தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

போட்டியில் ஒருவர்க்குக் கிடைப்பது வெற்றி அல்லது தோல்வியே. வெற்றியால் கிடைப்பது மகிழ்ச்சி. தோல்வியால் கிடைப்பது அனுபவம். வெற்றி பெறுவதைவிட தோல்வியடைந்து பாருங்கள், மனதில் நிறைய சிந்தனைகள் உருவாகும். மூளை சுறுசுறுசுறுப்பு அடையும். ஏன் தோல்வி வந்தது என்று வினா எழும். உங்களால் ஏற்பட்டதா? அல்லது மற்றவர்களால் உண்டானதா? என்னசெய்ய மறந்து விட்டீர்கள்? என்ன செய்திருக்க வேண்டும்? அணுகுமுறை என்ன? எந்த மனப்பக்குவம் அடைய வேண்டும். இன்னும் எவ்வகையான மனப்பயிற்சி வேண்டும்? என்ற இத்தனை வினாக்களும் தோன்றும்.

        மனம் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும். வைரஸ் வந்துவிட்டால் கம்ப்யூட்டர் செயலிழந்து நிற்பது போல, உள்ளம் ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கும். அந்த நேரத்தில் ஒன்றும் யோசிக்க தோன்றாது. யோசித்தாலும் சரியான தெளிவு ஏற்படாது. எனவே மனம் தெளிவாக அமைதி அடைந்தபிறகு, தோல்விக்கான காரணம் என்ன? நிதானமாக யோசித்தால் உங்களுக்கு எழுந்த எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும்.

தோல்விக்கு நன்றி சொல்லுங்கள்

        தோல்விகளுக்கு நன்றி சொல்லுங்கள் என்ற இந்த வாக்கியம் எப்போதோ படித்த ஞாபகம். இது எவ்வளவு பெரிய அனுபத்தை உண்டாக்கியிருக்கும் என்பதை உணர முடிகிறது. தோல்விகள் உங்களை மீண்டும் மீண்டும் எழுவதற்கு தூண்டுகிறது. எழச்செய்கிறது. வீழ்ந்தால் எழமுடியும் என்ற நம்பிக்கையை பெறச்செய்கிறது. எனவே ஒருபோதும் தோல்வியை வீழ்ச்சி என்று எண்ணாதீர்கள். அது வீழ்ச்சி அல்ல எழுச்சி ஆகும். நீங்கள் அடையும் உயர்வும் தாழ்வும் உங்களால் ஏற்பட்டவை என்பதை உணருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைத்தால் அது உங்களின் உழைப்பு விடாமுயற்சியால் கிடைக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் சிபாரிசால் கிடைக்கக்கூடாது. அவ்வாறு கிடைத்தால் அது தோல்வியே ஆகும். அந்த மாதிரியான எளிமையாகக் கிடைக்கும் வெற்றிகள் சூரியன் ஒளி பட்டதும் பனி விலகுவது போல அது காணாமல் போய்விடும்.

          நீங்கள் அந்த சவாலை போட்டியை எதிர்கொள்ள அத்தனை முயற்சி செய்தும் தோல்வி கிட்டியது என்றால் அதுவும் நல்ல அனுபவமே. ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவனுக்கு உண்டாகும் பிரச்சனைகளே என்பதை உணருங்கள். எப்போதுமே வெற்றியை நோக்கியே உங்கள் சிந்தனையைச் செலுத்தாமல் தோல்வியால் பல மனிதர்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கப்பெறுங்கள். எப்போதுமே நிழலிலேயே இருந்தால் அதன் குளிர்ச்சி தெரியாது. ஆனால் சிறிது வெய்யிலில் சென்று வாருங்கள் நிழலின் அருமையை அப்போது உணர்வீர்கள்.

விழுந்தாலும் எழுந்திருங்கள்

        ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்குக் கூறினார். “நீங்கள் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களைப் பெற்றாலும் பரவாயில்லை. ஆனால், மற்றவர்களைப் பார்த்து எழுதி பெறும் மதிப்பெண்கள் நூறாக இருந்தாலும் அவை உமக்கு வேண்டாம். ஏனென்றால் உமது உழைப்பால் பெற்ற மதிப்பெண்கள் தன்னம்பிக்கையைத் தரும். மற்றவர்களால் வந்தவை மனத்தாழ்ச்சியையே தரும். பெறுவது வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அவை உங்களால் பெற்றவையாக இருக்க வேண்டும்.”என்று கூறினார்.

எனவே நீங்கள் பெறுவது சிறிதளவே என்றாலும் நன்றானதே. மற்றவர்களால் கிடைக்கப்பெறுவது இந்த உலகளவே ஆனாலும், நாளடைவில் அது மனதளவில் உங்களுக்குள்ள தனித்திறனைக் குறைத்துவிடும்.

        தோல்விகள் எந்தப் பிரச்சினைகளால் ஏற்படுகின்றன? அவற்றை மீண்டும் வராமல் நீக்குவது எவ்வாறு? என்பதை சிந்தனை செய்ய வேண்டும். ஒரு பிரச்சினைக்கு மூன்று வகையில் தீர்வு காணலாம். ஒன்று, அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு மாற்றியமைப்பது. மூன்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. ஒரு பிரச்சனையை மாறாது என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்க இயலாது என்றால் விட்டுவிடுவது நல்லது. வெற்றியை அடைவது எளிதல்ல. ஆனால் அதை தக்கவைத்துக்கொள்வதே சிறந்த வெற்றி.

இடர்பாடுகள் இயல்பானவை

            வெற்றியை உங்கள் வாழ்நாளில் நிலை நாட்ட வேண்டுமென்றால் இன்னல்கள், துன்பங்கள், கவலைகள், இழப்புகள், மனக்காயங்கள் என்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தனை வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்து தெளிந்து அதிலிருந்து இதுதான் நடைமுறை என்று மனதை பண்படுத்திக்கொண்டால் மட்டுமே இந்த வெற்றித் தோல்விகளை ஏற்றுக்கொள்ள இயலும்.

         வெளி நாட்டில் வாழ்ந்த ஒரு இளைஞன் சிறு வயதில் நன்றாகப் படித்தான். நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். சிறந்த கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றான். பெற்றவுடன் வெளிநாட்டு கம்பெனி அவனுடைய அறிவுக்குச் சிறந்த வேலையைக் கொடுத்து அதிக ஊதியத்தையும் கொடுத்தது. எனவே அவனுக்கு சிறு வயதிலிருந்தே எல்லாமே கிடைத்தன. திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் நன்றாக வாழ்ந்தான். ஆண்டுகள் சில கடந்தன. ஒரு நாள் நாளிதழில் வெளிவந்த தகவல், அந்த இளைஞன் தன்மனைவி குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் சுட்டுக்கொண்டான். இங்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்த மாணவனுக்கு எல்லா வயதிலும் குறையே இல்லாமல் அனைத்தும் கிடைத்தன. ஆனால் இவ்வாறு நடந்ததற்கு காரணம் என்ன? உண்மையில் என்ன நேர்ந்தது என்றால், அம்மாணவனின் வாழ்க்கையில் தோல்வியே கண்டதில்லை. இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ காரணத்தால் அவனுடைய வேலை பறிபோனது. அதை சமாளிக்க தன்சொந்த வீடு, காரையும் விற்றான். பின்னர் இவற்றை சீரணித்துக்கொள்ள முடியாமல் இவ்வாறு கொலை செய்து விட்டான் என்ற செய்தி கிடைத்தது. கவனியுங்கள்! அந்த இளைஞனுக்கு அவ்வப்போது தோல்விகள் கிடைத்திருந்தால், பல அனுபவங்களைக் கற்றிருப்பான். வாழ்வில் எந்த நிலையையும் சமாளிக்கும் திறனைப் பெற்றிருப்பான். இறப்பு என்பது நேர்ந்திருக்காது. எனவே மனித வாழ்வில் இடர்பாடுகளும் இயல்பானவை என்பதை உணருங்கள்.

தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !

தடைகளைத் தாண்டுங்கள்

       மனித வாழ்வில் பிரச்சனைகள் என்பவை எல்லா காலக்கட்டங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை சமாளிக்க கற்றுக்கொண்டால் வாழ்க்கை சுகமானதாகவே காணப்படும். ஒருநாள் என்பது இரவும் பகலும் சேர்ந்தது போல, மனித வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் சேர்ந்தது ஆகும்.

         சிலருக்கு எவற்றை பிரச்சினையாக எடுத்து கொள்வது. சாதாரணமானவை எவை என்ற தெளிவுகூட இருக்காது. சிலருக்கு இடற்பாடுகள் தேடி வரும். சிலருக்கு துன்பங்கள் வரத்தேவை இல்லை. அவர்களே சென்று வரவழைத்துக் கொள்வார்கள். ஒருவர் புகைவண்டியில் பயணம் செய்தார். அவர் அருகிலிருந்தவரிடம் கேட்டார். நீங்கள் எங்கு செல்கிறீர்கள். அவர் சென்னையில் தாம்பரம் செல்ல வேண்டும் என்றார். அப்பாடா, இவருக்கு பெருமூச்சு வந்தது. காரணம் இவரும் அந்த இடத்தில்தான் இறங்க வேண்டும். எனவே அவ்விடம் வந்ததும் தனக்கும் கூறுமாறு ஒரு கட்டளையை வைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார். பின்பு அடுத்த ஸ்டேஷனில் டிபன் வாங்க வேண்டும் என்று கவலைப்பட்டார். கிடைக்கவில்லை என்றால் என்று வேதனையடைந்தார். ரயில் நிலையம் சென்றதும் அழைத்துப் போக ஆள் வரவில்லை என்றால்? என்று கவலையுற்றார்

இவ்வாறு சிலர் வேதனைப்படுவதையே பழக்கமாகக் கொண்டிருப்பர். அவையே அவர்களுக்கான பிரச்சினைகள். நீங்கள் மனதில் இவ்வாறுதான் நடக்க வேண்டும். இவை கிடைக்க வேண்டும். மற்றவர் இவற்றை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் போது, எண்ணியபடி அவை நடக்காத பட்சத்தில் பிரச்சனையாகவே தோன்றும். எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்காதபோது உலகில் நடக்கும் எந்தச் செயலும் ஒன்றும் செய்யாது. அது பிரச்சினையாகவும் தோன்றாது. எனவே வெற்றியோ தோல்வியோ எவை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் தெளிந்தால் வாழ்க்கை சுவாரஸ்யமானதே.

இன்னல்கள் தேவைதான்

       சுயநலமாகத் தனது, நான், தான் மட்டும் என்று வாழும் மனித உலகத்தில் இன்னல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. உங்கள் மனதில் எந்தச் செயலையும் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டாம். ஏனென்றால் அவை மாறி நடந்தால் நடத்தப்பட்டால் அது உங்களுக்கு பிரச்சனை ஆகிவிடும். இடர்பாடுகளும் இல்லாத வாழ்க்கை இங்கு எவருக்கும் இல்லை. இது தின்னம் எனும்போது அவற்றை எதிர்கொள்ளும் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே தங்களால் இயலாது என்ற மனநிலையை மாற்றி அவற்றை நிகழ்த்தவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உங்கள் மனம் உணரச்செய்ய வேண்டும். தோல்வியைக் கண்டு துவழாமல் அவற்றை ஏற்றார் போல எவ்வாறு மாற்றி அமைப்பது என்ற சிந்தனை வேண்டும்.

      மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பங்கள், தோல்விகள், இடற்பாடுகளும் இன்னல்களும் இழப்புகளும் நிகழ்ந்தால் மட்டுமே அது முழுமையான வாழ்க்கையாகும். உணவில் அறுசுவை இருந்தால் தான் விருந்து சிறக்கும். அதைப்போல இன்பம் மட்டுமே மனித வாழ்க்கை ஆகாது. அது அரைகுறை வாழ்க்கையே ஆகும். எனவே எல்லாவற்றையும் கடந்து செல்லும் மன திடம் உங்களுடையது என்றால் இச்சமுதாய நாயகன் நீங்கள்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here