Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

புதிய விடியல் - சிறுகதை -முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »