Family In The Works Of V.Iraiyanbu|Dr P.Vignesh kumar

Family In The Works Of V.Iraiyanbu - Dr P. Vignesh kumar
Abstract
       If a society wants to progress or develop, it has to progress from Economically marginalised family to families living in urban areas. Every individual’s role is essential for that. The family plays a primary role in making an individual a good human being . Such a system of family organization as prevails in India is seen as a source of virtue and a school of virtue for the individual. The system of family system prevailing in our country from ancient times to modern times has been surprising to all the people of the world. This article examines how V. Iraianbu has expressed such thoughts and highlight the values about family in his works.

Keywords:  Contemporary, Family, Passion, Marriage, Honesty, Togetherness, and Motherhood.


“வெ.இறையன்பு படைப்புகளில் குடும்பம்”

ஆய்வுச் சுருக்கம்
     ஒரு சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமுகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு ஒவ்வொரு தனிமனிதனின் பங்கும் இன்றியமையாததாகும். தனிமனிதனைப் பண்புள்ள மனிதனாக மாற்றுவதில் குடும்பம் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் நிலவும் இத்தகைய குடும்ப அமைப்பு முறையானது அறத்திற்கு உட்பட்டதாகவும், தனிமனிதனுக்கு அறத்தைப் போதிக்கும் பள்ளியாகவும் விளங்குகிறது. நம் நாட்டில் நிலவும் குடும்ப அமைப்பு முறையானது  பண்டைய காலம் முதல் சமகாலம் வரை உலக மக்கள் அனைவரும் கண்டு வியக்கும் விதத்தில் உள்ளது. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என்பதைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குறிப்புச் சொற்கள்:  சமகாலம், குடும்பம், உணர்வு, திருமணம், நேர்மை, ஒற்றுமை, தாய்மை.

முன்னுரை
        தனிமனித முன்னேற்றம் குடும்ப  முன்னேற்றத்திற்கும், குடும்பம்  முன்னேற்றம் சமுதாய முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.  எனவே   ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள்  காணப்படுகின்றன. இத்தகைய குடும்பம் பற்றிய சிந்தனைகளை, வெ.இறையன்பு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

குடும்பம்
        ஒரு சமுதாயத்தின் அடித்தளமாகக் குடும்பம் கருதப்படுகிறது. குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் சேர்த்ததன் பிணைப்பாக உள்ளது. பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது சமுதாயமாகும்.  அக்குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாகவும், தனி நபரைப் பண்புள்ள மனிதனாக மாற்றும் ஆற்றல் உடையதாகவும் திகழ்கிறது. பண்பாட்டிற்கு ஒரு மனிதனைப் பண்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனை, “பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல் அல்லது திருந்துதல், திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளம் என்று சொல்வது வழக்கம்” (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும், ப.5) என்கிறது. ஒரு மனிதனின் வாழ்வியலை மேம்படுத்தும் ஆற்றல் பண்பாட்டிற்கு உண்டு. அவ்வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வகையான பண்பாடு, மொழி, உணவு, பழக்க வழக்கம், குடும்ப கட்டமைப்புகள்  காணப்படுகின்றன. இருப்பினும் இந்தியாவில் நிலவும்  குடும்ப கட்டமைப்பு உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

தாய் தந்தை என்னும் உணர்வு
      தாய் தந்தை உணர்வு என்பது ஒரு வரம். மனிதனின் அடுத்த பரிமாணமே தாய் தந்தை என்னும் உணர்வு. கணவன் மனைவி இருவரும் தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததும், அவர்கள் அதுவரை அடையாத மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனைப் பூனாத்தி என்னும் கதையில் “ஆசிரியர் தன்னுடைய மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார். டாக்டர் இது ரொம்ப விலை உயர்ந்த கர்ப்பம் எனவே எந்த வேலையும் செய்யாமல் எந்தப் பயணமும் மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி சில குறிப்புகளைத் தந்தார். திரும்பி வரும்போது எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் புதிய அர்த்தம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” (பூனாத்தி, ப.115) என்கிறார். கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைவதுடன், இருவரும் தனக்கு மட்டுமின்றி தன் குழந்தைக்காகவும்  வாழத் தொடங்குகிறார்கள். இந்த மாற்றம் அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்வதுடன், சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணம்
       ஆண், பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் முறையாகத் திருமணம் செய்து வைப்பதுபெற்றோர்களால் நிகழ்த்தப் பெறும் திருமணமாகும். இவ்வழக்கம் நெடுங்காலமாக நம் தமிழ் மரபில் நிலவிவருவதை நாம் பார்க்கிறோம். சமகாலத்தில் மாறி வரும் சமுதாயத் தேவைக்கு ஏற்ப திருமணம் செய்வோரின் எதிர்பார்ப்பும், திருமண முறைகளும் மாறிவருகிறது. ஒருவர் உயர்ந்த  வேலையில் இருக்கிறார் எனில் அவருக்கு உடனே பெண் தருகிறார்கள். மற்றொரு புறம் ஒருவர் நேர்மையாகப் பணி செய்து பொருள் ஈட்டினாலும் அவர் செய்யும் தொழிலைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பெண் தரச் சமுதாயம் மறுக்கிறது. அதனை ‘செருப்பு விற்பவர்’ என்னும் கதையில், சங்கர் செருப்பு விற்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அவனது பெற்றோர்கள் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள். அவன் செருப்பு விற்கும் கடையில் வேலையில் இருப்பதால் அவனுக்குப் பெண் தர மறுக்கிறார்கள். “பல வீடுகளில் செருப்பை எடுத்துக் கொடுக்கிற உத்தியோகமா” (நரிப்பல், செருப்பு விற்பவர், ப.51) என்று பெண் தரவில்லை. கடைசியில் ஓர் இடம் பிடித்தது. ஆனால் வந்தவள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகத்  திருமணம் செய்து கொண்டாள்.
பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மணமகனுடன் சேர்த்து அவர்களுடைய வேலையைக் கவனிக்கிறார்கள், அத்துடன் சமுதாயம் ஒருவனின் வேலையை எவ்வாறு பார்க்கிறது என்பது வெளிப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்கள் வேலையை மட்டும் பார்க்காது. அவர் செய்யும் வேலையில் நேர்மையாகப் பணம் பெறுகிறாரா என்பதையும், அவர் தனது பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும்  பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பண்டைய காலத்தில் தமிழர் திருமணம்  எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அகநானூறு,

“திண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி 
…………………………………….. 
வதுவை நன்மணம் கழிந்த”      (அகநானூறு.86)
         
          என்னும் வரிகளில் திருமணத்தில் ஊர்ப் பொதுமக்கள், சான்றோர், உற்றார், உறவினர் பலரும் கலந்து கொள்வர். திருமண விருந்து இடையறாது நிகழும். நல்ல நாள் நிமித்தம் எல்லாம் பார்த்துள்ளனர். திங்களை ரோகிணி சேரும் நாளே திருமண நாள். மணவறையை அலங்கரிப்பர். கடவுளை முதலில் வணங்கித் தொடங்குவர். மணமுழவும் முரசும் ஒலிக்கும். மகளிரே திருமணத்தை நடத்தி வைத்தனர். வாகையில் கவர்ந்த இலையுடன் அருகம்புல் கிழங்குடன் கூடிய அரும்மை நூலால் கட்டி மணமக்களுக்குக் கைகளில் காப்புக் கட்டுவர். மண ஒலி முழவொலி மிக்க மணப்பந்தர். இழை அணி அணிவித்தல் (மங்கல நாண்) என்று குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. ஆனால் சம காலத்தில் ஒரு சில இல்லங்களில் பெண்களை வற்புறுத்தித் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்யப்பெறும் திருமணங்களால் எந்த ஒரு பயனும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையே மன வேறுபாடுகளும் சரியான புரிதலின்மையும்  ஏற்படுகிறது. ஆதலால் ஆண்-பெண் இருவருக்கும் மணம் முடிக்க விருப்பம் எனில் அவர்களுக்கு மணம் செய்து வைக்க வேண்டும். அதுவே இன்பமாக வாழ வழி வகுக்கும்.

கணவன் மனைவி புரிதலின்மை
        இல்லறம் நன்றாக இருக்க வேண்டுமெனில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும், சரியான புரிதலும் வேண்டும். இப்பண்பு நலன் சரியாக அமையப் பெறாதபோது விவாகரத்து நடைபெறுகிறது. இதனை ‘நண்பர்கள்’ என்னும் கதையில் ஜீவகாருண்யன் மிருதுனி இருவருக்குமான விவாகரத்து கோர்ட்டில் நடைபெறுகிறது. “நீதிபதி இருக்கையில் கம்பீரமாக தன்சிங் அமர்ந்திருந்தார். ஜோடியாக சிரித்துக்கொண்டே அந்த இருவரும் பேசியவாறு வருவதைப் பார்த்தார். காலம் காயங்களை ஆற்றும் என்ற பழமொழி சரிதான் என்று நினைத்துக் கொண்டார். “அவர்களிடம் உங்கள் முடிவில் மாறி விட்டீர்களா என்று கேட்க. அவர்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தோம். ஒன்றாக செல்வோம், மதிய உணவு அருந்துவோம், ஒருவரிடத்தில் ஒருவர் பேசுவோம். எங்கள் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அப்படியிருந்தவர்கள் தாம். எங்கள் அன்பு நன்றியறிதலாக எப்போதும் முகிழ்க்கும் எனச் சொல்ல நீதிபதி ரொம்ப மகிழ்ச்சி உங்கள் முடிவில் சரியாக இருக்கிறீர்கள் என்றேனும் புரிந்து ஒன்றாக வாழ்ந்தால் சந்தோசம் தான் என்று சொல்லி அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தார்.” (பூனாத்தி, பக்.29,30) என்று குறிப்பிடுவதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குமிடையே சரியான புரிதல் வேண்டும். ஏதோ ஒரு பிரச்சினை நடைபெறுகிறது என்றால் அது சில நாட்களில் மாறிவிடும். அதற்காக உடனே விவாகரத்துக்குச் சென்று விடக்கூடாது. ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்வதாகும். இதனை உணர்ந்து உண்மையான அன்பு கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்தனை வயதானாலும் அன்பு குறையாது என்பதைப் பாரதிதாசன்,

“புதுமலர் அல்ல காய்ந்த 
புற்கட்டே அவள் உடம்பு! 
சதிராடும் நடையாள் அல்லள்.  
தள்ளாடி விழும் மூதாட்டி  
மதியில்ல முகம் அவட்கு  
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கின்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்பதொன்றே! (குடும்ப விளக்கு, முதியோர் காதல், ப.274)
         
       என்னும் வரிகளில் வயதான தலைவன் தலைவியைப் பற்றிச் சொல்கிறார். அவளுடைய உடம்பானது புதிதாக மலர்ந்திருக்கும் புது மலர் போன்று இல்லை. காய்ந்து போன புற்கட்டை போன்றுள்ளது. அவள் அழகாக நடந்து செல்லும் பெண்ணைப் போன்று இல்லை. நடக்கும்போதே தள்ளாடி நடப்பவளாக இருக்கிறாள். நிலவைப் போன்று ஒளிவீசுவதாக அவளது முகம் இல்லை. வறட்சியுடைய நிலத்தைப்  போன்று உள்ளது. அவளது கண்கள் குழிகள் உடையதாக உள்ளது. இப்படிப்பட்டவள் என்னுடன் வாழ்கிறாள் என்பது ஒன்றே எனக்கின்பம் தருகிறது என்கிறார். உண்மையான காதல் கொண்டு இல்லறம் நடத்துபவர்களுக்கு எத்துணை வயதானாலும் அன்பு குறைவதில்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துவதே இல்லறம் சிறப்பதற்கான வழியாகும்.

இல்லாளின் சிறப்பு
     தற்காலத்தைப் போன்று பண்டைய காலத்துப் பெண்களும் இல்லறக் கடமைகளை ஆற்றுபவர்களாகவே இருந்துள்ளனர். கணவனைப் பேணுதலும், சமையல் செய்தலும், பிள்ளைகளை வளர்த்தலும், கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டைக் காத்தல் என்னும் வேலைகளைப் பெண்களே நெடுங்காலமாகச் செய்து வந்துள்ளனர். அவ்வாறு “வீட்டில் இருந்து இல்லம் சார்ந்த வேலைகளைச் செய்வதாலேயே பெண்களுக்கு “இல்லாள், மனைவி, மனையாள், மனையாட்டி, மனைக்கிழத்தி, வீட்டுக்காரி என்னும் இடம் பற்றிய பெயர்களும், இல், மனை, குடி என்னும் இடவாகு பெயர்களும் ஏற்பட்டன” என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். (பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், ப.63) என்கிறார்.

       கணவன், மனைவி இருவரும் தன் குழந்தைகளிடம் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு தாய் தனது கணவன் இறந்ததற்குப் பிறகு தங்களுடைய குழந்தையை வளர்க்க எவ்வளவு  கஸ்டப்படுகிறாள் என்பதை, ‘கைமுறுக்கு காரி’ என்னும் கதையில், பொன்னம்மா தனது கணவன் கணேசன் இறந்த பிறகு உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாது இருந்த போது, அவளது அம்மா சொல்லிக்கொடுத்த முறுக்குப் பிழியும் தொழில் ஞாபகத்திற்கு வருகிறது. அதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் வாங்கித் தொழில் செய்கிறாள். அதில் நல்ல முன்னேற்றமும், நல்ல லாபமும் கிடைக்கிறது. அதில் கிடைத்த பணத்தில் “பெரியவள் சாந்தியை திருமணம் செய்து கொடுத்தாள். பெண் லட்சணமாக இருந்ததால் நல்ல இடத்தில் திருமணம் செய்ய முடிந்தது. ஒருத்தியாகவே முன் நின்று கல்யாணம், வளைகாப்பு, பிரசவம் என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்” என்கிறார். (அழகோ அழகு, ப.21)

      இல்லாள் தன்னுடைய கணவனின் இறப்பிற்குப் பிறகு தன்னம்பிக்கையை இழந்து விடவில்லை. தன்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அம்மா சொல்லிக்கொடுத்த கைத்தொழிலைச் செய்கிறாள். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தனது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்கிறாள் என்கிறார். இதன் வாயிலாக இல்லாள் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை தன்னுடைய பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உடையவளாகத் திகழ்கிறாள் என்பது வெளிப்படுகிறது. தாய் தன் குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடையவளாக உள்ளாள் என்பதை குறுந்தொகை,

“கருங்கட் தாக்கலை பெரும் பிறிது உற்றென,
…………………………………..
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்.” (குறுந்தொகை, பா.69)
         
     என்னும் வரிகளில் கருமையான கண்களைக் கொண்ட ஆண் குரங்கு பெண் குரங்கு அதனின் குட்டிக் குரங்கு என ஒரு மரக்கிளையில் இரவு நேரத்தில் அமர்ந்திருக்கின்றன. ஆண் குரங்கு ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்குத் தாவுகிறது. இரவு நேரம் என்பதால் மற்றொரு கிளையை பற்றாது கீழே விழுந்து இறந்து விடுகிறது. ஆண் குரங்கிடம் மிகுந்த அன்பு கொண்ட பெண் குரங்கு இனி தானும் இறந்து விடவேண்டும் என்று எண்ணுகிறது. இருப்பினும் தன் வயிற்றை தொற்றிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கைப் பற்றி எண்ணுகிறது. தற்போது தன்குட்டி உள்ள நிலையில் அதனை விட்டால் அதனால் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவத் தெரியாது. அதனால் உணவைத் தேடி உண்ணத் தெரியாது என எண்ணுகிறது. ஒருபுறம் தன்னுடைய கணவனிடம் கொண்ட அன்பு, மறுபுறம் தன்னுடைய குட்டியை நினைக்கிறது. பிறகு தன்னுடைய குட்டியைச் சுற்றத்தாரிடம் சென்று சேர்த்து அதனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி தானும் கணவன் சென்ற இடத்திற்குச் செல்கிறேன் என்று தன் உயிரை மாய்த்தது என்கிறது. இத்தகைய சிறப்பினை உணர்த்தவே வள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்று பெண்மையைப் போற்றுகிறார். இதன் வாயிலாக பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பை உணர முடிகிறது.

தாய்மையைப் பற்றித் தாய்மைக்குத் தெரியும்
     உலக மொழிகள் அனைத்திலும் பண்பு நிறைந்த சொல் அம்மா. உலக உயிரினத்தில் தன்னலம் கருதாது ஓர் உயிர் இருக்குமானால் அது தாய்தான்.  ஒரு பெண் தான் தாய்மை அடைந்தேன் என்று தெரியும்போது அவள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். அத்தகைய அம்மா என்னும் சொல்லுக்குப் பிறமொழிகளில் இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு. அம்மா ‘அ’ உயிர் எழுத்து தன்னுடைய குழந்தைக்கு உயிர் தருபவள். ‘ம்’ மெய்யெழுத்து உயிராகிய குழந்தை உறைவதற்கு உடல் தருபவள். ‘மா’ உயிர் மெய் எழுத்து பத்து மாதம் தன்னுடைய வலிகள் அனைத்தையும் மறந்து பெற்றெடுத்து உயிர்மெய்யாக உலகைக் காணச் செய்பவள் தாய். இதன் பொருட்டு அமைந்ததே அம்மா என்னும் சொல்.
         
     அத்தகைய தாய்மை என்னும் உணர்வில் உள்ள சந்தோசம் மற்றொரு தாய்க்குத் தெரியும் என்பதை இறையன்பு, ‘பூனத்தி’ என்னும் கதையில் வரும் கதைத் தலைவனின் மனைவி ராஜிக்குக் குழந்தை பிறக்கிறது. அப்போது அவள் தான் வளர்த்த பூனை பார்த்தால் சந்தோசப்படும் என்பதை “அழகாக ஆண் குழந்தை பிறந்ததும் அதுநாள் வரை இருந்த தவிப்பு நீங்கியது. மறுநாள் என் மனைவி ஏங்க நம்ம குழந்தையைப் பார்த்தாப் பூனாத்தி சந்தோசப்படுமில்லே.” என்றாள் (பூனாத்தி, ப.119) என்கிறார். தான் தாய்மை அடைந்தேன் என்று தெரிந்ததும் பெண் மகிழ்ச்சி அடைகிறாள். அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து தன் கையில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறாள். ராஜி தாய்மை அடையும் முன்பு தான் வளர்த்த பூனை குட்டி போட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவள் என்பதாலும் தாய்மையின் உணர்வைப் புரிந்தவள் என்பதாலும் தன்னுடைய குழந்தையைத் தான் வளர்த்த பூனை பார்த்தால் மகிழ்ச்சியடையும் என சொல்கிறாள். இங்கு ஒரு தாயின் உணர்வைப் பிறிதொரு தாய் உணர முடியும் என்பது வெளிப்படுகிறது.

முடிவுரை
      சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமெனில் அச்சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் குடும்பங்கள் முதல் நகரப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் வரை முன்னேற்றமடைய வேண்டும்.குடும்பங்கள் மனித உணர்வுகளின் பிறப்பிடமாக உள்ளது,கணவன் மனைவி இருவரும் தாய், தந்தை என்னும் உணர்வினை அடையும்போது வாழ்வின் அடுத்த பரிமாணத்தை அடைகிறார்கள்.பெற்றோர் தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவரது ஊதியத்தை மட்டும் பார்க்காது அவர் தனது  பெண்ணுக்குப் பொருத்தமானவராக இருப்பாரா என்பதையும்  பார்க்க வேண்டும். அதுவே வாழ்வில் வளம் சேர்க்கும். பெண்களுக்கே உரித்தான கடமை, பொறுப்பு, அன்பு, அக்கறை ஆகிய பண்பு நலன்களையும் இல்லாளின் சிறப்பையும் அறிய முடிகிறது.

துணைநின்ற நூல்கள்
1. வெ.இறையன்பு – பூனாத்தி, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் – 
    641001. மூன்றாம் பதிப்பு 2017.

2. வெ.இறையன்பு – நரிப்பல் நியூ செஞ்சுரி புக் (பி) லிட், அம்பத்தூர்,  
    சென்னை – 600050. ஏழாம் பதிப்பு 2019.

3. வெ.இறையன்பு – அழகோ அழகு, நியூ செஞ்;சுரி புக் (பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600098. ஏழாம் பதிப்பு  2019.

4.  தேவ நேயப் பாவாணர், ஞா.- பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்,
தமிழ் மண் பதிப்பகம், சென்னை- 600014. இரண்டாம் பதிப்பு, 2000.

5. நாகராசன்,வி. (உ,ஆ)  – குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக் (பி) லிட்
அம்பத்தூர், சென்னை – 600098. முதல் பதிப்பு. 2004.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்  பா. விக்னேஷ்குமார்,
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை – 600 077

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here