இயற்கையியல் (Naturnlism)

இயற்கையியல் (Naturnlism)

இயற்கையியல்’ (Nataralism) என்ற சொல்லுக்குப் பொருள் ‘இயற்கையின்படி இருப்பது அல்லது இயங்குவதும் என்பதாகும். ‘இயற்கையியல்’ என்ற இலக்கிய இயக்கமாவது, கலை அல்லது இலக்கியத்தில், வாழ்க்கையை ஒரு குறிக்கோள் முறையில் தீட்டிக்காட்டாமல், இயற்கையில் உள்ளபடியே முழுமையாகத் தீட்டிக்காட்டும் முயற்சியை நோக்கிப் படைப்பாளர் செல்வதாகும்.

இயற்கையியல் இயக்கம்

இயக்க அடிப்படையில் பிரெஞ்சு நாட்டில் சில நாவல்கள் எழுந்தன, அந்நாவல் படைப்பாளருள் தலைமையிடம் வகிப்பவர் எமிலி ஜோலா (Emile Zola) என்பவராவார். இவ்வியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னைய காலக்கட்டத்தில் எழுந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை வளர்ந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மலர்ந்திருந்தது.

இயற்கையியல் (Naturalism) பற்றி அறிஞர்களின் கூற்றுகள்

கிரேக்க நாட்டுத்தத்துவத்தைப் பொறுத்தவரை ‘இயற்கையியல்’ என்ற சொல்லின் பழைய பொருள் இன்பத்தைத் துய்த்தல்’ என்பதாகும்.

  • ஹால்பக் (Holbach) என்பவர் கருத்துப்படி,

“இயற்கையியல்“ என்பது ஒழுங்குபட்ட ஒரு முறையான தத்துவமாகும். இதன்படி மனிதன் என்பவன் அண்டம் என்னும் மிகப்பெரிய பொறியினுள் ஒரு சிறுஉறுப்பாவான். அவ்வண்டப் பொறியானது இயற்கையை நிர்ணயம் செய்வதுபோல், அவனது வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது. அவ்வியற்கையோ, இடமும் காலமும் கடத்த தத்துவங்களாலும் நுண்பொருள் பண்புகளாலும் தெய்வீக சக்திகளாலும் இயங்காது இயற்கையாய் தன்னிச்சையாய் இயங்கும் ஒன்றாகும்.  

  • G. Gaorge என்பவர்,  இவ்வுலகம் பற்றி வெவ்வேறு வசையான இரு கருத்துக்கள் உண்டு என்கிறார்.

1. ஒருவகை, நாம் காணும் இயற்கைக்கு அப்பாற்பட்டு அல்லது நாம் காணும் இயற்கைக்குள் இருக்கும் ‘கடவுள்’ அல்லது ஆத்மாவைப்பற்றி உலவும் சமயக்கொள்கைகளாகும்.

2. இரண்டாம் வகை, தன்னில்தானே இயங்குவதாக, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கின்ற இயற்கையின் செயற்பாடு பற்றி நிலவிடும் பொருளியல் (Materialism), இயற்கையியல், நடப்பியல் ஆகியவற்றின் சார்பாக விளங்கும் கொள்கைகளாகும். இயற்கையைக் கடந்திருக்கும் ஒரு சக்தியின்பால் நம்பிக்கை கொள்வோர் இந்த உலகத்தையும் மனித இயற்கையையும் விளங்கிக்கொள்வதற்கு அல்லது விளக்குவதற்குப் பொருளியியல் பாகுபாடுகளோ, தூயஇயற்கைக் கோட்பாடுகளோ போதாது என எண்ணுகின்றனர்.  இவ்வகையினர் சிந்தனைப்படி இயற்கையென்பதும், மனிதஇயற்கை என்பதும் நன்கு வேறுபட்டவையாக பிரித்து அறியத்தக்கனவாவும் இருக்கின்றன.

