Wednesday, July 23, 2025
Home Blog Page 26

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

     தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 26+8=34 என்று குறிப்பிடுகின்றது. பிற்கால யாப்பியல் நூல்களான யாப்பருங்கலக்காரிகை, 8 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம்), யாப்பருங்கலம் 7 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு), காக்கை பாடினியம் மற்றும் இலக்கண விளக்கம் 6 உறுப்புகளையும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை), வீரசோழியம் 4  உறுப்புகளையும் (அசை, சீர், அடி, தொடை), கொண்டுள்ளது. பிற்கால யாப்பியல் நூல்களில் அசை என்பது பொதுவாக கூறப்பெற்றுள்ளது.  தொல்காப்பியர் அசையை நான்காகப் பகுக்கிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் அதை இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன. செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான அசை எனும் உறுப்பை மையமாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொல்காப்பியர் கூறும் அசை வகைகள்

            தொல்காப்பியர் அசையை மூன்றாவது உறுப்பாகக் கொண்டுள்ளார். இதனை, இயலசை, உரியசை என்று குறிப்பிடுகிறார். மேலும், இயலசையையும் உரியசையையும் இரண்டாகப் பிரித்துக் கூறுகிறார். இயலசை என்பது நேரசை, நிரையசை என்றும், உரியிசை என்பது நேர்பு, நிரைபு என்றும் குறிப்பிடுகிறார். இதனை,

                        “இயலசை முதலிரண் டேனவை உரியசை”

(தொல்.பொருள்,நூ. 314)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

                        “குறிலே நெடிலே குறிலினை குறில்நெடில்

                        ஒற்றொரு வருதலோடு மெய்ப்பட நாடி

                        நேரும் நிரையும் மென்றிசிற் பெயரே”

(தொல். பொருள், நூ. 312)

       என்று அசை வகைகளைக் குறிப்பிடுகிறார். மேலும், தொல்காப்பியர் உரியசையில் நேர்பு, நிரைபு எனும் இருவகை அசைகளை சுட்டுகிறார். இது நேரசையோடும் நிரையசையோடும் குற்றியலுகரம் அல்லது முற்றியலுகரம் ஆகிய இருவகை உகரமும் சேர்ந்துவரின் அவை நேர்பு, நிரைபு என்று கொள்ளப்படும் என்று குறிப்பிடுகிறார். இதனை,

“இருவகை உகரமோ டியந்தவை வரினே

நேர்பு நிரைபும் ஆகும் என்ப

குறிலிணை உகரம் அல்வழியான”

(தொல். பொருள், நூ. 313)

        எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. தொல்காப்பியத்திற்குபின் தோன்றிய பிற்கால யாப்பியல் நூல்கள் நேர்பு, நிரைபு எனும் அசை வகைகளைக் குறிப்பிடவில்லை என்பதை அறியமுடிகிறது. மேலும், நேர்பசை வரும் இடங்களை மூன்றாகப் பகுக்கிறார். அவை,

                        ♥ நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்ரசையாதல்

                        ♥  நெடில் ஒற்றைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

                        ♥ தனிக்குறில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நேர்பசையாதல்

என்று குறிப்பிடுகிறார். மேலும், நிரைபசை வரும் இடங்களை நான்காகப் பகுக்கிறார். அவை,

                       ♥  குறிலிணை தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥  குறிலினை ஒற்றினைச் சார்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடிலைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்

                       ♥ குறில் நெடில் ஒற்றினைத் தொடர்ந்து உகரம் வந்து நிரைபசையாதல்.

என்று குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

யாப்பருங்கலம் – அசை வகைகள்

      எழுத்துக்கள் அசைந்து சேர்ந்து ஒலிப்பதால் இது அசை எனப்படுகிறது. மேலும், எழுத்துக்கள் தனித்து நின்றும் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வருவதாலும் அசை உண்டாகின்றது. இதனை,

                        “எழுத்து அசைந்து இசைகோடலின் அசையே”

      எனும் யாப்பருங்கல விருத்தி. மேலும், அசை வகைகளை 1. நேரசை 2. நிரையசை என்று இரண்டாகப் பகுத்துக் கூறியுள்ளார், நேரசையை,

                        “நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும்

                        நடைபெறும் நேரசை நால்வகை யானே” (யா.க. நூ. 6)

       எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. குறில், நெடில் தனியாக வந்தும், அதனோடு ஒற்றடுத்து வந்தாலும் அது நேரசை எனப்படும். இதனை நான்காகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது. மேலும், நிரையசையை,

                        “குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்

                        நெறிமையின் நான்காய் வருநிரை யசையே” (யா.க. நூ.8)

        எனும் நூற்பாவின் மூலம் இருகுறில் இணைந்து வந்தும் குறில் நெடில் இணைந்து வந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்து வந்தும் குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வருதலும் நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இவர் நேரசைக்கும் நிரையசைக்கும் தனித்தனி நூற்பாக்களை கூறுகிறார். பிற்கால யாப்பியல் நூல்கள் இவை இரண்டையும் சேர்த்து ஒரே நூற்பாவாகக் கூறியுள்ளனர் என்பதையும்  அறியமுடிகிறது.

யாப்பருங்கலக்காரிகை  – அசை வகைகள்

            அசை வகைகளை குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும், வருவது நேர் அசை என்றும், நிரையசையை இருகுறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், இருகுறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிடுகின்றார். இதனை,

                        “குறிலே நெடிலே குறிலினை ஏனைக் குறில்நெடிலே

                        நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென்

                        றறிவேய் புரையுமென் தோளி உதாரணம் ஆழிவெள்வேல்

                        வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே” (யா.கா.5)

     என்று காரிகை / நூற்பாவின் மூலம் அறியமுடிகின்றது. மேலும், நூற்பாவிலேயே நேரசை, நிரையசைக்குரிய எடுத்துகாட்டுகளையும் சுட்டிச் சென்றுள்ளதையும் அறியமுடிகிறது. மேலும்,

            யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் நேர், நிரை அசைகளை சிறப்பசை, சிறப்பில் அசை என்று புதுப்பெயர் சூட்டியுள்ளார். எழுத்துக்கள் மொழியாகவே அமைந்து பொருள் பெற்று நிற்பது ‘சிறப்பசை’ என்றும், மொழிக்கு உறுப்பாக அமைந்து நிற்பன ‘சிறப்பில் அசை’ என்று வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

காக்கை பாடினியம் – அசை வகைகள்

            தொல்காப்பியருக்குப் பின் தோன்றிய காக்கை பாடினியம் அசையை நேரசை, நிரையசை என்று சுட்டாமல் தனியசை என்றும், இணையசை என்றும் இருவகையாகக் கையாண்டுள்ளார். இதனை,

                        “தனியசை என்றா இணையசை என்றா

                        இரண்டென மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே”  (கா. பா. நூ.5)

எனும் நூற்பாவின் வழி அறியமுடிகிறது. மேலும், இணையசை / நிரையசையில் இரண்டு நெடில் எழுத்துக்களோ அல்லது நெடிலை அடுத்து குற்றெழுத்தோ நிரையசையாய் வருதல் இல்லை என்று குறிப்பிடுகிறார். இதனை,

                        “நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்

                        இணையசையாதல் இலவென மொழிப” (கா. பா. நூ.6)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளதையும் அறியமுடிகிறது.

இலக்கண விளக்கம் – அசை வகைகள்

            இந்நூல் ஐந்திலக்கண நூலாகும். இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூல் யாப்பிலக்கணத்தில் அசை வகைகளைக் குறிப்பிடும்போது, ஏனைய பிற்கால யாப்பியல் நூல்களைப் போலவே நேர் அசை, நிரை அசை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “நேர்நிரை என அசை ஓரிரண்டு ஆகும்” (இ.வி.நூ.713)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. நேரசை 4 என்றும், நிரையசை 4 என்றும் மொத்தம் 8 வகையாக குறிப்பிடுகின்றார். இதனை,

                        “நெடிலும் குறிலும் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நடைபெறும் நேரசை நான்கு; நீங்காக்

                        குறிலினை குறில்நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும்

                        நெறிவரும் நிரையசை நான்கும் ஆகும்” (இ.வி. நூ.714)

எனும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. மேலும்,

            குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேர் அசை என்று குறிப்பிடுகிறார். நிரையசையை குறில் இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், குறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவது நிரையசை என்று குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

வீரசோழியம் – அசை வகைகள்

      வீரசோழியம் அசையை முதல் உறுப்பாகக் கொண்டுள்ளது. கலமும், காரிகையும் குறிப்பிடுவதைப் போன்றே அசையை நேர், நிரை என்று குறிப்பிடுகின்றது. இதனை,

                        “குறிலு நெடிலு மெனுமிசை நேரசை; குற்றெழுத்துப்

                        பெறின்முன் இவையே நிரையசை யாம்; பிழைப் பில்லைபின்பொற்

                        றிறினும்; அசையிரண் டொன்றின்முற் சீர்மூ வசையொன்றிநேர்

                        இறுவ தடைச்சீர்; நிரையிறிற் பிற்சீர் எனவியம்பே”   (வீ.சோ. நூ. 105)

எனும் நூற்பாவின் மூலம் இவரும் நேரசை, நிரையசை என்று இரண்டாகக் குறிப்பிடுவதை அறியமுடிகிறது.

தொகுப்புரை

    தொல்காப்பியர் அசை வகைகளை இயலசை 2 (நேர், நிரை), உரியசை 2 (நேர்பு, நிரைபு) என்று நான்காக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

      பிற்கால யாப்பியல் நூல்கள் அசை வகைகளை நேர், நிரை என்று இரண்டாகப் பகுத்துள்ளதை அறியமுடிகிறது. மேலும், நேர்பு, நிரைபு ஆகிய அசைகளை இவர்கள் ஓர் அசையாகக் கொள்ளவில்லை. அவற்றையும் தேமா, புளிமா என்று ஈரசையாகவே கொண்டனர். இதற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களும் இந்த முறையையே கையாண்டுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

      காக்கை பாடினியம் நேரசையை தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும் குறிப்பிட்டுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலம் நேரசைக்கு ஒரு நூற்பாவும் நிரையசைக்கு ஒரு நூற்பாவும் தனித்தனியே கூறியுள்ளமையை அறியமுடிகிறது.

   ♥யாப்பருங்கலக் காரிகை அசைகளைக் கூறும் நூற்பாவிலேயே அதற்கான எடுத்துக்காட்டுகளையும் காரிகை ஆசிரியர் கூறிச்சென்றுள்ளதை அறியமுடிகிறது. மேலும், யாப்பருங்கல விருத்தியுரை அசை வகைகளை சிறப்பசை என்றும் சிறப்பில் அசை என்றும் வகைப்படுத்தியுள்ளதை அறியலாகிறது.

  ♥வீரசோழியமும், இலக்கணவிளக்கமும் ஒரே மாதிரியான அசை வகைகளைக் கொண்டுள்ளன. நேரசை 4, நிரையசை 4 என எட்டாக வகைபடுத்தியுள்ளதையும் அறியலாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ல.திலிப்குமார்,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

அரசு ஆடவர் கலைக் கல்லூரி,

கிருட்டினகிரி – 635 001.

மனதை ஊக்கப்படுத்துங்கள் – தன்னம்பிக்கை கட்டுரை

மனதை ஊக்கப்படுத்துங்கள்

மனதை ஊக்கப்படுத்துங்கள்

     நீங்கள் உங்களின் இலக்கை அடைவதற்கு போராடத் தொடங்கி விட்டீர்கள் என்றால் தடைக்கல்லாக உங்கள்முன் நிற்பது விமர்சனங்களே ஆகும். இவ்வுலகில் பெற்றோர்களைத் தவிர வேறுயாரும் உங்கள் முன்னேற்றத்தில் இன்பம் காண மாட்டார்கள். எனவே உறவு, நட்பு, அலுவலகம் போன்ற எல்லா இடங்களிலிருந்தும் உங்களுக்கு கிடைப்பவை எதிர் மறையான விமர்சனங்களே ஆகும். உங்களிடமே ஆகாது என்பதற்கு நிறைய உதாரணங்களை முன்வைப்பார்கள். முடியாது என்பதற்கு பல காரணங்களை எடுத்துரைப்பர். நடக்காது என்று ஏளனமாக பேசிச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் இந்தப் பூமியில் சீர்குலைக்கப் பிறந்தவர்கள். இவர்களும் ஒன்றை செய்ய மாட்டார்கள் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்கள். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இவர்கள் வடிகட்டிய சுயதுரோகிகள் எனலாம்.

விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

         மற்றவர்களை விமர்சனம் செய்பவர்களுக்குத் தெரியும்,  அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் அவர்களுடைய வேலையைச் சிறப்பாகச் செய்யலாம் என்று. ஆனால் சோம்பித் திரிவார்கள். படிக்கும் காலத்தில் ஊர் சுற்றாமல் ஒழுங்காகப் படித்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு நல்ல பெயர் என்று எல்லாம் அறிந்தும் ஊதாரித்தனமாகச் செலவளித்துத் தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்பவர்கள் இவர்கள்தான். அவ்வாறு தனக்கே துரோகத்தைச் செய்துகொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் நல்லது நினைப்பர்? மற்றவர்கள் முன்னேறிவிட்டால் இவர்களால் தாங்க இயலாது. பாவம் பொறாமையில் கொதிப்பார்கள். இம்மாதிரியான பிறவிகளை உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

         எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டியே பேசுவார்கள். எனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பார்கள். ஆனால் அவர்களுக்கே தன்னை எவ்வாறு மதிப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது. விமர்சனங்களைப் பற்றி கண்ணதாசன் கூறுவார். “போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் நில்லேன் அஞ்சேன்” என்று. எனவே மற்றவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்கள் மதிப்புக் கொடுங்கள்

       நினைவில் கொள்ளுங்கள்! மற்றவரின் தூற்றுதலோ போற்றுதலோ உங்களுக்கு தேவையோ தேவையற்றதோ முதலில் உங்களை நீங்களே உற்சாகப் படுத்திக்கொள்ளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். சுய ஊக்குவிப்பே உண்மையானது. இவ்வாறு அல்லாமல் மற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதையே மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பாராட்டும் மனம் என்பது எல்லோருக்கும் வராது. தெளிந்த மனத்தவருக்கே அது கைகூடும்.

           உங்களை வெற்றி பெறுவதற்குத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ளுங்கள். சுயசோதனை செய்து கொள்ள உங்களிடம் இருக்கும் பலம் என்ன? பலவீனம் என்ன? திறமை யாது? அணுகுமுறை யாது? எவ்வளவு காலத்தில் வெற்றியை ஈட்ட முடியும்? இந்த வினாக்களுக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்கவேண்டும். அந்தப் பதிலும் காரணத்துடன் அமைய வேண்டும். சில செயல்களுக்கு பலம் மட்டுமே போதாது. எந்த நேரத்தில் எவ்வாறு என்ற நுணுக்கங்களை கையாளவேண்டும். உங்களை வீழ்த்தும் பலவீனத்தை எவ்வாறு நீக்குவது. அல்லது பலமாக மாற்றுவது போன்ற சுய மதிப்பீடு செய்து கொண்டு, ஒரு வினையை ஆக்கபூர்வமாக செய்ய இயலும் என்ற மனத்தெளிவு வந்தவுடன் எவற்றைப்பற்றியும் நீங்கள் ஆலோசிக்க தேவையில்லை. உங்கள் இலட்சிய செயல்பாட்டை துவக்கலாம்.

மற்றவர்கள் மகிழட்டும்

      உங்கள் செயல்களுக்கு மகுடம் சூட்டுபவர் யாரேனும் இருந்தால் அவர்களை அருகிலேயே வைத்ததுக் கொள்ளவும். இழிவுபடுத்துபவர் இருந்தால் அவர் உறவினர்களாக இருந்தாலும் விட்டு விலகிவிடுங்கள். உங்களை தாழ்த்துபவர் உறவினரே அல்ல. உங்களின் ஆற்றலைக் கொண்டு திறனைப்பெருக்கி ஊக்கத்தை கூட்டுங்கள் வெற்றிப்பாதையில் செல்லுங்கள். உங்களின் வெற்றியானது மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கட்டும். அதை அடைவதற்கு நீங்கள் பல இன்னல்களை அடைந்திருந்தாலும் அதனால் மற்றவர்க்கு பயனைத்தரும் என்றால் தயங்காமல் செய்யுங்கள். தான்பெற்ற துன்பங்கள் தன்னுடனே இருக்கட்டும். ஆனால் மற்றவராவது பயன்பெறட்டும் என்ற தியாக எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.

தியாக மனோபாவம்

         ஒரு மருத்துவமனை இருந்தது. அங்கு ஒரு அறையில் திரையிடப்பட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று இரண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்தனர். அந்த நோயாளிகளும் நீண்ட நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. எனவே மனம் வெதும்பிய நோயாளி திரையின் மறுபக்கத்தில் இருந்த நோயாளியிடம் “சார் எனக்கு இப்படியே படுத்திருப்பதற்கு வேதனையாக உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். “சார் நான் நலமாகவே மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்” என்றார். மனம் வெதும்பிய நோயாளி “அப்படியா? எவ்வாறு இது சாத்தியம்”? காரணம் என்ன? அதற்கு அவர் “சார் இங்கு ஒரு சன்னல் உள்ளது அதன் வழியாக இயற்கையைப் பார்க்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது” என்றார். “அப்படியென்றால் நீங்கள் பார்க்கும் காட்சிகளை எனக்கும் கூறுங்கள்” என்று கேட்டார். “சார் இந்த சன்னலின் வழியாக ஒரு மலை தெரிகிறது. அதில் அருவி ஒன்று உருவாகி அழகாக நீர் கொட்டுகிறது. அதனால் அந்த மலை பச்சைப்பசேலென்று காட்சியளிக்கிறது. பூங்கா ஒன்று தெரிகிறது. அங்கு சிறுவர்கள் ஓடியாடி விளையாடுகின்றனர். மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் அழகான பறவைகள் என்று இருக்கின்றன சார். அதனால் மனம் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். இவற்றை கேட்டவுடன் நோயாளிக்கு வெதும்பிய மனம் நிம்மதியானது. அதுமட்டுமல்லாமல் தினமும் தனக்கு கூறுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களின் உரையாடல் ஒவ்வொரு நாளும் நடந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாது. மனம் வெதும்பிய நோயாளி மகிழ்ச்சியாக இருந்தார். ஒரு நாள் மாலைவரை அந்த நோயாளியை அறைக்கு அழைத்து வரவில்லை. ஆதலால் நர்சிடம் கேட்க “சார் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவருக்கு அதிகாலையில் மூன்றுமணி இருக்கும். உடலுக்கு முடியாமல் போனது. மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், உயிர் பிழைக்கவில்லை இறந்து விட்டார்” என்றாள். இவருக்கு மனம் மிகவும் வேதனைப்பட்டது. தினமும் தன்னை மகிழ்ச்சிப்படுத்திய ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்று அவரின் கண்கள் கலங்கின. சில நிமிடங்கள் கழித்து “சிஸ்டர் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். எனது இந்த படுக்கையை அந்தப்பக்கம் மாற்றிவிடுங்கள்” என்றார். சரி என்று அந்த சிஸ்டரும் மாற்றினார். இவர் கேட்டார் “சிஸ்டர் இங்கு ஒரு சன்னல் இருந்ததல்லவா அது எங்கே? என்றதும் “சன்னலா, இங்கு ஒன்றுமே இல்லையே” என்றாள். “என்ன சிஸ்டர் அவர் தினமும் சன்னலில் பார்க்கும் காட்சிகளை என்னிடம் பேசி பகிர்ந்து கொள்வார் நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள்?” “சார் இங்கிருந்த நோயாளி பிறவியிலேயே பார்வையற்றவர்” என்று கூறியதும் தான் இவருக்கு புரிந்தது அவரின் தியாக மனம். ஆமாம் அவர்தான் பார்வையற்றவர் என்ற தன்னுடைய சோகத்தை மற்றவரிடம் காட்டாமல் மற்றவரை அந்த  வேதனையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் காணாத இயற்கை காட்சிகளையெல்லாம் கூறினார். அது எவ்வளவு பெரிய தியாகமனப்பான்மை. அசந்து விட்டார் இந்த நோயாளி.

         நீங்கள் இங்கு கவனிக்க வேண்டியது பிறவி பார்வையற்றவராக இருக்கும் நோயாளி சில நாட்களிலேயே இறக்கும் நிலையில் இருப்பவர். அவரின் உடல் எந்த அளவிற்கு வேதனையை வலியை ஏற்படுத்தும். அவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு தன்சோகம் மற்றவரை தாக்கக்கூடாது என்று எண்ணி உற்சாகமாகப் பேசி மற்றவரின் வேதனையை மாற்றுகிறார். இந்த மாதிரியான பெருந்தன்மை, நேர்மை உங்களிடம் இருக்கிறதா? என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்காக அல்ல மற்றவர்க்குத்தானே செய்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் உங்கள் செயல்பாட்டில் மெத்தனப்போக்கு உருவாகிவிடும். எனவே மெய்யான தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் தனித்திறனை இனம் காணுங்கள்

        மனிதர்களில் பலர், மற்றவரின் விமர்சனங்களால் உந்தப்பட்டு தன்னுடைய சுயதிறமைகள் என்ன என்பதை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பர். உங்கள் சூழ்நிலையின் காரணமாகச் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணியிருந்தால் அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். இவ்வாறான தாழ்வான மன நிலையை மாற்ற நீங்கள் செய்த செய்யப்போகும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்.

       ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாத்தது. அதன் முட்டைகளில் ஒன்றை நீக்கிவிட்டுப் பருந்தின் முட்டை வைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. அடைகாத்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்தன. பருந்தின் குஞ்சும் வெளியே வந்தது. அது கோழிக்குஞ்சுகளுடனே எந்தவித வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தது. அதுவும் சில மாதங்களில் கோழிகளைப் போன்றே ஒலி எழுப்பியது. சிறிது உயரமே அதனால் பறக்க முடிந்தது. அதற்கு தான் பருந்தின் குஞ்சு என்பதே தெரியாது. ஆனால் அதன் உண்மையான திறன் என்ன? மேகத்தையும் கடந்து மேலே பறக்கும் அசாத்திய சக்தி கொண்டது. ஆனால் அது கோழிகளுடனே சேர்ந்துகொண்டு கோழியாகவே தன்னை நினைத்துக்கொண்டது. கோழியாகவே இறந்தும் போனது. இவ்வாறே இங்கு பலரின் வாழ்க்கை அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களைப்பற்றி என்ன கூறுகிறார்களோ அவ்வாறே மாறிவிடுகின்றனர். ஆனால் அவரவர்க்கென்று தனித்தனி திறமைகள் உள்ளன. அவற்றை இனம் காணவேண்டும். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதைச் செய்ய வரும் எது சிறப்பாக வரும் எதுவெல்லாம் சுமாராக செய்ய முடியும் தன் குருதியில் தசை நரம்புகளில் மூளையில் ஊறியிருக்கும் ஆற்றல் எது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நீங்கள் சாதனை படைக்கலாம்.

           உங்களின் உள்மனதை ஊக்கப்படுத்த வேண்டும். தினமும் உறங்கச் செல்வதற்கு முன்பாக நீங்கள் அடையப்போகும் வெற்றியை அதனால் ஏற்படும் பயனை மற்றவர் அடையும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்துபாருங்கள். நாளடைவில் அதை உங்கள் ஆழ்மனம் நம்பத்துவங்கும். ஆழ்மனதிற்கு கொண்டு செல்லப்பட்ட எண்ணங்கள் செயல்களாக மாறும். செயல் வெற்றியைத் தேடித்தரும். இதில் ஐயமில்லை.

            மற்றவர்களுக்காக ஒன்றைச் செய்ய தயாராக இருக்கும் நீங்கள் உண்மையில் மாமனிதர்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மெய்ப்பொருள்‌ நாயனார்‌ வரலாறு

மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள்‌ நாயனார்‌

      சேதி நாட்டில்‌ திருக்கோவலூரில்‌ அரசாட்சி புரிந்த மன்னரே மெய்ப்பொருள்‌ நாயனார்‌ ஆவார்‌. சிவனடியார்களின்‌ வேடத்தை மெய்ப்பொருளாக இவர்‌ கருதியதால்‌ மெய்ப்பொருளார்‌ என்று மக்களால்‌ அழைக்கப்‌பட்டார்‌. பகை அரசர்களை வென்று நாட்டைக்‌ கண்ணெனக்‌ காத்தார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ அடி.யவர்கவின்‌ மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. ஆலயங்களில்‌ பல திருத்தொண்டுகள்‌ புரிந்து வந்தார்‌. தனக்கு உடைமையான பொருள்கள்‌ அனைத்தும்‌ அடியவர்க்கு உடையது என்று கருதினார்‌ மெய்ப்பொருளார்‌.

       மெய்ப்பொருளார்‌ மீது முத்தநாதன்‌ என்ற ஓர்‌ அரசன்‌ பகை கொண்டான்‌. அவன்‌, “மெய்ப்பொருளாரை போரில்‌ வெல்ல இயலாது, அதனால்‌ வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும்‌” என்று தீர்மானித்தான்‌. சிவனடியார்கள்‌ மீது மெய்ப்பொருளார்‌ கொண்டிருந்த அரும்பக்தியை அறிந்திருந்தான்‌ முத்தநாதன்‌.

      ஒருநாள்‌ இரவு முத்தநாதன்‌ அடியவர்‌ வேடம்‌ பூண்டான்‌. இடுப்பில்‌ ஒரு கத்தியை மறைத்து வைத்தான்‌. மெய்ப்பொருளாரின்‌ அரண்மனைக்கு வந்தான்‌. அரண்‌ மனையிலிருந்த காவலாளி தத்தன்‌, மன்னர்‌ உறங்குவதாகக்‌கூறி அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனைத்‌ தடுத்தான்‌.

      அவன்‌ காவலாளியிடம்‌, “நான்‌ அரசர்க்கு வேதப்‌பொருளைக்‌ கூறும்பொருட்டு வந்துள்ளேன்‌. என்னைத்‌தடுக்காதே!” என்று தத்தனை விலக்கிவிட்டு அரண்‌மனைக்குள்‌ நுழைந்தான்‌.

       அப்போது மெய்பொருளார்‌ கட்டிலில்‌ உறங்கிக்‌கொண்டிருந்தார்‌. அவரது அருகில்‌ அரசியார்‌ அமர்ந்து, மன்னர்க்கு விசிறிக்‌ கொண்டிருந்தார்‌. அடியவழைக்‌ கண்டதும்‌ அரசியார்‌, மெய்ப்‌பொருளாரைஎழுப்பினாள்‌. மெய்ப்பொருளாரும்‌ விழித்து அடியவரைக்‌ கண்டதும்‌ எழுந்து வணங்கினார்‌.

       “அடியவரே! இந்நேரத்தில்‌ என்னைக்‌ காண வந்ததன்‌ காரணம்‌ என்னவோ?” என்று கேட்டார்‌. உடனே அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதன்‌, “மெய்ப்பொருளாரே! இறைவன்‌ என்னிடம்‌ ஆகமப்‌ பொருளொன்றைக்‌ கூறினார்‌. அதை நான்‌ ஓலையில்‌ குறித்து வைத்துள்ளேன்‌. அதைத்‌ தாங்களுக்கு உரைத்திடவே வந்துள்ளேன்‌! என்று நயமாகப்‌ பேசினான்‌.

      மெய்ப்பொருளாரும்‌, “சிவாகமத்தைக்‌ கேட்பது நான்‌ செய்த பாக்கியமன்றோ! உடனே அதை என்னிடம்‌ படித்துக்‌ காட்டுவீராக!” என்றார்‌.

       உடனே அடியவர்‌, “நான்‌ ஆகமத்தைப்‌ படிக்கையில்‌ உன்‌ மனைவியார்‌ அருகில்‌ இருக்கக்‌ கூடாது!” என்று கூறினான்‌. அகைக்கேட்டு நாயனார்‌, தன்‌ மனைவியை அவ்விடத்தை விட்டுப்‌ போய்விடுமாறு கூறினார்‌. அடியவர்‌ வேடம்‌ பூண்டிருந்த முத்தநாதனும்‌, இதுதான்‌ தக்கநேரம்‌ என்று, தன்‌ இடுப்பிலிருந்த ஒலையை எடுப்பதுபோல்‌, கத்தியை எடுத்து மெய்ப்பொருளாரைக்‌ குத்தினான்‌. தான்‌ குத்துப்பட்ட நிலையிலும்‌, மெய்ப்‌ பொருளார்‌ அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை வணங்கியபடிச்சாய்ந்தார்‌.

    ஏற்கெனவே சந்தேகத்திலிருந்த தத்தன்‌, தற்செயலாக அரண்மனைக்குள்‌ நுழைய, அங்கே மன்னர்‌ மெய்ப்‌பொருளார்‌ அடியவரால்‌ குத்துப்பட்டதைக்‌ கண்டான்‌. உடனே தன்‌ உடைவாளை உருவி, அடியவரின்‌ மீது வீச முயன்றான்‌.

      அதைக்கண்ட மெய்ப்பொருளார்‌, “தத்தா! இவர்‌ அடியவர்‌. அவரை ஒன்றும்‌ செய்யாதே!” என்று தடுத்தார்‌. அதைக்கேட்ட தத்தன்‌ மன்னரிடம்‌, “நான்‌ இப்போது என்ன செய்ய வேண்டும்‌?” என்று கேட்டான்‌. மெய்ப்‌பொருளாரும்‌, “தத்தா] இவ்வடியவர்க்கு இவ்வூர்‌ மக்கள்‌ எவராலும்‌ தீங்கு நேராதபடி பாதுகாப்புடன்‌ அனுப்பி வைப்பாயாக!” என்று ஆணையிட்டார்‌.

      அரசனை அடியவர்‌ ஒருவர்‌ கத்தியால்‌ குத்திவிட்டார்‌ என்று அறிந்த அவ்வூர்‌ மக்கள்‌, முத்தநாதனைச்‌ சூழ்ந்து கொண்டார்கள்‌. ஆனால்‌ தத்தனோ, அவர்களைத்‌ தடுத்து மன்னரின்‌ ஆணையை அவர்களிடம்‌ கூறினான்‌.

       அடியவர்‌ வேடத்திலிருந்த முத்தநாதனை நகரின்‌ எல்லையில்‌ கொண்டுவிட்டு, அரண்மனை இரும்பி, மெய்ப்‌ பொருளாருக்குச்‌ செய்தியை அறிவித்தான்‌.

     அதுவரை உயிர்‌ பிரியாதிருந்த மெய்ப்பொருளார்‌ அதைக்கேட்டு, அடியவரைக்‌ காத்த தத்தனுக்கு நன்றி தெரிவித்தார்‌. அரண்மனையில்‌ இருந்தவர்களிடம்‌ அடியவர்‌ திருத்தொண்டை வழுவாது செய்யும்படிக்‌ கட்டளையிட்டார்‌. சிவனைச்‌ சிந்தித்தார்‌.

    அக்கணத்தில்‌ சிவபெருமானும்‌ நாயனாருக்குத்‌ திருக்காட்சி தந்தார். மெய்ப்பொருள்‌ நாயனாரைச்‌ சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

 

மறையாத வடு | சிறுகதை

மறையாத-வடு

விடிந்தால் சுதந்திர தின விழா அதனால், ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல இடங்களில் கொடி ஏற்ற நாடு முழுவதும் தட புட வேலைகள் விடிய விடிய நடந்து கொண்டிருந்தது.

அரசு வேலையில் இருப்பவர்கள் இந்த முறை சுதந்திர தின விழா ஞாயிற்றுக் கிழமை வந்து விட்டது. மற்ற நாளில் வந்திருந்தால் ஒரு நாள் விடுமுறை கிடைத்திருக்கும் என நினைத்து வருத்தப்பட்டார்கள்

அவள் கோழி கூவுவதற்கு முன்பு எழுந்து வாசலை கூட்டி, சாணம் தெளித்து, கோலமிட்டு, முகம் கழுவி, தலைவாரி எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் நாங்களும் நல்லாஇருக்க வேண்டும் விடியிறது நல்ல பொழுதா இருக்க வேண்டும் சாமி என்று வேண்டி திருநீற்றை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைத்து கொண்டே காலையில் மார்க்கெட்டுக்குப்  போனால்தான் நல்ல காய்கறி கிடைக்கும், இல்லை என்றால் சொத்தல், பொத்தல்தான் கிடைக்கும் என்று கூறி தன் மகனை எழுப்பினாள். அவனும் எழுந்துமுகத்தைக் கழுவிக்கொண்டு ‘என்னம்மா’ காய்கள் வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்  உனக்குத் தான் தெரியுமே என்ன என்ன காய்கள் வாங்கி வருவது என்று கூறினாள்.

அவன் எப்போதுமே வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமையில்தான் காய்களை வாங்கி வருவான்.

என்றுமே சோகம்  தெரியாத இன் முகத்தோடு இருப்பவன். அவன் மிதிவண்டியை எடுத்து புறப்படுவதற்கு முன்பு அவள் என் நெஞ்சு லேசாக வலிக்கிற மாதிரி இருக்கிறது என்றாள்.

அதற்கு அவன் நீ இரவெல்லாம் ஒரே பக்கமாய் படுத்திருப்பாய் அதனால், வலிக்கும் என்று கூறி புறப்பட்டான்.

அவன் போன பிறகு அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திர உலையில் பாதி பருப்பு வெந்திருக்கும் ஆனால், அவளால் வேலை செய்ய முடியாமல் நெஞ்சி வலித்ததனால், மகன் வரமாட்டானா என்று எதிர் பார்த்திருந்தாள்.

மகன் வந்து  பார்த்தான், அடுப்பு நனைந்து அவளும் மழையில் நனைந்தவள் போல் முழுமையாக வியர்வையால் நனைந்து படுத்திருந்தாள். அவன் மனம் படப்படத்தது, என்னாச்சோ, ஏதாச்சோ என்று தன் தாயை தூக்கி தன் மார்பில் சார்த்தினான். அவள் மூன்று முறை வானத்தை நோக்கியவளாய் வாயைத் திறந்து மூடி நான்காவது முறை தன் மகனின் மடியில் படுத்துக்கொண்டு கண்களை மூடி விட்டாள்.

    அவன் அம்மா, அம்மா எழும்மா எழும்மா என்று எழுப்பினான் அவள் உயிர் உடலை விட்டுச் சென்றதை அறிந்த அவன் அம்மா என்று கதறின கதறல் எமலோகத்தைத் திரும்பிப்பார்க்கச் செய்தது மட்டும் அல்லாமல் ஊரில் உள்ள காக்கை, குருவி, காடை, கௌதாரி என்ற எல்லா உயிர்களுக்கும் கேட்கும்படியானது. அவள் இறப்பு எல்லோருக்கும் கைபேசி மூலம் காட்டுத் தீயைபோல் பரவியது.

அவனுடைய உலகம் இருண்டு நின்றுபோனது, பூமியும் பிளந்து வானமும் இடிந்து வீழ்ந்தது, நிழல் தந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்தது, பூ மரமெல்லாம் பட்டுப் போனது, ரசித்த இயற்கையெல்லாம் வெந்து கருகிப் போனது.

இறப்பின் செய்தி அறிந்த மக்கள் அவரவர்கள் வயதிற்கேற்ப வந்து சேர்ந்தார்கள். வந்த பெண்கள் அவனைப் பிடித்துக்கொண்டு உன்னை அனாதையாக விட்டு விட்டுப் போய்யிட்டாளே….  என்று சிலபேர் உண்மையாகவும், கடமைக்காகவும் அழுதார்கள்.அவனுடைய மூன்று அக்காவும் ஒரு தங்கையும் சொகுசுந்திலும் தூரத்திற்கு தகுந்தார்போல் நடந்தும் வந்து தம்பி நம்ம அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாளே என்று அவனைப் பிடித்து உழுக்கினார்கள். பிறகு மூக்கை சிந்தி போட்டுவிட்டு அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தார்கள். நேரம் ஆக ஆக அவங்க நான்கு பேரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவன் மட்டும் அம்மா சாகுவது தெரிந்திருந்தால் என்னிடம் என்ன பேசியிருப்பளோ என்று அழுது கொண்டிருந்தான்.

ஊரில் உள்ள பெரியவர் ஒருவர் நல்ல நேரத்தில் பிணத்தை எடுக்க வேண்டும் என்றார். அதற்கு அவன் எங்க அம்மாவை பிணம் என்று சொல்லாதே! என்று துக்கம் தாங்காமல் கத்தினான். நேற்று இந்த நேரத்தில் எங்க அம்மா உயிரோடு இருந்தாங்க இப்போ இல்லையே என்று தேம்பி தேம்பி அழுதான்.இன்னொருவர் நல்ல நேரம் நான்கு மணி முடிவதற்குள்ள பாடியை எடுக்க வேண்டும்என்றதனால் எல்லாம் வேலையும் நடந்தது. எங்க அம்மா உயிர் பெற்று வந்திட கூடாதா, நடந்ததெல்லாம் பொய்யென்று இருந்திடக் கூடாது என்று ஏங்கினான். ஒருவருக்கு எதிர்பாராததுநடந்து விட்டால் அது பொய்யாகக் கூடாதா என்று நினைப்பார்கள் அதைத்தான் அவனும் நினைத்தான்.

ஒருவர் கேட்டார் உன் அம்மா மூத்தவங்க அவங்களை எரிப்பதா? புதைப்பதா? என்றுஅதற்கு அவன் எங்க அம்மா எரிவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால், புதைத்து விடுங்க என்று சொல்லக் கூட தைரியமில்லாமல் கூறினான்.

பிணத்தை எடுங்க என்று சொல்லி பாடையில் வைத்து, எடுத்துக்கொண்டுபோய்  குழிக்கிட்ட வைத்துச் சடங்குகளெல்லாம் செய்தபோது இன்றோடு அம்மா மண்ணுக்குள்ளே போறாங்களே, அம்மா என்ற வார்த்தை இன்று முதல் மறையப் போகுதே என்னை அனாதையாக விட்டுட்டு போறாயே என்று கத்திக் கதறி யார் அடக்கினாலும் அடங்காமல் கீழே விழுந்து புரண்டு, புரண்டு அழுதான். அவன் அழுவதைப் பார்த்த காக்கா, குருவி கண்களிலும், இதுவரைக்கும் அழாத கல்நெஞ்சம் உடைவர்கள் கண்களிலிருந்தும் அழாமலேகண்ணீர் வந்தன. மேலும் புல்லும், பூவும் பனித்துளியாகவும். செடியும், மரமும் இலைகளாகவும் கண்ணீர் உதிர்த்தன. தென்றல் வாயை மூடி அழுதது. அந்த வழியே போகுகின்ற எமன் அவனிடமிருந்து அவன் தாயைப் பிரித்து விட்டோம் என்று நினைத்து இதற்கு பரிகாரமாக நானும் என் தாயை இழந்து கண்ணீர் விடவேண்டும் என்று உண்மையாகவே கண்ணீர் விட்டான். மேகமும் சொல்ல முடியாத துக்கத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது.

பிணத்தை குழிக்குள்ளே இறக்கினார்கள் பிணத்தை மண் போட்டு மூடுவதற்குள் நகைகளை கழட்டுங்கள் என்ற வார்த்தை கேட்பதற்குள் அக்கா, தங்கை நான்கு பேரும் குழியைச் சுற்றி வந்து நின்றார்கள். காதிலும், மூக்கிலும் கழற்றினால் ஒரு பவுன் நகை தேறும். இந்த ஒரு பவுன் நகைக்கு நான்கு பேரும் என்கிட்ட கொடு, உன்கிட்ட கொடு என்று அம்மா நகை எனக்குத்தான் சொந்தம், உனக்குதான் சொந்தம் என்று சண்டை போட்டுஆளுக்கொரு நகையைப் பிடிங்கிக்கொண்டு தாய்க்குக் குழியில் ஒரு பிடி மண் போட்டார்களோ இல்லையோ எனக்கு வேலையிருக்கு, உனக்கு வேலை இருக்கு என்று வந்த வேகத்தை விட போகும் வேகத்தில் ஆர்வம் காட்டினார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் சிலபேர் பிணத்தை எடுப்பதற்கு முன்பும், மீதி இருந்தவர்கள் எடுத்த பின்பும் சென்று விட்டார்கள். அன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடியது. நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவன் மட்டும் என்ன பாவம் செய்தானோ, ஏன் இப்படி அவல நிலை ஏற்பட்டது.

அவன் தாய் உயிர் விட்ட நேரம் என்னும் எட்டு மணியையும், நாள் என்னும் ஞாயிற்றுக் கிழமையும், விழா என்னும் சுதந்திர தின விழாவையும் வெறுத்து ஒதுக்கியவனாய் தாயைப் புதைத்த இடத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.

இருட்டிய பிறகும் அங்கே அவன் இருந்ததைப் பார்த்த அந்த வழியே வந்த ஒரு பெரியவர் அவனை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு புறப்பட்டார். அவனுக்கு வீட்டிற்கு வரும் தூரம் அதிமாய் தெரிந்தது. அவன் தோப்பிலே இருக்கும் தனிமரம் போல் ஆகிவிட்டான்.

அவன் அந்த ஓட்டை படிந்த கூரை வீட்டில், அம்மா ஆறு மணிக்கே லேசாக நெஞ்சுவலி என்று சொன்ன உடனே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போயிருந்தால் காப்பாற்றி இருக்கலாமோ என்று நினைத்து, நினைத்து உண்ணாமல் உறங்காமல் தாய் படுத்த இடத்தைத் தடவி, தடவி பார்த்து அந்த இரவு முழுவதும் அழுவதற்குக் கூட முடியாமல் தொண்டை வரண்டு போய் வார்த்தை வெளி வர முடியாமல் அழுதது யாருக்கும்கேட்க வில்லை.

அவன் உயிர் சென்றிடுமோ இல்லை அழப்போவானோ, அப்படி இல்லையென்றால் தாயை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போகாத எண்ணம் ஷமறையாத வடு|வாக இருந்து காலம் முழுவதும் ஈட்டியைப் போல் குத்தித் துன்புறத்துமோ.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இயற்பகை நாயனார்‌

இயற்பகை-நாயனார்

இயற்பகை நாயனார்‌

     சோழநாட்டிலே காவிரிப்பூம்பட்டினம்‌ என்னும்‌ ஊரில்‌, வணிகர்‌ குலத்திலே பிறந்தவர்‌ இயற்பகை நாயனார்‌ ஆவார்‌. இவர்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌. சிவபெருமான்‌ மீது பெரும்பக்தி கொண்டிருந்தார்‌. சிவனடியார்கள்‌ மீதும்‌ பேரன்பு கொண்டிருந்த இவர்‌, தன்னைத்‌ தேடிவரும்‌ அடியவர்கள்‌ எதைக்‌ கேட்பினும்‌ அதைத்‌ தயங்காது வழங்கி வந்தார்‌. 

       சிவபெருமான்‌ இயற்பகையாரின்‌ அடியார்‌ பக்தியை உலதிற்குக்‌ காட்ட திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணமே திருநீறு அணிந்த வேதியர்‌ கோலம்‌ கொண்டார்‌. இயற்‌பகையாரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. அவர்‌, இயற்பகையாரிடம்‌, “ஒரு பொருளை வேண்டியே இங்கே வந்துள்ளேன்‌. அதைத்‌ தருவீரோ?” என்று கேட்டார்‌.

    இயற்பகையார்‌, அவ்வேதியரை வணங்கி, “தாங்கள்‌ கேட்ட பொருள்‌ என்னிடம்‌ உள்ளதென்றால்‌, நிச்சயமாகத்‌ தருவேன்‌!” என்றார்‌.

       வேதியரும்‌, “நான்‌ உன்‌ மனைவியைத்தான்‌ வேண்டுகிறேன்‌. அவளை எனக்குத்‌  தருவீரோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டதும்‌, “அடியவரே! மிக்க மகிழ்ச்சி. தாங்கள்‌ என்னிடம்‌ உள்ள பொருளைக்‌ கேட்டதற்கு நன்றி!” என்று கூறி தன்‌ மனைவியாரை அழைத்தார்‌. வேதியர்‌ வேண்டியதை மனைவியாரிடமும்‌ கூறினார்‌. அப்பெண்‌மணியும்‌ அடியவர்‌ தொண்டே சிறந்தது என்று அதற்குச்‌சம்மதித்தார்‌.

        அடியவருடன்‌ புறப்படத்‌ தயாரானார்‌. உடனே அடியவர்‌ இயற்பகையாரை நோக்கி, “நீர்‌ உன்‌ மனைவியை எனக்குத்‌ தந்துவிட்டீர்‌. ஆனால்‌ உன்‌ சுற்றத்தாரும்‌ இவ்வூரிலுள்ளவர்களும்‌ இதற்குச்‌ சம்மதிக்க மாட்டார்கள்‌. அதனால்‌ நான்‌ உமது மனைவியுடன்‌ இவ்வூர்‌ எல்லையைக்‌ கடக்கும்வரை எனக்குப்‌ பாதுகாப்பு தர வேண்டும்‌!” என்று கூறினார்‌.

        இயற்பகையாரும்‌, “தாங்கள்‌ இந்த ஊர்‌ எல்லையைக்‌ கடக்கும்வரை நானே உங்களுக்குத்‌ துணையாக வாள்‌ ஏந்தி வருகிறேன்‌!” என்று கூறியபடி, அடியவருடன்‌ புறப்பட்டார்‌.

         ஒரு சிவனடியார்‌ இயற்பகையாரின்‌ மனைவியை அழைத்துச்‌ செல்வதையும்‌, அவர்களுக்கு இயற்பகையாரே காவலுக்குச்‌ செல்வதையும்‌ கண்டு சுற்றத்தாரும்‌ ஊராரும்‌ கடுங்கோபம்‌ கொண்டனர்‌.

       அவர்கள்‌ இயற்பகையாரிடம்‌ வந்து, “உன்‌ மனைவியை யாரோவொரு வேதியனுடன்‌ அனுப்பத்‌ துணிந்தது மட்டுமல்லாமல்‌, அவர்களுக்குக்‌ காவலாய்‌ வேறு செல்கிறாயே! உனக்கு புத்தி கெட்டுப்‌ போனதோ[” என்று கேட்டனர்‌.

      இயற்பகையார்‌ சுற்றத்தாரிடம்‌, “ பேசாமல்‌ விலகிப்‌போய்விடுங்கள்‌. இல்லையென்றால்‌ உங்கள்‌ உயிர்‌ உடலில்‌ தரிக்காது” என்று கூறினார்‌.

        சுற்றத்தாரும்‌ நாயனாரை நோக்கி, “மனைவியை வேற்று மனிதருடன்‌ அனுப்பிவிட்டு, வீரம்‌ பேசுகிறாயே. உனக்கு நாணமாக இல்லையா? உனக்கு நாணம்‌ இல்லாமல்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ நாங்கள்‌ இதற்கு ஒப்புக்‌ கொள்ள மாட்டோம்‌” என்று கூறி வேதியரை நோக்கி ஓடினார்கள்‌. வேதியரைத்‌ தாக்குவதற்குக்‌ கை ஓங்கினார்கள்‌.

        இதைக்கண்ட இயற்பகையாரின்‌ கோபம்‌ எல்லை கடந்தது, அவர்‌ தன்‌ கையிலிருந்த வாளால்‌ வேதியரை நெருங்கியவர்களை எல்லாம்‌ சரமாரியாக வெட்டி வீழ்த்தினார்‌. வேதியரைத்‌ தாக்க முயன்ற அனைவரும்‌ உடல்‌ துண்டாகி விழுந்தனர்‌. பின்‌ வேதியரையும்‌ அவரோடு செல்லும்‌ தன்‌ மனைவியையும்‌ அழைத்துக்‌ கொண்டு திருச்சாய்க்காடு என்ற இடத்திற்கு வந்தார்‌.

      அங்கு வந்ததும்‌, வேதியர்‌ இயற்பகையாரிடம்‌, “இனி உன்‌ துணை எனக்குத்‌ தேவையில்லை. நீர்‌ திரும்பிச்‌ செல்லலாம்‌!” என்று கூறினார்‌. இயற்பகையாரும்‌ திரும்பி நடந்தார்‌. சிறிது தூரம்‌ நடந்த இயற்பகையார்‌ காதில்‌ “இயற்பகையே!அபயம்‌” என்ற வேதியரின்‌ குரல்‌ கேட்டது.

      வேதியருக்கு மீண்டும்‌ இவ்வூர்‌ மக்களால்‌ ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று பதைபதைத்த இயற்பகையார்‌ திரும்பி வேதியரை நோக்கி ஓடினார்‌. என்னே ஆச்சரியம்‌! அங்கே வேதியரைக்‌ காணவில்லை. மனைவியார்‌ மட்டும்‌ நின்று கொண்டிருந்தார்‌.

        அக்கணமே சிவபெருமான்‌ உமாதேவியாரோடு இடபவாகனத்தில்‌ திருக்காட்சி நல்கினார்‌. “இயற்பகையே! நீ அடியவர்‌ மீது கொண்ட பேரன்பு என்னை மகிழ்ச்சியடையச்‌ செய்தது. நீயும்‌ உன்‌ மனைவியும்‌ சிவலோகம்‌ வந்தடையுங்கள்‌!” என்று தருவாய்‌ மலர்ந்‌தருளினார்‌.

இயற்பகை நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ பிறவிப்‌ பெருங்கடல்‌ கடந்தனர்‌. சிவலோகம்‌ சென்றடைந்தனர்‌.

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.இயற்பகை நாயனார்

இளையான்குடி மாற நாயனார்‌

இளையான்குடி-மாற-நாயனா

        இளையான்குடி என்னும்‌ ஊரில்‌ வேளாளர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ மாறனார்‌ என்பவர்‌ ஆவார்‌. வேளாண்மையில்‌ பெரும்‌ செல்வம்‌ ஈட்டிய இவர்‌ சிவபெருமான்‌ மீதும்‌ அடியவர்‌ மீதும்‌ அரும்பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்‌களுக்கு அமுது படைப்பதை அரும்பெரும்‌ தொண்டாகக்‌கருதி செய்து வந்தார்‌.

      மாறனாரின்‌ பெருமையை உலகுக்கு அறிவிக்க சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. அதனால்‌ மாறனாரின்‌ மலை போன்ற செல்வம்‌ கரையத்‌தொடங்கியது. வறுமை மெல்ல மெல்ல நாயனாரைப்‌ பற்றிக்‌கொண்டது. மாறானர்தன்னிடமிருந்த பொருள்களை விற்றுவிற்று அடியவர்களுக்கு அமுது படைக்கும்‌ தொண்டினை விடாது செய்து வந்தார்.  வறுமை முற்றியது. பலரிடம்‌ கடன்‌பெற்று அடியவர்க்கு அமுது படைத்தார்‌ நாயனார்‌.

        அவ்வாறிருக்கையில்‌ ஒருநாள்‌ இரவு உண்ண உணவு ஏதுமின்றி பசியோடு தன்‌ குடிசை வீட்டில்‌ படுத்திருந்தார்‌. அது மழைக்காலம்‌. வெளியில்‌ கடும்மழை பெய்து கொண்டிருந்தார்‌. அவ்வேளையில்‌ வீட்டின்‌ கதவு தட்டப்பட்டது. மாறனார்‌ எழுந்து கதவைத்‌ திறந்தார்‌. வாசலில்‌ அடியவர்‌ ஒருவர்‌ நின்றிருந்தார்‌. அடியவரைக்‌ கண்ட மாறனார்‌, அவரை வீட்டினுள்‌ அழைத்து, அவரது தேகம்‌ துடைத்திட துண்டு தந்து, அமரச்‌ செய்தார்‌.

       பிறகு மனைவியிடம்‌ வந்து அடியவர்க்கு ஏதேனும்‌ உண்ணத்‌ தரவேண்டுமே என்று கூறினார்‌. வீட்டிலே அரிசி சிறிதும்‌ இல்லை. மாறனாரும்‌ அவரது மனைவியும்‌ என்ன செய்தென்று புரியாமல்‌ தவித்தனர்‌. உடனே அவரது மனைவியார்‌, “இன்று வயலில்‌ விதைநெல்‌ தூவினோமே. அந்நெல்மணிகளை எடுத்து வருவீராயின்‌, அடியவர்க்கு அமுது படைக்கலாம்‌!” என்று யோசனை கூறினார்‌.

       மாறனாரும்‌, மழையைப்‌ பொருட்படுத்தாது, தலையில்‌ ஒரு கூடையைக் கவிழ்த்தபடி வயலுக்கு ஓடினார்‌. அங்கே நாற்றங்கால்‌ நீரில்‌ மிதந்து கொண்டிருந்த நெல்மணிகளைச்‌ சேகரித்து கூடையில்‌ அள்ளினார்‌. வீட்டை நோக்கி நடந்தார்‌.

         அரிசிக்கு நெல்‌ வந்து சேர்ந்தது. நெல்லை வறுத்து குத்தி அரிசியாக்க வேண்டுமே? அதற்கு விறகு வேண்டும்‌ என்று நாயனாரைக்‌ கேட்டார்‌. உடனே நாயனார்‌, தன்‌ வீட்டுக்‌கூரையின்‌ தாங்கு கட்டைகளை உருவித்தந்தார்‌. அவரது மனைவியாரும்‌ அக்கட்டைகளை விறகாக எரித்து நெல்லை வறுத்தார்‌. உரலில்‌ இட்டு அதைக்‌ குத்தி அரிசியாக்கி அமுது உண்டாக்கினார்‌.

       கறி சமைக்க காய்‌ ஏதேனும்‌ கொண்டு வரும்படி நாயனாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌ மனைவியார்‌. உடனே நாயனார்‌ வீட்டின்‌ பின்புறத்திற்குச்‌ சென்று அங்கு வளர்ந்திருந்த குப்பைக்‌ கரைகளைப்‌ பறித்து வந்தார்‌. அதைச்‌ கொண்ட மனைவியார்‌ கரி சமைக்கார்‌

     மனைவியார்‌ சமைத்து முடித்ததும்‌ நாயனார்‌, “அடியவரே! உணவு சமைத்தாகிவிட்டது. உணவு அருந்த வாருங்கள்‌! என்றபடியே, அடியவர்‌ படுத்திருந்த இடத்திற்கு வந்தார்‌. கணநேரத்தில்‌ அவ்வடியவர்‌ மறைந்தார்‌. அவ்விடத்தில்‌ சிவபெருமான்‌ உமாதேவியாருடன்‌ இடப வாகனத்தில்‌ தோன்றினார்‌. இறைவன்‌ நாயனாரை நோக்கி,

         “மாறனாரே! அடியவர்களைத்‌ தேடி அன்றாடம்‌ அமுதூட்டிய அன்பரே! உமது மனைவியாருடன்‌ எம்மிடம்‌ வந்து சேர்வீராக! அங்கு எல்லா இன்பங்களையும்‌ துய்ப்பீராக!” என்று இருவாக்கருளினார்‌.

          இளையான்குடி மாற நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ சிவலோகம்‌ சென்று பேரானந்தத்தில்‌ மூழ்கினர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

திருநீலகண்ட நாயனார்

திருநீலகண்ட நாயனார்‌

        தில்லையில்‌ குயவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ திருநீலகண்ட நாயனார்‌ ஆவார்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அரும்‌ பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்களுக்கு திருவோடு செய்து கொடுப்பதைப்‌ பெரும்‌பேறாகக்‌ கருதினார்‌ இவர்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டிருந்தார்‌.

        ஒருமுறை திருநீலகண்டர்‌ பரத்தையிடம்‌ சென்று வந்தார்‌. அதையறிந்த அவரது மனைவியார்‌ நாயனாரிடம்‌ பேசுவதை நிறுத்திக்‌ கொண்டார்‌. இல்லறத்தரசிக்குரிய பணிகளைச்‌ செய்தார்‌. எனினும்‌ நீலகண்டரைத்‌ தீண்டாது இருந்தார்‌. ஒருமுறை நாயனார்‌, தன்‌ மனைவியைத்‌ தீண்ட முற்பட்டபோது, அவர்‌ மனைவியார்‌, “நீர்‌ என்னைத்‌ தீண்டுவீராயின்‌ நான்‌ உயிர்‌ தரிக்க மாட்டேன்‌. இது நீலகண்டத்தின்‌ மீது ஆணை என்று சிவபெருமான்‌ மீது ஆணையிட்டார்‌. அன்றிலிருந்து இருவரும்‌ ஒரு வீட்டில்‌ இருந்தும்‌ உடல்‌ தொடர்பின்றி இருந்தனர்‌. அடியவர்க்கு தொண்டு புரிந்தும்‌ வந்தனர்‌. ஆண்டுகள்‌ பல ஓடின. நீலகண்டரும்‌ மனைவியாரும்‌ முதுமை அடைந்தனர்‌.

      நீலகண்டரையும்‌ அவரது மனைவியாரையும்‌ மீண்டும்‌ இணைத்திட சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. மறுகணம்‌ ஒரு அடியவர்போல உருவம்‌ கொண்டு, நீலகண்டரின்‌ வீட்டை அடைந்தார்‌.

          நீலகண்டரிடம்‌ ஒரு திருவோட்டைத்‌ தந்து, “அன்பரே! இத்திருவோட்டை பாதுகாத்து வைப்பீராக. இத்திருவோடு தன்னுள்‌ வந்த பொருட்களை எல்லாம்‌ புனிதம்‌ அடையச்‌ செய்யும்‌ சக்தி பெற்றது. இதை நான்‌ வந்து கேட்கும்போது தருவீராக!” என்று கூறினார்‌. நீலகண்டரும்‌ மிக்க மகிழ்ச்சியோடு அதைப்‌ பெற்று வீட்டில்‌ வைத்தார்‌. அடியவர்‌ பெருமானும்‌ சென்றுவிட்டார்‌.

      நாட்கள்‌ பல கடந்தன. சிவபெருமானது திருவருளால்‌ திருவோடு காணாமல்‌ போயிற்று. சிலநாளில்‌ அடியவர்‌ மீண்டும்‌ நீலகண்டரின்‌ வீட்டிற்கு வந்தார்‌. தன்‌ திருவோட்டைத்‌ தருமாறு கேட்டார்‌. நீலகண்டரோ திருவோட்டை எங்கும்‌ தேடினார்‌. கிடைக்கவில்லை. மனம்‌ பதைத்தார்‌. அடியவரிடம்‌ சென்று வணங்கி, திருவோடு காணாமல்‌ போனதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ மிக்க கோபம்‌ கொண்டார்‌.

       அதைக்‌ கண்டு நடுங்கிய நீலகண்டர்‌, தான்‌ பழைய திருவோட்டிற்குப்‌ பதிலாக புதிதாக வேறு திருவோடு செய்து தருவதாகக்‌ கூறினார்‌. அடியவரோ பெருமை மிக்க தன்‌ பழைய திருவோடே வேண்டும்‌ என்று கூறினார்‌. நீலகண்டர்‌ அது காணாமல்‌ போய்விட்டதாகக்‌ கூறினார்‌. அடியவர்‌ அதை நம்பவில்லை.

        “என்‌ பெருமை மிக்க திருவோட்டை நீர்‌ ஒழித்து வைத்துக்‌ கொண்டு, என்னை ஏமாற்றப்‌ பார்க்கிறாயோ?” என்று கேட்டார்‌. அதைக்கேட்டு, நீலகண்டர்‌, “ஐயா! என்‌மேல்‌ ஆணையாக நான்‌ அதைத்‌ திருடவில்லை!” என்று கூறினார்‌. இருப்பினும்‌ அடியவர்‌ அதை நம்பவில்லை.

      அவர்‌, “உன்‌ மேல்‌ ஆணைசெய்ய வேண்டாம்‌. உனக்கு மகன்‌ இருந்தால்‌ அவன்‌ கையைப்‌ பற்றிக்‌ கொண்டு, குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌ என்று கூறினார்‌. அதற்கு நாயனாரோ, தனக்குக்‌ குழந்தைகள்‌ இல்லை என்று கூறினார்‌. உடனே அடியவர்‌, “அப்படியானால்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய வேண்டும்‌!” என்று கூறினார்‌.

    அதற்கு நாயனாரோ, தான்‌ மனைவியோடு நெடுங்‌காலம்‌ ஊடல்‌ கொண்டிருப்பதாகக்‌ கூறினார்‌. உடனே அடியவர்‌, “என்னுடைய திருவோட்டைக்‌ களவாடியது உண்மைதான்‌. அதனால்தான்‌ உன்‌ மனைவியின்‌ கையைப்‌பற்றி குளத்தில்‌ மூழ்கி சத்தியம்‌ செய்ய மறுக்கிறீர்‌. நான்‌ இவ்வழக்கை அந்தணர்கலிடம்‌ எடுத்துச்‌ செல்லப்‌போகிறேன்‌. அவர்கள்‌ வழக்கை விசாரிக்கட்டும்‌!” என்று கூறிச்‌ சென்றார்‌. அந்தணர்களிடமும்‌ வழக்கைக்‌ கூறினார்‌.

     அந்தணர்கள்‌ நீலகண்டரை அழைத்தனர்‌. வழக்கை விசாரித்தனர்‌. அவர்கள்‌ நீலகண்டரிடம்‌, “அடியவரது திருவோட்டை நீர்‌ களவாடவில்லை என்றால்‌ உம்‌ மனைவியாரின்‌ கையைப்‌ பற்றி குளத்தில்‌ மூழ்க வேண்டும்‌!” என்று உத்தரவிட்டனர்‌. என்ன செய்வதென்று புரியாது தவித்த நீலகண்டர்‌, ஒரு நீண்ட கோலை எடுத்து, அதன்‌ ஒரு முனையைத் தான்‌பற்றிக்‌ கொண்டு, மறுமுனையை தன்‌ மனைவியாரிடம்‌ பற்றிக்‌கொள்ளச்‌ செய்து இருவரும்‌ குளத்தில்‌ மூழ்கி எழுந்தனர்‌.

     அதைக்கண்ட அடியவர்‌, “கோலைப்‌ பற்றியபடி இருவரும்‌ மூழ்கினால்‌ நான்‌ நம்பமாட்டேன்‌. இருவரும்‌ கைகளைப்‌ பற்றிக்கொண்டு குளத்தில்‌ மூழ்கினால்தான்‌ நம்புவேன்‌!” என்று கூறினார்‌. யாதொரு வழியும்‌ தெரியாது தவித்த நீலகண்டர்‌, மனைவியாரிடம்‌ தன்மீது ஊடல்‌ கொண்ட காரணத்தை எல்லாம்‌ மானத்தை விட்டுக்‌ கூறினார்‌. மனைவியோடு குளத்தில்‌ மீண்டும்‌ மூழ்கி எழுந்தார்‌.

       மறுகணமே நீலகண்டருக்கும்‌ அவரது மனைவியாருக்கும்‌ முதுமை நீங்கியது. இருவரது உடல்களும்‌ இளமைத்‌ தோற்றம்‌ கொண்டன. அருகில்‌ நின்ற அடியவரும்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌.

     அவ்வேளையில்‌ சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனத்தில்‌ திருக்காட்சி அருளினார்‌. நீலகண்ட நாயனாரும்‌ அவரது மனைவியாரும்‌ பெருமானையும்‌ அன்னையையும்‌ பணிந்து தொழுதனர்‌.

       சிவபெருமானும்‌ அவ்விருவரிடம்‌, “இவ்வாலிபத்‌ தோற்றத்துடனே எம்‌ அருகில்‌ எப்போதும்‌ இருப்பீர்களாக!” என்று இருவரையும்‌ சிவலோகம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

சுந்தரர் வரலாறு

சுந்தரர்-வரலாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌

63 நாயன்மார்களில் ஒருவர்

        திருமுனைப்பாடி நாட்டிலுள்ள இருநாவலூரில்‌ ஆதிசைவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ ஆவார்‌. இவரது தந்தை சடையனார்‌தாய்‌ இசைஞானியர்‌ ஆவர்‌. பெற்றோர்‌ அவருக்கு இட்ட பெயர்‌ நம்பியாரூரர்‌. நம்பியாரூரர்‌ சிறுபிள்ளையா௧ இருக்கையில்‌, அவரைக்‌ கண்ட அந்நாட்டு மன்னரான நரசிங்கமுனையார்‌ அக்குழந்தையைத்‌ தனக்கே தருமாறு சடையனாரிடம்‌ கேட்டார்‌. சடையனாரும்‌ தந்தார்‌. நம்பியாரூரரும்‌ அரண்மனையில்‌ அந்தணக்‌ குழந்தையாகவே வளர்க்கப்‌பட்டார்‌. இவ்வாறு நம்பியாரூரர்‌ சிறப்புற வளர்ந்து திருமணப்‌ பருவத்தை எட்டினார்‌.

    புத்தூரில்‌ வசித்து வந்த சடங்கவி சிவாச்சாரியரின்‌ புதல்வியை, நம்பிக்கு மணம்‌ செய்து வைக்க சடையனார்‌ ஏற்பாடுகள்‌ செய்தார்‌. அதை ஊரில்‌ அனைவருக்கும்‌ தெரிவித்தார்‌. திருமண நாளும்‌ வந்தது. சடங்குகள்‌ எல்லாம்‌ நடந்தேறின.  நம்பியாரூரரும்‌ திருமணப்‌ பந்தலுள்‌ அமர்ந்தார்‌. சிவபிரான்‌, ஏற்கனவே தான்‌ கூறியபடி நம்பியாரூராரைத்‌ தடுத்தாட்‌கொள்ள நினைத்தார்‌.

சிவபெருமான்‌ தடுத்தாட்கொளல்‌

      சிவனடியாரைப்‌ போன்று வடிவெடுத்த சிவபிரான்‌, கையில்‌ ஒரு சிறிய ஒலையுடன்‌, திருமணப்‌ பந்தலிற்குள்‌ நுழைந்தார்‌. சபையோர்‌ சூழவிருந்த நம்பியாரூரரும்‌ அவரை வணங்கினார்‌. சிவனடியாரும்‌ தான்‌ வந்த காரணத்தை சபையோர்முன்‌ கூறினார்‌.

“நம்பியாரூரா! நீ எனக்குப்‌ பரம்பரை அடிமை. இத்திருமணத்தை உதறிவிட்டு என்‌ பின்னே வா!” என்றார்‌.

     நம்பியாரூரார்‌ சினம்‌ கொண்டு, “அந்தணருக்கு அந்தணர்‌ எப்படி அடிமையாக முடியும்‌? அதற்கு என்ன சாட்சி உள்ளது? என்று கடுமையாக வினவினார்‌.

    சிவனடியாரும்‌, “இதோ என்‌ கையிலுள்ள ஓலைதான்‌ அதற்குச்‌ சாட்சி. ஒலையை உன்னிடம்‌ காட்டத்‌ தேவையில்லை. நீ என்‌ பின்னே வா” என்று நடக்கலானார்‌. சினம்‌ கொண்ட நம்பியாரூரரும்‌, சிவனடியாரின்‌ பின்னே சென்று ஒலையைப்‌ பறித்துக் கிழித்தெறிந்தார்‌.

     உடனே சிவனடியாரும்‌ அருகில்‌ நின்றிருந்தவர்களைப்‌ பார்த்து, “என்‌ ஓலையை இவன்‌ கிழித்ததனால்‌, இவன்‌ என்‌ அடிமை என்பது உறுதியாயிற்று. இன்னும்‌ இதை மெய்பிக்கவேண்டும்‌ என்றால்‌ என்னோடு திருவெண்ணெய்‌ நல்லூருக்கு வாருங்கள்‌ என்றபடி நடந்தார்‌. எல்லோரும்‌ சிவனடியாரின்‌ பின்னே, திருவெண்ணெய்‌ நல்லூருக்குச்‌ சென்றார்கள்‌.

     திருவெண்ணெய்நல்லூரில்‌, சான்றோர்கள்‌ நிறைந்த சபைக்குச்‌ சென்றார்‌ அச்சிவனடியார்‌. நடந்தவற்றைக்‌ கூறினார்‌. அச்சான்றோர்களும்‌, “அந்தணர்க்கு அந்தணர்‌ அடிமையாதல்‌ வழக்கிலில்லையே? நீர்‌ கூறுவதை எப்படி நம்புவது? என்று வினவினர்‌.

அதற்கு அச்சிவனடியார்‌, “இதோ, நம்பி கிழித்தது படிஒலைதான்‌. மூல ஓலை என்னிடம்‌ இருக்கிறது, எடுத்து வருகிறேன்‌” என்று ஆலயத்தின்‌ சன்னிதிக்குப்‌ போய்‌ அதை எடுத்து வந்தார்‌. சான்றோர்களால்‌ அவ்வோலை வாசிக்கப்பட்டது. பின்‌, நம்பியாரூரரின்‌ பாட்டனாரின்‌ கையெழுத்தோடு ஒப்பிடப்பட்டு, அது உண்மையென்பது உறுதிப்படுத்தப்‌பட்டது. நம்பியாரூரரும்‌ கலங்கி நின்றார்‌. பின்‌ அனைவரும்‌, “சரி, அடியவரே! இவ்வோலையில்‌ உமது ஊர்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ என்று எழுதப்‌பட்டுள்ளதே. இங்கு உமது வீடுதான்‌ எங்குள்ளது?” என்று கேட்டனர்‌.

      அதற்கு அடியவரும்‌, “இதோ என்னிருப்பிடம்‌ இங்குள்ளது!” என்றபடி திருக்கோயிலினுள்‌ சென்று மறைந்தார்‌. நம்பியாருரார்‌ மட்டும்‌ தனியாக ஆலயத்தினுள்‌ பிரவேசித்தார்‌. உள்ளே சிவனடியாரைத்‌ தேடினார்‌. காணவில்லை. அங்கே, சிவபிரான்‌, உமாதேவியருடன்‌ ரிஷப வாகனத்தில்‌ நம்பிக்குக்‌ காட்சிக்‌ கொடுத்தார்‌. நம்பியாரூராரும்‌ மெய்‌சிலிர்த்தார்‌. பரமனை இருகரம்‌ கூப்பி வணங்கினார்‌. கயிலையில்‌ நடந்தவை அனைத்தும்‌ நினைவிற்கு வந்தது. எளியவன்‌ தன்‌ வேண்டுதலின்‌ பொருட்டு தன்னை தடுத்தாட்கொண்ட பெருமானின்‌ கருணை நினைந்து சிந்தையுருகினார்‌.

       சிவபெருமானும்‌ நம்பியை நோக்கி, “நீ என்னை வன்மையான வார்த்தைகளால்‌ பேசினாய்‌. எனவே இன்றுமுதல்‌ நீ ‘வன்தொண்டன்‌’ என்று அழைக்கப்படுவாய்‌ என்று இருவாக்கு அருளினார்‌. நம்பியாரூரரும்‌ ‘பித்தா பிறைசூடி’ என்னும்‌ திருப்‌ பதிகத்தைப்‌ பாடினார்‌.

      திருமணம்‌ தடைபட்டதால்‌, சடங்கவி சிவாச்சாரியாரின்‌ புதல்வியும்‌, நம்பியின்‌ நினைவாகவே இருந்து சிவனடி சேர்ந்தாள்‌. வன்தொண்டரோ அன்று முதல்‌ சிவபெருமானைத்‌ திருப்பதிகங்களால்‌ பாடித்‌ தொழுது வந்தார்‌. பல தருத்தலங்களுக்குச்‌ சென்று திருவதிகை என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

      திருவதிகை, அப்பர்‌ சுவாமிகள்‌ உழவாரப்‌ பணி செய்த இத்திருத்தலம்‌. எனவே அம்மண்ணை மிதிக்கக்‌ கூடாது என்ற எண்ணத்தில்‌ஆலயத்திற்குச்‌ செல்லாமலேயே இறைவனை வணங்கி அருகிலுள்ள மடத்தில்‌ படுத்தார்‌. அப்போது சிவபிரான்‌ கிழ அடியவராக வந்து சுந்தரரின்‌ அருகில்‌ படுத்தார்‌. தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையின்மீது படும்படி வைத்தார்‌. அதைக்கண்ட வன்தொண்டர்‌ சற்று தள்ளிப்‌ படுத்தார்‌. மீண்டும்‌ கிழ அடியவர்‌, தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையில்‌ வைத்தார்‌.

       வன்தொண்டருக்குச்‌ சற்று கோபம்‌ வந்தது. அவர்‌ அம்முதியவரை நோக்கி, “அடியவரே! நீர்‌ செய்வது முறையா?” என்று கேட்டார்‌. கிழ அடியவரும்‌, “என்ன வன்தொண்டா? என்னைத்‌ தெரியவில்லையோ ?]” என்ற படி மறைந்தார்‌. அப்போதுதான்‌ அவ்வடியவர்‌ யாரென்று வன்‌தொண்டருக்குப்‌ புரிந்தது. இறைவனின்‌ கருணையை நினைத்து மெய்‌ சிலிர்த்தார்‌.

     பிறகு திருவாரூர்‌ சென்றடைந்த வன்தொண்டரின்‌ பக்திக்கு மெச்சிய சிவபெருமான்‌, நம்பியாரூரைத்‌ தன்‌தோழராக ஏற்றுக்‌ கொண்டார்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டு வாழவும்‌ பணித்தார்‌. அதனால்‌ நம்பியாரூர்‌ தம்பிரான்‌ தோழர்‌ என்ற பெயர்‌ பெற்றார்‌. மேலும்‌ சிவபிரான்‌ நம்பியாரூரிடம்‌, “யாம்‌ உன்னைத்‌ தடுத்து ஆட்கொண்ட போது இருந்தபடி திருமணக்‌ கோலத்திலேயே எப்போதும்‌ இருப்பாயாக!” என்று கூறினார்‌. நம்பியாரும்‌ திருமணக்‌கோலம்‌ தாங்கியே எங்கும்‌ போய்‌ வந்தார்‌.

பரவையாரோடு இல்லறம்

     இந்நிலையில்‌, திருவாரூரில்‌ பரவை நாச்சியார்‌ என்ற மங்கையைக்‌ கண்டார்‌. அவர்மீது நம்பியார்‌ காதல்‌ கொண்டார்‌. பரவையாரும்‌ நம்பியார்‌ மீதுமையல்‌ கொள்ள இருவருக்கும்‌ பெற்றோர்‌ மணம்‌ செய்து வைத்தனர்‌. இருவரும்‌ இல்லறம்‌ நடத்தத்‌ தொடங்கினர்‌.

   ஒருநாள்‌ அடியவர்களுடன்‌ கோயிலில்‌ அமர்ந்திருந்த நம்பியாரூரர்‌ முன்‌ சிவபிரான்‌ காட்சி தந்தார்‌. திருத்‌தொண்டத்‌ தொகை” பாடும்படிக்‌ கூறினார்‌. நம்பியாரும்‌ அதைப்‌ பாடினார்‌.

      ஒருமுறை குண்டையூர்‌ என்னும்‌ ஊரிலே கிழவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ கனவிலே தோன்றிய சிவபிரான்‌, “வன்தொண்டருக்காக உம்மிடம்‌ நெல்‌ அனுப்பியுள்ளோம்‌. அவற்றை வன்தொண்டரிடம்‌ சேர்ப்பிப்பாயாக!” என்று கூறினார்‌.  கண்விழித்த கிழவர்‌, தன்‌ ஊர்‌ முழுவதும்‌ நெல்‌ மலையாகக்‌ கிடக்கக்‌ கண்டார்‌. உடனே நம்பியாரூரருக்குச்‌ செய்தி அனுப்பினார்‌. நம்பியாரூரார்‌ குண்டையூர்‌ வந்து நெல்மலைகளைக்‌ கண்டார்‌. பின்‌ சிவபெருமானை வேண்ட, சிவபூத கணங்கள்‌ வந்து அவற்றை திருவாருக்கு எடுத்துச்‌ சென்றன. நம்பியாரும்‌, பரவையாரும்‌ அவற்றை ஊர்‌ மக்களுக்கு வழங்கினர்‌.

      ஒருமுறை திருநாட்டியத்தான்குடி என்னும்‌ ஊரிலுள்ள கோட்புலியார்‌ நம்பியாஞரனின்‌ பெருமைகளைக்‌ கேட்டறிந்‌தார்‌. அவர்‌ தன்‌ இரு புதல்விகளான சிங்கடியையும்‌, வனப்பகையையும்‌ திருமணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌ என்று நம்பியாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. நம்பியாரூரரோ, இவ்விரு மங்கையரும்‌ தம்‌ புதல்வியர்‌ போன்றவர்கள்‌ என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்‌. அவ்விருவரையும்‌ தம்‌பதிகங்களில்‌ வைத்துப்‌ பாடிச்‌ சிறப்பித்தார்‌.

செங்கல்‌ பொன்னானது

      ஒரு பங்குனி உத்திரத்‌ திருநாள்‌ செலவிற்கு பொருள்‌ ஏதுமின்றித்‌ தவித்த பரவையார்‌, நம்பியாரூரரிடம்‌ தெரிவித்தார்‌. நம்பியாரும்‌ திருப்புகலூர்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. அன்று அவர்‌ அக்கோயிலின்‌ அருகேயுள்ள மடத்தில்‌ ஒரு செங்கல்லைத்‌ தலையணையாக்கி உறங்கினார்‌. சிவபிரான்‌ அருளால்‌ செங்கல்‌ பொன்னாக மாறியது. பரவையாரின்‌ குறையும்‌ நீங்கியது. இவ்வாறு பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்ற சுவாமிகள்‌, சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. பொன்னும்‌ பொருளும்‌ பெற்றார்‌.

     திருமுதுகுன்றம்‌ என்னும்‌ இடத்தில்‌ உறைந்தருளும்‌ சிவபெருமானைப்‌ பாடித்துதித்தார்‌. பெருமான்‌ நம்பியாருக்குப்‌ பன்னிரண்டாயிரம்‌ பொன்‌ தந்தார்‌. அப்போது நம்பியார்‌, சிவபிரானிடம்‌ இப்பொன்னைத்‌ திருவாரூரில்‌ தந்தால்‌, சிறப்பாகவிருக்கும்‌ என்று வேண்டிக்‌ கொண்டார்‌. சிவபெருமான்‌, “வன்தொண்டரே! இப்பொன்னை மணிமுத்தா நதியில்‌ இடுவீராக! பிறகு திருவாரூர்‌ சென்று அக்கோயில்‌ குளத்தில்‌ எடுத்துக்‌ கொள்வீராக!”  என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ அப்பொன்னை நதியில்‌ விட்டுவிட்டு, மாற்று உரை பார்க்கும்‌ பொருட்டு ஒரு சிறு துண்டு பொன்னை மட்டும்‌ வெட்டி எடுத்துக்‌ கொண்டார்‌. திருவாரூர்‌ சென்றார்‌. திருவாரூர்‌ மக்கள்‌ அறிய பொன்னை அவவூரின்‌ குளத்திலே எடுத்தார்‌. இரு பொன்னின்‌ மாற்றும்‌ ஒத்ததாக இருந்தது. சுந்தரரின்‌ பெருமையை மக்கள்‌ அறிந்தனர்‌.

       வன்தொண்டர்‌ பின்‌ பல திருத்தலங்களுக்குச்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. திருக்குருகாவூர்‌ என்ற இடத்திலும்‌, திருக்கச்சூர்‌ என்னுமிடத்திலும்‌ நம்பியாரூரர்‌ உணவின்றித்‌ தவித்தார்‌. அவ்வேளைகளில்‌ சிவபிரானே அடியவர்‌ கோலத்தில்‌ வந்து சுந்தரரின்‌ பசியைத்‌ தீர்த்தார்‌; தாகம்‌ தணித்தார்‌. இவ்வாறு சிவபிரான்‌ நம்பியாஞூரரைத்‌ தன்‌ தோழராகவே பாவித்து பல இடங்களில்‌ அருள்‌ செய்தார்‌.

     நம்பியாரூரரும்‌ இவ்வாறு பல திருத்தலங்களை வழிபட்டு தொண்டை நாடு வந்தார்‌. திருக்காஞ்சி, காமக்‌கோட்டம்‌ முதலிய இடங்களுக்குச்‌ சென்று இறைவனை வழிபட்டார்‌. இறுதியில்‌ திருவொற்றியூர்‌ வந்து சேர்ந்தார்‌.

சங்கிலி நாச்சியாரோடு திருமணம்‌

      திருவொற்றியூரில்‌ ஞாயிறு கிழவர்‌ என்பவரின்‌ புதல்வி சங்கிலியார்‌ என்னும்‌ மங்கை உமையன்னையிடம்‌ மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்க பெற்றோர்‌ பல வரன்களைத்‌ தேடினர்‌. ஆனால்‌ சங்கிலியாருக்கோ, ‘தான்‌ ஒரு சிவனடியாருக்கு மனைவியாகவே பிறந்தவள்‌’ என்ற உணர்வு தோன்றியிருந்தது. அதனால்‌ பெற்றோர்‌ கொண்டுவந்த வரன்களை எல்லாம்‌ மறுத்து வந்தார்‌.

       அவ்‌வேளையில்‌ சுந்தரமூர்த்தியார்‌ திருவொற்றியூர்‌ வந்தார்‌. அக்கோயிலில்‌ இருந்த சங்கிலியாரைக்‌ கண்டார்‌. காதல்‌ கொண்டார்‌. சங்கிலியாரைக்‌ கண்ட பொழுது முதல்‌, அவருக்கு அப்பெண்ணின்‌ நினைவாகவே இருந்தது. எனவே சிவபிரானிடம்‌, “இப்பெண்ணை நான்‌ மணக்க வேண்டும்‌!” என்று வேண்டினார்‌. இறைவனும்‌ அவ்வாறே நடக்கும்‌” என்று அருள்‌ செய்தார்‌.

     சுந்தரரைக்‌ கண்ட நாள்‌ முதல்‌ சங்கிலியாரும்‌ தன்‌ மனதை, நம்பியாரூரரிடம்‌ பறி கொடுத்திருந்தார்‌. அவ்வாறிருக்கையில்‌, ஒருநாள்‌ சிவபிரான்‌, சங்கிலியாரின்‌ கனவில்‌ தோன்றி, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்து கொள்ள விரும்புவதாகக்‌ கூறினார்‌. அதற்கு சங்கிலியாரோ, “பெருமானே! சுந்தரர்‌ ஏற்கனவே திருவாரூரில்‌ ஒரு பெண்ணைத்‌ திருமணம்‌ செய்துள்ளாரே! என்னை மணம்‌ செய்தால்‌ என்றேனும்‌ ஒருநாள்‌ என்னைப்‌ பிரிந்து திருவாரூர்‌ சென்றுவிட மாட்டாரோ!” என்று கேட்டார்‌.

       அதற்கு இறைவன்‌, “சுந்தரன்‌ அவ்வாறு செய்யாமலிருக்க, நீ அவனிடம்‌, உன்னைப்‌ பிரிந்து போகாதபடி சத்தியம்‌ வாங்கிக்‌ கொள்‌!” என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பிறகு சிவபிரான்‌ சுந்தரரின்‌ கனவில்‌ தோன்றி, “ நீ சங்கிலியார்‌ மேல்‌ வைத்த காதலை அவரிடம்‌ தெரிவித்தாகி விட்டது. ஆனால்‌ நீ அவளிடம்‌, அவளைப்‌ பிரிந்து போக மாட்டேன்‌ என்ற சத்தியம்‌ செய்து தர வேண்டும்‌” என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ இறைவனிடம்‌, “நான்‌ கோயிலின்‌ கருவறையின்‌ முன்‌ சத்தியம்‌ செய்து தருகிறேன்‌. பெருமானே! நீர்‌ அப்போது அக்கோயிலில்‌ உள்ள மகிழ மரத்தின்‌ கீழ்‌ வீற்றிருக்க வேண்டும்‌!” என்று கேட்டுக்‌ கொண்டார்‌. இறைவனும்‌ சம்மதித்தார்‌.

       ஆனால்‌ சிவபிரான்‌ தன்‌ திருவிளையாடலைத்‌ தொடங்கினார்‌. நேராக, சங்கிலியாரின்‌ கனவில்‌ சென்று, “சுந்தரன்‌ உன்னிடம்‌ சத்தியம்‌ செய்யும்போது, மகிழ மரத்தின்‌கீழ் சத்தியம்‌ செய்யும்படி கேட்டுக்‌ கொள்‌! என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பின்‌ செய்தியைத்‌ தன்‌ தோழிகளிடம்‌ கூறினார்‌.

      மறுநாள்‌ கோயிலில்‌ சங்கிலியார்‌ மறைந்திருக்க, அவரின்‌ தோழிகள்‌, சுந்தரரிடம்‌ ‘சங்கிலியாரைப்‌ பிரிய மாட்டேன்‌’ என்று சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டார்கள்‌. சுந்தரரும்‌ கோயிலின்‌ கருவறை முன்‌ சத்தியம்‌ செய்யச்‌ சென்றார்‌. தோழிகளோ, மகிழ மரத்தின்‌ அடியில்‌ சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டனர்‌. சுந்தரர்‌ என்ன செய்வதென்று புரியாமல்‌ விழித்தார்‌. வேறு வழியில்லாமல்‌ சத்தியம்‌ செய்து தந்தார்‌. அதைக்கண்ட சங்கிலியார்‌ மனம்‌ வருந்தினார்‌.

     சுந்தரருக்கும்‌ சங்கிலியாருக்கும்‌ திருமணம்‌ நடைபெற்றது. இருவரும்‌ மகிழ்ச்சியாக இல்லறம்‌ நடத்தினர்‌. சில மாதங்கள்‌ சென்றபின்‌, நம்பியாருராருக்கு திருவாரூர்‌ நினைவு வந்தது. அவர்‌ பரவையாரிடம்‌ செல்லநினைத்தார்‌. சங்கிலியாரிடம்‌ விடை பெற்றார்‌. இறைவனின்‌ தோழராக இருப்பினும்‌ சத்தியம்‌ தவறலாமோ? அதனால்‌ சிவபிரான்‌ சுந்தரரின்‌ இரு கண்களிலும்‌ பார்வையைப்‌ பறித்து விட்டார்‌. சுந்தரர்‌ கண்பார்வையின்றி தவித்தார்‌. இறைவனிடம்‌ தொழுதார்‌. பலநாட்களுக்குப்‌ பிறகு திருவெண்பாக்கம்‌ என்னுமிடத்தில்‌

       இறைவன்‌ சுந்தருக்கு ஒரு ஊன்று கோல்‌ தந்தார்‌. அதைப்‌ பெற்றுக்கொண்டு, பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்று, பதிகங்கள்‌ பாடி சிவபிரானைத்‌ தொழுதார்‌ சுந்தரர்‌. அவ்வாறு வருகையில்‌ காஞ்சி ஏகாம்பரநாதரைத்‌ தொழுகையில்‌ ஒற்றைக்‌ கண்ணில்‌ மட்டும்‌ பார்வை வந்தது. பிறகு பலத்‌ திருத்தலங்களைத்‌ தொழுது வருகையில்‌, திருத்துமுத்தி என்னும்‌ இடத்தில்‌ சிவபிரானை மனம்‌ வருந்தித்‌ தொழுதார்‌. மறு கண்ணிலும்‌ பார்வை பெற்றார்‌.

      இவ்வாறு பயணம்‌ செய்து இறுதியில்‌ திருவாரூர்‌ சென்றடைந்தார்‌. ஆனால்‌ பரவையார்‌, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்த செய்தி அறிந்து அவர்‌ மீது கடுங்கோபம்‌ கொண்டிருந்தார்‌.

சிவபெருமானைத்‌ தூது விடல்‌

      பரவையாரைக்‌ காணச்‌ சென்ற சுந்தரரை, பரவையார்‌ வீட்டினுள்ளேயே அனுமதிக்க மறுத்தார்‌. அவருடன்‌ பேசவும்‌ மறுத்தார்‌. சுந்தரர்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தி அவவூர்க்‌கோயில்‌ மண்டபத்திற்கு வந்து அமர்ந்தார்‌. பரவையார்‌, தன்னை வெறுத்ததை சுந்தரரால்‌ பொறுக்க முடியவில்லை. அவ்விரவே, தியாகேசப்‌ பெருமானைத்‌ தொழுதார்‌. ‘தன்‌மீது கோபம்‌ கொண்ட பரவையாரை ஆறுதல்‌ செய்து, தன்னை மீண்டும்‌ சேரும்படிச்‌ செய்ய வேண்டும்‌” என்று வேண்டினார்‌. சிவபெருமானும்‌ சுந்தரருக்காக அந்த நடுநிசியிலும்‌ பரவையாரிடம்‌ தூது செல்லச்சம்மதித்தார்‌.

      மறுகணமே சிவபிரான்‌ அடியவர்‌ கோலம்‌ கொண்டார்‌. தேவர்களையெல்லாம்‌ பிற அடியவர்களாக கோலம்‌ கொள்ளச்‌ செய்தார்‌. பரவையார்‌ வீடு நோக்திச்‌ சென்றார்‌. பரவையாருக்கு சுந்தரர்‌ மீது கோபம்‌ இன்னும்‌ அடங்கவில்லை. நடுநிசியிலும்‌ உறங்காது விழித்திருந்தார்‌.

    அவ்வேளை, சிவபெருமான்‌ அடியவர்‌ கோலத்தில்‌ சென்றார்‌. சுந்தரர்‌ மீது தவறேதும்‌ இல்லை என்று எடுத்துரைத்தார்‌. ஆனால்‌ பரவையார்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அவர்‌ அவ்வடியவரிடம்‌, “சுந்தரர்‌ எனக்கு வஞ்சகம்‌ செய்தார்‌!அதனால்‌ நான்‌ அவரை ஏற்றுக்‌ கொள்ள இயலாது!” என்று கூறிவிட்டார்‌.

    சிவபிரானும்‌ திரும்பி, சுந்தரரிடமே வந்தார்‌. நடந்ததைக்‌ கூறினார்‌. உடனே சுந்தரரும்‌, “பரவையார்‌ நித்தம்‌ வழிபடும்‌ சிவனே தூது வந்தார்‌ என்று அறிந்தும்‌, என்னை ஏற்றுக்‌ கொள்ள மறுக்கிறாளோ பரவையார்‌ இல்லாது என்னால்‌ உயிர்‌ வாழ முடியாது. எனக்காக நீர்‌ மீண்டும்‌ ஒருமுறை தூது செல்ல வேண்டும்‌!” என்று பணிந்து வேண்டினார்‌.

    சுந்தரர்‌ மீது பெருங்கருணை கொண்ட சிவபிரான்‌, மீண்டும்‌ பரவையார்‌ வீட்டிற்கு, தேவர்கள்‌ புடைசூழச்‌ சென்றார்‌. இந்நிலையில்‌ பரவையாரின்‌ மனதில்‌, ‘சற்று முன்பு வந்தது சிவபெருமானே!’ என்ற எண்ணம்‌ உதித்தது. ‘ஐயோ! நான்‌ நித்தம்‌ வணங்கும்‌ பெருமான்‌, என்னைத்‌ தேடி வந்தாரே! நான்‌ அவரைத்‌ திருப்பி அனுப்பினேனே!’ என்று கலக்கமுற்றிருந்தார்‌. அவ்வேளையில்‌ மீண்டும்‌ சிவபிரான்‌ தன்னைத்தேடி வரும்‌ உணர்வு அவருள்‌ தோன்றியது.

      இம்முறை சிவபிரான்‌, வந்து கேட்கும்‌ முன்பே, பரவையார்‌ பெருமானை வணங்கித்‌ துதித்தாள்‌. சுந்தரரை ஏற்றுக்‌ கொள்ளச்‌ சம்மதித்தார்‌. சிவபிரானும்‌ செய்தியைச்‌ சுந்தரிடம்‌ தெரிவித்தார்‌. சுந்தரரும்‌ வணங்கினார்‌

      நம்பியாரும்‌ பரவையாரும்‌ மீண்டும்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டனர்‌. சுந்தரர்‌, சிவபெருமானை ஒரு பெண்ணிற்காகத்‌ தூது அனுப்பியதை அவ்வூரில்‌ இருந்த ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ என்ற அடியவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியவில்லை. அவர்‌ சுந்தரர்‌ மீது கோபம்‌ கொண்டார்‌. ஆனால்‌, கலிக்காமரின்‌ கோபத்தை மாற்ற திருவுள்ளம்‌ கொண்டார்‌ சிவபிரான்‌. அவருக்கு சூலை நோயை உண்டாக்கினார்‌.

        அந்நோயை சுந்தரர்‌ நீக்குவார்‌ என்று சொல்லி, கலிக்காமருக்கும்‌ சுந்தரருக்கும்‌ இடையே நட்புண்டாகச்‌ செய்தார்‌. இருவரும்‌ அதன்‌ பிறகு ஒருவர்‌ மீது ஒருவர்‌ மாறாப்‌ பேரன்பு கொண்டிருந்தனர்‌.

      பிறகு சுந்தரர்‌, பாண்டி நாட்டிலுள்ள பல இருத்தலங்‌களுக்கும்‌ சென்று சிவபிரானை வழிபட்டார்‌. அதுபோல்‌, மலை நாட்டை ஆண்டு கொண்டிருந்த சேரமான்பெருமாள்‌ என்னும்‌ மன்னர்‌, சிவபக்தியில்‌ சிறந்து நின்றவர்‌. அவரோடு சுந்தரரை நட்புறவு கொள்ளச்செய்தார்‌ சிவபிரான்‌. அவர்கள்‌ இருவரும்‌ நட்பு கொண்டனர்‌. சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரரின்‌ மீது பேரன்பு வைத்திருந்தார்‌. சுந்தரரும்‌ மலைநாடு சென்று, சேரமான்‌ பெருமாளுடன்‌ சிலகாலம்‌ தங்கியிருந்து இருவாருக்குத்‌ திரும்பினார்‌.

       அவ்வேளையில்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரருக்கு ஏராளமான பொன்னும்‌ பொருளும்‌ தந்து வழியனுப்பினார்‌. சிவபிரானோ, எப்பொருளையும்‌ சுந்தரருக்குத்‌ தானே நேரடியாகத்‌ தரவேண்டும்‌ என்று திருவுள்ளம்‌ கொண்டார்‌. சுந்தரரின்‌ உடன்‌ வந்த அடியவர்களின்‌ பொன்னையும்‌ பொருளையும்‌ திருடர்களாய்‌ கோலம்‌ கொண்ட சிவகணங்கள்‌ கொண்டு பறித்தார்‌. திருமுருகன்‌ பூண்டி என்னும்‌ தலத்தில்‌ மீண்டும்‌ தந்தார்‌.

சுந்தரர்‌ இவ்வாறு பலத்‌ திருத்தலங்களைச்‌ சென்று தரிசித்து, திருப்புக்கொளியூர் என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

முதலையுண்ட பாலகனை உயிர்ப்பித்தல்‌

          சுந்தரர்‌, திருப்புக்கொளியூர்‌ தலத்து பெருமானைத்‌ தொழுது, மாடவீதி வழியே வந்து கொண்டிருந்தார்‌. அப்போது அவ்வீதியில்‌ எதிர்‌ எதிரே அமைந்த இரு வீடுகளைக்‌ கண்டார்‌.  ஒரு வீட்டில்‌ மங்கல மேளச்‌ சத்தம்‌ கேட்டது. எதிர்‌ வீட்டில்‌ அழுகுரல்‌ கேட்டது. என்ன நடந்தது என்று சுந்தரர்‌, அவவீடுகளுக்குச்‌ சென்று கேட்டார்‌. மங்கலமேளம்‌ கேட்ட வீட்டில்‌ ஒன்பது வயது பாலகன்‌ ஒருவனுக்கு உபநயனம்‌ நடந்து கொண்டிருந்தது.

         பிறகு, சுந்தரர்‌ அழுகுரல்‌ கேட்ட வீட்டிற்குள்‌ சென்றார்‌. காரணம்‌ கேட்டார்‌. அக்குடும்பத்திலுள்ள ஒரு பாலகன்‌ கடந்த ஆண்டு, நண்பனுடன்‌ குளத்தில்‌ குளிக்கச்‌ சென்றான்‌. அப்போது, அக்குளத்திலிருந்த ஒரு முதலை அப்பாலகனைக்‌ கடித்து விழுங்கியது. அவன்‌ இறந்து ஓர்‌ ஆண்டு முடிவுற்றிருந்தது.

    இன்று எதிர்‌ வீட்டுப்‌ பாலகனுக்கு உபநயனம்‌ நடக்கையில்‌, இவ்வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள்‌ புதல்வனின்‌ நினைவு வந்தது. அவர்கள்‌ அழுது கொண்டிருந்தனர்‌. ஆனால்‌, சுந்தரரைக்‌ கண்டதும்‌ அவர்கள்‌ தங்கள்‌ கவலையை மறந்து, அவரை வரவேற்று உபசரித்தனர்‌. அக்காட்சி சுந்தரரின்‌ மனதைத்‌ தொட்டது. அவர்‌, அக்குடும்பத்திலுள்ளோர்களிடம்‌, இறந்து போன பாலகனை முதலை விழுங்கிய குளம்‌ எங்கே உள்ளது என்று கேட்டறிந்து, அவர்களையும்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்கு சென்றதும்‌, சிவபெருமானை நினைத்துப்‌ பதிகம்‌ பாடி பாலகனை அழைத்தார்‌.

       இறந்து போன பாலகன்‌, ஓர்‌ ஆண்டில்‌ எவ்வளவு வளர்ச்சி பெற்றிருப்பானோ, அப்பருவத்தில்‌ முதலையின்‌ வாயிலிருந்து வெளிவந்தான்‌. அவனது பெற்றோர்கள்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்‌. சுந்தரை வணங்கி, ஆனந்தக்‌ கண்ணீர்‌ வடித்தனர்‌.

மலைநாடு வருதல்‌

        ஏற்கனவே, சுந்தரரின்‌ மீது பேரன்பு கொண்டிருந்த மலைநாட்டு மன்னர்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரர்‌ ஒவ்வொரு திருத்தலங்களிலும்‌ நடத்திய அற்புதங்களைக்‌ கேட்டறிந்து, அவரை எப்போது காண்போம்‌ என்று காத்திருந்தார்‌.

        அவ்வேளையில்‌ சுந்தரரும்‌ மலைநாடு சென்றடைந்‌தார்‌. அவரைக்‌ கண்ட சேரமான்‌ பெருமாள்‌, எல்லையில்லா ஆனந்தம்‌ அடைந்தார்‌. சுந்தரரும்‌, சேரமான்‌ பெருமாளும்‌ எந்நேரமும்‌ சேர்ந்தே சிவபிரானைத்‌ தொழுதனர்‌. பல நாட்கள்‌ கடந்தன.

        ஒருநாள்‌ சுந்தரரைத்‌ தேடினார்‌ சேரமான்‌ பெருமாள்‌. காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம்‌ கேட்டார்‌. சுந்தரர்‌ திருவஞ்சை களத்தியப்பனை வணங்கச்‌ சென்றிருப்பதாகக்‌ கூறினர்‌. சேரமான்‌ பெருமாளும்‌ தன்‌ வெள்ளைக்‌ குதிரையில்‌ ஏறிப்‌ புறப்பட்டார்‌. திருக்கோயிலை நெருங்கினார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌, கோயிலினுள்ளிருந்து வெளியே வந்தார்‌. அப்போது சேரமான்‌ கண்ட காட்சி திருக்கயிலையிலிருந்து கணங்கள்‌ சூழ ஒரு வெள்ளை யானை இறங்கி வந்தது. சுந்தரரை தன்‌ முதுகில்‌ ஏற்றியது. பின்‌ விண்ணுலகம்‌ தாண்டிப்‌ பறந்தது.

    சுந்தரரை ஒரு கணமும்‌ பிரிந்திருக்க இயலாத சேரமான்‌ பெருமாள்‌ மனம்‌ பதைத்தார்‌. தன்‌ வெள்ளைக்‌ குதிரையின்‌ காதில்‌ சிவபஞ்சாட்சர மந்திரத்தைக்‌ கூறினார்‌. விண்ணுக்குக்‌ கிளம்பி, அவ்வெள்ளை யானையைத்‌ தொடரும்படிக்‌கூறினார்‌. குதிரை உயரே கிளம்பியது. சுந்தரரை ஏற்றிச்‌சென்ற யானையை வலம்‌ வந்தபடியே பறந்து வந்தார்‌ சேரமான்‌.

       இறுதியில்‌ இருவரும்‌ கைலாயத்தை அடைந்தனர்‌. அங்கு சுந்தரரைக்‌ கண்டதும்‌ பல வாயில்கள்‌ திறந்தன. சுந்தரர்‌ அவைகளில்‌ நுழைந்து சென்றார்‌. சேரமானும்‌ பின்‌ தொடர்ந்து சென்றார்‌. ஒரு வாயிலில்‌ சுந்தரர்‌ நுழைந்தார்‌. சேரமான்‌ பெருமாள்‌ நுழையுமுன்‌ வாயில்‌ அடைபட்டது. சுந்தரர்‌ இவ்வாறு பல வாசல்களைக்‌ கடந்து சிவபெருமானின்‌ முன்‌ வந்து நின்று வணங்கினார்‌. பெருமானும்‌, “சுந்தரா! நான்‌ உன்னை மட்டும்தானே வரும்படிக்‌ கூறினேன்‌. வேறு யாரையேனும்‌ அழைத்து வந்தாயோ என்று வினவினார்‌.

      சுந்தரர்‌ சிவபிரானை வணங்கி, “பெருமானே! என்‌ மீதுள்ள அன்பினால்‌ சேரமானும்‌ என்னைத்‌ தொடர்ந்தார்‌. இப்போது கயிலையின்‌ வாசலில்‌ நிற்கின்றார்‌! என்றார்‌. சிவபிரான்‌, சேரமானையும்‌ கயிலையினுள்‌ வரும்படி ஆணையிட்டார்‌. கயிலை வந்ததன்‌ காரணம்‌ கேட்டார்‌. சேரமான்‌, “பெருமானே! சுந்தரை வணங்கி நானும்‌ வலம்‌ வந்தேன்‌. திருக்கயிலையை அடைந்து விட்டேன்‌.

       சுந்தரைப்‌ பிரிந்து என்னால்‌ பூவுலகில்‌ வாழ இயலாது!” என்று வணங்கினார்‌. இறைவன்‌ திருவுள்ளம்‌ பூரித்தார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகளை முன்போல, தன்‌ பணி புரிய ஆலால சுந்தரராய்‌ விற்றிருக்கச்‌ செய்தார்‌ இறைவன்‌. பின்‌, சேரமானின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சி, சேரமான்‌ பெருமாளையும்‌ கணங்களுக்குத்‌ தலைவராக்கினார்‌.

சுந்தரர்‌ மண்ணுலகம்‌ ஏன்‌ வந்தார்‌?

     சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ திருக்கையிலாயத்தில்‌ சிவபிரானுக்குத்‌ திருப்பணி புரியும்‌ ஆலால சுந்தரராய்‌ இருந்தார்‌. ஒருநாள்‌ கயிலாயத்‌ தோட்டத்தினுள்‌ சென்ற சுந்தரனார்‌, அங்கே பார்வதி தேவியின்‌ தோழியரான கமலினி, அநிந்திதை என்ற இரு தேவ கன்னிகையரை நோக்கி மனதில்‌ சிறிது சலனம்‌ கொண்டார்‌.

        இதனையறிந்த சிவபிரான்‌, சுந்தரரை நோக்கி, “பெண்‌ மீதான காமத்தைக்‌ கடந்தாக வேண்டும்‌. அதனால்‌ பூமியில்‌ பிறந்து காமம்‌ தணிந்து வருவாயாக!” என்று பணித்தார்‌.

        அதனால்‌ மனம்‌ கலங்கிய சுந்தரரோ, சிவபெருமானை நோக்கி, “பூமியில்‌ பிறக்க சபிக்கப்பட்டேன்‌. இருப்பினும்‌ நான்‌ பூலோக ஆசைகளில்‌ சிக்கிக்‌ கொள்ளும்போது, நீ என்னைத்‌ தடுத்தாட்கொள்ள வேண்டும்‌ என்று வேண்டிக்‌கொண்டார்‌. அதன்படியே செய்வதாக சிவபிரானும்‌ வாக்களித்தார்‌. தான்‌ சுந்தரனுக்கு வாக்களித்தபடியே, திருமணப்‌ பந்தத்தில்‌ சிக்கிக்‌ கொள்ளவிருக்கும்‌ சுந்தரனை, தடுத்தாட்‌கொண்டார்‌. பின்‌ சுந்தரமூர்த்தியாரே, வேண்டியபடி பரவையாரையும்‌, சங்கிலியாரையும்‌ அவரோடு சேர்ப்பித்து இல்லறத்தில்‌ ஈடுபடச்‌ செய்தார்‌. பின்‌, மீண்டும்‌ பிறவாதபடி திருக்கயிலையில்‌ அணைத்துக் கொண்டார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் வாழ்வியலில் தைப்பொங்கல்

காரிமங்கலம்-வட்டார-வேளாளர்கள்-வாழ்வியலில்-தைப்பொங்கல்

முன்னுரை

ஒரு சமுதாயத்தைத் தெரிந்துகொள்ள அவர்களின் வாழ்வியலை ஆய்வதே சிறப்புடையதாக இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், வழிபாட்டுமுறைகள் விழாக்கள் அனைத்தையும் உற்றுநோக்கினால் அம்மக்கள் பற்றிய தெளிவு பிறக்கும். அந்த வகையில் காரிமங்கலம் பகுதியில் இருக்கும் வேளாளகவுண்டர்களின் வாழ்வில் தைப்பொங்கல் பெறும் இடத்தை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் வாழ்வியலில் தைப்பொங்கல்

ஊர் கூடுதல்

                பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடுகின்றனர். பானைக்குத் தேவையான விறகு சேகரிப்பது, வாசலைக் கொத்தி செப்பனிடுவது, மண்ணால் அடுப்புக்கல் செய்வது வெங்கலிச்சான் கல் எடுத்து இதை தோணி உரலில் போட்டு சிறுமிகள் இடித்துக் கோலமாவு உருவாக்குவது எனத் தொடக்க வேலைகளைப் பெரியோர்கள் முதல் சிறியோர்கள் வரை செய்து வருகின்றனர். அதோடு ஊர் மக்கள் ஒன்றுகூடி விழாவிற்கான செயல்பாடுகள் விழாவின்போது மக்கள் நடந்துகொள்ளும் முறைகள், ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பது முதலான அனைத்து முடிவையும் எடுப்பதைக் காணமுடிகிறது.

‘மேரை’ வழங்குதல்

                மேரை என்பதற்கு “‘மரியாதை’ என்றும் ‘குடிமக்களுக்குக் களத்தில் கொடுக்கும் தானியம்’”1 என்று தமிழ் அகராதி பொருள் தருகிறது. அதற்கேற்ப காரிமங்கலம் வட்டார வேளாளர்கள் தங்களின் வேளாண்மை சிறக்க பேருதவிபுரியும் மக்களுக்கு நெல் அல்லது நெற்கதிரோடு கூடிய கட்டை அன்பாக வழங்குவர். அவ்வாறு வேளாண் கருவி உருவாக்கித் தரக்கூடிய கொல்லர்கள், ஆடை வெளுப்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், தோட்டிவேலை பார்ப்பவர்கள், சால், பரி தைத்துக் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பட்ட குடிகளுக்கும் மேரை வழங்கப்படுகிறது. ‘மேரை’ என்பது பொருளாக இல்லாமல் பணமாகப் பெற்றுக்கொள்வதைக் தற்காலத்தில் ஒருசில இடங்களில் பார்க்கமுடிகிறது. இது அம்மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது.

போகியும் காப்புக்கட்டுதலும்

                                “பழையன கழிதலும் புதியன புகுதலும்

                                வழுவலக்கால வகையி னானே”  (நன்னூல். நூ. 462)

என்ற நன்னூலாரின் வாக்கிற்கிணங்க பழைய பொருட்களை எடுத்துவிட்டு, புதிய பொருட்களை வீட்டில் சேர்க்கின்றனர். வீடு தூய்மை செய்வதனால் வந்த குப்பையை வெளியே கொட்டி எரிக்கின்றனர். அன்றே மண்டு (பொதுவிடம்)  தூய்மை செய்து அங்கு கூலி கட்டுவதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் கம்பம், ஜெகினி ஆகியவற்றிற்கு சுண்ணாம்பு மற்றும் செம்மண் சாயம் பூசி அம்மக்களே அழகு படுத்துகின்றனர். அதோடு தோட்டத்தில் இருக்கும் தென்னை, மா முதலிய மரங்களுக்கும் அதே சாயம் பூசப்படுகிறது.

                நெல்லு பில்லால் கயிறு திரித்து அதில் வேப்பிலையைச் செருகி ஊரின் முக்கிய தெருக்கள் மற்றும் கோயில் முன்பாகத் தோரணத்தைத் தோட்டியால் கட்டப்படுகிறது.  மக்களும் அவரவர் வீடு, கொட்டகை, நெற்போர் ஆகியவற்றை சுற்றி பண்ணைப்  பூ, பூலாப் பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சேர்த்து சொருகி வைக்கின்றனர். இந்நிகழ்வைதான் காப்புக் கட்டுதல் என்கின்றனர்.

தைப்பொங்கல்

                ஆடிமாதத்தில் விதைத்த நெல்விதை தைக்கு முன்னால் அறுவடையாகின்றது. பொங்கல் விழாவானது நெல்லைக் களத்திற்குத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகக் அமைகிறது. தை முதல்நாளே தமிழர்களின் அறுவடை நாளாகக் கொண்டாடுகின்றனர். பொங்களன்று காலையில் சூரியன் உதயத்தின்போது பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் இப்பகுதியில் இருக்கும் மக்கள் பிற்பகல் பொழுதில் அவர்களின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அங்கு அடுப்பு வெட்டி புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

இலக்கியங்களில் பொங்கல்

                சங்ககாலம் முதற்கொண்டு பொங்கல்விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது என்பதனை பல்வேறு இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இதனை,

                                “மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்

                                மான் தடி புழுக்கி ய புலவு நாறு குழிசி

                                வான் கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றி,

                                சாந்த விறகின் உவித்த புன்காம்;” (புறம். 168: 8 – 11)

என்ற பாடலில் புலவர் சாத்தனார், மரைபசுவில் கறந்த நுரைக்கொண்ட இனிய பாலை தினை அரிசியோடு சந்தனக்கட்டையால் அடுப்பெரித்து புதுப்பானையில் சேர்த்துப் பொங்கல் வைத்து பலரும் உண்டு மகிழ்ந்த விதத்தை அழகுறத் தெளிவுபடுத்துகின்றார்.

                                “பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்

                                தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்”  (பெரும்.230 – 231)

எனப் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் உழவுத் தொழிலைப் போற்றுகின்றார். அதிலிருந்து வெளிப்படுவது தமிழர்கள் பண்ணெடுங்காலத்திற்கு முன்பிருந்தே அறுபடை விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அதோடு நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகைப் பாடல்களிலும் பொங்கல் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் காவற்பூதத்திற்கு பூவையும் பொங்கலும் வைத்துத் தமிழ் மக்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

                                “மதுக்குலாம் அலங்கல் மாலை

                                மங்கையர் வளர்த்த செந்தீப்

                                புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” (சீவகசிந்தாமணி: 1821)

எனும் பாடல் அடியின் மூலம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீவகசிந்தாமணியில் சங்கத் தமிழன் புதுப்பானையில் பாலோடு புத்தரிசியிட்டு பொங்கல்வைத்து வழிபட்டான் என்பதை இதன் மூலமாக அறியமுடிகிறது.

பொங்கலும் பகிரிந்துண்ணும் வழக்கமும்

                பொங்கலன்று ஊரிலுள்ள அனைவரும் பொங்கல் வைப்பதில்லை மாறாக, ஒருசில குடும்பம் மட்டுமே பொங்கல் வைக்கின்றனர் மற்றவர்கள் மாட்டுப் பொங்கலன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். அதற்கு காரணம் மக்கள் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்’ என்ற பண்பு படைத்தவர்கள் தமிழர்கள். தான்செய்த உணவைப் பிறருக்குக் கொடுத்துதவும் எண்ணம் அவர்களின் இரத்தத்தில் ஊரி நிற்பதால் தைப்பொங்கல் கொண்டாடுபவர்கள் வீட்டிற்கு மற்றவர்கள் வந்து உணவுண்பதும் அடுத்தநாள் மாட்டுப் பொங்களன்று அவர்களுடைய வீட்டிற்கு இவர்கள் சென்று விழாவைச் சிறப்பிப்பதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

மாட்டுப் பொங்கல் (பட்டி பொங்கல்)

                விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருப்பவை மாடுகள். அதனால், தைப்பொங்கலன்று சூரியனை வணங்கிவிட்டு தன்வாழ்வு சிறக்க உதவியாய் இருந்த கண்முன் இருக்கும் கடவுளாய்ப் போற்றப்படும் மாடுகளுக்கு அடுத்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கலன்று விடியற் காலையில் மன்னால் செய்த அடுப்புக்கல்லை மூட்டி அதன்மேல் புதுப்பானையேற்றி அதில் உப்பிட்டு அதனுடனேயே பாலோடு நீர் கலந்து ஊற்றுகின்றனர். பின் இறைவனையும் முன்னோர்களையும் வணங்கி அடுப்பைப் பற்றவைக்கின்றனர். அடுப்பில் இருக்கும் பானையை ஒரு குடுவைக் கொண்டு மூடுகின்றனர். பானையில் இருக்கும் பால் பொங்கி வழியும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிடுகின்றனர்.

                                ”பொங்கலே பொங்கல் மாட்டுப்பொங்கல்

                                பட்டிப் பெருக பால்பானை பொங்க!

                                நோவும் நொடியும் தெருவோடு போக…”2         

அவ்வாறு பொங்கி வழிவது கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு என்றால் வாழ்வில் சிறப்பு என்றும் தெற்குப் பக்கத்தில் வழிந்தால் முன்னோர்களுக்கு ஆகாது என்றும் கருதுகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் முன்னோர்கள் மீது எவ்வளவு பற்றோடும் பக்தியோடும் இருக்கின்றனர் என்பது புலனாகிறது.

பட்டி கட்டுதல்

                சாணத்தைக் கொண்டு வீடுபோல நாலுமூல சதுரமாகப் பிடித்துக் கிழக்குப் பகுதியில் வாசல்வைத்து அதன் முன்புறத்தில் பெரிய சாணஉருண்டைப் பிடித்து வைக்கின்றனர். முதலில் வைத்த சாணஉருண்டையைக் காட்டிலும் சற்று சிறிய உருண்டையாகச் செய்து அதை சதுரமாக உள்ள சாணத்தின் மேல் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், நெத்திகண்ணாடிப் பூவோடு அருகம்புல்லையும் சேர்த்து அழகுபடுத்துகின்றனர். அந்தப் பட்டிக்குள் வெள்ளை நிறத்துணியால் மத்தை சுற்றி வைக்கின்றனர், அதோடு கிழங்கோடு கூடிய மஞ்சள்செடி, ஆவாரம் பூ, பூலாப்பூ, கடமுடையான் புல் ஆகியவற்றை சேர்த்து வைக்கின்றனர்.

                பட்டியின் மத்தியில் தலைவாழை இலைபோட்டு அதில் பால்பொங்கலை வைத்து அங்கே உண்டான அவரைக்காய்க் கொட்டை சேர்த்த பூசணிக்காய் குழம்பு அதில் சேர்க்கின்றனர். அதில் நெய், வெல்லம், தேன், வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து படையல் போடுகின்றனர். படையல் பக்கத்தில் வெல்லம் சேர்த்த குழிபன்னியாரம் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இறுதியில் ஒரு தட்டில் மஞ்சள் அரிசியும் மற்றொரு தட்டில் படையல் உணவையும் இருவர் எடுத்துக்கொண்டு முதலில் செல்பவர் அரிசியை இறைத்து பொங்கலோ என்று சொல்லிக்கொண்டும் பின்செல்பவர் கையில் இருக்கக்கூடிய தழுகி உணவை இறைத்து பொலியோ என்று கூறி அங்கிருக்கக்கூடிய பசுக்கூட்டத்தை மூன்று முறை வலம் வந்து மீதம் இருக்கும் அரிசியையும் தழுகியையும் வைத்து வணங்குவர். பிறகு படையல் உணவை எடுத்துப் பிசைந்து அங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் உருண்டையாகக் கொடுப்பர்.

                ஒருசிலர் மாட்டுத் தொழுவத்திற்கு முன்  பாத்திரத்தில் பொங்கல் வைத்து பின்வட்டமாகச் சாணத்தால் மெழுகி ஓர் உருண்டை பிடித்துவைத்து அதன்மேல் அருகம்புல், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து அதற்கு முன்னால் வெற்றிலைப்பாக்கில் இரண்டு வாழைப்பழம் ஊதுவர்த்தி ஏற்றி வழிபட்டு பின் உணவை மாடுகளுக்கு உண்ண கொடுப்பர். அன்றே மாட்டுத் தொழுவத்தில் படையலுக்கு வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அதை பாதியளவுக்கு உரித்து உரிக்காத பகுதியைச் சாணத்தில் அழுத்தி வைத்து அதை மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அதை கைப்படாமல் வாயால் சாப்பிட அழைக்கின்றனர். அதை சாப்பிட வருவோர், சாப்பிடும் தருவாயில் சானத்தில் அழுத்தி விடுகின்றனர். இது அம்மக்களின் அறியாமையால் செய்கின்றனர் என்று சொன்னாலும் சானத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் தன்மை உள்ளது என்பதை உணர்ந்த நம் தமிழ் முன்னோர்கள் காலம் காலமாக இதைச் செய்துவருகின்றனர்.

முன்னோர் வழிபாடு

                ஒவ்வொரு குடும்பத்திற்குமென கூடம் உள்ளது. அந்த ஆண்டில் இறந்தவரை கூட்டத்தில் சேர்க்கும் நிகழ்வு மாட்டுப்பொங்கலன்று நடக்கும். இறந்தவருக்கான கல்லை ஆற்றில் எடுத்து அதற்கு நீராட்டி அக்கல்லை ஆற்றங்கரையில் இருக்கும் அழிஞ்சி மரத்தின்கீழ் வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து அதற்கு முன்னால் இறந்தவர் வாழ்வில் எடுத்துக்கொண்ட உணவுப்பொருட்கள் மற்றும் சாராயம் முதலானவற்றை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். பின் மேலதாளம் முழங்க அந்த கல்லை எடுத்துக் கொண்டு கூடத்தில் கொண்டு சேர்க்கின்றனர். இந்நிகழ்வைக் கூட்டத்தில் சேர்த்தல் என்கின்றனர் இப்பகுதி மக்கள். அக்கூடத்தில் உள்ள முன்னோர்களுக்கு வழிபாடு செய்பவர் கூடத்தில் உள்ள அனைத்து கற்களையும் கழுவி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு முன்னால் முன்னோர்களுக்காக செய்துவைத்த வெல்லம் சேர்த்த அரிசிமாவு தோசையைச் சுட்டு முன்னோர்களுக்குப் படைப்பர் இது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சடங்கு முறையாகும். இதன் மூலம் முன்னோர்கள் மீது பற்றும் பக்தியும் கொண்டவர்களாக இருப்பது தெளிவாகிறது.

அம்மன் வழிபாடு

                மாட்டுப்பொங்கலன்றே மாரியம்மனுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மாரியம்மனை வழிபடுவதற்கு முன் ஒரு செம்பில் மஞ்சள் தண்ணீர் மற்றும் மஞ்சள் துணி பூசைக்குத் தேவையான வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு, ஊதுவர்த்தி, கற்பூறம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பறை இசைக்க மணி ஒலிக்க ஒரே ஓட்டமாகப் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் கோயில் இருக்குமிடத்திற்கு ஓடிச்சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மன்களுக்கு எடுத்துச்சென்ற மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அதன்மேல் மஞ்சள் துணியைச் சாற்றி பழம் பூ வைத்து வழிபாடு செய்து அங்கு உடைத்த தேங்காய்த் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு ஒரே மூச்சகாக மீண்டும் வந்த வழியே ஓடிச்சென்று மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபாட்டை முடிக்கின்றனர்.

அனைவருடைய ஆடு, மாடுகளையும் ஓட்டிச்சென்று தலைக்கொண்டம்மன் கோயில் முன்பாக மாடுவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வின் இறுதியில் கோயிலுக்கு முன் ஒரு சிறுகல்லிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதனை தலைகொண்டம்மனாகப் பாவித்து அதற்கு கிடா வெட்டுகின்றனர். அந்தக் கிடா இரத்தத்தை அங்கு சூழ்ந்திருக்கக்கூடிய மக்கள் எடுத்துச் சென்று ஆடுமாடுகளுக்கு பூசுகின்றனர். இதனால் அந்த ஆண்டு முழுவதும் ஆடுமாடுகளுக்கு எந்த நோய் நொடியும் வராது என்ற நம்பிக்கை நிலவுவதைக் காணமுடிகிறது. அந்தக் கிடாதலையை ஒருவர் எடுத்துக்கொண்டு பூசாரி மணியடித்துக் கொண்டு, அடுத்தவர் தேங்காய் உடைத்த தீர்த்தத்தை கையில் எடுத்துக் கொண்டு, அங்கு குழுமி இருக்கும் ஆடுமாடுகளை சுற்றி பொங்கலோ, பொலியோ என்று கூறிக்கொண்டு மூன்றுமுறை வலம் வருகின்றனர். பின்னர் மாடுகளைக் கோயில் சுற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். இது அப்பகுதி மக்கள் தலைகொண்டம்மன்மீது கொண்ட பக்தியை வெளிக்காட்டுகிறது.

கானும் பொங்கல்

                பொங்கலின் மூன்றாவது நாள் கானும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் அவர்களின் குலதெய்வக் கோயிலான பெருமாளப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பட்டாளம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும்போது ஆற்றங்கரை மருங்கில் உள்ள நாகருக்கும் பொங்கலிட்டு கோழி, கிடா முதலானவற்றை வெட்டி வழிபாடு செய்கின்றனர். அங்கு செய்யும் உணவுகளை அங்கேயே உண்டுவிட்டு வரவேண்டும் இல்லையேல்  தெய்வ குத்தம் ஆகிவிடும் என்று அங்கிருக்கக்கூடிய மக்களுக்கு மாமிசம் முதலான உணவுகளைப் பகிர்ந்து கொடுத்து உண்கின்றனர். இந்நிகழ்வு சாதாரணமாக ஒரு மனிதன் உணவை மற்றவருக்கு கொடுப்பதற்கு மனம் வராது. மாமிசம் என்றால் அரவே கொடுப்பதற்கு முன்வரமாட்டார். இறையோடு சம்பந்தப்படுத்திச் சொன்னால் பயத்தின் காரணமாகவோ அல்லது தெய்வத்தின் மீதுள்ள மரியாதைக் காரணமாகவோ பகிர்ந்துண்ணும் நிலை தோன்றும். அதை உணர்ந்த முன்னோர்கள் ஒருசில மனித செயல்பாடுகளில் இம்மாதிரியான இறை நம்பிக்கையைப் புகுத்திச் சென்றிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

எருதுகட்டு

                ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாடுஓட்டம், மாடுவிடுதல், கூலியாட்டம், கூலிபிடித்தல், எருதாட்டம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்விளையாட்டு சங்ககாலம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை,

                                ”மருப்பில்  கொண்டும், மார்பு உறத்  தழீஇயும்

                                எருத்திடை அடங்கியும், இமில்இறப் புல்லியும்

                                தோள்இடைப் புகுதந்தும், துதைந்துபாடு ஏற்றும்,

                                நிரைபு மேல் சென்றாரை நீள்மருப்பு உறச்சாடி,” (கலி.முல்லை.105 :30 – 34)

எனும் கலித்தொகை பாடலடி உணர்த்துகிறது. காளை என்பது அவர்களுடைய கௌரவமாகக் கொள்ளப்படுகிறது. எருதுகட்டு என்பது எருதினைக் கட்டி விளையாடும் வீரவிளையாட்டாகும். இப்பகுதியில் எருதின் கழுத்தில் பெரிய கயிரு ஒன்று கட்டப்படுகிறது. அக்கயிற்றைச் சுற்றி துணி சுற்றப்படுகிறது. இது மக்கள் இழுக்கும்போது மாட்டிக் கழுத்தை கயிறு அருக்காமல் இருக்கச் செய்யப்படுகிறது. ஒரு முப்பதடி வடக்கயிறை எடுத்து அதன் நடுப்பகுதி மாட்டின் கழுத்துக் கயிரோடு பிணைக்கப்படுகிறது.

                மக்கள் அந்தக் கயிற்றை முன்பக்கமும், பின்பக்கமும் அந்தக் கயிற்றைக் கொண்டு இழுத்தப் பிடித்துக்கொள்கின்றனர். அப்போது மாட்டிற்கு முன் மூன்று குச்சியின்மேல் ஒரு குடவை மூடி அதற்கு மனிதன் போல வேடமிடவைத்து எருதின் முன் நிறுத்துகின்றனர். அங்கு குழுமியிருக்கும் கூட்டத்தைப் பார்த்த எருது கோபத்தில் வேடம் தரித்து வைத்திருக்கக்கூடிய குடுவையைக் கொம்பால் தூக்கியெரிந்து தன்கோபத்தை வெளிக்காட்டுகிறது. அப்போது கூலியாட்டும் வீரர்கள் ஒரு நிலமான குச்சியில் துணியைச் சுற்றி கூலியின் முன்காட்ட கூலி நாலுக்கால் பாய்ச்சலில் அவரை முட்டித்தள்ள முற்படுகிறது. அந்நேரத்தில் முன்னும் பின்னும் கயிறைப் பிடித்து நிற்கக்கூடிய வீரர்கள் விட்டுப் பிடிக்கின்றனர். இம்மாதிரியாகச் செய்துகொண்டே கோயிலை மூன்றுமுறை வலம் வருகின்றனர். கடைசியாகக் கோயில் பூசாரி தீர்த்தம் கொண்டுவந்து கூலியின் மீது தெளிக்க கூலிக்குச் சொந்தக்காரர் கூலியைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். இவ்வாறு இப்பகுதியில் எருதுகட்டு நடைப்பெறுவதைக் காணமுடிகிறது.

எருதாட்டம்

                வேளாளர் சமூக மக்கள் எருது, மாடுகளைத் தங்களின் குலக்கடவுளுக்கு இணையாகப் போற்றி வணங்குகின்றனர். அதற்குச் சான்று திங்களன்று மாடுகள் பிறந்தநாள் என்று உழவு உழுவதைச் செய்யமாட்டார்.

                காரிமங்கலம் வட்டம் கரகப்பட்டி கிராமத்தில் இருக்கும் வேளாளர்கள் எருதுகட்டு முடித்தப்பின் எருதாட்டம் ஆடுகின்றனர். எருதிற்குப் பயன்படுத்திய வடக்கயிரை வட்டமாக வைத்து அதற்குப் பூசாரி மஞ்சள், பூ, குங்குமம் வைத்து பூசை செய்வார். அப்போது கூலியாடுபவர் (எருதைப்போல ஆடுபவர்) காவிவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டைதீட்டிக்கொண்டு நடுவில் குங்குமம் வைத்து நிற்பார். பூசாரி மணியடிக்க அங்கு சூழ்ந்திருக்கும் மக்கள் ஓசையெழுப்பிக் கொக்கரிக்கச் செய்வார்கள். அப்போது கூலியாடுபவருக்கு அருள் வந்து அங்கு வட்டமாக வைத்திருக்கும் வடத்திற்கு மத்தியில் சென்று நின்றவுடனே அங்கு குழுமியிருக்கும் மக்கள் வடத்தினைச் சூழ்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றனர். வடத்திற்கு உள்ளிருப்பவர். ஆடிக்கொண்டே வடத்தைப் பிடித்திருக்கக் கூடியவர்களைத் தன்தலையால் இழுத்து முட்டுவார். அதற்கு மாமன் மச்சான் உறவுக்காரர்கள் அவர் முட்டுவதற்கு ஏதுவாக ஒவ்வொருவராகப் பிடித்துக் கொடுப்பார்.

இந்நிகழ்வு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் நடைபெறும். இந்நிகழ்வு முடிந்தபின் வடக்கயிரைப் பிடித்திருந்தவர்கள் கூலியாடியவரும் கோயிலுக்கு முன்னால் வந்து மாமன், மச்சான், அண்ணன், தம்பி என அவர் இவர் காலில் விழ முற்படுவதும், இவர் அவர்காலில் விழ முற்படுவதுமான நிகழ்வைக் காணமுடிகிறது. இவையனைத்தும் அம்மக்கள் எருதுகட்டின்போது எருதிற்கு ஏற்படும் வலியை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதோடு ஒருவரையொருவர் மதிக்கக்கூடிய பண்பும் இவ்விழாவில் புலப்படுகிறது.

வழுக்கு மரம்

                எருதுகட்டு முடிந்தபின் அங்கு குழுமியிருக்கக்கூடிய இளைஞர்கள் வழுக்குமரம் ஏறுகின்றர். கிரிஸ் தடவிய மரத்தில் ஒருவர் ஏற மற்ற இளைஞர்களும் உதவிபுரிவர். மேல் ஏறி போகபோக அங்கு இருக்கக்கூடிய இளம் பெண்கள் ஏறாமல் இருக்க தண்ணீரை முகத்தில் பீச்சியடிப்பார்கள். இது மாதிரியாகத் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க கடைசியில் இளைஞர்களின் கூட்டு முயற்சியால் வழுக்கு மரத்தின் உச்சத்தைத் தொட்டு வெற்றிபெறுகின்றனர். இந்நிகழ்வு இளைஞர்களின் விடாமுயற்சியை வெளிக்காட்டுகிறது.

பூப்பத்திரிகை பங்கிடல்

                கடைசிநாள் ஊர்க்கூடி பொங்கலுக்குச் செலவழித்த பணம் முதலான வரவு, செலவு கணக்குகளைப் பார்த்தபின் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெறுங்கையோடு வீடு திரும்பக்கூடாது என்று வெற்றிலையில் பாக்கு வைத்து அதோடு வாழைப்பழம், தேங்காய்சில் வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனுப்புகின்றனர். இதற்கு பூப்பத்திரிகை பங்கிடல் என்கின்றனர். இந்நிகழ்வு அவர்களின் உயரிய பண்பை வெளிக்காட்டுகிறது.

முடிவுரை

                தொடக்ககாலம் முதலே வேளாண்மையை நம்பியிருக்கும் தமிழ்க்குடிகள் வேளாளர்கள் ஆவர். இவர்கள் தம் வேளாண்மைக்கு இணக்கமானவர்களை அந்நியர்களாகப் பார்ப்பதில்லை. குறிப்பாகப் காரிமங்கலம் வேளாளர் இனமக்கள் பிற சமுதாய மக்களை மதிப்பதோடு அவர்களோடு இணக்கமாக இருக்கின்றனர். வேளாண்மை சிறக்கப் பேருதவிபுரியும் விலங்குகளிடத்தும் பேரன்பு கொண்டவர்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

தொகுப்புரை

                விழா என்றால் மக்கள் கூடி முடிவெடுக்கும் திறனும், பொங்கலின்போது தாங்கள் தன்குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக இல்லாமல் பிற சமுதாயத்தினரையும் தன்குடும்பம்போல் கொடுத்துதவும் தன்மையும் காணமுடிகிறது.

                போகியன்று ஊரைத் தூய்மை செய்து காப்புக்கட்டும் வேலையை பிற சமுதாய மக்களோடு இவர்களும் சேர்ந்து செய்வதை சாதியபேதமற்று இருப்பதைக் காணமுடிகிறது.

                பொங்கலில் தனக்கு உணவுப் பொருளை விளைவிக்க ஏதுவாக இருந்த இறைவனை வழிபடுவதோடு அவ்வேளாண்மையை தங்களுக்குக் கற்றுத்தந்த முன்னோர்களை வழிபடும் வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்துவருகின்றனர்.

                பகிர்ந்துண்ணும் வழக்கம் என்பது தமிழனுக்கே உரித்தானது. அதற்கேற்ப அம்மக்களுக்கும் நாகருக்கும் மாரியம்மனுக்கும் பட்டாளம்மன், கக்குமாரியம்மன் என எங்குகோழி ஆடு வெட்டி பொங்கல் வைத்தாலும் அதை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என்றும் அங்கேயே சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையேல் வீட்டிற்கு ஆகாது என அவர்கள் மட்டுமல்லாமல் அங்கு கூடியிருப்போருக்கும் உணவு வழங்கி அகமகிழ்வதைக் காணமுடிகிறது.

                மனிதரைப்போல் மிருகங்களுக்கும் வலி என்பது இருக்கும் என்பதை உணரவைக்க இவர்களுள் ஒருவரைக்கொண்டு எருதாட்டம் ஆடுவது மெய் சிலிர்க்கவைக்கிறது. பிறர் மேல் கால், கை படுவது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு போரும்விதமாகக் குனிந்து வணங்கும் வழக்கம் இவர்களிடையே காணமுடிகிறது.

References

1.Tamil Wiktionary from Internet

2. Lakhsmanan, Karagapatti, Karimangalam.

Reference Books

1.Thiruthakka Dever.,                                              –           Sivagasindamani                                                                                                                                   Uma Publications, Chennai

2. Parimanam.,                                                          –         Kazhiththogai,

                                                                                          NCBH, Ambatore, Chennai – 98

                                                                                          First Edition – 2007.

3. Parimanam.,                                                          –         Perumpaanatrupadai,

                                                                                          NCBH, Ambatore, Chennai – 98

                                                                                           First Edition – 2007.

4. Parimanam.,                                                          –          Puranaanuru

                                                                                           NCBH, Ambatore, Chennai – 98

                                                                                           First Edition – 2007.

5.Puzhiyur Kesigan,                                                 –           Nannool (Kandigaiyurai)

                                                                                           Saratha Publications, Chennai – 600 014.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திரு.இல.பெரியசாமி                                                                                

முனைவர் பட்ட ஆய்வாளர்,                                                                

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,                                                    

பெரியார் பல்கலைக்கழகம்.                                                                  

தொலைபேசி எண் : 97861 80599                                                            

மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com                                         

பண்டைய தமிழர் திருமண முறைகள்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

பண்டைய தமிழர் திருமண முறைகள்

       திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் அல்லது மகள் தங்களுக்கான பருவம் வந்தவுடன் தாய், தந்தை என்னும் நிலையை அடைவதற்கான ஒன்று கூட்டுதல் சடங்காகச் சமுதாயத்தால் நிகழ்த்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் நடத்தி வைப்பதற்கு முன்னர் களவு மணம் என்பது பழங்கால மணமாக நிகழ்ந்துள்ளதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறாகத் திருமணம் சார்ந்த செய்திகளை முன்வைத்து இவ்வாய்வுக்கட்டுரை நிகழ்த்தப்படுகின்றன.

முன்னுரை

       பண்டையக்காலத்தில் திருமணமுறை என்பது ஆணும் பெண்ணும் நேரில் சந்தித்து மனமும் உடலும் ஒருங்கே அமைந்து களவு என்னும் காதலை உரித்தாக்கிக் கொள்கின்றனர். “உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் காதலர்க்கு உரிய” (நம்பியகப் பொருள் அகம்.34) என்பார் நாற்கவிராச நம்பி. களவுக்குப் பிறகே ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு கற்பு என்னும் இல்லறத்தில் சேருகின்றனர். வாழ்நாள் முழுவதும் தனக்காகவே வாழும் ஒருவரை கண்டு தெளிந்து திருமணம் செய்துகொள்ளும் பாங்கினைச் சங்க இலக்கியங்களின் வாயிலாகச் சொல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட இல்லறமானது சமூகத்தில் மக்களால் பெரிதும் போற்றப்பட்டது எனலாம்.

தொல்காப்பியர் குறிப்பிடும் திருமணமுறை

       தொல்காப்பியர் திருமணம் தோன்றியதற்கான காரணமாகப் ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்கிறார். களவில் பொய்யான அன்பு தோன்றிய பின்னரும் திருமணத்தைக் கட்டாயப்படுத்திச் சேர்த்தல் நடைமுறை உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு களவில் ஏற்பட்ட அன்பின் வெளிபாடு உருவாகும் என்பதாகும்.

       “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

        கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

         கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”   (தொல்.பொருள்.கற்பு.நூ.1)

என்று குறிப்பிடுகிறார். அதாவது கற்பென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, சடங்கோடு பொருந்திய மரபின் அடிப்படையில், தலைவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியை, அவர்களுடைய தந்தையும் தமையன்மாரும் மணஞ்செய்து கொடுக்க, மணந்து கொள்ளுதல் ஆகுமென்று விளக்கமளிக்கிறார்.

அம்பலும் அலரும்

       ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு மணம் புரிந்து கொள்ளவும் தலைவனையும் தலைவியையும் பெற்றோர்கள் பார்த்து மணம் புரிந்து  வைக்கவும் (தெய்வம் கூட்ட) ஆகிய இரண்டையும் நம்பியகப்பொருள் ஆசிரியர் இயற்கைப் புணர்ச்சி எனக் குறிப்பிடுகிறார்.

       “தெய்வம் தன்னில் எய்தவும் கிழத்தியின்

         எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி”(நம்பி.அகத்.நூ.32)

என்ற நூற்பாவானது தெளிவாகக் காட்டுகிறது. இதன்வழி காதல் செய்யும் தலைவிக்கும் தலைவனுக்கும் ஊரில் அலரும் அம்பலும் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். இதனைத் தொல்காப்பியர் கூறும்பொழுது,

       “அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்

        அங்கதன் முதல்வன் கிழவனாகும்”  (தொல்.பொருள்.களவு.நூ.49)

என்று அம்பல், அலர் இரண்டுமே களவொழுக்கத்தினைத் தெளிவுப்படுத்துதலால் வருவதாகும். இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் தலைவன் என்பர். அம்பல் – முகிழ்த்தல். அதாவது ஒருவரையொருவர் முகக்குறிப்பினாலே தோற்றுவித்தல். அலர் என்பது வெளிப்படச் சொல்லுதல் ஆகும். சங்க இலக்கியத்தில் இத்தகுச்சூழல் நற்றிணையில் காணப்படுகிறது.

                “சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி

                 மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி

                 மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”(நற்.149:1-3)

என்னும் பாடலடிகள் அம்பல் நிகழுமாற்றைத் தெளிவுபடுத்துவதைக் காணலாம். ஊரில் உள்ள பெண்டிர் சிலராகவும் பலராகவும் தெருக்களில் கூடி, அவர்களின் கடைக்கண் குறித்துக் காட்டியும் சுட்டு விரலை மூக்கில் வைத்துப் பழிச்சொற் கூறியும் திரிவதால், அப்பழிச்சொற்களை அன்னை கேட்டு உண்மையென நம்பி, சினம் கொண்டாள் என்கிறது பாடல். இவ்வாறு காதலுக்கு எதிர்ப்பு நிகழ்வதைக் காணமுடிகிறது. இற்செறிப்புக் குறித்த தகவல்களையும் (அகம்.7,20,201,), (நற்.4), (கலி.124) சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. எதிர்ப்புகள் ஒருபுறம் இருப்பினும் பெரும்பாலான காதலர்களின் களவு வாழ்க்கையானது திருமணத்திலேயே முடிந்திருக்கிறது.

உடன்போக்கு

       தலைவன் தலைவியருக்கு இடையிலான காதலை அவரவர் பெற்றோர்கள் ஏற்காத பொழுது, இருவரும் உடன்போக்குச் செல்ல முற்படுகிறார்கள். குறுந்தொகை தலைவி ஒருத்தி, உடன்போக்கில் சென்று விடுகிறாள். அவளைத் தேடி செவிலித்தாய் செல்கிறாள். அப்பொழுது கண்டோரின் கூற்றாகப் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது.

        “வில்லோன் காலன கழலே தொடியோள்

         மெல்லடி மேலவும் சிலம்பே”(குறுந்.7:1-2)

ஆடவன் கால்களில் வீரக்கழல் அணிந்திருந்தான் என்றும் அவன் வளையல் அணிந்த கைகளையுடையவளும் மெல்லிய அடிகளின் மேல் சிலம்பும் அணிந்திருந்தவளுமாகிய தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்றான் என்றும் கூறுகின்றாள். இதனைக் கலித்தொகை,

       “பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லது

        மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்

        நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே”  (கலி.9:12-14)

என்று ஒத்த அன்புடைய இருவர் சேர்தலே இயல்பு என்பதைக் கண்டோர் உணர்த்துகின்றனர். இவ்வாறான செய்திகள் சங்க இலக்கியப் பாடல்கள் (குறுந்.56), (ஐங்.374), (நற்.29), (அகம்.117,145,165,219,383) பலவற்றில் இடம்பெறுகின்றன. தன் மகள் தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிட்டதை அறிந்த நற்றாய் தனக்கு இது முன்னமே தெரிந்திருந்தால் திருமணம் நடத்தி வைத்திருப்பேனே என்று புலம்புவதாக அகநானூற்றின் 315ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மேலும் இதுபோல் உடன்போக்குச் சென்ற தலைவியால் பெற்றோர்கள் துன்பப்படுதலும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

திருமணம் பேசுதல்

       ஊரில் ஏற்பட்ட அலரும் அம்பலும் வீட்டுக்குத் தெரிய வருகின்றது. ஒருசில பெற்றோர்கள் தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்தும் கொடுத்திருக்கிறார்கள். தலைவியுடைய காதல் தாய்க்குத் தெரிய வரும்போது, அவள் வதுவைக்கு (திருமணம்) நாள் குறிக்கின்றாள். அதனால் தலைவி மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். இதனைக் குறுந்தொகையின் 248ஆம் குறிப்பிடுகிறது. மேலும் குறிஞ்சி நில மக்கள் வேங்கைப் பூ மலரும் காலத்தையே திருமணம் முடிக்கும் நாளாகக் கொண்டிருந்தனர் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

       “மென்தோட் கிழவனும் வந்தனென் நுந்தையும்

         மன்றல் வேங்கைக் கீழ் இருந்து

        நயந்தனன் அம்மலை கிழவோர்க்கே”(கலி.41:42-43)

என்று தலைவனுக்குத் தலைவியை மணம் முடிக்கும் காலம் குறிஞ்சி மலரும் காலமாகக் குறிக்கப்பட்டதைப் பழங்கால வழக்கமாகக் கொள்ளலாம். இச்செய்தி கலித்தொகையின் 38ஆம் பாடலிலும் குறுந்தொகையின் 367ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. பொய்மை இல்லாத தலைவனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் விரும்பியதைக் கலித்தொகை (107), ஐங்குறுநூறு (145) ஆகிய இலக்கியங்கள் சுட்டுகிறது. தனக்கும் தலைவனுக்கும் திருமணம் நிகழப்போகிறது என்பதை அறிந்த தலைவி பசலை நீங்கப்பெற்று, புத்துணர்ச்சியோடு காணப்பட்டாள் என்பதை ஐங்குறுநூறு கூறுகிறது.

மகட்பேசுதல்

       தலைவன் தலைவியைத் தன் சுற்றத்தாரோடு சென்று மகட்பேசி முடிக்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. “காதலுக்குத் திருமணமின்றேல் சமுதாயத்திற்கு வாழ்வில்லை. ஆதலின் அகத்திணை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை – மன்றலை – வலியுறுத்தினர் என்க”1 என்ற வ.சுப. மாணிக்கனாரின் கூற்றாக மன்றலின் முக்கியத்துவத்தைப் பொன்னுசாமி குறிப்பிடுகிறார்.

              “அம்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்

                 வந்தனன் எதிர்ந்தனர் கொடையை

                 அம்தீம் கிளவி பொலிக நின் சிறப்பே”(ஐங்.300:2-4)

என்ற பாடலில் பெரிய மலையினை உடைய தலைவன் தன் சுற்றத்தாருடன் பெண் பார்ப்பதற்காக வருவதையும் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கிய தலைவியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் காணமுடிகிறது. இதேசெய்தி நற்றிணையிலும் (393) இடம்பெறுகிறது. தனக்குப் பெண் கொடுக்க முற்பட்ட தலைவியின் பெற்றோர்களுக்கும் தமர்க்கும் தன்னுடைய ஒரு நாட்டையே எழுதிக் கொடுத்துள்ளான் தலைவன். இதனை,

       “ஒண் தழை அயரும் துறைவன்

        தண் தழை விலை என நல்கினன் நாடே”(ஐங்.147:2-3)

என்ற பாடல் காட்டுகிறது. எனவே “மணமகன் வீட்டார் பெண் கேட்டு வருவதும் பெண் வீட்டார்க்கு அவன் பரிசம் அல்லது முலைவிலை என்னும் பொருட்கொடை நல்குவதும் பழங்காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது”2 என்னும் இறையரசனின் கூற்று இங்கு சிந்தித்தற்குரியது. பெண்களுக்குப் பொருள் அளித்தோ அல்லது அவள் பொருளுடன் வருவதோ அவளுக்கான பொருளியல் பாதுகாப்பினை நல்கியது எனலாம். “திருமணம் தவிர்க்க முடியாதது, இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளுவோமேயானால் நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முடியும்”3 என்று பெர்னாட்சாவின் கூற்றைச் சான்று காட்டுகிறார் மு. பொன்னுசாமி. இவரது கூற்றுப்படிப் பணமும் பொருளும் இல்லாமல் மனம் சார்ந்த வாழ்க்கையாக அமைவது நன்றாகும். புதிய மலர்களைச் சூட்டி தலைவிக்குத் திருமண ஏற்பாடுகளைப் பெற்றோர்களும், தமையன்மாரும் செய்வதைக் கலித்தொகை (114) குறிப்பிடுகிறது. தலைவனும் தன் மலையிடத்து உள்ள குடியிருப்புக்கள் எல்லாம் பொலிவு பெறுமாறு செய்தும் மன மகிழ்ச்சியுடனும் சுற்றத்துடனும் இருந்தான் (நற்.393) என்று திருமண நிகழ்வை நற்றிணை குறிப்பிடுகிறது. திருமணத்தில் களவு மணம் அல்லாது “ஆடவன் அத்தை மகள் அம்மான் மகளை மணப்பதும், பெண் மக்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குங்குமப்பொட்டு அணிவதும் தமிழரின் வழக்கங்கள்”4  எனக் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார்.

திருமணப் பொருத்தம்

       திருமணத்திற்குரிய பொருத்தங்களாகத் தொல்காப்பியர் சிலவற்றை முன்மொழிகிறார். ஆடவனுக்கும் பெண்ணிற்கும் இருக்கவேண்டிவைகளாக இவை பழங்காலத்தில் கருதப்பட்டிருக்கலாம்.

       “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

         உருவு நிறுத்த காமவாயில்

        நிறையே அருளே உணர்வொடு திருவென

        முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”  (தொல்.பொருள்.மெய்ப்.நூ.25)

என்ற தொல்காப்பிய நூற்பாவில், திருமணத்திற்கு இருக்க வேண்டியப் பத்துப் பொருத்தங்களாக, ஒத்த பிறப்பும்  ஒத்த ஒழுக்கமும் ஒத்த ஆண்மையும் ஒத்த ஆண்டும் அழகும் அன்பும்  நிறையும் அருளும்  அறிவும் செல்வமும் என்று வரிசைப்படுத்துகிறார். இவ்வாறு பொருத்தம் பார்த்து நல்ல மணநாளை குறிப்பதற்கு ஏதுவாக வேங்கை மலரும் பூத்தது (அகம்.133). மண நாள் குறித்தவுடன் மழவர்கள் திருமணத்திற்குச் செல்வதற்காகத் தன்னை மிகவும் அழகுப்படுத்திக்கொண்டார்கள் என ஐங்குறுநூறு (432) கூறுகிறது.

திருமணம் நிகழும் முறை

       சங்ககாலத் திருமண முறை குறித்து அதிகப்படியான பாடல்களில் குறிப்புகள் இல்லை. ஆனால் அகநானூற்றில் இது பற்றி விரிவான விளக்கம் இடம்பெறுகிறது.

       “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

        பெருஞ் சோற்று அமலை நிற்ப நிரைகால்

         தண் பெரும் பந்தர்த் தரு மணல் நெமிரி

        மனை விளக்குறுத்து மாலை தொடரி

        கனை இருள் அகன்ற கவின்பெறு காலை

         கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

         கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென

        உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்

        பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

         மன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர

        புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

         வாள் இழை மகளிர் நால்வர் கூடி

         கற்பினின் வழாஅ நற்பல உதவிப்

        பெற்றோற் பெட்கும் பிணையை ஆக என

        நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி

        பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

        வதுவை நல்மணம் கழிந்த பின்றை”(அகம்.86:1-17)

என்ற பாடலில், திருமண நாளன்று உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த குழைவாக வெந்தப் பொங்கலொடு பெருஞ் சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நடந்து கொண்டே இருந்தது. வரிசையாகக் கால்களைக் கொண்டு குளிர்ந்த பெரிய பந்தலை அமைத்திருந்தனர். அப்பந்தலிலே கொண்டு வந்த மணலைப் பரப்பினார்கள். மனையின் கண் விளக்கினை ஏற்றி மாலைகளைத் தொங்கவிட்டனர்.

       அந்நாளானது தீய கோள்கள் நீங்கப்பெற்ற வளைந்த வெண்மையான திங்களைத் தீமையற்ற ரோகிணி நட்சத்திரத்தில் கூடிய நன்னாளில் மணநாளாகக் குறித்தார்கள். அந்நாளிலே மணம் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் தலையில் நீர்க் குடத்தினைச் சுமந்தவராய்ப் புதிய அகன்ற மண்டை என்னும் கலத்தினை ஏந்தியவராய் ஒன்று கூடுவார்கள். முன்னே தருவனவற்றையும் பின்னே தருவனவற்றையும் முறை முறையாக எடுத்துத் தந்த வண்ணம் இருந்தனர்.

       தேமல் படர்ந்த அழகிய வயிற்றினையுடைய தூய அணிகலன்களை அணிந்த மகனைப் பெற்றெடுத்த மகளிர் நால்வர் கூடிநின்று, கற்பினின்றும் வழுவாது நல்ல பலவற்றினும் உதவியாக இருந்து, நின்னை மனைவியாகப் பெற்ற நின் கணவனைப் பேணிக் காக்கும் பெருவிருப்பத்தை உடையை ஆகுக எனக் கூறி வாழ்த்தினர். வாழ்த்தியவராய் நீரோடு குளிர்ந்த இதழ்களுடைய மலர்களை நெல்லுடன் கலந்து அவளது பலவாகிய கரிய கூந்தலையுடைய தலையிலே தூவினர். இவ்வாறாக வதுவை மணமும் நடந்து முடிந்தது. இச்செய்தி அகநானூற்றின் 136ஆவது பாடலிலும் கலித்தொகையின் 115ஆம் பாடலிலும் இடம்பெறுவதைக் காணமுடிகின்றன. ஆனால் மேற்குறிப்பிடும் திருமண முறையில் தாலி கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. வாழ்த்துச் சொல்லுதல் மட்டும் வந்துள்ளது. வாழ்த்துதலுக்கு அத்தனைப் பெரிய மதிப்பும் அதனுடைய உயர்வும் இருந்திருக்க வேண்டும். குறிஞ்சிப்பாட்டில் தலைவியின் வீட்டார் தலைவனிடத்தில் பெண்ணைக் கொடுக்கும் செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது.

              “நேர் இறை முன்கை பற்றி நுமர்தர

                 நாடு அறி நல்மணம் அயர்கம்”(குறிஞ்சி.231-232)

என்னும் அடிகள் தலைவியின் வீட்டார் பெண்ணளிப்பதைக் காட்டுகின்றன. இவ்வாறே சான்றோர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் திருமணமாக (அகம்.385) (சிலம்பு.1:47), (சீவக.2697) இலக்கியங்களில் காணமுடிகின்றன.

சிலம்பு கழித்தல்

       பெண்ணிற்குத் திருமணத்திற்கு முன்னர் சிலம்பு கழித்தல் என்னும் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிலம்பு கழித்த பின்னரே ஒரு பெண் திருமணம் செய்யத் தகுதியானவளாகக் கருதப்பட்டாள்.

              “நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்

                எம் மனை வதுவை நல்மணம் கழிக”(ஐங்.399:1-2)

என்னும் அடிகளில் பெண்களுக்கு மணமாகும் முன்பு பெற்றோர் அணிவிக்கும் கன்னிச் சிலம்பினைத் திருமணத்திற்கு முன்னர் கழிப்பது ஒரு மரபாகும். அதனைச் சிலம்புகழி நோன்பு என்றனர். இத்தகு நோன்பு தலைவியின் வீட்டில் நிகழ்த்துவது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது (நற்.229).

தாலி

       மணமான பெண்களின் அடையாளக் குறியீடாக விளங்குவது தாலி எனப்படும் மங்கள நாண் ஆகும். சங்க இலக்கியத்தில் தாலியைப் ‘புதுநாண்’ (குறுந்.67:3) என்று குறிக்கின்றனர். இது வேப்பம்பழம் போன்ற வடிவத்தில் இருந்ததாகக் குறுந்தொகைக் குறிப்பிடுகிறது. “கழுத்தில் தடையாக அணிந்த நூல் தாலி என்று பெயர் பெற்றது. தாலிக்கே நூல் என்ற பெயர் உண்டு. தாலியிழந்த பெண்ணை நூலிழந்தவள் என்பர். தாலி பொன்னால் செய்யப்பட்ட பொற்றாலி என்று பெயர் பெற்று இருந்தாலும் அதனுள்ளே மங்கல நாணாகிய நூலை இடும் வழக்கம் இன்றும் உண்டு. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க ஐம்படைத்தாலி கட்டுவது வழக்கம்”5 என ரா.பி. சேதுப்பிள்ளை கூறுகின்றார். விக்கிப்பீடியாவில் தாலி என்ற சொல்லானது, “ஆண் பெண்ணுக்குக் கட்டும் ஒருவகை கழுத்துச் சங்கிலி ஆகும். தாலி அணிந்த ஒரு பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கியக் குறியீடு. தாலி கட்டும் வழக்கம் திராவிட மக்களிடம் காணப்படுகின்றது. பெண்ணியப் பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம் மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஓர் ஆண் ஆதிக்கச் செயற்பாடாகப் பார்க்கப்படுகின்றது”6 என்ற விளக்கம் பெண்ணிற்கான குறியீடாகத் தாலி விளங்குவதை எடுத்துரைக்கிறது.

தாலி பெயர்க்காரணம்

       “தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத்தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டிக் கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலிதான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத்தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்) தாலியின் சூட்சூமம் மஞ்சள், கயிறு, கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மாங்கலியம், மங்கலவணி எனச் சொல்லும் தாலியை மண் அடையாள வில்லையைக் குறிக்கும்”7 என விக்கிப்பீடியா தாலி என்பது பற்றியும் அதன் விளக்கம் அடங்கியப் பொருள் பற்றியும் கூறுகிறது.

       தாலி அணிந்த பெண்களை “வாலிழை மகளிர்”(குறுந்.386:3) என வெள்ளி வீதியார் குறுந்தொகை நூலில் அழைக்கின்றார். “தாலி கட்டும் வழக்கத்தை முதன் முதல் தெரிவிக்கும் கல்வெட்டுக் கி.பி. 958 ஆம் ஆண்டுக்கரியதாகும் என்று கே.கே. பிள்ளை கூறுவதாக”8 இறையரசன் கூறுகின்றார். தாலி என்ற ஒன்றை ஒருத்தி அணிந்திருந்தாளானால் அவள் ஒரு ஆடவனுக்கு உரியவள் என்பதைக் காண்போர் உணர்வர். அவளை காம நோக்குடன் பார்ப்பதோ அல்லது வேறு தவறான நடத்தைகளுக்கு இணங்கச் செய்வதையோ தவிர்ப்பர். எனவே தாலியானது பெண்ணிற்குப் பாதுகாப்பளிப்பதாக இச்சமூகம் கருதுகிறது எனலாம்.

பிள்ளைப்பேறு

       திருமணம் ஆன பிறகு கணவனும் மனைவியும் ஒற்றுமையாகத் தங்களின் இறுதிக் காலம்வரை வாழ வேண்டுமானால், பொருளையும் பொன்னையும் விட பிள்ளைப்பேறு அவசியமான ஒன்றாகும். இந்நிலையைக் குறுந்தொகைக் கூறும்போது,

       “புதல்வற் றழீஇயினன் விறலவன்

        புதல்வன்தாய் அவன் புறம் கவை இயினளே”(குறுந்.359:5-6)

என்னும் அடிகளில் மணம் கமழ்கின்ற மலர்ப்படுக்கையில் தலைவன் பெரும் அன்பால் தன்னுடைய புதல்வனைத் தழுவியவாறு உறங்குகின்றானாம். அதைக் கண்ட தலைவி பாசத்துடன், புதல்வனைத் தழுவிக் கிடக்கும் தன் கணவனின் புறத்தைத் தலைவி வளைத்துக் கொண்டதாகப் பாடல் குறிப்பிடுவதை அறியலாம்.

       “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

         நன்கலம் நன்மக்கட் பேறு”(குறள்.6:10)

என்று திருக்குறள், மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலமாகும் என்றும் மக்களைப் பெறுதல் அதற்கு அணிகலன்களாகும் என்றும் குறிப்பிடுகிறது.  உடன்போக்கில் சென்ற தலைவி திருமணம் முடிந்து தன் பெற்றோர்களைப் பார்க்க வருகிறாள் என்று ஐங்குறுநூறு (400) கூறுகின்றது. உடன்போக்கில் சென்ற மகளின் தவறுகளை மறந்து அவர்களை எல்லா நிலைகளிலும் ஏற்றுக் கொள்கின்றனர் தலைவியினது பெற்றோர்கள். தலைவன் தலைவியை விட்டுவிட்டு இரண்டாவதாகக் காமக்கிழத்தியை அறநூல் கூறிய வழியில் பெருமணம் புரிந்தான் என கலித்தொகை (96) கூறுகின்றது. சங்க காலத்தில் ஆடவர்கள் மனைவியைத் திருமணம் செய்தும் காமக்கிழத்தி, பரத்தையரிடம் செல்வது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக வைத்திருந்தனர் என இதனால் அறியலாம். ஆனாலும் வள்ளுவரின் கூற்றுப்படி ஊடலுக்குப்பின் காமம் இனிது என்பதற்கிணங்க தலைவனும் தலைவியும் இல்லறம் சிறப்புடன் அமைய வாழ்ந்தனர் என்கிறது சங்க இலக்கியங்கள். “இல்லறத்திற்குப் பின் முதுமை தொடங்கும்பொழுது கணவனும் மனைவியும் ஊரின் கண்ணே தனியே இருந்து தவவாழ்க்கை மேற்கொள்ளுதல், ஒரு சமூகக் கட்டுப்பாடாக இருந்துள்ளது”9 என மு. கோவிந்தசாமி சொல்வது இங்கு எண்ணுதற்குரியது. அக்கால சமூகத்தினர் கடைசிவரை தன்னுடைய துணையைப் பிரியாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

முடிவுரை

       தன்னுடைய எதிர்கால துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் வழங்கப்பட்டிருந்தது. தமிழரின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் பற்றிய பழக்கங்களும் வழக்கங்களும் இன்றுவரை நம் சமுதாயத்தில் பயன்படுத்தி வருகின்றோம். திருமணம் என்ற ஒற்றை வார்த்தையில் முடிந்துபோவது இல்லை வாழ்க்கை. பந்தம், பாசம், அனுசரிப்பு, விட்டுக்கொடுத்தல், விருந்தோம்பல் என்ற ஐந்தின் அடிப்படையில் தொடங்குவதுதான் திருமணம்.

சான்றெண் விளக்கம்

1. மு. பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள்,  

     ப.180.

2. பா. இறையரசன், மு.நூ., ப.270.

3. மு. பொன்னுசாமி, மு.நூ., ப.180.

4. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.65.

5. ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழகம் அலையும் கலையும், ப.177.

6. தமிழ் விக்கிப்பீடியா.

7. மேலது.

8. பா. இறையரசன், மு.நூ., ப.270.

9. மு. கோவிந்தசாமி, தமிழக வரலாறு, ப.49.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130,

 Gmail : iniyavaikatral@gmail.com

புறப்பொருள் வெண்பாமாலையில் போர்ச்செய்திகள்

புறப்பொருள்-வெண்பாமாலையில்-போர்ச்செய்திகள்

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

       பண்டைய கால மக்கள் அகத்திலும் புறத்திலும் சிறந்து விளங்கினார்கள். அகம் மட்டுமே மனிதனை வாழ வைத்துவிட முடியாது. மனிதன் புறம் சார்ந்த சமூகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். புறச்செய்திகளிலும் புறம் சார்ந்த நூல்களிலும்தான் அன்றைய தமிழின மக்கள் வாழ்ந்த வாழ்வியலை அறிய முடிகிறது. அம்மக்கள் பயன்படுத்திய பேசிய எழுதிய பார்த்த தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட என எதையும் அறிய ஏதுவாகிறது. தெய்வங்கள், வீரமறவனின் குடிப்பெருமை, பாராட்டுதலும் பரிசும், கூத்துக்கலைகள், பாதீடு, ஒற்று, பெண் மறுத்தல், போர்க்கருவிகள், உழவும் வாணிபமும், அறக்கோட்பாடு, ஆற்றுப்படுத்துதல், கணிவன், பேய்கள், பூக்கள், விலங்குகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள், இடங்கள், கையறுநிலைகள் போன்றவைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வாய்வானது முழுவதும் ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

       போர் நடைபெற்ற அக்காலத்தில் மக்களின் நிலை என்ன? அம்மக்கள் வாழ்வதற்கான அணுகுமுறைகளையும், நாட்டிற்காகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீரமறவர்களுக்குள்ளும் மனம் (அன்பு) இருக்கிறது என்பதையும், அவர்களும் முறையான வாழ்க்கையினை வாழக்கற்றுக் கொண்டவர்கள்தான் என்பதையும் முன்வைக்க முயல்கிறது இவ்வாய்வு.

முன்னுரை

      காடுகளில் மனிதன் நாடோடியாக வாழ்ந்து வந்தவன் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நாகரிக வாழ்க்கையை அடைகின்றான். தன்னுடைய சமூகத்தை நாகரிகமாகவும் பண்பாட்டுடனும் நற்ஒழுக்கத்துடனும் நிலை நிறுத்த அவனுக்கு பல யுகங்கள் தேவைப்பட்டிருக்கும். அவ்வாறு பண்பட்ட சமூகம்தான் சங்ககால சமுதாயம். அன்றைய மக்கள் எண்ணம், செயல், வாழும் முறைகள் என தங்களை மேம்படுத்திக் கொண்டவர்கள். சங்ககாலம் பொற்காலம் என்றும் சங்க இலக்கியங்கள் பொற்இலக்கியங்கள் என்றும் அழைக்கலாம். அப்படிப்பட்ட சங்க இலக்கியங்களில் அன்றைய மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் போது அகத்தையும் (காதலும்) புறத்தையும் (வீரமும்) முன்நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பாலும் அகப்பாடல்கள் மூலம் அக கருத்துக்களே நிரம்பி வழிகின்றன. ஆங்காங்கே புறநூல்கள் கொஞ்சமாய் வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. தலைவன் தலைவியிடம் காதலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்  அவர்களின் வாழ்க்கை புறச்செய்திகளால்தான் சூழ்ந்து கிடக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். புறப்பொருளில்தான் அம்மனிதனின் வாழ்வியலை வெளிக்கொணர முடியும். அதனாலயே புற இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலை மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.

தெய்வங்கள்

     மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கையே தெய்வங்கள்தான். தெங்வங்கள் இல்லையென்றால் இந்நேரத்தின் மனிதர்கள் காட்டாறு போல தறிகெட்டுப் போயிருப்பார்கள். மனிதனின் எண்ணத்தில் கடவுள் பயம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை வாழ்க்கை என்ற ஒரு நேர்கோட்டில் செல்ல வைத்திருக்கிறது. தெய்வங்கள் மூலமாகவே தங்களுடைய பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டான். புறப்பொருள் வெண்பாமாலையில், கொற்றவை, முருகன், சிவபெருமான், திருமால் ஆகிய கடவுள்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளன.

                ‘‘ஒளியின்நீங்கா விறல்படையோள்

              அளியின்நீங்கா அருள்உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:18)

     அன்னை வழிப்பட்ட தமிழ்ச்சமுதாயத்திற்கு முதற்கடவுளாக விளங்குபவள் கொற்றவை தெய்வமாகும். இத்தெய்வம் வீரம் செறிந்தவளாகவும் பிறருக்கு அச்சத்தை தரக்கூடியவளாகவும் உடையவள். மேலும் பேய்க்கூட்டத்தைப் படையாகவும் கொண்டுள்ளாள் என்கிறது புறப்பொருள் வெண்மாலை. படை வீரர்கள் கொற்றவையின் அருளினைப் பாராட்டி மகிழ்கின்றனர். தங்களுடைய வெற்றிக்காரணமான கொற்றவைத் தெய்வத்தை மறவர்கள் வணங்குகின்றனர்.

                                    ‘‘சூழும்நேமியான் சோஎறிந்த

              வீழாச்சீர் விறல்மிகுத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:36)

     கருணை குணம் கொண்டவன். உலகத்தைக் காக்கும் தொழிலினைச் செய்பவன் திருமால். போர் மறவர்கள் வெற்றிப்பெற்றதால் அவ்வெற்றிக்கு காரணமான திருமாலை கந்தழி என்னும் துறை மூலம் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். மேலும் வெற்றிப்பெற்ற தன்னுடைய அரசனை திருமாலுக்கு நிகராக நினைத்து போற்றுகிறார்கள்.

     போர்மறவர்கள் சிவப்பெருமானைப் பூக்கொண்டு வணங்குதலும், முருகக்கடவுளைப் பூச்சொறிந்து வணங்குதலும் செய்கின்றனர். முருகன் வள்ளி இருவரையும் ஒன்றாய் சேர்த்து வணங்கியுள்ளனர். தங்களுடைய அரசன் வணங்கும் தெய்வத்தை மறவர்கள் உயர்த்தி பாடி மகிழ்கின்றார்கள்.

                           ‘‘வயங்கியபுகழ் வானவனைப்

                            பயன்கருதிப் பழிச்சினர் பணிந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.9:40)

     உலக இன்பத்தை நுகர்தல் பொருட்டு இறைவனை வணங்கும் பொருட்டு பழிச்சினர் பணிதல் என்னும் துறையாக அமைகின்றது. போர்மறவர்கள் இவ்வுலகப் பேறுகளைக் கருதி இறைவனை வாழ்த்தி வணங்குகின்றனர். தெய்வப்பெண்கள் ஆண்தெய்வங்களை விரும்புவது போல மானிடப்பெண்களும் கடவுளை விரும்பியள்ளனர். பண்டையக் காலக்கட்டத்தில் ஆண்களும் பெண்களும் இறைவனை வழிப்பட்டு வந்துள்ளனர். போருக்குச் செல்லும் முன் இறைவனை வழிபடுதலும் வெற்றிப்பெற்ற பின்பு மகிழ்ச்சியில் இறைவனைப் போற்றித்துதித்தலும் உண்டு.

குடிப்பெருமை

உலகம் தோன்றியபோதே வீரத்தின் அறிகுறியாய் வாளோடு தோன்றிய குடி மறவனின் குடி. தமிழ் இனத்தவரே முதல் குடியாவர். புறப்பொருள் வெண்பாமாலையில் குடிநிலை என்னும் துறையில் கரந்தை மறவர்கள் தம்முடைய தொன்றுதொட்ட குடிப்பெருமையினைப் பறைச்சாற்றுகிறார்கள்.

          ‘‘மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்

             கொண்டுபிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.2:13)

     காஞ்சி மறவர்கள் போரின்கண் தமது மறப்பெருமைகளை பெருங்காஞ்சி என்னும் துறையின் வழியாக வெளிப்படுத்துகின்றனர். போரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போரிட்ட மறவனின் ஆண்மைத்திறத்தினைப் போற்றியது.

            ‘‘தொல்மரபின் வாட்குடியின்

             முன்னோனது நிலைகிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:10)

     மறவன் ஒருவன் தான் பிறந்த குடியின் முதல்வனைப் புகழ்ந்து பாடுதலை முதுமொழிக்காஞ்சி கூறுகிறது. தொன்று தொட்டு வாளை ஏந்தி போர்ச்செய்கின்றவர்கள் மறவர் குடியே. அக்குடிக்கண் பிறந்த முன்னொனது தந்தையின் பேராற்றலைப் புகழ்ந்து பாடுவதாகும். மரபு மாறாமல் துடி கொட்டுபனுடைய குடிப்பெருமையைப் புகழ்ந்து கூறுகிறது துடிநிலை என்னும் துறை.  வேதம் உணர்ந்த பார்ப்பண குடியை மேம்பட எடுத்துரைத்தது பார்ப்பன வாகை ஆகும்.

                     ‘‘செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்

                        இருநிலம் காவலன் இயல்புஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:16)

     இப்பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்பவன் அரசன். அவன் போர்க்களத்தில் பகைவரை வருத்துகின்ற சிவந்த நெடிய வேலினை ஏந்தியவன் ஆவான். அம்மன்னனின் இயல்புகளை மிகுத்து அரச முல்லை என்ற துறையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசனின் நற்பண்புகளையும் எடுத்துக் கூறுவதாகவும் அமைகின்றது. பகைவரை பெறாத போதும் மிகுந்த சினம் கொண்டது மறக்குடி ஆகும். அக்குடி மென்மேலும் உயர்கின்ற ஆண்மைத்தன்மையினையும் ஒழுக்கத்தினையும் ஏறாண்முல்லை என்னும் துறையில் சொல்லப்பட்டுள்ளது.

     நடுவுநிலைமையையுடைய சான்றோர்களின் குடிப்பெருமையைக் கூறுகிறது. ஒரு வீரமறவன் போரில் இறந்துபட்டான். அப்போது அந்த மறவனின் வீரத்தைப் பார்த்த நட்பு மறவர்களும் பகை மறவர்களும் ஒன்றாய்ச் சேர்ந்து சுற்றி அவனுடைய உடலைப் பார்த்து அம்மறவனின் குடியைப் புகழ்ந்து பேசுகின்றனர் என்னும் செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் நாகரிகமாகவும் பண்பாடு கொண்டவராகவும் அக்கால மக்கள் விளங்கியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

பாராட்டும் பரிசும்

மறவர்களின் வீரச்செயலுக்கு பாராட்டும் பரிசும் அக்காலத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட பாராட்டுச் செயல்களை மறவர்களும் விரும்பினார்கள். பகைவென்ற மறவனை அரசன் பாராட்டிப் பரசளித்தலை பேராண் வஞ்சி என்னும் துறை கூறுகிறது.

                ‘‘மறவேந்தனில் சிறப்புஎய்திய

                    விறல்வேலோர் நிலைஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.3:8)

வெற்றிக்காக விழுப்புண்ணை ஏற்ற மறவர்களுக்கு அரசன் முத்துமாலைகளைப் பரிசாகத் தந்து சிறப்பித்துக் கூறுவதனால் மாராய வஞ்சி எனப்பட்டது. அரசனால் சிறப்பிக்கப்பெற்றதனால் அம்மறவர் வெற்றி பொருந்திய வேலினைக் கொண்டவராக இருப்பார். எதிர் நிற்கும் பகை வேந்தர்களுக்கும் படை வீரர்களுக்கும் முன்சென்ற மறவன் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறுகிறது நெடுமொழி வஞ்சி என்னும் துறையாகும். இந்தத் துறையானது தற்புகழ்ச்சி ஆயினும் அவனுடைய வீரச்செயலைப் பிறருக்கு காட்டுவதில் அவன் தயங்கவில்லை. அதன் மூலம் பகைநாட்டு மறவர்களின் மனதளவில் நிலைக்குலைய செய்துள்ளான்.

                                 ‘‘மைந்துஉயர மறம்கடந்தான்

                                   பைந்தலைச் சிறப்புஉரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:9)

     பகைவரின் வலிமையைக் கெடுத்துத் தம் வலிமை வெளிப்படும்படியாகப் போர்த்தொழில் செய்தவன் காஞ்சி மறவன். வீரமறவன் போர்க்களத்தில் பகைவரால் தலை வெட்டப்பட்டு இறந்தான். அம்மறவனின் தலையைக் கொண்டு வந்த மற்றொரு மறவனுக்கு அரசன் பெரும்பொருள் கொடுத்துச் சிறப்பு செய்கின்றான். மேலும் இறந்த மறவனின் புகழைப் பராட்டியும் அவனை நினைத்து மனம் வருந்தி இருத்தலும் உண்டு.

     பகைவரின் உயிரை உண்ண மேகம் போல விரைந்து பாய்ந்து வரும் குதிரையின் மாண்பினையும் குதிரைப்படை வீரர்களின் மறமாண்பினையும் எடுத்துக்கூறுவது குதிரை மறம் என்னும் துறையாகும். மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது எயிற்போர் என்னும் துறையாகும். மன்னனின் பிறந்தநாளன்று வலிய யானைகளையும் சிவந்த பொன்னையும் பரிசாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்டவர்கள் விருப்பமுடன் மகிழ்ந்திருந்தனர். இந்நிகழ்வினை நாள் மங்களம் என்னும் துறை எடுத்துரைக்கிறது. மன்னர்கள் தன்னுடைய நாட்டிற்காக உயிரை விட்ட மறவர்களுக்கு பரிசினைக் கொடுத்துப் பாதுக்காத்துக் கொண்டான்.

பங்கிட்டுக்கொடுத்தல் (பாதீடு)

     பண்டையக்கால சமூகத்தில் தான் கொண்டு வந்த பொருளினை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தான் உழைத்த பொருளே ஆனாலும் கவர்ந்து கொண்டு வந்த பொருளே ஆனாலும் ஊர்ப்பொதுவில் வைத்து அவற்றினை பெரியோர்கள் முன்னிலையில் பங்கிட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வினைப் புறப்பொருள் வெண்பாமாலை பாதீடு என்கிறது.

         ‘‘கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை

          அவர்அவர் வினைவயின் அறிந்துஈந் தன்று  ’’ (பு.வெ.மாலை.கொளு.1:12)

     பகைவர்களைத் தங்களுடைய கொல்லுகின்ற அம்பினை விட்டு கொன்றுவிட்டு அவர்களுடைய ஆநிரைகளைக் கவர்ந்து வந்தனர் வெட்சி மறவர்கள். அவ்வாறு கைப்பற்றி வந்த ஆநிரைகளை அவரவர் தகுதிகேற்பப் படைதலைவன் பகிர்ந்து அளித்துள்ளான் என்கிற பாதீடு என்ற துறை. பகைவரைத் தம் படையினரால் வெற்றி கொண்டவன் வஞ்சி வேந்தன். அவன் தம் மறவர்களால் பகைவர்கள் மேலும்மேலும் அழிவுற வேண்டுமென நினைத்தான். அதற்காகத் தம் மறவர்களை பாணர்கள் புகழவும் வீரமுரசு ஆராவாரிக்கவும் புகழ்ந்தான். அரிவாள் போன்று வளைந்த கோடுகளை உடைய புலியை ஒத்தவர்களான வீர மறவர்கள் உரிய வரிசை முறையில் அழைத்து அவர்களுக்கு வேண்டுமளவிற்கு பெருஞ்சோற்றுத் திரளை நிறையக் கொடுத்தான் என்கிறது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாகும்.

     தேன் மிகுந்து நறுமணம் வீசும் கள்ளினைக் காஞ்சி வேந்தன் தன்னுடைய வீரர்களுக்கு வயிறு நிரம்ப கள்ளினை ஊற்றிக்கொடுத்தான். மேலும் பகை நாட்டு வீரர்களுக்கும் ஊருக்கு வெளியே கள் கிடைக்கப்பெற்றது என்கிறது கட்காஞ்சி என்னும் துறை. தனக்கு கிடைத்ததைத் தான்மட்டும் உண்டு அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுத்து அவனையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளான் என்பதை அறியமுடிகிறது.

கூத்துக்கலைகள்

நாள் முழுவதும் வேலை என்று இருந்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வில் மனமகிழ்ச்சியை எதிர்ப்பார்த்தான். அதனால் இசையொடு ஆடியும் பாடியும் தன்னை மகிழ்ச்சியாக்கிக் கொண்டான். பகைவரின் ஆநிரைகளைக் கவர்ந்த செல்லும் போது பற்பல இசைக்கருவிகளை முழங்கியும் ஆராவாரித்தும் செல்லுவார்களாம். அவ்வாறு இசைக்கப்பட்ட இசைக்கருவிகளில் முதன்மையாக வைக்கப்பட்டது துடி என்னும் கருவியாகும். போருக்குச் செல்லும் படையினருக்கு ஊக்கம் தருவதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

         ‘‘தொடுகழல் மறவர் தொல்குடி மரபில்

          படுகண் இமிழ்துடிப் பண்புஉரைத் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:17)

என்று துடிநிலை என்னும் துறை விளக்குகிறது. அடுத்ததாக கிணை என்னும் தோற்கருவியைக் குறிப்பிடுகிறார்கள். கிணை – தடாரிப்பறை. வேளாண் புகழை எடுத்துரைப்பது. கிணை என்னும் இசைக்கருவியை இசைத்ததற்காக மன்னனிடமிருந்து கைநிறையப் பொருட்களைப் பெற்றுக்கொண்டான் என்கிறது கிணைநிலை என்னும் துறையாகும்.

              ‘‘வால்இழையோர் வினைமுடிய

          வேலனொடு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:19)

வெண்மையான அழகிய அணிகலன்களை அணிந்தவர்கள் மறக்குடி மகளிர்கள். அப்பெண்கள் தம் கணவர்கள் மேற்கொண்ட தொழில் நன்றாக முடிய வேண்டும் என எண்ணினார்கள். அதற்காகக் வேலனோடு கூடி வள்ளி என்கிற கூத்தினை ஆடினார்கள். இவ்வாட்டத்தினை வெறியாட்டு என்பர். ஒரு வீரமறவன் போர்க்களத்தில் இறந்துபட்டான். அவனைச் சூழ்ந்து வலிமை பொருந்திய தோளினை உடைய தும்பை மறவர்கள் மகிழ்ச்சி களிப்புடன் வாளேந்தி ஆடியதை ஒள்வாள் அமலை கூறுகிறது. மறவர்கள் சூழ வெற்றிப் பெற்றவனைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். அரசனின் தேர்க்கு முன்பும் பின்பும் வெற்றியை நுகர்ந்து குரவைக் கூத்தினை ஆடி மகிந்தனர். அதேபோல் பேய் மகளிரும் தேருக்கு முன்பும் பின்பும் ஆடுகின்றார்களாம்.

          ‘‘பூண்முலையார் மனம்உருக

          வேல்முருகற்கு வெறிஆடின்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:37)

மகளிர்கள் முருகனுக்காக வள்ளிக்கூத்தினை ஆடி மகிழ்நதனர். வள்ளிக்கூத்து என்பதற்கு வெறிக்கூத்து என்று அழைப்பர். இறைவன்பால் விருப்பம் கொண்டு ஆடுகின்ற ஆட்டம் சிறந்த பயனைக் கொடுக்கும். அதனால் மனதை மகிழ்ச்சியான நிலைக்கு கொண்ட வர இவ்வாறான ஆட்டங்கும் கூத்துகளும் மனிதனுக்கு தேவைப்பட்டது எனலாம்.

நற்சொல் கேட்டல்

நல்ல சொற்கள் ஒரு மனிதனை வாழவைக்கும். மனதை நிறைவடையச் செய்யும். நம்முடைய பயணம் விஷேச நாட்களின் போதும் நல்ல சொற்களும் வார்த்தைகளும் மனம் மகிழ்ந்து இன்னும் உத்தியோகமாக வேலை செய்ய தூண்டும். விரிச்சி என்கிற துறையில்,

         ‘‘வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு

          ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.1:2)

தாம் மேற்கொள்ளும் செயலின் நிலையை அறியும் பொருட்டுச் சொல்லை ஆராய்தலே ஆகும். வெட்சி மறவர்கள் ஒன்று கூடி ஓரிடத்தில் கூடினார்கள். தாம் விரும்பிய அச்செயலானது இனிதாக நிறைவேறவேண்டும் என்று எண்ணினார்கள். அதற்காக இருள் வருகின்ற மாலைப் பொழுதில் நற்சொல்லினைக் கேட்டு ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். அதன் பிறகுதான் செல்லும் இடத்திற்குச் செல்வார்கள். ஒருசில நேரங்களில் தீய நிமித்தங்களும் நடைபெறுவதுண்டு. ஆனாலும் மறவர்கள் சென்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம். அம்மறவர்கள் மனவலிமையைக் கொண்டு வெற்றியும் அடைந்துள்ளார்கள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

ஒற்று அறிதல்

     ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதனால் பகையரசனின் பலம் அறிந்து கொள்ளாமல் போருக்குச் சென்றால் தோல்வியை மட்டுமே சந்திக்க நேரிடும். அதனால் பகை நாட்டின் சூழலை நன்கு அறிந்து கொள்ளும் தன்மை நன்மை பயன்தக்கது. அதனால் அக்காலத்தில் சூழலை அறிந்து வருவதற்கென்றே வீரர்களை நியமித்திருந்தனர். இவர்களை ஒற்றர்கள் என்று அழைப்பார்கள்.

           ‘‘பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து

          ஒற்றுஆ ராய்ந்த வகைஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:4)

ஒற்றர்கள் பகை நாட்டின் அவர்கள் அறியாதவாறு அம்மக்களுக்குள்ளே சென்று தங்குவர். அம்மக்கள் அறியா வண்ணம் ஆநிரைகள் இருக்கின்ற இடம், ஆநிரைகளின் எண்ணிக்கை, அவற்றினைக் காக்கின்ற வில் மறவர்களின் அளவு ஆகியவற்றை ஆராய்ந்து வருவார்கள் என்கிறது வேய் என்னும் துறையாகும். இதுமட்டுமன்று மன்னர்களின் அரசியல் போக்குகளையும் ஆராய்ந்து வருதலும் உண்டு. பரிசுகள் ஒற்றர்களுக்கு பிற மறவரைக் காட்டிலும் மிகுதியாகக் கொடுக்கப்பட்டது. இது ஒற்றர்களுக்குச் சிறப்பு செய்வதினால் இது புலனெறி சிறப்பு என்றாயிற்று. ஒற்றர்களின் பணி மிகவும் கடுமையானது. பகையரசனிடம் மாட்டிக்கொண்டால் ஒற்றரை துன்புறுத்தி கொன்று விடுவார்கள். ஆனாலும் தம் நாட்டை காப்பாற்றுவதற்காக மறவர்கள் ஒற்றர் வேலையை செய்து வந்துள்ளனர்.

அன்பு

     போர் சண்டை என இருந்து வந்த காலக்கட்டத்தில் அன்பும் இருந்திருக்கிறது. மறவன் ஒருவன் தம்மால் கவர்ந்து வரப்பட்ட ஆநிரைகளுக்குத் துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் காட்டு வழியே ஓட்டிச் சென்றான்.

            ‘‘அருஞ்சுரத்தும் அகன்கானத்தும்

              வருந்தாமல் நிரைஉய்த்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.1:9)

காட்டு வழிகளில் செல்லும் போது நிழழும் தண்ணீரும் உணவும் கிடைக்கபெறும். இந்நிகழ்வினை சுரத்துய்த்தல் என்னும் துறை உரைக்கிறது.

போர்க்கருவி

    போர்களில் சண்டையிடுவதற்காக நிறையப் போர்க்கருவிகளை மறவர்கள் வைத்திருந்தனர். மறவர்களின் இடையில் எப்பொழுதும் ஆயுதம் இருக்கப்பெற்றிருக்கும்.

           ‘‘வென்றி யோடு புகழ்விளைக் கும்எனத்

          தொன்று வந்த தோல் மிகுத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.6:11)

     உழிஞையரசன் தனது கிடுகுப்படையைப் பாராட்டியது. இதனை தோல் உழிஞை என்னும் துறையைாகும். தோல் என்பது கிடுகு என்னும் ஒருவகைப் போர்கருவியாகும். வட்டவடிவில் அமைந்து கண்ணாடி நிரைத்ததால் ஒளிரும் தன்மை கொண்டது கிடுகுப்படை. அதன் துணைக்கொண்ட தன்னிடம் பணியாத அரணினைக் கைப்பற்றுவது எளிது என்பதும் அதன் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்பதுதான்.

உழவர்கள்

உழவர்கள் வாழ வேண்டும். விவசாயம் பெருக வேண்டும். நம் நாட்டின் வளத்தை பெருக்கி மூன்று வேளையும் வயிறு நிரம்ப உண்ண வேண்டும். கிணைநிலை என்னும் துறையில்,

           ‘‘தண்பணை வயல்உழவனைத்

          தெண்கிணைவன் திருந்துபுகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:30)

 குளிர்ச்சி பொருந்திய தன்மை கொன்டது நன்செய் நிலம். நிலத்தை உழுது மக்களுக்கு பயன் விளைப்போர் உழவர்கள் ஆவார்கள். அவர்கள் இவ்வுலகத்தில் மேலான புகழினை உடையவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட உழவர்களை வாழ்கவென்று கிணைப்பறையை அடித்து வாழ்த்தி வறுமை நீங்க வேண்டுமென உரக்கக் கூறுதல். நெல் அறுவடை முடிந்ததும் உழவர்கள் தம் குடிகளுக்கு தக்கவாறு நெல்லினைக் கொடுப்பார்கள். அது அவர்களின் ஆண்டு முழுவதும் உணவு பஞ்சமின்றி வாழ வழிவகைச் செய்யும்.

கண்டார்க்கு அச்சத்தைத் தருவதாய் விளங்குவது படை. அதனை வரப்பாகக் கொண்டு விளங்குவது போர் செய்வதற்குரிய களம். அக்களமே நெடிய வயல். சிவந்த நிறத்தால் ஒளிர்கின்ற வேலே கோலாகும். பசிய நிறமுடைய கண்களையும் பெருத்த கால்களையும் உடைய யானை எருதாகும். அவ்வயலின் வெம்மையாகிய சினவே விதையாகும். புகழே பயன் மிகுந்த விளபொருளாகும். பகை வென்ற அரசனே உழவன் ஆவான். போர்க்களத்தை விவசாய நிலமாக்கி உழவனை அரசனுக்கு உருகவம் செய்துள்ளார் ஐயனாரிதனார். மேலோர் சொல்வழி நின்று உலகத்தார் பயன் கொள்ளும் வகையில் உணவு கொடுக்கும் உழவனை மிகுத்துக் கூறுவதாக வேளாண்வாகை என்னும் துறை கூறுகிறது. அரணை அழித்து கழுதை பூட்டி வரகை விதைப்பது பற்றி உழுது வித்திடுதல் கூறுகிறது. உழவனை எருதோடு ஒப்பிட்டுக் கூறுகிறது பகட்டு முல்லை என்னும் துறை.

          ‘‘செறுதொழிலின் சேண்நீங்கியான்

          அறுதொழிலும் எடுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:9)

அறுவகைத் தொழிலினையும் சிறக்கச் செய்கின்ற வணிகர்கள் தம் மேம்பாட்டைக் கூறுவது வாணிக வாகை ஆகும்.

அறுவகைத் தொழில்கள்

நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைப்பொருட்களைக் கைக்கொள்ளுதல்

ஆராவாரிக்கின்ற ஆநிரைகளைப் பாதுகாத்தல்

குற்றமற்ற பொருட்களை விற்றல்

கற்பதற்கு உரியவற்றை முற்றும் கற்றல்

முத்தீயைப் போற்றி வணங்குதல்

தம்பொருளை சீர்தூக்கிப் பாராமல் பிறருக்கு வழங்குதல்

என இவ்வாறு தன்மைகளை உடையவர்கள் வணிகர்கள் என்கின்றார் ஐயனாரிதனார்.                

பெண்மறுத்தல்

     வலிமை மிக்க மன்னன் பகை மன்னன் பெற்ற பெண்ணை திருமணம் செய்ய கருதி பெண் கேட்பான்.   பெண் கொடுக்காவிட்டால் அம்மன்னன் மீது படை எடுத்துச் சென்று தாக்குதலும், பெண் தரும் வரை காத்திருத்தலும் அக்காலத்தில் நடைபெறுவதொன்று. மன்னனின் மகவை சான்றோர்களும் ஊர் மக்களும் மிக்க புகழ்துரைக்கின்றனர்.

          ‘‘வெம்முரணான் மகள்வேண்ட

          அம்மதிலோன் மறுத்துரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.5:8)

     கொடிய பகையினை உடையவன் உழிஞை அரசன். அவன் நொச்சி வேந்தனின் மகளைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் நொச்சி அரசனோ தன் மகளை தர மறுக்கிறான். இதனால் இது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாகும். பகை மன்னனுக்கு பெண் கொடுக்காமல் போர்ச்செய்தலை விரும்பியதால் மகட்பாற் காஞ்சி எனும் துறையாம். மற்றொரு மன்னன் மாற்றரசனின் மகளைத் திருமணம் செய்தே தீருவேன் என்று மதில் புறத்திலே தங்கியிருந்தானாம். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் புறச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அறம் செய்வித்தல்

இருக்கின்றவன் இல்லாதவனுக்கு உதவ வேண்டும். கிணற்றில் தண்ணீர் இறைக்க இறைக்க எவ்வாறு தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்குமோ அதுபோல செல்வமும் கொடுக்க கொடுக்க நிறைந்து கொண்டே செல்லும்.

        ‘‘புகழோடு பெருமை நோக்கி யாரையும்

          இகழ்தல் ஓம்புஎன எடுத்துரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:11)

ஒருவர்க்குப் புகழும் பெருமையும் உண்டாகும். அவ்வொருவர் தன்னுடைய புகழையும் பெருமையையும்  பிறரோடு ஒப்பிடுவர். அதன் காரணமாகப் பிறர் யாரும் தனக்கு நிகரில்லை என எண்ணி மகிழ்ந்து பிறரை எள்ளி நகையாடவும் செய்வர். அவ்வாறு எவரையும் இகழ்தலை தவிர்க்க வேணடும் என பொருந வாகை கூறுகிறது. துறவியரின் தவநெறி பிறழாத வாழ்வினைப் போற்றி உரைப்பது தாபத வாகை ஆகும். அரசர்களுக்குள் மாறுபாடு தோன்றும் போது அம்மாறுபாட்டினைத் தவிர்த்து நன்மை செய்வதற்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் சந்துசெய்வித்தலைச் செய்வார்கள் என்று பார்ப்பண முல்லை கூறுகிறது. விண்ணை தீண்டுமாறு உயர்ந்து நிற்பது மலை. நல்லியல்பால் உயர்ந்து நிற்பவர் சான்றோர்கள். அறம் பயிற்றுவிக்கின்ற அச்சான்றோர்களின் மேன்மையைக் கூறுவது சால்பு முல்லை என்னும் துறையாகும்.

         ‘‘வையகத்து விழைவுஅறுத்து

          மெய்யாய பொருள் நயந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.8:31)

உலகின்கண் பல பொருட்கள் உள்ளன. அவற்றின் பொய்யான பொருள் மீது பற்றுக் கொள்ளுதலை விட வேண்டும். மெய்யான பொருளாகிய இறைவன் மீது பற்று வைக்க வேண்டும் என பொருளோடு புகறல் துறை கூறுகிறது. மீண்டும் பிறவிச் சுழற்சியில் உழலாமல் உலகப் பற்றை விட்டு அருளாகிய நன்னெறியினைப் பற்றுதலை அருளோடு நீங்கல் துறை விளக்கம் தருகிறது.

அறம், பொருள், இன்பத்தை உறுதிப்பொருளாக முன்னோர்கள் மொழியப்பட்ட அறத்தை கூறுதல் – முதுமொழிக்காஞ்சி

கண்ணுக்குப் புலனாகும் அனைத்துப் பொருள்களும் நிலைபெறாமல் அழியும் எனக் கூறுவது – பெருங்காஞ்சி

மெய்ப்பொருளினை உணர்த்துவது – பொருள்மொழிக்காஞ்சி

வீட்டுலகத்தின் இயல்பினை எடுத்துரைப்பது – புலவர் ஏத்தும் புத்தேள் நாடு

உணர்தற்கு உரிய பொருளை உணர்த்துவது – முதுகாஞ்சி

பழமையான நூல்கள் கூறுகின்ற நெறியினை அடிப்படையாக வைத்து பிற உயிர்களிடத்து அருளுடைமையே அறம் என்று கூறப்படுகிறது.

ஆற்றுப்படுத்துதல்

     ஓர் அரசனிடம் பரிசினைப் பெற்றான் ஒரு பாணன். தான் பெற்ற பரிசினை தன்னைப் போல் உள்ள மற்றொரு பாணனிடம் இன்ன மன்னனிடம் சென்று இன்னப் பரிசினைப் பெற்றுக்கொள்க எனக் கூறுவது. ஆற்றுப்படுத்துவது – வழிப்படுத்துவது.

             ‘‘சேண்ஓங்கிய வரைஅதரில்

          பாணனை ஆற்றுப்படுத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:24)

     இந்நிகழ்வானது வறுமையை புலப்படுத்தியிருப்பினும் தனக்கு கிடைத்தது மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நற்பண்பு அக்கால மக்களிடம் இருந்து வந்துள்ளது. இதேபோல் புலவர், கூத்தர், விறலி, பொருநர் ஆகியோரையும் ஆற்றுப்படுத்தப்படுகிறது.

கணியன்

     காலம்தொட்டு வருகின்ற அறிவால் சிறந்து நிற்பவன் கணிவன். அவர்கள் உலக நடப்புகளைத் துணிந்து கூறும் தன்மை கொண்டவர்களாகச் சுட்டப்பட்டுள்ளனர்.

         ‘‘துணிபுஉணரும் தொல்கேள்விக்

          கணிவனது புகழ்கிளந்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:19)

     காலத்தின் பகுதிகளைக் கணக்கிட்டு ஆராய்ந்து கூறும் புலவனின் திறத்தைச் சிறப்பித்துக் கூறுவது கணிவன் முல்லை. அவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். வாழ்வின் பின்னால் நடப்பவையை முன்கூட்டியே சொல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

அறிவுரைக்கூறல் (ஓம்புடை)

     அறத்தினை ஆராய்ந்து ஆட்சி புரிபவன் செங்கோல் அரசன். அவனுக்கு மறமும் பிறழ்ச்சியும் இல்லாத நல்லுரைகளை உணரும்படியாகச் சான்றோர்கள் கூறுவர்.

         ‘‘மறந்திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி

          அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.9:29)

     ஓர் அரசனுக்கு அறிவுரை கூறுவது செவியறிவுறூஉ என்னும் துறையாகும். உலகை ஆளும் அரசனே தவறு செய்து இருப்பினும் அவர்களுக்கு சான்றோர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். சான்றோர்கள் வழங்கிய அறிவுரைகளையும் அரசர்கள் கேட்டிருக்கிருக்கிறார்கள்.

பூ மரம்

     புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலில் பூக்களும் மரங்களும் சுட்டப்பட்டுள்ளன. போர் மறவர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய பூக்களைச் சூடி போருக்குச் சென்றிருக்கிறார்கள்.

காயாம் பூவினைப் புகழ்ந்து கூறுவது – பூவைநிலை (தற்காலத்தில் காசாம்பூ வழங்கப்படுகிறது)

சிவன் சூடிய உழிஞை பூவினைப் புகழ்ந்து கூறுவது – முற்றுழிஞை

முருகன் சூடிய காந்தள் பூவின் சிறப்பினைக் கூறுவது –  காந்தள்

சேரர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – போந்தை

சோழர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – ஆர்

பாண்டியர் அடையாளமாகச் சூடுகின்ற பூ – வேம்பு

உன்னம் என்னும் மரத்தின் நிலையினைக் கூறுவது – உன்னநிலை

போர்க்களத்தில் தன்னுடைய நாட்டுக்காகப் போரிடுகின்ற மறவர்கள் பூவைச் சூடுதலும் தோல்வியினால் வாடுதலும் உண்டு.

விலங்குகள்

     புறப்பொருளில் ஒருசில விலங்குகளின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்காலங்களில் யானைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப்பற்றுவது யானை கைகோள் என்கிறது.

          ‘‘எறிபடையான் இகல்அமருள்

          செறிபடைமான் திறம்கிளந்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.7:3)

     தும்பை அரசனுடைய இளம் களிறு மிகுந்த வீரத்தைக் கொண்டது. அந்த யானையானது சினந்து வந்தது பற்றி கூறியது யானைமறம் என்பதாம். வீரமறவன்  ஒருவன் யானையின் மீது வேலினை எரிகின்றான். யானையை வீழ்த்திய அவனின் வீரத்தை இவ்வுலகம் கண்டு வியக்கிறது.

     கழுதையைப் பூட்டி ஏர் உழுது வரகை விதைத்துள்ளார்கள். தும்பை அரசனடைய கதிரைகளின் திறத்தை மிகுத்துச் சொல்லுவது குதிரைமறம் என்னும் துறையாகும். எங்கள் அரசன் நாங்கள் மகிழும் பொருட்டு எங்களுடைய வீட்டின் முன் ஆட்டின் மீது ஏறி விளையாடுதலை ஏழக நிலை கூறுகிறது.  உழவனை எருதோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறது பகட்டு முல்லை எனும் துறையாகும். விலங்குகள் மக்களின் வாழ்க்கைக்கு எந்தளவிற்கு உதவியாகவும் பிரிக்க முடியாதவையாகவும் இருந்து வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

புறப்பொருளில் இடங்கள்

     மக்கள் வாழும் இடங்கள், புழங்குகின்ற இடங்கள், போர் நடைபெறும் இடங்கள் என ஒருசில இடங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

காவற்காடு, அகழி – உழிஞை மறவர்கள் நொச்சியாரின் காவற்காட்டைக் கடந்து அகழியை அடைகின்றனர்.

மதில் – செங்கற்களால் கட்டப்பட்டதும் நொச்சியாரின் நீண்ட மதிலாகும். உழிஞை மறவர்கள் மதிலை விட்டு அகலாமல் நின்றனர்.

பாசறை – பகைவர் நாடு தன்கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருந்து போர் செய்தல்.

விழல் (குடிசை) – பசும்புல் தொகுதியால் வேயப்பட்ட குடிசை.

நடுகல்

இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லினைத் தேர்ந்தெடுத்தல் – கற்காண்டல்

தேர்ந்தெடுத்த கல்லை பல சடங்குகள் செய்வது – கற்கோள் நிலை

நடுகல்லை நீரில் போட்டு வைத்தல், நடுதற்குரிய இடத்தில் சேர்த்தல் – கல்நீர்ப்படுத்தல்

வீரமறவரின் நினைவாகக் கல்லை நடுதல் – கல் நடுதல்

நட்ட கல்லினை வாழ்த்துவது – கல்முறை பழிச்சல்

கோயிலை எழுப்பி நடுகல்லை எடுத்துச் செல்வது – இற்கொண்டு புகுதல்

இவ்வாறாக அக்கால மக்கள் தங்களின் பழக்கவழக்கத்தினை சிறப்புறச் செய்து வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

     பண்டைய கால மக்கள் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆண்களும் பெண்களும் பயன்படுத்தி வந்தமை, வீடுகளில் பயன்படுத்தி வந்தமையும் குறிக்கப்பட்டுள்ளன.

ஏணி – மதிலை தாண்டிச்செல்ல ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

முரசு – மாற்றரசனின் முரசொலியைக் கேட்டு மிகுந்த சினம் கொண்டான் மன்னன். வெற்றிக்காகவும் முரசினை ஒலித்து ஆராவாரம் செய்துள்ளார்கள்.

வாள் – வேந்தனின் வாளை புனித நீராட்டுவது. வாளினைப் போர்க்களத்திற்கு எடுத்துச் செல்லுதல். அரசனின் வெற்றி வேளினைச் சிறப்பித்துக் கூறுவது.

கழல் –  போர்மேற் செல்லுவோர் வீரக்கழல் அணிந்து செல்வார்கள். அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.

செங்கொல் – வாகை வேந்தனின் செங்கோல் சிறப்பை எடுத்துரைப்பது. செங்கொல் மன்னனை உழவனாக உருவகம் செய்தல்.

குடை – காஞ்சியரசன் தன் குடையைப் போர்க்களத்திற்குச் செல்ல விடுவது. அரசனின் வெற்றிக்குடையைச் சிறப்பித்துக் கூறுவது.

தேர் – தும்பை அரசனின் தேர் வலிமையைக் கூறுவது.

விளக்கு – அரசனுடைய திருவிளக்கு நிலையைக் கூறுதல்.

அரியணை – அரசன் வீற்றிருந்த அரியணைச் சிறப்பைக் கூறுவது.

மேற்கண்ட பொருட்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி வந்துள்ளதை புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலின் வாயிலாக அறியலாம்.

கையறுநிலை

     போர்களில் அரசன் முதற்கொண்டு மறவர்கள், யானைகள், குதிரைகள் என இறந்து போகின்றனர். இவர்களுடைய உறவினர்கள் இறந்து போனவர்களின் துக்கத்தைத் தாளாமல் மனம் வருந்தி நிற்பர். அத்தகையச் சூழலைத்தான் கையறுநிலை விளக்குகிறது.

              ‘‘வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு

          கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று’’ (பு.வெ.மாலை.கொளு.2:9)

தன்னுடைய தலைவனின் இறப்பால் செய்வதறியாது பாணன் திகைத்து கையறுநிலையாய் நிற்கின்றானாம். அதேபோல் பகை நாட்டிற்காக இறந்து போன மறவர்களை நினைத்தும் வருந்தும் உன்னத போக்கு நம்மக்களிடையே இருந்து வந்துள்ளது. இறந்துபட்டவர்களுக்காக இறுதிக்கடன்களைச் செய்தலும் சொல்லப்பட்டுள்ளது. போரில் அரசன் கொல்லப்பட்டவுடன் அதை மனம் தாங்காது மறவன் ஒருவன் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொள்ளும் பேரன்பு அக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது.

          ‘‘காதற் கணவனொடு கனைஎரி மூழ்கும்

          மாதர் மெல்லியல் மலிபுஉரைத் தன்று ’’ (பு.வெ.மாலை.கொளு.4:19)

கணவனின் இறப்பிற்குப் பின்னர் அவனுடைய மனைவி வாழ அஞ்சுகிறாள். அதனால் போரில் இறந்துபட்ட கணவனுடன், கணவனை அழித்த கருவியால் தானும் குத்திக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதன் தொடக்கமே பின்னால் உருவாகி பெண்களுக்கு அச்சுருத்தலாக இருந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பதை இங்கு சுட்டிக்காட்டலாம். போர்க்களத்தில் இறந்துபட்ட கணவனை விண்ணுலகப் பெண்கள் தழுவும் முன்னர் அவனுடைய மனைவி தழுவி நிற்கின்றாள் என்பதை சிருங்காரம் என்னும் துறை விளக்குகிறது. விழுப்புண் பட்டு இறந்த கணவனைக் கண்ட அவன் மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறாள். தன்னுடைய கணவன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமை படுகின்றாள்.

முதுபாலை –  பாலை நிலத்தில் தன்னுடன் வந்த கணவன் இறந்ததால் தலைவி வருந்ததல்.

சுரநடை – காட்டில் மனைவியை இழந்த கணவன் வருந்தவது.

தபுதார நிலை – மனைவியை இழந்த கணவன் வருத்தத்துடன் தனியே வாழ்வது.

தாபத நிலை – கணவனை இழந்த பெண் கைம்மை நோன்பினை மேற்கொள்வது.

தலைப்பெயல் நிலை – குழந்தையைப் பெற்றெடுத்த பெண் இறந்ததைக் கூறுவது.

பூசல் மயக்கு – போரில் இறந்த சிறுவயது மறவனின் சுற்றந்தார் அழுது ஆராவாராம் செய்வது. மன்னன் இறந்ததற்கு வருந்துதலும் ஆகும்.

மாலை நிலை – கணவனை இழந்ததால் உயிர்விடக் கருதிய மனைவி மாலைப்பொழுதில் தீப்புக நின்றது.

மூதானந்தம் – இறந்த கணவனோடு சேர்ந்து உயிர்விட்ட தலைவியின் நிலையைக் கண்டோர் புகழ்வது. ( உடன்கட்டை இதனால்தான் உண்டாகியிருக்கும்)

ஆனந்த பையுள் – போரில் இறந்த கணவனை எண்ணி மனைவி மிகவும் வருந்துவது. இறந்தோரது புகழினை அன்பின் காரமாக எடுத்துரைப்பது.

வருத்தமடைதல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஒருவரின் மேல் கொண்ட எல்லையற்ற அன்பின் காரணமாகவே கையறுநிலை உண்டாகிறது. அதனால் கணவன் இறந்தவுடன் மனைவி அன்பின் காரணமாகவே உயிர் விடுகிறாள். ஆனால் அதற்கு பின்னால் வந்த மக்கள் உயிர்விட விரும்பாத பெண்களையும் இவ்வாறாகச் செய்ய சொல்லி வற்புறுத்தி இருப்பார்கள். இதன் காரணமாகவே உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்திருக்கலாம்.

பேய்கள்

           ‘‘செருவேலோன் திறம்நோக்கிப்

          பிரிவின்றிப் பேய்ஓம்பின்று’’ (பு.வெ.மாலை.கொளு.4:13)

புண்பட்டு இறந்த மறவனை பேய்கள் காவல் காத்து நின்றனவாம். புண்பட்ட மறவனை சுற்றி நின்று பேய்கள் அச்சுருத்தலையும், வீர மறவனின் புண்ணை பேய் தீண்டி மகிழ்ச்சி அடைவதும், சில பேய்கள் விழுப்புண்ணை தீண்ட ஆஞ்சுவதுமாய் இருப்பதும் சுட்டப்பட்டுள்ளன.

முடிவுரை

     பண்டையகால மக்களின் புறச்செய்திகளைப் புறப்பொருள் வெண்மாலை இலக்கண நூலில் இருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. போர்ச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூலாக இருப்பினும் அன்றைய மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஆசிரியர். போரின் காரணமாக மறவர்களும் விலங்கினங்களும் உயிர் விட்டுள்ளனர்.  அதனால் மறவர்களின் மனைவிமார்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஆண்கள் அதிகம் இறந்துபட்டதால் அக்காலத்தில் பெண்கள் அதிகம் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் ஆண்கள் குறைவு என்ற போதில் ஒரு ஆணுக்குப் பல மனைவிமார்கள் என்ற கட்டமைப்பு வந்துள்ளதை பார்க்க முடியும். இதற்கு முழுக் காரணமாக மன்னர்களின் பேராசையே காரணமாக இருக்க முடியும். சங்க இலக்கியத்தில் புறச்செய்திகளைக் குறைவாகத் தந்ததிலிருந்து அவ்வவ்போதுதான் போர் நடந்திருக்கக்கூடும். அவ்வாறு நடந்திருக்கும் போர்களில் உண்மைத்தன்மையும் நியதியையும் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

iniyavaikatral@gmail.com

மாக்கிழவன் கோவில்

மாக்கிழவன்-கோவில்

சிறுகதை : மாக்கிழவன் கோவில்

          உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்கு முன்னரே நடந்து இன்று கோடிமலை வந்து சேர்ந்தனர். மாக்கிழவன் கோயில் அறுபது ஏக்கரில் பரந்து இருந்தது. ஒன்பது நாள் திருவிழா. கோயிலுக்குச் சொந்தமான ஒன்பது பட்டத்தார்களும் அவர்களின் வாரிசுகளும் முன்னே நின்று பூஜையினை நடத்துவார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு பட்டத்தார் வீதம் ஒன்பது நாட்களிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இவர்களைத் தவிர இருபத்துநான்கு உப பட்டத்தார்களும் உண்டு. கோவில் நிர்வகிப்பதில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த ஒன்பது பட்டத்தார்களில் அம்மாசி கிழவன் தலைமை பொறுப்பில் இருந்தார். மாக்கிழவன் என்ற மனிதன் இருந்ததாகவும் அவர்தான் கோடிமலைக்கிராமங்களை உருவாக்கி காவல் காத்ததாகக் கதை ஒன்று உண்டு. அவர் கொல்லிவாய்ப் பிசாசுடன் சண்டையிட்டு இறந்தாகவும் மீண்டும் மனிதராகப் பிறந்து அப்பேயைக் கொல்வார் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடம் இருந்து வருகிறது.  மாக்கிழவன் இறந்த பிறகு அம்மலைவாழ் மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் கிழவன் என்று சேர்த்துக்கொண்டார்கள்.

       ஒன்பது நாட்களும் இரவு மாக்கிழவன் நாடகம் நடத்தப்படும். அதுவும் கடைசி ஒன்பதாவது நாளிரவு மாக்கிழவன் அந்த கொல்லிவாய்ப் பிசாசை கொல்லுகின்ற காட்சி பார்ப்பவர்களை அப்படியே அசர வைக்கும். அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காகவே மக்கள் திரண்டு வருவர்.  ஒவ்வொரு பட்டத்தார்களின் நாளுக்கு ஏற்ப அவர்களின் வகையறாக்கள் பலிகிடா வெட்டியும் கோழி அறுப்பும் செய்வர். அதனால் தினமும் அன்னதானம் நடைபெறும். வேண்டிக்கொண்டவர்கள் ஒருபுறம் எதையாவது சாப்பிட கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பாட்டும் இசையும் ஆடலும் எங்கு பார்த்தாலும் நின்று பார்க்கத் தூண்டும். ஐஸ் விற்பவர்கள் முதல் பொறிகடலை பஜ்ஜி கடை வரை அந்த ஒன்பது நாட்களும் வியாபாரம் சூடு பறக்கும். ரங்க ராட்டினமும் குதிரை ராட்டினமும் எப்போதும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கும். சேலையுடன் நெற்றி உச்சியில் குங்கும பெண்கள், தாவணிப் போட்ட அழகு பதுமைகள், வேட்டி சட்டை காளைகள் என எங்கும் மாக்கிழவன் கோவில் களைக்கட்டும்.

    அவரவரும் மாடுகளை ஒரு ஓரமாகக் கட்டி வைக்கோல் போட்டனர். தங்களுடைய மாட்டு வண்டியோடு கூடாரம் அமைத்துக் கொண்டனர்.  அப்பெண்கள் மூன்று கற்களைச் சரியாக வைத்து, பொறுக்கி வந்த சுள்ளிகளை இட்டு பொங்கலிட்டனர். முதல் நாளைய இரவு நாடகத்தில் மாக்கிழவன் பிறப்பைக் காட்சிப்படுத்தினார்கள்.

      “சரவணா… நீ அம்மா பொறந்த ஊருக்குப் போ.. ரொம்ப நல்லாயிருக்கும்” என்றார் அப்பா.

      “எனக்கு போகனுமுன்னு தோணல. எல்லாம் இந்த அம்மாவுக்காகத்தான்” என்றான் சரவணன்.

      “எனக்காக எல்லாம் நீ வர வேண்டாம். இந்த இருபத்தி அஞ்சு வருசமா உன்னை உங்க தாத்தா பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போகாம இருந்திட்டன். ஏதோ நான் செஞ்ச பாவம். எங்க மலை கிராமத்துக்கு பாரஸ்ட் ஆபிசரா வந்த உங்க அப்பாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அப்ப ஓடி வந்தவதான். இன்னும் நான் அங்க போகவே இல்ல. எல்லாம் மறந்து இப்பத்தான் மாக்கிழவன் விழாவுக்கு நம்மளை அழைச்சிருக்காங்க. நீ வரலன்னா கூட பரவாயில்ல நான் கண்டிப்பா போகத்தான் போறேன்” என்றாள் அன்னம்.

      “அம்மா கோவிச்சுக்காத.. நான் கண்டிப்பா வறேன். அப்பாவும் நம்மோடவே வரட்டுமே” என்றான் சரவணன்.

      “நீயும் அம்மாவும் முன்னால போங்க. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் அத முடிச்சிட்டு கடைசி நாளுக்கு வந்துடுறேன்” என்றார் அப்பா கணேசன்.

      நான்காம் நாளுக்கு அன்னமும் சரவணனும் மலைகிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். தாத்தா அம்மாசி கிழவனும் பாட்டி பூவாயியும் மகளையும் பேரனையும் உச்சி முகர்ந்தார்கள். அம்மாசி கிழவனுக்கு தலைகால் புரியவில்லை. மகளும்  பேரனும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். ஒற்றை மகளை இழந்து நிற்கிறோமே என்ற தவிப்பில் நிறைய நாள் அழுததுண்டு அம்மாசி கிழவன்.  பேரனை தன்னுடனே வைத்துக்கொண்டார்.  தனக்கு பிறகு இவன்தான் அம்மாசி கிழவனின் வாரிசு என்று ஊருக்குள் சொல்லிக்கொண்டார். நான்காம் நாள் இரவு நாடகத்தில் மாக்கிழவனின் பராக்கிரமக் காட்சியினையும் ஊர்க்காவல் காக்கும் திறனையும் தத்ருபமாக நடித்துக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் சரவணன் நாடகத்தை தன்னை மறந்த நிலையில் பார்த்துக்கொண்டிருந்தான்.  கொஞ்ச நேரத்தில் வயிறு முட்டவே,

      “அம்மா… எனக்கு ரெஸ்ட் ரூம் போகனும் போல இருக்கு… கூட வறீயா” என்றான் சரவணன். மகனுக்குத் துணையா அம்மா எழுந்தாள். கோவிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிய படி கோவிலைச் சார்ந்த ஆலமரம். அடுத்தபடியே நெல் வயல் ஒன்று இருந்தது.

      “சரவணா… மரத்துக்குப் பின்னால வயலு ஓரமா போயி இருந்துட்டு வாடா” என்றாள் அம்மா

      அந்தக் கும்மிருட்டில் ஏதோ ஒரு தடவலுடன் மரத்துக்குப் பின்னால் சென்றான். வயிற்றில் இருப்பதை கொஞ்சகொஞ்சமாய் இறக்கி வைத்தான். அப்பொழுதுதான் தனக்கு முன்னால் இருக்கும் வயல்வெளியை உற்றுக் கவனித்தான். சின்னசின்ன விட்டில் பூச்சிகளின் சத்தத்துடன் நீண்டதாய் கறுப்பாய் இருட்டாய் ஒரே மாதிரியாய் தெரிந்தது. அந்நேரத்தில் கறுத்த உருவத்தில் வாயில் கொல்லியை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு உருவம் புகைத்துக் கொண்டிருந்தது.       சரவணனின் மனம் திடும் என்று பதைத்தது. கண்ணை இறுக்கி மூடி மீண்டும் அதே திசையை நோக்கிப் பார்த்தான். அங்கு முன்பு பார்த்தது போலவே எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது. அம்மாவிடம் ஒரே ஓட்டமாய் ஓடினான். எதுவும் பேசாமல் நாடகத்தைப் பார்த்தான். இத்தனை வயசாயிடுச்சி பயந்ததை போயி அம்மாவிடம் சொன்னால் அவர்கள் எண்ண நினைப்பார்கள் என்று எண்ணிக்கொண்டான்.

      கட்டிலில் படுத்தவுடன் தூங்கிப்போய் விட்டான் சரவணன். கொஞ்ச நேரத்தில் அவனுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டன. “காப்பாத்துங்க… காப்பாத்துங்க…” என்று பலம் கொண்ட மட்டும் கத்தினான். அவன் கத்துவது யார் காதுக்கும் கேட்கவில்லை. யாரோ அவன் கழுத்திலே கயிறு கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள். யாருமில்லாத இடம். சத்தமில்லாத பகுதி. கும்மிருட்டு. நடு யாமத்தைத் தாண்டிய சூழல். தான் எங்கே இருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முடியாமல் தவித்தான் சரவணன். மண்ணில் நுழைந்து வேரில் புகுந்து பல குறுத்தைக் கடந்து சென்றான். அவ்விடம் குறுகிய பாதையாய் நீளமாய் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இருட்டாகவே தென்பட்டது. மூக்கின் நுனி பலவண்ண வாசனையை நுகர்ந்தது. நன்கு நீண்டு வளர்ந்து இருக்கக்கூடிய மூங்கிலின் நடுவே உள்ள ஓட்டையினுள்ளே தான் இருக்கின்றோம் என உணர்ந்தான்.

      “என்ன மாக்கிழவோரே… எப்படி இருக்கீர்?” – குரல் மட்டும் கேட்டது.

      “யாரது? உனக்கு என்ன வேண்டும்? என்னை எதற்கு இங்கு தூக்கிக்கொண்டு வந்தாய்? திக்கிதிக்கி பேசினான்  சரவணன்.

      “உனக்கும் எனக்கும் பழையக்கணக்கு ஒன்று உள்ளது. அதை தீர்த்துவிட்டு போகலாமென்று வந்தேன்” – மீண்டும் அதே குரல்.

      “எனக்கு பயமா இருக்கு! என்ன விட்டுறு!” என்று தலையைத் திருப்பி கண்கள் சுழற்றியபடியே பார்த்தான். திடிரென்று நெருப்பு குழம்பாய் கோரப்பற்கள் தொங்க அவ்வாயில் இருந்த ஒழுகிய எச்சிலுடன் அவன் கண்ணுக்குள் வந்து சென்றது அந்தக் கொல்லிவாய்ப் பிசாசு.

      “அம்மா… என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தான் சரவணன். பக்கத்தில் படுந்திருந்தவர்கள் அனைவரும் என்னுமோ ஏதோவென்று பதறிப்போனார்கள். சரவணனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது.

      “என்னப்பா கெட்ட கெனவா? என்றார் அம்மாசி கிழவன்

      “ஆமாம் தாத்தா!” என்றான். மகனின் முகத்தை நன்றாகத் துடைத்து விட்டாள் அம்மா அன்னம். பாட்டி கொடுத்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் உறங்கச்சென்றான்.  அனைவருக்கும் நல்ல தூக்கம். எப்படி புரண்டு படுத்தாலும் அந்தக் கொல்லிவாய்ப்பிசாசின் உருவம் அவனின் கண்முன் அடிக்கடி வந்து போனது. எதைஎதையோ நினைத்து மறக்க முயற்சி செய்தான். ஆனால் அந்தக் கோரப்பற்களுடைய நெருப்பை விழுங்கிய பிசாசின் நினைப்பு அடிக்கடி கண் முன்னெ வந்து சென்றது.  இரவில் தான் கண்ட கனவைப்பற்றி அம்மாவிடம் கூறினான். குறிப்பாக அந்தப் பேய் தன்னை மாக்கிழவன் என்று அழைத்ததைப் பற்றிக் கூறினான்.

      “ஒன்னுமில்லப்பா… இன்னிக்கு பூரா கோவிலை சுத்துனது. மாக்கிழவன் சாமியின் நாடகம் பார்த்தது. இதெல்லாம் நெனச்சிட்டுப் படுத்திருப்ப அதான்! என்றாள்.

      சரவணனின் மனசுக்கு அம்மாவின் பதில் ஏதோ தன்னை சமாதானப்படுத்துவதாகவே இருந்தது. தாத்தாவிடம் கேட்க எண்ணினான். தாத்தாவை தேடினான். அவர்கள் வீட்டுக் களத்துமேட்டு ஓரத்தில் செங்குத்தான கல் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. அந்தக்கல்லில் தன்னுடைய உச்சந்தலை வைத்து அழுது கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

      “தாத்தா இங்க என்ன பன்றீங்க… உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கனும்” என்றான் சரவணன். பேரனின் குரலைக் கேட்டவுடன் கண்களைத் துடைத்துக்கொண்டு,

      “என்னப்பா கேட்கனும். கேளு?” என்றார்.

      “மாக்கிழவோன் கோவில பத்தி தெரிஞ்சுக்கனும்” என்றான். அம்மாசி கிழவன் கொஞ்சம் நடுங்கிப் போனார். இக்கோடிமலையில் மாக்கிழவோன் என்ற உண்மைப்பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று அனைவரும் மருவிய பெயராய் மாக்கிழவன் என்றே அழைத்து வந்தனர். பேரனுக்கு மாக்கிழவோன்  என்று எப்படி தெரிந்தது. மனம் குழம்பினார். அவரின் உதடுகள் வரலாற்றைச் சொல்ல தொடங்கியது.

      “ஒரு காலத்துல இந்த மலைகள் எல்லாம் ரொம்ப வளமா இருந்துச்சி. அங்கொன்னு இங்கொன்னுமா குடிசைகள் இருந்தன. கொஞ்ச நாளைக்கு அப்புறம் புலி சிங்கம் கரடி போன்ற விலங்குகள் பயத்துனால ஒரே இடத்துல குடிசைகள் அமைச்சி வாழ ஆரமிச்சாங்க. அவுங்க அவுங்களுக்கும் தனியா இடம் காடு மாடுகள் ஆடுகள் என வைச்சிருந்தாங்க. ஒரு வீடு தவறாம நாயும் எப்பவும் அவுங்க கூடயே இருக்கும். எங்காளுங்க எங்க போனாலும் கூடவே வரும் போவும். எங்களுக்கு ஒரு பாதுகாப்புன்னா அது வேட்டை நாய்தான். நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க தாத்தா என்கிட்ட சொல்லுவாரு” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த மாமர கிளையில் கையை ஊன்றியபடி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அம்மாசி கிழவன்.

      “என்ன தாத்தா? அப்புறம் என்னாச்சி? உங்க தாத்தா இன்னும் என்னவெல்லாம் சொன்னாரு? சொல்லுங்க” என்றான் சரவணன்.

      “காலமாற்றம். சூழ்நிலை மாற்றம். மனிதர்களும் மாறித்தான ஆகவேண்டும். அப்படித்தான் எங்க மனிதர்களும் மாறிப்போனார்கள்.  அந்தச் சமயத்துல மழையே இல்லாம போச்சு. எங்கும்  பசி பட்டினி பஞ்சம். பசிக்காகச் சண்டை போட்டி பொறாமை ஏற்பட்டுச்சி. ஒருத்தர் ஒருத்தர் அடிச்சிக்கிட்டு செத்தும் போனாங்க. மலையில இருக்குற மரமெல்லாம் எரிஞ்சு சாம்பலாச்சு. அப்பத்தான் இந்த மலைக்கு எங்கிருந்தோ கடவுள் மாதிரி ஒருத்தர் வந்தார். அவரு யாருன்னு யாருக்கும் தெரியாது! பெத்தபுள்ளயே அப்பன வெட்ட அருவாவ எடுத்துட்டு ஓடுனான். எதிர்ல வந்த அந்தக் கட்டுடம்பு பெரியவர் அவனுக்கு முன்னால போயி நின்னு அப்பிடியே பார்த்தார்”

      “நல்லதை செய்! நன்மையே நடக்கும்!!” என்றார் அந்த பெரியவர்.

      அவன் என்ன நினைச்சானோ தெரியவில்லை. கையில் இருந்த அருவாவைப் போட்டுவிட்டு பின்னால் நகர ஆரமித்தான். அந்நேரம் அவனின் உச்சந்தலையில் பெரியதாய் உருண்டையாய் மழைக்கட்டி விழுந்து தெறித்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் அன்னாந்து வானத்தையே பார்த்தனர். பகை மன்னனை அழிக்க வரும் குதிரைப்படைகளைப் போல கூட்டாகச் சொட்டென்று பூமியில் வந்து விழுந்தது மழைத்துளி. பயங்கர மழை. கிட்டதட்ட நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஆனால் யாருமே அங்கிருந்து நகரவேயில்லை. வெளியில் இருந்து வந்தவரும் அப்படியே நின்றிருந்தார். அம்மனிதர்களின் தண்ணீர்ப் பார்க்காத அவ்வுடம்பில் இன்னும் கொஞ்ச நேரம் நனைய விட்டிருந்தாலும் நனைந்து இருப்பார்கள். அவ்வளவு தாகம் இருந்தது.

      அவர் வந்த பிறகு தேங்கிப்போன வளங்கள் மீண்டும் எங்களுக்குக் கிடைத்தது. இக்கோடிமலை வாழ்மக்களுக்கு ஏதாவது பிரச்சனையின்னா உடனே சரியான தீர்ப்பு வழங்கிடுவார். நல்ல பச்சிலை மருத்துவர். அதிகம் பேசாதவர். இனிமையாகச் சொல்ல வேண்டியதை மட்டும் பேசுவார். அவரின் பெயர் எங்க யாருக்குமே தெரியாது. அவரின் வயசு முதிர்ச்சி பார்வையின்னு உசத்தியா காமிச்சது. நாங்க எல்லோரும் அவரை கிழவோன் (தலைவன்) என்று அழைக்க ஆரமித்தோம்.

ஒருமுறை எங்கள் மலையைச் சுற்றிலும் புலிகள் ஆக்கிரமித்துக் கொண்டது. போவோர் வருவோர்களை அடித்துக் கொன்றது. விடியற்காலை நேரங்களில் பசுக்களையும் ஆடுகளையும் கொன்று தின்றது அந்தக் கொடூர புலி. எங்கள் முன்னோர்கள் எல்லாம் பயந்து போய் கதவை அடைத்து விட்டுக்குள்ளே இருந்தனர்.  அன்று காலை ஊரின் நடுவே அனைத்துப் புலிகளும் கைக்கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுருண்டு கிடந்தது. பக்கத்தில் இளவட்டக்கல். அக்கல்லின் மேல் அமர்ந்திருந்தார் கிழவோன். இடுப்புக்குக் கீழே வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். வேட்டியை இரண்டு கால்களுக்கு இடையே நன்கு சுற்றி இறுகக்கட்டியிருந்தார். கறுத்த மீசை. மேலாடை இல்லாமல் தலையில் தலைப்பாகை போன்று துண்டால் கட்டியிருந்தார். நுனாக்கட்டையைப் போன்ற வழுவழுப்பான உடம்பு. வயிரம் பாய்ந்தது போல் முறுக்கேறியிருந்தது. ஆதிகால மனிதனின் முகம். ஈரம் கொண்ட கண்கள். பசையாய் ஒட்டிக்கொள்கிற தேகம். ஏதும் அறியாதவர் போல் கற்களைக் கொண்டு மூங்கில் குச்சியைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார். கால்கள் கட்டப்பட்டிருந்த புலிக்கூட்டத்தை சிலர் நடு காட்டுக்குள் உள்ளே போய் விட்டார்கள். அக்கிழவோரைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். அவர் கிழவோன் இல்லை மாக்கிழவோன் என்றனர்.

      அன்றிலிருந்து மாக்கிழவோன்தான் கோடிமலை கிராமங்களுக்குப் பாதுகாவலர் ஆனார். எப்போதும் கூர்மையான மூங்கில் குச்சியைக் கையிலே வைத்திருப்பார்.  நடந்துகொண்டே இருப்பார். ஒரு களவாணிப் பைய கூட எங்க மலை பக்கத்துல நெருங்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. அன்றைய தினம் என்னுடைய பாட்டனார்,  தூக்குச் சட்டி நிறைய ஆட்டுக்கறிக்குழம்பு மாக்கிழவோனுக்காகக் கொடுத்தனுப்பினார். காட்டுக்குள்ளே கிணறு. கிணறு நிறைய தண்ணீர். நீர்க்கிணறு பக்கத்தில் பனையோலை குடிசை. குடிசையின் ஓரத்தில் அலைமாறி, கீழே நீண்டதொரு அழகாய் கயிற்றுக்கட்டில்.  அலைமாறி வாரையில் தூக்குச் சட்டியை மாட்டியிருந்தார் கிழவோன். சுடச்சுட அப்போதே சாப்பிட்டுவிட வேண்டும் என எண்ணினார். ஆனால் காவல் காத்தலை முடித்து யாமத்தில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். கையில் மூங்கில் குச்சியை எடுத்தபடியே மலைகிராமங்களுக்குள் நுள்ளே நுழைந்தார்.

      மலை கிராமங்களுக்குள் வேகமாக நடையைக் கூட்டினார். முடிந்தவரை சீக்கிரம் குடிசைக்குப் போக வேண்டும். ஆட்டுக்கறியின் ருசி அவரை வேகமாக நடக்க வைத்தது. ஆனாலும் யாமத்தைத் தாண்டிதான் கிழவோனால் வர முடிந்தது. குடிசைக்குள் உள்ளே வந்தவர் நேராகத் தூக்குச்சட்டியை எடுத்துக் கறித்துண்டை வாயிலே போட்டார்.  உப்புசப்பு இன்றி சுவையே இல்லாமல் இருந்தது. நன்றாகக் கலக்கி மீண்டும் சாப்பிட்டுப் பார்த்தார். அப்போதும் கொஞ்சம் கூட சுவையே அற்று இருந்தது. தூக்குச்சட்டியில் இருக்கும் கறியை வெளியே கொட்டிவிட்டு தண்ணீர் ஊற்றி வைத்தார். ஒருசில மாதங்களுக்குப் பிறகு அமாவாசைக்கு முதல் ராத்திரி. எங்கும் ஒரே இருட்டு தோற்றம். அதே மாதிரி இன்னொரு வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் கறிக்குழம்பு வந்தது. தூக்குச்சட்டியை அலமாரியில் மாட்டிவிட்டு காவலுக்காக நடக்க ஆரமித்தார். மாக்கிழவோனின் மனம் அன்றைய சம்பவத்தை நினைவுப் படுத்தியது. அவருடைய கால்கள் பின்னோக்கி இழுத்தன. வேகமாக மீண்டும் தன் குடிசை பக்கம் ஓடினார். குடிசையின் வாசலில் கால்கள் இரண்டையும் நீட்டிப்போட்டுக்கொண்டு மடியில் வைத்திருந்த தூக்குச்சட்டியில் நாக்கை உள்ளே விட்டு நக்கி சுவைத்துக் கொண்டிருந்தது கொல்லிவாய்பிசாசு.

      “ஏ… பிசாசே! ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை உரு தெரியாமல் அழித்து விடுவேன்” – மாக்கிழவோன்

      பலமாகச் சிரித்துவிட்டு, ”என்னை என்ன காட்டில் வாழும் புலி என்று நினைத்துக் கொண்டாயோ?” ஏளனச் சிரிப்பு அந்தப் பிசாசுக்கு. மாக்கிழவோனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. கையிலிருந்த மூங்கிலை கொல்லிவாய் பிசாசு மீது வேகமாக எறிந்தார். தலையில் அடிப்பட்டு சுருண்டு விழுந்தது. பிசாசு கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. வேகமாக ஓடிய மாக்கிழவோன் மீண்டும் மூங்கில் குச்சியை எடுத்து தலையில் பலம் வந்த மட்டும் அடிக்கத் தொடங்கினார். அவர் அடித்த அடியில் நிலைகுழைந்து போனது கொல்லிவாய் பிசாசு. இருட்டில் அங்கே இங்கே ஓடி மாக்கிழவோனை கொஞ்சம் அலைக்கழித்தது. யாமம் தாண்டிய நிலையிலும் சண்டை தொடர்ந்தது. இருவருக்குமே உடம்பில் இரத்தக்காயங்கள் ஏற்பட்டன. காட்டுத்தனமான சண்டை. பிசாசுக்கு வெற்றியைக் கிடைக்கவிடாமல் விடியும்வரை போராடினார் மாக்கிழவோன். பொழுது விடிந்தது.

      “மாக்கிழவோரே… அடுத்த இரவுக்காகக் காத்திருக்கிறேன். உன்னை கொல்லாம விட மாட்டேன். நான் திரும்பி வருவேன்” – என்றது கொல்லிவாய்ப்பிசாசு.

      “உனக்காக நான் எப்போதும் இங்கேயே காத்திருப்பேன். வா… உன்னால் முடிந்தால் வந்து கொல்லு.. உன்னை அழிச்சு இரத்தத்தை இந்தப் பூமியில தெளிச்சி காடடுறேன் பாரு” என்றார் மாக்கிழவோன்.

      பொழுது விடிந்தது. எம் பாட்டனார் வீட்டின் முன்புற களத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். எம் பாட்டியோ வாசலில் சாணியை கரைத்துத் தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது எம் பாட்டிதான் முதலில் மாக்கிழவோரை கண்டார். உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் இரத்த வெள்ளமாய் எங்கள் களம் நோக்கி வந்து கொண்டிருந்தாராம்.

      “என்னங்க… என்னங்க… சீக்கிரம் எழுந்திருங்க. மாக்கிழவோன் ஐயா பாருங்க துணியில்லாம இரத்தத்தோட வராரு” ன்னு பாட்டனாரை பாட்டி எழுப்பியிருக்கா. அவரும் தடாபுடான்னு எழுந்திருச்சி, ஓடிப்போயி தான் போத்தியிருந்த போர்வையை மாக்கிழவோன் உடம்புல போட்டு மறைச்சிருக்காரு. பாட்டனார் மடியிலயே சாய்ஞ்சி படுத்திட்டார். எதுவும் பேசல. தன்னை இழந்து காணப்பட்டார். அதற்குள் பாட்டி சொம்புல தண்ணீர் எடுத்து வந்து மாக்கிழவோன் வாயில ஊத்தினாங்க. இரண்டு முழங்கு கூட இறங்கியிருக்காது, “நான் மீண்டும் பிறப்பேன். கொல்லிவாய்ப்பிசாசைக் கொல்லுவேன்” என்று சொல்லிக்கொண்டே என் பாட்டியின் கண்களைப் பார்த்தவாறே உயிரை விட்டுள்ளார்.

      அம்மாசி கிழவனின் கண்கள் கலங்கியிருந்தது. பேரன் சரவணின் கையை இறுகப்பிடித்துக்கொண்டார். மாக்கிழவோன் மீண்டும் பிறக்க வேண்டும் என்று உரக்கக்கத்தினார். அப்போது சரவணனின் தோள்கள் தெனவெடுத்து நின்றன.

மாக்கிழவன் கோவில் ஒன்பதாம் நாள் திருவிழா களைக்கட்டியது. அடுத்த நாள் பூரண அமாவாசை. அங்கே மாக்கிழவர் சிலை நன்றாக அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படுகிறார். விடியற்காலைதான் சாமி கோயிலுக்குள் வரும். அதற்குள் இரவு நாடகம் முடிக்கப்பட வேண்டும். கொல்லிவாய்பிசாசும் கொல்லப்பட வேண்டும். அதன்பிறகு மாக்கிழவர் சாமிக்கு உற்சவ பூஜை நடைபெறும்.  அதன்பிறகு மழை வரும். விழாவும் நிறைவுபெறும். 

      தன் வீட்டின் முன் பூஜைக்காக நிறுத்தப்பட்ட, நன்றாய் அலங்கரிக்கப்பட்டு கோடிமலை முழுதும் ஏழு குதிரையில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும் மாக்கிழவரின் சிலையை அம்மாசி கிழவன் உற்று நோக்கினார். சிலையின் முகம் சரவணன் வேடமிட்டு சிலையாய் அமர்ந்திருப்பது போன்று இருந்தது. அது சிலையல்ல. என் பேரன் சரவணனும் இல்ல. எம் கோடிமலை கடவுள் மாக்கிழவோன்தான் என்று புரிந்து கொண்டார். கூடியிருந்த மக்கள் மா… கிழவரே… என்று உரக்கக்கத்தினர். அன்று விடியற்காலையிலேயே மழை பொழந்து கட்டியது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

iniyavaikatral@gmail.com

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »