சிறுதாயம் விளையாட்டு

நாட்டுப்புற கலைகளுள் குறிப்பிடும்படியாக உடல் மற்றும் ஆரோக்கியத்தினை வளர்ப்பதில் மிக முக்கிய இடம் விளையாட்டிற்கு உண்டு. நாட்டுப்புற விளையாட்டுகளுள் உடல் சார்ந்த விளையாட்டுகள் மூளை சார்ந்த விளையாட்டுகளில் மகளிர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறன் சார்ந்த நாட்டுப்புற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு மகளிர் பெரும் பங்காற்றியுள்ளனர். சங்க காலத்தில் இருந்தே பல்வகை விளையாட்டுகளை மகளிர் விளையாடி வருகின்றனர். நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப தற்காலத்தில் விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம், இயந்திரமயமான வாழ்க்கையும், பொருளாதார நெருக்கடியும், தொலைக்காட்சியும் ஆகும். பழங்காலத்தில் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியன இயல்பாகவே கிடைத்தன. அதனால், மகளிர் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர். இந்நிலையில் விளையாட்டுகளில் கவனம் செலுத்தினர், ஆனால், இன்றைய சூழலில் கணவன், மனைவி என்ற நிலைப்பாட்டில் கணவனின் வருமானத்தோடு மட்டுமல்லாமல் மனைவியின் வருமானமும் தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக, மகளிர் தங்களுடைய குடும்பத்தைக் காப்பதற்குத் தொழிலை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு இடையிலான நேரம் குறுகுகிறது. இதன் காரணமாகவே இன்றைய சூழலில் விளையாட்டுகள் தேய்ந்து போகின்றன.

நாட்டுப்புற மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். நாட்டுப்புற விளையாட்டுகளுள் சிறுதாயம் விளையாட்டு கிருஷ்ணகிரி வட்டாரத்தில், நாட்டுப்புற மக்களிடையே விளையாடப்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு, பெண்களால் விளையாடப்பட்டு வருகின்றது. இது தாயாட்டத்திலிருந்து மாறுபட்டது. இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டை தாயம் விளையாட்டு என்று தமிழகத்தின் பிற பகுதிகளில் வழங்கப்படுகின்றது. இவ்விளையாட்டு, ஆண்கள் பெண்கள் எனத் தனித்தனியே இரண்டு பிரிவினரும் விளையாடும் விளையாட்டாக இருக்கின்றது.           

            சிறுதாயக்கட்டத்திற்கு இவ்விளையாட்டு எதிரெதிரே இருவரும் அமர்ந்து புளியாங்கொட்டைகளை தெரித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் கட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

சிறுதாயக்கட்டம்

            நான்கு மையப்பகுதியை மலைகளாக வைத்துக்கொள்கின்றனர். ஒட்டுமொத்த கட்டத்தின் மையப்பகுதி இரண்டு பேருக்கும் பொதுவான பகுதியாகும். இதைப் பழமலை என்கிறோம். ஒரு பக்கத்திற்கு ஐந்து கட்டங்கள் விதமாக முதலில் ஆறு கோடுகளும், குறுக்க வாட்டில் ஆறு கோடுகளும் இருக்கும். குறுக்கில் ஐந்து கட்டங்களையும் நெடுக்கில் ஐந்து கட்டங்களையும் வரையறுத்துக்கொள்கின்றனர்.

சிறுதாயம் கட்டம் வரைய பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாடப்படும் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்துக் கட்டத்தை வரைந்துக் கொள்கின்றனர். கட்டத்தை வரைவதற்குக் கோவை இலை, சுண்ணாம் கட்டி தீச்சட்டி ஓடு, செம்மண் கட்டி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுதாயம் விளையாடுவோர் நேரம்

            சிறுதாயம் விளையாட்டில் இரண்டு நபர்கள் பங்கெடுத்துக்கொள்வர். இந்த விளையாட்டைப் பெண்கள் மட்டும் விளையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் சிறுவர்களும் ஆடவர்களும் விளையாடுவதுண்டு. இவ்விளையாட்டுப் பகலிலும் இரவு நேரங்களிலும் ஓய்வான நேரத்தில் விளையாடப்படுகிறது.

விளையாட்டுக்களம்

            வேலைக்குச் செல்லும் மகளிர் ஓய்வு நேரங்களிலும், தோட்ட வேலைசெய்யும் நேரங்களிலும், கழனியில் வேலை செய்யும் நேரங்களிலும், மரங்களின் நிழலிலும், மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மகளிர் பாறைகளின் மேற்புறத்திலும் கட்டங்கள் வரைந்து விளையாடுகின்றனர். பெரும்பாலும் வீட்டின் உள்ளே பெண்கள் இவ்விளையாட்டை விளையாடுகின்றனர்.

சிறுதாயாட்டத்திற்குப் பயன்படும் பொருட்கள்

            சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெண்மையாகும் வரை இக்கொட்டைகளைக் கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பர். “ஒரு சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வதும் உண்டு. நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடப்படுவதும் விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வர்.”1

            இவ்விளையாட்டில் கொட்டைகளின் வெண்மைப்பகுதி மேல் நோக்கி இருப்பதை வைத்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். நான்கு காய்களும் வெண்மையாகத் தெரிந்தால் அது நான்காகக் கணக்கிடப்படுகின்றன. அதுவே, நான்கு கொட்டைகளும் கவிழ்ந்து கருப்புப் பகுதி தெரிந்தால் எட்டு எனக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர்.

எருக்கம் பூ

            புளியங்கொட்டை இல்லாத, கிடைக்காத சூழ்நிலையில், விளையாட்டிற்கு எருக்கன் பூவைப் பயன்படத்துவதுண்டு. எருக்கன் செடியில் மொட்டின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் பூ பகுதியைக் கொண்டு விளையாடுகின்றனர்.

            எருக்கம் பூவைப் பயன்டுத்தும்போது விளையாட்டில் பூ செங்குத்தாக இருப்பதையும் சாய்ந்து விழுந்து இருப்பதையும் வைத்துக் கணக்கிடுகின்றனர்.

            விளையாடும்பொதுது நான்கு பூவும் செங்குத்தாக இருந்தால் எட்டுஎனவும், நான்கு பூவும் சாய்ந்திருந்தால் அதை நான்கு எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். மூன்று பூ செங்குத்தாக நின்றால் மூன்று எனவும், ஒன்று இரண்டு பூ செங்குத்தாக இருப்பின் இரண்டு, ஒன்று எனவும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு எருக்கன் பூவை வைத்து விளையாடப்படுகின்றது.

“புளியங்கொட்டை இல்லாத சூழ்நிலையில் விளையாட்டிற்கு எருக்கம் பூவைப் பயன்படுத்தப்படுகின்றது. புளியங்கொட்டை இருந்தால் புளியங்கொட்டையையே பயன்படுத்துவர்.”2

விளையாட்டில் காயை நகர்த்துவதற்குப் பயன்படும் பொருட்கள்

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாயாட்டத்தை விளையாடுவதற்கு, புளியங்கொட்டை, புன்னைக்கொட்டை, கரிசட்டி ஓடு, எருக்கன்பூ இவற்றுள் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர். கட்டத்தில் எண்ணிக்கைக்கு ஏற்ப நகர்த்திச் செல்ல, சில பொருட்களைப் பயன்படுத்துவதுண்டு. அதாவது, அடையாளக் குறிப்புகளுக்காகத் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் சில கற்கள் விதைகள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று போலவே நான்கு பொருட்களையும் சேர்க்கின்றனர் எதிர் அணியும் அதே போன்று ஒரே மாதிரியாகச் சேகரிக்கின்றனர். ஆனால், இரண்டு அணியினரும் ஒரே வகையான பொருளைத் தேர்வு செய்வதில்லை. ஒருவர் பெரிய கற்களைப் பயன்படுத்தினால் எதிரணியினர் சிறிய கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

தாயம் விளையாடும் முறை

சிறுதாயம் விளையாட்டை விளையாடும்பொழுது இரண்டுபேர் இணைந்துதான் விளையாடத்தொடங்குகின்றனர். அவ்வாறு விளையாடும்போது கட்டத்தின் எதிர்ரெதிரே புறமாக ஒருவருக்கு ஒருவராக அமர்ந்துகொண்டு விளையாடத்தொடங்குவர். அவர்களுள் யார் முதலில் விளையாட்டைத் தொடங்குவது என ஒருமனதாகப் பேசி முடிவெடுத்து, நீ முதலில் தொடங்கு என்று சொல்லி, விளையாட்டைத் தொடங்குவர். அவ்வாறு தொடங்கும்போது முதலில் விளையாடக்கூடிய நபர் எருக்கன் பூ, அல்லது புளியங்கொட்டைகளைக் கொண்டு விளையாடும்போது அதில் என்ன எண்ணிக்கை விழுகிறதோ அந்த எண்ணிக்கையில் காயைக் கட்டத்தில் நகர்த்தத் தொடங்குகிறார்கள்.

 ஒரு நபர் நான்கு காய்கள் வீதம், கட்டத்திற்குள் வைத்திருப்பர். நான்கு என எண்ணிக்கை விழுந்தால் இரண்டு காய்களையும், நான்கு காய்களும் கருப்பாக விழுந்தால் நான்கு காய்களையும் கட்டத்தில் இறக்குகின்றனர். அதற்குமேல் ஒன்று விழுந்தால் ஒன்று என்றும், இரண்டு, மூன்று என எண்ணிக்கை விழுந்தால் முறையே காய்களை இறக்குகின்றனர். அந்தக் கட்டத்தில் உள்ளிருக்கும் காய்களை நகர்த்தத்தொடங்கியவுடன் நான்கு என எண் விழுந்தால் நான்கு கட்டங்களையும், எட்டு விழுந்தால் எட்டு கட்டங்களையும் கடந்து செல்கின்றன.

சிறுதாயம் விளையாட்டு முறைகளில் தாய் மலையில் காய் வெட்டப்படாது. இரண்டு அணியினருடைய காய்களை வெட்டுக்கட்டங்கள், மறு ஆட்டம் (அ) கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, தொக்கை பழம் எடுக்கும் மலை எனப்பல நிலைகள் கையாளப்படுகின்றன.”3 என்பதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது.

தாய்மலை

தாய்மலை என்பது, கட்டத்திற்குள் நகர்த்தத் தொடங்கும் இடங்களைக் குறிக்கும். இம்மலையைக் ‘காய் இறக்கும் மலை’ என்றும், முதல் ‘தாய் மலை’ என்றும் அழைப்பர்.”4 எட்டு, நான்கு எண்ணிக்கை விழுந்தவுடன் கட்டத்திற்கு வெளியே வைத்திருக்கக்கூடிய நான்கு கற்களுள் இரண்டு கல்லை (அ) நான்கு கல்லை, தாய் மலையில் வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து விழக்கூடிய ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கை அடிப்படைக்கேற்ப அந்தக் காயைக் கட்டத்தில் நகர்த்துகின்றனர். இரு அணியினரும் 2, 3, 4, 6, 7, 8, 10, 11, 12, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, ஆகிய கட்டங்களில் காய்களை நகர்த்தி வெட்டிக்கொள்ளலாம்.

1.ஆவது மலை, 5 ஆவது மலை, 9.ஆவது மலை, 13.ஆவது மலைகள் தவிர, வெளிக்கட்டங்களில் காய்கள் நின்றால், எதிரணியினர் எண்ணிக்கை அடிப்படையில் காய்களை வெட்டுகின்றனர். வெட்டுவது என்பது இரு அணியினருக்கும் பொதுவானது, அதேப்போல் உள் கட்டங்களுள் உள்ள 25 ஆவது கட்டமான பழம்மலை தவிர, மற்ற கட்டங்களில் காய்களை வெட்டுவர்.

மறுஆட்டம் (அ) கையாட்டம்

நான்கு, எட்டு, ஒன்று எண்ணிக்கை விழுந்தால், அதற்குக் கையாட்டம் என்று பெயர். இதை விளையாடுபவர் காய்களை குலுக்கிப்போட்டு மீண்டும் விளையாடுவர்”5

வெட்டாட்டம்

எதிரணியினரின் காய்களுள் ஏதாவது ஒரு காயை வெட்டுவர். இதற்கு ‘வெட்டாட்டம்’ என்று பெயர். இந்த வெட்டாட்டத்தில் மறுபடியும் புளியங்கொட்டைகளைக் குழுக்கிப் போடுவர். இது மறுமுறை விளையாட மீண்டும் வாய்ப்புத் தருவதாகும்.

கோடிமலை

            தாய் மலையிலிருந்து காய்களை இறக்கிக் கட்டத்தில் நகர்த்திக் கொண்டு வரும்பொழுது, 13 ஆவது மலையைக் ‘கோடிமலை’ என்று அழைக்கின்றனர். இம்மலையில் காய்கள் இருந்தால், பழம் எடுப்பதற்கு உரிய மலையாகவே கோடி மலை கருதப்படுகிறது. இதற்கு நிரம்பி விட்டது என்று பொருள்”6 இது வாய்மொழிச்செய்தியாகும்.

வெளிகட்ட தொக்கை

வெளிகட்டங்களான 14 ஆவது 15 ஆவது 16 ஆவது கட்டங்களில் காய் நின்றால் தொக்கை என்று கூறுகின்றனர். இக்கட்டங்களில் இருக்கும் காய்கள், உள்கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், எதிரணியினருடைய காய்களை வெட்டினால் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

உள்கட்டத்தொக்கை (அ) பழம் எடுக்கும் மலை

இம்மலையை ‘வெற்றிமலை’ என்றும் ‘பழம் எடுக்கும் மலை’ என்றும் அழைக்கின்றனர். 24 ஆவது கட்டத்தில் காய் நிற்கும்போது தொக்கை என்பர். தாயம் போட்டுத் தொக்கையில் உள்ள காய்களைப் பழமெடுப்பர். இரு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னும் பழமாகினாலும், இறுதியில் எந்த அணியினர் முதலில் பழம் எடுக்கிறார்களோ? அவர்களே வெற்றிபெற்றவர் ஆவார்.

விளையாட்டின் விதிமுறைகள்

சிறுதாயாட்டத்தை நான்குபேர் விளையாடும் பொழுது இரண்டுபேர் விளையாடுவது போலவே, விளையாடலாம் என்பது விளையாட்டின் விதிமுறை. காய் வீசுவது மட்டும் சுழற்சி அடிப்படையில் வந்து கொண்டிருக்கையில், அதில் ஒரே அணியில் இருப்பவர்கள் அவர்களுக்குரிய காயை நகர்த்தி;க் கொள்ளவேண்டும் என்பது விதிமுறையாகும்.”7

            விளையாடுபவர்கள், ஆட்டத்தில் காய்களைப் பயன்படுத்தும்போது, காய்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு. அதேப்போல கற்கள் என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு.

            சிறுதாயாட்டத்தில், புளியங்கொட்டையை விளையாடும் களத்தில் போடும் பொழுது ஒன்று விழுந்தால் ஒரு தாயமாகும். ஒரு தாயத்திற்கு ஒரு காயை மட்டும் தாய் மலையில் இறக்குதல் வேண்டும் என்பது விளையாட்டின் நெறிமுறையாகும். ஆனால், எட்டு, நான்கு எண்ணிக்கையில் விழுந்தால் விளையாட்டில் காய்களின் நகர்வுகளுக்கு மட்டும் இந்த எண்ணிக்கைகளைப் பயன்படுத்துவதுண்டு. குறைவான நேரத்தில் விளையாட்டை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், விளையாட்டில் காயை விளையாட்டுக் களத்தில் குலுக்கிப் போடும்போது நான்கும் எட்டும் விழுந்தால் நான்கிற்கு ஒரு காயையும், எட்டிற்கு இரண்டு காய்களையும் தாய்மலையிலிருந்து இறக்கவேண்டும்.

முதலில் கொட்டையை விளையாட்டுக்களத்தில் குலுக்கிப்போட்டு நான்கு, எட்டு தாயம் விழும் எண்ணிக்கையில் காய்களை, முதல் மலையில் இறக்கினால், எதிரணியினர் ஒன்பதாவது மலையில் காய்களை இறக்க வேண்டும் என்பது விதிமுறை.

முன் கட்டத்தில் சுற்றி வந்து ஏதாவது ஒரு காய், பழம் எடுக்கும் மலையில் தொக்கையில் உட்கார்ந்து விடும். தொக்கையில் உட்கார்ந்த காயைத் தாயம் போட்டுத்தான் பழமாக்க முடியும். மற்ற எந்த எண்கள் விழுந்தாலும் தொக்கையிலிருந்து பழம் எடுக்க முடியாது. எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும் என்பது விதிமுறை.

எதிரணியினருடைய ஏதாவது ஒரு காயை வெட்டினால் மட்டுமே, உள்கட்டத்திற்குள் சென்று பழம் எடுக்க முடியும். ஒருவருடைய காயை, வெட்டி விட்டுத் தன் காய்களை உள்கட்டத்தில் கொண்டு சென்று விட்டால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஒவ்வொரு காய்களையும் அடுக்கி பிடித்துக் கீழே போடக் கூடாது. அப்படி கீழே போட்டு விழும் எண்ணிக்கைக்குக் காய்களைக் கட்டத்திற்கு நகர்த்தமாட்டார்கள் என்பது விதிமுறை.

விட்டுக் கொடுத்தல்

            ஒரு சில நேரங்களில் நட்பு ரீதியில் எதிரணியினரும் வெற்றி பெறட்டும் என்னும் நோக்கில், காய்களை வெட்டுபவர், வெட்டாமல் போவதும் உண்டு.

சமூகப் பின்புலம்

சிறுதாயாட்டம் விளையாடும் பெண்களின் உறவு முறைகள் வலிமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த விளையாட்டை வீட்டின் அருகாமையிலேயே விளையாடுகின்றனர். நெருங்கிய உறவு முறைக்காரர்கள் மட்டும் வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்றனர். அதேப்போல் ஆண்கள் வீதியிலும், பொது இடங்களிலும் பல விளையாட்டுகளை விளையாடுகின்றனர். ஆனால், பெண்கள் அது போன்று விளையாடுவதில்லை. அதாவது, சமூகத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுந்த மகாபாரதத்தில் ஆணாதிக்கத்தை மையப்படுத்தி நாடு, நகரம், ஊர் எல்லாவற்றையும் தாயக் கட்டையை உருட்டி இழந்ததை இந்த விளையாட்டுப் புலப்படுத்துகின்றது. ஆனால், சிறுதாயாட்டத்தில் பொருளையோ, பிறவற்றையோ வைத்து விளையாடுவதில்லை என்பதும், கால மாற்றம், சமுதாய மாற்றத்திற்கான விழிப்பாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

குடும்பத்தை நர்வாகம் செய்வதில் பெண்ணின் பங்கு அளப்பரியாதாகும். பெண் சமுதாயம் தாயாட்டத்தினை விளையாடுவதற்குப் பொதுவிடங்களைத் தவிர்ப்பது என்பது, இதைச் சூதாட்டம் என்ற நிலையில் பார்க்கப்படும் கண்ணோட்டமாகும். ஆனால், கட்டையை உருட்டுவதை விட பெரும்பாலும் புளியங்கொட்டையைக் கொண்டு விளையாடும் சிறுதாய விளையாட்டையே பெண்கள் விரும்பி விளையாடுகின்றனர். புளியங்கொட்டைகளைப் பயன்படுத்துதல் குடும்பத்தை நிர்வாகிக்கும் முறையினை உணர்த்துகிறது. கணவன், குழந்தைகள், மாமியார், மாமனார் ஆகியோரை நிர்வகிக்கும் பொறுப்பினை வளர்க்கின்றது.

சிற்றூர்ப் பகுதியில் வாழும் மக்கள் உழவுத்தொழிலையும் பிற தொழில்களையும் செய்து வாழ்கின்றனர். அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தொழில்களில் ஈடுபடுவதால் உழைத்துக் களைப்பைப் போக்கும் ஓய்வான நேரங்களில் அவர்கள் குழுவாக இருந்து இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, அக்கா ஆகியோர் சேர்ந்து விளையாடுவது குடும்ப உறவுகளைப் பேணிக்காக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

 குடும்ப உறவுகளோடு கட்டங்களைப் போட்டுத் தனித்தனியாக விளையாடும் பொழுது, அந்த உறவு முறைகளில் ஏற்படும் உறவினைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விளையாட்டில் பொருளையோ? பணத்தையோ வைத்து விளையாடுவதில்லை. ஆனால், அன்புக்கு மட்டும் ஏங்கி விளையாடப்படும் இவ்விளையாட்டுப் பொழுது போக்கு விளையாட்டாகவே நிகழ்த்தப்படுகிறது. பல்வேறு விதமான வழக்குச் சொற்களைச் சொல்லி விளையாடுகின்ற முறையையும் இவ்விளையாட்டில் பார்க்க முடிகிறது. கூழோ? கஞ்சியோ? தண்ணீரோ? வந்த உறவுக்காரர்களுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு விளையாட்டைத் தொடங்கும் முறையானது, பகுத்துயிர் வாழ்தலும், பல்லுயிர் ஓம்புதலுமாகிய விருந்தோம்பலைப் பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.

விளையாட்டின் நன்மைகள்

சிறுதாயாட்டமானது பெண்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் நுட்பமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதற்கு இந்த விளையாட்டு உதவி புரிகின்றது. குடும்ப உறவு முறைகளைப் பேணிக் காக்கும் பொருட்களான புளியாங்கொட்டையும் எருக்கம்பூவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இனக்குழு சமுதாயத்தில் சிறுதாயாட்டம் பெரும்பாலும் முல்லை நிலத்து விளையாட்டாகவே இருக்கிறது. இந்த விளையாட்டுப் பெண்களின் குடம்பத்தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக அமைந்தள்ளது.

சிறுதாயாட்டத்தில் வாழ்க்கை தத்துவம்

யார் எங்கு ஆரம்பித்தாலும் இறுதியில் சேர வேண்டியது ஓர் இடம்தான் என்பதை உணர்த்தும் விதமாகச் சிறுதாயம் விளையாட்டு அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதும், உதைப்பதும், வீழ்த்துவதும், ஒன்று சேர்வதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைக் கொள்வதும், நான் போராட வேண்டும், நீ போராட வேண்டும், என இப்படி இரண்டு பேரும் ஓரிடத்தில் வாழ்க்கையை நிறைவு செய்வதுமான வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துகிறது. இந்தப் போராட்டத்தில் எந்தக் காயும் வெட்டப்படலாம். காய்கள் மாட்டிக் கொள்ளாமல் வெற்றிபெறுவதே மகிழ்ச்சியான செய்தியாகும்.

முடிவுரை

சிறுதாயாட்டம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் மகளிர் விளையாடும் விளையாட்டாகவே உள்ளது. இவ்விளையாட்டுப் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் விளையாடப்படுகின்றது. சிறுதாயாட்டத்திற்குப் புளியங்கொட்டைகள் அல்லது எருக்கம் பூக்களை விளையாட்டுக்களத்தில்; கீழே போட்டுப் பயன்படுத்துகின்றனர். தாய்மலை, மறுஆட்டம், கையாட்டம், வெட்டாட்டம், கோடி மலை, வெளிகட்ட தொக்கை, உள்கட்ட தொக்கை, தொக்கைபழம் எடுக்கும் மலை என்ற நிலைகளில் கிருஷ்ணகிரி  வட்டாரத்தில் சிறுதாயாட்டம் முறை அமைந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி வட்டாரத்தில்  மாறுபட்டிருப்பதை அறிய முடிகிறது. மகளிர் சமுகப் பின்புலத்தோடுதான் சிறுதாயாட்டத்தை விளையாடுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்து மகளிர் தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களோடு மட்டும்தான் விளையாடுகின்ற முறையை இந்த விளையாட்டில் பார்க்க முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1.          நேர்க்காணல் பச்சையம்மாள் (24), மத்தினேரி, தேதி 10.4.15

2.          நேர்க்காணல் தமிழரசி (17), இராமபுரம், 2.05.15

3.          நேர்க்காணல் கண்ணம்மா (36), திம்மாபுரம், 4.5.14

4.          நேர்க்காணல் உமா (18), ஏரிக்கொல்லை, 22.04.15

5.          நேர்க்காணல் இரஞ்சிதா (30), செம்படமுத்தூர், 18.6.16

6.          நேர்க்காணல் பாஞ்சாலை (50), மாதேப்பட்டி 6.6.15

7.          நேர்க்காணல் சங்கீதா (22), செம்படமுத்தூர், 8.6.16

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஒசூர்-635130.

அலைபேசி எண் : 9943259247

மின்னஞ்சல் : aathmalingam1977@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here