Friday, September 12, 2025
Home Blog Page 26

செய்திகள் என்றால் என்ன? What is NEWS?

செய்திகள்-என்றால்-என்ன-What-is-news

            “எது செய்தி?” என்று இலக்கணம் வகுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், எவை செய்தியாகின்றன என்பதைப் பட்டியல்போட்டுக் காட்டுவதன் மூலம், செய்திக்கு விளக்கம் முயலலாம். தாம்சன் பவுண்டேஷனின் ஆசிரியர் குழுவின் ஆய்வு மையம் (Editorial study Centre of Thomson Foundation) செய்தியாகக் கூடிய இருபது வகைகளை தொகுத்தளித்திருக்கின்றது. அவை எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியவை. ஆதலால் அவற்றை விளக்கிக் கூறலாம்.


1. புதுமையானது (Novelty) :

            எது இதுவரை இல்லாமல் இப்பொழுது புதுமையாக நடக்கின்றதோ ஏனெனில் அது செய்தியாகின்றது. புதுமைக்கு மக்களைக் கவரும் ஆற்றல் மிகுதி நொண்டிப் பெண் நாட்டியம் ஆடினால் அது செய்தி. பாம்புகளோடு ஒருவர் தங்கி இருந்தால் – அது புதுமை. ஆதலால் அது செய்தி,


2. மனிதத் தாக்கம் (Personal Impact):

            சராசரி வாசகருக்குச் சுவையூட்டுவதும், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதும் செய்தியாக உருவெடுக்கின்றது. பங்கீட்டில் வழங்கும் சீனியின் அளவைக் கூட்டுதல், வேலை நிறுத்தத்தின் விளைவாகப் பேருந்துகள் ஒடாமை, தாங்கள் விரும்பும் நடிகரின் திருமணம் போன்றவற்றை
எடுத்துக்காட்டாகக் கூறலாம்.


3. உள்ளூர் நடவடிக்கைகள் (Local affairs) :

            தூரத்தில் நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சியைவிட உள்ளூரில் நடைபெறும் ஒன்றினை அறிந்து கொள்வதில்தான் வாசகர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உள்ளூரில் தீ விபத்தில் நான்குபேர் இறந்திருப்பார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டில் 400 பேர் ஒரு பலமாடிக் கட்டிடம் இடிந்து இறந்திருப்பார்கள். இரண்டு நிகழ்ச்சிகளில் உள்ளூர் விபத்துப் பற்றி அறிந்து கொள்வதில் தான் வாசகர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

4. பணம் (Money) :

            பணத்தோடு தொடர்புடையன செய்திகளாகின்றன. அரசின் வரவு-செலவுத் திட்டம், புதிய வரிகள், விலைகள் ஆகியவை செய்திக்குரிய கருப் பொருட்களாகும்.


5. குற்றம் (Crime) :

            நாட்டில் நடைபெறும் குற்றங்களைப் பற்றிய செய்திகள் ‘சூடான செய்திகளாகும்’ (Hot News), கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். ஆதலால் அவை பற்றிய விவரங்கள் செய்திகளாகின்றன. குற்றச் செய்திகள் கதைகள் போல இருப்பதால், அவற்றைப் பலரும் படிக்கின்றனர்.


6. பால் (Sex) தொடர்பானவை :

            ஆண்-பெண் பால உணர்வு தொடர்பானவற்றில் மனித குலத்திற்கு எப்பொழுதும் ஒர் ஈடுபாடு இருக்கின்றது. மிகவும் மரியாதைக்குரிய இதழ்கள் கூட பால் உணர்வுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. செய்திகளுக்கே மிகுதியாக இடம் ஒதுக்குவதிலிருந்தே. இவற்றின் செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட முக்கியவத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.


7. மோதல் (Conflict) :

            இருவரோ, இரண்டு அணிகளே மோதிக்கொள்ளும் பொழுது செய்தி பிறக்கின்றது. மோதலையும், முடிவையும் அறிந்து கொள்வதில் மக்கள் அக்கறை காட்டுகின்றன. கணவன்-மனைவி சண்டை, தொழிலாளர் போராட்டம், இருநாடுகளுக்கு இடையில் சண்டை போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

8. சமயம் (Religion) :

            சமயம் சார்ந்தவற்றைப் பற்றியவை மக்களைக் கவர்கின்றன. நாத்திகர்கள் கூட சமயத்தலைவர்களைப் பற்றியும், மடங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஒருவர் பதவி துறந்து போக முயன்றதால் அது செய்தியாகின்றது. போப்பின் தேர்தலை உலகமே அறிந்து கொள்ள விரும்புகின்றது.


9. அழிவும் (Disaster) துயரமும் (Tragedy) :

            எங்காவது அழிவு ஏற்பட்டால் அது செய்தியில் இடம் பிடிக்கின்றது. கப்பல் மூழ்குதல், இரயில் கவிழ்தல், தீ விபத்து போன்றவை மக்களின் இதயத்தைத் தொடுகின்றன. துயரமானவை நடக்கின்ற பொழுதும், அவை மக்களிடம் இரக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. காந்தியடிகள், கென்னடி, இந்திராகாந்தி ஆகியோர் கொல்லப்பட்டவை உலகையே உலுக்கிய செய்திகள். பெருந்தலைவர் காமராசர், புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றோர் மறைவுச் செய்தி நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது.


10. நகைச்சுவை (Humour) :

மக்களின் நகைச்சுவைக்குத் தீனியாகக் கூடியவற்றைச் செய்தியாகக் கருதலாம். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால், அதனைச் செய்தித்தாளில் வெளியிடுவார்கள். அவற்றைப் படித்து மக்கள் ரசிப்பார்கள்.


11. மனித ஆர்வமானவை (Human Interest) :

            பொதுவாக மனிதர்களோடு தொடர்புடைய இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் செய்திகளாகும் தகுதியுடையன. ஒருவர் பணத்தைத் தொலைப்பதும்; ஒருவருக்கு பரிசு கிடைப்பதும்; உத்தரப் பிரதேசக் காட்டில் ஓநாய்ப் பையனைக் கண்டுபிடித்ததும் செய்தியாகின்றன.


12. ஏழைகளைப் பற்றியவை (The Under Dog) :

            ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் செய்திகளாகின்றன. எடுத்துக்காட்டாக, ஒர் ஏழைக் குடும்பம் வறுமையில் விட்டால் உடனே செய்தியாக நஞ்சுண்டு மாண்டு
தாளாமல் வெளியிடப்படுகின்றது.


13. மர்மம் (Mystery) :

            உடனடியாகப் புரியாத மர்மமானவை எங்கு நடந்தாலும் அவை செய்தி மதிப்பைப் பெறுகின்றன. ஓரிடத்தில் காயங்களோடு ஓர் உடல் கிடந்தால், அதனைப்பற்றி அறிய எல்லோரும் எப்படிக்கொல்லப்பட்டார்” விரும்புவார்கள். “அது யாருடைய உடல், ” என்பன போன்றவற்றைச் சுவையான செய்திகளாக வெளியிடலாம்.

14. ஆரோக்கியம் (Health):

            உடல் நலத்தோடு தொடர்பானவை மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குணமாக முடியாத நோய் குணமானால் அதனை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர். மந்திர, தந்திரங்களால் நோய் குணப்படுத்தப்பட்டால் உடனே அது செய்தியாக வெளிவருகின்றது. உடல்
நலக்குறிப்புகளுக்குத் தனி இடம் இருக்கின்றது.

15. அறிவியல் (Science) :

            அறிவியல் விந்தைகளும் சாதனைகளும் செய்திகளாக வடிவெடுக்கின்றன. முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த விண்வெளி வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் விழைகின்றனர். புதிய கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிப்பாளர்களும் செய்தித்தாளில் இடம் பெறுகின்றனர். நோபெல் பரிசு பெற்ற அறிவியலறிஞர்களை உலகம் முழுவதும் அறிந்து பாராட்டுகின்றது.

16. பொழுது போக்கு (Entertainment) :

            திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்குத் துணை செய்கின்றவை பற்றிய விவரங்களை அறியும் ஆர்வம் இயல்பாக மக்களிடம் இருக்கின்றது. ஆதலால் தான் திரைப்படங்களைப் பற்றிய பல்வேறு வகையான செய்திகளும் எப்பொழுதும் சுவை தருவனவாக உள்ளன. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள், ஆட்டக்காரர்கள் மீது மக்கள் காட்டும் இடையறா ஆர்வத்தைப் பார்க்கின்றோம்.


17. புகழ்பெற்ற மக்கள் (Famous People) :

            சமுதாயம், சமயம், அரசியல், விளையாட்டு, திரைப்படம் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய எந்த விவரமும் செய்தியாகின்றது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் புகழ் பெற்று விட்டால் செய்தியில் இடம் பிடிக்கின்றனர்.


18. தட்பவெப்ப நிலை (weather) :

            மழை பெய்தல், புயலடித்தல் போன்றவை மக்களைப் பாதிக்கின்றன. நமது நாட்டில் பருவமழை தவறினால் வேளாண்மை பாதிக்கின்றது. இங்கிலாந்து மக்கள் எப்பொழுதும் தட்பவெப்பநிலையை அறிந்து கொள்ளத் துடிப்பார்களாம். ஏனெனில் அவர்களது மாலை நிகழ்ச்சிகள் பாதிக்கக் கூடாதென்ற கவலை அவர்களுக்கு.


19.உணவு (Food) :

            மனிதன் உயிர் வாழ இன்றியமையாதது உணவு. உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் காரணங்களை அறிய மக்கள் முயல்கின்றனர். உணவுப்பொருட்களின் விலை ஏற்றம் மக்களைப் பாதிக்கின்றது. ஆதலால் இவை பற்றிய செய்திகளை நாளிதழ்கள் வெளியிடுவது தேவையாகும்.


20. சிறுபான்மையினர் (Minorities) :

            ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் இருக்கின்றனர். நமது நாட்டில் மலைவாசிகளைச் சிறுபான்மையினராகக் கருதலாம். சிறுபான்மையினரை மற்றவர்கள் நடத்தும் முறைகளும், சிக்கல்களும் செய்தி மதிப்பைப் பெறுகின்றன.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

1.இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

2.இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இந்தியப் பெண்களின் சமூகநிலை | (Social status of Indian women )

இந்திய பெண்களின் சமூகநிலை

இந்தியப் பெண்களின் சமூகநிலை

(Social status of Indian women )

            மேலைநாடுகளில் பெண்ணியக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ந்து மாறுபாட்டைந்ததைக் கண்டோம். இதற்கு முக்கியக் காரணம் அந்நாடுகளில் மாறிவரும் சமூகச் சூழலுக்கியைந்தவாறு பெண்ணியக் கருத்துக்களும் மாறுபாடடைந்ததாகும். பெண்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், தங்கள் நிலையை மாற்ற இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் இதற்கு வழிகோலின

            இதற்கு மாறாக, பெண்ணியக் கருத்துக்கள் இந்தியாவில் வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலம் ஏற்பட்டவையாகும். பெண்களின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களை ஆட்சியாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளுமே வெளியிட்டனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு உகந்தவை என்று தாங்கள் கருதியவற்றைப் பல திட்டங்களின் மூலமும், சட்டங்களின் மூலமும் செயற்படுத்த விழைந்தனர். இவர்கள் பெரும்பாலும் ஆண்களே ஆவர். ஆரம்ப காலங்களில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

            இந்தியப் பெண்ணியத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, இந்தியா சுதந்திரமடையுமுன்பு உள்ள காலம்; இரண்டாவது, இந்திய சுதந்திரத்திற்குப் பின் உள்ள காலம் காலகட்டத்தில் இந்தியப் பெண்ணியவாதிகள் ஆங்கிலேயர்களின் ஆளுகைக்குட்பட்டுச் செயலாற்றினர். இரண்டாவது காலகட்டத்தில் அவர்கள் சுதந்திரமாகச் செயலாற்ற முடிந்தது. ஆயின், இரு காலகட்டங்களிலும் இந்தியப் பெண்ணியம் பெரும்பாலும் செயற் திட்டங்களாகவே உள்ளது) அவ்வாறே இந்தியப் பெண்ணியம் இங்கு விளக்கப்படுகின்றது.


இந்தியப் பெண்களின் சமூக நிலை (1947-ஆம் ஆண்டு வரை)

            இந்தியச் சமூகத்தின் ஆரம்ப காலங்களில் இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றிச் சரியான முறையில் விளக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களும், சரித்திரச் சான்றுகளுமே துணை நிற்கின்றன. மேலும் அதிகமான சான்றுகள் கிடைக்குமாயின் இப்பொழுது கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். அல்லது அவற்றை மேலும் உறுதிப்படுத்திக் கூறுமாறும் அமையலாம். ஆயின், 19-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில அரசாலும், கிருத்துவ மதத்தினராலும், சமூக சீர்திருத்தவாதிகளாலும் தொகுக்கப்பட்ட செய்திகள் அக்கால கட்டத்தில் பெண்களின் சமூக நிலையை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றன. அதனால் ஆரம்ப காலங்களில் உள்ள பெண்களின் நிலையைச் சுருக்கமாகக் கூறி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு வரை உள்ள இந்தியப் பெண்களின் நிலை சற்று விரிவாக விளக்கப்படுகின்றது.


தொடக்க காலக் கண்ணோட்டம்


            வரலாற்று நோக்கில் இந்தியப் பெண்களின் சமூக நிலையை நோக்கும்பொழுது சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருதக் காரணங்கள் உள்ளன சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தாய்வழிச் சமூகம் வழக்கில் இருந்தது என்ற கொள்சை இக்கருத்தை ஆதரிக்க முக்கியக் காரணமாகும்.

            இந்தியப் பெண்களின் சமூக நிலையை வரலாற்று நோக்கில் ஆராய விழைந்த அல்டேகர் (Altekar), கோசாம்பி (Kosambi), குர்யே (Ghurye), ராதா குமுத் முகர்ஜி (Radha Kumud Mokerji) முதலிய சமூக அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் வேதகாலங்களில் பெண்களின் நிலை மேன்மையுற்றிருந்தது என்பதைச் சில ஆதாரங்களோடு விளக்குகின்றனர்.(ரிக் வேதத்தில் காணப்படும் சில பாடல்கள் அக்காலத்தில் வாழ்ந்த சில பெண்களால் இயற்றப்பட்டவை. இவ்வாறு பெண்கள் இயற்றிய இருபது பாடல்கள் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன. அக்காலப் பெண் தத்துவவாதிகள், ‘பிரமவதனிகள்’ என்றழைக்கப்பட்டனர்) கோஷா, ரோமசா, லோபாமுத்திரா போன்றவர்கள் அவ்வாறான பிரம்மவதனிகள் ஆவர். மேலும், கார்க்கி, லசக்னவி, மைத்ரேயி போன்றவர்களும் பொது விவாதங்களில் கலந்து கொண்ட தத்துவ ஞானிகள் ஆவர்.

            வேத காலத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று குருகுலவாசத்திற்கனுப்பப்பட்டு, ஆண்களுக்கிணையாகக் கல்வி பயின்றனர். அவர்களுக்கும் ஆண்களைப் போன்று உபநயனம் என்ற சடங்கு செய்யப்பட்டு, அவர்களும் இரண்டாவது பிறவி பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு 16 வயதிற்குப் பின்பே திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்திற்கு முற்பட்ட காலகட்டத்தினை அவர்கள் அறிவை மேம்படுத்துவதற்கே பயன்படுத்தினர்.

            மேலும், பெண்கள் தங்கள் மனத்துக்கு இயைந்த கணவன்மார்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெண்கள் விவசாயம், நெசவுத் தொழில், மட்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களிலும் ஆண்களுக்கிணையாகப் பணிபுரிந்தனர். ஆண்களைப் போலவே வில், அம்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிட்டனர். அவர்கள் ஆசிரியர்களாகவும், பாடகிகளாகவும், அதிகாரிகளாகவும் பணி புரிந்தனர். தாய் வழிப் பெயரையே சூட்டும் பழக்கம் அக்காலத்தில் வழக்கில் இருந்தமை, தாய்வழிச் சமூகம் அக்காலத்தில் இருந்தது என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. இவ்வாறான காணரங்களினால் வேத காலத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது என்பது இவ்வறிஞர்களின்
கருத்தாகும்.

            தமிழ்நாட்டில் பெண்களைப் பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் (கி.மு. 200 முதல் கி.பி. 200 ஆண்டு வரை) காணக் கிடக்கின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும் பெண்களுக்கென்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன. வீரம், தலைமை தாங்கும் பண்பு முதலியவை ஆண்களுக்குரியவை என்று அவற்றை உயர்த்திக் காட்டுகின்றன. அதே சமயம் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்குரிய குணங்கள் என்று கூறிப் பெண்கள் இவற்றுடன் வாழ்வதே அவர்களுக்கு அழகு என்று வலியுறுத்துகின்றன. மேலும், சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும்.

            அகம் என்னும் பிரிவு ஆண், பெண் உறவுகளைப் பற்றிக்கூறும். இங்கு பெண் தலைவியாவாள். இப்பிரிவில் ஆண் பெண் உறவுகளான காதல், இல்லறம், ஊடல், பிரிவு, மக்களைப் பேணுதல் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. புறம் என்ற பகுதியில் தலைவன் ஆண் ஆவான். இப்பகுதியில் வீட்டிற்கு வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளான போரிடுதல், பொருளீட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இவ்வாறாகத் துறைகளைப் பாகுபடுத்தியதில் தவறெதுவும் இல்லை. ஆயின், இவ்வாறு பாகுபடுத்தியதன் மூலம் பெண்களுக்கென்று பாகுபடுத்திய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் சமூக மதிப்பீட்டில் தாழ்ந்தவை; ஆண்களுக்குரிய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் உயர்வானவை என்ற ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஆண் பெண் இனத்தாருக்கிடையே நிலைபெறக் காரணமாயுள்ளன.

            சங்க நூல்களும், அதன் பின்னர் தோன்றிய காப்பியங்களும் பெண்களின் கற்பின் மேன்மையைப் புகழ்ந்துரைக்கின்றன. அவை, பெண்களின் கற்பின் திறம் பற்றியும், பெண்கள் கற்பைத் தங்கள் தனிப்பெருங்குணமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. அவ்வாறான தனிப்பெருங் குணமாகிய கற்பை, ஆண்களும்  கடைப்பிடிக்க வேண்டுமென அவை வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக, ஆண்கள் எத்தனை பெண்களோடும் பாலுறவு கொள்ளலாம்; இவ்வாறு, நடந்து கொள்வது அவர்களது தனித்த உரிமை என்றும் விவரிக்கின்றன.

 
            காலம் செல்லச் செல்ல, இந்தியப் பெண்களின் நிலை மேலும் வீழ்ச்சியுற்று அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாயினர். அதனால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிய இந்தியப் பெண்களின் சமூக நிலையுடன் ஒப்பிடும் பொழுது சங்ககாலப் பெண்களின் நிலை ஓரளவு மேம்பட்டே இருந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், சங்க நூல்களில் காணப்படும் களவொழுக்கம் அக்காலச் சமூகம் பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்திருந்தது என்பதைக் காட்டுகின்றது.

            தங்களது விருப்பத்திற்குப் பெற்றோர் உடன்படவில்லையெனில் தாங்கள் விரும்பிய ஆண்மகனுடன் ‘உடன்போக்கு’, மேற்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டவும் அவர்கள் மனவலிமை பெற்றிருந்தனர். இதைத்தவிர, பெண்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகள் அளிக்கின்றன. வீரத்தில் சிறந்த தாய்மார்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் நிறையவே இருந்திருக்கின்றனர்.


            ஆயினும், ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற சமூக நீதி முறையும், ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்ற கருத்தும் சங்க காலம் முதல் தமிழர் சமூகத்தில் காணப்படுகின்றன. இவை காப்பிய காலங்களில் மேலும் வலிமையுற்று பெண்களின் நிலை வீழ்ச்சியுறக் காரணமாயின. காப்பிய நூல்களைத் தொடர்ந்து வந்த நீதி நூல்கள், ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றிப் பெண்கள் தீய குணங்கள் நிறைந்தவர்கள் என்றும், ஆண் மக்களால் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்றும், விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்துகின்றன. தமிழில் எழுதப்பட்ட நீதி நூல்கள் வடமொழி நீதி நூலாகிய மனுதர்ம சாஸ்திரத்தின் கருத்துக்களை வலியுறுத்துகின்றன.

            இதற்குக் காரணங்கள் என்ன என்பதைச் சமூகவியலாரும், பெண்ணியவாதிகளும் ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் காரணம் என்று வலியுறுத்திக் கூறப் பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரக் கலாச்சார மாற்றங்களை விளக்கும் சான்றுகள் நமக்கு இல்லை. ஆயினும், இவைகளும் காரணங்களாக இருக்கலாம் என்று கூறச் சில ஆதாரங்கள் உள்ளன.


            இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு போர்களை இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறலாம். இருநாடுகளிடையே போர் நிகழ்ந்து முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேந்தனின் வீரர்கள், தங்கள் வெற்றிக் களிப்பின் ஒரு பகுதியாக தோல்வியுற்ற நாட்டு மன்னனைக் கைது செய்து இழிவுபடுத்துவதும், அந்நாட்டுப் பொருட்களைச் சூறையாடுவதும் காலங்காலமாக வழக்கிலிருந்து வருகின்றன. இவை தவிர, தோல்வியுற்ற நாட்டு மன்னரின் மனைவியரையும், அந்நாட்டுப் பெண்களையும் கவர்ந்து சென்றும், நாட்டுப் பெண்களை இழிவுபடுத்தினர்.

        தோல்வியுற்ற இழிவுபடுத்துவதன் மூலம் அந்நாட்டை இழிவுபடுத்துவதாகக் கருதினர். இவ்வாறு இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகள் அடிக்கடி போர்களைச் சந்திக்க நேர்ந்தபொழுது, அந்நாட்டுப் பெண்கள் வேற்றரசனால் இழிவுபடுத்தப்படுவதற்கு முன்பாக உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மேற்கொண்டனர். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின்மீது படையெடுத்து வந்த அலெக்சாண்டர் என்னும் கிரேக்க அரசர் உடன்கட்டை ஏறும் பழக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றார். காலப்போக்கில் ஒரு சமூகத்தின் பெண்களும், அவர்களது கற்பும் அச்சமூகத்தின் ஆண் மக்களால் காக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

         பெண்கள் சுந்திரமாக வாழ்ந்த நிலை மாறி, ஒரு பெண், ‘அவள் ஆயுட்காலம் முழுவதும் காக்கப்பட வேண்டியவள்’, என்ற கருத்து உருவாயிற்று இதை மனுநீதி போன்ற நூல்கள் ஒரு திருமணத்திற்க முன்பாகத் தந்தையாலும், திருமணத்திற்குப் பின் அவள் கணவனாலும், முதுமைக் காலத்தில் அவளது மகனாலும் காப்பாற்றப்பட வேண்டியவள் என்று வலியுறுத்தின. பெண்கள்  
அவர்களின் வாழநாள் முழுவதும், ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலை உருவாகியபொழுது இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் வழக்கில் வந்தது. ஒரு தந்தை தான் பெற்ற பெண்குழந்தையின் பாதுகாவற் பொறுப்பைக் கூடியவிரைவில் திருமணத்தின் மூலம் அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவே முற்பட்டான்.

       இவ்வாறாகப் பெண்கள் வலிமையற்றவர்கள்; அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்கள் வலிமையுற்றதால் திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைந்தது. பெண்கள் பிறந்தது முதல் கணவன்மார்களுக்குத் தொண்டு செய்து அடிமைகளாக வாழவும், அவர்கள் மூலமாகக் குழந்தைகள் பெற்று வளர்க்கவும், கணவன் வீட்டாரிடம் அடங்கி ஒடுங்கி வாழவுமே பயிற்றுவிக்கப்பட்டனர். இதுவே அவர்களது வாழ்க்கைக் கல்வியாயிற்று. மனத்தையும், அறிவையும் வளப்படுத்தும் கல்வியறிவைப் பெறுவதும், பொது வாழ்வில் ஈடுபடுவதும் தேவையற்றவையாயின.

       மேலும், இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றமையால் திருமணமான பின்பு பள்ளிக்குச் சென்று கல்வியறிவு பெறுவதும் யலாத ஒன்றாயிற்று. பெண்களின் உலகம் வீடும் அதைச் சார்ந்த இடமுமே என்று வட்டம் சிறுத்துச் சிறுத்து, வெளி உலகிற்கு அவர்கள் வருவதும் வெளி உலக வாழ்வில் பங்கு கொள்வதும் காலப்போக்கில் தடை செய்யப்பட்டன. மேலும், வெளியுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருந்ததால் பெண்களை வீட்டிற்குள் அடைத்துப் பூட்டி வைக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்தது.

      இவை தவிர, கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே வைதீக எதிர்ப்பு மதங்களாகிய ஜைன மதமும், பௌத்த மதமும் பிரபலமாயின. இம்மதங்கள், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கும் துறவு வாழ்வை வாழ்க்கை முறையாகக் கொண்டவையாகும். ஆண்கள் மட்டுமே துறவு வாழ்விற்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். அவ்வாழ்க்கை முறைக்கு, இல்லற வாழ்க்கையும், அதற்குத் துணையான பெண்களும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். அதனால் அம்மதங்கள் பெண்களையும், பெண்களின் தொடர்பினையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமெனப் போதித்தன. அவ்வாறான வாழ்க்கை முறைக்குச் சாதகமாகப் பெண்களை இழிவுபடுத்திப், பெண்கள் காமம் நிறைந்தவர்கள், இழிவானவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று போதித்தன. மனுதர்ம சாஸ்திரம் முதல் பின்வந்த எல்லா நீதிநூல்களிலும் இவ்வாறான கருத்துக்களே பரவிக் கிடக்கின்றன.

     இவ்வாறான காரணங்களினால் காலம் செல்லச் செல்ல, பெண்களுக்கு வெளியுலகத் தொடர்பு அறுபட்டுப் போயிற்று. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. உரிய உரிமைகள் அளிக்கப்படவில்லை. இவற்றைத் தவிர, பெண்கள் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறுபட்ட கொடுமைகளுக்கும் உள்ளாயினர்.

       கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த கிருத்துவ மதத்தினரும், ஐரோப்பியர்களும், இந்திய நாட்டை இந்திய மக்களின் பழக்க ஆண்ட ஆங்கிலேயர்களும் வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், சமூக நியதிகளையும் எழுதி வைத்துள்ளனர். இச்செய்திகள் அவர்கள் நம் நாட்டினரைப் புரிந்து கொண்டு அவர்களுடன் பழகவும், மதமாற்றம் செய்யவும், பின்பு நம் நாட்டினரை ஆளவும் தேவைப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் அக்கால இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையையும் உணர்த்துகின்றன; அவை இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் வெளிப்படுத்துகின்றன.

 

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.



 

குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம் | சிறுகதை

குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம்

   அந்தக் கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள்தானிருக்கும். இரண்டு வீதி நாலு சந்து அவ்வளவே. ஊருக்கு நடுவே கோவில். கோவிலில் முன்வாசல் தவிர சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கருவேல முட்களால் சூழ்ந்துதான் இருந்தது. போனவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்ல சாமிக்கு பூஜை நடந்தது. அந்தப் பூஜையில ஒரு அம்மாவுக்கு சாமி வந்து ஆடுச்சி. அப்போ, “என்னை வடம் புடிச்சி இழுத்து வையுங்கடா… இல்லன்னா காய்ஞ்சிரும்மடா” ன்னு சொல்லிருக்கு. ஊர்க்காரங்க அத்தனைப் பேரும் பயந்து போயி அடுத்த நாளே கோவிலுக்கு முன்னால வந்து உட்காந்துட்டாங்க. நெத்தி முழுக்க விபூதியை அப்பிக்கொண்டு அனைவருக்கும் நேரெதிரே அமர்ந்திருந்தார் பண்ணையார். எல்லாத் தலையும் வந்துருக்கான்னு ஒருமுறை தலைச்சுற்றிப் பார்த்தார். அந்தக் கிராமத்துல இருக்குற அத்துன ஆம்பிள பொம்பளன்னு எல்லாம் அங்கதான் இருந்தாங்க.

“நம்ம ஊரு கோவில் திருவிழா மூணு வருஷத்துக்கு ஒரு தரம் நடத்திட்டு வரோம். இந்தச் சித்திரை வந்தா மூணு வருஷம் முடியப்போகுது. அதான் ஆத்தாளும் குறியா சொல்லிருக்கு” என்றார் பண்ணையார்.

குந்தியிருந்த மக்களும் நின்னுட்டு இருந்த மக்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதான் யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் தலையை மட்டும் ஒருதரம் ஆட்டி பண்ணையார் சொல்லுக்கு ஆமாம்! போட்டார்கள்.

“இந்த வருஷமும் கோவில் திருவிழாவை நல்லா நடத்திப்புடுவோம். ஆனா சாமி சொன்ன மாதிரி புதுசா ஒரு தேர செஞ்சி ஊர் முழுக்க சுத்தி வர வச்சிப்புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.

ஒரு தேரு செய்யுனுமுன்னா எவ்வளவு ஆகும் தெரியுமா? நீ பாட்டுக்கு தேர செய்யி… அத செய்யின்னு சொல்லிப்புட்டு போயிடுவ. யாரு செய்யுறது. யாரு நோட்ட அவுக்குறது.. என்றார் சுப்பையா. இப்படித்தான் போன தரம் வாணவேடிக்கை நடத்தனுமுன்னு சொல்லிப்புட்டு, கடைசியா சுப்பையாகிட்ட வசூல் பண்ணிட்டாங்க. அதான் எங்க நம்மல இழுத்து வுட்டுடுவாங்கன்னு பயப்படுறாரு.

“சுப்பையா கொஞ்சம் அமைதியா இரு. நாச்சியப்பன் சொல்றது சரிதான். நாமும் தேர் செஞ்சி இழுப்போமே. ஆகுற செலவுல பாதியை நான் ஏத்துக்குறேன். மீதிய ஊர் மக்கள் கிட்ட வசூல் பண்ணிக்கலாம். நான் சொல்றது சரின்னா சொல்லுங்க உடனே வடகத்திக்கார ஆசாரியை வரச்சொல்லலாம் என்றார் பண்ணையார். மீண்டும் எல்லோரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துத் தலையை முன்பக்கமாக ஆட்டிக்கொண்டனர்.

“கோவில் திருவிழாவுக்கு என்னென்ன பண்ணனும்முன்னு சொல்லுங்கப்பா…” என்றார் சுப்பையா.

ஒருவர் கரகாட்டம் என்றார். ஒருவர் ஒயிலாட்டம் என்றார். மற்றொருவர் மயிலாட்டம் வைக்கலாம் என்றார். இன்னொருவர் பறையாட்டம் வைத்தால் நல்லா இருக்கும் என்றார்.

கோலம் போடனும் மாவு அரைக்கனும் பொங்கல் வைக்கனும் ராட்டினம் சுத்தனும் வளையல் வாங்கனும் கொலுசு அணியனும் தாவணிப் போடனும் என நீண்டுக்கொண்டேப் போனது பெண்களின் ஆசைகள்.

கலர் கண்ணாடி வாங்கனும் ஊதி வாங்கனும் ஐஸ் சாப்பிடனும் சிறுவர்களும் தனக்கு வேண்டியதைச் சொன்னார்கள்.

“அனைத்திக்கும் ஏற்பாடு செய்யனும்” என்றார் பண்ணையார்.

“எத்தன வருஷம்தான் இருட்டுல நிக்கிறது. இந்த வருஷமாவது முதல்ல கரண்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றார் நாச்சியப்பன்.

“புதுசு புதுசா ஏதாவது சொல்லிட்டு இருக்கானே இந்த நாச்சி… இவன என்ன செய்ய..” என்று பொறுமினார் சுப்பையா.

“என்ன நாச்சியப்பா.. ஒரேயடியா சொன்ன எப்படி? தேரு செய்யனுமுன்னு சொன்ன.. சரி. இப்ப கரண்டு எப்படி?” – பண்ணையார்.

“அண்ணே.. கரண்டு வர வழிய நான் சொல்றண்ணே..” என்றார் நாச்சியப்பன்

ஆறு மாதத்திற்கு முன்….

       மணமகளே மணமகளே வா வா… வலது காலை எடுத்து வைத்து வா வா… என்று ஒலிபெறுக்கியில் பாட்டு பாடிக்கொண்டிருந்தது. பண்ணையார் மகளுக்கு கல்யாணம். பட்டணத்தில் பிஎஸ்.சி படித்து முடித்தவள். கூட படிக்கும் பையனுடன் காதல். பையன் வீடு வசதியும் நாகரிகமும் உடையவர்கள். இருட்டில் தீப்பந்தம் பிடித்து வெளிச்சம் தேடுகின்ற ஊரில் பெண் எடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார் மணமகனின் பெற்றோர்களும் உறவினர்களும். இறுதியில் வென்றது காதல். கிட்டத்தட்ட பத்துக் கிலோமீட்டர் தூரம் வரை ஒயர் மூலமாகக் கரண்ட் எடுக்கப்பட்டு பண்ணையாரின் வீடு சீரியல் பல்புகளால் பளபளன்னு மின்னியது. அப்ப நம்ம ஊரே ராத்திரியில பளிச்சின்னு இருந்திச்சி. அதேபோல கோவில் திருவிழாவுக்கும் கரண்ட் கொண்டு வந்து ரேடியோ செட்டு கட்டிப்புடனும் என்று நாச்சியப்பன் தனக்கு என்ன தேவையென்று சொல்லிவிட்டார்.

       அந்த ஊருல பண்ணையார் வீட்டு கல்யாணத்தப்பத்தான் ரேடியோ செட்டு போட்டிருந்தார்கள். அதுவும் மாப்பிள்ளையின் தயவால். யாருமே ரேடியாவையோ ஒலிபெருக்கியையோ கூட பார்த்ததும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக கேள்விபட்டதாகவோ தெரியவில்லை. அந்த ஊரில் வசிக்கும் ஒயர்மேன் மட்டும் பட்டணத்திற்குச் சென்று சினிமா பார்த்து விட்டு கிராமத்து மக்களுக்கு கதைகதையாய் சொல்லுவான். எல்லாரும் அவனுடைய வாயையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் கிராமத்து மக்கள் பலருக்கு இவன் ரொம்ப கற்பனைவாதி. அதான் இல்லாததை இருக்கின்ற மாதிரி சொல்லுறான் என்று நினைத்துக்கொண்டார்கள். ஒயர்மேன் சொல்வது அனைத்தும் பொய்யே என்று நம்பினார்கள். ஆனால் பண்ணையார் வீட்டு கல்யாணத்தில் ஒலிபெருக்கியைப் பார்த்தவுடன் கிராமத்து மக்கள் அனைவரும் வாயடைத்துப்போனார்கள்.

       நீளமான கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்யாண வீட்டின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் முன்னால் தாடையில் கை வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தக்கூட்டத்தில் குள்ளமணியும் ஒருத்தன். கருப்பா குண்டா இருப்பான். ஒரு காலு சின்னதா இருக்கும் அவனுக்கு. அதனால குனிஞ்சு குனிஞ்சு பெரியகாலை கையால் பிடித்துதான் நடப்பான். சின்ன வயசுல கேலியும் கிண்டலும் நெறைய இருந்தது. இப்பல்லாம் அது குள்ளமணிக்கு பழகிடுச்சு. நல்லா பேசுவான். யாரும் அவன்கிட்ட வாயைக் கொடுத்து மீள முடியாது. எப்பவும் எதையாவது பண்ணிக்கிட்டே இருப்பான். ஊருல ஏதாவது நடந்ததுன்னா அதுக்கு ஆயிரம் கேள்விகளைக் கேட்பான். அவன் கேட்க நினைக்கின்ற ஒரு கேள்விக்கும் கூட பதில் வராது. ஆனாலும் குள்ளமணி கேள்வியை கேட்கிறதுக்கு நிறுத்தவே இல்லை.

அன்னிக்கு ரேடியோ செட்ட போட்டு ஒலிபெருக்கியில் பாட்டு வந்தவுடனேயே முதல் ஆளாய் கல்யாண வீட்டு முன்னாடி நின்னுட்டான். கூட்டமும் கூடுச்சி.  எப்படி பாடுது? யாரோ உள்ளே இருந்து பாடுறாங்களோ? யார் அவன்?  அவனைப் பார்ப்பதற்காக ஒலிபெருக்கியை ஒரு சுற்றுசுற்றி வந்து பார்த்தான் குள்ளமணி. யாரும் இல்லை. அந்த ஒலிபெருக்கியிலிருந்துதான் பாட்டும் சத்தமும் வருகிறது. குள்ளமணி பட்டணத்திலிருந்து வந்திருக்கும் ரேடியொ செட் ஆளுடன் ஒட்டிக்கொண்டான். கல்யாணத்திற்கு வந்த கிராம மக்கள் அனைவரும் கொஞ்ச நேரம் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றுவிட்டுத்தான் போனார்கள். பலர் சாப்பிட கூட போகாமல் வாசலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ஒயர்மேன் தம்பி சொன்னது சரிதான்னு பெரிசுங்க சிலர் பேசிக்கொண்டார்கள். ஒலிபெருக்கியின் முன்னால் சின்ன பசங்களெல்லாம் கால் வலிக்க ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

நாச்சியப்பன் பண்ணையார் மகளுக்கு நடந்த திருமணத்தால் வந்த கரண்டையும் ஒலிபெருக்கியையும் பற்றி நினைவுப்படுத்தினார். ஊர் மக்கள் எல்லோரும் ஆமாம்! ஆமாம்! என்றார்கள். மற்ற விஷியத்தில் நாச்சியப்பனைத் திட்டிய சுப்பையா கூட இப்பொழுது நாச்சியப்பன் சொல்லுறது சரிதான் என்றார்.

“நம்மள வச்சு இவனுங்க காரியத்த சாதிக்கிறானுங்களேன்னு” பொறுமிக்கொண்டார் பண்ணையார்.

“சரி கரண்ட்ட இழுத்துப்புடுவோம். ரேடியோ செட்டுக்கும் சொல்லிப்புடுவோம்“ என்றார் பண்ணையார். அனைவருக்கும் மகிழ்ச்சி.

“ரேடியோ செட்டு போடுறுதுன்னு முடிவாயிடுச்சி. அது நம்ம குள்ளமணிகிட்டயே சொல்லி புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.

“அங்கிட்டு இங்கிட்டுன்னு கடைசியா தன்னோட அக்கா பையனுக்கு வியாபாரத்த பண்ணிட்டாருய்யா…” என்றான் கூட்டத்தில் ஒருத்தன். இப்ப எல்லோருக்கும் புரிந்து விட்டது. நாச்சியப்பனோட அக்கா மகன்தான் குள்ளமணி.

“யார்ற சொன்னது. யார்ற அது?” என்று அதட்டிவிட்டு நாச்சியப்பன்,  “நான் ஏதோ நம்ம ஊரு பையன் ஒருத்தன் பட்டணத்துக்கு போயி ஒலிபெருக்கி கடை வச்சிருக்கான். யாரோ ஒருத்தனுக்கு காசு கொடுத்துக் கூட்டியாரதவிட நம்ப பையனுக்கு செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தான் சொன்னேன்” என்றார். அதற்கு மேல் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. கோயில் கூட்டம் அத்தோடு கலைந்தது.

விழாவிற்காக நோட்டிஸ் அடிக்கப்பட்டது. நோட்டிஸில் பின்பக்கத்தில்  இறுதியில் ஒரு கட்டம் கட்டி, கோவில் தேர் திருவிழாவிற்கு ரேடியோ செட் உபயம் “குள்ளமணி ஒலிபெருக்கி நிலையம்” உரிமை – திரு.குள்ளமணி அவர்கள் என்று போடப்பட்டிருந்தது.

குள்ளமணிக்கு தலைகால் புரியவில்லை. வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். இந்த ஊரில் தன்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பெயர் ஊர்பொது கோவில் நோட்டிஸில் இடம் பெற்றுவிட்டது என்பதுதான். அவனுடைய நண்பர்கள் அவன் வீட்டுப்பக்கம் போவதையே தவிர்த்தனர். அப்படியே செல்ல நேர்ந்தாலும் அந்த வீதிப்பக்கம் செல்லாமல் இரண்டு வீதி தள்ளியே சென்றார்கள். அவனுடைய கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் பேசியே கொன்று விடுவான் என்ற பயம்.

கரண்ட் இழுக்கப்பட்டது. இந்த ஊர் இன்னும் ஏழு நாளைக்கு கதிரவனை வானத்திலிருந்து இழுத்து வைத்தாற்போன்று இரவில் ஜொலிக்க வேண்டும் என்று குள்ளமணி எண்ணினான். தன்னோட நண்பர்களை அவர்கள் வீடு சென்றே பார்த்தான்.   முகம் பார்த்துக்கொண்டன. கண்கள் தரையை நோக்கின. மனம் – மனம் விட்டு பேசியன. கால்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊர்ப்பொது இடத்தில் நின்றன.

ஊர் முமுக்க சீரியல் பல்புகளால் மின்னியது. கோவில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.  ஒருத்தன் கோவில் வேப்ப மரத்தில் ஏறி சீரியல் பல்புகளைத் தொங்க விட்டான். அம்மன் சிலையையே சீரியல் பல்புகளால் அலங்கரித்து ஊருக்குப் பொதுவில் மிக உயரமாக வைக்கப்பட்டது.  ஒரு சந்து விடாமல் ஒலிபெருக்கியை இழுத்துக் கட்டினார்கள். அவ்வப்போது நண்பர்களை அழைக்க ஒலிபெருக்கியில் “மாணிக்கம் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும். சரவணன் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும் எனப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது குள்ளமணிதான் அங்கு பெரிய ஆளாகப்பட்டான். மைக் பிடித்து பேச வேண்டுமென்றால் குள்ளமணியைக் கூப்பிடு… சவுண்ட் வைக்க குள்ளமணியைக் கூப்பிடு… அம்மன் பாட்டு போட குள்ளமணியைக் கூப்பிடு… எல்லாம் அவனுடைய பாடாகவே இருந்தது. அவன் இரவுபகல் என்று பாராமல் கோவிலில் ரேடியோ செட்டுக்கிட்டேயே படுத்துக்கொண்டான். உடல் உபாதைக்கு மட்டுமே அப்பப்ப  வெளியே சென்று வருவான். மத்தபடி சாப்பாடு கூட கோவில்லதான்.

அன்னைக்கு வெள்ளிக்கிழமை. சாயங்காலத்துல பொங்கல் வைக்கனுமுன்னு காலையிலயே மைக்குல, “இன்னிக்கு சாயுங்காலம் அம்மனுக்கு பொங்கல் வைக்கனும். மதியம் மூனு மணியிலிருந்தே கோவிலுக்கு வந்துருங்க. வரும்போதே உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொண்டு வந்துருங்க. குழி மட்டும் கோவில்ல ரெண்டு பக்கங்களிலும் அடுப்புகளுக்காகத் தோண்டி வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குத் தேவையான எதுவானாலும் தானமாகக் கொடுக்கலாம்” என்று சொல்லியாச்சு.

கிராமத்துல எல்லா வீடுகள்ளேயும் ஒரே கூட்டம். ரெண்டு மூனு பேர் இருக்குற வீடுகள்ள கூட எட்டு பேர் பத்து பேர்ன்னு சொந்தகாரங்க நிரம்பி வழிஞ்சாங்க. அன்னைக்கு காலையில ஒன்பது மணி இருக்கும். கோவிலுக்கு முன்னால இருக்குற குழாயில நல்ல தண்ணி வந்துச்சு. ஊருல இருக்கிற கிணறெல்லாம் கொஞ்சம் உப்பு கரிக்கும். மண்ணு அப்படி! இந்தத் தண்ணி பக்கத்துல இருக்குற மலையில இருந்து வருது. இந்தத் தண்ணிதான் மலைக்குக் கீழ இருக்குற ஐந்தாறு கிராமங்களுக்கும் போகும். வாரவாரம் வெள்ளிக்கிழமை மட்டும்தான் வரும். குடிக்கிறதுக்கு மட்டும் இந்தத் தண்ணியைப் பிடிச்சு ஒரு வாரம் வச்சுக்குவாங்க.

ஊர் பொம்பளைங்க எல்லாம் தண்ணி பிடிக்க ஓடி வந்தாங்க. அதுக்குள்ள குடமும் குண்டானுமாக அந்த இடம் முழுமையானது. கடா முடான்னு சத்தம். கீச்சு மூச்சுன்னு சத்தம். என்ன நடந்ததோ தெரியல ஒரு அம்மா தண்ணியைத் தூக்கி இடுப்புல வச்சிகிட்டு வாயில என்னவெல்லாம் வந்ததோ தெரியல அதையெல்லாத்தையும் திட்டிக்கிட்டே போச்சு. தண்ணிப்புடிக்கிற இடத்துல இப்ப கூட்டம் அதிகமாயிடுச்சு. கோவிலுக்கு வந்த சொந்தகாரங்களும் தண்ணிப்பிடிக்க ஆளுக்கொரு குண்டானோடு வரிசையா நின்னுட்டு இருந்தாங்க.

திட்டிட்டு போன அம்மா திரும்ப நேரா தண்ணி குழாய்க்கிட்ட வந்து குடத்த வச்சுது. ஏற்கனவே வைத்திருந்த குடம் நிரம்பியவுடன் வரிசையில் நிற்கின்ற மற்றொரு அம்மா குடம் வைக்கப் போனது. திட்டிட்டு போன அம்மா,

“நான்தான் வப்பன். நானு ஒரு குடம்தான் புடிச்சுருக்கன். இன்னும் ரெண்டு குடம் புடிச்சிட்டுத்தான் யாருக்குன்னாலும் வுடுவேன்”

வரிசையில் நின்ற அம்மா…

“அதெப்படி நாங்க நின்னுட்டே இருப்பமா? நீங்க மகாராணியாட்டம் நேரா வந்து புடிச்சிட்டு போவிங்களாம். குடத்த எடுடி…” குடத்தைத் தட்டிவிட்டு இவருடைய குடத்தைக் குழாயின் முன்னால் வைத்தார். இரண்டு பேருக்கும் பெரும் குழாயடி வாய்ச்சண்டை ஆரம்பமானது.

“நீ யாருன்னு எனக்கு தெரியாதாடி.. சிறுக்கி மவளே”

“யாருடி சிறுக்கி.. நீதான் சிறுக்கி… ஒ.. வீட்டுக்கு அப்பப்ப ஒருத்தன் வந்துட்டு போரானே எனக்கு தெரியாதாடி?”

“நீ மட்டும் யோக்கியமாடி….. தேவி….. ” அதற்குமேல் இருவரும் அவர்களுடைய குடும்பத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு முன்னால் சண்டையிடாதீர்கள். இப்படி பேசாதீர்கள் என்று சில ஆண்கள் வந்து சண்டையை நிறுத்த முயற்சி செய்தார்கள். மூக்கு அறுபட்டு ஏண்டா வாயைக்கொடுத்துப் புண்ணாக்கிக் கொண்டோம் என்று நினைத்து ஒதுங்கிப் போனார்கள்.

 வெளியூரிலிருந்த வந்திருந்த ஆண்களும் பெண்களும் முகம் சுழித்துப்போனார்கள். தண்ணீர் பிடிக்க வந்த சிலர் வெறும் குண்டானோடு வீட்டுக்கு வந்தனர். தண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை இரண்டு பெண்களும் பிடித்து ஆட்டி ஆட்டியே பிடிங்கியிருந்தார்கள். தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வெறுமனே மண்ணை நனைத்து வழிந்தோடியது. சண்டையிட்ட பெண்களும் அமைதியாயினர்.  அவர்கள் இருவரும் குடத்தை எடுத்துக்கொண்டு  தங்களின் வீடுகளுக்கு நடையைக் கட்டினார்கள். எப்படியாவது ஒரு குடமாவது தண்ணீரை பிடித்தே ஆக வேண்டும் என்று நினைத்து வரிசையில் காத்துக்கொண்டிருந்தவர்களின் பாதங்களை ஈரமாக்கியது. கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடித்து ஓய்ந்தது போல இருந்தது.

அவ்வளவுதான் யாரும் இதை கேட்கவில்லை. கவனிக்கவில்லை. நாளைக்கு நாம் சொன்னதை சொல்லவில்லை என்று சொன்னால் கூட யாரால் இவர்களை நிருபிக்க முடியும். காலம் கடந்து விட்டது. கடந்த காலத்திற்கு சென்று மீண்டும் குழாயடி சண்டையில் என்ன நடந்தது? யார் மேல் தப்பு? யார் யார் என்னன்ன பேசினார்கள்? என்று யாராலும் சொல்ல முடியுமா என்ன? ஆமாம் யாராலும் சொல்ல முடியாது. கரண்ட் வராமால் இருந்திருந்தால். ஒலிபெருக்கி வராமல் இருந்திருந்தால்.. விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. காலையில் குள்ளமணி உடல் உபாதைக்காகச் சென்றுவிட… அந்நேரம் பார்த்துச் சிறுவர்கள் சிலர் ரேடியொ செட்டில் எதையோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நடந்ததை அப்படியே அம்மன் கேசட்டில் பதிவாகிவிட்டது.

அன்று மாலை கோவிலில் இருந்து பொதுமக்களுக்கு எப்போதும் போல் மீண்டும் மைக் மூலமாகப் பொங்கல் வைப்பதற்கு முன்னேற்பாடாகச் சொல்லப்பட்டன. அடுத்த சில வினாடிகளில் அம்மன் பாடலை குள்ளமணி தன்னுடைய ஒலிபெருக்கியில் ஓடவிட்டான். அன்று காலையில் நடந்த பதிவு செய்யப்பட்ட குழாயடி சண்டை முழுவதும் கோவில் ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டது. மீண்டும் ஊர் முழுக்க பெண்கள் இருவரின் வாய்ச்சவடால்கள் அரகேற்றப்பட்டன. நிம்மதியாக இருந்த பெண்கள் இருவரும் கோவிலில் இருக்கும் குள்ளமணி ஒலிபெருக்கியை நோக்கி ஓடி வந்தார்கள்.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

திருநாளைப் போவார் புராணம்

திருநாளைப்போவார் நாயனார்

திருநாளைப் போவார் புராணம்

            சோழநாட்டிலுள்ள ஆதனூரில், ஆதிதிராவிடர் குலத்தில் பிறந்தவர் நந்தனார் ஆவார். சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிவாலயங்களிலுள்ள மேளக் கருவிகளுக்கான தோல்களையும், யாழ்களுக்கான நரம்புகளையும் அளித்து வந்தார். அரசு தந்த சிறு நிலத்தில் பயிர்செய்து வாழ்ந்து வந்தார்.

            எப்போதும் சிவனையே சிந்தித்து இருந்தும், ஆலயத்தினுள் செல்ல இவரது குலத்தோர் அனுமதிக்கப் படாததால் கோயிலின் வாசலிலேயே நின்று சிவபெரு மானை வணங்கி வந்தார்.


            ஒருமுறை திருப்புன்கூர் சிவபெருமானைத் தரிசிக்கும் ஆசையில் அவ்விடம் சென்றார். கோயிலின் வாசலில் நிற்கும் நந்தனாருக்குக் காட்சிதர விரும்பிய பெருமான், நந்தி தேவரை விலகும்படிக் கூறினார். நந்தியும் விலகியது. நாயனார் சிவனைச் சிறப்புறக் கண்டு வழிபட்டார். பின்பொருநாள் தில்லையைத் தரிசிக்க ஆசை கொண்டார். அந்நினைவிலேயே இரவில் உறங்கச் சென்றார். அவருக்கு உறக்கம் வரவில்லை.


‘நான் தில்லைக்குச் சென்றாலும் ஆலயத்தினுள் நுழைய முடியாதே! நடராஜ பெருமானின் திருநடனத்தைக் கண்டு தரிசிக்க முடியாதே!’ என்று வருந்தியவர், தன்னைத்தானே சமாதானம் செய்யும்வகையில், எப்படியும் ‘நாளைப் போவேன்! நாளைப் போவேன்!’ என்று கூறியபடியே இருந்தார். இவ்வாறு நாட்கள் கடந்தன.


            ஒருநாள் நந்தனார் தில்லைக்குப் புறப்பட்டுச் சென்றார். இருப்பினும் ஆலயத்தினுள் பிரவேசிக்க அனுமதி இல்லாததால், ஆலயத்தின் வெளிப்புறமிருந்த மடங் களையும், யாகசாலை முதலியவற்றையும் கண்டு வணங்கினார்.


            ‘ஆலயத்தின் உள்ளே சென்று தில்லைக்கூத்தனின் நடனத்தைத் தரிசிக்க முடியவில்லை. அதற்கு இப்பிறவிக் குலம் தடையாக உள்ளதே!’ என்று வருந்தியபடியே உறங்கினார். அவர் கனவில் தோன்றிய இறைவன், “இந்தப் பிறவி தீர, நீ நெருப்பில் இறங்கி புனிதமடைந்து, பின் வேதியர்களுடன் என்னை வந்தடைவாய்!” என்று கூறியருளினார்.


            இறைவன் அந்தணர்களின் கனவில் தோன்றி, திருநாளைப் போவார் இறங்க யாககுண்டம் அமைக்கும் படி ஆணையிட்டார். அதுகண்டு திகைத்த அந்தணர்கள், நந்தனாரை வணங்கி, இறைவனின் ஆணையைக் கூறினர். நந்தனாரும் பேரானந்தம் கொண்டார். அந்தணர்கள் இறைவனின் கட்டளைப்படி நெருப்பு உண்டாக்கினர். திருநாளைப் போவார், இறைவனை நினைத்து, வலம் வந்து நெருப்பில் இறங்கினார். மறுகணமே பழைய உடல் மறைந்து, வேதியராக வெளிப்பட்டார். அதைக்கண்ட அந்தணர்கள் அவரை வணங்கினார்கள்.


            திருநாளைப்போவார், அந்தணர்களுடன் ஆலயத் தினுள் சென்று பொன்னம்பலத்தினுள் நுழைந்தார். அக்கணமே அவரது உடல் அவ்விடத்தை விட்டு மறைந்தது. அந்தணர்கள் உட்பட அனைவரும் அதைக் கண்டு அதிசயித்தனர். திருநாளைப் போவார் தில்லை அம்பலக்கூத்தனின் திருவடி நிழல் சேர்ந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

தீவிரவாதப் பெண்ணியம் | Radical Feminism

தீவிரவாத-பெண்ணியம்

தீவிரவாதப் பெண்ணியம்


            தீவிரப் பெண்ணியம், 1960-களில் தொடங்கி பெண்ணியத்திற்கும், அதன் அமைப்பிற்கும் புது விளக்கங்களை அளித்தது. இதில் ஈடுபட்ட பெண்கள் அரசியலில் புது இடதுசாரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தீவிரவாதப் பெண்ணியவாதிகளின் வாதம், பெண்களின் இயற்கையான தன்மைகள் என்ன என்பதை மையமாகக் கொண்டது. மிதவாதப் பெண்ணியவாதிகளும், சோஷலிசப் பெண்ணியவாதிகளும் பெண்களும் ஆண்களைப் போன்று சுதந்திரமான மனிதர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர்.

            இது பெண்ணியத்தின் மையக் கருத்து, ஆனால் அவர்கள் ஆண்களும் பெண்களும் சில தன்மைகளில் வேறுபடுகின்றனர் என்று கருத்து கொண்டனர். அதனால் 19-ஆம் நூற்றாண்டு மிதவாதப் பெண்ணியவாதிகள், பெண்களின் இயற்கையான தன்மைகள் அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு, தாய், தாரம் என்ற கடமைகளை நிறைவேற்றத் தகுதியுடையவர் களாக்குகின்றது என நம்பினர். சோஷலிசப் பெண்ணியவாதிகளும் பெண்களின் இயற்கையான தன்மைகள் ஆண்களிடமிருந்து வேறுபடுகின்றன என்றே கருதினர். அவர்களது வேலைகளைத் தனிநபர் வட்டத்திலிருந்து பொதுவட்டத்திற்கு மாற்றுவது, பாலினத்  தன்மைகளை மாற்றாது என விவாதித்தனர். ஆயின், தீவிரவாதப் பெண்ணியவாதிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலியல் சார்ந்த மாறுபட்ட தன்மைகள் எதுவும் கிடையாது என மறுத்து, அதன் அடிப்படையில் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வேலைப் பங்கீடுகள் நியாயமற்றவை என விவாதித்தனர்.


பெண்ணடிமையின் காரணங்கள்


            தீவிரவாதப் பெண்ணியத்தின் முதல் கோட்பாடு பெண்கள் ஒரு நசுக்கப்பட்ட வர்க்கத்தினர் என்பதாகும். அவர்களது கருத்துப்படி, பாலினப்பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த நசுக்குதல் பொருளாதார அடிப்படையிலமைந்த நசுக்குதலைவிட சமூகத்தின் தன்மைகளை அதிக அளவில் பாதிக்கின்றது என்பதாகும்.


            தீவிரவாதப் பெண்ணியத்தின் முக்கிய கருத்து, ‘பாலியல் அரசியல்’ என்பதாகும். இதில் அரசியல் என்ற சொல் அதிகாரத்தின் அடிப்படையிலான உறவைக் குறிக்கும். ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரை ஆள்வது இதன் இயற்கையான இயல்பு. இதுவரை ஆண் பெண் இரு பாலருக்கிடையே இருந்து வந்த உறவை ஆராய்ந்தால் சரித்திரம் முழுவதும் ஆண்கள் பெண்களை அடிமை கொண்டிருப்பது தெரியவரும். ஆண்கள் பெண்களை ஆள்வதைத் தங்கள் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளனர். இதுதான் இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிப்படையான, சமூகத்தின் எல்லாக் கூறுகளிலும் பரவி நிற்கும், சமூகக் கலாச்சாரக் கோட்பாடாகும். ஆண் நாயகத்தின் மிகப் பெரிய வலிமை, அது எல்லா சமூகங்களிலும் ஆண்டாண்டு காலமாக வழக்கிலிருக்கின்றது என்பதாகும். பாலியல் வேறுபாடுகள் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளன. அதனால் அவை இருக்கின்றன என்பதே உணரப்படுவதில்லை.

            இக்காரணத்தினால் அவை இயற்கையானவை என்றும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒருவரும் அது குறித்து வினாக்கள் எழுப்புவதில்லை. இதற்குச் சாதகமாக சமூகம் வாழ்க்கையின் தனி மனித அனுபவங்கள் வேறு: புற உலக அனுபவங்கள் வேறு எனப் பாகுபடுத்தி வைத்தது. ஆயின், தீவிரப் பெண்ணியவாதிகள் பொதுவான, மரபு சார்ந்த அரசியல் நிறுவனங்களை ஆராய்ந்து பெண்கள் ஏன் நசுக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயன்றனர். இதன் உண்மை தனிமனித மூலம் அவர்களுக்குத் தெரிய வந்த அனுபவமும் ஒரு அரசியல்தான் (Personal is Political) என்பதாகும். அதாவது, தனிமனித வாழ்வில் பெண்கள் நசுக்கப்படுவது போன்றே பொதுவாழ்விலும் நசுக்கப்படுகின்றனர் என்பதாகும்.

            சமூகத்தில் பெண்கள் நசுக்கப்படுவது மறைமுகமாவும், வெளிப்படையாகவும் சமூகத்தின் ஒவ்வொரு கூறிலும் நிகழ்கின்றது. மனித மறு உற்பத்தி, மேலும், சமூக நிறுவனங்களான திருமணம், கட்டாய இருபாலர் உடலுறவு, தாய்மை போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டும், தனி நபர்கள் சமூகத்தில் இப்படித்தான் வாழவேண்டுமென சமூக மயமாக்கப்பட்டும், வழக்கத்திலிருக்கும் சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

 
            தீவிரவாதப் பெண்ணியவாதம் நான்கு முக்கிய கோட்பாடுகளில் அடங்குகின்றது. அவை ஆண் நாயகம், குடும்பம், பாலியல், பெண்களின் வரலாறு என்பவைகளாகும். ஆண்நாயகக் கூறுகள் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அடங்கியுள்ளன. இதை வலியுறுத்த எழுந்த நிறுவனம் தான் குடும்பம். இங்கு ஆண் பெண் இருபாலருக்கிடையே வேறுபடுத்தப்பட்ட வேலைப் பங்கீடுகள் உள்ளன. இங்குதான் ஆண்களும், பெண்களும் ஆண்நாயகச் சமூகத்திற்கியைந்தவாறு உருவாக்கப்பட்டு, ஆண் நாயகத்தைப் பலப்படுத்துகின்றனர். இது ஆணாதிக்கத்தின் அடித்தளமாகும்.

            அடுத்தது, பாலியல் உறவுகள். ஒரு நபர் மணம் என்ற விதிமுறை பெண்ணுக்கு மட்டும் தான் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்குக் கிடையாது. இதுவும், ஆண் பெண்ணின் பாலியல் மீது கொள்ளும் ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. இந்நிலையை மாற்ற பெண்களின் வரலாற்றை ஆராய்வது முக்கியம். சமூக மாற்றத்தில் எப்பொழுது, ஏன் பெண்கள் ஆண் நாயகத்தால் கொடுமைப்படும் வழக்கம் தோன்றியது என்பதை உணர்ந்தால்தான் அந்நிலையை மாற்றும் வழிவகைகளை ஆராய இயலும்.
தீவிரவாதப் பெண்ணியவாதிகள் ஆண்களை எதிரிகளாகக் கருதுகின்றனர். ஆண் நாயகத்தால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டுகின்றனர்.

பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

தீவிரவாதப் பெண்ணியம், ஆண்களால் ஏற்பட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஆண்களே பெண்களுக்கு எதிரிகள் கருதுகின்றது. அதனால் பெண்கள் ஆண்களை எந்த வகையிலும், சாராது, பிரிந்து வாழ வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இதனால் எல்லா தீவிரப் பெண்ணியவாதிகளும் பெண்களுக்குள் உடலுறவு கொள்வதை ஆதரித்து, ஆண்களுடன் உடலுறவு கொள்வதை எதிர்த்தனர். மேலும், ஆண்தாயக அமைப்பிற் கெதிராகப் பெண்களை மட்டும் கொண்ட நிறுவனங்களை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். பெண்கள் மட்டும் கொண்ட குழுக்கள், உணவுவிடுதிகள், புத்தகக்கடைகள், பதிப்பகங்கள், பெண்கள் உடல்நலம் பேணும் நிறுவனங்கள் முதலியவை அவற்றில் சிலவாகும்.

பெண்களின் நசுக்குதல் என்பது சமூகத்தில் ஒவ்வொரு கூறிலும் நிகழ்வதால் சமூகத்தின் மேல் மட்டத்தில் பெண்களுக்காகச் செய்யப்படும் சீர்திருத்தங்கள் எந்தவித பயனையும் அளிக்காது; அதனால் புது சமுதாய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தீவிரமாக ஆதரித்தனர். இதற்கு முதலாவதாக, குடும்பம் என்ற அமைப்பு தகர்க்கப்படவேண்டும்; பாலியல் தொடர்புகளில் முழு சுதந்திரம் வேண்டும்; இருபாலர் உடல் உறவு, பலருடன் உடலுறவு, ஒரு பாலரிடையே உடலுறவு, உடலுறவு இன்றி வாழ்வது என்ற வாழ்க்கை முறைகளில் எப்படி வேண்டுமானாலும் வாழச்சுதந்திரம் வேண்டும் எனக் கோரினர். பெண்களின் உடல் மனித மறு உற்பத்தியோடு இணைக்கப்பட்டிருப்பதால் ஆண் இனம் அதைக் காரணம் காட்டி பெண்களைத் தாழ்மைப்படுத்திற்று, அந்நிலையிலிருந்து பெண்கள் விடுதலையடைய குழந்தை பெறும் பொறுப்பிலிருந்து சுதந்திரம் பெற வேண்டும். இதற்கு சுலாமித் பயர் ஸ்டோன் என்பவர் குழந்தைகள் பெண்களின் உடலுக்கு வெளியே செயற்கையான சூழ்நிலையில் உருவாக்கப்பட வேண்டுமென்ற வழிமுறையைக் கூறினர். அதேபோன்று, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பிலிருந்தும் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் கூட்டுமுறையில் சமுதாயத்தால் வளர்க்கப்பட  வேண்டும். இது குழந்தை வளர்ப்பில் உள்ள மேம்பட்ட அறிவும், அனுபவமும் குழந்தைகளுக்குக் கிடைக்க வழி செய்யும் எனவும் கருதினார். மேலும், குழந்தைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களிடையே சுயநம்பிக்கையை ஏற்படுத்தும். பெண்களையும் குழந்தைகளையும் சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஈடுபடுத்தி, ஒன்றுபடுத்த வேண்டும். ஆண் பெண் இருபாலருக்கிடையே உள்ள வேலைப் பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும் அறவே நீக்க வேண்டும் என்பவை தீவிரவாதப் பெண்ணியவாதிகளின் வழிமுறைகளாகும்.


குறைபாடுகள்

தீவிரவாதப் பெண்ணியவாதிகள் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட போதிலும் அவர்கள் கோட்பாடுகளிலும், அணுகுமுறைகளிலும் சில குறைபாடுகள் இருந்தன. உயிரியல் காரணிகள் மட்டும் ஆண் பெண் வேறுபாடுகளைத் தீர்மானிப்பதில்லை. அதற்கு வேறு காரணிகளும் உண்டு. ஆயின், ஆண் பெண் வேறுபாடுகளுக்கு உயிரியல் காரணிகள் எந்த வகையிலும் ஆதாரமானதன்று என்பது தவறான வாதமாகும்.
ஆண், பெண் இருபாலருக்கிடையே உள்ள உயிரியல் வேறுபாடுகள் படைப்பில் அமைந்தவை; இயற்கையானவை. ஆயின், தீவிரப் பெண்ணியம் அதற்கு எதிரிடையாகச் செயற்பட்டது. அச்செயற்பாடுகள் தீவிரமாகவும் இருந்தன. இதைப் பெரும்பான்மையான பிற பெண்ணியவாதிகளும், பொது மக்களும் ஒப்புக் கொள்ளவில்லை.

தீவிரப் பெண்ணியவாதிகள் ஆதரித்த ஒருபாலர் பாலுறவு, குடும்ப எதிர்ப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தைகளை உருவாக்குவது போன்ற கருத்துக்களைப் பெரும்பான்மையோர் எதிர்த்தனர். தீவிரப் பெண்ணியவாதிகள் சிற்சிறு குழுக்களாகப் பிரிந்து, சரியான தலைவர்கள் இன்றி, வெவ்வேறுபட்ட இலக்குகளோடும், வழிமுறைகளோடும் செயற்பட்டனர். அவர்களிடையே ஒரு சரியான அமைப்போ, எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட செயற்திட்டங்களோ இல்லை.

முடிவுரை

1.மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

2.மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

3.சோஷலிசப்  பெண்ணியம் | Socialist Feminism

4.தீவிரவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் சீர்திருத்தத்தில் நம்பிக்கை உடையது.

சோஷலிசப் பெண்ணியமும், தீவிரவாதப் பெண்ணியமும் ஒரு சுதந்திரமான சமூகத்தை உருவாக்க முற்படுகின்றன.

மார்க்சியப் பெண்ணியம் வர்க்கத்திற்கும், தீவிரப் பெண்ணியம் பாலியல் போராட்டத்திற்கும் முதலிடம் கொடுக்கின்றன.

சோஷலிசப் பெண்ணியம் சமூக நசுக்குதலுக்குக் காரணமானவைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டுமென விழைகின்றது.

 

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்,

ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சோஷலிசப் பெண்ணியம் (Socialist Feminism)

சோஷலிசப் பெண்ணியம்

    சோஷலிசப் பெண்ணியம் (Socialist Feminism)

     சோஷலிசக் கருத்துக்கள் ராபர்ட் ஓவன், சார்லஸ் புரியர், செயிண்ட் சிமான்ஸ் முதலியோரது கோட்பாடுகளில் ஆரம்ப காலங்களிலேயே பரவிக் கிடந்தன. அவர்கள் ஏற்றத் தாழ்வுகளற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முயன்றனர்.

      1973-களில் மார்க்சிசக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ள அமெரிக்கப் பெண்ணியவாதிகள், மார்க்சிசம், பெண்ணியம் ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கும் இடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை ஒழுங்குபடுத்தவும், பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான நசுக்குதலின் காரணங்களையும் அறிந்து அவற்றை நீக்கும் முறைகளை ஆராயவும் பெண்ணியக் குழுக்களை ஏற்படுத்தினர். தனித்தியங்கிய பெண்ணியவாதிகளும், மார்க்சிசவாதிகளும்கூட இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
            இந்த முயற்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் சோஷலிசப் பெண்ணியம் / பெண்ணிய சோஷலிசம். இது பெண்ணியக் கருத்துக்களின் மூலமும் மார்க்சியக் கருத்துக்களின் மூலமும் பெண்ணடிமையின் காரணங்களை ஆராய முற்பட்டது.

பெண்ணடிமையின் காரணங்கள்

            ஜூலியட் மிட்சல் (Juliet Mitchell) என்பவர் தனிநபர் சொத்துரிமையை அழித்து விடுவதால் மட்டும் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றார். தனது கருத்துக்களை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். பெண்கள் ஏன் எல்லா சமூகங்களிலும் நசுக்கப்படுகின்றார்கள்; எவ்வாறு நசுக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆராய்வது முக்கியம். இதை நான்கு முக்கியக் கூறுகளில் மறுஆய்வு செய்ய வேண்டும். அவை உற்பத்தி, மனித மறு உற்பத்தி, பாலியல், குழந்தை வளர்ப்பு என்பனவாகும். பெண்கள் பொது வேலைகளிலிருந்து விலக்கப்பட்டதற்கு அவர்களது உடற்கூறுகள் காரணமன்று; சமூகமே காரணம். அதனால் பெண்கள் சமூகத்தில் ஆண்களுடன் வேலைகளைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டாலும், சமூக நிலையும், சமூகத்தின் மதிப்புகளும் மாறாதவரை பெண்களுக்குச் சமத்துவம் கிடைக்காது.

            இரண்டாவது, பெண்கள் குழந்தை பெறும் வேலையின் காரணமாகக் குடும்பத்தில் முடக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்பம் என்ற அமைப்பை அழித்துவிட்டால் பெண்கள் விடுதலை அடைவர் என்ற கருத்தும் சரியல்ல. இது குடும்பத்தின் பங்குப் பணிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட தவறு. இப்பங்குப் பணிகளை ஆராய்ந்து அவற்றைத் தகர்க்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குடும்பத்தில் மனித மறுஉற்பத்தி, பாலியல், குழந்தை வளர்ப்பு, இவை முக்கிய பங்குகள் ஆகும்.

            இதில், மனித மறுஉற்பத்தி குடும்பக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் எளிதில் கிடைப்பதன் மூலம் கட்டுப்படும். குடும்பத்தில் ஆண் பெண்களுக்கிடையே நிலவும் சமத்துவமற்ற அதிகாரம், ஆண், பெண்ணைச் சுரண்ட அனுமதித்தது. இருவருக்கும் சமமான பாலியல் சுதந்திரம் கிடைக்கும்பொழுது இந்நிலை மாறும். அப்பொழுது குடும்பம் தேவையற்றதாகும். பெண்கள் குழந்தைகளைப் பெறுவதால் அவர்களே குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்ற கொள்கையை மாற்ற வேண்டும். இதனால் குடும்பம் என்பது பொருளாதாரத்தோடு மட்டும் சம்மந்தப்பட்டதன்று; வேறு நிலைகளோடும் சம்மந்தப்பட்டதென விளங்கும்.

            சோஷலிசப் பெண்ணியம் எல்லாப் பெண்களும் பாலின அடிப்படையில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்தை ஒப்புக்கொண்டாலும், சமூகத்தில் பல்வேறு வகைப்பட்ட கூறுகளும் பெண்களை நசுக்கக் காரணமாயுள்ளன என்பதையும் ஒப்புக் கொள்கின்றது. நாடுகள், இனம், வயது, அறிவுத்திறன், மதம், வர்க்கம் இவைகளும் பாலினப் பாகுபாடுகளினூடே செயற்படுகின்றன என்று வலியுறுத்துகின்றது. அதாவது, உலகம் முழுவதும் பெண்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக நசுக்கப்படுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் தாம் சார்ந்த மற்ற கூறுகளோடு, தம் இன ஆண்களோடு சேர்ந்தும் பல்வேறு விதமான நசுக்குதல்களுக்கு உட்படுகின்றனர்.

            அதனால் பாலினமோ, வர்க்கமோ நசுக்குதலின் அடிப்படைக் காரணி என்று விவாதிப்பதைவிட, எல்லாப் பிரச்சனைகளும் பெண்களைத் தாக்கும் பிரச்சனைகள்தான்; அதனுடன் வர்க்க, இனப் பிரச்சனைகளும் அடங்கும் என்று கொள்வது பொருத்தமாகும். அதனால் பெண்களின் பிரச்சனைகளை மற்றப் பிரச்சினைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் முழுமையான கண்ணோட்டத்தோடு நோக்க வேண்டும். இக்காரணங்களினால் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராடும் பொழுது மற்ற சோஷலிசப் புரட்சிகரக் குழுக்களோடு ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென்பது அவர்கள் கருத்தாகும்.

            சோஷலிசப் பெண்ணியவாதிகள், மார்க்சிசத் தத்துவத்தில் காணப்படும் பொருளுற்பத்தி என்ற கருத்தை மனித மறு உற்பத்தி உள்ளிட்ட வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும், உள்ளடக்குமாறு விரிவுபடுத்தினர். அவர்கள் கருத்துப்படி, மனித மறுஉற்பத்தி என்பது குழந்தைகளை ஈன்றெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடும் பணியாகாது. அது உயிரைப்படைப்பதுடன், மக்களை வளர்த்து, ஆளாக்கி, சமூக நிலைக்குத்தக்கவாறு உருவாக்கி, சமூகத்திற்குத் தொழிலாளர்களை வழங்கும் பணியுமாகும். அதனால் உற்பத்தி என்னும் சொல் மனித மறு உற்பத்தியையும் குறிக்குமாறு விரிவு படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.


            சோஷலிசப் பெண்ணியம் பெண்களின் வேலை என்ற பதத்திற்கும் புதிய விளக்கத்தை அளித்தது. பெண்கள் வீட்டில் செய்யும் வேலை வெளியில் ஆண்கள் செய்யும் வேலைக்கிணையான  மதிப்பைக் கொண்டது. ஆனால் அதற்கு தகுந்த மதிப்போ, ஊதியமோ அளிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிற்று சோஷலிசப் பெண்ணியவாதிகள் தீவிரப் பெண்ணியவாதிகளைப் போன்று வாழ்க்கையில் தனி மனித அனுபவமே புற உலக அனுபவம் என்ற கருத்தைக் கொண்டவர்கள். அதாவது வாழ்க்கையின் வெளி, உட்பகுதிகள் என்ற பாகுபாட்டை நிராகரிக்கின்றனர்.


            சோஷலிசப் பெண்ணியம் மார்க்சிச நோக்குடன் தீவிரப் பெண்ணியத்தையும் சேர்த்து நோக்குகின்றது. இது வர்க்கப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டையும் அழிக்க வேண்டுமெனக் கருதுகின்றது. இது முதலாளித்துவத்தையும் ஆண் நாயகத்தையும் ஒழித்து, சமூகத்தின் எல்லாவிதமான சுரண்டுதல்களையும் நீக்கி, ஆண்மை பெண்மை என்ற பாகுபாடற்ற சமூகத்தை நிறுவப் பாடுபடுகின்றது.


 பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

            மிதவாதப் பெண்ணியவாதிகளைப் போலன்றி சோஷலிசப் பெண்ணியவாதிகள், சமூக அமைப்பே குறைபாடுள்ளது. அதனால் ச்மூக அமைப்பைப் புரட்சியின் மூலம் மாற்ற வேண்டுமென விழைகின்றனர். மேலோட்டமான சீர்திருத்தங்கள் முழுமையான பலனளிக்காது என்பது அவர்களது கொள்கையாகும். சோஷலிசப் பெண்ணியவாதிகளும், பெண்கள் ஆண்களிடமிருந்து பிரிந்து, தனித்த குழுக்களாகப் போராட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

            பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் சமூக அமைப்பு மட்டுமல்லாது ஆண்களும் இவர்களுக்கு எதிரிகள்தான். உலகம் முழுவதும் நிலைபெற்றிருக்கும் சமூக அமைப்பு ஆண்களுக்குச் சாதகமாகவே உள்ளதால் ஆண்கள் தற்போதுள்ள சமூக அமைப்புக்கெதிராகப் போராட முன்வரமாட்டார்கள். இந்நிலையைப் பெண்ணியவாதிகளும், சோஷலிசவாதிகளும் பெண்ணிய இயக்கத்தில் மும்முரமாக ஈடுபடும்பொழுது உணர்ந்து கொண்டனர்.

            சில ஆண் சோஷலிசவதிகள் பெண்களின் விடுதலையை முக்கிய குறிக்கோளாகக் கொள்வது தனிநபர் சொத்துரிமையை அழிக்கும் நோக்கத்தைப் பின் தள்ளிவிடும் எனப் பயந்தனர். சிலர் பெண்களுக்கு எதிரிகளாவும் இருந்தனர். பெண்களின் இயல்பு சோஷலிசப் புரட்சிக்கு எதிரிடையாக உள்ளது எனச் சிலர் குறை கூறினர். வேறு சிலர், பெண்களின் காம உணர்ச்சியில் இருந்து ஆண்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரித்தனர்.

            இக்காரணங்களினால் பெண்ணிய வாதிகள், ஆண்கள் தங்கள் தாழ்நிலையை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்; பெண்களின் தாழ்நிலையைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை என உணர்ந்து அதிருப்தியுற்றனர். இவ்வெண்ணங்களினால் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தனித்துப் போராட வேண்டுமென்ற எண்ணம் சோஷலிசப் பெண்ணியவாதிகளிடையே வலுப்பெற்றிருந்தது.

            சோஷலிசப் பெண்ணியவாதிகள் ஆண்களைப் போன்று பெண்கள் பொது வேலைகளில் ஈடுபடவேண்டும்; பெண்கள் தங்களது தனிவேலை அல்லது குடும்ப வாழ்க்கை முறைகளினால் கட்டுப்படுத்தபடக் கூடாதென வலியுறுத்தினர். மேலும், தற்கால இயந்திர வளர்ச்சி பெண்கள் உடல் வலிமை குறைந்தவர்கள், அதனால் சில வேலைகளுக்குப் பயன்படமாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.


            சோஷலிசப் பெண்ணியவாதிகள் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பொது வேலைகளில் ஈடுபட அவர்களுக்குச் சம கல்விவாய்ப்பு அளிக்கப்படுதல் வேண்டும். என வலியுறுத்தினர்.


            குடும்பம் என்ற அமைப்பை அழிக்க வேண்டும்; குடும்பம் அல்லாது வேறு வகையான வாழ்க்கை முறைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களது வழி முறைகளில் ஒன்றாகும். கூட்டு வாழ்க்கை, சுதந்திரமான மண உறவுகள், இவைகள் பெண்களுக்குக் குழந்தைப் பேற்றிலிருந்து சுதந்திரம் அளிக்கும். பிறந்த குழந்தைகளுக்குப் பெற்றோர் பெயர் தெரியாவிட்டால் சமூகத்தால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படாத நிலைமாற வேண்டும்; குழந்தை வளர்ப்பு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பவையும் இவர்களது வழிமுறைகள் ஆகும்.

குறைபாடுகள்

பெண்கள் பாலியல் காரணங்களினால் நசுக்கப்படுவதற்கும், முதலாளித்துவ வர்க்கத்தினரால் நசுக்கப்படுவதற்கும் அடிப்படையில் உள்ளன என்பதை சோஷலிசப் வெவ்வேறு காரணங்கள்
பெண்ணியவாதிகள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயின், அவர்களால் ஆண்நாயகத்தின் அடிப்படையான காரணத்தைக் கண்டுகொள்ள இயலவில்லை.

அதே போன்று, முதலாளித்துவத்திற்கும் ஆண் நாயகத்திற்கும் அடிப்படையில் உள்ள தொடர்பையும் அவர்களால் சரியான முறையில் விளக்க இயலவில்லை. இவை பற்றிய கருத்து வேறுபாடுகளினால் சோஷலிசப் பெண்ணியம் இடதுசாரி, வலதுசாரி என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்தது. 1980-களில் இடதுசாரிகளின் கை அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஓங்கிய பொழுது சோஷலிசப் பெண்ணியம் வீழ்ச்சியுற்றது.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க, 

1.மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

2.மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

மார்க்சியப் பெண்ணியம்

மார்க்சியப் பெண்ணியம்


            காரல் மார்க்ஸும், ஏங்கல்சும் கம்யூனிசக் கருத்துக்கள் பரவக் மார்க்ஸின் கருத்துக்களை ஏஞ்சல்ஸ் காரணமானவர்கள். ‘குடும்பம், தனிச்சொத்துரிமை, அரசு இவற்றின் தோற்றம்’ (Origin of the Family Private Property and the State) என்னும் நூலில் விளக்குகின்றார். இக்கருத்துக்கள் மார்க்சியப் பெண்ணியத்திற்கு அடிப்படையாக அமைந்தன.


பெண்ணடிமையின் காரணங்கள்


            ஏங்கல்சின் கருத்துப்படி, பொருள் முதல்வாதக் கொள்கையின் அடிப்படையில் கூறப்படும் வரலாற்றில், சமுதாய வாழ்வின்
தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பொருளுற்பத்தியும், மனித மறு உற்பத்தியும் சமுதாயத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். இந்த இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் முன்னேற்ற நிலையுடனும், குடும்ப நிலையுடனும் சேர்ந்து வரலாற்றில் ஒரு கால கட்டத்தின் சமுதாய அமைப்பை உருவாக்குகின்றன. அவர் கருத்துப்படி, பெண்கள் குடும்பத்தின் மூலம் தாழ்நிலை அடைவதே முதன் முதலாக உருவாகின்றது. அதைத் தொடர்ந்து அடிமை வர்க்கம் தாழ்த்தப்படுவதும் நிகழ்கின்றது. இவை இரண்டும் தனிநபர் சொத்துரிமையின் தொடக்க விளைவுகள் ஆகும். அதனால் தனிநபர் சொத்துரிமை அழிக்கப்படுவதன் மூலம் பெண்களின் தாழ்நிலையும், அடிமை வர்க்கத்தின் தாழ்நிலையும் மறையும் என்பது அவர் கருத்து.


            பெண்கள் தாழ்நிலை அடைந்த வரலாற்றை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். சமூகத்தின் ஆரம்பகால கட்டத்தில் தனிநபர் சொத்துரிமை கிடையாது. மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து பலருடன் பாலுறவு கொண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அதனால் ஒரு குழந்தைக்கு அதன் அன்னையைத்தான் அடையாளம் தெரியும். தந்தை யாரெனத் தெரியாது. இவ்வாறான சமூகங்களில் தாய்வழிச் சமுக அமைப்பு வழக்கிலிருந்தது. பெண்களுக்கு மதிப்பு இருந்தது. ஆண்களும் பெண்களும் செய்யும் வேலைகளில் உயர்வு தாழ்வு பாராட்டப் பெறவில்லை.

            பின்பு, தனிநபர் சொத்துக்கள் அதிகரிக்க, அதிகரிக்க, மனிதனுக்கு மற்ற மனிதர்களின் உழைப்பு தேவைப்பட்டது. இது மிருகங்களை வளர்க்கத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து ஆரம்பமாயிற்று. ஆணுக்குப் புதுவிதமான செல்வங்கள் சேர்ந்தன. இதை அவன் தனக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே வாரிசாக அடைய வேண்டுமென விரும்பினான். இதற்கு உதவியாக ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணம் புரிந்து, அவனுக்குக் குழந்தைகள் பெற்றெடுக்குமாறு வலியுறுத்தினான். இந்தக் கட்டாயம் ஆண்களது வாழ்வில் இல்லை. இக்கட்டத்தில் தாய்வழிச் சமூகமுறை மாறி, தந்தைவழிச் சமூகமுறை ஆரம்பமாயிற்று. ஏஞ்சல்ஸ், இதனைச் சமூகத்தில் பெண் இனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என விவரிக்கின்றார்.

            பெண்,  வீட்டில் ஆணுக்கு அடிமையாக வேலை செய்துகொண்டு, அவனது உடற்பசிக்கு இரையாகிக், குழந்தை பெறும் இயந்திரமாக மட்டும் வாழத் தொடங்கினான். இதனால் சரித்திரத்தில் முதல் வர்க்க நசுக்குதல், ஆண், பெண்ணை ஒரு நபர் மணத்தின் மூலம் கட்டுப்படுத்தியதன் மூலம்தான் ஆரம்பமாயிற்று என்கிறார் ஏங்கல்ஸ். பழங்காலக் கம்யூனிசக் குடும்பங்களில் பெண்கள் வீட்டைப் பராமரிப்பது, ஆண் வெளியில்
சென்று பொருளீட்டுவதற்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றிருந்தது.

            ஆயின், ஆண் நாயக ஒரு நபர் மணத்தில், பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் ஒருவனுக்கு மட்டுமே செய்யும் தனி வேலைகளாயின. இதற்குச் சமூக மதிப்பு கிடையாது. பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவது தடைப்பட்டது. அதனால் பெண்களின் தாழ்நிலை சமூகத்தில் ஆண் பெண் இருபாலரும் செய்யும் வேலைகளுக்கு அளிக்கப்பட்ட மாறுபட்ட மதிப்புகளினால் ஆரம்பமாயிற்று. இதே நிலைதான் முதலாளித்துவக் குடும்பத்திலுள்ள பெண்களது வாழ்விலும் காணப்பட்டது என்கின்றார் ஏங்கல்ஸ்.


            இயந்திரமயமாக்கப்பட்ட சமூகத்தில், பெண்களும் வெளியே சென்று உழைத்துப் பொருளீட்டும் கட்டத்தில், அவர்கள் ஆண்களிடமிருந்து விடுதலை பெறுகின்றனர். அதனால் தொழிலாள மக்களிடையேதான் உண்மையான அன்பின் அடிப்படையிலான திருமணங்களும், பெண்களின் சுதந்திரமும் காணப்படுகின்றன. இங்கு சொத்து இல்லாததால் ஆண்நாயகத்தை உறுதிப்படுத்தும் அடிப்படை எதுவும் இல்லை. ஆயினும், பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்தாலும் வீட்டு வேலை செய்வது, வெளி வேலை செய்வது இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். சமூக வேலைகளில் ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றுகின்றனர் என்றும் ஏங்கல்ஸ் விளக்குகின்றார்.


பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்


மார்க்சிசக் கருத்துப்படி, உண்மையான சமூக சமத்துவம், ஆண், பெண் இருபாலரும் சட்டப்படி சம உரிமைகளை அனுபவிப்பதன் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே நடைபெற முடியும். அதற்கு மூலமே செயற்பட முடியும். இது பெண் இனம் முழுவதும் பொதுத் பொருளாதாரப் பகுதியாக இருப்பது தவிர்க்கப்படுதல் வேண்டும். அடிப்படையாக, ஒரு நபர் மணம் சமூகத்தின் அடிப்படைப் வரப்போகும் சமுதாயப் புரட்சியின் மூலம் சொத்துக்கள் சமுதாய உடமையாகும்பொழுது, வாரிசு முறையில் பெற மிகக் குறைந்த
சொத்துக்களே இருக்கும். ஒரு நபர் மணமுறையின் அடிப்படையான தனிநபர் சொத்துரிமை தகர்க்கப்படும். அப்பொழுது ஒரு நபர் மணமும் தகர்ந்துவிடும்.

            தனிக்குடும்ப நிர்வாகம் சமூக நிறுவனத்திற்கு மாற்றப்படும். குழந்தை வளர்ப்பும் கல்வியும் பொதுப் பணிகளாக மாறும். ஆண் பெண் உறவுகள் அன்பின் அடிப்படையில் அமையும். அதனால் திருமண உறவுகள் ஒருமண உறவாகவே இருக்கும். இதில் ஆணின் ஆதிக்கம் மறையும்.
இந்நிலை மாற ஒரு புரட்சி தேவை. இதில் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து போரிட வேண்டுமேயன்றி, மற்ற வர்க்கப் பெண்களோடு ணைந்து செயற்படக்கூடாது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.


குறைபாடுகள்


            ஐரோப்பிய நாடுகளில் பெண்ணியம் வளர்ச்சியுற்று, பெண்கள் உயர்கல்வி பெற்ற காலத்தில் மார்க்சியக் கோட்பாடு வலிமை பெற்று விளங்கியது. அக்காலத்தில் உயர்கல்வி பெற்ற பெண்ணியவாதிகள், மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தனர். இங்கிலாந்துப் பெண்ணியவாதிகளிடையே இக்கோட்பாடே வலிமையுற்றிருந்தது. ஆயின், அவர்கள் தொழிற் சங்கங்களுடன் இணைந்து பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய காலத்தில், மார்க்சியம் பெண்களின் அடிமைத்தனத்தின் காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் சரியான முறையில் விளக்கவில்லை என்ப்தைப் புரிந்து கொண்டனர். முதலாளித்துவம் எவ்வாறு ஆண் நாயகத்தால் பயனடைகிறது என்பதை விளக்கும் அதே சமயத்தில், ஆண் நாயகம் முதலாளித்துவத்தின் துணையின்றித் தனித்து எவ்வாறு செயற்படுகின்றது என்பதை மார்க்சிசம் விளக்க முயலவில்லை.

            உதாரணமாக, தனிநபர் சொத்துரிமையும் முதலாளித்துவமும் ஏற்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களிலும், பெண் எனும் வர்க்கம் ஆண் வர்க்கத்தால் நசுக்கப்பட்டு வந்திருக்கின்றது; அதற்கான காரணங்களை மார்க்சிசம் விளக்க முற்படவில்லை. அதே போன்று தனிநபர் சொத்துரிமை அழிக்கப்பட்டால் பெண்கள் ஆண்களுக்கிணையான சமூக ன்று. தனிநபர் மதிப்பைப் பெறுவார்கள் என்பதும் உண்மையன்
சொத்துரிமைகள் அழிக்கப்பட்ட கம்யூனிச நாடுகளிலும் பலவிதங்களில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்நிலையில் உள்ளனர் என்பதும் வெளிப்படையாகும். மேலும், இங்கிலாந்தில் தொழிற்சங்கப் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டபொழுது, அவர்களுக்கு ஆண் தொழிலாளர்களிடம் இருந்து தகுந்த ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து போராடுவது தகுந்த பயனளிக்குமா என்ற வினாவும் பெண்ணியவாதிகளிடையே எழுந்தது.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

மிதவாதப்-பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

பெண்ணடிமையின் காரணங்கள்

            பதினெட்டாம் ஐரோப்பாவிலும் முதன் முதலாகத் தோன்றிய பெண்ணியக் கருத்துக்கள், மிதவாதப் பெண்ணியம் என்னும் பிரிவில் அடங்கும். பிரான்சு நாட்டில் உருப்பெற்ற சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்களும், அமெரிக்காவில் சுதந்திரம், தன்னாட்சி என்ற கருத்துக்கள் வலுப்பெற்றதன்மூலம் விளைந்த அமெரிக்கப் போரும், தனிமனிதனுக்குச் சுதந்திரமும், முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியவை.

            அவை, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சில பிறப்புரிமைகள் உள்ளன. அவை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுதல் வேண்டும்’ என வலியுறுத்தின. சுதந்திரம் என்ற மதிப்பு, எல்லா மதிப்புகளையும்விட மேலானது என்ற கருத்து அக்காலத்தில் மேலோங்கி நின்றது. ஆயின், இச்சுதந்திர எழுச்சி தோன்றிய ஆரம்ப காலத்தில் இவ்வுரிமைகள் அனைத்து மத, இன, வர்க்கத்தைச் சார்ந்த ஆண் மக்களுக்கு மட்டுமே தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை பெண்களுக்கும் தேவை என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. இதற்குச் சில முக்கியக் காரணங்கள் இருந்தன.

முதலாவது, பெண்கள் ஆண்களைவிட பகுத்தறிவுத் திறனில் குறைந்தவர்கள் என்ற கருத்து அக்கால மக்களிடையே நிலைத்திருந்தது. அதனால் அவர்கள் மனிதர்கள் என்ற தகுதியைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் கருதினர்.

            இரண்டாவது காரணம், பெண்கள் முதலில், ‘பெண்கள்’ என்ற மதிப்புக்களின் அடிப்படையில்தான் உணரப்படுகின்றனர். பின்புதான், ‘மனிதர்கள்’ என்ற அடிப்படையில் உணரப்படுகின்றனர். அதனால் பெண்கள் அவர்களுக்குரிய தனியான திறமைகளின் அடிப்படையில் உணரப்படவில்லை. ஆனால், ஆண்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் உணரப்படுகின்றனர். இவ்வாறான கருத்துக்களும், நம்பிக்கைகளும் பெண்களுக்குத் தனிமனித சுதந்திரம் தேவை என்று நினைப்பதற்கே இடங்கொடுக்காதவாறு தடை செய்தன.

நூற்றாண்டில் அமெரிக்காவிலும், மிதவாதப் பெண்ணியத்தில் மனிதர்களைப் பற்றிய இரண்டு கருத்துக்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஒன்று, காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திறமை; இரண்டாவது, தனிமனித சுதந்திரம். முதல் கருத்தின்படி பெண்களுக்கும் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவுத்திறன் உள்ளது என்ற கருத்து மிதவாதப் பெண்ணியவாதிகளால் விவாதங்களின் மூலம் விளக்கப்பட்டது. இரண்டாவது, பெண்ணும் ஆணைப்போல் ஒரு தனி நபர் என்பதாகும். பெண் ஆணின் போகப்பொருள் அன்று என்ற கருத்தும் நிறுவப்பட்டது. அதனால் ஆணைச் சார்ந்து பெண் வாழும் நிலை மாறி, அவளுக்குத் தனிமனித உரிமைகளும், சுதந்திரமும் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான சமூகச் சூழலில், ஆரம்பகால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களுக்குத் தனிமனிதப் பிறப்புரிமைகளைக் கோரினர். இவர்கள், அக்கால கட்டங்களில் தீவிரமடைந்திருந்த சமத்துவம், மக்களாட்சி முதலிய தனிமனித சுதந்திரக் கருத்துக்களுக்கும், நடைமுறையில் பெண்கள் அடிமைகளாக எவ்வித சுதந்திரமுமின்றி உள்ள இடையில் நடத்தப்படுவதற்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினர். ஆரம்ப காலகட்டத்தில் 1792-இல் மேரி உல்ஸ்டோன் கிராப்ட் எழுதிய ‘பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்’, 1848- இல் செனாகாபால்ஸ் பேரவையின் அரசியலமைப்பு, 1869-இல் ஜான் ஸ்டூலட் மில்லின் படைப்பான ‘பெண்கள் அடிமையைப் பற்றி’ முதலிய படைப்புக்கள் இக்கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.

ஆரம்ப கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியமான இடம் குடும்பமே என வலியுறுத்தினர். இவர்கள் ஆண் பெண் இருபாலருக்கிடையே வழக்கத்திலுள்ள வேலைப் பங்கீடுகளை எதிர்க்கவில்லை. ஆயின், இவ்விரண்டு வேலைகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது; இரண்டும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

மிதவாதப் பெண்ணியவாதிகள் சமூகத்தில் பெண்கள் தாழ்நிலை அடைந்திருப்பதற்குச் சமூகத்தில் நிலவிவரும் சில குறைபாடுகளே காரணம் என்று கருதினர். அதனால் அவற்றைச் சில சீர்திருத்தங்களின்மூலம் சரிசெய்துவிட முடியும் என்று நம்பினர். அவர்கள் கருத்துப்படி, இம்மாற்றங்களுக்குப் புரட்சிகள் எதுவும் தேவையில்லை. மேலும் புரட்சி என்பது தற்பொழுது சமூகத்தில் நிலவிவரும் சுதந்திரத்தையும் அழித்துவிடும் என்று அச்சமுற்றனர்.


            பெண்களின் தாழ்நிலையை மாற்ற அவர்கள் காட்டிய வழிகள் சில. அவற்றில் முக்கியமானது, பெண்களுக்கு உரிமைகள் அளிக்க வகை செய்யும் சட்டச் சீர்திருத்தங்கள் ஆகும். ஏனெனில் பெண்ககளின் தாழ்நிலைக்கு அக்காலத்தில் அவர்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டங்கள் கிடையாது. இவ்வாறான உரிமைகளில் முக்கியமாக அளிக்க வேண்டியது சொத்துரிமையும், பொது (Civil) உரிமையும் ஆகும்.

மேலும், திருமணம் என்பது உள்ள உடன்பாடாகக் மனைவியருக்கிடையே கணவன் கருதப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பெண்கள் தங்கள் உரிமைகளை உணருமாறு அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டுமென்றும், பெண்களைப் பற்றி சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களைப் பற்றிய நல்ல கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இம்மாற்றங்களை அவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, பொது மக்களுக்குப் புதுக் கருத்துக்களைக் கல்வியின் மூலமும், மக்கள் தொடர்புச் சாதனங்களின் மூலமும் பரப்புவது, சட்டத்தைப் பயன்படுத்துவது முதலிய வழிமுறைகளின் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்பினர்.

கற்பழிக்கப்பட்ட பெண்கள், கொடுமைகளுக்குள்ளான
பெண்கள், அபலைகள் முதலியோருக்கு ஆதரவு இல்லங்களையும் அவர்கள் நடத்தினர். குழந்தைகள் காப்பகங்களும் செயற்பட்டன. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தன்னை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டுமென்பது அவர்களது நோக்கமாகும்.

பிற்கால மிதவாதப் பெண்ணியம்

பிற்கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் நல்லியல்புகள் என்று சமூகம் சித்தரிக்கும் இயல்புகள் அவர்களை 
வீட்டிற்குள் சிறைப்படுத்தி, அவர்களுடைய ஆற்றல்கள், உந்துதல்கள் இவைகள் வெளிப்படாதவாறு அடக்கி, அவர்களுடைய சுய மதிப்பைக் கெடுக்கின்றது என்று கருத்துத் தெரிவித்தனர். இதை அவர்கள் ‘பெண்மை என்னும் மாயை’ என அடித்துக் கூறினர். இந்நிலைமாறப் பெண்கள் தங்களை அர்த்தமுள்ள வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம், தாய்மை இவற்றுடன் வாழ்க்கைப் பணியையும் இணைத்துப் புதுவிதமான வாழ்க்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் விரும்பினர். இது ஒரு பெண்ணின் முக்கியமான இடம் குடும்பமே என்ற ஆரம்பகாலப் பெண்ணியக் கருத்தினின்றும் வேறுபட்டு நிற்கின்றது.

மிதவாதப் பெண்ணியத்தின் குறைபாடுகள்


            மிதவாதப் பெண்ணியம் ஒரு சீர்திருத்தவாதம். இது வர்க்க, இன, பால்சார்ந்த அடக்குமுறைகள் பெண் இனத்தை நசுக்குவதைப் பற்றி ஆராய முற்படவில்லை. மேலும், இது பெண் இனத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆணாதிக்க மதிப்புகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒப்புக் கொள்கின்றது. அதனால் பெண்களின் தாழ்மை நிலை பற்றிய சரியான விளக்கங்களைக் கொடுக்கத் தவறிவிட்டது.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

 

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

இதழியலில் தொழில் வாய்ப்புகள் என்னென்ன

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்

II.இருவகை இதழியலாளர்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்


            இதழியல் பணி தற்கால உலகில் போற்றுதலுக்கும் புகழுக்கும் உரிய ஒன்றாகி வருகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இதழியல் துறையில் வேலைவாய்ப்புக்கள் பெருகி வருகின்றன. புதுப்புது தொழில் நுட்பங்களை இதழ்களின் வெளியீட்டுத் துறையில் பயன் படுத்துவதால், தொழில் நுட்ப வல்லுநர்களும், இதழ்களின் வீச்சு விரிவடைவதால், பல்வேறு பணிகளைச் செய்பவர்களும் நாள்தோறும் கூடி வருகின்றனர். இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இதழியல் பணிகள் இதழ்களோடு சேர்ந்து வளர்கின்றன.


இதயம் ஒன்றிய ஈடுபாட்டோடு இதழியல் பணியை மேற்கொள்கின்றவர்கள், அதிலிருக்கும் தீரச்செயல்களுக்கும், சாகசச் செயல்களுக்கும் உள்ள வாய்ப்புக்களில் தனி இன்பமும், உள்ளார்ந்த மனநிறைவும் காண்பார்கள். மக்களாட்சியில் வரலாறு படைத்த இதழியலாளர்களை நாடு என்றும் மறப்பதில்லை.


இப்பொழுது புதுப்புது நாளிதழ்களும், இதழ்களும் தோன்றுகின்றன. நாளிதழ்கள் வெளியிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் வியக்கத்தக்க அளவில் மிகுந்துள்ளன. செய்திகளை சேகரிப்பதிலும், அச்சுக்கலையிலும், இதழ்களின் தோற்றப் பொலிவிலும் அவற்றைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதிலும் புதுப்புது மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் இதழியலில் வேலை வாய்ப்புப் பணிகளை பல்கிப் பெருகத் துணை செய்கின்றன.

ஒரு காலத்தில், “இதழியலாளர்கள் பிறவியிலேயே அதற்குரிய திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும்,” என்று கருதினர். இப்பொழுது இக்கருத்து மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஆர்வம் இருந்தால், இதழியல் கல்வியும் பயிற்சியும் பெற்று இதழியலாளராகத் திகழமுடியும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.


II.இருவகை இதழியலாளர்கள்:

 இதழியலில் பணி செய்பவர்களைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

இதழியலாளர்கள்
(Journalists)


தொழில்முறை இதழியலாளர்கள்                                                      சுதந்திர இதழியலாளர்கள்

       (Professional Journalists)                                                                           (Free-lance Journalists)

இந்த இருவகை இதழியலாளர்களையும் பற்றித் தனித்தனியாக விளக்கலாம்.


தொழில்முறை இதழியலாளர்கள் :

            ஏதாவது ஒரு இதழில் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு பணி செய்கின்றவர்களைத் தொழில் முறை இதழியலாளர்கள் என்கின்றோம். இவர்கள் சேகரிப்பவர்களாகவோ, எழுதுகின்றவர்களாகவோ,
துணையாசிரியர்களாகவோ, செய்திகளைச் செய்திகளை-சிறப்புக் கட்டுரைகளை எழுதியவற்றைச் செப்பனிடும் இதழ்களுக்கு முழுவடிவம் தருகின்ற ஆசிரியர்களாகவோ, ஒவியர்களாகவோ, புகைப்படக்காரர்களாகவோ பணியாற்றுவார்கள்.


பொதுவாக, தொழில் முறை இதழியலாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணியாற்றும் இதழ்களே அவர்களுக்குப் பயிற்சிக்களமாக இருக்கும் காலப் போக்கில் தொழில் திறன் பெற்று விளங்குவார்கள்.


தொழில்முறை இதழியலாளர்கள் தங்களது விருப்பம் போல் செயல்பட முடியாது. தேவைகளுக்கேற்பச் செயல்படுவது இவர்களது கடமையாகும். பெரிய தாங்கள் பணியாற்றும் இதழ்களின் இதழ்களில் பணியாற்றும் இதழியலாளர்களின் பெயர்கள் வெளியிலேயே தெரியாமல் போகலாம்.

சுதந்திர இதழியலாளர்கள்:

எந்த ஒரு தனி செய்தித்தாளோடும், தங்களைப் பிணைத்துக் கொள்ளாமல், தங்களது இதழோடும் விருப்பம்போல் இதழ்களுக்கு எழுதவோ, ஒவியம் தீட்டவோ, புகைப்படம் எடுக்கவோ, வேறு தேவையான பணியையோ செய்வார்கள். இவர்கள் மாத ஊதியம் பெறாமல், இதழ்களிலிருந்து செய்யும் பணிக்குத் தனித்தனியான அன்பளிப்புப் போல ஊதியம் பெறுவார்கள்.


நமது நாட்டில் சுதந்திர இதழியலாளராகப் பணியாற்றிக் கொண்டு வாழ்வதென்பது மிகவும் சிரமமானது. தொடக்ககாலத்தில் இதழ்களில் இடம் பிடிக்கவே போராட வேண்டியதிருக்கும். ஆனால், பெயரும் புகழும் பெற்றுவிட்டால் சுதந்திர இதழியாளர்களாலும் வளமாக வாழமுடியும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க,

1.இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள்

இதழியலாளரின் தகுதிகள் யாவை?


            ஒருவர் இதழியலாளராக வாழ்க்கையை நடத்தி, பெயரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டுமானால், அவரிடம் இதழியல் தொழிலுக்கு வேண்டிய சில பொதுத் தகுதிகளும் (General Qualifications), சில சிறப்புத் திறன்களும் (Special skills) இருக்க வேண்டும். இவை இயல்பாக அமையாவிட்டால் பயிற்சியின் மூலமாகவும், முயற்சியின் வாயிலாகவும் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இதழியலாளர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் திறன்களையும் விளக்கிக் கூறலாம்.

(i) பொதுத் தகுதிகள் :

            இதழியலில் பணி செய்கின்றவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க பொதுத் தகுதிகளைத் தொகுத்துக் கூறலாம்.

1.கல்வித் தகுதி :

      இதழியலாளராகப் பணி செய்ய விரும்புபவர் ஓரளவு நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பெரும்பாலான இதழ்கள் பொதுவாகப் பட்டம் பெற்றவர்களையே பணியிலமர்த்த விரும்புகின்றன. பொதுக்கல்வித்தகுதியோடு, எந்த மொழி இதழில் பணியாற்றச் செய்கின்றாரோ அந்த மொழியில் எழுத்தாற்றல் பெற்றிருக்க வேண்டும். பல மொழிகளைத் தெரிந்திருப்பது இதழியல் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களால் இதழியல் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

2. பொது அறிவுத்தேர்ச்சி:

      பொது அறிவில் தேர்ச்சி பெற்றிருப்பது இதழியலுக்கு வேண்டிய ஒரு தகுதியாகும். எடுத்துக்காட்டாக, செய்தியாளர் எந்தச் செய்தியைத் திரட்டினாலும், அந்தச் செய்தி சரியானதா வென்பதைத் தீர்மானிக்கவும், அதனைப் பற்றி எழுதவும் பொது அறிவு தேவையாகும். உலகியலறிவு பெற்றவர்களால் இதழியல் பணிகளை அருமையாகச் செய்ய முடியும்.

3. வீர தீரச் செயல்களில் ஆர்வம்:

இதழியல் பணியில் பல வகை இடர்களை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அறிவாற்றலோடும், துணிச்சலோடும் இதழியலாளர்கள் செயல்பட வேண்டும். அதற்குரிய அஞ்சாமை இயல்பு இதழியலாளர்களுக்குத் தேவை.

4. கடின உழைப்பு :

இதழியலாளர்கள் காலம் கருதாமல் உழைக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, செய்தியாளர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும். ஓய்வு ஒழிவின்றி அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றவர்களால் தான் இதழியலில் பெயரும் புகழும் கொண்ட சிறப்பினைப் பெற முடியும்.

5. பொறுப்புணர்ச்சி:

இதழியலாளா மிருந்த பொறுப்பு வுணர்ச்சியோடு செயல்பட வேண்டும். தனது பணிகளின் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய தெளிவு இதழியலாளருக்கு வேண்டும்.

6. சுதந்திரமாகச் செயல்படல்:

இதழியலாளர்கள் எந்த விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படாமல், சுதந்திரமாகச் செயல்படும் மனப்பாங்கினைப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திர உணர்வு இல்லாதவர்களால் இதழியலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்த முடியாது.

7. சத்திய வேட்கை:

இதழியலாளர்கள் சத்திய வேட்கை வுடையவர்களாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய்யானவற்றைப் பரப்பக் கூடாது.

8. அற உணர்வு :

இதழியலாளர்கள் நடுநிலை நின்று அறவுணர்வோடு செயல்பட வேண்டும். எந்த நிலையிலும் சமுதாய நீதிக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது.

9.நாட்டுப் பற்று :

இதழியலாளர்களிடம் தாய் நாட்டுப் பற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் இதழியல் பணியைத் தொண்டு மனப்பான்மையோடு செய்ய முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இதழியல் பணி மூலம் தொண்டு செய்கின்ற நோக்கம் இருந்தால், அவரது பணியால் பெரும்பலன்கள் விளையும்.

(ii) சிறப்புத் திறன்கள்:

ஆசிரியர் தொழில், மருத்துவர் தொழில் போன்று இதழியல் தொழிலும் தனித்திறமைகளைச் சார்ந்து அமைகின்றது. செய்யும் தொழிலுக்கு வேண்டிய திறமைகளைப் பெற்றிருக்காவிட்டால், இத்தொழிலில் வெற்றி பெற இயலாது. இதழியல் தொழிலுக்கு வேண்டிய சிறப்புத் திறமைகளைச் சுட்டிக்காட்டலாம்.

1. எழுத்துத்திறன் :

இதழியலில், குறிப்பாக செய்தித்திரட்டுதல், செப்பனிடுதல் (Editing) போன்ற பணிகளைச் செய்பவர்களிடம் எதற்கும் வடிவமைத்து எழுதும் திறன் இருக்க வேண்டும். எழுதுவது ஒரு கலையாகும். எழுதுவதை விளக்கமாகவும், நுட்பமாகவும், பிறர் மனங்கொள்ளத்தக்க வகையிலும் எழுத வேண்டும். சுவையான எழுத்து நடையை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். எழுத வேண்டியதை உரியகாலத்தில், விரைந்து எழுதித்தரும் ஆற்றலை இதழியலாளர்கள் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கும் திறன் :

உலகத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கலாம். அவை எல்லாம் இதழ்களில் வெளியிடும் தகுதி பெறுவதில்லை. எவற்றை எப்படி வெளியிட வேண்டுமென்பதைத் தெரிந்தெடுக்கும் திறன் இதழியலாளர்களுக்குத் தேவை.

3.மெய்ப்பொருள் காணும் திறன்:

‘எப்பொருள் எத்தன்மைத் தாயின்’, எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருளில் மெய்ப் பொருள் காணும் திறன் இதழியலாளருக்குத் தேவை. உண்மை இதுவென்று ஆராய்ந்தறியாமல் எதனையும் வெளியிடக் கூடாது.

4.நினைவாற்றல்:

இதழியலாளர்களிடம் நல்ல நினைவாற்றல் இருக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளையும் உடனுக்குடன் எழுத இயலாது. பலவற்றை நினைவில் நிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுது தான் செய்திகளைச் சீர்குலைக்காமல் வெளியிட முடியும்.

5. சிறப்புப்பயிற்சி:

தொழிலில் பயன்படுத்துகின்ற கருவிகளை இயக்கவும், பிற பணிகளைச் செய்யவும் சிறப்புப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதழியல் துறையில் மேலும் நிறைய வேலைவாய்ப்புக்கள் தோன்றும் சூழல் இருக்கின்றது. அவற்றைப் பலரும் குறிப்பாக இளைஞர்கள், நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

முருக நாயனார் புராணம்

முருக நாயனார்

முருக நாயனார்

இறைவர் திருப்பெயர் :ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் :ஸ்ரீ கருந்தார்குழலி

அவதாரத் தலம் :திருப்புகலூர்

முக்தி தலம் : ஆச்சாள்புரம்

குருபூஜை நாள் : வைகாசி – மூலம்

“புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்

மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த

அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்.”


பாடல் விளக்கம்:

            பொழுது விடிவதற்கு முன்பாக எழுந்து, தூய நீரில் மூழ்கிச் சென்று, தம்பெருமானின் திருமுடிமேல் பிறையுலவும் திருச்சடையிடத்து முகையவிழ்ந்து மலர்கின்ற செவ்வி பார்த்து, எடுத்த அளவற்ற மலர்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளில் சேர்ப்பாராய்.

திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம்பெரும் திருத்தலம்! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார்! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார்.

எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார்.


            முருக நாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம் கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.


            இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம் பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார்.


            இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருக நாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருக நாயனாரின் திருமடத்திற்கு திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.


            இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார் , இறைவன் அருளிய பேரொளியிலே திருஞானசம்பந்தர் புகுந்த போது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.


“அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்

விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக்

கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.”


பாடல் விளக்கம்:


பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக அவருடைய திருவடி நிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறியினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார்பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.

சோழநாட்டிலுள்ள திருப்புகலூரில், வேதியர் குலத்தில் பிறந்தவர் முருக நாயனார். சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.


            நாள்தோறும் மரம், கொடி, செடி, நீர் இவைகளில் பூக்கும் மலர்களைப் பறிப்பார். அவைகளைக் கொண்டு மாலைகள் தொடுப்பார். அவற்றை சிவபெருமானுக்குச் சூட்டி வணங்குவார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்.


இவ்வாறு திருத்தொண்டு செய்து வந்த இவர், திருஞான சம்பந்தப் பெருமானுடனும் திருநாவுக்கரசு சுவாமிகளுடனும் நட்பும் பக்தியும் கொண்டிருந்தார். சிவ வழிபாட்டில் வழுவாது நின்ற முருக நாயனார் சிவனடி நிழலில் சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார்

            பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெரு மான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப் பெருமானுக்கு சந்தனக் காப்பணிவதைத் தன் பெரும் பேறாகக் கருதி, அத்திருத் தொண்டை. தவறாது புரிந்து வந்தார்.

இவ்வாறிருக்கையில் கர்நாடகத்து மன்னன் ஒருவன் பாண்டியனை போரில் வென்று மதுரையின் அரசனானான். அவன் சமண மதத்தைத் தழுவியவன். சைவர்களை வெறுத்தான். சிவனை வழிபடுவோரை பல்வகையில் துன்புறுத்தினான்.

மூர்த்தியார் சிவனுக்குச் சந்தனக்காப்பு அணிவிப்பதை அறிந்து, அவருக்குச் சந்தனம் அளிக்கத் தடை விதித்தான். இதனால் மூர்த்தியார் மிகுந்த வேதனையடைந்தார்.

சொக்கநாதப் பெருமானுக்குச் சந்தனக் காப்பிட, எங்கெல்லமோ சந்தனத்தைத் தேடி அலைந்தார். மன்னனின் கட்டளை என்பதால் அவருக்கு யாரும் சந்தனம் அளிக்கவில்லை. மூர்த்தியார், ‘இக்கொடிய மன்னன் எப்போது இறப்பான், நமக்கு எப்போது சந்தனம் கிடைக்கும்?’ என்று தவித்தார்.

நேராகக் கோயிலுக்குச் சென்றார் நாயனார். அங்கு சந்தனம் அரைக்கும் கல்லை அடைந்தார். சந்தனம்தான் கிடைக்கவில்லை! என் முழங்கையையே சந்தனக் கட்டையாகத் தேய்த்து பெருமானுக்குக் காப்பிடுவேன் என்று கூறி தன் முழங்கையைக் கல்லில் தேய்க்கலானார். அவரது கைமூட்டின் தோல் பிய்ந்தது. சதை தெறித்தது. பின்பு எலும்பும் தேய்ந்து, எலும்பினுள் இருக்கும் தசையும் வெளிவந்தது. இருந்தும் அவர் தன் கையைக் கல்லில் தேய்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அக்காட்சியைக் கண்ட பெருமா,ன், “மூர்த்தியாரே! உன் துயரெல்லாம் நாளையே மாறும். இத்தேசம் உனக்குச் சொந்தமாகப் போகிறது. நீர் உம் கையைக் கல்லில் அரைப்பதை நிறுத்து வீராக!” என்று வாக்கருளினார்.  நாயனாரும் கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். மறுகணமே அவரது கை பழைய நிலைக்குத் திரும்பியது.


அன்றிரவே அச்சமண மன்னன் இறந்தான். மறுநாள் அரண்மனையிலிருந்தோர் அவனது உடலுக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். இறந்த மன்னனுக்கு மனைவியோ, மகனோ இல்லை . அதனால் அடுத்த மன்னன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

அமைச்சர்கள் ஆலோசித்தார்கள். ‘பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி நடக்கச் செய்வோம். அது யாரைத் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொள்கிறதோ அவரே இந்நாட்டின் அடுத்த மன்னர்!’ என்று முடிவெடுத்தனர்.

அதன்படி யானையின் கண்ணைக் கட்டி அனுப்பப்பட்டது. வீதியெங்கும் திரிந்த யானை, மூர்த்தியாரின் முன் வந்து அவரை வணங்கியது. அவரைத் தூக்கித் தன் முதுகில் வைத்தது. அமைச்சர்களும் மூர்த்தியாரை அந்நாட்டின் மன்னராக்கினார்கள். மூர்த்தியாரும், “சமண மதத்தை ஒழித்து, எல்லோரும் சைவ மதத்தைப் பின்பற்றுவீர்களானால் நான் மன்னர் பொறுப்பை ஏற்பேன்!” என்று கூறினார்.

அமைச்சர்கள் அதற்குச் சம்மதித்தனர். நான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டாலும், சிவனடியார் கோலத்தில்தான் இருப்பேன் என்றும் கூறினார். அதற்கும் அமைச்சர்கள் சம்மதித்தனர்.

மூர்த்தியார் உடனே மதுரை சொக்கநாதப் பெருமான் ஆலயம் சென்று வணங்கினார். மன்னர் பொறுப்பேற்றார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல், அடியவராகவே இருந்தார். அவரது ஆட்சியில் சமணம் ஒழிந்து சைவம் தழைத்தது.

இவ்வாறு நெடுநாட்கள் சிறப்புற மதுரையை ஆண்ட மூர்த்தி நாயனார் இறுதியில் சிவனடி நிழலில் அமர்ந்தார்.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »