இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

‘மொழி நம் விழி’ என்று பேராசிரியர் மா.நன்னன் குறிப்பிடுவார். அதுபோல நம் கண்ணின் கருமணியை இமை எவ்வாறு மென்மையாகப் பாதுகாக்கின்றதோ அவ்வாறு நாமும் நம் மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். காரணம், ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் தமிழுக்கும் உயரிய மேன்மைகளும் பெருமைகளும் உண்டு. அதனை எடுத்துரைக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளோம். மொழியுணர்வு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உதிரத்தில் ஊறியிருக்க வேண்டியவை. மொழியை இகழ்ந்தால் அவனுடைய இனத்தை இகழ்ந்ததற்குச் சமமாகும். ஆகவே, மொழி வாயிலாக மனித இனத்தின் மாண்புகளை அடையாளம் காணலாம். இதன் அடிப்படையில் ‘தொன் மொழியாம் தமிழ் மொழியின்’ சிறப்புகளை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

இந்திய மொழிகள்

                இந்தியாவில் மொத்தம் 12 மொழிக்குடும்பங்களைச் சார்ந்த 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும், இந்தியாவில் மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மொழிகளும் கிளை மொழிகளும் உள்ளன எனவும் இந்தியாவை மொழிகளின் ‘அருங்காட்சியகம்;’ எனவும் பேராசிரியர் அ. அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார். மொழியியலாளர்கள் இந்தியாவில் வழங்கும் மொழிகளை நால்வகை மொழிக்குடும்பங்களுள் அடக்குவர். அதனை,

1. இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்

2.திராவிட மொழிக் குடும்பம்

            3.ஆஸ்திரோ ஆசிய மொழிக்குடும்பம்

             4.சீனோ – திபெத்திய மொழிக்குடும்பம்

இவ்வகையினுள் இந்தோ – ஆரிய மொழிகளே இந்தியாவில் வழங்கி வருவதைக் காண்கிறோம். சமஸ்கிருதம், இந்தி, உருது, வங்காளம், பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, மைதிலி, இராஜஸ்தானி, அஸ்ஸாமி, காஷ்மிரி முதலிய மொழிகள் இவ்வகையினவாகும். ஆஸ்திரோ – ஆசிய மொழிக்குடும்பத்தின் கிளையாகிய முண்டா மொழிகள்  இந்தியாவில் வழங்குகின்றன. சந்தாலி, முண்டாளி, ஹோ, கொற்கு போன்ற மொழிகளும் இவ்வகையே சாரும். இவைபோன்று இந்தியாவில் வழங்குகின்ற திராவிட மொழிகள் துளு, படகா, கன்னடம், இருளா, கொடகு, கோடா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி பெங்கோ, முண்டா, கொலாமி, நாயக்கி, பர்ஜி, கடபா, ஒல்லாரி, சில்லூர்,குருக், மால்டோ, பிராகுயி போன்றவையாகும். மேலும், நேபாளி மணிப்புரி முதலிய மொழிகள் இந்தியாவில் வழங்குகின்றன. இவை சீனோ – திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளாகும், ஆனால், தமிழ் மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவையாக அமைந்திருப்பது சிறப்புக்குரியவொன்றாகும். இம்மொழிக்குரிய சிறப்பியல்புகளை இனிவரும் பகுதிகளில் காணலாம்.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

                தொன்மைச் சிறப்பாலும் இலக்கிய வகைமைச் சிறப்பாலும் தனித்தன்மையாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் தனித்து நிற்கும் ஒரே மொழி தமிழ்மொழி, இம்மொழி உலகச் செம்மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளிலேயே ‘பன்னாட்டு மொழி’ என்ற தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மொழிதான் என்பதை அனைவரும் அறிந்தவொன்றே. மேலும், அதுமட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக நடைமுறையில் இருந்து வருகின்றது. உலக மொழிகளில் எழுந்த முதல் மொழி மற்றும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் திகழ்வதையும் இங்கு அறியத்தக்கதாகும். தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் இலத்தின் கிரேக்கம், முதலியன போலத் தமிழ்மொழியும் உயர்தனிச் செம்மொழி என்பதனை நிறுவியுள்ளார். மேலும், இவரைப் போல் “எடுக்க எடுக்க குறையாதது கொடுக்க கொடுக்க மாளாதது நம் தமிழ் மொழியின் வளம் – வல்லமை தமிழ் இனியது அழகியல் ஆற்றல் மிக்கது, சொற்செறிவும் பொருட் செறிவும் நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது அது தொன்மையானது தூயது” என்று 1967-இல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் உண்மையை இன்றும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.

                அண்ணா எடுத்துரைப்பதற்கு முன்பே 15.03.1951-ஆம் நாளன்று சாகித்திய அகாதெமியின் தொடக்க மாநாட்டில் மத்தியில் மத்திய அரசின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த திரு. மௌலானா அபுல்கலாம் ஆசாத் உரையாற்றும் போது ‘தமிழ் வளமான, தொன்மையான இலக்கிங்களைப் பெற்றுள்ளது. தமிழ் உண்மையாகவே ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்று குறிப்பிட்டிருப்பதையும் இங்கு அறிந்துகொள்ளலாம். மேலும், தொல்காப்பியத்தில் தமிழ் என்னும் சொல்லாட்சி ‘தமிழென் கிளவியும் அதனோரற்றே’ (எழுத்து-386) என்னும் நூற்பாவில் இடம்பெற்றுள்ளதை உணரலாம்.

தமிழ் என்ற சொல்லில் ‘த’- வல்லினமும் மி – மெல்லினமும் ழ் – இடையினமும் ஆகிய மூவின எழுத்துச் சேர்க்கை தமிழ் ஆயிற்று என்பர். மேலும், உலகில் தோன்றிய மொழி தமிழ், மாந்தன் பேசிய முதல் மொழி தமிழ், தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் உலக மொழிகட்கு வேராகவும் இருப்பது, ‘முதல் மொழியாகவும், மொழிக்குடும்பத்திற்கும் உலகக் கிளை மொழிகளுக்குத் தாயாகவும் அமைந்த மொழி தமிழாகும். உலக மொழிகள் ஐயாயிரத்துள்ளும் வேர்ச்சொல் காண்பதற்கு எளிதாகவும், மிகுதியாகவும் இடம் தரும் மொழியும் தமிழே. அஃது இயன் மொழி ஆதலால் பெரும்பான்மை சொற்களின் வேர் வடிவை அல்லது வேர் உறுப்பை இன்றும் தாங்கி நிற்கிறது’ என்கிறார் பாவாணர். மனோன்மணியம் சுந்தரனாரும்,

‘சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

என்றும்,

‘கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்’

‘உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல அயிடினும்’

என்றும் புகழ்ந்து பாடியிருப்பதன் மூலம் நம் மொழியின் ஆழத்தை உணர்கிறோம்.

                தமிழ் இலக்கியம் கி.மு நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்களைக் கொண்டு வானளாவி வளர்ந்திருந்த நிலையைக் காண்கிறோம். அதோடு, உலகிலேயே தமிழை பக்தியின் மொழி என்று தனிநாயக அடிகளார் குறிப்பிடுவதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். மேலும், வடமொழியான பாணிணியத்திற்கும் முற்பட்ட தொல்காப்பியம் உலகின் முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. பொருள் இலக்கணம் உலகில் வேறுமொழிகளில் காணப்படாத ஒன்று. தமிழ் இலக்கியத்தின் காலத்தை நிர்ணயிப்பது கடினம் என்று இந்தியக் களஞ்சியம் குறிப்பிடுகிறது.

‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’

என்று பிங்கல நிகண்டு இயம்பும்.

‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே’

என்ற கம்பன் தொடரில் தமிழ் இனிமை என்ற பொருளில் எடுத்தாளப்படுகிறது. மேலும், தன்னேரில்லாத தமிழ், என்றும்

                                        ‘இருந்தமிழே  உன்னால் இருந்தேன்  இமையோர்

                                         விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’

என்று தமிழ் விடு தூது தமிழின் பெருமையைப் பகர்கின்றது. மேலும்,

‘தமிழுக்கும் அமுதென்று பேர்’

என்றும் பாரதிதாசன் பைந்தமிழ் இனிமையைப் பறைசாற்றுகிறார். அதுமட்டுமல்லாமல், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்றும்,

                                      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச் சொல்லே’

என்றும்,

                                     ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

                                            இனிதாவது எங்கும் காணோம்’

என்று பாரதியார் எடுத்தியம்புவதையும் காணலாம். இச்சான்றுகளைக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழிலக்கியங்களில் மொழியின் சிறப்பியல்புகள்

                மக்கள் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உலகளாவிய பண்பாட்டு எண்ணம் தமிழ் இனத்திற்கே உரியதாகும். எனவேதான்,

‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ (புறம். 92)

என்று கணியன் பூங்குன்றனார் குறிப்பிடுகிறார். மேலும்,

‘பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’

என்ற சங்கப் பாடல் உயர்வு தாழ்வு இன்றி மக்கள் அனைவரும் ஒன்றே என்ற வாழ்வியல் சிந்தனையை உணர்த்துகின்றது. மேலும், புறநானூற்று (204 ஆம் பாடல்) எனக்குக் கொடுத்திடு என்று இரத்தல் இழிந்தன்று, அவ்வாறு கேட்டார்க்குக் கொடுக்க மாட்டேன் எனக் கூறி மறுத்தல் அவ்விரத்தலைவிட இழிந்தன்று ஒருவன் இரப்பதற்கு முன்பாகவே அவன் குறிப்பை முகத்திலிருந்து அறிந்துகொண்டு இதனைக் கொள்க எனக் கொடுத்தல் உயர்ந்தது. அவ்வாறு கொடுக்கும்போது இரவலர் அதனைக் கொள்ளேன் என மறுத்தல் அக்கொடைச் செயலைக் காட்டிலும் உயர்ந்தது என்று இரத்தலுக்கு மிக அழகான கருத்தை முன்வைத்திருப்பது எந்த மொழியிலும் இருக்காது ஒன்று என்றே கூறலாம்.

                குறுந்தொகையில், ஒருவர்மீது வைத்திருக்கின்ற நட்பு குறித்து சொல்லும்போது நிலத்தைவிட அகலமானது, வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது என்ற சிந்தனையாழம் மிக்க பாடல் எந்தவொரு இலக்கியத்திலும் இல்லை என்றே கூறலாம். இதனை,

‘நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல் ……….

………. நாடனொடு நட்பே’ (குறுந் – 03)

என்ற பாடல் உணர்த்தி நிற்கின்றது. மேலும்,

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றி மூத்தக்குடி’

என்று புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடுகிறது.

‘கற்கை நன்றே கற்கை நன்றே’

பிச்சை புகினும் கற்கை நன்றே’

எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என்று வெற்றி வேற்கையில் அதிவீரராம பாண்டியன் கூறியிருப்பது மேன்மை தரக்கூடியதாகும். மேலும், முரசு கட்டிலில் ஏறிய மோசிகீரனாரை வாளால் வெட்டிக் கொல்லாது கவரி எடுத்து வீசினான் சேரமான் காவலன் இரும்பொறை. இதைப்போன்று அரிதிற்பெற்ற நெல்லிகனி ‘நெடுநாள் வாழச் செய்வது’ என்பதை அறிந்த அதியமான் தானுண்ணாது ஒளவைக்களித்துத் தமிழ் வளர்க்கச் செய்தான். மேலும், குமணன் எனும் புலவரின் வறுமையைப் போக்க தன் தலையையும் கொடுக்க முன் வந்தான். இத்தகைய சங்க இலக்கியச் செய்திகள் தமிழ்ப் புலமையும் புலவர்களின் பெருமையையும் போற்றுவனவாக அமைந்திருப்பதை இதன் தெளிவாக அறிகின்றோம்.

                மேலும், சிலப்பதிகாரம் வழக்குரைக் காதையில் இகதலில்லாத சிறப்பினை உடையவரான இமையவரும் வியப்படையுமாறு புறாவின் துயரினைத் தீர்த்தவன் சிபி சக்கரவர்த்தி, அவனல்லாமலும் கடைவாயில் மணியின் நாவானது அசையப் பசுவின் கடைக் கண்களினின்றும் வடிந்த கண்ணீர் தன் நெஞ்சினைச் சுடத் தானே பெறுதற்கரிய புதல்வனைத் தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவன் மனுநீதிச்சோழன் என்று எல்லா உயிரும் சமம் என நினைத்து நீதி வழங்கிய மன்னர்கள் இருந்தார்கள் என்று வேற்றுமொழி இலக்கியத்திலும் இல்லாத செய்தியை நம்  செம்மொழிச் சிலம்பின் கண்ணகி பாத்திர வழி அறியலாம்.

இந்திய மொழிகள் அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்:

பிறமொழி அறிஞர்களின் கூற்று

                அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி, கால்டுவெல், பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், மாக்ஸ் முல்லர், ஹிராஸ் பாதிரியார், ஸ்காட் எலியட் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களை நோக்கும்போது தமிழ்மொழியின் உன்னதத்தை தமிழ்நாட்டினர் உணரும் வகையில் கூறியிருப்பதை எண்ணத்தக்கதாகும்.

‘உலகம் தோன்றிய முதன் முதலில் பேசப்பட்ட மொழி தமிழாகத்தான் இருந்திருக்க வேண்டும்’ என்கிறார் அமெரிக்க பேரறிஞர் நோவாம் சாம்ஸ்கி. இவரைப் போல் ஆய்வியல் அறிஞராகிய கால்டுவெல் தாம் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் ‘திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியால் நிலைபெற்று விளங்கும் தமிழ் என்றும் ‘தமிழ் மொழி’ செம்மொழியே’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘தமிழ் மொழி பழமை மிகுந்த சிறப்பு வாய்ந்த மொழி’ என்று அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தமிழின் தொன்மையினைச் சிறப்புகளைத் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

                ‘மதுரமான மொழி என்று வால்மீகியார் தமிழை வாயார புகழ்வதைப்போல தமிழுக்கு நிகர் வேறு மொழி கிடையாது’ என்று மாக்ஸ் முல்லர் கூறுகிறார். மேலும், பிரிட்டானிகா கலை களஞ்சியம், இந்திய மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ் இலக்கியம் எனக் குறிப்பிடுவதைக் காணலாம். ‘சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன’ என ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுவது போற்றத்தக்கதாகும். ஸ்காட் எலியட் என்பவர் ‘தமிழ்நாடு லெமூரியாவில் இருந்தபோது எகிப்து நாடு நீருள் இருந்தது’ என்கிறார். எனவே எகிப்து தோன்றுவதற்கு முன்பே தமிழ்நாடு தோன்றியிருக்கவேண்டும் என்பார். மேலும், சமுத்திர குப்தனின் அமைச்சனாகிய சாணக்கியர் தான் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பாண்டிய நாட்டின் தலைநகராகிய கபாடபுரத்தினை ‘பாண்டியக் கபாடம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அசோகரின் கல்வெட்டுக்களிலும், தமிழ் நாட்டைப்பற்றி அதிலும் சிறப்பாக மூவேந்தர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கி.மு 150-இல் வாழ்ந்த பதஞ்சலி என்பாரும் காஞ்சிபுரத்தைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிறமொழி இலக்கியங்களில் தமிழின் தாக்கம்

                தமிழர்களின் தலை சிறந்த பண்பாடாகக் கருதப்படும் பொங்கல் திருநாளைக் குறித்து தமிழ் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் பிறநாட்டு இலக்கியங்களிலும் இடம்பெற்றிருப்பதை இக்கட்டுரை வாயிலாக அறியலாம். அதாவது, சங்க இலக்கியங்களுக்கும் மன்யோசு போன்ற ஜப்பானியக் காதல் பாடல்களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஆய்வுகள் தொடக்க நிலையில் உள்ளன என்றும், ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிற்கும் தமிழகப் பொங்கல் திருவிழாவிற்கும் உள்ள ஒற்றுமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சேர வேந்தன் பாரதப் போhரில் படை வீரர்களுக்கு உணவு கொடுத்தான் என்று புறநானூறும், பதிற்றுப்பத்தும் கூறுகின்றன. சுமித்திரா, பர்மா போன்ற கீழை நாடுகளில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் தமிழர் திருவிழாக்களைப் போன்று நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கோவில்களில் திருப்பாவை அங்கு நடைபெறும் திருமணங்களும் தமிழர் திருமண முறைப்படியே நடைபெற்று வருகின்றன. பட்டினப்பாலையில் தமிழர் கிரேக்க, உரோம் நாடுகளோடு வணிகம் நடத்தினர் என்பதை அறிகிறோம். கி.மு.10 ஆம் நூற்றாண்டின் அரசனாகியவர்களைப் பொருட்களும் தமிழ் நாட்டுக் கப்பல்கள் மூலம் கொண்டு செயல்பட்டன. கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயில் தோகைகளும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவிற்குக் கடல் வழியாகச் சென்றன. கிரேக்க நாட்டிற்கு இஞ்சியும் மிளகும் சென்றன. ரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் அந்நாட்டுடன் தமிழ்நாட்டிற்குக் கடல் வணிக உறவு இருந்தது. அக்காலத்து ரோம் நாயணங்கள் தமிழ் நாட்டின்  புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. ரோமர்கள் தமிழ் நாட்டு முத்துகளையும் யானைத் தந்தங்களையும், மெல்லிய ஆடைகளையும் பெற்று மகிழ்ந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிகின்றோம்.

                திருக்குறளை இலத்தீன் மொழியில் வீரமாமுனிவரும், ஆங்கிலத்தில் ஜி.யு.போப்பும், ஜெர்மன் மொழியில் கிராலும், பிரெஞ்சு மொழியில் ஏரியலும், வடமொழியில் அப்பாதீட்சிதரும் மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சாலைட்சரின் திருக்குறளைப் போல் அறிவார்ந்த அறநெறிகளைத் தாங்கிய இலக்கியம் உலக இலக்கியங்களில் எங்கும் இல்லை என்ற கருத்து தமிழின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், தமிழ்மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகின் வேறு எங்கனும் இல்லையென்று மேனாட்டறிஞர்களாகிய பெஸ்கி மற்றும் போப் போன்றோர் வியந்து மொழிவதையும் இங்கு எண்ணத்தக்கது.

                புராண இதிகாசங்களிலும் மொழி சார்ந்த பதிவுகள் காணப்படுகிறது. குறிப்பாக, வடமொழியின் முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே ‘முத்து’ முதலிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. மேலும், தருமனின் இராசூய யாகத்திற்குத் தமிழ் மூவேந்தரும் வந்திருந்தனர் என்றும், திரௌபதியின் சுயம்வரத்திற்குப் பாண்டியன் வந்தான் என்றும், அருச்சுனன் பாண்டிய இளவரசி சித்திரங் கதையை மணந்தான் என்றும் மகாபாரதம் பகர்கின்றது. கி.மு. 5 ஆம் அண்டில் தோன்றிய      வால்மீகி இராமாணயத்தில் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் பேசப்படுகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு

உலக மொழிகள் எத்தனையோ இருந்த போதிலும் ‘ழ’ என்னும் ஒலியன் தமிழ், மலையாளம் ஆகிய இரு திராவிட மொழிகளில் மட்டுமே தற்போது காணப்படுகிறது. தமிழுக்கே உரிய சொற்கள் பிற மொழிகளில் கலந்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது. அவற்றில் குறிப்பிட்ட சொற்களை மட்டும் கீழ்க்காணும் அட்டவணை வாயிலாக அறியலாம்.

சொற்கள் தமிழ் மலையாளம்      கன்னடம் பாஜி
உப்புஉப்புசுப்பு
பன்றிபன்றி பன்னி
செவி செவி செவி  
ஈ (கொடு) 
தான் தான் தான்
பால்    பால்  பால் 
இரண்டு இரண்டு இரண்டு
நான் நான் நான்
நாம் நாம் நாம்
திராவிட மொழிகளின் ஒலியன்கள்

இக்கட்டுரையின் வாயிலாகத் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளையும், இந்திய மொழி அல்லாத பிறமொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் பங்கு ஆகியவற்றை அறியமுடிகின்றது. இதன் மூலம் தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழின் மேன்மையையும் அதன் தரத்தையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.

துணை நின்ற நூல்கள்

 1. தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1998

 2. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 1903

 3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியாருக்குநல்லாருரையும், உ.வே.சா

   நிலையம், சென்னை,

 4. புறநானூறு மூலமும் உரையும், பதிப்பாசிரியர் குழு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 

   சென்னை, 2004

 5. தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, நாமக்கல்.

 6. தமிழ் இலக்கிய வரலாறு, அ. ஜெயம், ஜனகா பதிப்பகம், சென்னை,

 7. தமிழ் இலக்கிய வரலாறு, ச. ஈஸ்வரன், நிர்மலா பதிப்பகம், சென்னை.

 8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் ஜி.ஜான்சாமுவேல், மாதவி பதிப்பகம்,

   சென்னை, 1975.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 109

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here