Tuesday, July 22, 2025
Home Blog Page 29

உளவியல் முறைத் திறனாய்வு (Psychological Approach)

இனியவை கற்றல்

          உளவியல் முறைத் திறனாய்வானது ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பின் வழி அவனுடைய உள்ளக் கருத்தை ஆராய்வது ஆகும். இதனை “Phychological Approach’ என்று கூறுவர். படைப்பாளியின் மனநிலையை அப்படைப்பில் வரும் பாத்திரங்களின் மனநிலையைக் கொண்டு அறியமுடியும்.

        ‘தாய்’ நாவலில் வரும் ‘பாவெல்’ என்னும் பாத்திரத்தின் மனநிலையும், சிந்தனையும் படைப்பாளரின் மார்க்சிய சிந்தனையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று ஆராய்ந்துள்ள ‘ஃபிராய்டு’ போன்ற உளவியலாளரின் கொள்கை அந்நூலினது சரியானத் தினாய்வு முடிவினைக் காட்டுகிறது.

       உளவியல் அணுகுமுறையில் ஃபிராய்டு அவர்கள் மகள் தந்தையிடமும், மகன் தாயிடமும் நெருங்கி இருப்பது பாலியல் அடிப்படை என்றும், பெற்றோரை விட்டு விலகி இருக்கக் கூடிய பாதுகாப்பற்ற குழந்தைகளைத் ‘தெரிந்த உணர்வு’ என்றும் பகுத்துள்ளார்.

    மேற்கண்ட உளவியல் கொள்கைகளை ஒரு சாரமாகக் கொண்டு அதனை இலக்கியத்தில் உட்புகுத்தி முடிபுகளைக் கூறுவதாக உளவியல் திறனாய்வு முறை அமைந்துள்ளது. மேலும்,

1. குழந்தை உளவியல் (Children’s Psychology)

2. மிகை உளவியல் (Abnormal Psychology)

3. தொழிற்சாலை உளவியல் (Industrial Psychology)

4. மூன்றும் சேர்ந்த மனித உளவியல் (Human Psychology)

         என்பதனுள் அடங்கும். இக்கொள்கைகளைப் (Theories) பயன்படுத்தி (applied) முடிவினைக் கூறுவது சிறந்த உளவியல் முறைத் திறனாய்வுக்குச் சான்றாகும்.

உளவியல் திறனாய்வின் பயன்கள்

1.இலக்கியம் படைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிதல்

2. படைப்பாளியின் உள்ள நிலையை அறிதல்

3. பாத்திரங்களின் தன்மையை அறிதல்

4. கதைமாந்தர்களின் உணர்வினை அறிதல்

5. படைப்புக்கும், வாசகத்திற்கும் உள்ள உணர்வு நிலையை அறிதல்

6.படைப்பாளரின் முழுவரலாற்றை ஆய்தல்

7. கனவு நிலையைக் காண்டல்

8. நிறைவேறாத எண்ணத்தை எடுத்தியம்பல்

9. உண்மைத் தன்மைக் கொண்ட உணர்வினை ஆய்தல்

போன்ற உளவியல் திறனாய்வின் பயன்களாக அமைகின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

iniyavaikatral.in

          முடிபுமுறைத் திறனாய்வினை ஒத்ததாகக் காணப்படுவது விதிமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறை என்பது ஒரு குறிப்பிட்ட சில அளவை முறைகளைக் கொண்டு ஓர் இலக்கியத்திற்கு முடிவினை வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது (Prescriptive Criticism) வரையறை மற்றும் அளவுகோல்களை இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது ஆகும். இத்திறனாய்வின் வழி தீர்வினை அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. சிலவகையான. வரையறைகளைக் கொண்டுள்ள இலக்கியத்தை விளக்குதற்கு விதிமுறைத் திறனாய்வு பயன்படுகிறது.

      ‘நெடுநல்வாடை’ – என்னும் நூல் அகமா, புறமா என்று சர்சைக்குள்ளான காலக்கட்டத்தின் பின்பு பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த நச்சினார்க்கினியர் நெடுநல்வாடை புறத்தைச் சார்ந்த நூல் என்ற முடிவினைத் தந்தார். ‘நெடுநல்வாடை – புறநூல்’ – என்பதை நிருபிக்க அவர் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்.

1. நெடுநல்வாடையில் அதிக அளவில் பேசப்படுகின்ற செய்தியானது புறத்தைப் பற்றியது என்றும்.

 2. இறுதி நிலையில் மட்டும்தான் அகம் பற்றி பேசப்படுகின்றது. அதனால் தொல்காப்பியரின் விதிப்படி இது அகம் ஆகாது என்று வரையறை செய்துள்ளார்.

3. அன்பின் ஐந்திணையில் தலைவனோ, தலைவியோ “சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப்பெறாஅர்” – என்ற தொல்காப்பியரின் கூற்று நெடுநல்வாடையில் இடம்பெறவில்லை. அதனில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ – என பாண்டிய மன்னனின் அடையாள மாலை பற்றிக் கூறப்படுவதால் இது புறமாயிற்று. இதனின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மரபு ரீதியான முறையில் பின்பற்றப்பட்ட செய்திகளை மாற்றி, சில விதிமுறைகள் கொண்டு வலிந்து பொருள் கொள்ளச் செய்வது விதிமுறைத் திறனாய்வு ஆகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) என்றால் என்ன?

iniyavaikatral.in

        விளக்கமுறைத் திறனாய்வானது ‘Descriptive Criticism’ என்று வழங்கப்படுகிறது. ஆய்வு செய்யப்படும் இலக்கியமானது பல்வேறு கூறுகளை உடையதாகவும், தனித்தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ள நிலையில் அவற்றின் ஒட்டுமொத்தக் கூறினையும் ஒரேடியாக விளக்காமல், ஒவ்வொரு பகுதியாக விளக்குவது விளக்கமுறைத் திறனாய்வு ஆகும்.  

             இலக்கியத்தை ஆய்வு செய்யும் திறனாய்வாளர் விளக்கமுறைத் திறனாய்வை பின்பற்றுவோரானால். அவர் அதிக நுகர்வுத் திறனை உடையவராக இருத்தல் வேண்டும். நுகர்வுத் திறனானது இரண்டு நிலைகளில் இடம்பெற்றுள்ளது. திறனாய்வாளர் ஆய்வு செய்த இலக்கியத்தில் நுகர்ந்து உணர்ந்தது என்ற ஒன்றும், வாசகருக்கு உணர்த்துவது என்ற இரண்டாவது நிலையையும் கொண்டதாகும்.

                 விளக்கமுறைத் திறனாய்வின் போது ஆய்வு செய்யப்பட்ட இலக்கியத்திலிருந்து,

1) உவமைகள்

2) அணிகள்

3) உருவக முறைகள்

4) உணர்ச்சிப்பாடு

5) கருத்து வெளியிடப்பட்டுள்ள முறை

6) இலக்கிய நயம்

7) இலக்கிய உத்தி

8) சொல்லாட்சித் திறன்

9) வர்ணனை

10) அதனின் பின்னணி

         என்ற பலவகையான இலக்கியக் கூறுகளும் விளக்கமுறையில் திறனாய்வு செய்யப்பட்டு விளக்கப்படுகின்றன.

             புதிய சூழல் அமைப்பிற்கேற்ப ஒரு இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும்போது பொருளைச் சரியாகப் புரிந்துக் கொள்ள கூடுதலான சொற்கள் தேவைப்படுகிறது. பொருளைப் பிறருக்கு புரிய வைக்கும்போது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட சொற்கள் மீட்சித் தன்மை பெறுகின்றன. அச்சொற்கள் மீளப்பெறும் முறையை Re-phrasing என்கின்றனர். இதுவே விளக்கமுறை (Interpretation) ஆகும். இதனைப் புலப்பாட்டு முறைத் திறனாய்வு (Heurmanatics) என்று கூறுவதுமுண்டு. விளக்கமுறைத் திறனாய்வில் திறனாய்வு செய்பவனுக்கு,

1. மொழிப்புலமை

2. நுணுகிப் பார்த்து ஆராயும் நுண்ணறிவுத் திறன்

3. அறிவாற்றல்

       என்ற மூன்று தன்மையும் பல்கிப் பெருகக் கூடிய நிலையினை அடைவர். இவ்வகையானத் திறனாய்வு தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டிரைடன் (Dryden) விளக்கமுறைத் திறனாய்வின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

விளக்கவியல் என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி அவர்கள் கூறுவதாவது “ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கவியல் எனப்படுகிறது.

“செருக்குஞ்சினமும் சிறுமையு மில்லார்

  பெருக்கம் பெருமித நீர்த்து”

            என்னும் திருக்குறளில் குற்றங்களைத் தவிர்த்தவர்களின் செல்வம் பற்றிய நிலையைப் பேசுகிறது. இக்குறளின் வாசகம் சரியான நிலையில் மக்களைச் சென்று சேரவில்லை எனக்கருதிய பரிமேலழகர் அதற்கு இணையாக வேறொரு பனுவலைத் தனது மொழியமைப்பில் தந்துள்ளார். அதாவது, ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாக அதனைச் சார்ந்த மற்றொரு பனுவல் (Alternative Text) வருவது விளக்கமுறை ஆகும்.

         பொதுவாக விளக்கமுறைத் திறனாய்வானது ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதுசமயம், அவை வளர்நிலைக் கொண்டது என்பதையும் மறந்துவிடுதல் கூடாது.

1. படைப்பின் பண்புகள்

2. விளக்கம் கூற முயல்கின்றவரின் நோக்கம்

3.பயிற்சி

4. அவரின் மொழிவளம்

5. விளக்கம் யாருக்காக எனும் பார்வை

      முதலிய காரணங்களால் திறனாய்வாளருக்குத் திறனாய்வாளர் சற்று பார்வை வேறுபடுமேயொழிய, சொல்லப்படுகின்ற விளக்கம் ஏற்புடையதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய உரைகளானது மேற்கூறியத் தன்மைகளை உடையதாகவே உள்ளன.

           விளக்கமுறைத் திறனாய்வானது உளவியல் பகுப்பாய்வில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதாக சிக்மண்டு ஃபிராய்டு அவர்கள் கூறியுள்ளார். மனதின் ஆழ்நிலையில் உள்ள நிழலாடுகின்ற தோற்றங்களின் உண்மைகளை ஆராய்வதிலும், புதிர், இருட்குகை. என்று வர்ணிக்கப்படுகின்றதைப் பற்றி ஆய்வதிலும் விளக்கமுறை முக்கியமான பங்கு வகிக்கிறது.

         மனதின் படிநிலைகளையும், அதனில் ஏற்படும் எண்ணத்தின் எழுச்சிகளையும், மனித நடத்தைகளையும் உளவியல் ரீதியாக ஆராய்வதற்கு விளக்கமுறை ஃபிராய்டுக்கு அடிப்படையாக இருந்தது. அதனடிப்படையில் மனித உளவியல் பகுப்பாய்வில் அவர் வெற்றியும் கண்டார். அவர் ஆராய்ந்த ‘கனவுகள்’ பற்றிய நிலை நேரடியாக கூறப்படாமல், பல்வேறு வடிவங்களின் படிமங்களாகவும், குறியீடுகளாகவும் வெளிப்பட்டுள்ளன என்றும், மேலும் தனிமனித நடத்தையோடு தொடர்புக் கொண்டிருக்கிற தன்மைகளையும், உண்மைகளையும் தேடுவதற்கு விளக்கவியல் துணை செய்கிறது.

உருவகமும் – விளக்கமுறையும்

      கலைஞன், சுவைஞன் இருவருக்குமிடையில் உள்ள உறவுநிலையை வெளிப்படுத்த காரணமாக அமையும் தகவலியல் தொடர்பாக இலக்கியம் அமைகின்றது. கலைஞன் இலக்கியத்தைக் குறியீடாக, படிமமாக உருவகமாக வெளிப்படுத்தும் நிலையில், அதனைச் சுவைஞன் வாசிப்பு முறையால் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறான். அத்தகைய நிலையில்தான் திறனாய்வாளனுக்கு வேலை அமைகிறது. இலக்கியத்தில்,

1. நேரடித் தெரிநிலைப் பண்பு

2. உருவகம்

3. படிமம்

4. குறியீடு

5. குறியீடு காட்டும் குறிப்புநிலைப் பண்பு

      இவையெல்லாம் நேரடிக் கூறுகளாக இடம்பெறுகின்றன. ஆனால் திறனாய்வில் தலைகீழ் விகிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. உருவகம் என்பது பொருளைப் பொதிந்து வைத்திருப்பது. விளக்கமுறைத் திறனாய்வு என்பது பொதிந்து கிடப்பதை வெளிப்படுத்துவது ஆகும். (Interpretation is metaphar in the reverse orders) உருவகமும் விளக்கவியலும் ஒரே தகவலியல் முறையின் இருவேறு சொற்கள் என்கிறார் பால் செஷான் (Edward Balcerzan) அவர்கள். விளக்கமுறை, இலக்கியத்தின் பல்வேறுபட்ட பண்புகளை தெளிவுப்படுத்துவதற்கும், புதியவற்றைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்ததாகவும், வார்ப்பு முறையின் தன்மையை சிறப்பிற்குரியதாகும். வெளிக்காட்டுவதாகவும் விளக்கமுறைத் திறனாய்வு அமைந்துள்ளது

இக்கட்டுரை கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை :

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

கோபல்ல கிராம நாவலில் குடும்ப உறவுகள்

இனியவை கற்றல்

            மனித சமுதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாக விளங்குவது குடும்பம் ஆகும். இஃது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் நிலவி வரும் சிறந்த அமைப்பாகும். மனிதன் பல நிறுவனங்களோடு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை  இணைத்துக் கொண்டாலும் குடும்பமே அவனது தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் குடும்பமே சமுதாயம் உருவாக அடிப்படையாக அமைகிறது. மனிதன் குடும்பமாக வாழ்வது நாகரிகத்தின் வெளிப்பாடாகும். மனிதனை விலங்கு நிலையிலிருந்து பிரித்துக் காட்டுவது குடும்பமே ஆகும்.

      “குடும்பமே சமுதாயத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாகயுள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை பாசம் போன்ற உன்னத அபலாசைகளும் தேவைகளும் முழுமையாகத் திருப்தி பெறுகிறது.”5 என்ற கருத்து குடும்பத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

            ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்தின் மூலம் இணைந்து குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். குழந்தைகள் பெறும் போது குடும்பம் என்ற அமைப்பு முழுமை பெறுகிறது. குடும்பம் என்பது தந்தை, தாய், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்டது. அத்தகைய உறவுகளுடைய குடும்பம் தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் என்ற இரு வகைகளில் சமுதாயத்தில் நிலவி வருகின்றது. தனிக்குடும்பம் என்பது சிலரையும் கூட்டுக்குடும்பம் என்பது பல நபர்களையும் கொண்டு விளங்குகின்றது. குடும்பங்களில் சிக்கல் எழுவது இயற்கை. அதனைக் களைத்து வாழ்ந்தால்தான் இன்பமும் அமைதியும் நிலைபெறும். குடும்பத்தின் இத்தகைய தன்மைகளைக் குறித்துக் கோபல்ல கிராமம் நாவல் வெளிப்படுத்தியுள்ள விதத்தை இப்பகுதி ஆராய்கின்றது.

கணவன் – மனைவி உறவு

            திருமணமான பின் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் உறவு முறையே கணவன் – மனைவி உறவு ஆகும். ஒரு குடும்பத்திலுள்ள அன்புறவுகளில் கணவன் மனைவி உறவே சிறந்த உறவாகக் கருதப்படுகிறது. குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சமமாகவும் மதிப்புக் கொடுப்பவராகவும் விளங்க வேண்டும். விட்டுக் கொடுத்து அன்புகொண்டு, சந்தேகப்படாமல் இணைந்து வாழும் வாழ்க்கையே வெற்றி பெற்ற கணவன் – மனைவி வாழ்வாக அமையும். தான் என்ற எண்ணம் இன்றி இருவரும் செயல்பட வேண்டும். இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். உணர்வுகளுக்கு ஒருவருக்கொருவர் மதிப்பளித்து வாழ வேண்டும்.

        “குடும்பம் சமூக நிறுவனங்களில் இன்றியமையாதது, முதலில் தோன்றியது எனலாம். இக்குடும்பம் அமைய ஆணி வேராக இருப்பது திருமணம். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாக இல்வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். உலகில் முதன் முதலில் தோன்றிய உறவு கணவன் – மனைவி உறவாகும். குழந்தைப்பேறு கணவன் – மனைவி உறவை அடையாளப்படுத்துகின்றது.”6  என்ற கருத்து கணவன் – மனைவி உறவின் சிறப்பை பதிவு செய்துள்ளது.

            நாவலில் வரும் சொக்கலிங்கம் என்பவர் ஆசாரித் தொழில் செய்பவர். அவரது மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஊடல் காரணமாக, அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு அவர் மனைவி வெளியேறுகிறாள். ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள் நீண்ட நேரம் நடந்த களைப்புத் தீர, நீர் வேட்கைக்காக நீர்நிலையைத் தேடுகிறாள். நீர்நிலையைக் கண்ட அவள் நீரைப் பருகி தாகம் தணிகிறாள். அப்போது அங்கு வந்த கள்வன் ஒருவன், அவள் நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை புரிகிறான். மனைவியைக் காணாது அவளைத் தேடி வந்த ஆசாரி அதே இடத்திற்கு வருகிறார். அங்குத் தன் மனைவி இறந்து கிடப்படதைப் பார்த்து மிகுந்தத் துயர் அடைகிறார். தன் மனைவியின் இறப்பை ஏற்காது கதறும் கணவனின் நிலையை,

             “அட பாதகத்தி உனக்கு இப்படி ஒரு சாவு வரும்ண்னு நாநினைக்கலையே ஆத்தா… ஐயோ ஐயோ… என் உயிரு போகமாட்டேங்குதே; என் உயிரு போகமாட்டேங்குதே… அவர் தனது முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு அவள் மீது விழுந்து புழுவாய்த் துடித்தார்.”7 என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி, மனைவி இறப்பு எண்ணி தனக்கு இறப்பு வேண்டும் என்று எண்ணும் கணவனின் அன்பை அறிய முடிகிறது.

            கணவன் – மனைவி உறவுக்குள் விரிசல் ஏற்படக் காரணமாக இருப்பதில் சந்தேக உணவர்வும் ஒன்று. மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவனோ, கணவனின் ஒழுக்கத்தின் மீது மனைவியோ சந்தேகம் கொள்ளும் போது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. ஆசாரி மீது அவர் மனைவி கொண்ட சந்தேகமே பிரிவுக்கும் இறப்புக்கும் காரணமாயிற்று எனலாம். ஆசாரி தன் அத்தை வீட்டுப்பெண் பூப்புக்கு நகை செய்து எடுத்துச் செல்வதை அவர் மனைவி விரும்பவில்லை. மீறி கணவன் (ஆசாரி) சென்றதையும் அதனால் அவருக்கும் அப்பெண்ணுக்கும் தவறான உறவு என்று எண்ணியும் ஆசாரியின் மனைவி ஊடல் கொண்டு பிரிகிறாள். இதனை,

             “என் அப்பா கூடப்பிறந்த அத்தவீடு மஞ்சனங்கிணறுதல இருக்கு. எனக்கு அங்கனே ஒரு முறைப் பொண்ணு உண்டும். அது பூத்து மூணுமாசமாச்சி. அது ஒரு நகை, செஞ்சி கொண்டு போனேன். இவளுக்கு அது பிடிக்கலை. பிடிக்கலைண்ணு வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தாக் கூட நா செஞ்சிருக்கமாட்டேன். நா ஒண்ணும் ஊராருக்குச் செய்யலையே; செய்ய வேண்டியவுகளுக்குச் செய்யணுமில்லயா? நாளைப் பின்னே அவுகளும் வேண்டாமா? ஆனால், இவ என்னை அப்படி நினைக்கல, ஒருமாதிரி நினைச்சிட்டா வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரே மோடி.”8  என்ற கருத்தானது வெளிப்படுத்தியுள்ளது. இதன்வழி சந்தேகம் கணவன் – மனைவியிடையே பிரிவுக்குக் காரணமாவதை அறிய முடிகிறது.

            இறந்த ஆசாரியின் மனைவியைப் புதைக்கின்றனர். புதைக்கும் போது ஆசாரி மண் தள்ளுகிறார். மண்ணைத்தள்ளிய ஆசாரி, தன் மனைவி அன்பைக் கொடுத்தான், நான் அவளுக்கு மண்ணைத் தள்ளுகிறேனே! என்று வருத்தம் கொள்கிறார். இதனை,

“குழிக்குகுள் சடலத்தை இறக்கினார்கள் மண்ணைத் தள்ளி மூடுவதற்கு முன் ஆசாரியார் இரண்டு கைகளாலும் மூன்று தடவை மண் அள்ளிப்போட்டார். தாயீ, உன் கையிலே எனக்கு சோறு போட்டே; நா உனக்கு மண் அள்ளிப் போடுதேன் என்றார்.”9   என்ற கருத்தின் வழி ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பெற்றோர் – பிள்ளைகள் உறவு

            கணவன் – மனைவி உறவு மூலம் மனைவி குழந்தை பெறும் போது அக்குழந்தை ஆணாக இருப்பின் மகன் என்றும், பெண்ணாக இருப்பின் மகள் என்றும் உறவு நிலைச் சுட்டப்படுகிறது. ஒரு சிறந்த சமுதாயத்தையும் எதிர் காலத்தையும் உருவாக்குவதில் பெற்றோர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெற்றோர் பிள்ளைகள் இடையே இணக்கமான உறவு இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தைப் பெற்றோர்கள் நல்க வேண்டும். அதுபோலக் குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடாமல் காக்க வேண்டும்.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.”10  

என்ற குறளும்,

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்”11

         என்ற குறளும் தந்தை மகனுக்குச் செய்யும் கடமையையும் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையையும் பதிவு செய்துள்ளது.

            ஆந்திர தேசத்திலிருந்து குடிபெயர்ந்து கம்மவர்கள் தமிழ்நாட்டிற்கு வரக் காரணம் முஸ்லீம்களின் கொடுமையே ஆகும். அத்தலைமுறையில் அவ்வினக்குழுவின் தலைமை வீட்டில் இருந்த சென்னா என்ற பெண்ணின் அழகில் மயங்கிய முஸ்லீம் ராஜா அவளைத் திருமணம் செய்து கொள்ள எண்ணியதே இடப்பெயர்வுக்குக் காரணம் ஆயிற்று. முஸ்லீம் ராஜா பெண் கேட்க வேறு வழியின்றி அவர்கள் சம்மதிக்கின்றனர். அப்போது சென்னாவின் தாய் மகளின் வாழ்வை எண்ணி வருந்தும் அன்பை,

        “தனது மகள் இவ்வளவு அழகாய் இருக்காளே என்று பெருமைப் பட்ட சென்னாவின் தாய், ஐயோ இவள் ஏன் இவ்வளவு அழகோடு பிறந்தாள் என்று கண்ணீர் விட்டாள்.”12 என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, மகளின் அழகு அவளுக்கு ஆபத்தாய் முடிந்ததை எண்ணியும், அவளின் வாழ்க்கைத் துன்பத்தில் சிக்குவதை எண்ணியும் வருத்தம் கொள்ளும் தாயின் சிறப்பை அறிய முடிகிறது.

            கோபல்ல கிராமத்திற்குப் பக்கத்து கிராமத்து இளைஞன் ஒருவன் சிறு வயது முதலே தீய வழியில் சென்றான். மேலே குறிப்பிட்ட ஆசாரியின் மனைவியை நகைக்கு ஆசைப்பட்டுக் கொன்றவன் இவனே. அவனின் தாய், இவன் தீய வழியில் செல்வதை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டாள். வீட்டில் அவன் தாய் உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைத் திருடிச் செல்வான். தடுக்கும் தாயை அடிப்பான். மகனின் இத்தகைய அவலப் போக்கை எண்ணி வருந்தும் தாயின் நிலையை,

“பாவீ, உனக்கு இரக்கம் இல்லையாடா?

என் எலும்பை சந்தனமாய் அறைச்சி அரும்பாடு பட்டு

உன்னை வளர்த்தனேடா; பெத்த தாயைக் கை நீட்டி

அடிக்கெயடா பாவி என்று கதறுவாள்.”13

என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது. இதன் வழி, தீய வழிக்குச் செல்லும் மகனைத் தடுக்கும் தாயை மகன் அடித்துத் துன்புறுத்தும் அவலத்தை அறிய முடிகிறது.

பாட்டி – பேத்தி உறவு

            திருமணத்தின் மூலம் கணவன் – மனைவி உறவு பெறும் இருவர்களுக்குப் பிறக்கும் மகன், மகள் வளர்ந்து திருமணம் செய்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு தான் தாத்தா – பாட்டி, பேரன் – பேத்தி உறவு முறையாகும். அதாவது, ஒரு தலைமுறை இடைவெளி விட்ட நபர்களுக்குள் ஏற்படும் உறவு ஆகும். தந்தை – தாய்க்கும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு முறைதான் பேரன் – பேத்தி உறவு முறையாகும். திருமணமானப் பெண்ணின் தாய் தந்தைக்கும் இஃது பொருந்தும்.

            ஆந்திர தேசத்திலிருது முஸ்லீம்களின் கொடுமையால் இடம் பெயர்ந்த கம்மாளர்கள் தமிழ்நாட்டில் கோபல்ல கிராமத்தை உருவாக்கினர். அவர்கள் குடிபெயரக் காரணம் அவர்களின் இனக்குழுத் தலைமைக் குடும்பத்தில் இருந்த சென்னா என்ற அழகுப் பெண்மணிதான். வியாபாரிகளைப் போல வந்த முஸ்லீம்கள் அவள் அழகை வியந்து ராஜாவிடம் கூற, படையுடன் வந்து அவளைக் கட்டாயத் திருமணம் செய்ய முயல்கிறான். அம்மக்களும் சம்மதம் தெரிவிப்பது போல் தெரிவித்து இரவில் ஒவ்வொருவராகத் தப்பித்து ஊரை விட்டு வெளியேறுகின்றனர். ராஜாவின் படைகள் அவர்களைப் பின் தொடர அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகின்றனர். நீண்ட தூரம் நடந்த களைப்பால் சென்னாவின் பாட்டியால் நடக்க முடியவில்லை. சென்னாவின் தந்தை பக்கத்தில் ஊர் இருந்தால் பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம் என்று கூற, சென்னாவோ பாட்டியைப் பிரிய விரும்பாது யாரும் பிரியக்கூடாது. பாட்டியை விட்டுப் போகலாகாது என்று கூறும் பாசத்தை, “அப்பா, இந்தக் கணத்தில் நாம் பிரியவே கூடாது; நமக்கு சாவு வந்தாலும் சரி, வாழ்வு வந்தாலும் சரி; நமக்கு எல்லாம் அவனே துணை.”14  என்ற கருத்தானது பதிவு செய்துள்ளது.

கூட்டுக்குடும்ப அழிவு

            ஒரு குடும்பத்தில் உறவுடைய நபர் பலர் சேர்ந்து வாழ்வது கூட்டுக்குடும்பம் ஆகும். ஆலமரம் போன்றது கூட்டுக் குடும்பம் ஆகும். ஒரே இரத்தப் பந்தம் உடையவர்கள் ஒன்றாக வாழ்வது இவ்வமைப்பு முறையாகும். இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணத் தம்பதியர்கள் வாழ்வர். இதுவே காலத்தால் முற்பட்ட குடும்ப அமைப்பு முறையாகும். அதாவது, பெற்றோர்கள் அவர்களது மகன்கள், மகள்கள், மகன்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள் என்று அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கும் அமைப்பு முறையே கூட்டுக்குடும்பம் ஆகும். இங்குதான் மரபும், பண்பாடும் காக்கப்படுகின்றன.

“ஒரே மரபு வழி சார்ந்த இரத்த உறவுடைய இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே வீட்டில் ஒரே தலைமையின் கீழ் தங்களின் மனைவியர்களுடனும் குழந்தைகளுடனும் கூடி வாழ்தலையே கூட்டுக் குடும்பம் என்பர்.”15 என்ற கருத்துக் கூட்டுக் குடும்பத் தன்மையைப் பதிவு செய்துள்ளது.

            தொழில் மயமாதலின் விளைவாலும், தான் தனது என்ற நிலையாலும், ஒருவர் உழைப்பில் பலர் வாழும் நிலையாலும் போன்ற பல காரணங்களினால் கூட்டுக் குடும்பம் சிதைவிற்கு உள்ளாகிறது.

                 “கூட்டுமனித சக்தியின் உழைப்பை நம்பி இருந்த காலத்தில் கூட்டுக் குடும்பமே பிரதானமாக இருந்தது. வரவர கூட்டுக்குடும்பங்கள் உடைந்துபோக ஆரம்பித்தன. தாயாதிகள் பாகப் பிரிவினை செய்து கொள்ள ஆரம்பித்தார்கள்.”16 என்ற கருத்துக் கூட்டுக் குடும்ப அழிவிற்குப் பாகப் பிரிவினையும் ஒரு காரணமாக அமைவதைக் குறிப்பிட்டுள்ளது.

தொகுப்புரை

குடும்பமே சமுதாய அமைப்புகளில் மிகச்சிறந்த பண்பாட்டின் கருவூலமாக விளங்கும் அமைப்பாக உள்ளது.

கணவன் – மனைவி உறவுக்குள் சந்தேகம் தோன்றக் கூடாது. தோன்றினால் இருவரும் பேசி அதனைத் தீர்த்துக் கொள்வதுதான் நலம்.

 தாய்மையே உறவுகளில் தலையாய உறவாகும். தன் பிள்ளைகள் ஒழுக்கம் தவறும் போது, தீயநெறியைச் சேரும் போது, நல்ல வாழ்க்கை அமையாத போதும் வருந்துவதோடு திருத்தவும் முயற்சிக்கும் சிறந்த உறவு.

பாட்டிக்காகத் தன் உயிரையும் துச்சமாக எண்ணும் பேத்தி உறவைப் பற்றியும், சொத்துப் பிரச்சனை கூட்டுக் குடும்ப அழிவிற்கு அடிப்படையாக அமைவதையும் அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கங்கள் அனைத்தும் கோபல்ல கிராமம் புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே ஆகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திரு.பொ.சிவலிங்கம்

ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

iniyavaikatral.in

            நல்ல குறுந்தொகை எனப் போற்றப்பெறும் குறுந்தொகையைப் பலர் பதிப்பித்துள்ளனர். பலர் உரையெழுதி உள்ளனர். குறுந்தொகையின் பதிப்பு வரலாற்றையும் பதிப்பு நுட்பங்களையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

            எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை நீங்கிய ஏழு நூல்களுக்கும் பழைய உரைகள் உண்டு என்றும் அவற்றுள் குறுந்தொகை உரை கிட்டவில்லை என்று முனைவர் அரவிந்தன் கூறுகிறார். (உரையாசிரியர்கள்)

            பேராசிரியர் குறுந்தொகையின் 380 பாடல்களுக்கு உரை வரைந்தார் என்றும் அவர் உரையெழுதாதுவிட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதினார் என்றும் நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புப்பாயிரம் குறிப்பிடுவதாக குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான தி.சௌரிப்பொருமாள் அரங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையினை உ.வே.சா வையாபுரிப்பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார். மு.அருணாசலம், மு.சண்முகம்பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.

குறுந்தொகைப் பதிப்புகளை குறுந்தொகைப் பதிப்பு வரலாறு என்னும் நூல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

            அ. பதிப்புகள்

            ஆ. வெளியீடுகள்

அ. பதிப்புகள்

            1. முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1915                 – தி. சௌரிப்பெருமாளரங்கன்

1930/2002       – கே.இராமரத்நம் ஐயர்

1937                 – உ.வே.சாமிநாதையர்

1985                 – மு.சண்முகம்பிள்ளை

          2. பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

                                    1934                 – இரா.சிவ.சாம்பசிவ சர்மா

 3. முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

                                    1933                 – சோ.அருணாசல தேசிகர்

                                    1957                 – எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

வெளியீடுகள்

1.          முழு அளவில் உரை மட்டுமாக அமைதல்

1941     – சு.அ. இராமசாமி

2.          முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1947, 1993                    – ரா.இராகவையங்கார்

1955                             – பொ.வே.சோமசுந்தரனார்

1958 ஃ 1983                 – சாமி சிதம்பரனார்

1965                             – புலியூர்க் கேசிகன்

1986                             – மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு

1999                             – இரா.பிரேமா

2000                             – மு.கோவிந்தசாமி

2002                             – தமிழண்ணல்

2004                             – வி.நாகராசன்

2005                             – துரை.இராசாராம்

2007                             – சக்தி

2009                             – ச.வே.சுப்பிரமணியன்

3.          பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1956                             – மு.வ

1988                             – ம.ந.இராசமாணிக்கம்

2007                             – தி.குலோத்துங்கன்

4.          முழு அளவில் கவிதை நடையில் அமைதல்

2003                             – எம்.கு.பிரபாகர பாபு

2006                             – சுஜாதா

2006                             – இரா.சரவணமுத்து

5.          பகுதி அளவில் கவிதை நடையில் அமைதல்

1985                             – மு.ரா.பெருமாள் முதலியார்

2003                             – கருமலைத் தமிழாழன்

2009                             – திருவேந்தி

6.          முழு அளவில் மூலமும் உரையும் கட்டுடைத்துக் கோத்த நிலையினது

2007                             – கு.மா.பாலசுப்பிரமணியம்

7.          முழு அளவிலான மொழிபெயர்ப்பு

1997                             – மு.சண்முகம் பிள்ளை ரூ டேவிட் கிலேடன்

8.          திறனாய்வு நூலில் உரை வரைந்து அளித்தல்

2000                             – மனோன்மணி சண்முகதாஸ்

           இவை அனைத்துமே பதிப்பு நூல்கள் என்று பொதுநிலையில் சுட்டப்படுகின்றன. இவற்றுள் ஓலைச்சுவடி, காகிதச்சுவடி அடிப்படையில் மூலபாடக் கவனத்துடன் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் மட்டுமே பதிப்பு நூல்களாக அமைகின்றன. சௌரிப்பெருமாள் அரங்கன் இராமரத்நம் ஐயர், உ.வே.சா மு.சண்முகம்பிள்ளை, இரா.சிவ.சாம்பசிவசர்மா (பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்) சோ.அருணாசல தேசிகர், எஸ்.ராஜம் (முழு அளவில் மூலம் மட்டும்) ஆகிய நூல்களின் பதிப்பு வரலாறு இங்கு உணர்த்தப்படுகிறது.

            1915 இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் “குறுந்தொகை மூலமும் புத்துரையும்” என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும்.

            சௌரிப்பெருமாள் அரங்கன் வேலூர் இந்து தேவஸ்தான உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பொறுப்பேற்றார். பின்னர் வாணியம்பாடி மதரஸே இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். முத்துரத்ன முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி குறுந்தொகையைப் படியெடுக்கச் சென்னை அரசு நூல்நிலையம் சென்றார். அந்நூலகச்சுவடியில் காணப்பெற்ற பிழைகளும் குறுந்.316 ஆம் பாடல் விடுபட்டுப்போயிருந்ததும் அவர் குறுந்தொகைக்கு உரையெழுதக்காரணங்கள் ஆயின. ஓப்பீட்டிற்கு உதவியாக முத்துரத்ன முதலியார் குறுந்தொகையின் மற்றொரு சுவடியை வரவழைத்துக்கொடுத்தார். அவ்விரு சுவடிகளோடு மதுரைத் தமிழ்ச்சங்க சுவடி ஆகிய மூன்றையும் ஒப்புநோக்கிக் குறுந்தொகைக்கு உரையெழுதினார் அரங்கனார்.

இவருடைய குறுந்தொகைப்பதிப்பு

1.          தலைப்புப்பக்கம் முதலாகப் பாடினோர் பெயர் உரையில் அமைந்த முதற்பகுதி

2.          குறுந்தொகை மூலமும் உரையும்

3.          அரும்பத அகராதி முதலாக விளம்பரம்வரை அமைந்த பிற்பகுதி

என 368 பக்கங்களைக் கொண்டது.

1.          முதற்பகுதி

      தலைப்புப்பக்கத்தில் எட்டுத்தொகையில் இடம்பெறும் இரண்டாவது நூல் குறுந்தொகை என்பதும் அதன் புத்துரையை இயற்றியவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன் என்பதும், அந்நூலும் உரையும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புரிமையாக்கப்பட்டன என்பதும் 1 முதல் 228 பக்கங்கள் வேலூர் வித்யரத்னாகர அச்சுக்கூடத்திலும் பதிப்பிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகம்.

            பொருளடக்கம் என்ற பகுதியில் சிறப்புப்பாயிரம் உதவியுரைத்தல், முகவுரை, மூலமும் உரையும், அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி, விளம்பரம் ஆகியவை இடம் பெற்றுள்ள பக்கங்கள் சுட்டப்பட்டுள்ளன. அடுத்துச் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளின் நிழற்படமும் உரையாசிரியர் எழுதிய உரிமையுரையும் இடம் பெற்றுள்ளன. அதனையடுத்து வேலூர்க் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் சீனிவாசாச்சாரியார் இயற்றிய சிறப்புப்பாயிரம் அமைந்துள்ளது. அப்பாயிரம் குறுந்தொகையின் சிறப்பையும் அரங்கனாரின் உரைச்சிறப்பையும் விளக்குகின்றது.

            சிறப்புப் பாயிரத்தைத் தொடர்ந்து மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இருந்த முத்துரத்னமுதலியார் எழுதிய முகவுரை அமைந்துள்ளது.

            முகவுரையைத் தொடர்ந்து உதவியுரைத்தல் என்ற பகுதியல் தம்மை வளர்த்துத் தமிழ்க்கல்வி தந்த பெருமக்களை நினைவு கூர்ந்துள்ளார். குறுந்தொகைச் சுவடி தந்த முத்துரத்ன முதலியாருக்கு நன்றி பாராட்டியுள்ளார். அதனையடுத்து குறுந்தொகையைப் பதிப்பிக்கப் பொருளுதவி செய்தவர்களைப்பற்றியும் கூறியுள்ளார். குறுந்தொகைக் குறுந்துணையாக அருந்தொகையுதவிய பெருந்தகைச்செல்வர்கள் பெயரும் உதவிய தொகையும் என்னும் தலைப்பில் நன்றி பாராட்டியுள்ளார்.

            இதனையடுத்து தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் செய்த உரை, இறையனார் அகப்பொருள் உரை, பரிமேலழகரின் திருக்குறளுரை, புறநானூற்றுப் பழையவுரை ஆகியவற்றுள் குறுந்தொகைப பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள இடங்கள் மேற்கோளாட்சி விளக்கம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன.

            இதனையடுத்து அருங்குறிப்புகளும் பிறவும் என்ற பகுதி அமைந்துள்ளது இது குறுந்தொகைப்பாடல்களின் பிழிவாக அமைந்துள்ளது. பழங்கால மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றை இப்பகுதி கொண்டுள்ளது. இப்பகுதி அகர வரிசையில் பாட்டு எண்களோடு அமைந்துள்ளது.

     எஞ்சியவைகளும் பிறவும் என்ற தலைப்பிலமைந்த பகுதியில் பதிப்பில் தாம் செய்த மாற்றங்களைத் தொகுத்தளித்துள்ளார். அவை விடுபட்டுப்போய்ப் பின்னர்க்கிடைத்த குறுந்தொகை 12ஆம் பாடலின் உரைமேற்கோள்கள், இடக்கர்ச் சொல்லாகிய அல்குல் வந்துள்ள 9 இடங்களில் தாம் கொண்ட புதிய பாடம் ஆகியவையாகும். அவ்வாறு திருத்தப்பெற்ற பாடல் எண்கள் 27, 101, 125, 159, 180, 216, 274, 294, 344.

            பாடல்களைப்பாடிய புலவர் பெயர்களை அகரவரிசையில் அமைத்துப் பாட்டெண்களையும் தந்துள்ளார். புலவர் பெயர் காணப்பெறாதன என்று 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 395 ஆகிய பத்துப் பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் பின் வந்த அனைத்துப் பதிப்புக்களிலும் அப்பாடல்கள் புலவர் பெயரில்லாத பாடல்களாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

2. குறுந்தொகை மூலமும் உரையும்

இவ்விரண்டாம் பகுதி பொழிப்புரையோடு 307 பக்கங்களைக் கொண்டது. முதல் 150 பாடல்களைப் பதிப்பிக்க 18 மாதங்கள் ஆகிவிட்ட படியாலும் விரைந்து நூலை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலும் பிற்பகுதியை சுருக்கமாகப் பதிப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சகத்தாரைக் கண்டாலே தமக்கு அச்சம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.

3. பிற்பகுதி

         பதிப்பின் பிற்பகுதி அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பகராதி, பிழைதிருத்தம், விளம்பரம் ஆகியவற்றைக் கொண்டது.

       அரும்பத அகராதியில் அருஞ்சொற்களுக்கு 2 பக்க அளவில் பொருள் தந்துள்ளார் செய்யுள் முதற்குறிப்பகராதியில் குறுந்தொகைப்பாடல்களை அகரவரிசையில் பாட்டு எண்களோடு தந்துள்ளார். பிழைதிருத்தம் பகுதியில் தாம் கண்ட பிழைகளை அட்டவணைப்படுத்திப் படிப்பதற்கு முன்னரே பிழைகளைத் திருத்திக்கொள்க எனக்குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தில் குறுந்தொகைப் பதிப்பின் விற்பனையாளர்கள், நூலின் விலை, நாலடி நானூறு மூலமும் அரும்பத உரைக்குறிப்பும் என்ற நூலின் விளம்பரம் முதலியன இடம்பெற்றுள்ளன.

அரங்கனாரின் குறுந்தொகையுரை பின்வரும் உரைக்கூறுகளைக் கொண்டுள்ளது.

1.          திணை வகுத்துக் கூறுதல்

2.          துறை

3.          துறைவிளக்கம்

4.          புலவர்பெயர்

5.          குறுந்தொகை மூலம்

6.          பொழிப்புரை

7.          விளக்கவுரை

எ    ட்டுத்தொகை நூல்களுள் பழக்காலத்திலேயே திணை வகுக்கப்பெற்ற நூல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை ஆகும். திணை வகுக்கப்பெறாதிருந்த குறுந்தொகைக்கு முதன்முதலாகத் திணை வகுத்த பெருமைக்குரியவர் அரங்கனார். இவர் பாடலின் திணையைப் பாடலின் தலைப்பாகத் தந்துள்ளார்.

  பாடல்களின் கீழ் இன்னார் கூற்று, இன்ன சூழலில் சொல்லப்படுகிறது என்ற விளக்கக்குறிப்புகள் காணப்படுகின்றன. இது பாடலாசிரியரால் எழுதப்பெற்றது அல்ல.

  பாடல்துறைகளையும் பாடற்பொருளையம் இணைத்துச் சுருக்கமாகத் துறைவிளக்கம் தந்துள்ளார். பாடலைப்பாடிய புலவர் பெயரை இன்னார் பாடியது எனத் தடித்த எழுத்துக்களில் தந்துள்ளார். குறுந்தொகை மூலத்தை தான் பொருத்தமானது எனக்கொண்ட பாடல்களைப் புணர்ச்சி நிலையிலேயே சீர் பிரிக்காது தந்துள்ளார். இதனையடுத்து பொழிப்புரை அமைந்துள்ளது. பொழிப்புரையை அடுத்துள்ள பகுதியில் இலக்கணச்செய்திகள், இலக்கியச்செய்திகள், வரலாற்றுச்செய்திகள், மரபுகள், பாடவேறுபாடு சுட்டுதல் போன்ற பலவும் விளக்கப்பட்டுள்ளது. உள்ளுறை, இறைச்சி ஆகிய இரண்டையும் தனித் தலைப்பிட்டு விளக்கியுள்ளார் இது குறிக்கத்தந்த ஒன்றாகும்.

தி.சௌ.அரங்கனார் நுட்பங்கள்

            அரங்கனாரின் உரை நுட்பங்கள் சில இங்கு உணர்த்தப்படுகிறது. குறுந்தொகைக்கு முதன்முதலில் திணை வகுத்தவர் இவரே பாடலின் துறையைக் கருத்துரை என்கிறார். திணைத்தலைப்பை அடுத்து துறையை அமைத்துள்ளார். கடவுள் வாழ்த்திலிருந்து முதல் 150 பாடல்களுக்கு துறை விளக்கம் உள்ளது.

            துறை விளக்கத்தினையடுத்து பாடலைப்பாடிய புலவர் பெயரைத் தந்துள்ளார்.

         பாடல்களைச் சீர் பரிக்காமல் தருதல், சிதைந்துள்ளவாறே அடிக்குறிப்பில் தருதல், மிகவும் சிதைந்துள்ளவற்றைத் தாமே ஒருவாறு திருத்தியமைத்தல் ஆகிய நிலைகளில் பதிப்பித்துள்ளார்.

            அல்குல் என்பதனை இடக்கரடக்கல் எனக்குறித்து அச்சொல் நூலுள் ஒன்பது இடங்களில் இடம்பெறுவதாகச் சொல்லி, அதனைத் திருத்தி வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

            தழையணி அல்குல் ………. தழையணி மருங்குல் (125)

தான் அவ்வாறு மாற்றங்கள் செய்ததற்கு சி.வை.தாமோதரன்பிள்ளை பதிப்பித்த கலித்தொகை முன் மாதிரியாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார்.

            பாடற்சொல் கிடந்தவாறே பொழிப்புத்தருதல் இவரது உரைநெறியாகும்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் கூறும் முறை இவரிடம் குறைவாகக் காணப்பட்டாலும் சிலவற்றிற்கு அகராதிப்பொருளைத் தந்துள்ளார்.

            செயலை – அசோகு (218)

            குருகு – நாரை (228)

இலக்கணத்துடன் பொருத்திப்பொருள் கூறுதல்

            கடுவன் – ஆண்குரங்கு – குரங்கினேற்றினைக் கடுவனென்றலும் என விதந்தோதினார் ஆசிரியர் தொல்காப்பியனரும்.

இரு பொருள் தருதல்

            ஒரு சொல்லுக்கு இருபொருள் தரும் நிலையைக் காணமுடிகிறது.

பனிபடுநாள் – பனிமிக்க பருவம்

            பனி நாடொறும் குறைந்து அப்பருவத்தோடு முற்றுமழிதல் கருதிப் பனி அழியும் நாள் எனலுமாம். (104)

பல்துறை அறிவு

            பைங்காய் – இளந்தன்மை மாறிப் பழந்தன்மை பற்றாத கடுங்காய் (196)

இலக்கணக்குறிப்பு

            இலக்கணச்செய்திகள் மிகுந்துள்ளன

            விழவு – ஆகுபெயர் (31)

உள்ளுறை, இறைச்சியைச் சுட்டுதல்

            வரலாற்றுச் செய்திகள் தருதல்

            எவ்வி (19) சுருக்கமானவை.

பழமொழிகளைச் சுட்டுதல்

            முடவன் கொம்புத்தேனை அவாவினாற் போல (60) என்னும் பழமொழியைப் புலப்படுத்தல் உணர்க.

பாட்டு வரலாறு கூறுதல்

            இப்பாட்டு இறையனார் தருமிக்கு இயற்றித்தந்தது. இறையனார் ஆலவாயடிகள் என்று கூறி அடிக்குறிப்பில் திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம் ஆகியவற்றில் கண்ட செய்திகளையும் தொகுத்துரைத்துள்ளார்.

சுவடி நிலை உரைத்தல்

            பொருள் விளங்காமையை எடுத்துரைத்தல் (330)

துறை மாறுபாடு சுட்டல்

            சுவடிகளில் துறை மாறியிருத்தலைச் சுட்டல்.

1930 இராமரத்நம் ஐயர்.கே

        சென்னையில் இருந்து கலாநிலயம் என்னும் வாரஇதழ் வியாழன் தோறும் வெளிவந்துள்ளது. உள்நாடு ரூ.7, புறநாடு ரூ.9 என இவ்விதழின் சந்தாத்தொகை வரையறுக்கப்பெற்றுள்ளது. 1930 ஏப்ரல் 3 அன்று இவ்விதழில் குறுந்தொகை உரை வெளிவரத் தொடங்கியது. இதில் குறுந்தொகை (பாட்டு – 1-11) மு.இராமரத்நம் ஐயர் டீ.யு என்று அமைந்துள்ளது குறுந்தொகைக்கு உரைவிளக்கம் அளித்த கே.இராமரத்ரம் ஐயர் தொடர்பான வாழ்வியலை அறியும் வகையில் எவ்வகைப்பதிவுகளும் இடம்பெறவில்லை.

      இவ்வாறு வெளியான இவருடைய உரை குறுந்தொகை மூலமும் உரையும் என்ற பெயரில் 2022 மார்ச்சில் வெளியாகி 475 பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பதிப்பில் உதவி நா.சந்திரசேகர் என்று உள்ளது.

            பாடல்களுக்கு வரிசை எண் இட்டு அந்த எண்ணிக்கையின் வலப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலுக்குரிய திணையும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலாசிரியர் பெயரும் குறிக்கப்பெற்றுத் தொடர்ந்து கூற்று அளிக்கப்பெற்றுள்ளது. பின்னர் பாடலும் தொடர்ந்து உரை என்னும் குறிப்புடன் பாடலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளன. இந்தப்பொது இயல்புக்கு அப்பால் அருஞ்சொல் பொருள் அளித்தல், இலக்கணக்குறிப்பு அளித்தல், சிறுவிளக்கம் அளித்தல் என்பன ஒருசில பாடல்களுக்கான உரைப்பகுதியாக உள்ளன.

        குறுந்தொகைப் பாக்கள் சிலவற்றுக்கு இருவகைக் கூற்றுகள் குறிக்கப்பெறுகின்றன ஆனால் இப்பதிப்பில் பாடலுக்கு முன்பு ஒரு கூற்றும் உரைப்பகுதியின் இறுதியில் மற்றொருவகைக் கூற்றும் அளிக்கப்பெற்றுள்ளன.

      உரையாக்கத்தில் பெரும்பாலும் பாடலடிகள் எப்படி அமைந்துள்ளனவோ அது போன்றே அதே வரிசை முறையிலேயே உரை சொல்லும்முறை பின்பற்றப்பெற்றுள்ளது.

        எளிய மொழிநடையில் பாடலுக்குப் பொழிப்புரை தந்துள்ளார். குக்கூ வென்றது கோழி (குறுந்.157) என்ற பாடலடிக்குக் கொக்கரக்கோ என்று சேவற்கோழி கத்தியது என எளிய மொழிநடையில் உரைதந்துள்ளார்.

      பொழிப்புரையைத் தொடர்ந்து சொற்பொருள் விளக்கம் தருதல், இலக்கணக்குறிப்புத்தருதல், இடப்பொருள் கூறல், இலக்கிய இலக்கணச் சான்றுகளை ஆளுதல், உவமைகளை விளக்குதல், பாட வேறுபாடுகள் சுட்டல், பொருத்தமுடைய பாடம், பொருந்தாத பாடங்கள் ஆகியவற்றை விளக்குதல் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.

       சொற்களுக்குப் பொருள் கூறும்போது உரைகாரர்கள் தம் பன்மொழித்திறத்தால் வடமொழிச் சொற்களாலும் பொருள் கூறுவதுண்டு ஆனால் ஆங்கிலச்சொற்களால் பொருள் விளக்கம் தருதலை இவருடைய உரையிலேயே காணமுடிகிறது.

      இறை – வீட்டின் இறப்பு (The caves of house) அரமகளிர் – தெய்வப்பெண்கள் (nlmphs) இவர் 22 பாடல்களில் உள்ளுறையும், 31 பாடல்களில் இறைச்சியும் இடம்பெற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.

      சுவடிகளில் பாடல் அமைந்துள்ள நிலையைச் சுட்டும் வழக்கம் இவரிடம் உள்ளது. பொருள் விளங்காத இடங்களைக் கீழே கண்ட பொருள் அத்துணை திருப்திகரமாக இல்லை என்று குறித்துள்ளதன் மூலம் இவருடைய நேர்மைத்திறத்தையும் பண்பாட்டுள்ளத்தையும் உணரமுடிகின்றது.

1937 – உ.வே.சாமிநாதையர்

            உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனாரான சாமிநாதையர் சீவகசிந்தாமணி பற்றிய பதிப்புப்பணியில் இருந்தபோது குறுந்தொகை பற்றிய தகவல்கள் கிடைத்தன. சில ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் குறுந்தொகையைப் பதிப்பிக்கக்கருதிய நேரத்தில் தி.சௌ.அரங்கனாரின் குறுந்தொகைப்பதிப்பு வெளிவந்தது. தி.சௌ.அரங்கனாரின் பதிப்பு பின்னர்க்கிடைப்பது அரிதாகியதால் உ.வே.சா மீண்டும் குறுந்தொகையை ஆராய்ந்து 1937-இல் வெளியிட்டார்.

            குறுந்தொகையில் உள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர்பெற்ற புலவர்கள் அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவது போல அந்நூல்களில் உள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை. இதனாலும் முதலில் குறுந்தொகை தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும் என்று கூறுகிறார்.

            காக்கைப்பாடினியார் நச்சௌ்ளையார், கயமனார் ஒரேருழவனார் போன்ற பாடலால் பெயர் பெற்ற புலவர்களையம் அவர் குறிப்பிடுகிறார்.

            குறுந்தொகையில் 307, 391 ஆகிய பாடல்கள் ஒன்பதடியை உடையவை. 391 ஆம் செய்யுள் சில ஏடுகளில் எட்டடியை உடையதாக உள்ளது. ஆகவே 307 ஆம் பாடலை விலக்கினால் குறுந்தொகை நானூறு பாடல்களை உடையதாக இருக்கும் என்பது இவருடைய எண்ணம்.

            குறுந்தொகைப்பாடல்களை தம் உரையில் கையாண்ட உரையாசிரியர்களை அகர நிரலில் கொடுக்கும் உ.வே.சா அவர்கள் குறுந்தொகையில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார். பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறுந்தொகைக்கு உரையெழுதிய நிகழ்வையும் இவர் குறிப்பிடுகிறார்.

            இதனையடுத்து இவர் பரிசோதித்த ஒன்பது ஏட்டுச்சுவடிகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. சென்னை ஸர்வகலாகலையார் (சென்னைப் பல்கலைக்கழகம்) ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பொருளதவி செய்ததைப் பேருதவியாகக் குறிப்பிட்டுள்ளார். குறுந்தொகைப் பதிப்பில் மேற்கொண்ட முறைகளைப்பற்றி கீழ்க்கண்டவாறு அவர் குறிக்கிறார்.

1.          கூற்று

ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். தொல்காப்பியத்தில் கூற்று வகையாகச் சூத்திரங்கள் வகுக்கப்பட்டிருத்தலும் இங்ஙனம் அமைக்கும் கருத்தை உண்டாக்கியது.

2.          கூற்று விளக்கம்

இது பழைய கருத்தையும் செய்யுட் பொருளையும் இணைத்துச் சுருக்கமாக வரையப்பட்டது. இரண்டு கருத்துள்ள இடங்களில் முதற்கருத்துக்கே இவ்விளக்கம் எழுதப்பட்டது.

3.          மூலம்

ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பொருட்சிறப்புடைய பாடங்களையே கொடுத்திருக்கிறேன்.

4.          பிரதிபேதம்

ஏட்டுச்சுவடிகளாலும், உரையாசிரியர்கள் உரைகளில் காட்டிய மேற்கோள் பகுதிகளாலும் தெரிந்த பாடல்களுள் முக்கியமானவை அடிக்குறிப்பில் காட்டப்பெற்றன.

5.          பழைய கருத்து

கருத்தில் பொருத்தம் இல்லாத சொற்கள் நகவளைவுக்குள் அமைக்கப்பட்டன.

6.          ஆசிரியர் பெயர்கள்

சுவடிகளில் இருந்தவாறே இப்பெயர்கள் அமைக்கப்பெற்றன.

7.          பதவுரை

பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிவு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை

8.          முடிபு

வினைமுடிபு இத்தலைப்பிற் காட்டப்பட்டது.

9.          கருத்து

செய்யுளின் கருத்துச் சுருக்கமாக எழுதப்பட்டது.

10.        விசேட உரை

  பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும் பொருள் விளக்கங்களும் வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி என்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன.

11.        மேற்கோளாட்சி

       இலக்கண இலக்கியங்களின் உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூற் செய்யுட்களையும் செய்யுட்பகுதிகளையும் காட்டிய இடங்கள் அடிவரிசைப்படி வகுத்துக்காட்டப்பட்டுள்ளன.

12.        ஒப்புமைப்பகுதி

       இந்நூற் செய்யுட்களின் சொற்பொருளோடு ஒப்புமையை உடைய பிறநூற் செய்யுட்களும் செய்யுட்பகுதிகளும் ஒப்புமைப் பகுதியென்னும் தலைப்பில் காட்டப்பட்டன.

      இவ்வொப்புமைப் பகுதி சங்க நூற்பொருள்களை ஆராய்வாருக்குப் பெரிதும் பயன்படும். நூலின் மூலமும் உரையும் அடங்கிய பகுதிகள் மேலே கண்ட முறையில் வகைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டன நூலிற்கு அங்கமாகச் செய்யுள் முதற்குறிப்பகராதியும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் நூலின் பின்னே சேர்க்கப்பட்டன.

   இம்முகவுரையின் பின்னே நூல் ஆராய்ச்சியும், ஆசிரியர் பெயர் அகராதியும், பாட பேதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாராய்ச்சியில் இந்நூலால் அறிந்த பலவகைச் செய்திகளையும் பண்டைக் காலத்துத் தமிழ் மரபுகளையும் வேறு பலவற்றையும் காணலாம்.

    இதனையடுத்து உதவிய அன்பர்கள் என்ற தலைப்பில் இந்நூல் பதிப்பித்தலின்போது உதவியர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளர் (அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கி.வா.ஜகந்நாத ஐயர்)

       தமிழ் அன்னையின் திருவடித்துணைகளில் இப்பதிப்பும் ஒரு மணமற்ற சிறு மலராகவேனும் கிடந்து நிலவும் என்பது எனது கருத்து.

      எனக்குள்ள பல வகையான குறைகளால் இப்பதிப்பில் பல பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றை அன்பர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.

       உ.வே.சா அவர்களின் புலமைத்திறத்தை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது நூலாராய்ச்சி என்னும் அரிய பகுதியாகும். இதில் முதல், கரு, உரிப்பொருள்களைப் பற்றிய அறிமுகம் முதலில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐவகை நிலச்செய்திகள், பொழுதுகள், மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், (தலைவன், தலைவியின்) அன்பு வாழ்க்கை உபகாரிகள், இடங்கள் (மலைகள், ஆறுகள், ஊர்கள்) பண்டைக்காலத்து மக்கள் வாழ்க்கை நிலை (அரசியல்- ஊரமைப்பு – சாதிகள் போன்றன) இலக்கணச் செய்திகள் புலவர்கள் (சிறப்புப்பெயர்கள் – ஊர்கள் – சாதி – தொழில்) போன்றவை அமைந்துள்ளன. குறுந்தொகை நூலின் பிழிவாக இப்பகுதி அமைந்துள்ளது எனலாம்.

       இதனையடுத்து பாடினோர் வரலாறு பகுதியில் புலவர்களுடைய பெயர் அவர்களைப் பற்றிய குறிப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதனைத்தொடர்ந்து குறுந்தொகை மூலமும் உரையும் அமைந்துள்ளது. இதன் பின்னர் செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, இப்பதிப்பில் எடுத்தாண்ட நூல்கள், நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி போன்றவை அமைகின்றன.

            குறுந்தொகைக்குச் செய்யப்பட்ட உரைகளுள் மிக விரிவானது உ.வே.சா வின் உரை ஆகும். அவருடைய தனித்தன்மைக்கும் ஆழ்ந்த புலமைத்திறனையும் நினைவாற்றலையும் அனைவரும் அறியும் வகையில் குறுந்தொகை உரை அமைந்துள்ளது எனலாம்.

            கடவுள் வாழத்து நீங்கலான அனைத்துப் பாடல்களுக்கும் கூற்றினைத் தலைப்பாகத்தந்துள்ளார் உ.வே.சா. திணையைத் தலைப்பாகத் தருவதால் பாடல் மரபினை உணர முடியுமே தவிர கிளவி மாந்தரின் உணர்வை உணர இயலாது என்ற அவருடைய கருத்தினடிப்படையில் கூற்று விளக்கம் இடம்பெற்றுள்ளது.

            குறுந்தொகைப்பாடல்கள் புணர்ச்சியில் மிகும் ஒற்றுக்கள் உடம்படுமெய்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.

உ.வே.சாவின் நுட்பங்கள்

இடம் நோக்கிப் பொருள் தருதல்

            பாடல்துறையில் இடம் பெற்றுள்ள சொல்லுக்குப் பாடல் பொருளோடு பொருத்திப் பொருள் தருவது இவ்வாறு கூறப்படுகிறது. 24-ஆம் பாடலின் பழைய கருத்து (துறை) பருவங்கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது என்பதாகும். இதன் விளக்கம் பருவம் – தலைவன் வருவேனென்று கூறிச்சென்ற காலம். ஈண்டு இளவேனில் என்பதாகும். அது இடம் நோக்கிய பொருளாக அமைகின்றது. வேம்பு இளவேனிற் காலத்தில் மலரும் செய்தியும் இடம் நோக்கி அமைகின்றது.

இலக்கண, இலக்கியச் செய்திகளை இணைத்துத் தருதல்

            தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது என்ற துறைக்கு தலைவன் பிரிவின் கண் கனவிற் தலைவியைக் காண்டல். தொல்.பொருளியல், ஐங்-324 என்று இலக்கண, இலக்கியச் செய்திகளை தொடர்புபடுத்திக் கூறுகிறார்.

பழஞ்சொல் வடிவச்சிந்தனை

            66 ஆம் பாடலின் துறையில் இடம்பெற்றுள்ள வற்புறீஇயது என்ற சொல்லுக்கு வற்புறுத்தியது என இந்நாளைய வடிவத்தைத் தந்து பொருள் விளக்குகின்றார்.

குறிப்புத்தருதல்

            30-ஆம் பாடலைப் பாடியவர் கச்சிப்பேட்டு நன்னாகையார். இப்புலவர் பெயரையடுத்து பிறைக்குறியீட்டினுள் பேட்டு – இது பட்டு என வழங்குகின்றது.

பாட வேறுபாடுகள்

            பாட வேறுபாடுகளைப் பிரதிபேதம் என உ.வே.சா குறித்துள்ளார்.

விசேடவுரை

            தம்முடைய இலக்கியப்புலமையினையும், பல்துறை அறிவினையும் நினைவாற்றலையும் ஒருங்கே காட்டுவது போன்று இவ்விசேடவுரை அமைந்துள்ளது. இதிலுள்ள சில நுட்பங்களை மட்டும் இங்குக்காணலாம்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் தரும் முறையை விசேடவுரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.  தாது – பலவகைப்பொடி             (48)

            புனவன் – புனத்தையுடைய குறவன் (105)

இலக்கணத்துடன் பொருத்திப் பொருள் கூறுதல்

            மாரிப் பீரத்து (98) என்ற அடியில் இடம்பெறும் பீரத்து என்னும் சொல்லுக்கு

பீர் என்னும் சொல் அத்துச்சாரியை பெற்று வந்தது (தொல்.புள்ளிமயங்கு 68)

இரு பொருள் தருதல்

            ஏழில் – ஒருமலை, இது நன்னன் என்பானுக்குரியது. ஏழிலைப் பாலையென்னும் மரமும் ஆம் (138)

மரபுவழிப் பொருள் தருதல்

            கண்களுக்கு உவமையாகத் தாமரை மலரையும் குவளை மலரையும் கூறுதல் சங்க இலக்கிய மரபு.

            பூ ஒத்து அலமரும் தகைய (72) என்ற பாடலில் இடம்பெறும் பூ என்ற சொல்லுக்கு

            பூ – தாமரைப்பூ, குவளையுமாம்.

உரைகள் வழி நின்று பொருளை விலக்குதல்

            பல உரைகளின் வழி நின்று பொருளை விளக்கியுள்ளார். வள்ளை – உரற்பாட்டு (தொல்.புறத்திணை 8,3)  (89)

பல்துறையறிவைப் புலப்படுத்தல்

            நிலந்தொட்டுப்புகுதல் முதலிய மூன்று அற்புதச் சித்திகளும் சித்து வகைகள். இவற்றை இருத்தியென்பர். சைனர்கள் இத்தகைய சித்திகளைப்பெற்ற சாரணரெண்மரென்பர். பௌத்தர்களும் இத்தகைய சித்திகளைப் பற்றிப் பாராட்டுவர் தம் தந்தையாகிய சுத்தோதனுக்கு ஞானம் உண்டாக்குதற் பொருட்டு இத்தகைய அற்புதங்களைப் புத்தர் காட்டினாரரென்று அசுவகோஷ போதிசத்துவரென்பவரால் இயற்றப்பெற்ற புத்த சரிதத்தின் 19 ஆம் வர்க்கம் தெரிவிக்கின்றது. (130)

நுண்ணறிவு தோன்றப் பொருள் தருதல்

            பதனழிந் துருகல் – உள்ளீடு அழுகிவிடுதல்

            ஒன்றும் இல்லையாதல் (261)

புதுமை தோன்றப் பொருள் தருதல்

            திண்டேர் – போர்க்களத்தில் மேடும் பள்ளமுமாய இடங்களில் ஓடினும் சிதைவின்றித் திண்ணியதாகும் தேர். (210)

இலக்கணக் குறிப்புத்தருதல்

            பெருந்தோள் – அன்மொழித்தொகை (210)

பயிரியல் செய்திகள்

            பித்திகம் – பிச்சி. இது மழைக்காலத்து அரும்பி மலரு மென்பது மாரிப்பித்திகத்து நீர்வார் கொழுமுகை (குறுந்-168:1, 222:5) என்பதனால் விளங்கும் (94)

            பாவை – மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின் தாள். இங்ஙனமே அறுகின் தண்டையும் கூறுதல் மரபென்று தெரிகிறது (220).

விலங்கியல் செய்திகள்

            புதுக்கோள் யானை – புதியதாகக் காட்டிலிருந்த பிடிபட்ட யானை (129)

பிறர் கருத்து கூறல்

            சின்மொழி – சிலவாகியமொழி

            மென்மொழி (பழ.226 உரை) என்றும் மெத்தென்ற மொழி (புறநா.166:16) என்றும் கூறுவர் உளர் (14)

பொருள்கோள் நெறி கூறுதல்

            புன்கண் மாலையும் புலம்பும்

            இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே (46)

            என்ற பாடலடிகளை

            மாலையும் இன்று கொல், புலம்பும் இன்று கொல்லெனத் தனித்தனியே கூட்டுக என்று எழுதுகிறாள்.

வரலாறு கூறுதல்

            2, 130 ஆகிய இரு பாடல்களின் உரையில் வரலாறு இடம் பெற்றுள்ளது. 2 – பாட்டு வரலாறு 130 – புலவர் வரலாறு.

பழமொழிகளைக் காட்டுதல்

            ஒரேருழவன் : ஓரேர்க்காரன் உழுது கெட்டான் அஞ்சேர்க்காரன் அமர்த்திக்கெட்டான் (ஒரு பழமொழி) 131

            ஒப்புமையில் பெரும்பாலும் குறுந்தொகைப் பாடல்களை முதலில் காட்டுகின்றார். சங்க நூல்கள் இலக்கண நூல்கள், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாசிரியர்களின் உரைகள், மறைந்து போன தமிழ் நூல்கள் (பரிபாடல் திரட்டு, சிற்றெட்டகம்) போன்ற 95 வகையான நூல்களிலிருந்து ஒப்புமை காட்டிய திறம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

1985 – மு.சண்முகம்பிள்ளை

            மு.சண்முகம்பிள்ளை அவர்கள் பல ஒலைசுசவடிகளைப் பார்த்து குறுந்தொகையை 1985-ல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாகப் பதிப்பித்தார். இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச்சுவடி, ரா.ராகவையங்காரால் பெயர்த்து எழுதப்பெற்ற சுவடி, அடிகளாசிரியர் காகிதச்சுவடி, பூண்டியப்புலவர் ஏடு போன்றவை இதில் குறிக்கத்தக்கன.

            இந்நூலில் முதலில் உ.வே.சா பதிப்பு, வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப்பதிப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிப்பு போன்றவற்றில் உள்ள பாட வேறுபாடுகள் சுட்டப்பெறுகின்றன. பாடலின் தலைப்பில் குறிஞ்சி – தோழி கூற்று, குறிஞ்சி – தலைவன் கூற்று என்று திணை, கூற்று இரண்டும் சுட்டப்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து சீர் பிரிக்கப்பெற்று பாடல் அமைந்துள்ளது. பாடலைத் தொடர்ந்து புலவர் பெயரும் அதனைத் தொடர்ந்து துறைக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன. அடுத்து பாடலின் பொருள் விளக்கம் உள்ளது. அதனைத் தொடந்து பாட வேறுபாடும் அதனைத் தொடர்ந்து உள்ளுறையும் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் தொல்காப்பிய நூற்பா போன்றவை பாடலுக்குப் பொருத்தமான இடங்களில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

            இதனைத் தொடர்ந்து பாட்டு முதற்குறிப்பு அகராதி இடம்பெறுகிறது. அடுத்து பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை இடம் பெறுகிறது. இது வேறு குறுந்தொகைப்பதிப்புகளில் இல்லாதது. தமிழிப்பல்கலைக்கழகம், இலண்டன் ஏடு, இராகவையங்கார் ஏடு, பூண்டியப் புலவர் ஏடு, அடிகளாசிரியர் ஏடு, சௌரிப்பெருமாள் அரங்கன், இராமரத்தன ஐயர், அருணாசலம் உ.வே.சா. சங்க இலக்கியப்பதிப்பு (வையாபுரிப்பிள்ளை) போன்றோரின் குறுந்தொகைப் பாட வேறுபாடுகள் 401 பாடல்களுக்கும் சுட்டப்பெறுகின்றன. இப்பணி மிகவும் போற்றத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாடினோரும் பாடற்குறிப்பும் என்ற பகுதியும், அடுத்து பாடலில் சுட்டப்பெற்ற வள்ளல் போன்றோரும் குறிக்கப்பெறுகின்றனர்.

            இதனையடுத்து திணை அமைப்பு முறையிலும், கூற்று வகையிலும் பாடலின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து தொடரடைவு இடம்பெறுகிறது. குறுந்தொகையின் வேறு எந்த நூலிலும் இல்லாத ஒரு முயற்சி இவ்வாசிரியரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுந்தொகையில் உள்ள சொற்கள், கருத்துக்கள், பாடலடிகள் போன்றவை மீண்டும் மீண்டும் எடுத்தாளப்பெற்றதை இத்தொடரடைவு மூலம் அறியமுடிகிறது. சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்கு இத்தொடரடைவு பெரிதும் பயன்படும்.

            இதனையடுத்து சொல்லடைவு இடம்பெற்றுள்ளது. பாடவேறுபாடுகளுக்கு ஆசிரியர் கூறும் காரணங்கள் குறிக்கத்தக்கன. பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணையும், தொடரடைவு போன்றவை இந்நூலில் மிகவும் போற்றத்தக்கன.

பகுதி அளவில் மூலமும் உரையும்

1934 – இரா.சிவ.சாம்பசிவசர்மா

            இலந்தையடிகள் வித்துவான் இரா.சிவ.சாம்பசிவன் என்ற பெயருடைய அறிஞர் செந்தமிழ்ச்செல்வி இதழில் குறுந்தொகையின் 50 பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார். 1940 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் நிகழ்த்திய குறுந்தொகை மாநாட்டில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிய அறிஞர் ஐவருள் ஒருவராக சர்மாவும் திகழ்கின்றார்.

            உரை கூறுவாரும் உண்டு, வரைவாருமுண்டு என்று குறித்துள்ளதன் மூலம் அவர்காலத்தில் குறுந்தொகை உரை வழக்குப்பெற்று இருந்த நிலையை உணரமுடிகின்றது (குறுந்தொகை பதிப்பு வரலாறு)

முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

1933 – சோ.அருணாசல தேசிகர்

            எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை மூலம் எனும் பெயரில் வித்வான் சோ.அருணாசல தேசிகர் குறுந்தொகைப் பாக்களைப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பில் பாக்கள் பாடல் எண், திணை, பாடல், கூற்று, புலவர்பெயர் எனும் முறையில் அளிக்கப்பெற்றுள்ளன. பாட வேறுபாடுகள் பிரதி பேதம் என்று குறிக்கப்பெற்றுள்ளன. நூல் இறுதியில் பாடினோர் பெயரட்டவனை செய்யுள் முதற்குறிப்பு அகராதி, சொல் அகராதியும் அளிக்கப்பெற்றுள்ளன.

1957 எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

            அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான ஒரு சிலரின் அரிய முயற்சியால் பாட வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு பொருத்தமான பாடல் தெரிவுடன் சங்க இலக்கியப்பாக்கள் உரையின்றி அச்சிடப்பெற்றன. குறுந்தொகை பாடல் எண், திணை, சந்தி பிரிக்கப்பெற்ற பாடல், கூற்று, புலவர் பெயர் முறையில் என்ற வரிசை அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பாடினோரும் பாடல்களும், பாடப்பட்டோர், சிறப்புப்பெயர், பாடல் முதற்குறிப்பு அகராதி ஆகியவை உரிய முறையில் இடம்பெற்றுள்ளன. சொற்பிரிப்பு நெறிமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப் பெற்றன என்று இன்னொரு நூலில் பதிப்பாசிரியர் குழு விளக்கியுள்ளது.

மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் தனித்தன்மைகள் பொதிந்துள்ளன. இருப்பினும் ஆய்விற்கு உதவும் வகையில் உ.வே.சாவின் குறுந்தொகையே முதலில் எண்ணத்தக்கது. அவருடைய நுட்பமான அறித்திறன் ஆய்வாளர்களால் என்றும் போற்றப்பெறுகின்றது.

             துணை நூல்கள்

            குறுந்தொகை                                –           அருணாசல தேசிகர்,

                                                                                 சாமிநாதையர் உ.வே.

                                                                                 இராமரத்னம் ஐயர்.கே

                                                                                 சண்முகம்பிள்ளை மு.

                                                                                 சௌரிப்பெருமாள் ஆரங்கன் தி

                                                                                  ராஜம் எஸ்

            குறுந்தொகை உரைகள்             –           மணி.ஆ

                                                                               தமிழன்னை ஆய்வகம்

                                                                               புதுவை

            குறுந்தொகைப்பதிப்பு வரலாறு         – அறவேந்தன்

                                                                              காவியா பதிப்பகம்

                                                                              சென்னை

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர்,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

காளிப்பட்டி. நாமக்கல் மாவட்டம் – 637501

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

3.தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – சிறுகதை

இனியவை கற்றல்

     கிராமத்துச் சிறுகதைகள்

       அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும்  வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன.

        போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி, டாபர்மேன், ராட்வீலர், லாப்ரடோர் போன்ற நாய்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

       ராஜபாளையம் நாய்தான் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தது.  முக்கியமாக வரவேண்டிய நாய் இனங்கள் அனைத்தும் வந்து விட்டனவா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டு பேச ஆரமித்தது,

”நாம இங்கு எதற்கு கூடி இருக்கின்றோம் தெரியுமா? ”

”தலைவரே, நீங்களே சொல்லி விடுங்கள்” என்றது மலையேறி

       “இந்த உலகத்துல ஆட்டுக்குச் சந்தை இருக்கு. மாட்டுக்குச் சந்தை இருக்கு. அதைபோல நமக்கும் இந்த மக்கள் சந்தைகள் வைக்கனும். அப்பதான் நம்முடைய மதிப்பு இந்த மனுச பயலுக்கெல்லாம் தெரியும்”

       ”நீங்க சொல்றது சரிதான் தலைவரே! ஒரு பயலும் எங்கள மதிக்க மாட்டங்குறான். கேவலமா வேற பாக்குறான். அதனால நமக்கும் சந்தை வச்சி பணத்தால மதிப்பிடறபோதுதான் எங்களுக்கும் கௌரவம் அதிகமாகும் இல்ல” என்றது தெருநாய்களெல்லாம் கூட்டாக..

      இதற்கெல்லாம் என்ன செய்யலாம் என்று நாய்களெல்லாம் யோசனை செய்து கொண்டிருந்தன. இறுதியாக நம்மை படைத்த சிவனிடம் சென்று முறையிடலாம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒரு நல்ல நாளில் கைலாயத்திற்கு நாய்கள் எல்லாம்  சென்றன.

    நாய்கள் எல்லாம் கூட்டாக வந்ததைப் பார்த்தவுடன் கைலாயித்தில் இருக்கும் சிவபெருமான் ஒருநிமிடம் ஆடிப்போய்விட்டார். ஏதோ பிரச்சனையைக் கொண்டு வருகிறார்கள் என்று மட்டும் அவர் மனதில் தோன்றியது.

      “எங்களுக்கென்று சந்தை ஒன்று வேண்டும். நாங்களெல்லாம் கூட்டாக இருக்க வேணடும். எங்களையும் மதித்து பணம் கொடுத்து இந்த மக்கள் வாங்க வேண்டும். இந்த உலகத்தில் எங்களுக்கு மதிப்பும் மரியாதையும்  இருக்க வேண்டும்” என்று சிவபெருமானிடத்தில் நாய்களெல்லாம் கோரிக்கை வைத்தன.

    ”வந்திருந்த நாய்களைப் பார்த்துச் சிவபெருமான் சிரித்தார். அவரவர் நிலைகளுக்கு ஏற்பதான் ஒவ்வொரு உயிரும் படைக்கப்பட்டுள்ளன. அதனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். வீட்டை காவல் காக்கவும் காவல் துறைக்கும்  உங்களுடைய  செயல்பாடுகள் மகிழ்ச்சி தருவனதாகவே இருக்கிறது. மக்கள் அனைவரும் உங்களை நண்பனாகவே பார்க்கிறார்கள். அதனால் போய் வாருங்கள்” என்றார் கடவுள்.

       நாய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் முகத்தைப் பார்த்துக் கொண்டன.  சில மணித்துளிகள் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டன. அவ்விடத்தை விட்டு யாரும் நகரப் போவதாக இல்லை.

”என்னவாயிற்று” என்று சிவபெருமான் கேட்டார்

      ”எங்களுக்கு சந்தை வைக்க அருள் புரிய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் இங்கிருந்து போகமாட்டோம்” என்றன கூட்டாக..

      கடவுள் யோசனை செய்தார். நாய்களை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தார். முதலில் மாட்டுச் சந்தைக்குக் கூட்டிச்சென்றார். சந்தையில் மாடுகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.  வாங்கிய மாடுகளைக் கூட்டாகப் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இரவு முழுவதும் அதுஅது பாட்டுக்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கோலை உண்ணுவதும் அசைப்போடுவதுமாய் இருந்தன.

      அடுத்து ஆட்டுச் சந்தைக்குக் கடவுள் கூட்டி வந்தார். அங்கும் அமைதியாகவே சந்தை நடந்தது. சரியென்று பறவைகளிடத்தில் கூட்டிச்சென்றார்.  மரத்தில்  காக்கை ஒன்று உட்காந்திருந்தது. கடவுள் காக்கைக்கு உணவு இட்டார். காகம் மரத்தை விட்டு பறந்து ஓடியது. காகம் பறந்து ஓடியதைப் பார்த்த நாய்கள் சிரித்தன. கொஞ்ச நேரத்தில் சென்ற காக்கை மீண்டும் தன் கூட்டத்தோடு திரும்பி வந்தன. அனைத்து காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்த அந்த உணவினைச் சாப்பிட்டன.

     அடுத்துக் கறிக்கடைக்காரர் இடத்திற்குக் கடவுள் வந்தார். தேவையில்லாத எலும்பு துண்டுகளைக் கீழே கொட்டினார். கடவுள் கூட வந்திருக்கும் நாய்கள் அனைத்திற்கும் நாவில் எச்சில் ஊறின. அனைத்து நாய்களும் எலும்பு துண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்தன. கடவுள்  நாய்களிடத்தில் திரும்பி ஏதோ சொல்ல வாயெடுத்தார்.  அதற்குள்…

     எலும்பு துண்டுகளைச் சாப்பிட கூட்டாக வந்த நாய்கள் ஒவ்வொன்றும் குலைத்துக்கொண்டன. அடித்துக்கொண்டன. முறைத்துக் கொண்டன. பற்கள் தெரிய கத்திக்கொண்டன. கடவுள் எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி செய்தும் ஒன்றும பலனளிக்கவில்லை.  வந்த வழியே கடவுள் மீண்டும் கயிலாயத்திற்கே சென்றார்.

குறிப்பு : சேலம் மாவட்ட கிராமத்துச் சிறுகதைகள்

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இரட்டைக் காப்பியங்களில் சமூக நிறுவனங்களும் சமூக மதிப்புகளும்

iniyavaikatral.in

குடும்பம்

            தொல்பழஞ் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாக இருந்து பின்னர் தந்தைவழிச் சமுதாயமாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பது சமூகவியலார் கருத்து. சிலப்பதிகாரத்தில் தாய்வழிச் சமூக எச்சங்களைக் காணமுடிகிறது. மங்கல வாழ்த்துப் பாடலில் தலைமைப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இளங்கோவடிகள்.

            “போகநீன் புகழ்மன்னும் புகார் நகரதுதன்னில்

            மாக வாணிகர் வண்கை மாநாய்க்கன் குலக்கொம்பர்             (சிலம்பு.1:22,23)

                என முதலில் கண்ணகியை அறிமுகப்படுத்துகின்றார். இதற்கு உரை கூறும் அடியார்க்கு நல்லார் “சுவர்க்கம் பவணமென்னும் இவற்றிற்குள்ள புகழும் போகமும் நிலை பெற்ற அப்புகார் என்னும் நகரின்கண் மழைப்போல் வழங்கும் கையையுடைய மாநாய்க்கனுடைய குலத்தில் தோன்றிய கொம்பும் கொடியும் போல்வாள்” என்பார். எனவே இவள் கொழு கொம்பில் படர வந்த கொடி அல்லள் கொம்பும் கொடியும் இவளே என்பது இதன் பொருள். கொலைக்களக் காதையில் கோப்பெரும் தேவியைக் குறிப்பிடுமிடத்தும் ‘குலமுதல் தேவி’ என்றே குறிப்பிடுவதும் இங்கு எண்ணத்தக்கது. இருப்பினும் இவை வெறும் எச்சங்களாகவே எஞ்சி நிற்கின்றன.

            சிலம்பு மேகலை ஆகிய இருகாப்பியங்களில் இடம்பெறும் கண்ணகி, ஆதிரை ஆகிய இருவரின் குடும்பங்கள் ஒரே நிலையினவாகக் காட்சி அளிக்கின்றன. திருமணமாகி யாண்டு சிலவே கழிந்த நிலையில் மாதவிபால் சென்ற கோவலனை எண்ணி அவன் வரவுக்குக் காத்திருந்த கண்ணகி நிலையை,

            அஞ்செஞ் சீரடி யணிசிலம் பொழிய

            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

            மங்கல அணியிற் பிரிதணி மகிழாள்

            கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பக்

            பவள வாணுதல் திலகம் இழப்ப

            மையிடுங் கூந்தல் நெய்யணி மறப்பக்

            கையறு நெஞ்சத்துக் கண்ணகியன்றியும் (சிலம்பு 4:47-57) என்று கூறுவார் என்று பாடுகின்றார். மங்கல அணியைத் தவிர பிறவற்றை எல்லாம் கண்ணகி இழப்ப தவள வாள் நகையை மட்டும் கோவலன் இழப்ப ஊதுலை குருகின் உயிர்த்து ஒடுங்கினள் என்கின்றார். சலம்புணர் கொள்கை சலதியோடு ஆடி குலம் தரும் வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தகும் என்று கோவலன் தன் மீதே கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.

            ஆதிரையை

            ‘ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று

            வான்தரு கற்பின் மனையுறை மகளிரின்

            தான் தனி ஓங்கிய தகைமைய ளன்றோ

            ஆதிரை நல்லாள்”                                                                         (மணி. 16:76-79)

என்று அறிமுகப்படுத்துகின்றார். ஆதிரையின் கணவன் சாதுவனை,

            ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

            சாதுவன் என்போன் தகவிலன் ஆகி

            அணியிழை தன்னை அகன்றனன் போகிக்

            கணிகை ஒருத்தி கைதூண் நல்க

            வட்டினும் சூதினும் வரன் பொருள் வழங்கி

என்று குறிப்பிடுகின்றார்.

            தன் செல்வத்தையெல்லாம் மாதவிக்கு ஈந்தவன் கோவலன் பரத்தையர் தொடர்பு மட்டும் அல்லாது வட்டினும் சூதினும் வான்பொருள் இழந்தவன் சாதுவன். இத்தகு கணவன்மாரையும் தெய்வங்களாகக் கருதி வாழும் குடும்ப அமைப்பைத்தான் சிலம்பும் மேகலையும் காட்டுகின்றன.

திருமணம்

            களவும் கற்பும் பழந்தமிழரின் மணமுறைகளாகக் காணப்பட்டன. “கற்பாவது நல்வாழ்வு என்றும் களவாவது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் கொள்க” என்பர். “கற்பெனப்படுவது களவின் வழிந்தே” என்கிறது இறையனார் களவியல் உரை (ஐ.15) எனவே களவும் கற்பும் பழந்தமிழரின் இல்லறாவாழ்வின் இரு முக்கிய கூறுகள் என்பது புலனாகும் இதைதான் தொல்காப்பியம்

            “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

            கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

            கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வது (தொல்.கற்பு.140) என்றும்

            கொடுப்போர் இன்றியும் கரண முண்டே

            புணர்ந்துடன் போகிய காளையான”            (தொல்.பொருள்.கற்பு.141) என்றும் கூறுவர்.

      தலைவன் தலைவியின் களவு கற்பாக மாற இருவழிகள் வழக்கில் இருந்தன. ஒன்று கொடுப்பக் கொள்வது – அதாவது தலைவியின் பெற்றோர் தம் மகளைத் தலைவனுக்குக் கொடுக்கக் கொள்வது. இரண்டாவது கொடுப்போர் இன்றி உடன்போக்கை மேற்கொண்டு கொள்வது.

வ.சுப.மாணிக்கனார், பெற்றோர் கூட்டுவிக்கும் இயல்பு மணம் வழக்கில் இருந்தது எனக் கூறுகின்றார். அதற்குச் சான்றாக.

“கழியக் காதலராயினும் சான்றோர்

பழியொடு வரும் இன்பம் வெஃகார்

வரையின் எவனோ வான்தோய் வெற்ப

கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின்

மணப்பருங் காமம் புணர்ந்தனம யறியார்

தொன்றியல் மரபின் மன்றல் அயர (அகம்.112)

என்னும் பாடலை எடுத்துக்காட்டுகின்றார்.

            ‘தொன்றியல் மரபின் மன்றல்’ என இயல்பு மணத்தைப் பெற்றோர் கூட்டுவிக்கும் மணத்தைத் தோழி சுட்டுதலை நினைக.

            மிளகுக் கொடி படர்ந்த மலைச்சாரலில் நிகழ்த்தியக் காமக் களவினைத் தலைவியின் பெற்றோர் அறியாத நிலையில் வைத்தே மரபு மன்றல் செய்து விடவேண்டும் என்று தோழி ஆசைப்படுகிறாள். காதலனுக்குள் எவ்வளவு அன்பிருந்தாலும் நீடித்தக் களவின்பம் பழிதருவது என்று தலைவனை இடித்துரைக்கிறாள். களவுக்கு அஞ்சுகின்றனர் என்பதுதானே இதன் உட்கிடை. (தமிழ்க்காதல்-ப.110) என்பார்.

            இங்கு நீடித்த களவின்பம் பழி தருவது என்று அவரே குறிப்பிட்டுள்ளமையும் எண்ணத்தக்கது. எனவே அவன் கூறுவதுபோல களவு பழி தருவது அன்று நீடித்த களவே பழிதருவது எனத் தலைவி கூறுவது இங்கு எண்ணத்தக்கது. எனவே இறையனார் களவியல் உரை கூறுவதுபோல் “கற்பெனப்படுவது களவின் வழித்தே” (இறையனார் களவியல். 15) என்பதும் களவொழுக்கமின்றி தனிக் கற்புமுறை முன்பு வழங்கியதில்லை. (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. பு.12) என்னும் கருத்துமே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.

            பழந்தமிழர் மரபு திருவள்ளுவர் தொடங்கி பின்வந்த கம்பர் வரை தொடருகின்றது. சுயம்வரத் திருமணத்தில் அதுவும் போட்டியை மையமாகக் கொண்ட சுயம்வரத்தில் களவுக்கான வாய்ப்பே இல்லை என்றாலும் இப்பழுந்தமிழர் மரபைப் புகுத்தி கம்பர் காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

            ஆனால் பெற்றோர் நிச்சயித்த மணத்தை அதாவது களவற்ற மணத்தை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்துகின்றார்.

            அவரை

            இருபெரு குரவரு மொருபெரு நாளான்

            மணவணி காண மகிழ்ந்தனர் என்றும்                   

(மங்கல வாழ்த்துப் பாடல். 40-43)

            சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

            மாமுது பார்ப்பான் மறைவழி காட்டித்

            தீவலஞ் செய்வது காண்பார் ணோன்பென்னை”

                                                                        (மங்கல வாழ்த்து.51-3) என்று கூறுகின்றார்.

            இதற்கு உ.வே.சா. அவர்கள் “மதியம் சகடணைந்த நாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்குகாட்ட இவன் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவந்திற் செய்த தவம் யாதுகாண் ணெண்பாராயும்.” என்று விளக்கம் தருவார் அடியார்க்கு நல்வார். (ப.41)

            இரண்டுவிதமான மரபு மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன. ஒன்று இங்கு தமிழருக்கு உரியதாக இருந்த பொதுவான மணச் சடங்குகள் சாதிவாரியான சடங்குகளாக மாற்றம் பெற்றமையை அறியமுடிகிறது. கிடைநிலை திணைமுறை வாழ்க்கை செங்குத்து அமைப்பிலான சாதிய அமைப்பு வாழ்க்கை முறையாக மாற்றம் பெற்றதையும் இது காட்டுகிறது.

இனக்குழு / சாதி

            சங்க இலக்கியங்களில் இனக்குழு வாழ்க்கை முறைக்கு மாறான சாதிய அமைப்பு முறை பற்றிய சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டாலும் இனக்குழு வாழ்க்கைமுறையே வழக்கில் இருந்துள்ளது. சங்க காலத்தில் ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள் என்றாலும் அவருடைய பண்பாடு பழக்கவழக்கங்கள் பழந்தமிழருடைய வாழ்க்கை முறையில் எந்த அளவிலும் பாதிக்கவில்லை என்ற சீனிவாச ஐயங்காருடைய கூற்றும் இதனை அரண் செய்யும்.

            சங்கம் மருவிய காலத்திலேதான் ஆரிய பண்பாட்டுக்கூறுகள் குறிப்பாக, சாதிய அமைப்பு முறைகள் கால்கொள்ளத் தொடங்கின. எனவேதான் கிடையின் நிலை சமுதாய அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையும் செங்குத்துநிலை சமுதாய அமைப்பான சாதிய அமைப்புமுறையும் இரட்டைக் காப்பியங்களில் பதிவாகியுள்ளன.

            மரக்குடி தாயத்து வழிவளம் சுரவாது

            அறக்கொடிபோல் அவிந்து அடங்கினர் எயினர்

மரக்குடி மக்கள் தம் கடமையான ஆநிரை கவர்தலை மறந்து அறக்குடி மக்களாக மாறிவிட்டனர்.

            பொற்றொடிமாதர் பிறந்த குடிப்பிறந்த

            விற்றொழில் வேடர்குலனே குலனும்

            பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த

            எய்வில் எயினர் குலனே குலனும்

            ஆய்தொடி நல்வாள் பிறந்த குடிப்பிறந்த

            வெய்வில் எயினர் குலனே குலனும்                           (சிலம்பு 12:5,6,7)

            இந்தப் பாடல் வரிகளைப் பாடும்போது இளங்கோவடிகள் எயினர் குலத்தவராகவே மாறி பெருமிதம் கொள்வதைக் காணமுடிகிறது. ஒரு பார்வையாளனாக இருந்து எழுதாமல் பங்காளனாகவே மாறிவிடுகிறார்.

            ஆய்ச்சியர் பாடுகின்ற ஆய்ச்சியர் குரவையிலும்

            மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடிய

            சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

            திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே           (சிலம்பு 17:35)

என்று பாடுகின்றார்.

            மனம், மெய், மொழி ஆகியவற்றால் வழிபடுவதை முக்கரணவழிபாடு என்பர். இளங்கோவடிகள் மாற்றான முக்கரண வழிபாட்டுமுறையை அறிமுகப்படுத்துகின்றார். இப்பாடல் வரிகள் ஊணோடும் உயிரோடும் கலந்து இளங்கோவடிகளைத் திருமால் பக்தனாகவே காட்டுகின்றன. குன்றக்குரவையிலும் இதே நிலை காணப்படுகிறது.

            சிலப்பதிகாரம் சாதிய அமைப்பு முறையையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது. மங்கல வாழ்த்துப்பாடல் இயற்கை வாழ்த்தாகக் காணப்படினும் உண்மையில் அது அரச வாழ்த்தே எனலாம். சோழனின் அருள்மிகுந்த வெண்கொற்றக்குடை போல் தண்ணொளி பரப்பியதால் திங்களையும் சோழனின் ஆணைச்சக்கரம்போல் மேருவை வலம் வருதலால் ஞாயிற்றையும் அவன் அருள்போல் மேநின்று சொரிதலால் மாமழையையும் போற்றுவோம் என்கிறார். மூவேந்தருடைய தலைநகரங்கள் ஆட்சிக் சிறப்பு போன்றவையும் சிறப்பாகவே பேசப்படுகின்றன.

            அந்தணர் சிறப்பு அவர்களது அறுந்தொழிலாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியவையும் சிறப்பித்தது பேசப்படுகின்றன. சேரனிடம் பரிசு பெற்று வந்த பராசகன் தக்கிணன் என்ற சிறுவன் வேதம் ஓதியதைக் கேட்டு பரிசு பொருள்கள் தந்து அவன் வழிச் சென்றான். காவலர் அப்பொருள் கண்டு படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என சிறைக்கோட்டத்தே இட்டனர். வார்த்திகன் மனைவி விட்ட கண்ணீரைக் கண்டு ஐயைக் கோயில் கதவும் அடைத்தது அறிந்த அரசன் என் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும் கடனென திருத்தங்கால் வயலூரை இறையிலி நிலமாகக் தந்து கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்கு திருமார்பினை அளித்து அவளது தணியா வேட்கையைச் சிறிது தணித்தார் என்பார்.

            ஆக ஒரு காவலன் செய்த குற்றத்திற்கு அரசனை மார்பு நிலத்தில் படும்படி வணங்கவைத்து அரசரும் வணங்கும் உயர்ந்தோர் அந்தணர் என்பதைக் காட்டவே இக்கதையைப் படைத்துள்ளார் எனலாம்.

            நால்வகை வருணத்து நலங்கே மொழியுவும் (சிலம்பு: 182) என்னும் தொடருக்கு உரைகூறும் அடியார்க்கு நல்லார் நால்வகை வருணத்து ஒளியாவன அந்தணன் – வெள்ளை, அரசன் – சிவப்பு, வசியன் – பச்சை, சூத்திரன் அந்தமில் கருமை என்பர். கொலைக்களக் காதையில் உணவு உண்ணும் கோவலனை

            அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்

            உரியவல்லாம் ஒருமுறை கழித்து (சிலம்பு:16:44,45)

என்று பாடுகின்றார். இவற்றை நோக்கும்போது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வரிசை முறை சிலப்பதிகார காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது.

            எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனக்குழு அமைப்பு முறைக்கு மாற்றான சாதி அமைப்பு முறையும் கிடைநிலை அமைப்புக்கு மாறான செங்குத்து அமைப்பு முறையும் உறுதிபட்டுவிட்டதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

கற்பு

            சமூக மதிப்புகளில் கற்புக்குக் குறிப்பிடத்தக்க இடமுண்டு. சமூகத்தின் சீரான இயக்கத்திற்குக் கற்பு அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம். கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தும் தொல்காப்பியர் பெண்ணுக்கு இலக்கணம் கூறுமிடத்து கற்பை முதல் தகுதியாகக் குறிப்பிடுகின்றார். உயிரினும் சிறந்தது நாண். நாணினும் சிறந்தது கற்பு என்று கூறுகின்றார். இந்நூற்பாவுக்கு ‘கற்பித்தபடி ஒழுகுவது’ அதாவது கணவன் கற்பித்தபடி ஒழுகுவது என்று உரை வகுக்கின்றனர். வள்ளுவர் உள்ளத் திண்மையைக் கற்பு என்று கூறுகின்றார். திண்மை என்பதற்கு ‘உள்ள உறுதி’ எனப் பொருள் கொண்டால் மன உறுதியே கற்பு எனலாம். பிற்கால ஒளவையார் கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்கிறார். இதற்கு உரை எழுதும் ஈ.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோர் சொன்ன சொல்லில் இருந்து வழுவாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு ஆகும் என்று கூறியுள்ளனர். ஆக கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளப்பட்டமை புலனாகிறது.

            பிற ஆடவர் நெஞ்சில் இடம்பெறாமல் இருப்பது பெண்ணுக்குக் கற்பு என்பது சாத்தனார் தரும் விளக்கம்.

            மண்டிணி ஞாலத்து மழைவளம் தரூஉம்

            பெண்டீராயிற் பிறர் நெஞ்சு புகாஅர்                                                (மணிமேகலை 22:45, 46)

ஒரு பெண்ணை பார்க்கும் ஆண் அவளைத் தன் உள்ளத்தில் இருத்திவிட்டால் அந்தப் பெண்ணின் கற்புக்கு பங்கம் நேர்ந்து விட்டதாகவே கொள்வர்.

            ககந்தன் என்னும் மன்னனுடைய மகன் காவிரியாடி விட்டு வந்த மாருதி என்ற பெண்ணைப் பார்த்து ‘நீ வா’ என்று அழைத்து விட்டான். எனவே முத்தீப் பேணும் முறையை யான் இழந்தேன் என்று சதுக்க பூதத்திடம் முறையிட்டனள்.

மேலும்,

            “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

            பெய்யென பெய்யும் பெருமழை யென்றவப்

            பொய்யில் புலவன் பொருளுறை கேளாய்                          (மணிமேகலை 22: 59-61)

என்ற வள்ளுவர் வாக்கை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். கொண்டவனையே முதல் தெய்வமாய் வழிபடும் பெண் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றாள் என்ற வள்ளுவரின் கருத்து, சாத்தனாருக்கும் உடன்பாடே எனலாம். எனவேதான் அத்தகு பெண்ணை ‘வான்தரும் கற்பினள்’ என்று கூறுகின்றார்.

            துறவியான கவுந்தியடிகள் கற்பில் சிறந்த கண்ணகியைத் தன் தோழி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளுகின்றார்.

            கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது

            பொற்டிடை தெய்வம் யாம் கண்டிலமால்                           (சிலம்பு.2:143,144)

என்று கூறி மேலும் இத்தகு பெண்டிர் உள்ள நாட்டில் வானம் பொய்யாது, வளம் குன்றாது வேந்தர் கொற்றம் சிதையாது என்று கூறுகின்றார். ஊரலருரைத்த காதையில் மணிமேகலை இந்திரவிழாவில் ஆடவேண்டும் என்றதற்கு

            கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்

            மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்

            கண்ணீராடிய கதிரிள வனமுலை

            திண்ணிதிற் திருகித் தீயில் பொத்திக்

            காவலன் பேரூர் களையெரி யூட்டிய

            மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை                              (மணி 2: 50-55)

என்கிறாள்.

            எனவே மணிமேகலையைத் தன்னுடைய மகள் என்பதைக் காட்டிலும் மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றாள்.

அறம்

            அறம் என்ற சொல் நுட்பமான பொருளுடையது. இச்சொல் காலத்துக்கும் இடத்திற்கும் ஏற்பப் பல்வேறு பொருள்களைத் தந்து செறிவுடையச் சொல்லாகச் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது. அறம் இறைவனின் ஆணை என்றும் அறத்திற்கு மாறான, செயல்களைச் செய்தல் இறைவனையே மீறுதல் என்றும் சைவ சித்தாந்த நூல்கள் கூறுகின்றன. ‘தக்கன சொல்லி நிற்றல்’ அறம் என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் என்று வள்ளுவர் கூறுகின்றார். ஆக மனத்தையும் வாக்கையும் செயலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதே அறம் எனலாம்.

            அறத்துக்கு, சாத்தனார் புது விளக்கத்தைத் தருகின்றார். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி’

            பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும்

            சிறந்த தம் கல்வியும் மாயும்                                                                (நாலடி.285)

என்கிறது நாலடியார். இப்பசிப்பிணியால் ஏற்படும் இழிவை சாத்தனார்

            குடிப்பிறப்பு அழிக்கம் விழுப்பம் கொல்லும்

            பிடித்த கல்வி பெரும்புணை விடூஉம்

            நாண் அணி களையும் மாண் எழில் நீக்கும்

            பூண்மூலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

            பசிப்பிணி என்னும் பாவி                                                                       (மணி.11:76-80)

உயர்குடி பிற்பை அழக்கும், கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும். நாணமாகிய ஆபரணத்தை நீக்கும். மனை மக்களோடு புறங்கடை நிறுத்தும். எனவே உலகில் பல துன்பங்களுக்கு நிலைகளனாயுள்ள இப்பசிப்பிணியைப் போக்குதலே தலையாய அறம் என்று கூறுகின்றார் சாத்தனார்.

            யாருக்கு அறம் செய்ய வேண்டும் என்பதையும் சாத்தனார் வரையறுக்கின்றார்.

            ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வார்

            ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

            மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

            மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

            உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே                                 (மணி.11:93-96)

        என்கிறார் கைமாறு எதிர்ப்பார்த்துச் செய்யப்படும் அறம் ஒரு வியாபாரம். எனவேதான் அத்தகையோரை அறவிலை வணிகன் என்று கூறுகின்றார்.

            மறுமை கருதிச் செய்யப்படும் அறமும்கூட ஒருவகையில் வாணிகம் தான் இம்மைச் செய்தது மறுகைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் என்று பாடுகின்றார் முடமோசியார். (புறம்.134)

            எனவே எவ்வகையிலும் கைமாறு செய்ய இயலாத நிலையில் உள்ள காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுதல் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக இசைந்து உடன் ஊட்டிட வேண்டும் (மணி 13:111-113) என்கிறார்.

            ஒருவனுடைய மறுமை இம்மை ஆகிய இரண்டையும் கெடுப்பதான இப்பசிப்பிணியைப் போக்குவதுதான் உலகின் மிகச் சிறந்த அறம். இதை அருளறம், அன்புகொள்ளறம், தாங்கா நல்லறம், பெருமைசால் நல்லறம், மலையாவறம், மிக்கவறம் முன்னவன் போதியின் நல்லறம் என்றெல்லாம் வழங்கி அறத்தின் இன்றியமையாமையைக் காட்டுகின்றார்.

            “அறம் எனப்பட்டது யாதென கேட்பின்

            மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

            உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்

            மேன்மக்களுக்குரியதாக இலக்கியம் வலம் வந்த காலத்திலேயே சாமான்ய மக்களைப் பற்றி சிந்தித்த முதல் சமுதாயச் சிந்தனையாளர் சாத்தனார். ஒரு நாட்டின் குடிமகன்கள் அனைவரும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அரசு வழங்கவேண்டும் என்று கூறுகின்றார். இதை அவர் செயலாக்கம் செய்த விதம் வேண்டுமானால் குறைபாடுடையதாக இருக்கலாம். ஆனால் அவருடைய திட்டம் ஃ சிந்தனை ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தக் கூடியதே. அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு தன்னிறைவு பெற்றுவிடும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

முடிவுரை

            தாய்வழிச் சமூக அமைப்பு சிதைவுற்று, தந்தை வழிச் சமூக அமைப்பு தோற்றம் கொண்டமையையும் தாய்வழிக் குடும்ப அமைப்பு தந்தைவழிக் குடும்ப அமைப்பாக மாற்றம் எய்தியமையையும் சிலம்பும் மேகலையும் தெளிவுபடுத்துகின்றன.

            கணவன் பரத்தையர் ஒழுக்கமுடையவனாக வட்டு, சூது போன்ற தீய பழக்கவழக்கங்களால் வான், பொருள் இழந்தவனாக இருப்பினும் மனைவி மட்டும் ஒழுக்கமுடையவளாகவும் கணவன் நலத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவளாகவும் இருக்க வேண்டும் என்று இரு நூல்களும் வலியுறுத்துகின்றன.

            சமத்துவமாகக் கிடைநிலையில் இருந்த இனக்குழு சமுதாய அமைப்பு சிதைந்து உயர்வு தாழ்வு கொண்ட செங்குத்து அமைப்பான சாதிய சமுதாய அமைப்பு உருப்பெற்றுவிட்டமையை இரட்டைக் காப்பியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்,

தமிழ்த்துறை,

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம்.

குதிரை குட்டியின் வழக்கு – கிராமத்துச் சிறுகதை

iniyavaikatral.in

The case of the pony

ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

வழியிலே ஒரு இட்லிக் கடையைக் கண்டான் அவன். சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது. பிடித்திருந்த குதிரையைப் பக்கத்தில் உள்ள  எண்ணெய் ஆட்டுகின்ற செக்கில் கட்டினான். கையோடு கொண்டு வந்திருந்த கொல்லை கரைத்து குதிரைக்கு வைத்தான்.

சுடச்சுட இட்லியை புட்டு வாயிலே போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கைகழுவினான். செக்கில் வந்து குதிரையைப் பார்த்த போது குதிரை குட்டி போட்டிருந்தது. குதிரையையும் குட்டியையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அப்போது அங்கு வந்த செக்கன்,

“நீ குதிரையை மட்டும்தான் செக்கில் கட்டிவிட்டுச் சென்றாய். குட்டியை நீ கொண்டு வரவே இல்லை. இந்தக் குட்டியை என்னுடைய எண்ணெய் செக்குதான் குட்டியாகப் போட்டது. அதனால் உனக்கு நான் குட்டியைத் தரமாட்டேன்” என்று சொன்னான்.

குதிரைக்காரன் எவ்வளவு பேசியும் குட்டியைச் செக்கனிடமிருந்து வாங்க முடியவில்லை. வழக்கு ஊர் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஊர்க்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் கேட்பதாக தெரிவில்லை. வழக்கும் முடிந்தபாடில்லை.

சரியென்று வழக்கானது ஏழூர்க்காரர்கள் சேர்ந்து செய்யும் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஏழூர் பஞ்சாயத்துக்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் பிடிவாதமாய் குதிரைக்குட்டி எனக்குத்தான் சொந்தம் என்று வாதாடினான்.

இது என்னாடா வம்பா போச்சு! வழக்கு இழுத்துக்கொண்டே போகுதேன்னு ஊர்மக்கள் நினைச்சாங்க. சரின்னு ஏழூர் பஞ்சாயத்துக்காரங்களும் வடக்குல  இருக்குற குள்ள நரிக்கிட்ட இந்த வழக்க கொண்டு போனாங்க.

வழக்குக்குண்டான  செய்தியை குள்ள நரிக்கிட்ட சொன்னாங்க. குள்ளநரியும் கேட்டுச்சு..

“சரி… வர்ற ஞாயிற்றுக்கிழமைதான் அனைவருக்கும் லீவு. அதனால  அன்னிக்கே பஞ்சாயத்த வச்சிப்புடுவோம். ஆறு மணிக்கெல்லாம் ஏழூர் மக்களையும் பஞ்சாயத்து ஆட்களையும் வரச்சொல்லிடுங்க. நானு ஏழு மணிக்காட்டம் வந்திடுறேன்” ன்னு நரி சொல்லிடுச்சி.

அன்னிக்கு ஊர்மக்கள் எல்லோரும் காலையிலேயே ஆறு மணிக்கெல்லாம் பஞ்சாயத்துல கூடிட்டாங்க. நரி வருவதற்கு இந்தா இப்ப வரும். இந்தா அப்ப வருமுன்னு பாத்துப் பாத்துக் கண்ணு பூத்துப் போச்சு.

சாயுங்காலம் ஆறு மணிக்கு வந்துச்சாம் குள்ளநரி.  எல்லோரும் நரிக்கிட்ட போயி,

“என்ன நரியண்ணே… காலையில ஆறு மணிக்குப் பஞ்சாயத்துன்னா… நீங்க சாயுங்காலம் ஆறு மணிக்கு வாரீங்களே… ” அப்படின்னாங்களாம்.

“பஞ்சாயத்துக்கு புறப்பட்டுக்கிட்டு இருந்தேனா…. அந்த நேரம் பார்த்து பிரம்மன்கிட்ட இருந்து ஒரு அழைப்பு… என்னான்னா… தெக்க வங்காளவிரிகுடா கடலு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருந்திச்சி. நெருப்ப அணைக்க வரகு வக்கீல மேல போட்டு மூடி அணைச்சிட்டு வருவதற்று நேரமாயிடுச்சி” அப்படின்னுதாம்.

வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாத செக்கன்,

“அதெப்படி வங்காளவிரிகுடா கடலு பத்திகிட்டு எரியும்” அப்படின்னானாம்.

            குள்ளநரி, செக்கானை பக்கத்தில் கூப்பிட்டதாம், செக்கானின்  கன்னத்தில் ஓங்கி ரெண்டு அறைவிட்டு, “ஏண்டா செக்கு குதிரைக்குட்டிப் போடும்போது – வங்காளவிரிகுடா கடலு நெருப்புல பத்திகாதாடா” என்று கேட்டதாம்.

            செக்கன் தலைதெரிக்க அவ்விடத்தை விட்டு ஓடினானாம். வழிப்போக்கனும் குதிரையையும் குட்டியை அழைத்துக்கொண்டுச் சென்றானாம்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சமூகவியல் நோக்கில் ஆசாரக்கோவை

iniyavaikatral.in

ஆசிரியர் : பெருவாயின் முள்ளியார்

காலம் : கி.பி. 7 –கி.பி. 8

பாடல் :100 (தற்சிறப்புப்பாயிரத்துடன் : 101)

பாவகை: பல்வேறு வெண்பா வகைகள்

      பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வரிசைப்படுத்தும் பழம்பாடல்கள் அடிப்படையில், ‘ஆசாரக்கோவை’ என்பது, பதினெட்டு நூல்களுள் பதினான்காம் நூலாகச் சுட்டப்படுகிறது. ‘ஆசாரக்கோவை’ என்பதற்கு நன்னடத்தைகளின் தொகுப்பு எனப்பொருள் கூறலாம்.

            ‘ஆசாரம்’ என்பது வடசொல். இதற்குத் தமிழில் ஒழுக்கம், நெறி, முறை, வழி எனப் பல சொற்கள் உண்டு. இச்சொற்கள் கூறும் பொருளைத்தான் வடமொழி ‘ஆசாரம்’ என வழங்குகிறது. ‘ஆசாரம்’ என்றால் பின்பற்றக்கூடியவை என்பதும் பொருளாகும்.

            ‘கோவை’ என்பது தமிழ்ச்சொல். ‘கோவை’ என்றால் தொகுப்பு என்பது பொருளாகும். பின்பற்றக்கூடிய ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களைத் தொகுத்தளிப்பது என்பது, ஆசாரக்கோவை என்பதன் பொருளாகும். ஆசாரம், கோவை என்ற இந்த இரண்டு சொற்களும் சேர்ந்து, இது ‘ஆசாரக்கோவை’ என்று ஆயிற்று.

            ஆசாரம் – ஒழுக்கம்; நடத்தை. கோவை – தொகுப்பு. எனவே, பொதுவகையான ஒழுக்கங்களோடு, அன்றாட வாழ்வில் மானுடர் கடைப்பிடிக்க வேண்டியதாகப் பெருவாயின் முள்ளியார் கருதும் ஒழுக்கங்களை அல்லது பின்பற்றுமாறு அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளைக் கோவைப்படுத்திக் கூறுவதால், இப்பாடல் தொகுப்புக்கு ‘ஆசாரக்கோவை’ என்பது பெயராயிற்று. இப்பெயர், ஆசாரங்களின் கோவை, ஆசாரங்களைத் தொகுத்தமைத்த கோவை என்றும் பொருள்படும்.

            கொள்ளத்தக்க ஆசாரங்களையும் – தள்ளத்தக்க ஆசாரங்களையும் தெளிவுபடுத்தி, இவற்றைச் செய் என்றும், இவற்றைச் செய்யாதே என்றும் வரையறுத்துக் கூறும் நூல்கள் வடமொழியில் ‘ஸ்மிருதிகள்’ எனக் கூறப்படுகின்றன. இந்த ஸ்மிருதிகளுடன் ஒப்பவைத்துக் கருதத்தக்கதாக ‘ஆசாரக்கோவை’ திகழ்கிறது. இந்நூலின் ஆசிரியராகக் கூறப்படும் முள்ளியாரின் முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாயின் என்பது இவரது தந்தையின் பெயராகவோ,கயத்தூர் என்ற ஊரின் பகுதியாகவோ இருக்கலாம். இவர் புதுக் கோட்டைநாட்டுக் குளத்தூர் வட்டத்திலுள்ள பெருவாயில் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் முடிவுரைத்துள்ளார். எனவே இவர், கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என வழங்கப்படுகிறார்.

              இவர் தமிழுடன் வடமொழியிலும் புலமையுள்ளவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. எனினும், இவர் இயற்றிய ‘ஆசாரக்கோவை’ யிலுள்ள பாடல்களில் மிகுதியான வடமொழிச் சொற்கலப்பைக் காண முடியவில்லை. இரண்டடி முதல் ஐந்தடி வரையிலான பலவகையான வெண்பாக்கள் இந்நூலில் காணப்படுகின்றன.

           குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா முதலிய பலவகையான வெண்பாக்களும் இந்நூலினுள் இடம்பெற்றுள்ளன. பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் போன்ற நூல்களின் உரைகளில் இந்நூற் செய்யுள்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்றுள்ளது.

     ஆசாரக்கோவையில் இடம்பெற்றுள்ள செய்யுள்களில், ‘வைதீக’ சமயத்தின் பிரித்தாளும் கருத்துகள் உட்கலந்துள்ளதாகத் திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். மேல்கீழ் பேதங்களை இந்நூல் கண்டிக்கவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். “எனினும், இந்த ஆசாரக்கோவையிலே சாதிக்கொரு நீதியென்று பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு. சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை…. (பதினென் கீழ்க்கணக்கும் பழந்தமிழர் வாழ்வும், பக். 115 – 116) எனவே, ஆசாரக்கோவையை ஒரு ‘பொதுச்சுகாதார நூல்’ என்றே சொல்லிவிடலாம்” என்பார் சாமி. சிதம்பரனார்.

            புறத்தூய்மையுடன் அகத்தூய்மையையும் பேசுவது, இந்நூலுக்குள்ள தனிப் பெருமையாகும். இந்நூலில் பேசப்படும் பெரும்பான்மையான ஆசாரங்கள், வடமொழியிலுள்ள சுக்ர ஸ்மிருதியிலிந்து தொகுத்தவையாய் இருக்கலாம் எனத் தம் ஆசாரக்கோவைப் பதிப்பின் முன்னுரையில் தி. செல்வக் கேசவராய முதலியார் குறிப்பிட்டுள்ளார். (ஆசாரக்கோவை, மூன்றாம் பதிப்பு . 1916, கலாரத்னாகரம் வெளியீடு, சென்னை, பக்கம். 6) எனினும்  பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளை,

“ஆர்எயில் மூன்றும் அழித்தான் அடிஏத்தி

ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான், ஆசாரம்

யாரும் அறிய, அறனாய மற்றவற்றை

ஆசாரக்கோவை எனத் தொகுத்தான், தீராத்

திருவாயிலாய திறல் வண்கயத்தூர்

பெருவாயின் முள்ளி என்பான்.”

         என்ற தற்சிறப்புப்பாயிரத்தைக் கூர்ந்தாராய்ந்து, ‘ஆரிடத்து’ என ஆசிரியர் பொதுப்படக் கூறுவதாலும், ‘தொகுத்தான்’ என விவரித்தலாலும், ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக்கோவைப் பொருள்கள் தொகுக்கப்பெற்றனவென்று கொள்ளுதலே தக்கது” என விளக்கமளிக்கிறார். மேலும் அவர், சுக்கிர ஸ்மிருதி எனப்படும் உஸனஸ் ஸம்ஹிதை, ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயன தர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், விசிஷ்ட தர்ம  சூத்திரம், மனு தர்ம சாஸ்திரம், ஸங்க ஸ்மிருதி, லகுஹாரித ஸ்மிருதி, லகுசாதாதபம், லகு அத்திரி ஸ்மிருதி  ஆகியவை எல்லாம் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன என்றுமுரைக்கிறார்.

     இவ்வாறு பல்வேறு ஸ்மிருதிகளிலிருந்து கருத்துகளைக் கடன் வாங்கியுள்ள ஆசாரக்கோவை, அந்த ஸ்மிருதிகளின் பொதுவான காலமான கி.பி. 600க்குப் பிற்பட்டவை என்றும், இக்கருத்துகள் தமிழ்நாட்டில் பரவி ஆசாரக்கோவைக்குள் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவில் வந்திருக்கலாம் என்றும் யூகிக்கிறார். (இராதா செல்லப்பன், பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஆராய்ச்சி முன்னுரைகள், கவிதை அமுதம் வெளியீடு, திருச்சி, முதல் பதிப்பு. 2010, ப. 248 – 251)

           இந்நூலின் தற்சிறப்புப்பாயிரத்தில், “ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி”  எனக் கூறப்படுவது கொண்டு, இந்நூலாசிரியரைச் ‘சைவர்’ எனப் பலர் கருதுகின்றனர். மேலும், வேள்வியைப் போற்றிப் பார்ப்பனரை முன்னிறுத்துவதுடன், சமணருக்கு மறுப்பாக நீராடுதலையும் முள்ளியார்  வலியுறுத்துகிறார். நின்று உண்ணும் பழக்கமுடைய சமணருக்கு மாறாகச் சைவரின் நின்று உண்ணக்கூடாது என்ற கருத்தை இவர் முதன்மைப்படுத்துகிறார்.(பா.23) அன்றாட ஒழுகலாறுகள் பற்றிய பல வைதீகக் கருத்துகளும் இந்நூலில் தொகுத்து உரைக்கப்பட்டுள்ளதால், இந்நூலாசிரியரைச் ‘சைவர்’ எனத் திறனாய்வாளர் பலர் அறுதியிடுகின்றனர்.

            தெய்வத்தைத் தாம் அறியும் வழியில் வணங்குக எனக் கூறும் முள்ளியார், மாலைப்பொழுதில் தாம் வணங்கும் தெய்வத்தை நின்று தொழுதல் பழி (பா.9) என்றுமுரைக்கிறார். அதாவது, அமர்ந்திருந்து தெய்வத்தை வணங்க வேண்டும் என்கிறார். இத்தகைய நம்பிக்கைகள், வைதீகச் சைவ வழிப்பட்டவையாகலாம். இந்நூல் கூறும், ஒருவர் செல்லும்போது பின்நின்று கூப்பிடாமையும் – தவறியும் எங்குச் செல்கிறீர் எனக் கேளாமையும் (பா.58), அந்திப்பொழுது கிடவாமையும் (பா.29), வடக்குத்திசையிலும் கோணங்களிலும் தலைவைத்துப் படுக்காமையும் (பா.30), அந்திநேரத்தில் முகங்கழுவித் தெய்வம் தொழுதலும்(பா.9) சைவத் தமிழரிடம் நிலையான வாழ்வு பெற்றுள்ளதாக ஆ. வேலுப்பிள்ளை துணிகிறார். மேலும் அவர்,  “ஏனைய அறநூல்கள் பெரும்பாலும் பொதுவான ஒழுக்கங்களைக் கூறுவன. இந்நூலாசிரியர் அவற்றை மாத்திரமன்றி நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டிய கடமைகளை அல்லது நித்திய ஒழுக்கங்களையும் கூறியுள்ளார்…. சமண பௌத்தரது அகிம்சைப் பிரச்சாரம் தமிழ் நாட்டில் பெற்ற வெற்றியை இது காட்டுகிறது…… அறத்தின் அடிப்படை உலக வாழ்க்கையைச் சிறப்பிக்க உதவ வேண்டும் என்ற கொள்கை திருக்குறளில் காணப்படுவதிலும் தெளிவாக இந்நூலில் காணப்படுகிறது” என்றுமுரைக்கிறார். (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப. 88 – 90)

         இந்நூலில் காணப்படும்,  முந்தையோர் கண்ட முறை, ஆய்ந்த அறிவின் அவர், யாவரும் கண்ட நெறி, நல்லறிவாளர் துணிவு, பேரறிவாளர் துணிவு, மிக்கவர் கண்ட நெறி, நுண்ணிய நூல் அறிவினார், அசையாத உள்ளத்தவர், நெறிப்பட்டவர், நூன்முறையாளர் துணிவு, திறங்கண்டார் (தெளியக் கற்றோர்) கண்டநெறி,  பெரியார், திறப்பட்டார் (ஒருவழிப்பட்டார்), மெய்யாய காட்சியவர் (உண்மை அறிவுடையவர்), ஐயமில் காட்சியவர் போன்ற தொடர்களின்வழி இந்நூலாசிரியர், தம் காலத்திற்கு முன் வாழ்ந்த பெருமக்களின் நல்லுரைகளை ஏற்று இவ்வொழுக்கநூலைச் செய்திருப்பதை அறியலாம். இந்நூல் சுக்ர ஸ்மிருதியைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்றும், தௌமியர் பாண்டவருக்குக் கூறிய உபதேசத்தைத் தழுவியது என்றும் இந்நூற்சாரம் தொடர்பாகப் பல்வகைக் கருத்துகள் கூறப்படுகின்றன. அவை விரிவாக ஆராயத்தக்கன.

            இந்நூலில் நீராடல், ஆடை அணிதல், உணவுகொள் முறைமை, உண்ணும் திசை, வாயைத் தூய்மை செய்யும் வகை, நீர்பருகும் முறைமை, தூங்கும் முறைமை போன்றவை கொள்ளத்தக்க ஆசாரங்களாகப் பெருவாயின் முள்ளியாரால் கூறப்பட்டுள்ளன. எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்து உண்ணாமை, அந்திப்பொழுது செய்வன தவிர்வன எனத் தள்ளத்தக்க  ஆசாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

            இந்நூலை, வழிநூல் வகைகளுள் ஒன்றாகிய மொழிபெயர்ப்பு நூலுக்குச் சிறந்த சான்றாக, இலக்கண விளக்க உரையாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். அந்தணர் உயர்வு இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘கீழ்மக்கள்’‘புலை’ போன்ற தற்காலம் ஏற்காத பல சொற்றொடர்கள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் கூறும் ஆசாரங்கள் அனைத்தும் இன்றைய சனநாயகச் சமூகத்துக்கு உவப்புடையதாக இருக்க இயலாது. குறிப்பாக, ஆசாரக்கோவையில் வருணதருமம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பார் கருத்தைப் புறக்கணித்து விடுவதற்கில்லை. (காசி மாரியப்பன், ஆசாரக்கோவையும் வைதீகமும், பக்.1 – 15)( நவீன நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு, தேசியக் கருத்தரங்கு 27.12.2007 – 28.12.2007, நாமக்கல், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வெளியீடு,)

            19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பாட்டும் தொகையுமான சங்க நூல்களையும், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும் பக்தி இலக்கியங்களையும் பழுத்த புலமையாளர்கள் சிலர் பதிப்பித்து வெளியிட்டனர். ஆறுமுக நாவலர், சி.வை தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் போன்ற தமிழ்ப் பதிப்பு முன்னோடிகள் இப்பணிகளைச் சிறப்பாகச் செய்தனர். ஆனால் பிறகு வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், இவ்வாறு செம்மையான பதிப்பு முறைமையுடன் பதிப்பிக்கப்படவில்லை. எனவே, இன்றளவிலும்கூட திருக்குறளும் நாலடியாரும் தவிரப் பிற கீழ்க்கணக்கு நூல்களுக்கான மிகத் திருத்தமான ஆய்வுப்பதிப்புகளுக்கான ஒரு சமூகத்தேவை இருப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது. (இரா.வெங்கடேசன், இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள்: ஆசாரக்கோவை பதிப்பும் உரையும் நூல் உருவாக்கப் பின்புலமும், ப. 148) (சு.துரை- கா.கோ.வேங்கடராமன் (தொ.ஆ.), (அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆய்வரங்கம் : 03.02.2010 – 05.02.2010, நீதி இலக்கியங்களும் பதிப்புகளும் வெளியீடுகளும்)

     இதுகாறும் வெளிவந்துள்ள ஆசாரக்கோவை பதிப்புகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்வது. திருமணம் செல்வக் கேசவராய முதலியாரின் பதிப்பாகும். ஆசாரககோவைக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதியதாகக் கூறப்படுவது உண்மையன்று எனக் கூறிப் பழைய பொழிப்புரையை நச்சினார்க்கினியரின் உரையாகக் கருதுவது தவறென்று நிலைநாட்டிய பெருமை தி.செ.கே.முதலியாருக்கே உரியதாகும்.

        “இந்நூலுக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அது பொழிப்புரை. அவ்வுரை ஒருவாறு கண்ணழிவு செய்து உள்ளபடியே பதிப்பித்திருக்கிறது. ஒவ்வொரு பாவிலும் உரைத்துள்ள ஆசாரங்கள் கண்ணழிவின்கீழே எளிய தமிழில் எழுதிச் சேர்ந்திருக்கின்றன. பற்பல ஆசாரங்களின் சம்பிரதாயங்களை இக்காலத்தறிவது கூடாமையால், கருத்துரையில் பிழைபட்ட இடங்களை ஆன்றோர் பிழைத்துக்கோடல் வேண்டும். அடியேனைப் பழிப்பதில் பயனன்று. பாக்களையேனும் இழவாமல் பாதுகாத்தல் வேண்டும் என்பதொன்றுமே இந்நூலினை அச்சிட்ட நோக்கம.; ஒரோவிடத்துப் பாடபேதமும் சில குறிப்புகளும்  காட்டியிருக்கின்றன. பழையவுரைக்கு மாறான புதுச்சரக்கு ஒன்றும் கலந்திராது. இந்நூல் முதன்முதல் கி.பி. 1857இல் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் இலட்சுமிவிலாச அச்சுக்கூடத்தில் பிரசுரமாயிற்று. அதை ஒட்டி 1893 இல் பி.டி.வி. செங்கல்வராய நாயகருடைய ஆர்பனேஜ்  அச்சுக்கூடத்தில் ஒரு பதிப்பும், அப்பால் உரிய திருத்தங்களோடு 1898இல் மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடத்தில் ஒரு பதிப்பும் பிரசுரமாயின. சில காலத்துக்குமுன் பிரதிகள் செலவாகிவிட்டமையால் இப்பதிப்பு வெளிவருகின்றது” எனத் தம் மூன்றாம் பதிப்புக்கான பதிப்புரையில் திருமணம் செல்வக் கேசவராய முதலியார் குறிப்பிட்டுள்ளார். (தி.செ.கே.மு., ஆசாரக்கோவை, மூ.ப: 1916, பக். 6 – 7) இப்பதிப்பை அடிப்படை ஆதாரமாக ஏற்று, சமூகவியல் நோக்கில் ஆசாரக்கோவையைப் பற்றி ஆராய முனைவது, இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            ‘ஆசாரம்’ அதாவது ‘ஒழுக்கம்’ என்பது யாது? இக்கேள்விக்கு விடை தருவதாகத்தான் ஆசாரக்கோவையின் முதல்பாடல் அமைகிறது. ஆசாரத்திற்குரிய விதையாக அதாவது ஆசார வித்தாக, எட்டுக்குணங்கள் கூறப்படுகின்றன.

“நன்றி அறிதல்; பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்இனத்தாரோடு நாட்டல் இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து”(பா. 1)

1.      நன்றியறிதல் – பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்காமல் இருத்தல்.

2.  பொறைஉடைமை – அறியாமை காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்.

3. இன்சொல் – யாரிடமும் கடுஞ்சொல் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்.

4.  இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை – எந்த உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்.

5.  கல்வி  -சிறந்த கல்வியைப் பயன்பாட்டு நோக்கிலான வாழ்வியல் கல்வியையும் சேர்த்துக் கற்றல்.

6.    ஒப்புரவு ஆற்ற அறிதல் – உலக நடையை அறிந்து உலகத்தோடு ஒட்டி வாழ அறிதல்

7. அறிவுடைமை  – எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருளைத் தானே சிந்தித்துச் சுயமாக அறிந்துகொள்ளும் அறிவுடைமை.

8.   நல்இனத்தாரோடு நட்டல் நல்லொழுக்கமும் நட்புமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து வாழ்தல்.

            இவை எட்டும் சாதி, மதம், இனம், நாடு, மொழி, பால் என வேறுபாடுகள் பலவற்றையும் கடந்தநிலையில் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசாரங்களாகும். எனவேதான்,இவ்வெட்டையும் ‘ஆசாரவித்து’ என்கிறார் பெருவாயின் முள்ளியார். இவ்வெட்டையும் பெறுவது என்பது எளிதன்று. ஆழமான முயற்சியாலும், முறையான பயிற்சியாலும், இயல்பான வளர்ச்சியாலுமே இது சாத்தியமாகும். எனினும், இவ்வெட்டுக் குணங்களைப் பெற முனைதலும், பெற்றுச் சிறந்தலுமே வாழ்வின் இலக்காதல் வேண்டும். இங்கொரு கேள்வி எழுகிறது. இந்த ஆசாரங்களை வளர்த்துக்கொள்வதால் மனிதன் அடையும் நன்மைகள் யாவை?

“பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு

நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை

இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்

ஒழுக்கம் பிழையாதவர்”(பா. 2)

1.          நல்ல குடிப்பிறப்பு

2.          நெடிய வாழ்நாள்

3.          செல்வம்

4.          அழகு

5.          நிலத்துக்கு உரிமை அல்லது சொந்த வீட்டுக்கான உரிமை

6.          சொல்லின் மேன்மை அல்லது வாக்குச்சுத்தம்

7.          கல்வி

8.          நோயின்மை

       இந்த எட்டையும், ‘ஆசாரம்’ பிழையாதவர் அடைவர் என்கிறது ஆசாரக் கோவை. நல்லவேளையாக ‘வீடுபேற்றையும்’ பயன்களுள் ஒன்றாக முள்ளியார் குறிக்கவில்லை! இந்த உலகப் பயன்கள்மீதுதான் அவருக்குக் கண் என்பது, சமூகவியல் நோக்கில் மிகவும் சாதகமான அம்சமாகும். இவ்வெட்டையும் யார்தான் வேண்டாம் என்பார்கள்? ஆனால், இங்கு ‘ஆசாரம்’ என்பது யாது? என்பதுதான் சிக்கல். குறிப்பிட்ட சில சாதியினரின் மேலாண்மைக்காகக் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கங்களை எல்லாருக்கும் பொதுவான ஒழுக்கங்களாக ஏற்க இயலுமா என்பதுதான் கேள்வி.

          பொதுவாக அறநூல்கள் என்பவை, பற்றுக்கோடில்லாமல் தறிகெட்டுத் திரியும் மனிதர்களைப் பண்படுத்தவும், ‘பொதுஅமைதி’ பேணும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள ‘சமூகம்’ என்ற இலட்சிய அமைப்பிற்கு ஓரளவிற்கேனும் ஏற்றவாறு அவர்களை உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன. ‘அறம்’ இல்லாமல் மனிதன் வாழ இயலாது. எனினும், அந்த ‘அறம்’ விதிகளையும் விலக்குகளையும் கணக்கிலெடுத்தே கட்டமைக்கப்பட வேண்டும்.

            சுத்தமாக இருப்பது என்பது, அனைவருக்கும் நன்மை தருவதுதான். ஆனால், சுத்தத்தின் பெயரைச் சொல்லி, இன்னொருவரை ‘நீ அசுத்தம்’ எனச் சுயநலவாதி ஒருவர் தாழ்மைப்படுத்தும்போது, அங்கு அதிகாரம் ‘பிறர் வாழ்வுரிமையில்’ குறுக்கிடும் ‘அத்துமீறல்’ நிகழ்கிறது. இதை மனிதநேயம் கொண்டோர் ஏற்பதற்கில்லை. இத்தகைய பார்வையுடன் முழுமையாக உடன்படுகிறவராக ஆசாரக்கோவையின் ஆசிரியரைக் கூற இயலவில்லை.

            “எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீத்தேவர்

            உச்சந் தலையோடு இவையென்ப யாவரும்

            திட்பத்தால் தீண்டாப் பொருள்”(பா. 5)

            “எச்சிலார் நோக்கார் புலை திங்கள் ஞாயிறு நாய்

            தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென

            நன்கறிவார் நாளும் விரைந்து”(பா.6)

            “நிரல்படச் செல்லார் நிழல்மிதித்து நில்லார்”(பா. 83)

      என்றெல்லாம் ‘தீண்டாப்பொருள்கள்’ பற்றி முள்ளியார் பேசுவன, இன்றைய சனநாயக காலத்துக்குச் சிறிதும் பொருந்தாத பிற்போக்கு கருத்துகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

            சுத்தம் – அசுத்தம் என்ற இருமை, அவரவர் வாழ்நிலை மற்றும் தொழில் சூழல்களுக்குக் கட்டுப்பட்டதாகும். தம் வசதிக்கேற்ப மானுடர் இவற்றைப் பேணுவதே இயல்பாகும். ஒரு கூட்டத்தார் வழக்கத்தை இம்மாதிரி செயல்பாடுகளில் மற்றவர்மீது திணிப்பது விரும்பத்தக்கதன்று. எப்பொழுதெல்லாம் மனிதன் நீராட வேண்டும் என்பது பற்றி, ஆசாரக்கோவையின் பத்தாம் பாடல் அறிவுறுத்துகிறது.

“தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலோடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயுறாது ஆடுக நீர்”(பா. 10)

1.          தன்னால் வழிபடப்படும் கடவுளை வணங்கும்போதும்

2.          தீய கனவைக் கண்டபோதும்

3.          தூய்மையின்மை உண்டானவிடத்தும்

4.          உண்ட உணவை வாந்தி எடுத்தபோதும்

5.          மயிர் களைந்தபோதும்

6.          உண்ணும் முன்பும்

7.          நெடும்போது தூங்கிய பிறகும்

8.          புணர்ந்த பிறகும்

9.          கீழ்மக்களின் உடலைத் தொட்டபோதும் (கீழ்மக்கள் மெய்யுறல்)

10.        மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும்

     எனப் பத்து இடங்களை ஆசாரக்கோவை பட்டியலிடுகிறது. இந்த ஆசாரங்களுள் சில மேல்சாதி மக்களுக்குரியனவாகும். பிறரிடமிருத்து தம்மை வேறுபடுத்திச் சமூக மதிப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர்கள், இந்த ஆசாரங்களைப் புனைந்து வழக்கப்படுத்தினர். முடிவெட்டி வந்தபிறகு நீராடுவது, உண்ணும் முன்னும், தூங்கியெழுந்த பின்னும், புணர்ச்சிக்குப் பிறகும், மலம் சிறுநீர் கழித்த பிறகும் நீராடுவது என்பதெல்லாம் பழங்கால நவீன வசதிகளற்ற காலத்தில் வேண்டுமானால் ஒருவேளை தேவைப்பட்டிருக்கலாம். இந்நவீனகாலத்தில் இவையெல்லாம், தம்மைப் பிறரினும் நாகரீகமானவராகக் காட்ட விரும்புவோரின் ‘உயர்வு தாழ்வு பாராட்டும்’ மனத்தின் புனைவு வெளிப்பாடுகளேயாகும். இவற்றைப் பொதுச் சுகாதார நெறிகளாகக் கருதித் தம்மளவில் ஒருவர் பேணுவதில் குற்றமில்லை. ஆனால் பெருவழக்காக அது அவ்வாறில்லை. காலங்காலமாகத் தொடரும் சாதிசார் வழக்கமாகவே தமிழ்ச் சூழலில் பேணப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மையாகும். மேலும், ஆசாரக்கோவையார், ‘கீழ்மக்களைத் தொட்டவிடத்து நீராட வேண்டும்’ எனக் கூறுவதில் வெளிப்படுவது, அவரது ‘சாதி மேலாண்மை’ பேணும் வைதீகச்சைவம்சார் பேதமனமே என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.

“நீர்தொடார் நோக்கார் புலை”(பா. 13)

“இருதேவர் பார்ப்பார் இடைபோகார்”( 31)

“படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்”(பா. 36)

“அறியாதார் தந்தலைக்கண் நில்லா விடல்”(பா.44)

“ஈன்றாள் மகள் தம் உடன்பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும்

தாங்கற்கு அரிதாகலான்” (பா.65)

“தம்மேனி நோக்கார்”( பா.77)

“மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டீர்க்கு உவப்பன”( பா.82)

         என்றெல்லாம் ஆசாரக்கோவையார் கூறும் பல கருத்துகளை, இன்று சிறிதும் ஏற்க இயலாது. இப்பாடல்களில், பார்ப்பனரின் மேலாண்மை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், ‘கீழ்மக்கள்’ என்ற சொல்லாட்சி பரவலாக இடம்பெற்றுள்ளதும் கடுமையான விமர்சனத்துக்குரியதாகும். நீரைத் தம்மீது தெளித்துக்கொள்ளாமல் புலையரை நோக்கக்கூடாது (பா.13) என்றும், காய்ச்சலாய் இருக்கும்போதுக்கூடத் ‘தலை முழுகாமல்’ கழுத்துவரை மட்டும் குளிக்கக்கூடாது என்றும், இரண்டு பார்ப்பனருக்கு நடுவில் நடந்து செல்லக்கூடாது (பா.31)  என்றும், படையே வந்தாலும் தம்மாடை பிறர்மீது படுமாறு ஓடக்கூடாது (பா.36) என்றும், அந்தணரிடம் நாள் கேட்டு நல்ல செயல் செய்க என்றும், புலையரிடம் நாள் கேட்டுச் செய்யற்க (பா.92) என்றும் இந்நூல் கூறுவனவற்றை இன்றைய காலமும் மனிதரும் சிறிதும் ஏற்கவியலாது. இவை கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளாகும்.

             அறியாதவர்முன் பெண் நிற்கக்கூடாது (பா.44)  என்றும், தாய் மகள் உடன்பிறந்தவள் எனினும் அவர்களுடன் தனியே ஆண் தங்கக்கூடாது(பா.65)  என்றும், தம் மேனியழகைக் (கண்ணாடி முதலியவற்றில்) குலப்பெண்கள் விரும்பிப் பார்க்கக்கூடாது (பா.77)  என்றும், தம் கணவரது உடல் வடிவத்தையன்றிப் பிற ஆண்களின் வடிவழகை மனைவியர் வியந்து பார்க்கக்கூடாது (பா.77) என்றும், தலைமுடியைக் கோதுதலும் கைந்நொடித்தலும் குலமாதருக்கு ஆகாது (பா.77) என்றும் பொதுமகளிர் வாழும் இடத்துக்கு அருகில் இல்லறத்தார் வீடெடுத்தால் அவர்தம் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும் (பா.82) என்றும பெருவாயின் முள்ளியார் கூறுவன யாவும் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கக் கருத்துகளே! இவை இக்காலத்துக்குச் சிறிதும் ஒவ்வாத பெண்விரோதக் கருத்துகளாகும். இது ஆசாரக்கோவையின் ஒரு முகம் எனினும், அதற்கு மற்றுமொரு முகமும் உள்ளது. அனைவருக்கும் பொதுவான அறக்கருத்துகள் சிலவற்றைக் கூறுவதற்கும், ஆசாரக்கோவை முயன்றுள்ளது.

            துன்பத்துள் துன்புற்று ஆனால் அதைப் பொறுத்து வாழவேண்டும் என்றும், இன்பத்துள் இன்புற்றுப் பிறருக்கு இன்பமளிக்குமாறு வாழவேண்டும் என்றும், அன்பற்றவர் இல்லம் புகாமல் வாழவேண்டும் (பா.79) என்றும் ஆசாரக்கோவை கூறுவன இன்றும் பின்பற்றத்தக்கனவே. பெற்றோரைத் தொழுது எழுந்தபிறகே செயல்களைச் செய்ய வேண்டும் (பா.4) என்றும், அரசன் ஆசிரியன் தாய் தந்தை முன்பிறந்த தமையன் இவர்களைத் தொழுது வணங்கிவிட்டு விடியலில் எழவேண்டும்(பா.16) என்றும்; முள்ளியார் கூறுவனவும் ஏற்கத்தக்கனவே. எனினும் இவை, நிலவுடைமைச் சமூகத்தில், ‘குடும்ப அமைப்பு’ நிலைபெறுவதற்காகப் பேணப்பட்ட அறங்களே எனலாம். பௌர்ணமி நாளில், பல்துலக்கக்கூட மரத்திலிருந்து குச்சியை ஒடிக்கக்கூடாது என்றும், அந்நாளில் மரம் வெட்டுவதும் கூடாது (பா.17) என்றும் ‘ஆசாரக்கோவை’ அறிவுறுத்துகிறது. இதிலுள்ள சமயநோக்கை நீக்கிவிட்டுச் சுற்றுச்சூழல் பார்வையில் காணும்போது, மரம் வெட்டக்கூடாது என்ற குரலை  இன்றும் ஏற்கலாம்.

            கால் கழுவிய பின்னர் நீர் உலர்வதற்கு முன்னர் உண்க என்றும், காலைக் கழுவிய ஈரம் உலர்வதற்கு முன்பு படுக்கைமீது ஏறாது விடுக (பா.19) என்றும் கூறப்படும் கருத்துகள் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கால் கழுவி நீர் உலர்வதற்குமுன் உண்டால் ஆயுள் நீளும் என்றும், கால் கழுவிய ஈரம் காயாமல் படுக்கைமீது ஏறினால் ஆயுள் குறையும் என்றும் மனுநீதி கூறுவதுடன், இதனை ஒப்பிடலாம். கிழக்குத்திசை நோக்கி அமர்ந்து உண்ணவேண்டும் (பா.20) என்றும், விருந்தினர்- மூத்தோர்- பசு- பறவை- குழந்தைகளுக்குத் தராமல் சாப்பிடக் கூடாது (பா.21) என்றும், வாசற்படியிலிருந்து உண்ணக்கூடாது (பா.22)  என்றும், கிடந்தும் நின்றும் வீடன்றி வெளியிடத்திருந்தும் கட்டில்மீதிருந்தும் உண்ணுதல் தகாது (பா.23) என்றும்  உண்ணும் முறைமையைப் பற்றி ஆசாரக்கோவை அறிவுறுத்துகிறது.

            “கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்

            சிறந்து மிக உண்ணார் கட்டில்மேல் உண்ணார்

            இறந்தொன்றும் தின்னற்க நின்று”(பா.23)

         என்று, நின்றுண்பதைக் கடுமையாக ஆசாரக்கோவை கண்டிப்பதற்குச் சமணர் நின்றுண்ணும் பழக்கத்தினராக இருந்ததே காரணமாகலாம். மேலும், “அந்திப்பொழுது கிடவார் நடவாரே உண்ணார்” (பா.29) என்று ஆசாரக்கோவை கூறுவதும், விளக்கு வைப்பதற்குமுன் உண்டுவிடும் வழக்கமுள்ள சமணருக்கு மறுப்பாகத்தான் எனக் கருதலாம்.  ஆனால், வயதில் பெரியவர் பந்தியிலிருந்து எழுவதற்குமுன் வயதில் சிறியவர் பந்தியைவிட்டு எழக்கூடாது என்றும், பெரியவர்க்குமுன் சிறியவர் உண்ணுதல் மரபன்று (பா.24) என்றும் ஆசாரக்கோவை கூறுவன இன்றும் தமிழரிடம் வழக்கத்தில் உள்ளன. உண்ணும்போது உடம்பை இரண்டு கையாலும் சொரியக்கூடாது (பா.28) என்ற கூற்றும் ஏற்கத்தக்கதே. எனினும், இன்றைய மருத்துவர்களும் ஏற்கும்வகையில், ஆசாரக்கோவையின் 25ஆம் பாடலில்,

            “கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப

            மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

            துய்க்க முறைவகையால் ஊண்”(பா.25)

         எனக் கூறப்பட்டுள்ளது. இனிப்பானவற்றை முதலிலும், பிற சுவையுள்ளவற்றை இடையிலும், கசப்பானவற்றை இறுதியிலும் உண்க என்ற ஆசாரக்கோவையின் அறிவுரை இன்றும் பின்பற்றத்தக்கதே. இப்படியெல்லாம் உணவுண்ணும் முறைமை பற்றி ஆசாரக்கோவை விரிவாகப் பேசியுள்ளபோதிலும், கள்ளுண்ணாமையையும் புலால்மறுப்பையும் பெரிதாக வலியுறுத்தி ஏதும் கூறவில்லை என்பதும் ஆராயத்தக்கதாகும். சமண பௌத்த நெறிமுறைகளைக் கடுமையாக எதிர்த்த பிற்கால வைதீகம், சமண பொளத்தரின் உயிர்க்கொல்லாமை, புலால்மறுப்பு, கள்ளுண்ணாமைக் கொள்கைகளைத் தான் ஏற்றுக்கொண்டதோடு, சமணம் பௌத்தம் போல் அவற்றைப் பொதுமக்களுக்கு வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. பிராமணருக்கும் பிற உயர்சாதியினருக்கும் உரியதாக அவற்றை வரையறுத்துக் கொண்டு, காலப்போக்கில் சமூக வாழ்வில் அவற்றின் மேன்மையை மெல்லமெல்ல உறுதிப்படுத்திக்கொள்ளும் தந்திரத்தைத் திட்டமிட்டு வைதீகம் நிறைவேற்றியதாகக் கருதலாம்.

            “பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார்

            பகல் பெய்யார் தீயினுள் நீர்” (பா.33)

        பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கியும் மலசலம் கழிக்கக்கூடாது; பகலில் நெருப்பில் நீர் ஊற்றி அதை அவிக்கக்கூடாது என்றெல்லாம் ஆசாரக்கோவை கூறுவனவற்றை இன்று யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தீப்பெட்டி, கேஸ்அடுப்பு, லைட்டர், மின்சாரம் இல்லாதகாலத்தில் ‘பகல்நெருப்பை’ அணைப்பது பாவமாய்க் கருதப்பட்டிருப்பது இயல்புதானே! நீர்நிலையில் நின்றபடி எச்சில் உமிழ்ந்து வாய் அலம்புதலை ஆசாரக்கோவை கண்டிக்கிறது. (பா.35) இது நீர்மாசு பற்றிய அச்சமாய் இருக்கலாம். ஒருவர் அமர்ந்துள்ள இடத்திற்கும் விளக்கிற்கும் இடையே யாரும் போகக்கூடாது (பா.36) என்றும், கடமையை அறிந்த அறிஞர் சுவர்மேல் எச்சில் உமிழார் (பா.36)  என்றும் தடைசெய்கிறது ஆசாரக்கோவை. இவற்றை இன்றும் ஏற்கலாம்.

            இன்றைக்குச் சாலைகளிலும், அலுவலக இடங்களிலும், பொதுப் பூங்காக்களிலும், பிற இடங்களிலும் எச்சில் துப்பியும் சிறுநீர் கழித்தும் இயற்கைச்சூழலை மானுடர் மாசுபடுத்தி விடுவதைக் காண்கிறோம். இதைக் கண்டிக்கும் பாடலொன்றும் ஆசாரக்கோவையில் காணப்படுகிறது.

            “புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்

            தேவகுலம் நிழல் ஆநிலை வெண்பலி என்று

            ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்

            சோரார் உணர்வு உடையார்”(பா.32)

1.          புல்வெளி

2.          விளைநிலம்

3.          பசுஞ்சாணம்

4.          சுடுகாடு

5.          பொதுவழி

6.          நீர்நிலைகள்

7.          கோவில்

8.          மரநிழல்

9.          பசு மேய்க்கும் இடம்

10.        சாம்பல்

     என்ற இந்தப்பத்து இடங்களிலும் உமிழ்நீர், சிறுநீர், மலம் கழித்தலை அறிவுடையார் செய்யார் என்ற ஆசாரக்கோவையின் குரலுக்குச் சுற்றுச்சூழல் நோக்கில் இன்று பெரும்மதிப்புண்டு.

“தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டு ஊன்கொள்ளார்”(பா. 39)

       எனத் ‘தமக்கென்று நல்லவர் சமைக்கமாட்டார்’ என்றும், ‘தெய்வப் பொருட்டன்றி தம் காரணத்தால் ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைக் கொள்ளலாகாது’   என்றும் ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது. முதலில் கூறியது நிலவுடைமைச் சமூக மனோபாவமாகலாம். அடுத்துக் கூறியது, புலால்மறுப்புப் பற்றிய ஆசாரக்கோவையின் நடைமுறைத் தந்திரத்திற்குச் சான்றாகும். மனுநீதியிலும் இத்தகைய கருத்தே காணப்படுகிறது. (தமிழ்நாடன், மநு தர்மம், திருத்திய விரிவான பதிப்பு, 1993, ப.95, குயில்பண்ணை வெளியீடு, சேலம்.)

            பஞ்சமாபாதகங்கள் (கள், களவு, சூது, கொலை, பிறர்மனை விழைதல்) புரிவோர் நிரயத்துச் செல்வழி அதாவது நரகத்திற்கான பாதைக்குரியோர் (பா.37)  எனக் கூறும் ஆசாரக்கோவை, புண்ணியப்பொருள்கள் கிடைத்தால் புண்ணியம் ஆய தலையோடு உறுப்புறுத்த (பா.41) என அவற்றைத் தலையிலும் கண்ணிலும் ஒற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.             இங்குப் புண்ணியம் என்ற பிற்காலச் சொல் வழக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

            “தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்

             ஈராறு நாளும் இகவற்க என்பதே

             பேரறிவாளர் துணிவு” (பா.42)

            மனைவிக்கு மாதப்பூப்பு நிகழுமிடத்து மூன்றுநாளுக்கு அவள் முகத்தைக் கணவன் காணக்கூடாது., மூன்றுநாள் கழித்துத் தலைமூழ்கியப்பின் 12நாளுக்குக் கணவன் அவளைப் பிரியக்கூடாது என்ற மேற்பாடலின் கருத்து குழந்தைப்பேற்றுடன் தொடர்புடையதாகும். இது தொல்காப்பியத்திலும் காணப்படுகிறது.

            “பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

             நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

             பரத்தையிற் பிரிந்த காலையான” (தொல்.பொருள்.சூ.187)

            வடமொழி ஸ்மிருதி மரபை மட்டுமின்றித் தமிழ் மரபிற்கேற்பச் சில கருத்துகளையும் ஆசாரக்கோவை எடுத்தாண்டுள்ளதற்கு, இது சான்றாகும். உச்சிப்பொழுது, நள்ளிரவு, மாலை, காலை, திருவாதிரை, திருவோணம், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, பிறந்தநாள் ஆகியவற்றில் கலவி கூடாது என்கிறது ஆசாரக்கோவை (பா.43). இதனை இன்று யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. கல்லியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி என்ற ஐவகை நாளும் இகழாது அறமும் விருந்தும் செய்க (பா.48) என அன்னதானத்தை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. இங்குக் கல்லியாணம் என்ற பிற்காலச் சொல்வழக்கு கையாளப்பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும். உடை, நடை, சொற்சோர்வு (சொற்செலவு), வைதல் ஆகிய நான்கும் நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் குடிமைக்கும் தக்கவாறு அமையவேண்டும் எனப் படிநிலைச் சமூக அமைப்பை ஆசாரக்கோவை பரிந்துரைக்கிறது. (பா. 49)

            மின்ஒளி, வீழ்மீன், வேசையர்கோலம், பகற்கிழவோன் முன்ஒளி மற்றும் பின்ஒளி ஆகிய ஐந்து ஒளிகளையும் உடல்நலம் பேணுவோர் நோக்கக்கூடாது என்கிறார் முள்ளியார்.(பா.51) சூரியகிரகணத்தைக்கூட அதற்குரிய கண்ணாடி அணிந்து பார்க்கலாம் என்பதுதான் இன்றைய விஞ்ஞானம். சூரியனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதி என்ற குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. சூரியனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண்கொண்டு பார்க்காதே என்பார் பாரதியார்! (சீனி. விசுவநாதன் (ப.ஆ.), பாரதியார் கவிதைகள், மு.ப.1991, ப.461, சென்னை)

             கள்குடித்துக் களித்தாடுகின்ற கள்ளாட்டுக் கண்ணும்  (பா. 55) நில்லாதே எனக் கூறினாலும், வெளிப்படையாகக் கள்ளுண்ணாதே எனத் திருக்குறள் போல ஆசாரக்கோவை வலியுறுத்துவதில்லை. வறுமை பெருகிய காலத்தும் குடியொழுக்கம் நீங்கிய தொல்வரவில் தீர்ந்த தொழில் (பா.56) செய்யக்கூடாது என்ற முள்ளியாரின் அறிவுரையில் ‘சாதித்தொழில் பேணும் வைதீக மனம்’ ஒளிந்துள்ளது எனலாம். பகல் வளரார் நோயின்மை வேண்டுபவர் (பா.57) என்ற அறிவுரை, இன்றும் பொருத்தப்பாடு உடையதே. உடல் கெடுவதற்கும், தொப்பை வளர்வதற்கும் பகல் தூக்கமே காரணம் என்பதை இன்றைய மருத்துவரும் ஏற்கின்றனர். ஆன்று அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு செல்லுமிடத்து யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார்(பா.60) என்ற கருத்துதான், பிறகு உயர்சாதியராகிய பெரியோர்முன் செருப்பணிந்தும் குடைபிடித்தும் செல்லக்கூடாது என மாறியிருக்கவேண்டுமெனலாம்.

            நான்மறையாளரைப் பெற்றோரைப் போல் பாவனை செய்தொழுக வேண்டும். (பா.61) என்ற அறிவுரையில், பிராமணரைப் பொதுமக்கள் பேணும் முறை பற்றிக் கட்டளையிடுகிறது ஆசாரக்கோவை. எனினும், சமூகத்தில் தம்முடன் வாழும் பிறருடன் பழகிக் கலக்கவேண்டிய முறைமை பற்றிப் பிராமணருக்கு ஏதும் சொல்லாமல் மௌனம் காப்பதிலிருந்து, முள்ளியாரின் மேட்டுக்குடி மனநிலையைத் தெளியலாம். இவ்வாறு அதிகாரத்துக்கும் ஆளுவோருக்கும் ஏற்ற நெறி முறைகளையே பின்பற்றத்தக்க ஆசாரங்களாக  முள்ளியார் பாடியுள்ளார் என்பதற்குப் பின்வரும் பாடலும் சான்றாகும்.

            “முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்

            தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்

            இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று

            காக்கை வெள் என்னும் எனின்”(பா.69)

            மன்னன் செய்வனவற்றை வெறுக்காதே, மன்னனுடன் கலகம் செய்யாதே, அவன் முகத்துக்கு எதிரில் நிற்காதே, அவன் தனியே இருக்கும்போது உன் வேலையைப் பற்றிப் பேசாதே, நன்மை தரும் சொற்களைக் கேட்காமல் கூறாதே, காக்கை வெண்ணிறமுடையது என்று மன்னன் கூறினால் மறுக்காமல் அதையும் ஏற்றுக்கொள் என்கிறார் பெருவாயின் முள்ளியார். மேலும் அவர், பாம்பு- அரசன்- நெருப்பு- சிங்கம் என்ற நான்கும் இளைய எளிய பயின்றன என்று நினைத்து இகழ்ந்தால் துன்பத்தைத் தவிர்க்கமுடியாது என்றுமுரைக்கிறார். (பா.84) இதற்கும் மேற்சென்று அறம், மணம், தொழில், வீடு ஆகிய நான்கையும் அரசனைக் காட்டிலும் பெரியதாகச் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் சேர்த்த செல்வமெல்லாம் (அரசனால்) அழியும் என்றும் எச்சரிக்கிறார்.(பா.85) இதுதான் ஆசாரக்கோவையின் கருத்துக்களம். அதிகாரவர்க்கத்தின் கருத்தியலுடன் சிறிதும் மோதாமல் அதை அப்படியே பொறுத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவதற்கான தத்துவத்தளத்தைக்  கட்டமைப்பது. இதைத்தான் முள்ளியார் செய்துள்ளார். இதனிடையிடையே பொதுச் சுகாதாரமும் நாகரீகமும் பேணும் வகையில், சிற்சில நற்கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

            “நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்

            இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்

            அசையாது நிற்கும் பழி”(பா.73)

          கொட்டாவி விடுதலையும், காறி உமிழ்தலையும், தும்முதலையும் பெரியார் கூடிய  சபைமுன் (இங்குச் சபை என்பது மன்னர் அவைதான்) செய்யாதே என்பதிலுள்ள ‘தர்ம சங்கடத்தைப்’ புரிந்துகொள்ளலாம். ஆனால்,‘மன்னன்முன் சிரிக்காதே’ ‘மன்னன்முன் கொட்டாவி விடாதே’ என்பதில் அதிகாரத்துக்குப் பணியும் அடிமை மனப்போக்கல்லவா ஒளிந்துள்ளது!

      மனைவியைச் சினந்துகொண்டு நெடுநேரம் வீட்டில் இருக்காதே எனக் கணவன் – மனைவி சண்டை முற்றாமலிருக்க ஆசாரக்கோவை கூறும் “இல்லத்து உறுமி நெடிதும் இராஅர்”(பா.80) என்ற ‘ஆண்நோக்கு’ யோசனையைச் சிறிது ரசிக்கலாம். பன்றியாய் உறுமும்  இந்த ‘ஆண்புத்தி’, இன்றளவிலும் தமிழ்ச் சமூகத்தில் நீடித்துக்கொண்டுதானே இருக்கிறது! எனினும், “புலையரையும் நன்கறிவார் கூறார் முறை ”(பா.80) என்ற முள்ளியாரின் தொடரைச் சிறிதும் ரசிப்பதற்கில்லை. இன்றளவிலும் சாதி பாராமல் மாமன் மச்சான் என்று முறைவைத்து விளிக்கும் பழக்கம் தமிழரிடம் இருந்துவருகிறது என்பதை மறைத்துவிடமுடியாது.

            எறும்பின் சுறுசுறுப்புடனும், தூக்கணாங்குருவியின் கூடு கட்டும் திறனுடனும், கூடிவாழும் காக்கையின் பெருங்குணத்துடனும் மானுடர் வாழப் பழகவேண்டும் என ஆசாரக்கோவை கூறுவதை ஏற்பதில் தடையில்லை. (பா.96) பல்லுயிர் பேணும் பண்பாடாகவும், இதனைக் காணலாம். எனினும், ஆசிரியருக்குத் தக்கணை கொடுக்குமாறு ஆசாரக்கோவை வலியுறுத்துவதில் (பா.3) ஒளிந்திருப்பது, ஆசிரியர் நலனேயன்றி மாணவர் நலனன்று. அக்காலத்தில் ஆசிரியர்களாகப் பெரும்பாலும் அந்தணர்களே இருந்தனர் என்பதால், இது அவர் நலம் பேணும் கருத்தே எனலாம். தக்கணை கொடுக்காதவிடத்தும், கொடுக்கவியலாத மாணவனுக்கும் கல்வி கற்பிக்கும் கடன் ஆசிரியருக்கு உண்டு எனக் கூறியிருந்தால்தானே ஆசாரக்கோவையைப் பொதுநீதி பேசும் நூலென்று கொள்ளமுடியும்! எனினும், விதிகளை மட்டுமல்லாமல், தவிர்க்கவியலாத சூழல்களில் சிலருக்கு விலக்குகளையும் ஆசாரக்கோவை அனுமதிக்கிறது.

1.          அறியாத தேசத்தான்

2.          வறியோன்

3.          மூத்தோன்

4.          சிறுவன்

5.          பிணம்

6.          பயந்தாங்கொள்ளி

7.          பெருந்தீனிக்காரன்

8.          அரசனிடம் பணி செய்பவன்

9.          மணமகன்

         ஆகிய ஒன்பதுபேருக்கும் ஆசாரக்கட்டுப்பாடு இல்லை என்கிறார் முள்ளியார். எனவே, இறுகிய ஆசாரவிதி நூலாக ஆசாரக்கோவை அமையாமல், நெகிழ்வான மற்றும் நீக்குப்போக்கான பொதுச்சுகாதார நூலாக அமைகிறதெனலாம். எனினும், ஆசாரக்கோவையின் குறைபாடுகளைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளவும் இயலும்.

     இரண்டாம் பாலினமாகப் பெண்களைக் கருதுதல், அரசர்- அந்தணர் முதலிய அதிகார வர்க்கத்தாரைப் போற்றுதல், சாதி அமைப்பைப் பாதுகாத்தல், அடித்தட்டு மக்களை மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்தல், நிலவுடைமைச் சமூகப் பழக்க வழக்கங்களை ஆதரித்தல், பல்வேறுபட்ட வாழ்க்கை முறைமைகளையும் செம்மைப்படுத்த அல்லது தரப்படுத்த அல்லது ஒன்றாக்க முனைதல், பொதுமைப்படுத்த இயலாதவற்றைப் புறக்கணித்தல், பிறப்பு முதல் இறப்பு வரையிலான மானுட வாழ்வை இனி எப்போதும் மாற்ற முடியாத வகையில் ஒழுங்குபடுத்தத் திட்டமிடல், ஒழுங்கைப் பேணுவோருக்குச் சொர்க்கத்தையும் ஒழுங்கை மீறுவோருக்கு நரகத்தையும் பரிந்துரைத்தல், உலக வாழ்வைப் பெரிய சிக்கல்கள் இல்லாமல் மன இசைவுடன் கடப்பதற்குரிய நடைமுறை ஒழுகலாறுகளை வலியுறுத்தல் என ‘உலகியல்’ நீதிநூலாக ஆசாரக்கோவையைத் துணியலாம். ஒழுங்கின்றிக் கெடாமல் ஒழுங்காக வாழ்ந்து உலகியல் இன்பங்களைத் துய்க்க வேண்டுமென்ற கருத்தியலையே ஆசாரக்கோவை முதன்மைப்படுத்துகிறது. வாழ்க்கை வெறுப்பை விடவும் வாழ்க்கை விருப்பே ஆசாரக்கோவையில் மிகுந்துள்ளது. பிற அறநூல்களிலிருந்து ஆசாரக்கோவையைக் குறிப்பிடத்தக்க அளவில் இப்பண்பே வேறுபடுத்துகிறது எனலாம்.

            பொதுவாக அறநூல்கள், ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினரை நோக்கி அல்லாமல், பொதுச்சமுதாயம் முழுவதையும் நோக்கியே பேசுகின்றன. இதற்கு ஆசாரக்கோவையும் விலக்கன்று. இந்நூலினுள் துறவு, புலால் மறுப்பு, கள்ளுண்ணாமை, புலனடக்கம், உடல் மற்றும் செல்வ நிலையாமை, ஊழ்வினை, மறுபிறப்பு, பழம்பிறப்பு, குறிப்பிட்ட சில பெருந்தெய்வ வழிபாடுகள் ஆகியன வலியுறுத்தப்படவில்லை. மாறாக, நடைமுறை மனித வாழ்வில் நிகழும் அனைத்துச் செயல்பாடுகளையும் கணக்கிலெடுக்கும் பொதுவான வாழ்முறை ஒன்றைச் சமய வேறுபாடின்றி ஆனால் வைதீக மேலாண்மைச் சாய்வுடன் நிலைநிறுத்தும் முயற்சியே ஆசாரக்கோவையில் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக,

            “சமணர் அமைத்த வழியில், வைதீக சமயத்தவர் சென்று அறநூல்கள் எழுதியுள்ளனர். சூழலுக்கேற்ற வாழ்வுக்கு அவர் தம்மைத் தயாராக்கிக்கொள்வதை இது காட்டுகிறது” (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ப.94) என்பார் ஆ.வேலுப்பிள்ளை. இக்கருத்து பெரும்பாலும் ஏற்கத்தக்கதாகும். சமண பௌத்தரின் சிறப்பான கொள்கைகள் பலவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு, அதேநேரத்தில் சாதியமைப்பையும் வைதீகம் தக்கவைத்துக்கொண்ட வரலாறே ஆசாரக்கோவையின் சாரமாகும்.

            மனிதன் மகத்தானவன், தவறுகள் செய்ய அவன் தயங்குவதில்லை, தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேறிச் செல்லவும் அவன் அறிவான். சுதந்திர வெளியில் செயல்படும் அவனது நடமாட்டம், அப்படியே விடப்பட்டால், அது அவனுக்கே ஆபத்தாகிவிடலாம் என்ற அக்கறையால்தான் அறநூல்கள் தோன்றுகின்றன. விதிகள் தோன்றும்போதே, விதிவிலக்குகளையும் மனிதன் தோற்றுவித்துவிடுகிறான். விதிகளே மீறுவதற்காகத்தான் என்ற தவறான புரிதலிலிருந்து அவனைத் திருப்பித் திருப்தியற்று அலைந்துகொண்டிருக்கும் அவன் மனத்துக்குக் குறைந்தபட்ச அமைதியை அல்லது ஆறுதலையேனும் உறுதிசெய்யும் நோக்குடன்தான் அறநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மேலும்மேலும் சாகசங்களையும் சவால்களையும் மகிழ்ச்சிப் பரவசங்களையும் வேண்டும் மனித மனங்களுக்கான தடுப்பரண்களாகச் செயலாற்றுகின்றன. தம் விதிகளுக்குள் மனிதன் முழுமையாகக் கட்டுப்பட்டுவிட மாட்டான் என்பதைப் பிறரைவிடவும் அறநூல் ஆசிரியர்கள் நன்கறிவர். எனினும், வேகத்தடைகளை எழுப்பும் முயற்சிகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இப்படித்தான் ஆசாரக்கோவை ஆசிரியரும், பலவகை ஒழுக்கவிதிகளை மனிதனுக்கு வகுத்துத்தர முனைந்துள்ளார். இவற்றுள் பல ஆளுவோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டவைதாம். ஆனால், அனைவருக்கும் பயன்படும்வகையிலான சில நல்லாறுகளையும் அவர் உருவாக்கித் தந்துள்ளமையை மறுத்துவிடுவதற்கில்லை.

            ஆசாரக்கோவையிலுள்ள கருத்துகளை நாம் ஏற்கலாம், மறுக்கலாம், எதிர்க்கலாம், பழிக்கலாம், தூற்றலாம், போற்றலாம், புறக்கணிக்கலாம். ஆசாரக்கோவை –  அனைவரும் கற்றறிய வேண்டிய நூல் – எப்படி வாழவேண்டும் என்றும், எப்படி வாழக்கூடாது என்றும் அறிவதற்காக மட்டுமன்று – குறிப்பிட்ட சில அதிகார நெறிமுறைகள் எவ்வாறு உருவாகிச் சமூக அங்கீகாரம் பெறுகின்றன என்பதுடன், அவற்றுக்கான நியாயமான எதிர்வினைகள் எவ்வாறு இயல்பாக மேற்கிளம்பிப் புதிய அறிதல்களைச் சாத்தியப்படுத்துகின்றன என்பதையும் புரிந்துகொள்வதற்காக, நாம் ஆசாரக்கோவையைப் படித்துத்தான் ஆகவேண்டும். சனநாயக காலத்துக்கு ஒவ்வாத ஒழுக்க நியதிகளை இந்நூல் தூக்கிப் பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், நம் புறவாழ்வின் பொதுநியதிகளையும்-  அகவாழ்வின் அடிப்படை ஒழுங்குகளையும் கட்டமைப்பது பற்றிய ஓர் இன்றியமையாத சமூகத்தேவையை இந்நூல் அதற்குரிய ‘வைதீகச் சைவம்சார்’ அரசியல் நோக்குடன் முன்னெடுத்துள்ளதையும் காணத்தான் வேண்டும். சுருங்கக்கூறின், ஆசாரக்கோவை – ஆசாரவாதிகளும் ஆசார மறுப்பாளர்களும் கற்றறிய வேண்டிய ஓர் இலக்கிய நூலன்று, ஆனால் தீவிர விவாதத்திற்குரிய ஓர் ஆளும்வர்க்கச் சமூகவியல் ஆவணம் எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா. இராமன்   

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,       

அரசு ஆடவர் கலைக்கல்லூரி,

நந்தனம், சென்னை – 35.

பொங்கு தமிழே உயிர்!                     

பாவகை : நேரிசை வெண்பா

பண்பாடு நாகரிகம் போற்றும் தமிழ்மொழியே!

பண்பட்ட நன்மொழி யாள்நீயே! – தண்மொழியே!

எண்ணச் செயலை முடிக்கும் அமிர்தமே!

மண்ணுலகம் போற்றுமொழி யே!        – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

நின்னில் நனைந்த மரமாய் இருந்தேனே!

என்னுள் நறுமணமாய் ஆனாயே! – தண்டமிழே!

என்னவென்று சொல்வேனோ நின்சீரை!  திக்கெட்டும்

உன்புகழை ஏற்றிடுவேன் நான்!            – (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

இலக்கணம் கற்றுத் தமிழினிமை உண்டேன்

இலக்கியம் கற்றனுப வித்தேன் இளந்தமிழே!

சங்கத் தமிழின் அகப்புறத்தில்  மூழ்கினேன்

பொங்கு தமிழே உயிர்!                     – (இரு விகற்ப நேரிசை வெண்பா)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

வாய்பாடு : மா மா காய்  மா மா காய்

குறையே யில்லாத் தமிழ்மொழியே!

              குன்று தோறும் மணப்பாயே!

கறையே யில்லாத் தாய்மடியே!

              கொட்டிக் கிடக்கும் ஆழ்கடலே!

முறையாய்  பயின்று வந்தாலே

              மகிழ்ச்சிப் பெற்று வாழ்வோமே!

 நிறைவாய் மனமும் பெற்றிடவே

              பொங்கு தமிழைப் பாடுவோமே!

கவிஞர் முனைவர் க.லெனின்

ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts





நீங்கள் வாழ்வில் உயர்வது உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையில்தான் உள்ளது. ஆதலால் சமுதாயத்தில் உயர்வதற்கு உங்களின் உடல் ஒத்துழைக்கின்றதா? கவனியுங்கள். மனம், மூளை, கண்கள், கைகள், கால்கள் என்று அனைத்தும் உங்களுக்கு உழைக்க தயாராக இருக்கின்றனவா? இந்தக் கேள்விக்கு ஆம் என்பது பதில் என்றால் நிச்சயம் நீங்கள் ஹீரோதான்.

        தொடுக்கப்பட்ட வினாவிற்குப் பலரின் பதில் இல்லை என்றே வரும். வெற்றிபெற வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் அதிகாலையில் கண்கள் உறக்கத்தைத் துறக்க மறுக்கும். கால்கள் எழுந்து நடக்க தயங்கும். உடல் சோம்பலில் சுகம் கண்டு செயல்பட மறுக்கும். இவ்வாறு உங்களின் உறுப்புகளே உழைக்க மறுத்தால் மற்றவர்கள் எவ்வாறு அக்கரை கொள்வார்கள். எனவே நீங்கள் பிறந்த இச்சமுதாயத்தில் மாற்றப்பட வேண்டியவை நீக்கப்பட வேண்டியவை என்று எத்தனையோ பொதிந்துள்ளன. அந்த மாற்றங்களை இளைஞர்களே கொண்டு வரலாம். அவ்வாறு சமுதாயத்தின் மாற்றத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு மாறப்போகும் காட்சியை இப்போதே உங்கள் மனக்கண்களால் காணுங்கள். எந்த நேரமும் அதே சிந்தனையுடனே உலவுங்கள். உறங்கும் போதும் அதே காட்சிகளைக் கனவிலும் கண்டீர்களேயானால், உங்களின் இலட்சிய பாதையை நோக்க உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் செய்யும் கைமாறு

       மனதில் நற்சிந்தனைகள் தோன்றி அவை செயலாக உருவெடுக்கும் போது துணையாக யாரும் இல்லையே என்று தோன்றும். மற்றவர்களை உதவிக்கு அழைக்கலாமா என ஏங்கும். வேண்டாம் யாரும் உங்களுக்கு உதவ வரவேண்டாம். மற்றவர்களுக்காகக் காத்திருந்தால் மணித்துளிகள் விரையமாகும். உலகில் எவற்றை இழந்தாலும் பெற்று விடலாம். ஆனால் உயிர்போன்ற நேரத்தை, நாட்களை இழந்தால் மீண்டும் பெற இயலாது. செயலைச் செய்ய தொடக்கத்தில் இவ்வாறெல்லாம் நடக்கும். நீங்கள் தொடர்ந்து செயல்பட்டால் நீரில் எழுதப்பட்ட எழுத்து போல கஷ்டங்கள் காணாமல் மறைந்து விடும். “தயங்கினால் உடலும் சுமைதான். எழுந்து நடந்தால் இமயமும் உங்கள் காலடியில் தான்” தேங்கி கிடக்கும் தண்ணீர் நாற்றமெடுக்கும். ஓடிக்கொண்டிருக்கும் நீரே தூய்மையானது. எனவே உங்களின் சிந்தனைகளைச் சமுதாய மாற்றத்திற்காகப் பயன்படுத்துங்கள். உங்களின் சிந்தனைகள் உதாரணமாக, நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் ஏழ்மையில் இருப்பவர்களை முன்னேற ஒருவழியை ஏற்படுத்தி அவர்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நினைக்கலாம். உமது சமுதாயத்தைப் பிச்சைக்காரர்களே இல்லாத ஒன்றாக மாற்ற வேண்டும் என எண்ணலாம். இளைஞர் தீயவழியில் செல்லாமல் நல்வழியைப் பின்பற்ற மார்கத்தைத் தேடலாம். இவ்வாறு எத்தனையோ உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மற்றவர்க்காகச் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றாமல் உங்களின் சமுதாயத்திற்காக உங்களை மனிதனாக உருவாக்கிய இயற்கைக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு என்று கடமையாற்ற வேண்டும்.

மேன்மை தரும் இலக்குகள்

          உங்களுக்குப் பிடித்த ஆசை சமுதாயத்திற்கு ஒரு வளர்ச்சியை பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும். தனிப்பட்ட உங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியை தரும் மாற்றத்தை உண்டு பன்னக்கூடாது. அது சுயநலம் என்ற பெயரில் தள்ளப்பட்டு விடும்.

        உதாரணமாக ரைட் சகோதரர்கள் பறவைகள் போல பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசை உலகத்தில் உள்ள மனித சமுதாயமே பறப்பதற்கு வழிவகுத்தது. கடின உழைப்பைக் கொண்டு பல போராட்டங்களின் இறுதியில் அடைய வேண்டியது பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும்.

        மற்றவர்கள் உங்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ! நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள். உதவும் இடத்தில் இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். கொடுக்கும்கை மேலிருக்கும் வாங்கும்கை தாழ்ந்திருக்கும். எனவே உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். பல வீடுகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு சன்னல் இருக்கும் அதற்கு எதிராக இன்றொன்றை வைப்பார்கள் காரணம் வெளியில் செல்ல வழி இருந்தால் மட்டுமே காற்றும் கூட உள்ளே நுழையும். உழைக்க தயாராக இருந்தால் மட்டுமே சில ஆக்கச்செயல்கள் உங்களை வந்து சேரும். ஒரு பிரச்சனை உங்களை தேடி வருகிறது என்றால் அதனை தீர்வு காணும் மார்க்கமும் உங்களிடமே உள்ளது என்பது பொருளாகும். எவற்றைக் கொண்டும் அச்சம் கொள்ளலாகாது. வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று உங்களின் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும், நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதன் பயன் உங்களையே வந்து சேரும்.

        ஆயிரமாயிரம் பசுக்கள் நிறைந்துள்ள கூட்டத்தில் விடப்பட்ட கன்று ஒன்று அதன் தாய்ப்பசுவைச் சென்று அடைந்துவிடும். அந்தத் தன்மை கன்றுக்கு உண்டு. அதைப்போன்று செய்யும் செயலின் பலன் சேர்வது உறுதி. பெய்த நீரானது பள்ளங்களை நோக்கியே செல்லும், சென்று அவற்றை நிறைவடையச் செய்யும். அதைப்போல உங்களின் இலக்குகளால் ஆக்கச் சிந்தனைகளால் இந்தச் சமுதாயத்தை நிறைவடையச் செய்யுங்கள்.

உங்களின் உள்ளே உன்னதம்

             இந்த உலகத்தில் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் செயல்களைச் செய்யும் ஆக்கசக்தி உங்களிடமே உள்ளது. இதை உணர்தல் வேண்டும்.

       ஒரு காட்டில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவனுக்கு பசி எடுத்தது. அவ்வழியில் ஒரு மரத்தில் பழங்கள் பழுத்து தொங்கின. அதைப்பார்த்த அவன் ஓடிச்சென்று மரத்தில் ஏறி பழங்களைப் பறித்து தின்றான். பின்னர் கிளையின் நுனியில் இன்னும் கனிந்த பழங்கள் தென்பட அந்த நுனிப்பகுதிக்கு செல்ல கிளை ஒடிந்து கீழே விழப்போனவன் அடுத்த ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு தொங்கினான். அங்கிருந்து தரை சிறிது தூரமாகத்தான் தெரிந்தது. அவன் பயத்தில் அலற ஆரம்பித்தான். நடுங்கினான் என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்த ஆரம்பித்தான். அந்த அலறல் காடு முழுவதும் கேட்டது. சில நிமிடங்களில் அங்கு ஒருவர் வந்தார். இவன் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பதற்றத்துடன் கத்தினான். கீழே இருந்த நபர் இவன் மீது ஒரு கல்லை விட்டெறிந்தார். இவனுக்கு கோபம் வந்தது “என்னை காப்பாற்றச் சொன்னால் கல்லால் அடிக்கிறாயா?” என்று கேட்டான். மீண்டும் அந்த நபர் இன்னொரு கல்லையும் விட்டெரிந்தார். அவனுக்கு கோபம் வந்து “இரு வருகிறேன். உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மரத்தின் சிறிது மேலுள்ள கிளையைப் பற்றிக்கொண்டான். மீண்டும் அந்த நபர் ஒன்றும் பேசாமல் கல்லை எடுத்து அவன்மீது எறிந்தார். உடனே மரத்தில் இருந்த அவன் கீழே இருக்கும் நபரை அடிப்பதற்காக மெதுவாக எம்பி மேலுள்ள கிளையில் தன்காலை வைத்து ஏறிவிட்டான். பின்னர் கோபத்துடனே சரசரவென்று மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அடிக்கச் சென்றான். “ஏன் என்னை கல்லால் அடித்தாய்” என்று அதட்டினான். அந்த நபர் “நான் உன்னை அடிக்க வில்லை காப்பாற்றினேன் எவ்வாறென்றால் மரக்கிளையில் தொங்கும்போது உங்கள் மனம் பயத்தில் மூழ்கியிருந்தது. உடல் வியர்த்தது. கால்கள் நடுங்கின. மேலே ஏற இயலாமலும் கீழே இறங்க முடியாமலும் கத்தினாய். நான் கல்லால் அடித்ததும் அந்தப் பயம்நிலை மாறி கோபம் வந்தது. நடுக்கம் மாறி மேலே ஏறுவதற்கான வேகம் வந்தது. கீழே இறங்கும் நிதானம் உண்டானது. நான் கல்லால் அடிக்கவில்லை என்றால் நீ பயத்தால் கத்திக்கொண்டேதான் இருப்பாய் இறங்க மாட்டாய். இறங்கும் சக்தி உன்னிடமே இருந்தது. ஆனால் அதை நான்தான் வெளிக்கொணர்ந்தேன். எனவே நான் தான் உன்னை காப்பாற்றினேன்”. என்றார்.

         இவ்வாறு உலகில் உள்ள ஆக்கங்கள் எல்லாமே செய்து முடிக்கும் தன்மை மனிதர்களிடம் உள்ளது. ஆனால் பலருடைய வாழ்வில் அந்த மாதிரியான நிகழ்வு நடப்பதே இல்லை. அந்த ஆக்கசக்தியை பத்திரமாகவே வைத்துக் கொள்கிறார்கள்.

தீமையற்றவை நல்லவையே

       தீமையை ஏற்படுத்தாத ஒவ்வொரு சிந்தனையும் ஆக்கச்சிந்தனையே ஆகும். பலர் வாழ்வில் வளர்ந்து காதல் செய்து திருமணம் புரிந்து குழந்தையைப் பெற்று காலம் முடிந்து மறைந்து விடுகிறார்கள். இது என்ன வாழ்க்கை. இம் மாதிரியான வாழ்க்கையை மிருகங்களும் வாழ்கின்றன. எனவே மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ வேண்டும்.

        இவ்உலகில் எத்தனையோ உயிர்களைப் பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் குறைந்த அறிவுடன் பிறக்க மனிதர்கள் மட்டும் ஏன் ஆறறிவு படைத்த சிந்தனைதிறன் மிக்கவராகப் பிறக்க வேண்டும்? சிந்திக்க வேண்டாமா? மனிதனிடம் மட்டுமே மற்ற உயிர்களையும் காப்பாற்றும் திறன் உள்ளது என்பதுதான். மனிதன் இந்தப் பிறவியில் மட்டுமே மற்றவர்களுக்கு நன்மை செய்யும் திறன் படைத்தவன். இதை பலர் உணர்வதில்லை. இந்த மனிதனை படைத்த பிறகு எந்த உயிரையும் இறைவன் படைக்கவில்லை. காரணம் மனிதனே எல்லா உயிர்களையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதாலேயே ஆகும்.

எனவே இலக்கு என்பது மற்றவர்களுக்கு சமுதாயத்திற்கு பயன்படுமாறு இருக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கச்சிந்தனைகள் மனதில் தோன்றி நல்வழி பிறக்கும்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

தமிழர் பண்பாட்டில் வெற்றிலை | Betel in Tamil Culture

வெற்றிலை என்றால் என்ன? | வெற்றிலைக்கதையும் காரணமும் | வெற்றிலையின் வகைகள் | வெற்றிலையின் பகுப்பு முறைகள் | இலக்கியங்களில் வெற்றிலை | வெற்றிலை வளர்ப்பு | கொடி பதியம் போடுதல் | செம்பக்கால்| பாக்குவிதை நடுதல் | குத்தகை முறை| கொடி இறக்குதல்| உரமும் பாதுகாப்பும் | விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் | ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் | ஏணி | வெற்றிலைக்கிள்ளுதல் | வெற்றிலை விற்பனை நிலை | மண்டி |சந்திக்கும் பிரச்சனைகள் |கெடு வெற்றிலை | வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்| பழக்கவழக்கங்கள் |வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

முன்னுரை

      மண்ணில் விதைத்த விதை விருச்சமாய் வளர்ந்து மக்களுக்குப் பல நன்மையே செய்கின்றன. செடி கொடி மரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு பலனை நமக்கு அளித்து வருகின்றன. இலை பூ காய் கனி என அனைத்துமே உயிர்கள் வாழ் துணையாக நிற்பதோடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் செய்கின்றன. தானியங்கள், கிழங்குகள், காய்கள், கனிகள் போன்ற வரிசையில் இலை என்னும் சொல்லக்கூடிய கீரைவகைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலையில் உண்டாகக் கூடிய கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளை உணர முடிகின்றது. இச்சுவையானது பல்வேறு மருத்துவக்குணங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றன. அவ்வகையில் கார்ப்புச் சுவையுடைய வெற்றிலை என்னும் கொடியானது தமிழகத்தில் ஆங்காங்கு பயிரிட்டு வருகின்றனர். தமிழ் பாரம்பரியத்தில் வெற்றிலைக்கு முதல் மரியாதை தரப்படுகின்றது. மங்கல நிகழ்ச்சிகளில் தாம்பூலம் என்கிற பெயரில் வெற்றிலையை முதன்மை படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலைக்கொடியின் வளர்ப்பு பயன்பாடுகள் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையின்கண் காண்போம்.

வெற்றிலை என்றால் என்ன?

         வெறுமை + இலை, வெற்று + இலை = வெற்றிலை. இங்கு வெற்று என்பது வெற்றி என்பதைக் குறிக்கின்றது. வெற்றிலைக்கால், வெற்றிலை தோட்டம் என்பார்கள். உலகினில் பல்வேறு இலைகள் இருப்பினும் இவ்வெற்றிலைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதே ஆகும். வெற்றிலை Piper Betle என்கின்ற தாவரவகையாகும். ஆங்கிலத்தில் Betel Pepper என்பர். மிளகு வரிசை, மிளகுக்குடும்பத்தைச் சேர்ந்தது. வெற்றிலைக்கு வேறுப்பெயர்களாகத் தாம்பூலம், நாகவல்லி, நாகினி, தாம்பூலவல்லி, சப்த ஷீரா, புஜங்கலதா என்று வடமொழியிலும் வெற்றிலை, வெள்ளிலை, மெல்லிலை, மெல்லடகு, திரையல், வேந்தன், இகனி எனத் தமிழிலும் உண்டு. “வெற்றிலைக்குத் தமிழகம் பூர்வீகம் இல்லை என்கின்றார்கள். இவ்வகையான தாவரத்தை மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்”1 இந்தியாவைத் தவிர மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகளவில் தமிழகத்தில் வெற்றிலை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கருர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் பொன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

வெற்றிலைக்கதையும் காரணமும்

             வெற்றிலையானது மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றாலும் தமிழகத்தில் அதற்கென்று கதை ஒன்றும் உள்ளது. சங்ககாலத்தில் இரண்டு ஆடு மேய்கும் சிறுவர்கள் தங்களின் ஆடுகளைக் காட்டில் எங்கு கொண்டுப்போய் விட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அந்த ஆடுகள் மீண்டும்மீண்டும் சென்று மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை இரண்டு சிறுவர்களுக்கும் ஆடுகள் வழக்கமாக நிற்கும் இடத்திற்கு யார் முதலில் செல்வது என்பது போட்டியாக நடந்தது. ஒரு சிறுவன் ஆடு நிற்கும் இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்று அங்கு பக்கத்தில் படர்ந்திருக்கும் கொடியிலுள்ள இலையைப் பறித்து நான்தான் வெற்றிப்பெற்றேன் என்றான். வெற்றிப்பெற்ற சிறுவன் ஊருக்குள்ளே சென்று வெற்றிப்பெற்றமைக்கு அடையாளமாகத் தன்கையில் வைத்திருந்த இலையைக்காண்பித்தான். அதைபார்த்த பெரியோர்கள் நீ வெற்றிப்பெற்றதால் வெற்றி + இலை = வெற்றிலை எனக் கூறியுள்ளனர். மேலும் வெற்றிலையைச் சாப்பிட்ட ஆடுகளுக்கு எந்தவொரு நோயும் வராமல் இருப்பதைக் கண்டு அவர்களும் சாப்பிடலாயினர்.

         பூமியில் வெற்றிலைக்கொடி இல்லாமல் இருந்ததாம். இந்திரலோகத்து அரம்பைகளில் ஒருத்தி சாபம் பெற்றுப் பூமிக்கு வந்தாளாம். அவளோ தாம்பூல ரசிகை. பூமியில் வெற்றிலை கிடையாது என்று அவளுக்குத் தெரியும். பூமிக்கு வெற்றிலைக்கொடியைத் தனது மறைவிடத்தில் ஒளித்துக்கொண்டு வந்தாளாம். ஆகவேதான் வெற்றிலைக்கு அதன் தற்போதைய வடிவமும் மணமும் கிடைத்ததாம். அந்தக்கதையை வாசித்த பலர் வெற்றிலையை முகர்ந்து பார்த்துக் கிளர்ச்சியுற்று ஆமோதித்ததுண்டு. (கி.ரா. கதைகளிலிருந்து)

       இவ்வாறாக வெற்றிலையைப் பற்றிய கதைகளும் அவை இவ்வுலகிற்கு வந்த காரணங்களும் மக்களிடையே நம்பப்பட்டு வருகின்றன.

வெற்றிலையின் வகைகள்

  • வெள்ளை வெற்றிலை என்கிற கற்பூர வெற்றிலை – இளம் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • கருப்பு வெற்றிலை – கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.
  • காப்பி வெற்றிலை – பளிச்சென்று மின்னுவது போல் இருக்கும். (தங்க நிறத்தில்)
  • பேகருப்பு வெற்றிலை – கருப்பு அதிகமுள்ள பச்சையாக இருக்கும்.

இவ்வெற்றிலையானது அனைத்து வகைகளிலும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.

1. கொழுந்து வெற்றிலை : கொழுந்து வெற்றிலை என்பது தளிராக இருக்கும்போதே பறித்துக்கொள்வது.

2. முத்தின வெற்றிலை : நன்றாக உருவான பிறகுப் பறித்துக்கொள்வது.

வெற்றிலையின் பகுப்பு முறைகள்

1. கொடியில் தனியாகக் கிளைவைத்து இருப்பது பாலை வெற்றிலை ஆகும். அதாவது நல்ல வெற்றிலை என்பார்கள்.

2. கொடியிலே வெற்றிலை வருவது சக்கை வெற்றிலை என்பார்.

3. கோணலாகவும் காய்ந்ததும் வேண்டமென்று ஒதுக்குவதும் கழுவன வெற்றிலைகள் ஆகும்.

105 வெற்றிலை (100 – 105 வரை தோரயமாக) – 1 கவுளி

2 கவுளி சேர்ந்தது – 1 கட்டு

30 கட்டு (அதாவது 60 கவுளி) – 1 வத்து

1 முழம் என்பது – 4 கொடி

200 கொடி சேர்ந்தது – 1 கட்டு

50 முழம் சேர்ந்தது – 1 கட்டு

இவ்வாறாக வெற்றிலையின் பகுப்பு முறைகள் வைக்கப்பட்டுள்ளன.

இலக்கியங்களில் வெற்றிலை

         வெற்றிலை பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் நிறையவே காணக்கிடக்கின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெற்றிலை சம்பந்தப்பட்ட குறிப்புகளும் மக்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் விதமும் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. மதுரை நகர வீதிகளில் நாளங்காடியில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அங்கு பண்டங்களை வாங்க மழவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிகின்றனர்.

“நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்” ( மதுரை.401)

           மழவர்கள் நன்கு வளர்ந்த கொடியிலிருந்து பறிக்கப்பட்ட வெற்றிலையை அங்காடியிலிருந்து பெற்று சங்கை சுட்டு உண்டாக்கிய சுண்ணாம்பையும் சீவிய பாக்கையும் சேர்த்து வாயிலே எச்சில்ஊற மென்று சுவைத்தார்கள். அப்படிப்பட்ட மழவர்கள் பண்டங்களை வாங்கும் வரையில் உயர்ந்த மாடங்களின் நிழலிலே தங்கியிருந்தார்கள் என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இதன்மூலம் வெற்றிலையோடு பாக்கும் சுண்ணாம்பும் மதுரையில் நாளங்காடி தெருவில் விற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

“உண்டுஇனிது இருந்த உயர்பே ராளர்க்கு

அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்த”

                                                                                                                          (சிலம்பு. கொலைக்களக்காதை.54-56)

     மதுரையில் ஆய்ச்சியர்கள் உடனிருந்து கவுந்தியடிகளின் வழிகாட்டுதலின்படி தன்னுடைய கணவன் கோவலனுக்குக் கண்ணகி இனியதும் சுவையுடையதுமாகிய உணவினைச் சமைக்கின்றாள். சாப்பிட்டு முடித்த கோவலனுக்கு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியும் பாக்கும் சேர்த்துச் சுருளாக மடித்துத் தருகின்றாள் கண்ணகி என்கிறார் இளங்கோவடிகள்.

“அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;” (கம்ப.காட்சிப்.15)

        மெல்+அடகு = மென்மையான வெற்றிலை. இலங்கையில் சிறைபட்டிருக்கும் சீதை கூற்றாக மேற்கண்ட வரி அமைந்துள்ளது. என்னுடைய கணவன் இராமபிரான் சாப்பிட்ட பின்பு வெற்றிலையை மடித்துக்கொடுக்க நான் அவருடன் இருக்கவில்லையே என வருந்துவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார்.

“சந்த பூக்கச் சாடை பாக்கிலை

கஞ்சுக நெய் ஆய்ந்த விவரெண் மராயத்தார்”

                                                                                             (சிலம்பு.இந்திரவிழா ஊரெடுத்த.157) என்கிறது.

வெற்றிலை வளர்ப்பு

       வெற்றிலை வளர்ப்புப் பகுதியைத் தோட்டம் என்கின்றனர். வெற்றிலை சாகுபடி என்பது மற்ற விவசாயிகளைக் காட்டிலும் தனித்துவமானது ஆகும். ஏனெனில் வெற்றிலை வளர்ப்பில் காலம், சூழ்நிலை, மண், தண்ணீர் போன்றவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகுந்த போராட்டங்களையேச் சந்தித்து வருகின்றனர். கருமண், செம்மண், சேடைமண் உள்ள இடங்களில் வெற்றிலைப்பயிர்கள் நன்றாக வளரும் என்கிறார்கள் வெற்றிலை விவசாயிகள். குறிப்பாக ஏரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மண் அதிக சத்துகள் நிறைந்ததாகவும் இலைகள் நன்றாக வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

          ஒரு செவ்வக வடிவிலான நிலத்தை டிராக்டரில் உழுவதைக் காட்டிலும் மாட்டு உழவுக்கொண்டு ஆழமாக உழ வேண்டும். அதுவும் முதலில் கிழக்குத் திசையிலிருந்து ஏர் ஓட்டினால் அடுத்து, தெற்கிலிருந்து ஓட்ட வேண்டும். அடுத்து மேற்குத்திசை, வடக்குத்திசை என மொத்தம் நான்குமுறை மாட்டு உழவால் ஆழமாக உழவேண்டும். ஒரு பக்கமாகத் தண்ணீர் செல்வதற்குப் பாத்திக்கட்டி தெற்கு வடக்காக ஒன்றடி வாக்கில் வாய்க்கால் போட வேண்டும். நிலத்தில் இரண்டரை அடிவிட்டு பாத்திக்கட்ட வேண்டும்.

கொடி பதியம் போடுதல்

         பாத்திப்போட்டவுடன் தண்ணீரானது நிலம் முழுவதும் நன்றாகப் பாய்ந்து ஊறவேண்டும். முதலில் தங்களுடைய மண்ணில் எந்த வெற்றிலையைப் போட்டால் அதிக மகசூல் கிடைக்கும் என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு பதியம் போடக்கூடிய கொடியை ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தோட்டத்திலிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கியும் கொள்கின்றனர்.

         பதியம் போடுதல் என்பது அனைவராலும் செய்ய முடியாது. இத்தொழிலில் பலகாலம் இருந்து பழக்கம் பட்டவர்களே பதியம் போடுகின்றனர். மேலும் அவர்களின் கையில் பதியம் போட்டால் வெற்றிலை நன்றாக வளரும் என நம்பிக்கையும் கொள்கின்றனர். அதற்குச் ‘சீவிக்கட்டுதல்’ என்று அழைப்பர்.

      நிலத்தைச் சுற்றிலும் பாக்கு மரத்தாலான பட்டையை இறுக்கிக்கட்டி தென்னங்கீற்றைக் கொண்டு கட்டுகின்றார்கள். இந்த வேலியானது காற்றிலிருந்து வெற்றிலைக்கொடிகளைப் பாதுகாக்கும் என்கின்றனர். மேலும் வேலியைச் சுற்றிலும் ஐந்து அடிக்கு ஒன்றாக வாழைக்கன்றினை நட்டுத் தோட்டத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுகின்றனர்.

முதலில் அகத்தி, சௌண்டல் மற்றும் முருங்கை விதையை ஊன்றுகின்றனர். இது ஆடி மாதத்தில் துவங்கப்படுகிறது.  அகத்தி நன்றாக வளர்ந்த பிறகு ஐப்பசியில் வெற்றிலைக்கொடி பதியம் போடப்படுகிறது. சௌண்டல் செடியானது கொஞ்சநாள் விட்டுத்தான் வளரும். வெற்றிலைக்கொடியை எடுத்துக்கட்டுவதற்கு அகத்தி மரம் தேவைப்படுகிறது. அகத்தி மரம் மூன்று வருடங்களுக்குள் பட்டுப்போய் விடும். அதன்பிறகு சௌண்டலில் சேர்த்துக் கொடிக்கட்டுவார்கள். ஒருசில நேரங்களில் மூங்கில் குச்சிகளை மண்ணில் ஊன்றி கொடி கட்டப்படுகின்றன.

    வெற்றிலைக்கு நிழல் அவசியம் என்பதால் அகத்தியையும் சௌண்டலையும் முருங்கையும் துணைப்பயிர்களாகப் பயிரிட்டு வருகின்றனர்.

செம்பக்கால்

       இளம்பருவ வெற்றிலை கொடியைச் ‘செம்பக்கால்’ என்பார். ஆரம்பக்கட்ட வளர்ச்சி என்பதால் பாத்துப்பாத்துச் செய்தாக வேண்டும். நான்கு நாளைக்கு ஒருமுறை கட்டாயம் தண்ணீர் கட்ட வேண்டும். வெற்றிலை கொடிக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ந்தால் கொடி அழுகிவிடும். மண்ணில் ஈரம் இல்லையென்றால் கொடி காய்ந்துவிடும். அதனால் எப்போதும் கொடிக்காலில் ஈரப்பதத்துடனே இருப்பது அவசியமாகிறது. ஏனெனில் வெற்றிலை தோட்டம் மிகுந்த வெப்பசலனமாக இருக்கும். தொட்டத்தில் வேலை செய்பவர்கள் வேட்டி சட்டையில்லாமல் கோவணம் அல்லகு கால் டவுசர் மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள்.

பாக்குவிதை நடுதல்

     வெற்றிலைப் பயிரோடு பாக்குக் கன்றுகளை நட்டு ஊடுபயிராக வளர்க்கவும் செய்கின்றனர். பாக்குப்பழங்களாக இருப்பின் தைமாதம் விதைப்போடுவார்கள். ஒருவேளை பாக்குக்கன்றுகளாக இருப்பின் வெற்றிலைக்கொடி பதியம்போட்டு அடுத்த ஆடியில் நடப்படுகின்றது. வெற்றிலை தோட்டம் அழிந்தவுடன் பாக்கு மரக்கன்றுகளை வளர்த்து அதிலிருந்து பாக்குக்காய்களை உற்பத்திச் செய்கின்றனர்.

குத்தகை முறை

      நிலம் வைத்திருப்பவரிடமிருந்து விவசாயி ஒருவர் வெற்றிலை கொடி நடுவதற்குக் குறைந்தபட்சம் நான்கு வருடத்திற்குக் குத்தகை கேட்பார். குத்தகைக்குப் பணம் மட்டும் பெற்றுக்கொள்வாரும் உண்டு. பாக்குக்கன்றுகளை வளர்த்தும் பணமும் கொடுக்கவேண்டும் எனவும் குத்தகை பேசப்படும். குத்தகைமுறை என்பது ஆளுக்காளுக்கு மாறுபட்டு நிற்கும். பாக்கு மரங்கள் குழை தள்ளியவுடன் நிலவுரிமையாளரிடம் நிலத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும். காய்ந்துபோனது அனைத்தும் குத்தகை எடுத்தவருக்கும் பச்சையாகவுள்ள அனைத்தும் நிலவுரிமையாளருக்கும் பொருந்தும் எனவும் குத்தகை பேசப்படுகிறது. குத்தகை என்பது கூட்டாகவும் தனியாகவும் செய்யப்படும். பொதுவாக அரை ஏக்கர்க்கு இரண்டு ஆண் விவசாயிகள் கட்டாயம் தேவைப்படுகின்றனர். இதனை ’தோட்டம் பேசுதல்’ என்றும் சொல்லப்படுகிறது.

கொடி இறக்குதல்

       முதலில் செம்பக்கால் வெற்றிலையைக் கிள்ளயவுடன் கொடியை இறக்கி வைக்கவேண்டும். ஆடியில் பதியம் போட்டால் அடுத்த ஆடியில் கொடி இறக்குவார்கள். வெற்றிலை அகத்தியிலும் சௌண்டலிலும் நாரால் கட்டப்பட்டிருக்கும். கொடிக்கு இடதுப்பக்கம் ஒருஅடி குழி வெட்டி அகத்தியில் கட்டியிருக்கும் கொடியை எடுத்து மண்ணில் பதியம் போடுவார்கள். எடுத்துக்கட்டின கொடி என்பது அனைத்து அகத்தி மரங்களிலும் சரியாகப் பொருந்தி நேராகக் காணப்படும். இந்தச் சமயங்களில் ஏரியிலிருந்து மண்ணைக் கொண்டுவந்து கொட்டி வெற்றிலைக்கு உண்டான சத்தினை அதிகப்படுத்துவார்கள். ஆறுமாதம் கழித்து வலதுபுறமாகக் கொடி இறக்குவார்கள். அப்போது இவ்வெற்றிலைக்கொடியானது ‘முத்தினக்கால்’ என்று அழைக்கப்படும்.

உரமும் பாதுகாப்பும்

     மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணமே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஏரிமண், களிமண், சேடை மண் ஆகியவற்றையும் பிற இடங்களிலிருந்து எடுத்துவந்து கொட்டப்படுகிறது. இதனால், மண் சத்து நிறைந்தாகவும் வெற்றிலை கொடிகள் நன்கு வளர்வதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இங்கு வெற்றிலையில் நோய் ஏற்பட்டால் மோரில் தண்ணீர் கலந்து தெளித்தலும் மொளகா பவுடர், சாம்பல் போன்றவைகளைத் தூவுதலும் நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர். ஒருசில விவசாயிகள் மட்டும் காம்ப்ளக்ஸ் (மருந்து) வாங்கி தெளிப்பதும் உண்டு. காம்ப்ளக்ஸ் தெளித்தால் ஒருவாரத்திற்கு வெற்றிலை கிள்ள மாட்டார்கள்.

விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள்

வெற்றிலை வெட்டி (இனியவை கற்றல்)
இனியவை கற்றல் – தமிழர் பண்பாட்டில் வெற்றிலை

கேள்விக்குறி வடிவிலான கத்திகள் ( பெரிதும் – சிறிதும் ), வெற்றிலை வெட்டி (நகவெட்டி, வெற்றிலை வெட்டும் கருவி), மண்வெட்டி, கடப்பாறை, ஆட்டுக்கால் ஏணி அல்லது கோஷம் ஏணி போன்றவைகள் அனைவரது வீட்டிலும் இருக்கும். அக்கால வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் அனைவரும் சைக்கிளையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தச் சைக்கிளில் வெற்றிலையும் சிறியதாகக் கத்தி ஒன்றையும் எப்போதும் வைத்தே இருப்பார்கள்.

          வெற்றிலை கத்தி                    இனியவை கற்றல்

ஆட்டுக்கால் ஏணி (அ) கோஷம் ஏணி

         ஏழுபளுவு உள்ள ஏணியில் மேலே ஓட்டையிட்டு இரண்டு கம்புகளாக முன்பகுதியில் நிறுத்தப்படும். தனியாக நிற்கும் ஏணிக்கு பாதுகாப்பாக இக்கொம்புகள் நிற்கின்றன.

வெற்றிலைக்கிள்ளுதல்

     வெற்றிலைக்கிள்ளும்போது மேற்கூறிய பகுப்புமுறைகளில் எவ்வகையான வெற்றிலையைக் கிள்ளப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றிலை வெட்டியை வலதுகையில் போட்டுக்கொள்ள வேண்டும். கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து வெற்றிலையைக் கிள்ளவேண்டும். கிள்ளிய வெற்றிலையை இடதுகையில் ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். அடுக்கிய வெற்றிலைகள் நூறிலிருந்து நூற்றைந்து வரையாக இருக்கலாம். இதை கவுளி என்பர். இப்படியாக அறுபது கவுளிகளைக் கொண்டது ஒரு வத்தாகக் கருதப்படுகிறது. ஒரு வத்தாகத்தான் தென்னங்கீற்றால் கட்டி விற்பனைக்குக் கொண்டுச்செல்வார்கள். இதனை ‘தென்னங்கோட்டை ’ என்பார்கள்.

வெற்றிலை விற்பனை நிலை

        வெற்றிலை விற்பனை என்பது காலச்சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். விவசாயிகள் கிள்ளிய வெற்றிலையை மார்கெட் மற்றும் மண்டி என இரண்டு விதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

அ) மார்கெட்

       அனைத்து விவசாயிகளும் வெற்றிலைகள் கொண்டுவரும் சந்தை ஆகும். அவ்சந்தையில் ஏலம் விடுவதற்கென புரோக்கர்கள் செயல்படுவார்கள். தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் வெற்றிலை வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் வெற்றிலையின் தரம்பார்த்து ஏலம் கேட்பார்கள். இங்கு புரோக்கர்கள் மூலமாகத்தான் வெற்றிலையை வாங்கவோ விற்கவோ முடியும். நூற்றுக்குப் பத்து ரூபாய் வீதம் பிடித்தம் செய்து கொள்வார்கள். பணமும் உடனடியாக விவசாயிகளின் கைகளில் கொடுத்துவிடுவார்கள். மார்கெட் என்பது சுற்றுவட்டாரத்தில் ஒன்றுதான் இருக்கும். விவசாயிகளும் இவற்றைவிட்டால் அடுத்து மண்டிக்குத்தான் செல்லவேண்டும்.

ஆ) மண்டி 

     வெற்றிலை விவசாயத்தில் பழக்கப்பட்டவரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநில வியாபாரிகளை நன்கு அறிதவர்களும் தனியாக வெற்றிலை மண்டி வைத்திருப்பார்கள். இதுபோல் பல நபர்கள் ஆங்காங்கே வெற்றிலை மண்டி நடத்துவார்கள். நாம் யாருடைய மண்டியிலும் வெற்றிலையை விற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய வெற்றிலையை வெளியூர்களில் விற்றுவிட்டு அதற்கேற்றவாறுதான் பணம் கொடுப்பார்கள். இந்த வகையில் பணம் உடனடியாகக் கையில் பணம் கிடைக்காது. இவ்வகையான முறையானது தற்போது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெற்றிலைக்கு நல்லவிலை போகும். மற்ற நேரங்களில் குறைந்த அளவிலேயே விற்கும்.

வெள்ளை வெற்றிலை ரூபாய் 2000 – திற்கு விற்பனை ஆகுமென்றால்,

கருப்பு வெற்றிலை ரூபாய் 2000 – திற்கும்,

சக்கை வெற்றிலை ரூபாய் 4000 – திற்கும் (காலத்திற்கேற்ப)

கழுவுன வெற்றிலை ரூபாய் 600 – க்கும்,

காபி வெற்றிலை சுமார் ரூபாய் 3500 – க்கும் விற்பனை ஆகும்.

        இவற்றில் காபி வெற்றிலை இருபது நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிள்ள முடியும். மற்ற வெற்றிலைகளை இருபத்தைந்து நாட்களுக்குள்ளே கிள்ள முடியும்.

சந்திக்கும் பிரச்சனைகள்

             வெற்றிலை விவசாயிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். தங்களுடைய சொந்தநிலம் என்றால் குத்தகை பிரச்சனை வராது. இல்லையெனில் நிலம் குத்தகை பேசுவதற்கு போதும்போதும் என்றாகிவிடும். நிலத்துக்காரர்கள் பேசின ஆண்டுகள் முடிந்தவுடன் காலிசெய்துவிட வேண்டும் என்பார்கள். அப்போதுதான் நம்முடைய வெற்றிலைப் பயிர் நன்றாக வளர்ந்திருக்கும். இப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது. குத்தகை என்றாலும் இரண்டு நபரோ அல்லது நான்கு நபரோ அதற்குமேலுள்ள நபர்களோ சேர்ந்துதான் குத்தகை எடுப்பார்கள். மொத்தமாகச் செலவு செய்ததற்கு அனைத்து விவசாயிகளும் பணத்தொகையைப் பங்கிட்டுக்கொள்வார்கள். கொடிக்காலின் சரிபாதியாக ஆளுக்காளுக்குப் பிரித்துக்கொள்வார்கள்.

         கூட்டுமுறை விவசாயம் என்பது ஒருப்பக்கம் நல்லதே என்றாலும் சில நேரங்களில் சிக்கலிலும் முடிந்துவிடுகிறது. ஏதாவது ஒருஆள் தோட்டத்தைவிட்டு விலகுகின்றார் எனில் வேறொரு ஆளை அவ்வளவு எளிதாக உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். அப்படியும் வரவேண்டும் என்றால் இங்குள்ள கட்டுப்பாடுகளைச் சொல்லி அதற்கு சம்மதம் பெற்ற பின்னரே அனுமதிப்பர். இல்லையெனில் விட்டுச்சென்ற கொடிக்காலை இருக்கின்ற அனைவரும் பணத்தொகையைக் கொடுத்துவிட்டு சரிப்பாதியாகப் பிரித்துக்கொள்கின்றனர். இவற்றில் யாரேனும் ஒருவரே கூட வாங்குவதும் உண்டு. நிலத்துக்காரர் தன்னுடைய நிலத்தில் நெல், கரும்பு, சோளம் என ஏதாவது பயிரிட்டுயிருந்தால் பகலில் அவர் தண்ணீர் கட்டிக்கொள்வார். அப்படியானால் வெற்றிலை விவசாயிகள் இரவில்தான் தண்ணீர் கட்ட முடியும். உதாரணமாக ஐந்துபேர் கூட்டாக இருக்கின்றார்கள் என வைத்துக்கொள்வோம். முதலில் ஒருவர் மட்டும் இரவு நேரத்தில் அனைவரது கொடிக்காலுக்கும் தண்ணீர் கட்டவேண்டும். நான்கு நாட்களுக்குப் பிறகு இன்னொருவர் தண்ணீர் கட்டுவார். இப்படி ஒவ்வொருவராகச் சுழற்சிமுறையில் தண்ணீர் கட்ட வேண்டும். சிலநேரங்களில் இரண்டு பேர்கூட தண்ணீர் கட்டுகிறார்கள். ஆனால் அதிகப்படியாக இரவில் ஒருவரே தண்ணீர் கட்டுகிறார்கள்.

      இரவுநேரம் என்பதால் இருட்டு, பறவைகளின் சத்தம், விஷப்பூச்சிகள், பாம்புகள் என விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். சிலநேரங்களில் அமானுஷிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன என்று கற்பனையிலோ அல்லது பயத்திலோ காட்டை விட்டு ஓடியும் வந்துள்ளனர்.

கெடு வெற்றிலை

       ஒருவருக்கு இந்த நாளன்று வெற்றிலையைத் தருவேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டால், சரியாக அந்தநாளில் சொன்னச்சொல் தவறாமல் வெற்றிலையைக் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் சரியான சண்டைகளும் வருவதுண்டு. இதற்கு ’கெடு வெற்றிலை’ என்பர். இத்தகுநிகழ்வானது வெற்றிலை விவசாயிகள் புரோக்கர்களிடமிருந்து அவ்வப்போது பணம் பெற்றுக்கொள்வதுண்டு. அப்பணத்தை திருப்பி தரமுடியாமல் வெற்றிலையாகக் கொடுத்துக் கழித்துக்கொள்வார்கள். மாறுபட்டு நின்றால் பணத்தைத் திருப்பிக் கேட்பார்கள். வெற்றிலை தோட்டத்தில் கொடிக்காலில் இந்த இரண்டு கால்களும் கெடு வெற்றிலைக்காக ஒதுக்கப்பட்டது என வைத்துக்கொள்வர்.

வெற்றிலையின் பயனும் மருத்துவக்குணமும்

  • வெள்ளை வெற்றிலையை வாயில்போட்டு மென்று தின்றால் வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கும்.
  • வெற்றிலை என்பது மனித உடலில் ஜீரண சக்திக்கு வழிவகுக்கிறது.
  • வெற்றிலை பாக்கோடு சுண்ணாம்பு சேர்த்து மெல்லும்போது உடலுக்குச் சுண்ணாம்பு சத்துச் சேர்கிறது. இதனால் பற்கள் வலிமையுள்ளதாக மாறுகிறது.
  • இரண்டு வெற்றிலைகள், கைப்பிடியளவு வேப்பிலைகள், அருகம்புல் ஒரு கைப்பிடியோடு அரைலிட்டர் தண்ணிரீல் நன்றாகச் சுடவைத்து அவற்றை வடிகட்டி மூன்று வேளையும் குடித்து வந்தால் சக்கரை நோயானது கொஞ்சகொஞ்சமாய் குணமாகும்.
  • வெற்றிலையோடு மிளகும் தேங்காய்த்துண்டும் சேர்த்து வாயில் மென்று முழுங்கினால் தேள் விஷம் நீங்கும் என்பார்கள்.
  • நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெற்றிலைசாரும் இஞ்சிசாரும் சமஅளவு கலக்கிக் கொடுத்தால் தீரும்.
  • நெஞ்சுசளி உள்ளவர்களுக்கு வெற்றிலையோடு மஞ்சள், மிளகுச் சேர்த்துக் கசாயம் செய்து கொடுப்பதை இன்றளவும் நம் வீடுகளில் பார்க்கலாம்.
  • பாலில் வெற்றிலை சாரை கலந்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
  • வெற்றிலையால் உமிழ்நீர் பெருகும். பசியை உண்டாக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரக்க வைக்கும். காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை வலுபடுத்தும். உடம்பில் நறுமணத்தை அதிகரிக்கும்.
  • யானைக்கால் வீக்கத்திற்கும் வலி நிவாரிணியாகவும் வெற்றிலையானது பயன்படுகிறது.
  • தொடர் இருமலை கட்டுப்படுத்த வெற்றிலையோடு கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் குணமாகும்.
  • வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி உடம்பிலுள்ள கட்டிகளின்மேல் பற்றாகப் போட்டால் கொப்புளங்கள் பழுத்து உடையும்.
  • வெற்றிலைக்கொடியின் வேரைச் சுவைத்து விழுங்கினால் வெங்கலத்தைப்போல் குரல்வளம் பெருகும்.
  • பாம்புக் கடித்தவர்களுக்கு வெற்றிலைச்சாறு கொடுத்தால் விஷம் முறியும். அதனால்தான் நாகவல்லி எனவும் அழைக்கின்றனர்.
  • இரவுப் படுக்கும்முன் வெற்றிலைச் சாறுடன் ஓமத்தைச் சேர்த்துக் குடித்து வர மூட்டுவலி, எலும்புவலி ஆகியவை குணமாகும்.
  • வெற்றிலை இலைகளைத் தலையில் ஒட்டிக்கொண்டால் ஒற்றைத்தலைவலி, தலைபாரம், தலைவலி உடனடியாக நீங்கும்.
  • உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகளைக் கொண்டது.
  • வாய் சம்பந்தப்பட்ட புண்களைக் குணமாக்குகிறது.
  • வெற்றிலையில் நார்ச்சத்து 84.4 சதவீதமும், புரதசத்து 3.1 சதவீதமும் கொழுப்புச் சத்து 0.8 சதவீதமும் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, தயமின், ரிபோபிளேவின், புரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
  • தீக்காயங்கள் பட்ட இடத்தில் கொழுந்து வெற்றிலையைக் கட்ட புண்கள் விரைவில் ஆறும்.
  • சிறுகுழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்படும்போது வெற்றிலை காம்பைக் கிள்ளி ஆசானவாயினுள் நுழைத்து வைத்தால் சிறுதுநேரத்தில் மலம் வெளிப்பட்டுக் குழந்தையின் வயிறு தூய்மையாகும்.
  • வெற்றிலையோடு தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து சொரி, சிரங்கு, படை மீது தடவினால் குணமாகும்.

பழக்கவழக்கங்கள்

வெற்றிலையோடு பாக்குச் சேர்த்து தாம்பூலம் என்கின்றனர்.

சுபநிகழ்ச்சிகளான திருமணங்கள், வரவேற்பு, நிச்சயதார்த்தம், பண்டிகைகள் போன்ற மங்கல நிகழ்வுகளில் தாம்பூலம் என்பதை முன்னிறுத்தியே நடத்தப்படுகிறது.

மணப்பெண்ணின் தந்தையும் மணமகனின் தந்தையும் பாக்கு வெற்றிலையை மாற்றிக்கொண்டால் பாதித்திருமணம் முடிந்துவிட்டது என்றே அர்த்தம். இதற்கு நிச்சயதார்த்த தாம்பூலம் என்றே கூறுவர். இப்படி செய்வது என்பது மரியாதை நிமித்தமாகவும் லட்சுமிகடாஷம் கிடைக்கும் எனவும் நம்பினர்.

வெற்றிலை – பாக்குப் போடுவது ஆண்பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டவுடன் மனைவி கணவனுக்கு வெற்றிலை தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழர் பண்பாட்டில் இருந்துவருவதைக் காணலாம்.

பண்டையக் காலத்தில் தங்களுடைய அழகுப்பொருட்களில் வெற்றிலைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திருந்தனர்.

’வெற்றிலைப்பெட்டி’ என்ற ஒன்றை சிலர் இன்றளவும் வைத்திருப்பதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெற்றிலை பயிரிடப்பட்டாலும் கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குத் தனிச்சிறப்பு உண்டு. “வெற்றிலைக்குக் கும்பகோணம்” என்பார்கள். இதற்குச் ’சேட்டு வெற்றிலைகள்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு.

மொகலாய மன்னர்கள் வெற்றிலை பழக்கத்திற்காகப் பெரும்பணத்தைச் செலவு செய்தார்கள். ஷாஜகான் மன்னர் தனது மகளின் தாம்பூலச்செலவுக்காகச் சூரத் மாநிலத்தின் வருவாய் முழுவதும் ஒதுக்கி வைத்தார் என்ற செய்தியும் இருக்கிறது.

மார்க்கோபோலோ, ஷான்மார்ஷ் போன்ற சர்வதேச பயணிகள் இந்திய மக்களின் வெற்றிலைப் போடும் பழக்கத்தைப் பற்றிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வெற்றிலை பற்றிய பொதுக்கருத்துகள்

வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டால் கையால் எடுத்துத் தரக்கூடாது. ஏனெனில் நள்ளிரவில் பேய்கள் அழகிய சினிமா நடிகைகள்போல் வேடம் புனைந்து வந்து வழிமறித்து வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்குமாம். விரலால் எடுத்துக்கொடுக்க கூடாது. கத்தியால் எடுத்துத் தரவேண்டும்.

வெற்றிலையில் ஆண் – பெண் வெற்றிலையும் உண்டு என்கிறார்கள். வெற்றிலையின் பின்பக்கம் காம்புக்குக் கீழே கோடு நேர்ச்சரியாக இருந்தால் பெண் வெற்றிலை எனவும், கோணல்மானலாக இருப்பின் ஆண் வெற்றிலை எனவும் அழைக்கின்றனர்.

கிராமங்களில் வயல், தோட்டம், காடு, விளைநிலங்களில் வேலைப்பார்க்கும் ஏழைமக்கள் ஓய்வு நேரத்தில் வெற்றிலைப்போடுவதும் பகிர்ந்து அளிப்பதும் இனாம் கேட்பதும் தினந்தோறும் நடப்பவையே ஆகும்.

வெற்றிலைப் போடும் பழக்கம் தமிழகத்தில் நிறைய மக்களுக்கு உண்டு.

ஆடைகளில் விழும் வெற்றிலைக்கரையானது ‘அம்மா என்றாலும் ஆத்தா என்றாலும் போகாது!’

நல்ல உணவுக்குப்பின் தாம்பூலம் தருவது நன்று.

வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களிடையே பெரியோர்கள் சொல்லி வைப்பார்கள்.

முடிவுரை

        தமிழர்ப்பண்பாடு என்பது பல்வேறு காரண காரியங்களாலும் பழக்கவழக்கங்களாலும் நாகரீகப் பண்பாட்டோடு இணைந்து வரையறுக்கப்பட்டது. தமிழ்ப்பேசும் மக்கள் ஒவ்வொருவரும் நம்முடைய பாரம்பரியத்தைக் காக்க போராடி வருகின்றனர். தமிழர்ப் பண்பாட்டோடு ஒத்துப்போகிற அனைத்தும் பாதுக்காக்கப்பட வேண்டியது அவசியமாகும். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிலைப் பயிரிட்டும் சபகாரியங்களுக்கும் பயன்படுத்தியும் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உட்புகத்தியும் வந்துள்ளனர். தமிழ் மக்களின் மனதோடு வெற்றிலை என்பது வெற்றிக்கொண்டு விட்டது எனலாம்.

            வெற்றிலை விவசாயிகள் பெரும்பாலும் குத்தகை நிலங்களிலே தோட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு சாதி, மதம் என்கிற பேதம் எதுவுமில்லை. தொழில் தெரிந்த அனைவரும் வெற்றிலைப் பயிர் செய்கின்றனர். மருத்துவக்குணம் நிறைந்த இவ்வெற்றிலைத் தொழிலை இன்றை இளம்தலைமுறையினர் மறந்து போயுள்ளனர். தமிழர் பாரம்பரியத்தைக் காக்கவும் வெற்றிலைத்தொழிலை நடத்தவும் இளைஞர்களும் முன்வர வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.திரு.மு.கணேசன் நாயக்கர், வயது 65, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி, வெற்றிலை வியாபாரி – வெற்றிலையைப் பற்றிய முழுத்தகவல் அளித்துள்ளார்.

2.திரு.கந்தன் உடையார், வயது 85, பெத்தநாயக்கன் பாளையம், வெற்றிலை விவசாயி – வெற்றிலையைப் பற்றியத் தகவல் அளித்துள்ளார்.

3.இணையத்திலிருந்து,

       1.தினமணி, தமிழரின் அகவாழ்வில் வெற்றிலை பாக்கு, வே.சிதம்பரம். 20.09.2012.

       2.theebamttamil.com, தமிழர் வாழ்வில் வெற்றிலை பாக்கு, 06.08.2016.

      3.Wordpress.com, வெற்றிலை பாக்கு தொடர்பான வரலாறு, 11.01.2013

      4.Sudhgar Krishnan channel, வெற்றிலை வளர்ப்பு மற்றும் மருத்துவப்பயன்கள், 16.09.2020

      5.ஆய்வுக்கட்டுரை, நாஞ்சில்நாடன், தீதும் நன்றும் (18) வெற்றிலை

     6.வெற்றிலை, 01.01.2017, மூலிகை அறிவோம், சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »