Sunday, September 7, 2025
Home Blog Page 2

Pandiya Tamilargalin Touchh Thozhil Muraigal|Dr.S.Ilavarasi

Pandiya Tamilargalin Touchh Thozhil Muraigal - Dr.S.Ilavarasi
Abstract
           Carpentry is one of the handicrafts of the ancient Tamil people. All the crafts that are useful for the prosperous life and comfort of the people are livelihood crafts. The special characteristics and structures of carpentry crafts can be seen in Sangam literature. Carpenters who have skillful activities along with artistic techniques are known through Sangam literature.


பண்டையத் தமிழர்களின் தச்சுத்தொழில் முறைகள்

ஆய்வுச் சுருக்கம்
         பண்டைய தமிழ் மக்களின் கைத் தொழில் முறைகளில் ஒன்று தச்சுத்தொழில்கள். மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் தச்சு தொழில்களின் சிறப்பு இயல்புகளை அமைப்புகளைக் காணலாம். கலை நுணுக்கங்களுடன் திறன் மிக்கச் செயல்பாடுகளைக் கொண்ட தச்சர்கள் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியப்பெறுகின்றனர்.

ஆய்வுச்சிக்கல்
        பண்டையத் தமிழ் மக்களின் தொழில் முறைகளைப் பேணுவதே நோக்கமாகக் கருதப்படுகிறது தவிர வேறு எந்த இனத்தையும் சார்ந்ததாகக் கூறப்படவில்லை என்பதை இவ்வாய்வின் சிக்கலாகக் கருதப்படுகிறது.

ஆய்வு முறையியல்
பகுப்பாய்வு, தொகுப்பாய்வு முறை, ஆய்வியல் முறைமையில் இவ்வாய்வு விளக்கப்படுகிறது.

முன்னுரை
     பண்டையக் காலத்து நானில இயல்புகளும் மக்களின் ஒழுகலாறும்  அரசியல், வாணிகம் உழவு முதலிய தொழிற்றுறை இயல்புகளும் மக்களின் வாழ்க்கைப் பண்பாடு, அவர்கள் கையாண்ட க் கருவிகளின் இயல்பும் பிறவும் அறிவதற்குச் சங்க காலப் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகையும் நல்ல சான்றுகளைக் கொண்டுள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டையத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியலை பற்றிய பல அரிய நூல்கள் அறிஞர் பலரால் எழுதப்பட்டுள்ளன. வாழ்வியல் சிறக்க அடிப்படைக் காரணமாக விளங்கும் தொழில்கள் பற்றிய நிகழ்வினை இவ்வாய்வில் காணலாம்.
 
“வினையே ஆடவர்க்கு உயிரே”1
 
என வரும் குறுந்தொகை பாடல்கள் வழி உணர்த்தப்படுகிறது.

பண்டையத் தொழில் முறைகள்
         தமிழர்களின் தொழில்களில் பெரும்பாலானவை கைத்தொழில்களேயாவன. பஞ்சை நூலாக்கி துணி நெய்தலும், இரும்பை உருவாக்கிக் கருவிகள் செய்தல் போன்றவை.தொழில்கள் பெருமளவு மனிதன் முயற்சிகளாகவே இருந்தன. இவற்றிற்குப் பயன்பட்ட கருவிகளும் எளிய அமைப்பினை உடையவையாகும். ஒரு தொழில் செய்பவனே தான் செய்யும் தொழிலுக்கு உரிமை உடையவனாகவும் இருந்தனர். அவரவர் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களது தொழிலை மேற்கொண்டனர். இவற்றால் அக்காலத்தில் தொழில் செய்வதில் கடும் உழைப்பும், பொறுப்புணர்ச்சியும், சுதந்திர மனப்பான்மை, ஆர்வத்தின் தேவைகள் இருந்தமையால் தொழில்கள் நேர்மையுடன் நேர்த்தியாகவும் செயல்பட்டன.

அழகுக் கலையின் திறன்கள்
     தொழில்களுடன் அழகுக்கலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கக் கூடியவையாகத் திகழ்கின்றது. தொழில்களில் அழகுக் கலைத் தொழில் சாயல் கையாளுகின்ற திறமைப் போன்றவை இருக்க வேண்டும் அவன் தான் சிறந்த கலைஞனாக இருக்க முடியும் என்பதை புறநானூற்றில் ஒரு நாளில் எட்டு தேர்களைச் செய்யக்கூடிய தச்சன் ஒரு மாதம் முயன்று மிகுந்த கவனத்துடன் ஒரு தேர் காலை உருவாக்கினார். இதனை

“……………………. வைகம்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் ளோனே”2 
         புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவுபடுத்துகிறது என்பதே அறியப் பெறுகின்றது. கலைப்படைப்பின் அழகினை வன்கலை அல்லது தொழில் என்று கூறுகின்றனர் . இதனை

“கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்”3
       எனப் பாரதியார் பாடியது போல நாடு நலம் பெற கலையையும் தொழிலையும் செழிக்கச் செய்தல் வேண்டும். இதற்கு வழிகாட்டிகளாய்த் திகழ்ந்தவர் பண்டையத் தமிழரே ஆவார். காலப்போக்கில் பல்கிப் பெருகித் தழைத்து வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன.

தச்சுத்தொழிகளின் சிறப்புகள்
       இயற்கை தந்த செல்வம் பலவகையான உரம் வாய்ந்த மரங்களே. தகுதி உள்ள மரங்களை அறுத்து வீடு அமைப்பதற்கும், வண்டி, தேர் முதலிய செய்வதற்கும் வழிகண்ட பெருமை தச்சர் என்னும் தொழிலாளர்களுக்கே உரியதாகும்.’ தச்சு’ என்பது ஒன்றையும் மற்றொன்றையும் பொருந்தி இணைப்பதாகும். இத்தச்சுத் தொழிலைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். கல் தச்சு தொழில் செய்வோர் கல்தச்சர் எனவும், மரத்தச்சு தொழில் செய்வோர் மரத்தடச்சர் எனவும் வழங்கப்பட்டனர். தச்சு தொழிலாற்றியதால் தச்சர் எனப்பட்டனர். மரத்தொழில் செய்து வந்த தச்சன் சங்க காலத்து இலக்கிய வழக்கில் மரக்கொல் தச்சன் என வழங்கப்பட்டான். மரம் கொல் என்பது மரத்தை வெட்டுதல் எனப் பொருள்படும் மரக்கொல் தச்சன் என்னும் சொல்

“காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஆர்”4
இப்பாடல் புறநானூற்றில் விளக்கப்படுகின்றது. சங்ககால இலக்கியங்களில் திறமை வாய்ந்த தச்சர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தச்சுத் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டனர். தமிழ்நாட்டுத் தச்சர்கள் மக்கள் வாழ்க்கைக்கு தேவையானப் பொருள்களைச் செய்து கொடுத்தனர். நால்வகைப் படைகளில் தேர் படையும் ஒன்றாக இருத்ததால் தேர்வு செய்வது அன்றையத் தச்சர்களின் தலையாயக் கடமையாக இருந்திருத்தல் வேண்டும். கண்ணைக் கவரும் வண்ணம் நேர்த்தியாகத் தேர்களை அக்காலத்தில் செய்யப்பட்டன. இதனை

“கண்ணோக் கொழிக்கும்
பண்ணமை நெடுந்தேர்”5
அகநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. தச்சரின் தொழில் திறமைகளை உணர்த்தப்படுகின்றன.

‘சகடம்’ பொருள் விளக்கம்
        ‘சகடம்’ ஒன்றின் வரிவான விளக்கத்தைக் காணலாம். திரண்ட வட்டையில் ஆரக்கால்கள் சொருகி அமைக்கப்பட்ட சக்கரங்கள் முழு மரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட குடங்கள் மத்தளங்கள் போன்று உள்ளன. ஆர்கள் குடத்திற்கும் வட்டைக்கும் இடையில் பொருத்தப்பட்டிருந்தன. அச்சு மரத்தின் மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் நெடுகக் கிடைக்கின்ற பருமரங்கள் இரண்டினையும் நெருங்கத் துறைத்து குறுக்கே ஏணி போலக் கோர்த்துப் பார். அதன் மேல் ஆரைப் புல்லான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

“கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழு மர வுருளி
எழூஉப்புணர்ந் நன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிகுன்ற மழைசுமந் தன்ன
ஆரை வேய்ந்த வறைவாய்ச்சகடம்”6
         
    இக்குறிப்பு பெரும்பாணாற்றுப்படையில் தச்சர்களின் திறம்பாட்டை காட்டுகிறது. ஒரு தொழிலாளர்களின் திறமைகள்அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் அவ்வகையில் தச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் திறமைகளை ஆய்ந்து உணரலாம்.

தச்சர்களின் திறமைகள்
      இயற்கை நமக்கு கொடுத்த மரங்களின் பயன்களை தச்சர்கள் தங்களுடையத் திறமைகளின் கை வண்ணத்தில் காண்கின்றனர். இவர்கள் பல அரிய பொருட்களை செய்து தங்களின் திறமை கோல்களை நிலைநாட்டி உள்ளனர். அரண்மனை மதில் கதவுகள், வாயில் நிலைக்கால், அமைப்பு, வாயில் நெடுநிலை ஆகியவற்றை குறித்து கூறுகையில் தச்சர்களின் தொழில் மேம்பாடு வளர்ச்சி நிலை அடைந்து உள்ளதை அறியலாம். இவற்றில்

“ஒருங்குடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பில்
பருஇரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துப்
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை”7
      என்ற பாடல் வரிகள் தச்சரின் அரண்மனையின் வேலைபாடுகளை குறித்தச் சிறப்பினை நெடுநல்வாடையில் விளக்கப்படுகிறது.

முடிவுரை
        பழங்காலம் முதல் இன்று வரை தச்சர்களின் வேலைப்பாடுத்திறன்கள் அதிகரித்து உள்ளது. பண்டையத் தொழில் முறைகளில் தச்சு தொழில்களின் முக்கியத்துவத்தைக் காணலாம். இவர்களின் அழகிய வேலைபாடுத்திறன் நுணுக்கங்கள் கலை நயத்துடன் வெளிப்படுகின்றது. கைத்தொழிலின் சிறப்பு அம்சங்களாக தச்சு தொழில் செயல் படுகிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் சான்றாக அழகு உணர்வுடன் வர்ணனைகளையும் வர்ண பூச்சுக்களையும் கொண்டு அரண்மனைகளையும் வாயில் மதில்களையும் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பினைக் காணலாம். நுண்கலைகளில் ஒன்றான  தச்சுத் தொழிலின் சிறப்பு இயல்புகளை இவ்வாய்வின் மூலம் அறியப்பெறுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.குறுந்தொகை.135

2.புறநானூறு பாடல்.87

3.பாரதியார் கவிதை

4.புறநானூறு.206

5.அகநானூறு.234

6.பெரும்பாணாற்றுப்படை.6

7.நெடுநல்வாடை.79-86 வரி

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். சு. இளவரசி

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி)

திருச்சி.

 

Sanga Ilakkiyathil Isai Kalaingarkalin Vaazhviyal Seithikal|Dr.C.Ramamirtham

Abstract            
         Iyal, Isai, and Nadagam (literature, music, and drama) are collectively known as Muthamizh (the three forms of Tamil). Isai (music) refers to “singing” or “melody.” It is also referred to as Pa or Paavinam. Music has been deeply intertwined with the lives of ancient Tamil people. Forest dwellers, tribal communities, and nomadic groups all had their own unique musical traditions. This essay records the life stories and cultural backgrounds of various musical artists such as Pānan, Porunan, Pāṭiṉi, and Koothar.


சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்


திறவுச்சொற்கள்: இசை என்பதன் பொருள், இசைக்கருவிகள், கலைஞர்கள்,  பொருநர், பாணர், கூத்தர், விறலியர், இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்.

இசை என்பதன் பொருள்          
        இசை என்னும் சொல்லுக்கு  ‘இசைவிப்பது , வசப்படுத்துவது’ என பொருள் கொள்ளலாம். இச்சொல் ‘இயை’என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது.
       இயைதல் என்பதற்கு பொருந்துதல் ,ஒன்று சேருதல், கூடி நிற்றல், புணர்தல் எனப்  பொருள் கொள்ளலாம். ‘இயைபே புணர்ச்சி’ (தொல். உரி:12) என்பது தொல்காப்பிய நூற்பா. ‘இயைபு’ என்னும் சொல்லில் இருந்து ‘இசைப்பு’ என்னும் சொல் உருவாயிற்று. ‘இசைப்பு’ என்பது ‘இசை’ என ஆயிற்று.

“இசைப்பு இசையாகும்” (தொல். உரி:12)
           
       இசை என்பதற்குப் பொருந்துதல் என்று பொருள் கொள்ளும்போது தாளம், பண் , பாடல் , பொருள், பாடுவோன் குரல் போன்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று இசைந்து நிற்றல் எனக் கொள்ளல் வேண்டும். இதனைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகின்றது.
 
“ யாழும் குழலும் சீரும் மிடறும்தாழ்குரல் தண்ணுமை  
ஆடலொடு இவற்றின்இசைந்த பாடல் இசையாகும் “   (சிலம்பு. அரங்கேற்றுகாதை: 26 -28)
இசைக்கருவிகள்
         
       சங்ககால இசைக்கருவிகளில் தலைமை சான்ற இசைக்கருவி யாழாகும். சீறியாழ், பேரியாழ்  என இருவகை யாழ் இருந்ததாக அறிய முடிகிறது.

“வள்ளுகிர்ப் பேரியாழ்”   (மலைபடுகடாம்: 37)
“இடனுடையப் பேரியாழ்” (பெரும்பாணாற்றுப்படை: 462)
என்பதனால் பேரியாழ் அளவில் பெரியது என்பதனை அறிய முடிகின்றது.

“கருங்கோட்டுச் சீறியாழ்”  (நெடுநல்வாடை: 70) 
“ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்” (மதுரைக்காஞ்சி: 559)
         
        என்பவை   சீறியாழைக் குறிப்பிடுகின்றன. மேலும் இசைக்கருவிகள், தோல்கருவிகள், நரம்புக்கருவிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

ஊதுக்கருவிகள்
🐚 குழல்

🐚 தூம்பு

🐚 கோடு

🐚 வயிர்சங்கு

தோல்கருவிகள்
🐚பறை

🐚 தண்ணுமை

🐚 மத்தளம்

🐚 முரசு

🐚 கிணை

🐚தடாரி

🐚 தட்டை

🐚 பதலை

🐚படகம்

🐚 எல்லரி

🐚பம்பை

கலைஞர்கள்
           
       கலை என்பது கற்றுக் கொள்வது.  ஒருவர் மற்றவரிடம் கற்றுக்கொண்டு வளர்க்கும் கலையே இசையாகும். கேட்போரை வயப்படுத்தித் தன்வசம் இசைய வைக்கும் ஆற்றல் வாய்ந்தது இசைக்கலையாகும். கலைஇன்பம் தரக்கூடியவர்கள் கலைஞர்கள். அவர்கள் முறையே பாணர், பொருநர், பாடினி (விறலி), கூத்தர் என்று அழைக்கப்பட்டனர். இச்செய்திகளை ஆற்றுப்படை நூல்கள் எடுத்து இயம்புகின்றன.

பொருநர்
         
      மற்றொருவர் போல் வேடம் கொள்பவர் பொருநர் ஆவார். இவர்கள் மூவகையினராக  ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இருந்தனர். போர்க்களம் பாடுவோரே பெரிதும் குறிக்கப்பட்டுள்ளனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப்படை இவ்வகைப் பொருநானல் பாடப்பட்டதாகும்.
திருவிழாவில் பொருநர்கள் கூடித் தங்கள் கலைத்திறனைக் காட்டிப் பின்னர் விழா முடிந்ததும் வேற்றுர் நாடி செல்வதாக முடத்தாமக் கண்ணியார் பாடலைத் தொடங்குகின்றார்.

“அறாஅ யாணர்  அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாள் சோறுநசை
உறாஅதுவேறுபுலம் முன்னிய விரகறி”           (பொருந:1-3) 
பாணர்
        
       பாணர் என்பதற்கு பண்பாடுவோர் அல்லது இசை பாடுவோர் என்று பொருளாகும். பாணரில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரிவினர் இருந்தனர். யாழ்ப்பாணருள் சிறுபாணர், பெரும்பாணர் என இருவகையினர் இருந்தனர்.

கூத்தர்
      
      ஆடல் மக்கள் கூத்தர் எனப்பட்டனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய கூத்தராற்றுப்படையில்  கூத்தன் ஒருவனை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது.

விறலியர்         
விறல்பட ஆடும் பெண்கலைஞர். அதாவது உள்ளக்குறிப்பு வெளிப்படுமாறு ஆடுபவர் விறலி எனப்பட்டனர்.

இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்
         
          எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. மழை , மடுவு என்ற நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். வறுமையின் எல்லைக்கோட்டை தொட்ட இசைக் கலைஞர்களின் கூட்டம். ‘பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற பறவைபோல’ மன்னர்களையும் வள்ளல்களையும் நாடிச்  செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை, நெஞ்சில் பதியும் வண்ணம் முடத்தாமக் கண்ணியார்  கரிகாலனிடம் பரிசில் பெற விழைந்த பொருநர் கூட்டத்தைக் கீழ் வருமாறு விளக்குகின்றார்.
       வறுமையில் வாடிப் பரிசில் பெறச் சென்ற பொருநர் கூட்டத்திற்கு கரிகாற்சோழன் பெருவிருந்து வைக்கின்றான். முல்லை மொட்டு போன்ற முனை மழுங்காத சோறு, பருக்கைக்கற்கள் போன்ற பொரிக்கப்பெற்ற கறியைத் தின்றுதின்று கழுத்துவரை உணவு வந்துவிட்டது. இறைச்சியைத் தின்று கொல்லை உழு கலப்பையின் கொழுவைப் போலப் பற்கள் தேய்ந்து விட்டனவாம். இதனை,

“அவிழ்பதங் கொள்கென்று இரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலைப் பயின்றினிது இருந்து
கொல்லை  உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து “   (பொருந:112-119) 
         
          மேலும், பத்துப்பாட்டில் மூன்றாவதாக வைத்துல் சொல்லப்படும்  சிறுபாணாற்றுப்படையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பெருமகனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் போற்றிப் பாடுகின்றார். பரிசில் பெற்று வந்த சிற்றியாழ்  இசைக்கும் பாணன் பரிசில் பெறாதவனை  இவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல்   அமைந்துள்ளது. ஆசிரியப்பாவில் அமைந்த இப்பாட்டு நூல் 269 அடிகளைக் கொண்டது.

     சிறுபாணாற்றின் மூலம் பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிந்துக் கொள்ளலாம். கடையெழு வள்ளல்கள் பற்றியும் மதுரை, உறந்தை, வஞ்சி, எயிற்பட்டினம், வேலூர்,ஆமூர் கிடங்கில், கொற்கை எனப் பல ஊர்கள் பற்றியும் இந்நூல் வழி அறிய முடிகின்றது.
   கண் விழிக்காக நாய்க்குட்டிகள் தாயின் காம்பில் பாலை குடிக்க, பசியில் ஆற்றாத குட்டி ஈன்ற நாய் குரைக்கின்றது. பழுதடைந்த குடிசையில் இசைவாணர் கூட்டம் மயங்கிக் கிடக்கின்றது. இல்லத் தலைவி ஏற்கனவே கிள்ளப்பெற்ற வேளைச் செடியின்  கொழுந்துகளை கிள்ளி வந்து வேகவைக்கிறாள் உப்பு இல்லை. இருந்த போதிலும் தன் வீட்டு வறுமை நிலையை அடுத்தவர் அறியாத வகையில் கதவினை அடைத்துக் கொண்டு தம் சுற்றத்தினருக்கு வெந்த உப்பில்லா கீரையைக் கொடுக்கின்றாள் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படையின் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.

“ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் …….”        (சிறுபா:135-140)            
        பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் இசை இரண்டற கலந்து இருக்கிறது. இயற்கையும் மனிதனும்  தமக்கே உரிய இசை மரபுகளைக் கொண்டுள்ளன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் மனிதன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் . பாணன், பொருநன், பாடினி, கூத்தர் என்னும்  இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகளை சங்க இலக்கியம் நமக்கு புலப்படுத்துகின்றன.

துணைநூற்பட்டியல்
1.சாமிநாதையர் உ .வே (தொ.ஆ), 1986, பத்துப்பாட்டு மூலமும்
உரையும், நச்சினார்க்கினியர் உரையும்,
                                   தமிழ்ப்பல்கலைக்கழகம்,
   தஞ்சாவூர்.

2.இளம்பூரணனார் (உ.ஆ ),2005, தொல்காப்பியம்,
சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.

3.வேங்கடசாமி நாட்டார் ந. மு, 1992, சிலப்பதிகாரம்,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
  சென்னை – 18.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்சி. இராமாமிர்தம்

உதவிப்பேராசிரியர்

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
 
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
 
இராமாபுரம், சென்னை – 89.

 

Irattaikkappiyankalil Malariyal|Dr.P.Manimegalai

Abstract
         
       Summary of the study The flowers that can be found on the Silappathikaram and Manimekalai, also known as the Double Epic, are associated with the manga and are associated with culture.


இரட்டைக்காப்பியங்களில் மலரியல்

திறவுச்சொற்கள்         
         சிலப்பதிகாரம் ,மணிமேகலை, இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், மலரியியல், மலரும் மங்கையும், மலரும் மங்கையும், மலரும் மணமும், கடவுளும் மலரும், விழாவும் மலரும், மன்னரும் மலரும், பரிசும் மலரும், திருக்குறள்.

ஆய்வுச் சுருக்கம்
         
        ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டைக்காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறக்கூடிய மலர்கள் மங்கையுடன் தொடர்பு உடையதாகவும், பண்பாட்டுடன் தொடர்புயைதாகவும் விளங்குகின்றன. அதுமட்டுமில்லாமல் மலர்களைப் பண் டத்தமிழர்கள் தங்கள் பெயர்காகவும் அமைத்து மகிழ்ந்தனர் மேலும் மன்னர்களின் அடையாளச் சின்னமாகவும் இம்மலர்கள் இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கும முகமாக இக்கட்டுரை அமைகிறது.

முன்னுரை        
     தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை இவ்விரண்டுக் காப்பியங்களும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம் சமண சமயத்தைச் சார்ந்தவை இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவர்.மணிமேகலை காப்பியம் பௌத்த சமயம் கருத்துக்களை வலியுறுத்துகிறது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.இவ்விரு காப்பியங்கள் வெவ்வேறு சமயங்களையும் ஆசிரியர்களையும் கொண்டாலும் சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலை காப்பியத்தில் வருவதால் இவ்விரு காப்பியங்களை ‘இரட்டைக்காப்பியங்கள்” என அழைக்கப்படுகிறது. தமிழர்கள் இன்றளவிலும் மங்கலப் பொருளாகப் போற்றுபவை மலர்களே.பெண்களையும் அவர்களின் கண்களையும் வருணைச் செய்வதற்கு சங்க காலப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை மலர்களைத் தான் உவமைப்படுத்துகின்றளர்.மலர்கள் அழகை மட்டும் தராமல் நம்முடைய பண்பாட்டில் பிரதிபலிப்பாக உள்ளது.இரட்டைக்காப்பிய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையினை மலர்கள் எவ்வாறு அழகுப்படுததுகிறது என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலர்களின் வகை
         
மலர்களின் வகைகளை 99 என வகைப்படுத்தியுள்ளார் கபிலர் என்றாலும் வள்ளுவர் மூன்று வகையாக கூறியுள்ளர்.அவை,

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்”  (குறள் : 1227)       
      காலையில் அரும்பாகவும்,பகலில் போதாகவும்,மாலையில் மலராகவும் விளங்கும் மலரின் மூன்று நிலையினை வள்ளுவர் கூறியுள்ளார்.

‘அரும்ப விழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின் மூசா தொல்யாண்டு கழியினும்”  (மணி.3:67)
         
     பதும பீடத்தில் அரும்புகளை இட்டால் மலராக நிற்கும்.மலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடாமல் இருக்கும்.
‘கோட்டின் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின்”  (சிலம்பு,22: 93-94)
         
      மலர்கள் மரத்தின் செடியின் கிளையில் மலர்வதை கோட்டுப்பூ என்றும்,கொடியில் மலர்வதை கொடிப்பூ எனறும், நிலத்திலுள்ள புதரில் மலர்வதை நிலப்பூ என்றும்,நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் இளங்கோவடிகள் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.
வனமும் மலரும்
         
     மங்கையர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவும், வாசனைப்பூச்சுகள் தயாரிப்பதற்காகவும் வனங்களில் மலர்களைப் வளர்க்கப்பட்டன. அவ்வனங்களுக்கு பெயர்களைச் சூட்டியுள்ளனர். மணிமேகலை தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் கண்ணீர் விழுந்தவுடன் அதைப் பார்த்த மாதவி தன்மகளை வேறொரு மாலையினை தொடுத்து கழுத்தில் அணியுமாறு மாதவி கூறினாள்.

‘பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயிற்புறம் போகின்”  (மணி.3:44-45)       
    மணிமேகலை அவளுடைய தோழி சுதமதியுடன் பல மலர்கள் நிறைந்த இலவந்திகை வனத்திற்கு மலர்களைப் பறிப்பதற்காகச் சென்றாள்.

‘வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை
இலவந்திகையினெயிற் புறம்போகி”  (சில.10:31-32)
         
    சிலப்பதிகாரத்தில்நீராவியல் சூழ்ந்த ஒரு வசந்தச்சோலை இலவந்திகை மலர்ச் சோலை என  குறிப்பிடப்பட்டுள்ளது.

மலரும் மணமும்
         
      அரும்பு நிலையிலும்,போது நிலையிலும் உள்ளடக்கிக் கிடக்கும் மணம்,மலராக விரியும் போது திசையெங்கும் மணத்தை பரப்புகிறது.

‘நாகம் நாறும் நாற்றம் நிறந்தன”   (சிலம்பு.12 :2)
‘திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே”  (சிலம்பு.12 :4)
         
     கொற்றவையின் அருளால் பாலை நிலத்தில் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசியது.

மாமலர் நாற்றம் போன்மணி மேகலை”  (மணி.3:3)         
      மலர்களின் நறுமணம் பற்றி மணிமேகலை காப்பியத்திலும் சீத்தலைச் சாததனார் குறிப்பிட்டுள்ளார்.

மலரும் மங்கையும்         
    பெண்களை தமிழ் இலக்கியங்களில் மலர்களோடு தான் அதிகயளவில் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.பெண்களோடு கண்களுக்குத் தான் மலர்களை பெரும்பாலும் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.மலர்களோடு தொன்மைக் கால மகளிர் முதல் தற்காலத்தில் உள்ள மகளிர் வரை உறவுக் கொண்டுள்ளனர்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு” (குறள்:1234)         
     அரும்பு நிலையில் இருக்கும் மலரின் நறுமணம் போல பெண்ணின் புன் முறுவலில் பொருள் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது.வள்ளுவர் மலரின் தன்மையினைக் குறிப்பிடுவது போல பெண்ணின் தன்மையினை குறளின் வாயிலாக வெளிப்படுகிறது.

‘மாமலர் நெடுந்கண் மாதவி”  (சிலம்பு.3 :170)
மாதவியின் கண்ணை  மாமலர் நெடுங்கண் என மலரோடு ஒபபுமைப்படுத்திக் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

“நறுமலர் நாணின நண்கண்”  (குறள்:1231)
மங்கையர்களின் கண்களுக்கு மலரினை வளளுவர் உவமையாகக் காட்டியுள்ளார்.
‘தாமரை செங்கண் தழல் நிறக் கொற்ற” (சிலம்பு.28:110)
கண்ணகியின் கண்களை செந்தாமரை போன்ற சிவந்த கண்கள் என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

‘மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்” (மணி.3:16)
         
பெண்கள் தலையில் விரும்பி மலர் அணியும் பழக்கம் இன்றளவில் வழக்கம் உள்ளது.  மணிமேகலை தேன் பொருந்திய மலர்களை தலையில் தொடுத்துயிருந்தாள்.

கடவுளும் மலரும்
         
     கடவுள் வழிபாடும் முறையில் மாற்றங்கள் இருந்தாலும் பூவை வைத்து கடவுளுக்கு வழிபாடும் முறை அரசர் முதல் பாமர மக்கள் வரைக் காணப்படுகிறது.கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா வகையான பூஜைகளும் மலர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறப்புச் சடங்குகளிலும் மலர்களைப் பயன்படுத்திகின்றனர்.நம்முடைய வாழ்வில் மலர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

‘…. மதுரை மூதூர்
கொன்றையஞ் கடைமு  மன்றப் பொதியிலில்”   (சிலம்பு.பதிகம்:40)
          சிவப்பெருமான் கொன்றை மாலையைச் சூடினார்.

வண்துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு”  (சிலம்பு.17:16)       
திருமால் துளசி மாலையை ஆய்ச்சியர்கள் கழுத்தில் இட்டனர்.

‘தூநிற மாமணி சுடரொளி விரிந்த
தாமரை பீடிகை தானுண் டாங்கிடின்”  (மணி.3:65-66)
         
வெண்மை நிறமுடைய  மாணிக்கம் போன்று ஒளி உடையது பதுமபீடம் (தாமரை பீடிகை).கடவுளை வழிபாடும்  பீடிகை தாமரை மலரை போன்ற அமைப்பில் இருந்தாக மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.

‘இடக்கை பொலம்பூந் தாமரை எந்தினும்”  (சிலம்பு.5.69)         
மதுரையில் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை எந்தியுள்ளது.

விழாவும் மலரும்
         
மலர்களை மங்கலப் பொருளாக வைத்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள தலைமுறையினாரிடம் வரை இவ்வழக்கம் உள்ளது.

வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று”  (மணி 3 : 50-51)
         
இந்திரனுக்கு விழாச் செய்யும் நாட்களில் பெருமைப் பொருந்திய வாடாத பூ மாலைகளை தொங்கவிட்டனார் என மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.
‘பூவும்,புகையும்,பொங்கலும் சொரிந்து”   (சிலம்பு.5 : 69)
மன்னரும் மலரும்
         
மங்கல நிகழ்வான திருமணத்தின் போது மணமகன்,மணமகள் மலர் மாலை அணியக்கூடிய வழக்கம் இன்றளவில் நம்முடைய மரபில் இருந்து வருகிறது. பழங்காலத்தில் நாட்டினை ஆட்சிச் செய்த மன்னர்கள் மலர்களை மாலையாக அணிந்திருந்தனார் என சிலம்பதிகார காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.

‘ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்” (சிலம்பு.பதிகம் : 12)
‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து”   (சிலம்பு.28 :211)
         
ஆத்தி மாலை சூடும் சோழன் என இப்பாடல் சோழ மன்னனின் அடையாளமாக அத்தி மாலை குறிப்பிடப்படுகிறது.

‘சினைஅலர் வேம்பன் தேரான் ஆகிக்”  (சிலம்பு.பதிகம் : 28)         
வேம்பம் பூவை மாலையாக சூடாக்கூடிய மன்னன் பாண்டியன் எனவே வேம்பன் தேரான் என சிலப்பதிகாரம் சுட்டுகிறது.

‘இலைதார் வேந்தன் எழில்வான் எய்த”  (சிலம்பு.27 : 62)         
சேரன் செங்குட்டுவன் இதழ் செறிந்த பனை பூவினை மாலையாக சூடினான்.

மலரும் பரிசும்
         
ஒருவரை வரவேற்காகவும்,வாழ்த்தவும் மலர்க் கொத்துகளை பரிசாக தரும் வழக்கம் இன்றைய காலக்கட்டத்திலும் நடைமுறையில் உள்ளது.

‘காவிதி; மந்திரக் கணக்கர் -தம்மொடு”  (சிலம்பு.22 : 9)         
எட்டி மரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களை பரிசாக வழங்கினார்.

‘வருக தாம் வாகைப் பொலந்தோடு” (சிலம்பு.27 : 43)         
சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களை வருக என வரவேற்று அவர்களுக்கு பொன்னால் செய்யப்பட்ட வாகை மலரினைப் பரிசாக அளித்தார்.

தொகுப்புரை
🌻இரட்டைக்காப்பியங்களில் இடம்பெற்றுள்ள மகளிரோடு மலர்கள் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்பதை விளக்குவதாக உள்ளது.

🌻 மலரின் வகைகள் பற்றியும்,மலரும் தன்மை பற்றியும் இரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.

🌻பெண்களைத் தமிழ் இலக்கியங்கள் மகளிரோடுதான் ஒப்பிட்டுக் கூறுகின்றன. இரட்டைக்காப்பியங்களும் மகளிரின் கண்களுக்கு மலர்களையே ஒப்புமைப்படுத்துகின்றள.

🌻கடவுளை வழிபடும் நிலையிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றுள்ளன.தெய்வங்களுக்கு மலர் மாலையைச் சூட்டி மகிழ்ந்தனர்.
விழாக்களிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றிருந்தன.

🌻 மூவேந்தர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களாகிய மாலைகளை அணிந்திருந்தனார் என்பது தெரிகிறது.

🌻எட்டி மரத்தின் பூ போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களைப் பரிசளித்துள்ளனர் என்பதையும் இரட்டைக்காப்பியங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை
         
     காப்பியக் காலத்தில் வாழ்ந்த மக்கள்  அவர்களின் வாழ்க்கை முறையில் மலர்கள் கடவுளை வழிபாடுவதற்கும்,மன்னர்களின் அடையாளமாகவும் மலர்கள் முக்கியத்துவம் பெறுகிறது.விழாக்களில் அழகினைச் சேர்க்கும் வாடா மலர்களாகவும்,வீரர்களுக்கு பரிசளிக்கும் பொன் மலர்களாகவும்,நறுமணத்தை தரும் வசனை மலர்களாகவும்,இயற்கைக்கு அழகுச் சேர்க்கும் வன மலர்களாகவும் இரட்டைக்காப்பியங்கள் மலர்களின் மகத்துவத்தைக் கூறுகிறது.மலர்களில் வசனைத்தரும் மெல்லிய இதழ் மட்டும் இல்லை நம் மரபினை வெளிப்படுத்தும் வரலாறு ஆகும்.  இரட்டைக்காப்பியங்களில் உள்ள மலரியியலை இக்கட்டுரை விளக்குகிறது. 

துணைநின்ற நூல்கள்
 
1.சிலப்பதிகாரம் – ராமையா பதிப்பகம்,பதிப்பு ஆண்டு : 2013,
     சென்னை – 14

2.திருக்குறள் – சாரதா பதிப்பகம்,
     ஜி-4 சாந்தி அடுக்கம்,
     3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,  
     ராயப்பேட்டை,
     பதிப்பு ஆண்டு : 2002,
     சென்னை -14.      

3.மணிமேகலை – அமிழ்தம் பதிப்பகம்,
     பி-11,குல்மோகர் குடியிருப்பு,
     35,தெற்கு போக்கு சாலை,
     தியாகராயர் நகர்,
     பதிப்பு ஆண்டு : 2014
     சென்னை – 17
 
Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. மணிமேகலை

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோயம்புத்தூர் – 4

 

PENNIN PERUNTHAKKA YAVULA|Dr.K.MUTHAMIL SELVI

ABSTRACT           
           Pathinen Kilkanakku , a collection of eighteen Tamil literary works, were written primarily to impart righteousness during the  Sangam period. Values to uplift the society, and ideas related to women were written by writers with unique talents. Thirukurral   depicts that the honour bestowed upon a women is the honour bestowed upon the society. To insist this value he has dedicated a chapter on “Valkai Thunai Nallam” to the world. He has rightly pointed out that the basement for a family life is only love. Thus a husband and wife bonded by love are created for the welfare of the family.  Works written during Sangam period portray women as characters not only engaged in household works but also in education and art. Therefore this paper aims at bringing out the high qualities possessed by women as expressed by Thiruvalluvar in his Thirukurral, written in the form of couplets.

Keywords:Aram, Menmai, Sangam, Iilaram, karbu, Anbu, Panbu


“பெண்ணின் பெருந்தக்க யாவுள”

ஆய்வுச்சுருக்கம்       
          Dr.K.MUTHAMIL SELVI பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றில் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பெண்மை சார்நத கருத்துக்கள் தனித்துவமான புலவர்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. திருக்குறள் பெண்மையின் மேன்மையினை சமூகத்தின் மேன்மையாகவே எடுத்துக்காட்டுகிறது. திருவள்ளுவர் அக்கருத்தை வலியுறுத்த “வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி, இல்லற வாழ்க்கையின் அடித்தளம் அன்பு மட்டுமே என்றும் அவ்வன்பில் வேரூன்றிய கணவனும் மனைவியும் குடும்பத்தின் நன்மைக்காக விதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். சங்ககாலத்தில் பெண்கள் இல்லறவேலைகளில் மட்டுமல்லாது கலை மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினர் என்பதை சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் பெண்களின் மேன்மையை குறட்பாக்களின் வழியாக உலகத்திற்கு உணர்த்திய திருவள்ளுவரின் கருத்துக்களை அறிவதே இக்கட்டுறையின் நோக்கமாகும்.

குறியீட்டுச் சொற்கள்
: அறம், மேன்மை, சங்கம், இல்லறம், கற்பு, அன்பு, பண்பு.

முன்னுரை
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” (தொல். பொருள்.141)
         
       என்னும் தொல்காப்பிய நூற்பா பெண்ணின் திறத்தை உயர்வாகச் சுட்டுகிறது. நிலஉடைமைச்சமுதாயமாக இருந்த திருக்குறள் காலத்தில் சமூக பண்பாட்டுச் சிதைவுகளும், தனிமனித ஒழுக்கச் சீர்கேடுகளும் நாட்டையே கலகத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதனாலே அக்காலகட்டத்தில் அறத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருந்தது. அவ்வறத்தின் வழியாக ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி வாழ்கின்ற நெறிகளை புறத்தார்க்குப் புலப்படும் வண்ணம் வள்ளுவர் தம் நூலில் வாழ்க்கைத்துணைநலம் என்னும் ஓர் அதிகாரத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

      அறக்கருத்துக்களைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்ட நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற போதும் அவற்றுள் சமுதாயத்தைச் சீர்படுத்தும் செறிவான கருத்துக்களும், பெண்மைக்கருத்தியலும் எடுத்தோதப்பட்டுள்ளன. திருக்குறளும் பெண்மையின் முக்கியத்துவத்தைக் கூறி அவர்களின் மேன்மையே சமுதாயத்தின் மேன்மை என்றும், பென்மையின் தனித்திறமையை போற்றவேண்டும் என்றும் விளம்புகிறது. தவறிழைப்பது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையானது. ஆண் தவறிழைக்கும் போது பெண்ணும் பெண் தவறிழைக்கும் போது ஆணும் உள்ளன்புடன் பிழைகளை தட்டிக்கேட்டு மனதால் உணரவைப்பதே சிறந்த இல்லறமாகும். இல்லறத்தை மேன்மையடையச் செய்யும் இல்லாளைக் குறிப்பிடும் வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தில் பெண்மையைப் போற்றும் திருவள்ளுவரின் கருத்துக்களை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

பெண்மையின் திறம்
         
     பெண்களின் அழகையும், நிறத்தையும் மட்டுமே பாடிய புலவர்களுக்கு மத்தியில் பெண்மையின் தனித்திறன்களையும், மனஉணர்வுகளையும் மதிப்பீடு செய்து வெளியிட்ட பெருமை திருவள்ளுவரையேச் சாரும். ஆணைத் தலைமையாகக் கொண்ட பெண்மை சேர்ந்த இல்லறம் சங்ககாலத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. அதனை திருவள்ளுவரும்,
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”    (திருக்குறள் – 51)         
    என்று மனையாளிடம் சிறந்த குணங்கள் இருந்து கணவனிடமும் நற்குணங்கள் அமைந்திருந்தால் அந்தக்குடும்பம் என்றும் வளமாக இருக்கும் என்று கூறுவதிலிருந்து உணரமுடிகிறது. அன்பு, தியாகமனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் திறன் இம்மூன்று பண்புகளும் இல்லறத்தில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளாம். இவைகுறையும் பொழுது அகம்பாவம் மேலிட்டு ஒற்றுமை குலைந்து இல்லறத்தின் மேன்மை கெடும். இல்லறம் என்னும் நல்லறப் பண்பே இல்லாளிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்பு ஆகும். இது குறையும் பொழுது கணவன் மிகப்பெரிய செல்வந்தனாயினும் பயனில்லை என்பதை,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை 
எனைமாட்சித் தாயினும் இல்”       (திருக்குறள் – 52)         
      என்ற கருத்தின் வழி உணர வைக்கிறார் வள்ளுவர். இதே கருத்தை மொ.அ.துரை. அரங்கசாமியும், “அன்பு காரணமாகத் தான் அடைந்த கணவனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அவள் சொல்வழி நின்று, அவனைத் தெய்வமாகக் கொண்டொழுகும் ஒருத்தியும், அவ்வாறே அவளைத் துணைவியாகக் கொண்டு அவளுக்கு வழித்துணையாய் மற்றவர்களுக்கெல்லாம் உற்றவிடத்து உறுதுணையர் அறவழி நிற்பான் ஒருவனும் ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர் விட்டு நீங்காது வாழவேண்டும் என்பதே திருக்குறளின் துணிவாகும்” (மொ.அ.துரை அரங்கசாமி, திருக்குறள் நெறியும் திருவள்ளுவர் நெறியும்) என்று கூறுகிறார். இல்லறத்தின் வாழ்வும் வளமும் சிறக்க வாழ்க்கைத் துணைநலமாகிய இல்லாளின் நற்பண்புகளே அடிப்படையாகும்.

இல்லாளின் மாண்பு
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்த குடி”  (புறப்பொருள் வெண்பாமாலை-35)         
      எனத் தமிழ் மறக்குடி போற்றப்பட்டது. அக்குடியில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மனத்தளவிலும் துன்பம் நினைக்காது, அறவழியில் இல்லறத்தை பேணிக்காப்பர். இல்லறம் நல்லறம் ஆவதற்கு ஆண், பெண் இருவருக்குமே கற்பு இன்றியமையாதது என்று குறிப்பிடும் திருக்குறளார்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்”       (திருக்குறள் – 54)         
       என்று கூறுவதில், கற்பை பெண்ணிற்கு முதன்மைப்படுத்தி அவளை சமுதாயத்தினர் உயர்வாகவே எண்ணுமாறு சிம்மாசனத்தில் உயர்த்திவிடுகின்றார். உயர்ந்த நெறிமுறைகளை உலகத்தார்க்கு புலப்படுத்தவே பெண்களுக்கு கற்பு எனும் பண்பை இறைவனும் வகுத்தனன் போலும்.
      பெண்ணின் உடல் மாறுபாடே பெண்ணினத்துக்கு கற்பு என்னும் வேலி போட்டு அடக்கிவிடுவதற்குக் காரணமாகும். இதனால் தான் பெண்ணைப் போதைப் பொருளாகவும், காமப்பொருளாகவும் உலகத்தார் பார்க்கின்றனர். கற்பிற்கு பல உரையாசிரியர்களும் பல்வேறு உரைகளைத் தந்த போதும், ஒளவையாரின்,

“கற்பெனப்படுவது சொல்திறம்பாவை”  (கொன்றைவேந்தன்-14)
         
       என்பதே பொருத்தமாகும். இல்லறஉறவில் ஈடுபடும் கணவனும், மனைவியும் அவரவர் சொன்ன சொல்லில் தவறிழைக்கக்கூடாது என்பதே சரியானதாகும். கற்பு என்பது ஒவ்வொரு பெண்ணிடமும் அமைந்துள்ள குணம் என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர்,

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை” (திருக்குறள் – 57)
         
         என்று பெண்களுக்கு மேலும் மேன்மை கொடுத்து, பெண்களுக்கு பெண்களே தலைவி என்றும் உலகத்தார் எவரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை என்பதையும் பெண்ணின் மனமறிந்து கூறிச்செல்கிறார். நீதிநூல்கள் அனைத்தும் ஒவ்வொரு பெண்டிர்க்கும் கற்பு இன்றியமையாப்பண்பாம் என்று கூறுகின்றன. அதேவேளையில் ஆண்களையும் இல்லாள்விட்டு அகலாதே என்று அறிவுரையும் கூறுகின்றன.

மைவிழியார் மனை அகல்’            (ஆத்திச்சூடி 95)
      என்றும்,

“இருதாரம் ஒருநாளும் வேண்டாம்’ (உலகநீதி 7)
          என்றும் கூறுகின்றனர்.
          மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் ஆடவன் பதருக்குச் சமம் என்றும் கூறுகின்றன. ஆண்களுக்கு வீரம் என்பதை உயர்வாகப் பேசும் சமூகத்தில் பெண்களுக்கு கற்பு என்பதையும் உயர்வாகப் பேசும்படி குறிப்பிடுகிறார், வள்ளுவர்.
 ஆண், பெண் இணையும் மண வாழ்க்கையில் இருவருமே கருத்தொருமித்து உள்ளத்தால் ஒன்றுபடவேண்டும். அவர்களின் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே அன்பு மட்டும்தான். கணவனும், மனைவியும் அன்பால் வேரூன்றி இல்லறம் என்னும் நல்லறத்திற்கு நீர்பாய்ச்சும் பொழுதுதான், வான் பொய்க்காது மழையாகப் பொழியும் என்ற உளக்கருத்தை தன் குறளில் பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை” திருக்குறள்-55)         
       என்பதில் தெய்வத்தை தொழாமல் தன் கணவனைத் தொழும் இல்லறத்தாள் சொல்லும் பொழுது பெய்யும் மழை என்று குறிப்பிடுகிறார். இக்குறளுக்கு உரையாசிரியர்கள் அவரவர் உரையைக் கூறினாலும் ஆராய்ந்து நோக்கின் கணவனுக்கும் இல்லாளுக்கும் இடையே உள்ள தூய்மையான அன்பு மட்டுமே தெளிவாகின்றது என்பது நிரூபணமாகின்றது.

இல்லாளின் பெருமைகள்
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் மிக்கவர்களாக இருந்தமையால், இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை எனும் பெருமை மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இதனை திருவள்ளுவர்,

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை”     (திருக்குறள்-54)         
என்றார். இதனையே இல்லறத்திற்கு இன்றியமையாதவள் மனைவி என்பதை,
“இல்லாளும் இல்லாளே
ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம்
உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்       (மூதுரை 21)         
      என்று கூறுவதிலிருந்து இல்லாளின் குணம் அறமற்றதாக இருந்தால் அந்த இல்லம் புலியின் குகை போலாகிவிடும் என்றும்,

“……………. பாழேமடக்கொடி இல்லா மனை”   (நல்வழி-24)         
     என்றும் ஒளவையார் கூறுவதன் மூலம் பெண்ணுக்கு அக்காலத்தில் உயர்ந்த மாட்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும், இல்லறத்திற்கு இன்றியமையாதவள் இல்லாள் என்பதும் பெறப்படுகிறது. இல்லாளின் திறமையைப் பார்க்கும் பொழுது ஆணினம் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் வாரிசை நல்வழிக்கு கொண்டு செல்லுதல் இயலாது. பொறுமையும் அக்கறையும் கொண்ட பெண்ணினமே வாரிசை நல்நிலமைக்குக் கொண்டு செல்லும் என்ற கருத்தியல் இக்குறட்பாவின் மூலம் பெறப்பட்டதை உணரலாம். இல்லாள் கணவனின் குறிப்பறிந்து ஒழுகுபவளாகலின அறக்கடவுளும் அவளுக்கு வீடுபேறு அளிப்பான் என்பதை,

“பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு”   (திருக்குறள்-58)
         
      என்று திருவள்ளுவர் கூறுவதன் மூலம் கணவனின் நலத்திற்காகவும், அவனது பெருமைக்காகவும் அவனுடன் மனம் ஒருமித்து வாழும் இல்லாளே மிகச் சிறந்தவள் என்னும் கருத்தும் புலப்படுகின்றது. இல்லறத்தையே நல்லறமாக மேற்கொள்ளும் பெண்கள் தங்களையும் கவனிக்கவேண்டும் என்பதை,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (திருக்குறள்-56)         
  என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து மகளிர் இயல்பிலேயே உடலால் மென்மையானவர்கள் என்பதையும் மனையுறை மகளிர் தங்கள் கணவனுடன் இணைந்து நன் மக்கட் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் இல்லறக் கருத்தியலாக பதிவு செய்கிறார். அக்குறள்,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”     (திருக்குறள்-60)
 
என்று விளம்புகிறது.

தொகுப்புரை
    திருவள்ளுவர் பெண்களை நேரடியாகவே உயர்த்திப் பேசுகிறார்.
திருவள்ளுவர் ஆண்களை மறைமுகமாகச் சாடுகிறார்.

முடிவுரை         
       இல்லறப் பெண்கள் சங்ககாலத்தில் இல்லறத்தை மட்டும் கவனியாது கலைத்துறையிலும், கல்வித் துறையிலும் சாதித்தனர் என்பதை சங்க நூல்கள் வழிகாண முடிகிறது. காப்பிங்களும், பக்தி நூல்களும் பெண்ணினத்தை பெருமையாகவே வைத்திருந்தன. திருவள்ளுவரும் பெண்களுக்கு தம் நூலில் ஏற்றம் கொடுத்து வெளிப்படையாக அவர்களை உயர்த்தியே காட்டியுள்ளார். எனினும் ஆண்மகனுக்குள்ள கடமைகளைச் சொல்லத் தவறவில்லை என்பதும் இக்கட்டுரை வழி அறியலாகிறது.

பார்வை நூல்கள்
1.திருக்குறள் – பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை-600014

2.எம்.சிவசுப்ரமணியம் – திருக்குறள் குறளும் விளக்கவுரையும், கமர்சியல் பதிப்பகம், சிவகாசி.

3.மு.வரதராசனார் – திருக்குறள் தெளிவுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-600018.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.முத்தமிழ்ச் செல்வி,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
சௌராஷ்டிரக் கல்லூரி, மதுரை

Kanini vazhi Tamil karpithal|Dr.R.Chitra

Kanini vazhi Tamil karpithal -Dr.R.Chitra
Abstract           
         Computer plays and vital role in student’s education. It encourages them to learn in a innovative way. All the new technology ideas can be using computers. Students can make use of the computer in all the fields like science technology and language studies. Since it gives innovative ideas in modern technology. Students were motivated to learn all the field with technological ideas. According to Leib – 1982, the computer replaces teachers in classroom learning. The main purpose of this article is how to teach Tamil language with all the technological terms and its growth by using computers.
Keywords
               
Computer plays, Student’s education, Innovative, Science technology, Language studies, Technological ideas, Classroom learning, Article, Tamil language, computer

Kanini vazhi Tamil karpithal | Dr.S.Chitra

கணினி வழித் தமிழ் கற்பித்தல்

முன்னுரை       
        உயர்தனிச் செம்மொழி என்று இன்று உலக அரங்கில் உலா வரும் நமது தாய் மொழியாம் செம்மொழித் தமிழை மேலும் சீரிளமைத் திறத்தோடு வைத்திருக்க வேண்டிய பொறுப்பிற்கு நவீன உத்திகளும் தொழில் நுட்ப சாதனங்களும் இன்றியமையாதவைகளாகும்.

“உலத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (கு 140)         
     என்பது நமது தமிழ்த் திருமுறை தந்த வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. கற்பித்தலின் ஒவ்வொரு நிலையும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறி இன்று தொழில்நுட்ப சாதனங்களின் கோலோச்சுதலுக்கு ஆட்பட்டு நிற்கின்றது. விஞ்ஞானத்தின் இத்தகைய நவீன தொழில் நுட்ப உத்திகளுக்கு ஆட்பட்டு கற்பித்தல் முறை மாறி வருகிறது. வரவேற்கத்தக்க இவ்வளர்ச்சியினை நாம் கைக்கொள்ள வேண்டியது, நமது மொழி வளர்ச்சிக்கு முக்கியமானதொரு தேவையாகும்.

கணினியில் தமிழ் மொழியின் தாக்கம்
         
         கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், காகிதம் எனப் பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்ற தமிழ் தற்போது இணையத்தில் உலா வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் கணினியில் இடம்பெறத் துவங்கியது தமிழ். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் அறிவியல் தமிழ் நான்காகவும், கணினித் தமிழ் ஐந்தாம் தமிழாக இன்று வளர்ந்திருக்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில் நுட்பம் தோன்றியது. இதன் பயனாகத் தமிழ் மிக உயர்ந்த நிலையிலுள்ளது. முன்பு கணினியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்தது. ரோமன் எழுத்துக்களில் தான் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துகளில் மாற்றிக் கொள்ளக்கூடிய வளர்ச்சியும், தமிழ் எழுத்துக்களையே நேரடியாகத் தட்டச்சு செய்து கொள்ளக் கூடிய வளர்ச்சியை எட்டியது.

இணையத்தில் தமிழ்க்கல்வி
         
        தமிழ்ப் பட்டமேற்படிப்பு வரை படிப்பதற்கான வாய்ப்புகள் இணையம் வழி, அதிகமாகக் காணக்கிடக்கின்றன. தமிழ் கற்க, தமிழ்வழிக் கல்வி என்ற சொல்லைக் கூகுள் போன்ற தேடு பொறிகளில் உள்ளீடு செய்தால் பல ஆயிரம் தளங்கள் தமிழைக் கற்றுத்தர ஆயத்தமாக நிற்கின்றன. தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி எழுதும் முறையைக் கூறிப் பயிற்சி அளிப்பதுடன் அதனை உச்சரிக்கும் முறையை ஒளி ஒலிப் பல்லூடகக் காட்சிகளாக இத்தளங்கள் தருகின்றன. இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களான தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்கள் ரோமன் ஆங்கில எழுத்துகளில் தரப்பட்டுள்ளன. நூலின் பாடுபொருள், தேடுபொருள் போன்றவற்றை எளிய முறையில் தேடிப்பெறும் வகையில் மின்நூலகம் அமைந்திருப்பது சிறப்பு. தமிழர்களின் பண்பாட்டு நாட்டுப்புறக் கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள், வழிபாட்டுத்தலங்கள் இவற்றை நினைவில்கொள்ள, ஒலி ஒளிக்காட்சித் தொகுப்புகளைப் பதிவு செய்யவும், தமிழகக் கலைகளான நாட்டியம், கரகம், காவடியாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, தாலாட்டு, மயிலாட்டம், கோலாட்டம், கும்மி போன்றவற்றின் தரமான காலப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

கணினி வழிக் கல்வி
         
      கணினி வழிக் கற்றல் கற்பித்தலினால் குறிப்பிடத்தக்க விளைக்கின்றன.

🖥️ பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துக்கொள்ள முடிகிறது.

🖥️ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கவும் பல புதிய சிந்தனைகளை வெளிக்காட்டவும் பயன்படுகிறது.

🖥️ எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics), நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித்தொடர்பு என பல வகையில் கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கின்றது.

🖥️ மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திடவும் உதவுகிறது.

🖥️ மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி ஆய்வு மனப்பான்மையை வளர்க்கிறது.

🖥️ கற்பதற்குரிய அனைத்து தகவல்கள் விரைவாகவும், விரிவாகவும் பெற முடிகின்றது.

கற்றலும் கற்பித்தலும்
         
       கற்றல் – கற்பித்தல் பலமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் நிகழ்வாகும். கணினி வழிக் கற்றல் – கற்பித்தலில் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. மொழியியல் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் முதலிய திறன்களையும் மொழியியல் பகுப்பாய்வு, பண்பாடு, தொழில், சான்றாண்மை போன்ற நிலைகளையும் மையமாகக் கொண்டு கணினி வழிக் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது.

இணையத்தில் தமிழின் இடம்
         
       இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் பலதரப்பட்ட இடங்களில் எல்லாம் பரவ எளிதாக வழி பிறந்துள்ளது.

முடிவுரை
         
         நேற்றைய உலகம் இருண்டு கிடந்தது, இன்றைய உலகம் வெளிச்சமாக இருக்கிறது. நாளைய உலகம் பிரகாசமாக இருக்க வேண்டும். தமிழ் மொழியைக் கற்பிக்கும்போது அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறன்களை இரு வழிகளில் கற்பிக்க முடியும். இதனால் திருத்தமான பேச்சு, வேற்றொலி, மயங்கொலிப் பிழைகள், குறில், நெடில் வேறுபாடறிதல் முதலியனவற்றை மாணவர்களுக்கு எளிதாகக் கற்பிக்க வேண்டும். கேள்வியோடு காட்சியும், இணையும்போது கற்றல் மேம்படுகிறது. ஒலி – ஒளி இரண்டும் இணையும் போது ஈர்ப்புடைய துணைக்கருவியாகவும், ஆர்வத்துடன் தொடர்ந்து சலிப்பில்லாமற் கற்கவும் கற்பிக்கவும், துணை செய்கிறது. கணினி வழியாகக் கற்பிக்கும்போது விரைவு, நுட்பம், தெளிவு, மாணவர் ஈர்ப்பு, அறிவுத்திறனை நிலைநிறுத்துதல், தன்னார்வம் முதலிய பல விளைதிறன்கள் வலுப்படுத்துகின்றன.

துணைநூற்பட்டியல்
1.ஆண்டோபீட்டர்,  மா., தமிழும் கணினிப்பொறியும், சாப்ட் வியூ பதிப்பகம், முதற்பதிப்பு  ஜீலை 2002, சென்னை.

2.இரத்தின சபாபதி, தி. , தமிழ் கற்க கற்பிக்க, அம்சா பதிப்பகம், சென்னை

3.இராதா செல்லப்பன், தமிழும் கணினியும், 2011, கவிதை அமுதா வெளியீடு  (திருச்சி)

4.பன்னிருகை வடிவேலன், தமழ் மென்பொருள்கள், நோக்கு (2014)

5.மணிகண்டன்,  துரை. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம் , 2012, தஞ்சாவூர்.

6.முத்து நெடுமாறன், கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல், 2012, தமிழ்மொழிக் கருத்தரங்கு கல்வி அமைச்சு, சிங்கப்பூர்

7.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் ஆராய்ச்சி மையம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. சித்ரா
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
மீனாட்சி சுந்தரராஜன்  பொறியியல் கல்லூரி, 
சென்னை.

 

அன்பை விதை|கவிதை|முனைவர் து.சரஸ்வதி

அன்பை விதை - முனைவர் து. சரஸ்வதி
👣 அம்மாமுன் மண்டியிடு

      கரு சுமந்ததால்..!
👣 அப்பாவை வணங்கு

      தோளில்சுமந்ததால்..!
👣 ஆசிரியரிடம்  
நன்றி மறவாதே

      ஆற்றுப்படுத்தியதால்!

👣 உறவுகளை விட்டுக் கொடுக்காதே,

      உன் அடையாளம் என்பதால்..!

👣 உழைப்பை போற்று

      உன்னை உயர்த்தும் என்பதால்..!

👣 இயற்கையிடம் கற்றுக்கொள்

      இன்பத்தோடு நீ வாழ்வதால்..!

👣 இறைவனிடம் நம்பிக்கை கொள்

      இசைப்பட வாழ்வதால்..!

👣 உயிர்களிடம் இரக்கம் கொள்

      உனை உயிர்ப்போடு வாழ வைப்பதால்..!

👣 உடலைப் பேணிக் கொள்

      நீ யார் என்று காட்டுவதால்..!

👣 காலத்தை கவனித்து நட

      கண்டிப்பான ஆசான் என்பதால்..!

👣 கடமையை உள்ளத்தே வை

      கவலை இன்றி வாழலாம் நீ..!

👣 எண்ணங்களை தூய்மையாய் வை

      நினைத்தது கிடைக்கும் என்பதால்..!

👣 எளிமையாய் எவரிடமும் இரு

      ஏற்றங்களே பெறுவாய் நீ..!

👣 புன்னகையை அணிந்திடுவாய்

      புதுப்பொலிவும் பெற்று விடுவாய் நீ..!

👣 குழந்தைகளிடம் கனிவாய் இரு

      குற்றமற்றிருப்பாய் அப்போது நீ..!

👣 பணிவை பழகிக்கொள்

      பாதுகாப்பாய் இருப்பாய் நீ..!

👣 எவரிடமும் இனிமையாய் இரு

      இன்னலின்றி வாழ்வாய் நீ..!

👣 அன்பின்றி அமையாது உலகு

      அதனால் நீ அனைவரிடமும் பழகு..!


கவிதையின் ஆசிரியர்

                              முனைவர் து. சரஸ்வதி

                              உதவிப்பேராசிரியர்,

                             தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)

     ஸ்ரீமதி தேவ் குன்வர் நானா  லால் பட் 

மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை -44.

 

மரபுச் சங்கிலி|சிறுகதை|முனைவர் சுகந்தி அன்னத்தாய்

மரபுச் சங்கிலி-சிறுகதை-முனைவர் சுகந்தி அன்னத்தாய்
   சென்னை மாநகரின் பரபரப்பான வாழ்க்கைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவள் வேல்மதி, அடுக்குமாடிக் குடியிருப்பின் பத்தாவது மாடியில், காலைநேர சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் கண்ணாடிச் சாளரங்களுக்குப் பின்னே அவளது உலகம் சுழன்றது. ஆனாலும், அவளது கிராமத்து வேர்கள் அவ்வளவு எளிதில் அறுபட்டு விடவில்லை. அவள் கிராமத்தை விட்டு வந்தாலும், கிராமத்தின் உயிர் அவளைவிட்டு நீங்கவில்லை.
         
        ஒவ்வொரு மாதமும் தவறாமல், கிராமத்தில் இருந்து ஒரு பெரிய மூட்டை சென்னைக்கு வரும். அது வெறும் மூட்டை அல்ல, அன்பு, உழைப்பு, மற்றும் தலைமுறை கடந்த பாரம்பரியத்தின் பெட்டகம். வேல்மதியின் ஆச்சி, அம்மா, மாமியார் என மூன்று தலைமுறைப் பெண்கள், தங்களது கையால் விளைவித்த காய்கறிகள், நெல் வயலில் விளைந்த புது அரிசி, வீட்டிலேயே அரைத்த தானிய மாவுகள், பருப்பு வகைகள், வீட்டுத் தோட்டத்துக் கீரைகள், பாட்டி போட்ட வற்றல், மாமியார் தட்டிய வடகம் என அனைத்தையும் கவனமாகப் பொட்டலம் கட்டி அனுப்புவார்கள்.
         
      மாமியார், “அந்த நகரத்துல டீ.வி-ல பாத்து, உடனே கிடைக்கிற நூடுல்ஸ், பர்கர்னு குழந்தைகள் விரும்புறாங்க. ஆனா, அதெல்லாம் உடம்புக்குக் கெடுதல். நம்ம தாத்தா, பாட்டி காலத்துல இருந்து சமைக்கிற பாராம்பரிய உணவு முறையிலதான் ஆரோக்கியம் இருக்கு. இட்லி, தோசை, கூழ், கஞ்சி, இந்த கீரைன்னு நம்ம வீட்டு உணவுகள் ஒவ்வொன்னும் உடம்புக்கு நல்லது. வெளியில கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டா சீக்கிரம் நோய் வரும். நம்ம பாரம்பரிய உணவுதான் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். இதெல்லாம் நகரத்துல கிடைக்காதுடி, பார்த்துப் பத்திரமா வச்சுக்கோ. கொஞ்சம் அக்கம் பக்கத்துலயும் கொடு,” என்று அக்கறையுடன் அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்.
           
           “ஊரில் விளைஞ்சது, பேத்திக்கு மட்டும் இல்ல, அவளோட சுத்தி இருக்குறவங்களுக்கும் கொடுக்கணும்,” என்று ஆச்சி சொல்ல, அம்மா அதை ஆசையுடன் அனுப்பி வைப்பார். இந்த மூட்டையில் வரும் பொருட்களை வெறும் உணவுப் பொருட்களாக வேல்மதி ஒருபோதும் கருதியதில்லை. அவை அவளுடைய வேர்கள், அவளது குடும்பத்தின் வரலாறு, தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்த அன்பு.
         
        வேல்மதிக்கு இந்தப் பொருட்கள் வந்தடைந்ததும், ஒருவித மகிழ்ச்சி மனதில் பரவும். முதல் வேலையாக, தனது பக்கத்து வீட்டு ஐயங்கார் குடும்பத்திற்குப் பச்சரிசியும், வடகமும் எடுத்துச் செல்வாள்.
எதிர்த்த வீட்டு ஜெயலட்சுமி அக்காவுக்கு கீரைக்கட்டுகளைக் கொடுப்பாள். “அக்கா, எங்க கிராமத்துல இருந்து வந்தது. ரொம்ப பிரெஷ்ஷா இருக்கும்,” என்று சொல்ல, ஜெயலட்சுமி அக்கா மனம் உருகிப் போவாள். “வேல்மதி, உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பாக்குறது கஷ்டம்டி. எல்லாம் சுயநலம் பாக்குற காலம்,” என்று புகழ, வேல்மதி வெட்கத்துடன் சிரிப்பாள்.
         
            ஒருமுறை, சங்க இலக்கியத்தில் படித்த ஒரு பாடல் வேல்மதி நினைவுக்கு வந்தது. பெரும் பரிசு பெற்று வந்த ஒரு புலவன், தன் மனைவியிடம், “பெரிய புகழுடன் பெரும் பரிசுகளைப் பெற்று வந்திருக்கிறேன். இவை அனைத்தும் நமக்கே சொந்தமல்ல. இதை நமக்கு அளித்த மன்னன், நம் சுற்றத்தாருக்கும் இதைப் பங்கிட்டளிக்கவே அளித்திருக்கிறான். எனவே, பசித்தவர்களுக்கும், நம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுப்போம்,” என்று கூறியது போல, வேல்மதிக்குத் தனது கிராமத்து உறவுகளின் அன்பளிப்புகளும் தோன்றின. இது தனக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் அல்ல; தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு பெரும் கருணை என்பதை உணர்ந்திருந்தாள்.
         
          ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவள் கணவரின் அலுவலக நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர அவர்களை நல்லமுறையில் உபசரித்து, அவர்கள் புறப்படுகிற சமயத்தில், “எங்க மாமியார் கிராமத்துல இருந்து வற்றல், ஊறுகாய் அனுப்பியிருக்காக. கொஞ்சம்  தர்றேன், எல்லாரும் சாப்பிடுங்க,” என்றவாறு அவற்றை எடுத்து வர சமையலறை சென்றபோது, நண்பர் ஆச்சரியத்துடன் “இந்த நகர வாழ்க்கையில இதெல்லாம் எப்படிங்க? எவ்வளவு பெரிய மனசுங்க உங்க மனைவிக்கு?” என வினவு,
           
         “இந்தக் குணம் இவளுக்குப் புதுசா வரல. இவங்க பரம்பரை வழக்கமே அப்படித்தான். இவங்க பாட்டி, அம்மா, மாமியார்… அதான் எங்க அம்மா.. எல்லாரும் இப்படித்தான். அவங்க கிட்ட இருந்துதான் இந்தக் குணம் அவளுக்கு வந்திருக்கு” என்று சிரித்தவாறே பதிலளித்தார் வேல்மதியின் கணவன்.
அதற்குள் தான் எடுத்துவந்த பொருட்களை நண்பரின் மனைவியிடம் வேல்மதி கொடுக்க, “வாரத்தில் ஒருநாள்தான் விடுமுறை. அதில் ஏகப்பட்ட வேலை இருக்கும். அதற்கிடையில் எங்களையும் முகங்கோணாமல் உபரித்து, இதுவேறேயா”  என அவற்றை மனமகிழ்வுடன் வாங்கியவாறே  கேட்க, மெல்லிய புன்னகையுடன்,
“உணவுபரிமாறுதல் என்பது வெறும் பசியைப் போக்குறது மட்டுமில்ல. அது அன்பை, உறவைப் பகிரும் ஒரு சாதனம்.” என்று தன்னடக்கத்துடன் சொன்னாள்.
         
          இந்தமுறையும் வேல்மதி, தனது கிராமத்து வீட்டுப் பெரியவர்கள் கொடுத்தனுப்பிய கீரைக்கட்டுக்களிலிருந்து ஒரு பகுதியைத் தனது அலுவலக நண்பர்களுக்கும், காய்கறிகளில் ஒரு பகுதியைத் தனது வீட்டுப் பணியாளருக்கும் கொடுத்தாள். அந்த மாலையில், அவளது மனம் நிறைந்திருந்தது.
         
           அன்று மாலை,  பள்ளி சென்று திரும்பிய வேல் மதியின் பிள்ளைகள், கௌசிக்கும் நரேனும், அம்மாவைப் பார்த்து கேள்விக் கேட்க ஆரம்பித்தனர்.
”அம்மா, இத்தனை நிறைய காய்கறி, தானியங்கள் எல்லாம் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டியது தானே, ஏன் எல்லாருக்கும் கொடுக்கிறீங்க?” என்று நரேன் கேட்டான். அவன் கையில், அவன் அப்பத்தா அனுப்பியிருந்த எள்ளுருண்டை இருந்தது.
கௌசிக்கும் அவன் ஆச்சி அனுப்பியிருந்த மரப் பொம்மையைக் குலுக்கியவாறே,, “ஆமாம்மா, நம்ம வீட்லயே நாலு பேரு இருக்கும்போது, எதுக்கு நாம அடுத்தவங்களுக்குக் கொடுக்கணும்? மிச்சம் இருந்தா கொஞ்ச நாளைக்கு வைத்து சாப்பிடலாமில்லையா?” என்றான்.
அவர்கள் பார்வையில், பகிர்ந்து கொடுப்பது என்பது வீணாக்குவது போலத் தோன்றியது. வேல்மதி புன்னகைத்தாள்.
         
           “கண்ணா, நல்ல கேள்வி கேட்டீங்க. நாம எதுக்காக அடுத்தவங்களுக்குக் கொடுக்கிறோம் தெரியுமா? இது வெறும் உணவுப் பொருட்களைக் கொடுக்கிறது இல்லை. இது அன்பைக் கொடுக்கிறது. இன்னைக்கு நீங்க எள்ளுருண்டை சாப்பிடுறீங்க, பொம்மையோட விளையாடுறீங்க. ஆனா, ஒரு காலத்துல எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கிறது கஷ்டம். அப்போ, ஒரு வீட்டுல எதாவது விளைஞ்சா, அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துதான் வாழ்ந்தாங்க.”
         
                அவள் தொடர்ந்தாள், “உங்க பாட்டிகள், கொள்ளுப்பாட்டி எல்லாரும் இப்படித்தான் வாழ்ந்தாங்க. அவங்ககிட்ட எதாவது ஒண்ணுன்னா, அதைத் தனக்கு மட்டும் வச்சுக்க மாட்டாங்க. அக்கம் பக்கத்துல, உறவினர்கள்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க. இங்க பாருங்க, கிராமத்துல விளையிற இந்தக் காய்கறிகளை எப்படி விளைவிக்கிறாங்க தெரியுமா? வற்றல், வடகம் எல்லாவற்றையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்றாங்க தெரியுமா? அதை நாம அனுபவிக்கிற மாதிரி, அடுத்தவங்களும் அனுபவிக்கணும்னு நினைக்கிறதுதான் மனிதாபிமானம்.”
                 “நம்ம ஆச்சி எப்பவுமே சொல்வாங்க, ‘பசியோட இருக்கிறவங்களுக்கு ஒரு கைப்பிடி சோறு கொடுத்தா, அது நூறு மடங்கு புண்ணியத்தைத் தரும்’னு. அதுமட்டுமில்ல, இப்படிப் பகிர்ந்து கொடுக்கும்போதுதான், நமக்கும் அடுத்தவங்களுக்கும் இடையில ஒரு பாசம் உருவாகும். கஷ்டம்னா உடனே ஓடி வருவாங்க. இது வெறும் பொருள் இல்லை, உறவு. நீங்க பாருங்க, பக்கத்து வீட்டு ஆன்டி நமக்கு எவ்வளவு உதவிகள் செய்றாங்க? நம்ம கஷ்டத்துல வந்து நிற்கிறாங்க. அதுக்குக் காரணம், நாம அவங்களுக்கு அன்புடன் சிலவற்றைக் கொடுக்கிறோம். அவர்களும் நமக்கு ஏதாவது தருகிறார்கள். இந்தச் சின்னச் சின்னப் பகிர்வுகள் தான் பெரிய பெரிய உறவுகளை உருவாக்கும்.”

          திடீரென்று கௌசிக் “அம்மா, போன மாசம் நான் காய்ச்சல் என்று ஸ்கூலில் இருந்து சீக்கிரம் வந்தப்போ, பக்கத்து வீட்டு ஆன்டி வந்து எனக்குக் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாங்க இல்லையா? அதுக்கு நாம கொடுத்த காய்கறிகள் தான் காரணமா?” என்று கேட்டாள்.
வேல்மதி புன்னகைத்தாள். “அதுமட்டுமே காரணம் இல்லை கண்ணா. அன்புடன் ஒன்றைப் பகிர்ந்து கொடுக்கும்போது, அது பல மடங்கு பெருகித் திரும்பி வரும். இது ஒரு மாயசக்தி மாதிரி. நம்ம முன்னோர்கள் இதைத்தான் புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தாங்க. நீங்க இந்த நகரத்துல இருந்தாலும், இந்தக் கிராமத்து மனசு நமக்குள்ள இருக்கணும். கிராமத்திலிருந்து வரும் இந்த உணவுகள் மட்டும் இல்லை, நம்மிடம் இருக்கும் எதையுமே, நம்மால் முடிந்த உதவிகளை கஷ்டப்படுகிறவர்களுக்குச் செய்ய வேண்டும். அது ஒரு நல்ல பழக்கம்.”
  
        நரேனும் கௌசிக்கும் அம்மாவின் விளக்கத்தைக் கவனமாகக் கேட்டனர். அவர்கள் கண்களில் ஒரு புதிய புரிதல் தோன்றியது. அம்மாவின் மனம் அவர்களுக்குப் புரிந்தது.
 நரேன் மெதுவாகச் சொன்னான், “அப்போ, நாங்களும் இனிமே எங்களுக்குக் கிடைச்ச எதையும் தனியா வச்சுக்காம, மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும் இல்லையா?  தின்பண்டங்கள், பொம்மைகள் எல்லாமே?” என்று கேட்டான்.
         
         கௌசிக் தலையாட்டினான் “ஆமாம்மா, நாங்களும் உங்கள மாதிரி, பாட்டிகள் மாதிரி, அடுத்தவங்களுக்குக் கொடுத்து வாழணும். எங்ககிட்ட இருக்கிறதை மத்தவங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கணும். இந்த அன்பு மாயத்தை நாங்களும் கத்துக்கணும். கிராமத்துல இருந்து வர்ற பொருட்கள் மட்டுமில்ல, எங்ககிட்ட இருக்குற எந்த விஷயமா இருந்தாலும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவ நாங்க தயாரா இருப்போம்.”
         
         வேல்மதிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவளது கண்கள் கலங்கின. ஐந்தாவது தலைமுறைக்கும் இந்த மரபு தொடரும் என்ற நம்பிக்கை, இன்று அவளது பிள்ளைகள் வாயிலாகவே உறுதிப்படுத்தப்பட்டது. வெறும் உணவுப் பொருட்களைப் பகிர்வது மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் பகிரும் இந்த அரிய பாடத்தையும், ஆரோக்கியமான பாரம்பரிய வாழ்க்கை முறையையும், கஷ்டப்படும்போது உதவி செய்யும் மனப்பான்மையையும், தனது பிள்ளைகள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள முடிவெடுத்தது அவளுக்குப் பெருமையாய் இருந்தது.
         
         கிராமத்தின் மண் வாசனையும், உறவுகளின் பாசமும், சங்க இலக்கியத்தின் பகிர்வு மனப்பான்மையும், தன் வாழ்க்கைப் போராட்ட அனுபவமும், பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவமும் வேல்மதியின் வாழ்க்கையை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன. இந்த வாழ்க்கை நெறி, மரபுச் சங்கிலி தனது பிள்ளைகள் மூலம் அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும் என்ற உறுதியுடன், வேல்மதி படுக்கையறையின் ஐன்னல் வழியே சென்னையின் இரவு விளக்குகளைப் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய்,

 உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி,

குரோம்பேட்டை, சென்னை 44.

 

விலையில்லா ஊடகம்|கவிஞர் ச.குமரேசன்

விலையில்லா ஊடகம் - கவிஞர் ச. குமரேசன்

🍵 அரசமர நிழலில்


ஆறுக்கு ஆறு


அளவமைந்த


கீற்றுக் கொட்டகை..!


 

🍵 தொண்ணூறுகளின்


பேருந்து நிறுத்த அடையாளம்,


எங்கள் ஊரின் இருட்டுக்கடை அது..!


 

🍵 கீரைப்பட்டி 


பாட்டியின் கைப்பக்குவம் !


பனிக்கால குளிர்,


வெயில் கால அயற்சி,


அனைத்தையும் போக்கும்


தித்திக்கும் தேநீருக்கு


பெயர் போன கடை அது..!


 

🍵 முதல் பேருந்துக்கு


முந்தி நிற்போருக்கு


பிரம்ம முகூர்த்த தீர்த்தம்..!


 

🍵 இரவு நேர


இறுதிப் பேருந்தில்


இறங்குவோருக்கு


இனிமையான அமிர்தம்..!


 

🍵 காலை நேர பணியாரம்,


மாலை நேர சுண்டல்


ஆறிப்போனாலும்


அங்கே பேச்சுக்கள்


சூடாக இருக்கும்..!


 

🍵 பித்தளையில்


பால் கொதிக்கும் பாத்திரமும்


குவளையில் ஆற்றித் தரும் தேநீரும் !


பாட்டியின்


வெற்றிலைப் போட்ட பற்களும்


ண்ணத்தில் ஒன்றாக வந்து நிற்கும்..!


 

🍵 பாமரரின்


உள்ளூர் செய்திகளுக்கு


உரமாகும் பாட்டி


அவளின் வாய்..!


படித்தவரின்


வெளியூர் செய்திகளுக்கு


வரமாகும் தாள்களுக்கு


அவள் தாய்..!


 

🍵 எங்கள் ஊரின்
 

முதல் வானொலி,


தொலைக்காட்சி,


நூலகம் எல்லாமே


பாட்டிக்கடை தான்!


விலையில்லா
அன்பான ஊடகம் அது..!


 

🍵 மங்கலான இராந்தல் ஒளியும்


மங்கும் நேரம்..


பத்து மணி ஆன பின்னும்


பாட்டியின் கடை


பகலாகத்தான் இருக்கும்..!


 

🍵 ஆண்டுகள் பல ஓடிய பின்..


அங்கே மின்விளக்குகள்


மின்ன மின்ன பேக்கரிகள் பெருகிவிட்டன..!


 

🍵 திரும்பிப் பார்த்தால்


விளம்பரமற்ற ஊடகம் !


விலையில்லா ஊடகம் !


என்று எதுவும் இல்லை !


 

🍵 தொகைக் கொடுத்து


தோண்டிப் பார்த்தாலும்,


இந்தத் தகவல்கள்


அதைப்போல்


சுவாரசியத்தை கொடுக்கவில்லை..!


 

🍵 எதிர்பார்க்கிறேன்


விலையில்லா ஊடகத்தை..!


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் ச. குமரேசன்,
 

உதவிப்பேராசிரியர்,
 

தமிழ்த்துறை,
 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

இராசிபுரம்.

 

எது சுதந்திரம்?|த.கருணா

எது சுதந்திரம் - த.கருணா

நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                   இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

கடைக்கூழ் கஞ்சி என்றாலும்
  

பகிர்ந்து உண்ட காலம் அதுவன்றோ………. !


10 பேரின் உணவை ஒருத்தரே உண்பது போல்


நடித்து லைக் சிறிது உண்டு பெரிது வீணடிக்கும் 

காலம்
  இதுவன்றோ………………!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!                

                 இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

நாடு விடுதலை பெற தொண்டை தண்ணீர் வற்றுமளவில்
           

புரட்சி மிக்க பாடலை பாடிய காலம் அது ஒன்றோ…………..!


பிறர் பாடலை திருடி வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு
   

பணத்தை பார்க்கும் காலம் இது இதுவன்றோ………………!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!                

               இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

ஒருவனுக்கு ஒருத்தி சிலர் உடன்கட்டை ஏறி

அன்பைக் காட்டிய காலம் அதுவன்றோ
               

ஒரு கணவருக்கு பல மனைவிகளும்…………………!
                            

ஒரு மனைவிக்கு பல கணவர்களும்…………………..!
                                        

லிவ்விங் டுகெதர் என்று வாழும் காலம் இதுவன்றோ……………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

முல்லைக்கு தேர் தந்த பாரி போன்ற வள்ளல்கள்


பலர் வாழ்ந்த காலம் அதுவன்றோ………………………………………..!
               

தேர் சக்கரம் உருண்டு தன்னை நோக்கியே வந்தாலும்
 

செல்பி எடுத்து சாகும் காலம் இதுவன்றோ…………………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                  இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

சித்திரங்களும் கதைகளும் கவிதைகளும் கொஞ்சித் தமிழில் மிஞ்சி


       விளையாடிய காலம் அதுவன்றோ………………………………….!
               

ஏ ஐ டி உயிர் கொடுத்து மனித மூளையின் உயிரை எடுத்து மாற்றுரு

கொடுக்கும் காலம் இதுவன்றோ……………………………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

காலங்கள் மாறலாம் யுகங்களும் மாறலாம்

என்றும் மாறாத ஒன்று
பாரம்பரியமும் பண்பாடும்…………………!
 

சுதந்திரம் நம்மை ஆட்சி செய்தால் அழிவு நிச்சயம்


நாம் சுதந்திரத்தை ஆட்சி செய்தால் ஆக்கம் நிச்சயம்……………..!


இப்பொழுது சொல்லுங்கள்

நாம் சுதந்திரத்தை பெற்றோமா………………………….?
         

இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா……………………………………?


கவிதையின் ஆசிரியர்

பேராசிரியர் த. கருணா

தமிழ்த்துறை தலைவர்



கிறிஸ்தவ அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி


ஆலம்பாடி (கிராமம் ), சிக்கதிருப்பதி (அஞ்சல்)


மாலூர் வட்டம். கோலார் (மாவட்டம் ),


கர்நாடக(மாநிலம்) 563150.

 

SOOL PUDHINATHTHIL PALAYAPATTU AATCHIMURAI|MARIA DEVA NESAM P

Abstract
           
Tamil Nadu has been ruled by different rulers at different times. When they all embark on a mission to expand their borders, there is a war with other countries. The administration of the country is not merely about expanding borders of waging war; It is also in the interest of the people of the country to redress their grievances, establish justice and increase their prosperity. A good leader is a one who considers the welfare of the people of his own. In this context, the main idea of this article is to know how the administration was in the Palayappattu administration established by the Nayaks through the Novel Sool.

Keywords:
 Ettappan, Palayappattu, Ettaiyapura Palayam, Justice, Respect.


சூல் புதினத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை

ஆய்வுச் சுருக்கம்
         
       தமிழகத்தை வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். அவர்கள், அனைவரும் தங்கள் எல்லைகளை விரிவாக்கும் பணியில் இறங்கும்போது, பிற நாடுகளுடன் போர் ஏற்படுகிறது. நாட்டின் நிர்வாகம் என்பது வெறும் எல்லையை விரிவுபடுத்துவதோ போரை நடத்துவதோ மட்டுமல்ல; நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களின் குறைகளைக் களைதல், நீதியை நிலைநாட்டல் மற்றும் வளத்தைப் பெருக்குதல் ஆகியவையும் ஆகும். நல்ல தலைவன் என்பவன் மக்கள் நலனையே தன் நலனாகக் கொள்வான். அந்த வகையில், நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையப்பட்டு ஆட்சிமுறையில் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பதை சூல் புதினத்தின்வழி அறிவதே இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.

குறியீட்டுச் சொற்கள்
 : எட்டப்பன், பாளையப்பட்டு, எட்டையபுர பாளையம், நீதி, மதிப்பு.

முன்னுரை
            மக்களின் வாழ்க்கை முறைகளை எதார்த்தமாக எடுத்துக்கூறுவதே, வட்டாரப் புதினங்களின் சிறப்பு ஆகும். சூல் புதினம், எட்டையப்புரப் பாளையத்திற்கு உட்பட்ட மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. இம்மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போன கண்மாய் பற்றிக் கூறுகிறது. எட்டையபுர பாளையத்தின் தலைவர்களான எட்டப்பர்களின் ஆட்சிமுறைகளையும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களின்மீது கொண்டிருந்த அன்பும், மக்கள் மன்னர்மீது கொண்டிருந்த மதிப்பும், பற்றும் இப்புதினம் வாயிலாக சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சூல்
        சோ. தர்மனின் சூல் எனும் புதினம் சாகித்திய அகாடமி உள்ளிட்ட நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சோவியத் நாட்டைச் சேர்ந்த பிரஷ்னேவ் என்பவர் எழுதிய தரிசுநில மேம்பாடு எனும் நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வின் உந்துதலாலேயே இப்புதினம் உருவானது என, சோ. தர்மன் அவர்கள் குறிப்பிடுகிறார். புதினம், உருளைக்குடி எனும் ஊரின் வரலாறு குறித்து கூறும் விதமாக அமைகிறது. இந்திய விடுதலைக்கு முன் உருளைக்குடியின் நிலை மற்றும் விடுதலைக்குப் பின் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்புதினம் பல தலைமுறைகளின் கதையை உள்ளடக்கியது.

உருளைக்குடி
         தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உருளைக்குடி எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரில் வாழ்ந்த பல தலைமுறையினரை இப்புதினம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கற்பனை கதை தான் ஆயினும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமான நிகழ்வுகளோடு ஒன்றிணைக்கின்றார்.

கதையின் போக்கு
         உருளைக்குடி கண்மாய் உருளைகுடிக்கு மட்டுமல்லாது சுற்றி இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அத்தகைய கண்மாயை குடிமராமத்து செய்யும் காட்சியில் இருந்தே புதினம் தொடங்குகிறது. அவ்வூர் மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவை மிகவும் எளிய மற்றும் வட்டார மொழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நிறைமாதப் பெண் போல கண்மாய் காட்சி அளிக்கிறது. அதை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் கண்மாய் எவ்வாறு அழிந்தது, மற்றும் அதற்கான காரணிகள் என்னென்ன, என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. கண்மாயின் அழிவு ஊரின் அழிவுக்கு எந்த விதத்தில் காரணமாக அமைகிறது என்பதை சூல் புதினம் பேசுகிறது. மன்னராட்சி , மக்களாட்சி இரண்டிலும் இருக்கும் நிறை மற்றும் குறைகளை சொந்த அனுபவம் போல பேசுகிறார் சோ. தர்மன்.

பாளையப்பட்டு ஆட்சிமுறை
       முகலாய மன்னர்களின் வீழ்ச்சியில் அடிகோலிடப்பட்டதே நாயக்கர் ஆட்சி ஆகும். ஹரிஹரன் எனும் அரசன் தன்னை தன்னாட்சி பெற்றதாக அறிவித்து முதன்முதலில் கி.பி.1336-இல் விஜயநகர அரசை தோற்றுவித்தான். அவனுக்குப் பிறகு நான்கு மரபுகளை சேர்ந்தவர்கள் விஜயநகர பேரரசை ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களின் ஆட்சி தென்னாட்டிலும் விரிவு பெற்றது. கி.பி.1529- இல் தமிழகத்தில் நாயக்கராட்சி தொடங்கியது. இவர்களுள் 13 பேர் தமிழகத்தை ஆண்டனர். அவர்களுள் குறிப்பிட தக்கவராக விளங்குபவர் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் ஆவார். இவர் தனது தளவாயான அரியநாதன் என்பவரின் அறிவுரைப்படி பாளையப்பட்டு எனும் ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். இவ்வாட்சிமுறை ஏற்கனவே காகதீய அரசன் இரண்டாம் பிரதாபருத்ரன் என்பவனால்  கடைபிடிக்கப்பட்டிருப்பினும், தமிழகத்தில் அதுவே முதன்முறை ஆகும். அவ்வாறு பிரிக்கப்பட்ட 72 பாளையங்களுள் ஒன்றாக விளங்குவதே எட்டைய புரம்.

எட்டையபுரம்
         தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்தது எட்டயபுரம் பாளையம். இதன் ஆட்சியாளராக இருந்தவர்கள் எட்டப்பன் எனும் அடைமொழியால் அழைக்கப்பட்டனர். அந்த பெயருக்கும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், சந்திரகிரி பகுதியில் ஆட்சி செய்து வந்த குமாரமுத்து நாயக்கரின் மகனான நல்லம நாயக்கர், விஜயநகரத்தை ஆண்ட சாம்பு மன்னனை சந்திக்க சென்ற போது, அங்கு வடக்கு வாயிலை காவல்காத்த, யாராலும் வீழ்த்த முடியாத, சோமன் எனும் மல்யுத்த வீரனைக் கொன்று, வென்று வேரெந்த பற்றுக் கோடும் இன்றித் தவித்த, அவனது எட்டு தம்பியரையும் தன் மகன்களாக ஏற்றுக் கொண்டமையின் ’எட்டு அப்பன்’ என்பது காரணப் பெயராயிற்று. பின்னர், அவன்வழி வந்தோர்க்கும் அதுவே பெயராயிற்று. எனவே, எட்டப்பன் என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு குடிவழியினரின் பெயர். சூல் புதினம் உருளைக்குடி ஊரானது எட்டப்ப வழியினர் ஆட்சி செய்த எட்டையபுர ஆட்சியின் கீழ் எவ்வாறு இருந்தது என்பதை கூறும் விதமாக அமைந்துள்ளது.

பாளையக்காரர்களின் கடமைகள்
        பாளையக்காரர்களின் கடமைகளாக 3 பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அவை,
       
1.நிதித்துறை
       மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு, பாளையக்காரர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு, மதுரை நாயக்க மன்னனுக்கு அனுப்பப்பட்டது. ஒரு பங்கு படைக்கும், மற்றொரு பங்கு, நிர்வாகச் செலவிற்கும் பயன்பட்டது.
       
2.நீதித்துறை
         பாளையத்தின் எல்லைக்குள் நடக்கும் எந்த ஒரு வழக்கையும் பாளையக்காரர்களே விசாரித்து நீதி வழங்கலாம். இதில், நாயக்க மன்னர்கள் தலையிடுவதில்லை.

3.படை பராமரிப்பு
         பாளையக்காரர்கள் படைகளைப் பராமரித்தனர். அதற்காக வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவிட்டனர். நாயக்க மன்னர்களுக்கு தேவை ஏற்படும் போது, படையை அளித்து உதவ வேண்டும்.
இவை மூன்றும் பாளையக்காரர்களின் முதன்மையான கடமையாக இருந்தது.

சூல் புதினத்தில் எட்டப்பர்களின் ஆட்சிமுறை
               எட்டப்பர்களின் ஆட்சிக்காலத்தில், பாளையக்காரர்கள் நாயக்க மன்னர்களுக்குக் கீழ் இல்லாமல், தனியாக ஆட்சி செய்து வந்தனர். மக்கள், பாளையக்காரர்களை மகாராஜா என்றே அழைத்துவந்துள்ளனர். மகாராஜாவின் நேரடி ஆட்சியின் கீழ், அனைத்து ஊர்களும் இருந்துள்ளன. ஊரின் அனைத்து பொது நடவடிக்கைகளும் மன்னனின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது. எட்டையபுரத்தின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு ஊர் சொக்கலிங்கபுரம். தனது சொந்தப்பகையின் காரணமாக சித்தாண்டி என்பவன், கண்மாயை உடைத்து விடுகிறான். இதை அறியாத ஊரார் அதனை தெய்வக்குற்றம் என்றே கருதுகின்றனர். அது உடனடியாக மன்னனின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
      “ அட கடவுளே, பெரிய ஓடையாப் போச்சே கரை, எப்பிடி அடைக்க, மகாராசா என்ன சொல்றாரோ! ”
ஊர் நலனுக்கு வேண்டிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டன.
“ உடைப்புக்கு நேராக கரையின் மேலேறி கண்மாயின் உள் வாகரையை ஆராய்ந்தது அதிகாரிகள் குழு… பக்கத்து ஊர்களில் உங்கள் ஊருக்கு ஏதும் பகை உண்டா என்றும் விசாரித்தார்கள்…  உடைப்பை அடைத்துக் கண்மாய்க்கரையைப் பழையபடிக்கு கொண்டு வருவதற்கு எத்தனை ஆட்களின் உழைப்பு தேவைப்படும் என்று கணக்குப் போட்டார்கள்… நாளையே வேலையை ஆரம்பித்துவிடுங்கள் என்றும், மடைக்குடும்பனையும் இன்னும் சில நபர்களையும் வரச்சொல்லி, மகாராசா கொடுக்கும் தொகையை வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.”
மக்கள், தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற எப்போது வேண்டுமானாலும் அரண்மனை அதிகாரிகளையும், மிக அவசியமான நேரங்களில் மன்னனையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பைப்  பெற்றிருந்தனர்.  மக்களின் தேவையை அறிந்தே மன்னனும் செயல்பட்டான்.
               எட்டையபுர மக்கள், மன்னன் மீது பயம் மட்டுமின்றி மரியாதையையும் அன்பையும் வைத்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. எனவே, மக்கள் இயல்பாகவே மன்னனுக்கு விசுவாசமாக இருந்தனர்.
“ கட்டபொம்முவோட ஆட்க ஒங்க ஊருக்கு வரப்போக இருக்கிறதா அரண்மனைக்குத் துப்பு கெடச்சிருக்கு. அத வெசாரிக்கத் தான் ராஜா எங்கள அனுப்பியிருக்காரு.”“ தப்பு சாமி. நம்ம மகாராஜாவுக்கு துரோகம் பண்ணுவமா? அப்பிடி எங்களுக்குத் தெரியாம யாராவது தொடர்பு வச்சிருந்தா நாங்களே புடிச்சி அரண்மனையில ஒப்படைச்சிர மாட்டமா சாமி.”“ அரண்மனைக்குள்ள ஆயிரம் இருக்கும், எப்பிடி இருந்தாலும் அவரு தான் நமக்கு ராசா. இந்தா இந்த கண்மாய் யாரு கண்மா, இந்தக் கரையில இருக்கிற பனைக யாரு பனை எல்லாமே ராசாவுக்கு சொந்தம். அவரு பனையில கள் எறக்கி, பதநீர் எறக்கி, அவரு வயக்காட்டுல பாடுபட்டு சாப்பிட்டுட்டு அவருக்கு துரோகம் பண்ணக்கூடாதுடா, அது பெரிய பாவம்.”    
செயலால் மட்டுமின்றி, மனதால்கூட மன்னனுக்கு எதிரான எதையும் நினைக்கக் கூடாது என மக்கள் எண்ணியதை இத்தகைய சொற்களால் அறிய முடிகிறது.

எட்டப்பன் மற்றும் ஆங்கிலேயர் உறவு
         இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த வேளையில், எட்டப்ப மன்னன், ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினான். இது வரலாற்றில் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் சூல் புதினத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆங்கிலேயர், தன் மக்களை துன்புறுத்த மன்னன் அனுமதித்தாக தெரியவில்லை. அதேபோல், அரண்மனை வீரர்களும் தேவையின்றி மக்களை துன்புறுத்தவில்லை. மாறாக, ஆங்கிலேயர்கள் மூலமாக தன் நாட்டிற்குத் தேவையான பல  நன்மைகளைக் கொண்டு வந்தான்.
“ கள்ளிக்கும் கரிசல் மண்ணுக்கும் கொண்டாட்டம். கள்ளிச் செடிகளை அகற்ற வழி தெரியாமல் சம்சாரிகள் சங்கடப்பட்டார்கள்… வெட்டிய கள்ளிகள் முளைத்துக்கொண்டன. சம்சாரிகள் தினமும் கள்ளியுடன் மல்லுக்கட்டினார்கள்.”“ இவன் லண்டன்லருந்து இங்க வந்து பத்து நாள் தான் ஆகுது, பெரிய ஆராய்ச்சியாளனாம். இந்த கள்ளிச் செடிப் பொதர்க் காடு பூராவும் பெருகிப் போச்சு,… கள்ளிய ஒழிக்க புதுசா மருந்து கண்டு பிடிக்கிறதுக்காக சீமையிலருந்து ராணி இவன இங்க அனுப்பி வச்சிருக்கு.”
மக்களும் மன்னனை முழுவதுமாக நம்பினார்கள்.
“ ஆமா, இது பூராவும் பூச்சிகளோட முட்டைக. இதுகள லண்டண்லருந்து நம்ம நாட்டுக்கு கொண்டாந்திருக்காம்னு அரண்மனைல பேசிகிட்டாக. நம்ம நாட்லயே கள்ளிச்செடி துப்புரவா இருக்காதாம், அம்புட்டும் பட்டு போயிருமாம்.”“ வேற வெள்ளாமைய சோலிய முடிச்சிரக் கூடாது, அதயும் பாக்கணுமில்ல…”“ சே… சே… ராசா அதையெல்லாம் வெசாரிக்காம இருப்பாகளா? அப்பிடி இருக்காது.”
மன்னன், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டமை இவ்வரிகளில் விளங்குகிறது. தன் நாட்டிற்கும் தன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் மன்னன் அனுமதிக்கவில்லை என்பதை மக்களின் சொற்கள் மூலம் அறியலாம். மன்னன் மீதான மரியாதை இப்போதும்கூட தொடர்வதைக் காண முடிகிறது.

மக்கள் நலன்
       விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கள்ளிச்செடிகளை அழிக்க ஆங்கிலேயர் உதவிகொண்டு நடவடிக்கை எடுத்ததே மக்கள்நலனில் எட்டப்ப மகாராஜா கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டிருந்த குடிதண்ணீர் குளத்தை யாரும் அசுத்தப்படுத்தக்கூடாது. அவ்வாறு, செய்தால் அதற்கு தண்டனை கடினமானதாக இருக்கும். எனவே, அவ்விடத்தில் எப்போதும் காவலர்கள் இருப்பார்கள். ஆனால், குளத்தினுள் ஒரு கெட்ட ஆவி புகுந்துள்ளதை அறிந்த குஞ்ஞான் அதை பிடிப்பதற்காகச் செல்லும்போது, அங்கு காவலுக்கு நின்ற வீரர்கள் அவனைப் பிடித்து அரசனிடம் கொண்டு சென்றனர். விசாரணையின்போது அவன் கூறிய அனைத்தையும் கட்டுக்கதைகள் என நினைத்த அரசன் அவனை சிறையிலிட்டான்.  

நீதி
       சில சிறப்புமிக்கத் தீர்ப்புகள் மற்றும் தண்டனைகள், இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள், சிலப்பதிகாரத்தில் பாண்டியன் கூறியத் தீர்ப்பினை மிக முக்கிய ஒன்றாகக் கொள்ளலாம். இதில்  சிறப்பு என்னவெனில், பாண்டியன் தன் தவறை மறைக்க எண்ணாது அதனை உணர்ந்து, அதற்காகத் தன் உயிரையே விட்டான். அதுபோல, ஒரு மன்னன் தான் செய்தது தவறு என்று உணரும்போது, தனது அதிகாரத்தின் வலிமையினால் அதனை மறைக்க முனையாமல், அத்தவறினை நினைத்து வருந்துதல் என்பது, ஒரு அரசனின் ஒரு உயரியப் பண்பாகும். அவ்வுயரியப் பண்பினை சூல் புதினத்தில் எட்டப்ப மகாராஜா பெற்றிருந்ததாக சோ.தர்மன் குறிப்பிடுகிறார்.
“ மன்னரின் முகக் கலவரம் மாறி சந்தோஷக்களை தெரிந்தது. உத்தரவுகள் பறந்தன. மேலெல்லாம் ரத்தத் திட்டுக்கள் உறைந்திருக்க குஞ்ஞான் நொண்டியபடியே அழைத்துச் செல்லப்பட்டான். அவனைச் சித்ரவதை செய்ததை நினைத்து வருந்தினான்.”
மன்னன் தவறு செய்யாத ஒருவனை சிறையிலிட்டதற்காக வருந்தியதைப் பார்க்க முடிகிறது. தான் செய்தத் தவறைத் திருத்திக் கொள்ளும் வழியையும் அவன் தேடினான்.
         
          மக்கள் உயிர் மட்டுமின்றி மற்ற உயிர்களுக்கு உற்ற துன்பத்திற்கும் நீதி கிடைத்தது எட்டையப்புரத்தில். அரண்மனையில், பசுக்களைப் பராமரிக்கும் பணியில் இருந்த நங்கிரியான், தனக்கு இறைச்சி உண்ணும் ஆசை மேலிடும்போதெல்லாம், தனது பராமரிப்பில் இருந்தப் பசுக்களை ஒரேடியாக அல்லாமல் அவை அணுஅணுவாக கொடுமை அனுபவித்து சாகும்படி செய்து, அதை இயற்கை மரணமாக அனைவரையும் நம்பச் செய்து, அக்கறியைத் தின்றான். இதை அவன் போதையில் உளறியதும், உடனே, மன்னனின் காதுகளில் அது விழுந்தது. அவன் கைகளிரண்டும் கட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டான்.
     “புறங்கை கட்டப்பட்டுத் தனியறையில் அடைபட்டுக் கிடந்தான் நங்கிரியான். விடிந்தால் மரணம் நிச்சயம்…. இதுவரை மன்னரின் முகத்தில் இப்படியொரு கோபத்தைப் பார்த்ததே இல்லை. சிவந்த முகம் மேலும் சிவந்து பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல் கொதித்துக்கொண்டிருந்தது.”
அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மன்னன் விரும்பிய போதும், அமைச்சரின் அறிவுரைப்படி, அவனது வேலை மட்டுமே பறிக்கப் பட்டது. இருப்பினும், அவன் பசுக்களைக் கொன்ற விதம் குறித்து சொன்ன வாக்குமூலம், மன்னனைக் கலங்கவைத்தது. அதன் நிலையை எண்ணி வருந்தினான்.

          ஒவ்வொரு ஊர்களிலும் தலைவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் ஊர்களில் ஏதேனும் சிறு சிறு பிரச்சனைகள் வரும்போது, அதனைத் தாங்களே தீர்த்துக் கொண்டனர். ஆயினும், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மன்னனிடம் கொண்டுசெல்லப்பட்டன.

முடிவுரை
         
          எட்டையப்புரம் என்றாலே, கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்பதுதான் பலரின் நினைவுக்குவரும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆயினும், அப்பழி அவனைச் சாராது. எட்டையப்புரத்தின் தலைவர்களாக விளங்கிய எட்டப்பர்கள், தங்களின் ஆட்சிக் காலத்தில், மக்கள்நலனைப் பெரிதென எண்ணி வாழ்ந்துள்ளனர். மேலும், மக்கள் மன்னன்மீது கொண்டுள்ள மதிப்பு இன்றுவரை நிலைக்கிறது.  காரணம், அவர்கள் செய்த பல நற்செயல்களே அவர்களது பெயரை இன்றும் தாங்கி நிற்கிறது.

துணைநூற்பட்டியல்
1.சிவசுப்பிரமணியன். ஆ., இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, இரண்டாம் பதிப்பு, 2019.

2.செல்லம். வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2021.

3.தர்மன். சோ., சூல், அடையாளம் பதிப்பகம், திருச்சி, மூன்றாவது மீளச்சு, 2019.

4.நடராசன் தி. சு., நாவல்களின் மகத்துவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, முதலாம் பதிப்பு, 2022.

5.பரந்தாமனார். அ.கி., மதுரை நாயக்கர் வரலாறு, பாரி நிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1966.
5.புதுப்புனல், கலை இலக்கிய மாத இதழ், மலர் 14, இதழ் 6, ஜூன் 2023.

6.ராமசாமி அ., தமிழ்நாட்டு வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, நான்காம் பதிப்பு, 2011.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப. மரிய தேவ நேசம்
Iniyavaikatral_Article_Publishedமுனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203

நெறியாளர்
முனைவர் தா.இரா. ஹெப்சிபா பியூலா சுகந்தி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203.

 

MUSIC IN KURUNTHOGAI|Dr.M.RANI

குறுந்தொகையில் இசைகள் - முனைவர் மு.இராணி
Abstract
        There are no creatures on this earth who are not fascinated by music. Thus, music and musical instruments are found in the Kuruntogai, one of the eight volumes of Sangam literature. The Panars have mastered these musical instruments. This article aims to highlight the use of instruments such as the yazh, parai, panilam, padalai, muzhavu, kural, and the specialty of vallaipattu and the role of the Panars in the lives of the people of the Sangam period.

KEY WORDS : Yazh -panilam – parai – padalai – muzhavu – kural – Panar – vallaipattu.


குறுந்தொகையில் இசைகள்

ஆய்வுச்சுருக்கம்       
        இசைக்கு மயங்காத உயிர்கள் இப்புவியில் இல்லை. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைகளும் இசைகருவிகளும் காணப்படுகின்றன. இவ்விசைக் கருவிகளைத் திறம்படப் பாணர்கள் கையாண்டுள்ளனர். யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற கருவிகளின் பயன்பாட்டையும் வள்ளைப்பாட்டின் சிறப்பினையும் சங்க கால மக்களின் வாழ்வில் பாணர்களின் பங்கையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

கலைச்சொற்கள் : யாழ் -பணிலம் – பறை – பதலை – முழவு – குளிர் –
 பாணர் – வள்ளைப்பாட்டு.

             சங்க இலக்கியம் என்பது பழந்தமிழ் இலக்கியங்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பாகும். இத்தொகுப்பு பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் ஒரு கருவூலமாகும். இக்கருவூலம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என வகுக்கப்படுகின்றன. அகத்திணை காதலையும் புறத்திணை வீரம், போர், அரசியல் போன்ற பிற செய்திகளையும் எடுத்தியம்புகின்றன. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைக்கலை பற்றியும் பாணர்களின் இசை நுட்பம் குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எட்டுத்தொகை நூல்கள்       
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு       
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்       
கற்றறிந்தோ ரேத்துங் கலியோடு அகம் புறம்என       
இத்திறத்த எட்டுத்தொகை”1
         
         நல்ல குறுந்தொகை எனச்சிறப்பிக்கப்படும் குறுந்தொகையில் நானூறு பாடல்கள் உள்ளன. குறுந்தொகை பாடலடிகள் நான்கு அடி சிற்றெல்லையும் எட்டு அடி பேரெல்லையும் கொண்டுள்ளன. இவற்றுள் குறிப்பாக 307, 391 ஆகிய இருபாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகுப்பித்தவர் பெயர் அறியவில்லை.

குறுந்தொகையின் சிறப்புகள்       
           குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்து 206 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் கரிகால் வளவன், குட்டுவன் திண்தேர் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்களையும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன், போன்ற சிற்றரசர்களையும் இவ்விலக்கியம் எடுத்துரைக்கிறது.
“வினையே ஆடவர்க்கு உயிரே”2
 என்னும் அடி ஆண்களின் கடமையை எடுத்துரைக்கிறது. இவ்வடி இந்நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
தொல்காப்பியர் சுட்டும் இசைக்கருவி       
        தமிழில் முதலில் நமக்குக் கிடைத்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் இசைகள் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன.

“தெய்வம் உணாவேமா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”3
         
      என்று, தொல்காப்பியர் கருப்பொருளில் பறையையும் யாழையும் சுட்டுகிறார். அவ்வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்னும் ஐந்திணைகளுக்கும் உரிய பறைகளை முறையாக வெறியாட்டுப்பறை, நெல்லறிப்பறை, நாவாய்ப்பறை, ஆறலைப்பறை என்று வகைப்படுத்துவர்.  யாழினால் மீட்கக்கூடிய பண்களைக் குறிஞ்சிப்பண், சாதாரிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், பாலைப்பண் என வகைப்படுத்துவர். குறுந்தொகையில் படுமலைப் பண்ணும் விளரிப் பண்ணும் இசைக்கப்படும்.

யாழ்       
       பாணர்கள் யாழினால் படுமலைப் பாலைப்பண்ணை வாசித்தனர். இவ்விசை வானோக்கி உயர்ந்து நல்லிசையாக முழங்கி நல்ல மழைவளம் தருகிறது.  அம்மழையின் செழிப்புக் காரணமாகப் பூத்த முல்லைப் பூக்களின் நறுமணம் எங்கும் வீசி மகிழ்விக்கின்றன என்பதை,
       
“எல்லாம் எவனோ? பதடி வைகல்       
பாணர் படுமலை பண்ணிய எழாலின்       
வானத்து எழும் சுவர் நல்லிசை வீழப்       
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்       
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்       
அரிவை தோள்இணைத் துஞ்சிக்       
கழித்த நாள் இவண் வாழும் நாளே!”4
     என்னும் அடிகள் சுட்டுகின்றன. யாழ் – எழால். பாணர்கள் யாழ் மீட்டும் திறன் மிக்கவர்கள் என்பதும் யாழிசையால் பெற்ற சிறப்பினையும் அறியமுடிகிறது.

பறையும் பணிலமும்
         பணிலம் – சங்கு. அழகிய வளையல்களைத் தன் முன்கைகளில் அணிந்த தலைவி, அழகிய வீரக்கழலையும் செம்மையாகிய இலையைக் கொண்ட வெண்ணிற வேலைக்கொண்ட பாலைநிலத் தலைவனைப் பறை ஒலிக்கச் சங்கு முழங்கத் திருமணம் செய்து கொள்வது நாலூரில் உள்ள கோசரது மொழியைப்போல் உண்மையாகியது. என்பதை,

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”5
        என்னும் அடிகள் சுட்டுகிறது. இதன்வழி பறையும் சங்கும் மங்கல இசைக் கருவியாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.

பதலை
       பதலை என்பது சங்ககாலத்தில் பாணர்கள் இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்த ஓர் இசைக்கருவி. ஒரு பக்கத்தில் மட்டும்தோல் போர்க்கப்பட்ட இசைக்கருவி.
பாணர்கள் ஒரு கண் பறையை இசைத்தனர் என்பதை,
  “பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்”6
என்னும் அடி சுட்டுகின்றன.

முழவு
         
           முழவு -முரசு. பனைமரத்தின் அடியானது முரசைப்போன்று உள்ளது. அப்பனை மரத்தின் கிளையில் கரிய கால்களையுடைய அன்றில் பறவை சிறிய கூடுகட்டி வாழ்கின்றன என்பதை,
         
“முழவு முதலரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்”7
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.

குளிர்
         
      குளிர் – மூங்கிலால் செய்த ஓர் இசைக்கருவி. திணைப்புனங்காப்போர் மூங்கிலை வீணைபோல் கட்டித் தம் விரலால் அசைத்து இசை எழுப்புவர் இவ்வாறு இசை எழுப்பும் கருவிக்கு குளிர் என்று பெயர்.
         
“சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்       
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பானித்தே”8
      நன்கு விளைந்த திணைப்புனத்தில் வீழ்கின்ற கிளிகளைத் தலைவி குளிர் என்னும் இசைக்கருவி கொண்டு ஓட்டுவாள் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.

வள்ளைப்பாட்டு
         
மகளிர் நெல் முதலிய தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும் போது உண்டாகும் களைப்பினை நீக்கப் பாடப்படும் பாடல் வள்ளைப் பாடலாகும். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியதை,
         
“பாவடி உரல பகுவாய் வள்ளை       
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப       
அழிவ தெவன்கொலிப் பேதையூர்க்கே       
பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்       
கருங்கட் தெயவம் குடவரை எழுதிய       
நல்லியற் பாவை அன்னஇம்       
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே”9
        என்னும் அடிகள் சுட்டுகின்றன. வள்ளைப்பாட்டு களைப்பைப் போக்கும் மருந்தாவதை அறியமுடிகிறது.

பாணர்கள்       
          வில்லையுடைய படைகளைக் கொண்ட விச்சிக்கோ எனப்படும் விச்சியர்தம் தலைவன் வேந்தர்களோடு போர் புரியும் போது பாணர்கள் பாடுவர் என்பதை,
“சிறுவீ ஞாழல் வேர்அளைப பள்ளி       
அலவன் சிறுமனை சிதையப் புணரி       
குணில்வாய் முரசின் இரங்கும் துறைவன்       
நல்கிய நாள்தவச் சிலவே அலரே       
விமல்கெழு தானை விச்சியர் பெருமகன்       
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்       
புலிநோக்கு உறழ்நிலை கண்ட       
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே” 10
என்னும் பாடல் சுட்டுகின்றது.

பாணன் தூது         
          தலைவன் பரத்தை வீட்டில் இருந்து கொண்டு பாணனிடம் ’நான் இங்கு இல்லை என்றுத் தலைவியிடம் கூறு’ என்று,பாணனைத் தூது அனுப்புவான். பாணனும் அவ்வாறு பொய் கூறியதால், பாணன் மீது நம்பிக்கையில்லாத தலைவி, தலைவன் விரைவில் வந்து விடுவான் என்று சொல்லும் பாணனின் கூற்றும் பொய்யாகும் என்பதையும் ஒரு பாணன் பொய் கூறியதால் அனைத்துப் பாணர்களும் பொய் சொல்லும் கள்வர்கள் என்றுரைப்பதை,
         
“குருகுகௌக் குளித்த கெண்டை அயலது       
உருகெழு தாமரை வான்முகை வெரூம்உம்       
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!       
ஒருநின் பாணன் பொய்ய னாக       
உள்ள பாணர் எல்லாம்       
கள்வர் போல்வர், நீ அகன்றிசி னோர்க்கோ”11         
         என்னும் பாடல் சுட்டுகின்றது. “ஒருமுறை கொக்குக் தப்பித்து அஞ்சியதால், அது போன்ற தோற்றமுள்ளத் தாமரை மொட்டுக்களைக் கண்டு கெண்டைமீன் அஞ்சுகிறது. ஒருவன் பொய் சொல்லவே ஊரிலுள்ள பாணர் எல்லோரும் பொய்யராகத் தோற்றுவதை, இது உள்ளுறை உவமையாக நின்று விளக்குகிறது.”12 இதன் வழி பாணன் தலைவனுக்காகத் தூது சென்றது புலப்படும்.

முடிவுரை         
           சங்ககால மக்களின் வாழ்வியலில் பாணர்களின் பங்கு இன்றியமையதது. யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற இசைக்கருவிகளைப் பாணர்கள் திறம்படக் கையாண்டுள்ளனர் என்பதைத் தெளிவுறுத்துகிறது.  பாணர்களின் யாழிசையால் நாடு சிறக்க நல்ல மழைவளம் பெற்றதை அறியமுடிகிறது. பறையும் சங்கும் மங்கல இசைக்கருவியாகக் காணப்படுவது புலப்படுகிறது. பாணர்கள் இசை மட்டுமல்லாது தலைவனுக்காகத் தலைவியிடம் தூது சென்றதும் புலப்படும்.

சான்றெண் விளக்கம்
1.மது.ச.விமலானந்தம், இலக்கிய வரலாறு, ப.39

2.குறுந்.135

3.தொல். அகத். 20

4.குறுந்.323

5.மேலது.15

6.மேலது.59

7.மேலது.301

8.மேலது.291

9.மேலது.89

10.மேலது.328

11.மேலது.127

12.தமிழண்ணல், குறுந்தொகை, மூலமும் உரையும், ப.168

துணைநூற்பட்டில்
1.விமலானந்தம் மது.ச., இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு. தி.நகர், சென்னை – 17.

2.தொல்காப்பியம் இளம்பூரணனார்,சாரதா பதிப்பகம், சென்னை.

3.தமிழண்ணல் முனைவர், குறுந்தொகை மூலமும் உரையும், கோவிலூர் மடாலயம், வர்த்தமான் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா நகர், சென்னை – 17.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மு.இராணி
உதவிப்பயிற்றுநர்,
தமிழ்த்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.3

 

Yogic Life shown in Naladiyar|S.Malathi

நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல் - ச. மாலதி
Abstract
           
     Mental health is equally important to human well-being as physical health. In the past, humans used to live a simple and peaceful life, in harmony with nature. But, adapting to the rapid advancements in modern technology is essential for human survival in today’s world. As a result of this, he now leads an anti-natural lifestyle. Hence, the human body and mind are becoming sick. In this scenario, yoga becomes an essential for preserving mental and physical well-being among people. In this era of rampant commercialization, it is crucial for us to grasp the ancient wisdom of our forefathers in order to understand the true essence of yoga and how it can enhance our well-being, both physically and mentally. This article compares the Jain sages’ Naladiyar song to the Atanga yoga standards of Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana, and Samadhi as described in Thirumandram, the first Tamil book to comprehensively explore the practise of yoga. Additionally, it has been noted how yoga aspects influenced the ancient Tamil people’s way of life, which was centred on nature and morality. Yoga is not just a physical activity, but a way of life that nurtures the mind, as exemplified by the songs of Naladiyar. In addition, it demonstrates how essential it is for people to conduct themselves following yogic principles in the modern world.

Keywords: yoga, Atanga yoga, Naladiyar, Thirumandiram, Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana,  Samadhi.


நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்

ஆய்வுச் சுருக்கம்
         
        மனிதனின் நலம் என்பது உடல்நலத்தினை மட்டுமன்று; அஃது மனநலத்தினையும் சார்ந்தது. இயற்கையோடு இணைந்து எளிமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டியத் தேவை ஏற்பட்டுவிட்டது. இது அவன் வாழ்க்கைமுறையை இயற்கையிலிருந்து விலகி ஓடவைத்திருக்கிறது. இவ்வோட்டம் மனிதனின் உடலையும் மனத்தையும் நலம் குன்ற வைத்துள்ளது. இந்நிலையில் மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஓகம் முக்கியப் பங்குவகிக்கிறது. அதுவே, வணிகமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், நம் முன்னோர்கள்  ஓகப் பயிற்சிகளை எவ்வாறு கடைபிடித்து,  தங்கள் உடலையும் மனத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டனர் என அறிவது தேவையாகிறது. இக்கட்டுரையில், ஓகக் கலையை முழுமையாகப் பேசும் முதல் தமிழ் நூலான திருமந்திரம் வரையறுத்துள்ள அட்டாங்க யோக நெறிகளான இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி போன்றவற்றின் கூறுகள், சமண முனிவர்கள் பாடிய நாலடியாரில் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், பழந்தமிழ் மக்களின்   வாழ்வியல் செயல்பாடுகள் இயற்கைச் சார்ந்தும் அறநெறியோடும் இருந்தமையில் ஓகக் கூறுகளின் பங்கு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. ஓகம் என்பது உடலினை வருத்திச் செய்யும் பயிற்சிகள் மட்டுமல்லாமல்  மனத்தையும் பண்படுத்தும்  வாழ்வியலாக இருந்தமையை நாலடியார் பாடல்கள் வழி வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதோடு, இன்றைய நாளது செயல்பாடுகளில், ஓக நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்து வாழவேண்டியதின் இன்றியமையாமையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்         
       அட்டாங்க ஓகம், ஆதனம், இயமம், ஓகம், சமாதி, தாரணை, தியானம், திருமந்திரம், நாலடியார்,  நியமம், பிரத்தியாகாரம், பிராணாயாமம்.

முன்னுரை
         
       மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் வைக்கும் ஓர் ஒப்பற்ற பயிற்சிதான் ஓகக்கலை. குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்து, இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட மனிதன் இன்றைய வாழ்முறைச் சூழலில் தனித்தனியாக வாழ்கிறான். இச்சூழலில், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள கூடுதல் அக்கறையை உடல்நலத்திலும்  மனநலத்திலும் செலுத்தவேண்டியுள்ளது; உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஒவ்வொரு மனிதனும் தமக்குத்தாமே முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டியிருக்கிறது. உடலையும் மனத்தையும் ஒருங்கிணைத்து, தனிமனிதனின் வாழ்வியல் செயல்பாடுகளைச் செம்மையாக்குவதில் ஓகக்கலை பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கையை விட்டு விலகியும் தனித்தீவாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத் தலைமுறைக்கு ஓக வாழ்க்கை நெறிகளின் இன்றியமையாமையை உணர்த்துவதோடு, பழந்தமிழரின் வாழ்வியலில் ஓக நெறிகள் பெற்றிருந்த இடத்தை அறிவதும் அதுகுறித்தான நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்வதும் தேவையாக இருக்கிறது. அந்தவகையில், பதினெண்கீழ்க்கணக்கில் சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரை ஆய்வுக்களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.      
         
     ‘நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்’ என்ற தலைப்பில் அமையும் இக்கட்டுரை, உடலை வருத்திச் செய்யும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், செம்மையான வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கைமுறையே ஓகம் என்பதைக் கருதுகோளாகக் கொள்கிறது.  மேலும், உடல்நலத்தோடு மனநலத்தையும் பேணும் ஓக வாழ்க்கை முறையின் தேவையை, இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதை  நோக்கமாகக் கொள்கிறது.

ஓகம் – விளக்கம்           
        ‘யூஜ்’ என்ற வடசொல் திரிந்து, யோகா என ஆங்கிலத்திலும் வடமொழியிலும் யோகம் எனத் தமிழிலும் வழங்கப்படுகிறது. அகரமுதலி செந்தமிழ் சொற்களஞ்சியம் அதனை  ‘ஓகம்’  என்று  முழுமையான தமிழில் வழங்கி, அதற்கு உடலியற் கலை எனப் பொருள் வழங்கியுள்ளது. மேலும், ஓகம் என்பதற்கு  மூச்சுடன் கலந்த உடற்பயிற்சி எனப்  தமிழ் – தமிழ் பையடக்க அகராதி பொருள் தருகிறது (செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், ப.69). பொதுவாக ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன்  இணைதல், கலத்தல் மற்றும் ஒன்றுதல். உடலைக் கருவியாக்கி அதன்வழியாக உள்ளத்தை உயிரைக் கட்டியாள்கிற எல்லா முயற்சிகளும் ஓகமாகிறது.  அவ்வாறு கட்டியாண்டு ஓகம் செய்தவர்கள் ஓகிகள் என்று ஆறுமுகத் தமிழன் கரு. உயிர்வளர்க்கும் திருமந்திரம் என்ற கட்டுரையில்  விளக்கம் தருகிறார். (இந்து தமிழ்திசை, 20.ஜூன் 2018). இவற்றிலிருந்து உடலும் உயிர் மனம் மூன்றும்  இணக்கமாக இருக்க பழகும் பயிற்சிகள்   ஓகம் என்று புரிந்துகொள்ளலாம்.
         
         பதஞ்சலியின்  ‘யோகசூத்திரம்’ மற்றும்  வியாசரின் ‘பகவத் கீதை’ இரண்டு நூல்களும் ஓகம் குறித்து விரிவாக விளக்கியுள்ளன. தமிழில்  திருமூலரின் ‘திருமந்திரம்’ ஓகம் குறித்த  விளக்கங்களையும்  பயிற்சி முறைகளையும்   விளக்கியுள்ள முதல் நூலாகும்.  ஓகத்தினைத் திருமந்திரம் எட்டு வகையான  நிலைகளாகப் பிரித்து அதை வாழ்வியல் முறையாக வகுத்துக்கொடுத்துள்ளது. அவ்வெண்வகை ஓக நிலைகளை அட்டாங்க யோகம் என்கிறார் திருமூலர்.
                            
இயம நியமமே எண்ணிலா ஆதனம்                       
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்                       
சயமிகு தாரணை தியானஞ் சமாதி                       
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.         (திருமந்திரம், பா.552)
      என்ற திருமந்திர சூத்திரம், 1.தீதகற்றல் 2.நன்றாற்றல் 3. இருக்கை நிலைகள் 4. வளிநிலை 5.தொகை நிலை 6.பொறை நிலை 7.நினைதல் 8.நொசிப்பு என்னும் ஓக நிலைகளைக்  கூறுகிறது. இவ்வெட்டு ஓக நிலைகளின் அடிப்படையில்,  நாலடியார் பாடல்களில் பொருத்திப் பழந்தமிழர்களின் ஓக வாழ்வியல் முறைகளைக் காண்கிறது இக்கட்டுரை.
 
இயமம் – தீதகற்றல்         
        தன்னிடம் உள்ள தீயகுணங்களை நீக்கி நல்ல குணங்களை பழகிக்கொள்ளுதல்தான்,  மனிதன் மேன்மையடைவதற்குச் செய்யவேண்டிய முதல் செயலாகும். அதனையே திருமத்திரம், ஓகத்தின் முதல் நிலையாக ‘இயமம்’ என்று வகுத்து, மனிதன், தீய குணங்களை நீக்க கடைபிடிக்கவேண்டிய பத்து தீதகற்றும் குணங்களை   பட்டியலிட்டுள்ளது.
     கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, நல்ல குணங்கள், அடக்கமுடைமை, நடுநிலைமை எனும் விருப்பு வெறுப்புகள் இன்மை, பகுத்துண்டல், குற்றமின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தினையும் உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் என்பதைத்   திருமந்திரம்  தீதகற்றலுக்கான குணங்களாகச் சுட்டுகிறது. (திருமந்திரம், பா.554)

கொல்லாமை          
   நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமல் காக்கும் நெறி(திருக்குறள், பா.324)  என்கிறார் வள்ளுவர். அத்தகைய நெறியைக் கடைப்பிடிக்காமல் உயிர்க் கொலைப் புரிவோர் மிகுந்த துன்பத்தில் உழல்வர்    என்பதும் சான்றோர் கருத்து. இதனை,
                    
இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க் காளாய்க்                 
கரும்பார் கழனியுட் சேர்வர் – கரும்பார்க்கும்                 
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்                  
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.                 (நாலடியார், பா.122:3-4)
       என்ற நாலடியார் பாடல், காட்டில் வாழும் பறவைகளான காடை, கவுதாரி போன்ற பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து வைப்பவர்கள், தொடரும் பிறவிகளில் இரும்பு விலங்குகளால் பூட்டப்பெற்ற அடிமைகளாகத் துன்புறுவர் என்று குறிப்பிடுவதிலிருந்து, உயிர்களைக் கொல்வதால் உண்டாகும் துன்பங்களை எடுத்துரைத்துக் கொல்லாமையை வலியுறுத்துவதினை ஓகத்தின் இயம நிலையாகக் காணமுடிகிறது.
நடுநிலைமை         
பல்வேறு நற்குணங்கள் இருந்தாலும் நடுநிலைமையே சான்றோர்க்கு அணியானபடியால் நாலடியாரும் மனிதர் மேன்மையடைய நடுநிலைமை தேவை என்பதை பின்வருமாறு விளக்குகிறது.
                             
———————-நயமுணராக்                       
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்,                       
வையார் வடித்தநூலார்.                      (நாலடியார், பா.163:3-4)
        என்ற பாடலடிகள், நல்லொழுக்கமில்லா மனிதர்களின் புகழ்ந்துரையும் இழிந்துரையும் பெரியோர் ஒக்கவே நோக்குவர் என்று குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, ஒருசார்பாக இயங்குதல் தீமையையே விளைவாகக் கொடுக்கும் என்பதால்,  மனிதருக்கு விருப்பு வெறுப்பில்லா நடுநிலைமை என்ற அறிவின் செயல்பாடு தேவை என்பது தெளிவுறுகிறது.

அடக்கமுடைமை
         
       அடக்கமுடைமையாவது மனம்‌, மொழி, மெய்கள்‌ தீய நெறிகளிலே செல்லாமல்‌ அடங்கி ஒழுகுதல்‌ ஆகும்‌ என்று டாக்டர். சஞ்சீவி குறிப்பிட்டுள்ளார் (திருக்குறள்‌ அமைப்பும்‌ முறையும்‌, ப.48). இதனை ஓகத்தின் இயமப் பண்பாக திருமந்திரம் வகுத்துள்ளதைப்போல்  நாலடியாரும் சுட்டுகிறது
                            
பெரியார் பெருமை சிறுதமைமை ஒன்றிற்கு                         
உரியார் உரிமை  அடக்கம்.        (நாலடியார், பா.170:1-2)
      என்ற பாடலடிகள், பெரியோர்க்குப் பெருமைத் தருவது பணிவுடைமை என்பது போல வீடுபேற்றினை வேண்டுவர்க்கு அடக்கம் இன்றியமையாதது  என்று கூறுகிறது. எனவே, அடக்கமுடைமை ஓகப்பயிற்சியின் அடிப்படையான இயல்பாகக் சான்றோர் சுட்டுவதை உணரமுடிகிறது.

பகுத்துண்டல்         
       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற வள்ளுவரின் வாக்கைச் சமண முனிவர்களும் மக்களுக்கு கற்பித்துள்ளனர். இதனை,
                  
பரவன்மின் பற்றன்மின் பார்துண்மின் யாதும்                
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.               (நாலடியார்,  பா. 92:3-4)
       என்ற பாடலடிகள், மேலும் மேலும் பொருள் தேடி அலையாதிருங்கள், தமக்கு மட்டும் என்று பற்றிக்கொண்டிருக்காதீர்கள், பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள் மேலும், கையிலிருப்பதை ஒளிக்காமல்  கொடுத்து உதவுகள் என்று,  அறிவுறுத்துகிறது.  இது, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நினைத்து பகிர்ந்துண்டு வாழ்தல் மனிதரை இயல்பாகத் தீயவற்றிலிருந்து விலகி நற்செயலைச் செய்விக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
 
காமம் இன்மை
         
      எய்யப்பட்ட அம்பு, நெருப்பு, சூரியனின் வெப்பம் போன்றவைப் புறவுடலைச் சுடும் ஆனால்  காமம், மனத்தை  மிகுந்த வெப்பமுடையதாக்கிக், கவலையை உண்டாக்கிச் சுடும். (நாலடியார், பா. 89) மேலும், காமத்தீ ஒருவனுக்கு மனத்தில் உண்டாகிவிட்டால், நீரில்  மூழ்கினாலும் குன்றின் மேல் ஏறி ஒளிந்துகொண்டாலும் சுடும் எனக்  மிகுதியான காமத்தின் துன்பத்தை எடுத்துக் கூறுகிறது. (நாலடியார், பா. 90) எனினும் இத்தகைய காமநோய்  அறிவை உரமாக உடைய மனவலிமை மிக்கவரிடம்  மிகாது, அவ்வாறு மிகுந்தாலும்  மற்றவர் அறிய வெளிப்படாமல் உள்ளேயே தணிந்து ஆறிவிடும் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் சுட்டுகிறது.
                            
பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;                       
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!                       
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்                       
உரையாதுஉள் ஆறி விடும்.                         (நாலடியார், பா. 88:2)
 
     இவற்றிலிருந்து, மிகுதியான காமம் பெரும் துன்பம் தருவதால் அதனை, மிகாமல்  காக்கவேண்டும் என்பதை   உணர்ந்துகொள்ளமுடிகிறது.

நல்ல குணங்கள்
          அறநெறிச் செயல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், உயிரைக் கொல்லும் எமனுக்குப் பயப்படுங்கள், மற்றவர்களின் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள், வஞ்சகச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். தீச்செயல் செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள் மேலும், எப்போதும் பண்பில் பெரியவர்  கூறும் சொற்களைக் கேட்டுப் பின்பற்றுங்கள் (நாலடியார், பா.172) என்று நாலடியார் நற்குணங்களைப் பட்டியலிடுகிறது. அதோடு, இயமத்தில் கடைபிடிக்க வேண்டிய  கள்ளுண்ணாமை, பொய்யாமை, களவு செய்யாமை,  போன்ற தீதகற்றும் செயல்களையும் பின்வரும் பாடலில் சுட்டுகிறது. 
கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ                        
எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையரா – தள்ளியும்                        
வாயிற் பொய் கூறார்.                        (நாலடியார், பா. 157:2-3)
          திருமந்திரம் கூறும் இயமத்திற்கான நியதிகளை நாலடியார், ஓக நெறி எனத் தனித்து வகுக்காமல், மனிதரின் வாழ்வியல் நெறிகளாக, அவர்களின் நாளது செயல்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டியச் செயல்பாடுகளாக அறிவுறுத்தியுள்ளதிலிருந்து, பழந்தமிழரின் வாழ்வியல் முறையாக ஓக நிலைகள் இருந்தமைத் தெளிவாகிறது.

நியமம் – நன்றாற்றல்         
       நற்செயல்களே மனிதனை நல்ல சிந்தனையோடும் மேன்மையுடைய குணங்களோடும் இருக்கப் பழகுகிறது. இதனைத்,  ‘தவஞ்செபஞ் சந்தோடம்’  என்ற திருமந்திர சூத்திரம் தனித்திருந்து இறைவனைத் தியானித்தல், மந்திரங்களை ஒரு மனத்துடன் ஓதுதல், அக மகிழ்வோடிருத்தல், கடவுள் நம்பிக்கை கொள்ளுதல், தானம் செய்தல், விரதம் இருத்தல், மெய்யறிவு பெறுதல், இறைவழிபாடு செய்தல், பரம்பொருளை அகச்சிந்தனைச் செய்தல், தெளிந்த அறிவுடையச் செயல்கள் போன்ற நன்னெறிகளைக் கடைப்பிடித்தல் ஓகத்தின் இரண்டாம் நிலையான  நியமம் எனத் திருமந்திரம் வரையறுக்கிறது.  (திருமந்திரம், பா.557) விரதமும் தவமும் மனிதன்  வாழ்க்கையை ஒழுக்க நெறியில் வாழ்வதற்குத் தேவை என்பதை,
                            
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்                          
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்                          
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்                          
காக்கும் திருவத் தவர்.                      (நாலடியார், பா.57)
          என்ற நாலடியார் பாடல்,  தாம் தொடங்கிய விரதங்களில் இடையூறுகள் வந்தால், உறுதியான மனவலிமையுடன்  தடைகளை நீக்கி, விரதங்களைக் காத்து முடிக்க வல்ல நல்லொழுக்கமானவர்களைத் தவம் செய்பவர் என்கிறது. இதில், தவம் மற்றும் விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மனவுறுதி தேவை எனச் சுட்டியிருப்பதன் மூலம்  அக்கால மக்கள்  விரதம், தவம் போன்ற  நியமங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தமை  தெரியவருகிறது.

ஆதனம் – இருக்கை
         
          உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல் ஆதனம் அல்லது இருக்கை நிலை எனப்படும். இதில் பத்மாசனம் முதலாகப் பல முக்கிய  இருக்கை நிலைகள் உள்ளன என்பதை,   ‘பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்’ (திருமந்திரம், பா. 540) என்று திருமூலர் கூறியுள்ளார்.  உடலினை உறுதி செய்யும் பயிற்சிகள் குறித்த தகவல்கள்  நாலடியாரில் காணப்படவில்லை எனினும், உறுதியான உடலினைக் கொண்டு பயனுள்ளச் செயல்களைச் செய்யவேண்டும் என்று  பின்வரும் பாடல்வழி குறிப்பிடுகிறது.
                                 
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற                 
யாக்கையா லாய பயன்கொள்க                          (நாலடியார், பா. 28:1-2) 
பிராணாயாமம் – வளிநிலை
         
    இன்றையச் சூழலில், பரவலாக மக்களிடையே ஓகப்பயிற்சியாகக் கற்றுக்கொள்ளப்படுவது பிராணாயாமம் ஆகும். வளிநிலை என்பது உடலுக்குள்  இயங்கும் உயிர் மூச்சுக்காற்றைக் கட்டுக்குள் கொண்டுவருதல்  ஆகும்.  இதனை, திருமூலர் பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி (திருமந்திரம், பா. 567) என்ற திருமந்திர சூத்திரத்தில் விவரித்திருக்கிறார். 
          நாலடியார், ஓக நிலையான மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறைகளை விளக்கவில்லையெனினும் உயிர்க்காற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது.  ‘தோற்பையுள் நின்று  தொழிலறச் செதூட்டும் கூத்தன்’ (நாலடியார், பா. 26:3-4) என்றப் பாடலடி, தோல் போர்த்திய உடலினுள் நடக்கவேண்டிய இயக்கத்தை நிகழவைப்பது, உயிர் (மூச்சுக்காற்று)  என்று குறிப்பிட்டுள்ளமை,  உயிர் காற்று குறித்த அக்கால மக்களின் நுண்ணறிவைக் காட்டுகிறது.

பிரத்தியாகாரம் – தொகை நிலை
         
        புலன்கள் வழி மனம்  செல்வதை நிறுத்தித் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை அறிதல் பிரத்தியாகாரம் என அழைக்கப்படுகிறது. மனம் போகும் வழியில் மனிதன் செயல்படாமல், ஆராய்ந்து நல்வழியில் செயல்படுவதற்குத் தொகை நிலை எனக் கூறப்படும் பிரத்தியாகாரம் உதவிசெய்கிறது.  ‘கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் ’( திருமந்திரம், பா. 578)  என்ற திருமந்திர சூத்திரம், புறத்தே ஓடுகின்ற மனத்தை அகத்தில் நிற்குமாறு செய்திட்டால் மனத்தில் சிறிது சிறிதாக இருள் நீங்கி, ஒளிபெறலாம் எனப் பிரத்தியாகாரம் பயிற்சிமுறையைத் தந்துள்ளது.
                            
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற                         
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்                       
கலங்காமல் காய்த்துய்க்கும் ஆற்றல் உடையான்                       
விலங்காது வீடு பெறும்                              ( நாலடியார், 59:1-4)
 
         என்ற நாலடியார் பாடல், மெய், வாய், கண், மூக்கு, காது  என்னும் ஐந்து புலன்களின்   அதீத ஆசைகளை அடக்கியும், அளவு மீறி  அவற்றின் வழிச் செல்லாமல் பாதுகாத்து நல்ல வழியில் செல்லுமாறு  வாழும் மனவலிமை உடையவர்கள் உயரிய பேரின்ப  புகழ் வாழ்வைப் பெறுவார்கள் என அறிவுறுத்துகிறது. இது,  புலன்வழி செல்லும் மனத்தினை நல்ல வழியில் செலுத்தவேண்டும் என்ற திருமூலர் கூறும் பிரத்தியாகாரத்தின் வரையறையோடு பொருந்துவதனால், அக்கால மக்களிடையே ஓக பழக்கங்கள் இருந்தன என்பதும் அவற்றை மக்கள் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டதும் தெரியவருகிறது.

தாரணை – பொறைநிலை
         
            ஓக நிலைகளில் ஆறாவது  நிலை, பிரத்தியாகாரத்தின் மூலம் புலன்வழி செல்லாமல், உள்ளே திருப்பிய மனத்தை அலைபாயவிடாமல் அகத்தே நிலைபெறச்செய்தல் பொறைநிலையாகியத் தாரணையாகும். ( திருமந்திரம், பா. 578) 
      
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்                       
தலையாயார் தங்கருமம் செய்வார்.               ( நாலடியார், 52:1-2)
       என்ற பாடல், நோய் மூப்பு சாக்காடு  இவை மூன்றும்  நிலையற்றவை என்பதை உணர்ந்த மேலோர், தன்  உயிர் உய்யும் வகையான கடமைகளைச்  செய்வர் என்று பாடியுள்ளது. நிலையற்றவற்றை நீக்கி நிலைபேற்றைப் பெறுவதற்கான தவமுயற்சிகளாகிய தன்கடமைய செய்வார்கள்  என்பது நாலடியார் சிந்தனை. இச்சிந்தனை தேவையற்றதில் மனதைச் செலுத்தாமல் தன் கடமையில் மனதை நிறுத்தல் என்ற பொறைநிலையை உணர்த்துவதாகவுள்ளது.

தியானம் – நினைதல்         
         தாரணையில் குறிப்பிட்டவாறு பொறி புலன்கள் நீங்கி மனம் ஒடுங்கி இறை நினைவில் இருப்பது தியானம். இதனை இரு நிலைகளாகக் கூறுகிறார் திருமூலர், அதாவது, உச்சியில் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சக்தி  தியானமாகும்; இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத் தியானமாகும். இதனைப் பின்வரும் திருமந்திரச் சூத்திரம் சுட்டுகிறது. 
                  
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்               
பொருவாத புந்தி புலன்போக மேவல்               
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்               
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.        (திருமந்திரம், பா. 598 )
        ‘உள்ளத்தான் உள்ளி’ (நாலடியார், பா. 64:3) என மனத்தால் நினைத்தலைப் பற்றிக் கூறும் நாலடியார், தியானம் செய்வது ஒருவரின் வாழ்க்கைச் செயல்பாடுகளில் தலையாய கடமையாக இருக்கவேண்டும்  என்பதை,  ‘தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்கு’ (நாலடியார், 365:1) என்று  அறிவுறுத்துவதைப் பார்க்கமுடிகிறது.

சமாதி – நொசிப்பு         
சமாதி என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏழு ஓக நிலைகளிலும் வழுவாது கடைப்பிடிப்பதால் அடையும் நிலையாகும். இதனை,  ‘சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்’ (திருமந்திரம், பா. 618) என்ற திருமந்திர சூத்திரம், இயமம் முதல் தியானம் வரை  பழகியபின் இறையோடு ஒன்றி நிற்கும் நிலையேச் சமாதி என்று வரையறுக்கிறது. 
          எனவே, ஓகப் பயிற்சிகளைத் தொடர்ந்து பழகவேண்டியத் தேவையைப் பின்வரும் நாலடியார் பாடல் இயம்புகிறது. 
                              
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
                            
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
                            
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
                            
தீர்விடத்து நிற்குமாம் தீது.                                 (நாலடியார், 51:1-4)

          என்ற பாடல், இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், அங்கு இருள் மறைந்து விடுவது போல,  ஒருவர் செய்கின்ற தவம் அவர் முன்பு செய்த பாவங்களை நீக்கும். எந்த விளக்கினால் இருள் மறைந்ததோ, அந்த விளக்கின் நெய் குறைந்து வற்றிவிட்டால், அங்கு இருள் மீண்டும் பரவும். அது போன்று நல்வினைத் தீருமானால், வாழ்வில் தீயவை வந்து நிற்கும் என்று அறிவுறுத்துவதின் மூலம், அத்தீயவற்றைப் போக்கத் தவம் என்பது தொடர்ந்து செய்யக்கூடியது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

முடிவுரை
         
    உடற்பயிற்சி மட்டுமே ஓகமல்ல, உள்ளத்தை ஒருமைப்படுத்துவதே ஓகத்தின்  இன்றியமையாத இலக்காகும்.  மனிதன் இவ்விலக்கை அடைவதற்கு   உள்ளமும் உடலும் தூய்மையோடு வைத்திருக்க வேண்டியுள்ளது. மனத்தில் எந்தவிதமான அகத்தடையும் புறத்தடையும்  உண்டாகாமல் இருக்க, இயம நியமங்களை ஓகவாழ்வியலின் தொடக்க நிலைகளாகப் பின்பற்றினர். இவற்றை  ஒழுக்க நெறிகளாக, தம் வாழ்க்கை முறையின் செல்நெறியாகப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பதை  மேற்கண்ட  நாலடியார்  செய்திகள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
          அதேபோல், மூச்சுக் காற்றின் இயக்கமும்  உடலின் அசையா நிலையும் உள்ளத்தினை ஒருமைப்படுத்த உதவும். இதற்காகத்தான், பிராணாயாமம் முதல் தியானம் வரை பயிற்சிகளாகப் பழகி சமாதி என்ற ஒன்றுதலை எய்தினர். அவற்றை நாலடியார் பயிற்சிமுறைகளாகக் கூறாவிடினும் அவை சான்றோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டும் மக்களுக்குக்  கடமையாக வலியுறுத்தப்பட்டும் வந்தன என்பதையும் அறியமுடிகிறது. மனிதன் ஆரோக்கியத்துடனும்  ஆனந்தமாகவும் வாழ்வதற்கு உடலும் மனதும் ஒன்றிணைந்து இயங்குவது தேவையாகிறது. அவ்வொருங்கிணைப்பை ஓகப் பயிற்சிகள்  உண்டாக்குகின்றன. மேலும் அவை, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையாக இருந்தன என்பதையும் உணர்ந்து, நம்மிடமுள்ள தீதகற்றி, நன்றாற்றி உடலையும் மனத்தையும் வலிமையோடும் தூய்மையோடும் பேணிக்காக்கச் சிறந்த வழியாக ஓகப் பயிற்சிகள்   உள்ளன என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1.ஆறுமுகத் தமிழன், கரு. “உயிர்வளர்க்கும் திருமந்திரம் 36”, இந்து தமிழ்திசை, 20.ஜூன்    2018). https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. 29.11.2023 அன்று       அனுகப்பட்டது.

2.சண்முகம் பிள்ளை (தொகு), தமிழ் – தமிழ் அகரமுதலி அகராதி. உலகத் தமிழாராய்ச்சி       நிறுவனம், தரமணி, சென்னை, மீள்பதிப்பு- 2015.

3.சிங்காரவேலு முதலியார் ஆ. அபிதான சிந்தாமணி அகராதி. சீதை பதிப்பகம், சென்னை.16  ஆம் பதிப்பு – 2018.

4.சிவராஜன், க. திருமூலரின் அஷ்டாங்க யோகம். அழகு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007.

5. ஞானானந்தா. திருமந்திரக் கருத்து.  சிவஞான சுவாமிகள் பேரவை, விக்கிரமசிங்கபுரம்,      மறுபதிப்பு – 29 ஏப்ரல் 2004.

6. பாலசுந்தரம் பிள்ளை, தி.சு. (உரை) . நாலடியார், கழக வெளியீடு, சென்னை – 2007.

7. புலவேறு அரிமதிதென்னகன். நாலடியார் நயவுரை. வசந்தா பிரசுரம், சென்னை – டிசம்பர்   2002.

8. ஸ்ரீசந்திரன், ஜெ. (உரை). நாலடியார், வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை – 2000.

9. ஸ்ரீநிவாசன், தே. ஆ. திருமந்திரக் கட்டுரை மூன்றாம் தந்திரம், திருவாவடுதுறை ஆதீனம்,           திருவாவடுதுறை. முற்பகுதி – தை 1963.

10. ஜம்புநாதன்‌ எம்‌. ஆர்‌. யோகாசனங்கள், ஜம்புநாதன் புஸ்தக சாலை, சென்னை, இரண்டாம் பதிப்பு- 1928.

References
1.Arumugathamizhan, karu. “Uyir Vllarkum Thirumanthiram 36”, Hindu Tamilthisai,20.June 2018.           https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. Accessed on 28.11.2023.

2.Shanmugampillai (edt), Tamil – Tamil Agaramudali Dictionary. International Institute of Tamil Studies,   Chennai, Revised edition – 2015.

3.Singaravellu mudaliyar, A. Abithana Chinthamani dictionary.  Seethai Publication, Chennai, 16th edition   – 2018.

4.Sivarajan, K. Thirumularin Ashttanga yogam. Azhagu Publication, Chennai, First edition – 2007.

5.Gnanandha.Thirumanthira karuthu. Sivagnana Swamigal Peravai,  Vikramasinkapuram, Reprint – 29    April 2004.

6.Balasundaram Pillai, T.S. Nalladiyar,  Kazhaga Publication, Chennai – 2007.

7.Pulaveru Arimadithennakan. Nalladiyar Nayavurai. Vasantha Publication, Chennai – 2002.

8.SriChanthiran, J. Nalladiyar, Varthamanan Publication, Chennai – 2000.

9.Srinivasan, T.A. Thirumanthira Katturai 3rd Thanthiram, Thiruvavaduthurai aadiinam,    Thiruvavaduthurai. First part –  1963.

10.Jambunadan M.R. Yogasanangal, Jambunathan bookstore, Chennai, Second edition – 1928.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச. மாலதி,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்: பதிவு எண்  2819,

நெறியாளார். முனைவர் ஆ. மணவழகன்,
இணைப் பேராசிரியர்,

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
         உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.







இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »