“தமிழ்நாடகக் கலையின் தோற்றம் வளர்ச்சி”
ABSTRACT
The origin and development of the art of drama are intertwined. The aim of this article is to highlight the development of drama in the grammatical literature of Tolkappiyam, Silappadhikaram
ஆய்வுச் சுருக்கம்
நாடகக் கலையின் தோற்றம் வளர்ச்சியை எடுத்து இயம்புகின்றன. நாடகத்தின் வளர்ச்சியினை இலக்கண இலக்கியங்களான தொல்காப்பியம் சிலப்பதிகாரத்தில் இச்சிறப்பினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திறவு சொல்
நட – நடந்து, மானியம் – நீதி, மடந்தையர் – பெண்டிர், துணங்கை – கைவிலா எலும்பு, பிரகாசனம் – நகைச்சுவை
ஆய்வுசிக்கல்
நாடகக் கலையின் வளர்ச்சியை இயம்புகின்றன தவிர வேறு எந்த கலைச் சிக்கலையும் மேம்படுத்துவதாகநோக்கம் இல்லை என்பதை ஆய்வு சிக்கலாக உணர்த்துகின்றது.
ஆய்வு முறையியல்
பகுப்பாய்வு, தொகுப்பு முறை ஆய்வு, விளக்கமுறை ஆய்வு ஆகிய அடிப்படையில் ஆய்வு முறையில் விளக்கப்படுகின்றது.
முன்னுரை
தமிழ் இலக்கியத்தைப் பழங்காலம் தொட்டே இயல் தமிழ் இசைத் தமிழ் நாடகத் தமிழ் என பாகுபாடு செய்துள்ளனர். மனிதன் அறிவு வளர்ச்சி தோன்றிய காலத்திலிருந்தே நாடகம் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ் மொழியின் தனிச்சிறப்பு முத்தமிழ் என்று கூறலாம். இயல் தமிழுக்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பது போல் இசை தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் இருந்துள்ளன. இதில் நாடகத் தமிழ் பழங்காலம் முதலே படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
நாடகத்தின் தோற்றம்
இயலும் இசையும் சேர்ந்து கதையைத் தழுவி வரும் கூத்தே நாடகமாகும். ‘நாடகம்’என்று வழங்குகின்ற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். நாட்டின் சென்ற காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால் நாடு+ அகம்- நாடகம் என்று ஆயிற்று ’நாடகம்’ என்ற சொல்லுக்கு வேறு சொல் ’நட’ என்று பாவாணர் கூறுகின்றார். சங்க பாடல்களில் அகப்பாடல்கள் அனைத்தும் நாடகக் கூற்றாகவே வருவதால் அவற்றை நாடகத்தின் தனி நிலை பாடல்கள் என்பர். பழங்காலத்தில் தமிழறிஞர்கள் நாடக இலக்கியங்களைக் கலிப்பாவிலும் பரிபாடல்களிலும் இயற்றியுள்ளனர். இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நாடக காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இச்செய்திகளை அறிய முடிகின்றது.
பழந்தமிழ் நூல்களில் நாடகம் பற்றியச் செய்திகள்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பே நாடகக்கலை நன்கு வளர்ந்திருந்தமைக்கு சான்றாகிறது. சிலப்பதிகாரத்திற்கு முன்னே தோன்றிய தொல்காப்பியத்தில் நாடகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் பட்டினப்பாலையில் நடனமாந்தரை’ நாடக மகளிர்’ என்றும் நடனத்தை நாடகம் என்றும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுவதைக் காணலாம்.. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் ஏழு இடங்களில் நாடகம் என்ற சொல் நடனம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெருங்கதையில்
“வாயிற் கூத்தும் சேரிப் பாடலும்
கோயில் நாடகக் குழுக்களும்”1
என வரும் சொற்றொடர் கி. பி எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்கப்பட்டதையும், நாடகக் குழுவினர் இருந்ததையும் குறிப்பிடுகின்றது. கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை நாடகம் என்னும் சொல் கூத்து என்பதை தான் குறித்துள்ளது. சோழர் காலத்தில் தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட முழு நாடகம் நடிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன.” இராஜராஜ விஜயம் என்ற நாடகம் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெற்றதைக்கி. பி. 984-ஆம்ஆண்டு ‘இராஜேந்திர சோழனின்’ கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. கமலாயப்பட்டர் என்பவர் எழுதிய ‘பூம்புலியூர் ‘நாடகத்தில் நடிப்பதற்காக மானியம் தரப்பட்ட செய்தியை 1119- ஆம் ஆண்டு கடலூர் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. “2 என பல கல்வெட்டுச் சான்றுகள் நாடக வளர்ச்சிக்கு தரப்பட்ட செய்திகளாகும்.
நாடகத்தின் வகைகள்
நாடகத்தின் வகைகளாக பழங்காலத்தில் இன்பியல் நாடகம் துன்பியல் நாடகம் என இரு வகையாக நாடகங்கள் இயற்றப்பட்டுள்ளன.இன்பமாக முடியும் வகையிலும், துன்பமாக முடியும் வகையிலும் நாடகங்களை இயற்றியுள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் வேத்தியல், பொதுவியல் என இரு வகையில் இயற்றப்பட்டுள்ளன.இக்கால இலக்கியங்களில் நாடகங்களின் வகைகளாக புராணம் நாடகம், வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம், பக்தி நாடகம், சமுதாயம் நாடகம், சீர்திருத்த நாடகம், நகைச்சுவை நாடகம், பிரச்சார நாடகம், ஓரங்க நாடகம்,மேடை நாடகம், திரைத்தந்த நாடகம் ,உரைநடை நாடகம், செய்யுள் நாடகம் ஆகிய நிலைகளில்நாடகங்களை வகைப்படுத்தி உள்ளனர். இக்காலச் சூழலிலும் நாடகங்களின் போக்கும் சூழலும் இதற்குகேற்ப அமைந்துள்ளது என்பதை நன்கரியலாம்.
நாடகத்தின் வளர்ச்சி நிலை
பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்த விலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளார். இன்னிசைக் கூத்து, வரலாற்று கூத்து என இருவகை நாடகம் மரபுகளும் இக்கால பகுதியில் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டின் சோழர் காலத்தில் ராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தொண்டி நாடகங்கள் தோன்றின. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள் மகாபாரதம், இ ராமாயணம் முதலிய காவியங்களின் கதைக் கூறிலிருந்து படைக்கப்பட்டன.
தொல்காப்பியத்தில் நாடகக் கூறுகள்
தமிழ் நூல்களில் முதலாவதான தொல்காப்பியத்தில் ‘நாடகம்’ என்ற சொல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வருகின்றது. அவற்றில் மூலம் நாடகத்தைப் பற்றி அதிகமாக அறிய முடியாவிட்டாலும் நாடகக்கலைபழங் காலத்தில் நன்னிலையில் இருந்தது என்று அறிய முடிகிறது.
“நாடக வழக்கினும் உலகியல் விளக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்”3
என்பது தொல்காப்பியம்நூற்பா விளக்குகின்றது.மனிதனது இன்ப வாழ்வைச் சிறப்பாக விளக்க முற்படுவது நாடக வழக்கமாகும். ஒரு நிகழ்ச்சியைக் கவர்ச்சியுடனும் சுவைகளுடனும் நாடகத் தன்மையோடு விளக்குவதையே தொல்காப்பியர் நாடக வழக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய காலச்சூழலிலும் மேடைகளில் சுவையூட்டும் தன்மைகளை உடைய நிகழ்ச்சிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்நிகழ்வுகள் தான் மேலும் சிறப்படைகின்றன.
சிலப்பதிகாரத்தில் நடனக் கலை
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நாடகம் என்னும்சொல் கூட நாட்டியத்தை உணர்த்தி நிற்கின்றது., நாடக மடந்தையர் எனக் குறிப்பிடுவது நாட்டிய மடந்தையரையே ஆகும். அரங்கு ஆடுதல் என்று வருவன எல்லாம் நாட்டியம் என்ற கருத்தில் வருவதாகும்.
“நாடகமடந்தையர் ஆடு அரங்கு”4
என்ற சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் நாடகம் என்பது நாட்டியம் கலைகளாக அரங்கேற்றியது. அரங்கேற்று காதையில் மாதவி அரங்கேறி ஆடினாள்என்று கூறப்படுகிறது. இதை நாட்டியக்கலை பற்றியனவே
“நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின்”5
இதை அரங்கேற்றுக் கதையின் இறுதியில் இளங்கோவடிகள் இவ்வரிகளில் விளக்குகிறார்.
சங்க இலக்கியங்களில் நாடகம்
இலக்கியங்களில் நாடகத்தின் பற்றியச் செய்திகளை அறியலாம். நடிப்பில் இரண்டு வகை உண்டு. கருத்துக்களை நடித்தல், கதைகளை நடித்தல் என்றும், கருத்துக்களை நடித்துக் காட்டுவதற்கு நாட்டியம் என்றும், கதைகளை நடித்துக் காட்டுவதற்கு நாடகம் என்று பெயர் சொல்வதுண்டு. சங்க காலத்தில் இவை இரண்டுமே கூத்து என்னும் பெயரால் வழங்கி வந்தது. கூத்து என்னும் சொல் சங்க இலக்கியங்களில் ஓர் இடத்தில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதனை
“வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெருங்கருங்கூத்து”6
என்ற கலித்தொகை வரிகளால் அறியலாம்.
கூத்து
பண்டைய காலத்தில் பொழுது போக்குவதற்காக நாடகங்கள் உருவாக்கப்பட்டன. பல வேடங்கள் போட்டு நடித்தார்கள். அவர்களே கூத்தர்கள் ஆவர். கூத்தர் என்பதற்கு நடிப்பவர் என்பது பொருள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்)இந்த கூத்தர்களை பற்றிய செய்திகள் கூறுகின்றது. சங்க காலக்கூத்துப் புலவர்கள் கூத்தனார் என அழைக்கப்பட்டனர். இதனை வள்ளுவர்
“கூத்தாட்டு அவைக்கூழாத்து அற்றே பெருஞ் செல்வம்
போக்கும் அதுவிளந்தன்று”7
என திருக்குறள் குறிப்பிடுகின்றது. இக்குறளால் கூத்தர்கள் நாடகம் அரங்கம் வைத்து ஆடினார்கள் என்பதையும், அவர்களின் ஆட்டத்தை மக்கள் கூட்டம் கூட்டமாகச்சென்று கண்டு களித்தனர் என்பதையும் அறிய முடிகிறது. கூத்துஎன்னும் சொல் நாட்டியம் நாடகம் ஆகிய இருகலைகளுக்கும் பொதுவானதாகவே வழங்க பெற்றுள்ளது. மேலும் சங்க இலக்கிய பாடல்கள் ஆன குறுந்தொகையில் கூத்தினை பற்றியச்செய்திகள் இடம் பெற்றுள்ளது. அவை
“வணங்கு இறைப்பணைத்தோலள் எல்வளை மகளிர்
துணை நாளும் வந்தன் அவ்வரைக்
கண் பொர,மற்று அதன் கண் அவர்
மனம் கொளற்குஇவரும் மன்னர் போரே”8
என குறுந்தொகை பாடல் வரிகள் கூத்து வகையினை 18 இடங்களில் சுட்டுகின்றன.என்றும் பல இடங்களில் பல கிராமங்களில் திருவிழா காலங்களில் கூத்து, மேடை நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அவற்றை கலை உணர்வுடன் இன்றும் ரசித்து வருகின்றனர்.
சீவக சிந்தாமணியில் நாடகம் பற்றிய குறிப்பு
கூத்துக்களைப் பற்றியச்செய்திகள் சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது. சீவகன் தான் பெற்ற வெற்றிக்கு துணை புரிந்த நண்பர்களுள் ஒருவனான சுதஞ்சணன் என்பவனுக்கு கோவில் கட்டி அதில் அவன் உருவத்தை பொன்னால் செய்து வைத்தான். சுதஞ்சணன் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதி அதை நடிப்பதற்கு ஏற்பாடும் செய்தான் என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. இதனை,
“பேரிடர் தன்கண்பெரும்புணையாழ்தோழற்கு
ஓரிடம் செய்து பொன்னால் அவனுக்கு இயற்றி ஊரும்
பாரிடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
தாருடைமார்பன்கூத்துத்தான்செய்துநடாயினானே”9
என்ற பாடல் வரிகளால் அறிய முடிகின்றது. இவற்றின் வாயிலாக நாடகக்கலையின் சிறப்பினை அறிய முடிகிறது.
பல்லவர் காலத்தில் நாடகம்
மன்னர்கள் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் நாடகங்கள் இடம் பெற்றுள்ளது. அவை பல்லவர் காலம், சோழர்கள் காலம் நாடகங்கள், நாயக்கர் கால நாடகங்கள், மராட்டியர் வளர்த்த நாடக கலை, ஐரோப்பியர் கால நாடகங்கள் மன்னர் காலத்தில் ஆறு நிலைகளில்நாடகம் பெற்ற சிறப்புகளை விளக்க பெறுகின்றன. கி.பி. 3-7 ஆம்நூற்றாண்டுகளில் நடிப்பும் உரையாடலுக்கும் தனி வடிவமாக நாடகம் வளர்ச்சி பெற்றது. மகேந்திரவர்ம பல்லவன் கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை இயற்றினான். பல்லாவரம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள குகைக்கோயில்களில் காணும் கல்வெட்டுகள் இதனை குறிப்பிடுகின்றன. மத்த விலாசம் என்னும் சொல் மாமண்டூர் குகை கோயிலில் வடமொழியில் அமைந்த கல்வெட்டுகளில் மத்த விலாச பிரகசனம் என்ற சொல் உள்ளது. இக்கோவில் மகேந்திரன் காலத்தில் உருவானதாகும். இதனைக் குறிப்பிடும் நாடகவியல் நூற்பா
“நகைச்சுவை தன்னை மிகுத்துக்காகாட்டி
ஒன்றேயாதல்இரண்டேயாதல்
அங்கங்கொண்டதரும்பிரகசனம்”10
மத்த விலாச பிரகசனத்தில்நகைச்சுவை அங்கதம் இரண்டும் நிறைந்துள்ளன. இக்கால நாடகங்கள் மேடையில் நடிக்கப்பட்டதோடு படிப்பதற்கு உரிய நாடகங்களும் தோன்றியிருந்தமையை இவ்வுலகினால் அறிய முடிகிறது.
இன்றைய சூழலில் நாடகக்கலை
இன்றைய காலங்களில்நாடகங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். நவீன கால வளர்ச்சி முறைக்கேற்ப நாடகத்துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. பல நவீன கருவிகள் துணையோடு பல திரைப்படங்கள் வந்தாலும் அதன் மூலக்கருவி இந்த நாடகக் கலை. மேடையில் அரங்கேறிய இக்கலை இன்றும் பல இடங்களில் திருவிழாக்கள் காலங்களில் நாம் புராண நாடகங்களை இன்றும் ராமாயணம்,வள்ளி தெய்வானை போன்ற நாடகங்களை நாடகக் கலைஞர்கள் வேடமடைந்து நடித்துக் காட்டும் நிலைகளைக் கண்டு களிக்கலாம். இன்று பெரிய திரையில் தோன்றிய பல கலைஞர்கள் அன்று மேடை நாடகங்களில் தோன்றியவர்கள் தான் அத்தகைய சிறப்பு மிகுந்த மனிதர்கள் நாடகவியல் துறையில் இருந்து உள்ளார்கள் என்பதற்கு சான்றளிக்கின்றது. மேலும் நாடகக்கலை வளர்ச்சி பெற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சான்றன் விளக்கம்
1.பெருங்காதை – 88-89 வரி
2.இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ் நாடகக் கலை – 2 பக்
3.தொல்காப்பியம் பொருள் நூற்பா – 53
4.சிலப்பதிகாரம் அரங்கேற்றும் காதை – 122
5.சிலப்பதிகாரம் அரங்கேற்றம் காதை 158 – 159
6.கலித்தொகை – 65 வரி
7.திருக்குறள் எண் – 332
8.குறுந்தொகை பாடல் எண் – 365 வரி
9.சீவக சிந்தாமணி – 2573 வரி
10.நாடகத் தமிழ் – 83 பக்
துணை நூல் பட்டியல்
1.தொல்காப்பியம் – இளம்பூரனார் உரை, தமிழ் மறை பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் தெரு, சென்னை-17, முதற்பதிப்பு – 2003
2.சிலப்பதிகாரம் – மாணிக்கவாசகம். ஞா, உமா பதிப்பகம்,18 பழைய (171), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை-01, ஆறாம் பதிப்பு டிசம்பர் – 2010
3.சீவக சிந்தாமணி – புலவர் அரசுபொ. வேசோமசுந்தரம், கழக வெளியீடு, சென்னை – 1.மூன்றாம் பதிப்பு டிசம்பர் 1959
4.பெருங்கதை – மயிலே சீனி வெங்கடசாமி, பாரி நிலையம் சென்னை – 1, முதற் பதிப்பு டிசம்பர் – 1959
5.கலித்தொகை-புலியூர் கேசிகன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை – 98, இரண்டாம் பதிப்பு ஜனவரி – 1981
6.குறுந்தொகை – சண்முகப்பிள்ளை. மு, தமிழ் பல்கலைக்கழகம், மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு – 1985.
7.திருக்குறள் – தேவநேயப் பாவாணர். ஞா, தமிழ்மணி பதிப்பகம், அகமது வணிக வளாகம், 293, திரு வி கா நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14, முதற் பதிப்பு – 2010
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. இளவரசி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி),
திருச்சி-20 .