கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் உரிமைசார் பதிவுகள்|முனைவர் ந.மகாதேவி
முன்னுரை
கொங்குநாடான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், தருமபுரி, முதலான மாவட்ட கல்வெட்டுகளில் உரிமைகள் தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. இது கி.பி.7 முதல் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கக்கூடிய கோயில் கல்வெட்டுகளில் அரசர்கள் சிலருக்கு உரிமைகள் வழங்கியுள்ளனர். அவ்வுரிமைகள் வரிசைகள் என்ற மாற்றுச்சொல்லால் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்கும் முறையாகக் கிடைக்கப் பெற வேண்டியவை அனைத்தும் உரிமைகள் எனலாம். அவ்வகையில் மனிதன் இவ்வுரிமைகளின்றிவாழ இயலாது எனக் கருதப்படும் அடிப்படையான தேவைகளைப் பெறுவதை உரிமைகள் எனலாம். இந்த உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்த, அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க இயலாத சில உரிமைகளாகக் கருதப்படுகின்றன. இவை, இனம், சமயம், பால், வயது, ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருப்பதை அடிப்படை உரிமைகள் எனலாம். இவ்வுரிமைகள் கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் எவ்வகையில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வெட்டுகளில் உரிமைகள்
கொங்குச்சோழர், கொங்கு பாண்டியர் ஆகியோர் ஆட்சிக்காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் சிலகுடிகள், சில உரிமைகள் பெற்றதைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளில் வழங்கப்பெற்ற வரிசைகள் அனைவருக்கும் ஒரே வகையாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வரிசைகள் எல்லோருக்கும் வழங்கப்பெற்றது. சிலருக்குச் சிறப்பாக வழங்கப்பெற்றது. இவற்றை நோக்குங்கால் தரப்பெற்ற வரிசைகள்
பொதுவான வரிசைகள் (பொது உரிமைகள்)
சிறப்பான வரிசைகள் (சிறப்பு உரிமைகள்)
என இரு வகையாகப் பாகுபடுத்திப் பார்க்க முடிகின்றது. இது வரிசை பெற்றவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உடையவராக்குகின்றன.
பொதுவான உரிமைகள்
இவ்வுரிமைகளைப் பெற்றவர்கள் பார்ப்பார் (அந்தணர்), சிரிநிமந்தகாரர் (நிமித்திகர்), தேவரடியார், கம்மாளர், இடையர் ஆகியோர் ஆவார்கள். பொது வரிசைகளாகக் குறிப்பிடப்பட்ட அவற்றை அவர்கள் அனைவரும் பெறுகின்றனர்.
சங்கு, பேரிகை ஊதிக்கொள்ளல்
அவினாசியிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு உரிமையுடைய கொல்லன், தச்சன், தட்டான் ஆகியோர் நல்ல நிகழ்வுகளுக்கும் தீய நிகழ்வுகளுக்கும் பேரிகை கொட்டிக்கொள்ளவும் சங்கு ஊதிக்கொள்ளவும் அரசன் உரிமை அளித்துள்ளன. இதனை,
“இவர்கள் நன்மைத் தீமைக்கு
பேரிகையும் புகுந்து கொட்டி சங்கும்
ஊதக் கடவதாகவும் இவர்கள் மக்கள்
மக்கள் சந்திராத்த வரைக்கும்”1
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன. பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்படும் ஓர் இசைக்கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்த இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சங்கு என்பது காற்று இசைக்கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையிலும் கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அவர்களின் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைச் சந்திரனும் சூரியனும் உள்ளவரை எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கல்வெட்டில் அரசன் பெயர் குறிக்கப்பெறவில்லை. ஆனால், மன்னனிடம் உரிமை பெற்ற பிறகே செயல்படக்கூடிய சூழலை நோக்கும்போது மக்கள் தாங்களாக எவற்றையும் செய்ய இயலாத சூழல் நிலவியுள்ளது.
கம்மாளர்களுக்கு உரிமை அளித்தல்
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் அரசர், கம்மாளர்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளார். அவை, நன்மை, தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளவும் பேரிகை வைத்துக்கொள்ளவும் தங்கள் புறப்பட்டுச் செல்லும் இடங்களுக்குக் காலணி அணிந்து கொள்ளவும் வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும் அரசர் உரிமை அளித்துள்ளதை,
“நன்மை தீ மைக்கு இரட்டைச்
சங் கும் ஊதி
பேரிகை உள்ளிட்டனவும்
கொட்டிவித்து கொள்ளவும்
தாங்கள் புறப்பட வேண்டும்
இடங்களுக்குப்
பாத ரசஷ கோத்துக்
கொள்ளவு தங்கள்
வீடுகளுக்குச் சாந்திட்டுக்“2
இச்சான்றுகள் வழி உணரமுடிகின்றது. இவற்றை நோக்கும் போது சாதாரணமாக வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்வதற்குக் கூட ஆரம்ப காலகட்டத்தில் உரிமை பெற வேண்டிய சூழலும் கட்டாயமும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
கி.பி.1050 இல் பரகேசரி அபிமானசோழதேவனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் திருமுருகன் பூண்டியில் குடியிருக்கும் மகாதேவர் கோயில் திருமடைவளாகத்திலிருக்கும் (கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடம்) தபசியர் (தவம்செய்பவர்கள்), தேவரடியார், உவச்சர் (மேளக்காரர்), நிமித்தக்காரா் (நிமித்திகர்) ஆகியோர் குதிரையில் ஏறிக் கொள்ளவும் பேரிகை, சேகண்டி கொட்டிக்கொள்ளவும் வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளவும் உரிமை அளித்துள்ளார் என்பதை,
“தபஸியர் தெவடியாற்கும் உவச்சர்
நிமந்தக்கா(ர)ற்கும் குடுத்த
வரிசைகளாவன
மெலெற்றம் இராசாயிராசநும் கிழெற்றம்
குதிரையு பெரிகை செகண்டியும்
கொட்டக் கடவதாகவும் இவர்கள்
அகங்கள் இரண்டாநிலையும்
இரட்டைத்தலைக்கடையும்
எடுத்துச் சான்தும்
வாரிக்கொள்ளப் பெறுவார்களாகவும்“3
இச்சான்றுகளின்வழி அறியமுடிகின்றன.
சிறப்பு உரிமைகள்
சில தேவரடியார்கள் மற்றும் அரசுக் கருவூலத்தில் பொருளை வைத்த பார்ப்பனச் சான்றோர்கள் மட்டுமே சிறப்பு உரிமைகளைப் பெறுகின்றனர். வீரராசேந்திர சோழனின் பதினைந்தாவது ஆட்சியாண்டில் கி.பி.1222 இல் வடபரிசார நாட்டைச் சேர்ந்த பார்ப்பார் சான்றோர்க்கு அரசன் கொடுத்த ஓலையாவது பார்ப்பார் சான்றோர்கள் அரசன் பண்டாரத்தில் (கருவூலம்) பொருள் வைத்ததன் காரணமாக, இவர்களுக்கு சில உரிமைகளை அளித்துள்ளார். அவை,
📜 குதிரையின் மீது ஏறிக்கொள்ளும் உரிமை
📜 சீனக்குடை பிடித்துக் கொள்ளும் உரிமை
📜 சேகண்டி அடித்துக்கொள்ளும் உரிமை
📜 வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளும் உரிமை
📜 இரட்டைத் தலைக்கடை (வாயிற்படி) வைத்துக்கொள்ளும் உரிமை
📜 பச்சை நிறப் பட்டால் ஆன மேலாடை போர்த்துக் கொள்ளும் உரிமை
📜 படைகள் சூழ மன்னவன் உலா வரும்போது இவர்களும் அப்பொழுது பொன்னராம் பூண்டு உடன் வரும் உரிமை
📜 தங்கள் மக்களுக்குப் பொன்னாலான காறை என்னும் கையணி அணிவிக்கும் உரிமையைப் பெறல்
📜 திருமணத்திற்கு கட்டணங்கட்டி ஏரி ஊர் சூழ யானை, பல்லக்கு போன்ற உயர்வகை ஊர்தியில் ஏறி ஊர்வலம் வரும் உரிமை
📜திருமணத்திற்கும் கட்டணம் செலுத்தி ஊர்தியைப் பயன்படுத்தும் மரபு அக்கால கட்டத்திலிருந்துள்ளதை அறியமுடிகின்றன.
📜இவ்வுரிமைகளையெல்லாம் இவர்கள் சந்ததியனர் சந்திரனும் சூரியனும் உள்ளவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசர் உரிமையளித்துள்ளார்4.
அரசனின் கருவூலத்தில் பொருள் வைக்கக்கூடிய அளவுக்குச் செல்வந்தராக இருக்கும் சூழலில் மட்டுமே இவ்வுரிமையைப் பெறக்கூடிய நிலையைப் பெறுகின்றனர் எனும்போது அக்காலகட்டத்தில் நிலவிய அடிமைச்சூழலை உணரமுடிகின்றன.
கோயிலில் பணிபுரிய உரிமையளித்தல்
வீரராசேந்திரனின் ஐந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1212 இல் குறுப்பு நாட்டிலுள்ள உகாப்பாடி ஊரார் இராசராசபுரத்துச் சிவப்பிராமணர் ஆலங்காட்டுப் பாண்டி உடையானான சைவ சிகாமணிபரியன், விசைய மங்கலம் ஆத்ரேய கோத்திரம் ஆளவந்தி ஆகிய இருவருக்கும் அரசர் உரிமைகள் அளித்துள்ளார். அவை, இவ்வூரிலுள்ள தேவகோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் உரிமையளித்து இவர்கள் பெறக்கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பதை,
“இவிருவற்கும் கங்காணி செய்து குடுத்த
பரிசாவது எங்களுர்த் தேவக்கோயிலும்
பிள்ளையார் கோயிலும் மற்றும்
ஏழுவநமுனைப்பநவும் இவளுக்கு காணிசெய்து
குடுத்தோமான்“5
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.
உரிமை அளித்தல்
வீரபாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1280 இல் காங்கயநாட்டிலும் பூந்துறைநாட்டிலும் கம்பளர்களுக்கு சில தடைகள் இருந்தன. அவற்றை நீக்கக் காரணமாக இருந்த அலுவலர் காளிங்கராயர் ஆவார். இதனை இக்கல்வெட்டின்கீழ் கையொப்பமிட்டுள்ளதின்வழி அறியலாம். நீக்கப்பட்ட தடைகள் பின்வருமாறு
”இரட்டைச் சங்கும்
ஊதிப் போதிகை உள்ளிட்டன கட்டுவித்துக்
கொள்ளவும் தாங்கள்
புறப்பட வேண்டுமிடங்களுக்குப்
பாதரச கோத்துக் கொள்ளவும்
வீடுகளுக்குச்சா
சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம்”6
தேவைப்படும் காலங்களில் இரட்டைச்சங்கு ஊதிக்கொள்ளுதல், போதிகை உட்பட்ட பிற கருவிகளையும் கொட்டுவித்துக் கொள்ளுதல், தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் காலணிகளை அணிந்து கொள்ளுதல் வீடுகளுக்குச் சாந்திட்டு வைத்துக் கொள்ளுதல் போன்ற உரிமைகளை அரசர் அளித்துள்ளதை மேற்கண்ட கல்வெட்டு வரிகள் மூலம் அறிய முடிகின்றது. பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட அரசனிடம் உரிமை பெற்ற பிறகே செய்யக்கூடிய கட்டாயத்தில் இருந்துள்ளனர்.
முடிவுரை
📜உரிமை அளித்தலில் நிலவிய பொது உரிமை, சிறப்புரிமை என்ற பாகுபாடு அக்கால சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை உணரமுடிகின்றது.
📜அரசனின் கருவூலத்தில் பொருள் வைத்தவர்களுக்கு மட்டுமே அரசர் சிறப்புச் சலுகைகளை வழங்கியுள்ளார். இவற்றை நோக்கும்பொழுது பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே சிறப்பு உரிமைகளைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
📜இவை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாக அமைந்துள்ளன. கொங்குச்சோழர், கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகளில் மட்டுமே உரிமைகள் பற்றியான செய்திகள் இடம்பெற்றுள்ளன.
துணைநூற் பட்டியல்
1. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.24
2. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.249
3. தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனம், தொகுதி-30, ப.20
4. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.6
5. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.17
6. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.90
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.மகாதேவி
தமிழ்த்துறை
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி
திண்டல், ஈரோடு.
சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல்|அ.அன்பரசன்
ஆய்வுச் சுருக்கம்
கலை மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், மனிதனை மற்ற உயிரினத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு கருவியாகும். மனிதனின் அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடும் கற்பனைத் திறனும் ஒன்று சேரும் நிகழ்வே கலையாக வடிவம் கொள்கிறது. கலையானது நிகழ்த்துக் கலை, நிகழ்வில்லாக் கலை என்று இரண்டு வகைப்படும். பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
திறவுச்செற்கள்
கலை – நிகழ்வில்லாக்கலை – நிகழ்த்துக்கலை – நிகழ்த்துக்கலைஞர்கள் – பாணர் – பாடினி – கூத்தர் – விறலி – பொருநர் – இயவர் – கிணைவர்.
முன்னுரை
சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழர்களின் வாழ்வியலையும், அவர் தம் வாழ்வியலின் உட்கூறுகளான அரசமைப்பு, கொடைத்திறன், போர்த்திறன், கல்வி, கலை என்று பலவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அந்தவகையில் சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைகளும்,கலைத் தொழிலாளர்களும் மிக உயர்வான இடத்தைப் பிடித்து அரசர் முதல் சாதாரன மக்களும் மதித்துப் போற்றும் விதத்தில் வாழ்ந்துள்ளனர். கலைஞர்கள் வறுமையால் வாடியப் போதும் ஒழுக்கம் தவறாதவர்களாகவும், மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நெறியாளராகவும் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு மிகுதியான கருத்துச் சுதந்திரம் இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. பாடித்திரியும் பறவைகளாக இசைப் பாடி வாழ்ந்த நிகழ்த்துக் கலைஞர்களான பாண்சமுகத்தினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆய்வு அமைகிறது.
கலை
கலை என்பது தான் உருவாகிய சமூகத்தை அடையாளப்படுத்தும் கருவியாகும். மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி உணர்வுகளால் மனங்களை இணைக்கும் தன்மையுடையது, கலை வேறு மனித வாழ்க்கை வேறல்ல. கலைகள் அனைத்தும் மனித வாழ்கையில் இருந்து பெறப்பட்டவை. மனிதர்களைத் தவிர்த்துக் கலைகள் தனியாக உருவாகவோ, வாழவோ முடியாது.
கலை என்பது மனித உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். மனிதனின் அனைத்துக் கண்டுப் பிடிப்புகளுக்கும் அடிப்படையானது கலையே. கற்பனையும், இயற்கையும் ஒன்று சேர்ந்து உருவாகும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கலை. மனித உள்ளத்தின் கவலைகளை மறக்கச் செய்யும் பண்புடையதே கலை ஆகும். ஒவ்வொரு மனிதனின் மனதின் அடிப்படையிலும், உணர்ச்சிகளின் அடிப்படையிலும் எதன் மீது மிகுந்த கவனத்தை உள்ளம் செலுத்துகிறதோ அதனையே உள்வாங்கி கலையாக மனித உணர்வானது வெளிப்படுத்துகிறது. கலையைப் பொதுவாக நிகழ்வில்லாக் கலை, நிகழ்த்துக் கலை என்று இரண்டு வகையாகப் பாகுப்படுத்தலாம்.
நிகழ்வில்லாக்கலைகள் (NON – PERFORMING ARTS)
பார்வையாளர்களை மையப்படுத்தாமல், தனிப்பட்ட இடத்தில் தமது கலைத்திறனை வெளிப்படுத்துபவர்கள் நிகழ்வில்லாக் கலைஞர்கள் ஆவர். கலையை நுகர்வோரை மையப்படுத்தாமல் கலையைப் படைப்பவர்களை மட்டும் மையமாகக் கொண்டுள்ள கலைகள் நிகழ்வில்லாக்கலைகள் ஆகும். இக்கலைகள் யாவும் படைத்து முடிக்கப்பட்டப் பின்பே பார்வையாளர்களைச் சென்றடையும். ஒரு முறை படைத்தால் போதும் இக்கலைகள் நீண்ட நாள்களுக்கு நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தன்மையுடையன.
சிற்பம்
ஓவியம்
தச்சுக்கலை
கட்டிடக்கலை
வார்ப்புக்கலை
மட்பாண்டக்கலை
ஆகியன சங்ககாலம் முதல் இன்றுவரையுள்ள நிகழ்வில்லாக் கலைகள் ஆகும்.
நிகழ்த்துக் கலைகள் (PERFORMING ARTS)
அரங்கத்தில் ஒரு கலைஞர் அல்லது பல கலைஞர்கள் சேர்ந்து தமது முகம், உடல், போன்ற அங்கங்களைக் கொண்டு ஒரு கலையை நிகழ்த்திக் காட்டுவது நிகழ்த்துக் கலை. நுண்மையான உறுப்புகளையும், நுண்ணியத் திறன்களையும், நுட்பமான உணர்வுகளையும் கொண்டது நிகழ்த்துக் கலை. ஒரு கலைஞன் தனது நுட்பமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் போது அது நிகழ்த்துக் கலையாக வடிவம் கொள்கிறது.
நிகழ்த்துக் கலைஞர்கள்
பார்வையாளர்களின் முன்பு கலைகளை நிகழ்த்திக்காட்டும் கலைஞர்கள் நிகழ்த்துக் கலைஞர்கள். இவர்கள் தாம் நிகழ்த்தும் கலைக்கு ஏற்ப தனது உடல், மொழி, உடை, ஒப்பனை போன்றவற்றை அமைத்துக்கொள்வர். இவர்களுக்குப் பக்கத்துணையாகச் செயல்படும் மேடையமைப்பாளர்கள், இசையாசிரியர்கள், இதரகலைஞர்களும் நிகழ்த்துக் கலையின் முக்கிய அங்கமாகவே விளங்குகிறார்கள். நிகழ்த்தப்படும் கலைகளனைத்தும் படைக்கப்படும் போதே பார்வையாளர்களைச் சென்றடைந்தாலும் நிரந்தரமற்றவைகளாக உள்ளன. நிகழ்த்தி முடிக்கப்பட்டதும் கலைஞர்களைப் போலவே கலைகளும் களைந்து விடுகின்றன.
இசை
கூத்து
நடனம்
நாடகம்
கழைக்கூத்து
பொம்மலாட்டம்
ஆகிய கலைகள் நிகழ்த்துக் கலைகள் ஆகும்.
பாண்சமூகம்
சங்ககாலத்தில் பாண்சமூகத்திற்குள் பல்வேறு சமூகக் குழுக்கள் இருந்துள்ளன. பாணர்சமூகம் மிகவும் பரந்துவிரிந்த சமூகமாக இருந்துள்ளது. அவர்களுக்குள் பல தொழிற் பகுப்புகளும், படிநிலைகளும், தனித்தனி அடையாளங்களும் இருந்துள்ளது. சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைஞர்கள் வெவ்வேறுப் பணிகளைச் செய்துள்ளனர். பாணர், பாடிணியர், பொருநர், விறலியர், கூத்தர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அகவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், இயவர் ஆகியவர்கள் முன்னிலையான நிகழ்த்துக் கலைஞர்கள். நிகழ்கலைச் சமூகத்தினரின் வாழ்வியல் பாங்கும், பொரளாதார நிலையும் சில பொதுவானப் பண்புகளைக் கொண்டிருப்பதால் இவர்களைப் பாண்சமூகத்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாணர்
பாணர்கள் இசைக்கலையில் வல்லவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் யாழ் என்ற இசைக்கருவியை இசைத்துப் பாடுவதில் கைத்தேர்ந்தவர்கள். யாழ் இசைத்துப் பாடும் பாணர்களை அவர்கள் இசைக்கும் யாழை மையமாக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். இருபத்தொரு நரம்புகள் கொண்ட பெரிய அளவிளான யாழை இசைத்துப் பாடுபவர்கள் பெரும்பாணர் என்றும், ஏழு நரம்புகள் கொண்ட சிறிய அளவிலான யாழை இசைத்துப் பாடுபவர்கள் சிறுபாணர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருப் பாணர்களும் நாடு முழுவதும் உள்ள வள்ளல்களைத் தேடிச் சென்று அவர்களையும், அவர்களைச் சார்ந்த நிலச்சுவாந்தார்களையும் பார்த்து பாடிப் பரிசுப் பெற்றுத் தம் வாழ்வை நடத்தி வந்துள்ளனர். இசைப் பாடுவதையே தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால் பாணர்களின் வாழ்வோடு ஒன்றியே இசையும், கூத்தும் வளர்ந்துள்ளதை இலக்கியங்கள் மூலமாக அறியமுடிகிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் தாம் செல்லும் ஊர்களை எல்லாம் தமது ஊராகவும் அங்கு வாழும் மக்களையெல்லாம் தமது உறவினராகவுமே நினைத்து வாழ்வினை நடத்தியுள்ளனர். மேற்கண்ட பாணர்கள் மட்டுமல்லாமல் இசைப் பாணர்கள், மண்டைப் பாணர்கள் என்ற பாணர்களும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளர்.
இசைப்பாணர்கள் என்பவர்கள் வாய்ப்பாட்டு இசைப்பவர்கள். இன்றைய சங்கிதக் கலைஞர்களுக் கெல்லாம் இசைப் பாணர்களே முன்னோடிகள். மண்டைப் பாணர்கள் தோற்கருவியை இசைப்பவர்கள். மண்டை என்பது அனைத்து விதமான பறையிசைக் கருவிக்கும் பொதுவான பெயராகும். இரவலர்கள் உணவைப் பெற்று உண்பதற்காக வைத்திருந்த பாத்திரத்திற்கும் மண்டை என்ற பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. மண்டைப் பாணர்கள் தமது இசைக் கருவிகளை உணவுப் பெறும் பத்திரமாகவும் பயன் படுத்தியுள்ளனர்.
“கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
———- ——– ——- ——- ——
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையில் கொழுநிணம் பெருப்ப” (புறம் – 103)
என்ற ஔவையார் பாடல் மூலம் பாணர்கள் அரண்மனைக்குச் சென்று மன்னர்களைப் பாடி முடித்தப்பின் அவர்கள் கொடுக்கும் கள், இறைச்சி,சோறு முதலிய உணவுகளை மண்டை என்ற தனது இசைக் கருவிகளிலையே பெற்று உண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
“பாணன் சூடிய பசும்பொன் தாமரை” (புறம் – 141)
“நைவளம் பழுநிய நயம்தெரி பாலை
“ கைவல் பாண்மகன் கடன்அறிந்து இயக்க” (சிறுபாண் – 36 – 37)
இசைப் பொழியும் பாண்கருவியை இசைப்பதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் இசை விருந்தளிப்பதில் திறன் மிகுந்தவர்கள் என்பதும், இவர்கள் பாணன், பாண்மகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டமையும் மேற்கண்ட பாடல் வரிகளால் புலனாகிறது.
பாடினி
பாணன் என்ற ஆண்பால் கலைஞர்களோடு அதிகம் இடம் பெறும் பெண்பால் கலைஞரின் பெயர் பாடினி. இவர்கள் பாணர்களின் மனைவி என்ற கருத்தும் உள்ளது. தம் கணவரோடு அவர்கள் செல்லும் இடமெல்லாம் தானும் சென்று தன் குரல் வளத்தால் இனிமையாகப் பாடும் பெண்பால் இசைக் கலைஞர்களாக விளங்கினர். பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய இருபாணாற்றுப்படைகளிலும் பாணர்களை விட பாடினியர்களைப் பற்றிய வர்ணணைச் செய்திகள் அதிகமாக உள்ளன.
“அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்” (அகம் – 126)
“இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்” (புறம் – 70)
“பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி” (பொருநர் – 47)
மேற்கண்ட பாடல் அடிகள் மூலம் பாடினி மென்மையானவள், மிகுந்த அழகு நிறைந்தவள், அழகிய சொற்களைப் பேசுபவள், கலைக்காகவே தன்னை அர்பணித்துக் கொள்பவள் என்பதை உணரமுடிகிறது. பாணர்களைப் போலவே இசையில் வல்ல மகளிர் பாடிணியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். பாடினி என்பவள் இசைப்பாடுவதிலும், இசைக் கருவிகளை வாசிப்பதிலும், புலவர்கள் இயற்றித் தரும் பாட்டைப் பாடுவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதைப் பின்வரும் பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
“மறம்பாடிய பாடினியும்மே” (புறம் – 11)
“பாடினி பாடும் வஞ்சிக்கு” (புறம் – 15)
இவர்கள் யாழ் இசைக்கு ஏற்றவாறு பண்ணோடு பாடுவதில் மிகுந்த திறம் வாய்ந்தவர்கள்.
கூத்தர்
பல வகையான இசைக் கருவிகளின் துணைக் கொண்டு நடனம் ஆடுபவர்கள் கூத்தர்கள். சங்ககாலத்தில் இக்கலையைத் தம் தொழிலாகக் கொன்டவர்களை மக்கள் கூத்தன், ஆடுகளமகன் என்று அழைத்துள்ளனர். இவர்கள் கூத்து நிகழ்த்திய அரங்கம் –ஆடுகளம் என்று அழைக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் கோவில் கலையரங்கங்களிலும், மக்கள் ஒன்றுகூடும் அளவிற்கு வசதி நிறைந்த இடங்களிலும் இவர்கள் தமது கூத்தினை நிகழ்த்தியுள்ளனர். விழாக்கள் இல்லாத காலங்களில் இவர்கள் அரசர்கள், வள்ளல்களிடத்தில் சென்று ஆடிப் பாடிப் பரிசு பெற்று தம் வாழ்வை நடத்தியுள்ளனர். ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக்கோடனிடம் சென்று தான் விரும்பியதை எல்லாம் பரிசாகப் பெற்று வந்ததைச் சிறுபாணற்றுப்படை நன்கு விளக்குகிறது.
விறலி
பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு தம் நுண்ணிய உடலசைவின் மூலம் வெளிப்படுத்தும் நடனக் கலையில் தேர்ச்சிப் பெற்ற பெண் நிகழ்த்துக் கலைஞர்களே விறலியர்கள். இன்றைய பரதநாட்டியம் என்ற ஆடல் கலையின் முன்னோடிகள் இவர்களே. இவர்கள் பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய மூன்றுவகைப் பட்ட ஆண்பால் நிகழ்த்துக் கலைஞர்களுடனும் தன் ஆடல் திறனைப் புரவலர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பரிசுப் பெற்று வந்துள்ளனர். மக்கள் இவர்களை விறலி, நடனமகள், கூத்தி, ஆடுமகள் என்ற பெயர்களில் அழைத்துள்ளனர்.
“ஐதுவீழ் இகுபெயல் அரககொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன
——- ———- ————– ————
மடமான் நேக்கின் வாள்நுதல் விறலியர்” (சிறுபாண் – 13 – 31)
என்ற சிறுபாண்ணாற்றுப்படை பாடல் விறலியர்கள் இக்காலத் திரைப்படக் கலைஞர்களைப் போல கண் கவரும் உடல் அழகுடன் இருந்தமையைப் புலப்படுத்துகிறது.
பொருநர்
பாண்சமூகத்தின் ஒரு பிரிவினரான பொருநர்களில் ஏர்களம் பாடுவோர், போர்களம் பாடுவோர், பரணிப் பாடுவோர் என மூன்று வகைப் பொருநர்களாக இருந்துள்ளனர். பொருநர்கள் மற்ற வகை நிகழ்த்துக் கலைஞர்களிடமிருந்து சற்று வேற்றுமைக் கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் அரசர்களோடும், பெருநிலக்கிழார்களோடும் மிக நெருங்கிய உறவுடையவராக இருந்துள்ளனர். போர்க்களத்திலும், அரண்மனையிலும் அரசர்களின் அருகிலேயே இருந்துள்ளனர். மற்ற நிகழ்த்துக் கலைஞர்களைவிட பொருநர்கள் வெளியிடங்களில் மிகக் குறைவாகவே திரிந்துள்ளனர் என்பதை பின்வரும் புறநானுற்றுப் பாடல் விளக்குகிறது,
“கடற்படை அடற்கொண்டி
மண்டுற்ற மறநோன் தாள்
தண்சோழ நாட்டுப் பொருநன்
——– ——— ———- ——-
அவற்பாடுதும் அவன்தாள் வாழியஎன” (புறம் – 382)
நான் வளமான சேழநாட்டைச் சார்த்த பொருநன். பகைவர்களைக் கடலில் சென்று வென்று அவர்களின் கலங்களிலிருந்து கொண்டு வந்த செல்வங்கள் எங்களிடத்தில் உள்ளன. தலையணி அணிந்த நல்ல குதிரைகளின் தலைவனாகிய நலங்கிள்ளியின் பொருநர்கள் நாங்கள் அவனை மட்டுமே பாடுவோம் பிறரைப் பாடுவதில்லை. பிறரிடமிருந்து பரிசும் பெருவதில்லை என்று ஒரு பொருநன் பாடுகிறான். தாம் வெளிப்படுத்தும் கலைக்கும் தாம் நடித்து காட்டும் கதைக்கும் பொருந்துமாறு தமக்கு வேடமணிந்து கூத்தாடுபவர்களே பொருநர்கள். விழா நடக்கும் ஊர்களுக்குச் சென்று தம் கலைத்திறனை நிகழ்த்திக் காட்டியப் பின் தம் கலைக் கருவிகளோடு தம் ஊருக்குச் செல்லும் வழக்கம் உடையவர்கள் என்பதை
“அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந” (பொருந – 1-3)
என்ற பொருநராற்றுப்படை அடிகள் மூலம் அறியமுடிகிறது. வள்ளல்களின் அரண்மனைக்கு வைகறையில் சென்று தனது கிணைப் பறையை இசைத்து அவர்களதுப் புகழைப்பாடி அவர்களைத் துயில் எழுப்புதல் இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத் திருப்பள்ளி எழுச்சிக்கு பொருநர்களே முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
இயவர்
காற்றுக் கருவியான குழலை இசைக்கும் நிகழ்த்துக் கலைஞர்களே இயவர்கள். போர்களத்திற்குச் செல்லும் முன்பு முரசிற்கு வழிபாடு இக்கலைஞர்களாலே செய்யப்பட்டுள்ளது. இவர்கள் போர்களத்தில் ஆம்பல் பண்னை குழலில் இசைப்பார்கள் என்பதைப் நற்றிணையின் பாடல் அடிகள் பின்வருமாறு விளக்குகிறது.
“இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்” (நற்றி – 113)
போர்களம் கண்டுப் பகைவர்களை வென்று மீண்டு வரும் முரசிற்கு இரத்தப்பலிக் கொடுத்து அதனை முதலாவதாக இசைக்கும் உரிமையைப் பெற்றவர்கள் இயவர்களே என்பதை விளக்குகிறது பின்வரும் பதிற்றுப்பத்தின் பாடல்
“மண்உறு முரசம் கண்பெயர்த்து இயவர்
கடிப்புஉடை வலத்தா் தொடித்தோள் ஓச்ச” (பதிற்று – 19)
இயவர்களின் இசையானது யானைகள் மூங்கிலை உடைத்துச் செல்லும் ஒலியைப் போல் இருந்தது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிகறது.
“நிழத்த யானை மேய்புலம் படர
கலித்த இயவர் இயல்தொட் டன்ன” ( மதுரை – 303 – 304)
இயவர்கள் பலவகைப்பட்ட இசைக்கருவிகளை இசைக்கும் திறன் பெற்றவர்கள், முரசிற்குப் பலிக்கொடுக்கும் உரிமை, முரசு அடிக்கும் உரிமை மற்றும் அரசனுக்கு மிக அருகில் இருக்கும் உரிமையைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
துடியன்
துடி என்ற இசைக் கருவியை இசைப்பவர்கள் துடியர்கள். போரின் தொடக்கத்தைத் தெரிவிக்கத் துடி என்ற இசைக் கருவிப் போர்களத்தில் இசைக்கப்பட்டுள்ளது. துடியை இசைத்து வீரர்களுக்கு வீரஉணர்வு மேலோங்கும் படித் துடியை இசைத்துள்ளனர் துடியர்கள். போர்களத்தில் மன்னனது மார்பினைத் துளைத்த வேல் துடியனின் கையில் இருந்தது என்று புறுநாறுற்றுப் பாடல் சுட்டிக்காட்டுகிறது. துடியர்கள் அதிகமாக போர்களத்தோடும், அரசர்களோடும் கொண்டிருந்த நெருங்கியத் தொடர்பைப் பின் வரும் படல்கள் மூலம் அறியமுடிகிறது.
“ உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்“ (புறம் – 269)
“துடியன் கையது வேலே” (புறம் – 285)
பாணன், விறலி, துடியன் என்று நிகழ்த்துக் கலைஞர்கள் ஒரே குழுவாகச் சேர்ந்து சென்று புரவலர்களைக் கண்டு பரிசுப் பெற்றுள்ளனர். மாங்குடிகிழார் என்ற புலவர் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.
“துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை” (புறம் – 335)
இதன் மூலமாக மாங்குடிகிழார் துடியன் என்ற கலைஞனையே முதலில் குறிப்பிடுகிறார். துடியர்கள் தொண்மையான குடிகள் என்பதும், மன்னர்களின் நேரடி ஆதரவைப் பெற்றவர்கள் என்பதையும் உணரமுடிகிறது.
கிணைவர்
கிணை என்பது பலவகைப் பட்ட தோற்கருவிகளில் ஒரு வகைப் பறைக் கருவியாகும். கிணைப் பறையை இசைப்பவர்கள் கிணைவர் என்று அழைக்கப்பட்டனர்.
“கணையர் கிணையர் கைபுனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட” (நற்றி – 108)
என்ற பாடல் அடிகள் கிணைவர்கள் வேளாண்மைப் பணியை மேற்கொண்டதை விளக்குகிறது. குறிஞ்சி நிலத்தில் பயிர்களை உண்ணும் யானைகளை விரட்டக் கிணைப் பறையை இசைத்தனர் என்பதையும் புலப்படுத்துகிறது.
நிகழ்த்துக் கஞைர்களின் வாழ்க்கை
பாணனும் அவன் மனைவியான பாடினியும் ஆறுகள், காடுகள், மலைகள் எனப் பலவற்றையும் கடந்துச் சென்று வள்ளண்மை நிறைந்த வள்ளல்களைக் கண்டு பாணன் இசைக் கருவிகளை இசைத்து அவர்களைப் புகழ்ந்து பாட விறலி அதற்கேற்றவாறு நடனமாடி அவர்களிடமிருந்து பரிசுப் பெற்று இல்வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களது இல்வழ்க்கை செந்நெறியில் நடைப் பெற்றக் காரணத்தால் கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. மதுரைக்குப் பக்கத்தில் வைகையாற்றின் நீர்த்துறைக்கு அருகில் பூந்தோட்டங்கள் நிறைந்த இடத்தில் பெரும்பாணர்களின் வீடுகள் அமைந்திருந்ததையும், அவா் தம் வீடுகளில் ஆடல், பாடல், சார்ந்த ஓசைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததையும்
“அவிர்அறல் வையைத் துறைதுறை தோறும்
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்“ (மதுரை – 340 – 342)
என்ற மதுரைக் காஞ்சிப் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது. நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களைப் பாடினியும், விறலியும் அணிந்திருந்ததைப் பல சங்கப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. நன்னனைக் காணச் சென்றக் கூத்தர்களுடன் இருந்த விறலியர்கள் அணிந்திருந்த அணிகலன்களின் நேர்த்தியான தன்மையால் “இலங்குவளை விறலியர்” என்று அழைக்கப்பட்டனர். சங்ககால மக்களின் அணிகலன்கள் செய்யும் நேர்த்தியானக் கலைத்திறனுக்கும், பெண்கள் தம்மை அழகுப் படுத்திக் கொள்ளும் அழகியல் உணர்விற்கும்
“இலங்குவளை விறலியர் நின்புறம் சுற்றக்” ( மலைப்படு – 46)
என்ற மலைப்படுகடாம் பாடல் அடிச் சன்றாக உள்ளது.
நிகழ்த்துக் கலைஞர்களின் வறுமைநிலை
சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துள்ளனர். வறுமையைப் பேக்கிக் கொள்ள தாம் நாடிச் சென்ற வள்ளல்களையும், மன்னர்களையும் மருத்துவன், அருளாளன், மழை போன்றவன் என்று போற்றியுள்ளமையால் அவர்களின் வறுமையை அறியமுடிகிறது, கிணை வாசிக்கும் கலைஞன் ஒருவனது குடும்பம் வறுமையால் வாடுகிறது. அவனது மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமே பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உவர்க்கும் உப்பும் இல்லாத வறுமை. அவனது மனைவி குப்பையில் இருந்த வேளைக் கீரையைப் பறித்தாள், உப்பில்லாமல் வேகவைத்ததோடு, அதை தம் குடும்பம் உண்பதை மாற்றார் கண்டுவிட்டால் தம் இல்லற வாழ்வை இழிவாகக் கருதுவார் என்பதால் தன் விட்டுக் கதவை அடைத்துவிட்டு தன் சுற்றத்தோடு தானும் உண்டுள்ளாள் என்பதைப் பின் வரும் சிறுபாணாற்றுப்படை பாடல் மூலம் அறியமுடிகிறது.
“வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
——– ——— ——– ——-
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்” ( சிறுபா – 136-139)
இல்லத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களும் திர்ந்தாலும் உப்பு மட்டும் இல்லை என்ற நிலை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் வழக்கம் இன்றளவும் தமிழர்களிடம் இருந்து வருகிறது, வீட்டில் உப்பும் இல்லாதா நிலை வரும் படியாகக் கலைஞர்கள் வறுமையில் வாழ்ந்துள்ளனர். ஆகவே தான் விருந்தோம்பல் சிறந்து விளங்கிய சங்கத் தமிழகத்தின் கிணைக் கலைஞனின் மனைவி பகிர்ந்து உண்ணுதலையும் மறந்து, உண்பதற்கு உகந்த தன்மை இல்லாத குப்பை வேளைக் கீரையை உண்டாள் என்பதை அறியமுடிகிறது.
நிகழ்த்துக் கலைஞர்களை அரசர்கள் பாதுகாத்தமை
கரிகாலன் தன்னைப் புகழ்ந்துப் பாடிய பொருநர்க்கு நூல் சென்ற வழியை கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு நுட்பமான வேலைப்பாடு வாய்ந்த பாம்பு உரித்தத் தோல் போன்ற மென்மையான ஆடையை வழங்கினான் என்பதைப் பின்வரும் பாடல் அடிகள் கொண்டு அறியமுடிகிறது.
“நோக்கு நூழைகல்லா நுண்மைய புக்கனிந்து
அரவுஉரி அன்ன அறுவைநல்கி” ( பொருநர் – 82- 83)
சங்ககால மன்னர்கள் பாணர்கள், பாடினியர்கள், விறலியர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய கலைவாழ் மக்களைக் கனிந்த முகத்துடன் வரவேற்று நல்ல உடைகளையும், பல்சுவை உணவுகளையும் கொடுத்து உபசரித்தார்கள்.
“கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை
–————– ——– ———- ——-
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்” (பெரும்பாணா – 471 – 480).
என்ற பாடல் அடிகள் தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையனின் அரண்மனையில் சமையல் கலையில் வல்லவன் சமைத்த பல்சுவை உணவுகளைப் பாணர்களின் பிள்ளைகளுக்குச் சிறிய வெள்ளிக் கலன்களிலும், பெரியவர்களுக்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் படைக்கப்பட்டதை நமக்கு உணர்த்துகிறது, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும், பாரி, காரி, அதிகன் போன்ற சிற்றரசர்களும் தன்னை நாடி வந்த இசைத் தமிழ் பாணர்களையும், நாடகத் தமிழ் நிறைக்கூத்தர்களையும் புன்னகையுடன் வரவேற்று பக்கத்தில் இருந்து உணவு படைத்து, உயர்ந்த ஆடைகளையும் வழங்கியுள்ளனர். அவர்களைப் பல நாள்கள் தம் அரண்மனையிலேயே தங்கியிருக்கவும் செய்தனர். அவர்கள் வேண்டியப் போது அவர்களே மலைத்து நிற்கும்படி பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக் கோடானது அரண்மனையின் வாயிற்கதவானது புலவர்களுக்கும், பொருநர்களுக்கும், பாணர்களுக்கும், கூத்தர்களுக்கும், அந்தணர்களுக்கும் தடையின்றி திறந்தே இருந்துள்ளதை விளக்குகிறது பின்வரும் பாடல்
“பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அடையா வயில்அவன் அருங்கடைகுறுகி” (சிறுபாண் – 203-206).
நன்னன் என்ற குறுநில மன்னன் பகைவர்களிடமிருந்து தான் பெற்ற செல்வங்களையும், அணிகளன்களையும் புலவர், பாணர், கூத்தர் முதலிய கஞைர்களுக்கு மழை போல வழங்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்துகிறது
“தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்
வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும்” (மலைபடு – 70 – 76)
என்ற மலைப்படுகடாம் பாடல் அடிகள்.
நிறைவுரை
சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையான சூழுலில் வாழ்ந்திருந்தாலும் மக்கள் முதல் மன்னர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டுள்ளனர். அவர்களது கலைகளும் பெரிதும் மதிப்போடு இருந்துள்ளது. அனால் இன்று நிகழ்த்துக் கலைஞர்களும், நிகழ்த்துக் கலைகளும் நலிவடைந்த நிலையே காணமுடிகிறது. நவின ஊடகங்களின் வருகையிலும் இயந்திரமயமான வாழ்கையும் இதற்கான காரணங்களாக அமைகின்றன. திருவிழாக்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் மட்டும் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நடனம். போன்றவை குறைந்த அளவில் மக்கள் மன்றங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் நிகழ்த்துக் கலைகளையும், கலைஞர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்த மக்களும், அரசும் முயற்சி செய்தால் பண்டைய நிகழ்த்துக் கலைகளையும், தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க முடியும்.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியன் ச.வே முனைவர் – சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்) – பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம், 21, இரமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர். சென்னை – 17.
2.மகாதேவன் . கதிர் முனைவர் – சங்கஇலக்கியம் மூலமும் உரையும் , (உரையாசிரியர்), நற்றிணை, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம், 21, இரமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர். சென்னை – 17.
3.மீனவன் . நா கவிஞர், முருகசாமி .தெ- சங்கஇலக்கியம் மூலமும் உரையும்,(உரையாசிரியர்- அகநானூறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம், 21, இரமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர். சென்னை – 17.
4.இளங்குமரன் . இரா புலவர் -சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்)- புறுநானூறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம், 21, இரமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர். சென்னை – 17.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.அன்பரசன்,
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
வேலூர் – 632 115.
அ.அன்பரசன்,
உதவிப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.
நெறியாளர்
முனைவர் மு.பாலமுருகன்,
இணைப்பேராசிரியர்,
ஆய்வுநெறியாளர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.
கல்கி |கவிதை|முனைவர் ச.திவ்யபாரதி
📜 ஒரு நாள்…
கோபாலகர்கள்
யமுனா நதி அருகே
ஆநிரைகளை மேய்த்துக் கொண்டிருக்க..!
📜 கண்ணனும் பலராமனும்
உடன் இருந்தார்கள்!
பசுக்களோ
தனது தாகத்தைத் தணிக்க
யமுனை நதி
நீரைப் பருகின..!
📜 சட்டென்று
மயங்கி விழுந்தன..
கோபாலகர்கள்
பயத்துடன் செய்வது
அறியாது திகைத்தனர் !
📜 கண்ணனை அழைத்தனர்
விரைந்தான் விலாசி
நீரெல்லாம்
விடம் பரவியது
மனமெல்லாம் பதறியது..!
📜 அம்மோ!
பாம்புகளின் தலைவன்! – என்று
அதிர்ந்த நண்பர்களை
ஆதரவாய் அனைத்துக் கொண்டான்!
ஆராவமுதன்
“ஆணவத்தோடு
காளிங்கன் தலைதூக்கி சீறினான்!
📜 ஆணவத்தை
அழிக்க வந்த ஆழியான் !
காளிங்கனின் தலையைத்
தூக்கி எறிய சீறினான்!
பகை மூண்டது போர் நீண்டது
பெற்றோரின் கண்ணீருக்கு
பேரரதரவாய் பிரகாசித்தான்
பலராமன்..!
📜 காளிங்கன்
தனது வலிய வாலால்
வல்லவனை கட்டினான்
விஷத்தை எல்லாம் கக்கினான்
கட்டுக்குள் அடக்கி விட முடியுமா?
ஆராவமுதனை..!
📜 தன் உருவத்தைப்
பெரிதாக்கினார்
சரீரத்தைச் சிகரம் ஆக்கினார்
யோகபாலன்..!
📜 சட்டென்று
படம் எடுத்த பாம்பின் பிடி
பட்டென்று நழுவியது
நயமாக நாகத்தின் மேல் ஏறி
நர்த்தனம் ஆடினான்
நீலமோகனன்..!
📜 இவன் சிறுவன் அல்ல
சிந்தனைக்கினியன்!
பாற்கடலில் வீற்றிருக்கும்
பரந்தாமன்!
என “கர்வம் தெளிந்தான்”
காளிங்கன்..!
📜 “நாகராஜா ரமணகத்
தீவிற்குச் செல்
ஆனந்தமாய் இரு” என
வரம் அளித்த வரையெடுத்தோன்,
காளிங்கன் தலைமேல்
திருபாதச் சின்னத்தைப் பதித்தான்!
அவனது ஆணவத்தை அழித்தான்!
📜 நாகஅரசனின்
கருட பயத்தை
நீக்கினான் நிமலன்!
பரந்தாமனின் பாதம்
சரண் அடைந்தான் – காளிங்கன்
பாக்கியமானான் பாம்பரசன்..!
📜 நாம் ஓதி உணர வேண்டிய
பாடம் இதோ!
நர்த்தனத்தில்
நாராயணன் நவின்ற
மறைமொழி இதோ!
அகங்காரம் அழிவை தரும் !
ஆணவம் இழிவைத் தரும் !
📜 மனமே!
மயக்கம் கொண்டு
மாயையில் சிக்காதே
மாயவன் வரவா? போகிறான் – என்ற
மமதையில் மிதக்காதே..!
📜 சலிப்புற்று வராமல்
இல்லை சாரங்கன்
சரணாகதியாகத் திருவடி
புகுவோர்க்கு அவன் இரங்கன்!
புராணக் கதையில்
பாம்பரசனுக்குப் பரம மோட்சம்
பாவம் புரிவோருக்கு
என்றும் இல்லை,
சாபவிமோசனம்
உடைத்தெறிவோம்
‘நான்’ எனும் அகங்காரத்தைத்
தஞ்சம் அடைவோம் தனுசாரியை..!
📜 ‘கிருஷ்ணம் வந்தே
தேவ தேவன்
வந்தே கிருஷ்ணம்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் ச.திவ்யபாரதி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம் – 636 005.
காலம் பேசுகிறேன்|கவிதை|முனைவர் சி. உமா சாரதா
📜 மானிடரே
நான் தான் “காலம்” பேசுகிறேன்
எனக்கு நானே சுய அறிமுகம்..!
📜 ஏனெனில் காலம் அப்படி
எனக்கு கர்மா விதி
என்ற பெயரும் உண்டு !
எனக்கு ஆதி – அந்தம் இல்லை
என்பது கணக்கு !
நடுவில் மானிடருக்கு
இதில் ஏனோ? பிணக்கு !
எனக்கு உருவம் கிடையாது !
அருவமும் கிடையாது !
என்னை யூகிக்க முடியாது!
கணிக்கவும் முடியாது !
என்னை நிர்ணயிக்க இயலாது !
வரையறுக்க இயலாது !
எனக்கு எல்லைகள் இல்லை !
வரம்புகளும் இல்லை !
எனக்கென்று தனிமுகம்
தனி குணம் இல்லை !
எவரிடத்தும் பாரபட்சமும் இல்லை !
எவர்மீதும் பச்சாதாபமும் இல்லை!
📜 மானிடரே!
உங்கள் ஆட்டத்தின்
உச்சத்தையும் பார்த்திருக்கிறேன்.
எல்லாம் அடங்கிய
மிச்சத்தையும் பார்த்திருக்கிறேன்
சுயநலத்திற்காகப்
பொதுநலம் பேணுபவரையும்
பொதுநலத்திற்காக சு
யநலம் மறந்தவரையும்
ஒருசேர கண்டிருக்கிறேன்..!
📜 ஒவ்வொரு முறையும்
இயற்கை விதிகளை
நீங்கள் மீறத் துடிக்கும் போதெல்லாம்
உங்களை கபளீகரம் செய்திருக்கிறேன்..!
📜 அன்பின் பலம் – பலவீனம்
ஒருமித்துக் கண்டிருக்கிறேன்!
இறைமையையும்
இயற்கையையும்
விஞ்சியவர்களைக்
கர்மபலன் கொண்டு
தண்டித்திருக்கிறேன்..!
📜 அறம் பிழைத்தவர்களை
“அறமே கூற்றாகும்” என
அழித்திருக்கிறேன் !
📜 நீதி மறந்தவர்களையும்
நீதி மறுத்தவர்களையும்
சுடும் நாக்கொண்டு
தகித்திருக்கிறேன்..!
📜 காலப்போக்கு
காலக்கொடுமை
காலம் செய்த தவறு
என்றெல்லாம்
என்னை சுட்டுகிறீர்கள்
என் மீது பழிசுமத்துகிறீர்கள்..!
📜 மானிடரே
மனிதன் அறவழிச் செல்ல
நான் பதித்துக் கொண்டிருக்கும்
சுவடுகள் – ஆயிரம் ஆயிரம்..!
📜 சுவடுகளை ஆராய்வதில்
அறிவு மிளிர்கிறது!
பின்பற்றச் சொன்னால்
அறிவு மறைகிறது..!
📜 மீண்டும் மீண்டும்
நான் உணர்த்த
விரும்பியதை
கண்டுணர்ந்தவர் மிகக் குறைவு..!
📜 கேள்விகள் உங்களிடத்தில்
பதில் தேடுவது என்னிடத்தில்
குழப்பம் நீங்கள் உருவாக்குவது
தெளிவு தேடுவது என்னிடத்தில்
எவ்வாறு?
📜 இறைபடைத்த
இயற்கையாயினும்
இயற்கை படைத்த
இறையாயினும்
மாற்றம் செய்து
அதன்வழி
தடுமாற்றம் கொண்டு
“காலம் மாறிப்போச்சு” என
வீண் பழி என் மீது ?
நியாயமா..?
📜 நான் எப்போது மாறினேன்
மாற்றம் தடுமாற்றம்
ஏமாற்றம் போன்ற
மானிட இலக்கணங்கள் எனக்கேது?
📜 என்னை அடையாளப்படுத்தி
இலக்கியம் படைத்தீர்கள்!
ஆனால்?
படித்தது நான் அல்லவே
படிப்பினை கற்றுத் தரும்
நான் படித்தது எங்கே யாரிடம்?
📜 என்னிடம்
உங்களைப் போலவே
ஆயிரம் ஆயிரம்
கேள்விகள் உண்டு!
பதிலை என்னுள்ளே
தேடித்தேடி தோற்றுப் போகிறேன்..!
தோல்வி பல கண்டாலும்
என் ஓட்டத்தில்
சிறு துவளளும் இல்லை!
தோல்வி கண்டு
சலனமும் இல்லை!
வெற்றி மீது எனக்கு
சபலமும் இல்லை..!
📜 ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஓடுவேன் இன்னும்!
காலமாகிய நான்
யாருக்காகவும்
காத்திருக்க வேண்டியதில்லை..!
📜 யார் சென்ற பாதையையும்
திரும்பிப் பார்க்கத் தேவையில்லை
பிறர்செல்லும்
பாதை குறித்து
அச்சம் ஏதும் எனக்கு இல்லை..!
📜 என்னை சரியாகப்
பயன்படுத்தியதற்குப்
பரிசாக வெற்றி!
நழுவ விட்டவர்களுக்கு
வாய்ப்பாகக் காத்திருப்பு!
அலட்சியப்படுத்தியவர்களுக்கு
தண்டனையாக மன்னிப்பு!
📜 என் நோக்கம்
“என் கடன் பணி செய்து கிடப்பதே”
ஏனெனில்
நிகழ்பொழுதினை நம்புகிறேன் !
எஞ்சியவற்றை
இறையும் இயற்கையும் காக்கும்!
📜 நான் எந்நிலையிலும்
என் நிலையிலும்
சமநிலை தவறியதில்லை..!
📜 மானிடரே
தொழில்நுட்பத்தில்
தொலைவதை நிறுத்துங்கள்!
இறந்த காலத்தில்
புதைந்து போகாதீர்கள் !
எதிர்காலத்தை
எட்டிப் பிடிப்பதில்
குழம்பித் தவிக்காதீர் !
📜 நிகழ்காலத்தின்
நிதர்சனத்தை
அழகிய நினைவுகளால்
நிரப்புங்கள்..!
📜 அறம் மறவாதீர் !
அன்பினை கொடுத்துப் பெறுங்கள்!
இறைமையை உணருங்கள் !
இயற்கை தான்
நம்மை காத்துக் கொண்டிருக்கிறது
என்பதை மறவாதீர்கள் !
📜 சகமனிதனிடம்
மானுடம் பேணுங்கள்
உயிர்களிடத்தில்
உணர்வுடன் ஒன்றுங்கள்..!
📜 மானிடா!
வெற்றியில்
தன்னிலை மறக்காதே
தோல்வியில் துவண்டு அழியாதே..!
📜 வெற்றியைத் தலைக்கேற்றாதே
தோல்வியும் உன்னிடம்
தோற்றுப் போகும்
கிடைத்ததை கொடு
கொடுத்தவை கிடைக்கும்!
📜எப்போதும்
சிறு புன்னகையுடன் இரு !
சோகமும் சோர்ந்து போகும் !
இனிய வார்த்தைகள் பேசு!
பண்போடு பழகு !
நன்னடத்தை கொள் !
நல்லுறவு பேணு !
மாற்றத்தினை
உன்னிடத்தில் தொடங்கு!
📜 மாற மறுத்து
“காலம் மாறிவிட்டது”
என என்மீது பழி சுமத்தாதே!
📜 மானிடரே !
இறுதியாக எச்சரிக்கிறேன்…
இறைவகுத்த
மானுட நலம்
ஏற்று நடந்தால்
என்னால் மதிக்கப்படுவாய் – மறுத்தால்
“வாமன அவதாரத்தை”
நினைவில் கொள்..!
📜 இயற்கை வகுத்த
நியதிகளை பேணி நடந்தால்
என்னால் போற்றப்படுவாய்
இல்லையேல்
“நெற்றிக்கண்ணின்” – வழி
அழிக்கப்படவாய்….!
மீண்டும் பேசுவேன்
இப்படிக்கு காலம்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் சி. உமா சாரதா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம் – 05.
அயல்மொழிப் பெயர்ச் சொற்கள்
ஆங்கிலத்தில் ஒரே எழுத்து பல்வேறு ஒலிப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதை ஆங்கிலம் கற்றோர் அறிவோம்அ. எ.கா. ‘c’ எனும் எழுத்து ‘case’ எனும் சொல்லில் வல்லின ‘க’ ஒலிக்கும் ‘center’ எனும் சொல்லில் மெல்லின ‘ச’ ஒலிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த எழுத்தைப் பொறுத்து ஒலிப்பு மாறுகிறது. சில உயிரெழுத்துகள் ஒவ்வொன்றும் எட்டு அல்லது ஒன்பது வெவ்வேறு ஒலிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன! அதற்கென ஆங்கிலேயர்கள் பிற மொழி எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கவில்லை. சரியான பலுக்கலை விளக்குவதற்கு இலக்கண விதிகள் உள்ளன. (நிறைய விதி விலக்குகளும் உள்ளன! எ.கா. machine, machination என்பவற்றில் ‘ch’-இன் ஒலிப்பு மாறுதல்.) இவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புகள்.
பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தம் மொழி இலக்கணத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுவதும் பலுக்குவதும் அனைத்து மொழிகளிலும் வழக்கமானதொன்று. போதிய எழுத்துகள் இல்லாதது மட்டும் இதற்குக் காரணமன்று; ஒரு மொழியில் வழங்கும் ஒலியன்கள், பெயர்ச் சொற்கள் முதலியன வேறொரு மொழியில் இயல்பாக இல்லாதபோது அந்தச் சொற்களின் உரு, ஒலி ஆகியன மாறும். ஆங்கிலத்தில் இதைச் செய்கையில் நமக்கு வேடிக்கையாகத் தெரிவதில்லை; பழகிவிட்டோம்.
அயல்மொழிப் பெயர்ச் சொல்லை எழுதுவதற்கு ஆங்கிலத்தில் எழுத்து இல்லாததால் சொல்லை மாற்றி எழுதுவதற்குப் பின்வருவன எடுத்துக்காட்டுகள்:
1. ‘L’ எனும் ஆங்கில எழுத்து ல, ள, ழ ஆகிய தமிழ் எழுத்துகளைக் குறிப்பதற்கும்,
2.’t’ என்பது த ட ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எ.கா. villupuram (வில்லுப்புரம்?, விளுப்புரம்?, விழுப்புரம்?), tamil (டமில், தமில், தமிள், …, தமிழ்?), tirupur (டிருப்புர், டிருப்பூர், …, திருப்புர், திருப்பூர்?).
எழுத்து இருந்தாலும் பேச்சு வழக்குக்கு ஏற்பப் பிற மொழிப் பெயர்ச் சொற்களை மாற்றிக்கொள்வதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
1.chepauk (சேப்பாக் = சேப்பாக்கம்),
2.chetput (ச்செட்புட் = சேத்துப்பட்டு),
3.tanjore (டேன்ஜோர் = தஞ்சாவூர்),
4.mulligawtawny (மல்லிகாட்டானி = மிளகுத் தண்ணீர்)ஆ
5.ஜப்பான் நாட்டை அந்நாட்டு மக்கள் நிப்போன் அல்லது நிஹோன் என்றுதான் அழைக்கின்றனர். இதற்கு வரலாற்றுக் காரணங்களும் மொழியியல் காரணங்களும் உள்ளன1,2 சப்பானியர்கள் இந்தியாவை இந்தோ என்கின்றனர். தெலுங்கர்கள் தமிழை அரவம் என்கின்றனர். இந்நிலையில் ஜப்பான் என்பதைத் தமிழில் சப்பான் எனவும் தெலுகு என்பதைத் தெலுங்கு என்றும் எழுதினால் என்ன கெட்டுவிடும்?!
அ. இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புதான்.
ஆ. மொழிப் பற்றுக் குறித்து வாய் கிழியப் பேசும் சில தமிழர்களைவிட அமைதியாகச் செயல்பட்ட மலையாளிகள் மேலானவர்கள்: திருவனந்தபுரம் என்பதை ஆங்கிலத்தில் trivandrum (ட்ரிவேன்ட்ரமீ) என்று தவறாக எழுதிய மரபை மாற்றி thiruvananthapuram என்றும், கோழிக்கோடு என்பதை calicut எனத் தவறாக எழுதிவந்ததை kozhikode என்றும் ஓரளவு சரியான பலுக்கல் வரும் வகையில் திருத்திக்கொண்டனர்.
6.மழைநாடு என்பதன் கன்னட வடிவம் மளேநாடு. இது திரிந்து ஆங்கிலத்தில் malnad என்று எழுதப்பட்டுத் தமிழில் மல்நாடு எனப்படுகிறது! (கன்னடக்காரர்கள் இதை எப்படிச் சொல்கிறார்களோ தெரியவில்லை.)
இந்தியில் f என்பதற்கு ஓர் எழுத்து உள்ளது. எனவே, february (பிப்ரவரி) என்பதை அவர்கள் ஆங்கிலப் பலுக்கலுடன் பெருமளவு பொருந்துமாறு பெப்ருரி என்றே எழுதலாம். ஆனால் பர்வரி என்று எழுதுகின்றனர். அதுபோலவே, காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) என்ற பொருள்படும் insurance எனும் ஆங்கிலச் சொல்லையும் சரியான பலுக்கல் வருமாறு இந்தி எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். அல்லது, அதற்கு இணையான இந்திச் சொல்லைப் பயன்படுத்தலாம்; அப்படிச் செய்யாதபோது இன்ஷியோரேன்சு என்று எழுதுகின்றனர். இது அவர்களுடைய இலக்கண மரபின்பாற்பட்டதாக இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் அயல்மொழிச் சொற்களை எழுதுவதற்கு அம்மொழியின் இலக்கணத்துக்கு ஏற்பச் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதைப் பார்த்து நகைப்பது அறியாமை.
birendranath datta gupta என்ற வங்காளிப் பெயரை பீரேந்த்ரநாத் தத்தா குப்தா என்பதற்கு மாறாக வீரேந்திரநாத தத்தா குப்தா என்று தமிழர் பலுக்குவதைக் கேட்டு (ஆரோவில்-புகழ்) அரவிந்தர் விழுந்து விழுந்து சிரித்ததாக பாரதியார் குறிப்பிடுகிறார் (அதற்கு பாரதியார் என்ன எதிர்வினையாற்றினார் என்பது தெரியவில்லை)3 மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிய கதைதான்! வங்க மொழியில் ‘வ’ ஓசை இல்லை; மெல்லின ‘ப-வாக மாறுகிறது. எ.கா. ரவீந்த்ரநாத் என்பது ரபீந்த்ரநாத் என்றும் வீர் என்பது பீர் என்றும் மாறுகிறது. இந்தியில் வீரேந்திரநாத் என்பதை வங்காளத்தில் பீரேந்திரநாத் என்றும், அர்விந் எனும் இந்திப் பெயரை வங்க மொழி வழக்குக்கு ஏற்ப அரோபிந்தோ aurobindo என்றும் மாற்றி வைத்திருப்பதைப் பார்த்து இந்திக்காரர் சிரிக்கமாட்டாரோ?’
இந்நூலில் உள்ள அயல்மொழிப் பெயர்ச் சொற்களில் வரும் மெல்லின ஒலிகளுக்குத் தமிழ் வல்லின எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளேன். ‘க’ என்பதை ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் உள்ள k, g ஆகிய ஒலிகளுக்கும், ‘ச’-வை ch, s, sh, j ஆகிய ஒலிகளுக்கும், ‘ட’ என்பதை t, d ஆகிய ஒலிகளுக்கும், ‘த’ என்பதை th, dh ஆகியவற்றுக்கும், ‘ப’-வை p, b, f ஆகியவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளேன். எ.கா. ‘கார்ல் மார்க்ச்” (பல தமிழ் நூல்களில் ‘காரல் மார்க்ஸ்’!).
பின்வருவம் வேடிக்கையான நுணுக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் மேற்படித் “தனித்தமிழ்” எழுத்து முறையையும் ஏற்றுக் கொண்டால் என்ன? ஏற்காமல் இருப்பது தான் முரணானது!
1.ஆங்கிலத்தில் சில எழுத்துகள் ஒலிக்கப்படாமல் இருத்தல். (எ.கா. island என்பதில் இரண்டாவது எழுத்து; madam என்பதில் நடு எழுத்து; பலர் இந்த ஆங்கிலச் சொல்லைத் தவறாக மேடம் என்றே பலுக்குகின்றனர்!)
2.corps போன்ற ப்ரென்ச் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துகையில் அவற்றின் பலுக்கல் எழுத்து வடிவத்தில் இருந்தும் corpse எனும் ஆங்கிலச் சொல்லின் பலுக்கலில் இருந்தும் வேறுபடுதல் (குழப்பத்தைச் சற்று அதிகரிக்கும் வகையில் இந்தச் சொல் ஒருமை பன்மை இரண்டுக்கும் corps என்கிற இதே வடிவில் பயன்படுத்தப்படுகிறது; ஆனால், பலுக்கல் வேறுபடும்!)
தமிழ் மொழியில் இல்லாத (‘வடமொழி’ ஒலிகளுக்கான கிரந்த) எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கிப் பயன்படுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது. எந்தவொரு மொழியிலும் அனைத்து ஒலிகளுக்கும் தனித்தனி எழுத்து வடிவம் இருக்கமுடியாது, அப்படி எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதைச் சிந்தித்துணர்ந்தால் இதன் அடிப்படை புரியும். நம் மொழியில் எந்தக் குறையும் இல்லை; குறை வேறு தளங்களில் தான் உள்ளது! ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளைப் பயன்படுத்தி இன்றைய உலக மொழியாக இருப்பது இதற்கு மிகச் சிறந்த சான்று.
jean dreze என்பவர் மாந்தநேயமிக்க ப்ரென்ச்-இந்தியப் பொருளியலாளர். அவருடைய பெயரை ழான் டராஸ்(z) என்பது போலப் பலுக்கவேண்டும். ஆனால், அது ப்ரென்ச் மொழிப் பெயர் என்பது தெரியாதவர்கள் ஜீன் ட்ரீஸ்(z) என்றுதானே படிப்பர்? (சரியான பலுக்கலைத் தெரிந்தவர்கள் இப்படிப் பலுக்கக்கூடாது.) ஆனால் அதை ஆங்கிலத்தில் ழா daraz என்று (பலுக்குவதைப் போலவே) எழுதவேண்டும் என ஆங்கிலேயர்களோ ப்ரெஞ்சுக்காரர்களோ நினைப்பதில்லை. தன்மானங் குறைந்த நாம் முதன்மையானவற்றில் கவனஞ் செலுத்தாமல் நம் மொழியைக் குறை கூறிக்கொண்டும் “சீர்திருத்திக்”கொண்டும் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறோம்.
ஒரு மொழியில் மற்ற மொழிச் சொற்கள் யாவும் ஒலி பிசகாமல் ஒலிக்கப்படுவதும் இல்லை. david என்ற பெயரை ஆங்கிலேயர் ‘டேவிட்’ என்று ஒலிக்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘தவித்’ என்றழைக்கிறார். தமிழர் ‘தாவீது’ என்கிறார். jesus christ என்ற பெயரை ஆங்கிலேயர் ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘ழெசுய் க்ரீஸ்த்’ என்கிறார். தமிழர் ‘ஏசு கிறித்து’ என்கிறார். ஒரே வகையாக ஒலிக்கப்படுவது எங்கே?
அதுபோலவே, கிருச்ணன் என்பது ஓர் இந்துக் கடவுளின் வடமொழிப் பெயர் என்பதை அறிந்தவர் அதைக் கிருஷ்ணன் என்று பலுக்கட்டும்! பிறர் தவறாகப் பலுக்கட்டும். தமிழர் வடமொழிப் பெயர் வைப்பதற்குச் சரியானதொரு தண்டனை இது” (இதைக் கிருட்டிணன் என்று தமிழில் எழுதுவது மரபு. அதை ஆங்கிலத்தில் kiruttinan என்று மொழிபெயர்ப்பது வேடிக்கையானது!) (மேலும், கிருஷ்ணன் என்பது இந்தி அல்லது வடமொழியில் க்ருஷ்ண் என்றுதான் இருக்கும்.) மற்றுமொரு எடுத்துக்காட்டு: இந்தியில் ஹரிஷ்ச்சந்தர் என்பது தமிழில் அரிச்சந்திரன் (அல்லது, “படித்தவர்கள்” என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் ஹரிச்சந்திரன்) என்றும் தெலுங்கில் ஹரிஷ்ச்சந்துருடு என்றும் மாறுகின்றன. தேவையில்லாமல் வடமொழிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்தித் தவறாகப் பலுக்கும் நாம் அவர்களுடைய பகடிக்கு ஆளாகிறோம்! அடிப்படையில் இது தான் இங்கு சிக்கல்!
இது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு 2011-இல் வெளியான ஒரு சிறு கையேடு பயன்படும்4. அது தேவைப்படுவோர் இந்நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.
இணையத்தில் தகவல் தேடுவதற்கு ஏதுவாக அயல்மொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவத்தைத் தந்துள்ளேன்.
1 . https://en.wikipedia.org/wiki/Names of Japan
2.”Nippon or Nihon? No consensus on Japanese pronunciation of Japan”, Japan Today, 2014 feb 16, https://www.japantoday.com/category/arts-culture/view/nippon-or-nihon-no-consensus-on-japanese-pronunciation-of-japan
3.திருமுருகன், “மொழிப் புலங்கள்”, 1999, பக்கங்கள் 22-48.
4.”ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்”, தி. ராமகிருச்ணன், தொகுப்பாசிரியர், தாளாண்மை உழவர் இயக்கம், 2011.
தடம்மாறும் தமிழ்ப்பெயர்கள்|முனைவர். த. தினேஷ்
மனிதனானவன் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு நிகழ்வுகளையும் பருவங்களையும் கடந்து வாழும் ஒரு கூட்டமைப்பைச் சார்ந்த விலங்காவான். அவனுள் ஏற்படும் பருவ மாற்றங்கள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஆரம்பக் காலத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதன் நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து தன் பகுத்தறிவால் மாற்றம், முன்னேற்றம், நவீனத்துவம் முதலானவற்றை அடைந்தவன். இவ்வகைப்பட்டப் பயணங்களில் அவன் பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆன்மீகம் – நம்பிக்கை என்ற இரண்டின் துணை கொண்டு நெறிப்படுத்தப்பட்டான். எஃப்.சி லாரன்ஸ் என்ற மேனாட்டு ஆய்வாளர்கள் பொதுவாக இத்தகைய சடங்கு நிகழ்ச்சிகளை ஆண்டு பட்டியலில் அமைந்த சடங்கு நிகழ்ச்சிகள், ஆண்டு பட்டியலில் அமையா சடங்கு நிகழ்ச்சிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம் என்கிறார். இவ்வகைச் சடங்கு முறைகளில் பெயர் சூட்டுதல் என்பது ஒருவகையாகும்.
பெயர்சூட்டும் மரபு என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும் விழாவாகவே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றது. பெயரிடுதல் என்பது ஒரு கலை. ஏனெனில் அவன் அதனை தன் பிறப்பு முதல் இறப்பு வரை சுமந்துச் செல்ல வேண்டும். சிலசமயம் இறப்புக்குப் பின்னும் இப்பெயர்கள் ஒருவனது வாழ்வைப் பிரதிபலிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
பழந்தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்ட பெயர்சூட்டும் முறைகள்
தமிழ் மரபுப் பெயர்களைப் பெரும்பாலும் இடம், வம்சம் தொடர்பான பொதுப்பெயர்கள், கற்பனைப் பெயர்கள், பட்டங்களால் வரும் பெயர்கள், கடவுள் சார்ந்த பெயர்கள் என வகைப்படுத்தலாம். பழந்தமிழர் மரபுப்படி தந்தை மற்றும் பாட்டனார், தாய் மற்றும் பாட்டியார் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ என்ற நற்றிணை வரியின் வாயிலாகவும், ‘எந்தைப் பெயரனை யாங்கொள்வோம்’ என்ற கலித்தொகைப் பாடல் வாயிலாகவும் அறியலாம்.
பெயர் சூட்டுதல் என்பது குழந்தைப் பிறந்த மூன்றாம் மாதத்தில் நடைபெறும் ஒரு சடங்கு நிகழ்வு. இவை கோவில்களிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் நடைபெறும் ஒரு விழா ஆகும். குலதெய்வப் பெயரைச் சூட்டும் மரபுகளைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த குழந்தையான மணிமேகலைக்கு தங்கள் குலதெய்வத்தின் பெயரான ‘மணிமேகலை’ என்ற பெயரினை வைத்தனர் எனச் சிலப்பதிகாரம் உரைக்கின்றது. (சிலப்பதிகாரம் கதை 15, 25 -37)
இப்பெயர் சூட்டு விழாவினை ‘’நாம நல்லுரை நாட்டுதும்’’ எனச் சிலப்பதிகாரமும் – 15:26. நாமஞ்செய்த நன்னாள் என மணிமேகலையும் – 7:35, நாமம் தரித்தார் என சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பெயர் சூட்டும் விழா குழந்தை பிறந்த பன்னிரெண்டாம் நாள் நடைபெற்றதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
“…………… தொகுத்தநாட் சச்சந் தண்ணே சுதஞ்சணணே தரணி கந்துக் கடன்விசயன்
தத்தன் பரதன் கோவிந்த னென்று நாமந்தரித்தாரே (சிந்தாமணி 2705)
என திருத்தக்கதேவர் குறிப்பிடுவார்.
“இத்தொடரில் ஈண்டுத் தொகுத்த நாள்’ என்பதற்கு 12 என்ற எண்ணாகத் தொகுத்த நாளிலே அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தார் என்க என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார் (சிலப்பதிகாரம் 2705 நச்சர் உரை) இதனை
“பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானஞ் செய் துகந்தன ராயரே”’
என வரும் திருமொழி பாசுரம் (1:2:8) மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பரிமேலழகர் (13 ஆம் நூற்றாண்டு) செவ்வியல் கால மரபினை அடியொட்டி தன் விளக்கத்தைத் தருகின்றார். யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற சரியான பெயருக்கு கோசீமாறன் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற பெயரைக் குறிப்பிடுகிறார். கோ என்றால் மன்னன் என்ற அலுவலகப்பெயரைக் குறிக்கும், சேரமான் என்பது வம்சத்தைக் குறிக்கும், யானைக்கண் என்பது வித்தியாசமான குணத்தைக் குறிக்கும். சேய் என்பது இயற்பெயர் அல்லது பொதுப்பெயராகும். இரும்பொறை என்பது இணைப்பாகும். இவ்வாறு குடிப்பெயர் மற்றும் தொழிற்பெயரை மாற்றாது பெயர் சூட்டும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. .
“நாட்டுப்புறங்களில் நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பதில்லை முதல் பிள்ளைக்கு பாட்டன் பெயரும் அடுத்த பிள்ளைக்கு கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயரும் அதை அடுத்தவனுக்கு முருகக்கடவுள் பெயர்களில் ஒன்றையும் வைப்பார்கள் அல்லது தமிழ் பொது பெயர்களாகவே இருக்கும் வைணவம் சைவம் சார்ந்த பெயர்களாகவும் திருத்தல பெயர்களும் வைப்பர் என கூறுவார். (எங்கள் நாட்டுப்புறம் (1951) பக்கம் 115 -116.)
பெயரிடல் முறையில் காணலாகும் நம்பிக்கைகள்
குலதெய்வ பெயர்களையும் தம் முன்னோர்களின் பெயர்களையும் தன் குழந்தைகளுக்குச் சூட்டும் பொழுது அவர்கள் எப்போதும் நம்முடன் இருப்பது போலவும் குழந்தைகள் அவர்களின் ஆசியால் நோய்நொடியின்றி இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வகை பெயர் வைக்கும் சடங்கு முறைகள் அன்று முதல் இன்றுவரை தமிழகத்தில் பரவலாக காணப்பட்டு வருகின்றது .
பெயரிடல் முறைகளில் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் பெயர்களும் இறப்புக்குப் பயந்து வைக்கப்பட்ட பெயர்களுமே அதிக அளவில் காணப்படுகின்றன. முந்தைய காலகட்டங்களில் தொடர்ந்து குழந்தைகள் இறப்பது மற்றவர்களின் கண் பட்டு விட்டதாலும் பில்லி சூனியம், நோய்கள், தெய்வ குற்றம் முதலானவற்றால் குழந்தைகள் இறக்கின்றனர் என மக்கள் நம்பினர். எனவே கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்கு மூக்கு குத்தி மேற்குறிப்பிட்ட பல்வேறு வகைச் சடங்கு முறைகளில் ஏதேனும் ஒரு பெயரினை வைப்பதன் மூலம் தொடர்ந்து குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கை இன்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு வலது பக்கத்தில் தான் காது குத்தப் படுகிறது. ஏனெனில் மனிதனின் உடலானது இரு கூறாகச் சமமாகப் பிரித்தால் வலதுபுறம் அதிகச் சக்தியை உடையது. எனவே நீண்ட ஆயுளைப் பெற வலதுபுறம் அதிக அளவில் மூக்கு குத்தப்படுகின்றது என்பது நம்பிக்கை
தமிழ்ப் பெயர்களின் மாற்றுப்பாதை
குடி, தொழில் அடிப்படையில் பெயரிடும் முறைமை மாறி குழந்தைகளுக்குப் பிறந்த நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கும் முறைகள் பிற்காலத்தில் உருவாயின. எனவே சோதிடத்தின் வளர்ச்சியால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்சூட்டும் வழக்கம் தமிழ் நிலத்தில் பரவத்தொடங்கியது.
இவற்றில் அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலான நட்சத்திரங்களின் அடிப்படையில் கணித்துப் பெயரிடும் வழக்கம் இன்று அதிக அளவில் பின்பற்றப்படுகின்றன. அதுவரை பல்வேறு அழகியத் தமிழ்ப் பெயர்களைத் தாங்கி வந்த தமிழ் நிலம் நீண்ட நெடிய பிறமொழிச் சொற்கள் அடங்கிய பெயர்களுக்கு இம்முறை வழிவகுத்தது என்றே கூறலாம். இதனால் கிரந்த எழுத்துக்களின் புழக்கம் அதிகமாயின. இதன் விளைவாகத் தமிழ்ப் பெயர்களில் ஸ். ஷ், ஹ, ஜ, ஜீ முதலான உச்சரிப்புகள் அடங்கிய பெயர்களின் வரத்து அதிகமாயின.. மனிதனின் பெயரே அவனது குடி அடையாளமாகும் பிறமொழி பேசும் மக்களின் வரவால் தமிழ்ப்பெயர்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. பல நீண்ட சீர்களைக் கொண்ட பெயர்களின் வரவும் உருவாயின.
உலகின் பலநாடுகளில் நெடிய சீர்களைக் கொண்ட ஒரு பெயர், இருபெயர், மூன்று, நான்கு, பெயர்கள் அடங்கிய கூட்டுப் பெயர்களாக வைக்கும் முறை இருந்து வந்துள்ளது. இதில் குடிப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் கூட சிலசமயங்களில் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். இரு பெயர்கள் என நாம் கூறும்போது SURNAME, FIRST NAME, MIDDLE NAME, LAST NAME என இணையும். SURNAME என்பது தலைமுறை தலைமுறையாக வந்த தொழிற் பெயர் (Smith, Carpenter), ஊர்ப்பெயர் (பழனி, திருமலை) என்று பலவிதங்களாக இருப்பதை அறியலாம்.
இவ்வாறு காலத்தைக் கடந்து தமிழ்ப் பெயர்களின் வளர்ச்சிமுறை பயணித்து வந்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறிய முடிகின்றது. எனவே இழந்த நம் மொழியைச் சிதைந்த நம் மொழியைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்., ஆக தமிழ் மக்களைத் தமிழில் பெயர்களைச் சூட்ட நெறிப்படுத்துவதில் இன்றைய சூழலில் தமிழாசிரியர்களைக் காட்டிலும் சோதிடர்களுக்கே பெரும்பங்கு உள்ளது. தாய்மொழியைத் தவிர்ப்பது என்பது பெற்றெடுத்த தாயைத் தவிர்ப்பதற்குச் சமம். கடந்தது கடந்துப் போகட்டும், இனி வரும் தலைமுறைக்காவது விழித்துக் கொண்டு தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரினைச் சூட்டுவோம் என அகமனதால் உறுதிமொழி ஏற்போம். வாழ்க தமிழ், வளர்க அன்னைத் தமிழின் புகழ்., நன்றி
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்
தமிழ் உதவிப் பேராசிரியர்
வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஈரோடு.
நூல் விமர்சனம்|ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு|வீ.பூமிநாதன்
கல்விப் புலத்திலிருந்து ஒரு கவிதைத் துடிப்பு : முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து.
முன்னுரை
தமிழக இலக்கியக் கல்விப் புலத்தில், இலக்கியப் படைப்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெரிதும் இலக்கியத்தின் நுட்பங்களை உள்வாங்கி, அதனை எளியமுறையில், மாணவர்களின் மனம் கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லும் வலிமை பெற்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் இவ்விரிவுரைகள் என்பவை திறனாய்வுரைகளாகவும் வருவித்துக்கொள்ளும் வல்லமை உடையவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. அவ்வகையில் எவ்வாறு பண்டைய இலக்கிய, இலக்கய உரையாசிரியர்கள், திறனாய்வாளர்களாக வரவுவைக்கப்பட வேண்டுமோ, அதேபோல, தமிழ் இலக்கியக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் திறனாய்வாளர்களாக வரவு வைக்கப்படின் அது தவறாகாது.
இலக்கியத்தை விவரித்துரைக்கும் ஆசிரியர்களிடையே இலக்கியப் படைப்பாளிகள் முகிழ்ப்பது அரிதினும் அரிதான செயல்பாடுகளாகவே இருக்கின்றது. ஏனெனில், இலக்கியம் என்பது அனுபவங்களை அகவயமாக நோக்கி, அதனைக் கொண்டு செரித்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கி, அதிலிருந்து படைப்பு நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதனை வெளிப்பாட்டு மொழிக்கு மடைமாற்றம் செய்து, மொழியின் துணைகொண்டு வெளிப்படுத்தும் மிகப்பெரிய செயல்பாடாகிறது. அச்செயல்பாட்டுக்கான அவகாசம் அன்றாடம் இலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அமைவது பெரிதும் இல்லை எனலாம்.
தமிழ்க் கல்விப் புலத்தில் படைப்பு மனத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது பெரும் சவால். முனைவர் வீ.பூமிநாதன், ஒரு கவிதைப் படைப்பாளியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தனித்துவமாகக் கருதத் தக்கது. முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ என்ற கவிதைத் தொகுப்பு, தற்காலக் கவிதைப் படைப்புத் துறையில் புதிய நோக்குகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை வகைதொகைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொகுப்பின் தலைப்பு
முனைவர் வீ.பூமிநாதன் தனது கவிதை வெளியெங்கும் மனிதாயப் பண்புகளின் சிக்கல்களையும் அதன் வெளிப்பாடுகளில் ஏற்படும் முரண்களையும் அவை உள்வாங்கப்படுவதில் ஏற்படும் பண்பு மாற்றங்களையும் நுட்பமாகப் பேசுகின்றார். தமிழ் இலக்கியக் கல்விப் புலத்தில் தொடர்ந்து இயங்கும் ஓர் ஆசிரியரே கவிதைப் படைப்பாளியாக இருப்பதால், அவர் தமிழின் நீண்ட நெடிய மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கிறார். குறிப்பாக தமிழ்ச் சமூகம், தாய்வழிச் சமூகமாக இருந்தது என்ற வரலாற்று நிலையில் அவர் அழுத்தமான பிடிப்பும் தொடர்பும் கொண்டிருக்கிறார். இச் சமூகம், மனிதப் பெருவெளி ஒரு முதாயிலிருந்து கிளைத்தது என்பது அவருடைய கவிதை வெளிப்படுத்தும் நம்பிக்கையாகும். எனவே கவிஞர், மனிதர்களின் தொப்புள்கொடியைப் பற்றிக் கொண்டு, காலவெளியின் பின்னோக்கிச் செல்லும்போது, அவரால் ஓர் ‘ஆதித்தாய்’ கண்டடையப்படுகிறாள்.
ஆதித்தாய் என்பது கவிஞரால் முன்வைக்கப்படும் கனதிமிக்க குறியீடு. இது தாய்வழிச் சமூகத்தின் அழுத்தமான வெளிப்பாடு. தாய்வெளிச் சமூகத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள், அசைவியக்கங்கள் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூகத்தால் வீழ்த்தப்பட்ட வலிமிகுந்த வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இக்குறியீடு.
ஒரு மனிதனின் இதயத் துடிப்பை இடதுபக்க மார்பின் வழியாகவே உணருவது என்பது வழமை. ஆனால், ஆதித்தாயின் முதுகில் இந்தத் துடிப்பை உணருவதாகக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு பேசுகிறது. அதிலும் அந்தத் துடிப்பு என்பது முதுகைத் தாண்டி ஒலி எழுப்புகிறது என்ற தொனிப்பொருளில் ‘கேட்கும் துடிப்பு’ என்கிறார் கவிஞர். எனவே ஆதித்தாயின் இதயத் துடிப்பு என்பது இயல்புக்கு மாறான துடிப்பு என்பது இதன்வழியாகப் பெறப்படுகிறது. எனில், எதன் பொருட்டு ஆதித்தாயின் இதயம் இயல்புக்கு மாறாக, அதிக ஒலி எழுப்பியபடி – பதற்றமுற்றபடி – ஒலிக்கிறது என்ற வினாவெழுகிறது.
இச்சமூகத்தில் – எல்லாம் இயல்பாக இருந்த, மனிதனை நேசித்த, அன்புக்கு முதன்மை இருந்த, தாய்வழிச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் வலியால் ஏற்படும் துடிப்பு இது என்பதாக இத்தொகுப்பின் கவிதைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். எனவே இத்தலைப்பு, தொகுப்பில் உள்ள கவிதைகளின் வரலாற்று, பண்பாட்டு, உளவியல் பின்புலத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
தொகுப்பில் மனதைப் பிடித்து நிறுத்துகிற… மறுபடியும் வாசித்து இரசிக்கத் தூண்டுகிற… சில வரிகளில் முன்னும் பின்னுமாய் மீண்டும் ஊர்ந்து திரிய வைக்கிற… திகைப்படைய வைக்கிற… குழப்பமடைய வைக்கிற… தெளிவுக்காக மீண்டும் வாசிக்கத் தூண்டுகிற பல வரிகள் கிடக்கின்றன.
தலைப்புகள் இல்லாக் கவிதைகள்
கவிதைக்கான தலைப்புகள் என்பவை முகவரி அட்டைகளைப் போன்றவை. அவை ஒருவகையில் கவிதைக்கான திறவுகோல்களாகவும் வாசல்களாகவும் அமைகின்றன. ஆனால் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைத் தொகுப்பில் எக்கவிதைக்கும் தலைப்பு இடப்படவில்லை. கவிதை வாசகனோடு உரையாடுவதற்கு முகப்புரை தேவையில்லை என்பது கவிஞர் வீ.பூமிநாதனின் கருத்தாக இருக்கலாம். கவிதையே வாசகனோடு நேரடியாக உறவாடும்போது, தலைப்புகள், ‘இடைமறிச்சான்’களாக எதற்கு என்று அவர் கருதியிருக்கக்கூடும். தலைப்புகள் அற்ற இக்கவிதைகள் வாசகனோடு நேரடியாகப் பேசத் தொடங்குகின்றன.
மாற்றம் ஒன்றே மாறாதது
இப்பிரபஞ்சத்தில் நிலையானது என்று எதுவும் இல்லை; எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது என்பது இயங்கியல் . இயற்கையின் இயக்க இயலில் சிலவற்றிற்குப் பொருள் கற்பிப்பதுதான் மனித வாழ்க்கை. வளைந்து கொடுப்பதும் நிமிர்ந்து நிற்பதும் எவற்றின் அடையாளங்கள்? வளைதல் என்பது பணிதலையும், நிமிர்தல் என்பது செருக்குறுதலையும் குறிக்கும் குறியீடு. இக்குறியீடுகளின் பின் தொக்கிநிற்கும் சமூதாய எள்ளல் நோக்கையும் பொதுப்புத்தி சார் தன்மையையும் கவிஞர் வீ.பூமிநாதன் வினாவெழுப்பி, அதனை மறுத்துரைக்கிறார்.
“வளைவதால் வாழை
கோழை அல்ல
நிமிர்வதால் பனை
செருக்கல்ல
வளைதல் நிமிர்தல்
வேறு வேறு அல்ல
காலத்தால்
பனியும் உருகும்
நீரும் இறுகும்” (ப.80)
வாசிப்பாளனைப் பிடித்து நிறுத்தி, அவனைக் குறித்து வைத்துக்கொள் என்று இக்கவிதை வாசகனோடு பேசத் தொடங்குகிறது. இந்தக் கவிதைகளைப் போல, நேரடியாகத் தொனிப்பொருளை வாசகனுக்குக் கடத்த நினைக்கும் கவிதைகள், சிறப்பாகவே வந்துள்ளன.
இருண்மையும் கவிதையும்
கவிஞர் வீ.பூமிநாதனின் பெரும்பாலான கவிதைகள், மெல்லிய இருண்மையை பூசிக் கொண்டுள்ளன. இருண்மையும் ஓர் அழகே என்பதுதான் கவிதை பற்றிய ஆழமான புரிதல். அப்படியான ஓர் அழகியல் தன்மை வீ.பூமிநாதனின் தொகுப்பில் உள்ள இருண்மைக் கவிதைகளில் தொக்கி நிற்பதை உணர முடிகிறது. கவிதையின் போக்கில், கவிஞரின் கைத்திறனில் வந்து விழும் இருண்மைக்கும், மொழியைக் கையாளுவதில் உள்ள சிக்கல்களால் வரும் கூடார்த்தத்திற்கும் வேறுபாடு உண்டு. இத்தொகுப்பில் அப்படிச் சில கூடார்த்தக் கவிதைகளையும் நான் அடையாளம் காணமுடிகிறது . இக்கவிதைகள் என்னவோ உள்ளே இருப்பதைப் போன்ற பாவனைகளைக்காட்ட உதவுமேயன்றி, வாசகனுக்கு அனுபவத்தைக் கடத்தத் துணை நிற்காது என்பதும் தொடர் வாசிப்புத் தந்த அனுபவம் ஆகும்.. எனவே எப்போதும் இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய வாசகனுக்குமான தொடர்பாடல் ( Communication ) அவசியமானது. அவ்வாறு தொடர்பாடல் செய்வதில் வஞ்சகம் செய்ய வேண்டுமென்று கருதாத இலக்கியப் படைப்புகளில் வெளிப்படும் வெளிப்படைத் தன்மையும் எளிமையும் பேரழகைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனலாம்.
காட்சிச் சித்தரிப்பும் கவிதை வலுவும்
கவிதைகளில் காட்சிகளைச் சித்தரிக்கிறபோது, குறைந்த சொற்களில் மேலான அனுபவத்தைக் கடத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது என்பதற்கான பல சான்றுகள் இக்கவிதைத் தொகுப்பில் உள்ளன. வாசகன், இலக்கியப் படைப்பில் வெளிப்படும் காட்சிச் சித்தரிப்பை வாசிக்கிறபோது, தானே அவற்றைக் காணும் அனுபவத்தைப் பெறுகிறான். இலக்கியப் பனுவலுக்கும் வாசகனுக்குமிடையில் ஸ்தூலமாக நின்கும் படைப்பாளி மறைந்துபோகும் பேரனுபவத்தை இக்காட்சிப் படிமங்கள் வழங்குவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், மொழி என்ற ஒன்றும் மறைந்து அனுபவம் என்ற முழுப்பொருளை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் தன்மையையும் ஒரு படைப்பாளி உருவாக்கிவிட முடியும் என்பதற்கு முனைவர் வீ.பூமிநாதனின் பல கவிதைகள் சான்று பகர்கின்றன.
“ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு“ என்னும் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள், இவ்வாறான காட்சி அனுபவத்தை வாசிப்பாளனுக்குக் கடத்துவதில் சிறப்புப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக,
“ஓடிக் கொண்டிருக்கும்
எனது பாதத்தை
ஒரு நொடி
தாமதாக்குகிறது
தனது முட்டையைத்
தனது வாயிலேயே
கவ்விக்கொண்டு,
ஊர்ந்து செல்லும்
பாம்பு ஒன்று” (ப.13)
இக்கவிதை, குறைந்த சொற்களில் ஒரு காட்சிப் படிமத்தை வாசிப்பாளனுள் எழுப்புகிறது.இக்காட்சி அனுபவம் ஏற்படுத்திய பேரதிர்ச்சியில் வாசகனைச் சில நிமிடங்கள் உறைந்துபோக வைக்கும். காட்சிப் படிமங்களாகவே மனதில் தங்கிவிடும் பல சொற்பதங்கள் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் கிடக்கின்றன.
நகம் என்னும் குறியீடு
ஒரு படைப்பாளியின் இலக்கியப் படைப்பில் ஒரு குறியீடு மீள மீள முன்வைக்கப்படும்போது, அக்குறியீடு தனித்துவக் கவனத்தைக் கோருகிறது என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் ‘நகம்’ என்பது பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறது. வேறு வேறு இடங்களில், வேறு வேறு தொனிப்பொருளில் இக்குறியீடு முன்வைக்கப்படுவதைக் காணமுடிகிறது. ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது குறித்துப் பேசும் கவிஞர் வீ.பூமிநாதன், அவ்வரிசையில் ‘நகத்தை’க் குறிக்கிறார்.
‘எனது இருப்பை / நான் எப்படி / அடையாளப்படுத்துவது?
எடை, உயரம் / நகம், கூந்தலின் வளர்ச்சி,
பார்வை, சொல், / பயணம், ஈரம், / உண்மை, கல்வி
பணி, குடும்பம், / எழுத்து…’ (ப.7)
‘கழுகின் கடினமான / நகங்களை விட
வலிமையான ஒரு கோழியின் இறகுகள்’ (ப.16)
‘நம் நகங்களை நாமே உண்போம்’ (ப.26)
‘எண்ணற்ற கழுகின் / நகங்களை உண்ட’ (ப.29)
‘உலர்ந்துபோன் நகங்களைச் சுமக்கும் / வெட்டுக்கிளி’ (ப.35)
இவ்வாறு இக்கவிதைத் தொகுப்பெங்கும் நகங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. இவை மிகவும் ஆழமான குறியீடாகப் பயின்றுவருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வந்தக் கவிதைகளில் அக்கவிதைகளுக்குரிய தனித்துவத்தை முன்னிறுத்திப் படைக்கப்பட்டிருப்பினும் மறைபொருளாக ஏதோ ஒன்றைக் கவிஞர் சுட்டிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதாவது நகம் என்பது வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மையுடையது. எனவே தரிக்கத் தரிக்க மீண்டும் வளரும் ‘வளமையும், எதிரியைத் தாக்க ஆயுதங்கள் அற்ற நிலையில், பெண்களுக்கு நகமே ஆயுதமாகும் தன்மையும், நாணத்தில் நகம் கடிக்கும் வெளிப்பாட்டுணர்வும், நகம் கடித்தல் என்னும் தவிப்பின் நிலையையும் குறியீடாகப் பல இடங்களில் கவிஞர் வீ.பூமிநாதன் பயன்படுத்துகிறார். இவ்வாறான தனித்துக் குறிப்பிடத்தக்க குறியீடுகள் இவரது கவிதை வெளிகளில் ஊடாடுவதைக் காணமுடிகிறது. இவற்றைக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளும் பொருள்கோள் முறையையும் வாசிப்பாளனிடன் இக்கவிதைப் பனுவல்கள் கோருவதை உணரமுடிகிறது.
முடிவுரை
தமிழ்க் கல்விப்புலங்களில் இருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகளில் , அப்படைப்பாளியின் வாசிப்பின் ஆழமும், அனுபவ வெளிப்பாடும் பொதிந்திருப்பதைப் பொதுவில் காணமுடிகிறது. பேராசிரியராகவும் தொழிற்படும் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைப் படைப்பில், தொன்மை மனத்தின் விழைவுகளும் நவீன நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணமுடிகிறது. நிலவுகிற சமூகத்தில் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல்வேறு அம்சங்களைக் கேள்விக்குட்படுத்தும் விமர்சன நோக்கும் பூமிநாதனின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. காட்சிப் படிமங்களைச் சித்தரிப்பதில் கவிஞர் தனித்துவம் உடையவராகத் திகழ்கிறார் என்பதற்கான சான்றுகள் பல இவருடைய கவிதைத் தொகுப்பில் உள்ளன. குறியீடுகளை மிகவும் காத்திரமாகக் கையாளும் திறனையும் பூமிநாதனின் கவிதைகளில் காணமுடிகிறது. தன் கவிதைப் பரப்பில் ஒரு பொதுக்குறியீட்டைப் பல இடங்களில் பொதிந்து வைத்துப் பல்வேறு பொருள்களை வாசகனுக்குக் கடத்துவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் பூமிநாதன் பயன்படுத்துகிறார் என்பதையும் காணமுடிகிறது.
தோழமையுடன்,
முனைவர் கி பார்த்திபராஜா
உதவிப்பேராசிரியர் (ம) தலைவர்,
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர்.
மண்மகள் |கவிதை| முனைவர் நா.சுபலட்சுமி
ா 📜 மண்மகள் உறங்கும்
கண்ணயர்வில் எங்கும்
பச்சைப் புல்வெளி
போர்த்திய போர்வை
பசும்புல்வெளியில்
பைந்நுனிகளிலே
பனித்துளியின் பரவசம்..!
📜 கொட்டும் அருவிகளில்
திக்கெட்டும் ஆளும்
இறைவனின் எல்லையில்லா
ஆனந்தத் தாண்டவம்..!
📜 ஆர்ப்பரிக்கும் கடல்களில்
இயற்கையின் இதயத்துடிப்பு
பொழியும் மழைத்துளிகளில்
இயற்கையின் சுவாசம்..!
📜 பறந்து விரிந்த
வெண்குடையாய் உலாவும்
வான் பரப்பில் வைரத்
துண்டுகளாய் நட்சத்திரங்கள்..!
📜 மஞ்சள் வெயிலாய்
மக்கள் வாழ்வில்
இருள்நீக்கும் சிவப்பு
கம்பள விரிப்புகள் ..!
📜 வானில் சிறகடித்து
பறந்து இரைதேடி
சுற்றித்திரியும் பறவைகள்
இயற்கையின்
சாகசப்பிறவிகள்..!
📜 பறவைகளின் இருப்பிடமாய்
பூக்களின் கூடாரமாய்
மணத்தைப் பரப்பி
அடிமனதை வருடிடும்..!
📜 வண்ண மலர்கள்
இயற்கையின் கொடைகள்
காடுகளைப் பிரசவிக்கும்
கருவறைகளாய் மரங்கள்
இயற்கை மகளின்
இறவா வரங்கள்..!
📜 எட்டா உயரமாய்
ஏற்றத்தைப் போதிக்கும் – மலைகள்
பூமிப்பந்தின் கர்வ கிரீடங்கள்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் நா.சுபலட்சுமி,
தமிழ்த்துறை,
உதவிப் பேராசிரியர்,
டிரினிடி மகளிர் கல்லூரி,
நாமக்கல் மாவட்டம்.
கேட்காத காதுகள்!|சிறுகதை|ச. வினிதா
“கேட்காத காது சொல்லும் கதை”
மலையடிவார நகரத்தில் இருந்த அந்தச் சிறு நகைக்கடை, ஒரு நாளில் பெரிய அற்புதத்தைக் கண்டது. அந்த நகைக்கடையின் உரிமையாளர் கோபாலன், அவருக்கு உறுதுணையாக இருந்த வேலைக்காரன் இராமு.. இராமுவிற்கு சரியாககாது கேட்காது. ஆனால், அவன் செயல்களில் எப்போதும் ஒரு நேர்மை இருந்தது.
ஒரு நாள், கடை உரிமையாளர் கோபாலன் அவனை அழைத்தார். “இராமு, நமதுகடையில் வெகுகாலமாக இந்த ஒரு தங்க நகை மட்டும் விற்காமல் இருக்கிறது. அதனால், அந்த நகையின் விலையை பாதியாகக் குறைத்து, ஒரு தகடு எழுதி அதற்கு அருகே ஒட்டி வை” என்றார்.
இராமுவும் சிரித்துக் கொண்டே, தலை அசைத்து ஒப்புக்கொண்டான். ஆனால் அவனுக்கு உரிமையாளர் கோபால் கூறிய செய்தி அவனுக்கு சரியாகக் கேட்கவில்லை. “பாதி விலை”என்றதை அவன் “இரண்டு மடங்கு விலை” என்று தவறாகப் புரிந்து கொண்டான். அதே நேரத்தில், அவனுடைய மனசு அது சரி என்றுதான் சொல்லியது, “இந்த நகை விலைமதிப்பற்றது, பாரம்பரியம்மிக்கது இதன் மதிப்பு உயர்த்தினால் தான் யாராவது கவனிப்பார்கள் !” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு செயல்பட்டான்.
பின்னர் இரண்டு மடங்கு விலையை எழுதி, ஒரு அழகிய அட்டையில் அந்த நகையுடன் சேர்த்து வைத்தான்.
மறுநாள், வாடிக்கையாளராக ஒரு பெரிய தொழிலதிபர் அந்த நகைக் கடைக்கு வருகை தந்தார். கடை முழுவதையும் பார்த்துவிட்டு, இறுதியாக அவரது கண்கள் ராமு எழுதி வைத்த அந்த தாங்க நகையின் மீது கவனம் சென்றது. இந்த நகை ஏன் இவ்வளவு விலையுயர்ந்தது?
இதில் என்ன சிறப்பு ?” என அந்த வாடிக்கையாளர் வினவினார்.
“இது சாதாரண தங்க நகைதாங்க எங்கள் முன்னோர்கள் செய்தது பாரம்பரியமானது ” என்று சொல்லி முடிப்பதற்குள், சரிசரி நான் புரிந்துக்கொண்டேன் “இதற்கு மற்றதைக் காட்டிலும் அப்போ தனித்தன்மை இருக்கு, ரொம்ப நல்லது, அப்போ இது எங்கள் வீட்டில் இருந்தா தான் இன்னும் சிறப்படையும் இதை என் மனைவிக்கு பெரிய பரிசாக நானே வாங்கிக் கொள்கின்றேன்!” இந்தாங்க அதற்கான முழுப்பணம் என விலை அட்டையில் சேர்க்கப்படிருந்த முழுத்தொகையினையும் எடுத்து நீட்டினார்.
அந்த நகை விற்ற மகிழ்ச்சியில், நகைக் கடையின் உரிமையாளரான கோபாலன் தனது ஊழியரான இராமுவை அழைத்தார்.
“இராமு, நான் சொன்னதை யெல்லாம் நீ மாறாக ஏன் செய்தாய்?
நான் பாதி விலை குறைக்க சொன்னேன்.
ஆனால், நீ எதற்கு இரண்டு மடங்கு அதிகம் எழுதினாய்?” என ராமூவிடம் வினவினார்.
இராமு தன் தலையை சொறிந்துகொண்டே மெல்ல திரும்பி பார்த்தான், முதலாளி என்னை மன்னிசுடுங்க ஒரு உண்மையை நான் உங்க கிட்ட சொல்லாம மறைத்துவிட்டேன்,
உங்களிடம் நான் ஒரு உண்மை சொல்ல வேண்டும். எனக்கு காது அவ்வளவாக சரிவர கேட்காது. நீங்க அன்னிக்கு சொன்ன வார்த்தை எனக்கு சரியா புரியல. ஆனால் நான் என்னுடைய மனசை கேட்டு, இந்த நகைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டும் என்று எண்ணினேன். அதையே முயற்சி செய்தேன்.”
கோபாலன் சற்று நேரம் உட்கார்ந்தார். அன்போடு இராமுவின்தோளைத் தொட்டு, மெல்லச் சிரித்தார்.
“இராமு, நீ செய்தது அற்புதம்! கேட்காத காதே இன்றைய என் மகிழ்ச்சிக்கும் லாபத்திற்கும் காரணம். சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் காரியம் கூட நல்லதொரு முடிவாக முடியகூடும் என எண்ணி ராமுவை அன்போடு கட்டி அனைத்தான்.
“விலையால் அளவிடும் மனிதர்கள்,
விதியால் உயர்ந்தார் ஒருவன்.
சிறு தவறுகள் கூட,
சில நேரங்களில் பேருணர்ச்சி தரும்!”
சிறுகதையின் ஆசிரியர்
ச. வினிதா
இளநிலை இரண்டாம் ஆண்டு
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திண்டல், ஈரோடு.