Sunday, September 7, 2025
Home Blog Page 3

Sanga Ilakiyathil Neer Melanmai|Dr.S.Dhandapani

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை - முனைவர் சீனு. தண்டபாணி
Abstract           
       The single line of “not waterless” will include all that emphasizes the need for water management. There is a lot of evidence in the Sangam literature that the ancient Tamil creatures have been praised and protected by water.  This article has taken some of them.

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

முன்னுரை
           
         “நீரின்றி அமையாது உலகு” என்ற ஒற்றை வரியில் நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தனையும் அடங்கிவிடும். பழந்தமிழர் உயிரினும் மேலாக நீர் வளத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இக்கட்டுரை  எடுத்தாண்டுள்ளது.
நீர் நிலைகள்         
       ‘நீர்நிலை’ என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள் சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர் நிலைகளையும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், அணைகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளையும் குறிக்கும்.  பொதுவாக பண்டைத் தமிழர்கள் அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி உறைக்கிணறு ஊறுணி, ஊற்று, ஏரி, கட்டுக்கிணறு, கடல், கண்மாய், குட்டம், கயம்,  கூவல், கேணி, சிறை, புணற்குளம்  என்று பலவகையான நீர் நிலைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

அகழி – கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரன்
அருவி – மலை முகட்டு தேங்கிய நீர் கொட்டுவதுநீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
ஆழிக்கிணறு – கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு
ஆறு – பெருகி ஓடும் நதி
இலஞ்சி – நீர் நிறைந்த ஆழமான பள்ளம்
உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையம் இட்டது
ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
ஊற்று – அடியிலிருந்து ஊரும் நீர்
ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
கட்டுக்கிணறு – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய     கிணறு
கண்மாய் – பாண்டி மண்டலத்தில் வழங்கப்படும் ஏரியின் பெயர்
குட்டம் –  ஆழமான நீர்நிலை
கயம் –  குளம்
கூவல்-  உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
சிறை – தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
புணர்குளம் – நீர் வரத்து மடையின்றி மழைநீரை கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
சங்க இலக்கியத்தில் நீர் நிலைகள்
         
       சங்க இலக்கியத்தில் பல வகையான இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் சூட்டப்பட்டுள்ளன சான்றாக அயிரி (அகம் 177:11) ஆன்பொருநை (புறம் 36:4) காவிரி (அகம் 123:11) குமரி (புறம் 6:2) என்ற நிலைகளில் இயற்கை நீர் நிலைகளையும் குளம், கிணறு, கிடங்கு போன்ற செயற்கை நீர் நிலைகளையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
“நெடுங் கிணற்று வல்லுற்று உவரிதோண்டி” (பெரும் 97– 98) 
“திரைப்படக் குழிந்த கல்கழ்  கிடங்கு” ( மலை 90-19)    
நீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
           
         பண்டைத் தமிழர் நீர் நிலைகளை உருவாக்கும் போது தகுந்த இடம் உணர்ந்து செய்ததற்கான குறிப்புகளும் உள்ளன. நீர்ப்பாசனம், குளித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காகப் பெரிய அளவில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன.
 
“குளம் தொட்டு வளம் பெருக்கி” பட்டி- 284
         
        சங்ககால மக்கள் கேணி எனப்படும் சிறுகுளம் போன்ற கிணற்றை ஊருக்குப் பொதுவான இடத்தில் வெட்டி அந்நீரைப் பருகியுள்ளனர்.
 
“ஊர்உண் கேணி உண்துறைத் தொக்க” (குறுந்: 399-1) 
“ஊர்உன் கேணி பகட்டு இலைப்பாசி” (அகம்:392-3) 
“மூதூதர் வாயில் பணிக்கயம் மண்ணி “ (புறம்-9:1)
           
    என்று புறநானூறு குறிப்பிட்டுள்ளது. மேலும் இவை மழை நீரை தேக்கிக் கொள்ளும் நீர் தேக்கிக்கிகளாகப் பயன்பட்டுள்ளன.
 
“பூவற் படுவில் கூவல் தோண்டிய செங்கட் சின்னீர்” (புறம் 319: 1.2 ) 
“கனிச்சியில் குழித்த கூவல் நண்ணி 
ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல்” (நற்றிணை 240: 6-8 )           
      நீரூற்றுகள் இருக்கக்கூடிய இடமறிந்து நீர் நிலைகளை உருவாக்கியுள்ளனர்.
 இயற்கையாகக் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தியும் எதிர்கால தலைமுறைக்கும்  விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் பண்டைத் தமிழர் மடை, கால்வாய், குளம், கேணி உள்ளிட்டவை மூலம் நீரினைச் சேமித்து வைத்துள்ளனர்.
 
“வையை உடைந்த மடையடைத்த கண்ணும் 
பின்னும் மலிரும் பிசிர் போல வின்னும்” (பரி: 6) 
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி: 35-5)  
“ஆறுகுளம் நிறைகுற போல அல்குலும்” (அகம்: 11)
அணை அமைத்தல்

          கற்களைக் கொண்டு தடுப்பணைக் கட்டி, ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைத் தடுத்து பயன்படுத்தி உள்ளனர்.
 
“வருவிசை புனல் கற்சிறை போல் ஒருவன்

தாங்கிய பெருமை யாலும்”  (தொல்:பொருள்.65 : 725-726)
         
      மழையினால் கிடைக்கும் நீரினையும் அருவிகளிலிருந்து கிடைக்கும் நீரினையும் சுனையில் சேமித்துப் பின் அகன்ற வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சி பயன்படுத்தி உள்ளதை நற்றிணை குறிப்பிட்டுள்ளது.
 
அகழ்வாய் பஞ்சுனை பயிர் கால் யாப்ப (நற்.5:2)
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி. 35:5)
நீர்நிலைகளைப்  பாதுகாத்தல்
         
           நீர்நிலைகளின் கரைகள் அழியாமல் இருக்க கரைகளுக்கு வலுவை தருகின்ற வேழக்கரும்பு என்றும் கொளுக்கச்சி அல்லது கொறுக்கந்தட்டு என்று கூறப்படும் புல்லினை வளர்த்துள்ளனர். இதன் தண்டில் துளை இருந்தமையால் உழவர் மகளிர் அஞ்சனம் இட்டு வைப்பர். மூங்கிலைப் போல் இவை வீடு கட்டி வரிச்சற் பிடித்ததற்குப் பயன்படும். நீராடுபவர்க்கு இது புணையாய் அமைக்கப்படுவது உண்டு என்பதை ஐங்குறுநூற்றில் காணமுடிகிறது.

“பரியுடை நன்மான் பொங்குவளை அன்ன 
வடகரை வேழம்” (ஐங்குறு: 13 :1-2 )
   குலத்தின் கரைகளைப் பாதுகாக்க குளக்கரைகளில் மரங்களை வளர்த்துள்ளனர்.
“நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து 
இடிகரைப் பெருமரம் போல” (குறும் : 368:6-7 )
“கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து”  (குறுந்- 171: 2 )
        நீர்ப்பெருக்கு கரையோர மண்ணை அரித்துக் கரையை உடைப்பதை தவிர்க்கத் தென்கரை அமைத்தனர். இதனால் கரையோர மரங்களின் வீழ்ச்சியும் தடுக்கப்பட்டது.
“நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தம் 
திண்கரைப் பெருமரம் போல” (குறுந் -368:.7-8 )
நீர்த்தேக்கப்  பராமரிப்பு முறை         
       நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவலர்கள் இருந்தனர் என்பதைச் சங்கப்பாடல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.  நீர் வரத்து அதிகமானாலோ அல்லது கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக காவலர்கள் அதனை ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்திச் சரிப்படுத்தும் விதமாக ஊர் மக்களோடு இணைந்து மணல் பைகளைக் கொண்டு கரையின் உயரத்தை உயர்த்தி நீரைச் சேமித்து வைத்துள்ளனர்.

“திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும் 
உரைச்சிறை பறை எழெளஉர் ஒலித்தன்று” (பரி:6- 22-25 ) 
“பெருங்குளக் காவலன் போல” (அகம்: 252) 
நீர் சுழற்சி பற்றிய புரிதல்         
        மேகம் கடல் நீரை முகர்ந்து மழையாகப் பொழிகிறது. மலையில்  விழும் மழை நீர் ஆறாகப் பயணித்துக் கடலைச் சேர்கிறது. நிலப்பரப்பில் விழும் மழைநீர் நிலத்தடி நீராகிறது. நீர்நிலைகளில் விழும் மழைநீர் மீண்டும் ஆவியாகி மழையாகிறது என்று நீர் சுழற்சி பற்றிய புரிதலைப் பட்டினப்பாலை தெளிவுபடுத்திய விதம் சிறப்பிற்குரியது.

“வான்முகுந்த நீர் மழைபொழியவும் 
மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பவும்  
மாரி பெய்யும் பருவம் போல  
நீரினின்று நிலத்து ஏற்றவும்  
நிலத்தினின்று நீர் பரப்பவும் (பட்டி :126 130)
         நீர்நிலைகள் மழை நீர் போக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய நீர் நிலைகளில் நீர் சுழற்சி ஏற்படுகிறது.

நீரின் பயன்பாடுகள்
           
      குளங்கள் குடிநீருக்காக மட்டுமன்றி மகளிர் நீராடுவதற்கும் பயன்பட்டுள்ளன. தண்ணீரைப் போதுமான அளவு திறந்து விட்டு பாசனத் தொழில் செய்யும் நுட்பங்களுடன் குளங்களை அமைத்து பயன்படுத்தியுள்ளனர். மழைக் காலங்களில் வரும் வெள்ள நீரை குளங்களில் சென்று சேரும்படி கால்வாய்கள் அமைத்துள்ளதை பொருநராற்றுப்படையில் காணப்படுகிறது.

“துறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி 
நிரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்” (பொரு: 238-239)

          ஆழமான நீரை உடைய குட்டத்தில் கரையிலிருந்து குதித்து குளித்துள்ளனர்.
 கரையவர் மருள திரையகம் பிதிர
 
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து” (புறம் 243: 8-9 ) 
“கூம்பு நிலை அன்னமுகைய ஆம்பற்
தூங்கு நீர்க்குட்டத்து துடுமென வீழும்” ( நற்றிணை- 280:2-3)
           
உழவர்கள் நெற்பயிரை உடைய தமது வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு சிறு துண்டுகளை நட்டுக் கருப்பங்கழிகளை குறுக்கு நெடுக்காக வைத்து அடைத்து அணையாக ஆக்கி அப்பளங்களில் நீரைத் தேக்கி வயலுக்குப் பாய்ச்சிய செய்தியை அகநானூறு குறிப்பிட்டுள்ளது.

“….கலிமகி உழவர் 
காஞ்சிஅம் குநற்தறி குத்தி தீம்சுவை
மீது அழி கடுநீர் நோக்கி” (அகம்- 346: 5-10 )
நீரைத் தெரிவித்த முறை
         
      கலங்கிய நீரைத் தெளிவிக்கத் தேற்றாங்கொட்டை விதையைப்  பயன்படுத்திய செய்தியைக் கலித்தொகையில் காணமுடிகிறது.

“கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்” (கலித்தொகை- 142: 64-65 )
         
      தேற்றா மரத்தின் நசுக்கப்பட்ட விதை கலங்கிய நீரில் காணப்படும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தி அழுக்குகள் கீழே தங்கி விடுகின்ற நிலையில் மேலே நீர் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று சிந்தித்து நீரைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்திய சங்கத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் அறிவியல் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது. பண்டைத் தமிழர் குடிநீரைச் சேமித்து  வைக்க கன்னல், செப்பு போன்ற கலன்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
 
“அறசிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ” (குறுந்தொகை:277 )
சேமச்செப்பு என்பதற்கு நீரை சேமித்து வைக்கும் பாத்திரம் என்று பொருள்.

முடிவுரை
         
         மேற்காணும் சங்க இலக்கியப் பாடல்களின்  வழியாக சங்கக் காலத்து தமிழரின் நீர் மேலாண்மைத் திறத்தை எண்ணுகையில்  அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நுட்பத் திறனை சங்ககாலத் தமிழர்கள் பெற்றிருந்திருந்தார்கள் என்பது கண்கூடு.

பார்வை நூல்கள்:
   சங்க இலக்கியம் மூலமும் உரையும்
வர்த்தமானன் பதிப்பகம் சென்னை -17
முதற்பதிப்பு : ஏப்ரல் 2002
உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல், பதிப்பாசிரியர்கள்:
முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப. அண்ணாமலை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சீனு. தண்டபாணி,
இணைப்பேராசிரியர் &  தமிழ்த்துறைத் தலைவர்,

சாரதா கங்காதரன் கல்லூரி,
வேல்ராம்பட்டு, புதுச்சேரி.

 

The Artistic Elegance and Creative Technique of PAVENDAR BHARATHIDASAN’s works in POR  MARAVAN|Dr.S.Shanmugadevi

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக் கலை நயமும் படைப்பாக்க உத்தியும்
Abstract
           The origins of Tamil literature are deeply rooted in various social, economic, cultural, and political contexts. Ancient Tamil literary works were crafted strictly within the framework of traditional grammar and conventions. In contrast, contemporary literary creations often break away from these established norms, aiming instead to narrow the gap between the writer and the reader. In this context, the modern epic Por Maravan (The Warrior of War), composed by the renowned poet Paavendhar (Bharathidasan), serves as the primary focus of this study. This paper examines how Por Maravan reflects a shift from classical literary traditions to a more accessible, reader-centric narrative style, while still engaging with themes relevant to the Tamil cultural and political milieu.

Key words
           
           Pavendar in pormaravan – Literary Tradition- Reader Engagement – Socio political context- Cultural context – Phychological Emotions- Modern Tamil Epic.


பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக் கலை நயமும் படைப்பாக்க உத்தியும்

(போர் மறவனை முன்னிறுத்தி)


கட்டுரைச் சுருக்கம்         
தமிழ் இலக்கியத்தின் தோற்றம் என்பது பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பண்டைய தமிழ் இலக்கிய படைப்புகள் யாவும் மரபு இலக்கணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரபமைப்பிலிருந்து விலகி இதற்கு நேர்மாறாக  சமகால   இலக்கியப் படைப்புகள் எழுத்தாளருக்கும் வாசகருக்குமான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. அவ்வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்ட போர் மறவன் இவ்வாய்வுக் கட்டுரையின் களமாக அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்
         
இலக்கிய மரபு- வாசகர் தொடர்பு- சமூக அரசியல் சூழ்நிலை- பண்பாட்டுச் சூழல் -மன உணர்வுகள் -நவீன தமிழ்க் காவியம்.
தோற்றுவாய்
              தமிழ் இலக்கிய மரபின் முக்கிய திருப்புமுனையை உருவாக்கும் நவீன தமிழ்க் காவியமாக போர் மறவன் உள்ளது.இச்சிறுகாவியம் தமிழ் கலாச்சார மற்றும் அரசியல் சூழலுடன் தொடர்புடைய கருப்பொருள்களால் படைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இலக்கிய மரபுகளிலிருந்து மிகவும் அணுகக் கூடிய வாசகர்களை மையமாகக் கொண்ட கதைப் பாணிக்கு எவ்வாறு மாறுகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

பாவேந்தரின் போர் மறவன்       
          கவிதை அல்லது பாடல் வடிவில் உள்ள நாடகப் பங்கில் அமைந்த 54 பாடல் வரிகள் கொண்ட சிறு காப்பியம் போர் மறவன். இது பாரதிதாசனின் கதைப் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. காப்பியக் கதையைத் தொடங்குவதற்கு  முன் திராவிட நாட்டுப் பண் 32 வரிகளில் பாடப்பட்டுள்ளது. பாண்டிமா நாடு குறித்தும் பாண்டிமா நாட்டு போர் மறவன் போருக்கு செல்வதையும், போர் மறவனை பிரிந்த தலைவி அவன் வருகைக்காகக் காத்திருப்பதையும் கதைக்களமாக அமைத்து கவிதையியலோடு படைத்திருக்கின்றார்.

படைப்புப் பொருண்மை       
         இலக்கியப் படைப்பாக்கம் என்பது உளவியல் தொடர்புடையதாகும். படைப்பின் உளவியலுக்கும் படைப்பாக்க உளவியலுக்கும் பொருத்தப்பாடு இருக்கின்றது. ஒரு படைப்பினைப் படைப்பதற்குப் படைப்பாளிக்கு ஏற்படும் உந்துசக்தி, படைப்புக் குறித்த பொருண்மை ஆழ்மன வெளியில் உருவாகி பின்பு படைப்பாக வெளிவருகின்றது. போர் மறவனின் படைப்புப்  பொருண்மையாகத்  திராவிட இனப்பற்று அமைகின்றது. திராவிட இனப்பற்றின் ஊடாக போர் மறவனின் கடமையையும் அவனின் வாழ்வியலையும் பாடுவதே படைப்பின் நோக்கமாகும். அதே நேரத்தில் தமிழ் இலக்கிய மரபின் மையமான அகம் சார்ந்த செய்திகளை இக்காப்பிய இன்பத்திற்காகக் கட்டமைத்திருக்கின்றார்.

திராவிட நாடு என்ற கருத்தாக்கம்
         
    திராவிடம் என்ற சொல்லுக்கு 150 ஆண்டுகால வரலாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1944-1955 ஆம் ஆண்டுகளில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கை வலுத்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் பாரதிதாசனின் கவிதை தொகுதி 2 வெளிவருகின்றது. திராவிட நாடு கோரிக்கைக்கு அடிப்படையான காரணங்களாகத்  தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்ற மொழிகள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும் , ஏனைய இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மொழி, கலாச்சாரம் , பண்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களிடையே பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது. தொடக்க காலத்தில் தமிழகத்திலிருந்து மட்டும்தான் தனி திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. ‘திராவிட ‘என்னும்  சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
          திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி தென்னிந்தியாவில் விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘குமரிக்கண்டம்’ என்னும் பகுதி திராவிடர் தோன்றிய இடமாகக் கருதப்படுகின்றது. இதனைத் திராவிட நாட்டுப் பண் பகுதியில் பாவேந்தர் குறிப்பிடுகின்றார்.

“சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆளும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு
துளு மலையாளம் கண்டை நிகர் கன்னடமெனும் மொழிகள்
கழகக் கலைகள் சிறந்த நாடு”
         
என்ற வரிகளில் பாவேந்தரின் திராவிட இனப்பற்று புலனாகிறது.

தமிழகப் போர் மறவர்கள்         
          நாட்டின் பாதுகாப்பிற்குப் போர்ப் படைபலம் இன்றியமையாததாகும். அஞ்சாமை என்பது போர்ப் படைகளின் முதற்குணம். வீரமும் மானமும் வழி வழியாக வந்த போரிடும் திறனும் படைகளுக்குரிய பண்புகள் ஆகும். தமிழகப் போர் மறவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்து போர் புரிந்தவர்கள். அவர்கள் தங்கள் ஆட்சி செய்த பகுதிகளை இழந்து நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள். போர்‌ மறவர்கள் அதிகமாக வாழ்ந்த பாண்டிமா நாடு என்பது இன்றைய தமிழக மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளாகும். இதனை,

“அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்       
அறிவின் விளைவும்
ஆர்த்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு
இங்கு திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்தது எங்கள் நாடு”
         
என்று, போர் வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர்கள் போர் மறவர்கள் என்பதை “வேகச் சீரும் மறவர்கள் நாடு” எனக் குறிப்பிடுகின்றார். போர் மறவர்கள் பகைவர் மேல் போர் புரிய விருப்பம்  உடையவர்கள் என்பதைப்,

புறநானூறு – “போரெனிற் புகழும்    புனைகழன் மறவர் “
திருக்குறள் -“உறின் உயிர் அஞ்சா மறவர்”
என்றும் சிறப்பிக்கின்றன.

படைப்பாக்கக் கலை நயம்       
               இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாறுபட்டு அமைகின்றன. கவிதை என்பது அழகியல் உணர்ச்சி உடைய ஓசை சந்துத்துடன் அல்லது ஒத்திசை பண்பு சொற்களால் சேர்க்கப்பட்ட இலக்கிய கலை வடிவமாகும். மேலும் மொழியில் உள்ள ஒலியின் அழகியல் ஒலிக் குறியீடுகள் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் போன்றவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாக உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. போர் மறவனில்  தலைவன் போர் செய்திக் கேட்டு உறுதியாகப் போரிட சென்று விடுவான் என்ற நினைத்த தலைவி, தலைவனைப் பிரிய மனமில்லாமல் தவிக்கின்றாள். தலைவனுடன் பிரியாது இருக்கும் காலத்தில் அவளுக்கு இன்பத்தைத் தந்த நிலா, நீர்வீழ்ச்சி, தென்றல், கிளிப்பேச்சு இவை எல்லாம் தலைவனைப் பிரிகையில் அவளுக்கு வருத்தத்தைத் தருவதாக அமைகின்றன. தலைவியின் மனநிலையை,

“என்றன் மலருடன் இறுக அணைக்கும்அக்
குன்று நேர் தோலையும், கொடுத்த இன்பத்தையும்
உளம் மறக்காதே ஒரு நொடியேனும் !
எனை அவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன் !
வான நிலவும், வன்புனல்,தென்றலும் ஊனையும் உயிரையும் உருக்கின.
இந்தக் கிளிப்பேச்சு எனில் கிழித்தது காதையே !
புளித்தது பாலும் ! பூ நெடி நாற்றம்.
         
             என்று தலைவியின் மன வலியும், பிரிவின் வேதனையும் ,காதலின் தேக்கமும் நயமான உவமை உருவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தலைவியின் மன உணர்வுகள் -“மலருடல் இறுக அணைத்தல் “;”குன்று நேர் தோல்” “கிழித்தது காதை”; “புளித்தது பாலும்”, “பூ நெடி நாற்றம்” என்ற உவமை, உருவகங்கள் மூலம் உணர்வுகளின் உடலியலானது படைப்பின் கலை நயத்துடன் உச்சநிலையைத் தொடுகின்றன. படைப்பாளனின் உணர்ச்சி அனுபவமும் வாசகனின் உணர்ச்சி அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே சிறந்த கவிதையாகும்.
 கவிஞரின் உணர்ச்சி சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலி நயமாகவும் வடிவம் பெறுகின்றது.  உரையாடல் பாங்குடைய கவிதைகள் படிப்போரை எளிதில் சென்றடையும் ஆற்றல் உடையவை .அந்த வகையில் தலைவனைப் பிரிய மனமில்லாமல் தலைவியானவள் கண்ணீர்த் துளிகளோடு “வாழையடி வாழையென வந்த என் மாண்பு வாழிய” என வாழ்த்தி தலைவனைப் போருக்குச் செல்ல விடை தருகின்றாள். ஒலிநயம், சொல்லாட்சி எதுகை மோனைகளுடன் சந்தங்களை பெற்றுள்ள போர் மறவன்  கருத்துக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு வரியமைப்பைப் பெற்றுள்ளது. கவிதையின் உணர்ச்சிக் கூர்மை, வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்கள் வண்ணக் கலவையாக மிளிர்கின்றன.

படைப்பாக்க உத்தி
         சமகால கவிதைகளில் உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்தி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. படைப்பிற்குத் தலைப்பிடுதல் என்பது மிக முக்கியமான உத்தி முறைகள் ஒன்று. ஒரு படைப்பு வெற்றி பெற வேண்டுமாயின் அதன் தலைப்புத் தெளிவாகவும் சுவைபடவும் பொருள்படவும் அமைந்திருத்தல் வேண்டும்.  பாவேந்தரின் போர் மறவனின் தலைப்பும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.
பண்டைய இலக்கிய கவிதை மரபில் அகத்தில் புறக்கூறும் புறத்தில் அகக்கூறும் இயைந்து படைக்கும் நெறி உள்ளது. அந்த வகையிலேயே போர் மறவனையும் பாவேந்தர் படைத்திருக்கின்றார் பாண்டிமா நாட்டின் வளம். மொழி, கலை ,பண்பாடு ,தலைவனைப் பிரிந்த தலைவியின் மனநிலை, போர் மறவனின் கடமை ,போர்க்களத்தில் போர் மறவனின் மனநிலை போன்றவற்றை எடுத்து இயம்பி பழமை புதுமை என்ற இருவகை கவிதையியல் மரபுகளும் கொண்டு போர் மறவனைக் கட்டமைத்துள்ளார்.

இலக்கிய உத்திகள்       
           அக உணர்வுகளை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த சங்கப் பாடல்களில் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் புலவர்கள் கையாண்டுள்ளனர். போர் மறவனின் தலைவன் பகைவரின் வாள் மார்பில் பட்டு போர்க்களத்தில் சாய்ந்த போதும் கூட, அவன் வேதனையை ஒரு பொருட்டாகக் கருதாமல் தலைவியின் நிலையைக் கண்டு வருந்துகிறான். என்னை நினைத்து, என் வருகையை எதிர்பார்த்து உணவருந்தாமல், உறக்கமில்லாமல் கண்ணீரோடு தனிமையில் காத்திருப்பாளே! அவளிடம் என் நிலையை யார் போய் கூறுவார் என்று வேதனை கொள்கிறான். இந்த இடத்தில் பறவையை ஒரு உத்தியாகக் கவிதை அமைப்பிற்குப் பாவேந்தர் கையாண்டிருக்கின்றார்.

“பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்று கேள்!
நீ போம் பாங்கில் நேரிழை என் மனை, மாபெரும் வீட்டு மணி
ஒளி மாடியில் உலவாது மேன், உரையாது செவ்வாய்
இனிமையாது வேற்க்கண் என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது  கூறுக;
பெருமை உன்றன் அருமை மணாளன் அடைந்தான். அவன்
தன் அன்னை நாட்டுக் குயிரைப் படைத்தான் உடலை
படைத்தான் என்று கூறி ஏகுக மறைந்திடேல்!
பாண்டி மாநாடே !பாவையே !வேண்டினேன் உன்பால் மீளா விடையே”         
            என்ற வரிகளில் பறவையை ஒர் ஊடகமாக மாற்றும் உத்தியும், வலியை பெருமையாக கொள்ளும் உத்தி முறையும் உரையாடல் வடிவமைப்பில் எழுத்தின் ஒலியியல் இசை நயமும் என்று படைப்பாக்க உத்திகளாகக் கையாண்டுள்ளார்.”பறவையே ஒன்று கேள்”என்ற வரி பிரகடன உத்தியாக அமைந்துள்ளது.தலைவன் தனக்குள்ளாகவே பேசுகின்ற உரைநடை பாங்கு நாடகத் தோற்றத்தை வடிவமைத்திருக்கின்றது. போர் மறவனின் கவிதை அமைப்பானது எளிமை, தெளிவு, பேச்சுத்தன்மை, நேரடித் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உரைநடையின் வாக்கிய அமைப்பில் செறிவு செய்து கட்டமைக்கப்பட்டுள்ளது.
நிறைவாக
       ‌           பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் போர் மறவனில் திராவிட நாடு, பாண்டிமா நாட்டு வளம், அங்கு வாழும் மக்கள் பற்றி முதலில் குறிப்பிட்டு பிறகு தலைவியின் மனநிலையை எடுத்துக் கூறி அதனை இடையிலேயே நிறுத்திவிட்டு ,போர் மறவனின் கடமையையும் குடி சிறப்பையும் உரைத்து இறுதியில் தனிமனிதனின் உயிர்த்தியாகத்தை மனித காப்பியமாக நிறைவு செய்கின்றார். இம்முறை இலக்கியத்தின் பொருண்மை, வடிவம் ,உத்தி என்ற கட்டமைப்பிற்குத் தக்க சான்றாக அமைந்திருக்கின்றது.

பார்வை நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்- இரண்டாம் தொகுதி, பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி.
2.புறநானூறு -நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை.

3.தமிழ் கவிதையியல் -இரா. சம்பத், சாகித்திம அகாடமி வெளியீடு.
4.தமிழ் அழகியல் -தி.சு நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் செ.சண்முகதேவி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்,
ஆவடி, சென்னை.

 

ஒரு காகிதம் நூலாகிறது!|கவிதை|ச. கார்த்திக்

ஒரு காகிதம் நூலாகிறது! கவிதை ச. கார்த்திக்

உயிரில்லாத புத்தகம்


உயிர் பெறுகிறது


வாசகனிடம்..!


 

புத்தகம் எல்லாம்


மௌனமாக,


பேசுகிறது..!

 

காகிதத்திற்கு எல்லாம்


அழகு சேர்கிறது,


சொற்கள்..!

 

வெட்டுபவனுக்கு


நிழல் தருகிறது,


மரம்..!

 

அம்மாவின்

நகைகள் எல்லாம்


அடகு கடையில்,


படித்துக் கொண்டு இருக்கிறது..!


 

ஐந்து நாளும் பள்ளி பாடம்

இரண்டு நாளும் விடுமுறையோ,


அதிலும்
விட்டுப்பாடம்..!


 

வயதான மரத்திற்கு


இளமை தருகிறது,


இலைகள்..!


 

மழை முடிந்த பிறகு


மரத்தின் இலைகள் எல்லாம்,


கண்ணீர் விடுகிறது..!


 

பட்டுப்போன மரத்திற்கு


உயிர் தருகிறது


ஏதோ ஒரு பறவை..!


 

சுடுகாட்டிற்கு

உயிர்
தருகிறது,


ஏதோவொரு பிணம்..!


 

அப்போது தீட்டு


இப்போது நீட்டு


எப்போது விடியும்..!


 

மீன்கள் எல்லாம் விற்றாலும்


அவன்(ள்) மேல்,


மீன் நாட்றம் போகவில்லை..!


 

மனிதனாகப் பிறந்திருப்பதை விட


ஒரு மழை நீராக பிறந்திருக்காலம்..!

 

பட்டாம்பூச்சிகள் போர் புரிகின்றன


இந்த
மழைக் காலத்தில் தான்..!


 

மழை துளிகள் எல்லாம்


மண்ணின்

மகத்துவம் அறிந்து
பேசுகிறது..!

 

எங்கள் ஊர் தார்ச்சாலைகள்


கண்ணீர் விடுகிறது


இந்த மழைக் காலத்தில் தான்..!


 

என்றோ ஒரு நாள்


நீயும் நானும்


சந்திப்போம்..!


 

காகிதமும் பேனா முனையும்


பேசிக்கொள்கிறது,


எழுத்தாளருக்கு தெரியமால்..!


 

கோடியில் வாழ்கிறான்


தெருக் கோடியை சுரண்டுகிறன்..!


 

பகலெல்லாம் வேலை


இரவெல்லாம் உறக்கம்


உன் வாழ்க்கை எப்போது..?


 

சிலந்திகள் எல்லாம் வருந்துகிறது


என்னுடைய நூல் வாங்குவதற்கு


இங்கு யாரும்(மே) இல்லையே..!


 

பல வார்த்தைகள் பேசி


அதில்
ஒரு வார்த்தையும்

பயனில்லை.


 

மின்விசிறி எல்லாம் அழுகிறது


குழந்தை எல்லாம்

நன்றாக
உறங்குகிறது.


 

நிலத்தை உழுது

உன்னவன்
இன்று


அதனை விற்று உண்கின்றன


இந்த விவசாயி..!

 

இறைய தேடுகிற

மீன்கள் எல்லாம்


மற்றவர்களுக்கு


இறைச்சியாக மாறுகிறது..!


 

போர்க்களத்தில்

சென்று பார்த்தால்


ஈக்களும் எறும்புகளும்

சண்டைப்
போடுகிறது


இறந்துபோன விலங்குகளிடம்..!


 

ஒரு மனிதன்

அவன் வாழ்க்கையை
வாழவில்லை


மற்றவர் தன்னை எவ்வாறு
நினைக்கிறார்கள்


என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறான்..!

சேற்றில் முளைத்தாலும்


தாமரை பற்றி பேசுவதற்கு


இன்று குழந்தைகள் வட்டாரம் உண்டு..!


 

பணத்திற்கு இருக்கும் மதிப்பு


இன்று
மனிதர்களுக்கு இல்லை..!


 

அவள் என்னிடம்


சண்டை போட்டுச் சென்றால்


என்ன காரணம் என்று நினைத்தேன்


அவளைப் புரிந்துக் கொண்டு


அவளை அழைத்து வரலாம் – என

புறப்படும்போது
இந்த மழையும் என்னைப்

புரிந்து
கொள்ளாமல் பொழிகிறது..!

நான் வைகறையில் காத்திருந்தேன்


அவள் தென்கரையில் காத்திருந்தாள்


எங்கள் இருவரும் பற்றி யோசிக்காமல்


ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது..!


 

பார்க்கதான் முடிந்தது


பேசதான் முடியவில்லை


கடிதம் எழுதினேன்


கவிதை எழுதினேன்


ஓவியம் வரைந்தேன்


இவை அனைத்தும்


கனவுகள் தான்..!


 

மழை வருவதற்கே


இயற்கை படைக்கப்பட்டன


ஏரிகள் உருவாகுவதற்கே


மழைநீர் படைக்கப்பட்டன


பெரும் வௌ்ளம் உருவாகுவதற்கே


நதிகள் படைக்கப்பட்டன


நதிகள் உருவாகுவதற்கே


கடல்கள் படைக்கப்பட்டன


வெயில் உருவாகுவதற்கே


மனிதன் படைக்கப்பட்டான்..!


 

பழைய வீடு


பழைய நட்பு


தாத்தவின் நினைவு


என் பாட்டியின் புகைப்படம்


அந்த ஆலமரம்


நான் வாங்கிய பழைய புத்தகம்


இன்று படிக்கும் போது


புதிய நினைவுகள் கொடுக்கிறது..!                                                    

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.

 

PILLAY PERUMALAIYANKAR PASURANGALIL IYARKKAI|Dr. DIVAHAR M

பிள்ளைப்பெருமாளையாங்கார் பாசுரங்களில் இயற்கை - ம.திவாகர்
Abstract
               
          Nature itself manifests many wonders within. We live a life deeply connected with such nature. This study’s summary is to understand the way Pillay Perumal Iyangar has employed the description of nature in his work, Ashtaprabandham.

Key Words
               
Nature – Scene – Imagination – Metaphysics – Devotion – Hymn – Devotional Verse – Sea – Spiritual Enthusiasm – Religious fervor – Dragonfly


பிள்ளைப்பெருமாளையாங்கார் பாசுரங்களில் இயற்கை

சுருக்கம்
    இயற்கையானது பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. அத்தகு இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். அவ்வகையிலே பிள்ளைப்பெருமாளையங்கார் தன் படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இயற்கை வருணனையை கையாண்டுள்ள விதத்தை அறிவது இவ்ஆய்வின் சுருக்கம் ஆகும்.

கலைச்சொற்கள்
        இயற்கை – காட்சி – கற்பனை – மெய்ப்பொருளியல் – பக்தி – பாசுரம் – கடற்கானல் – மதப்பெருக்கு – வேழம் – பிடி – முகில் – அரவு – தும்பி.

முன்னுரை
         
        இயற்கை பல அரிய அதிசயங்களை தன்னகம் கொண்டு திகழ்கிறது. இயற்கையோடு இயைந்து பாடும் கவிஞர்கள் அதில் பல காட்சிகளைக் கற்பனையில் காணுகின்றனர். கவிஞர்கள் தாம் பெற்ற மெய்யுணர்வு அனுவத்தை ஒரு விருந்தாக படைக்கிறான்.
அந்த வகையில் பிள்ளைப்பெருமாளையங்காரும் திருமால் குடி கொண்டு இருக்கும் திருத்தலங்களின் இயற்கையெழிலில் மனதினை செலுத்தி பக்தி உணர்வுடன் சொற்கவியை இயற்றியுள்ளார்.

சங்க இலக்கியங்களில் இயற்கை
         
         சங்க காலம், இயற்கையில் இறைவனைக் கண்டு  இன்புற்ற காலம். அக்காலத்து வாழ்ந்த மெய்பொருளியல் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் போன்றோர் இயற்கையைக் கொண்டு இறைவனின் பெரும் புகழை எடுத்தியம்பினர்.
அந்த பாடல்கள் எவற்றிலும் சுட்டி ஒருவர் பெயர் கூறப் பெறாததால் இன்னார் என்று உணரமுடியாத தலைவன் தலைவி காதல் பாடல்கள் தோன்றி, பிறகு தெய்வத்தின் மீது கொண்ட காதலாக மாறி பாசுரங்களாக வளர்ந்து செழித்தன.
மன்னர்களின் வீரச் செயல்களை பாடும் நிலைமாறி, இறைவனின் அறிபுதச் செயல்களைப் பாடும் நிலை வளர்ந்தது. வள்ளல்களின் வள்ளல் தன்மையை பாடும் பாடல்களுக்கு ஈடாக இறைவனின் அற்புதச் செயல்களைப் பாடும் பாசுரங்கள் தோன்றின.

             கற்பனைக் காதலுக்குப் பின்னணனியாக அந்தந்த ஊர்களின் இயற்கைச் சூழல் வருணிக்கப் பெற்றிருந்தது மாறி இறைவனிடம் செலுத்தும் பக்தி மாண்புக்கு பின்னணியாக அந்தந்த திருக்கோயில் தலங்களைச் சூழ்ந்த இயற்கை எழில்களைப் பற்றிய வருணனைகள் அமைந்தன.
இயற்கைக் காட்சிகளோடு இறைவனை, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் காட்டுவதால் மக்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இறைவன் மீது பாடப்பட்ட பாசுரங்கள் அமைகின்றன. சங்க காலத்தில் இருந்தே இறைவனை இயற்கையோடு இணைத்து பாடி வந்துள்ளனர்.
         
      கலித்தொகையில் சூரியன் மேற்குத் திசையில் மலையில் சென்று மறைய இருள் வந்த காட்சியினை விளக்குமிடத்தில் “போரில் வல்ல சக்கரப் படையினையுடைய திருமாலின் நிறம் போல எம்மருங்கும் இருள் சூழ்ந்தது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) என்று அவனது கரிய நிறத்தின் தன்மை தோன்ற இயற்கைக் காட்சியில் வர்ணிக்கப்படுகிறான்.பரிபாடல் திருமாலின் திருமேனியழகைக் காட்டுமிடத்தில் இயற்கைக் காட்சியோடு இணைத்துக் கூறுகின்றது.

       “நீண்ட மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்து பொருள்களையும் ஒக்கும் அழகு விளங்கு திருமேனியை உடையாய்” (பரிமேலழகர்,1956) என்று போற்றப்படுகிறான்.
நெய்தற்கலியில் வண்டொலி முழங்கும் கடற்கானலின் இயற்கைக் காட்சியைச் சிறப்பிக்குமிடத்து, “பெருங்கடலும் துயில்வது போல ஒலி வந்து கிடக்கின்ற காட்சி, அரும்பொருள்கள் முறையோடு இசைந்து வருகின்ற பாடலோடு, கலந்து கேட்கும் யாழிசையை அனுபவித்தவாறே, திருமால் பாற்கடலின் மீது கிடந்து உறங்குவது போன்று இருந்தது” என்று கூறுமிடத்தில் பாம்பணையில் கிடந்த தோற்றத்தில் திருமால் காட்சி தரும் நிலை காட்டப்படுகிறது.
         
       கண்ணபிரான் இயல்பாகவே வலிமையுடையவன் என்ற பெருமை தோன்ற  “மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம் போல் ஞாயிறு குடமாலையைச் சேரன் பலராமன் நிறம் போல மதி தோன்றியது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) முல்லைத் திணையின் முதல் தெய்வமாக மாயவன் போற்றப்படுவதால் அவன் நிறமும், ஆற்றலும் ஒருங்கே தோன்றப் போற்றப்படுவதைக் காண்கிறோம்.  
         
         மாந்தர் கண்களால் காணமாட்டாத கடவுளை அவனது படைப்புப் பொருள்களின் வாயிலாகக் காண்டல் கூடும் என்பது இளங்கோவடிகள் கருத்து. இறைவனுடைய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்தது.
ஆதலால், அப்பண்பு திங்களிடத்திலும், அவனுடைய முத்தொழில்களை முகிலிடத்திலும் காணப்படுவதால் இவற்றில் இக்கடவுட்பண்பையே அடிகளார் கண்டு வழிபடுகின்றார் எனலாம்.
உயிரில்லாப் பொருளாகிய இவற்றிலும் உயிர்களிடத்தே கடவுட் பண்பு, இறைத்தன்மையாக வெளிப்படுவதால் இவற்றிற்கு உவமையாகக் காவிரி நாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகிறார்.  இது அவருடைய கடவுட் கொள்கையை ஒருவாரு அறிவுறுத்திக் காட்டுகின்றது. 
இவ்வாறு  எப்பொருளிலும் கடவுளைக் காணும் இயல்பு சமயக் கணக்கர் மதி வழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாக கடவுளைக் கண்டு வழிபடுகின்ற உண்மை நெறி எனலாம்.

ஆழ்வார் பாசுரங்களில் இயற்கை
         
         மதப்பெருக்கால் செருக்கித் திரிகின்ற ஆண் யானை ஒன்று, அது தன் பெண் யானையைக் காண்கிறது. அதற்கு இனிய உணவு கொடுத்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகிறது. அந்த ஆண் யானை அருகிலிருந்த மூங்கில் குருத்தைப் பிடுங்கி மலையிலுள்ள ஒரு தேனடையில் தோய்த்து அப்பெண் யானைக்கு ஊட்டுவதை,
         
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று       
இருகண் இளமூங்கில் வாங்கி – அருகிருந்த       
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்    (ஜெகத்ரட்சகன், 1993)
என்று இரண்டாம் திருவந்தாதி பாடும். இதே கருத்தினை,
         
……. ……. …….. அலைமடு தேன் தோய்த்துப்       
பிரச வாரிதன் இளம்பிடிக் கருள்செய்யும்   (ஜெகத்ரட்சகன், 1993)
என்று பெரியதிருவந்தாதி பேசும்.
         
முருகு நூறுசெந் தோளினை முழைநின்றும் வாங்கி       
பெருகு சூழ்இளம் பிடிக்கு ஒருபிறை மருப்பியானை  (இராஜம். எஸ், 1958)
என்று கம்பரும் இக்காட்சியை வருணிப்பது நினையத்தக்கதாகும்.
         
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்       
கொண்டங் குறைவதற்குக் கோவில் போல் – வண்டு       
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை       
இளங்குமரன் றன்விண் ணகர்(ஜெகத்ரட்சகன், 1993)
         என்பது பாசுரம்.
பண்டு திருவேங்கடம், திருப்பாற்கடல், திருவைகுண்டம் போன்றவற்றைத் தன் இருப்பிடமாகக் கொண்டு உறைந்தவர்க்குத் தற்பொழுது வண்டுகள் திரளாக இருக்கின்ற மலர்மிகுந்த சோலைகளை உடைய அழகிய திருக்கடிகைக்குன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளான் என்று பொருள் கொள்ள இப்பாசுரம் இடமளிக்கின்றது. எங்கெல்லாம் அழகுள்ளதோ அங்கெல்லாம் இறைவன் இருப்பதாகக் கொள்வது சமயக் கொள்கை. இக்கொள்கையை ஒட்டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அனுபவிக்கின்றனர். எல்லா இடங்களிலும் காணும் இயற்கை அழகில் எம்பெருமானின் அழகுக்கூறுகளில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இயற்கை அழகினை தம் உள்ளத்து அழகுடன் குழைத்துத் தம்மனம் விரும்பும் கடவுள் வடிவத்தின் தெய்வீக அழகாகக் கொள்கின்றனர். இதனை பிள்ளைப்பெருமாளையங்கார் தன்னுடைய படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இணைத்துப் பாடியுள்ளார்.

செவிலி இரங்கல்         
       தலைமகளின் நிலையைக் கண்டு செவிலித்தாய் மிக்க துயர் கொள்கிறாள். அப்பொழுது திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிப் பேசுகின்றாள். இக்காட்சியை ஐயங்கார், இயற்கையோடு செவிலித்தாய் சேர்த்து திருமாலைப் பேசுவதாகக் காட்டுகிறார். “திரு அரங்கநாதனே!  தாமரை போன்ற இரு கண்கள் வாடவும், கண்களிலிருந்து பெருகி வருகின்ற கண்ணீரானது மலையருவி போல் வழிந்தோடவும், மன்மதனின் மலரம்புகள் உள்ளே ஊடுருவிச் செல்லவும், வாடைக் காற்று இடையே நுழைந்து செல்லவும், அன்றில் பறவை எழுப்பும் குரல் ஒலியானது காதினைக் குடையவும், வளமான துளசிமாலையின் ஆசையுடனே, எங்கள் பேதைப் பெண்ணாகிய இவள் உயிர் நீங்கப் பெறுதல் உமக்கு அறமாகுமா? ஆகாதே!” என்று செவிலித்தாயின் நிலையில் இருந்து தலைமகளாகத் தன்னை நினைத்துக் கொண்டு திருமால் அருள் கிடைக்காததால் தான் வருந்தும் துயரை செவிலித்தாய் எடுத்துக் கூறுவது போலத் திருமாலிடம் தன் உள்ளத் துன்பத்தை எடுத்துரைக்கிறார். இதனை,
         
வாடி ஓட வசைம் அன்ன இருகண் வெள்ளம் அருவிபோல்       
மருவி ஓட, மதனன் வாளி உருவி ஓட, வாடை ஊடு       
ஆடி ஓட, அன்றில் ஓசை செவியில் ஓட, வண் தூழாய்       
ஆசையோடு எங்கள் பேதை ஆவி ஓடல் நீதியோ?       
திரு அரங்க ராசரே!     (வை. மு. கோ.)
என வரும் பாசுரவடிகளால் அறியலாம்.

தலைவி இரங்கல்
         
     தலைமனின் பிரிவைத் தாங்க மாட்டாமல்  ஆறாத் துயரில் இருக்கின்ற தலைவி நிலையில் இருந்து பாடுகின்ற நிலையில் இயற்கைக் காட்சிகளை அமைத்து “திருமாலை அழைத்து வந்து என்னிடம் சேருங்கள் என்று பாடுகிறார் பிள்ளைப்பெருமாளையங்கார். அரிய பெரிய புன்னை மரச் சோலையே! ஆசை என் மனதில் அடங்குவதில்லை. தாமரை மலரில் பொருந்திய வண்டே! அழுகின்ற விழிநீர் ஒழுக கண் உறங்குகின்றேன் இல்லை. பரந்த கடலில் ஊர்கின்ற மரக்கலமே! பாவிக்கு அலர்தூற்றும் ஊராரின் நாவும் வாயும் பகையாம். கரைமேல் பெரிய சுறாவே! வருந்துகின்ற எனக்குக் குற்றமுள்ள உறவினரும் அயலாராவார். தாழை மலர்கள் சிந்தும் மணற்குன்றே! இரவுப் பொழுது பல ஊழிக் காலமாக நீளும். பனையே! கரும்புவில் காமனை அழைக்கும் நாரைகளே! சங்கு உலவும் அழகியே கரையே! என அரங்கநாதனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று பாடுகின்றார் ஐயங்கார். இச்செய்தியை,
         
அரும் புன்னாகத் தடங்காவே! அவா என் ஆகத்து அடங்காவே       
அம்போருகக்கண் பொரும் தேனே! அழுநீர் உகக் கண் பொருந்தேனே       
……………. ………………. ………………. …………..       
குருகீர்! நந்து அமர் அம் கரையே! கொணரீர், நம்தம் அரங்கரையே!   (வை. மு. கோ.)
என வரும் பாசுர அடிகளால் அறியலாம்.

திருமாலின் சிறப்பு
         
        திருமாலின் சிறப்பினை எடுத்துக் கூறும்போது, “வானகத்தில் திரளாகத் தோன்றுபவை விண்மீன் கூட்டங்களோ, உன்னைத் தொழும் தேவர்கள் அன்பொடு சொரிகின்ற மலர்களோ? ஒளிப்பிளம்பாகத் தோன்றும் பதினாறு  கலைகளும் நிரம்பிய வெண்மதியோ, உன்னைத் தேவமாதர்கள் மங்களார்த்தமாக ஆலத்தி எடுத்த கற்பூரத் தட்டோ? நாங்கள் அறிய முடியவில்லை. இப்பொழுது நீண்ட திருக்கண்கள் அறிதுயில் கொள்ளுதற்கு இடமான திருப்பாற்கடலிலிருந்து எழுந்தருளி வந்த எம்பெருமாளே! என்று பாடுகின்றார். இதனை,
         
உடுத் திரளோ, வானவர்கள் சொரிந்த பூவோ,               
உதித்து எழுந்த கலை மதியோ, உம்பர் மாதர்       
எடுத்திடு கர்ப்பூர ஆரத்திதானோ,               
யாம் தெளியோம் இன்று, நீள் திருக்கண் சாத்திப்       
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து(வை. மு. கோ.)
      என வரும் பாசுர அடிகளால் அறியலாம். இங்கு திருமாலின் சிறப்பினை எடுத்து ஊதினால் உலகங்கள் அனைத்தும் செழித்து வளர்கின்றன என்று காட்டி இயற்கையின் செயல்கள் அனைத்தும் திருமாலின் கீழ் நடக்கின்றன என்று காட்டுகின்றார் ஐயங்கார்.

திருமால் வடிவம்
         
          திருமாலது வடிவத்தை ஐயங்கார் பாடியுள்ளார். “கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி இளம்பிறையையும், புருவம் வில்லையும், விழிகள் வேலையும், காது வள்ளை இலையையும், மூக்கு எள்ளுப் பூவையும், இதழ்கள் இலவம் பூவையும், பற்கள் முல்லை மலரையும், முகம் முழு நிலவையும், கழுத்து சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும், உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கை நகம் கிளியலகையும், கொங்கை குடத்தையும், முலைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும், தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் விரால் மீனையும், புறங்கால் பந்தையும், கால் விரல்கள் பவளத்தையும், கால் நகம் முத்தையும், பாதங்கள் மலர்த் தாமரையையும் ஒத்திருந்தன” என்று திருமாலின் திரு அவயங்களை ஒப்புமை செய்து வடித்துள்ளார் பிள்ளைப்பெருமாளையங்கார். இதனை,
         
மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின்               
மலர் முல்லை மதி வளை கழை யாழ்       
வாரிசம் கெளிறு தந்தை வாய் கலசம்               
மணி வடபத்திரம் எறும்பு ஊர்       
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம்               
அரம்பை ஞெண்டு இளவாரல் ஆமை       
அணி தராக இணை கந்துகம் துகிர் தரளம்               
அம்புயம் அரங்க நாடு அனையார்       
குழல் நுதல் புருவம் விலோசனம் காது               
நாசி வாய் நகை முகம் கண்டம்       
குலவு தோள் முன்கை அங்கை மெல்விரல்கள்               
கூர் உகிர் கொங்கை கண் வயிறு       
விழைதரும் உரோமம் வரை இடை உந்தி               
விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்       
மிளிர் கணைக் கால்கள்  புறவடி பரடு               
மென் குறி விரல் நகம் தானே(வை. மு. கோ.)
என்ற பாசுரத்தால் அறியலாம். என்று ஆசிரியர் திருமாலின் வடிவழகைப் பாடுகிறார்.

திருமாலிருஞ்சோலையின் சிறப்பு
         
   திருமால் அருளி நிற்கின்ற நூற்றெட்டுப்பதிகளில் ஒன்றாக விளங்குகின்ற திருமாலிருஞ்சோலை என்ற தலம் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை இயற்கையோடு காட்டியுள்ளார் ஐயங்கார். ‘மனமே தீவினையை உடையவனான எனக்கும், தூயவனான பிரம்மனுக்கும், தலைவரும், அன்புள்ள அடியவர்களது உள்ளத் தாமரையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானது, நீர்ப்பூக்களில் மொய்த்தற்கு வருகின்ற இன்னிசை கொண்ட தடாகங்களின் நீர், அம்மலர்களின் நறுமணம் கமழுகின்ற திருமாலிருஞ்சோலையைக் கண்ணால் கண்டவுடன் நமது தீவினைகள் தீரும். ஆதலால் அங்குச் செல்வதற்கு தலைப்படுவாய்’ என்று தனது மனதை நோக்கிக் கூறுகிறார் ஐயங்கார். இவ்வழியாக, திருமாலிருஞ்சோலையின் சிறப்பை இயற்கையோடு பின்னிப் பாடியுள்ளதை அறியமுடிகிறது.
இதனை,
         
பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள் ஆவிக்       
கமலத்து வீற்றிருப்பார் அளிப்பாடல் கொண்ட       
வாலிக் கமல மணம் நாறும் சோலை மலையைக் கண்ணால்       
சேவிக்க மலம் ஆறும் – மனமே! எழு செல்லுதற்கே(வை. மு. கோ.)
என்று வரும் பாசுர அடிகளில் விவரிக்கிறார்.

திருவரங்கத்தின் இயற்கை சிறப்பு
         
        உலகங்களைக் காத்து வருகின்ற திருமால் பள்ளி கொண்டிருக்கும் தலம் திருவரங்கம் என்று கூறும்போது ஐயங்கார் இப்பதியின் சிறப்பினை இயற்கையோடு பிணைத்து பாடுகிறார். ‘மண்ணகத்தையும், விண்ணகத்தையும், நின்ற இமயமலையையும், அதனைச் சூழ்ந்து நின்ற மலைகளையும், கடல்களையும், இவற்றைக் கொண்ட புடவியையும், அதனின் விரிவான எல்லையையும், ஊழிக்காலத்தில் உண்டு வந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருப்பதி எதுவெனில், முகில்கள் முழங்கி மேற்கு மலையிலிருந்து பெருகிப் பெருக்கெடுத்து அகிற்கட்டைகளை வாரி வருகின்ற காவேரி அலைகள் முத்துக்களையும், பொன்னையும் சிந்துகின்ற தென் திருவரங்கம் ஆகும்’ என்று கூறுகின்றார் பிள்ளைப்பெருமாளையங்கார். இச்செய்தியினை,
         
கொண்டல் குமுறும் குடகு கிழிந்து மதகு உந்தி அகில்               
கொண்டு நுரை மண்டி வரு நீர்       
தென் திரைதோறும் தரளமும் ககைமும் சிதறு               
தென் திரு அரங்க நகரே    (வை. மு. கோ.)
என வரும் பாசுரத்தால் உணரலாம்.
  மேலும்,
         
ஆழம் உடைய கருங் கடலின்
அகடு கிழியர் கழித்து ஓடி       
அலைக்கும் குட காவிரி நாப்பண்
ஐவாய் அரவில் துயில் அழுதை(வை. மு. கோ.)
என்று இயற்கையோடு இணைத்து திருவரங்கத்தின் புகழைப்பாடுகிறார் ஆசிரியர்.

திருவேங்கடத்தின் சிறப்பு
         
        திருமாலின் நூற்றெட்டுப்பதிகளில் மற்றொன்று திருமலை எனப்படும் திருவேங்கடம் என்னும் பதி ஆகும். இயற்கையை தன் போர்வையாக போர்த்திய ஊர் ஆகும். இந்த இயற்கை அழகை பிள்ளைப்பெருமாளையங்கார் அஷ்டப்பிரபந்தத்தில் வர்ணித்து உள்ளார்.
 கொம்பில் கட்டிய தேங்கூட்டை எடுத்தற்கு நீட்டிய யானையின் துதிக்கை நிலவினை கவ்வும் இராகு என்னும் பாம்பு போல் தோன்றும் வேங்கடமே, வண்டுகள் நெருங்கி மொய்த்த குளிர்ந்த மலர்மாலை தரித்த வஞ்சமகள் மூக்கையும், காதையும் அறுத்த எளிதின் எய்தப்படானின் திருமலை ஆகும் என்று விளக்குகிறார்.
   இதனை,
கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக் கை அம்புலிமேல்       
வெம்பி எழும் கோள் அரவுஆம் வேங்கடமே – தும்பி பல       
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு       
வார் காதும் ஈர்ந்தார் வரை (வை. மு. கோ.)
என்னும் பாசுரத்தில் விளம்புகிறார்.
 திருவேங்கடத்து அந்தாதியில், வேங்கட மலையின் சிறப்பாக ஐயங்கார் காட்டுகிறார்.
         
ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர்இரு கோட்டு       
ஊறு கடா மழை ஓங்கல் கடாவுவர் ஓடு அருவி       
ஆறு கடாத அமுது எனப் பாய அரி கமுகம்       
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே(வை. மு. கோ.)
      என்னும் பாசுரத்தில் திருவேங்கடத்தின் சிறப்பினையும், அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனது சிறப்பினையும் பாடுகிறார் ஐயங்கார்.

முடிவுரை
         
              இயற்கையோடு இயைந்து பாசுரங்களையும், பாடல்களையும் பாடிய ஆழ்வார்களையும், சான்றோர்களையும் இவ் ஆய்வில் அறியமுடிந்தது. இயற்கையை அவர்கள் காட்டுமிடத்து அவர்கள் தங்களது கற்பனைத்திறன் வெளிப்படும் அளவில் சிறப்பாகப் படைத்துள்ளனர். பாசுரங்கள் அனைத்தும் இயற்கை ததும்பும் அமிர்தமாக படைக்கப்பட்டுள்ளன. பிள்ளைப் பெருமாளையங்கார் திருவரங்கம் மற்றும் திருவேங்கட மலைகளின் இயற்கை சிறப்பினை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

பார்வை நூல்கள்
1.இராஜம். எஸ் – கம்பராமாயணம்: மூலமும் உரையும் – மர்ரே அண்டு கம்பெனி  – மு.ப.958

2.சக்திதாசன் சுப்பிரமணியன் –கலித்தொகை –அன்பு வெளியீடு, புதுச்சேரி – மு.ப.958

3.சாமிநாதையர், உ. வே. – பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் – சென்னை – நா.ப.956

4.வை. மு. கோ. – அஷ்டபிரபந்தம்: மூலமும் உரையும் – உமா பதிப்பகம், சென்னை

5.ஜெகத்ரட்சகன், முனைவர் – நாலாயிர திவ்யப் பிரபந்தம் – ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை- மு.ப.993

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம. திவாகர்,
உதவிப்பேராசிரியர் (தமிழ்),

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்,

சென்னை, இராமாபுரம் – 89

மாரியம்மன்|கவிதை|கவிஞர் மா.நந்தினி

மாரியம்மன்-கவிஞர் மா.நந்தினி

ψ மாரியம்மன்


மனம் இறங்கி வந்து – எங்கள்


மனக்குறைகளைத் தீர்ப்பவளே..!


 

ψ ஆடி மாதத்தில்


அம்மனுக்கு கம்பம் நடுதல்


அம்மன் மனம் குளிர்ந்து


மகிழ்ச்சியாக இருக்கும் 


சக்தியானவள்..!


 

ψ பூச்சாட்டுதல் முடிந்தவுடன்


அம்மன் அலங்காரத்தில் ஜொலிப்பாள்!


மாரி  மழையாகப்
பொழிக!

திருவிழா


பதினெந்து நாள்


அம்மா சிங்க வாகனத்தில்


அழகான பட்டு வண்ண உடுத்தி


பக்தர்களைக் காண


பவனி வருகிறாள்..!


 

ψ நம் வாழ்வில்


தெரிந்தும் தெரியாமல் செய்த


பாவங்களை போக்குபவள்!


ஆடி மாதத்தில்


அம்மனுக்கு    கூழ் காய்ச்சுதல்


ஆலயத்திற்கு வரும்


பக்தர்களுக்குப் போற்றும் போது 


அம்மன் வடிவில் 


பக்தர்கள்  கூழ் குடிப்பது ஐதீகம்..!


 

ψ புது பொலிவுடன்


அம்மன் நாளும் ஜொலிக்கிறாள்..!


அம்மனை வேண்டிக்கொண்டு


தீ மிதிக்கும் போது


வாழ்வில் இன்னல்கள் நீங்கும்..!


 

ψ சக்தியின் வடிவில்


மன சஞ்சலங்களைப்


போக்கி விடுவாள்


அம்மனுக்கு


மஞ்சள் நீராட்டு விழாவில்


மனம் இறங்கி வந்து


நினைத்ததை நடத்தி கொடுப்பவள்..!


 

ψ மாரியம்மனை


மனதார வேண்டிக் கொண்டால்


திருமணத்தடை நீங்கும்!


மகப்பேறு வழங்குவதால்


தீபாராதனையில்


ஜோதியின் சக்தியாக திகழ்வாள்!


ஆதிபராசக்தியே


அகிலங்களை


ஆளும் மகாபராசக்தியே..!


 

கவிஞர் மா.நந்தினி 


சேலம்.

 

Pazhadhtamillarkalin Uzhavutholil Muraigalin Sirapiyalpugal|Dr.S.Ilavarasi

Pazhadhtamillarkalin Uzhavutholil Muraikalin Sirapiyalpugal
Abstract           
        Man was involved in the agricultural industry, one of the industrial systems of the ancient Tamil. Essential for their livelihood is the man who created a plowing industry through food farming. In the Sangam literature, the eating habits of the Tamils are found about the food industry. He created a food production capacity for the food. Agriculture is the most important industry during the Sangam period. The way of literature can be highlighted by the spy system.
         The study is complicated in that there is no intention of the tillage industry that produces the food that is important for us to eat. This review is explained in the analysis set. The literature of the time they lived in certifies the biological elements of the ancient Tamil. Food, clothing, and location are the needs of man. Once the people found fire, he was focused on eating. He started the first step. The characteristics of the food industry can be found in the literature.

பழந்தமிழரின் உழவுத்தொழில் முறைகளின் சிறப்பியல்புகள்

முன்னுரை
            இயற்கையோடு இணைந்த பழந்தமிழரின் தொழில் முறைகளின் ஒன்றான வேளாண்மைத் தொழிலில் மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டன. தங்களுடைய வாழ்வாதார வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு விவசாயத்தின் மூலமாக உழவுத் தொழிலை மனிதன் உருவாக்கினான். சங்க இலக்கியத்தில் பைந்தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள் உணவுத்தொழில் பற்றி காணப்படுகின்றன. உணவிற்காக பயிரிடும் தொழிலை தன் நிலைக்கேற்ப உணவு உற்பத்தித் திறனை உருவாக்கினான். சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக் காணப்பெறுகின்றன.
     இலக்கியத்தின் வழி உளவத் தொழில் முறைகளை சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.
சங்க கால உணவு முறைகளின் பயன்பாட்டுகளை அறிவதற்கு துணை புரிகின்றன.நாம் உண்பதற்கு முக்கியமாகத் திகழக்கூடிய உணவுப் பொருளை தயாரிக்கும் உழவுத் தொழில் சிறப்பு இயல்புகளை உணர்த்துவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை ஆய்வு சிக்கலாக எடுத்துரைக்கின்றன. பகுப்பாய்வு தொகுப்பு முறையில் இவ்வாய்வியல் விளக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் வாழ்வியல் கூறுகளை அறிய அவர்கள் வாழ்ந்த காலத்து இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் மனிதனின் தேவையாகும். இவற்றுள் மக்கள் நெருப்பை கண்டறிந்தவுடன் அவன் கவனம் உணவு அருந்தும் முறையில் இருந்தது. அதன் முதல்படி விவாசயத்தைத் தொடங்கினான். இலக்கியங்களின்வழி உணவுத்தொழிலின் சிறப்பியல்புகளை அறியலாம்.

தொழில்கள் வரையறை
        பண்டைய தமிழகத்தின் வழக்கில் இருந்த தொழில்களை குறித்து செய்திகளை அறியலாம். தொழில் என்பதற்கு ஒரு வரையறை காண்போம். உழைப்பு என்பது பெயர்ச்சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச்சொல்லாகத் தொழில்செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாக தொழிலாளர்களைக்குறிக்கும். இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும்நிலைகள்ஆகும்.

வாழ்வியல் தொழில்கள்
       மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழிலாகக் கருதப்படுகின்றது. அவற்றுள் கைத்தொழில், நிலஞ் சார் தொழில், கைவினைத் தொழில், பிற தொழில், அறிவு சார் தொழில் ஆகிய நிலைகளில் வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் கைத்தொழில்களில் பயிர்த்தொழில் மிகவும் முக்கியதாக க் கருதப்படுகிறது.

பயிர்த்தொழில்
       மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு ஒருவர் சிறந்த பண்பினைப் பெற அடிப்படையாய் இருக்க வேண்டியது வறுமையின்மை. உணவே இல்லை இன்றேல் பண்பாடு இல்லை,பழம் பெருமையும் இல்லை ஆதலால் உணவுப்பொருளின் இன்றியமையினை உணர்ந்து அவற்றைப் பெருக்கினர். உணவுத் தொழில் தலைமைத் தொழிலாக உயிர்த் தொழிலாகப்போற்றப்பட்டது. பண்டைய தமிழர் இயற்கையோடு ஒன்று வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாக பயிர்த்தொழில் பன்னெடுங்காலமாகத் தமிழரது தொழிலாக அமைந்தது எனினும் இதற்கான முதல் சான்றினை தருவது தொல்காப்பியமாகும்.

“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது
இல்லென மொழிபிறவகை நிகழ்ச்சி “1
      என்ற நூற்பா மூலம் விளக்குகின்றது. சங்க இலக்கியங்களில் ‘வேளாண்’ என்ற சொல் இரண்டு இடங்களிலும்’ வேளாண்மை’ என்ற சொல் ஓரிடத்திலும் இடம்பெற்றுள்ளது. ‘வேளாளர்’ என்ற சொல்

“தொடர்ந் தேம்எருது தொழில் செய்யாதோட
விடுங்கடன் வேளாளர்க் கின்று”2
       என்று பரிபாடல் அடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தொல்காப்பியர் காலம் தொடங்கி சங்ககாலம், சங்கம் மருவிய காலம் முடிய வேளாண்மை என்னும் சொல் பெரும்பான்மை உதவி என்ற பொருளியிலும் சிறுபான்மை உழவுத் தொழில் என்று பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. இலக்கண நூலார் வேளாண் என்னும் சொல்லைவேள்+ஆள் எனப் பிரிப்பர். வேள் என்னும் வேர் சொல்லுக்கு மண் என்று ஒரு பொருள் உண்டு. வேளாண்மை மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தரும். மண்ணைப் பயன்படுத்தி ஆள்பவன் வேளாண் என பட்டான்.

உழவுத் தொழில் முறைகள்
       உழவுத் தொழில் என்பது நிலத்தைத் தயார்ப்படுத்தி விதைகளை விதைத்து பயிர்களை விளைவித்து அறுவடை செய்யும் முறையாகும். ஒருவர் உண்ணும் உணவில் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கின்றது. உழவர் இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை. எவ்வித விளம்பரமும் இல்லாமல் இருக்கின்ற ஒரே தொழில் முறை உழவுத் தொழிலாகும்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்”3
       என்ற வரிகள் வள்ளுவர் உழவுத் தொழிலின் சிறப்பினை விளக்குகின்றார். உழவுத் தொழில் என்பது உழுதல், உரமிடுதல், நீர்ப்பாய்ச்சுதல், விளைத்தல், களை கட்டல், காத்தல், அறுவடை, பதப்படுத்துதல் எனப் பல கூறுகளை விளக்கலாம்.

உழுதல்
           நிலத்தை பண்படுத்துதல் நிலையே உழுதல் ஆகும். நீர்வளம் நிறைந்த வயல் பகுதிகளில் நாற்று நடுவதற்கு முன் நிலத்தைப் பலமுறை உழுவார்கள் அதனை பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் ஆசிரியர் உத்திர கண்ணனார் சிறு சிறு அடைமொழிகளின் மூலம் உழும் வகையை குறிப்பிடுகிறார்.

“குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவாயன் னமடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முகக்கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பெறிந்து உழுததுளர் படுதுடவை”4
        என்ற வரிகள் மூலம் உழுதல் நிலையை விளக்குகின்றனர். பண்டைய தமிழர் நிலத்தை உழுவதற்கு எருதுகள் இன்றி எருமைகளையும் பயன்படுத்தினர்.சான்றாக

“மலைகண்டன் னநிலை புணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவு”5
          என்ற வரிகள் நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமைகளைப் பூட்டி விழுகின்ற உழவனே என்பதை விளக்குகின்றன. மண்ணை செழுமைப்படுத்தும்  உழுதல் விதைகளின் விதைப்பதற்கும் நீர் பாய்ச்சலுக்கும்தயார்படுத்தும் நிலையே  உழுதலாகும்.

பல்வேறு பயிர்கள் பயிரிடல்
     நிலத்தை  உழுதல் முறைகளில் விதை விதைத்து அறுவடை செய்து அதனை பயன்படுத்தினர். நிலத்தின்தன்மைக்கு ஏற்றவாறு அதன் பயிரிடும் முறைகளும் வேறுபடுகிறது. பின்னர் மீண்டும் அந்நிலத்தில்வேறு பயிரிடும் முறைகளை  அறிவோம்.திணைப்புனங்களில்  திணையொடு கலந்த பருத்தியையும் விதைப்பர். அதன்பிறகு தினை, அவரை விதைப்பர். இந்த அவரை வளர்ந்து சிறுதினை மறுகாலில் படர்ந்து காய்க்கும்.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்.”6
     என்று குறுந்தொகைப் பாடல் வரிகள் விளக்குகின்றது. புன்செய் விளைச்சலில் ஒரு நிலப்பகுதியில் ஒருவகை பயிரை மட்டும் விளைவிக்காமல் பல்வேறு விளைவித்தனர். ஒரு பகுதியில் தினை மற்றொரு பகுதியில் எள் பிறிதொரு பகுதியில் வரகு எனவும் விளைவித்தனர் என்பதை,

“சிறுதினைகொய்யக்கவ்வைகறுப்பக்
கருங்கால்வரகின்இருங்குரல்புலர.”7
       என்ற பாடலடிகளால் உணரலாம். பயிரிடும் முறைகளை இலக்கியங்களின்வழி சான்று அளிக்கின்றன.இன்றையச் சூழலில் உணவு பயிரிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருவகாலநிலைக்கேற்ப இல்லாமல் நவீனமுறையில் பயிரிடும் முறை அமைந்துள்ளது. இதனால் உணவின் சுவை, ஆரோக்கியம் பாதிக்கின்றது. பருவநிலைக்குஏற்ப நிலத்தின் தன்மையை பொருத்தும் உளவுத்தொழிலை உருவக்குவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

முடிவுரை
     பழந்தமிழர்களின் உணவு பயிரிடும் முறைகளை சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். காலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நிலத்தில் விதை விதைத்து அறுவடை செய்யும் விவசாயம் முறை என்றும் மாறாது. ஆயினும் சுற்றுச்சூழலின் நிலத்தைப் பராமரிக்கும் முறையினைநாம் ஒவ்வொருவரும் கடமையாகக் கருத வேண்டும். நிலத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவைப் பெறுவோம்.

சான்றெண்விளக்கம்
1.தொல்காப்பியம்பொருள், மரபு -81 நூற்பா

2.மேலது – 20:63-64

3.திருக்குறள் – 1033

4.பெரும்பாணாற்றுப்படை196 – 200

5.நற்றினைபாடல் – 60 – 2

6.குறுந்தொகை – 82

7.மதுரைக்காஞ்சி 271-2

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.இளவரசி
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.

 

நானாக நான்|கவிதை|மெ.அபிரக்ஷா

நானாக நான்-கவிதை-மெ.அபிரக்ஷா

இந்தச் சமூகம்


என்னை ஏற்றுக்கொள்வதற்காக
 

நான் விருப்பமில்லாமல்


நாள்தோறும் – அணியும்


முகத்திரை


உன்னைக் கண்டவுடன்


மட்டும் ஏனோ


தானாகவே மறைந்து போகிறது..!


 

நான் யாரென்ற


ரகசியத்தைப்


பல நேரத்தில்


நான் மறந்து போனாலும்


அந்த உண்மையை


உரக்கச் செல்ல


சிறிதளவும் – நீ


தவறுவதில்லை..!


 

உன் முன் –  நான்
மெ.அபிரக்ஷா

இருக்கையில்


என் மெய் நகலாக


மாறிப் போன நீ!


பல நேரம் என்னுடன்


செலவிடுபவர்களாலும்


கணிக்க முடியா


என் உணர்வுகளை


உன்முன் நான் நிற்கும்


அந்தக் கண நேரத்திலேயே


கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுகிறாய்..!


 

இறுதியில் நான் நானாக


இருக்க இடமளித்து – என்னை


அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்


விந்தை நிறைந்த


நீதான் நான் !


தினமும் பார்த்து


ரசிக்கும் கண்ணாடி..!


 

கவிதையின் ஆசிரியர்


மெ.அபிரக்ஷா


B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, 


திண்டல், ஈரோடு.

 

சீர்வரிசை|சிறுகதை|முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்

சீர்வரிசை - சிறுகதை - முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்
   சமையலறையில் தனது தாய் மேரி, சமையல் செய்யும்போதெல்லாம் கூடவே வந்து நின்று பேசிக்கொண்டிருக்கும் அவளது மகன் வில்லியம்ஸ், ஒருநாள், அவள் பயன்படுத்தும் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு,    
         
     “தேவர்குளத்தில் சோமு என்ற பெயரில் பாத்திரக்கடை இருக்கிறதா? நான் பார்த்ததே இல்லையே.” என்று வியப்புடன் கேட்டான்,

            “அப்படி ஒரு கடையும் இல்லைதான். ஏன் கேட்கிறாய்?” என்றாள்  மேரி.
         
        “இல்லை, நீ பயன்படுத்தும் எல்லாப் பாத்திரங்களிலும் ‘ சோமு, தேவர்குளம்’ என்று எழுதியிருக்கிறதே! அதான் கேட்டேன்,” என்றான்.
           
    “அது கடையில் வாங்கிய பாத்திரங்கள் இல்லைடா. என் திருமணச் சீர்வரிசைக்காக, ‘சோமு அண்ணன்’ அன்பளிப்பாய் வாங்கிக் கொடுத்தது,” என்றாள் அம்மா.
         
          “சீர்வரிசையா? அப்படி என்றால் என்னம்மா?”  வியந்து கேட்டான் வில்லியம்ஸ்.
         
         “திருமணம் முடிந்து,  பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வரும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் பொருட்கள்தான் பிறந்த வீட்டுச் சீதனம். கட்டில், பீரோவிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் என அம்மா வீட்டிலிருந்து பெண்ணுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். அதைத்தான் சீர்வரிசை என்பார்கள். அவரவர் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்பப் பொருட்களின் தன்மை மாறுபடும். வெண்கலப் பாத்திரங்கள், செப்புப் பாத்திரங்கள் போன்ற சில பொருட்கள் வழிவழியாக பெண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
         
        “அப்படியா ஆச்சரியமா இருக்கே. அப்போ நீ பயன்படுத்துற பொருள் எல்லாம் ஆச்சி உனக்கு வாங்கி தந்ததா?” எனக் கேட்டான் வில்லியம்ஸ்.
         
       “எனக்குத் திருமணம் ஆனபோது, ஆச்சி எனக்கென்று எந்தப் பொருளையும் விலைக்கு வாங்கவில்லை. உற்றார் உறவினர் ஆளாளுக்கு வாங்கிக் கொடுத்த பொருட்களைத்தான் நான் தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தேன்,” என்றாள் மேரி.
         
     “அதுசரி! அதற்காக இவ்வளவு பாத்திரங்களா? யார் அந்த சோமு அண்ணன்?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்டான். சோமு அண்ணனைப் பற்றி மகனிடம் அவள் பகிர்ந்தபோது, அவளும் பழைய நினைவுகளுக்குள் சென்று மீண்டாள்.
         
         ‘சோமு அண்ணன்’ லட்சுமி அக்காவின் தம்பி. தன் தாயையும் ‘பாப்பாக்கா’ என்று அழைக்கும் அன்புத் தம்பி. அவர் இராணுவத்தில் பணியாற்றுகிற காலங்களில். வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். எல்லை காக்கும் இராணுவ வீரர்களின் தியாகத்தைப் பாடங்களில் படித்திருப்பதால், அண்ணனைப் பார்ப்பதற்கே அவர்களுக்குப் பெருமையாக இருக்கும். அதோடு, அவர் வரும்போது மின்சாதனப் பொருட்களான ‘டார்ச் லைட், அயன் பாக்ஸ், மிக்ஸி ‘என அவர்களின் வீட்டிற்குத் தேவையானது எதுவானாலும் மிலிட்டரி கேன்டீனில் வாங்கிக் கொடுப்பார். ஏதாவது அவசரமாகத் தேவைப்பட்டால்கூட, ‘சோமு வரும்போது வாங்கிக் கொள்ளலாம்’ என்று தாய் கூறிவிடுவாள். தொடக்கத்தில் இவை மட்டுமே சோமு அண்ணனைப் பற்றி அவள் அறிந்திருந்தது.
         
          பின்னர் அவள் வளர வளர லட்சுமி அக்கா குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகத் தொடங்கியபின், தேசத்திற்காக எல்லை காக்கும் வீரனாக மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினருக்காக சோமு அண்ணன் செய்யும் தியாகத்தையும் அவள் அறிந்தபோது, அவர் மீது அவளுக்கு மதிப்பு கூடியது.
         
         நான்கு பெண் குழந்தைகளுக்குப் பின் பிறந்தவர் சோமு அண்ணன். தன் தாய் தந்தையரைக் கவனிப்பதை மட்டும் கடமையாக எண்ணாமல், தன் உடன்பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டியவற்றையும் ஒற்றை மனிதராக மனமகிழ்வோடு செய்தவர் அவர். இரண்டு அக்காக்களுக்கு நகை போட்டு, சீர்வரிசைகள் செய்து, திருமணம் செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அக்கா பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய சீர்களையும் ஒவ்வொரு கட்டங்களிலும் செய்துவந்தார். அதுபோலத்தான் அவளுக்கும் சமையலறைப் பொருட்கள் அத்தனையும் வாங்கிக் கொடுத்தார் என்று அவள் கூறி முடித்தாள்.
         
     அப்போ உனக்கு கூட உங்க அண்ணன்மார்தான்.. அதான் பெரிய மாமாவும், சின்ன மாமாவும்தான் எல்லாம் செய்தார்களாமா?
    ஆமாம்டா கண்ணு.. தாத்தாவும் ஆச்சியும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்ததால எங்க மூவரையும் படிக்க வைக்கவே விழிப்பிதுங்கி போனாங்க.. அதனால பெரிய மாமாதான்  எனக்கு எல்லாமே செய்தான். எனக்கு முன்னாடியே அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு. அப்பக்கூட அவன் பாசம் மாறல. என் கல்யாணத்தப்ப நகைவாங்க, அவன் பொண்டாட்டி.. அதான் உங்க அத்தை.. அவங்க கூட, தான் போட்டு வந்த நகையைத் தந்திருக்கிறார்கள்.  வாங்கின பீரோ கலர் நல்லா இல்லன்னு சொன்னதும், கல்யாணத்துக்கு மறுநாள் நாங்கெல்லாம் விருந்து சாப்பாட்டில் ஆர்வமாக இருக்க, பிடித்தமாதிரியான பீரோ வீடு வந்து சேர்ற வரை பெரிய மாமா ஓயவில்லை. சின்ன மாமாவுக்கு அப்போ நிரந்தர வேலையில்லை. ஆனால் வேலை கிடைச்சு, அவனுக்குக் கல்யாணம் ஆனதற்கு அப்புறம் சின்ன மாமாவும் சின்ன அத்தையும் இந்நாள்வரைக்கும் செய்துவருகின்றனர்.
         
       ஓ.. அதனால் தான் சென்றமுறை வீட்டில் ஏசி இல்லாமல் நாம வெயிலில் அவதிப்படுவதைப் பார்த்துவிட்டு, கஷ்டமான சூழலிலும் அடுத்தவாரமே அத்தையும் மாமாவும் ஏசியோடு வந்தார்களா?
     
         ஆமாம். அதான் சகோதரப் பாசம்.
  
        அப்போ.. நானும் நம்ம பாப்பாவுக்கு எல்லாம் செய்யனும்லா?
         
         செய்தா நம்ம பாப்பா எபாபவும் சந்தோஷமா இருப்பா. என்ன.. நீ செய்வியா?
         
           “என்னமா அப்படி கேட்கிற. பாப்பாக்கு மட்டுமல்ல. சோமு மாமா அவங்க அக்கா பிள்ளைகளுக்குச் செய்த மாதிரி, நம்ம மாமாமார் அவங்க தங்கச்சி பிள்ளைகளான எங்களுக்குச் செய்ற மாதிரி, பாப்பாவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் நான் சேர்த்து செய்வேன்மா” உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லி முடித்தான் வில்லியம்ஸ்.
 
         “அடியென் தங்கம். அதுபோதும்டா எனக்கு” என்றவாறு மகனை அணைத்துக்கொண்டாள் மேரி.
         
   “அதெல்லாம் சரிம்மா, இந்தப் பாத்திரங்களில் ஏன் இவ்வளவு துல்லியமாகப் பெயரையும் ஊரையும் பொறித்திருக்கிறார்கள்? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவரிடம் இருந்து வந்ததென்றால், அவை எப்படி ஒன்னா சேர்த்தீங்க?” என்று மகன் ஆர்வத்துடன் கேட்டான்.
         
             அவள் புன்னகைத்தாள். “நல்ல கேள்வி. அக்காலத்தில் திருமணம் என்பது வெறும் இரு உள்ளங்களின் இணைப்பு மட்டுமல்ல, இரு குடும்பங்களின் சங்கமம்.. உறவுகள் வலுப்படவும், பிணைப்புகள் புதுப்பிக்கப்படவும் அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சீர்வரிசை என்பது வெறும் பொருள் பரிமாற்றம் அல்ல; அது அன்பின், ஆதரவின் அடையாளம். ஒவ்வொரு பொருளும் உறவின் ஆழத்தையும், அதை வழங்கியவரின் நல்லெண்ணத்தையும் பிரதிபலிக்கும். அதனால் தான், ஒரு பொருள் யார் கொடுத்தது என்பதைப் பிற்காலத்தில் நினைவுகூர, பாத்திரங்களில் பெயர்கள் பொறிக்கும் வழக்கம் வந்தது. உன் தாத்தா காலத்தில், சீர் கொடுப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பொறிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இது ஒருவகையில், ‘இந்த சீரில் நானும் பங்கெடுத்துள்ளேன்’ என்று வெளிப்படுத்தும் ஒரு வழி. மேலும், யார் என்ன கொடுத்தார்கள் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்ய, பெரியவர்கள் ஒரு சீதனப் பட்டியல் தயாரிப்பார்கள். அதில் ஒவ்வொரு பொருளும், அதை வழங்கியவர் பெயரும், அவர்கள் ஊரும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், பின்னாளில் யாரேனும் அதே போன்ற பொருளைக் கொடுக்க விரும்பினால், அது ஏற்கனவே வாங்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும், மேலும், இது ஒரு வட்டியில்லா கடன்’  என்று விளக்கினாள்.
         
       தொடர்ந்து, “சோமு அண்ணன் மட்டுமல்ல… மிக்ஸி சரோ பெரியம்மா வாங்கிக் கொடுத்தது; கிரைண்டர் ஹரி அண்ணன் வாங்கிக் கொடுத்தது; எலெக்ரிக் குக்கர் மூசாவோட அத்தா அசன் அண்ணன் வாங்கி கொடுத்தது, பெரிய குக்கர் ரேவதி அக்கா, சின்ன குக்கர் லீமா அக்கா, பெரிய அஞ்சறைப் பெட்டி ரூபி சித்தி, மாவு தூக்கு வாளி லீலா சித்தி, அடுக்குச் சட்டி கருணா சித்தி” என்று அவள் கூறத் தொடங்கினாள்.
         
       “அம்மா! நிறுத்து, நிறுத்து! விட்டால் உன் அடுக்குப்பானை கவிதை நூல் மாதிரி அடுக்கிக்கொண்டே போவாய் போல!” என்று அவளை நிறுத்திய மகன், “ஏதோ, ‘வட்டியில்லா கடன்’ என்று கூறினாயே, அப்படினா என்ன? அதைச் சொல்லு முதல்ல” மேலும் ஆர்வத்துடன் கேட்டான்.
         
         அவள் விளக்கினாள், “ஆமாம், திருமணத்திற்கு அநேகர் வருவார்கள், யார் யார் என்னென்ன பொருள் வாங்கிக் கொடுத்தார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெயர்களைப் பதிவிட்டுத் தருவார்கள். திருமண விழாவில் வழங்கும் மொய்ப் பணத்தையோ பொருளையோ, திருமண அன்பளிப்பு என்று கூறினாலும், ‘வட்டியில்லா கடன்’ என்றுதான் சொல்வார்கள். ஒரு குடும்பத்தில் திருமணம் அல்லது வேறு ஏதேனும் சுப நிகழ்ச்சி நடக்கும்போது, உறவினர்களும் நண்பர்களும் பணமாகவோ, பொருளாகவோ ‘மொய்’ எழுதுவார்கள். இது, அந்த குடும்பத்திற்கு ஒருவகையான நிதி உதவியாக இருக்கும். அதே உறவினர் அல்லது நண்பர் வீட்டில் ஒரு சுப நிகழ்வு நடக்கும்போது, மொய் பெற்ற குடும்பம், தாங்கள் பெற்ற மொய்க்குச் சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ திருப்பிக் கொடுப்பார்கள். இதைத்தான் மொய் திருப்பிக் கொடுத்தல்’ என்பார்கள். இதில் வட்டி ஏதும் கிடையாது. இது ஒருவகையான சமூகப் பிணைப்பு, பரஸ்பர உதவி. இன்றும் கிராமப்புறங்களில் இந்தப் பழக்கம் மிகவும் வலுவாக உள்ளது. சீர் வரிசையிலும் இது பொருந்தும். இன்று நாம் அவர்களுக்குச் சீர் கொடுக்கிறோம், நாளை அவர்கள் நம் வீட்டிற்குச் சீர் கொடுப்பார்கள். அதனால்தான் பொருட்களில் பெயரிடும் பழக்கம் தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது, நான் சின்னவளாக இருக்கும் போது, எங்கப் பக்கத்துவீட்டில் இருந்த ஜானகி அத்தை மகள் வடிவு அக்காவின் திருமணத்திற்கு, நம்ம ஆச்சி பால் குக்கர் வாங்கி தந்தார்கள். என் திருமணத்தின் போது ஜானகி அத்தை வீட்டில அதே போல் பால்குக்கரையே அன்பளிப்பாக வழங்கினார்கள். என்ன, நாங்க வாங்கி தரும்போது அது அலுமினியத்தில் இருந்தது. எனக்கு அவர்கள்தரும்போது, காலத்திற்கு ஏற்றார் போல அது சில்வராக மாறி இருந்தது. அவ்வளவுதான்” என்றாள்.
ஆயினும், அவளின் நினைவுகளில் அவளுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், அவளுக்குக் கொடுக்க வேண்டிய பொருட்களை ஒருவர் வாங்கியதையே மற்றொருவர் வாங்கிவிடாதபடி ஒவ்வொருவரும் கலந்து ஆலோசித்து, திருமணத்தின்போது வழங்கிய உற்றார் உறவினர்களின் அன்பும் அக்கறையும் காட்சிப் பிம்பமாய் வந்துதான் சென்றன. அவளின் உறவுகளை விட்டு அவள் நெடுந்தொலைவில் இருந்தாலும், ஒவ்வொரு பொருட்களையும் அவள் பயன்படுத்தும்போது, அவளின் உறவுகளுடன் உறவாடுவது போன்ற உணர்வு மேலோங்கி, அவளுக்கு ஆத்மார்த்தமான திருப்தியை அளிக்கிறது என்பதுதான் உண்மை.
         
          “உன்  அண்ணன்மாரில் இருந்து, அத்தைகள், சித்திகள், மாமாக்கள் என எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன் மகிழ்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள், இல்லையாம்மா?” என்றான் மகன்.
         
          “ஆமாம்டா கண்ணு, என் உறவுகள் மட்டுமல்ல..ஜாதி கடந்து, மதம் கடந்து ஒவ்வொருத்தரும் வழங்கிய ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு பெயரும் ஒரு உறவின் நினைவுகளை மீட்டெடுக்கிறது. அதுதான் இந்த சீர் வரிசையின் உண்மையான அழகு,” என்று நெகிழ்வுடன் பதிலளித்தாள் மேரி.

சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய், 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை 44.

 

Silappathikarathil Esainadanamum Medai Amaippum | Dr.V.Nalini

சிலப்பதிகாரத்தில் இசை நடனமும் மேடை அமைப்பும் -முனைவர் வெ. நளினி

Abstract           

There are reasons for classification of Tamil, music and drama. Our literature has long been composed in the form of poetry, and prose is the case in the case of speech and is often not featured in the size or literary form. In the case of “Silappadikaram”, the article, “Silappadikaram” is the epitome of the music, the music, the drama, the excellence of the music, the music, the drama, “.

சிலப்பதிகாரத்தில் இசை நடனமும் மேடை அமைப்பும்

முன்னுரை        

தமிழை இயல் ,இசை ,நாடகம் என்று மூன்றாக வகைப்படுத்தி பிரித்ததற்கு காரணங்கள் உண்டு. நமது இலக்கியங்கள் முழுவதும் நெடுங்காலமாக  கவிதை வடிவில் தான் இயற்றப்பட்டுள்ளன, உரைநடை என்பது பேச்சு வழக்கில் இருந்ததே தவிர ஏட்டு அளவிலோ அல்லது இலக்கிய வடிவிலோ பெரும்பாலும் இடம்பெறவில்லை‌. தமிழரின் வரலாற்றுத் தலைமை காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இயல், இசை நாடகம் ஆகிய முத்தமிழும் விரவிக் காணப்படுகின்றது அதன் அடிப்படையில் “சிலப்பதிகாரத்தில் இயல் இசை நடனமும் மேடை அமைப்பும்” என்னும் பொருண்மையில் இக்கட்டுரையானது இயல், இசை ,நாடகம், எனும் முத்தமிழின் சிறப்பினை விளக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.


இசைக்கருவிகளின் வகைகள்

ஆடல் பாடல் அழகு என்ற இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று குறைவு படாமல் இருக்க வேண்டும் அதற்கு முக்கியமான அம்சமாக விளங்குபவை இசைக்கருவிகள் ஆகும், இசையின் பயனானது சிறப்பாக அமைந்தால்தான் கூத்தானது முழுமை உடையதாக சிறக்கும், இத்தகைய சிறப்பினை கொண்ட இசைக்கருவிகள் நான்கு வகைப்படும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இசைகள் ஏழு ஆகும்.


ஏழு இசைகள்          

“குரல் துத்தம் நான்கு கிளை மூன்றிரண்டாம்           

குறையா வழைஇனி நான்கு விதையா- விரையா          

விளரி எனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்`          

களிர் சேர் கண்ணுற் றவர்” 1

அறிவில் சிறந்த புலவர் பெருமக்கள் தமிழின் ஏழு இசைகளையும் தொகுத்து கூறியுள்ளனர் .குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் ,என்பன ஆகும்.
 

ஏழு சுவரங்கள்       

சச்சம், ரிடபம், காந்தாரம் ,மத்திமம் ,பஞ்சமம்,கைவதம், நிடதம் என்பன ஏழு சுவரங்கள் ஆகும். இவற்றை முறையே சரிகமபதநி என்று பாகுபடுத்துவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டே பண்கள் பிறக்கும் இதனை.
 “சரிகம பதநியென் றெழுத்தால் தானம்
விரிபரந்த கண்ணினாய் வைத்துத் தெரிவரிய
ஏழழிசையுந் தேனார்று மிவற்றுள்ளெ பண்பிறக்கும்
சூல்முதலாம் சுத்தத்துளை”2
எனும் பாடல் அடிகள் எடுத்துரைக்கிறது.


தமிழ் இசையின் மாத்திரை அலகுகள்

தமிழின் ஏழிசைக்கும் இருபத்தி இரண்டு அலகுகள் உள்ளன அவைகளை


1. குரல்          _ 4 அலகுகள் கொண்டது


2. துத்தம்.        _ 4 அலகுகள் பெற்றது


3. கைக்கிளை.    _ 3 அலகுகள் கொண்டது


4 உழை.         _ 2 அலகுகள் கொண்டது


5. இளி.          _ 4 அழகுகள் பெற்றது


6. விளரி.        _ 3 அலகுகள் உடையது


7. தாரம்.         _ 2 அழகுகள் கொண்டது


இவ்வாறாக தமிழிலன் ஏழிசைக்கும் உரிய மாத்திரை அலகுகள் வகுக்கப்பட்டுள்ளது.


நான்கு வகை இசைக்கருவி
 

1.தோல் கருவி
  2. துளைக்கருவி
  3. கஞ்சக் கருவி
  4. மிடற்றுக் கருவி
என்பன வள்ளோரால் வகுக்கப்பட்ட இசைக்கருவிகள் ஆகும்.


தோல்கருவி  _ மத்தளம்       

தண்ணுனம்மை என்று அடியார்க்கு நல்லரால் போற்றப்படும் இசைக்கருவி மத்தளம் என்ற தோல்கருவி ஆகும். தோலினைப் பதப்படுத்தி   செய்யப்படுவதால் இப்பெயர் பெற்றது .
 

“இடக்க ளியாய் வலக்கண் குரலாய் 

நடப்பது தோலியார் கருவியாகும்”3

என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. மத்தளம் என்பது மத் _ ஓசை, தளம் _ இடம். ஆகவே இசை இடனாகியக் கருவிகளுக்கெல்லாம் தாளமாதலின் மத்தளம் என்றுப் பெயர் பெற்றது இக்காலத்தவர் இதனை மிருதங்கம் என்று அழைப்பர்.
மத்தளமானது அகமுழவு ,அகப்புறமுழவு, புறமுழவு, பண்மை முழவு, நான் முழவு, காலை முழவு, எனும் ஏழு வகைப்பட்ட முழவுகளுள் அகமுழவும். மத்திமம் ஆன தண்ணுமைத் தக்கை, தகுணிச்சம் முதலிய அகப்புற முழவினையும் கொண்டது ஆகும்..


துளைக்கருவி _ யாழ்                    

“ பேரியாழ் பின்னும் மகரஞ் சகோடமுடன்                 

சீர்பொழியுஞ் செங்கோடு செப்பினர் தார்பொழிந்து                

மன்னுந்  திமார்பவன்கூடர் கோமானே                  

பின்னு முளவோ பிற”4         

இப்பாடல் அடிகளின் மூலம் துளைக் கருவியான யாழினைப் பற்றியும் அதன் . வகைகளை பற்றியும் அறிய முடிகிறது. யாழ் நான்கு வகைப்படும் அவையாவன .
பேரியாழ், மகரையாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் என்பன ஆகும்.
நான்கு வகையாழிற்கும் உரிய நரம்புகளை நூலோர் விதிமுறைப்படி பாகுபடுத்தி வைத்துள்ளனர்.


1.பேரியாழ்.            -21 நரம்புகளைக் கொண்டது


2.மகரயாழ்             -19 நரம்புகளைக் கொண்டது


3.சகோடயாழ்        -14 நரம்புகளை உடையது


4.செங்கோட்டுயாழ் – 7  நரம்புகளை உடையது


இவ்வாறாக யாழிற்கு உரிய நரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


குழல்

மூங்கில், சந்தனம், வெண்கலம், கருங்காலி, செங்காலி, ஆகிய ஐந்து பொருள்களால் செய்யப்படுவது குழல் எனும் இசைக்கருவி ஆகும். இதனை புல்லாங்குழல்,வேய்ங்குழல், வேணுவங்கியம் எனும் பல பெயர்களால் அழைப்பர்.
குழலின் நீளமானது 20 விரல் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். சுற்றளவானது நாலரை விரல் அளவு உடையதாய் இருத்தல் வேண்டும், குழலினைத் துளையிடும் போது நெல்லரிசியில் ஒரு பாதி மரணிறுத்துக்கடைந்து  வெண்கலத்தினால் அனைசு பண்ணி இடமுகத்தினை அடைத்தும் வலமுகத்தினை வெளிப்படையாகவும் விடுதல் வேண்டும்.
 தூப முகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல் வாய்விட்டு விடவேண்டும். அடுத்தபடி ஏழு அங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவிலிருந்து ஒன்பது விரல் அளவு விட்டும் எட்டுத்துளைகள் இடவேண்டும். இவ்வாறாக அமைக்கப்படும் துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரல் அகலம் கொண்டிருக்க வேண்டும்.
குழலினை வாசிக்கும் போது முன்னின்ற ஏழு துளைகளில் இடக்கையின் இடைமூன்று விரலும் வழக்கையின் பெருவிரல் ஒழிந்த நான்கு விரலினையும் பற்றி வாசிக்க வேண்டும் இவற்றில் இருந்தே சரிகமபதநி என்று ஏழு சுவரங்களும் பிறக்கும்.


மிடற்றுக்கருவி _ தூக்கு

தாளங்களின் வழியால் பிறப்பதும் இசையின் இனிமையை கூட்டுவதுமான இயல்பினை கொண்டது மிடற்றுக் கருவியான தூக்கு ஆகும், இத்தகு சிறப்பினை கொண்ட தூக்கு ஏழு வகைப்படும் அவையாவன செந்துக்கு, மதளைத் தூக்கு ,துணிபுத்தூக்கு, நிவப்புத் தூக்கு ,கோயிற்றூக்கு, கழாற்றுக்கு நெடுந்தூக்பகு என்பனவாகும்.


தூக்குகளின் சீர் அளவு

“ஒரு சீர் செந்துதூக் கிருசீர் மதலை

முற்றிலும் துணிபு நாற்சீர் கோயில்       

ஐஞ்சீர் நிவப்பே அறுசீர் கழலே       

எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்”5

ஏழு வகையான தூக்குகளுக்கும் உரிய சீர்களின் அளவை இப்பாடலானது உணர்த்துகிறது.
இசை மீட்டுவதற்கு உரிய விரல்கள்
 இசையினை மீட்டுவதற்கு உரிய விரல்களை நூலோர் வகுத்துக் காட்டி உள்ளனர். இடக்கையில் உள்ள பெருவிரலும் சிறுவிரலும் மற்றைய மூன்று விரல்களும், வலக்கையில் உள்ள பெருவிரல் ஒழிந்த நான்கு விரல்களும் ஆக ஏழு விரல்களும் இசைமீட்டுதலுக்கு உரிய விரல்கள் ஆகும்.


ஏழிசைக்கும் உரிய எழுத்துக்கள்

“ஆ,ஈ,ஏ, ஐ ,ஓ, ஔ வெனும்

இவ்வே ழெழுத்தும் ஏழிசைக்குரிய”6

சுரங்களைக் கொண்டு இசைனை எழுப்புவதற்கு கருவியாக கொள்ளப்பட்டவை சரிகமபதநி என்னும் எழுத்துக்கள் ஆகும், எனவே ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு எழுத்துக்களுமே ஏழு இசைக்கும் உரிய எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தமிழரின் வாழ்வானது இவ்வாறாக இசையோடு பொருந்திய இனிமையினை கொண்டுள்ளது.


நடன வகைகள்

சிலப்பதிகாரத்தில் கணிகையர் குலத்தில் பிறந்தவளாக காட்டப்படும் மாதவி என்பவள் ஆடிய 11 வகையான நடன வகைகள் பற்றி காணலாம்
கோவலன் மாதவியை நாடுவதற்கு முதன்மை காரணமாக அமைந்ததும் இந்த மாதவியின் நாட்டியக் கலையே ஆகும் இச் செய்தியை


“தெய்வமால் வரைத்திருமுனி யருள

எய்திய சாபத்து இந்திர சிறுவனோடு

………………………………………………. 

தாதவில் புரிக்குழல் மாதவி”7

ஆடல், பாடல் ,அழகு ஆகிய மூன்றும் நாடக மகளிருக்கு குறைவுப்படாமல் இருக்க வேண்டிய நலன்கள் ஆகும், இத்தகு நலன்களை பெற்றவள் மாதவியாவாள்.
நாட்டியம் பயில்வோர் ஏழு ஆண்டு காலம் முறைமையாக பயின்று பின் அரங்கம் ஏற வேண்டும் இதனை


“பண்ணியம் வைத்தானை முகன் பாதம் பணிந்துறும்

தண்டியஞ் சேர் விதர்பதே சால்பு” 8
என்ற அடிகள் உணர்த்துகிறது.


கொடிக்கொட்டி, பாண்டரங்கம், அல்லியம், துடி, மல்லாடல், குடைகூத்து, குடக்கூத்து, பேடியாடல், மரக்காலாடல், பாவையாடல், கடையம், நின்றாடல், படிந்தாடல், இப்படியாக மாதவி ஆடிய நடனத்தின் வகைகள் சிறப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொடுவினை நீங்குதல் பொருட்டு இறைவி ஆடியது கொடிக்கொட்டியாகும் அதன் உறுப்புகள் நான்கு ஆகும், முக்கண்ணன் ஆடியது பாண்டுரங்கம் அதற்கு உறுப்புகள் ஆறு ஆகும், மாயவன் ஆடியது அல்லிய கூத்து அதற்கு உரிய உறுப்புகள் ஆறு ஆகும், நெடியவன் ஆடியது மல்லாடலாகும் அதற்குரிய உறுப்புகள் ஐந்து,வேலவன் ஆடியது துடியாடல் இதற்குரிய உறுப்புகள் ஐந்து, ஆறுமுகம் ஆடியது குடைக்கூத்து இதற்குரிய உறுப்புகள் நான்கு, திருமால் ஆடியது குடத்தாடல் இதற்குரிய உறுப்புகள் ஐந்து ,காமன் ஆடியது பேடியாடல் இதற்குரிய உறுப்புகள் ஆறு, மாயவன் ஆடியது மரக்காலாடல் இதற்குரிய உறுப்புகள் நான்கு, திருமகளால் ஆடப்பெற்றது பாவை இதற்குரிய உறுப்புகள் ஒன்று, இந்திராணி ஆடியது கடையம் இதற்குரிய உறுப்புகள் ஆறு  ஆகும். இவ்வாறாக பதினோறு வகையான ஆடலுக்கும் உரிய உறுப்புகள் பற்றி அறிய முடிகிறது.
நடனங்கள் அனைத்தும் எட்டு வகையான மெய்பாடுகளைக் கொண்டே வெளிப்படும், அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை,  என்பனவாகும்.


அரங்க அமைப்பு

“எண்ணிய நூலோர் அரங்கத்து”9 என தொடங்கும் பாடல் வரிகள் ஆனது ஆடுவதற்குரிய அரங்கத்தின் அமைப்பானது நூலோர் கண்ட இயல்பிலிருந்து முறைப்படி வழுவாமல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேடை அமைக்க தேவையான இடத்தினை முதலில் ஓரிடத்தில் வரையறை செய்ய வேண்டும் இந்த நிலமானது கோயில், பள்ளி அந்தணர் இருக்கை,ஊருணி, கிணறு,சோலை, புட்கள் முதலியவற்றிற குறைவில்லாமல் இருக்க வேண்டும். மேலும் பொடி மண், நாற்றம்,உவர், ஈளை,களி, சாம்பல் போன்றவை இல்லாமலும் ஊரின் நடுவே தேரோடும் வீதிகளின் எதிர்முகமாகவும் அமைந்திடல் வேண்டும்.


மேடைக்கான நீளம் மற்றும் அகலம்

மேடை அமைப்பு காண நீளம் அகலம் நூலோர் கூறிய முறைப்படி வகுக்கப்பட வேண்டும். பொதிய மலையின் கண் கண்ட புண்ணியம் கொண்ட மலைப் பக்கங்களில் நெடிதாகி உயர்ந்து வளர்ந்த மூங்கிலை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒரு சாண் நீலமுடையதாக சிற்ப நூல்களில் விதித்த முறைப்படி தலையாய வளர்ச்சியினை உடையவன் கைப்பெரு விரலில் 24 விரல்கள் அளவிற்கு உள்ள ஒரு கோலை நீளம் அளக்கும் கோலாக நறுக்க வேண்டும். இந்தக் கோலானது ஏழு கோல் அகலமும் எண் கோள் நீலமும் ஒரு கோள் உயரமும் உடையதாய் இருக்க வேண்டும்.தூணின் மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கு உட்பட்ட பலகைக்கும் இடை நின்ற நிலம் நான்கு கோல் அளவிற்கு உயரம் கொண்ட வகையில் இரு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். அரங்கினில் பார்ப்பவர்கள் அனைவரும் கைகுவித்து வணங்கும் வகையில் நால்வகை பூதங்களான வக்கிரதேவன் முதலான வருணன் ஈறாக நால்வரையும் ஓவியமாக வரைந்து அரங்கத்தின் மேல் இடத்தை அமைத்திடல் வேண்டும். மேடையில் இருக்கும் தூண்களின் நிழல் நாயகப் பத்தினியின் மேலும் அவையிலும் விழாமல் புறத்தே விழுமாறு மாண்புடைய நில விளக்கின நிறுத்தி ஒருமுகஎழினி,பொருமுகஎழினி,கரந்துவரல்எழினி  ஆகிய மூன்றினையும் முறையே அமைக்க வேண்டும்.


அரங்கினுள் புகும் முறை

“இயல்பினின்வழா அ இருக்கை முறைமையின்

தென்னெரி மரபிற் றேரிய மகனே”10

அரசர் முதலிய யாவரும் தத்தம் தகுதிகளுக்கு ஏற்ப இருக்கையில் அமர்ந்த பின்னர் குயிலுவை கருவியார்கள் தாம் முறையாய் நிற்க, நாடகக்கணிகையர் வழக்கால் முற்பட இட்டேறி பொருமுக எழினிக்கு நிலையிடமான வலப்பக்கதத் தூணிடம் செல்ல வேண்டும். நூல் மரபுக்கு இணங்க ஏறிய பின்பு இடத்தூணின் நிலையிடமாகிய ஒருமுக எழினியிடம் பற்றிய பழைய நெற்றியியர் கைகளை உடைய தேரிய மடந்தையர் புகுதலும் முறை என்று அறிய முடிகிறது.


முடிவுரை

சங்கச் சான்றோர்களால் முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தில் இசை நடனம் மேடை அமைப்பு  ஆகியவை எவ்வாறாகப் போற்றப்பட்டன என்பதை பற்றி இக்
கட்டுரையானது எடுத்துரைக்கிறது. மேலும் வளரும் தலைமுறையினரும் வருங்கால தலைமுறையினரும் இவற்றைப் போற்றி பாதுகாப்பதற்குரிய வழிமுறைகளை தங்களால் இயன்றவரை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.


சான்றெண் விளக்கம்

1.சாமிநாத ஐயர் வே .சிலப்பதிகாரமும் மூலமும் உரையும். பக்கம் 67.


2.சோமசுந்தரனார் போ .வே .சிலப்பதிகாரம் புகார் காண்டம். பக்கம் 116.


3.வேங்கடசாமி நாட்டார் ந. மு. சிலப்பதிகாரமும் புகார் காண்டமும் பக் 70


4.சோமசுந்தரனார் போ.வே சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் பக் 94


5.மேலது பக்கம் 101


6.வேங்கடசாமி நாட்டார் ந .மு .சிலப்பதிகாரம் புகார் காண்டம் பக்கம் 102.


7.அழகு கிருஷ்ணன் சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்.


8.இராமசுப்பிரமணியன் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் திருமகள் பதிப்பகம்.


9.சாமிநாத ஐயர்,வே. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் .பக்கம் 69


10.மேலது பக்கம் 73.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வெ. நளினி எம் .ஏ. பி எச்.டி, நெட்.

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்நிறுவனம்.

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்.

இராமாபுரம், சென்னை.89

 

International Faculty Development Program| Vaasippu Veliyel Silappathiram

இனியவை கற்றல் ஆசிரியர் திறன் மே்பாட்டு திறன் பயிற்சி அழைப்பிதழ்

Vasippu Veliyil Silappathikaram

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

E-ISSN : 3048 – 5495

பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

(International Faculty Development Program )

பொருண்மை : வாசிப்பு வெளியில் சிலப்பதிகாரம்

நாள் : 05.07.2025 முதல் 11.07.2025 வரை (7 நாள்கள்),  நேரம் : இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, வழி : Google Meet

அன்புடையீர் வணக்கம்,  
   தமிழ்மொழியின் அரும்பெரும் இலக்கியங்களில் சிறப்புடையதாகக் காப்பியங்கள் அமைந்துள்ளன.  காப்பியங்களில் ஒளிரும் ஒற்றை அணிகலனாக விளங்குவது “சிலப்பதிகாரம்” ஆகும். இயல், இசை, நாடகம், நீதியியல், கலை, பண்பாடு போன்ற பழந்தமிழரின் வாழ்வுக் கருவூலங்களை உணரும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் சித்திரமாக்கியுள்ளார். கண்ணகியின் பேராற்றல் மாதவியின் நடனத்திறன் நில இயல்புகளுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் கலைகள் போன்றவை சிலப்பதிகாரத்தில் மிளிர்கின்றன. சிலப்பதிகாரத்தின் காப்பிய அறிமுகம், கதை உருவாக்கம், கவிதைக் கட்டமைப்பு, இசை நுட்பங்கள், இலக்கியச் சிறப்புகள், வணிக மேலாண்மைச் சிந்தனைகள், சிலப்பதிகாரக் காதைகளில் சில புதிய வெளிச்சங்கள், பிற பழந்தமிழ் நூல்களுக்கும் சிலப்பதிகாரக் காதைகளுக்குமான ஒப்பீடு போன்ற பலவற்றையும் அறியும் வகையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ உள்ளது. இந்தச் சிந்தனையூட்டும் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

முதல் நாள் : 05.07.2025 (சனிக்கிழமை)

தலைப்பு : “சிலம்பில் இசை நுட்பங்கள்”

நெறியாளர் : முனைவர் இராச.கலைவாணி

இசைப்பேராசிரியர் (விருப்ப ஓய்வு), இயக்குநர்,

ஏழிசை இசை ஆய்வகம் மூங்கில் தோட்டம் மயிலாடுதுறை.

இரண்டாம் நாள் : 06.07.2025 (ஞாயிற்றுக்கிழமை)

தலைப்பு : “வழக்குரை காதையில் சில புதிய வெளிச்சங்கள்”

நெறியாளர் : முனைவர் வாணி அறிவாளன்

உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

மூன்றாம் நாள் : 07.07.2025 (திங்கள்கிழமை)

தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் வணிகமேலாண்மைச் சிந்தனைகள்”

நெறியாளர் : முனைவர் சி.சிதம்பரம்

உதவிப்பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்.

நான்காம் நாள் : 08.07.2025 (செவ்வாய்க்கிழமை)

தலைப்பு : “வாசிப்பு நோக்கில் சிலப்பதிகாரம் : கதை உருவாக்கமும் வஞ்சிக்காண்டமும்”

நெறியாளர் : முனைவர் இ.சேனாவரையன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,

அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்

ஐந்தாம் நாள் : 09.07.2025 (புதன்கிழமை)

தலைப்பு : “மங்கல வாழ்த்துப் பாடலும் காப்பிய அறிமுகமும்”

நெறியாளர் : முனைவர் வ.கிருஷ்ணன்

முதல்வர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்.

ஆறாம் நாள் : 10.07.2025 (வியாழக்கிழமை)

தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு

நெறியாளர் : முனைவர் இரா.செல்வஜோதி

இணைப்பேராசிரியர், மொழியியல் துறை,

மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.

ஏழாம் நாள் : 11.07.2025 (வெள்ளிக்கிழமை)

தலைப்பு : “முல்லைக்கலியும் ஆய்ச்சியர் குரவையும்

நெறியாளர் : முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), காளிப்பட்டி, நாமக்கல்

 குறிப்புகள்
1.பேராசிரியர்கள் ஏழு நாள்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
2.ஒவ்வொரு நாள் நிகழ்விற்குப் பின் கொடுக்கப்படும் அன்றைய நிகழ்வின் கேள்விகள் சார்ந்த பின்னூட்டப் படிவத்தினைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
3.பதிவுப்படிவம் பூர்த்தி செய்வதற்கு முன், கட்டணத்தொகை ரூ.150 செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
4.பதிவுப்படிவம் பூர்த்தி செய்யும்போது கவனமாகச் செய்யவும்.
5.பதிவுப்படிவத்தில் கட்டாயம் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) இணைக்கவும்.
6.நிகழ்வுகள் அனைத்தும் Google Meet வழியாக மட்டுமே நடத்தப்படும்.
7.ஏழு நாள்களிலும் கலந்து கொள்ளும் பேராசிரியர்களுக்கு மட்டுமே E-ISSN எண்ணுடன் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
8.ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பு எண் வழங்கப்படும். QR Code மூலமாக எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புலனக்குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EHzDgmWAkww022Gl35xxlX

தொடர்புக்கு :

முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் : ‪+91 70102 70575‬

முனைவர் அ.ஜெயக்குமார், இயக்குநர், இனியவை கற்றல்‪ : +91 99945 07627‬

முனைவர் கை. சிவக்குமார், நிர்வாக ஆசிரியர், இனியவை கற்றல்: ‪+91 99949 16977

 

வாசிப்பு வெளியில் சிலப்பதிகாரம் Logo

 

 

 

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

புதிய விடியல் - சிறுகதை -முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

லவ் பேர்ட்ஸ்-சிறுகதை -மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »