மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

உங்களுடைய இடற்பாடுகளைக் கையாள கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால் அடுத்து இலட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இலட்சியத்தை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு மாறினால் அவை இலட்சியங்கள் அல்ல. ஆசைகளே ஆகும். அடையும்வரை மாறாமல் இருப்பவையே இலட்சியம் ஆகும். அவ்வாறான இலக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடைவதற்கு எவ்வகையான அவமானங்களும், புறக்கணிப்புகளும் துரோகங்களும் விளைந்தாலும் நீங்கள் செல்லும் பாதையிலிருந்து விலகாதீர்கள். திடமனத்துடன் போராடுங்கள். கடினப்பட்டு தேடும் எதுவும் நிலைத்திருக்கும். எளிமையாகக் கிடைப்பவை வந்த மாயத்தில் சென்று விடும். அது பொருளாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. இதுவே நியதி. நீங்கள் கொண்டிருக்கும் இலக்கால் உங்களுக்கோ உங்களின் சமுதாயத்திற்கோ நன்மை விளைப்பதாக இருக்க வேண்டும். இலக்கை அடைவதில் நீரில் மூழ்கியவன் மூச்சுவிட, வெளியே வருவதற்கு எவ்வளவு வேகமாக செயல்படுகிறானோ அந்த வேகத்துடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

நெருப்பில் இட்ட சொர்ணம் ஜொலிக்கும்

      ஒரு இலக்கை அடைவதற்கு பல வகைகளில் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். சிலரின் பகையைப் பெறவேண்டி வரும். சில உறவுகள் நீங்கி செல்லக்கூடும். பலர் கேளியாகப் பேசக்கூடும். சிலரின் விமர்சனங்கள் உங்களின் மனதிடத்தையே ஆட்டம் காணச்செய்யும். இவையெல்லாம் நடக்கும். ஆனால் உங்களின் இலட்சிய பாதையிலிருந்து மனம், எப்போதும் விலகாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நீங்கள் பயணித்தால் நெருப்பில் இட்ட சொர்ணம் போல நீங்களும் மிளிரலாம். இதில் ஐயமில்லை.

       கிராமப்புறங்களில் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் சமைப்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவார்கள். அடுப்பில் வைக்கப்பட்ட விறகு எரிந்து கரியாக மாறிவிடும். அந்த அடுப்புக்கரியும் உலகில் விலையுயர்ந்த வைரமும் ஒரே இனத்தைச் சார்ந்தவைதான். இரண்டும் கார்பன்தான். ஒருநாள் இந்த இரண்டும் சந்திக்க நேர்ந்தது. கரி வைரத்திடம் கேட்டது! “நாம் இருவரும் ஒரே இனம்தான். ஆனால் நீ மட்டும் எவ்வாறு ஜொலிக்கிறாய்? மனிதர்கள் எல்லோரும் உன்னை அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். உன்னை பெறுவதற்கு நிறைய உழைக்கிறார்கள். ஆனால் என்னுடைய நிலை மிகவும் தாழ்மையாக உள்ளது. என்னை அள்ளி குப்பையில் கொட்டுகிறார்கள் இதற்கு என்ன காரணம்?” வைரம் கூறியது, “நான் இந்த பூமியில் நிலநடுக்கம் போன்றவற்றால் உள்ளே அழுத்தப்பட்டு, பூமியின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு அழுத்தத்தால் நெருக்கப்பட்டு ஒராண்டு, இரண்டாண்டுகளல்ல பலஆயிரம் வருடங்கள் அந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு பொறுமையாக உள்ளேயே இருந்தேன். எனக்கு கொடுக்கபட்ட எல்லாவகையான இடற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு இருந்ததால் என்உடல் இறுகி திடமாக மாறிவிட்டது. மனிதர்களால் தோண்டி எடுக்கப்பட்டுப் பூமியின் மேல் வந்து தீட்டப்பட்டு அழகாக ஜொலித்ததால் அடுப்புக்கரியாக இருந்த நான் வைரம் என்ற பெயரைப் பெற்றேன்” என்று கூறியது. எல்லாவற்றையும் தாங்கும் மனோதிடம், எதிர்கொள்ளும் தின்மை மனதிற்கு வேண்டும். அப்போதுதான் வரலாறு படைக்க இயலும்.

முன்னேற்றம் உங்கள் கையில்

        இலக்கை அடைவதில் மனம் உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்கமும் உங்களின் முன் தெளிவாகத் தெரியும். முன்னேற்றம் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்கள் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிப்பது மேலான பேச்சு ஆகும். பேசுதல் என்பது ஒரு கலை. மற்றவரிடம் தண்மையாகப் பேச வேண்டும். தான்என்ற அகங்காரத்துடனோ வேண்டாத வெறுப்பாகவோ, அதிகாரத்துடனோ, பேசினால் அநதச் செயல் அங்கு நடைபெறாது. தங்களின் முகபாவனை பேச்சு என்பது மற்றவரை கவனிக்க செய்வதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நீங்கள் தொடங்கும் செயல் முடியும். உங்களின் பணிவான பேச்சு எவ்விடம் தேவையோ அவ்விடத்தில் பண்புடனே பேசுங்கள். அதற்கு நன்றாக மனதை பக்குவம் செய்து கொள்ளுங்கள். இதுவே இலக்கை அடைவதற்கான நடைமுறை என்பதில் தெளிவாகுங்கள்.

வாயில் இருக்கிறது வழி

           ஒரு பொன் மொழி உண்டு “நீ எப்போதெல்லாம் உன் வாயை திறக்கிறாயோ அப்போதெல்லாம் உன் மனதை திறக்கிறாய்” என்று கூறுவதுண்டு. பேச்சு என்பது தெளிவாகத் தேவையான சொற்களையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை அன்னைத்தெரசா அவர்கள் தான்நடத்தும் குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டுவதற்காகச் செல்வந்தர் ஒருவரை காணச்சென்றார். அப்போது அந்தச் செல்வந்தர் எவ்வகையான மனநிலையில் இருந்தாரோ! தெரியவில்லை. தெரசா அவர்கள், செல்வந்தரிடம் தமக்கு நிதயுதவி செய்யுமாறு கேட்டார் அப்போது அவர் “ஒன்றுமில்லை போ” என்று கூறினார். ஆனாலும் அன்னை அவர்கள் அந்த இடம்விட்டு நகரவில்லை. செல்வந்தரை காணவந்த சிலரும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். செல்லாமல் நின்று கொண்டிருந்த அன்னை அவர்களைப் பார்த்து “நீ இன்னும் போகவில்லையா”  என்று அதட்டினார்.  “ஏதேனும் உதவி செய்யுங்கள்”என்று அன்னை கேட்டபோது, “இந்தா பெற்றுக்கொள்” என்று அவர் அன்னையின் மீது காரி உமிழ்ந்தார். அதை தன் கைகளில் ஏந்தி கொண்டு “ஐயா இதை நான் பெற்றுக்கொள்கிறேன் பசியுடன் இருக்கும் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்” என்றார். இதைக்கேட்டவுடன் அந்தச் செல்வந்தரின் மனம் மாறியது. அவரே அன்னையைப் பாராட்டி அதிகமான நிதியைக் கொடுத்து உதவினார். இவ்வாறு தான் எடுத்துக்கொண்ட செயலை எவை நேர்ந்தாலும் செவ்வனே செய்து முடிக்கும் மனதிடம் வேண்டும். பேச்சுத் தின்மைவேண்டும். பேசுவதற்கு முன்பாக நன்றாக சிந்தனை செய்து கொள்ள வேண்டும். ஆனாலும் சிந்தித்த எல்லாவற்றையும் பேசி விடக்கூடாது. பேச்சு என்பது ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும்.

       உங்களுடைய மனம் இலக்கை அடைவதில் பிடிவாதமாக இருந்தால் உங்களின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் செயல்பட தொடங்கும். உங்களின் மூளையும் ஒளி பெற்றதைப் போன்று உணரும். இரவில் தூங்கவும் தோன்றாது. மனம் சோம்பலையும் வென்றுவிடும். உடல் பசியையும் பொருட்படுத்தாது. உங்களின் மூளை, மனம், உடல், ஆன்மா என்று எல்லாவற்றிலும் இலக்கை அடையும் வேகம் இரண்டறக் கலந்துவிடும். பின்னர் ஒவ்வொன்றும் ஒன்றை நோக்கியே பயணிக்கும். இந்த நிலையை  அடைந்துவிட்டால் நீங்கள் இலச்சியத்தை அடைவதை உங்களால்கூட தடுக்க இயலாது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணருங்கள்.

     உங்கள் இலக்கில் மனம் வையுங்கள். வரலாறு படைப்பவர்கள் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here