சங்கத்தமிழர் உணவுகள்|ஆய்வுக்கட்டுரை|ர. அரவிந்த்
முன்னுரை
உலகத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது உணவு, உடை, இருப்பிடமாகும். அவரவர் வாழ்விடங்களில் கிடைக்கப்பெற்ற உணவுகளையே உண்டு வாழக்கையினை நடத்தினர். பிறகு பண்பாடு மூலம் அனைத்து இடங்களிலும் உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றன. சங்க தமிழர்களுக்குக் காட்டில் வாழும் விலங்குகளும், கடல்வாழ் உயிரினங்களும் மிகவும் முக்கியமான உணவாக இருந்தன. அதன் பின் இயற்கையாகக் காய்களும், உழவர்களால் விளைவிக்கப்பட்ட செந்நெல், வெண்ணெல், மலைநெல், வரகு போன்றவையும் இது தவிர பிற சிறுதானியங்களும், கிழங்கு வகைகளும் உணவாகப் பயன்படுத்தி இருப்பதை இவ்வாய்வு கட்டுரை வெளிப்படுத்த முயலுகின்றது.
உணவு வகைகள்
சோற்றை வல்சி, சொன்றி, மிதவை, அடிசில், புன்கம், விதவை, துழவை, கூழ், என்ற பல பெயர்களில் உணவுப் பொருள்களையும், சமையல் முறைகளையும் குறிக்கும் பெயராகும். உணவுகள் உழுந்து, அவரை, பருப்பு சேர்த்த கலவையான உணவும், நெய், புளி, சோறு கலந்த உணவும், முல்லை நில மக்கள் செம்மறியாட்டின் பாலிலிருந்து எடுக்கப்பட்ட தயிரை உலையாகவைத்து, வரகு அரிசியை சேர்த்து அதோடு ஈசல் சேர்த்த உணவுகளும் மக்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளது. புளி, தயிர் கலந்த சோற்றுடன் மாமிசத்தை, கலசிகம் உண்டுள்ளதை,
“படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பிஞ்
வழுக்குறிணம் பாணரொடு, ஒராங்கு” (புறம்,326:9-10)
இப்பாடலின் மூலம் அறியவருகிறது. மோருக்கு அளவான புளியம்பழம் சேர்த்தும், தினைமாவையும் கொழியலரிசினையும், கள்களை சேர்த்தும், பழந்சோற்றையும் கட்குடிகளுக்கு மயக்கதருவனாவாக இருந்துள்ளது. பாரிநாட்டில் மூங்கில்நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் போன்றவை இயற்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதை,
“உழவர் உழாபலேயே நான்கு பயன்உடைத்தே
ஒன்றே, சிறியிலைவெதிரின், நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின்வழம் ஊழ்கிகும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிகிழங்கு வீழ்க்கும்மே” (புறம், 109:3-6)
எனும் பாடலில் கொண்டு அறியலாம். மேலும், தமிழர் உணவுவகைகளைப் பின்வருமாறு காண்போம்.
கறி வகைகள்
குழம்பு, பொரிக்கறிகள், இறைச்சியால் செய்யப்பட்ட கறிவகைகள், புளியுடன் மீன்கறி, தயிர், கொம்மட்டி உணவு, மாதுளையின் மசிய காயொடு மிளகு பொடி கருவேப்பிலை, அளாவிப் பசு வெண்னையும் சேர்த்து உணவாக அந்தணர்கள் பயன்படுத்தியுள்ளனர். கீரையுண்ணுதலைப் “பாசபத மிசைதல்” என்பார்கள். நண்டு பீர்க்கங்காய், வெள்ளரிக்காயால் செய்த கூட்டும் சோறும். மழைக்கால பருவத்தில் விளையும் வேளைக்கீரை, குப்பைக்கீரை, சிறிய இலைகளையுடைய இலைக்கறிகள் சேர்த்த கறிவகைள் உணவுகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
கிழங்குகள்
கிழங்குவகைளான, வள்ளிக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, கூவைக்கிழங்கு, மற்றும் பலாபழக்கொட்டையும் போன்றவையும் பிற கிழங்குகளும் பயன்படுத்தியுள்ளார்கள்.
ஊறுகாய்
உணவிற்கு துணையாக ஊறுகாயை வைப்பது சங்க கால மக்கள் பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தணர்கள் “மாவடு” என்ற பெயரில் பயன்படுத்தினர். குறிப்பாக, மாங்காய் ஊறுகாய், மாங்காயுடன் புளியம்பழம் சேர்த்தும் ஊருகாய் தாயரித்துள்ளார்கள். “கூட்டு நுகரும் இயல்பினை மாங்காய் நறுங்காடி கூட்டுவோம்” (109:23) என வரும் கலித்தொகை பாடல் மூலம் அறியலாகிறது.
மாமிச உணவு
தமிழ் மக்களிடையே விலங்குகள், பறவைகள், மீன், நத்தை, நீர்வாழ் உயிரினங்கள் முக்கியமான உணவாகும். ஆடு, கடமான், மான், முயல், உடும்பு, எலி, கோழி, போன்றவற்றை வேகவைத்தோ, தீயில் சுட்டோ, நெய்யில் இட்டோ பொரித்தே மாமிசத்தை உண்டுள்ளார்கள். நெயில் பொரித்த இறைச்சியை வறை, வாட்டு, செதுக்கண், குறை எனும் பெயர்களில் வழங்கியுள்ளனர். பச்சை மீனைச் சுட்டு காயவைத்து உப்பு கண்டம் போட்டும், இயற்கையாக எழும் தீயில் புகை நாற்றம் இல்லாத வகையில் வதக்கி, அவற்றின் மேலுள்ள மயிரையும், தோலையும் நீக்கி விட்டு இறைச்சியை உண்டுவாழ்ந்துள்ளனர். ஆண்பன்றிக்கு நெல்லை இடித்த உணவைக் கொடுத்து பெண் பன்றிகளுடன் கூடப் புணராமல் தவிர்த்து விலநாள் குழியிலே நிறுத்தி வளர்த்து, பின் வேண்டிய நேரத்தில் உணவாகப்பயன்படுத்தியுள்ளார்கள். இறைச்சியை மேற்சொன்னபடியல்;லாமல் பச்சை இறைச்சியையும் உண்பதும் மக்களிடம் வழக்கத்தில் இருந்துள்ளதை,
“……………….. தீம் ந்தாரம்
நிறுத்தஆயம் தலைச் சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிறி
புல்புக்கனனே, புல் கணற் காளை
ஒருமுறை உண்ணி அளவை, பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுபவன்” (புறம், 258:2-8)
எனும் பாடலில், வீரர்கள் வேற்றுநாட்டிற்கு சென்று ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் போது போர் முனைக்கு செல்லும் வேகத்தில் பச்சை ஊனைத்தின்று கள்ளை அருத்திவிட்டு கையை வில்லிலே துடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். எனவே அவசரகாலத்தில் பச்சை உணவை உட்கொண்டுள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. புலால் நாற்றம் வீசும் பச்சை இறைச்சிக்குப் பூநாற்றம் உடைய புகையையூட்டி சமைத்த ஊனும் உண்ணப்பட்டது. பச்சூன் என்பது எவ்வகை மாற்றமும் செய்யப்படாத பச்சை இறைச்சி என்பதை,
“பச்சூன் பெய்த கவல்பினி பைந்தோல் கோல்வல்
பாண் மகனே” (பெரும்,283-284)
எனும் அடிகளின் மூலம் பச்சை இறைச்சியையே குறிப்பிடுகிறது.
கள் வகைகள்
ஊனோடும் விருப்பமாக உட்கொண்ட மற்றொன்று கள்ளே. என்பதை,
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்புவும்” (புறம்,113)
எனும் பாடலில், இவ்விரண்டின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றது. பானையில் இருந்து இறக்கும் கள்ளும், தேனும் அரிசிதிணை முதலிய தானியங்களிலிருந்து வடிக்கப்பட்ட கள் அக்காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்துள்ளது. பனைஅரும்புகளிலிருந்தும், தேனை பக்குவபடுத்தியும், இல்லத்திலிருந்தும் கள்ளினை தோப்பி என்னும் பெயரரல் வழக்கத்தில் இருந்தது. கள்ளை பன்னாடையில் வடிக்கட்டி சாடியிலும், மூங்கில் குழாயிலும் இட்டு பக்குவப்படுத்தி உண்டனர். நாட்பட்ட பழங்கள் மிக்க போதையைக் கொடுப்பதற்கு அதிகமாக பயன்படுத்தியுள்ளதை,
“அரவு வெகுண்டன்ன தேறல்” (புறம்,376:14)
“பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண்,237)
“பாப்புக் சுடுப்பன்ன தொப்பி” (அகம்,348:7)
“தேற்கடுப்பன்ன நாட்பவ தேறல்” (புறம்,392:16)
என வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.
“கள்ளை மகிழ்தால் மரபின் மட்டு” (புறம்,390:16)
என்ற பாடலில் கள் மகிழ்ச்சியைக் கொடுப்பது பானமாகப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு மரபு என்பதையும் அறிய முடிகிறது. கமுகம் பூவின் பாளையைக் கள் வைக்கும் குப்பிற்க்கு ஒப்பிட்டு கூறுதலின, பச்சை நிறமான குப்பிகள் கள் வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கள்ளின் நாற்றத்தை மாற்றப் பூவும் கட்குடியும் காலத்து கட்குடிக்கும் காலத்தில் இடை இடையே கட்டியும், இஞ்சியையும் பயன்படுத்தியுள்ளார்கள். களிப்பு மிகுதியால் கள்ளுண்டவர் உடல் ஆடுவதைப் போல கட்குடம் கள்ளின் முதிர்ச்சியால் அசைவதும் உண்டாம்.
யவனர்களின் மது
யவனர்கள் தங்கள் நாட்டிலிருந்து பக்கல் வழியாகக் கொண்டு வந்த மது வகைகள் பழந்தமிழர்கள் மிகவும் விரும்பி உண்டனர். செல்வர் மனைகளில் இளம் பெண்கள் இதனைப் பொற்கலத்தில் ஊற்றி ஆடவரை உண்பித்தனர் என்பதை (புறநானூறு,24:32-34,56:18-21), (மதுரைக்காஞ்சி,779-78) இப்பாடல்கள் மூலம் மதுக்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிகிறது.
அந்தணர்களும் ஊன், மது, உண்ணும் பழக்கத்தைப் பெற்றிருந்துள்ளனர் என்பதை, அந்தணர் மரபில் இருந்து புலவராகிய கபிலர் (புறம்,113) கூறியுள்ளார்.
இனிப்புவகைகள்
இனிப்பு உணவுகள் பண்டைய தமிழ்மக்கள் ஊன், கள்ளையும் முதன்மையான உணவாகவும், அதன் பிறகு அனைவரும் இனிப்பையே அதிகமாக விரும்பி உண்டுள்ளனர். பருப்புடன் வெல்லம் கலந்த பொங்கலும், வெல்லப்பாகுடன் மாவைக் கலந்து அப்பமும், வரகில் பால் கலந்த உணவும் கரும்பஞ்சாற்றுப் பாகுடன் பால், நெல், அவலை சேர்த்து இனிப்பு உணவும், தேன், பால் சேர்ந்த இனிய இனிப்பு வகையாக மக்களிடையே வழக்கத்தில் இருந்திருக்கின்றன. பலாப்பழம், இளநீர், வாழை, பனைநுங்கு, இனிய பழங்ளையும் இனிப்பு உணவாகவும் மற்றும் பிற பழங்களையும் உணவாக பயன்படுத்தியுள்ளதை,
“தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
வீழ்இல் தாழைக் குலவித் தீம்நீர்
கவைமுலை இரும் பிடிக்கவுள் மருபு ஏய்க்கும்
மிரள் அரைப் பெண்ணை நு{ற்கொடு, பிளவும்
தீம்பால் தாரம் முனையின்” (பெரும்,356:36)
என்னும் பாடல் மூலம் இனிய பழங்களையும் “பிறவும் தீம்பல் தாரம்” எனக் குறிப்பிட்டுள்ளதை கொண்டு அறியமுடிகிறது. கரிகாலன் பொருநர்களுக்கு ஊனையும், கள்ளையுமே முதன்மையான உணவாக கொடுத்தனர். பிறகு அவற்றில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் பலகாரங்களும், சோறும் வழங்கப்பட்டதை,
“ஊனும் ஊணும் மனையின் இனிதுஎன
பாலின் பெய்தவுமு;, பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து, மெல்லியது பருகி
விருந்துறுத்த, ஆற்றி இருந்த னமாக” (புறம்,381:1-4)
என்பதை இப்பாடல் வாயிலாக இனிப்புவகையான உணவுகளையும் மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளமையை அறிந்துக் கொள்ள முடிகிறது.
முடிவுரை
சங்கத் தமிழர்கள் வாழ்விடங்களில் கிடைக்கப் பெற்ற இயற்கையான உணவுகளையும், காட்டு விலங்குகளையும், நீர்வாழ் உயிரினங்களையும், தினைவகைகளையும், பழங்களையும் உண்டு வாழ்க்கையினை வாழந்திருக்கின்றனர். பிறகு உழவர்கள் உழவின் மூலம் நெல்வகைகளை விளைவித்து அறுவடை செய்து களத்தில் அடித்து பிறருக்கு கொடுத்தும் அங்கு வருபவர்களுக்கு உணவுகளையும் கொடுத்து அறங்களையும் செய்துள்ளனர். மேலும், ஆண்பன்றியை, பெண்பன்றிகளுடன் புணர்ச்சியில் இருந்து முற்றிலுமாக தடுத்து தனியாக வளர்த்து உணவுகளை சேமித்து தேவையான போது பயன்படுத்தயிருக்கின்றன.
கிழக்குகள், தென், கீரை போன்ற இயற்கையான உணவுகள் இக்காலத்தில் சிறந்த உணவாகவும் இந்நாளில் சைவ உணவாகவும் பின்பற்றப்படுகிறது. நாடிவரும் பாணர்களுக்கு ஊன், சோறு, கள் போன்றவுணவுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வெறுக்கப்பட்டதின் காரணமாக இனிப்புவகை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கநூல்களை உற்று நோக்கும் போது தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துள்ளதையும், உணவு பழங்கள் வழக்கங்களை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ர. அரவிந்த்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர். கல்லூரி,
ஓசூர் – 635 001.
இ-மெயில்: omarivuom.999@gmail.com
ர. அரவிந்த் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க…
அவளின் காதலோ ! 60 ஆண்டின் காதலோ!!|கவிதை|க.கலைவாணன்
சித்திரையில் சீவி சிங்காரி…
வைகாசியில் வெட்கம் வரக்கோரி!!..
ஆணியில் ஆசை அமுதூறி..
ஆடியில் மாமன் அலை மோதி..
ஆவணியில் தாவணி தடுமாறி!!
புரட்டாசியில் பெண்மை புயலேறி….
ஐப்பசியில் கைப்பேசி கழுத்தேறி…
கார்த்திகையில் காதல் கறை சீறி!!
மார்கழியில் மங்கை மனம் கூறி!!!
தையில் தாம்பூலம் கைமாறி…
மாசியில் மாங்கல்யம் அரங்கேறி..
பங்குனியில் மொட்டு மலரானது…
ஆசிரியர்
கவிஞர் க.கலைவாணன்
ஓசூர் – 635 109
ஆசிரியரின் பிற கவிதைகளைப் படிக்க – You searched for க.கலைவாணன் » இனியவை கற்றல் | பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (iniyavaikatral.in)
யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும் | சுருக்கக் கையேடு
யாப்பு இலக்கணம்
செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை என்பன…
1.எழுத்து:
தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.குறில் (க)
2.நெடில் (கா)
3.ஒற்று (க்) என்பனவாம்.
தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து வகைகளாகச் சுட்டுகின்றார்.
2.அசை:
குறில்,நெடில்,ஒற்று என்னும் மூவகை எழுத்துகளால் அசைக்கப்படுவது அசை எனப்படும். எழுத்துகள் ஒன்று சேர்ந்து வருவது அசை (சொல்) ஆகும். அசை இரண்டு வகைப்படும்.
1.நேர் அசை
2. நிரை அசை
நேரசை:
1.குறில் தனித்து வருதல் – க
2.குறிலும் ஒற்றும் இணைந்து வருதல் – கல்
3.நெடில் தனித்து வருதல் – பா
4.நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் – பால்
நிரையசை:
1.இரண்டு குறில்கள் இணைந்து வருதல் – பல
2.இரண்டு குறில்கலோடு ஒற்றும் இணைந்து வருதல் – பலர்
3.குறிலும் நெடிலும் இணைந்து வருதல் – படா
4.குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் -படாம்
குறிப்பு:
1.முதல் எழுத்து நெடில் வந்தால் தனித்துதான் வரும்.
2.ஒற்றுகள் அசையாகாது. ஓன்றுக்கும் மேற்பட்ட ஒற்றுகள் சேர்ந்து வரினும் அவை ஒரு ஒற்றாகவே கருதப்படும். (உம்-ங்ங்ங்ங்)
3.இரண்டு நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வராது. அப்படி வந்தால் பிரிக்க வேண்டும்.
4.நெடில் எழுத்தை அடுத்து குறில் சேர்ந்து ஓர் அசையாக வராது.
3.சீர்:
செய்யுளில் ஓர் அசை தனியாகவோ, பல அசைகள் சேர்ந்தோ அமைந்து வருவது சீர் எனப்படும். அசைகள் ஒன்று சேர்ந்து வரவது சீர் ஆகும். (சீர்- ஒழுங்கு). சீர் நான்கு வகைப்படும். அவை,
1.ஓரசைச்சீர்
2.ஈரசைச்சீர்
3.மூவசைச்சீர்
4.நாலசைச்சீர்
1.ஓரசைச்சீர்:
அசைச்சீர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வெண்பாவின் ஈற்றில் நேரசை அல்லது நிரையசையென தனித்து நின்று சீராய் அமையும். இவை நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாட்டைக் கொண்டு முடியும்.
நேர் – நாள்
நிரை – மலர்
நேர் + நேர் = நேர்பு – காசு
நிரை + நேர் = நிரைபு – பிறப்பு
2.ஈரசைச்சீர்:
இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என வேறுபெயர்கள் உண்டு. நேர்,நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசைச்சீர்கள் எனப்படும். வெண்பா, ஆசிரியப்பாவில் வரும். இவை
மாச்சீர் (தேமா,புளிமா),
விளச்சீர் (கூவிளம்,கருவிளம்) என இரண்டு வகைப்படும்.
அசையின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் = தேமா
நிரை+ நேர் = புளிமா
நேர் + நிரை = கூவிளம்
நிரை + நிரை = கருவிளம்
3.மூவசைச்சீர்:
ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நேர் என்னும் அசையைத் சேர்த்தால் காய்ச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வெண்சீர்,வெண்பா உரிச்சீர் என அழைக்கப்படும்.
நேர் +நேர் + நேர் – தேமாங்காய்
நிரை +நேர் +நேர் – புளிமாங்காய்
நேர்+ நிரை +நேர் – கூவிளங்காய்
நிரை +நிரை+ நேர் – கருவிளங்காய்
மேற்கூறிய நான்கும் நேரீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது.
ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நிரை என்னும் அசையைத் சேர்த்தால் கனிச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வஞ்சிச்சீர், வஞ்சி உரிச்சீர் என அழைக்கப்படும்.
நேர் +நேர் + நிரை – தேமாங்கனி
நிரை+ நேர்+ நிரை – புளிமாங்கனி
நேர்+ நிரை +நிரை – கூவிளங்கனி
நிரை +நிரை +நிரை – கருவிளங்கனி
மேற்கூறிய நான்கும் நிரையீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது. மூவசைச்சீர்களாகிய காய்ச்சீர்கள் நான்கும், கனிச்சீர்கள் நான்கும் சேர்த்து மொத்தம் எட்டு வகைப்படும்.
4.நாலசைச்சீர்:
பொதுச்சீர் என்ற வேறுபெயரும் உண்டு. மூவசைச்சீர் எட்டுடன் நேரசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்பூ, நறும்பூ எனக் கொண்டு முடியும். இவை எட்டும் பூச்சீர் என்றும், நேரீற்றுப் பொதுச்சீர் எனவும் வழங்கப்பெறும்.
பூச்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நேர் – தேமாந்தண்பூ
நிரை +நேர் +நிரை +நேர் -புளிமாந்தண்பூ
நேர் +நிரை +நிரை+ நேர் -கூவிளந்தண்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிளந்தண்பூ
நேர் +நேர் +நேர் +நேர் -தேமாநறும்பூ
நிரை +நேர் +நிரை+ நேர் -புளிமாநறும்பூ
நேர் +நிரை +நிரை +நேர் -கூவிள நறும்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிள நறும்பூ
மூவசைச்சீர் எட்டுடன் நிரையசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்ணிழல், நறுநிழல் எனக் கொண்டு முடியும். இவை எட்டும் நிழற்சீர், நிரையீற்றுப் பொதுச்சீர் என வழங்கப்பெறும்.
நிழற்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நிரை -தேமாந்தண்ணிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாந்தண்ணிழல்
நேர் +நிரை +நிரை +நிரை- கூவிளந்தண்ணிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளந்தண்ணிழல்
நேர்+ நேர் +நேர் +நிரை -தேமாநறுநிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாநறுநிழல்
நேர் +நிரை +நிரை+ நிரை -கூவிளநறுநிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளநறுநிழல்
இவ் பூச்சீர் எட்டும், நிழற்சீர் எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச்சீர்களாக கருதப்படும்.
4.தளை:
சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை தளை எனப்படும். சீர்கள் ஒன்றி வருவது தளை ஆகும். (தளை – கட்டு). நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும். தளை கூறும்போது முதல்சீர் இறுதி அசையின் வாய்ப்பாட்டோடு அடுத்த சீரின் முதல் அசையைச் சேர்த்துக் கூற வேண்டும்.
தளை ஏழு வகைப்படும். அவை,
1.நேரொன்றாசிரியத்தளை
2.நிரையொன்றாசிரியத் தளை
3.இயற்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை
5.கலித்தளை
6.ஒன்றிய வஞ்சித்தளை
7.ஒன்றா வஞ்சித்தளை
1.நேரொன்றாசிரியத்தளை: ( மா முன் நேர் )
நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது நேரொன்றாசிரியத்தளை எனப்படும்.
(உம்) பரிசில் வென்றான்
பரிசில் = நிரை நேர் = புளிமா , வென்றான் =நேர் நேர் = தேமா
2.நிரையொன்றாசிரியத்தளை: ( விள முன் நிரை )
நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது நிரையொன்றாசிரியத்தளை எனப்படும்.
(உம்) மாம்பழம் விழுந்தது
மாம்பழம் – நேர் நிரை – கூவிளம், விழுந்தது – நிரை நிரை – கருவிளம்
3.இயற்சீர் வெண்டளை: (மா முன் நிரை, விள முன் நேர்)
நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வந்தாலும், நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வந்தாலும் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
(உம்) கன்று குதித்தது – மா முன் நிரை
பணிவுடன் சென்றான் – விள முன் நேர்
4.வெண்சீர் வெண்டளை : (மா முன் நேர்)
நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது வெண்சீர் வெண்டளை எனப்படும்.
(உம்) கல்விக்கு கம்பன் – மா முன் நேர்
5.கலித்தளை: (மா முன் நிரை)
நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது கலித்தளை எனப்படும்.
(உம்) வள்ளுவரின் திருக்குறள் – மா முன் நிரை
6.ஒன்றிய வஞ்சித்தளை : ( கனி முன் நிரை)
நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
(உம்) செந்தாமரை முகத்துடையாள்
7.ஒன்றா வஞ்சித்தளை : (கனி முன் நேர் )
நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது ஒன்றா வஞ்சித்தளை எனப்படும்.
(உம்) மாமுனிவரே அகத்தியர்
5.அடி :
சீர்கள் பல தொடர்ந்து வந்து ஓர் அடியாக அமைந்து செய்யுளுக்கு உறுப்பாவது அடி எனப்படும். ஓர் அடியில் சீர்கள் தொடர்ந்து வருவது சீர் அடிகள் ஆகும். அடிகள் ஐந்து வகைப்படும். அவை,
1.குறளடி
2.சிந்தடி
3.அளவடி
4.நெடிலடி
5.கழிநெடிலடி
1.குறலடி :
இரண்டு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன இரண்டு அடிகள் ஆனது குறளடிகள் எனப்படும். இவ்வடிகள் வெண்பாவில் பயின்று வரும்.
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இரண்டு அடிகளால் ஆன குறலடி.
“காயும் கனியும்” – சீர்களால் ஆன குறலடி.
2.சிந்தடி :
மூன்று சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன மூன்று அடிகள் ஆனது சிந்தடிகள் எனப்படும். வெண்பாவின் ஈற்றடிகள் சிந்தடிகளாக இருக்கும். இவ்வடிகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பாவிலும் பயின்று வரும்.
(உம்) “அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே” – மூன்று அடிகளால் ஆன சிந்தடி.
“ஞானத்தின் மாணப் பெரிது” – சீர்களால் ஆன சிந்தடி.
3.அளவடி :
நான்கு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன நான்கு அடிகள் ஆனது அளவடிகள் எனப்படும். நேரடி என்றும் அழைக்கப்பெறும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பாவிலும் இடம்பெறும்.
(உம்)அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்மை – நான்கு சீர்களால் ஆன அளவடி
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றியருவா வதன்வடக்கு – நன்றாய
சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்” – நான்கு அடிகளால் ஆன அளவடி.
4.நெடிலடி:
ஐந்து சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன ஐந்து அடிகள் ஆனது நெடிலடிகள் எனப்படும்.
(உம்) மங்குவென் உயிரோடென்றுன் மலரடி சென்னி வைத்தாள் – ஐந்து சீர்களால் ஆன நெடிலடி.
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீhப் பந்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல்! வுல்லாதீமே. (ஐங்.304) – ஐந்து அடிகளால் ஆன நெடிலடி
5.கழிநெடிலடி :
ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆனதும் ஐந்துக்கும் மேற்பட்ட பல அடிகள் கொண்டது நெடிலடிகள் எனப்படும்.
(உம்) “மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்
முதுகிலா வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனம்தான் வாழ்க்கையென – வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்?
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் -உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!” – ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அறுசீர் கழிநெடிலடி.
6. தொடை :
தொடை – தொடுக்கப்படுவது. ஒரு செய்யுளில் எழுத்துக்களை அசைகளாக்கி, அசைகளைச் சீர்களாக்கி, சீர்களையெல்லாம் அடிகளாகக் கொண்டது மட்டுமல்லாமல் ஓசையின் இன்பமும், செய்யுளில் தோன்றும் பொருட்பயனும் முழுமையாக தொடுக்கப்படுவது தொடை எனப்படும். தொடை எட்டு வகைப்படும். அவை,
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4.இயைபுத்தொடை
5. அளபெடைத் தொடை
6.அந்தாதித் தொடை
7.இரட்டைத்தொடை
8. செந்தொடை என்பதாகும்.
1.மோனைத்தொடை :
செய்யுளின் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். இவ்வகைகளில் முதலெழுத்துகளின்றி அதற்குரிய இனவெழுத்துகளும் ஒன்றி வரும். இதனை இணை மோனை, கிளை மோனை என்றும் கூறுவர். (மோனை – முதன்மை).
மோனைத் தொடை இரு வகைப்படும். அவை,
1.அடி மோனை
2. சீர் மோனை என்பன.
1.அடி மோனை:
அடிகள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
(உம்) “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
இங்கு, முதலடியின் முதலெழுத்தும் (சொ) இரண்டாமடியின் முதலெழுத்தும் (சொ) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
2. சீர் மோனை :
சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.
(உம்) “கற்க கசடற கற்றவை கற்றபின்”
இங்கு, நான்கு சீர்களிலும் முதலெழுத்தாக (க) வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.
2.எதுகைத் தொடை:
செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும். எதுகைத் தொடை இரு வகைப்படும். அவை,
1.அடி எதுகை
2. சீர் எதுகை
1.அடி எதுகை:
அடிகள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
(உம்) “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
இங்கு, முதலடியின் இரண்டாம் எழுத்தும் (ல) இரண்டாமடியின் இரண்டாம் எழுத்தும் (ல) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
2.சீர் எதுகை :
சீர்கள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.
(உம்) “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல”
இங்கு, மூன்று சீர்களிலும் இரண்டாம் எழுத்தாக (ன்) வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.
3.முரண் தொடை :
செய்யுள் அடிகளில் உள்ள முதற்சீர்களோ அல்லது ஓர் அடியில் உள்ள சீர்களோ சொல்லாலும், பொருளாலும் முரண்பட்டு (எதிர்மாறாக) நிற்பது முரண்தொடை எனப்படும். இவையும் அடி முரண், சீர் முரண் என இரண்டு வகைப்படும்.
ஒரு செய்யுளில் அடிகளில் முரண்படுவது அடிமுரண் ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் முரண்படுவது சீர் முரண் எனப்படும்.
(உம்) “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை”
இக்குறட்பாவில் துன்பம் – இன்பம் என அடிகளில் முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம். இவை அடிமுரண் ஆகும்.
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்”
இவ்வடியில் இனிய – இன்னாத என சீர்கள் முரண்படுவதால் இவை சீர்முரண் எனப்படும்.
4.இயைபுத் தொடை :
ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, ஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.
ஒரு செய்யுள் அடிகளில் இயைபு அமைவது அடிஇயைபு ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் இயைபு அமைவது சீர் இயைபு எனப்படும்
(உம்) “திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”
இங்கு மலை என இரண்டு அடிகளிலும் இயைந்து வந்ததால் இவை அடி இயைபு எனப்படும்.
(உம்) “பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்”
இவ்வடியில் உள்ள சீர்களில் மின் என இயைந்து வந்துள்ளதால் இவை சீர் இயைபு எனப்படும்.
5.அளபெடைத்தொடை :
ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் அசைகள் அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும்.
ஒரு செய்யுள் அடிகளில் அளபெடை அமைவது அடிஅளபெடை ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் அளபெடை அமைவது சீர் அளபெடை எனப்படும்.
(உம்) “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”
இங்கு கெடுப்பதூஉங் – எடுப்பதூஉம் என இரண்டு அடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளதால் இவை அடி அளபெடை எனப்படும்.
(உம்) “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்”
இவ்வடியில் உள்ள சீர்களில் அழிவதூஉம் – ஆவதூஉம் என அளபெடுத்து வந்துள்ளதால் இவை சீர் அளபெடை எனப்படும்.
6.அந்தாதித்தொடை :
செய்யுளில் ஓர் அடியின் இறுதிச்சீரின் இறுதி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருவது அந்தாதித் தொடை எனப்படும்.
(உம்) “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
7.இரட்டைத்தொடை:
செய்யுளில் ஓர் அடி முழுவதும் ஒரே சொல்லை தொடர்ச்சியாக வருமாறு அமைத்துப் பாடுவது இரட்டைத் தொடை எனப்படும்.
(உம்) “வாழி வாழி வாழி வாழி
அம்ம கோவே வாழி”
8.செந்தொடை :
மோனைத் தொடை முதல் இரட்டைத் தொடை வரையிலான ஏழு தொடைகளுக்கும் சொல்லப்பட்ட இலக்கணங்கள் எதற்குள்ளும் பொருந்தாமல் தனித்து நிற்கும் தொடை செந்தொடை எனப்படும்.
(உம்) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
தொடையின் வகைகள் அமையும் முறை
மோனை – முதல் எழுத்து ஒன்றுபடல்
எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றுபடல்
இயைபு – இறுதி எழுத்து ஒன்றுதல்
முரண் – முரண்பட்டு நிற்றல்
அளபெடை – அளபெடுத்து வருதல்
அந்தாதி இறுதி – முதலாக வருதல்
இரட்டைத் தொடை – ஒரே சொல்லே அடிமுதல் வருதல்
செந்தொடை – இவற்றில் பொருந்தாமல் தனித்து
தொடை விகற்பத்தின் வகைகள்
விகற்பங்கள் தொடைகளுடன் சேரும் முறை
விகற்பங்கள்
1.இணை = 1, 2 சீர்கள்
2.பொழிப்பு = 1, 3 சீர்கள்
3.ஒருஉ = 1, 4 சீர்கள்
4.கூழை = 1, 2, 3 சீர்கள்
5.மேற்கதுவாய் = 1, 3, 4 சீர்கள்
6.கீழ்க்கதுவாய் = 1, 2, 4 சீர்கள்
7.முற்று = 1, 2, 3, 4 சீர்கள்
உதாரணம் :
ஐந்து தொடைகளுடன் ஏழு விகற்பங்களும் ஒன்றாய்ச் சேரும்.
01.இணை மோனைத் தொடை
02.பொழிப்பு மோனைத் தொடை
03.ஒருஉ மோனைத் தொடை
04.கூழை மோனைத் தொடை
05.மேற்கதுவாய் மோனைத் தொடை
06.கீழ்க்கதுவாய் மோனைத் தொடை
07.முற்று மோனைத் தொடை
இது போன்று ஒவ்வொரு விகற்பமும் தொடையுடன் சேர்ந்து வரும்.
குறிப்பு :
அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை விகற்பங்கள் இல்லை.
இதன் அடிப்படையில் தொடை விகற்பங்கள் மொத்தம் (7x 5=35) 35 ஆகும்.
மேற்கண்ட குறிப்புகள் இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழால் வெளியிடப்படுகின்றன.
புறப்பொருள் வெண்பாமாலை|பொருள் விளக்கம்|சுருக்க கையேடு
இந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் ஆவார். புறப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறுவதால் இது புறப்பொருள் வெண்பாமாலை ஆயிற்று. வெண்பாக்களால் அமையப்பெற்றுள்ளது. தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் புறத்திணை இலக்கணத்தை ஏழு திணைகளாகப் பிரித்துக் கூறுவார். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரெண்டு தினைகளாகப் பகுத்து விரிவுப்படப் பேசுகின்றது.
பன்னிருப்படலம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்நூல் ஆசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையைச் செய்ததாகக் கூறுவார்கள். இந்நூலில் அமைந்துள்ள துறைகளை விளக்கும் நூற்பாக்களுக்கு ‘கொளு’ என்று அழைக்கப்படுகிறது.
தொல்காப்பியர் – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாக உரைப்பார்.
ஐயனாரிதனார் – வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல் எனப் பத்தாகப் பகுப்பார்.
போர்க்களத்தில் நடக்கும் தன்மையை, நிகழ்வை, குறிப்பை இருபக்கமும் நின்று விளக்குவதுதான் புறப்பொருள் வெண்பாமாலை. இவ்வகையான இலக்கணத்தை நேரடியாகப் பார்த்தும் அல்லது இப்படி எல்லாம் நடைபெற்று இருக்கலாம் என்று எண்ணியும் இலக்கண ஆசிரியர்கள் வரையறுத்துச் சொல்லியுள்ளது இன்றைய தலைமுறையினரை வியக்கச் செய்கிறது.
1.வெட்சிப்படலம்:
வெட்சிப்பூவைச் (குறிஞ்சி நிலத்திற்குரியது, சிவந்த நிறத்தை உடையது) சூடிய மறவர்கள் பகை நாட்டில் உள்ள மலையிலும், பிற நிலப்பகுதிகளிலும் மேய்ந்து கொண்டிருக்கின்ற ஆநிரைகளை (பசு) பிறர் அறியாதவாறு கவர்ந்து வருவர். இவ் ஒழுக்கத்தை வெட்சித்திணை என்பர். இது இருவகையாக நடக்கும் என்கிறார் ஆசிரியர்.
1.மன்னுறு தொழில் : அரசனின் கட்டளையை ஏற்று ஆநிரைகளைக் கவரச் செல்வது.
2.தன்னுறு தொழில் : அரசனின் ஏவலின்றி மறவர்கள் தானே பகைவர் நாட்டு ஆநிரைகளை கவர்தல்.
வெட்சித்திணை துறைகள் மொத்தம் – 19
1.வெட்சி அரவம்: பகைவரின் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது பல்வகை இசைக்கருவிகளை முழங்கி ஆராவாரித்துச் செல்லல்.
2.விரிச்சி: தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை ஆராய்தல். நற்சொல் கேட்டல்.
3.செலவு (பயணம்): வெட்சி மறவர்கள் ஆநிரைகளை கவர பகைவர் நாட்டிற்கு செல்லுதல்.
4.வேய்(ஒற்று) : ஆநிரைப் பற்றியச் செய்திகளை ஒற்றர் ஆராய்ந்து வந்து கூறுதல்.
5.புறத்திறை: பகைவரின் மதிலைச் சுற்றி வளைத்துப் புறத்தே (வெளியே) தங்குதல்.
6.ஊர்கொலை: பகைவரின் மதிலைத் தீயிட்டு அழித்து, ஊரில் உள்ளாரைக் கொள்வது.
7.ஆகொள்: பகைவருடைய ஆக்களைக் கன்றுடன் கவர்வது.
8.பூசல்மாற்று: எதிர்த்துப் போர் செய்து, இனிப் போர் இல்லை என்று சொல்லுவது.
9.சுரத்துய்த்தல்: தம்மால் கவரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேராமல் காட்டு வழியே ஓட்டிச் செல்லுதல்.
10.தலைத்தோற்றம்: ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வெட்சித் தலைவன் முன்னே வந்து ஊரார்க்கு மகிழ்ச்சித் தோன்றும் படிச் சொல்வது.
11.தந்துநிறை: வெட்சியார் தாம் கைப்பற்றி வந்த ஆநிரைகளை ஊரின்கண் வந்து நிறுத்தியது.
12.பாதீடு: மறவர்களின் தகுதிக்கேற்ப ஆநிரைகளைப் பங்கிட்டுக் கொடுப்பது.
13.உண்டாட்டு: மறவர்கள் கள்ளினை உண்டு தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது ஆகும்.
14.கொடை: மறவர்கள் தான் பிரித்துக்கொண்ட ஆக்களைப் பிறருக்கு கொடையாகக் கொடுப்பது.
15.புலனறி சிறப்பு: சரியாக ஒற்று அறிந்தவர்களுக்கு சிறப்புச் செய்வது.
16.பிள்ளை வழக்கு: நிமித்தமாகிய சகுனம் சொன்னவர்களுக்கு ஆக்களைப் பரிசாகக் கொடுத்து சிறப்பிப்பது.
17.துடிநிலை: தொன்று தொட்டு மரபு மாறாமல் துடி கொட்பவனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்துக் கூறுவது.
18.கொற்றவை நிலை: வெற்றிக்குக் காரணமாக விளங்கும் கொற்றவைத் தெய்வத்தை வணங்குதல்.
19.வெறியாட்டு: மறக்குடி மகளிர் வேலனோடு வள்ளிக் கூத்தினை ஆடுவது ஆகும்.
2.கரந்தைப் படலம்:
கரந்தைப் பூவினைச் சூடி மாற்றார் கவர்ந்து சென்ற ஆக்களை மீட்கச் செல்வது கரந்தைத் திணை எனப்படும்.
கரந்தை திணை துறைகள் மொத்தம் – 13
1.கரந்தை அரவம்: வெட்சி வீரர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்பதற்காக கரந்தை மறவர்கள ஓரிடத்தில் கூடுதல். அதனால் ஏற்பட்ட போர் ஓசையே ஆகும்.
2.அதரிடைச் செலவு: வெட்சி மறவர்களைப் பின்பற்றி கரந்தை மறவர்களும் பின்னால் செல்லுதல்.
3.போர்மலைதல்:வெட்சி மறவர்களோடு கரந்தை மறவர்கள் போர் புரிவது.
4.புண்ணோடு வருதல்: கரந்தை மறவர்கள் விழுப்புண்ணைத் தாங்கி வருவது.
5.போர்க்களத்து ஒழிதல்: வெட்சியாருடன் போரிட்டு கரந்தை மறவர்கள் போர்களத்தில் இறப்பது.
6.ஆளெரி பிள்ளை: தான் ஒருவனாக நின்று வெட்சி மறவர்களை வெட்டி விழ்த்திய கரந்தை வீரன் ஒருவனின் நிலையைக் கூறுவது.
7.பிள்ளைத் தெளிவு: விழுப்புண் பட்ட கரந்தை மறவன் தான் பெற்ற புண்ணைக் கண்டு மகிழ்ந்துக் கூத்தாடுவது.
8.பிள்ளைப்பாட்டு: பகை மறவனின் குடலை வேலுக்கு மாலையாக அணிந்து அவ்வேலைச் சுற்றி மறவன் ஆடுவது.
9.கையறுநிலை: தன் தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து நிற்றல்.
10.நெடுமொழி கூறல்: ஒரு வீரன் தன் ஆற்றலைத் (பெருமையை) தானே எடுத்துக் கூறுவது.
11.பிள்ளைப் பெயர்ச்சி: தீய நிமித்தங்களைப் பொருட்படுத்தாது நிரை மீட்கச் சென்றவனுடைய ஆற்றலை அரசன் சிறப்பிப்பது.
12.வேத்தியன் மலிபு: மறவர்கள் தம் அரசனைப் போற்றிக் கொண்டாடுவது ஆகும்.
13.குடிநிலை: கரந்தை மறவர்கள் தம்முடைய குடிப்பெருமையைக் கூறுவது.
3.வஞ்சிப்படலம்:
வஞ்சிப்பூவினைச் சூடி மாற்றான் மண்ணைக் கவரக் கருதி படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணை எனப்படும்.
வஞ்சித்திணை துறைகள் மொத்தம் – 20
1.வஞ்சி அரவம்: அணி வகுத்துச் சென்ற ஆரவார ஒலியே ஆகும்.
2.குடைநிலை: வஞ்சி அரசன் நல்ல நாளில் படையெடுப்பிற்கு முன்னால் தன்னுடைய வெண்கொற்ற குடையை எடுத்து ஊர்ச் சுற்றிச் செல்வது.
3.வாள்நிலை: நல்ல நாளில் தன்னுடைய வெற்றி வாளைப் புறவீடு விட்டது.
4.கொற்றவை நிலை: கொற்றவையின் அருளுடைமையினைப் பாராட்டி வணங்குதல் மற்றும் வஞ்சி மறவரின் போர்த்தொழிலைப் பாராட்டுதல்.
5.கொற்ற வஞ்சி: வஞ்சி அரசனின் வாள் வலிமையைச் சிறப்பித்துக் கூறுவது.
6.கொற்றவள்ளை: வஞ்சி அரசனின் வெற்றியைக் கூறி, பகை நாட்டின் அழிவிற்கு மனம் வருந்துதல்.
7.பேராண் வஞ்சி: பகைவென்ற மறவனை அரசன் பாராட்டி பரிசளித்தல், தோல்வியுற்ற பகை அரசனிடமிருந்து திறைப்பொருட்களைப் பெற்று தன் நாட்டிற்குத் திரும்புதல்.
8.மாராய வஞ்சி: அரசனால் சிறப்பிக்கப்பட்ட மறவரின் மாண்பினைக் கூறுவது.
9.நெடுமொழி வஞ்சி: வஞ்சி மறவன் பனைவர்களின் முன்னே தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்துக் கூறுவது.
10.முதுமொழிக் காஞ்சி: மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்துப் பாடுதல்.
11.உழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துதல்.
12.மழபுல வஞ்சி: வஞ்சி மன்னன் பகைவர் நாட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்தல்.
13.கொடை வஞ்சி: தனது வெற்றியைப் பாடிய புலவர்க்கு வஞ்சியரசன் பரிசு வழங்குதல்.
14.குறவஞ்சி: வஞ்சியரசனை எதிர்த்துப் போர் செய்யும் பகையரசன் பணிந்து திறை செலுத்துவது மற்றும் போர் செய்யாமல் பகைவரை பணிய வைத்து பாசறையிலே தங்கியிருத்தல்.
15.ஒரு தனிநிலை: தன்னந் தனியாளாக நின்று பகைவரைத் தடுத்த வஞ்சி மறவனின் நிலையைக் கூறுவது.
16.தழிஞ்சி: போரில் அஞ்சி ஓடுபவர்கள் மீது படைத் தொடுக்காத தன்மையினைக் கூறுவது.
17.பாசறை நிலை: பகையரசன் பணிந்த பின்னரும் வஞ்சி அரசன் பாசறைக்கண் தங்கியிருப்பது.
18.பெருவஞ்சி: முன்பு தீயிட்டும் (உழபுலவஞ்சி) பணியாத பகை மன்னனது நாட்டின் மீது மறுமுறையும் தீயிட்டு அழிப்பது.
19.பெருஞ்சோற்று நிலை: வஞ்சி வேந்தன் தனது படை மறவர்களுக்கு மிகுந்த சோற்றைக் கொடுத்தது.
20.நல்லிசை வஞ்சி: வஞ்சி வேந்தனது வெற்றியைப் புகழ்ந்துப் பாடுதல் மற்றும் அவனால் அழிந்துப் பட்ட பகை நாட்டிற்காக வருந்திப் பாடுதல் ஆகியவையும் ஆகும்.
4.காஞ்சிப் படலம்:
தன் நாட்டைக் கவருவதற்காக பகையரசன் (வஞ்சியரசன்) படையெடுத்து வருவதை அறிந்தான் ஒரு வேந்தன். அப்படைகள் தம் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் பொருட்டு காஞ்சி மறவர்கள் காஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு தம் எல்லையில் நின்று தடுத்துப் போர் புரிவது காஞ்சித்திணை எனப்படும்.
காஞ்சித்திணை துறைகள் மொத்தம் – 21
1.காஞ்சி எதிர்வு: வஞ்சி வேந்தன் படையெடுத்து வர அதனைக் கண்ட காஞ்சி வேல்மறவனின் ஆற்றலை மிகுத்துச் சொல்வது.
2.தழிஞ்சி: வஞ்சியரசனின் படை தம் நாட்டின் எல்லையைத் தொடாத படி காத்து நிற்பது.
3.படை வழக்கு: காஞ்சி வேந்தன் தன் படைமறவர்களுக்கு துணைப்படையை வழங்குவது மற்றும் படைக் கருவிகளைப் பெற்ற மறவன் தன் ஆற்றலைத் தானேப் புகழ்ந்துக் கூறுவது.
4.பெருங்காஞ்சி: காஞ்சி மறவர் போரின்கண் தமது மறப்பெருமையை வெளிப்படுத்துவது.
5.வாள் செலவு: காஞ்சி அரசன் தன் வாளைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்லுமாறுக் கூறியது.
6.குடை செலவு: காஞ்சியரசன் தன் குடையைப் போர்களத்திற்கு எடுத்துச் செல்ல விடுவது.
7.வஞ்சினக் காஞ்சி: காஞ்சி மன்னன் சூளுரைப்பது. உறுதிபட சினந்து கூறுதல்.
8.பூக்கோள் நிலை: மறவர்கள் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுதல்.
9.தலைக்காஞ்சி: போர்க்களத்தில் செயற்கரும் செயலைச் செய்து இறந்த மறவனின் தலையைப் பாராட்டுவது.
10.தலை மாராயம்:ஒரு பகை மறவனின் தலையைக் கொண்டு வந்த காஞ்சி மறவனுக்கு மன்னன் பெரும்பொருளைக் கொடுத்து சிறப்பிப்பது.
11.தலையோடு முடிதல்: இறந்த தலைவனின் தலையைக் கண்டு அவனுடைய மனைவி இறந்துபடுவதே ஆகும்.
12.மறக்காஞ்சி: வஞ்சி மறவர்கள் அஞ்சும்படியாகப் போர் செய்தல் மற்றும் ஒரு மறவன் தன்னுடையப் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு உயிர்விடுதல்.
13.பேய்நிலை: புண்பட்டு இறந்த மறவனைப் பேய் காவல் காப்பது.
14. பேய்க்காஞ்சி: புண்பட்டுக் கிடப்பவனைப் பேய் அச்சுறுத்துவது.
15.தொட் காஞ்சி: மறவனின் புண்ணைப் பேய் தீண்டுவது.
16.தொடாக் காஞ்சி: மறவனின் புண்ணைத் தீண்டப் பேய் அஞ்சுவது.
17.மன்னைக் காஞ்சி: இறந்த மறவனின் புகழைப் பாராட்டி மனம் வருந்துவது.
18.கட்காஞ்சி: காஞ்சி வேந்தன் தன் வீரருக்குக் கள்ளினை வழங்கியது.
19.ஆஞ்சிக் காஞ்சி: கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுவது மற்றும் போரில் இறந்த கணவனுடன் மனைவியும் உயிர்விடுதல் மற்றும் கணவனை அழித்தக் கருவியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிர் விடுதல்.
20.மகட்பாற் காஞ்சி: தன் மகளைக் கேட்கும் வஞ்சியரசனோடு காஞ்சியரசன் மாறுபட்டு நிற்பது.
21.முனைகடி முன்னிருப்பு: காஞ்சி வேந்தன் வஞ்சியரசனின் படையைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வது.
5.நொச்சிப் படலம்: (நொச்சி – மதிலைக் காப்பது)
ஓர் அரசன் பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்றிவளைத்துக் கொள்வான். அப்போது முற்றுகையிடப்பட்ட அரசன் கோட்டைக்குள் இருந்துதன் மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூவினைச் சூடிக்கொண்டு போரிடுதலை நொச்சித்திணை எனப்படும்.
நொச்சித்திணை துறைகள் மொத்தம் – 8
1.மறனுடைப் பாசி: உழிஞை மறவர்களுக்குப் புறங்கொடாமல் நொச்சி மறசர்கள் போர் செய்வது.
2.ஊர்ச்செரு: அரணுக்குப் புறத்தே உள்ள ஊரின்கண் பகைவரோடு நொச்சியார் போர் புரிவது.
3.செருவிடை வீழ்தல்: பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காக்கப் போரிட்டு இறந்த மறவனைப் பாராட்டுவது
. 4.குதிரை மறம்: குதிரைப் படையின் மற மாண்பினைப் பாராட்டிக் கூறுவது.
5.எயிற்போர்: மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.
6.எயில்தனை அழித்தல்: எயிலைக் காக்கின்ற நொச்சி மறவர்களை பகைவர் வீழ்த்துவது.
7. அழிபடை தாங்கல்: பகைவரால் அழிந்து பட்ட காவல் படைக்கு மாறாக பிற மறவர்கள் அக்காவலில் நின்று தடுத்தல்.
8.மகள் மறுத்து மொழிதல்: மகளைக் கேட்ட பகையரசனுக்கு நொச்சி வேந்தன் பெண் கொடுக்க மறுப்பது.
6.உழிஞைப் படலம்:
பகையரசனின் கோட்டையைக் கவரக் கருதும் உழிஞை அரசன், பகைநாட்டின் காவற்காட்டையும் அகழியையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்ற நினைப்பான். அதன் பொருட்டு மறவர்கள் உழிஞைப்பூவினைச் சூடி போருக்குச் செல்வது உழிஞைத் திணை எனப்படும்.
உழிஞைத்திணை துறைகள் மொத்தம் – 28
1.குடைநாட்கோள்:உழிஞையரசன் நல்ல நாளில் தன் வெண்கொற்றக் குடையைப் போருக்கு அனுப்புவது.
2.வாள்நாட்கோள்: உழிஞையரசன் தன்னுடைய வெற்றி வாளை நல்ல நாளில் புறவீடு விட்டது.
3.முரச உழிஞை: பொன்னால் ஆகிய உழிஞைப் பூக்களை அணிவித்து முரசினை வழிபடுவது.
4.கொற்ற உழிஞை: பகைவரின் அரணைக் கைப்பற்ற உழிஞையரசன் படையெடுத்துச் செல்வது.
5.அரச உழிஞை: உழிஞை வேந்தனது புகழினைப் பாராட்டுவது.
6.கந்தழி: உழிஞை வேந்தனை திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது.
7.முற்றுழிஞை: சிவப்பெருமான் சூடிய உழிஞைப்பூவின் சிறப்பைக் கூறுவது.
8.காந்தள்: முருகப்பெருமான் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது.
9.புறத்திறை: பகைவர் நாட்டின் மதிலுக்குப் புறத்தே தங்குவது.
10.ஆர்எயில் உழிஞை: நொச்சியரசனுடைய அரண் வலிமையை மறவர்கள் எடுத்துக் கூறுவது.
11.தோல் உழிஞை: உழிஞையரசன் தனது கிடுகுப் (ஒரு வகைப் போர்கருவி) படையைப் பாராட்டியது. தோல் – கிடுகுக்கருவி
12.குற்றுழிஞை: உழிஞை வேந்தன் தான் ஒருவனாக நின்று போர்செய்து அரணைக் கைப்பற்றியது மற்றும் உழிஞை வேந்தனது படை காவற்காட்டைக் கடந்து செல்லுதல் மற்றும் அப்படையானது கூத்தாடிக் கொண்டு நொச்சியாரின் கோட்டைக்குள் புகுதல்.
13.புறத்துழிஞை: உழிஞை மறவர் நொச்சியாரின் காவல்காட்டைக் கடந்து அகழியை அடைதல்.
14.பாசிநிலை: உழிஞையார் அகழிக்கரையில் நொச்சியாரின் வலிமைக் கெடப் போர் புரிவது.
15.ஏணி நிலை: உழிஞை மறவர்கள் நொச்சியாளாரின் மதில்மேல் ஏணியைச் சாத்தியது.
16.எயிற்பாசி: உழிஞையார் ஏணிமீது ஏறிச் செல்லும் நிலை.
17.முது உழிஞை: உழிஞையார் பகைவருடைய மதிலின் மீது குதித்தல் மற்றும் உழிஞை ஒற்றன் பகைவர் நிலையை அறிவித்தல்.
18.அகத்து உழிஞை: மதிலின் அகத்து உழிஞையார் நொச்சியாரை வென்றது.
19.முற்றுமுதிர்வு: நொச்சி வேந்தனின் முரசினது ஒலி கேட்டு உழிஞை வேந்தன் மிகுந்த சினம் கொள்வது.
20.யானை கைக்கோள்: நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது.
21.வேற்றுப்படை வரவு: நொச்சியரசனுக்கு துணை செய்ய வேற்றரசன் வருவது. 2
2.உழுது வித்திடுதல் : நொச்சியாரின் அரணை அழித்து, கழுதைப் பூட்டி உழுது கவடி(உண்ணா வரகு) விதைப்பது.
23.வாள் மண்ணுநிலை: உழிஞை வேந்தனின் வெற்றி வாளைப் புனித நீராட்டுவது.
24.மண்ணுமங்கலம்: வெற்றிப்பெற்ற உழிஞை வேந்தன் தன்னை மணமகனாக ஒப்பனைச் செய்வது.
25.மகட்பால் இகல்: நொச்சியாரின் மகளை விரும்பி உழிஞையரசன் மதிற்புறத்தில் தங்கியிருத்தல்.
26.திறைகொண்டு பெயர்தல்: நொச்சி வேந்தனிடமிருந்து திறைப்பொருளைப் பெற்று உழிஞையரசன் தன் நாட்டிற்குத் திரும்புதல்.
27.அடிப்பட இருத்தல்: பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருப்பது.
28.தொகை நிலை: உழிஞை வேந்தனின் ஆற்றலைக் கண்ட பகைவேந்தர்கள் பலரும் அவனிடம் தஞ்சம் புகுவது.
7.தும்பைப் படலம்:
பகையரசர் இருவர் ஓரிடத்தைப் போர்களமாகக் கொண்டு வெற்றியைக் குறிக்கோளாக வைத்துக் கடும் போர் செய்வர். இப்போர் தத்தம் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையும். இப் போரிடத்து தும்பைப் பூவினைச் சூடி போரிடுவதுதும்பைத் திணை எனப்படும்.
தும்பைத்திணை துறைகள் மொத்தம் – 23
1.தும்பை அரவம் : அரசனிடமிருந்து பொருள் பெற்ற படைமறவர் மகிழ்ந்து ஆரவாரம்செய்வது ஆகும்.
2.தானை மறம்: இருதிறத்துப் படைகளும் போர் செய்து அழியாமல் காத்தது. போரினை விரைந்து மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவது. வேற்படை மறவரின் சிறப்பினை எடுத்துக் கூறுவது.
3.யானை மறம்: தும்பை அரசனுடைய யானையின் வெற்றியை கண்டவர்கள் வியந்து போற்றியது ஆகும்.
4.குதிரை மறம்: தும்பை அரசனுடைய குதிரையின் திறத்தை மிகுத்துச் சொல்லியது.
5.தார்நிலை: பகைவரின் தார்படையை (தரைப்படை) தான் ஒருவனாக நின்று தகர்ப்பேன் என ஒரு வீரன் கூறுவது மற்றும் தன் அரசனை சூழ்ந்து கொண்ட பகையரசர்களை தான் ஒருவனாக நின்று போர் செய்து காத்தல்.
6.தேர்மறம்: தும்பை அரசனுடைய தேர் வலிமையைக் கூறுவது.
7.பாண்பாட்டு: போர்களத்தில் இறந்துப்பட்ட மறவர்களுக்குரிய இறுதிக்கடன்களை பாணர்கள் செய்வது ஆகும்.
8.இருவரும் தபுநிலை: போர்களத்தில் இருதிறப் படைகளோடு அரசரும் இறந்துபடுவது ஆகும். (தபுதல் – சாதல்)
9.எருமை மறம்: புறமுதுகிட்டு ஓடும் தன்படையைச் சினந்து, தான் மட்டும் பகைவரை எதிர்த்து நின்று தடுக்கும் மறவனின் ஆண்மையைப் போற்றியது.
10.ஏம எருமை: தன்னிடமிருந்த ஒரே வேலினை யானை மீது எறிந்த பின்பும் கருவி தேடி அலையாமல் தன் தோள் வலிமையால் பகைவரை வெற்றிக் கொண்டது ஆகும்.
11.நூழில் :பகைவரின் மார்பை பிளந்த மறவன் தன் மகிழ்ச்சியின் காரணமாக போர்க்களத்தில் வேலினை கீழும் மேலுமாக சுழற்றி ஆடியது.
12.நூழில் ஆட்டு: தும்பை மறவன் ஒருவன் எறிந்த வேலானது பகைவனின் மார்பைப் பிளந்தது. அவ்வேலினைப் பறித்து பகைவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடும்படியாக வீசியது.
13.முன்தேர்க் குரவை: தும்பை மறவர்கள் தம் அரசனின் தேருக்கு முன் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.
14.பின்தேர்க் குரவை: தும்பை மறவர்களும் விறலியரும் தம் அரசனின் தேருக்கு பின் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது.
15.பேய்க்குரவை: தும்பை அரசனின் தேருக்கு முனனும் பின்னும் பேய்மகள் நின்று ஆடுவது.
16.களிற்றுடனிலை: தன்னால் வீழ்த்தப்பட்ட யானையின் கீழ் வீழ்ந்து மறவன் ஒருவன் அதனுடன் ஒருங்கே இறப்பது.
17.ஒள்வாள் அமலை: போரில் இறந்த பகையரசனைச் சூழ்ந்து நின்று தும்பை மறவர்கள் வாளினை வீசி ஆடுவது.
18.தானை நிலை: இருபக்கத்து மறவர்களும் தன் புகழைப் பேசும்படி மறவன் ஒருவன் மேம்பட்டு நிற்றலைச் சிறப்பித்துக் கூறுவது.
19.வெருவெரு நிலை: ஒருவனுடைய உடலை துளைத்த அம்புகள் அவனை நிலத்தில் விழாதபடி தடுத்து நிற்பது.
20.சிருங்கார நிலை: போர்க்களத்தில் இறந்து கிடக்கும் மறவனது உடலை அவன் மனைவி தழுவி நிற்பது.
21.உவகைக் கலுழ்ச்சி: விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்டு அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துவது.
22.தன்னை வேட்டல்: தன் அரசன் போர்க்களத்தில் இறந்ததைக் கேட்ட மறவன் அப்போர்க்களத்திலே உயிரை விடுதல் மற்றும் களத்தில் இறந்த கணவனைக் காண மனைவி வருதல்.
23.தொகை நிலை: இருநாட்டு அரசாகளும் இறந்துபட அவர்தம் போர் மறவர்கள் மட்டும் தொடர்ந்து போர் செய்து இறப்பது.
8.வாகைப் படலம்:
பகைவரை வென்று அதற்கு அறிகுறியாக வாகை மாலையைச் சூடுவது வாகைத்திணை எனப்படும்.
வாகைத்திணை துறைகள் மொத்தம் – 32
1.வாகை அரவம்: போர் மறவர் வாகைப்பூச் சூடியும், வீரக்கழல் அணிந்தும் ஆரவாரிப்பது.
2.அரச வாகை: வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது. 3.முரச வாகை: வாகை வேந்தனின் வெற்றி முரசைச் சிறப்பிப்பது.
4.மறக்களவழி: செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுவது.
5.களவேள்வி: வாகை அரசன் போர்க்களத்தில் வேள்வி செய்வது.
6.முன்தேர்க்குரவை: வெற்றிப் பெற்ற அரசனுடைய தேரின் முன் பேய் கூத்தாடுவது. (தும்பை.13)
7.பின்தேர்க்குரவை: வாகை அரசனின் தேரின் பின்னர் மறவர்களும் விறலியரும் நின்று குரவைக் கூத்தினை ஆடுவது. (தும்பை.14)
8.பார்ப்பன வாகை: வேதம் உணர்ந்த பார்ப்பனனின் மேம்பாட்டைக் கொண்டாடுவது.
9.வாணிக வாகை: அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர் தம் மேம்பாட்டைக் கூறுவது.
10.வேளாண் வாகை: வேளாளரைச் சிறப்பித்துக் கூறுவது.
11.பொருந வாகை: பிறருடைய ஒவ்வாமை நோக்கி யாரையும் இகழ வேண்டாம் என்பது.
12.அறிவன் வாகை: மூன்று காலத்தையும் உணர்ந்த அறிவனின் நிலையைஎடுத்துரைப்பது.
13.தாபத வாகை: துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது.
14.கூதிர்ப் பாசறை: காமத்தை மிகுதிப்படுத்தும் கூதிர்ப்பருவத்திலும் அரசன் பாசறைக்கண் தங்குவது.
15.வாடைப் பாசறை: வாடைக்காற்று வீசிய நிலையிலும் அரசன் பாசறைக்கண் இருப்பது.
16.அரச முல்லை: மற மாண்பினை உடைய அரசனின் நல்இயல்புகளை மிகுத்துக் கூறுவது.
17.பார்ப்பன முல்லை: அரசரின் பகை நீக்கிச் சந்து செய்து நட்பாக்கும் நடுவுநிலைமை உடைய பார்ப்பனனின் சிறப்பைக் கூறுவது.
18.அவைய முல்லை: அறம்கூறும் சான்றோரின் தன்மையைக் கூறுவது.
19.கணிவன் முல்லை: காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பிப்பது.
20.மூதின் முல்லை: பழமை வாய்ந்த மறக்குடியில் பிறந்த பெண்டியரின் மறப்பண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.
21.ஏறாண் முல்லை: மறக்குடியின் மேலோங்கும் ஒழுக்கத்தினைச் சிறப்பித்துக் கூறுவது.
22.வல்லாண் முல்லை: மறவன் ஒருவனின் ஆண்மைத் தன்மையை எடுத்துரைப்பது
. 23.காவல் முல்லை: ஓர் அரசனின் காவல் தொழிலைச் சிறப்பித்துக் கூறுதல் மற்றும் அக்காவலைச் சான்றோர் எடுத்துரைத்தல் ஆகிய இரண்டும்.
24.பேராண் முல்லை: அரசன் தன் பகைவரை வென்று அக்களத்தை தனதாக்கிக் கொண்ட சிறப்பினைக் கூறுவது.
25.மறமுல்லை: மறவன் ஒருவனின் மேன்மையைச் சிறப்பித்துக் கூறுவது.
26.குடைமுல்லை: அரசனது வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.
27.கண்படை நிலை: அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது.
28.அவிப்பலி:மறவன் அரசனுக்காகத் தம் உயிரைப் போர்க்களத்தில் நீத்தல்.
29.சால்பு முல்லை: நற்குணங்கள் நிறைந்த சான்றோரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறுவது.
30.கிணை நிலை: வேளாளனைக் கிணை கொட்டுவோன் புகழ்ந்து கூறுவது.
31.பொருளொடு புகறல்: மெய்ப்பொருள் மீது பற்றுக்கொள்ளுமாறு கூறுதல்.
32.அருளொடு நீங்கல்: உலகப்பற்றிலிருந்து விலக வேண்டுமெனக் கூறுவது.
9.பாடாண் படலம்:
புகழ், வலிமை, கொடைத்தன்மை, இரக்கம் ஆகியவற்றில் சிறப்பைப் பெற்ற ஓர் ஆண்மகனுடைய ஒழுக்கத்தைக் கூறுவது பாடாண் திணை எனப்படும்.
பாடாண் திணை துறைகள் மொத்தம் – 47
1.வாயில் நிலை: புலவன் ஒருவன் தன் வருகையை மன்னனுக்கு உரைப்பாய் என வாயிற்காவலனிடம் கூறுவது.
2.கடவுள் வாழ்த்து: அரசனால் வணங்கப்படுகின்ற கடவுளருள் ஒருவரை உயர்த்திக் கூறுவது.
3.பூவை நிலை: காயாம் பூவினைப் புகழ்ந்துக் கூறுவது.
4.பரிசில் துறை: இரவலன் தான் விரும்பியப் பொருளை அரசனிடமிருந்து கேட்பது.
5.இயல்மொழி வாழ்த்து: முன்னோர் கொடுத்ததைப் போல நீயும் கொடுக்க வேண்டும் என்றல் மற்றும் அரசனுடைய இயல்பினை எடுத்துக் கூறுவது.
6.கண்படை நிலை: அரசனுடைய ஆழ்ந்த உறக்கத்தைச் சிறப்பிப்பது.
7.துயில் நிலை: உறங்கும் அரசனை அவ் உறக்கத்திலிருந்து எழுப்புவது.
8.மங்கல நிலை: துயில் எழுந்த அரசனுக்கு வாழ்த்துக் கூறுதல் மற்றும் ஓர் அரசன் இயல்பாகவே ஆக்கத்தைப் பெற்றான் எனக் கூறுதல்.
9.விளக்கு நிலை: அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுவது மற்றும் அரசனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.
10.கபிலை கண்ணிய புண்ணிய நிலை: அரசன் கொடையாகக் கொடுக்கும் பசுவினுடையச் சிறப்பினைக் கூறுதல்.
11.வேள்வி நிலை: அரசனுடைய வேள்வியைச் சிறப்பித்துக் கூறுவது.
12.வெள்ளி நிலை: அரசனின் செங்கோன்மையைக் கோள் வழிச் சிறப்பிப்பது.
13.நாடு வாழ்த்து: ஓர் அரசனுடைய நாட்டை வாழ்த்திக் கூறுவது.
14.கிணை நிலை: கிணைப்பறை கொட்டுபவனுடைய நிலையை உரைப்பது. (வாகை.30)
15.களவழி வாழ்த்து: போரில் பெற்ற செல்வத்தை வாழ்த்துவது.
16.வீற்று இனிதிருந்த பெருமங்கலம்: அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.
17.குடுமி களைந்த புகழ்சாற்று நிலை: பகையரசரை வென்று அவர்தம் குடுமியைக் களைந்த நிலையைக் கூறுவது.
18.மண் மங்கலம்: அரசன் மகளிரோடு புணர்ந்து மகிழ்வது.
19.பொலிவு மங்கலம்: மன்னனின் மகப்பேற்றினைப் புகழ்ந்துக் கூறுவது.
20.நாள் மங்கலம்: அரசனது பிறந்தநாளைச் சிறப்பித்துக் கூறுவது.
21.பரிசில் நிலை: பரிசு பெற்றோன் தன் ஊருக்குச் செல்ல விரும்புவது.
22.பரிசில் விடை: பரிசிலருக்குப் பொருள் வழங்கிச் சென்று வருக என விடைக் கொடுப்பது.
23.ஆள்வினை வேள்வி: அரசன் இல்லறம் நடத்தும் பாங்கைச் சிறப்பித்துக் கூறுவது.
24.பாணாற்றுப்படை: ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவது.
25.கூத்தராற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவது.
26.பொருநர் ஆற்றுப்படை: பரிசில் பெற்றுச் செல்லும் ஒரு பொருநன் மற்றொரு பொருநனை ஆற்றுப்படுத்துவது.
27.விறலியாற்றுப்படை:பரிசில் பெற விரும்பும் ஒரு விறலியை ஒரு வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது.
28.வாயுறை வாழ்த்து: பின்னர்ப் பலித்துப் பயன் தரும் தன் சொல்வழி நடக்குமாறு கூறுவது.
29.செவியறிவுறூஉ: ஓர் அரசனுக்கு அறிவுரைக் கூறுவது.
30.குடை மங்கலம்: அரசனுடைய குடையினைச் சிறப்பித்துக் கூறுவது.
31.வாள் மங்கலம்: அரசனுடைய வாளைச் சிறப்பித்துக் கூறுவது.
32.மண்ணுமங்கலம்:மன்னன் மங்கல நீராடுதலின் மாண்பினைக் கூறுவது.
33.ஓம்படை: அரசனுக்கு சான்றோர் அறிவுரைக் கூறுதல்.
34.புறநிலை வாழ்த்து: வழிபடு தெய்வம் காக்குமாறு வாழ்த்துவது.
35.கொடிநிலை: அரசனுடையக் கொடியைத் தெய்வக் கொடியோடு ஒப்பிட்டுக் கூறுவது.
36.கந்தழி: திருமாலின் வெற்றியைப் புகழ்ந்து கூறுவது.
37.வள்ளி: மகளிர் முருகனுக்கு வள்ளிக் கூத்தினை ஆடுவது.
38.புலவராற்றுப்படை: அருள்பெற்ற புலவன் அது பெறாத மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவது.
39.புகழ்ந்தனர் பரவல்: நினைத்ததைப் பெறுவதற்காக இறைவனைப் போற்றி வணங்குவது.
40.பழிச்சினர் பணிதல்: உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்குதல்.
41. கைக்களை: ஒரு பெண் தலைவனுடைய மாலையினைப் பெற விரும்புவது.
42.பெருந்திணை: தன்னை விரும்பாத தலைவனை ஒருத்தி தழுவ விரும்புவது.
43.புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு: தலைவனின் மார்பினை இனித் தழுவ மாட்டேன் என ஊடலுற்றப் பெண் கூறுவது.
44.கடவுள் மாட்டுக் கடவுள் பெண்டிர் நயந்த பக்கம்: தெய்வப்பெண்கள் தன் இனத்தைச் சார்ந்த ஆண் தெய்வங்களை விரும்பியது.
45.கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்: மானிடப் பெண்கள் கடவுளை விரும்புவது.
46.குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி: சிறுவனை மங்கைப்பருவ பெண்ணொருத்தி விரும்புவது.
47.ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி: காதல் நிகழ்வுகள் வெளிப்படத் தோன்றும் ஊரைச் சிறப்பித்துக் கூறுவது.
10.பொதுவியல் படலம்:
வெட்சி முதல் பாடாண் ஈறாக கூறப்பட்ட படலங்கள் ஒன்பது. ஆவற்றுக்குப் பொதுவாக அமைந்த துறைகளை விளக்குவதால் இது பொதுவியல் திணை எனப்பட்டது. ஆசிரியர் இத்திணையை நான்காகப் பகுத்துள்ளார். அவை,
I.பொதுவியற்பால
II.சிறப்பில் பொதுவியற்பால
III.காஞ்சி பொதுவியற்பால
IV.முல்லை பொதுவியற்பால என்பவனாம்.
I . பொதுவியற்பால : (12 துறைகள்)
1.போந்தை: சிறப்பு பொருந்திய பனம்பூ மாலையைப் புகழ்தல். (சேர நாட்டு பூ)
2.வேம்பு : வேப்பம் பூமாலையைப் புகழ்தல். (பாண்டிய நாட்டுப் பூ)
3.ஆர்: அத்திப்பூ மாலையைச் சிறப்பித்துக் கூறுவது. (சோழ நாட்டு பூ)
4.உன்னநிலை: உன்னம் என்னும் மரத்தினது நிலையைக் கூறுவது. இம்மரம் நிமித்தம் உணர்த்தும் மரம் ஆகும்.
5.ஏழக நிலை: அரசிளங் குமாரனாய் ஆட்டுக்கிடாயில் ஏறிவருதல் மற்றும் இளமையைப் பொருட்படுத்தாமல் அரசுரிமையை ஏற்றல்.
6.கழல்நிலை: ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
7.கற்காண்டல்: இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லை தேர்ந்தெடுப்பதைக் கூறுவது.
8.கற்கோள் நிலை: தேர்ந்தெடுத்த கல்லைக் கைக்கொள்வது.
9.கல் நீர்ப்படுத்தல்: தேர்ந்து எடுத்து வந்த கல்லை நீரில் போட்டு வைத்தல் மற்றும் நடுதற்குரிய இடத்தில் சேர்த்தலும்.
10.கல் நடுதல்: மறவரின் நினைவாகக் கல்லை நடுதல்.
11.கல்முறை பழிச்சல்: நட்ட கல்லினை வாழ்த்துவது.
12.இற்கொண்டு புகுதல்: கோயிலை எழுப்பி அதனுள் நடுகல்லை எடுத்துச் செல்வது.
II. சிறப்பில் பொதுவியற்பால: (11 துறைகள்)
1.முதுபாலை: பாலை நிலத்தில் தன்னுடன் வந்த தலைவன் இறந்ததால் தலைவிவருந்துவது.
2.சுரநடை: காட்டில் மனைவியை இழந்து கணவன் வருந்துவது.
3.தபுதார நிலை: மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.
4.தாபத நிலை: கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.
5.தலைப்பெயல் நிலை: குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்து பட்டதை கூறுவது.
6.பூசல் மயக்கு: போரில் இறந்த இளைஞனின் சுற்றந்தார் அழுது ஆரவாரம் செய்வது மற்றும் மன்னன் இறந்ததற்கு வருந்துதல் ஆகியவையும்.
7.மாலை நிலை: கணவனை இழந்ததால் உயிர் விடக்கருதி மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.
8.மூதானந்தம்: இறந்த கணவனோடு உயிர் விட்ட மனைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது மற்றும் தான் எண்ணியதை முடிக்காமல் வீரன் இறந்துபடுதல்.
9.ஆனந்தம்: நிமித்தம் வேறுபட்டதால் தலைவன் நிலையை எண்ணித் தலைவி நடுங்குதல் மற்றும் இறந்துபட்ட மறவனுக்காக வருந்துவது.
10.ஆனந்தப் பையுள்: போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மகவும் வருந்துவது.
11.கையறுநிலை: தலைவனின் இறப்பைக் கண்டு சூழ்ந்திருந்தோரின் செயலற்ற நிலையைக் கூறுவது மற்றும் இறந்தோனுடைய புகழை எடுத்துக் கூறி வருந்துவதும் ஆகும்.
III. காஞ்சி பொதுவியற்பால: (6 துறைகள்)
1.முதுமொழிக் காஞ்சி: முன்னோர்களால் மொழியப்பபட்ட அறம் முதலான பொருட்களைக் கூறுதல்.
2.பெருங்காஞ்சி: கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் என்பது.
3.பொருண்மொழிக்காஞ்சி: மெய்ப்பொருளை உணர்த்துவது ஆகும்.
4.புலவர் ஏத்தும் புத்தேள் நாடு: வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது.
5.முதுகாஞ்சி: உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது.
6.காடு வாழ்த்து: இடுகாட்டினைச் சிறப்பித்துக் கூறுவது.
IV. முல்லை பொதுவியற்பால: (8 துறைகள்)
1.முல்லை: தலைவன் தலைவியோடு கூடிக் களித்த இன்பத்தின் மிகுதியை எடுத்துரைப்பது.
2.கார்முல்லை: தலைவனின் வரவுக்கு முன்னால் கார்காலம் வந்ததை கூறுவது.
3.தேர்முல்லை: பகைவென்று தேரின்மீது ஏறி வரும் தலைலவனின் நிலையைக் கூறுவது.
4.நாண்முல்லை: பெண் ஒருத்தி நாணத்தின் துணையால் தன்னைக் காத்துக் கொண்டது.
5.இல்லாள் முல்லை: கற்புடை மகளிரின் இயல்பினைக் கூறுவது.
6.பகட்டு முல்லை: வேளாளனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுவது.
7.பால் முல்லை: ஊழினது மிகுதியைச் சிறப்பித்துக் கூறுவது.
8.கற்பு முல்லை: தலைவி தலைவனின் அழகைப் பாராட்டுதல் மற்றும் தலைவன் பிரியனும் தலைவி தன் கற்பைக் காத்தல் மற்றும் தலைவன் தலைவியரின் மனைவளத்தைப் பாராட்டுதல் ஆகிய மூன்றும் ஆகும்.
ஆற்றுப்படை|சிறுகதை|பழ.பாலசுந்தரம்
அருவியில் திளைத்தது அலுக்கவே இல்லை அவர்களுக்கு. ஒரு வாளித் தண்ணீரில் உடம்பை நனைத்துக் கொள்ளும் அன்றாடக் கடமையிலிருந்து அருவிக் குளியல் முற்றிலும் வேறுபட்டிருந்தது. தடதட வென விழும் நீருக்கடியில் தங்களை மறந்து நின்று அனுபவித்துக் கொண்டிருந்தனர். திவ்யமான நீராடல் பசியைக் கிளப்பிற்று. அனைவரும் உணவை முடித்தபோது மணி பத்துதான் காலை ஆகியிருந்தது.
“ஆஃபீஸ் போற டைம் ஆயிடுச்சுப்பா… நேத்து இதே டைமுக்கு..” ஆரம்பித்த குமாரை அடக்கினர்.
”டேய் நிறுத்துடா…ஒரு நாளு ஜாலியா இருக்கலாமேன்னு ஒகேனக்கல் வந்திருக்கோம். இங்க வந்தும் ஆஃபீஸ் ஞாபகமா? அடுத்து என்ன பண்ணலாம்? சொல்லுங்கப்பா.”
“ரசூல்கானின் கேள்விக்கு விடைகள் பல வந்தன. மீன் வறுபடும் வாசனையில் மயங்கிய சிலர், வாங்கிக் கொடுத்து வறுக்கச் சொல்லும் ஏற்பாடுகளில் இறங்கினர். வேறு சிலர் தொங்கு பாலம் நோக்கி நடையைக் கட்டினர். மீண்டும் குளிக்க ஆசைப்பட்டவர்கள் நகர்ந்தனர். தண்ணீரைப் பார்த்ததும் வேறு திரவம் பற்றிய எண்ணம் எழப்பெற்றவர்கள் தனியே ஒதுங்கினர். எஞ்சிய மூவர் ராமன், சேகர், மற்றும் இளங்கோ.
“அப்படியே வேடிக்க பார்த்துக்கிட்டே நடப்போம்…” சேகரின் யோசனையை மற்ற இருவரும் மறுக்கவில்லை. வாகனங்கள் வர ஆரம்பித்தன. கர்நாடக மாநிலத்திலிருந்து நிறைய வந்திருந்தன. ஒரு கல்லூரியின் பேருந்து வந்ததும் களை கட்டியது. அந்தச் சூழ்நிலையே வண்ணமயமானது. மாணவிகள் குதூகலத்தோடு உலவினர். மேக மூட்டத்தால் சூரியன் காணாமல் போயிருந்தான். இளங்கோவிற்கு உடலும் மனதும் இலேசானது போல் இருந்தது. நடை தொடர்ந்தது.
மாதையன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கால் சட்டை மட்டும் உடம்பில். அரிவாளால் விறகு பிளந்து கொண்டிருந்த அம்மா தென்பட்டாள்.
“அம்பது ரூவா சேந்ததுமே வந்து குடுத்துட்டுப் போடா. இருந்த காசையெல்லாம் உங்கொப்பன் தூக்கிட்டுப் போயாச்சு. அரிசி எண்ணெயெல்லாம் வாங்கனும். சீக்கிரம் வந்துரு..”
”சரிம்மா…” ஆமோதிப்போடு ஆற்றங்கரை நோக்கி ஓடினான். ஐம்பது ரூபாய்க்கு மேல் எவ்வளவு சேர்க்க முடியும் என்ற எண்ணம் உள்ளே ஒடிக் கொண்டிருந்தது. நண்பர்களோடு தர்மபுரி சென்று சினிமா பார்த்துவிட்டு நன்றாகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப எப்படியும் ஐம்பது ரூபாய் வேண்டும் என மனம் கணக்கிட்டது. இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற துடிப்பும் நாளைய சுகங்கள் பற்றிய நினைப்பும் அவனை வேகமாகச் செயல்பட வைத்தன.
அவர்கள் மூவரும் படகுத் துறையை அடைந்தபோது துடுப்போடு ஒருவர் அணுகினார்.
“சார்.. வாங்க சார்.. போட்ல போகலாம். ஐந்தருவியெல்லாம் பாத்துட்டு வரலாம்…”
”மூவருக்கும் உந்துதல் ஏற்பட ஒப்புதலோடு அவரைத் தொடர்ந்தார்கள். நதியின் ஓட்டத்தில் சீற்றம் இருந்தது. மாநில எல்லையாக மலை படுத்திருந்தது. மூவரையும் ஏற்றிக் கொண்டு பரிசல்காரரும் உள் அமர்ந்தார். துடுப்பை நீருக்குள் பாய்ச்சி, மணலை இளங்கோ, அவர் பெயரை விசாரிக்க, முகத்தில் சற்றே அழுத்த, படகு முன்னேறியது. ஆச்சரியம் காட்டினார். அவனை நன்றாகப் பார்த்து உச்சரித்தார் ‘மாணிக்கம்’.
பரிசல் நீரின் போக்கிற்கு எதிராக முன்னேறிக் கொண்டிருந்தது. இருபுறமும் உயர்ந்த செங்குத்தான பாறைகள் புது அனுபவம். பிரிந்து விழுந்து கொண்டிருந்த அருவிகளின் மதில் போல நின்றிருக்க நடுவில் பயணித்தது இளங்கோவிற்குப் திவலைகள் காற்றில் பறந்து கொண்டிருந்த காட்சியில் சத்தம் அண்மையில் கேட்கத் தொடங்கியது. வெண்ணிறத் இளங்கோ லயித்துக் கொண்டிருந்தபோது வானிலிருந்து அசரீரியாய் ஒரு குரல் கேட்டது.
“அஞ்சு ரூவா குடுக்கறீங்களா, குதிக்கிறேன்…”
குரல் நோக்கித் தலை உயர்த்தினான் இளங்கோ. பக்கப் பாறையின் உச்சியில் ஒரு சிறுவன் உடம்பில் நீர் சொட்ட நின்று கொண்டிருந்தான். வயிறு ஒட்டிப் போய்த் தெரிந்தது. வயது பத்து கூடத் தாண்டியிருக்காது. கையை அவர்களை நோக்கித் தாழ்த்தி, விரல்களைக் குவித்து விரித்து மீண்டும் கேட்டான்.
“அஞ்சு ரூபா குடுக்கிறீங்களாண்ணா? குதிச்சுக் காட்டறேன்.”
திடுக்கிட்ட இளங்கோவிற்குள் சிந்தனை அலைகள் எழுப்ப நொடியில் சேகர் உரக்க கத்தினான்.
”குதிடா… பாக்கலாம்.”
அடுத்த வினாடி அந்தச் சிறுவன் பாறையிலிருந்து எம்பினான். சரேலென்று அந்தரத்தில் பறப்பது போல் உயர்ந்து, செங்குத்தாக இறங்கி, நீருக்குள் அமிழ்ந்தான். நீர்ப்பரப்பு பெரிதாகச் சலனப் பட்டு, அலைகள் உற்பத்தியாகி நெளிந்து பரவின. பரிசலில் மோதி ஆடவைத்தன. இளங்கோ பிரமிப்போடு எச்சில் விழுங்கினான். மாணிக்கம் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
“என்ன சார்… ஆச்சர்யமா இருக்கா? அந்தப் பையனுக்கு இதுதான் சார் தொழிலே. அவனோட தாத்தா சினிமா ஹீரோவுக்கெல்லாம் டூப்புப் போட்டுக் குதிச்சிருக்காரு… அருவிகிட்டயே குதிப்பாரு…”
வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். பரிசல் அருவிகளை நெருங்கத் தத்தளிப்பு அதிகமானது. ஒடுங்கி அமர்ந்திருந்த ராமனின் குரல் நடுங்கியது.
“போதுங்க மாணிக்கம்… ரொம்ப கிட்ட போவேணாம்…”
லேசான சிரிப்போடு பரிசலை ஒரு சுற்றுச் சுற்றி லாவகமாகத் திருப்பினார். நீரின் திசையில் வேகமெடுத்தது. பாறை ஓரமாக ஒதுக்கி சற்றே குழிவான இடுக்கில் நிறுத்திக் கொண்டார். அவர் பீடியைப் பற்ற வைத்தபோது, பாறை மறைவிலிருந்து அந்தச் சிறுவன் வெளிவந்தான்.
இளங்கோ ஐந்து ரூபாய் நோட்டை அவன் ஈரக்கையில் வைத்தான்.
“ஆமா காசெல்லாம் எங்க வெச்சுக்குவே? நனையாதா?”
“நனையாதுண்ணா.. மேல பாறை சந்துல வெச்சுக்குவேன். அம்பதுரூவா சேந்ததும் எங்கம்மாகிட்டக் குடுத்துட்டு வந்துடுவேன்.
“ ஐம்பது ரூபாய்க்குப் பத்து முறை குதித்து மேலே ஏற வேண்டுமே என இளங்கோவின் மனம் கணக்கிட்டது.
“உங்கம்மா என்ன பண்றாங்க?”
”வீட்டுலயே மீன் வறுத்து விக்கிறாங்கண்ணா, அவங்களுக்கு ஒரு கால் இல்லங்கண்ணா… சரியா நடக்க முடியாது…” ”உங்கப்பா இருக்காரா? என்ன பண்றாரு?” “பரிசல் வருதுங்கண்ணா… நான் போறேன்.” இளங்கோவின் தொடர்ந்த அழைப்புகளைப் பொருட்படுத்தாமல் விறுவிறுவெனப் பாறையில் தொற்றி ஏறி உச்சிக்குப் போய்விட்டான். மறுபடியும் அவன் குரல் ஒலித்தது. புதிதாக வந்த பரிசலில் இருந்தவர்கள் அவனைக் குதிக்கச் சொல்ல மீண்டும் அந்தக் காட்சி காணக் கிடைத்தது. இம்முறை இளங்கோவின் மன ஆழத்தில் குதித்து அங்கேயே துளைக்கத் தொடங்கியிருந்தான். அதிர்ச்சி நீங்காமல் கேட்டான்.
“இங்க ஆழம் எவ்வளவு இருக்குங்க மாணிக்கம்?”
“அது இருக்கும் சார்… ஒரு எம்பதடி..
“அப்படியா? பாறையோட உச்சி எவ்வளவு ஒயரம் இருக்கும்?”
“ம்… நாப்பது அம்பதடி இருக்கலாம். மேலே நின்னு கீழ தண்ணியப் பாத்தா ஈரக்குலையெல்லாம் நடுங்கும் சார். அந்தப் பையனுக்குத் தெகிரியம் ஜாஸ்தி. சலிக்காத குதிப்பான். என்ன சார் பண்றது? அவங்கப்பனுக்குச் சதா சர்வ காலமும் சாராயந்தான் கதி. இவந்தான் சம்பாரிக்கணும். இவனுக்கு ஒரு தம்பி இருக்கான் சார்…”
மாணிக்கத்தின் விவரிப்பு இளங்கோவின் மனத்தைப் பிசைந்தது. சுரந்த கண்ணீரை, முகம் திருப்பிச் சுண்டிவிட்டான். இறங்க வேண்டிய இடம் சமீபித்துக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தபோது பாறை உச்சியில் சிறுவன் தெரிந்தான். குவிந்து விரிந்த வலக்கையும், அசைந்த வாயும் அப்படியே மனத்துள் பதிவாயின.
“சார் மொதல்லருந்தே அக்கறையா விசாரிச்சுகிட்டே வர்றீங்க….. இந்த ஏழைங்களைப் பத்தியெல்லாம் யாருமே கவலப்பட மாட்டாங்க சார்… நெறையப் பேரு ரெண்டு ரூவாதான் குடுப்பாங்க… சில பேரு அவனக் குதிக்கச் சொல்லிட்டுக் காசு தராமலே போயிருவாங்க… என்ன பண்ண முடியும் சொல்லுங்க… பொருளா, காசு தர்லேன்னா திரும்ப எடுத்துக்க?”
இளங்கோ கதறிவிடுவான் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டான். காவிரியின் ஆழத்தில் வாழ்க்கையைத் தேடித் தேடித் திரும்பும் அவனின் தொழில் நடவடிக்கைகள் இளங்கோவை அடியோடு புரட்டிப் போட இயல்பிழந்தான். மாணிக்கத்திடம் பணம் தந்து விடை பெற்றான்.
மீண்டும் அவர்கள் குழுவானார்கள். அவரவர் தங்கள் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அனுபவப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்க இளங்கோ மட்டும் தீவானான். சுற்றுலா மையத்தில் நிற்கும் பிரக்ஞையே அற்றுப் போனான். நீர் தளும்பும் செப்புக் குடத்தை நெஞ்சின் மேல் வைத்து ஒரு சேரப் பலர் அழுத்துவது போல் ஒரு வலி உணர்ந்தான். மறுபடியும் அந்தச் சிறுவன் எத்தனை முறை குதித்தானோ என்று மனம் பதைத்தது. கால் இல்லாத அம்மா குடிசை முன் அமர்ந்து மீன் வறுக்கும் காட்சியும் அவ்வப்போது தோன்றி வதைத்தது.
மாலையில் குளிர் ஆரம்பித்தபோது சிறுவனின் நடுக்கத்தை இளங்கோவால் உணரமுடிந்தது. மனவெளியில் நீர் நிறைந்து அதில் அந்தச் சிறுவன் மூழ்கி எழுந்து கொண்டிருந்தான். அவர்கள் சேலம் செல்லும் பேருந்தை நிறைத்தனர். ஓகேனக்கல் விலகத் தொடங்கிற்று. சமவெளியில் நதியாய் நடந்த காவிரி அருவியாய்க் குதிக்கும் உருமாற்றத்தால் எத்தனை பேரின் பிழைப்பு நடக்கிறது என்ற எண்ணம் பயணம் முழுவதும் அவனுள் ஊறிக்கொண்டேயிருந்தது.
அடுத்த நாள் முதல் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் அதில் அந்தச் சிறுவன் குதித்து எழுவதான பிம்பம் தெரிந்து மறைய ஆரம்பித்தது இளங்கோவிற்கு. அவன் நெஞ்சிற்குள் சிறுவனின் கைகள் துழாவிக் கொண்டேயிருந்தன. ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்ற நினைப்பு பரிணாமுற்று குறிக்கோளாயிருந்தது. பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு ஞாயிறன்று புறப்பட்டுவிட்டான்.
விடுமுறையாதலால் அன்று கூட்டம் அதிகம்தான். எண்ணெய்ப் புட்டியோடு சூழ்ந்தவர்களையும், மீன் துண்டங்களோடு மறித்தவர்களையும் புறக்கணித்துப் பரிசல் துறையை எட்டினான் இளங்கோ கண்கள் மாணிக்கத்தைத் தேடின. சில நிமிடங்களில் பின்னாலிருந்து குரல் வந்தது.
“வாங்க சார்… வந்து ரொம்ப நேரமாச்சா?”
“இல்லல்ல… இப்பதான் வந்தேன். போலாமா?” ”போலாம் சார், தனியாத்தான் வந்தீங்களா?”
“ஆமாமா… அதுக்காக யோசிக்காதீங்க. சேத்து ரூவா குடுத்தர்றேன்.”
”அடடா… அதுக்காக கேக்கல சார்.. போன தடவையே பேசுனதவிடப் பத்து ரூவா அதிகமாத்தான் தந்துட்டுப் போனீங்க… உக்காருங்க.”
படகு நகர்ந்தது. இருவர் மட்டுமே என்பதால் இலகுவாக முன்னேறியது.
“ஆமா, அந்தப் பையன் எப்படி இருக்கான்? மேலயிருந்து குதிச்சு சம்பாரிப்பானே…”
“மாதையனா… அவன் போய்ச் சேந்துட்டான் சார். தண்ணீலேயே பொழப்பு நடத்துனான் கடைசில அதுலயே உசிரும் போயிருச்சு…”
“பகீரென்றது அவனுக்கு. அதிர்ச்சியில் நெஞ்சடைத்தது.
“ஐயய்யோ… என்ன சொல்றீங்க மாணிக்கம்?”
“என்னத்த சார் சொல்றது? கொடும சார். ஒரு நா வேற ஸ்டேட் பசங்க கும்பலா வந்திருந்தானுங்க. வழக்கம் போல இவன் குதிச்சுக் காமிச்சு அஞ்சு ரூவா வாங்கினான். கும்பல்ல யாரோ பாவி நூறு ரூவா தர்றதா ஆச காட்டி அருவிகிட்டக் குதிக்கச் சொல்லியிருக்கான். இவனும் பணத்துக்கு ஆசப்பட்டு நெப்பு தெரியாமக் குதிச்சுட்டான். பாறையில் அடிபட்டு மண்ட பொளந்து போச்சு. ரொம்ப தூரம் தள்ளிப்போய்த்தான் பாடி கெடச்சுது. வயித்துப் பொழப்புக்காக ஏதோ பண்ணப் போயி… ப்ச் பாவம் சார்…”
துக்கத்தால் கனத்துப்போன மனத்தோடு செய்வதறியாது உறைந்து போனான் இளங்கோ. படகு ஐந்தருவியை நெருங்க. அவன் பார்வை மேலே போனது. வெட வெடத்தபடி ஒரு சிறுவன் தெரிந்தான்.
“இது யாருங்க மாணிக்கம்?”
”மாதய்யனோட தம்பி சார். இஸ்கூல் போறத நிறுத்திட்டு இங்க வந்துட்டான். என்ன சார் பண்றது. பொழப்பு நடக்கணுமே.
பரிசல் முன்னேற… மேலிருந்து கீச்சுக் குரல் கேட்டது.
“அம்பது ரூபா குடுக்கறேன் குதிடா…” கட்டுப்பாட்டை இழந்து கத்திய இளங்கோ, பொங்கிய கண்ணீரையும் துடைக்காமல் மாணிக்கத்தின் தோளில் விழுந்து கேவ ஆரம்பித்தான். அவர் உடலும் குலுங்க துவங்க, இருவரின் கண்ணீரும் படகுக்குள் சொட்ட ஆரம்பித்தது. சில நொடிகளில் நீர்ப்பரப்பு அதிர்ந்து படகு ஆட ஆரம்பித்தது. சிதறித் தெளித்த நீர்த்துளிகளுள் ஒன்று இளங்கோவின் வாயில் பட உப்புக் கரித்தது
சிறுகதையின் ஆசிரியர்
பழ.பாலசுந்தரம்
எழுத்தாளர்
ஓசூர் – 635 109
தேவதை சிரிப்பு |கவிதை|ச.குமரேசன்
தேவதை சிரிப்பு
பிரெஞ்சு டியூ பிளேவை
நினைவூட்டும் வெண்ணிற
சுருண்ட கூந்தல்..!
தோடுடைய செவியனை
கண் முன் நிறுத்தும்
அவள் காதின் நீண்ட துளைகள்..!
கைகளால் என்னை இழுத்து
இன்பமாய் கொஞ்சிடும்போது
தொங்கட்டான் கன்னம் வரை சென்று
ஊசல் வரி பாடிவரும்..!
பாட்டி வந்தவுடன்
திருவிழா ராட்டினம்
கண்ட மகிழ்ச்சி பொங்கி வரும்..!
வயல் வரப்புகளை
இரண்டு வட்டம் சுற்றி வருவோம்…
ஓட்டத்தினூடே பாட்டி கையிலுள்ள
மஞ்சள் பையின்
நினைவுகளும் சேர்ந்தே
ஓடிக்கொண்டிருக்கும்..!
பாட்டியின் வழக்கமான
மிக்சர் பொட்டலம்
பார்லேஜ் பிஸ்கட்
அன்பில் துவைத்து எடுத்த
அச்சு முறுக்கு . . !
பேரன்களை கண்டவுடன்
பாட்டியின் மஞ்சள் முகம்
மத்தாப்பாய் ஒளிவிடும்…
பாட்டி வாய்க்கு பல்லே
தேவையில்லை
தேவதை சிரிப்பு..!
எங்கள் அன்னையை
அகிலத்திற்கு
அறிமுகப்படுத்தியவள்
அன்பே உருவானவள்..!
எப்போது எண்ணினாலும்
என் துன்பத்தை எல்லாம்
நினைவுகளால் துடைத்திடுவாள்
‘துளசி’ பாட்டி ..!
கவிதையின் ஆசிரியர்
-கவிஞர் ச.குமரேசன்
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),
இராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
தமிழ் இலக்கியக் கதைகளில் அறநெறிமுறைகள்|ஆய்வுக்கட்டுரை|முனைவர் பெ.இளையாப்பிள்ளை
முன்னுரை
தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்வை படம் பிடித்து காட்டும் காலப் புகைப்படக் கருவிகள் என்றே சொல்லலாம் பாட்டும் தொகையும் பழந்தமிழ்ப் பனுவல்கலாம். சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டை வெளிப்படுத்தும் விழுமியங்களாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களோடு மக்களாக பயணித்த புலவர்களினுடைய கவிதை வரிகளினூடே அறநெறிகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன பண்பாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. சங்கம் தொடங்கி சமகாலம் வரை உள்ள பலவகைப்பட்ட இலக்கியங்களில் அறநெறி முறைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை விளக்கும் இக்கட்டுரை அவற்றின் பின்புறமான இவ்விளக்கியம் அக்கதையை கூறும் சான்றோர் அவை அன்று பயன்பட்ட விதம் ஆகிய எல்லாவற்றையும் திறம்பட விளக்குவதாய் அமைந்துள்ளது.
அறநெறிக் கதைகள் கூறும் இலக்கியங்கள்
கதைகள் இன்று இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் அன்றோ! பாமர மக்களின் பொழுது போக்கிற்காகவும், அவர்கள் நாளும் உரையாடும் உரையாடல்களிலும், ஒருவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளையும் செவிவழியாக கடத்தப்பட்டு இன்றைக்கு நூல்களாக அச்சுக்கு ஏறி பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பதை பார்க்கும் போது பன்னெடுங்காலக் கதைகள் வழி அறநெறிச் சிந்தனைகளை பழந்தமிழ் மக்கள் எந்த அளவிற்குக் கையாண்டுள்ளனர் என்பது புலப்படும். மன்னனுக்கும் மக்களுக்கும் ஒரே நீதி என்ற உயர்ந்த அறநெறியை வெளிப்படுத்தும் விதமாய் பாண்டியர் வரலாறு ஒரு செய்தியை பகர்கின்றது. மதுரை மாநகரை ஆண்டு வந்த அரசன் பொற்கை பாண்டியன். அவன் அறநெறி தவறாது ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அந்தணரின் இல்லக் கதவை தட்டியதன் காரணத்தால் தன் அறநெறியினின்று தவறிவிட்டோம் என்று அறிந்து தன் கையை தானே வெட்டிக் கொண்டார். வெட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாது பொன்னாலாகிய மற்றொரு கையை செய்து மாட்டிக் கொண்டான் என்பதை சங்கநூற்கதைகளின் வழி நாம் அறிந்து கொள்கிறோம். “வெட்டுண்ட கைக்குப் பதிலாக அரசன் பொன்னால் கை செய்து அமைத்துக் கொண்டான்” என்கிறார் மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22) சான்றோர் செய்யுள்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் தங்களுக்குள்ளே பல்வேறு விதமான மக்கள் மொழி கதைகளை பதிவு செய்து வைத்திருக்கின்றன. அக்கதைகள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வகையான அறநெறி முறைகள் பின்பற்றப் பட்டிருக்கும். வீடென்றால் அந்த வீட்டில் நல்ல மனையாள் இருக்க வேண்டும். மனையாள் மட்டும் போதாது. அந்த மனையாளுக்கு கல்வியறிவில் சிறந்த புதல்வனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும் தான் அந்த வீடு வீடாக இருக்கும் என்பதை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை சான்றாதாரத்துடன் விளக்குகின்றது. அவை.,
“மணிக்கு விளக்கம் மடவாள்; மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர் மனக் இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கு
ஓதின் புகழ்சால் உணர்வு” (நான்மணிக் ; பாடல் – 101)
என்ற பாடலின் வழி அறிய முடிகின்றது. இல்லானகத்தில் ஒரு பெண் முடமானவளாகவாவது இருத்தல் வேண்டும். இல்லையேல் அது வீடாக இருக்காது பிணம் எரியும் சுடுகாடாக இருக்கும் என்னும் அறத்தை நாலடியார் கூறும் செய்யுற் கதை பதிவுசெய்கின்றது.
“மாண்ட மனையாலை இல்லான் தன்னிலகம்
காண்டர்க்கு அறியதோர் காடு”
(நாலடி ; பாடல் – 361) நசையில்லாமல் எந்த ஒரு பெண்ணையும் ஆடவன் பின்தொடரக் கூடாது அப்படி பின்தொடர்ந்தால் அவனுக்கு என்ன விதமான தீங்கு நேரும் என்பதை உதயகுமாரன் மரணத்திலிருந்து நமக்கு புலப்படுத்துகின்றது மணிமேகலை காப்பியம்.
“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” (மணி.அடி ; 228-231)
என்பதை அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபி கதையின் மூலம் மணிமேகலை வெளிப்படுத்தும் அறநெறிமுறைப் பாங்கினை பார்க்கவியலும். தெய்வ நம்பிக்கையைப் பற்றுதலோடு பற்றிக் கொண்டிருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுள் காட்சி கொடுப்பான் என்பதை சுந்தரரின் வரலாற்றுக் கதையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதிலும் ஒருவகையான அறம் பின்பற்றப்பட்டுள்ளது. கிழவனாக வந்து இறைவன் ஆட்கொண்டவற்றை திருவெண்ணெய்நல்லூர் திருப்பதிகம் பத்தும் திறம்பட எடுத்துரைக்கின்றது.
“நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை
பேயாய்த் திரிந்து எய்தேன் பெலாகா அருள் பெற்றேன்”
(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பாடல் – 02)
தான் கொண்ட கொள்கையில் நேர்மையும் பய பக்தியும் கொண்டால் தெய்வத்தையே கணவனாக ஏற்கலாம் என்ற ஆண்டாளின் கதை வழி அறம் வெளிப்படுகின்றது. அதை.,
“மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தொழீ!நான்”
(நாச்சியார் திருமொழி ; பாடல் – 58)
பெரியாழ்வார் பெற்றெடுத்த பொற்கொடி ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றுக் கதையின் வழி அறம் கொண்டு நிற்பதை காண முடிகின்றது. அது கற்பனையாயினும் அதன் உள்ளே ஒரு அறம் பொதிந்து கிடப்பதை காண முடிகின்றது. மாலவனே வந்து மாலை சூட்டுவான் எனும் மகத்தான ஒரு நெறி கொண்ட கொள்கையில் நேர்மையும் பற்றும் கொண்டு எந்த ஒரு பெண்ணிருக்கிறாளோ அவளுக்கே அது சாத்தியமாகும் என்பதை திறம்பட திருப்பாவையும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் உரைக்கிறது.
எட்டு மகளிரை மணந்தாலும் கூட கடைசியில் அவனுக்கும் நிலை பெற்றது வீடுபேறு நிலை தான் என்பதை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது. காதலைக் கூட அறத்தின் வழியில் இட்டுச் செல்கின்ற தமிழில் காப்பியக் கதைகள். என்னிலை ஆயினும் கடைசியில் வீடுபேறு நிலைதான் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. அறநெறியை சொல்லும் முதற்காப்பியமான சிலப்பதிகாரம் அம்மானைப் பாட்டில் கோவிலன் கதை என்று வழங்கப்பட்டுள்ளது. அவற்றை ஆராய்ந்து கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் மேற்கோள் இட்டுக் காட்டுகின்றார். அவை., “சிலப்பதிகாரக் கதை பிற்காலத்தில் பல படியாக வேறுபட்டு வழங்குவதாயிற்று கோவலன் கோவிலனாகவும், கண்ணகி கர்ணகையாகவும், மாதவி மாதகியாகவும், மாசாத்துவான் மாச்சோட்டானாகவும் ஆயினர். கதையும் அங்காங்கே பல மாறுபாடுகளை அடைந்துள்ளது. கண்ணகி துர்கையின் அவதாரம் என்று கதை தொடங்குகிறது. கோவிலன் கதை என்று அம்மானைப் பாட்டில் ஏற்றப்பட்ட நூலால் இவை தெரிகின்றன”. (தமிழ்க் காப்பியங்கள்,பக் – 155) பலவகைப்பட்ட கதைகளின் மூலம் அறநெறிமுறைகள் காணப்பட்டிருப்பினும்., பிற்காலத்தில் தோன்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, விவேக சிந்தாமணி, உலகநீதி போன்ற அறநூல்கள் பலவாறாக அறத்தைக் கதைக்குள் புகுத்தி மக்களிடம் சென்றுள்ளன.
ஔவையாரின் மூதுரை ஒரு கதை சொல்கின்றது. நெல்லுக்கு பாய்ச்சும் நீரானது நெல்லோடு இணைந்து வளரும் புல்லுக்கும் பாய்வதைப்போல் நல்லவர் ஒருவர் இம்மண்ணுலகில் இருந்தாலே அவரால் எல்லாருக்கும் மழை பொழியும் என்ற உயறிய அறத்தை மூதுரை கூறுகின்றது.அப்பாடல்.,
“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியொடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை” (மூதுரை : பாடல் – 10)
பெற்ற பிள்ளை வயதில் மூத்து விட்டால் அப்பாவின் சொல்லைக் கேட்க வேண்டு, மனைவியானவள குடும்ப அதிகாரப் பொறுப்பிற்கு வந்து விட்டால் அவள் தனது கணவன் என்று கருதிப் போற்றுதல் வேண்டும். தன்னிலையில் இருந்து உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டால் பணிவைக் கையாளுதல் வேண்டும் இல்லையேல் அது பாழாய் போனதே என்று விவேக சிந்தாமணி கூறுகின்றது. அப்பாடல்.,
“பிள்ளைதான் வயதில் மூத்தான் பிதாவின் சொற்புத்திக் கேளான்
கள்ளினற் குழலாள் கணவனைக் கருதிப் பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்”
(விவேகசிந்தாமணி : பாடல் – 03)
என்ற பாடலின் வழி அறியமுடிகின்றது. கதைகள் பலவகைப்பட்டன. அக்கதைகளில் ஏதோ ஓர் அறம் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கும். முன்னோர் சொல்லும் நன்னெறிக் கதைகள், ஐந்து தந்திரக் கதைகள் என கதைகள் பொருண்மைப் புலப்பாட்டிற்கேற்ப வழிவழியாக அறநெறிக் கதைகள் கடத்தப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் உள்ளன.
முடிவுரை
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் மெய்பொருளைக் கதைகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைப்பவை தமிழ் இலக்கியங்கள். அவற்றில் அறநெறிகளைச் சொல்லும் இலக்கியங்கள் அற இலக்கியங்கள் என்னும் தொகுதியில் அடங்குவன. அறநெறி முதற்றே அரசின் கொற்றம் என்னும் சான்றோர் செய்யுட்கள் தொடங்கி சமகால அறக்கதைகள் வரை மானுடம் உய்க்கும் பொருட்டு அறநெறிமுறைகள் வழுவாது காத்துள்ளவற்றை பதிவு செய்யும் நோக்கில் இக்கட்டுரையானது அமைக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
1.இசைவாணர் கதைகள், மயிலை சீனி.வேங்கடசாமி, இரண்டாம் பதிப்பு ; பிப் – 2022, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை – 600006
2.தமிழ் காப்பியங்கள், கி.வா.ஜெகந்நாதன், முதல் பதிப்பு 2016, வெளியீடு : தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர், சென்னை – 600 008
3.மு.அருணாச்சலம் (தமிழ் இலக்கியம் சொல்லும் கதைகள், பக் ; 22)
4.நான்மணிக் : பாடல் – 101)
5.(நாலடி ; பாடல் – 361)
6.(மணி.அடி ; 228-231)
7.(ஏழாம் திருமுறை.வெண்ணைநல்லூர் பதிகம் ; பா – 02)
8.(நாச்சியார் திருமொழி : பா – 58)
9.(மூதுரை : பாடல் – 10),
10.(விவேகசிந்தாமணி : பாடல் – 03)
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் பெ.இளையாப்பிள்ளை
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
கலைப்புல முதன்மையர்,
பேராசிரியர் – இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
மின்னஞ்சல் : pelayapillai@gmail.com
கள ஆய்வு என்றால் என்ன? கள ஆய்வின் படிமுறைகள் யாவை?
ஆய்வுக்குரிய களத்துக்கே நேரடியாகச் சென்று தகவல்களைத் திரட்டி நிகழ்த்தப்படுகின்ற ஆய்வைக் கள ஆய்வு என்று குறிப்பிடுகிறோம்.
கள ஆய்வு ஏற்பாடுகள்
கள ஆய்வுக்குப் புறப்படும் முன்பு ஆய்வுக்குரிய ஏற்பாடுகளைச் செம்மையாகச் செய்து கொள்ள வேண்டும். அந்த ஏற்பாடுகளில் குறைவு ஏற்பட்டால் ஆய்வுக்கு அது இடையூறாக அமையும். ஆய்வுப் பொருளுக்கும் ஆய்வுத் தன்மைக்கும் ஏற்றபடி கள் ஆய்வுக்குரிய கருவிகள் வேறுபடலாம். பொதுவாகச் சொல்லப் போனால் ஆய்வுக்குரிய கருவிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1.சுவடிகள்
2. எழுதுகோல்கள்
3. தகவல் திரட்டுவதற்கு ஏற்ற வகையில் ஒலி இழைப்பதிப்பான்
4.இன்றியமையாத படங்களை எடுப்பதற்கு நிழற் படக் கருவி.
5. தலைவலி போன்ற பொது இடையூறுகளைத் தவிர்க்கத் தக்க மருந்துகள்.
6. நேரச் செலவில்லாமல் எளிய வகையில் பயன்படுத்தத் தக்க உணவு வகைகள்,
7.அன்றாட வாழ்வில் பொதுவாக நாம் பயன்படுத்த வேண்டிய பொருள்கள்.
நாம் இவற்றையெல்லாம் முறையாக ஏற்பாடு செய்து கொண்டு கள ஆய்வுக்குப் புறப்பட வேண்டும்.
தகவலாளர் தெரிவு அல்லது தேர்ந்தெடுப்பு
நமது ஆய்வுக்குப் பயன்படத்தக்க வகையில் நாம் பொருத்தமான தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தகவலாளர்கள் பொருத்தமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வில்லையானால் சரியாகவும் முறையாகவும் தகவல்களைத் திரட்ட முடியாது. எடுத்துக்காட்டாகச் சொன்னால் நாம் மொழியியல் ஆய்வு செய்வதாகக் கொள்வோம். மொழியியல் ஆய்வு செய்யும் பொழுது பேச்சுக் குறைபாடு இல்லாதவராகப் பார்த்து நாம் தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பேச்சுக் குறைபாடு உள்ளவரைத் தேர்ந்தெடுத்தால் நம்முடைய தகவல் பதிவு தவறாக முடிந்துவிடும்.
இன்னொரு எடுத்துக்காட்டு சொன்னால் நாட்டுப்புறத் தரவுகளைப் பதிவு செய்ய விரும்புகிற ஒருவர் நாட்டுப்புறத் தரவுகளில் நன்கு பழக்கமுள்ள வயது முதிர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு பழமொழிகளைப் பற்றி ஆய்வு செய்கின்ற ஒருவர் வயது முதிர்ந்த ஒருவரைப் பழமொழிகளைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இக்காலச் சூழலில் இளைஞர்கள் பொதுவாகப் பழமொழியைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயன்படுத்துவதில்லை. இளைஞர்களுக்குப் பழமொழிகளும் சரியாகத் தெரியும் என்று சொல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்தவர்கள் தான் பழமொழிகளை நமக்குச் சரியான முறையில் வழங்கத் தக்கவர்களாக இருப்பார்கள். இப்படித் தகவலாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது சரியான முறையில் சரியான அடிப்படையில் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தகவலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது நமக்குப் பயன்படத் தக்கவர்களை மனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அல்லது நமது ஆய்வு நமக்கு ஆய்வு நிகழும்போது இடையில் உதவமுடியாத உதவ முடியாமல் போனால் நாம் இன்னொருவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். ஆகவே தகலாளர்களை முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கும் பொழுது இரண்டு மூன்று பேரையாவது மனத்தில் கொள்ள வேண்டும்.
தகவல் களச் சூழலும் பழகு முறையும்
தகவல் களத்துக்கு ஆய்வாளர் ஓரிரு முறை சென்று வந்து அந்தச் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தச் சூழலில் வாழும் வாழ்க்கை முறை பற்றியும் அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடி தகவல் களச் சூழலில் ஆய்வுத் தகவல்களைச் சிறப்பாகத் தொகுக்கின்ற ஆற்றல் பெற்றவராக ஆய்வாளர் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தகவல் களச் சூழலை உணர்ந்து கொண்டால்தான் அந்தக் களத்தில் உள்ள மற்ற மக்களோடு முறையாகவும். எளிதாகவும் பழகித் தகவல்களைத் தொகுத்துக் கொள்ள முடியும். தகவல் களச் சூழலைப் புரிந்து கொள்வதும் அந்தச் சூழலில் வாழும் மக்களைப் புரிந்து கொள்வதும் கள ஆய்வுக்கு மிக இன்றியமையாதவை என்றே குறிப்பிட வேண்டும்.
தகவல் திரட்டும் முறை
கள ஆய்வில் தகவல்களைத் திரட்டும் பொழுது செய்திகளை முறையாகச் சுவடிகளில் அல்லது தனித் தாள்களில் குறித்துக் கொள்ளலாம். தகவலாளர்களை இயல்பாகப் பேசவிட்டு அந்தப் பேச்சை ஒலிப்பதிவுக் கருவியில் முறையாகப் பதிவு செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் அந்த ஒலிப்பதிவுக் கருவியின் துணைகொண்டு தகவல்களை முறையாகச் சுவடியில் அல்லது தனித்தாளில் எழுதிக் கொள்ள வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட சூழல் களில் நிழற்படக் கருவியைப் பயன்படுத்திப் படங்களை எடுத்துப் படங்களையும் தகவல் தொகுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாகப் பேசவிட்டுச் செய்திகளைத் தொகுப்பது ஒரு பக்கம் இருக்க, நேர்காணல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். வினா நிரல் மூலமும் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும். நேர்காணல் மூலம் தகவல்களைத் திரட்டும் போது திட்டமிட்டு நேர்காணலாம், அல்லது தன்னிச்சையாகவும் நேர்காணலாம்.
சரிபார்ப்பும் சீர் அமைப்பும்
தொகுக்கப்பட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சரி என்று நம்பிவிட முடியாது. சில இடங்களில் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டவையாக அமையக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் அந்தத் தகவல்களைச் சரியாக நாம் சீரமைத்துக் கொள்ள வேண்டும். சரிபார்த்த தகவல்களை முறைப்படி மீண்டும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சரிபார்க்கவும் சீரமைக்கவும் ஆய்வாளன் பல்வேறு உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். சூழலுக்கு ஏற்றபடி ஆய்வாளனே அத்தகைய உத்திகளை அமைத்துக் கொண்டு தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். சீரமைத்துச் செம்மைப் படுத்த வேண்டும்.
கள ஆய்வில் எதிர்பார்க்கும் சிக்கல்களும் தீர்வுகளும்
பொதுவாகக் கள ஆய்வில் ஈடுபடுகின்ற ஒருவர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு எப்படிப் பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும், அவற்றுக்கு எப்படிப்பட்ட தீர்வுகள் அமைய வேண்டும் என்பன பற்றிக் கருத்து வகையில் தெரிந்திருக்க வேண்டும். ஆய்வாளர் அந்தக் களச் சூழலைப் புரிந்து கொண்ட நிலையில் அவரால் ஓரளவுக்கு அங்கே தோன்றுகின்ற சிக்கல்களை உணர முடியும். அவற்றைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளையும் கண்டு கொள்ள முடியும். இவை ஒருபுறம் இருக்கத் தான் தெரிந்து வைத்துக் கொண்ட தகவலாளர் தனக்குச் சரியாக முழுமையாக உதவாமல் போனால் அதற்கு அவர் மாற்று வேண்டும். அதனால்தான் ஏற்பாடு செய்து கொள்ள தகவலாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போதே இரண்டு மூன்று பேரை அவர் மனத்தில் கொள்ள வேண்டும் என்று முதலிலேயே குறிப்பிட்டுள்ளோம். தான் தொகுத்த தகவல்களைக் கொண்ட தாள்கள் ஒருகால் காணாமல் போய்விட்டால் அவர் ஆய்வு தடைப்படக் கூடாது. ஆகவே ஆய்வுத் தகவல்களை முதலில் ஒரு சுவடியில் குறித்துக் கொண்டால் அதன் பிறகு தகவல் அட்டையில் எழுதி முறைப்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில் கள ஆய்வின்போது நாம் சேகரித்த தகவல்களில் நமக்கே ஐயம் இருக்குமானால் ஒவ்வொரு நாளும் அவற்றைப் பரிசோதித்து ஐயத்தை மறுநாளில் தீர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இப்படி ஐயப்பாட்டிற்குரிய செய்திகள் எல்லாவற்றையும் தொகுத்து அதற்காகவே ஒரு தனிக் கள ஆய்வை அமைத்துக் கொண்டு அந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஆய்வில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கெல்லாம் ஆய்வாளனே தீர்வு கண்டாக வேண்டும். கள ஆய்வு என்பது ஆய்வாளன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆய்வுக்கு ஏற்றபடி எளிதாகவும் அமையலாம்: மிகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் அமையலாம். எப்படி இருப்பினும் களஆய்வைச் சிறப்பாக நிறைவேற்றுவது ஆய்வாளனுக் குரிய தனிப் பொறுப்பு.
நூல் : ஆராய்ச்சி நெறிமுறைகள்
ஆசிரியர் : டாக்டர் பொற்கோ
பதிப்பகம் : ஐந்திணைப் பதிப்பகம், சென்னை – 600 005.
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து
கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளையின் பிறப்பு
கி.பி.1886ஆம் மார்கழித் திங்கள் ஆண்டு ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்றார். பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகளுக்குமேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார்.
தமிழ்ப்பற்று
1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
கரந்தைக் கவியரசு எனும் பட்டம்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய கல்வி நிலையத்தில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார். தொல்காப்பியத்திற்கு தெய்வசிலையார் எழுதிய ஏட்டுச்சுவடி உரையை தமிழ்த்தாத்தா உ.வே.சா.விடம் பெற்று, பதிப்பித்துக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார்.
‘ஆசானாற்றுப் படை’, ‘சிலப்பதிகார நாடகம்’, ‘மணிமேகலை நாடகம்’, ‘அகநானூறு உரை’ முதலிய நூல்களைப் படைத்து கவியரசு வேங்கடாசலம் தமிழுக்குத் தந்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், கவியரசு வேங்கடாசலத்தின் தமிழ்த் தொண்டினைப் போற்றிப், பாராட்டி, ‘கரந்தைக் கவியரசு’ எனப் பட்டமளித்துச் சிறப்பித்தது. டாக்டர் மா.இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம், தமது அறுபத்து ஏழாவது வயதில் 1955 ஆம் ஆண்டு மறைந்தார். அன்று அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை பல பாடல்களைப் படைத்துள்ளார். இவர், இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து
“வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !
மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !
தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்
தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !
கான் ஆர்ந்த தேனே! கற்கண்டே ! நற்கனியே !
கண்ணே! கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி !
ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !
அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !”
அருஞ்சொற் பொருள்
வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை
மன்னிய = பெருமை மிக்க
தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த
திருமாலின் குன்றம் = வேங்கட மலை
ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)
செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற
கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற தமிழே !
கட்புலம் = பார்வை
ஆனாத = குறையாத
சீர் = பெருமை
அறைதல் = சொல்லுதல்
யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.
வீழ்ந்து விடாத வீரம்|கவிதை|ச. குமரேசன்
வீழ்ந்து விடாத வீரம்
வல்லவனையும் வழுக்கி விடும்
வழுக்குப் பாறை தான் வாழ்க்கை…!
நம்பிக்கை என்னும்
நரம்பு கயிற்றைப் பிடித்து நட…
உந்தி உந்தி உயரே செல்..
நாளை நட்சத்திரமாய் ஒளிர்வாய்…!
வறுமையென்னும்
வளைவுகள்
வாழ்க்கை நதியை
தாமதப்படுத்தலாம்
தடுத்து நிறுத்தி விடாது…!
வாடிய பயிர்கள் எல்லாம்
வளைந்து ஓடும்
நதிகளால்தான்
வளம் கொழிக்கின்றன…!
காற்றினால்
களவாடப்பட்ட
கருமேகங்களும் – தான்
கண்ணெதிரே
கனமழையை
கொடுக்கின்றன…!
உன் வீரம் வீழ்ந்து விடாது…
நம்பிக்கையோடு
நதியாக..
கனவுகளோடு
கார்மேகமாக..
தடைகளைத் தகர்த்தெறி
வீறுநடைபோடு வெற்றி உனதே..!
ஆசிரியர்
கவிஞர் பேரா. ச. குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.
கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..