இயற்கையியல்வாதிகளோ இயற்கை என்பதனைத் தூயஇயற்கை நெறிமுறைகளாலேயே விளங்கிக்கொண்டு விளக்கமுடியும் எனக் கருதுகின்றனர். இவ்வகையில் இவர்களுக்கும் நடப்பியல்வாதி அல்லது பொருளியல்வாதிகளுக்கும் இடையே ஓரளவு ஒற்றுமை உண்டு.

  • டிட்ராட் (Diderot) என்பவரின் கூற்றுப்படி,

இயற்கையியல்வாதிகள் என்பவர்கள் கடவுளை நம்பாதவர்கள் என்றும் பொருளியல் சாரத்தில் (Material substance) மட்டும் நம்பிக்கை உடையவர்கள் என்றும் கருதினார். 1839 ஆம் ஆண்டு செயின்ட். பியூவி (Sainte-Beuve) என்பவர், ‘இயற்கையியல்’ என்பதை விளக்கும்போதெல்லாம் அதனருகே அடைப்புக்குள் ‘Materialism’ என்பதைப் பயன்படுத்தினார். இதனால் ‘இயற்கையியல்’ என்பதும் ‘பொருளியல்’ என்பதும் ஏறக்குறைய ஒன்று என்ற கருத்து உளவலாயிற்று.

  • அரை நூற்றாண்டுக்குப்பின் 1882ஆம் ஆண்டு காரோ (Caro) என்ற தத்துவஞானி, ‘தெய்வீகஇயல்’ என்பதற்கு மாறுபட்ட ஒன்றாக இயற்கையியலைக் கொண்டார்.

இந்த உலகம் இயற்கை மயமாக இருக்கின்றது. இது உயிர்ப்புமிக்கதும் ஒழுங்குபட்டதும் ஒன்றோடொன்று இயைபுபட்டதுமான ஓர் அமைப்பினை உடையது. இதில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மரஞ்செடி கொடிகள் இயங்குகின்றன. நட்சத்திரங்கள் மின்னுகின்றன. கற்கள் கிடக்கின்றன. இவையாவும் இப்பேரண்டத்திற்குள்ள உயிரியக்கப் பெருவாழ்வினுள் ஒவ்வோர் அங்கம் வகிக்கின்றன. முன்னர் இன்பநுகர்ச்சியையும் பொருளியலையும் குறித்து வந்த ‘இயற்கையியல்’ மேற்கூறிய வண்ணம், இயற்கை, அண்டம், பூதவியல், உயிரியல் ஆகிய பொருளுணர்ச்சி அனைத்தையும் தாங்கி வழங்கிவரத் தொடங்கிற்று. நாளடைவில் புதியதொரு பொருள்வன்மை பெற்று இலக்கிய உலகோடு தொடர்புகொண்டு இலக்கிய ஆராய்ச்சியாளரின் நீடிய ஆராய்ச்சிக்குரியதாயிற்று.

இவ்வியற்கையியலைப் போற்றும் இயற்கையியல்வாதியர் (Naturnlists), ஓவியக்கலையைப் பொறுத்தமட்டில், இயற்கையின் உண்மை வடிவங்களை அப்படியே திரைச்சீலையில் வரைந்து காட்டவே விரும்பினர். அதாவது, இயற்கையில் படைக்கப்பட்ட ஒன்றைப் பார்த்து அதுபோலவே இயற்கை வண்ணம் முழுதுமாகத் தெரியும்படி வரைந்துகாட்ட விரும்பினர். ஆயின், வரலாற்றுத் தொடர்பாகவோ உருவகத் தொடர்பாகவோ உள்ள எதையும் வரைந்துகாட்ட விரும்பவில்லை.

இவ்வியற்கையியல்வாதிகளாகிய ஓவியக்கலைஞர்களால் பிரெஞ்சு நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், இயற்கையியல் என்பது நுண்கலை உலகத்தோடு தொடர்புகொள்ளலாயிற்று. பாட்லியர் (Baudelaire) போன்றோரால் ஊக்குவிக்கப்பெற்றது. இனி, இலக்கியத்தில் இடம்பெற்ற ‘இயற்கையியல்’ எவ்வெவ்வகையில் அமைந்திருந்தது எனக்காண்போம்.

மனிதனை விலங்காகக் காட்டும் இயற்கையியல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் உலகத்தில் நேர்ந்த புதிய கண்டுபிடிப்புகளும் முறைகளும் (the new Physics of Newton, the Biology of Darwin, Sociology of of Herbert Spencer) தொழில் வளர்ச்சியும் புரட்சியும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த இலக்கியவாணர்களையும் பாதித்திருக்கின்றன. அறிவியல்துறை பற்றிய முக்கிய சில கொள்கைகளானவை,

1.மனிதனையும் மனிதனின் இயற்கைப் பண்புகளையும் இலக்கியத்தில் படைத்துக் காட்டும் எழுத்தாளர் சிலரால் மேற்கொள்ளப்பட்டன.

2. மனிதன் உயர்வாக வைத்துப் போற்றப்படும் நிலைபோலவே, அவனுக்கு இயல்பாக அமைந்த சில விலங்கு உணர்ச்சிகளின் அடிப்படையில் பொதுவாக அவனியங்கும் நிலையும் எழுத்தாளர் சிலரால் சித்தரிக்கப்பட்டது.

டார்வின் கண்டுபிடித்த  ‘உள்ளது சிறத்தல்’ என்னும் கொள்கை இயற்கையியல்வாதிகளைப் படைப்புத்துறையில் பெரிதும் இயக்கியுள்ளது. இயற்கையியல்வாதிகள் மனிதனை ஒரு சாதாரண விலங்கினைப் போல நோக்கியும் அவ்விலங்குத்தன்மை கொண்டு அவன் நடந்து கொள்ளக்கூடும் நடைமுறைகளை எடுத்துக்காட்டியும் அவனது உயரிய நோக்கமென்னும் வலையினின்றும் அவனை விடுவித்து விளக்கியும் உள்ளனர்.

மனிதனைக் குறிக்கோள் நிலையில் வைத்துக்காட்ட முனைந்த புனைவியல்வாதிகள்போல் அல்லாது இயற்கையியல்வாதிகள் மனிதனை விலங்கு நிலையிலேயே வைத்துக் காட்டினர். மனிதன் உயரிய தெய்வீகப் பேராற்றலின் படைப்பாகக் காட்டப்படாமல், விலங்கு நிலையினின்றும் ஓரளவே ‘உயர்ந்திருக்கின்ற ஓரினமாகக் காட்டப்பட்டான். வாழ்க்கையும் ஒரு பெரியதொடர் போராட்டமாகவே காட்டப்பட்டது.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதனென்ற கருத்தும், குரங்கிலிருந்து வளர்ந்த மனிதன் மறுபடியும் மனிதநிலையினின்றும் தாழக்கூடும் என்ற கருத்தும் எழுத்தாளர் சிலரால் இலக்கியத்தில் ஏற்றப்பட்டன. ‘மனித விலங்கு’ (The human animal) என்னும் ஒரு நாவல் 1913ஆம் ஆண்டு சார்பென்டிர் (Charpentier) என்பவரால் இயற்றப்பட்டது. ‘உள்ளது சிறத்தல்’ என்னும் இயற்கைநியதி புறக்கணிக்கப்பட்டு உள்ளதும் கெடுதல்’ என்னும் போக்கும் மனித வாழ்க்கையைப் பொறுத்தஅளவில் இலக்கியத்துறையில் ஏற்படலாயிற்று.

பிரெஞ்சுமொழியில் இப்போக்கினை உடைய நாவல்கள் சில எழுந்தன. பின்னாளில் ஃபிராய்ட் என்பார் விளக்கியதற்கேற்ப, மனிதனானவன் ஒரு குறிப்பிட்ட நெருக்கடி வரும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடர்ப்பாட்டிற்கு ஆளாகும்போது அல்லது பாலுணர்வுக்கு இரையாகும்போது அல்லது குடியில் ஆழும்போது அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் புதைந்துகிடக்கும் காட்டுமிராண்டி நிலைக்குத் திரும்பி விடுகின்றான்.  இதனால் இயற்கையியல் முறையில் எழுந்த இலக்கியங்களில் காணப்பட்ட காட்சிகளுக்குரிய மூலங்கள் விலங்கு உலகத்தினின்றும் அவ்வுலகம் பற்றிய சொற்கோவையினின்றும் பெறப்பட்டன. இதன் விளைவாக இயற்கையியல்வாதிகள் சினத்திற்கும் ஆளாயினர்.

இயற்கையியல் நாவல்களில் இயற்கை நியதிபற்றி அல்லது இயற்கைச் சூழல்களையொட்டி மனிதனைச் சித்தரித்துக் காட்டுவதே முக்கிய நோக்கமாக இருந்தன. இவ்வகை எழுத்தாளர்கள் தத்தம் சொத்தப் படைப்புரிமையைப் பெரிதும் விட்டுக்கொடுத்துப் படைப்புக்குரிய சூழ்நிலைகளுக்கே தங்களை ஆளாக்கிக்கொண்டனர். இவர்கள் படைத்த நாவல்களில் வரும் சுதாநாயகர்களும் இப்படியே இருந்தார்கள்.

கிராமிய இயற்கையியல் (Rural Naturalism)

கிராமியச் சூழலில் வாழ்ந்து வயல்வெளிகளில் பாடுபட்டுப் பயிர் செய்யும் உழவர்கள் வாழ்வும் அவர்க்கென்று அமைந்த தனித்த கிராமியப் பண்புகளும் இயற்கையியல் இலக்கியத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இவ்வகை நாவல்களில், உளவியல் முறையில் உழவர் பெருமக்களின் உள்ளம் எவ்வெவ்வேறு செயற்படுகின்றது. தங்களைச் சுற்றியிருக்கும் தங்களின் தொழிற்களமாகிய நிலத்தோடு எவ்வெவ்வாறு அவர்கள் போராடுகின்றார்கள் என்பனவும் அழகுறக் காட்டப்பட்டன. சுருங்கக்கூறின் கிராமியச்சூழலை ஒட்டி உளவியல் இலக்கியம் (Pastoral Literature) உருவானது. இவ்வகையில் அமெரிக்கநாட்டு எழுத்தாளர்களாகிய ஹாம்லின் கார்லண்டு (Hamlin Garland), வில்லா கேதர் (Willa Cather), எல்லன் கிளாஸ்கோ (Fllen Glasgow), பால்க்னர் (Faulkner)ஆகியோரின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

ருசிய நாட்டில் டால்ஸ்டாயின் நாடகம் ஒன்றும் (The Powcr of Darkness), கார்க்கியின் (Gorkey) நாடகம் ஒன்றும் (The Lower Depths) உழவர்க்குரிய காம இச்சையையும் அக்காலக்கட்டத்தில் அவர்தம் செயற்போக்கினையும் விளக்கியுள்ளன. இவ்வகை இயற்கையியல் நாடகங்களில், நடுத்தர வர்க்கமாகிய உழவர் அல்லது உழைப்பாளர் கூட்டம் பற்றிய நடப்பியல் செய்திகளும் அவர்களிடையே நிகழும் நிகழ்ச்சிகளும் இவர்கள் அல்லாத ஏனைய கூட்டத்தார்க்கும் புலனாகும்படி அமைத்துக் காட்டப்பட்டன. சுருங்கக் கூறின், இயற்கையியல் நாவல்களும் நாடகங்களும் இயற்கையோடு இயைந்த கிராமிய வாழ்வைப் பிரதிபலித்தன.

நடப்பியல் – இயற்கையியல் வேறுபாடு

நடப்பியல் (Realism) என்பதும் இயற்கையியல் என்பதும் ஒருவகையில் ஒத்திருப்பினும் அவற்றை ஒன்றென்று கொள்வது பொருத்தமன்று. நடப்பியல் என்பது, உண்மைக் கூறுகளைத் தனித்த ஒருவர் காணும் கண்ணோட்டத்தோடு கலைப்பண்போடு நமக்குக் காட்டுவதாகும். பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் உண்மையை உள்ளபடி கண்டு வந்த கண்ணோட்டத்தோடு தொடர்புடையது நடப்பியலாகும். ஆயின், இயற்கையியல் என்பதோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய இயக்க வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதும் முருகியல் சார்பு கொண்டதுமான ஓர் இயக்கமாகும். பொருள்களைப் பார்க்கும் பார்வையோடு மட்டும் இயற்கையியல் தொடர்புடையதன்று. மனம்,  அம்மனத்தை இயக்கும் பொருள் வண்ண உலகம், இந்த இரண்டோடும் தொடர்புடைய அனைத்துவகை இயக்கங்களுக்கும் இயற்கைக் காரணங்களே பொறுப்பாகும் என்று கருதும் கோட்பாட்டோடு தொடர்புடையதாகும்.

கலையுலகத்தைப் பொறுத்த அளவில் பொருளியல் கோட்பாட்டோடு தொடர்புடைய இயற்கையியல் எமிலி ஜோலா (Emile Zola), ப்ளாபெர்ட் (Flaubert) கெய் டிமாப்பசான் (Guy de Maupessant) ஆகியோரின் நாவல் படைப்புக்களில் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றது.

இயற்கையியல் இயக்கத் தொடர்பான செய்திகள்

எமிலி ஜோலா என்பவருக்கு முன்னால் கிளாட் பெர்னார்டு (Claude Bernard) என்பவர் இயற்கையியல் பற்றிய முருகியல் கோட்பாடுகளின் (Naturalistic Aesthetics) அடிப்படையை விளக்கி உள்ளதாக நாம் அறிய வருகின்றோம். ஜோலா ஓர் எழுத்தாளனுக்கு அறிவுறுத்தும் செய்தியாவது

உண்மை இயலை ஒரு விஞ்ஞானியைப் போல உற்று நோக்கி அவ்வண்ணமே சிந்தித்து எழுத வேண்டும். ஒன்று எப்படி இருக்கின்றது என்று கண்டால் போதும். அது ஏன் இருக்கின்றது என்று காணவேண்டியதில்லை.

இவ்வகை நோக்குடைய இயற்கையியல்வாதிகள் தனிப்பாட்டு வகையை விரும்பியதைவிட நாடக வகையை அல்லது நாவல் வகையைப் பெரிதும் விரும்பினர். காரணம், இவற்றுள் சில கதைப்பாத்திரங்களைப் படைத்துக்காட்டி, அவை குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு உட்பட்டு அச்சூழ்நிலைகளால் தாக்குறும் இயற்கை நிலையில் அவை செயல்படும் திறத்தை இயற்கை வண்ணம் மிக வெளிப்படுத்திக் காட்டமுடியும் என்பதே.

இயற்கையியல் என்பது தொடக்கத்தில் பழங்கால கிரேக்கநாட்டில் வழங்கிய ஒரு கோட்பாட்டோடு தொடர்பு கொண்டு பின்னாளில் விஞ்ஞான முறையில் வளர்ந்து காலப்போக்கில் இலக்கியம் என்னும் எழில் நங்கையோடு தொடர்பு கொள்ளலாயிற்று. ஓரளவு கருத்து வகையில் வளரத் தொடங்கிய இயற்கையியல் என்னும் கோட்பாடு நாளடைவில் இலக்கியத் திறனாய்வு உலகில் ஆராய்ச்சியாளர்க்குரிய ஓர் இயக்கமாக மலர்ந்தது. இவ்வியக்கம் வெவ்வேறு நாடுகளில் அவ்வப்போது இலக்கியப் பூங்கொடியில் படரித் தொடங்கிக் கண்ணுக்கினிய புதிய சில சிந்தனை மலர்களைக் கலை உலகிற்கு வழங்கியது. இலக்கியம் செழித்த ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலும் இவ்வியக்கம் இடம் பெற்றதாயினும் சிறிதுசிறிது கொள்கையளவில் இதற்குரிய விளக்கம் வேறுபட்டிருந்தது என்பதையும் இலக்கிய ஆராய்ச்சி வரலாற்று முறையால் நாம் அறிய வருகின்றோம்.

இவ்வியக்கம் முதன்முதலாகப் பிரான்சு நாட்டில் தோன்றியது. பின்னர் இங்கிலாந்து நாட்டிற்குப் பரவியது. ஆயினும் பிரான்சு நாட் டில் வளர்ந்திருந்த இயற்கையியல் என்ற இலக்கிய இயக்கம் சிறிது வேறுபட்டு இங்கிலாந்து நாட்டில் வளர்ந்து வந்தது. மொத்தத்தில் பிரான்சு நாட்டில் பெற்றிருந்த அவ்வளவு செல்வாக்கினை இவ்வியக்கம் இங்கிலாந்தில் பெறவில்லை. ஐரோப்பிய நாடுகளை விட சமுதாயப் பொருளாதாரத் துறைகளில் அதிகமான மாற்றங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்பட்டமையின். இயற்கையியல் இயக்கத்திற்கும் அதிக செல்வாக்கு ஆண்டு ஏற்பட்டது. ஆயினும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ‘இயற்கையியல்’ என்பது இருபதாம் நூற்றாண்டின் ‘ஒருவகை புதிய நடப்பியல் (a new Realism ) என்று வழங்கப்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இயற்கையியல் இலக்கிய இயக்கம் செர்மானிய நாட்டிலும் பல்வகை நிலைகளில் பரவலாகப் படர்ந்திருந்தது. இயற்கையியல் இலக்கியச் சார்பு கொண்ட சில நாவல்களும் நாடகங்களும் செர்மானிய நாட்டில் எழுந்தன. செர்மானிய இயற்கையியல்வாதிகளுக்கு இப்சனும் டால்ஸ்டாயும் முன் மாதிரிகளாக அமைந்தனர்.

ஐவகை இயற்கையியல்

இயற்கையியல் தத்துவ முறையிலும் பரிணாமவளர்ச்சிக் கொள்கை முறையிலும் இலக்கியத்துறையில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘இயற்கையியல்’ இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சார்பு மிக்கதாயினும், அது குறித்து வழங்கும் பல குறிப்புகளையும் செய்திகளையும் விரிவாக ஆராயும் போது, பொது நிலையில் கீழ்க்கண்ட ஐந்து வகையாகப்  பிரித்துக் காட்டப்படுகின்றன.

(1) தத்துவவழி இயற்கையியல் (Philosophical Naturalism)

(2) அறிவியல் கொள்கைப்படி மனிதனைக் காட்டும் இயற்கையியல்

     (டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை)

(3) கிராமிய இயற்கையியல் (Rural Naturalism)

(4) உள்ளதை உள்ளபடி (Realism) காட்டும் இயற்கையியல்

(5) அறிவியல்கூறு புலனாகும் இயற்கையியல்

முடிவுரை

இலக்கிய ஆராய்ச்சித் துறையில் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் இவ்வியக்கம் இடம் பெறுவதற்குரிய அல்லது செல்வாக்குப் பெறுவதற்குரிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஆயினும், உலக நாடுகள் பலவற்றுக்கும் பொது வாக வளர்ந்து வரும் இலக்கியத் திறனாய்வுத் துறையில் இவ்வியக்கம் பற்றிய சிந்தனைகளுக்கும் ஓரிடம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here