய் வீடு

            கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாய் மலையைத் தாய் வீடு என்று அழைக்கின்றனர். இவ்விளையாட்டில் அனைத்துக் காய்களையும் இறக்குமிடத்திற்குத் தாய்மலை (அ) தாய்வீடு என்று கூறப்படுகிறது.

2. கை துவைதல் (அ) காய் இறக்குதல்

            தாயம் விளையாட்டில் கை துவைதல் அல்லது கை தொய்தல் என்ற வட்டாரச் சொல் வழக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ஒருவர் தாயக் கட்டையை முதன் முதலில் உருட்டி விளையாடும் போது 4,5,6,12,2,3 என்ற எண்கள் நீண்ட நேரம் விழுந்து கொண்டேயிருந்தால் அவருக்கு விளையாடுவதற்குத் தகுதி இல்லை. முறையாக ஒரு புள்ளி விழும் போதுதான் அவர் தாயம் விளையாடுவதற்குத் தகுதி பெறுகிறார். தாயம் (ஒன்று) விழுந்தால் மட்டும்தான் காய் துவைதல் என்கின்;றனர்.

3. கீழ் மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து வெளியேற்றி வரும்போது 6 ஆவது கட்டத்தையும், 20 ஆவது கட்டத்தையும், 34 ஆவது கட்டத்தையும், 48 ஆவது கட்டத்தையும் கீழ் மலை என்று அழைக்கின்றனர்.

4. மூலை மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 13 ஆவது கட்டத்தையும், 27 ஆவது கட்டத்தையும், 41 ஆவது கட்டத்தையும் மூலை மலைகள் என்று அழைக்கின்றனர்.

5. கோடி மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 55 ஆவது கட்டம் கோடி மலையாகும். காயை இறக்கும் தாய் மலைக்கு இடது பக்கமாக இருக்கும் மலையைக் கோடிமலை என்று கூறப்படுகிறது. கோடி மலையை மூலை மலை என்றும் அழைப்பர். 6. தொக்கை மலை

            தொக்கை மலை என்பதைப் பழம் மலை என்றும் அழைப்பர். இம்மலையில் எதிர்பாராத விதமாக 67 ஆவது கட்டத்தில் காய் இருந்தால், தாயம் போட்டுத்தான் காயை எடுக்க முடியும். இல்லையென்றால் தொக்கையிலே காய் உட்கார்ந்துவிடும்.

தாயாட்டம் தெரிவிக்கும் செய்தி

            தாயம் விளையாட்டுக் கட்டத்தில் மனித சமுதாயத்தின் பிறப்பும், இறப்பும் ஆகிய இரண்டும் அறிவுறுத்தப்படுகின்றன. பிறந்த பின்பு நல்ல அறங்களையும், ஒழுக்க நெறிமுறைகளையும் கற்றுக் கொள்வதற்குப் பாட போதனையாகவும் தாயம் விளையாட்டு அமைகிறது. மனித சமூகத்தில், ஒருவன் பலவிதமான இன்னல்களையும் வெற்றித் தோல்விகளையும் மாறி மாறி அனுபவிக்கின்றான். இதனைச் சந்திக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒருவரை உயர்த்தி பேசுவதும், தாழ்த்தி பேசுவதும் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், நிறைகளை மேன்மைப்படுத்துவதும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதும், மீண்டும் ஓரிடத்தில் சேருவதும் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கின்ற மனித குலப் போராட்டங்களைத் தாயம் விளையாட்டுத் தெரிவிக்கிறது. இவ்விளையாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விளையாட்டாக இருந்தாலும், சிற்றூரில் வாழக்கூடியவர்கள், விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர். அவர்கள் நிலத்தில் வேலை செய்து விட்டு, ஓய்வான நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர் ஒன்றிணைந்து தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

முடிவுரை

            இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காகவே இக்காலத்தில் விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு, மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் அமைகின்றது. அதே சமயத்தில் மக்களின் ஒற்றுமையை புலப்படுத்தவும் வலுப்படுத்துவதாகவும் மனம் மகிழ்ச்சி, சகோதரத்துவம் வளர்க்கும் விளையாட்டாக அமைகிறது. இந்த விளையாட்டுக் காலத்தை கடந்து நிற்கும் வகையில், மேன்மேலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியதாகின்றது.

சான்றெண் விளக்கம்

1.          செந்தமிழ் அகராதி, ப.344

2.          நா.கதிரைவேற்பிள்ளை அகராதி, ப.687

3.          நேர்காணல், மகாலிங்கம், வயது – 68, ஏரிக்கொல்லை, நாள் : 26.01.2019

4.          மேலது. நாள் : 26.01.2019

ஆசிரியரின் பிறக்கட்டுரை

1.சிறுதாயம் விளையாட்டு

கட்டுரையின் ஆசிரியர்

ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130,

தொலைபேசி எண் : 9943259247,

gmail: aathmalingam1977@gmail.com

தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர், பழைய உரைகாரர் முதலிய அறுவரே தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பழைய உரையாசிரியர்கள் ஆவர். இவர்களுள் முதல் உரையாசிரியர் இளம்பூரணர். இவ்வுரைக்கு முன்னரே தொல்காப்பியத்திற்கு உரைகள் பல இருந்தன. அதனை இளம்பூரணரே “என்பாரும் உளர். என்பர் ஒரு சாரார் என்பதாலும் நச்சினார்க்கினியர் சில இடங்களில் இங்ஙனம் பாடம் ஒதுப என்றும் உதாரணம் காட்டுப என்றும் கூறுவதாலும் அறியலாம். எனவே இளம்பூரணருக்கு முன்னரே உரைகள் இருந்ததை உணர முடிகிறது.

இவர்களில் இளம்பூரணர் உரையே முழுமைக்கும் கிடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் உரைகள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உள்ளன. பேராசிரியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கே உள்ளது. நச்சினார்க்கினியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியில் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்குக் கிடைக்கவில்லை, இவ்வுரைகளே இன்றி சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது.

தொல்காப்பியத்திற்கு உரைகண்ட அறுவருள் இளம்பூரணரே முதல் உரையாசிரியர் ஆவார். “உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்” என்று அடியார்க்கு நல்லாரும் “உளங்கூர் கேள்வி இளம்பூரணர்” என்று மயிலை நாதரும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து இவர் இளமையிலேயே பேரறிவு படைத்திருந்தனர் என்றும் துறவு மேற்கொண்டிருந்தனர் என்றும் அறிய முடிகிறது.

இளம்பூரணன் என்னும் பெயர் இளையனாய்ப் பேரறிவுச் செல்வனாய் விளங்கும் முருகப்பெருமானைக் குறிக்கும் என்று கூறுவர். பொருளியல் முதல் நூற்பாவிற்கு உரையெழுதும்போது இறைவனது தாள் நிழலைச் சிவானுபூதி எனக்குறிக்கின்றார் அன்றியும் தாமரை புரையும் காமர் சேவடி எனத்தொடங்கும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலை உவமவியல் 3, 6 செய்யுளியல் 11, 49, 74 ஆகிய நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு இவரது பெயரையும் இவ்வுரைகளையும் உற்றுநோக்கும் போது இவரைச் சைவர் என்று துணிய இடமேற்படுகிறது.

தொல்காப்பியத்தையும் இளம்பூரணரின் உரையையும் தழுவியே பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்துள்ளார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பவணந்தியாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. எனவே இளம்பூரணரின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.

இவருக்குப் பின்வந்த சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்றோர் இவருடைய உரையை ஆங்காங்கு மறுத்துச் சொல்லினும் இவர்பால் அவர்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர் என்பதை அவரவர் உரையால் அறியமுடிகின்றது. மற்ற தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவருடைய இயற்பெயரைக்குறிக்காமல் உரையாசிரியர் என்றே குறித்துச்செல்லுகின்றனர்.

இவருடைய உரை ஆற்றொழுக்காக அமைந்து செல்கிறது. இன்றியமையாது விளக்க வேண்டிய இடங்களில் மட்டும் விளக்கி, படிப்பவர் உள்ளத்தில் நூற்கருத்தையே இவரின் உறை இடம்பெறச்செய்யும். ஐயுறுவதற்குச் காரணமான பொருளை இங்ஙனமிருக்கும் போலும் எனக் கூறிச்செல்வது இவ்வுரையின் இயல்பாகும்.

இளம்பூணரின் உரை உவமை நலம் சான்றது.

1.          அணியிழை மகளிருக்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல

2.          குறிச்சி புக்க மான்போல

3.          நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல போன்றவை சில உதாரணங்களாகும்.

மாத்திரையின் இலக்கணம் பற்றிய இளம்பூரணரின் உரையைக் காண்போம்.

            கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

            நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே

            என்பது எழுத்ததிகார நூன்மரபில் உள்ள (7) நூற்பாவாகும்.

கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு. இது நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி. இமையென்றது இமைத்தல் தொழிலை. நொடி என்றது நொடியிற் பிறந்த ஓசையை தன் குறிப்பு இன்றி நிகழ்தலின் இமைமுன் கூறப்பட்டது.

நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல் தேங்க முகத்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என ஏழுவகையன என்னும் அளவினுள் இது சார்த்தியளத்தல்.

நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு என்றதனான் நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற் போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக.

தொல்காப்பிய உரையாசிரியர் டாக்டர் கு.சுந்தரமூர்த்தி “மாத்திரையின் அளவைக் கண்ணிமைத்தல், கை நொடித்தல் ஆகியவற்றின் அளவோடு ஒப்பிட்டுரைத்தலின் இவ்வளவு சார்த்தியத்தலின் பாற்படும்.

எழுத்துக்களை ஒலித்தற்கு ஆகும் காலக்கழிவினை மாத்திரை என்பர். இதில் கால், அரை, முக்கால் என்னும் பகுப்பு உண்டு. ஆனால் இரு மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ, மூன்று மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ அதற்குப் பெயர் கூறப்படுவது இல்லை. இதற்கு மாறாக முகத்தல் அளவையில் இங்ஙனம் பெயர் உளதாதலைக் காணலாம். நான்கு உழக்குக் கொண்டதற்கு நாழி என்று பெயர். இரண்டு நாழி கொண்டதை ஒரு படி என்பர். இரண்டு படி கொண்டதை ஒரு குறுணி என்பர். இங்ஙனம் கூறுமாறு போல இத்துணை மாத்திரையுடையது இன்னபெயர் பெறும் என்று கூறப்படுவதில்லை. இதனையே “நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல” என்னும் உவமை கொண்டு உரையாசிரியர் விளக்குகின்றார்.

தொகை மரபில் அளவைப் பெயர்களைப் பற்றிக் கூறும்போது (நூற்பா 171) நாழி என்பது அளவைப் பெயர் என்று இளம்பூரணர் கூறுகிறார்.

உயிர் மயங்கியலில் (நூற்பா 241) நாழி என்னும் சொல்லை அடுத்து உரி என்னும் சொல் வந்தால் அது நாடுரி என மாறும் என்கிறார் இளம்பூரணர்.

            நாழி (ழ் + இ) + உரி

            நாழ் + உரி

            நா(ட்) + உரி → நாடுரி

மேற்கண்டவாறு இவை மயங்கும்

            நாழி என்னும் சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை புறநானூறு போன்ற நூல்களில் சுட்டப்படுகிறது. முல்லைப்பாட்டில் விரிச்சிக்காக (சகுனம் கேட்டல்) தெய்வத்தை வணங்கும் பெண்கள் நாழியில் முல்லை அரும்புகளையும் நெல்லையும் கொண்டு வந்து தெய்வத்தை வணங்கினர் என்ற செய்தியை அறியமுடிகிறது (அடி.எண்-9)

உண்பது நாழி என்று புறநானூறு (188) என்று கூறுவதும் எண்ணத்தக்கது.

            மூங்கிலில் கூடை பின்னுவது போல உழக்கு, நாழிகை என்னும் அளவைகளும் மூங்கிலைத் துண்டாக்கிச் செய்யப்பெற்றதை அறியமுடிகிறது. குதிரைக்கு உழக்காலும் நாழியாலும் வண்ணம் தீட்டும் தொழிலுக்குச் சேதிகை என்று பெயர். சேதிகையால் குதிரையின் உடல் அழகு படுத்தப்பெற்றதை

            வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்

            குதிரை உடல் அணி போல”

            என்று கலித்தொகை (பாடல் எண் 96) குறிக்கிறது. இக்காலத்தில் இரும்பால் படி முதலியன செய்யப்படுவது போல அக்காலத்தில் மூங்கிலின் கணுக்கள் வரை வெட்டி உழக்கு நாழி போன்ற அளவைகள் செய்யும் வழக்கம் இருந்ததையும் வண்ணங்களை நீரில் கெட்டியாகக் கரைத்து அவற்றில் உழக்கு, நாழி போன்றவற்றை வைத்து அதன் அச்சை குதிரையின் உடலில் வைத்து அழகு செய்யும் கலை இருந்ததையும் அறிய முடிகிறது. மாட்டுப்பொங்கல் போன்ற விழாக்களின்போது வண்ணக்கலவையில் கையை வைத்து அக்கையை மாடுகளின் மீது வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

            தனிப்பாடல் திரட்டில் உழக்கு பற்றிய தகவல் உள்ளது. குறவன் ஒருவனுக்கு இரு மனைவியர், இளைய மனைவியின் மீது அன்பு கொண்ட குறவன் ஒரு நாள் தான் வளர்க்கும் பலா மரத்தை பார்த்துக்கொள்ளும்படி மூத்த மனைவியிடம் சொல்லிவிட்டுச் குறவன் வெளியே சென்று விடுகிறான். மூத்த மனைவியை குறவன் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைய மனைவி சிலரின் உதவியோடு அம்மரத்தை வெட்டி விடுகிறாள். மூத்த மனைவி மிக வருந்தி அழும்போது ஒளவையார் அங்கே செல்கிறார். மூத்த மனைவி நடந்த நிகழ்வுகளைக்கூற ஒளவையார்

            கூரிய வாளால் குறைப்பட்ட கூன்பலா

            ஓரிலையாய் கன்றாய் மரமாய் – சீரிய

            வண்டுபோல் கொட்டையாய் வண்காயாய் திண்பழமாய்

            பண்டு போல் நிற்கப் பலா”.

என்று பாடுகிறார். உடனே அப்பலாமரம் முன்னர் இருந்தது போன்ற நிலையை அடைகிறது. குறவனின் மூத்த மனைவி ஒளவையாருக்கு மூன்று உழக்கு தினையைத் தருகிறாள். அதனை வாங்கிக்கொண்ட ஒளவையார் அருகில் உள்ள குறுநில மன்னனை சந்திக்கச் செல்கிறார். அம்மன்னன் தினை உள்ள துணி முடிச்சினை என்ன இது என்று வினவ

            கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்

            மூவுழக்குத் தினை தந்தாள் – சோழா கேள்

            உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை

            ஒப்பிக்கும் என்றன் உள்ளம்”

என்கிறார் ஒளவையார். மூன்று உழக்குத் தினையை மட்டுமே அந்த ஏழைக்குறப்பெண்ணால் தர முடிந்தது அதை மறுக்காது வாங்கிச்சென்ற ஒளவையின் பண்பு நம்மை வியக்க வைக்கிறது. நான்கு உழக்கு ஒரு நாழியாதலால் ஒரு நாழிக்கும் குறைவான அதாவது அரைபடிக்கும் குறைவான தினையை குறமகள் ஒளவைக்குக் கொடுத்ததை அறியமுடிகிறது.  மூதுரை முப்பது நூலில் நாழியைப் பற்றி ஒளவை

            “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

            நாழி முகவாது நால்நாழி”

            என்று கூறுகிறார். ஒரு நாழியை எவ்வளவுதான் கடலில் அழுத்தி முகந்தாலும் அது நான்கு நாழி நீரை முகக்காது என்பதே இதன்பொருளாகும்.

            நாலுழக்குக் கொண்டது நாழி என்று இளம்பூரணர் கூறுகிறார். நாழி என்பது ஒரு முகத்தல் அளவை கலைச்சொல்லாகும். உழக்கு என்பதும் கலைச்சொல்லாகும். உழக்கை விட மிகச்சிறியது ஆழாக்கு.

முகத்தல் அளவை

            360 நெல்                             1 செவிடு

            2 செவிடு                            1 பிடி

            5 செவிடு                            1 ஆழாக்கு

            2 ஆழாக்கு                          1 உழக்கு

            4 உழக்கு                             1 நாழி

            8 நாழி                                 1 குறுணி

            12 குறுணி                          1 கலம்

            3 கலம்                                 1 கோட்டை

மேற்கண்டவாறு தமிழரின் அளவை முறை 1950 வரை நாட்டுப்புறங்களில் இருந்தது என ம.சோ விக்டர் குறிப்பிடுகிறார்.

            இது போன்ற அளவைப்பெயர்கள் ஒவ்வொன்றுமே கலைச்சொற்கள். சிறிய துளையுள்ள பாத்திரத்தில் உள்ள நீர் கீழே வடிந்ததும் அதை இவ்வளவு நாழிகை எனக்கணக்கிட்டு கூறும் மக்கள் இருந்தனர். அவர்களை நாழிகைக்கணக்கர் என்று கூறுவர். அக்கருவியை குறுநீர்க்கன்னல் என்று கூறுவர் இதனை முல்லைப்பாட்டு (அடி.எண் 55)

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்

தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி

எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்

குறுநீர்க் கன்னல்”

என்று உணர்த்துகிறது.

கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்”

என பிங்கல நிகண்டு கூறுகிறது. 1 நாழிகை என்பது 24 நிமிடம். கிண்ணம் எனப்படும் பாத்திரம் துளையைக்கொண்டது வாய்க்கால் நீரை பாசனத்திற்குப் பயன்படுத்துவோர் இக்கிண்ணத்தைப் பயன்படுத்துகின்றனர். 24 நிமிடங்களில் இதில் நீர் நிரம்பி விடுகிறது. ஒரு வயலுக்கு இத்தனை கிண்ணம் நீர் என அளவீடு செய்வது ஆத்தூர் வட்டாரத்தில் இன்றும் உள்ளது. பிங்கலநிகண்டு கூறும் கிண்ணம் நாழிகை வட்டிலே என நம்மால் உணரமுடிகிறது.

            நாழிக்கும், நாழிகை வட்டிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு. ஏ.கே செட்டியர் தன்னுடைய பயணத்தின்போது இக்கிண்ணத்தை சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதியில் பார்த்ததாக தன்னுடைய பயணக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் என்பது குறிக்கத்தக்கது. இதுபோல இளம்பூரணரின் உரையில் உள்ள கலைச்சொற்களைப் பற்றி தனியாக ஆராயும் அளவுக்கு இடம் உள்ளது. எனவே இளம்பூரணரை கலைச்சொல்லாக்க முன்னோடிகளுள் ஒருவராகக் கருதலாம் என்று உணரமுடிகிறது.

ஆய்விற்குத் துணைநின்ற நூல்கள்

1.தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்

பதிப்பாசிரியர்

டாக்டர் கு.சுந்தரமூர்த்தி

அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

2.சங்க இலக்கியம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு

சென்னை – 98

3.மூதுரை முப்பது

கழக வெளியீடு

4.தனிப்பாடல் திரட்டு

பாரி நிலைய வெளியீடு

5.தமிழரின் எண்ணியல் – ம.சோ.விக்டர்

நல்லேர் பதிப்பகம் – சென்னை – 04

6.தமிழ்நாடு – (பயணக்கட்டுரைகள்) – ஏ.கே.செட்டியர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

நாமக்கல் – 637501

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

ஒளவையாரின் படைப்பாளுமை

முன்னுரை

            செம்மொழி என்று போற்றப்படும் பெருமைக்குரியது உயர் தனிச்செம்மொழியான நம் கன்னித் தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரைநூல், பதினெண் மேற்கணக்கு நூல்கள் (18), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (18) சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் ஆகிய 41 நூல்களும் செவ்வியல் இலக்கியங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.  தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சமூகவியல் வெளிப்பாடுகள் எனும் தலைப்பின் கீழ் சங்ககால ஒளவையாரின் படைப்பாளுமையையும் அவரது பாடல்களில் காணப்படும் சமூகவியல் வெளிப்பாடுகளையும் கண்டுகாட்ட விழைகிறது இக்கட்டுரை.

படைப்பாளுமை

            படைப்பாற்றல் என்பது மனிதர்கள் எல்லோரிடத்திலும் காணப்படுகின்ற பொதுமைப்பண்பு அல்ல.  அது ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற ஒரு தனிப்பண்பு.  அதிலும் இலக்கியப் படைப்பாற்றல் என்பது கற்றுத்துறைபோகிய சான்றோருள்ளும் மிகமிகச் சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற பெருமைக்குரிய ஆளுமைப்பண்பாகக் கருதப்படுகின்றது.  சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடியுள்ளோர் 40 பெண்பாற்புலவர்களே. அவர்களுள் ஈடும் இணையும் அற்றவராக முதன்மையானவராகக் கருதப்படுபவர் பாட்டுக்கு அரசியாகிய நம் ஒளவைப் பெருமாட்டியார்.

சங்ககால ஒளவையார்

            கடைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையார் பாணர் மரபினைச் சார்ந்தவர்.  நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு. அருணாசலம் ஆறு ஒளையார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  டாக்டர் மு.வ தம் இலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறார்.  எனினும் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் நீதிநூல்களைப் பாடிய ஒளவையாருமே மன்னரும் மக்களும் மதித்துப்போற்றும் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் தமிழண்ணல். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைப்பாடிப் பெரும் புகழ் பெற்றவர் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரே எனினும் காலந்தோறும் ஒளவையின் புகழ் விளங்கத் தொடங்கிவைத்தவர் சங்ககால ஒளவையாரே ஆவார்.  சங்க காலத்தில் புகழ் பெற்ற பெண்பாற் புலவராக இவர் திகழ்ந்தமையால் பிற்காலத்தில் தமிழகத்தில் சிறப்புடைய பெண்பாற்புலவர் பலர் ஒளவை என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

ஓளவையின் படைப்புகள்

            ஓளவையார் பாடியவையாகச் சங்க இலக்கியத்தில் 59 பாடல்கள் உள்ளன.  இவற்றில் 26 அகப்பாடல்கள், 33 புறப்பாடல்கள். 26 அகப்பாடல்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும் நற்றிணையில் 7 பாடல்களும் அகநானூற்றில் 4 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.  புறப்பாடல்கள் 33 இல் 22 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை. 3 பாடல்கள் அவர்மகன் பொகுட்டெழினியைப் பற்றியவை.

            ஒருபாடல் நாஞ்சில் வள்ளுவனைப் பற்றியது.  ஒரு பாடல் மூவேந்தர்களைப் பற்றியது.  மீதி ஆறு பாடல்களும் பொதுவியல் திணையில் அமைந்த பாடல்களாகும்.

சீற்றத்தில் மலர்ந்த சிறந்த கவிதை

            ஒளவை அதியமானைக் காணச் செல்கிறார்.  அதியமான் ஒளவைக்கு உடனே பரிசில் தராமல் காலம் தாழ்த்துகிறான்.  இதனால் ஒளவைக்குக் கோபம் வருகிறது.  சினமுற்ற ஒளவையார் வாயில் காப்போனை விளித்துப் பாடிய பாடல் அழகான பாட்டுச்சித்திரமாய் விளங்குகிறது.  ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்: ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு: சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்றெல்லாம் சுட்டப்படுகின்ற சினத்திலும் அழகான, ஆழமான பொருள்நிறைந்த கவிதையை ஒளவை பாடியிருப்பது அவரது புலமைத்திறனுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.

வாயிலோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!

………………………………………

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செல்லினும் அத்திசைச்சோறே! (புறம் – 306)

என்கிறார் ஒளவையார்

            வாயிற்காவலனே தமது அறிவாலும், புலமைத்திறத்தாலும் வள்ளல்களின் செவிகளில் சிறந்த வாய்மொழிகளை விதைத்துத் தாம் நினைத்த பரிசினை நினைத்தவாறே அறுவடை செய்கின்ற புலவர்கள் பசியால் இறந்தனர் என்று சொல்லும்படியான வறுமையான உலகம் அல்ல இது. அறிவும், புகழும் உடையோர் எத்திசைக்குச் சென்றாலும் அவர்களுக்கு உணவும் கிடைக்கும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நான் இப்பொழுதே என் இசைக்கருவிகளையும், முட்டுக்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். விறகுவெட்டி கோடரியைத் தோளில் போட்டுக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றால் அவனுக்கு மரத்துக்கா பஞ்சம்?  எனப்பாடியுள்ளார்.  இதில் வறுமையிலும்  செம்மையாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முறை புலப்படுகிறது. பரிசில் பெற வந்திருக்கிறோமே?  இப்படிப்பாடினால் இனி இவனிடமோ இவனைப்போன்ற வள்ளல்களிடமோ பரிசில் கிடைக்குமோ? கிடைக்காதோ என அஞ்சாது துணிந்து பாடிய இவரது அஞ்சாமை நம்மை வியக்கவைக்கிறது.  சினமுற்றபோதும் சிறந்த பாட்டியற்றும் திறமும் சினத்தைச் சாதுர்யமாக வெளிப்படுத்திய விதமும் இவரது படைப்பாளுமைக்குச் சான்றாக அமைகிறது.

உவமைத் திறமெனும் புலமைத்திறம்

            நுட்பமான உவமைகளால் தான் சொல்லவந்த கருத்துக்களை விளக்குவதில் ஒளவை தன்னிகரற்றவராக விளங்கினார் என்பதை அவரது பாடல்களில் காணப்படும் உவமைகளின் மூலம் அறியலாம்.  அதியமான் பரிசில் தராது காலம் தாழ்த்தியது தன்னை அவனருகே மேலும் சில நாள் தங்க வைக்கத்தான் என்பதை உணர்ந்து கொண்ட ஒளவையார்

ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ

………………………………………..

அதியமான் பரிசில் பெறூஉம் காலம்

நீட்டினும் நீட்டாதாயினும் களிறுதன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யாகாதே! (புறம். 101) எனப் பாடியுள்ளார்.

            அதியமான் பரிசில் தரும் காலம் நீட்டினும் நீட்டாதாயினும் பரிசில் தருவது உறுதி என்பதைக் களிறு தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்ததுவது பொய்யாகாதே எனும் உவமையால் விளக்குகிறார்.  அதாவது யானைக்குக் கவள உணவை உருட்டிப் பாகன் போடும் போது யானை ஆவென வாயைத் திறந்து ஒரு பருக்கை சிந்தாமல் சிதறாமல் ஏற்றுக்கொள்ளும்.  அதுபோல பரிசிலும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாகக் கிடைக்கும் என நுட்பமான உவமையால் விளக்குவது ஒளவையின் படைப்பாளுமைத்திறன் அன்றி வேறில்லை.

யாழொடும் கொள்ள பொழுதொடும் புணரா

பொருளறிவாரா வாயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை

என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்

கடிமதில் அரண்பல கடந்த

நெடுமான்அஞ்சி நீ அருளன் மாறே” (புறம் – 92) என்ற பாடலில்

            குழந்தைகளின் மழலைப் பேச்சு யாழிசையை ஒத்தனவா? காலத்தொடு பொருந்தியனவா? பொருள் விளங்குவனவா? ஆயினும் தந்தை தன் பிள்ளைகளின் மீதுகொண்ட அன்பினாலும் பாசத்தினாலும் அவை போற்றப்படுகின்றன.  அதுபோல என் பாடல்களும் நீ மதிப்பதனால்தான் மதிப்பினைப் பெறுகின்றன என உவமைகூறி தனக்கும் அஞ்சிக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவினைப்போன்ற நெருக்கமும் பாசமும் உண்மையும் உடையது என்பதை உவமையால் விளக்கும்திறன் பாராட்டுதற்குரியது.

நன்றியில் மலர்ந்த நயமிகு கவிதைகள்

            நன்றி மறவா நெஞ்சினராகிய ஒளவையார் அதியமான், பெருஞ்சேரல் இரும்பொறையுடன் கடும்போர் செய்தபோது அவனது வலிமையைப் பாராட்டி அவனை ஊக்கமூட்டியப் பாடல்கள் அவரது நன்றி உணர்வைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

போரிலே அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் பாடிய

                                    சிறியகட்பெறினே எமக்கீயும் மன்னே

                                    பெரியகட்பெறினே

                                    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே

                                    சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!

                                    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!

                                    …………………………………………….

                                    …………………………………………….

                                    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளை உரீஇ

                                    இரப்போர் கையுளும் போகிப்

                                    புரப்போர் புன்கண் பாவை சோர

                                    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

                                    சென்று வீழ்ந்தன்று அவன்

                                    அருநிறத்து இயங்கிய வேலே

                                    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப் பாடுநரும் இல்லை என்ற பாடலில் பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை (புறம் – 235) எனப்புனைவியல் ஏதுமின்றி தன் மனநிலையை ஒளிப்படமாக்கியிருப்பது அவரது படைப்பாளுமைத் திறனை வெளிப்படுத்துகிறது.

            ஒளவையின் புறப்பாடல்கள் பல இருப்பினும் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நடக்க இருந்த போரை நிறுத்திய பாடல் சிறந்ததொரு பாடலாகும்.  தொண்டைமானைப் புகழ்வது போல இகழ்ந்து, அதியமான் போரில் வல்லவன் என்பதை நிறுவியவர் ஒளவையார்.

            “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி” (புறம். 95) என்ற அடிகளால் இதனை உயரலாம். வெறும் பாடல்கள் இயற்றுவதோடு தம்முடைய கடமை முடிந்து விட்டதென எண்ணாமல், செயல்கள் மூலமும் தமக்குள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார் ஒளவையார்.

            ஓளவை புறப்பாடல் புலவர் எனப்போற்றப்பட்டாலும் அவர் அகப்பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறத்தொடுநிற்றலை அழியாக்கவியாக்கியவர்

            அறத்தொடு நிற்றல் குறித்துப் பலர் பல பாடல்கள் பாடியுள்ளபோதும் ஒளவைபாடிய

                                                அகவன் மகளே! அகவன் மகளே

                                                மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்

                                                அகவன் மகளே! பாடுபாட்டே

                                                இன்னும் பாடுக பாட்டே

                                                அவர் நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே” (குறுந்-23)

என கட்டுவிச்சியை அழைத்துப்பாடிய பாடல் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் என்றும் போற்றும்படி அமைந்துள்ளது.

            வரைவிட  ஆற்றாத தலைவியின் நிலையை

                                                முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

                                                ஒரேன் யானும் ஒர்பெற்றி மேலிட்டு

                                                ஆஅ! ஒல்எனக் கூவுவேன் கொல்

                                                அலமரல் அசைவளி அலைப்ப என்

                                                உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந் – 28)

என சொற்சித்திரமாக்கியுள்ளார்.

அகப்பாடல்களில் புறச்செய்திகள்

அகப்பாடல்களைப் பாடிய ஒளவையார் அவற்றில் சில புறச்செய்திகளையும் கூறுகிறார்.

                                                வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

                                                முனையான் பெருநிரை போல” (குறுந்.80)

                                                “………… நெடுந்தேர் அஞ்சி

                                                கொன்முனை யிரவூர் போல”        (குறுந்.91)

            என்பன அவற்றில் சில. ஒளவையின் பரத்தைக் கூற்றுப் பாடல்களும் இங்குக் குறிக்கத்தக்கன.

முடிவுரை:

            உவமைத்திறத்தாலும் சொல்வீச்சாலும் நடைநயத்தாலும் கருத்துச்செறிவாலும் ஒளவையின் பாடல்கள் காலத்தை வென்று வாழும் தகுதியைப் பெற்றுள்ளன.  கவிதைகள் பாடுவதோடு நின்றுவிடாமல் தன்னுடைய செயலாலும் ஆளுமையை வெளிப்படுத்தியவர் ஒளவையார் என்று உணர முடிகிறது.

ஒளவையின் பாடல்களில் இருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய்வு செய்யலாம்.

1.         ஒளவையின் அகப்பாடல்களில் பரத்தை.

2.         ஒளவையின் அகப்பாடல்களில் புறச்செய்திகள்.

3.         ஒளவையின் புறப்பாடல்களில் அதியமான்.

4.         ஒளவையின் பாடல்களில் உவமைகள்.

5.         ஒளவையின் பாடல்களில் போர்ச்செய்திகள். என்பன அவற்றில் சில.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் த.மஞ்சுளாதேவி

தமிழ்த்துறைத் தலைவர்,

அரசு கலைக் கல்லூரி,

முசிறி.

செவ்வியல் இலக்கியங்களில் கைம்மை

முன்னுரை

            சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பென்டிங் பிரபு காலத்தில் ஒழிக்கச் சட்டமியற்றப்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் என்ற பெண் தன் கணவனை இழந்தபிறகு உடன்கட்டையேற்றப்பட்டு இறந்திருக்கிறாள். அம்மாநிலத்தில் இவ்வழக்கமானது கடுமையான அரசியல் சட்டத்திற்கு அப்பாலும் செயல்பட்டு வருவதைத்தான் இச்செயல் காட்டுகின்றது. பெண்கள் சிலரை சதி கவர்ந்திருப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கணவன் இறந்த பிறகு பெண்கள் வாழும் நெறி கடுமையான விதிகளுக்கு உட்பட்டதாய் இருந்திருக்கின்றது. காலப்போக்கில் முழுமையான மாற்றத்தினை அடைந்திருக்கின்றது என்று கருதப்பட்ட போதிலும் ஆயினும் முற்றிலுமாக மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண் விதவை என்று அழைக்கப்படுகிறார். ‘சொல்லில்கூட பொட்டு இல்லையே என்று வருத்தப்படுவதற்கு, கைம்பெண் என்று அழைத்தால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு கிடைக்கும்’ என்ற கூற்று ஆறுதல் வார்த்தையாகத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் சங்க காலத்தில் கைம்பெண்நோன்பு பெண்ணிற்கு ஆறுதல் அளிப்பதாக அமையவில்லை. சங்க காலத்தில் கைம்மை எத்தகு நிலையில் இருந்திருக்கின்றது என்பதை இக்கட்டுரை நுவல்கின்றது.

சங்க கால மகளிர்

            சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. பொற்காலத்தில் பெண்கள் ஆடவருக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான உரிமையினையும் பெற்றிருக்கிறார்கள். ஆடவரைப் போலவே கள் அருத்தியிருக்கிறார்கள்.1 அரசியல் காரணமாய் தூது சென்றிருக்கிறார்கள்.2 சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய நிலை மிக உன்னதமாய் இருந்திருக்கின்றதா? என்பது வினாவுக்குரியதாய் இருக்கிறது. கணவனை இழந்த சங்ககாலப்பெண்டிர் நிலை குறிப்பிடும்படியாக இல்லை. இந்திய மரபு வழிப்பட்ட (?) பெண்களாகவே இருந்திருக்கின்றனர். பிற்காலத்தில் வீடுபேறு பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மிகவும் கொடிய பழக்கந்தான் உடன்கட்டை ஏறுதல். இப்பழக்கத்தினை சங்க காலமகளிரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக சம உரிமை படைத்தவர்களாக விளங்கியவர்களிடம் உடன்கட்டை ஏறல் இருந்தமை வியப்புக்குரியதே.

கைம்மை நோன்பு

            திருமணத்திற்கு முன்பிருந்தே பூச்சூடி வளையலணிந்து நல் உணவு உண்ட மகளிர் கணவரை இழந்த பிறகு அனைத்தையும் துறந்தவராகின்றனர். பஞ்சணையிலோ, நல்ல படுக்கையிலோ படுத்துறங்கிய மகளிர் பாயும் இல்லாது சிறிய கற்கள் நிறைந்த வெறுந்தரையில் படுத்து உறங்கியிருக்கின்றனர். தாளிப்புடன் கூடிய நல்ல கொழுவிய சுவையுடனான அடிசிலைத் தவிர்த்து நறு நெய்யின்றி நீர்ச்சோற்றையும் புளிகூட்டப்பட்ட வேளைக் கீரையினையும் உணவாகக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அவ்விடத்து உண்டான புல்லரிசியினையே தம் உணவாக உட்கொண்டனர். இதனை

                                    …………………… நறுநெய் தீண்டா

                                    துடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

                                    வெள்ளெட் சாந்தோடு புளிப்பெய் தட்ட

                                    வேளை வெந்தை வல்சியாகப்

                                    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்”

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நீர்ச்சோறோ, புல்லரிசிச்சோறோ யாதாயினும் அதனை கணவனை இழந்த மகளிர் முறையான நேரத்தில் உண்டார்களா எனில் இல்லை எனலாம். நேரந்தவறி உண்ணும் நிலை கணவனை இழந்த பிறகே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

                                    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்

                                    தின்னா வைக    லுண்ணும்

                                    அல்லிப் படூஉம் புல்லா யினவே

என்று ஒக்கூர் மாசாத்தனார் கணவனை இழந்த பெண்ணொருத்தியின் நிலையினை எடுத்துக் காட்டுகின்றார்”4 கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர்5, ஆளில் பெண்டிர்6, உயவல் பெண்டிர்7, கழிகலமகளிர்8, கழிகல முகடூ9, பருத்திப்பெண்டிர்10, என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

இறந்தவருக்கு உணவிடுதல்

            கணவன் இறந்த பிறகு அவன் இறந்த இடத்தினை அவனுடைய மனைவி சாணத்தால் மெழுகி புல்லின்மேல் உணவு இட்டு அவனுக்குப் படைப்பாள். வேள் எவ்வி என்ற அரசன் இறந்தபின் அவனுடைய மனையில் அவன் மனைவியின் நிலையினை வெள்ளெருக்கிலையார் என்ற புலவர்

                                    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்

                                    தன்னமர் காதலி புன்மேல் வைத்த

                                    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்

என்று காட்டுகின்றார்11. இதே போன்று இன்னுமொரு காட்சி. மீனிறைச்சியினைப் பலருடன் சேர்ந்து விருந்துண்ணும் இடமானது. கணவன் இறந்து பட்டதும் மாறி விடுகின்றது. இறந்த கணவனுக்கு உணவு படைக்க வேண்டி சிறிய இடத்தினை அழுத கண்களோடு ஆவின் சாணத்தால் மெழுகுகின்றாள் மனைவி.

                                    அடங்கிய கற்பி னாய்துதன் மடந்தை

                                    உயர்நிலை யுலக மவன்புக வார

                                    நீறாடு சுளகிற் சீறிடநீக்கி

                                    அழுத லானாக் கண்ணள்

                                    மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே

கண்ணீரையும் சாணத்தோடு மெழுகுகின்ற இந்நிலையை தும்பை கோகிலவானர் படம்பிடித்துக் காட்டுகின்றார்12.

கூந்தல் களைதல்

            பெண்ணுக்கு அழகினைத் தருவது கூந்தல். மயிலின் தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிட்டுக் கூறக்கூடியகூந்தலை அகிற்புகையூட்டியும் வாசனைத் திரவியங்களைப் பூசியும் அழகுபடுத்துவர். ஐந்து வகையான பகுப்புகளில் மிகச் சிறப்பாக ஒப்பனை செய்து அழகுபடுத்துவர். இதனை ஐம்பால், சில்லைங் கூந்தல் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. இவையனைத்தும் கணவர் உயிருடன் இருக்கின்ற காலம் வரையிலுமே. கணவர் இறந்தபின்னர் திரவியங்களால் பெண்கள் தம் கூந்தலை அழகுபடுத்துவதில்லை. மாறாகக் கூந்தலை குறைத்துக் கொண்டிருக்கின்றனர். வளையல் போன்ற அணிகலன்களை அணிவதையும் இழந்திருக்கின்றனர். இந்நிலையினை,

                                    கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

என்று தாயங்கண்ணியார் குறிப்பிடுகின்றார்13. கணவர் இறந்த பின்னர் பெண்கள் வளையல் அணியாதிருப்பதை

                                    வளையில் வறுங்கை யோச்சி

என்று குளம்பந்தாயனாரும் கயமனாரும் தம் பாடல்களில் கூறுகின்றனர்.14 கூந்தலைக் குறைத்துக் கொள்வது தவிர முழுவதுமாகக்களைந்து விடுகின்ற பழக்கமும் இருந்திருக்கின்றது. கைம்பை நோன்பிற்காகப் பெண்கள் தங்கள் கூந்தலை மழித்துக் கொண்ட நிலையினை

                                    ஒள்நுதல் மகளிர் கைம்மை கூர

                                    அவிர் அறல் கடுக்கும் அம்மென்

                                    குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே

என்று கல்லாடானார் பாடிய பாடல் வழி அறியலாம். காரியாதி என்ற சிற்றரசன் இறந்த பின்பு அவனுடைய பொலிவிழந்த மனையின் அழகை ஆவூர் மூலங்கிழார் உரைக்கையில் கணவனை இழந்த பெண்ணின் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கின்றார்.

                                    கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

                                    கழிகல மகடூஉப் போல

                                    புல்லென் றணையாற் பல்லணி யிழந்தே

            என்ற இப்பாடலடிகள் கணவனை இழந்த பெண் தலைமயிரை – கூந்தலை மழித்தலோடு அணிகலன்களையும் துறந்த நிலையினை அறிவிக்கின்றன.16 இதனை மாறோக்கத்து நப்பசலையார் பாடலும் உறுதிப்படுத்துகின்றமையைக் காணலாம். பூக்களையும் தழையினையும் சூடுவது கூட கணவன் உயிருடனிருக்கும் காலத்து மட்டுமே. கணவன் இறப்பிற்குப் பின்னர் இவற்றை அணியாது இருந்திருக்கின்றனர்.

                                    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வார

                                    தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்

                                    சிறுவெள் ளாம்பல் அல்லி யுண்ணும்

                                    கழிகல மகளிர் போல

என்பன அப் பாடல் அடிகளாகும்.17 இத்தகைய நிலையே கைம்மை நோன்பாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனைக் கைம்மைக்கொடுமை என்றே கூறலாம். சங்க காலத் தமிழரிடம் வழக்கிலிருந்த கூந்தல் கலையும் பழக்கம், பிற்காலத்தில் தமிழகத்தில் ஆரியர்கள் வந்தேறிய பிறகு அவர்களிடம் இப்பழக்கம் ஒட்டிக்கொண்டது. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு கைம்மை நோன்பின் ஒரு கூறினை பின்பற்றி இருந்தனர். சிலப்பதிகார காலத்தில் இக்கைம்மை நோன்பு துறைகளில் நீராடுவதோடு தொடர்கின்றமையைக் காணலாம்.18

கைம்மைத் துயருக்கு மாற்று

            கூந்தலை மழித்து, பூ, தழையாடை முதலியனவற்றைத் துறந்து அணிகலன்களை இழந்து தூய நல்லரிசியினை விலக்கி நீர்ச்சோற்றையும் புல்லரிசிச் சோற்றையும் உண்டு. பஞ்சணையினையும் பாயினையும் நீக்கிப் பருக்கைக் கற்கள் நிறைந்த தரையில் படுத்துறங்கி வாழுகிற வாழ்க்கை கைம்மை நோன்பு ஆகும். இந்நோன்பிற்கு சங்க கால மகளிர் மாற்று தேடினர். அஃது இக்கைம்மை நோன்பினை ஏற்க மறுப்பதோ எதிர்த்துப் போராடுவதோ என்ற வழியில் அமையவில்லை. உயிர் துறப்பதன் மூலமே தீர்வு கண்டிருக்கின்றனர். கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறுதல் அல்லது காடுகிழாள் கோயில் முன்பு தீ மூட்டப்பட்டு அதனுள் இறங்குவதைத் தெரிவு செய்திருக்கின்றனர் புறங்காட்டில் காடுகிழாள் கோயில் முன்பு தீயினுள் இறங்கி பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு உயிர்துறந்தமையை மதுரைப் பேராலவாயர் பாடியிருக்கிறார்.19

            கைம்மை நோன்பின் கொடுமையினை நன்கறிந்த பெருங்கோப்பெண்டு தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்ததும் உடன்கட்டையேறத் துணிகிறாள். நாட்டின் நிலை குறித்து அரசியல் சுற்றத்துச் சான்றோர் தடுக்கின்றனர். பெருங்கோப்பெண்டு இதனைப் பொல்லாச் சூழ்ச்சி என்று கூறி உயிர்துறக்க முயல்கின்றாள்.

                                                பல்சான் றீரே பல்சான் றீரே

                                                செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்

                                                பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

என்பது அவரது கூற்று 20 கைம்மை நோன்பின் கொடுமையினைத் தாளமுடியாமையினாலேயே இக்கூற்று வெளிப்பட்டிருக்கின்றது. ஒருவர் இறந்தபின் இறந்தவரை எரிக்கின்ற பழக்கமும், புதைக்கின்ற பழக்கமும் உள்ளன. எரிக்கின்ற பழக்கம் உடையோரிடம் கணவனை இழந்த பெண்தீ வளர்த்து தீயினுள் இறங்குவாள். புதைக்கின்ற பழக்கம் உடையோர் இறந்தவரைப் பெரிய தாழியுள் இட்டுப்புதைப்பர். அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பெற்ற முதுமக்கட்டாழிகள் இதனை நமக்கு அறிவிக்கின்றன. இது குறித்துப் புறநானூற்றிலும் அகச்சான்று உள்ளது. கணவனை இழந்த பெண்ணொருத்தி கலஞ்செய்து கொடுக்கும் குயவரிடம் மிகப்பெரிய கலம் கேட்கிறாள். கணவனோடு தன்னையும் சேர்த்துப் புதைப்பதற்காகப் பெரிய கலத்தினைக் கேட்கின்றாள்.

                                                கலஞ்செய் கோவே கலஞ் செய் கோவே

                                                ………………………………………….

                                                வியம்மல ரகன் பொழி லீமத்தாழி

                                                அகலிதாக வனைமோ

என்பது அப்பெண்ணின் வேண்டுகோளாக அமைகிறது.21 கணவன் இறப்பிற்குப் பின்னர் பெண்கள் எரிந்தோ, புதைந்தோ, கைம்மை நோன்பை முடிந்திருக்கின்றனர்.

அகப்பாடலில் கைம்மைக் கொடுமை

            இரவில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகின்றான். களவின்பத்தில் மிகுதியும் விருப்புடைய தலைவன் செயலைத் தோழி வரைவுகடாவுதல் காரணமாய் கண்டிக்கிறாள். கடுமையான ஆபத்துகளுக்கிடையே வாரற்க என்கிறாள். இவ்வாபத்து பற்றிக் கூறுகையில் தலைவன் நாட்டில் உள்ள குரங்கின் செயலை எடுத்துக்காட்டுகிறாள். ஆண்குரங்கு இறந்துபட்டதும் பெண் குரங்கு தன்னுடைய குட்டியை உறவினரிடம் கொடுத்து விட்டு கைம்மை நோன்பின் துயர் தாளமுடியாமல் அல்லது அடைய விரும்பாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தன்னுயிரினைக் போக்கிக் கொள்கின்றது.

                                                கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

                                                கைம்மை உய்யாக்காமர் மந்தி

                                                கல்லா வன்பறழ் கிளைமு தற் சேர்த்தி

                                                ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்.

என்ற இந்த அகப்பாடல் அடிகளில் ஐந்தறிவுடைய குரங்கின் மேல் சங்க கால மகளிரின் நிலை ஏற்றிக் கூறப்படுகிறது.22 கைம்மை நோன்பு கொடுமையானது என்பதும் இந்நோன்புக் கொடுமையினின்று மீள உயிர் துறத்தலைத் தீர்வாகக் கொண்டமையும் என்பது வெள்ளிடை மலையாகிறது.

உடன்கட்டை ஏறக் காரணம்

            ஒத்த அன்புடையவராய் நல்லறமே கொண்டு வாழ்வது இல்லறம். இந்த இல்லறத்தில் இன்ப துன்பங்களைத் தங்களுக்குள் சமமாய் பங்கெடுத்துக் கொளல் வேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் ஒன்று உயர்ந்தோ, குறைந்தோ இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் அங்குச் சமநிலை இல்லை. சங்க காலந்தொட்டு இன்று வரை துன்பங்கள் எப்பொழுதும் பெண்களின் சொத்தாகவே விளங்குகின்றன. திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல் என்ற சடங்கு ஒன்றுண்டு. அம்மி எதற்காக மிதிக்கப்படுகிறது? கணவனுடைய வாழ்க்கைப்பாதை கரடு முரடானதாக இருந்தாலும் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு, மனைவி கணவனோடு செல்லுதல் வேண்டும். இச் செய்தியைத்தான் அம்மி மிதித்தல் என்ற சடங்கு உள்ளடக்கியிருக்கின்றது. பெரும்பாலும் பெண்ணுக்கே இது போன்ற அறிவுரைகள் பல கூறப்படுகின்றன. ஆணுக்கு இத்தகைய அறிவுரை கூறும் சடங்கு இல்லை. கணவன் இறந்த பெண் கைம்பெண், விதவை என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றாள். வெண்ணிற ஆடை உடுத்துகின்றாள். ஆனால் மனைவியை இழந்த கணவனை இது போன்று அடையாளம் காட்டக்கூடிய சொல்லோ, ஆடையோ ஒன்று கூட இல்லை.

சங்க காலத்திலும் இத்தகைய நிலையில் மாற்றம் இல்லை. ஒத்த அன்புடையவரில் கணவன் இறப்பின் மனைவியே பல துன்பங்களைப் பெறுகிறாள். நல்ல உணவில்லை, படுக்கையில்லை, அணிகலன்களை அணிவதுமில்லை. கூந்தலை இழந்து கண்ணீர் மல்க, கணவன் இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் வாழும் கணவனுக்கு உணவு படைத்து வாழும் வாழ்க்கை நரக வாழ்க்கையாகத்தான் இருக்கின்றது. மனைவி இறந்த பிறகு கணவனுக்கு இது போல் எந்தவிதமான விதிமுறைகளும் கிடையா. மனைவி இறந்த பிறகு எந்த ஒரு கணவனும் தலைமயிரை மழித்துக்கொண்டு நீர்ச்சோறோ, புல்லரிசிச் சோறோ உண்டு வெறுந்தரையில் படுத்துறங்கி மனைவி இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் (?) வாழும் மனைவிக்கு உணவு படைத்து நோன்பிருப்பதில்லை. மீறி மீறிப் போனால் கொஞ்சம் வருத்தப்படலாம். கைம்மை நோன்போ, உடன்கட்டை ஏறலோ, கணவனுக்குக் கிடையா. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தம் பெருங்கோப்பெண்டு இறந்த பொழுது.

                                    யாங்குப்பெரி தாயினு நோயல வெனைத்தே

                                    உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்

                                    கள்ளி போகிய களரியம் பறந்தலை

                                    வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்

                                    தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி

                                    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

                                    இன்னும் வாழ்வ லென் னிதன் பண்பே

என்று வருந்த மட்டுமே முடிகிறது.23 தலைவியை விட்டுப்பிரிவது துன்பமெனப் புலம்புகிற தலைவன் கூற்றும் இருக்கத்தான் செய்கிறது. அக்கூற்று

                                    வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த

                                    அரிசில் அம்தௌ;ளறல் அன்னயிவள்

                                    விரி ஒலி கூந்தல் விட்ட மை கலனே என்று வெளிப்படுகிறது.24

தலைவியைப் பிரிந்து வாழும் நாட்கள் வீணான பதர் போன்றவையே என வருந்துகிற (எல்லாம் எவனோ? பதடி வைகல்) தலைவனையும் பார்க்க முடிகிறது.25 இவை விகிதாச்சார அளவில் மிகவும் சிலவே. ஆனால் சங்ககாலப் பெண்கள் தாங்கள் இல்லாமல் தலைவர்கள் – ஆண்கள் வாழ மாட்டார்கள் என்று அளவுக்கு அதிகமான நம்பிக்கையினை ஆண்கள் மீது வைத்திருக்கின்றார்கள். இதனை

                                    நீரின்ற மையா உலகம் போலத்

                                    தம்மின்ற மையா நம் நயந் தருளி என்றும் 26

                                    நம்மை விட்டு அமையுமோ மற்றே என்றும் 27

பாடப்படும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. தாமின்றி தலைவன் இல்லை எனும் எண்ணம் பெண்களுக்கு மிகுதியாக இருந்ததைப் போலவே தலைவன் இல்லாத வாழ்க்கை ஒன்றுமில்லாத பாழ் என உறுதியாக நினைத்த பெண்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். தலைவனுடைய தற்காலிகப் பிரிவைத் தாள முடியாமல்,

                                    நின் இலது இல்லா இவள் என்றும்28

                                    ……….              இவளே

                                    வருவை ஆகிய சின்னாள்

                                    வாழா னாதல் நற்கு அறிந்தனை என்றும்29

                                    ……….              காதலர்

                                    ஒரு நாள் கழியினும் உயிர் வேறு படூஉம் என்றும்30

                                    உயிர்க்கு உயிர் அன்னர்                            என்றும்31

                                    யாம் எங் காதலர்க் காணேம் ஆயின்

                                    செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

                                    கல்பொரு சிறுநுரை போல

                                    மெல்ல மெல்ல இல்லா குதுமே                என்றும்32

                                    நீயெமக்கு இன்னாதன பல செய்யினும்

                                    நின்னின்று அமைதல் வல்லாம் ஆறே              என்றும்33

                                    விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்

                                    இன்னுயிர் அல்லது பிறிதொன்று

                                    எவனோ? தோழி நாம் இழப்பதுவே                    என்றும்34

புலம்புகிற பெண்ணின் குரலையே அதிகமாகக்கேட்க முடிகிறது. தலைவனை விட்டுப் பிரிந்து துன்புறுவதைவிட அவனுடன் சேர்ந்திருக்கின்ற காலத்திலேயே உயிர் பிரிந்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற தலைவியின் துயரத்தினை – பிரிவுக்கொடுமையினை தலைவன் இல்லாத வெறுமை நிலையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதனை சிறைக்குடி ஆந்தையாரின்,

                                    பிரிவ ரிதாகிய தண்டாக் காமமொடு

                                    உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து

                                    இருவேம் ஆகிய உலகத்து

                                    ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே

என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன 35 களவுக்காலத்திலும் கற்புக்காலத்திலும் தலைவனின் குறுகிய காலப் பிரிவும் கூட மிகப்பெரிய வருத்தத்தினையும் துன்பத்தினையும் தரும்போது அவன் இல்லாத வாழ்வு, கைம்மை நோன்பு நோற்று வாழும் வாழ்வு வாழமுடியாத ஒன்றாகவே ஆகிறது.

            கைம்மை நோன்பு தமிழ் மரபென்றும் வடமரபில் காணப்படாதது என்றும் கூறப்பட்டதை மறுத்து போரில் இறந்து பட்ட வீரர்களுடைய மனைவியரின் வீரயுக நம்பிக்கை சார்ந்ததாக அமைந்ததே கைம்மை நோன்பு என்ற கருத்துரைக்கப்படுகின்றது. 36 தமிழ்மரபு, வீரயுக நம்பிக்கை வைதீக மரபு என எதுவாகப் புனைந்து கூறப்பட்டாலும் கைம்மை நோன்பு கொடியதாக இருந்திருக்கின்றது. இதனைத்தாங்கிக் கொள்ள முடியாமல் தாங்கிக் கொண்டு வாழுகிற ஆற்றல் இல்லாமல் உடன்கட்டையேறுதலைப் பெண்கள் ஒருவிதக் கட்டயாத்தின் பேரில் ஏற்றுச் செயல்பட்டிருக்கின்றனர். இது ஒரு வகையான ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடாகும்.

            இத்தகைய ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பெண்ணால் நேரடியாக எதிர்த்துப் போராட ஆற்றல் இல்லை. அல்லது இல்லாத நிலை ஆக்கப்பட்டிருக்கின்றது. கடுமையான நோன்புகளை மேற்கொண்டு வாழ்ந்து ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேல் என்ற முடிவுக்கே சங்க கால மகளிர் வந்திருக்கின்றனர். அக்காலச் சமுதாயத்தின் மீது தங்களது எதிர்ப்புணர்வைக்காட்டும் கருவியாகவே உடன்கட்டையேறுதலைக் காணமுடிகிறது. சுக வாழ்வு வாழுகிற அரசப்பரம்பரையில் தோன்றிய பூதப்பாண்டியன் மனைவிக்கும் இதில் விலக்கு இல்லை. பிற்காலத்தில் மதச்சாயம் பூசப்பட்டு வீடு பேறு அடையும் வழியாக மாற்றப்பட்டு விட்டது. வீடு பேறு மனைவிக்கு மட்டுமே. கணவனுக்கு இல்லை. இத்தகைய சமுதாய அமைப்பே, சங்க கால மகளிர் உடன்கட்டையேறல் என்ற பிற்போக்கான முடிவினை எடுக்கக் காரணமாகின்றது.

நிறைவுரை

            சங்க காலமகளிர் அரசியல், தூது, கல்வி, கள்ளுண்ணல் போன்றவற்றில் ஆண்களுக்கு நிகராக ஆற்றல் பெற்றிருக்கின்றனர். கணவனை இழந்த பிறகு கைம்மை நோன்பு என்ற கொடுமையினை அனுபவித்திருக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக ஆற்றல் கைவரப் பெற்றிருப்பினும் கணவனை இழந்த பிறகு வாழத் தகுதியற்றவராகவே இருந்திருக்கின்றனர். ஏனெனில் கணவனை இழந்த பிறகு வாழும் பெண்ணின் வாழ்வு நெறி இயல்பானதாக இல்லை. கழிகல மகளிர், கழிகல மகடூஉ, பருத்திப் பெண்டிர், உயவல் பெண்டிர், தொடிகழி மகளிர் என்று பல பெயர்களால் கைம்பெண்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். களவிலும் கற்பிலும் தலைவனின் சிறு பிரிவைக் கூட தாங்க இயலாது வருந்தக்கூடியவளாகப் பெண் விளங்குகிறாள். கணவனை இழந்த பிறகு கடுமையான கைம்பெண் நோன்பு நோற்று வாழ வேண்டுவது பெண்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு இந்நோன்பு விதிக்கப்படவில்லை. பின்பற்றப்படவும் இல்லை. களவொழுக்கத்திலும், கற்பொழுக்கத்திலும் தலைவனை விமர்சிக்கிற தலைவி, கணவன் இறந்தபிறகு தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகிறாள். இது தலைவன் மீதுள்ள அன்பின் மிகுதி எனக்கொள்ள இயலாது. பிற்போக்குத்தனமான இம்முடிவு அக்காலச் சமுதாயத்தைப் பழி வாங்குவதாகவே அமைகின்றது.

குறிப்புகள்

1.          பட்டினப்பாலை 106-108 புறநானூறு 235

2.          புறநானூறு.95

3.          புறநானூறு.246.5-9

4.          புறநானூறு.248. 3-5

5.          புறநானூறு 238: 6

6.          நற்றிணை 353 : 1

7.          புறநானூறு 246 : 10

8.          புறநானூறு 248 : 14

9.          புறநானூறு 261 : 18

10.        புறநானூறு 125 : 1,325:5)

11.        புறநானூறு 234, 2-4.

12.        புறநானூறு 249, 10-14.

13.        புறநானூறு 250. 4-5.

14.        புறநானூறு 253;5, 254;4

15.        புறநானூறு 25:12-14

16.        புறநானூறு 261. 18-20

17.        புறநானூறு 280. 11-14

18.        சிலப்பதிகாரம் துன்பமாலை 39,43

19.        புறநானூறு.247

20.        புறநானூறு.246:1-3

21.        புறநானூறு.256

22.        குறுந்தொகை 69:1-4

23.        புறநானூறு.245

24.        நற்றிணை 1:6-7

25.        குறுந்தொகை 323:1

26.        நற்றினை 1:6-7

27.        குறுந்தொகை 317:5

28.        ஐங்குநூறு 179:4

29.        நற்றிணை 19:7-9

30.        நற்றிணை 141:11-12

31.        குறுந்தொகை 218:5

32.        குறுந்தொகை 290:3-6

33.        குறுந்தொகை 309:7-8

34.        குறுந்தொகை 334:4-6

35.        குறுந்தொகை 57:3-6

36.        பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் குடும்பம், பக்.119-120 (மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

முதல்வர்

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி,

திருப்பூர் – 641 602

கொப்புகொண்ட பெருமாள் கோவில் வரலாறு

கொப்புகொண்ட பெருமாள் கோவில் தலபுராண வரலாறு

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா  சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன் மலைத்தொடர் உள்ளது.  2,200 அடி உயரத்தில் உள்ள, இம்மலைகுன்றில் கால்நடை மற்றும் விவசாய நிலத்துக்கும், இலை, தழைகள் அறுப்பதற்குப்  பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  மலைகுன்றின் மேலேறி ஆண்கள் அவ்வவ்போது விளையாடி வருவதுமுண்டு. இம்மலையில் மூலிகை செடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அவற்றினைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். தினமும் காலை நேரங்களில் ஆண்களோடு பெண்களும் சேர்ந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு  மலை உச்சிக்குச் செல்வதுண்டு.  அங்கு ஆண்கள் மரங்கள் ஏறி காய்கனிகளைப் பறித்தும் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டிருப்பர். அந்நேரத்தில் பெண்கள் நல்ல விளைச்சலுள்ள பகுதியில் ஆடு மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடுவதுண்டு.

கோவில் உருவான வரலாறு (கொப்புகொண்ட பெருமாள் உருவான கதை)

புரட்டாசி வெள்ளிக்கிழமை ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தியின் காதில் அணிந்திருந்த தோடு (தோடு என்பதற்கு கொப்பு என்று பொருள் உண்டு) திருகாணி கழன்று கீழே விழுந்துள்ளது. அது தெரியாமல் அவளும் தன்கணவனுடன் வீட்டுற்குச் சென்று விடுகிறாள். வீட்டை அடைந்ததும் மாமியார் மருமகளிடம் ஒருபக்க காதில் தோடு இல்லாமையைக் கண்டு திட்டியுள்ளார். மருமகளும் அழுதுகொண்டே கணவனிடம் சொல்ல, இருவரும் அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை காலையில் மலை உச்சிக்குச் சென்றார்கள்.  பெண்கள்  ஆடுமாடுகள் மேய்த்த இடம், விளையாடிய இடம் என்று ஒன்றுவிடாமல் தேடிப்பார்த்தபோது, அப்பெண்கள் விளையாடியிருந்த இடத்தில் புற்று ஒன்று எழும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்கள். புற்று இருந்த இடத்தில்தான் தோடு விழுந்திருக்க கூடும் என்று நினைத்த அப்பெண் அப்புற்றினை இடித்துத் தோட்டினை எடுத்துக் கொடுக்கும்படி கணவனிடம் கூறுகிறாள். கணவனும் மனைவி சொன்னதைக் கேட்டுக் கடப்பாறையால் புற்றினை இடிக்க முயல்கிறான்.

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில், சின்னமசமுத்திரம், பெத்தநாயக்கன் பாளையம்.

அப்போது ஒரு அசரரீ ஒலித்ததாகவும், அதிலிருந்து, திருமால் குடிக்கொண்டிருப்பதாகவும் அப்பெண்ணின் தோட்டினை (கொப்பு) ஆதாரமாகக்  கொண்டு இவ்விடத்தில் உறைவதாகவும் ஒலித்துள்ளது. மேலும், கரடுமுரடான மலைப்பாதையினை மென்மையான கற்களைக் கொண்டு சரிசெய்து ஒரு நடைபாதையாகத் தானாகவே உருவானது என்றும் ஊரிலுள்ள வயதானவர்கள் இன்றளவும் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.

பெண்ணிடமிருந்து கொப்பையைக் கொண்டதால் ”கொப்புகொண்ட பெருமாள்” என அழைக்கப்படுகின்றார். அதன்பிறகு கொப்புகொண்டபெருமாள் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு திருவிழா எடுத்துப் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். சின்னமசமுத்திரத்தில் இத்திருக்கோவில் அமைந்திருந்தாலும் அதற்கு அடுத்துள்ள காளிச்செட்டியூர் கொண்ட ஆட்களே பூசாரிகளாகவும் இக்கோவில் நிர்வாகப் பிரிவுகளையும் கவனித்து வருகின்றனர்.

கோவிலின் படிக்கட்டுகள்

ஆரம்பகாலத்தில் கோவில் மலைமேல் செல்வதற்கு சிவப்பு மஞ்சளால கற்கள் மற்றும்  கூலாங்கற்களால் ஆன நடைபாதையே இருந்தது. இப்பாதையானது வளைந்து வளைந்து மலையைச் சுற்றிச் செல்லும். அதன்பிறகு இக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைமேல் சென்று வருகின்ற மாதிரி சாலை அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். அதனால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இம்மலையை குடைந்து குறுக்கும் நெடுக்குமாகச் சாலை போட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பணத்தொகை அதிகம் ஆகும் என்பதாலும், ஒருபகுதிக்குமேல் சாலை அமைக்க முடியாத சூழ்நிலைகள் இருந்ததாலும் மலைமேல் போதியவசதி இல்லாமல் இருந்ததால் அந்த திட்டத்தைக் கைவிடப்பட்டது.

கொப்புகொண்ட பெருமாள் மலை – ஓர் அதிசயம்

ஆரம்பத்தில் மலைஉச்சியில் புற்று இருந்த இடமானது சிறிய கோவிலாக மட்டுமே இருந்தது. கோவில் பக்கத்தில் ஆங்காங்கு சின்னசின்ன கோவில்கள் (குடில்கள்) இருந்தன. கோவிலுக்கென்று என்றுமே வற்றிப்போகாத நல்ல தண்ணீர் கிணறும் இருந்தது. இக்கோவிலில் சந்தனக்கல் ஒன்றும் இருந்தது. தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கல்லோடு கல் உரச சந்தன திரவியம் உண்டாகும். பொதுமக்கள் அதனை அரைத்து அரைத்துப் பூசிக்கொள்வதும் உண்டு.  கீழிருந்து மேல் போகும் வழியெல்லாம் அரக்கு செடிகள் ஏரளமாய் உண்டு. பை நிறைய பறித்து வந்து காயவைத்துத் தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். கோவிலுக்குச் சென்று வந்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள் எண்ணினர். புத்திசுவாதினம் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் போன்றோர்கள் மலைமீது ஏறி இறங்கிவிட்டால் ஏதோ அவர்களுக்குள் மாற்றம் நிகழ்ததாகக் கூறுவார்கள்.

முருகன் சன்னிதி

            பெருமாளைத் தரிசித்துவிட்டு கீழே இறங்கி வருகையில் மலையின் குறுக்குவாக்கிலுள்ள முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பொதுமக்கள் அங்கேயும் சென்று முருகபெருமானையும் வணங்கிவிட்டு வருவார்கள். மலை ஏறுபவர்கள் முருகன் சந்நிதி அடைந்துவிட்டால் அங்கு கொஞ்சநேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டுப் பிறகு செல்வார்கள்.

புரட்டாசி மாதம் திருவிழா

வருடாவருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். பெத்தநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார ஊர்களான கொத்தாம்பாடி, கல்பகனூர், செல்லியம்பாளையம், ராமநாயக்கன் பாளையம், ஆத்தூர், ஓலப்பாடி, ஒட்டப்பட்டி, ஆரியபாளையம், புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், பனைமடல், பாப்பநாயக்கன் பட்டி, கருமந்துறை போன்ற இடங்களிலிருந்தும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும்திரளாக வருகை தருகின்றனர். 

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில் – நுழைவாயில்

கோவில் அன்னதானம், பொதுமக்களின் அன்னதானம், ஆடு மாடுகளை காணிக்கை ஒருபுறம், பக்தர்கள்  மொட்டை அடித்தல், இரு சக்கர நான்கு சக்கர நிறுத்தங்கள், வழிநெடுக சிறுகுறு கடைகள், பெருங்கடைகள், ஐஸ் பெட்டிகள், பலவகையான ராட்டினங்கள், வாடகை வண்டிகள், இரவு நேரங்களில் கண்கவர் விளக்குகள், வானவேடிக்கைகள், மைக்செட் வர்ணனைகள் எனத் திருவிழாக்களாய் அமர்க்களப்படுத்தும்.

கும்பாபிஷேகம்

பெத்தநாயக்கன் பாளையம் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு பெரிய மலைகோவிலாக இருக்கும் பழமை வாய்ந்த கொப்புகொண்ட பெருமாள் கோவிலை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். மலைமேல் கொஞ்சம் விரிவுபடுத்தியும் கோபுரங்களைச் சீரமைத்தும் சரிசெய்தனர். மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும் 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையில்  எப்போதும் உள்ள கல்லால் ஆன சாலையை நீக்கிவிட்டு கிரானைட் கற்கள் கொண்டு படிக்கட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன.  நன்கொடையாளர்கள் மூலம், 1,893 கருங்கல் படிகள் அமைத்தனர்.

முடிவுரை

            புற்றுக்கு அடியில் ராமமிட்டபடி கொப்புகொண்ட பெருமாள் சுமாமி  காட்சியளிக்கிறார். துளசி மாலையும் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில் சார்பாகப் புரட்டாசி சனிக்கிழமைகளில் முழுவேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மலைமேலிருந்து பார்த்தால் வசிட்ட நதி ஓடும் அழகை ரசிக்கலாம். பெத்தநாயக்கன் பாளையம் சுற்று வட்டார கிராமங்களையும் நெல் வயல்களையும் தென்னை பாக்கு மரங்களின் ஒய்யார முழுஅழகையும் நுகரலாம். புரட்டாசி அல்லாத பிற சனிக்கிழமைகளிலும் இக்கோவிலில் வழிபாடு செய்யப்படுகிறன. மொட்டை அடித்தல், கோவிந்தா.. கோவிந்தா… பொறிக்கடலை, பீப்பீ ஊதி போன்றவைகள் தவிர்க்க முடியாதனவாக இருக்கின்றன. மொத்தத்தில்  அனைவரும் ஒருமுறையாவது சென்று வருவதற்கான அற்புதமான திருத்தலமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்க இலக்கியத்தில் குடில்கள்

மனிதன் முதலில் உணவைத் தேடி அலைந்து உணவைப் பெறுகிறான்.  பின்னர் உடையை உடுத்துகிறான்.  நாடோடியாகத் திரிந்து, அலைந்த பின்னர் ஒரே இடத்தில் வாழத்தொடங்குகின்றான். மனிதன் முதலில் குகைகள் போன்றவற்றில் வசிக்க ஆரம்பித்து அவற்றின் தோற்றத்தைக் கொண்டு, அதைப்போலவே குடிசைகள் அமைக்க ஆரம்பிக்கிறான்.  இவ்வாறே முதலில் மனிதன் உறைகின்ற இடம் அமைகிறது.  பல்வேறு விதமான குடிசைகளை இருப்பிடங்களுக்கு ஏற்றவாறு அமைத்த மனிதன், அவற்றில், பல வேறுபாடுகளைச் செய்கிறான்.         

தோற்றம்

            குடிசைகள் புதர்போன்ற தோற்றத்தில் இருந்ததை புதல்போல் குரம்பை என்று அகநானூறு (315) கூறுகிறது.

மரங்களின் பயன்பாடு

சங்ககாலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன.  சங்கத்தமிழர் காடுகளில் இருந்த மரங்களை (விறகிலிருந்து வீடு கட்டுவது வரை) அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைகளிலும் பயன்படுத்தினர். வேட்டை நாய்கள் குரைத்து விளையாடி வர வேட்டையில் வென்ற கானவன் மரக்காலில் சேர்த்துப்பிணித்த தன் குடிசையை நோக்கிச் சென்றான் என்று நற்றிணை (285) கூறுகிறது. இதனை,

            “மனைவாய் ஞமலி ஒருங்கு புடைஆட

            வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட

            நடுகாற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கழிகள்

            ஆடுகள் நின்று தின்பதற்காகத் தழைகள் கட்டின குறிய காலையுடைய குடில். அக்குடிலின் வாயில் பல கழிகள் சேர்த்து அமைக்கப்பட்ட கதவினைக் கொண்டதாக உள்ளது.  குடிலின் மேல் உள்ள கழிகளின் மீது வரகுக்கற்றை வேயப்பட்டிருக்கும், என்று கோவலரின் குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (147) உணர்த்துகின்றது. கழிகள் மிடைந்து புல்லால் வேயப்பட்ட குடிலை

            “……….. கழி மிடைந்து இயற்றிய

            புல்வேய் குரம்பை

என்ற அடிகளில் மலைபடுகடாம் (437) உணர்த்துகின்றது.

மூங்கில்

            மூங்கிலைக் கழிகளாப் பயன்படுத்தியதை வேழம்நிரைத்து என்று பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது.

ஒடு மரம்

ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக்கதவினையுடைய இல்லங்களின் முன்னர் வேட்டுவர் தீயைமூட்டி உடும்பை வாட்டுவர் என்று புறநானூறு (325) கூறுகிறது. இதனை,

            உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்

            சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மரக்கோல்கள் கொண்ட கதவு படலை என்று அக்காலத்தில் அழைக்கப்பெற இக்காலத்தில் அது படல் என்று அழைக்கப்படுகிறது.  ஆடு, மாடுகளை அடைக்கும் குடிலின் கதவு கிராமங்களில் சில இடங்களில் மரக்கோல்களைக் கொண்டே இன்றும் அமைக்கப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

வெப்பம் மிக்க குடில்

            குடிலின் உள்ளே இருப்போர் வருந்துதலுக்குக் காரணமான வெப்பம் மிக்க குடிலைப்பற்றி, உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை என்று சிறுபாணாற்றுப்படை (174) குறிக்கிறது.

வறுமை மிக்க குடில்

            கூரையில் உள்ள கழிகள் வீழ்ந்து கிடக்க, சுவரில் கறையான் அரித்ததால் காளான் பூத்து விளங்க, அடுக்களையில் குட்டிகளை ஈன்ற நாய் பாலில்லாமல் வருந்தி குரைக்கும் வறுமை மிக்க குடிலை சிறுபாணாற்றுப்படை (132) கூறுகிறது.

மரக்கால் பந்தல்

            குடில்களுக்கு முன்னர் பந்தல் இருந்தது.  அப்பந்தல் மரக்கால்களால் அமைக்கப்பட்டிருந்தது.  குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடு துப்பிய விதைகள் பந்தலில் காணப்படும்.  அங்கு இடையன் தீயை மூட்டுவான் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதனை,

            “குமிழ் உண்வெள்ளை பகுவாய் பெயர்த்த

            வெண்காழ் தாய வண்காற் பந்தர்

            இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 பாசறை

            பாசறையும் மரக்கால்களைக் கொண்டு அமைக்கப்பட்டது.  கூவையிலையால் மூடப்பட்டது. இதனை, கூவை துற்ற நாற்கால் பந்தர் (புறம் 29) என்ற அடியால் உணரலாம். மேற்கண்ட செய்திகளிலிருந்து குடில்களில் மரங்கள் கதவாகவும், கழியாகவும் பயன்பட்டதை அறிய முடிகிறது.

சுவர்

            குடில்களுக்கு மண்ணால் ஆன சுவர் வைக்கப்பட்டிருந்தது. தரையை மெழுகுவது போல சுவற்றையும் மண்பூசி செய்யப்படுகிறது.

செம்மண் பூசுதல்

 தலைவியை  உடன்போக்கில் அழைத்துக்கொண்டு வரும் தலைவனின் தாய், அலங்கரிக்கப்பெற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, முற்றத்தில் மணலைப் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு வீட்டினை அழகு செய்வாள் என்று அகநானூறு (195) கூறுகிறது.  இதனை,

            “………………. தாயே

            புனைமான் இஞ்சி பூவல் ஊட்டி

            மனைமணல் அடுத்து மாலை நாற்றி

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சுவரில் செம்மண் பூசியதால் சுவர் மண்சுவர் என்று அறியலாம்.  இக்காலத்தில் சுண்ணாம்பு பூசாத மண்சுவருக்கு பண்டிகை போன்ற நாட்களில் செம்மண் பூசும் வழக்கம் உள்ளது. செம்மண் பூசப்பட்ட இல்லத்தை செவ்வாய்ச் சிற்றில் என்று அகநானூறு (394) கூறுகிறது.

திருமணவிழாவின் போது எங்கும் மணல் பரப்பி, இல்லத்திற்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை வைத்து வணங்குவர் என்று கலித்தொகை கூறுகிறது. இதனை,

            தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி

            எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்

என்ற கலித்தொகை (114) அடிகள் உணர்த்துகின்றன. இல்லிற்குச் செம்மண் பூசுவர் என்பதன் மூலம் தரை, சுவர் போன்றவற்றிற்குச் செம்மண் பூசியிருப்பர் என்று உணரப் பெறுகின்றது.

சுண்ணாம்பு பூசுதல்

            குடிலின் இறப்பில் (தாழ்வாரத்தில்) சுண்ணாம்பு பூசியதை

            “……………. இறைமிசை

            மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன

என்று அகநானூறு (346) கூறுகிறது. கலப்பையைச் சார்த்தி வைப்பதால் சுவர் தேய்ந்து காணப்பட்டது என்று பெரும்பாணாற்றுப்படை (188) கூறுகிறது.

குடில்களில் மண்சுவர் இருந்துள்ளது.  அதனைச் செம்மண், சுண்ணாம்பு பூசி அழகு செய்வர் என்று உணரப்பெறுகின்றது. சுவர் மண்சுவராக இருந்ததால் தேய்ந்து காணப்பெற்றது என்று அறியலாம்

குடிசையின் கூரைகள்

            பலவித புற்களையும் இலைகளையும் கொண்டு குடிசையின் கூரைகளை வேய்ந்துள்ளனர்.

புல்

புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசையினை புல்வேய் குரம்பை என்று அகநானூறும் (172), புறநானூறும் (120) உணர்த்துகின்றன. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊரில் புலால் நாற்றம் வீசியதை, புலால்அம் சேரி புல்வேய் குரம்பை என்று அகநானூறு (200) உணர்த்துகிறது. புல்லிய இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊரை, புல்இலை வைப்பின் புலம் என்று பதிற்றுப்பத்து (15) கூறுகிறது.

            “ஊகம்புல்லால் வேயப்பட்ட சுவருடைய குடிசையை

            ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்

            என்று பெரும்பாணாற்றுப்படை (122) கூறுகிறது. இதைப்போலவே குன்றக் குறவன் புல்வேய் குரம்பை என்று ஐங்குறுநூறு (252) கூறுகிறது.  இது ஊகம்புல் என்று உரையாசிரியர் கருதுகிறார். எனவே, புல்லால் வேயப்பட்ட குடிசை என்றால் அது ஊகம்புல்லாக இருக்கவும் வாய்ப்புண்டு.

தருப்பைப் புல்

            மூங்கிலைக் கழிகளாக வைத்து, இடையில் மரக்கொம்புகளை வைத்து தாழை நாரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேய்ந்த வலைஞரின் குடிலை பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது. மீனவர்களின் குடியிருப்பாதலால் அங்கு கிடைக்கும் தாழை மர நார் கட்டுவதற்கும், தருப்பைப்புல் (நாணற்புல்) வேய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம்.

தாழை

            “தாழையால் வேயப்பட்ட குடிசையை

            தடந்தாட் தாழைக் குரம்பை

என்ற நற்றிணை (270) உணர்த்துகிறது.

முள்ளிச் செடி

            முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய வாசலையுடைய குடிசையை

            “முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை

என்று நற்றிணை (207) கூறுகிறது. நெய்தல் நில மக்கள் தருப்பை, தாழை, முள்ளி போன்றவற்றைக் குடிசையில் வேய்ந்தனர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

 ஈந்தின் இலை

            கொழுவிய மடலையும், வேல்போலும் நுனியையும் பொருந்திய ஈந்தின் இலையால் வேயப்பட்ட, முள்ளம்பன்றியின் முதுகு போன்ற புறத்தினை உடைய குடிசை, இதன்மேல் எலி, அணில் முதலியன திரியாமல் இருக்கும் என்று பெரும்பாணாற்றுப்படை (86) கூறுகிறது. இதனை,

            “……………….. கொழுமடல்

            வேற்றிலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்

            ஈத்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை

என்ற அடிகள் உணர்த்துகின்றன.  முள்ளம்பன்றியின் முதுகில் கூர்மையான முட்கள் குத்திட்டு நிற்பது போல குடிசையில் ஈந்தின் இலைகள் குத்திட்டு நின்றன.  இவ்வாறு இதை வேய்வது கடினம். எலி, அணில் போன்றவற்றால் வரும் தொந்தரவுகளைத் தடுக்க, தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில், பாதுகாப்பு அரண்போன்று அமைத்துள்ளனர்.

வரகுத்தாள்

            வரகின் வைக்கோலால் வேயப்பெற்ற குடிசையை பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இதனை, கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (191) என்ற அடி உணர்த்துகிறது. கழிகளுக்கு மேல் வரகுக்கற்றை வேயப்பட்டதை

            “செறிகழிக் கதவின்

            கற்றை வேய்ந்த (149)”

என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இவை இரண்டுமே கோவலர்களின் குடிசைகள் என்பது குறிக்கத்தக்கது. முல்லை நிலத்தில் விளைந்த வரகு உணவாகவும், வரகுத்தாள் வேய்வதற்கும் பயன்பட்டது என்று அறியலாம்.

நெற்தாள்

            உழவர்களின் குடிசைகளில் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. இதனைப் பெரும்பாணாற்றுப்படை(225) கூறுகிறது. புதுவை வேய்ந்த கவிகுடில் என்ற அடி இதனை உணர்த்துகிறது.  உழவர்களாதலால் அங்கு நெல்லடித்த பின்னர் எஞ்சியுள்ள நெற்தாள் வீடு வேயப்பயன்பட்டது. இன்றும் பல இடங்களில் இதனை வீடு வேய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

நெற்கதிர்

நெற்கதிர்களைக் கூரையாக வேய்ந்து, கழிகளாகக் கரும்பைப் பயன்படுத்திய குடிலை

“செந்நெற் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக்கூரை

என்ற அடிகளில் புறநானூறு (22) உணர்த்துகிறது.  மருத நில வளத்தை இவ்வாறு கூறியிருக்கலாம்.

பனை ஓலை

            சமையற் கூடத்தின் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது என்று நற்றிணை (300) கூறுகிறது. இதனை,

            அட்டில் ஓலை தொட்டனை

என்ற அடி உணர்த்துகிறது. இன்றும் பனையோலைகளால் குடில்கள் வேயப்படுகின்றன.

தென்னை மடல்

            தென்னந்தோப்புகள் தோறும் தனித்தனியாக இருந்த உழவரின் வீடுகளைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இங்கு முற்றத்தில் மஞ்சள் இருக்கும்.  வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டங்கள் இருக்கும் தென்னையின் வாடிய மடலால் இதன்கூரை வேயப்பட்டிருக்கும். இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில் மணம்நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனை

என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (353) உணர்த்துகிறது. மருதநிலத்தில், தென்னை முதலியன நன்கு வளர்கின்றன. தோப்புகளுக்கு இடையில் உள்ள குடிசை. அதனால் நிறைய இடம் அங்கு இருக்க அவ்விடத்தில் பூந்தோட்டங்கள் இருந்தன என்று அறியலாம். வாடிய தென்னை மடல் வேயப்பயன்பட்டது என்பதை அறியலாம். இன்று தென்னை மடலைக் கீற்றுக்களாகப் பின்னி, கழிகளின் மேல் அதனைக் கட்டி, அதன்மேல் நெற்தாள் போன்றவற்றை வேய்கின்றனர். இன்றும் பல இடங்களில் வயல்களுக்கு நடுவில் குடிசை வீடுகள் உள்ளன.  வீடுகளைச் சுற்றித் தோட்டங்களும், மரங்களும் வளர்க்கப்படுகின்றன.

குறுகிய கூரை

            குறுகிய கூரையையுடை குடிசையையும், அதன் அருகில் மிளகுக்கொடி படர்ந்த தோட்டத்தையும் அகநானூறு (272)

            “…………. கறிஇவர் படப்பைக்

            குறிஇறைக் குரம்பை

என்ற அடிகளில் உணர்த்துகின்றது. வரகுத்தாள், நெற்தாள், ஈந்தின் இலை, ஊகம்புல், தாழைமடல் போன்றவை கிடைப்பதற்கேற்ப அவை குடிசைகளின் மேற்கூரையாகப் பயன்படுத்தப்பெற்றன என்று உணர முடிகிறது.

பரண்

            கானவர்கள் தம் தினைப்புனத்தில் காவலுக்கு இருப்பதற்காக மரங்களின் மீது பரண் அமைப்பர்.  இப்பரணுக்கு மேற்கூரை இருந்ததை நற்றிணை (306) உணர்த்துகிறது. இப்பரணின் மேற்கூரையில் புலித்தோல் வேய்ந்து இருந்ததையும் நற்றிணை (351) உணர்த்துகிறது.

வாயில்கள்

            குடிசைகளின் வாயில்கள் பெரும்பாலும் மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளன.  காட்டு விலங்குகள் குடிசைகளுக்குள் புகாமல் இருக்கவே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியலாம். குனிந்து செல்லும்படியான தலைகுவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட பாலைநில ஊரைப் பற்றி அகநானூறு (329) குறிக்கிறது. இதனை, குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்ற அடி உணர்த்துகின்றது. முள்ளிச்செடிகளால் வேய்ந்த குறுகிய வாயிலையுடைய குடிசையை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை என்று நற்றிணை (207) உணர்த்துகிறது.குறுகிய வாயிலைக் கொண்ட மீனவர்களின் வீடுகளை குறுங்கூரைக் குடி என்று பட்டினப்பாலை (81) கூறுகிறது. குடில்களின் வாயில்கள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. குறுகிய இறப்பிணையுடைய குடிசைகளை குறிஇறைக் குரம்பை என்று அகநானூறும் (210) புறநானூறும் (129) கூறுகின்றன.  இறப்பினை, இறவானம் என்று இக்காலத்தில் கூறுகின்றனர்.  இறப்பு மிகவும் குறுகியது என்பதால் வாயிலும் மிகவும் குறுகியது என்று உணரலாம்.

முற்றம்

            வீட்டின் முன்புறம் முற்றம் என்றும் முன்றில் என்றும் கூறப்பட்டது. முள்வேலிக்கு அருகில் பீர்க்கும், சுரையும் படர்ந்த வீட்டின் முற்றத்தை

            “……….. முள்மிடை வேலி

            பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்

            பீரை நாறிய சுரை இவர் மருங்கின்

என்று புறநானூறு (116) உணர்த்துகிறது.

நண்டுகள் விளையாடல்

            பரதவர்களின் வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்பட்டிருக்கும். புலால் நாற்றம் வீசும். நண்டுகள் விளையாடும் என்று நற்றிணை (239) உணர்த்துகிறது.

பனைமரம்

            பனையின் கரிய அடிமரம் மறையுமாறு மணல் மிகுந்த முற்றத்தை

            “……………….. பெண்ணை

            மாஅரை  புதைத்த மணல்மலி முன்றில்”

என்று நற்றிணை (135) உணர்த்துகிறது.

புன்னை, தாழை மரங்கள்

            முன்றிலில் புன்னை மரமும், தாழை மரமும் இருந்தன அவற்றின் மணம் எங்கும் பரவின என்று நற்றிணை (49) கூறுகிறது. 

பலா

            குறிஞ்சி நிலத்தில்  முற்றத்தில் கிளைகள்தோறும் பழங்கள் தொங்குகின்ற பலாமரங்கள் இருந்தன என்பதை

            “சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்

            சுளையுடை முன்றில்

என்ற அடிகளில் நற்றிணை (77) உணர்த்துகிறது. முன்றிலில் இருந்த பலாச்சுளைகளைத் தின்ற மந்தி, விதைகளைத் தரையில் பரப்ப, கொடிச்சி தன் தந்தையின் மலையைப் பாடிக்கொண்டே ஐவன வெண்ணெல்லைக் குற்றுவாள் என்பதை நற்றிணை (373) உணர்த்துகின்றது. மரை மான்கள் நெல்லிக்காயைத் தின்று முற்றத்தில் பரப்பும் என்று புறநானூறும் (170) மான்கள் நெல்லிக்காயை உண்ணும் முற்றத்தை குறுந்தொகையும் (235) கூறுகின்றன.

விளாமரம்

எயினரின் குடிசை முற்றத்தில் விளாமரமும் அங்கே மான்களும் கட்டப்பட்டிருந்தன என்று பெரும்பாணாற்றுப்படை (95) கூறுகிறது. இதனை,

            “பார்வை யாத்த பறைதாள் விளவின்

            நீழல் முன்றில் நில உரல் பெய்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

குரவைக்கூத்து

            முன்றிலில் இருந்த வேங்கை மரத்தின் அடியில் மக்கள் குரவைக் கூத்தாடுவர் என்பதை, வேங்கை முன்றில் குரவையும் கண்டே என்ற அடியில் நற்றிணை (276) உணர்த்துகிறது.

குறிபார்த்தல்

            மணல் பரப்பப்பட்ட முற்றத்தில் வேலனை அழைத்து கழங்கிட்டுக்குறி பார்ப்பர் என்பதனை

            “பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு

            மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே

என்ற அடிகளில் நற்றிணை (268) உணர்த்துகிறது.

விளையாடுதல்

            குறவர்கள் முன்றிலில் விளையாடுவர் என்பதை நற்றிணை (44)  குறவர் அல்கு அயர் முன்றில் என்ற அடியில் உணர்த்துகிறது.

 கழங்காடுதல்

            கூரையுடைய நல்ல வீட்டின் முற்றத்தில் வளையணிந்த மகளிர் மணற்பரப்பில் கழங்கு விளையாடுவர். இதனை,

            “கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்

            மணல்ஆடு கழங்கின்

என்று நற்றிணை (79) உணர்த்துகிறது.

பறிகள்

            வலைஞரின் குடிசைக்கு முன்னால் மீனை வாரி எடுக்கும் பறிகள் இருந்ததை, பெரும்பாணாற்றுப்படை (265) பறியுடை முன்றில் என்று உணர்த்துகிறது.

கன்றுகள்

            வீட்டின் முற்றங்களில் பசுக்கன்றுகளை கட்டுவர், நெல் குற்றுவர் குரவைக் கூத்தாடுவர் என்பதால் முற்றம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.

மான்கள்

            வேட்டுவரின் குடிசை முன்னால் மான்கள் கட்டப்பட்டதைப் புறநானூறும் (320) கூறுகிறது.

உரல்

முற்றத்தில் உரல் இருந்துள்ளது. உரல் குடிலில் இருந்தால் உயர்த்திக் குற்றும்போது கூரையில் படும் என்பதற்காக வீட்டின் முன்னால் உரல்களை வைக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது.

தூய்மையற்ற முற்றம்

            செத்தைகள் மிகுந்து, தூய்மை செய்யப்பெறாத முற்றத்தை, காட்டொடு மிடைந்த சீயா முன்றில் என்று புறநானூறு (316) கூறுகிறது.

முற்றத்தை மெழுகுதல்

            மனைவி தன் கணவன் விண்ணுலகு அடைந்தபின் அவனுக்கு உணவிட விரும்பி, தன் கண்ணீரும், பசுஞ்சாணமும் கொண்டு முற்றத்தில் முறம் அளவு மெழுகுவதைப் புறநானூறு (249) கூறுகிறது. தெய்வத்திற்கு அயரும் குரவைக்கூத்து முதல், இறந்த கணவனுக்கு உணவு படைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரை முற்றம் இன்றியமையாத பங்கு வகிக்கும் இடமாக இருந்தது என்று உணரப்பெறுகின்றது.

பந்தல்

            குடிசைகளுக்கு முன்னால் பந்தல் இருந்தது. பந்தலில் பொருட்களைத் தொங்க விடுவர், விருந்தினரைப் பேணுவர்.  சில கொடி வகைகளை வளர்த்து அவற்றைப் பந்தலாக்குவர்.  வளைந்த கால்களையுடைய பந்தலை அகநானூறு (394) கூறுகிறது. இதனை, முடக்கால் பந்தர் என்ற தொடர் உணர்த்துகிறது. குழந்தை பாலை உண்ணாமல் முற்றத்தில் உள்ள பந்தலுக்கு ஓடியதை நற்றிணை (110) கூறுகிறது. விருந்தினர் வந்து கொண்டே இருப்பதால் வீட்டில் ஏற்படும் நெருக்கத்தைக் குறைப்பதற்காகவும், ஒய்விற்காகவும் வீட்டின் முன்னர் பந்தலை அமைத்திருக்கலாம்.

கன்றுகளைப் பிணித்தல்

            சிறிய கால்களைக் கொண்ட பந்தலில், செழுமையான கன்றுகளைப் பிணித்துள்ளதைப் பெரும்பாணாற்றுப்படை (297) கூறுகிறது. இதனை செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர் என்ற அடி உணர்த்துகிறது.

பசுங்காய்கள்

            புன்னையின் கொம்பால் அமைக்கப்பட்ட பந்தலில் பசுங்காய்கள் தொங்குவதை

            “கொடுங்காற் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய

            பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்

என்று அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (266) உணர்த்துகிறது. பசுங்காய்கள் தொங்கும் என்பதால் கொடி வகைகளைப் பந்தலில் படர விட்டுள்ளனர் என்றும், அவை காய்த்துத் தொங்கின என்றும் அறியலாம்.

இசைக்கருவிகள்

            துடி என்னும் இசைக்கருவிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலை

            கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்

என்று பெரும்பாணாற்றுப்படை (124) கூறுகிறது.

முஞ்ஞைக் கொடி, முசுண்டைக் கொடி

            வீட்டின் முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும், முசுண்டைக் கொடியும் வளர்ந்து, புதிதாகப் பந்தல் அமைக்க வேண்டாமல் அக்கொடிகளே பந்தல் போலக் காட்சியளிக்கும். பலரும் உறங்குவதற்கு அந்நிழல் பயன்படும் என்று புறநானூறு கூறுகிறது. (320) இதனை,

            “முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி

            பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பலரும் உறங்குவர் என்பதால் பெரிய பந்தல் போல் முஞ்ஞையும், முசுண்டையும் படர்ந்திருந்தது என்று அறியலாம்.  இக்காலத்தில் முல்லை மல்லிகை போன்ற கொடிவகைகளை வீட்டிற்கு முன்னரும் பின்னரும் பந்தல் போல் படர விடுகின்றனர்.  கன்றுகளைப் பிணித்தல், விருந்தினரைப் பேணுதல், கொடி வகைகளைப் படர விடுதல் போன்ற பலவற்றிற்கும் முற்றத்தில் அமைந்திருந்த பந்தல் பயன்பட்டது என்பதை அறிய முடிகிறது.

 வேலி

            வீட்டைச் சுற்றிப் பலவகையான வேலிகளை அமைத்துள்ளனர்.  வீட்டைச் சுற்றி இருந்த முள்வேலியை எருமை தன் கொம்பினால் அகற்றியது. இதனை,

            கூர்முள் வேலி கோட்டின் நீக்கி

என்ற அடியில் அகநானூறு (46) உணர்த்துகிறது.

பீர்க்கங் கொடி

            வீட்டைச் சுற்றி கூர்மையான முள்வேலி இருந்ததையும், அதன்மேல் பீர்க்கங் கொடிகளைப் படர விட்டிருந்ததையும் நற்றிணை (277) கூறுகிறது. இதனை,

            “நுண் உள் வேலித் தாதொடு பொதுளிய

            தாறு படு பீரம்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பீர்க்கங்கொடி படர்ந்த வேலியைப் பீர் இவர் வேலி என்று பதிற்றுப்பத்து (26) கூறுகிறது. வேலியில் மற்றச் செடிகளைவிட பீர்க்கங் கொடிகளையே அதிகம் படர விட்டிருந்தனர் என்ற கருத்து பெறப்படுகிறது.

முள் வேலி

முள்வேலியிட்ட, தொழுக்கள் நிறைந்த குடியிருப்புகளை

            “………. முள் உடுத்து

            எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்

என்று பெரும்பாணாற்றுப்படை (184) கூறுகிறது.

கழல் முள் வேலி

            கழல் முள்ளால் ஆன வேலியை கழல் முள் வேலி

என்று புறுநானூறு (306) கூறுகிறது. கழல்முள் போன்றவற்றாலும் வேலியை அமைப்பர் என்று அறியலாம்.

மூங்கில் முள்

            மூங்கில் முள்ளால் அமைந்த வேலியையுடைய குடியிருப்புகளை வேரல் வேலி என்று நற்றிணையும் (232) குறுந்தொகையும்(18) கூறுகின்றன.  இயற்கையாக இதுபோல் அமையும் வேலியை வாழ்வேலி என்றும், செயற்கையாக அமையும் வேலியை இடுமுள்வேலி என்றும் அழைத்துள்ளனர். வாழ்வேலியைப்பற்றி பெரும்பாணாற்றுப்படையும் வாழ்முள் வேலி (126) என்று குறிக்கிறது.

தாழை மரவேலி

தாழை மரங்களும் வேலியாக அமைந்திருந்தன. தாழை மரங்கள் வேலியாக இருந்ததை

நற்றிணை (363, 372) உணர்த்துகிறது.  குறிஞ்சி நிலத்தில் மூங்கில் வேலியாக இருந்தது போன்று நெய்தல் நிலத்தில் தாழை இருந்தது என்று அறியமுடிகிறது.

பனையோலை வேலி

            பனை மரங்களிலிருந்து விழும் பனையோலைகளைக் கொண்டு வேலி அமைத்த, மணல் பரந்த நெய்தல் நில முற்றத்தை நற்றிணை (354) உணர்த்துகிறது. குடிசையின் கூரை மட்டுமல்ல, வேலியும் பனையோலையால் அமைவதும் உண்டு என்று அறியலாம். பனை ஓலையோடு முட்கள் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலியையும் நற்றிணை (38) உணர்த்துகிறது. 

நொச்சி வேலி

            மனைக்கு வேலியாக நொச்சி மரம் இருந்ததையும், அதன் கிளையில் குயில் கூவும் என்பதையும் நற்றிணை (246) கூறுகிறது. இதனை,

            “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

            வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

முல்லை வேலி

            வேலியைச்சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்ததை வேலி சுற்றிய வால்வீ முல்லை என்று அகநானூறு (314) கூறுகிறது. பீர்க்கங்கொடி வேலிகளின் மீது படர்ந்திருந்தது போல் முல்லைக் கொடியும் படர்ந்திருக்கலாம் என்று உணரமுடிகின்றது.

காந்தள் வேலி

குறிஞ்சி நிலத்தில் காந்தள் செடியும் இயற்கை வேலியாக இருந்துள்ளது.  இதனை, காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி என்று குறுந்தொகை (100) உணர்த்துகிறது.

பருத்திச்செடி

            பருத்திச்செடியும் வேலியாக இருந்துள்ளது. பருத்திச்செடி வேலியாக இருந்த ஊரை, பருத்தி வேலிச் சீறூர் என்று புறநானூறு (299,345) கூறுகிறது.

            எனவே, முள்வேலி, பனையோலை வேலி, மூங்கில்முள் வேலி, தாழை மர வேலி, நொச்சி மர வேலி, முல்லைக்கொடி வேலி, கழற்கொடிவேலி போன்ற பலவகை வேலிகள் இருந்துள்ளன என்று அறியப் பெறுகின்றது.  நில  அமைப்பிற்கு ஏற்றாற்போல் இவ்வேலிகள் இருந்தன.  விலங்குகளின் ஆபத்தில் இருந்து தவிர்க்கவே இவ்வாறு வேலியை அமைத்திருப்பர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

செடிகளும், மரங்களும்

            ஒவ்வொரு நிலத்திலும் அந்தந்த நிலத்திலுள்ள சிறப்பான செடிகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றன. இல்லத்தில் வயலைக்கொடி வளர்த்ததை இல் எழு வயலை என்று நற்றிணை (179) குறிக்கிறது.

குறிஞ்சி

ஓவியம் போன்ற இல்லத்தின் அருகில் குறிஞ்சிச் செடிகள் இருந்ததையும் அதன் மலர்களில் தேன் இருந்ததையும் நற்றிணை (268) உணர்த்துகிறது.

வயலை, நொச்சி

            வீட்டின் முன்னர் வயலைக்கொடியும், நொச்சி மரமும் இருந்ததை,

            “…………… வயலையும்

            மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்

என்ற அடியில் நற்றிணை (305) உணர்த்துகிறது.

பனை

            பனை மரங்கள் ஊரைச்சுற்றி இருந்தன என்று நற்றிணையும் (323), குறுந்தொகையும் (81) கூறுகின்றன.

மூங்கில்

            மூங்கில் மரங்கள் வளர்ந்த இடத்தில் இருந்த மலைக்குவடுகளுக்கு அருகில் இருந்த ஊரை மூங்கில் குவட்டிடையதுவே என்று குறுந்தொகை (179) கூறுகிறது.

தென்னை     

            மணம் கமழும் பூந்தோட்டங்கள் சூழுமாறு, தென்னை மரத்தோப்புகளுக்கு இடையில் உழவர்களின் வீடுகள் இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (353) கூறுகிறது.  இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

பூந்தோட்டங்கள்

            பூந்தோட்டங்களுக்கு அருகில் பாணர்களின் குடியிருப்பு இருந்ததை,

            “பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி

            அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

என்று மதுரைக்காஞ்சி (341) உணர்த்துகிறது. எனவே, வீட்டைச்சுற்றி அல்லது வீட்டின் அருகில் புன்னை, தாழை, விளா, பலா, வேங்கை, மூங்கில், பனை, ஆலமரம், நொச்சி முதலிய மரங்களும், குறிஞ்சி, முல்லை, காந்தள், பீர்க்கு, சுரை, வயலை, கழற்கொடி, முஞ்ஞை, முசுண்டை, பருத்தி முதலிய செடி கொடி வகைகளும் இருந்தன என்று அறிய முடிகின்றது. பலா, வேங்கை, முஞ்ஞை, முசுண்டை, கழற்கொடி முதலியவை முன்னரே வீடுகளின் அருகில் இருந்தமை உணர்த்தப் பெற்றது.

பறவைகள்

            வீடுகளில் சில வகையான பறவைகள் வளர்க்கப்பெற்றன.  அவை குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலியன.

குருவி

            குருவிகள் முற்றத்தில் உலர்த்திய புழுக்கலை உண்டு பொது இடத்தில் உள்ள நுண்ணிய புழுதியில் குடைந்து விளையாடி, தன் குஞ்சுகளோடு வீட்டின் இறைப்பில் தங்கியிருக்கும் என்று குறுந்தொகை (46) கூறுகிறது.  முற்றத்தில் நெல் போன்ற தானிய வகைகளை உலர வைத்திருக்கலாம் என்றும் அதைக் குருவிகள் உண்டிருக்கலாம் என்றும் அறியமுடிகிறது. வீட்டின் இறப்பில் குருவி இருந்ததை உள் இறைக் குரீஇ என்றும் (181) உள் ஊர்க் குரீஇ என்றும் (231) நற்றிணை உணர்த்துகிறது. இதனை மனை உறைக் குரீஇ என்று புறநானூறும் (318) உணர்த்துகிறது.

கோழி

            வீட்டில் கோழிகள் வளர்க்கப்பெற்றுள்ளன. இல்லத்தில் உறையும் கோழியின் பெடை, வேலிக்கு அப்பால் இருந்த காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் இல்லிற்கு வந்ததால், பாதுகாப்பாகப் புகுவதற்கு உரிய இடத்தை அறியாமல் துன்பத்துடன் தன் குஞ்சுகளை அழைத்துக் கூவிற்று என்று குறுந்தொகை (139) கூறுகிறது.

புறா

            புறாக்களும் வளர்க்கப்பெற்றுள்ளன. பாணன் விருந்தினராக மாலை நேரத்தில் வந்ததால் குடிலின் முன்னர் தினையைத் தூவி புறாக்களைப் பிடிப்பதற்கு முடியவில்லை என பாலை நிலத் தலைவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதல்

            இப்பறவை கௌதாரி என்றழைக்கப்படுகிறது. பாணன் மாலைப்பொழுதில் வந்ததால் தினையைத் தூவி இதனைப் பிடிக்க முடியாமல் போனது.  இருப்பினும் முயலின் சுட்ட கறித்துண்டுகளைத் தருவோம் என்று பாலை நிலத் தலைவன் ஒருவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதனை

            “படலை முன்றில் சிறுதினை உணங்கல்

            புறவும் இதலும் அறவும் உண்கெனப்

            பெய்தற்கு எல்லின்று பொழுதே

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கிளி

            இது அந்தணர்களின் வீடுகளில் வளர்க்கப்பெற்றது. கிளிகளுக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் அந்தணர் வீடுகளைப் பெரும்பாணாற்றுப்படை (300) கூறுகிறது.  இதனை,

            வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

            மறைகாப் பாளர் உறைபதி

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

            குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலிய பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றுள்ளன.  கோழி, புறா, இதல் முதலிய பறவைகள் உணவிற்கும் பயன்பட்டன.  குருவி, கிளி முதலியவை பொழுது போக்கிற்காக வளர்க்கப் பெற்றுள்ளன.  புறா, இதல் முதலியவை விருந்தினர் வந்தால் உடனடியாக உணவிற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  இவற்றை உணவிற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் முயல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

 விலங்குகள்

            குடில்களில் பறவைகள் மட்டுமன்றி விலங்குகளும் பயன்கருதி வளர்க்கப்பெற்றுள்ளன.  பசு, எருமை, மரையா, மான், நாய், பன்றி முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டதை அறிய முடிகிறது.

பசு

            இது  ஆயர்களின் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்பட்டது.  ஆயர்கள் இதன் மூலம் வளமை அடைந்தனர்.  காலையில் பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச்செல்வர். பசுவின் கன்றுகளை வீட்டில் கட்டி வைப்பர்.  தாயில்லாமல் வருந்தும் கன்றுகளிடம்,

            கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

            இன்னே வருகுவர் தாயர்

என்று ஆயர் மகள் கூறுவதாக முல்லைப்பாட்டு (15) கூறுகிறது. பசுக்களை மேய்ப்பதற்கு ஆயர்கள் ஓட்டிச் சென்றதை கலித்தொகை (106) கூறுகிறது. ஆயர்கள் ஏறு தழுவும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைக்கலிப் பாடல்கள் உணர்த்துகின்றன.

            பசுக்களின் மூலம் ஆயர்கள் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றை விற்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கினர்.

எருமை

            சிறுவர்கள் எருமைகளின் இனிய பாலை கறந்து கொள்வதற்காக எருமைக் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டு வைப்பர்.  எருமைகளின் மேலேறிக் கொண்டு விடியற்காலத்தில் அவற்றை மேய்த்து வைப்பர் என்று நற்றிணை (80) கூறுகிறது. நெய் விற்று வாழ்க்கை நடத்தும் ஆயர்மகள் பசும்பொன்னை விரும்பி வாங்காது எருமைகளையும், பசுக்களையுமே விலைக்கு வாங்குவாள் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதால் பொன்னைவிட எருமை, பசுக்களைப் போற்றினர் என்று அறிய முடிகிறது. இதனை,

            நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

            எருமை நல்ஆன் கருநாகு பெறூஉம் (164)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மரையா

இது ஒருவகை காட்டுப்பசு என்று அறியப்பெறுகிறது.  மரையாவால் உண்ணப்பட்ட நெல்லி விதைகள் முற்றத்தில் கிடக்கும் என்று புறநானூறு (170) கூறுகிறது.  இதனை,

            மரை  பிரித்து உண்ட நெல்லிவேலி

            பரலுடை முன்றில்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மான்

            வேடர்களின் வீடுகளில் இது வளர்க்கப்பட்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்மானைத் தழுவி, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஆண்மான் விளையாடியதைப் புறநானூறு (320) உணர்த்துகிறது. 

நாய்

            வேட்டைக்குச் செல்லும் வேடர்கள், கானவர்கள் வேட்டை நாயை வளர்த்துள்ளனர்.  கானவன் முள்ளம்பன்றியைக் கொன்று, மனையிடத்தே உள்ள நாய்கள் எல்லாம் ஒருசேரப் பக்கத்தில் குரைத்து விளையாடி வர, மகிழ்வோடு இருப்பதை நற்றிணை (285) உணர்த்துகிறது. 

ஆடு

            ஆடுகள் வளர்க்கப்பெற்றுள்ளன.  வெள்ளாடு குமிழம்பழங்களை உண்டு, அதன் விதைகளைப் பந்தலருகில் துப்பும் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதைப்போன்றே மரையாக்கள் நெல்லி விதையை முற்றத்தில் பரப்பியமை முன்னரே உணர்த்தப்பட்டது.

பன்றி

            கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதால் வடிந்த நீர் குழம்பிய, ஈரமாகிய சேற்றில் பெண்பன்றிகள் தங்கள் குட்டிகளோடு அளைந்து கொண்டிருக்கும்.  அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லையிடித்து மாவாக்கி அதை உணவாகக் கொடுத்துப் பலநாளும், குழியிலே நிறுத்தி வளர்த்த ஆண்பன்றிகள் இருந்ததாக பெரும்பாணாற்றுப்படை (339) கூறுகிறது. இப்பன்றிகள் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்விலங்குகளைத் தவிர குதிரைகள், யானைகள் போன்றவைகளை மன்னர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தியுள்ளனர்.  கழுதைகளை உப்பு வணிகர் பயன்படுத்தியுள்ளனர்.  எனவே, இவ்விலங்குகளும் வளர்க்கப்பெற்றுள்ளன. விலைஞர் குடில்களின் முன் விலங்குகள் செறிந்து கிடந்தன என்று பட்டினப்பாலை (198) கூறுகிறது.

இதனால் நில அமைப்பிற்கு ஏற்றபடி அந்தந்த நிலங்களில் இருந்த விலங்குகள் அங்குள்ள மக்களால் வளர்க்கப்பெற்றுள்ளன.

தெரு

            பல இடங்களில் வீடுகள் முறைப்படி இல்லாமல் கூட்டங்கூட்டமாக இருந்துள்ளன.  இருப்பினும் சில சிற்றூர்களில் தெருக்கள் அமைத்துக் கட்டப்பட்ட வீடுகளும் இருந்துள்ளன. புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருவை        மறுகு தொறு புலாவும் சிறுகுடி என்று நற்றிணை (114) கூறுகிறது. மணல் மிகுந்த அகன்ற நீண்ட தெருவும் நெய்தல் நிலத்தில் இருந்துள்ளதை நற்றிணை (319) உணர்த்துகிறது. மலர்களின் மகரந்தத்தாதுக்கள் நிறைந்த தெருவை,

            …….. அம்குடி சீறூர்த்

            தாது எரு மறுகின் என்று நற்றிணை (343) உணர்த்துகிறது. இவ்வூரில் தெருக்களின் இருபுறமும் மலர்ச்செடிகள் இருந்திருக்கலாம். இதுபோன்ற தெருக்கள் சில ஊர்களில் இருந்துள்ளன. நகரங்களில் பெரிய தெருக்கள் இருந்துள்ளன.

ஊர்கள்

            சிற்றூர்கள் பல இருந்துள்ளன. இவைகளும் நில அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அழகிய குடியிருப்புகளை உடைய சிற்றூரை அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு(367) குறிப்பிடுகிறது. பொதுமன்றங்களைக் கொண்ட அழகிய சிற்றூரை புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு (321) குறிக்கிறது. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய புலால்நாறும் ஊரை புலால்அம் சேரி புல்வேய் குரம்பை ஊர் என்று அகநானூறு (200) குறிக்கிறது. ஊகம்புல் போன்ற புற்களால் அங்குள்ள குடிசைகள் வேயப்பட்டிருக்கலாம். அங்குள்ளோர் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று, ஊரினருக்கும் இறைச்சியைப் பகுத்துத் தருவதால் அவ்வூரில் புலால் நாற்றம் இருந்திருக்கலாம். குனிந்து செல்லும்படியான தலை குவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட குடியிருப்புக்களை உடைய சிற்றூரை அகநானூறு (329) குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்று உணர்த்துகிறது.

            விலங்குகள் வீட்டிற்குள் புகாதவாறு சிறிய வாயில்கள் இருப்பதால் அவ்வூர் காட்டு வழியில் இருந்தமையும், விலங்குகளின் ஆபத்தும் உணர முடிகின்றது. மலைச்சாரலில் அமைந்த ஊரை சாரற் சிறுகுடி என்று நற்றிணையும் (168) பல மலர்களையுடைய மலைச்சாரலில் உள்ள ஊரை பல்மலர்ச் சாரற் சிறுகுடி என்று குறுந்தொகையும் (95) கூறுகின்றன. காவற்காடு சூழ்ந்த சிற்றூரைக் குழு மிளைச் சீறூர் என்று நற்றிணை (95) கூறுகிறது. போரினால் அழிந்த வேலிகளையுடைய, ஆளில்லாமல் பொது மன்றம் இருக்கும் குடியிருப்புகளையுடைய சிற்றுரை

            அழிந்த வேலி அம்குடிச் சீறூர்

            ஆள்இல் மன்றத்து என்று நற்றிணை (346) கூறுகிறது. அகன்ற வயல்கள் சூழ்ந்த கொல்லைகளை உடைய ஊரை அகல்வயற் படப்பை அவன்ஊர் என்று நற்றிணை (365) கூறுகிறது. நெற்கதிர்கள் நிறைந்த ஊரை பிணிக்கதிர் நெல்லின் செம்மல் மூதூர் என்று புறநானூறு (97) கூறுகிறது.  மேற்கண்ட இரண்டும் வளம் நிறைந்த ஊர்கள் என்பது புலனாகிறது.

            உப்புப்பாத்திகளுக்கு அருகே கடற்கரைச் சோலையால் சூழப்பெற்ற ஊரை,

            நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி

            வானம் வேண்டா உழவின் எம்

            கானல்அம் சிறுகுடி

என்று நற்றிணை (254) குறிக்கிறது. மணல்மேடுகள் நிறைந்த ஊரை எக்கர் நண்ணிய எம்ஊர் என்று குறுந்தொகை (53) கூறுகிறது. கடற்கரையில் உள்ள குடியிருப்பை காமர் சிறுகுடி என்று நற்றிணை (299) கூறுகிறது. மேற்கண்டவை நெய்தல் நிலச்சிற்றூர்கள் என்று அறியமுடிகிறது.  உப்புபாத்திகளுக்கு அருகில் வீடுகள் இருந்தன என்று அறிய முடிகிறது. பாலைநிலத்தில் இருந்த அழகிய சிற்றூரை அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் என்று குறுந்தொகை (79) கூறுகிறது. பரற்கற்கள் மிகவும் அமைந்த செல்லுதற்கு அரிய வழியில் உமணர்களின் குடியிருப்பு இருந்ததை நற்றிணை (374) கூறுகிறது. சங்கத்தமிழர்கள் தமக்குக் கிடைத்த பொருட்களைக்கொண்டே குடிசைகளை அமைத்தனர். மரங்களை வைத்து மரக்கால் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை, மரக்கோல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கதவு முதலியவற்றையும் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க குடிசையின் வாயில்களை மிகவும் குறுகியதாகவும் அமைத்துள்ளார்கள்.

ஊகம்புல், தழைகள், கூவையிலை, ஈந்தின் இலை, வைக்கோல், வரகுத்தாள், தருப்பைப்புல், தென்னைமடல், தாழையின் தூறுகள், பனையோலை முதலியவற்றைக் கொண்டு சங்கத் தமிழர்கள் குடிசைகளை வேய்ந்துள்ளனர்.  இதில் ஈந்தின் இலையால் வேயப்படும் குடிசையில் எலி, அணில் முதலியன நுழைய முடியாதபடி இருந்துள்ளது. வீட்டில் பலவகையான பறவைகளையும் பசு, எருமை போன்ற விலங்குகளும் இருந்துள்ளன.  பலவகையான செடிகளும் மரங்களும் வீட்டைச்சுற்றி இருந்துள்ளன. 

            வீட்டின் சுவருக்கு செம்மண் பூசுதல், சுண்ணாம்பு பூசுதல் போன்றவை நடைபெற்றுள்ளன. வுpழாக் காலங்களில் முற்றத்தில் மணல் பரப்பப்பெற்றது.  வீட்டைக்காவல் காக்க காவலர்கள் இருந்தது போல், ஊரைக்காக்கவும் காவலர்கள் இருந்துள்ளனர்.  சங்கத் தமிழர் உறைந்த இடங்கள் பற்றி இவ்வாறு பல செய்திகளை அறிய முடிகிறது. ஐவகை நிலங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டது போலவே ஐவகை நில மக்கள் வசித்த இடங்களும் மாறுபட்டவை என்று இதைப்போலவே ஊர்களும் குடியிருப்புகளும், வீடுகளும் அமைந்திருந்தன என்று அறிய முடிகிறது. சங்கத்தமிழர்கள் மேற்கண்டவாறு குடில்களை அமைத்தும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பயிரினங்களையும், உயிரினங்களையும் வளர்த்தும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர் என்பது எண்ணத்தக்கது.

முனைவர் அ. ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி,

காளிப்பட்டி, நாமக்கல்.

ஆசிரியரின் பிற ஆய்வுக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

            மேலாண்மை என்பது எந்த ஒரு செயலையும் முறையாகத் திட்டமிட்டு சரியாகவும் திறம்படவும் செய்து முடிப்பதே ஆகும். மனிதன் உயிர்வாழ அவசியமானது உணவு. கீரைகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், தானியங்கள் எனப் பலவிதமான உணவு வகைகள் அன்றைய காலம் முதல் இன்றுவரை மக்களால் பயன்படுத்தப் பெறுகின்றன. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தினை, சாமை, வரகு, நெல் முதலிய தானிய வகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தானியமாக நெல் அமைகிறது. மற்ற தானியங்களை விட நெல்லைப்பற்றிய பதிவுகள் கூடுதலாக உள்ளதும் இங்கு குறிக்கத்தக்கது. நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்” என்ற நான்மணிக்கடிகை (11) அடிகளுக்கு ஏற்ப மருத நிலத்தில் நெல் அதிகம் விளைந்தது. வயல்களை இருப்பிடமாகக் கொண்ட மருத நிலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் நீர்த்தேவையை நிறைவு செய்தன. நிலத்திற்கு அழகூட்டும் நெல்லும், கரும்பும் மருத நில மக்களின் வாழ்க்கையை உயரச்செய்தன. குறிஞ்சி நிலத்திலும் சில வகை நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

            சங்க காலத்தில் இருந்த நெல் வகைகளும் சங்க கால மக்கள் நெல்லைப் பயன்படுத்தி மேலாண்மை முறைகளையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

நெல் வகைகள்

            ஐவனநெல், தோரை நெல், மூங்கில் நெல் முதலிய நெல் வகைகள் குறிஞ்சி நிலத்திலும் வெண்ணெல், செந்நெல், முடந்தை நெல், சாலி நெல் முதலிய நெல் வகைகள் மருத நிலத்திலும் விளைந்தன.

ஐவனநெல்

            ஐவனம் எனப்படும் மலைநெல்லைக் கானவர்கள் அருவியை உடைய நிலத்தில் விதைப்பர். நெல் வளர்ந்ததும் இடையில் உள்ள களைகளான காட்டு மல்லிகைச் செடி, மரல் எனக் கூறப்பெறும் ஒருவகைக் கற்றாழை முதலியவற்றைப் பறித்து எறிவர். இதனை,

                        அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

                        ”பருஇலைக் குளவியொடு பருமரல் கட்கும்

                        காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி

என்ற குறுந்தொகை அடிகள் (100) உணர்த்துகின்றன. இந்நெல்லை ஐவன வெண்ணெல் என்று கலித்தொகை (43) கூறுவதை

                        “ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து

என்ற அடியின் மூலம் அறியலாம். ஐவன நெல்லோடு இஞ்சி, மஞ்சள், மிளகு போன்றவை விளைந்தன என்று மதுரைக்காஞ்சி (288) குறிப்பதால் அதிக ஈரப்பதம் இல்லாத நிலங்களிலும் இந்நெல் விளைந்தது என அறியலாம்.

தோரைநெல்

            மதுரைக்காஞ்சி (287) தோரை என்னும் ஒரு வகை நெல்லைப்பற்றிக் கூறுகிறது. இந்நெல் மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்டது, குறுகிய கதிர்களையுடையது.

இதனை

                        கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை”

என்ற அடியால் உணரலாம்.

மூங்கில்நெல்

            மூங்கிலின் நெல்லைப் பாறை உரலுள் கொட்டி யானைத் தந்தத்தைக் கொண்டு இடித்து, வள்ளைப்பாட்டைப்பாடி சேம்பின் இலைகளில் புடைத்தனர் என்று கலித்தொகை (41) கூறுகிறது. இதனை

                        ஆடுகழை நெல்லை அறை உரலுள் பெய்து”

என்ற அடியால் உணரலாம். மூங்கிலரிசி, அவரைவிதை, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லரிசி ஆகியவற்றைப் புளிக்கரைத்த உலையில் பெய்து புளியங்கூழினை ஆக்குவர் என்பதை மலைபடுகடாம் (435)

                        வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த

                        சுவல்விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது. மூங்கில் அரிசியோடு பிற பொருட்களைச் சேர்த்துச் சுவையாக உண்டதைப் போலவே இன்றும் கூட்டாஞ்சோற்றில் பலவித காய்கறிகள், தானியங்கள் இடம்பெறுகின்றன.

வெண்ணெல்

            வெண்ணெல்லை அரியும்போது உழவர்கள் தண்ணுமை முதலிய கருவிகளை முழக்கியவாறு பறவைகளை விரட்டுவர் என்பதை

                        வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை

                        பல்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்;”

  என்ற (அகம்-204) அடிகள் உணர்த்துகின்றன.     தொண்டி என்னும் நகரத்தில் விளைந்த வெண்ணெல்            சிறப்புடையது என்று குறுந்தொகை (210)

                        ……………….. தொண்டி

                        முழுதுடன் விளைந்த வெண்ணெல்

            என்ற அடிகளில் உணர்த்துகிறது.

முடந்தைநெல்

            முடந்தை நெல் வளைந்த கதிர்களை உடையதாக இருக்கும் என்பதை

                        முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த”

                        “முடந்தை நெல்லின் கழையமல் கழனி”

            பதிற்றுப்பத்து (29இ32) உணர்த்துகிறது. இந்நெல் விளைந்த வளமிக்க ஊர்கள் அழிக்கப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது.

செந்நெல்

            செந்நெல்லின் அரிசி சற்றுச் சிவந்த நிறத்தில் இருக்கும் அந்தணர்கள் இல்லத்தில் இது பயன்படுத்தப்பெற்றதை

            ”ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை

            செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது

என்று குறுந்தொகை (277) உணர்த்துகிறது. மருதநில உழவர்கள் செந்நெல்லை விளைவித்தனர். பாண்மகள் வாளைமீனுக்கு மாற்றாக செந்நெல்லைப் பெறாமல் முத்துக்களையும் அணிகலன்களையும் பெறுவாள் என்பதை அகநானூறு (126)

                        “பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

                        கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது.

சாலிநெல்

            சாலி என்ற நெல் அதிகமாக விளைந்த ஊர் சாலியூர் என்றழைக்கப்பட்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சாலியூரைக் கைப்பற்றியதை மதுரைக்காஞ்சி (87) உணர்த்துகிறது. பொருநராற்றுப்படையும் (246) இந்நெல்லைப் பற்றிக்குறிக்கிறது.

கருடச்சம்பா (இராசான்னம்)

            இந்நெல் அந்தணர்களின் இல்லத்தில் பயன்படுத்தப்பெற்றது கருடச்சம்பா என்னும் அரிசியால் ஆக்கப்பெற்ற நெற்சோற்றையும், வெண்ணெயில் வெந்த மிளகுப்பொடியும் கறிவேப்பிலை கலந்த மாதுளங்காய்ப் பொரியலையும் மாங்காய் ஊறுகாய் போன்றவற்றை உணவாகப்பெறலாம் என்று பெரும்பாணாற்றுப்படை (305) கூறுகிறது. இதனை

            “சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

            சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

            உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து

            நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

            தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்

என்ற அடிகள் உணர்த்துகிறது.

உழவு செய்தல்

            உழவுத்தொழிலில் சிறந்த எருதுகளை நுகத்தில் பூட்டி, பெண் யானையின் வாயைப்போன்ற வளைந்த வாயையுடைய கலப்பையை உடும்பு முகம் போன்ற முழுக்கொழு மறையும்படி அமுக்கி உழுவர். இதனை

            “………………………. செஞ்சால் உழவர்

            நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி

            பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

            உடும்புமுக முழுக்கொழூ ஊன்றி

            தொடுப்பு எறிந்து உழுத

            என்ற பெரும்பாணாற்றுப்படை (198) அடிகள் உணர்த்துகின்றன.

நாற்று நடுதல்

            கரிய ஆனேறுகள் தம்முள் போரிட்டமையால் சேறாகிய வயலில், சேற்றைச் சமம்பட மிதித்த உழவர்கள் முடி நாற்றை நடுவதாகப் பெரும்பாணாற்றுப்படை (210)

                        “…………… வினைஞர்

                        முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்

            என்று உணர்த்துகிறது. உழவன் தன் உழத்தியருடன் நாற்று நடுவதற்குச் செல்வான் என்று நற்றிணையும் (60) கூறுகிறது.

            சேற்றைச் சமப்படுத்துவதும் நாற்று நடுவதும் இன்றும் இருந்தாலும் ஆண்கள் நாற்று நடும் வழக்கம் அரிதான ஒன்று. நடவுப்பணியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். முக்கூடற்பள்ளு (126) நூலும் இதனையே உணர்த்துகிறது.

களை பறித்தல்       

            நெற்பயிர்களுக்கு இடையில் இருந்த களைகளைக் களைந்தும், நெய்தல் செடிகளை அப்புறப்படுத்தியும் களை பறித்தல் நடந்துள்ளதாகப் பெரும்பாணாற்றுப்படை (211) கூறுகிறது.

            கொண்டையணிந்த கூந்தலையுடைய உழத்தியர் நெல் வயலில் ஆம்பல், நெய்தல் செடிகளைக் களையாகப் பறிப்பர். வயலில் பிறழும் வாளைமீன் வயலைச் செப்பம் செய்யும் தளம்பு என்னும் கருவியால் துண்டிக்கப்படும் என்று புறநானூறு (61) கூறுகிறது. இதனை

                        “……………. செறுவின் தளம்பு தடிந்து இட்ட

                        பழன வாளை        

என்ற அடிகள் உணர்த்துகின்றன.   வயலில் களை பறிக்கும்போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். செப்பம் செய்யப்பயன்படும் கருவி என்பதால் பிற உழவுப்பணிகளுக்கும் இக்கருவி பயன்பட்டிருக்கலாம்.

காவல் செய்தல்

            வயலைக் காவல் புரியும் உழவரை “கழனிக் காவலர்” (280) என்று நற்றிணை குறிக்கிறது. நெல் விளைந்த வயலில் பறவைகளை விரட்டி, விளைந்த நெல்லைக் காத்துள்ளதை அறியமுடிகிறது. இதனை

                        நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்” (புறம்:29)

என்ற அடியால் உணரலாம்.

அறுவடை செய்தல்

            நெல்லரிவாரின் கையிலிருந்த அரிவாள்கள் மடங்கும்படி வளர்ந்த நெல்லைப் பற்றிப் பதிற்றுப்பத்துக் (19) கூறுகிறது. வெண்ணெல்லை அரிகின்ற உழவர்கள் வயலில் உள்ள பறவைகளை விரட்ட தண்ணுமை என்னும் இசைக்கருவியை முழக்குவர் என்பதை நற்றிணையும் (350) அகநானூறும் (40, 204) உணர்த்துகின்றன. பறவைகளை விரட்ட பறையைப் பயன்படுத்தியதை அகநானூறு (84) உணர்த்துகிறது.

            பறவைகளை விரட்டும் உழுகுடியோர் கீழே விழுந்த பனங்கருக்கை விறகாகக் கொண்டு கழியில் பிடித்த மீனைச் சுடுவர். அதனுடன் கள்ளை உண்டபின் தென்னையின் இளநீரை உதிர்ப்பர் என்பதை

                        நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

                        ஓழிமடல் விறகின் கழிமீன் சுட்டு

                        வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்

                        இளநீர் உதிர்க்கும்;”

என்ற அடிகளில் புறநானூறு (29) உணர்த்துகிறது. மள்ளர் என்போர் நெல்லரிந்த செய்தியை நற்றிணை (400) உணர்த்துகிறது. நெற்கட்டு;களைக் கள்ளுண்டு களித்திருக்கும் களமர்கள் நெற்களங்களுக்குக் கொண்டு செல்வர் என்பதை

                        அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ் சூடு

                        கள்ளார் வினைஞர் களம்தொறும் மறுகும்”

என்று அகநானூறு (84) உணர்த்துகிறது. நன்கு அரிக்கப்பட்ட முதிர்ச்சியுற்ற மதுவை, ஆமை இறைச்சியோடு களமர் உண்பர். ஆரல் மீனின் வேகவைத்த கொழுப்பமைந்த துண்டைத் தம் கன்னத்தில் அடக்கிக்கொண்டு மதுவுண்டு மயங்கி இருப்பர் என்பதை

                        களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்

                        யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா

                        ஆரல் கொழுஞ்சூடு அம்கவுள் அடா”

என்ற அடிகளில் புறநானூறு (212) உணர்த்துகிறது.

            நெற்கதிரை அரிவோர் மடுவில் உள்ள மீன்களைப் பிடித்து அவற்றின் கொழுவிய துண்டங்களைக் களத்தில் இருந்தவாறே கடித்து வயிறார உண்டபின் நெற்கட்டுக்களைக் களத்தில் சேர்ப்பர் என்று அகநானூறு (236) கூறுகிறது. நீர்வளம் நிறைந்த பகுதியில் மீன்கள் இருந்ததால் அவற்றை உண்டு வேலையின் களைப்பைப் போக்கியுள்ளனர். இதே போல் வயலைக் காவல் புரியும் உழவர் ஆமை ஒட்டில் வைத்து நத்தையை உண்டனர் என்று நற்றிணை (280)

                        பழன யாமைப் பாசடைப் புறத்து

                        கழனிக் காவலர் சுரிநந்து உடைக்கும்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது. நெல் வயலில் பணியில் ஈடுபடுவோர் அங்குள்ள உணவுகளை, உழைப்பின் களைப்பு தீர உண்ட பின்னர் தங்கள் பணியினைத் தொடர்ந்துள்ளனர்.

ஊடுபயிர்

            பாணர் குலப்பெண்ணின் வட்டி நிறையுமாறு நெல் வயலில் விளைந்த பயற்றை உழவர்குலப்பெண் நிரப்புகிறாள் என்று ஐங்குறுநூறு (47) கூறுகிறது. நெல் வயலில் பயறு போன்றவற்றை பயிர் செய்துள்ளனர் என்று இதன் மூலம் உணரமுடிகிறது.

 நெல்லடித்தல்

            உழவர்கள் விடியற்காலை நேரத்தில் வைக்கோலைப் பிரித்துக் கடாவிட்டுத் தூற்றி எடுத்தனர் என்று அகநானூறு (37) உணர்த்துகிறது. செந்நெல்லின் தாளை அறுத்த உழவர்கள் அவற்றை மருதமரத்தின் நிழலில் போராகக் குவித்து வைத்து, அதைக் கடா விட்டு அடித்த பின்னர் நெல்லில் உள்ள வைக்கோல், தூசு முதலியவற்றைப் போக்கி அவற்றை உலர வைப்பர். கோடைக்காற்றில் தூற்றிக் குவித்த நெற்பொலிகள் மேருமலை போல் தோன்றும் என்று பெரும்பாணாற்றுப்படை (238) குறிக்கிறது.

இதனை

                        பகடுஊர்பு இழிந்த பின்றை துகள்தப

                        வையும் துரும்பும் நீக்கி பைதுஅற

                        குடகாற்று எறிந்த குப்பை வடபால்

                        செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்

            என்ற அடிகள் உணர்த்துகின்றன.   மலை போன்ற நெற்போர்களை அழித்துக் கடா விட்டு வளமையை உண்டாக்கும் உழவரைப்பற்றி மலைபடுகடாமும் (461) குறிக்கிறது.   நெல்லடிக்கும்போது உழவர்களுக்கும் பரதவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. கடலுக்கு அருகே உள்ள வயலில் நெல்லை அறுத்தனர். நெற்கதிர்ப் போரினைப் பிரித்துக் கடாவிட்டனர். கள்ளுண்டு களித்த அவ்வுழவர்கள் காளைகளை மாற்றி வேறு காளைகளைக்கொண்டு கடாவிட்டனர். பின்னர் நெல்லைத் தூற்றினர். பறந்து சென்ற துரும்புகள் அருகிலிருக்கும் உப்பு காயும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்தது. உணவுக்கு இனிமை தரும் வெள்ளிய உப்பு பாழ்பட்டுப் போனமையால் நெய்தல் நில மக்கள் சினந்து, கழனி உழவருடன் மாறுபட்டுச் சேற்றுக்குழம்பினை எடுத்தெறிந்து கைகலப்பில் ஈடுபட்டனர். நரைத்து முதுமையுற்ற மருதநிலமக்கள் இருவரையும் அமைதியுறச்செய்து முற்றிய கள்ளின் தெளிவை பரதவர்க்குக் கொடுத்து அவரை மகிழ்வித்தனா.;

இதனை

                        “……………… பரதவர்

                        தீம்பொழி வெள்உப்புச் சிதைதலின் சினைஇ

                        கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி

                        இருஞ்சேற்று அள்ளல் எறி செருக் கண்டு

                        நரைமூ தாளார் கைபிணி விடுத்து

                        நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்”

என்ற அகநானூற்று அடிகள் (366) உணர்த்துகின்றன.

            நெல்லடிக்கும்போது காளைகளுக்கு ஓய்வு அளித்து மாற்றி மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர். வயது முதிர்ந்தோர் நெற்களங்களில் பணிகளைப் பார்வையிடுவர். நெல்லில் சேற்றுக்குழம்பை எறிவதால் நெற்களம் சேறும் சகதியுமாக இருக்கும். உப்பளப் பணிகளுக்கு இடையூறு வந்ததால் நெற்களப் பணிகளுக்கு பரதவர் இடையூறு செய்தனர்.

            நெல்லை அறுவடை செய்வதிலிருந்து நெற்களங்களில் நெல்லை அடிப்பது வரை கள்ளின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. கடினமான வேலை என்பதால் உடற்சோர்வைப் போக்கக் கள்ளை அருந்தி நெற்களப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடங்குகளில் நெல்

விரிச்சி கேட்டல்

            வயது முதிர்ந்த பெண்டிர் விரிச்சி (சகுனம்) கேட்கும் பொழுது நெல்லையும் முல்லை மலரையும் தெய்வத்தின் மீது தூவி விரிச்சி வேண்டி நிற்பர். இதனை

                        “…………… நெல்லொடு

                        நாழி கொண்ட நறுவீ முல்லை

                        அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                        பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப”

என்ற அடிகளில் முல்லைப்பாட்டு (8) உணர்த்துகிறது மாலைக்காலத்தில் பெண்கள் நெல்லையும் மலரையும் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கியதை நெடுநல்வாடை (43). உணர்த்துகிறது.

திருமணம்

            இன்று திருமணத்தில் மணமக்களின் தலையில் அரிசி தூவும் வழக்கம் உள்ளது. சங்க காலத்தில் மகளிர் நால்வர் கூடி தலைவியின் தலையில் நெல்லையும், மலர்களையும் நீரொடு தூவி வாழ்த்தினர். இதனை

                        நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

                        பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க”

என்று அகநானூறு (86) உணர்த்துகிறது.

            இன்றும் திருமணத்தில் சிலர் அரிசிக்கு மாற்றாக நெல்லைப் பயன்படுத்துகின்றனர். அரிசி முளைவிடாதது. நெல் முளைவிடும் தானியம். அதுவே மணமக்களுக்குப் பொருத்தமான ஒன்று என்கின்றனர்.

            மேற்கண்ட சடங்குகளில் பெண்களே நெல்லைப் பயன்படுத்தியவர்கள். நெல் மிக உயர்ந்த பொருளாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது என்பதை இவற்றான் உணரமுடிகிறது.

நெல்லுணவுகள்

            நெல்லைக் குற்றி, அதிலிருந்து அரிசி பெறப்பட்டது. நொய்யரிசி, நெல் மாவு, பொரி, அவல், அரிசி முதலிய வகைகள் சங்க காலத்தில் பயன்படுத்தப்பெற்றன.

நொய்யரிசி

            தலைவனின் பரத்தமையை வெறுத்து அவனோடு ஊடல் கொண்ட பெண்கள் நொய் அரிசியை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனிமையை மேற்கொண்டிருப்பர். இனிய மொழி பேசும் குழந்தைகள் பாலின்றி உலர்ந்த முலையைச் சுவைத்துப் பார்த்துப் பெரிதும் வருந்தி இருப்பர் என்பதை

                        செய்யோள் நீங்க சில்பதம் கொழித்து

                        தாம் அட்டு உண்டு தமியர் ஆகி

                        தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப”

என்ற அகநானூற்று அடிகள் (316) உணர்த்துகின்றன.

நெல்மா

            நெல்லை இடித்து நெல்மா உருவாக்கப்பட்டது. இம்மாவை ஆண்பன்றிக்குக் கொடுத்து அதைக்கொழுக்க வைத்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை (343) கூறுகிறது. குதிரைக்கு நெல்மாவு கொடுத்ததை அகநானூறு (340) உணர்த்துகிறது.

பொரி

            நெல்லை வறுத்து அதிலிருந்து நெற்பொரி பெறப்பட்டது. “செந்நெல் வான்பொரி” என்று குறுந்தொகை (53) இதனைக் குறிக்கிறது.

அவல்

            நெல்லை நீரில் ஊற வைத்து அதிலிருந்து அவல் இடித்தெடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. மருதநிலச் சிறுவர்கள் வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிலின் முற்றத்தில் கிடக்கும் உரலில் அவலை இடித்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (226) கூறுகிறது. நெல் விளைந்த கதிரை முறித்து பசிய அவலை இடிக்கும் பெண்ணை அகநானூறு (237) கூறுகிறது.

            மகளிர் அவலினை வாயில் அடக்கி நீராடுவர் என்று புறநானூறு (63) கூறுகிறது. இதனை

                        …………………. மகளிர்

                        பாசவல் முக்கி தண்புனல் பாயும்”

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மேற்கண்ட உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நெல்லுணவில் அரிசியே முக்கியப்பங்கு வகிக்கிறது. அரிசியில் இருந்து பலவிதமான சோற்று வகைகள் பயன்படுத்தப்பெற்றன. அரிசியை வேகவைத்துச் சோறு பெறப்பட்டது. இன்சோறு, உப்பில்லாச்சோறு, உழுத்தஞ்சோறு, ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, மூங்கிலரிசிச்சோறு எனப் பலவகை உணவுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இன்சோறு

            இனிப்புப் பொருட்களைச் சேர்த்தாக்கிய சோற்றுணவு இன்சோறு என்று அழைக்கப்பட்டதை மதுரைக்காஞ்சி (535) உணர்த்துகிறது.

உழுத்தஞ்சோறு

            அரிசியோடு உழுத்தப்பருப்பையும் இட்டு ஆக்கப்படும் சோறு உழுத்தஞ்சோறு என அழைக்கப்பட்டது. திருமணத்தில் இச்சோறு உண்ணப்பட்டதை அகநானூறு (86) உணர்த்துகிறது.

ஊன்சோறு

            சோற்றோடு ஊனைக்கலந்து ஆக்கினால் அது ஊன்சோறு ஆகும். பதிற்றுப்பத்தில் (45) இடம் பெறும் ஊன்துவை அடிசில் என்ற தொடர் இங்கு எண்ணத்தக்கது. மன்னர்கள் இரவலர்களுக்கு ஊன் சோற்றையே அதிகம் கொடுத்துள்ளனர்.

கொழுஞ்சோறு

            கொழுப்பு முதலியன கலந்து ஆக்கப்படும் சோறு கொழுஞ்சோறு எனப்பட்டது. கரும்பனூர் கிழான் இரவலர்களுக்குக் கொழுஞ்சோறு கொடுத்தான் என்று புறநானூறு (384) கூறுகிறது. இதனை

            “நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை” என்ற அடி உணர்த்துகிறது.

செஞ்சோறு

            செந்நெல்லரிசியால் ஆக்கப்பட்ட சோறு செஞ்சோறு எனப்பட்டது. இதனை “செந்நெல் வல்சி” என்று பதிற்றுப்பத்து (75) கூறுகிறது.

நெய்ச்சோறு

            நெய் மிகுதியாகக் கலந்து ஆக்கப்படும் சோறு நெய்ச்சோறு எனப்பட்டது. இதனை

            “நெய்ம்மலி அடிசில்” என்று குறிஞ்சிப்பாட்டு (204) கூறுகிறது.

புளிச்சோறு

            புளி அதிகம் கலந்து ஆக்கப்படும் சோறு புளிச்சோறு எனப்பட்டது. இச்சோறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எயினர் குலப்பெண் விருந்தினருக்கு இச்சோற்றைக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப்படை (175) கூறுகிறது. இதனை

                        “எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு” என்ற அடி உணர்த்துகிறது.

பாற்சோறு

            முல்லை நில மக்களுக்கு பால் அதிக அளவில் கிடைத்தது. பாலை உலைநீராகக் கொண்டு ஆக்கப்பட்ட சோறு பாற்சோறு எனப்பட்டது. இன்றும் சிலர் சர்க்கரைப்பொங்கல் வைக்கும்போது பாலை உலை நீராகப்பயன்படுத்துகின்றனர் பாலில் சமைத்த உணவை அகநானூறு (394) “பாலுடை அடிசில்” என்று கூறுகிறது.

            “………………. பாற்சோறு

            மூடநெய் பெய்து முழங்கை வழிவார

            என்ற திருப்பாவை (27) அடிகளும் இங்கு உணரத்தக்கன.

வெண்சோறு           

            வெண்ணெல் அரிசியைக்குற்றி பின்னர் அதனைப் புழுக்கி ஆக்கப்படும் சோறு வெண்சோறு என்று அழைக்கப்பட்டது. இதனை

                        “அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”

என்று சிறுபாணாற்றுப்படை (194) கூறுகிறது.

மூங்கிலரிசிச்சோறு

            மலைவாழ் மக்கள் மூங்கில் நெல்லின் அரிசியைச் சோறாக்கினர், அவ்வாறு சோறாக்குவதற்கு மோர் உலை நீராகப் பயன்பட்டது என்று மலைபடுகடாம் (179) கூறுகிறது.

உப்பில்லாச்சோறு

            உப்பில்லாமல் சமைக்கப்பட்ட இச்சோறு இடுகாட்டில் ஈமச்சடங்கின்போது பயன்படுத்தப்பெற்றது. பிணத்திற்கு புலையனால் இச்சோறு கொடுக்கப்பட்டது.

இதனை

                        உப்பு இலாஅ அவிப்புழுக்கல்

                        கைக்கொண்டு பிறக்கு நோக்காது

                        இழிபிறப்பினோன் ஈயப்பெற்று

என்ற புறநானூற்று (363) அடிகள் உணர்த்துகின்றன. இன்றும் ஈமச்சடங்குகளில் நெல் பயன்படுத்தப் பெறுகின்றது.

கள்

நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது. இது நறும்பிழி என்று அழைக்கப்பட்டது. கொழிக்கப்பட்ட குற்றாத அரிசியைக் களியாக்கிய பின்னர் அதனைக் கூழ்போலக் கரைத்து, தட்டில் இட்டு உலரும்படி ஆற்றி, நெல்முளையை இடித்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, இரண்டு பகலும் இரண்டு இரவும்; கழிந்த பின்னர் சாடியில் இட்டு வேகவைத்து, பன்னாடையால் வடிகட்டி, விரலால் துழாவிப் பிழியப்பட்டது. இதனை

                        அவையா அரிசி அம்களித் துழவை

                        மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி

                        பாம்புஉறை புற்றின் குரும்பி ஏய்க்கும்

                        பூம்புற நல்அடை அளைஇ தேம்பட

                        எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி

                        வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த

                        வெந்நீர் அரியல் விரல்அலை நறும்பிழி”

என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் (281) உணர்த்துகின்றன.

            கொழியல் அரிசி என்பது தவிடு போகாத அரிசி. விரலால் அலைத்துப் பிழியப்பட்ட அக்கள்ளைத் தளர்ச்சியான நிலையில் பருகினால் தளர்ச்சி நீங்குமாம். இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஊறிய கள்ளை வேக வைத்து, விரலால் அலைத்துப் பன்னாடையால் வடிகட்டிப் பயன்படுத்தினர். விரலால் அலைத்துப் பிழியப்பட்டதால் அக்கள் நறும்பிழி எனப்பட்டது. நெய்தல் நில மக்களின் விருந்தோம்பலை பெரும்பாணாற்றுப்படை கூறுவது போலவே இன்றும் நெய்தல் நிலங்களில் சோற்றிலிருந்து பெறப்படும் கள்ளாக “சுண்டக்கஞ்சி” விளங்குகிறது.

பண்டமாற்று

            சங்க காலத்தில் நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தன. உமணப்பெண்கள் உப்பு விற்கும் பொழுது

                        நெல்லின் நேரே வெண்கல் உப்பு”

                        “நெல்லும் உப்பும் நேரே”

            என்று கூவி விற்பனை செய்வதை அகநானூறு (296,126) மூலம் அறியமுடிகிறது. உமணர்கள் மாட்டு வண்டிகளில் செல்ல, உமணப் பெண்கள் அருகில் உள்ள சேரிகளில் உப்பு விற்றுக்கொண்டே செல்வார்கள். படகுகளில் சென்று உப்பை விற்று நெல் கொண்டு வந்ததை

                        வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

                        நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”

என்ற அடிகளில் பட்டினப்பாலை (21) உணர்த்துகிறது.

            பாணர்குலப் பெண்ணின் வரால் மீனுக்கு முந்தைய ஆண்டு விளைந்த பழைய வெண்ணெல்லை மருதநிலப் பெண் தருவாள் என்பதை

                        வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

                        யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்”

என்று ஐங்குறுநூறு (48) கூறுகிறது.

            இன்னொரு பாணர்குலப்பெண் மீன்களைக் கொடுத்து மாற்றாக நெல்லை வாங்காமல், முத்துக்களையும் அணிகலன்களையும் பெற்றுச் செல்வாள் என்று ஐங்குறுநூறு (126) கூறுகிறது. இதனை

                        பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

                        குறங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”

            என்ற அடிகளால் உணரலாம். நெல்லை விட விலை உயர்ந்த மீன் என்பதால் அப்பெண் நெல்லை வாங்கவில்லை.

            கானவன் வேட்டையாடி மான்தசையைக் கொடுக்க உழவர் மகளிரோ வெண்ணெல்லை முகந்து தருவர் என்று புறநானூறு (33) கூறுகிறது. ஆயர் மகளும் பால் பொருட்களை விற்று நெல் முதலிய உணவுப்பொருட்களைப் பெற்று தங்கள் சுற்றத்துடன் உண்பாள் என்று பெரும்பாணாற்றுப்படை (162)  கூறுகிறது.

ஈகை

            செல்வக்கடுங்கோ வாழியாதன் மரக்காலில் அளந்து இரவலர்களுக்கு நெல்லை வழங்கினான் என்று பதிற்றுப்பத்துக் (66) கூறுகிறது.

            அதியமான் செந்நெல்லை நெற்போரோடு கொடுப்பான் என்று புறநானூறு (390) கூறுகிறது. நெற்போரில் நெல்லைச் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்ததையும் நெல்லை ஈகையாகக் கொடுத்ததையும் இதன்மூலம் உணரமுடிகிறது.

            பெண்களுடன் ஆண்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் களைபறிக்கும் போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். வயலைக் காவல் காக்கும் வழக்கம் இருந்தது. நெல் அறுக்கும் போது பறவைகளை விரட்ட தண்ணுமை, பறை முதலிய இசைக்கருவிகள் பயன்பட்டன. நெல்வயலில் ஊடு பயிர் செய்யப்பட்டது. விடியற்காலை நேரத்தில் நெல்லடிக்கப்பட்டது, நெல்லால் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. பின்னர் கள் அருந்தி பரதவர் சமாதானம் அடைந்துள்ளனர்.

            நெல்லுடன் முல்லை மலர் தூவி பெண்கள் தெய்வத்தை வணங்கினர். திருமணச் சடங்குளில் முறையே நெல்; பயன்படுத்தப்பெற்றது. நொய்யரிசி, நெல்மாவு, பொரி, அவல், பல வகையான சோற்று வகைகள் பயன்பாட்டில் இருந்தன. இறப்புச் சடங்கில் உப்பில்லாச்சோறு பயன்படுத்தப்பெற்றது. நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது.

நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தாலும் உமணப்பெண்கள் உப்பை விற்று நெல்லை வாங்கிச்சென்றனர். நெல்லை நெற்போரில் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

            குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் தம் நிலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து மாற்றாக நெல்லை வாங்கிச்சென்றுள்ளனர். மருத நில மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அங்கு விளைந்த நெல்லால் அவர்களுக்குக் கிடைத்தது. தம் நிலத்தில் விளைந்தவற்றை விற்ற மற்ற நில மக்களைப்போல அல்லாமல் மருதநில மக்கள் நெல்லை மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யவில்லை. இதிலிருந்தே அக்காலத்தில்  நெல்லுக்கு இருந்த மதிப்பு உணரப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்த தானியங்கள் நெல்லுக்கு அடுத்த நிலையிலேயே போற்றப்பட்டு வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் சில நெல் வகைகள் விளைந்தாலும் மருதநிலத்தில் விளைந்த நெல்லே அதிகம் பேசப்படுகிறது.

நெல் பயிரிடுவது முதல் நெல் அறுவடை, பண்டமாற்று முதலிய பல நிகழ்வுகள் பதிவுகளாக உள்ளதாலும் மற்ற தானியங்களின் பதிவுகள் நெல்லின் அளவுக்கு இல்லாததாலும் அக்காலத்தில் நெல் சமூகத்தில் மிக உயர்வாக மதிக்கப்பட்டு வந்தமையை உணரலாம். திருமணம், விரிச்சி கேட்டல் போன்ற நிகழ்வுகளிலும் இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் நெல் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் நெல்லுக்கு இருந்த பெருமதிப்பு அறியப்படுகிறது. சங்ககாலத்தில் மற்ற தானியங்களை விட நெல்லே உயர்வானதாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பெற்றது. ஈகையாகக் கொடுக்கப்படும் அளவிற்கு நெல்லின் மதிப்பு உயர்ந்திருந்தது. நெல் வயல்கள் இருந்த வளமிக்க ஊர்கள் பகை மன்னர்களால் அழிக்கப்பட்டதும் இங்கு எண்ணத்தக்கது எனவே சங்ககால மக்கள் நெல்லால் வாழ்ந்தும் மன்னர்கள் நெல்லால் வீழ்ந்தும் உள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.

நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து பயிர் செய்யும் முறைகள், அதற்குரிய சூழல், தரமான விதைகள், நீர்ப்பாசனம், களையெடுத்தல், அறுவடைக்கு முன் பறவைகளை விரட்டுதல், அறுவடை செய்தல், சடங்குகளில் பயன்படுத்தப்பெற்றமை, பண்ட மாற்று, நெல்லில் இருந்து பெறப்பட்ட கள், அரிசியால் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைள், நெல்லை இரவலர்களுக்கு ஈந்தமை போன்ற பல்வேறு நிலைகளில் சங்ககால மக்கள் நெல்லை மேலாண்மை செய்து வாழ்;ந்தனர் என்பதை இவற்றான் அறியமுடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

காளிப்பட்டி, நாமக்கல்-637501.

திறனாய்வுக் கொள்கைகள்

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் ஏற்பக் காலந்தோறும் புதிய இலக்கியக் கோட்பாடுகள் இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. உலக. இலக்கியப் போக்கினைத் தழுவி அவற்றினை ஆராய்ந்த ‘ஏபிரம்’ என்ற அறிஞர் நான்கு விதமான இலக்கியக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுகிறார். அவையாவன.

1. அநுகரணக் கொள்கை

2. பயன்வழிக் கொள்கை

3. வெளிப்பாட்டுக் கொள்கை.

4. புறநிலைக் கொள்கை

இக்கோட்பாடுகளில் ஒன்று மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்தது. என்பது பொருளல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று மட்டுமே தலைமை பெற்றிருந்தது என்பர் ஜி. ஜான்சாமுவேல்

1.அநுகரணக் கொள்கை (MIMETIC THEORY)

அநுகரணம் என்பது ‘போலச் செய்தல்’ எனப்படும். எனவே இக்கொள்கையை, ‘போலச் செய்தல்’ என்னும் கொள்கை என்றும் அழைக்கின்றனர். இக் கொள்கையின்படி கலை, இலக்கியம் என்பன மனிதனால் நகல்களாகச் செய்யப்படுவன என்பதாம். உலகத்தின் அல்லது இயற்கையின் அல்லது மனித வாழ்வின் பிரதிபலிப்பு என்று கருதுகின்ற இலக்கியக் கோட்பாடுகளை இப்பிரிவில் அடக்கலாம். இக்கொள்கையைப் பின்பற்றியே அரிஸ்டாடில் ‘ஒரு நிகழ்வைப் பின்பற்றி அதுபோல அமைக்கப்பட்டதே நாடகம்’ என்கிறார். ஆனால் போலச் செய்வது என்பது புறஉலகக் காட்சிகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதன்று படைப்பாளன் தம் உள்ளத்தன்மைக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் புறப் பொருள்களையும் காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டுஅவை போன்ற ஒன்றைப் புதிதாகப் படைப்பதே ‘போலச் செய்தல்’ என்று திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர். இவ்வடிப்படையிலேயே டாக்டர் கைலாசபதி, ‘அரிஸ்டாடில்’ போன்றோர். அநுகரணம் என்பது கேவலம் வெறும் பிரதி செய்யும் முயற்சி எனக் கருதியவரல்லர், பிரபஞ்சத்தில் காண்பவற்றிலிருந்து வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு இன்றியமையாத உருவத்தை இலக்கியக் கர்த்தா அளிக்கின்றான் என்பதே அவர்கள் கருத்தாகும் எனச் சுட்டுகிறார். அது மேலோட்டமாகப் பார்க்கும் நிலையில் இலக்கியப் படைப்புத் தொடர்பான கொள்கையாகத் தோன்றலாம். ஆனால் நுணுகி நோக்கினால் இது இலக்கியத்தை மதிப்பீடு செய்யும் வரைவிலக்கணம் என்பது புலனாகும்.

திறனாய்வுக் கொள்கைகளில் அநுகரணக் கொள்கையே முதன்மையானது. தொடக்க நிலைப் படைப்புகளில் இத்திறனாய்வுக் கோட்பாடே தலைமை இடம் பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கவிதையைக் காட்டிலும் நாடகம், சிறுகதை, புதினம் ஆகியவற்றில் நாம் அறிந்தோ அறியாமலோ இக்கொள்கையைக் கொண்டே பாத்திரங்கள். நிகழ்ச்சிகள் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறோம்.

2.பயன்வழிக் கொள்கை (PRIGMATIC THEORY)

இக்கொள்கை ‘போலச் செய்தல்’ என்ற கொள்கையைத் தொடர்ந்து எழுந்தது. அறிவியற் கொள்கையுடன் பெரிதும் ஒப்புமை உடையது. இலக்கியத்தைப் படிக்கும் சுவைஞருக்கு ஏற்படும் பயன்பாட்டினை அளவுகோலாகக் கொண்டு அதன் இயல்புகளையும், பண்புகளையும் ஆராய்வதே இக்கொள்கையின் நோக்கமாகும். படைப்பிற்கும் கலைஞனுக்கும் இடையிலான உறவு அதிகமாக வலியுறுத்தப்பட்ட காலத்தில் இக்கொள்கை பிற கொள்கைகளைவிட ஆதிக்கம் பெற்றிருந்தது.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியரே இக்கொள்கையை வலியுறுத்தியுள்ளார் எனக் கருதலாம். நூற்படைப்புக் குறித்து, ‘இருமென மொழியால் விழுமியது நுவலல்’ என்கிறார். ஒரு நூல் சுவைஞனைக் கவரும் வகையில் இசையோடு இணைந்த மொழி நடையும். விழுமிய பொருளும் அமையும் வகையில் படைக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் மரபியலில் நூற்பாவினைக் கேட்போனுக்கு விளங்கும் வகையில் தெளிவாக அமைக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியருக்குப் பின் வந்த நன்னூலார் இலக்கியப் படைப்பு சுவைஞனை அடைய வேண்டியதன் இன்றியமையாமையின மிகவும் விளக்கமாகக் கூறுகிறார். ‘கருங்கச் சொல்லல்’ என்ற நூற்பாவில் சுவைஞனைக் கவரும் பத்து அழகுகளை விளக்கமாக விளக்கிக் காட்டுகிறார்.

மேலும் சுவைஞனை மயங்க வைக்கக் கூடாது; பயனற்றவற்றை விரித்துப் பேசக்கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை நலகுவது நூலின் பயன் என்ற பயன்வழிக் கொள்கை தண்டியலங்கார ஆசிரியராலும் பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.

எனவே இலக்கியத்தின் பயன் சுவைஞனது உள்ளத்தில் மகிழ்வுணர்வை ஊட்டுவதோடு அறிவுரை நல்கி, மனித சமுதாயத்தை நலவழிப்படுத்துவதே என்னும் அறநெறி சார்ந்த கோட்பாடும் இக்கால கட்டங்களில் வலுப்பெறுகின்றது எனக் குறிப்பிடுகிறார் ஜி. ஜான் சாமுவேல்.

3.வெளிப்பாட்டுக் கொள்கை : [EXPRESSIVE THEORY)

இக்கொள்கை உணர்ச்சிக் கொள்கை. அழகியற் கொள்கை என்பனவற்றோடு மிகுந்த உறவுடையது. படைப்பாளனின் கற்பனை, மனநிலை, ஆளுமை முதலியனவெல்லாம் தெளிவாக வெளிப்படுவதே இலக்கியத்தின் சிறப்பியல்பு என்பது இக்கொள்கையின் கருத்தாகும். பொருளைப் பாடி எடுத்துக் காட்டுவதே கவிதை என்னும் கொள்கைக்கு மாறாக கவிஞனின் அக உணர்ச்சிகளையும் அவன் மனத்தில் இடம்பெறும் உள்ளக்காட்சிகளையும் வெளிப்படுத்துவதே கவிதை என்கின்ற கோட்பாட்டை வெளிப்பாட்டுக் கொள்கையாளர் வலியுறுத்துகின்றனர்.

இக்கொள்கை 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆங்கில, இந்திய இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்ற போதிலும் தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலேயே இக்கொள்கை தோற்றம் பெற்றுவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியங்களில் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளையும், பக்தி உணர்வினையும், ஆற்றொழுக்காகப் படைப்பு நுட்பம் சிறக்கப் படைத்துக் காட்டியுள்ளதனை அவ்விலக்கிய வகையினைப் படிப்போர் பெரிதும் உணர்வர்.

4.புறநிலைக் கொள்கை : [OBJECTIVE THEORY)

இக்கொள்கை வெளிப்பாட்டுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுதலானதாகும். இக்கொள்கையானது எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி மட்டுமே அறிந்து தெளிய வேண்டும் என்ற குறிக்கோளினை உடையது. இங்குப் பொருள் என்று சொல்லும் பொழுது புலனால் அறியும் பொருள், நூல் நுதலிய பொருள் என்பவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் டாக்டர். க. கைலாசபதி.

இக்கொள்கையின்படி ‘கலைப்படைப்பைக் கலைஞன், சுவைஞன், உலகம் ஆகியவற்றோடு இணைத்துக் காணாமல் அதை தனித்த ஒன்றாகச் சில விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு புறச்சார்பின்றிக் கவிதையை ஆய்வதை உயிர்நாடியாகக் கொண்டது’ என்று கூறுகிறார் ஜி. ஜான் சாமுவேல். இக்கொள்கை 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மேனாடுகளில் அதிக அழுத்தம் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் இக்கொள்கை தற்காலத்தில் படிப்படியாக வலுப்பெற்று வருகின்றது. இவ்வாறு இத்துறையில் அமைந்த பல்வேறு கொள்கையினாலேயே இலக்கியத் திறனாய்வு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்பதனை நாம் உணர்ந்து தெளிதல் வேண்டும்.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையன..

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

6.இலக்கியத்திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

இலக்கியத் திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

இன்றையச் சூழலில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. அவற்றையெல்லாம் தரம் பிரித்து தகுந்தது இவையென இருப்பவைகள் சிலவேதான். நூல்களைத் திறனறிந்து பார்க்க திறனாய்வாளர்களும் விமர்சனர்களும் தேவைப்படுகின்றார்கள். அனைவராலும் திறனாய்வாளராகச் செயல்பட முடியாது. அவற்றிற்கென்று தனிப்போக்கும் நோக்குத்தன்மையும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. அவர்களே சிறந்த திறனாய்வாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்காலத்தில் வெங்கட்சாமினாதன், அசோகமித்திரன், அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி. பா. மதிவாணன், த. முருகேசபாண்டியன், க, பஞ்சாங்கம், ராஜ்கௌதமன் முதலியோர் நல்ல திறனாய்வாளர்களாகவும் விமரிசனம் செய்பவர்களாகவும் உள்ளனர்.  இங்கு திறானாய்வாளர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பேராசிரியர் இரா.மருதநாயகம் கூறுவது உற்றுநோக்கத்தக்கது.

திறனாய்வாளர்களிடையே அமைய வேண்டிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தரப்படுகின்றன.

  1. திறனாய்வாளர், பல நூல்களைக் கற்றறிந்தவராகவும், பழுத்தப் புலமை உடையவராகவும், புதிது புதிதாய்ப் பயின்று இன்புறும் இயல்புடையவராகவும் இருத்தல் வேண்டும். விரிந்து பரந்துபட்ட நூலறிவு அவருக்கு மிகவும் இன்றியமையாதது.
  2. ஒரு மொழி நூல்களில் மட்டுமன்றிப் பலமொழி நூல்களிலும் இலக்கிய அனுபவம் பெற்றவராய் இருப்பது நல்லது. அப்போதுதான் இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளைத் திறம்பட வெளியிட முடியும்.
  3. கவிதை, நாடகம், புதினம் போன்ற எந்தத் துறையைப் பற்றித் திறனாய்வு செய்கின்றாரோ அந்தத் துறை சார்ந்த மற்றும் அதனோடு தொடர்புடைய பல நூல்களையும். கலை நுணுக்கச் செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இலக்கியத்தைப் பன்முறை பயின்று பயின்று அதன் உயிர்ப்பான பகுதியைத் தெள்ளத் தெளிய உணர்ந்து கொள்ள வேண்டும்.
  5. நூலின் நிலையான பகுதிகள் எவை, நிலையில்லாத பகுதிகள் எவை என்பதைப் பகுத்தறிய வேண்டும்.
  6. பயில்வோர்க்கு மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய சிக்கலான பகுதிகள் நூலில் இருப்பின் அவற்றை வெளிப்படுத்திக் காட்டி மூலநூல் ஆசிரியரின் நோக்கத்தை நன்கு புரிய வைக்கவேண்டும்.
  7. இலக்கியம் படைத்தவர் சில கலை நுணுக்கங்களாலும்,  அறக்கோட்பாடுகளாலும் இயக்கப்பட்டிருந்தால் அவற்றைத் திறனாய்வாளர் தெரிந்து தெளிய வேண்டும்.
  8. கால வெள்ளத்தைக் கடந்து ஒரு நூல் வாழ்வதற்குரிய காரணங்களை. நூலாசிரியரின் படைப்பாற்றலை மற்றவர்களும் கண்டு மகிழும் வகையில் வெளிக் கொணர வேண்டும்.
  9. திறனாய்வாளர், நூலைப் பற்றிய ஒரு கருத்தைத் தன் சிந்தனைக்குள் அடைத்துக் கொண்டு அதை நிறுவுவதற்கான ஆதாரங்களை அரிதின் முயன்று வலிய இழுத்து வந்து வெளிப்படுத்தலாகாது. தன் படைப்பின் மூலம் நூலாசிரியர் வலியுறுத்துவதை வெளிக் கொணர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  10. நூலாசிரியரின் தனிச்சிறப்பினையும், உள்ளத்து உணர்வுகளையும், கற்பனைத் திறனையும் கண்டறிய முனைய வேண்டும்.
  11. வரலாற்றுப் பின்னணியையோ. குறிப்பிட்ட சமூகச் சூழலையோ மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருந்தால் அப்பின்னணியை அல்லது சூழலைத் திறனாய்வாளன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
  12. ஒரு நூலைச் சாதாரண மக்கள் சுவைத்து மகிழ்வதற்கும், கலைத்துறை வல்லுநர்கள் சுவைத்து மகிழ்வதற்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே திறனாய்வாளர் இவ்வேறுபாட்டின் உண்மை நிலையை எடுத்துக் காட்டிப் பொதுமக்களின் சுவையுணர்வினை மேன்மேலும் பண்படுத்தி உயர் தரமான நிலைக்கு உயர்த்த வேண்டும்.
  13. ஒரு சிலர் அரைகுறைப் பயிற்சியால் ஒரு நூலின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு, சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களைப்  பரப்பிவிடக்கூடும். அக்கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி அசைக்க முடியாதபடி நிலைத்து விடுதலும் உண்டு.  அந்நிலையில், திறனாய்வாளர், நூலுக்குரிய உண்மையான தகுதியை மதிப்பீடு செய்து மற்றவர் உணர்ந்து கொள்ளுமாறு தெளிவுப்படுத்த வேண்டும். பிழையாக மலிந்துவிட்ட தவறான கருத்துக்களைக் களைந்தெறிய வேண்டும்.
  14. புற்றீசல் போல வளர்ந்து வரும் இலக்கிய நூல்களுள் இறவாதத் தன்மை உடைய இலக்கியங்கள் இவை என்று சுட்டிக்காட்டும் துணிவு திறனாய்வாளருக்கு அமைய வேண்டும்.
  15. மானிடவியலின் கடந்த கால வரலாற்றைப் பற்றி அறிவு தெளிவு மிக்கவராகவும், அருள் ஒழுக்கம் பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இவை போன்றன திறனாய்வாளருக்குரிய இன்றியமையா தகுதிகளாகக் கருதப்படுகின்றன.

திறனாய்வாளருக்குரிய பணிகள்

“இலக்கியத்தை நன்கு புரிந்து அனுபவிக்கும் இயல்பை வளர்ப்பதே இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியாகும் என்று திறனாய்வுப் பணி குறித்து டி.எஸ். எலியட் என்பார் குறிப்பிடுகின்றார். இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியினைக் காணும் போது உரையாசிரியர்களின் பணி திறனாய்வுப் பணியே என அறியலாம். திறனாய்வாளர்கள் செய்துள்ள பணிகளைக் கீழ்வருமாறு பகுத்துக் காட்டலாம்.

1 மூலநூற் பொருளைத் தெளிவாகக் காட்டுதல்.

2 அரிய சொல்லாட்சி, சொற்றொடர்களின் சிறப்பான பொருளை நன்கு விளக்கிக் காட்டல்.

3. இயல், இலம்பகம், அதிகாரம், காதை, படலம், போன்ற பல உட்பிரிவுகளை உடைய ஒரு நூலினுள் குறிப்பிட்ட ஓர் உட்பிரிவுக்குரிய சிறப்பிடத்தை நன்கு புலப்படுத்துல்.

4. நூல் நுவலும் கருத்துக்களைத் தொடக்கத்தில் தொகுத்துச் சொல்லுதல்.

5.நூற் பொருளால் ஏற்படக் கூடிய சிக்கலையும், முரண்பாடுகளையும் விளா-விடைமுறையில் தீர்த்து வைத்தல்; பயில்வோரின் ஐயத்தினைப் போக்கித் தெளிவுபடச் செய்தல்.

6. பிழையான கருத்துக்களைத் தக்கச் சான்றுடன் மறுத்தல்.

7.பாட பேதம் இருப்பின் அவற்றை வெளிக்கொணர்தல்.

8.குறிப்பிட்ட நூற்பொருளின் பின்னணியில் நமக்குத் தெரியா வண்ணம் மறைந்து கிடக்கும் அரிய செய்திகளை வெளிப்படுத்துதல்.

9.மூலநூலில் இடைச் செருகல் இருப்பின் அவற்றைக் களைந்து எறிய முற்படுதல்.

10. காப்பியம் போன்ற இலக்கிய வகையில் வரும் கதைக் கோப்பையும், பல்வகை மனிதரின் பல்வகைப் பட்ட பண்புகளையும் செயல்முறைகளையும் காவியக் கட்டுக்கோப்புக்கு ஏற்ற வண்ணம் இயைபு படுத்திக் காட்டல்.

11.நூலின் போக்கிற்குப் பொருத்தமானவை இவை என்றும், பொருத்தமற்றவை இவை என்றும் சுட்டிக்காட்டுதல்.

12 உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றை நயமுடன் விரித்துக் காட்டுதல்.

13. மூலநூலில் மறைந்துவிட்டதாகக் கருதப்படும் செய்யுள்களைக் கண்டறிந்து கூறுதல்.

14. இசை, நாடகம் போன்ற துறைகளைப் பற்றிய அரிய கலைச் செல்வங்களை ஆங்காங்கே கொண்டு வந்து வெளிப்படுத்தல்.

15. பழங்கால நாட்டுப்பாடல்,விடுகதைப் பாடல், பழமொழி போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளை உரையிற் செய்து அழியாது காத்தல்.

16. உரைகள் வாயிலாகத் தம் கால மக்களின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், பண்பாடு, அரசியல் மற்றும் சமுதாயச் சூழ்நிலைகள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டல், மேற்கண்ட போற்றப்படுகின்றன.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையக் கட்டுரைகள்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

இலக்கியக் கொள்கை – இலக்கியத் திறனாய்வு – இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. எனினும் இவற்றுக்குள் சில வேறுபாடுகளும் உண்டு. காலந்தோறும் இலக்கியங்கள் படைக்கப்பட்டு அவ்வப்போது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன. இலக்கியத்தைக் கற்கும் போதும், கற்பிக்கும்போதும் அதன் கால வரிசை தேவைப்படுகிறது. இலக்கிய ரசனையை விரும்பி அதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கூறுவதும் இலக்கியக் கல்வியில் அடங்குகிறது. இலக்கியம் காலந்தோறும் வெளிப்படுத்தும் நெறிமுறைகளையும் இது உணர்த்துகிறது. இவ்வாறு இலக்கியம் கற்றுக் கொள்ளக் கூடிய முறைகளில் வேறுபாடுகள் புலப்படுகின்றன.

இலக்கிய வரலாறும் ஓர் ஆய்வின் அடிப்படையில் தான் செய்யப்பட்டு ஒத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல இலக்கியத் திறனாய்வும் சில விதிமுறை ஆய்வுகளின் வழியே நிகழ்கிறது. இலக்கியத் திறனாயவிற்கு முடிவு செய்யும் ஆற்றலும் உண்டு. இலக்கிய வரலாறு எழுதுவோரும் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்த முடிபுகளைக் கொண்டே படைக்கின்றனர். படைப்புப் பற்றியும் மதிப்பீடு பற்றியும் அறிந்து கொள்ளாமல் இலக்கிய வரலாறு எழுதப்படுவதில்லை. எனவே வரலாற்று அறிஞர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் உருவான காலம் வெவ்வேறாக இருக்கும். தொகுக்கப்பட்ட காலமும் வேறுபடலாம். திறனாய்வு உதவியுடன் இவ்விலக்கியங்களின் காலத்தை அறியமுடியும். எனவே இலக்கிய வரலாறு சிறப்பாக அமையத் திறனாய்வு முறை தேவைப்படுகிறது. வரலாற்றுத் தொடர்பின்றி அமையும் திறனாய்வும் தவறாகி விடும். இந்த அடிப்படையில் இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு. இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன என்று கூறலாம்.

திறனாய்வு என்றால் என்ன? அதன்  விளக்கம்

திறனாய்வு, விமர்சனம் என்னும் இருசொற்களும் இலக்கிய ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கியத் திறனாய்வு என்பது இலக்கியத்தின் திறனை ஆய்தல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை முதன் முதலாக பேராசிரியர். அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் தம்முடைய இலக்கியக் கலை என்னும் நூலில் பயன்படுத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் CRITIC, CRITICISM என்னும் இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிஸ்பேக்கன் என்பவர் தம்முடைய கட்டுரை ஒன்றில் CRITIC என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதுபோல ஜான்டிரைடன் என்னும் கவிஞர் CRITICISM என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 1944-இல் ஆ.முத்துசிவன் விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். கிரேக்கச் சொல்லான கிரிட்டிகோஸ் (KRITIKOS) என்னும் சொல்லிலிருந்து CRITICISM என்னும் சொல் உருவாக்கப்பட்டது. KRITIKOS என்பதன் பொருள். முடிபு கூற முடிந்த ஒன்று என்பர். ஒன்றை நடுநிலையோடு கவனித்துக் கூறப்படும் அனைத்தும் திறனாய்வு என்றும் அதனைச் செய்யும் அவர்களைத் திறனாய்வாளர் என்றும் கூறுவர்.

திறனாய்வு என்பதற்கு அறிஞர்களின் கருத்துகள்

  1. உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும் என்பர் மேத்யூ ஆர்னால்டு.
  2. கவிஞன் அல்லது வண்ண ஓவியனின் அறச் சிந்தனையை உணர்வதும், அதைப் பிரித்து அறிவதும், விளக்குவதும் திறனாய்வின் மூன்று படிநிலை’ என்பது வால்டர் பேட்டன் தரும் விளக்கம் ஆகும்.
  3. இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு என்பர் விக்டர் யூகோ.
  4. ‘கலைஞன் எதைக் கூற முயல்கிறான்; அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதி உடையது தானா? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்’ என்பர் ஸ்பிங்கான்.
  5. திறனாய்வாவது ஒரு கலையினை நுண்ணறிவு கொண்டு உணர்ந்து அதன் தரத்தினை மதிப்பீடு செய்வதாகும் என்பது சி.டி. வின்செஸ்டர் கருத்து ஆகும்.
  6. ஓர் இலக்கியத்தின் தரத்தினையும் குறைபாடுகளையும் இலக்கியத் திறனாய்வாளன் தன்னுடைய அறிவும் பயிற்சியும் கொண்டு அதைப் பற்றிய தன்னுடைய முடிவினை வழங்குவதே இலக்கியத் திறனாய்வு என்பார் வில்லியம் ஹென்றி அட்சன்.

இவ்வாறாக ‘திறனாய்வு’ என்பதற்குப் பொருள் விளக்கம் பலவாறு பெறப்படுகிறது.

இலக்கியத் திறனாய்வு

டாக்டர் மு. வரதராசனார் இலக்கிய ஆராய்ச்சி என்னும் தமது நூலில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்பதற்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார். அவை,

  1. இலக்கியங்களில் காணும் உவமை, உணர்ச்சி, கற்பனை, வடிவம், பொருள் முதலியவற்றைக் கொண்டு இலக்கியக் கொள்கைகளை உருவாக்குவது.
  2. இலக்கியத்தின் பொது மற்றும் சிறப்பைக் காணுவது.
  3. இலக்கியம் வாழ்க்கைக்காகவா? கலை இன்பத்திற்காகவா? என்று ஆராய்வது.
  4. இலக்கியத்தை நுகரும் முறை கூறல்; நுகர்வோனுக்குரிய அடிப்படைத் தகுதியை வகுத்தல்.
  5. படைப்போன், நுகர்வோன் இருவருக்குமுள்ள இடைவெளி குறைவு என்பதை உணர்த்தல்.
  6. இலக்கியங்களை மேலும் படைக்கத் தூண்டுதல் போன்றனவாகும்.

திறனாய்வின் நோக்கம்

திறனாய்வின் நோக்கம் அல்லது பணி, அடிப்படையில் இலக்கியத்தை மையமிட்டது. திறனாய்வு வினாக்களை எழுப்பி, விடை தந்து, வினாக்களையும் எதிர் கொள்கிறது.

இலக்கியம் ஒரு கலையாக, ஒரு சாதனமாக ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறபோது, அதனுடைய சாத்தியங்களையும், வழிகளையும் திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் ஒரு புதிராக வருணிக்கப்படுமானால் அந்தப் புதிரைத் திறனாய்வு விடுவிக்க முயல்கிறது. இலக்கியம் மக்களுக்கானது: மக்களைப் பற்றி பேசுகிறது; மக்களிடம் போகிறது: மக்களைப் பாதிக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அந்த உறவுகளை இனங்கண்டு விளக்குகிறது.

இலக்கியம் ஒரு காலத்தை, ஒரு இடத்தைப் பற்றி எழுந்திருக்கிறது என்று வருணிக்கும்போது அதன் கால, இட, அச்சுக்களை (TIME, SPACE, AXIS) திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் பிரத்தியேகமாகப் பல கூறுகளையும், பண்புகளையும், உத்திகளையும் கொண்டிருக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அதனை ஆழ்ந்து சென்று புலப்படுத்துகின்றது. இலக்கியம் பல செந்நெறிகளையும்(TRENDS], பல இலக்கியப் போக்குகளையும் (MOVEMENTS], பல கருத்துக்களையும் [CONCEPTS], கொண்டிருப்பது என்று வருணிக்கப்படுமானால், திறனாய்வு பொருத்தமான தளங்களில் காலூன்றி, இலக்கியத்தின் இந்த இயங்கு நிலைகளையும் கோணங்களையும் பகுத்து ஆராய்கிறது.

முடிவுரை

இவ்வாறு திறனாய்வு விசாலமான பணிகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதோடு, இலக்கியத்தை ஒரு தளமாகக் கொண்டு, திறனாய்வு ஒரு அறிவுத் தேடலாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி இலக்கியத்தைக் காலம், இடம் என்ற பரிமாணங்களில் இடைவெளியை நிரப்பிப் புரிந்து கொள்ளுதலுக்குத் துணை நிற்கிறது. இலக்கியத்தை விளக்கி, மதிப்பீடு செய்து. வாசிப்புகளுக்குப் பல பரிமாணங்களைத் தருகிறது.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »