Monday, September 8, 2025
Home Blog Page 38

விடியலைத் தேடுகிறேன்

பொழுதுபுலர்ந்து விட்டது

♥ விடியலைஇன்னும்

   தேடிக்கொண்டிருக்கிறேன்..

   சாலையோரத்தில்

  அம்மாபிச்சைப் போடு

  என் காதுகளில் ரீங்காரம்

  விடியலைத் தேடுகிறேன்..!

 

       ♥  குட்டிச்சுவரில்

வேலையில்லாப் பட்டதாரிகள்

விடியலைத் தேடுகிறேன்..!

 

      ♥ பூங்காக்களில்

        சிருங்கார ராஜாக்களாக

        சோம்பேறிகள்!

        விடியலைத் தேடுகிறேன்..!

 

      குடிமகன்களின்

மகத்தான வெற்றிகளால்

வீதியிலேப் பிள்ளைகள்..

விடியலைத் தேடுகிறேன்..

 

  ♥   கல்வியை

வியாபாரம் செய்யும்

விகடகவிகள் பலபேர்

படிப்பை அறியத் துடிக்கும்

பாமரச்சிறுவர்கள்கன்னத்தில்

கைவைத்தபடியே

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   குடும்பம் என்ற

கதம்பத்தில்ஒற்றுமையைக்

காணத்துடிக்கின்றேன் !

நீயா.. நானா.. போட்டியில்

விவாகரத்து வாங்கி

வாசலோடு பிரிகிறார்கள் !

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   தொலைந்து போன விடியல்

தூரத்தில் இல்லை

கைக்கு எட்டும் தூரம்தான் !

கண்ணால் கண்டு

கைகளினால் பூட்டிடுவேன்

விடியலை ஒரு நாள் !

 

    ♥    தொலையாமல் இருக்கும்

புன்னகையைத் தொலைத்து

புகைத்துக் கொண்டிராதே

பூமியில் உன் பெயரினைச் சொல்ல

போடு விதையை,

முளைக்கட்டும் மரம்அது

பூப்பூக்கட்டும் கனியாகட்டும்..!

 

  ♥   பம்பரமாய் சுழன்று

வெற்றி பெறுநான்

விடியலைத் தேடுவதை

நிறுத்தி விடுகின்றேன்..!

கவிஞர் முனைவர்.க.லெனின்

ஒரு சிறுவனின் அழுகை

             காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” என்றாள் சந்திரா. கையில் கோத்த பூவை மடக்கி மடக்கி இன்னும் வேகமாகக் கட்டிக்கொண்டிருந்தான் விநாயகம். பெருமாள் கோயிலு வாசல்ல பூ  கட்டி விக்கிற தொழில்தான் விநாயகத்துக்கு. அப்பா அம்மா வயசானவங்க. படிப்பும் ஏறல விநாயகத்துக்கு. அப்பாக்கூட சேர்ந்து பூ  கட்டுற வேலையப் பாத்துகிட்டான். சின்ன வயசுல இருந்து சேத்து வச்ச காசுக்கு முன்னூறு சதுர அடியில ஒரு வீடு கட்டியிருந்தான். நல்ல வீடு இருந்தாதான் பையனுக்கு பொண்ணு கிடைக்கும்ன்னு யாரோ சொன்னங்க… அதான் விநாயகம் வீடு கட்டியிருக்கான். சந்திராவும் படிச்சவ கிடையாது. அப்பா அம்மா இல்ல. சந்திராவோட பாட்டிதான் வளத்திச்சி. விநாயகத்துக்கு தூரத்து சொந்தம்தான் சந்திரா. கிழவி செத்ததுக்குப் போன விநாயகத்தின் அப்பா மாணிக்கம் சந்திராவை தன்னோட மகனுக்குப் பேசிட்டார். கிழவி செத்து மூணு மாசம் கழிச்சி திருமணம் நடந்திச்சு. சந்திராவும் கணவனுக்குத் துணையா தினமும் பூ  கடைக்கு வந்து விநாயகத்துக்கு உதவியா இருப்பா. கொஞ்ச நாள்ல அழகான ஆண் குழந்தைய பெத்தெடுத்தா சந்திரா. இப்ப அவனுக்கு ஆறு வயசாகுது. சந்திரா வீட்டிலிருந்து கிளம்பும்போது “அம்மா புரோட்டா வாங்கியாறியாம்மா?” என்றான். “குட்டி, அப்பாகிட்ட சொல்லி கண்டிப்பா வாங்கியாறேன். என்ன?” என்று சொல்லிவிட்டுதான் கடைக்கு வந்தாள்.

      “என்னங்க… நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்கும் ஏதோ நினப்புல இருக்கிங்க? என்னாச்சு…” என்றாள் சந்திரா. தன்னை உணர்ந்தவனாய் “என்ன கேட்ட” என்றான் விநாயகம். “சரியா போச்சு போங்க. நம்ம குட்டி ராத்திரிக்கு வரும்போது புரோட்டா கேட்டான்” “அதுக்கென்ன வாங்கிக்கலாம் சந்திரா” என்றான் விநாயகம்.

      “சரிங்க, நீங்க ஏ ஒரு மாதிரியா இருக்கிங்க?”

      “அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ பூவ நல்லாப் பாத்து கட்டுவியா” என்று முறைத்தான்.

      “உண்மைய சொல்லுங்க. என்னாச்சு?”

      விநாயகத்துக்கு தன்னோட மனைவிகிட்ட எதையும் மறைக்க முடியாதுன்னு தெரியும். “கந்து வட்டிகாரனுக்கு இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள இருநூற்று இருபது ரூபா தரனும். இல்லன்னா நம்ம மானத்த வாங்கி கப்பல்ல ஏத்திருவான். காலையிலிருந்து வியாபாரமே இல்ல. நம்மகிட்ட நூத்தி ஐம்பது ரூபாதான் இருக்கு. பாக்கி எழுபது ரூபாயிக்கு எங்க போவேன்” என்று  புலம்பினான்.

      “என்னங்க சொல்லுறிங்க… இருக்கிறத கொடுத்துட்டு, மீதியை நாளைக்கு கொடுத்துடலாம்ங்க..”

      “அதெல்லாம் அந்த ஆளு ஒத்துக்கமாட்டாரு. கந்து வட்டிக்குப் பணத்த வாங்கிட்டு கட்டுறதுக்கு ரொம்ப சிரமமாயிருக்கு. வாங்குன அசல விட இன்னிக்கு வட்டி அதிகம் கட்டிட்டேன். என்ன பன்றது? வட்டிக்காரர பாத்தாலே எனக்கு வயிறு கலக்குது சந்திரா”

      “என்னங்க இப்படி பேசுறிங்க.. பயப்படாதிங்க! வட்டிக்காரகிட்ட பேசிப்பாக்கலாம். இந்த வருஷம் குட்டிய வேற ஸ்கூல் சேக்கனும். அதுக்கு வேற காசு வேணுமில்லங்க”

      சந்திரா சொல்ல சொல்ல கண்கலங்கியது விநாயகத்துக்கு. மனைவியோட கண்களையே பாத்துக் கொண்டிருந்தான். அவளும் கணவன் கண் கலங்குவதைப் பார்த்தபோது கண்கள் குளமாகியிருந்தன. சடாரென பூக்கடை தூக்கி எறியப்பட்டது. புயலாய் சீறிய பேருந்து பள்ளத்தில் இருந்து ஏறியபோது தன் கட்டுப்பாட்டை இழந்தது. கோயில் ஓரத்தில் உள்ள கடைகளில் மேல் ஏறி நசுக்கியது. கோயில் சுவற்றில் முட்டிமோதி நின்றது அப்பேருந்து. ஓ….ஓ….ஓ…. என்று ஓலக்குரல் எட்டு திசைகளையும் நடுங்க வைத்தது. விநாயகத்தின் தலை மீது பேருந்தின் டையர் நின்று கொண்டிருந்தது. கொஞ்சம் கூட அடையாளம் தெரியாதபடி தலை நசுக்கப்பட்டிருந்தது. சந்திராவின் குடல் வெளியே வந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடையக் கண்கள் மட்டும் இன்னும் விநாயகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தன. கொஞ்ச கொஞ்சமாக சந்திராவின் கண்கள் மூடின. இப்பொழுது மனசு முழுவதும் தன் மகன் குட்டியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

      பற்றி எரிகின்ற சுடுகாட்டின் மணம் எங்கும் பரவியது. மொட்டைத் தலையோடு கையில் கொள்ளிக்கட்டையைப் பிடித்திருந்தான் குட்டி. எதற்காக இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறோம்? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தான் அச்சிறுவன். அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் கொள்ளி வச்சு தலை முழுகினான் குட்டி. தாத்தா மாணிக்கம் பேரனைக் கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். பாட்டி கனகு, மகனும் மருமகளும் இருக்கின்ற புகைப்படத்தின் முன்பு தன்னோட மாரிலே அடித்துக்கொண்டு மயங்கி விழுந்தாள். அந்த வீடு இரண்டு மாதமாய் மயனமாய் காட்சியளித்தது.

      “குட்டிக்கு வயசாச்சு. பள்ளிக்கூடம் சேக்கனும்” என்றாள் கனகு பாட்டி.

“ஆமாம் கனகு! ஞாபகமிருக்கு. நம்ம இருக்குற நிலமையில தனியாருல போயி சேக்க முடியாது. அரசாங்க பள்ளிக் கூடத்துல குட்டிய சேக்க வேண்டியதுதான்” என்றார் மாணிக்கம்.

பள்ளிக்கூடம் ஆரம்பமானது. குட்டி நல்ல டிரஸ் போடலன்னாலும் அழுக்கு இல்லாம, கிழிஞ்சல் இல்லாம சட்டைப் போட்டிட்டு போவான். அவனுக்கு இப்ப எல்லாமே தாத்தா பாட்டிதான். இரவு நேரத்துல தூங்கும்போது அம்மா… அம்மா… ன்னு அழுவுவான். கனகு பாட்டிதான் எழுந்து குட்டியை சமாளிப்பாள். ஒருசில ராத்திரியில அவன சமாளிச்சு தூங்க வைக்குறதுக்கு போதும் போதும் என்றாகியிடும். “அம்மா கடைக்கு போயிருக்கா.. இப்ப வந்துருவாடா செல்லம். நீ தூங்குடா குட்டி” என்றெல்லாம் சமாளிப்பாள். பாதி ராத்திரியில எழுந்திரிச்சி மாணிக்கமும் கனகு பாட்டியும் அழுவுவாங்க.

“இந்தப் பையனுக்கு என்னத்தச் சொல்லி புரிய வைக்குறது” என்பார் மாணிக்கம்.

“பாவங்க சின்னப்பையன். அவனுக்கு அப்பா, அம்மா நினப்பு வராதா என்ன? முடிஞ்சவரை சமாளிப்போம். காலம் போகபோக அவனே புரிஞ்சுக்குவான்” என்றாள் கனகு பாட்டி.

மூணு மாசம் கடந்து பொச்சு. ஒருநாளு மாணிக்கம், அவனோட புத்தகங்களை எல்லாம் வாங்கிப் பாத்திட்டு, குட்டி இந்த புக்குல இருக்குற ஒரு பாட்டு ஒன்னு பாடன்” என்றார்.

“குள்ள குள்ள வாத்து

குவா குவா வாத்து

       மெல்ல உடலைச் சாய்த்து

  மேலும் கீழும் பார்த்து

 செல்லமாக நடக்கும்

 சின்ன மணி வாத்து”

என்று அழகாய் உடலை ஆட்டி ஆட்டிப் பாடினான் குட்டி. வாரி அணைத்துக் கொண்டார் மாணிக்கம் தாத்தா. அதுக்கப்புறம் ரெண்டு நாளைக்குப் பிறகு குட்டி சோகமாயிருந்தான். “என்னாடா குட்டி சோகமாயிருக்க” என்றார் மாணிக்கம். “இல்ல தாத்தா, ஸ்கூல்ல பசங்க எல்லோரும் அவுங்க அவுங்க புத்தகங்களை எல்லாம் பைண்டிங் பண்ணிட்டு வந்திருக்காங்க. அதனால நீயும் என்னோட புக்க பைண்டிங் பண்ணிக்கொடு தாத்தா” என்றான்.

“பைண்டிங் பண்ற அளவுக்கு நம்மகிட்ட காசு கிடையாதுடா குட்டி. அதனால உனக்கு நான் பேப்பர்ல அட்டை போட்டு தரட்டுமா?”

“இல்ல தாத்தா, எனக்கு பைண்டிங்தான் வேணும்” அடம் பிடித்தான் குட்டி.

“என்னங்க, பேரன் ஆசப்படுறான். பைண்டிங் பண்ணிக் கொடுங்க. எப்படியாவது சமாளிச்சுகலாம்” என்று குட்டிக்கு வக்காலத்து வாங்கினாள் கனகு பாட்டி.

பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் தாத்தா வருகின்ற திசையையேப் பார்த்துக் கொண்டிருந்தான் குட்டி. இதோ தாத்தாவும் வந்துவிட்டார். “தாத்தா என்னோட புக்குக்கு பைண்டிங் பண்ணிட்டியா?” என்றான் குட்டி.

“இ.. இல்.. இல்ல..” என்று எச்சில் விழுங்கினார் மாணிக்கம்.

“ஏன் தாத்தா? பைண்டிங் பண்ணல?”

“கடக்காரரு கேக்குற பணம் நம்மகிட்ட குறைச்சலாதான இருக்கு. அதான்! அப்படியே வையி. நாளை காலையில வந்து சொல்றன்னு வந்துட்டன்”

“தாத்தா, நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தா”

மாணிக்கம் – கனகு இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடின. பெரிய மனுசனாட்டம் பேசறான் பாரு என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள் கனகு பாட்டி. அடுத்த நாள் காலையிலையே பைண்டிங் கடைக்கு வந்து விட்டார் மாணிக்கம்.

“என்ன பெரியவரே! நேத்துதான சொன்னன். அதுக்கு கம்மியா யாரும் போட்டுத் தரமாட்டாங்க”

“தம்பி என்னோட பேரன், நாங்க மெட்ராசுக்கும் போகல. பம்பாயிக்கும் போகல. டெல்லிக்கும் போகல. கூலி வேலைக்குதான் போறோம்ன்னு சொல்லி பைண்டிங் பண்ணிட்டு வாங்க தாத்தான்னு” சொல்றான்.

“என்ன பெரியவரே சின்னப்பையன்னு சொன்னிங்க. இப்படி விவரமா பேசுறான்”

“ஆமாம் தம்பி! அவனோட அம்மாவும் அப்பாவும் ஒரு விபத்துல செத்துப்போயிட்டாங்க. இப்ப நாங்கதான் பாத்துக்குறோம்”

“அப்பா அம்மா இல்லாத பையனா. சரி! எவ்வளவு கொடுப்பிங்க பெரியவரே!”

மாணிக்கம் தொகையைச் சொன்னதும். “கொஞ்சம் உட்காருங்க கிட்டயிருந்து வாங்கிட்டே போயிடுவீங்க”

சரியென்று அங்கையே அமர்ந்து கொண்டார் மாணிக்கம்.

பைண்டிங் செஞ்ச புக்க பாக்க பாக்க குட்டிக்கு எங்கையோ மிதப்பது போல இருந்தது. புக்க தொறந்து தொறந்து மூக்கால் வாசம் இழுத்தான். புத்தகத்தை நெஞ்சிலே போட்டு அப்படியே உறங்கி விட்டான். அவனுடைய தலை அம்மாவின் மடியில் இருந்தது. குட்டியின் கால் அப்பாவின் மடியில் இருந்தது. அம்மா கதைச் சொல்லிக் கொண்டிருந்தாள். குட்டியும் ம்..ம்.. கொட்டிக்கொண்டிருந்தான்.

அம்மா… அம்மா… என்று கத்தியதில் மாணிக்கமும் கனகுவும் எழுந்து கொண்டார்கள். “குட்டி என்னடா? கனவு ஏதாவது கண்டியா?” என்றாள் கனகு பாட்டி. குட்டியின் அழுகை அன்று அதிகமாகி இருந்தது.

“எனக்கு அம்மா வேணும். எனக்கு அம்மா வேணும்”

அம்மா! உனக்கு புரோட்டா வாங்கியாற கடைக்கு போயிருக்கு”

“நீ பொய் சொல்லுற பாட்டி. நேத்தும் அதையேதான் சொன்ன! இப்பவும் அதையேதான் சொல்ற. ஆனாலும் அம்மாவ நான் இன்னும் பாக்கலியே”

“சரிடா குட்டி! இந்தா பாரு நீ கேட்டல்ல… இதோ உன்னோட புக்கெல்லாம் பைண்டிங் போட்டிருக்கு”

“இந்த பைண்டிங் புக்கு யாருக்கு வேணும். எனக்கு அம்மாதான் வேணும்” என்று சொல்லிய குட்டி தன்னோட கையில் இருந்த புத்தகத்தை தூக்கி எறிந்தான். புத்தகத்தில், குட்டி சேமித்து வைத்திருந்த மயில் தோகை பறந்து போய் அவன் அம்மாவின் புகைப்படத்தில் ஒட்டிக்கொண்டது.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தேங்காய் சுடுதல் நோன்பு

தேங்காய் சுடுதல் நோன்பு

சேலம் மாவட்ட பகுதியில் ஆடி மாதம் 1-ந்தேதி அன்று தேங்காய் சுடுதல் நோன்பு பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

தோட்டியின் பிள்ளை

    பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல் மேளத்தைத் தட்டிக் கொண்டிருந்தான். கையிலே பறை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரு பக்கமாய் தலைச்சாய்த்து கொட்டு அடிப்பதில் கோவிந்தனுக்கு அலாதி பிரியம்தான். அதிலும் சாவு என்று வந்துவிட்டால் தலையை ஆட்டி உடம்போடு காலும் சேர்த்து முன்னாலையும் பின்னாலையும் சென்று ஆடுவான். கோவிந்தனுடைய கொட்டும் ஆட்டமும் அந்த ஊர் மக்களிடையே ரொம்ப பிரசித்தி. யாராவது அவனிடம் “ஏண்டா கோவிந்தா சாவு வீட்டுகாரங்க ரொம்பவும் துக்கத்துல இருக்காங்க. நீ மட்டும் இப்படி ஆட்டம் போடுறீயே இது நல்லாவா இருக்கு”  என்று கேட்டால், “பிறக்கும்போது எப்படி சந்தோசமா பொறக்குறோமோ அதுபோல இறந்து காட்டுக்கு போற இப்பவும் இவுங்க சந்தோசமா இருக்கணும்” என்று சொல்லுவான். அப்படித்தான் இன்றும் ஆடிக்கொண்டிருக்கின்றான். கால் கட்டை விரல் கட்டப்பட்டு கைகள் விரைத்த நிலையில் தலையில் ஒரு ரூபாய் நாணயத்துடன் பாஞ்சாலைக் கிழவி பாடையில் ஏற்றப்பட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டாள். 

நான்கு தூண்களால் தார்ஸ் போடப்பட்ட நிழற் கூடம். அதாவது யாரோ ஒருவரின் சமாதி. பணம் இருக்கிறவன் பலம் இருக்கிறவன் செத்தும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவன். ஏழைகளோ பிணம் புதைத்த குழிக்குள் மீண்டும் விழுவார்கள். ஊர் தர்மகர்த்தா, மணியார் மற்றும் பாஞ்சாலை கிழவிக்குச் சம்பந்தகார்கள் அமர்ந்திருந்தார்கள். தோட்டி, ஏகாலி, குடிமகன் போன்றோர்கள் அவர்கள் செய்த வேலைக்கு கூலி வாங்குவதற்காகக் காத்திருந்தனர். ஏகாலி ரெண்டு பேர் எட்டு ரூபாய். “தோட்டி எத்தனை பேர்யா?” என்றார் மணியார். “சாமி நாங்க நாலு பேர்” என்றான் கோவிந்தன். இந்தா… என்று ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களையும் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் கொடுத்தார் மணியார். கோவிந்தன் முதலில் கை நீட்டி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டான். குடிமகன், ஏகாலி ஆகியோர்க்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

     இடுப்பில் கட்டிய துண்டும், குனிந்த முதுகுமாய், இருகைக் கூப்பி வணங்கியபடியே நின்றிருந்தார்கள். “என்ன எல்லாம் முடிஞ்சுதா? போயி அவுங்க அவுங்க வேலையைப் பாருங்க” என்றார் ஊர் தர்மகர்த்தா. தோட்டிகள் நிற்கிற இடத்தில் இருந்து கூச்சல் வருவது மணியாருக்குத் தெரிந்தது. “என்னாடா அங்க…” என்றார் மணியார். “காசு பத்தல… இன்னும் ரெண்டு ரூபா போட்டுக் கொடுங்க சாமி…” என்றான் கோவிந்தன். கண்டிப்பாக அவன் பேசியது அவனுக்கே கேட்டிருக்காது. பயந்து கொண்டே அவ்வளவு மெதுவாகத்தான் சொன்னான். ஆனாலும் மணியாருக்கு கேட்டுருச்சு. “போப்போ… அதெல்லாம் சரியாகத்தான் குடுத்திருக்கு. வேணுமின்னா அடுத்த சாவுக்குப் பாத்துக்கலாம். இங்கையே, மழ பெய்யாம வானம் வெளுத்துகிட்டு நிலமெல்லாம் பொளந்துகிட்டு நிக்குது. இதுல இவனுங்க வேற” என்று கோபமாய் முறைத்துப் பார்த்தார் மணியார். இதற்கு மேல் கோவிந்தன் மறுப்பு பேச முடியாதவனாய் தன் பங்காகிய பத்து ரூபாவையும் ரெண்டு பைசாவையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

     அப்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. அந்தச் சேரியில் தெரு விளக்கு இல்லாததால் எப்பொதும் இருட்டாகவே இருக்கும். கதவு தட்டும் சத்தம் கேட்டு அலமேலு கதவைத் திறந்தாள். “என்ன பையன் தூங்கிட்டானா?” “ஆமா! மணி இன்னா ஆவுது இன்னுமா முழுச்சிட்டு இருப்பான்” என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அலமேலு. தன்னுடைய மகன் கருப்பையா ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான் என்பதை எண்ணிப் பெருமையாய் நினைத்தான் கோவிந்தன். தன் மகனுக்காக வாங்கி வந்த மிட்டாயைத் திட்டு மீது வைத்து விட்டு தூங்கபோனான். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி தன்னோட மகனை நல்லா படிக்க வச்சிடனும். தான்தான் மத்தவங்க முன்னாடி கைக்கட்டி வாய்பொத்தி கூனிக்குறுகி நிக்கிறேன். தான் மகனாச்சும் படிச்சு அரசாங்க வேலைக்குப் போயி தலைநிமிர்ந்து நிக்கனும். யோசனையில் ஆழ்ந்து போனான் கோவிந்தன். இரவு முடிந்து காலையில் சூரியன் உதயமானான்.

     கருப்பையாவுக்கு மீசை முளைத்தது. இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறான். தன்னுடைய தாய்தந்தையர் காலில் விழுந்து ஆசிப் பெற்றான். அலமேலுவும் கோவிந்தனும் கண்ணீர் மல்க வாழ்த்தினார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ராந்தலை வைத்துக் கொண்டு அந்த வெளிச்சத்திலே படித்தான். அவனுக்காக அவ்வப்போது தூக்கம் வராமல் இருக்க கருப்பு டீயை போட்டுக்கொடுத்தாள் அலமேலு. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்று விட்டான் கருப்பையா. அடுத்து அவன் மேல்படிப்பு படிக்க வேண்டும். கோவிந்தனின் மனதில் ஆசைகள் இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாதபடி அவனிடம் பணம் இல்லை.

     ஓடினான். அலைந்தான். யார் யாரிடமோ பணம் கேட்டான். தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரின் காலிலும் விழுந்தான். எந்தவொரு வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. கோவிந்தனின் மனதில் எப்பாடுப்பட்டாவது மகனை பெரிய படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். இப்போது கோவிந்தனின் நினைவுக்கு தர்மகர்த்தா நினைவில் வந்தார். மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு தர்மகர்த்தாவின் காலில் போய் விழுந்தான். “உங்களுக்கு எல்லாம் எதுக்கு பணம் தரணும். நீங்கல்லாம் படிச்சி என்ன செய்யப் போறீங்க… குடும்பத்தோட வந்து எங்க பட்டியில இருக்கிற எருமை மாடுகளை மேய்ங்கடா” என்று முறைத்துக்கொண்டார். மணியார் காலிலும் விழுந்தாகி விட்டது. ஒரு பிரயோசனமும் இல்லை. சிவந்த கண்களில் நீர் ததும்பியது கோவிந்தனுக்கு. அப்பா மற்றவர்களுடைய காலில் விழுவது கருப்பையாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. மனம் வெதும்பினான். மனிதன் இன்னொரு மனிதன் காலில் விழுவதா? கடவுளின் படைப்பபில் ஏன் இந்த பாகுபாடு. பணம் படைத்தவன் ஒருபுறம். அடுத்த சாப்பாட்டிற்கே வழி இல்லாத மக்கள் இன்னொரு புறம். இப்படி பாகுபடுத்திப் பார்ப்பதில் இறைவனுக்கு எவ்வளவு சுகம். இதுபோல பிள்ளையின் கண்முன்னால்  பெற்றவன் அடுத்தவருடைய காலை பிடித்து கெஞ்சுவது எவ்வளவு அபத்தம். இறைவனே உன்னை நான் காணவேண்டும். உன்னைப் பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ச்சிக் கடலில் பொங்கி எழுவதற்காக அல்ல. நாக்கு புடிங்கி கீழே தொங்கற மாதிரி ஒரு கேள்வியை கேட்பதற்காகத்தான். அப்பாவின் கண்ணகளில் நீர் ததும்புவதை அதற்கு மேலும் கருப்பையாவால் பார்க்க முடியவில்லை. தலை கவிழ்ந்து முகத்தை திருப்பிக் கொண்டான்.

     அன்று இரவு மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கோவிந்தனின் வீட்டில் மூலைக்கு ஒருவாராய் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்காந்திருந்தனர். “அப்பா நான் படிக்கலை.. உன் கூடவே மோளம் அடிக்க வரேன்” என்று கருப்பையா சொன்னதுதான் தாமதம் எழுந்து வந்து பளார் என்று அறைவிட்டான் கோவிந்தன். “நீ படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். நீ நல்ல இருக்கிறதுக்காக நான் யாரு கால்லயும் விழுவேன்” என்றான்.

வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டு கதவை திறந்தான் கோவிந்தன். சேரி மக்கள் அனைவரும் நின்றிருந்தனர். “ஏலே கோவிந்தா இந்த ரெண்டு மூணு நாளா உன்னை பாத்திட்டுதான் இருக்கேன். ஊர் மக்கள்கிட்ட  தெரிஞ்சவ தெரியாதவகிட்ட எல்லாம் பணம் கேட்குற… இந்த சேரி மக்கள்கிட்ட கேட்கனுமின்னு தோனலியே உனக்கு…” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார். “நம்ம கருப்பையா படிச்சு பெரிய ஆளா வந்தான்னா நமக்குதான பெருமை. அதான் கருப்பையா படிப்புச் செலவை இந்த சேரி மக்கள் அனைவரும் ஏத்துக்கணுமுன்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தா பிடி இந்த பணத்தை…” என்று கொஞ்சம் சேர்த்த பணத்தைக் கொடுத்தார் இன்னொருவர். கோவிந்தனின் கண்ணகளில் இருந்து இப்போதும் கண்ணீர் சிந்தியது. அது அழுது அழுது சிவந்த கண்ணீர் அல்ல. மகிழ்ச்சி பெருக்கில் நனைந்த ஆனந்த கண்ணீர்!

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சாவடி

 
    திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள கிராமத்தில் மேற்கண்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.  இந்த இடத்தைச் சாவடி என்று அழைக்கிறார்கள். ஊருக்குள் செல்லும்முன் சாவடியைத் தாண்டித்தான் செல்ல முடியும். சாவடியில் எப்போதும் மூன்று அல்லது நான்கு பேர் அமர்ந்திருப்பார்கள். ஊருக்குள் ஏன்? எதற்காகச் செல்கின்றோம்?  யாரை பார்க்கச் செல்கின்றோம்? எப்போது திரும்பி வருவோம் என்று அவர்களிடம் உறுதி பெற்ற பின்னரே செல்லமுடியும். அவர்களிடம் உறுதி பெறவில்லையென்றால் உள்ள அனுமதிக்க மாட்டார்கள். இது அனைத்துக் காரண காரியங்களுக்கும் பொருந்தும். 
 
  சாவடியில் இருப்பவர்கள் வயது முதிர்ந்தவர்களே அதிகம் இருக்கின்றார்கள். தெளிவான பேச்சு. சாமர்த்தியமான பதில் என நம்மை வியக்க வைக்கின்றார்கள். சாவடியில் செய்தித்தாள்கள் உண்டு. அஞ்சல்காரர்களும் சாவடியில் வந்து கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். யாரேனும் வெளியூருக்குச்  செல்லவிருந்தால் சாவடியில் சொல்லிவிட்டுச் சென்றால் போதும். அவர்களைத் தேடி யார் வந்தாலும் சாவடியில் உள்ளவர்களே பதில் அளித்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.
 
    ஊருக்குள் என்ன நடக்கின்றது என மொத்த தகவலும் சாவடியில் உள்ளோருக்குத் தெரியும். மொத்தத்தில் சாவடி என்பது ஊருக்கு வாசற்படி எனலாம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

விளையாட்டு வினை

  

    பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் அக்கல்லூரிக்கு. வழிநெடுக புளிய மரங்கள். மண்ணால் போடப்பட்ட சாலை. கல்லூரியின் குட்டிச்சுவரில் அன்பு யாரையோ எதிர்ப்பார்த்து உட்காந்திருந்தான். கல்லூரிக்கு மாணவர்கள் வருகின்ற திசையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்பு உட்காந்திருந்த பின்பக்கத்தில் இருந்து வினோத் வலது தோளை தட்டியவாறு இடதுபக்கம் வந்து குட்டிச்சுவரின் மீதேறி அமர்ந்தான். “எவன்டா என்ன தட்டினது” என்று வலப்பக்கம் திரும்பிப்பார்த்தான். “என்ன மச்சான் எந்த பிகரை பார்க்க இப்படி டிப்டாப்பா வந்திருக்க” என்றான் வினோத். “அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று இழுத்த இழுவையைக் கண்டு வினோத் புரிந்து கொண்டான். “அந்த மாலதி புள்ளயப் பாக்கத்தானே…” “ஆமா மச்சான்”. “காதல் வேணாமின்னா எவன் கேட்குறான். பட்டாதான் புத்தி வரும்போல.. அது உன்பாடு அன்பு. அது இருக்கட்டும் எங்க ரவியும் கேசவனும்” என்று கேட்க, அவர்கள் இருவரும் சாலையின் மறுப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தார்கள்.

     அன்பு, வினோத், ரவி, கேசவன் நால்வரும் நல்ல நண்பர்கள். ஒரே கல்லூரியில் வெவ்வேறு பிரிவுகளில் மூன்றாம் வருடம் படிக்கிறார்கள். அன்பு பத்தி சொல்லனுமின்னா, நல்ல குண்டு. கருப்பா சுருட்டை முடியோட கடோத்கஜன் மாதிரி இருப்பான். கொஞ்சம் கோபக்காரன். பட்டுன்னு அடிச்சிட்டுதான் பேசுவான். அதனால என்னவோ இவன் கபடி பிளேயர் ஆயிட்டான். அடுத்து வினோத், உயரமா சிவப்பா இருப்பான். இந்த நால்வரில் இவன்தான் கொஞ்சம் அழகு. இவன் வாலிபால் பிளேயர். அடுத்ததா  ரவி மாநிறம். அளவான உடம்பு. உடம்பெல்லாம் ரோமம். இவனுடைய ஒவ்வொரு ரோமமும் பேட்மிட்டன் பெயரைச் சொல்லும். ஆமாங்க! இவன் பேட்மிட்டன் பிளையர். கடைசி ஆள் கேசவன். எல்லாம் எனக்கு தெரியுமுன்னு நினைக்கிற ஆள். மாநிறம்தான். கிரிக்கெட் பிளையர். எப்போதுமே களத்தில தான் மட்டும் நிக்கனுமுன்னு நினைக்கிற ஆளு. இப்படி நாலுபேரும் நாலு விதமான விளையாட்டில் கெட்டிக்கார்கள். அந்த விளையாட்டிற்காக தன்னோட உசிரையே கொடுப்பாங்க. இவுங்க விளையாட்டுப் போலவே ஒவ்வொருத்தரும் மாறுபட்ட குணம் உடையவர்கள். ஒருத்தன் சொன்ன கருத்துக்கு மற்ற மூணு பேரும் எதிர்த்து பேசுவார்கள். ஒருத்தன் ஆமா என்பான். இன்னொருத்தன் இல்ல என்பான். அடுத்தவன் அதற்கு வேறவிதமா பதில் தருவான். கடைசி ஆளு இதெல்லாம் ஒரு மேட்டராடா வேற பேசுங்கடா என்பான். ஆனாலும் இவுங்க நட்புக்குள்ள அவர்களுடைய விளையாட்டுகள் ஒருபோதும் வந்ததில்லை. அதை அவர்களும் அனுமதித்ததில்லை. இவுங்க நாலுபேரும் நல்ல நண்பர்கள்.

     “என்ன ரவி இவ்ளோ லேட்” என்றான் வினோத். “அதற்கு பஸ் வர வழியில பிரேக்டவுன் ஆயிடிச்சுடா மச்சான்” என்றான் கேசவன். “சரி பேச்சைக் குறைச்சிட்டு கிளாஸ்க்கு போகலாம்டா. ஈவினிங் எல்லொரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் முடிச்சிட்டு இதே இடத்தில வந்து சந்திக்கலாம்” என்றான் அன்பு. மாலை நாலு மணிக்கு கல்லூரியில் அனைத்து வகுப்புகளும் முடிந்து விட்டன. இந்த நண்பர்கள் நாலு பேரும் அவுங்க அவுங்க பிராக்டிஸ் பன்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்தார்கள். வாலிபால் களம். தோளில் மாட்டிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு ஷீ மாட்டிக்கொண்டான் வினோத். தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டியவாறு எகிறி எகிறி குதித்தான். உடம்பை நான்கு முறுக்காய் முறுக்கிக்கொண்டான். தலையை காலுக்குக் கொண்டுபோய் இரு உள்ளங்கையினையும் நிலத்திலே தொட்டான். ஒரே குதியில் களத்திற்கு வந்து விட்ட வினோத், எதிர்ப்புறத்தில் வேகமாய் வந்து கொண்டிருந்த பந்தினை தட்டியபடியே தன்னோட விளையாடிக் கொண்டிருக்கின்றவனைப் பார்த்து, “என்ன கோச் இன்னும் வரலியா” என்று கேட்டான். “கோச் இன்னிக்கு வரமாட்டாராம்” ஏன்? “அவுங்க அப்பாவுக்கு திடிரென்று நெஞ்சுவலியாம்” தன்னை நோக்கி வந்த பந்தை வெறி வந்தவன்போல் எகிறி ஒரு அடி அடித்தான் வினோத். களத்தில் இருந்து வெளியே வந்து அமைதியாய் உட்கார்ந்து கொண்டான் வினோத். அப்பா மேல உசிரா இருந்தாரு. பாவம் கோச் என்று பரிதாப்பட்டான். கோச்சும் இல்ல. விளையாட மனசும் இல்ல. என்ன பன்றதன்னு யோசித்தான். சரி நண்பர்களைப் பார்க்கப் போவோம் என்று கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

     அது பேட்மிட்டன் களம். வினோத்தின் கால்கள் நின்றன. தன்னோட நண்பன் ரவி எதிர்நொக்கி வருகின்ற அனைத்துப் பந்துகளையும் துவம்சம் செய்து மறுமுனைக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ரவியின் ஆட்டத்தைப் பார்ப்போம் என்று அக்களம் ஓரத்தில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். பந்து மாறிமாறி வருவதும், அதை லாவகமாக திருப்பி மெதுவாக அடிப்பதும் பார்த்து ரொம்பவே ரசித்தான் வினோத். தன்னோட வாலிபால் விளையாட்டு போலத்தான் இதுவும். ஆனாலும் ஒரு ஜென்டில் தெரிந்தது வினோத்துக்கு. தன்னை லயித்து அவ்விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியனும் மறைந்தான். பயிற்சி ஆட்டமும் முடிவுக்கு வந்தது. “ஹே… வினோத் எப்படா வந்த…” “உன்னோட எதிர்ல இருக்கிறவனோட மூக்குலயே அடிச்சியே அப்பவே வந்துட்டன்”. இருவரும் சிரித்துக் கொண்டனர். “ஏய் ரவி… நீயும் நானும் ஒரு ஐஞ்சு நிமிசம் பேட்மிட்டன் ஆடுவோமாடா…” சிறிது யோசனைக்குப் பிறகு ரவி ஒப்புக்கொண்டான். இந்த நிகழ்வானது எத்தகைய விளைவை தரப்போகிறது என அப்போது ரவிக்கு தெரியவில்லை. இருவரும் மகிழ்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

     குட்டிச் சுவரு. நால்வரும் பயிற்சி முடிந்து வந்து சேர்ந்தார்கள். “டே! கேசவா… நான் இன்னிக்கு ரவியோட சேர்ந்து பேட்மிட்டன் விளையாண்டன்டா… ரொம்ப இன்ரஸ்டா இருந்தது தெரியுமா!” “என்ன வினோத் உன் ஆட்டத்தை விட்டுட்டு அடுத்தவரோட ஆட்டத்துல சேர்ந்துட்ட” என்றான் அன்பு. “இல்ல.. சும்மா விளையாண்டு பாத்தன்” என்றான் வினோத். “விளையாட்டு விபரீதமாகிவிடக்கூடாது. நீ உன் விளையாட்டுல மட்டும் கவனம் செலுத்து. மத்தவங்க விளையாட்டுல மூக்கை நுழைச்சி வீணா உடைச்சிக்காதே” என்று கோபத்தோடு முறைத்துக் கொண்டே கூறினான் அன்பு. “டே அன்பு.. நீ சும்மாயிரு. அவன் ஏதோ ஆசையில போயி விளையாண்டிருக்கான். அதுக்குபோய் அவனை திட்டுற…” என்றான் கேசவன். “ஏய் அன்பு நான் விளையாடுற வாலிபால் அக்கான்னா… பேட்மிட்டன் தங்கச்சி மாதிரிடா… இரண்டு ஆட்டமுமே ஒரேமாதிரிதான் இருக்குதுடா… அதான் விளையாண்டேன்” என்றான் வினோத். இத்தனைக்கும் நடுவில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கின மாதிரி ரவி காணப்பட்டான்.

     நண்பர்கள் எப்போதும் போல ஜாலியாக இருந்தார்கள். பயிற்சியின் போது மட்டும் அவரவர் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். மற்ற நேரங்களில் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். ஆனால் வினோத் மட்டும் வாலிபால் பயிற்சி முடிய அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொள்வான். நேராக பேட்மிட்டன் விளையாடுற இடத்துக்குச் சென்று விடுவான். வேடிக்கைப் பார்த்து மகிழ்வான். பயிற்சி முடிந்தவுடன் இவனும் ரவியும் சேர்ந்து விளையாடுவார்கள். காலம் செல்லச் செல்ல வினோத்தும் பயிற்சியில் சேர்க்கப்பட்டு விட்டான். வாலிபால் ஒரு மணிநேரம். பேட்மிட்டன் ஒருமணிநேரம் பயிற்சி என்றானது வினோத்துக்கு.

     பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது. பேட்மிட்டன் கோச், ரவியை தன்னோட அறைக்கு அழைத்தார். “என்ன ரவி லிஸ்ட் ரெடி பண்ணிடலாமா? நீயும் கார்த்திக்கும் உள்ள ஆடுங்க. கதிரேசனும் சிவக்குமாரும் வெளிய மாற்று ஆளாக இருக்கட்டும். என்ன ரவி உனக்கு ஓகேவா… என்னாடா நான் கேட்டுகிட்டே இருக்கேன். நீ ஒரு மாதிரியாவே இருக்க..” என்றார் கோச். “அதுவந்து… வந்து… என்று இழுத்தான்” ரவி. “நீ என்னா நினைக்கிறன்னு சொன்னாதான தெரியும்.  சொல்லுப்பா…” “கடந்த ஒரு மாசமா கதிரேசன் சரியாவே பிராக்டிஸ்க்கு வரவே இல்ல. அவன எப்படி கூட்டிட்டு போறது. அதனால என்னோட பிரெண்டு வினோத்த போடுங்க” என்றான் ரவி. என்ன நினைச்சிட்டு இருக்கிற ரவி. நீ நல்லா ஆடுறன்னா, அதுக்காக எதை வேணுமின்னாலும் சொல்லுவியா? என்று கோபமாகக் கத்தினார் கோச். கோச்சின் அதட்டலைக் கேட்டு ரவி பயந்துதான் போனான். ஆனாலும் மனம் எப்படியாவது வினோத்த உள்ள கொண்டு வந்திடனும். அப்பதான் அவனுக்கும் ஒரு சர்ட்டிபிகேட் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டான். அந்த அறை கொஞ்சநேரம் அமைதி நிலவியது.

     கோச்சே பேச ஆரமித்தார். “ரவி! வினோத்த நான் தப்பு சொல்லல. வினோத் வாலிபால் பிளையர். அவன எப்படி பேட்மிட்டன்னல சேர்த்துகிறது. அவன் வாலிபால்ல விளையாடட்டும். அவன விட்டுறு. உன்னோட கனவப்பத்தி நெனச்சுப்பாரு ரவி. நீ இதுல ஜெயிச்சா கண்டிப்பா உன்னோட வாழ்க்கையே மாறிடும். என்ன ரவி நான் சொல்லுறது புரியுதா?” என்றார். கொஞ்சநேரம் மெளனித்திருந்தான் ரவி. பிறகு “வினோத்த கண்டிப்பா சேத்துக்கணும்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

     அடுத்தநாள் மாலை பேட்மிட்டன் அலுவலகத்தின் முன்பு தேர்வு வீரர்களின் பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. அப்பட்டியலில் வினோத் பெயரும் இடம்பெற்றிருந்தது. ரவியின் பின்தோளில் கைவைத்து அழுத்தினார் கோச். “இப்ப திருப்தியா? எனக்கு நம்ம கல்லூரி ஜெயிக்கனும், அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றார்.  நான் கண்டிப்பா ஆடனுமா ரவி என்று மனக்குழப்பத்துடன் கேட்டான் வினோத்.  “ஆமாம்! கண்டிப்பா நீ ஆடனும். நாம ரெண்டு பேரும் ஒன்றா ஜெயிப்போம்” என்றான் ரவி.

     பல்கலைக்கழக போட்டிக்களம். பலக்கல்லூரிகளிலிருந்து வந்திருந்த பேட்மிட்டன் நடுவர்கள். தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கச் செயலர், மற்றும் ஆட்டத்தை ரசிக்க வந்த ஏராளமான மாணவ மாணவிகள். பாட்டும் சத்தமும் ஒருபுறம். வெற்றி முழக்கங்கள் இன்னொருபுறம். தங்களின் போட்டி உடைகளை அணிந்து தயார் நிலையில் இருந்தார்கள் இரு அணியினரும். போட்டியும் தொடங்கியது. அனல் பறக்கும் போட்டி. யாருக்கு வெற்றி தோல்வி எனக் கணிக்க முடியாதபடி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ரவி மிகவும் ஆக்ரோசத்துடன் பந்தை எதிர் முனையில் திருப்பிக்கொண்டிருந்தான். ரவியின் முகம் சோர்வு அடைந்ததாக தெரியவில்லை. முகமும் வெற்றி நமக்கே என்று சொல்லியது. எதிர் திசையில் வேகமாய் வந்த பந்தினை முன்னால் நின்றிருந்த கார்த்திக், தன்னிடமிருந்து பந்து செல்லக்கூடாது என்று ஒரு காலை ஊன்றி மறுகாலை எகிறி வைத்து பந்தை அடிக்கிறான். எகிறி வைத்தக் கால் நழுவி மண்ணில் தேய முட்டி பிளந்து ரத்தம் கொட்டுகிறது. வலியால் துடிக்கிறான் கார்த்திக். நடுவர் ஆட்டத்தைக் கொஞ்ச நேரம் நிறுத்துகின்றார். கார்த்திக்கு முதலுதவி செய்யப்படுகிறது. அடுத்து கார்த்திக்குப் பதிலாக சிவக்குமார் உள்ளே ஆடவருகின்றான். “சிவா நீ போய் உட்காரு. வினோத் உள்ள வாடா…” கோச் குழப்பத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நிற்கிறார். 2011 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி ஆறாவதாக களம் இறங்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே களம் இறங்கி சிக்ஸர் அடித்து ஜெயிக்க வைக்கவில்லையா? அதுபோலத்தான் இன்றைக்கும் ஏதாவது நடக்கும் என்று மனதைத் தேத்திக்கொண்டார் கோச்.

     “ரவி எனக்கு பயமா இருக்குடா…” “பயம் இருந்தா ஜெயிக்க முடியாது. நான் உன்னை நம்புறன். சந்தோசமா விளையாடு. ஆனா ஒன்னு மட்டும் நினைவுல வச்சிக்க. நீ முன்னால நில்லு. முடிந்தவரை உனக்கு வர பந்தை அடி. முடியலன்னா விட்டுறு. பின்னால் இருக்குற நான் பாத்துகிறேன். உன்னை பின்னால நிக்கவெச்சன்னா என்னைத் தாண்டி வர்ற பந்தை நீ விட்டுட்டன்னா பாயின்ட்ஸ் நமக்கு குறைஞ்சிரும். என்னா சொல்லுறது புரியுதாடா…” ஏதோ தலையை ஆட்டிக்கொண்டான் வினோத். போட்டியும் தொடங்கப்பட்டது.

     தனக்கு வர்ற பந்தை கவனமாக அடித்து எதிர்முனைக்குத் திருப்பினான் வினோத். வினோத் அடிக்க முடியாமல் விட்ட பந்தினை ரவி அடித்து சரிசெய்து கொண்டான். ஆட்டமும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆட்டத்தில் வேகத்தோடு சூடும் பிடிக்க ஆரமித்தது. பார்வையாளர்கள் ஓயாமல் தங்களின் களிப்பினை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ரவி எதிர்முனையில் இருந்து வந்த பந்தினை லாவகமாக திருப்பி அடிக்க, எதிர்முனையில் இருந்த ஒரு பிளையர் அப்பந்தினை மெதுவாக மேல்நோக்கி அடிக்கிறார். பந்து நெட்டுக்குப் பக்கத்தில் உயரத்தில் இருந்து கீழ்நோக்கி வருகின்றது. நெட்டுக்குப் பக்கத்தில் முன்னால் நிற்கின்றான் வினோத். “வினோத் உனக்குதான்டா பந்து வருகிறது. பாத்து அடிடா” என்று எச்சரிக்கைப் படுத்துகிறான் ரவி. இப்போது வினோத்துக்கு இக்களம் பேட்மிட்டன் களம் அல்லாமல் வாலிபால் களம் போன்று காட்சியளிக்கிறது. மேலிருந்து வருகின்ற பந்தும் வாலிபாலாக வினோத்துக்குத் தெரிய அவனுள் பெரிய மாற்றம் நிகழ்கிறது. வினோத் நல்ல உயரம். வாலிபாலை எப்படி ஓடி வந்து கட் அடிப்பானோ அதேபோல் இந்த பந்தையும் ஓடிவந்து எகிறி கையை மேலே உயர்த்தி ஓங்கி ஒரு அடி அடிக்கிறான். பந்து நெட்டுக்கு நூல் அளவே இருக்கிற மாதிரி தரையில் லொட் என விழுகிறது. பார்க்க வந்த அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கிறார்கள். பேட்மிட்டன் சங்க செயலர் “இப்படி ஒரு ஷாட்டை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை” என்கிறார். ரவி வினோத்தை கட்டிப்பிடித்து தன்னோட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பார்வையாளர்களின் கரகோஷம் நிற்க நீண்ட நேரம் ஆனது. அன்றையப் போட்டியில் ரவியின் அணி வெற்றியைச் சூடி கோப்பையைக் கைப்பற்றுகிறது.

     பதினைந்து நாள் கழித்து தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்திலிருந்து கடிதம் ஒன்று வரகிறது. அக்கடிதத்தில் தமிழ்நாட்டு அணிக்காக வினோத் அழைக்கப்பட்டிருந்தான். உண்மையான பேட்மிட்டன் பிளையருக்குக் கிடைக்காத வாய்ப்பு வாலிபால் பிளையருக்குக் கிடைத்துவிட்டது. இதை ரவி கேட்டவுடன் கையில் இருந்த பேட்டை தரையில் ஓங்கி அடித்தான். நன்றாக ஆடியும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மனதில் குமுறினான். “ரவி கோவப்படாதடா… வினோத் அடித்த அந்த ஒரு ஷாட்டப் பார்த்துதான் அவனை செலக்ட் பன்னியிருக்காங்கடா…” என்றார் கோச். மனம் தாங்கதவனாய் அறையை விட்டு வெளியேறுகிறான். கல்லூரியின் கடைசி நாள். அதே குட்டிச்சுவரு. வினோத், அன்பு, கேசவன் என மூன்று நண்பர்கள் மட்டும். மூவரும் மாணவர்கள் வருகின்ற திசையில் யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்ககால குறுந்தொழில்கள்

 

இவ்வுலகம் உயிரினங்களால் சூழ்ந்தது. ஒவ்வொரு உயிர்களும் இப்புவியில் வாழ பலப்போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிர்களில் ஆறறிவுள்ளவனாக மனிதர்கள் சுட்டப்படுகிறார்கள். நாடோடியாக வாழ்நத மனிதர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து வாழத்தொடங்கினர். குடும்பமாய் வாழ்ந்த மனிதர்களில் அறிவு மிக்கவனும், சோம்பலை போக்கியவனும், உழைப்பை மேன்மையாகக் கொண்டவனே நல்ஆடவர் என அழைக்கப்பட்டான். ‘வினையே ஆடவர்க்கு உயிரேஎன்ற குறுந்தொகை வரிகளுக்கு ஏற்ப ஆண்மகன் என்பவன் உழைப்புக்கு முன்னுரிமை வழங்கினான்.

தொழிலும் தொழிற் பிரிவுகளும்

மலைகளை உடைத்து காடுகளாக்கியும், வயல்களாக்கியும் பெரும் நிலப்பகுதியை உருவாக்கினான். அப்பகுதிக்கு அவனே தலைவனாகவும் பின்னாளில் அரசனாகவும் முடிசூட்டப்பட்டான். மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறையுள் என தனக்கு வேண்டியதை தானே செய்து பழக்கப்படுத்திக்கொண்டான். அவ்வாறு செய்த வேலைகளில் உழவுத்தொழிலை முன்னிறுத்தியே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டான். ‘சுழன்று ஏற்பின்னது உலகம்என்பார் வள்ளுவர். மனிதர்கள்; பல தொழில்கள் செய்து வந்தாலும் ஏர்த்தொழிலின் பின்னால்தான் இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது. அன்றையச் சூழலில் அரசரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அனைவரும் தனித்தனியே வேலை செய்வதற்கென ஒதுக்கப்பட்டனர். அரசர் கட்டளையிட்ட வேலைகளை தலைமேல் சுமந்து செய்யலாயினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை பெருமையாக எண்ணினார்கள். தன்னுடைய வேலையை பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் பொழுது உரிமைக்காகப் போராடி சண்டையிடவும் செய்தனர். பண்டையக் காலத்தில் அரசரால் வகுக்கப்பட்ட வேலைகள் பின்னாளில் அவர்களுடைய சந்ததியினர்களுக்கு தொழில்களாக மாறிப்போயின. “தொழிலில் திறமை பெற தந்தை தொழிலை மகன் ஏற்றதால் பரம்பரைத் தொழில்முறை உருவாகியது1 என்கிறார் பா.இறையரசன். நிலம் அதிகம் உள்ளவன் உழவுத்தொழில் செய்தான். அத்தொழிலுக்கு தகுந்தவாறு மக்களை பயன்படுத்திக்கொண்டான். பொருள் உள்ளவன் உள்நாட்டு வாணிபம் அயல்நாட்டு வாணிபம் செய்து, அதன் மூலம் நிறைய பொருட்களைச் சேர்த்தான். இன்னும் உள்ள சில மக்கள் அரண்மனைகளில் வேலை செய்து வந்தனர். படை வீரர்கள், காவல் காப்பவர்கள், ஊர்மன்ற தலைவர்கள், ஒற்றர்கள் என அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர மக்கள் வாழ்கின்ற பகுதியில் அன்றாடம் நடைபெறக்கூடிய தொழில்களும் இருந்து வந்தன.

            உழவு, வாணிபம், படைவீரர்கள் தவிர சங்ககால மக்களிடையே இருந்து வந்த குறுந்தொழில்களை முன்னிறுத்தியே இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது. நிலவாரியாக தொழில்கள் நடந்து வந்திருப்பினும் மற்றத் தொழில்களுக்கான மக்கள் இருந்து கொண்டு, அவற்றைச் செய்தும் வந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்திலே கூறப்பட்டுள்ள தொழில்களை இங்கு காணலாம்.

தச்சுத்தொழில்

            மரத்தை அறுத்து அதன் மூலம் பொருள்களைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். குறுந்தொகையில்,

                        தச்சன் செய்த சிறுமா வையம்‘ (குறும்.61:1)

            தச்சனால் செய்யப்பட்ட சிறிய தேரினை குதிரைகள் பூட்டியபடி இழுத்துச் செல்லும். குதிரைக் கட்டாத நேரங்களில் சிறுவர்கள் அத்தேரினை இழுத்து விளையாடுவார்கள். “தச்சர்கள் வீடுகட்டுதல், கப்பல், கட்டுமரம், படகு முதலியன கட்டுதல், தேர்களைச் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்2 என்கிறார் டாக்டர் .சுப்ரமண்யன். இதேச் செய்தியை புறநானூற்று ஆசிரியர் கூறுகையில்,

                        எண்தேர் செய்யும் தச்சன்‘ (புறம்.87:3)

            ஒரே நாளில் எட்டு தேர்களைச் செய்து முடிக்கக்கூடிய தச்சன் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது அதியமானுடைய வீரத்தைக் குறிப்பதாக இருந்தாலும் தச்சனுடைய உழைப்பை நமக்கு காட்டுவதாக அமைகின்றது. மேலும், தச்சர்களின் பிள்ளைகள் சிறுதேர்களை உருட்டி விளையாடுதலைப் பற்றி பெரும்பாணாற்றுப்படையிலும் (248), யானையின் தந்தத்தைச் சிறு உளிக்கொண்டு கட்டிலும், இலை வடிவத்தினாலான கால்களும் செய்கின்ற தச்சன் என நெடுநல்வாடையிலும்(118-119), காட்டிற்குச் செல்லும் தச்சன், தனக்கு வேண்டிய பொருளைச் செய்து மகிழ்வர் என புறநானூற்றிலும் (206:1) கண் இமைக்காமல் தச்சனால் செய்யப்பட்ட ஆரக்கால் (புறம்:290:4) கைத்தொழிலில் கைதேர்ந்த தச்சன் மரங்களை அடுக்கி வைத்து வாயில் கதவை செய்தான் (நெடுநல்:83-84) எனச் சங்கப்பாடல்கள் தச்சர் தொழிலைப் பற்றி கூறுகின்றன. “குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நானிலத்தும் முறையே குறவர், ஆயர், உழவர், மீனவர் என நான்கு பிரிவினராய் அமைத்தனர். துணைத்தொழில் புரிந்தோர் தச்சர், குயவர், கம்மியர், கொல்லர், வண்ணார் எனப்பட்டனர்3என்று பா.இறையரசன் குறுந்தொழில்களின் பிரிவுகளைக் குறிப்பிடுகிறார்.

கொல்லர்

            கொல்லர்களில் இரும்புக் கொல்லர், பொற்கொல்லர் எனத் தனித்தனியாக தொழிலை பாகுபடுத்தப்படுகிறது. ஒன்றை அழித்து செய்வதனால் கொல்லுதல் என வந்திருந்து, பிறகு கொல்லன், கொல்லர் என வந்திருக்கலாம். இரும்பு வேலைச் செய்யும் கொல்லர்களைப் (நற்:133) பற்றி கூறுகின்றது. அகநானூற்றில்,

                        நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்

                         குருகு ஊது மதிஉலைப் பிதிர்வின் பொங்கி‘ (அகம்.202:5-6)

            கொல்லன் துருத்தியை மிதித்து ஊதுகின்றான். அப்போது உலைக்களத்திலே தீப்பொறிகள் எங்கும் எழுந்தது என்கிறார். இதேச் செய்தி, இரும்பைப் பயன்படுத்தும் உலைக்களத்திலே இருக்கும் கொல்லன் (புறம்:170:5), வலிய கையையுடைய கொல்லன் இலையுடைய நெடிய வேலை வடித்தான் (புறம்:180:3), கொல்லனுடைய வேலை வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து தருதலே ஆகும் (புறம்:312:3). “போர்ப்படைக்கலங்களை ஆக்கவும் திருத்தவும் கொல்லர் பட்டறைகள் இருந்தன. இப்பட்டறைத் தீயில் இரும்புச் சக்கரங்கள், வீட்டுச் சாமான்கள் முதலியன ஆக்கப்பெற்றன4என கொல்லன் பட்டறைப் பற்றி டாக்டர் .சுப்ரமண்யன் கூறுகிறார். கொல்லன் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறியானது எங்கும் படரும் (நற்:13:5). காலால் மிதித்து துருத்தியை ஊதும் கொல்லன் (பெரும்:207), யானையானது பகைவருடைய மதில்களை அழித்தலால் அதனுடைய முகத்தில் உள்ள பூண்கள் சிதைந்து விடுமாம். அப்பூனை கொல்லன் சம்மட்டியால் வைத்து அடித்து சரிச்செய்வானாம் (பெரும்:437), கொல்லனது உலைக்களத்தில் அம்பை கூர்மையாக்குதல் (குறுந்:12), இரும்;;;;பினைக் காய்ச்சி   அடிக்கும் கொல்லன் (அகம்:72) போன்றவை கொல்லர் வேலை செய்பவர்களுக்கு சான்றாகக் காட்டப்படுகின்றன.

பொற்கொல்லர்

            பொன் வேலைச் செய்யும் கொல்லர்களை பொற்கொல்லர் என அழைக்கப்படுவதுண்டு. நற்றிணைப் பாடல் ஒன்றில்,

                        பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப‘ (நற்.313:2)

            பொற்கொல்லர்கள் பொன் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் இனியதான ஓசைப் பிறக்குமாம் என்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும், பொன்னை விற்பவர்கள் பவளச் செப்பிலே பொன்னைச் சேர்த்து வைத்திருப்பாராம் (அகம்:25:11), குற்றம் இல்லாத பொற்கொல்லன் செய்த பொற்காசுகளும், மேகலையும், மாலையும் (புறம்:353:1) என்றும் சிறப்புடையது என்றும், பொடியுடைய நெருப்பிலே பூக்கள் வடிவம் கொண்ட பொன்(கலி:54:2), பொன்னை உரைத்துப் பார்த்து ஆராய்ந்து அறியும் திறனும் அன்றைய மக்களிடம் இருந்து வந்துள்ளது (நற்:25,3:3), (மதுரை:513) என்பன போன்றவையும், சிலம்பில் பொற் கொல்லனால் மதுரையே அழிந்தது என்பதும் அனைவரும் அறிந்தச் செய்தி ஆகியன சான்றாகக் கொள்ளலாம்.

குயவர்த்தொழில்

            மண்ணைக் கொண்டு பொருள் செய்வோரை குயவர் என்று அழைப்பர். இவர்களுடையத் தொழில் முழுக்க முழுக்க மண்ணை நம்பியே இருந்தது எனலாம். ஐங்குறுநூற்றில்,

                        புதுக் கலத்தன்ன கனிய ஆலம்‘ (ஐங்.303:1)

            ஆலம்பழத்தைப் போன்றும், உருண்டை வடிவாலும் பார்த்துப் பார்த்துச் செய்த குயவன் என ஆசிரியர் கூறுகின்றார். மேலும், மண்ணால் சுடப்பட்ட தாழி   என்னும் பானையை தயிர் ஊற்றி கடையும் போது உடைந்து விட்டதாம் (நற்:84), மண்ணால் நிறைய கலங்கள் செய்யும் குயவன் (புறம்:228:1) தான் மண் வேலை செய்யும் முன்னர்; பலியிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் (நற்:293), ஊரில் நடக்கும் விழாவிற்கு குயவர்கள்தான் வருக வருக என்று அழைப்பார்களாம் (நற்:200) போன்றவையை கூறப்படுகின்றன.

 ஆடை வெளுத்தல்

            துணிகளை துவைத்தல் இவர்களுடைய தொழிலாகக் கருதப்படுகின்றது. இவர்களை காழியர்வண்ணார், புலைத்திவண்ணாத்தி என்று அழைக்கின்றனர். அகநானூற்றிலே,

                        பசைவிரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய

                         பூந்துகில் இமைக்கும், பொலன்காழ் அல்குல்‘ (அகம்.387:6-7)

            உவர் மண்ணை சுமத்தலால் தேய்ந்து போன தலையை உடையவள் வண்ணாத்தி. அவள் கூர்மையான நகத்தினையும், நீண்ட விரல்களையும் கொண்டவள். கஞ்சி போட்டு நீண்ட நேரம் ஊர வைத்து துணியினைத் துவைக்கக்கூடியவள். அவ்வாறு துவைக்கப்பட்ட ஆடையானது அழகியதாக விளங்கும் எனறும்;. அந்தக் காலத்திலே சோப்பு கிடையாது. அதனால் அழுக்கைப் போக்குவதற்காக உவர் மண்ணை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆடைகள் விரைப்பாக இருப்பதற்கு கஞ்சி போட்டு வெளுத்து இருக்கிறார்கள். “சாயம் தோய்த்தல் ஒரு பெருவாரியான கைத்தொழில். நீலச்சாயம் தோய்த்த அரை வேட்டிகளைத் துணி வாங்குவோர் மிகவும் விரும்பினர்5 என டாக்டர் .சுப்ரமண்யன் கூறுகின்றார். வண்ணார்கள் எடுத்த உவர்மண் (அகம்:89:7), உவர்நிலத்தில் கிணறு தோண்டி நாள்தோறும் ஆடையை வெளுப்பவர்கள் (புறம்:311:2), ஆடையை வெளுக்கக்கூடிய வறுமையுற்ற புலைத்தி (நற்:90:3), ஊரில் உள்ள மக்களின் ஆடையை வெளுக்கும் வண்ணாத்தியர்கள் (கலி:72:14), கஞ்சி போட்டு ஆடையை வெளுத்தல் (அகம்:34), ஆடையை வெளுப்பவர்கள் கஞ்சியில் தொய்த்து நீரில் அலசி எடுத்தல் (குறுந்:330), வண்ணார்கள் (அகம்:89) ஆகியவை சான்றுகளாகச் சுட்டப்பெறுகின்றன.

சானைப்பிடிப்போர்

            கூர்மை மலிந்து போன கருவிகளுக்கு மீண்டும் கூர்மைப்படுத்தி தருவோர்களைச் சானைப்பிடிப்போர் என அழைக்கப்படுகிறார்கள். இன்றும் நமது வீதிகள் தோறும் இவர்கள் வருவதைக் காணலாம். அகநானூற்றில்,

                        சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய

                         கல்போல் பிரியலம் என்றசொல்தாம்‘ (அகம்.1:5-6)

            தோல் என்னும் சிறு தொழில் செய்பவன். இவன் சானைக்கல்லில் கொஞ்சம் அரக்கினைச் சேர்த்து அதனோடு தேய்ப்பான். அப்போது கத்தியானது மிகுந்த கூர்மைபெறும். இச்செய்தி அகநானூறு (356,355) – லும் இடம்பெற்றுள்ளது.

முத்துக்குளிப்போரும் சங்கு எடுப்போரும்

            கடலில் உள்ளேச் சென்று சிப்பியைக் கொன்று முத்தை எடுத்து வெளியில் கொடுப்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு கடற்கரையோர அரசவையிலும் இருந்திருக்கிறார்கள். ஐங்குறுநூற்றிலே,

                        திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்

                         தண்ணம் துறைவன் வந்தென‘ (ஐங்.105:2-3)

            முத்துக் குளிப்பார் மூச்சடக்கி அரிதாகக் கொணரத் தக்க முத்துக்களை தலைவனுடைய நாட்டில் அதிகம் இருக்கும் என ஆசிரியர் கூறுகின்றார். அதைப்போல சங்கினையும், முத்தினையும் கடலிலே மூழ்கி எடுப்பார்கள் என மதுரைக்காஞ்சி (135-136) கூறுகின்றது. இச்சங்கும் முத்துக்களும் வாணிபத்தில் சிறந்ததொரு இடத்தில் இருந்து வந்தது எனலாம்.

பூ விற்றல்

            பெண்கள் தலையில் பூச்சூடிக்கொள்வது வழக்கம். நற்காரியங்களுக்கு செல்லும் மகளிர்கள் தலையில் பூ வைக்காமல் செல்வதில்லை. ஒரு மொக்காவது தலையில் இருக்கும். இதனால் ஆங்காங்கே பூக்கடைகள் இருந்தன. மேலும், பூவைப் பறித்து தெருவெங்கும் விற்கும் செய்தியும் இலக்கியத்திலே வந்துள்ளன. அகநானூற்றிலே,

                        பைங்குழைத்தழையர் பழையர் மகளிர்

                         கண்திரள் நீள்அமைக் கடிப்பின்தொகுத்து

                         குன்றகச் சிறுகுடி மறுகுதொறும்மறுகும்‘ (அகம்.331:5-7)

            வெண்மையானப் பூக்களை ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும் தின்னுமாம். தின்றதுபோக மீதியுள்ளப் பூக்களைப் பறித்து தன்னுடையக் கூடையிலேப் போட்டுக் கொண்டாள் எயினமகளிர். பக்கத்தில் உள்ள சிற்றூரில் தெருக்களைச் சுற்றியும் சுழன்றும் பூக்களை விற்பாளாம் என ஆசிரியர் கூறுகின்றார். இச்செய்தி, பூந்தட்டில் கட்டு மணம் வீசுகின்ற நறிய பூவினை உடையவர்கள் (மதுரை:397-398), பூ விற்கும் பெண்(நற்:118), பூக்களோடு சந்தனத்தையும் சேர்த்து விற்றல் (மதுரை:515) சான்றுகளாக இங்கு சுட்டப்படுகின்றன. இன்றும் பூக்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றன. விலையுயர்ந்தாலும் மங்கையர்கள் பூவைச் சூடிக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கம்மியர்

            அணிகலன்களைச் செய்பவர்களை கம்மியர் என்றும் கம்மாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நற்றிணையில்,

                        கைவல்வினைவன் தையுபு சொரிந்த

                         சுரிதக உருவின ஆகிப்பெரிய‘ (நற்.86:5-6)

            கைவினையில் வல்ல கம்மியர்கள். பலவண்ணக் கற்களைக் கட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியினைத் தலைவி அணிந்து கொண்டாள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், செம்பினால் செய்த பானை (நற்:153:2-3), தொழில் வல்லவன் வாளரத்தால் அறுத்து வளையல்கள் செய்யப்பட்டன (நற்:77), (அகம்:345,351) போன்றவை உதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளன.

கிணறு வெட்டுதல்

            கிணறுகள் வெட்டி தண்ணீரைத் தேக்கி அதன் மூலம் குடி தண்ணீர், வயல்களுக்குத் தண்ணீர் போன்றவை சங்க காலத்திலே நடைபெற்று வந்திருக்கின்றன. அகநானூற்றில்,

                        கனைபொறிபிறப்ப நூறி வினைப் படர்ந்து,

                         கல்லுறுத்து இயற்றியவல்உவர்ப்ப படுவல்,

                         பார் உடை மருங்கின்ஊறல் மண்டிய‘ (அகம்.79:2-4)

            வலிமைப் பொருந்திய கையினை உடைய ஆடவர்கள், தோளிலே சோற்று முடிச்சு தொங்க கிணறு வெட்டும் தொழிலுக்குச் செல்வார்கள். தீப்பொறிக் பறக்க பாறைகளை வெட்டி மிக்க உவரையுடைய கிணற்றினைத் தோண்டுவர் என ஆசிரியர் குறிக்கின்றார். அப்போது குந்தாழியால் குழி தோண்டுதல் (அகம்:399) கோசர்கள் பாறையை குடைதல் (அகம்:252) போன்றவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

            மேலும் எண்ணெய் ஆட்டும் செக்கர்களும் சங்ககாலத்தில் இருந்திருக்கிறார்கள். (நற்:328:8-9) என ஆசிரியர் குறிக்கின்றார் கயிறு மேல் நடக்கும் கழைக் கூத்திகளும் இருந்திருக்கிறார்கள் (நற்:95)

புறநூல்களும் பத்துப்பாட்டும் கூறும் தொழில்கள்

            மேற்கூறிய அனைத்து தொழில்களும் எட்டுத்தொகை அக இலக்கியங்களைக் கொண்டு எடுத்தாளப்பட்டவைகள். புறநூல்களிலும் பத்துப்பாட்டு இலக்கியங்களிலும் குறுந்தொழில்கள் பயின்று வந்துள்ளமையை காணமுடிகிறது.  இங்கு தொழில் பெயரும் அதனோடு சேர்த்து பாடல் எண்களின் குறிப்புகளும் தரப்படுகின்றன.

1.         நெசவாளர் மதுரைக்காஞ்சி:521

2.         கட்டில் பின்னுபவர் புறநானூறு:82:3

3.         பிணம் சுடும் புலையர்கள் புறநானூறு:36:19

4.         நீர் இறைக்கும் தொழுவர் மதுரைக்காஞ்சி:89

5.         நெல்லரியும் தொழுவர் புறநானூறு 379:3,209:2,24:1

6.         விறகு விற்போர் புறநானூறு:70:17

7.         பாசவர் எனும் ஆட்டு வணிகர்கள் பதிற்றுப்பத்து:21:9,67:16

8.         கச்சு முடிவோர் மதுரைக்காஞ்சி:513

9.         கட்டடக்கலைஞர் நெடுநல்வாடை:76-78

10.       ஓவியர் நெடுநல்வாடை:110-114,மதுரைக்காஞ்சி:516

சங்ககாலத்தில் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட குழுக்கள் பின்னாளில் குலமாக மாறியது எனலாம். “தொழில் பிரிவினர் காலவோட்டத்தில் குலங்களாய் குடிகளாய் ஆயின6 என பா.இறையரசன் கூறுகின்றார். சாதிகள் பெருகுவதற்கு தொழில்களே காரணமாக இருந்தது என்பது அடிப்படை உண்மை.

முடிவுரை

முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை உட்கார்ந்து கொண்டு அழிப்பவன் மனிதன் அல்லன். சொத்து சேர்த்து வைக்காவிடிலும் தனக்குண்டானச் சோற்றையாவது தான் சம்பாதித்த பணத்தில் சாப்பிடுவது நன்று. நம் நாட்டின் இழிவு என்பது சோம்பேறித்தனமும், பிச்சை எடுப்பதும்தான். அவர்களுக்கு தகுந்த வேலையைக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். இன்று உடல் ஊனமுற்றோர்கள் கூட தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல வேலை என்று ஒன்றும் இல்லை. கிடைத்த வேலையைச் செய்து கொண்டே நல்ல வேலையைத் தேடுதலே சாலச்சிறந்து. இவ்வுலகில் பொய் உரைக்காமலும், மற்றவர் பொருளினை அபகரிக்காமலும், யாரையும் ஏமாற்றாமலும் எந்தவொரு வேலையினைச் செய்தாலும் அத்தொழிலானது மகிழ்ச்சிக்குரியதாகும்.

சான்றெண் விளக்கம்

1.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்பு ஜுலை 1993, .192

2.         சுப்ரமண்யன்,., சங்ககால வாழ்வியல், NCBH சென்னை-98, இரண்டாம் பதிப்பு – 2010, .304

3.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்புஜுலை 1993, .192

4.         சுப்ரமண்யன்,., சங்ககால வாழ்வியல், NCBH சென்னை-98, இரண்டாம் பதிப்பு – 2010, .304

5.         மேலது. .303

6.         இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108,         முதற்பதிப்புஜுலை 1993, .192

 

முத்துக்கமலம் மின்னிதழ் – 15.04.2018   வெளிவந்தது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

மணிமேகலை ஒரு சீர்த்திருத்தவாதி

        தொடக்கக் காலத்தில்மனிதன் சமயங்கள் வாயிலாகவே தன்னுடையநம்பிக்கையை வளர்த்து வந்தான். அந்நம்பிக்கைகளுக்கு எந்தவொரு ஊறு விளைவிக்காமல் நடக்கவும்செய்தான். மனிதனின் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும்கதைகளாக வடிக்கத் தொடங்கினான். அந்தக் கதைகளின்போக்கு சிறப்புடையதாக அமையநிறைய வடிவங்களையும், கதாப்பாத்திரங்களின் ஆளுமைத்தன்மையினையும் கொண்டு வந்தான். அக்கதையின் வழியாகதான் நினைக்கின்ற உலகத்துஇயல்புகளை எல்லாம் உருவாக்கி நடமாடச்செய்தான். மக்களுக்கு நல்லவை நடக்கும்என்று நம்பி கற்பனைக்கும் எட்டமுடியாதக் கருத்துக்களைக் கூட  நம்பவைத்தான். அந்த வகையில்காப்பியங்கள் மிகச்சிறப்பான இடத்தைப்பெறுகின்றன. ஐம்பெருங் காப்பியத்தில் மணிமேகலையில்கோவலனுக்கு கிடைத்த தண்டைனையை மாற்றி, கண்ணகியின்கோபம் குறைவுபட, மாதவியின் மானம்காத்து, பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவுஇட்டாள் காவிய நாயகி மணிமேகலை. அம்மணிமேகலைபசிப்பிணி என்னும் பாவியை சுட்டெரித்துவீழ்த்தியச் செய்திகளை இவ்வாய்வுக் கட்டுரைவெளிப்படுத்த முயல்கிறது.

மணிமேகலை 

            தன்னுடையப் பழம் பிறப்பினைஅறிந்து கொண்ட மணிமேகலை, அறத்தின் இயல்புகளையும்தத்துவங்களையும் கற்றுக் கொள்வதற்கு தகுதிஅடைந்தவளாய் இப்போது இருக்கின்றாள். மணிமேகலை சிறுகுமாரியாகஇருப்பதனால் சமயக் கொள்கைகளை அடிகளார்கூறமாட்டார்கள். அதனால் உனக்கு வேற்றுருக்கொண்டும், வான் வழியேச் செல்லும் மந்திரத்தையும் அளிக்கின்றது மணிமேகலாத் தெய்வம்.

            புத்த பிரான் அவதரித்தநாளான வைகாசி நாளன்று கோமுகிப்பொய்கையின்று அமுதசுரபி என்னும் ஐயக்கலம்வெளிப்படும். அக்கலமானது ஆபுத்திரன்கையில் இருந்தது. அதில் இடப்பட்டசோறு எடுக்க எடுக்க குறைவுபடாதுவளரும் தன்மையுடையது. இன்றுதான் அமுதசுரபிதோன்றும் நன்னாள் என்று கூறிதீவத்திலகை மணிமேகலையை கோமுகிப்பொய்கைக்கு அழைத்துச் செல்கின்றாள். அப்பொய்கையில் இருந்துதோன்றிய அமுதசுரபியானது மணிமேகலையின்கைகளில் வந்து தங்கியது. அமுதசுரபி தன்கைகளில் புகுந்ததும் மனதில்பெரும் மகிழ்ச்சி அடைந்து புத்தப்பகவானை வணங்கித் துதித்தாள்.

                        குடிப்பிறப் பழிக்கும்விழுப்பங் கொல்லும்

                         பூண்முலைமாதரொடு புறங்கடை நிறுத்தும்

                         பசிப்பிணி  யென்னும் பாவியது தீர்த்தோர்” (மணிமேகலை.11:76-79)

            பசிப்பிணி என்னும் பாவியானவன்குடிப்பெருமையை அழிப்பான். மேன்மையைக் கொல்வான். நாணம்என்ற அணிகலனைக் களைந்து எறிவான். உடலழகையும்அழித்து விடுவான். மனைவி மக்களோடுஅயலான் வீட்டுக்கு நாணாதுபிச்சை எடுக்கச் செய்வான். இவ்வளவு கொடுமைகளைச்செய்யும் கொடும்பாவியை அழிப்பவரைபுகழ வேண்டும். அக்கொடும்பாவியாகியப் பசியைஅழிக்க வந்தவள்தான் மணிமேகலைஆவாள். தன்னுடையப் பாத்திரத்தின் வாயிலாகமக்களின் பசியினைத் தீர்த்து வைக்கிறாள்.

பசியின் கொடுமை

            பசி வந்தால் பத்தும் பறந்துபோகும், பசி ருசி அறியாது என்றபழமொழிகள் கிராமங்களில் சொல்வதுண்டு. பசியின் வலியை அறிந்தவன் மற்றவரின்பசியை நன்கு புரிந்து கொள்வான். திருக்குறளில்,

                        உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

                           சேரா தியல்வதுநாடு” (குறள்.74:4)

            மிகுதியானபசியும், அந்தப் பசியோடு சேர்ந்தநீங்காத நோயும், அழிவைத் தருகின்றபகையும் சேராது ஒரு மனிதன்வாழம் நாடே சிறந்த நாடாகக்கருதப்படுகிறது. பசிப்பிணி இல்லா நாட்டையேவள்ளுவர் விரும்பினார். மணிமேகலைக் காப்பியத்தில்பசியின் கொடுமையை சாத்தனார் அவர்கள்விரிவாகச் சுட்டுகின்றார். பசியின் வலிஅவஅவனுக்கு வந்தால்தான் தெரியும்என்பார்கள். உன்று கொழுத்தவனுக்கு பசியின்கொடுமைப் பற்றி எங்கே தெரியப்போகிறது. மணிமேகலையில் மழையின்மையால் கௌசிகமுனிவன் இறந்து கிடந்த நாய்க்கறியினைஉண்ணுகிறான்.  அதையேஇந்திரனுக்கும் படைக்கவும் செய்கின்றான்.

            பசியானது கௌசிக முனிவனையேஇழி செயல் செய்யத் தூண்டியிருக்கிறது. அப்பசியின் கொடுமை பாமர மக்களைஎன்னச் செய்யத் துண்டாது? உலக அறங்களில்சிறந்தது பிறருடையப் பசியினைப்போக்குவதுதான். பசியைப் போக்கி ஆற்றுவாரேசிறந்தவராகக் கருதப்படுகிறார். “எல்லா ஒழிப்புக்களிலும் உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலைவற்புறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல்வற்புறுத்தும் வேறு நூல் தமிழில்இல்லை. பசியின் கொடுமை மிகப்பெரியது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்றநல்லவை யாவும் பசித் தீமுன் அழிந்தொழியும். எதனைத் துறந்ததுறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசியாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும்”1  என்று .சுப. மாணிக்கம் அவர்கள்பசியின் வலியை உணர்த்தி நிற்கின்றார்.

                        பசிப்பிணி யென்னும் பாவியதுதிர்த்தோர்

                         இசைச்சொலளவைக் கென்னு நிமிராது” (மணிமேகலை.11:80-81)

            சோற்றுக் கொடையும் அக்கொடையாளரின் சிறப்பும் இந்நூலால் பறைச்சாற்றப்படுகின்றன. சோற்றை ஆரூயிர்மருந்து என்றும் அதனை வழங்குவோரைஆருயிர் மருத்துவர் என்றும்சாத்தனார் கூறுகின்றார். பசி என்கிறநோயிலிருந்துதான் ஏனையப் புற நோய்களும்அக நோய்களும் பிறக்கின்றன. உடற்பிணி மருத்துவர்களாலும் அகப்பிணி அறிஞர்களாலும் போக்கப்படுகின்றன.  ஏனைய நோய்களுக்குப் பிறப்பிடமாகப்பசி என்னும் நோய் தோன்றுகிறது.

                        மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

                         உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத் தோரே” (மணிமேகலை.11: 95-96)

            என்று சீத்தலைச் சாத்தனார்அவர்கள் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு தனிமனிதனும் பசியினைப் போக்க பாடுபடுதல்வேண்டும். அதன் ஒழிப்பை அரசும் முதற்கடைமையாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும். ஓருயிர்கூட பசித்துக் கிடத்தல் கூடாதுஎன்று நினைத்தல் வேண்டும். பசிப்பிணி நீங்கபுறப்பிணி நீங்கும். புறப்பிணி நீங்கஅகப்பிணி நீங்கும். மக்கள்களுக்கு அடிப்படையாகத்தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் ஆகியவைஅரசு அமைத்துக் கொடுத்தல் வேண்டும்என்று சாத்தனார் அவர்கள் மணிமேகலையில்பாடுகின்றார்.

                        ஆற்றுநர்க் களிப்போரறவிலை பகர்வோர்

                         ஆற்றாமக்கள் ளரும்பசி களைவோர்

                         மேற்றேயுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை” (மணிமேகலை.11:92-94)

            அறத்தை விலைக் கூறிவிற்கும் அறவணிகர்கள் பொறுத்துக்கொள்ளும் செல்வந்தர்களுக்கு உணவுஅளிப்பார்கள். பசியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத மக்களின் பசியினை நீக்குபவர்கள்உண்மையுடையவர்களாக இருப்பார்கள். உண்மையான வாழ்க்கையானதுஅவர்களின் உள்ளம்தான். இந்த உலகத்தில்வாழ்கின்ற உயிர்களுக்கெல்லாம் உணவுகொடுத்து பசியைப் போக்குவோர்தாம் உயிர்கொடுத்தவர்களாகக் கருதப்பெருவார்கள். உணவு கொடுப்பதுதான்உயிர் கொடுப்பதற்குச் சமமாகக்கருதப்படுகின்றது.

                        சோறில்லை என்பார்க்குச் சோறுதருவதுதான்

                         கூறறங்களின்சாற்றுக் கூட்டம்மாவேறேதான்”2

            என்று மணிமேகலை வெண்பாவில்பாரதிதாசன் குறிப்பிடுகின்றார். வயிற்றுக்குச் சோறில்லைஎன்று துன்பம் படுகிறவர்களுக்கு சொறுதந்த உதவுவதுதான் சிறப்பித்துச்சொல்லுகின்ற அறத்தின் தொகுதியாகக் கருதப்படுகிறது. அறங்களின் சாற்றையெல்லாம் கூட்டியகூட்டுத்தான் சோறு தருவது என்றுபாரதிதாசன் கூறுகின்றார்.

சிறைக்கோட்டத்திற்கு உணவுவழங்கல்

            ஒருநாள் சிறைக்கோட்டத்திற்குச் சென்றுஅங்குப் பசியால் வாடிக்கொண்டிருந்தவர்களைக் கண்டுஇன்மொழிகளைக் கூறி அமுதசுரபியிலிருந்து உணவைஅள்ளி அள்ளித் தந்து அவர்களின்பசியினைப் போக்கி உள்ளம் குளிரச்செய்தாள் மணிமேகலை.

                        ஆங்குப் பசியுறு மாருயிர்மாக்களை

                         ஊட்டியபாத்திர மொன்றென வியந்து” (மணிமேகலை.19:45-46)

            மணிமேகலையின் செயலைக் கண்டசிறைக் காவலன் மன்னனிடம் சென்றுநடந்ததை தெரிவித்தான். சோழ மன்னன்தன்னுடைய அரசமாதேவியுடன் சோலையில்வீற்றிருந்தான். நம் நகரத்தில் யானைத்தீ என்னும் கடும் பசியால்உடல் வருந்தி மெலிந்து திரியும்பெண்ணொருத்திக்கு ஒருத்தி தன்னுடையப் பாத்திரத்தில்இருந்து உணவினை எடுத்துக் கொடுத்தாள். அது அள்ள அள்ள குறைவில்லாமல்இருந்தது. அவள் தந்த உணவினை அனைவரும்உண்டு பசி நீங்கினார்கள். மன்னன் மணிமேகலையைஅழைத்து வர உத்திரவிடுகின்றார்.

            ஐயக்கலனைப் பற்றி மன்னர்வினவுகின்றார். உலக அறவியில் ஒருதெய்வம் எனக்கு தந்தது. இது தெய்வத்தன்மைபொருந்தியது. புசியால் வாடும் உயிர்களுக்குஉயிர் தரும் மருந்தான உணவைவற்றாமல் சுரக்கின்ற அமுதசுரபிஇது. இதைக் கொண்டு என்னுடைய கடமையைச்செய்து வருகின்றேன் என்கிறாள்மணிமேகலை.

            மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்ற வழிவகைச் செய்தல்வேண்டும் எனக் கூறுகிறாள். மன்னனும் சிறைப்பட்டோரைஎல்லாம் விடுதலை செய்த அறக்கோட்டமாகமாற்றுகிறேன் என்று உறுதி கூறுகின்றான். முனிவர்கள் அரசரிடம் உம் கொற்றம்சிறக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். பஞ்சமா பாதங்களில் மிகவும்கொடியதாகக் காமமேச் சுட்டப்படுகின்றது. அதை நீக்கிவிட்டால் பொய், கொலை, களவு, கள் எனநான்கும் தானாகவே நீங்கிவிடும் என்கிறார்ஆசிரியர்.

இலக்கியப் பார்வை

பொய், களவு, பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைவிட மிகப்பெரிய நோய்பசியே என்கிறார்கள். அப்பசியினைப் போக்கஅரசாங்கம் வழிவகை செய்தல் வேண்டும். அக்காலத்தில்பசி என்று வந்தவர்களுக்கு உணவுபரிமாறிட அன்னச்சத்திரங்கள் ஆங்காங்குகட்டி வைத்தார்கள். தானத்தில் சிறந்ததுமற்றவர்களுக்கு பசியை ஆற்றும் அன்னதானமேஆகும். சங்ககாலம் முதல் இடைக்காலம்வரை சத்திரங்களும் மடங்களும்மக்களுக்கு சோறு போட்டன. காவிரிபூம்பட்டினத்தில், சோறாக்கிய கொழுங்கஞ்சிஆறு போல் வீதியை நனைத்ததுஎன்று பட்டினப்பாலை உரைக்கிறது. ஆனால் இன்றைக்கு உணவினை காசுக்குபோட்டிப்போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். உழைப்பவனுக்கே அனைத்தும் கிடைக்க வேண்டும்என்கிறார்கள். ஆனால் அவனுக்கு கிடைப்பதுவெறும் கூழோடு கூடிய கஞ்சிமட்டும்தான். நாட்டின் வளர்ச்சி மாணவஇளைஞர்கள் கையில் உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள்பட்டினி கிடந்தால் பாடம்தான் ஏறுமா? புத்திதான்விளையுமா?

                            தனியொருவனுக்கு உணவில்லைஎனில்

                             ஜகத்தினை அழித்திடுவோம்  (பாரதியார் கவிதைகள், பாரதசமுதாயம். பா.2)

என்கிறார் பாரதியார். தனி மனிதனுக்கு உணவில்லைஎனில் இந்த உலகம் எதற்காக? அரசாங்கம்எதற்காக? மானுடம் வெல்லும் என்றுவாய்ப்பேச்சில் மட்டும் இருந்தால் போதாது.

முடிவுரை

அள்ள அள்ளகுறையாத தமிழ் மண்ணில் பிறந்தமக்கள் சோற்றுக்கு வக்கத்தவர்களாக மாறி விட கூடாது. ஆபுத்திரன் கையில்இருந்த அமுதசுரபியானது எத்தனையுகங்கள் ஆனாலும் மணிமேகலை போன்றநல்ல உள்ளங்கள் கைகளில் இருந்து, பசிக்கொடுமையால் வாடி வதங்கிக்கிடக்கும் மனிதர்களுக்குஎப்போதும்  உணவு வழங்கிக்கொண்டிருக்கும்.

சான்றெண் விளக்கம்

1.காப்பியப் பார்வை, .சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, .146

2.மணிமேகலை வெண்பா, பாரதிதாசன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, நூ.113

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்ககால உப்பு வணிகர்களின் வாழ்வியல் சிக்கல்கள்

          பண்டைய மனிதன் தன்னுடைய நிலத்தில் விளைந்தப் பொருட்களை தான் மட்டும் பயன்படுத்தியது அல்லாமல் பிற நிலத்து மக்களுக்கும் கொடுத்து வந்தான். பிற நிலங்களில் விளைகின்ற பொருட்களையும் வாங்கி உபயோகிக்கவும் செய்தான்.  அப்படிப்பட்ட மனிதன் காலப்போக்கில் ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்கி பண்டமாற்றுக்கு வழிவகுத்தான். அந்த நிலையே கொஞ்ச கொஞ்சமாக மாறி உள்நாட்டு வாணிபத்துக்கு வழிவகுத்தது எனலாம். அவ்வகையில் நெய்தல் நிலத்தைச் சார்ந்த மக்கள் உப்பை விளைவித்து பிற நிலங்களில் வாழக்கூடிய மக்களுக்கு விற்று வாழ்ந்து வந்தனர். உப்பு விற்கும் மக்களின் உணர்ச்சி போராட்டங்களையும், வாழ்வியல் சிக்கல்களையும் இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைக்கிறது.

உப்பு விளைவித்தல்

            நிலத்தில் எவ்வாறு உழவு மேற்கொண்டு வேலைச் செய்தார்களோ அவ்வாறே பரதவர்கள் கடல் என்ற நிலத்திலே உப்பை விளைவித்தனர் என சங்கப் பாக்கள் கூறியிருக்கின்றன. நற்றிணையில்,

                        “நேர் கண் சிறுதடி நீரின் மாற்றி

                         வானம் வேண்டா உழவின் எம்” (நற்.254:10-11)

என்னும் அடிகளில், பரதவர்கள் ஒரு நேரிய இடத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். மழை நீரை எதிர்பாராது கடல் நீரைக் கொண்டு உப்பை விளைவிப்பார்கள். அப்படிப்பட்ட வேளாண்மையை உடையது இந்த கடற்கரைச் சோலை என்கிறார் ஆசிரியர். மீனையும், விளைவித்த உப்பையும் ஊர்ஊராகச் சென்று விற்றதை அகநானூறு (140) குறிப்பிடுகிறது. தந்தையுடன் சேர்ந்த இளமகள் ஒருத்தியின் செயல் பின்வருமாறு சுட்டப்படுகிறது.

                        “இருநீர்ச் சேர்ப்பின் உப்புடன் உளுந்தும்” (அகம்.280:8)

                        “கண்திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்

                         தேன் இமிர் அதன்கரைப் பகுக்கும்” (அகம்.280:12-13)

    என்னும் அடிகளில், தன் தந்தை கடலில் இருந்து கொண்டு வந்த முத்தையும் மீனையும் விற்றுப் பொருள் சேர்த்தாள் என்று அகநானூற்று ஆசிரியர் கூறுகின்றார். உப்பங்கழியில் உழாமலே கல் உப்பினை விளைவித்த (நற்:140)  செய்தியையும் காணமுடிகிறது.  

உப்பு வணிகர்கள்

            கடலில் விளைந்த உப்பினை வண்டி வண்டியாக ஊர்ஊராக சென்று விற்று வருகின்ற தொழிலைச் செய்பவர்களை உமணர்கள் என அழைத்தனர்.  இவர்களுடைய தொழில் மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். சங்கப்பாடல்களில் இவர்களைப் பற்றியக் குறிப்புகள் மிகுதியாகக் காணக்கிடைக்கின்றன.

உமணரும் உப்பு வண்டியும்

            கடலில் உப்பு வணிகர்கள் வரும் வரை பரதவர்கள் செய்வித்த உப்பினை குவியலாக கூட்டி வைப்பர். உப்பு வணிகர்கள் வந்தப் பின்பு பரதவர்கள் விலைக் கூறி விற்று விடுவார்கள் என நற்றிணை (331) கூறுகிறது. உப்பினை ஏற்றிக் கொண்ட உமணர்கள்,

                        “உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன” (குறும்.388:4)

    என்னும் அடியில் ‘வண்டியினை வரிசையாக நிறுத்திக் கொண்டார்களாம். உப்பினை ஏற்றிக் கொண்டு வரிசையில் நிறுத்தினர்’ என்னும் செய்தி சுட்டப்படுகிறது. நற்றிணையும் (354) இச்செய்தியினைக் குறிப்பிடுகிறது. கள்வர்களின் பயத்தால் உப்பு வணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து செல்வது வழக்கமாயிருந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்றனர் எனும் செய்தியை குறுந்தொகை (124) தருகிறது. எருதுகளை ஒன்றாகக் கட்டி செல்வதற்குத் தயாராகும் செய்தி அகநானூற்றில் (30) கூறப்பட்டுள்ளது. நற்றிணையில் உமணர்கள் உப்பின் விலையைக் கூறி விற்பதை,

                        “……………………….. உமணர்

                         வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி

                         கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்

                         மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்” (நற்.4:7-10)

    என்னும் அடிகளில், ‘உப்பு வணிகர்கள் வெண்மையான கல்லுப்பின் விலையைக் கூறிக் கூட்டமாகிய ஆநிரைகளை ஒலியெடுப்பியப் படியே செல்வார்கள். அப்படி செல்லும் போது வண்டியின் சக்கரத்தில் கட்டியிருக்கும் மணியின் சத்தம் கேட்டு வயலில் உள்ள கருங்கால் வெண்குருகுகள் அஞ்சும்’ என ஆசிரியர் கூறுகின்றார்.

            உப்பு வணிகர்கள் பல புரிகளையுடைய நீண்ட கயிற்றினால் வண்டியை எருதுகளின் கழுத்தில் பூட்டுவார்கள். ஏற்றமான இடங்களில் வண்டியை ஓட்டும்போது உமணர்கள் எருதுகளை அதட்டி ஓட்டுவார்கள். அப்போது ஒரு வித ஓசையை எழுப்பி அதன் மூலம் வண்டியை விரைவாகச் செலுத்துவார்கள் என்னும் குறிப்பு காணப்படுகிறது.

                        “பகடு துறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ

                         உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஓட” (அகம்.173:10-11)

என்று அகநானூற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இன்றும் மாட்டு வண்டிகளை ஓட்டுவோர் இது போன்ற சத்தத்தை எழுப்பி வண்டியை ஓட்டுதலைக் காணலாம்.

உப்பை விற்றல்

            உவர் நிலத்திலே விளையும் குன்று போல் குவிந்து இருக்கக் கூடிய உப்பின் குவியலை உப்பு வணிகர்கள் மலை நாட்டு ஊர்களுக்குக் கொண்டு போய் விலைக் கூறி விற்பார்கள் என்பதனை,

                        “உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை

                         மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை

                         கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த” (நற்.138:1-3)

என்று நற்றிணை கூறுகிறது. உப்பு வணிகருடைய வாழ்க்கை நிலையில்லா வாழ்க்கை என்றும், உப்பினை விலைக் சுறி விற்ற உமணர்கள்,

                        “தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்

                         கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை

                         உரனுடைச் சுவல பகடுபல பரப்பி

                         உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்” (அகம்.159:1-4)

என்ற பாடலில் சுட்டப்படுகின்றனர். இப்பாடலில் எருதுகள் பலவற்றையும் மேயும்படி அவிழ்த்து விட்டு, வரகினைச் சமைத்து உண்டார்கள் என்றும், இளைப்பாறினார்கள் உமணர்கள் என்றும் அந்த அடுப்பினை அவ்விடத்தே விட்டுச் சென்றனர் என்றும் அகநானூறு கூறுகிறது. ஆக உப்பு விற்கின்ற உமணர்களின் வாழ்க்கை நாடோடி வாழ்க்கையை ஒத்திருந்துள்ளது. அவர்கள் ஓரிடத்தில் தங்கி இருந்தாலும், உப்பு வாங்கி மலையோரப் பகுதிகளான (குறிஞ்சி) முல்லை மருத நிலமக்களுக்கு விற்கும் நோக்கில் செல்வதால் தங்கள் குடும்பத்தை விட்டு அதிக நாள் பிரியும் வாய்ப்பும் உண்டு.

            மேலும் உப்பு வணிகரின் வண்டியினுடைய அச்சு முறிந்து போனால் அதை வீசி எறிந்து விடுவர் என நற்றிணை (138) கூறுகின்றது. இதே போல் புறநானூற்றிலே,

                        “எருதே இளைய நுகம் உணராவே

                         சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே” (புறம்.102:1-2)

என்னும் அடியிலும் மேற்கண்ட செய்தி இடம்பெறுவதைக் காணமுடிகிறது. வண்டியில் உப்பாகிய பண்டம் அதிகம் ஏற்றப்பட்டது. இளம் வயதுடைய எருதுகள் வண்டியை இழுத்தலை அறியாமல் நிற்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வண்டியானது பள்ளத்தே சென்றாலும், மேட்டிலே ஏறினாலும் அவ்விடத்து வரும் இடையூற்றை நினைத்து முன்னெச்சரிக்கையாக அச்சு மரத்தின் கண்ணே காவலாகிய மோச்சையை சேர்த்துக் கட்டியிருப்பர் என ஆசிரியர் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. “உப்பளங்களிலிருந்து தலைச் சுமையாகக் கொண்டு சென்றும் நாட்டின் பலப்பகுதிகளிலும் விற்றனர்”1 என்று டாக்டர் ந.சுப்பிரமண்யன் குறிப்பிடுகிறார். இதனால் மாட்டு வண்டிகள் மட்டுமல்லாது முதுகிலும், தலையிலும் சுமந்து வந்து உப்பை விற்று வந்தனர் என்பதை அறியமுடிகிறது.

            பாலை வழியில் உமணர்கள் செல்லும் போது கள்வர்கள் பயம் இல்லாமல் செல்வதற்காக சத்தம் எழுப்பியும் மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் ஒலியும் கேட்கும் என அகநானூறு (17) கூறுகிறது. உமணர்கள் செருப்பை அணிந்து இருந்தார்கள் என்றும், கோலினைக் கையில் உடையவர்கள் என்றும்,

                        “தோல்புரை சிரற்றுஅடி கோலுடை உமணர்” (அகம்.191:4)

என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது. கல்வி அறிவில்லா உப்பு வணிகர்கள் என அகநானூறு (257) கூறுகின்றது. ஊர்ஊராக சுற்றும் உமணர்கள் ஏதாவது ஒரு மர நிழலில் நின்று இளைப்பாறுதலும் உண்டு என அகநானூற்றில் (295) பாடல் ஒன்று கூறுகின்றது. அதைப்போல,

                        “………………………. உமணர்

                         கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்” (அகம்.329:5-6)

என்று உப்பு வணிகர்கள் வளைந்த நுகத்தடியில் சிவந்த கயிறுக் கொண்டு பூட்டியபடி வைத்திருப்பார்கள். இவ்வண்டியானது துன்பம் தரக்கூடிய புழுதியுடன் காற்று சுழன்றடிக்கும் வகையில் வேகமாகச் செல்லுமாம். காட்டு வழியிலேச் செல்லும் உப்பு வணிகர்கள் (புறம்:313:5) சீறூர் சிறுவர்கள் குப்பைகளின் மீதேறி நின்று எத்தனை என எண்ணுவார்களாம் (புறம்:116:7-8). ஆனால் அவர்களுக்குள் சண்டை, சச்சரவு போன்ற பாகுப்பாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. வண்டிகளை எண்ணிய சிறுவர்கள் அந்த உமணச் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவார்கள் என சிறுபாணாற்றுப்படை (55) கூறுகிறது.

            வண்டிகளில் பூட்டப்பட்ட எருதுகள் சோர்ந்து போகும் இடத்து வேறு எருதுகளையும் உடன் கூட்டிப் போகும் வழக்கம் இருந்து வந்தது என்பதை,

                        “பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி” (பெருபாண்.66-67)

என்னும் அடியினால் அறியமுடிகிறது. மேலும், உமணர்கள் கல்லென்னும் ஆராவாரத்தையுடைய எருதுகளை உசுப்பியும், ஒருவரோடு ஒருவர் சொல்லாடியும் கூட்டமாக செல்வார்களாம். அப்படி செல்வதால் கள்வர் பயம் அற்றுப் போகும் என்பதை,

                        “எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக

                         மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்” (பெரும்பாண்.பா.66-67)

என்னும் அடிகளில், பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகின்றார்.

கழுதையில் ஏற்றி உப்பை விற்றல்

            எருது வண்டிகள் இல்லாதோர் கழுதைகளின் முதுகில் வைத்து உப்பை விற்று வந்தனர் என்பதை,

                        “நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்

                         குறைக்குளம்பு உதைத்து கல்விறழ் இயவின்” (அகம்.207:5-6)

என்னும் அடிகளில், நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை உமணர்கள் மூட்டைகளாகக் கட்டி, வெண்ணிற கழுத்தினைக் கொண்ட கழுதைகளின் முதுகிலே வைப்பர். மேற்கு திசையில் உள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று விலைக் கூறி விற்பார்களாம் என அகநானூறு பாடல் தெரிவிக்கின்றது. நெல்லுக்கு உப்பு நேர் என்று கூறி உமணர்கள் உப்பை விற்றனர் என்ற செய்தி (அகம்.390, நற்.254) ஆவது பாடலிலும்இடம்பெறுகின்றது. “உமட்டியர் எனப்படும் உமண மகளிரும் உப்பு விற்கும் தொழிலில் ஈடுபடுவார்கள். உப்பு கடற்கரைப் பகுதியில் மட்டுமே கிடைத்தாலும், எல்லோருக்கும் உணவில் இன்றியமையாது தேவைப்படும் பொருளாதலாலும், நாட்டின் பிற பகுதிகளுக்கு அதிக அளவில் எடுத்துச் சென்று விற்கப்பட்டது”2 உமணப் பெண்களும் உமணர்களோடு சேர்ந்து உப்பை விற்றனர் என முனைவர் அ.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

            உப்பை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் உமணர்களின் வாழ்க்கை பல சிக்கல்களை உடைத்தாயினும், தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்து விளங்கினார்கள்.

சான்றெண் விளக்கம்

1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமண்யன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,  

 இரண்டாம் பதிப்பு – 2010, ப.307.

2. அகநானூற்றில் பெண்கள், முனைவர் அ.ஜெயக்குமார், பல்லவி பதிப்பகம்-ஈரோடு, முதல் பதிப்பு – 2008, ப.87

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

நான்மணிக்கடிகை உணர்த்தும் நன்நட்பு

போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தில் மனிதன் தன் கை,கால்களை ஊன்றி நிற்பதற்கே அவனுடைய வாழ்நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. வாழ்க்கையில் முட்டி, மோதி வெற்றிப் பெற்றவனே இவ்வுலகத்தை ஆள்கிறான். தோற்றுப்போனவன் மீண்டும் மீண்டும் தோற்று ஒருநாளில் வெற்றியை நெருங்குகிறான். ஆனால், ஏற்கனவே வெற்றிப் பெற்றவன் தோற்றுப்போனவனின் வெற்றியைத் தடுக்க, மீண்டும் அம்மனிதன் தோல்வியையேச் சந்திக்கின்றான். வெற்றித் தோல்விகள் இரு மனிதர்களுக்குள்ளே அல்லது இரு தரப்பினருக்குள்ளேயே நிர்ணிக்கப்படுகிறது. அவ்வாறு வெற்றிப் பெற்றவனிடம் நற்பண்புகள் காணப்படுமாயின் அவனுடன் சேர்ந்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஒரு மனிதனின் உள்ளத்தைக் கணக்கிடும் போது அவனின் ஒழுக்கமும், நற்பண்புகளுமே மக்களின் மனதில் என்றுமே நிற்கும்.

இரு மனிதர்களிடம் காணப்படும் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவற்றை தவிர்த்து நட்பு பாராட்டப்படுமாயின் இவ்வுலகினில் நல்லதொரு ஆட்சியை நடத்தலாம். கடந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு நம்மிடையே இல்லாதப்பட்சத்தில்தான் நாட்டை ஆங்கிலேயரிடம் தாரைவார்த்து விட்டோம். அவர்களும் நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு வந்தார்கள். “நாடு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்” என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய நட்புகள் பகைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன எனலாம். அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் சொல்லப்பட்டிருக்கும் நல்ல நட்பின் பெருமையும், சிறுமையையும் இக்கட்டுரையின்கண் ஆராயலாம்.

 நான்மணிக்கடிகை:

            நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் ஆவார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவினால் பெயர்ப்பெற்ற நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஓவ்வொரு கருத்துக்களும் சிறப்பு வாய்ந்தவையாகவே கருதப்படுகிறன. “கடிகை என்பதற்குரிய பொருள்களில் துண்டம் என்பதும் ஒன்றாம். எனவே, நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும்” என முனைவர் வே.இராமநாதன் அவர்கள் கூறுகின்றார். தெளிந்த தமிழ்ச்சொற்களோடு எளிமையாகப் பாடல்களைக் கொண்டிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பினைக் காட்டுகிறது.

சங்ககாலத்தில் நட்பு:

            சங்ககாலத்திலே நட்பைச் சிறந்ததாகக் கருதினர். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், கபிலர் – பரணர், அதியமான் – ஒளவையார் ஆகியோரின் நட்பினை உதாரணமாகக் காட்ட முடியும். நட்பின்மேல் அன்பும், ஆழ்ந்த பற்றும் சங்க காலத்திலே இருந்து வந்தது எனலாம். அரசன் புலவனென்று பாராமல் நல்ல நட்பானது அன்றாடம் வளர்ந்து வந்தது. தோழிக்காக அதிசய நெல்லிக்கனியைக் கொடுத்ததும், நண்பனுக்காக உயிரை துட்சமென மதித்து உயிரை விடுவதும் இன்றும் நம்நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. ஒரு பக்கத்தில் போர் சண்டையென இருப்பினும் நட்பு பாராட்டும் நல்உள்ளங்களையும் இருக்கக் காண்கிறோம்.

 நான்மணிக்கடிகையில் நட்பு:

            நட்பைப் பற்றி எந்நூலூம் பேசாமல் இருந்ததில்லை. நான்மணிக்கடிகையும் நட்பைப் பற்றி விளம்புகிறது. நண்பன் பக்கத்தில் இருக்கும் போது கவலையில்லை, மன உறுதி மிகும், முகம் புத்துணர்ச்சி பெறும் போன்றவை மட்டுமில்லாமல் நண்பர்களுக்கிடையேக் காணப்படும் ஒற்றுமை, வேறுபடும் தன்மை, பிரிவுகள், நண்பனுக்காகவே வாழ்தல், உதவி செய்தல், நண்பனை மதிப்பிடும் முறை போன்றவற்றைப் பற்றி பேசுகிறது.

 நகையினிது நட்டார்:

            தோல்விகளாலும், துன்பங்களாலும் துவண்ட மனிதனின் இதயமானது ரொம்பவே கனத்துப் போயிருக்கும். அப்பொழுது மனதில் உள்ள துயரத்தை மற்றவர்களிடம் பகிரவே நினைப்பான். எல்லோரிடமும் தன் அந்தரங்கத்தை வெளிப்படுத்த முடியுமா? அதனால், தனக்கு நெருங்கிய நண்பனைத்தான் தேடுவான். அந்த நண்பனிடம் தன்னுடைய கஸ்டத்தைச் சொல்லி அழுவான். அழுகையின் முடிவில் கண்ணீராய் துன்பம் கரைந்து போகும். அக்கண்ணீரை முகமலர்ச்சியுடன் நண்பன் துடைப்பான்;. நான்மணிக்கடிகையில்,

            “நகையினிது நட்டார் நடுவன்” (நான்மணி.38:1)

            “நசைநலம் நட்டார்கண் நந்தும்” (நான்மணி.26:1)        

போன்ற பாடல்கள் நண்பர்கள் ஒருசேர இருக்கும்போது முகமலர்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்து காணப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர். துன்பத்தில் இருந்து மீட்டு இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளவே நண்பன் வருகின்றான். ஆனால்; இக்காலத்தில் முகத்தில் மட்டும் நட்பை வைத்துக்கொண்டு அகத்தில் வஞ்சனையை சூடிக்கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் கூட,

                 “முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து

                அகம்நக நட்பது நட்பு” (குறள்.786)

            முகத்தில் தோன்றுவது நட்பல்ல. உள்ளத்தில் தோன்றுவதுதான் நட்பு என்கிறார். இக்காலக்கட்டத்தில் சிரித்துப் பேசும் எல்லோரையும் நண்பனாக்கிப் பார்க்க முடிவதில்லை. வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில் அவை ஏமாற்றத்திலேயே முடியும்.

நட்டார்கண் விட்ட வினை:

    நண்பர்களுக்குள்ளே உண்மைதான் முதலில் இருக்க வேண்டும். உண்மைப் பொய்யாகும்போது அங்கு விரிசல் ஏற்படுகிறது. பொய் சொன்னால் நட்பானது கெட்டழியும் என்கிறார் விளம்பிநாகனார்.

                  “—————————— நாடாமை

                  நட்டார்கண் விட்ட வினை” (நான்மணி.27:3-4)

        நண்பர் ஒருவரிடத்தில் ஒரு வேலையைச் சொன்ன பின்பு, மீண்டும் அவ்வேலையை தன் நண்பனால் செய்ய முடியுமா என்று சந்தேகிப்பது மிகப்பெரியத் தவறாகும். தன்னுடைய நண்பர் இக்காரியத்தைச் செய்ய முடியும்யென நம்பித்தான் வேலையைக் கொடுக்கின்றீர். பிறகு சந்தேகப்பட்டு நல்ல நண்பனை இழக்கவே நேரிடுகிறது. இதுபொன்ற நிலை ஒருசில மனிதர்களிடம் இன்றும் கானப்படுகின்றன. இது மற்றவர்களிடம் நாம் கொண்டிருக்கும் நம்பகத்தன்னையைக் குறிக்கிறது. ஒரு மனிதனிடத்தில் இப்போக்கானது தொடர்ந்து காணப்படுமாயின் அவனின் மனமானது மிகுந்த குழப்பத்துடனும், தன் சொந்த பந்தகளைக்கூட சந்தேகப்பட்டு வாழ்க்கையை இருண்ட நகரத்துக்குள் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே மனிதனின் மனம் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுத்தப் பின்பு அவற்றை ஆராய்ந்து மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது.

 நண்பர்களின் தன்மை:

        உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடனே வாழ்வார்கள். அவர்களுக்குள் சின்னசின்னச் சண்டைகள் வரினும் தன் உற்ற நண்பர்களுக்கு தீய செயல்களை மட்டும் ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஒரு நண்பனின் நல்லகுணமும், தன்மையும் எப்பொழுது நமக்கு தெரிய நேரிடுகிறது என்றால், அந்த நண்பனை விட்டுப் பிரிந்து தனிமையில் துன்பப்படும்போதுதான் உயிர் நண்பனின் நினைப்பு வருகின்றது.

                             “—————————————————-ஒருவன்

                            கெழியின்மை கேட்டால் அறிக: பொருளின் ”   (நான்மணி.63:1-2)

            ஒருவன் கேடு செய்வதில் இருந்து அவன் தனக்கு நட்பில்லாதவன் என்பதை அறியலாம் எனச் சுட்டுகிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் இவ்வுலகினில் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட தீய நண்பர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்கு நண்பனுடைய நன்மதிப்பு தெரிவதில்லை என்றேச் சொல்லலாம். நட்பைப் பற்றி அறிய நேரும்போது ஒருவர்கூட இவர்களிடத்தில் நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. இவற்றை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்.

 நண்பர்கள் உரைக்கும் இன்சொல்:

            நண்பர்கள் தீயச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவர்களுடைய நட்பு நீண்ட காலம் நீடிப்பது குறைவே. எந்நேரத்திலும் நுனிப்பொழுதினும் கூட நண்பர்களிடம் மாறுபட்டு நிற்கக்கூடாது. அவர்களின் நட்பில் சூது, வஞ்சகம், பொறாமை ஏற்படுமாயின் அந்நட்பு உடனடியாய் பிரியும் என்பதை,

                    “நாவன்றோ நட்பறுக்கும்? தேற்றமில் பேதை

                   விடுமன்றோ வீங்கிப் பிணிப்பான்?” (நான்மணி.80:1-2)

           இக்கூற்றின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் நண்பன் தவறானப் பாதைக்குச் செல்லும்போது தடுத்து நிறுத்துபவனே உண்மையான நண்பன். தவறானப் பாதைக்குச் செல்லும் நண்பனோ அப்பேச்சைக் கேட்க மறுப்பான். மேலும் தனக்கு அறிவுரை சொன்ன நண்பன் மீது கோபமும் வெறுப்பும் அடைவதுடன் நட்பு முறிந்துபோகும் அளவிற்கு பிரச்சனையும் செய்வான். ஆனாலும் நண்பனுக்காக பொறுமையுடன் அவனை வழிநடத்த வேண்டும். அந்நண்பன் கோவப்படுவதற்கு காரணம் அவன் போகின்ற கீழானச் செயலே ஆகும் என்பதை அறிந்து நட்புடன் பழகுதலே அன்பு நிறைந்த வழியாகும். நான்மணிக்கடிகையில் நண்பனுடைய சொல்லானது இன்சொல் என்கிறது,

                                            “—————————————— பண்ணிய

                                           யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல்;” (நான்மணி.100:2-3)

            நட்புடையார் இடித்துரைக்கும் சொல் வலிமையுடையதாயினும் முடிவில் யாழினைப் போன்று இனிமையினையே தரும் என்கிறார் ஆசிரியர். ஆகையால் நண்பர்கள் எப்போதும் கெடுதல் செய்ய மாட்டார்கள். காலமாற்றத்தால் நண்பர்களுக்குள் வெறுப்பினை உண்டாக்கி நட்பினை அழிக்கவும் செய்கிறது.

நண்பரை வாழச் செய்க :

            இன்றையக் காலச்சூழ்நிலையோடு ஒப்பிடும்போது நட்பில் ஆயிரம் மாற்றங்கள் உண்டாயிருக்கின்றன. பள்ளி வாழ்க்கையில் மிட்டாய் கொடுத்து பக்கத்தில் அமர வைத்து நான் இருக்கின்றேன் என்று சொன்ன முதல் நண்பனை இன்று எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் சில நண்பர்கள் வந்து போகின்றார்கள். எத்தனை பேர் நண்பனுக்காகத் தோள் கொடுக்கச் சென்றார்கள்? தோள் கொடுக்க வந்தார்கள்? எண்ணிப்பார்த்தால் ஒன்றுமே இல்லை. அன்றைய ஆண்-பெண் நட்புகளில் புனிதம் இருந்தன. போற்றுதலுக்குரிய மரியாதை இருந்தன. இன்று வேறுவிதமாய் இருக்கின்றன. இன்றைய ஆண்-பெண் நண்பர்களே ஒழுக்கமாக நடந்து கொண்டால் கூட இச்சமூகம் அப்பெண்ணைப் பழிதூற்றவே செய்கிறார்கள். இதனால் இங்கு நட்பானது மறுக்கப்படுகிறது. பெண் தோழிகள் என்றால் அவர்களின் நட்பு பள்ளி, கல்லூரி வரைதான். திருமணத்திற்குப் பிறகு வெறும் நலம் விசாரித்தல் மட்டுமே அவர்களுக்குள் நடக்கிறது. ஆண் நண்பர்கள் எனில் இன்பமானலும் துன்பமானலும் சரி உடனே மதுக்கடைக்கு மொய் வைக்கச் சென்று விடுகிறார்கள். இவர்களா நல்ல நண்பர்கள்? என நினைக்கத் தோன்றுகிறது. “இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்ஃ788) என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு நினைவுக்கூறத்தக்கது. நட்பு என்ற பெயரினால் புகைக்கும், மதுவுக்கும் அடிமையாகி வாழ்க்கையே சீரழிந்து கெட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய இளைய சமூதாயத்தினர். நான்மணிக்கடிகை கூறும் நல்ல நண்பன் எங்கே இருக்கின்றான் என்று தேட வேண்டியிருக்கிறது. அந்த நல்ல நண்பன் எங்குமில்லை. நமக்குள்தான் தூங்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதை அறிய வேண்டும்.

            தான் கெட்டாலும் நண்பர்களை ஒன்றாக வாழச்செய்வதுதான் உண்மையான நட்பு. அந்நட்பானது அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணமாக இருக்கின்றது.                                

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

சங்ககால இலக்கியத்தில் கூத்துக்கலையின் வளம்

iniyavaikatral.in
பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த மனிதனுக்குப் பொழுது போக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும், தன் அறிவு சார்ந்த காரணங்களிலும் தன்னை கலையின் மீது ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். காலையில் எழுந்து வயலுக்குச் சென்று வேலை செய்து மாலை வீடு திரும்பும் உழவனுக்கு உடல் அசதியோடு மனச்சுமையும் கூடியிருக்க வேண்டும். அவன் சந்தோசத்தில் இருக்க வேண்டிப் பாடலைப் பாடியும், கைகளைத் தட்டியும் இசையை எழுப்பி இருக்க வேண்டும். அல்லது பொருட்களைத் தட்டியோ உரசியோ  ஒலி எழுப்பி இருக்க வேண்டும். அதனோடு நடனம்  ஆடித் தான் மட்டும் சந்தோசம் அடையாமல் தன்னைப் போன்ற பிற மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்க வேண்டும். இசையோடு கூடிய நடிப்புக்கலையே கூத்துக்கலையாகும். மக்களை இன்புறச் செய்யும் நிகழ்ச்சி கூத்து ஆகும். இக்கலையில் மக்கள், மன்னர்கள், புலவர்கள் என்று அனைவரும் பங்கு பெற்றனர். விறலியர், வயிறியர், கோடியர், கண்ணுளர், ஆரியர் எனக் கூத்தர்களை இலக்கியங்கள் சுட்டுகின்றன. இவ்வகை கூத்துகலைப் பற்றி இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

காதலும் கூத்தும்

            காதலர்கள் சந்தித்துக்கொள்ளவும், குறியிடம் குறிப்பிடுவதற்கும், தங்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதற்கும் இக்கூத்துக்கலை களமாக விளங்கியுள்ளது. கலித்தொகையில்,

                        “தொழீஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை

                         அரக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல்” (கலி.104:69-70)

என்று மகளிர் குரவைக் கூத்து நிகழ்த்தியதைக் காணமுடிகிறது. இவ்வகைக் கூத்தில் தலைவி, தோழியோடு ஆடியதையும், அப்போது தலைவன் தலைவியைக் காண வருவதையும், அவர்களிடையே காதல் மலர்வதையும் பாடலாசிரியர் சுட்டுகிறார். ஆட்டனத்தியை எதிர்ப்பார்த்த ஆதிமந்தி இத்துணங்கைக் கூத்தில் இருப்பானோ என்று சுற்றிப் பார்த்ததாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

            தலைவன் காதிற் குழையும் கழுத்தில் மாலையும் அணிந்து குறுகிய பல வளையல்களையும் அணிந்தவனாய் விழாக்காலத்தில் தலைவியோடு துணங்கை ஆடியதாகப் பின்வரும் நற்றிணைப்பாடல் எடுத்துரைக்கிறது.

                        “குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்

                         விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல” (நற்.50:2-3)

என்னும் அடிகள் மேற்கூறிய செய்தியினை உரைப்பதைக் காணலாம். “மதுரைத் தமிழ்க் கூத்தனார் தமிழரின் கூத்துக்களை ஆடிக்காட்டுவதில் புகழ்பெற்றிருந்தார்”1 என்று வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை குறிப்பிடுவது இங்கு சிந்தித்தற்குரியது.

புறமும் கூத்துக்கலையும்

            போர்க்காலங்களில் வீரர்களை ஊக்கப்படுத்தவும், எழுச்சியூட்டவும் பழங்காலத்தில் கூத்துகள் நடத்தப்பட்டன. இதனை அகநானூற்றின் 22ஆம் பாடல் உறுதி செய்கிறது. கூத்து வகைகளில் முன்தேர்க்குரவை, பின்தேர்க் குரவை என இரண்டு வகைக் கூத்துக்கள் நிகழ்த்தப்பட்டன. இவ்வகைக் கூத்துக்களைப் பற்றி தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கண நூல்களும் இயம்புகின்றன. பதிற்றுப்பத்தில் கூட,

                        “குருதி பனிற்றும் புலவுகளத் தோனே

                         துணைவகை ஆடிய வலம்படு கோமான்” (பதிற்று.57:3-5)

மேற்கண்ட அடிகள் துணங்கைக் கூத்து போர்க்காலங்களில் நிகழ்த்தப்பட்டதை உறுதிசெய்கின்றன.

குரவைக் கூத்து

            “பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களுள் ஒன்று குரவைக்கூத்து. குரவைக் கூத்தின் மலை நடனம் என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. ஏழு அல்லது ஒன்பது மகளிர் கூடி ஆடும் ஆட்டம் என்று உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ளுதல் குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும்”2 என்று பாக்யமேரி குறிப்பிடுவது குரவைக் கூத்தின் நிகழ்த்துமுறையை விளக்கியுரைக்கிறது. எனவே இக்கூத்தினைப் பெண்கள் மட்டும் ஆடியிருக்க வாய்ப்பில்லை. ஆண்களும் பெண்களும் கலந்து ஆடியிருக்க வேண்டும். இவ்வகையான குரவைக் கூத்து ஆடுவதால் தலைவன் தலைவியின் நெருக்கம் அதிகமாக்கப்படுவதற்கான சூழல் உருவாவதை உணரலாம்.

                        “வணங்கு இறைப் பணைத்தோள் எவ்வளை மகளிர்

                         துணங்கை நாளும் வந்தன் அவ்வரைக்” (குறும்.364:5-7)

பரத்தையானவள் தலைவியைப் பழித்துரைக்கிறாள். அவளைக் தண்டிக்க நினைத்த தலைவி குரவைக்கூத்து விழா நடக்கும் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்நாளும் வந்தது. இப்போது பரத்தை யாருடன் குரவைக் கூத்து ஆடுகின்றாள் எனப் பார்ப்பதாக ஆசிரியர் உரைக்கின்றார்.  இக்குரவைக் கூத்து சில நேரங்களில் குடும்பங்களில் குழப்பம் தோன்றுவதற்கும் வழிகோலியது. கலித்தொகையின் 65ஆம் பாடலும், பரத்தையோடு தலைவன் குரவை ஆடுவதால் அதனைக் கண்ட தலைவி வருத்தமுறுவதும் பாடலடிகளில் சுட்டப்படுகின்றன. இச்செய்தியினைக் கலித்தொகையின் 66ஆம் பாடலும், நற்றிணையின் 50ஆவது பாடலும் மதுரைக்காஞ்சியின் 328ஆம் அடியும் எடுத்துரைக்கக் காணலாம். அகநானூற்றில் இக்குரவைக் கூத்து, கீழ்க்காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது என கூறுகிறது.          

                      “குரவை தழீஇ யாம் மரபுளி பாடி

                         தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்” (கலி.103:75-76)

 என்னும் கலித்தொகை அடிகளில் குரவைக் கூத்தில் ஏற்றினை அடக்கிய தலைவனும் கலந்துகொண்டு சுற்றத்தார் மகிழும்படி ஆடியதை அறியமுடிகிறது.

குரவைக் கூத்தின் நன்மைகள்

            குரவைக் கூத்தினை வெறும் பொழுதுபோக்குத் தன்மை மட்டும் கொண்டதாகக் கருதிவிட முடியாது. இதன் மூலம் சமுதாய நன்மைகள் பல நிகழ்ந்தன.

                1. “ஒரு நிலத்தினைச் சேர்ந்த மக்கள் பிறிதொரு நிலத்தில் சென்று குரவை நிகழ்த்தினர். சமுதாய ஒற்றுமை மேலோங்கியது.

               2. ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுக்களைப் போலவே குரவைக் கூத்து சிறந்த பொழுது போக்காக

                விளங்கியன.

             3. சூதாட்டம் முதலான தீய பொழுது போக்குகளில் இருந்து இளைஞர்களை மன மாற்றம் செய்தன.

           4. குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப்பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று

              பலவித இசைக்கருவிகள் குரவையால் பயன்பட்டன.

         5.குரவைச் செய்யுள் என்ற மரபு பாவியற்றும் புலமைத் திறத்தை வளரச் செய்ததனைக் குரவையினால் ஏற்பட்ட மிகப்பெரிய 

           நன்மையாகக் கருதலாம். இது கூத்து இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பெரிய வரவாகும்”3

    என்று குரவைக் கூத்தினால் நிகழ்ந்த நன்மைகளைப் பட்டியலிடுவர் பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள்.

துணங்கைக் கூத்து

            குரவைக்கு முன் தோன்றி குரவைக்கு முன்னரே வழக்கிழந்து போனது இக்கூத்து வகை. துணங்கைக் கூத்து அதிகம் போர்ச்செய்திகளை எடுத்துரைக்கப் பயன்பட்டது. இதில் மகளிர் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்ததைக் காணமுடிகிறது. பரத்தையர்கள் பாடும் துணங்கைக் கூத்து எனக் கலித்தொகையும் (70), பெண் வேடமிட்டு பெண்களுடன் சேர்ந்து ஆடுகின்றான் தலைவன் என்றும், பிறகு துணங்கைக் கூத்து ஆடியவுடன் ஆண் எனத் தெரிந்ததும் தலைவனின் ஆடை கிழிந்து போனதாகவும் கலித்தொகையின் 73ஆம் பாடல் எடுத்துரைக்கிறது. இரவு நேரத்தில் துணங்கைக் கூத்து நிகழ்த்தியதாகப் பதிற்றுப்பத்து (52) குறிப்பிடுகிறது.

வெறியாட்டு

            கூத்து வகைகளில் ஒன்றான வெறியாட்டு என்பது பெண்களுக்காக நிகழ்த்தப்படுவதாக இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பெண்களுக்குப் பேய் பிடித்து விட்டதாக நற்றாய் நினைத்துக்கொண்டு வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தினர். தலைவிக்குத் தலைவனுடன் காதல். தலைவி தலைவனை நினைத்து உருகுகின்றாள். தலைவனோ வருவேன் என்று சொல்லிச் செல்கிறான். தலைவனுடன் பேசாமலும், பார்க்காமலும் இருக்கும் தலைவி உண்ணாமல் உடல் மெலிந்து காணப்படுகின்றாள். எப்பொருளைப் பார்த்தாலும் தலைவனின் முகமே தெரிகின்றது. இவ்வாறு காதல் நோயால் வாடும் தலைவியின் நிலை தவறாக நற்றாயினாலும் செவிலியினாலும் புரிந்துகொள்ளப்பட்டு இது பேய் பிடித்ததின் விளைவு என்று எண்ணி வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

                        “கிழவோன் அறியா அறிவினள் இவளென

                         மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்” (தொல்.பொருள்.களவு.நூ.27)

             என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, நம் குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து நட்பு கொள்ளத் தெரியாத அறிவினையுடையாள் என நற்றாயும் செவிலியும் எண்ணிக் குற்றமற்ற சான்றோரிடத்துக் கூறுகின்றனர் என்று உரைப்பதைக் காணலாம்.

                        “மறிக் குரல் அறுத்து தினைப் பிரப்பு இரீஇ

                         செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் இறங்க

                         தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா” (குறும்.263:1-3)

          என்ற பாடலின் வழி வெறியாட்டானது, களவொழுக்கத்தில் உடன்பட்டு நிற்கும் தலைவியின் நிலையை அறியாத நற்றாய் வெறியாட்டு நிகழ்ச்சி நடத்தத் தயாராகின்றாள். வெள்ளாட்டின் குட்டியினது கழுத்தை அறுத்து, தினை அரிசி நிரம்பிய பிரம்பின் கூடையை வைத்து, ஆற்றின் நடுவே அமைந்த மணல் திட்டில், பல இசைக்கருவிகள் ஒலிக்க, வேலன் முதலியோரை ஆவேசித்துப் பல தெய்வங்களை வேண்டுவார்கள் என்று  உரைக்கின்றது.

            பாவை ஒன்றில் பொறி இணைத்து விட்டால் அது எவ்வாறு தானே இயங்கி ஆடுமோ அவ்வாறு வெறியாட்டு ஆடினார்கள் என்று அகநானூறு (98) கூறுகின்றது. திருமுருகாற்றுப்படையில் தெய்வம் ஏறப்பட்டு வெறியாட்டு ஆடப்படுவதையும் (273), இவ்வெறியாட்டு ஒரு விழாவிற்கு ஒப்பாகக் கருதப்பட்டதையும் அறியலாம்.

                        “பொய்மணல் வரைப்பில் கழங்கு படுத்து அன்னைக்கு

                         முருகு என மொழியும் வேலன் மற்று – அவன்” ( ஐங்குறு.249:1-2)

            புதிதாகக் கொண்டுவரப்பட்ட மணலைப் பரப்பி அதன் மேல் வெறியாட்டுக் களம் அமைக்கப்பட்டதையும் அன்னையால் வரவழைக்கப்பட்ட வேலன் மணலின் மீது கழற்சிக்காய்களைப் பரப்பிய பின் குறிபார்த்துத் தலைவியின் மெலிவிற்குக் காரணம் உரைப்பான் என்னும் செய்தி இடம்பெறுகிறது. இதன்வழி வெறியாட்டு ஒரு பேயோட்டும் சடங்காக நிகழ்த்தப்பட்டதை அறியலாம்.

                        “முதுவாய் பெண்டிர் அது வாய் கூற

                         களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி

                         வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து

                         உருவச் செந்திணை குருதியொடு தூஉய்

                         முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம்.22:7-11)

              என்ற அடிகளில் முருகவேளை வழிபடுவதற்கு வேலனை வெறியாட்டு நிகழ்த்த நற்றாய் அழைத்தமை புலப்படுகின்றது. வெறியாட்டு குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்றன. நற்றிணையில் 268, அகநானூற்றில் 370, ஐங்குறுநூற்றில் 245, 248, குறுந்தொகையில் 53, 360ஆம் பாடல் ஆகியவை வெறியாட்டு நிகழ்த்தப்படும் சூழலை மிக விரிவாகப் பேசுகின்றன. வேலன் முதலாயினாரிடம் வெறியாட்டு முதலிய செயல்களைச் செய்யுமாறு கூறி, முடிவில் இவளை அணங்கிய துறைவனைத் தாய் அறிந்து கொண்டாள் என ஆசிரியர் கூறுகின்றார். எனவே வெறியாட்டு நிகழ்த்தப்படுவது பெரும்பாலும் நோய்த்தீர்த்தற் பொருட்டு மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளதை இதன்வழி அறியமுடிகிறது.

          இன்றைய விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருப்பினும், துன்பப்பட்ட மனிதனுக்கு ஆடலும் பாடலும்தான்; என்றைக்கும் புத்துணர்வை தருகின்றன. மேலைநாடுகளில் ஏனோ தானோவென்று ஆடுகின்ற மனிதர்களுக்கு மத்தியில் ஒரு கோட்பாட்டோடு உன்னதமான கலையைப் போற்றவும் வளர்த்திடவும் தமிழன் செய்திருக்கிறான். நாகரீக தோற்றத்தினால் திரைப்படம், இணையம் இவற்றின் தொடர்பால் பழங்காலத்து செவ்வியக் கலையான இக்கூத்துகலைகள் மக்களிடம் வழக்கிழந்து போய்விட்டன. ஆனாலும், கிராமங்களில் நடைபெறவிருக்கும் திருவிழாக்களின் போது இக்கலைகளைக் காணமுடியும்.

சான்றெண் விளக்கம்:

1.கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், சென்னை – 13, ப.157

2.எஃப். பாக்கியமேரி, காலந்தோறும் தமிழர் கலைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை-14,ப.64

3.மேலது.ப.69                     

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

 

 

 

 

 

 

 

 

                                    

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »