Vethakkannin Keerthanai Nadakangalil Isaiyum Porunmaiyum|Dr.T.R.Hebzibah Beulah Suganthi

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்


Abstract
               

         In the 18th and 19th centuries, Keerthanai drama emerged as a notable development within Tamil dramatic literature. Among these Keerthanai dramas, Vethakkan’s Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi are notable for their adaptations of Milton’s Paradise Lost and Paradise Regained. This study critically examines the literary and musical dimensions of these Keerthanai dramas. It specifically investigates the structural and contextual aspects of the three primary components of Keerthanai: Pallavi, Anupallavi, and Charanam. Through a thorough analysis, the paper provides a nuanced critique of the musical and literary elements present in Keerthanai dramas and introduces novel insights into the compositional frameworks of Vethakkan’s works. Furthermore, this research elucidates the cultural and contextual impacts of Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi, thereby offering a comprehensive re-evaluation of the literary significance of Tamil Keerthanai dramas.


Keywords: Keerthana Drama, Musical Elements, Tharu, Pallavi, Saranam, Rhythm


ஆய்வுச் சுருக்கம்
         

        நாடக இலக்கியங்களின் வளர்ச்சியாக 18,19 ஆம் நூற்றாண்டில் கீர்த்தனை நாடக இலக்கியங்கள் தோன்றின.இக்கீர்த்தனை நாடக இலக்கியங்களில் அ.வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி ஜான் மில்டனின் சொர்க்கம் நீக்கம், சொர்க்கமீட்சியும் தழுவி எழுதப்பட்டனவாகும்.இக்கட்டுரை, இக்கீர்த்தனை நாடகங்களில் இலக்கிய மற்றும் இசைத் தன்மைகளை ஆராய்கிறது.குறிப்பாக் கீர்த்தனையில் பயின்று  வரும் பல்லவி, அனுபல்லவி, மற்றும் சரணம் ஆகிய மூன்று பிரிவுகளின் அமைப்பு மற்றும் அவற்றின் பொருத்தப்பாட்டினை ஆராய்கிறது. இந்த ஆய்வில், கீர்த்தனை நாடகங்களில் உள்ள இசை மற்றும் இலக்கியவியல் பரிமாணங்கள் பற்றிய ஆழமான விமர்சனங்கள், மற்றும் வேதக்கண்ணின் படைப்புகளில் உள்ள பாடல்களின் அமைப்புகளைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும், “ஆதி நந்தவனப் பிரளயம்” மற்றும் “ஆதி நந்தவனம் மீட்சி” ஆகிய நாடகங்களின் கலாச்சார மற்றும் தொகுதித் தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்யும் இந்த ஆராய்ச்சி, தமிழ் கீர்த்தனை நாடகங்களின் இலக்கிய மதிப்பைப் புதிய முத்திரையுடன் விளக்குகிறது.


தரவுச்சொற்கள்

கீர்த்தனை நாடகம், இசைத் தன்மைகள், தரு, பல்லவி, சரணம், தாளக்கட்டு


முன்னுரை
         

       தமிழ் நாடக இலக்கியங்களில் கீர்த்தனை நாடக இலக்கியமும் ஒரு வகை. இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழின் முழு வடிவாய்க் கீர்த்தனை நாடகங்கள் விளங்குகின்றன. இக் கீர்த்தனை நாடகங்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி அடைந்தன. அக்கீர்த்தனை நாடகங்களுள், அ. வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற கீர்த்தனை நாடகத்தில் இடம் பெறும் கீர்த்தனைப்பாடல்கள் இவண் ஆராயப்படுகிறது.


அ.வேதக்கண்
         

        அ. வேதக்கண் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலான்விளை என்னும் ஊரில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து மதப் பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்பட்டவர். இவர் தம்  தொடக்கக் கல்வியை நெய்யூர் போர்டிங் பள்ளியில் பயின்றார். பின் நாகர்கோவில் இறையியல் பள்ளியில் இறையியல் கல்வியை முடித்தார். இறையியல் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம் ..முதலிய மொழிகளைக் கற்று அறிந்த இவர் மேலும் மூன்று மொழிகளைத் தாமே முயன்று கற்று  ஏழு மொழிகளில் பேசும் திறன் உடையவராக விளங்கினார். பன்மொழி அறிஞராகத் திகழ்ந்த இவர் தமிழ் மொழியில் 13 நூல்களை எழுதியுள்ளார்.
         

        உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்களின் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்களில் ஒருவரான  ஜான் மில்டன் எழுதிய Paradise Lost, Paradise Regained ஆகிய நூல்களைத் தழுவி அருள் திரு அ. வேதக்கண் ஆதி நந்ததாவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி என்னும் கீர்த்தனை நாடகங்களைப் படைத்துள்ளார். ஆதிநந்தவனப் பிரளயம் 1862ஆம் ஆண்டில் முதல் பதிப்பாகவும் 1868 இல் இரண்டாம் பதிப்பாகவும் இலண்டன் மிஷனரிஅச்சகம் பதிப்பித்தது. இதன் சிறப்புக் கருதி கிறித்தவ இலக்கிய சங்கம் ஏறத்தாழ ஒரு  நூற்றாண்டு கழித்து 1992ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டது.


ஆதி நந்தவன பிரளயமும் சுவர்க்க நீக்கமும்
         

        கிறித்தவ விவிலியத்தில் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் முக்கியத்துவம் பெறுவது போல சொர்க்க நீக்கமும் சொர்க்கமீட்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. பழைய ஏற்பாட்டில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியும் கனியைச் சாத்தானின் வஞ்சனையால் உண்டு தேவ கட்டளையை மீறி பாவம் செய்து சொர்க்கத்தை விட்டு நீக்கப்படுகிறார்கள். சாத்தானின் பேச்சுக்கு இணங்கி தேவர்களைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அறிவு மரத்தின் கனியை உண்டதால் நன்மை தீமை பற்றிய  அறிவு, தீவினை, நோய், முதுமை, சாவு ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். பூலோகத்தில் பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் உலகின் முதல் மனிதர்கள். இவ்வாறு பாவம் செய்து சாத்தானுக்கு அடிமைகளாய்க் கிடந்த மனிதர்களை மீட்க இயேசு மனிதனாக உலகில் வந்து சாத்தானின் சோதனைகள் யாவற்றையும் வென்று மனிதர்களைப் பாவத்தில் இருந்து மீட்டு இழந்த சுவர்க்க வாழ்வை மீட்டுக் கொடுக்கிறார். ஜான் மில்டன் கிறித்தவ விவிலியத்தை மூலமாகக் கொண்டு paradise lost, paradise Regained  என்ற நூல்களை எழுத, வேதக்கண் ஜான் மில்டனின் காப்பியங்களையே தம் கீர்த்தனை நாடகங்களுக்கு மூல நூலாகக் கொண்டு இரு கீர்த்தனை நாடகங்களாகப் படைத்துள்ளார்.


கீர்த்தனை நாடகம்

         ஒரு வரலாற்றைக் கீர்த்தனைகளினால் நாடகத் தன்மை விளங்க எழுதுவதை நாடகக் கீர்த்தனைகள் எனலாம். கீர்த்தனைகள் இசைப்பாடல்கள் இராகத்தாளங்களுடன் அமைபவையாகும். இக்கீர்த்தனைப் பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முப்பிரிவுகளை உடையவை. கீர்த்தனைப்பாடல்கள் அனுபல்லவி இன்றியும் வரும். நாடகத் தன்மை செயல்பாடுகள் உணர்ச்சி வேகங்களைக் கொண்டு அமையும் இக்கீர்த்தனை நாடகங்கள் கீர்த்தனைகளை மிகுதியாக கொண்டு நாடக இயல்புகளுடன் எழுதப்பட்டுள்ளன.  நாடகக் கீர்த்தனைகள் தமிழ் மொழியில் ஒரு இலக்கியமாக 18,19 ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் பேராதரவுடன் நன்கு விளங்கின. கீர்த்தனங்களுடன் ஈரடி கண்ணிகளால் அமைந்த இசைப் பாடல்களும் கதை விளக்க குறிப்புகளாலான விருத்தங்களும் நாடகக் கீர்த்தனைகளில் இடம்பெறுவது மரபு. கீர்த்தனைப் பாடல்களைத் தரு என்றும் அழைப்பர் தமிழ் மொழியில் பல நாடக கீர்த்தனைகள் எழுதப்பட்டு இசைவாணர்களால் இன்னிசை பொழிவுகளாகப்  (காலட்சேபம்) பல நாட்கள் தொடர்ந்து ஆவல் ததும்ப சுவைக்கும் மக்கள் முன்பு மிகவும் இனிமையாக இசையுடன் விளக்கப்படும். பெரும்பாலும் நாடறிந்த நல்ல வரலாறுகளையே நாடகக் கீர்த்தனைகளாக எழுதுவது வழக்கம் (ஏ.என். பெருமாள்,தமிழர் இசை,ப.85).


கீர்த்தனை நாடகங்கள்
         

        அருணாச்சல கவிராயர் எழுதிய இராம நாடக கீர்த்தனையைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் ஆகிய  கீர்த்தனை நாடகங்களைத் தொடர்ந்து இசுலாமியர்களும்  கிறித்தவர்களும் தங்கள் சமய கருத்துக்களைப் பரப்பும் பொருட்டு கீர்த்தனை நாடகங்களை எழுதினர். வீரமாமுனிவர் தேம்பாவணிக் கீர்த்தனை , தேம்பாவணிக் கீர்த்தனை இரண்டாம் காண்டம் என்ற இரு கீர்த்தனை நாடகங்களை எழுதியுள்ளார்.  அ.வேதக்கண் எழுதிய  இரண்டு கீர்த்தனை நாடகங்களும் வேதக்கண்ணால் மக்களிடம் காலட்சேபம் செய்து பாடப்பட்டன.


ஆதி நந்தவன பிரளயம் கீர்த்தனை  நாடக நூல்அமைப்பு
        

         பலதரப்பட்ட சிறந்த பண் அமைப்பும், தாளக்கட்டும் உடையனவாய் இசைக்கப்படும் கீர்த்தனைகள் ஆசிரியர் தம் இசைப் புலமையை வெளிக்காட்டும் மொழி திறன்கள் ஆகும். கீர்த்தனையில்  பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகளில் பல்லவியே கரு; இதன் தொகை விரிவுகளே பின்வரும் அனுபல்லவி, சரணங்கள். எனவே பல்லவி இன்றி கீர்த்தனைகள் அமைவதில்லை ஆயின் அனுப்பல்லவி இன்றிக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. சரணங்கள் கீர்த்தனையின் விளக்கப் பகுதியாகும். சரணம் முடிந்தவுடன் பல்லவியைத் தொடர்ந்து பாடுதல் வேண்டும். ஆதி நந்தவனப் பிரளயத்தில் 39 கீர்த்தனைகளும் ஆதி நந்தாவனமீட்சியில் 41 கீர்த்தனைகளும் தோடயப் பகுதியில் 3 கீர்த்தனைகளும் ஆக மொத்தம் 83 கீர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.


கீர்த்தனை
         

        கீர்த்தனை என்ற சொல்லுக்கு ‘கீர்த்தி’ என்பது அடிச்சொல். இது ‘புகழ்’ எனப் பொருள்படும். தமிழில் ‘இசை’ என்ற சொல்லுக்கு ‘புகழ்’ எனப் பொருள் இருப்பது இங்கு கருதத்தக்கது. கீர்த்தனை என்னும் சொல் வடிவம் இடைக்காலத்தில் தோன்றியது; கீர்த்தியைப் பாடுவது கீர்த்தனை.


சீர்-புகழ்,கீர்-புகழ்,(சீர்=கீர்),

கீர்+த்+த்+இ=கீர்த்தி,

கீர்த்தி+அன்+ஐ=கீர்த்தனை         

       மாந்தன் தன் அறிவுக்கு எட்டிய அளவில் அறிந்து போற்றிப் புகழும் இன்னிசைப் பாடலே கீர்த்தனை எனப்படும். கீர்த்தனை, கிருதி, கீதம் என்பன பொதுவாக ஒன்றெனக் கருதப்பட்டாலும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. கீதம் என்பதும் இசைப் பாடலே; எனினும் கீதத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பிரிவுகள் இல்லாமல் ஒரே பாடலாக அமைந்திருக்கும். கீர்த்தனை, கிருதி என்பவற்றுள் கீர்த்தனையே இலக்கியச் சிறப்பு உடையது; கிருதியில் இலக்கிய மேன்மை குறைவு; ஆனால் இசைத் திறம் அதிகம். கிருதிகளுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூவமைப்பு இன்றியமையாதது. கீர்த்தனைகள் அனுபல்லவி இல்லாமலும் வருவதுண்டு. கிருதியில் இசைத்திறம் அதிகமாக இருக்கும்; கீர்த்தனையில் பக்தி திறம் அதிகமாக இருக்கும். (எஸ்.சௌந்தர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்; ப.27) கீர்த்தனை என்ற பெயர் அமைய கீர்த்தனை தோன்றிய காலச் சூழல் காரணம் எனக் கருதலாம்.


பல்லவி
         

        கீர்த்தனைப் பாடலின் திரண்ட கருத்தைப் பல்லவியிலேயே அறிய இயலும். மீண்டும் மீண்டும் பாட இனிமை பயக்க வல்லன பல்லவிகள்; அனுபல்லவி பாடிய பின்பும் சரணம் பாடிய பின்பும் பல்லவியை மீண்டும் பாட வேண்டும். கீர்த்தனை ஆசிரியர் இக்கருத்தை உட்கொண்டே பல்லவியை அமைப்பர்.
பல்லவி ஓரடியிலும் அமைவதுண்டு. பெரும்பாலும் ஈரடியிலேயே பல்லவிகளை அமைப்பர். வேதக்கண் ஓரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் ஈரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் அமைத்துள்ளார்.


ஓரடியில் அமைந்த பல்லவி

‘மகனே நீயே ஒரு செய்தி வகை கேளாயே’ (ஆதி நந்தாவனப் பிரளயம்,ப.15)

மற்றும்
‘ஓசன்னா! சிம்மாசன னே! பாவமோசன்னா!’ (மேலது,ப.20)

ஈரடியில் அமைந்த பல்லவி

இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம் -ஆதமே

வீணில் இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம்   (மேலது,ப.105)

      என்பன போன்ற ஈரடியில் அமைந்த பல்லவி பாடல்கள் பல உள்ளன.


இயைபுத் தொடை நயம்
         

     பல்லவியில் கையாளப்படும் அதே இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் பெரும்பாலும் வருவதில்லை. அடியின் ஈற்றொலி ஒற்றுமைப்பட வருவதே
இயைபுத் தொடையாகும்.
 

‘ஏன் ஐயா மறுக்க வேணும் 

பாணம் ஊண் ஒறுக்கவேணும்?’ (ஆ.மீட்சி.ப.160)
           

      எனும் பல்லவியில் ‘வேணும்’ என்ற சொல் ‘ஈற்று’ச் சொல்லாக வந்தமையைக் காணலாம். இவ்வாறு வருவதே இயைபுத்தொடையாகும்.’வேணும்’என்ற சொல்லுக்கு இணைந்த  சொல்லாக வரும் இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் வராது. மீண்டும் மீண்டும் பல்லவி பாடும் போது அதில் வரும் இயைபுத் தொடை நயத்துக்கும் பின்வரும் அனுபல்லவி சரணங்களில் வரும் இயைபுத்தொடைக்கும் வேறுபாடு இருத்தலே சிறப்பாகும். இது பல்லவியை ஏற்புடையதாக்கக் கையாளப்படும் உத்தியாகும்.


எதுகைத்தொடை 
         

        இயைபுத்தொடை நயமின்றி எதுகைத்தொடை நயமும் பல்லவியில் உள்ளது. பல்லவியில் என்ன எதுகை வருகின்றதோ அதே எதுகை பெரும்பாலும் அனுபல்லவியின் முதல் அடியில் வரும். இது பல்லவியை எடுப்புடையதாக்கும் மற்றொரு உத்தியாகும்.


அடுக்க வேண்டாம் ஏவையே!

தாட்சண்யப் பாம்பே

அகன்று நில் இனி வராதே (ஆ.பிரளயம்,ப.81)

என்பது கீர்த்தனையின் பல்லவி. ‘அடுக்க’ என்று வரும் எதுகைக்கு ஏற்ப
அனுபல்லவியில் ,


‘துடுக்கண் அலகையோடு

துணிந்தெனைச் சதி செய்த’  ( ஆ.பிரளயம்,ப.81)
         

      என அமைந்துள்ளது.துடுக்கண் என்ற சொல் எதுகை நயம்பட உள்ளது. இதே எதுகைச்சொல் அனுபல்லவியைத் தொடர்ந்து வரும் சரணங்களில் அமைவதில்லை.
 பொருள் நிலையில் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் சரணத்திற்கும். முரண் இருத்தல் கூடாது. பல்லவி,அனுபல்லவி,சரணம் மூன்றும் ஒரே கருத்தையொட்டி ஒன்றுக்கொன்று இணக்கமாக அமைதல் இன்றியமையாத கீர்த்தனை இலக்கணம் ஆகும். வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றும் ஒரே கருத்தை விளக்கும் தன்மையதாய் பொருள் நிலையில் முரணில்லாத தன்மையில் பாடப்பட்டுள்ளன.


அனுபல்லவி         

        அனுபல்லவி என்ற சொல்லுக்குப் பல்லவியைத் தொடர்ந்து வருவது என்பதே பொருளாகும். பல்லவிக்கு விளக்கமாக நிற்பது அனுபல்லவியாகும். அனுபல்லவியைப் பாடி முடித்ததும் மீண்டும் பல்லவியை எடுத்துப் பாட வேண்டும்.(எஸ்.சௌந்திர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்.ப.27)


‘விருந்து வைத்தானே!

சம்பிரதாயம்தெரிந்திடத் தானே! ‘  (ஆ.மீட்சி.ப.161)
         

        என்பது பல்லவி. இப்பல்லவியில் யார் விருந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.அதைத் தொடர்ந்து வரும் அனுபல்லவியில் அதன் விடை உள்ளது.


விருந்து வைத்தனன் தெரிந்து சோலையில்

மேசியா வேசுமுன் ராஜபவுசினில்

மருந்திதை விட வேறில்லை என்றெண்ணி

மந்திர இந்திரமகா தந்திர சாத்தானவன் (மேலது).         

         என்ற அனுபல்லவியைப் பாடிய பின்னரே விருந்து வைத்தவன் சாத்தான் என்று அறிய முடிகிறது. அனுபல்லவியை ஒருமுறை பாடிவிட்டுத் திரும்பவும் பல்லவியைப் பாடுவது சிறப்புடையதாகும். பல்லவியினும் சிறிது உயர்ந்த ஓசை கொண்டது அனுபல்லவி. தாழ்ந்த எடுப்பிற்கும், மிகுந்த உச்ச ஒலிக்கும் இடைப்பட்ட பாலமாக நின்று உதவுவதுஅனுபல்லவியாகும். அனுபல்லவியினும் உயர்ந்த ஒலிநிலைக்கு இராகம் சென்று , பின்பு இறுதி நிலை அடைந்து அமர்வது சரணத்தில் தான்.(மேலது) வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் இரண்டடி அனுபல்லவி பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளது. நான்கு அடியில் அமைந்த அனுபல்லவிப் பாடலையும் சிறுபான்மையாக அமைத்துள்ளார். எட்டு வரிகளில் ஒரு அனுபல்லவிப் பாடலை அமைத்துள்ளார்.


சரணம்
         

       பல்லவி அனுபல்லவிகளில் குறிப்பாகக் கூறப்பட்ட கருத்து மிக விளக்கமாக வருவது சரணத்தில் தான். பாடுபொருளை வருணித்துக் கூற இடம் அளிப்பது சரணப் பகுதி. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பாடப் பெறும் பல்லவியால் சரணப்பகுதி மேலும் சிறப்படைவதைக் காண முடியும்.சரணங்களை ஒரே மூச்சில் பாடி முடிப்பது சிறப்பன்று.


‘பார்வை பாவம் இல்லை என்றெண்ணாதே -வேசை

பார்வை உனை இழுக்கும் நண்ணாதே'(ஆ.பிரளயம்,ப.47)
         

    என்ற சரணம் மோனைத் தொடையழகும் இயைபுத் தொடை அழகும் பெற்றுப் பாடலிற்கு எழிலூட்டுகிறது. பல்லவியின் எடுப்பு எந்த இராகமோ அதே இராகமே சரணத்தின் இறுதி வரையிலும் வரும்; தாளமும் அவ்வாறே அமையும்.


‘சாற்றும் யோர்தானெனும் ஆற்றங்கரையிலே

நோற்ற யோவானுனை போற்றினனே, பரன் 

தேற்றினனே நமக் கேற்ற சுதனென

வேற்றுமை நீயிங்கு தோன்றிய தெப்படி.’ (ஆ.மீட்சி,ப.132)

       எனும் இப்பாடலின் சரணத்தில் ‘சாற்றும்,நோற்ற,தேற்றினன், வேற்றுமை’ என்பதில் இரண்டாம்  எழுத்து ஒன்றி வந்து எதுகைத்தொடை நயத்துடன்  அமைந்துள்ளது.


முடிவுரை
         

       முத்தமிழால் ஆக்கப்பட்ட வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்கள் படிப்பதற்கும் இசைப்பதற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இவரது கீர்த்தனைப் பாடல்கள் சிறந்தபண்ணமைப்பும்,தாளக்கட்டும் உடையனவாய் ஆசிரியரின் இசைப்புலமையை உணர்த்துகின்றது.  ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற இரு கீர்த்தனைநாடகங்களிலும் இடம் பெற்றகீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகள் பாடுபொருளின் தன்மைக்கேற்ப பொருள்நயத்துடன் பொருத்தமாகப் பாடப்பட்டுள்ளன.


பயன்படுத்திய நூல்கள்

1..அ.வேதக்கண்.அ, ஆதிநந்தாவனப்பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி, கிறித்தவ இலக்கிய சங்கம், சென்னை.


2.சௌந்த பாண்டியன்.எஸ், தமிழில் கீர்த்தனை இலக்கியம்,  ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை.


3.பெருமாள்.ஏ.என். தமிழ்நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் , அணியகம், சென்னை.


4.பெருமாள் ஏ.என் தமிழர் இசை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை


5.சுந்தரம் வீ.பா.கா. தமிழும் இசையும் தமிழ்நாடு இறையியல் கல்லூரி, அரசடி, மதுரை.


6.ஞானராபின்சன்,(ப.ஆ) தமிழ் கிறித்தவ மரபு, தமிழ்நாடு இறையியல்கல்லூரி,
அரசடி, மதுரை-10.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஹெப்சிபா பியூலா சுகந்தி தா.இரா.,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

அறிவியல் மற்றும் கலையியல் புலம்,

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,

காட்டான் குளத்தூர் – 603203.

Leave a Reply