Wednesday, June 3, 2026
Home Blog Page 14

Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi

மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்

 Abstract                    

The creature can live on the ground only if it is associated with each other.  Each of the creatures is looking for a situation and set up a habitat accordingly.  Not only lives, but all the fifties are dependent on. Water, land, air, air polluting is only because man is only looking for self -interest.  That is why the toxins are mixed in the resulting products. Our ancestors planted trees in the fields. When small birds sit in trees, they use small insects that are harmful to crops. The diet of the food chain is also excellent.


“மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்”
 

      (நிலம்-பூமி, விசும்பு-ஆகாயம், வளி-காற்று, தீ-நெருப்பு, நீர்-தண்ணீர்) மண்ணை நிறைந்து வைத்திருக்கும் நிலமும், நிலத்தை ஏந்துகின்ற ஆகாயமும், ஆகாயத்தை வருடும் காற்றும், காற்றினால் மேலெழும் நெருப்பும், நெருப்பை அணைக்கும் நீர் என இயற்கையின் தன்மையை


மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு வைதரு வளியும்

வளி தரைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம் 2,16)

அறிவியலோடு எடுத்தியம்பியுள்ள புறநானூற்றுப்பாடல் சிறப்பிற்குரியது.


தனித்து வாழ இயலாது
 

       ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே நிலத்தில் உயிரினம் வாழ முடியும்.  உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கேற்ற சூழ்நிலையை தேடி, அதற்கு தகுந்தாற்போல வாழ்விடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றன.  உயிர்கள் மட்டுமல்லாது ஐம்பூதங்கள் அனைத்தும் சார்ந்து இயங்கக் கூடியதாகவே உள்ளன.


      இதில் மனிதன் மட்டும் சுய நலத்தை தேடியதால் தான் நீர், நிலம், ஆகாயம், காற்று மாசடைகின்றன.அதனாலேயே விளைப்பொருட்களிலும் நச்சு கலக்கின்றன.  விவசாயம் தமிழகத்தில் முதன்மை ஆதாரம். விவசாயம் செய்யும் பகுதிகளை வயக்காடு என்பர்.  ஏனெனில் வயலும், ஆங்காங்கே சிறு காடுகளும் இருக்கும்.  இப்பொழுது காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வெறும் வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
         

          நம் முன்னோர்கள் வயல்வரப்புகளில் மரங்களை  நட்டு வைத்திருந்தனர். சிறு பறவைகள் மரங்களில் அமர வரும்போது பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும்  சிறு பூச்சிகளை தனக்கு உணவாக பயன்படுத்தி கொள்ளும்.  இதனால் பயிர்கள் சேதமின்றி, தானியங்கள் நல்ல விளைச்சல் கிடைத்தன.
 தற்போது மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பறவைகள் தங்குவதற்கு ஆன சூழ்நிலை இல்லை.  இதனால் பயிர்களை சேதப்படுத்தும் புழுக்கள் மட்டுமின்றி, பல வகையான பூச்சிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்கின்றன.  இதற்கு தீர்வாக (செயற்கை) இரசாயன மருந்து தெளித்து வருகின்றனர்.   இதனால் மண்வளம் கேள்வி குறியாகின்றது.
          இன்றைய சூழல் மாசுபாட்டினால் நன்மை தரும் புழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக மண்புழு இனம் அழிந்து வருகின்றது.  மண்ணிற்குள் நண்டு, எலி, தேள், பூரான் ஆகியவை ஏற்படுத்தும் வளையின் வழியாக தண்ணீர் உள் இறங்கும்.  நுண்ணுயிர் பெருகும்.
         

       ஒரு கைப்பிடி மண்ணில் பல லட்சத்திற்கு மேல் நுண்ணுயிர்கள் இருக்கின்றன.  இந்த நுண்ணுயிர்கள் இருக்கும் மண்ணில்தான் மண்புழு இருக்கும். மண்புழு எப்போதும் மண் சுரங்கம் தோண்டி கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் மண் சுரங்கமும், மண்புழுக்களினால் மண்வளம் மேம்பட்டு சிறப்பாக  இருந்துள்ளன.  உணவுச் சங்கிலி முறையிலுள்ள உயிரினங்களின் உணவு முறையும் சிறந்தோங்கிய நிலையில் இருந்துள்ளன.

உணவு முறைகள்
         

       கோழியின் உணவு குப்பையிலுள்ள புழுக்கள். கொக்கு, வாத்துகளின் உணவு மீன்களும் மீன்முட்டைகளும்.  பயிர்கள், விலங்கு மற்றும் தாவரங்களின் மட்கிய   கழிவுகனை  உள்வாங்கி வளர்ந்தன.  மாட்டின் சாணியைக் கோழி கொத்தித் தின்றன, கோழி எச்சத்தை மண்புழு உண்பதற்கு முன்பாக நுண்ணுயிர்கள் பல உண்ணும்.
 மண்புழுவின் எச்சத்தைப் பயிர்கள் தின்னும்.  பயிர்களின் விளைச்சலை மனிதர்கள், விலங்குகள் உண்டு வாழ்வதை உணவு வளையம் அல்லது உணவு சங்கிலி என்று கூறுவர்.  இதில் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மனித இனம் வாழத் தடுமாறும் என நம்மாழ்வாரின் கூற்று சிந்தனைக்குரியது.


        பொதுவாக மண்ணில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வேறொரு உயிர்களை சார்ந்தே வாழ்கின்றன.   ஓரறிவு புல்பூண்டு முதல் ஆறறிவு மனிதன் வரை  இயற்கையோடு இணைந்து சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறப்பானது.  எந்திரங்களை சார்ந்து எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதை மனித இனம் புரிந்து கொண்டால் மனித வாழ்வு சிறப்படைய முடியும்.


காட்டு விலங்குகளின் உணவு

       விலங்குகளின் வாழ்வின் முக்கிய ஆதாரமாக யானை இருந்துள்ளது.   யானையின் செயல்பாடுகளாக மரக்கிளையை ஒடித்தல் பற்றி சங்க இலக்கியங்களில் பரவலாக பாடல்கள் பாடப் பெற்றுள்ளது. காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் மரக்கிளைகளை ஒடித்துப் போடுவதும், முறித்துப்போடுவதும் உண்டு.  மூங்கில் காடுகளுக்குள் நுழைந்து மூங்கில் கிளைகளை யானைகள் முறித்து தான் உண்பதுமுண்டு.  ஆனால் இவ்வாறு செய்வது நமக்கு பாதிப்பாக இருந்தாலும் அதில் பல உயிரினங்களின் வாழ்வதாரம் அடங்கியுள்ளன.


    யானை இப்படி செய்யும்போது கீழே விழும் ஒடிந்த கிளையின் இலைதழைகளை உண்பதற்கு மான்கள், கரடி, காட்டுப்பன்றி, முயல், காட்டு எருது ஆகியன காத்திருப்பதையும் மற்ற உயிரினங்கள் உணவாக்கி கொள்வதையும் அறிய முடிகின்றது. மேலும் அடர்ந்திருந்த படர் இலைகளை யானைகள் முறிப்பதால் சூரிய ஒளி அடர்ந்த காட்டிற்குள் புகுந்து வளர்ச்சியை உண்டாக்கும.  மற்ற உயிர்களுக்கு இரையாக கிடைக்கின்றது. இந்நிகழ்வானது, தாவர உண்ணி அதிகரிக்கும்போது அவை ஊன்உண்ணிகளுக்கு போதுமான உணவாகின்றது.


      யானைகள் மரக்கிளைகளை முறித்து போட்டும் புதர்களை மிதித்துப் போட்டும் சில இடங்களைப் புல்வெளிகளாக மாற்றுகின்றன.  இதனால் பல உயிரினங்களுக்கு வாழிடமாக மாறுகின்றன. காடுகளில் இறந்துபோகும் உயிரினங்களின் சடலங்களை பிணந்தின்னி கழுகு, நரி, கழுதைப்புலி மற்றும் பூச்சிகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகும் மறுசுழற்சி ஏற்படுகின்றது.
          பொதுவாக பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் செயல்பாடுகளால் மற்றொரு உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில  நேரங்களில் பிற உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில நேரங்களில் பிற உயிரினத்தால் தீங்கு நிகழும்போது அவ்வுயிரினத்தையே அழிக்க எண்ணுவது தவறானது.  அவ்வாறு செய்வதன் விளைவாக பெரும் பாதிப்புக்குள்ளாவது மனித இனமேயாகும்.


காடு வளர்ப்பின் பயன்

🌴இயற்கையான நல்ல காற்றை சுவாசிக்க முடியும்


🌴பிராண சக்தி அதிகரிக்கச் செய்யும்


🌴நோய்கள் நீங்கும்


🌴நலமாய் வாழ வழிவகுக்கும்

🌴வெப்பநிலை குறையும்


🌴மழை பொழியும்


🌴நிலத்தடி நீர்மட்டம் உயரும்


🌴பல்லுயிர் வாழும் இடமாகி, விலங்கு பறவைகள் சரணாலயங்களாகும்.


        என்ற உயர்ந்த சிந்தனையோடு  காடுகள் வளர்ப்போம்.  காடுகளை வளர்த்து காற்றையும், மழையையும் உணவையும், தந்து மனிதர்களை வாழவைக்கும்  பிற உயிர்களையும் பாதுகாப்போம்.


பறவைகளின் முக்கியத்துவம்

     இயற்கைச்சூழலைப் பாதுகாப்பதிலும், வேளாண் தொழிலுக்கும் உற்றத்தோழனாக இருப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.   பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.  இப்பூமியானது  உலகளாவிய பறவை இனங்களைக் கொண்டு, பல்லுயிர்த் தன்மையை காத்து வருகின்றது.  மனிதனின் வாழ்வின் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றி பறவை இனங்கள் வாழ்வது மிக முக்கியம்.
         

        பறவைகள் எளிதில் இடம் பெயரக் கூடியவை.  சதுப்புநிலங்கள், பெரும்பாலும் பறவைகள் வாழ்வதற்குரிய சூழலைத் தருகின்றன.  வானிலையை முன்கூட்டியே அறியும் ஆற்றலுடையது.  தாங்கள் செல்லும் வழியில் அபாயம் இல்லை எனத் தெரிந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளும்.  பகலில் சூரியன் திசையைக் கொண்டும், இரவில் நட்சத்திரங்களை அடையாளமாக கொண்டும், பூமியின் காந்த அலைகள், மற்றும் தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளை வைத்து பாதையை அமைத்துக் கொள்ளும் தன்மையுள்ளது.
         

     பறவைகள் இனப்பெருக்கமும், இடம் பெயர்தல் இல்லையெனில், பூமியில் தாவரங்கள் பொய்த்து போய்விடும்.  தாவரங்கள் நன்கு வளர்வதற்கு முதல் ஆதராமே பூச்சிகளும், பட்சி இனங்களுமே.


கற்பிக்கும் பறவையினங்கள்
         

      பல வண்ண பறவைகளைக் காண்பது கண்களுக்கு இனிமை. பறவைகளின் குரலொலி கேட்பது காதுகளுக்கு இன்னிசை. பறவைகளின் குரலோசையை நாம் எழுப்பினால் நமது குரல் வளம் இனிமையாகும்.
          பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், அவை தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.
         

      பறவைகளோ  விலங்குகளோ அல்லது புழு பூச்சிகளோ இல்லையென்றால் மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு வழியில்லை.  வேம்பு, அத்தி, அரசமரம், ஆலமரம், புளிய மரம் போன்ற பல தலைமுறைகள் தாண்டி வளரும் மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்கின்றன.
 உழவுத்தொழிலை மனிதன் பறவைகளின் வாயிலாக கற்றுக்கொண்டான்.  பறவைகள் வயல்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழ்வதன் மூலம் பயிர்களுக்கு தீமைகள் விளைவிப்பது குறைவே.  செடிகளுக்கு இடையே மகரந்தச் சேர்க்கைக்கு  உதவும். பறவைகளின் எச்சங்கள் உரமாகின்றன.  இறந்த விலங்குளை உண்பதால் சுற்றச்சூழலைத் தூய்மையாக்குகின்றன.


என் தனிமைக்கு துணையானாய்

உன் மெல்லிசையால் மகிழ்வித்தாய்

தானுண்ட மீதியால் பசியாற்றினாய்

இந்த கிளை முறிந்தாலென்ன

வேறொரு கிளை
         

       காலுண்டு கையிண்டு பிழைக்க வழியுண்டு என வழிகாட்டுவது பறவையினம்


பறவைகளுக்காகப் பயிரிடுதல்
         

      உயர்ந்த குணமுடைய பறவைக்கென சோளம், கம்பு, கேழ்வரகு என பலவகை தானியங்களை பறவைகள் உண்பதற்காகவே பயிரிடலாம்.  வானில் பறந்து செல்லும் பறவைகளே தோட்டத்திற்கு வந்து செல்.  உனக்கு பிடித்ததை உண்டு மகிழ், காலார உட்கார்ந்து கவிதை பாடிவிட்டு போ என்று கூறுவதைப் போலவும், உன் எச்சங்கள் என் பயிர்களுக்கு உரம். என் தலைமுறை வாழ நல்ல விதைகளை வித்திட்டு போ என்ற நோக்கில் பறவைகளுக்கென கொட்டாச்சியில் உணவு, தண்ணீர் என மரங்களிடையே சிறுசிறு  ஊஞ்சல் என ஏற்பாடு செய்து அதில் பறவைகள் வந்தமர்ந்து  பயன்பெறுவதைப் பார்க்கும்போது மனதிற்கு இன்பமும் உற்சாகம் கிடைக்கின்றது. இக்காட்சியானது பல மனநோய்களுக்கு மருந்தாகும்.
          பறவைகளுக்கும் பிற உயிர்களுக்கும் உணவிடுதால் மனித இனம் தழைத்தோங்கும்.  ஒவ்வொரு உயிரினங்களும் தன்னால் இயன்ற நன்மையை மனித இனத்திற்கு செய்து விட்டு செல்கின்றது.  இதனால் சூழல் மாறுபாட்டிற்கு தீர்வுகாண முடியும்.  வனங்கள் பெருகும் வாய்ப்பு உண்டாகின்றது.  நல்ல மழை பொழியும்.


விழிப்புணர்வுச் செய்திகள்

🌴இன்றைய வாழ்வில் சூழலோடு, பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பறவைகள் பாதுகாப்புக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


🌴மாசுக்கட்டுப்பாடு, நீர்சேமிப்பு, சுகாதாரம் பற்றி குழந்தைகளின் பாட நூல்களில் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறுவது போன்று பறவைகள் பாதுகாப்பு பற்றிய  விழிப்புணர்வு செய்திகள் இடம் பெற வேண்டும்


🌴பறவைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு பறவைகளின் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வாழும் நிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்த்த வேண்டும்.


🌴வலசைக்காக வந்து செல்லும் பறவைகள் அதிகமுள்ள ப குதியைக் கண்டறிந்து, அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.


🌴வேட்டையாடுதல், நீர் நிலைகளில் எண்ணெய் கழிவுகளை ஏற்படாதிருத்தல், விளைநிலங்களில் உயரக பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்.


🌴உயர்கோபுர விளக்குகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் பறவைகளை அச்சுறுத்தாத வகையில் அமைக்கப்பெற வேண்டும்

🌴பனை, வேம்பு, ஆலமரம், அரசமரம், போன்ற மரங்களை  வளர்க்க வேண்டும். இம்மரங்களில் அமரும்போது எழும்பும் ஓலிகள் நம் மனதிலுள்ள கவலைகளை மறக்கச் செய்யும்.  பறவைக் கூட்டங்களைக் காணும்போது புத்துணர்வு பெறுவோம். 


🌴இம்மரங்களின் கனிகளை உண்ண வரும் பலவகை பறவைகளுக்கு தங்க இடமும் உணவும் கிடைக்கும்.


🌴தோட்டங்களில், வயல்வெளிகளில் வளரும் களைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் செயற்கை உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.


🌴பலவகையான கனிதரும் மரங்களை வளர்க்க வேண்டும். தானிய பயிர்களை வளர்க்கும் போது பறவைளுக்கும்  உணவாகும்.


🌴பறவைகள் கூடு கட்டி வாழும் தன்மைக்கேற்ப மனித சமூகம் தங்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டும். நம்மால் இயன்றவரை தொந்தரவு கொடுக்காமல் அன்பு செய்யும் பழக்கத்தையும், தண்ணீர் உணவு கொடுக்கும் வழக்கமும் வேண்டும்.


🌴தன் அன்றாட பணிகளை செய்யும்போது, பறவைகளுக்குத் தொல்லை கொடுக்கும் செயல்களைத் தவிர்க்கலாம்.


🌴காடுகளை அழிப்பதைத் தவிர்க்கலாம்.    மனிதர்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து, பல தலைமுறைகளைக் கடந்து  வாழ்வதுபோல, விலங்குகளும்,  பறவைகளும், தாவரங்களும் பல தலைமுறைகளைக் கடந்து  வாழ  படைக்கப்பட்டவை  என்பதை உணர வேண்டும்


🌴அமாவாசை நாளில் மட்டும் காக்கைக்கு உணவிடுவதைத் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் வீட்டினருகே வரும் பறவைகளுக்கு உணவிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.


🌴முந்தைய நாட்களில் வாசலின் முற்றத்தில் அரிசி மாவில் கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.  அதனால் பல நுண்ணுயிர்கள் வாழும்.
பறவைகளைக் கூண்டுக்குள் வளர்ப்பதை தவிர்த்தல் நல்லது. வெட்டவெளியில் தனித்து இயங்கினால் சமூகத்திற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.


🌴வீட்டினருகே பெருமரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும், சிறு தானிய பயிர்களை வளர்த்தால் பறவைகளுக்கு உணவாகும்.


🌴வீட்டு மாடிகளில் சிறு வேர்களையுடைய சிறுதானிய பயிர்களை வளர்க்கலாம்.  பறவைகளுக்கென்று குடிநீர் வசதியை ஏற்படுத்தலாம்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிகள்( பிளாஸ்டிக ஒழிப்பு)
         

🌴நமது வாழ்க்கை முறையை மாற்றிப்போட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
         

🌴பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதில் கண்ணாடிப் பொருட்களோ, எவர்சில்வர் பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.
 

🌴துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடை, மாமிச விற்பனை கடைகள், வீட்டு விசேஷங்கள் பழச்சாறு மற்றும் இனிப்பகங்கள், பூக்கடைகள், தேநீர்கடைகள் போன்ற நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகளைக் குறைத்து, பேப்பர் கவர், துணிப்பைகள், பேப்பர் கப், பேப்பர் தட்டுகள், சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
         

🌴விளம்பர பேனர்களுக்கு மாற்றாக துணி, மரப்பலகை, தகரம் சுவர்கள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.


பள்ளிக்குழந்தைகள்
         

     பள்ளிக்குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுக்காமல், பாதிப்புகளைக் கூறி சில்வர் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுத்தனுப்ப வேண்டும்.
  விளையாட்டுப்பொருட்கள்  பனை, தென்னை,மரம், மண் ஆகியவற்றில் ஆன விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கலாம்.  மின்சாதன பொருட்களோடு அல்லது தனியாக விளையாடாமல் இயற்கையோடும், பலரோடுக் கூடி விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

கோவில்
         

    வழிபாட்டிற்கு செல்லும்போது வழிபாட்டிற்குரிய பொருட்களை துணிப்பையில் கொண்டு செல்லலாம்.  வாழை இலையிலோ, பேப்பர் கவரிலோ, பாத்திரங்களில் கொண்டு செல்ல வேண்டும்.


பயணங்கள்
         

      பேருந்து மற்றும் இரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்குரிய உணவை எடுத்துச்செல்லவோ, அல்லது பெறவோ சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.  தனிநபர் தங்களுக்குரிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
         

சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் நம் பாவங்களில் ஒன்று

இயற்கையைப் பாதுகாப்பது புண்ணியங்களில் ஒன்று


     ஏனென்றால் நம் தலைமுகைளுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச்சூழலை உண்டாக்கி கொடுப்பது நம் கடமையென அனைவரும் உணர வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்

🌴பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வெளியேறும் நச்சுப்புகையால் ஒவ்வாமை நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்


🌴வாய்க்கால் போன்ற நீர் வழிகளை அடைப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயங்கள், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


🌴பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதித்து மரணிக்கின்றன.


🌴வேளாண் நிலங்கள் பாதிக்கின்றது


🌴கடலில் எறியப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் தடுக்கப்படுகின்றது.


🌴பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களினால் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது
         

🌴பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகக்கேடுகள், நோய்கள், நீர்நிலைகள் பாதிப்பு, காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு என நம்மைச் சார்ந்த உயிரினங்கள் (விலங்கு, பறவை, நுண்ணுயிரிகள்) அனைத்தும் பாதிக்கப் படுவதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


மாற்று வழிகள்

🌴திரவப்பொருட்கள் வாங்க பாட்டில்களோ பாத்திரங்களோ பயன்படுத்தலாம்
எங்கு போனாலும், துணிப்பை எடுத்துச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.


🌴பிளாஸ்டிக் உறைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்போம்.


நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வழிகள்
         

       நன்னீரில் வாழக்கூடிய கொசு இனங்களைஅழிக்க இரசாயனம் கலந்த கொசு மருந்துகள் பயன்படுத்தும்போது, நீர் வாழ் பிற உயிர்கள் அழிந்துவிடுகின்றன. நன்னீரில் உள்ள சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை முறையில் கொசுக்கள் உற்பத்தியைக் குறைக்கலாம்

மீன் வளர்ப்பு
         

      மீன்களின் முட்டை உணவு கொசுக்களின் முட்டைகள். மீன்கள் மீன் முட்டைகளை உண்பதால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை. கொசுக்களை அழிக்க அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குளம், குட்டைகளில் கம்பூசியா அஃபினிஸ் மீன் வளர்க்கப்படுகின்றது.(கு.கணேஷ் 2017 அக்18 கொசுக்களுடன் ஒரு பனிப்போர் கட்டுரை தி இந்து இதழ்)


தவளை வளர்ப்பு

     
குளிக்கும் நீர் முழுவதும் மரஞ்செடிகளுக்கு பயன்படும்.  சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால் தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகின்றது.  துணி துவைக்க வேப்பங்கொட்டையால் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள், தவளைகள் வந்து அழுக்கை உண்ண வரும்.
  சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் போது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.  பாத்திரங்கள் கழுவ சாம்பல்தூள், இலும்பைத்தூள் பயன்படுத்தும்போது சாக்கடையில் வாழும் தவளைகள் ஆயிரக்கணக்கில் உருவாகும். கொசுக்களை உண்டு வாழ்ந்தன.
           மனிதனை காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றின.  தவளைகள், கொசுக்களின் பெருக்கத்தினையும், கொசுமுட்டைகளையும், முட்டைப்புழுக்களையும், தலைப்பிரட்டைகளையும் உட்கொள்வதால் கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம்.


தட்டான்பூச்சி
         

       தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம்  கொசுக்களைத் தின்று விடும்.  இப்பொழுது தட்டான் இனமே அழிந்து விடும் சூழலில் உள்ளது. இது பறக்கும் நிலையியேயே தன் உணவை வீழ்த்தும் தன்மையுடையது.  பிற சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணி பூச்சி என்ற அழைக்கப்படுகின்றது.
   பொதுவாக மனிதன் பெருந்தொற்று நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ரசாயனங்கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.  இயற்கையை மீட்டெடுப்போமானால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.


முடிவாக
 

நல்ல இயற்கையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமெனில்
  

1.பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து பிணமாவதைத் தடுப்போம்.
         

2.நீர்நிலைகளைச் சேமித்து நிம்மதி அடைவோம்.
         

3.காடுகளை வளர்த்து மனக்காயங்களைப் போக்குவோம்.


4.இயற்கையை நேசித்து இன்பமாய் வாழ்வோம்.
         

5.பறவைகளைப் பராமரித்துப் பாராளுவோம்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஜெ.ஜெஸி,

உதவிப்பேராசிரியர்,

எம் .ஏ. எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்,

சிறுகனூர், திருச்சி.

 

விருட்சத்திற்கான வித்து|சா.சிவானந்தம்

விருட்சத்திற்கான வித்து சா.சிவானந்தம்

🍓முயற்சியை விதைத்தேன்


வளர்ச்சி விருட்சமானது !


 

🍓தடைகளைத் தகர்த்து விதைத்தேன்


பாதை விருட்சமானது !


 

🍓செயல்களை விதைத்தேன்


வெற்றி விருட்சமானது !


 

🍓அவிநயம் விதைத்தேன்


ஆடல் விருட்சமானது !


 

🍓யாப்பினை விதைத்தேன்


பாப்புனைதல் விருட்சமானது !


 

🍓பூவினை விதைத்தேன்


தேன் விருட்சமானது !


 

🍓நட்பினை விதைத்தேன்


அன்பு விருட்சமானது !


 

🍓அன்பினை ஆழமாக விதைத்தேன்


அளாவிய காதல் விருட்சமானது !

🍓அறிவினை விதைத்தேன்


கல்வி விருட்சமானது !


 

🍓தமிழை விதைத்தேன்


கவிதை விருட்சமானது !


 

🍓ஒளியை விதைத்தேன்


வெளிச்சம் விருட்சமானது !


 

🍓நல்லொழுக்கங்கள் விதைத்தேன்


நல்ல மானுடர்கள் விருட்சமானார்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


சா.சிவானந்தம்
எம்.ஏ, பி.எட், எம்.ஏ, சி.எல்.ஐ.எஸ்


முதுகலைத் தமிழாசிரியர்


தி யுனைடெட் பப்ளிக் பள்ளி


கோவை

 

Marxism in Indian Sculpture|Kumaravelu Danistan

இந்திய சிற்பங்களில் மார்க்சியம்_குமாரவேலு டனிஸ்ரன்

Abstract
               

      Sculpture is an important art form that reflects the history of human society and the culture. In India, sculptures often have secular domination, but they reveal social class organizations and the lives of working people. At the Marxist Perspective, the Indian sculptures can see the classes, reflections of labor, and the release of the oppression. According to Marxist theory, art is an expression of society’s economic base. What kind of Indian sculptures do the Magician attributes? What is the place where they get in the community? Such questions are the problems of this study. Therefore, the purpose of this study is to examine the Indian sculptures from the Marxist angle and make clear the social classes, the role of working people and the dominance of the bureaucracy. The study is carried out based on analysis, description research, and historical research systems.


இந்திய சிற்பங்களில் மார்க்சியம்

முன்னுரை
         

     சிற்பக்கலையானது மனித சமூகத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான கலை வடிவமாகும். இந்தியாவில் சிற்பங்கள் பெரும்பாலும் மதச்சார் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தாலும் அவை சமூக வர்க்க அமைப்புகளையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்றன. மார்க்சியக் கோணத்தில் (Marxist perspective) பார்க்கும் போது இந்தியச் சிற்பங்களில் வர்க்கப் பிரிவுகள், உழைப்பின் பிரதிபலிப்புக்கள், அடக்கு முறையிலிருந்து விடுதலை போன்ற அம்சங்களை காண முடிகின்றது. மார்க்சியக் கோட்பாட்டின்படி கலை என்பது சமூகத்தின் பொருளாதார அடிப்படையின் வெளிப்பாடாக விளங்குகிறது. இதன் வழி இந்திய சிற்பங்கள் எவ்வகையான  மாக்சிய கற்பிதங்களை முன்வைக்கின்றன? அவை சமூகத்தில்  பெறும் இடம் எத்தகையது? போன்ற  கேள்விகள் இவ்வாய்வின் பிரச்சினைகளாக உள்ளன. எனவே இந்திய சிற்பங்களை மார்க்சிய கோணத்தில் ஆய்வு செய்து சமூக வர்க்கப்பிரிவுகளையும், உழைக்கும் மக்களின் பங்கு,  அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை தெளிவாக புரியவைப்பது இவ்வாய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வானது பகுப்பாய்வு, விபரண ஆய்வு, வரலாற்று ஆய்வு முறையியல்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.


திறவுச் சொற்கள் : கலைகள், மார்க்சியம், சிற்பங்கள், சமூகம்,சமயம்

மார்க்சியம் மற்றும் கலைவடிவங்கள்

         கார்ல் மார்க்ஸ் (Karl Marx) மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் (Friedrich Engels) முன்வைத்த மார்க்சிய கோட்பாட்டின்படி சமூக வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் நிகழ்கிறது. கலை, சிற்பம் போன்றவை ஆட்சி வர்க்கத்தின்  ஆதிக்கத்தையும், உழைக்கும் வர்க்கத்தின் நிலைமையையும் பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் சிற்பக் கலையின் அடித்தளத்தைப் புரிந்துகொள்வதற்கு அதன் வரலாற்று வளர்ச்சியை அலச வேண்டியது அவசியம் ஆகும். இந்திய சிற்பங்கள் பெரும்பாலும் மதம், அரசியல், மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்துள்ளன. சிந்து நாகரியத்தின் மோஹெஞ்சோதாரோ மற்றும் ஹரப்பா கால சிற்பங்கள் சிவில் சமூகங்களில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள், தொழிற்சாலைகள், மற்றும் அன்றாட உபயோக பொருட்களை பிரதிபலிக்கின்றன. சிந்துவெளி நாகரிக சிற்பங்களில் அரசியல் அதிகாரத்தின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது.1 வர்த்தகர்கள், உழைப்பாளர்கள் மற்றும் சிற்றொழில் தொழிலாளர்களின் இருப்பு வலியுறுத்தப்படுகிறது. இந்த கால சிற்பங்கள் ஒரு சமத்துவ சமூகத்தைக் குறிக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதிகாரம் மற்றும் சொத்துச் சுரண்டல் வந்துவிட்டன.


          மௌரியர் மற்றும் குப்தா கால சிற்பங்களில் அஸோக மையந்திகள், சாஞ்சி ஸ்தூபி போன்றவை மிகப்பெரிய அரசியல் மற்றும் மத ஆதிக்கத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இவற்றில் அரசியல் அதிகாரம் மற்றும் மத ஆட்சியின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. ஆனால் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறிய சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
   மத சிற்பங்களில் பிராமணிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு பாரம்பரியமாக காணப்படுகின்றது. 2 இந்தியாவின் முக்கிய மதங்களான  இந்து, புத்த, சமண ஆகியன சிற்பக் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மதங்களின் சிற்பங்களே பிற்கால இந்தியாவின் மார்க்சியவாத கருத்தியல்களை பிரதிபலித்து நின்றன.


1.வர்க்கத் தொடர்புகள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரதிபலிப்புக்கள்


     மார்க்சிஸ்ட் கோணத்தில் ஒவ்வொரு காலத்திலும் உழைக்கும் மக்களின் நிலை சிற்பங்களில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பது இங்கு முக்கியமான ஆய்வுப் பொருளாக அமைகின்றது. பூமிபுத்திரா சிற்பங்களில் பெரும்பாலும் அரசர்கள், மதத்தலைவர்கள் காணப்படுகிறார்கள். 3 அத்தோடு  கிராமப்புற உழைப்பாளர்களின் திறமையை சில சிற்பங்கள் உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் பண்பலைக் கோவில் சிற்பங்களில் கலைஞர்களின் உழைப்பும், தொழிலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கிராமிய மற்றும் சிறுபான்மை சமூகங்களின் சிற்பங்கள் என்ற கட்டமைப்பில் ஆராய்யும் போது பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மக்கள் தங்களது சிற்பங்களை இயற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர். 4 அவை அதிகார வர்க்கத்தின் சிற்பங்களை விட நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் மிளிர்கின்றன. மார்க்சிஸ்ட் பார்வையில் இவை ஒரு “சமூகவியல் வரலாற்று ஆவணமாக” கருதப்படும்.

சமூக வர்க்கப் பிரிவுகள் மற்றும் அதிகாரத்தின் பிரதிபலிப்புக்கள்

     இந்தியக் கலையின் பெரும்பாலான பகுதி அரசின் ஆதிக்கத்தையும், மத மரபுகளையும் காட்டி உருவானது. 5 இந்திய அரசியல் அமைப்புகளில் கட்சி, வர்க்கம், குடும்பம், மதம் ஆகியவை ஒன்றாக கூடி இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளன. இதனையடுத்து பெரும்பாலான சிற்பங்கள் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன.


(a)கோயில் சிற்பங்கள் – ஆட்சியாளர்களின் கலாச்சார ஆயுதம்

     பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசு ஆகிய ஆட்சியாளர்களின்  இந்திய சிற்பங்கள் முக்கிய வரலாற்றுக் கட்டங்களை கொண்டுள்ளன. இந்தக் கோயில்களின் கட்டமைப்புகள் மற்றும் சிற்பங்கள் பெரும்பாலும் அரசியலின் மத ஆதிக்கத்தை பிரதிபலிக்கின்றன.


பல்லவர் சிற்பக்கலை

        பல்லவ கால சிற்பங்கள் பெரும்பாலும் கோயில்களை மையப்படுத்தி இருந்தன. பல்லவரின் மாமல்லபுரம் சிற்பங்கள், இரதக் கோயில்கள், அருச்சலேஸ்வரி கோயில்கள் மற்றும் “அர்ஜுனா பபிர்தி” போன்ற சிற்பங்கள் அரசியல் கருத்துக்களையும் மத ஆட்சியையும் பிரதிபலிக்கின்றன.


சோழர் சிற்பக்கலை

      சோழர் காலத்தில் அரசின் பெருமை மற்றும் தெய்வீக ஆட்சியையும் குறிக்கும் சிற்பங்கள் பல உருவாக்கப்பட்டன.  பெருநகரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கோயில் சிற்பங்கள் மதத் தலைவர்களும், அரசர்களும் ஒத்திசைவாக உருவாக்கிய சிற்பங்களை காட்டுகின்றன. சோழர்களின் அரச ஆட்சியை வெளிப்படுத்தும் விதமாக சிற்பங்களில் தெய்வங்களை பிரதிபலிப்பது மிக முக்கியமாக இருந்ததுள்ளது.


விஜயநகரப் பேரரசின் சிற்பங்கள்

       விஜயநகரப் பேரரசின் காலத்திலும் கோயில்களில் சிற்பங்கள் முக்கியமான பகுதியாக இருந்தன. ஹம்பி கோயில்கள் உள்ள விஸ்வரூபம் போன்ற சிற்பங்கள் அரசின் கலை ஆக்கங்களை மற்றும் அந்தக் காலத்தின் சமூக நிலைகளைக் காட்டுகின்றன. அரசின் ஆதிக்கம் மற்றும் தெய்வங்களின் வியாபகம் இங்கு பிரதிபலிக்கப்படுகின்றன.


(b) புத்த, சமண சிற்பங்களில் சமய சமத்துவத்தின் வெளிப்பாடுகள்

     புத்த மற்றும் சமண தத்துவங்கள் பரபரப்பான சமூக மாற்றங்களுக்கான அடிப்படை கொள்கைகளாக இருந்தன. இவை அரச ஆட்சியின் மாற்றத்தையும், சமத்துவத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. 6

அஜந்தா மற்றும் எலோரா குகைச் சிற்பங்கள்

       இந்த சிற்பங்கள் பொதுவாக சமய சமத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இந்தக் குகைகளில் அரசர்கள் அல்லாத மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கப்படுகின்றன. இதில் மனிதர்கள் உழைக்கும் நிலைகளை மற்றும் கலாச்சார வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவான சிற்பங்கள் மக்களுக்கான ஒரு குறியீடாக விளங்குகின்றன.


சமண மற்றும் புத்தர் சிலைகள்

    புத்த மற்றும் சமண மதங்களில் சமூக சமத்துவம் முன்னிலை வகிக்கின்றது. சமண சிலைகளில் மிகுந்த மனதிலான இருதயத்தை (Ahimsa) பிரதிபலிக்கும் வகையில் சிற்ப வேலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமணர்களின் வாழ்வு மற்றும் அவற்றின் சமூக ஒழுங்கை பிரதிபலிக்கும் சிற்பங்கள் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.


(c) சிந்துவெளி நாகரிக சிற்பங்கள் – ஒரு சமத்துவ சமூகத்தின் நினைவுகள்

      மோகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரிகங்களின் சிற்பங்கள் பெரும்பாலும் அரசர்களின் ஆதிகத்தை குறிப்பிடவில்லை. ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. பஞ்ச் மார்க் சிலைகள் உழைக்கும் மக்களின் நெறிமுறைகளையும், மனிதர்களின் பரிமாற்றங்களையும் பிரதிபலிக்கின்றன. 7 இதில் பொதுமக்களின் வாழ்வை வெளிப்படுத்தும் வகையில் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


2.இந்திய சிற்பங்களில் உழைக்கும் மக்களின் பங்களிப்பு மற்றும் மறைக்கப்பட்ட வரலாறுகள்

       இன்றுவரை இந்திய சிற்பங்கள் பெரும்பாலும் அரசர்கள் மற்றும் மத ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டுள்ளன. ஆனால் உழைக்கும் மக்களின் பங்களிப்பை மறைத்து விடுகின்றன.


(a)கோயில் தொழிலாளர்களின் மறைக்கப்பட்ட கதைகள்
         

    சில கோயில்கள் மிகப்பெரிய பணியாற்றுதல்களையும், தொழிலாளர்களின் பங்களிப்பையும் மறைத்து நிற்கின்றன. பரபரப்பான கோயில்களை உருவாக்கிய தொழிலாளர்கள் முக்கியமான பங்காற்றினாலும் வரலாற்றில் அவர்களின் பெயர்கள் அதிகமாக குறிப்பிடப்படவில்லை. 8 இது வரலாற்றின் அதிகார மையங்களால் மக்களுக்கு உணர்த்தப்படாத உண்மைகள் ஆகின்றன.


3.உழைக்கும் மக்களின் சிற்பக் கலைகள்

உழைக்கும் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களின் மகத்துவத்தை விளக்கும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரம், நாட்டுப்பற்று, வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக சிற்பங்களில் மக்கள் களைப்புடன் இணைந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


(a)அடக்குமுறைக்கும் எதிராக உருவான சிற்பங்கள் மற்றும் புரட்சியியல் சிந்தனைகள்

சிற்பங்கள் அடக்குமுறை மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவான ஒரு புரட்சி முறையாகக் கூட விளங்குகின்றன. புரட்சியியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள், சமூகத்தில் உள்ள அந்தஸ்து மாற்றத்திற்கு ஒரு கருவி ஆக இருந்துள்ளன. குறிப்பாக பாண்டிய மன்னர்களின் சிற்பங்கள் தன்னம்பிக்கை,வீரம், இலட்சிய பயணம் போன்ற விடயங்களை பிரதிபலிக்கின்றன.


(b)இந்திய விடுதலைப் போராட்ட சிற்பங்கள்


   இந்திய விடுதலைப் போராட்டத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் பெரும்பாலும் மக்கள் போராட்டத்தை வெற்றியுறுத்தும் சின்னங்களாக இருந்து வருகின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சின்னங்களாக விளங்கிய வ. உ. சிதம்பரம்பிள்ளை,  வீரமங்கையர் ராணி வேலுநாச்சியார் போன்றவர்களின் சிற்பங்களை மக்கள் உருவாக்கினர். 9 இவை அரசின் அதிரடிகளுக்கு எதிராக மக்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிற்பங்களாக சிறப்பு பெறுகின்றன. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோரின் சிற்பங்கள் காலனித்துவத்தின் எதிர்ப்பு, மக்கள் விடுதலை மற்றும் பிரம்மாண்ட சமூகவியல் மாற்றங்களை காட்டும் வடிவங்களாக அமைந்துள்ளன.


4.சமகால அரசியலில் மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கம்

       மார்க்சியக் கோட்பாடு இந்தியாவில்  சாதாரணமாக சமகாலத்தில்  விரிவடையவில்லை என்றாலும் அது சில பகுதிகளில் குறுகிய வரம்பில் வலுவடையப் பெற்றது. திரிபுரா, கொல்கத்தா போன்ற இடங்களில் மார்க்சிய சமூகத்தில் தத்துவங்களை வெளிப்படுத்தும் சிலைகள் மற்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன. 10 இவை சமூகப் புரட்சிக்கு வழிவகுத்துள்ள சிற்பங்கள் ஆகின்றன. குறிப்பாக பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் மற்றும் தலித் சிற்பங்கள் ஒரு வர்க்கமிகுதி சமூகத்திற்கான எதிர்ப்பாக உருவாகின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்கள் கலை வடிவங்களாகவும் சில சிற்பங்களாகவும் உருவாகின்றன.


5.வர்த்தகமும் சிற்ப வளர்ச்சியும்

(a) சிற்ப தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்களின் நிலை

     வரலாற்று ரீதியாக சிற்பத் தொழிலாளர்கள் பின்தங்கிய சமூகமாகவே காணப்பட்டனர். அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாத நிலையில் அரசர்களின் அரண்மனைகளுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டனர். 11  மார்க்சிய கோணத்தில் இது ஒரு தொழிலாளர் வன்முறையின் சிறந்த எடுத்துக்காட்டாகக் காணலாம்.


(b) சமகால சிற்பக் கலையில் பொருளாதார மாற்றம்

     இன்று சிற்பக் கலை ஒரு வணிகரீதியாக மாறிவிட்டது. இது கலைஞர்களைச் சந்தையின் வசமாக மாற்றுகிறது. ஆனால் சில கலைஞர்கள் மக்கள் குரலாகவும், சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறார்கள்.


நிறைவுரை

      இந்தியச் சிற்பங்களை மார்க்சிய கோணத்தில் பார்க்கும் போது வர்க்கப் போராட்டம், உழைக்கும் மக்களின் பங்கு, ஆட்சி வர்க்கத்தின் ஆதிக்கம் போன்றவை தெளிவாக வெளிப்படுகின்றன. பெரும்பாலான சிற்பங்கள் ஆட்சி வர்க்கத்தையும், மதநிலையையும் ஆதரிக்கும் விதமாக இருந்தாலும் சில சிற்பங்கள் சமூக நியாயத்தையும், மாற்றங்களையும் ஒட்டியுள்ளன. இன்று இந்த சிற்பக் கலையின் வாயிலாக வர்க்கச் சுரண்டலை வெளிப்படுத்தவும், சமூகவியல் மாற்றங்களை தூண்டவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய சிற்பங்கள் வெறும் அழகியல் மட்டுமல்ல ஒவ்வொரு காலத்திலும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியக் கருவியாகவே திகழ்கின்றது.


அடிக்குறிப்புக்கள்

1.சேதுராமன்,கு., தமிழ்நாட்டு சமுதாயப் பண்பாட்டுக் கலை வரலாறு, பக் 234


2.வீரபாண்டியன், சிற்பி கோ. தமிழர் சிற்பக்கலை, பக் 91-99


3.ஏகாம்பரநாதன்,ஏ., தமிழகச் சிற்ப, ஓவியக் கலைகள், பக் 45


4.இராசமாணிக்கனார், மா., தமிழகக் கலைகள், பக் 29


5.Sethuraman,G., Facts of Indian Art and Culture,  p 78


6.அம்பை மணிவண்ணன், கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், பக்117


7.மேலது நூல், பக் 129


8.மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்,


9.வீரபாண்டியன், சிற்பி கோ. தமிழர் சிற்பக்கலை,  பக் 89


10.மேலது நூல், பக் 133


11.பசுபதி, ம.வே., செம்மொழித்தமிழ், பக். 81


உசாத்துணை நூல்கள்


1.மஜும்தார்,R.C., ராய் சசௌத்ரி, H. C., தத்தா,K., (1965), இந்தியாவின் சிறப்பு வரலாறு (முதற் பகுதி), தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை


2.இராசமாணிக்கனார், மா., (1980), தமிழகக் கலைகள், பாரிநிலையம் 184.பிராட்வே சென்னை 600001


3.வெங்கடேசன்,க., (2014), இந்திய வரலாறு (சிந்து முதல் பிளாசி வரை கி.மு. 3000 முதல் கி.பி. 1757 வரை), வி.சி.பப்ளிகேசன்ஸ், இராஜபாளையம்


4.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, (1989), இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், சென்னை புக்ஸ்


5.கந்தன், கி., (2017),  தமிழகச் சிற்பக் கலை வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 427

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

குமாரவேலு டனிஸ்ரன்

மானிப்பாய், இலங்கை

 

JAPAN NAATU SIRUKATHAIKAGAL – KULANTHAIKALUKKANA NEETHIGAL|Dr.N.PARAMASIVAM

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்- குழந்தைகளுக்கான நீதிகள்

Abstract


        Storytelling has long been a fundamental aspect of classical literature, serving as a powerful medium to impart discipline, moral values, respect for humanity, and the significance of hard work. It is not limited to the educated but also serves as a guiding tool for those with limited knowledge. By narrating stories to children, we can effectively instil essential virtues and ethical principles that shape human life. This research explores key moral values such as the importance of work, respect for nature, and the consequences of arrogance, as depicted in Japan Naatu Siru Kadhaigal (Short Stories from Japan). Through an analysis of these narratives, this study highlights how storytelling remains a timeless and impactful means of moral education.

ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள்- குழந்தைகளுக்கான நீதிகள்

ஆய்வுச்சுருக்கம்

       காலம் காலமாகச் செவிவழியாகக் கடத்தப்படும் இலக்கியமே கதை இலக்கியம். இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாது அறத்தை, அன்பை, பிறருக்குக் கொடுக்கப்படும் மரியாதையை, உழைப்பின் மேன்மையை என வாழ்வியலில் உள்ள அனைத்து அறங்களையும் கதை வடிவில் படைத்துக் கற்றவர், கல்லாதவர் என அனைவருக்குமான இலக்கியமாக,பொது இலக்கியமாகக் கதைகள் அமைந்துள்ளன.
‘அனைவருக்குமான’ என்ற பொதுத்தளத்தில் கதைகள் இயங்கினாலும் வரும்காலத்தை இயக்கும் குழந்தைகளுக்கு அறத்தை வலியுறுத்தும் பொழுதுதான் கதைகள் முழுமை பெறுகின்றன. அவ்வகையில் ஆய்வுக்குக் களமாய் உள்ள “ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் – குழந்தைகளுக்கான  நீதிகள்” என்னும் தலைப்பின்கீழ் ‘வேலையே தெய்வம்’,’இயற்கையை மதித்தல்’,’தான் என்ற அகம்பாவம்’ என்னும் பொருண்மையில் இவ்வாய்வு அமைகின்றன.


முகவுரை

      அன்றிலிருந்து இன்று வரை மனிதன் நாடோடியாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறான்.  அன்று வயிறும் வயிற்றை நிரப்புவதற்கான உணவுமே முதன்மையாக இருந்தன.  அதனாலேயே வேட்டைச் சமூகமாக இருந்து வந்தது.  இன்றும் அதே நிலைதான்.  ஆனால் அதில் சிறு மாற்றம். என்னவெனில் உணவே முக்கியமென்றாலும் அதைப் பெறுவதற்கான வளர்ச்சி அதுவும் அறிவு வளர்ச்சி என்ற நிலையை எட்டியபின் பணம் என்பது இங்கு அனைவருக்குமான பொதுத்தேவையாக மாறிவிட்டது.  எனவே இடம் விட்டு இடம்தேடி ஓடிய கால்கள் பணம் ஈட்ட, இன்று இருந்த இடத்திலேயே அமர்ந்து அறிவால் ஈட்டுகின்றனர்.  இப்படி ஒளிபடைத்த கண், உழைத்த உடல், சப்தமிட்டு ஒரு செய்தியை தன் இனக்குழுக்களுக்கு அறிவித்த வாய், வாசனை அறிந்தே அது விலங்கா? விலங்கின் எச்சமா? என உணர்ந்த மூக்கு எனும் ஐம்பொறிகள் ஒரு கட்டத்தில் இயல்பான நுண்ணறிவால் தன் நுண் உணர்வை இழந்து இன்று சற்று மங்கியுள்ளன.

        இதற்குத் தொழில் வளர்ச்சியும் அதனோடு இணைந்த பாதுகாப்பும் என்ற காரணங்களால் எச்சரிக்கை என்னும் உணர்வு, குறிப்பாக விலங்குகளால் அச்சுறுத்தல் இல்லை என்ற உணர்வால் அதன் பயன்பாடு குறைந்துள்ளதை அறிவோம். ஆனால் காது எனும் உறுப்பை எடுத்துக் கொள்ளின் “செவிச்செல்வம’’ “கேட்டல்  இனிது” எனும் இலக்கிய வரிகள் ஐம்புலன்களுள் காதுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. காரணம், காதுகளின் வழியேதான் உலக உயிர்களின் இயல்புகளை நம் முன்னோர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர்.  தான் கண்டு, உற்று, உணர்ந்த செய்திகளை அனுபவ வெளிப்பாடாக, சொற்களின் பிறப்பிடமான வாய் கூறினும் அதனை உள்வாங்கி தன் கற்பனைத்திறன், அறிவாற்றல், அறிவின் வழியில் செயல்படல் என்ற மூன்று நிகழ்வை ஒருங்கே இணைக்கும் மையப்புள்ளியாகக் காதுகள் செயல்படுகின்றன.  அதனால்தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் வளரும் குழந்தைப் பருவத்தில் இருந்து நமக்குக் கதைகள் கூறித் தன் கற்பனைத் திறத்தை வளர்த்துக் கொண்டதுடன் நிறைவேறா ஆசைகள், நிறைவேற்றத் துடிக்கும் லட்சியங்கள், வாழ்ந்த வாழ நினைக்கின்ற நிகழ்வுக் கதைகள், தனக்கான உலகம் மற்றும் தன்னைச் சுற்றி உலகம் எவ்வாறு சுழல வேண்டும் என எண்ணிலடங்கா வண்ணங்களை எண்ணிலடங்காகக் கதைகளால் கூறி கேட்போரின் உணர்வுகளை ஆட்கொள்வதுடன் கேட்போரையும் அவர்கள் அறியாமல் அவர்களுக்கான கற்பனைகளைத் தூண்டுகின்றனர். 
         

        ஆக, கதை கூறலும் கேட்டலும் என்பது நம் நாட்டிற்கு மட்டுமல்ல.  மொழிபேசும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.  இக்கதைகளின் ஊடாக பொழுதுபோக்கின் கூறுகளை மட்டுமல்ல ஒவ்வொரு நிலத்திலும் வாழும் சூழல்சார் அறிவினையும் அவ்வறிவினால் அவர்களின் மேம்பட்ட சிந்தனைகளையும் அறிவதற்குக் கதைகள் துணை புரியும்.  அவ்வகையில் ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் குறித்து இனிக் காணலாம். 


வேலையே தெய்வம்
         

        சின்டோ, பௌத்தம் ஆகிய மதங்களை ஜப்பானியர்கள் பின்பற்றி வரினும் அவர்கள் தாம் மேற்கொள்ளும் பணிகளையே தெய்வமாகக் கருதிவருகின்றனர்.  அதைத்தான் அவர்களுடைய மதங்களும் மதகுருமார்களும் வலியுறுத்தியுள்ளனர்.  இதை அடிப்படையாகக் கொண்டே “வெட்டி வேலை’ என்னும் சிறுகதையில் ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஜங் என்னும் விறகுவெட்டி நாள்தோறும் தன் கடமையைச் செய்ய, ஒருநாள் அவ்வழியாக வந்த ஒரு முனிவர் இறைவனை நினையாது அவர் குறித்துப் பாடாது வேலை மட்டுமே செய்தால் அடுத்த பிறவியில் புழுவாகப் பிறப்பாய் என்கிறார். 
          இதைக்கேட்டுத் திடுக்கிட்ட அவன் தன் தொழில், குடும்பத்தை மறந்து இறைவனின் புகழ்பாடித் திரிகிறான்.  ஒருநாள் தன் தாகம் தீர்க்க குளத்து நீரைக் குடிக்க முயல்கையில் தெளிந்த நீரில் தன் உருவத்தைக் காண்கிறான்.  அதில் தன் மெலிந்த உருவத்தைக் கண்டு இறையை விட உழைப்பே உடலை உறுதி செய்யும் என உணர்ந்து தன் இல்லம் திரும்புகிறான்.  இல்லத்தில் யாரும் இல்லாததைக் கண்டு அங்கிருந்த பெண்மணியிடம் வெறும் பிரார்த்தனை வேண்டாம். அது உடல், குடும்பம் என அனைத்தையும் அழிக்கும். 

          நாம் மேற்கொள்ளும் வேலையை முழுமனதுடன் செய்தால் இறையருள் கிடைக்கும் எனக் கூற அங்கிருந்த பெண் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறாள் எனக் கதை முடியும். எனவேதான் ஜப்பானியர்கள் வேலைப்பளுவால் சோர்வு சூழும்போதெல்லாம், இரண்டாம் உலகப் போரில் இறந்து போன தன் தம்பியைச் சுமந்த ஜப்பானியச் சிறுவனின் புகைப்படத்தை அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் ஜோ ஓ டோனல் என்பவர் வெளியிட அதை இன்றளவும் ஒவ்வொரு முறையும் காணுகிற ஜப்பானியர்கள் அப்புகைப்படத்தை வலிமையின் அடையாளமாகக் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆகக் கதை என்பது வெறும் கதை அல்ல. அது உணர்வு சார்ந்தது.  எனவே, தான் மேற்கொள்ளும் செயலை, பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நமக்குச் சொல்லும் நீதியாகும்.  எனவே ‘சிறுகதை என்பது எளிமை சான்ற படைப்பாக இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவான பயனை மட்டும் கொடுக்க முயல்கிறது’ என்பர்( 1 )


பணமா? நற்காரியமா?
         

        ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையில் ஒரு வயதான பெரியவரிடம் ஒரு கூஜா இருந்தது. அதில் நீரூற்றினால் குறையாத சூட்டுடன் இருந்தது.  ஒருநாள் அதில்  துளைவிழ அதைப் பெட்டியில் போட்டு விடுகிறார்.  அட்டைப் பெட்டியில் இருந்த அது தானூகிப் பறவையாய் மாறியது.  பின்னர் காலையில் பழைய கூஜாவாக உருமாற்றம் அடைந்தது.  இதைக் கண்ட அப்பெரியவர் இது நம்முடன் இருந்தால் குழப்பமே மிஞ்சும் என்று வேறொரு வியாபாரியிடம் விற்று புதிய கூஜா வாங்கிக் கொள்கிறார்.  அதை வாங்கிய வியாபாரி தன் இல்லம் கொண்டு செல்கிறார்.  அது மீண்டும் தானூகிப் பறவையாகிறது.  அதைக் கண்ட வியாபாரி உன்னை வைத்து நான் என்ன செய்வது எனக் கேட்க, என்னை வைத்து கூஜாவாகவும் பறவையாகவும் மாற்றிக் காட்டுகிறேன் என மக்களிடத்தில் கூறி வித்தை செய்து பிழைத்துக் கொள் எனக் கூறுகிறது. 

         அவ்வாறே வியாபாரியும் வித்தை செய்து பெரும் பணக்காரன் ஆகிறான்.  நன்றி மறவாத வியாபாரி இதை விற்ற பெரியவரைக் கண்டுபிடித்து தான் சம்பாதித்த பத்தில் ஒரு தொகையை அவரிடம் கொடுக்கிறான்.  அந்த முதியவரோ அந்தப் பழைய கூஜாவும் நீ தரும் பணமும் எனக்கு ஒன்று தான்.  இந்த இரண்டையும் பெற்றுக் கொண்டால் எனக்குக் குழப்பமும் துன்பமும் ஏற்படும் எனக் கூறி அதை மறுத்து விடுகிறார்.  இறுதியாக, அவனிடம் நீ எனக்குக் கொடுக்கும் பணத்தை மக்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்து என்கிறார்.  ஸ்டெவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகளாக கருவால் வந்த கதை, குணச்சித்திரத்தால் வந்த கதை, உணர்ச்சிப் பதிவால் வந்த கதை. மேற்கண்டவை குணச்சித்திரத்தால் வந்த கதை ஆகும் (2).
         

        பணத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கண்ட கதையைப் போலவே ‘யாருகிட்ட’ எனும் கதையும் அமைந்துள்ளது. க்யோடோ எனும் ஊரில் மியாட்சுகோ என்ற ஏழையும் அதே ஊரில் சானுகி எனும் பணக்காரனும் வாழ்ந்து வருகின்றனர்.  சானூகியிடம் மியாட்சுகோ கடன் வாங்கி முறையாக வட்டியும் செலுத்தி வருகிறான்.  ஒருநாள் தான் கொடுத்த தொகையை மியாட்டிடம் கேட்க அவன் பணம் தரமுடியாத சூழலை விளக்குகிறான்.  அதனை ஏற்காத சானூகி நீ இறந்தாலும் உன் ஆவியிடமிருந்தாவது பெற்றுக் கொள்வேன். உனை விடமாட்டேன் என்கிறான். 
         

        மனம் வெறுத்த மியாட்சுகோ  மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.  இதை அறிந்த காவலர் பிரேத பரிசோதனை முற்பட அன்றைய நாள் விடுமுறை என்பதால் அந்த மரத்திலேயே விடப்படுகிறான்.  நாளைதானே சடலம் எடுப்போம் என நினைத்த காவலர் மது அருந்திக் காவல் காக்க. அவ்வழியாக வந்த சானூகி தன்னால்தான் அவன் இறந்தான் என நினைத்து அவனைக் கண்டு பயந்து ஓடுகிறான்.  போதையில் இருந்த காவலர்கள் இறந்தவனின் ஆவிதான் ஓடுகிறது என நினைத்து அந்தச் சானூகியைப் பிடித்து மியாட்சுகோ இறந்த பக்கத்து மரக்கிளையில் சுருக்கிட்டுக் கொல்கின்றனர் எனக் கதை நிறைவடைகின்றது.  ‘இரண்டும் ஒன்றுதான்’ எனும் கதையும் ‘யாருகிட்ட’ எனும் கதையும் மையப் பொருண்மையில் பணம் தான் என்றாலும் இரண்டிலும் இமயம் அளவு வேறுபட்டுள்ளது. 
முதல் கதையில் மதியை மயக்கச் செய்யும் பொருளை வைத்து இருப்பதும் தவறு.  அதனால் எண்ணற்ற செல்வங்ளைப் பெறுதலும் தவறு. காரணம் உழைப்பில்லாச் செல்வம் சோம்பேறியாக்கும். உழைப்பில்லா வருமானம் தீது என்பதுடன் அவற்றைத் தனக்காகப் பயன்படுத்தாது மக்களுக்காகப் பயன்படுத்துவதே சாலப் பொறுத்தமாகும் என்கின்றது கதை.  இரண்டாம் கதையில் தான் கொடுத்த பணமட்டுமல்லாது அதோடு வட்டியையும் பெறத்துடித்தால் அதனை அனுபவிக்க இப்புவியில் இருக்காது இறப்போம் எனப் பணத்தின் இயல்பை விவரித்துள்ளது.  அதுமட்டுமின்றி பேராசைக்காரனோடும் எதையும் வியாபார நோக்கோடு பார்ப்பவனோடும் மது அருந்துபவனோடும் இணக்கம் வைத்தால் புகழும் உயிரும் அழியும் எனும் நீதியை குழந்தைகளுக்கு உணர்த்துகிறார் அரு.வி.சிவபாரதி.


இயற்கையை மதித்தல்
         

          ‘அதிசயக் கண்ணாடி’  எனும் கதையில் ஜப்பான் நாட்டு அரசர் தற்பொழுது இருக்கும் சிறிய மாளிகையைவிட்டு பெரிய மாளிகைக்குச் செல்ல நினைக்கிறார்.  ஆனால் தன் பழைய மாளிகையில் உள்ள எட்டு முகம் கொண்ட கண்ணாடியில் வாழும் சூரிய அரசி உத்தரவு தராமல் இருக்கிறாள்.  அவளை மீறி புதிய மாளிகைக்குச் சென்றால் சூரிய அரசி துன்பம் தருவாள் என நினைக்கிறார்.  அதனால் உண்டான வருத்தத்தைத் தன் மகளான இளவரசியிடம் கூற சூரிய அரசி எட்டுமுகக் கண்ணாடிக்குள் வந்த கதையைக் கூறுமாறு சொல்கிறாள்.  சூரிய அரசியின் தம்பி சோமாஹங் தீயவன். ஒருநாள் கடவுளுக்கு சூரிய அரசி உள்ளிட்டவர்கள் ஆடை நெய்து கொண்டிருக்கும் பொழுது இறந்த குதிரையின் உடலை மேற்கூரையிலிருந்து தள்ளிவிட அதனால் ஒரு நெசவாளி இறந்து விடுகிறான்.  இதைக்கண்டு பயந்து போன சூரிய இளவரசி பாறை ஒன்றில் மறைந்து கொள்கிறாள்.
 இதனால் உலகம் பனியால் உறைகிறது.  உயிர்கள் இறக்கின்றன.  இதனை உணர்ந்த சிந்தனைக் கடவுள்,’ சேவல்கள் கூவட்டும் அவள் இருக்கும் இடத்தில் எட்டுமுகக் கண்ணாடியை வையுங்கள்’ எனக் கட்டளையிட, சேவல் ஒலி கேட்டு அவள் வெளிவந்தவுடன் எட்டுமுகக் கண்ணாடி பட்டு பளபளக்கிறாள். இவளைக் கண்ட ஆற்றல் கடவுள் உடனே அவளை பாறையில் இருந்து இழுத்து உலகிற்கு ஒளிதந்து நெல்லை விளைவிக்கிறாள்.  இன்று வயதான அவள் இக்கண்ணாடியில் வாசம் செய்து நெற்கதிர்களை வாழவைக்கிறாள் என்று முடிகின்றது. இதைத்தான் பேட்சு எனும் ஆசிரியர் நினைக்கும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம் என்கிறார். 
         

         ‘மந்திரமும் கழுதையும்’ எனும் கதையில் மந்திரக் கோலை வைத்திருந்த தேவதை பூங்காவில் ஓய்வெடுக்கிறாள். மறதியில் மந்திரக் கோலை விட்டுவிட்டு வீடு வந்தடைகிறாள்.  பின்னர்தான் மந்திரக் கோலை விட்டு வந்ததை உணர்ந்து மீண்டும் பூங்காவை அடைகிறாள்.  அந்தக் கோல் காணாமையினால் பத்திரிகையில் விளம்பரம் தர பத்திரிகை ஆசிரியரை அணுகுகிறாள்.  இவள் கூறியதைக் கேட்ட ஆசிரியர் இதுபோன்ற மூடத்தனத்தை என் பத்திரிகையில் விளம்பரமாகத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.  வேறு வழியில்லாத தேவதை மீண்டும் பூங்காவுக்கே வர அங்கே மந்திரக்கோலை வைத்திருக்கிறாள் ஒரு சிறுமி.  அப்போது அவள் ஒரு  மாமரத்திடம் பலாப்பழம் தருமாறு வேண்டுகிறாள்.  இதைக் கண்ணுற்ற தேவதை அச்சிறுமியிடம், மாமரத்திடம் இப்படித் தவறாகக் கேட்பது இயற்கையை அவமதித்தல் ஆகும் எனக் கூறி அவளைச் சினந்து மந்திரக் கோலைப் பெற்று மாம்பழத்தை வேண்டி அச்சிறுமியிடம் கொடுத்து அனுப்புகிறாள். 
         

       ஜப்பானியர்கள் தொலைந்த ஒரு பொருள் குறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும் எனும் அறிவினைக் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொடுக்கின்றனர்.  அத்துடன் மூடத்தனத்திற்கு எதிராகவும் பத்திரிகைகள் உள்ளன என நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என இக்கதை உணர்த்துகிறது. ‘மந்திரமும் கழுதையும், அதிசயக் கண்ணாடி’ எனும் இரு சிறுகதைகளும் இயற்கையை மதித்தல் வேண்டும் எனும் அடிப்படைப் பண்பினை வலியுறுத்தியிருப்பதைக் காண முடிவதுடன் சிந்தனை, ஆற்றல் என அனைத்தையும் கடவுளாகப் படைக்கப்பட்டதையும் உணர முடிகின்றன.   

       நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமையும் சிறுகதை, ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டிய சிறுகதை, பொருந்தாத வேண்டாத வலிந்து வராத சிறுகதை, வாழ்க்கையின் பல கோணங்களை உணர்த்தும் சிறுகதை, நீதி மற்றும் அறத்தின் காரணமாக அமையும் சிறுகதை என மேற்கண்ட ஐவகை உணர்ச்சிகளுடைய சிறுகதை இலக்கியம் நெடிது வாழும் என்பார் மு.வ. 


ஆணவம் கூடாது

     புத்தமதத்தில் ‘ஜென்கதைகள்’ உலகம் முழுக்கப் புகழ் பெற்றவையாகும்.  அதுவும் ‘ஒருசொல்’ என்பது மிகவும் பிரபலமானது.  ஞானநூலையும் உலகு இயல்பையும் ஒருங்கே குறைவறக் கற்ற ஞானகுரு இறந்து போகும் தருவாயில் இருக்கும்பொழுது அவரிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் ஒரு சொல் கேட்பது பெருவழக்கு.  அந்த குரு வாய் திறந்து ‘ஆ. ..‘என்று காட்டி மூடிய பின்னர் என்ன தெரிந்தது எனக் கேட்பார். நல்லறிவு வாய்ந்த சீடர்கள் குருவே! நா தெரிகிறது என்பர். அவ்வளவுதான் என்பார் குரு.  இதன் உட்பொருள் யாதெனில் பல் குறிப்பிட்ட வயதில் முளைத்து ஒரு குறிப்பிட்ட வயதில் விழுந்து விடும். ஆனால் ‘நா’ என்பது நாம் இருக்கும் வரையில் அதுவும் இருக்கும்.  எனவே சொல்லைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.  நா வளைகிறது என்பதற்காக ஆணவத்தில் பேசுவது தவறு என்பது ஞானி உணர்த்தும் கருத்தாகும்.  இதை உணர்ந்தவரே ஞானநிலையை அடைந்தவர் ஆவர். 

       அவ்வாறு இல்லையெனில் அவர் அஞ்ஞானிகளே என்கிறது ஜென்.
டாங் பரம்பரையைச் சேர்ந்தவன் லீ ஜில் மன்னன். கர்வம் மிக்கவன்.  இவன் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உரோசிமா ‘தாரோ’ என்ற அறிஞர் இருந்தார்.  தான் மட்டுமே அறிவில் சிறந்தவன் என நினைத்துக் கொண்டிருந்த லீ ஜில் ஒரு நாள் உரோசிமா தாரோவின் திறமையை உணர்ந்து அவர் இருக்குமிடம் சென்று சேர்ந்தான்.  உம்முடன் நான் வாதப்போர் புரியவே வந்தேன். எனை யாரும் ஏமாற்ற முடியாது. உடனே வாதப்போருக்கு வருக என வம்பிழுத்தான்.  உடனே உரோசிமா உங்களோடு வாதப் போர் புரிய வேண்டுமானால் என் மந்திரப் பையை எடுத்துவரவேண்டும்.  அதைக் கொண்டே உமை வெல்வேன். எனவே, என் வீட்டிற்குச் செல்ல உம் குதிரை வேண்டும் என லீ ஜில்லின் குதிரையைப் பெற்றுக் கொண்டு பறந்து விட்டார். அதென்ன மந்திரப்பை என்ற யோசனையில் ஆழ்ந்து மதியம், மாலை, இரவு என நெடுநேரம் காத்திருந்த பின்னரே தன்குதிரையைக் கொண்டு சென்றதன் மூலம் தன்னை ஏமாற்றி முட்டாளாக்கி விட்டார் என்று உணர்ந்து தோல்வியை ஏற்று அரண்மனை திரும்பியவன் கடைசிவரை தன் வாயைத் திறக்கவில்லை.
‘கூடைநிறையப்பொய்’ எனும் சிறுகதையில் செல்வந்தன் ஒருவனுக்கு ஏழைப்பணியாளர் தான் சமைத்த கோழியையும் திராட்சை ரசத்தையும் கூடையில் வைத்துப் பரிசாகக் கொடுத்தான். உடனே அங்கிருந்த வேலைக்கார ஏழைச்சிறுவனிடம், ‘இதை என்வீட்டில் கொடு இக்கூடையில் உயிருள்ள வாத்தும் பாட்டிலில் விசமும் உள்ளன’ எனப்பொய் கூறினார். திறந்தால் பறந்து விடும் குடித்தால் இறந்து விடுவாய் என புத்திசாலித்தனமாகக் கூறுவதாக நினைத்து அச்சிறுவனை அனுப்பினார். தன் வேலையை முடித்துவிட்டு தன் இல்லம் வந்த செல்வந்தன் இரவாகியும் அச்சிறுவன் வராததைக்கண்டு அவன் வரும் பாதையின் எதிரே சென்றார். அச்சிறுவன் மரத்தடியில் உறங்குவதைப் பார்த்து கோபத்தில் உதைத்து உன்னிடம் கொடுத்த கூடை என்னவானது என வினவ, புத்திசாலிச்சிறுவன் அய்யா நீங்கள் கூறியது போல நடந்துவிட்டது. ஆர்வத்தில் நான் கூடையைத் திறந்தவுடன் வாத்து பறந்து விட்டது. என்னைத் தண்டிப்பீர்கள் எனப்பயந்து உயிர்துறக்க விசத்தைக்குடித்தேன். உயிர் பிழைத்ததை என்னால் நம்பமுடியவில்லை என்றதும் உண்மையை மறைத்ததால் தான் ஏமாற்றப்பட்டது மட்டுமல்லாமல் எதுவும் கேள்வி கேட்கமுடியாதபடி தன்வாயாலேயே தான் ஏமாறியதை உணர்ந்தான் செல்வந்தன்.


முடிவுரை

     கதைகள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவனவாகவே இருக்கும். காரணம் இதன் அடிப்படைப்பண்பு அறம் என்னும் அடிநாதம் என்பதாலேயே அவ்வாறு அமைகின்றன. எனவே நாடும் மொழியும் இயற்கைச் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும் எனப் பல்வகையான கூறுகள் ஒரு கதை அமைவதற்கான காரணிகள் இருக்கின்றன.
ஜப்பானியச் சிறுகதைகளில் அறத்தை, அது கூறுகின்ற விதத்தை நுணுகி ஆராயும்பொழுது அந்நாட்டு மண்ணுக்கே உரிய தன்மையான பிரார்த்தனையை விட வேலைதான் முக்கியம் என உணர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இயற்கையை மதித்தலும், சிந்தனையையும் ஆற்றலையும் கடவுளாக்குவதும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பற்ற பொருள் காணாது போய்விடின் அதுகுறித்துப் பத்திரிகையில் செய்தி வெளியிடவேண்டும் என்ற அறிவார்ந்த பண்பை ஜப்பான் நாட்டுச் சிறுகதைகள் உணர்த்தியுள்ளன. 


பார்வை நூல்

1.ஜப்பான் நாட்டுச் சிறுவர் கதைகள் – அரு.வி.சிவபார்வதி,  ஜீவா பதிப்பகம்,  முதல் பதிப்பு – 2021.


2.இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு. பாலச்சந்திரன், ப.209.


3.மேலது, ப.217.


4.மேலது, ப.209.


5.இலக்கியத் திறன், டாக்டர் மு.வ. ப.71.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப்பேராசிரியர்

விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி

திண்டல், ஈரோடு – 638 012.

 

அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார்

அலைபேசியின் வாக்குமூலம் -தெய்வானை சிவகுமார்

📞 அலைபேசியின் வாக்குமூலம்

 

📞கண்களால் பார்த்து! ரசித்து,


கைகளால் தொட்டு! வருடி!


மார்போடு அனைத்து!


உன் மூச்சுக்காற்று


என் மீது பட


உன் இரு கைளால்


என்னை அணைத்தபடி


எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்..!


 

📞 நீ கேட்கும் ஒவ்வொன்றும்


என்னிலிருந்து நான் தருகிறேன்!


அது நன்மையாக இருக்கலாம்!

தீமையாக இருக்கலாம்!


 

📞 ஏனென்றால்!


கேட்பது நீயல்லவா!


நான் உன் கையில்


தவழும் போது


இந்த உலகமே  நான்தான்..!


 

📞 என்னுடன் பல விளையாட்டுகளை


விளையாடுகிறாய் – அவற்றில்


தோற்றும் போகிறாய் !


ஆனாலும் மீண்டும் மீண்டும்


தோற்றுப் போக ஆசைப்படுகிறாய்!


ஏன்! ஏனென்றால்


என்னில் உன்னை


மூழ்கடித்து விட்டதால்,


 

📞 இப்படி மூழ்கடித்து விட்டதால்


எத்தனையோ,

உயிர்களை  
குடித்திருக்கிறேன்.


 

📞 ஆனாலும்! உன் கைகளால்


இறுக்கிப் பிடித்து


என்னை  இறக்கி விட


முயற்சி செய்வதே இல்லை,.!


 

📞 உன்  தேவைக்கு ஏற்ப


என்னைப் பயன்படுத்தினால்


நான் உனக்கு சொர்க்கம்!


உன் ஆசைக்கு


என்னை பயன்படுத்தினால்


நானே உனக்கு நரகம்! 


 

கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்


உதவி பேராசிரியர் 

தமிழ்த்துறை


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி


பர்கூர்

கிருஷ்ணகிரி

 

நிலவைச் சுற்றி முகப்பருக்கள்|ச. கார்த்திக்

நிலவைச் சுற்றி முகப்பருக்கள்ச. கார்த்திக்

விதை விதைத்தவன்


உறங்கும் போதும்


விதைகள் உறங்குவதில்லை..!


 

பறவையின் கண்களுக்கு


மனிதன் எல்லாம்


சிறிது ஊனமுற்றவர்கள் தான்..!


 

இலையுதிர் காலத்தில்


மரத்தின் நிலை


எலும்புக்கூடு போல்..!


 

நான் எங்குச் சென்றாலும்


என்னை பின் தொடர்கிறது


இந்த நிலவு..!


 

மழை பெய்து முடிந்தும்


பட்டாம்பூச்சி சாயம்


அழியவில்லை..!


 

இயற்கை அழகே


மலையின் நடுவே


நத்தை போல்


ஊர்ந்துச் செல்கிறது


இந்த காட்டாறு..!


 

இரவு நேரத்தில்


நிலவைச் சுற்றி


எத்தனையோ


முகப்பருக்கள்


காணப்படுகிறது..!


 

இருளில் இருந்தே


தாய்மொழி அறிந்தேன்


அது என் தாயின்


கருவறையோடு


ஒட்டியே இருந்தது..!


 

வாழ்வதும் தண்ணீரில்


இறப்பதும் தண்ணீரில்


ஒருபோதும்


கரையை பார்க்கவில்லை


எந்த மீன்களும்..!


 

கடல் ஆழத்தைக்


காண முடியாது


என் நண்பனின்


சேட்டைகளை


எண்ணவே முடியாது..!


 

பொம்மைகள் அழுவதில்லை,


கடையை விட்டுச் செல்லும்


குழந்தைகள் அழுந்துக்கொண்டே


செல்கிறது..!


 

மழையின் ஓசையும்


இடியின் ஓசையும்


முடிந்துவிட்டது


அதன் பிறகு


தவளையின் ஓசை


தொடங்கிவிட்டது..!


 

மரத்தில் இலைகள்


இருந்த போதும் – அது


உதிர்ந்திட்ட போதும்


கிளையில் சிறிது


நேரம் அமர்ந்துச் செல்லும் கிளி..!


 

எந்தப் பறவை யாமந்ததோ


இந்தச்
சிறுவன் கையில்


பின்னால் கூரைகள்..!


 

இரவு நேரத்தில்


நிலவை பார்க்க முடியும்


அதே
நிலவை சுற்றியிருக்கும்


நட்சத்திரங்களை


எண்ண முடியவில்லை..!


 

ஏதோ ஒரு காகிதத்தில்


என்றோ வரைந்த ஓவியம்


இன்று
 ஒரு கதை சொல்கிறது..!


 

பெயர் தெரியாத புல்லையும்


பெயர் தெரியாத கல்லையும்


நாம் கடந்தேச் செல்கிறோம்..!


 

நான் எழுதாத கவிதை


மற்றவர்கள் எழுதுகிறார்


கவிஞராகிறார்!


நான் படிக்கிறேன்..!


 

ஏதோ எழுதினேன்


ஏதோ கிறுக்கினேன்


என் மீது


கோவம் அடையவில்லை


எனது காகிதம்..!


 

வானம் நீல நிறம்


கடல் நீல நிறம்


ந்த ஓவியன் கையில்


அமைந்தது அது..!
  

 

அழகு


 

  மழைக்கே அழகு இடிகள்


மலைக்கே அழகு மரங்கள்


கடலுக்கே அழகு மீன்கள்


ஓடைக்கே அழகு நீர்


செடிக்கே அழகு பூக்கள்


காட்டிற்கே அழகு விலங்கு


வீட்டிற்கே அழகு வாசல்


தெருவுக்கே அழகு குழந்தைகள்


மைதானத்திற்கு(கே) அழகு வீரர்கள்


கோவிலுக்கே அழகு சாமி


பேருந்துக்கே அழகு பயணிகள்


கல்லூரிக்கே அழகு மாணவர்கள்


காகிதத்திற்கே அழகு எழுத்துகள்


வாகனத்திற்கே அழகு வேகம்


வானிற்கே அழகு மேகம்


விடுமுறைக்கே அழகு பயணம்


மரத்திற்கே அழகு இலைகள்

அவளுக்கே அழகு புருவம்


எனக்கே அழகு புத்தகம்.


 

கவிதையின் ஆசியியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)


திருப்பத்தூர்

 

தித்திக்கும் தீபாவளி! தத்தளிக்கும் தீபாவளி|இரா.சுபாஷினி

தித்திக்கும் தீபாவளி! தத்தளிக்கும் தீபாவளி இரா.சுபாஷினி

       ன்று தீபாவளி, காலை விடியலில் காரிருளை, இளஞ்சூரியன் கதிர்களை வீசி கண்களைக் கூச செய்தான். எல்லா திசைகளில் இருந்தும் இடி முழக்கம் போன்ற பட்டாசு சத்தம் அதனிடையே அம்மாவின் குரல் எப்போதும் போல, தித்திக்கும் தீபாவளியிலும் திட்டிக்கொண்டே என்னையும் தம்பியையும் எழுப்பினாள். ’எந்திரிங்க மணி 6 ஆச்சி  இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க, சீக்கிரம் எந்திரிங்க சாமி கும்பிடணும்.’ என அம்மா திட்ட  எங்களுக்கு அது இசைஞானியின் தாலாட்டுப் போல இன்னும் தூக்கம் சொக்கிக் கொண்டு வந்தது.
         

        எப்போதும் இப்படிதான், ஒரு முறை அம்மா ஊருக்கு சென்று இருந்தாள்.  ஏதோ அவள் அண்ணன் மகனின் கல்யாணம் என்று நினைக்கிறேன். அன்று எப்போதும் 6 மணிக்கு மேல் எந்திருக்கும் நான் 4 மணிக்கே எந்திரித்து விட்டேன். எல்லாம் அவள் திட்டுகின்ற தாலாட்டு இல்லாமல்தான். சரி அப்பா என்ன செய்கிறார் என்று எந்திரித்து பார்த்தேன். அப்பா, அம்மா தந்த காபியைக் குடித்துக்கொண்டே செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். மெதுவாக நானும் தம்பியும் எந்திரித்து எண்ணெய் வைத்து குளித்துவிட்டு. மிகவும் ஆசையுடன் வாங்கிய புத்தாடையை அணிந்து கொண்டு. தீபாவளி நாளில் எங்களுக்கு பிடித்த இனிப்பு செய்ய இருவரும் அம்மாவிற்கு உதவி செய்தோம்.
 

       அப்பா பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். நான் அப்பாவிற்கு உதவி செய்வதாகக்  கூறி இனிப்பு செய்யும் வேலையில் இருந்து தப்பித்து அவர் அருகே அமர்ந்து கொண்டேன். தம்பி, நீண்ட நேரம் அப்பா தீபாவளிக்காக வாங்கி வந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அதில் குறிப்பாக தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அவன் அழுது அடம்பிடித்து வாங்கிய பட்டாசு பெட்டியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக தெரிந்தது. அம்மா! நான் போய் பட்டாசு வெடிக்கட்டுமா?’ என்று கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். சாமி கும்பிட்ட பிறகு வெடிக்கலா முதல்ல  இருக்கிற வேலையை செய்  என அம்மா கோவமாக பேசினாள். அம்மாவின் கோபத்தை பார்த்ததும். வேலை முடிந்தால் பட்டாசு வெடிக்காலம் என எண்ணி வாடிய முகத்துடன் விரைந்து  அம்மாவிற்கு உதவிகள் செய்ய விழைந்தான்.
         

       பட்டாசு வெடிக்க என்னலாம் செய்கிறான், பாருங்க! என தம்பியை கேலி செய்து கொண்டே நானும் அப்பாவும் பூஜைக்கு தேவையான வேலைகளை செய்தோம். அப்பா சிறுவயதில் இருக்கும்போது தீபாவளி நாளிற்காக  காத்திருந்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து தீபாவளி நாளை எண்ணிக்கொண்டு புத்தாடைகளை எடுத்துக்கொண்டு விடிய விடிய கால் கடுக்க டெய்லர் கடையின் முன் நின்று தைத்து அணியும் ஆனந்தம் இன்று இல்லாமல் போனது.  இன்று நாம் நினைத்தால் நினைத்த நேரம் காரணம் இல்லாமல் புத்தாடை எடுக்கிறோம். பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட புலனத்தின்(Whatsapp) வழியாகவே வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அன்று கொண்டாட்ட நாட்களில் மட்டுமே இட்லி சாப்பிட முடியும் என தந்தை கூறியதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
         

        இன்று நவீனத்துவம் பெருகி உள்ளது. இட்லி தினந்தோறும் நம் காலை உணவாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கு சாபமா? சந்தோஷமா? என தெரியவில்லை என்று அப்பா கூறிக் கொண்டிருந்தார். திடீரென  தம்பியின் முணுகள் சத்தம் கேட்டது. இல்லை, அது அவனது புலம்பல். நானும் அப்பாவும் அவன் புலம்பலை கவனித்தோம். ‘என்ன  பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புங்க, நானே பட்டாசு செஞ்சு வெடிச்சிக்கீறே’ நான் மட்டும் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு போயிருந்தா எனக்கு எவ்வளவு பட்டாசு கிடைச்சிருக்கும். பள்ளிக்கு செல்ல வேண்டாம். வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று முணங்கி கொண்டிருந்தான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஒன்றும் சொல்ல இயலாமல் மௌனமாக இருந்தார். அவன் சிந்தனை சரிதானா என சிந்திக்கத் தொடங்கினேன். பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுவர்கள் ஒருபோதும் பட்டாசு வெடிப்பதில்லை என்பது அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவன் இவ்வாறு பேசி இருக்க மாட்டான். பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டு, நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் ஒருபோதும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் அவன் அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் இனிப்புகளுடன் பூஜை முடிந்தது. தம்பியின் முகத்தில் அத்தனை ஆனந்தம். ஒரு மாத காலமாக அவன் காத்திருந்த கனவு நினைவாக போகிறது.
           

        இதோ பட்டாசு பெட்டியை எடுத்துக்கொண்டு தெரு பக்கம் ஓடினான்.  அப்பா மீண்டும் தொடங்கினார்.தம்பி  ஆசையாக வாங்கிய பட்டாசுகளை  வெடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு பட்டாசு வெடிக்கும் போதும் அவன் முகத்தில் அத்தனை ஆனந்தம். உலகத்தில் உள்ள மொத்த ஆனந்தத்தையும் ஒன்றாக பெற்றவனை போல குதூகலமாக இருந்தான். கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்ற போது மக்களும் தேவர்களும் அடைந்த ஆனந்தத்தை விட பன் மடங்கு ஆனந்தத்தை பட்டாசு வெடிக்கும்போது பெற்றிருந்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது? எப்பொழுதில் இருந்து கொண்டாடப்படுகிறது? சிலர் கிருஷ்ண பகவான் நரகாசுரனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் விஷ்ணு பகவான், ராம அவதாரத்தில் சீதையைத் தூக்கி சென்ற ராவணனை கொன்றதால் தீபாவளி பண்டிகை தோன்றியது எனக் கூறுகின்றனர்.
         

       இவ்வாறு ராம அவதாரத்தில் தான் தீபாவளி பண்டிகை தோன்றியது என்பதனை நிறுவுவதற்காக வால்மீகி ராமாயணத்தின் குறிப்புகளை சான்றாக காட்டுகின்றனர். இதில் எது உண்மை, இதில் நாம் எதை ஏற்றுக் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில் தம்பியின் அழுகுரல் கேட்டு எல்லோரும் தெருவிற்கு சென்று பார்த்தோம்.   கையில் தீக்காயம் ஏற்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தான். அப்பா,  தம்பிக்கு முதலுதவி செய்தார். அம்மா தம்பியை அணைத்து கொண்டு அழுதாள். திடீரென தம்பியை திட்ட ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அடிக்கடி என் அம்மா இவ்வாறு நடந்து கொள்வது உண்டு. ஒரு நாள் அப்பா இப்படி தான்,  ‘ஆபீசுக்கு  நேரமாச்சு  நா  ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்’ என்று வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். மறுநாள் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தவரை  அம்மா மருத்துவரிடம் கூட்டி சென்றார். பின் வீட்டிற்கு வந்ததும்  ‘நேத்தே சொன்னேன் ஹோட்டல்ல எல்லாம் சாப்பிட வேண்டாம்னு கேட்டீங்களா‘ இப்போ பாருங்க வயிறு வலிக்குதுனு கஷ்டப்பட்டு  இருக்கீங்க என அப்பாவை திட்ட தொடங்கினாள். அன்பின் உருவமாய் சில நொடி, அடுத்த நொடியே அக்கறையின் வடிவமகிறாள் அம்மா. தம்பி, அம்மா திட்டியதால் மேலும் அழுதான். ‘இங்க தானே இருந்தீங்க, குழந்தையை பத்திரமா பாத்துக்க மாட்டீங்களா. நீங்க இருக்கீங்கனு  தானே நான் உள்ள இருக்கிற வேலையை பார்க்க போனேன்‘ என அனல் வாதத்தை அப்பாவை நோக்கி திருப்பினாள் அம்மா.
         

     இத்தனை நேரம் மௌனமாக இருந்த அப்பா  டிவில புதுப்படம் பாக்குறது முக்கியமான வேலையா? என வினாவினார். உடனே அம்மா  விடையாக அப்பாவின் மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார். தம்பி சிறிது நேரம் பட்டாசு வெடிப்பதை வெறுத்தான் முழுமையாக அல்ல. இரவு தூங்கப்போகும் வரை ஊதுவத்தியால் ஏற்பட்ட காயத்தை ஊதிக்கொண்டே இருந்தான். இரவெல்லாம் பட்டாசு வெடிக்கும் இரைச்சல் சத்தம். இவ்வாறு தித்திக்கும் தீபாவளியானது எங்கள் வீட்டில் தீக்காயத்துடன்  நிறைவடைந்தது. மறுநாள் காலை விடியல் 9 மணி வரை புகை மூட்டமாக காணப்பட்டது. செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த அப்பா  சோகமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். என்ன சோகமா இருக்கீங்க? காபில சக்கரை இல்லையா? எனக்கேட்ட அம்மாவிடம் செய்தித்தாளை  காட்டி  அப்பா சொல்லத் தொடங்கினார். நேற்று நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளனர்.
         

       குடிசை வீட்டில் இருந்த பலர்  இருப்பிடத்தை இழந்துள்ளனர். பட்டாசு வெடித்ததில் பறவைகளும் பாதிப்படைந்துள்ளன என அப்பா வருத்தத்துடன் கூறினார். உடனே அம்மா தீபாவளி பண்டிகை கொண்டாடவே கூடாதுனு சொல்றீங்களா? இல்ல(லை) இல்ல தீபாவளி பண்டிகையே வேணாம்னு சொல்லல ஆயிரம், இரண்டாயிரம்னு காசு செலவு பண்ணி பட்டாசு வாங்குறோம். அதனால யாருக்காச்சும் ஏதாவது ஒரு நன்மை இருக்கா? என அப்பா கேட்டு முடித்ததும். படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து சென்ற தம்பி அப்பாவிடம் பட்டாசு வெடிப்பதால் நம் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பறவைகள் எல்லாம் பாதிப்படைகின்றனர். பலர் தீக்காயம் அடைகின்றனர். ஒரு நாள் பட்டாசு வெடித்த எனக்கே காயம் ஏற்பட்டதே என சோகமாக கூறினான். ஒரு நாள் ஆசையாக பட்டாசு வெடித்த தம்பிக்கு தீக்காயம் ஏற்பட்டதே அதே போல பட்டாசு தொழிற்சாலையில் தினம்தோறும் என் தம்பியைப் போன்ற சிறுவர்களுக்கு எத்தனை காயங்கள் ஏற்பட்டிருக்கும். எத்தனை வெடி விபத்துகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள்  பசி காரணமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும் குழந்தைகள் நாளெல்லாம் தன் சந்தோஷத்தை மறந்து, சுதந்திரத்தை இழந்து, உயிரை பணையம் வைத்து பணியாற்றுகின்றனர் என சிந்தனையில் ஆழ்ந்து இருந்த என்னை அப்பாவின் குரல் தட்டி எழுப்பியது.
         

      பலர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் வாழ்வை தொலைத்து விடுகின்றனர். அவர்கள் தீபாவளியின் போது புத்தாடை அணிவதில்லை, பட்டாசுகள் வெடிப்பதில்லை, இனிப்புகள் சாப்பிடுவதில்லை  என அப்பா கூறியதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒரு உலகம் நமக்கு தெரியாமல் இருக்கிறதா? அதில் நம்மைப் போன்ற மக்கள் இன்னல்கள் பல அனுபவிக்கின்றானரா? என தம்பியும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்பா சொல்லி முடித்த உடனே தம்பி சொன்னான் அடுத்த தீபாவளிக்கு நாம் பட்டாசுகளை வாங்க வேண்டாம். வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், மேலும் தம்பி தொடர்ந்தான். பட்டாசு வெடிப்பதால் காயம் ஏற்படுகிறது. பறவைகள் பாதிப்படைகின்றன. எனவே இனி பட்டாசு வாங்கும் பணத்தில் இனிப்பு, புத்தாடை  வாங்கி ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்றான். இவ்ளோ மக்கள் கஷ்டப்படுறாங்களே இந்த அரசாங்கம் பட்டாசு வெடிப்பதை தடை செஞ்சா என்ன? என வில்லம்பை போல அப்பாவை நோக்கி அம்மாவின் கேள்வி வந்து கொண்டிருந்தது. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் வருடந்தோறும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமே அந்த காரணத்தினால் தான் அரசு பட்டாசு தொழிற்சாலைகளின் வளர்ச்சியை தடை செய்யாமல் இருக்கிறது. அரசாங்கம் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பட்டாசு தொழிற்சாலைக்கான விழிப்புணர்வு முகாம்கள், மக்கள் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், பட்டாசு வெடிப்பதற்கான நேரம் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செய்து வருகிறது.  எல்லா தொழிற்சாலைகளிலும் இயந்திரங்களின் உதவியுடன் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.ஆனால் இன்றும் கூட பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்கள் வெடி மருந்துகளை கைகளாலேயே எடுத்து பட்டாசுகளை தயாரிக்கின்றனர். இது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும். எத்தனை குழந்தைகள் தனது அப்பா அம்மாவை வெடி விபத்தில் இழந்திருப்பார்கள். எத்தனை பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை இழந்திருப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதம் என்பதே இல்லாமல் நம் ஒருநாள் சந்தோஷத்திற்காக தினந்தோறும் அவர்கள் தங்கள் சந்தோஷத்தை இழக்கின்றனர்.
         

          இவ்வாறு அப்பா கூறிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. காரணம் அவர் வெடிவிபத்தில் உயிர் இழந்த பெற்றோர்களின் செல்லப்பிள்ளை என்பதே. அன்று, முதல் முதலில் உணர்ந்தோம் தித்திக்கும் தீபாவளி பலருக்கு தத்தளிக்கும் தீபாவளியாக உள்ளதை. இனி தத்தளிக்கும் மக்களின் தீபாவளியை தித்திக்க செய்ய வருடந்தோறும்  நாம் ஒரு நாள் சந்தோஷத்திற்காக பாடுபடும் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் மக்களுக்கு புத்தாடை, இனிப்பு வகைகள், நம்மால் முடிந்த அளவு நிதி உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம்.


சிறுகதையின் ஆசிரியர்

இரா.சுபாஷினி MA.,NET

உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகம்,

காஞ்சிபுரம் – 631 501.

 

Sanjaaram Novelil Isaikalaignargalin Velinaattupayana Anubavam-Oar Aaiyvu|G.Abirami

சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம்

சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின்

வெளிநாட்டுப் பயண அனுபவம் – ஓர் ஆய்வு

Abstract

      This study of musicians’ foreign travel experience in the novel – a study of the study of musicians in the novel, describes the foreign travel experience of musicians and the disappointment they faced, through which the social view of faith and disappointment, in particular, and the interest of traveling abroad, and other countries in the background, and other countries.

ஆய்வுச்சுருக்கம்
         

        சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் – ஓர் ஆய்வு என்ற இந்த ஆய்வின் மூலம், நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்களைப் பற்றி விவரிக்கவும், இதன் வழியாக நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் சமூகப்பார்வையை, நிதானமான பார்வையில் அணுகி, குறிப்பாக, உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் ஆர்வம், அதன் பின்னணியில் உள்ள பொருளாதார நிலைகள் மற்றும் பிற நாடுகளில் கலைஞர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆராய்ந்து ஏமாற்றங்களை உணர்த்தவும் நோக்கமாகக் கருதப்படுகிறது.


முன்னுரை
         

       தமிழ் இலக்கியங்களில் கடை நிலைப்பட்ட இசைக்கலைஞர்களின் பொருளாதாரப் பின்னடைவு நிலையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டவேண்டியே பல இலக்கியங்கள் பேசுகின்றன. பொருளின் இன்றியமையாமையைக் குறித்து சங்ககாலம் முதற்கொண்டு பேசப்பட்டு வருகின்றன. அவ்வகையில்
     ”வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறுந்தொகை – 135 : 1-2)

       என்று குறுந்தொகை கூறுகிறது. திருவள்ளுவர் கூட
               

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
 இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (திருக்குறள் – 247)

     என்ற திருக்குறள் வழி பொருளின் இன்றியமையாமையை உணர்த்துகின்றார். காலமெல்லாம் வறுமையில் வாடும் ஏழ்மை நிலையை மாற்ற, பலரும் முயலும் சூழலில், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலில் நாதசுவர இசைக்கலைஞர்கள் அயல் நாட்டிற்குச் சென்று அதிக பணம் சம்பாதித்தும், விருதுகளைப் பெற்றும் வந்தால், உள்நாட்டில் தன் மதிப்பும் மரியாதையும் கூடுவதோடு, வாய்ப்புகளும் அதிகமாகக் கிடைக்கும் என்றும், பொருளாதாரத்தால் தம் நிலை உயரும் என்ற நம்பிக்கையில், ஆர்வமாக இருப்பதும், இறுதியில் வெளிநாட்டுப் பயணத்தையே வெறுப்பதுமாக அவர்கள் ஏமாற்றுக்காரர்களால் வாழ்வில் ஏமாற்றமடைந்தமை குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.


பொருள் பற்றிய சிந்தனை
         

         ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது அவ்வை வாக்கு. ’பணம் பந்தியிலே’, ’பணம் பாதாலம் வரைப் பாயும்’ முதலான   பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று, அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது, அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப் படுத்துகின்றன. பொருள் பற்றி திருவள்ளுவர் கூறும்போது
         

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து         

தீதின்றி வந்த பொருள்” (திருக்குறள் – 754)

      இக்குறட்பாவில் தீயவழிகளில் பொருள் ஈட்டாமல் அதை முறையாகத் திறனறிந்து பொருளீட்டுதல் அறத்தையும் இன்பத்தையும் தரவல்லது என வள்ளுவர் வலியுறுத்துகிறார். அத்தகைய பொருளை ஈட்ட சஞ்சாரம் நாவலில் நாதசுவர இசைக்கலைஞர்கள் இலண்டன் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.


இசைக் கலைஞர்களுக்கு நம்பிக்கை எழுதல்
         

          நம்பிக்கை என்பது புயல் அடிக்கும் கடலில் கப்பலை வழி நடத்தும் கலங்கரை விளக்கைப் போன்றது. வாழ்க்கைப் பயணத்தில் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் கூட நம்பிக்கை ஒருவரை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக செயல்படுகிறது. சஞ்சாரம் நாவலில் வீரப்பன் ஒரு முகவர்(ஏஜண்ட்).  ஒருநாள் ஊருக்கு வந்திருந்த வீரப்பன் ரத்தினம் என்கிற நாதசுவர இசைக்கலைஞரிடம் வெளிநாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்வேன் என்று கூறினார். அதோடு முன்பணமும் தந்தார்.
  ”உங்களை எல்லாம் பாரின் கூட்டிக்கிட்டு போறேன் கை நிறைய பணம் வரும். விருது எல்லாம் கொடுப்பாங்க” (சஞ். பக். 178)
 இருபதாயிரம் ரூபாய் முன் பணம் பெற்ற நாதசுவர இசைக்கலைஞர்களுக்கு வெளிநாட்டிற்குச் செல்லப்போகிறோம் என்கின்ற நம்பிக்கை மிகுந்தது.

உற்சாக உணர்வின் வெளிப்பாடு
         

      உணர்ச்சிகள் மகிழ்ச்சியின் பரவசத்திலிருந்து விரக்தியின் ஆழம் வரை, திருப்தியின் அமைதியிலிருந்து கோபத்தின் கிளர்ச்சி வரை. ஒவ்வொரு உணர்ச்சியும் அதனுடன் தனித்துவமான உடலியல் எதிர்வினைகள், அகநிலை அனுபவங்கள் மற்றும் வெளிப்படையான நடத்தைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் நாம் உற்சாகமாக இருக்கும்போது நம் வயிற்றில் படபடப்பை உணர்கிறோம். நாம் வெட்கப்படும்போது நம் முகம் சிவந்துவிடும். நாதசுவர இசைக்கலைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும் ஆர்வத்தால் உள்ளூர் நிகழ்ச்சிகளை எல்லாம் நிராகரித்துவிட்டனர். இதனை
 “அன்னைக்கு ரத்தினம் அண்ணன் ஆடுன ஆட்டம் இருக்கே, அதைச் சொல்லி முடியாது. பேசின கச்சேரி எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு, லண்டனுக்குப் போக துடிச்சுக்கிட்டு இருந்தாரு.”(சஞ். பக் – 179)
என்ற வரிகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

இலண்டன் போக ஆயத்தமாதல்         

       இசைக்கலைஞர்கள் ஆறு பேரும் லண்டன் போக தயாராகினர். அங்கு குளிர் அதிகமாக இருக்கும், அதனால் எல்லோரும் வேஷ்டி சட்டை போட முடியாது என்றும், பேண்ட் சட்டை தைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டனர். இவர்கள்
    ”பேண்ட்டு சட்ட துணி எடுத்துக்கொண்டு போயி மதுரை புது மண்டபத்தில் இருக்கிற டெய்லர்கிட்ட தைச்சுக்கிட்டோம். பேண்ட் போட்டதில்லையா? இடுப்புல நிக்க மாட்டேங்குது. அருணாக்கயிற்ற வைத்து கட்டினாலும், அம்மணமா நிக்கிற மாதிரி இருந்துச்சு” (சஞ். பக் – 179)
பத்து நாளைக்குத் தானே, ”நடிக்கிறதுன்னு வந்துட்டா வேஷம் கட்டித்தானே ஆகவேண்டும்” முழு கால் சட்டையைப் போட்டுக்கொண்டு நான்குபேரும் ஸ்டார் ஸ்டுடியோவிற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பாஸ்போர்ட் வாங்க ஆளுக்கு 6 ஆயிரம் கடனாக வாங்கிக் கொடுத்தனர். இரண்டு மாதம் ஆனது. பாஸ்போர்ட் வரவில்லை. வேறு கச்சேரிக்கும் போக முடியவில்லை. சோற்றுக்கு என்ன செய்வது, பக்கத்து ஊரு கச்சேரிக்கு ஒத்துக் கொண்டனர். ஒரு நாள் வீரப்பனும் ஏகாம்பரமும் வந்தனர். சும்மா வரவில்லை. லாலா கடை லட்டு, சென்ட் பாட்டில் எல்லாம் கொண்டு வந்து இருந்தனர். நிகழ்ச்சி எல்லாம் தயாராகிவிட்டது. பாஸ்போர்ட் ரெடி, பதினெட்டாம் தேதி புறப்படுகிறோம் என்று சொல்லிவிட்டனர். இவர்களுக்கு மகிழ்ச்சியால் தூக்கம் வரவில்லை.
“இதுவரைக்கும் நாங்க யாருமே டெல்லிக்குக் கூட போனதில்ல, இப்ப முதல் முறையா இலண்டனுக்குப் போறோம். நம்பள ஆண்ட வெள்ளைக்காரன் ஊருக்கே போயி வாசிக்கப் போறோம்” (சஞ். பக் – 180)
என்று அனைவரும் மகிழ்ந்தனர்.


விமானத்தில் புறப்படுதல்
         

        விமானம் புறப்படும்போது அவர்களுக்கு அடிவயிற்றில் இருப்பவை குடல் வழியே மேலே வருவது போல இருந்தது. இருட்டில் வெளியே ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் வானத்தில் மிதக்கின்றோம் என்கின்ற உணர்வு பெரு மகிழ்ச்சியைத்தந்தது.
 ”எத்தனை நாள் வானத்தில் விமானத்தைப் பார்த்துப் பின்னாடியே ஓடியிருக்கோம், இன்று விமானத்தில் பறக்கின்றோம்” (சஞ். பக் – 190)
என்று கூறி மகிழ்ந்தனர்.


இலண்டனில் இசைக் கலைஞர்கள்         

      இசைக்கலைஞர்கள் வெறும் வேட்டி, சட்டை மட்டும் அணிந்திருந்த காரணத்தால் குளிர் தாங்க முடியவில்லை.  இலண்டனில் கடும் குளிர். உடல் நடுங்கியது. கை கால் எல்லாம் குண்டு ஊசி வைத்துக் குத்துவது போல இருந்தது. இதனை
“விஷக் குளிரால்லே இருக்கு என நடுங்கிய படியே சொன்னார் பழனி” (சஞ். பக் – 191)
என்று கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.
 

இலண்டனில் தங்குதல்
         

மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் முதலானவை அடிப்படைத்தேவைகளாக உள்ளன. இலண்டனுக்குச் சென்ற இசைக்கலைஞர்கள்  கார் செட்டில் தான் தங்கப் போவதாக வீரப்பன் கூறினார். அதன்படி இசைக்கலைஞர்கள் அங்கேதான் தங்கினர்.


இலண்டனில் உணவு
         

      இசைக்கலைஞர்களுக்கு உணவாக ரொட்டியும், வெண்ணையும், உப்புமாவும் சாப்பிடுவதற்காகக் கொண்டு வந்து தந்தார்கள். மறுநாள் காலையில் மூன்று இட்டிலி மட்டும் கொடுத்தார்கள். போதவில்லை என்றாலும் வேறு வழியின்றி இருந்தனர்.


இலண்டனில் முதல் நாள் நிகழ்வு         

         சமூக, குடும்ப அல்லது தொழில் காரணங்களுக்காக மக்கள் கூடுவது அல்லது சந்திப்பதைக் குறிக்கும் கெட் டு கெதர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாற்பது, ஐம்பது பேர் கூடிய அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி துவங்கியது. வாசிக்குமாறு கூறினர். இசைக்கலைஞர்கள் உட்கார இடம் கேட்க, நின்று கொண்டே வாசி என்று சொன்னார்கள். ஆனால் விருந்திற்கு வந்த எவரும் இசையைக் கேட்டதாகத் தெரியவில்லை. நம்மை ஏன் இப்படி அழைத்து வந்து அவமானப்படுத்துகிறார்களோ என புலம்பினர். அப்போது ஒருவர் சப்தம் குறைவாக வாசிக்குமாறு கூறினார். அதற்கு ரத்தினம் இது என்ன ரேடியோவா? சத்தம் கூட்டவும் குறைக்கவும் எனக் கூறினார். நாய்கள் எல்லாம் பயப்படுகிறது என்றனர். வாசிப்பதை நிறுத்தினர். வீரப்பன் ஏன் நிறுத்தினீர் எனக் கேட்டார். ஒருவரும் கவனிக்கவே இல்லையே? என்றனர் இசைக்கலைஞர்கள். அப்படித்தான் இருப்பாங்க வாசிங்க என்றார். மேலும் காசு வேணும்னா வாசிக்கச் சொன்ன இடத்துல வாசிங்க – என்றார் வீரப்பன். மீண்டும் வாசித்தனர். ஒரு பிச்சைக்காரர் வாசிப்பதை உன்னிப்பாகக் கேட்டுப் பாராட்டி, ஒரு பூவைப் பரிசாகத் தந்தார். ரத்தினம் வீரப்பனிடம் இன்னைக்கு வாசித்ததற்குக் காசு கொடுப்பார்களா? என்றார். இல்லை இது சும்மாதான். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குக் கராராகப் பேசி, பணம் வாங்கிடுவேன் என்றார். அதோடு குளிர் தாங்க பிராந்தி பாட்டில் தந்து குடிங்க எனக் கூறினார் வீரப்பன்.


ரத்தினத்திற்கு உடல் நலமின்மை
         

         இரவு மூன்று மணி அளவில் ரத்தினத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பக்கிரியிடம் ரத்தினம் எனக்குக் கை, கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. மூச்சு விட முடியவில்லை. நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கி வைத்ததைப் போல உள்ளது. நான் செத்துப் போகப் போறேன். என் பிள்ளைக்குட்டிகளை நீ தான் பார்த்துக்கிடனும் என பெரும் குரல் கொடுத்து அழுதார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குளிர் காய்ச்சல் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்றனர் மருத்துவர்கள்.


அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு ஆயுத்தமாதல்         

    ரத்தினத்திற்கு உடல் நலமின்மை காரணமாக நிகழ்ச்சிக்குச் செல்ல தயங்குகின்ற நேரத்தில், வாசித்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரு கோயிலில் வாசிக்கச் சொன்னார்கள். ஐந்து நிமிட வாசிப்பு. வாசிப்பு முடிந்தவுடன் லட்டு பிடிக்க ஆளின்றி லட்டு பிடிக்கச் சொன்னார்கள். இசைக்கலைஞர்கள் வருந்தினர்.


ஐந்தாம் நாள் நிகழ்ச்சி
         

       ஒரு பலசரக்குக் கடை(ஷாப்பிங் மால்)க்குச் சென்றனர். அங்கு வாசிக்கும்படி வீரப்பன் கூற, கூலி எவ்வளவு கிடைக்கும் என கேட்டனர் இசைக்கலைஞர்கள். ஆளுக்கு இருபதாயிரம் வரும் என்று கூற, இசைக்கலைஞர்களும் வாசித்தனர். அங்கு வந்தவர்களில் சிலர் நாணயத்தையும், பணத்தையும் குனிந்து போட்டுவிட்டுச் சென்றனர். அவற்றை ஏகாம்பரம் எடுத்துக் கொண்டார்.


இலண்டனில் கடைசி நாள்
         

       கல்பனா ஸ்ரீ என்ற நடிகையை வரவேற்று விருந்து கொடுக்கும் நிகழ்விற்குச் சென்றனர். நடிகையை வரவேற்கவே நாதசுவரம், தவில் இசை நிகழ்ச்சி. கடைசி நாள் என்பதால் அமைதியாகச் சென்று வாசித்தனர். நாதசுவர ஓசையைக் கேட்டு பக்கத்து வீட்டு நாய் பயந்து குறைக்கத் துவங்கியது. இசைப்பதை நிறுத்துமாறு கூறினார். இசைப்பதை நிறுத்தினர்.


இலண்டனில் இருந்து புறப்படுதல்
         

      இலண்டனில் இருந்து திரும்பும் போது, ஏகாம்பரம் மட்டும்தான் வந்தார். வீரப்பன் வசூல் செய்து கொண்டு வருவதாகக் கூறினார். வானூர்தி(பிளைட்) சென்னைக்கு வந்தது. முன்பு தங்கி இருந்த அதே அறையில் இரண்டு நாட்கள் தங்கினர். வீரப்பன் வரவே இல்லை. வீரப்பன் வந்தவுடன் பணத்தைக் கொடுப்பதாகக் கூறினார் சிதம்பரம்.  அவரவர் வீட்டிற்குச் சென்றனர் இசைக் கலைஞர்கள்.


ஏமாற்றம் அடைதல்
         

      ஆறு மாதம் ஆகியும் பணம் வரவில்லை. வீரப்பனுக்குக் கால் செய்தும் போன் எடுக்கவில்லை. அலுத்துப்போனது, முடிவில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் வீரப்பனை மடக்கிப் பிடித்து பணம் கேட்டபோது,
”நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க அண்ணே. பேசிய காசு கொடுக்கல. கேட்டா டிக்கெட் செலவுக்கு சரியா போச்சு, ஆஸ்பத்திரி பில்லு ரெண்டு லட்சம்னு சொல்றாங்க. நான் சண்டை போட்டேன். ஒரு பைசா கிடைக்கல. இதுல திரும்பி வர்றதுக்கு எனக்கு பிளைட் டிக்கெட் போட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கை காசு போட்டு திரும்பி வந்தேன்”.
 என்றார் வீரப்பன். எங்கள் உழைப்பு போனதே என்றனர் இசைக்கலைஞர்கள். நான் என்ன செய்வது? உங்களுக்கு என் மேல சந்தேகம் இருந்தால், கூட வாங்க, மொட்டை கோபுரத்து முனி கோவிலில் வந்து சத்தியம் வைக்கிறேன். உங்க காசு எனக்கு எதுக்கு அண்ணே என்றார் வீரப்பன். அப்போ இதுக்கு என்னதான் தீர்வு? என்றனர் இசைக்கலைஞர்கள். என்னால் தான் இப்படி நடந்து போச்சு. அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. ஆயிரம் ரூபாய் என்கிட்ட இருக்கு, அதை இப்போது தருகிறேன்.  இரண்டு மாதம் காலம் கொடுத்தால் கடனை வாங்கியாவது உங்களுக்கு ஆளுக்குப் பத்தாயிரம் தருவேன். என்னால முடிந்தது இவ்வளவுதான் என்றார். அது எப்படி சரியாகும் என்றனர் இசைக்கலைஞர்கள். இலட்சக்கணக்கில் கொடுக்க ஆசைதான். ஆனால், அந்த களவாணிப் பயல் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்து விட்டானே. இரண்டு மாசத்துல ஊருக்கே வந்து மொத்தமா ஐம்பதாயிரம் தந்து விடுகிறேன். போதுமா? என்றார் வீரப்பன். ஆனால் வீரப்பன் பணத்தைக் கொண்டு வரவே இல்லை. அவரைத் தேடி சென்னைக்குச் சென்றபோது, மலேசியாவிற்குக் குடும்பத்தோடு சென்றுவிட்டதாகக் கூறினர். அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொள்வது இல்லை இசைக்கலைஞர்கள்.


முடிவுரை       

”விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்       

தீமை புரிந்தொழுகு வார்”

       என்பார் திருவள்ளுவர். ஒருவர் நம் மீது எந்தவித ஐயப்பாடும் இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்டவருக்கு ஒரு தீமை செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர். அவர் இருந்தும் இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பானவராகவே கருதப்படுவார். இதுதான் நம்பிக்கை துரோகம் நம்மை நம்பி இருப்பவர்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்தல் கூடாது. துரோகங்களில் பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம் தான். துரோகமே கடுமையான மன உளைச்சல் தரக்கூடியது தான். இங்கு இசைக்கலைஞர்கள் நம்பி ஏமாற்றம் அடைந்தனர் என்பதை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


க.அபிராமி., எம்.ஏ., பி.எட்.,

பதிவுஎண்: 20920M13001

ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)


முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,


சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,


திருவண்ணாமலை – 606 603.


திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,

வேலூர்.


நெறியாளர்

பேரா. அ. ஏழுமலை  எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்.,(பிஎச்.டி.,)


உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,

திருவண்ணாமலை – 606 603

 

Origin and Development of Tamil Drama|Dr.S.Ilavarasi

தமிழ்நாடகக் கலையின் தோற்றம் வளர்ச்சி

“தமிழ்நாடகக் கலையின் தோற்றம் வளர்ச்சி”

ABSTRACT               

           The origin and development of the art of drama are intertwined. The aim of this article is to highlight the development of drama in the grammatical literature of Tolkappiyam, Silappadhikaram


ஆய்வுச் சுருக்கம்

     நாடகக் கலையின் தோற்றம் வளர்ச்சியை எடுத்து இயம்புகின்றன. நாடகத்தின் வளர்ச்சியினை இலக்கண இலக்கியங்களான தொல்காப்பியம் சிலப்பதிகாரத்தில் இச்சிறப்பினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


திறவு சொல்

      நட – நடந்து,  மானியம் – நீதி, மடந்தையர் – பெண்டிர், துணங்கை – கைவிலா எலும்பு, பிரகாசனம் – நகைச்சுவை


ஆய்வுசிக்கல்

         நாடகக் கலையின் வளர்ச்சியை இயம்புகின்றன தவிர வேறு எந்த கலைச் சிக்கலையும் மேம்படுத்துவதாகநோக்கம் இல்லை என்பதை ஆய்வு சிக்கலாக உணர்த்துகின்றது.


ஆய்வு முறையியல்

        பகுப்பாய்வு, தொகுப்பு முறை ஆய்வு, விளக்கமுறை ஆய்வு ஆகிய அடிப்படையில் ஆய்வு முறையில் விளக்கப்படுகின்றது.


முன்னுரை

          தமிழ் இலக்கியத்தைப் பழங்காலம் தொட்டே இயல் தமிழ் இசைத் தமிழ் நாடகத் தமிழ் என பாகுபாடு செய்துள்ளனர். மனிதன் அறிவு வளர்ச்சி தோன்றிய காலத்திலிருந்தே நாடகம் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ் மொழியின் தனிச்சிறப்பு முத்தமிழ் என்று கூறலாம். இயல் தமிழுக்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பது போல் இசை தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் இருந்துள்ளன. இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.


நாடகத்தின் தோற்றம்

         இயலும் இசையும் சேர்ந்து கதையைத் தழுவி வரும் கூத்தே நாடகமாகும். ‘நாடகம்’என்று வழங்குகின்ற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். நாட்டின் சென்ற காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால் நாடு+ அகம்- நாடகம் என்று ஆயிற்று ’நாடகம்’ என்ற சொல்லுக்கு வேறு சொல் ’நட’ என்று பாவாணர் கூறுகின்றார். சங்க பாடல்களில் அகப்பாடல்கள் அனைத்தும் நாடகக் கூற்றாகவே வருவதால் அவற்றை நாடகத்தின் தனி நிலை பாடல்கள் என்பர். பழங்காலத்தில் தமிழறிஞர்கள் நாடக இலக்கியங்களைக் கலிப்பாவிலும் பரிபாடல்களிலும் இயற்றியுள்ளனர். இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நாடக காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இச்செய்திகளை அறிய முடிகின்றது.


பழந்தமிழ் நூல்களில் நாடகம் பற்றியச் செய்திகள்


      கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பே நாடகக்கலை நன்கு வளர்ந்திருந்தமைக்கு சான்றாகிறது. சிலப்பதிகாரத்திற்கு முன்னே தோன்றிய தொல்காப்பியத்தில் நாடகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் பட்டினப்பாலையில் நடனமாந்தரை’ நாடக மகளிர்’ என்றும் நடனத்தை நாடகம் என்றும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவதைக் காணலாம்.. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் ஏழு இடங்களில் நாடகம் என்ற சொல் நடனம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெருங்கதையில்


“வாயிற் கூத்தும் சேரிப் பாடலும்

கோயில் நாடகக் குழுக்களும்”1
 

    என வரும் சொற்றொடர் கி. பி எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்கப்பட்டதையும், நாடகக் குழுவினர் இருந்ததையும் குறிப்பிடுகின்றது. கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை நாடகம் என்னும் சொல் கூத்து என்பதை தான் குறித்துள்ளது. சோழர் காலத்தில் தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட முழு நாடகம் நடிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.” இராஜராஜ விஜயம் என்ற நாடகம் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெற்றதைக்கி. பி. 984-ஆம்ஆண்டு ‘இராஜேந்திர சோழனின்’ கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. கமலாயப்பட்டர் என்பவர் எழுதிய ‘பூம்புலியூர் ‘நாடகத்தில் நடிப்பதற்காக மானியம் தரப்பட்ட செய்தியை 1119- ஆம் ஆண்டு கடலூர் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. “2 என பல கல்வெட்டுச் சான்றுகள் நாடக வளர்ச்சிக்கு தரப்பட்ட செய்திகளாகும்.


நாடகத்தின் வகைகள்

         நாடகத்தின் வகைகளாக பழங்காலத்தில் இன்பியல் நாடகம் துன்பியல் நாடகம் என இரு வகையாக நாடகங்கள் இயற்றப்பட்டுள்ளன.இன்பமாக முடியும் வகையிலும், துன்பமாக முடியும் வகையிலும் நாடகங்களை இயற்றியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் வேத்தியல், பொதுவியல் என இரு வகையில் இயற்றப்பட்டுள்ளன.இக்கால இலக்கியங்களில் நாடகங்களின் வகைகளாக புராணம் நாடகம், வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம், பக்தி நாடகம், சமுதாயம் நாடகம், சீர்திருத்த நாடகம், நகைச்சுவை நாடகம், பிரச்சார நாடகம், ஓரங்க நாடகம்,மேடை நாடகம், திரைத்தந்த நாடகம் ,உரைநடை நாடகம், செய்யுள் நாடகம் ஆகிய நிலைகளில்நாடகங்களை வகைப்படுத்தி உள்ளனர். இக்காலச் சூழலிலும் நாடகங்களின் போக்கும் சூழலும் இதற்குகேற்ப அமைந்துள்ளது என்பதை நன்கரியலாம்.

நாடகத்தின் வளர்ச்சி நிலை

       பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்த விலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். இன்னிசைக் கூத்து, வரலாற்று கூத்து என இருவகை நாடகம் மரபுகளும் இக்கால பகுதியில் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தில் ராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தொண்டி நாடகங்கள் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இ ராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன.

தொல்காப்பியத்தில் நாடகக் கூறுகள்

       தமிழ் நூல்களில் முதலாவதான தொல்காப்பியத்தில் ‘நாடகம்’ என்ற சொல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வருகின்றது. அவற்றில் மூலம் நாடகத்தைப் பற்றி அதிகமாக அறிய முடியாவிட்டாலும் நாடகக்கலைபழங் காலத்தில் நன்னிலையில் இருந்தது என்று அறிய முடிகிறது.

“நாடக வழக்கினும் உலகியல் விளக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர்”3

         என்பது தொல்காப்பியம்நூற்பா விளக்குகின்றது.மனிதனது இன்ப வாழ்வைச் சிறப்பாக விளக்க முற்படுவது நாடக வழக்கமாகும். ஒரு நிகழ்ச்சியைக் கவர்ச்சியுடனும் சுவைகளுடனும் நாடகத் தன்மையோடு விளக்குவதையே தொல்காப்பியர் நாடக வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய காலச்சூழலிலும் மேடைகளில் சுவையூட்டும் தன்மைகளை உடைய நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்நிகழ்வுகள் தான் மேலும் சிறப்படைகின்றன.

சிலப்பதிகாரத்தில் நடனக் கலை

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நாடகம் என்னும்சொல் கூட நாட்டியத்தை உணர்த்தி நிற்கின்றது., நாடக மடந்தையர் எனக் குறிப்பிடுவது நாட்டிய மடந்தையரையே ஆகும். அரங்கு ஆடுதல் என்று வருவன எல்லாம் நாட்டியம் என்ற கருத்தில் வருவதாகும்.

“நாடகமடந்தையர் ஆடு அரங்கு”4

என்ற சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் நாடகம் என்பது நாட்டியம் கலைகளாக அரங்கேற்றியது. அரங்கேற்று காதையில் மாதவி அரங்கேறி ஆடினாள்என்று கூறப்படுகிறது. இதை நாட்டியக்கலை பற்றியனவே

“நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்

காட்டினள் ஆதலின்”5

இதை அரங்கேற்றுக் கதையின் இறுதியில் இளங்கோவடிகள் இவ்வரிகளில் விளக்குகிறார்.


சங்க இலக்கியங்களில் நாடகம்

           இலக்கியங்களில் நாடகத்தின் பற்றியச் செய்திகளை அறியலாம். நடிப்பில் இரண்டு வகை உண்டு. கருத்துக்களை நடித்தல், கதைகளை நடித்தல் என்றும், கருத்துக்களை நடித்துக் காட்டுவதற்கு நாட்டியம் என்றும், கதைகளை நடித்துக் காட்டுவதற்கு நாடகம் என்று பெயர் சொல்வதுண்டு. சங்க காலத்தில் இவை இரண்டுமே கூத்து என்னும் பெயரால் வழங்கி வந்தது. கூத்து என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஓர் இடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது.  இதனை


“வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்

வீழ்க்கை பெருங்கருங்கூத்து”6
 

என்ற கலித்தொகை வரிகளால் அறியலாம்.


கூத்து

       பண்டைய காலத்தில் பொழுது போக்குவதற்காக நாடகங்கள் உருவாக்கப்பட்டன. பல வேடங்கள் போட்டு நடித்தார்கள். அவர்களே கூத்தர்கள் ஆவர். கூத்தர் என்பதற்கு நடிப்பவர் என்பது பொருள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)இந்த கூத்தர்களை பற்றிய செய்திகள் கூறுகின்றது. சங்க காலக்கூத்துப் புலவர்கள் கூத்தனார் என அழைக்கப்பட்டனர். இதனை வள்ளுவர்


“கூத்தாட்டு அவைக்கூழாத்து அற்றே பெருஞ் செல்வம்

போக்கும் அதுவிளந்தன்று”7
 

     என திருக்குறள் குறிப்பிடுகின்றது. இக்குறளால் கூத்தர்கள் நாடகம் அரங்கம் வைத்து ஆடினார்கள் என்பதையும், அவர்களின் ஆட்டத்தை மக்கள் கூட்டம் கூட்டமாகச்சென்று கண்டு களித்தனர் என்பதையும் அறிய முடிகிறது. கூத்துஎன்னும் சொல் நாட்டியம் நாடகம் ஆகிய இருகலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்க பெற்றுள்ளது. மேலும் சங்க இலக்கிய பாடல்கள் ஆன குறுந்தொகையில் கூத்தினை பற்றியச்செய்திகள் இடம் பெற்றுள்ளது. அவை


“வணங்கு இறைப்பணைத்தோலள் எல்வளை மகளிர்

துணை நாளும் வந்தன் அவ்வரைக்

கண் பொர,மற்று அதன் கண் அவர்

மனம் கொளற்குஇவரும் மன்னர் போரே”8

       என குறுந்தொகை பாடல் வரிகள் கூத்து வகையினை 18 இடங்களில் சுட்டுகின்றன.என்றும் பல இடங்களில் பல கிராமங்களில் திருவிழா காலங்களில் கூத்து, மேடை நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அவற்றை கலை உணர்வுடன் இன்றும் ரசித்து வருகின்றனர்.


சீவக சிந்தாமணியில் நாடகம் பற்றிய குறிப்பு

        கூத்துக்களைப் பற்றியச்செய்திகள் சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது. சீவகன் தான் பெற்ற வெற்றிக்கு துணை புரிந்த நண்பர்களுள் ஒருவனான சுதஞ்சணன் என்பவனுக்கு கோவில் கட்டி அதில் அவன் உருவத்தை பொன்னால் செய்து வைத்தான். சுதஞ்சணன் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி அதை நடிப்பதற்கு ஏற்பாடும் செய்தான் என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. இதனை,

“பேரிடர் தன்கண்பெரும்புணையாழ்தோழற்கு

ஓரிடம் செய்து பொன்னால் அவனுக்கு இயற்றி ஊரும்

பாரிடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்

தாருடைமார்பன்கூத்துத்தான்செய்துநடாயினானே”9

    என்ற பாடல் வரிகளால் அறிய முடிகின்றது. இவற்றின் வாயிலாக நாடகக்கலையின் சிறப்பினை அறிய முடிகிறது.


பல்லவர் காலத்தில் நாடகம்

       மன்னர்கள் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் நாடகங்கள் இடம் பெற்றுள்ளது. அவை பல்லவர் காலம், சோழர்கள் காலம் நாடகங்கள், நாயக்கர் கால நாடகங்கள், மராட்டியர் வளர்த்த நாடக கலை, ஐரோப்பியர் கால நாடகங்கள் மன்னர் காலத்தில் ஆறு நிலைகளில்நாடகம் பெற்ற சிறப்புகளை விளக்க பெறுகின்றன. கி.பி. 3-7 ஆம்நூற்றாண்டுகளில் நடிப்பும் உரையாடலுக்கும் தனி வடிவமாக நாடகம் வளர்ச்சி பெற்றது. மகேந்திரவர்ம பல்லவன் கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை இயற்றினான். பல்லாவரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள குகைக்கோயில்களில் காணும் கல்வெட்டுகள் இதனை குறிப்பிடுகின்றன. மத்த விலாசம் என்னும் சொல் மாமண்டூர் குகை கோயிலில் வடமொழியில் அமைந்த கல்வெட்டுகளில் மத்த விலாச பிரகசனம் என்ற சொல் உள்ளது. இக்கோவில் மகேந்திரன் காலத்தில் உருவானதாகும். இதனைக் குறிப்பிடும் நாடகவியல் நூற்பா


“நகைச்சுவை தன்னை மிகுத்துக்காகாட்டி

ஒன்றேயாதல்இரண்டேயாதல்

அங்கங்கொண்டதரும்பிரகசனம்”10

       மத்த விலாச பிரகசனத்தில்நகைச்சுவை அங்கதம் இரண்டும் நிறைந்துள்ளன. இக்கால நாடகங்கள் மேடையில் நடிக்கப்பட்டதோடு படிப்பதற்கு உரிய நாடகங்களும் தோன்றியிருந்தமையை இவ்வுலகினால் அறிய முடிகிறது.


இன்றைய சூழலில் நாடகக்கலை

        இன்றைய காலங்களில்நாடகங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். நவீன கால வளர்ச்சி முறைக்கேற்ப நாடகத்துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. பல நவீன கருவிகள் துணையோடு பல திரைப்படங்கள் வந்தாலும் அதன் மூலக்கருவி இந்த நாடகக் கலை. மேடையில் அரங்கேறிய இக்கலை இன்றும் பல இடங்களில் திருவிழாக்கள் காலங்களில் நாம் புராண நாடகங்களை இன்றும் ராமாயணம்,வள்ளி தெய்வானை போன்ற நாடகங்களை நாடகக் கலைஞர்கள் வேடமடைந்து நடித்துக் காட்டும் நிலைகளைக் கண்டு களிக்கலாம். இன்று பெரிய திரையில் தோன்றிய பல கலைஞர்கள் அன்று மேடை நாடகங்களில் தோன்றியவர்கள் தான் அத்தகைய சிறப்பு மிகுந்த மனிதர்கள் நாடகவியல் துறையில் இருந்து உள்ளார்கள் என்பதற்கு சான்றளிக்கின்றது. மேலும் நாடகக்கலை வளர்ச்சி பெற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

சான்றன் விளக்கம்

1.பெருங்காதை – 88-89 வரி


2.இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ் நாடகக் கலை – 2 பக்


3.தொல்காப்பியம் பொருள் நூற்பா – 53


4.சிலப்பதிகாரம் அரங்கேற்றும் காதை – 122


5.சிலப்பதிகாரம் அரங்கேற்றம் காதை 158 – 159


6.கலித்தொகை – 65 வரி


7.திருக்குறள் எண் – 332


8.குறுந்தொகை பாடல் எண் – 365 வரி


9.சீவக சிந்தாமணி – 2573 வரி


10.நாடகத் தமிழ் – 83 பக்


துணை நூல் பட்டியல்

1.தொல்காப்பியம் – இளம்பூரனார் உரை, தமிழ் மறை பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் தெரு, சென்னை-17, முதற்பதிப்பு – 2003


2.சிலப்பதிகாரம் – மாணிக்கவாசகம். ஞா, உமா பதிப்பகம்,18 பழைய (171), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை-01, ஆறாம் பதிப்பு டிசம்பர் – 2010


3.சீவக சிந்தாமணி – புலவர் அரசுபொ. வேசோமசுந்தரம், கழக வெளியீடு, சென்னை – 1.மூன்றாம் பதிப்பு டிசம்பர் 1959


4.பெருங்கதை – மயிலே சீனி வெங்கடசாமி, பாரி நிலையம் சென்னை – 1, முதற் பதிப்பு டிசம்பர் – 1959


5.கலித்தொகை-புலியூர் கேசிகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை – 98, இரண்டாம் பதிப்பு ஜனவரி – 1981


6.குறுந்தொகை – சண்முகப்பிள்ளை. மு, தமிழ் பல்கலைக்கழகம், மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு – 1985.


7.திருக்குறள் – தேவநேயப் பாவாணர். ஞா, தமிழ்மணி பதிப்பகம், அகமது வணிக வளாகம், 293, திரு வி கா நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14, முதற் பதிப்பு – 2010


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

           முனைவர் சு. இளவரசி,
 

உதவிப்பேராசிரியர்,


தமிழாய்வுத்துறை,

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி),

திருச்சி-20
.

 

Pazhankudi Makkalin Vunavu Muraikal|Dr.S.Prabakaran

பழங்குடி மக்களின் உணவு - முனைவர் சு. பிரபாகரன்

“பழங்குடி மக்களின் உணவு முறைகள்”

Abstract
           

      Aboriginal people have been living in a landscape for a long time. They live their lives with their own customs, language, and land with their own practices, flags, wood, and animals. They have separate arts for themselves and the principles of God, religion, and the world. They have separate methods in individual life, relationship systems, and smooth life. They are not getting much from contemporary people, lack a money-based economy, and have not accepted any new products that have been developed by contemporary industry. Since these people live in conjunction with nature, the food system of these people was natural. This article makes this article about the Tamil tribes of Malayali, Paliyar, Patar, Cholakar, and the people.


முன்னுரை       

    பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாக ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும் சுமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள் வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள். இம்மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற காரணத்தினால் இம்மக்களின் உணவு முறையும் இயற்கையானதாகவே இருந்தது. இக்கட்டுரையானது தமிழகப் பழங்குடிகளான மலையாளி, பளியர், படகர், சோளகர், குறவர் மக்களான உணவு முறைகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.


உணவு – விளக்கம்       

      உணவு என்பதில் ‘உண்’ என்பதே அடிச்சொல்லாக அமைகிறது. அடிச்சொல்லை ஆதாரமாகக் கொண்டு உயிரினங்கள் உண்ணப்படும் அனைத்துமே உணவு எனக் கருதலாம். உயிரினங்கள் உண்ணப்படும் உணவானது காலத்திற்கு ஏற்ப உணவாகவும் , மருந்தாகவும் பயன்படுகிறது.


உணவின் இன்றியமையாமை
         

       உணவு  ஒரு சமுகத்தின்  ஒழுக்கத்தை  நிர்ணயிக்கும்   பண்பாக  அமைகின்றது. மழை இல்லாமல் இரண்டாண்டுகள் சென்றால் ஏற்படும் பஞ்சத்தினால்  கொள்ளை, கொலை போன்ற  சமூகச் சீர்கேடுகள் நடக்கின்றன. எனவே உணவு என்பது சமூகத்தின் பண்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது. பண்பாட்டுப் பிழை ஏற்படுவதால் பசியை நோய் என்று பழந்தமிழர் குறித்துள்ளனர். இதனாலேயே புறநானூறு பண்ணன் வள்ளலை “பசிப்பிணி மருத்துவன் எனக் குறித்துள்ளது. உணவின் பிண்டமாகிய உடம்பு உயிரைச் சுமந்து கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சே. நமச்சிவாயம் கூறுகின்றார் மேலும்,


’ உண்டிகொடுத்தோ ருயிர் கொடுத்தாரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்’     (புறம்; 18:19:20)

என்று குடபுலவியனாரும்,


மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே   (மணி.11:95-96)


       என்று சாத்தனாரும் உணவு கொடுத்துப் பசியை நீக்குதல் நலம் எனக் குறித்துள்ளனர்.  


பழங்குடி மக்களின் உணவு முறைகள்

      பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப உணவுமுறைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் காட்டில் கிடைக்கும் பழங்களையும் காய்களையும் ஆரம்பகாலத்தில் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டைமூலமும் வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைப் பெற்றனர். மலையாளிப் பழங்குடி மக்கள் பலா, அன்னாசி, வாழை, கொய்யா, களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியவற்றையும் உண்கின்றனர். வீட்டின் முன்பு வளரும் காய், கீரை, வகைகள் மற்றும் ஏதேனும் பயறு வகைகளையும் கேழ்வரகு உணவோடு சேர்த்துக் கொள்கின்றனர். கேழ்வரகின் இரும்புசத்து இவர்களின் திடகாத்திர உடலமைப்பிற்கும் கடின உழைப்புக்கும் உறுதுணையாக உள்ளது. பன்றி, மான், கரடி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகினறனர்1 என்று கு.சின்னப்பபாரதி கூறுகின்றார்.


        மேலும் மலையாளி இனமக்கள் முற்காலத்தில் கிழங்கு, தேன், கனி, முதலியவற்றை உணவாக உண்டு வந்துள்ளனர். பின்பு தானியங்களைப் பயிரிட்டு தானிய உணவினை உட்கொள்ள ஆரம்பித்தனர். வரகு கஞ்சியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொண்டனர். மேலும் திணை, வரகு, பனிவரகு,  கம்பு போன்ற தானிய வகைகளையும் மொச்சை, பருப்பு, வகைகளான அவரை, மொச்சை, கருமொச்சை, செம்மொச்சை ஆகியவற்றையும் தங்களுடைய அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர்.  கீரை வகைகளையும் காய்கறி வகைகளையும் பயன்படுத்துகின்றனர். அவ்வபோது சிறிய பறவை வகைகளையும் காட்டுப்பன்றி, காட்டுக்கோழி, உடும்பு,  முள்ளம் பன்றி கறியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொள்வதோடு விருந்து உபசரணைக்கும் பயன்படுத்துகின்றனர். மேலும் கோதம்பு முதலிய பலவகை உணவு தானியங்களையும் உணவுப்பொருட்களாக உட்கொள்கின்றனர். இவ்வாறு உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டதற்கு சமவெளிப் பகுதிமக்களுடன் கொண்ட தொடர்பே முக்கியக் காரணம் எனலாம். மலையாளி இனமக்கள் தங்கள் மரபு வழி உணவை மட்டுமல்ல மரபு சார்பண்பாட்டையும் இழந்துள்ளனர்2 என்று அ. நடராஜன் கூறுகின்றார். மேலும்  இம்மக்கள் உடும்பு, காட்டுப்பன்றி, மான், புனுகுபூனை, முயல், முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, காட்டுப்பறவைகளை வேட்டையாடி காட்டில் இருக்கும் கடும்பாறையின் மேல் போட்டு இயற்கை முறையில் கடும்வெயில் சூட்டில் வேகவைத்து உண்டு வாழ்ந்தனர்.


       இது சமைத்தலின் ஆரம்ப நிலையாகும். சமைத்தலின் அடுத்த படிநிலையாக பாறை குழிகளின் வேட்டை விலங்கின் மாமிசத்தை இட்டு சுற்றிலும் தீயிட்டு சுட்டுத் திண்ணும் உணவுமுறை உருவானது எனலாம் இதனை விளக்கும் விதமாக புறநானூறு,


முயல் சுட்ட ஆயினும் தருகுவோம்”  – புறம். 319-8
         

பளியர் இனப் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு வகைகள், தேன், பலா, பச்சைக் கடலை போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர். பன்றி, மான், முயல், காட்டுக்கோழி போன்றவற்றை வேட்டையாடியும் உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். மேலும் காட்டுப்பழங்கள், ஈச்சம்பழம், தேன் ஆகியவற்றுடன் மான், பன்றி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர்3. படகர் இனப்பழங்குடி மக்கள் பாலும் நெய்யும் கலந்த பொங்கலை உண்டதாகக் குறஞ்சித்தேன் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலும் வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவலானப் பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள்4 என்று கூறப்பட்டுள்ளது. 

         இதன் மூலம் படகரின மக்களின் உணவு முறையை அறிந்து கொள்ளலாம். மேலும் இம்மக்கள் தங்கள் காடுகளில் கடுமையாக உழைத்து அதன் மூலம் கிடைத்தவற்றையே உணவாகக் கொண்டனர். சாமை, ராகி, கோதுமை, கஞ்சே இவற்றைக் களியாகச் செய்து உண்கின்றனர். இவர்கள் ஒரே வகை உணவை இரு வேளைகளிலும் உண்பர். உழைக்கும் நேரங்களில்  தேநீர் அல்லது காப்பி, கோதுமை, மாவினால் செய்யப்பட்ட உணவு முதலியவற்றை உண்கின்றனர்  என்று க. பார்வதி கூறுகின்றார்5. படகர் இன மக்கள் இன்றைய சூழலில் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர் என்றும் அறியமுடிகிறது. சோளகர் பழங்குடி மக்கள் ராகியை விளைவித்து அத்துடன் சில காய்கறிகளையும் சேர்த்து உண்டனர்.
சமீப காலமாக அரிசி  இவர்களின் முக்கிய உணவாக மாறி வருகின்றது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை, ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் போன்றவற்றையும் சேர்த்து உண்கின்றனர்6 என்று ச. பாலமுருகன் தனது புதினத்தில் கூறுகின்றார். குறவர் இனப் பழங்குடி மக்கள் புறா, முயல், காட்டுப்பூனை, பன்றி, வெள்ளை எலி, கீரிப்பிள்ளை, கொக்கு, அணில் போன்றவற்றை வேட்டையாடி, உணவாக உட்கொண்டனர். குறிப்பாக பாண்டியக் கண்ணன். “அணிலை பிடித்து, அல்லது உறித்து உப்பு தடவி சுட்டு கள்ளுடன் சேர்த்து சாப்பிடுவது” போன்றவற்றை குறவர் பழங்குடி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்7 என்று கூறுகிறார்.


          மேலும் குறவர் இன மக்கள்  பண்டைய காலத்தில் கிழங்கு, தேன், கனி, விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை  உணவாக உட்கொண்டனர். குறப்பெண்கள் கடமானின் தசையும் பன்றித் தசையும் உடும்புக் கரியையும் புளியோடு கலந்து உலை நீரில்  மோரை வார்த்து மூங்கிலின் அரிசியை உலையில்  இட்டு வெண்சோறு சமைத்து உண்டனர். பின் பாம்புக் கறியையும் சாப்பிட்டனர்.  பாம்பைப் பிடித்து அதன் தோலை உரித்து அதிலுள்ள நச்சு தன்மையை நீக்கி உண்டனர். பாம்பின் நெய் மூட்டு வலிக்குப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய குறவர் இன மக்கள் நெல், வரகு, கம்பு, திணை, கேழ்வரகு, கிழங்கு, சாமை முதலியவறை உண்டு வருகின்றனர். விலங்கு கறியான ஆமை, காடை, கெளதாரி, உடும்பு, வெற்கீரி, அணில், கொக்கு, உள்ளான், ஆலாவு மைனா, குட்டியான் ( குருட்டுக் கொக்கு) கோழி, கொக்கு, காட்டுக்கோழி, ஆடு, காட்டுப்பூனை, காணாங்கொத்தி, பன்றி ஆகியவற்றையும் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்8  இவ்வாறு பழங்குடி மக்கள்  வாழ்விடச் சூழல் பிற மக்கள் தொடர்பு நிலை போன்றவற்றின் அடிப்படையில் உணவுமுறை அமைந்துள்ளது.
 

முடிவுரை         

            பழங்குடி மக்களின் உணவு முறையானது அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. இவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற காரணத்தினால் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் கிடைக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டை மூலமும், வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தாங்களே உற்பத்தி செய்யது பயன்படுத்தினர். இன்றையச் சூழலில் நவீன வளர்ச்சி, உலகமயமாக்கல், நகரமயமாக்கல், நகர மக்களின் தொடர்பு போன்றவற்றின் காரணமாக இம்மக்கள் பல்வேறு உணவுக்குப் மாறியுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.


மேற்கோள் நூல்கள்

1.கு. சின்னப்பபாரதி, சங்கம், ப.66


2.அ. நடராஜன், கொல்லிமலை மலையாளிகளின் வாழ்வியல், பக், 47-48


3.கொ.மா. கோதண்டம், குறிஞ்ஞாம்பூ, ப.6


4.இராஜம்கிருஷ்ணன், குறிஞ்சித்தேன், ப.67


5.க. பார்வதி, படகர் வாழ்வியல், ப.67


6.ச. பாலமுருகன், சோளகர்தொட்டி, ப.186


7.பாண்டியக்கண்ணன், சலவான், ப.50


8.மு. சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் பழங்குடி மக்கள் வாழ்வியல்,
   முனைவர்பட்ட ஆய்வேடு, பக்.54-55


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சு. பிரபாகரன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தூய வளனார் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்),

கோவூர், சென்னை – 600 128.

 

Neithal Thinai Mayakkamum Perazhivom|Dr.N.Dharmaraj

நெய்தல் திணை மயக்கமும் பேரழிவும்

“நெய்தல் திணை மயக்கமும் பேரழிவும்”

Abstract
           

      In today’s modern period, the state of human life has been undergoing various changes. Human lifestyle is gifted to them as a state of emergency, urgent pleasure, and emergency. The purpose of the article is to explore this, although there are many issues (economic extremism) in today’s world, but a common problem for all countries.


ஆய்வுச் சுருக்கம்
         

       இன்றைய நவீன காலகட்டத்தில் மனித வாழ்க்கையின் நிலை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி உள்ளது. மனித வாழ்க்கை முறையானது அவசர தேவை, அவசர இன்பம், அவசர முடிவு என்ற அவசரகதியான நிலை பேரழிவை அவர்களுக்கு பரிசாக தரவுள்ளது. இன்றைய உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் (பொருளாதார தீவிரவாதம்) போன்றவை காணப்பட்ட போதிலும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது” புவி வெப்பமடைதல்” என்ற நிகழ்வாகும். இதைப் பற்றி ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாகும்.


முன்னுரை         

         இந்தப் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும், கட்டுரை பூவி வெப்பமடைவதற்கான காரணங்களையும், அதனால் தோன்றக்கூடிய விளைவுகளையும் கூற உள்ளது. குறிப்பாக, நெய்தல் திணை மயக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவே இப்பவி வெப்பமடைதலுக்கான முக்கிய காரணம்; அதனால் பேரழிவு ஏற்படும் என்பதை விளக்குவதே நோக்கமாக்கும். 


நெய்தல் திணை விளக்கம்
         

        தமிழ் இலக்கியத்தில் கடலும் கடல் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்பார்கள். பூமி உருண்டையை சுற்றியுள்ள பெரும்  பகுதியான உப்பு நீரை தான் கடல்கள் என நாம் அழைக்கின்றோம். இது சுயமான பூக்கோல அமைப்பாகும். கடலின் ஆழமான உட்பகுதிக்கும் கரைகளுக்கும் விசேஷமான புவியியல் கட்டமைப்பு உள்ளது. கடல் நீரின் ரசாயன உள்ளடக்கமும் அதில் காணப்படும் பௌதிக நிகழ்ச்சி போக்குகளும் தனித்தன்மை வாய்ந்தவை. கடலின் அடியில் உள்ள நிலப் பகுதிக்கு குறிப்பிட்ட உள்கட்டமைப்பும் வெளி வடிவங்களும் உள்ளன. புவியியல் நிகழ்ச்சி போக்குகளால் உண்டாகும் இந்த வெளிவடிவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. இவை கடல் அடியாளத்தின் கட்டமைப்பிலும் வெளிப்படுகின்றன. கடல் அடித்தளத்தின் வடிவங்கள் நான்காக பகுக்கப்பட்டுள்ளன. அவை

1. கண்டதிட்டு

2. கண்ட சாய்வு

3. கண்ட கீழ்ப்பகுதி

4. கடல் படுகை என்பதாகும்.
         

கண்டத்திட்டு எனப்படுவது சாதாரணமாக கண்டத்தின் ஓரமாக இருக்கும் ஆழமில்ல கடற்பரப்பு. இது கடல் நீரில் கீழ்ப்பகுதி வரை செல்லும் கண்டத்தின் பகுதியாகும். பெரும்பாலும் இது கடலால் மூழ்கடிக்கப்பட்ட கரையோர சமவெளியாக இருக்கும். கடல் மட்டம் இன்று உள்ளதை விட குறைவாக இருந்தபோது நிலவிய பண்டைய ஆற்றுப்பள்ளத்தாக்குகள். கரையோரங்களில் சுவடுகள் இங்கு காணப்படும்.
         

கண்ட சாய்வு என்பது  கண்டத்திட்டின் வெளி விளிம்பிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கிய கடல் அடித்தளத்தின் சாய்வு இது புவி அமைப்பு முறைகேட்ப பல்வேறு கடல்களில் இச்சாய்வு மாறுபடுகிறது.

கண்ட கீழ்ப்பகுதி என்பது கண்ட ஆய்விற்கும் கீழ்ப்பகுதியில் கடல்படுகைக்கும் இடையில் உள்ள பகுதி.

கடல் படுகை என்பது கடல் அடித்தளத்தின் மிகப் பரவலான பகுதி; அதிக அளவு கூறுபடுத்தப்பட்ட புடைப்புகளைக் கொண்டது.  இங்கு மலைகள், ஆழ்நீர் பள்ளங்கள், குன்றுகள், சமவெளிகள் உள்ளன. எல்லா கடல்களிலும் நடுக்கடலில் மலைத்தொடர்கள் தெளிவாக காணப்படுகின்றன.
         

     இன்று அறிவியலானது பல்துறை ஆராய்ச்சியின் மூலம் கடலில் உள்ளே ஒரு பிரதேச பகுதி காணப்படுகின்றது என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது. இத்தகைய விளக்கத்தையும் குறிக்கும் விதமாக, தவறின் பழம் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் முதற்பொருள் என்ற பாகுபாட்டில் வருணன் மேய பெருமடல் உலகம் என்று பூதமாக குறைத்துள்ளது  பூடகமாக உரைத்துள்ளது. இது எப்படி எனில், தொல்காப்பிய அகத்திணையிலே கடல் என்பதை குறிக்க படுதிரை முந்நீர் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நில வகைப்பாட்டில் உரைக்கின்ற பொழுது மட்டும் தொல்காப்பியர் தெளிவாக பெருமணல் என்று கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் சுட்டியுள்ளது; அவருடைய புவியியல் அறிவினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கடலையும் அதனை சார்ந்த இடத்தையும் நெய்தல் என்ற கடல்
         

      வாழ் தாவரத்தின் பெயரை குறியீடாக வைத்திருப்பது தொல்காப்பியருக்கு முன்பே மரபாக இருந்துள்ளது என்பது இளம்பூரணரின் கருத்தாகும். ஆகையினால் இக்கட்டுரை கடல் கடல் சார்ந்த பகுதியை தமிழ் இலக்கிய மரபுப்படி நெய்தல் எனவும், சில இடங்களில் கடல் தேவை கருதி எனவும் பயன்படுத்தப்படுகிறது.


நெய்தல் நிலத்தின் பயன்பாடு        

            நெய்தல் நிலத்தினுடைய பயன்பாடு என்பது கற்காலத்தே தொடங்கிவிட்ட நிகழ்ச்சியாகும். மனித உணவிற்கும் போக்குவரத்திற்கும் பல்வேறு வசதிகளுக்கும் பயன்பட்ட நெய்தல் நிலத்தின் முக்கிய பணி சூழலைக் கட்டுப்படுத்துதல் என்பதாகும்.
 உலகில் மூன்றில் துருவப் பகுதிகள் தவிர்த்து இரண்டு பங்கு கடல் சூழப்பட்டுள்ளது. உலகில் பருவ நிலைகளை, அதாவது தட்பவெப்பத்தை கடல் கட்டுப்படுத்துகின்றது. இதற்கு காரணம் வளிமண்டலத்தை தாண்டிய பிரபஞ்ச பகுதியில் இருந்து வரும் மின்னோட்டம் கடலில் பாய்கின்றது. இதனை கடலானது பூமியின் நன்மைக்காக, குறிப்பாக உயிரினங்களின் நன்மைக்காக, புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள வெப்பத்தை துருவப் பகுதிக்கும், அவ்வாறே துருவப் பகுதி உள்ள குளிரை நில நடுக்கோட்டு பகுதிக்கும் கொண்டு வந்து, தட்பவெப்பத்தை நிலை நிறுத்துகின்றது. இச்செயலுக்கு மிக முக்கியமான காரணியாக விளங்குவது கடல் நீரின் உப்பு தன்மையே ஆகும். கடல்நீர் என்பது வீரியமற்ற முற்றிலும் ஒரே மாதிரியான திரவமாகும். இதில் 96.5% நீர், சுமாராக 3.5 உப்புகள் மிகச் சிறிய அளவு திடப்பொருள்களின் துகள்கள் கரைந்த நிலையில், வாயுக்கள் அங்கத கூட்டுப் பொருள்களாக உள்ளன.


இதழ் திணை மயக்கம் மாசுபாடு திரிபு       

      நெய்தல் திணை மயக்கம் என்பது இங்கு நெய்தல் நிலமாச்சுபாடு திரிபையும் அதற்கான காரணங்களையும் சுட்டுதல்.  சாதாரண குப்பை கழிவு நீர் முதற்கொண்டு அணுக்கழிவு ஏவுகணை கழிவு எல்லாமும் கொட்டுகின்ற குப்பை தொட்டி கடல் என்ற நிலை உருவாகியுள்ளது. புதிய கண்டுபிடிப்பு மேம்பாடு போன்றவைகளில் ஒன்றான கடலிலே கால்வாய் தோண்டுதல் இதன் காரணமாக ஆழிப்பேரலையை தடுக்கும் இயற்கை அறனும் கடல் வாழ் உயிரினங்களின் உணவு மூலமாக விளங்கும் பவள பாறைகளும் சேதமுறுகின்றன. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.  புதிய கடற்கரை கடலோர மண்டலங்கள் என கடற்கரை பகுதிகளை நவீனப்படுத்துதல் என்ற செயல் பழந்தமிழர் வாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடிய பரதவ மக்களுடைய வாழ்க்கையையும் அவரது குடியிருப்புகளையும் அளிக்கின்றது. அழிக்கிறது.
         

     இதைப்போல இன்னும் கடலை மாசுபடுத்துகின்ற நிகழ்வுகளை கூறிக் கொண்டே போகலாம். இலக்கியத்திலே திணை மயக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது; ஆனால் உண்மை வாழ்வில் அது நிகழ்ந்தால் மிகுந்த ஆபத்தை தரும்.


நெய்தல் நில மயக்கமும் பேரழிவும்       

      புவி வெப்பமடைதல் தொடர்பாக இரு கோட்பாடுகள் அறிஞர்கள் இடையே முன்வைக்கப்படுகின்றன.


1. தானாகவே அதிகரிக்கும் முடிவு இறுதியில் பேரழிவு.

2. திடீரென வந்து தாக்கும் பேரழிவு என்பதாகும்.

3. தானாக அதிகரிக்கும் முடிவு பேரழிவு
         

        உலகம் வெப்பமடைவதற்கான காரணமாக கூறப்படுவது, துருவப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், இதன் விளைவாக வளிமண்டலத்தில் கலக்கும் நீராவி அளவு அதிகரித்து அவை பசுமை இல்லா வாய்வாக மாறி சூரியனிடமிருந்து வெப்பத்தை ஏற்று பூமியின் மீது அனுப்புகின்றன. இதனால் புவி வெப்பமடைகிறது. இது சுழற்ச்சியாக நடந்து, பனிப்பாறைகள் மேலும் உருகுதல், கடல் மட்டம் உயர்தல், நீராவியின் அளவு அதிகரித்தல், இதன் விளைவு காலநிலை மாற்றம், கடைசியில் பேரழிவு.

திடீரென வந்து தாக்கம் பேரழிவு
         

       மேலே கூறியவாறு பனிப்பாறைகள் உருகி கடல் நீருடன் கலந்து ஆவியாகி பசுமை இல்லா வாய்வாக மாறுதல் பூமி வெப்பம் அதிகரித்து அதிகமாக பனிப்பாறைகள் உருகுகின்றன இந்நிலையில் இது மற்றுமொரு வகையான
           

    ஆபத்தினை தருகின்றது இந்நிகழ்வு கடலின் உப்பு தன்மையினை குறைக்க வைக்கின்றது பனிப்பாறைகளில் தூய நீர் கடல் நீருடன் கலப்பதால்  கடல் மின்கடத்தும் தன்மையை இழக்கும் இதனால் காலநிலை சீராக்கும் என்ற கடலின் முக்கிய பணி தடைப்பட்டு புவி வெப்பமும் குளிரும் இடமாறும் தன்மை போகும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய கண்டம் உள்ளிட்ட நாடுகள் கடும் குளிரில் சிக்கும் அபாயம் உள்ளது தற்பொழுது வரலாறு காணாத பனிப்பொழிவு அமெரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் உணவு உற்பத்தி மின்சாரம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் மேலும் பெரும்புயல் வெள்ளம் தாக்கும் இதனால் கடலோரங்கள் கடலில் மூழ்கும் இத்தகைய நெய்தல் நில மயக்கத்தால் பூமியில் வரலாற்றில் கூறியுள்ளது போல நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் நிலை உள்ளது இதனையே கவிஞர் சுரதா


பொடி மணல் உலகை சூழ்ந்த

போர்க்கடல் மாந்தர் தம்மை

வடிந்திடா நீரினாலே வஞ்சிக்கும்

நெய்தல் நீர் இயற்கை எழில்
         

    என்று குறிப்பிட்டுள்ளார். அன்று தொல்காப்பியன் நெய்தல் திணைக்காக வகுத்த இரங்கலம்  இரங்கலும்இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் வருங்கால மக்களின் வாழ்வில் வர நேரிடும் என்ற அச்சம் தோன்றுகின்றது.


பார்வை நூல்கள்

1. கடல்களும் மனிதனும் ப.ஸ்லோகின்
 மொழிபெயர்ப்பு: இரா பாஸ்கரன்
 முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ விற்பனையாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.


2. நெய்தல் முகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் நாகப்பட்டினம்


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் ந. தர்மராஜ்,  

இணைப் பேராசிரியர், 

செயின்ட் ஜோசப் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்), 

கோவூர்- சென்னை.

 

Vethakkannin Keerthanai Nadakangalil Isaiyum Porunmaiyum|Dr.T.R.Hebzibah Beulah Suganthi

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்


Abstract
               

         In the 18th and 19th centuries, Keerthanai drama emerged as a notable development within Tamil dramatic literature. Among these Keerthanai dramas, Vethakkan’s Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi are notable for their adaptations of Milton’s Paradise Lost and Paradise Regained. This study critically examines the literary and musical dimensions of these Keerthanai dramas. It specifically investigates the structural and contextual aspects of the three primary components of Keerthanai: Pallavi, Anupallavi, and Charanam. Through a thorough analysis, the paper provides a nuanced critique of the musical and literary elements present in Keerthanai dramas and introduces novel insights into the compositional frameworks of Vethakkan’s works. Furthermore, this research elucidates the cultural and contextual impacts of Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi, thereby offering a comprehensive re-evaluation of the literary significance of Tamil Keerthanai dramas.


Keywords: Keerthana Drama, Musical Elements, Tharu, Pallavi, Saranam, Rhythm


ஆய்வுச் சுருக்கம்
         

        நாடக இலக்கியங்களின் வளர்ச்சியாக 18,19 ஆம் நூற்றாண்டில் கீர்த்தனை நாடக இலக்கியங்கள் தோன்றின.இக்கீர்த்தனை நாடக இலக்கியங்களில் அ.வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி ஜான் மில்டனின் சொர்க்கம் நீக்கம், சொர்க்கமீட்சியும் தழுவி எழுதப்பட்டனவாகும்.இக்கட்டுரை, இக்கீர்த்தனை நாடகங்களில் இலக்கிய மற்றும் இசைத் தன்மைகளை ஆராய்கிறது.குறிப்பாக் கீர்த்தனையில் பயின்று  வரும் பல்லவி, அனுபல்லவி, மற்றும் சரணம் ஆகிய மூன்று பிரிவுகளின் அமைப்பு மற்றும் அவற்றின் பொருத்தப்பாட்டினை ஆராய்கிறது. இந்த ஆய்வில், கீர்த்தனை நாடகங்களில் உள்ள இசை மற்றும் இலக்கியவியல் பரிமாணங்கள் பற்றிய ஆழமான விமர்சனங்கள், மற்றும் வேதக்கண்ணின் படைப்புகளில் உள்ள பாடல்களின் அமைப்புகளைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும், “ஆதி நந்தவனப் பிரளயம்” மற்றும் “ஆதி நந்தவனம் மீட்சி” ஆகிய நாடகங்களின் கலாச்சார மற்றும் தொகுதித் தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்யும் இந்த ஆராய்ச்சி, தமிழ் கீர்த்தனை நாடகங்களின் இலக்கிய மதிப்பைப் புதிய முத்திரையுடன் விளக்குகிறது.


தரவுச்சொற்கள்

கீர்த்தனை நாடகம், இசைத் தன்மைகள், தரு, பல்லவி, சரணம், தாளக்கட்டு


முன்னுரை
         

       தமிழ் நாடக இலக்கியங்களில் கீர்த்தனை நாடக இலக்கியமும் ஒரு வகை. இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழின் முழு வடிவாய்க் கீர்த்தனை நாடகங்கள் விளங்குகின்றன. இக் கீர்த்தனை நாடகங்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி அடைந்தன. அக்கீர்த்தனை நாடகங்களுள், அ. வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற கீர்த்தனை நாடகத்தில் இடம் பெறும் கீர்த்தனைப்பாடல்கள் இவண் ஆராயப்படுகிறது.


அ.வேதக்கண்
         

        அ. வேதக்கண் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலான்விளை என்னும் ஊரில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து மதப் பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்பட்டவர். இவர் தம்  தொடக்கக் கல்வியை நெய்யூர் போர்டிங் பள்ளியில் பயின்றார். பின் நாகர்கோவில் இறையியல் பள்ளியில் இறையியல் கல்வியை முடித்தார். இறையியல் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம் ..முதலிய மொழிகளைக் கற்று அறிந்த இவர் மேலும் மூன்று மொழிகளைத் தாமே முயன்று கற்று  ஏழு மொழிகளில் பேசும் திறன் உடையவராக விளங்கினார். பன்மொழி அறிஞராகத் திகழ்ந்த இவர் தமிழ் மொழியில் 13 நூல்களை எழுதியுள்ளார்.
         

        உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்களின் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்களில் ஒருவரான  ஜான் மில்டன் எழுதிய Paradise Lost, Paradise Regained ஆகிய நூல்களைத் தழுவி அருள் திரு அ. வேதக்கண் ஆதி நந்ததாவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி என்னும் கீர்த்தனை நாடகங்களைப் படைத்துள்ளார். ஆதிநந்தவனப் பிரளயம் 1862ஆம் ஆண்டில் முதல் பதிப்பாகவும் 1868 இல் இரண்டாம் பதிப்பாகவும் இலண்டன் மிஷனரிஅச்சகம் பதிப்பித்தது. இதன் சிறப்புக் கருதி கிறித்தவ இலக்கிய சங்கம் ஏறத்தாழ ஒரு  நூற்றாண்டு கழித்து 1992ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டது.


ஆதி நந்தவன பிரளயமும் சுவர்க்க நீக்கமும்
         

        கிறித்தவ விவிலியத்தில் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் முக்கியத்துவம் பெறுவது போல சொர்க்க நீக்கமும் சொர்க்கமீட்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. பழைய ஏற்பாட்டில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியும் கனியைச் சாத்தானின் வஞ்சனையால் உண்டு தேவ கட்டளையை மீறி பாவம் செய்து சொர்க்கத்தை விட்டு நீக்கப்படுகிறார்கள். சாத்தானின் பேச்சுக்கு இணங்கி தேவர்களைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அறிவு மரத்தின் கனியை உண்டதால் நன்மை தீமை பற்றிய  அறிவு, தீவினை, நோய், முதுமை, சாவு ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். பூலோகத்தில் பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் உலகின் முதல் மனிதர்கள். இவ்வாறு பாவம் செய்து சாத்தானுக்கு அடிமைகளாய்க் கிடந்த மனிதர்களை மீட்க இயேசு மனிதனாக உலகில் வந்து சாத்தானின் சோதனைகள் யாவற்றையும் வென்று மனிதர்களைப் பாவத்தில் இருந்து மீட்டு இழந்த சுவர்க்க வாழ்வை மீட்டுக் கொடுக்கிறார். ஜான் மில்டன் கிறித்தவ விவிலியத்தை மூலமாகக் கொண்டு paradise lost, paradise Regained  என்ற நூல்களை எழுத, வேதக்கண் ஜான் மில்டனின் காப்பியங்களையே தம் கீர்த்தனை நாடகங்களுக்கு மூல நூலாகக் கொண்டு இரு கீர்த்தனை நாடகங்களாகப் படைத்துள்ளார்.


கீர்த்தனை நாடகம்

         ஒரு வரலாற்றைக் கீர்த்தனைகளினால் நாடகத் தன்மை விளங்க எழுதுவதை நாடகக் கீர்த்தனைகள் எனலாம். கீர்த்தனைகள் இசைப்பாடல்கள் இராகத்தாளங்களுடன் அமைபவையாகும். இக்கீர்த்தனைப் பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முப்பிரிவுகளை உடையவை. கீர்த்தனைப்பாடல்கள் அனுபல்லவி இன்றியும் வரும். நாடகத் தன்மை செயல்பாடுகள் உணர்ச்சி வேகங்களைக் கொண்டு அமையும் இக்கீர்த்தனை நாடகங்கள் கீர்த்தனைகளை மிகுதியாக கொண்டு நாடக இயல்புகளுடன் எழுதப்பட்டுள்ளன.  நாடகக் கீர்த்தனைகள் தமிழ் மொழியில் ஒரு இலக்கியமாக 18,19 ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் பேராதரவுடன் நன்கு விளங்கின. கீர்த்தனங்களுடன் ஈரடி கண்ணிகளால் அமைந்த இசைப் பாடல்களும் கதை விளக்க குறிப்புகளாலான விருத்தங்களும் நாடகக் கீர்த்தனைகளில் இடம்பெறுவது மரபு. கீர்த்தனைப் பாடல்களைத் தரு என்றும் அழைப்பர் தமிழ் மொழியில் பல நாடக கீர்த்தனைகள் எழுதப்பட்டு இசைவாணர்களால் இன்னிசை பொழிவுகளாகப்  (காலட்சேபம்) பல நாட்கள் தொடர்ந்து ஆவல் ததும்ப சுவைக்கும் மக்கள் முன்பு மிகவும் இனிமையாக இசையுடன் விளக்கப்படும். பெரும்பாலும் நாடறிந்த நல்ல வரலாறுகளையே நாடகக் கீர்த்தனைகளாக எழுதுவது வழக்கம் (ஏ.என். பெருமாள்,தமிழர் இசை,ப.85).


கீர்த்தனை நாடகங்கள்
         

        அருணாச்சல கவிராயர் எழுதிய இராம நாடக கீர்த்தனையைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் ஆகிய  கீர்த்தனை நாடகங்களைத் தொடர்ந்து இசுலாமியர்களும்  கிறித்தவர்களும் தங்கள் சமய கருத்துக்களைப் பரப்பும் பொருட்டு கீர்த்தனை நாடகங்களை எழுதினர். வீரமாமுனிவர் தேம்பாவணிக் கீர்த்தனை , தேம்பாவணிக் கீர்த்தனை இரண்டாம் காண்டம் என்ற இரு கீர்த்தனை நாடகங்களை எழுதியுள்ளார்.  அ.வேதக்கண் எழுதிய  இரண்டு கீர்த்தனை நாடகங்களும் வேதக்கண்ணால் மக்களிடம் காலட்சேபம் செய்து பாடப்பட்டன.


ஆதி நந்தவன பிரளயம் கீர்த்தனை  நாடக நூல்அமைப்பு
        

         பலதரப்பட்ட சிறந்த பண் அமைப்பும், தாளக்கட்டும் உடையனவாய் இசைக்கப்படும் கீர்த்தனைகள் ஆசிரியர் தம் இசைப் புலமையை வெளிக்காட்டும் மொழி திறன்கள் ஆகும். கீர்த்தனையில்  பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகளில் பல்லவியே கரு; இதன் தொகை விரிவுகளே பின்வரும் அனுபல்லவி, சரணங்கள். எனவே பல்லவி இன்றி கீர்த்தனைகள் அமைவதில்லை ஆயின் அனுப்பல்லவி இன்றிக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. சரணங்கள் கீர்த்தனையின் விளக்கப் பகுதியாகும். சரணம் முடிந்தவுடன் பல்லவியைத் தொடர்ந்து பாடுதல் வேண்டும். ஆதி நந்தவனப் பிரளயத்தில் 39 கீர்த்தனைகளும் ஆதி நந்தாவனமீட்சியில் 41 கீர்த்தனைகளும் தோடயப் பகுதியில் 3 கீர்த்தனைகளும் ஆக மொத்தம் 83 கீர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.


கீர்த்தனை
         

        கீர்த்தனை என்ற சொல்லுக்கு ‘கீர்த்தி’ என்பது அடிச்சொல். இது ‘புகழ்’ எனப் பொருள்படும். தமிழில் ‘இசை’ என்ற சொல்லுக்கு ‘புகழ்’ எனப் பொருள் இருப்பது இங்கு கருதத்தக்கது. கீர்த்தனை என்னும் சொல் வடிவம் இடைக்காலத்தில் தோன்றியது; கீர்த்தியைப் பாடுவது கீர்த்தனை.


சீர்-புகழ்,கீர்-புகழ்,(சீர்=கீர்),

கீர்+த்+த்+இ=கீர்த்தி,

கீர்த்தி+அன்+ஐ=கீர்த்தனை         

       மாந்தன் தன் அறிவுக்கு எட்டிய அளவில் அறிந்து போற்றிப் புகழும் இன்னிசைப் பாடலே கீர்த்தனை எனப்படும். கீர்த்தனை, கிருதி, கீதம் என்பன பொதுவாக ஒன்றெனக் கருதப்பட்டாலும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. கீதம் என்பதும் இசைப் பாடலே; எனினும் கீதத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பிரிவுகள் இல்லாமல் ஒரே பாடலாக அமைந்திருக்கும். கீர்த்தனை, கிருதி என்பவற்றுள் கீர்த்தனையே இலக்கியச் சிறப்பு உடையது; கிருதியில் இலக்கிய மேன்மை குறைவு; ஆனால் இசைத் திறம் அதிகம். கிருதிகளுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூவமைப்பு இன்றியமையாதது. கீர்த்தனைகள் அனுபல்லவி இல்லாமலும் வருவதுண்டு. கிருதியில் இசைத்திறம் அதிகமாக இருக்கும்; கீர்த்தனையில் பக்தி திறம் அதிகமாக இருக்கும். (எஸ்.சௌந்தர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்; ப.27) கீர்த்தனை என்ற பெயர் அமைய கீர்த்தனை தோன்றிய காலச் சூழல் காரணம் எனக் கருதலாம்.


பல்லவி
         

        கீர்த்தனைப் பாடலின் திரண்ட கருத்தைப் பல்லவியிலேயே அறிய இயலும். மீண்டும் மீண்டும் பாட இனிமை பயக்க வல்லன பல்லவிகள்; அனுபல்லவி பாடிய பின்பும் சரணம் பாடிய பின்பும் பல்லவியை மீண்டும் பாட வேண்டும். கீர்த்தனை ஆசிரியர் இக்கருத்தை உட்கொண்டே பல்லவியை அமைப்பர்.
பல்லவி ஓரடியிலும் அமைவதுண்டு. பெரும்பாலும் ஈரடியிலேயே பல்லவிகளை அமைப்பர். வேதக்கண் ஓரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் ஈரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் அமைத்துள்ளார்.


ஓரடியில் அமைந்த பல்லவி

‘மகனே நீயே ஒரு செய்தி வகை கேளாயே’ (ஆதி நந்தாவனப் பிரளயம்,ப.15)

மற்றும்
‘ஓசன்னா! சிம்மாசன னே! பாவமோசன்னா!’ (மேலது,ப.20)

ஈரடியில் அமைந்த பல்லவி

இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம் -ஆதமே

வீணில் இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம்   (மேலது,ப.105)

      என்பன போன்ற ஈரடியில் அமைந்த பல்லவி பாடல்கள் பல உள்ளன.


இயைபுத் தொடை நயம்
         

     பல்லவியில் கையாளப்படும் அதே இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் பெரும்பாலும் வருவதில்லை. அடியின் ஈற்றொலி ஒற்றுமைப்பட வருவதே
இயைபுத் தொடையாகும்.
 

‘ஏன் ஐயா மறுக்க வேணும் 

பாணம் ஊண் ஒறுக்கவேணும்?’ (ஆ.மீட்சி.ப.160)
           

      எனும் பல்லவியில் ‘வேணும்’ என்ற சொல் ‘ஈற்று’ச் சொல்லாக வந்தமையைக் காணலாம். இவ்வாறு வருவதே இயைபுத்தொடையாகும்.’வேணும்’என்ற சொல்லுக்கு இணைந்த  சொல்லாக வரும் இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் வராது. மீண்டும் மீண்டும் பல்லவி பாடும் போது அதில் வரும் இயைபுத் தொடை நயத்துக்கும் பின்வரும் அனுபல்லவி சரணங்களில் வரும் இயைபுத்தொடைக்கும் வேறுபாடு இருத்தலே சிறப்பாகும். இது பல்லவியை ஏற்புடையதாக்கக் கையாளப்படும் உத்தியாகும்.


எதுகைத்தொடை 
         

        இயைபுத்தொடை நயமின்றி எதுகைத்தொடை நயமும் பல்லவியில் உள்ளது. பல்லவியில் என்ன எதுகை வருகின்றதோ அதே எதுகை பெரும்பாலும் அனுபல்லவியின் முதல் அடியில் வரும். இது பல்லவியை எடுப்புடையதாக்கும் மற்றொரு உத்தியாகும்.


அடுக்க வேண்டாம் ஏவையே!

தாட்சண்யப் பாம்பே

அகன்று நில் இனி வராதே (ஆ.பிரளயம்,ப.81)

என்பது கீர்த்தனையின் பல்லவி. ‘அடுக்க’ என்று வரும் எதுகைக்கு ஏற்ப
அனுபல்லவியில் ,


‘துடுக்கண் அலகையோடு

துணிந்தெனைச் சதி செய்த’  ( ஆ.பிரளயம்,ப.81)
         

      என அமைந்துள்ளது.துடுக்கண் என்ற சொல் எதுகை நயம்பட உள்ளது. இதே எதுகைச்சொல் அனுபல்லவியைத் தொடர்ந்து வரும் சரணங்களில் அமைவதில்லை.
 பொருள் நிலையில் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் சரணத்திற்கும். முரண் இருத்தல் கூடாது. பல்லவி,அனுபல்லவி,சரணம் மூன்றும் ஒரே கருத்தையொட்டி ஒன்றுக்கொன்று இணக்கமாக அமைதல் இன்றியமையாத கீர்த்தனை இலக்கணம் ஆகும். வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றும் ஒரே கருத்தை விளக்கும் தன்மையதாய் பொருள் நிலையில் முரணில்லாத தன்மையில் பாடப்பட்டுள்ளன.


அனுபல்லவி         

        அனுபல்லவி என்ற சொல்லுக்குப் பல்லவியைத் தொடர்ந்து வருவது என்பதே பொருளாகும். பல்லவிக்கு விளக்கமாக நிற்பது அனுபல்லவியாகும். அனுபல்லவியைப் பாடி முடித்ததும் மீண்டும் பல்லவியை எடுத்துப் பாட வேண்டும்.(எஸ்.சௌந்திர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்.ப.27)


‘விருந்து வைத்தானே!

சம்பிரதாயம்தெரிந்திடத் தானே! ‘  (ஆ.மீட்சி.ப.161)
         

        என்பது பல்லவி. இப்பல்லவியில் யார் விருந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.அதைத் தொடர்ந்து வரும் அனுபல்லவியில் அதன் விடை உள்ளது.


விருந்து வைத்தனன் தெரிந்து சோலையில்

மேசியா வேசுமுன் ராஜபவுசினில்

மருந்திதை விட வேறில்லை என்றெண்ணி

மந்திர இந்திரமகா தந்திர சாத்தானவன் (மேலது).         

         என்ற அனுபல்லவியைப் பாடிய பின்னரே விருந்து வைத்தவன் சாத்தான் என்று அறிய முடிகிறது. அனுபல்லவியை ஒருமுறை பாடிவிட்டுத் திரும்பவும் பல்லவியைப் பாடுவது சிறப்புடையதாகும். பல்லவியினும் சிறிது உயர்ந்த ஓசை கொண்டது அனுபல்லவி. தாழ்ந்த எடுப்பிற்கும், மிகுந்த உச்ச ஒலிக்கும் இடைப்பட்ட பாலமாக நின்று உதவுவதுஅனுபல்லவியாகும். அனுபல்லவியினும் உயர்ந்த ஒலிநிலைக்கு இராகம் சென்று , பின்பு இறுதி நிலை அடைந்து அமர்வது சரணத்தில் தான்.(மேலது) வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் இரண்டடி அனுபல்லவி பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளது. நான்கு அடியில் அமைந்த அனுபல்லவிப் பாடலையும் சிறுபான்மையாக அமைத்துள்ளார். எட்டு வரிகளில் ஒரு அனுபல்லவிப் பாடலை அமைத்துள்ளார்.


சரணம்
         

       பல்லவி அனுபல்லவிகளில் குறிப்பாகக் கூறப்பட்ட கருத்து மிக விளக்கமாக வருவது சரணத்தில் தான். பாடுபொருளை வருணித்துக் கூற இடம் அளிப்பது சரணப் பகுதி. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பாடப் பெறும் பல்லவியால் சரணப்பகுதி மேலும் சிறப்படைவதைக் காண முடியும்.சரணங்களை ஒரே மூச்சில் பாடி முடிப்பது சிறப்பன்று.


‘பார்வை பாவம் இல்லை என்றெண்ணாதே -வேசை

பார்வை உனை இழுக்கும் நண்ணாதே'(ஆ.பிரளயம்,ப.47)
         

    என்ற சரணம் மோனைத் தொடையழகும் இயைபுத் தொடை அழகும் பெற்றுப் பாடலிற்கு எழிலூட்டுகிறது. பல்லவியின் எடுப்பு எந்த இராகமோ அதே இராகமே சரணத்தின் இறுதி வரையிலும் வரும்; தாளமும் அவ்வாறே அமையும்.


‘சாற்றும் யோர்தானெனும் ஆற்றங்கரையிலே

நோற்ற யோவானுனை போற்றினனே, பரன் 

தேற்றினனே நமக் கேற்ற சுதனென

வேற்றுமை நீயிங்கு தோன்றிய தெப்படி.’ (ஆ.மீட்சி,ப.132)

       எனும் இப்பாடலின் சரணத்தில் ‘சாற்றும்,நோற்ற,தேற்றினன், வேற்றுமை’ என்பதில் இரண்டாம்  எழுத்து ஒன்றி வந்து எதுகைத்தொடை நயத்துடன்  அமைந்துள்ளது.


முடிவுரை
         

       முத்தமிழால் ஆக்கப்பட்ட வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்கள் படிப்பதற்கும் இசைப்பதற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இவரது கீர்த்தனைப் பாடல்கள் சிறந்தபண்ணமைப்பும்,தாளக்கட்டும் உடையனவாய் ஆசிரியரின் இசைப்புலமையை உணர்த்துகின்றது.  ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற இரு கீர்த்தனைநாடகங்களிலும் இடம் பெற்றகீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகள் பாடுபொருளின் தன்மைக்கேற்ப பொருள்நயத்துடன் பொருத்தமாகப் பாடப்பட்டுள்ளன.


பயன்படுத்திய நூல்கள்

1..அ.வேதக்கண்.அ, ஆதிநந்தாவனப்பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி, கிறித்தவ இலக்கிய சங்கம், சென்னை.


2.சௌந்த பாண்டியன்.எஸ், தமிழில் கீர்த்தனை இலக்கியம்,  ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை.


3.பெருமாள்.ஏ.என். தமிழ்நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் , அணியகம், சென்னை.


4.பெருமாள் ஏ.என் தமிழர் இசை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை


5.சுந்தரம் வீ.பா.கா. தமிழும் இசையும் தமிழ்நாடு இறையியல் கல்லூரி, அரசடி, மதுரை.


6.ஞானராபின்சன்,(ப.ஆ) தமிழ் கிறித்தவ மரபு, தமிழ்நாடு இறையியல்கல்லூரி,
அரசடி, மதுரை-10.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஹெப்சிபா பியூலா சுகந்தி தா.இரா.,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

அறிவியல் மற்றும் கலையியல் புலம்,

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,

காட்டான் குளத்தூர் – 603203.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »