Sunday, July 20, 2025
Home Blog Page 13

கடிதம் எழுதுவது எப்படி?|இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

கடிதம் எழுதுவது எப்படி
     கடிதம் இல்லா உலகம் வெறுமையானது. மனிதனுடைய உண்மையான மனநிலையை எடுத்துக்காட்டுவது கடிதம் ஆகும். நேரிலே சொல்ல முடியாதவற்றை எல்லாம் எழுத்தின் மூலமாகக் காகிதத்தின் வழியாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கலாம். ஒவ்வொருவரும் கடிதம் எழுவது பற்றி அறிந்து வைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு இடத்திலும் கடிதம் மூலம் நாம் கேட்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்குமே மதிப்பு உண்டு.

      ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடி, துணிகளில் மையிட்டு எழுதி ஒற்றர்கள் (குதிரைகள்) மூலமாகவோ அல்லது புறாக்களில் கால்களில் கட்டியோ கடிதங்கள் அனுப்பட்டன. பின்னாளில் அதற்குத் தனியாக அஞ்சல் அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.  எந்தவொரு கிராமத்திற்கும் கடிதம் கொண்டு சென்று கொடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

       இலக்கியங்களில் கடிதங்களை நிறைய பார்க்க முடியும். அக்காலங்களில் மனிதர்களையே தூது என்ற வாக்கில் சொல்லி அனுப்பப்பட்டார்கள்.  ஆனால் இவ்வகையான முறைகளில் நாம் சொல்லும் அனைத்தும் சரியாகப் போய்ச்சேருமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் நாம் அனுப்பும் ஆள் கூட்டியோ குறைத்தோ சொல்ல முடியும்.  ஆதலால் கடிதம் மூலம் எழுதி அனுப்பும் முறைதான் சரியாக இருக்கும்.
     
கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, தூது இலக்கியங்கள், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், ஞாபக கடிதங்கள் எனக் காணமுடியும்.
கடித வகைகளை மூன்று வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
           
        மேற்கண்ட மூன்று வகையான கடிதங்களில் பிரிவுகளாகக் கீழ்க்கண்ட கடிதங்களை வரையறுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள்
1.விண்ணப்பக்கடிதங்கள்

2.அலுவலகக் கடிதங்கள்

3.புகார்க்கடிதங்கள்

4.வணிகக்கடிதங்கள்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
1.பாராட்டுக் கடிதங்கள் (வாழ்த்துக் கடிதங்கள்)

2.சுற்றுலாக் கடிதங்கள்
3.உறவுக்கடிதங்கள்
3.அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
 
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

எனப் பிரித்துக்கொள்ளலாம். மேற்கண்ட ஒவ்வொன்றின் தன்மையைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

 

அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள் | இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்

அழைப்பிதழ் சார்ந்த கடிதங்கள்
     அழைப்பிதழ் கடிதம் மிக முக்கியமான ஒன்றாகும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே இவ்வகையான கடிதத்தினைப் பயன்படுத்துவார்கள். வீட்டிற்கு வந்தவர்களை அழைத்து மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. நம் வீட்டிலே விஷேசம் என்றால் அவர்கள் வீடு தேடிச்சென்று அழைத்து மகிழ்வார்கள். அழைப்பிதழ் கொடுத்து அழைக்கும் முறையிலேயே உறவுநிலை எப்படி இருக்கின்றது என்பது தெரிந்து விடும்.

அழைப்பிதழ் கடிதங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகளாகப் பாகுப்படுத்தலாம்.
1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

2.உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்

1.பொது நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
           
       இவ்வகையான கடிதங்கள் பொது நிகழ்ச்சிகள் நடக்கும்போது வந்திருந்தவர்களை வரவேற்கும் பொருட்டும் அவர்கள் பெறும் சிறப்பகள் குறித்தும்  அமையும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

1.கல்லூரி விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கடிதம் வரைக.

2.தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கடிதம் ஒன்றை  தயார் செய்க.

3.நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.

4.இலவச உதவித்தொகை வழங்கும் விழாவை வைத்து அழைப்பிதழ் கடிதம் வரைக.

5.புதிய நூலகம் திறப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.

6.புத்தக வெளியீட்டு விழாவினை முன்வைத்து அழைப்பிதழ் கடிதம் தயார் செய்க.

7. பணி நிறைவு விழாவிற்கான அழைப்பிதழ் கடிதம் எழுதுக.

2. உறவு நிகழ்ச்சிக்குரிய அழைப்பிதழ் கடிதங்கள்
           
         இவ்வகையான கடிதங்கள் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மங்கள நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள இதர நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படும். அவைகள் கீழ்க்கண்டவாறு அமையலாம்.

1.திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.

2.காது குத்தும் விழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.

3.புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பிதழ் பத்திரிக்கை அமைக்க.

4. இறந்தவர்க்கு கிரியைப் பத்திரிக்கை அமைக்க.

5.கோவில் கும்பாபிஷேகம் பத்திரிக்கை அமைத்துத் தருக.

6. மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பத்திரிக்கை அமைத்துத் தருக.

        இவ்வாறான இரண்டு வகையான கடிதங்களும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இரண்டிலும் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உதாரணமாகப் பார்ப்போம்.

புதிய நூலகம் திறப்புக்கான அழைப்பிதழ் கடிதம் வரைக.
நிகழ்ச்சி நிரல்

தழிழ்த்தாய் வாழ்த்து

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு

வரவேற்புரை                             :  திரு.நடராஜன் அவர்கள்

                                                            நூலகர்.

முன்னிலை                                 :  பெயர்
தலைமையுரை                        :   திருமதி.கல்பனா அவர்கள்
    
                                                              பஞ்சாயத்துத் தலைவர்,

நூலகம் திறந்து வைத்து

சிறப்புரை                                  :    திரு அரங்கநாதன்  அவர்கள்
                                                           
                                                              மாவட்ட ஆட்சித்தலைவர்.

வாழ்த்துரை                             :           பெயர்

வாழ்த்துரை                             :           பெயர்

நன்றியுரை                               :           பெயர்

நாட்டுப்பண்

கவனிக்கத்தக்கவை

1. முதலில் தமிழ்த்தாயை வணங்கி ஆரமிப்பது நன்று.

2. குத்துவிளக்கேற்றி மங்களகரமாகத் தொடங்குதல் நல்வரவைத் தரும்.

3.வரவேற்புரை 
இந்த நிகழ்ச்சியினை (நூலகம் அமைய)  யார் முன்னின்று வேலை செய்தார்களோ அவர்கள் வரவேற்புரை சொல்ல வேண்டும். மேலும் இவ்விழாவிற்குத் தகுதியானவர்கள் அழைத்தால் அனைவரும் வருவார்கள்.

4.முன்னிலை

இந்நூலகம் அமைய காரணகர்த்தாவாக இருக்கின்றவர் முன்னிலையாக இருக்கலாம். மேலும் இவர்கள் பெரும்பாலும் வயதானவராக இருப்பர்.

5. தலைமையுரை
           
இந்த விழாவினைத் தலைமையேற்று நடத்தக்கூடியவரும் மற்றவர்களுக்கு முன்மொழிபவராகவும் இருப்பார். இவர்களும் பெரும்பாலும் வயதானவராக இருபார்கள்.

6. சிறப்புரை
           
இவ்விழாவினைப் பெரியதாகவும், சிறப்பாக நடத்தவும், விழாவானது நல்லதொரு முறையில் நடைபெறவும் தகுதியான ஒருவரை நியமித்தலே ஆகும். சிறப்புரை வழங்குபவர் அந்நிகழ்வினை சிறப்புப்படுத்தி நடத்திக்கொடுப்பவர்.

7. வாழ்த்துரை
           
இந்நிகழ்வினை வாழ்த்திப் பேசுதல். வாழ்த்துரையைப் பொறுத்தவரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பேசலாம். வரையறை கிடையாது. ஆனாலும் நேரத்தைப் பொறுத்து குறைவானால் நன்று.

8.நன்றியுரை
           
இந்நிகழ்வின் ஒரு மனிதராய் நின்று கடைசி வரை இருந்து அனைவரையும் கவனித்து கொள்பவரே நன்றியுரை வழங்கலாம்.

9.நாட்டுப்பண்
           
இறுதியில் நாட்டுப்பண் பாடி நிகழ்வினை முடித்தல் என்பது சிறப்பானதாகும்.

குறிப்புகள்
1.வரவேற்புரை ஒருத்தர்தான் சொல்ல வேண்டும்.

2.தலைமையும் ஒருவர்தான்.

3.சிறப்புரை அதிகமாக இருவர் இருக்கலாம். ஆனாலும் ஒருவர் இருந்தால் நலம்.

4.வாழ்த்துரையில் நேரத்தைப் பொறுத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.

2 வது அழைப்பிதழ் கடிதம்திருமணப் பத்திரிக்கை ஒன்றை அமைக்க.
♦ தற்போது உள்ள திருமணப்பத்திரிக்கை நகல்கள்

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி  அழைப்பிதழ் கடிதங்களை எழுதுங்கள்.

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள் பார்க்கவும்

2.உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

ஒலியும்! ஒளியும்!!|சிறுகதை|முனைவர் க.லெனின்

ஒலியும் ஒளியும் - முனைவர் க.லெனின்
“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
 
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
 
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்”

           என்று ஆல் இந்தியா ரேடியோவில் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலில் சிறுவன் குமரன் லயித்துபோயிருந்தான். அங்கிருக்கும் வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் ரேடியோக்கள் இருக்கின்றன. அதிலும் ரேடியோக்களில் இருந்து ஒலிக்கின்ற பாடல் அந்தப்பக்கம் போவோரை நின்று கேட்டுவிட்டுதான் போகத்தோன்றும். “சத்தத்தைக் கொஞ்சம் ஜாஸ்தியா வையுங்களேன்” என்று ஒருசிலர் வாய்விட்டே கேட்பார்கள். அந்தக்காலத்தில் ரேடியோக்களில் பாட்டுக் கேட்பது என்பது ஒரு அலாதியான சுகம்தான். ரேடியோ வைத்திருந்தாலே அவர்கள் வீடு பெரிய வீடுதான். எத்தனை எருமை மாடுகள் உள்ளன. எத்தனை பசு மாடுகள் உள்ளன. எத்தனை ஆட்டுக்குட்டிகள் உள்ளன என்பது போய் இப்போது ரேடியோ இருக்கிறதா… அப்போ அவன்தான் பணக்காரன். ரேடியோ வைத்திருப்பவர்களும் தங்களைக் கொஞ்சம் பிகுபண்ணி அதிகமாகவே காட்டியும் கொள்வார்கள்.

        அன்றைய நாளில் ஒரு வீட்டின் முன்வாசல் ஓரமாய் விளையாடுவது போல சிறுவர்கள் குமரன், ஆனந்த், பாபு, சங்கர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் ரம்மியமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மண்ணில் குழியைத் தோண்டி தேங்காய் ஓட்டை மூடியபடி மணல்வீடு கட்டிக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களின் விளையாட்டு ஒருபுறம் இருந்தாலும் பாடல்கள் கேட்பதில்தான் அச்சிறுவர்கள் உன்னிப்பாக இருந்தார்கள். இப்போதும் கூட யாரோ உள்ளிருந்துதான் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அச்சிறுவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுகூட அவர்களுக்கு அந்த ஊருக்கு வந்த நாடோடி ஒருவன் சொல்லிவிட்டுப் போனதுதான். சின்ன பெட்டிக்குள்ள எப்படி ஒரு ஆள் உள்ள போயி பாட முடியும் என்று நிறைய நாட்கள் ரேடியோவைப் பற்றி அச்சிறுவர்கள் பேசியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் பாடலை ரசித்துக் கொண்டிருந்தபோதுதான் வேகவேகமாய் ஓடி வந்தான் செல்வம். தலையைக் குனிந்து கொண்டு உவ்வே..உவ்வே.. எச்சிலைத் துப்பினான். ஓடி வந்ததில் செல்வத்திற்குத் தொண்டை அடைத்துப் போனது. இன்னமும் மூச்சி வாங்கிக்கொண்டே இருந்தான். இடையிடையே பேசவும் வாயெடுத்தான்.

“கொஞ்சம் மூச்சி வாங்கிக்கோடா… எதுக்கு இப்படி ஓடீயாந்த.. என்ன வச்சிருக்க.. ” குமரன்தான் கேட்டான்.

“கட்டமா சின்னதா பெட்டி மாதிரி இருக்குடா… அதுக்குள்ள ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து பாட்டுப் பாடிகிட்டே டேன்ஸ் ஆடுறாங்கடா” மூச்சிறைக்க சொன்னான் செல்வம்.

“கனவு ஏதாவது கண்டியாடா” என்றான் சங்கர்.

“இல்ல நிஜமாலுந்தான் சொல்றன். நான் பாத்தேன். இதுவரை பாட்ட நாம ரேடியோக்கள்ளதான கேட்டுட்டு இருந்தோம். அங்க பாட்டோட ஆளுங்களும் தெரியறாங்க” கண்ணை விரித்து மனசு பறந்து கைகள் ஆட்டி சொன்னான் செல்வம்.

“எங்கடா.. யார் வீட்டுல பாத்த..” பரபரப்புடன் கேட்டான் ஆனந்த்
.
“நம்ம கிராமத்துல கடைசி வீட்டுக்கு ஒரு டாக்டர் குடி வந்திருக்கார்ல்ல..”
“ஆமா வந்திருக்கிறாரு.. அவரு வந்து பதினைஞ்சு நாளுக்கு மேல ஆகுது. அவருக்கென்ன?” பாபுதான் அவசரப்பட்டான்.

“அவருக்கெல்லாம் ஒன்னுமில்ல. அவரோட வீட்டுக்கு இன்னிக்குதான் வீட்டு பாத்திரமெல்லாம் வண்டியில வந்து இறங்கினிச்சு. பொருளையெல்லாம் இறக்கிறதுக்கு எங்க அப்பா கூட நானும் அவுங்க வீட்டுக்குப் போயிருந்தேன். வண்டி நிறைய சாமான்கள்தான். எதுஎது எதுக்கின்னே தெரியல. அப்பதான் அங்கிருந்த பொட்டிய பாத்தேன்.  அது என்னன்னு கூட எனக்கு தெரியல. கொஞ்ச நேரத்துல அந்தப் பொட்டிய கரண்ட்ல சொருவுனாங்க.  அப்பதான் அதை பாத்தன். பொட்டி முழுக்க வெள்ளையா இருந்தது. உன்னிப்பா கவனிச்சுப் பார்த்த போதுதான் ஆம்பளையும் பொம்பளையும் டேன்ஸ் ஆடிக்கிட்டே பாட்டு பாடிக்கிட்டு இருந்தாங்க. நான் பிரமிச்சுப் போயிட்டேன். அந்த வீட்டுல இருந்து வரதுக்கு மனசே வரல” சோகத்துடன் சொன்னான் செல்வம்.

செல்வம் சொல்ல சொல்ல குமரனுக்கு எப்படியாவது அந்தப் பொட்டிய பாத்துப்புடனுமுன்னு நினைச்சான். கிராமத்தில் கிழக்குப் பக்கமா இருக்குற அந்த வீட்டுக்கு ஓடினான். அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னாடி பலமுறை வந்திருக்கிறான். ஆனால் அப்பொழுதெல்லாம் அது தேங்காய் குடோனோவாகத்தான் இருந்தது. ஆனால் இன்று கூட்டி மொழுகி அழகாய் வீடு போல்தான் தோன்றியது. வாசலில் பெரியதாய் கோலம் போடப்பட்டிருந்தது. கண்டிப்பாக நம்மூர்க்கார பெண்கள்தான் போட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். கேட்டைத் தாண்டி தயங்கியபடியே உள்ளே நுழைந்தான். ஓட்டு வீடு என்றாலும் இன்றைக்கு என்னமோ புதுவீடு போல இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் குமரன்.  வீட்டினுள்ளே டாக்டர் சேரில் உட்காந்து கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த குமரனைப் பார்த்து,

“என்னப்பா… யார் நீ? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

குமரனின் கண்கள் அந்த அறை முழுவதும் தேடின. ஆம்! பார்த்து விட்டன கண்கள்! ஆச்சர்யம்! ஆனந்தம்! வியப்பு! எல்லாம் ஓரெங்கே குமரனின் முகத்தில். புன்னகைத்தான். சிரித்தான். அந்தப் பெட்டியப் பார்த்து, “அது என்ன? அதுக்கு பேரு என்ன?” என்றான் குமரன்.

”டிவி..“ என்று அமைதியாய் பதில் சொன்னார் டாக்டர்.

“டிவி..டிவி… ஆ…” வாயைப் பிளந்தான் குமரன்.

“இது என்ன பண்ணும்? மனுஷங்க உருவமெல்லாம் தெரியுதே! எப்படி தெரியுது? இவங்கெல்லாம் யாரு? இதுக்குள்ள எப்படி உள்ள போனாங்க? அவுங்க மட்டும் ஏன் குள்ளமா இருக்கிறாங்க? அந்த டிவியில பூவெல்லம் தெரியுதே! டிவியில பூ பூக்குமா?” மனத்திற்கு என்னவெல்லாம் தோன்றியதோ அவன்பாட்டுக்கும் வரிசையா கேட்டுக்கொண்டே இருந்தான் குமரன்.

“என்னப்பா கேள்வி இப்படி கேட்குற.. நான் எதுக்கு பதில் சொல்லட்டும்“ என்றார் டாக்டர்

தலையைச் சாய்த்துக் கொண்டே “எல்லாத்துக்கும் சொல்லுங்க அண்ணா” என்றான்.
“நீ திரைப்படமெல்லாம் பார்த்து இருக்கியா?“

“அப்படின்னா என்னா அண்ணா?”

“நம்மள மாதிரி மனுஷங்க நடிச்சத கேமிராவுல புடிச்சி பெரிய திரையில காட்டுவாங்க… ஆடுவாங்க.. பாடுவாங்க.. பேசுவாங்க… இயற்கையையெல்லாம் காண்பிப்பாங்க”

“நான் மட்டும் இல்ல இந்தக் கிராமத்துக்காரங்க யாரும் அப்படி பார்த்தது இல்ல. ஆனா ரேடியோவுல மட்டும் பாட்டுக் கேட்டுருக்கோம். ஆனா அதுவே சின்ன டப்பா மாதிரி இருக்கு. அது எப்படி பாடுதுன்னே தெரியல?”

டாக்டர் வாய்விட்டே சிரித்தார். குமரன் பேசுவது அழகாய் இருந்தது. நகரத்தில் வாழும் மக்களிடையே இப்பொழுதுதான் கொஞ்சகொஞ்சமாய் டிவி என்கிற ஒன்று பரவி வருகிறது. அப்படி இருக்கும்போது இந்தக் கிராமத்தில் எப்படி சாத்தியமாகும்? குமரனுக்கு டிவி செயல்படும் விதம் பற்றி புரிய வைத்தார். ஆனால் குமரனுக்கு ஏதோ புரிஞ்ச மாதிரிதான் இருந்தது. வெளியே வந்து கேட்டிற்கு முன் நின்று அந்த வீட்டை ஒருமுறை கண்கள் அசையாமல் அப்படியே பார்த்தான்.  அப்பொழுதுதான் கவனித்தான் வீட்டின் மேற்கூறையில் சிலுவைப் போன்று நீளமான கம்பிகளால் குறுக்கும் நெடுக்குமாய் போடப்பட்டிருந்தன. டாக்டர் அந்தக் கம்பிகளைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது.

இருட்டுகிற சமயம் வீட்டுக்கு வேகமாக ஓடினான் குமரன். மனசு முழுவதும் டிவி பற்றிய யோசனையாகவே இருந்தது.  சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரானான். வீட்டு முன் களத்தில் வக்கில் போர் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் கட்டில் போட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ஆளுக்கொரு கட்டிலில் படுத்துக்கொண்டனர். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான்.  வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முற்பட்டான். ஆனால் மனசு மீண்டும் டிவியின் பக்கம் வந்தது. களைப்பில் தூங்கிய பிறகும் கூட டிவியில் படம் ஓடிக்கொண்டிருப்பதாகக் கனவில் தொல்லை தந்தது. டிவி… டிவி… என்று பினாத்திக்கொண்டே இருந்தான். குமரனின் அம்மா வெண்ணிலா தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள்.

“குமரா.. குமரா… என்னாச்சுப்பா…“ என்று பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த குமரனின் தலையைத் தொட்டுப்பார்த்தாள். இப்பொழுது குமரனின் பினாத்தல் நின்று விட்டிருந்தது.

“ஏதோ பினாத்துறான். ஆனா என்னன்னுதான் புரியல! காட்டுப்பக்கம் தனியா போவாதன்னு சொன்னா கேட்கிறானா இந்தப் பைய… சொல்ல சொல்ல பசங்க கூட சேர்ந்துகிட்டு ஊர சுத்துதுங்க. இப்ப என்னாடான்னா யாம நேரத்துல பினாத்திக்கிட்டு இருக்கு. காலையில எழுந்திரிச்ச உடனே புள்ளைக்குச் சுத்தி போடனும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள் வெண்ணிலா.

விடியற்காலையில் மேகம் இருண்டது. மழை வர ஆயுத்தமானது. தூரல் சின்ன சின்னதாய் விழ ஆரமித்தன. வெண்ணிலா டக்கென எழுந்து கொண்டாள்.

“என்னங்க.. என்னங்க… மழை வருது. நான் பையன தூக்கிட்டு உள்ள போற. நீங்க கட்டிலைத் தூக்கி தாவாரத்துல போட்டுட்டு உள்ள வந்துருங்க” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமலே பையன தூக்கிட்டு வீட்டிற்குள்ளே ஓடினாள் வெண்ணிலா.

மழை கொஞ்சம் வேகமாகவே வந்தது.  அதற்குள் கட்டிலைத் தூக்கி தாவாரத்திலே போட்டுவிட்டிருந்தார் குமரனின் அப்பா விநாயகம். ஈரமான கைக்கால்களைத் துவட்டிக்கொண்டே பையனின் கால்மேட்டில் உட்காந்து கொண்டார். பொழுது விடிந்து நேரமாகிவிட்டது. மழை இன்னும் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.  வீட்டை விட்டு யாராலும் வெளியே வர முடியாத நிலை. எப்போதும் நண்பர்களுடன் ஊர் சுற்றும் குமரனுக்கு இப்பொழுது அம்மா அப்பாவுடனே இருந்தான்.

“அப்பா, நீ திரைப்படமெல்லாம் பார்த்திருக்கியாப்பா?“ மெல்ல பேச்சை ஆரமித்தான் குமரன்.

“கேள்விபட்டுருக்கேன்டா.. ஆனா இதுவரையிலும் ஒரு திரைப்படம் கூட பார்க்கல..” உதட்டைப்பிதுக்கியபடியே விநாயகம் சொன்னார்.

“ஏன்பா பாக்குல?”

“நம்மூர்லயும் சரி இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கேயும் சரி சினிமா கொட்டா இல்ல. அதனால் பாக்கவும் வாய்ப்பு கிடைக்கல. ஏதோ வெளியூருக்கு வேலைக்குப் போன பயலுவதான்  சம்பாரிச்ச பணத்துல ரேடியோவ வாங்கி வச்சிருக்கானுவ.. அத அப்பப்ப பாட்டு கேட்கிறதோட சரி “ ஆசையோடு விரக்தியில்தான் பேசினார் விநாயகம்.

“அம்மாவும் பாக்கலையாப்பா..”

“என்னாலையே பாக்க முடியல. பாவம் உங்கம்மா! இந்த ஊரத்தவிர எங்கேயும் போனதில்ல”

குமரன் அம்மாவின் மூஞ்சை வைத்தகண் வாங்காமலே பார்த்தான். அப்பாவையும் ஓரக்கண்ணால் சுழற்றி சுழற்றி பார்த்தான்.

”நாம இதுவரையிலும் ரேடியோவலதான பாட்டுக் கேட்போம். இன்னிக்கு டாக்டர் வீட்டுக்குப் போயிருந்தேன்.  அங்க  பெட்டி போல டிவின்னு ஒன்னு இருந்துச்சி. அதுல பாட்டும் கேட்டுது. படமும் தெரிஞ்சது. நம்மள மாதிரியே மனுஷங்க அதுக்குள்ள ஆடிட்டும் பாடிட்டும் இருந்தாங்க. அவுங்கெல்லாம் ரொம்ப அழகா இருந்தாங்கப்பா!”

குமரன் சொல்வதைக் கேட்ட விநாயகமும் வெண்ணிலாவிற்கும் கூட அந்த டிவியைப் பாக்க வேணடும் போல தோன்றியது.

“அந்தப் பொட்டிய பாக்குற நிலைமை நமக்கெல்லாம் எங்கே கிடைக்க போகிறது? ஏதோ இருக்கிறத தின்னுபுட்டு ஓடுற மட்டும் வாழ்க்கையை ஓட்டிட்டு கிழக்கமா போயிட வேண்டியதுதான்”  என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாள் வெண்ணிலா.

கொஞ்ச நேரம் மூவரிடையே அமைதி நிலவியது. வெளியே மட்டும் இன்னமும் மழை சில்லென்று தூரலாய் பெய்து கொண்டிருந்தது.

“அப்பா.. நம்ம வீட்டிலேயும் அந்த மாதிரி ஒரு டிவி வாங்கலாமாப்பா” ஏக்கத்துடன் கெட்டான் குமரன்.

“இல்லடா… அது என்னன்னே எனக்கு தெரியாது. சுத்தமா புரியவேயில்ல.. நானும் அத முன்ன பின்ன பாத்தது கூட இல்ல. எப்படி வாங்கனும்? வாங்கிட்டு என்ன பன்னனும்? அத எப்படி பயன்படுத்தனுமுன்னு தெரியாது?“

“அதெல்லாம் எனக்கு தெரியாது! நீங்க எனக்கு டிவி வாங்கி தர்றீங்க..
”
எப்படியோ ஏதேதோ சொல்லி குமரனைச் சமாதானப்படுத்தினார்கள் வெண்ணிலாவும் விநாயகமும். ஆனாலும் அவனுடைய மனதில் டிவி ஆழமாகவே பதிந்து போனது.

அடுத்த நாளிலிருந்து சிறுவர்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்ப்பதற்காகப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் பொகிற நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் டாக்டர் வீட்டைச் சுற்றியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் டிவி பார்ப்பதற்கு வீட்டினுள்ளே சென்று விடுவார்கள். டாக்டரின் மனைவி, அவரின் வயதான அம்மா மட்டுமே தங்கியிருந்தனர். டாக்டரின் இரண்டு பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து தங்குவது என்பது நடக்காத ஒன்று. டாக்டரின் அம்மாவுக்கு இந்தப் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து டிவி பார்ப்பது சுத்தமாகவே பிடிக்கவில்லை. அதுவும் கைக்கால்கள் கூட கழுவாமல் ஒரு மாதிரியாக வந்து ஷோபாவிலே உட்காந்து கொள்வார்கள். ஷோபாவிலே உட்காருவது மட்டுமில்லாமல் கால்கள் இரண்டையும் தூக்கி ஷோபாவிலே வைத்துக்கொள்வார்கள். காலில் ஒட்டியிருந்த அழுக்கு அப்படியே ஷோபா துணி மேல் படிந்து போகும்.  தினம்தினம் இதுபோலவே நடக்கும்போது  டாக்டரின் அம்மா கோபத்தின் உச்சிற்கே சென்றாள். ஒருநாள் பசங்களை எல்லாம் திட்டி தொரத்தியும் விட்டுவிட்டாள்.

அன்று மாலை டாக்டர்தான் அம்மாவைச் சமாதானம் செய்து வைத்தார். மனைவியிடம்,

“அம்மாதான் வயசானவங்க… நீயாவது பேசி அம்மாகிட்ட புரிய வைத்திருக்கலாமே! சின்ன பசங்க. ஏதோ ஆசையில டிவி பார்க்க வரானுங்க. அவுங்கள ஏன் தொரத்தனும். பாத்துட்டுப் போகட்டுமே!” என்றார் டாக்டர்.

டாக்டர் மனைவிக்கு முகம் கோணலாகிப்போனது.

“அம்மாவுக்கு மட்டும் இல்ல உனக்கும் இந்த பசங்க நம்ம வீட்டுக்கு வரது பிடிக்கலன்னு நினைக்கிறன்” என்றார் டாக்டர்.

ஆமாம்! என்பது போல கண்களும் சுழன்றன. அப்படித்தான் பார்வையும் இருந்தது.

“பசங்கள டிவி பார்க்க விடுங்க” என்று சொல்லிவிட்டு நேராக பாத்ரூம் நோக்கி நடந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் பசங்கள வீட்டிற்குள் விடப்பட்டார்கள். குமரனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ரொம்பவே சந்தோசம். ஆனால் இப்பொழுது  அந்த வீட்டில்  டிவியின் முன்னால் தரையில் அமர்ந்து பார்க்கிறார்கள்.  காலையில் டிவி போட்டுவிட்டால் அணைப்பதற்கு இரவு பதினொன்று மணிக்கு மேல் ஆகிவிடும். பகல் முழுவதும் டிவியில் ஏதோ ஒன்று ஓடிக்கிட்டே இருக்கும். டிவியில் ஓடும் படக்காட்சிகள் தெரியும். ஆனால் தமிழ்மொழி அல்லாது வேற்றுமொழியில் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் சாயுங்காலம் ஐந்து மணிக்கு மேலதான் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வார்கள். பகலில் செய்திகளுக்கு மட்டும் அவ்வவ்போது தமிழில் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையில் எட்டு மணிக்கே தமிழ் மொழிக்கு மாற்றி விடுவார்கள். டிவியின் அலாதியான பிரியத்தின் காரணமாக வேற்றுமொழி என்றாலும் கூட குமரனும் அவனுடைய நண்பர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு டிவியின் முன்னாடி போய் தலையைத் தூக்கிக்கொண்டு உட்காந்துவிடுவார்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் குமரன் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் துடுக்காகவே இருந்தான். இதனால் டாக்டரின் மனைவியும் அம்மாவும் அந்தக் கிராமத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சின்னச்சின்ன வேலைகளுக்கு அவனை உபயோகித்துக் கொண்டார்கள்.  குமரன் டிவியை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்போதுதான் டாக்டரின் மனைவி,

“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.

குமரனுக்குக் கடுப்பாக இருக்கும். வேறுவழியின்றி காசை வாங்கிக்கொண்டு கடைக்கு ஓடுவான். போன சுருக்குத் தெரியாது. உடனே பொருட்களை வாங்கி வந்து விடுவான். மீண்டும் டிவியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பான். இப்பொழுது டாக்டரின் அம்மா,

“டே குமரா.. கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வரீயாடா?” என்பார்.

மீண்டும் கடைக்கு ஓடுவான். டிவி பாக்குற அவசரத்தில் வேகமாகவே வாங்கி வந்து விடுவான். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது. இவன் கடைக்குப் போன நேரத்தில் டிவியில் என்ன ஓடியது என்று தன்னுடைய நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். எப்பொழுது பார்த்தாலும் அந்தக் கிராமத்தில் டாக்டர் வீட்டு டிவி பற்றிய பேச்சுத்தான் அதிகமாகவே இருந்தது. நாளாக நாளாக டிவி பார்க்கின்ற ஆர்வத்தில் ஆண்களும் பெண்களுமாய் பெரியவர்களும் டாக்டர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அதுவும் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஏழு மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஒலியும் ஒளியும் பாட்டுக்குப் பெரும் கூட்டமே கூடிடும்.  இங்கு குமரனின் வேண்டுதலுக்காக விநாயகமும் வெண்ணிலாவும் கூட இரண்டொரு நாட்கள் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க வந்திருந்தனர். அவ்வளவுதான். அதற்குமேல் வருவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை. திருவிழா கூட்டம் போல இருந்ததனால் வெட்கப்பட்டு வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.

கிராமத்து மக்கள் சாயுங்காலம் வந்து டிவி பார்க்க உட்காந்து விட்டால் இரவு பதினோரு மணி ஆகிவிட்டாலும் ஒருவர் கூட எழுந்து வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். வீட்டில் பலகாரமோ கறியோ காரமோ இப்படி எதுவுமே செய்ய முடியாது. வீடும் சிறியதாக இருந்ததால் அவர்கள் சென்ற பின்பே சாப்பிடவும் உறங்கவும் முடியும். நல்லது கெட்டதை வீட்டில் பகிர்ந்து கொள்ள முடியாது. டாக்டரும், யாரையும் டிவி பார்க்க வர வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று கூறிவிட்டார். ஆனால் டிவி பார்க்கின்ற இடம் ஒரு பொது சினிமா கொட்டகையாகவே மாறிவிட்டிருந்தது. படத்தில் சிரிக்கும்போது எல்லோரும் ஓ..வென்று சத்தத்துடன் சிரிப்பார்கள். படத்தில் அழும்போது உண்மையாகவே இவர்களும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கி விடுவார்கள். 
 
டாக்டரின் மனைவிக்கு இது பெரும் எரிச்சலை உண்டு பண்ணியது. எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியாய் ஒருநாள் இருக்க வேண்டம் என்று அவள் விரும்பினாள். கணவனுடன் அன்பாக சில நிமிடமாவது பேச வேண்டும் என்று மனதார ஏங்கினாள்.  டாக்டரும் மருத்துவமனைக்குச் சென்று இரவு நேரத்தில்தான் வருவார். அந்த மக்களுடன் சேர்ந்து டிவி பார்ப்பார். அவர்கள் சென்றவுடன் சாப்பிட்டுவிட்டு கொட்டாவி விட்டுக்கொண்டே தூங்கி விடுவார். கொஞ்ச நாளாகவே இதுவே டாக்டர் வீட்டின் தொடர் நிலைமையாகிப் போனது.

டாக்டர் வீட்டில் டிவி பார்ப்பதனால் நடக்கும் பிரச்சனை விநாயகத்தின் காதிற்கும் எட்டியது. மகன் குமரனை அழைத்து, “இனிமேல் டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்கச் செல்ல வேண்டாம்“ என்று கண்டித்தார். ஆனாலும் குமரன் டிவி பார்க்கும் ஆசையினால் தொடர்ந்து டாக்டர் வீட்டுக்குச் செல்ல ஆரமித்தான். அதனால் படிப்பிலும் பின்தங்கியே இருந்தான்.  ஆனாலும் மகனின் மனதில் தோன்றிய ஆசையை களைத்துவிட்டால் வேறேதும் விபரீதம் நடந்து விடக்கூடும். அதனால் கொஞ்ச கொஞ்சமாயத்தான் டிவி பார்ப்பதிலிருந்து வெளியே கொணடு வர வேண்டும் என்று நினைத்தார். இனிமேலும் குமரனை அடக்கி வைக்காமல் இருந்தால் பையனின் வாழ்க்கை கெட்டு விடும் என்று அஞ்சினார் விநாயகம்.

“குமரா நீ டாக்டர் வீட்டுக்கு டிவி பார்க்க போ… நானும் அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டோம். ஆனா, இரவு எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும். அப்படி வரலைன்ன கதவ பூட்டு போட்டுருவோம்” என்றார் விநாயகம்.

அப்பா சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டவனாக தெரியவில்லை. அன்றே டிவி பார்த்து விட்டு பதினொரு மணிக்கு மேலதான் வீட்டுக்கே வந்தான் குமரன். இருட்டு ரொம்பவும் அதிகப்படியாக இருந்தது. வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டினான். கதவு திறக்கப்படவில்லை. மௌனமாகவே இருந்தார்கள்.

“கதவ தொறமா… கதவ தொறமா… பசிக்குது ”

உள்ளேயிருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. அணைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரியாமலே இருந்தது. மீண்டும் மீண்டும் அழைத்தான் குமரன். கதவு திறக்கபடவேயில்லை. பணியும் பயமும் அவனை நிலைகுழைய செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் குமரன் சோர்ந்து போனான். வீட்டினுள்ளே இருவரும் பாசத்தை அடக்கிக்கொண்டு மகனின் குரல் ஒலியைக் கேட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுது கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வெண்ணிலா மகனின் குரல் அடங்கியவுடன் அவளுடைய ஈரக்குழையே அருந்து விழுந்தது போல ஆயிற்று.

“என்னங்க பையன் பாவுங்க..! கதவ தொறந்து கூப்பிட்டுகளாமுங்க..” வெண்ணிலா

“வாழ்க்கையில துன்பத்தையும் அனுபவிக்கனும். அப்பதான் வாழ்க்கன்னா என்னான்னு புரியும்.
கொஞ்ச நேரம் போகட்டும்” விநாயகம்
கொஞ்ச நேரம் கழித்து இருவரும் கதவை திறந்து வெளியே வந்து குமரனைப் பார்த்தார்கள். குமரன் பசியோடு தூங்கிவிட்டிருந்தான். குமரனை அள்ளி தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள் வெண்ணிலா. உடம்பு ரொம்பவும் சூடாகக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. குமரன் கண் விழித்துப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று.

டாக்டர் தன்னுடைய வீட்டிலிருந்த டிவியை அதனுடைய பெட்டியில் போட்டு நான்றாக மூடி பழைய சாமான்கள் இருக்கும் அறையில் வைத்துவிட்டு வந்தார். டாக்டரின் மனைவி தன்னுடைய  கணவனுக்கு ஆவி பறக்க டீ போட்டுக்கொடுத்து உபசரித்தாள்.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130
முனைவர் க.லெனின் அவர்களின் படைப்புகளைக் காண…

 

தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி?|முனைவர் ஈ.யுவராணி

தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி - யுவராணி
        தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி? இதை மூன்றறிவு உள்ள எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. ஒரு உயிரியல் நிபுணர் எறும்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார். அவர் எறும்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு எறும்பு அதனுடைய வாயில் நீளமான ஒர்  உணவைத் தூக்கிக்கொண்டு ஊர்ந்து சென்றது. தரை வழியாகச் சென்று கொண்டு இருந்த அந்த எறும்பு வழியில் ஒரு வெடிப்பை இருப்பதைப் பார்த்துவிட்டு திடீரென்று அங்கேயே நின்றது. தொடர்ந்து அந்த வழியில் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த எறும்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அது  தான் வாயில் சுமந்து வந்த இரையை அந்த வெடிப்பின் மேல் வைத்துப் பாலமாக மாற்றியமைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.  அந்த வெடிப்பின் மீது வைத்திருந்த அந்த உணவைத் தன் வாயால் மீண்டும் கவ்வி எடுத்துச் சென்றது எறும்பு. இந்த மாதிரி செயலைப் பார்க்கும்போது தனக்கு மிகுந்த வியப்பு அளிப்பதாக இருக்கிறது என எழுதினார் அந்த நிபுணர்.
           
        அதேபோல் நமக்கு துன்பம் வரும் போது கவலை பட வேண்டாம். அத்துன்பத்தையே பாலமாக (Bridge) வைத்து முன்னேற வேண்டும். இதை நாம் மூன்றறிவு உள்ள எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறிய எறும்பின் தன்னம்பிக்கை இருந்தால் கூடப்போதும் எந்தத் தடையையும் நம்மால் வெல்ல முடியும். எறும்புகள் எப்பொழுதும் சாரை சாரையாகச் செல்லும். அந்த அடர்ந்த காட்டில் படர்ந்தச் செடி கொடிகளுக்கும் அடியில் எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு புற்று (Ant House ) ஒன்று கட்டி இருந்தது. அந்த எறும்பு புற்றில் எறும்புகள் அனைத்தும் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் ஒரு நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இரை தேடிச் செல்கின்றபோது அந்த இரண்டு எறும்புகளும் ஒன்றாகவே சேர்ந்து செல்லும்.  அதில் கட்டெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் செவ்வெறும்பு தன் சேகரித்த உணவைக் கட்டெறும்புக்கு கொடுத்து உதவும். அது போலவே கட்டெறும்பும் செவ்வெறும்புக்கு உணவை கொடுத்து உதவும்.
           
       ஒரு நாள் இந்த இரண்டு எறும்புகளும் இரைத் தேடி ஒர் இடத்தில் அலைந்து கொண்டிருந்தன.  நிறைய இடங்களைத் தேடிப்பார்த்தும் உணவே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு குளத்தின் கரையில் இருக்கும் மாமரத்தை பார்த்தது. அந்த மரத்தில் நிறைய மாம்பழங்கள்  பழுத்து வாசனைக் காற்றில் வீசிக் கொண்டு இருந்தன. அந்த இரண்டு எறும்புகளும் ரொம்ப பசியாக இருந்ததால் அந்த மாமரத்தில் ஏறி தொங்கி கொண்டிருந்த ஒரு பழுத்த மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. உடனடியாக ஒரு பயங்கரமான காற்று வீச ஆரம்பித்தது. அந்த எறும்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாம்பழம் அறுந்து குளத்தில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு எறும்புகளும் குளத்துத் தண்ணீரில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தன.
    
         நண்பா, இப்படி வந்து குளத்துத் தண்ணீரில் விழுந்து விட்டமே. ‘இப்பொழுது நாம் என்ன செய்வது?’ என்றது செவ்வெறும்பு. நிச்சயம் நமக்கு எதாவது ஒரு உதவி கிடைக்கும். அதுவரை குளத்தில் நீந்திக் கொண்டே இருப்போம் என்று கூறியது கட்டெறும்பு. நீண்ட நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எறும்புகளும் ரொம்ப நேரமாகக் குளத்துத் தண்ணீரில் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா, இவ்வளவு நேரமாகத் தண்ணீரில் நீந்திக் கொண்டே இருந்த காரணத்தால் என்னுடைய கால், கை எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்தவே முடியாது.  எப்படியும் தண்ணீரில் மூழ்கி செத்துதான் போகிறேன் என்று சொன்னது செவ்வெறும்பு. இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்சம் நேரம் குளத்தில் நீந்தி போராடு. நிச்சயம் நாம் உயிர் பிழைப்பதற்கு எதாவது ஒரு வழி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனியும் நமக்கு எந்த உதவியும் கிடைக்க போவது இல்லை. நாம் இறந்துதான் போகின்றோம் என்று கூறிய படி குளத்துத் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது அந்த செவ்வெறும்பு.
           
       அந்த கட்டெறும்பு எப்படியாவது உயிர் பிழைத்துவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது. கட்டெறும்பு நீண்ட நேரம் தண்ணீரில் நீந்திக் கொண்டி இருந்ததால் கை, கால்கள் சோர்ந்து பயங்கரமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இனி நம்மாலும் முடியாது போல் இருக்கிறது. இனி நாமும் இறந்து போய் விடுவோமோ? என்று கட்டெறும்பு மனதில் தோன்றியது. இப்படி செத்து மடிவதற்காக பிறந்தோம். வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் நிறைந்ததுதான். அதற்கு பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது. அதனால் துணிச்சலோடு போராட வேண்டும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டது. ஆகையால் கட்டெறும்பானது துணிச்சலோடு போராட தொடங்கியது. சிலமணி நேரம் சென்ற பிறகு ஒரு பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. அப்போது அந்த மாமரத்திலிருந்து ஒரு மாவிலை அந்த கட்டெறும்பு பக்கதில் வந்து விழுந்தது. சட்டென்று கட்டெறும்பு அந்த மாவிலையைப்  பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்து அதை ஒரு படகாகப் பயன்படுத்தி கரையேறியது.
           
       இந்த அனைத்து நிகழ்வுகளையும் குளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனானது கட்டெறும்பை பார்த்துச் சொன்னது. நீ துணிச்சலோடு விடாமல் போராடிக் கொண்டே இருந்தாய். அதனால்தான் உன்னால் கரை ஏற முடிந்தது. வாழ்த்துக்கள் நண்பா என்றது அந்த மீன். நண்பர்களே, எந்த விஷயத்திற்கும் பயந்துக் கொண்டே வாழாமல் போராடு. எதற்கும் துணிச்சலோடு போராடினால் எதையும் வென்றிடலாம்!
தன்னம்பிக்கை கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி
இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு – 638 476


 

முனைவர் ஈ.யுவராணி அவர்களுடையப் படைப்புகளைக் காண்க…

 

உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
உறவுக் கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
1.உறவுநிலை சார்ந்த கடிதங்கள் ஆரமிக்கும் முன்பே வலப்பக்கத்தில் தேதியைக் குறிப்பிடவேண்டும். ஏனெனில் கடிதத்தைப் பிரிக்கும்போதே இக்கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது என்பதை தெரியப்படுத்த வசதியாக இருக்கும்.

2.அடுத்ததாக யாருக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும். அன்புள்ள | பாசமுள்ள | பிரிமுள்ள | மனைவிக்கு | அம்மாவுக்கு  என்று எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். கட்டாயமில்லை.

3.பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.

4. வணக்கமும் நன்றியும் கடிதத்தில் போட்டே ஆக வேண்டும் என்ன கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி. அதேபோல் தாழ்ந்த என்பது போடவேண்டாம். யாருக்கும் யாரும் தாழ்ந்தவர்கள் கிடையாது. ஆனால் பணிவு என்பது நல்லது.

5. இவ்வகையான கடிதத்தைப் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, என்றும் அன்புடன், என்றும் நட்புடன், என்றும் பிரியமுடன் என எது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.  இறுதியில் காற்புள்ளி ( , )  வைத்தல் அவசியம்.  அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும்.

6. இறுதியில் அனுப்புநர் முகவரியும் அதற்கு நேராக பெறுநர் முகவரியும் இடம் பெறுதல் அவசியம். ஆனாலும் அனுப்புநர் முகவரியை ஒரு பக்கத்திலும் பெறுநர் முகவரி மறுபக்கத்திலும் கூட இடம் பெறலாம்.

7.இவ்வகையான கடிதங்கள் தபால் துறையின் மூலம் செல்லுவதால் தபால் முத்திரையை ஒட்டுவது அவசியமாகும். அரசுத்துறை அஞ்சலில் அனுப்பினால் பணம் கிடையாது (இலவச கடிதங்கள் மட்டும்). கூரியரில் அனுப்பும் போது பணம் கட்ட வேண்டும்.

8. ஒருகாலத்தில் மின்னலாய் இருந்த அஞ்சல் துறையானது இன்று இணைய வரவால் கொஞ்சம் வலுவிழந்து தற்போது அஞ்சலக சிறுசேமிப்பு, வங்கி முறைகள் என முன்னேறி வருகின்றது எனலாம். ஆனாலும் எதுவாயினும் கடிதத்தில் எழுதி அனுப்புகின்ற அமைதி வேறெங்கும் இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.

9. இறுதியாக உறவுநிலை சார்ந்த கடிதங்களைப் பொறுத்தவரை இக்கடிதம் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது.

10.மேலே சொல்லப்பட்டது கூட இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றே சொல்லப்படுகின்றன.
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி உறவுக்  கடிதத்தினை எழுதுங்கள்.

1.பாராட்டுக் கடிதங்கள் அல்லது வாழ்த்துக் கடிதங்கள்

       ஒருவரைப் பாராட்டிக் கடிதம் எழுதுவது பாராட்டுக்கடிதம் எனப்படும். இதனை வாழ்த்துக்கடிதம் என்றும் சொல்லலாம். பாராட்டுதல் என்பது அனைவருக்கும் வராது. ஆனால் மற்றவரை பாராட்டிப் பாருங்கள். மனம் மகிழ்ச்சியாகும். துன்பம் நம்மை விட்டு விலகும். முகம் மலரும். நேரடியாக ஒருவரைப் பாராட்டும்போது இயல்பாக நம்மிடையே இருக்கும் கூச்ச சுபாவம் நம்மை பேசவிடாமல் தடுக்கும். அதனால் மனதில் உள்ளதை கடிதத்தின் வாயிலாகச் சொல்லமுடியும். நேரில் வெளிப்படையாகப் பேச முடியாததைக் கூட கடிதம் வாயிலாக பேசமுடியும். அதுவும் பாராட்டுக் கடிதத்தைப் பொறுத்தவரை உணர்ச்சி, அன்பு, கருணை, வர்ணனை என எதுவேண்டுமானாலும் அமைத்து எழுதலாம்.

       இக்கடிதங்கள்  நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், முன்பின் தெரியாதவர்களுக்குகூட பாராட்டி கடிதம் எழுதலாம். பாராட்டுதானே யார் வேண்டுமானாலும் யார்க்கிட்டேயும் சொல்லலாம். சாலையில் ஒருவர் நன்றாகப் பாடிக்கொண்டிருப்பார். நமக்கு அப்பாடலும் அப்பாடலை பாடியவரையும் பிடித்துப்போகும். உடனே சென்று வாழ்த்துகள் சொல்லுகின்றோம். அதுபோலத்தான். 

       இன்றைய இணைய உலாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மகம் தெரியாத ஒருவர் பதிவு போடுகின்றார். அப்பதிவானது நமக்கு பிடித்துப்போக, உடனே விரும்புதல் (லைக்) செய்கின்றோம்.  பிறரை பாராட்டாவிட்டாலும் பராவாயில்லை. உங்களுடன் இருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களையாவது பாராட்டுங்கள்.
பாராட்டுவதும் வாழ்த்துவதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

கீழ்க்கண்டவாறு பாராட்டுக் கடிதங்கள் அமையலாம்
1. ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.

2.பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.

3. மேனேஜர் பதவி கிடைத்த தந்தையைப் பாராட்டிக் கடிதம் வரைக.

4. பிறந்தநாள் விழா கொண்டாடும் அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

5.வேலை கிடைத்த அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

6.அக்காவின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

7.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலை ஆகியனவை பாராட்டியும் வாழ்த்துச் சொல்லியும் கடிதம் எழுதலாம்.
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம்.
உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.
நாள் : 08.03.2024
அன்புடைய நண்பனுக்கு,           
        நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. இப்பொழுதுதான் செய்தித்தாளில் நீ ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்ததைப் பற்றி பார்த்தேன். மிகவும் சந்தோசம். நீ சிறு வயதுள்ளபோதே நன்றாக ஓடுவாய். நான் அறிவேன். உன்னுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் இன்று உன்னை வெற்றியடை வைத்திருக்கிறது. இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். மேலும் நம் நாட்டிற்காகவும், ஒலிபிக்கிலும் நீ கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும். இறைவன் எப்பொழுதும் உன்னுடனே இருக்க வாழ்த்துகிறேன்.

நன்றி நண்பா

என்றும் நட்புடன்,
 
(சரவணன்)

அனுப்பநர்                                                                          பெறுநர்
                                                 
               க.சரவணன்,                                                                        த.முருகவேல்
           
               விவேகானந்தர் தெரு,                                                     ராம் நகர், அடையார்,

                ஆத்தூர்.                                                                               சென்னை.


2.சுற்றுலாக் கடிதங்கள்
           

          உலகம்  மிகப்பெரிது. நாம் பார்க்காத காட்சிகள் இவ்வுலத்தில் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் இயற்கையும் செயற்கையுமாய் கலந்து விரிந்து நிற்கின்றன. சிலவற்றை நாம் நேரில் பார்த்து ரசித்திருப்போம். சிலவற்றை தொலைகாட்சியிலோ அல்லது புகைபடத்திலோ பார்த்திருக்கலாம். அவ்வாறு நேரிலே பார்க்காத சில காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமும் உண்டாகிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்து ரசிப்பதும் உண்டு. 
           
       நாம் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள் உலகத்தில் நிறையவே இருக்கின்றன. அவ்விடத்திற்கு எல்லாம் தனி மனிதனாய் சென்றால் அவனுக்கே போரடித்துவிடும்.  கூட்டமாக உறவுகளுடன் நண்பர்களுடன் சென்று பாருங்கள். அதனுடைய சுவாரிசயத்தைப் புரிந்த கொள்ளலாம். அவ்வாறு செல்லும் இடங்களைச் சுற்றுலா தளங்கள் என்கிறோம்.
           
     இவ்வுலகத்தில் எங்கும் இல்லாதுபோல் தனித்து அமைந்த பொருட்கள், இயற்கை  காட்சிகள், செயற்கை உருவாக்கங்கள், பழைய இடங்கள், கோவில்கள், கடல், ஆறு, மலை, வயல், மனிதன் என அனைத்துமே சிறப்புடையதுதான். அவற்றை எல்லாம் பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து போவார்கள். மக்கள் சுற்றிப் பார்க்க ஏதுவாக இருப்பதால் சுற்றுலா எனப் பெயர் வந்திருக்கலாம். அந்த இடங்களைச் சுற்றுலா இடங்களாகக் கருதப்படுகின்றன.
           
     இன்று சுற்றுலா தளங்களுக்கென்று அரசாங்கமே ஏற்பாடு செய்கிறது. பெரியபெரிய தொழில் நிறுவனங்களும் சுற்றுலா தளங்களை விரும்பி வந்து பார்க்கின்றனர். இதனால் குடும்ப ஒற்றுமை வலப்படும், மனம்  இலேசாக உணர ஆரமிப்பீர்கள், நட்பு வளரும், பகிர்ந்துண்ணும் பழக்கம் ஏற்படும். குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் வெளியுலகத்தை அறிந்து கொள்ளலாம்.
           
      நமது ஊரில் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இரந்தாலும் அசலூரில் நாம் வேற்று ஆள்தான். அப்போதுதான் நம்மை நாமே உணர முடியும். அப்படிப்பட்ட சுற்றுலாவைப் பற்றி கடிதங்கள் எவ்வாறு எழுதுவது என்பதை பார்க்கலாம்.

சுற்றுலாக் கடிதத்தைப் பொறுத்தவரை இரண்டு  வகையாகப் பிரிக்கலாம்.
1.சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.

2. இனி செல்லுகின்ற சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.

கீழ்க்கண்டவாறு சுற்றுலாக் கடிதங்கள் அமையலாம்
1. கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.

2.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு உன்னோடு வருமாறு நண்பனை அழைத்துக் கடிதம் எழுதுக.

3. குடும்பத்துடன் சிம்லா செல்ல உறவுகளை அழைத்துக் கடிதம் எழுதுக.
           
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம்.  உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சுற்றுலா கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.
  
நாள் : 10.03.2024

அன்புடைய நண்பனுக்கு,
           
       நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நான் தற்போதான் கொடைக்கானல் சென்று வந்தேன். மிக அருமையான இடம்.  இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். கொடைக்கானல் முழுமையும் கண்டு களித்தேன். மனம் முழுவதும் நிம்மதி. குளிர்மையான பிரதேசம். மிக்க சந்தோசம் அடைந்தேன். ஆனால் ஒருகுறை இருந்ததுபோல் இருந்தது. அது என்னவென்றால், நண்பா! நீயும் என்னுடன் வந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அந்த அழகான தருணத்தை உன்னுடன் பகிர்ந்திருப்பேன். அடுத்தமுறை மீண்டும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக வரவேண்டும். உனக்காகக் காத்திருக்கிறேன்!

நன்றி நண்பா

என்றும் தோழமையுடன்,

(கதிரவன்)

அனுப்பநர்                                                                      பெறுநர்
          
         ச.கதிரவன்,                                                                          த.முருகவேல்
           
         விவேகானந்தர் தெரு,                                                    ராம் நகர், அடையார்,

         ஆத்தூர்.                                                                               சென்னை.


3.உறவுக் கடிதங்கள்

          ஒரு காலத்தில், செய்தியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பாலமாகக் கடிதங்கள் இருந்து வந்துள்ளன. கடிதங்கள் ஞாபகங்களைக் கொடுக்கும். நேரிடையாகச் சொல்ல முடியாத வார்த்தைகளைக் கூட எழுத்தின் மூலமாகச் சொல்லி தெரிவிக்கமுடியும்.  எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சொந்தங்களை நண்பர்களைக் கடிதத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம். கடிதத்தின் முக்கியக் கருப்பொருளாக விளங்குவது உறவுகளுக்குள் எழுதுகின்ற கடிதங்கள்தான்.

        அன்பின் வெளிப்பாடாகவும் உணர்ச்சிகளின் தூண்டுதலாகவும் கடிதங்கள் அமைந்திருக்கின்றன. வெளியூரில் இருக்கும் கணவனிடமோ அல்லது மகனிடமோ மாதத்திற்கு ஒருமுறையோ இல்லை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ கடிதம் வந்து விட்டது எனில் அந்தக் குடும்பப் பெண்களின் கண்களைப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு கடிதங்கள் உள்ளங்களை நிறைவித்து வாழ்ந்தன.

   அதுவும், காதல் கடிதங்களைப் பொறுத்தவரை இன்னும் ஒருபடிமேலே சொல்லலாம். பிடித்தமானவர்களிடம் இருந்து வருகின்ற கடிதங்களை பெட்டியிலோ அல்லது மறவிடத்திலோ வைத்து அவ்வவ்போது மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொள்வது காதலின் கவிதைதான்.

      உறவுக்கடிதங்களை மக்கள் விரும்பினார்கள். கடிதங்களை யாருக்கும் தெரியாமல் ஒட்டி அனுப்புவது (இன்லேண்ட் லெட்டர்), வெளிப்படையான கடிதங்கள் (போஸ்ட் கார்டு), வெள்ளைத்தாளில் எழுதி அதற்குண்டான கவரில் (ஆபிஸ் கவர்) போட்டு அனுப்புவது என அவர்அவர்களுக்கென தரம் இருந்தன. அப்படிப்பட்ட உறவுக்கடிதங்களை இங்கு  பார்க்கலாம்.

கீழ்க்கண்டவாறு உறவுக் கடிதங்கள் அமையலாம்
1. வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.

2.விடுதியில் தங்கியிருக்கும் மகன் தன் குடும்பத்திற்கு எழுதும் கடிதம்.

3. பள்ளிப் பருவ நண்பனுக்கு கடிதம் எழுதுதல்.

4.காதல் சம்பந்தப்பட்ட கடிதங்கள்.

5. பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்கள்.

        இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உறவுக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

        இன்று கடிதங்கள் குறைந்து வாட்ஸ் அப், பேஸ்புக் என பல்வேறு இணைய தொடர்புகள் வந்தவிட்டன. ஆனாலும் கடிதங்களுக்கென மன மகிழ்வு இன்றும் உள்ளன.

வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.
நாள் : 12.03.2022
அன்புள்ள மனைவி மற்றும் குழந்தைகளுக்கு,           
            நான் நலம்! உன் நலம் அறிய ஆவல்! ஊரில் மழை பெய்ததா! உன்னையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்று மனம் பாடாய்படுத்துகிறது. பெரியவன் எப்படி இருக்கின்றான். சின்னவன் அடம்பிடிக்கின்றானா? நம் இரண்டு குழந்தைகளையும்   நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு வாங்கி கொடு. என்கூட தங்கியிருக்கும் இராமசாமி அண்ணா இன்னும் பத்து நாளில் இந்தியா வருகிறார். அவரிடம் பணமும் குழந்தைகளுக்கான பொட்களும் வாங்கி கொடுத்து அனுப்புகிறேன்.  என்னை பற்றி கவலைப்படாதே. நீ உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள். இன்னும் இரண்டு வருடங்கள்தான் வேலை இருக்கிறது. முடிந்தவுடன் ஊருக்கு வந்து விடுகிறேன்.

என்றும் உன் நினைவுடன்,
 (கேசவன்)

அனுப்பநர்                                                                                              பெறுநர்
           
       க.கேசவன்                                                                                                    கே.மலர்விழி
           
      துபாய்,                                                                                                              கும்பகோணம்.

 

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள் பார்க்கவும்

அந்தச் சிவப்பு பழம் |சிறுகதை|முனைவர் ந.அரவிந்த்குமார்

சிறுகதை-அந்தச் சிவப்பு பழம் - முனைவர் ந.அரவிந்த்குமார்
         அன்று விடுமுறை என்றதனால் குமரனையும் தான் வேலை செய்யும் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் மீனாட்சி. குமரா இங்கேயே உட்காரு எதையும் தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துவிட்டு தன் பணியைத் தொடங்கினாள். அப்போதுதான் அந்தக் காட்சி குமரன் கண்ணில்பட்டது. போதும் போதும் என்கிற பிள்ளைக்குப் பழங்களை அள்ளி ஊட்டிக் கொண்டிருந்தாள் பார்வதி. அதைக் கண்ணுற்றுப் பார்த்த குமரனுக்குத் தானும் பழங்களை உண்ண வேண்டும் என்ற ஆசை தோன்றியது. மாலையில் வீடு திரும்பியதும் அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினான். மீனாட்சியும் சரி இரு என்று வீட்டிலிருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தாள். அது குமரனின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இது இல்லம்மா! இன்னைக்கு முதலாளி அம்மா பையன் ராஜு சாப்பிட்டுட்டு இருந்த அந்தச் சிவப்பு கலர் பழம் வேண்டும்  என்று கேட்டான். அதுக்கெல்லாம் நூறுரூபா ஆகும் நம்மால வாங்க முடியாது என்ற மீனாட்சி சம்பளம் வந்தா வாங்கித்தரேன் என்று நகர்ந்தாள். ஆம், ஏழைகளின் வாழ்வில் பல ஆசைகள் நாட்களைக் கடத்திப்போட்டு மறக்கடிக்கப்பட்டவை தான். ஆனாலும் பாழாய்ப்போன ஆசை யாரைவிட்டது.
        குமரன் எப்படியும் அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டுமென நினைத்து தான் சேர்த்து வைத்திருந்த சில்லரைக் காசை உண்டியலை உடைத்து எடுத்துக்கொண்டு, பள்ளி முடிந்து வரும் போது நேரே பழக்கடைக்குள் நுழைந்தான். ஏயேய்.. நில்லு எங்கப் போற என்று வாயிலிலேயே தடுத்தது அந்தக் கருத்தவுருவம். பழம் வாங்கப் போறேன் அண்ணா. பழம் வாங்கப்போற ஆளப்பாரு. சரி எவ்வளவு காசு வச்சிருக்க. முகத்தில் ஒரு வெளிச்சம் பத்து ரூவா இருக்கு அண்ணே. களிர் சிரிப்புடன் அந்த உருவம் சொன்னது போடா போய் ஸ்கூல் முன்னாடி ஒரு பாட்டி இருக்குல்ல அதுகிட்ட போய் மிட்டாய் வாங்கிச் சாப்டு ஓடு. இங்கெல்லாம் வரக்கூடாது. பெருசா பத்து ரூவா வச்சிருக்கானாம். வந்திட்டான். இல்ல அண்ணே அந்தச் சிவப்பு நிறப்பழம் எனக்கு வேணும். சரிடா! அது நூறு ரூவா. அம்மா சொன்ன பதிலே இங்கயும் கிடைத்தது. உன்கிட்ட நூறு ரூவா இருக்கா சொல்லு என்ற அந்த உருவத்திடம் இல்ல அண்ணே என்ற பதிலுடன் புறப்பட்டான் குமரன். ஆனாலும்  மனதினுள் தீர்மானம் வலுத்தது. நாள்தோறும் தனக்கு கிடைக்கும் காசைச் சேர்க்கத் தொடங்கிய அந்தப் பிஞ்சு மூன்று மாதத்திற்குப் பிறகு தன் எண்ணம் நாளையீடேறும் என இரவெல்லாம் மனக்கோட்டைக் கட்டியது.
       மறுநாள் காலை பள்ளிக்குக் குறித்த நேரத்திற்கு முன்னமே குமரன் கிளம்பினான். கால்கள் விரைந்தன, இதயம் வேகமுடன் துடித்தது, முகம் மலர்ச்சியில் மிளிர்ந்தன, தனக்குள் தோன்றிய சொல்லொணாக் கர்வத்துடன் பழக்கடைக்குச் சென்றான். பழக்கடை வாயிலில் அதே கருத்தவுருவம். மறுபடியும் எங்க இந்தப்பக்கம் என்ற கேள்விக்குப் பெருமிதம் பொங்க குமரன் சொன்னான். அந்தச் சிவப்பு பழம் வாங்க வந்தேன். மீண்டும் அந்த உருவம் சிரித்துக் கொண்டே சொன்னது அது சீசன் பழம் தம்பி. ஒன்றும் புரியாதவனாய் அப்படினா என்ன? என்ற குமரனிடம் குறிப்பிட்ட சில மாசத்துல தா அந்தப் பழம் கிடைக்கும். இப்போ எல்லாம் அது கிடைக்காது. இனி அடுத்த வருஷம் தா அந்தப் பழம் வரும் எனும் போதே குமரனின் மனக்கோட்டை மண்கோட்டையானது. ஆனாலும் உறுதியுண்டு. அடுத்த வருஷம் இந்த நூறு ரூவாயை வச்சு அந்தப் பழத்தை நிச்சயம் வாங்குவேன் எனச் சொல்லிப் புறப்பட்ட குமரன் பள்ளியை அடைந்ததும் வாயிற்கடை பாட்டியிடம், ரெண்டு ரூவாயிக்கு நெல்லிக்கா குடு என வாங்கிக் கொண்டு நடந்தான்.

ஆக்கம்,

முனைவர் ந.அரவிந்த்குமார்

உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
அரசூர், கோவை.

 

ஆழ் மனப் பயணம்|முனைவர் நா.சாரதாமணி

ஆழ் மனப் பயணம் - முனைவர் நா.சாரதாமணி
        நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விருப்பத்துடன் செய்யுங்கள். எந்தச் செயலையும் சிறிதென்று எண்ண வேண்டாம். வீடு கட்டுவதற்கு ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் முக்கியமானவை. இலக்கியத்தில் நம் முன்னோர்கள் கூறுகிறார்கள், ” பகை சிறிது என்று எண்ண வேண்டாம். பாம்பானது மிகச்சிறிதாக இருந்தாலும் குன்றுபோல் உள்ள பெரிய யானையையும் வீழ்த்தும் சக்தி வாய்ந்தது. பகையை அழித்துவிடுவதே சிறந்தது” என்று கூறியுள்ளனர். மனதில் நினைக்கும் எண்ணம் சிறிதாக இருந்தாலும் அது தீயஎண்ணமாக இருந்தால் மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிடும் வல்லமை கொண்டது. எனவே மனதிற்கு உள்ளே அனுப்பப்படும் எண்ணங்களைக் கவனமாக அனுப்புங்கள். அறியாமலும் பாதகமான எண்ணங்களை மனதின் உள்ளே அனுமதிக்க வேண்டாம்.

செயல்படுத்தும் சிந்தனைகள்
         
        மனதை தெளிவாகத் தெளிந்த ஓடைநீர் போல வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்களின் மனதில் இலட்சியத்திற்கான எண்ணங்களை உள்ளே விடுங்கள். அந்த எண்ணங்கள் சரியானவையா? அந்த இலக்கு நன்மையை பயக்குமா? எதாவது பாதகம் விளைத்துவிடுமா? என்று மனதை அசைபோட வையுங்கள். அந்த எண்ணம் சரியானது  அல்லது தவறானது என்று ஒரு முடிவிற்கு வர சில வாரங்கள் ஆகலாம். பல மாதங்களையும் எடுத்துக்கொள்ளட்டும். அடுத்து அந்த நல்ல எண்ணத்தை செயல்படுத்துவதற்கு என்ன தேவை? எவ்வளவு பொருள் தேவை? யாருடைய உதவி தேவை? எல்லாம் சரியாக நடக்குமா? நடக்கவில்லையென்றால், வேறுவழியில் எவ்வாறு செயல் படுத்துவது? தடுப்பதற்கென்றே சில மனிதர்கள் கிளம்பிவிடுவார்கள். அவர்களை எவ்வாறு சமாளிப்பது? சிலர் இவன் நம்மை விட பெரிய ஆளாக வந்துவிடுவானோ என்று தேவையான பொருட்களை தர மறுத்து விடுவார்கள். இன்று நாளை என்று காலத்தை நீட்டித்து இறுதியில் இல்லை என்று கூறிவிடுவார்கள். இம்மாதிரியான சூழலில் எவ்வாறு அணுக வேண்டும் போன்ற அனைத்தையும் சிந்தனை செய்ய வேண்டும். அவற்றுக்கான பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கான மார்கத்தையும் கண்டறிய வேண்டும். அந்த மார்க்கம் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச்செல்வதாக இருக்க வேண்டும்.
         மனத்திற்குள்ளாக இத்தனை செயல்பாடுகளும் ஆண்டுகள் கணக்காகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மனதில் இத்தனை செயல்களும் நடந்தபின்னரே வெளிப்புறத்தில் தொடங்க வேண்டும், அப்போதுதான் எதைப்பார்த்தும் பின்வாங்காமல் “பார்த்து விடலாம் ஒரு கை ” என்று செயலை சவாலாகச் செய்ய முடியும்.

உங்கள் பலம் அறியுங்கள்
           
      மனிதன் தன் மூளையைக் கொண்டு பல சாதனைகளைப் புரியலாம். அபாரமான சக்தியைக் கொண்டவனே மனிதன்.  அவனுடைய பலம் அவனுக்கு தெரிவதில்லை. பள்ளி பருவத்தில் மற்றவனை இவன் முதல்மதிப்பெண் பெற்று விடுவான் என்று நம்பும் மாணவன்  தன்னை நம்புவதில்லை. அவனை முதலாவதாக நினைத்திருந்தால் அவன் கைகள் புத்தகத்தை எடுக்கும். கண்கள் பாடங்களைப் படிக்கும். விரல்கள் தேர்வை எழுதும். முதல் மதிப்பெண்களைப் பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். முதலில் அம்மாணவன் தமது மனதில் தேர்வை எழுதி முதல் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் வகுப்புத்தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிடுவான். மனதால் வெற்றிகொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பது என்றால் அவ்வளவு எளிதல்ல. பல இன்னல்களுக்கு இடையிலேயே போராடிச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

உங்கள் இலக்கு மனதிற்குள் பயணிக்கட்டும்
           
      ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் தன் தோட்டத்தில் பல தானியங்களைப் பயிர் செய்வான். அது விளைகின்ற பொழுது காட்டில் உள்ள மான்கள் போன்றவை வந்து மேய்ந்து விடும். அந்த உழவன் இதை தடுக்க யோசித்தான். பறந்த இந்த நிலத்தைச் சுற்றி மூங்கிலை வளர்த்து விட்டால் அது வேலியாகவும் இருக்கும். கூரைவீடும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற தேவைகளுக்கும் பயன்படும் என்று மூங்கில் விதைகளை வாங்கி நிலத்தை தோண்டி விதைத்து மணலை மூடி வைத்தான். ஒவ்வொரு நாளும் சென்று அதற்கு நீரை ஊற்றி வந்தான். ஒருவாரம் சென்றது. அதன் தளிர் இன்னும் மேலே வரவில்லை. உழவன் எருவிட்டு நீர் ஊற்றினான். ஒருமாதம் சென்றது அவ்விடத்தில் எந்தவித சலனமும் இல்லை. மூங்கில் முளைப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை. அந்த உழவன் மனம் தளரவில்லை. ஒவ்வொரு நாளும் நீரை ஊற்றிக்கொண்டே இருந்தான். ஓராண்டைக் கடந்தது ஆனாலும் முளை விடவில்லை. அந்த உழவனும் விடுவதாக இல்லை. நீரை ஊற்றிக்கொண்டே இருந்தார். அதற்கு தேவையானவற்றைச் சலைக்காமல் செய்தார். இரண்டு  மூன்று என்று ஆண்டுகள் கடந்து  சுமார் ஐந்தாவது ஆண்டில்தான் சிறிதாகத் தளிரானது. இளம்பசுமையாகப் பூமியை பிளந்துகொண்டு வெளியே எட்டிப்பார்த்தது. உழவனுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. ஆமாம்! இந்த மூங்கில் விதை ஐந்து ஆண்டுகளாக முளைக்காமல் மண்ணுக்குள் என்ன செய்தது? அந்த மூங்கில் எந்த உயரத்திற்கு வளருமோ அதன் பாதியளவுவரை வேரானது பூமியின் உள்ளே வளர்ந்து சென்றுள்ளது. அதற்கு தேவையான தண்ணீரை உறிஞ்சி மேலும்மேலும் தன்னை உறுதிப்படுத்தி கொண்டு பூமியின் மேல் உயரமாக வளரும்போது சாய்ந்துவிடாமல் தாங்குவதற்கு வேர் தன்னை திடமாகச் செய்து கொண்டது. பூமிக்கு மேலே வளரும் மூங்கிலுக்குத் தேவையான அளவு தண்ணீர் போன்றவற்றை தருவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டுகள் மூங்கிலின் பயணம் வெளியே தெரியவில்லை. ஆனால் பூமிக்கு உள்ளே அது தன் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அது ஐந்தாண்டுகளை எடுத்துக்கொள்கிறது. அதன்பின்னர் பூமியின் வெளியே ஐந்து வாரங்களில் தொன்னூறு அடிவரை வளரக்கூடிய மூங்கில். ஓராண்டு முடியும்வரை அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அடுத்த ஆண்டுகளில் மிக வேகமாக அதன் வளர்ச்சி மெதுவாக நடைபெற்றது.
          கவனியுங்கள் மூங்கில் ஐந்தாண்டுகளாகப் பூமிக்குள் சென்று தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. இவ்வாறு உங்கள் இலக்கின் பயணத்தைப் பொறுமையாக மனதிற்குள் நிகழ்த்தி கவனமாகச் செயல்பட தயாராக உள்ளீர்களா? ஆம்! என்றால் உங்களின் பயணம் வெற்றியை அடையும் என்பது தின்னமே.

இன்னல்களை எதிர் கொள்ளுங்கள்
        
       சிறுகாப்பியங்களில் ஒன்று சூளாமணி. அதில் ஒரு பாடலில் கூறுவார்கள். காட்டிற்கு ஒருவன் வேட்டையாட சென்றான். அப்போது காட்டு யானை ஒன்று இவனை துரத்திக்கொண்டு வந்தது. வெகு தொலைவுக்கு ஓடி வந்தான். ஆனாலும் அந்த யானை அவனை விடுவதாக இல்லை. இதனிடமிருந்து  எவ்வாறு தப்புவது என்று அவன் வழியைத் தேடிக்கொண்டு ஓடினான். சிறிது தூரத்தில் கிணறு போன்று பள்ளம் தென்பட்டது. உடனே வேகமாக ஓடிச்சென்று அதனுள்ளே குதித்தான். குதித்தவன் மேல் நோக்கியே பார்த்தான். சில நொடிகளில் அந்த காட்டுயானை அங்கு வந்து எட்டிப்பார்த்தது. அங்கேயே நின்று கொண்டது. அதன்பிறகு அவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். பாம்பு ஒன்று படமெடுத்துத் தீண்டுவதற்காகத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டது. இதை அப்போதே கவனித்த அவன் அருகில் தொங்கும் ஒரு வேரைப் பற்றிக்கொண்டு சரசர வென்று மேலே பாதிதூரம் வரை ஏறி  மேலேயும் செல்ல முடியாமல் கீழே இருக்க முடியாமல் பாதியில் தொங்கிக்கொண்டு இருந்தான். பின்னர் அவனுக்கு அருகே கைக்கு எட்டும் தொலைவில் தேனிக்கள் இல்லாமல் தேன் கூடு ஒன்று இருந்தது. அதை ஒரு கையால் அவிழ்த்து எடுத்து தின்று அதன் சுவையில் லயித்தான். கவனியுங்கள்! அவனுக்கு மேலேயும் கீழேயும்  அவனை வீழ்த்துவதற்கு இரண்டு சக்திகள் காத்திருக்கின்றன. ஆனாலும் அவற்றிலிருந்து தன்னை தவிர்த்துக் கொண்டு தேனின் இனிமையில் இன்பம் கண்டான். நீங்கள் ஒவ்வொரு செயலையும் செய்யும் போதும் இவ்வகையான இடர்பாடுகள் இழப்புகள் என்று வருவது இயல்பானதே. அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, சாதனை புரியும் மனப்பக்குவம் உங்களிடம் இருந்தால் வரலாறு படைப்பவர் நீங்கள்தான்.

சுய கணிப்புச் செய்யுங்கள்
          
        உங்களை நீங்களே கணிப்பது நல்லது. நீங்கள் செய்யும் செயலில் நிறை என்ன? குறை என்ன? நன்மை தீமை என்ன? என்று மற்றவர்கள் உங்களைப்பற்றி தவறுகள்  குறைகளைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நீங்களே கண்டறியுங்கள். இந்த வழிமுறையைப் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகள் செய்வதைக் காணலாம்.
    ஒரு பொருளை உற்பத்தி செய்யும் கம்பெனி, உதாரணமாகக் காப்பித்தூள் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று. தம்பொருளை மக்கள் வாங்குவதற்காக விளம்பரம் செய்தது. “ஆகா என்ன சுறுசுறுப்பு, என்ன சுவை என்னே மணம், காப்பினா இதுதான் காப்பி” என்று விளம்பரம் செய்து விட்டது. அதில் வேலை செய்யும் பணியாளர்கள் அந்தப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக வீடு வீடாக சென்று, பணம் பெற்றுக்கொள்ளுமலே காப்பித்தூளைக் கொடுத்து விட்டு “இதை நீங்கள் உபயோகித்து பாருங்கள் நன்றாக இருந்தால் பணம் கொடுங்கள். நன்றாக இல்லை என்றால் பணமே வேண்டாம்” என்றுக் கூறி அவர்களின் பொருளை வாங்கச்செய்து விடுவார்கள். பின்னர் சில வாரங்கள் கழித்து மீண்டும் வந்து  அது நன்றாக உள்ளதா? இல்லை என்றால் என்ன குறை உள்ளது? இன்னும் மக்கள் எதை எதிர் பார்க்கிறார்கள் போன்ற நிறை குறைகளை அறிந்து கொண்டு அவற்றை போக்குவதற்கான செயல்பாடுகளில் இறங்குவார்கள். மக்களிடம் அப்பொருள் அதிக அளவு விற்பனையாகும் வரை  விடமாட்டார்கள். அவர்களின் குறைகளை அவர்களே களைவார்கள்.

உங்கள் தேவையைக் கண்டறியுங்கள்
         
         உங்கள் செயல்களின் குறைகளை நீங்களே கண்டு தெளிந்து அவற்றையெல்லாம் நீக்கி விட்டு அதன்பின்னர் செயல்புரிவதில் தீவிரம் காட்டுங்கள். உங்களைப்பற்றி பெற்ற தாய்க்குக்கூட தெரியாது. உங்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் செய்யும் செயலில் ஆற்றலை செலுத்தி அதில் வெற்றி பெறுவதும் அது வேண்டாமென்று பாதியில் விட்டுவிடுவதும் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு இலக்கை வையுங்கள், அதனை அடைவதற்கு மனதில் பல சிந்தனைகளைச் செய்து பல ஆண்டுகளுக்குப்பின் எண்ணம் சரிதான் என்று தோன்றியவுடன் செயலைத் தொடங்குங்கள். அதற்காகச் செல்லும் போது எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவற்றை உடைத்தெறியுங்கள். மனத்தின்மையுடன் போராடுங்கள். மற்றவர்க்காக நீங்கள் செய்யும் செயல் என்று இந்தப் பிரபஞ்சத்திற்குப் புரியும்வரை போராடுங்கள்.  புரிந்து விட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.
கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நா.சாரதாமணி,
உதவிப்பேராசிரியர்,
SMS கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்
முனைவர் நா.சாரதாமணி அவர்களின் படைப்புகளை மேலும் படிக்க… கிளிக் செய்யவும்

 

அலுவலகம் சார்ந்த கடிதங்கள்|இனியவை கற்றல் மின்னிதழ்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் கீழ்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.விண்ணப்பக்கடிதங்கள்
2.அலுவலகக் கடிதங்கள்
3.புகார்க்கடிதங்கள்
4.வணிகக்கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்


1.அனுப்புநர், பெறுநர் என்றே போட வேண்டும். அனுப்புதல் – பெறுதல் என்று போடக்கூடாது.

2.அதேபோல் அனுப்புநர், பெறுநர் என்பதற்குப் பக்கத்தில் முற்றுப்புள்ளி      ( . ), காற்புள்ளி ( , )  என எதுவும் போட வேண்டாம்.

3.அனுப்புநரில் பொதுவான கடிதம் எனில் ஊர்ப்பொதுமக்கள் என்றே போடலாம். இல்லையாயின் தனிநபர் எழுதுவது போன்றும் பெயரிட்டும் எழுதலாம். அது தவறில்லை. ஆனால் இறுதியில் தங்கள் உண்மையுள்ள என்ற இடத்தில் அனுப்புநரில் என்ன உள்ளதோ அதுதான் இங்கும் இடம்பெறுதல் வேண்டும்.

4. அனுப்புநர், பெறுநர்- இல் இடம்பெறும் முகவரி ஒவ்வொன்றின் இறுதியிலும் காற்புள்ளி இட்டு கடைசியில் மட்டும் முற்றுப்புள்ளி வைப்பது கட்டாயம் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

5.பெறுநர் என்னும் முகவரி பகுதியில் பெயர் இருந்தால் (திரு. அ. கந்தசாமி அவர்கள்) மட்டுமே திரு, அவர்கள் போட வேண்டும். பெயரில்லாமல் பதவி இருப்பின் திரு, உயர்திரு மற்றும் அவர்கள் என எதுவும் போடக்கூடாது.

6. ஐயா / அம்மையீர் எனும் பகுதியில் பெறுநரில் உள்ளவர் ஆண் / பெண் எனத் தெரியாமல் இருந்தால் மேற்கண்டவாறு இரண்டுமே போட்டுக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும் எனில் ஒன்றை மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்.

7. ஐயா / அம்மையீர் எனும் இடத்தில் காற்புள்ளி வைத்தல் அவசியம்.

8. பொருள் என்னும் இடத்தில் முக்காற்புள்ளி ( : ) வைத்தல் வேண்டும். மேலும், நாம் பெறுநரிடம் என்ன கேட்கின்றோமோ அவற்றை சுருக்கமாகச் சொல்லி – தொடர்பாக… என முடிக்க வேண்டும். 

9.தொடர்பாக… என்பது இதைப்பற்றி இன்னும் பேசப்போகின்றேன் எனப் புரிந்து கொள்ளலாம்.

10. பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.

11. பொருள் ஆரமிப்பதற்கு முன்னால் வணக்கம் என்று குறிப்பிடுவது சிறப்பு. ஏனெனில் உயர் பதவியில் உள்ளவர்கள் மற்றும் நாம் தனக்கு இதுஃஇவை வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றோம். அதனால் இம்முறை தவறில்லை. (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை)

12.வணக்கம் சொல்லிவிட்டால் முடிவில் நன்றி கட்டாயம் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

13.வணக்கமும் நன்றியும் அலுவலகம் சார்ந்த கடிதங்களில் போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி.

14. அலுவலகம் சார்ந்த கடிதங்களில் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, தங்கள் அன்புள்ள எனப் போடுதல் கூடாது. தங்கள் உண்மையுள்ள என்றே போட வேண்டும். இறுதியில் காற்புள்ளி ( , )  வைத்தல் அவசியம்.  அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும். (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் சுற்றறிக்கை அனுப்புவோர் நேரிடையாகப் பெயரிட்டு பெயருக்கு மேல் கையெழுத்திடுவர்)

15.இடப்பக்கத்தில் இடம், நாள் என்பவைகள் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

16. தங்கள் உண்மையுள்ள என்பதின்கீழ் கையெழுத்துப் போட வேண்டும். அதற்குகீழ் அனுப்புநரின் பெயரினைத் தெளிவான முறையில் எழுதுதல் அவசியம்.

17.இறுதியில் கட்டாயம் இணைப்பு இருக்க வேண்டும். இணைப்பில் நீங்கள் கேட்ட பொருளுக்கு ஏற்றவாறு சான்றுகள், புகைப்படங்கள், பொதுமக்கள் கையொப்பங்கள், அளவு வகைபாடுகள் என அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.

18.இறுதியில் நீங்கள் எழுதிய அலுவலகம் சார்ந்த கடிதத்தை ஒருமுறை நன்றாகப் படித்துச் சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் ஒரு மின்நகல் (Xerox) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுதிப் பழகிக்கொள்ளுங்கள்

1.விண்ணப்பக்கடிதங்கள்
 

          வேண்டல், கேட்டல், விரும்புதல், முடித்துத் தரச்சொல்லல், அமைத்துக் கொடுக்க கேட்டல் ஆகியன பொருளாகக் கொள்ளலாம்.
 
       நாம் ஒருவரிடம் தனக்கு இது அல்லது இவை வேண்டும் அல்லது செய்து கொடுக்கும்படி என்று கேட்பது விண்ணப்பம் ஆகும். அவை கீழ்க்கண்ட உதாரணம்படி இருக்கலாம். இன்று நாம் ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு விண்ணப்பம் என்பது அவசியமாகிறது.
           விண்ணப்பம்  (சுயவிபரம்) என்பது, ஒருவரின் பெயர், வயது, முகவரி, கொடுக்கப்படும் வேலையின் முன் அனுபவம், கல்விநிலை என்ற முழுமையான தகவல் இருக்கக்கூடியது.

விண்ணப்பக்கடிதம் சார்ந்த சில உதாரணங்கள்
1.தலைமை ஆசிரியருக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் வரைக.

2.உங்கள் ஊருக்குச் சாலை சீரமைத்துத் தரும்படி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

3.பழுதடைந்த தெருவிளக்கை சீரமைத்துத் தரும்படி மின்பொறியாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. உங்கள் ஊருக்கு நூலகம் அமைத்துத்தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

5.உதவிப்பேராசிரியர் பணி வேண்டி முதல்வருக்கு விண்ணப்பம் வரைக.

6. மூவாளூர் ராமாமிருதம் அம்மையாரின் திருமண உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

7. பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

8. வருமானச்சான்று சாதிச்சான்று இருப்பிடச்சான்று பெற வட்டாச்சியர் அவர்களுக்கு விண்ணப்பம் வரைக.

9. மாணவர்களைப் பள்ளிக்கூடம் சேர்க்க வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் வரைக.

10.குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு விண்ணப்பம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                     ஊர்ப்பொதுமக்கள்,
                       
                     விவேகானந்தர் தெரு,
                       
                     எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                       
                     சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    நகராட்சி ஆணையாளர்,
                       
                    நகராட்சி அலுவலகம்,

                    பெத்தநாயக்கன் பாளையம்,
                    சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : குடிநீர் வசதி செய்து தருதல் தொடர்பாக…
           
                  வணக்கம். எங்கள் கிராமத்தில் கிட்டதிட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீருக்காகப் பக்கத்தில் உள்ள கிணற்றிலிருந்து பயன்படுத்தி வருகின்றோம். அதுவும், நீண்டதொரு தூரத்திலிருந்து பெண்கள் தலையிலும் இடுப்பிலும் சுமந்து வருகின்றனர். ஆண்கள் மிதிவண்டியின் மூலமாகத் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்தத் தண்ணீரைத்தான் குடிநீருக்காகவும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், கோடைகாலத்தில் கிணற்றிலுள்ள தண்ணீர் வற்றிப்போவதால் குடிக்க ஒருவீட்டுக்கு ஒரு குடம்  தண்ணீர் கிடைப்பதே மிக அரிதாகிறது. அதனால் எங்கள் ஊர் வழியாகச் செல்லும் மேட்டூர் குடிநீர் இணைப்பை எங்களுக்கு வழங்கியும், நகராட்சியின் சார்பாகத் தெருவெங்கும் குடிநீர்த் தொட்டி அமைத்து கொடுத்து உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                   தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                             ஊர்ப்பொதுமக்கள்

இணைப்பு
1.ஊர்பொதுமக்களின் கையொப்பம்

குறிப்பு
1.பெறுநர் பகுதியில் யாருக்கு எழுத வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

 

2.அலுவலகக் கடிதங்கள்           

       அலுவலகங்கள் சார்ந்து எழுதப்படுகின்ற கடிதங்களை அலுவலக கடிதங்கள் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் சார்ந்தவைகளே அதிகம் இடம்பெறுகின்றன. தனியார்த் துறையில் குறைவானதாகவே காணப்படுகின்றன. ஏனெனில் அரசு சார்ந்த இடங்களில் பழைய கோப்புகளைப் பாதுகாத்து,  அதனை முன்வைத்து வரும்காலங்களில் பயன்படுத்தி வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் செயல்பாடுகள் குறித்துக் கடிதம் இடம்பெற்றிருப்பின் அதனை கோப்பில் பாதுகாத்தும் வருகின்றனர்.

        இக்கடிதங்கள் மேலதிகாரி தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அனுப்புவார். அவர் அவரின் கீழ் வேலை செய்யும் நபர்களுக்கு பரிந்துரை செய்வார். இப்படியே இறுதியாகப் பொதுமக்களிடம் சென்றடையும். 

   அலுவலக கடிதங்களைப் பொறுத்தவரை ஆணை பிறப்பிப்பதற்காகவும் செய்திகளைத் தெளிவுப்படுத்தவும் எழுதப்பப்படுகின்றன.
கீழ்க்கண்டவாறு அலுவலக கடிதங்கள் அமையலாம்
1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாச்சியர்களுக்கு கடிதம் எழுதுதல்.

2.வட்டாச்சியரிடமிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் கடிதம் வரைக.

3. ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அமைச்சர்களிடமிருந்து துறைதோறும் கடிதத்தை அனுப்புதல்.

4. கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார்க்குக் கடிதம் வரைதல்.

5. காவல்துறை ஆய்வாளர் தான்சார்ந்த காவல் நிலையங்களுக்கு ஆணையிட்டு கடிதம் அனுப்புதல்.

6. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.

7. பல்கலைக்கழகங்கள் தங்கள் கீழ்ச்செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்குச் செய்திகளை அனுப்ப கடிதம் எழுதுதல்.
8. சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்களுக்குப் பொதுநலம் கருதி கடிதம் எழுதுதல்.

9.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலைக்கு உண்டா ஆணை, அங்கீகாரம் ஆகியன இவையுள் அடங்கும்.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.
அனுப்புநர்
                       
                     முதலமைச்சர்,
                       
                     தமிழ்நாடு.

பெறுநர்
                     மாவட்ட ஆட்சியர்கள்

                     தமிழ்நாடு.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : கோவிட் – 19 பொது ஊரடங்கு செயல்படுத்துதல் தொடர்பாக…
           
             வணக்கம். நம் மாநிலத்தில் கோவிட் – 19 என்கிற பெரும் தொற்றுநோய் நமது மக்களிடையே அதிகளவில் தொற்றி வருகிறது. இதன்காரணமாகத் தினம்தினம் மக்கள் பலர் உயிர்நீத்து வருகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் – 19 க்கான புதிய மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் அனைத்துப் பொதுமக்களும் வீட்டினுள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவிதமான போக்குவரத்தும் இல்லாமல் ஊரடங்கு நாளை முதல் செயல்பட தொடங்குகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். மேலும், அனைவரும் முககவசம் அணிந்தும் ஒருவர்க்கு ஒருவர் இடைவெளிவிட்டும் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தியும் இருப்பது அவசியமாகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்தில் கொண்டு அனைத்துப் பொதுமக்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  சென்னை                                                                                                                                              முதலமைச்சர்
நாள் :                                                                                                                                                                           (தமிழ்நாடு)

இணைப்பு
1.செய்தித்துறை

2.மக்கள் தொடர்பு துறை

3.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

4.முதலமைச்சர் தனிப்பிரிவு

 

3.புகார்க்கடிதங்கள்


     புகார் என்பது பிறமொழிச்சொல்லாகும். தமிழில் புகார் என்பதற்கு முறையீடு என்று பெயர் கொள்ளலாம். புகார் அளிப்பது என்பதை தவிர்த்து முறையீடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டால் நலம். ஆனால் மக்கள் பேச்சு வழக்கில் முறையீடு கடிதம் என்பதைவிட புகார் கடிதம் என்பதே அதிகம் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகிறது. இங்கு புகார் என்பது பொதுச்சொல்லாக வைத்து கடிதம் எழுதப்படுகிறது.

       புகார், முறையீடு என்பதற்கு மீட்டுக்கொடுக்க வேண்டல், நீதி கேட்டல், சொந்தம் கொண்டாடல், உரிமை வேண்டல், என்னுடையது என்று முறையிடல் ஆகியனவும் இன்னும் பிறவும் பொருளாகக் கொள்ளலாம்.

      நீதி கேட்டோ அல்லது உரிமையைக் கேட்டோ அந்தந்த மேலதிகாரிக்கு தனக்குள்ள நிறையைத் தெரிவித்து எதிரானவரைப் பற்றி புகார் அளித்தல்.

           காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு புகார் கடிதம் எழுதுதல்.

        சண்டையிட்டும், வழக்கு சார்ந்தும், குடும்ப பிரச்சனைகளை முன்வைத்தும் காவல் நிலையங்களில் புகார் அளித்தல்
.
இம்மாதிரியான புகார் கடிதங்கள் அதிகமாகக் காவல் நிலையங்கள் சார்ந்தே இருக்கும். 
கீழ்க்கண்டவாறு புகார் கடிதங்கள் அமையலாம்

1.காணாமல் போன மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

2. காணாமல் போன நகையைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

3. காணாமல் போன மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

5. எங்கள் வீட்டில் திருட்டுப்போன பொருட்களைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

6. காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

7. காணாமல் போன கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

8. பாலியல் கொடுமையை எதிர்த்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

9. சமூக பிரச்சனைகளுக்காக அந்தந்த உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் வரைக.

10.குடும்ப பிரச்சனைகளை முன்வைத்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு புகார்க்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                      அமுதன்,
                       
                      காமராஜர் தெரு,
                       
                      எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                 
                      சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    காவல் ஆய்வாளர்,
                       
                    காவல் நிலையம்,
                       
                   ஏத்தாப்பூர்,

                   பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,

                   சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                   பொருள் : இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தருதல்  தொடர்பாக…
           
                       வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். தற்போது எனது தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு ஆத்தூருக்கு என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தேன். ஆத்தூரில் NM ஜுவல்லர்ஸ் – க்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள்ளே நகை வாங்க சென்றிருந்தேன். கிட்டதிட்ட இரண்டு மணி நேரங்களுக்குப்பின் நகை வாங்கிவிட்டு வெளியில் வந்து பார்க்கும்போது எனது வண்டியைக் காணவில்லை. அக்கம்பக்கத்திலும் சென்று பார்த்தேன். பக்கத்தில் உள்ளோரிடம் விசாரித்தும் பார்த்தேன். எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஆதலால், என்னுடைய இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                        தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                               ( அமுதன் )
இணைப்பு
1.TVS – WEGO, Blue color

2.வண்டி எண் – TN 27 A 2314

3.வண்டியின் RC  புத்தகம்

4.என்னுடைய ஓட்டுநர் உரிமம் நகல்

5.  NM ஜுவல்லர்ஸ் கடையின் நாங்கள் வாங்கின நகையின் அன்றைய ரசீது

 

4.வணிகக் கடிதங்கள்

         வணிகம், வாணிபம் என்று சொல்லலாம். இங்கு வணிகம் என்பது தொழில் சார்ந்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. அவ்வாறு தொழில் சார்ந்து நடக்கும் கடித போக்குவரத்துக்களை நாம் வணிகக் கடிதம் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் சிறுகுறு தொழில்களிலிருந்து பெருந்தொழில்கள் நடக்கும் அனைத்து வகையிலும் உண்டு எனலாம்.

          சிறுகுறு தொழிலகங்கள் பெரும் தொழிற்சாலைகளிடமிருந்து தனக்கு இந்தப் பொருட்கள் அல்லது கருவிகள் தனக்கு வேண்டும் என்று கடிதம் எழுதப்படுவது ஆகும்.
         
இவ்வகையான கடிதங்களைப் பொறுத்தவரை அந்தந்த தொழிற்சாலைகளின் தலைமை மற்றும் மேனேஜர் அவர்களுக்கு எழுதக்கூடியதாகும்.

கீழ்க்கண்டவாறு வணிகக் கடிதங்கள் அமையலாம்
1.புத்தகங்கள் வேண்டி பதிப்பகத்தார்க்கு கடிதம் வரைக.

2.சக்கரை வேண்டி சக்கரை தொழிற்சாலை மேனேஜருக்கு கடிதம் வரைக.

3. வாகனங்களின் உபரி கருவிகள் வேண்டி அவ்தொழிற்சாலைக்குக் கடிதம் வரைக.
3. அரிசி, பருப்பு, வெங்காயம் போன்றவைகள் பெற அந்தந்த மண்டிகளின் (மார்கெட்) தலைமை பொறுப்பாளருக்குக் கடிதம் வரைக.

4. எலெக்ட்ரானிக் சாதனங்கள் (TV, Phone, Watch, Computer, Fan Ex..) வேண்டி அவ்வவ் துறைகளுக்கு கடிதம் வரைக.

5. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ( Bulb, Switch Ex..)  வேண்டி கடிதம் வரைக.

6. வர்ணங்கள் (பெயிண்ட் ) வேண்டி அந்தந்த தொழிற்சாலைகளுக்கு (Asian Paints Ltd, Berger Paints India Ltd, Kansai Nerolac paints Ltd Ex..) கடிதம் வரைக.

7. துணிக்கடைக்கு புதிய ஆடைகள் வேண்டி கடிதம் வரைக.

8. பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.

9. மளிகைப் பொருட்கள் வேண்டி கடிதம் வரைக.

10.மருந்து கடைக்கு தேவையான மருந்துகள் வேண்டி கடிதம் வரைக.

       இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இங்கு ஒருசில கேள்விகளுக்கு இதற்கு கூடவா கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணலாம். ஆனால் வணிகக் கடிதம் என்று வரும்போது இவையெல்லாம் சேர்ந்துதான் வரும். மேலும், கடித வடிவில் இல்லாமல் நீங்கள் சாதாரணமாக கேட்கும் பொருட்களை அவர்களும் கொடுத்து விடுவதால் நமக்கு இதுவே போதும் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. பொருட்கள் தரக்கூடியவர்கள் இப்படித்தான் தனக்கு வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் கடித முறையைப் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு வணிகக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.
அனுப்புநர்
                       
                      கதிரவன்,
                       
                      கதிர் பர்னிச்சர்ஸ்,
                      
                      நேரு தெரு,
                       
                      சேலம் மாவட்டம்,
                       
பெறுநர்
                      மேனேஜர்,

                      ராயல் பர்னிச்சர்ஸ் & கோ

                      அண்ணா நகர்,
                       
                      சென்னை – 600 021.

ஐயா / அம்மையீர்,
           
                       பொருள் : பர்னிச்சர்ஸ் வாங்குதல்  தொடர்பாக…
           
                வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த இருப்பத்தைந்து வருடங்களாகப் பர்னிச்சர்ஸ் கடை நடத்தி வருகின்றேன். தற்போது எனது கடைக்குச் சில பொருட்கள் தேவைப்படுகின்றன. மரத்தாலான கட்டில்களும் ஷோபாக்களும் நல்லதொரு வடிவிலும் உறுதியான நிலையில்  அமைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  மேலும் நாற்காலிகள் சிறந்த தச்சர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அறிந்தேன். அதனால் எனக்கு கீழ்க்கண்ட பொருட்களை என்னுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். 
            நீங்கள் எங்களுக்கு அனுப்புகின்ற பொருட்களுக்கு ரசீது அனுப்பியவுடன் உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையை வங்கியில் செலுத்திவிடுகின்றோம்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                     தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                             ( கதிரவன் )

இணைப்பு
1. Wood Shoba Set  – 25 Nos

2.Chair (Rs.500) – 100  Nos

3. Small size Chair (Rs.350) – 100 Nos

4. Bed Smart Design – 75 Nos

5.  Dressing Table – 100 Nos

 

பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக

பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக
          “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி” என்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபெருமானின் அருளால் அகத்திய முனிவரால் பொதிகைமலை என்னும் தமிழ்நாட்டிற்குத் தமிழ்மொழி கொண்டு வரப்பட்டது. இலக்கணங்கள், இலக்கியங்கள், காப்பிங்கள், நிகண்டுகள், அகராதிகள், சிந்தாந்த நூல்கள் எனப் பலதரப்பட வகைமையுடைய நூல்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டன. இருப்பினும் ஆங்கிலேயர்கள், வடநாட்டவர்கள், இஸ்லாமியர்கள் என அந்நியர்களின் படையெடுப்பால் மொழிக்கலப்பு ஏற்பட்டது.
மக்களின் இயலாமை, பிறமொழியின் மீதுள்ள ஈர்ப்பு, புதியமொழி என்கிற ஆசை, அம்மொழிகளைக் கற்றால் அறிவு பெருகும் என்கிற எண்ணம் போன்றவைகள் மக்களைத் தமிழ்மொழியோடு பிறமொழிகளையும் கலந்து பேச வைத்தது. இதன் காரணமாகப் பிறமொழிக்கலப்பு அதிகமானது. காலம் செல்லச்செல்ல இளம்தலைமுறையினருக்குப் பிறமொழிகள்கூட தமிழ்மொழிதான் என்கிற உணர்வும் எண்ணமும் உண்டாயிற்று. இப்படியே சென்றால் ஒருகாலக்கட்டத்தில் உண்மையான மொழி அழிந்து பிறமொழிகள் கலந்து பேசக்கூடிய கலப்பு மொழியே உண்மையாகிவிடும்.  இதன்காரணமாகப் பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து, அவற்றினைக் களைந்து தூயத்தமிழ்ச் சொற்களையே பேசுவோம்.
வ.எண்தெலுங்குச் சொற்கள்தமிழ்ச்சொற்கள்
1அப்பட்டம்வெளிப்படையாக
2ஆஸ்திசெல்வம்
3எக்கச்சக்கம்மிகுதி
4கச்சிதம்ஒழுங்கு
5கெட்டியாகஉறுதியாக
6கெலிப்பு  வெற்றி
7கேட்பைகேழ்வரகு
8சந்தடிஇரைச்சல்
9சாகுபடிபயிரிடுதல்
10சொச்சம்மிச்சம்
11சொந்தம்உறவு
12தாறுமாறுஒழுங்கின்மை
13தெம்புஊக்கம்
14தொந்தரவுதொல்லை
15நிம்மதிகவலையின்மை
16பண்டிகைபெருநாள்
17பந்தயம்பணயம்
18மச்சுமேல்தளம்
19மடங்குஅளவு
20வாடகைகுடிக்கூலி
21வாடிக்கைவழக்கம்
பிறமொழிச் சொற்களுக்கான தமிழாக்கம் தருக

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் / அ.செல்வராசு

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் - அ. செல்வராசு
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 246ஆம் பாடல் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடியதாகும். பூதப்பாண்டியன் இறந்து பட்டபோது இப்பாடல் அவன் மனைவியால் பாடப்பெற்றுள்ளது. கணவனை இழந்து தவித்த அவளிடம் சான்றோர்கள் அவளைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்துகின்றனர். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. கணவனை இழந்து விட்டால் பெண்கள் தம் நிலை குறித்து மூன்று வகையான முடிவெடுக்கலாம் என ஆண்தலைமைச் சமூகம் கற்பித்துள்ளது. ஒன்று – இறந்த கணவனின் உடல் மீது விழுந்து எரிந்து படுவது. இரண்டு – கணவரின் இறப்புக்குப் பிறகு 14 நாட்கள் கழித்து இறந்துபடுவது. மூன்று – கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாக வாழ்வது. இந்த மூன்று நிலைப்பாடுகளைக் கொண்டு அவளை முதல்தரக் கற்புடையவள், இரண்டாம்தரக் கற்புடையவள், மூன்றாம்தரக் கற்புடையவள் என ஆண்தலைமைச் சமூகம் நிரல் படுத்தியுள்ளது; வற்புறுத்தி உள்ளது.

     மேற்சுட்டிய புறப்பாடலில் சான்றோர்கள் பெருங்கோப்பெண்டைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்த, அவளோ பின்வருமாறு கூறி மறுத்துரைக்கிறாள்.

“பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்து இட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்பது பெருங்கோப்பெண்டின் குரலாகும்.
    
“நான் தீப்பாய்வதை விடுத்துக் கைம்பெண்ணாக வாழவேண்டும் எனக் கூறும் சான்றோரே நெய்யில்லாது சமைத்த, பானையின் அடியில் கிடக்கும் கைப்பிடியளவு மட்டுமான உணவை வெள் எள்ளின் துவையலுடன் புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு கல் படுக்கையில் உறங்கச் சொல்லும் வாழ்க்கையை ஏற்கும் பெண்ணல்ல நான் சுடுகாட்டு நெருப்பு உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகும். எனக்கு அது தாமரை பூத்திருக்கும் பொய்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்” என்பது அவளது குரலாகும்.
    
ஆண் தலைமைச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள் / தீர்மானிப்பவர்கள் ஆண்களேயாவர். கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏற வேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்களே. அதுதான் முதல்தரக் கற்பு என்றும் கற்பித்தனர். கைம்பெண்ணாக வாழவேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்கள்தான். ஆனாலும் அது மூன்றாம்தரக் கற்பு என்று கற்பித்திருந்தனர்.கற்பித்ததே ஒரு சூழ்ச்சி என்கிறபோது இதில் முதல்தரம் என்ன மூன்றாம் தரமென்ன? இந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டதால்தான் பெருங்கோப்பெண்டு அவர்களது கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கிறாள். உண்மையில் சான்றோர் உருவாக்கிய இந்தச் சூழ்ச்சியின்படி அவளை அவர்கள் தீப்பாயவே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைத் தவிர்க்கக் கூறுகின்றனர்.
    
பூதப்பாண்டியன் இறந்துபட்டதால் அரசுக் கட்டிலேறி ஆட்சிபுரியுமாறு வேண்டவே சான்றோர் அவ்வாறு கூறியதாக ஒளவை சு.துரைசாமி பிள்ளை கூறியுள்ளார். என்றாலும்கூடத் தீப்பாய்வதைவிடக் கைம்பெண்ணாக வாழ்வது கொடுமையானது என அவள் குறிப்பிடுகிறாள். வாழ்வா சாவா என முடிவெடுக்கவேண்டுமென்றால் அவள் வாழ்வையே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவளோ அதை விடுத்து இறப்பையே தேர்ந்தெடுத்திருக்கிறாள். பெண்களுக்கு மட்டுமே என்று உருவாக்கப்பட்ட இந்தக் கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீதான எதிர்ப்புக் குரலாகப் பெருங்கோப்பெண்டின் குரல் ஒலித்துள்ளது செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச்சூழ்ச்சிப் பல்சான் றீரே என கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீது சொற்களை வீசுகிறாள் ஆடவர்க்கென்றும் பெண்டிர்க்கென்றும் வேறுபட்ட ஒழுகலாறுகளை உருவாக்கியவர்கள் எப்படி சான்றோராக இருக்க முடியும்? அந்தச் சான்றாண்மையை அவள் சான்றாண்மை என்றே கருதவில்லை.
    
இந்தப் பாடலை அடுத்து பெருங்கோப்பெண்டு தீப்பாய நின்றதைப் பேராலவாயார் என்பவர் நேரில் கண்டு அதனைப் பதிவிட்ட பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. காட்டிடத்து அணங்குடையாள் கோயில் முன்பாக தீமூட்டப்பட்டு எரிந்து கொண்டுள்ளது. பெருங்கோப்பெண்டு நீராடிய கூந்தலோடு தீப்புக வந்து நிற்கிறாள். சிறிது நேரம் கூடத் தன் கணவனைப் பிரிந்திருக்க விரும்பாதவள் இவ்வாறு வந்து நிற்கும் காட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யானைத் தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெழுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் லிருபுறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவு கண் டுயிலாக் கடியுடை யனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
இன்னுயிர் நடுங்குந் தம்இளமை புறம் கொடுத்தே”
என்பது அப்பாடலாகும்.
கணவன் இறந்த பிறகு அவளை உயிரோடு (கைம்பெண்ணாக) இருக்கச் சொல்வதும் ஆடவர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டவளாகத் தீப்பாயும் முடிவை எடுத்துள்ளாள். எவ்வாறாயினும் ஆடவர்கள் பெண்களுக்கென்று உருவாக்கியிருக்கும் கற்பிதங்களின் மீது கல்லெறியும் முதல் வேலையைப் பெருங்கோப்பெண்டு செய்துள்ளாள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,

மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப் பங்களிப்பு

தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக்கலைப்
முன்னுரை
          தமிழ்ப் பண்பாட்டில் முழுமை பெற்றக் கலை வடிவமாகத் தெருக்கூத்துக் கலை விளங்குகிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒரே இடத்தில் இணையும் ஆதி கலை. கூத்தாடுநர், களரி (கூத்தாடும் இடம்), எழுத்துப் பிரதி, பார்வையாளன் ஆகிய நான்கும் கூத்துக் கலைக்கு அடிப்படையானவை என்கிறார் கூத்தியல் ஆய்வாளர் முனைவர் கி.பார்த்திபராஜா. இம்மண்ணில் கலை உயிரொட்டமாக விளங்குகின்றது என்றால் அதற்கு அடித்தளமாக இருப்பவன் கலைஞன். கூத்துக் கலைப் பரப்பென்பது, தமிழ்க் கலைப் பரப்பில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் வாழ வைப்பது கலைகள். அக்கலைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வாழ்ந்தவர்கள் பலர். தொன்று தொட்டக் கலை மரபில் கூத்துக்கலைக்கென்றே தனியான தாகமும் வேகமும் உண்டு. தெருக்கூத்து இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வருவதற்குக் காரணம் கூத்துக்கலைஞர்கள். அக்கூத்துக் கலைஞர்களின் வழியில் வந்தவர் பண்டிதர் மு.மணியன். பன்னெடுங்காலமாய் தெருக்கூத்துக்கலை வாழ்க்கைகென்றே தன்னையும் தனது சந்ததியினரையும் அர்ப்பணித்துக்கொண்ட நிகழ்த்துக் கலைஞர் ஒருவரின் வாழ்கை வரலாற்றை இவ்வெழுத்துக்கள் திறம்பட விளக்குகின்றன. தெருக்கூத்துக் கலைஞர் குடியநல்லூர் மு.மணியன் பண்டிதரின் கூத்துக் கலைப் பங்களிப்பு எனும் பொருண்மையிலமைந்த இக்கட்டுரை, பண்டிதர் மு.மணியனிடம் கண்ட நேர்காணல் மூலம் கிடைத்த தரவினடிப்படையில் அமைந்ததாகும்.

தெருக்கூத்துக் கலைஞர் மு.மணியனின் வாழ்வும் பணியும்
         கள்ளக்குறிச்சி மாவட்டம், குடியநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பண்டிதர் மு.மணியன். இவர் வயதை அரிதியிட முடியவில்லை. அவரைக்கேட்கும் போது 85 வயதிற்கு மேல் இருக்கும் என்கிறார். இவர் ந.கோவிந்தனுக்குப் பங்காளி ஆவார். கோவிந்தன் எனக்கு நான்கு வயது சின்னவன் மணியன் என்கிறதை வைத்துப்பார்க்கும் போது, இவர் கி.பி.1937 இல் பிறந்திருத்தல் வேண்டும். மணியன் முடித்திருத்தும் தொழிலாளி. இவரின் வயதை 86 எனலாம். மணியனின் தந்தை கோ.முத்துசாமி பண்டிதர் (முத்தான்), தாய் மு.பெரியம்மாள் ஆவர். இவருக்கு இரண்டு மனைவியர் 1. ஆண்டாள், 2.கொளஞ்சி. இரண்டு குழந்தைகள் ஒரு ஆண், ஒரு பெண். மணியன் தனது அப்பா காலத்திலிருந்தே தெருக்கூத்து, மேடை நாடகம் (ட்ராமா) போன்றவற்றில் பெண் வேடமிட்டு ஆடுவாராம். இவர் காலத்தில் நடைபெற்ற பல கூத்துக்களைப் பட்டியலிட்டுத் தருகிறார். நாடகத்தில் பிரத்தேயமாக பெண் வேடமிட்டு ஆடுவேன் என்பதை பெருமையோடு சொல்கிறார். தமிழ்க் கூத்து மரபில் இதிகாசங்களான பாரதம், இராமாயணம் இல்லாமல் கூத்தே நடைபெற்றதில்லை எனலாம். குடியநல்லூரில் பல நாடகக் கலைஞர்கள் இருந்து தமிழ் கூத்து மரபிற்கு உரமிட்டுடிருக்கின்றனர். அதனை மணியன் மிகவும் நேர்த்தியாகக் கூறிகிறார்.  இவர் தனது 16 வயதிலேயே கூத்தாட வந்தவர். கூத்து ஆடுவது எனக்கு பிடித்த பழக்கங்களுள் ஒன்று என இவர் கூறுவதிலிருந்தே கூத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர்கள் மணியன் பரம்பரையினர் என்பது புரிகிறது.

     திருக்கோயிலூர் வட்டம், ரிஷிவந்தயம் காத்தமுத்து ஆசாரி என்பவர் மணியன் போன்றோர் பின்னாளில் கூத்து வாத்தியார்களாக மாற வழிவகுத்துள்ளார் என்பது தெரிகிறது. காத்தமுத்து ஆசாரியிடம்  கூத்துக் கற்றுக்கொண்ட மூத்த மாணவராக இருந்தவர் குடியநல்லூர் நாடகக் கலைஞர் மண்ணாங்கட்டி ஆசாரி ஆவார். இச்செய்தியை மணியன் கூறுகின்றார். மணியனின் கூத்துக் கலைப்பங்களிப்பு பாராட்டற்குறியது. இவர் சம்பூர்ண ராமாயணம் மேடை நாடகத்தில் சூர்ப்பனகை வேடமிட்டு நடித்துள்ளார். இந்நாடகத்தை ஒருங்கிணைத்துப் பயிற்றுவித்த கூத்து வாத்தியார் நாடக வித்துவான் காத்தமுத்து ஆசாரி ஆவார். சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு சேர்ந்து வேடமேற்று நடித்தவர்கள் 25 நபர்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. அவர்களைப் பட்டியலிடுகிறார் கலைஞர் மு.மணியன்.

சம்பூர்ண ராமாயணத்தில் மணியனோடு நடித்த கலைஞர்கள் : (15 பேர்)
1.மொச்சைக் கொட்ட உடையார் ( இராமர்)

2.சுப்பிரமணிய உடையார் (சீதை, கைகேயி)

3.செக்காமூட்டு சந்தரகாசு (இலஷ்மணன், பரதன்)

4.மண்ணாங்கட்டி ஆசாரி (சுப்பிரமணிய ஆசாரி) – (விபீஷ்ணன், சுக்ரீவன்)

5.இராஜகோபால் நாய்க்கர் (அனுமார்)

6.சந்தூட்டு பெரியதம்பி உடையார் (தாடகை, மரவுரி சீதை)

7.பரியேறி வீட்டு பாவடை (கலியாண சீதை)

8.உம உடையான் (வேலாயுதம்) – சுமித்திரை

9.தரவுகாரமூட்டு முருகேச உடையார் – தசரதன்

10.பூசாலிவூட்டு கண்ணன் (மோகினி)

11.சூரசங்கு உடையார் (மோகினிராஜா)

12.மடத்தொடையார் (இராவணன்)

13.மினியன்(முனியன்) – கும்பகர்ணன்

14.கொறவன்(பிச்சக்காரன்) – அய்யாமூகி, அசோமுகி

15.வண்ணாமூட்டு நடேசன் (இலஷ்மணன் பாலகாண்டத்தில்)

    இப்பதினைவரை மட்டும் சொல்லிவிட்டு பாதிபேரை மறந்து விட்டேன் என்கிறார் மணியன். இராமாயண ‘ட்ராமா’ தமிழகத்திலேயே யாரும் நிகழ்த்த முடியாத ஒரு பிரம்மாண்டம் என அவர் மனமுருகி சொல்லிய விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இராமாயணம் கூத்தாகவும் நிகழ்த்தப் பெற்றது என்பதையும் உரைக்கின்றார். இராமயணம் தெருக்கூத்தாக, சூர்ப்பணகை கர்வ பங்கம், வாலி மோட்சம் என்ற பெயர்களில் குடியநல்லூர் மட்டுமல்லாது எல்லா ஊர்களிலும் ஆடக்கூடிய சிறப்புக் கூத்துகளாகும் என்ற செய்தியை அவர் தரும் தகவல்களில் காணமுடிகிறது.

பண்டிதர் மு.மணியன் வேடமிட்டு நடித்த நாடகங்கள்
     மு.மணியன் இராமாயணத்தில் இராமரின் தாய் கோசலையாகவும், இராவணனின் தங்கை சூர்ப்பனகையாகவும், இராவணனின் மனைவி மண்டோதரியாகவும் இராமாயண காண்டக் காட்சிக்கேற்ப தனது வடிவத்தை மாற்றியமைத்து ஆடிய கலைஞன். மணியன் பார்ப்பதற்கு எளியவர். பழகுவத்றகு இனியவர் என்று குடியநல்லூர் சூடாமணி அம்மாள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. மணியன் இராமாயணம் மட்டுமல்லாது பாரதத்தையும் நன்குக் கற்றுத்தேர்ந்தவர். பாரதத்தில் பல நாடகங்களை ஆடியுள்ளதாகத் தெரிகிறது. அவர் ஆடிய பாரதக் கதைகளில் ஒன்று ‘போர்மன்னன் சண்டை’ ஆகும். இந்த நாடகத்தை இன்று போத்துராஜா சண்டை என்ற பெயரில் நிகழ்த்துகின்றனர். இப்போர்மன்னன் சண்டை பாரதக் கிளைக்கதைகளில் ஒன்று. போர்மன்னன் கூத்தில் நாடகக் கலைஞர் மணியன் பாஞ்சாலி (திரௌபதி) வேடமிட்டு நடித்துள்ளார். புராண இதிகாசப் பாடல்களை அவருக்கு உடல் நிலை முடியாத காலத்திலும் பாடியே ஆகவேண்டுமென்ற ஆர்வத்தோடு இன்றும் படிவருவது  போற்றுதலுக்குறியது.
           
    இன்னும் பல நாடகங்களை நடித்துக் காட்டியுள்ளார். சிறுதொண்ட நாயனார் சரித்திரக் கூத்தை தெருக்கூத்தாக நடித்துள்ளார். இந்நாடகத்தில் சிறுதொண்ட பக்தனுக்கு மனைவி வெங்காட்டு நங்கையாக வேடமிட்டு நடித்துள்ளார்.
சம்பூர்ண ராமாயணத்தில் சூர்ப்பனகையின் கதையமைப்பை விளக்க முனைகிறார் மணியன். இராமாயணத்திலேயே சூர்ப்பனகை தான் நல்லவள் என்று அவர் கூறுவதை நுணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. இராமாயணக்கதை இருவரால் இயங்கியது எனலாம். ஒருவர் கூனி மந்தரை, மற்றொருவர் சூர்ப்பனகை. இந்த இரண்டு கதாப்பாத்திரங்கள் இல்லையானால் இராமாயணக் கதைப்போக்கில்லை. சூர்ப்பனகை வருகின்ற விதத்தை அழகாக இலக்கிய நயத்தோடு பாடுவான் கம்பன். ஆனால் சம்பூர்ண ராமாயணம் சாரத்தை மட்டும் கூறுகிறது.

      ஆரண்ய காண்டத்தில் இராமர், சீதை, இலக்குவன் மூவரும் பஞ்சவடியில் இருப்பார்கள். பஞ்சவடியிருக்கும் தண்டகாருண்ய வனம் சூர்ப்பனகையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதி. அன்றோர் நாள் சூர்ப்பனகை தண்டகாருண்யம் வருகிறாள். அப்போது இராமனைப் பார்க்கிறாள். ஆசை பெருக்குகிறாள். இராமனைக் கூடத்துடிக்கிறாள், இராமனோடு ஆசை மொழிபேசி வேசை காடுகிறாள். இராமன் அதற்கு மசியவில்லை உடனே தனது பெண்மையின் ஆண்மையை வெளிக்காட்டுவாள் அதனை மணியன் பாடலாகப் பாடுகிறார்.
ஏ வில்லேந்திய வீரா….
           
கண்ணால நீ மயங்காதே கன்னியைக் கண்டு         
கண்ணால நீ மயங்காதே !                               – (2)         
உன்னை நம்பி நானே உற வாடினேன் பூமானே         
பாவையவள் வதனம் பாரையா ஏ….இராகவா         
காம வீரியம் தீரையா         
காயாம்பூ மேனியனே கன்னிக்குகந்த நாதா         
தீராத ஆசைதீர்க்க்கவா கோதண்ட இராமா         
மாறாத மோகம் போக்க வா…         
கண்ணால நீ மயங்காதே கண்ணியைக் கண்டு
கண்ணால நீ மயங்காதே !                               – (2)    
     (சூர்பனகைப்பாட்டு, சம்பூர்ண ராமாயணம்)
என்ற பாடலைப் பாடி முகபாவனைக்காட்டினார் மணியன். பாடும் போதே ஒருவிதமான உணர்ச்சி தோன்றியது. இந்த பாடல் மோகன ராகத்தோடும் தாளத்தோடும் பாடக்கூடிய பாடலாகுமென்கிறார். பண்டிதர் மு.மணியனின் பணிகள் போற்றுதலுக்குறியது. மறைந்து போன கலைகளை அவரின் பெயரன் தலைமுறைவரை கொண்டு சென்றுள்ளார் என்பதை நினைக்கும் போது மகிழ்வைத் தூண்டுகிறது. மணியன் இந்த வயதிலும் கூட யாராவது இராமாயணம், மகாபாரதம், கூத்துக் கதைகளைக் கேட்டால் தயங்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த அளவு கூத்தில் பாண்டித்தியம் பெற்றவர்.

நிறைவாக
    கூத்தில்  ஆழங்கால் பட்ட நயத்தகு மனிதரில் இவரும் ஒருவர். மணியனின் கலைப்பயண அனுபவங்களை சொல்லிக்கொண்டே போகலாம், அந்த அளவு குறிப்புகள் உள்ளன. சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்தாலும், கலையைக் காக்க வேண்டும் பண்பாட்டை மீட்க வேண்டுமென்ற அவாவினால் கூத்தைக் கற்றுக்கொண்டார். தெருக்கூத்தால் அவர் புகழடைந்தார் கூத்தும் குடியநல்லூரில் செழித்தோங்கியது. செம்மையான தமிழ் மரபில் கூத்து தனித்த அடையாளமாக உள்ளது என்றால் அதற்கு இது போன்ற கலைஞர்கள் தான் காரணம். அப்படிப்பட்டக் கலைஞர் மு.மணியனின் வாழ்வைக் கருத்தாழம் மிக்க ஆவணப் பதிவாக இக்கட்டுரை பதிவுசெய்கின்றது.

(நாடக்க கலைஞர் மு.மணியன் அவர்களை நேர்காணல் செய்து எழுதப்பட்ட ஆவணப் பதிவுக் கட்டுரை இது. நேர்காணல் கண்ட நாள் : 19.03.2023, கிழமை : ஞாயிற்றுக்கிழமை, நேரம் : பிற்பகல் 1.00 மணி)

உசாத்துணை
1.பார்த்திபராஜா.கி., நிகழ்த்துக்கலை மரபு, பரிதி பதிப்பகம் வெளியீடு, திருப்பத்தூர், மு.பதிப்பு : 2022.

2.சிவக்ஷண்முகம் பிள்ளை.ஏகை. மங்கைபுரி சமஸ்தான வித்துவான்., சம்பூர்ண ராமாயணம், பி.இரத்தன் நாயகர் அண்ட் சன்ஸ் வெளியீடு, சென்னை, மு.பதிப்பு : 1970.

3.தகவலாளர் : பண்டிதர் மு.மணியன், வயது (86), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
4.
தகவலாளர் : பண்டிதர் ந.கோவிந்தன், வயது (90), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

5.தகவலாளர் : சூடாமணி அம்மாள், வயது (63), ஊர் ; குடியநல்லூர் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ச.வாசுதேவன்
முனைவர் பட்ட ஆய்வாளர்

இலக்கியத்துறை,
மொழிப்புலம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010

மின்னஞ்சல் : shankarvasu98@gmail

நெறியாளர் :
முனைவர் பெ.இளையாப்பிள்ளை

பேராசிரியர்,
இலக்கியத்துறை

கலைப்புல முதன்மையர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613010
ச.வாசுதேவன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பார்க்க…

 

ஆண் கட்டற்ற ஆளுமை|அ.செல்வராசு

ஆண் கட்டற்ற ஆளுமை - அ.செல்வராசு
மனித சமூகத்தை, சமூகவியலாளர் இருவகையாகப் பிரிப்பர். ஒன்று, பெண் தலைமைச் சமூகம். மற்றொன்று ஆண் தலைமைச் சமூகம். குடும்ப, சமூக அதிகாரம் யாரிடம் இருந்தன அல்லது யாரால் கட்டுப்படுத்தப் பெற்றன என்பதை வைத்து இவ்வகைப்பாடு செய்யப்பெற்றுள்ளது. இன்று ஆண் தலைமைச் சமூகம் நிலைபெற்றுள்ளது. எனினும் சமூக வரலாற்றின் தொடக்கத்தில் பெண் தலைமைச் சமூகமே இருந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வரலாற்றிலும் இலக்கியத்திலும் பெண் தலைமைச் சமூகம் இருந்ததற்கான எச்சங்கள் ஆங்காங்கே காணப்பெறுகின்றன.
    
குடும்பம், அரசு, சொத்து ஆகியவற்றைக் கைப்பற்றி கொண்ட ஆடவர்கள், தம் தலைமையிலான சமூகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆண் தலைமைச் சமூகம் உருக்கொண்ட பிறகு, பெண்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்களாலேயே தீர்மானிக்கப்பட்டன. அந்தத் தீர்மானத்தின் உச்சக்கட்டம் தான் ‘கற்பு’ என்பது. ஆண் என்ற பாசக்கயிறு பெண்களின் மீது எப்போதுமே பிணிக்கப்பட்டே இருந்துள்ளது; இருக்கிறது. அந்தப் பாசக்கயிற்றை எங்கே இறுக்குவது எங்கே இலகுவாக்குவது என்பதை ஆண்களே முடிவு செய்தனர்; செய்கின்றனர். ஆண்களுக்கு இணையான எல்லாத் திறன்களையும் பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவற்றை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. குடும்பம் என்ற கட்டமைப்பில் ஆடவர் கையிலிருந்த பாசக்கயிற்றாலேயே பெண்கள் கைப்பாவை ஆனார்கள். தந்தை, கணவன், அண்ணன், தலைவன் என்று அனைத்துப் பொறுப்பினராலும் பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். அதேநேரத்தில் ஆண் என்ற பாசக்கயிறு இல்லாச் சூழலில் பெண்கள், தம் முழு ஆற்றலையும் வெளிக்காட்டுபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
    
சிலப்பதிகாரத்தில், கண்ணகி பாத்திரம் முதன்மைப் பாத்திரமாகும். தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே கண்ணகி இடம்பெற்றுள்ளாள். காப்பியத்துள், திருமண வயதுடைய பெண்ணாக அவள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளாள். திருமணம் முடிந்தவுடன் கோவலன் அவளை, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே, மலையிடைப் பிறவா மணியே…, அலையிடைப் பிறவா அமிழ்தே…, யாழிடைப் பிறவா இசையே…’ என்றெல்லாம் புகழ்கின்றான். இந்தப் புகழுரைக்குக் கண்ணகியிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை. அவன் புகழப்புகழ அவள் வெட்கப்பட்டதாகக்கூட இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. அறியாப் பருவத்துப் பெண் போல அவள் அமைதியாகவே இருந்தாள். பிறகு கோவலன் மாதவியோடு சென்றுவிட, பிரிந்த கணவன் மீண்டும் வந்து சேர்வதற்கு தேவந்தி வழி கூறியபோதும் ‘பீடன்று’ என ஒரே சொல்லில் முடித்துக் கொண்டாள் கண்ணகி.
     மாதவியை விட்டுக் கோவலன் கண்ணகியிடம் மீண்ட பொழுது ‘நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச், சிலம்பு உள கொண்ம்’ என்று சிலம்பைக் கொடுத்து விட்டாள். புகாரிலிருந்து மதுரைக்குச் செல்லும்வரை, ‘நீர் ஏன் இவ்வாறு செய்தீர்?’ என ஒரு வார்த்தைகூட அவனிடம் அவள் கேட்கவில்லை.
    
மதுரையின் புறச்சேரியில் சென்று தங்கி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மனைவி சமைத்த உணவைக் கோவலன் உண்கிறான். தன் மனைவி தன்னிடம் எதுவுமே கேட்காதது அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது. அவனே, ‘சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன், வழு எனும் பாரேன்’ என்று கூறி வருந்துகிறான். அப்போதும்கூடக் கண்ணகி ‘அறநெறியாளர்க்கு உணவு அளித்தல், அந்தணரைப் பேணுதல், துறவியரை உபசரித்தல், விருந்தினரை எதிர்கோடல் என்பனவற்றை நான் இழந்திருந்தேன். போற்றா ஒழுக்கம் புரிந்தீர்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறாள்.
    
கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்கு அடங்கிய பெண்ணாகவே இங்கும் கண்ணகி இருந்திருக்கிறாள். ‘போற்றா ஒழுக்கம் புரிந்த’ கணவனை ஏற்றுக் கொள்கிறாள். ஆண் தலைமைச் சமூகம் கற்பித்த கற்பிதத்திலிருந்து கண்ணகி சற்றும் விலகி நிற்கவில்லை. கோவலன் கொல்லப்படும்வரை அவள் ‘அப்பாவி’ பெண்.
    
கோவலன் கொல்லப்பட்ட பிறகு வெளிப்படும் கண்ணகியின் ஆளுமை மேற்சுட்டியதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. கணவன் என்ற ‘கட்டு’ அறுபட்டவுடன் அவளது சுயம் முழுமையாக வெளிப்படுகின்றது. மன்னனிடம் நீதி கேட்கச் செல்லும் கண்ணகி, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாக, தான் வாழ்ந்த சோழநாட்டு அரசரையும் அவர்தம் ஆட்சி முறையையும் எடுத்துரைக்கிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, காட்சிப் பொருளான மாணிக்கப் பரல்கள் கொண்டு நிறுவுகிறாள். தானும் ஒரு பத்தினிப் பெண் என்பதை நிறுவ, தனக்கு முன்பிருந்த பத்தினிப் பெண்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறாள். வரலாறு, அரசியல், சமூகம் என அனைத்தையும் அறிந்திருந்தவளாகக் கண்ணகி இவ்விடத்தில் அடையாளப்படுகிறாள். புகாரை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, ‘மதுரை மூதூர் யாது?’ எனக் கேட்ட கண்ணகியா இவள்? என வியக்கும் வண்ணம் அவளது ஆளுமை மதுரையில் வெளிப்படுகின்றது.
    
இவ்வளவு திறன் படைத்த கண்ணகி, கணவன் என்ற ‘கட்டு’ இருக்கும்வரைத் தன் திறனை வெளிப்படுத்தவேயில்லை. வரலாறு, அரசியல், சமூகம் என்பவற்றை அறிந்திருந்த கண்ணகிக்கு, மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு தொடர்புகொண்டு அழிந்துபோன ஆடவர்கள் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை. தவறு செய்த ஆடவன் திரும்பி வந்தபோது அவனை வீட்டிற்குள் விடாமல் விரட்டிய பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
தவறு செய்த கணவனை விட்டுவிட்டுத் தனியாக வாழ்ந்த பெண்களின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும்? ஆனால் அவள் பேசவில்லை.
     எல்லாம் தெரிந்தும் அவள் பேசாமல் இருந்ததற்கான காரணம் கணவன் (ஆடவன்) என்ற ‘பாசக்கயிறே’ ஆகும். அந்தக் கயிறு இல்லாதபொழுது பெண்கள் தம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாகக் கண்ணகியின் ஆளுமைப் பண்பு வெளிப்பட்டுள்ளது. ஆண் தலைமைச் சமூகத்தின் அடிப்படையே பெண்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுதான். அதனையும் மீறிப் பெண்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனையும் தமக்கானதாக மாற்றிக்கொள்ளும் வழிவகைகளையும் ஆண் தலைமைச் சமூகம் அறிந்து வைத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,


மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »