Sunday, September 7, 2025
Home Blog Page 39

கிராமத்துக்கதைகள் – 1

நாயும் பொன்னும்

          இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்!

ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்யும். பின்பு அவர்களால் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ளும் .இதுதான் அந்த நாயினுடைய அன்றாடம் வேலையாக இருந்தது.

அப்போது நாயானது கர்ப்பமாக இருந்தது. ஒரு நல்ல நாளில்  இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று எடுத்தது. நாய் வயிற்றில் மனித குலம் சேர்ந்த பெண்களா! என்று அந்த ஊர்மக்கள் அனைவரும் வியந்து போயினர்.

எப்படியோ அப்படி இப்படியென்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும்  வளர்த்தது. தனக்கு ஊர்மக்கள் கொடுக்கக் கூடிய கூழையோ கஞ்சியையோ தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுத்தது. இரண்டு பெண் பிள்ளைகளும் பெரியவர்களாக ஆயினர்.

பெரியவள் கொஞ்சம் அழகாய் இருப்பாள். வெள்ளையாகவும் மூக்கு முழியுமாகவும் இருப்பாள். இளையவள் கொஞ்சம் கருப்பு. எடுப்பாக இருக்க மாட்டாள்.

அந்த ஊரைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன்  நாயின் பெரிய பொண்ணை காதலித்தான். பொண்ணு பார்க்க அழகாக இருக்கிறாள் என்று நாய் பெற்ற பிள்ளைதான் என்றும் பாராமல் அந்த பையனுடையப் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர்.

சிறியவளுக்குக் கல்யாணம் நடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அழகும் இல்லை. நாய் பெற்ற பிள்ளைதானே என்று யாரும் கட்டிக்கொள்ள முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் அந்த ஊரின் ஏழைப்பையன் ஒருவன் சின்னவளைக் கட்டிக்கொள்ள முன்வந்தான். அவனுக்கு பெற்றோர்களும் கூட பொறந்தவங்களும் யாரும் இல்லை. அவனும் எங்கெங்கோ பொண்ணுப் பார்த்து சலித்துவிட்டான். அவன் அநாதை என்பதற்காக யாருமே பொண்ணு தர மறுத்து விட்டார்கள்.  இருவருக்கும் திருமணம் நடந்தது.

மீண்டும் நாய் அநாதையானது. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து விட்டாகிவிட்டது. இனிமேல் தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் முன்னேப் போலவே இப்போது வேலை அவ்வளவாகச் செய்ய முடியவில்லை. சோர்ந்து சோர்ந்து உட்காந்து கொண்டது.

“சரி எவ்வளவு நாள்தான் இப்படியே உட்காந்து கொண்டிருப்பது. நம்மாலும் ஒன்றுமே முடியவில்லை. அதனால், நம்முடைய பெரிய பொண்ணு வசதியாதான இருக்கா.. அங்க போயிடுவோம். நாம மாட்டங்கும் ஒரு ஓரமா வாழ்ந்திட்டுப் போயிடுவோம்” என்று பெரிய மகள் வீட்டுக்குச் சென்றது.

வீட்டு வாசலுக்குச் சென்று தன்னுடைய மகளை அழைத்தது. பெரிய மகளும் வெளியே வந்தாள்.

“ஏண்டி நாயே.. இங்க எதுக்கு வந்த நீ? உன்னெல்லாம் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்ல்ல… ஏற்கனவே எங்க மாமியார் நாயி பெத்த மொவதானே… என்ன கொண்ட வந்தன்னு திட்டிட்டு இருங்காங்க.. இதுல நீ வேறயா… போடி என் வீட்டவுட்டு” என்றாள்

அழுதபடியே வீதியில் நடந்து வந்தது. சரி தன்னுடைய சின்ன பொண்ணு வீட்டுக்குப் போவோம்ன்னு போச்சு. சின்ன மொவ,

“வாம்மா வா… ஞா கூடயே இங்கையே இருந்திரு. உனக்குன்னு தனியா உளை வைக்கப்போறோம். நாங்க சாப்பிடுறத கொஞ்சம் நீயும் சாப்பிட்டுட்டு இருந்துட்டு போ… ” என்றாள் சின்ன மகள்.

வாழ்க்கை அப்படியே சென்றது. ஒருநாள் நாயானது சின்ன மகளைக் கூப்பிட்டது.

“எம்மாடி… நான் செத்துப் போனேன்னா.. என்னை கொண்டு போயி மண்ணுல புதைச்சிடாதே. ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வை. ஒரு மாசத்துக்கு அப்புறமா எடுத்து பாரு. என்கிட்ட ஏ எதுக்குன்னு எல்லாம் கேள்வி கேட்காத” என்றது அந்த நாய்.

ஒருநாள் அந்த நாய், சொன்னது போலவே செத்துப் போச்சு. தங்கச்சிக்காரி அக்காவுக்கு அம்மா செத்துப்போனத சொல்லி அனுப்பினா… அவ வர்ற மாதிரி தெரியல. சரின்னு அம்மா சொன்ன மாதிரியே ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வைச்சுட்டா…

ஒருமாசம் கழிச்சி பெட்டிய தொறந்து பார்த்தா… பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பெட்டி நிறைய பொன்னும் முத்தும் மாணிக்கமும் பவளமும்  நிறைந்திருந்தது.

சின்னவள் இவ்வளவு நகையையும் அளந்து பார்க்க வேண்டும் என்று எண்ணினாள். அதற்காக அவளுக்குப் படி (அளக்கும் பொருள்) தேவைப்பட்டது.  படி யார் வைத்திருப்பார். பொருள் இருந்தால்தானே அளக்க முடியும். அதனால் அந்த ஊரில் யாரிடத்தில் படி இருக்குமென்று யோசனை செய்தாள். ஊரிலே பணக்காரி அக்காதான். அவளிடமே படி வாங்கி வந்து அளந்துவிட வேண்டும் என்று அக்காவிடம் செல்கிறாள்.

“அக்கா… படி இருந்தா கொடுக்கா..”

“எதுக்குடி படி உனக்கு?” என்றாள் அக்கா

“வீதியில பருப்பு வித்திட்டு வராங்க. அதான் வாங்களாமுன்னு படி கேட்டன்க்கா” தங்கச்சி

வீட்டுக்குள் சென்ற அக்காளுக்கு  சந்தேகம். படியில் உள்ளே சின்னதாய் புளியை ஒட்ட வைத்துக் கொடுக்கிறாள்.

படியை வாங்கி வந்த தங்கச்சியும் பொன்னையும் மாணிக்கத்தையும் முத்துக்களையும் அளந்து போடுகிறாள். தங்கச்சிக்கு சந்தோசம் அதிகம். அப்பாடா அம்மா போகும்போது தனக்கு  நிறைய கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள் என்று பெருமிதம் கொண்டாள்.

படியை மீண்டும் அக்காளிடம் கொடுக்கும் போது அக்காகாரி படியினுள்ளே ஒட்டியிருந்த புளியைத் தேய்த்து எடுக்கிறாள். அப்புளியில் சின்னதாய் ஒரு மாணிக்க கல் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறாள். குட்டு வெளிப்பட்டு விடுகிறது.

“ஒன்னுமில்லாத உனக்கு எப்புடிடி இந்தக் கல் கிடைச்சது” என்று மிரட்டும் தோரணையில் கேட்கிறாள் அக்கா.

பயத்தில் அம்மா நாய் சொன்னதையும் தான் செய்ததையும் அக்காளிடம் சொல்லுகிறாள். தங்கை போன பிறகு அக்காகாரி, தெருவில் சுற்றித்திரிந்த நாய்யொன்றை உலக்கையால் அடித்து பெட்டியில் பூட்டி வைக்கிறாள். எப்போதும் ஒருமாதம் ஆகும் என்று காத்திருக்கிறாள்  அக்காகாரி.

அன்றுடன் ஒருமாதம் முடிகிறது. சந்தோசமாய் பெட்டியைத் திறந்து பார்க்கிறாள். குப்பென்ற வாடை அந்த அறை முழுவதும் அடித்தது. அந்த நாத்தத்தில் சுருண்டு விழுந்தாள் அக்காகாரி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தூரிகை

வாசலில் ஆண்களும் பெண்களுமாய் செருப்புகளை வரிசையாக விடப்பட்டிருந்தார்கள். இராமன் சீதையைக் கண்டுபிடித்தான். சீதை இராமனுக்காகக் காந்திருந்தாள். சொந்த பந்தங்கள் கூடி திருமணம் பொருத்தம் பார்க்க அங்கே குழுமி இருந்தார்கள். அக்கூட்டத்தின் நடுவே தலை நிமிராமல் மாப்பிள்ளை நடேசனும் உட்காந்திருந்தான். ஆள் கொஞ்சம் கருப்புதான். தலைமுடி அடர்த்தியா இல்லையன்னாலும் சொட்ட இல்ல. பார்க்க வாட்ட சாட்டமான ஆண்பிள்ளைதான். வெத்தல பாக்கு பழம் பூ தாம்பாலத்தில் கூட்டத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்தன.

     மீனாட்சி மா நிறத்தவள். ஜன்னலுக்கு நேரே கட்டியப் புடவையோடு உட்காந்திருந்தாள். மீனாட்சியின் தாயார் அம்சவேணி அவளுக்கு மல்லிகையை நிறைய தலையில் சூடிக்கொண்டிருந்தாள். அவர்களுக்குள் எந்தவொரு சம்பாசனையும் அங்கே நடக்கவில்லை. மௌனமே நிலவியது. தாயுள்ளம் எதை நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை முக்கால் பங்கு அனுமானித்துக் கொண்டாள் மீனாட்சி.

     மகளைச் சந்தையில் கூறுக்கட்டி விற்க அம்சவேணிக்கு விருப்பமில்லை. பின்னன்ன, முத்துன கத்திரிக்கா சந்தைக்கு வந்துதான ஆகனும்! யாரும் வாங்கலன்னா காய் அழுகி யாருக்கும் உதவாது குப்பையிலேதான தூக்கிப் போடனும். அதுக்கு குறைஞ்ச விலக்கொடுத்தாலும் வித்துட்டா, குழம்புக்குக் கறிக்காச்சும் உதவுமே! என எண்ணியவளாய் அம்சவேணி அங்கிருந்து எழுந்து கூட்டத்தில் ஒருத்தியாகி விட்டிருந்தாள்.

     மீனாட்சி கண்ணாடியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் கண்ணாடிக்கும் அத்தனைப் பொருத்தம். கண்ணாடிக்கு வாய் இருந்திருந்தால் மீனாட்சியை திட்டித் தீர்த்திருக்கும். கால்கள் இருந்திருந்தால் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்திருக்கும். என்ன செய்ய? அது கண்ணாடி ஆயிற்றே! மீனாட்சியின் முகம் கண்ணாடி முழுவதும் பரவியிருந்தது. அவளின் மென்மையான உதடுகள் எதையோ சொல்ல வாயெடுத்தது. ஆனால் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. மீனாட்சி மௌனித்திருந்தாள். கண்ணாடியும் மௌனம் காத்தது. ஜன்னல் வழியே காற்று மெள்ள வீசியது. அவளுடையக் கூந்தல் இடுப்பு வரை நீண்டிருந்தது. கூந்தலில் வைக்கப்பட்டிருந்த மல்லிகையின் ஈரம் ஜாக்கெட்டை நனைத்து ஈரமாக்கியது. தென்றல் காற்றானது ஈரம்பட்ட முதுகை வருடித்தான் கொடுத்தது. ஆனந்த இன்பத்தை ரசித்துக் கொண்டே கண்ணாடியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. பரந்து பட்ட அவளின் தோள்களில் மென்மையான நான்கு விரல்கள் தொட்டன.  இப்போதும் மீனாட்சியின் கண்கள் கண்ணாடியிலிருந்து அகலவேயில்லை. கொஞ்சம் திரும்பி யாரென்று கூடப் பாரக்கத்தோனவில்லை. ஏனென்றால் அந்த கை ஏற்கனவே பழக்கப்பட்டிருந்த கையாகவே தோன்றியது. என்னோட கை என் உடல்களைத் தீண்டும் போது எனக்கு எந்தவொரு உணர்வும் புதுமையும் தெரிவதில்லையே. அதுபோலத்தான் இந்தக் கை. இந்தக் கையை நான் பலமுறை பிடித்திருக்கிறேன். முகர்ந்திருக்கிறேன்.  எனக்கு எப்படி இந்தக் கை தொட்டவுடன் சிலிர்ப்பு வரும். இன்னும் மீனாட்சியின் முதுகிலிருந்து அந்தக் கை எடுக்காமல் அப்படியேதான் இருந்தது. இப்போது மீனாட்சியும் கண்ணாடியின் பிம்பத்தில் ஒருத்தியாகியிருந்தாள்.

     “நீ கண்ணாடியைப் பாத்துட்டு இருந்தா, இந்த உலகத்துல எது நடந்தாலும் நீ அசையவே மாட்டியே… அப்படி என்னதான் பாத்திட்டு இருக்கடி..” என்று சொல்லிக் கொண்டே முன்பக்கமாய் வந்து நின்றாள் மல்லிகா.

     மீனாட்சியின் அன்பு தோழி மல்லிகா. பாவாடைச் சட்டைப் போட்டதிலிருந்து இன்று வரை ஒன்றாய் வளர்ந்தவர்கள். மல்லிகாவின் வீடு ரெண்டு வீதி தள்ளிதான் இருக்கிறது. காலையிலேயே மல்லிகாவை தூக்கத்திலிருந்து எழுப்பி, “இன்னிக்கு என்ன பொண்ணுப் பாக்க வராங்கடி, நீ கண்டிப்பா வந்தரணும்” என்று சொல்லிப்புட்டுதான் வந்தாள் மீனாட்சி. மல்லிகாவுக்கும் சந்தோசம்தான். ஆனால் மீனாட்சி போகும்போது சொல்லிய அந்த வார்த்தை மனசை நொறுங்க வைத்தாலும், மீனாட்சியின் நிலையில் இருந்து பார்க்கும் போது அது சரியாகவேப் பட்டது. கதவுப்பக்கத்தில் போன மீனாட்சி “அடியேய் மல்லிகா…” “சொல்லுடி..” “நீ எங்க வீட்டுக்கு வரும்போது பின்வாசல் வழியா வாடி ப்ளிஸ்…” மறுவார்த்தையை மல்லிகாவிடம் இருந்து எதிர்ப்பார்க்காமல் வெளியே சென்று கொண்டிருந்தாள் மீனாட்சி.

           “ஏண்டி இவ்ளோ நேரம்” – மீனாட்சி

           “குழாய்ல தண்ணீ வந்திருச்சி, துணியெல்லாம் அலசிப்போட்டுட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சிடி… அதுமட்டுமில்லாம நானா கட்டிக்கப்போறேன்” காலையில மீனாட்சி சொன்ன வார்த்தைக்குச் சரியான சவுக்கடிக் கொடுத்தாள் மல்லிகா.

     “அதிகபிரசங்கி.. அதிகபிரசங்கி…” என்று மல்லிகாவின் தலையில் ரெண்டு கொட்டு கொட்டினாள் மீனாட்சி. “உண்மையச் சொல்லனுமின்னா நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கத் தெரியுமா… என் கண்ணே பட்டிடும் போலிருக்கு…” – மல்லிகா. மீனாட்சி சிரித்தாள். கண்ணாடியிலுள்ள பிம்பமும் சிரித்தது.

     பொண்ணக் கூட்டிட்டு வாங்க… ஊர் பெரியவர் உரக்கச் சொன்னார்.  அம்சவேணி தன்னோடப் பொண்ணு கையில டீயைக் கொடுத்தனுப்பினாள். டீயைக் கையில் வாங்கியவுடனே மீனாட்சியின் மனம் நடுங்கத் தொடங்கியது. இவனாவது பொண்ணப் புடிச்சிருக்கு… கல்யாணத்த எப்ப வச்சிக்கலாமுன்னு கேட்க மாட்டானா..? இல்ல, டீயைக் குடிச்சிட்டு ஊருக்குப்போயி சொல்லி அனுப்புறேன்னு சொல்வானா? மனசு குழம்பித்தான் போயிருந்தது.

     மீனாட்சி மாப்பிள்ளை வீட்டாருக்கு ஒவ்வொருத்தருக்காய் டீ கொடுத்துக் கொண்டே வந்தாள். இப்போது மாப்பிள்ளைக்கு டீ கொடுக்கிறாள். மாப்பிள்ளை நடேசன் குனிந்து கொண்டே டீயை எடுக்கிறான். மீனாட்சியின் முகம் வாடின. மாப்பிள்ளைக்கு எதற்காக டீ கொடுக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை மூஞ்சப் பாக்கணும். மாப்பிள்ளை பொண்ணு மூஞ்சப் பாக்கணும் என்கிறதுக்குத்தானே.. மாப்பிள்ளை டீ எடுத்துக்கொண்டப் பின்பும் மீனாட்சியின் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தன. தான் கற்பனித்த உள்ளத்தில் உருவான உருவம் இவர்தானோ? அந்த உருவம் மனதிலே பதிந்து காதல் கீதம் தீட்டாதோ என எண்ணி உருகுகிறாள். “மாப்பிள்ளை தம்பி கொஞ்சம் பொண்ண நிமிர்ந்து பாருங்க…” என்றாள் மீனாட்சியின் தூரத்து அத்தை ஒருத்தி.

     நடேசன் மீனாட்சியை நிமிர்ந்துப் பார்க்கிறான். மீனாட்சியும் நடேசனை உற்றுப் பார்க்கிறாள். நடேசனின் ஒற்றைக் கண் பார்வையால் தீயிலே கருகிய புழுவாய் எரிகிறாள் மீனாட்சி.  மாப்பிள்ளை நடேசனோ தன்னுடைய ஊனத்தை நினைத்து வருத்தத்துடன் தலைகுனிகிறான். சிவந்த கண்களில் கண்ணீர் நிரம்ப உறவுகளுக்காகச் சிரித்த முகத்தோடு தன் அறைக்குள் நுழைகிறாள். மீண்டும் கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்க்கிறாள். கண்களை நிறைத்த கண்ணீர் கண்ணாடியில் சொட்டாய் விழுந்தது.

     கண்ணாடியின் முகம் கண்களாக விரிய, அலைகளை ஆக்கிரமித்துக் கொண்டது கண்ணீர்த்துளிகள். “என்னடி விசும்புற..” அம்மா அம்சவேணி மீனாட்சியின் பின்புறமாய் நின்று கொண்டிருந்தாள். “உனக்கு மூணு வயசிருக்கும். உங்க அப்பாவும் மாமாவும் கிணத்துல குளிச்சிட்டு இருந்தாங்க. நீ கிணத்து மேட்டுல நின்னுட்டு கிணத்துப் பூண்டுச் செடியைக் கிள்ளிக்கிட்டு விளையாடிட்டு இருந்த. அந்த நேரத்துல மாமா கிணத்து மேட்டுல இருந்து தண்ணிக்குள்ள குதிக்கிறதப் பாத்து நீயும் குதிச்சிட்ட. குதிச்ச நீ நேரா பம்பு செட்டுல விழுந்து தாடையைக் கிழிச்சிட்டு இரத்த வெள்ளமா மயங்கி தண்ணில மூழ்கின. உடனே உங்க அப்பா தண்ணில இருந்து உன்னையத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினாரு. வேலைக்குப் போயிருந்த எனக்கு சேதி கெடச்சவுடனே உன்னப் பார்க்க ஓடோடி வந்தேன். ஆனாலும் பார்க்க முடியல. அப்புறம் டாக்டர் வந்த சொன்னாரு, “தாடையில ரொம்ப அடிப்பட்டிருக்கு. தாடை கிழிஞ்சித் தொங்குது. இழுத்துப் புடிச்சிதான் தையல் போடனும். உங்க பொண்ணோட முகமே மாற வாய்பிருக்கு” என்று சொன்ன போது தலையில இடி விழுந்த மாதிரி சுர்ர்…ன்னுது. ஆரம்பத்தில உன்னைப் பார்க்கும் போது மனசு வலிக்கும். போகப்போக மனசு கல்லாயிடுச்சி. கொஞ்ச நாள்ல உங்க அப்பாவும் போய்ச் சேந்துட்டாரு. கடங்காரனுகளும் இருக்கிறதப் புடிங்கிட்டானுவ… நான் எப்படி உன்னை காப்பாத்தப் போறன்னு மனசு நோகிடுச்சி. இந்த கல்யாணத்துக்கு நீ சம்பதிச்சே ஆகனும்டி…”

     “அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு கண்ணே இல்லம்மா”

     “கண் இல்லன்னா என்னாடி? உன்ன கண்ணும் கருத்துமா வச்சிக் காப்பாத்துவாண்டி”

     “என்னோட முகம் இப்படி ஆனதுக்கு நான் என்ன செய்ய முடியும். அந்த கடவுளுக்கே கண் இல்லையோ என்னுமோ! அதான் கண் இல்லாத ஒருத்தனுக்கு என்னை கட்டி வைக்கப் பாக்கராரு…எனக்கு கல்யாணமே வேண்டாம்மா…”

     “போடி போக்கத்தவளே… நான் போய்ச் சேர்ந்ததுக்கு அப்புறம் உனக்கு ஒரு பாதுகாப்பு வேணாம்மா…”

     “அதெல்லாம் ஒன்னும் வேணாம். என்னோட மூஞ்சி கூர்மையா இருக்குது. அதனால ஊனம் இருக்கிறவங்கள மட்டுதான் கட்டிக்கனுமா…ம்மா”

     “வந்த மாப்பிள்ள எல்லாம் பொண்ணப் புடிக்கல… பொண்ணப் புடிக்கல…ன்னு சொல்லும் போது எங்க நான் பெத்தது சொத்தையாயிடுச்சேன்னு அடிவயிறு கலங்கிப் போகுதடி”

     “நான் அழகா இல்லையாம்மா”

     “யாரு சொன்னது. நீ அழகுதான். உன் மனசு யாருக்கும் வராதுடி செல்லம்”

     “மல்லியாவுக்குக் கூடவாம்மா”- மீனாட்சி.

     “அவளுக்கென்ன அவ மாமங்காரன் சிங்கப்பூர்ல இருக்கான். அவனுக்காகக் காத்துக்கிட்டு இருக்கா… நீ அப்பிடியா மீனாட்சி. கல்யாணத்துக்கு ஒத்துக்கோடி” – அம்சவேணி

     சாப்பிட்ட ரசத்தின் மனமும் குழம்பின் வாசனையும் தென்றல் காற்றில் இரண்டறக் கலந்தன. பார்த்துக்கொண்டிருந்தக் கண்ணாடியைச் சுவற்றிலே வீசி எறிந்தாள். அக்கண்ணாடி சுக்கு நூறாய் வெடித்து சிதறின. சிதறியக் கண்ணாடி பிம்பத்தில் ஓவியமாய் தெரிந்தாள் மீனாட்சி.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தாய்மை

iniyavaikatral.in
    கருப்பு நிறச்சாலையில் சக்கரம்சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு சக்கரவாகனத்தில் ஒய்யாரமாய்கேசவன், அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். எதிர்க்காற்றில் தலைமுடி தென்னங்கீற்றாய்ப் பறந்தது. அலுவலகத்தில் அன்றைய வேலை பரப்பரப்பாக ஓடியது அவனுக்கு. “கேசவனுக்கு என்னாச்சுஇன்னிக்கு ஒரேசிரிப்பும் கும்மாளுமாக இருக்கிறார்என்று அலுவலகத்தில் அரசபொறசலாகப் பேச்சு அடிப்பட்டது. அன்றைய தினமும் புதியதாய்தான் பட்டது அவனுக்கு. அந்த சந்தோசத்தை மனதிலே நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டான்.

     கேசவன் சார்கேசவன் சார்என்று பியுன் ஆறுமுகம் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமலே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போய்க்கிடந்தான். திடுக்கிட்டவனாய், என்னஆறுமுக அண்ணே! என்றான். உங்கள மேனேஜர்சார் கூப்பிடுறார் என்றுசொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். தன் மேசையில் இருக்கும் நான்கு ஐந்து பைல்களை எடுத்துக்கொண்டு மேனேஜர் ரூமிற்குள் சென்றான். கதவை மெல்லியதாக தள்ளிவணக்கம்சார்நான் உள்ளேவரலாமாஎன்றான். வாங்கஆனந்தன். எடுத்து வந்த பைல்களை மேசையின்மீது வைத்தான். கையெழுத்துப்போட ஏதுவாகச் சரியானப் பக்கத்தை அடையாளமிட்டு சிறுசிறு பேப்பர் துண்டுகளைச் சொருகிவைத்திருந்தான். பைல்களில் கையெழுத்து இட்டவாறே, என்ன கேசவன்டெல்லிக்கு மெயில்அனுப்பிட்டிங்கிளா? அனுப்பிட்டேன்சார்தூத்துக்குடியில இருந்து வந்த பணத்த நம்ம அக்கௌண்ட்ல மாத்திட்டிங்களா? நேத்தே மாத்திட்டேன்சார்…. கேசவனிடம் கேட்குற கேள்விக்குப் பதில் மட்டுமே வந்தது.

மனதில் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட நரைத்து வெளுத்துப்போன முடியைக் காட்டிலும் அனுபவத்தையே மிகுதியாகக்கொண்டிருப்பவரிடம் விடுமுறை எவ்வாறு கேட்பது. ஏதாவது சொல்லிவிட்டால், என்றபயம் வேறு. பயந்தால் நடப்பது ஒன்றுமில்லை. அந்த ரூமின் கதவினை அடைவதற்குள் ஒருமுடிவினை எடுத்தாக வேண்டும்.  இதோகதவின் பிடியைபிடித்து திறந்தாகிவிட்டது. சார்என்று மெதுவாக இழுத்தான் கேசவன். என்னகேசவன், சொல்லுங்கஎனக்கு இன்னிக்கு மதியம் லீவு வேணும் சார்.. புன்னகைக்கு மாறகொஞ்சம் நெரம்தேவைப்பட்டது மேனேஜர்க்கு. சரி எடுத்துக்கோ.. தேங்ஸ்சார். மறுபடியும் கதவின்பிடியினை இழுத்தான். இப்போது மேனேஜர்அழைக்கின்றார். “ஒருநிமிஷம் கேசவன்பிடியைஇலேசாக விட்டபடியேதிரும்பிப் பார்க்கின்றான்.

     என்ன விஷியமுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா கேசவன்” “எனக்குஎனக்கு இன்னிக்கு கல்யாண நாள் சார்என்று தட்டுதடுமாறிச் சொல்லி முடித்தான். வாழ்த்துக்களை கைக்குலுக்களோடு பகிர்ந்து கொண்டார் மேனேஜர். பேசிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். அலுவலகத்தில் இருந்த அத்தனைக் கண்களும் அவர்கள் இருவரைச் சுற்றியே இருந்தது. தனியேப் போனவன், மேனேஜரோடு வருகிறானேபதவி உயர்வாக இருக்குமோ என்று பலரின்வயிற்றில் எரிந்துகொண்டிருந்தது.  கேசவனுக்கு இன்னிக்கு கல்யாணநாளாம்என்று பட்டாசு வெடித்ததுபோல் பட்டென்று சொல்லிமுடித்தார் மேனேஜர்.  தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்படத்தயாரானான்.  இதுஎத்தனையாவது கல்யாணநாள்என்றது ஒருகுரல். திரும்பிப் பார்க்காமலேநாலாவது என்றுசொன்னான். வாயில் வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. உதடுகள் புன்னகைத்தன.

கேசவன் ஆயிரம் கனவுகளோடு வீட்டிற்குள் நுழைந்தான். மதிமுகம். மயில்தோகையாய் கருநிறக்கூந்தல். கையினால் பார்த்துப்பார்த்துத் தொடுக்கப்பட்ட மல்லிகையைக் கூந்தலில் சூடியிருந்தாள் ஆர்த்தி. சிவப்பும் மஞ்சளும் கலந்த பட்டுப்புடவை. கேசவன் வைத்தக்கண்வாங்காமல் தன்மனைவியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாங்கஎன்னைஅப்படி பார்க்கீறிங்க?” என்று ஆர்த்தி சொன்னதுதான் தாமதம். கையில் இருந்த பேக்கை கீழேப்போட்டுவிட்டு ஆர்த்திஎன் ஓடி வந்தவன் இடுப்புக்கு மேலேதூக்கி ஒருசுற்று சுற்றினான்.  என்னாங்கபுதுசா கல்யாணம்ஆன மாதிரி? விடுங்கஎன்று பொய்வெட்கத்துடன் கேசவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் ஆர்த்தி.

     சாயங்காலம் சூரியன்மறைய கொஞ்ச நேரமே இருந்தது. இருவரும் பக்கத்தில்உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார்கோயில், சர்ச், மசூதி என ஒரு கோயிலையும் கடவுளையும் விடாமல் வணங்கினார்கள். அந்தவீதியிலேயே நல்ல ஹோட்டலா பார்த்து இருவரும் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டார்கள். வீட்டிற்கு வரமணி ஒன்பதை தாண்டியிருந்தது. படுக்கை அறை ஜன்னலின் சுவாசத்தால் பிரகாசமாய் இருந்தது. மல்லிகையின் வாசனை மூக்கின் நுனியை நாணச்செய்தது. ஜீரோ வாட்ஸ் பல்பைத்தவிர விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.  வெற்றுடம்போடு லுங்கி மட்டும்அ ணிந்தவாறு கேசவன் படுத்திருந்தான். கேசவனின் முடிகள் நிறைந்த மார்பில் கன்னம் வைத்து படுத்திருந்தாள்  ஆர்த்தி. இருவருக்குள்ளும் எந்தவிதமான சம்பாசனைகளும் அங்கே நடைபெறவில்லை. மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது. கண்மூடி லயித்திருந்தான் கேசவன்.  மெல்லியதாகஓர் அழுகை. தேம்பலுடன் கண்ணீரைக் கரைத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி. “என்ன ஆர்த்தி அழுவுற.. என்னாச்சு உனக்கு?” விசும்பலையே பதிலாகத் தந்தாள். “என்னன்னு சொன்னதான தெரியும்” “எனக்கு குழந்தை வேணும்நமக்குதான்குழந்தையே பிறக்காதுன்னுடாக்டர் சொல்லிட்டாருல்ல..  என்ன பன்றது ஆர்த்தி. ஆர்த்தியின் அழுகை பீறிட்டது. உள்ளத்தின் குமுறலைக் கண்ணீராக வடித்தாள். அக்கண்ணீரானது கேசவனின்மார்பு முடியை நனையச்செய்தது. அது அவனை வெட்கப்பட வைத்தது. ஆர்த்தியின் கூந்தலைமெல்ல வருடிய படிமார்போடு இறுக்கிக்கொண்டான் கேசவன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தை முக்கியமானதாகும்.  அதுவரை மூடியிருந்த கண்களை இருட்டிலே நன்றாக திறந்து பார்த்தான் கேசவன்.  எங்கும் மயானமாகக் காட்சியளித்தது அவனுக்கு. ஆர்த்தியின் அமைதி வேறு அவனுள் புகுந்துமனதை கரையானாய் அரித்துக்கொண்டிருந்தது.  கேசவனே பேச்சை ஆரமித்தான். “ஆர்த்திநாஒன்னு சொல்லட்டுமாம்என்ற ஒலி அவளிடமிருந்து வந்தபிறகே பேச ஆரமித்தான். “நாமரெண்டு பேரும் நாளைக்கு அனாதை விடுதிக்கு போவோம். நீயும் நானும் அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்ப்போம். நமக்கு பிடிச்சகுழந்தையாப் பார்த்து எடுத்துவந்து வளர்ப்போம். இதைப்பத்தி நீஎன்ன நினைக்கிற..” தட்டுதடுமாறி ஈனச்சுரணையில் சொல்லிமுடித்தான். ஆர்த்தியின் மனம்குட்டையைக் குழப்பின. சேறாயிருந்தன.  தான்கொஞ்சி விளையாட குழந்தை இல்லையே என்ற எண்ணமே அவளை முழுவதும் தின்றுகொண்டிருந்தது. இருவரும் அழுத கண்ணகளாய் நனைந்தனர். கேசவனின் மார்பில் படுத்திருந்த ஆர்த்தி அழுது அழுதுக ண்கள் சொருகி எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.

     இரவு விடியலைநோக்கி நகர்ந்தது. ஆர்த்தி சிறுநீர்க் கழிப்பதற்காகக் கட்டிலிருந்து எழுந்திருந்தாள். கண்களைச் சுத்தமாகத் திறக்க முடியவில்லை. துக்கமும் தூக்கமும்அ வளை ஓரிடத்தில் நிலைகொள்ளமுடியாமல் தவிக்கச்செய்தது. பழகிய வீடு. கண்ணைத் திறக்காமலே புழக்கடைக்கு வந்தாள். காலினைச் சற்றே அகல விரித்து புடவையைக் கொஞ்சம் மேலுயர்த்தினாள். தன் வயிற்றில் தங்கிய ஒன்று கீழே இறங்குவதாக நினைத்து தன்னையே மெய்மறந்து நின்றாள். இன்னும் முடியவில்லை சிறுநீர். கண்களையும் திறந்துபார்க்க இயலவில்லை. மூக்கின் ஓரம் நாற்றத்தை உணர்ந்தாள். என்னவாயிருக்கும் அந்தநாற்றம். கண்களைத்தான் திறக்கமுடியவில்லை. ஆனாலும் தன்னை கூர்மையாக்கி கொண்டாள் ஆர்த்தி. எவ்வளவு முயன்று பார்த்தாலும் அந்த வாசனையை அவளால் உணரவே முடியவில்லை. க்யிங்.. க்யிங்காதிலேரீங்காரம். கேட்கத் துடிக்கும்ரீங்காரம். என்ன ஓசையாக இருக்கும். ஆனாலும் அந்த ஓசையைத் திரும்பதிரும்ப கேட்க ஆவலாயிருந்தாள் ஆர்த்தி. உதடுகள் முணுமுணுத்தன. கண்களைத் திறந்து என்னவென்று பார்க்க ஆசைப்பட்டாள். கண்ணைத் திறக்க இவ்வளவு நேரமா? எப்படியாவது என் கண்ணை திறந்துவிடு இறைவனே என்று வேண்டிக்கொண்டாள். காதில்கேட்ட ரீங்காரமும் மூக்கின் நாசியைத்தொட்ட வாசனையுமே அவளை கண்ணை திறக்கச்செய்தது.

     புழக்கடை ஓரத்தில்முள் வேலி. வேலிக்குப்பக்கத்தில் அழுக்குசாக்கில் ஒருபச்சிளம் குழந்தை. புழக்கடைக்குமேற்கு பக்கத்தில் சின்னதாய் சந்து தெற்குப்புறச் சாலையை ஒட்டி இருந்தது. அந்தக் குழந்தை அப்போதுதான் பிறந்திருக்க வேணடும். தொப்புள் கொடிக்கூட இன்னும் சரியாக அறுக்கப்படவில்லை. பிறந்த குழந்தையின் உடம்பிலே இரத்த சிதள்கள் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. ஆர்த்தி குழந்தையைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள சிலமணித்துளிகள் தேவைப்பட்டன. தெற்குப்புறச் சாலையில் மறைவாக இருக்கும் இச்சந்தில் ஒருகர்ப்பிணி பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருக்கலாம். ஏதோ காரணங்களுக்காக இக்குழந்தையை இங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கிறாள் என்று அணுமானிக்க முடிந்தது ஆர்த்திக்கு. வீட்டுக்குள் ஓடியவள் வட்டாவில் தண்ணீரை நிரப்பி வந்தாள். இரண்டுகால்களுக்கும் நடுவிலே  குழந்தையைப் படுக்கவைத்தாள். தண்ணீரைத் தொட்டுக் குழந்தையின் பிஞ்சு உடம்பினை தடவுகிறாள். குழந்தையின் ஒவ்வொரு அங்கமாக ஆர்த்தியின் வீணை வீரல்கள் நீவுகின்றன. குழந்தையின் தொடுதலையை எண்ணி எண்ணி மனம் சுகத்தை அடைந்துகொண்டிருந்தன. குழந்தையின் இரத்த சிதள்களைத் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் ஆர்த்தி.

     கண் விழித்தகேசவன் படுக்கையில் மனைவி இல்லாததை அறிந்து திடுக்குற்றான். குழந்தை இல்லாததை எண்ணி தற்கொலை ஏதாவது பண்ணியிருப்பாளோ என்று நினைத்துப்பார்க்கவே கொடுரமாக இருந்தது அவனுக்கு. “ஆர்த்திஆர்த்திஒவ்வொரு அறையாய் மூச்சு வாங்கியபடி பார்த்தான். புழக்கடையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்து அங்கு வந்து சேர்ந்தான். முதுகு புறமாய் மனைவியைப் பார்த்த சந்தோசத்தில் பெருமூச்சுவிட்டான்.  ஓடிவந்து ஆர்த்தியின் முன்நின்று, “இங்கஎன்ன பன்ற…” கேட்டவுடன் குழந்தையைப் பார்த்தஅ திர்ச்சியில் உறைந்துபோனான். “யாருது குழந்த? இங்க எப்படி வந்தது? உனக்கு எப்படி கிடைச்சது? கேள்விகளை அடுக்கிக்கொண்டேச் சென்றான். நடந்ததை பொறுமையாகச் சொன்னாள் ஆர்த்தி. வாயைபிளந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான் கேசவன். “எவ்ளோ அழகா கொளுகொளுன்னு இருக்கு. இந்தக் குழந்தையக் கடவுளே அனுப்பிவச்சு நமக்குகுழந்தை இல்லாக்குறையை தீர்த்துவச்சிட்டாரு. நான் யாருக்காகவும்இந்தக் குழந்தைய விட்டுத்தரமாட்டேன். இவன் என்னோடப் பிள்ளஎன்று மார்போடு குழந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். குழந்தை தனக்குமடி கிடைத்துவிட்டது என்பதாய்க் கண்ணை மூடிஉறங்கியது.

     சேவல் விடிலைகூவி அழைத்தது. கதிரவன்அந்த ஊரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தான். அந்தச்செய்தி ஊர்முழுக்கப் பரவியது. “வாங்கடாவாங்கடா.. கேசவன் வீட்டுல ஏதோ குழந்த கிடைச்சிருக்காம்பாக்கலாம்..“ என்று குழந்தையைப் பார்க்க கேசவனின் வீடுமுழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குட்டிப் பசங்க குழந்தையைப் பார்க்கமுடியாமல் பெரியவர்களின்கால் இடுக்குகளில் புகுந்து தலையை மட்டும் நீட்டி பார்த்துவாய் மேல் கைவைத்தனர். “குழந்தஎவ்ளோ அழகாசெவப்பா.. இருக்கு பாரடா…” இரண்டுவாண்டுகளின் பேச்சுகள் அவை. கூட்டத்திலே சலசலப்பு. ஆளாளுக்கு பேச்சுகள் பலவிதம். “இவ்ளோஅழகான குழந்தய பெத்துப் போட்டுபோறதுக்கு அவளுக்கு எப்படி மனசுவந்ததோ தெரியலையேகூட்டத்தில் ஒருகுரல்.  அனாதையா பச்சப்புள்ளயப் பெத்துப்போட்டு எங்கயோபோயிட்டாஅவ எங்கையில கிடைச்சான்ன நாக்கபுடிங்கிகின்னு சாவுற மாதிரி நாலு கேள்வி கேட்பேன். தேவுடியாகுழந்த உடம்புலஇருக்கிற ஈரம் காயிரதுக்கு முன்னாடியேஇப்படி தொப்புள் கொடி உறவ அறுத்துட்டுபோயிட்டாளே…” என்றது கூட்டத்தின் மற்றொரு குரல். “அதுஇதுன்னுவாய்க்கு வந்தபடிதப்பா பேசாதிங்கஅவளுக்கு என்ன நிலமையோஎன்னவோ…” கூட்டத்தின்நடுவே கணிரென்றுஒரு குரல்.  அக்கூட்டத்தின் பேச்சரவம் முழுவதும் குறைந்தது. மூச்சு விடும்சப்தமும் ஆங்காங்கே இறுமும் சத்தமும்தான் கேட்டது.

     ஆர்த்தியின் மடியில்இருந்த குழந்தை அழத்தொடங்கியது. இந்தஅழுகைக்கு காரணம், தன்தாயை இவர்கள் திட்டுகிறார்களேஎன்று அழுகிறதா? இல்லை, தனக்கு பசிக்கிறது உணவு கொடுக்க யாரும் முன்வரவில்லையே என்றுஅழுகிறதா? தெரியவில்லை. குழந்தை அழுது கொண்டுதானிருக்கிறது. கேசவன் பால்வாங்கி வருவதற்காகவண்டியை ஸ்டார்ட்செய்கிறான். கூட்டத்தின் நடுவே ஆர்த்தியின் மடியில் குழந்தை. கூட்டத்தில் உள்ள அனைத்து கண்களும் ஆர்த்தியையேப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தையின் அழுகையையும் பார்க்கிறார்கள். இன்னும் ஓரிருவினாடிகளில் அக்குழந்தை அழுது அழுது விக்கி இறக்கப்போகிறது. ஆர்த்தி என்ன நினைத்தாலோ, உடனே மாராப்பைவிலக்கி தன்னுடையமார்பு நுனியைக் குழந்தையின் வாயிலேதிணித்தாள். குழந்தையின் அழுகை நின்றது. எதுவரையில் இது நீடிக்கும். கேசவன் பால்வாங்கி வரும்வரையிலா? இல்லை, இந்தமார்பில் பாலே சுரக்காது என்று அந்த குழந்தைக்குத் தெரியும்வரையிலா? ஆனாலும் எது எப்படியாயிருந்தாலும் உண்மையிலேயே ஆர்த்தி இன்று தாய்மை அடைந்துவிட்டாள்! தாய்மை அடைந்துவிட்டாள்!

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

“பெருஞ்சித்திரனார் பாவியத்தில் ஐயையின் காதல்”

உலகத்தில் எல்லா உயிர்களும் காதலால் வாழ்கின்றன. காக்கை,குருவி போன்ற பறவையினங்களும், ஐந்தறிவுப் படைத்த விலங்கினங்களும் காதலிக்க தவறுவதில்லை. இந்த ஜீவராசிகளின் காதலுக்கு யாரும் எதிர்ப்பேர் கருப்புக்கொடியோ காட்டுவதில்லை. அவைகளுக்குப் பிடித்திருந்தால் ஒன்றாயச்; சேர்ந்து வாழும். ஆனால், பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வரும் மனித இனம் காதலுக்கு எதிப்பையும், ஏமாற்றத்தையும் துன்பங்களையுமே தருகின்றது. மேற்கத்திய நாடுகளில் அவ்வளவாக எதிர்ப்புகள் இல்லை என்றாலும் இந்தியா, அரபு நாடுகளைப் போன்றப் பழமையையும் பண்பாட்டையும் மறக்காமல் வாழும் ஒரு சில நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

பெருஞ்சித்தனாரின் பாவியம்

            காதலிக்க இருமனங்கள் இருந்தால் போதும். வேறென்ன வேண்டும். நம் நாடானது சமூகங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. சுhதி,மதம் என்ற போர்வைக்குள் மக்கள் தூங்கிக்கொண்டு இருக்கிறாhகள். புழமைவாதம் அவர்களின் உயிர் மூச்சாக இருக்கின்றது. இவர்களை மீறி எப்படி இரு மனங்கள் காதலிக்க முடியும். அப்படியேக் காதலித்தாலும் ஆணாதிக்கம் பெண்மையைக் காலால் மிதித்து நசுக்கின்றதே. இவ்வுலகத்தில் மக்கள் இனத்தைத் தோற்றுவித்த மாதரை உள்ளத்தாலும், உடலாலும் துன்புறுத்தப்பட்டு அழிக்கச் செய்கின்றதே இந்த ஆணாதிக்கம். “ஆணின் பண்பாடு மனம் எவ்விதக் கட்டுகளாலும் இறுக்கமடையவில்லை. மாறாகப் பெண்ணைப் பண்பாடு இறுக்கி மனோநிலையைப் பாதிப்பது சமூகத்தில் கண்கூடாகத் தெரிகிறது” என முனைவர் அரங்க மல்லிகா கூறுகிறார். பெண்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களும், துயரங்களும் நீக்க முடியாதவனாக அமைகின்றது. அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் நடந்த காதல் சோகங்களை நம் கண் முன்னே நிறுத்தி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர் பெருஞ்சித்தரனார்.

ஐயையின் வாழ்க்கை:

            புதினிக்குன்றம். புலியூர் கிராமத்தில் தன் அத்தை முத்தம்மாளுடன் வாழ்கிறாள் ஐயை. பிறந்தவுடன் தாயையும், தந்தையையும் பறிக்கொடுத்தவள். யாரும் இல்லாத அநாதையாக இருந்த ஐயையை அவளின் அத்தை எடுத்து வளர்க்கின்றாள். கணவனை இழந்த முத்தம்மை தன் மகன் செம்மலை நகரிலேப் படிக்க வைக்கிறாள். படிப்புச் சரியாக வராததால் பாதியிலேயே நின்ற ஐயை ஆடு மேய்க்கப் புறப்படுகிறாள். தினமும் ஆட்டை ஓட்டி மலைப்பகுதிக்குச் சென்று மேய்த்து விட்டு மீண்டும் பட்டியில் அடைப்பதுதான் ஐயையின் வேலை.

                                                “காலை யிருந்து மாலை வரையிலும்

                                                நூலிடை வருத்த நுதல்நனி வெயர்ப்ப

                                                ஆடுகள் மேத்தல் ஐயை வழக்கம்? ” (ஐயை.45-47)

            ஐயையின் மீது அவளின் அத்தை உயிரையே வைத்திருந்தாள். பாசத்தைக் கொட்டினாள். தனக்கு மகள் இல்லையே என்று வேதனைப்பட்டுக் கொணடிருந்த முத்தம்மைக்கு நல்ல மகளாக ஐயை இருந்தாள். ஐயைக்கு எண்ணைத் தடவி தலை வாரி பூ முடிப்பாள், பொட்டு வைப்பாள். சுற்றிப் போடுவாள். தன் விழி அகலாமல் ஐயையைப்,

                                         “பேடையெகி னம் போல் நடக்கும் பெற்றியை

                                                விழியகற் றால் உவந்து வியப்பாள்!

                                                பழிமே வாமல் பாவையைக் காத்தாள்!” (ஐயை.96-98)

பார்த்து ரசிப்பாள். ஐயையை தன் மகன் செம்மலுக்குக் கட்டி வைத்து மருமகளாக்கி விட வேண்டும் என்ற ஆசையும் முத்தம்மைக்கு உண்டு.

ஐயையின் காதல்

            தன்னுடைய அத்தை மகனான செம்மல் மீது உயிர்க்கும் அதிகமான காதலைச் சேர்த்து வைத்திருந்தாள். எப்போழுதும் செம்மலின் நினைப்பாகவே இருந்தாள். ஆட்டை மேய்கும் போது கூட ஆடுகளை ஓட்டுவாள்;; பிறகு செம்மலின் நினைப்பு வர அப்படியே நின்றுடுவாள். அதற்குள் ஆடு பள்ளத்தில் இறங்கி ஓடும். நினைவு திரும்பி மீண்டும் ஆட்டை ஓட்ட கையிலேக் கொம்பைத் தூக்கிக்கொண்டு ஓடுவாள்.

                                                “ஆட்டுக் கூட்டமோ அவளுணர் வறியாது

                                                மேட்டில் ஏறும்: பள்ளத்திறங்கும்!

                                                ஓட்டி ஒருபுறம் சேர்ப்பாள் ஒருநொடி!

                                                மீண்டும் நெஞ்சில் அவனுரு மின்னும்!” (ஐயை.64-68)

            செம்மலின் வரவை எண்ணி ஒவ்வொருக் கற்களாக அடுக்குவாள். கற்கள்தான் குவிந்ததே தவிர செம்மல் ஒருநாளும் வரவே இல்லை. ஆனால் அவளின் அன்பான நினைவிலும் செம்மலின் நினைவே மிகுந்திருந்தது.

கனவிலும் காதல்:

            செம்மலிடம் இருந்து முத்தம்மைக்கு கடிதம் ஒன்று வருகின்றது. படிப்பு முடிந்து விட்டது இன்னும் முப்பது நாட்களில் வருவதாக கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஐயைக்கு, கடிதத்தில் தன்னைப் பற்றி ஒரு இடத்தில் கூட கேட்கவில்லையே என்று வருத்தம். ஐயை என்ற அடிமை பேதை இருக்கின்றாளா? இறந்தாளா? ஏன ஒரு வரிக்கூட எழுதவில்லையே. அப்படி நான் என்ன பிழை செய்தேன் எனக் காதலின் மிகுதியால் தன் அத்தையிடமே கேட்கின்றாள். திருக்குறளில்,

                                    “நனவினால் நல்கா தவரைக் கனவினால்

                                    காண்டலின் உண்டுஎன் உயிரியர்” (குறள்.122-1213)

            நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் இருக்கிறது என தலைவியின் நிலைப் பற்றி வளளுவர்   கூறுகிறார். கனவிலே அத்தானின் முகத்தையும், அள்ளும் விழி அழகையும், பழகு நெஞ்சையும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு காயைப் பொறித்தெடுத்தாள். ஒரு காயை வெட்டி மோர்க்குழப்பு வைத்தாள். ஒன்றைப் பருப்பிலே வேகவைத்தாள். ஒரு காயைச் சீவி உறைத்தயிர் ஊற்றி உறைப்புக்கு மிளகோடு சேர்த்து வைத்தாள். உருகாத நெய்யை உருக்கி உருகுகின்ற அன்பால் உண்ணுவதற்கு பெருவாழை இலை விரித்து பெரும்படையை இட்டாள் ஐயை. தினமும் குன்றுக்குச் செல்வாள்? அங்கு நன்கு விளைந்த கதிரோடும் இலையோடும் மரத்தோடும் தன்னைப் பற்றியும் தன் காதல் பற்றியும் பேசி வருவாள்.

ஐயையின் மகிழ்வு:

            புலியூருக்கு செம்மல் வருகின்றான். முத்தம்மையும் ஐயையும் வாசல் வந்து அவனது இருக்கைகளை வாங்கி வந்து குடியிலே வைக்கின்றனர். ஐயைக்கு செம்மல் வந்ததில் பெரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். அழகிய மலரை மாலையாகத் தொடுப்பதும், ஆட்டுக் குட்டியினை அன்போடு அணைப்பதும், கால் சிலம்பு ஒலிக்க தாவி நடப்பதும், தன் கூந்தலில் வாசனை நிறைந்த மலரினைச் சூடுவதும், செம்மலின் நகர்ப் பற்றியச் செய்திகளைக் கேட்பதும், அவன் பேசும் அழகை ரசிப்பதும், குறுநெல் புடைத்து அன்போடு உண்ணக் கொடுப்பதும், உண்பதைப் பார்த்து மகிழ்வதும், ஏடு கொணர்வதும், எழுதுகோல் எடுத்துக் கொடுப்பதும், பாடெனக் கேட்டால் பாடுவதும் என அவனே எல்லாம் என மனதை முழுமையாக காதலில் தன்னை மறந்தாள்.

                                                “மின்னென மானென மீனெனத் திரிவதும்

                                                அத்தான் கண்முன் அடிக்கடி மேய்ந்த

                                                முத்து நகைச்சியின் மொய்ம்புக் குறும்புகள்!” (ஐயை. 417-419)

            ஐயையின் மனம் முழுக்க செம்மலின் எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது. தனக்கு வரப்போகின்ற வாழ்க்கையை நினைத்து பெருமிதம் கொண்டாள். இக்காதலுக்கு சாதி,மதம் தடையில்லை. உறவுகள் தடையில்லை. ஆசைக்கனவை நிறைவேற்றுவதில் மனம் தடைக்கற்களாய் மாறிப்போனது.

காதல் முறிந்தது:

            தன் காதலை செம்மலிடம் சொல்ல துடித்தாள் ஐயை. அதற்கேற்ப காலமும் விரைவில் வாய்த்தது. ஆடுகளை ஓட்டி குன்றுக்குப் புறப்பட்டாள். ஆடுகள் மேய்ந்தன. பெருங்கல் மேல் ஐயை அமர்ந்தாள். அப்போது செம்மல் அங்கே வருகின்றான். அப்போது,

                                                “உள்ளமும் அன்பைக் காதலால் வளர்த்து

                                                ஊனும் கொள்ளாது உறக்கமும் இன்றி

                                                பனியினும் குளிரினும் வெயிலினும் சாகாது

                                                பிழைந்துக் கொண்டுள பேதை ஏழையின்

                                                தழைத்த அன்பினை உணர்வீரா?”  (ஐயை.476-483)

            தன் காதலைப் பற்றி ஐயை கூறுகிறாள். ஆனால் செம்மலோ தும்பை என்ற பெண்ணின் மீது வைத்துள்ள காதலைப் பற்றிக் கூறுகிறான். ஐயையின் தலையில் இடி விழுந்தது. நெஞ்சு நொறுங்கியது. மயங்கி விழுகின்றாள். அப்போது ஆந்தை அலறியது., தனி நாய் தொண்டை கிழிய ஊளையிட்டது. கழுத்து மணி ஒலிக்கக் காளைகள் இராப்புல் அருந்தாக் கத்தின. ஐயையின் உடல் அசைவற்று இருந்தாள். முத்தம்மை தன் மகனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் செம்மல் கேட்காமல் தும்பையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாகக் கூறுகிறான். அதற்கு முத்தம்மை மகனை வீட்டை விட்டுச் செல்லுமாறு கூறுகின்றாள். அவனும் வீட்டை விட்டுச் சென்று தும்மையை மணந்துக் கொண்டு ஓர் ஆண்பிள்ளைக்கும் தந்தையாகின்றான்.

இளமையைக் கடிதல்

            முறித்;து விட்டுப்போன செம்மலை மறக்க முடியாமல் தவித்தாள் ஐயை. இந்த உள்ளமும் உடலும் செம்மலுக்கு பயன்படாமல் போனதை எண்ணித் துடித்தாள்.

                                    “இறவாக் காதற்கு இளமையைக் கடிந்தாள்” (ஐயை.605)

            தன்னுடைய காதல் மெய்மையைப் போற்றும் கற்பின் பெருமையைக் காறி உமிழ்ந்தாள். தாய்தந்தையை இழந்து அன்பாய் நேசித்தவனையும் துறந்து மனச்சுமையை அதிகமாக கூட்டிக்கொண்டாள். செம்மல் வந்தால் தன் அத்தையிடம் சொல்லி தும்பையிடம் பேசி இரண்டாதாரமாகக் கூட மணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் ஐயைக்கு இருந்தது.

தாய்மை உள்ளம்

            தன் காதலை மறக்கவும் முடியவில்லை, மறைக்கவும் முடியவில்லை. ஆடுகளை ஓட்டி குன்றுக்குச் செல்வாள். மீண்டும் இயற்கையின் மீது தன் மனச்சுமையினைக் கொட்டித்தீர்ப்பாள். அவன் வரவை எண்ணி அடுக்கியக் கற்களை மீண்டும் எண்ணத் துவங்குவாள். அப்படியிருக்க ஒருநாள் செம்மலும் – தும்பையும் இறந்து பட, அவர்களின் மகன் சேரனை ஐயையிடம்  ஒப்படைத்து விடுகிறான் ஒருவன். சேரனை அள்ளி முத்தமிடுகிறாள் ஐயை,

                                                “செம்மா துளைஇதழ் சிரித்திட மலர்ந்தே

                                                ‘அம்மா’ என்றான்! அள்ளி எடுத்தே

                                                நூறு முறைசொல், நுங்குவாய் திறந்து என” (ஐயை.932-935)

            அம்மா என அழைக்கக் கேட்டு காதல் உள்ளம் தாய்மை உணர்வைப் பெறுகின்றாள். குழந்தையின் விளையாட்டிலும்; பேச்சிலும்;; அழகிலும் கொஞ்ச கொஞ்சமாக செம்மலை மறக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அவ்வவ்போது செம்மலின் நினைவும், இம்மையில் இல்லையென்றாலும் மறுமையிலாவது மணக்க வேண்டும் என மனதை மயக்கிக்கொண்டிருந்தது. தன் மகன் சேரனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். தானும் அவனோடு சேர்ந்துப் படித்தாள். நகருக்கு அழைத்துச் சென்று கல்லூரிப் படிப்பை படிக்க வைக்கிறாள். சேரனும் நன்றாகப் படிகின்றான். சேரனுக்கு நெய்தல் என்ற பெண்னை சொந்தமாக்கி விட்டு உயிர் துறக்கிறாள் ஐயை.

தெய்வக் காதலாள்

            சமூக வரலாற்றில் எத்தனையோ காதல் வாழ்ந்து வந்திருக்கலாம். அவற்றில் பாதி வெற்றியும் மீதி தோல்வியும் பெற்றிருக்கலாம். பெருஞ்சித்திரனார் படைத்த ஐயையின் பாத்திரம் வியப்புக்குரியது. ஒரு கிராமத்தில் சாதாரணமான பெண்களின் இயல்பான நிலை, வீடு, இடம் அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆகியவையை அழகாகப் படைத்துள்ளார். இந்த ஐயையின் படைப்பானது ஆசிரியரின் வாழ்கையில் நடந்த சம்பவமாகவே நான் கருதுகிறேன். பெண்ணினத்தை துச்சமாக நினைக்கின்ற ஆணாதிக்கத்தை இப்படைப்பிலேக் காணமுடியும். ஒரு பெண் தன்னுடைய அன்பான காதல் கிடைக்கவில்லையென்றாலும், அவனையே நினைத்து உள்ளம் உருகி வாழ்கிறாள். அவன் பெற்ற மகனை தன் பிள்ளை போல் வளர்த்து ஆளாக்கி விடவும் செய்கிறாள். இதைவிட ஒரு காதலுக்கு வேறென்ன செய்ய முடியும் என எண்ணத்தோன்றுகிறது.

முடிவுரை:

            ஐயையின் காதலை வானம், மழை, நீர், காற்றெல்லாம் சொல்லும். ஐயை இறந்த பின்பு குன்றிலே செம்மல் வர சேர்த்து வைத்திருந்த கற்களைக் கொண்டு வெண்மேடைக் கட்டி, அங்கு வெண்பளிங்கு சிலையொன்றை ஐயைக்கு எழுப்புகிறான் சேரன். ஐயையின் காதல் இவ்வுலகம் உள்ளவரை வாழும். காதலுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஐயையின் உறைவிடமானது கோயிலாகக் கொண்டு விழா எடுப்புது நலம்.

             

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

                     

 

 

 

 

       

“ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடை ஆளுமை”

        ஆதிகாலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்தான் கண்டதை உண்டான் மரப்பொந்து, குகை எனத் தங்கி தட்பவெப்பங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டான்.  இவ்வுலகத்தில் நிலைபெற, கரடு முரடாக இருந்த மலையைக் காடாக்கினாhன்.  காட்டை வயலாக்கினான்.  உடலுழைப்பையே அதிகமாகக் கொடுத்துப் பல நிலங்களைத் தனதாக்கிக் கொண்டான்.  அந்நிலங்களில் மக்கள் பலர் வேலைச்  செய்திருப்பார்கள்.  அம்மனிதனே தலைவனாகியிருப்பான்.  ஐந்திணை நிலத்தில் உள்ள மக்களின் செயல்பாட்டுத் திறனுக்கேற்ப சிறுகுடித் தலைவனே பின்னாளில் மன்னனாகியிருப்பான்.  “தமிழகத்தில் ஒரு மன்னரின் கோலில் கீழ் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை முல்லை நிலத்திலேயே தோன்றியிருக்கக்கூடும்”1 என டாக்டர் ந. சுப்ரமண்யன் கூறுகிறார். முல்லை நிலத்தில் உள்ள மக்களுக்கும் மன்னர்களுக்கும் இருக்கும் தொடர்பே  இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.  முல்லை நிலத்தில் ஆநிரைகளைக் கவர்தலும் மீட்டலும் நடைபெற்றிருக்கிறது.  இதன் அடிப்படையிலேயே மன்னர்கள் இருவருள்ளும் சண்டை நிகழ்ந்து வந்துள்ளது என்பதை இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

            தமிழகம் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பெரும்வேந்தர்களால் ஆளப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி.  பெரும் நிலப்பரப்பு, வீரம், அனைத்து நிலங்களும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனத் திண்ணம் போன்றவையே இம்மூவேந்தர்களையும் பேரரச மரபாக வரலாறு சுட்டுகின்றது.  பரந்து விரிந்த இம்மண்ணிலே எத்தனையோ  தலைவர்கள் தோன்றியிருப்பார்கள்.  அவர்களும் தனக்கென ஒரு நிலம், மக்கள்,  சமுதாயத்தை உருவாக்கி நலம் பெற ஆட்சி நடத்தியிருப்பார்கள்.  வல்லமை உள்ள மன்னர்கள் குறுநில மன்னர்களை வலிய போருக்கு அழைத்துத் தோற்கடித்துள்ளார்கள்.  அந்நிலத்தில் உள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். “அரசன், இறைவன், காவலன், மன்னன், வேந்தன் ஆகிய சொற்கள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக ஆட்சி பெற்றிருந்த போதிலும் மன்னன், வேந்தன் என்ற இவ்விரு சொற்களின் ஆளுமையே மிகுதி.  மன்னர் என்ற சொல் குறுகிய மன்னனையும், வேந்தன் என்ற சொல் முடியுடை ஆட்சித்தலைவராகிய சேர, சோழ, பாண்டியரையும் குறிக்கின்றது”2 என அரங்க. இராமலிங்கம்  அரசர்களின் பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகின்றார்.  அப்பேரரசர்கள் போர் நடக்காமல் இருக்க அக்குறுநில மன்னர்களைக் கப்பம் கட்டும்படி வலியுறுத்தினார்கள். 

இப்படிப் பெயரே இல்லாமல் குணமும் பண்பும் நிறைந்த எத்தனையோ சிற்றரசர்கள் வரலாற்றில் இடம் பெறாமல் போயிருக்கிறார்கள்.  அந்த வகையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடனின் கொடைத்திறனும், ஆளுமையும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

மன்னன் நல்லியக்கோடன்

            ஆற்றுப்படை – வழிப்படுத்துதல், நெறிப்படுத்துதல், பரிசில் பெற்ற பாணன் ஒருவன் வறுமையில் வாடும் மற்றொரு பாணனிடம் ஓய்மானாட்டு நல்லியக்கோடனிடம் பரிசிலைப் பெறுமாறு கூறுகின்றான்.  தொண்டடை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் ஓய்மான் நாட்டில் மாவிலங்கைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன்.  இவனுடைய ஆட்சியின் கீழ் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.

            “உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்” (சிறுபாண். 122)

            தமிழகத்தில் சிறந்து விளங்கிய குடிகளுள் ஒன்று ஓவியர்குடி ஆகும்.  ஓவியர் குடியில் பிறந்ததனால் நல்லியக்கோடன் ஓவியர் பெருமகன் எனப்பட்டான்.  ஓவியர் குடியே பின்னாளில் ஓய்மாநாடு என்றானது.  இவ் “ஓவியர் குடி நாகர் குடியினுள் ஒரு பிரிவாகும்”3 என நாராயண வேலுப்பிள்ளை கூறுகிறார்.  நீண்ட மூங்கில் மரங்கள் நிறைந்து விளங்குகின்ற மலையை உடையவன் நல்லியக்கோடன் ஆதலின் இவனைக் குறிஞ்சி நிலத்தலைவன் எனச் சான்றோர்கள் கூறுவார்கள்.  வீரத்திலும் குணத்திலும் சங்ககால மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்தவன்.

சேர, சோழ, பாண்டியர்கள்

            பெரிய வாயையுடைய எருமை, கொழுத்த மீன்கள்  காலடியிலேயே பட்டு நசுங்கும்படி வயலியே இறங்கி நடந்தது.  அங்குள்ள செங்கழுநீர் மலர்களை மேய்ந்தது.  மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கின்ற ஒரு பலா மரத்தின் நிழலை அடைந்தது.  தேன் கமழும் அந்தச் செங்கழுநீர் மலர்களை மென்று கொண்டே காட்டு மல்லிகைகள் நிறைந்த படுக்கையிலேப் படுத்துக் கொண்டது.

                        “கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்

                        கழுநீர் மேய்ந்த கடவாய் எருமை

                        பைங்கறி நிவந்த பலவின் நிழல்” (சிறுபாண். 41-43)

இவ்வடிகளால் எருமையின் செயலை எடுத்துக் காட்டுவதன் வாயிலாகச் சேர நாட்டின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் விளக்குகிறார்  ஆசிரியர். கொற்கையின் செல்வம் முத்தும் உப்புமாகும்.  மதுரை மாநகரமானது மகிழ்ச்சி மிகுந்திருக்கின்ற மக்கள் வாழும் தெருக்களையுடையது என்றும்,   தமிழ்சங்கம் நிலைபெற்று மதுரையில் வளர்ந்தது எனவும், பாண்டிய நாட்டின் வளத்தையும், தமிழின் சிறப்பைப் பற்றியும் ஆசிரியர் உரைக்கின்றார்.

              “தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்

               மகிழ் நனை மறுகின் மதுரை” (சிறுபாண். 66-67)

      மேலும் வயல்களிலே தாமரைகள் பூத்திருக்கின்றன.  அத்தாமரைகளிலே வண்டுகள் தங்கள் பெடைகளைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பன்ணைப் பாடிக் கொண்டிருக்கின்றன எனச் சோழ நாட்டின் வளத்தைக் குறிப்பிடுகிறார்.  நல்லியக்கோடனுடைய நாட்டிலே  எண்ணற்ற செல்வங்கள் இருந்தன,  வளமிகுந்த சேர பாண்டிய சோழ நாட்டைக் காட்டிலும் வற்றாத செல்வங்கள் குவிந்திருந்தன.  ஓய்மானாடே உயர்ந்த செல்வமுடைய நாடு என்பதைக் குறிக்கவே முடியுடை வேந்தர்கள் மூவர் நாட்டையும் புகழ்ந்து பாடுகின்றார்”4 என சாமி சிதம்பரனார் கூறுகின்றார்.

            நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடனின் சிறப்பைக் கூறும்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வலிமை, வளத்தை விட நல்லியக்கோடனின் வளம் மேன்மையுடையது என்பதை அறியலாம்.

கடையெழு வள்ளல்கள்

            சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமல்லாமல் கடையெழு வள்ளல்களை விடவும் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறந்தவனாகவே விளங்குகின்றான்.

            “பெருங்கல் நாடன் பேகன்

            மறம்பின் கோமான், பாரியும்

            கழல்தொடித் தடக்கை, காரியும்

ஆர்வ நன்மொழி, ஆயும்

            அரவக் கடல்தானை அதிகனும்   

            நளிமலை நாடன், நள்ளியும்

            ஓரிக் குதிரை, ஓரியும்” (சிறுபாண். 85-113)

            பேகன், பாரி, காரி, ஆய் ஆண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி போன்ற ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையைப் புகழ்ந்த பின்னர் இவர்களுக்குப் பிறகு நல்லியக்கோடன் ஒருவனே நடத்தி வந்தான் என ஆசிரியர் குறிப்பிடுவது நல்லியக்கோடனின் உன்னதக் கொடைத்தன்மையை வெளிப்படுத்துவதாகும்.

வறுமையிலும் வண்மை

            நாட்டிலே என்னதான் வாரிக் வாரிக் கொடுக்கும் மன்னன் இருந்தாலும், தவறாது பொழியும் மழை பொய்த்து விட்டால் மக்களால் என்ன செய்ய முடியும்?  தன்னை நாடி வந்தவர்களுக்கு கைமாறு பார்க்காமல் உதவின நல்லியக்கோடனுடைய ஓய்மானாட்டிலும் வறட்சியால், பஞ்சத்தால் வறுமை உண்டாயிற்று,

            “வளைக்கைக் கிணைமகள், வள்ளுகிர்க்குறைத்த

            குப்பை வேளை உப்பிலிவெந்ததை,

            மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து” (சிறுபாண். 136-138)         

பசியினால் வருந்தி வாடுகின்ற கிணைவாசிப்போன் மனைவி அவள் வீட்டிலே உணவை ஆக்குவதற்கு ஒரு பண்டமும் இல்லை. உடனே அவள் குப்பையிலே பயிரான வேளைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளியெடுத்தாள்.  உப்பில்லாமல் வேகவைத்தாள். அண்டை வீட்டார்கள் அதைப் பார்த்தால் பரிகசிப்பார்களே என்று நாணமடைந்து வாயில் கதவைச் சாத்திக் தாளிட்டுக் கொண்டாளாம்.  வீட்டினுள்ளே நிறைந்த தன் சுற்றந்துடன் உண்டாள் என ஆசிரியர் குறிக்கின்றார்.  சேர, சோழ, பாண்டியர் மற்றும் கடையெழு வள்ளல்களின் சிறப்பையும், கொடைத் திறனையும் கூறிய ஆசிரியர் இப்படிப்பட்ட வறுமை நிலையையும் கூறியுள்ளார்.  தன் மக்கள் பஞ்சத்தால் வாடி வருந்தும் போது நல்லியக்கோடனே நேரில் வந்து நலம் விசாரித்தும், அக் குடும்பத்திற்கு தேவையான கொடையளித்தும் இருக்க வேண்டும் என்பதால் தான் ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.  மன்னனே நேரடியாக மக்களின் குறையைக் கேட்டுத் தீர்த்து வைத்துள்ளான் என்பது நல்லியக்கோடனின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது.        

விருந்தோம்பல் பண்பு

            தன்னை நாடி வந்தவர்களுக்கு வயிராற உணவைக் கொடுத்தவன் நல்லியக்கோடன்.  நெய்தல் நிலத்திலே வாழ்வோர் மீன் உணவையே மிகுதியாக உட்கொள்வார்கள்.

            “வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர்” (சிறுபாண். 163) வறல் குழல் என்பது காய்ந்த கருவாட்டைக் குறிக்கும். இந்தக் கருவாட்டுக் குழம்பினைச் சுடச்சுட ஒவ்வோரிடத்தும் பெற்றுக் கொள்ளலாம்.  வேடர் குலப் பெண்கள் சோற்றோடு புளியைச் சேர்த்துச் சமைப்பார்கள். தான் வேட்டையாடிக் கொண்டு வந்த ஆமானையும் சமைப்பார்கள்.  புளிச் சோற்றோடு ஆமான் கறியையும் விருந்தினர்க்கு இட்டுத் தானும் உண்டார்கள்.  

            உழவர் குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள்.  வயல்களிலே பிடித்த நண்டையும், காட்டிலே விளைந்த பீர்க்கங்காயையும் சேர்த்து சமைத்தார்கள் என்பதை,

            “இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த    

            அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,

            கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவிர்;” (சிறுபாண். 193-195)

என ஆசிரியர் கூறுகிறார். இவ்வாறு எயினர்கள், வேடர்கள், உழவர்கள் ஆகியோர் விருந்தோம்பலைச் செய்து வந்தார்கள். அரசனான நல்லிக்கோடன் தான் மட்டும் விருந்தோம்பலைக் கடைபிடித்ததோடு நின்றுவிடாமல் தன் மக்களையும் அவ்வாறு செய்ய வைத்து   நாட்டில் உள்ள மக்களிடையே உதவும் பண்பையும் வளர்த்தான். மேலும் மூங்கிலின் உட்பட்டையை உரித்தலைப் போன்று தூய ஆடையினை உடுக்கத் தருவான்.  பாம்பின் நஞ்சேறி மயக்கினார்ப்போன்று களிப்புத் தரும் கள்ளைப் பருகத் தருவான்.  வீமன் மடை நூலில் குறித்தப்படி சமைக்கப்பட்டப் பல்வேறு உணவு வகைகளை அவனே பக்கத்தில் நின்று பரிசிலரை உண்ணச் செய்யும் தகைமையுடையவன் நல்லியக்கோடன் என்னும் மன்னன்.  முடிவேந்தரின் அரண்களை அழித்து அப்பகைவர் நாட்டில் பெற்ற பொருள்களைக் கொண்டு தன்னை நாடி வந்தவர்களின் வறுமையைப் போக்கியவன்.  பாணர்களுக்கு வேலைப்பாடு அமைந்த தேர், யானை, குதிரை முதலியவற்றையும், பல வகையான ஆடை, அணிகலன்களையும் அளவின்றித் தந்து உதவக் கூடியவன் ஆவான்.          

நல்லியக்கோடானின் குணநலன்கள்

            போர் வீரர்களும், பெண்களும், மக்கள் பலரும் நல்லியக்கோடனின் குண நலன்களைப் போற்றுகின்றனர். வேந்தனிடம் இருக்க வேண்டிய பண்புகளாக “1)ஆண்மை, 2) அருள், 3) கொடை, 4) காட்சிக்கு எளிமை. 5) நாள்தோறும் நல்லற வினைகள் செய்தல், 6) அன்பு மனைவியரைப் பிரியாமை,”5 போன்றவை கண்டிப்பாக வேண்டும் என அரங்க. இராமலிங்கம் கூறுகிறார்.  சிறுபாணாற்றுப்படையில்; நல்லியக்கோடனைப் பற்றிக் குறிக்குங்கால்

            “செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும்,

                இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,

                செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ரத்த,” (சிறுபாண். 207-209)

என்கிறார். சான்றோரும், போர் மறவரும், அரிவையரும், பரிசிலரும் அவனை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.  செய்ந்நன்றி மறவாப் பண்பினன், சிற்றினம் சேராச் சிறப்பினன், இனிய முகத்தினன், அவன் வீரத்திற்கு அஞ்சிப் பகைவர்கள் அடிபணிவார்கள்.  அவனுடைய அருளும் திறன், வெகுளாமைப் பண்பு, அஞ்சாமை, ஆண்மை முதலியவை நல்லியக்கோடனின் குணநலன்களாகக் கூறப்படுகின்றன.

            தாய், தந்தை, ஆசிரியர், தமையன், அந்தணர், அறவோர் ஆகியோரைப் பலகாலும் வணங்கும் தன்மை உடையவன். உழவர்களுக்கு நிழல் போன்றவன். பரிசிலருக்கு நல்லியக்கோடன் தந்தையைப் போன்றவன்.

            வறுமையுற்றுக் கிடக்கும் மக்களுக்குத்தான் கொடை தேவைப்படும். உழைப்பினால் செல்வ நிலைகளில் வளர்ச்சி பெற்று இருக்கும் மக்களுக்குக் கொடையும் மன்னனின் அவரவணைப்பும் தேவைப்படாது.  ஆனால் வறுமை நிலையில் வாடிக் கிடக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி புரிதலே உண்மையான அன்பாக இருக்க முடியும்.  இத்தமிழகத்தில் பல அரசர்கள் ஆண்டிருப்பினும், வெளியில் தெரியாத ஓய்மானாட்டு நல்லியக் கோடனின் கொடையும் ஆளுமையும் பாராட்டத்;தக்கது.

சான்றெண் விளக்கம்

1.         சங்ககால வாழ்வியல், டாக்டர்.ந.சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், ப.49

2.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க. இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.30

3.         பத்துப்பாட்டு (முதற்பகுதி) எம். நாராயண வேலுப்பிள்ளை, முல்லை நிலையம், சென்னை, ப.113.

4.         பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், சாமி. சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை, ப.67.

5.         சங்க இலக்கியத்தில் வேந்தர், அரங்க இராமலிங்கம், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.98.

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

பரத்தையர்கள் ஓர் ஆய்வு

மங்கையராய் பிறப்பதற்கேநல்ல

மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”.

            என்று பெண்மையின் சிறப்பை கவிமணி பாடியதற்கு இணங்க நம் நாட்டின் பெண்கள் கண்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாய், மகள், மனைவி, தோழி என பல்வேறு படி நிலைகளில் தன்னை இவ்வுலகிற்கே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பெண்களின் வாழ்வு அலைக்கழிக்கப்படுவதும், தூக்கி எறியப்படுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. அவ்வாறு தொன்று தொட்டுவரும் மனிதர்களின் வாழ்க்கையில்பரத்தையர்என்றொரு குலம் காலம் காலமாய் மனித சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

யார் இந்த பரத்தையர்கள்?

            பழங்காலத்தில் தன் நகரத்தை விட பக்கத்தில் உள்ள நகரம் செல்வ சிறப்புமிக்கது எனில், உடனே அந்நகரை கைப்பற்ற எண்ணம் உருவானது. அக்கால மன்னர்களுக்கு அதன் விளைவாக எதிர் நாட்டு மன்னனை வழிய அழைத்துப் போரிட்டனர். இப்போரில் வெற்றி தோல்வி என்பது இரு நாட்டு மன்னர்களுக்கு தான். ஆனால் இப்போரிலோ உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையோ பல. மனிதர்கள் மட்டுமின்றி குதிரை, யானை போன்ற விலங்குகளும் தான்.

            இப்படிப்பட்ட பொறாமை, வஞ்சகம், ஆசை உள்ள காலக் கட்டத்தில் பகை நாட்டு மன்னனை தோற்கடித்த கையோடு அவ்வீரர்கள் அந்நாட்டில் உள்ள பொன், பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். இது போதாது என்று பெண்களின் தலைமுடியினை அறுத்து தன் தேரை இழுக்கப் பயன்படுத்தினான் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. மேலும் போரிலே இறந்த வீர மறவர்களின் மனைவி அன்றிரவே தன் கணவனோடு தீயினுள் புகுவாள். இல்லையென்றால் பகை நாட்டு மன்னன் பெண்களை வழிய இழுத்து செல்வான். அங்கு அவன் நாட்டிலே அடிமைகளாகவும், வீரர்களுக்கு தன் உடல் மூலம் விருந்து படைப்பவளாகவும் இருந்து சாகவேண்டும். இப்படியெல்லாம் புண்படுவதைவிட இன்றே கணவனோடு தீ புகுதல் தகும் என மகளிர்கள் நினைத்திருக்க வேண்டும். ‘‘இதுவே, பின்னாளில் உடன்கட்டை ஏறுவதற்கு காரணமாய் இருந்ததது’’1என முனைவர். .முத்துச்சிதம்பரம் கூறுகின்றார்.

            கணவனோடு தீ புகுந்த மகளிர்களின் மகள்கள் தன் பெற்றோரை இழந்து அநாதை ஆக்கப்பட்டு இருக்கலாம். அந்த சின்னஞ்சிறு வயதில் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அந்த ஊரில் உள்ள கோவில்களில் வாசலை கூட்டியும், பெருக்கியும் வேலை செய்து அங்கு கொடுக்கும் உணவினை உண்டு தனது வாழ்க்கையினை நடத்தியிருக்கலாம். சொந்தபந்தம் இல்லாத அவர்களை சில ஆண் நாயக வர்க்கத்தினர் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்திருக்கலாம். காலம் செல்லச் செல்ல இதுவே தொழிலாக மாறி இருக்க வேண்டும்.

தொல்காப்பியர் கூறும் பரத்தையர்கள்

பரத்தையர்கள் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்கு முன்னே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தனது கற்பியலில்

            பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்

            நீர்த்தகன்று உறையார் என்மனார் புலவர்

            பரத்தையற் பிரிந்த காலையான” (தொல்.கற்பு.185)

எனத் தலைவன் தன் மனைவிக்கு பூப்பு வெளிப்பட்டு பன்னிரெண்டு நாளும் அகலமாட்டான். அதன்பிறகு பரத்தையரின்; இல்லத்திற்கு செல்வான் என்றும், தொல்காப்பியர் பரத்தையரைகாமக்கிளத்தியர்எனவும் அழைக்கின்றார்.

சங்க காலமும் பரத்தையரும்

            சங்க கால இலக்கியத்தில் அகப் பொருள் பாடல்களில் பரத்தையர் பிரிவுச் செய்தியைக் காணலாம். குறிப்பாக மருதத் திணை பாடல்களில் மிகுதியாக காணப்படும். சங்க காலத்தைப் பொறுத்தவரைபரத்தமை என்பது ஒழுக்கமாகவே கருதப்பட்டிருக்கிறதுபரத்தை, கணிகையர், சேரிப் பரத்தையர், காம கணிகையர், காதல் பரத்தையர், காம கிளத்தியர், உரிமை மகளிர் எனப் பல்வேறு பெயர்களுடன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவ்வகை பரத்தியர்களில் இரு வகை உண்டு. முதலாவதாக தினம் தினம் ஒரு ஆடவரோடு தம் வாழ்க்கையை நடத்திய பரத்தியர்கள் சேரிப்பரத்தியர் அல்லது காம கணிகையர் எனப்பட்டனர். இரண்டாவதாக ஏதேனும் ஒரு ஆண் மகன் மேல் விருப்பம் கொண்டு அவன் ஒருவனோடு மட்டும் சேர்ந்து வாழ்தல், ஆனால் அவர்கள் திருமணம் மட்டும் செய்வதில்லை என்ற குறிக்கோளும் இருந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக கோவலன், மாதவி உறவைச் சுட்டிக் காட்டலாம்.

பரத்தையரின் வாழ்க்கை

            மதுரைக் காஞ்சியில்; பரத்தை ஒருத்தி கூர்மையான பற்களையும், மூங்கில் போன்ற தோளினையும், கைவந்திகை என்னும் அணிகலனும், நீண்ட கருமயிரினை உடையவளும், இனிமையாக பேசும் திறனுடையவளான இவள், தன்னை அழகு செய்து கொண்டு வீதிகளில் மெத்தென நடந்து இளைஞர்களை கைத்தட்டி அழைத்தாளாம் என்பதனை,

            மயில் இயலோரும், மட மொழியோடும்,

            கைஇ மெல்லிதின் ஒதுங்கி, கைஎறிந்து,

            கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப” (மதுரை.418-420)

என ஆசிரியர் கூறுகின்றார். மேலும் காமம் நுகர்ச்சியின்றி வேறொன்றையும் அறியாத இளைஞர்களை மயக்கி புணர்ந்தார்கள். இவர்கள்;நீண்ட வீதிகளிலும் வீடுகள் தோறும் கையில் மணம் கமலும் பூக்களை ஏந்தியவர்களாய் நிற்பார்களாம்.   ஐங்குறுநூற்றில் பரத்தையர் வீட்டிற்கு சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது, இதற்கு அன்பே காரணம் என ஆசிரியர் கூறுகிறார். “ஆண்கள் பரத்தையர்களின் வீட்டிற்கு போகும் குணமுடையவராக இருப்பினும், இல்லாவிடினும் எப்போதும் அன்புடன் தான் இருந்தார்கள்”2 என சாமி சிதம்பரனார் கூறுகிறார்.

            பண்டைய தமிழர்கள் பலதாரமணம் புரிந்து வந்துள்ளனர். தலைவன் பரத்தையரிடம் செல்வதும், தலைவி ஊடல் கொள்வதும் தன் குழந்தையை முன்னால் நிறுத்தி தலைவன் தலைவியின் ஊடலை தணிப்பதும், பரத்தை தன் தலைவனின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதும்; அதனைக் கண்ட தலைவி பரத்தையை திட்டுவதும் மருதத்திணையில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும். இப்பரத்தையர்களால் பல குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் எழுந்தது. பரிபாடல் தலைவி ஒருத்தி பரத்தையை காமுகர்க்கு பொதுமகளின் இரண்டு இதழ்களும் சேர்த்த பன்றித் தொட்டி, உழுகின்ற சால் என பழித்துரைக்கிறாள்(பரி.20). இப்பரத்தையர் ஒழுக்கத்தினை சான்றோர்களும், பெண்களும் கண்டித்தும் இருக்கிறார்கள்.

வள்ளுவர் குறளில் பரத்தையர்

            பெண்இயலார் எல்லோரும், கண்ணின் பொது உண்பர்

            நன்னேன், பரத்தநின் மார்பு” (குறள்.132-1)

            என வள்ளுவர் பரத்தையர்கள் உன் மார்பினை கண்ணால் கண்டு அனுபவிப்பர். ஆதலால் நான் உன்னை அணைக்கமாட்டேன் என தலைவி கூறுகிறாள். ஆக இருண்ட காலத்தில் களவு, சூது, பொய், வஞ்சகம் இவையெல்லாம் நடந்திருக்கும்போது கண்டிப்பாக பரத்தையரின் வாழ்க்கையும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

தேவாரக் காலம்

            சமணமும், பௌத்தமும், இசையும், நடனத்தையும் அறவே வெறுத்தன. ஏனெனில் அவை காமம் விளைவிக்கும் என்பதால். ஆனால் சைவம், வைணவம் போன்ற மதங்கள் இசையையும், நடனத்தையும் போற்றியது. அப்போது நடனம் கற்றுக் கொண்ட நடன மகளிர்கள் வேத்தியல், பொதுவியல் போன்ற கூத்துக்களை ஆடினர். “மதுரையில் அரசன் முன்னால் நாடக கணிகையர் நடன அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவர்களுக்கு பாண்டியன் தலைக்கோலிப் பட்டம் அளித்ததோடு, அவர்கள் ஆடல், பாடல்களுக்கு 1008 கழஞ்சு பொன் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டனர்.”3 என முனைவர் எஃப் பாக்ய மேரி கூறுகிறார்.

பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்

            சிலம்பில் மாதவியின் தோற்றமே கணிகையர் குலத்தை வெளிக்காட்டத்தான் என்பது போலவே ஆசிரியர் அமைத்திருக்கின்றார். தனது குலத்தொழிலான பரத்தமையை ஏற்கும்படி தாய் சித்ராபதி மாதவியிடம் கூறுகின்றாள். நடனத்தில் கற்று தேர்ந்துள்ள மாதவியும் பரத்தமை தொழிலுக்கு ஒத்துக்கெண்டு கூனியிடம் ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவரை இங்கு கூட்டி வா என கூறுகிறாள். இதனை,

நூறு பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன,

மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து,”(சில்மபு.164-167)

            கோயிலில் மாதவியின் நடனத்தை கண்டு ரசித்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கி, அன்றிரவே மாதவியுடன் இன்பம் நுகர்ந்தான். சோழர் காலத்தில் கோயில்களில் ஆடவும் பாடவும் நிவந்தங்கள் கொடுக்கப்பட்டன. “தஞ்சைக் கோயிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆளுக்கொரு வேலி நிலம் கொடுக்கப்பட்டது. பதிலியார் என இவர்கள் பெயர் பெற்றனர். இக்காலத்தில் திருவிழாக்களில் இவர்களது நடனம் தவறாது இடம் பெற்றது.”4

நாயக்கர் காலம்

            தேவரடியார்கள் என்ற வழக்கம் நாயக்கர் காலத்தில் தேவதாசி முறை என மாறிப்போய் இருந்தது. “நாயக்கர் மன்னர் காலத்தில் தேவதாசிகள் என்போர் கோயில்களில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் பூசையின் போது சிலைக்கு முன் நடனமாடியதோடு இறைவனுக்கு உணவூட்டியதாக டாக்டர் .தட்சிணாமூர்த்தி கூறுகிறார். கோயிலுக்கு பெண்களைப் பொட்டுகட்டும் வழக்கம் இவர்கள் காலத்தில் இருந்தது. அரண்மனையில் இருந்த அரசன் சிலைக்கு முன் நின்று ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மகளிர் நடனம் ஆடினர் என்கிறார் நியுனிசு.”5

கணிகையர்கள் கற்று வைத்திருக்க வேண்டிய கலைகள்:

1.         வேத்தியல் மற்றும் பொதுவியல் கூத்துக்கள்

2.         பந்தெறிந்து ஆடதல்

3.         உணவு வகை பற்றிய கலை

4.         காதற்கலையின் எல்லா செயல்களும்

5.         திறம்படவும் நயம்படவும் பேசுங்கலை

6.         பிறர் காணாது திரியும் கலை

7.         பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை

8.         வேடமணிதல்

9.         சோதிடம் முதலிய 64 கலைகளை உணர்ந்திருத்தல்6

கணிகையர் இவையெல்லாம் கற்றிருக்க வேண்டுமென முனைவர் .சுப்ரமண்யன் கூறுகின்றார். இப்பரத்தையர்கள் தங்களது தொழிலை செய்யாது விடுப்பின் தண்டனையும் தரப்பட்டது.

இக்காலத்தில் பரத்தையர்

            பரத்தையர் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும், புன்சிரிப்பையும் மயக்கும் கண்களையும் எப்போதும் தன்னிடத்தில் கொண்டிருப்பவர்கள். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற எத்தனையோ இலக்கியங்கள் இவர்களின் நிகழ்வுகளை சொல்லி இருக்கின்றது. இத்தொழிலுக்கு காவல்துறை கடுமையான தண்டனையும் தருகின்றது. இருப்பினும் சினிமா மற்றும் கையில் காசு உள்ள செல்வந்தர்களின் கடற்கரை ஓர பங்களாவிலும் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வை தொலைத்த இந்த பெண்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.         பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் .முத்துச்சிதம்பரம், முத்துப்பதிப்பகம், திருநெல்வேலி. ஐந்தாவது பதிப்புஅக்டோபர் 2005,-91.

2.         எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்புஜூலை 2008,-37

3.         காலந்தோறும் தமிழர் கலைகள், முனைவர் எஃப்.பாக்யமேரி, அறிவுப்பதிப்பகம், சென்னை. முதல்பதிப்புமார்ச் 2008,-48

4.         மேலது. -84.

5.         மேலது. -85

6.         சங்ககால வாழ்வியல், முனைவர் . சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இரண்டாம் பதிப்புஜனவரி 2010, -398

 

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

சங்க இலக்கியத்தில் வாழ்வியல் நோக்கில் பெண்கள்

          சங்க இலக்கியங்கள் பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் படம் பிடித்துக் காட்டுவன. அதனால்தான் சங்க இலக்கியங்கள் தமிழர்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன.  சங்ககாலத்திலே பெண்கள் வீரமிக்கவராகளாவும், புலமை பெற்று அரசர்களுக்குக் கூட அறிவுரை வழங்கியும், விருந்தோம்பல் என்ற தலையாயப் பண்பைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

கற்பு நெறியில் பெண்கள்

       பெண்கள் இல்லாத சமூகம் வெறுமையுற்றது.  இவ்வுலகில் பெண்மையைப் போற்ற வேண்டும் “சங்ககாலப் பெண்கள் ஆண்கள் அளவிற்குச் சமவுரிமை பெறவில்லை என்றாலும் அடிமைகளாய், வாழ முடியாதவர்களாய் இல்லை.  சமயம், கல்வி, காதல் ஆகியவற்றில் உரிமை மகளிராய்த் திகழ்ந்தனர்”1 என இறையரசன் கூறுவது உண்மையானது.  சங்க காலத்தில் நச்செள்ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஒளவையார் போன்ற பெண்பால் புலவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.  அவர்களின் செருக்குப் பற்றிக் கூறும்போது.

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே” (புறம்.206:13)

          எனக்குறிப்பிட்டுள்ளனர். என்னிடம் புலமை இருக்கிறது.  நான் எந்த ஒரு மன்னனையாவது புகழ்ந்து பாடிப் பரிசிலைப் பெற்றுவிடுவேன்.  நீ இல்லையென்றால் என்ன? எனக்கு எந்தத் திசைச் சென்றாலும் சோறு கிடைக்கும் என ஒளவையார் அதியமானிடம் கேட்பதிலிருந்து பெண்களுடைய உயர்வை சங்ககாலத்தில் நலமாக உள்ளது என அறியலாம்.

                                             உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

                                             செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றென”  (தொல்.பொருள்.களவு.23)

          பெண்களுக்கு உயிரை விட நாணமே சிறந்தது என்றும், அந்நாணத்தை விட குற்றமில்லாத கற்புதான் சிறந்நது எனத் தொல்காப்பியரும் பெண்ணினுடைய கற்பின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.  “கற்பு என்பது தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதன் மேற்கோள் என்பர் நச்சினார்க்கினியர்”2 சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பெண்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் தன்னுடைய தலைவனைத் தானே தெரிவு செய்யும் மனப்பான்மையும் பெற்றிருந்தனர்.  தங்கள் தலைவர்களோடு திணைப்புனம், காடு, வயல், கடற்கரை மணல், சுனை போன்ற இடங்களில் காதலை வளர்த்துக்கொண்டார்கள்.

                                               நிலத்தினும் பெரியதே, வானினும் உயர்ந்தன்று

                                                   நீரினும் ஆர் அளவின்றே”          (குறும்.3:1-2)

          இங்கு தலைவனோடு தலைவி கொண்ட காதலானது நட்பு, மொழி, மனம், மெய் என்பதைக் கடந்து நிற்பது ஆகும்.  நிலம், வான், நீர் என மூன்றினையும் விட உயர்ந்தது என்கிறார் ஆசிரியர்.  ஊரில் ஏற்பட்ட அலரால் தலைவியுடைய காதல் பெற்றோர்க்கு தெரிய வருகிறது.  பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், தலைவி தன் தலைவனோடு உடன்போக்கு செல்வதற்கும் தயங்க மாட்டாள் என்கிறது சங்க இலக்கியப்பாக்கள்.

துள்ளித் திரிந்த மகளிர்

          எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவுமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இல்லையென்றால் குறிஞ்சிப்பாட்டிலே தலைவி ஒருத்தி தன் தோழிகளுடன் சுனை நீராடுகையில் அங்கே இருக்கும் கற்பாறையில் தொண்ணூற்று ஒன்பது வகையான மலர்களைப் பறித்து வைத்து அழகு பார்த்திருக்க மாட்டாள்.

                                                     பொலம்செய் கழங்கின் தெற்றி ஆடும்” (புறம்.36:4)

          அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் வண்டல் மண்ணால் பாவை செய்வதும், மணல் மேட்டிலே கழற்சிக் காய்களை ஒருவருக்கொருவர் வீசி விளையாடுவதும், பொற்சிலம்பு ஒலிக்க மேல்நிலை மாடத்தில் பந்தாடுவதையும், சுனை நீராடல், சிற்றில் இழைத்தல், துணைங்கையாடல்  குரவை ஆடல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளனர்

நல்லறமே இல்லறம்

        ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் தவிர்க்க முடியாதது.  தன்னை திருமணப் பந்தத்திலே ஈடுபடுத்தி வாழ்க்கையை முழுமை ஆக்குகின்றான். ஒவ்வொரு பெண்ணும்  தனக்கு எவ்வாறு கணவன் அமைய வேண்டும் என கனவு காண்பாள்.  அக்கால மகளிரும் தனக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சா நெஞ்சம் உடையவனாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர்.  காளையை அடக்கும் வீரர்கள், வட்டக்கல் தூக்கும் வீரர்களுக்கே தங்கள் மனதினைப் பறிக்கொடுத்தனர்.  வீரம் இல்லாத ஆண்களை வேண்டாம் என ஒதுக்கினர் என்பதை,

                                         கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

                                             புலலாளே, ஆயமகள்” (கலித்.103)

          கலித்தொகை தலைவி மறுபிறப்பும் கூட அந்த வீரமற்றவனை திருமணம் செய்யமாட்டேன் என்கிறாள்.  சங்க இலக்கியத்தில் ஒத்த வயதுடைய தலைவனும் தலைவியும் காதல் கொண்டு திருமணம் செய்யலாம் என்கிறது.  தொல்காப்பியர் கூட, பத்து வகையான ஒழுகலாறுகளைக் (தொல்.பொருள்.மெய்.25) கூறிச் செல்கின்றார்.  தலைவியின் திருமணத்தின் போது, பந்தலிட்டு, புதுமணல் பரப்பி, மனை விளக்கு ஏற்றி மாலைகளை தொங்க விட்டனர் என்றும், புதல்வனைப் பெற்றெடுத்த மகளிர்கள் நெல்லும் மலரும் கலந்ததை அம் மணமக்கள் மேல் தூவி வாழ்த்துவதாக கூறுகிறது அகநானூற்றுப்பாடல் (அகம்.86). நல்லநேரம் பார்த்தல், சகுனம் பார்த்தல், திருமணத்தின் போது உணவு பரிமாறுதல், (அகம்.136) முரசு கொட்டுதல் போன்ற நிகழ்வுகள் சங்க காலத்தில் இருந்ததாக அறிகின்றோம்.  ஆனால் அக்காலத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்ததாக தெரிவில்லை.

       மலைப்பக்கத்தில் வாழும் குறவர்கள் தம் மனைவிமார்கள் தவறாது தங்கள் கணவர்களைத் தினம்தினம் தொழுதெழுவதால் அக்குறவர்கள் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம் என சங்கப்பாடல் கூறுகிறது.  சங்ககாலத்து மகளிர் தங்களுடைய கணவர்களையும் கண்ணுக்கு கண்ணாக போற்றி வந்தனர்.  திருமணத்திற்கு முன் துள்ளித் திரிந்த மகளிர் திருமணம் ஆனபிறகு தன் கணவனே உயிர் என்று அன்பிற்கு ஏங்கும் பாவைகளாகவும் திகழ்கின்றனர்.

                                                 இம்மை மாறி மறுமை ஆயீனும்,

                                                    நீ ஆகியர் எம் கணவனே” (குறும்.49:3-4)

      இந்தப்பிறப்பு மட்டுமின்றி இனி வருகின்ற ஏழ்எழு பிறப்புகளிலும் நீயே என் கணவனாக வர வேண்டும் எனச் சங்ககால மகளிர் ஆசைப்பட்டனர்.  மேலும், பொருள் தேடத் தன் தலைவன் பிரிந்து சென்றால் அவன் இல்லாத நாட்களை ஒவ்வொரு நாளும் யுகமாக கழித்தும், முள் படுக்கையில் இருப்பது போன்று எண்ணியும், பிரிந்து சென்ற தலைவனின் காட்டு வழிக் கொடுமையினை எண்ணி வருந்தியும், கார்காலத்தை எதிர் நோக்கியும், சுவரிலே கோடிட்டு தலைவன் வரவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தனர் என நற்றிணைப்பாடல் (நற்.324) மூலம் அறியலாம்.  அதுபோல் ஐங்குறுநூற்றில் ஒரு தலைவி திருமணமாகித் தலைவனுடன் தன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள்.  புகுந்த வீட்டிற்குச் சென்ற ஓரிரு மாதம் கழித்து முதன் முதலில் தன் பிறந்த வீட்டிற்கு வரும் தலைவியிடம் நலம் விசாரிக்கிறார்கள் உறவினர்கள் என்பதனை,

                                                        மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே” (ஐங்,203:4)

          என்னும் பாடல் வரியில், குளத்திலே கலங்கிய தண்ணீரை வெப்பம் மிகுதியால் அந்த பக்கம் சென்ற மானானது உண்டது.  அந்த எச்சில் தண்ணீர் கூட எனக்கு இனிய தேனோடு கலந்த பசுவின் பாலை விட இனிமையானது என்கிறாள் தலைவி.  தன் புகுந்த வீடும், நாடும், ஏழ்மை வறட்சி உடையது என்பதை அறிந்திருந்தும், உறவினர்களிடம் தன் கணவனின் நலன் கெடாதவாறு தலைவி கூறுகிறாள்.  இதை விட ஒரு பெண் தன்னுடைய புகுந்த வீட்டிற்கு வேறென்ன பெருமை சேர்க்க முடியும்.

விருந்தோம்பல்

          நம் தமிழ் பண்பாட்டில் பகைவர்களாக இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அவர்களை வா என்று அழைக்கும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.  மகிழ்ச்சியிலும் பெரும்மகிழ்ச்சி மற்றவர்களுக்கு உணவு அளித்து ஆனந்தப்படுவதே ஆகும்.     அப்படிப்பட்ட   உயர்வான பண்பினை  எப்போதும்  குறையாத     அளவிற்கு பெற்றிருந்தனர் சங்ககாலப் பெண்கள். தொல்காப்பியர் கூட,

                                            விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஒம்பலும்

                                               பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்” (தொல்.பொருள்.கற்பு.11)

          எனக் கூறுகிறார். ஒழுக்கமும், பொறுமை குணத்தையும், அடக்கமான உடைமையினையும் கொண்ட பெண்கள் விருந்தினரை நன்றாகக் கவனிப்பார்கள்.  “விருந்தினரை வரவேற்று அவர்கள் விடைபெறும் போது அவர்கட்கு வெற்றிலைப் பாக்குக் கொடுக்கும் வழக்கம் உள்ளது”3 “விருந்தினரை வழி அனுப்பும் போது ஏழடி உடன் பின் சென்று அனுப்புதல் வழக்கம்”4 போன்றவை தமிழரின் பண்பாட்டைக் கூறுகிறது.

                                          செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்” (புறம்.168:13)

          பன்றி தோண்டிய வயலில் திணை விதைத்து, அவற்றை அறுவடையும் செய்த உழவுப் பெண்கள் திணைச் சோற்றோடு பாலை உலை நீரோடு வார்த்த மானிறைச்சியைத் தன்னுடைய விருந்தினர்க்குப் படைத்தனர்.  மேலும் தங்கள் கணவன் இல்லாத நேரங்களில் விருந்தோம்பல் செய்வதில்லை என்ற செய்தி அவர்களின் கற்புத்திறத்தைக் காட்டுவதாக அமைகிறது.

பரத்தை மகளிர்

          கணவன் பரத்தையர் பால் பிரிந்து சென்றாலும் அவன் மேல் கோபம் கொள்ளாமல் ஊடலை மட்டும் காட்டும் மகளிரையும் சங்ககாலத்தில் காணமுடிகிறது.  விலை மதிக்க முடியா வைரம் போல நல்ல மகளிர் இருந்தாலும் பரத்தை போன்ற விலை மகளிரும் இருக்கவே செய்கிறார்கள்.  மேலும் காதல் பரத்தை,  காமகிளத்தி போன்றோரும் எதிர் காலத்தை அறியும் கட்டுவிச்சி, வெறியாட்டு நடத்தும் குறமகள், தேவராட்டி, தோழி, செவிலி, நற்றாய் என சங்ககாலத்திலே இருந்து வந்தனர்.

குழந்தைச்செல்வம்

          செல்வம் எவ்வளவு இருப்பினும் அது குழந்தைச் செல்வத்திற்கு ஈடாகாது.  ஒரு பெண் பிறந்த விட்டால் அவள் தாய்மையை எய்தாவிடில் அவளுடைய உடல் தீயிலே வேகாது.

                                         இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,

                                            நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,” (புறம்.188:4-5)

          குழந்தையானது குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டும், பிசைந்தும், வாயால் கவ்வியும், கையில் துழாவியும், சோற்றை தன் உடம்பிலே கொட்டியும் உண்ணுகின்ற அழகைப் பார்ப்பதற்கு அந்தத் தாய்க்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.  இப்படிப் பாசம் மிகுந்த தாயாக மட்டும் அல்லாமல் வீரம் மிகுந்த தாயாகவும் இருக்கின்றாள்.  புறநானூற்றிலே ஒரு தாய் முதல் நாள் தந்தை, அடுத்த நாள் கணவன், அடுத்த நாள் தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு வளர்த்த பிள்ளையைப் போருக்கு அனுப்புகிறாள்.  அப்போரிலே தன்மகன் மார்பிலே புண் பட்டு வீரமரணம் அடைந்ததை எண்ணி மார்பிலே பால் சுரந்ததாம் அந்தத் தாய்க்கு என்கிறார் ஆசிரியர்.

கைம்பெண்ணும் கலக்கமும்

          பெண்ணாகப் பிறந்து பல தருணங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவளுடைய கணவன் இறந்துபட்டால் அப்பெண்ணின் நிலை என்ன? இழிவு, துன்பம், போராட்டம் தான் வாழ்க்கையாக அமைகிறது.  கைம்மை பற்றி பா.இறையரசன் கூறும் போது, “கணவன் இறந்த பிறகு வாழும் மகளிர் கைம்பெண்கள், ஆளில் பெண்டிர்,  கழிகல பெண்டிர், படிவ மகளிர், உயவர் பெண்டிர், பருத்திப் பெண்டிர் எனப்பட்டனர்,  மேலும் அவர்கள் அணிகலன்கள் அணியாமலும், உப்பில்லாத உணவை மட்டுமே உண்டனர்”5 என்கிறார். இப்படிப் பெண்கள் சிறுவயதில் மகிழ்ச்சியும் இன்பமும், பெற்றவர்கள், திருமணம் ஆகி கைம்பெண் ஆனால் அவர்கள் உடன்கட்டை (புறம்.247) ஏறுவது என்பது  வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது.

சான்றெண் விளக்கம்

  1. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு . 1993, பக்.296-297.
  2. சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், டாக்டர்.மு.பொன்னுசாமி, இந்து பதிப்பகம், கோவை, முதற்பதிப்பு: டிசம்பர்-1990, பக்.203.
  3. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர்.கே.கே.பிள்ளை, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.  மறுபதிப்பு: 2000, பக்.65
  4. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.266.
  5. தமிழர் நாகரிக வரலாறு, பா.இறையரசன், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு: 1993, பக்.257.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

www.iniyavaikatral.in

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »