Tuesday, July 22, 2025
Home Blog Page 27

சிலம்பில் தொல் சமூக மரபும் மாற்றங்களும்

சிலம்பில்-தொல்-சமூக-மரபும்-மாற்றங்களும்

முன்னுரை

            ஒவ்வொரு இனத்திற்கும் தனித்த அடையாளங்களும் தமக்கான பண்பாட்டு விழுமியங்களும் உண்டு. பழந்தமிழரும் அத்தகு தனித்த அடையாளங்களோடும் பண்பாட்டு விழுமியங்களோடும் வாழ்ந்தனர். இடையில் நிகழ்ந்த பண்பாட்டு தாக்குதல்கள் அவ்வடையாளங்களையும் விழுமியங்களையும் சிதைத்தும் மாற்றியும் போட்டன. தொல் தமிழரின் பண்பாட்டு மரபுகளையும் அவை மாற்றம் பெற்ற விதத்தையும் காட்டுவதாக இவ்வுரை அமைகிறது.

இறைவனும் அடையாளங்களும்

            பழந்தமிழ்ச் சமுதாயம் பல்கடவுள் சமயத்தை அடிப்படையாகக் கொண்டது. பல்கடவுள் சமயத்தில் அடையாளம் மிக முக்கியக் காரணியாகத் திகழ்கின்றது. அடையாளத்திலும் குறிப்பாக நிறம், உடை, மாலை ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. திணைக்குரிய கடவுளரில் முல்லைக்கு மாயோனும் குறிஞ்சிக்கு முருகனும் கடவுள். இதனை

            “மாயோன் மேய காடுறை உலகமும்

            சேயோன் மேய மைவரை உலகமும்” என்பார் தொல்காப்பியர்

                                                                                                (தொல்காப்பியர் அகம்.5)

முருகனுடைய நிறம் சென்னிறம். எனவே அவன் சேயோன் எனப்பட்டான். அவனுடைய அடையாளப்பூ செங்காந்தள். இது ஒண்செங்காந்தள் கல்மிசை கவியும் நாடன் (குறு.185.6,7) ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் (குறு.284,3) என குறிஞ்சிக்குரிய கருப்பொருளாகப் பேசப்படுகிறது. குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருளான இம்மலர் முருகனின் அடையாள மலராகவும் கொள்ளப்பட்டுள்ளது.

                                    “செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த

                                    செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

                                    கழல்தொடிச் சேஎய் குன்றும்

                                    குருதிப் பூவின் குலைக்காந் தட்டே”

                                                                                                (குறு.1) என்று பாடுகின்றார்.

வெற்ப! போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்கள் சாயுமாறு கொன்று வீழ்த்தி, அந்த அசுரர்களைத் தரையோடு தரையாய்த் தேய்த்து இல்லையாம்படி செய்த சிவந்த நேரான அம்பினையும் பகைவனைக் குத்தியமையால் செந்நிறம் படிந்த கொம்புகளையுடைய யானையையும், கழல இடம்பட்ட வீரவளையினையும் உடைய முருகப் பெருமானுக்குரிய இந்த மலை உதிரநிறம் வாய்ந்த பூக்களைக் கொண்ட செங்காந்தளின் பூக்களை உடையது.

            இப்பாடல் ‘தோழி கையுறை மறுத்தது’ என்ற துறை விளக்கத்தில் மட்டுமே அகப்பொருள் தன்மையையும் பெறுகிறது. எனவே திணையின் கருப்பொருள் திணைக்குரிய கடவுளுக்கு அடையாளப் பொருளாகியுள்ளது எனலாம்.

            முல்லைக்குரிய கருப்பொருள்களில் குறிப்பிடத்தக்கது கொன்றை மலர். அழகும் சிறப்பும் அதனை பலப் புலவர்களின் பாடல் பதிவைப் பெற வைத்துள்ளது.

            ‘பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப்பூங்கொன்றை’ (குறு.21:3,4) ‘மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை (குறு.66.1) காசின் அன்ன போதுஈன் கொன்றை’ (குறு.148.3) போன்றவை தக்க சான்று.

            முல்லை நிலத்திற்குரிய இம்மலர் அத்திணைக் கடவுளான திருமாலுக்கு ஆகாமல் பாலைத் திணைக்குரிய கடவுளான கொற்றைக்குரியதாகச் சிலப்பதிகாரம் பேசுகின்றது. இதனை,

                                    கொன்றையும் துவளமும் குழுமத் தொடுத்த

                                    துன்று மலர்ப்பிணையல் தோள் மேலிட்டாங்கு

                                    அசுரர் வாட அமரர்க் கடிய

                                    குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே. (சிலம்பு.12.11)

என்னும் அடிகள் தெளிவுபடுத்தும்.

                                    திருமாலின் படைகளாகச் சங்கு சக்கரமும் முன்வைக்கப்படுகின்றன.

                                   ‘வள்உருள் நேமியான் வாய்வைத்தவளை போல’ (கலி.105.9)

                                    இகல் மிகு நேமியான் நிறம் போல (கலி.119:3)

                                    செருமிகு நேமியான் தார் போல (கலி.127:4)

            சங்கத்தமிழ் மரபில் நேமியை உடையவனாதலின் நேமியோன் என்றே அழைக்கப்படுகின்றான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

            சிலம்பில் கொற்றவைப் பரவலில் சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாகக் காட்டப்படுகின்றன.

            “சங்கமும் சக்கரமுத் தாமரைக் கையேந்தி“ என்கிறது சிலம்பு (சிலம்பு.12:10) எனவே குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளான காந்தள் மலரும் செந்நிறமும் முருகனின் அடையாளங்களாக்கப்பட்டன. ஆனால் முல்லைக்குரிய கருப்பொருளான கொன்றை மலர் அந்நிலக் கடவுளான திருமாலுக்குரிய அடையாளப் பொருளாகாமல் கொற்றவைக்கு உரிய அடையாளாமாகவும் திருமாலின் படைக்கருவிகளான சங்கும் சக்கரமும் கொற்றவையின் படைக்கருவிகளாவும் ஆக்கப்பட்டுள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது.

கற்பும் பெருங்கற்பும்

            எதனாலும் எவராலும் குலைக்க முடியாத உள்ள உறுதிப்பாடே கற்பு. இதைதான் வள்ளுவர் ‘கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்று கூறுகின்றார். கற்பை உயிரைவிட சிறந்ததாகத் தொல்தமிழர் மதித்தனர்.

                                   உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்

                                    செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று            (தொல்.1058)

என்பர் தொல்காப்பியர். இதற்கு விளக்கம் கூறும் வ.சுப.மாணிக்கனார் “நாணைக்காட்டிலும் கற்புச் சிறந்தது என்று நெறி தெளிந்த பெண்கள், கற்புக் காவலின் பொருட்டு நாண் வேலியைக் கடந்து செல்வார்கள். அதுவும் அகப்பொருளேயாம் எனத் தொல்காப்பியம் விதந்து மொழிகுவர் என்பார் (தமிழ்க்காதல். ப.212)

            பெண்ணுக்கு உயிரினும் மேலானதாக வலியுறுத்தப்பட்ட இந்தக் கற்பு ஆடவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. பரத்தைமை என்பது சங்ககாலத்து ஒரு ஒழுக்கமாகக் கருதப்பட்டதே இதற்குக் காரணம் எனலாம். பின்னர் வந்த வள்ளுவரும் இதனை அடியொற்றியே பிறன்மனை நோக்காமையைப் பேராண்மையாகப் போற்றினார். பிறன்மனை நோக்குதல் மட்டுமே ஆடவர்க்குக் குற்றமாகக் கருதப்பட்டது. எனினும் தலைவியருக்கு ஊடல் ஒரளவுக்குத் துணைநின்றது. தான் கற்புள்ளவளாக இருப்பதுபோல தன் கணவனும் கற்புள்ளவனாக இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் உரிமையை ஊடல் தலைவிக்கு ஒரளவு தந்தது.

            இந்த நிர்ப்பந்தத்திலிருந்து தலைவனை விடுவித்து அவனுக்குப் பூரண விடுதலையைத் தருவதற்காக் கொண்டு வரப்பட்டதுதான் பெருங்கற்பு. பெருங்கற்பு என்பது தலைவனைத் தெய்வ நிலைக்கு, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வது. இதைத்தான் வள்ளுவர் தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று கூறுகின்றார்.

            இளங்கோவடிகள் கானல் வரிப் பாடலில்

            திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சிக்

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி

            மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி

            கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற் கண்ணாய்

            மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி என்பார்.

                                                                                                                                                    –           (கானல் 7:2,3)

            காவிரிப் பெண்ணே உன் தலைவனான காவிரி நாடன் உன்னை விட்டு கங்கை என்னும் பெண்ணை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். உன் தலைவன் உன்னை விட்டு கன்னியை நாடிச் சென்றான். ஆனாலும் நீ புலவாது ஒழிந்தாய். இது உன் பெருங்கற்பைக் காட்டுகிறது. எனவே தலைவனைக் கட்டுப்படுத்த தலைவியிடமிருந்த ஒரே அத்திரமான ஊடலையும் பறித்துத் தலைவனுக்கு முழுச் சுதந்திரம் அளிப்பதே பெருங்கற்பு எனலாம்.

            இந்தப் பெருங் கற்பின் அடுத்தநிலை பிற நெஞ்சுப் புகாமை, அதாவது அவள் குற்றமற்றவளாக இருப்பினும் குற்ற நோக்கோடு ஒருவன் அவளைக் கண்டால் அது அவள் கற்புக்கு பங்கம் விளைவிக்கும்.

            கற்புடை மகளிர் எழுவரைக் குறிப்பிடும் இளங்கோவடிகள், கணவனைப் பிரிந்திருந்த தலைவி அவன் வருமளவும் தன்னைக் கல்லுருவாக மாற்றிக்கொண்டு அவன் திரும்பி வந்தபிறகு கல்லுரு நீங்கினாள் என்றும் ‘கணவனைப் பிரிந்த தலைவி அவன் திரும்பி வருமளவும் தன் அழகிய உருவைக் குரங்கு உருவாக மாற்றிக்கொண்டு அவன் வந்தபிறகு பழைய உருவைப் பெற்றாள்” என்றும் கூறுவர். தன் இயற்கை அழகு பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதே இம்மாற்றத்துக்குக் காரணம் எனலாம்.

                        கொலைக்களக் காதையில் கோவலன் செய்கைக்கு வருத்தம் கொண்ட கண்ணகி

                        “அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்

                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                         விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை“ (சிலம்பு.16.71-74)

என்று கூறுவார். கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் அறவோர், அந்தணர் துறவோர்க்கு அளித்தலும் விருந்து எதிர்க்கோடலுமாகிய இல்லறக் கடமைகளைச் செய்யவும் இச்சமூகம் அனுமதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. படிதாண்டா நிலையையே இது காட்டுகிறது.

எனவே பெண்ணுக்கு மிக மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆண்களுக்கு எல்லையில்லா சுதந்திரத்தை வழங்க புகுத்தப்பட்டதுதான் இப்பெருங்கற்பு என்றால் மிகையாகாது.

பண்டமாற்றும் வணிக மரபுகளும்

            சங்ககாலத்தில் பண்டமாற்று முறைதான் வழக்கிலிருந்து. தங்கள் விளைபொருளில் மிகுதியாக உள்ளவற்றைப் பக்கத்துத் திணைகளில் கொண்டு கொடுத்து அதற்கு ஈடாக அந்நில மக்களிடம் உள்ள பொருள்களை வாங்கி வந்தனர். பொருளுக்குப் பொருள் என்ற நிலையில்தான் இந்த பண்டமாற்று நிகழ்ந்துள்ளதே தவிர பொருளுக்கான மதிப்பு இங்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை. ‘பாலோடு வந்து கூழோடு பெயரும் யாடுடை இடையனை குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகிறது. வேடன் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக்கொண்டதைக் கோவூர்கிழார் பாடுகின்றார்.

                                    “நெல்லின் நேரே வெண்கல் உப்பென்றும்”

                                    “நெல்லும் உப்பும் நேரே ஊரீரே என்றும்”

            உமணர் கூறி விற்றுப் பண்டமாற்றாகப் பெற்றதைச் சிறு படகுகளில் கொண்டு சென்றதை அகநானூறு காட்டுகிறது. இங்ஙனம் பண்டமாற்றுப் பெருவழக்காக இருந்தாலும் செம்பு, வெள்ளி, பொற்காசுகள் பற்றிய குறிப்புகளையும் காணமுடிகிறது.

            சிலம்பில் கோவலன் தந்தை மாசாத்துவானையும் கண்ணகி தந்தை மாநாய்க்கனையும்

                                     “மாகவாண் நிகர் வண்கை மாநாய்கன்“ என்றும்

                                   ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்

                                    வருந்தி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான்’

என்றும் அறிமுகப்படுத்துகின்றார்.

            அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கூட்டமாகச் சென்றதோடு அவர்களோடு வில் வீரர்களையும் அழைத்துச் சென்றனர். இந்தச் சாத்துக்களின் தலைவன் மாசாத்துவான் என்று அழைக்கப்பட்டான். மரக்கலங்களாகிய நாவாய்களில் உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் அயல் நாடுகளில் விற்றார்கள். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர்கள் நாவிகர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் எனப் பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்க்கர் என்று வழங்கப்பட்டது என்பர்.

            உற்பத்தியின் மிகையைப் பண்டமாற்று செய்த பழந்தமிழர் மரபு மாறி உற்பத்தியோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு கூட்டம் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, பெரும்பொருள் ஈட்டிச் செல்வந்தர்களாகத் திகழ்ந்தமையைச் சிலம்பு காட்டுகின்றது. உற்பத்தியில் ஈடுபட்ட பழந்தமிழரில் ஒரு சிலர் உற்பத்தியை விட்டு இடைத்தரகர்களாகச் செயல்பட்டு வணிகர் என்ற பெயரைப் பெற்றார்களா? அல்லது புதிய கூட்டம் தமிழகத்தில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டதா? என்பது மேலும் ஆய்வுக்குரியது.

ஊழ்வினை

            சங்க காலத்தில் ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்தது. காரணமறிய முடியாத சில நிகழ்வுகளுக்கு ஊழ்வினையைக் காரணமாக்கினர். தலைவனும் தலைவியும் சந்திக்க முதல் சந்திப்பே காதலாக மாறுவதற்கு ஏதோ ஓர் உந்து சக்தி இருக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்கு ஊழ் என்று பெயரிட்டனர்.

            சிலம்பில் ஊழ்வினை மிக வலிமை வாய்ந்ததாக இம்மையை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகக் காட்டப்பட்டுள்ளது.

            கானல்வரியில்தான் ஊழ் தன் பணியைத் தொடங்குகிறது. விடுதல் அறியா விடுப்பினாக மாதவி மனையில் கிடந்த கோவலனை வெளியேற்றும் முதல் பணியை அது செய்கிறது. 

            கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து

            மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினான் என

            யாழிசைமேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்”

                                                                                                (சிலம்பு 7.53-57) என்கிறார்.

            மாதவியைப் பிரிந்து வந்த கோவலனை மதுரைக்குக் கொண்டு செலுத்தியதும் ஊழ் இதனை ‘ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப’ தீவினை வந்து உறுத்தியதன் பயனாக, உள்ளம் தன்னைச் செலுத்தக் கோவலனும் கண்ணகியோடு வெளியேறத் துணிந்தான்.

            கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்குச் செலுத்திய பின் ஊழ்வினை தன் பணியைச் செம்மையாக முடித்துக் கொண்டது.

                        வினைவிளை காலம் ஆதலின், யாவதும்

                        சினை அலர் வேம்பன் தேரான் ஆகி

                        ஊர்க் காப்பாளரைக் கூவி ஈங்கு என்

                        தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு

                        கன்றிய களவன் கையதாகில்

                        கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு (கொலைகளம் 16:148-153)

எனக் கட்டளையிடுகிறான்.

            மாதவியிடம் மகிழ்வுற்றிருந்த கோவலனை அவளிடமிருந்து பிரித்து, கண்ணகியிடம் சேர்த்து இருவரையும் மதுரைக்குத் துரத்தி நீநிநெறி தவறா பாண்டியனை நீதி தவற வைத்து கோவலனைக் கொன்று தன் பணியைச் செம்மையாக முடித்துக்கொண்டதாக இளங்கோ குறிப்பிடுகின்றார்.

குடும்ப அமைப்பு

            சங்ககால குடும்ப அமைப்பு தாய்வழிச் சமூக எச்சங்களாகவே காட்சி அளிக்கின்றன. அகப்பாடல்களில் தலைவி செவிலித்தாய், நற்றாய், தலைவியின் தந்தை, தலைவியின் சகோதரர்கள் மட்டுமே இடம்பெறுகின்றார்கள். தலைவனின் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இடம்பெறவில்லை.

            மூதின் முல்லை பாடல்களில் தலைவி போருக்கு அனுப்பும் குடும்ப உறுப்பினர்களின் வரிசையைப் பார்க்கும்போதும் முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்புகின்றாள். அடுத்தநாள் போருக்குக் கணவனை அனுப்புகின்றாள். இறுதியாகத் தன் மகனைப் போருக்கு அனுப்புகின்றாள். எனவே தலைவன் திருமணத்திற்குப் பின்பு தலைவியின் இல்லத்தில் வாழ்ந்ததையே இப்பகுதிகள் நமக்கும் தெளிவுபடுத்துகின்றன.

            சிலம்பு அதற்கு மாற்றான ஒரு பதிவை நமக்குக் காட்டுகிறது. மாசாத்துவான் இல்லத்திலே கோவலன் கண்ணகியின் மண வாழ்க்கைத் தொடங்குகிறது.

                                    கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும்

                                    மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை

                                    நெடுநிலை மாடத்து, இடைநிலத்து இருந்துழி

                                                                                                                              (சிலம்பு.2:11-13)

என்பார். இப்பகுதிக்கு விளக்கம் கூறும் உ.வே.சா அவர்கள் “கோவலன் கண்ணகிபால் மிகவும் அன்பு வைத்து நலம் பாராட்டி இன்புற்றுத் தருக்கி மகிழ்ந்து நடக்கும் நாட்களில் ஒரு நாள். அக்கோவலன் தாயாகிய பெருமனைக் கிழத்தி யென்பவள், கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்திக் கைத்தேர்ந்து உயர்ச்சிப் பெற்று விளங்குதலைக் காணவேண்டி வேறோரு மாளிகையில் இல்லறம் நடத்த வேண்டும் பொருளைக் கொடுத்துக் குடிவைத்தாள்” என்பார்.

            ஆக தாய்வழி சமூக அமைப்பு தந்தை வழிச் சமூக அமைப்பாக மாற்றம் பெற்றதையும், கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் அமைப்பாக மாற்றம் பெற்றதையும் இப்பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன.

முடிவுரை

            திணைக்குரிய கருப்பொருள்களே அத்திணைக்குரிய மக்களுக்கும் கடவுளுக்கும் அடையாளப் பொருளாக இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிக் கடவுள் முருகனுக்கு அத்திணைக்குரிய செங்காந்தள் அடையாளப் பூவாக இருந்துள்ளது. ஆனால் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்கு அந்நில மலரான கொன்றை அடையாளமாகக் கொள்ளப்படவில்லை. மாறாக கொற்றவைக்குரிய அடையள மலராக இதனைச் சிலம்பு குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

            சங்க இலக்கியங்களில் முல்லைநிலக் கடவுளான மாயோனுக்குரியவையாக பேசப்பட்ட படைக்கருவிகளான சங்கும், சக்கரமும் சிலம்பி;ல் பாலைநிலக் கடவுளான கொற்றவைக்குரியவையாகப் பேசப்படுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

            ஊடல்வழி கணவனின் பரத்தமை ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தி சுதந்திரமாக செயல்பட்ட பெண்ணை கணவனை, தெய்வ நிலையிலும் கேள்விக்கு அப்பாற்பட்ட நிலையிலும் வைத்துப் பார்க்கும் பெருங்கற்புக்கு உரியவளாக்கி கணவனின்றி பிச்சையிடவும் உரிமையற்ற நிலையில் அவளை நிறுத்தி படிதாண்டா பத்தினியாக்கி பெண்ணின் இயக்கத்தை முற்றிலும் முடக்கிவிட்ட நிலையைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.

            பண்டமாற்றாக இருந்த சங்ககால வாணிபம் உற்பத்தியில் பங்குபெறாத இடைத்தரகர்களின் கைக்குமாறி உற்பத்தியாளர்கள் அதே நிலையில் இருக்க இடைத்தரகர்களான இவ்வணிகர்கள் பெருஞ்செல்வம் பெற்று அரசர்களுக்கு இணையாகத் திகழ்ந்த நிலையைச் சிலம்பு காட்டுகிறது.

            காரணம் அறியாச் சில நிகழ்வுகளுக்கு உழ்வினையைக் காரணம் காட்டிய தமிழர் இம்மையை நிர்ணயிருப்பதும் இயக்குவதும் ஊழ்வினைதான் என்ற நிலைக்கு மாறிவிட்டதைக் சிலம்பு காட்டுகிறது.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேராசிரியர்.வ.இராசரத்தினம்

தமிழ்த்துறை

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்

காந்திகிராமம்.

மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

45.மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

விளிம்புநிலை மக்கள் என்பதற்குச், சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், பாலியல்நிலை, சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூகக் கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.(2002:50), மணிமேகலையில் விளிம்புநிலை மாந்தர்கள்

இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ் மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மக்கள், மகளிர் எனக் குறிப்பிடலாம். மேட்டிமைக் குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, குறைந்த அளவு உடை, குறைந்த அளவு கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக இவர்கள் உள்ளனர் எனலாம்.

விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் மணிமேகலையை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும். மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் புதிய பொருண்மைத் தளத்தில் மணிமேகலையை அறிந்து கொள்ளத் துணைபுரியும். மணிமேகலையில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்க்கண்ட உட்தலைப்புகளில் காணலாம்.

கணிகையர் / பரத்தையர்:

            மணிமேகலை துறவு என்று பதிகத்தில் அழைக்கப்படும் சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் பல விளிம்புநிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது.

            பெண்களும் மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகியோர் கணிகையர் குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் சமூக பழிப்புக்கு உள்ளானவர்கள்; மாதவி கோவலன் இறந்தவுடன் துறவு கொள்கிறாள்; மணிமேகலையும் கணிகையர் குலத்தொழிலைத் தொடரத் தம்மால் முடிந்தவரை போராடினாள்.

            மணிமேகலை, பிக்குணிக் கோலம் பூண்டு, பிச்சை ஏற்றதனைக் கேட்டுச் சித்திராபதி சீற்றம் கொண்டாள். கூத்தியர் மடந்தையாகிய நாடகக் கணிகையர்களிடம் வஞ்சினம் கூறும்போது,

“கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி,

மாதவி மாதவர் பள்ளியள் அடைந்தது,

நகுதக்கன்றே!” (7-9)

என்று கூறிக் காதலன் இறப்புக்கு பத்தினிப் பெண்கள் தீ புகுந்து மாள்வர்; ஆனால், மாதவியின் துறவுக்கோலம் அனைவரின் நகைப்பிற்க உரியது என்கிறாள். கணிகையர் குலத்துப் பெண்கள் பத்தினிப் பெண்கள் அல்லர்; பலரின் கைப்பொருளைப் பெற்று வாழும் வாழ்வுடையவர்கள் என்பதை,

“பத்தினிப் பெண்டிர் அல்லேம்;

பலர்தம் கைத்துண் வாழ்க்கை கடவியமன்றே!” (14-15)

என்கிறாள். மேலும், கணிகையர் தம் குலவொழுக்கம் குறித்து,

“பாண்மகண் பட்டுழிப் படூஉம் பான்மையில்

யாழினம் போலும் இயல்பினம்; அன்றியும்,

நறுந் தாதுண்டு நயனில் காலை

வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்;

வினையொழி காலைத்திருவின்செல்வி

அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்;

தாபதக் கோலம் தாங்கினம் என்பது

யாவரும் நகூஉம் இயல்பினதற்றே?” (16-24)

என்று கூறுகிறாள். பாண் மகன் இறந்து போனவிடத்துத், தான் பிறனொருவன் கைப்படும் யாழினத்தைப் போன்ற இயல்புடையவர்கள்; மணமுள்ள பூந்தாதினை உண்டு, வறிதான் மலரினைக் கைவிடும் வண்டினம் போன்றவர்கள் கணிகையர்கள் என்கிறாள். உதயகுமரனுக்காக, மணிமேகலையைக் கைப்பற்றிக் கொண்டு வருவேன் என்றும் அவள் தம் கையிலே இருக்கும் பிச்சைப் பாத்திரத்தினைப் (அமுதசுரபி) பிச்சை எடுத்துண்ணும் பிற மக்களின் கையில் தந்துவிட்டு மணிமேகலையைப் பொற்தேரில் அழைத்து வருவேன்; அவ்வாறு செய்யாது போனால், தலையிலே சுட்ட செங்கற்களைச் சுமந்து நாடக அரங்கினைச் சுற்றிவருவேன்; அதுதவிர, பழி சுமக்கும் குலமரபு கெட்டவள் ஆவேன்; அரங்கக் கூத்தியரின் வீட்டினுள் நுழையவே மாட்டேன் என்று வஞ்சினம் கூறினாள். (31-35) மேலும், மணிமேகலை குலமகள் அல்லள் என்பதைச் சித்திராபதி உதயகுமரனிடம் வற்புறுத்துகிறாள். இதனை,

“கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்

பெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லாள்;” (100-101) என வருகிறது.

            பரத்தையரின் இயல்புகள் இவை இவை என்பதைச் சித்திராபதியின் கூற்றில் வரும் அடிகள்:

“நாடவர் காண, நல்லரங்கு ஏறி,

ஆடலும், பாடலும் அழகும் காட்டிச்

கருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணைதூவச்

செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்

கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்

பண்டோர் மொழியிற் பயன்பல வாங்கி

வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்

பன்மயிற் பிணித்துப் படிற்றுரை அடக்குதல்

கோன்முறை யன்றோ குமரற்கு?” (103-110)

என்பதிலிருந்து பூவில் தேன் உண்ணும் வண்டினம் போன்றவர்கள் பரத்தையர்கள் என்பதைப் பெறலாம்.

            இங்கு கணிகையர் குலத்திலிருந்து மீளும் மேனிலையாக்க முயற்சியில் மாதவியும் மணிமேகலையும் ஈடுபடுகின்றனர். ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவள் சித்திராபதி; இவளும் கணிகையர் குலப் பெண்தான் என்பது முரண்.

            இவ்வாறு, குலப் பெண்களாக மதிக்கப்படாத விளிம்புநிலைக் கணிகையர் குலப்பெண்களின் சமூக மதிப்பினை மணிமேகலை, உதயகுமரன் அம்பலம் புக்க காதையில் பதிவு செய்துள்ளது.

            “கற்புத்தானிலன்; நற்றவை உணர்விலள்;

             வருணக்காப்பிலள்; பொருள் விலையாட்டி என்று”

மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை (86-87)யில் உதயகுமரன் மணிமேகலையை இழிவாகப் பேசுகிறான். அதாவது, சுதமதியிடம், மணிமேகலை கற்பு என்பதும் இல்லாதவள்; நல்ல தவவுணர்வும் இல்லாதவள்; சாதிமுறையை ஒட்டிய பாதுகாப்பு (வருணக்காப்பு) இல்லாதவள்; பொருளுக்குத் தன் இன்பத்தை விலைப்படுத்துபவள் என்று இகழ்கிறான். குறிப்பாக, அந்தணர், அரசர், வணிகர், வெளாளர் எனும் நால் வருணப்பிரிவில் கணிகையர் குலம் வருவதில்லை. எனவே, அக்குலத்தில் பிறந்த மணிமேகலைக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்பதை அறியலாம்.

உதயகுமரனின் கூற்றிலிருந்து கணிகையர்குலம் அக்காலத்தில் சமூகத்தின் விளிம்புநிலையிலும் பாதுகாப்பு அற்றதாகவும் விளங்கியுள்ளதை மணிமேகலை பதிவு செய்துள்ளது.

கல்லா இளைஞன்

            கல்லா இளைஞன் குறித்த செய்தி சிறைவிடு காதையில் (43-57) இடம் பெற்றுள்ளது. காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலையை அறிந்த உதயகுமரன் நள்ளிரவில் ஊரம்பலத்திற்கு வருகிறான். ஆனால் அவ்விடத்தில் மறைந்து காத்திருந்த விஞ்சையன் காஞ்சனன், ‘ஈங்கிவன் வந்தனன் இவள்பால்’ என்று கருதி வாளால் வெட்டி வீழ்த்துகிறான். தன் மகனின் இறப்புக்கு மணிமேகலைதான் காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்ட இராசமாதேவி (உதயகுமரனின் தாய்) அவளைப் பழிவாங்கத் துடிக்கிறாள். பித்த மருந்து கொடுத்தும் அவளைப் பட்டியினிட்டும் பொய்ந்நோய் காட்டியும் புழுக்கறையில் அடைக்கிறாள். ஆனால், இவற்றையெல்லாம் தன்னுடைய மந்திர சக்தியால் முறியடித்து விடுகிறாள் மணிமேகலை.

            ஆனால், அரசி, கல்லாத ஒருவனை அனுப்பி மணிமேகலையைப் பாலியல் வன்கொடுமை நிகழ்த்த அனுப்புகிறாள். இதுகுறித்த பதிவுகள் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

“கல்லா இளைஞன் ஒருவனைக்கூஉய்

வல்லாங்குச்செய்து மணிமேகலைதன்

இணைவளர் இளமுலை ஏந்தெழிலாகத்துப்

புணர்குறிசெய்து, பொருந்தினள் என்னும்

பான்மைக் கட்டுரையலர்க்குரை என்றே

காணம் பலவும் கைந்நிறை கொடுப்ப-

ஆங்கவன் சென்றவ் வாயிழையிருந்த

பாங்கில் ஒருசிறைப்பாடு சென்றணைதலும்;

தேவிவஞ்சம் இது வெனத்தெளிந்து

நாவியல் மந்திரம் நடுங்காதோதி

ஆண்மைக்கோலத் தாயிழையிருப்பக்

காணம் பெற்றோன் கடுந்துயரெய்தி

அரசருரிமையில் ஆடவர் அணுகார்

நிரயக் கொடுமைகள் நினைப்பறியேன் என்று

அகநகர் கைவிட்டு, ஆங்கவன்போயபின்-” என்று வருகிறது.

            கல்வியற்ற இளைஞன் ஒருவனுக்குப் பொற்காசுகள் பலவற்றை அவன் கைநிறையும் அளவிற்குக் கொடுத்து, மணிமேகலையை வல்லாங்கு செய்யுமாறு அனுப்புகிறாள் இராசமாதேவி. பாலியல் வன்கொடுமையை செய்தமைக்கான குறிகளை உண்டாக்கி ‘அவள் என்னோடு கூடியிருந்தாள்’ என்ற மொழியை அனைவரிடமும் அலர் உரைக்க வேண்டுமென அவனிடம் ஏவுகிறாள். அவ்வாறே, கல்விகற்காத அவனும் அதற்கிசைந்து மணிமேகலை இருந்த பக்கத்தில் செல்கிறான். இதனை நன்குணர்ந்த மணிமேகலை மந்திரத்தின் உதவியால் ஆணுருக் கொண்டாள். அவ்விடம் பொன் பெற்று வந்த கல்லா இளைஞன் பெண் இல்லாது ஆடவன் இருப்பதைக் கண்டு கடுந்துயர் அடைந்தான். அரசனின் உரிமை மகளிர் இருக்கும் அந்தப்புறத்தில் ஆடவர் எவரும் நெருங்க மாட்டார்களே? நரகத்தைப் போன்ற கொடுந்தன்மையிலான அரசியின் நினைப்பினை, யான் அறிந்திலேனே? என்று கலங்கினான். பின்பு, அந்த அகநகரை விட்டு வெளியேறி எங்கோ ஓடிப்போய் விட்டான். எனும் இப்பதிவில் கல்வி கற்காத இளைஞன் ஒருவன் பொன்னுக்காக எச்செயலையும் செய்வான் எனும் கருத்தினை உணர்த்துகிறது.

            பெரும்பாலும் உழைக்கும் விளிம்பு நிலை மக்கள்தாம் கல்வி கற்காத மக்களாக, சமூகத்தில் இருந்துள்ளனர். நால் வருணப் பாகுபாட்டில் இடம் பெறாத இம்மக்கள் கல்வியறிவினைப் பெறவில்லை. இம்மக்களின் பிரதிநிதியாகக் கல்லா இளைஞனைக் கருதலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசி, பொருள் கொடுத்து இத்தகைய கொடுஞ்செயலைச் செய்யப் பணிக்கப்படுவதையும் அதற்கு அடிபணியும் விளிம்பு நிலை கல்லா மாந்தரையும் மணிமேகலை பதிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள்

            சமூகத்தில் உடல் ஊனமுற்றோருக்கு அனுதாபம் உண்டு. ஆனால், சமூக மதிப்பு என்பது முழுவதும் கிட்டுவதில்லை. இம்மக்களை விளிம்பு நிலையினராகக் கொள்ளலாம். இம்மக்கள் குறித்த பதிவுகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது.

“கூனும், குறளும், ஊமும், செவிடும்,

மாவும், மருளும், மன்னுயிர்பெறாஅ;”

என்று அறவணர்த் தொழுத காதை (96-97)யில் வருகிறது. இங்கு, புத்தரின் அருள் அறத்தினைக் கேட்டவர்கள் பழுதுள்ள பிறவிகளை ஒருபோதும் அடைய மாட்டார்கள் என்று அறவண அடிகளின் கூற்றாக வருகிறது.

            மேலும், தென் மதுரையில் ஆபுத்திரன் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு வீடுகள்தோறும் எடுத்த பிச்சை உணவினைக் “கண்ணற்றவரே! கால்முடம்பட்டவரே! ஆதரிப்பார் இல்லாதவரே! நோயால் துன்புற்றவரே! யாவரும் வாருங்கள்!” என்று கூவியழைத்து, அவர்களுக்கு முதலில் ஊட்டுவான். எஞ்சியிருக்கும் உணவினைத் தான் உண்பான். என்று வரும் பாடல் அடிகள்:

“ஐயக் கடிஞை கையின்ஏந்தி

மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்

காணார், கேளார், கான்முடப்பட்டோர்

பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்;

யாவரும் வருக”  என்று இசைத்துடன் ஊட்டி,

உண்டொழிமிச்சிலுண்டு, ஓடதலை மடுத்தக்

கண்படை கொள்ளும் காவலன்தானென்

(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை: 109-115)

இங்கு ஆபுத்திரனால் பாதுகாக்கப்படும் இம்மக்கள் எளிமையானவர்கள்; உணவின்றித் தவிப்பவர்கள்; சமூகத்தில் கவனிப்பாரற்று வறுமையில் உழல்பவர்கள்; இத்தகைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வு குறித்த தன்மையினை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

            கச்சி மாநகர் புக்க காதையில் மணிமேகலை பசிப்பிணி மருந்தாகிய அமுதசுரபி கொண்டு, எல்லா உயிரும் வருக! என அழைத்துப் பசிப்பிணியைப் போக்குகிறாள்.

“காணார், கேளார், கால்முடமானோர்

பேணா மாக்கள், பேசார், பிணித்தோர்;

படிவ நோன்பியர், பசிநோயுற்றோர்,

மடி நல் கூர்ந்த மாக்கள் யாவரும்” (222-225)

பசிப்பிணி நீங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, வறுமை மக்களின் பதிவாக மணிமேகலை விளங்குகிறது.

பேடிகள்:

            பாலியல் அடிப்படையில் சமூகத்தின் ஓரத்தில் இருப்பவர்கள் அலிகள், பேடிகள் ஆவர். மணிமேகலையில் பேடி குறித்த இரு பதிவுகள் உள்ளன.

1. மணிமேகலை சுதமதியுடன் மலர் கொய்ய உவ வனம் செல்லும் வழியில் வாணன் என்னும் அசுரனது ‘சோ’ என்னும் நகரில் நின்று, உலகை அளந்த திருமாலின் மகனாகிய காமன் என்பவன் முன்னர் ஆடிய பேடிக் கோலத்தினைக் கொண்டு விளங்குகின்ற பேடு என்னும் கூத்து நிகழ்த்தப்படுகிறது. அதனைக் கண்டு தெருவில் உள்ள மக்கள் இன்புற்றனர்.

            இப்பேடிக் கோலம் குறித்த வருணனை மலர் வனம் புக்க காதையில் (116-122) காணப்படுகிறது. அழகிய கூந்தல், பவளவாய், செவ்வரி பரந்த கண்கள், கருங்கொடி புரவம், பிறைநுதல், காந்தள் செங்கை, இளங்கொங்கைகள், நுண்ணிடை, வட்டுடை, தொய்யில் வரிக்கோலம் எனச் சித்தரிக்கிறது.

“வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி,

நீணிலம் அளந்தான் மகன் முன் ஆடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்” (123-125)

என மன்மதன் ஆடிய பேடிக்கூத்து பற்றி வருகிறது.

2. உவ வனத்திற்குச் செல்லும் வழியில் தெருவில் உள்ள மக்கள் மணிமேகலையைச் சூழ்ந்து கொள்கின்றனர். இக்காட்சி, விராடநகரத்தே ‘பிருகந்நளை’ என்னும் பெயருடன் பேடியாயிருந்த அருச்சுணனைக் காண்பதற்காகத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் போல் மணிமேகலையைக் காண்கின்றனர்.

“விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்

மணிமேகலைதனை வந்துபுறஞ் சுற்றி” (146-147)

இங்கு உவமையாக பேடிமக்கள் இடம் பெற்றுள்ளனர்.

களிமகன்

            கள்ளுண்ட களிமகன் குறித்த பதிவு இங்கு குறிப்பிடத்தக்கது.

            பிச்சைப் பாத்திர உறியினை நுழைகோல் பிரம்பால் சுமந்தும், நாணமும், உடையும் இன்றிக் காணாத நுண்ணுயிக்கு வருந்தியும், குளிக்காத யானையைப் போன்று தெருவில் வந்து கொண்டிருந்த சமணத்துறவியிடம், “எம்முடைய அடிகளாரே! என் பேச்சினைக் கேளுங்கள்: அழுக்கு உடையதான இவ்வுடலில் புகுந்திருக்கும் உயிர் புழுக்கமான அறையில் அடைபட்டிருப்பதைப் போல் உள்ளம் வருந்தாதா? இம்மை, மறுமை, முக்தி தருபவனான பெருமான் உரைத்தது என்ன? தென்னையின் பாளையில் விளைகின்ற தேறலில் (கள்) கொலை என்பதும் உண்டா? உண்மைத் தவம் உடையவரே! அக்கள்ளினை உண்டு தெளிவடைந்து, இந்த யோகநெறியில் அடைகின்ற பயனை அறிந்தால் எம்மையும் கையசைத்து ஏற்றுக்கொள்வீராக!” என்று சூளுரைத்து, இக்கள்ளினை ‘உண்பீராக!’ என்றான் அக்களிமகன்.

            இதனை உணர்த்தும் பாடல் அடிகள் இவை:

“வந்தீர் அடிகள்! நும் மலரடி தொழுதேன்;

எந்தம் அடிகள்! எம்முரை கேண்மோ;

அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர்

புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது,

இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும்

தன்வயின் தரூஉம்; என் தலைமகன் உரைத்தது?

கொலையும் உண்டோ, கொழுமடற்றெங்கின்

விளைபூந் தேறலின்? மெய்த்தவத் தீரே!

உண்டு, தெளிந்திவ் யோகத்து உறுபயன்

கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்ம என

உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று,

உண்மென இரக்குமோர் களிமகன்” (மலர்வனம் புக்க காதை: 92-103)

            இக்களிமன் சமணத் துறவியைக் கிண்டல் செய்து பகடி செய்யும் போக்கில் கலகம் உடையது எனலாம். இவ்விளிம்பு நிலை மாந்தரின் கேள்விகள் யதார்த்தமானவை; சமணசமயத்தினைக் கிண்டல் செய்பவை; இத்தொனியில் கேலி மிளிர்கிறது.

பித்தன்:

            பொதுவாக, இன்றைய சூழலில், மனநிலை பிறழ்ந்தவர்களைப் பெரும்பான்மைச் சமூகம் அனுதாபத்துடன் அணுகுவதில்லை. அவ்வாறு, அணுகும் போக்கு மிகவும் குறைவு எனலாம். அம்மக்களைப் பெரும்பான்மைச் சமூகம் இழிவாகத்தான் பார்க்கிறது. பேடிகள், களிமகன் ஆகியோர் இருக்கும் புகார் நகரத் தெருவில் பித்தன் ஒருவன் உள்ளதையும் மணிமேகலை காப்பியம் எடுத்தியம்புகிறது.

            இப்பித்தன் குறித்த மணிமேகலையின் சித்தரிப்பு குறிப்பிடத்தகுந்தது. செவ்வலரி மாலை சூடிய கொண்டை, கழுத்தில் எருக்கம் பூமாலை, கந்தல் துணியும் சுள்ளியும் சேர்த்துக் கட்டிய ஆடை, வெண் பலிசாந்து பூசிய உடல் என்று பித்தனின் உருவத்தினைக் குறிப்பிடுகிறது. அத்துடன், தம் எதிரில் உள்ள பலரோடும் பண்பற்ற மொழிகளைத் திரும்பத் திரும்பப் பிதற்றிக் கூறுகின்றான்; அவ்விடத்தில் திடீரென்று அழுகின்றான்; பின் சுற்றிச் சுழல்கின்றான்; கீழே விழுகின்றான்; எழுந்து பிதற்றுகின்றான்; உரக்கக் கூவுகின்றான்; தொழுகின்றான்; எழுகின்றான்; அதன்பின் ஓடுகின்றான்; பின்னர், அமைதியுற்று ஒருபக்கம் ஒதுங்கி நெடுநேரம் நிற்கின்றான்; உடனே, தன் நிழலிடம் பகைத்துக் கொள்கின்றான் என்று பித்தனின் செயல்களை மணிமேகலை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

            இதனை,

“கணவிர மாலையில் கட்டிய திரணையன்,

குவிமுகிழ் எருக்கிற் கோத்த மாலையன்

சிதவற் றுணியோடு, சேணோங்கு நெடுஞ்சினைத்

தகர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன்

வெண்பலி சாந்தம் மெய்ம்முழு துறீஇப்

பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு

அழூஉம், விழூஉம், அரற்றும், கூஉம்

தொழூஉம், எழூஉம் சுழலலும் சுழலும்

ஓடலும் ஓடும், ஒருசிறை ஒதுங்கி,

நீடலும் நீடும் நிழலொடும் மறலும்,

மையலுற்ற மகன்பின்; வருந்திக்

கையறு துன்பம் கண்டுநிற் குநரும்” (மலர்வனம் புக்ககாதை:104-115)

            இங்கு மனம் பிறழ்ந்த ஒருவனின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி வெளிப்படுத்தும் சாத்தனாரின் திறன் நுட்பமானது. மிகுதியான துன்பத்தில் உழலும் அப்பித்தனைக் கண்ட புகார் நகர மக்கள் வருத்தம் கொள்கின்றனர் என்பதாக வரும் சாத்தனாரின் சித்தரிப்பிலிருந்து மணிமேகலை காலசமூகத்தில் மனிதாபிமானம், இரக்கம் முதலான நற்குணங்கள் இருந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

            இவ்வாறு, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் எளிய இம்மக்களின் பதிவுகள் விளிம்புநிலை ஆய்வுக்கு வலுசேர்க்கிறது எனலாம்.

சூதாடிகள்:

            காமுகர்கள், பரத்தர்கள், வீட்டிலிருந்து வெளியேறித்திரியும் நாடோடிகள், சூதாடிகள், வம்பு பேசும் மக்கள், தாயம் ஆடுபவர்கள், வழிப் போக்கர்கள் ஆகியோர்களைச் சமூகம் சற்றுப் புறம் தள்ளியே விளிம்புநிலையில் வைத்திருக்கிறது. இம்மக்கள் குறித்து, பாத்திர மரபு கூறிய காதையில் மணிமேகலை பேசுகிறது. தென்மதுரையில் அம்பலப்பீடிகையில் இருந்த ஆபுத்திரன் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அதன்மூலம், பசிப்பிணி போக்கும் அறச்செயலைச் செய்து வருகிறான். அதனைப் பாராட்டி வரம் தர வந்த இந்திரன், ஆபுத்திரனின் மறுப்புரையால் சினம் கொண்டு பாண்டிய நாட்டின் பன்னிரண்டு ஆண்டுகால பஞ்சத்தினைப் பெருமழை பெய்விக்கச் செய்து போக்குகிறான். இதனால், அந்நாட்டில் பசிப்பிணி தீர்ந்தது. அம்பலப்பீடிகையில் உணவு கொள்வோர் எவருமின்றி வெறிச்சோடியது. அப்பீடிகையில் பசித்திருப்போர் எவருமில்லை. அதனால், சமூக இழிவுக்கு உள்ளாகும் ஓரத்துமக்கள் வசிக்கும் இடமாக அப்பீடிகை மாறுகிறது.

            இதனை,

“பசிப்புயிர் அறியாப் பன்மைத் தாகலின்,

ஆரூயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை

ஊணொலி அரவம் ஒடுங்கியதாகி;

விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும்

நடவை மாக்களும் நகையொடு வைகி;

வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்

முட்டா வாழ்க்கை முறைமையதாக” (58-64)

என்று மணிமேகலை பதிவு செய்துள்ளது.

செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவுகள்

            செய்தொழில் அடிப்படையில் வாழ்ந்திருந்த விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினை கச்சி மாநகர் புக்க காதை வெளிப்படுத்துகிறது. வஞ்சிநகரில் தன்பாட்டன் மாசாத்துவானைக் காணச் சென்ற மணிமேகலை, பலதொழில் செய்யும் மக்கள் வாழும் தெருக்களைக் கடந்து செல்வதாகக் காட்டப்படுகிறது.

“பன்மீன் விலைஞர், வெள்ளுப்பு பகருநர்,

கண்ணொடை யாட்டியர், காழியர், கூவியர்,

மைந்நிண விலைஞர், பாசவர், வாசவர்,

என்னுநர் மறுகும்; இருங்கோ வேட்களும்,

செம்பு செய்ஞ்ஞரும்; கஞ்ச காரரும்

பைம்பொன் செய்ஞ்ஞரும், பொன்செய் கொல்லரும்,

மரங்கொல் தச்சரும், மண்ணீட் டாளரும்,

வரந்தர வெழுதிய ஓவிய மாக்களும்

தோலின் துன்னரும், துன்னவினைஞரும்,

மாலைக் காரரும், காலக் கணிதரும்,

நலந்தரு பண்ணனும் திறனும் வாய்ப்ப;

நிலங்கலங் கண்டம் நிகழக் காட்டும்

பரணர் என்றிவர் பல்வகை மறுகும்;

விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு

இலங்குமணி வினைஞர் இரீஇய பறுகும்;

வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின்

கூத்தியல்பு அறிந்த கூத்தியர் மறுகும்;” (31-47)

என்று தொழில் அடிப்படையில் மக்கள் இடம் பெற்றுளளனர்.

            அதாவது, மீன் விற்கும் பரதவர், உப்பு விற்போர், கள் விற்கும் வலைச்சியர், பிட்டு விற்போர், அப்பம் விற்போர், ஆட்டிறைச்சி விற்போர், குயவர், தட்டார், கொல்லர், தச்சர், தோல் வேலை செய்யும் செம்மார், பாணர், ஆடல் மகளிரான கணிகையர் ஆகியோர் வசிக்கும் இடங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. காலப்போக்கில் இத்தொழிற் பிரிவுகள் சாதியப் பிரிவுகளாக மாற்றம் பெற்றன. உடல் உழைப்பு, கல்வியறிவின்மை காரணமாக இவர்கள் சமூகப் படிநிலையில் விளிம்பில் இருந்துள்ளனர், என்பதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது எனலாம். நால் வருணப்பாகுபாடு மணிமேகலையில் இடம் பெற்றுள்ளதை ‘வருணக்காப்பிலள்’ என்று உதயகுமரன் கூற்றாக வருவதை முன்னர் கண்டோம்.

            மேலும், சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் இவ் வருணப்பாகுபாடு இடம் பெற்றுள்ளது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வருணத்தார்க்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டச் சுடுகாடுகள் / கோட்டங்கள் புகார் நகரில் சக்கரவாளக் கோட்டத்தில் இருந்தன. அவை, அவரவர் சமூக தகுதிக்கேற்ப சிறிதும் பெரிதுமாக சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்ட அச்சமாதிக் கோயில்கள் குன்றுகள் போல் இருந்தன எனும் பதிவில் இறப்பிலும் கூட வருணம் போற்றிப் பாதுகாக்கப்பட்டுள்ள தன்மையினை மணிமேகலை தவறாமல் பதிவு செய்துள்ளது.

இப்பதிவு பின்வருமாறு

“காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்

அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும்,

ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்,

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி,

இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த

குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்;” (53-59)

இதில், அவரவர்க்கு உரிய நால் வேறு வகைப்பட்ட வருண பேதங்களைப் பகுத்துக் காட்டிய வண்ணம் இறந்தோரைச் சார்ந்த அன்புடையவர்களால் கட்டிய சமாதிகள் என்பதிலிருந்து மணிமேகலை காலத்தில் வருணாசிரம நெறி தவறாது இருந்திருப்பதை அறியலாம். அக்காலத்தில் சுடுகாட்டுப் பெருந்தெய்வமாக துர்க்கை விளங்கியிருப்பதையும் உணர்த்துகிறது.

வேட்டுவன்

            கொலைக்கு அஞ்சக்கூடியவர்களாகக் காட்டில் வாழும் வேடர்கள் இருந்துள்ளனர் என்பதை மணிமேகலை கூறுகிறது.

            சூல் முதிர்ந்த மானை வேட்டையாடிய வேட்டுவனின் அம்பு அம்மானின் வயிற்றில் இருந்த இளையமானின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு சென்றது. வீழ்த்த அப்பெண்மானின் அழுகுரலைக் கண்டு மனமயக்கம் அடைந்த அவ்வேடன், அதுபடும் துயரம் பொறாது அவ்விடத்திலேயே தன் இன்னுயிரைத் துறந்தான். இச்செய்தி,

“சூல்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக்

கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப,

மான்மாறி விழுந்தது கண்டு மனமயங்கிப்

பயிர்க்குரல் கேட்டதன் பான்மையனாகி;

உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்க்கண்டு,

ஓட்டி யெய்தோன் ஓரூயிர் துறந்ததும்; (113-118)

எனச் சிறைவிடு காதையில் இடம் பெற்றுள்ளது. வேடர்கள் விளிம்புநிலையினர். இம்மக்கள் கொலைக்கு அஞ்சுபவர்களாகக் காட்டியிருப்பது நோக்கத்தக்கது. கள், பொய், களவு, காமம், கொலை ஆகிய பஞசசீலக் கொள்கைகளை விளக்கும் நோக்கில் மணிமேகலை இவ்வாறு கூறுவது போல் அமைந்திருந்தாலும் பழிக்கு அஞ்சும் நன்னிலை மாந்தராகப் படைத்திருப்பது சிறப்பானது.

ஆபுத்திரன்:

            மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் கதை மாந்தரை விளிம்பு நிலைப் பாத்திரமாகக் கருத இடமாண்டு. பிறப்பின் அடிப்படையில், இவன் தீண்டத்த காதவன் என்பதாக “புல்லோம் பன்மின், புலைமகன் இவனென” ஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில் (91) வரும் பாடல் அடிகள் கூறுகிறது. இவன் இழிமகன்; அதனால் அவனைத் தீண்டாது போவீராக! என்று கூறும் ஓர் அந்தணனின் கூற்றில் இவ்வாறு இடம் பெறுகிறது.

            சாலி எனும் பார்ப்பனத்தி (அவள் கணவன் அபஞ்சிகன் எனும் பெயர் கொண்ட காசி அந்தணருக்குத் தெரியாமல்) அந்தணர் அல்லாத இன்னொருவருடன் ஏற்பட்ட தவறான ஒழுக்கத்தினால் கருவுறுகிறாள். அக்காலச் சமூக நியதியான வருணாசிரம் நெறிக்கு மாறாக பிறப்பவன் ஆபுத்திரன். கணவனை இழந்து, வன்முறைக்குப் பயந்து, தன் பாவம் போக்கக் காசியிலிருந்து குமரிக்கு வந்தவள் சாலி. வரும் வழியில் பாண்டிய நாட்டில் கொற்கை நகர் அருகில் ஆயர்களின் இருப்பிடத்தில் குழந்தை பெற்றெடுக்கிறாள்; சமூகத்திற்குப் பயந்து ஒரு தோட்டத்தில் விட்டுச் செல்கிறாள்; பசு ஒன்று, அச்சிசுவினை ஏழு நாட்கள் பால் ஊட்டி பாதுகாத்தது. இளம்பூதி எனும் அந்தணன் இக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.

            ஆனால், வேள்விச் சாலையில் பலி கொடுக்க வைத்திருந்த பசுவினைக் காப்பாற்றும் நோக்கில் கடத்திச் செல்கிறான். வழிமறித்த அந்தணர்கள் அச்சிறுவனை,

“ஆகொண்டு இந்த ஆரிடைகட கழிய,

நீசமகன் அல்லாய்; நிகழ்ந்ததை உரையாய்;

புலைச்சிறு மகனே; போக்கப்படுதி” யென்று;

அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப”, (42-45)

என்று கூறி கோலால் அடிக்கின்றனர். அச் சிறுவனால் காப்பாற்றப்பட்ட அப்பசு, அடித்த அந்தணனின் குடல் சரியுமாறு வயிற்றில் குத்தி தாக்கி விட்டுக் காட்டிற்குச் சென்று விடுகிறது.

            பழமையான மறைகளை ஓதும் அந்தணர்களே! பசுவின் மீது நுமக்கு ஏனிந்த பகைமை? என்று கேட்டான் ஆபுத்திரன். அதற்கு, திருமால் மகனான பிரம்மன் படைத்த நான்மறைகளை ஓதியறியாத நீ ஆ மகனே; எம் பார்ப்பனன் மகன் ஆக மாட்டாய்? என்று அச்சிறுவனை இகழ்ந்தனர். மேலும், வளர்ப்புத் தந்தையான இளம்பூதி, அச்சிறுவனைச் சாதிப் பிரதிஸ்டம் செய்கிறான். அவன் இழிபிறப்பு குறித்து அந்தணர்கள் இகழ்ந்தனர்;; பிச்சைப் பாத்திரத்தில் கல்லிட்டும் யாகப் பசுவினைக் கவர்ந்த கள்வன் எனவும் அவ் அந்தணக் கிராமத்தை விட்டு அச்சிறுவனை வெளியேற்றினர். ஆனால், ஆபுத்திரன் அதைப்பற்றிக் கவலை கொள்ளாது, நீங்கள் அருமறை முதல்வர் என போற்றுகின்ற அகத்தியரும் வசிட்டரும் (அந்தணர்கள்) தேவதாசியான திலோத்தமையின் மைந்தர்கள். இது பொய்யுரை ஆகுமா? என்று சிரித்த வண்ணம் எதிர்க்கேள்வி கேட்கிறான். இங்கு, ஆபத்திரனின் வாதத்திறம் குறிப்பிடத்தக்கது.

            தென்மதுரையில் தான் பிச்சை எடுத்துப் பிறர் பசிப்பிணி போக்கும் பண்பாளளானாக விளங்குகிறான் ஆபுத்திரன். இதனால் சிந்தாதேவியின் அருளால் அமுதசுரபி பாத்திரம் பெறுகிறான். அப்பாத்திரம் கொண்டு பசிப்பிணி இல்லாது செய்கிறான்; அதனால், பழுமரத்து ஈண்டிய பறவைக்கூட்டம் போன்று அம்பலப் பீடிகை இருந்தது. வரம் தர வந்த இந்திரனிடம்,

“வெள்ளை மகன்போல் விலாவெற நக்கீங்கு,

எள்ளினன், போமென் றெடுத்துரை செய்வோன்;”

(பாத்திர மரபு கூறிய காதை: 36-37)

என விலா வெடிக்கும்படி சிரித்து ‘உம் வரம் தேவையில்லை’ என்கிறான். மேலும்,

“வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்

திருந்துமுகம் காட்டுமென் தெய்வக்கடிஞை,

உண்டி கொல்லோ, பேணுநர் கொல்லோ,

யாவையீங் களிப்பன்; தேவர்கோன்? என்றலும் (44-48)

       என உணவு, உடை, பெண்கள், பாதுகாவலர் ஆகிய இவற்றையாத் தாங்கள் எனக்குத் தருவது என்று இந்திரனை ஏளனம் செய்கிறான் ஆபுத்திரன்.

            அமுதசுரபியின் பயன்பாடு அனைவருக்கும் இல்லாத நிலை ஏற்படும்பொழுது மணிபல்லவத் தீவில் தன் உயிர் துறக்கிறான். நல்லோரிடம் அது சேர்க எனக் கூறி கோமுகிப் பொய்கையில் இடுகிறான். தன்னலம் கருதாது பொதுநலம் கருதியவனாக ஆபுத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். அதனால் அவன் மறு பிறவியில் புண்ணியரசனாகப் (அரசனாக) பிறக்கிறான்.

            இவ்வாறு, ஆபுத்திரன் எனும் விளிம்புநிலைப் பாத்திரம் வருணாசிரம நெறியை எதிர்க்கும் பாத்திரமாக மணிமேகலை படைத்துள்ளது.

நாகர் / மலைவாழ் மக்கள்:

            ஆதிரை பிச்சையிட்ட காதையில் கூறப்படும் நாகர் மலையில் வாழும் நக்க சாரணர்கள் மலை வாழ் விளிம்பு மக்களாகக் கொள்ளலாம்.

            இம்மக்கள் அச்சம் தரும் தோற்றத்தை உடையவர்கள்; நர ஊண் உண்பவர்கள் என்பதை,

“பரிபுலம் பின்னிவன்;

தானே தமியன் வந்தனன்; அளியன்;

ஊனுடை இவ்வுடம்புண” (57-59) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

            இனக்குழு மக்கள் தலைவனான குருமகனின் வசிப்பிடம் இவ்வாறு சுட்டப்படுகிறது,

“கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்,

வெள்ளென் புணங்கலும், விரவிய இருக்கையில்

எண்குதன் பிணவோடி ருந்தது போலப்

பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்” (66-69)

அதாவது கள்பானைகளும் மிகுதியான முடை நாற்றமும் காய்ந்த எலும்புத் துண்டுகளும் கலந்து விளங்கிய இடமாக அவ் வசிப்பிடம் இருந்தது. அதுவும் கரடி தன் மனைவியுடன் இருந்ததைப் போன்று குருமகன் தன் மனைவியுடன் இருந்தான் என்று வருகிறது. இவர்கள், கள், புலால் உண்பவர்கள் என்பதை,

“பெண்டிரும் உண்டியும் இன்றெனின், மாக்கட்கு

உண்டோ ஞாலத் துறுபயன்?” (80-81)

எனக் குருமகன் சாதுவனிடம் கூறுவதிலிருந்து அறியலாம். மேலும்,

“அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி,

மூத்துவிளி மாவொழித்து எவ்வுயிர் மாட்டும்

தீத்திறம் ஒழிக!” (115-117)

என்ற சாதுவனின் அறக் கருத்துக்களை நாகர் மக்கள் கேட்டு அதனைப் பின்பற்றுவதாகவும் கூறினர்.

            அத்துடன், அகில், சந்தன மரங்கள், மரக்கலம் கவிழ்வதால் பெற்ற மெல்லிய ஆடைகள், பொருட்குவியல் ஆகியவற்றைப் பரிசாக சாதுவனுக்குத் தருகின்றனர் என்பதிலிருந்து இம்மக்கள் விருந்து போற்றுபவர்கள் எனலாம்.

            இவ்வாறு, மணிமேகலை பல்வேறு விதமான விளிம்பு நிலை மாந்தர்களைப் பதிவு செய்துள்ளது. மேற்சொன்னவர்களுள் கலகத்தன்மை கொண்ட ஆபுத்திரனும் உண்டி கொடுக்கும் மணிமேகலையும் பாராட்டத்தகுந்தவர்கள் எனலாம்.

பயன்பட்ட நூல்கள்:

1.          சிவசுப்ரமணியன், ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 2002.

2.          புலியூர்க் கேசிகன், மணிமேகலை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2011.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் மா.வெங்கடேசன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)

கிருட்டினகிரி – 635001.

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் : ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

சங்க அக இலக்கிய மாந்தர்களும் அவர்தம் கூற்றுகளும் : ஓர் உளப்பகுப்பாய்வு விளக்கம்

       சங்க அக இலக்கிய மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, பரத்தை, செவிலி போன்ற பாத்திரங்களும் அன்னோர் நிகழ்த்தும் கூற்றுகளும் படைப்பாக்க உளவியலைக் கண்டறிய உதவும் இன்றியமையாத தடயங்களாகும். சங்க அகப்பாடல்களில் படைப்பாளி முற்றிலுமாக மறைந்த நிலையில் பாத்திரங்கள் தங்களது அக வாழ்வின் இன்ப துன்பங்களைத் தத்தமது கூற்றுகளின்வழி வெளிப்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில் இவ்விலக்கியப் பாத்திரங்களை உண்மையான மனிதர்களாகவும் அவரது கூற்றுகள் அன்னோர்தம் அகவாழ்வியல் அனுபவங்கள் என்பதாகவும் எண்ணி அவ்வாறே நெடுங்காலமாக அவற்றைப் படித்து மகிழ்ந்து வருகிறோம்1. ஆனால், சங்க அக இலக்கியப் பாத்திரங்கள் என்பவை உண்மையான மாந்தர்களா? என்னும் கேள்வியை எழுப்பும்போது அன்னோர் முற்றிலும் கற்பனை மாந்தர்களே என்னும் விடை தெளிவாகக் கிடைக்கிறது. எவ்வாறெனில், எந்த ஒரு சங்க அகஇலக்கிய மாந்தர்களுக்கும் ஊரோ, பெயரோ கிடையாது. சங்க அக இலக்கியம் காட்டும் மாந்தர்கள் உண்மையாக வாழ்ந்த மக்கள் என்பதற்கான வரலாறு சார்ந்த சான்று ஏதும் இல்லை. சங்க அகஇலக்கியத் தோழி பாத்திரத்திற்கான களவு வாழ்வோ கற்பு வாழ்வோ ஏன் இல்லை என்ற கேள்விக்குச் சரியான விடையில்லை. இதுபோன்ற இன்ன பலவாறான காரணங்களால் சங்க அகஇலக்கியப் பாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்களே என்னும் முடிவிற்கு வருகிறோம். அப்படியாயின் இந்தப் பாத்திரங்களுக்கும் அப்பாத்திரங்களின் கூற்றுகளின்வழி வெளிப்படும் இன்ப துன்பங்களுக்கும் பொறுப்பேற்பது யார்? என்னும் கேள்வியை எழுப்பும்போது, அப்படைப்பைப் படைத்த படைப்பாளியே என்பதுதான் விடையாக அமைய முடியும். இந்நிலையில் பாத்திரம் மற்றும் அதன் கூற்று என்பன படைப்பாளி மற்றும் அவன் குரல் எனத் துணிவதில் பிழையில்லை.

            எந்தவொரு படைப்பு மனமும் தன் வாழ்க்கை அனுபவத்தைத்தான் அல்லது தனது விருப்பு வெறுப்புகளைத்தான் சமூகப் பண்பாட்டுக் கலை இலக்கிய மரபுகட்கு உட்பட்டுக் கூட்டியோ அல்லது குறைத்தோ வெளிப்படுத்துகின்றது எனத் தொடர்ந்து இலக்கியத் திறனாய்வு உலகில் கருதப்பட்டு வருகிறது. இக்கருத்து உளப்பகுப்பாய்வு நோக்கில் இலக்கியத்தை ஆராய்வதற்கு உதவுகின்ற ஒரு முக்கியமான கருத்தாகும். தொன்றுதொட்டு வரும் படைப்பாக்கங்களில் (தொன்மங்கள், கலை இலக்கியங்கள் மற்றும் இன்னபிற) இடம்பெற்று வரும் பாத்திரங்களின் வாழ்வியல் இன்ப, துன்ப வெளிப்பாடுகளுக்கு உள்ளே மறைந்திருப்பது படைப்பாளியின் மனமே2. உளப்பகுப்பாய்வு அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் படைப்பாளியின் மனம் தனது இன்ப, துன்ப உணர்வுகளை வெளிப்படுத்தவும், அதே வேளையில் அவற்றிற்கும் தனக்கும் தொடர்பு ஏதும் இல்லை எனச் சொல்லி விலகிக் கொள்ளவும் கண்டுபிடித்த படைப்பாக்க உத்திகளுள் ஒன்றே பாத்திரம் என்னும் உத்தி (ஊhயசயஉவநசளைவiஉ வநஉhnஙைரந) எனில் தவறாகாது. படைப்பாளன் ஏன் தனக்கும் பாத்திரத்திற்கும் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்கிறான் எனில் பாத்திரங்களின் இன்ப, துன்ப உணர்வுகள் என்பவை படைப்பாளன் தனது உண்மை வாழ்வில் நிறைவேற்றிக் கொள்ள இயலா ஆசைகளேயாம். நிறைவேற்றிக் கொள்ள வழியில்லா இந்த ஆசைகளைப் படைப்பாளியின் ஆசைகள் எனக் காட்டினால் படைப்பாளியின் ஆசை யதார்த்தத்திற்குப் புறம்பானது என்னும் பழிப்புக்குள்ளாகும். எனவேதான் படைப்பு மனம் தனது நிறைவேறா ஆசையைப் பாத்திரத்தின் ஆசையாக மாற்றிப் படைப்பின்வழி நிறைவேற்றுகிறது (படைப்பாளி தானே நேரடியாக படைப்பில் வெளிப்படும்போது படைப்பு முழுவதற்கும் அவனே பொறுப்பேற்கிறான். சான்று: பக்தி இலக்கியம்).

            உண்மையில் ஒரு மனிதனின் முதல் நிறைவேறா ஆசை என்பது அவனது குழந்தைப் பருவத் தாய்க்காம ஆசையும், தந்தைப் பகை உணர்வும் என மனித மனத்தை ஆராய்ந்து ஃபிராய்ட் விளக்குகிறார். இந்தத் தாய்க்காம மற்றும் தந்தைப் பகை உணர்வுகள் பண்பாட்டால் ஒடுக்கப்படும்போது இரகசியமாக மனத்துள் அமுக்கப்பட்டுக் காலப்போக்கில் நனவிலியாகின்றன. மனித மன வளர்ச்சிப் பருவக் கட்டத்தில் எந்த நிலையிலும் இந்த நனவிலி ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதனுக்கு இடமில்லாமல் போவதால் பண்பாட்டுக்கு ஒவ்வாத இந்த ஆசைகளைப் பண்பாட்டுக்கு ஒத்த வடிவில் அல்லது நனவிலிப் பண்பில் வெளிப்படுத்தி நிறைவடைகிறது மனித மனம். ஒவ்வொரு மனித மனத்துள்ளும் இருக்கும் இந்த ஆசைகளைப் பற்றி அவனுக்கே தெரியாது. இந்த ஆசை மனத்தைத்தான் ஃபிராய்ட் நனவிலி மனம் எனக் கண்டறிந்தார். இந்த ஆசை மன உணர்வை ஃபிராய்ட் இடிப்பஸ் உணர்வு என்னும் பெயரில் விளக்கினார்3. இந்த நனவிலி மனத்தின் விளைச்சல்களில் ஒன்றுதான் இலக்கியம். இலக்கியத்திற்குள் நனவிலி தனது இரகசிய ஆசைகளைப் பண்பாட்டிற்கு இசைந்த வடிவில் வெளிப்படுத்தி வருகின்றது. இதை உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு முறை கண்டறிந்து விளக்குகிறது.

            சங்க இலக்கியங்களைப் படைத்தளித்த சங்கப் படைப்பு மன நனவிலி, கூற்று மாந்தர்களைக் கற்பனை செய்து கூற்று மாந்தர்களின் வழித் தனது நனவிலி ஆசைகளைப் பண்பாட்டுக்கேற்ற வடிவில் வெளிப்படுத்தி நிறைவடைந்துள்ளது. இந்த உளவியல் உண்மையைச் சங்ககால ஆண்புலவர்கள் படைத்துள்ள சில அகப்பாடல்களின்வழி ஆராய்ந்து உறுதி செய்யலாம்.

            இந்தக் கட்டுரைக்குத் தலைவன் கூற்று, தலைவி கூற்று ஆகிய இரண்டு வகைக் கூற்றுப்பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் கூற்றிற்கும் தலா ஒரு பாடல் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பாடலின் நனவிலிப் பொருள் கண்டறியப்படுகிறது. ஆண்பாற் புலவர்களால் பாடப்பட்ட பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்ட்டுள்ளதால் ஆண்மன நனவிலி இக்கட்டுரையின் தேடுபொருளாகிறது. இக்கட்டுரை சங்க அக இலக்கியப் பாத்திரப் படைப்புகளை ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு அடிப்படையில் ஆராய்வதற்கான முன்மாதிரிக் கட்டுரையாகும்.

            முதலில் தலைவன் கூற்றில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அப்பாடலாவது:

                        “யாயும் ஞாயும் யாரா கியரோ

                         எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்

                         யானு நீயு மெவ்வழி யறிதும்

                         செம்புலப் பெயனீர் போல

                         அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே” (குறுந். 40)

            இப்பாடலின் பொருளாவது: என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர். இப்போது பிரிவின்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன (குறுந். பு. 118).

            மேற்கண்ட பாடலுக்குரிய துறைக்குறிப்பாவது: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் பிரிவாரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது.

            தலைவன் கூற்றில் அமைந்த இப்பாடலைப் பாடிய புலவர் செம்புலப் பெயனீரார் ஆவார் (இது உவமையால் பெற்ற பெயர்). இனி இப்பாடலின் உளவியல் பொருளைக் காண்போம்.

            தலைவியோடு ஏற்பட்டுவிட்ட உறவின் வலிமையை விளக்கத் தலைவன் தனது பெற்றோர்க்கும் தலைவியின் பெற்றோருக்குமிடையே யாதொரு உறவும் இல்லாத சூழலையும் தனக்கும் தலைவிக்கும் முந்தைய காலங்களில் எவ்வழியிலும் உறவு இல்லாத சூழலையும் இங்கு எடுத்துக்காட்டி இத்தகைய நிலையில் திடீரென அன்னோரிடையே ஏற்பட்டுவிட்ட காதல் உறவை வியப்போடு வெளிப்படுத்துகிறான். இப்பாடலில் தலைவன் தனக்குத் தலைவியோடு உள்ள உறவின் மிகுதியைச் சுட்டிக்காட்டத் தத்தமது பெற்றோர்களுக்கும் தமக்கும் முந்தைய காலங்களில் யாதொரு உறவும் இல்லையெனப் பேச வேண்டிய தேவை என்ன?

            சங்க அக இலக்கியங்கள் தலைவன், தலைவி உறவு என்பது ஏழு பிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவு (பயிலியது கெழீஇய நட்பு-குறுந்.2) என்றும் இவ்வுலகத்தில் பிறவிதோறும் பிரிதலின்றித் தலைவனும் தலைவியுமாகவே பிறவி எடுத்து வரும் உறவு (இருவேமாகிய உலகத்து ஒருவே மாகிய புன்மைநா முயற்கே-குறுந்.57) என்றும் பல இடங்களில் பேசிச் செல்கின்றன. மேலே குறிப்பிட்ட குறுந்தொகை 57-ஆம் பாடல் குறிப்பிடும் ‘இருவேமாகிய உலகம்’ என்பதற்கு உ.வே.சா. பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

            இருவேமாகிய உலகம் என்றது பல பிறப்பின்கண்ணும் தொடர்ந்து வந்த நட்பைக் குறிக்கொண்டது. நெஞ்சம் உயிரும் ஒன்றுபட்டனவேனும் நம் கடமையறிந்து ஒழுகுவதற்காக இரண்டு மெய்யுடையோமாயினோம் என்பது தலைவியின் கருத்து (குறுந். பு. 161).

            மேற்கண்ட உ.வே.சா.வின் உரை விளக்கமும் முன்னர்க் குறிப்பிட்ட குறுந்தொகைப் பாடல்களின் வரிகளும் தலைவன், தலைவி உறவு பிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவு என்பதை உறுதிப்படுத்திகின்றன. மேலும், தொல்காப்பியமும் இயற்கைப் புணர்ச்சி ஊழ்வயத்தால் நடைபெறுவது (தொல். பொரு. நூ. 90) என்று கூறித் தலைவன் தலைவி உறவு அன்னோரின் முற்கால உறவின் தொடர்ச்சி என்பதாக விளக்குகிறது. ஆனால் நாம் மேலே ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செம்புலப் பெயனீரார் பாடல் தலைவன், தலைவி ஆகியோருக்கு இடையே பண்டைய தொடர்பு ஏதும் இல்லை எனக் கூறுவது நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

            ஒவ்வொரு மனிதனின் அறிவுக்கு எட்டாத குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய தாய்க்காமம் பண்பாட்டால் ஒடுக்கப்படும்போது அக்காமம் குற்ற உணர்விற்கு ஆளாகிறது. குற்ற உணர்வினால் நிறைவேற்றமின்றித் தவிக்கும் இந்தத் தாய்க்காமம் பண்பாட்டிற்கேற்ற ஆண், பெண் காமமாக மாறி வெளிப்படுகிறது. சேயின் தாய்க்காமத்தைப் பண்பாட்டு ஆண், பெண் காமத்திற்குள் நேரடியாக இணைக்க விரும்புகிறது படைப்புமனம்; ஆனால் குற்ற உணர்வு தடுக்கிறது. இடிப்பஸ் விழைவை ஏதேனும் ஒரு வகையிலாவது பண்பாட்டு ஆண், பெண் காமத்தோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்தினால்தான் இடிப்பஸ் நனவிலியின் எண்ணம் நிறைவடையும். எனவே நனவிலி தன்னை எதிர்மறை வடிவில் வெளிப்படுத்தி, (உண்மையை மறைப்பதற்காக) உடன்பட்டு இலக்கை எய்துகிறது. எனவேதான் தலைவன், தலைவி என்ற ஆண், பெண் காம உறவிற்கு முந்தையத் தொடர்பு ஏதும் இல்லை என்பதைச் சொல்லி முந்தைய இடிப்பஸ் காம நனவிலி உறவிற்கும் இன்றையத் தலைவன் தலைவி காம உறவிற்கும் யாதொரு தொடர்பு இல்லையென இரண்டிற்கும் இடையேயான உறவை அறுத்துவிடுகிறது. இதனால் படைப்பு மனம் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கிறது. எனவேதான் தலைவனைத் தனக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள உறவு முன்பின் தொடர்பற்றது எனக் கூற வைக்கிறது. இலக்கியங்கள் குற்ற உணர்வினின்றே பிறக்கின்றன என்னும் ஃபிராய்டின் கருத்து இங்கு நினைக்கத்தக்கது4.

            வெளிப்பட முந்தும் இடிப்பஸ் காமத்தை மறைக்க வேண்டுமென்று பதறுகின்ற மனம் ஒருபுறம் இழுக்க அதை வெளித்தள்ளி நிறைவடைய விழைகின்ற மனம் மறுபுறம் இழுக்க இந்த இழுபறிக்கிடையில் பாடல் நிலைக்கிறது.

            இப்பாடலின் பிந்தைய அடிகளில் இடம்பெற்றுள்ள ‘செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே’ என்னும் அடிகளில் இடிப்பஸ் காமப் புணர்ச்சி விழைவு குறியீட்டுப் பண்பில் வெளிப்படுகிறது. ‘செம்புலம்’ என்பது தாயையும் செம்புலத்தில் பெய்கின்ற ‘பெயல்நீர்’ என்பது மகனையும் நனவிலி நிலையில் குறியீட்டாக்கம் செய்கின்றன. பொதுவாக நிலம் அல்லது புலம் (டுயனௌஉயிந) தாயின் குறியீடாகவே நனவு நிலையிலேயே கூடக் கருதப்படுவது நாம் அறிந்ததே. ‘பூமித்தாய்’, ‘பூமிமாதா’, ‘அன்னைபூமி’, ‘அன்னைவயல்’, ‘தாய்மண்’ போன்ற தொடர்கள் மனிதன் நிலத்தைத் தாயாகவே உருவகித்த மனப்பான்மையை உணர்த்துகின்றன. சூல்கொண்ட மேகம் ஈன்ற குழந்தை பெயல்நீர். எனவே பெயல்நீர் என்பது மகனைக் குறியீட்டாக்கம் செய்கின்றது. மழை செம்மண் நிலத்தில் பெய்தல் என்பது மகனின் தாய்;ப்புணர்ச்சி விழைவிற்குக் குறியீடாகிறது. ‘செம்புலம்’ என்ற தொடரில் உள்ள செம் என்ற சொல் சிவப்பு நிறத்தைக் குறிக்கும்பொழுது இந்தச் சிவப்பு நிறம் காமத்திற்கான நிறக்குறியீடாகவும் ஆகிறது. விபச்சாரம் நடைபெறும் பகுதிக்குச் சிவப்பு விளக்குப் பகுதி என நிறக்குறியீட்டு அடிப்படையில் சுட்டப்படுவது இங்கு இணைத்து எண்ணத்தக்கது5.

            இப்பாடலில் இடம்பெற்றுள்ள செம்புலப் பெயல்நீர் போல என்னும் உவமத் தொடராட்சியின் நனவிலிப் பொருளை அடைய முடியாதபோதுதான் இப்பாடல் உடல்சார் காமத்தைப் பேசவில்லை மாறாக அன்புடை நெஞ்சங்கள் கலந்த மனம்சார் காமத்தைத்தான் பேசுகிறது எனக் கருதப்படுகிறது6. எல்லா இலக்கியங்களும் உடல்சார் காமத்தைத்தான் வெளிப்படையாகவோ அல்லது குறியீட்டுப் பான்மையிலோ (கருப்பொருள் காட்சி வழி) வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இப்பாடலிலும் பண்பாட்டால் வெளிப்படையாக பேசுவதற்குத் தடை செய்யப்பட்ட உடல்சார் காமம் நனவிலிக் குறியீட்டுப் பண்பிலும் (செம்புலப் பெயனீர்) பண்பாட்டால் அனுமதிக்கப்பட்டுள்ள மனம்சார் காமம் (அன்புடை நெஞ்சம் கலந்தமை) வெளிப்படையாகவும் இடம்பெற்றுள்ளன என உணரமுடிகிறது. இந்தப் பாடல் உடல்சார் காமத்தைத்தான் பேசுகிறது என்பதை வலுப்படுத்த உரையாசிரியர் உ.வே.சா. தந்துள்ள “இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் பிரிவாரெனக் கருதியஞ்சிய தலைமகளின் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது” என்னும் உரைக்குறிப்பும் நமக்கு உதவுகிறது.

            தலைவன் கூற்றில் அமைந்துள்ள இப்பாடலின் கூற்று மொழியைப் படைப்பாளனின் குரலே எனக் கருதிப் படைப்பாளனையும் பாத்திரத்தையும் இணைப்பதில் இங்குப் பால்சார் தடையேதும் இல்லை. ஆண் படைப்பு மனத்தின் நனவிலி மனக் குரல் தலைவன் பாத்திரத்தின் நனவுமனக் குரலாக மாறி வெளிப்படுகிறது. ஆண் படைப்புமன நனவிலி நனவுநிலையில் தன்னைத் தலைவனாகவும், தனது நனவிலிக் காமப் பொருளான தாயை நனவுநிலைத் தலைவியாகவும், தனது இடிப்பஸ் காம நனவிலியை நனவுநிலைப் பண்பாட்டுக் காமமாகவும் மடைமாற்றி எல்லோருக்கும் இசைந்த வடிவில் இப்பாடலைப் படைத்துள்ளது.

            இங்கு வாசகர்கட்கு ஒரு கேள்வி எழலாம். கூற்று நிகழ்த்தும் தலைவனை மகன் என்றும், தலைவியைத் தாய் என்றும் கொள்ள பாடலில் வெளிப்படையான சான்றுகள் இல்லை. எனவே தலைவன், தலைவி என்போரைப் படைப்பு மன இடிப்பஸ் மாந்தர்களோடு பொருத்துவது வலிந்து செய்யும் முயற்சி எனலாம். ஆனால் இது வலிந்து சொல்லும் முயற்சி அன்று. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோர் தாய், சேய் உறவினர்களாகவே வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் படைப்பாளர்களால் பொருத்திக் காட்டப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன7.

            அடுத்து தலைவி கூற்றில் அமைத்துப் பாடலை வெளிப்படுத்தும் போது ஆண் படைப்பாளியின் நனவிலி எவ்வாறு இடம்பெயர்ந்து (னுiளிடயஉநன) உறைந்து (ஊழனெநளெநன) குறியீட்டாக்கம் (ளுலஅடிழடணையவழைn) பெறுகிறது என்பதைக் கீழ்வரும் பாடல்வழிக் காண்போம்.

                        “யாரு மில்லைத் தானே கள்வன்

                         தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

                        தினைத்தா ளன்ன சிறுபசுங் கால

                        ஒழுகுநீ ராரல் பார்க்கும்

                       குருகு முண்டுதான் மணந்த ஞான்றே” (குறுந். 25)

            மேற்கண்ட பாடலைப் பாடியவர் கபிலர். இப்பாடலின் துறையாவது: வரைவு நீட்டித்தவிடத்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்பதாம் (குறுந். ப. 77).

            இப்பாடலின் பொருளாவது: “தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர்;; தலைவனாகிய கள்வன் ஒருவன்தான் இருந்தான். அங்ஙனம் இருந்த தலைவன் அப்பொழுது கூறிய சூளுரையினின்றும் தப்பினால் நான் யாது செய்ய வல்லேன். ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வரவை உண்ணும் பொருட்டுப் பார்த்து நிற்கும் தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய நாரையும் அங்கு இருந்தது” (குறுந். ப. 77).

            தலைவன் தலைவியோடு கொண்டுள்ள காம உறவைப் பொய்ப்பானாயின் உண்மையை உணர்த்தத் தலைவிக்கு யாதொரு சான்றும் இல்லை என்பது பாடலின் நனவுநிலைப் பொருள். இந்த நனவுநிலைப் பொருளுக்கு இணையான படைப்பு மன நனவிலிப் பொருளாவது தனக்கும் தாய்க்கும் உள்ள காம உறவைத் தாய் மறுப்பாளாயின் அவ்வுறவை உறுதிசெய்ய மகனுக்கு யாதொரு சாட்சியும் இல்லை என்பதுதான்.

            தலைவனுக்கும் தனக்கும் உள்ள காம உறவு நிலைக்காமல் போய்விடுமோ! தலைவன் ஏமாற்றிவிடுவானோ! எனும் பதற்றம் (ழுடிளநளளழைn) தலைவியின் குரலில் வெளிப்படுகிறது. இது இடிப்பஸ் பருவத்தில் காயடிப்புச் சிக்கல் உணர்வில் வாழும் மகன் இனித் தனக்குத் தாய்க்காமம் கிட்டாதோ எனப் பதறிய மனப் பதற்றத்தின் இடப்பெயர்வு எனலாம். வாசகர்களுக்கு இங்கு ஒரு கேள்வி எழலாம். எந்தத் தாய் தனது மகன்மீது தான் வைத்துள்ள உறவை மறுப்பாள்! எனவே தாய் தன்மீதான உறவைக் கைவிட்டுவிடுவாளோ என மகன் பதற்றம் கொள்ள யாதொரு வாய்ப்பும் இல்லை. ஆகவே பாடலில் வெளிப்பட்டுள்ள தலைவியின் நனவுநிலைக் காமப் பதற்றத்திற்கும் படைப்பு மன நனவிலியில் உறையும் இடிப்பஸ் காமப் பதற்றத்திற்கும் தொடர்பிருக்க முடியாது என வாசகர்கள் விவாதிக்கலாம். மேலோட்டமான பார்வையில் இது சரிதான். ஏனெனில் தாய் மகன்மீது கொள்ளும் பண்பாட்டு உறவு எப்பொழுதும் நழுவிப்போவதில்லைதான். ஆனால் மகன் தாய்மீது கொள்ளும் இடிப்பஸ் காம உறவைத் தாய் மறுக்கும் நிலை பண்பாட்டில் இருப்பது வெளிப்படை. இவ்வுண்மை பண்பாட்டைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் மகனுக்கு விளங்குகிறது. இதனால்தான் தனது இடிப்பஸ் காம உறவு கைநழுவிவிடுமோ என்னும் பதற்றம் இடிப்பஸ் மகனுக்கு ஏற்படுகிறது. இந்தப் பதற்றம் காலப்போக்கில் நனவிலியாகப் படைப்;பு மனத்திலிருந்து எழும்போது தான் கற்பனையாகப் படைத்த தலைவியின் காம உறவுப் பதற்றமாக இடம்பெயர்ந்து வெளிப்படுகிறது. எனவே பாடலின் நனவுநிலைப் பொருளான தலைவியின் காமப் பதற்றம் என்பது உண்மையில் படைப்பாளனின் நனவிலி மனத்தில் உறையும் இடிப்பஸ் காமப் பதற்றத்தின் இடப்பெயர்வுதான்.

            இப்பாடலில் இடம்பெற்றுள்ள தலைவி என்பவள் படைப்பு மன நனவிலியில் உறையும் மகனின் பதிலிப் பாத்திரம் எனலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது பாடலில் இடம்பெற்றுள்ள தலைவன் என்பவன் படைப்பு மன நனவிலியுள் உறையும் தாயின் பதிலியாகிறான்.

            இனி இப்பாடலின் கருப்பொருள் காட்சியில் இடம்பெற்றுள்ள நனவிலிப் பொருள் இன்னதென்பதைக் காண்போம். தலைவன், தலைவி ஆகியோரின் காம உறவிற்குச் சாட்சியாக முடியாத ஒரு காட்சியைத் தலைவி இப்பாடலில் காட்டுகிறாள். அதாவது தலைவன் தன்னோடு களவு வாழ்வு வாழ்ந்தபோது ஓடிக்கொண்டிருக்கும் நீரில் ஆரல்மீன் வருமா என்று ஆரல் மீனைப் பார்த்துக் காத்திருந்த குருகு இருந்தது எனத் தலைவி கூறுகிறாள். தலைவியின் இந்தக் கூற்றின்வழி அவளது காதலுக்குக் குருகு சாட்சியாகா என்பது நமக்குத் தெற்றென விளங்குகிறது. அதே வேளையில் பின் ஏன் தலைவி இந்தக் காட்சியைக் கூறுகிறாள் என்னும் கேள்வியும் உடன் எழுகிறது. கருப்பொருட் காட்சியை உளப்பகுப்பாய்வு வெளிச்சத்தில் நோக்கும்பொழுது படைப்பு மன ரகசியங்கள் வெளிப்படுகின்றன. நீரோடு வாழும் ஆரல் மீனைச் சமயம் பார்த்துக் கொத்திச் செல்லக் குருகு காத்திருக்கும் காட்சியில் மூன்று கருப்பொருட்கள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படை. அவை: 1. ஒழுகுநீர், 2. ஆரல் மீன், 3. குருகு.

            நீரோடு பிறந்து நீரோடு சேர்ந்து வாழ்வது மீன். நீரினின்று மீன் பிரியாது; பிரித்தால் அது உயிர் வாழாது. மீனுக்கு நீரோடு உள்ள உறவு அத்தகையது. ஆனால் குருகின் நிலை வேறு. குருகுக்கும் மேற்சொன்ன நீர் மற்றும் மீன் ஆகியவற்றிற்கும் பிறவித்தொடர்பு ஏதும் இல்லை. இந்த நிலையில் நீரோடு வாழ்ந்து வரும் மீனை நீரினின்றுப் பிரிக்க குருகு காத்திருக்கிறது. இந்த கருப்பொருட் காட்சியை ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு ஒளியில் நோக்கும்பொழுது அது இடிப்பஸ் நனவிலிச் செய்திக்கான படிம வெளிப்பாடாகவே தோன்றுகிறது. தாயுடன் பிறப்பிலிருந்து தொடர்ந்துவரும் மகனின் பதிலியாகப் பிறப்பிலிருந்து நீரோடு சேர்ந்து வாழும் ஆரல் மீன் வெளிப்பட்டுள்ளது. பிரிக்க முடியாத தாய், சேய் உறவைப் பிரித்து வதைக்கும் தந்தையின் பதிலியாகக் குருகு வெளிப்பட்டுள்ளது. ஆகக் கருப்பொருளில் வெளிப்பட்டுள்ள குருகு தந்தையையும், நீர் தாயையும், நீரில் வாழும் சிறு ஆரல்மீன் மகனையும் நனவிலிக் குறியீட்டாக்கம் செய்கின்றன எனில் அது தவறாகாது.

            தாய்க்காம நினைவில் வாழும் தன்னை எந்த நேரத்திலும் தந்தை தாயினின்று பிரித்துவிடலாம் என அஞ்சும் நனவிலி மகனின் பதற்றம் எந்த நேரத்திலும் நீரோடு வாழும் மீனை நீரினின்று பிரித்துக் கொத்திச் செல்லக் காத்திருக்கும் கொக்குப் படிமத்தின்வழி மடைமாற்றம் பெற்று வெளிவந்துள்ளது எனலாம்.

            கொலைப் பண்புடைய கொக்குப்படிமம் நனவிலித் தந்தையின் பதிலியாக வெளிப்பட்டுள்ளது. நமது இக்கருத்தை வலுப்படுத்துவதுபோல் அமைகிறது இப்பாடலில் இடம்பெற்றுள்ள கொக்குப் படிமத்திற்கு நச்சினார்க்கினியர் தந்துள்ள விளக்கம். அவ்விளக்கமாவது:

                        “இரை தேடும் மனக்குறிப்புடைமையிற் கேளாது,

                           சிறிது கேட்டதாயினும்

                         கொலை சூழ் குருகாதலின் கூறுவதுஞ் செய்யாது” (குறுந். ப.79)

மேற்கண்ட விளக்கம் நமது உளப்பகுப்பாய்வு விளக்கமான குருகு ஸ்ரீ கொலைகாரத் தந்தை என்னும் படைப்பு மனம் கருத்திற்கு அண்மையில் இருக்கிறது என்பது ஒருபுறமிருக்கத் தனது நனவிலி மனத்துறையும் கொலைகாரத் தந்தையை வாசகன் நிலையிலிருந்து நச்சினார்க்கினியர் இனங்காட்டுகிறார் என்பதும் நாம் இங்குக் கருதத்தக்கது. குருகு பற்றிய இந்த உளவியல் புரிதலுக்குப் பின் பாடலின் கிடந்த பொருளான தலைவனோடு தலைவி கொண்ட காம வாழ்விற்குச் சார்பான வகையில் சாட்சி சொல்லும் நிலையில் குருகு இல்லை என்னும் பாடல் செய்தி இடிப்பஸ் தளத்தில் பொருந்துகிறது. அதாவது மகனின் இடிப்பஸ் காம வாழ்விற்குச் சார்பாக குருகு இல்லை என்னும் நனவு நிலைச் செய்தியாக மடைமாற்றம் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. தலைவியின் காதலுக்குச் சாட்சியாகாத குருகை ஏன் தலைவி தனது கூற்றுக்குள் கொண்டு வந்தாள் என்னும் வினாவிற்கு மேற்கண்ட உளவியல் விளக்கம் மட்டுமே இயைபுடையதாக இருக்க முடியும்.

            மேலே நாம் ஓடும் நீரைப் பெண்பதிலி எனக் குறியீட்டு அடிப்படையில் விளக்கியது கொண்டு வாசகர் பின்வரும் கேள்வியை எழுப்பலாம். அதாவது ஓடும் நீரை ஆண் பதிலியாகத்தானே உளப்பகுப்பாய்வு அடிப்படையில் நோக்க முடியும். மாறாக, ஒழுகு நீர் எவ்வாறு பெண்பதிலியாக அல்லது தாய்ப்பதிலியாக ஆக முடியும்? இந்தக் கேள்விக்கு நாம் பின்வருமாறு விடைதரலாம். இங்கு ஒழுகுநீர் பெண்படிமமாக ஆக முடியும்.

            தந்தை தன்னைத் தாயிடமிருந்து பிரித்துவிடுவாரோ என அஞ்சிய நனவிலி மகனின் பதற்றம் பாடலில் முதலிரண்டு அடிகளுள் மறைந்துள்ள பான்மையை முன்னர் விளக்கினோம். இந்தப் பயத்திற்கு அடிப்படைக் காரணியாக இருக்கும் காயடிப்பு அச்சம் குறியீட்டுப் பான்மையில் கருப்பொருட் காட்சியின்வழி வெளிப்பட்டுள்ளது என்பதைப் பின்னர் விளக்கினோம்.

            இதுவரை கண்ட விளக்கத்தின் அடிப்படையில் கூற்று நிகழ்த்தும் தலைவி என்பவள் படைப்பாளன் அல்லது அவனது நனவிலியில் உறையும் மகனின் பதிலி என்றும், தலைவியின் மனத்தைத் திருடிய கள்வனாகிய தலைவன் என்பவன் படைப்பு மன நனவிலியில் உறையும் தாய் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது

                        தலைவி ஸ்ரீ படைப்பு மன நனவிலிமகன்

                        தலைவன் ஸ்ரீ படைப்பு மன நனவிலித்தாய்

என்றாகிறது.

            பொதுவாகப் படைப்பாளனின் நனவிலி தலைவி கூற்றாக மாறி வெளிப்படும்போது பாத்திர அடிப்படையிலும் உரிப்பொருள் அடிப்படையிலும் மேற்கொண்ட வகைகளில் இடம்பெயர்ந்து உறைந்து குறியீட்டாக்கம் பெற்று வெளிப்படுகின்றன எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு வாசகர்களுக்கு ஒரு கேள்வி எழலாம். தலைவி என்ற பெண் பாத்திரத்தைப் படைப்பாளன் என்ற ஆணோடும், தலைவன் என்ற பாத்திரத்தைப் படைப்பாளனின் தாய் என்னும் பெண்ணோடும் சமப்படுத்தும்போது அடிப்படையில் பால் பொருத்தம் அடிப்படுகிறதே எனலாம். இத்தகைய பாலின முரண்பாட்டுப் பொருத்தத்தைப் பயன்படுத்தி நிறைய அகப்பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்ப்பறவை, தாய்ப்பசு, தாய்க்குரங்கு என்னும் பெண் அஃறிணை உயிர்கள் தலைவன் என்னும் உயர்திணை ஆணுக்கும், சேய்ப்பறவை, சேய்க்குரங்கு, சேய்க்கன்று என்னும் பால்பகா அஃறிணை உயிர்கள் தலைவி என்னும் உயர்திணைப் பெண்ணுக்கும் உவமையாகப் பொருத்திப் பாடப்பட்ட சங்க அகப்பாடல்கள் ஏராளமாக உள்ளமை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் நனவிலி நிலையில் வெளிப்பட்டுள்ள தலைவி, தலைவன் முறையே ஆண் படைப்பாளிக்கும், அவனது தாய்க்கும் பாலின மாற்று அடையாளத்தோடு பொருத்தி விளக்குவதில் பிழையில்லை. முந்தையது நனவு நிலைப் பாலின முரண்பாட்டுப் பொருத்தம். பிந்தையது நனவிலி நிலைப் பாலின முரண்பாட்டுப் பொருத்தம் எனலாம்8.

சான்றெண் விளக்கம்

1.          சங்க அகஇலக்கிய ஆய்வுகளில் ஒன்று வ.சு.ப. மாணிக்கனாரின் முனைவர் பட்ட ஆய்வாகிய ‘தமிழ்க்காதல்’ எனும் ஆய்வாகும். இவ்வாய்வில் வ.சு.ப. மாணிக்கனார் சங்க அகஇலக்கிய மாந்தர்களாகிய தலைவன், தலைவி, தோழி முதலான பாத்திரங்களையெல்லாம் சங்க காலத்தில் வாழ்ந்த உண்மை மாந்தர்களாக எண்ணிப் பல கருதுகோள்களைத் தனது ஆய்வு நெடுக வழங்கிச் செல்கின்றார். சங்க அகக்கவிதைகள் சங்க கால ஆண், பெண் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன எனும் முடிவை ஏற்கும்போது புலவனுக்கும் கவிதைக்கும் உள்ள உறவு முற்றிலும் முறிந்துபோகிறது. இதனால் புலவனின் விருப்பு, வெறுப்புகட்கும் அவனது கவிதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றாகிறது. இது எந்த அளவிற்கு ஏற்புடைய கருத்தாகும்?

நாடக பாணியான சங்க அகஇலக்கியங்களாயினும் சரி, தன்னுணர்வுப் பாடல்களான புறஇலக்கியங்களாயினும் சரி, பிற்காலத்தில், தமிழில் எழுந்த ஆழ்வார், நாயன்மார்களின் நேரடி அனுபவ வெளிப்பாடுகளான பக்தி இலக்கியங்களாயினும் சரி, அவையெல்லாம் படைப்பாளியின் மன அனுபவங்களிலிருந்து தானே தோன்றியிருக்க முடியும். இன்னும் சொல்லவேண்டுமென்றால் நேரடியாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்னுணர்வுப் படைப்புகளை விடப் பாத்திரங்களைப் படைத்து வெளிப்படுத்தும் படைப்புகளில் தாம் படைப்பாளன் தன்னைக் கூடுதலாகத் தொடர்பு படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பாத்திரங்களின் மீது தனது விருப்பு வெறுப்புகளைப் படைப்பு மனம் துணிந்து ஏற்றலாம். இதனால் படைப்பாளனுக்கு எந்தக் குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. குற்றமுடைய பாத்திரப் படைப்புகளாயின் அவற்றைக் கற்பனைப் படைப்புகள் என்று கூறித் தப்பித்துக் கொள்ளவும் படைப்பாளனுக்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு படைப்பாளர்களின் கற்பனைப் படைப்பில் ஆசிரியனது நனவிலி மன உணர்வுகளைத் தேடுவதில் மிகுந்த நாட்டம் காட்டுகிறது.

சங்க அகப்பாடல்கள் தலைவன், தலைவி மற்றும் இன்னபிற பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன எனப் பார்ப்பதற்கும் முன்னதாகப் படைப்பாளனின் மன உணர்வை வெளிப்படுத்துகின்றன எனப் பார்ப்பது கூடுதல் இயல்புடையதாக இருக்கும். அப்படியாயின் இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கவில்லையா? எனும் கேள்வி சிலருக்கு எழக் கூடும். படைப்புமன நனவிலி உணர்வுகள் புற உலக யதார்த்தப் போர்வையில் இலக்கியத்தில் இனம் காட்டுகின்றன என்பதுதான் மேற்கண்ட வினாவிற்குரிய உளவியல்சார் விடையாகும்.

2.          தமிழில் புனை கதை எழுத்தாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தன் தான் கேட்டது, கண்டது, கனவுகண்டது, காணவிருப்பது, காணவிரும்பியது, காணவிரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் தனது கதைகள் என்று கூறுகிறார் (புதுமைப்பித்தன் நூல் முன்னுரைகள், பக். 777-782). இக்கூற்றிலிருந்து புதுமைப்பித்தனின் உணர்வுகள்தாம் பாத்திரங்களின் உணர்வுகளாக விளங்குகின்றன என்பது வெளிப்படை.

நாவலாசிரியர் ஜெயகாந்தன் தனது படைப்புகளுக்கு முன்னுரை வழங்கும்போது தான்தான் தனது நாவல்களின் பாத்திரமாக உருமாறுகிறேன் எனப் பல இடங்களில் கூறிச்செல்வது இங்குக் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அவரது கூற்றகளில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“கல்யாணி (ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற நாவலின் கதைத் தலைவி) என் மனைவி அல்ல; என் காதலியும் அல்ல; நான்தான் ஏன் என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களுமே-ஒன்றைக் கவனியுங்கள்; என் பாத்திரங்களில் யாருமே முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை – நான்தான் – நான் போட்டுக் கொள்கின்ற – வாழ்க்கையில் நான் சந்தித்த பிறர் மாதிரியான வேஷங்களே அவை”. (ஜெயகாந்தனின் முன்னுரைகள், ப. 153).

இதே ஜெயகாந்தன் தனது இன்னொரு நாவலான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனும் நாவலின் கதைத் தலைவியான ‘கங்கா’ பாத்திரப் படைப்பின் முடிவு குறித்து வாசகர்களின் கண்டனக் கடிதத்திற்குப் பதில் எழுதும்போது தனக்கும் அப்பாத்திரத்திற்கும் தொடர்பில்லை. அப்பாத்திரம் தன்னைத் தானே ஆக்கிக்கொண்டது எனக் கூறித் தப்பித்துக் கொள்கிறார். (ஜெயகாந்தனின் முன்னுரைகள், பக். 146-147).

ஒரு படைப்பாளன் சார்பான சூழலில் தன்னைத் தனது படைப்போடு அல்லது பாத்திரத்தோடு இணைத்து இனங்காட்டிக் கொள்வதற்கும் எதிரான சூழலில் படைப்பு மற்றும் பாத்திரம் ஆகியவற்றிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறித் தப்பித்துக் கொள்வதற்கும் ஏற்ற களம் பாத்திரப் படைப்பாக்கம் எனில் தவறாகாது. படைப்பாளர்களின் இத்தகைய கூற்றுகளிலிருந்து இலக்கிய மாந்தர்களின் உணர்வுகளைச் சமுதாய மாந்தர்களின் உணர்வுகள் என்று பார்ப்பதை விடப் படைப்பாளனின் உணர்வுகள் என்று பார்ப்பதே சாலச் சிறந்ததாகும் என்பதை உணரமுடிகிறது.

3.          காண்க: Freud ‘The Dissolution of the Oedipus Complex’  pp. 395-401, The Essentials of psycho Analysis.

4.          நனவிலியில் கலந்து கிடக்கும் குற்ற உணர்வு மனிதனின் பண்பாட்டு நடத்தைகளுக்குத் தூண்டு கோலாக விளங்குகிறது என்பதைப் பரவலாகப் பேசும் ஃபிராய்ட், இலக்கிய 11-ஆம் பக்கம் ஆக்கட்கும் தூண்டு கோலாக இருப்பது இக்குற்ற உணர்வே என்பதை இரஷ்ய நாவலாசிரியர் ‘டாஸ் டோவஸ்கி’யின் இலக்கியப் படைப்புகளை ஆராயுமிடத்தில் விரிவாக விளக்கிச் செல்கிறார் காண்க Freud Dostoevsky and Parricide, Art and Literature, Vol. 14, pp. 441-460.

5.          சிவப்பு நிறம் காமப் பொருளுக்கான நிறக் குறியீடு என்பதை வகுப்பறையில் நான் விளக்கிக் கொண்டிருக்கும் போது மாணவரொருவர் எழுந்து இந்த கருத்தை எல்லா இடத்திற்கும் பொதுமைப்படுத்த முடியுமா? எனும் கேள்வியை எழுப்பினார். மேலும் பொதுவுடைமைக் கட்சியின் நிறம் சிவப்பு. இந்தக் கட்சி நிறத்திற்கு எவ்வாறு காமப்பொருள் கற்பிக்க முடியும்? எனவும் வினவினார். அவருடைய கேள்விக்கு இக்கட்டுரையாசிரியர் வகுப்பறையில் வழங்கிய விளக்கத்தின் சுருக்கம் கீழே இடம்பெற்றுளளது.

பொதுவுடைமைக் கட்சியின் அடிப்படைத் தத்துவம் பொருளாதாரச் சமத்துவம். பொருள் என்பது பெண்ணிற்கான குறியீடு எனும் கருத்தில் பெரும்பாலான உலக சமுதாயங்கள் ஒத்துப் போகின்றன. நம் பண்பாட்டில் பெண் கடவுள் திருமகளை (லஷ்மி) பொருளின் குறியீடாகவே கருதுகிறோம். பொருளாதாரச் சமத்துவம் பற்றிய போராட்டத்திற்கான மனிதமன அடிப்படை அவனது நனவிலியுள் உறையும் தாயுடைமை பற்றிய இடிப்பஸ் மன உந்துதலே எனலாம். முதன்மை நிலையில் தந்தையின் தனியுடைமையாக இருக்கும் தாயைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது இடிப்பஸ் மனம். இதற்குப் பண்பாடு இடந்தராது. ஆகையால் இதை எந்த வடிவிலாவது நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது இடிப்பஸ் மனம். பண்பாட்டுக்கொவ்வாத இந்த நனவிலி ஆசை மடைமாறி வெளிப்படும்போது பொதுவுடைமைத் தத்துவமாக மலர்ந்துள்ளது எனலாம். இரஷ்யாவில் ஜார் மனனர்கட்கு எதிராகக் கொதித்தெழுந்த இரஷ்ய இனக்குழு மக்களின் போராட்டத்தின் அடிப்படை இடிப்பஸ் போராட்ட உணர்வே. இங்கு ஜார் மன்னர் ஸ்ரீ தந்தை, மக்கள் ஸ்ரீ பிள்ளை, பொருள் ஸ்ரீ தாய் எனப் புரிந்து கொள்வதில் தவறிருக்காது. இத்தகு அடிப்படையில் இக்கட்சியின் நிறம் சிவப்பு என்பதைத் தொடர்புடைய நனவிலி தீர்மானம் செய்கிறது. இந்த வகையில் பொதுவுடைமைக் கட்சியின் சிவப்பு நிறம் காமப் பொருள் தொடர்புடையது எனப் புரிந்து கொள்ள முடியும். இது பற்றி மேலும் விரிவாக விளக்க இது இடமில்லை.

6.          பெரும்பாலான தமிழறிஞர்கள் சங்க அகஇலக்கியங்கள் மனம் சார் காதலைத்தான் பேசுகின்றன. உடல் சார் காமத்தைப் பேசவில்லை என இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். ஆனால் சங்க இலக்கிய அறிஞர் வ.சு.ப. மாணிக்கம் சங்க அகப்பாடல்களின் பாடுபொருள் ‘காதற் காமம்’ எனத் தெளிவுபடுத்துவது (காண்க: வ.சு.ப. மாணிக்கம், தமிழ்க்காதல், பக். 490-506) ஃபிராய்டின் கருத்திற்கு மிக அண்மையில் உள்ளது.

சங்க அகப்பாடல்கள் தலைவன், தலைவி உறவு உடற்காமச் சார்புடையது என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகின்றன. சான்றுக்குக் கீழே இடம்பெற்றுள்ள பாடலைக் காட்டலாம்.

            “குக்கூ வென்றது கோழி யதனெதிர்

             துட்கென் றன்றென் றூய நெஞ்சம்

             தோடோய் காதலர்ப் பிரிக்கும்

             வாள்போல வைகறை வந்தன்றா லெனவே.” (குறுந். 157)

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘தோள் தோய் காதலர்’ எனும் வரி தலைவன் தலைவி ஆகியோர் உடல்கள் பின்னிக் கிடந்தமையை வெளிப்படையாகவே உணர்த்துகின்றது. திருமணம் நிகழ்ந்த முதல் நாளிரவில் உடைவிலக்கப்பட்ட தலைவியின் உடல் உறையினின்று வெளிப்பட்ட வாளைப்போல ஒளிர்வதாக அகநானூற்றுத் தலைவன் ஒருவன் கூறுகின்றான். இதுபோன்று உடற்காமத்தை வெளிப்படையாகப் பேசுகின்ற பல சங்கப் பாடல்கள் கிடைக்கின்றன.

ஏராளமான அகப்பாடல்கள் உடல் சார்காமத்தைக் குறியீட்டு வடிவிலேயே வெளிப்படுத்தியுள்ளன என்பது அறியத்தக்கது. ‘காமக் குறியீட்டாக்கம்’ (ளுநஒரயட ளுலஅடிழடளைஅ) பற்றிய கல்வியை நாம் ஏற்க மறுப்பதால் சங்க அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள கருப்பொருட் குறியீட்டாக்கங்கட்குரிய காமப் பொருளை நாம் எட்ட முடியாதவர்களாக உள்ளோம். இதனால் தான் சங்க அகப்பாடல்கள் உடல் சார் காமத்தைப் பேசவில்லை. மாறாக, மனம் சார் காதலைத்தான் பேசுகின்றது எனக் கூறப்பட்டு வருகிறது. மனம் ஒத்த காதலின் முடிவு உடல்சார் காமத்திற்கே எனில் பிழையாகாது. ஏனெனில் தடையற்ற எல்லாக் காதலும் இறுதியில் காமக் கூட்டத்தில் தான் முடிவுறும். இதை நமது பண்பாட்டில் விளைந்த சங்க இலக்கியம் மிக அழகியல் உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளது.

7.          இது பற்றிய விரிவான விளக்கத்திற்கு “உளப்பகுப்பாய்வு நோக்கில் சங்க அகப்பாடல்கள்” என்ற எனது கட்டுரையைக் காண்க. (புலமை தொகுதி 27, பகுதி-2, டிசம்பர். 2001).

8.          இக்கட்டுரை பக்கவரையறைக் கட்டுப்பாட்டினால் தற்காலிகமாக இத்துடன் நிறுத்தப்படுகிறது.

பயன்பட்ட நூல்கள்

1.          சாமிநாத ஐயர், உ.வே. (ப.ர்.),                  குறுந்தொகை,

                                                                                 கேஸரி அச்சுக்கூடம்,

                                                                                 சென்னை, 1937.

2.          மாணிக்கம், வ.சு.ப.,                                  தமிழ்க்காதல்,

                                                                                  பாரிநிலையம்,

                                                                                 சென்னை, 1962.

3.    வேங்கடாசலபதி, ஆ.இரா.(ப.ர்.),                  புதுமைப்பித்தன் கதைகள்,

                                                                                 முழுத்தொகுப்பு,

                                                                                 காலச்சுவடு பதிப்பகம்,

                                                                                 நாகர்கோவில், 2000.

4.  வையாபுரிப்பிள்ளை, எஸ்(ப.ர்.),                     சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்),

                                                                                பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு,

                                                                                 சென்னை, 1967

5.     ஜெயகாந்தன்,                                               ஜெயகாந்தனின் முன்னுரைகள்,

                                                                                மீனாட்சி புத்தக நிலையம்,

                                                                                 மதுரை, 1972.

1.Carvalho – Neto Paulo de,                        Folklore  and Psycho Analysis,

University of Miami Press,

Florida, 1972.

2.Freud, Sigmund,                                  The Essentials of Psycho Analysis,

The Hograth Press and the Institute of
Psycho Analysis, London, 1986.

3.Freud, Sigmund,                              Art and Literature – Vol. 14,

Penguin Books,

London, 1985.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா அரங்க.நலங்கிள்ளி

புல முதன்மையர்,

புதுவை பல்கலைக்கழகம்.

கழிவறையின் கதவு

கழிவறையின் கதவு

வகை : சிறுகதை

    “அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் அம்மா ரஞ்சிதம். அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஷோபாவில் அமர்ந்தான் கதிர். அவனின் கையில் இருந்த ஈரம் அம்மா ரஞ்சிதத்தின் உள்ளங்கையை நனைத்தது. மகனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டாள். அவன் தலைமுடிக்குள் தனது ஐந்து விரல்களையும் சீப்பு போல செலுத்தி கோதினாள். “உனக்கு என்னடா பயம். நான் அப்பா எல்லோரும் இருக்கோமல்ல” என்றாள்.

“நான் சென்னைக்கு இன்டர்வியூக்குப் போய்த்தான் ஆகனுமா? இங்கயே.. உங்க கூடயே ஏதாவது வேல பாத்திட்டு இருந்திர்ரனே”

“இப்பத்தான் முதல்ல இன்டர்வியூக்குப் போற.. நீ பாஸ் பண்ணனும். வேலைக்குப் போகணும். அப்பறம் பாத்துக்கலாம். இப்படி ஒவ்வொரு இன்டர்வியூக்கா போயி பழக்கப்பட்டாதான் உனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இந்த உலகம் ரொம்ப பெருசுடா. நீ நாலு இடத்துக்குப் போனாதான் நாலு மக்கள பாக்க முடியும்”

போதும்மா.. என்று கையெடுத்துக் கும்பிட்டான். அவனின் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி “ஒழுங்கா இன்டர்வியூக்குப் போயி வேலைக்கு போற வழியப் பாரு” என்று சொல்லிவிட்டு சமயலறைக்குள் புகுந்தாள் ரஞ்சிதம்.  ரெங்கநாதன் ரஞ்சிதாவிற்கு ஒரே மகன் கதிர். இன்ஜினியரிங் முடித்து விட்டான். பிறந்ததிலிருந்து அம்மா அப்பாவை பிரிந்தது இல்லை. அதிலும் படிப்புக்கூட காலை சென்று மாலை வீடு திரும்பும்படியாக உள்ள கல்லூரிலேயே சேர்த்துப் படிக்கவைத்தார்கள். அம்மா அப்பாவுக்கு ரொம்ப செல்லம். மகனை நாலு சுவத்துக்குள்ளே அடைத்து வைத்திருப்பது ரெங்கநாதனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளையை எப்படியாவது வெளியுலகத்திற்குப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்று நினைத்தார். எப்படியாவது அவனை சென்னைக்கு வேலைக்கு அனுப்பி விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மகனின் சர்ட்டிபிகேட் அனைத்தும் பையில் எடுத்து வைத்து விட்டார். மூஞ்சை தொங்கப்போட்டு உட்காந்திருக்கும் மகனின் பக்கத்தில் வந்து உட்காந்தார். அன்போடு அவனின் தோளில் கையைப் போட்டார்.

“என்ன கதிர் ஒரு மாதிரியா இருக்க?” என்றார் ரெங்கநாதன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டான் கதிர். ஆனாலும் மகனை ரெங்கநாதன் விடுவதாக இல்லை. அவன் கேட்காமலே இன்டர்வியூவில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

“பஸ்சுல ஏறினவுடனே முன்னால பின்னால பக்கத்துல ஒருமுறை சுத்திப்பாரு. யாராவது திருடனுங்க மாதிரி இருக்காங்களான்னு. அப்படி உனக்கு டவுட்டா இருந்துச்சுன்னா டிரைவர் சீட்டுக்குப் நேர்ரெதிர் சீட்டுல போய் உட்காந்துக்கு. அதான் உனக்கு சேப். பஸ்சுக்குத் தேவையான பணத்தை மட்டும் சட்டை மேல் சோப்பில் எடுத்து வைச்சுக்கோ. அடிக்கடி பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ்ஸ எடுத்து எடுத்துப் பாக்காதே. பேக்கை மடிமீது வச்சு உன்னோட கையை பேக்குல இருக்குற தோள்ல மாட்டுற நாடாவுக்குள் உள்ளவிட்டு பிடிச்சுக்கோ. பஸ்சு கொஞ்ச தூரம் போன பின்னாடி உனக்கு சேப்புன்னு தெரிஞ்ச பிறகு தூங்கு. நீ தூங்கனாலும் உன்னோட உடம்பை யாராவது தொட்டாலோ, சத்தமிட்டாலோ உடனே எழுந்திருச்சிக்கோ. விடியற்காலை மூணு முப்பதுகெல்லாம் தாம்பரம் போயிடும். வாட்ச்ல மூணு மணிக்கு அலாரம் வச்சிட்டு சரியா எழுந்திக்கோ. அப்பவே ராஜன் மாமாவுக்கும் போன் செஞ்சு பஸ்ஸ்டாண்ட்க்கு வரச்சொல்லிரு. வீட்டுக்குப் போனவுடனே கொஞ்சநெரம் நல்லா தூங்கு. காலையில எழுந்திருச்சி தலைக்கு குளி.  சாண்டல் கலர் பேண்ட் எடுத்து வச்சிருக்கன். அத போட்டுக்கு.. அதுக்கு மேட்சா டார்க் புல்லெண்ட் சர்ட் எடுத்து அயன் பண்ணி வச்சிருக்கேன். அத டக்இன் பண்ணிக்கு”

“என்னங்க..என்னங்க..” சமையறையிலிருந்து ரெங்கநாதனை ரஞ்சிதம் அழைத்தாள். மனைவியின் பதிலுக்கு எழுந்து போனவன் என்ன நினைத்தானோ! மீண்டும் கதிரின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“சொல்ல மறந்துட்டன். குளிக்கிறதுக்கு முன்னாடி தலைக்கு கொஞ்சம் வௌக்கெண்ணெய வச்சுக்கோ. அளவா சாப்பிட்டுக்கோ. கொஞ்சமா தண்ணீர் குடி. தண்ணீர் அதிகமா குடிச்சின்னா ரெஸ்ட்ரூம் அடிக்கடி போய்ட்டே இருப்ப. அதுமட்டுமல்லாம பயத்துல கைக்கால் எல்லாம் வியர்க்கும்” என்று சொல்லிக்கொண்டே போனார் ரெங்கநாதன். அதற்குள் சமையல்கட்டிலிருந்த வெளியே வந்திருந்தாள் ரஞ்சிதம்.

“என்னங்க.. நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க. போதுங்க அவனை தனியா விடுங்க. அவனே ரொம்ப பயந்துபோய் இருக்கான். இதுல நீங்க வேற.” என்றாள். நிறைய அறிவுறுத்தலுக்குப் பின் கதிர் தயாராக இருந்தான்.

சேலம் பஸ் ஸ்டாண்டில்  கதிரை சென்னை பேருந்தில் டிரைவருக்கு எதிர் சீட்டில் உட்கார வைத்தார் ரெங்கநாதன். பஸ் எடுக்கும்வரை ஜன்னல் வழியாக மகனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். கதிரின் பக்கத்தில் வயதான முதியவர் ஒருவர் வந்து உட்காந்தார். வெள்ளை வேட்டி சட்டையும் நரைத்த முடியும் கண்ணாடியும் அவர் அணிந்திருந்தார். இருவரும் பரஸ்பரம் சிரித்துக்கொண்டார்கள். ஒருவழியாக பஸ் சேலத்தை தாண்டியது. கண்டக்டர் அனைத்து சீட்டுகளையும் கொடுத்து லைட்டை அணைத்து அவரது சீட்டில் போய் உட்காந்தார். பஸ் ஆத்தூரை தாண்டியதும் கதிர் கண்ணயர்ந்தான். பஸ்ஸில் மெல்லியதாக பழைய பாடல்கள் இசைத்துக்கொண்டிருந்தது. கதிரின் தூக்கத்தில் கூட நாளைய இண்டர்வியூ பற்றிய கனவே வந்தது. அவ்வவ்போது முழித்து ஜன்னலை திறந்து எந்த ஊர்? என்று பார்த்துக்கொண்டான். மீண்டும் உறங்க தயாரானான். இப்போது பஸ் கள்ளக்குறிச்சியைத் தாண்டியிருந்தது. அடிவயிறு ஏதோ வலிக்கின்ற மாதிரி உணர்வு. காலையில் சாப்பிட்ட சிக்கனும் மட்டன் வறுவலும் வேலையைக் காட்ட ஆரமித்திருந்தது.  சாப்பிட்ட அனைத்தும் கரைந்து வெளியே வர துடித்துக்கொண்டிருந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வீட்டில் செய்த சிக்கனையும் மட்டனையும் ஒருபிடி பிடித்தான். கதிருக்கு அப்போது தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமென்று. முடிந்தவரை தன்னை அடக்கிக்கொண்டான். ஜன்னலை திறந்து காற்றை முகத்தில் வாங்கிக்கொண்டான். ஏதோ இப்போது கொஞ்சம் வயிறு லேசானதாய் போன்று இருந்தது.

“தம்பி.. காத்து ரொம்ப அடிக்குது. ஜன்னலை கொஞ்சம் மூடுறியா” என்றார் பக்கத்தில் இருந்த பெரியவர்.  கதிருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் கதவை மூடினான். மீண்டும் வயிறு ராகம் பாட ஆரமித்தது. எப்போது வேண்டுமானாலும் வயிற்றில் உள்ள கழிவு வெளியேற முண்டியடித்துக்கொண்டிருந்தது. அவ்வவ்போது ஜன்னல் வழியாக அடுத்த பஸ்ஸ்டாப் எப்போது வருமென்று பார்த்துக்கொண்டான்.  பேருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸ்டாண்ட்டினுள் போகாமல் வெளியே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் பறக்கத்தொடங்கியது. “இங்க நிறுத்தியிருந்தா டிரைவர்கிட்ட சொல்லிட்டு பாத்ரூம் போய்ட்டு வந்திருக்கலாம். இப்படி ஆச்சே! கடவுளே என்ன காப்பாத்துப்பா! பஸ்சுல ஏதாவது ஆச்சுன்னா நாத்தம் அடிச்சு எல்லாரும் என்னயே பாப்பாங்களே! ரொம்ப அவமானமா போயிடுமே! ஐயோ இந்த வயிறு வேற கேட்க மாட்டங்குதே…” அடிவயிற்றில் கையை வைத்துக்கொண்டு மனதிற்குள்ளே ஏதோதோ நினைத்துக்கொண்டான்.

“தம்பி என்னாச்சுப்பா ஒருமாதிரியா இருக்க?” என்றார் அந்தப் பெரியவர்.

“ஒன்னுமில்ல” என்ற ஒற்றைப் பதிலோடு நிறுத்திக்கொண்டான் கதிர்.

“சென்னைக்கு எதுக்குப் போற? சொந்தகாரங்க வீட்டுக்கா இல்லை வேலைக்குப் போறியா?” என்றார்

“இன்டர்வியூக்குப் போறேன்”

“என்ன கம்பெனி? உள்நாட்டு கம்பெனியா வெளிநாட்டு கம்பெனியா? சம்பளம் எவ்வளவு தருவாங்க?”

“இன்டர்வியூக்குப் போனாதான் தெரியும். கம்பெனி பத்தி அவ்வளவா எனக்கு தெரியல”

“என்னாப்பா நீ! வேலைக்குப் போற கம்பெனி பத்தி முழுசும் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா? அப்பதான அவுங்க கேட்குற கேள்விக்குச் சரியா பதில் சொல்ல முடியும்”

பெரியவரின் கேள்விக்கு எந்தவொரு பதிலையும் தராமால் முகத்தை மட்டும் அவருக்கு காட்டினான். அவன் இருந்த அச்சமயத்தில் அம்முகம் சிரிப்பைக் காட்டியதோ இல்லை கோபத்தைக் காட்டியதோ தெரியவில்லை. ஆனால் பெரியவரே ஏதோ புரிந்தவர் போல கதிரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“தம்பி வாந்தி வரமாதிரி இருக்கா. என்கிட்ட ஒரு பிளாஸ்டிக் பை இருக்கு. உனக்கு தரேன். நீ வாந்தி எடுத்துட்டு வெளிய தூக்கிப் போட்டுடு” என்றார். அவனுக்குத்தானே தெரியும் என்ன பிரச்சனையென்று. எப்படி சொல்வது? என்று திருதிருவென்று முழித்தான் கதிர். அவனால் இப்பொழுது ஒன்றுமே செய்ய முடியவில்லை.  பின்பக்க இரண்டு தொடைகளையும் இறுக்கி மூச்சை இழுத்து கீழ் வயிற்றை மேல்வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான். கதிரால் அதிகநேரம் தம்கட்ட முடியவில்லை. முகமெல்லாம் வேர்த்து வியர்த்தது. வயிற்றில் உள்ள குடலே வெளியே வந்துவிடும் போலிருந்தது. நினைக்ககூடாததை எல்லாம்நினைத்தான். மூச்சை இழுத்து இழுத்து வயிற்றை தம்கட்டி மயக்கமே வருவதுபோல் ஆனது. இதற்குமேல் பொறுக்கமாட்டாதவனாய் என்ன ஆனாலும் பரவாயில்லை டிரைவரிடம் சொல்லி வண்டியை ஓரங்கட்டச் சொல்ல வேண்டியதுதான் என்று பெரியவரைத் தள்ளிக்கொண்டு டிரைவர் பக்கத்தில் போய் நின்றான் கதிர். இப்பொழுது பஸ் விழுப்புரம் பஸ்ஸாண்டிற்குள் சென்றது. கதிருக்கு அப்பாடா என்றிருந்தது. பெரியவரிடம், “ஐயா.. நான் வந்திடுறேன். கொஞ்சம் பாத்துக்குங்கோ” என்று சொல்லிவிட்டு பஸ் நின்றவுடன் அவசர அவசரமாக பாத்ரூமிற்குள் ஓடினான்.

அந்த பாத்ரூமில் அனைத்து கதவுகளும் மூடியிருக்க. கடைசில இருக்குற ஒரு ரூம் கதவு மட்டும் தொறந்திருந்தது. மூடியிருந்த கதவுக்கு நேரே ஒருஒரு ஆளாய் நின்றிருந்தார்கள். திறந்திறந்த கதவுக்கு நேராய் யாருமில்லை. வேர்த்து விருவிருத்துப் போன அவசரத்தில் நேராகப் போய் கடைசிக்கதவைத் திறந்தான் கதிர். உள்ளே ஒர் ஆள் உட்காந்திருந்தார்.

“கதவை மூடிட்டு போப்பா..” என்றார் உள்ளே இருந்தவர். கதவைச்சாத்தி விட்டு வெளியே காத்திருந்தான். ரொம்ப நேரம் வயிற்றுக்கழிவை அடக்கி வச்சிருந்ததனால அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. தலை சுற்றியது. நெஞ்சு படபடத்தது. அப்போது உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். டக்கென்று உள்ளே ஓடி கதவின் லாக்கைப் போட்டுவிட்டு காலை விரித்து அமர்ந்தான். வயிற்றில் உள்ள அனைத்தும் கீழே தள்ளியது. கொஞ்சகொஞ்சமாய் வந்து கொண்டே இருந்தது. உடபெல்லாம் வியர்வை. பனியன் சட்டையெல்லாம் நனைந்து போயிருந்தது. உடம்பு வளைந்து தலைகுனிந்து போயிருந்ததனால் லேசான மயக்கமும் மூச்சும் வாங்கியது. கொஞ்சநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். வயிற்றில் இருந்து முழுச்சுமையையும் இறக்கி வைத்தார்போன்று இருந்தது கதிருக்கு. சரியாக பேண்ட் ஜிப்பை மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முயன்றான். அப்பொழுதுதான் கதவின் லாக்கை கவனித்தான். கதவில் இருக்கக்கூடிய லாக்கில் கைப்பிடி உடைந்திருந்தது. கதிர், உள்ளே போன அவசரத்தில் வெளியே நீட்டிக்கொண்டிருந்த லாக்கை உள்ளே தள்ளியவுடன் அருக்காலில் உள்ள லாக்கில் புகுந்து கொண்டது. இப்போது அருக்காலில் உள்ள லாக் வெளியே வந்தால்தான் கதவை திறக்க முடியும். ஆனால் லாக்கில் உள்ள கைப்பிடி உடைந்து போயிருப்பதனால் அருக்காலில் உள்ள பிடியை வெளியே தள்ள முடியவில்லை.

அதுவரை ஏதோ கழிவறையில் இருக்கின்றோம் என்றுதான் நினைத்திருந்தவன் கதவு திறக்க முடியாமல் போனாதால் மனம் பதறியது. குப்பென்று முகமெல்லாம் வியர்த்தது.  சின்ன பெட்டிக்குள் அடைபட்டு கிடந்த பிணம்போல் ஆனான். மூன்றடி அளவே உள்ள அந்த அறையில் கைக்கால் நீட்டுவதற்கே ரொம்ப கஷ்டமாயிருந்தது. தூண்டில் மாட்டிய மீனாய் அகப்பட்டுக்கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. லாக்கை வெளியே தள்ள முயற்சியில் தோற்றுப்போனான்.  கதவை எட்டி உதைத்தான். கோபம் தலைக்கு ஏறியது. நிதானத்தை இழந்தான். கதவுக்குப் பின்னால் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

“அண்ணா நான் உள்ள மாட்டிக்கிட்டேன். கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா… அண்ணா..” பலம் வந்த மட்டும் கத்தினான். மூச்சை அடக்கி வயிற்றுக்கழிவை தேக்கி வைத்திருந்ததாலும் கதவு அடைப்பட்டு கிடக்கின்ற பயத்தினாலும் அப்படியே கழிவறையில் மயங்கி விழுந்தான். அதற்குள் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் கதிரை தேடியபடி உள்ளே நுழைந்திருந்தார். கதிரின் சத்தம் கேட்டு அந்த கடைசி கழிவறையின் கதவுப்பக்கம் சென்றார்.

“தம்பி.. தம்பி.. என்னாச்சு வெளிய வா..” என்றார் பெரியவர். உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

“கதவு லாக் ஆகிடுச்சு. என்னை யாராவது காப்பாத்துங்க.. அண்ணா…ன்னு உள்ளயிருந்து சத்தம் மட்டும் கேட்டுச்சு ஐயா” என்று பகத்தில் இருந்த ஒருவன் சொன்னான். பெரியவருக்கு ஓரளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய ஆரமித்திருந்தது. மேலும் அவர் காலம் தாமதிக்கவில்லை. “தம்பி என்ன பண்ற.. கதவ தொற… தம்பி” கதவை வேகமாகத் தட்டிக்கொண்டே இருந்தார்.

“ஹலோ.. என்ன உங்கப்பன் வூட்டு கதவா.. இப்படி தட்டிக்கிட்டே இருக்க. ஒடஞ்ச நீயா காசு தருவ. நீ மாட்டுக்கும் எனக்கென்னான்னு போயிடுவ. நான்தான தண்டம் கட்டணும்” என்று சொல்லிக்கொண்டே வெளியே உட்காந்திருந்த கழிவறையின் காண்டிராக்டர் உள்ளே நுழைந்தார்.

“உள்ள ஒரு பையன் மாட்டிக்கிட்டான். கதவு லாக்காகிடுச்சு” என்று பதற்றத்துடனே சொன்னார் பெரியவர்.

“அதுக்கு நா என்ன பன்றது. அவனெல்லாம் செத்துரல்லாம் மாட்டான்” என்று எகத்தாளமாய் பதில் சொன்னார்.

“அந்த பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா கொலை கேசுல உள்ள போயிடுவ பாத்துக்க” என்றது அங்கிருந்த ஒரு குரல். அவ்வாறு கேட்டதும் கண்டிப்பாகக் காண்டிராக்டர் ஆடித்தான் போய்விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஓராமாய் போய் நின்று கொண்டார்.

“கதவ ஒடைச்சிடலாம். உள்ள இருக்கிற பையன் எந்த நிலமையில இருக்கான்னு தெரியல” என்றது இன்னொரு குரல். பேச்சு சத்தமும் கதவை தட்டுகிற சத்தமும் லேசாய் காதில் விழுந்தது அவனுக்கு கேட்டது. கண்ணை முழித்து எழுந்திருக்க முயற்சி செய்கிறான். ஆனால் அவனால் கொஞ்சம் கூட அசையக்கூட முடியவில்லை. அவனுடைய முயற்சி மேலும்மேலும் தோல்வியே சந்தித்தான்.

அம்மாவை நினைத்தான். கொஞ்ச நேரம் மௌனமாய் எதையும் சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்தினான். கொஞ்சகொஞ்சமாய் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டான். டக்கென்று ஒரே மூச்சாய் எழுந்தான். வாளியில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்துக்கொண்டான்.

“தம்பி.. தம்பி… என்னாச்சு கதவ தொறப்பா” என்று வெளியே கூப்பிடும் சத்தம் கேட்டது கதிருக்கு.

கதவின் லாக்கையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தனது பாக்கெட்டில் இருந்த பேனாவின் மூடியை கழட்டி விட்டு அருக்காலில் உள்ள லாக் ஓட்டையின் வழியாக பேனாவின் முனையை அழுத்தினான். லாக்கானது அருக்காலை விட்டு கதவுக்குச் சென்றது. கழிவறையின் கதவும் திறந்தது. கதவுக்கு முன்னால் பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே ஒரு கூட்டமே நின்றது. பெரியவரும் கதிரும் வேகமாக பஸ்சுக்கு ஓடினார்கள். கதிர் போகும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டான். பஸ் ஸ்டார்ட் செய்து தயாராக இருந்தது. கண்டக்டர் வெளியே இருந்தபடி எங்களை முறைத்துக் கொண்டே விசிலை வேகமாக ஊதினார். பஸ் நகர்ந்தது. ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டேன். பெரியவர் என்னைப் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. தண்ணீரை தொண்டைக் குழியில் இறக்கினேன். அந்தத் தண்ணீர் என் அடிவயிற்றை நிரப்பியது. குளிர்ந்த காற்று. ஜில்லென்ற தண்ணீர். ஏதோ செத்துப்பிழைத்து வந்தது போல் இருந்தது கதிருக்கு. பஸ் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

சிறுகதையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்

mail : iniyavaikatral@gmail.com 

மதுரைக்காஞ்சியில் நகரம்

மதுரைக்காஞ்சியில் நகரம்

புற இலக்கியம் கொடை, வீரம், கையறுநிலை, சுட்டி ஒருவர் பெயர் சொன்ன காதல், இனக்குழுத்தலைவர், குறுநில மன்னர், வேந்தர் உள்ளிட்ட பலவற்றையும் செல்கிறது. சீறூர்த் தலைவர், குறுநில மன்னர் அழிவின் மேல் வேந்தர்களின் எழுச்சியும் நகரங்களும் எழுகின்றன. மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் நகரங்களை முன்னிறுத்துபவை.

நகரம்

            வேந்தர்களின் அரண்மனைகள் நகரங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன. நகரம் பல்வேறுபட்ட அமைச்சுகள், அறங்கூறவையம், படைகள், சமயக் குழுக்களால் அதிகாரமுடையதாக்கப்படுகிறது. தொழில் வினைஞர், வணிகர், கலைவினைஞர், பாடுதொழில் புரிவோர், புலவர் இரண்டாம் நிலையில் அமைகின்றனர். இனக்குழுக்கள், குறுநில மன்னர்கள் நானில எளியோரின் உழைப்பையும் உணவையும் செழும் நகரம் உறிஞ்சி எடுக்கிறது. இவ்வாறான நகரத்தையும் அதிகாரக் கட்டமைப்பையும், மதுரைக்காஞ்சி காட்டுகிறது.

சீறூர்த் தலைவனது முற்றமும் வேந்தனது அரண்மனையும்

            சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் பெருமை மட்டும் சங்க இலக்கியத்தில் விளக்கப்படவில்லை. எளிய குடிகள், இனக்குழுக்கள், சீறூர்த்தலைவர்களின் வாழ்வும் சித்திரிக்கப்பட்டுள்ளது. “சீறூர்த் தலைவனது முற்றம் கூளம் நிறைந்து துடைக்காதது. முஞ்ஞைக் கீரையும் முசுண்டைக் கொடியும் பம்பி வளர்ந்தது. நிழல் தருவதால் பந்தல் போடாமலேயே பலரும் தூங்கக்கூடியது. வேந்தனது முற்றம் காவல் நிறைந்த பெரிய அரண்மனை. மலைக் கூட்டத்தைக் போன்ற மாடமுடைய வீடு. சோழனது அரண்மனை பிறைச்சந்திரன் போல் சுண்ணாம்பால் செய்யப்பட்ட மாடம். விண்ணைத் தொடும் சுட்ட செங்கல்லால் ஓங்கி வளர்ந்த நீண்ட பெரிய அரண்மனை ஆகும்”. (கா.சுப்பிரமணியன்,1982,58-59).

அரண்மனை உருவாக்கம்

            பேரரசுகள் சிற்றரசுகளை அழித்து மேலெழுவன. பண்ட உற்பத்தியையும் வாணிபத்தையும் பேணுபவை. எளிய குடிகளின் உபரிகளை விரும்புபவை. அதிகாரத்தின் பொருட்டு மேல் கீழ்ப் பிரிவினையை மேற்கொள்பவை. பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பொருத்துபவை. வேந்தன் அரண்மனை என்ற பெருவெளியை உருவாக்குவதற்கான செல்வத்தைக் குடிகளிடமிருந்து பெறுகிறான். கொள்ளையிடப்பட்ட செல்வமும் உதவும்.

அரண்மனை அமைப்பு

            பேரரசைக் கொண்டு அதிகாரம் செலுத்தும் மன்னன் தன் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்கிறான். கோட்டை நெடுஞ்சுவர் முன் அகழி அமைகிறது. வளமுடைய நாட்டினை இழந்து பழம்பகையோடு போர் செய்ய வந்த மன்னர்கள் அகழிக்கே ஆற்றாது தோற்றோடுகின்றனர். ஆழ்ந்த நீர்நிலையைக் கொண்ட அகழியினை அரண்மனை கொண்டுள்ளது. மண்ணுற வாழ்ந்த மணிநீர்க்கிடங்கு (மதுரைக்காஞ்சி-351) அது. அவ்வரண்மனை வானுற ஓங்கிய பல கற்படைகளையும் மதிலையும் பழையதாகிய வலிநிலை பெற்ற தெய்வத்தையுடைய நெடிய நிலையினையும் நெய்யொழுகிக் கருகிய திண்ணிய கதவினையும் முகில் உலாவும் மலை போன்றுயர்ந்த மாடங்களையும் உடையது. வையை யாறு போன்று இடையறாது மக்களும் மாவும் வழங்காநின்ற வாயிலை உடையது. (மதுரைக்.352-356).

            புதுவருவாயும், கொழுவிய தசையும், உண்டமையாத சோறும், பருகி அமையாத கள்ளும், தின்று தின்று அமையாத தின்பண்டங்களும், நிலம் பொறுக்கவியலாப் பொருட்குவையும், இன்பந்தரும், அழகிய அவ்வரண்மனையிடத்தே ஆடல் மகளிர் இருந்தனர் (210-219).

புறநகர்ப்பகுதி

            பொருளாதாரத்தாலும் சமயத்தாலும் மேம்பட்ட குடிகள் அரசனை அண்டி வாழ்ந்தனர். மீன்சீவும் பாண்சேரி, முல்லையம்புறவு, இலைவேய் குடிசைகள், நனந்தலைத் தேயப்புரவிகளுடைய துறைமுகம், துணங்கையும் குரவையும் ஆடும் மகளிருடைய மணங்கமழ்சேரி, பெரும்பாணர் குடியிருப்புகள் போன்றவை வெண்மணல் திரள், கா, பொழில்சூழ் வையையாற்றை ஒட்டி அமைகின்றன. இலங்குவளை இருசேரிக் கட்குடி கொண்ட குடிப்பாக்கமும் உள்ளது (136-137) அதன் பின்னரே அகழி தொடங்குகிறது.

நகரக் குடியிருப்புகள்

            மதுரைக்காஞ்சியில் காட்டப்படும் நகரம் எளிய மக்கள் வாழும் ஊரிலிருந்து வேறுபட்டது. திருத்தமான ஒழுங்கில் அமைவது. யாறு கிடந்தாற்போன்ற அகல்நெடுந் தெருக்களில் பல்வேறு குழாத்து மக்கள் பேசு மொழிகளின் ஆரவாரம் கேட்கிறது. ஓவு கண்டன்ன இருபெரு அங்காடித் தொருக்களில் கொடிகள் பறக்கின்றன. கட்டுத்தறியைப் பெயர்க்கும் யானை, பறக்கும் புரவிகள், கள்ளுண்மறவர் படைகள் நிலை கொண்டுள்ளன. குளிர் மாட நிழலில் தீம் உணவு, சுண்ணம் – பசும்பாக்கு – வெற்றிலை விற்போர் உளர்.

            உயர்ந்த சிறகுகளை உடைய சீரிய தெருவில் இருக்கும் பொய்யறியா வாய்மொழியால் புகழ்நிறைந்த மாந்தர்கள் மதுரையில் (18-19) வாழ்கின்றனர். சிறகு என்பதற்குத் தெருவில் இருபுறத்துமுள்ள வீடுகளின் வரிசை என்று நச்சினார்க்கினியர் பொருள் உரைக்கிறார்.

            நகர மக்கள் பலவின்சுளை, தேமாவின் கனிகள், இலைக்கறிகள், கற்கண்டு, பெரிய இறைச்சி கலந்த சோறு, நிலத்தின் கீழ் வீழ் கிழங்கு, பாற்சோறு உண்கின்றனர். (527-535). வளப்பம் பொருந்திய பண்டங்களோடு தேவருலகம் போலப் பெரும் பெயர் பெற்ற மதுரை பொலிவுறுகிறது (687-699).          

பெருஞ்செல்வர் இல்லம்

            ஊண் கவலையற்ற செல்வப் பெருங்குடியினர் நகரில் வாழ்கின்றனர். தொய்யில் எழுதப்பட்ட சுணங்கு பிதிர்ந்த இளமுலைப் பெண்டிர் தம்மைக் கோலஞ் செய்து கொண்டு மெத்தென நடந்து தங்காதற் கொழுநரைக் கைதட்டி அழைத்துக் காமநுகர்தலையன்றி வேறொன்றையும் கல்லாத அவ்விளைஞரோடு மகிழ்ந்து புணரும்படி பல்வேறு செப்புகளில் தின்பண்டங்களையும் மலர்களையும் மனைகள் தோறும் ஏந்தி நிற்கின்றனர் (395-406). பெருநிதிக் கிழவரின் பெண்டிர் பூந்தொழில் செய் வளையணிந்து தெருவெல்லாம் மணம் கமழ ஒழுங்குபட்ட மாடத்தே நிலாமுற்றத்தின்கண் நின்றனர்.

அறங்கூறவையத்தாரும் பிறரும்

            குடிகளைக் காக்கும் இறைவன் வேந்தன். வேந்தனின் அதிகாரத்தைக் குலைக்கும் செயல்கள் அறமற்றவை. அறமற்றவை தண்டிக்கப்பட வேண்டும். துலாக்கோலை ஒத்த நடுவுநிலை உடைய அறங்கூறவையத்தார் ஒரு தெருவில் வாழ்கின்றனர். காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்கள் வாழும் தெரு, அறம் பிறழா வணிகர் உறையும் தெரு, ஒழுக்கத்தால் மேலாகிய நாற்பெருங்குழு வாழும் தெருக்கள் உள்ளன. ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு மக்கள் திண்ட நால்வேறு தெருக்கள் உள்ளன என்ற குறிப்புகளைக் காண இயலுகிறது. சத்திரியர், வணிகர், சூத்திரர் என்ற வருணப் பிரிவினையை நினைவூட்டும் ‘நால்வேறு தெரு’ என்ற தொடர் அமைகிறது. ஆயின் தீண்டாமை இல்லை. காலொடு கால் பொருந்துமாறு மக்கள் திரண்டுள்ளனர்.

சமயம்சார் குடிகள்

            வேந்தன் தன் அதிகாரத்தை மேம்படுத்த சமய மேலோரை அரவணைக்கிறான். மதுரைக்காஞ்சியின் இறுதியில் ‘வளப்பமுடைய மதுரையிடத்தே பல யாகங்களைச் செய்த உன் முன்னோராகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று வேள்வி செய்வாயாக’ (758-765) என்று பாடப்படுகிறான். வைதீகச் சார்புடைய வேள்வியை மேற்கொள்ள உரிமையுடன் புலவர் கேட்கிறார். மழுவான் நெடியோனை முதல்வனாக மாயோன் முருகன் போன்றோரைக் கொண்ட கோயில், புறங்காக்கும் பௌத்தப்பள்ளி, வேதம் பாடும் குன்று குயின்றன்ன அந்தணர்பள்ளி, செம்பாற் செய்தாலொத்த சுவர்களையுடைய அமண் பள்ளி ஆகியவை உள்ளன.

வரைவின் மகளிர் மனை

            நிலவுடைமையின் தோற்றத்தோடு பரத்தமையும் தோன்றுகிறது. ஆதிக்கம் செலுத்தும் ஆண்மையப் பாலியல் உணர்வுக்குரியவர்களாக வரைவின் மகளிர் அமைகின்றனர். பாதிப்புறும் அம்மகளிரே குற்றச்சாட்டுக்கும் ஆளாகின்றனர். ‘வெண்மலர் கொண்டையிற் முடித்துத் தொடிகள் விளங்கும்படி கைகளை வீசி நடந்து தெருவெல்லாம் மணம் கமழ மிகுநலம் எய்துகின்றனர்’. வரைவின் மகளிர் தம்மைக் கண்டோரை வருத்தி அவர் பொருளைக் கவர்கின்ற தன்மையுடையோர் யாழுடன் பொருந்திய மத்தள இசையில் மகிழ்ந்து கூத்தாடி – குவிந்த மணலில் ஆடி மணம் நாறுகின்ற தம்மில்லங்களில் விளையாடுகின்றனர். மதுரைக்காஞ்சியில் நானிலப்பகுதியில் பரத்தையர்களைக் காண இயலுவதில்லை. கொழுங்குடிச் செல்வர் வாழும் நகரத்தில்தான் அவர்கள் வாழ்கின்றனர்.

கண்படை கொண்ட கடிநகர் மதுரை

            நகரத்தில் இரவுகள் தூங்காது விழித்திருக்கின்றன. வணிகம் அல்லும் பகலும் நிகழ்கிறது. ‘வளிதரு வங்கத்தில் வந்த மரக்கலங்களிற் கொணர்ந்த பல்வேறு பண்டங்கள் இறங்குகின்ற பட்டினத்தில் ஒல்லென்ற ஓசை முழங்குகிறது (536-544). நெடிய கடையை அடைத்து மாதர் துயில்கின்றனர். பாகும் பருப்பும் கலந்த மாவினை விற்கும் வணிகர் தூங்கி விழுகின்றனர். கடல் போன்ற பாயலில் துயில் கொள்ளும் ஏனைய மாந்தர் இனிதே உறங்க நள்ளிரவில் துயிலாக் கண்ணையுடைய வலிய புலியைப்போல அஞ்சாத கோட்பாடுடைய ஊர்க்காப்பாளர் களவு நூலறிந்தோரால் புகழும் ஆண்மையுடையோராய் மழை நீரோடும் நள்ளிருளில் தெருக்களில் உலவுகின்றனர். தெய்வங்கள் செயலற்ற இருட்போதிலும் அஞ்சுதல் இன்றிச் செல்கின்றனர் மறவர்.

நகரில் குவியும் உபரிச் செல்வம்

            செழும் நகர அரண்மனையில் வாழும் மன்னனுக்கு அணுக்கமாக அறங்கூறும் அவையத்தார், காவிதி மாக்களாகிய அமைச்சர், பெருங்குடிச் செல்வர், படையணியினர், வணிகர் உறைகின்றனர். வேளாண் உற்பத்தியிலோ தொழிலிலோ ஈடுபடா இவர்கள் வறுமை வாய்ப்படவில்லை. புல்லும் வளரா இவ்வீதிகளுக்கு ஐவகை நிலங்களிலிருந்து கூலமும் நெல்லும் பிறவும் வந்தடைகின்றன.

            யானைகளையும் மறைக்கும் ஓங்கிய கதிர்களையுடைய கழனிகளில் (247) முற்றிய நெல்லை அறுக்கும் ஓசை மருத நிலத்தில் கேட்கிறது. கற்றரையில் வரகின் கரிய கதிர்கள், தோரை நெல், நெடுங்கால் ஐயவி, இஞ்சி, மஞ்சள், மிளகு குவிக்கப்பட்டுள்ளன (286-290), நெய்தல் நில ஒளியுடைய முத்துக்கள், தீம்புளி, வெள்ளுப்பு, உணங்கல் பிறர் நுகர்வுக்காகக் காத்திருக்கின்றன. உழைப்பினால் செல்வம் சேர்வதில்லை. உழைப்பவர் உயிர்வாழ மட்டுமே இயலும். உழைப்பவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் செழுங்குடி வசம் வருகின்றன. போரினாலும் கொள்ளையினாலும் அச்சுறுத்தலினாலும் அரண்மனை செல்வத்தைப் பெறும்.

            மதுரைக்காஞ்சியில் பாண்டியனின் போர்த்திறம் உற்சாகத்துடன் பாடப்படுகிறது. பகைவர் நிலத்தில் காவலுடைய பொழில்களை வெட்டி அழித்து வளங்குன்றா மருதநில வயல்களை நெருப்புண்ணச் செய்து நாடெல்லாம் காடாகவும் பசுத்திரள் தங்கின இடமெல்லாம் புலி முதலியன தங்கவும் ஊரெல்லாம் பாழாகவும் சான்றோர் அம்பலங்களில் பேய் மகளிர் குடியேறும்படியாகவும் வேந்தர் செயல்புரிகின்றனர். மாளிகைக் குதிர்கள், பகைவர் நாடு கெட்டுப் பாழாகின. பாண்டியனின் நன்னெறியைக் கேளாக் குடிகளின் (152-176) வாழ்வு அழிக்கப்பட்ட கொடுஞ்சித்திரத்தை மதுரைக்காஞ்சி தருகிறது.

மன்னர்களின் அழிவு

            குட்ட நாட்டு மன்னன், முதுவெள்ளிமலை வாழும் மன்னன் ஆகியோரைப் பாண்டிய நெடுஞ்செழியன் வெல்கிறான். தலையாலங்கானத்துப் போரில் இருபெருவேந்தரோடு வேளிர் சாய்கின்றனர். அழும்பில், மோகூர், சாலியூர் போன்ற இடங்களில் போர்த்தொழில் செய்கிறான் பாண்டியன்.

            கொழுவிய இறைச்சியையுடைய கொழுப்புடைய சோற்றினை உண்பாரும், புலால் கமழும் விற்படையுடையாரும் ஆரவாரத்தையுடைய சேரிகளையுடையாரும், தென்றிசைக் குறுநில மன்னருமாகிய பரதவர் என்ற யானைகளை அச்சுறுத்தி அடிமைப்படுத்துகிறான் (139-144). அவன் உழவு, வாணிகம் செய்யும் குடிகளும் நான்கு நிலங்களில் வாழ்வோரும் பழைமை கூறி ஏவலைக் கேட்கும்படி செய்பவன் (119-124). கள்ளுண்போர் உறையும் கொற்கையைக் கைக்கொள்ளுகிறான்.

துறைமுகப்பட்டினத்தை வெல்லுதல்

            பொருட்கள் வரவும் போகவும் துறைமுக வாணிபத்தை மேம்படுத்துகிறான். பொன்மலி விழுப்பண்டம் ஏற்றிக் கொணர்ந்து நன்றாக இறக்குதலைச் செய்யும் முகில் சூழ்ந்த மலைபோல் தோன்றும் பெரிய மரக்கலங்கள் நிற்கும் துறைமுகத்தோடு ஆழ்ந்த கடலாகிய அகழியினையும் கொண்ட நெல்லூரை வெல்கிறான் (75-88). கடலற்ற மதுரை மன்னனின் எல்லை கடற்கரைப்பட்டினம் வரை விரிகிறது.

            தலைநகரம் கொண்ட பேரரசுகள் செல்வத்தில் திளைப்பதற்கான வழிகளும் மாற்றாரை அச்சுறுத்தும் முறைகளும் மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளன. எளிய குடிகளின் குருதிப் பிசுபிசுப்பில் நகரம் பொலிகிறது. அத்தகைய முட்டாச் சிறப்பின் பட்டினத்தைப் புலவர் போற்றியுரைக்கின்றனர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.காசிமாரியப்பன்

தமிழ் இணைப் பேராசிரியர்,

பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி)

திருச்சிராப்பள்ளி – 620 023.

மாற்றி யோசியுங்கள்

மாற்றி-யோசியுங்கள்

    தன்னம்பிக்கை கட்டுரை – 10    

         உங்களின் மனதை அழகான பூந்தோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான சிந்தனைகளை மட்டும் உள்ளே விடுங்கள். மனதில் எந்தவித இறுக்கமும் இருக்கக்கூடாது. பாறையின் உள்ளே நீர் நுழையாது. மன இறுக்கத்தில் மேலோங்கிய சிந்தனைகள் நுழைவதில்லை.

          உங்களின் மனநிலையை பொறுத்தே பேச்சுகள் செயல்பாடுகள் வெளிப்படும். நீங்கள் முன்னேற நினைத்தால், உங்கள் மனம் பெருந்தன்மையால் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். மற்றவரின் நற்சிந்தனைகளையும் ஏற்க கூடியதாக இருக்க வேண்டும். சில வெறுப்புகள் கோபங்கள் மற்றவரால் ஏற்பட்ட கசப்புகளைக் கொண்டு உங்களுக்கு நீங்களே மனக்கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டால் உங்களால் எதையும் சாதிக்க இயலாது. அந்த கட்டுப்பாடுகள் வெளியே செல்ல விடாது.

மனம் குப்பைத்தொட்டி அல்ல

     மனதில் தேவையற்ற கீழான எண்ணங்கள் மற்றவரின் விமர்சனம் என்ற குப்பைகள் எல்லாவற்றையும் மனதில் நிரப்ப வேண்டாம். ஆரோக்கியமாக வைத்திருங்கள். குப்பைத் தொட்டியாக மாற்றிவிடாதீர்கள். மனதில் என்ன தேவையோ அவை மட்டுமே இருக்க வேண்டும். வேண்டாதவற்றை வைத்திருக்கக் கூடாது. வேண்டாதவை மனதில் இருந்தால், தேவையானவை தொலையக்கூடும். சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை மனதை ஒரே மாதிரியாக வைத்திருக்க வேண்டாம். மாற்றங்களே மாறாதவை.

        உலகின் மாற்றங்களை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அதேநேரத்தில் சிந்தனையிலும் மன எண்ணங்களிலும், மாற்றம் நடைபெற வேண்டும். ஒரு தாய்க்குப் பிறந்த இரட்டை குழந்தைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் வேறானவை. உலகில் பலஆயிரம் கோடிபேர் வாழ்ந்திருப்பார்கள், இப்போதும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருடைய கைரேகையும் வேறாகவே உள்ளது. எனவே அவர் இவ்வாறு நடக்கக்கூடாது. இவர் அப்படி பேசக்கூடாது என்றெல்லாம் ஒரு அரணை எழுப்ப வேண்டாம். சிறிது சிந்தனையை மாற்றுங்கள்.

தடைக்கல்லே படிக்கல்

          நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது தொடக்கத்திலேயே தடை வந்துவிட்டால் உங்களுக்கு பயம் வந்துவிடும். உதாரணமாக, ஒரு கல்லூரியில் சேர விண்ணப்பம் பூர்த்தி செய்ய அமர்ந்து கொண்டு பேனாவை திறக்கிறீர்கள் அதிலிருந்து அதிகப்படியான மை விண்ணப்பத்தில் ஊற்றி விடுகிறது. உடனே என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று அச்சம் கொள்வீர்கள். சிலர் விண்ணப்பிக்காமல் விட்டு விடுவார். சிலர் விண்ணப்பித்தாலும் படிக்கும் காலத்தில் ஏதேனும் சிறிய விபத்து ஏற்பட்டாலும் இதற்குதான் ஆரம்பத்தில் மை கொட்டியது என்று எதற்கு எதையோ காரணம் கூறிக்கொண்டு சதா எதிர் மறையான எண்ணங்களை மனம் முழுவதும் நிரப்பி வைத்துக்கொள்வர். அந்தப் படிப்பு முடியும்வரை எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு அச்சத்துடனே நடமாடிக்கொண்டு இருப்பார்கள்.

சிந்தனைகளை மாற்றுங்கள்

       எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர். அவருக்கு எதைத் தொடங்கினாலும் பச்சை கொடி தெரியவே தெரியாது. தடைகள்தான் வரும். ஒரு ஊருக்கு புறப்பட்டு சென்றால் பேருந்து வராது. ஒரு செயலைச் செய்ய ஒருவரை நாடிச்சென்றால் அந்தநபர் முன்னரே வெளியில் சென்றிருப்பார். வருவதற்கு சிலநாட்கள் ஆகும் என்பார்கள். படிக்க வேண்டி தகவலை திரட்ட போன் செய்தால் “சுவிச் ஆஃப் என்று வரும். ஒரு வண்டி வாங்க கம்பெனிக்கு சென்று கையெழுத்து இடும் போது “லைட் ஆஃப்” ஆகிவிடும். ஒரு நேர்காணலுக்குப் பள்ளிக்கு புறப்படும் போது வண்டி ஸ்டார்ட் ஆகாது. இவ்வாறெல்லாம் நடந்தாலும் அவர் சலைக்கமாட்டார் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார். “அந்த வேலை எனக்குத்தான் என்பது முடிவாகி விட்டது. நான் முயற்சிப்பதே மீதம் உள்ளது” என்பார். அவர் கூறியவாறே நடக்கும். ஒரு நாள் அவரிடமே கேட்டேன்” இவ்வாறு எதற்கெடுத்தாலும் உங்களுக்கு தடங்கள் வருகிறதே! உங்கள் மனம் பின்வாங்க வில்லையா? மனதிற்கு சோர்வு வரவில்லையா? என்று. அதற்கு அவர் சிரித்துவிட்டு கூறினார். “செயலைச் செய்யத்தொடங்கும் போது எவற்றுக்கெல்லாம் தடங்கல்கள் வருகிறதோ அவையெல்லாம் எனக்கானவை என்பதை நான் உணரும்வரை அச்சமாகவே இருந்தது. அதன் பின்னர் அந்தத் தடங்கல்கள்தான் எனக்கு கிடைக்கும் வெற்றியை முன்னரே அறிவிக்கின்றன என்ற உண்மையை நான் தெரிந்து கொண்டேன். கிடைக்கும் தடைகளே எனது படிக்கல் என்று புரிந்தவுடன் மகிழ்ந்தேன்.ஆ னால் தடையில்லாமல் ஒரு செயலை முடித்துவிட்டேன் என்றால் அது என்னிடம் நிலைக்காது. இது என் அனுபவம்” என்றார். கவனியுங்கள் தடைகள் வந்தால் செயல்களை நிறுத்திவிட அவர் நினைக்கவில்லை. மாறாக எனக்கு தடைகள் வரவேண்டும். அவற்றை மீறி வெற்றியடைய வேண்டும் என்று மாற்றி யோசித்தார்.

எதார்த்தம் ஏற்கலாம்

         வண்டியில் செல்கிறீர்கள் விழுந்து விட்டால் எப்படி என்று நினைப்பதைவிட விழுந்தால் என்ன ஆகும்? காயம் படும். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சரிசெய்து கொள்ளலாம். அதிக பட்சமாக உயிர் போகும். உயிர் என்பது எப்போது செல்லவேண்டுமோ அது அப்போது தான் செல்லும். இதனை மாற்ற யாராலும் முடியாது. இந்த எதார்த்தத்தை மனத்தில் ஏற்றுக்கொண்டால் அச்சப்பட வேண்டியதில்லை. மனிதபிறவி மீண்டும் கிடைக்குமோ! இல்லையோ தெரியாது. இப்போது உள்ள இந்த வாழ்க்கையைத் தைரியமாக பெருந்தன்மையாக உயர்ந்த செயல்களால் மற்றவர்க்கு நன்மை செய்து வாழலாம். அதை அச்சப்பட்டு துயரப்பட்டு மற்றவரை ஏமாற்றி கீழே தள்ளி உரிமைகளைப் பறித்து ஏன் இந்த குறுகிய வாழ்க்கை. எனவே மாற்றி யோசியுங்கள். நடைமுறையில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சிந்தனையை மாற்றுங்கள்.

முடியும் வரை முயலுங்கள்

     நாட்டையே தன் இராகத்தால் குரல் வளத்தால் கட்டிப்போடும் பாடகர் இசைஞானி இளையராஜாவை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர் முதன்முதலில் ஒரு பாடலை பாடுவதற்காக வந்துநின்று தொடங்கும் போது மின்சாரம் நின்று போனது. மீண்டும் அவர் விடாமல் பாடியே ஆகவேண்டும் என்று பாடி முடித்து பதிவு செய்த்தைப் போட்டுப் பார்க்கலாம் என்று டேப்ரெக்கார்டரில் போட்டு ஆன் செய்தால் அதில் பாடல் கேட்கவே இல்லை. பாடல் பதிவாகவில்லை. சினிமாத்துறை என்பது மிகவும் பரந்தது. அதில் வாய்ப்பு கிடைத்தது குதிரைக் கொம்பு. அவ்வாறு வாய்ப்பு கிடைத்து பாடல் பதிவாகவில்லை என்றால் மனம் எவ்வாறு இருக்கும்? யோசியுங்கள். ஆனால் அவர் தன்மனதில் எந்தவிதமான எதிர் மறையான எண்ணத்தையும் நினைக்காமல் மீண்டும் பாடினார் இசையமைத்தார். இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அறியும்படி உயர்ந்துள்ளார். இதன் காரணம் அவரின் செயலை முடியும்வரை முயன்றார்.

மற்றவரை மாற்ற நீங்கள் மாறுங்கள்

      சிலர் எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்கள். அது அவர்களுடைய இயல்பு. குறை காண்பது ஒரு மனநோய் என்று மனவியலாளர் கூறுகின்றனர். குறை காண்பவரையும் எந்த மனநிலையில் கூறுகிறார்கள. அவர்களின் தேவை என்ன? என்று மெய்யான பொருளைக் கண்டறியுங்கள். உங்களின் மனதை இதமாக மாற்றிக்கொண்டு அவர்களைப் பற்றி சிந்தனை செய்வது நல்லது. மனம் என்பது எல்லா திசைகளிலும் பறக்கும் குதிரை போன்றது. அதனை கட்டுக்குள் வைத்து வசந்தகாலத்தின் பசுமை போன்று சீராக்கிக் கொண்டு அதன்பின்னர் மற்றவர்க்கு நற்சிந்தனைகளை அளியுங்கள். மற்றவர்கள் நீங்கள் நினைப்பது போல் மாற வேண்டும் என்று எண்ணுவதைவிட நாமே நம்மை மாற்ற முடியவில்லை. அவ்வாறு இருக்க மற்றவர்கள் எவ்வாறு மாறுவார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

       மாற்றம் வேண்டுமென்றால் உங்களிடம் மாற்றத்தை நிகழ்த்துங்கள். தீய எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு பிடிவாதமாக விடாமல் இருந்தால் உங்களுக்குள்ளே எந்த மாற்றமும் நிகழாது. ஆதலால் முதலில் நீங்கள் மாறுங்கள்.

பகையை மாற்றுங்கள்

      இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிர்களுக்கும் இங்குள்ள உணவைப் பெறும் உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் உரிமை.

       யாரிடமும் பகைபாராட்ட வேண்டாம். மற்றவர் மீது உங்களுக்கு பகை உணர்வு இருந்தால் மனதில் பழிவாங்கும் எண்ணங்களே உருவாகும். வெளியிடப்படாத கோபம் வஞ்சமாக மாறும். ஆதனால் மற்றவரைப் பகைவராக என்ன வேண்டாம். ஒருவர்க்கு நண்பர் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். நட்பால் ஒருவரின் குணத்தை கணிக்கலாம். பகை என்பது சமமான நபரிடம் மட்டுமே உருவாகும். “உன் பகைவன் யாரென்று கூறு, உன் தரம் என்ன என்று கூறுகிறேன்” என்ற வாக்கியம் ஒன்று உள்ளது.

       பலர் வாழ்வின் சிறு வயதில் அண்ணன் தம்பிகளாகப் பாசத்துடன் வளர்வார்கள். அண்ணனை யாரேனும் அடித்தால் தம்பி ஓடிச்சென்று அடித்தவனை உதைப்பான். தம்பியை மற்றவர் வம்புக்கு இழுத்தால் அண்ணன் சென்று சட்டையைப் பிடிப்பான் “யாரடா என் தம்பியை வம்புக்கு இழுப்பது” என்று சத்தமிடுவான். இவ்வாறு இருக்கும் சகோதரர்கள், திருமணம் ஆகி குழந்தைகளைப் பெற்றதும் சொத்துக்குச் சண்டை செய்கிறார்கள். ஒரு வரப்பிற்காக அவ்வயலையே விற்று வக்கீல்களுக்கு பீஸ் கட்டிய அண்ணன் தம்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

          பகையுணர்வு மனதை ஆட்கொண்டு விட்டால் அது ஆரோக்கியம் பாசம் உறவு சொந்தம் சகோதரத்துவம் என்று எதையும் பார்க்காது. பகை பழி தீர்ப்பதை மட்டுமே பார்த்திருக்கும். எனவே பகை எண்ணங்களை மனதில் நுழைய விடாதீர்கள்.

           மனிதர்களின் மனதில் நல்லெண்ணங்கள் புகுவதைவிட தீயவை விரைவாக நுழைந்துவிடும். மனதில் நல்ல பழக்கங்களைப் பதிய வைப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் தீய எண்ணங்களுக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். அவை தானாகவே மனதின் உள்ளே சென்று அமர்ந்து கொள்ளும். இது இயல்பான ஒன்று.

மாற்றமே லாபம்

       மனதில் மாற்றம் ஏற்படால் அதுவே மிகப்பெரிய லாபம். படித்த கதையொன்று, ஒருவர் வாழைப்பழக்கடை வைத்திருந்தார். அந்த கடையில் ஒரு இளைஞனும் வேலை செய்தான். ஒருமுறை முதலாளி நிறைய வாழைத்தார்களை வாங்கி குடோனில் வைத்தார். பழங்களும் பழுத்து விட்டன. சந்தைக்குக் கொண்டு சென்றும் என்ன காரணமோ தெரியவில்லை பழங்கள் விற்பனை ஆகவில்லை. அடுத்தநாள் அவை மேலும் கனிந்து நிறம் மாறத்தொடங்கின. சிறு புள்ளிகளும் ஏற்பட்டன. இதனால் முதலாளிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் மிகவும் கவலை அடைந்தார். அழுகிய பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வேலை செய்யும் இளைஞனை அழைத்து அவற்றை பள்ளத்தில் கொட்டுமாறு பணித்தார். அதற்கு அவன் பழங்களை தான் எடுத்துக்கொள்வதாக கூறினான். முதலாளியும் சரி என்று தலையசைத்தார். இந்த வேலை செய்யும் இளைஞன் பழங்களை அள்ளி எடுத்துக்கொண்டு தெருக்களின் சந்திப்பில் வைத்தான் “ஐயா இவை புள்ளி விழுந்த புளிப்பான விட்டமின்கள் நிறைந்தவை. வெளிநாட்டு வாழைப்பழஙகள். இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். அம்மா வாருங்கள் இந்தப் பழங்கள் விற்று தீர்ந்தால் இனி கிடைக்காது” என்று கூவினான். சுமார் இரண்டு மணி நேரத்தில் பத்தாயிரம் பழங்கள் விற்று தீர்ந்தன. இளைஞன் மாற்றி யோசித்தான். லாபம் அடைந்தான். முதலாளி முடியாமல் விட்டதை இவன் முடித்துக்காட்டினான்.    

உங்கள் ஆக்கங்களை ஏற்றுக்கொள்ள இந்தச் சமுதாயம் கைநீட்டி அழைக்கிறது.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

விமர்சனங்கள்-ஒரு-பொருட்டல்ல

தன்னம்பிக்கை கட்டுரை தொடர் – 9

        நீங்கள் உங்களின் இலக்கை அடைவதற்கு போராடத் தொடங்கி விட்டீர்கள் என்றால் தடைக்கல்லாக உங்கள்முன் நிற்பது விமர்சனங்களே ஆகும். இவ்வுலகில் பெற்றோர்களைத் தவிர வேறுயாரும் உங்கள் முன்னேற்றத்தில் இன்பம் காண மாட்டார்கள். எனவே உறவு, நட்பு, அலுவலகம் போன்ற எல்லா இடங்களிலிருந்தும் உங்களுக்கு கிடைப்பவை எதிர் மறையான விமர்சனங்களே ஆகும். உங்களிடமே ஆகாது என்பதற்கு நிறைய உதாரணங்களை முன்வைப்பார்கள். முடியாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைப்பர். நடக்காது என்று ஏளனமாக பேசிச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் இந்தப் பூமியில் சீர்குலைக்கப் பிறந்தவர்கள். இவர்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இவர்கள் வடிகட்டிய சுயதுரோகிகள் எனலாம்.

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

         மற்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியும்,  அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யலாம் என்று. ஆனால் சோம்பித் திரிவார்கள். படிக்கும் காலத்தில் ஊர் சுற்றாமல் ஒழுங்காகப் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் என்று எல்லாம் அறிந்தும் ஊதாரித்தனமாகச் செலவளித்துத் தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்பவர்கள் இவர்கள்தான். அவ்வாறு தனக்கே துரோகத்தைச் செய்துகொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் நல்லது நினைப்பர்? மற்றவர்கள் முன்னேறிவிட்டால் இவர்களால் தாங்க இயலாது. பாவம் பொறாமையில் கொதிப்பார்கள். இம்மாதிரியான பிறவிகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

         எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டியே பேசுவார்கள். எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தன்னை எவ்வாறு மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது. விமர்சனங்களைப் பற்றி கண்ணதாசன் கூறுவார். “போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நில்லேன் அஞ்சேன்” என்று. எனவே மற்றவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுங்கள்

       நினைவில் கொள்ளுங்கள்! மற்றவரின் தூற்றுதலோ போற்றுதலோ உங்களுக்கு தேவையோ தேவையற்றதோ முதலில் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். சுய ஊக்குவிப்பே உண்மையானது. இவ்வாறு அல்லாமல் மற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதையே மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பாராட்டும் மனம் என்பது எல்லோருக்கும் வராது. தெளிந்த மனத்தவருக்கே அது கைகூடும்.

           உங்களை வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ளுங்கள். சுயசோதனை செய்து கொள்ள உங்களிடம் இருக்கும் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை யாது? அணுகுமுறை யாது? எவ்வளவு காலத்தில் வெற்றியை ஈட்ட முடியும்? இந்த வினாக்களுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்கவேண்டும். அந்தப் பதிலும் காரணத்துடன் அமைய வேண்டும். சில செயல்களுக்கு பலம் மட்டுமே போதாது. எந்த நேரத்தில் எவ்வாறு என்ற நுணுக்கங்களை கையாளவேண்டும். உங்களை வீழ்த்தும் பலவீனத்தை எவ்வாறு நீக்குவது. அல்லது பலமாக மாற்றுவது போன்ற சுய மதிப்பீடு செய்து கொண்டு, ஒரு வினையை ஆக்கபூர்வமாக செய்ய இயலும் என்ற மனத்தெளிவு வந்தவுடன் எவற்றைப்பற்றியும் நீங்கள் ஆலோசிக்க தேவையில்லை. உங்கள் இலட்சிய செயல்பாட்டை துவக்கலாம்.

மற்றவர்கள் மகிழட்டும்

      உங்கள் செயல்களுக்கு மகுடம் சூட்டுபவர் யாரேனும் இருந்தால் அவர்களை அருகிலேயே வைத்ததுக் கொள்ளவும். இழிவுபடுத்துபவர் இருந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் விட்டு விலகிவிடுங்கள். உங்களை தாழ்த்துபவர் உறவினரே அல்ல. உங்களின் ஆற்றலைக் கொண்டு திறனைப்பெருக்கி ஊக்கத்தை கூட்டுங்கள் வெற்றிப்பாதையில் செல்லுங்கள். உங்களின் வெற்றியானது மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கட்டும். அதை அடைவதற்கு நீங்கள் பல இன்னல்களை அடைந்திருந்தாலும் அதனால் மற்றவர்க்கு பயனைத்தரும் என்றால் தயங்காமல் செய்யுங்கள். தான்பெற்ற துன்பங்கள் தன்னுடனே இருக்கட்டும். ஆனால் மற்றவராவது பயன்பெறட்டும் என்ற தியாக எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.

தியாக மனோபாவம்

         ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு அறையில் திரையிடப்பட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இரண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தனர். அந்த நோயாளிகளும் நீண்ட நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே மனம் வெதும்பிய நோயாளி திரையின் மறுபக்கத்தில் இருந்த நோயாளியிடம் “சார் எனக்கு இப்படியே படுத்திருப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். “சார் நான் நலமாகவே மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்” என்றார். மனம் வெதும்பிய நோயாளி “அப்படியா? எவ்வாறு இது சாத்தியம்”? காரணம் என்ன? அதற்கு அவர் “சார் இங்கு ஒரு சன்னல் உள்ளது அதன் வழியாக இயற்கையைப் பார்க்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது” என்றார். “அப்படியென்றால் நீங்கள் பார்க்கும் காட்சிகளை எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். “சார் இந்த சன்னலின் வழியாக ஒரு மலை தெரிகிறது. அதில் அருவி ஒன்று உருவாகி அழகாக நீர் கொட்டுகிறது. அதனால் அந்த மலை பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. பூங்கா ஒன்று தெரிகிறது. அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் அழகான பறவைகள் என்று இருக்கின்றன சார். அதனால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். இவற்றை கேட்டவுடன் நோயாளிக்கு வெதும்பிய மனம் நிம்மதியானது. அதுமட்டுமல்லாமல் தினமும் தனக்கு கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் உரையாடல் ஒவ்வொரு நாளும் நடந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது. மனம் வெதும்பிய நோயாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் மாலைவரை அந்த நோயாளியை அறைக்கு அழைத்து வரவில்லை. ஆதலால் நர்சிடம் கேட்க “சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவருக்கு அதிகாலையில் மூன்றுமணி இருக்கும். உடலுக்கு முடியாமல் போனது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், உயிர் பிழைக்கவில்லை இறந்து விட்டார்” என்றாள். இவருக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது.

          தினமும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திய ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்று அவரின் கண்கள் கலங்கின. சில நிமிடங்கள் கழித்து “சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். எனது இந்த படுக்கையை அந்தப்பக்கம் மாற்றிவிடுங்கள்” என்றார். சரி என்று அந்த சிஸ்டரும் மாற்றினார். இவர் கேட்டார் “சிஸ்டர் இங்கு ஒரு சன்னல் இருந்ததல்லவா அது எங்கே? என்றதும் “சன்னலா, இங்கு ஒன்றுமே இல்லையே” என்றாள். “என்ன சிஸ்டர் அவர் தினமும் சன்னலில் பார்க்கும் காட்சிகளை என்னிடம் பேசி பகிர்ந்து கொள்வார் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்?” “சார் இங்கிருந்த நோயாளி பிறவியிலேயே பார்வையற்றவர்” என்று கூறியதும் தான் இவருக்கு புரிந்தது அவரின் தியாக மனம். ஆமாம் அவர்தான் பார்வையற்றவர் என்ற தன்னுடைய சோகத்தை மற்றவரிடம் காட்டாமல் மற்றவரை அந்த  வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் காணாத இயற்கை காட்சிகளையெல்லாம் கூறினார். அது எவ்வளவு பெரிய தியாகமனப்பான்மை. அசந்து விட்டார் இந்த நோயாளி.

         நீங்கள் இங்கு கவனிக்க வேண்டியது பிறவி பார்வையற்றவராக இருக்கும் நோயாளி சில நாட்களிலேயே இறக்கும் நிலையில் இருப்பவர். அவரின் உடல் எந்த அளவிற்கு வேதனையை வலியை ஏற்படுத்தும். அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு தன்சோகம் மற்றவரை தாக்கக்கூடாது என்று எண்ணி உற்சாகமாகப் பேசி மற்றவரின் வேதனையை மாற்றுகிறார். இந்த மாதிரியான பெருந்தன்மை, நேர்மை உங்களிடம் இருக்கிறதா? என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்காக அல்ல மற்றவர்க்குத்தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் செயல்பாட்டில் மெத்தனப்போக்கு உருவாகிவிடும். எனவே மெய்யான தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் தனித்திறனை இனம் காணுங்கள்

        மனிதர்களில் பலர், மற்றவரின் விமர்சனங்களால் உந்தப்பட்டு தன்னுடைய சுயதிறமைகள் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். உங்கள் சூழ்நிலையின் காரணமாகச் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். இவ்வாறான தாழ்வான மன நிலையை மாற்ற நீங்கள் செய்த செய்யப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

       ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாத்தது. அதன் முட்டைகளில் ஒன்றை நீக்கிவிட்டுப் பருந்தின் முட்டை வைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. அடைகாத்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தன. பருந்தின் குஞ்சும் வெளியே வந்தது. அது கோழிக்குஞ்சுகளுடனே எந்தவித வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தது. அதுவும் சில மாதங்களில் கோழிகளைப் போன்றே ஒலி எழுப்பியது. சிறிது உயரமே அதனால் பறக்க முடிந்தது. அதற்கு தான் பருந்தின் குஞ்சு என்பதே தெரியாது. ஆனால் அதன் உண்மையான திறன் என்ன? மேகத்தையும் கடந்து மேலே பறக்கும் அசாத்திய சக்தி கொண்டது. ஆனால் அது கோழிகளுடனே சேர்ந்துகொண்டு கோழியாகவே தன்னை நினைத்துக்கொண்டது. கோழியாகவே இறந்தும் போனது. இவ்வாறே இங்கு பலரின் வாழ்க்கை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்களோ அவ்வாறே மாறிவிடுகின்றனர். ஆனால் அவரவர்க்கென்று தனித்தனி திறமைகள் உள்ளன. அவற்றை இனம் காணவேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதைச் செய்ய வரும் எது சிறப்பாக வரும் எதுவெல்லாம் சுமாராக செய்ய முடியும் தன் குருதியில் தசை நரம்புகளில் மூளையில் ஊறியிருக்கும் ஆற்றல் எது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் சாதனை படைக்கலாம்.

           உங்களின் உள்மனதை ஊக்கப்படுத்த வேண்டும். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அடையப்போகும் வெற்றியை அதனால் ஏற்படும் பயனை மற்றவர் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாளடைவில் அதை உங்கள் ஆழ்மனம் நம்பத்துவங்கும். ஆழ்மனதிற்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணங்கள் செயல்களாக மாறும். செயல் வெற்றியைத் தேடித்தரும். இதில் ஐயமில்லை.

     மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் உண்மையில் மாமனிதர்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

அர்த்தநாரி சிறுகதை (Arthanari Short Story)

அர்த்தநாரி-சிறுகதை

      சிங்கப்பூரிலிருந்து விடியற்காலை 6:30 மணியளவில் ஆண்ட்ரூ லைன் இந்தியாவில் சென்னை நகரில் இருக்கும் நளபாகம் சுவை உணவகம் உரிமையாளர் பார்த்திபனுடன் ஸ்கைப் வழியாக உரையாடுகிறார். சிங்கப்பூர்க்கும் இந்தியாவிற்கும் நேர அளவு 2:30 மணித்துளிகள். இப்பொழுது சென்னையில் சரியான நேரம் விடியற்காலை 4:00 மணி. அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. சுவற்றில் ஆங்காங்கே அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அலமாரியில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தொங்கும் திரைச்சீலைகள் அந்தப் படுக்கையறையை மேலும் அழகுப்படுத்தின. படுக்கையில் உள்ள போர்வைகள் கொஞ்சம் கூட கசங்காமல் சலவை போட்டதுபோல் இருந்தன. அவனுடைய நெகிர்ந்தெடுத்த தலைமுடி நீண்டிருந்தது. அவ்வவ்போது தலைமுடியைக் கோதிக்கொண்டான் பார்த்திபன். இரண்டு தலையணைகளை முன்னால் இட்டு அதற்கு மேல் கணினியை வைத்திருந்தான். சம்மணம் இட்டு இருகாதுகளிலும் ஹெட்போன் மூலம் ஆண்ட்ரூ லைன்னிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.

              “ஹலோ,  நளபாகம் சுவை உணவகத்தின் உரிமையாளர் திரு.பார்த்திபன்… நான் சிங்கப்பூரிலிருந்து ஆண்ட்ரூ லைன் பேசுறேன்”

              “யா.. நான் பார்த்திபன்தான் பேசுறன். சொல்லுங்க லைன்”

              என் மகளின் திருமண விழாவிற்கு தென்னகத்து இந்திய உணவு பரிமாறிட இருக்கின்றோம். தங்களுடைய நளபாக சுவை உணவுப் பற்றி இணையத்தில் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் அமெரிக்கா நியூயார்க் நகரில் தங்களின் உணவின் சுவையை சுவைத்திருக்கிறார். ரொம்ப நன்றாய் இருப்பதாகவும் சொன்னார்.  நானும் எங்கள் உறவுகளும் தென்னிந்திய உணவை சுவைக்க ஆயுத்தமாக  உள்ளோம்” என்றார் ஆண்ட்ரூ லைன்

       “ரொம்ப சந்தோசம் லைன். உங்களுக்கு எந்த வகையான பேக்கேஜ் வேண்டும். வெளிநாடுகளில் ஐநூறுக்கும் மேற்பட்டவை மட்டும்தான் எடுத்துக்கொள்வோம். அதற்கு கீழ் உள்ள பேக்கேஜ்களால் எங்களுக்கு நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐநூறு முதல் ஆயிரம் என ஐயாயிரம் வரை ஒருநாளில் எங்களால் சமைத்துத் தரமுடியும். பேக்கேஜ் அதிகம் ஆகஆக பணமும் குறையும். இது இல்லாமல் விமானப்போக்குவரத்துக்கான செலவுகளில் முக்கால் பங்கு தங்களிடமிருந்து வசூலிக்கப்படும். பாத்திரங்கள், ஆட்கள், உங்களுடைய விழா நிறைவு வரை சிங்கப்பூரில் இருக்கின்ற எங்களின் கேட்டரிங் ஆட்கள் உடனிருந்து பணிபுரிவார்கள். எங்களுடைய நிறுவனத்தில் உலகம் முழுவதிலிருந்தும் கேட்டரிங் ஆட்கள் வேலை செய்கிறார்கள்” – பார்த்திபன்

       “எனக்கு சைவ உணவாக ஆயிரம் பேர் சாப்பிடுகின்ற மாதிரி வேண்டும். ஆனால், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள தூரம் 3,440 கிலோ மீட்டர். 3.45 மணி நேரம். எங்களுக்கு சரியான நேரத்தில் சுடச்சுட உணவு கிடைத்து விடுமா?” என்றார் லைன்

    “விழாவின் தேதி மற்றும் உணவு வந்து சேரவேண்டிய நேரம் ஆகியவையைக் குறிப்பிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் நேரத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே நான் அனுப்பி வைத்துவிடுகிறேன்” என்றான் பார்த்திபன். கொஞ்சம் உரையாடலுக்குப்பின் அனைத்து விபரங்களையும் குறித்துக்கொண்டான். அந்த விபரங்கள் அடங்கிய  மெயிலையும் தன்னுடைய மேனேஜர்க்கு அனுப்பி தகவலைச் சொன்னான். போதும் என்றானது அவனுக்கு. இரண்டு பக்க நெற்றியிலும் கை வைத்துக்கொண்டு குனிந்து கொண்டான். கண்கள் தூக்கத்தை தேடின. கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். அம்மாதான் காபியுடன் நின்றிருந்தாள். இவனும் தூங்கமாட்டான். அம்மாவையும் தூங்க விடமாட்டான். மணிக்கு ஒருதரம் இப்படி காபி டம்ளரை எடுத்துக்கொண்டு வந்து விடுவாள். மற்ற வேலைக்காரர்கள் யாரும் அவனின் அறைக்கு வருவதில்லை. சுடச்சுட காபி டம்ளரை மகனிடம் நீட்டினாள் அகிலாண்டம். கையில் வாங்கி வாயில் உறிஞ்சத்தொடங்கினான். விடியற்காலை இரவில்  இருவரும் மௌனமாய் இருந்தார்கள்.

      ஆரம்பத்தில் பார்த்திபனின் அப்பா நளன் சாதாரணமாய்தான் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வந்தார். அகிலாண்டத்தின் கைப்பக்குவம், வாடிக்கையாளர்களைக் கவரும் அப்பாவின் பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் ஹோட்டல் பெரிய அளவில் வளர்ந்தது. பார்த்திபனின் அறிவு இன்று நளபாகம் சுவை உணவகம் என உலகளவில் பேசப்படும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பார்த்திபனின் வளர்ச்சியைக் கண்டு, அவனுக்கு உடம்பெல்லாம் மூளை என்பார்கள். எப்படி சாத்தியம்? கொஞ்ச நாள்களிலேயே அசுர வளர்ச்சி? என்று பிரமித்துபோனவர்கள் ஆயிரம் பேர். அவனின் வளர்ச்சியைப் பிடிக்காமல் வயிற்றெரிச்சலுக்கு மாத்திரையை விழுங்கியவர்கள்  ஏராளம்.

“தம்பி….நான் சாயுங்காலம் சொன்னது பத்தி என்ன நினைக்கிற?” – அகிலாண்டம்மா.

“அம்மா… எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா? நான் எப்படிம்மா கல்யாணம் செஞ்சுகிறது. பாவம்! ஒரு பெண்ணோட வாழ்க்கைய கெடுக்கச் சொல்லிறியா?” – பார்த்திபன்

    அப்பாவுக்குப் பிறகு உன்னை நான் கவனிச்சிக்கிட்டேன். எனக்கு பிறகு யாரு உன்ன பாத்துக்கிறது? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமாடா? இப்படியே இருந்தா எப்படி? உன்ன நினைச்சா எனக்கு கவலையா இருக்கு!

       அம்மா… அதுக்காக நான் எப்படிம்மா? எனக்கு கல்யாணம்மல்லாம் வேண்டாம்மா?- அம்மாவை ஏக்கமாய்ப் பார்த்தான்.

     பாக்கிறவங்க எல்லாம் உம்மகனுக்கு எப்ப கல்யாணம்? எப்ப கல்யாணம்? ன்னு கேட்கிறாங்க. கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்ல முடியல.. நான் என்ன பண்றது.!

        மதுரம் சொன்னதை மாலையே பார்த்திபனிடம் சொல்லியிருந்தாள். மதுரத்தின் கிளினிக்கில் ஒரு விதவைப் பெண் வேலை செய்கிறாள். கல்யாணம் ஆகி மூன்று மாதத்தில் கணவனைப் பறிகொடுத்தவள். ஏழைப்பெண்ணான அவளுக்கு ஒரு துணை வேண்டும். அந்தத் துணை நம் பார்த்திபனாகவே இருக்கட்டுமே! நான் அவளுடன் கலந்து பேசி சம்மதம் தருவதாகவும் உறுதியளித்திருந்தாள் மதுரம்.  அம்மாவை முறைத்துப் பார்த்தவனாய் மீண்டும் நெற்றியின் இரண்டு பக்கத்தையும் பிடித்துக்கொண்டு தலைக்கவிழ்ந்தான்.

        முதல்நாளில் காலை மணி 11:00. அகிலாண்டம் மகனின் நினைவுகளில் மூழ்கியிருந்தாள். வாசலில் காலிங் பெல்லின் ஒலி திரும்ப திரும்ப கேட்டது. நினைவுகளிலிருந்து விடுபட்டவளாய் கதவை திறக்கப்போனாள் அகிலாண்டம்.

“ஹாய் அகிலா….” வந்தவள் அகிலாண்டத்தை இறுக்கமாகக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

“வாடி மதுரம். எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாளாச்சே.. வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் அகிலாண்டம்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க. நானும் ரொம்ப சந்தோசமா இருக்கேன். சென்னையில ஒரு வேல விஷியமா வந்தன். அதான் போற வழியில உன்னையும் ஒரெட்டு பாத்துட்டு போயிரலாமுன்னு வந்தேன். சரி நீ எப்படி இருக்க? உன்னோட பையன் எங்க?” – மதுரம்

“ம்… இருக்கேன்” முகம் வாடியவளாய் சொன்னாள். “சரி உன்னோட டாக்டர் வேலையெல்லாம் எப்படி போகுது?” – அகிலாண்டம்

“நல்லா போகுது. ஆனா நீ ஏ ஒருமாதிரியா இழுத்துட்டுச் சொல்லுற.. என்னாச்சு அகிலா”

“எனக்கென்னா கவலை இருக்க போவுது. என் பையனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு வச்சிட்டன்னா என்னோட கடமை முடிஞ்சிரும்”

“செஞ்சிட்டா போச்சு. அதுக்கென்ன?“

“அவன் கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லுறான். எனக்கும் அவன் சொல்லுறது சரிதான்னு தோனுது. ஆனா மனசு கேட்க மாட்டங்குதே. ஆமாம் மதுரம்! உனக்கு தெரியாததா?”

“நான்தான் உனக்கு பிரசவமே பாத்தன். கவலைப்படாத என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு? எப்படியும் பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம். சரி எங்க உன்னோட பையன்? கடைசியா அவன நான் அண்ணா இறக்கும்போது பாத்திருந்தேன்” என்று ஆவலாய் கெட்டாள் மதுரம். அந்த அறையின் ஒரு பக்கத்தில் பார்த்திபனின் புகைபடம் தெரிந்தது. பார்த்திபனை ஒருமுறை பார்த்துவிட்டு அசந்துபோனாள். அழகோவியமாய் பிரகாசித்தான் அவன்.

 “மதுரம் அத்தை சொன்னதா சொன்னல்ல அதுபத்தி என்ன நினைக்கிற தம்பி” என்றாள் அகிலாண்டம். சிறிது நேர யோசனைக்குப் பிறகு பார்த்திபன் அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“சரிம்மா… எனக்கு சம்மதம். ஆனா! அந்தப்பொண்ணுக்கிட்ட என்னைப் பற்றி எல்லாத்தையும் சொல்லிடுங்க. பின்னால ஏதாவது பிரச்சனையின்னா அது சரியிருக்காது. அதனால அந்தப்பொண்ணுக்கு ஓகேன்னா.. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” – பார்த்திபன்

     பார்த்திபன் இவ்வளவு சீக்கிரமாய் ஒரு நல்ல பதிலைச் சொல்லுவான் என்று அகிலாண்டம் எதிர்ப்பார்க்கவில்லை. அகிலாண்டம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். விடிந்ததும்  உடனே மதுரத்திற்கு போன் செய்து சொல்லியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அகிலாண்டம். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தப் பண்ணு என்று கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அந்த ஆயிரம் பொய்யையும் பார்த்திபனுக்காக மதுரமும் அகிலாண்டமும் பெண் வீட்டாரிடம் சொல்லி சம்மதம் பெற்றுவிட்டார்கள்.

         ஒரு நல்ல நாளில் பார்த்திபனுக்கும் கல்பனாவிற்கும் திருமணம் நடந்தது.  முதலிரவு அறை அழகாய் தோரணத்துடன் அலங்கரிப்பட்டிருந்தன. பூவின் வாசனையும் ரம்மியமான வெளிச்சமும் நிலவின் குளிர்ச்சியும் அந்த இரவை சொர்க்கமாக்கியது. கட்டிலின் ஒரு ஓரத்தில் கல்பனாவும் அடுத்த ஓரத்தில் பார்த்திபனும் படுத்திருந்தனர். ஆனால் இருவரும் உறங்கினார்கள் என்று சொல்ல முடியாது. மனதில் ஆயிரம் ஆசைகளோடு இருமனங்களும் எண்ணங்களில் மூழ்கியிருந்தன. கல்பனாவிற்கு அந்த வீடு, இடம், வேலையாட்கள், உபசரிப்பு, கழுத்தில் தொங்கிய மிதமிஞ்சிய ஆபரணங்கள் என எல்லாமே புதியதாய் இருந்தன. குடிசை வீட்டில் மண்தரையில் கிடைத்ததை உண்ட அவளுக்கு இங்கு நடப்பது எல்லாம் புதியதாய் தோன்றியது.

        ஆனால் இந்தப் பணக்கார வேஷம் அவளை திக்குமுக்காட வைத்தது. குளிக்கச் சென்றால் நான்கு பெண்கள் உடன்வந்து மஞ்சளையம் சந்தனத்தையும் பூசுகின்றனர். வெள்ளி தட்டில் நாக்குக்கு சுவையான உணவு. மயிலிறகாய் பஞ்சுமெத்தை. ஆனால், முதலிரவில் பார்த்திபன் தன்னிடம் நெருங்கி வராதது, அதுபற்றி யாரும் என்னிடம் எதுவும் கேட்காமலிருப்பது என்னுடைய கடந்த திருமணத்தின் போது எத்தனை கேலிகள், கிண்டல்கள். ஒருவேளை நான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதாலோ? அவருக்கு ஏற்னவே திருமணம் ஆகி மனைவி இறந்துவிட்டாள் என்று மதுரம் மேடம் சொன்னார்களே! அப்பாவும் அம்மாவும் என்னால் கஷ்டப்படக்கூடாது. இனியும் என்னால் ஏற்படுகின்ற சிரமத்தையும் அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது, நாமும் வாழ்க்கையை இழந்து நிற்கின்றோம் அவரும் வாழ்க்கையை இழந்து வாடுகின்றார் அதனால்தானே திருமணத்திற்கு சம்மதித்தோம். பணக்கார வீட்டில் விட்டில்பூச்சியாய் அகப்பட்டுக்கொண்டோமோ? மிகவும் குளம்பிப்போயிருந்தாள் கல்பனா. 

       கல்பனாவின் கேள்விகளுக்கு அகிலாண்டம்தான் அவ்வப்போது எதையாவது சொல்லி சமாளிப்பாள். தன்னுடையக் குடும்பத்தைப் பற்றியும் பார்த்திபனின் திறமையையும் அவனின் வளர்ச்சியையும் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வாள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. இந்தத் தொன்னூத்தியொரு இரவுகளில் இருவரும் கட்டிலில் இரண்டு பக்க விளிம்புகளிலேயே படுத்திருந்தனர். கல்பனா கீழே சமையல் முடித்து மேலே வரும்போது குளித்து தன்னை முழுமையாக அலங்கரித்துக்கொண்டு விடுவான். ஒருநாள் கூட அவனின் வெற்றுடம்பைக் கூட கல்பனா பார்த்த்தில்லை. மகிழ்வாக ஒருநிமிடம் கூட பேசியது இல்லை.

        பார்த்திபனை கல்பனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. கணவன் தன்னை முழுமையாக ஆட்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அவன் பார்க்காத நேரத்தில் ரசிக்கவும் செய்தாள். ஆனாலும் தன்னை விலக்கி வைப்பதன் காரணம்தான் அவளுக்குப் புரியவில்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக திருமணத்திற்கு சம்மதம் சொல்லி தாலி கட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? மனம் பல்வேறாய் சிந்திக்கத்தொடங்கியது. இன்று இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினாள்.

        இரவு அலுவலகத்திலிருந்து வந்த பார்த்திபன் நேராக குளியலறைக்குச் சென்றான். கல்பனாவும் பின்னாலே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். குளியலறையில் பார்த்திபன் குளிக்கின்ற தண்ணீர் சத்தம் கேட்டது. பார்த்திபனுடன் என்ன பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று வரிசைப்படுத்திக்கொண்டாள். மனம் புண்படாமல் என் காதலை அவரின் இதயத்தைத் துளைத்து எடுக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள். தண்ணீரின் சத்தம் நின்றுபோனது. ஒன்றை துணியால் உடம்பு முழுவதையும் மறைத்தவாறு ஒரு கையால் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்தான். படுக்கையில் கல்பனா அமர்ந்திருப்பதைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் பார்த்திபன். என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென முழித்தான். கல்பனாவே அங்கு நிலவிய சூழலைக் களைத்தாள்.

     “என்னங்க என்ன புடிச்சிருக்கா” என்றாள் கல்பனா. எப்படி கேட்டாள் என்பதை அவளாளயே உணரமுடியவில்லை. ஏதோதோ கேட்க வேண்டும் என்று நினைத்தவள் திடிரென்று இப்படி கேட்டுவிட்டாள். பல்லைக் கடித்துக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.  கல்பனாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று திக்கு முக்காடிப்போனான்.

“நீ வெளிய போ… நான் டிரஸ் மாத்தனும்” என்றான் பார்த்திபன்

“போக மாட்டேன். நான் உன் பொண்டாட்டிதான என் முன்னாலயே டிரஸ் மாத்து. நானும் பாக்குறன்” – கல்பனா.

“நீ இப்ப போக போறியா? இல்லையா? நீ போகலன்னா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” – பார்த்திபன்

“இப்ப எதுக்கு கோப்படுறீங்க! நான் என்ன கேட்டுட்டன். என்னை புடிச்சிருக்கா? இல்லையான்னு சொல்லுங்க? நான் போயிடுறன்” – கல்பனா. பார்த்திபனின் கையில் இருந்த சாயப்பாட்டிலை ஓங்கி தரையில் அடித்தான். அடித்த வேகத்தில் உடைந்து அதனுள் இருந்த சாயம் அந்த அறை முழுவதும் பரவியது. “வெளிய போ…..” என்று உக்கிரமாகக் கத்தினான். எதையோ பேச வந்து இங்கு வேற எதுவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தாள். கலகம் பண்ணா வழிப் பிறக்கும் என்பார்கள். என்னோட வாழ்க்கைக்கு தேவை பணம் இல்லை. அன்புதான். அன்பை பெறுவதற்கு அக்கலகத்தில் முழுமையாக ஈடுபடவேண்டும்  என்று எண்ணினாள் கல்பனா.

      சிதறிய சாயத்தின் துளிகள் கல்பனாவின் முகத்திலும் தெளித்திருந்தது. பார்த்திபனின் உக்கிரமான கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். “போக முடியாது. நான் உன் பொண்டாட்டிதான.. நான் எதுக்கு போகனும்” என்றாள்.

“ஏண்டி இப்படி அலையிற… அப்பவே சொன்ன எங்க அம்மகிட்ட கல்யாணம் வேண்டாம்மா… வேண்டாம்மா.. ன்னு அவுங்கதான் கேட்கல. ஏதோ ரோட்ல போற ஒன்னப் புடிச்சு என் தலையில கட்டி வைச்சிட்டாங்க”  தன்னிலை மறந்து பேசினான் பார்த்திபன். இதற்குமேல்  கல்பனாவால் கோபத்தை அடக்க முடியவில்லை.

“நான் அலையிறனா… நான் அலையிறனா… நான் ரோட்டுல போற ஒன்னா.. பேசுவ… நீ பேசுவ.. ஏன்னா நீ பணக்காரனாச்சே! கல்யாணம் பண்ணி மூணு மாசம் ஆச்சு. அவள அம்மாவாக்க முடியல. நீயெல்லாம் பேசுற… ஆமா எனக்கு ஒரு டவுட். நீ ஆம்பிளயா… சொல்லு நீ ஆம்பளயா..” தன்னையே இழந்து பேசினாள் கல்பனா.

                             “ஆமாம் நான் ஆம்பளைதான்” – கத்தினான் பார்த்திபன்.

       “அப்புறம் ஏன் கட்டில் விளிம்புல போயி போயிப் படுத்துக்கிற. நான் பொம்பளன்னு நினைச்சன்” – கல்பனா

       “ஆமாம் நான் பொம்பளதான்! எனக்கு எந்த ஆண் மேலயும் ஆசை வராது. எந்த பெண் மேலயும் ஆசை வராது. ஏன்னென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன் நான்! ! பார் என்னை” என்று உடலில் கட்டியிருந்த ஒற்றைத்துணியை நீக்கினான். முழு நிர்வாணம் ஆனான்.  மின்சாரம் நின்று போனது. முன்னிரவில் சாளரத்தின் வழியாய் நேர்திசையில் முழுபௌர்ணமி வெண்மையாய் உருண்டையாய் தெரிந்தது. ரம்மியமான நிலவொலியை ஒத்த வெளிச்சத்தில் பார்த்திபனின் முழு நிர்வாணத்தைக் கண்டாள். இடது பக்கத்தொடை நடுவே பெண்ணுறுப்பும் நேராக நெஞ்சில் சின்னதாய் முலையும், வலப்பக்கத் தொடை நடுவே ஆணுறுப்பும் நேராக நெஞ்சில் வட்டமாய் காம்பும் இருந்தன. கயிலாயத்தில் அம்மையும் அப்பனும் இணைந்து ஒன்றாய் திருநீலகண்டனாய் இருப்பது போன்ற காட்சி. முழுகோளமாய் தலையில் நிலவுடன் ருத்ரனாய் காட்சியளித்தான் பார்த்திபன்.

       கைகள் கோர்த்தன. கண்கள் கலங்கின. மனம் மகிழ்ந்தது. கல்பனா அப்படியே மயக்கமடைந்தாள். பஞ்சு மெத்தையில் மயிலெனப் படுத்திருந்தாள். அவளின் முகம் தாமரையாய் ஒளிர்ந்தது. கண்கள் மூடியிருந்தன. ஆணும் பெண்ணும் ஓர் உடலில். எப்படி சாத்தியம்? உண்மையிலேயே பார்த்திபன் தில்லைவாணனா? இறைவனையே நேரில் பார்த்தது போன்ற காட்சியல்லவா? நான் என்னுடைய பிறவிப்பயனை அடைத்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். மூடியிருந்த கல்பனாவின் கண்களிலின் ஓரத்திலிருந்து கண்ணீர் துளியானது வழிந்தது. கல்பனாவின் உடலும் இப்போது சில்லென்றானது.

சிறுகதையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்

iniyavaikatral@gmail.com

சங்க இலக்கியத் தொகுப்பும் அதன் சமூகப் பின்புலங்களும்

சங்க-இலக்கியத்-தொகுப்பும்-அதன்-சமூகப்-பின்புலங்களும்

      ‘பாட்டும் தொகையும்’ என்றும், ‘தொகைநூல்கள் என்றும், ‘எட்டுத்தொகை நூல்கள்’, ‘பத்துப்பாட்டு நூல்கள்’ என்றும், ‘சங்க இலக்கியங்கள்’ என்றும், ‘பதினெண் மேற்கணக்கு நூல்கள்’ என்றும் கூறப்பட்டு, இன்று நாம் வழங்கி வருகின்ற பழந்தமிழ் இலக்கியங்கள்,

1.          பாடப்பட்ட காலம்

2.          எழுதப்பட்ட காலம்

3.          தொகையாக்க காலம்

4.          இலக்கண காலம்

5.          உரைக் காலம்

6.          பதிப்புக் காலம்

        என்ற படிநிலைகளில் உருவாகி, இன்று நம் கைகளில் கிடைத்துள்ளது. இப்படிநிலைகளில் பல்வேறு அரசியல், சமய, மொழிநிலைகளின் ஊடாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக தொகைநூல்களின் தொகையாக்க அரசியல், சமய, மொழிப் பின்னணிகள் என்ன என்று காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            இன்றைக்குச் சங்க இலக்கியங்கள் என்று பெயரிடப்பெற்று, நம் பார்வைக்கு வந்துள்ளகிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள் பல்வேறு இடங்களிலிருந்து பாடப்பட்டு, பின் எழுதப்பட்டு அதற்குப்பின் தொகுக்கப்பட்டவை. தொகுக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய வரலாறு, அவற்றின் பின்னணி, அவற்றின் தேவை போன்றவை முதலில் விளக்கப்பட வேண்டும்.

            தொகைநூல்கள் எட்டாக நமக்குக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் குறுந்தொகை, நடுந்தொகை (நற்றிணை), நெடுந்தொகை (அகநானூறு), புறத்தொகை (புறநானூறு) என்ற நான்கு மட்டும்தான் தொகைநூல்கள். மற்ற நான்கும் ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து ஆகியவை தொகுக்கப்பட்ட காலத்தில் (சற்று முன் அல்லது சமகாலத்தில்) உருவாக்கப்பட்டவைசேர்க்கப்பட்டவை.

            பாடல்வரிகளான அடிகளின் அடிப்படையில்தான் 4-8 (குறுந்தொகை) 9-12 (நடுத்தொகை) 13-31 (நெடுந்தொகை) முதலில் தொகுக்கப்பட்டன. இவ்வடிகளுக்குப் புறம்பாக உள்ளவை புறத்தொகை. இறையனார் களவியல் உரை காலத்தில்தான் (கி.பி 7-ஆம் நூற்றாண்டு) நாம் இன்று குறிப்பிடுகின்ற அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவை எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறையனார் களவியல் உரையில் ‘பத்துப்பாட்டு’ என்பதோ, ‘பாட்டும் தொகையும்’ என்பதோ, ‘தொகைநூல்கள்’ என்பதோ, ‘பதினெண் மேற்கணக்கு’ என்பதோ குறிக்கப்பெறவில்லை. கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேராசிரியரின் தொல்காப்பிய உரையில்தான் ‘பாட்டினும் தொகையினும் வருமாறு கண்டு கொள்க’ (செய்யுளியல் 50) என்று எடுத்தாளப்பட்டுள்ளது. உரையாசிரியர்கள் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

            கி.பி 7-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை மூலம் ‘சங்கச் செய்யுள்’ என்ற பெயர் ஏற்படலாயிற்று. சமணச் சங்கத்திற்குப் போட்டியான வைதீகச் சங்க உருவாக்கமாகவும் சமணர்களின் எழுத்துத் தொகுப்பு முயற்சிக்கு எதிரான தொகையாக்க முயற்சியாகவும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடப்பட்டன. கே.என். சிவராஜபிள்ளை இவற்றைச் ‘சங்கச் செய்யுள்’ என்றழைக்கக் கூடாது என்றும் தவறான சொல்வழக்கு என்றும் குறிப்பிடுகின்றார். க. கைலாசபதி இவற்றை ‘பாண்பாட்டு’ என்று அழைக்கலாம் என்கிறார்.

            தொகையாக்கத்தில் சமயம், அரசியல், மொழிக்கல்வி என்ற பின்னணிகள் தொழிற்பட்டுள்ளன. அரசியல் என்பது பாண்டியரைமதுரையை முன்னிறுத்தும் போக்கு களவியல் உரை மூலம் வெளிப்படுகின்றது. தொகுத்தார், தொகுப்பித்தாரில் சோழர்கள் இடம்பெறவில்லை. பதிற்றுப்பத்து சேரர்களுக்குரியதாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தொகையாக்கத்தில் சோழர்கள் இடம்பெறவில்லை என்றாலும், புறப்பாடல்களில் சோழ மன்னர்கள் பாண்டியர், சேரர்களைவிட அதிகம் இடம்பெற்றுள்ளனர் (70 பாடல்கள்) என்பது முரணாக உள்ளது. பாணர் பாடியதாகக் கருதப்பெறும் பழம் பாடல்களில் சோழர்கள் அதிகமாகவும், புலவர்கள் பாடியதாக உள்ள பாடல்களில் சேர, பாண்டியரும் இடம்பெற்றுள்ளனர்.

            தொகையாக்கத்தின்போதுகூட திணை, துறை, கூற்று போன்றவை கொடுக்கப்படவில்லை. உரையாசிரியர் காலத்தில் அல்லது பதிப்புக் காலத்தில் இவை குறிக்கப்பெற்றவை. மேலும், ‘கொளு’ என்கிற அடிக்குறிப்பிற்கும் பாடல்களுக்கும் தொடர்பு இல்லாமல் அமைந்துள்ளன. சான்றாக, குறிப்பிட்ட மன்னனின் (சேர, சோழ, பாண்டியர்) பெயர் அடிக்குறிப்பில் இடம்பெற, பாடல்களின் செழியன், கிள்ளி, வளவன், மாறன், பொறையன் என்று பொதுப்பெயர்களிலேயே சுட்டப் பெறுகின்றனர். அரசப்புலவர்கள் 15 பேர் பாடியதாக அடிக்குறிப்பு காணப்படுகிறது. ஆனால் அதற்கான தரவு பாடல்களில் இல்லை.

            பாணர்கள் பாடிய பாடல்கள் தொன்மையானவை. அவை வாய்மொழிப் பாடல்களாக வெளிப்பட்டவை. அவை அகப்பாடலால் ஆனவை. புலவர்களின் செய்யுள் மரபில் வந்தவை. ஆசிரியப்பாவால் இயன்றவை. பாணர் பாட்டுக்கும் புலவர் செய்யுளுக்கும் கால இடைவெளியால் வேறுபாடுண்டு.

            ‘புலவர்களின் அதிகாரமும் தகுதியும் பாணர்களின் அதிகாரத்திற்கும் தகுதிக்கும் காலத்தாற் பிற்பட்டன’ என்ற க. கைலாசபதியின் கூற்று பாணர்கள் முந்தியவர்கள் என்பதையும், புலவர்கள் பிந்தியவர்கள் என்பதையும் உறுதிசெய்கிறது. (பக்.175)

            “தொல்காப்பியர் காலத்தில் ‘அகவல்’ என்னும் பெயர் ஆசிரியம் என்னும் பெயரால் அகற்றப்பட்டு விட்டது.” (பக்.175) என்ற கூற்றும் அகவல் பாடுவதற்குரிய பாண்மரபாக இருந்து ‘ஆசிரியம்’ என்று செய்யுள் எழுதுவதற்குரிய புலவர் மரபாக மாறியதைக் காட்டுகிறது.

            எழுத்துரு கையாளப்பட்டபோது, பாடப்பட்டவற்றுள் சில எழுத்துவடிவம் பெறலாயின. எழுதப்பட்ட காலத்துத் தேவைக்கேற்ற பாடல்களே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். எழுதப்பட்ட முயற்சியும் சமணர்களால் உருவானது என்பதை கா.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அக்காலகட்டம் மதஞ்சார்ந்த கல்வியாக அல்லாமல் இருந்தது என்பதை முதற்காலகட்ட தொகைப்பாக்கள் உணர்த்துகின்றன.

            எழுத்து சார்ந்த கல்வியும் பாட்டும் வந்தவுடன் இலக்கணத்தில் ஒரு மொழியின் எழுத்து, சொல் பற்றிய சிந்தனை உருவாகின்றது. பேச்சுமொழி எழுத்துமொழியாக உருவெடுக்கின்ற சூழலிலும் பிறமொழி ஊடாடுகின்ற நிலையிலும் ஒரு மொழியின் எழுத்து, சொல் போன்றவை சுட்டப்பட வேண்டிய அல்லது வரையறுக்கப்பட வேண்டிய தேவை எழுகின்றது. அதனைத் தொல்காப்பியம் சிறப்புற நிறைவேற்றியுள்ளது. எழுத்தும் சொல்லும் மொழியின் இலக்கணம். இதற்கடுத்து, இலக்கியத்தின் இலக்கணமாகிய பொருளதிகாரம் முன்வைக்கப்படுகின்றது. இலக்கியத்தின் உருவ, உள்ளடக்க, உத்தி மற்றும் யாப்பு குறித்துப் பேசப்படுகிறது. தொல்காப்பியத்தின் இந்தப் பொருளதிகாரம் குறித்த கருத்துக்கள் இன்றையவரையில் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கு இட்டுச் செல்கின்றது.

            அகம், புறம் என்பதற்குத் தொல்காப்பியத்தில் விளக்கம் இல்லை. எழுத்து, சொல் அதிகாரங்களில் தலைச்சூத்திரம் அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு இல்லை. இதுபற்றி நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னரே குறிப்பிட்டுள்ளார். எழுத்து, சொல் அதிகாரங்களுக்குப் புறனடை அமைந்ததுபோல் பொருளதிகாரத்திற்கு அமையவில்லை. மேலும் தலைவன் கூற்று இருப்பதுபோல் தலைவி கூற்று இடம்பெறவில்லை. இதுபற்றி இளம்பூரணர் கூறுகையில் ‘தலைமகன் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப்பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினர் போலும்’ என்கிறார். மேற்குறித்த ஐயங்களுக்குத் தெளிவான விடைகள் ஏதமில்லை. பொருளதிகாரம் பின்னர் சேர்க்கப்பட்டது என்ற கருத்தும், தொல்காப்பியம் ஒருவரால் எழுதப்பட்டதன்று என்ற கருத்தும், ஒரு சிந்தனைப் பள்ளியின் கருத்துருவாக தமிழ் இலக்கணம் எழுந்ததன் வடிவமே ‘தொல்காப்பியம்’ என்ற கருத்தும் குறிப்பிடத்தக்கது.

            தொல்காப்பியத்திற்கு முன்னரே பாடப்பட்டு, எழுதப்பட்ட, கல்விநிலையில் பயிலப்பட்ட பழந்தமிழ் நூல்கள் என்ற வரிசையில் குறுந்தொகை, நெடுந்தொகை, நடுந்தொகை, புறத்தொகை போன்றவற்றின் இலக்கண மரபுகளும், தொல்காப்பியத்தின் சமகாலத்தில் நிலவிய இலக்கியத் தரவுகளின் இலக்கண மரபுகளும் இடைச்செருகலாக வந்த இலக்கண மரபுகளும் கொண்ட களஞ்சியமாகவே தொல்காப்பியம் விளங்குகின்றது.

            அகப்பாடலுக்குரிய பா வடிவமாகிய கலி, பரிபாட்டு இரண்டும் தொல்காப்பியத்தில் சுட்டியிருப்பது பழைய தமிழ்ப் பாடல்களுக்கு என்றால் அப்பாடல்களில் கலி, பரிபாடல் கொண்ட பாடல்களின் சான்றில்லை. எல்லாமே அகவல் அல்லது ஆசிரியப்பா வடிவங்களே. சமகால இலக்கியத்தில் பயின்றிருக்கிறதென்றால் கலித்தொகை, பரிபாடலுக்குப் பின் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

            மற்றொருநிலையில், முன்பிருந்த அகத்துக்குரிய கலி, பரிபாட்டு பாவகை வழக்கொழிந்த நிலையில், புதிய உள்ளடக்கம் கொண்டு பழைய வடிவங்கொண்டவையாக வெளிப்பட்டிருக்க வேண்டும். கலித்தொகை பிற்காலத்தது என்பதற்கு, பாலைக்கலியில் இளவேனில் காலம் தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தும் காலமாகச் சுட்டப்பட, பழைய இலக்கியங்களில் கார்காலமே தலைவியை வருத்தும் காலமாகச் சுட்டப்பட்டிருப்பதன் மூலம் உறுதி செய்யலாம். அவ்வாறே தொடக்கத்தில் மக்கள் காதலுக்குரிய பரிபாடல் வடிவம் தெய்வமும் காதலும் இணைந்த ஒன்றாக பிற்காலப் பரிபாடல் வடிவமாக வெளிப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

            தொகையாக்க காலத்தில் சிற்றரசுகளை அழித்துப் பேரரசுகள் நிலைநிறுத்தப்பட்டது. பாண்டியர், சேரர்கள் தொகுப்பித்தவர்களாக அடிக்குறிப்புகள் சுட்டுகின்றன. இறையனார் களவியல் உரையில் அரசியல் நிலையில் பாண்டியர்களைச் சார்ந்தும் சமயநிலையில் சைவத்தைச் சார்ந்தும் சமணர்களுக்கு எதிராகச் சங்க நடவடிக்கையைக் காட்டித் தமிழை இறைவர்களோடு சேர்த்தும் கட்டமைக்கப்பட்ட முயற்சி வெளிப்படுவதாக கா. சிவத்தம்பி முதல் இன்றுவரை பல அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தொகையாக்க அரசியலுக்கு மாறாக, சோழர்கள் பற்றிய பாடல்கள் புறத்தொகைப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதும், பாண்டியர், சேரர்தம் முயற்சி பலனளிக்கவில்லையா? தொகையாக்க முயற்சியில் சோழர்தம் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

            தொகையாக்கத்திற்குப் பின்னரே, உரை முயற்சிகள் தொடங்குகின்றன. சமணராகிய இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியதும் பேராசிரியர், நச்சினார்க்கினியர் அதற்குப்பின் உரை எழுதியதும் வரலாற்றுண்மை. பத்துப்பாட்டு போன்றவற்றிற்கு நச்சினார்க்கினியரின் உரையை நாம் காணமுடிகின்றது. உரையாசிரியர்கள் மூலமாகவே சங்கப்பாட்டு என்பதும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பதும் திணை, துறை, கூற்று போன்றவையும் அகம், புறம் என்பதற்கு விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. உரையாசிரியர்களின் மகத்தான பங்களிப்பு என்பது, தொல்காப்பியம் மற்றும் பழந்தமிழ் நூல்களை இழக்காமல் காத்ததோடு தம்காலச் சிந்தனைகளுக்கேற்ப அவற்றை மறுவாசிப்பு செய்து இடையறவுபடாமல் காத்துவந்ததாகும்.

            அச்சுப்பண்பாடு அறிமுகமான 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான பதிப்பு முயற்சிகள் உரையாசிரியர்களுக்கடுத்த மாபெரும் பணியைச் செய்தது. ‘கொளு’ என்கிற அடிக்குறிப்புகள் இன்னாரை இன்னார் பாடியது என்ற வரையறைகள் இப்பதிப்புக் காலத்தில்தான் செய்யப்பட்டன. பிரதிபேதம், பாடபேதம் போன்றன உரையாசிரியர் காலத்தில் தொடங்கப்பட்டாலும் பதிப்புக் காலத்தில் அவை செம்மைவடிவம் பெறலாயின. மாற்றி எழுதுதல், நீக்குதல், இடைச்செருகல் போன்றவைகள் இப்பதிப்புக்காலத்தில் செய்யப்பட்டன.

            மேற்கூறியவற்றால், எழுதப்பட்ட காலத்திலிருந்து இலக்கண உருவாக்கம், தொகையாக்கம், உரையாக்கம், பதிப்பாக்கம் என்ற பல்வேறு படிநிலைகளில் பாடப்பட்ட பழந்தமிழ் நூல்கள் குறிப்பாக, தொகைநூல்கள் சமய, அரசியல், மொழிக்கல்வி என்ற பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு இன்றைக்குக் கைகளில் தவழுகின்ற இலக்கியங்களாக, இறுதிவடிவம் பெற்றவையாக, அடிப்படைத் தரவுகளாக விளங்குகின்றன என்பது புலனாகின்றது.

பயிலரங்கப் பொழிவிற்குப் பயன்பட்ட நூல்கள்

1.          மு.வை. அரவிந்தன்                                –           உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம்,

சிதம்பரம், 1983.

2.          க. கைலாசபதி                                      –           தமிழ் வீரநிலைக் கவிதை,

கு.வெ.பாலசுப்பிரமணியன்,

(மொழிபெயர்ப்பு), குமரன் பதிப்பகம்,

சென்னை, 2006.

3.          அ. பாண்டுரங்கன்                              –           தொகை இயல், தமிழ் ஆய்வரங்கம்,

புதுச்சேரி, 2007.

4.          பா. இளமாறன்                                   –           பதிப்பும் வாசிப்பும் : தமிழ் நூல்களின்

பதிப்பு மற்றும் ஆய்வு

சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.

5.          கா. சிவத்தம்பி                                  –           சங்க இலக்கியமும் கவிதையும் கருத்தும்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,

சென்னை, 2009.

6.          சிலம்பு நா. செல்வராசு                   –           சங்க இலக்கிய மறுவாசிப்பு –

சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள்

காவ்யா, சென்னை, இரண்டாம் பதிப்பு 2009.

7.          து. சீனிச்சாமி                                  –           செவ்வியல் இலக்கியம்

புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010.

8.          க. ஜவகர்                                        –           திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும்

காவ்யா, சென்னை, 2010.

9.          பெ. மாதையன்                              –           தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களில்

காலமும் கருத்தும்

நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2011.

10.        ப. மருதநாயகம்                           –           தமிழின் செவ்வியல் தகுதி

இராச குணா பதிப்பகம், சென்னை, 2012.

11.        துளசி ராமசாமி                           –           பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்களே

விழிகள் பதிப்பகம், சென்னை, 2012.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.ம.மதியழகன்

பேராசிரியர்

புதுவைப் பல்கலைக்கழகம்

இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

இலக்கியத்திறனாய்வின் பயன்கள்

திறனாய்வினால் சமுதாயத்திற்கும் இலக்கியப் படைப்பு வரலாற்றிற்கும் பயன்கள் உண்டாகின்றன. இலக்கியத் திறனாய்வில் கீழ்க்காணும் பயன்கள் உண்டாகின்றன.

  1. சிறந்த கலைப்படைப்புத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  2. இலக்கியக் கொள்கைகள் உருவாகின்றன.
  3. புதிய இலக்கியங்களைப் தூண்டப்படுகின்றனர்.
  4. இலக்கிய வரலாற்றிற்குத் தேவையான தகவல்கள் கிடைக்கின்றன.
  5. இலக்கியத் திறனாய்வு வரலாறு உருவாகிறது.
  6. இலக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் நீங்குகின்றன.
  7. சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
  8. கலையின் சிறப்பும் அதனைக் கற்போர்க்கு உண்டாகும் மகிழ்வும் சமூக வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  9. கலை, கலைக்காக மட்டுமன்று. கலை சமூகத்திற்காகவும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தல்.
  10. தனிமனிதரின் ஆளுமை, தனி இலக்கியச் சிறப்பு முதலியன அறிந்து கொள்ளப்படுகின்றன.

இலக்கியத் திறனாய்வின் பயன்கள் யாவை? | What are the benefits of literary criticism?

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

தன்னம்பிக்கை கட்டுரை – வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வாய்ப்புகளைப்-பயன்படுத்துங்கள்

          மனிதப்பிறவியும் உயிர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புதான். பல உயிர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு மனித பிறப்பிற்கு மட்டுமே கிடைக்கும். எனவே உலகில் கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் சிறந்த வாய்ப்புதான். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பலருக்கு வாய்ப்புகளைத் தேடிப்போக வேண்டும். அதாவது வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை கட்டுரை : வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

       படிக்கின்ற மாணவனுக்கு தன்திறனை வெளிப்படுத்த பருவத்தேர்வு ஒரு வாய்ப்பு. ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நழுவ விட்டார் என்பதை உணரவேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

             படித்த காப்பியக்கதை ஒன்று. வணிகனின் மகள் ஒருத்தி பத்தரை என்பவள். திருமணப்பருவத்தில் இருந்தாள். அப்போது இரவு நேரத்தில் இரத்தினங்களைத் திருடிச்செல்ல ஒரு கள்வன் வந்தான். வணிகன் வீட்டுக்குள் நுழைந்த அவனைப் பார்த்ததும் அவன் மீது காதல் வயப்பட்டாள். சில மாதங்கள் கடந்ததும் தன் தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் அவள் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக இருந்து தந்தையின் சம்மதத்துடனே திருமணமும் செய்து கொண்டாள். ஆண்டுகள் சில கடந்தன. ஒருநாள் ஏதோ காரணம் பற்றிப் பத்தரைக்கும் அவள் கணவனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டத்தில் அவள், “நீ ஒரு கள்வன் தானே என்று கூறிவிடுகிறாள். இதனை மனதில் வைத்துகொண்ட அவன் இவளை பழிவாங்குவதற்காக எதிர்பார்த்திருந்தான். ஒருநாள் பத்தரையிடம் குலதெய்வக்கோவில் ஒன்று மலைமீது உள்ளது. அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம்” என்று கூறினான். உடனே அவளும் மகிழ்ந்து தன்னை அணிகளால் அலங்காரம் செய்துகொண்டு புறப்பட்டாள். இருவரும் மலை உச்சிக்கு செல்கின்றனர். அங்கு ஒரு கோவில் உள்ளது. இது நமது குலதெய்வம் வணங்கு என்று கூறுகிறான். இவளுக்கு காரணம் புரிந்துவிட்டது. இவன் தம்மை கொலை செய்வதற்கு இங்கு அழைத்து வந்துள்ளான் என்று மனதிற்குள் தெளிந்து கொண்டு அவள் “தெய்வத்தை வணங்குவதற்கு முன்பு தங்களையும் மூன்று முறை வலம் வந்து வணங்கிக் கொள்கிறேன்” என்றாள். அவனும் சரி என்று தலையசைத்தான். உடனே கைகளைக் கூப்பி அவனை ஒன்று இரண்டு என்று வலம் வந்து மூன்றாவது முறையாக அவனைப் பின்னால் இருந்து தள்ளிவிட்டாள். அவன் மலையின் உச்சியிலிருந்து அதலபாதாளத்தில் விழுந்தான். இங்கு நீங்கள் கவனிக்க வேண்டும். அவளை அவன் கொன்றுவிடுவான் என்பதை அறிந்து, அவளே ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறாள்.  தன்உயிர் பிழைக்கும் வாய்ப்பு. இவ்வாறான நிலையில் வேறுவழியில்லை. தற்கொல்லியை முற்கொல்லல் என்பதை இங்கு காணமுடிகிறது.

சொல்லிக்கொண்டு வருவதில்லை வாய்ப்பு

            வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத்தட்டாது. வாய்ப்பு வருவதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படிப்பை முடித்துவிட்டு பள்ளி ஒன்றுக்கு வேலை தேடி செல்கிறீர்கள் அங்கு தலைமையில் இருப்பவர் எங்கே வகுப்பில் பாடம் நடத்துங்கள் பார்க்கலாம்” என்று கூறினால் உடனே மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவ்வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும். எனவே உங்களைத்தேடி வருவதை பிடித்துக் கொள்ள நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

           ஒரு கோயிலில் பூஜை செய்யும் குருக்கள் ஒருவர் எப்போதுமே இறைவனின் சிந்தனையில் இருப்பார். இறைவனின் நாமத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் அவ்வூரில் அதிக மழை பெய்தது. ஏரி நிரம்பியது. மாலை நேரமும் வந்துவிட்டது. ஒரு சிறுவன் ஓடி வந்து ஐயா மழை நீர் ஏரியில் சேர்ந்ததால் ஏரியின் கரை விரிசல் விட்டுள்ளது. அதனால் ஊர் மக்கள் எல்லோரும் மேடான பகுதியை நோக்கி செல்கின்றனர். நீங்களும் வாருங்கள் சென்று விடலாம்” என்றான். அவர் “என்னை காப்பாற்ற என் இறைவன் வருவார் நீ போ” என்று சொல்லி அனுப்பிவைத்தார். சிறிது நேரம் சென்றதும் சிறுவன் கூறியவாறே ஏரியின் சுவர் உடைந்து ஊருக்குள் நீர் வந்துவிட்டது. அப்போது மற்ற மக்கள் அனைவரும் ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இவரையும் அழைத்தனர் ஆனால் “நான் வணங்கும் இறைவன் என்னை காப்பாற்ற வருவார் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டார். சிறிது நேரம் சென்றது. நீர் நிறைய வந்து ஊரே நிரம்பிக்கொண்டு இருந்தது. அப்போது நீரில் யாராவது மாட்டிக்கொண்டு உள்ளனரா என்று பார்த்துக்கொண்டு இருவர் பரிசலில் வந்து வீட்டுக் கூறையின்மீது நின்றிருந்த இவரை அழைத்தனர். “இறைவன் நேரில் வந்து என்னை அழைத்தால் மட்டுமே வருவேன். உங்களுடன் நான் வரப்போவதில்லை. நீங்கள் செல்லுங்கள்” என்று கூற அவர்களும் சென்றுவிட்டனர். நீர் மட்டம் அதிகமாகி குருக்களை நீர் மூழ்கடித்தது. அவரும் இறந்து விட்டார். சொர்க்கத்திற்குச் செல்கிறார், அங்கு சண்டையிட இறைவனை அழைக்கிறார். அங்கிருந்த தேவர் ஒருவர் ஏனய்யா? என்று வினவ நடந்தவற்றை கூறிய குருக்கள் “இறைவன் என்னை காப்பாற்ற ஏன் வரவில்லை” என்று கூறி முடித்தார். அதற்கு அந்தத் தேவர் “ஐயா இறைவன் எப்போதும் நேரில் வரமாட்டார் மற்றவர் மூலம் நல்ல வாய்ப்புகளை நல்குவார். உமக்கு மூன்று முறை பிழைத்துக்கொள்ள வாய்ப்பளித்தார். அதுபுரியாமல் இத்தனைக்காலம் இறைவனை வணங்கி என்ன பயன்? இறைவனின் இந்தச் செயலைக்கூட அறியவில்லை” என்றார் தேவர். எனவே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும்போது அதை உணர்ந்து கொண்டு நழுவாமல் பிடித்துவிடுங்கள்.

        வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாய்ப்பை பயன்படுத்துவது. இன்னொன்று வாய்ப்பை உருவாக்குவது.

எதுவும் நடக்கலாம்

           மனித சமுதாயத்தில் அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். நாளை என்பது இல்லாமலே போகலாம். அவ்வாறு நிலையற்ற வாழ்க்கை வாழும் இந்தச் சமுதாயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை இரும்பை கவரும் காந்தம் போல் இழுத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறுவதற்காகப் பத்துப்பேரை கூட கீழே தள்ளிவிட்டு மேலேறும் மனிதர்கள் வாழும் சமூகம் இது. எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும். தானே பெரிய பதவி வகிக்க வேண்டும். இதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை முகவரி இல்லாமல் செய்வது என்று சிலர் முனைப்புடன் இருக்கும் இன்றையச்சூழலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

         படித்த மகாபாரதக்கதை ஒன்று. அழகான புறாக்கள் இரண்டு வானில் பறந்து கொண்டு காதல் செய்தன. பின்னர் அடர்த்தியான மரத்தில் அமர்ந்து கொண்டன. சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடன் ஒருவன் இரண்டு புறாக்களையும் ஒரே அம்பு கொண்டு வீழ்த்த குறிபார்த்தான். அதை கவனித்த பெண்புறா அச்சம் கொண்டு ஆண் புறாவிடம் “நாம் இந்த இடம் விட்டு பறந்து விடலாம் வாருங்கள் கீழே கவனியுங்கள் வேடன் நம்மை குறி பார்க்கிறான்” என்றது. ஆண் புறா”அவசரப்படாதே அவ்வாறெல்லாம் பறக்க முடியாது. மேலே வானத்தில் பார். நாம் பறந்தால் பருந்துக்கு இரையாவோம்” என்றது. பெண் புறா பயத்தில் நடுங்கியது” மேலே பருந்து சுற்றுகிறது. கீழே வேடன் குறிபார்க்கிறான். இங்கு அமர்ந்தாலும் தவறு. மேலே பறந்தாலும் தவறு. இன்று நாம் இறப்பது உறுதி”என்றது. “இல்லை அவ்வாறெல்லாம் அச்சம் கொள்ளாதே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். என்றது ஆண்புறா. அதே நேரத்தில் வேடன் அம்பை குறிபார்த்து விட்டான். விடும்போது அவனுடைய பாதம் எதன் மீதோ வைக்கப்பட்டது. அவன் பாதத்தில் ஏதோ ஒன்று சுருக்கென்று கடிக்க அவன் வில்லின் குறிதவறி மேலே வட்டமிட்ட பருந்தின் மேல் சென்று அம்பு தைத்தது. அப் பருந்து கீழே தரையில் வீழ்ந்தது. அந்த வேடனும் பாதத்தில் பாம்பு கடித்ததால் வலியால் துன்பப்பட்டான். இப்போது இரண்டு எதிரிகளும் முடிந்து விட்டனர். எமனுடைய மேல் கீழ் பற்களுக்கு இடையே அகப்பட்டாலும் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பும் உண்டு. பின்னர் அந்தப் புறாக்கள் ஆனந்தமாக மேலே பறந்து சென்றன.

சோம்பலுடன் நட்பு வேண்டாம்

          சிலர் படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடப்பார்கள். சிலர் அதிக சம்பளம் கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி காலத்தைக் கழிப்பார்கள். இந்த இருவகையினருமே வாழும் வாய்ப்புகளை நழுவ விடுபவர்கள். இவ்வாறான மனிதர்களிடம் நட்பு கொண்டால் மற்றவரையும் அவர்களைப்போல சோம்பேறிகளாக மாற்றிவிடுவர்.

       சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பு முடிந்ததும் வேலைக்குச் சென்று அதற்குத் தன்னை தகுதியாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை சிறிது சிறிதாகச் செய்து தன்நிலையை உயர்த்திக் கொள்வர். இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் கற்றுக்கொள்பவை ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு பண்பு இருக்கிறது. இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் தோல்வி அடைந்தவரிடமும் வெற்றி பெற்றவரிடமும் எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்ற அனுபங்களைக் கற்றுக்கொள்ளலாம். எனவே கற்றுக்கொள்ள வாய்ப்புகள் எவர் மூலமாகவும் கிடைக்கலாம். எவரையும் சாதாரணமாக எண்ணிவிடலாகாது. பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இல்லை என்றால் நீங்களே பலருக்கு உதவுமாறு வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

     வாய்ப்புகளை ஏற்படுத்தும் திறன் சரிவரப்பெற்ற நீங்கள் எதிர்காலத்தில் மெய்யாகவே பெரிய நிர்வாகத்திற்கு எஜமானர்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

திறனாய்வு உத்திகள் என்றால் என்ன? உத்தியின் வகைகள் யாவை?

இலக்கியத் திறனாய்வு உத்திகள்

           உத்தி என்னும் சொல் பல்பொருள் நிலையினது. ‘உந்து’ எனும் அடிப்படைச் சொல் தொடர்பில், ஆபரணத் தொங்கல், சீதேவி உருவம் பொறித்த தலையணி என்னும் பொருண்மைகள் அமைகின்றன. “உக்தி என்ற அடிப்படையில் பேச்சு என்னும் பொருள் உணர்த்தப்படுகின்றது. வடமொழிச் சொல் மரபுத் தொடரில் சேர்க்கை, முப்பத்திரண்டு வகை உத்திகள் போன்றவை சுட்டப்படுகின்றன.

உத்தி என்பதன் விளக்கம்

          ஆங்கிலத்தில் டெக்னிக் என்னும் சொல்லால் இவ்வுத்திநிலை குறிக்கப்படுகின்றது. உந்துதல், பொருத்துதல் என்ற வினை அடிப்படையில் பாடுபொருளைக் கவிஞன் பொருத்தமுற வெளியிடும் பாங்கு அல்லது முறை உத்தி என்பதாகக் கொள்ளப்பட்டது எனக் கருதலாம். இந்த தனிச்செயல்முறை நுணுக்கத்திறம் பல வகைகளாக விரிந்து வெளிப்படுவதனை இலக்கியக் கலைச்சொல் அகராதிகளும், இலக்கியத் திறனாய்வு நூல்களும், இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளும் காட்டுகின்றன. ஒவ்வொரு கவிஞனின் தனித்தன்மையும் இவ்வுத்திகளைக் கையாளும் முறையில் வெளிப்படுகின்றது.

         மரபு உத்திகளைப் பயன்படுத்தலும், புதுவகை உத்திகளை உருவாக்குதலும் என இரு அடிப்படை நிலைகள் அமைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இலக்கியத் திறனாய்வின் நோக்கமே படைப்பாளனின் உத்திகளை இனம் கண்டு கொள்வதில்தான் நிறைவுறுகிறது எனும் எண்ணம் உத்தி பற்றிய ஆய்வின் முதன்மையை உணர உதவுகிறது. படைப்பாளனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், படைப்பாற்றலுக்கு ஏற்பவும் உத்திகள் உருவாகியும் பெருகியும் அமைவதினால் உத்திபற்றிய கொள்கைகள் கட்டுப்பட்ட வரையறைக்கு அப்பாற்பட்டுச் செல்கின்றன எனக் கூறலாம்.

உத்தியின் இயல்பு

       பல்வகைத் திறனாய்வு முறைகளில் உத்திமுறைத் திறனாய்வும்ஒன்றாக அமைகின்றது. செய்தி தெரிவிப்பதைவிட ஆற்றலுடைய வெளியீடே உத்தியின் நோக்கமாக அமைகின்றது எனலாம். இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் அமையும் பொருள், வடிவம், வெளியீடு ஆகிய மூவிடத்தும் உத்திகள் இடம்பெற வாய்ப்பு அமைகின்றது.

பகுப்பு நெறி

    பொருளும், வடிவமும், வெளியீடும் தாமே உத்திநிலை பெற்றும், தமக்கேற்ற உத்திவகைகள் பெற்றும் அமைகின்றன. எல்லா வகை இலக்கியங்களுக்கும் பொதுவான சில உத்தி வகைகள் அமையலாம். அதே வேளையில் சில இலக்கிய வகைகளிலேயே கையாளப்படுவனவும் அமையலாம். இவற்றில் முன்னதைப் பொது உத்தி எனவும் பின்னதைச் சிறப்புத்தி எனவும் குறிப்பர்.

          பொதுவாக இலக்கியத்தைப் பொருளும் அமைப்பும் என இரு பகுப்புக் கொண்டு அவற்றிற்கேற்ப பொருள் உத்தி அமைப்பு உத்தி என்றோ, அகஉத்தி – புறஉத்தி என்றோ பகுக்கலாம். எனினும் இலக்கிய வடிவின் வெளியீட்டு முறையில் கதை உத்தி, காப்பிய உத்தி, நாடக உத்தி என்னும் முறையில் காண்பது பொருத்தமானதாகும்.

         தமிழ்மொழி இலக்கணத்தின் ஐம்பகுப்பு அடிப்படையில் உத்திகளை அணுகுதலும் உண்டு. எழுத்து உத்தி, சொல் உத்தி, பொருள் உத்தி, யாப்பு உத்தி, அணி உத்தி என ஒலிநிலை உத்தியை எழுத்து பகுப்பிலும், தொடர் உத்தியைச் சொல் பகுப்பிலும், மடக்குப் போன்ற மீண்டு வரல்களை அணிப் பகுப்பிலும் இவ்வாறு அடக்கலாம்.

உத்தியின் வகைகள்

       உத்திகள் எவையெவை என்பது பற்றிய எண்ணம் பல்வகை நூல்களில் பரந்து அமைகின்றது. நடை, கவிதை, மொழி, ஒலிநயம் போன்றன இதனுள் அடக்கப்படுகின்றன. உரையணிகளாக உருவகம், உவமை,மீமரபு உவமை போன்றனவும் இங்கு இடம் பெறும். அங்கதப் போலி ஓர் ஆய்வுமுறை இலக்கிய உத்தியாகக் கொள்ளப்படுகின்றது. பிற எல்லாக் கலைகளையும் விட இலக்கியம் ஏற்றமும், சிறப்பும் கொள்வதற்கு ஏற்ப, அதன் உத்திகளும், உயர்வும், பொருத்தமும், வகைமையும், பயிற்சியும், புதுமையும் இலக்கியத் திறனாய் வகைகளும் வளர்ச்சியும் கொண்டு அமைகின்றன. பல்வகை உத்தி பற்றிய விளக்கம் இக்கருத்திற்கு அரண் செய்யும். எனினும் உத்திகளை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். அவையாவன,

1.ஒலிநிலை உத்திகள்

2.சொல்நிலை உத்திகள்

3. பொருண்மைநிலை உத்திகள்

4.தொடரமைப்பு உத்திகள்

5.கூற்றுநிலை உத்திகள்

6.வெளியீட்டுநிலை உத்திகள்

7.அணிநிலை உத்திகள்

8. வடிவநிலை உத்திகள்

9.அமைப்புநிலை உத்திகள்

10.யாப்புநிலை உத்திகள்

என்பனவாகும்.

இலக்கியத்திறனாய்வில் உத்திகள்

1.ஒலிநிலை உத்திகள்

       மொழிக்கு அடிப்படையாக அமையும் ஒலி, சில உத்தி வகைகளுக்கும் அடிப்படையாக அமைகின்றது. சொற்பொருளுக்கும், உணர்வு வெளியீட்டிற்கும், பிற சூழல்களுக்கும் ஏற்பக் கவிஞன் இலக்கியத்தில் ஒலியைப் பயன் கொள்ளும் போது ஒலியடிப்படை உத்திகள் உருவாகின்றன. ஒலிக்குறிப்புச் சொற்களை (Onomatopoeal) பயன்படுத்தல் ஒரு வகை ஒலி உத்தியாகின்றது.

‘நெடுநீர் குட்டத்துத் துடுமென பாய்ந்து (புறம்243)

‘கண்ண டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ (மலைபடு-352)

        தொல்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்பாகிய வண்ணம் ஒலி அடிப்படையில் பலவகைகளைக் கொண்டு அமைதல் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

‘மாவா ராதே மாவா ராதே’ (புறம் – 273 – 1)

‘வாரா ராயினும் வரினு மவர்நமக்

சியாரா கியரோ தோழி’ (குறுந் – 110 -1,2)

        போன்றன முறையே நெடுஞ்சீர் வண்ணம், அகைப்பு வண்ணத்திற்குச் சான்றாக்கப்படுகின்றன. இலயப்போக்கும் (Cadence) இவற்றுடன் ஒலி உத்தியாக வைத்துக் கருதத்தக்கது எனலாம். கருத்து அழுத்தம் தரும் ஒலிமுடிவு என்ற நிலையில் ஆசிரியத்தின் ஈற்று ஏகாரம், வெண்பாவின் ஓரசை முடிபு போன்றன கருதத்தக்கன.

‘பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே’ (ஐங்குறு – 55 4)

‘யாண்டும் இடும்பை இல’ (குறள் – 4)

2. சொல்நிலை உத்திகள்

      சொல் ஆட்சி, சொற்பயிற்சி, சொல்திறன் இவற்றின் அடிப்படையில் வருவன சொல்நிலை உத்தியாகக் கருதத்தக்கன. கவிதையின் திறன்மிக்கச் சொல்நடைக்கு வாய்ப்பாகப் பல சொல்நிலை உத்திகள் அமைகின்றன. அடைச்சொற்கள் (epithets) தொடர்ந்த ஆட்சி காரணமாகவும், குறிப்பிட்ட பொருள் தேர்ச்சிக் காரணமாகவும் உத்திநிலை பெறுகின்றன.

      இளங்கோவடிகள் பன்முறை பயன்படுத்தும் ‘மாமலர் நெடுங்கண் ‘மாதவி’: மாடலனைக் குறிக்கும் ‘மாமறை முதல்வன்’; பழந்தமிழ் இலக்கியத்தில் பன்முறை பயிலும் ‘மாந்தளிர் மேனி’ போன்றவற்றை இங்கு கருத்தில் கொள்ளலாம்.

     தொன்மைச் சொல் மீது ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக பழஞ்சொற்களைப் பயன்படுத்தலும் கவிதை முறையாக அமைகின்றது. இலக்கிய நடையில் பின்பற்றப்படும் உத்திமுறையாக இது காணப்படுகின்றது. இல்லக்கிழத்தி, இளிவரல், அல், அப்பு, புகன்றிடுவேன், சூட்டுவேன் போன்ற முற்காலச் சொல்வடிவங்கள் மிக அண்மைக் கால இலக்கியத்துள் பயின்று வருவதை சான்றாகக் காட்டலாம்.

     பல்பொருளுடைய ஒரு சொல் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில் ஓரிடத்தில் பயன்படுத்தப்படுவதும் ஒரு உத்திமுறை ஆகும்.  சான்று.

‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட’ (சிலம்பு – 53-54) என்பதாகும்.

       கவிதை அடியின் தொடக்கமும், முடிவும் ஒரே சொல்லாக அமையப் பெறுவதும் உத்திவகையாகக் கருதத்தக்கதாகும். தொடர், தொடர் பகுதி என்பதிலும் இது அமையும். உதாரணமாக,

‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாத் தலை’ (குறள் – 411)

என்பன போன்று வரும் குறட்பாக்களைக் குறிப்பிடலாம்.

3. பொருண்மை நிலை உத்திகள்

       சொல்நிலை உத்திகளுடன் தொடர்பு கொண்டு அமைவன பொருண்மை அடிப்படை உத்திகள். சொல்கொள்ளும் பொருண்மை காரணமாக ஏற்படும் உத்தி. பொருண்மையை அடிப்படையாகக் கொண்ட வெளியீட்டு உத்தி, முரண்பொருண்மை, மயக்கப் பொருண்மை, பல் பொருண்மை பெருக்கு என இப்பொருண்மை உத்திகள் பரந்து விரிகிறது.

முரண் உத்தி:

       முரணான அல்லது தம்முள் எதிரான இரு கருத்துக்களை அருகருகே அமைத்துக் கூறும் முரண் உத்திமுறை பொருண்மை உத்திமுறையின் வகைகளுள் ஒன்றாக அமைகின்றது. சான்றாக,

‘ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண்’ (ஆத்திச்சூடி – 8,9)

‘நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று’ (குறள் -222)

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

4. தொடரமைப்பு உத்திகள்

          தொடரமைப்பு அடிப்படையிலும், பல உத்திகள் அமைந்து காணப்படுகின்றன. விளி, கேள்வி, பதில், எதிர்வாதம், வியப்பு. இணைத்தொடர், பழமொழி எனப் பல வகைகளாக இது விரிகின்றது. முன்னிலை மொழிகளும், படர்க்கை அழைப்புகளுமாக விளித்தொடர்கள் வாழ்வில் அமைவது போன்று இலக்கியத்திலும் அமைகின்றன.

     கேட்பன போலவும் கிளக்குந போலவும் கொண்டு ஞாயிறு, திங்கள், அறிவு, நாண் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி மொழியும் தலைவியின் காமமிக்க கழிபடர்கிளவியாக அமைவன இலக்கியத்திற்கு உத்தியாக அமைகின்றது

‘தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்தேரும்.

எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க

அம்மென் இணர அடும்பு கான் அன்னங்காள்

நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்’

என்றமைந்த சிலப்பதிகாரப் பாடலை தொடரமைப்பு உத்திக்குச் சான்றாகக் காட்டலாம்.

5.கூற்றுநிலை உத்திகள்

          தொடரமைப்பு உத்திகளிலிருந்து சிறிது வேறுபட்டு அமைவன கூற்றுநிலை உத்திகள். இவற்றை பாத்திரங்கள் செய்திகளைத் தரும் கூற்று உத்திகள் எனவும், ஆசிரியன் இலக்கியத்தை அளிக்கும் முறைவகை உத்திகள் எனவும், இலக்கியத்தில் அமையும் கூற்றுநிலை உத்திகள் எனவும். இலக்கியத்தில் பயன்படும் வெளியீட்டு முறை உத்திகள் எனவும் பலநிலைகளில் கூறலாம்.

     இலக்கியத்தை அளிக்கும் முறையில் நனவோடை அல்லது உட்தனிமொழி (Interior Monologue) என்பனவும் கூற்றுநிலை உத்தியாகக் காணப்படுகின்றன. உளவியல் புதின ஆய்வாளர் இதனைச் சிறப்பாகக் சுட்டுகின்றனர். தலைவி நெஞ்சுக்கு உரைப்பதாக வரும் அகப்பாடலில் இவ்உட்தனிமொழி அமைகின்றது.

“உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ

யாருழைச் சேறிஎன் நெஞ்சு” (குறள்-1248)

என்ற குறட்டாவினை கூற்றுநிலை உத்திமுறைக்குச் சான்று காட்டலாம்.

6.வெளியீட்டு நிலை உத்திகள்

         வருணனை, கற்பனை, எதிர்மை (Irony) போன்றவை வெளியீட்டு நிலை உத்திகளாக அமைகின்றன. சில நோக்கம் கருதியும், பயன் எதிர்பார்த்தும், நயம் விரும்பியும், நிறைவு விழைந்தும் இவ்வுத்திகள் கையாளப் பெறுகின்றன.  

        பின்புல வருணனை உத்திக்கு கடனாக அமைவதை அகப்பாடல்கள் காட்டுகின்றன. காலம் மற்றும் இடம் பற்றி குறிப்புத் தருவதோடு உள்ளுறை இறைச்சிக்கும் இது களனாகின்றது. காப்பியம் போன்ற நெடும் யாப்புகளில் பாத்திர வருணனை, செயல் வருணனை, செலவு வருணனை போன்ற பல அமைந்து உறுப்பு நிலைபெறுகின்றன.

       வருணனை என்பது சொல்லில் அமைக்கப்படும் காட்சியாகும். ஒரு பொருள், காட்சி, மாந்தரின் தோற்றம் அல்லது பண்பினைக் காட்சிப் படுத்துவது வெளியீட்டு உத்தியாகும். பண்பு. பாத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டவோ, மாற்றியமைக்கவோ, கதைக் கருவின் வளர்ச்சிக்கு வாய்ப்பாகத் தடைகளை ஆக்கவோ, நீக்கவோ இது உதவுகின்றது.

“தாழ்இருள் தூமிய மின்னித் தண்ணென

வீழ்உறை இனிய சிதறி, ஊழின்

கடிப்புஇகு முரசின் முழங்கி, இடித்திடித்தும்

பெய்க இனி, வாழியோ பெருவான்.. -” (குறு-270)

        என்ற குறுந்தொகைப் பாடலில் மழைக் காட்சி உணர்த்தப்படுகின்றது. கண், செவி, ஆகிய இருபுலனுக்கும் ஏற்ப இச்சொற்காட்சி அமைந்துள்ளது. மேற்கண்ட பாடலை வெளியீட்டு உத்திக்கு தக்கச் சான்றாகக் காட்டலாம்.

7.அணிநிலை உத்திகள்

        கூற்றுமுறை உத்திகளுடன் ஓரளவு தொடர்பு கொள்வன அணிநிலை உத்திகள். இலக்கிய அமைப்பில் பெருமளவில் இவை பயன்படுகின்றன. அழகு, விளக்கம், தெளிவு. நயம் போன்ற பன்முகப் பயன்பாட்டில் இவை இடம் பெறுகின்றன. கூற்று முறை அணிகளை (Figure of Speach) மூன்று வகையாகப் பிரித்து ஆராய்கின்றனர். ஒன்று கூறுகளை இணைப்பதால் உருவாவது; இரண்டு கூறுகளை நீக்குவதால் உருவாவது; மூன்று ஒத்த அல்லது இணையான ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

        இவ்வாறன்றி, காதுக்கு நயம் அளிப்பன; மனத்துக்கு இன்பம் அளிப்பன; இரண்டையும் கவருவன என்ற பிறிதொரு அடிப்படையிலும் மூன்று பகுப்புக்களில் காண்பது உண்டு. உவமை, உருவகம் முதலான அணிகளின் பயன்பாடு பல்வேறுபட்டதாக  அமைகின்றது.

          தெளிவுப்படுத்தவும், விளக்கம் காட்டவும், ஊக்கம் ஊட்டவும். இயங்காப் பொருளை இயக்கவும், தொடர்பினைத் தூண்டவும், நகைச்சுவை உணர்வினை எழுப்பவும், அழகுணர்ச்சியை ஏற்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. முருகியல் இன்பப்பயன் அணிநிலை உத்திகளின் முதன்மை நோக்காக அமைகின்றது.

        அணிகளுள் உவமையே தலைமையும், சிறப்பும் பொருந்தியதாகக் ஒப்புமைப்படுத்திக் கூறும் இவ்வுவமைகள் இலக்கியத்திற்கு நயம் கருதப்படுகின்றது. வெவ்வேறு வகையைச் சேர்ந்த இருபொருள்களை சேர்க்கின்றன. உவமைகள் கையாளப் பெறாத இலக்கியங்களே இல்லை என அறுதியிட்டுக் கூறலாம்.

       உவமைக்கு அடுத்து இடம் வகுப்பது “உருவகம் எனலாம். கருத்தும், கருவியும் ஆகிய இரு கூறுகளால் இவ்வுருவகம் அமைந்ததாக விளக்குவர். இவற்றுள் கருத்து என்பது கூறவிழைந்த பொருள்; கருவி என்பது அக்கருத்து வெளிவரும் உருவம்.

இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார காவியத்தில்,

“கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழிந்தாங்கு

இருகருங் கயலோடு இடைக்குமிழ் எழுதி

அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்

திங்களும் ஈண்டுத் திரிதல் உண்டுகொல்”

             என்று இந்திரவிழா காணவந்த பெண்களைத் திங்களாகவும். வானவல்லியாகவும், கமலமாகவும், கூற்றமாகவும் காட்டுவது முழு உருவகமாக அமைகின்றது. உருவகம் பல ஒருபொருள்மேல் தொடர்ந்து வந்து ‘மாலை உருவகமாக அமைதலும் உண்டு.

”———————————————–வானச்

சோலையிலே பூத்த தனிப்பூவோ, நீதான்

சொக்க வெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ”

       என்று தம் புரட்சிக்கவி காவியத்தில் ‘நிலவினை’ மாலை உருவகமாக அமைத்துக் காட்டியிருப்பது உருவக உத்தீக்குச் சான்றாகிறது.

       நுண்பொருளுக்குப் பருப்பொருள் வடிவம் கொடுத்து ஆற்றல் உடையதாகச் செய்து. இலக்கியப் படைப்பிற்கு உதவுவதில் உவமையும். உருவகமும் முன்னிற்கின்றன. இவ்வுருவகம் குறியீட்டு நிலைக்கு உயரும் போது பிறிதொரு உத்தி உருவாகின்றது (Symbol) குறியீட்டின் சிறப்பு அது உணர்த்தும் குறிப்புப் பொருளிலும், உருவகத்தின் நேரடித் தொடர்பினை விட்டு மீள்வதிலும் அமைகின்றது என்பர்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்ததுகாடு – தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

என்ற பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ சிறந்ததொரு குறியீடு எனலாம்.

          உணர்வுக்கு முதன்மை கொடுத்து இலக்கியம் இயற்றப்படுகிறது. சுவையணி, மெய்ப்பாடு பற்றிய எண்ணங்கள் இங்கு சிந்திக்கத்தக்கது. படைப்போனின் உணர்வு வெளிப்பாடும், கற்போனின் உணர்வுப் பிரதிபலிப்பும் ஆகிய இருநிலைகள் இங்கு அமையலாம். தன்னுணர்ச்சிக் கவிதையில் கவிஞனின் சொல்லாட்சி அவன் உணர்வை வடித்துத் தருவதில் வெற்றிக் காண்பதனை உத்திச் சிறப்பாகக் கொள்ள முடிகின்றது. உணர்வின் மிகுதிக்கேற்பச் சொல், தொடர், வெளியீட்டமைப்பும் உருவாகின்றன.

“பார், சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்

எத்தனை தீப்பட்டெரிவன? ஓகோ!

என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்! வெம்மைத் தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி

நீலப் பொய்கைகள்! அடடா…” (பாஞ்சாலி சபதம் – 152)

எனும் பாரதி பாடல் அடிகள் இதற்குச் சான்றாகின்றன.

8. வடிவநிலை உத்திகள்

      அணிநிலை உத்தியினின்று ஓரளவு வேறுபட்டு நிற்பன, அழகு, நயம், புதுமை, பயன் போன்ற பல்நோக்குக் காரணமாக அமைவன வடிவுநிலை உத்திகளாகும். நூல் அல்லது இலக்கிய வகைக்கு ஏற்ப அதன் உத்திகள் வேறுபட்டு உருவாகின்றன. எல்லா மொழியிலும் பெரும்பாலும் பண்டைய இலக்கியங்கள் செய்யுள் வடிவில் அமைந்தமையால் யாப்பு உத்திகளும் இடம்பெற வாய்ப்பு மிகுகின்றது.

       காப்பியம், நாடகம் போன்ற தொடர்நிலை இலக்கியங்கள் பல அமைப்பியல் உத்திகட்கு கடனாகின்றன. பாடு பொருள் ஆக்கத்திற்குக் கவிதைத் தலைவியின் அருள் வேண்டுதல் (INVOCATION) காப்பியத் தொடக்க உத்தியாக அமைகின்றது. காப்பியத்துக்கு மட்டுமன்றி எந்த நூலுக்கும், இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும் இறைவாழ்த்துத் தொடக்கம் இடம் பெறுவது மரபுத் தொடர்ச்சிக்காட்டும் உத்திவகைகளுள் ஒன்றாக அமைதல் குறிப்பிடத்தக்கது.

      காப்பியக் கதைத் தொடக்க உத்தியாக நடுவில் தொடங்குதல் என்பது அமைகின்றது. காப்பிய உத்தி நிலையிலிருந்து பரந்து தற்காலத்தில் நாடகம், கதை, புதினம் போன்ற புனைவுகளுக்கும் இது விரிந்துள்ளது.

        இடைக்காட்சி (Interlude) பண்டை நாடக் கூறாக அமைந்துள்ளது. இடைவேளையை நிரப்பி இவை அமைகின்றன. குழுப் பாடகரும் (Chorus) நாடகப் போக்கிற்கு உதவும் உத்திநிலையில் நாடகாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டனர்.

       நகைச்சுவை இடையீடு தொடர்நிலை இலக்கியத்தின் மற்றொரு உத்தியாகத் தென்படுகிறது. ஒரு காட்சியாகவோ, கிளைக்கதையாகவே கூட இது அமையமுடியும். சீரியமுனைப்பு உள்ள நாடகத்தில் இடையில் வந்து உணர்வுத் தணிப்புச் செய்தல் இதன் முக்கிய நோக்கமாக அமைகின்றது. முன் நிகழ்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைத்து பின் தொடரும் நிகழ்வுக்கு மனத்தைச் செலுத்தவும் இது உதவுகிறது. சிலம்பில் கொலைக்களக் காட்சிக்குப்பின் அக்கொடுமையின் உணர்வுத் தணிப்பாசித் தொடரும் ஆய்ச்சியர் குரவையின் இசையும் ஆடலும் இங்கு நினைக்கத்தக்கன. சிலப்பதிகாரம் காப்பியமாயினும், நாடகப் பாங்குடைமை பற்றி இக்கூறு இணைவுப் பொருத்தம் புலப்படுகின்றது.

          சிக்கல் அவிழ்தல் (Denuouement) தொடர்நிலை இலக்கிய முடிப்பு உத்தியாகக் கருதத்தக்கது. நாடகம், காப்பியம், கதை போன்ற பலவகை இலக்கியங்கள் இதனைக் கொண்டு முடிகின்றன. தொடக்கம் முதல் முடிவுவரை ஆக்க அமைப்புக் கூறுகளுடன் இணைந்து வரும் இவ்வுத்தி முறைகளுடன், அடியார்க்கு நல்லார் கூறும் முகம், பிரதிமுகம், கருப்பம். விளைவு. துய்த்தல் ஆகியனவற்றை இணைத்து நினைக்கலாம். கதைப் போக்குக்கு உரிய படிநிலை உத்திகளாக இவை அமைகின்றன எனலாம்.

9.அமைப்புநிலை உத்திகள்

          தொடர்நிலை இலக்கியங்கள் சிலவற்றின் இவ்ஆக்க அடிப்படையின் அமைப்பு உத்திகள் ஒரு பாலாக, பிற சில கூறுகளின் அடிப்படையிலும் அமைப்பு உத்திகள் காணப்படுகின்றன. அமைப் பொருண்மைகள் சில இலக்கங்களிடையே அமைந்து, அவற்றை ஆட்சிநிலை உத்தியாகக் கருதச் செய்கின்றன. ஒரு அடிப்படை நிகழ்வுக் சூழல், பாத்திரம் அல்லது உருவருணனையில் இவ்அமைப்புப் பொருண்மை வாழ்வியலிலும் அவ்வாறே இலக்கியத்திலும் அமைந்து தொன்மை வகை அமைப்பொருண்மையாகச் சுட்டப்படுகின்றது.

       ஒரு பெண் கல்லாகுதலும் மீண்டும் தன் உருப்பெறலும், கண்ணகி கூறும் கற்புடைப் பெண் கதையிலும் அகலிகை வாழ்விலும் அமைந்து நிகழ்வுச் சூழலில் ஒருமை காட்டுகின்றது. கணவனால் கைவிடப்பட்ட பெண், அனாதைக் குழந்தை, மாற்றாந்தாய் போன்ற பல பாத்திரங்கள் பலகால பல்வகை இலக்கியங்களில் அமைந்து பாத்திரம் – பண்பு அடிப்படையில் அமைப் பொருண்மை காட்டுகின்றன. சாபமளித்தல், போரில் வீரச் செயல்புரிதல், நெய்தல் தலைவி காமம் மிக்க கழிபடர்க்கிளவியுடன் இரங்கல் போன்ற பலவற்றின் பயிற்சியால் செயல் அமைப் பொருண்மை காணப்படுகின்றது.

      பழமையான கருத்து ஒன்று மீண்டும் இலக்கியத்தில் மற்றும் கற்பனைப் படைப்பில் பயின்று வருவதற்குக் காரணம் அது படைப்போனின் ஆழ்மனத்தில் பதிந்து கிடத்தலே எனவும் இத்தகு கருத்துகள் மக்களின் ஆழ்மனப் பதிவுகள் எனவும் உளவியல் அடிப்படையில் கருதுவர். இவ்வாறு ஒர் அடிப்படை அமைப்பொருண்மையைக் கையாளுவதன் வாயிலாகக் கவிஞன் தன் எண்ணங்களை வெளியிடுவதாலும், தன் நோக்கம் நிறைவேறுவதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாலும் அவை உத்திநிலை பெறுகின்றன எனலாம்.

10. யாப்பு நிலை உத்திகள்

       யாப்பு உத்திகள் செய்யுள் இலக்கிய வகைகளில் மிக இன்றியமையாத இடம் பெறுகின்றன. செய்யுளின் ஒழுங்கமைப்புக்கு மிகத் தேவையான உத்திநிலையை யாப்பு வடிவம் அளிக்கிறது. செய்யுள் அடியின் பொருள் ஒழுங்கு, பாடலின் ஓசை ஒழுங்கு, ஒலி விட்டசை போன்ற பல கூறுகளைக் கருதுவதற்கு இடம் அமைகின்றது.

         யாப்பின் இன்றியமையாக் கூறாக ஓசையொழுக்கு அமைகின்றது. செய்யுளின் ஆக்க உறுப்புகளில் இது இடம் பெறுகிறது. படைப்பாசிரியனின் கருத்து, பொருள் இவற்றிற்கேற்ற வெளியீட்டு நிலையில் உருவாகும் பாங்கு இதன்கண் அமைவதால் இதில் ஆக்குவோனின் தனித்தன்மையும் வெளிப்படுகின்றது. சிறந்த பாடல்களில் உணர்வோடு ஒன்றியே ஓசையொழுங்கு புலப்படுகின்றது.

      கவிஞனின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அவன் கையாளும் பாடுபொருளுக்கு ஏற்பவும் யாப்பு உத்திகள் உருவாகின்றன; கையாளப்படுகின்றன. இதனால் மரபு யாப்பு வரைமுறைக்கு உட்பட்டே இலக்கியம் பலவும் ஆக்கப்படுகின்றபோதும், உத்தி வேறுபாடுகளும், புதுமைகளும், தனித்தன்மைகளும் இடம் பெறுகின்றன.

          வெளியீடே உத்திக்கு மிகுதியான இடம் அளித்த போதும், வெளியீட்டுக் கூறுகளே பெரும்பான்மையாக உத்தி உருப் பெற்றபோதும், பொருளும் வடிவும் கூட உத்திக்கு இடனாயும் உத்தியாயும் இயன்ற நிலை மேற்கண்ட செய்திகளால் புலப்படுகின்றன. இதன் அடிப்படையில் இலக்கியத் திறனாய்வு உத்திகள் அமையப் பெற்று ஆய்வு மேற்கொண்டு இலக்கியத்திற்கு வலிமையும், பொலிவும் சேர்க்கின்றன எனில் அது மிகையாகாது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »