Sanjaaram Novelil Isaikalaignargalin Velinaattupayana Anubavam-Oar Aaiyvu|G.Abirami

சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம்

சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின்

வெளிநாட்டுப் பயண அனுபவம் – ஓர் ஆய்வு

Abstract

      This study of musicians’ foreign travel experience in the novel – a study of the study of musicians in the novel, describes the foreign travel experience of musicians and the disappointment they faced, through which the social view of faith and disappointment, in particular, and the interest of traveling abroad, and other countries in the background, and other countries.

ஆய்வுச்சுருக்கம்
         

        சஞ்சாரம் நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் – ஓர் ஆய்வு என்ற இந்த ஆய்வின் மூலம், நாவலில் இசைக்கலைஞர்களின் வெளிநாட்டுப் பயண அனுபவம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்களைப் பற்றி விவரிக்கவும், இதன் வழியாக நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் சமூகப்பார்வையை, நிதானமான பார்வையில் அணுகி, குறிப்பாக, உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் ஆர்வம், அதன் பின்னணியில் உள்ள பொருளாதார நிலைகள் மற்றும் பிற நாடுகளில் கலைஞர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆராய்ந்து ஏமாற்றங்களை உணர்த்தவும் நோக்கமாகக் கருதப்படுகிறது.


முன்னுரை
         

       தமிழ் இலக்கியங்களில் கடை நிலைப்பட்ட இசைக்கலைஞர்களின் பொருளாதாரப் பின்னடைவு நிலையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டவேண்டியே பல இலக்கியங்கள் பேசுகின்றன. பொருளின் இன்றியமையாமையைக் குறித்து சங்ககாலம் முதற்கொண்டு பேசப்பட்டு வருகின்றன. அவ்வகையில்
     ”வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறுந்தொகை – 135 : 1-2)

       என்று குறுந்தொகை கூறுகிறது. திருவள்ளுவர் கூட
               

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
 இவ்வுலகம் இல்லாகி யாங்கு” (திருக்குறள் – 247)

     என்ற திருக்குறள் வழி பொருளின் இன்றியமையாமையை உணர்த்துகின்றார். காலமெல்லாம் வறுமையில் வாடும் ஏழ்மை நிலையை மாற்ற, பலரும் முயலும் சூழலில், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலில் நாதசுவர இசைக்கலைஞர்கள் அயல் நாட்டிற்குச் சென்று அதிக பணம் சம்பாதித்தும், விருதுகளைப் பெற்றும் வந்தால், உள்நாட்டில் தன் மதிப்பும் மரியாதையும் கூடுவதோடு, வாய்ப்புகளும் அதிகமாகக் கிடைக்கும் என்றும், பொருளாதாரத்தால் தம் நிலை உயரும் என்ற நம்பிக்கையில், ஆர்வமாக இருப்பதும், இறுதியில் வெளிநாட்டுப் பயணத்தையே வெறுப்பதுமாக அவர்கள் ஏமாற்றுக்காரர்களால் வாழ்வில் ஏமாற்றமடைந்தமை குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.


பொருள் பற்றிய சிந்தனை
         

         ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது அவ்வை வாக்கு. ’பணம் பந்தியிலே’, ’பணம் பாதாலம் வரைப் பாயும்’ முதலான   பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று, அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது, அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப் படுத்துகின்றன. பொருள் பற்றி திருவள்ளுவர் கூறும்போது
         

“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து         

தீதின்றி வந்த பொருள்” (திருக்குறள் – 754)

      இக்குறட்பாவில் தீயவழிகளில் பொருள் ஈட்டாமல் அதை முறையாகத் திறனறிந்து பொருளீட்டுதல் அறத்தையும் இன்பத்தையும் தரவல்லது என வள்ளுவர் வலியுறுத்துகிறார். அத்தகைய பொருளை ஈட்ட சஞ்சாரம் நாவலில் நாதசுவர இசைக்கலைஞர்கள் இலண்டன் செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.


இசைக் கலைஞர்களுக்கு நம்பிக்கை எழுதல்
         

          நம்பிக்கை என்பது புயல் அடிக்கும் கடலில் கப்பலை வழி நடத்தும் கலங்கரை விளக்கைப் போன்றது. வாழ்க்கைப் பயணத்தில் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் கூட நம்பிக்கை ஒருவரை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக செயல்படுகிறது. சஞ்சாரம் நாவலில் வீரப்பன் ஒரு முகவர்(ஏஜண்ட்).  ஒருநாள் ஊருக்கு வந்திருந்த வீரப்பன் ரத்தினம் என்கிற நாதசுவர இசைக்கலைஞரிடம் வெளிநாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்வேன் என்று கூறினார். அதோடு முன்பணமும் தந்தார்.
  ”உங்களை எல்லாம் பாரின் கூட்டிக்கிட்டு போறேன் கை நிறைய பணம் வரும். விருது எல்லாம் கொடுப்பாங்க” (சஞ். பக். 178)
 இருபதாயிரம் ரூபாய் முன் பணம் பெற்ற நாதசுவர இசைக்கலைஞர்களுக்கு வெளிநாட்டிற்குச் செல்லப்போகிறோம் என்கின்ற நம்பிக்கை மிகுந்தது.

உற்சாக உணர்வின் வெளிப்பாடு
         

      உணர்ச்சிகள் மகிழ்ச்சியின் பரவசத்திலிருந்து விரக்தியின் ஆழம் வரை, திருப்தியின் அமைதியிலிருந்து கோபத்தின் கிளர்ச்சி வரை. ஒவ்வொரு உணர்ச்சியும் அதனுடன் தனித்துவமான உடலியல் எதிர்வினைகள், அகநிலை அனுபவங்கள் மற்றும் வெளிப்படையான நடத்தைகளைக் கொண்டுள்ளது. அதனால்தான் நாம் உற்சாகமாக இருக்கும்போது நம் வயிற்றில் படபடப்பை உணர்கிறோம். நாம் வெட்கப்படும்போது நம் முகம் சிவந்துவிடும். நாதசுவர இசைக்கலைஞர்கள் வெளிநாட்டிற்குச் செல்லும் ஆர்வத்தால் உள்ளூர் நிகழ்ச்சிகளை எல்லாம் நிராகரித்துவிட்டனர். இதனை
 “அன்னைக்கு ரத்தினம் அண்ணன் ஆடுன ஆட்டம் இருக்கே, அதைச் சொல்லி முடியாது. பேசின கச்சேரி எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு, லண்டனுக்குப் போக துடிச்சுக்கிட்டு இருந்தாரு.”(சஞ். பக் – 179)
என்ற வரிகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

இலண்டன் போக ஆயத்தமாதல்         

       இசைக்கலைஞர்கள் ஆறு பேரும் லண்டன் போக தயாராகினர். அங்கு குளிர் அதிகமாக இருக்கும், அதனால் எல்லோரும் வேஷ்டி சட்டை போட முடியாது என்றும், பேண்ட் சட்டை தைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டனர். இவர்கள்
    ”பேண்ட்டு சட்ட துணி எடுத்துக்கொண்டு போயி மதுரை புது மண்டபத்தில் இருக்கிற டெய்லர்கிட்ட தைச்சுக்கிட்டோம். பேண்ட் போட்டதில்லையா? இடுப்புல நிக்க மாட்டேங்குது. அருணாக்கயிற்ற வைத்து கட்டினாலும், அம்மணமா நிக்கிற மாதிரி இருந்துச்சு” (சஞ். பக் – 179)
பத்து நாளைக்குத் தானே, ”நடிக்கிறதுன்னு வந்துட்டா வேஷம் கட்டித்தானே ஆகவேண்டும்” முழு கால் சட்டையைப் போட்டுக்கொண்டு நான்குபேரும் ஸ்டார் ஸ்டுடியோவிற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பாஸ்போர்ட் வாங்க ஆளுக்கு 6 ஆயிரம் கடனாக வாங்கிக் கொடுத்தனர். இரண்டு மாதம் ஆனது. பாஸ்போர்ட் வரவில்லை. வேறு கச்சேரிக்கும் போக முடியவில்லை. சோற்றுக்கு என்ன செய்வது, பக்கத்து ஊரு கச்சேரிக்கு ஒத்துக் கொண்டனர். ஒரு நாள் வீரப்பனும் ஏகாம்பரமும் வந்தனர். சும்மா வரவில்லை. லாலா கடை லட்டு, சென்ட் பாட்டில் எல்லாம் கொண்டு வந்து இருந்தனர். நிகழ்ச்சி எல்லாம் தயாராகிவிட்டது. பாஸ்போர்ட் ரெடி, பதினெட்டாம் தேதி புறப்படுகிறோம் என்று சொல்லிவிட்டனர். இவர்களுக்கு மகிழ்ச்சியால் தூக்கம் வரவில்லை.
“இதுவரைக்கும் நாங்க யாருமே டெல்லிக்குக் கூட போனதில்ல, இப்ப முதல் முறையா இலண்டனுக்குப் போறோம். நம்பள ஆண்ட வெள்ளைக்காரன் ஊருக்கே போயி வாசிக்கப் போறோம்” (சஞ். பக் – 180)
என்று அனைவரும் மகிழ்ந்தனர்.


விமானத்தில் புறப்படுதல்
         

        விமானம் புறப்படும்போது அவர்களுக்கு அடிவயிற்றில் இருப்பவை குடல் வழியே மேலே வருவது போல இருந்தது. இருட்டில் வெளியே ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் வானத்தில் மிதக்கின்றோம் என்கின்ற உணர்வு பெரு மகிழ்ச்சியைத்தந்தது.
 ”எத்தனை நாள் வானத்தில் விமானத்தைப் பார்த்துப் பின்னாடியே ஓடியிருக்கோம், இன்று விமானத்தில் பறக்கின்றோம்” (சஞ். பக் – 190)
என்று கூறி மகிழ்ந்தனர்.


இலண்டனில் இசைக் கலைஞர்கள்         

      இசைக்கலைஞர்கள் வெறும் வேட்டி, சட்டை மட்டும் அணிந்திருந்த காரணத்தால் குளிர் தாங்க முடியவில்லை.  இலண்டனில் கடும் குளிர். உடல் நடுங்கியது. கை கால் எல்லாம் குண்டு ஊசி வைத்துக் குத்துவது போல இருந்தது. இதனை
“விஷக் குளிரால்லே இருக்கு என நடுங்கிய படியே சொன்னார் பழனி” (சஞ். பக் – 191)
என்று கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.
 

இலண்டனில் தங்குதல்
         

மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் முதலானவை அடிப்படைத்தேவைகளாக உள்ளன. இலண்டனுக்குச் சென்ற இசைக்கலைஞர்கள்  கார் செட்டில் தான் தங்கப் போவதாக வீரப்பன் கூறினார். அதன்படி இசைக்கலைஞர்கள் அங்கேதான் தங்கினர்.


இலண்டனில் உணவு
         

      இசைக்கலைஞர்களுக்கு உணவாக ரொட்டியும், வெண்ணையும், உப்புமாவும் சாப்பிடுவதற்காகக் கொண்டு வந்து தந்தார்கள். மறுநாள் காலையில் மூன்று இட்டிலி மட்டும் கொடுத்தார்கள். போதவில்லை என்றாலும் வேறு வழியின்றி இருந்தனர்.


இலண்டனில் முதல் நாள் நிகழ்வு         

         சமூக, குடும்ப அல்லது தொழில் காரணங்களுக்காக மக்கள் கூடுவது அல்லது சந்திப்பதைக் குறிக்கும் கெட் டு கெதர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாற்பது, ஐம்பது பேர் கூடிய அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி துவங்கியது. வாசிக்குமாறு கூறினர். இசைக்கலைஞர்கள் உட்கார இடம் கேட்க, நின்று கொண்டே வாசி என்று சொன்னார்கள். ஆனால் விருந்திற்கு வந்த எவரும் இசையைக் கேட்டதாகத் தெரியவில்லை. நம்மை ஏன் இப்படி அழைத்து வந்து அவமானப்படுத்துகிறார்களோ என புலம்பினர். அப்போது ஒருவர் சப்தம் குறைவாக வாசிக்குமாறு கூறினார். அதற்கு ரத்தினம் இது என்ன ரேடியோவா? சத்தம் கூட்டவும் குறைக்கவும் எனக் கூறினார். நாய்கள் எல்லாம் பயப்படுகிறது என்றனர். வாசிப்பதை நிறுத்தினர். வீரப்பன் ஏன் நிறுத்தினீர் எனக் கேட்டார். ஒருவரும் கவனிக்கவே இல்லையே? என்றனர் இசைக்கலைஞர்கள். அப்படித்தான் இருப்பாங்க வாசிங்க என்றார். மேலும் காசு வேணும்னா வாசிக்கச் சொன்ன இடத்துல வாசிங்க – என்றார் வீரப்பன். மீண்டும் வாசித்தனர். ஒரு பிச்சைக்காரர் வாசிப்பதை உன்னிப்பாகக் கேட்டுப் பாராட்டி, ஒரு பூவைப் பரிசாகத் தந்தார். ரத்தினம் வீரப்பனிடம் இன்னைக்கு வாசித்ததற்குக் காசு கொடுப்பார்களா? என்றார். இல்லை இது சும்மாதான். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குக் கராராகப் பேசி, பணம் வாங்கிடுவேன் என்றார். அதோடு குளிர் தாங்க பிராந்தி பாட்டில் தந்து குடிங்க எனக் கூறினார் வீரப்பன்.


ரத்தினத்திற்கு உடல் நலமின்மை
         

         இரவு மூன்று மணி அளவில் ரத்தினத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பக்கிரியிடம் ரத்தினம் எனக்குக் கை, கால் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. மூச்சு விட முடியவில்லை. நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கி வைத்ததைப் போல உள்ளது. நான் செத்துப் போகப் போறேன். என் பிள்ளைக்குட்டிகளை நீ தான் பார்த்துக்கிடனும் என பெரும் குரல் கொடுத்து அழுதார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குளிர் காய்ச்சல் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்றனர் மருத்துவர்கள்.


அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு ஆயுத்தமாதல்         

    ரத்தினத்திற்கு உடல் நலமின்மை காரணமாக நிகழ்ச்சிக்குச் செல்ல தயங்குகின்ற நேரத்தில், வாசித்தாக வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரு கோயிலில் வாசிக்கச் சொன்னார்கள். ஐந்து நிமிட வாசிப்பு. வாசிப்பு முடிந்தவுடன் லட்டு பிடிக்க ஆளின்றி லட்டு பிடிக்கச் சொன்னார்கள். இசைக்கலைஞர்கள் வருந்தினர்.


ஐந்தாம் நாள் நிகழ்ச்சி
         

       ஒரு பலசரக்குக் கடை(ஷாப்பிங் மால்)க்குச் சென்றனர். அங்கு வாசிக்கும்படி வீரப்பன் கூற, கூலி எவ்வளவு கிடைக்கும் என கேட்டனர் இசைக்கலைஞர்கள். ஆளுக்கு இருபதாயிரம் வரும் என்று கூற, இசைக்கலைஞர்களும் வாசித்தனர். அங்கு வந்தவர்களில் சிலர் நாணயத்தையும், பணத்தையும் குனிந்து போட்டுவிட்டுச் சென்றனர். அவற்றை ஏகாம்பரம் எடுத்துக் கொண்டார்.


இலண்டனில் கடைசி நாள்
         

       கல்பனா ஸ்ரீ என்ற நடிகையை வரவேற்று விருந்து கொடுக்கும் நிகழ்விற்குச் சென்றனர். நடிகையை வரவேற்கவே நாதசுவரம், தவில் இசை நிகழ்ச்சி. கடைசி நாள் என்பதால் அமைதியாகச் சென்று வாசித்தனர். நாதசுவர ஓசையைக் கேட்டு பக்கத்து வீட்டு நாய் பயந்து குறைக்கத் துவங்கியது. இசைப்பதை நிறுத்துமாறு கூறினார். இசைப்பதை நிறுத்தினர்.


இலண்டனில் இருந்து புறப்படுதல்
         

      இலண்டனில் இருந்து திரும்பும் போது, ஏகாம்பரம் மட்டும்தான் வந்தார். வீரப்பன் வசூல் செய்து கொண்டு வருவதாகக் கூறினார். வானூர்தி(பிளைட்) சென்னைக்கு வந்தது. முன்பு தங்கி இருந்த அதே அறையில் இரண்டு நாட்கள் தங்கினர். வீரப்பன் வரவே இல்லை. வீரப்பன் வந்தவுடன் பணத்தைக் கொடுப்பதாகக் கூறினார் சிதம்பரம்.  அவரவர் வீட்டிற்குச் சென்றனர் இசைக் கலைஞர்கள்.


ஏமாற்றம் அடைதல்
         

      ஆறு மாதம் ஆகியும் பணம் வரவில்லை. வீரப்பனுக்குக் கால் செய்தும் போன் எடுக்கவில்லை. அலுத்துப்போனது, முடிவில் மதுரை டவுன்ஹால் ரோட்டில் வீரப்பனை மடக்கிப் பிடித்து பணம் கேட்டபோது,
”நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க அண்ணே. பேசிய காசு கொடுக்கல. கேட்டா டிக்கெட் செலவுக்கு சரியா போச்சு, ஆஸ்பத்திரி பில்லு ரெண்டு லட்சம்னு சொல்றாங்க. நான் சண்டை போட்டேன். ஒரு பைசா கிடைக்கல. இதுல திரும்பி வர்றதுக்கு எனக்கு பிளைட் டிக்கெட் போட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கை காசு போட்டு திரும்பி வந்தேன்”.
 என்றார் வீரப்பன். எங்கள் உழைப்பு போனதே என்றனர் இசைக்கலைஞர்கள். நான் என்ன செய்வது? உங்களுக்கு என் மேல சந்தேகம் இருந்தால், கூட வாங்க, மொட்டை கோபுரத்து முனி கோவிலில் வந்து சத்தியம் வைக்கிறேன். உங்க காசு எனக்கு எதுக்கு அண்ணே என்றார் வீரப்பன். அப்போ இதுக்கு என்னதான் தீர்வு? என்றனர் இசைக்கலைஞர்கள். என்னால் தான் இப்படி நடந்து போச்சு. அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. ஆயிரம் ரூபாய் என்கிட்ட இருக்கு, அதை இப்போது தருகிறேன்.  இரண்டு மாதம் காலம் கொடுத்தால் கடனை வாங்கியாவது உங்களுக்கு ஆளுக்குப் பத்தாயிரம் தருவேன். என்னால முடிந்தது இவ்வளவுதான் என்றார். அது எப்படி சரியாகும் என்றனர் இசைக்கலைஞர்கள். இலட்சக்கணக்கில் கொடுக்க ஆசைதான். ஆனால், அந்த களவாணிப் பயல் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்து விட்டானே. இரண்டு மாசத்துல ஊருக்கே வந்து மொத்தமா ஐம்பதாயிரம் தந்து விடுகிறேன். போதுமா? என்றார் வீரப்பன். ஆனால் வீரப்பன் பணத்தைக் கொண்டு வரவே இல்லை. அவரைத் தேடி சென்னைக்குச் சென்றபோது, மலேசியாவிற்குக் குடும்பத்தோடு சென்றுவிட்டதாகக் கூறினர். அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொள்வது இல்லை இசைக்கலைஞர்கள்.


முடிவுரை       

”விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்       

தீமை புரிந்தொழுகு வார்”

       என்பார் திருவள்ளுவர். ஒருவர் நம் மீது எந்தவித ஐயப்பாடும் இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்டவருக்கு ஒரு தீமை செய்பவர் இறந்தவரினும் வேறு அல்லர். அவர் இருந்தும் இல்லாமல் இருப்பவருக்கு ஒப்பானவராகவே கருதப்படுவார். இதுதான் நம்பிக்கை துரோகம் நம்மை நம்பி இருப்பவர்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்தல் கூடாது. துரோகங்களில் பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம் தான். துரோகமே கடுமையான மன உளைச்சல் தரக்கூடியது தான். இங்கு இசைக்கலைஞர்கள் நம்பி ஏமாற்றம் அடைந்தனர் என்பதை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


க.அபிராமி., எம்.ஏ., பி.எட்.,

பதிவுஎண்: 20920M13001

ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)


முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,


சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,


திருவண்ணாமலை – 606 603.


திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,

வேலூர்.


நெறியாளர்

பேரா. அ. ஏழுமலை  எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்.,(பிஎச்.டி.,)


உதவிப்பேராசிரியர்,

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,

சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி,

திருவண்ணாமலை – 606 603

 

Leave a Reply