புனைவியல் (Romanticism)

ரொமாண்டிசிஸம் எனப்படும் புனைவியலின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினம். புனைவியலின் இலக்கணம் ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கோணத்தில் விளக்கப்பட்டுள்ளன.

புனைவியல் என்றால் என்ன?

Romanticism என்னும் இச்சொல் ரொமான்ஸ் அல்லது நாவல் என்று பொருள்படும். Romanz என்னும் பழைய பிரஞ்சுச் சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது.  Romantic ஒரு காலத்தில் வீர தீரச் செயல்கள் நிறைந்த, உணர்ச்சி வயப்படுத்துகிற, கட்டுக்கடங்காத கற்பனை நிறைந்த செய்திகளைக் கொண்ட இலக்கிய வகையைக் குறிக்கும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல், வீரம், இயற்கை, இறந்த நிகழ்ச்சிகள், தனிமனித முக்கியத்துவம், தன்னுணர்ச்சிப் புலப்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாகக் கற்பனைச் சார்வு ஆகிய கூறுகள் மிகுந்துள்ள படைப்புகளைப் புனைவியல் கலை இலக்கியம் எனலாம். ஆகவே இதைப் புனைவியல் என்பது பொருந்தும்.

புனைவியலின் இலக்கணம்

இடைக்காலத்தில், இது முன்மை மரபியலுக்கு எதிராகத் தோன்றி வளர்ந்துள்ளது. தானென்னும் தன்முனைப்புடைய தனிநபர் ஆளுமை, தீவிரமான சமுதாய எதிர்ப்பு, அறியமுடியாத புதிர்த்தன்மை, உணர்ச்சிவயப்பாடு, கற்பனை,  உலகச்சஞ்சரிப்பு, வழக்கத்திலுள்ள சட்ட விதிகளிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முழுமையான சுதந்திரம் ஆகியன இவற்றைப் புனைவியலின் இலக்கணங்களாகச் சொல்லலாம்.

புனைவியல் பற்றி அறிஞர்களின் கருத்துகள்

  • பிரான்சு நாட்டில் விக்டர் ஹியூகோ (Victor Hugo,1802-1885)  என்பவர் இலக்கியத்திற்கு முன்மை மரபு விதிக்கப்பட்டிருந்த தடைகள், விதிமுறைகள் ஆகியவற்றிலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதும் அரசியல் கருத்துக்களை அரசியல்வாதிகளால் புரட்சிகரமாக ஆதரிப்பதும் ஆகிய இலக்கியத் தாராள வாதத்தை (libralism in literature) வலியுறுத்துகிறார்.
  • ஹென்ரிச் ஹெய்னே (Heinrich Heine, 1797-1856) என்னும் ஜெர்மானியர் கலை, இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் இடைக்காலப் பழைமைக்குப் புத்துயிரளித்தலே புனைவியலின் நோக்கம் என்கிறார்.
  • வால்டர் பாட்டர் (Watter Pater, 1839-1894) என்னும் ஆங்கில எழுத்தாளர் வழக்கத்திலிருந்த புனைவியலழகில் புதுமை சேர்ப்பது என்று கூறுகிறர்.

வேறுசிலர் புனைவியல் இயக்கம் என்பது விரும்பத்தகாத எதார்த்தத்திலிருந்து தப்பி ஓடுதல் என்று விளக்குகிறார்கள்.

  • வேட்ஸ் வொர்த் (words worth) முதல் ஸர் வால்டர் ஸ்காட் (sir watter scot) வரை மாறுபட்ட நோக்கும் போக்கும் உடைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் இப் புனைவியலுக்குள் அடங்குவதால் இதன் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினமே.
  • சுருங்கச் சொன்னால் புனைவியல் முன்மை மரபியலுக்கு எதிர்ப்பாக எழுந்து எதார்த்தவாதத்திற்கு மறுப்பாக அமைந்த ஒரு இலக்கிய இயக்கம் எனலாம். புனைவியல் பற்றித் திறனாய்வாளர் தி. க. சிவசங்கரன் அவர்கள் கூறும் கருத்துக்களும் மனங்கொளத்தக்கவை.

இலக்கியத்தில் புனைவியல்

ஆங்கிலத்தில் வேட்ஸ்வார்த், கோல்ரிஜ், பைரன், ஷெல்லி, கிட்ஸ், போ –  போன்றவர்கள் புனைவியல் கவிஞர்களாகக் கருதப்படுகின்றனர். ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் (As you like it) என்பதும் புனைவியல் நாடகமாகக் கருதப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், கந்தபுராணம் போன்றவைகள் புனைவியல் கூறுகள் காணப்படுகின்றன.  

விக்கிரமாதித்தன் கதை. திருவிளையாடல் புராணம், மதனகாமராசன் கதை, பிரதாப முதலியார் சரித்திரம், கல்கியின் பொன்னியின் செல்வன், பாத்திபன் கனவு, கலைஞர் கருணாநிதியின் புதையல் போன்ற நூல்களையே புனைவியல் இலக்கியங்களாகச் சொல்லலாம்.

அதீத கற்பனைவாதம்

ரொமாண்டிஸசிம் என்பதை அதீத கற்பனைவாதம் என்று சொல்லலாம். இன்றைய வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் துயரங்களையும் நேருக்குநேர் காண மறுத்து அவற்றிலிருந்து தப்பியோடி ஒரு சொர்கத்தீவில் திளைத்துக் கொண்டிருப்பதே அதீதக் கற்பனைவாதம்.

இப்போக்கு இன்றைய பத்திரிக்கைகளில் மக்களின் பார்வையைத் திசை திருப்புவதற்கும், அவர்களது போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் ஒரு சிறந்த ஆயுதமாக இது பயன்படுகிறது.

ரெவல்யூஷனரி ரொமாண்ட்டிசிஸம் என்பது மனித வாழ்வில் சுரண்டலும், அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது எனக்கருதும் புதுமை எழுத்தாளர்கள் தாம் கனவுகாணும் எதிர்காலச் சமுதாயம் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு அதீதக் கற்பனாவாதத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்போது “புரட்சிகரமான அதீதக் கற்பனாவாதம்” (ரெவல்யூஷனரி ரொமண்ட்டிசிசம்) என்ற புதுப்பெயரைப் பெறுகிறது.

பாரதியின் பாஞ்சாலிசபதத்தையும் பாரதிதாசனின் புரட்சிக் கவிதையையும் மாக்சிம் கார்க்கியின் ‘புயல் பறவையின் கீதம்’ போன்ற படைப்புக்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.!

முடிவுரை

            இன்றைய மக்களுக்கு சொல்லக்கூடிய கருத்துகளில் நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன.  அதற்காகப் படைப்பாளர்கள் தன்னுடைய கற்பனை திறத்தால் புதியதொரு படைப்பினை உண்டாக்கினர். அவைகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருந்தன.  மனித எண்ணத்திற்கு அப்பாற்பட்டவையாக இவ்புனைவியல் என்பது இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.

பார்வை நூல்

1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here