Monday, September 8, 2025
Home Blog Page 4

International Faculty Development Program| Vaasippu Veliyel Silappathiram

இனியவை கற்றல் ஆசிரியர் திறன் மே்பாட்டு திறன் பயிற்சி அழைப்பிதழ்

Vasippu Veliyil Silappathikaram

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

E-ISSN : 3048 – 5495

பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

(International Faculty Development Program )

பொருண்மை : வாசிப்பு வெளியில் சிலப்பதிகாரம்

நாள் : 05.07.2025 முதல் 11.07.2025 வரை (7 நாள்கள்),  நேரம் : இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, வழி : Google Meet

அன்புடையீர் வணக்கம்,  
   தமிழ்மொழியின் அரும்பெரும் இலக்கியங்களில் சிறப்புடையதாகக் காப்பியங்கள் அமைந்துள்ளன.  காப்பியங்களில் ஒளிரும் ஒற்றை அணிகலனாக விளங்குவது “சிலப்பதிகாரம்” ஆகும். இயல், இசை, நாடகம், நீதியியல், கலை, பண்பாடு போன்ற பழந்தமிழரின் வாழ்வுக் கருவூலங்களை உணரும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் சித்திரமாக்கியுள்ளார். கண்ணகியின் பேராற்றல் மாதவியின் நடனத்திறன் நில இயல்புகளுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் கலைகள் போன்றவை சிலப்பதிகாரத்தில் மிளிர்கின்றன. சிலப்பதிகாரத்தின் காப்பிய அறிமுகம், கதை உருவாக்கம், கவிதைக் கட்டமைப்பு, இசை நுட்பங்கள், இலக்கியச் சிறப்புகள், வணிக மேலாண்மைச் சிந்தனைகள், சிலப்பதிகாரக் காதைகளில் சில புதிய வெளிச்சங்கள், பிற பழந்தமிழ் நூல்களுக்கும் சிலப்பதிகாரக் காதைகளுக்குமான ஒப்பீடு போன்ற பலவற்றையும் அறியும் வகையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ உள்ளது. இந்தச் சிந்தனையூட்டும் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

முதல் நாள் : 05.07.2025 (சனிக்கிழமை)

தலைப்பு : “சிலம்பில் இசை நுட்பங்கள்”

நெறியாளர் : முனைவர் இராச.கலைவாணி

இசைப்பேராசிரியர் (விருப்ப ஓய்வு), இயக்குநர்,

ஏழிசை இசை ஆய்வகம் மூங்கில் தோட்டம் மயிலாடுதுறை.

இரண்டாம் நாள் : 06.07.2025 (ஞாயிற்றுக்கிழமை)

தலைப்பு : “வழக்குரை காதையில் சில புதிய வெளிச்சங்கள்”

நெறியாளர் : முனைவர் வாணி அறிவாளன்

உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

மூன்றாம் நாள் : 07.07.2025 (திங்கள்கிழமை)

தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் வணிகமேலாண்மைச் சிந்தனைகள்”

நெறியாளர் : முனைவர் சி.சிதம்பரம்

உதவிப்பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்.

நான்காம் நாள் : 08.07.2025 (செவ்வாய்க்கிழமை)

தலைப்பு : “வாசிப்பு நோக்கில் சிலப்பதிகாரம் : கதை உருவாக்கமும் வஞ்சிக்காண்டமும்”

நெறியாளர் : முனைவர் இ.சேனாவரையன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,

அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்

ஐந்தாம் நாள் : 09.07.2025 (புதன்கிழமை)

தலைப்பு : “மங்கல வாழ்த்துப் பாடலும் காப்பிய அறிமுகமும்”

நெறியாளர் : முனைவர் வ.கிருஷ்ணன்

முதல்வர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்.

ஆறாம் நாள் : 10.07.2025 (வியாழக்கிழமை)

தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு

நெறியாளர் : முனைவர் இரா.செல்வஜோதி

இணைப்பேராசிரியர், மொழியியல் துறை,

மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.

ஏழாம் நாள் : 11.07.2025 (வெள்ளிக்கிழமை)

தலைப்பு : “முல்லைக்கலியும் ஆய்ச்சியர் குரவையும்

நெறியாளர் : முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), காளிப்பட்டி, நாமக்கல்

 குறிப்புகள்
1.பேராசிரியர்கள் ஏழு நாள்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
2.ஒவ்வொரு நாள் நிகழ்விற்குப் பின் கொடுக்கப்படும் அன்றைய நிகழ்வின் கேள்விகள் சார்ந்த பின்னூட்டப் படிவத்தினைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
3.பதிவுப்படிவம் பூர்த்தி செய்வதற்கு முன், கட்டணத்தொகை ரூ.150 செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
4.பதிவுப்படிவம் பூர்த்தி செய்யும்போது கவனமாகச் செய்யவும்.
5.பதிவுப்படிவத்தில் கட்டாயம் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) இணைக்கவும்.
6.நிகழ்வுகள் அனைத்தும் Google Meet வழியாக மட்டுமே நடத்தப்படும்.
7.ஏழு நாள்களிலும் கலந்து கொள்ளும் பேராசிரியர்களுக்கு மட்டுமே E-ISSN எண்ணுடன் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
8.ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பு எண் வழங்கப்படும். QR Code மூலமாக எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புலனக்குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EHzDgmWAkww022Gl35xxlX

தொடர்புக்கு :

முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் : ‪+91 70102 70575‬

முனைவர் அ.ஜெயக்குமார், இயக்குநர், இனியவை கற்றல்‪ : +91 99945 07627‬

முனைவர் கை. சிவக்குமார், நிர்வாக ஆசிரியர், இனியவை கற்றல்: ‪+91 99949 16977

 

வாசிப்பு வெளியில் சிலப்பதிகாரம் Logo

 

 

 

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

புதிய விடியல் - சிறுகதை -முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

லவ் பேர்ட்ஸ்-சிறுகதை -மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

ஆண் தேவதைசிறுகதைச.அபர்ணா

       திகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர் போல் எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் எழுந்து அரிசியை ஊற வைத்துவிட்டு பருப்பை வேக போட்டு, காப்பியுடன் மனைவியை எழுப்புகிறார் வீட்டுத் தலைவர் சரவணன்.
        

            சமையலுக்கு உதவி செய்துவிட்டு,  மனைவிக்கு குளிக்க சுடுநீர் போட்டு கொடுத்து, மதிய உணவை கட்டிக் கொடுத்து 6.10 மணி பேருந்துக்கு வண்டியில் ஏற்றி, பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பி சற்றே அமர்ந்தார். இளைய மகள் இனியாள் எழுந்துவிட்டால் தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு காப்பி தயாராக இருந்தது.
       

            மீதமிருக்கும் பாத்திரத்தை கழுவி விட்டு சற்றே அமர்கையில் இனியாளின் குரல் ‘போலாமா அப்பா? ‘  இனியாளுக்கும் நேரத்துடன் கிளம்புவதற்கும் ஏழாம் பொருத்தம் பேருந்துடன் ஓட்டப்பந்தயம் வைத்து தான் சென்று வருவாள். திரும்பி வந்து சரவணனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட தலை சுற்று 10 மணிக்கு மேல் வெயில் வந்துவிடும் தலை சுற்றலுக்கு மருந்தாய் ஒரு காபி குடித்துவிட்டு மனைவி மகளுடைய துணிகளை எடுத்துக் கொண்டு மாடி சென்று துவைக்கிறார்.
          

       அந்நேரத்தில், பக்கத்து வீட்டு சுந்தரம் ‘என்ன சரவணன் வேலையா ?’ சரவணனோ ‘ஆமாம்பா  வெயிலுக்கு முன்னாடி துவைக்கணும்ல  என்று சொல்வதைக் கேட்டு சுந்தரம் , ‘உண்மையில் நல்ல மனுஷன்யா நீ’ சிரித்தபடியே சென்றார். ‘சரியான இளிச்சவாயனா இருக்கான் சரவணன் எனக்கு எல்லா வேலையும் பொட்டச்சி மாதிரி பண்ணிட்டு இருக்கான்’  தன் மனைவியிடம் சொல்ல,  சுந்தரத்தின் மனைவியோ ‘ஆணாதிக்கவாதி’ என்னும் சொல் அறியாதவளாய் ‘ஆமாங்க’ என்று சொல்லி நகர்ந்தாள்.


            சில நேரம் கழித்து நியாயவிலை கடைக்கு சென்றார் சரவணன் ஆளே இல்லாத ஆண் வரிசையில் நின்று பொருள் வாங்கிக் கொண்டு திரும்புகையில், மங்களத்தின் குரல். ‘நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்கு போறதில்லையா?  பொட்டச்சி கணக்கா வரிசையில் நின்னு பொருள் வாங்கிட்டு நிக்கிறான் பாரு ‘  என்று தங்களுக்கென தள்ளப்பட்ட வேலையை செய்தபடியே சொன்னாள்.
       

     சரவணனுக்கு இது எதைப் பற்றிய கவலையும் இல்லை. இன்றா, நேற்றா ? எட்டு வருடங்களாக சமைக்கும்போதும், வாசல் கூட்டும் போதும்,  கடைக்கு செல்லும் போதும், துணி காய வைக்கும் போதும் என எத்தனையோ குரல்கள் அவர் காதுகளுக்கு பரீட்சையம் திருப்பிபப் பேச துளியும் விருப்பமில்லை.
 

    திடீரென்று ஒரு நாள்,  ‘சரவணன் நல்லவன் பா. அவன் தனியான நின்னு இந்த குடும்பத்தையே காப்பாற்றினான்’ என்ற  சுந்தரத்தின் குரல்.
 ‘ பின்ன… மூத்ததை கட்டிக் கொடுத்து , இரண்டாவத படிக்க வைத்து வேலைக்கு சேர்த்து,  பையனையும் படிக்க வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா..? ‘ என்று மற்றொரு ஆண்.
 ‘இந்த பிள்ளைகளுக்கு மட்டும் ரெண்டு அம்மா, அப்படித்தானே பாத்துக்கிட்டாரு சரவணன் ? ‘ என்று மங்களம்.
 ‘சரவணன் போல ஒரு தகப்பன் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. இந்த குழந்தைக எல்லாம் புண்ணியம் பண்ண குழந்தைங்க ‘மனதார கூறினாள் ஒரே ஒரு பெண்.
 

     இப்போதும் சரவணனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் ஏதாவது கேட்டு விட வேண்டும் போல் இருந்தது .
     

       அதற்குள் ஒரு குரல்,  நேரமாச்சு சொல்லிட்டீங்கனா பொனத்தை எடுத்துடலாம்.
  ஆண் தேவதை செல்லும் நேரம் வந்துவிட்டது.


சிறுகதையின் ஆசிரியர்

ச.அபர்ணா,


உதவிப் பேராசிரியை,


KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி,


அரசூர்.

 

SANGA ILAKKIYATHIL NIGAZHTHU KALAI KARUVIKAL| A.ANBARASAN

சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைக்கருவிகள் - அன்பரசன்
Abstract
     Tamils ​​have held arts in high esteem in their lives from the beginning till the present day. They observe many rituals from birth to death. They perform many performing arts by touching and touching while performing rituals. Arts are intertwined with the life of Tamils.
Music dominates both the external and internal lives of Sangam Tamils. Through Sangam literature, we can learn about many musical instruments used by the people and performers of the Sangam period. Art is what touches the mind through the sense of sight. Music, based on sound and moving the mind and thought through the sense of hearing, has the unique ability to bring all beings under its control, from a man with a stone mind to a religious elephant.

சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைக்கருவிகள்
முன்னுரை
         
தமிழர்களின் வாழ்வில் அன்று முதல் இன்று வரை கலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. பிறப்பு முதல் இறப்பு வரை பல சடங்கு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். சடங்குகளை மேற்கொள்ளும் போது தொன்று தொட்டு பல நிகழ்த்துக் கலைகளை அவர்கள் நிகழ்த்திக் கொண்டுள்ளர். கலைகள் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளன. இசைக்கலை சங்கத் தமிழர்களின் புறவாழ்வு, அகவாழ்வு என இரண்டிலும் மேலோங்கி நிற்கிறது. சங்க இலக்கியங்களின் வாயிலாக சங்க கால மக்களும், நிகழ்த்துக் கலைஞர்களும் பயன்படுத்தியப் பல இசைக்கருவிகளை அறிந்து கொள்ளமுடிகிறது. கண்புலன் வழியாக மனதைத் தொடுவது கலை ஆகும். இசைக்கலையானது ஒலியை அடித்தளமாகக் கொண்டு செவிப்புலன் வழியாக மனதையும் சிந்தனையையும் நெகிழச்செய்வது, கருங்கல் மனம் கொண்ட மனிதன் முதல் மதம் கொண்ட யானை வரை அனைத்து உயிர்களையும் தனது கட்டுப்பட்டின் கீழ் கொண்டு வரும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

இசைக்கருவிகளும் பாணர்களும்
         
பண்டையக் காலம் தொட்டே கலைகளுக்குத் தமிழர்கள் தம் வாழ்வில் சிறப்பிடம் கொடுத்தனர். தமிழர் தம் வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரை ஒன்றாகக் கலந்தது கலை. குறிப்பாகத் தமிழர்களின் போர் வாழ்வு, பொது வாழ்வு, சுகவாழ்வு என அனைத்து விதமான புறவாழ்வுக் கூறுகளிலும், இசைக் கருவிகளும், இசையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
 இசைக் கலையானது ஒலியின் அடிப்படையில் அமைந்து செவிப்புலன் வழியாக சிந்தையில் சேர்ந்து மனதை நெகிழ்த்துவது ஆகும். சங்க இலக்கியத்தில் தடாரி, முழவு, பறை, துடி, ஆகுளி, எல்லரி, பதலை போன்ற தோற்கருவிகளும், குழல், கொம்பு, நெடுவாங்கியம் ஆகிய காற்றுக் கருவிகளும், சீறியாழ், பேரியாழ் என்ற நரம்புக் கருவிகளையும் காணமுடிகிறது. இக்கருவிகளை நிகழ்த்துக் கலைஞர்களான, பாணர்களே பெரும்பான்மையாகப் பயன் படுத்தியுள்ளனர். மேற்கண்ட இசைக்கருவிகளை நிகழ்த்துக் கலைஞர்களாகிய இவர்கள் கலைகளை நிகழ்த்தும் போது அக்கலையை மேலும் மேன்மையுறச் செய்யப் பயன் படுத்தியுள்ளனர்.
 “இசைக் கருவிகளில் முதலில் தோன்றியவை தோல் கருவிகள். பின்னர் தோன்றியவைத் தாளக் கருவிகள், அதன் பின்னரே நரம்புக்கருவிகள் தோன்றின. சங்க இலக்கியத்தில் மிகவும் வளர்ச்சி பெற்ற யாழ் வகைகள்  பல சொல்லப்பட்டுள்ளன. இசைப் பாணர்களிலும் அவர்கள் பயன்படுத்தும் கருவியின் அடிப்படையில் சிறுபாணர், பெரும்பாணர் என்று பிரிக்கப்பட்டுள்ளார்கள். பாடகர்களில் பல பிரிவுகள் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. மிக வளர்ச்சியடைந்த நிலையில்தான் சங்க காலத்தில் இசைக் கலை காணப்டுகிறது.”1

பாணர்களின் இசைப்பள்ளி
         
சங்க காலத்தில் வாழ்ந்த குடிகளில் பாணர்கள் தனிக்குடியாக வாழ்ந்துள்ளனர் என்பதைப் பின்வரும் மாங்குடி மருதனார் பாடல் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

“துடியன் பாணன் பறையன் கடம்பனென் 
றிந்நான்  கல்லது குடியு மில்லை”2       
பாணர்கள் தனிக்குடிகளாக இருந்தமையால் இவர்களிடத்தில் தம் சந்ததியினருக்குத் தனியாக இசையைக் கற்றுக் கொடுக்கும் முறை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். இளையவர்கள் தம் குடியைச் சார்ந்த மூத்தவர்களுக்குப் பணி நிமித்தமான உதவிகளைச் செய்ததன் மூலமாக இசைப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். “பாணர்களின் கலையானப் பாடுதல், அவிநயத்தல், உணர்ச்சியுடன் பேசுதல் ஆகியவை முதியவர்களிடமிருந்து வாய் வழியாகக் கற்கப் பெற்றன. இத்தகு கற்றலின் உட்கூறுகளான விதிமுறை, உட்கருத்து, மரபு வழி உள்ளடக்கம் போன்றவை நினைவூட்டும் வழியாக விளங்கின. இவை பாணராலும் அவையினராலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் பெற்றன. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் கல்வி என்ற ஒன்று இக்காலக்கட்டத்தில் இல்லாமலிருப்பது வியப்பளிக்கிறது.”3 எனக் கூறுகிறார் க.கைலாசபதி. இசைப்பயிற்சி கல்வியாக அளிக்கப்படாமல் தொழிலறிவாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கற்பிக்க எழுதிப் படிக்கும் கல்வி முறையாக இல்லாமல் தம் முன்னோர்களின் அனுபவத்தையும் அவர்களின் வாயிலாகக் கொண்ட கேள்வி ஞானத்தையும் கொண்டே பரம்பரையாக இவர்கள் இசையைக் கற்றிருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மதுரைக்குப் பக்கத்தில் வைகையாற்றின் நீர்த்துறைக்கு அருகில் பூந்தோட்டங்கள் நிறைந்த இடத்தில் பெரும்பாணர்களின் வீடுகள் அமைந்திருந்ததையும், அவர்களது வீடுகளில் ஆடல், பாடல் சார்ந்த ஓசைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததையும்

“லவிரறல் வையைத் துறைதுறை தோறும் 
பல்வேறு பூத்திரட் டண்டலை சுற்றி
யழுந்துபட் டிருந்த பெரும்பா ணிருக்கையு”4
என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது. பாணர்கள் ஓய்வு நேரங்களிலும் தமது இல்லத்தில் நிகழ்த்துக் கலைகளை நடத்தியும் அதன் மூலமாக அவர்களின் அடுத்தத் தலைமுறைக்கு தமது கலைத் திறனைக் கற்பித்ததையும் உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

இசைக்கருவியும் நிகழ்த்துக் கலைஞர்களும்
         
பாணர்கள் எங்கும் குழுவாகவேச் சென்றார்கள். இவர்கள் நிகழ்த்தும் கலைகளான ஆடல், பாடல் என்ற கலை பகட்டு அனுபவம் சார்ந்தது. இவர்களது கலைகள் பல்லிசைப் பாணர்கள் சேர்ந்து நடத்தும் கோவையாகவே அமைந்துள்ளன. இவ்வாறு இசைக் கருவிகள் பல இணைந்து நிகழ்த்தும் கலை அக்காலத்தில் “ஆமந்திரிகை” என்று அழைக்கப்பட்டுள்ளது.

“கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல் வழிநின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணும்மைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை”5
என்பதை மேற்கண்ட பாடல் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

சங்க கால நிகழ்த்துக் கலைச் சமூகம்
         
சங்க கால நிகழ்த்துக் கலைஞர்கள் விரிவான சமூக அமைப்பிற்கு உரியவர்களாக வாழந்துள்ளார்கள். இவர்கள் ஒரே சமூக அமைப்பில் வாழ்ந்து வந்திருந்தாலும் இவர்களுக்குள் தொழில் அடிப்படையில் பிரிவுகள் இருந்துள்ளன. பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அகவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், குறுங்களியர், நகைவர், இயவர் என்றப் பிரிவுகள் குறிப்பிடத்தக்கப் பிரிவுகள் ஆகும்.


நிகழ்த்துக்கலைகள்

நிகழ்த்துக் கலைக் கருவிகள்
         
பண்டையத் தமிழகத்தின் வேட்டைச் சமூகத்தில் இசைத் தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்குப் பெரிதும் இடமளித்தது. இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என்று வகைப்டுத்தலாம். இயம் என்ற சொல்லிற்கு இசை, இசைக் கருவி என்று பொருள்.

“இயமெனும் பெயரே உரையும் ஓசையும் 
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே”6
என்கிறது வடமலை நிகண்டு.

“இயம் என்ப ஒகியே வார்த்தை 
வாச்சியம் இம்முப் பேரே”7
என்கிறது சூடாமணி நிகண்டு.

தோற்கருவிகள்
         
கருவிகளின் வடிவத்தை மரத்தால் செய்து அவற்றின் மேல் விலங்குகளின் தோலைக் கொண்டு மூடி இறுதி வடிவம் கொடுக்கப்படும் கருவிகள் தோற்கருவிகள் ஆகும். முரசு, முழவு, தண்ணும்மை, கிணை, தடாரி, பதலை, தட்டை, தொண்டகம், ஆகுளி, எல்லரி, சல்லி, துடி, உடுக்கை, மகுளி, பம்பை, மத்தரி, பறை ஆகியனக் பண்டைத் தமிழர் பயன் படுத்திய முக்கிய தோற்கருவிகள் ஆகும்.

பறை
         
சங்க இலக்கியத்தில் மணப்பறை, பிணப்பறை, பறைச்சாற்றல் போன்றக் கருவிப் பெயர்ச் சொற்கள் கையாளப் பட்டுள்ளதைப் பார்க்கும் போது பறை என்பது பல வகையானத் தோற்கருவிகளுக்கும் பொதுப் பெயராக அமைவதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இப்பறை என்ற இசைக் கருவிகளை இசைப்பவர்களே பறையர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். “தொடக்கக் காலத்தில் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப் பெயராகப் பறை வழங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் ஏறக்குறைய எழுபது வகையானத் தோற்கருவிகள் இருந்துள்ளன”8 என்கிறார் மு.வளர்மதி.
 பண்டைக் காலத்தில் மண்டை என்ற பெயர் பறைக்கு வழங்கப்பட்டுள்ளது. “பறைகளை அடித்தப் பாணர்கள் ‘மண்டைப் பாணர்கள்’ எனப்பட்டனர். பிற்காலத்தில் மண், மரம், பித்தளை முதலியவற்றால் செய்து தோற்கட்டியப் பறைகளையும் பழைய பெயராலேயே மண்டை என்று வழங்கியது ஒரு வகை உவமையாகுப் பெயராகும்”9 என்கிறார் இரா.இளங்குமரன்.
          பறைகளை அடித்த பாணர்களே மண்டைப் பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். மரம், பித்தளை, மண் இவற்றால் வளையத்தை உண்டாக்கி அதன் மீது தோல் கட்டிய நிகழ்த்துக் கருவியே பறை. இன்றளவும் பறை என்பது தோற்கருவிகளின் பொதுப் பெயராகவே வழங்கப்படுகிறது. ‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை’ என்ற தொல்காப்பிய நூற்பாவும், ‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை’ என்ற குறளும் தோற்கருவிகளின் பொதுப் பெயர் தான் பறை என்பதற்குச் சான்றுகளாக அமைகின்றன.

சிறுபறை (ஆகுளி)
         
பறை என்ற இசைக் கருவியின் மற்றொரு வகையே சிறுபறை ஆகும். இச்சிறுபறை குறிஞ்சி நிலமக்களின் முதன்மையான இசைக் கருவியாக விளங்குகிறது. மானின் தோலால் கட்டப்படுவது சிறுபறை ஆகும்.
“மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை யயரும் குரவை”10

முரசு
         
தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே உள்ள தோலிசைக்கருவிகளில் ஒன்று முரசு. இக்கருவி அரசர்களுக்கு நிகரான மதிப்பு மிக்க கருவியாக போற்றப்பட்டுள்ளது. இது இடி போல் முழங்கும் தன்மையுடைய இசைக் கருவியாகும்.

“கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த

மாக்கண் முரச மோவில கறங்க”11

மேற்கண்ட பாடல் வரிகள் முரசு காளைகளின் தோலால் கட்டப்படுவது என்பதையும், அதிக ஒலி எழுப்பக் கூடியது என்பதையும் உணர்த்துகிறது.

முழவு
         
முரசில் இருந்து சற்று வேறுபட்டத் தோற்கருவி முழவு ஆகும். இது முரசு போலில்லாமல் மென்மையான இசையை உடைய கருவியாக அமைந்துள்ளது.

“மண்ணமை முழவின் பண்ணமை சிறியா 
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க”12
         
இந்த முழவு சங்க இலக்கியத்தில் பலாப் பழத்திற்கு உவமையாகப் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. “கானப் பலவின் முழவுமருள் பெரும்பழ”13 இது முரசு போல் அதிரும் ஓசை இல்லாமல் இனிய ஓசை உடைய நிகழ்த்துக் கலைக் கருவியாகும். நன்னனது மலையில் மகளிருடைய ஆடலுக்கு ஏற்றவாறு இடைவிடாமல் முழவு ஒலித்தச் செய்தியைப் பின்வரும் மலைப்படுகடாம் பாடல் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“குரூஉக்கட் பிணையற் கோதை மகளிர் 
முழவுத் துயி லறியா வியலு ளாங்கண்”14
தண்ணுமை
         
தண்ணும்மை என்பது தோற்கருவிகளில் முதன்மையானது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் மத்தளம் (அ) மிருதங்கம் என்ற இசைக் கருவியானது தண்ணும்மையின் பரிணாம வளர்ச்சியால் உண்டான இசைக் கருவியாகும். “மத்தளமாகிய மிருதங்கமே மிகவும் நேர்த்தியான இன்னிசையைக் கொண்டது. நாட்டியத்தின் சிறப்பிற்கு ஏனைய இசைக் கருவிகளைவிட மத்தளம் மிக மிகத் தேவைப்படுகிறது. எல்லாம் வல்ல ஆடவல்லான் தாண்டவமாடும் போது நந்தித் தேவரே தண்ணும்மை அல்லது மத்தளங் கொட்டியதாகக் குறிப்புகள் உள்ளன”15 என்கிறார் தெ.மு. பாஸ்கரத்தொண்டைமான்.

தடாரி
         
ஒரு பொருநனை ஆற்றுப்படுத்தும் மற்றொரு பொருநன் அவன் வைத்திருக்கும் தடாரி என்ற இசைக் கருவியைப் பின் வருமாறு எடுத்துரைக்கின்றான்.

“பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி
யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய”16
         
வெள்ளி முளைக்கும் இருட்டான விடியற்காலைப் பொழுதில் படம் விரித்தப் பாம்பின் படத்தைப் போன்றுள்ள அகலமான என் தடாரி இரட்டைத் தாளத்திற்குப் பொருத்தமுற இசைக்கும் என்பதில் இருந்து தடாரி என்ற இசைக் கருவியின் அமைப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது.

காற்றுக் கருவிகள்
         
துளையின் வழியாகக் காற்றைச் செலுத்தி இசை எழுப்பப் பயன்படும் நிகழ்த்துக் கலைக் கருவிகள் காற்றுக் கருவிகள் (அ) துளைக் கருவிகள் என்று வழங்கப்படுகின்றன. காற்றுக் கருவிகளில் புல்லாங்குழல் தலைமை வகிக்கின்றது. இப்புல்லாங்குழல் மூங்கில் என்ற தாவரத்தின் தண்டினைத் துளைத்து உருவாக்கப்படுகிறது. மூங்கில் புல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். மூங்கிலுக்கு நிகண்டுகள் வேண், வேணு என்று பொருள் தருகின்றன. வடமொழியில் வேணு என்ற சொல் புல்லாங்குழலைக் குறிக்கிறது. பழங்காலத்தில் காட்டில் உலர்ந்த மூங்கில்களில் வண்டுகள் துளைத்தத் துளையின் வழியேக் காற்று நுழையும் போது ஓசை உண்டாவதை அறிந்த ஆயர்கள் மூங்கில்களை வெட்டி எடுத்து தாமே தீக்கட்டையால் துளைத்து பல துளைகளையிட்டு ஊதி பல்வேறு வகையான இசைகளை உண்டாக்கி மகிழ்ந்தனர்.

“யொன்றம ருடுக்கைக் கூழா ரிடையன் 
கன்றமர் நிரையொடு கானத் தல்கி 
யந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலி” 17
         
என்ற பாடல் வரிகள் முல்லை நிலத்துக் குடிமக்களான ஆயர்கள் புல்லாங்குழலைச் செய்யும் போது முதலில் தீக்கோலைக் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால் மூங்கில் குழாய்களில் துளையை உண்டாக்கி அதனை ஊதி இனிய ஓசையை எழுப்பினான் என்று கூறுவதன் மூலம் புல்லாங்குழல் உருவான வரலாற்றை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

கொம்பு
         
விலங்குகளின் கொம்பினால் செய்யப்படுவதால் இந்நிகழ்கலைக் கருவி ஊது கொம்பு என்றும் கொம்பு என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் ஆவினத்தின் கொம்புகளால் செய்யப்பட்ட இக்கருவியானது இக்காலத்தில் உலோகத்தால் செய்யப்படுகிறது.

நரம்புக் கருவிகள்
         
நரம்புக் கருவிகளில் நரம்புகள் இருக்கும். அவற்றை அதிர்வடையச் செய்து சீரான ஒலியை உண்டாக்கி மனித மனதிற்கு நன்மையைப் பயப்பன நரம்புக் கருவிகள் ஆகும். தமிழர்களது சிறப்பு வாய்ந்த நரம்புக் கருவியாக யாழ் விளங்கி உள்ளது. யாழும் அதன் வகைகளும் சங்க இலக்கியத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன. இசைக் கருவிகளின் உயர்ச்சிக்குக் காரணம் ஆதி கருவியாகிய யாழே ஆகும். இது யாளி என்ற விலங்கின் தலையைப் போல் செய்யப்பட்டதால் யாழ் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இக்கருவியின் அடுத்த வளர்ச்சியாக வீணை உருவாகியுள்ளது. வீணையின் பரிணாம வளார்ச்சியே இன்றைய இசைக் கருவியான கிட்டார்.
  வேட்டைச் சமூகத்தின் பயன்பாட்டில் இருந்த வில்லின் முறுக்கேறிய நாணிலிருந்து அம்பு செல்லும் போது உண்டான ஓசையே யாழ் உருவாக்கத்தின் மூலம் ஆகும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது.
யாழின் உறுப்புகள்
      யாழ் நரம்பு, யாழ் முறுக்காணி, கோடு, திவவு, பத்தல், பச்சை, போர்வை, தோற்பலகை, உந்தி, வறுவாய் போன்றவை யாழின் முக்கிய உறுப்புகள் ஆகும். மானின் தடம் போன்று இருக்கும் பத்தல், விளக்கின் சுடர் போன்ற யாழின் தோல், அதனை இழுத்து தைத்த போர்வை, வளையில் வாழும் நண்டின் கண்கள் போன்ற பிரடை என்று அழைக்கப்படும் ஆணி, எட்டாம் நாள் பிறையைப் போன்றத் தோற்றத்தையுடைய வறுவாய், பாம்பு படம் போன்ற தண்டு, பெண்களின் கையில் உள்ள வளையல்கள் போன்ற வார்கட்டு, நரம்புகள் முடைக்கப்படும் இடமான திவவு ஆகியவற்றைப் படம் பிடித்துக்காட்டுகிறது பின் வரும் பாடல்.

“குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல் 
விளக்கழ லுருவின் விசியுரு பச்சை
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற் 
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசித் தொடையன்”18
வில்யாழ்
         
குமிழ மரத்தின் உட்புறக் கூடாகியக் கொம்பில் மரத்தின் நாரை வளைத்துக் கட்டி வில்யாழ் செய்யப்பட்டுள்ளது.

“னின்றீம் பாலை முனையிற் குமிழின் 
புழற்கேட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின் 
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்”19
         
இப்பாடல் வரிகள் குமிழமரத்தின் துளையுள்ள கொம்பில் தானே தயாரித்த நரம்பினை வில் போல் கொம்பு வளைய இழுத்துக் கட்டி அந்த யாழில் குறிஞ்சிப் பண்ணை மீட்ட அந்த இசையைக் கேட்ட வண்டுகள் தம் இனத்தின் ஒலியாகக் கருதிக் கேட்கும் என்பதிலிருந்து வில்யாழ் உருவாக்கப்படும் விதத்தை அறிந்துக் கொள்ள முடிகிறது.

பேரியாழ்
         
வில்யாழைப் போன்று உருவத்தில் பெரியதாக அமைந்ததால் இது பேரியாழ் எனப்பட்டது. இதில் இருபத்தொரு நரம்புகள் இடம் பெற்று இருக்கும். இது சங்க காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு இசைக்கருவியாகும்.

“விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழுப்உப் பழிச்சி”20
         
என்ற பாடலில் ஒரு பாணன் மற்றொரு பாணனைப் பார்த்து உன் இடது பக்கத்தில் உள்ள பேரியாழை இசைக்கும் முன் நம் முன்னோரின் தெய்வமான யாழ்தெய்வத்தை உன் கைகளால் தொழுது நாவினால் வாழ்த்தி வணங்கியப் பின் யாழினை மீட்டு என்று கூறுவதில் இருந்து பேரியாழின் முதன்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

சீறியாழ்
         
வில்யாழ்க்கும், பேரியாழ்க்கும் இடைப்பட்ட அமைப்பில் இருந்ததால் இது சீறியாழ் என்று அழைக்கப்டுக்கிறது. இது ஏழு நரம்புகளைக் கொண்டது.

“தெறரல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்; 
நரம்பு இசைத்தன்ன இன்குரல் குருகின்”21
எனப் பாணர்கள் சீறியாழ் இசைத்துக் கடவுளரை வணங்கியது நற்றிணையில் காட்டப்பட்டுள்ளது.

“மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் 
நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக்”22
         
மேற்கண்ட பாடல் வழியாகப் பொற்கம்பியினைப் போன்ற முறுக்குக் கொண்ட நரம்பினைக் கொண்டச் சீறியாழை இடப்பக்கத்தே தழுவி நட்டபாடை என்ற பண் இசைத்த செய்தியை அறிந்துக் கொள்ள முடிகிறது. பொதுவாக நிகழ்;த்துக் கலைஞர்கள் யாழினை தனது இடப்பக்கதில் தழுவிக் கொண்டு வலது கரத்தால் அதன் நரம்புகளை அதிரச் செய்து இசையை நிகழ்த்தியதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கஞ்சக் கருவிகள்
         
இசைக்கருவி வகைகளுள் ஒன்று கஞ்சக்கருவி. இக்கருவிகள் உலோகத்தால் செய்யப்படுபவை ஆகும். இவை பெரும்பாலும் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன. தாளம், பாண்டில், மணி போன்றக் கருவிகள் இப்பிரிவில் அடங்கும். பாண்டில் வட்டமான தட்டுக்களால் ஆன இசைக்கருவி வெண்கலத்தால் செய்யப்படுவது. இக்கருவி மலைபடுகாடமில் இடம்பெற்றுள்ளது.

“நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்”23
         
என்று உருக்கித் தட்டாகத் தட்டப்பட்ட பாண்டில் இசைக்கருவி அக்காலத்தில்  பயன்பாட்டில் இருந்துள்ளமையைக் காட்டுகிறது. இக்கருவி இக்காலத்தில் ஜால்ரா என்று அழைக்கப்படுகிறது.

முடிவுரை
         
சங்க காலத்தமிழர்கள் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நன்கு உற்று நோக்கி அது எதனால் நடக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதில் வல்லவராக இருந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே குழல், பறை, முழவு, பாண்டில் போன்ற பல நிகழ்கலைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். தமிழர்கள் தாம் நிகழ்த்தும் கலைகளுக்கு ஏற்றப் படியான நிகழ்த்துக் கலைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். நிகழ்த்துக் கலைஞர்கள் தாம் இசைத்த இசைக் கருவியின் பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளனர். தாம் நிகழ்த்தும் கலைகளுக்கு ஏற்றபடிப்யான நிகழ்க்கலைக் கருவிகளை உருவாக்கவும், அவற்றை இசைக்கவும் நன்கு கைத்தேர்ந்த வல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறிந்துக்கொள்ளமுடிகிறது.
          ஒரு நிகழக்கலைக் கருவியை அடிப்படையாகக் கொண்டு அதில் பல வகையான நிகழ்க்கலைக் கருவிகளை உருவாக்கவும், அதன் முக்கிய உறுப்புக்களையும் அதன் அமைப்பைப் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டு அவற்றில் ஏற்படும் பழுதுகளையும் தாமே நீக்கவும் அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

சான்றெண் விளக்கம்.
1.நா.வானமாமலை, கலைகளின் தோற்றம், பக்கம், 92.

2.புறநானூறு, பாடல் எண், 335.

3.க.கைலாசபதி, தமிழ் வீரநிலைக் கவிதை, பக்கம், 60.

4.மதுரைக் காஞ்சி, அடிகள், 340 – 342.

5.சிலப்பதிகாரம், அரங்கேற்றுக் காதை, அடிகள், 139 – 142;.

6.வடமலை நிகண்டு, பாடல் எண், 222.

7.சூடாமணி நிகண்டு, 11வது தொகுதி, பக்கம், 5.

8.மு.வளர்மதி, மனிதசமூக கலை அறிவியலின் மூலாதாரம், பக்கம், 112.

9.இரா.இளங்குமரன், பாணர், பக்கம், 38.

10.மலைபடகடாம் அடிகள், 321 – 322.

11.மதுரைக் காஞ்சி, அடிகள், 732 – 733.

12.பொருநராற்றுப்படை, அடிகள், 109 – 110.

13.மலைபடுகடாம், அடி, 511.

14.மேலது, அடிகள், 349 – 350.

15.தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்(ப.ஆ), தமிழ்க்கோயில்கள் தமிழர் பண்பாடு, ப.125.

16.பொருநராற்றுப்படை, அடிகள், 69 – 72.

17.பெரும்பாணாற்றுப்படை, அடிகள், 175 – 179.

18.பொருநராற்றுப்படை, அடிகள், 4 – 18. 

19.பெரும்பாணாற்றுப்படை, அடிகள், 180 – 184.

20.மேலது, அடிகள், 463 – 464.

21.நற்றிணை, பாடல் எண், 189.

22.மலைபடுகடாம், அடிகள், 534 – 535.

23.மேலது, அடி, 4.

துணைநூற்பட்டியல்

1.சங்கஇலக்கிய உரைவேறுபாட்டுக் களஞ்சியம். – நியூசெஞ்சுவரி புக்ஹவுஸ்(பி)லிட், அம்பத்தூர்,சென்னை – 600 050.

2.பாணர் –  புலவர் இரா.இளங்குமரன், மணிவாசகர் பதிப்பகம்,தாம்பரம்.

3.தமிழ் வீரநிலைக் கவிதை – க.கைலாசபதி, குமரன் புத்தக இல்லம், சென்னை.

4.தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு – தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்,  கௌரா பதிப்புக் குழுமம், சென்னை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.அன்பரசன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி, 
திருவண்ணாமலை – 606 603,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,

வேலூர் – 632 115.


 

அ.அன்பரசன்,
உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,

திருவண்ணாமலை – 606 603.

நெறியாளர்

முனைவர் மு.பாலமுருகன்,
இணைப்பேராசிரியர், ஆய்வுநெறியாளர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.

கடைக்குட்டி|சிறுகதை|முனைவர் சு.சோமசுந்தரி

கடைக்குட்டி-சிறுகதை - முனைவர் சு.சோமசுந்தரி
      காலை வெயில் தலையில் சுள்ளென்று விழும் பொழுதில் அக்காக்குருவிகளின் அக்கூவ் என்ற சத்தம் காதுகளில் ரீங்காரமிட்டது. கார்த்திக் சன்னமான கோபத்துடன்  அம்மாவிடம் கத்திக்கொண்டிருந்தான்.

“ஏம்மா என்னம்மா சமையல் பண்ணியிருக்க. சாம்பாருக்குப் போய் தொட்டுக்க கூட்டு வச்சிருக்க. இத யாரு தின்பா? நாய் கூடத் திங்காது இந்தச் சோத்த. எத்தனை தடவ சொல்லிருக்கேன் நான். சாம்பார் வச்சா பொறியல் ஏதாவது வையின்னு”

“டேய் இருக்கத தானடா வைக்கமுடியும். துரை அப்படியே சம்பாத்தியம் பண்ணி போட்டு முடிச்சிட்ட. உனக்கு வகைவகையாய் வச்சுக்குடுக்கணும் பாரு. பொங்குனது தின்னுடா”

“எனக்கு ஒண்ணும் வேணாம். நீயே கொட்டிக்க” என்று மூஞ்சியை வலித்துவிட்டுச் சென்ற கார்த்திக்குக்கு வயது இருபதாகிறது. இளங்கன்று பயமறியாது என்று பெரியவர்கள் சொல்லுவதற்கேற்ப பர்வதம் அம்மாளுக்கு மத்த எல்லாப்பிள்ளைகளையும் சமாளித்து விடுவாள். ஆனால் இந்தக் கார்த்தியைச் சமாளிப்பது பெரும்பாடுதான். அவன் இஷ்டத்துக்குச் சமைக்கவேண்டும், கேட்கும்போது காசு கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கோபத்தில் வீட்டிலிலுள்ள பொருள்களைப் போட்டு உடைப்பான். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து, அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு,

“அம்மா சாரிம்மா. நீ ஏன் எனக்குப் பிடிச்சதைச் சமைக்கமாட்டேன்கிற. சமைச்சிருந்தா நான் சாப்பிட்டுருப்பேல்ல”

என்று அம்மாவைச் சமாதானப்படுத்திக் கொஞ்சுவான். அவளும் உச்சிகுளிர்ந்து போவாள். அவன் செய்த சேட்டைகள் மறந்துபோகும். அவளும்,

“என் ராசா. நாளைக்கு நீ கேட்டதையே சமைக்கிறேன்டா” என்று பதிலுக்குக் கொஞ்சவும், அதைப் பார்த்த அவன் தங்கை வான்மதிக்கு எரியும்.

“அவன் என்ன பண்ணாலும். ஒன்னும் சொல்லாத. என்னைய மட்டும் திட்டு. ஒரு நாளைக்குப் பெரிசா ஏதாவது பண்ணிட்டு வந்து நிப்பான். அப்ப பாக்குறேன். என்ன பண்றன்னு”
என்று திட்டுவாள். அம்மாவும் மகனும் அதைக் கண்டுகொள்வதே இல்லை.

“போடி பெரிய இவ பாரு. பொறாமை புடிச்சவ” என்று திட்டுவான்.

இப்படித்தான் கார்த்திக்கும் அவன் அம்மாவுக்குமான கொஞ்சல்கள் தொடர்கதையாகிப் போயின. மற்ற இவனது அண்ணன்களுக்கும் தங்கைக்கும் இவர்களது குணம் தெரிந்து கண்டுகொள்ளமாட்டார்கள். இவன் சண்டை போடுவதும் சமாதானம் ஆவதும் தொடர்கதையாகிப் போனது. கார்த்திக் மற்ற பிள்ளைகளை விட புத்திசாலி. ஆனால் படிக்கவைக்க சரியான வசதியில்லை. இருந்தும் டிப்ளமோ சேர்ந்து தொழில்கல்வியைக் கற்றிருந்தான். தனது தகுதிக்கேற்ற வேலை தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு நிறைய நண்பர்களும் இருந்தனர். யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் முதலில் போய் நிற்பான். இதனால் எல்லோருக்கும் அவனைப் பிடிக்கும். ஆண், பெண் பாகுபாடின்றி அக்கா, தங்கையாக பழகுவான். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் நினைத்ததைச் சாதிக்க நினைப்பான். அது சரியான விசயமாகத்தான் இருக்கும். அந்தப் பிடிவாதம்தான் எல்லா முயற்சியிலும் வெற்றி பெறவும் வைத்தது. வீட்டின் கடைக்குட்டியாக இருந்ததால் அம்மாவுக்கு கார்த்திக் என்றால் உயிர்தான். எவ்வளவு சண்டை போட்டாலும் அம்மாவைச் சமாதானம் பண்ணி அவள் கையாலேயே சோறு ஊட்ட வைத்துவிடுவான். மற்றவர்கள் செய்கின்ற சேட்டைகளை மன்னிக்காத அம்மா, இவன் என்ன செய்தாலும் சமாதானமாகிக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள். ஏனென்றால் கார்த்திக் மீது அம்மாவுக்குக் கொள்ளை பிரியம்.

ஒரு நாள் அதிகாலையிலேயே கார்த்திக்கின் நண்பன் வீட்டிற்கு வந்தான்.

“டேய் கார்த்திக் அம்மாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா. உன் கையில காசு இருக்குமா? இல்ல யார்கிட்டயாவது வாங்கித்தர முடியுமா? என்றான். உடனே பதறிப்போன கார்த்திக்,

“இருடா. பார்க்கிறேன்” என்று வீட்டிற்குள் சென்றவன்,

“அம்மா ஏதாவது காசு வச்சுருக்கியா. சுரேஷ் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையாம். பாவம்மா” என்றவனிடம்,

“என் கிட்ட ஏதுடா காசு. போய் உன் அண்ணன்கள்ட்ட கேளு” என்றாள்.

உள்ளே சென்று அண்ணனிடம் கெஞ்சிக்கூத்தாடி அவனிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைப் பிடுங்கி தனது நண்பனிடம் கொடுத்து அனுப்பினான். இந்த உதவும் குணத்துக்காகவே கார்த்திக்கைக் கொண்டாடுவார்கள் நண்பர்கள். ஆறு மாதத்திற்குப் பின் தீவிரமான முயற்சியில் கார்த்திக்கு நல்ல வேலையொன்று சென்னையில் அமைந்தது. அம்மாவையும் நண்பர்களையும் பிரிந்து சென்னைக்கு சென்றான். கைநிறைய சம்பளத்துடன் அந்த வேலையும் கார்த்திக்குப் பிடித்துப்போனது. முதல் மாத சம்பளத்திலேயே அம்மாவுக்கு டிரெஸ், அண்ணன் குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான் என வாங்கிக் கொண்டுபோய் பார்த்துவிட்டு வந்தான். அம்மாவுக்கு மனம் மகிழ்ந்தாலும் கார்த்திக்கை பிரிந்திருப்பது மிகுந்த வேதனையைத் தந்தது. இரண்டு ஆண்டுகளில் பர்வதம் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள். கார்த்திக்கிற்கு அம்மாவின் இறப்பு மிகுந்த வேதனையைத் தந்தது. அதிலிருந்து மீண்டுவரவே ஒரு வருடம் ஆனது. கார்த்திக்கு திருமணம் செய்யவேண்டும் என அண்ணன்கள் முடிவுசெய்தனர். அவன் பெரியப்பா மகள் ஜெயசுதா அக்காவிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கார்த்திக்கு அவள் பார்ப்பது பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டான்.

மறுவாரமே ஒரு வரன் அமைந்திருப்பதாகவும் பொண்ணு பார்க்க கார்த்திக்கை வரச்சொல்லி போன் செய்தார்கள். கார்த்திக் கருப்பு நிறம்தான் என்றாலும் களையான முகத்தை உடையவன். பெண்ணைப் போய் பார்த்த கார்த்திக்கிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை. அதைத் தனது அக்காவிடம் கூறினான். பெண் மிகச்சுமாராக இருந்தாள். அவளுக்கு மூன்று தங்கைகள் வேறு.

“பெண் சுமாராக இருந்தாலும் நல்ல குடும்பம்டா. பெண்ணுக்கு என்ன குறைச்சல்? நீயும் கறுப்பாகத்தானே இருக்கிறாய்?” என மட்டம் தட்டினாள் ஜெயசுதா அக்கா.

கார்த்திக்கிற்கு என்னதான் இருந்தாலும் தன் தாய் உயிரோடு இருந்திருந்தாலோ, தனது உடன்பிறப்புகள் என்றாலோ தனது எண்ணங்களுக்கு மதிப்பளித்திருப்பர். இவள் அடுத்தவள்தானே? அதனால்தான் தனது கருத்தையே வலியுறுத்துகிறாள் என்று எண்ணினான். எனவே,

“அக்கா இப்போதைக்கு எனக்குத் திருமணம் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்கா” என்றான்.

“சரி நீ ஊருக்குப் போ. பார்ப்போம்” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் ஜெயா. இருப்பினும் கொஞ்ச நாள் கழித்து இவனிடம் பேசிப்பார்ப்போம் என மனதில் எண்ணிக் கொண்டாள். அவள் ஒன்று நினைத்தால் அதை நடத்திக்காட்டவேண்டும் என்ற பிடிவாதம் அவளிடம் உண்டு.

கார்த்திக்கின் வீட்டிலோ அம்மா இறந்தபிறகு அவனைப் பற்றிக் கவலைப்பட ஆளில்லாமல் போனது. அண்ணன்களுக்கு அவர்கள் குடும்பமும் தங்கைக்கு அவள் குடும்பம் பற்றியே சிந்திக்கவும் நேரம் போதவில்லை. இதில் அவன் விருப்பமறிந்து செயல்படுவதற்கு ஏது நேரம் என நினைத்துக் கொண்டனர். அவன் பெண்ணைப் பிடிக்கவில்லை எனச் சொன்னபோது,

“வேறு பெண் அமையுதா என்று பார்ப்போம்டா” என்று சொன்னதோடு அண்ணன் தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணினார். ஆறு மாத காலத்திற்குப் பின் ஜெயசுதா அக்கா ஏற்கனவே பார்த்த சுப்புலட்சுமியை முடிப்போம் எனச் சொன்னபோது, கார்த்திக் வேண்டாம் எனத் தடுத்தும் அண்ணன்,

“வயது ஏறிக்கொண்டே போகுதடா. இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்ப. எங்க கடமைய நாங்க முடிக்கணுமில்ல. அம்மாவும் உயிரோடு இல்ல” என்றார். வேறு வழியில்லாமல் அண்ணனின் பேச்சுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல நாளில் சுப்புலட்சுமியைக் கரம்பிடித்தான் கார்த்திக். உறவுகளை விட ஏராளமான நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொண்டான் கார்த்திக்.

அவன் ஆரம்ப காலத் திருமணவாழ்க்கை கொஞ்சம் சிரமப்படாமல் கழிந்தது. சுப்புலட்சுமியின் குடும்பத்தாரும் அவனிடம் பாசமாகவே இருந்தனர். ஆனால் சுப்புலட்சுமியின் குணம்தான் அவனுக்குப் பிடிபடாமல் போனது. திருமணத்திற்குப் பின் கார்த்திக் தனது அண்ணன்களுக்கோ, அவர்கள் பிள்ளைகளுக்கோ எதுவும் செய்யவிடாமல் சண்டைபோட்டாள். தனது நண்பர்கள் யாருக்கேனும் பணஉதவி செய்தாலும் அன்று சண்டைதான். நாளுக்கு நாள் சின்னச்சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைபோடும் சுப்புலட்சுமியின் போக்கு கார்த்திக்கிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் நிமிடத்துக்கு ஒரு சண்டை. என்னடா வாழ்க்கை இது என வெறுத்துப்போனான் கார்த்திக். இதற்கிடையில் ஓராண்டில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையின் மீதிருந்த பாசத்தாலும் சுப்புலட்சுமிக்குக் கீழ் மூன்று தங்கைகள் இருந்ததாலும் அவளைப் பெற்றவர்கள் வீட்டிற்கு அனுப்பவும் இயலாது போராடித் தோற்றான் கார்த்திக். நாளுக்கு நாள் சுப்புலட்சுமியின் பிடிவாதம் வலுத்துக் கொண்டே போனது.

அவனுக்குச் சோறு போட்ட அண்ணிகள் கூட,“ என்ன கொழுந்தனாரே ஒரு நாள்கூட உங்கள் வீட்டிற்குக் கூப்பிடமாட்டீங்களா?” என்று கேட்கும்போது தனது மனைவியின் குணமறிந்து கூப்பிடமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கிப் போனான் கார்த்திக். இயல்பிலேயே எல்லோரிடமும் பாசம் காட்டும் கார்த்திக்கின் உள்ளம் குறுகிப்போனது.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கார்த்திக்கின் அண்ணனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. பிரித்துப் படித்தவர் மயக்கம் போடாத குறைதான்.

“டேய் என் தங்கமே ஏண்டா இப்படிப் பண்ண” என்று கதறிய அண்ணனின் குரலில் அண்ணியும் கார்த்திக் இறந்துபோனான் என்ற தந்திச் செய்தியைக் கேட்டுக் கதறினாள். வீட்டின் கடைக்குட்டி செல்லமாய் வளர்ந்த கார்த்திக் திருமணமான நான்கு ஆண்டுகளில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான். இறப்பிற்குப் போய் வந்த குடும்பத்தார் அவன் எப்படி இறந்தான்? என விசாரித்தனர். நீண்ட நாளைக்குப் பிறகு ஒருவரும் அறியாமல் சென்னை சென்ற அண்ணன், தன் தம்பி தனது மனைவியின் கொடுமை தாங்காது விஸ்கியில் விசம்கலந்து குடித்து இறந்தான் என்ற செய்தியில் துடித்துப்போனார். அம்மா போன பிறகு, தான் பார்த்து தம்பிக்கு வாழ்க்கை அமைத்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என மறுகினார். துடித்துப் போனது அவர் மட்டுமல்ல நிம்மதியிழந்த கார்த்திக்கின் ஆன்மாவும்தான்.

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் சு.சோமசுந்தரி,

புனைபெயர் : மதியழகி

ஆய்வறிஞர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.

 

Velli Veethiyar Padalkalil Pen Mozhiyum Punaivum|Dr.A.Kohila

வெள்ளி வீதியார் பாடல்களில் பெண்மொழியும் புனைவும் -முனைவர் அ.கோகிலா
Abstract
               
The writings of the feminists are primarily recorded by the people’s life. They have recorded their inner self through their works. He was born in Madurai. His songs are cantered on his own experiences. He followed the songs of the Sangha literary traditions.


வெள்ளி வீதியார் பாடல்களில் பெண்மொழியும் புனைவும்         

பெண்படைப்பாளிகளின் எழுத்துக்கள் மக்கள் வாழ்வியலை முதன்மையாகக் கொண்டவை. தனது படைப்புகள் வழியாக தன் அகஉணர்வுகளை சுயம் இழக்காமல் பதிவு செய்தனர்.பிரிவாற்றாமையால் தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைத் தனக்கே உரிய பெண் மொழியடன் புனைந்தார் வெள்ளிவீதியார் என்பதை எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது இவ்வாய்வு.
         
மதுரையில் வெள்ளிவீதியார் பிறந்தார்.இவரின் பாடல்கள் தன் சொந்த அனுபவங்களை மையமிட்டே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சங்க இலக்கிய மரபுகளைப் பின்பற்றியே பாடல்களை உருவேற்றினார்.தனிபட்ட ஆண் பெண் இருவரிடையே உள்ள காதல் உணர்வினை மறைத்துத் தலைவன் தலைவி பெயர்களைக் கூறுவதைத் தவிர்த்தார். இயற்கையைத் தனிப் பொருளாகக்கொண்டு மானிட உணர்வுகளைப் பதிவு செய்வதை நோக்கமாக் கொண்டார்.
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப்பிறர் முன்னர் 
கல்லாமைகாட்டியவள்-வாழி சான்றீர்”1
         
என்ற கூற்றிற்கிணங்க வெள்ளிவீதியார் புலமைப் பெற்றிருந்தார்.இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலிய உணர்வுகளைக் கூறாமல் தலைவனும் பாங்கனும் காதல் பொருளாக நிகழ்த்தும் பாடல் ஒன்றினை மட்டும் வெள்ளிவீதியார் பாடியிருக்கிறார்.காமம் செப்பல் ஆண்மகற்கமையும் என்பது ஆண்பாற் புலவர்களுக்குப் பொருத்தமாவது போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களுக்கு பொருத்தமாக அமையவில்லை.அதே போல் பெண்பாற் புலவர்கள் பாடல்களில்  இளமை நலம் பயவாமல் இருப்பது தாங்கொணாத் துயர நிலையாகவேப் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது.இந்நிலையை ஆண்பாற்புலவர் பாடல்களில் காண முடியவில்லை.

“வெண்மணல் விரிந்த வீததை கானல்”2
“இலங்கு வெள் அருவி போல”3               
“தண்டுடைக் கையர் வெண்தலை சிதவலர்”4
“வான்கரும்பின் ஓங்கு மணற் சிறுசிறை”5
“சிறு வெள்ளாங்குறுகே சிறுவெள்ளாங்குறுகே”6
என வெள்ளிவீதியார் வெண்மை என்ற சொல்லாடல் மீது பற்றுக் கொண்டவராக வெள்ளிய மணல் பரந்த கடற்கரை வெண்மைத்தலையினை உடைய தலைவன் என பதிவு செய்திருப்பதின் வழி தன் பெயரை ஒவ்வொருப்பாடலிலும்  பதிவு செய்யவேண்டும் என்பதில் தனித்துவம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
இவரது பாடல்கள் பிரிவாற்றாமையை முதன்மையாக கொண்டிருக்கின்றன. இவர் செய்யுட்கள் சோக கீதங்கள் எனக் கூறத்தகுந்தவை. இவர் தம் பாடல்கள் இகத்துறை தழுவியவை. இவர் பாடல்களில் ஒன்பது தலைவிக் கூற்றாகவும் மூன்று தோழிக் கூற்றாகவும் ஒன்று செவிலித்தாய் கூற்றாகவும்  ஒன்று மட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
          கற்பு நெறி பிறழாமை தலைவியின் அவல நிலை காமம் மிக்க கழிபடர்கிளவி முதலானவையே பாடலின் பொருண்மைகளாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர்க் காட்சிகற்புச் சிறந்தன்று”7
எனத் தலைவிக்கூற்றுரைக்கு ம் போது தலைவிக்கு நாணும் கற்பும் கடவாமை வேண்டும் என்கிறார்.

“நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முன்னீர் காலின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை  குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம்காதலரே”8
         
என பெரும்பாலும் தலைவிக் கூற்றினையே  தன்மைப்படுத்தியிருக்கிறார். காதலனைத் தேடிப் பிரிந்த துயரத்தைப் பின்வருமாறுப் பதிவு செய்கிறார்.

“காலேப் பரிதப்பினவே கண்ணே நோக்கி
நோக்கி வாள் இழந்தனவே”9
“வெண்தேர்தாதின் புன்னையோடு கமழும்
பல் கானல் பகற்குறி வந்து நம்
மெய்கவின் சிதையப்பெயர்ந்தமை”10
         
என்று தன் தோழியிடம் தன்  காதலைக்கூறுகிறாள்.மற்றொருப்பாடலில் தலைவியின் மனநிலையைக் கீழ்க்கண்டவாறு பதிவு  செய்கிறார். கடல் ஒலிக்கின்றது. கடல்நீர் பொங்கிக் கரையை உடைக்கின்றது. தாழையும் பெயர்ந்து நறுமணம் வீசுகின்றது. பறவைகள் கூக்குரலிடுகின்றன. அத்தருணத்தில் காதலன் தன்னுடன் இல்லையே என புலம்புவதாக அமைந்துள்ளது.

“ஓங்கு மணற்சிறுசிறை
தீம்புனல் தெரிதர வீந்து உக்காஅங்கு
தாங்கும் அளவைத்தாங்கி
காமம் தெரிதரக் கைநில்லாதே”11
                   
என பசலையால் உண்ட அழகினையும்

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்த உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது”12         
என தலைவியின் புலம்பலையும் காம உணர்வினையும் கூறுகிறார்.இதே கருத்தினை ஔவையார் உடன்போக்கில் சென்ற தலைவியின் காதல்உணர்வினை வெள்ளிவீதியாரைத் தழுவி

“உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின்எம் அளவைத்தன்றே வருத்தி
வான்றோய்வற்றே காமம்
சான்றோ ரல்லர் யாம் மரீஇயோரே”13         
இவ்வகையில் தலைவியின் களவையும் கற்பையும் பேசுவதில் இருவரும் ஒன்றுப்படுவதைக்காணமுடிகிறது.இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 13. களவிற்கு உரியன 5 கற்பிற்கு உரியன 8. இவரின் மாந்தர்கள் களவினராயினும் கற்பினராயினும் காதல் உணர்வு கொண்டவர்கள்.பாடும் புலவர்க்குப் பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உணர்வு அகத்திணை இலக்கியத்தில் இல்லை.இதனை மாற்றும் விதமாக  வெள்ளிவீதியார் செயல்பட்டிருப்பதைக்காண முடிகிறது.இவர் பாடிய பாடல் அகத்தைத் தழுவி எழுதப்பட்டனஎன்பதைப் பின்வருமாறு அறியலாம்.

“மகளீர் தழுவிய துணற்மையானும்
மள்ளர் குழீஇய  விழவி னானும்”14
         
என்ற ஆதிமந்தியின் அகப்பாடலை ஒத்து தம் பாடலைப் பாடி  இருக்கிறார்.உடன்போக்கு பொருள்வயிற்பிரிவு ஆகியவையும் தன் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறார்.இவர் கற்பு நெறியின் போக்குகள் அகத்தை சார்ந்தவையாகவே  அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.களவு நெறியின் பண்புகள் குறித்து  அதிகம் பேசி இருப்பதைக் காணமுடிகிறது.பிறக்கூறுகளை குறிப்பாக தொன்மத்தைத் தன் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பதைப் பின்வருமாறு உணரலாம்.

“————————- யானே 
காதலர் கெடுத்த சிறுமையோடு   நோய்கூர்ந்து
ஆதிமந்திபோல பேதுற்று”15
         
தன் அனுபவத்தை வெளிக்கொணரத் தொன்மத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.

தொகுப்பாக
Ö பிரிவாற்றாமையை  மையமாகக் கொண்டு பாடல்களை எழுதினமை.

Ö சுய உணர்வு குறிப்புகளாக பாடல்களை உருவாக்கியமை.

Ö இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாக் கொண்டு களவுநெறி கற்பு நெறி வாயிலாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியமை.

Ö வெள்ளிவீதியார் என்ற பெண் மொழியின் புனைவுகள் அடிப்படையின் வாழ்வின் உணர்வு பிம்பங்களே என்பதை அறிய முடிந்தமை.

துணை நூல்கள்
1.நெய்தற்கலி.24

2.குறுந்தொகை.386

3.அகநானூறு.362

4. குறுந்தொகை.146

5. குறுந்தொகை.149

6.நற்றிணை.70

7.தொல்காப்பியம் இளம் உரை

8.குறுந்தொகை.130

9. குறுந்தொகை.42

10.நற்றிணை பாடல்

11.குறுந்தொகை.149

12.குறுந்தொகை.44

13.ஔவையார் பாடல்

14.ஆதிமந்திப்பாடல்

15.அகநானூறு.45

 
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ கோகிலா,

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,


சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,

மாதனாங்குப்பம், சென்னை – 600 099.

 

Mannai Maasupaduthum Navina Ethiri|Dr.N.Dharmaraj

Mannai Maasupaduthum Navina Ethiri Dr.N.Dharmaraj

Abstract         
           

         On the other side of the science to grow, it should be approached with caution. When we approach science naturally, we have seen the traumatic events in front of us when we arise against nature due to civilized maturity. Some people in the world have tried to take control of their natural control because we do not know that part of nature is a part of nature. This earth is called the mother of the world, if so, if the mother of all of us is extinct. We are dead but if we are destroyed, we have no way to exist. We must all live in immortality, the only earth that everyone has.


“மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரி”

ஆய்வுச் சுருக்கம்         

        அறிவியல் வளர வளர அதன் இன்னொரு பக்கம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டும் என்பார் இறையன்பு. அறிவியலை இயற்கைக்கு இணக்கமாக்கி அணுகும் போது பாதிப்பில்லை நாகரீக முதிர்ச்சியால் இயற்கைக்கு எதிராக நாம் எழும்போது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம் முன்னால் நிகழ்வதை கண்டு கொண்டுதான் இருக்கிறோம் நம்மிடையே ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தாலோ கலாச்சார மாற்றத்தாலோ சிதைக்கப்படுவது சுற்றுச்சூழல் மட்டுமே என்பதை இக்கட்டுரையில் காண்போம்.


முன்னுரை
         

        இயற்கையோடு இணையும் போது தான் மனித வாழ்க்கை அத்தப்படுகிறது.நாம் இயற்கையின் ஒரு பாகம் என்பது தெரியாத காரணத்தால் உலகத்தில் சிலர் இந்த இயற்கை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று முயற்சித்தார்கள் ஆகையால் இயற்கை மோசமாகி சீரழிந்துள்ளது. இந்த பூமியை உலகம் முழுவதும் அம்மா என்று அழைக்கிறது அப்படி என்றால் நம் எல்லோருக்கும் இருக்கும் அம்மா அழிந்தால் நாம் இல்லை. நம்மைப் பெற்ற தாய் இறந்தாள் நாம் இருக்கிறோம் ஆனால் பூமித்தாய் அழிந்தால் நாம் இருப்பதற்கு வழியே இல்லை. எல்லோருக்கும் இருக்கும் ஒரே பூமித்தாயை நாம் எல்லோரும் சேர்ந்து அழியாமல் வாழ வைக்க வேண்டும்.
         

      எந்த வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும் சுற்றுச்சூழல் பாதிக்கும்போது வளர்ச்சி தானாகவே தடைப்பட்டு போகும். இந்த நூற்றாண்டில் மனிதன் நன்கு வாழ வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்து அடுத்த தலைமுறையினரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இன்று மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத போது வருங்கால சந்ததிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் இது மிகவும் அவசியமானதாகும். இன்றைய காலகட்டத்தில் மண் மாசு படுவதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் நெகிழிப் பயன்பாடு நெகிழிப் பயன்பாட்டால் பூமி வெப்பமடைவதை கட்டுரை விளக்குகிறது.


          நெகிழிப் பயன்பாடு அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்று வருகிறது நகரத்தில் சேரும் கழிவுகளில் நெகிழி கழிவு பொருட்கள் மட்டும் 50% விழுக்காட்டிற்கு மிகுதி என்ற செய்தி நெகிழியின் பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஒருபுறம் நெகிழிப் பொருள்களின் தேவை மிகுதியாகி வருகிறது மறுபுறம் எதிர்ப்பு பெருகி வருகிறது. இந்த எதிர்ப்புக்கு காரணம் நெகிழியினால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் பாதிப்புகளே. ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களால் சூழல் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.
 மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக நெகிழி திகழ்வதை பழனி பாரதி மிக அழகாக கூறியுள்ளார்.


“அதிகாலையில்

வாசலில் வந்து விழுந்த

பால்காரனின்குரல்

எடுத்து பேசியது

பால் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் பை

காய்கறி மளிகை என்று

வேலைக்காரியின் கைகளோடு

வீட்டுக்குள் நுழைகின்றன

நான்கைந்து பிளாஸ்டிக் பைகள்

குழந்தைகளின் உணவு சட்டி

தண்ணீர் குவளைஎல்லாம் பிளாஸ்டிக் “..!
         

     என்ற வரிகளில் விவரிக்கின்றார் இப்பைகளை பயன்படுத்துவதாலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதாலும் ஏற்படும் இன்னல்களை மனித இனம் உணர்வதில்லை. இயற்கையை மனிதனே சீரழிக்கின்றான்.நாளைய உலகம் நெகிழிப் பைகளாக காட்சியளிக்கும். வருங்கால தலைமுறையினர் மண் எப்படி இருக்கும் என்று அறியாமலேயே இறக்க நேரிடும் மண்ணோடு மண்ணாக சிதைவடைய 10 லட்சம் மில்லியன் ஆண்டுகள் கால அளவு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


நெகிழி மோகம்
         

    மக்களிடையே மிகுந்து வரும் நெகிழி மோகத்தையும் அதற்கு அடிமையாகி விட்டதையும் சோ. இராஜேந்திரன் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்.


காய்கறி வாங்க

எடுத்துச் சென்ற மஞ்சள் பை

இறைச்சி வாங்க

எடுத்துச் சென்ற ஓலைப்பை

எண்ணெய் வாங்க பாதுகாத்த கண்ணாடி குப்பி

தண்ணீருக்கு இல்லாத

தனிமனம் தரும்

பித்தளை சொம்பு 

அத்தனையும் தொலைத்து

உயிர் வாழ தொடங்கி விட்டோம்

பிளாஸ்டிக் இதயத்தோடு..
        

    என்று சுட்டிக் காட்டுகிறார்.பல்வேறு காரியங்களுக்கும் நெகிழியை பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள் மனிதர்கள். ஆகவே நெகிழிக்கு அடிமையாகாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் கவிஞர் இராசேந்திரன்.


நெகிழி – மண் மாசு
         

பண்டைய காலத்தில் வளமான மண்ணை கொண்டு காட்சி அளித்தது நிலம்.எனவே ஐவகை நிலப் பாகுபாடுகளின் வழியே தமிழர்கள் வாழ்க்கையை உணர்த்தினர். இப்பொழுது மண்ணினைக் காண முடியாத அளவுக்கு நெகிழி நிரப்பி காணப்படுகிறது இதனால் நிலம் தனது தன்மையிலிருந்து மாறி வருகின்றது.


“ நெகிழி குப்பைகள் மூடஇறந்து கொண்டே இருக்கும் நிலம் “
 

என்று செழியன் கூறுகின்றார் மாணவர் எக்ஸ்னோரா ஆலோசகர் முத்துகிருஷ்ணன்


“ நல்ல நிலம் கெட்டுப் போகுது பிளாஸ்டிக்காலே

மழை பேஞ்ச தண்ணியும் தான் பூமியிலே சேறாதுங்க

பூமியிலே       சேறாதுங்க

மண்வளம் கெட்டுப்போகும் மண்புழுவும் செத்துப்போகும்

மண்புழுவும் செத்துப் போகும்

முந்நூறு ஆண்டு ஆனாலும் பிளாஸ்டிக் மக்காதுங்க..

மண்ணோடு மண்ணாக ஒன்னாவே சேராதுங்க 

ஒன்னாவே சேராதுங்க…
        

       என்று குறிப்பிடுகின்றார். நிலத்தில் கிடக்கும் நெகிழிப் பைகள் மண்ணிற்குள் காற்று போகாமல் தடுக்கின்றன. மண்வளத்தை கெடுக்கின்றன.தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. மண்ணின் பிடிமானத்தை குறைத்து நிலச்சரிவு ஏற்படும் சூழலை உருவாக்குகின்றன. நிலத்திற்கு போர்வையாக நெகிழிகள் அமைந்துவிட்டால் நுண்ணுயிர்கள் இன்மையால் மண்புழுக்கள் அழிந்து விட்டன. மட்கும் தன்மையற்ற நெகிழிகளால்  நிலங்கள் அழிந்து வருவதை “இறப்பு “என்று சுட்டிக் காட்டுகின்றார். மண்ணுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் நெகிழிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நிலம் அழிந்துவிடும் நிலம் அழிந்துவிட்டது என்றால் உணவுக்கு என்ன செய்வது பணத்தையே உணவாக உண்ண முடியுமா? ஆகவே இயற்கைக்கு தீங்கு இழைக்காதீர்கள் என்று கவிஞர் வருந்துகின்றார்.


நெகிழி மண்ணுக்கு இழைக்கும் கொடுமை
         

     செயற்கை பொருள்களான நெகிழிப் பைகள் மேல் மண்ணுக்கும் கீழ் மண்ணுக்கும் இடையில் ஒரு கண்ணாடி சுவர் போல நீரோ காற்று உள்ளே செல்ல வழி விடாது மண்ணை மூச்சு திணற செய்கிறது.அதனை மீறி எந்த விதையும் முளைப்பதில்லை. மேலும் நுண்துளைகள்.நீர் பிடிப்பு தன்மை. மண்ணில் இயற்கை தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன நெகிழி பயன்பாட்டால் மண்ணில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை..
 நெகிழி கழிவு பொருட்கள் நிலத்தில் எரியப்படுவதால் அவை மற்ற உயிர்மக் கழிவுப் பொருட்களை போல மண்ணோடு மண்ணாக மடக்குவதில்லை. அவை நிலத்தில் வெப்ப அழுத்தத்தினால் வேதியில் மாற்றத்திற்குள்ளாகி நிலத்தின் தன்மையை நஞ்சாக்குகிறது. அதனால் மண்வளத்தை காக்கும் பல பூச்சி இனங்கள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் மூலம் நிலத்தடி நீரையும் நஞ்சாகுகிறது மேலும் அப்பொருட்கள் செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து விட்டாலோ வேர்களுக்கு கிடைக்கும் காற்றோட்டம் தடைபட்டு செடிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது. அதேபோல நிலத்தின் காற்றோட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதால் நிலம் கட்டிப் படுவதுடன் மண்வளம் குறைந்து நிலங்கள் பயிரிட தகுதியற்றவையாக மாறிவிடுகின்றன. என்று பூரணச் சந்திரன் கூறுகிறார்.
          இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலை இன்று முற்றிலும் மறைந்து விட்டது. தெய்வமாக விளங்கிய இயற்கையும் இன்று மாறிவிட்டது.இயல்பாக நிலத்தில் வளரும் தாவரங்களை செயற்கையாக வளர்க்கின்றனர் இதனை கலாபிரியா


“ வாசலில் பதியன்கள்

தின்று வளர

மண் திணித்து

மச்சுத் தோட்டத்தில்

மண் தின்ன முடியாத

பாலத்தீன் பைகள் ‘’
         

       என்று விளக்குகிறார். மண்வாசனையை நுகராதவர்கள் அதன் பெருமையை அறியாதவர்கள். நிலத்தில் வளரும் தாவரங்களைப் பைகளில் மண்ணிறப்பு வளர்க்கின்றனர் ஆடம்பர வாழ்க்கையின் எதிரொளிப்பான அழகிய வீடுகளில் மண் இருப்பதை இழிவாக கருதுகின்றனர் எனவே நெகிழிப்பைகளில் செடிகளை வளர்க்கின்றனர் இயற்கையாக கிடைக்கும் நுண்ணுட்ட சத்துக்களை உந்து வளர்கின்ற தாவரங்களை செயற்கையாக வளர செய்கின்றனர் இதனால் மண்ணோடு மனிதருக்கு உறவு இல்லாமல் போகின்றது.எனவே நிலத்தின் காற்றோட்டத்தை தடுக்கும் நெகிழிகள் பெருகிவிட்டது அழிக்க முடியாத பொருளை உருவாக்கி அல்லலூரும் சமுதாயத்தை கண்டு வருந்துகிறார் கவிஞர் கலாப்ரியா
         

       மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரிகளில் நெகிழி முதன்மையானது மண்ணின் உறிஞ்சும் தன்மையை தடுப்பதோடு மண்ணோடு செரிமானமாகாமல் நீண்ட தொல்லையாய் உள்ளன நெகிழி உருவாக்கத்தின் போது அதிலுள்ள நச்சு கழுவுப் பொருட்கள் நிலத்தை மாசடைய செய்கின்றன இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மண்ணைக் காண முடியாத நிலை ஏற்படும் என்பதை  செந்தமிழ் இனியன்


“குப்பைகளில் நாளைய தலைமுறைகள் நெகிழியில் நெளியும்”
         

என்று சுட்டிக் காட்டுகிறார். நெகிழிக் குப்பைகளின் மிகுதியால் எதிர்கால தலைமுறைகள் தவழ்ந்து விளையாட மண் இருக்காது. ஐம்பெரும்புதங்களில் முதலிடம் வகிக்கும் நிலம் எதுவென்று கேட்டால் விடை தெரியாமல் திகைப்பர். நிலத்தின் மேல் போர்வை போல் நெகிழி குப்பைகள் படிந்து காணப்படுவதால் மழை நீர் உட்புக முடியவில்லை அதனால் மண் வெப்பமடைகிறது. மண் வெப்பம் அடைவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது மனித சமுதாயம அழிவதற்கு காரணமாகவும் நெகிழி அமைகிறது. பூமியில் மண்ணுக்கு பதிலாக நெகிழி பரவினால் மண்ணின் தன்மை குறைந்து வெப்பம் அதிகரிப்பதை கண்களால் காண முடிகிறது.


சான்றெண் விளக்கம்

1.கவிஞர் பழனி பாரதி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 40


2.இராசேந்திரன், சூழலியல் தமிழ் ப-90


3.செழியன் தீட்டெனக் கழியும் ப -18


4.முத்துக்கிருஷ்ணன் நெகிழிக்கு டாட்டா சொல்லுவோம் ப – 51


5.சத்தியமோகன், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப -41


6.வைகைச் செல்வி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 43


7.ரவிச்சந்திரன் கே, மேலது ப –  44


8.பூரணச்சந்திரன், அறிவியல் கட்டுரைகள் ப -43,44


9.கலாப்ரியா சூழலியல் தமிழ் ப 90


10.செந்தமிழ் இனியன், தற்கால கவிதைகள் ஒரு பார்வை ப- 68



ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்

இணைப் பேராசிரியர்


செயின்ட் ஜோசப் கல்லூரி( கலை மற்றும் அறிவியல்)


கோவூர், சென்னை.

 

திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனை-இல்லறம்

திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனை - இல்லறம்

ஆய்வுச் சுருக்கம்

      தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளனதைப் பார்க்க முடிகின்றன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது


குறிச்சொல் – திருக்குறள், இல்லறம், அறம், துறவறம், மனத்தூய்மை, தர்மம், நீதி, நேர்மை.


Keyword – Thirukkural,  domesticity, virtue, asceticism, purity of mind, dharma, justice, honesty.


முன்னுரை

      அறம் என்ற சொல்லுக்குத் ‘தருமம், புண்ணியம், இல்லறம், அறக்கடவுள்’ என்ற பல பொருள்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக நேர்மையாக இருப்பது, மனசாட்சிப்படி நடந்து கொள்வது, நீதி நெறிப்படி வாழ்வது என்பன போன்ற தனிமனித – சமூக ஒழுக்கம் சார்ந்த நடத்தையைப் பற்றிக் குறிக்கும் சொல்லாக உள்ளது. அதாவது மனம், சொல், செயல் என்ற மூன்று முறைகளில் மனிதனிடம் வெளிப்படும் ஒழுக்கப்பண்பே அறம் எனப்படுகின்றது. இது இல்லறம் துறவறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றது. இவற்றில் இல்லறத்தைப் பற்றியும் அவ்வறத்தின் மேன்மை பற்றியும் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. துறவறத்திற்கும் அத்துறவறத்தை மேற்கொள்ளும் துறவிக்கும் உற்ற உதவிகளைச் செய்யும் இல்லறத்தின் மேன்மை குறித்த ஒரு பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது. 


அறமும் – இல்லறமும்

      மனிதன் செய்யக்கூடிய அறங்களில் எல்லாம் உயர்ந்தது மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பதே. இதன் கருத்தாவது ஒரு மனிதன் எத்தகைய செயலை செய்தாலும் அந்தச் செயல் செய்வதற்கு முன் அது பற்றிய சிந்தனை அவன் மனதில் தோன்றும். அதன் தொடர்ச்சியாகத்தான் அதன் செயல்வடிவம் நிகழும். அதாவது மனதில் தோன்றுவது எண்ணங்கள்தான் வாய்வழியாக வார்த்தைகளாகவும், உடல் உறுப்புகள் வழியாகச் செயல்களாகவும் வெளிப்படுகின்றன.  
அதாவது, எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அது குறித்த திட்டமிடல் அல்லது அச்செயல் குறித்த சிந்தனை முதலில் தோன்றும். அதன்பிறகுதான் அச்செயல் செயல்படுத்தப்படும். ஆக, மனம் சிந்திக்க அச்சிந்தனையின் செயல் வடிவத்தை உடல் செயல்படுத்துகிறது.  எனவேதான் 


மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்


ஆகுல நீர பிற (குறள்.34)


      என்று குற்றமற்ற நல்ல மனமே அறங்களில் எல்லாம் உயர்ந்தது என்பதாகத் திருக்குறள்  குறிப்பிடுகிறது. 
ஆனால், அதே திருக்குறளில் ‘அறமெனப்பட்டதே இல்வாழ்க்கை (குறள்.49)’ என்று வேறொரு இடத்தில் அறம் என்ற சொல்லுக்கான பொருளே இல்வாழ்க்கை என்பதுதான் என்றும் கூறுகிறது. 
இது பார்க்க முரணாகத் தோன்றினாலும் இரண்டும் உண்மைதான். காரணம் இல்வாழ்க்கை என்பதுதான் அறம் என்ற சொல்லுக்கான பொருளை நிர்ணயம் செய்கிற இடமாக அமைகின்றது. மனம், வாக்கு, காயம் என்ற மூன்று செயல்பாடுகளும் ஒன்றின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துகிற ஓரிடமாகவும் அமைகின்றது.


இல்லறத்தின் மேன்மை

     ஒரு மனிதன் தான் தன் மனைவி அல்லது கணவன் குழந்தைகள் என்று ஒரு அமைப்பாக ஒரு நிலையான குடியிருப்பில் வாழ்வதற்கான முக்கியமான அல்லது முதன்மையான காரணமே மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே என்கிறது திருக்குறள். அதாவது,


இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி


வேளாண்மை செய்தல் பொருட்டு (குறள்.80) 


    இத்தகைய இல்வாழ்க்கையை வ‍ழ்பவர் ‘உறவினர்கள், நண்பர்கள் மற்றும் எளியவர்க்கு உற்ற துணையாக இருப்பர். துறவிகளுக்கும், பசியால் வாடுபவர்க்கும், மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்பவராக இருப்பர். மூதாதையர்களை வணங்குதல், தெய்வ வழிபாடு, விருந்தினரை உபசரித்தல், சுற்றத்தவருக்கு உதவுதல் என்பதை எல்லாம் முடித்த பின்னர் கடைசியாகத்தான் தனக்கானதைப் பற்றி சிந்திப்பவராக இருப்பர்’  (குறள்.41- 43) இப்படிப்பட்ட சிறப்புகளை எல்லாம் கொண்டிருப்பதால்தான் ‘அவர் துறவியை விட மேலானவர்’ {குறள்.46-48] என்று சுட்டப்படுகிறார்.     

      
உற்றார் உறவினர் உடன் பிறந்தவர்கள் பெற்றெடுத்த தாய் தந்தையர் என அனைவரையும் விட்டு விலகி சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழும் துறவியின் வாழ்க்கையானது சமுகத்திற்கு எத்தகைய பயனைத் தரப்போகிறது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. ஆனால், துறவிக்கே உதவி செய்யக்கூடிய ஒருவராக இல்லறத்தார் விளங்குகிறார். எனவே துறவியைக் காட்டிலும் இல்லறத்தவன் மேன்மையானவன் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத்தேவை இல்லை.   ஏனெனில் முற்றும் துறந்தவன் சுயநலத்தோடு செயல்பட இல்லறத்தை மேற்கொள்பவன் பொது நலத்தோடு செயல்படுகிறான்.  


    ஆக இல்லறத்தின் அடித்தளமாக விளங்குவது அன்பு. அந்த அன்பின் பயனாக அறச்செயல்கள் நடைபெறுகின்றன. அறத்தின் முதன்மையானது பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைத்து அத்துன்பத்தைப் போக்க முயற்சித்தல் என்பதாக இது ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்து செயலாற்றுகின்றது.
அறம் செய்வதனால் இன்பம் உண்டாகின்றது. அவ்வாறு உண்டாகும் இன்பத்திற்கு நிகரான இன்பம் வேறொன்றில்லை (குறள்.39). எனவே இயன்றவரை அறம் செய்ய வேண்டும். அப்படி அறம் செய்வதால் கிடைக்கும் நன்மையைவிடச் சிறந்த ஒன்று வேறில்லை. எனவே அறத்தை மேற்கொள்ள வேண்டும்  என்கிறது திருக்குறள். மேலும், அறம் செய்வதால் கெட்டோம் என்று வருந்தும் அளவிற்கு யாரும் தீங்கினை அடையவில்லை. எனவே முடிந்த அளவு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறம் செய்ய வலியுறுத்துகின்றது.


அறம் எனப்படுவது யாது?எனக் கேட்பின் 


மறவாது இது கேள் மண் – உயிர்க்கு எல்லாம் 


உண்டியும் உடையும் உறையுளும் அல்லது


கண்டது இல்………………. (மணிமே. 25;228-231)  


      என்று துறவு நூலான மணிமேகலையில் மக்களின் பசிப்பிணியைத் தீர்ப்பதே முதன்மையான அறமாகச் சுட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.
‘உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்’ (புறம்.18) எனச் சங்க இலக்கியம் கூற அதற்கு நேர் எதிராக ‘உண்டி கொடுத்தோ உயிர்கொடுத் தோரே’ என்கிறது மணிமேகலை. அதாவது, துறவுநூல் என்று அடையாளம் காணப்படும் மணிமேகலை சமுதாய வாழ்வின் அடிப்படை நெறியாகிய இல்லறத்தைத் திடமாக வற்புறுத்துகின்றது. ‘பத்தினி இல்லோர் பல்லறம் செயினும் புத்தேள் உலகம் புகார்’ ( மணிமே.22;117- 18) என்ற அடிகளில், இல்லற வாழ்வை ஏற்காதவர் என்ன அறம் செயினும் பயனில்லை என்பதை வற்புறுத்திய காட்டுகிறது.

       மேலும், துறவியாகிய மணிமேகலையின் கையுள்ள வெற்று ‘அமுதசுரபி’ சிறந்த இல்லறத்தாளாகிய ஆதிரையின் கையினாலே சோறிடப்பட்ட பிறகே எடுக்க எடுக்கக் குறையாத நல்ல உணவைத் தந்தது. மேலும், துறவறத்தினையும் அதனோடு சார்ந்த பிறவற்றையும் அறமெனக் காட்டாது, உலகில் இன்றியமையாத உணவினை அளிக்கும் சிறப்பினையே அறமெனக் காட்டுகிறது மணிமேகலை.
சங்கப் பாடல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் தலைவன் ‘இல்லறத்தின் அறமே விருந்தோம்பல் என்றும். விருந்தினர் உண்டு எஞ்சியதைத் தலைவியே உன்னோடு நான் உண்டு மகிழ்வதே இன்பமாகும் (குறிஞ்.பா.200-15)’ என்று கூறுவதான இடமும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்று. 


     தர்மங்களை மதித்து நடப்பவன், நல்ல வழியில் பொருளைச் சம்பாதித்து வாழ்க்கை நடத்துபவன், குற்றமற்ற இன்பங்களை விரும்புபவன், உயிர் பற்றியும் கவலை கொள்ளாமல் பிறருக்கு உதவுபவன் ஆகிய நான்கு விதமான நற்பண்புகளைக் கொண்டவர்களைத் துணையாகக் கொள்ளவேண்டும்.
இப்படியான காரணங்களால்தான் அறங்களில் எல்லாம் சிறந்தது ‘மாசில்லாத மனமே’ என்று சொல்லும் திருக்குறளும் கூட ‘அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்று இல்லறத்தின் மேன்மை பற்றி விரிவாகப் பேசுகிறது.


முடிவுரை

     நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைத்தையும் பண்டமாக பார்க்கிற போக்கு நிலவுகிறது. உலகமயமாதல் நவீனமயமாதல் என்ற வணிக மயமான இன்றைய காலகட்டத்தில் நீதி, நேர்மை, உண்மை, சத்தியம், தர்மம் என்பன போன்ற சொற்கள் புறக்கணிக்க கூடியவையாக மாறிவிட்டன. இந்தப் பின்னணியில்தான் நாம் தமிழனுடைய அறவியல் சிந்தனை பற்றித் திரும்பிப் பார்க்க வேண்டி உள்ளது. அப்படி பார்க்கையில் இல்லறம் x துறவறம் என்ற இரண்டு பிரிவாக நாம் நம்முடைய அறவியல் சிந்தனை மரபு இருந்தது என்பதை திருக்குறளில் முன்வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது. அவற்றில் துறவரத்தைக் காட்டிலும் இல்லறம் மேன்மையானதாக விளங்குகின்றது. எனவேதான் இல்லறத்தின் இன்றியமையாமை குறித்து திருக்குறள் விரிவாக பேசுகிறது. ஏனெனில் இல்லறந்தான் தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற இந்த மனித வாழ்க்கைச் சங்கிலியின் மையமாக விளங்குகிறது. எனவே இல்லறம் நல்லறமாக விளங்கினால் சமூகமாகத்தில் மகிழ்ச்சி பொங்கும். அன்பு நிலைபெறும். அன்பின் நிலைகலனாக விளங்கும் இல்லறமே தமிழனின் நல்லறம் என்பது திருக்குறள் முன்வைக்கும்  அறவியல் சிந்தனையாக உள்ளது.


பயன்பட்ட நூல்கள்

1.திருக்குறள், மணக்குடவர் உரை, 1955 (முதற்பதிப்பு), மலர் நிலையம், சென்னை –  600 001.

2.திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், 1976, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை.

3.திருமகள் தமிழ் அகராதி, 2007(மூன்றாம் பதிப்பு), திருமகள் நிலையம், தி.நகர், சென்னை – 600 017.

4.பதினண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும் (முதல் தொகுதி), 2022 (மூன்றாம் பதிப்பு), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை – 600 017.

5.பத்துப்பாட்டு மூலமும் உரையும் (பகுதி – 2),  முனைவர் இரா. மோகன் (உ.ஆ.), 2004 (மூன்றாம் அச்சு),  நியூ செஞ்சுரி  புக்  ஹவுஸ் (பி) லிட்,  சென்னை – 600 098.

6.மணிமேகலை (தெளிவுரை), துரை.தண்டபாணி (உ.ஆ), 2019 (எட்டாம் பதிப்பு), உமா  பதிப்பகம், சென்னை – 600 001. 

முனைவர் ஆ. சந்திரன்,

  உதவிப் பேராசிரியர்,  தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை,

 தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்,

திருப்பத்தூர்  மாவட்டம்

நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை|குமாரவேலு டனிஸ்ரன்

நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை - குமாரவேலு டனிஸ்ரன்

ஆய்வுச் சுருக்கம்

          நாட்டிய சாஸ்திரம் என்பது பாரத நாட்டியத்திற்கான அடிப்படை நூலாக கருதப்படுகிறது. இது பரத முனிவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் நடனம், அபினயம், இசை, ராகம், தாளம் மற்றும் இதர பல கலைகளை உள்ளடக்கியது. நாட்டியத்தில் இசைக்கலையின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இசை இல்லாமல் நாட்டியம் முழுமையாக இருக்க முடியாது. இப்படி பட்ட இசைக்கலை  நாட்டிய சாஸ்திரத்தில் எவ்வாறு கையாளப்படுகின்றது? அது பெறும் இடம் எத்தகையது? போன்ற கேள்விகள் இவ்வாய்வின் பிரச்சினைகளாக உள்ளன. இந்த அடிப்படையில் இவ்வாய்வானது  நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலையின்  பங்கு, அதன் அம்சங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விரிவாக ஆராய்வதை நோக்கமாக கொண்டு  அமைகின்றது. மேலும் இந்த ஆய்வானது பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு, வரலாற்று ஆய்வு  எனும் ஆய்வு முறையில்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள் : கலைகள், நாட்டிய சாஸ்திரம், இசை, நடனம், சமூகம்

அறிமுகம்

          இந்திய கலாச்சாரத்தில் நாட்டியம் என்பது அழகியலில் ஒரு உயரிய கலை வடிவமாகப் போற்றப்படுகிறது. இதன் வேர்கள் வேதங்களில் உறைந்துள்ளன. நாட்டியம் என்பது வெறும் உடல் அசைவுகள், நடன வடிவங்கள் மட்டுமல்ல; உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த வடிவமாகும்.1 இது உடல்மொழி, முகபாவங்கள், கைமுத்ரைகள், இசை மற்றும் கதை சொல்லும் பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியது. இவற்றில் இசை மிக முக்கியமான கூறாக விளங்குகிறது.  பரத முனிவரால் எழுதப்பட்ட “நாட்டிய சாஸ்திரம்” என்ற நூலில் இசையின் பங்கு மிக விரிவாக விவரிக்கப்படுகிறது.

நாட்டிய சாஸ்திரத்தின் வரலாறு

          பரத முனிவர் இயற்றிய “நாட்டிய சாஸ்திரம்” என்பது இந்திய பாரம்பரிய நடனக் கலைக்கு அடித்தளமாக விளங்கும் நூல் ஆகும். இது சுமார் கி.மு. 200–300 காலத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. இந்த நூலில் 36 அதிகாரங்கள் உள்ளன.2 அதில் இசை, நடனம், வாத்யங்கள், நவரசங்கள், அபிநயங்கள் போன்றவை விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

          இந்த நூலின் தனிச்சிறப்பு என்னவெனில் இது நான்முக வேதங்களில் உள்ள அறிவின் சாரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது ரிக் வேதம் – பாடல், யஜுர் வேதம் – செயல், சாம வேதம் – இசை, அதர்வ வேதம் – உணர்வுகள் என்பவற்றின் தொகுப்பே நாட்டிய சாஸ்திரம். இவ்வாறு இசை என்பது இதன் ஆழ்ந்த கூறாகவே அமைந்துள்ளது.

இசைக்கலையின் அடிப்படை அம்சங்கள்

இசை என்பது ஸ்வரங்கள், ராகங்கள் மற்றும் தாளங்களால் ஆனது. நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் இசையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1.வாயல் இசை (வாக்கிக இசை)

வாயால் பாடப்படும் இசை. இதில் பாடல்கள், பாடல் இசை, சாத்திர ஒலி ஆகியவை அடங்கும். இது குறிப்பாக சோளோகங்கள் மற்றும் பதங்களின் உச்சரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

2.வாசன இசை (துவனிக இசை)

இது வாத்தியங்கள் மூலம் உருவாகும் இசை. இது நாட்டியத்தின் பின்நிலையிலும், அழுத்தங்களை காட்டவும் பயன்படுகிறது. பக்கவாத்தியங்கள், மெல்லிசை வாத்தியங்கள் இதில் அடங்கும்.

3.அங்க இசை (ஶாரீரிக இசை)

இது உடலின் இயக்கங்களின் வாயிலாக வெளிப்படும் இசை. இது கண்கள், கரங்கள், கால்கள், முகபாவங்கள் ஆகியவற்றின் ஒழுங்கிய இயக்கத்திலிருந்து தோன்றும். ஸ்வரங்கள் (ச, ரி, க, ம, ப, த, நி) என்பது நாட்டியக் கலைஞர்களின் நடையில் சீரான ஒழுங்கை ஏற்படுத்த உதவுகின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு உணர்வை பிரதிபலிக்கிறது. உதாரணமாக, “பைரவி” ராகம் ஒரு சிறிய துக்க உணர்வை ஏற்படுத்தும், “ஹம்சத்வனி” ராகம் மகிழ்ச்சி தரும்.3

நாட்டியத்திற்கும் இசைக்கும் உள்ள தொடர்புகள்

நாட்டிய சாஸ்திரம் முழுவதும் இசையுடன் இணைந்துள்ளது. பரத நாட்டியம் மூன்று முக்கிய கூறுகளை கொண்டுள்ளது:

1.ந்ருத்தம் (Nritta) – சுத்தமான உடல் அசைவுகளின் தொகுப்பு

2.ந்ருத்தியம் (Nritya) – இலக்கணத்துடன் கூடிய நடனம்

3.நாடியம் (Natya) – கதையொன்றை கூறும் நடனம்

இந்த மூன்று கூறுகளும் இசையுடன் ஒன்றிணைந்திருக்கும். நாட்டிய சாஸ்திரம் இசையை முக்கியமாகக் கருதி அதன் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறுகிறது.

நாட்டிய சங்கீதத்தின் முக்கிய அம்சங்கள்

1. ஸ்வரம்

இசையில் உள்ள ஏழு முக்கிய ஸ்வரங்கள் (ச, ரி, க, ம, ப, த, நி) நாட்டியத்திலும் பிரதிபலிக்கின்றன. இவை நாட்டியத்தின் தாளம் மற்றும் ராகத்துடன் பொருந்தி நடனத்தின் அழகினை அதிகரிக்கின்றன.

2. ராகம்

நாட்டிய இசையில் ராகம் என்பது நுண்ணிய உணர்வுகளைத் தூண்டும் இசை அமைப்பாகும். நாட்டிய சாஸ்திரத்தில் பல்வேறு ராகங்களும், அவற்றின் உணர்வும் (ரசமும்) விவரிக்கப்படுகின்றன. நாட்டியத்திற்கான பாடல்களுக்கு ஏற்பவே ராகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ராகத்திற்கும் தனித்துவமான உணர்வுகள் உள்ளன:

பைரவி – பக்தி உணர்வுகளை தூண்டும்

கம்போதி – வீர உணர்வை வெளிப்படுத்தும்

தோடி – சங்கட உணர்வுகளை வெளிப்படுத்தும்

மோகனம் – சந்தோஷ உணர்வுகளை தூண்டும்

கரஹரப்ரியா – மென்மை மற்றும் அமைதியை வெளிப்படுத்தும்

3. தாளம்

          தாளம் என்பது இசையின் அளவுக்கட்டுப்பாடாகும். நாட்டிய சாஸ்திரத்தில் தாளங்கள் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றன. நாட்டியத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் தாளங்கள்:

ஆதி தாளம் (8 மட்டிரம்)

ரூபக தாளம் (6 மட்டிரம்)

மிஸ்ரா சாபு (7 மட்டிரம்)

த்ரிஷ்ரா ஏகம் (3 மட்டிரம்)

கண்டா சாபு (5 மட்டிரம்)

4. லய ஒழுங்கு

          நாட்டியத்தின் ஒழுங்கு முறையான இயக்கங்களை இசையின் லய ஒழுங்குடன் இணைக்க வேண்டும். நாட்டிய சாஸ்திரத்தில் லய ஒழுங்கு காட்சியினை இன்னும் விளக்கமாக வெளிப்படுத்த உதவுகிறது.

6. நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் வாத்தியங்களின் வகைகள்

நாட்டிய சாஸ்திரம் எடுத்துரைக்கும் இசைக்கலையில் வாத்தியங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. பரத முனிவர் வாத்தியங்களை மூன்று வகைப்படுத்துகிறார்.4

1. தத வாத்தியம் – தாள வாத்தியங்கள் (மிருதங்கம், பக்கவாத்தியம்)

2. அவனத்த வாத்தியம் – வாசிப்பதற்கான வாத்தியங்கள் (வீணை, பன்சுரி)

3. கண வாத்தியம் – தாள ஒலி உள்ள வாத்தியம் (டபிலா, மணி)

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

மிருதங்கம் – தாளத்திற்காக

வீணை – மெல்லிசை வழங்க

வயலின் – பின்னணி இசைக்காக

மத்தளம் – அதிக லய உணர்வு கொண்ட பாடல்களுக்கு

நாதஸ்வரம் –  இன்னிசை எழுப்புவதற்கு

கஞ்சீரா – சிறப்பு தோடகங்களுக்கு

ஊதுக்குழல் – மென்மையான சங்கீதத்திற்காக

தவில் – சத்தமிக்க லய ஒழுங்குகளுக்கு

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் சங்கீதத்தின் முக்கிய பாணிகள்

நாட்டியத்திற்காக இசை பல பாணிகளில் பிரிக்கப்படுகிறது:

மெளன சங்கீதம் – மெதுவாக தொடங்கும் இசை

தானம் சங்கீதம் – விதவிதமான லயங்களைக் கொண்ட இசை

க்ருதி – பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இசை

பதம் – கதையினை வெளிப்படுத்தும் பாடல்கள்

நாட்டியத்திற்கும் சங்கீதத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

நாட்டியமும் சங்கீதமும் இரண்டும் நவரசங்களை வெளிப்படுத்த பயன்படுகிறது.

நாட்டியத்தின் அபினயம் இசையின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

இசையின் உச்சம் நாட்டியத்தின் உச்ச கட்டத்தை உருவாக்க உதவுகிறது.

நாட்டிய சங்கீதம் பாரம்பரிய ராகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாட்டியத்திற்காக எழுதப்பட்ட பாடல்களில் பெரும்பாலும் தெய்வீக உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

நாட்டியத்தில் இசையின் பங்கு

          நாட்டியம் ஒரு முழுமையான கலை வடிவமாக இருப்பதற்கு இசை அவசியம். இசை இல்லாமல் நடனம் ஒரு ஓட்டமற்ற உரையாடலாகவே தோன்றும். ஒரு நாட்டிய கலைஞரின் உடல்நடை, முகபாவம், கைமுத்ரைகள் அனைத்தும் இசையின் ஓட்டத்தோடு பின்னப்பட்டிருக்கும்.

          நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது – “ந்ருத்யம் கீர்த்தியதம்விநா ந ரம்யம்”. இதன் பொருள், “இசை இல்லாமல் நடனம் அழகாக இருக்க முடியாது”.5

          இசையின் உதவியுடன் கதை சொல்லும் பாங்கு மேம்படுகிறது. குறிப்பாக அபிநய தர்பணம் என்ற பகுதியில் இசையின் மேன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ராகமும் எந்த உணர்வை வெளிப்படுத்த முடியும் என்பதை நாட்டிய சாஸ்திரம் விளக்குகிறது.

இசை கருவிகள் உருவாக்கும் தாக்கங்கள்

          நாட்டிய நிகழ்வுகளில் பல்வேறு இசைக்கருவிகள் பயன்படுகின்றன இசை கருவிகள் ஒவ்வொன்றும் தனித்தனி பாங்கில் நாட்டியத்தில் இசையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. கருவி இசை என்பது நவரசங்களை (அனந்தமான ஒன்பது உணர்வுகள் – சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரௌத்திரம், வீரர், பயம், பீபத்ஸம், அத்புதம், சாந்தம்) வெளிப்படுத்த உதவுகிறது.6

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் பாடல்களின் வகைகள்

          நாட்டிய இசையில் பின்வரும் பாடல் வடிவங்கள் காணப்படுகின்றன:

1.வர்ணம் – ஆரம்பத்தில் நிகழும்; நடை மற்றும் லய பாணிகளை அமைக்கிறது.

2.ஜவளி – லய விரைவு, அபிநயத்திற்கு ஏற்றது.

3.பதம் – நகைச்சுவை, காதல் போன்ற உணர்வுகளை வெளிக்கொணரும்.

4.தில்லானா – தாளங்களின் வளத்தை காட்டும்.

5.அஸ்தபதிகள், தேவாரங்கள் – ஆன்மீக உணர்வை கூட்டும்.

நாட்டிய இசையின் உளவியல் தாக்கங்கள்
         

நாட்டியத்தில் இசை என்பது வெறும் கேட்பதற்கான உவகை அளிக்கும் கலை மட்டும் அல்ல; அது மனதிற்குள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். இசையின் மூலம் ஒரு நாட்டிய கலைஞர் பார்வையாளர்களின் உணர்வுகளை எழுப்ப முடிகிறது.7 இவ்வாறு இசை உணர்வுகளை உந்துவதால் தான் அது மனநலனுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. உதாரணமாக இராகங்கள் ஒவ்வொன்றும் மனநிலைகளை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. “தோடி”, “சந்திரகௌள”, “ஷண்முகப்ரியா” போன்ற இராகங்கள் தனித்துவமான உளவியல் நிலைகளை உருவாக்கும். இது நாட்டியத்தில் இசையின் மௌனமான பேசுதலாகும்.


இசை பயிற்சி மற்றும் நாட்டியக் கலைஞரின் பயணம்
         

ஒரு நாட்டியக் கலைஞர் தனது பயணத்தில் இசையின் மீது வலுவான பிடிப்புடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஸ்வரங்களின் துல்லியம், தாளங்களின் பரிசுத்தம், ராகங்களின் உணர்வுபூர்வ வெளியீடு ஆகியவை நாட்டியத்தின் சிறப்பான வெளிப்பாட்டுக்கு ஆதாரம். இசை பயிற்சி இல்லாமல் நாட்டியக் கலைஞர் முழுமையான அபிநயத்தை வெளிக்கொணர இயலாது. அதனால் தான் பாரம்பரிய குருக்கள் நாட்டியம் மற்றும் சங்கீதம் இரண்டையும் இணைத்து கற்றுத் தருகிறார்கள். இதுவே பரம்பரையான “குருகுல” முறையின் சிறப்பாகும்.


பரத நாட்டியத்தில் இசையின் சிறப்பு
         

பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தின் மீது தழுவிய ஒரு முக்கியமான நடனக் கலைவடிவமாகும். இதில் “நட்டுவங்கம்” எனப்படும் இசை ஓர்மையுடன் நடனம் வழங்கப்படும். 8 இசையின் ஒலி, தாள ஒழுங்குகள் மற்றும் பாடல்களின் வரிகள் அனைத்தும் நேரடி முறையில் நாட்டிய கலைஞரின் இயக்கங்களைத் தீர்மானிக்கும். மேலும் பரத நாட்டிய பாடல்கள் பெரும்பாலும் தேவாரம், திருப்புகழ், பதம், கீர்த்தனை, தில்லானா போன்ற பாரம்பரிய பாடல்களைக் கொண்டு இயங்குகின்றன. இந்த பாடல்களும் இசையும் கலாசாரத்தின் சுவையை வெளிப்படுத்துகின்றன.


இசை, நாட்டியம் மற்றும் தத்துவங்கள்
         

நாட்டிய சாஸ்திரத்தில் இசை மட்டும் அல்லாமல் அதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவக் கூறுகளும் குறிப்பிடத்தக்கவை. “ரஸா” என்ற உணர்வு பாங்குகள் ஆன்மீக பரிசுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இசையால் வெளிக்கொணரப்படுகின்றன. அதாவது “ரசாநுபூதி” எனப்படும்  சக்தி இசையின் மூலம் உருவாகும் போது தான் நாடக கலை முழுமையாக நிறைவேறுகிறது என சாஸ்திரம் கூறுகிறது. இங்கே ராகம், ஸ்வரம், மற்றும் தாளம் அனைத்தும் ஒருங்கிணைந்து அதிசயமான அனுபவத்தைக் கொடுக்கின்றன.


சமூக மற்றும் ஆன்மீக தாக்கம்
         

நாட்டிய இசை என்பது ஒருபக்கம் கலைக்கான பயிற்சி என்றாலும், மறுபக்கம் ஆன்மீக சாதனையாகவும் பரிணமிக்கிறது. பக்தியுடன் கூடிய பாட்டு, ராகம் மற்றும் அபிநயங்கள் பார்வையாளர்களை புனித அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றனசமூக நோக்கிலும் நாட்டியம் மற்றும் இசை கலாசார பரம்பரையை பாதுகாக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது. சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு இசை மற்றும் நாட்டியம் பயிற்சியளிப்பது நாகரிகப் பண்பாட்டை பாதுகாக்கும் வழியாகிறது.


நவீன பார்வை
         

இன்று நாட்டிய சாஸ்திரத்தின் இசை கூறுகள், நவீன மேடைகளில் சில மாற்றங்களுடன் புழக்கத்தில் உள்ளன. கலைஞர்கள் பலர் இசையில் சிருஷ்டியைச் செய்து நவீன இசைத்தொணிகளுடன் பாரம்பரிய நடனங்களை இணைக்கிறார்கள். இதுவே பாரம்பரியம் மற்றும் புதுமையின் சந்திப்பு ஆகிறது. மேலும் சினிமா, நாடகம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நாட்டிய இசையின் கூறுகள் இடம்பெரும். இது மக்கள் மத்தியில் இசை மற்றும் நாட்டிய சாஸ்திரத்திற்கான ஆர்வத்தை வளர்க்கிறது.


உலகளாவிய தளத்தில் நாட்டிய இசையின் தாக்கம்
         

இன்றைய உலகளாவிய காலப்போக்கில் இந்திய நாட்டிய இசை உலக நாடுகளில் பரவியுள்ளது. அதற்கான அடிப்படை நாட்டிய சாஸ்திரத்தின் இசைக் கூறுகள் தான். ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் பாரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களுக்கு இசையின் பின்னணி விளக்கமும் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த வகையில் இந்தியாவின் இசைக் கலையின் விஞ்ஞானத்தன்மை மற்றும் கலாசாரத்தில் உரையாடும் திறன் உலகையே வியப்படைய வைக்கிறது. இது “சாஸ்திர” மற்றும் “அனுபவ” என்பவற்றின் இணைவைச் சுட்டிக்காட்டுகிறது.

முடிவுரை

          நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இசை இல்லாமல் நாட்டியம் என்பது முழுமை பெறமுடியாது. நாட்டிய சாஸ்திரத்தில் இசை என்பது ஒரு உயிர் சக்தியாகவே இருக்கிறது. இசை இல்லாத நாட்டியம் ஒரு உடல் அசைவின் கலையாக மட்டுமே இருக்கும். அதனால் தான் இசையின் மூலம் நாட்டியம் உயிர் பெறுகிறது. இசையின் ராகம், தாளம், லயம் ஆகியவை நாட்டியத்தின் உணர்வுகளை பிரதிபலிக்க உதவுகிறது. இதுவே மனங்களை உருக்கும் புனித அனுபவமாக மாறுகிறது. அதனாலேயே நாட்டியமும் சங்கீதமும் ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்துள்ளன. நாட்டிய சாஸ்திரம் இசைக்கலையின் அடிப்படையான விதிகளை பராமரித்து, பாரம்பரிய கலையை பாதுகாக்கும் ஒரு அறிவுசார்ந்த கலைநூலாக இன்றும் சிறப்புடன் திகழ்கின்றது. நாட்டியம் மற்றும்  சங்கீதத்தின் மூலம் பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவம் சமகாலத்தில் இன்னும் அதிகரிக்கிறது. இந்த புனித இணைவை நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும் நமக்கே உரியதாகும்.

அடிக்குறிப்புக்கள்

1.பரத முனிவர்., (2001) ,  நாட்டிய சாஸ்திரம், ப. 18-29

2.ராமா தேசிகன், ஸ்ரீ.,   பரதநாட்டிய சாஸ்திரம், ப. 75-89

3.Macleod, WilliamT., (1985), New Collin’s The saurus, oxford. P.115,179

4.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),ப.21

5.சோமசுந்தரம், அ.நா பிரம்ம ஸ்ரீ, மிருதங்க சங்கீத சாஸ்திரம், ப. 144, 155

6.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),ப.41

7.இராகுராமன், சே., (2006) தமிழர் நடனவரலாறு,ப.55

8.பத்ம சுப்பிரமணியம், பரதக்கலை(கோட்பாடு), ப. 111

உசாத்துணை நூல்கள்

1.பரத முனிவர்., (2001),  நாட்டிய சாஸ்திரம் , உலக தமிழாராய்சி நிறுவனம், சென்னை

2.ராமா தேசிகன், (2001),  ஸ்ரீ.,   பரதநாட்டிய சாஸ்திரம், ப. 77-79

3.பக்கிரிசாமி பாரதி, கே.ஏ., (2004), திருக்கோயில் நுண்கலைகள்

4.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),வானதி பதிப்பகம்

5.இராகுராமன், சே., (2006) தமிழர் நடனவரலாறு, நந்தினி பதிப்பகம்

6.சோமசுந்தரம், அ.நா பிரம்ம ஸ்ரீ, மிருதங்க சங்கீத சாஸ்திரம்

7.Macleod, WilliamT., (1985), New Collin’s The saurus, oxford

8.More R.J, (1979), Tradition and Politices of South Asia, New Delhi

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

குமாரவேலு டனிஸ்ரன்,

மானிப்பாய், இலங்கை.

Kumaravelu Danistan,

Manipay, Srilanka.

முகமூடி இல்லாத கண்ணாடி|ச.கார்த்திக்

முகமூடி இல்லாத கண்ணாடி -ச. கார்த்திக்

முகம் சுழிக்காமல்


முகம் காட்டுகிறது


முகமூடி இல்லாத கண்ணாடி!


 

எந்த பறவையும்


அழிவு பற்றி யோசிக்கவில்லை


பறந்து(தே) செல்கிறது!


 

வானில் நிலவை தேடுபவனுக்கு


பக்கத்தில் இருக்கும்


நிலா கண்ணுக்கு தெரியவில்லை!


 

கடல் அலைகள் எல்லாம்


கரைகளிடம் மட்டும் உறவாடுகிறது!


அது நமக்கு தெரியவில்லை..


 

அலங்காரத்துடன் நிற்கும்


ஆட்டுக்குட்டி! தெரியாத ஒன்று


தன்னை பலியிடுவார்கள் என்று..


 

இந்தக் கிறுக்களின்


உன் பெயரை


எங்கையோ நான் மறைந்து வைக்கிறேன்!


 

புல் கண்ணீர் சிந்துவதை


இந்த
அருவாள் மட்டும் அறியும்!


 

கூவுகின்ற சேவலுக்கு
தெரியவில்லை


தன்னை பலியிடுவார்கள் என்று..


 

கடல் அலை அசைந்து கொண்டே


இருக்கிறது


சிறு மீன் குஞ்சுகள்!


 

மிகப்பெரிய உறக்கத்தில்


அவளின்


சிறிய கனவுகள்!


 

செடிகள் எல்லா வாடியே


இருக்கிறது
அவளைப் பார்க்காமல் தான்!


 

நிழலை தேடி நாம் செல்கிறோம்


யாரை பற்றி யோசிக்கவில்லை


எந்த மரமும்!


 

அவள் மூச்சு காற்றை


அறிந்தே(து)


மரத்தின் இலைகள் எல்லாம்


மயங்கி விழுகிறது!


 

ஏதோ ஒன்று நினைத்தேன்


ஏதோ ஒன்று எழுதினேன்


உன் பெயரை தவிர!


 

இந்தக் காற்றெல்லாம்


புற்களிடையே


கதையாடிக் கொண்டிருக்கிறது


மரத்தின் கதையை..!


 

செடி வாடுவதை


மழை அறியும்


அவள் வருந்துவதை


நான் அறிவேன்!


 

தந்தை திட்டியதும்


மகளின் முகத்தில்


கண்ணீர் ஓவியம்


வரைந்தது!


 

தன்னுடைய ஆடையைப்
பார்பதற்கு

இங்கு யாரும் வருவதில்லை


புலம்பிக் கொண்டே செல்கிறது


இந்தப் பாம்பு!


 

தனக்கு தேவையான


மீன்களை மட்டும்


பிடித்துச் செல்கிறது


அந்தக் கொக்கு!


 

எதைப் பற்றியும் யோசிக்காமல்


தன் செயலை செய்துக்கொண்டே


இருக்கிறது கடிகார முள்!


 

கடங்காரன் வருகை


அறிந்தே(து)


கதவு மூடப்படுகிறது!


 

யார் யாரோ பற்றி


நினைத்துக்கொண்டு


இருக்கிறேன்


அவன்
அறியாதது

அவனைத்தான்!


 

நீ முகம் கழுவிய


தண்ணீர்


தண்ணீருக்கே அழகு சேர்க்கிறது


கண்மணியே!


 

மரத்தைச் சுற்றி


விழுந்த இலைகள் காண்போம்!


அதை மரத்தின்


துளிர்(கள்) காண்பதில்லை!


 

அவளை பார்க்கத்தான்


முடியவில்லை


அவளின் புகைப்படம்


ஒன்றே போதும்!


 

மரத்தின் இலைகள்


பூமிக்குச் செல்லும் முன்


காற்றில் நடனமாடுகிறது!


 

கடலின் அலைகள்


என் கால் பாதத்தில்


முத்தம் மிட்டு செல்கிறது!


 

சாவிக்கு தெரிந்த கதையும்


பூட்டுக்கு தெரிந்த கதையும்


நமக்கு மட்டும் தெரியாமல் போனது!


 

எந்த ஊர் சென்றாலும்


நான் முதலில் கேட்பது


தேனீர்கடை மட்டும்தான்!


 

யாரும் இல்லாத வீட்டில்


பூனை மட்டும் உலாவியே
செல்கிறது!


கொக்குகளுக்கு மட்டும் தெரிந்த


புழுக்கள்!


மனிதன் கண்களுக்கு


அகப்படவில்லை..


வயலில் இருந்த கொக்குகள்


விரட்டுகின்றன !


எந்த மனிதன்..


 

கூடையில் சுமந்துச் செல்லும்


புல்லாங்குழலுக்கு


காற்றோடு மட்டும்(மே) இசைக்கிறது


செவிக்கு ஆறுதலோடு


வயிற்றுக்கு ஆறுதலாய்
ஒரு

புல்லாங்குழலும் விற்கவில்லை!


 

கண் தெரியாத


பிச்சைக்காரனிடம்


யார் சொல்வார்


இங்கு யாரும்


இல்லை என்று!


 

நாள்தோறும் விலை உயர்வு


என்னுடைய வருவாய் மட்டும்


அதே நிலையில்


இந்த நிறுவனத்தில்..


 

சாலையில் கிடந்த நெற்கதிர்கள்


எந்த பேருந்து ஏரி சென்றதோ


எந்த லாரி எடுத்துச் சென்றதோ


எந்த பையில் அடுத்த வந்ததோ


என் வீட்டிற்கு வெந்து தனிந்தது


ஒரு கைபிடி சோறு!


 

நானெங்குச் சென்றாலும்


ஏதோ ஒன்றை


தொலைந்து விட்டு வருவேன்!


 

யார் யாரோ பற்றி எழுதுகிறோம்


வேரோ சொல்கிறது


இந்த மரம் வாடுவதை பற்றி


எழுதுவதற்கு இங்கு யாருமே இல்லை!


 

விடுமுறை நாட்களில்


நான் ஓய்வாக இருப்பேன்


எங்கள் வீட்டில்


மின்விசிறி மட்டும்


புலம்பிக்கொண்டே இருக்கும்!


இவனுக்கு எதற்கு தான் விடுமுறை விட்டார்களோ?


என்னை அழ வைத்துப் பார்ப்பதில்


இவனுக்கு என்ன ஒரு ஆனந்தம்


என்னை மட்டும் அல்ல !


இந்த நாற்காலியும் பாவம்


அவனை நாள்தோறும்


சுமந்து கொண்டு இருக்கிறது!


அது அழுவதை நான் மட்டும் அறிவேன்


அவனுக்கு தெரியவில்லை ! அவனது செயல் !


அந்த எழுதுக்கோலும், இந்த காகிதமும், பாவம்


ஏன் எழுதுகிறேன் அவன் கை சொல்கிறது


நான் எழுதுகிறேன் என புலம்புகிறது.


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

அமிழ்து|கவிதை|நவநீதனா ச

அமிழ்து_நவநீதனா ச
👑 மாநகர் மண்டபத்தின்

மாமணி வடிவுடையாய்!

 
👑 மயிலினங்கள் இடையூடே,

ஆழித்தேர் ஒப்புடையாய்!

 
👑 வர்ணத்துப் புவியூடே,

வளை மெலிந்த சுடரழகே!

 
👑 வானத்துவெளி உறைந்த, 

பூதத்து மிகையுணர்வே!!…

 
👑 நாட்டியத்துச் சபை நளிந்த, 
இடையழகே! கேளாயோ?!!

 
👑 வேலுடையான் விரலமர்ந்த,

குளிர்நிலவே! இன்னுயிரே!

 
👑 கிளியினங்கள் கொஞ்சுகின்ற,

மீனவளின் கடைக்கண்ணாய்!

 
👑 சடையேற்ற அண்ணானின்,

உடலேற்ற வெளிர்நீறாய்!

 
👑 நாணத்து மாடத்திலே,

நகைப்போங்கும் பொன்முகிலே!!…

 
👑 கன்னத்தின் குழியழகு, அது

சீனத்து இலக்கணமோ?!

 
👑 பாசுரப் பெண்ணவளே,

அவள் சிரமாடும் முத்துடையாய்!

 
👑 மார்கழிக் குளிரிடையே, 

மையலுற்ற இசையழகே!

 
👑 வெப்பத்தின் சீற்றத்தூடே, 

மைவிழியே! வனப்புற்றாய்!!…


 

👑 மசையுற்றாள் கருவுடைய,

மாசற்ற ஒளியுடையாய்!

 
👑 அம்பலத்தில் ஆடிடுவான்,

மரகதமே! முகமணிந்தாய்!!…

 
👑 பெயரிலே பூட்டி வைத்தாய்!

அடீ! இரத்தினச் சுருக்கமடீ!!

 
👑 புவியுடையார் உரைக்கையிலே!

பூங்குயிலே!! மேனியுமே சிலிர்க்குதடீ!

 
👑 விண்ணுடையார் இசைக்கையிலே!

சிற்றிதழே! குருதியுமே உருகுதடீ!!

 
👑 விழியளித்த நீரினிதாம்!

தாயளித்த பிறப்பினிதாம்! 

 
👑 நின்றன் பெயராலே,
அ
வை அமிழ்தன்றோ?!

நனிச்சுவையன்றோ?!…

 
👑 அழிழ்துடையாய்! 

நீ இரத்தினச் சுருக்கமன்றோ?!

என்றன் உயிருடையாய், கேளாயோ?!…

கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »