Thoughts on the Upliftment of Humankind in Kalithogai|Dr S. Dhandapani

Abstract    
         
            For countless years, as a gracious message handed down by the wise and the learned, as a cultural emblem of the ancient Tamils, and as a perennial spring of knowledge overflowing with love, Kalithogai stands in the Ettuthokai as an agam (interior/love) anthology. While attempting to explore and understand the messages contained in Kalithogai, certain ideas related to the upliftment of humankind that touched my heart appeared repeatedly. This article proceeds with the aim of presenting those ideas under the following subheadings: True wealth that humanity should attain Nothing in this world belongs to us; nothing is permanent One should understand human nature and live accordingly No occupation is inferior One should not burden others by sharing one’s own suffering Control of the mind is essential The principles of the forefathers are the path to progress Patience alone leads to success Today’s reality becomes tomorrow’s dream  Through these themes, this article undertakes a journey to highlight the humanistic and progressive thoughts found in Kalithogai.


“கலித்தொகையில் மனிதகுல மேம்பாட்டுச் சிந்தனைகள்!”

முன்னுரை
    
      ஆண்டாண்டு காலமாய் ஆன்றோர்கள் சான்றோர்கள் அருள்வாக்காய், ஆதிகாலத் தமிழரின் அடையாளச் சின்னமாய், ஆயுளெல்லாம் அன்பு சுரக்கும் அறிவுச்சுணையாய் எட்டுத்தொகையில் அகமாய் அமைந்த கலித்தொகையில், அறிய வேண்டிய செய்திகளை ஆராய முற்பட்டபோது, ஆங்காங்கே கண்பட்டு  என் நெஞ்சம் தொட்ட சில மனித குல மேம்பாட்டுச் சிந்தனைகளைத்  தொகுத்துக் கூறும் நோக்கில் இக்கட்டுரைப் பயணிக்கின்றது.
மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்து
      சொத்து சுகம் தேடி அலையும் மனிதரினம் பெறவேண்டிய உண்மையான சொத்துக்களைப் பழமொழிப் பாங்கில் பட்டியலிட்டுத் தந்துள்ளது கலித்தொகை.

“ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தார்க்கு உதவுதல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”   (நெய்தற்கலி 133: 6-14 )
       
       இல்லறம் நடத்துதலில் சிறந்த செயல் என்பது வறியவர்க்கு ஒன்றை உதவுதல். அகவாழ்வில் பாதுகாத்தல் என்பது துணையைப் பிரியாதிருத்தல். மக்கட் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல். அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரை அனுசரித்து நடத்தல். அறிவு எனப்படுவது அறிவு அற்றவர்களின் சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல். நட்பில் உயர்ந்த பண்பு எனப்படுவது முன்பு நாம் கூறியதை பின்பு மறுக்காது இருத்தல். நிறை எனப்படுவது மறைபொருளை பிறர் அறியாமல் பாதுகாத்தல். ஆட்சியில் முறை செய்தல் என்பது கொலை குற்றம் புரிந்தோர்க்கு இரக்கமின்றி மரண தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை பழிப்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல் என்று வாழ்வின் உயரிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறது கலித்தொகை.

இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று
      
       களவு ஒழுக்கத்தில் ஈடுபட்ட தலைவியின் பெற்றோர் அவளை அயல்மணம் பேசுகிறார்கள். அதனை அறிந்த தலைவி, தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். செவிலித்தாய் அவளை பல இடங்களில் தேட, எதிரில் வந்த அந்தணரிடம் இது பற்றி வினவ, அவர் செவிலித் தாய்க்குக் கூறிய ஆறுதல் உலக இயல்பினை எடுத்துரைப்பதாக இருந்தாலும் இவ்வுலகில் எதுவும் நமதன்று; எதுவும் நிரந்தரமன்று: என்ற தத்துவத்தையும் உணர்த்துவதாக உள்ளது.

“பலவுரு நறுந் சாந்தம் படுப்பவர் கல்லதை
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையவளே”  (பாலைக்கலி 9:11-19  )
மனித சுபாவம் அறிந்து பழகிட வேண்டும்         
      பக்கத்தில் இருக்கும் வரை ஒருவரைப் பாராட்டி புகழ்வது, அவர் சென்றவுடன் அயலாரிடம் அவர் மீது பழித்துற்றுவது போன்றவை அற்பர் செயல்கள் எனக் கலித்தொகையில் சுட்டப்பட்டுள்ளது.

“சிறப்புச் செய்து உழையராப் புகழ்போற்றி மற்றுஅவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல்” (பாலைக்கலி 25: 15 -16 )

      செல்வக் காலத்தில் ஒருவரோடு நட்பு கொண்டு அவரது செல்வத்தை அனுபவித்து விட்டு அவர் வறுமையுற்றபோது ஓர் உதவியும் செய்யாத நன்றியறிவு அற்றவர், நட்புணர்வு அற்றவர் என்று பாலைக்கலியில் குறிப்பிட்டுள்ளது.

“செல்வத்துள் சேர்ந்து அவர் வளன்உண்டு மற்றுஅவர்
ஒல்கிடத்து உலப்பு இலா உணர்விலார் தொடர்பு போல்” (பாலைக்கலி :25:19-20)        
       ஒருவரோடு நட்பு கொண்ட காலத்தில் அவரைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்டு அந்த நட்பு மாறிய பொழுது அதை பிறருக்குக் கூறும் பெருமையற்றவர் உறவை பீடிலார் தொடர்பு என்கிறது கலித்தொகை.  

“பொருந்திய கேண்மையின் மறைஉணர்ந்து அம்மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்புபோல்” (பாலைக்கலி :25:23-24)
        
       ஒருவரது முகம், கடன்பெறும் போதும் அதைத் திருப்பிக் கொடுக்கும் போதும் வேறுபடுவது புதிதல்ல. இந்த இயல்பு உலகத்தில் என்றும் உண்டு என்ற உளவியல் பார்வையும் கலித்தொகையில் உள்ளது.

உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேராகுதல்
பண்டும் இவ்வுலகத்து இயற்கை”  (பாலைக்கலி :22:1-3)         
        சிற்பி ஒரு சிலையைச் செதுக்கும் பொழுது அதில் அமைத்த உணர்வுகள் யாவும் இறுதிவரை அதில் புலப்படும். அதுபோல நற்பண்பு உடையவர்  வாக்கின் உண்மையை இறுதிவரை காப்பாற்றுவர் என்று மனிதர் இயல்பைத் தெளிவாக உரைத்துள்ளது கலித்தொகை.

“தாய்உயிர் பெய்த பாவை போல
நலனுடையார் மொழிக்கண் தாவார்”  பாலைக்கலி :22:5-6
செய்யும் தொழிலே தாழ்வில்லை
        
       நான் மோர் விற்றுத் திரிவது எம் குலத்துக்குத் தீதன்று. எம் சுற்றத்தார் ஆயராதல் போல் நானும் ஆய்ச்சியே. ஆதலால் நான் மோர் விற்பதில் எந்தத் தீமையும் இல்லை என்ற தலைவியின்  கூற்று செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்த்துகின்றது. மேலும் குலத்தொழிலின் அவசியத்தை வற்புறுத்துகின்றது. அதுமட்டுமன்றி குலத்தொழிலை வெறுக்கும், ஏற்றுக்கொள்ள மறுக்கும்  இன்றைய கால இளைஞர்களின் மன நிலைக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது.

அஃது அவலம் அன்று மன
ஆயர் எமரானால் ஆயத்தியேம்”  (முல்லைக்கலி 108:9-10
)
நமது துயரத்தைப் பிறருக்குக் கடத்துதல் கூடாது        
     ஆய்ந்து செய்த அணிகலன்களை உடையவளே! பயனில்லாதவற்றைக் கூறாதே. தொலைநாட்டில் உள்ளவர்க்கு நம் துயர் கூறி தூது அனுப்ப வேண்டாம் என்ற தலைவியின்  கூற்று நமது கஷ்டங்களைப் பிறருக்குச் சொல்லி அவர்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற அற்புத நெறியை  உணர்த்துகின்றது.

“ஆயிழாய்! ஆங்கனம் உறையாதி சேயோர்க்கு
நாம்தூது மொழிந்தனம் விடல் வேண்டா”  (பாலைக்கலி 28:21-22)
மனத்தை அடக்கினால் வாழ்வை வெல்லலாம்!         
      சுருக்கமாகப் பேசும் திறன் உடைய தோழி தொலைநாட்டுக்குச் சென்றவரை எண்ணி வருந்தும் என் மனத்தை நீ கூறும் அளவைவிட மிகுதியாகவே கட்டுப்படுத்துகின்றேன். ஆனால் அந்தக் கட்டுப்பாடு உடைகின்றது என்ற தலைவியின் கூற்று மனத்தை அடக்கி ஆளும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதோடு மனத்தை அடக்குதல் எளிதன்று, நாம் எடுக்கும் பயிற்சியும் முயற்சியும் நமது மனத்தை அடக்கினால் நம்மை வெல்வது எளிதன்று என்பதை அருமையாக எடுத்துரைக்கின்றது.

“சேயார் கட் சென்ற என் நெஞ்சினைச் சின்மொழி 
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்மன்”    (பாலைக்கலி 29:10-11)
முன்னோர் கொள்கையே முன்னேற்றப் பாதை        
       தலைவன் தனக்கென்று ஒரு மனை அமைத்துக் கொள்ளும் பொருள்வளம் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ளும் தகுதியை அடைகிறான் என்பது முன்னோர் கொள்கை. இக்கொள்கைக்குச் சான்று முல்லைக்கலியின் பாடல்.

“முற்றிழை ஏஎர் மட நல்லாய் நீயாடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான்”      (முல்லைக்கலி 111:8-12)
       
      சங்ககாலத்தில் களவுக் காதல் சமுதாயத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆயினும் திருமணம் பெற்றோராலும் சுற்றத்தாராலுமே முடிவு செய்யப்பட்டது. எனினும் பெண்ணின் காதலைப் பெற்றோர் அறிந்த பின்பும் ஆடவனின் குணச்செயல்களைப் பற்றி நன்கு கேட்டறிந்த பின்னரே திருமணத்தை முடிவு செய்வர் என்பதையும் கலித்தொகையின் பாடல் விளக்குகிறது.

“மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது எனக்கேட்டுத் திண்ணிதாத்
தெய்வம் மால் காட்டிற்று இவட்கென”    (முல்லைக்கலி 107:30-33)
      
      குறிஞ்சி நிலமக்கள் வேங்கை மர நிழலில் இருந்து மணம் பேசி முடிவு செய்தலும் திருமணம் நடத்துவதும் சங்ககால வழக்கமாக இருந்திருக்கின்றது.

“மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் நம்மலை கிழவோற்கே”    (குறிஞ்சிக்கலி :41:44-45)        
       கணவர் இறந்தபின் கற்புடைய பெண்டிர் வானுலகில் அவரை மீண்டும் தன் கணவனாகப் பெறுவர் என்ற நம்பிக்கையை நெய்தற் கலியில் காணமுடிகிறது.

“மாண்ட மனம்பெற்றார் மாசில் துறக்கத்து
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல்”   நெய்தற்கலி :143:45-46
நிதானம் வெற்றிதரும்        
       ஒரு நாள் நானும் அன்னையும் வீட்டில் இருந்தபோது அவன் வாயிலில் வந்து நின்று தாகம் என்றான். அன்னையும் பொற்சொம்பில் நீர் ஊற்றி அவனுக்குக் கொடுத்துப் பருகச் செய் என்றாள். நானும் வீட்டிற்கு வந்தவன் யார் என்று தெரியாமல் தண்ணீர் கொண்டு சென்று கொடுத்தேன். அப்போது தான் தெரிந்தது அவன் என்னவன் என்று. அவன் என்னை இறுகப் பிடித்து இழுத்தான். நான் திடுக்குற்று அஞ்சி அம்மா என்று கத்தினேன். அன்னையும் அலறி ஓடி வந்தாள். நான் நடந்ததை மறைத்து தண்ணீர் பருகிய போது விக்கினான் என்றேன். அன்னையும் அதனை நம்பி மெல்லவே பருகலாகாதா? என்றாள்.  (நடந்தத அறியாமலே). அந்தக் கள்ளன் கடைக் கண்ணாலேயே என்னை கொன்று விடுபவனைப் போல பார்த்தான்.
        கலித்தொகையின் இப்பாடல் ஒரு புரட்சியை ஏற்படுத்திய பாடல். என்னவென்றால், கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கே உரித்தானது என்பது பண்டுதொட்ட சிந்தனை. பாரதிதாசனும் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” என்ற இலக்கியத்திலே “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படி கடைக்கண் பார்வை என்பது பெண்களுக்கானது என்ற ஒரு பிம்பத்தை கலித்தொகை மாற்றி ஆண்களுக்கும் கடைக்கண் பார்வை உண்டு என்ற புரட்சி விதையை இங்கே விதைத்திருக்கிறது.
      மேலும் நடந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட பெண்ணின் அன்னையின் மெல்லவே பருகலாகாதா? என்ற கூற்றில் நமக்கானது நமக்கு கிடைக்கும் அவசரம் வேண்டாம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் எதிலும் நிதானம் தேவை. நிதானமே வெற்றி தரக்கூடியது என்பதை நகைச்சுவையோடு இப்பாடல் வலியுறுத்தி இருக்கிறது.

அன்னையும் யானும் இருந்தேமா இல்லீரே
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”     ( குறிஞ்சிக்கலி :51:5-15)
நனவே கனவாகும்      
      விழிப்பு நிலையில் ஆழ்மனத்தில் படிந்த நினைவே கனவிற்குக் காரணம் என்ற ஃபிராய்டின் கருத்திற்கு கலித்தொகை பாடல் ஒன்று வலு சேர்த்திருக்கிறது.

“நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇப்”    (குறிஞ்சிக்கலி 49:3-4)
      
      வளைவான வரிகளை உடைய புலியைத் தாக்கி அதனை வென்ற முயற்சியில் மலைச்சாரலில் உறங்கும் யானைக்கு அந்த நினைவு மனத்தில் இருந்ததால் கனவிலும் அப்புலியைக் கண்டு அங்கு பூத்திருந்த வேங்கை மரத்தை அப்புலி என்று கருதி தன் வலிமையால் வந்த கோபத்திற்கு குத்தி அடியோடு குலைத்து கோபம் தணிந்தது என்று உதாரணமும் தந்துள்ளது.

முடிவுரை     
       மனித குல வாழ்விற்கான உயரிய வாழ்வியல் நெறிகளை பழமொழிகளைப் போன்று ஒரே வரியில்  வளமான சான்று ஆதாரங்களோடு தந்திருக்கின்ற கலித்தொகையைக் கல்விமான்கள் புலவர்கள் மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் அனைவரும் “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று புகழ்வது பொருத்தமுடையதே என்பதற்கு மேற்கூறியவைகளே சான்றாதாரங்களாகும்.

ஆய்வுக்குப் பெரிதும் துணை நின்ற நூல்
சங்க இலக்கியம் மூலமும் உரையும் ( தொகுதி-6),உரையாசிரியர் முனைவர் சுப. அண்ணாமலைமுதன்மை பதிப்பாசிரியர்கள்முனைவர் தமிழன்னல் & முனைவர் சுப. அண்ணாமலைகோவிலூர் மடாலய பதிப்புவருத்தமானன் பதிப்பகம். முதற் பதிப்பு: ஏப்ரல் 2003

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சீனு. தண்டபாணி,

இணைப் பேராசிரியர் மற்றும் மொழித்துறைத் தலைவர்,

சாரதா கங்காதரன் கல்லூரி (தன்னாட்சி),

வேல்ராம்பட்டு, புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here