Tuesday, July 22, 2025
Home Blog Page 30

தண்டனை | சிறுகதை

மத்தியான நேரம். சித்திரகுப்தன் எருமை மாட்டின் கொம்பின் நுனியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். நன்றாகத் தண்ணீர் ஊற்றி கழுவினார். இருந்தும் அந்த எருமை மாடு கருகருன்னு இருட்டுப் போல கருப்பா இருந்தது. சிவந்த கண்களும் முறுக்கிய கொம்பும் யாருக்கும் பயத்தை வரவழைக்கும்.  பளிங்கு பாறையின் முன்னால் எமதர்மராஜா அலங்கரிக்கப்பட்ட உடையோடு நெஞ்சை நிமிர்த்தி ஒருமுறை அகலமாய் வாயைத் திறந்து சிரித்துக்கொண்டார். அவரின் கர்ஜனையால் எமலோகமே அதிர்ந்தது. எருமை மாட்டின் மீது அமர்ந்து கொண்டு  இன்றையத் தொழிலுக்குப் பூலோகம் கிளம்பிவிட்டார்.

      ராஜன் மிகவும் கவலையுடன் காணப்பட்டான். வயித்துப்புள்ளத்தாச்சி லட்சுமி மூடப்பட்ட அந்த அறையின் ஒரு பகுதியில் இரண்டு கால்களும் விரிந்த நிலையில் படுத்துக் கிடந்தாள். லட்மியால் வேதனை பொறுக்க முடியவில்லை. அவளைச் சுற்றிலும் சிஸ்டர்கள் நாலு பேர் இருந்தார்கள். லட்சுமியின் நெஞ்சுப்பகுதிக்கு அடியிலிருந்து கை வைத்து வயிற்றை நன்றாகக் கீழ் நோக்கி தள்ளிக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் தலைப்பகுதி மெல்லமெல்ல வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே நடப்பது பற்றி அறியாத ராஜன், தன்னுடைய விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தான். மனசு வேற வேகமாக இயங்கியது.  குழந்தை வெளியே வந்து கத்தியது. குழந்தையின் சத்தம் ராஜனின் காதுகளில் சங்கீதமாய் ஒலித்தது. எமன் இதற்கு மேல் பொறுமையில்லாதவராய்  பாசக்கயிற்றினை ராஜன் மீது வீசினார்.  குழந்தை பிறந்த மகிழ்ச்சி கொந்தளிப்பில் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மருத்துவரை உடனடியாக வரவழைக்கப்பட்டு ராஜனுக்கு சோதனை செய்யப்பட்டது. ராஜன் மாரடைப்பால் இறந்து விட்டான்  என்றார் மருத்துவர். அங்கிருந்தவர்களின் அழுகை ஒப்பாரியாய் மாரிப்போனது.

“பொறந்த குழந்தைய  ஒருமுறை கூடப் பாக்காம போயிட்டாரே…” “புள்ளப் பெத்துக்கிடக்குற மக லட்சுமி எழுந்து வந்து கேட்டா நா என்ன சொல்றது. கடவுளே.. என் மருமகப்புள்ளைய கொடுத்திடு. கடவுளே உனக்கு கண்ணில்லையா… இன்னும் வாழவே இல்லையே… அதுகுள்ள கூட்டிட்டு போயிட்டியே… ஆஆச்ச்ச்சு… ஆஆச்ச்சு…” என்று ஒப்பாரி வைத்தாள் லட்சுமியின் அம்மா.

ராஜன் கழுத்தில் கயிறை இறுக்கமாகக் கட்டி பூமியிலிருந்து எமலோகம் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் எமன்.  எருமை மாட்டின் வாலில் ராஜனை கட்டிப்போடப்பட்டது. கொஞ்ச நேரம் தான் இறந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனிடம் இல்லை. கொஞ்சகொஞ்சமாகத் தான் இறந்து எமனுடன் விண்ணுலகம் சென்று கொண்டிருக்கிறோம் என புரிய ஆரமித்தது ராஜனுக்கு. அழுதான். கண்ணீர் விட்டான். எமனிடன் கேள்விகள் பல கேட்டான்.

“எதற்காக என்னை இவ்வளவு சீக்கிரம் அழைத்துச் செல்கிறீர்” “நான் ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைச்சதில்லையே” “நான் என்ன தவறு செய்தேன்” “பிற்ந்த என் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் சாகடித்துவிட்டீர்களே? அப்படி என்ன உங்களுக்கு அவசரம்? இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் ஊரையே கொள்ளை அடிக்கின்றார்களே! அவர்களை முதலில் சாகடிக்க வேண்டியதுதானே… என்னை ஏன் பிடித்து வந்தீர்கள்” ராஜன் எமனிடம் வாதம் செய்தான். எமதர்மராஜாவின் உதட்டிலிருந்து புன்னகை மட்டுமே வந்தது. கெஞ்சியும் பார்த்துவிட்டான். மிஞ்சியும் பார்த்துவிட்டான். எமன் வாயிலிருந்து ஒரு பதிலும் வருவதாக இல்லை. சோர்ந்து போய் படுத்துவிட்டான்.

எமனுக்கு எப்படியாவது தம்முடைய வாகனத்தை பூமியை விட்டு தாண்டியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார்.  எமதர்மராஜா  சில நேரங்களில் அழுத கண்ணீரைப் பார்த்தவுடன் மனம் இளகி பிடித்து வந்த உயிரை மீண்டும் விட்டுவிடுவார். அதனால்தான் அதிசியக்கும்படியாகச் சில மனிதர்கள் இறந்து போய் மீண்டும் பிழைத்துக்கொள்கிறார்கள். செத்துப்போயிட்டார்ன்னு சுடுகாடு வரை சென்றவர்கள் கூட மூச்சுவிட்டு எழுந்து நிற்பதைக் காணமுடியும்.  இதனால் பல நேரங்களில் மூம்மூர்த்திகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார் எமன். பூமியைத் தாண்டிவிட்டால் என்ன அழுதாலும் மீண்டும் உயிரானது உடலிடம் போய்ச்சேராது. ஆகவேதான் எருமை வாகனம் பூமியைத் தாண்டும் வரை ராஜன் மீது தன்னுடையப் பார்வை விழதாபடிக்கும், காதில் எச்சொல்லும் கேட்காதபடிக்கும் முகத்தை அங்கும் இங்கும் திரும்பிய படியே வைத்திருந்தார். இதோ எருமை வாகனம் பூமியைத் தாண்டிவிட்டது. இனிமேல் தான் இரக்கப்பட்டாலும் இந்த உயிர் உடலில் சேராது. அதனால் கவலையில்லை. மனம் திருப்திவுடன் பலமாகச் சிரித்தார். எமனின் சிரிப்பைக் கேட்டு அதிர்ந்து போனான் ராஜன். இப்பொழுது ராஜனின் சந்தேக கேள்விகளுக்கு எமன் பதிலளிக்கத் தயாரானார்.

“மானிடா… உன் கேள்விகளை இப்பொழுது கேள்…”

“சாக வேண்டிய வயது அல்ல எனக்கு. என் உடலில் எந்த நோயும் இல்லை. அப்படியிருக்க எதற்காக என்னைக் கொன்று அழைத்துச் செல்கின்றீர்” – ராஜன்

“எல்லாம் உன்னுடைய கர்மவினை. உன்னுடையப் பாவங்கள் உன்னைக் கொன்றுவிட்டன”

“கர்மவினையா… நான் என்ன பாவம் செய்தேன். நான் யாருக்கும் கெட்டது பண்ணினது இல்லையே. என்னால் முடிஞ்ச உதவிகளை நாள்தோறும் செய்திட்டுதான இருந்தேன். அப்புறம் எப்படி பாவம் செய்தேன்?”

“நீ பாவம் செய்ததனால்தான் இப்படி குறைஞ்ச வயசுல வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறேன்”

“எரும மாட்ட நிறுத்து எம ராஜனே. நான் பாவம் செய்யவில்லை. தவறுதலாக என்னை அழைத்து வந்துவிட்டீர்கள். உடனடியாக என் உயிரை உடலுடன் சேர்த்து வையுங்கள்” என்றான்.

“ஆ…ஆ…ஆ… மீண்டும் எமனின் சிரிப்பு. மானிடனே நீ இந்த ஜென்மத்தில் நல்லவனாய்தான் இருந்தாய். ஆனால் போன ஜென்மத்தின் பாவம் உன்னை இந்த ஜென்மத்திலும் துரத்துகிறது” என்றார் எமன்.

“என்ன போன ஜென்மத்து பாவமா?”

“ஆமாம்! கடந்த பிறவியில்  நீ செய்த பெரும்பாவம் உன்னை இன்றும் துரத்துகிறது”

“நான் செய்தது பாவமாக இருப்பின் அதற்குரிய தண்டனையை அந்தப் பிறவியிலேயே அனுபவிக்கவில்லையா? ஏன் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும்?”

“ம்… சரியான கேள்விதான்? நீ அப்போதும் அனுபவித்தாய்! இப்போதும் அனுபவிப்பாய்?”

“எதற்காக இரண்டு தண்டனை எனக்கு?”

“என்ன இரண்டு தண்டனையா? யார் சொன்னது உனக்கு? உன்னுடைய மொத்த தண்டனை ஏழு ஆகும். இப்போதுதான் இரண்டு கழிந்திருக்கிறது. இன்னும் ஐந்து பாக்கி உள்ளது”

“என்னது… இன்னும் வரும் பிறவிகளிலும் தண்டனையா? அப்படி என்ன தவறு செய்தேன் எமதர்மராஜா? – என்றான் ராஜன். அவன் செய்த பாவங்களை எமன் சொல்லலானார்.

கடந்த பிறவியில் நீ பிறந்து மூன்று வயதானதும் உன்னுடைய தகப்பனார் காலமானார். அது அவருடைய வினைப்பயன். அதன்பிறகு உன்னை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் உன் தாய். மறுதிருமணம் செய்யாமல் உனக்காகவே வாழத்தொடங்கினாள். ஆண்களின் கழுகுப்பார்வையில் தப்பித்துப் படாதபாடுபட்டு தன்னையும் காத்துக்கொண்டு உன்னையும் நன்கு வளர்த்து வந்தாள். உன்னை ஆளாக்கி திருமணமும் செய்து வைத்தாள். உன் மனைவி பிள்ளைகளையும் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தாள். அவளுக்கு நீதான் உலகம். உன் பிள்ளைகள் நட்சத்திரம். ஒருநாள் வயதாகி படுத்தப்படுக்கையாகி விட்டாள். காலமாற்றத்தால் உன் மனைவி மாமியாரைக் கொடுமைப்படுத்த ஆரமித்தாள். கணவனாகிய உன்னிடம் அம்மாவைப்பற்றி தரக்குறைவாகப் பேசினாள். நீ  மனைவி மீது கொண்ட மோகத்தால் எல்லாமும் மறந்து பெற்றெடுத்த அன்னையை வெறுத்து ஒதுக்கினாய். உன் ஆயையும் நீ பெற்றெடுத்த பிள்ளைகளின் ஆயையும் கழுவிய அந்தத்தாய்யின் மலத்தை கழுவ ஆளில்லை.

“கண்டவளுக்கெல்லாம் பீ… மூத்திரம்… அள்ளவா என்னை எங்க அப்பனும் ஆத்தாவும் பெத்துப்போட்டுருக்காங்க” சிலிர்த்துக்கொண்டாள் மருமகள்.

சரியானப் பராமரிப்பு இல்லாதனால அவளின் உடம்புகளில் கொப்புளம் ஏற்பட்டது. கொப்புளத்திலிருந்து சீல் வடிந்தது. கொஞ்ச நாளுக்கு அப்புறம் அப்புண்களிலிருந்து புழு நெளிய ஆரமித்தது. அத்தாயின் மீது கடும் துர்நாற்றம் வீசியது. மகனாகிய நீ உன் அம்மாவை யாருமில்லாக் காட்டிலே தனியாக விட்டுப்போனாய். வெயிலின் தாக்கத்தினால் அன்றே உடல் வெந்து கண்ணீருடன் இறந்தாள். அத்தாயின் கண்ணீரே உன்னை இந்த அளவிற்கு கொண்டுபோய் விட்டுள்ளது. நீயும் ஒருநாள் கிழவனாவாய். உனக்கும் அந்நிலைமை உருவாகலாம் என்றார் எமன். ராஜனுக்கு தான் செய்த பாவவினைகள் புரிந்தது. தனக்கு கொடுக்கப்பட்டத் தண்டனை சரியானதுதான் என்பதை உணர்ந்தான். அதற்குள் இருவரும் எமலோகம் வந்து சேர்ந்தார்கள்.

எமன் வருவதைக் கண்ட எமகாத வீரர்கள் ஓடி வந்தார்கள். எமனை வணங்கிய அவர்கள், ராஜனைப் பிடித்துக்கொண்டார்கள்.  

“எமகாதர்களே… எல்லாம் சரியாக நடக்கிறதா? என்றார் எமன்.

“நல்லபடியாக நடக்கிறது மகாராஜா. இவனை உடனடியாக அவ்விடத்தில் அழைத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்” என்றார்கள் எமகாதர்கள்.

கொப்பரையில் எண்ணை ஊற்றப்பட்டது. விறகு வைக்கப்பட்டு தீ மூற்றப்பட்டது. எண்ணையினுள்ளே ராஜன் இறக்கப்பட்டான். கொஞ்சகொஞ்சமாகச் சூடு பரவியது. அந்நேரத்தில் ராஜனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

“எமதர்மராஜா… எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.

“உன்னுடைய சந்தேகத்தை இப்போதே கேட்டுக்கொள். இல்லையெனில் அடுத்த ஜென்மத்தில்தான் என்னை பார்க்கவும் பேசவும் முடியும்” சிரித்துக்கொண்டே சொன்னார்.

“நான் செய்த குற்றத்திற்கு ஏற்றத் தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மனைவியாகிய அவளுக்குத் தண்டனை இல்லையா” என்றான்.

பலமாக சிரித்தார் எமன். “வினையின் பயன். விதியின் விளையாட்டு யாரையும் விடாது. இன்று உன் மனைவியாய் இருக்கின்றாளே லட்சுமி அவள்தான் உன்னுடைய முந்தைய பிறவியிலும் மனைவி ஆவாள். யாரை வெறுத்து ஒதுக்கினாளோ! யாருடைய மலத்தை தொட தயங்கினாளோ! அவளே உன் மகளாய் பிறந்துள்ளாள். லட்சுமிதான் அக்குழந்தையின் மலத்தை துடைக்க வேண்டும்.  ஆம்! உன்னுடைய தாய்தான் உனக்கு மகளாய் பிறந்துள்ளாள். கணவனை இழந்த உன் தாய் அனுபவித்த அனைத்தும் அவளும் அனுபவிப்பாள். வேண்டாமென்று ஒதுக்கிய தாயை இன்று அவளே அணைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பாள். உடல் என்பது வடிவம் மட்டுமே. உயிரால் விளையும் ஆன்மாவே என்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.

ராஜனின் உடல் எண்ணையில் கரைந்து போய் அடுத்தப் பிறவிக்கானக் கருப்பைக்காகக் காத்திருந்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்கள்

முன்னுரை

            150 கலிப்பாக்களைக் கொண்டது கலித்தொகை. ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒவ்வொரு புலவராக ஐந்து திணைகள் பற்றியும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டது. பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி-கபிலர், மருதம்-மதுரை மருதனிளநாகனார், முல்லை-சோழன் நல்லுருத்திரன், நெய்தல்-நல்லந்துவனார். ஆகியோர் பாடியுள்ளனர்.

            கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார். ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் புலவர்களால் பாராட்டப் பெறுவது கலித்தொகை. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் பாலைக்கலி உணர்த்தும் சமூக விழுமியங்களை ஆராயலாம். பாலைக்கலியில் 35 பாடல்கள் உள்ளன.

விழுமியம்:

            வாழ்க்கைக்குத் தேவையானவற்றை உரைப்பதை ‘விழுமியம்’ என்ற சொல்லால் குறிப்பர்.

பாலைப் பாதை:

            பாலையின் கொடுமையை இந்நூலைப் போல விரிவாகப் பிற நூல்களில் காணமுடியாது. பாலை வழியில் செல்பவர்களின் நாக்கு வறண்டு விடுகின்றது. தண்ணீர் கிட்டவில்லை. துயரால் தடுமாறுகின்றார்கள். அப்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வருகின்றது. அக்கண்ணீர் நாவை நனைத்துச் சிறிது ஆறுதல் அளிக்கிறதாம்.

                        “உள்நீர் வறப்பப் புலம் வாடு நாவிற்குத்

                                தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந்துயரம்

                                கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு. (பாலைக்கலி, பாடல் எண்-5)

            இத்தகைய காட்டில் ஆறலைக் கள்வர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வழிச் செல்பவர்களை மறித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். கொள்ளை அடிப்பதற்குப் பொருள் இல்லை எனில், வழிச் செல்பவர்களைக் கொன்று அவர்களின் உடல்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்கின்றார்கள்.

                        “கடுங்கண் மறவர் தாம்

                        கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்

                        துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வெளவலின்

                        புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆரிடை” (பாடல்-3)

எவ்வளவு கொடுமை! இக்காட்டில் பறவைகள் செல்லவில்லையாம்.

அன்பின் மாட்சி:

            பொருளீட்டச் செல்லும் தலைவனைப் பலவாறு கூறி தடுத்து நிறுத்துகிறாள் தோழி. அப்போது தலைவியின் அன்பினைப் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்.

            “மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்

            கானம் – தகைப்ப, செலவு” (பாடல்-2)

            “உயிர் வாழாள், நீ நீப்பின்”, என்று தலைவியின் அன்பு உணர்வைத் தலைவனிடம் எடுத்துரைக்கிறாள் தோழி.

            “பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?

            ஓழிக, இனி பெரும! நின் பொருட் பிணிச் செலவே”  (பாடல்-3)

என்கிறாள் தோழி. தன்னையும் உடன் அழைத்துச்செல்க என வேண்டுகின்றாள் தலைவி.

            “துன்பம் துணையாக நாடின், அது அல்லது

            இன்பமும் உண்டோ, எமக்கு?”

            இணைந்து செல்லும் அந்த இன்பத்தின் முன் துன்பமும் பொறுத்தற்கு எளிதேயாகும் என்ற தலைவியின் உள்ளப்பண்பை இதன் வழி உணர முடிகிறது.

நிலையற்ற பொருள்:

            பொருள் நிலையற்றது. செல்வம், இளமை, யாக்கை நிலையாமை குறித்துப் பாலைக்கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன. பொருளோடு திரும்பி வரும்போது, அதற்குள் போய்விடும் தலைவியின் உயிரை மீட்டுத் தரும் சக்தியும் பொருளுக்கு உளதாமோ? என்கிறாள் தோழி.

“இன் உயிர் தருதலும் ஆற்றுமோ

                        முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே” (பாடல்-6)

தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி. இல்வாழ்வு நெறியே பொருள் என்கிறாள் தோழி.

            “பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்

            திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?”  (பாடல்-7)

என்கிறாள் தோழி.

                                    “மன்னவன் புறந்தர வருவிருந்து ஒம்பி,

                                     தன் நகர் விழையக் கூடின்,

                        இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே”        (பாடல்-7)

            விருந்தினரைப் பேணி, தலைவனுடன் கூடிக் கலந்து இன்புறுதலே தலைவிக்குச் சிறப்பு. நிலையற்ற பொருளும், தலைவியின் பால் பெறுகின்ற இல்லற இன்பமும் ஒன்றேயாகும் என்கிறாள் தோழி.

            வாழ்க்கைக்குத் தேவை பொருளை விட இல்லற வாழ்வில் பிரியாது கூடி வாழ்ந்து இணைந்து நிற்றலே என்பதைப் பாலைக்கலிப்பாடல் கொண்டு அறிய முடிகிறது.

அறம் உரைத்தல்:

            முக்கோற்பகவர் வழி அறம் உரைக்கப்படுகிறது. பெண்ணிற்குப் பிறந்த இடத்துப்பாசம் இல்லறக்கடமை தொடங்கும் போது பின் சென்றுவிடுவது இயல்பு என்பதைப் பாடல் குறிப்பிடுகிறது.

                        “பல உறு நறுஞ்சாந்தம், படுப்பவர்க்கு அல்லதை,

மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்”     (பாடல்-8)

சந்தனம் மலையிலே பிறந்தாலும், மலைக்குப் பயன்தராது, பூசிக்கொள்பவர்க்கே பயன்தரும். அது போல உம் மகளும் ஓர் ஆடவனுக்குத்தான் பயன் நல்குவாள் என்கிறது பாலைக்கலி. குடும்ப வாழ்வை, நீதிகள் கூறி இணைத்து வைக்கும் பாங்கினை இப்பாடல் தெளிவிக்கிறது. முத்து, நீரில் பிறந்தாலும் நீருக்கு உதவா, இசை யாழிலே பிறந்தாலும் யாழுக்கு உதவா என்பன போன்ற நீதிகள் வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தலைவியரின் அக வாழ்வு நெறி குறித்து இப்பாடல் உரைக்கிறது.

                        “கற்பினாட்கு எவ்வம் படரன்மின்

                        சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்

                        அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே”.

தலைசிறந்த கற்பினள் நும் மகள். அவளுக்கு எத்துன்பமும் செய்யாதீர். சிறந்தவனான தன் தலைவனோடு அவள் சென்று விட்டாள். அவர்கள் கொண்ட முடிவு சற்றும் அறநெறி தவறாத ஒழுக்கம் என்பதை அறிக என்கின்றனர் முக்கோற்பகவர். (முத்தலைக்கோல் ஏந்திய சான்றோர்)

நம்பிக்கைகள்:

            தலைவன் இன்னமும் வரவில்லையே என ஏங்கிய தலைவிக்குத் தோழி ஆற்றுவிக்கிறாள். அப்போது பல்லி ஒலி செய்கிறது. இது, தான் சொல்வதை ஆமோதிப்பது போல் உள்ளது. அச்சமயம் உன் இடக்கண்ணும் துடிக்கிறது. தலைவர் வந்துவிடுவார் என்கிறாள் தோழி. இதன் வழி பல்லி ஒலி, பெண்கட்கு இடக்கண் துடித்தல் ஆகிய நம்பிக்கைகளை அறிய முடிகிறது.

                        “பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன

                        நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே” (பாடல்-10)

என்கிறாள் தோழி.

இளமை நிலையாமை:

            தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லல் நல்லதன்று. இளமை நிலையில்லை. பொருளீட்டலை விட தலைவியோடு இணைந்து, பிரியாது வாழும் வாழ்வே நல்வாழ்வு என்கிறாள் தோழி.

                        “இளமையும் காமமும் நின் பாணி நில்லா”…..

                        கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு

                        மாற்றுமை கொண்ட வழி”     (பாடல்-11)

            கூற்றமும் மூப்பும் உளவென்ற உண்மையை மறந்தவரோடு ஒன்றாகக் கூடிப் பொருள் தேடிப் போக எண்ணுகிறாய். அது நன்மக்கள் செல்லும் வழியன்று. அறநெறிக்கு மாறான பாதை எனக்கூறி தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி.

                        “கவவுக் கைவிடப் பெறும் பொருட் திறத்து

                         அவவுக் கைவிடுதல், அது மனும் பொருளே”    (பாடல்-13)

பொருளின் மீதுள்ள அவாவைக் கைவிடுவாயாக. அதனைக் கைவிட்டுத் தலைவியுடன் பிரியாமல் கூடியிருப்பதே நிலையான உண்மைச் செல்வம் என்கிறாள் தோழி.

“செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?” (பாடல்-14)

            செம்மையான வழிகளிலிருந்து மாறுபட்டுச் சென்று பொருள் தேடுவார்க்கு, அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாக விளங்கும் என உரைக்கிறாள் தோழி. நல்வழியில் பணம் ஈட்டல் வேண்டும் என்ற சிறந்த நீதியை இப்பாடல் சுட்டுகிறது.

                        “இளமையும் தருவதோ, இறந்த பின்னே?”

            இளமை நிலையில்லை என்பதைக் கூறுகிறது இப்பாடல்., அகவாழ்வு தான் புறவாழ்வான பொருள், கல்வி, தொடர்பு ஆகியனவற்றினுள் சிறந்தது என்கிறது இப்பாடல்.,

                        “பொய் அற்ற கோள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ,

                        “பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப்படர்ந்து, நீ”

என்கிறாள் தோழி.

                        “ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

                         ஓன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிது அரோ

                        சென்ற இளமை தரற்கு”.                                  (பாடல்-17)

எனக் கூறுகிறாள் தோழி.

கற்பின் பெருமை:

            மழையும், ஞாயிறும், காற்றும் வேண்டுமோ என்றவளுக்கு, “உன் கற்பின் பெருமையால், அறக்கடவுள் தானே சென்று உதவும். அப்படியிருக்கும்போது, நீ இறைவனிடம் வேண்டுவது ஏன்?” என்று தலைவியின் கற்பின் உயர்வைக் கூறி மனக்கலக்கத்தைப் போக்குகிறாள் தோழி.

                        “தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் – தேமொழி!

                        வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்” (பாடல்-15)

இதன்வழி தலைவியின் கற்பின் உயர்வினை எண்ண முடிகிறது.

            எப்பொருள் இன்பத்திலும் தன் காதலுடன் கூடிப்பெறும் அக இன்பம் ஒன்றே சிறப்பு. சென்று போன இளமையை மீட்டுத்தருவது எவர்க்கும் அரிது என்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது.

            இளமை நிலையில்லை என்பதை மேற்கண்ட பாலைக்கலிப் பாடல்கள் விளக்கியுரைக்கின்றன.

சொல் தவறாமை:

            ஆசை மிகுந்த போது புகழ்ந்தாய், இப்போது ஒதுக்கிச் செல்கிறாய். தலைவனே நீ, சொன்ன சொல் போற்றாதவன் என இடித்துரைக்கிறாள் தோழி.

                        “உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்

                        கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்

                        பண்டும் இவ் வுலகத்து இயற்கை” (பாடல்-21)

பொருளைக் கடனாகப் பெறும்போது காட்டிய முகபாவமும், திரும்பத் தரும்போது தோன்றும் முகபாவமும் மாறுபட்டுத் தோன்றல் உலக இயற்கை என்பதை இப்பாடல் தெளிவிக்கிறது. சொல் தவறக்கூடாது என்பதை இப்பாலைக்கலிப் பாடல் வழி அறிய முடிகிறது.

இழிவான செயல்:

            நட்பாயிருக்கும் காலத்திலே அவரின் இரகசியச் செய்திகளை அறிந்து கொண்டு, பின்னர் பிரிந்த காலத்தில் பிறருக்கு அந்த இரகசியங்களை வெளிப்படுத்துவது இழிவு.

“பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம்மறை

 பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்”?(பாடல்-24)

செல்வம் உடையவராக இருந்தபோது உறவு கொண்டு அனுபவித்து, பின் அவர் வறுமையுற்ற போது ஒதுங்கிச் செல்லும் உணர்வற்றவரின் உறவு சிறப்பானதன்று என்கிறது பாலைக்கலி.

                        “செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்

                        ஓல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?”   (பாடல்-24)

எனவே, தலைவனே தலைவியை விட்டுப்பிரியாதே. மழை பெய்யாது போனால் உலகு வருந்தும். அதுபோல தலைவி உன் அருள் இல்லையெனில் வருந்துவாள் எனக்கூறி வாழ்வில் கூடியிருத்தலைப் புலப்படுத்துகிறது இப்பாடல்.

பொறுமை தேவை:

            அவசரப்படாது பொறுமையுடன் இருப்பின் நல்லது கிட்டும். மனம் வெதும்பிக் குயிலையும், தலைவரையும் வெறுத்துப் பேசாதே. விரைந்து வருவார் என்கிறாள் தோழி.

            “புரிந்து நீ எள்ளும், குயிலையும், அவரையும் புலவாதி”        (பாடல்-32)

தலைவர் வருவார் என நற்சொல் கூறி நெறிப்படுத்தும் தோழியின் செயல் உணரற்குரியது.

முடிவுரை

            பாலைத் திணை வழி பிரிவை உணர்த்தும் பாலைக் கலிப்பாடல்கள் சமூக விழுமியங்களைத் தெளிவாக உரைத்துள்ளன. அவ்விழுமியங்களை மனதிற் கொண்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது உறுதி.

துணை நின்ற நூல்

            கலித்தொகை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. திருத்திய பதிப்பு-1982.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ச.ஈஸ்வரன்,

இணைப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தேசியக்கல்லூரி (தன்னாட்சி),

திருச்சிராப்பள்ளி.

பாலம் (சிறுகதை)

பாலத்திற்கு முன்னால் இருக்கும் மனித சிலைக்கு நடந்து போகின்றவர்கள், வாகனத்தில் போகின்றவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு ஐந்து நிமிடம் நின்று மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதைப் பார்த்த அந்த ஊருக்குப் புதியதாக வந்த ஒருவர் அதே ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் கேட்டார்.

            பெரியவர் சொல்லத்த தொடங்கினாhர். இந்த ஆற்றன் குறுக்கே பாலம் கட்டிய பிறகுதான் இந்த ஊரில் படித்தவர்கள் அதிகமாக உள்ளார்கள். பெரிய பெரிய வேலையில் உள்ளார்கள். இதற்கு காரணம் யார் தெரியுமா இதோ சிலையாய் நிற்கிறாரே அவர்தான்.

            அவர் அப்படி என்ன பெரியதாக செய்தார் என்று புதியவர் கேட்டார். அதற்கு பெரியவர் மேலும் சொல்லத் தொடங்கினார். இந்த ஊருக்குப் பக்கத்து நகரத்திற்கும் உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டர் தான். ஊருக்கும் நகரத்திற்கும் இடையில் வற்றாத ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலம் கட்டுவதற்கு முன்பு அந்த நகரத்திற்கு போக வேண்டும் என்றால் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

            மழை காலங்களில் அதிகமாக நிர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடு;ம்போது மக்கள் ஆற்றைக் கடந்து நகரத்திற்கு போக முடியாமல் தத்தளிப்பார்கள்.

            மழைகாலங்களில் நகரத்திற்கு செல்லவேண்டுமானால் பத்துக் கிலொ மீட்டர் சுற்றி போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

            காய் கறிகள் வாங்க விற்க, பிள்ளைகள் பள்ளிக்குப்போக, மக்கள் ஊருக்கு சேரிக்குப் போக நோயாளிகள் மருத்துவ மனைக்குப்போக எல்லாவற்றிற்கும் இந்த ஊர் மக்கள் அந்த நகரத்தை நம்பியிருந்தது. பள்ளி, மாணவ மாணவிகள் ஆற்றைக் கடந்து செல்லும்போது பள்ளி சீருடையைப் பையில் வைத்து, பையைத் தலைமீது வைத்துக்கொண்டு கழுத்துவரை வரும் தண்ணீரில் நடந்து கரையை அடைந்து சீருடையை மாற்றிக்கொள்வார்கள். சில நேரம் கால் தவறி ஆற்றில் விழுந்தால் புத்தகமெல்லாம் நனைந்துவிடும். அப்போது மாணவர்கள் மற்றும் இதை பார்த்தவர்கள் நெஞ்சம் நீரில் உடல் நனைந்ததைவிட கண்ணீரில் நனைந்தது அதிகம். சில பெற்றோர்கள் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற ஆசையில் ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்த்தி காலையிலும் மாலையிலும் தன் தோளின் மீது ஏற்றிக்கொண்டு போய் கொண்டு வருவார்கள். ஆற்றில் கால் தவறி விழுந்தால் நீந்திக்கொள்வதற்காக சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்கள்.

            ஆற்றில் எப்போது தண்ணீர் அதிகமாக, குறைவாக வருகிறது என்று யாருக்குமே nதியாது. ஒவ்வொரு முறையும் மக்கள் ஆற்றைக் கடக்கும்போது தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். உயரமான மாணவர்களிடம் தன் பையைக்கொடுத்துவிட்டு இளைய மாணவர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து, நனைந்த உடையை கழற்றிவிட்டு பள்ளி சீருடையை மாற்றிக்கொண்டு நனைந்த துணியை பிழிந்து தன்மீது போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்று அதை அங்கு இருக்கும் செடிகொடி மீது காய வைத்து மீண்டும் மாலையில் அதை எடுத்து ஆற்றுப்பக்கம் வந்ததும் பள்ளி சீருடையைக் கழட்டிவிட்டு அதை மாற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து வீட்டிற்கு வருவார்கள். இது வழக்கம் போல் நடக்கும். இது மக்களுக்கு பழகிப்போனதாகவே இருக்கும்.

            ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் தண்ணீர் குறையும் வரை பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் இறங்கி வந்தால் ஆளை அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு முறை ஒருவர் மாட்டை மேய்ச்சலுக்காக காலையில் ஆற்றைக் கடந்து ஓட்டிக்கொண்டு போய் மேய்த்துக்கொண்டு ஆற்றுக்கிட்ட வருவதற்குள் இருட்டாகிவிட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் மாட்டை ஓட்டிக்கொண்டு இறங்கிவிட்டார். அவரையும், மாட்டையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் மனம் கலங்கிப்போனார்கள்.

            இந்த ஆறு எத்தனையோ பேரை பலிவாங்கிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லாத காரணத்தால் பக்கத்து வீட்டுக் கைக்குழந்தை வைத்திருந்த ஒருத்தி குழந்தையோடு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ஆற்றில் அழைத்துச் செல்லும்போது அவர்களையும், உடல் நிலை சரியில்லாக் குழந்தையை எடுத்துச்சென்ற தாயையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. மேலும், வரம் வாங்கி பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து பள்ளிக்கு அனுப்பும்போது ஆறு அடித்துக்கொண்டு போனதை அறிந்த ஒரு தாய் துயரம் தாங்காமல் மகன் சென்ற இடத்திற்கே நான் போய்விடுகிறேன் என்று ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட துயரம் ஊரை உளுக்கியது.

            ஊரில் ஒருவர் தன் மகனை வெளியூரில் படிக்க வைத்தார். அவன் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக தன் ஊருக்கு வரும்போது ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த அவன் அப்பா பட்ட துயரத்திற்கு அளவே கிடையாது.

            ஆறு அந்த ஊரில் உள்ளவர்களை ஒருவரை அடுத்து ஒருவரை பலி வாங்கிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் பார்த்த ஊர்மக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அடுத்த ஊரில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தார்கள். தலைவரும் படித்து பார்த்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்றுகூறி அவர்களை அனுப்பினார். இதுபோல பல தலைவர்கள் மாறியும் பாலம் கட்டவில்லை. இது ஊர் மக்களுக்கு வருத்தமாகவே இருந்தது.

            மேலும், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியும், சாலை மறியல் செய்தும் பலன் கிடைக்காமல் ஏமாந்து போனார்கள். முதலமைச்சருக்கு மனு அனுப்பியதில் பலன் கிட்டவில்லை. இதையெல்லாம் பார்த்து வந்த அதே ஊரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அந்த ஆற்றை கடந்துபோய்தான் படித்தான். அவனோடவே முதல் வகுப்பிலிருந்து படிக்கும் ஒரு மாணவன் அவனுக்கு நண்பனாக இருந்தான். அந்த நண்பனுக்கு அப்பா, அம்மா யாருமே கிடையாது. அனாதை விடுதியில் இருந்து தங்கி படித்து வந்தான். அந்த நண்பனை அவன் அப்பா அம்மாவிடம் கூறி தன் வீட்டிற்கே அழைத்துக்கொண்டு இரண்டுபேரும் ஆற்றைக் கடந்துபோய் படித்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து செல்லும்போதும் வரும்போதும் நாம் நல்லா படித்து மாவட்ட ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிவிடலாம் என்று இரண்டு பேரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்த நண்பன் நான்தான் முதலில் ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு பாலம் கட்டுவேன் என்று கூறுவான். அதற்கு அவன் யார் பாலம் கட்டினால் என்ன நம்ம ஊருக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்க போகுது என்று கூறினான்.

            ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று நண்பன் போகவில்லை. அவன் மட்டும் வருத்தத்தோடு பள்ளிக்குப் போனான். வீட்டிற்கு மாலையில் வரவில்லை. அவன் கேட்டான் அதற்கு அவன் அப்பா, அம்மா உன் நண்பனை வெளிவூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்று கூறினார்கள். நண்பனும் அவனுடைய அப்பாவிடம் சென்று அப்பா நானும் நண்பன் படிக்கும் பள்ளியில் படிக்கிறேன் என்னையும் அங்கே சேரத்திவிடுப்பா என்று கேட்டான். அதற்கு அவனுடைய அப்பா வேண்டாம்பா நம்மிடம் பணம் வசதி இல்லை விடுதியில் தங்கி படிக்கவேண்டியிருக்கும். அதனால் அவன் மட்டும் படிக்கட்டும் என்று மனவேதனையோடு கூறினார். அதற்கு அவன் பெரிய பெரிய நகரத்தில் நிறைய அரசு விடுதி இருக்கிறது அதில் தங்கி படிக்கிறேன். அப்படி இல்லை என்றால் நான் இங்கே படித்தால் என்னையும் ஆறு அடித்துக்கொண்டுப் போகலாம் நாளை உன்னையும் அடித்துக்கொண்டுப் போகலாம் இது நம்ம ஊருக்க கடவுள் எழுதிய விதி இதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.

            மேலும், அதற்கு அவன் அப்பா விதியை மாற்ற முடியாததை நான் என் உயிரைக் கொடுத்தாவது இந்த விதியை மாற்றுவேன். என்னை வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சினான். அதற்கு அவன் அப்பா ஊரில் உள்ள படித்த ஒருவரை அழைத்துக்கொண்டு வெளியூரில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். அவன் அப்பாவிடம் அப்பா நான் நல்லா படித்து அரசு வேலைக்குபோகும் வரை நான் ஊருக்கு வருவதில்லை என்று கூறி அப்பாவை வழி அனுப்பி வைத்தான்.

            அதற்கு பிறகு அவன் பள்ளியிலும் தங்கிய அரசு விடுதியிலும் நண்பனைத் தேடி பாரத்தான் கிடைக்கவில்லை. சரி அவன் வேற பள்ளியில் படித்து வேற விடுதியில் தங்கி இருப்பான் என்றாவது ஒரு நாளைக்கு பார்ப்போம் என்று நினைத்து நல்ல படித்து பள்ளியில் முதலிடத்தில் வந்தான். பள்ளிக் கல்லூரி படிப்பு முடித்து ஆட்சியர் பணிக்கு பயிற்சி எடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று நண்பன் இருந்த அதே மாவட்டத்திற்கு ஆட்சியாளராக பணிபுரிய வந்து முதன் முதலாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேலையைத் தொடங்கினார். இவன் ஆட்சியாளராக ஆனதும் ஊரே பெரிதும் வரவேற்றன. அவனுடைய நண்பனின் வயதான அப்பா இதைப் பார்த்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

            பாலத்தின் வேலை மிக வேகமாக நடந்தது பாலம் கட்டி முடிந்ததும், யாரையும் இந்த ஆறு பலி வாங்காது என்று ஊர் மக்கள் நினைத்தார்கள். அவனும் எண்ணினான். பாலத்திற்கு திறப்பு விழா ஏற்பாடு நடைபெறுகிறது. ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள் ஒலிபெருக்கி பாடிக்கொண்டிருந்தது. வாழைமரம் பாலத்தின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருந்தது. காகிதப்பூ தோரணம் ஊர் முழுவதும் கட்டியிருந்தார்கள். தென்னையின் கீற்றுகள் அங்கங்கே தொங்கப்பட்டு இருந்தது. ஊர் மக்களும் புதிதாக சுதந்திரம் கிடைத்ததுப் போல் இருந்தார்கள். சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கம் ஊர்க்காரர்களும் பாலத்தின் திறப்பு விழாவிற்கு வந்து கூடியிருந்தார்கள்.

            பாலத்தைத் திறப்பதற்கு ஆட்சியாளரை அழைத்தார்கள், அவர் வந்ததும் எல்லோரும் கடவுளை போல் கை கூப்பி வணங்கினார்கள். ஆட்சியாளர் பாலத்தை திறந்து வைத்தபோது எல்லோரும் இந்த ஆறு இனிமேல் யாரையும் பலி வாங்காது என்று கைத்தட்டி மகிழ்ந்தார்கள். ஆட்சியாளர் பாலத்தின் வழியே நடந்து வரும்போது தன் நண்பனுடைய அப்பாவிடம் என் நண்பன் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் நீ ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் பள்ளிக்கு போகாமல் இருந்தபோது உன் நண்பன் மட்டும் பள்ளிக்குப் போக ஆற்றில் இறங்கியபோது தண்ணீர் வேகமாக வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது. இதை உனக்கு சொன்னால் நீயும் நண்பன் போன இடத்திற்கு நானும் போய்விடுகிறேன் என்று கூறி ஆற்றில் குதித்து விடுவாய் என்று உன்னிடம் சொல்லாமல் வெளியூர் பள்ளியில் சேர்த்து விட்டோம் என்று பொய் கூறினேன். அதற்கு என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

            அவன் அப்பா கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தான், கண்களில் கண்ணீர் ததுமபின. இனிமேல் இந்த ஆறு என் நண்பனை பலி வாங்கியது அல்லாமல் நீ யாரையும் பலி வாங்காது என்று கூறி பாலத்தின் சுவரைப் பிடித்து இந்த ஆறு தான் என் நண்பனை பலிவாங்கியது என்று மனதுக்குள் எண்ணி எட்டி பார்த்தார். கால் தவறி ஆற்றில் விடந்துவிட்டார். ஆறு அடித்தக்கொண்டுபோய்விட்டது. இந்த ஆறு ஆட்சியாளரையும் பலி வாங்கிவிட்டதே என்று மக்கள் எல்லோரும் கத்தி, கதறி யார் பெற்ற மகனோ நம்ம ஊருக்குப் பாலம் கட்டி திறந்து வைத்த பிறகு ஆற்றில் விழுந்துவிட்டாரே என்று கூறி புலம்பினார்கள் அதற்கு அப்புறம் ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நமக்கு பாலம் கட்டித்தந்தவர் கடவுள் மாதிரி என்று கூறி பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைக்க வேண்டும் என்று பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைத்தார்கள் அன்று முதல் சிலையை கடக்கும் முன்பு அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு போகிறர்கள். இந்த கதையை கேட்ட புதியவர் கண்ணீர் விட்டார். இதை பார்த்து ஏன் அழுகிறாய் என்று கதை கூறிய பெரியவர் கேட்டார். அதற்கு புதிதாக வந்தவர் அங்கு சிலையாக நிற்கக் கூடியவர் என் நண்பன் தான் என்று கூறி, நான் ஆற்றில் அடித்துக்கொண்டு போகும்போது வெகு தூரம் போய் ஒரு செடியில் மயக்க நிலையில் மாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த வசதி படைத்த ஒருவர் என்னை மருத்துவ மனைக்கு கொண்டுபோய் காப்பாற்றினார். அவரிடம் நான் எங்க ஊருக்குப் போவதில்லை மீண்டும் அந்த ஆறு என்னை அடித்துக் கொண்டு போய்விடும் என்று கூறினேன். அவரும் வெளியூரை சேர்ந்ததனால் என்னை அவருடைய ஊரிலே பள்ளியில் சேர்த்து நல்ல படிக்க வைத்து ஆட்சியாளராக ஆக்கினார். இப்போது இந்த மாவட்டத்திற்கு புதிதாக வந்த ஆட்சியாளர் நான் தான் என்று கூறி நானும் இதே ஊரில் பிறந்தவன் தான் இந்த ஊர் மாற்றமடைந்திருக்கிறது என்று உன்னிடம் கேட்டான் என்று கூறி முடித்து தன் நண்பனுடைய சிலைக்கு பக்கத்திலுள்ள பூக்கடையில் பூ மாலை வாங்கி போட்டு மரியாதை செலுத்திவிட்டு அவனுடைய சேவையைத் தொடங்கினான்.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்க

1.மறக்க முடியுமா (சிறுகதை)

2.இருளில் ஓர் அலறல் | சிறுகதை

இருளில் ஓர் அலறல் | சிறுகதை

            ஊர் ஓரம் மலைப் பக்கம் ஒரு சின்னக் குடிசை. அந்த குடிசையில் விளக்கின் ஒளியை தவிர வேறு எந்த ஒளியும் இல்லை. இருள் சூழ்ந்திருந்தது. எங்கோ ஊரில் கொஞ்சம் ஆரவாரம் கேட்கிறது.

            அவள் மட்டும் தென்னை ஓலையால் பின்னப்பட்டக் கதவைப் பிடித்துக்கொண்டு கால் கடுக்க நின்று எதிர்பார்த்தக் கொண்டிருந்தாள் பார்த்து பார்த்து அவள் இருவிழிகளும் தேய்ந்தனஇ மனதில் ஏதோ பயம். அன்று நிலவும் விண்மீண்களும் ஒன்று கூட வெளியே தலைகாட்டவில்லை. நிலவு குளிர்எடுக்க மேகத்தைப் போர்த்திக் கொண்டது. அவளுக்கோ துக்கம் தொண்டையை இறுக்கிப்பிடித்தது.

            ஊரில் கேட்ட கொஞ்சம் ஆரவாரமும் கேட்கவில்லை. பயம் அவளைத் துரத்த அப்போது ஒரு சத்தம். அந்த சத்தம் யாரோ நடந்து வருவது போல் அவளுக்குக் கேட்கிறது. காதையும் பார்வையையும் அந்தப் பக்கம் திருப்பினாள். இருளில் ஓர் உருவம். மட்டும் தெரிந்தது அப்போது அவளுக்குக் காத்திருப்பது சுகமாகத் தெரிந்தது. நிலவுக்கு வியர்வை கொட்ட தன் மேகப் போர்வையை எடுத்தது. நிலவு தனக்கு விடுதலை கிடைத்ததுபோல் எங்கும் ஒளியை வீசினான். வெளிச்சத்தில் அவள் எதிர்பார்த்த உருவம் தெரிந்தது அவளுக்குப் பயம் பறந்துபோய் சிறகு முளைப்பதுபோல் இருந்தது.

            அந்த உருவம் அவளுடைய ஆசை நாயனக். அவன் பக்கம் வந்ததும் ஏங்க இவ்வளவு ஆநரம் என்று கேட்டாள். இது என்ன புதுசு நான் எப்போதும் வருவதுபோல்தான் வருகிறேன். இன்றைக்குக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நானும் நகரத்தில் கூலி வேலையை முடித்து விட்டு ஐந்து மைல்கள் நடந்து வர வேண்டும் என்றான். அதற்கு அவள் நான் பயந்தே போய்விட்டேன். உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள். இனிமேல் வேகமாக வந்திருங்க என்றாள். (அவன் வேகமாக வருவதற்கு என்ன வாகனமா) சரி சோற்றைப்போடு எனக்குப் பசிக்குது என்றான்.

            அவளும் சோற்றை ஆக்கி வைத்தவிட்டு அவனுக்காக காத்திருந்தாள். வயிறு பசியெடுக்க அவர் வரட்டும் சாப்பிடலாம் என்று பசியை அடக்கி வைத்திருந்தாள்.

            கடப்பாரையைப் பிடித்து பிடித்து காப்பு ஏறிய கையைப் பார்த்து முத்தமிடுவாள். அது அவனுக்கு அன்று நாள் முழுவதும் கஷ்டப்பட்டது அத்தனையும் மறந்துபோகும்.

            அவர்கள் அந்த ஊரிலே அனாதையாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கென்று யாரும் உறவினர்கள் கிடையாது.

            காலையில் அவள் எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு அவனை எழுப்பி வாங்க குளிங்க வேலைக்கு நேரமாச்சு என்பாள். அவள் உடனே எழுந்து குளித்துவிட்டு பாசமாக பரிமாறிய சோற்றைச் சாப்பிட்ட பிறகு மதிய உணவு எடுத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் முத்தமிட்டுப் புறப்படுவான். அவள் வாசப்படி ஓரமாய் அவன் மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தக் கொண்டே இருப்பாள்.

            அவன் வேலைக்குப்போன பிறகு. அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். அவன் போன பிறகு திரும்பி வரும் வரைக்கும் அவனுக்காகவே காத்திருப்பாள். அவன் கால்கள் நடந்து நடந்து தேய்ந்துப் போயின. அவை அவளுக்காகத் தேய்கிறது என்று சுகமாக நினைப்பாள்.

அவன் எவ்வளவு வேகமாக வந்தாலும் இருட்டாகிவிடும். அதற்கு வேலி ஓரத்தில் இருக்கும் மின்மினிப் பூச்சி வெளிச்சத்தைத் தரும். அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் தனிமையைப் போக்கிக்கொள்ள குழந்தை வந்துவிட்டது. அவள் வேலையைச் செய்ய பையன் கை விடவில்லை என்றால் வாசலில் உள்ள வேப்பமரத்தில் தூளிகட்டி  பையனை அதில்போட்டு விட்டு தன் வேலையைச் செய்வாள். மரத்தில் இருக்கும் குயில் தாலாட்டு பாட தென்றல் தூளியை ஆட்ட குழந்தை தூங்கிவிடும்.

மாலை நேரத்தில் அப்பா வருகிறார் பார் என்று குழந்தைக்கு அவர் வருகின்ற வழியைக் காட்டிக் கொண்டு இருப்பாள். அவள் வந்த பிறகு குழந்தையைத்  தூக்கும் வரைக்கும் மாற்றி மாற்றி கொஞ்சுவார்.

அந்த ஆண்டவன் அவனுக்காக அவளையும் அவளுக்காக அவனையும் படைக்கப்பட்டது போல் இருந்தது. இயற்கையே அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தது.

அவள் நாம் அனாதையாக இருக்கிறொம் நமக்கென்று ஒரு சொந்தமும் இல்லை என்று கண்ணீர் விட்டாள். அவன் ஏன் வேதனைப்படுகிறாய் பக்கம் ஆறு ஓடுகிறது. அவை குளிப்பதற்கு குடிப்பதற்கு நீர் தருகிறது. சொந்தம் ஒன்று இருந்தால் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்க மாட்டார்கள், நிலா வெளிச்சத்தைத் தருகிறது. காற்று பணம் வாங்காமல் வீசுகிறது. இயற்கையே நம் சொந்த பந்தம் இனி அழவேண்டாம் என்று அவன் கண்ணத்திலிருந்த கண்ணீரை துடைத்தான். அதற்கு அவள் இல்லிங்க நாம் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்வோம் நம் பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து சொந்தத்தைச் சேர்த்துக் கொள்வோம். நம் மகனை மருத்தவராகவும் பெண்ணை ஆசிரியராகவும் நல்ல முறையில் படிக்க வைத்து மற்றவருக்குப் பொதுச் சேவை செய்ய வைப்போம். அனாதை இல்லாத உலகத்தைப் படைப்போம் என்றாள். இவனும் அதற்கு சரி என்றான்.

அவள் மீண்டும் கர்ப்பமானாள். அவனே காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்து முடித்துவிட்டு அவளை ஓய்வு எடுக்கச்சொல்லி விட்டு வேலைக்குப் புறப்படுவான்.

அன்று அவன் வேலைக்குப் புறப்பட்டான். அவள் மனசு ஏதோ பறிகொடுத்ததுபோல் இருந்தது. அவரை இன்று வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லலாமா  என்ற எண்ணம். ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை அப்படி அவள் சொல்லியிருந்தால் அவளைவிட வேலை முக்கியமா என்று நின்றிருப்பானோ என்னவோ? அவன் மறைவிற்குப் பின்னும் எட்டிப் பார்க்கிறாள்.

அவளோ நிறைமாத கர்ப்பிணி. அவளால் மகனைக்கூட எடுக்க முடியவில்லை. அவன் வெலைகடகு நகரத்திற்குப் போய் சேர்ந்திருப்பான் அவளோ பெண் குழந்தைப் பிறக்கும் என்று பெருமகிழ்ச்சியடைந்தாள். உடனே குழந்தை பிறக்க வலி ஏற்பட்டது. அப்பா, அம்மா என்று கத்துகிறாள். அக்கம் பக்கம் ஆளில்லை வயிற்றை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அழுகின்ற குழந்தையின் தூளியை ஆட்டுகிறாள். கீழே விழுகிறாள்  புரள்கிறாள் எழுந்து கத்துகிறாள்.

அவன் அவன் நினைப்பாகவே வேலை செய்ததனால் கடப்பாரையை எங்கே குத்தவது என்று தெரியாமல் தன் பாதத்தில் குத்திக் கொள்கிறான். அய்யோ என்று கத்துகிறான். இரத்தம் நிறைய வெளியேறுகின்றது.

உடனே அவனை மருத்தவமனைக்குப்போ என்று அனுப்பிவிட்டார்கள்.

மருத்தவமனைக்கு வந்ததும் மருத்தவர் இல்லை மாலை ஆறு மணிக்கு வருவார் என்றார்கள். அவன் அதுவரைக்கும் காத்திருந்து மருத்துவரைப் பார்த்தவிட்டு நொண்டி நொண்டி வருகிறான். கருமை நிற இருட்டு, நிலவை குளிர் ஆடை போர்த்திக்கொண்டது. மேகம் வானத்தை விட்டு கீழே வந்து விழவதுபோல் கருமையாக இருந்தது. வழியே தெரியவில்லை. மின்னல் மின்னினால் தான் வழிதெரிகிறது.

வானம் லேசாகத் தூரல் போடத் தொடங்கியது. காற்று வீசியடிக்க மின்னல் கீற்றுகள் வானம் முழுவதும் பறக்க அவனும் மழையால் முழுமையாக நனைந்துக்கொண்டு குளிரால் நடுங்கி ஒடுங்கி தள்ளாடி வருகிறான்.

அவன் நடக்க முடியாமல் துன்பப்படுவதைப் பார்த்த பூமி வாகனம் ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. ஆனால் அவன் புனிதமானப் பாதம் பூமியில் படாமல் போய்விடும் என்று கொடுக்கவில்லை.

வானம் அவன் நனைந்துகொண்டு போவதைப் பார்த்து ஒரு குடை ஒன்று கொடுக்கலாம் என்று நினைத்தது. குடை கொடுக்கமுடியாவிட்டாலும் மழையை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நிறுத்தமுடியவில்லை. ஏன் என்றால் அவன்படும் துன்பக் காட்சியைப் பார்த்து வானமே கண்ணீர்விட்டது.

அவன் காதுகளுக்கு எங்கோ இருட்டில் குழந்தை அலறல் சத்தம் கேட்கிறது. வீட்டிற்கு பக்கம் வரவர வீட்டிலிருந்து வந்தது. அவனுக்கு பயம் ஏற்பட்டது வீட்டில் விளக்கு எரியவில்லை. அவள் தூங்கியிருப்பாளோ? விளக்கை காற்று அனைத்திருக்குமோ? என மனம் ஏதேதோ நினைக்கலாயிற்று. அவன் வீட்டிற்கு நுழைவதற்கு முன்பே பாதி உயிர் போனமாதிரி இருந்தது.

அவள் குழந்தை பிறக்க முடியாமல் வயிற்று வலியால் கத்திக் கத்தி அவள் உடலிலிருந்து உயிர் அறுபட்டு அவன் வரவதற்கு கொஞ்சமுன் அவனை தேடிச் சென்றது.

அவன் வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் பற்ற வைத்தான். அவள் இறந்து கிடப்பதை பார்த்து. அய்யோ என்று கத்தினான். அவன் மீதி உயிரும் போய்விட்டது. அவர்கள் உயிர்கள் அந்த மகனைச் சுற்றி சுற்றி வந்தன.

மழை பெய்யாமல் நின்றது. தென்றல் வீசாமல் நின்றது, ஆறு ஓடாமல் நின்றது, பூ பூக்காமல் இருந்தது, நலவு ஒளியை காட்டாமல் இருந்தது, கொடி படராமல் நின்றது பூமி சுற்றாமல் நின்றது, தளிர் தளிர்க்காமல் நின்றது, இவையெல்லாம் அவர்கள் இறப்புக்கு கொஞ்சம் நேரம் இறங்கள் செலுத்திவிட்டு பிறகு அதன் தன் வேலைகளைச் செய்ய தொடங்கின

ஆனால், இரவெல்லாம் தென்னை ஓலையால் வேயப்பட்ட வீட்டில் தனி ஒரு அலறல் ‘சத்தம்’.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்கவும்

1.மறக்க முடியுமா (சிறுகதை)

அகநானூற்றுப் பாடல்களில் தலைவனின் ஒழுக்க நெறிமுறைகள்

சங்ககால மக்களின் அகவாழ்வைக் குறிப்பது அகத்திணையாகும். அகத்திணை ஒழுக்கமானது ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் காதல். இல்லற வாழ்வைக் குறிப்பதாகும். இவ்வகையான ஒழுக்கத்தை அகநானூற்றுப் பாடல்கள் உணர்த்துகின்றன. அசு ஒழுக்கங்களை அறிந்து கொள்ளவும், படிப்பவர் இன்புறவும். புலவர் சில உத்திமுறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள் உள்ளுறை உவமம் ஒரு உத்திமுறை ஆகும். உள்ளுறை பாடல்கள் தலைவனின் ஒழுக்க நெறிகனைத் தலைவி மறைமுகமாகச் சுட்டுவதைப் போல உள்ளது. அதற்காகப் பரணரின் மருதத் திணைப் பாடல்கள்ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.

சமூக ஒழுக்கம் பரத்தையும் கள்ளும்

சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியை விடுத்து பரத்தையிடம் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கமாகும். இதற்குத் தொல்காப்பியர்,

கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்

உள்ளத்தூடல் உண்டு என மொழிப (தொல். 1179)

எனக் கூறுகின்றார். இதேபோன்று கள் அருந்துதல் ஏற்றுக் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் (235) இதற்குச் சான்றாகின்றது. இதன்மூலம் பரத்தை ஒழுக்கமும், கள்ளும் சமூக ஒழுக்கமாக இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், அவை இல்லற வாழ்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாக இல்லை என்பதனையும் சங்கப் பாடல்கள் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன.

கள்ளின் தீதும் தலைவனின் ஒழுக்கக் குறைபாடும்

அகநானூறு ஆய்வுக்கோவை 2011 தலைவன் தலைவியை விடுத்துப் பரத்தையோடு மகிழ்ந்து இருந்தான் இச்செயல் தலைவிக்கும் ஊர்ப் பொதுமக்களுக்கும் தெரிந்தது. ஊரார் அலர்படுத்தினர். அலரின் காரணமாக வீட்டிற்குச் சென்ற தலைவனைத் தலைவி வாயில் மறுக்கின்றாள்.

தலைவி தலைவனிடம், நெருப்புக் கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையே விளைந்து, சிவந்த நெற்கதிர்களை அறுத்துக் கவிழ்க்கின்ற உழவர்களுக்கு கள்ளினை ஏற்றிக்கொண்டு பலகாலமாக வந்து செல்லும் வண்டி, ஏதேனும் ஒரு சூழலில் சேற்றிலே புதைந்து விடுவதுண்டு. அது போன்ற சமயங்களில் அவ்வண்டியை விடுவிக்கும் பொருட்டுச் சிறந்த கரும்புகளை அதன் சக்கரத்திலே அடுக்கும் வளமிக்க ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள்.

கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்

ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர” (116: 3-4)

இங்குப் பரத்தை அறிவை மயக்கும் கள்ளுக்கும், தலைவி நாவிற்கும், மனதிற்கும் சுவைதரும் கரும்புக்கும் தலைவன் கலங்கிய சேற்றைப் போன்ற மனதிற்கும் இணையாக்கப் பட்டுள்ளது இப்பாடலில் தலைவன் தலைவியோடு கூடிய இல்லறத்தைச் சேற்றில் புதைத்து, இழிவான வாழ்வை தரும பரத்தையை நாடிய ஒழுக்கக் குறைபாட்டை எடுத்து உரைக்கின்றது.

மேலும், இதேபோன்றே தலைவனின் ஒழுக்கக் குறைப்பாட்டைக் கூறும் (அகநா 196. 1-4) பாடலும் இடம் பெறுகின்றது கள் மிகுதியாக உடைய பாக்கத்தில் நீண்ட செடிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அச்செல்வமிக்க பகுதியில் பாணர்கள் வைகறை வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துறையிடத்துப் பெரிய வயிற்றினையுடைய வரால் மீன் அகப்பட்டது அம்மீனினுடைய துடியின் கண் போன்ற கொழுவிய துண்டத்தினை விற்றனர் அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கள்ளுண்டு களித்து ஆடினர் அவர்கள் ஆடிய மயக்கத்தில மீண்டும் மீன்வேட்டைக்குச் செல்வதை மறந்து உறங்கினர். உறங்கிய கணவன்மார்களுக்கு அவரவர் மனைவியராகிய பாண்மகளிர் அதிகாலையில் அவ்வுணவானது ஆம்பலது அகன்ற இலையானது உணவு கொடுத்தனர் சுடுகின்ற சோற்றுத் திரளோடு பிரம்பின் புளிப்பும் ஆக்கிய புளிக்கறியை இட்டு உண்பித்தனர். அத்தகைய தன்மையுடைய வீரனே எனத் தலைவி கூறுகின்றாள்.

இங்குப் பாணன் தன்மை தலைவனுக்கும் பாண் மகளிரின் செயல்பாடு தலைவிக்கும், மயக்கம் தரக்கூடிய கள்ளைப் பரத்தைக்கும் ஒப்பாகக் கூறப்படுகின்றது. தலைவன் இல்லற வாழ்க்கைக்காகப் பொருளீட்டச் செல்கிறான் ஈட்டிய பொருளை இல்லறத்திற்காகச் செலவிடாமல் பரத்தையோடு கூடிய மகிழ்ச்சிக்காகச் செலவிடுகிறான். அவ்வாறு தன் கடமையை மறந்த தலைவனுக்குக் கற்பு ஒழுக்கமுடைய – தலைவி உணவளிக்கின்றாள். அதாவது ஒழுக்கமுடைய தலைவியின் பண்பு உணவளிப்பதும், ஒழுக்கமற்ற தலைவனின் பண்பு பரத்தையுடன் செலவழிப்பதையும் உள்ளுறையாகக் கூறப்பட்டுள்ளது.

ஒழுக்கக் குறைபாட்டில் பாணன் துணை

பாணன் துணையோடு தலைவன் பரத்தையோடு மகிழ்ந்திருந்தான் தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டு தலைவியிடம் சென்றபோது ஊடல் வெளிப்பட்டது அதனால், அவன் தோழியிடம் வாயில் வேண்டினான் அதற்குத் தோழி பரத்தையுடன் கூடியிருந்தமையால் உண்டான அலர் குறித்துக் கூறுகின்றாள்.

தோழி தலைவனிடம் ஆண் சங்கு சருச்சரை பொருந்திய வயிற்றினையும், பிளந்த வாயினையும் உடையது. அது கதிர்ப் போன்ற கூர்மையான மூக்கினை உடைய ஆரல்மீன் துணை கொண்டது. அத்துணையோடு ஆண் சங்கு ஆழமான நீர்ப் பெருக்கத்தை உடைய பெண் சங்கினோடு கூடும். அத்தகைய நீர் நிறைந்த அகன்ற வயல்களையுடைய புதுவருவாயையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 246 1-4).

இங்கு ஆண் சங்கு தலைவனையும், ஆரல்மீன் பாணனையும், பரத்தைக்குப் பெண் சங்கும் இணையாகக் கூறப்படுகிறது. பாணன் துணையோடு இல்லற வாழ்விற்கு மீளமுடியாத, துன்பந்தரும் பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் ஒழுக்கக் குறையைத் தோழி வெளிப்படுத்துகின்றாள்.

அலரும் ஆக்கமும்

தலைவன் பரத்தை ஒழுக்கம் மேற்கொள்கின்றான். அவன் செயலை ஊரார் இழிவுபடுத்துகின்றனர். அதன் பிறகு தலைவன் தன் வீட்டிற்குச் செல்கின்றான். அவன் செயலைத் தலைவி கடிந்து கூறுகின்றாள்.

ஊரலர் ஏற்பட்ட பிறகு வீடு திரும்பும் தலைவனிடம் தலைவி, அழகிய மயில் வயலுக்கு அருகில் இருந்தது. வயலிடத்தில உள்ள உழவர்கள் செருக்குடன் ஆரவாரம் செய்தனர். அதற்கு அஞ்சிய மயிலானது பறந்து சென்று தெய்வத்தையுடைய குன்று பொலிவனைப் பெறுமாறு தங்கியது. அத்தகைய ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 266 16-19).

 இப்பாடல் தலைவனை மயிலுக்கும், ஊர் மக்களை உழவர்களுக்கும், தலைவியிருக்கும் இல்லத்தைத் தெய்வத் தையுடைய குன்றுக்கும் உள்ளுறையாகக் கூறப்படுகின்றது. அதாவது தலைவன் பரத்தையுடன் இருப்பதை தலைவியும் ஊர் மக்களும் அறிந்தனர். ஊரார் தலைவனை இழிவு படுத்தினர். அதனலால் அவன் அப்பரத்தையிடமிருந்து வீட்டைஅடைகின்றான் இங்கு ஒழுக்கக்கேட்டை ஊரார் வெளிப்படுத்துவது புலனாகின்றது.

முடிவுரை

தலைவன் தலைவியை விடுத்து பரத்தையை நாடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாகப் பண்டைய பாடல்கள் சிலவற்றில் வெளிப்படுகிறது. இருப்பினும், இவ்வொழுக்கம் தவறானது. களையப்பட வேண்டியது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு உரிய நாகரிகமான வெளிப்பாட்டுக் கருவியாக உள்ளுறை உவமம் உள்ளது. சங்க காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டதாக பரத்தமை ஒழுக்கம் இருந்தாலும் அது கூடாதது விலக்கப்பட வேண்டியது என்ற தனிமனித சமுதாய ஒழுக்கச் சிந்தனையாக இவ்வுள்ளுறை உவமம் சார்ந்த பாடல்கள் அமைந்துள்ளன எனத் துணியலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப் பேராசிரியர்

எம்.ஜி.ஆர். கல்லூரி, ஓசூர்.

திரௌபதை – சிறுகதை

அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ததும்ப வீற்றிருந்தனர். அனேகமாக அப்புகைப்படம் குழந்தையின் முதலாம் பிறந்தநாளன்று எடுத்திருக்கிறார்கள். அடுத்தப் புகைப்படம் கோவிந்தன் வெண்மதி மகன் முத்து மகள் ஜானகியுடன் குடும்பப் புகைப்படமாக அந்தச் சுவற்றினை அலங்கரித்திருந்தார்கள். அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும்  கண்ணாடியின் பிம்பம்  அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது.

            வெண்மதி குடும்பப்பெண். மாநிறம் கொண்ட பூங்கொடியாள். வெண்மதியின் முகத்தில் கருணையே எஞ்சி நிற்கும். அவள் முகத்தைப் பார்க்கும் எவராயினும் தலையசைத்து விழி பார்வையில் மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டும். வெண்மை குணம் கொண்ட கற்புக்கரசி. பருத்திக்காட்டில் களை எடுத்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் வடிகின்ற வேர்வையை முந்தானையால் அவ்வவ்போது துடைத்துக் கொள்கிறாள். மாலை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் அவளைச் சுட்டது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றே ஆகவேண்டும். கூலிப்பணம்தான் வெண்மதியின் குடுபத்திற்கு சோறு போடுகிறது. உடம்போ மனமோ எவ்வளவு துன்பப்பட்டாலும் வேலைக்கு ஓடிவிடுவாள். வேலையில்லாத நேரத்தில் அவள் மனம் மிகவும் வருத்தமடையும். இன்றையப் பொழுதின் கூலி போயிடுச்சே என நொந்துக்கொள்ளுவாள். வீட்டு வேலைகளையும் துய்மையாக வைத்திருப்பதிலும் ரொம்ப கவனம் கொளளுவாள். களை எடுக்க ஒவ்வொரு முறையும் மண்ணில் களைக்கொத்தினைக் கொத்தும்போதும் அழகிய பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டாள். பருத்திக் காட்டில் மனம் சிந்தையில் ஆழ்ந்து போனாள்.

            “ஏலே… மதி! உம் மொவ அழுதுட்டு ஓடீயாறா… பாருடி” என்றாள் பருத்தில் காட்டில் வேலை செய்யும் கிழவி ஒருத்தி. தலை நிமிர்ந்து பார்த்த மதி கொஞ்சம் பதறித்தான் போனாள். வேகமாய் மகள் ஓடிவரும் திசையை நோக்கி நடந்தாள்.

            “ஜானகி என்னாச்சுடி… ஸ்கூல்க்கு போயிட்டு உன்னையும் அண்ணனையும் வீட்டுலதான இருக்கச் சொன்னேன். இங்க ஏ ஓடியாற..” – என்றாள் மதி.

            அழுது கொண்டிருந்த ஜானகி, “அம்மா… அண்ணாக்கு வயித்து வலி. அழுவுறான்” என்று தத்தித்தத்தி சொன்னாள். மதிக்கு மனசு என்னவோ செய்தது. திரும்பி நின்று வேலை செய்பவர்களைப் பார்த்தாள். வேலை செய்பவர்கள் அனைவரும் மதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மதியின் உள்ளம் அனைவருக்கும் புரிந்தது. “மதி.. நீ வீட்டுக்குப் போயி மகனை கவனி. நாங்க உன்னோடதையும் சேர்த்துக் களை வெட்டிடுறோம்” என்றார்கள். வெண்மதி வீட்டை நோக்கி ஓடினாள்.

            வீட்டு வாசலில் வயிற்றைப் பிடித்தப்படி சுருண்டு படுத்திருந்தான் முத்து. மகனை அந்த நிலையில் பார்த்தவுடன் ஓடிப்போய் மகனை அணைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நீர்வீழ்ச்சியாய் விழுந்தது. தன்னுடைய வயிற்றில் முதலில் பூத்த பூவல்லவா! முதலில் நின்ற உதிரத்தில் உருவான கருவல்லவா! அதுதான் துடித்துப்போய்விட்டாள். அக்கிராமத்தில் உள்ள மருத்துவச்சியிடம் கூட்டிட்டு போய் காட்டுகிறாள். முத்துவின் அடிவயிற்றில் தொட்டுப்பார்த்தாள். சூடு ஆறப்பட்ட நல்லெண்ணையைக் கொஞ்சம் எடுத்து வயிற்றில் தடவி நீவி விடுகிறாள். வெந்தையத் தண்ணீயை முத்துவுக்கு ஊட்டிவிடுகிறாள். 

“ஒன்னுமில்ல வெண்மதி சூடுதான். நல்லெண்ணையைத் தடவி வெந்தையத் தண்ணியக் கொடுத்திருக்கென் கொஞ்ச நேரத்துல வலி கொறஞ்சு சரியாயிடும். வீட்டுக்கு கூட்டிட்டு போயி மோரு இல்லன்னா இளநீரு ஏதாவது கொடுத்து தூங்க வையிடி” என்றாள் மருத்துவச்சி.

வரும் வழியில் பால்கார வீட்டில் காசுக்கு மோரை வாங்கினாள் மதி. வீட்டுக்கு வந்தவுடன் மோரில் தேவையான அளவு உப்பைக் கலந்துகொடுத்து மகன் முத்துவை பாய் விரித்து படுக்கவைத்தாள். மாலை மயங்கி இரவை நெருங்கிகொண்டிருந்தது. வீட்டு வேலைகளைக் கவனிக்க மும்பரமானாள். அரிசையைக் களைந்து ஊறவைத்தாள். காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைத்தாள். விறகை வைத்து அடுப்பினைப் பற்ற வைத்தாள். உலைக்கு பாத்திரத்தை எடுக்க குடிசையின் மூலைப்பகுதிக்குச் சென்றாள். அடுக்கி வைக்கப்பட்டிருந்தப் பாத்திரத்தில் சோறு வடிக்கும் பாத்திரம் காணாமல் போயிருந்தது. சிந்தித்தவளாய் வெளியே வந்து பாத்திரங்கள் கழுவும் இடத்திலே பார்த்தாள். அங்கேயும் அப்பாத்திரம் இல்லை. அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இது தன்னுடைய கணவனுடைய வேலைதான். கணவன் கோவிந்தனைச் சமாளிப்பது என்பது வெண்மதிக்கு ஒவ்வொரு நாளும் போர்க்களத்தில் விட்ட அம்பாய் நெஞ்சில் குத்தியது. அம்பை பிடிங்கி இரத்தத்தைத் துடைத்து காயத்திற்கு மருந்து போடவேண்டும். அம்பு விட்டவனை எதிர்த்து நின்று போரிடவும் அவனின் நெஞ்சை பிளக்கவும் எங்கள் பாரம்பரியம் பெண்களுக்குச் சொல்லித்தரவில்லையே.  அந்த அளவிற்கு கோவிந்தனைக் குடிப்பழக்கம் ஆட்டிப்படைத்தது. விற்றுவிற்று குடித்ததன் விளைவாக இன்று குடிசை வீட்டில் இருக்கிறான். வெண்மதியோ ஆனமட்டும் திருத்த முயற்சி செய்தாள். கோவிந்தனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. நாலு நாள் வேலைக்கு செல்வான். அந்தக்காசை வைத்துக்கொண்டு ஒருமாதமாய் குடிப்பான். இதுல சூதாட்டம் வேற. வெண்மதிக்கு எல்லாம் பழகிப்போனது. ஆனால் இன்று உலைப்பாத்திரம் இல்லாதது அவளை கோபத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.

சமையல் செய்து ஜானகிக்குக் கஞ்சி சோற்றினை ஊற்றிவிட்டாள். முத்து வயிற்று வலி என்று மோர் மட்டும் போதும் என தூங்கிவிட்டான். பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு கணவனுக்காகக் காத்திருந்தாள். தன்னுடையப் பிள்ளைகளை நினைத்து எப்போதும் பெருமை கொள்வாள். ஆறு வயதில் முத்துவும் நான்கு வயதில் ஜானகியும் வளர்ந்து நன்றாகப் படித்து செல்வசெழிப்பில் இருக்க வேண்டும் என எந்நேரமும் இறைவனை வேண்டிக்கொள்வாள். குடிசையின் கதவுகள் திறக்கப்பட்டு கோவிந்தன் தள்ளாடும் போதையில் உள்ளே வந்தான். வெண்மதி முன்னே சென்று தாங்கிப்பிடித்தாள். மதுவின் வாடை வயிற்றை குழற்றியது. அவனை அமரவைத்து சோற்றைப் பரிமாறினாள். வெண்மதிக்கு கணவன் மீது கடுங்கோபம் இருப்பினும் அந்நேரத்தில் காண்பிக்க விரும்பவில்லை.

“புள்ளைங்க.. சாப்டாங்களா மதி” – கோவிந்தன்

“முத்துவுக்கு உடம்பு சரியில்லை. வயித்துவலி ரொம்ப துடிச்சிப்போயிட்டான். மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போன, இப்ப பரவாயில்ல. மோரு மட்டும் குடிச்சிட்டு தூங்கிட்டான்” என்றாள் வெண்மதி

“என்ன பையன் சாப்பிடலையா?” என்று தன் தட்டில் இருந்த சோற்றை ஒரு பிடி எடுத்து தூங்கிக்கொண்டிருக்கிற மகனுக்கு ஊட்டிவிட்டான். முத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததால் அவன் உதடுகளில் பட்டு சோறு கீழே விழுந்தது. வெண்மதி கணவனைத் தடுத்துச் சரியாகச் சாப்பிட வைத்தாள். குடிசையின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதிகாலையில் சீக்கிரமாய் எழுந்து கொண்டாள். சமையல் முடித்து வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் போதை தெளிந்து எழுந்தான் கோவிந்தன். மதி…மதி.. என்று வெண்மதியை நெருங்கியவனுக்கு, அவள் கையில் இருந்த கரண்டியைக் கோவிந்தன் மீது எறிந்தாள். உடம்பை வளைத்துக் கரண்டியிடமிருந்து தப்பித்துக்கொண்டான் கோவிந்தன்.

“யோ.. வீட்டுல வைச்சிருந்த உலைப்பாத்திரத்தை எடுத்துட்டு போயி வித்து குடிச்சிருக்கியே.. இது நல்லாவா இருக்கு”  கோவிந்தன் தலை தொங்கப்போட்டு அமைதியாய் நின்றான். “ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதுங்க முகத்தப் பாருய்யா.. இப்படியே நீ பண்ணிட்டு இருந்தின்னா இந்தப் புள்ளையங்களோட எதிர்காலம் என்னா ஆவுறது. அத கொஞ்சமாவுது நினைச்சிப் பாக்கிறியா..” கொஞ்ச நேரம் கோபத்தில் கத்தி முடித்தாள் வெண்மதி. சிறிது நேரத்திற்குப் பிறகு “என்னை மன்னிச்சிடு மதி” என்றான் கோவிந்தன். அப்படி என்ன மந்திரமோ தந்திரமோ… உடனே வெண்மதி உதட்டில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். கணவன் மீது பாசம் அதிகம். அவன் மீது மிகுந்த அக்கறை உடையவள். தன் முந்தானையில் இருந்து ரூபாய் முப்பதை எடுத்து கோவிந்தனிடம் கொடுத்து ரேஷன் கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள். “குடிச்சிட்டு வந்துராத… வீட்டுல கொஞ்சம் கூட அரிசி இல்ல. புள்ளையங்க ஸ்கூல் போகட்டும். நீ ரேஷனுக்குப் போயிட்டு அரிசி வாங்கிட்டு வந்து வீட்டுல வச்சிட்டு அப்புறமா போ..” என்று சொல்லிவிட்டு வேலைக்காக வயக்காட்டிற்கு ஓடினாள்.

ரேஷன் கடை செல்லும் வழியில் வேப்பமர நிழலில் பிள்ளையார் கோவில் இருந்தது. சிலைக்கு முன் பகுதியில் பாகவதர் ஒருவர் ஒருசில பேருக்கு மகாபாரதக்கதையைக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது பீஸ்மரின் பிறப்பை பாடலடியோடு பாடினார். சிலைக்கும் மரத்துக்கும் பின் பகுதியில் சில ஆண்கள் ரம்மி சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். கோவிந்தன் ரேஷன் கடைக்குச் சென்று அரிசியை வாங்கி வைத்துவிட்டு இந்தப் புள்ளையார் கோயிலுக்கு வந்துவிட வேண்டும் என்று வேகமாக நடக்க ஆரமித்தான்.

அப்போது புள்ளையார் கோயிலிலிருந்து, “ஏ கோவிந்தா… எங்கடா போற” என்றது ஒரு குரல்.

“அரிசி வாங்க ரேஷனுக்குப் போறன்”

“இப்பதான் நானும் சக்கரை வாங்கலாமுன்னு போயிட்டு வந்தன். இதோ பாரு மஞ்சப்பை. கடையில ஒரேக்கூட்டம். அதுதான் திரும்பி வந்துட்டேன். கொஞ்ச நேரத்திற்குப் பின்னால போனா கூட்டம் குறைஞ்சிரும்” என்றான். அவன் பேச்சைக் கேட்டு, அப்புறமா வாங்கிக்கலாம் என்று அரசமரத்தடியில் உட்காந்தான் கோவிந்தன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கோவிந்தனும் அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட ஆரமித்தான். ரேஷனுக்காக வைத்திருந்த முப்பது ரூபாயை பந்தையக்கட்டணமாக வைத்து ஆடினான். முதல் சுற்று ஆட்டத்தில் முப்பதுக்கு அறுபதாகக் கிடைத்து வெற்றி கிட்டியது. ஆசை யாரை விட்டது. பாகவதரின் மகாபாரதக்கதை இப்போது சூதாட்டப்படலத்தில் சகுனியின் பகடைக்காய்களைப் பற்றிக் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்தச் சுற்றில் தான் வைத்திருந்த அறுபது ரூபாயையும் விட்டுவிட்டான் கோவிந்தன். திருதிருவென்று முழித்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான். கருத்த உடலில் முறுக்கிய மீசையோடு எதிரில் உட்காந்திருக்கும் அழகேசனின் பார்வை கோவிந்தன் மேல் பட்டது.

“என்ன கோவிந்தா? காசு இல்லன்னா கிளம்பிட்டே இரு..” என்றான் அழகேசன். கோவிந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அரிசி வாங்க வெண்மதி கொடுத்த பணம் மொத்தமும் போச்சு.

“அழகேசண்ணே கடனா முப்பது ரூபாய் கொடுங்கண்ணா சாயுங்காலத்துக்குள்ள கொடுத்திடுறேன்” என்றான் கோவிந்தன்.

“காசல்லாம் தரமுடியாது. வேணுமின்னா எதையாவது வைச்சு ஆடு. நீ ஜெயிச்சிட்டன்னா உன்னோட முப்பது ரூபா காசையும் கொடுத்திடுறேன். இதைவிட்டா என்னால வேற எதுவும் செய்ய முடியாது” என்றான் அழகேசன். இப்போது பாகவதர் திரௌபதையை துச்சாதணன் தலைமுடியைப் பற்றி இழுத்து வரும் காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் “டே கோவிந்தா.. உன் பொண்டாட்டிய வச்சு ஆடுறா” என்றான். கோவிந்தன் மௌனம் காத்தான். அழகேசனின் கறுத்த உதட்டில் சிரிப்பு வந்துபோனது. கோவிந்தனை ஏளனமாகப் பார்த்தபடியே சீட்டை இரண்டு கைகளாலும் நன்றாகக் குலுக்கி கோவிந்தனின் முன் வைத்தான். “சம்மதம் என்றால் சீட்டை வெட்டி போடு.. இல்லையென்றால் போயிட்டே இரு” என்றான் அழகேசன். சிறிது நேர அமைதிக்குப்பின் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டான் கோவிந்தன். பாகவதர் கதையில் திரௌபதை துகிலுரியப்பட்டாள். கண்ணன் அவளைக் காப்பாற்றினான்.

ஆடிய ரம்மி ஆட்டத்தில் ஏழு ஆட்டங்களிலும் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றியடைந்தான் அழகேசன். கோவிந்தன் முழுமையாகத் தோற்று தன்னை இழந்து காணப்பட்டான். கண்கள் அழும் நிலைக்கு வந்துவிட்டன. ஓடி விடலாமா என்று தோன்றியது. நைசாக எழுந்திருக்க முயற்சி செய்தான். அதற்குள் அழகேசனின் கை கோவிந்தனின் வேட்டியை உருவியது. இப்போது கோவிந்தன் அரை நிர்வாணத்தில் இருந்தான்.

“என்னா ஓட பாக்குற… உன் பொண்டாட்டிய வைச்சு ஆடினில்ல. போயி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வா” என்றான் அழகேசன்.  அவன் சொன்ன அந்த வினாடியே அழகேசனின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான் கோவிந்தன்.

“ஏண்டா பொண்டாட்டியை வச்சு விளையாண்டுட்டு உனக்கெல்லாம் ரோஷம் வருதா” என்று கோவிந்தனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் அழகேசன். கோவிந்தனின் மூக்கு உடைந்து இரத்தம் வாயை நிரப்பியது. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு மண்ணில் உருண்டு சண்டையிட்டுக்கொண்டனர்.

அன்னிக்குன்னு பாத்து வெயில் ரொம்ப அதிகமா அடிச்சுது. வயக்காட்டில் நெல் நாற்றை வரிசையாக நட்டுக்கொண்டிருந்தாள் வெண்மதி. வெயிலின் சூட்டை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் குனிந்து வேலை செய்யும் போது முதுகுப் பகுதி வெயில் பட்டு வெடித்துவிடுவது போன்று உணர்ந்தாள். முழங்கால் வரை சேற்றுப்பகுதியில் இருந்தது. உடம்பெல்லாம் சேறு சகதி. வியர்வையால் உடம்பே அழுகிபோனது மாதிரி உணர்வு. அந்நேரத்தில் பம்புசெட்டில் தண்ணீர் எடுத்துவிடப்பட்டு வயக்காலில் ஓடிக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த நாற்று முடிச்சை அப்படியே வைத்துவிட்டு ஓட்டமாய் ஓடி பம்புசெட்டில் தலையைக் காண்பித்தாள். ஜில்லென்ற குளிர் தண்ணீர் அவளின் புடவையை நனைத்தது. வியர்வையை நீக்கியது. உள்ளத்தில் கலந்து பரவசத்தை உண்டாக்கியது. நெஞ்சில் பட்டு அதன் ஈரத்தை உணர்ந்தாள் மதி. எப்படி இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கின்றதே என்று நினைத்துக்கொண்டாள். அவள் தலையை இன்னும் நன்றாகத் தண்ணீரில் காண்பித்தாள். அந்தக் கிழவிதான் இப்போதும் மதியை இழுத்து ஊருக்குள் கோவிந்தனும் அழகேசனும் சண்டையிட்டுக் கொள்ளும் செய்தியைக் கூறுகிறாள். நனைந்த உடல். விரித்தக் கூத்தல். அழுத கண்கள் என விரைந்து ஓடுகிறாள் கிராமத்தை நோக்கி..

கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வெண்மதி உள்ளே நுழையும் போது அழகேசனின் வலது கை கோவிந்தனின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறது. மற்றொரு கை கோவிந்தனின் இரண்டு கைகளையும் மடக்கி பிடித்திருக்கிறது. “உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு… உம் பொண்டாட்டிய இப்பவே அனுப்பு…” என்னும் வார்த்தையைத் தவிர அழகேசனின் வாயில் இருந்து வேற எந்தவொரு வார்த்தையும் வரவே இல்லை.

அந்தச்சொற்கள் வெண்மதியின் இதயத்தைக் கூரிய முள்ளால் கிளித்தது போன்று இருந்தது. அதே இடத்தில் அழுத கண்ணீரோடும் தலையில் அடித்துக்கொண்டும் அமர்ந்தாள். அவளின் அழுகை அழகேசனின் காதுகளில் விழுந்தன. அழகேசன் வெண்மதியைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை கோவிந்தனை விட்டுவிட்டு ஒரு கையால் மீசையைத் தடவியபடியும் மறுகையால் வேட்டியை தூக்கிப்பிடித்தபடியும் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தான். எல்லோரும் வெண்மதியின் அழுகையைப் பார்த்து கண்கலங்கினர். கோவிந்தன் தன்நிலையைக் கண்டும் வெண்மதியின் வேதனைக் கண்டும் வெட்கப்பட்டான். தன் மனைவியின் அவமானத்தை நினைத்து சாக துடித்தான்.

“ஏண்டா பொறம்போக்குப் பயலே… யாராவது பொண்டாட்டிய சூதுல வச்சி ஆடுவாங்களாடா… ஏற்கனவே வச்சி விளையாடினவங்களோட கதை உனக்கு தெரியாதாடா..” கூட்டத்தில் ஒருவர்.

“உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி புள்ளையங்க.  இப்படியெல்லாம் செய்யுற நீ நாளைக்கு இவளையும் விக்கமாட்டின்னு என்னடா நிச்சயம்” – கூட்டத்தில் ஒருவர்.

“இந்தாம்மா வெண்மதி… இன்னுமா இவனை நம்புற. இவன வச்சுகிட்டு இன்னும் கொற காலத்த எப்படி ஓட்டப்போற. இவ கூட வாழுறதை விட செத்துப்போலாம்” – கூட்டத்தில் ஒருவர்.

ஒவ்வொருவராய் செல்ல கூட்டம் கலைந்தது. கோவிந்தன் கிழக்கு திசையை நோக்கி ஓடினான். நடைபிணமாய் குடிசைக்குள் வந்தாள் வெண்மதி. முத்துவும் ஜானகியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து போனது அக்குழந்தைகளுக்கு. அம்மாவின் பக்கத்தில் கட்டிப்பிடித்தபடி படுத்துக்கொண்டனர். இரவு நேரமாகியும் கோவிந்தன் இன்னும் வரவேயில்லை.

மணி பதினொன்றை தாண்டியிருந்தது. வெண்மதியின் மனம் நெருப்பாய்க் கொதித்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் மகனை எழுப்பினாள். மகளை அணைத்து தூக்கிக்கொண்டாள். ஜானகி தூங்கி வழிந்தாள். அம்மாவின் தோளில் அவளின் வாய் வழியே வழிந்த எச்சில் மதியின் நெஞ்சைத் தொட்டது. அம்மா கூப்பிட்ட உடனே மகன் முத்துவும் நடக்க ஆரபித்தான். வயக்காட்டுக் கிணறு. மகளை மடியில் கிடத்தி அழுகின்றாள். தன்னுடையத் தாலியைக் கழற்றி கிணத்து மேட்டில் வைக்கின்றாள். மகன் அம்மாவையே உற்று பார்க்கின்றான். இந்த நேரத்தில் யாராவது வந்து என்னுடைய மனதை மாற்ற மாட்டார்களா என்றும் மதியின் மனம் எண்ணுகிறது. ஆனாலும், வாழப்பிடிக்கவில்லை.  பிள்ளைகளையும் என் கணவர் அநாதையாக விட்டுவிடுவார். அதனால் அவர்களையும் என்னுடனே அழைத்துக்கொள்கிறேன். இறைவனை வேண்டுகிறாள். அம்மாவையும் அப்பாவையும் நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறாள். மகளை ஒருபக்கமும் மகனை ஒருபக்கமும் தூக்கி இறுக்கி அணைத்துக் கொள்கிறாள். முத்துவுக்கு ஓரளவுக்கு புரிய ஆரமித்தது. அம்மா இந்தக் கிணற்றில் குதிக்கப்போகிறாள் என்று நினைத்தான்.

“அம்மா வேண்டாம்மா… எனக்கு பயமா இருக்கு.. என்ன விட்டுடுமா.. அம்மா பயமா இருக்கும்மா…” கெஞ்சுகிறான் முத்து.

“இந்த உலகம் பொல்லாதது. உன்னை வாழவிடாது. நீ என்னுடனே வந்து விடு” என்று மனதை இரும்பாக்கிக்கொண்டாள். அடுத்த வினாடி கிணற்றுக்குள் குதித்து விட்டாள். கலைந்த கூந்தல் வானத்தை நோக்கி மேலெழும்புகின்றன. வெண்மதியே போகதே… மேலே வா.. என்பது போல் இருந்தது.  முத்து மூச்சை இழுக்க முடியாமல் அம்மாவை உதைத்து வெளியே வர பார்க்கிறான். ஜானகியும் தூக்கம் கலைந்து அம்மாவை விட்டு வெளிவர முயற்சிக்கிறாள். ஆனால் வெண்மதியின் பிடியே வெற்றி பெறுகிறது. இருவரும் மூர்ச்சையான பின்பு தன்னையும் இழக்கிறாள். கிணற்றின் தண்ணிரின் மேலே ரெண்டு மூன்று கொதி வந்தவுடன் எப்போதும் போல் அமைதியானது அக்கிணறு. முழுநிலவு பௌர்ணமியின் பிம்பம் இப்போது அக்கிணற்றில் தெரிந்தது.

அடுத்ததொரு புகைப்படம் புதியதாக அங்கே மாட்டியிருந்தது. வெண்மதி தன்னுடைய மகன் மகளோடு மட்டும் இருக்கும் புகைப்படம் அது. விளக்கொளியில் அப்புகைப்படத்தில் இருக்கும்  கண்ணாடியின் பிம்பம்  அக்கூரை கொட்டகையின் நடு ஆரமாய் விளங்கும் மூங்கிலில் பட்டுத் தெறித்தது. அப்புகைப்படத்திற்கு கோவிந்தன் கையில் வைத்திருந்த மாலையை அணிவித்தான். ஓ… வென்று வாய்விட்டு அழுத அவனுடைய அழுகையானது எங்கும் ஒலித்தது. உடம்பு முழுவதும் மண்ணெண்னையால் ஊற்றிக் கொண்டதனால் பக்கத்தில் இருக்கும் விளக்கினைக் கோவிந்தன் தன்மேல் சாய்த்தவுடன் அனலாய் பற்றி எரிந்தது கோவிந்தனின் உடலும் அக்குடிசையும். அந்த நெருப்பின் புகையானது வானத்து மேகத்தில் கரைந்து போனது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

முல்லைக்கலியில் தொழில்கள்

இனியவை கற்றல்

முன்னுரை

            தொழில் என்பது ஒருவருடைய வாழ்வதாரத்திற்கும், பொருளாதார நிறைவுக்கும் வருமானம் ஈட்டக் கூடிய செயல் என்றும், ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றக் காரணிகளுள் மிகவும் இன்றியமையாத ஒன்று என்றும் கூறுவர். தொழிலே மனித மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. ஒருவர் செய்யும் தொழிலைக் கொண்டே அவர் சமூகத்தின் நிலை அறுதியிடப்படுகின்றது.

            சங்ககாலத்தில் பெரும்பாலும் இயற்கைச் சார்ந்த தொழில்களையே செய்து வந்தனர். இயற்கையோடு வாழ்ந்த சங்க மனிதன் அதற்கேற்றாற் போன்ற நிலப்பகுப்பையும், தொழிலையும் கையாண்டான். அதுமட்டுமல்லாது அன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிபம் சிறப்புற்றிருந்ததைச் சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சங்ககாலத்தில் அனைத்தும் பண்டமாற்றுத் தொழில்களாகவே இருந்தன. ஒவ்வொரு நிலப்பகுதி மக்களும் தங்கள் பகுதியில் கிடைக்கும் மற்றும் விளைவிக்கும் பொருட்களை மற்ற நிலத்தில் கொடுத்து அங்குத் தங்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பின் பெற்றுக்கொண்டான்.

“தனிமனிதத் தேவைதான் அவன் வாழும் சமுதாயத் தேவையாகின்றது. இந்த அடிப்படையில் அரும்பி மலர்ந்து பயன் தருவதே ஒவ்வொரு தொழிலுமாகும்.”1

என்ற கருத்து தொழிலின் தன்மையைப் பதிவு செய்துள்ளது. உழவுத் தொழில், நெசவுத்தொழில், வணிகம், போர்த்தொழில், குயவுத்தொழில், தச்சுத் தொழில், கொல்லர் தொழில், மீன்பிடி தொழில், மீன் விற்றல், உப்பு விளைவித்தல், வேட்டையிடுதல், காவல், சிற்பம், கட்டிடம், கோயில் தொழில், ஆடுமாடு மேய்த்தல் போன்ற பல தொழில்கள் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்தன. அதனால் சமுதாயமும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருந்தது. அவ்வகையில் முல்லை நிலமக்களின் தொழில்கள் குறித்து இப்பகுதி விளக்குகின்றது.

மேய்ச்சல் தொழில்

            காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலமாகும். தலைவனுக்காகத் தலைவியும், தலைவிக்காகத் தலைவனும் காத்திருத்தலை உரிப்பொருளாக கொண்ட  இந்நிலமக்களின் முதன்மையான தொழில் மேய்ச்சல் ஆகும். கால்நடை வளர்ப்பில் சிறந்த முல்லை நிலமக்கள் அதன் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வாழ்க்கையை நடத்தினர். மேய்ச்சலுக்கென்று நிலங்களை உருவாக்கிக் கொண்டனர். தாங்கள் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு அருகிலேயே மேய்ச்சல் நிலங்களைத் தேர்ந்தெடுத்தனர் முல்லைநில ஆயர்கள். இவர்களை இடையர்கள், கோவலர்கள் என்ற சொற்களாலும் அழைத்தனர். ஆடு, மாடுகளை மேய்த்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தினர் முல்லை நில மக்கள்.

“சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

வறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய

கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர் தாயர் என்போள்”2

என்ற முல்லைப்பாட்டு அடிகள் கோவலர் ஆநிரைகளை மேய்த்து விட்டுத் திரும்பும் காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன.

            முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடை மேய்ச்சலுக்குச் செல்லும் போது, பால் கறந்த கலங்களை வைக்கப் பயன்படும் உரியினையும், சிறிய கத்தி மற்றும் சூட்டுக் கோல்களுடன் கூடிய சுருங்கிய பையையும், கொன்றைக் காயால் உருவாக்கிய இனிய இசையைத் தரும் நிழலினையும் கொண்டு சென்றதை,

“கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்

இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி

ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்

வழூஉச் சொற் கோவலர் தத்தம் இனநிரை

பொழுதொடு தோன்றிய கார்நனை வியன் புலத்தார்”3

என்ற அடிகளானது பதிவு செய்துள்ளன. மேய்ச்சலுக்குச் செல்லும் போது சூட்டுக் கோல், ஞெழிகோல் கொண்டு சென்றதற்குக் காரணம் குளிரை விரட்டத் தீ மூட்டுவதற்கும், சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி சுட்டுத் தின்பதற்கும் ஆகும். கழு கொண்டு சென்றதற்குக் காரணம் வேட்டையாடுதலாகும். உறி கொண்டு சென்றதற்குக் காரணம் கொண்டு செல்லும் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியும், காட்டில் கிடைக்கும் சிறுசிறு பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வரவும் ஆகும். குழலோசை இனிமை கருதியும், ஆக்கள் திசைமாறி செல்லாமலிருக்கவும், பிறவிலங்குகளிடமிருந்து ஆக்களைக் காக்கவும் பொருட்டு மேய்ச்சலில் பயன்படுத்துகின்றனர்.

            ஆயர் ஆக்களை (ஆநிரைகளை) ஊருக்கு அடுத்துள்ள மேய்ச்சல் நிலங்களில் மேயவிடுவர். காலையில் சென்று  மாலையில் வீடுதிரும்பும் ஆயர்கள் பசுக்கள் மேயும் இடத்திற்கே பால் கறக்கும் கலங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை,

“கலந்தொடுயாஞ் செல்வும் நாடிப் புலந்தும்”4

என்ற அடியானது பதிவு செய்துள்ளது. ஆநிரைகளை மேய்க்கும் போது அவற்றைப் பாதுகாக்கும் விதமாகவும் அவற்றிற்குத் தேவையான தழைகளை மரங்களிலிருந்து ஒடித்துத் தரவும் கோல்களை ஆயர்கள் பயன்படுத்தினர். இதனை,

“மேயும் நிரைமுன்னர்க் கோல் ஊன்றி நின்றாய்”5

என்ற அடியானது வெளிப்படுத்தியுள்ளனர்.

            ஆயர்கள் தம் மனைக்கு அருகிலேயே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர்த் தொழில் செய்தனர். பயிர்த் தொழில் செய்த இடத்திற்கு ஆநிரைகளைக் கன்றுடன் ஓட்டிச் சென்று மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளனர். இதனை,

“பாங்கரும் பாட்டங்கால் கன்றோடு செல்வேம் எம்”6

என்ற அடியானது விளக்கியுள்ளது. இதன்வழி ஆயர்களின் மேய்ச்சல் சிறப்பினை அறிய முடிகின்றது.

பால், மோர், தயிர் முதலிய பொருட்களை விற்றல்

            கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சலை முதன்மையான தொழிலாகக் கொண்ட முல்லை நில ஆயர்கள் அதன் மூலம் கிடைக்கும் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் போன்றவற்றை வேற்றூர் சென்று விற்றுத் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்று வந்தனர். சங்ககாலத்தில் பண்ட மாற்று முறையே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

            பசுவிலிருந்து கறக்கும் பாலை நொதிக்கச் செய்வதன் மூலம் தயிரும் தயிரைக் கடைந்து வெண்ணெயும், தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு எஞ்சிய நீர்மப் பொருள் மோராகவும், வெண்ணெயை உருக்கும் போது நெய்யும் கிடைக்கிறது. பாலில் இவ்வளவு பொருட்கள் இருப்பதை அன்றே அறிந்த தமிழன் இதை அத்துணையையும் தன்னுடைய வாழ்வில் பயன்படுத்தியுள்ளான். அதனை முல்லைக் கலி தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆயமகள் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த செய்தியை,

“பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல்”7

என்ற அடியானது பதிவு செய்துள்ளது.

            ஆயர் மகள் பாலிலிருந்து மோர் தயாரித்து அருகிலிருந்த ஊர்களுக்குச் சென்று விற்ற செய்தியை,

“……………..அளைமாறி யாம் வரும்

செல்வம் எம்கேள்வன் தருமோ?”8

என்ற அடியும்,

“அகலாங்கண் அளைமாறி, அலமந்து பெயருங்கால்”9

என்ற அடியும்

“அளைமாறிப் பெயர் தருவாய்! அறிதியோ”10

என்ற அடியும், பதிவு செய்துள்ளன. மேலும், பேரூர் மற்றும் சிற்றூரின் கண் தலையில் மோர்ப் பானையுடன் சென்று சத்தம் போட்டு அழைத்து ஆயமகள் மோர் விற்றதை,

“தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள்

பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்

மோரோடு வந்தார்………………………….”11

என்ற அடிகளானது வெளிப்படுத்தியுள்ளன. மேற்குறிப்பிட்ட பாடல்களின் வழி அளை என்ற பதத்திற்கு மோர் என்ற பொருளைப் பெற முடிகின்றது.

“அளைவிலை உணவின் கிளைஉடன் அருந்தி

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமைநல் ஆன் கருநாகு பெறூஉம்”12

என்ற பெரும்பாணாற்றுப் படைகள் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கின்றது. இவ்வடிகள் பண்டமாற்றாக விற்ற மோருக்குப் பெற்ற நெல்லைக் கொண்டு வந்து சோறாக்கிக் தன்னுடைய சுற்றத்தார்களை உண்பிக்கச் செய்வாள். பின்பு வெண்ணெய் உருக்கிப் பெற்ற நெய்க்குப் பண்ட மாற்றாகப் பொன் கட்டிகளைப் பெறவிரும்பாமல், பால் தரும் எருமை நல்ல பசுக்கள் கரிய எருமைக் கன்றுகள் பெறுவாள் என்று பதிவு செய்துள்ளன. ஆயர்கள் பொன் பொருட்களை விரும்பாமல் ஆநிரைகளையே விரும்பியதை அறிய முடிகிறது.

வேளாண்மை (அ) உழவு

            முல்லைநில ஆயர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் மூலம்  கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மட்டும் தொழில் நிகழ்த்தவில்லை. உழவுத் தொழிலையும் செய்துள்ளனர். மனிதன் உயிர்வாழ இன்றியமையாதவைகளில் ஒன்று உணவு. இவ்வுணவானது வேளாண்மையின் மூலமே பெறப்படுகிறது. உழவுத்தொழிலே ஒரு நாட்டின் முதுகெலும்பாகும். உழவின்றி உயிரில்லை. ஒரு நாட்டில் உழவுத் தொழில் மேம்பட்டிருந்தால் செல்வம் மிகுந்த நாடு என்றும், உழவுத் தொழில் செழிப்பில்லையென்றால் செல்வ வளம் குறைந்த நாடு என்றும் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டே கூறுவர். அத்தகைய உழவுத் தொழிலைச் செய்யும் விவசாயியைக் கடவுளாக மதித்துப் போற்ற வேண்டும். தற்போது விவசாயம் அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

            வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல்லானது, கொடை, ஈகை என்ற பொருளைத் தருகின்றது. நிலம் தரும் கொடையாதலால் இப்பெர் ஏற்பட்டிருக்கலாம்.

“வேளாண் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்னும் பொருளது என்பர். வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற Sgriculture என்னும் ஆங்கிலச் சொல் Sgricultural என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. யபநச என்பது நிலம் என்றும் உரடவரசய என்பது பண்படுத்தல் என்றும் பொருள் தரும். எனவே நிலத்தைப் பண்படுத்தும் செயல்பாடு ‘யபசiஉரடவரசய’ (யபசiஉரடவரசந) என்று அழைக்கப்படலாயிற்று. மேலும் ‘உரடவரசய’ என்னும் சொல்லே பண்பாடு என்னும் செம்மைப் பொருளை ஏற்றது”13

என்ற கருத்தானது நிலத்தைத் திருத்தி செம்மைப்படுத்தி உழும் நிலையே வேளாண்மை எனப்பட்டது என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”14

என்ற குறள் உழவர்களின் சிறப்பினை எடுத்துரைக்கிறது.

            முல்லை நில உழவு முறை மற்ற நில உழவு முறையிலிருந்து வேறுபட்டது. இம்முல்லை நிலம் வித்தி வான் நோக்கும் புன்புலமாகும். அதனால், மழை பெய்ததும் ஈரம் காய்வதற்கு முன்னால் மிகவும் விரைந்து செயலாற்ற வேண்டியவர்களாக இவர்களின் உழவு முறை காணப்பட்டது. கார்காலத்தில் மழை பெய்தவுடன் அடிமண் மேலே வருமாறு ஒன்றாக உழுது வரகு, தினை, எள், அவரை முதலிய பயிர்களைக் கொல்லை உழவர்களாகிய முல்லை நில ஆயர்கள் பயிரிட்டனர். இவர்கள் நிரந்தரமான ஓர் இடத்திலேயே உழவை மேற்கொண்டனர். ஆயர்கள் தம் மனைக்கு அருகிலேயே பிறர் செல்வதற்கு அரிய இடத்தில் பயிர் தொழிலை மேற்கொண்டதை,

“பாங்கரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்யாம்”15

என்ற அடியானது பதிவு செய்துள்ளது. முல்லை நில மக்கள் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்தமையால், விளை நிலத்தை வீட்டின் அருகிலேயே உருவாக்கிக் கொண்டதை அறிய முடிகிறது.

முடிவுரை

          காடும் காடு சார்ந்த பகுதியை நிலமாகக் கொண்ட முல்லை நில ஆயர்கள் மேய்ச்சல் தொழிலில் சிறப்புற்று விளங்கினர். மேய்ச்சல்  நிலங்களை உழவு செய்யும் இடத்துக்கு அருகிலேயே அமைத்துக் கொண்டனர்.

          கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைத்த பால், தயிர், நெய், மோர், வெண்ணெய் போன்ற பொருட்களை விற்று வாழ்வாதாரங்களையும், பொருளாதாரங்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

          வீட்டின் அருகிலேயே நிலங்களை உருவாக்கி உழவு செய்தனர் என்பதை இயல்வழி அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.          வி.சி.சசிவல்லி, பண்டைத் தமிழரின் தொழில்கள், ப.316

2.          முல்லைப். 12-16

3.          கலி. 106:1-5

4.          மேலது, 116:16

5.          மேலது, 108:11

6.          மேலது, 116:1

7.          மேலது, 106:37

8.          மேலது, 106:44

9.          மேலது, 108:5

10.        மேலது, 108:26

11.        மேலது, 109:5-7

12.        பெரும்பாண். 163-165

13.        www.wikipedia.com

14.        குறள். 1033

15.        கலி. 116:1

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி சி.முத்துலட்சுமி

ஆய்வில் நிறைஞர் பட்டஆய்வாளர் (பகுதிநேரம்),

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி,நாமக்கல் – 637501.

குறுந்தொகை – கோப்பெருஞ்சோழன் பாடல்களில் பொருள்கூறு

காணாமலே பிசிராந்தையார் மீது நட்பு கொண்டு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் கோப்பெருஞ்சோழன் ஆவார். உரையாசிரியர்களிலேயே அதிமான மேற்கோள் காட்டப்பட்டதும், சாகாவரம் பெற்ற பாடல்களுமுடைய சங்க நூலான குறுந்தொகையை ஆராயும்போது, இவர் நான்கு (20, 53, 129, 147) பாடல்களைப் பாடியிருப்பதைக் காணமுடிகிறது. குறுந்தொகையில் இந்நான்கு பாடல்களை மட்டுமே பாடிய கோப்பெருஞ்சோழன் மன்னராக இருந்தபோதிலும் புலவர்களுக்கு ஈடாக பாடியிருப்பது வியக்கத்தக்கதாகும். இந்நான்கு பாடல்களை அடையாளம் கண்டு பொருள்கூறு நோக்கில் காணும்போது செயல், அழகு,  துன்பம், வேட்கை, வருணனை எனும் ஐந்து விதமான பொருள் கூறுகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே, சங்கப்பாடல்கள் அனைத்தும் பல்வேறு பொருள்கூறுகளின் இணைவால் உருக்கொள்பவையாகும். அதே சமயத்தில் ‘அமைப்பியல்’ என்பது ஒரு முழுமைக்கும் அதன் பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பினை ஆய்வதை வற்புறுத்துகிறது. இந்த வகையில் ஒரு பொருள் கூறுக்கும் இன்னொரு பொருள் கூறுக்கும் இடையே உள்ள தொடர்பினை கோப்பெருஞ்சோழனின் பாடல்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறுந்தொகை – கோப்பெருஞ்சோழன் – பொருள்கூறு – செயல் – அழகு – துன்பம் – வேட்கை – வருணனை .

செயல்

            ஒருவர் தானே செய்யும் வேலையையும், பிறருக்குச் செய்யும் வேலையையும் தானே சொல்வதாகவும், பிறர் சொல்வதாகவும் அமைகின்ற செயலை இரண்டு (பாலை 20, 147) பாடல்கள் கூறப்படுகிறது.

            பொருள்வயிற் பிரியக்கருதிய தலைவன் தன் கருத்தை தோழிக்குக் கூறினான்.  தோழி தலைவன் பிரியக்கருதியதை தலைவிக்குக் கூறும்போது தலைவனின் செயல் வெளிப்படுகிறது. அவை,

                        “அருளும் அன்பும் நீக்கி துணைத்துறந்து

                        பொருள்வயிற் பிரியோர் உரவோர் ஆயின்

                        உரவோர் உரவோர் ஆக”  (குறுந். பா. 20 ; 3 – 5)

எனும் பாடலடிகள், தோழியே தொடர்பிலார் மீது தோன்றும் அருளையும் தொடர்புடையார் மீது தோன்றும் துறந்து பொருள் தேடும் நோக்கம் ஒன்றே உடையவராக நம்மைப் பிரிந்து செல்லும் காதலர் அறிவுடையவராயின் அத்தகைய ஆற்றல் உடையவர் அவர் அறிவுடையாரே  ஆகுக. இதில் அருளுக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாட்டை தோழியின் மூலம் புலவர் மிக அழகாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலே கூறியதுபோல இன்னொரு செயலையும் அதாவது, தலைவன் பிரிந்த இடத்து துயிலுங்கால் தலைவியை கனாவில் கண்டு விழித்து ஆற்றாமையை கனவிடம் கூறும்போது தலைவனின் செயல் வெளிப்படுகிறது. இதனை,

            “……….மடந்தமையைத் தந்தோய் போல

            இன்றுயில் எடுப்புதி கனவே

            எள்ளார் அம்ம துணைப்பிரிந்தோரோ ”  (குறுந். பா. 147 ; 3 – 5)

என்னும் பாடலின் மூலம், கனவினை விழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. அதாவது, கனவே! தலைவி கொண்டு வந்து தந்தது போலக் காட்டி இனிய துயிலைக் கெடுத்து எழுப்புகின்றாய் துணையைப் பிரிந்துறைவோர் நின்னை இகழார் என்று கூறுகிறார். இதில், எல்லோரும் தூக்கத்தைக் கெடுத்த கனவை இகழ்வார். ஆனால், தலைவன் புகழ்கின்றார் என்பது வியக்கத்தக்கதாகும்.

அழகு

            எந்த ஒரு கவிஞனும் அழகை வருணிக்காமல் இருந்ததே இல்லை. அதைப்போல் குறுந்தொகையில் தலைவியின் அழகை மிகவும் நுண்மையாக  புலவர் இரண்டு (குறிஞ்சி 129, பாலை 147) பாடல்களில் வருணித்துள்ளார். அவை, இயற்கை புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்து வந்த தலைவனது வேறுபாடு கண்ட பாங்கன் இவ்வேறுபாடு நினக்கு ஏற்றலாகாது என்று வினவியவழித் தலைவன் அவனுக்கு உரைக்கும்போது தலைவியின் அழகு இடம்பெறுகிறது. இவ்வழகினை,

                        “மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்தப்

                        பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்

            கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்”  (குறுந். பா. 129 ; 3 – 5)

என்ற பாடல் புலப்படுத்துகின்றது. அதாவது, தோழனே கேட்பாயாக கரிய கடலினிடையே குளிர்ந்த வளர்பிறையின் எட்டாம் நாளின் வெள்ளிய பிறைத் திங்கள் தோன்றியதுபோல கூந்தலின் பக்கமாக விளங்கும் சிறிய நெற்றியாகும் என்பதைத் தலைவன் தலைவியின்  அழகை வியந்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழகினைக் குறித்து கீழ்வரும் பாடலும் உணர்த்துகின்றது.

தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் சென்றவிடத்தே துயிலுங்கால் தலைவியைக் கனாவில் கண்டு விழித்து ஆற்றாமையாலே கூறும்போது மேலும் தலைவியின் அழகானது,

                        “வேறிற் பாதிரிக் கூண்மல ரன்ன

                        மயிரேர் பொழுகிய வங்கலும் மாமை

            நுண்புண் மடந்தையைத் ………….” (குறுந். பா. 147 ; 1 – 3)

என்ற பாடலில் வேனிற் காலத்தில் மலரும் மாதிரி மரத்தின் இதழ்கள் உட்புறம் வளைந்த பூவில் உள்ள மயிரினைப் போன்று மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாந்தளிர் போன்ற நிறத்தினையும், நுண்ணிய வேலைப்பாடுடைய அணிகலன்களையும் உடைய தலைவி என்று கனவில் வந்த தலைவியின் அழகை மிக அழகாக  தலைவன் மூலம் புலவர் சித்திரித்துள்ளார். இவ்விரண்டு பாடல்களும் அடி அமைப்பில் வேறுபட்டிருந்தாலும் அழகு என்ற அமைப்பில் ஒத்துக்காணப்படுகின்றது.

துன்ப நிலை

            துன்பம் என்பது அவரவர் வாழ்க்கையில் நிகழக்கூடியதாகும். ஒன்றை இழந்து விட்டால், நினைத்து நடக்காவிட்டால், எதிர்ப்பார்த்தது கைக்கூடவில்லை என்றால் அதை நினைத்து மனதில் துன்பம் ஏற்படுவது இயல்பு. இத்துன்பத்தைப் பற்றி இரண்டு (பாலை 20, மருதம் 53) பாடல்கள் கிடைக்கின்றன. அவை, பொருள்தேட கருதிய தலைவன் தன் கருத்தைத் தோழிக்குக் கூறினான். அதை, தோழி தலைவன் பிரியக் கருதியதைத் தலைவிக்குத் கூறும்போது தலைவியின் மனதில் வருத்தம் தோன்றுகிறது.  இத்துன்ப நிலையை,

                        “மடவம் ஆக மடந்தை நாமே” (குறுந். பா. 20 ; 4)

என்ற பாடல் வரியின் மூலம் தோழியே அவரை பிரிந்திருப்பதற்குரிய அறிவில்லாத நாம் அறிவில்லாமலே ஆகட்டும் என்று கூறுவதைக் காணலாம்.  கீழ்வரும் பாடலும் இப்பொருளினைத் தாங்கி நிற்பதை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மணம் புரிந்துகொள்ள காலம்கடத்திய நிலையில் தோழியானவள்  தலைவனுக்கு எடுத்துரைக்கும்போது தலைவியின் துன்பம் வெளிப்படுகிறது.

                        “எம்மணங் கினவே மகிழ்ந………

                        ………. ……….. ……….. வியன்துறை

                        நேரிறை முன்கை பற்றிச்

                        சூர்ர மகளிரோ டுற்ற சுளே”  (குறுந். பா. 53 ; 1, 5-7)

என்னும் பாடலில், தலைவனே! நீர்த்துறையில் நல்ல சிந்தனையுடைய நிலையில் முன் கையைப் பிடித்துக்கொண்டு நீ தெய்வத்தின்முன் நிறுத்தி கூறிய சூளுரையானது எங்களைத் துன்புறுத்தியது என்று கூறினாள். மேலே கூறிய இரு பாடல்களும் துன்ப நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

வேட்கை

            வேட்கை என்பது ஏதாவது ஒன்றின்மீதோ அல்லது ஒருவர் மீதோ  ஆசைக்கொள்வது வேட்கையாகும். இவ்வேட்கையானது இயற்கைப் புணர்ச்சி எய்தித் தலைவியைப் பிரிந்த தலைவனது வேறுபாடு கண்ட தோழன் வேறுபாடு உனக்கு ஏற்றாலாகாது என்று கூறியபோது தலைவனின் வேட்கை,

                        “எழுவ சிறாஅர் ஏமுறு நண்ப

                        புலவர் தோழ கேளாய் ……..

                        ……. …….. …………  சிறுநுதல்

                        புதுக்கொள் யானையிற் பினித்தற்றால் எம்மே” 

(குறுந். பா. 129 ; 1-2, 5-6)

என்ற பாடலில் கூறும்போது என் தோழனே சிறுவர்கள் இன்புறுதற்குக் காரணமான நட்பை உடையவனே, அறிவுடையோர்க்கும் தோழனானவனே கேட்பாயாக. ஒரு மகளின் நெற்றியானது புதிதாக காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானையைப் பிணிக்குமாறு போல என்னை பிணித்துவிட்டது என்று தன் விருப்பத்தை தோழனிடம் கூறினான் என்பது இன்றியமையாமையாகும்.

வருணனை

ஒரு இலக்கியம் அல்லது கவிதை வெற்றிப்பெற  வேண்டுமானால் வருணனை  என்பது முக்கிய கூறாக அமையவேண்டும். அவ்வகையில், எந்த ஒரு படைப்பாளனும் வருணனையில்லாமல் படைப்பதில்லை என்றே கூறலாம். அதாவது, தலைவன் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதிமொழி கூறிய பின்னரும் காலந் தாழ்த்தியதனால் அதைத் தாஙக்கிக்கொள்ள இயலாத தலைவியின் நிலையைக் கண்டு தோழி, தலைவனை நோக்கிக் கூறும்போது நீர்த்துறையின் வருணனை  ஒரு (மருதம் 53) பாடலில் இடம்பெறுகிறது. இவ்வருணனையைப் பற்றி,

                        “……….. ………. ………….. முன்றில்

                        நனை முதிர் புன்நின் பூத்தாழ் வெண்மணல்

                        வேலன் புனைந்த வெறிய களந்தொறும்

                        செந்நெல் வான்பொரி சிதறி யன்ன

                        எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை”  (குறுந். பா. 53 ; 1-5)

என்ற பாடல் எடுத்தியம்புகின்றதை, இல்லத்தின் முன்னே அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தினது பூக்கள்  உதிர்ந்து கிடந்த வெண்மையான மணற்பரப்பு, வேலனால் ஒப்பனை செய்யப்பட்ட வெறியாட்டு நிகழ்த்தப் பெறும் இடங்கள் தோறும் செந்நெல்லின்  வெள்ளிய பொரியைச் சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும், மணல் மேடுகள் செறிந்த நம் ஊரில் உள்ள அகன்ற நீர்த்துறை என வருணனை செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

ஆய்விற்கு எடுத்துகொண்ட அவர் பாடிய நான்கு பாடல்களில் 20-ஆம் பாடலில் தலைவனின் செயலும் தலைவியின் வருத்தமும், 53-ஆம் பாடலில் மருதநில நீர்த்துறையின் வருணனையும் தலைவியின் வருத்தமும், 129-ஆம் பாடலில் தலைவனின் வேட்கையும் தலைவியின் அழகும், 147-ஆம் பாடலில் தலைவியின் அழகும்  தலைவனின் செயலும் போன்ற இருவிதமான பொருள்கூறுகள் இடம்பெறுகின்றன. இதேபோல குறுந்தொகையில் மற்ற பாடல்களில் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கூறுகள் இடம் பெறலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி. ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130.

கைபேசி 9952779278

மின்னஞ்சல் d.krishnantamil@gmail.com

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

2.நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

சிலப்பதிகாரத்தில் விளிம்புநிலை மாந்தர்கள்

            ஒவ்வொரு கால கட்டத்தில் தோன்றும் அறிவுலகக் கோட்பாடுகள் சமூகத்தினை மாற்றம் பெறச்செய்கின்றன.  இலக்கியமும் வரலாறும் இக்கோட்பாடுகளினால் புதிய பரிணாமம் பெறுகின்றன.  எனவே இலக்கியம் காலம்தோறும் பன்முக வாசிப்புக்கு ஆளாவதும் வரலாறும் அத்தகைய மாற்றத்தினை எதிர் கொள்வதும் இயல்பானதாகும்.  இன்றைய நவீன உலகில் விளிம்பு நிலை ஆய்வின் வருகை பின்காலனிய கால கட்டத்தில் துவங்குகிறது எனலாம்.  சமூகத்தின் ஒரத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களாக அவற்றை இனம் காண்கிறார் ஹோமி பாபா எனும் பின் – காலனியத் திறனாய்வாளர்.  ஆனால் ‘காயத்ரி ஸ்பிவாக்’ பண்பாட்டு மேலாண்மை குறித்த சொல்லாடல்களை முன்வைக்கிறாhர்.

            இந்தியாவில் விளிம்புநிலை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக 1982 – இல் ‘ரணஜித் குகா’ அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட  ‘Subaltern Studnes’ எனும் இதழ் அமைகிறது.  இது இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்களையும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் கடுமையாக உள்ளிட்டவர்களை மையப்படுத்தியது.  வரலாற்றினை மீள் ஆய்வு செய்தது.  புதிய நோக்கில் வரலாற்றெழுதியல் முறையினைக் கொண்டு வந்தது.

            அடித்தள மக்கள் ஆய்வு குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்தன.  விளிம்பு நிலை மக்கள் எனப்படும்  ‘Subaltern’ எனும் தொடருக்கு மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக, அரசியல், நிலவியல், பண்பாட்டு மேலாண்மை ஆகிய அதிகார மையத்தில் இருந்து விலகியுள்ள அல்லது விலக்கப்பட்டு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த உழைக்கும் மக்கள்  திரளின் கூட்டம் என்பதாக அந்தோணி குரோம்சி (1891 – 1937) எனும் இத்தாலி நாட்டு மார்க்சிய அறிஞர் வரையறைப்படுத்துகிறார்.  இருப்பினும் காலம், இடம், சமூகச்சூழல், பண்பாட்டு, ஆதிக்கம் ஆகியவை சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வினைத் தீர்மானிக்கின்றன.

            இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ்மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மகளிர் எனக் குறிப்பிடலாம்.  இவர்கள் மேட்டிமைக்குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, உடை, கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக உள்ளனர் எனலாம்.

            விளிம்பு நிலை மக்கள் என்பதற்கு சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூக கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். (2002 : 50)

            இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் தமிழ்ச்சமூகக் காலவெளியில் பல்வேறு வாசிப்புகளைக் கடந்து வந்துள்ளது.  சிலம்பினைத் தேசிய இலக்கியமாக வடிவமைத்ததில் ம.பொ.சி. நா.வானமாமலை, சாமிசிதம்பரனார், வையாபுரிப்பிள்ளை, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.  சிலம்பு சைவ இலக்கியம் என்றும் இளங்கோ அடிகளின் சமயம் சமணம் அன்று: என வலியுறுத்தியவர்கள் ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வீ. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர்கள் ஆவர்.  மேலும், சிலம்பினை சமூகவியல், உளவியல் திறனாய்வுப் போக்கில் ஆராய்ந்தவர்கள் தெ.பொ.மீ, கா. செல்லப்பன், துரை. சீனிச்சாமி, எஸ். இராமகிருஷ்ணன் ஆவர்.  மார்க்சிய அணுகுமுறையில் கே. முத்தையா, இரகுநாதன் ஆகியோர் ஆளும் அரச வர்க்கத்திற்கும் வணிக வர்க்கத்திற்கும் இடையில் தோன்றிய முரண்பாட்டின் விளைச்சல்தான் சிலம்பு என்கின்றனர்.  நாட்டார் மரபின் அடிப்படையில் நா. வானமாமலை போன்றோர் சிலம்பில் இடம்பெறும் நாட்டார் பண்பாட்டினை மையப்படுத்துகிறார்.

              புகழேந்திப் புலவர் தொடங்கி சங்கரதாஸ் சுவாமிகள் வரை இது தொடர்ந்தது.  திராவிட இயக்கத்தின் வரவால் தமிழர், ஆரியர் திருமண முறை, மக்களாட்சி சிந்தனை, தமிழரின் மேன்மை, மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் அடங்கிய இலக்கியமாகச் சிலம்பு பார்க்கப்பட்டது.  சான்று: பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம்.  இவ்வாறு சிலம்பு பன்முக வாசிப்புக்கு ஆளானது.

            விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.  மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் சிலம்பில் இடம் பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் சிலம்பினை புதிய பொருண்மைத் தளத்தில் அறிந்து கொள்ளத் துணைபுரியும்.

            சிலம்பில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்கண்ட உட்தலைப்புகளில் காணலாம்.  அவை:

1. குற்றம் இழைப்போர் – பொற்கொல்லர், கள்வர், கல்லாக் களிமகன், சிறைவாசிகள், பொய் சாட்சி கூறுவோர்

2. செய்தொழில் / வருணம்/ சாதிப்பிரிவு – எயினர், வேடர், கானக் குறவர், ஆயர், ஆய்ச்சியர், பொருநர், பாணர், கூத்தர், பரதவர்

3. மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றோர்

4. ஏவலாளர் – அடிமைகள்

5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்.

1. குற்றம் இழைப்போர்:

பொற்கொல்லர்:

            சிலம்புவில் இடம் பெறும் பொற்கொல்லன் பாத்திரம் குற்றச் செயல்புரியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது.  பொருளாதாரத் தற்சார்பு, சமூக மேன்மை பெற்றிருந்தாலும் பொற்கொல்லர் கதை மாந்தர் சிலம்பு திருடியதாகப் படைக்கப்பட்டிருப்பது மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதற்கு இடமுண்டு. ஏனெனில் சிலம்பு பொற்கொல்லர் மேல் வெறுப்பு கொள்வதற்காகவே படைக்கப்பட்ட காப்பியம் என்ற விமர்சனம் உண்டு.  ஆனால், ஆசாரி, பத்தர் ஆகிய பிறப்புவழிச் சாதிப்பெயர்கள் சிலம்புவில் இல்லை.  தொழில் அடிப்படையில் இளங்கோ சுட்டுகிறார் என்ற ம.பொ.சி.யின் மறுப்பும் உண்டு. இருப்பினும், இழிந்தோன் எனும் பார்வையில் அடிகள்.  “விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லன்.  கூற்றத்தூதன், பொய்த்தொழிற்கொல்லன், கருந்தொழிற்கொல்லன்” என்றெல்லாம் சித்திரிக்கின்றார்.  மேலும், கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (இவனை இளஞ்செழியன் என்பார் அடியார்க்கு நல்லார்) பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லர்களை ஒரு பகற்பொழுதில் உயிர்ப்பலியூட்டி அரசுக் கட்டில் ஏறினான் என்ற பதிவைப் புறம் தள்ள முடியாது. குற்றம் செய்தவர் என்ற சமூக இழிவின் அடிப்படையில் மட்டுமே இங்கு பொற்கொல்லர் பாத்திரம் விளிம்புநிலைப் பாத்திரமாகக் கருதுவதற்கு ஓரளவு தர்க்கமுண்டு எனலாம்.

கள்வர்:

            சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் கள்வர்கள் ஆவர். இழிந்த களவுத்தொழிலைச் செய்து வாழும் கள்வர்கள் குறித்த பதிவு சிலம்புவில் உண்டு.  அடைக்கலக் காதையில் (166-171) கோவலன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் உடையவனாக இருக்கிறான்.  எனவே, இவன் கொலை செய்தற்கு உரிய கள்வனாகத் தோன்றவில்லை என்று கூறிய காவலர்க்குக் கள்வர்தம் இலக்கணத்தினைக் களவு நூலிலிருந்து விரிவாக எடுத்துக்கூறினான் பொற்கொல்லன்.  கள்வர்கள் மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டினையும் துனையாகக் கொண்டிருப்பர்: எளிதில் அகப்படமாட்டார்கள்: கண்ணுக்குப் புலப்படமாட்டார்கள்: உருமாறும் தன்மை கொண்டவர்கள் என்று இடம் பெறுகிறது.  “இழுக்குடை மரபிற் ஃ கட்டுண் மாக்கள்” எனச் சித்திரித்துள்ளது.

கல்லாக் களிமகன்:

            கல்லாத மக்கள் குறித்துச் சிலம்பு பகர்கிறது.  “கல்லாக் களிமகன் ஒருவன் கையில் / வெள்வாள் எறிந்தனன் விலங்கு ஊடறுத்தது / புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப / மண்ணக மடந்தை வான்றுயர் கூறக் / காவலன் செங்கோல் வளைய வீழ்ந்தனன் / கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (212-217) இது.  கொலைக்களக்காதையில் கல்வியின்மையானும் கொலையஞ்சானுமாகிய கள்ளுண்ட களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளால் கோவலனைக் கொன்றதைக் கூறுகிறது.

            இங்கு கல்வி கற்ற சமூகம் வேறு: கல்லாத மக்கள் திரள் என்பது வேறு.  இக்கல்வி பெற்றவர்கள் யார் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது.  தோல்காப்பியரின் “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்னும் அகத்திணையியல் (28) நூற்பாவில் இடம்பெறும் உயர்ந்தோராக அந்தணர்.  அரசரைச் சுட்டுகிறார்.  “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான்” (33) எனும் நூற்பா வணிகர்க்கு ஓதுதலின் பொருட்டும் பிரிவு நிகழ்கிறது.  அப்படியாயின் உயர்ந்தோர் என்ற பிரிவிற்குள் வராதார்க்கு ஓதல் பிரிவு இல்லை என்றாகிறது.  வெகுசன மக்கள் கூட்டத்திற்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

            “தொன்னெறி மொழிவயின் அகுநவும்” என்ற சொல்லதிகார நூற்பாவிற்கு உரை எழுதும் சேனாவரையர், “யாட்டுளான் இன்னுரை தாரான் என்றது இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறுதலின்றி எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான்” என்று விளக்கம் தருகிறார்.  கல்வி கற்காத இம்மக்கள் குறித்துச் சங்க இலக்கியங்களில் கல்லாக் கோவலர் (அகம். 74:16; நற். 367:8; ஐங். 304:1) என்றும் திருப்பாவையில் “அறிவென்றுமில்லாத ஆயக்குலம்” என்றும் குறிப்பிடுகிறது. ஆநிரைச் செல்வம் உடைய ஆயர்குலமே இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டதற்குக் காரணம் கல்வி மறுக்கப்பட்டதே.  இம்மக்கள் குறித்த இலக்கியப்பதிவுகள் அருகிக் காணப்படுகின்றன.

            உடைமையற்ற கற்காத உடல் உழைப்புடைய ஏனைய விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவுகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே எனலாம்.  கல்வியறிவு மறுக்கப்பட்ட இம்மக்கள் பிரதிநிதியாகச் சிலம்புவில் ‘கல்லாக் களிமகனைக்’ கருதலாம்.  கோவலனைக் கொன்றவன் கல்வி கற்காதவன்; கள்ளுண்டவன்; முன்பின் யோசனை அற்றவன்;  உணர்ச்சிமிக்கவன் என்ற பதிவுகள் உள்ளன.  இப்பதிவுகள் விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கால மதிப்பீடாகக் கொள்ளலாம்.

சிறைவாசிகள்:

            சிறைவாசிகள் குறித்த பதிவு கட்டுரை காதையில் (98-103) இடம் பெறுகிறது.  கள்வர்கள், குற்றவாளிகள், பகைவர்கள் ஆகியோர் இச்சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  சுpறைவாசிகளை விடுவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதை ‘சிறைப்படுகோட்டம் சீமின்’ (126) எனவும் ‘சிறையோர் கோட்டம் சீமின்’ (நடுகற்காதை: 203) எனவும் ‘ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப்’ (194) என வரும் அடிகள் உணர்த்துகின்றன.  மங்கலதேவி நன்னாளில் செய்த நாளணி வேள்வியில் ‘அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் / பெருஞ்சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்’ (வரந்தருகாதை: 157-158) கலந்து கொண்டனர் இங்கு அரசியல் கைதிகளான பகை அரசர்களும் விளிம்புநிலை குற்றவாளி மக்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

பொய் சாட்சி கூறுவோர்:

            வறுமையில் உழலும் ஒருவன், பொருள் பெறுதலுக்காக, கற்புடை மகள் மீது பொய்ப்பழி சுமத்திப் பொய்க்கரி (பொய்சாட்சி) கூறியதால் தீயோரைத் துன்புறுத்தும் பூதம் அவனைக் கொல்லப் பிடித்துக்கொள்கிறது.  இப்பதிவு அடைக்கலக்காதையில் வருகிறது.  (76-85) இல்லோர் செம்மல் (வறியொர் தலவன்) எனக் கோவலனின் பெருமை பேசும் மாடலனின் கூற்றாக இடம் பெறுகிறது.  பொய்ச்சாட்சி கூறியவனைப் பூதம் துன்புறுத்த அதைக் கண்டு அவன் தாய் படும் துயரத்தைக் காண் சகியாத கோவலன் அப்பூதத்திடம் சென்று, “என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென / நன்னெடு பூதம் நல்கா தாகி / நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு / பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஃஎன்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்டது.  அதாவது, கீழோனுடைய உயிரின்பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்கும் தன்மை என்னிடத்தில் இல்லை எனும் பூதத்தின் கூற்றில் மேல் கீழ்: நல்லவர் நரகர் (கெட்டவர்) எனும் முரண் உள்ளதை அறியலாம்.

2. செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவு:

            நால்வருணம் குறித்த பதிவு ஊர்காண் காதையில் (211-213) இடம் பெற்றுள்ளது.  மதுரையில் உள்ள தெருக்கள் பற்றிக் கூறுமிடத்து, “கூலங் குவிந்த கூல வீதியும் /பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் / அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்” என வருகிறது.  கூல வீதிகளும், பகுதி வேறு தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பார் இருக்கும் நால்வேறாகிய தெருக்களும் முச்சந்தியும், நாற்சந்தியும், கொயிற்கடைத் தெருக்களும் அமைந்துள்ளதைச் சித்திரிக்கிறது.

            செய்தொழில் அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் குறவன் குறத்தியர், வேட்டுவரும் புறஞ்சேரியிறுத்த காதையில் யாழிசைக்கும் பாணரும் (105), மருத நிலத்து வைகறையில் பறை ஓசை கொட்டும் கிணைநிலைப் பொருநரும் (148) நடுகற்காதையில் கூத்து நிகழ்த்தும் சாக்கையனும் (77), ஆய்ச்சியர் குரவையில் ஆயரும், ஆய்ச்சியரும், கானல் வரியில் பரதவ மக்களும், வேட்டுவ வரியில் வழிவளம் பெறும் எயினர், எயிற்றியரும், விளிம்புநிலை மாந்தராகக் கொள்ளலாம்.  நாடுகாண் காதையில் வரும் விருந்தின் பாணி, ஏர் மங்கலம், தொழிலாளர்களின் பாடல்களைக் கொள்ளலாம்.

            சிலம்புவின் துன்பமாலை  விளிம்புநிலை மக்களின் ஒப்பாரிப்பாடல் வகையாகக் கருதலாம்.  மேலும், மாதரி பாற்சோறு படைக்கும் இயக்கி, பாசண்ட சாத்தன், சாலினி வழிபடும் கொற்றவை, வன தேவதைகள் வரத்தோமை, வட்டிகைப் பூங்கொடி ஆகியன சிலம்பில் இடம்பெறும் விளிம்புநிலை மக்களின் தெய்வங்களாகக் கூறலாம்.  அடைக்கலம் கொடுக்கும் வழக்கமும், நீராடிய பின் வழிபடும் மரபும் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையும் மானிட மகளைத் தெய்வமாக அலங்கரித்துக் குறி கேட்கும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்திருப்பதைச் சிலம்பு உணர்த்துகிறது.

            செய்தொழில் அடிப்படையில் மேற்சொன்ன மக்கள் இனங்கள் காலப்போக்கில் வைதிகச் சமயத்தின் வருணக்கோட்பாட்டுடன் உட்கலந்து பின் அகமணம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சாதிப்பிரிவுகளாக மாறின.

3. மாற்றுத்திறனாளிகள்:

            சிலம்பில் இடம்பெறும் மாற்றுத்திறனாளிகள் அரச மகளிர்க்கு குற்றேவல் புரியும் ஏவலர்களாகவும் ஆடல்மகளிரின் பணிப்பெண்களாகவும், இலஞ்சி மன்றத்தில் நோயாளிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இலஞ்சி என்ற குளத்தில் மாற்றுத்திறனாளிகளான கூனரும், குறளளும், ஊமையும், செவிடரும் மூழ்கி எழுந்தால் அவர்களின் உடல் ஊனம் நீங்கி நன்னிலை பெறுவதாக ‘இளங்கோ’ சித்திரித்துள்ளார்.  “கூனும் குறளும் ஊனமும் செவிடும் / அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப் / பழுதில் காட்சி நன்னிறம் பெற்று / வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” இந்திரவிழவூர் எடுத்த காதை (118-121)

            மேலும் சேரன் செங்குட்டுவன் இமயமலை சென்று பத்தினிக்கல்லைக் கனக விசயர் முடியின் மீதேற்றி வெற்றியுடன் திரும்பி வரும் செய்தியைச் சிறுதொழில் செய்யும் குறிய  கூனும் குறளும் துயிலின்றி வருந்தியிருக்கும் வெண்மாளின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியில் செறியும் வண்ணம் அரசியிடம் சென்று ‘அரசன் வந்தனன்; நின் எழிலைப் பெறுவாயாக’ என்று கூறினர்.  இச்செய்தி நீர்ப்படைக் காதையில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.  சிறு குறுங்கூனும் குறளுஞ் சென்று / பெருக நின் செவ்வி பெருமகன் வந்தான் /நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென (214-216). பாண்டிமாதேவியின் அந்தப்புறத்தில் பணிபுரியும் கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் புரியும் மகளிர் நெருங்கிப் புடைசூழத் தான் கண்ட தீக்கனாவின் தன்மையைப் பாண்டிய அரசனிடம் எடுத்துச் சொல்லச் சென்றாள்.  “கூனுங் குறளும் ஊமுங்கூடிய / குறுந் தொழிலிளைஞர் செறிந்து சூழ் தர” என்று வழக்குரை காதையில் (18-19) ஏவல் தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.

            நடுகற்காதையிலும் (57-58) “மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் / கூனுங் குறளுங் கொண்டன வொருசார்” என இம்மக்கள் இடம் பெற்றுள்ளனர்.  அங்கக் குறைபாடு உள்ளவர்களை அரசன் அந்தப்புறத்தில் பணியாளராக வைத்திருப்பதன் நோக்கம் அரச மகளிரின் மீது அரசன் கொண்ட நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது எனலாம்.  அதே நேரத்தில் அரச மகளிரைப் பாதுகாக்கவும் ஏவல் பணிகளைச் செய்யவும் இம்மாற்றுத் திறனாளிகளைப் பணியாளர்களாக வைத்துள்ளனர்.

            சிலம்பின் திருப்பு முனைப் பாத்திரம் கூனி. கணிகையர் குலப்பெண்ணான மாதவியின் நடன அரங்கேற்றத்திற்குப் பரிசிலாக அரசன் தரும் 10008 கழஞ்சு பொன்மாலையை விற்கச் செல்லும் பணிப் பெண்ணாகக் கூனியைப் படைத்துள்ளார் இளங்கோ அடிகள். இதனை, அரங்கேற்று காதை “மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென /மானமர் நோக்கியோர் கூனி கைக் கொடுத்து /பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த  /மாமலர் நெடுங்கண் மாதவி மாலை / கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு /மணமனை புக்கு”…. (166-172) எனச் சித்திரிக்கிறது. இங்கு கூனியின் இயற்பெயர் சுட்டப்படவில்லை.  இது நோக்கத்தக்கது. உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடும் இம்மாற்றுத்திறனாளிகள் சிலம்புவில் இவ்வாறு வந்து போகும் பாத்திரங்களாக, அரச அதிகார மைய நீரோட்டத்தில் விளிம்புநிலைத் தன்மையில் ஓரத்திலேயே இம்மக்களின் சித்தரிப்பு இடம் பெறுகிறது எனலாம்.

4. ஏவலாளர் – அடிமைகள்:

            “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் / கடிவரை இல: புறத்து என்மனார் புவலர்” (1:25), “ஏவல் மரபின் ஏனோரும் உரியர் / ஆகிய நிலைமை அவரும் அன்னர்” (1:26) எனும் நூற்பாக்களில் தொல்காப்பியர் கூறும் செய்தியாவது அடியோர், வினைவலர், ஏவலாளர் ஆகியோர் அக இலக்கியத்தல் கதை மாந்தர்களாக இடம் பெறக்கூடாது: மாறாக, புற இலக்கியத்தில் அவர்கள் வரலாம்.  சிலம்புவில் ஏவலாளர் குறித்த பதிவு புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது.  கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் மதுரைக்கு யாருக்கும் சொல்லாமல் செல்கிறான்.  இவர்களைக் காணாத சுற்றத்தினர் துயரமுற்றுத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.  ஏவலாளர் பலவிடங்களிலும் தேட முற்பட்டனர்.  இதனை “இருநிதிக்கிழவனும் பெருமனைக் கிழத்தியும் / அருமனை இழந்த நாகம் போன்றதும் / இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் / துன்னியச் சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்/ ஏவலாளர் யாங்கணும் சென்று / கோவலன் தேடிக் கொண்ரக வெனப் பெயர்ந்ததும்  / (15-62) என்று கூறி ஏவல் தொழில் செய்யும் விளிம்புநிலை மாந்தரைப் பதிவு செய்துள்ளது.

5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்:

            அந்தணர் யார் என்பதற்குச் சிலம்பு கூறும் வரையறை இங்கு குறிப்பிடத்தக்கது.  “ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் /முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி/ ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் / அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க” (கட்டுரை காதை: 66-70) எனும் இவ் அடிகள் ஆரியரின் வருணாசிரமக் கருத்தாக்கம் சிலம்புவில் இடம் பெற்றுள்ளதை உணர்த்துகிறது.

            சிலம்புவில் வரும் அந்தணர்கள் வேதக்கல்வி பயின்றவர்கள்: அரசனுக்கு அருகாமையில் இருப்பவர்கள்.  ‘வரிநவில் கொள்கை மறைநூல் வழக்கத்து புரிநூல் மார்பர்’ (புறஞ்சேரியிறுத்த காதை: 38-39) முப்புரிநூல் அணிந்தவர்கள்: இரு பிறப்பாளர்கள் ஆவர்.  குறிப்பாக மாடல மறையோன், மாங்காட்டு மறையோன், கோசிகாமணி ஆகிய அந்தணக் கதை மாந்தர்கள் தனிச்சிறப்பிடம் பெறுகின்றனர்.

            மாடல மறையோன், நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன்: சொல்லின் செல்வன்: குமரி முதல், கங்கை வரை நிலவியல் அறிவு கொண்டவன்: நீண்ட பயணம் செய்பவன்: செங்குட்டுவனிடம் வேள்வி நடத்தச் சொன்னவன்: நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் ஃ அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய ஃ பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும். (நடுகற்காதை: 176-178) சேரன் செங்குட்டுவன் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன்னைப் பரிசிலாக (துலா புருட தானம்) மாடல மறையோனுக்கு பெரு விருப்பம் கொண்டு வழங்கினான்.  (நீர்ப்படைக்காதை: 173-176)

            காப்பிய நிகழ்ச்சிகளை ஒன்றிணைக்கும் பாலம் போன்றவன்: கோவலன் புகழ் பாடுபவன் என்று சிறப்பு மாடலனுக்கு உண்டு. புறஞ்சேரியிருத்த காதையில் கோவலன் இவன் காலில் விழுந்து வணங்குகிறான்.

            மாங்காட்டு மறையோன் உறையூரில் மதுரைக்குச் செல்லும் செவ்விய வழியைக் கோவலனுக்கு கூறியவன்: திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய தலங்களில் திருமாலைத் தரிசிக்கக் குடமலை நாட்டிலிருந்து பயணப்பட்டவன்: வைணவ சமயத்தின் பெருமை பேசுபவன்.

            கோசிகாமணி மதுரைக்குச் செல்லும் கோவலனைப் பின் தொடர்ந்து சென்று மாதவி தீட்டிய காதல் மடலைக் கோவலனிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான்.  மாதவியின் மனப்பாங்கினைப் புலப்படுத்தும் பாத்திரமாக விளங்குகிறான்.  இச்செய்தி புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது.  இம்மூன்று அந்தணர்களும் பயணம் மேற்கொள்பவர்கள்: தனித்த ஆளுமை கொண்டவர்கள்: அதிகார மையத்துடன் நெருக்கம் மிக கொண்டவர்கள்: அரசனிடம் பல வெகுமதிகள் பெற வேதக்கல்வி உடையவர்கள்.

            வீடுபேற்றினை விரும்பும் ஒரு கொள்கையுடையவர்கள்; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்பும் ஆகிய இருபிறப்பாளர்கள்; ஆகவனியம், காருகபத்தியம், தக்கிணாக்கினி ஆகிய முத்தீ வளர்ப்பவர்கள்; ரிக்கு, யசூர், சாமம், அதர்வணம் எனும் நான்மறை கற்றவர்கள்; கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி ஆகிய ஐந்து வேள்விகளைச் செய்பவர்கள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில் உடையவர்கள் அந்தணர்கள் ஆவர்.  இத்தகைய தன்மையுடையவன் சோணாட்டைச் சார்ந்த அறிவில் வல்ல பராசரன் எனும் அந்தணன்.  இவன், சேர மன்னனின் கொடைத்திறம் கேட்டு அவனிடம் சென்று தன்னுடைய நாத்திறத்தால் வாதிட்டுப் பகைவரை வென்று பார்ப்பனவாகை சூட்டப்பெற்று பொன் பரிசில் பெற்றுத் திரும்பும் வழியில் பாண்டிய நாட்டில் திருத்தங்கால் எனும் அந்தணக்குடியிருப்பில் இளைப்பாறினான்.  அவனைச் சுற்றி அந்தணச் சிறுவர்கள் சூழ அவர்களிடம் “அந்தணச் சிறுவர்களே, என்னுடைய ஒப்ப மறையினை ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின்” என்கிறான்.

            அதற்கேற்ப வார்த்திகன் புதல்வன் தக்கிணாமூர்த்தி எனும் அந்தணச் சிறுவன் அம்மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளம் நிறைமகிழ்வுடன் பராசரனோடு ஒப்ப ஓதுகிறான்.  அதைக்கண்ட பராசரன் அச்சிறுவனை வியந்து பாராட்டி முத்து வடப் பூணூல், கைவளை, தோடு ஆகிய தகுதிவாய்ந்த பொன்னாலான அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்து தன்னூர் சென்றான்.

            பொன்பரிசிலைப் பொறாத சிலர். படுபொருள் (களவுபொருள்) வெளவிய பார்ப்பான் இவன் என்று கூறிக் காவலரிடம் கூற அவர்கள் புதையலைக் கவர்ந்த குற்றத்திற்காக வார்த்திகனைச் சிறையில் இட்டனர்.  அதனால். அவன் மனைவி கார்த்திகை என்பவள் பெருந்துன்பம் கொண்டு அழுது புலம்பினாள்: நிலத்தில் புரண்டு மயங்கி விழுந்தாள்: கடவுளை வெறுத்து வெகுண்டாள்: அதனால் மதுரையிலிருந்த (இதுநாள் வரை திறந்திருக்கும்) துர்க்கை கோயிற்கதவு இப்பெண்ணின் புலம்பலால் திடீரென மூடிக்கொண்டது.  இதனால் பாண்டிய மன்னன் மனம் வருந்தி, எனது செங்கோல் கோடியது உண்டா?  துர்க்கைக்கு உற்ற துன்பம் எதனால்?  என்று வினவ கார்த்திகையின் கணவனான வார்த்திகனைச் சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் காவலர் கூறினர்.

            உடனே, பாண்டிய மன்னன் வார்த்திகனை சிறையிலிருந்து விடுவித்து அவனைப் புகழ்ந்து. ‘என்னுடைய அரச நீதி தவறுற்றது; அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும்’ என்று மன்னிப்பு கேட்கிறான்.  மேலும், அதற்கு ஈடாக பெரிய நீர் சூழ்ந்த வயல்களை உடைய திருத்தங்கால் எனும் ஊருடன் குறைவுபடாத விளைவினை உடைய வயலூரையும் வழங்கினான்.  பாண்டிய நாட்டின் அரசனே மன்னிப்பு கேட்பதும் அதற்கு கைம்மாறாக ஊர்களை வழங்குவதும் ஆகிய பதிவுகள் “அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவெண் / இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நுங் கடன்எனத் /தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் / மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் / கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்” / (கட்டுரை காதை: 116-120) என்று வருகிறது.  இது சிலப்பதிகார காலத்தில் அந்தணர்கள் பெற்ற மேன்மை நிலையாகக் கொள்ளலாம்.

            விளிம்புநிலைப் பெண்ணான மாதரி, தம்மிடம் அடைக்கலமாக வந்த கண்ணகி கோவலன் ஆகியோரின் இறப்புக்காக மனம் வருந்தித் துன்புற்று இறுதியில் உயிர் துறக்கிறாள்.  அதைப்போலவே. வணிகர் குலத்தில் பிறந்த கோவலனின் நற்றாயும் கண்ணகியின் நற்றாயும் இறக்கின்றனர்.  வரந்தரு காதையில் தெய்வ அருள் பெற்றத் தேவந்தியின் கூற்றாக வரும் பகுதியில் கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் மறுபிறவி எடுத்து வஞ்சி நகரில் பிறக்கின்றனர்.  இது,

 “கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் / கடவுண் மங்கலங் காணிய வந்த / மடமொழி நல்லார் மாணிழை யோருள் / அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற / இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் / ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் / சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் / (வரந்தரு காதை: 46-52) என வருகிறது.

            கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்க வந்த மகளிருள் அரட்டன் செட்டியின் மனைவி மன மகிழ் சிறப்புடன் பெற்றெடுத்த இரட்டையாராகத் தோன்றிய மகளிர் இருவரும் (முற்பிறவியில் கண்ணகி கோவலனின் தாய்மார்கள் இவர்கள்) திருவனந்தபுரத்து அராவணையில் பள்ளி கொண்ட திருமாலுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த சேடன் (திருவடி பிடிக்கும் அடியவன்) மகளாகப் பிறந்த சிறுமகளும் (முற்பிறவியில் மாதரி) கண்ணகி கோயிலில் இருந்தனர்.  கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் இறந்தவுடன் சொர்க்கம் (துறக்கவுலகம்) செல்வதில்லை.  ஆனால், கோவலன், கண்ணகிக்கு வானுலகம் கிட்டுகிறது.  இதற்குக் காரணம் இம்மூன்று பெண்களும் அறம் செய்வதில்லை: அதனால் மேலுலகம் அவர்களுக்கு கிடைப்பதில்லை: கோவலனிடம் தானம் பெற வந்த பார்ப்பனனை மதம் யானை தாக்க வருகிறது.  அம் மத யானையிடமிருந்து அப்பார்ப்பானனைக் காப்பாற்றுகிறான்.  இவ் அறச்செயல் தான் கோவலனுக்கு வானுலகத்தைப் பெற்றுத் தருகிறது.

            கோவலன் மீது கண்ணகி கொண்ட அன்புதான் அவள் சொர்க்கம் அடையக் காரணம் எனும் பதிவும் கண்ணகி மீதுள்ள அன்பின் மிகுதியால் இடையர் குலத்து முதியளாகிய மாதரி மற்றும் வணிகர் குலத்து மாசாத்துவன் மனைவியும் மாநாய்கன் மனைவியும் கண்ணகி அணுகிய வஞ்சி மூதூரில் பிறக்கின்றனர் என்ற செய்தியும் அறம் செய்தால் பொன்னுலகம் அடைதலும் ஒருவர்பால் அன்பு வைக்கும் உள்ளமுடையோர் இந்நிலத்தில் தாம் அன்பு வைத்த இடத்தே பிறத்தல் இயல்பும் ஆகிய கருத்துக்கள் வரந்தரு காதையில் (121-138) இடம் பெற்றுள்ளன.

            இப்பதிவுகளை உற்று நோக்கும்போது ஆயர்குலத்தில் பிறந்த மாதரி அடுத்த பிறவியிலும் அதே குலத்தில் பிறந்து பெருமாளுக்கு அடிமைத் தொண்டு செய்வதும் வணிகர் குலத்தில் பிறந்த கண்ணகி, கோவலன், தாய்மார்கள் மறுபிறவியிலும் அதே (வணிகர்) செட்டியார் சாதியில் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களாகப் பிறப்பதும் ஏன் என்ற வினா எழுவது இயல்பு. காரணம் விளிம்புநிலை மாந்தரான மாதரியும், வணிகர்குல மாந்தர்களான கண்ணகி, கோவலன், தாய்மார்களும் சாதி மாறாமல் அடுத்த பிறவியில் பிறப்பது என்பது சாத்தியமா? என்ற வினாவும் உடன் தோன்றுகிறது ஒரு ஆறுதலான விசயம் இம்மூன்று பெண்களும் ஒரே நாட்டில் பிறக்கின்றனர் என்பதே அது.

            தமிழ்ச் சமூக அமைப்பில் சாதி / இனம், தொழிற்பிரிவுகள் ஆகியவைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.  ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதி / இனத்தில் பிறந்துவிட்டால் அதுவே அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற கருத்தியலுக்குச் சான்றாகவும் மாதரி எனும் விளிம்புநிலைப் பாத்திரத்தைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது எனலாம்.

நிறைவாக:

            சிலப்பதிகார காலகட்டத் தமிழ்ச் சமூக அதிகார அமைப்புகளின் மேல் மட்டத்தில் இருந்தவர்கள் அரசர்கள் இருப்பினும் அவர்களை இயக்குபவர்களாக அந்தணர்கள் இருந்துள்ளனர்.  அத்துடன் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியற்பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

பயன்பட்ட நூல்கள்:

1.          சிவசுப்பிரமணியன்.ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை. முதற்பதிப்பு, 2002

2.          வேங்கடசாமி நாட்டார், ந.மு., (உரை ஆசிரியர்), சிலப்பதிகார ராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2005.

3.          Bier, Jess “Srbalterin Studies” Encyclopedia of Geography,  2010. 15 Nov. 2010 http://www. Sageereference.com/geography_n1095.html.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் மா. வெங்கடேசன்

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)

கிருட்டினகிரி-635 001.

கிணத்துக்கடை| சிறுகதை

                          பழைய ஊர். கட்டுப்பாடுகள் அதிகம். சண்டைகளும் கலவரங்களும் சக்கரைப் பொங்கல் மாதிரி அப்பப்ப வந்து தெவட்டும். முனுசாமி அதிகாரி பொம்பளைங்க விஷியத்துல கொஞ்சம் அப்படி இப்படி. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பொண்டாட்டிக்கும் ஆளுக்கொரு ஒரு ஆண் பிள்ளைங்க. ஊரே தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருந்தாரு. அவருடைய முறுக்கு மீசையும் கோபக்கண்களும் பார்த்தா, யாருக்குமே பயம் வரும். முனுசாமி அதிகாரியை கேட்காம அந்தவூர்ல எதுவுமே நடக்காது. ஆண்டு அனுபவிச்சிட்டு ஒருநாள் இறைவனிடம் போய் சேந்திட்டாரு. ஆனா, வக்கில புடிச்சி பத்திரத்துல தன்னோட ரெண்டு மகனுகளுக்கும் சரிபாதியா பங்கு பிரிச்சி வச்சிட்டுத்தான் போயிருக்காரு. அவருக்குப் பின்னால வந்த மகன்களும் அப்பன மாதிரி குடியும் கும்மாளமுமா இருந்தாங்க. வீட்டுல இருக்கிற பண்டப் பாத்திரங்கள வித்தாங்க.. நிலத்த மனைகளாக்கி காசப்பாத்தாங்க. வீடுகள் அதிகமாச்சு. ஊரும் பெருசாச்சு. சனி பகவான் பசங்க ரெண்டு பேரோட தலையை இறுக்கப் பிடிச்சிட்டான் போலிருக்கு. அண்ணன் தம்பிக்குள்ள ஒரே சண்டை. ரெண்டு பேரும் ஒருசில இரத்தக் காயங்களோட தப்பிச்சிட்டாங்க. இனி செத்தா கூட போவக்கூடாதுன்னு முடிவும் பண்ணியாச்சு. தங்களோட எல்லையை முள்ளுக்கம்பிகளாலும் செங்கல் கற்களாலும் தனித்தனியா பிரிச்சிட்டாங்க.

                          ஒரு விஷியத்துல முனுசாமி அதிகாரி ரொம்ப விவரம். அவங்க காட்டுல நல்லத்தண்ணி கிணறு ஒன்னு இருக்கு. நல்லா அகலமாவும் பெரியதாகவும் இருக்கும். கோடையிலும் தண்ணீ வத்தவே வத்தாது.  மக்கள் கூட்டகூட்டமா வந்து தண்ணி எடுத்துட்டு போனதால கிணத்துக்கடைன்னு சொல்லுவாங்க. அவருகிட்ட,

                          “ஏங்க அதிகாரி, உங்க கிணத்துல மட்டும் தண்ணீ எப்பவும் வத்தவே மாட்டங்குதே…. என்ன? ஏதாவது மந்திரம் தந்திரம் செய்யுறீங்களா” ன்னு ஊரார் கேட்கும் போது,

                      “அந்த கிணத்துக்கு அடியில பெரிய நீர் வீழ்ச்சி இருக்கிறதாகவும், அது ஆறாக ஓடுவதாகவும், இந்தக் கிணத்துல இருந்துதான் சூரியனின் பார்வையைப் பெற்று இருப்பதனால்தான் தண்ணீரானது தேன் போன்று சுவையா இருக்கிறதாகவும் என் அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லுவாரு” என்று ரொம்பவே பெருமைப்பட்டுக்கொள்வார்.

   ஊரே அந்தக் கிணத்துலதான் தண்ணீர் எடுக்க வருவாங்க. முனுசாமி அதிகாரி ரொம்ப கர்வமா நினைப்பார். ஒருநாளும் யாரும் வராதிங்கன்னு சொல்லவே மாட்டாரு… அந்த வட்டாரத்துல கிணத்துக்கடைன்னா தெரியாதவங்க யாருமே கிடையாது. அந்தக்கிணத்துத் தண்ணிக் குடிச்சா  கொஞ்சம் கூட சளி பிடிக்காது. யாருன்னாலும் தைரியமா அந்தத் தண்ணியைக் குடிக்கலாம். பழைய ஊருக்கு கிணத்துக்கடைதான் சாமி.. குலசாமி.

       முனுசாமி அதிகாரி கிணத்தைப் பிரிக்கும் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் வராதபடிக்கு பிரிச்சார். கிணறு ரெண்டு மகன்களுக்கும் சரிபாதி. அதாவது, மொத்த நிலத்தின் மையப்பகுதி அக்கிணறு. வட்டமாய் உள்ள கிணற்றில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையாய் நேராகச் செல்வது. அந்தப் பத்திரத்தில், கிணற்றில் தண்ணீர் இருக்கும் வரை பொதுமக்கள் பிடித்துக் கொள்ளலாம். தனியாக குழாய்ப் போட்டு பிடிக்க அனுமதி இல்லை. யாரும் கிணற்றுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. என் இரு மகன்களும் அந்தக் கிணற்றுக்குப் பாதுகாவலராக இருப்பார்கள். கிணற்றைத் தூர்வாரும் செலவுகள் அனைத்தும் என் மகன்களோடு ஊர்ப்பொது மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

                          சண்டையிட்ட அண்ணன் தம்பிகள், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி சரியாகக் கிணற்றின் பாதி வழியாக செங்கல் கட்டிடம் கட்டினர். ஊர் ரெண்டாக்கப்பட்டன. அந்தந்தப் பிரிவு வேலிக்கு உள்ளிருந்தவர்கள் அந்தப் பகுதிக்கு கட்படுவாராயினர். கிணற்று நடுவில் நேராக இரண்டு அரங்கள் போடப்பட்டன. அரத்திற்கு ஆறாய் தவலைக் கட்டப்பட்டன. இப்பகுதியில் உள்ளோர் கிணற்றில் இங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். அப்பகுதியில் உள்ளோர் அங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். பொதுவா மக்கள், பெரியவரு ஊரு… சின்னவரு ஊருன்னு சொல்லுவாங்க. பெரியவரு ஊருல பூங்கொடின்னு வயசு பொண்ணு ஒருத்தி இருந்தா. கருப்பா இருந்தாலும்,  பாக்க லட்சணமா அழகா இருப்பா.

                          “என்ன பூங்கொடி! தனியா யோசனையில இருக்க! கொடி வாடுதா? இல்ல வாடாம இருக்க மாரியத்தேடுதா?” என்று புதிர்ப்போட்டாள் பக்கத்துவூட்டுக்காரி மங்கா.

                          “ஏ… மங்கா என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா. ஆமா! மாரியத் தேடித்தான் இந்த கொடி வாடிக்கிடக்குது. இப்ப அதுக்கு என்ன?” என்று முறைத்தாள் பூங்கொடி.

                          “அதுக்கில்ல பூங்கொடி… உன்னப்பாத்தா ஏதோ மனசு கவலையில இருக்கிற மாதிரி தோணிச்சு. அதான் உதவலாமுன்னு பேச்சுக்கொடுத்தேன். நீ என்னன்னா இப்படி கோவிச்சிக்கிறீயே” என்று உதட்டை ஒருவாறு பிதுக்கிக்கொண்டாள் மங்கா. பூங்கொடியும் மங்காவும் ஒரு வயசுக்காரிங்கதான். மங்காவுக்கு பதிமூனு வயசிலேயே தாய்மாமனைப் புடிச்சி கட்டி வச்சுட்டாங்க. மங்காவுக்கு ரெண்டு பொட்டபுள்ளையங்க. கடைசியா ஆம்பிளை பிள்ளை ஒன்னு. ஆக மொத்தம் மூனு புள்ளையங்க. யாராவது கேட்டா, “ஏண்டி.. மூனு புள்ளைய பெத்துருக்கியே.. எப்படி கரைசேத்துவன்னு” அதுக்கு அவ சொல்லுவா, “கடவுள் கொடுத்தது. அவனுக்குத் தெரியாதா எப்படி கரைசேத்தனுமுன்னு” என்று பதில் சொல்லுவா.

                          “இல்ல மங்கா… பெரியவரும் சின்னவரும் சண்டைப் போட்டு தனித்தனியா பிரிஞ்சிட்டாங்க. இதுல வேற ரெண்டு பக்கமும் செவறு, கம்பி வேலிப் போட்டு கட்டிட்டாங்க. மாரியப் பாத்து ரொம்ப நாளாச்சு. நேத்துதான் கிணத்துக்கடைக்கிட்ட தண்ணி எடுக்கலாமுன்னு போனேன். அங்கதான் மாரியும் தண்ணிப் புடிக்க வந்திச்சு”

                          “அப்ப காதலர்கள் ரெண்டு பேரும் ஒன்னா சந்திச்சிட்டீங்க”

                          “ஆமாம்! என்ன சந்திச்சோம். கிணத்துக்கடையில ஒரே கூட்டம். பேசவே முடியல. மாரிக்கு மட்டும் கேட்குற மாதிரி, என்ன ஓங்கூட சீக்கிரம்  கூட்டிட்டு போயிடுன்னு மட்டும் சொல்லிட்டு வந்தட்டேன்”

    மாரியும் பூங்கொடியும் காதலிக்குறாங்க. சாதி வேற. பிரச்சனையும் பெரிசு. ஊரு ஒன்னா இருந்தப்ப ஒன்னா திரிஞ்சாங்க. அம்பல் அலராகிப் போனது. காதலர்கள் ரெண்டு பேத்தையும் பாக்கவிடாம செஞ்சாங்க. இதுல சண்டைப்போட்டு கிணத்துக்கடைக்கிட்ட செவுறு வேற. ஒருத்தர ஒருத்தர் பாக்காம துடிச்சிப் போயிட்டாங்க.

                          “பூங்கொடி… நீ வேற சாதி.. மாரி வேற சாதி… அதனால பிரச்சனைதான் பெரிசாகும்டி. இந்த கிராமத்துல இருக்கிறவங்கள எதிர்த்திட்டு உன்னால வாழ முடியாது”

                       “எது நடந்தாலும் எனக்கு மாரிதான் முக்கியம். என்னோட வாழ்க்கை மாரிக்கூடத்தான்” என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னால் பூங்கொடி.

                          “ஏதோ நீ பெரிசா பண்ணப்போறன்னு தெரியுது. எரியுற நெருப்புல யாரெல்லாம் குளிர் காயப்போறாங்கன்னு  தெரியல… நல்லது நடந்தா சந்தோசம்தான்” என்று சொல்லிவிட்டு மங்கா அழுகிற கைக்குழந்தையை தூங்கிட்டு வீட்டுக்குள் போனாள். பூங்கொடியின் மனசு ஒருமாதிரியாக இருந்தது.

                          அடுத்த ஒரு வாரத்தில் பழைய ஊர் பரப்பரப்பாகக் காணப்பட்டது. மாரியும் பூங்கொடியும் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு போலிஸில் தஞ்சமடைந்தார்கள் என்று செய்திதாளில் செய்தி வெளியாயின. பெரியவரு ஊரு, சின்னவரு ஊரு என ரெண்டு ஊர்க்காரங்களும் தங்களோட சாதிக்காக சண்டைப் போட்டுக்கிட்டாங்க. எங்கப்பார்த்தாலும் கோ…கொல்லேன்னு சத்தம் கேட்கும். எல்லாரும் ஓடுவாங்க.. தனியா யாரும் போக மாட்டாங்க. கும்பளமா நின்னு பேசுவாங்க. யாரு எப்ப வந்து வெட்டுவா? அடிப்பான்னு தெரியாத ஒரு நிலை இருந்தது. ரெண்டு பிரிவினருக்கும் இதே பயம்தான். பிரிவு செவுத்த உடைச்சி உள்ள வந்து பூங்கொடிவூட்டு ஆளுங்க விடியக்காத்தால மாரிவூட்ட கொளுத்திப்பூட்டானுங்க. இதுல தூங்கிட்டு இருந்த மாரியோட அம்மாவும்  தங்கச்சியும் நெருப்புல பட்டு முகம், கைக்காலெல்லாம் வெந்து போச்சு. அவுங்க பெரிய ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.  இதனால மாரிவூட்டு வகையறா பூங்கொடிவூட்டு மேல மிகுந்த கோபத்துல இருந்தானுங்க.  

        எப்படியாவது அவனுங்கள பழி வாங்கியேத் தீரனும். நம்ம இடத்துக்கே வந்து குடிசைய பத்த வச்சிட்டானுவ. அவனுகளை சும்மா விடக்கூடாது என்று பொறுமினார்கள் கிணத்துக்கடைக்கிட்டதான் அடிக்கடி சண்டை நடந்துகிட்டே இருக்கும். ஏன்னா? காலையில அங்க தண்ணி எடுக்க வரவங்க சும்மா இருக்கிறதுல்ல… எதையாவது கிளப்பிவிட்டுட்டு போயிடுராங்க.. அதுதான் பின்னால பத்திட்டு எரியுது. அங்க எப்பவும் பெரிய மனுசங்க ரெண்டு மூனு பேரு இருந்திட்டே இருப்பாங்க. ஏதாவது பிரச்சனையின்னா முதல்ல அடிச்சிட்டுதான் கலைஞ்சு போவச் சொல்லுவாங்க. அப்படி இருந்தும் கிணத்துக்கடைக்கிட்ட அடிக்கடி அடிதடி நடந்துகிட்டே இருக்கும்.

                          இப்படியே விட்டா ஊரு சுடுகாடா மாறிடும்.        பெரியவரும் சின்னவரும் ஒன்னா சந்திச்சு பேசுனாங்க. கிணத்துக்கடைக்கிட்ட ரெண்டு பகுதிகாரங்களையும் ஒன்னா கூட்டி பஞ்சாயத்து நடந்தது.

                          “சாதியினர். இரண்டு ஊர்களிலுமே இருவரும் சரியாய் இருக்கின்றனர். சண்டைப் போட்டு சாவுறதை விட சமாதானமா வாழ்ந்துட்டு போவோமே” என்றார் பெரியவர்.

                          “அதெப்படிங்க முடியும். என்னோட வீட்ட எரிச்சு,  பொண்டாட்டி புள்ளைய தீயில வெந்தது எனக்குதான தெரியம்” என்றார் மாரியோட அப்பா.

                          “ஏலே, அதுக்கு என்ன செய்யனுமிங்கிற… நீயே சொல்லு” என்று கத்திக்கேட்டார் சின்னவர்.

                          “அவனுங்க வீட்டுல ஒரு உசிராவது போவனும்” என்று மெதுவாய் முகத்தை திருப்பியபடி சொன்னார்.

                    “அது எப்படி முடியும்? அவுங்க வீட்டுப் பொண்ண உன் பையன் இழுத்துட்டு போயிட்டான்ல்ல. பொண்ணப் பெத்தவங்க கொஞ்சம் கோபமாத்தான் இருப்பாங்க. அதனால அவுங்க செஞ்சது சரியின்னு நான் சொல்லல. கொளுத்திய வீட்டை சீரமைத்து தரணும். ஆஸ்பத்திரி செலவ முழுசா பாத்துக்கணும். அதுக்கப்புறம் பொண்ணு மாப்பிள்ளையை சேத்துக்கிறது சேத்துகாதது அவுங்க விருப்பம். நான் சொல்லறதுக்கு கட்பட்டு இருக்கிறதா இருந்தா இருங்க. இல்லன்னா டவுன்ல போலிஸ வரச்சொல்லி ரெண்டு பேருமேலேயும் கேஸ் குடுத்துப்புடுவேன். என்ன தம்பி? நான் சொல்லுறது உனக்கும் சரிதானே” என்று தம்பியிடம் கேட்டார்.

         சின்னவரு வாயடைத்துப் போனார். இவ்வளவு நாளைக்கு பின்னர் தம்பின்னு சொல்லியிருக்காருன்னு பெருமைபட்டார். தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவித்தார்.

                    “இளவட்ட பசங்க இரத்தத்துடிப்புல இருப்பீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க. சின்னப்பசங்க தப்பு பன்னா பெரியவங்க எடுத்துச் சொல்லிப் புரியவையுங்க. நீங்களே அவுங்கள உசுப்பிவிட்டு கலவரத்தை உண்டு பண்ணாதீங்க. இத்தோட இந்த பிரச்சனையை விட்டுடுங்க” என்றார் பெரியவர்.

                     “அண்ணாரு சம்மதிச்சாருன்னா… செவுத்த இடிச்சிட்டு எப்போதும் போல ஒன்னா இருக்கலாம்” என்று தன்னோட கருத்தை முன் வைச்சார்.

                          “எங்க அப்பா முனுசாமி அதிகாரி உழைச்ச பூமி இது. இங்க வாழனுமே தவிர, சாகக்கூடாது. எனக்கு பரிபூரண சம்மதம். கிணத்துக்கடை இனிமேல் ஊருக்கு பொது” என்றார் பெரியவர்.

                          அத்துடன் கூட்டம் முடிந்தது. மக்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசம். ஒரு பிரச்சனை உருவாகும் போதுதான் இன்னொரு பிரச்சனை முடிவுக்கு வருகிறது என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். மாரியின் அப்பாவிற்கு பஞ்சாத்தில் நடந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எப்படியாவது அவர்களை பழிவாங்கியே ஆக வேண்டும் என்று உறுமிக்கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையம் திட்டத்தையும் வகுத்துக்கொண்டிருந்தார்.

                          கிணத்துக்கடை பாதுகாவலில் இருக்கும் பெரிய மனுசங்க மூனுபேரில் ஒருத்தர் மட்டும் மாரிவூட்டுக்கு  சொந்தக்காரர். அவருக்கு தண்ணிய நிறையா வாங்கி கொடுத்து கிணத்துக்கடையில இருக்கிற கிணத்துல சுமார் நாப்பது லிட்டர் விஷத்தை கலக்கச் சொல்லிட்டார். போதையில பின்னால் நடக்கும் விபரீதம் தெரியாம மத்த ரெண்டு பேரையும் வீட்டுக்குச் சாப்பிட அனுப்பினார். அமாவாசை இருட்டு. அந்த நேரத்துல மறைச்சு வச்சிருந்த விஷக்கேனை திறந்து கிணத்துகடை தண்ணில ஊத்திட்டாரு.

                 அந்த விஷமானது நேராக பூமிக்கு அடியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் ஊற்றியது. நீர் வீழ்ச்சியின் அடிப்பகுதியில் சிவன் அண்ணாந்து பார்த்த நிலையில் வாயில் தண்ணீரானது உள்ளே விழுந்த்து. திருநீலகண்டனின் கழுத்தில் விஷம் நின்று போனது. நிலவின் ஒளி கிணற்றில் விழுந்தது. கிணற்றில் நடக்கும் அதிசயம் நிலவில் ஓவியமாய் தெரிந்தது. கிணத்துக்கடைப் பாதுகாவலர் அதிசயத்து மயங்கிப்போனார்.

                          அடுத்த நாள் செய்தித்தாளில், கிணத்துக்கடை தண்ணீர் குடித்துவிட்டு  பழைய ஊர் மக்கள்  வாந்தி, பேதியினால் அவதி. பெரிய ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதின. கிணத்துக்கடையில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் கலவரம் நடக்காமல் இருக்க காவலர்கள் குவிந்தனர். இனி யாரும் கிணத்துக்கடை தண்ணீரை உபயோகப்படுத்தக்கூடாது என்று இரும்பால் கான்கிரீட் போடப்பட்டு கிணறு மூடப்பட்டது.  செய்தியினைப் படித்துவிட்டு மாரியும் பூங்கொடியும் இறைவனின் பாதங்களில் போய் விழுந்தார்கள். அதன்பிறகு கிணத்துக்கடையில் ஒவ்வொரு அமாவாசை  அன்றும் பைத்தியக்காரன் ஒருவன் வருவான். அவன் யார்? எங்கிருந்து வருகிறான்? என்று யாருக்கும் தெரியவதில்லை. இரவு முழுக்க பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருப்பான். விடிந்ததும் காணாமல் போய் விடுவான்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இளமையில் ஆமைபோல் வாழ்ந்து விடாதே!

“என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுகிறேன்” என்று விவேகானந்தர் கூறினார். அவர் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற இளைஞர்களையே கேட்டார். எனவேதான் நன்றாக உழைப்பதற்கு இளமைக்காலமே உகந்தது.

          இளமைக்காலத்தில் உள்ள நீங்கள் நல்ல வழியை தேர்ந்தெடுத்து பலரின் இன்னல்களை நீக்குகின்ற பெரும் செயலைச் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைக்கும் மனம் தூய்மையானதாக எந்தவித உணர்வுகளுக்கும் ஆட்படாததாக பக்குவப்பட்டதாக இருக்கவேண்டும். வித்தைகளாக இருந்தாலும் கல்வியாக இருந்தாலும் கற்றுக்கொள்ள இளமையே சிறந்தது. இளமையில் தான் உடலும் உள்ளமும் ஒன்றுசேர்ந்து வேகமும் விவேகமும் கலந்து பலத்துடன் காணப்படும்.

          இந்த இளமைக் காலத்தில் நீங்கள் பிறந்த இந்தச் சமுதாயத்திற்கு செய்ய வேண்டியவை உழைக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன. உதாரணமாக, நீங்கள் பிறந்துள்ள இந்த நாட்டில் சேரிகள் உள்ளன. உணவை விளைவிக்கும் விவசாயிகள் ஏழ்மையால் தற்கொலை செய்துள்ளனர். ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் முதலாளிகளும் உள்ளனர். இவற்றையெல்லாம் நீங்கள் மாற்ற வேண்டாமா? அதற்காக உழைக்க வேண்டாமா? இவற்றை எல்லாம் மாற்றவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டாமா? இளமையில் மனப்பக்குவம் என்பது சிறிது சிரமம்தான் என்றாலும், சமுதாயத்தைத் திருத்த பிறந்துள்ள இளமைக்கு புலன்களை அடக்கி ஆளும் மனப்பக்குவம் வேண்டும்.

புலன்களைக் கையாளுங்கள்

       விட்டில் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அவை இரவில் விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்தப் பூச்சிகளின் கண்களுக்கு ஒரு ஆற்றல் உண்டு. இவை வெளிச்சத்தை மிக அருகில் சென்று பார்க்கும். மனிதர்களின் கண்களானது லைட், சூரியன் போன்றவற்றைப் பார்த்தால் கூசும். எனவே விட்டில் பூச்சிகளுக்கு விளக்கின் வெளிச்சத்தை சுடரின் மிகஅருகே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுடரை நெருங்கும். அப்போது சுடரின் வெப்பத்தால் தாக்கப்பட்டு இறந்துவிடும். அதனுடைய பலவீனம் அதன் கண்களில் உள்ளது. கண்களுக்கு வெளிச்சத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை.

            மீன் பிடிப்பவர்கள் தூண்டிலிட்டு மீனைப்பிடிப்பார்கள், மீனுக்கு அதன் வாய்தான் பலவீனம். தூண்டிலில் ஏதேனும் உணவை மாட்டி விட்டு நீரில் விடுவார்கள். அதை பார்க்கும் மீனின் கண்களுக்கு உணவு மட்டுமே தெரியும். உணவு மாட்டப்பட்டுள்ள கொக்கியோ நூலோ தெரியாது. உண்ண வேண்டும் என்ற ஆசையில் சரியாகக் கவனிக்காமல் தன்வாயால் உணவை பற்றும். பற்றியதும் அதனுடைய வாயின் மேல் பகுதி தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் பின்னர் மனிதர்களுக்கு உணவாகிவிடும். மீனுக்கு அதன்வாய் ஆபத்தை தேடித்தரும். மீனின் பலவீனம் அதன் வாயில்தான் உள்ளது.

மரம் துளைக்கும் வண்டுகள்

       வசந்தகாலத்தில் இயற்கை அழகாக இருக்கும். பசுமை நிறைந்த அக்காலத்தில் எல்லா தாவரங்களும் புல் முதல் மரம் வரை பூத்துக்குலுங்கும். வண்டுகள் அந்த மலர்களைச் சுற்றிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகப் பாடிக்கொண்டே இருக்கும். இந்த வண்டுகளுக்கு மலர்களின் மணம் மிகவும் பிடிக்கும். மாமரப்பூக்களில் வண்டுகள் அமர்ந்து தேனையும் உண்டு மலரின் நறுமணத்திலேயே மயங்கி கிடைக்கும். பூ இதழ்களை மூடிக்கொள்ளும் அதன் உள்ளேயே மாதக்கணக்கில் இருக்கும். அது பிஞ்சாகி காயாகி பழமாகி உண்ணும் வரை வண்டு வெளியே வராது. உள்ளேயே இறந்தும் விடும். ஒரு மரத்தையே துளைத்து துவாரமிடும் ஆற்றல் கொண்ட ஒரு வண்டு ஒரு பூவை துளையிட்டு வெளியே வர இயலாதா? முடியும். ஆனால் அது பூவின் வாசனையிலேயே மயங்கிக் கிடைக்கும். எனவே வண்டுக்கு அதன் மூக்கே ஆபத்தை விளைவித்துவிடும். மூக்குதான் அதன் பலம். ஏனெனில் மலர்களை கண்டறிவது அதன் நறுமணத்தை வைத்துதான். ஆனால் அது அளவுடன் இல்லாமல் மேலும் மேலும் வாசனையை நுகர்ந்து இறப்பை தேடிக்கொள்ளும். எனவே வண்டு அதன் மூக்கால் அழியும்.

நெருப்பில் குளிக்கும் பறவைகள்

           காட்டில் வேட்டையாடும் வேடர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் பறவைகள் விலங்குகள் என்று எல்லாவற்றையும் பிடிப்பதற்கு சில வழிமுறைகளையும் கருவிகளையும் வைத்துக்கொண்டு வேட்டையாடுவர். அவற்றில் அசுணமா என்ற பறவையினம் இசையைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவை. அவற்றை வேட்டையாடும் வேடர்கள் காட்டில் சென்று புல்லாங்குழலை வாசிப்பார்கள். அந்த இசையைக் கேட்டதும் அப்பறவை இசை எங்கிருந்து வருகிறது என்று தேடிக்கொண்டு பறந்தது வந்துவிடும். அவ்வாறு வரும் பறவை இசையை கேட்பதற்காக மிகஅருகில் இன்னும் அருகில் என்று கீழே வந்து பறந்து கொண்டே இருக்கும். குழலை வாசிக்கின்ற வேடன் அதனை கவனித்துக்கொண்டே இருப்பான். பறவை இசையில் மயங்கி வேடனின் தலைக்கு மேலே பறக்கும். மிக அருகிலேயே பறக்கும். உடனே மற்ற வேடர்கள் அந்த வேடனின் அருகில் காய்ந்த சருகுகளைக் கொண்டு நெருப்பை எரிய விடுவர். இசைத்துக் கொண்டிருந்த வேடன் அதை நிறுத்தி விட்டு பறை என்ற தோல் கருவியை எடுத்து தாறுமாறாக அடித்து ஒலி எழுப்புவான். மிகவும் இனிமையான புல்லாங்குழலின் இசையைக் கேட்டு மயங்கிய பறவை அந்த பறையின் சத்தத்தை கேட்டதும் நிலை தடுமாறி நெருப்பில் விழுந்துவிடும். இறுதியில் வேடர்களுக்கு உணவாகிவிடும். அந்தப் பறவைகளின் காதுகளுக்கு கேட்கும் திறன் அதிகம். இசையை மிகமிக அருகில் சென்று கேட்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதால், வேடர்கள் பிடித்துவிடுவர் என்பதை உணராமல் தலைக்கு மேலேயே பறந்து கொண்டு இசையில் மயங்கி தன் உயிரை போக்கிக்கொண்டது. மற்ற பறவை இனத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பறவைகளுக்கு அதன் காதுகளால் உள்ளது. ஆனால் ஆசையை ஒரு அளவில் வைக்கலாம் தன்னையே அழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. அசுணமா பறவைகளுக்கு அதன் காதுகளே பலவீனம்.

மனிதனுக்கு அடிபணியும் யானைகள்

            யானைகளுக்கு மெய்யுணர்வு அதிகம். மனிதர்கள் காட்டு யானைகளைப் பிடிக்க வேண்டுமென்றால் பெண்யானை ஒன்றை பிடித்துச்சென்று காட்டில் ஓரிடத்தில் கட்டிவிடுவார்கள். அது நிற்பதற்கும் சிறிது நடப்பதற்கும், இடம்விட்டு சுற்றிலும் பெரிய குழியைத் தோண்டிவிடுவார்கள். அவ்வாறு தோண்டிய குழி மேலே தெரியாதவாறு மரக்கிளைகளைக் குறுக்காகப் பரப்பி வைத்துவிடுவார்கள். பின்னர் யாரும் இல்லாத அந்தக் காட்டில் தனியாக உள்ள பெண்யானை கத்த ஆரம்பிக்கும்.  ஒலியைக் கேட்டதும் காட்டுயானை கத்துவது பெண்யானைதான் என்பதை உறுதி செய்துகொண்டு அதனுடன் சேரவேண்டும் என்ற ஆசையால் மிக வேகமாக ஓடி வரும். அதற்கு பெண்யானை மட்டுமே கவனத்தில் இருக்கும் சுற்றிலும் குழி தோண்டி இருப்பது கண்களுக்கு புலப்படாது. வேகமாக பெண்யானையை நுகரவந்து குழிக்குள் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளும். காட்டிலேயே பெரிய உடலையும் பலத்தையும் கொண்ட விலங்கினம் தனது மெய்யுணர்வு ஆசையால் சிறிய உருவம் கொண்ட மனிதர்களால் ஆளப்பட்டுவிடும். எனவே அதற்கு அதன் அதிகமாக உள்ள மெய்யுணர்வே துன்பத்திற்கு காரணமாகும்.

விட்டில் பூச்சிகளுக்கு அதன் கண்களால் ஆபத்து ஏற்படும்.

மீனுக்கு அதன் வாயால் ஆபத்து நேரும்

வண்டுக்கு அதன் மூக்கே எமனாகும்

பறவைக்கு அதன் காதுகளே பலவீனமாகும்

யானைகளுக்கு அதன் மெய்யுணர்வே துன்பத்தை கொடுத்து விடும்

இவ்வாறு இந்த விலங்கினங்களுக்கு அவைகளின் ஒரு புலனால் மட்டுமே ஆபத்து உண்டாகும். ஆனால் மனித இனத்திற்கு அவனுடைய ஐந்து புலன்களாலும் ஆபத்து நேர்ந்துவிடும்.

உழைக்கும் காலம், இளமைக்காலமே

       இளைஞர்களாகிய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களின் ஐம்புலன்களால் உண்டாகும் ஆசைகளை கட்டுப்படுத்துங்கள். இளமையில் அது மிகவும் கடினம். நம்முன்னோர்கள் “ஐந்தை அடக்கு” ஐம்புலன்களையும் எவன் ஒருவன் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளானோ அவன்கட்டுக்குள் இந்த உலகம் அடங்கும் என்று கூறியுள்ளனர்.

         இளைஞனே! உனது சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் நீரை மாசுபடுத்திவிட்டனர். காற்றையும் விஷவாயுவாக மாற்றுகின்றனர். இயற்கையாக உணவைத்தரும் மண்ணையும் மாசுபடுத்திவிட்டனர். இன்னும் எவ்வளவோ கூறலாம். இவற்றையெல்லாம் பார்க்கும் உணரும் உமது மனதில் ஒரு வேகம் எழவில்லையா. அடுத்து வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கிறது. இதையெல்லாம் பார்த்துமா உனது மனம் தடுக்க நினைக்க வில்லை? இந்த நிலையை மாற்ற உனது இளமையே சிறந்தது. உழைக்கப்புறப்படு. உன் தேசத்தை சரியாகத் திருத்தப் பயணம் செய். இரவு பகல் என்று பாராமல் உழைப்பதற்கு ஆயத்தமாகு.

உலகம் உனக்கானது. நீயே அதன் அதிபதி. அதன் சேவகன் எல்லாம் நீயே. இங்கு நடக்கும் அநியாயங்களை தடுக்கவில்லை என்றால் அவை நடப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். இந்த உண்மை நீங்கள் சிந்தித்து பார்த்தால் உமக்கே புரியும்.

இளைஞர்களே செய்யும் கைம்மாறு

         இளைஞனே! நீங்கள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வகிக்கும் பதவி, அடையும் மகிழ்ச்சி அனைத்தும் இங்குதான் கிடைத்தன. இவற்றை யெல்லாம் பெற்றுக்கொண்டு இந்தச் சமுதாயத்திற்காக என்ன செய்யப்போகிறாய்? சிந்தனை செய். மனித வாழ்க்கை என்பது இரயில் பயணம் போன்றது, அவரவர் இடம் வந்துவிட்டால் இறங்கிக்கொள்ள வேண்டியதுதான். இறங்குவதற்கு முன்பாக அதாவது காலம் முடிவதற்குள் தீமைகள் சிலவற்றையாவது மாற்றலாம். அவ்வாறு மாற்ற உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு இளமையே சரியானது. உழைக்காமல் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. எனவே சாதிக்க வேண்டியவற்றை இளமையில் செய்து முடிப்பதே உன்னதமானது.

     உங்கள் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் நீங்கள்தான் இவ்வுலகின் தலைவன்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலாயா மகளிர் கல்லூரி, தர்மபுரி.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

  1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
  2. தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !
  3. மனப்பான்மையை உயர்த்துங்கள்
  4. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

அன்னை முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாறு

‘பெண்ணினத்தின் உயர்வில்தான் ஒரு நாட்டின் உயர்வு அடங்கி இருக்கிறது’ என்று உணர்ந்து பெண்ணினத்தின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட முன்வந்த பெருமக்களுள் அன்னை முத்துலட்சுமி, பெருமைக்குரிய இடத்தைப் பெற்றவர் ஆவார்.

சேற்றில் முளைத்த செந்தாமரை

இத்தகு பெருமை வாய்ந்த அன்னை முத்துலட்சுமி அம்மையார் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாள் புதுக்கோட்டையில், இழித்தும் பழித்தும் பேசப்பட்ட பெண்ணினத்திலே சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனத் தோன்றினார். புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராகவும். கல்வித் துறை இயக்குநராகவும், அரசருக்கு ஆய்வுரை கூறுநராகவும் இருந்த நாராயணசாமி ஐயரே இவர் தந்தை. இளமையும் எழிலும் நல்லொழுக்கமும் வாய்ந்த சந்திரம்மா இவர் தாய். கலப்பு மணம் செய்துகொண்ட இவர்கட்குத் தோன்றிய நான்கு மக்களுள் மூத்த மகளே அன்னை முத்துலட்சுமி என்பார்.

திண்ணைப் பள்ளியில் கல்வி

தந்தை நாராயணசாமி தம் மகள் நான்காம் அகவையில் ஆடவர் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். முத்துலட்சுமியை நடத்தும் திண்ணைப் செல்வி முத்துலட்சுமியைப் பள்ளியில் சேர்த்தபோது அவர் தந்தை ஆசிரியரிடம் ‘பால் கணக்கு சலவைக் கணக்கு எழுதும் அளவிற்குக் கற்பித்தால்  போதும்’ என்று கேட்டுக் கொண்டார். படித்தார். முத்துலட்சுமியோ ஊக்கத்தோடு ஆனரல் தந்தைக்கு தெரியாமலேயே ஆங்கில அரிச்சுவடியைப் படித்து முடித்தார். அவர் ஆங்கில அறிவு மேம்பட்டு வருவதைக் கண்டு ஆசிரிய பாராட்டி அன்பு செலுத்தினார். மகள் ஆறாம் வகுப்புப் படித்துத் தேர்ச்சி பெற்றுவிட்ட செய்தி தந்தைக்குப் பெரு வியப்பாயிருந்தது. எனினும் மேற்படிப்பிற்குச் செல்லாதவாறு தடுத்துவிட்டார். மேற்கொண்டு உயர்கல்வி பெற இயலாமல் குழம்பினார் முத்துலட்சுமி.

பாடங்கற்பித்த ஆசிரியர் பாலையா, முத்துலட்சுமியின் தாயாரிடம் சென்று முத்துலட்சுமியின் மதிநுட்பத்தையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்துக் கல்விச் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், படிப்பை நிறுத்த வேண்டாவெனவும் கேட்டுக் கொண்டார். முத்துலட்சுமியின் அறிவின் கதவு திறக்கப்பட்டுவிட்டது; பெற்றோரின் இசைவால் படிப்புத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடிப்பதற்கும், 13 ஆம் அகவையில் பருவமடைவதற்கும் சரியாயிருந்தது. அக்காலத்திலே பருவமடைந்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவது மரபில்லை ஆதலின், அவர் பள்ளி செல்ல மீண்டும் தடை போடப்பட்டது.

திவானுக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தந்தை பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றார். முத்துலட்சுமி தம் தந்தையிடமே பாடம் கேட்டார். கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சரவணப் பிள்ளையும் பேராசிரியர் இராதாகிருஷ்ணரும் தமிழும் அறிவியலும் கற்றுக் கொடுத்து, இடைநிலைத் தேர்வில் சிறப்பான வெற்றிபெற அவருக்கு உதவினர்.

புதுக்கோட்டையிலிருந்து தேர்வுக்குச் சென்ற நூற்றுவருள் பதின்மரே தேர்ச்சி பெற்றனர். முத்துலட்சுமியும் ஒருவர். முந்துலட்சுமியின் வெற்றிச் அவர்களுள் ஏனையோர் சிறப்பிடம் பெற்றது. பெற்றோரும் உற்றாரும் பெருமகிழ்ச்சி எய்தினர். செல்லி செய்தி, செய்தி ஏடுகளில் ஆசிரியர் ஆடவர் அன்னை முத்துலட்சுமியோ பாலையாவுக்கு உள்ளத்தில் கோயிலெழுப்பி உயர் வணக்கம் செலுத்தினார்.

கல்லூரி வாழ்க்கை

ஒருநாள் தந்தை நாராயணசாமி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் திருமதி கமலா சத்தியநாதன், அவர் தங்கை கிருஷ்ணம்மா ஆகியோர் படங்கள் பட்டதாரி உடையிலிருந்ததைக் கண்டு, முத்துலட்சுமி தாமும் படித்துப் பட்டம் பெற்று அத்தகைய உடையணிய வேண்டுமென ஆவல் கொண்டார்; தந்தையை வேண்டினார். கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. முத்துலட்சுமியின் விண்ணப்பத்தைக் கண்டு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மலைத்துப் போயினர். நாராயணசாமி, கல்லூரித் தலைவரை அணுகினார். ஆடவர் கல்லூரியில் பெண்களைச் சேர்க்கக் கூடாதென்ற விதி இருந்ததால் வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை நாராயணசாமி மன்னரை அணுகினார். மன்னர் ஆஸ்திரேலிய பெண்ணை மன்னரை மணந்தவர். ஆதலின் முற்போக்குச் சிந்தனை உடையவராக இருந்தார். எனவே இருவரும் கலந்து பேசி முத்துலட்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள இசைவளித்ததோடு ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தனர். முத்துலட்சுமியை மாணவர்கள் காணாத வகையிலும் ஆசிரியர் மட்டும் காணும் வகையிலும் இடையில் ஒரு திரையிடப்படும் என்பதுதான் அக்கட்டுப்பாடு முத்துலட்சுமி திரைக்குப் பின்னாலமர்ந்து படித்தார். அவர் வகுப்பறையை விட்டுச் சென்ற பின்னரே வகுப்பு நேரம் முடிந்ததாகக் கருதப்படும். பின்னரே ஆண் பிள்ளைகள் வெளியே போசுலாம். அவ்வாண்டு நடந்த தேர்வில் முத்துலட்சுமி பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாகத் தேறினார் என்ற செய்தியைக் கேட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருபுறம் நாணமும், மறுபுறம் வியப்பும் அடைந்தனர். ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்கிறாள் என்ற கேலிப் பேச்சும் மொட்டைக் கடிதங்களின் மூச்சும் பயனற்றுப் போயின.  

மகள் முத்துலட்சுமிக்கு மணமுடிக்கவில்லையே என்ற மனக்கவலை, தாயார் சந்திரம்மாளை நோய்வாயில் தள்ளிப் படுக்கையில் கிடத்திவிட்டது. சமுதாயச் சழக்குகளிலேயும் பழமைப் பிடிப்பிலேயும் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலே சந்திரம்மாள் கவலைப்பட்டதில் வியப்பில்லை. அதிலும், கலப்புமணம் செய்து கொண்ட சந்திரம்மாளின் கூடுதலாகவே இருந்ததில் நியாயம் இருந்தது. மருத்துவர் தந்த மருந்து பயனளிக்காமல் தாயார் உடல் மெலிந்தார். உயிருக்கு மன்றாடினார். தலைமகளோ உளம் மெலிந்தார்; இரவு பகல் ஊணுறக்கமின்றி அன்னையின் அருகிலேயே இருந்து இருந்து பணிவிடைகள் செய்தார். தாம் மருத்துவம் படித்திருந்தால் தாயாருக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணினார் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவரெல்லாம் பார்த்துக் கைவிரித்து விட்டனர். இறுதியாக ‘வான் ஆலன்’ என்ற அமெரிக்க மருத்துவர் கொடுத்த மருந்தால் தாய் உயிர் பிழைத்தார்.

மருத்துவக் கல்லூரி

தாயார் சந்திரம்மாளுக்குத் தம் மகளின் திருமணம் பற்றிய எண்ணம் தலைதூக்கியது. தலைமகள் முத்துலட்சுமிக்கோ தாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்னும் எண்ணம் தலைதூக்கியது. அதன் பயனாகச் செல்வி முத்துலட்சுமி 1907 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இவ்வகையில் சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றிலேயே எம்.பி. & சி.எம். வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் தமிழ்ப் பெண்மணியும், ஒவ்வோராண்டும் தகுதியிலேயே தேர்ச்சி பெற்றுவந்த முதல் பெண்மணியும் முதல் முத்துலட்சுமியே ஆவார். பல்கலைக் கழகத்திலேயே முதல பட்டதாரியாகவும் இந்தியாவிலேயே முதல் மருத்துவப் பெண் பட்டதாரியாகவும் இவர் தேர்ச்சி பெற்றார்.

நெஞ்சை உலுக்கிய துயர நிகழ்ச்சி

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 1907ஆம் ஆண்டு தந்தையோடு புறப்பட்டார். புறப்படும்போது பெற்றோரையும் கணவரையும் இழந்து, நிறைமாதக் கருவோடு தமது இல்லத்திலே இருந்தது செல்வி முத்துலட்சுமி சென்னைக்குப் சிற்றப்பா மகள் வீரலட்சுமி தம்மிடத்தில் மிகவும் அன்போடிருந்த முத்துலட்சுமியைப் பிரிய இயலாமல் கோவெனக் கதறினார். தம்மையும் அழைத்துச் சென்று சென்னையைச் நிறைவயிற்றுப் சுற்றிக் காட்டுமாறு கெஞ்சினார். அந்த பெண்ணிற்குக் கலங்கிய கண்களோடு முத்துலட்சுமி ஆறுதல் கூறி விடை பெற்றார். சென்னைப் புரசைவாக்கத்தில் குடியமர்ந்து தந்தையும் மகளும் நூல்கள் வாங்குவதற்காகக் கடைத்தெரு சென்று திரும்பிய போது அவர்கட்காகக் காத்திருந்த தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தனர். வீரலட்சுமி ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு உயிரிழந்தாள் என்று அறிந்து முத்துலட்சுமி ஆற்றொணாத் துயரமடைந்தார்; சில நாள் ஊணுறக்கமின்றித் துயருழந்தார். பின்னர்ச் சில நாள்களில் தம் தாயார், வீரலட்சுமியில் குழந்தையோடும் ஏனையோரோடும் சென்னை வந்து சேர்ந்தார். தம்பி இராமையாவைக் கிறித்தவக் கல்லூரியிலும், சுந்தரம்மாள், நல்லமுத்து ஆகிய தங்கையரை எழும்பூர் மாநிலப் பெண்கள் பயிற்சிக் கல்லூரியிலும் சேர்த்தனர். மருத்துவக் கல்விக்காகப் புதுக்கோட்டை அரசு அனுப்பி வந்த உதவித் தொகை ரூ.180/- இவர்கள் குடும்பத்திற்கு உதவியாய் இருந்தது.

நாட்டுப்பற்று

முத்துலட்சுமியின் நாட்டுப்பற்று டாக்டர் நஞ்சுண்டராவின் தொடர்பால் கிளர்ந்தெழுந்தது. அவர்  வழியாகவே அக்காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் பலரோடு கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. 1912 ஏப்பிரல் திங்களில் பட்டம் பெற்றவுடன் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். பின்னர், 1917-ல் எழும்பூரில் தனியாகத் தொழில் நடத்தத் தொடங்கினார்.

மணவாழ்க்கையும் மக்கட்பேறும்

ஆடவர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்களின் நிலைமையை நேரில் அறிந்திருந்த முத்துலட்சுமி இளமைக் காலத்தில் திருமணத்தின் மீதே வெறுப்புற்றிருந்தார். பின் மனம் மாறித் தம்மைப்போலவே மருத்துவப் பணி புரிந்து வந்த சுந்தரம் என்பாரைத் தம் வாழ்க்கைத் துணைவராக ஏற்றும் கொண்டார். இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நன்மக்களை ஈன்று புறந்தந்தனர்.

புற்றுநோய்க்குத் தீர்வு

முத்துலட்சுமியின் தங்கை சுந்தரம்மாள் ஒருநாள் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அன்னை முத்துலட்சுமி 1922 ஆட்பட்டுவிட்டன் தங்கையின் உடல் நிலையை முதன்முறையாக ஆராய்ந்த போது . தம் அன்புத் தங்கை புற்றுநோய்க்கு என்பதறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதையறிந்த சுந்தரம்மாகும் அமைதியிழந்து பெரிதும் துயருழந்தார். 1922 முதல் 1923 வரை முத்துலட்சுமி தம் தங்கையின் படுக்கை அருகிலேயே இரவு பகல் உடனிருந்து பணிவிடை செய்தும் பயனேற்படவில்லை சுந்தரம்மாள் இறந்தாள். தம் அன்புத் தங்கையை என்ன எண்ணிக் கண்ணீருகுத்தார் முத்துலட்சுமி. உற்றார்க்கு விடிவே இல்லையா?” எனப் ”புற்றுநோய் புலம்பினர் புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினார். அதல் விளைவுதான் இன்றுள்ள அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை.

வெளிநாட்டுப் பயணம்

முத்துலட்சுமி அரசினரின் உதவியால் தம் கணவருடன் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இலண்டன் மாநகர் சென்று அங்குத் தம் மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். குழந்தைகளுக்கு வரும் நோய் பற்றி அவர் நடத்திய ஆராய்ச்சியைக் கண்டு மேதைகள் வியப்படைந்தனர். குழந்தை மருத்துவத்தில் பெரும் திறன் பெற்றார். ஒருமுறை மேல்நாட்டு மருத்துவ மருத்துவமனையைப் பார்வையிட்டுப் புற்றுநோய் அறுவை இராயல் மருத்துவம் பற்றிப் பல நுட்பங்களைத் தெரிந்து கொண்டர்.

பாரீஸ் பெருநகரில் நடந்த அனைத்து உலகப் பெண்கள் மாநாட்டில், கலந்து கொண்டு அன்னை முத்துலட்சுமி அரியகொரு சொற்பெருக்காற்றினார். இந்தியப் பெண்கள் பெற்றிருக்கின்ற பெறவேண்டிய உரிமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கீழைதாட்டுப் பெண்களும் மேலைநாட்டுப் பெண்களைப்போல் சிறந்து வாழத் தாம் தொண்டு செய்யப் போவதாக உறுதி கூறினார்.

தாயகம் திரும்புதல்

அன்னை முத்துலட்சுமி 1926 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். நண்பர்களும் பொதுமக்களும் அவருக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் நடந்த விழாவில் அன்னை முத்துலட்சுமி தம் பயணப் பட்டறிவு பற்றி எடுத்துரைத்தார்.

இந்தியப் பெண்கள் கழகத்தின் ஏற்றமிகு தோற்றம்

அன்னை முத்துலட்சுமி அவர்கள் பரந்த சமய நோக்குடைய (Theosophist) திருமதி மார்கரெட் இ. சுசின்ஸ். திருமதி ஜினாாதாதாசா என்ற ஐரோப்பிய மாதருக்கு உறுதுணையாக இருந்து 8-5-1917-இல் அடையாற்றில் இந்தியப் பெண்கள் கழகத்தைத் (Women’s Indian Association) தோற்றுவித்தார். தொடக்கக்கால முதல் அதன் முதல் இந்திய உறுப்பினராகவும், பல்லாண்டுகள் அதன் செயலாளராகவும், பின்னர் வாழ்நாள் தலைவராகவும், அது நடத்திய ‘ஸ்திரீ தர்மா’ (மாதர் அறம்) என்னும் இதழாசிரியராகவும் இருந்து தொண்டாற்றினார்.

சட்டமேலவையில் அன்னை

அன்னை முத்துலட்சுமி சென்னை திரும்பியதும் ‘இந்தியப் பெண்கள் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாநில ஆளுநரால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப் பெற்றார்; 1927-இல் மேலவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். உலகத்திலேயே இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற முதல் பெண்மணி அன்னை முத்துலட்சுமியே ஆவார்.

சட்ட மேலவையில் அன்னை முத்துலட்சுமி 27-1-1927-இல் அவைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதன்முறையாகத் தலைமையேற்றுப் பேசினார் ஒருமுகமாக, முழுமனத்தோடு எனக்களித்த பெருமையைத் தனிப்பட்ட பெருமையாகக் கருதாமல் இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களனைவர்க்கும் அளித்த பெருமையாகவே கருதுகிறேன்.

‘இந்த மாநிலம், பெண்ணினத்தைப் பொறுத்தவரை இணையற்ற பல பெருமைகளை ஈட்டியிருக்கிறது. முதன் முதல் பெண்ணினத்திற்கு வாக்குரிமை அளித்த பெருமையும். பெண்மணி ஒருத்தி உறுப்பினராய் அமர இடமளித்த பெருமையும், விழிப்புணர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் யாரும் கேளாமலும் வேண்டாமலும் இருக்கும்போது ஒப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் மேலவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த பெருமையும் ஆகிய இணையற்ற பெருமைகளை நம் மாநில அரசு பெற்றுத் திகழ்கிறது. இது, பல் சீர்திருத்தங்களில் பெண்கள் முன்னேற்றத்தில் வழிகாட்டியாக விளங்கும் என நம்புகிறேன். எப்போதும் உங்கள் ஒத்துழைப்புக் கிடைக்குமெனவும் நம்புகிறேன்’ என்று பேசினார்.

அன்னை முத்துலட்சுமியின் மருத்துவமனைகளில் டையறா முயற்சியால் முதன் முதலில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. குழந்தைகட்குத் தனி மருத்துவமனையும் மகப்பேறு மருத்துவமனையும் ஏற்படுத்தப்பட்டன. ஏழைச் சிறுமியர்க்கு இலவசக் கல்வியும், இளங்கைம்பெண்களுக்குக் கல்விச் சலுகையும், பள்ளிகளில் மருத்துவக் கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குழந்தை மணத் தடுப்பும், கோயில்களில் தேவரடியார் அமைப்புமுறை ஒழிப்பும் கொணரப்பட்டன.

அன்னை முத்துலட்சுமி சட்ட மேலவையில் 1927 ஆண்டு நவம்பர்த் திங்களில், ‘தேவரடியார் அமைப்புமுறை ஆம் ஒழிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேச்சைக்கேட்டு மேலவையே அசைந்தது; பழமை விரும்பிகளின் பல்வேறு எதிர்ப்புக்கிடையிலும் சட்டம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமியால் இளமையணத் தடுப்புத் தீர்மானமும் கொணரப்பட்டு வெற்றி பெற்றது.

காந்தியடிகளைக் காணல்

அண்ணல் காந்தியடிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தேசியக் காங்கிரசு தலைவர் திரு. எஸ். சீனிவாச ஐயங்கார் இல்லத்தில்தான் அன்னை முத்துலட்சுமி, அண்ணல் காந்தியடிகளை அன்னை கஸ்தூரிபாவுடன் முதன் முறையாகக் கண்டு பூரிப்பும் பெருமகிழ்வும் எய்தினார். முத்துலட்சுமி அறிமுகப்படுத்தப்பட்டதும் அண்ணல் காந்தியடிகள் அவரை நோக்கி, ‘மேலவையில் பொறுப்பேற்றிருப்பதறிந்து மகிழ்கிறேன். நீர் பெண்ணினத்திற்கு எவ்வாறு தொண்டாற்றப் போகிறீர்’ என்று கேட்டார். உடனே பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகத் தீட்டி வைத்திருந்த திட்டங்களையும் தீர்மானங்களையும் அண்ணல் காந்தியடிகளிடம் தந்து ஒத்துழைப்புத் தரக் கேட்டுக் கொண்டார்.

பதவியைத் துறத்தல்  

அண்ணல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உறங்கிக் கொண்டிருந்த மக்களைத்  தட்டியெழுப்பியது. காந்தியடிகள் தண்டியிலே உப்பெடுத்துச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயைப்போல் பரவியது. உதகையிலிருந்த அன்னை முத்துலட்சுமி செய்தி அறிந்த அரை மணி நேரத்தில் சட்ட மேலவைத் துணைத்தலைவர் பதவியைத் துறந்தார். உதகையில் தங்கியிருந்த ஆங்கில ஆளுநருக்குப் பதவி விலகல் கடிதம் எழுதித் தம் கணவர் வழியாக அனுப்பினார்.

அவ்வாறு அன்று பதவியைத் துறந்த நாட்டுப்பற்றையும் செய்தி ஏடுகளும் தேசியத் தலைவர்களும் அவ்வாறு முதல் முத்துலட்சுமியின் துணிவையும்  வியந்து பாராட்டினர்.

அண்ணல் காந்திக்கு அரிய வரவேற்பு

தாழ்த்தப்பட்டோர்க்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து அண்ணல் காந்தி எரவாடாச் சிறையில் உண்ண நோன்பு இருந்து உடலிளைத்தார். அவர் உடல் நலம்பெ தடைவிதித்தாலும் கோரி வழிபாடு நடத்தச் சென்னை நகர மாதர் கூட்டத்திற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அரசு அன்னை முத்துலட்சுமி தடையை மீற முடிவு செய்தார். நோய் வாய்ப்பட்டுச் சிறிது மயக்கமுற்ற நிலையிலும் தம் கணவருடன் பி வந்தார். அன்னை முத்துலட்சுமி.

கூட்டம் கூட வேண்டிய திடலுக்குச் செல்ல முடியாதாவறு காவலர்களால் ஸ்பர்டாங் தடுக்கப்பட்ட சாலையில் மக்கள் அலைகடலெனக் ஆயிரக்கணக்கி கூடியிருந்தனர். அன்னை முத்துலட்சுமி தடையை மீறி நேரே திடலுக்கு நுழைந்து சென்று வழிபாட்டுப் பாடலைப் பாடாலானர்.

அண்ணல் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புக்காகத் தென்னகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சென்னையில் மாதர் கழகத்தின் சார்பில் வரவேற்பளித்துப் பண முடிப்பும் வழங்கினார் அன்னை.

 அன்னை முத்துலட்சுமி ‘ஸ்திரீ தர்மம்’ (மகளிர் அறம்) என்னும் பெயரில் இதழ் தொடங்கிப் பெண்கல்லி நாட்டுரிமை. தீண்டாமை ஒழிப்பு, இளமை மணத்தில் கொடுமை பற்றியெல்லாம் கனல் தெறிக்கும் கட்டுரைகச எழுதினார்.

குழந்தைகளின் அன்புத்தாய்

அன்னை முத்துலட்சுமி குழந்தைகளிடத்தில் அளவது, அன்புடையவர். தாம் பிறந்து வளர்ந்த புதுக்கோட்டையில் 5 இல்லத்திற்கு அருகிலிருந்த ஆயர்குடிக் குழந்தைகளை நீர் குளிப்பாட்டிச் விளையாடிய தொடர்ந்தது. சீவி முடித்து இளமைக்காலப் பழக்கம்  இறுதிவரை  தொடர்ந்தது.  தம் பிள்ளைகளின்  பிறந்தநாள்   வரும்போதெல்லாம் குழந்தை இல்லங்களுக்குச் சென்று இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வது அவரது வழக்கமான பணி. எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் ஒரே பெண் மருத்துவ அலுவலராகப் பணியேற்றபோதும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது குழந்தைப் பகுதியே.

 பாரீஸில் கண்ட குழந்தைகள் பாதுகாப்பில்லத்தைப் பொல, குற்றமிழைத்த சிறுவர்கள் திருந்து நடக்கவும் அன்புப் பிணைப்போடு வளரவும் குழந்தைகள் பாதுகாப்பில்லம்’ ஒன்றை நிறுவியதோடு அதைச் சீர்திருத்தப் பள்ளியாகவும் மலரச் செய்தமை அவர் அருள் உள்ளத்திற்கோர் எடுத்துக் எட்டாகும். அதேபோன்று பெண்களுக்காகக் கீழ்ப்பாக்கத்தில் திக்கற்ற இளம்பெண்கள் இல்லம்’ அமைந்ததும் மறக்க முடியாத தொண்டாகும்.

அவ்வை இல்லம்

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இளம்பெண்கள் அன்னை முத்துலட்சுமியிடம் அடைக்கலம் வேண்டியபோது அவர் தம் தங்கை நல்லமுத்தோடும் கணவரோடும் கலந்து பேசினார். அன்று இரவே அவ்வை இல்லம் தோற்றமெடுத்தது. திருமதி நல்லமுத்து அதன் முதல் காப்பாளராகப் பொறுப்பேற்றார்.

நேர்மையும் நடுநிலைமையும் அற்ற தன்னலம் மிகுந்த – சமுதாயத்திற்கெதிராகச் சூழ்நிலையின் நெருக்குதலாலும், மன எழுச்சியாலும் 1930-இல் தோற்றுவிக்கப் பெற்ற இவ் அவ்வை இல்லம் நானூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும். இளம் பெண்களுக்கும், முதிய மகளிர்க்கும் புகலிடம் தந்து, ஒரு தொழிற்பள்ளி, ஒரு தொடக்கப்பள்ளி, அடிப்படை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஓர் உயர்நிலைப் பள்ளி எனப் படிப்படியாக வளர்ந்து வலிவோடும் பொலிவோடும் விளங்குகின்றது. புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் செவிலித் தாயர்களாகவும் மருத்துவர்களாகவும் ஊரகப் பெண் தொண்டராகவும் பயிற்சி பெற்று அவ்வை இல்லத்திலிருந்து  ஆண்டுதோறும் வெளிவருகின்றனர்.

பிற பணிகள்

அவ்வை இல்லத்தைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமி சென்னையில் ‘ஒழுக்கந் தவறிய பெண்கள் கண்காணிப் கழகம்’ (Vigilance Association) ஒன்றமைத்து முதன் முறையா அத்தகைய பெண்களுக்குத் தற்காப்பில்லம் ஒன்றும் ஏற்படுத்தினார். குற்றமிழைத்த சிறுவர்களுக்கான நிறுவனம் (Children Aid Society) ஒன்றை நிறுவி அதன் செயலாளராகப் பணிபுரிந்தார்.

அம்மா

அவ்வை இல்லத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதரவிழந்த இளம்பெண்களும் பிறரும் அன்னை முத்துலட்சுமியை ‘அம்மா’ என்றே அழைத்தனர். அவர் தோழி பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ‘அம்மா’வாகத் திகழ்ந்ததோடு பெண்கள் சீர்திருத்தத்திலே ‘பெரிய அம்மா’வாகவும் (The Great Mother) அவ்வையாகவும் நிகழ்ந்தார் எனலாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம்

புற்று நோய் தொன்றுதொட்டு, வேதகாலம் முதல் இருந்த வரும் கொடிய நோயாகும். இதைப் பணக்கார நோய் என்று தீவினை நாய் என்றும் கூறுவதுண்டு. இதன் கடுை நோயுற்றார்க்கும். அருகிலிருந்து காண்பவருக்குமே நன்று. தெரியும். தம் அன்புத் தங்கை சுந்தரம்மாளைத் துடிக்க துடிக்கத் துன்பத்தில் ஆழ்த்தி அவர் உயிருக்கே உலைவைத்து புற்றுநோயின் கடுமையை அருகிலிருந்து கண்ட அன்மை முத்துலட்சுமி புற்றுநோயை அடியோடு ஒழிக்க வழி முயற்சி மேற்கொண்டார்.

அடையாற்றில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம்

இங்கிலாந்து சென்று திரும்பிய அன்னை முத்துலட்சுப் துணைத் தலைவரானதும் சென்னை மேலவைத்  மேலவையில் சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று ஏற்படுத்த வேண்டும் எனப் பேசினார். பெண்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆங்கில மரபின்படி அன்போடு கேட்டனர். ஆனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

1935-இல் நடந்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவுக் கொடைக் குழுவிடம் அளித்தனர். அதேபோன்ற தீர்மானத்தை மேலும் பல பெண்கள் அமைப்புகள் தந்தன. நாடு விடுதலை பெற்றபின் அன்றைய ஆளுநரின் மனைவியும் பவநகர் பேரரசியுமான மாண்புமிகு சாகியா தலைமையில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் புற்றுநோய் நீக்கச் சேமிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1951-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு இராசேந்திர பிரசாத் புற்றுநோய் ஒழிப்பு நாளைத் தொடங்கி வைத்தார். அடையாறு காந்தி நகரில் அரசு வழங்கிய நிலத்தில் 1952-இல் நேரு பெருமகனார் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பெற்றோர் – கணவர் பிரிவு

தம்மைப் பெற்ற அன்பு அன்னை 1919 ஆம் ஆண்டிலும், நம் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் காரணமான தந்தை 1930 ஆம் ஆண்டிலும், தம் அன்புக் கணவரும் அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவருமான மருத்துவர் சுந்தர ரெட்டியார் 1943-லும் இயற்கை எய்தினர்.

புத்துலகப் பெண்துறவி புகழுடம்பெடுத்தார்

அன்னை முத்துலட்சுமி அம்மையார் எண்பதாம் அகவையில் ஒரு கோயிலெனக் காட்சி தந்தார். அவரை நினைத்தால் கவுந்தியடிகளும் அவ்வைப் பெருமாட்டியும் நம் கண்முன் தோன்றுவர். அவரைக் காண்பதும் அவரோடு பேசுவதும் அவர்தம் உறுதிவாய்ந்த தெளிவான குரலைக் கேட்பதும் யாருக்கும் எழுச்சியூட்டுவனவாகவே இருந்தன.

அத்தகு கீர்த்தி வாய்ந்த சமுதாயச் சீர்திருத்தச் செல்வி அன்னை முத்துலட்சுமி தமது எண்பத்து இரண்டாம் அகவையில் 22.7.1968-இல் பொன்னுடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார். அவ்வை இல்லமும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் அன்னை முத்துலட்சுமியின் அழியாப் புகழை நிலைநாட்டும் நிறுவனங்களாகக் காட்சி தருகின்றன.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்

பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

அன்னை முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்

2.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »