Monday, July 21, 2025
Home Blog Page 5

எட்டுத்தொகை இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்|திருமதி ந.கார்த்திகா

எட்டுத்தொகை இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்
முன்னுரை           
சங்கப்பாடல்கள் பொதுவாக அகத்திணை, புறத்திணை என இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றை  விரித்துக்கூறும் போக்கில் காதல், வீரம் பண்பாடு மட்டுமின்றிப் பல்வகை வாழ்வியல் கூறுகளும் அறவியல் சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. தன்மானம், ஊக்கம், கடமையுணர்வு, இறையுணர்வு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மனிதநேயம், செய்நன்றியறிதல் போன்ற அக்கருத்துக்கள், சங்கப்பாடல்களின் வழியே ஆராயப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் காலப் பழமை உடையவை எனினும் அதில் அறவியல் சிந்தனைகள் பழையனது என்று விட்டுவிடுவதற்கு இடமின்றி என்றும் நின்று நிலவுகின்ற சிறப்பினை உடையது. இவ்விலக்கியங்கள் அமைந்ததாலேயே “செவ்வியல் இலக்கியங்கள்” என போற்றப்படுகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்
           
பதிணென் மேற்கணக்கு நூல்களில் முதற்கண் தொகுக்கப் பெற்றது எட்டுத்தொகை நூல்களாகும். அதை,           
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குநூறு
           
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
           
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று
           
இத்திறந்த எட்டுத்தொகை”

என்று பழம்பாடல் படம் பிடிக்கிறது.
எட்டுத்தொகை நூல்களைப் பாடியோர் பல புலவர்கள் ஆவார்கள். அவர்கள் பல்வேறு ஊரினைச் சேர்ந்தவர்கள். பல்வேறு தொழில் புரிபவர்கள் பல்வேறு காலத்தவர்கள், அவர்களில் அரசவைப்புலவர்களாக சிலர் இருந்துள்ளனர். பெண்பாற் புலவர்களும் இடம்பெற்;றுள்ளனர். சங்கப் பாடல்கள் அகம், புறமெனும் இருதிணைகளில் அமைந்து ஒரே காலச் சூழலில் பொருள் பொதிந்து பாடியுள்ளதை காணமுடிகிறது. ஒரே வகை மரபு, இலக்கியப் போக்கு, நாகரிகம், பண்பாடு போன்றவை தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய தன்மையை இப்பாடல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. பரிபாடலும், கலித்தொகையும் போக எஞ்சிய ஆறு நூல்களும் ஆசிரியப் பாவிலும், அவற்றுள் சில வஞ்சியடிகள் கலந்தும் வருகின்றன என்பதை அறியமுடிகிறது. அனைத்துப்பாடல்களிலும் வாழ்வியல் சிந்தனைகள் மிகுந்திருக்கின்றன.

நற்றிணையில் வாழ்வியல் சிந்தனைகள்           
செல்வம் எதுவென்பதை நற்றிணையிலுள்ள பாடல்களால் காணலாம். பிறர் நம்மைச் சிறப்பித்துக் கூறும் புகழுரைகளோ, விரைந்து செல்லும் சிறப்புமிக்க ஊர்திகளோ செல்வம் ஆகாது. அவரவர் செய்த நல்வினையின் பயனே செல்வம் ஆகும். சான்றோர் செல்வமெனக் கூறுவது தன்னைச் சார்ந்தோர் மனதைப் புண்படுத்தாததும், அவர்கள் துன்பம் கண்டு நெஞ்சுருகும் தன்மையுமே ஆகும். 
           
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
           
செல்வம் அன்று; தன் செய்வினைப்பயனே
           
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
           
புன்கண் அஞ்சும் பண்பின்
           
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே”1 (நற்.201)
செல்வத்தின் விளக்கத்தை இப்பாடல் படம் பிடித்துக் காட்டுகிறது. தலைவியின் தன்னிகரற்ற அன்பு, கற்பனை வளத்துடனும் கவி நயத்துடனும் கையாளப்பட்டிருக்கும் பாடல்களின் சிறப்பை காணமுடிகிறது.
           
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
           
பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின
           
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே”2 (நற்.397)
என்று அஞ்சும் தலைவியின் நிலையை இப்பாடலடிகள் படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்துள்ளது. கற்புடைய பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் எவ்வளவுதான் வறுமையால் வாடினாலும் ஏற்றமுடைய வளமிக்க வீட்டில் பிறந்தநிலையை என்றும் ஒரு போதும் நினைத்தில்லை இதனை,           
“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென்க
           
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்”

என்னும் வரிகளால் தெளிவாகக் காட்டுகிறது.
  தலைவன் தன் தேர்க்கால்களில் நண்டுகள் அகப்பட்டு நசுங்கா வண்ணம் தேரைச் செலுத்திய அருள் உணர்வினை,           
“ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வரவன் வன்பாய்கர்”

என்ற பாடலடிகளால் காணமுடிகிறது.

குறுந்தொகையில் வாழ்வியல் சிந்தனைகள்           
குறுகிய அடிகளால் ஆன பாடல்களின் தொகுப்பாதலின் இப்பெயர் பெற்றது. இது நல்ல என்ற அடைமொழியும், உரையாசிரியர்களால் மிகவும் மேற்கோள் காட்டிய சிறப்பும், தொகை நூல்களில் முதலில் தொகுக்கப்பெற்ற பெருமையும் உடையது. அஃறிணை உயிர்களைக் கொண்டு ஆறறிவு மனிதர்கள் தம் அகநிலையினைப் படம் பிடித்துக்காட்டும் இணையற்ற நூல். இறையனார் தருமிக்கு எழுதி கொடுத்ததாகக் கூறப்படும் “கொங்குத்தேர் வாழ்க்கை” எனும் பாடல் இந்நூலில் தான் அமைந்துள்ளது.

 ஆதிமந்தியார் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்களும் பிற பெண்பாற்புலவர்களும் பாடிய பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அணிலாடு முன்றிலார், காக்கைப் பாடினியார், குப்பைக்கோழியார், விட்டகுதிரையர், மீனெரி தூண்டிலார் எனப் பாட்டின் சிறப்புமிக்க தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் இந்நூலில் உள்ளனர். 
           
குறுந்தொகைப் பாடல்கள் அனைத்தும் இன்பத்தைதரக் கூடியனவாக இருக்கின்றன. இரு நெஞ்சங்கள் எக்காரணமும் இல்லாமல் இணைந்து ஒன்றுபடும் இயல்பினை

“யாயும் ஞாயும் யாராகியறோ”3
எனத்தொடங்கும் பாடல் வரிகள் காட்டுகின்றன. திருமணமான புதுப்பெண் தீம்புளிப்பால் குழம்பு வைத்துத் தலைவனிடம் பாராட்டுப் பெறும் பாங்கினை, 
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” (குறுந்.107)
என்ற பாடலடிகள் படம்பிடித்துக்காட்டுகின்றன.
           
“உத்தியோகம் புருஷலட்சணம்”4
என்று வழங்கப்படும் கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது என்பதை

“வினையே ஆடவர்க்கு உயிரே”5 (குறுந்.135)

என்ற வரிகளில் காணமுடிகிறது.  அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எளிமையும் இனிமையும் கலந்த சொற்களால் அனுபவ உணர்வோடு எடுத்துக் கூறி நம் உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் இயல்புடைய பாடல்கள் இருப்பதையும், குடும்ப சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பெண்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் காணமுடிகிறது.

ஐங்குறுநூறு காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
ஐந்து திணைக்கும் தனித்தனியே நூறு நூறு பாடல்கள் கொண்டு குறைந்த அடிகளை உடைய பாடல்களால் இயற்றப்பட்டமையால் இத்தொகுப்பு இப்பெயர் பெற்றது. இது மூன்று முதல் ஆறு அடிவரையறையுடையது. ஒவ்வொரு நூறும் பத்துப் பத்தாக பிரிக்கப்பட்டு அதன் பொருள் பயின்று வரும் சொல்லால் பெயரிடப்பட்டுள்ளது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் சிவன் பற்றிய கடவுள் வாழ்த்தைப் பெற்றது. இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தர்ஞ்சேரல் இரும்பொறை ஆவான். ஐந்து திணைகளும் தனித்தனிப் புலவர்களால் பாடப்பெற்றுள்ளன. 
           
பறவை, விலங்கினங்களைக் கொண்டு ஐந்திணை ஒழுக்க உணர்வுகளை அருமையாக விளக்கும் அழகும் இயற்கை எழிலையும் உலகப் பொருள்களின் இயல்பையும் எடுத்துரைக்கும் திறமும் இவற்றை தமிழ்ச்சுவையோடு கூறும் பாங்கும் கொண்டு விளங்கும் சிறந்த நூலாக அமைந்துள்ளது.
           
இந்நூலில் விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரங்குபத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப்பத்து எனப் பாக்களுக்குப் பெயரமைத்து அகப்பொருட் கருத்துக்களாக இடம் பெற்றுள்ளது.
  தலைவியை உடன் அழைத்துச் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்கின்றான் தலைவன். தலைவியின் பெற்றோர் இருவரையும் தம் ஊருக்கு அழைக்கின்றனர். அவர்கள் இருவரும் வந்தனர். இதுவரை தலைவியை பிரிந்த தோழி அவளைத் தழுவி அவளது புது வாழ்வினைப் பற்றி அறிய ஆவல் மிகக் கொண்டு, “ஆமாம் தலைவி! உன் தலைவன் இருக்கின்ற நாட்டில் குடிப்பதற்கு நீர் கூட இல்லையாமே? உன்னால் எப்படி வாழ முடிந்தது?” என்றாள். தலைவியும் ஆம் தோழியே நீ கூறியது உண்மையே அங்கு வகையான நீர்நிலை கூட இல்லை! இருப்பவை கூட இழை தழை விழந்தமையால் அழுகியும், மான் போன்ற விலங்குகள் குடிப்பதால்  கலங்கியும் இருக்கின்றன. இருந்தாலும் அந்த அருவருக்கத்தக்க எச்சில் நீரும் எவ்வளவு இனிமையாக இருக்கின்றது தெரியுமா? நம் தோட்டத்துத் தேனினைத் தீம்பாலுடன் கலந்து உண்டால் எப்படி இருக்குமோ. அப்படி இனித்தது என்றாள். காதல், அன்பு இருக்குமிடத்தில் எல்லாமே இருக்கும் என்று இதயம் அன்பை வெளிப்படுத்திய பாடல்,           
“அன்னாய் வாழிவே ண்டன்னை நதட படப்பைத்
           
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
           
உவகைக் கூவற் கீழல்
           
மானுண் டெஞ்சிய கலுழி நீரே”6 (ஐங்குறு.203)

என்னும் பாடலடிகள் மானிட வாழ்க்கையை அறிய உதவுகின்றது.

அகநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்           
அகம்” எனவும், “அகப்பாட்டு” எனவும் இந்நூல் அழைக்கப்படுகின்றது. இதில் நீண்ட அடிகளால் அமைந்ததால் நெடுந்தொகை எனவும் பெயர் உண்டு. 13 அடி முதல் 31 அடிகளை உடையது. அகநானூற்றைத் தொகுத்தோர் மதுரை உப்பூரிக் குடிகிழார் மகன் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, அகநானூற்றை 145 புலவர்கள் பாடியுள்ளனர்.  அகநானுற்றுத் தலைவியின் அன்புள்ளத்தை,           
“செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
           
இன்றுவரல் உரைமோ சென்றிசி னோர்திறந்து என
           
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
           
முழலை இன்சொல் பயிற்றும்
           
நாணுடை அரிவை…….”7 (அகம்.31)
என்னும் பாடல் வரிகள் உளவியல் அடிப்படையில் அமைந்துள்ளது.

“பூத்த பொங்கர்த் துணையோடு பதிந்த
           
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
           
மணிநா ஆர்த்த மாண்வினைத்தேரன்”8 (அகம் 4)

என்னும் பாடல் வரிகள் தேனருந்தும் வண்டுகள் அஞ்சி ஓடிவிடுமென்று தன் தேரில் அசைந்தாடும் மணியின் நாவினைக் கட்டிவிட்டு தேரில் விரைந்து வரும் தலைவனின் உளவியல் கருத்துக்களையும், உயிர் இரக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்கள்.

கலித்தொகையில் வாழ்வியல் கூறுகள்           
எட்டுத்தொகையின் மேற்குறித்த அகப்பொருள் நூல்கள் நான்கும் அகவற்பாவில் அமைய கலித்தொகை முழுவதும் கலிப்பாவால் அமைந்தது. தரவு, தாழிசை, கரிதகம், தனிச்சொல் என்னும் அமைப்பினைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது. 150 பாடல்கள் கொண்டது, கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் பாட ஏற்ற யாப்பு வடிவங்கள் ஆகும்.
           
ஒருதலைக் காதல், பொருந்தாக் காதல், ஏவலர், அடிமைகள் பற்றிய உறவுகள் புராணக் கூறுகள் கொண்டுள்ள பாடல்கள் இதில் காணப்படுகின்றன. பாலைக்கலியில் 35 பாடல்கள் உள்ளன. தலைவன் பிரிவைத் தடுப்பதாக உள்ளது.

“உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர்
          
 பெறா அத் தடுமாற்றந்துயரம் கண்ணீர் நிலைக்கும் கருமைக்கும்”

என்னும் பாடலடிகள் பாலையின் கொடுமையை எடுத்துக்காட்டுகிறது. கடன் வாங்கும்போது மகிழ்ச்சியும் அதனைத் திருப்பிக் கொடுக்கும்போது துயரமும் தோன்றும் இதனை பின்வரும் பாடலில்,           
“உண்கடன் வழிமொழிந்திரங்குங்கால் முகணம்தாங்
           
கொண்டது கொடுங்கால் முகணம் வேறாகுதல்
           
பண்டுமில் வுலகத்து இயற்கை அதின்றும்
           
புதுவ தன்றே புலனுடைய மாந்தர்” (கலி.22)
       
என்பது சிந்திப்பதற்குரிய கருத்துக்களையும், பிரிவினால் ஏற்படும் சிரமத்தையும், வழியில் உள்ள இடர்பாடுகளை அறிவியல் அடிப்படையில் கூறவதையும் காணலாம். இது இருபத்தொன்பது பாக்கள் கொண்டது. குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்பதோடு தலைவியை திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வற்புறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும். அது நாடகப் பாங்கோடு நகைச்சுவையும் பொருந்த அமைந்திருக்கும் பாங்கு அழுத்தத்தைக் காட்டுவதோடு அதிலிருந்து விடுபடுவதற்குரிய வழியையும் சுட்டுகிறது. மாலைப் பொழுது அழகுற வருணிக்கப்பட்டுள்ளது. நற்பண்புகள் பற்றிய அறகருத்துக்கள் சிந்தை கொள்ளும் இயல்புகளை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.

புறநானூறு காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
பழந்தமிழ் புறப்பொருள் பற்றிப் பாடும் நூல்களில் ஒன்று புறநானூறு. புறநானூறு தமிழகத்தில் இருந்த பெருவேந்தர்கள். குறுநில மன்னர்கள், கொடைவள்ளல்கள், அரசமகளிர் வரலாறுகளை அறிவதற்குப் பயன்படும் அறிய கருவூலப் பெட்டகமாக உள்ளது.  இப்பாடல்கள் நான்கடிச் சிறுமையும் நாற்படிதடிப் பெருமையும் உடையன. புறநானூறு பண்டைய தமிழகத்தின் வரலாற்றினை அறியவும் மேலும் இது உழவுத்தொழில் பண்பாட்டுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றது. இதன்கண் தமிழத்தின் பெருநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. சங்ககாலத்துத் தமிழகத்தின் அரசியல், பொருளாதரம், சமுதாயநிலை, பழக்கவழக்கங்கள், நாகரிகம், கல்வி, கலைவளர்ச்சி முதலானவற்றை  அறிந்துகொள்வதற்கு புறநானூறு பெருந்துணை புரிகின்றது. மன்னர்களின் பழமையான மரபுகலையும் அவர்தம் புகழையும் வெளிப்படுத்தும் கதைக்கூறுகளும் தெய்வங்கள் தொடர்பான புராணச் செய்திகளும், வழிபாட்டு முறைகளும் பூமியின் ஏற்பாடு மாற்றங்களை சங்கப்பாடல்களால் கண்டறியப்படுகின்றது.
           
புறநானூற்றில் மகளிர் பற்றிய செய்திகள், மறக்குடிப் பண்பு, கையறுநிலை போன்ற பல்சுவைப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற விதத்தில் பொதுவான சிந்தனைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பெட்டகமாகப் புறநானூறு விளங்குகிறது. புறநானூற்றில் இயற்கை பற்றிய செய்திகளும் ஏறத்தாழ நாற்பது வகை மலர்களைப் பற்றியும் ஆங்காங்கே குறித்துச் செல்கின்றது.
 சான்றோர்கள் சமுதாயச் சிறப்புக்குரிய பொதுமை ஒழுக்கத்தைக் கடைபிடித்து இருப்பதால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் தான் மட்டும் சமநிலையாக நின்று சமுதாய நோக்கில் மக்களைப் பாதுகாத்ததைத் தெளிவாகக் காணலாம்.
           
“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே
          
  சான்றோ னாக்குதல் தந்தையின் கடனே”

இப்பாடலில் பெற்றோரின் கடமையும், ஒழுக்கமும் தன்னிலை நிறைவு செய்யும் கருவிகளாக இருந்தனர் என்பதைக் கண்டறியலாம்.

புலவரின் செயல்கள்           
பாரி மகளிரை அழைத்துச் சென்று மணம் வேண்டி கபிலர் தம்மை இளங்கோவேள் இகழ்ந்தமையால், “அரசே உனது ஆட்சி பீடம் அழிந்ததற்குன் காரணம் உன் முன்னோர்களில் ஒருவன் கழா அத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்துரைத்ததே” புறநானூறு எடுத்துரைக்கிறது. (புறம் 202). இப்பாடலில் சொல்வன்மை மிக்கவரிடம் பகைத்துக் கொள்ளுதல் அறிவின்மை ஆகுமென்ற கருத்தும் புலவர்கள் சொல்லாற்றலால் தெய்வத்திற்கு அடுத்தநிலையில் உள்ளவர்கள் என்னும் கருத்தும் ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது.
           
சங்ககாலப் பெண்கள் வீரத்தில் சிறந்து விளங்கினர் என்பதைப் பல்வேறு புறநானூற்றுப் பாடல்கள் பறைசாற்றுகின்றன. தந்தையும், கணவனும் போரில் இறந்த பின் தனது ஒரே மகனைப் போர்க் கோலத்துடன் களம் இறக்கும் துணிவுடைய பெண்ணை ஒக்கூர் மாசாத்தியார் (புறம்.279) பாடலில் படைத்துக் காட்டியுள்ளார்.  போர்க் களத்தில் உடல் வெட்டப்பட்டுக் கிடந்த மகனின் மறப்பண்பைக் கண்ட தாயின் உள்ளத்தை ஒளவையார்,           
“சிறப்புடைய யாளன் மாண்புகண் டருளி
           
வாடுமுலை ஊறிச் சுரந்தன
           
ஓடாப்புட்கை விடலைத் தாய்க்கே”9
எனத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
 போர்க்களத்தில் தன் மகனின் நிலையைக் காவற்பெண்டு,           
புலி சேர்ந்து போகிய கல் அளைபோல
           
ஈன்ற வயிறோ இதுவே
           
தோன்றவன் மாதோ, போர்கட களைத்தானே”10
என்ற உவமையோடு இளைஞரின் வீரச் செயல்களை தெளிவுபடுத்தியுள்ளார். மனித வாழ்க்கையில் பெண்களும் மறப்பண்புடையவராக இருத்தல் என்பது தேவை என இவை காட்டும். மக்களிடத்தில் பொருள் தேடலும், இன்பம் அலைவித்தலும் அறவழியில் நடைபெறல் வேண்டுமென்ற குறிக்கோள் இருந்தது. இதனை, 
செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
           
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
           
நீர்சூழ் நிலவரை உயரநின்
           
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகப் பலவே”11
என்ற புறநானூற்றுப் பாடல்வழி அறியலாம்.
 விருந்தோம்பல் என்பது பண்டைக்காலம் முதல் இன்று வரை மகளிரின் பண்பாகவும் இல்லறத்தின் அறவாழ்வாகவும் போற்றப்படுகிறது. பெண்கள் மென்மையான தன்மையால் விருந்தோம்பல் பண்பிலும் நன்கு படம் பிடித்துக் காட்டுகிறார்.
           
“அமிழ்து அட்டு ஆனாக் கமழ்உய் அடிசில்
           
வருநர்க்கு வரையாக வசையில் வாழ்க்கை”12
என்ற பாடலடிகள் வழியாக விருந்தோம்பலின் பண்பினைக் காணலாம்.
 பொருள் அதிகமாக இருந்தாலும் அறத்தோடு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதப் பிறவியி;ன் பயனாகும். “அறம் தவறி நடந்தால் குறையுடைய மனிதப் பிறவியிலிருந்து நினைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறியவனாய் ஆவாய்” என்பதை,            “ஆடுகளங் கடுக்கும் அகநாட் டைவே
            அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
            ஆற்றும் பெரும நின் செல்வம்
            ஆற்றாமை நின் போற்றா மையே”13
என்ற பாடலில் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.

பதிற்றுப்பத்து காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்           
இந்நூலில் தமிழர்களின் மரபும் பண்பாடும் விரவிய ஓர் பண்பாட்டுக் கருவூலமாகவும் செவ்வியலோடு அறிவியல் சிந்தனைகளையும் காண முடிகிறது. குறிஞ்சிக்கபிலன் என்னும் பெயர் பெற்ற இப்புலவர் செல்வக் கடங்கோ வாழியாதனை இப்பகுதியில் பாடியுள்ளார். பறம்பு நாட்டு மன்னன் வேள்பாரிக்கு உற்ற துணைவர் இவர். பாரியின் இறப்புக்குப் பின் அவன் மகளிரைத் தன் மகளிராகக் கொண்டு திருக்கோவில் மலையமான் மக்களுக்கு மணம் முடித்துக் கொடுத்த பெருமை கபிலருக்குண்டு.
உணர்ச்சியினைக் கூட இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கு இரண்டாம் பத்தில் காணப்படுகிறது இப்பாடலில் இயற்கை நிலையில் காட்சிகள் துல்லியமாக காட்டப்படுகின்றன.

“தொறுத்த வயல் ஆரல் பிறழ்நபும்

ஏறு பொருத செறுவுழாது வித்துநவும்”14
           
இப்பாடலடிகளில் ஆனிரைகள் மேயும் கொள்ளைப்புறம். ஆரல் மீன்கள் பிறந்துழாவும் கிண்டி புழுதியாக்கிய இடம் ஏர் கொண்டு உழவு செய்யாமல் காலால் உழவு செய்து விதைத்த விரை, வயல்கள் கரும்பு நிற்கும் பாத்திகளில் பூத்து மலர்ந்த நெய்தல் மலர்கள் என அந்நாட்டு இயற்கை வளக் காட்சிகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காண முடிகிறது

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு பரிந்தொழுகும்

அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி

ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று 

நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

திருந்திய வியன் மொழித் திருந்திழை”15
      
முறை ஓதுதல், வேள்வி வேட்டல் இவையிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியவர்க்கு ஒன்றை ஈதல், தமக்கு ஒருவர் கொடுத்ததை ஏற்றல் என ஆறு தொழிலையும் செய்து வாழும் அறநூல்களின் பயனை விரும்பும் அந்தணர்கள் வழிபாடொழுகி இருக்க, அதனாலயே உலகத்தவரும் உன்னை வழிபடுகின்றனர். நீயே தேடிச் செல்லாது உன்னிடம் தேடி வருகின்ற நல்லிசை பண்பு என்றும் இயல்பு மாறாத நற்பேச்சு என  அனைத்தையும் கொண்ட எனது கணவனே” என மனித வாழ்வின் இயல்பு நிலைகள் மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. மழையே ஒரு காற் பொய்த்தாலும் சேரலாதன் எக்காலமும் கொடை பொயப்பதில்லை என்பதனை 
 
“மாரி பொய்க்குவ தாயினும்

சேர லாதன் பொய்யலன் நசையே”16
என்னும் பாடலடிகளில் சேரலாதனின் கொடைச் சிறப்பைக் காணலாம் ஆற்றினை கடக்க உதவும் வேலக்கரும்பை விட வறுமை ஆற்றைக் கடக்க உதவும் சேரன் சிறந்தவன் என்பதனை அறவியலோடு,
“ஒய்யு நீர்வழிக் கரும்பினும்

பல்வேற் பொறையன் வல்லனால் அணியே”17
இப்பாடலில் சேரர் கொடை சிறப்பினை அறியமுடிகிறது.

பரிபாடல் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
           
மார்கழி நீராட்டு விழாவைப் பற்றியும் ஆற்றில் புது வெள்ளம் பொங்கி வரும் பொழுது நிகழும் செயல்களைப் பற்றியும் இந்நூல் புலப்படுத்திக் காட்டுகிறது. பொருட் சிறப்பாலும் நுண்மாண் நுழைபலச் செம்மையாலும் “ஓங்கு பரிபாடல்” என்று இந்நூல் சிறப்பாக கூறப்பட்டது. தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களும் அறம், பொருள், இன்பம், வீடு முதலிய உறுதிப் பொருட்களும் இயற்கைக் காட்சியின் இயல் நலன்களும், காதறசிறப்பும்வீரர் மேம்பாடும், அன்பும், பண்பும், ஆடலும் பாடலும் பிறவும் நெஞ்சை அள்ளும் வகையில் புலமைச் சான்றோர்களால் பொருள்; பொதிந்துள்ளதை பரிபாடல் படம் பிடித்து காட்டுகிறது. 
           
எட்டுத்தொகை நூல்களில் கடவுளைப் பற்றிய குறிப்புகளும் வழிபாடு பற்றிய குறிப்புகளும் பரிபாடலில் உள்ள சிறப்பை போன்று பிற பாடல்களில் அமையவில்லை. சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறந்து பொருள்களின் இயற்கை அழகு கலை நன்கு தெரிவிப்பது மதுரை வைகை ஆறு, திருமருதத்துறை, திருப்பரங்குன்றம், திருமால் இருஞ்சோலை மலை என்பனவற்றின் பண்டைக் கால நிலைகளையும் அக்கால நாகரீக முறையையும் வைதீக ஒழுக்கங்களையும் தெய்வ வழிபாட்டு முறையையும் பிற பழக்கங்களையும் தமிழ்நாட்டின் வரலாற்றையும் செவ்வனே தெரிந்து கொள்வதற்கு இந்நூல் கருவியாக அமைந்துள்ளது. இந்நூலுக்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிபாடலின் பல பாடல்களில் திருமாலும், செவ்வேறுமே பாடல் பொருளாகக் காட்சி தருகின்றனர் சமய சார்பான பூசல்களில் அதிகக் கவனம் செலுத்தாமல் எந்த பெயரால் எவ்வுருவத்தை வழிபட்டாலும் அந்த பெயரும் அவ்வுருவமும் வழிபாடும் ஒருவனாக கலந்து உலகந்து நிற்கின்ற ஒருவனையே சாரும் என்பதும் புராணக் கதைகளும் வேதங்களின் கருத்துக்களும் இந்நூலில் நிறைய காணப்படுகின்றன. பண்ணொடு பாடுவதோடு பக்தி நெறியை பரப்புவதிலும் பக்தி இலக்கியமான தேவார, திருவாசக திவ்ய பிரபந்தங்களுக்குப் பரிபாடல் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வீடுபேறு அடையத் திருமாலின் அருள் தேவை என் தேவையென்றும், இல்லையெனில் வீடுபேறு பெற இயலாது என்னும் கருத்தை இளம்பெருவழுதி,
“நாறிணர்த் தூழாயோன் நல்கின் அல்லரத

ஏறுதல் எளிதோ வீடு பேறு துறக்கம்”18           
எனப் பாடுகிறார். முருகனிடம் வரம் வேண்டியது போல அன்பர்கள் திருமாலிடமும் வேண்டுகின்றனர் தமக்கும் சுற்றத்தாருக்கும் மெய்யுணர்வு வேண்டும் எனக் கூட்டு வழிபாடு செய்யும் முறையை 

கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்

கொடும்பாடு அறியற்க எம்மறிவு எனவே”19
என்னும் பாடலடிகளால் படம்பிடித்துக்காட்டுகிறார்.

தொகுப்புரை           
எட்டுத்தொகை நூல்கள் சிறந்த செவ்வியல் இலக்கியத் தன்மை கொண்டு வேறெந்த மொழியிலும் இல்லாத தனித்தன்மையுடன் அமைந்துள்ள இலக்கியங்கள் ஆகும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதும் அக்காலத்திலேயே அகம், புறம் எனப் பகுத்தும் காணப்படுகின்ற தன்மைகொண்டு உள்ளதையும் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் எக்காலத்திற்கும் பயன்படும் மொழி பயன்பாடும் கொண்டு அமைந்துள்ளன. இவை இலக்கணச் செழுமை, இலக்கிய வளம், பொருள் ஆகியவை அருமையான உயிர்ப்புடன் இருப்பதையும் அறிவியல் நெறிகளையும் தெளிவாக கண்டறிய முடிகிறது. எட்டுத்தொகை நூல்களை தொகுத்தவர், தொகுப்பித்தோர் போன்றவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வளம் பொருள் அருமையான உயிர்ப்புடன் இருப்பதையும் மானிடவியல் நெறிகளையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதைக் கண்டறிய முடிகிறது. எட்டுத்தொகை இலக்கியங்களில் சில பண்புகள் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி ஆராயப்பட்டுள்ளன. அன்றைய உழவும் இயற்கைச் சூழலும் இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டு காட்டும் அளவிற்கு இருப்பதை காண முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1. நற்றிணை பாடல் 210 வரி.அ-1
2. நற்றிணை பாடல் 397 வரிகள் 2,3,4
3. நற்றிணை பாடல் 397 வரிகள் 10-11
4. குறுந்தொகை பாடல் 107 வரி..5
5. குறுந்தொகை பாடல் 135 வரி.7
6. ஐங்குறுநூறு பாடல் 203 வரி.8
7. அகநானூறு பாடல் 33 வரி.9
8. அகநானூறு பாடல் 4 வரி.10
9. புறநானூறு பாடல் 295  வரிகள்.1-5
10. புறநானூறு பாடல் 86 வரிகள். 3-5
11. மேலது பாடல் 160 வரிகள்.23-26, 18
12. மேலது பாடல் 10 வரிகள்.7-8
13. மேலது பாடல் 28 வரிகள்.14-17
14. பதிற்றுப்பத்து வரிகள்.1-3, 21
15. மேலது மூன்றாம்பத்து 6, வரிகள். 1-6
16. மேலது ஏழாம் பத்து 7, வரிகள். 5-7
17. மேலது ஏழாம் பத்து வரிகள். 4-5
18. மேலது பாடல் 15 வரிகள். 15-16
19. மேலது பாடல் 2 வரிகள். 75-76
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ஆய்வாளர்

 திருமதி ந.கார்த்திகா

பகுதிநேரமுனைவர் பட்டஆய்வாளர்

தமிழ்த்துறை

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி

கோபிச்செட்டிபாளையம் – 638 476

நெறியாளர்

முனைவர் ஈ.யுவராணி

உதவிப்பேராசிரியர்

வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சென்னை-62

 

அதுதான் முதுமை | சுஹைப் அக்தர்

அது தான் முதுமை சுஹைப் அக்தர்

🍂 வயது முதிர்ந்து 


முதுகெழும்பு வளைந்து 


கூனி குருகி நிற்கும் நிலை


அது தான் முதுமை


 

🍂 நேரம் பல இருந்தும்


பரிமாற துணையில்லா


துக்கத்துடன்


தூக்கம் அதிகரித்தால்


அது தான் முதுமை


 

🍂 எழுந்து நிற்க,


எகிறி குதிக்க


திராணி இல்லாமல்


திக்குமுக்காடும் 


அது தான் முதுமை


 

🍂 வாச்சதும் போய் 


வந்ததும் காணாமல் போய்


வறுமையில் வயிறு வாடும் 


அது தான் முதுமை


 

🍂 நீக்கமற நினைவுகள்


நீர்ததும்ப வலிகள்


விழியோ துணை தேடும் 


அதுதான் முதுமை


 

🍂 உண்ண உணவும் 


உடுத்த உடையும்

இவையும் தனிமையும்

இருந்தால் 


அது தான் முதுமை


 

🍂 சாப்பிட வாயும் 


ருசிக்க சுவை புலனிருந்தும் 


நோய் அதனை தடுத்தால் 


அது தான் முதுமை


 

🍂 இன்னும் எத்தனை


இன்னல் கண்டு


இதயம் நோகுமோ


என்றிருந்தால்


அது தான் முதுமை

 

கவிதையின் ஆசிரியர்


சுஹைப் அக்தர் 


இணையாசியர் நாகூர்ப் புராணம் மின்னிதழ்.

 

பசுமை கொண்ட வானம்!|கவிதை|நவநீதனா ச

பசுமை கொண்ட வானம்! - நவநீதனா ச

 ⛅ உவமை கூற இயல்வதுண்டோ?


அன்னை அவள் எழிலைக் கண்டு..!

 

 ⛅ வளியென்னும் வானவன்,


நிலமென்னும் மங்கைக்கோ,


கூந்தலாகிப் பறக்கின்றான்..!

 

 ⛅ நெருப்பினது துணையாலே,


ஒளியான கற்பகமே!


ஆகாயத்தில்,


நிலவைத்தேடி அலைகின்றாயோ?..!


 ⛅ மார்கழியின் இதழ்களிலே,


பன்னீர் தெளிக்கும் பனிப்புகையே,

விழிகளிலே வனப்பாக வசிக்கின்றாய்..!


 ⛅ நீல வண்ணமாய்க் கடலலையே,


உம் தோள் போர்த்திய விந்தை
 

என்னவோ?!
புது விளையாட்டோ?..!


 ⛅ மையலுற வைக்கும் உம்மை,


பூதத்தில் ஒன்றென


யாமழைத்தால்,


சீற்றமதைக் கொடுப்பாயோ?


பசுமை சுமக்கும் தாரகையே..!


 ⛅ ஏனோ விடை


வனைய மறுக்கின்றாய்?!!


குயிலிசைகள் கேட்டிடவே,


மங்கையெனும் மழையினிலே,


காதலுற்றாயோ கவிநயமே..!


கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,


கோவை.

 

மீன்தொட்டி கவிதைகள்|முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்

மீன்தொட்டி கவிதைகள் - முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

🐟 கண்ணாடிச் சிறை


முட்டி மோதாத வாழ்க்கை


மீன்களின் பாடம்..!


 

🐟வண்ணக் கற்கள்


பாரங்களை அழகாகக் காட்டும்


மீன் தொட்டி…!


 

🐟செயற்கைச் சுவாசம்


கண்ணாடி அறையில் வாசம்


நிறைவான வாழ்க்கை..!


 

🐟கண்ணாடித் தொட்டி


முகம் பார்க்கும் அழகு


மீன்களின் வாழ்க்கை…!


 

🐟பிடித்திருக்கிறது மீனைத் தொட்டி


பிடித்திருக்கிறது மீனுக்குத் தொட்டி


பிடித்திருக்கிறது மீன் தொட்டி..!


 

🐟சுற்றிலும் பீங்கான் சுவர்கள்


தப்பிக்கத் தோன்றாத கைதிகள்


மீன் தொட்டி..!


 

🐟வலையை சுருட்டிவைத்து


ரசிக்கின்றான் மீன்களை


எதிரில் மீன் தொட்டி..!


 

🐟குரோட்டன்சுகளோடு பேச்சு


இயற்கை மீது ஆவல்


தொட்டியில் மீன்கள்..!


 

🐟தரையில் விழுந்த மீன்


துள்ளித் துள்ளி அழுகிறது


தொட்டியின் மரணம்..!


 

🐟துள்ளி விழுகிறது மீன்


துடிதுடிக்கிறது என்கிறான் மனிதன்


தப்பித்தலின் உத்தி..!


 

🐟துள்ளித் துள்ளி விழுகிறது.


அழுகை மறந்து சிரிக்கிறது குழந்தை


தவறி விழுந்த மீன்..!


 

🐟கூடுவிட்டு கூடு மாறினோம்


தொட்டி வைக்க இடமில்லை


டலுக்கு சென்றன மீன்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்


உதவிப் பேராசிரியர் 
 

தமிழ்த்துறை 


அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ( தன்னாட்சி)


சிவகாசி

 

பாட்டியல்  உரைகளின் கலைச்சொல் விளக்கம் | முனைவர் ஞா.விஜயகுமாரி

பாட்டியல் உரைகளின் கலைச்சொல் விளக்கம் முனைவர் ஞா.விஜயகுமாரி
முன்னுரை
பாட்டியல் நூல்களுக்கு எடுத்த பழைய உரைகளின் அமைப்பு மட்டுமே இங்கு நோக்கப் பெறுகின்றன. பண்டைய பாட்டியல் உரைகள் பிற இலக்கண உரைகள் போலவே அமைந்துள்ளன. எனினும் பிற இலக்கண உரைகள் போல விரிந்த நிலையிலோ மிகுதியாக மேற்கோள் காட்டும் போக்கையோ நடைநல சிறப்புகளையோ பெரிதும் கொள்ள வில்லை என்று கூறலாம்.
 பாட்டியல் உரைகள் பெரிதும் சுருக்கமாகவே அமைந்துள்ளன. இலக்கிய வகைப் பற்றிக் கூறும் இடங்களில் முழுமையாக இலக்கியங்களை எடுத்துக்காட்டல் என்பது சாத்தியமற்றது ஆகையால் உதாரணங்கள் இந்த உரைகளில் மிகுதியும் இடம்பெறவில்லை.
 பாட்டியல் இலக்கண செய்திகளுள் வடமொழி இலக்கண செய்திகளும் இடம்பெற்றுள்ளதால் வடமொழி சார்ந்த சொற்கள், ஆட்சிகள் ஓரளவு காணப்படுகின்றன. பாட்டியல் இலக்கண உரைகள் தமது அமைப்புகள் இலக்கண நூற்பாக்களை மேற்கோள்களாக கொண்டுள்ளன. சில இடங்களில் இலக்கிய இலக்கணங்களில் இருந்து மேற்கோள்களாக கொண்டுள்ளன.

உரைகளில் கலைச்சொல் விளக்கம்
பாட்டியல் இலக்கண உரைகள், பாட்டியல் கலைச்சொற் களுக்குச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளன. ஒரே கலைச்சொல்லுக்கு ஒவ்வொரு உரையும் தந்துள்ள விளக்கத்தைப் பின்வரும் பகுதியில் நோக்கலாம்.
வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் இவற்றால் உரைகளின் கலைச்சொல் விளக்கம் கூறும் போக்கினை அறியலாம்.

மங்கலச்சொல்
வெண்பாப் பாட்டியல்
சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார், பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை,மா, மங்கை, தீபம் இவை மங்கலச்சொல்.

நவநீதப்பாட்டியல்

திரு, மணி, பூ, திங்கள், ஆரணம், சொல், சீர், எழுத்து, பொன், தேர், புனல், கார், புயம், நிலம், கங்கை, மாலை, உலகம், பரி, கடல், ஆனை, பருதி, அமுதம், புகழ் ஆக இருபத்து மூன்று மங்கலச்சொல்

சிதம்பரப்பாட்டியல்
மா. மணி, தேர், புகழ், அமுதம், எழுத்து, கங்கை, மதி, பரிதி, களிறு, பரி, உலகம், நீர், நாள், பூ. மலை, கார், திரு, கடல், தீர், பழமை, பார் சொல், பொன், திகிரி இவை இருபத்தைந்தும்.

இலக்கண விளக்கம்

சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை, யானை, கடல், நிலம், மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ், நிலம், ஆரணம், கடவுள், திகிரி முதலிய முதற் சீர்கண் அமைவது மங்கலச்சொல்.

முத்து வீரியம்
கார், புயல், மா, மணி, கடல், ஆரணம், உலகு, பூ, அமுதம், தேர்,வயல்,திங்கள், பொன், எழுத்து, சூரியன், யானை, குதிரை, கங்கை, நிலம், திரு, இவை முதலிய மங்கலச்சொல்.

தொன்னூல் விளக்கம்
கங்கை, மாலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ், எழுத்து, அவர், திங்கள், தினகரன், தேர் வயல் அழுத்தம், திரு, உலகு, ஆரணம், நீர் என்று சொல்லப்பட்ட இருபத்தினான்கு சொல்லு மித்தொடக்கத்தான் மங்கலச்சொல்.
காலத்தால் முந்தையது வெண்பாப் பாட்டியல் தொடக்கி தொன்னூல் விளக்கம் வரை மங்கலச்சொல் மாற்றம் பற்றி கலைச் சொல்லுக்கு விளக்கம் அமையுமாறு அமைந்துள்ளது.
 மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்று பத்து பொருத்தங்களில் மூன்றுக்கு மட்டும் கலைச்சொல் எவ்வாறு காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை காண்கிறோம். முதன்மொழிக்கு அடுத்து இயலில் சிற்றிலக்கியத்திற்கு கலைச்சொல் கூறப்படுகிறது.

வெண்பாப் பாட்டியல்
கோவை
கட்டளைக் கலித்துறை நானூறு அகப்பொருள் மேல் வருவன கோவை.
நவநீதப்பாட்டியல்
பொருளதிகாரத்துப் பிரமம், பிராஜா பத்தியம், ஆரிடம், தெய்வம். காந்திருவம், அசுரம், இராக்கதம் பைசாசம் என்று சொல்லப்பட்ட எட்டு வகை மணத்தினுள் காத்திருவ மணத்தில் நானூறு கலித்துறைப் பாடுவது கோவை.

சிதம்பரப் பாட்டியல்
அகப்பொருள்மேற் கலித்துறை நானூறு பாடுவது கோவையாம்.

இலக்கண விளக்கம்
கட்டளைக்கலித்துறை நானூறாகத் திணை முதலாக துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவையாகும்.
தொன்னூல் விளக்கம்
பொருளதிகாரத்தின் கண்ணே காட்டிய தன்மையிற் களவு, கற்பென விருபா லுடைய வகப்பொருட்டிணைகளேழும் விளக்கிக் கலித்துறை நானூறாகப் பாடித் தொகுத்த செய்யுள் கோவை.

முத்து வீரியம்
இருவகையாகிய முதற்பொருளும் பதினான்கு வகையாகும். கருப்பொருள் பத்துவகையாகிய உரிப்பொருளும் பெற்றுக் கைக்கிளை முதலுற்ற அமையும் காமப்பகுதியவாம் களவொழுக்கமுற் கற்பொழுக்கமும் கூறவே யெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டாகப் பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப்பாடுவது அகப்பொருள் கோவை.
ஆறு பாட்டியல் உரைகளில் கோவை கலைச்சொல்லுக்கு விளக்கம் கூறுகிறது.

நவநீதப்பாட்டியல்
இருவர் வேந்தர் யானை பொருத வெற்றி ஒருவன் செய்கிற புறநடைசேர் குரவைமேல் நேரடி முதலான சீர்களின் இவ்விரண்டடியாகத் தாழிசையான் வருவது பரணி.

இலக்கண விளக்கம்
போரிடை ஆயிரம் களிற்றியானை படைவென்ற வீரத் தன்மை உடையோனுக்குப் பாடப்படுவது பரணி.

தொன்னூல் விளக்கம்
பரணி யாமாறுணர்த்தும் போர்முகத் தாயிரம் யானையைக் கொன்ற வீரனே பாட்டு நாயகனாகக் கொண்டு பரணிக் குறுப்பெனக் கடவுள் வாழ்த்துங் கடைதிறப்பும். பாலை நிலமுங் காளிகோயிலும் பேய்களோடு காளியுங் காளியோடு பேய்களுஞ் சொல்ல, சொல்லக் கருதிய நாயகன் கீர்த்தி விளங்கறு மவன் வழியாகப் புறப்பொருள் போன்ற வெம்போர் வழங்க விரும்பறு மென்றிவை யெல்லா மிருசீர் முச்சீரடி யொழிந்தோழிந்த மற்றடியாக வீரடி பஃநொழிசையாய்ப் பாடிய செய்யுளே பரணி.

முத்துவீரியம்
போர், முகத்து ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை நிறம், காளிகோயில், பேய்களோடு காளி, காளியோடு பேய்கள் கூறத் தான் சொல்லக்கருதிய தலைவன் கீர்த்தி விளங்க அவன் வழியாகப் புறப்பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பல். இவையெல்லாம் இருசீரடி, முச்சீரடி, யொழித்து, ஒழிந்த மற்றடி யாக ஈரடிப் பலதாழிசையாற் பாடுவது பரணி.
வெண்பாப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் இவை இரண்டு நூல்களில் பரணி இலக்கணம் கொடுத்துள்ளன. ஆனால் உரையில் கலைச்சொல் விளக்கம் கொடுக்கவில்லை.

உரைகளில் மேற்கோள் நூற்பாக்கள்
உரைகளில் நவநீதப்பாட்டியலில் பல மேற்கோள் பாடல்கள் கையாண்டுள்ளார் உரையாசிரியர்.
📜
”இந்திர கணமே பெருக்கஞ் செய்யும் சந்திர கணமே வாணாற் தரூஉம் சீர்த்த நீர்கணம் பூக்கணஞ் செழுந்திரு ஆங்கு மென்றாய் கறையப் படுமே”
என்பது மாமூலம்,

📜 “நேரசை யாகவும் நிரையசை யாகவும் சீர்பெற வெடுத்தல் சிலவிடத் துளவே”
என்பது இந்திர காளியம்,

📜“அந்தர கணமே வாழ்நாட் குன்றும் சூரிய கணமே வீரிய மகற்றும் வாயுகணமே செல்வ மழிக்கும் தீயின் கணமே நோயை விளக்கு”
என்று ஒப்புமையாக தொன்னூல் விளக்கம் கூறுகிறது என்ற கருத்து பாட்டியலே ஒப்புமையாக கூறியுள்ளதை காட்டுகிறது.
📜கலம்பகத்தின் செய்யுட் தொகை பற்றி பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புமை மற்ற இலக்கணங்கள் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டியுள்ளார் உரையாசிரியர்.
📜“அமராக்கு நூறந் தணருக் கிழிவைத் தரசர்க்குத் தொண்ணூறு மூன்றாம் பட்ட முடிபுடையா மன்னர்க் கெண்பது வணிநர்க் கெழுபது மற்றை யோர்க்குத் துணியி லறுபத் தஞ்சு சொல்லும்”
இது முள்ளியார் கலித்தொகை.
📜
”அந்தணர் அரசர் வணிகர் வினைஞர்க்குத் தொண்ணூ றென்ப தெழுப தறுபது விண்ணோர் தமக்கு நூறெனவிளம்பினர்”
என்பது கல்லாடம்.
📜“அமர்ரர்க்கு நூறந் தணருக் கிழிவைத் தரசக்குத் தொண்ணூ நன்றி முடிபுடையாய் புதல்வாக கெண்பது புகலுங் காலை.”
”தானைத் தலைவர்க்கும் வணிகர்க்கும் எழுப தேனை யோர்க்கிழி பிருபது பாட்டே”

முடிவுரை
இவ்வியலில் பாட்டியல் இலக்கண உரைகளின் இயல்புகள் அமைப்புகள், நோக்கப்பெற்றன. பாட்டியல் இலக்கண உரைகள் ஓரளவு சுருக்கமாகவே அமைந்துள்ளன. வடமொழி செய்திகளை ஒப்பிட்டு காட்டு கின்றன. வடமொழி கலைச்சொற்களை இணைத்து சுட்டுகின்றன. முந்தைய, பிற பாட்டியல் இலக்கண நூல்களின் நூற்பாக்கள் பலவற்றை மேற்கோள்காக காட்டுகின்றன. ஆங்காங்கு நடைநயம், தொடர்களைக் கொண்டுள்ளன. தொடர்புடைய பிற பாட்டியல் நூலாரின் கருத்துக்களை ஒப்பிட்டுக் கூறுகின்றன.
 வடமொழி இலக்கண கலைச்சொல், விளக்கம் தருதல், இலக்கிய மேற்கோள்காட்டல் பிற பாட்டியல் நூலாரின் கோட்பாட்டை ஒப்பிட்டு ஒத்தோ உறந்தோ கூறுதல், நடைநலம் வாய்ந்த தொடர்களை கொண்டிருத்தல் ஆகியக் கூறுகளை உரையின் சிறப்பியல்புகளாக கருதமுடிகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,

முனைவர் ஞா.விஜயகுமாரி,

                                                                                                                                   உதவிப் பேராசிரியர்,

                                                                                                                 அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,

                                                                                                                          மீனம்பாக்கம், சென்னை-61.

 

நிகண்டுகளில் நெய்தல் நிலப் பெயர்கள் | முனைவர் கி. சுமித்ரா

நிகண்டுகளில் நெய்தல்நிலப் பெயர்கள் - முனைவர் கி. சுமித்ரா
யற்கையோடு ஒட்டி வாழ்ந்தவன் தமிழன். எனவே, தான் தொடக்கக் காலத்தில் உறைவிடங்களை அமைத்து வாழத்தொடங்கிய இயற்கை நிலங்களின் பெயர்களையே தான் அமைத்த இடப்பெயர்களுக்குப் பெயரடைகளாக அமைத்துள்ளான். திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏழு நிகண்டுகளில் இடம்பெறும் இடப்பெயர்களில் ஒன்றான நெய்தல்நிலப் பெயர்களை மட்டும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சமுத்திரத்தின் பெயர்
திவாகர நிகண்டு       
     
“அத்தி, பௌவம், அளக்கர், ஆர்கலி,       
ஆழி, பெருநீர், அம்பரம், முந்நீர்…” (878)
1. அத்தி, 2. பௌவம், 3. அளக்கர், 4. ஆர்கலி, 5. ஆழி, 6. பெருநீர், 7. அம்பரம், 8. முந்நீர், 9. உப்பு, 10. வீரை, 11. சக்கரம், 12. சாகரம், 13. வேலை, 14. வெள்ளம், 15. மகாலயம், 16. நேமி,  17. சலநிதி, 18. வாரி, 19. சலதி, 20. அலை, 21. பாராவாரம், 22. உததி, 23. சமுத்திரம், 24. பரவை, 25. உவா, 26. நரலை, 27. புணரி, 28. வேலாவலயம், 29. கார்கோள், 30. வாரம், 31. வாருணம், 32. சிந்து, 33. வாரம், 34. அம்புராசி, 35. உவரி.

உரிச்சொல் நிகண்டு              
“நீர்புணரி நேமி பரவைவேலாவலய     
மார்கழி யத்தி திரைநரலை – வாரிதி…” (119)

1. நீர், 2. புணரி, 3. நேமி, 4. பரவை, 5. வேலாவலயம், 6. ஆர்கலி, 7. அத்தி, 8. திரை,  9. நரலை, 10. வாரிதி, 11. பாராவாரம், 12. பௌவம், 13. வேலை, 14. முந்நீர், 15. உவரி, 16. ஆழி, 17. வாரி, 18. கடல்
  
“கலராசி தோயநிதியம்பர முப்புச்    
சலநிதி யேயுததி சிந்து சலதி…” (120)
1. கலராசி, 2. தோயநிதி, 3. அம்பரம், 4. உப்பு, 5. சலநிதி, 6. உததி, 7. சிந்து,
8. சலதி, 9. வெள்ளம், 10. நதிபதி, 11. வரை, 12. எக்கர்

கரை, கடற்றிரை, நீர்க்குமிழி, நீர்நுரை
உரிச்சொல் நிகண்டு

“கூலம்பா ரந்தீரங்கோடு தடங்கரைகல் 
லோந்தரங்க மலைதிரை – வேலையிற்…” (121)
கரை        :       1. கூலம், 2. பாரம், 3. தீரம், 4. கோடு, 5. தடம்

கடற்றிரை     :       1. கல்லோம், 2. தரங்கம், 3. அலை

நீர்க்குமிழி     :       புற்புரம்

நீர்நுரை   :       பேனம்

கடலின் பெயர்
பாரதிதீப நிகண்டு

“பரவை யளக்கர் மகரா லையமத்தி பௌவமுந்நீர் 
நரலை சமுத்திரம் வேலா வலயம் நதிபதியே…” (256)
               
1. பரவை, 2. அளக்கர், 3. மகராவையம், 4. மத்தி, 5. பௌவம், 6. முந்நீர், 7. நரலை, 
8. சமுத்திரம், 9. வேலாவலயம், 10. நதிபதி, 12. திரை, 13. இறவாலையம், 14. கார்கோள்,
15. கவருப்பு, 16. சித்தலை, 17. அரிகூலம், 18. ராசி, 19. கடல், 20. வேலை, 21. ஆர்கலி,
22. வாருதி

கடல், கடற்றிரை

பாரதிதீப நிகண்டு

“மாவாரி வீரையுததி சலதி மகோததிபா 
ராவார நேமி பெருநீர் புணிரிமை யம்பரமே…” (257)
               
1. மாவாரி, 2. வீரை, 3. உததி, 4. சலதி, 5. மகோததி 6. பாராவாரம், 7. நேமி,
8. பெருநீர், 9. புணிரிமை, 10. அம்பரம், 11. பூவாடை, 12. சாகரம், 13. சக்கரம், 14. ஆழி,
15. புணரி

நீர்த்திரை, கடற்கரை, நீர்க்கரை
பாரதிதீப நிகண்டு

“தரங்கங்கல், வோலம் விசிகர மேயறல் தத்துமலை 
விரிந்தான் னீர்த்திரையாலண்பர் பாரமல் வேலையுட…” (258)
நீர்த்திரை   :   1. தரங்கங்கல், 2. வோலம், 3. விசிகரம், 4. அறல், 5. தத்துமலை

கடற்கரை   :   1. ஆலண்பர், 2. பாரமல், 3. வேலை, 4. அருங்கரை

நீர்க்கரை : 1. கோடணை, 2. கூலம், 3.அந்திரம், 4.அடர், 5.வரையார், 6.வசிசம், 7. புனல்

செய்கரை, மலைச்சாரல், முல்லைநிலக் கான்யாறு, ஆறு
பாரதிதீப நிகண்டு

“செங்குலை சேதுக் குரம்பிவை செய்கரை தெள்ளருவி 
யங்கிரிச் சாரல் வருமாறுபவை யருங்கலுழி…” (259)
செய்கரை       : 1. செங்குலை, 2. சேது, 3. குரம்பு

மலைச்சாரல் : 1. தெள்ளருவி, 2. கிரி

முல்லைநிலக் கான்யாறு : 1. கலுழி, 2. ஆறுத்தி, 3. குடிஞை

ஆறு               : சிந்துநதி

கழிமுகம், உப்பளம், காவிரி, பொருனை, ஆன்பொருனை
பாரதிதீப நிகண்டு
“புகல்புகரோடை யதோமுக மென்னிற் பொருந்துகழி 
முகமது வாகுமுகங்காய லாங்கழி மொய்யுப்பள…” (260)
கழிமுகம்         : 1. புகல், 2. புகரோடை, 3. அதோமுகம்
உப்பளம்            : 1. வாகுமுகம், 2. காயலாம், 3. கழிமொய்

காவிரி             : கானல்

பொருனை     : பொன்னி

ஆன்பொருனை : 1. மகவாணி, 2. ஆனி

கடலின் பெயர்
சூடாமணி நிகண்டு
           
“பரவைதெண் டிரையே சிந்து பௌவமே பாராவாரம் 
நரலையார் கலியே யுந்தி நதிபதியம்பு ராசி…” (361)
               
1. பரவை, 2. தெண்டிரை, 3. சிந்து, 4. பௌவம், 5. பாராவாரம், 6. நரலை, 7. ஆர்கலி, 8. உந்தி, 9. நதிபதி, 10. அம்புராசி, 11. குரவை, 12. சக்கரம், 13. கார்கோள், 14. வேலாவலயம், 15. முந்நீர், 16. அரி, 17. மகராலயம், 18. நீராழி, 19. அம்பரம்,
20. வேலை

வாரிதி யளக்கர் நீண்ட வாரியே யுததி யோதம் 
வீரையன் னவமே யத்தி வெள்ளஞ்சா கரமே யாழி…” (362)
               
1. வாரிதி, 2. அளக்கர், 3. வாரி, 4. உததி, 5. ஓதம், 6. வீரை, 7. அன்னவம், 8. அத்தி, 9.  வெள்ளம், 10. சாகரம், 11. ஆழி, 12. சலதி, 13. உப்பு, 14. சலநிதி, 15. சமுத்திம், 16. வாரணம், 17. உவரி

மண்ணிற் கடல் வகை, கடல் பெயர்
கைலாச நிகண்டு

“ஆர்கலி பௌவம் அளக்கர் அத்தி 
ஆழி பெருநீர் அம்பர முந்நீர்…” (382)
               
1. ஆர்கலி, 2. பௌவம், 3. அளக்கர், 4. அத்தி, 5. ஆழி, 6. பெருநீர், 7. அம்பரம், 8. முந்நீர், 9. விரை, 10. சகரம், 11. வேலை, 12. வெள்ளம், 13. சலதி, 14. உப்பு, 15. சமுத்திரம், 16.  நேமி, 17. வாரி, 18. நரலை, 19. மகராலையம், 20. உவரி, 21. பாராவாரம், 22. பரவை, 23. கார்கோள், 24. வாருணம், 25. சிந்து, 26. வாரம், 27. அம்புராசி, 28. சானவி, 29. புணரி, 30. சலநெதி, 31. ஓதம், 32. நெய்தல், 33. தரங்கி, 34. நீர், 35. தொன்னீர், 36. அரி, 37. மாநீர், 38. குரவை, 39. மகோததி, 40. பயோததி, 41. உததி, 42. காராழி, 43. உந்தி, 44. நதிபதி, 45. அலையிரத்தி, 46. நாகரம், 47. அவனியாடை, 48. வேலாவலயம், 49. மேகமோனை

கடற்பெயர், கடற்கடவுள் பெயர்
ஆசிரிய நிகண்டு
“பரவைதெண் டிரைவேலை பெருநீர்முன் னீருவரி           
பௌவனதி பதிவாரணம்…” (151)
               
1. பரவை, 2. தெண்டிரை, 3. வேலை, 4. பெருநீர், 5. முன்னீர், 6. உவரி, 7. பௌவம், 8. நதிபதி, 9. வாரணம், 10. பாருடை, 11. சமுத்திரம், 12. சக்கரம், 13. சலநதி, 14. பயோதரம், 15. வெள்ளம், 16. நரலை, 17. அரலை, 18. அலை, 19. ஆழி, 20. அரி, 21. அத்தி, 22. அம்பரம், 23. அம்புராசி, 24. சலராசி, 25. உந்தி, 26. அளக்கர், 27. ஆர்கலி, 28. உததி, 29. வாருதி, 30. மகோததி, 31. அன்னவம், 32. புணரி, 33. குரவை, 34. வருணம், 35. மணியாகரம், 36. வாராகரம், 37. சிந்து, 38. வரி, 39. உவா, 40. வீரை, 41. உப்பு, 42.வாரி, 43. சாகரம், 44. நேமி, 45. சலதி, 46. திரை, 47. ஓதம்,  48. கராலையம், 49. மகராலையம், 50. விரிநீர், 51. வேலாவலையம், 52. ஆரல், 53. பாராவாரம், 54.மிகுகார்கோள்

கடற்கடவுள் பெயர் : வருணன்

அபிதான மணிமாலை
“செந்நீர்ப் பவளந் திகழ்கடல் தெண்டிரை
முந்நீர் புணரி சமுத்திரம் சாகரம்…” (1223)
               
1. செந்நீர், 2. பவளம், 3. திகழ்கடல், 4. தெண்டிரை, 5. முந்நீர், 6. புணரி, 7. சமுத்திரம், 8. சாகரம், 9. கந்தி, 10. சலதி, 11. சக்கரம், 12. கலி, 13. ஆர்கலி, 14. உந்தி, 15. நதி, 16. பதி, 17. உததி, 18. பயோததி, 19. குரவை, 20. நரலை, 21. கார்கோள், 22. கலராசி, 23. பரவை, 24. மகோததி, 25. பயோநிதி, 26. வாரிதி, 27. உப்பு, 28. உவர், 29. ஓதம், 30. உவரி, 31. வாரி, 32. அப்பு, 33. நீராழி, 34. ஆழி, 35. சிந்து, 36. அளக்கர், 37. அலை, 38. அம்போதி, 39. அம்பரம், 40. அத்திவேலா, 41. வலயம், 42. அரி, 43. சலநிதி, 44. வாரணம், 45. வாருணம், 46. அருணவம், 47. அன்னவம், 48. அம்புதி, 49. நேமி, 50. கருநிறவேலை, 51. பெருநீர், 52. பௌவம், 53. பாராவாரம், 54. பரப்பு, 55. பயோததி, 56. வாரம். 57. வீரை, 58. மகராலயம்
திரையின் பெயர்கள்
கடற்றிரையின் பெயர்
திவாகர நிகண்டு
           
“ஓதமும், புணரியம், கடற்றிரையாகும்” (879) – 1. ஓதம், 2. புணரி

புணற்றிரைப் பொதுப்பெயர்
திவாகர நிகண்டு
               
“விசிகரம், தரங்கம், அறல், கல்லோகம், அலை,             
புணற்றிரைக்கு வரும் பொதுப்பெயரே” (880)
               
1. விசிகரம், 2. தரங்கம், 3. அறல், 4. கல்லோலம், 5. அலை

வெண்திரையின் பெயர்

கைலாச நிகண்டு      
           
“புணரியுமோதமும், பொங்கு கல்லோலமும்       
அலையுந் தரங்கமும் ஆழிவெண்திரையே” (383)
       
1. புணரி, 2. ஓதம், 3. பொங்கும், 4. கல்லோலம், 5. அலை, 6. தரங்கம், 7. ஆழி

விரிதிரையின் பெயர்
கைலாச நிகண்டு
“அறலுந் தரங்கமும் அலையுங் கல்லோலமும் 
விசிகரமும் புனலின் விரிதிரைப் பெயரே” (384)
       
1. அறல், 2. தரங்கம், 3. அலை, 4. கல்லோலம், 5. விசிகரம், 6. புனல், 7. விரிதிரை

உவர்த்திரை

கைலாச நிகண்டு                
“இருணம் உவர்த்திரை யென்மார் புலவர்” (392) – இருணம்

கடலலையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“கடலலை அறல் சீகரம் திரை தரங்கம்             
ஓதம் புணரி என்றோதப் படுமே” (1228)
       
1. அறல், 2. சீகரம், 3. திரை, 4. தரங்கம், 5. ஓதம், 6. புணரி

கடல் பேரலையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“கல்லென்றொலிக்குங் கடற் பெருந்திரைப்பெயர்             
உல்லோலம் கல்லோலம் என்றோதுப” (1229)
       
1. கல்லென்றொலிக்கும், 2. உல்லோலம், 3. கல்லோலம்      
திரையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“திரை அலை தரங்கம் சீகரம் வாரம்             
அறை கல்லோலம் அறல் எனப்படுமே” (1231)
       
1. திரை, 2. அலை, 3. தரங்கம், 4. சீகரம், 5. வாரம், 6. அறை, 7. கல்லோலம், 8. அறல்

உவர்நீரின் பெயர்
கைலாச நிகண்டு
           
“உறையென் றுரைப்பது உவர் நீராகும்” (387) – உறை

கரையின் பெயர்கள்
கடற்கரையின் பெயர்
திவாகர நிகண்டு
           
“வேலையும், பாரா வாரமுங்கடற்கரை” (881) – 1. வேலை, 2. பாராவாரம்

கைலாச நிகண்டு
           
“வரையணை கூலம் வாரம் பாரம்     
 தீரம் கோடுதிரைக் கடற்குரைத்தனரே” (385)
       
1. வரையணை, 2. கூலம், 3. வாரம், 4. பாரம், 5. தீரம், 6. கோடு, 7. திரை
அபிதான மணிமாலை
           
“நீரார் பரவை நெடுங்கரை வேலை             
பாரா வாரம் பாரம் என்ப” (1230)
       
1. நீரார், 2. பரவை, 3. நெடுங்கரை, 4. வேலை, 5. பாரா, 6. வாரம், 7. பாரம்
           
“ஆழி தீரம் அணை வரை பாரம்             
வாரம் விளிம்பு என வைக்கப்படுமே” (1232)
   
1. ஆழி, 2. தீரம், 3. அணை, 4. வரை, 5. பாரம், 6. வாரம், 7. விளிம்பு

கரைப்பொதுப்பெயர்

திவாகர நிகண்டு
           
“தீரம், பாரம், வரை, அணை, கோடு,           
கூலம், வார், புனற்கரைக்கு பொதுப்பெயர்” (882)
       
1. தீரம், 2. பாரம், 3. வரை, 4. அணை, 5. கோடு, 6. கூலம்

செய்கரையின் பெயர்
திவாகர நிகண்டு     
“குலையும், சேதுவும், குரம்பும், செய்கரை” (883) – 1. குலை, 2. சேது, 3. குரம்பு

அபிதான மணிமாலை
           
“செய்கரை குலை அணை சேது குரம்பே” (1233)                       
1. குலை, 2. அணை, 3. சேது, 4. குரம்பு

கரையின் பெயர்
கைலாச நிகண்டு
     
“குரம்புஞ் சேதுவும் குலையும் அணையும்       
வரம்புஞ்செய் கரையென வகுத்தனருளரே” (386)
       
1. குரம்பு, 2. சேது, 3. குலை, 4. அணை, 5. வரம்பு
உப்பளத்தின்பெயர்

திவாகர நிகண்டு
           
“காயல், உப்பளம், ஆகக் கருதுவர்” (889) – காயல்

கைலாச நிகண்டு
 
“கானலுங்கழியுங் கருதில் உப்பளம்” (389) – 1. கானல், 2. கழி
           
“அகர முப்பள மாகுமென்ப” (391) – அகரம்

அபிதான மணிமாலை
           
“உப்பளம் அளக்கர் அளம் உவளகம் கழி           
 உவர்க்களம் இருணம் இரிணம் உவர்த்தரை” (1227)
       
1. அளக்கர், 2. அளம், 3. உவளகம், 4. கழி, 5. உவர்க்களம், 6. இருணம், 7. இரிணம்

கழிமுகத்தின் பெயர்கள்
கழியின்பெயர்
திவாகர நிகண்டு
           
“காயலும், முகமும், கழியெனப்படுமே” (887) – 1. காயல், 2. முகம்

கைலாச நிகண்டு
           
“காயலென்பது கழிப்பெயராமே” (388) – காயல்
கழிமுகத்தின் பெயர்

திவாகர நிகண்டு
           
“அதோமுகம், புகாரோடு, அருவி, கூடல்,             
கழிமுகமென்று கருதல் வேண்டும்” (888)
                       
1. அதோமுகம், 2. புகவர், 3. அருவி, 4. கூடல்

கைலாச நிகண்டு
“அதோமுகம் புகாரே பிறாக் கழிமுகம்” (393) – 1. அதோமுகம், 2. புகார்

அபிதான மணிமாலை
           
“கழிமுகம் அதோமுகம் கயவாய் கயவு           
அழிவி கூடல் அரவி புகார் ஆம்” (1225)     
1. அதோமுகம், 2. கயவாய், 3. கயவு, 4. அழிவி, 5. கூடல், 6. அரவி, 7. புகார்

கழிகாயல்
அபிதான மணிமாலை
           
“கழி காயல் உப்பளம் கானல் முரம்பே” (1224) – 1. உப்பளம், 2. கானல், 3. முரம்பு

சூழ்கழியிருக்கை
அபிதான மணிமாலை  
 “சூழ்கழியிருக்கை கோணாமுகம் தோட்டி ஆம்” (1226) – 1. கோணாமுகம், 2. தோட்டி

மணலின் பெயர்கள்
புதுமணற் குன்று
கைலாச நிகண்டு
           
“புளின மென்பது புதுமணற் குன்றே” (390) – புளினம்

வெண்மணல்
திவாகர நிகண்டு
           
“வாலுகம், வெண்மணல்” (912) – வாலுகம்

கைலாச நிகண்டு
               
“வாலுகமென்பது வெண்மணலாகும்” (399) – வாலுகம் 
நுண்மணல்
கைலாச நிகண்டு
           
“அயிரென் கிளவி யாகு நுண்மணல்” (400) – அயிர்

கருமணல்
கைலாச நிகண்டு                
“அறலென்பது யலைநுணங்கு கருமணல்” (401) – அறல்

மணற்குன்றின் பெயர்
திவாகர நிகண்டு                 
“புளினம் மணற்குன்றே” (913) – புளினம்

நுண்மணலின் பெயர்
திவாகர நிகண்டு

“அதர், அயிர், நுண்மணல்” (914) – 1. அதர், 2. அயிர்

கருமணலின் பெயர்

திவாகர நிகண்டு                
“அறலே, அலைநுண் கருமணலாகும்” (916) – அறல்

அகராதி வடிவில் நிகண்டுகளின் நெய்தல்நிலப் பெயர்கள்
               
திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 ஏழு நிகண்டுகளில் இடம்பெறும் இடப்பெயர்களில் ஒன்றான நெய்தல்நிலப் பெயர்களை அகராதி வடிவில் அகரவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே இடம்பெறும் அட்டவணையில் முதலில் இடப்பெயர்களும் அடுத்து அப்பெயருக்குரிய பொருள்களும், அடுத்து அந்நெய்தல்நிலப் பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் இடம்பெற்றுள்ளன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நெய்தல்நிலப் பெயர்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய சொற்களை விட்டுவிட்டு ஒரு பதிவினை மட்டும் கணக்கில் கொண்டு 34 நெய்தல்நிலப் பெயர்கள், பொருள், இடம்பெறக்கூடிய நிகண்டுகள் என்ற வகையில் இவ்வட்டவணையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அகர வரிசையில் நெய்தல்நிலப் பெயர்களின் அட்டவணை

வ.எண்.

சொல்

பொருள்

நிகண்டுப் பெயர்கள்

1

ஆறு

சிந்துநதி

பாரதிதீபம் 258

2

உப்பளம்

வாகுமுகம், காயலாம், கழிமொய், காயல், கானல், கழி, அகரம், அளக்கர், அளம், உவளகம், உவர்க்களம்,  இருணம், இரிணம்

பாரதிதீபம் 260

திவாகரம் 889

கைலாச நிகண்டு 389, 391

அபிதான மணிமாலை 1227

3

உவர்த்திரை

இருணம்

கைலாச நிகண்டு 383

4

உவர்நீர்

உறை

கைலாச நிகண்டு 387

5

கடலலை

அறல், சீகரம், திரை, தரங்கம், ஓதம்,  புணரி

அபிதான மணிமாலை 1228

6

கடலின் பெயர்

அத்தி, அத்திவேலா, அப்பு, அம்பரம், அம்புதி, அம்புராசி, அம்போதி, அரலை, அரி, அருணவம், அலை, அலையிரத்தி, அவனியாடை, அளக்கர், அன்னவம், ஆரல், ஆர்கலி, ஆழி, உததி, உந்தி, உப்பு,  உவரி, உவர், உவா,  ஓதம், கடல், கந்தி, கராலையம், கருநிறவேலை, கலராசி, கலி, காராழி, கார்கோள், குரவை, சகரம், சாகரம், சமுத்திரம், சலதி, சலநிதி, சலநெதி, சலராசி, சாகரம், சானவி, சிந்து, செந்நீர், தரங்கி, திகழ்கடல், திரை,  தெண்டிரை, தொன்னீர், நதி, நதிபதி, நரலை, நாகரம், நீராழி, நீர், நெய்தல், நேமி, பதி, பயோததி, பயோதரம், பயோநிதி, பரப்பு, பரவை, பவளம், பாராவாரம், பாருடை, புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகாலயம், மகோததி, மணியாகரம், மாநீர், மிகுகார்கோள், முந்நீர், மேகமோனை, வரி, வருணம், வலயம், வாரணம், வாரம், வாராகரம், வாரி, வாரிதி, விரிநீர், விரை, வெள்ளம், வேலாவலயம், வேலை

திவாகரம் 878

உரிச்சொல் 119, 120

பாரதிதீபம் 256

சூடாமணி 361, 362

ஆசிரிய நிகண்டு 151

அபிதான மணிமாலை1223

7

கடலின் பேரலை

கல்லென்றொலிக்கும், உல்லோலம், கல்லோலம்

அபிதான மணிமாலை 1228

8

கடல், கடற்றிரை

மாவாரி, வீரை, உததி, சலதி,  மகோததி  பாராவாரம், நேமி, பெருநீர், புணிரிமை, அம்பரம், பூவாடை, சாகரம், சக்கரம், ஆழி, புணரி, ஓதம்

பாரதிதீபம் 257

திவாகரம் 879

9

கடற்கடவுள்பெயர்

வருணன்

ஆசிரிய நிகண்டு 151

10

கடற்கரை

ஆலண்பர், பாரமல், வேலை, அருங்கரை

பாரதிதீபம் 258

11

கடற்கரையின் பெயர்

வேலை, பாராவாரம், வரையணை,  கூலம், வாரம், பாரம்,  தீரம், கோடு, திரை, நீரார்,  பரவை, நெடுங்கரை, வேலை, பாரா, ஆழி, தீரம், அணை,  வரை, விளிம்பு

திவாகரம் 881

கைலாச நிகண்டு 385

அபிதான மணிமாலை 1230, 1232

12

கடற்றிரை

கல்லோம், தரங்கம், அலை

உரிச்சொல்  121

13

கருமணல்

அறல்

கைலாச நிகண்டு 401

திவாகரம் 916

14

கரைப்பொதுப்பெயர்

தீரம், பாரம், வரை,  அணை, கோடு,  கூலம்

திவாகர நிகண்டு 882

15

கரையின் பெயர்

கூலம், பாரம்,  தீரம், கோடு,  தடம், குரம்பு, சேது,  குலை,  அணை,  வரம்பு

உரிச்சொல் 121

கைலாச நிகண்டு 385

16

கழிகாயல்

உப்பளம், கானல், முரம்பு

அபிதான மணிமாலை 1224

17

கழிமுகம்

புகல், புகரோடை, தோமுகம், காயல்,  கயவாய், கயவு, அழிவி, கூடல், அரவி, புகார்

பாரதிதீபம் 260

கைலாச நிகண்டு 388, 393

அபிதான மணிமாலை 1225

திவாகரம் 888

18

கழியின் பெயர்

காயல், முகம்

திவாகர நிகண்டு 887

19

காவிரி

கானல்

பாரதிதீபம் 260

20

சூழ்கழியிருக்கை

கோணாமுகம், தோட்டி

அபிதான மணிமாலை 1226

21

செய்கரையின் பெயர்

 குலை,  சேது,  குரம்பு, அணை, செங்குலை, சேது,  குரம்பு

திவாகர நிகண்டு 883

அபிதான மணிமாலை 1233

பாரதிதீபம் 258

22

திரையின் பெயர்

திரை, அலை, தரங்கம், சீகரம், வாரம், அறை,  கல்லோலம், அறல்

அபிதான மணிமாலை 1228

23

நீர்க்கரை

கோடணை, கூலம், அந்திரம், அடர், வரையார், வசிசம்,  புனல்

பாரதிதீபம் 258

24

நீர்க்குமிழி

புற்புரம்

உரிச்சொல் 121

25

நீர்த்திரை

தரங்கங்கல், வோலம், விசிகரம், அறல், தத்துமலை

பாரதிதீபம் 258

26

நீர்நுரை

பேனம்

உரிச்சொல் 121

27

நுண்மணல்

அயிர், அதர்

கைலாச நிகண்டு 400

திவாகரம் 914

28

புணற்றிரைப் பொதுப்பெயர்

விசிகரம், தரங்கம்,  அறல், கல்லோலம், அலை

திவாகரம் 880

29

பொருனை

பொன்னி

பாரதிதீபம் 260

30

மணலின் பெயர்

புதுமணற் குன்று

புளினம்

கைலாச நிகண்டு 390

திவாகரம் 912

31

மலைச்சாரல் வரும் ஆறு

தெள்ளருவி, கிரி

பாரதிதீபம் 258

32

விரிதிரையின் பெயர்

அறல், தரங்கம்,  அலை,  கல்லோலம், விசிகரம், புனல்,  விரிதிரை

கைலாச நிகண்டு 383

33

வெண்திரையின் பெயர்

புணரி, ஓதம்,  பொங்கும்,  கல்லோலம்,  அலை, தரங்கம், ஆழி

கைலாச நிகண்டு 383

34

வெண்மணல்

வாலுகம்

கைலாச நிகண்டு 399

திவாகர நிகண்டு 912

முடிவுரை
இக்கட்டுரையில் திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்நெய்தல்நிலப் பெயர்கள் அனைத்தும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. நெய்தல்நிலம் சார்ந்த பெயர் என்பதை கடலின் பெயர், திரையின் பெயர், கரையின் பெயர், உப்பளத்தின்பெயர், கழிமுகத்தின் பெயர், மணலின் பெயர் போன்ற 34 நெய்தல்நிலம் சார்ந்த பெயர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இன்றுள்ள இயந்திர யுகத்தாலும், புதுமை ஆக்கத்தாலும், இலக்கிய இலக்கண, நிகண்டு நூல்களில் கையாளப்பட்ட சொற்கள் அனைத்தும் நம் சமூக வழக்கினின்று மறைந்துக் கொண்டு வருகின்றன. எனவே அச்சொற்களை அறிந்து கொள்ளும் விதமாக ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்ஆய்வுகள் மூலம் அரிய சொற்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றையெல்லாம் தொகுப்பதாலும், தொகுத்த சொற்களுக்குப் பொருள் விளக்கம் காண்பதன் மூலமும் பல்வேறு அகராதிகளை உருவாக்க முடியும். அதற்கு முன்னோடி முயற்சியாகத்தான் இவ்ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
துணைநின்ற நூல்கள்
1.சுப்பிரமணியன், ச.வே., (ப.ஆ), தமிழ் நிகண்டுகள் தொகுதி – 1 & 2, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001. முதற்பதிப்பு, டிசம்பர் – 2008.
2.சற்குணம், மா., தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், புதிய எண் 16,  முதல் தளம், பாலாஜி நகர், இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை – 14.
3.நாச்சிமுத்து, கி., தமிழ் இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில். 1983.
4.சேதுப்பிள்ளை, ரா.பி., தமிழகம் ஊரும் பேரும், சீதை பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5. முதற்பதிப்பு, பிப்ரவரி 2012.
5.ஜெயதேவன், வ., தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், 282, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. முதற்பதிப்பு, 1985.
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கி. சுமித்ரா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்)
மல்லுப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி – 63

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் | வெ. கெளதம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-வெ. கெளதம்
முன்னுரை
                 
விளையாட்டு என்பது பொழுதுபோக்காகவும் வெற்றி தோல்வியை நிர்ணிக்கும் என்றாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு என்பது கிராமப்புறங்களில் நகர்புறங்களிலும்  வயது வேறுபாடு இன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை ஒன்று கூடி  விளையாண்ட காலகட்டம் அது. இன்று தொலைக்காட்சியை கைபேசி மற்றும் பல அடுக்கு கட்டிடங்கள் விளையாட்டினை முடக்கிவிட்டது அழித்துவிட்டது என்றைக்கு கூறலாம் இயற்கையோடு கலந்து ஓடி ஆடி விளையாடிய நோய் நொடி இல்லாமல்  வாழ்ந்த காலமும் அது தான். இந்த தலைமுறைக்கு விளையாட்டு பற்றியும் வியர்வை பற்றியும் ஏசி வகுப்பில் பாடம் எடுக்கப்படுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு             
தமிழர்களின் விளையாட்டு என்பது உடலும் வியர்வையும் சேர்ந்து ஆடுவது ஆகும். விளையாட்டின் போது உடல் வலிமை மனவலிமை ஆகியவை மேம்பட்டு இருந்தது. சிறுவர் முதல்  பெரியவர் வரை தனது சிந்தனைகளையும் பிறர் சிந்தனைகளையும் தோன்றினர் பொழுதுபோக்காகவும் அறிவியலாகவும்  இருந்தது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
 
விளையாட்டுக்களின் வகைகள்               
விளையாட்டினை அவற்றை நிலையைக் கொண்டு வீர விளையாட்டு, பொழுதுபோக்கு விளையாட்டு, தனி நபர் விளையாட்டு, இருவர் விளையாட்டு, குழு விளையாட்டு,  சிறுவர் விளையாட்டு, சிறுமியர் விளையாட்டு, சிறுவர் சிறுமியர் செய்து விளையாடும் விளையாட்டு, மகளிர் விளையாட்டு, ஆடவர் விளையாட்டு, பொது விளையாட்டு என பல விளையாட்டுகளை கொண்டிருந்தது
      பொழுதுபோக்கு  விளையாட்டாகும் விளையாடினர். போட்டி மனப்பான்மை கொண்டு விளையாடினர் அக விளையாட்டு பர விளையாட்டு என இரண்டு வகையாகவும் பிரித்து விளையாடினர். இதில் உடல் திறன் அறிவுத்திறன்  மனமகிழ்ச்சி ஆகியவை மேம்பட்டு இருந்தது. விளையாட்டுகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தது விடாமுயற்சியும் இருந்தது

சிறுவர்கள் விளையாட்டுகள்         
சிறுவர்கள் ஒன்றாக ஆடிப்பாடி மகிழ்ந்து விளையாண்டு இருந்த காலகட்டம் அன்று ஒற்றுமையும் பலப்படுத்தியது இயற்கையோடு கூடி காலை மாலை இன்று வெயிலும் மழையிலும் விளையாட காலகட்டம் . ஆவியம் பம்பர விளையாட்டு தவிட்டு குச்சி கிளித் தட்டு கில்லி சைக்கிள் உப்பு விளையாட்டு கள்ளன் போலீஸ் விளையாட்டு கோலி கண்ணாடி குண்டு கால் தாண்டி கிட்டிப்புலி மந்தியோடுதல் பந்து விளையாட்டு ஒச்சியப்பன் தலைவனைக் கண்டுபிடித்தல் உருண்டை திருட்டை விளையாட்டு மாட்டுக்கால் திருவிளையாட்டு சைக்கிள் விளையாட்டு தேர் அல்லது சப்பர விளையாட்டு சாமி ஊர்வள விளையாட்டு மாட்டு விளையாட்டு வண்டி விளையாட்டு நுங்கு வண்டி விளையாட்டு குருடனை கொக்கு விளையாட்டு  ஐஸ் பால் ரெடி விளையாட்டு கல் எடுக்கும் விளையாட்டு  காற்றாடி பட்டம்  ஒத்தையா ரெட்டையா, தை தாத்தாதை, தைத்தக்கா தை, பட்டத்திரி எலியும் பூனையும் காக்கா குருவி குண்டு விளையாட்டு ஆடு விளையாட்டு சக்கர விளையாட்டு கண்ணாமூச்சி விளையாட்டு என சிறுவர்கள் சேர்ந்து விளையாடிய விளையாட்டுக்கள் இருந்தது
சிறுமியர்கள் விளையாட்டு
பூப்பறிக்க வருகிறோம், பூசணிக்காய் விளையாட்டு, உன் புருஷன் பெயர் என்ன, பூச்சொல்லி விளையாட்டு, ஒன்று பத்தி இருபத்தி,குச்சி குச்சி ராக்கம்மா, சோற்றுப் பானை விளையாட்டு, கலாக்காய் விளையாட்டு, பல்லாங்குழி,பொம்மை விளையாட்டு, என் தலைக்கு எண்ணெய் ஊத்து, கரகரவெண்டி, சமையல் விளையாட்டு,நொண்டி, கல்லாட்டம் குச்சி ஆட்டம்,  ராஜா ராணி, 

சிறுவர் சிறுமியர்  விளையாட்டுகள்
               
நொண்டி,நிலா பூச்சி,கிறுகிறு மாம்பழம், சாட்டு பூட்டு,கண்ணாமூச்சி,ஒரு தலையிலே ஆடுமேயுதாம்,யாருக்கு வேட்டை? பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு,  தட்டா மாலை, கும்மி, கோலாட்டம்,பாண்டி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி,பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி,சில்லுக் கோடு,கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை,நொண்டி, ராஜா மந்திரி

மகளிர் விளையாட்டு
பல்லாங்குழி, தட்டாங்கல்,தாயம்

ஆடவர் விளையாட்டு
கில்லி, சடுகுடு, உறியடித்தல், சேவல்,கட்டு, எருது கட்டு,சிலம்பாட்டம்,ஆடுபுலிஆட்டம்,
மஞ்சுவிரட்டு,சிலம்பம்,கபடி,வழுக்கு மரம்
 
சிலம்பாட்டம்
               
கையில் உள்ள கம்பினை  வீசி ஒலியெழுப்பும் விளையாட்டு  கம்பு வீசுதரன் காலடியை எடுத்து வைக்கும் முறை வேகமாக வீசும் திறன் இவை மூன்றுமே சிலம்பாட்டத்தின் முக்கியத்துவம் ஆகும்
சடுகுடு
    
சடுகுடு விளையாட்டு பழந்தமிழர் விளையாட்டை என்பர் கபடி என்றும் கூறுவர்
 
தாயம்
               
மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் தாயகம் ஒன்று விளையாடுவதற்கு வரைபடம் கட்டத்தில் தாயகட்டம் என்று சொல்வார்கள் உருட்டு கட்டை பகடைகளை பயன்படுத்துவார்கள் சோழியம் பயன்படுத்துவார்கள்
 
பல்லாங்குழி
           
பல்லாங்குழி என்பது பெண்கள் பருவம் அடைந்த பொழுது விளையாடத் தொடங்கும் விளையாட்டாகும் மரத்தில் அல்லது ஏதேனும் ஒரு உலோகத்தால் 7  குழியான கட்டையில் இருபக்கமும் இரு பெண்கள் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு ஆகும்
 
தட்டாங்கல்
            
கல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழே வந்து விழுவதற்குள் முன்பாக கைகளால் தரையில் தட்டி கல்லை பிடிக்கும் விளையாட்டை ஆகும்

கண்ணாமூச்சி
           
சிறுவர் சிறுவீர்கள் இணைந்து கண்களை மூடிக்கொண்டு விளையாடும் ஆட்டம் கண்களை மூடிக்கொண்டு சுற்றியும் இருக்கு நண்பர்களே கண்டுபிடிப்பது ஆகும்
 
நொண்டி விளையாட்டு
             
ஒரு காலனி பயன்படுத்தி ஆடும் ஆட்டம் நொண்டி விளையாட்டு ஆகும் ஒருவர் நொண்டி அடித்துக் கொண்டு மற்றவர்களை தொட்டு விளையாடு மாட்டமாகும். 

கிட்டிப்புள்
               
இது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டாகும் நீல குச்சி கிட்டி என இரண்டு வைத்திருப்பார்கள் நிலத்தில் சிறிது பள்ளம் தோண்டி அவற்றில் கிட்டியை வைத்து நீளக்குச்சியால் அடிப்பார்கள்
 
பம்பரம்
          
பம்பரம் எனும் விளையாட்டு  சாட்டையை எடுத்து பம்பரத்தில் சுழற்றி கையால் எடுக்க வேண்டும் அல்லது மற்றொரு பம்பரத்தை உடைக்க வேண்டும் ஒரு வட்டத்திற்குள் பம்பரம் விடுவதும் உண்டு

குண்டு விளையாட்டு         
கோழி விளையாட்டு என்றும் கூறுவர் நிலத்தில் குளிகை தோண்டி அதனை நோக்கி குண்டை வைத்து அடித்து விழச் செய்ய வேண்டும் கிராம மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகவும் இருந்தது

ஒத்தையா? இரட்டையா? விளையாட்டு 
       
கிராமங்களில் புளியங்கொட்டை முத்து அல்லது அவரை கையில் வைத்து மறைத்து விளையாடும் விளையாட்டு ஒத்தையா இரட்டையா என்பதை கண்டுபிடிப்பதை ஆகும்
 
பட்டம் விடுதல்      
கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் கூட இப்போது பட்டம் விடுவது என்பது பொழுது பார்க்க இருந்தது ஒரு காகிதத்தில் இரண்டு குச்சிகளை வைத்து நூல்களை கட்டி உயரம் பறக்க விடுவார்கள்

 கரகர வண்டி    
சிறுவர் சிறுமிகள் பலர் நின்று கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பார்கள் யார் கடைசியாக சுற்றுகிறார்களோ அவரை சென்றடைவர் கரகர வண்டி காமாட்சி வேண்டி என பாடிக்க கொண்டு விளையாடுவார்கள்
 
கள்ளன் போலீஸ் விளையாட்டு
        
கள்ளன் போலீஸ் அல்லது திருடன் போலீஸ் என்று சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து விளையாடும் விளையாட்டு  களனாகும் போலீசாகவும் மாறி மாறி நடித்து விளையாண்டு தனது திறமையும் அறிவையும் வெளிப்படுத்துவார்கள்
 
கால் தாண்டி 
    
பச்சை குதிரை என்றும் கூறுவார்கள் காலை நீட்டி உட்காந்தவாறு கால் மேல் கால் வைப்பார் பின் கால் மேல் விரல் வைப்பான் பின் இரண்டு விரல் வைப்பார்கள் பின்பு குனிவான் மற்றவர்கள் அதனைத் தாண்டுவார்கள். அவன் மீது படாமல் தாண்டுவது இந்த விளையாட்டாகும்

உருண்டைத் திரண்டை விளையாட்டு 
        
விளையாட்டில் ஒருவன் குனிந்து கொள்வான்  அவன் முதலில் மீது மற்ற பையன் ஒருவன் கை மீது ஒருவன் வைத்துக் கொள்வான் தலைவனா இருப்பின் யாரிடமாவது ஒருவன் துரும்பு கொடுப்பான். அவன் அனைவரின் உருண்டை திரட்டு உள்ளங்கையை பிரட்டை எடப்பாடிக்கொண்டே கையை தேய்ப்பார் குனிந்தவன் யாரிடம் துரும்பு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் குனிய வேண்டும்
 
சைக்கிள் விளையாட்டு
                  
இரண்டு பையன்கள் நின்று கொண்டு கைகளை கோர்த்துக்கொள்வார்கள் மூன்றாவது பையன் கைகோர்த்து இருப்பவன் மீது அமர்ந்து கொள்வான் அமர்ந்த பையன் சைக்கிளில் ஓடுவது போன்று காலை ஆட்டுவான் ஒரு எல்லைக்கு போக வேண்டும் எல்லைக்கு போனவுடன் மாறி மாறி உட்கார்பவர் முடிவு செய்யப்படுவார்
 
கல் எடுக்க விளையாட்டு
                           
ஒரு வட்டத்தில் ஒரு கல் இருக்கும் எத்தனை பேர் வேண்டுமானால் பங்கு பெறலாம் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளவர்கள் எண்கள் உண்டு விளையாட்டு தலைவன் என்ன ஒன்று கூறினால் அந்தப் பக்கத்தில் அதே என் உள்ளவர் கல்லை எடுக்காவிட்டால் தோற்றவன் அவன் கல்லை எடுத்து விட்டால் தோற்றவன் பக்கத்தில் உள்ள ஜெயித்தவன் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் அதேபோன்று ஒரு பக்கத்தில் உள்ள நான்கு பேரும் கல்லை எடுத்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்றவர்
 
வட்டத்திரி     
பிள்ளைகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவர் துணியை கையில் வைத்துக் கொண்டு அவர்களை சுட்டு சுற்றி வருவான் அப்போது குலை குலையை முந்திரிக்காய் என்று சொல்வார்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஒருவருக்கு பின்னால் போட்டுவிட்டு சுற்றி சுற்றி போடுவார்கள் துணியை எடுத்தவன் இவனைப்போலவே சுற்றி வருவான் துணியை எடுக்காவிட்டால் இது யாருக்குப் பின் உள்ளதோ அவனை துணியால் அடிப்பான்
 
எலியும் பூனையும்
     
எலியாக இருப்பவன் வட்டத்திற்குள்ளே இருப்பான் பூனையாக இருப்பவன் வட்டத்திற்கு வெளியே இருப்பான் பூனையாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பவன் உள்ளே நுழைய முயற்சிப்பான் துணி உள்ளே வந்துவிட்டால் எலிவேலியே சென்றுவிடும் போனாய் இருப்பவன் எலியை தொட்டுவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும் இவ்வாறு மீண்டும் மீண்டும் விளையாடுவது

ஆடு ஓநாய் விளையாட்டு
       
சிறுவர்கள் வரிசையாக ஒருவர் இருப்பினை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்பார் ஒருவர் மற்றவர் சுற்றி சுற்றி வருவான் என் ஆட்டைக் காணமோ என நிற்பவர் கூறுவர் வரிசையில் இருந்து பிரிந்து நிற்பவனை தொடுவான் பின்பு தொட்டவன் சுற்றிவர வேண்டும் வரிசையாக நிற்பவர்களை ஆடுகளாகவும் சுற்றி இருப்பவர் ஓநாய்களாகவும் கருதுவதால் இவ்வாறு இந்த விளையாட்டு பெயர் உண்டானது
 
நிலாப்பூச்சி         
நிலா காலங்களில் விளையாடும் விளையாட்டு ஆகும் சிறுவனும் சிறுமியும் பிடித்து வருவாள் அவள் நிலா வெளிச்சத்தில் நின்று கொள்வாள் மற்றவர்கள் நிழலில் நின்று கொள்வார்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தொடுவார் வெளிச்சத்தில் உள்ள நிழலை தொட்டாலும் தொடுபவர்கள் பிடித்து கொண்டு வர வேண்டும்

பூசணிக்காய் விளையாட்டு
               
சிறுமிகள் விளையாடும் விளையாட்டு தரையில் அமர்ந்து ஒருவர் இருப்பினை மற்றொருவர் பிடித்துக் கொண்டு முதலில் இருக்கும் சிறுமி தோட்டக்காரன் கடைசியில் இருக்கும் சிறுமி பூசணிக்காய் ஒரு சிறுமி ராஜாவாகும் மற்றொரு சிறுமி சேவானாகவும் நடிப்பர் ஒவ்வொரு நடிப்பும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளது. பூசணிக்காய் விதை விதைத்தது முதல் அதை அறுவடை செய்யும் வரை ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி விளையாடுவார்கள்
.
மஞ்சுவிரட்டு
       
ஜல்லிக்கட்டு மாடு பிடி காளைப்போர் மஞ்சு விரட்டி  என பல பெயர்கள் உண்டு  பழந்தமிழ் ஏறுதழுவுதல் என்றும் வழங்கினர். பொங்கல் விழாவின்போது இவ் விளையாட்டு நடைபெறும் வெற்றி பெற்ற வீரனுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படும் மாடு அல்லது காளையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சென்று அதன் முதுகில் உள்ள பரிசு பொருளை எடுப்பது இந்த போட்டியாகும்
 
பொம்மை விளையாட்டு
                
பொம்மை துணி மரக்கட்டை மண் கல் போன்றவற்றில் பொம்மைகளை செய்து விளையாடுவார்கள் குழந்தைகள் சிறு வீடு கட்டி விளையாடுவதும் இந்த விளையாட்டு தான் சாப்பாடு செய்து விளையாடுவார்கள்

அம்மானை விளையாட்டு
     
பெண்கள் குழுவாக அமர்ந்து வினா விடை கேட்டு விளையாடுவது இதற்கு இறுதியில் அம்மானை என்று சொல்லி முடிப்பார்கள்
 
ஊஞ்சல் விளையாட்டு      
மரத்தடியில் அல்லது ஒரு இடத்தில் கயிறு கொண்டு ஊஞ்சல் கட்டி  அதில் அமர்ந்து விளையாடுவார்கள். ஊஞ்சல் மேலும் கீழும் போய்வரும்
 
முடிவுரை               
அந்த காலகட்டத்தில் விளையாட்டு என்பது பொழுதுபோக்காகவும் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை செய்தது. ஏதேனும் ஒரு தேடலும் கட்டலும் அதிலிருந்து  இயற்கையோடு ஒன்றி வாழ்க காலகட்டங்களில்விளையாட்டுகளும் வாழ்வியலில் ஒன்றாக இருந்தது ஆனால் இன்று கைக்கும் கண்களுக்கும்  மட்டுமே விளையாட்டு நடைபெறுகிறது  தொலைபேசியில் விளையாடும் விளையாட்டு பொருளாதாரத்தையும் குழந்தைகளின் மனநிலையையும் மூளையின் செயல்பாட்டையும் குறைக்கிறது.இன்றைய விளையாட்டு ஓடவும் முடியாமல் விளையாடவும் முடியாமல் ஆட்களும் இல்லாமல் நான்கு சுவருக்குள் கூண்டுக்கிளியை போல வாழ்கிறது இந்த கால சமுதாயம் என்பது வேதனையாக ஒன்று. மீண்டும் இயற்கையோடு விளையாடப் பழகிக் கொண்டு வாழ வேண்டும்

துணை மற்றும் பார்வை நூல்கள்
1) நாட்டுப்புறவியல் ஆய்வு  – டாக்டர் சு.சக்திவேல்

2) நாட்டுப்புறவியல் – சு.சண்முகசுந்தரம்

3) அமைப்பியல் ஆய்வியல் நாட்டுப்புற விளையாட்டுகள் – முனைவர் செ.இளையராஜா

4) தமிழக கிராமிய விளையாட்டுக்கள் – குமரி ஆதவன்

 
ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்
 
வெ. கெளதம்
 
துறைத்தலைவர் மற்றும்
உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விஜயமங்கலம்

 

சங்க காலத் தொழிற்பிரிவில்  தூதுவர்கள் மற்றும் ஒற்றர்களின் வாழ்வியல் கூறுகளும் பணிகளும்

சங்க காலத் தொழிற்பிரிவில் தூதுவர்கள் - முனைவர். த. தினேஷ்
 முன்னுரை           
ங்கத்தமிழர்கள் காதலையும் வீரத்தையும் தங்களது இருகண்களாகப் போற்றினர். இத்தகைய காதல் பொருட்டும் வீரம் பொருட்டும் தூதுவிடும் முறை சங்ககாலம் தொட்டே நடைமுறையில் இருந்து வந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இவ்வகைத் தூதுமுறை உதவுகின்றது. தூது செல்வோர்களைத் தூதுவர் எனவும் வேவுபார்போர்களை ஒற்றர்கள் எனவும் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் அரசமைப்பு முறைகளில் இவர்களின் பங்களிப்புகள் குறித்தும்  இவ்வாய்வுக்கட்டுரையில் காண்போம்.
தூதின் இலக்கணம்         
தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். தமிழ் இலக்கிய நூல்களான இலக்கண விளக்கம், பிரபந்தத்தீபிகை, முத்துவீரியம், இரத்தினச்சுருக்கம்நவநீதப்பாட்டியல் ஆகியவற்றில் தூது குறித்த  இலக்கணத்தைக் காணமுடிகின்றது. ஆனால் இது சங்ககாலம் தொட்டே வழக்கத்தில்  இருந்துவந்துள்ளது. மன்னர்கள் ஓலைச்சுவடிகளிலோ அல்லது பட்டுத்துணிகளிலோ செய்திகளை எழுதி தூதுவர்கள்ஒற்றர்கள் மூலமாகக் குதிரையில் அனுப்புவது  அக்காலத்தில்  வாடிக்கை.
தூதுவர்கள் 
               
தூது என்னும் தொழில் மிகவும் நல்லியல்புடைய ஒரு தொழிற்பிரிவாகும்.   இருநாட்டு மன்னர்களுக்கு இடையே பகை உண்டாகாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவரே தூதர் எனப்படுவர். தற்கால  வழக்கில் கூறினால் ‘Ambassador’ எனும் சொல் நிலைத் தூதர்களையும் ‘Envoy’  என்பது தற்காலகத் தூதரையும் குறிக்கும்.    தூதர்கள் கல்வி, போர், சந்து செய்வித்தல் (“ஓதல் பகையே தூதிவை பிரிவே”, தொல்.   பொருள்:25) என்னும் மூன்று காரணங்களை முன்னிட்டுத் தங்கள் தலைநகரை விட்டுப் பிரியலாம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.  தூது உயர்ந்தோருக்கு உரியது.   உயர்ந்தோர் என்பதற்கு “ஒழுக்கத்தானும் குணத்தானும், செல்வத்தானும், ஏனையரினும் உயர்வுடையவராதலின் உயர்ந்தோர் ஆவர்”1 என்பது இளம்பூரணர் கருத்து ஆகும்.  தூதுத் தொழில் அரசியலிலும், போர்ச்சூழலிலுமே பெருமளவு நிகழ்ந்தது என்றாலும் அகவாயில்களாகத் தூது செல்வதும் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

சங்க காலத்தில் காணலாகும் புகழ்பெற்ற தூது அதிகமான் நெடுமானஞ்சியிடமிருந்து தொண்டைமானிடம் ஒளவையார் சென்ற தூதேயாகும். (புறம்.93) புறப்பாடல்களில் அரசர்கள் போர் குறித்த செய்திகளைச் சொல்லத் தூதுவரை அனுப்புவர்.   ஒருக்கால் மன்னன் போர் குறித்து வீரர் பலரும் வந்து சேருமாறு தூது விடுத்தான்.   தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு வீரர் பலரும் திரண்டனர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. (புறம். 284, 1-2), மேலும் பதிற்றுப்பத்து பாடலொன்றும் தூதுவரைப் பற்றி,

“ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந்  தோற்கென
அம்புடை வலத்தர் உயர்ந் தோர் பரவ”            (பதிற்.  80:9-11)               
என ’நும்மைக் காக்குடம் பாதுகாவற் பணியை மேற்கொள்வோனாகிய என் இறைவனுக்கு நீரும் திறை இட்டுப் பணிவீராக’ என்று சொல்லி ‘உயர்ந்த பண்புடையவராகிய நின் தூதுவர் நின்னுடைய அருங்குணங்களை எல்லாம் பாராட்டி எடுத்துக்கூறுவர் என அரிசில் கிழார் இரும்பொறையினைப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.   இங்குத் தூதுவரைச் சிறந்த வலிமையானோர் என்றும் உயர்ந்த ஆற்றலுடையவர் என்றும் குறிப்பிடப்படுகின்றார்.
                வயலைக்கொடி போல வாடிய இடையினையும், வருத்தந்தோய்ந்த நடையினையும்  உடைய இளம் பார்ப்பான் இரவின்கண் வந்து உள்ளே சென்று சில சொற்களே சொன்னான்.  உடனே மதில் கோடற்கென்று வைத்திருந்த ஏணியையும், வாயில் கதவுக்கு வலியாக உள் வாயிற்படியிலே நிலத்தே வீழ இடும் மரமான சீப்பையும் களைந்துவிட்டனர்.   அதுபோன்றே வேந்தன் ஊர்ந்து செல்லும் யானையின் மணியும் களையப்பட்டது.   என்னும் கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது,

“வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே”         (புறம்.305)               
என்ற இப்பாடல் பார்ப்பான் தூது சென்றதற்குச் சான்றாக அமைந்துள்ளது.  வேந்தனொருவன் போருக்கு ஆயத்த நிலையில் இருந்தபொழுது, பார்ப்பான் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் ஏணியும், சீப்பும், யானையின் மணியும் களையப்பட்டன என்னும் செய்தியில் இருந்து பார்ப்பானும் தூது சென்றுள்ளனர் என்பது தெளிவு. இவர்கள் மட்டுமின்றி பாணர்கள், குறுநில மன்னர்கள், சீறூர் மன்னர்கள்.   புலவர்கள், முதலானோரும் தூது சென்றுள்ளனர்.   பண்டைய வேந்தர்கள் தம்முடைய ஆட்சி சிறக்க வேண்டி, நல்ல திறன் வாய்ந்த தூதுவர்களை நியமித்தனர்.    எனவே தூதருக்கும் – வேந்தருக்கும், தூதருக்கும் – அரசுக்கும்  இடையே நல்லுறவு இருந்ததால் இவர்கள் சங்க காலத்தில் மதிப்பு வாய்ந்து காணப்பட்டனர்.  எனவே   இவர்கள் முதல் நிலைத் தொழிற்பிரிவில் வைத்துப்போற்றப்பட்டனர்.

ஒற்றர்கள்               
பகை நாட்டின் / அண்டை நாட்டின் நிகழ்வுகளை அறிவதற்கு அரசர்கள் ஒற்றர்களைப் பயன்படுத்தினர்.  இவர்கள் ‘ஒற்றர்கள்’ அல்லது ‘வேவு பார்ப்போர்’ என அழைக்கப்பட்டனர். சந்தேகப்படாத மாற்று உருவத்துடன், பார்த்தவர்க்கு அஞ்சாமல், அறிந்ததை யாருக்கும் வெளிப்படுத்தாமல் இருப்பவனே ஒற்றன்.  பகை நாட்டின் திட்டங்கள், சூழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் முதலானவற்றை அறிந்து அவற்றைத் தம் அரசர்களிடம் தெரிவித்தல் இவர்களின் பணியாகும்.
               
வேவு பார்ப்போரைத் தமிழ் மன்னர்கள் அதிக அளவில் பயன்படுத்தினர்.   இவர்களின் தொழில் ‘ஒற்று’ அல்லது ‘வேய்’ எனப்பட்டது.   நாட்டிலுள்ள நிலைகளை, மக்களின் நிலைகளை ஒற்றர்களின் மூலம் அரசு புரிபவன் அறிவானேயானால், அவன் மீதும் அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துப் போற்றுவர்.  பிறநாடுகளுக்கு ஒற்றாடச் செல்வோர், பிறர் அறியாவண்ணம் உடை உடுத்தியும், பேசியும் பழகியும் நடித்தும் ஒழுகி வந்தாலும், சிலபோது பிறரால் அறிய நேர்வதுண்டு.   இந்நிலையில் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளத் துணிந்தும், உயிரைவிட துணிந்தும் தம் தொழிலைச் செய்வர்.
   
‘ஒற்றினாகிய வேயே’ (தொல் பொருள்:58) இதில் வேய் என்பது ஒற்றருடைய அறிக்கை, ஒற்று என்பது அவர்கள் செய்யும் தொழில் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.   புறத்தினையின் தொடக்க நிலையான நிரை கவர்வோரும், மீட்போரும் ஒற்றர்களை ஏவினர்.   இவ்வாறு “ஒற்றறிதல் நாட்டில் நெருக்கடி நிறைந்த காலங்களில் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளது”2.  எதிரிப் படைகளிடமிருந்து செய்திகளைத் திரட்டிவந்த ஒற்றர்க்கு நிறையப் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.   மதுரைக்காஞ்சி குறிப்பிடும் ‘நாற்பெருங்குழுவில்’ஒற்றரும் ஒருவர் என்பார் நச்சர்.  

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் “அரசனின் அவையில் ஒற்றர்களுக்குத் தூதுவர்களைப் போல் அதிகாரமும், தகுதியும் வழங்கப்படவில்லை.   தூதர்கள் பொது நிர்வாக அதிகாரிகள், எனவே அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டனர். ஆனால் “ஒற்றர்களோ ரகசிய வேவு வேலைப் பார்ப்பவர்கள்.   அவர்கள் அகப்பட்டால் உடனே கொல்லப்படுவர்”4  என்ற ராமச்சந்திர தீட்சிதரின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
உறையூரை ஆண்ட நெடுங்கிள்ளி என்னும் சோழ மன்னன் இளந்தகன் என்னும் புலவர், ஒருவரை ஒற்றன் எனக்கருதிக் கொல்ல முற்பட்டான்.   (புறம்.   47) இதனை அறிந்த கோவூர்கிழார் கிள்ளிக்கு உண்மையினை எடுத்துக்கூறி அவ்விளந்தகனைக் காத்தார் என்பதை அறிய முடிகின்றது.
 அரசர் ஒரு செய்தியை அறிந்துவர மூன்று ஒற்றர்களை அனுப்புவர்.   அம்மூவருமே ஒருவரையொருவர் ஒற்றர் என அறியார்.   பின்னர் அவர்கள் மூவரும் அறிந்துவந்த செய்தியினைக் கேட்டு ஒப்பிட்டு உண்மையினை அறிவர். உள்நாட்டு மக்களையும் அயல்நாட்டு மக்களையும் மாறுவேடத்தில் வேவு பார்த்து வந்த இவர்கள் பல்வேறு வகைப்பட்ட சப்தங்களை ஏற்படுத்தி தங்களது செய்திகளைப் பரிமாறி வந்தனர்.    இவ்வாறாகத் தம் அறிவையும் திறமையும் பயன்படுத்திப் பணி செய்த ஒற்றர்களைப் பற்றிய சில குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.   எனவே இவர்கள் சமுதாயத்தில் மிக முக்கியத் தொழில்களில் தம் உயிரைப் பணையம் வைத்து ஒற்றர்களாகச் செயல்பட்டதால் இவர்கள் சங்க அடுக்கமைவுச் சமுதாயத்தில் முதல்நிலைத் தொழிற்பிரிவினர்களில் இருந்திருக்கலாம் எனக் கருத இடம் இருக்கின்றது.

குறிப்புகள்
1.இளம் பூரணர் (உரை), 1973, தொல்,பொருள்.28, கழகம், பக்.30.

2.நச்சினார்க்கினியார் (உரை), தொல், பொருள்.58. கழகம். சென்னை
3.நச்சினார்க்கினியார் (உரை),1974 பத்துப்பாட்டு, உ.வே.சாமிநாதையர் (பதி), ப.396. உ. வே. சாமிநாதர் நூல் நிலையம், சென்னை.

4.VRR.   Dikshiter : Mauryan polity, பக்.181.
5.https://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0311-html-a0311661-6941

பார்வை நூல்கள்
1.திவாகர நிகண்டு, திவாகரர்.

2.தமிழில் தூது இலக்கியம், முனைவர் வே.இரா.மாதவன்., அன்னம் பதிப்பகம், தஞ்சை-007.

3.பிரபந்தப் பாட்டியல் (மரபியல்-15), கு.சுந்தரமூர்த்தி, கழக வெளியீடு..

4.தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணம், கழக வெளியீடு.
5.புறநானூறு, ஔவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2015.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர். த. தினேஷ், 
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

(வேளாளர் கல்வி நிறுவனம்)   ஈரோடு.


 

மழைக்காடும் மனிதமும் | சி.மேரி ஜீவிதா

மழைக்காடும் மனிதமும் சி.மேரி ஜீவிதா
ஆய்வுச்சுருக்கம்
  சமூகத்தில் ஒரு சிக்கல் முதிர்ந்து உச்சம் பெறும்போது அதனைக் களையும் வண்ணம் உருவெடுத்ததே இலக்கியங்கள்.இவ்விலக்கியங்கள் காலத்தின் தேவைக்கேற்பத் தன்னளவில் செயலாற்ற வேண்டிய கட்டாயத்துடன் தோற்றம் பெறுகின்றன. நவீனக் காலத்தில் சூழல் பாதுகாப்பின் அவசியம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.சூழல் என்பது உயிரியப் பன்மயம் என்பதை மறந்து விட்டது மனிதக் குலம்.உயிர்ம மண்டலத்தில் பல்லுயிர் ஓம்பல் நிலைத்து நிற்கும் போது தான் அவை நற்சூழலை நீடித்த முறையில் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சி அறாது பார்த்து வரும்.
இயற்கையைப் பயன்படுத்தி அனைத்துத் தலைமுறைகளும் மகிழ்ந்து வாழ முடியும் என்ற பகுத்தறிவு மனிதரிடையே இல்லாமல் போய்விட்டது. தனது வாழ்நாளுக்கான மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இயற்கையை சுய லாபத்திற்காக மனிதன் அழித்து வருகிறான். 
 இயற்கை வளங்களில் ஒன்றாகவும் இயற்கையையே பாதுகாக்கும் காரணிகளில் ஒன்றாகவும் விளங்கும் மழைக்காடுகள் தொடர்ந்து அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.மனித இனத்தின் சுயநலம், பேராசை, வியாபார நோக்கம், அரசியல், ஆடம்பரம்,அறியாமை போன்றவையே இதற்குக் காரணங்களாக அமைகின்றன.  உயிர்ச்செறிவு மிக்க மழைக்காடுகளின் அழிவுக்கான காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வின் வழி பெற முடிகின்றது.

முன்னுரை
  இலக்கியங்களே தொடக்கம் முதல் இன்று வரை மனிதக் குலத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகின்றன. மனிதச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பும் ஆழமும் விரிந்து கொண்டே வருவதால் பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சூழலியல்சார் சிந்தனைகள் படைப்புகளாக நவீனக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இயற்கையானது தன்னகத்தே நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு போன்ற ஐந்து காரணிகளை உள்ளடக்கியது. இவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவையும் கூட.இவற்றை பேணி பாதுகாக்காவிடில் பல்வேறு விபரீதங்களைச் சந்திக்கக்கூடும். இன்றளவிலும் அதை நம்மால் உணர முடிகின்றது. இயற்கையின் வளங்களில் ஒன்றான மழைக்காடுகள் வெகு நாட்களாக அழிக்கப்பட்டு வருவதைச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள், “மழைக்காடுகளின் மரணம்”என்ற தனது படைப்பில் விளக்கியுள்ளார். அவரது கூற்றை சூழலியல்  நோக்கில் ஆராயும் பாங்கினைக் கட்டுரையில் காண்போம்.

சூழலியல் விளக்கம்
  ஓர் உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள காரணிகளுடன் நெருங்கியத் தொடர்புடையது. இந்தக் கூட்டமைப்பு தொடர்பைச் சுற்றுச்சூழல் என்று பொதுவாகக் கூற முடியும். சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியலைச் சூழலியல் (Ecology) என்று குறிப்பிடலாம். Ecology என்ற வார்த்தை Oikos என்ற கிரேக்கப் பதத்திலிருந்து தோன்றியது.Oikos என்றால் வீடு என்றும் logos என்பது அதைப்பற்றி அறிவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது. 1868 இல் சூழலியல் என்ற வார்த்தையை முதலில்  ஹென்ஸ் ரெய்ட்டன் என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் (1866-1870) இல் எர்னெஸ்ட் ஹெக்கேல்  என்பவரே சூழலியலுக்கான இலக்கணத்தை வகுத்தவர் ஆவார். அவரது கூற்றுப்படி,
 
“சூழலியல் என்பது ஒர் உயிரினத்திற்கும் அதனைச் சூழ்ந்துள்ள  உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையிலான உறவு முறையாகும்” என்று கூறுகிறார்.
 ( சுற்றுச்சூழல் கல்வி,ப.எ.1 )
தமிழ் இலக்கியங்களில் சூழலியல்
சங்க இலக்கியங்கள் பலவும் ஆதி சமூகத்தினர் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டதை எடுத்துரைக்கின்றன. நம்முடைய மூதாதையர்கள் இயற்கையை எப்போதும் தங்களது அக வாழ்க்கைக்குப் புறமாகப் பார்த்ததில்லை . சூழல் சார்ந்த தெளிவான அறிவுடன் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்திருந்தனர்.

தொல்காப்பியம்
தமிழின் தலைசிறந்த இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம். இதனைத் தமிழ் உலகிற்கு அளித்த தொல்காப்பியர் ஐந்திரம் படைத்தவராக விளங்கியவர். ஐந்திரம் என்பது நிலம், நீர்,வளி, விசும்பு, நெருப்பு ஆகியவற்றை பற்றிய ஆழ்ந்த அறிவுடைமையாகும்.இதனாலேயே,

“நிலம் தீ நீர் வளி விசும்பாடைந்தும் கலந்த மயக்கம் உலகம்”    (தொல்.பொரு.635)
என்று கூறியுள்ளார். உலகம் தோன்றிய முறையை ஐம்பூதங்களின் இயல்பான சேர்க்கை என்று கூறியுள்ளார்.
தொல்காப்பியர் இன்றைய சூழலியல் பார்வையை அன்றே திணைக் கோட்பாட்டில் விளக்கிச் சென்றுள்ளார்.பொருள் அதிகாரத்தில் திணையியல் கோட்பாட்டை நிலத்தின் அடிப்படையில் வகுத்தளித்துள்ளார். திணை என்பதை வாழும் இடம்,புரியும் ஒழுகலாறு என்ற நோக்கில் ஐவகை திணையாகவும்,நால்வகை நிலமாகவும் வகுத்துள்ளார்.முதல், கரு, உரி என்ற மூன்று பொருட்களாக அந்நிலத்துக்கும் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை விளக்கியுள்ளார். அவரது கருத்து இன்றைய சூழலியல் கருத்தோடு ஒத்திசைவாக அமைந்துள்ளது.

புறநானூறு
தொல்காப்பியரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஐம்பூதங்கள் சேர்ந்ததே இயற்கை என்னும் கருத்தை புறநானூறும் எடுத்துரைக்கின்றது.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வழித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் 
என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை”   ( புறம்.பா.எ.2-5 )
திருக்குறள்
உலகப் பொதுமறை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளிலும் சூழலியல் சார்ந்த சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய  தரண் ”  (திரு.பொரு.742)
என்பது வள்ளுவரின் குறள். இதில் நிலம், நீர், மழை, அடர்ந்த நிழல் உடைய காடு இவை நான்கும் அமைந்தது அரண் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.இவை உலக உயிர்களுக்குப் பாதுகாப்பாக விளங்குவதைச் சுட்டியும் காட்டுகின்றார்.
இதுபோன்று நம் இலக்கியங்கள் பலவும் இயற்கையின் தன்மையையும் சிறப்பினையும்  எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

மழைக்காடுகள்
காடுகள் பல்வேறு வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக மழைக்காடுகள் விளங்குகின்றன. இக்காடுகள் ஓர் உயிர்மப் புதையல் என்று சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் கூறுகிறார். அழிந்துவரும் மழைக்காடுகள் பற்றி அவர் கூறுகையில், அமேசான் மற்றும் போர்னியோ மழைக்காடுகள் பற்றிச் சுட்டிக்காட்டி விளக்குகிறார்.
இக்காடுகள் அதன் அமைவு முறையால் பல்லுயிர் வாழக்கூடிய இடமாகவும் சுற்றுச்சூழலை வளமுடன் பாதுகாக்கக்கூடிய மிகச்சிறந்த காரணியாகவும் இருக்கின்றன. அதனைக் கீழ்க்காணும் பட்டியல் மூலமாக அறிய இயலும்.
மழைக்காடும் மனிதமும்
(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.10,22)
மழைக்காட்டின் அமைவு முறை
மழைக்காட்டின் மரங்கள் 200 அடி உயரம் வளரக்கூடியவை. உயரடுக்கு,கவிகை அடுக்கு, தாளடுக்கு, தரை அடுக்கு என்னும் நான்கு அடுக்குகளை உடையது.உயர்ந்த மரம், அதற்கடுத்தார் போல் குட்டை மரங்கள், அதற்கடுத்தார் போல் புதர் செடிகள், அடுத்ததாக செடி இனங்கள், தரையை மூடி இருக்கும் மூடாக்கு பயிர்கள் ,பின்னர் தரைக்குள் உள்ள கிழங்கு வகைகள், நீண்ட  கொடி இனங்கள் என்று  இங்கே வளர்கின்றன.இந்த அமைவு முறையால் சூரிய ஒளி ஊடுருவாத படி எப்போதும் நிழல் பரவி குளிர்ச்சியான சூழலையும் கொண்டு விளங்குகின்றன. இவ்வாறு வளிமண்டலம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இக்காடுகளில் எப்போதும் லேசான தூரலோ மழையோ பெய்து கொண்டே  இருக்கும். ஆகவே தான் இக்காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.இத்தகைய மழைக்காடுகளை  நம் இலக்கியங்கள் அணிநிழற்காடு என்று குறிப்பிடுகின்றன.    (திரு.பொரு.742)
  இதனை,
“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கத மென்றிசையில் திசை போயதுண்டே”
    என்று  தென்னை (தெங்கு)பாக்கு (கமுகு) பலா (வருக்கை) மா, வாழை என்ற ஒரு வகையான அடுக்கு முறையைக் கூறி,சீவக சிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தை  திருத்தக்கத்தேவர் பாடியுள்ளார்.
  (திணையியல் கோட்பாடு.ப.எ. 40-42 )
மழைக்காட்டின் பயன்கள்
      மழைக்காட்டின் அமைவு முறையால் மரங்களிலும் புதர்களிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. மேலும் நீர் நில வாழ்விகளும் அதிகப்படியான நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. இங்குள்ள மரங்களின் அடர்த்தியால் மழை பெய்யும் போது மொத்தமாகத் தரையில் விழாமல் துளித்துளியாக இறங்குவதால் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுகின்றது.மேலும் மரத்தில் உள்ள இலைகள் மற்றும் உயிரினங்களின் கழிவுகள்  கலந்து  தரைப்பரப்பில் சத்துள்ள உரமாக உருவாகின்றன. இதனால் அங்குள்ள மண், வளமானதாக உருவாகின்றது. ஆனால் இத்தகைய உரம் உருவாகி மண் வளம் பெறப் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகின்றது. மேலும் தரைப்பரப்பு முழுவதும் மரங்களின் வேர்களாலும் செடிகளும் போர்த்தப்பட்டு இருப்பதினால் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணரிப்பில்லா இடத்தில் விழும் மழைநீரானது நிறமற்று காணப்படும்.இதையே வள்ளுவர் மணி நீர் என்று குறிப்பிடுகிறார்.        (திரு.742)
மழைக்காட்டின் மரணம்
காடழிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவை, பெரு வணிக நிறுவனங்களே ஆகும். இந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உலக நாடுகளுக்கிடையே வியாபார அரசியல் நடைபெற்று வருகின்றது. இதில்  நிதி நிறுவனங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இவர்களது சூழ்ச்சி வலையில் அறிந்தும் அறியாமலும் விழுந்த ஏழை நாடுகள் சுற்றுச்சூழலின் வில்லன்களாகப் பார்க்கப்படுகின்றனர். வருமானத்திற்காக மழைக்காடுகளை அழிப்பதால் ஏழை நாடுகளுக்கு இப்பெயர்.ஆனால் வெட்டப்பட்ட மரங்களை  இறக்குமதி செய்யும் வளர்ந்த நாடுகளுக்கோ இப்பெயர் பொருந்துவது இல்லை.

தொழிற்சாலைகள்
அமேசான் காட்டின் ஒரு பகுதியில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் சில ஆயிரம் மைல்கள் அழிக்கப்பட்டன. பின் அந்த ஆலைகள் இயங்குவதற்கு மின்சாரம் தயாரிக்க மரக்கரி எடுப்பதற்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டன.
 
காகித ஆலை
காகித ஆலை அமைக்கவும் மேற்ச்சுட்டியவாறு   அமேசான் காடுகள் அழிக்கப்பட்டன. சுமார் 5600 சதுர மைல்கள் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன.இதுபோன்று பல மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆடம்பர நுகர்வு கலாச்சாரம்
கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் எஃகு போன்ற பொருட்களை தயாரிக்கும் ஆலைகள் இயங்குவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. பணக்காரர்கள் சொகுசுப் பயணம் செல்ல தொடர்ந்து மரங்கள் இவ்வாறு வெட்டப்படுகின்றன.பியானோவின் தாளக்கட்டைகள் செய்ய ‘ஜெலுத்தோங் ‘என்ற மரம் வெட்டப்படுகின்றது. பியானோ இசைக்கப்படும் போது அதன் இன்னிசையில் நாம் மெய் மறக்கலாம். ஆனால் அதன் பின்புறம் உள்ள பல உயிரினச்  சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை மனிதர் அறியாதது போல் செயல்படுகின்றனர்.

கனிம வளங்கள்
நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் கனிமங்களால் ஆனது. உலோகக் கனிமங்கள், உலோகம் அல்லாத கனிமங்கள் இவற்றால் தயாரிக்கப்படும் பொருள்களுக்காகவும் அதன் பயன்பாட்டிற்காகவும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

மேய்ச்சல் நிலங்கள்/ பண்ணை அமைப்பு
உணவு உற்பத்தி செய்யும் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அதிக லாபம் அடைவது வணிக நிறுவனங்களே. மேய்ச்சல் நிலங்களுக்காக அழிக்கப்பட்ட காட்டின் பரப்பும் கால்நடைகளின் மேய்ச்சலால் வளம் இழந்த காட்டின் பரப்பும்  தரிசாக மாற்றப்படுகிறது.

வேளாண்மை
சோயா உற்பத்தி மற்றும் கொழுத்த வாழைப்பழங்களுக்காகவும் இக்காடுகள் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்பட்ட காட்டின் நிலப்பரப்பு அதிக உரச்செறிவு மிக்கதாக இருக்கும். இந்நிலத்தில் பயிரிடப்படும் பொருட்கள் அதிக சத்துள்ளதாகவும் அதிக விளைச்சலையும் கொடுக்கும். ஆனால் நாளடைவில் நிலத்தின் வளம் குறைந்து விடும். பின் அந்நிலங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு  விளைநிலங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை,
”வேளாண்மைக்காகக் காடுகளை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் போதுமான நிலங்கள் வெளியே உள்ளன” என்று கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த டேனியல் பிரிண்டிஸ் கூறியுள்ளார். இதிலிருந்து வேளாண்மை செய்ய வேண்டிய இடத்தை விட்டுவிட்டு காட்டை அழிப்பது மூடத்தனம் என்பது தெளிவாகிறது. (மழைக்காடுகளின் மரணம்.ப.எ.24 )
காட்டுத்தீ
காட்டுத்தீயினால் மழைக்காடுகள் அழிவது சொற்ப அளவில்  மட்டுமே. ஆனால் வியாபார அரசியலால் அழிவது தான் அதிகம். இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயினால் விபரீதம் ஏற்படுவதைவிட நன்மைகளும் உண்டு. எவ்வாறெனில் காட்டில் உள்ள விதைகளில் சில வெப்பம் படும்போது மட்டுமே  விதை வெளிப்பட்டு முளைப்பு ஏற்படும்.மேலும் காட்டுத் தீயினால் எரியும் தாவரங்கள் சொற்ப அளவில் மட்டுமே உண்டு. அவையும் சாம்பல் உரமாக மக்கிப் பிற தாவரங்களுக்கு உரமாக மாறுகின்றது. செயற்கையாக ஏற்படுத்தப்படும் காட்டுத் தீக்குப் பின்னால் அப்பகுதியை பாதுகாப்பற்றது என அறிவித்து அதைக் கையகப்படுத்தும் வியாபார அரசியல் ஒளிந்துள்ளது.அநியாயமாகப் பல காட்டுவாழ் உயிரினங்கள் தீயில் கருகி மடிகின்றன. மேலும் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் பழங்குடிகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதரமும் முடக்கப்பட்டு தினக்கூலிகளாக மாற்றப்படுகின்றனர்.

காடழிப்பின் விளைவுகள்
மழைக்காட்டில் வெட்டுமர நிறுவனங்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின் எஞ்சிய துண்டுக் காடுகள் “பாதுகாக்கப்பட்ட கான் பகுதி” என்று அழைக்கப்படுகின்றன.ஆனால் இவற்றால் எந்த பயனும் இல்லை. காடு சுருக்கமடைவதால் உயிரினங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே முடக்கப்படும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் விலங்குகளின் வலசைப் பாதைகள் மாற்றம் பெறுகின்றன.மேலும் மகரந்தச் சேர்க்கை, விதைப்பரவல், உணவு சுழற்சித் தடை போன்றவை நடைபெறுகின்றது. மேலும் ஓடைகள், ஆறுகள் மாசுபடுகின்றன அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. 
வெட்டப்பட்ட காட்டிற்குள் நேரடியாக வெயில் தாக்குவதால்  தாவரங்கள் அழிவைச் சந்திக்கின்றன.ஒரு பெரிய மரத்தினை வெட்டி அது கீழே விழும் போது அதைச் சுற்றியுள்ள பல மரங்களும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் மரங்களை நம்பி வாழ்கின்ற உயிரினங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன. இவ்வாறு  ஒரு சங்கிலித் தொடர்பு போன்று பல உயிர்களுக்கான அழிவு ஒரு மரத்தை வெட்டும்போது நிகழ்கின்றது.
இதுபோன்று செய்துவிட்டு மறு காடுவளர்ப்பு என்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் பசப்புவது வியாபார அரசியலின் உச்சகட்ட தந்திரம் என்றே கூறலாம்.  இவ்வாறு ஒட்டுமொத்த உயிர் மண்டலத்திற்கும் எதிரான செயலைச் செய்வதினால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. பருவநிலை மாற்றத்தால் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு மரத்தை வெட்டி அதன் தலைமுறையை அழிப்பது  நாம் ஒவ்வொருவரும் நமது தலைமுறையை அழிக்க இப்போதே ஆயுதம் தயார் செய்து வைக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

கானகத்தின் மீட்பு
இவ்வுலகம் பன்மயத்தன்மை கொண்டது. அதுபோல ஒரு காடு நெடுங்காலம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அங்குள்ள மரங்கள், செடிகள், கொடிகள், உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் வாழ வேண்டும் இல்லையென்றால் அதன் நிலை மாறி காடே அழிந்து விடும்.இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். இதனை வலியுறுத்தும் விதமாக வள்ளுவர்,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”    (குறள் 322)
என்று கூறியுள்ளார்.உயிரியப் பன்மயத்தில் பல்லுயிர் ஓம்பி, இயைந்து வாழ்வதே சிறப்பான வாழ்வாகும்.
காடுகளை அழித்து வருமானம் ஈட்டுவதை விட காடுபடு பொருட்கள் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். இதனை,

“சிறு பொருள்களான பழங்கள் கொட்டைகள் நார் பஞ்சு மூலிகை வாசனை பொருட்கள் நச்சுப் பொருட்கள் மூங்கில் பிரம்பு என்னை ரப்பர் தேன் அரக்கு பிசின் இறந்த விலங்குகளின் தந்தம் மற்றும் தோல்” போன்ற 18 வகையான பொருட்களில் இருந்து அதிக வருமானம் ஈட்ட முடியும் என்கின்றனர் வல்லுநர்கள் .(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.9 )
முடிவுரை
இவ்வுலகம் தொடர்ந்து இயங்கக்கூடிய ஒரு இயங்கு தளம். இதில் அனைத்து உயிரினங்களும் அதற்கான பங்கினை ஆற்றி வருகின்றன.  இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும்இருக்கின்றன.
ஆறறிவு படைத்ததால் மற்ற உயிரினங்களில் இருந்து மேலானவன் என்ற நிலையை மனிதன் அடைகிறான். ஆனால் அறிவியல், வளர்ச்சி என்ற எந்திரத்தனமான ஆற்றலினால் அறமற்ற அறிவு  நிலையை அடைந்து விட்டான். இயற்கை விதிகளை மறந்து விட்டு செயற்கைத் தன்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். இந்நிலையில் இருந்து மீண்டு அனைத்து உயிரினங்களையும் மதித்து போற்றுகின்ற மாண்புடன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வானாயின் நிகழ்காலமும் எதிர்காலமும் சிறப்பானதாய் அமையும்.

துணைநூல் பட்டியல்
முதன்மை நூல்
1.நக்கீரன்    –  மழைக்காடுகளின் மரணம்
                            
முதல் பதிப்பு – டிச. 2021
                            
வெளியீடு  – காடோடி பதிப்பகம்
                            
நன்னிலம் – 610105
, திருவாரூர் மாவட்டம்

துணைமை நூல்கள்
1 .  சுற்றுச்சூழல் கல்வி
      டாக்.சுசிலா அப்பாத்துரை
     முதல் பதிப்பு –  அக்.2005
     பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட் இராயப்பேட்டை
     சென்னை –  14

2.  திணையியல் கோட்பாடு
     பாமயன்
    முதற்பதிப்பு – நவ. 2012
    வெளியீடு  – தடாகம்
    திருவான்மியூர்
    சென்னை – 41

3. திருக்குறள்
    மாணிக்கவாசகன்,ஞா
    உமா பதிப்பகம், 58
    ஐயப்ப செட்டி தெரு
   மண்ணடி
   சென்னை- 600001 

4.தொல்காப்பியம் (தெளிவுரை )
    புலியூர் கேசிகன்
5. புறநானூறு ( மூலமும் உரையும் )
    புலியூர் கேசிகன்


 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சி.மேரி ஜீவிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
டாக்.என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,   
காளப்பட்டிகோயம்புத்தூர் – 48.
 

நிதர்சனம்|கவிதை|முனைவர் த. சுதாமதி

நிதர்சனம் முனைவர் த. சுதாமதி

📜 நானும்


எனது எண்ணங்களும்


ஒன்றாகவே பயணிக்க


ஒவ்வொரு நாளும்


ஓடிக்கொண்டிருக்கின்றோம்..!


 

📜 எனக்கு  வியப்புகள் பல உண்டு!


பல்வேறு சந்தர்ப்பங்களில்


துணிச்சல் மிக்கவர்கள்


வீரமான முடிவையும்


உயிரை துச்சமாக


மதிக்கும் மனதையும்


கொண்டவர்களாகவே


உள்ளார்கள்..!


 

📜 எனது


நம்பிக்கையும்


நான் கொண்ட


பார்வையும்


பலமானதுதான்..!


 

📜 ஆனாலும்!


சில நேரங்களில்


என்முன் தோன்றும்


மாயையை,


வாழ்வின் சூட்சமத்தை


அலங்கரிக்கவோ


நிறுத்தவோ


போராடுகிறேன்..!


 

📜 என்னுடைய


ஆத்ம மனத்திற்குள்


நிற்கும்


கம்பீரமானவர்கள் என்ற


எனது கணிப்புகள்


அனைத்தும்


தவிடு பொடி ஆகி விடுகிறது


உடற்கூறு ஆய்வின் போது..!


 

📜 நான்கு பேர்


முன்னிலையில்


நிர்வாணமாகக் கிடத்தப்படுவோம்


என்ற அச்சத்தினால்..!


 

📜 மீண்டும் நொறுங்குகிறேன்!


மீண்டும் அழுகின்றேன்!


மீண்டும் துவண்டு போகிறேன்!


நான்தான் வலிமையான


பெண்ணாச்சே..!


 

📜 பெண்ணென்றால்


வீழ்வதற்காகப் பிறந்தவளா?


வீழ்த்தப்பட…


கிள்ளி எறிய …


நான் ஒன்றும் பூவல்லவே..!


 

📜 ஆதி புருஷனானாலும்


எம் புருஷனானாலும்


எப்பேர்ப்பட்ட


எமகாதர்களையும்


எதிர்த்து நின்று


போரிடவே – மனம்


எண்ணுகிறது..!


 

கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. சுதாமதி


துறைத்தலைவர் ,

வணிக நிர்வாகவியல் துறை,

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


சேலம்-05.

 

அம்மாவின் கைவளையல்|கவிதை|ச. கார்த்திக்

அம்மாவின் கை வளையல் - கார்த்திக்

          தீர்வு


📜 நான் புத்தகத்தைத்


திறந்து வைத்தேன்


எனக்கு ஐயத்தை


எடுத்து வைத்தது..!


 

📜 நான் எழுத ஆரம்பித்தேன்


எனக்குச் சிந்தனையைத்


தேட வைத்தது..!


 

📜 நான் கண்ணீர்


எடுத்து வைத்தேன்


எனக்கு மழைநீர்


எடுத்து வைத்தது..!

 

📜 
நான் ஏரிகளில்


கட்டிடம் கட்டினேன்


மழை நீர்


செல்வதற்கே வழி இல்லை!


மழை வந்தால்
 

ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

📜 நீ இருக்கும் இருப்பிடமே!


நான் இருக்கும்


இருப்பிடம் அல்ல !


நீ பத்து மாடிக்கட்டிடத்தில் இரு !


நான் ஒன்பதாவது மாடி வரை !


 

📜 நான் சில நாள் இருப்பேன்


நான் சென்ற பிறகே !


நீ இரு


வருடத்திற்கு ஒரு முறை நான்


என்னுடைய வீடு தேடி வருவேன்..!


 

📜 என்னை வைத்தே
 

கண்ணீர் வேண்டாம்


உனக்கு, எனக்கு தீர்வு வேண்டும்!


 

         உண்மை


📜 காலத்திற்கு என் வீடு


தேடி வருகிறேன் !


சாலை ஓரம்


வீட்டிற்கு புகுந்த


மழை நீர் !


தன்னுடைய இருப்பிடம்


தேடி அலைகிறதே


இந்த பெரு வெள்ளம்..!


 

           கவிதை

📜 எழுதி எழுதிக் கொண்டேன்


எழுதி முடியவில்லை


திருந்தி திருந்திக் கொண்டேன்


திருந்தி முடியவில்லை


என்னுடைய குப்பைத்தொட்டி


நிறைந்ததே


அப்பொழுதே


என்னுடைய கவிதை


முழுமை பெற்றது.


 

அம்மாவின் கைவளையல்


📜 நான் வாழ வேண்டும்


நினைத்தே பருகினாள்


இப்போது !


நான் பருகினேன்


என் தாயின் முகத்தில் மகிழ்ச்சி


ஆனால்


தாய் உண்ண வில்லை!


நான் அறியவில்லை!


 

📜 என் தாய் நாள்தோறும்


வேலைக்குச் சென்றால்


நான் தினந்தோறும்


பள்ளிக்குச் செல்வேன் !


 

📜 என் அம்மாவின்


மூச்சி


அந்த அடுப்பின் புகையில்


கலந்தே


எரிய தொடங்குகிறதே !


 

📜 என் வீட்டின் சுவர்களிலே


சிறு சிறு சேமிப்பு


எங்க அம்மாவின்


கை வளையல் !

 

📜 என் தாயின் செயலே


நான் இந்த கவிதை


எழுதுவதற்கு !


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்,


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு,


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),


திருப்பத்தூர்.

கொங்கு நாடு|ஆய்வுக்கட்டுரை|வெ. கெளதம்

கெளதம் கொங்கு நாடு
முன்னுரை
               
     பழந்தமிழகம் சேர நாடு சோழநாடு பாண்டி நாடு என முப்பெரும் பிரிவுகளாக இருந்தது. சேர சோழ பாண்டிய நாடுகளேயன்றித் தமிழகத்தே கொங்கு நாடு,தொண்டை நாடு என்று இரு பிரிவுகள் உண்டு.இவற்றுள் கொங்கு நாடு என்னும் பிரிவு தொன்று தொட்டு இருந்து. சேர நாடு முதலிய 5 முறையே சேர மண்டலம், சோழ மண்டலம்,பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் எனவும் பெயர் பெற்று விளங்கியது.

கொங்கு நாடு
               
கொங்கு என்பதற்கு பல பெயர்கள் உண்டு. தேன் பூந்தாது குரங்கு என்று பெயர் உண்டு. குறிஞ்சி நிலம் முல்லை வளம்,மருதம் நிலமும் மிகுந்து காணப்பட்ட நாடு, மலையும் காடும் நிறைந்த நாடு தேன் மிகுந்த நாடு கொங்கு நாடு என்ற புகழ் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்க கால புலவர்கள் புகழ் பாடி மகிழ்ந்தனார்.”குன்றும்,பல பின்னொழிய வந்தனன்” என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்துக்குரியவை என்பர்.

சங்க இலக்கியத்தில் கொங்கு நாடு
”கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்.தும்பி” (குறுந் *1)
இறையனார் பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்று பொருள் கொண்டு பாடினர். சிறுபாணாற்றுப் படையில்,

“கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்” (சிறுபா*184)
எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு உ.வே.ச. உரைகூறினார்.  கொங்கு முதிர்நறு விழை” (குறிஞ்*83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது என்றும் கூறலாம்.
“கொங்கில் குரும்பில் குரக்குத்தளியாய்”   – ஊர்த்தொகை
“கொங்கே புகினும் கூறை கொண்டா றலைப்பாரில்லை” – அவிநாசித் தேவாரம்
“கொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருனானை”  – பேரூர் கோவில் திருப்பதிகம்
“கோதைநனி யாண்ட தொரு கொங்குவள நாடு”
               
என்று அருணகிரிநாதர் பாட பின் திருப்பேரூர் புராண  ஆசிரியர் வர்ணித்து பாடியுள்ளார். அவிநாசிப்புராணம், கரூர்ப் புராணம், பவானிப்புராணம், திருச்செங்கோடுப் புராணம்,திருமுருகன்பூண்டிப்புராணம்      முதலியபுராணங்களில் கொங்கு நாடு பற்றி அருணகிரிநாதர் தனது பாடல்களில் பாடியுள்ளார்.

கொங்கு நாட்டின் எல்லைகள்
                 
கொங்குநாடு பழம்பெரும் நாடாகவும் பல சிறப்புகள் பெற்ற நாடாகவும் விளக்குகிறது. மேலும் பல குன்றுகளையும் காடுகளையும் கொண்டு மலை வளம் சிறந்த நாடாக திகழ்கிறது. நான்கு புறமும் மலைகளை அரனாக கொண்டு விளக்கு   பழனி மலையும்,மேற்கில் வெள்ளி( வெள்ளியங்கிரி)மலையும், வடக்கில் தலைமலை, பெரும்பாலை கிழக்கில் குளித்தலை,மதில் கரை என்று சொல்லப்படுகின்ற மதுக்கரையையும் எல்லையா கொண்ட கொங்குநாடு விளங்குகிறது. கொங்கு சோழர்கள் ஆட்சியில் கொங்கு நாடு ஏழு மண்டல பிரிக்கப்பட்டிருந்தது.கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பிரித்தனர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தோன்றியது காலகட்டில் இசைய நகர பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாக பிரித்தது நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தார்கள்  என்ற செய்தியும் உண்டு. இலக்கியங்கள் ஆவணங்களும் பிற்கால கல்வெட்டுகளும் குறிப்புகளை தருகின்றன

கொங்கு மண்டல 24 நாடுகள்
               
கொங்கு நாட்டில் 24 நாடுகளும் இணை நாடுகளும் இணைந்துள்ளன என்பது பற்றி கொங்கு மண்டல சதகம் குறிப்பிட்டுள்ளது. அவை தற்கால அமைப்புப்படி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.

1. பூந்துறை நாடு – ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்
2. தென்கரை நாடு – தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
3. காங்கேய நாடு – தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
4. பொங்கலூர் நாடு – பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
5. ஆரை நாடு – கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
6. வாரக்கா நாடு – பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
7. திருஆவின் நன்குடி நாடு – பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
8. மணநாடு – கரூர், வட்டம் தெற்கு பகுதி
9. தலையூர் நாடு – கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.
10. தட்டயூர் நாடு – குளித்தலை வட்டம்
11. பூவாணிய நாடு – ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
12. அரைய நாடு – ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.
13. ஒடுவங்கநாடு – கோபி வட்டம்
14. வடகரைநாடு – பாவனி வட்டம்
15. கிழங்கு நாடு – கரூர், குளித்தலை வட்டம்
16. நல்லுருக்கா நாடு – உடுமலைப்பேட்டை
17. வாழவந்தி நாடு – நாமக்கல் வட பாகம், கரூர்
18. அண்ட நாடு – பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி
19. வெங்கால நாடு – கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி
20. காவழக்கால நாடு – பொள்ளாச்சி வட்டம்
21. ஆனைமலை நாடு – பொள்ளாச்சி தென்மேற்கு
22. இராசிபுர நாடு – சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23. காஞ்சிக் கோயில் நாடு – கோபி, பவானிப் பகுதி
24. குறும்பு நாடு – ஈரோடுப் பகுதி
  
என்றவாறு கொங்கு மண்டலம் 24 பகுதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கொங்கு நாடு மலைகள்
               
ஒதியமலை, குருந்தமலை சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள்,வெள்ளியங்கிரிமலை, ஆனைமலை, பொன்மலை, திருமூர்த்தி மலை, செஞ்சேரிமலை  அழகுமலை, குமார மலை ஊதியூர்மலை, சிவன் மலை, சென்னிமலை, கைதித்தமலை, அலகுமலை,பெருமாள் மலை, தவளகிரி, குன்றத்தூர், பச்சை மலை, பவளமலை, பாலமலை,நாக மலை,ஊராட்சிக் கோட்டை மலை,மாதேசுவரன் மலை, சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு, கொங்கணமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி நாமக்கல் – கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை, தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை,ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை என்று பல மலைகளையும் இயற்கை வளங்ளோடு கொண்டுள்ளது

கொங்கு நாட்டுக் கோட்டைகள்   
கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு, காங்கேயம், கரூர், விஜயமங்கலம், அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப்பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி ,காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை,  பெண்ணகரம், பெரும்பாலை, சோழப்பாவு, தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல்,  சங்ககிரி, கனககிரி,மகாராசக்கடை தட்டைக்கல் துர்க்கம், இரத்தினகிரி, சூளகிரி ஆகிய பகுதிகளில் கோட்டைகள் இருந்தன என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.
               
 14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கொங்கு நாட்டின் புனித நதி மற்றும் ஆறுகள்           
கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. 
               
அவிநாசி, நாமக்கல், பவானி, வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல், திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். “கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்” என்பது பழமொழி.  கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்
               
சரவணபவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆறு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு, திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம்.

தேவார பாடல் பெற்ற தலங்கள்
               
அவிநாசி, திருமுருகன் பூண்டி பவானி, திருச்செங்கோடு, கொடுமுடி கரூர், வெஞ்சமாக் கூடல் ஆகிய 7 திருத்தலங்களும்  அப்பர் சம்பந்தர் சுந்தர் ஆகியோர் தேவாரம் பாடுபட்ட திருத்தலமாகும்.

திருப்புகழ் பாட பெற்ற தலங்கள்
               
பழனி, செஞ்சேரிமலை, முட்டம்,கோவை, குருடிமலை, அவிநாசி, விஜயாபுரம், பழனி, கனககிரி, பேரூர், மருதமலை, ஓதிமலை, திருமுருகன் பூண்டி, விஜயமங்கலம், பவானி, கடபுரம், தீர்த்தமலை, கொங்கணகிரி, கொல்லிமலை, புகழிமலை, நெரூர், கண்ணாபுரம், சிவன்மலை, கீரனூர், திருச்செங்கோடு, சேலம், ராசிபுரம், ஏழுமலை கொடுமுடி, கரூர், காங்கேயம், சென்னிமலை, வெஞ்சமாக் கூடல் ஆகியோர்களில் திருப்புகழ் பாடப்பட்ட புனித தலங்களாக பார்க்கப்படுகிறது.. (கொ. நா. பு. கு)

கொங்கு நாட்டில் புராணம் பெற்ற தலங்கள்            
பேரூர்ப் புரணம், துடிசைப் புராணம், அவிநாசிப் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், பவானிப்புராணம் திருச்செங்கோடுப்புராணம் ,பூத்துறைப்புராணம், சென்னிமலைப்புராணம், சிவன்மலைப்புராணம், தாராபுரத்தலப்புராணம், திருமூர்த்தி மலைப்புராணம், பழனி தலப் புராணம், வெஞ்சமாக் கூடல் புராணம், கரூர்ப்புராணம், கொடுமுடிப்புராணம், குரக்குத்தளிப்புராணம், சேவூர்ப்புராணம், செஞ்சேரிகிரிப்புராணம், அன்னியூர் தலப்புராணம், கவசைப் புராணம், காரமடைப்புராணம், திருவெள்ளூர்ப்புராணம், தீர்த்தகிரிப்புராணம், கரபுரதலப் புராணம் ஆகிய புராணங்கள்  கொங்கு நாட்டில் இயற்றப்பட்டு எழுதப்பட்டது. (கொ. நா. பு. கு)

கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்கள்
சங்க காலத் தலைவர்கள் 
 
பேகன், அதியமான், ஓரி, குமணன், கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங் கிழான், விச்சிக்கோ, தாமன் தோன்றி கோன், மோகூர்ப் பழையன்
               
பழைய கோட்டைக் சர்க்கரை, அழகன் சர்க்கரை, பெரியன் சர்க்கரை, சேனாபதி சர்க்கரை, சம்மந்த சர்க்கரை, நல்லதம்பி சர்க்கரை, சொட்டைப்படை, மும்முடிப் பல்லவராயர், பல்லவராயன் சிறுவன், காடையூர் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மோரூர் காங்கேயர், சூரிய காங்கேயன், பொப்பண காங்கேயன், காங்கேயன்,நல்லதம்பி காங்கேயன்,குமார காங்கேயன், மசக்காளி மன்றாடியார், முளசை வேலப்பன்,கோபண மன்றாடி, வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன்,, பாரியூரான், செய்யான் பல்லவராயன், உலகுடையன், ஐவேலசதி, அகளங்கன், பூத்துறைக் குப்பிச்சி, வணக்காமுடிக்கட்டி, அல்லாளன் இளையான், தொண்டை மான், அருமைப் பிள்ளை, தீரன் சின்னமலை, கொல்லி மழவன், சீயகங்கன், வரபதி யாட்கொண்டான், கொங்கு மங்கலை ஆகியோர் கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்களாக சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர் பெரும் புகழும் வீரத்தையும் இந்த மண்ணில் விதைத்தனர். 

முடிவுரை
               
கொங்கு நாடு என்பது பல சிறப்புகளையும் புகழையும்   கொண்ட பகுதியே ஆகும். இங்கு இயற்கை வளமும் மலை வளமும் கனிம வளங்களை கொண்டு சிறப்பாக அமையப்பெற்றது. அனைத்து தொழில்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அடைக்கலம் கொடுத்து வாழ்விலே மேம்படுத்தி வந்தோரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது கொங்கு நாடு…

பார்வை நூல்கள் 
 
1.கொங்கு நாடு -புலவர் குழந்தை
 
2.கொங்கு நாட்டு வரலாறு -கோ. ம. இராமச்சந்திரன்  செட்டியார்

3.கொங்கு வேளாளர் கவுண்டர்களின்  வரலாறும் பண்பாட்டும்- கவியருவி தே. ப. சின்னசாமி கவுண்டர் M.A, M.Ed

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

வெ. கெளதம், 

துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விஜயமங்கலம்,

திருப்பூர் மாவட்டம்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »