Monday, July 21, 2025
Home Blog Page 19

மொபைல் ரூல்ஸ்|ப.பிரபாகரன்| சிறுகதை

மொபைல் ரூல்ஸ்

 ‘மொபைல் ரூல்ஸ்’

           “இப்போ, அப்பா குளிச்சுக்கிட்டு இருக்கிற நேரமாச்சே! என்ன செய்றது? வேறு வழியில்லையே. போன் பண்ணிதான் பார்ப்போம். ஒருவேளை அவர் குளிச்சு முடிச்சுட்டு வந்திருக்கலாம்!” என்று நினைத்து ஹேண்ட்பேக்கில் இருந்து போனை எடுத்து டனுஜா அப்பாவுக்கு போன் செய்தாள்.

           அப்பாவின் போனில் காலர்ட்யூனாக கண்ணதாசனின் வரிகள் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…’ என்று பாடி இரண்டு முறை ஒலித்து முடித்தது. அவர் போனை எடுக்கவில்லை. டனுஜாவுக்கு அப்பாவின் மீது கோபம் எல்லைமீறியது; ‘இரண்டு மூன்று முறை முழு ரிங்கும் போய் கூட இன்னும் போனை எடுக்கவில்லையே’ என்று புலம்பினாள்.

           குளியலறையில் முகத்திற்கு சோப்பு போட்டுவிட்டு ஸவரில் குளித்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு, டனுஜா முதலில் அழைத்த போனின் ஒலி செவிக்கு எட்டவில்லை. ஆனாலும் அவள் போனை வைக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள். சில நிமிடங்களில் அவர் குளித்து முடித்துவிட்டு துண்டை எடுத்து துவட்ட ஆரம்பித்தார்.

           அப்போதுதான் அவருடைய போனில் ஒலித்த சத்தம் கேட்டு துவட்டிக்கொண்டிருந்த துண்டை எடுத்து இடுப்பினில் கட்டிக்கொண்டு குளியலறையில் இருந்து வேகமாக ஓடிவந்தார். பிறகு வீட்டினுள் சரியாக சிக்னல் கிடைக்காது என்பதால் அவசர அவசரமாக போனை எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து அட்டண்ட் பண்ணினார்.

           “ஹலோ, ஹலோ சொல்லு பாப்பா! என்னம்மா, கேக்குதா! இப்பதான் குளிச்சுட்டு வர்றேன்”. என்றார். ஆனால் போனின் மறுமுனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அட்டண்ட் பண்ணின உடனே போன் ஏனோ கட் ஆகி போயிருந்தது. அது தெரியாது மூச்சு விடாமல் போனில் தனியே பேசிக் கொண்டிருந்தார். சில நொடிகளில் போன் கட் ஆகி போனதை அறிந்து காதில் இருந்த போனை கையில் எடுத்து உற்று பார்த்தார்.

           “அட, போன் கட் ஆகி போச்சே! என்ன ஆச்சு? எதுக்கு போன் பண்ணினான்னு தெரியலயே?” என்று நினைத்து, எதற்காக போன் செய்தாள்? என்ன மறந்து போனாளோ தெரியலயே? என்று நினைத்துக்கொண்டு டனுஜாவுக்கு போன் செய்து கொண்டிருந்தார்.

மறுபுறம் “இந்த நேரத்துலதான் நெட்வொர்க் கூட நம்மை பழி வாங்கும்” நம்ம அவசரத்திற்கும் ஆத்திரத்திற்கும் இந்த நெட்வொர்க்க குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்? என்று டனுஜா கட் ஆனா போனில் இருந்து மீண்டும் அப்பாவுக்கு முயற்சித்தார்.

           இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி போன் செய்து கொண்டிருந்ததால் ‘நெட்வொர்க் பிஸி, பிஸி’ என்று காண்பித்து இருவருக்கும் போன் கட் ஆகி போனது. அவள் கட்டுக்கடங்காத கோபத்திற்கு ஆளானாள். ஓங்கி போனை உடைத்து விடலாம் என்று கையை உயர்த்த டனுஜாவின் போனில் இருந்து ‘கிளிங், கிளிங்’ என்று பேட்டரி லோ ஆனதை உணர்த்தும் எச்சரிக்கை ஒலி ஒலித்தது. சார்ஜ் வேறே கம்மியா இருக்குதே! ஆபிஸ் வேற வரப்போகுது. அங்கு உள்ளே போனதும் போனை ‘வாங்கி சுவிட்ச் ஆப் பண்ணீ’ வச்சுக்குவாங்களே. எப்படி சொல்றதோ தெரியலயே!” எப்படியாவது அவள் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று துடிதுடித்தாள்.

           அதே சமயம், அப்பாவும் நான்கைந்து முறை முயற்சி செய்து, போன் போகவே மாட்டேங்கிறது? என்று கடுப்பாகி என்ன ஆச்சு? என்று தெரியாமல், “ஒரு வேளை போனை சுவிட்ச் ஆப் செய்து பார்த்தால், போன் போகுமோ?” என்று நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.

           என்ன இது? ஒரு அவசரத்திற்கு போன் பண்ணுனா, இப்படி பண்ணுறாரே? போன் வேற போக மாட்டேங்கிறது? இப்ப போன் சுவிட்ச் ஆப் ஆகியிருக்குன்னு வருதே. இருவருக்கும் ஏற்பட்ட பதற்றமும் பரபரப்பும் கொஞ்ச நேரத்தில் பலமடங்காக அதிகரித்து போனது.

           சில விநாடிகளில் காலர் டோன், ரிங் டோன் என்று இருவரின் செவிகளிலும்  கண்ணதாசனின் கீதம் மீண்டும் இசைக்க ஆரம்பித்தது. ஆனால் தொடக்கத்திலேயே இருவரும் அதை துண்டித்து ‘ஹலோ, ஹலோ’ என்று பேச ஆரம்பித்தனர்.

           “அப்பா! எவ்வளவு நேரமாக உங்களுக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கிறேன்! என்ன ஆச்சு உங்க போனுக்கு?” என்றாள்.

            “இல்ல பாப்பா, நானும் அத்துனை முறை உனக்கு போன் பண்ணிக்கிட்டே தான் இருந்தேன். போன் போகவேயில்ல. என்னன்னு புரியல. நெட்வொர்க் பிரச்சனையான்னு தெரியல. அதனால தான் போனை சுவிட்ச் ஆப் செய்து ஆன் பண்ணினேன். அதனால தான் இப்போ நம்மால பேச முடிஞ்சது” என்றார்.

எத்தனை முறை உங்களிடம் சொல்லி இருக்கிறேன் “இரண்டு பேரும் ஒரே நேரத்தில் போன் பண்ணினால் இரண்டு பேருக்குமே கடைசிவரைக்கும் லைன் கிடைக்காதுங்கிற உண்மைய புரிஞ்சுக்கங்க, அதே போல யாராவது உங்களுக்கு போன் பண்ணி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, இல்ல அட்டண்ட் பண்ணின அப்பறம் போன் கட் ஆனாலோ அல்லது பாதி பேசிக்கிட்டு இருக்கும்போது கட் ஆனாலோ, அவரே திரும்ப போன் பண்ணும்வரை கொஞ்சம் பொறுமையா இருங்க! அது போதும்! அப்போதுதான் இதுபோல தேவையே இல்லாத டென்சனை தவிர்க்க முடியும்” என்று டனுஜா அப்பாவிடம் சொன்னாள்.

            “ஒரு வேளை பேலன்ஸ் இல்லாமல் கட் ஆகி போனால் என்ன செய்றதாம்? சரிம்மா. காலையிலே வேண்டாம். நீ சொல்றதை ஒத்துக்கிறேன். இனிமேலு அதை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு போன் வந்தா பேச முயற்சிக்கிறேன். சரி விடு. நீ எதுக்கு இப்ப போன் பண்ணின? அதை முதல்ல சொல்லு.” என்று கிண்டலாக மெல்ல முணுமுணுத்தார்.

           “இப்படி கிண்டல் கேலிக்கு மட்டும் குறைச்சலில்லை போங்க! ஒரு வேளை போன் பண்ணுபவரின் பேலன்ஸ் இல்லாமல் பாதியில் போன் கட் ஆகி போகும் நிலை இருந்தால் போன் பண்ணியதும் ஹலோ சொல்றதுபோல, பேலன்ஸ் கம்மியாக இருக்கு நீங்களே பண்ணுங்க, இல்ல போன் கட் ஆனா நீங்கள் பண்ணுங்க” என்று சொல்லிட வேண்டியது தானே.

           இதைக் கேட்ட அப்பாவும் கடுப்பாகி, அம்மா டனுஜா! எல்லாம் சரிதான். நீயும் ஒன்னு புரிஞ்சுக்கோ!

           “ஒருத்தருக்கு ஒரு முறை போன் செஞ்சு எடுக்கலன்னா! மாத்துகட்டுல திருப்பி திருப்பி போன் பண்ணிக்கிட்டே இருக்காத. ஒரு வேளை போனுக்கு அருகில் இல்லாமல் இருக்கலாம். இல்லை வேறு ஏதேனும் மிகவும் முக்கியமான வேலையில் இருக்கலாம். ஓரிரு முறை போன் செய்தும் எடுக்கவில்லை என்றால் விட்டுவிட்டால் உனக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அதையும் மீறினால் உனக்குத்தான் டென்சன் மேல் டென்சன் அதிகமாகும்” என்றார் அப்பா.

           “ஐயோ! அப்பா, உங்ககிட்ட பேசிகிட்டே நான் சொல்ல வந்ததையே மறந்து போயிட்டேனே!  பஸ்ஸில இருந்து இறங்குற இடம் வந்திடுச்சு. இன்னிக்கு முக்கியமான கேஸ் விசயமா வெளியில போகணும். அதனால ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சு வர லேட் ஆகும். தம்பியை பள்ளிக் கூடத்தில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திடுங்க. மறந்திடாதிங்க! நான் வச்சுடுறேன்” என்று கூறி கைபேசி வச்சிருபோருக்கெல்லாம் கச்சிதமாக பல ரூல்களை சொல்லினார்.

           பிறகு டனுஜா பேருந்தில் இருந்து இறங்கி சிட்டியிலே பிரபலமான வக்கீலிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள். ஈவினிங் அந்த கேஸ் விசயமா போக வேண்டி இருந்த ப்ளான் இப்ப காலையிலேயே போகணும் என்று மாறி போனதை தொடர்ந்து ஆபிஸின் வாசலிலே டனுஜாவுக்காக கூட பணிபுரியும் பிரபா காத்திருந்தாள்.

           டனுஜாவை கண்டவுடன் கடுகடுத்த குரலில் ‘டனுஜா, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? காலையிலே செம்ம கடுப்பான சாரு, கண்ணா பின்னான்னு திட்டிட்டு போயிருக்கார். கிளையண்ட் வீட்டுக்கு உன்னை வர வேண்டான்னு சொல்லிட்டு மாலாவை மட்டும் கூட்டிக்கிட்டு கிளம்பிட்டார். அவ்ளோ நேரமா உனக்கு மாத்தி மாத்தி போன் பண்ணிக்கிட்டே இருந்தார். நீ எங்க வர்றன்னு தெரியாம இவ்ளோ நேரமாக காத்திருந்து இப்பதான் கிளம்பி போனார்.

           “என்னடி சொல்ற. ஐயயோ! நான் அப்பாகிட்டதான் போன் பேசிக்கிட்டே வந்தேன். அதுவும் ஈவினிங் மீட்டிங் விசயமாதான், பையனை ஸ்கூலில இருந்து கூட்டிக்கிட்டு வரச் சொல்ல அவ்ளோ நேரமா ஆச்சு. எல்லாம் இந்த நெட்வெர்க் பிரச்சனைதான்” என்று சொன்னாள்.

           “ஏண்டி டனுஜா, உங்கிட்ட எத்தன டைம் சொல்லியிருக்கே! ஒழுங்கு மரியாதயா உன்னோட போன்ல ‘கால் வெயிட்ங்க ஆன்’ பண்ணி வையின்னு. அப்பதான் நீ, வேற யார்கிட்டயாவது பேசிக்கிட்டு இருந்தாலும் உனக்கு தெரியவரும். யாரு போன் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கிட்டு உடனே அட்டண்ட் பண்ணி பதில் சொல்ல முடியும். இல்லைன்னாலும் அவங்ககிட்ட பேசிட்டு அப்பறமாவது திருப்பி பேசலாம்ல. கால் வெயிட்டிங் ஆன் பண்ணலன்னா கடைசிவரையும் உனக்கு எதுவும் தெரியாமலே போயிடும். ஏதாவது எமர்ஜென்ஸினாலும் உனக்கு தெரியபடுத்த முடியும்” என்று சொன்னாள் பிரபா.

           “இன்னிக்கு அந்த கேஸ் விசயமா, போக விருப்பம் இல்லாம தானே நானே லேட்டா வந்தேன். அதே மாதிரி ஆபிஸ் டென்சன தவிர்க்கதான் இதுவரைக்கும் கால் வெயிட்டிங்க ஆன் பண்ணாமலே இருக்கிறேன்” என்று மனதிற்குள் டனுஜா நினைத்துக்கொண்டு, பதில் ஒன்றும் சொல்லாமல் விழித்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் ப.பிரபாகரன் அவர்களுடைய சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

 

விநாஷாய சதுஷ்க்ருதாம் |ஆனந்த்.கோ |நூல் விமர்சனம்

விநாஷாய ச துஷ்க்ருதாம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர் 

“தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” ( மொழி: பிரன்ச்)

ஆசிரியர் பெயர் :  அலெக்சாண்டர் தூமா

முன்னுரை

            கட்டுரை ஒன்று எழுதலாம் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன்,நான் எப்பொழுதோ வாசித்த இந்த நாவல் நினைவில் வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இதை எப்படி இவ்வளவு நாள் மறந்திருந்தேன் என்பதுதான் ஆச்சரியமூட்டியது. சிறுவயதிலிருந்தே பல சிறுகதைகள், நாவல்கள் என நிறைய வாசித்திருந்தாலும், நான் முதன்முதலில் படித்த பிற மொழி நாவல் இதுதான். அம்புலிமாமா, கோகுலம் இதழ்களுடன் சுஜாதா, தமிழ்வாணன்,  லக்ஷ்மி, சிவசங்கரி போன்றோரை வாசிக்கத் துவங்கிய காலம் அது. இந்த ஆங்கில நாவலை வாசித்த போது எனக்கு பதினைந்து வயதிருக்கலாம். அந்த வயதில் ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாதிருப்பினும் தமிழ் நாவலைப் படிப்பதற்கு நிகராக ஒரே மூச்சாக (அகராதியின் உதவியுடன்) படித்து முடித்ததாக ஞாபகம். அந்த நாவல் பிரெஞ்சு கதாசிரியர் ‘அலெக்சாண்டர் தூமா” எழுதிய “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” (மூலம்: ஃபிரெஞ்ச்) என்ற நாவலின் ஆங்கில பதிப்பு. அதுவரை ஆங்கில நாவல்களே படித்திராத என்னை, என் சகோதரிக்குப் பள்ளியிலோ, கல்லூரியிலோ துணைப்பாடமாக வந்து, எதேச்சையாகப் படிக்க வைத்து வசீகரித்துக் கொண்டது.

எழுதும் ஆர்வம்

            எத்தனையோ மனம் கவர்ந்த தமிழ் கதைகள் இருக்கையில் உள்ளன. இதை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஒரு கேள்விக்குறிதான். யோசித்து பார்த்ததில் காரணம் புலப்பட்டது. அந்த இளம் வயதில் நாவல் படித்து முடித்தவுடன், அதன் கதையோட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அது ஆங்கில நாவல் என்பதால் யாரும் படிக்கத் தவறிவிடக் கூடாது என்ற ஒரு பேராசையில்(?!!) அதை மொழி பெயர்க்கவே ஆரம்பித்து விட்டேன்!. ஆனால் அனுபவமின்மை மற்றும் பள்ளிப் படிப்பின் காரணமாக இரண்டு அத்தியாயங்களுடன் மலைத்து ஓய்ந்துவிட்டேன். அந்த வயதில் சொந்தமாகப் பள்ளிக் கட்டுரைகள் கூட எழுதியிருப்பேனா என்பதே சந்தேகம்தான். ஆகையால் என்னை முதன்முதலாக எழுதத் தூண்டிய அந்த புத்தகத்தைப் பற்றிப் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அலெக்சாண்டர் தூமா 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியராக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்து வறுமையில் உழன்று, பின் பாரீசிற்கு வந்து நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றிருக்கிறார். த்ரீ மஸ்கிடீர்ஸ் இவரது மற்றொரு புகழ்பெற்ற படைப்பாகும். “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” தூமா வால் 1844-46 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

     அலெக்சாண்டர் தூமாவின்  தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ இதைப்பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தபின் குறிப்புகளுக்காக இணையத்தில் பயணித்தபோதுதான் இந்நாவலைப்பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அவற்றின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது. 1840 களில் எழுதப்பட்ட நாவல்  பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணிலடங்கா வடிவங்களில் சுருக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது. 1920 – களில் பேசாமொழி படங்களில் தொடங்கி 2002 வரை பலமுறைத் திரைப்படவடிவில் எடுக்கப்பட்டுள்ளது. நான் படித்ததும் கதை சுருக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகம் தான் என்பதையும் அறிந்து கொண்டேன். (மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டுள்ளது)

            “உனக்கு எதிரிகளே இருப்பதாகத் தெரியவில்லையா? கொஞ்சம் சிரித்து சந்தோஷமாக இருந்து பார். பிறகு தெரியும்” – சமீபத்தில் எங்கோ இதைப் படிக்க நேர்ந்தது. ஆம் இதுதான் தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோவின் அடிநாதமும். தனக்கானத் துணையை கைத்தலம் பற்றவிருந்த ஒரு கள்ளங்கபடமில்லா அப்பாவி இளைஞனின் கனவைப் பொறாமையும் வஞ்சகமும் சிதைத்தெறிந்ததை சோகம் சொட்ட விவரித்து அந்த இளைஞனின் தோளைப்பற்ற வைத்து கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் கதாசிரியர்.

திறனாய்வு நோக்குப் பார்வை

            எட்மண்ட் டான்டேஸ் தான் அந்த அப்பாவி இளைஞன். கப்பல் மாலுமியான அவன் தன் திறமையால் முதலாளியின் நன்மதிப்பைப் பெற்று கேப்டன் பதவியையும் அடைகிறான். மேலும் தன் காதலி மெர்சிடீஸையும் சில நாட்களில் மணம் புரியவிருக்கிறான். வாழ்வில் நண்பர்களாய், சக பணியாளனாய், அண்டைவீட்டுக்காரனாய், முகம் தெரியா மனிதனாய்ப் பயணிக்கும் சில தீயசக்திகளுக்கு இவனின் இந்த மகிழ்ச்சியானத் தருணங்கள் மட்டுமே சதிவலையில் வீழ்த்தி சிறையில் தள்ளப் போதுமானதாக இருந்தது.

            ஒருவனுக்கு எதிர்பாராத தீமைகள் நிகழ்வது, சக மனிதரில் சிலர் தீயவர் என்பதனால் மட்டும் அல்ல.தன் எதிரிகள் யார் என்ற அறியாமையில் அவன் இருப்பதால்தான். அத்தகைய அறியாமைக்கு முடிவுரை எழுத முடிந்தவனே தீமையைக் கையாளத் தெரிந்தவனாகிறான். “வசந்த விழா! வசந்தத் திருவிழா! என்று டான்டேஸ் மனம் மகிழ்ந்த மணநாளில் திருமணம் முடியும் முன்னரே தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு கோட்டைத் தீவுச்சிறையிலடைக்கப்படுகிறான். ஏனிந்த தண்டனை என்பது புரியாமலேயே பல வருடங்கள் காலங்கழித்த நிலையில் இருண்ட குகையின் விரிசல் வெளிச்சமாய் சுரங்கம் அமைத்து இவனை வந்தடைகிறார் சகக் கைதி அபே ஃபாரியா.

            நாவலாசிரியர் இந்த நிகழ்வை விவரிக்கும் தருணம் அலாதியானது. மொழி தெரியா நாட்டில் “நீங்க தமிழா?” என்று செவிகளில் ஒலித்தால் எவ்வளவு ஆனந்தப்படுவீர்களோ அதற்கு நிகரான மகிழ்ச்சியைக் கதை மாந்தர்கள் அனுபவிப்பதை நீங்களும் உணர்வீர்கள். கடினமான சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்க்கப் பெறும் போதுதான் ஒருவனால் தன்னுள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்களையும், சாத்தியங்களையும் வெளிக்கொணர முடிகிறது.கைதிகள் இருவரும் சிறிய ஆயுதங்களை உருவாக்குவது, தப்பித்துச் செல்ல சுரங்கம் தோண்டுவது மற்றும் இவற்றுக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் அபே ஃபாரியாவின் அபார மூளைத்திறன் ஆகியவற்றை விவரிக்கும் விதக்தில் நம்மை வாய் பிளக்கச் செய்கிறார் தூமா. திரைப்படங்களிலும் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் நம்மை நெகிழ வைக்கின்றன.

            ஒன்றுமறியா டான்டேஸிற்கு என்ன நடந்திருக்குமென்பதை யூகித்துப் புரிய வைத்து,இறக்கும் தறுவாயில் புதையல் இரகசியம் சொல்லி ,தன் உயிரற்ற உடலாலும் டான்டேஸிற்கு உதவி புரியும் அபேவின் கதாபாத்திரம் இந்த கதையின் உயிர்நாடி என்றால் அது மிகையல்ல. அபே கூறிய புதையலை சில கடத்தல்காரர்கள் உதவிடன் கண்டுபிடித்து டான்டேஸ் “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ” வாக உருவெடுக்கையில் கதைக்களம் சூடுபிடிக்கிறது. அதன்பின் இராமனின் வனவாசமாய் பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வைத்த  வஞ்சகர்களை டான்டேஸ் பழிவாங்கும் படலம் துவங்குகிறது.ஒவ்வொரு எதிரிக்கும் ஒவ்வொரு விதமான தீர்ப்பு என பழிவாங்கல் படலத்தை அமைத்திருக்கும் விதம் மிக அருமை. அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அதே வேளையில் அவர்களுடைய கள்ளங்கபடமில்லா நல்ல வாரிசுகள் சிலருக்கும்,தன் முன்னாள் கப்பல் முதலாளிக்கும் நிதியுதவிகள் செய்தும்,வாழ்க்கை அமைத்துக் கொடுத்தும் நன்மைகள் பல செய்து தான் ஒரு நல்லவனே, வஞ்சத்தால் வீழ்த்தியதாலேயே பழிவாங்க வேண்டியிருக்கிறது என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார் கதாநாயகன். இத்தகைய சதித்திட்டங்கள் அல்லது கதைக்கான கருவினை தன் நண்பர் ஒருவர் உதவியுடன் தூமா அமைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.எது எப்படியோ அவை வாசகருக்கு மிகுந்த விறுவிறுப்பைத் தருகின்றன.

முடிவுரை

            “வரலாற்று சாகச நாவல்” என வகைப்படுத்தப்பட்டு அநீதிக்கு பழிவாங்குதலை கதைக்களமாக கொண்டிருந்தாலும், கதை மனிதநேயம்,காதல்,கருணை,நட்பு, நீதிநேர்மை,சமுதாயம்,மன்னிப்பு என எக்காலத்திற்கும் பொருந்தும் பன்முகத்தன்மை காட்டிப் படிப்போரைப் பரவசப்படுத்துகிறது “தி கவுன்ட் ஆஃப் மான்டி கிறிஸ்டோ”. மூலவடிவம் கிட்டத்தட்ட 1700 பக்கங்கள் கொண்டிருக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் இது அதிகம் எனப் பேசப்பட்டாலும், அவ்வளவு நீளத்தையும் இரசிக்கத்தக்க வகையிலும், கதையில் தொய்வு ஏற்படாத வகையிலும் கொடுத்திருப்பதாலோ என்னவோ  இலக்கிய உலகில் இக்கதை இன்னும் முடிசூடா மன்னனாகவேத் திகழ்கிறது.

நூல் விமர்சகர்

ஆனந்த்.கோ

கிழக்கு தாம்பரம்,

சென்னை – 600 059

மேலும் பார்க்க,

1. தூவானம் (சிறுகதை)

2.கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!

 

 

பூவே பிழைத்துக்கொள் |க.கலைவாணன்| கவிதை

பூவே பிழைத்துக்கொள்

பூவே பிழைத்துக்கொள்!!

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கூந்தல் !
என் பெயரைச் சொல்லி
உன்னை வாடச் செய்கிறதா..
பூவே சொல் !

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கழுத்து !
என் தலை சாயச்சொல்லி
உன்னை கொலை செய்கிறதா ..
பூவே சொல் !

 

பூவே !
இந்தா எடுத்துக்கொள்
என்னவளின் தேகத்தால்
உன் மோகம் பெருகும் !
கருமேகம் இருளும்!
காடும் காதலால் மலரும்!

 

பூவே !
விட்டுச்செல்
என்னவளின் இதயத்தை..
உன் மகரந்தம் பிழைக்கும் !
உன் அழகிய
மென் இதயம் மணக்கும் !

 

பூவே !
பிழைத்துக்கொள் நீயே !
நானும் என்னவளும்
இணைகையில் – நீ
அனலாய் எரிந்து விடுவாய் !

 

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

 

உழவே தலை|ச. குமரேசன்|கவிதை

உழவே தலை

உழவே தலை

♣ சேவல் கூவிடும்

செங்கமலம் பூத்திடும்

தோள் மேல் கலப்பை ஏறும்..

கயிறுகள் கைக்குள் நுழையும்..

காளைகளோடு

கம்பீரமாய் நடப்பார் தாத்தா…!

 

♣ வைகறை நிலவின்

வெளிச்சம் கொண்டு

வயலில் நுழைவார்..!

 

♣ நொகத்தடியை

நோகாமல் எடுத்து வைப்பார்..

ஏர்க்கால் தடியை

அதன் மேல் ஏற்றி வைப்பார்..

காளைகள் கொண்டு

கச்சிதமாய் பூட்டிடுவார்..

காலுக்கு முன்புறம்

கலப்பையை தூக்கி வைப்பார்..

மோலி மேல் ஒரு கையும்..

வால் மேல் மறு கையுமாய்..

அடியேதும் கொடுக்காமல்

அன்பாய் ஓட்டிடுவார்….!

 

♣ அந்த ஒற்றை கொலு முனையில்

ஓராயிரம் உயிர்கள் பசியாறும்…!

 

♣ அளவு கோலே இல்லாத

அழகான கோடு அது..

ஐந்து கால் முடியும்

ஆறாம் கால் படைசால்..

வகிடெடுத்து வாரியது போல்..

பட்டையாய் ஓட்டிடுவார்…!

 

♣ செம்மண் நிலமெல்லாம்

சேவல் கொண்டையாய்

சிவந்திருக்கும்..

உழுத நிலத்தில்

ஊன்றிய காலடி

ஒரு சாண் ஆழத்தில்

உறைந்திருக்கும்…!

 

♣ கால் பொழுது வரும்போது

காட்டையே உழுதிருப்பார்…!

 

♣ ஆடியில் தேடி

ஆரியமும் கம்பும் சோழமும் வரகும்

அழகாய் விதைத்திருப்பார்..!

 

♣ பித்தளை தூக்கு போனி

வெத்தலை பாக்கோடு

வெள்ளனே வந்திருக்கும்..

சின்னதாய் சிவந்த வெங்காயம்..

பக்குவமாய் பச்சை மிளகாய்..

பழைய சோறும் கூடவே வரும்..

சொர்க்கம் போல் எண்ணி சோற்றைச்

சாப்பிடுவார்…!

 

♣ உலக உயிர்களின்

உணவுக்காக..

‘உழவே தலை’ – என்ற

ஒற்றை மந்திரத்தோடு.. .!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மேலும் பார்க்க,

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

5.மலையதிகாரம்

 

24 காரட் தங்கம்|ப.பிரபாகரன்| சிறுகதை

24 காரட் தங்கம்

            பிபு, தினமும் அதிகாலையில் எழுந்து சுமார் 2.5 கி மீ சுற்றளவுள்ள ஏரிக்கரையை சுற்றி நடைபயிற்சி செய்வது வழக்கம். அப்படி அவன் நடைபயிற்சி செய்து முடித்த பின் அந்தநாள் முழுவதும் அவனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் எல்லையே கிடையாது.

            இனிமையான காலையில் வீசிய இளந்தென்றல் காதோரம் “பொழுது விடியப் போகுது, எழுந்து வா! பிபு, வாக்கிங் போகலாம்” என்று மெல்ல பேசி அவனை தட்டி எழுப்பிவிட்டது. அவன் வழக்கம் போல் எழுந்து பெரிய ஏரிக்கரைக்கு வாக்கிங் போனபோது பொழுது முழுவதும் விடியவில்லை.

இயற்கையின் இசையைக் கேட்டு நடந்தபோது, இனிதே பொழுதும் விடிந்தது; சுமார் 1 கி மீ தூரம் வரை சாலையின் இடது புறமாகச் சென்று கொண்டிருந்தான். பின்னர் சாலையில் குறுக்கே ஒரு சிறிய பள்ளம் கண்களில் தென்பட்டது.  மேலும் அந்தப் பள்ளத்தில் நேற்று பெய்த மழை நீரும் சிறிதளவு தேங்கி இருந்தது.

பிபு, அந்த சிறிய பள்ளத்தைத் தாண்ட மறுத்துச், சாலையின் வலது ஓரமாக நடக்கலானான். அங்கிருந்து பத்து அடிகள்தான் எடுத்து வைத்து இருப்பான், அங்கே அழகான மொபைல் போன் ஒன்று, தன்னந்தனியே தனது உரிமையாளர் இல்லாது நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். வியர்வை வடிந்த அவன் முகத்தில் இருந்த இரு கண்களின் விழியில் ஒருவரும் தென்படவில்லை. அந்த மொபைல் போன் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று புதிதாக இருந்தது.

ஒரு வேளை எவரேனும் வேண்டுமென்றே இங்கே வைத்துவிட்டு, யார்? இந்த கிராமத்தில் நல்லவர். யார்? பிறர் பொருளின் மீது ஆசைப்படாதவர், என்று எவரேனும் இந்த அதிகாலையில் லைவ் ஷோ பண்ணுகிறார்களோ! என்னவோ? என்று நினைத்து, அதை அவன் எடுக்காமல் சற்று தயங்கி யோசித்துக் கொண்டு நின்றான். நிற்க,

(முன்பு ஒரு நாள் இது போலவே சிறப்பானதொரு சம்பவம் நடந்திருந்தது. ஒரு முறை அவன் மளிகை கடைக்கு நடந்து செல்லும் வழியில் ரூபாய் 20, ஒரு ஓரத்தில் கிடப்பதைக் கண்டான். அப்போது கடையில் வாங்கப் போகும் பொருட்களின் சிந்தனையில் சென்று கொண்டிருந்ததால், அந்தப் பணத்தை எடுக்க மறந்து கடையை நோக்கி சற்று முன்னோக்கி சென்றேன். அவனைத் தொடர்ந்து வந்த ஒரு நபர், எங்கே பிபு திரும்பி பார்த்து எடுத்து விடுவானோ! என்று நினைத்து வேக வேகமாக ஓடி வந்து அதை எடுத்து விட்டார். திடீரென்று அந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சிறுவர்கள், ஹே ஹேய், ஹேய்…… என்று கத்தி கூப்பாடு போட்டனர். என்ன நடந்தது? என்று திரும்பி அவர்களை பார்த்தபோது தான் எல்லாமே விளங்கியது.

சிறுவர்கள் கையில் கேமரா வைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின் சிறுவர்கள் அனைவரும் அந்த நபரை சுற்றி கூட்டமாக மொய்த்தனர். உண்மையில் அந்த நபர் செய்வதறியாது வெட்கித் தலைகுனிந்தார். “டேய்! உங்களுக்கு விளையாட விளையாட்டே இல்லையா! இது எல்லாம் ஒரு விளையாட்டா? என்று கடுகடுத்த குரலில் கூறி, கையில் எடுத்த 20 ரூபாயையும் கொடுத்து விட்டு அவ்விடம் இருந்து கிளம்பினார்.

ஜஸ்ட் மிஸ்… என்று முணுமுணுத்துக் கொண்டே அவ்விடம் விட்டு பிபு கிளம்பினான்.)

அன்று நடந்தது போல எந்த ஒரு சம்பவமும் நடக்காது என்று நம்பி, அந்த போனை எடுக்கலாம் என்று மனதிற்குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் வரவழைத்து அந்த போனை எடுத்துப் பார்த்தான்.

உண்மையில் அது விலையுயர்ந்த மொபைல் போன் தான்!  அதில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கூட இன்னும் நீக்கம் பெறவில்லை. அநேகமாக வாங்கி ஒரிரு மாதம்தான் இருக்கும் போல் தோன்றியது.

அடடா! யாருடையதாக இருக்கும் என்று தெரியவில்லையே! என்று யோசித்துப் பின்புறம் போட்டிருந்த கவரைக் கழட்டிப் பார்த்தான். அதில் ரெட்மி என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் அந்த கவரில் ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. அந்த போட்டாவை நன்றாக உற்றுப் பார்த்து அந்த நபரை எங்காவது பார்த்து இருக்கிறோமா? என்று சிந்தித்தான்.

பிறகு போனின் முன்புறம் திருப்பிப் பார்க்க, ஐயோ! டிரா அன்லாக் பேட்டன் என்ற வாக்கியமும், அதைத் தொடர்ந்து 9 புள்ளிகள் 3X3 என்ற வரிசையில் இருந்தது. அதற்கும் கீழே, சற்று உற்று நோக்க, எமர்ஜென்சி கால் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து, அப்பா! முடியல, ஏன் தான் இப்படி லாக் போட்டு வச்சிருக்காங்கலோ, என்ன செய்வது? என்று தெரியாது திகைத்தான்.

அப்போதுதான் அதில் ஒரு மிஸ்டு கால் இருப்பதைக் கண்டான். அந்த நம்பருக்கு பிபு அவனுடைய போனில் இருந்து அழைத்தான். அவனது போனில் ட்ரு காலர் வசதி உள்ளதால் அந்த நபருக்கு போன் செய்தவுடன் ‘ஹரி ஹரி’ என்று காண்பித்தது.

ஹலோ! ஹரியா? தம்பி! நான் பெரிய ஏரிக்கரையில் இருந்து பேசுகிறேன். “உன்னுடைய பிரண்ட்ஸ் யாராவது போனை தொலைச்சுட்டாங்களானு, கொஞ்சம் கேட்டு சொல்லு. ஒரு போன் ஏரிக்கரையில் அந்த குமுளிக்கு பக்கத்திலே கிடந்தது. உன்னுடைய நம்பரில் இருந்துதான் கடைசியாக மிஸ்டு கால் வந்திருக்கிறது. உனது போனையும் கொஞ்சம் செக் பண்ணு. இந்த போன் போட்டோவும், அதில் இருந்த ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும், போட்டா எடுத்து வாட்ஸ் அப்ல அனுப்பி வச்சிருக்கிறேன். பார்த்துவிட்டு கூப்பிடு” என்றான் பிபு

ஆமாம். சொல்லுங்கண்ணா. அப்படியா! (பேசிகொண்டே வாட்ஸ் அப்ல பார்த்து விட்டு) அண்ணா! இது எங்க மாமாவோட போன் தான். எப்படி மிஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. நேற்று எங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்தார். திருவிழா முடிந்து இரவு முழுவதும் தங்கியிருந்து, அதிகாலையில் ஊருக்குத் திரும்பி சென்றார். எப்படி விழுந்தது என்று தெரியவில்லை. ரொம்ப நன்றிங்கணா! இப்ப எங்க இருக்கீங்க!”என்றான் ஹரி.

பிபு பெரிய ஏரிக்கரையில் ரோட்டு மேலே வெயிட் பண்ணுவதாகவும், அடையாளமாக அவன் தலையில் அணிந்திருந்த கருப்பு தொப்பியையும் கூறியதைக் கேட்டு ஹரி அண்ணே! இன்னும் 2 நிமிடத்தில் அங்கு இருப்பேன். தான்க்ஸ் ணா… என்றான்

அப்போதுதான் பிபுவுக்கு என்ன நடந்து இருக்கும்? என்று புரிந்தது. அவன் முன்பு இடப்புறமாக வாக்கிங் வந்தபோது இடையில் ஒரு சிறிய பள்ளம் இருந்தது அல்லவா! அதில் ஹரியின் மாமா வண்டியை விட்டு இருப்பார். அப்பொழுது அவரின் போன் தவறி விழுந்து இருக்க வேண்டும். மேலும் மழை பொழிந்து மண் தரை, பஞ்சு மெத்தை போல இருந்ததால், போன் விழுந்த சத்தம் கூட பாவம் அவருக்கு கேட்டு இருக்காது என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

இப்படி சிந்தனையில் ஆழ்ந்து இருக்க, மிகவும் வேகமாக வந்து சடெர்ர்ர்… என்று ப்ரேக் அடித்து ஒரு பைக் வந்து அவன் அருகே நின்றது. அந்த பைக்கில் வந்திருந்த பையனுக்கு சுமார் 12 வயது இருக்கும். தலை குளித்த ஈரம் கூட அந்த சிறுவனின் தலையில் காயவில்லை. தலைமுடி ஈரத்தாலும் வியர்வையாலும் சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் பூசிய திருநீறு லேசாக அழிந்து இருந்தது. மாமா தொலைத்துவிட்ட போனை எண்ணி சற்று பதற்றமாகவுமே இருந்தான்.

அண்ணே! “அது எங்க மாமாவோட போன் தான்! என்று ஹரி சொல்ல, அதற்கு பிபு நீ ஹரியா? தம்பி! என்றான்.

ஆமாம். “அண்ணே! வேணும்னா அந்த போன்ல இருக்கிற நம்பருக்கு இப்ப நான் போன் பண்ணுறேன்” என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் தம்பி சரியானவங்ககிட்ட கொடுக்கணும் இல்லயா! அதனாலதான் சும்மா கேட்டேன். இந்தா! போனை பிடி” என்று நீட்டினான் பிபு.

ஹரி போனை வாங்காமல் அவனுடைய சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அண்ணே! இத பிடிங்கண்ணே! என்றான்

தம்பி! “என்னப்பா இது, இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாம அக்கம் பக்கத்து ஊர்க்காரங்க, இப்படி எல்லாரும் வந்து போகிற ரோட்டுல, எதையாவது யாராவது தொலைச்சுட்டால் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும் இல்லயா! அந்த ஒரு நல்ல எண்ணத்திலே தான் இதை செய்தேன்” என்றான் பிபு

ம்ம்… என்று தலையாட்டிவிட்டு எல்லாம் சரி தான் அண்ணே…ப்ளீஸ் இத வாங்கிக்கங்க! மத்தவங்க பொருளை திருடி வாழ்க்கை வாழ்வோர் இங்கு பலர் இருக்கின்றனர். கீழே தவறவிட்ட மத்தவங்க போனை திருப்பிக் கொடுக்கணும் என்று நினைக்க ஒரு பெரிய மனசு வேணும் அண்ணா! உங்களுக்கு நல்ல மனசு; நீங்க சுத்த தங்கம். ரொம்ப நன்றி அண்ணா!

18,000 ரூபாய் போன், நான் மாமாவுக்கு போன வாரம் தான் அமேஷான்-ல ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுத்தேன். என்ன சொல்வது? என்ன செய்வது என்றே தெரியவில்லை. உங்க நல்ல மனசுக்கு என்ன செய்றதுன்னு புரியல. இதைப் பிடிங்க ப்ளீஸ் என்றான்.

‘வேண்டவே வேண்டாம்’ என்று பிபு மறுத்து விட, ஹரி காணாமல் போய் கிடைத்த போனை வாங்கிக்கொண்டு முழுமனதோடும் மகிழ்ச்சியோடும் செல்லவில்லை. கைம்மாறாகக் கொடுத்த அந்த 100 ரூபாயை வாங்காததால் அரை மனதோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். ஒரு வழியாக பிபுவின் கண்களின் பார்வையில் இருந்தும் ஹரி மறைந்து போனான்.

பிபுவும் அடையாளத்திற்கு அணிந்திருந்த தொப்பியைக் கழட்டிவிட்டு ஏதோ பெரிய சாதனை செய்தது போல பெருமகிழ்ச்சியோடு அவ்விடம் விட்டு கிளம்பினான். அப்போது அவனது பாதத்தில் அந்த நூறு ரூபாய் தாள் லேசாக உரசி, ‘நான் உனக்குத்தான்’ என்று உணர்த்தியது. அய்யய்யா, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த பணத்தை கீழே போட்டுட்டு போயிட்டான். இப்படி பண்ணினால் நாம எடுத்துக்கிட்டு போயிடுவோம் என்று நினைத்து விட்டான் போல முட்டாள் என்று முணுமுணுத்துக்கொண்டு ஹரிக்கு போன் பண்ணினான். ‘தாங்கள் டயல் செய்த எண் இப்போது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்றது. அடக்கடவுளே! இப்ப என்ன செய்றது? என்று யோசித்துக்கொண்டே ஹரி சென்ற பாதையை நோக்கினான் பிபு.

ஹரி மறைந்த அந்த பாதையில் இருந்து மீண்டும் ஒரு பைக் வருவதைக் கண்டான். ஒரு வேளை திரும்பி வருகிறானோ என்று நினைத்து உற்று நோக்கினான். ஆனால் அதில் வந்தவன் அந்த பையன் இல்லை. பதினைந்து வயது மதிக்கத்தக்க வேறொரு சிறுவன், பைக்கின் பிரேக்கை வேகமாக அழுத்தி அவன் பிபுவுக்கு முன்னே அருகில் வந்து நின்றான்.

அவன் வண்டியில் இருந்து இறங்கி, “அண்ணா!, நீங்க தானே இப்போ, கொஞ்ச முன்னாடி எனக்கு போன் பண்ணி, எங்க மாமா போன் கீழே கிடப்பதை எடுத்து, பத்திரமாக வச்சு இருக்கிறதா இன்ஃபார்ம் பண்ணுனீங்க!”என்றான்.

ஐயோ! ஆமாம்ன்னு சொன்னா, போன் எங்கன்னு கேட்டு நம்மல பிடிச்சுக்குவானே! அது நான் இல்லன்னு சொன்னா, நம்ம மனசாட்சி நம்மல படுத்துமே என்று யோசித்துக் கொண்டு, நாம ஒருத்தருக்கு போன் பண்ணினா இன்னொருத்த வந்து வாங்கிட்டு போயிட்டானே! அது எப்படி சாத்தியமாகும்? இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? ஐயோ! முடியலடா சாமி. சுத்த தங்கமா இருந்தா ஒன்னுக்கும் உதவாதோ? நல்லதுக்கே காலம் இல்லடா. என்று நினைத்து ஒரு கணம் விழி பிதுங்க விழித்தான்.

சிறுகதையின் ஆசிரியர்,

ப.பிரபாகரன், இலால்குடி

மேலும் சிறுகதைகள் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!! |கோ.ஆனந்த்|சிறுகதை

கார்காலக் குளிரும்! மார்கழிப் பனியும்!!

வாழ்க்கை மிக எளிதானது.கணவன் மனைவி ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகள்.அன்றாடத்திற்கு உணவு உடை உறைவிடம். இவற்றைப் பெற ஏதோ ஒரு நேர்மையான சம்பாத்தியம். இது மட்டும் போதும் என்று இருந்தால், வாழ்க்கை சுகமானது மகிழ்ச்சியானது. ஆரோக்கியத்துடன் நிம்மதியான உறக்கம் கைகூடும்.

“ஓ இது மட்டும் போதுமா?”

இப்படி கேட்க ஆரம்பிப்பதில் தான் எல்லோருக்கும் வாழ்க்கையின் கடின பக்கங்கள் புரட்டப்படுகின்றன. விமல்ராஜூக்கும் அப்படித்தான் புரட்டப்பட்டது.

“சும்மா இருக்கிற வேலையிலேயே உட்கார்ந்துகிட்டிருந்தா எப்படி? நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சாதானே ஒரு நல்ல வேல கிடைக்கும்.எல்லாத்துக்கும் எங்க வீட்டையே எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியுமா? நாளைக்கு பாப்பாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு கூட எங்க அப்பாவையே கேக்க முடியுமா?” மல்லிகா ஒருநாள் குழந்தையைத் தூளியில் ஆட்டிக்கொண்டே கேட்டாள்.

விமல்ராஜுக்கு சுருக்கென்று தைத்தது. தனிக்குடித்தனம் சந்தோஷமாகத் தான் இருந்தது குழந்தை பிறக்கும் வரை. குழந்தை பிறப்புக்கும் வளர்ப்புக்கும் மாமனார் வீட்டைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதுவரை இருவருக்கும் எதேஷ்டமாக இருந்த சம்பளம்,மாதக் கடைசியில் வேகவேகமாகக் கரைய ஆரம்பித்தது.

மாமனார் நல்லவர்.ஒரு பெண் ஒரு பையன்.பெண்ணுக்கு கல்யாணம் முடித்துப்  பிள்ளைப் பேற்றையும் பார்த்து விட்டார். பிள்ளை படித்துக் கொண்டிருக்கிறான். அவன் வேலைக்குப் போய் திருமணமாகும் வரை நிச்சயமாக எந்தக் குறையும் சொல்லாமல் பெண் குடும்பத்தையும் சேர்த்து தாங்குவார் தான். ஆனால் அதுவரையிலும் அவர் தலையிலேயே தங்கள் சுமையை இறக்கி வைத்திருக்க முடியுமா?.

அதுவரை யோசிக்கப்படாத மற்ற அத்தியாவசியத் தேவைகள் ஒவ்வொன்றாய் தலை தூக்க ஆரம்பித்தன.ஏதாவது தொழில் தொடங்கலாமென்றாலும் அதற்கும் மாமனார் தலையைத் தான் உருட்ட வேண்டியிருக்கும். விமல் ராஜின் பெற்றோர் ஊரில் விவசாயம் செய்து தங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்கிறார்கள். இவனை சல்லிக்காசு கேட்பதில்லை. அதற்கே அவன் சந்தோஷப்பட்டாக வேண்டும். அவர்களைப் போய் தொழில் தொடங்க பணம் கேட்பது எரிகிற வீட்டில் பிடுங்குவது போலத் தான்.

கிராமத்து வளர்ப்பு, மாமனாரிடம் போய் நிற்பது கேவலம் என்று இடித்துச் சொன்னது.மல்லிகாவும் பொறுமைசாலி தான்.ஆனால் பிற்காலத்தை நினைத்து இப்போதே கணவனைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டாள்.

ஆச்சு. ஆறுமாதமாகி விட்டது குழந்தை பிறந்து.இன்னும் ஆறு மாதம் மாமனார் பார்த்துக் கொள்வார்.அப்புறம்?கணவன் மனைவி இருவரும் தனித்து இயங்க வேண்டும்.இவன் அலுவலகம் செல்ல வேண்டும்.அவள் குழந்தையையும் பார்த்துக்கொண்டு அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுகூட சமாளித்து விடலாம்.துண்டு விழும் குடும்ப பட்ஜெட்டை எப்படி சரி செய்வது.?’

விமல்ராஜுக்கு நினைக்க நினைக்கத் தலை சுற்றிற்று.குடும்ப பாரம் என்பது புரிய ஆரம்பித்தது.அவனுக்கு அப்போது தெரிந்த ஒரே வழி சென்னையிலிருக்கும் நண்பன் ஜெயராஜைத் தொடர்பு கொள்வது தான்… கொண்டான்…

ஜெயராஜ் பால்ய சிநேகிதன். “பார்த்துக்கலாம் வா” என்று தைரியம் சொன்னான்.

மேகங்கள் சூழ்ந்த ஒரு மழை நாளில் விமல்ராஜும் சிங்காரச் சென்னையில் கால் பதித்திருந்தான்.சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து திருவல்லிக்கேணி சேவல் பண்ணை மேன்ஷன்களில் ஒன்றின் முன் வந்து இறங்கினான்.

இவன் வருகைக்காகவே வெளியில் கைகளைக் குறுக்காக கட்டியபடியே ஜெயராஜ் காத்துக்கொண்டிருந்தான்.

“வாடா விமலு, புள்ளகுட்டிக்காரனாயிட்ட. எல்லாம் எப்படியிருக்காங்க?”

“சௌக்கியன்டா ஜெயா.நீ என்ன இப்படித் துரும்பா கெடக்க?”

“என்னடா பண்றது.வேல அலச்சல்தான். வா மேல ரூமுக்கு போவோம்”.

“காஞ்சிப் பட்டுடுத்தி..கஸ்தூரி பொட்டும் வச்சு” …பக்கத்து அறையில் பாடல் மெல்லியதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

“விமல் அப்படியே குளிச்சு முடிச்சு வா.போய் சாப்பிட்டு வருவோம்.சீக்கிரமா போனாத்தான் மெஸ்ஸில சாப்பாடு கிடைக்கும்”

மெஸ்ஸில் சாப்பிட்டு முடித்து விட்டு, வீட்டை அழைத்து வந்து சேர்ந்த விவரம் தெரிவித்தான். மேன்ஷன் வந்து அமர்ந்தவுடன் விமல் ராஜ் ஆரம்பித்தான்.

“ஜெயா,உன்ன நம்பித்தான், இருக்கிற வேலய விட்டு கெளம்பி வந்துட்டன். ஏதாவது பாத்து சீக்கிரம் பண்ணுடா.”

“டேய் வந்த ஒடனே ஆரம்பிச்சிட்டியா. டிரெய்ன்ல சரியா தூங்கியிருக்க மாட்ட.உன் விவரம் எல்லாம் அவர் கிட்ட சொல்லியிருக்கேன்.நாளைக்கு எனக்கு லீவுதான்.பொறுமையா போய் பாத்து பேசவோம்.இப்பப் படுத்து ரெஸ்ட் எடு”

“சரிடா.ஆமா காலைலே கேக்கனும்னு இருந்தேன்.வரும்போதே குளுகுளுனு குளிர் காத்து.இப்ப என்னடான்னா ரூமுக்குள்ளாறயே இப்படி குளிருது.என்னடா ஆச்சு உங்க சென்னைக்கு?”

“அட ஆமாடா.இது எல்லாருக்குமே புதுசா இருக்கு. இது மழக்காலமா இருந்தாலும் எப்பவும் மார்கழில தான் குளிர் அதிகமா தெரிய ஆரம்பிக்கும்.இப்ப கார்த்திக தான் நடக்குது. அதுக்குள்ளாறயே குளிரடிக்குது. அதுவும் நடுப்பகல்லயே. ஏதோ அடமழ வரப்போவுதுன்றானுங்க. ஆனா ஒண்ணயும் காணோம்.குளிரு தான் அடிக்குது.இந்தா போர்வ.இத போத்திகிட்டு படுத்துக்க.நல்ல வேள.நீ வந்த நேரம் பக்கத்து பெட் அன்வர் பாய் ஊருக்குப் போய்ட்டாரு .இல்லன்னா உனக்கு வேற மேன்ஷன்ல தான் இடம் பாத்திருக்கனும்.”

ஜெயராஜ் கொடுத்த போர்வையைப் போர்த்தி சென்னைக் குளிரை(!!!) அனுபவித்தவாறே கண்ணை மூடித் தூங்க முயற்சி செய்தான்.

பக்கத்து அறையில் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…” என்று யேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார்.அப்படியே நினைவுகளிலாழ்ந்தான் விமல்.

இப்படியாகப்பட்ட ஒரு கார்காலம் தான் அவர்கள் பாப்பா உருவாகக் காரணமாயிருந்தது. கோயம்புத்தூர் பக்கமிருந்த மல்லிகாவுடைய அத்தை வீடு அது. மல்லிகாவின் சித்தப்பா மகள் திருமணத்திற்கு சென்றிருந்த அவர்கள், திருமணத்திற்கு முந்தைய இரவு அந்த அத்தை வீட்டில் உறங்கச் சென்றிருந்தனர்.

இருந்த ஒற்றைப் படுக்கையறையை புது மணத்தம்பதிகளான இவர்களுக்குக் கொடுத்துவிட்டு அத்தைக் குடும்பம் ஹாலில் படுத்துக் கொண்டது.

விமல்ராஜ் குளிரால் இழுத்துப் போர்த்து சுருண்டுக் கொண்டிருந்த மனைவியை சுரண்டினான்.

“சும்மா இருங்க.எங்க வந்து,..இப்ப யார் வீட்ல இருக்கோம்?”.

“யார் வீட்ல இருந்தா என்ன,ரூம்ல தான இருக்கோம்?”

“இருந்தாலும் அவங்க படுக்கை இது”

“இதுவும் படுக்கை தான”.

வாய்கள் தான் பேசிக் கொண்டிருந்தன சற்று நேரத்தில் பேச்சு அடங்கியது.

அடுத்த நாள் காலை மல்லிகா ரூம் கதவைத் திறக்க அதற்காகவே காத்திருந்த அத்தையின் கணவர்,அவசர அவசரமாய் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு “உங்க அத்த ரொம்ப நேரமா கதவத் தட்டிப் பாத்தாமா.நீங்க எழுந்துக்குற மாதிரி இல்ல.அதனால என்ன இருந்து சாவிய குடுத்துட்டு வரச் சொல்லிட்டு பசங்களும் அவளும் கிளம்பி மண்டபத்துக்குப் போய்ட்டாங்க.நானும் கிளம்பறேன்.நீங்களும் சீக்கிரம் கிளம்பி வாங்க.முகூர்த்தத்துக்கு நேரமாயிடுச்சி” என்றபடி அவசர அவசரமாய் வெளியே சென்றார்.

மல்லிகாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.அவசரஅவசரமாகக் கணவனை எழுப்பி,இருவரும் கிளம்பி மண்டபத்துக்கு போய் சேரவும்,கெட்டி மேளம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.அங்கிருந்து திரும்பிய அடுத்த மாதமே மல்லிகா கருவுற்றிருப்பதாகப் பரிசோதித்த மருத்துவர் சொன்னார்.

அன்றிலிருந்து விமலுக்கு மனைவியை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால்,” கோயம்புத்தூர் ஒருதரம் போய்வருவோமா?” என்று கண்ணடிப்பான். மல்லிகா வெகுண்டு கையில் கிடப்பதைத் தூக்கி அவன் மேல் எறிவாள்.

நன்றாகத் தூங்கி எழுந்து மறுநாள் நண்பர்கள் இருவரும் கிளம்பிப் போய் அரபு நாடுகளுக்கு ஆளனுப்பும் ஏஜன்ட் செல்வத்தை சந்தித்தனர்.

“வாப்பா ஜெயா.இவர்தான் நீ சொன்னவரா?”

“ஆமா செல்வம் அண்ணே.பாத்து சீக்கிரம் அனுப்பி வைங்க.”

“ஜெயா எல்லாம் சொன்னார் தம்பி. போனாக்கா ரெண்டு வருசமாவது இருந்தாவனும்.வேல கஷ்டமா இருக்கு.பொண்டாட்டி புள்ளயப் பாக்கனும்னு கிளம்பி வந்துடக் கூடாது.அதுக்கு சரின்னா அடுத்த வாரமே எல்லாம் ஏற்பாடு பண்ணிரலாம்”.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க.போயி கொஞ்சம் காசு தேத்திகிட்டு வந்தா போதும், அப்புறம் கடை கண்ணி வெச்சி பொழச்சிக்கலாம்னு பாக்கிறேன்.”

“எல்லாம் அப்படி சொல்லித்தான் போறாங்க.ஆரம்பம் தான் கஷ்டம்.ஒருதடவை இருந்துட்டு வந்துட்டா அப்புறம் இது புலி வால புடிச்ச கத தான்.மறுபடி எங்கிட்ட தான் வந்து நிப்பாங்க.சரி பாஸ்போர்ட், ஃபோட்டோ எல்லாம் குடுத்துட்டு ஊருக்கு போறதானா போய்ட்டு வாங்க.நான் எல்லாம் ரெடிபண்ணிட்டு ஜெயா கிட்ட சொல்லி அனுப்பறேன்”.

“இல்லண்ணே ஒரு வாரம் தானே.இங்கேயே இருந்துடறேன்.நீங்க ரெடி பண்ணிட்டு சொல்லுங்க.”

“அப்ப சரி .போயிட்டு வாங்க”

ஜெயாவும் விமலும் மேன்ஷன் வந்து சேர்ந்தனர்.

“செல்வம் நல்லவருடா.எப்படியும் அடுத்த வாரம் உன்ன பிளேன்ல ஏத்தி விட்ருவாரு பாரு.அன்வர் பாயத் தான் கொஞ்சம் சமாளிக்கனும்”

“அன்வர் பாய எதுக்குடா சமாளிக்கனும்?”.

“அவரும் என்கிட்ட தான்டா வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தாரு. நானும் செல்வம் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். இந்த வருசம் இன்னும்  ஒரே ஒரு ஆள் தான் அனுப்பமுடியும். பாக்கலாம்னு சொல்லிகிட்டிருந்தார். அப்ப தான் நீ போன் பண்ணி புலம்பின.

அன்வரும் அவசரமா ஊருக்கு போகனும்னு புறப்பட்டு போய்ட்டாரா.. அதனால அந்த வேலய உனக்கு குடுக்கச் சொல்லி செல்வம் கிட்ட சொல்லிட்டேன். அன்வர் வந்தா அடுத்த வருசம் போயிடலாம்ணே ன்னு சொல்லி சமாளிக்கனும்.”

“ரொம்ப தாங்க்ஸ்டா நானும் இந்த வருசம் போய்ட்டு வந்தா தான் திரும்பி வந்து செட்டிலாக சரியா இருக்கும்.”

மறுநாள் செல்வம் எல்லா நடைமுறைகளும் அந்த வாரத்தில முடிந்து விடும் என்றும் அடுத்த திங்கள்கிழமை கிளம்ப வேண்டியிருக்கலாம் என்றும் சொன்னார்.விமல், மல்லிகாவிற்கு போன் பண்ணி சொல்ல அவளும் சந்தோஷமடைந்தாள்.குழந்தையைக் கூட்டிக்கொண்டு ஏர்போர்ட் வருவதாகச் சொன்னாள்.ஆனால் விமல் சென்னையின் சீதோஷ்ண நிலையைப் பற்றிச் சொல்லி வரவேண்டாமென சொல்லி விட்டான்.

“இந்த மழக்காலம் வீணாப்போச்சு மல்லிகா.இரண்டு வருஷம் கழிச்சு வந்தவுடனே கோயம்புத்தூர் அத்தையப் பாத்துட்டு வந்திடலாம்”. மறுமுனையில் மல்லிகா “உங்கள ..” என்று சிணுங்கினாள்.

விதியைப்பற்றி பலர் பலவிதமாய் கூறுவதுண்டு.எல்லாம் விதிப்படிதான் என்பார் சிலர்.விதியை மதியால் வெல்லலாம் என்பார் சிலர்.விதி வலிது ஆனால் மதியால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்பார் மற்றும் சிலர். ஆனால் யாரும் விதியைக் குறைத்து மதிப்பிட விரும்புவதில்லை.

அன்வர் பாய் மறுநாளே சென்னை வந்து சேர்ந்திருந்தார்!!!.ரூமுக்குள் நுழைந்து தன் கட்டிலில் அமர்ந்திருந்த விமலைக் கூட கவனிக்காமல்,ஜெயாவைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வி” “ஜெயா செல்வம் சார் என்ன சொன்னார்?”என்பது தான்.

ஜெயா ஏதும் பதிலளிக்காமல்,”வாங்க பாய்.என்ன விஷயம்? வந்ததும் வராததுமா செல்வம் சாரப் பத்தி கேட்கிறீங்க” என்றான்.

உள்ளே வந்த அன்வர் விமலைப் பார்க்க,பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்கப் பட்டனர்.

“ஜெயா நா இங்கிருந்து போனேன் இல்ல,அதுக்கு காரணமே என் தங்கச்சி ஆயிஷா தான். ரொம்ப நாளா அவளுக்குத் தள்ளி போயிட்டிருந்த கல்யாணம் முடியற மாதிரி இருக்கு.ஆனா மாப்பிள்ளை வீட்ல கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கு.எங்க வாப்பா அதெல்லாம் நம்ம சக்திக்கு அதிகம் வாணாம்னு சொல்லி வருத்தப்படறாரு. நான் தான் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க, எப்படியாவது நீங்க எதிர்பார்க்கிறத செஞ்சிடறோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். எப்படியும் இந்த தடவ செல்வம் அனுப்பிருவாரு இல்ல.அவரத்தான் மலபோல நம்பியிருக்கேன்.” என்று கலங்கினார்.

ஜெயாவும் விமலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஜெயா ஒன்றும் பேசாமல் மௌனம் காக்க, விமல் தான் அன்வருக்கு ஆறுதல் சொன்னான். “கவலப் படாதீங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.நாளைக்கே செல்வம் சாரப் பாத்துப் பேசிடலாம்.”

ஜெயா திடுக்கிட்டு விமலைப் பார்க்க, விமல் ஆமாம் என்பதாய் தலையசைத்து ஜெயாவின் கைகளை அழுத்தினான்.

பக்கத்து அறையில் யேசுதாஸ் மயங்கி(க்கி)க் கொண்டிருந்தார். “கார்காலக் குளிரும்

மார்கழிப் பனியும் ….

கண்ணே உன் கை சேரத் தணியும்…’

 

மேலும் பார்க்க,

1. தூவானம் (சிறுகதை)

 

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும் | சு.கலைச்செல்வன்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

            கவிதை என்பதை கதை, விதை என்று அழைக்கலாம். ஒரு பொருளின் விதையைக் கதையாக மக்களுக்கு எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது ஆகும். எவ்வளவு பெரிய கருத்துக்களையும் சுவையாக நறுக்கென சொல்லப்படுவது கவிதை. எல்லோரோலும் கவிதையை எழுத முடியாது. எவர் உள்ளத்தில் இயற்கையை நேசிக்கவும் ரசிக்க வைக்கின்ற எண்ணமும் உள்ளதோ அவர்களே கவிதை எழுத வல்லவர்கள் ஆகின்றார்கள். இவ்வுலகத்தில் எத்தனையோ கவிஞர்கள் இருப்பினும் கவிச்சக்கரவர்த்தி கம்பனைின் கவி நடையை இன்றளவும் எண்ணி வியந்து போவதுண்டு. அதேபோல் ஆங்கில கவிஞர் மில்டனின் கவிதையைில் ஓர் ஆழம் இருப்பதை உணர முடியும். கம்பனின் பஞ்சவாடி என்பதையும் மில்டனின் ஈடன் தோட்டத்தையும் பின்னணியாகக் கொண்டு இவ்வாய்வு ஒப்பாய்வாக நிகழ்த்தப்படுகிறது. கவிநயப்பார்வையில் கம்பனின் கவித்துவமும் மில்டனின் கவியழகும் இவ்வாய்வுக் கட்டுரையின் காண்போம்.

 கவிச்சக்கரவர்த்தி கம்பன்

     காப்பிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.  தமிழில் சிறந்த கவிஞர். கவிஞர்களின் சக்கரவர்த்தி என்று பாராட்டப் பெற்றவர்.  கம்பனைப் போல் பூமிதனில் எங்கேயும் பிறந்ததில்லை என்பார் பாரதி. கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவி பாடும், கல்வியில் பெரியவன், கல்வியில் சிறந்தவன்  கம்பன்,  பெருங்கவிஞர்  என்றெல்லாம் சிறப்பு பெற்றவர். கம்பராமாயணத்தின் ஆசிரியர். தன்னுடைய ஒவ்வொரு படலத்திலும் காட்சி அமைப்பு, காடடசியைச் செலுத்தும் முறைமை, பாத்திர படைப்பு மற்றும் பண்புகள் ஆகியன ஒருமித்ததாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.                    

மில்டன்

            ஆங்கில மொழியின் மிகச்சிறந்த கவிஞர்.  இழந்த சொர்க்கம் என்ற நூலை எழுதியுள்ளார்.  மதவாதிகளும், பழமைவாதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்தவர்கள். ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும் கல்வியாளர்களும் கூட மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர். அவர் பயின்ற  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்   முதல் இடத்தைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்ற உண்மையைக் கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் பறைசாற்றிய கவிஞர் மில்டன் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்றெல்லாம் மக்கள் ஆசைப்படார்கள்.

மில்டனின் ஈடன்  தோட்டம்

            தலைவன் ஆதாம் தலைவியே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இறைவடிவினர் ஆகிய இருவரும்  நிமிர்ந்த நன்னடையும் மேற்கொண்ட பார்வையும் உயர்ந்து ஓங்கிய வளர்ச்சியும் தோற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆடை ஏதும் அணியாத நிலையிலும் மாட்சிமை பெற்று வளர்கின்றனர். தூய்மை, வாய்மை, விவேகம் பெற்று ஒழுக்கத்தின் சிறந்த அழகான வடிவினராக இருக்கும் அவர்கள் உழைப்பால் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.  அவர்கள் ஈடன் தோட்டத்தில் பூஞ்செடியைச் பேணுவதுபோல எளிய பணிகளைச் செய்கின்றனர். தென்றலில் இனிமையும் ஓய்வு நிம்மதியும் கூடுதலாகத் துய்ப்பதற்கு அந்த உழைப்பும் உதவுகிறது. வேலை முடிந்தபின் தோப்பு நிழலில் அருவி அருகில் அமர்ந்து உள்ளவர்கள் அங்குள்ள பூக்கள் மீது சாய்ந்தவரே மரங்களில் உள்ள கனிகளை உண்பார்கள். பின்னர் தெளிந்த நீரோட நீரை பருகுவார்கள். இருவரும் இயற்கையின் வசம் உடலாடி பின்பு  இன்புறுகிறார்கள்.

வெள்ளாட்டுக் குட்டியுடன் கர்ஜனை செய்யும் சிங்கம், தும்பிக்கை வளைத்து விளையாடும் யானை, வளைந்த நெடிய விஷம் உள்ள பாம்புகளை கண்டு மகிழ்வார்கள்.  இவர்களின் இன்பமான வாழ்விற்கு வழிவகை செய்த இறைவனை உள்ளன்போடு  போற்றி புகழ்வார்கள்.  சிந்தனை அறிவுக்கு ஆதாமும்  மென்மை கவர்ச்சிக்கு ஏவாளும் இறைவன்  படைத்ததாக மில்டன் கூறுகிறார்

“உனக்கு விதி வகுப்புவன் இறைவன் எனக்கு விதி வகுப்புகள் நீயே”  — என்று ஆதாமும் ஏவாளும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவார்கள்

            மனிதகுலம் கருத்து ஒருமித்த காதலராகப் பலரை கண்டு இருக்கிறது. ஆனால்  ஆதாமையும் ஏவாளையும் போல்  ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்பார் கவிஞர். அதனை புலப்படுத்தும் ஏவாளின் பேச்சுகளும் உள்ளன. ஆதாம் ஏவாளை தன் வாழ்வின் உயர்நிலையாகக் கருதுகிறார். முழுமையான வளர்ச்சியைப் பெற்ற ஆளுமை உடையவள் ஏவாள். அவள்  சொல்லும் செயலும் அன்புக்குரிய  அறத்திற்கு  அறிவிக்கும் உச்சவரம்புக்கு எல்லை இல்லை என்று கூறுவான். அவனோடு  உரையாடும்போது மென்மைத்தன்மைய இழந்து  வெண்மையாகும் என்று ரஃபேரிடம் மெய்மறந்து பேசுவான்.

            சாத்தான் ஆதாமும் ஏவாளும் அனுபவிக்கும் இன்பத்தை கண்டு பொறாமையும் துக்கமும் அடைகின்றான்.  சாத்தான் சற்று ஆதாமும் ஏவாளின் பேடியின் தேடித் தன்மையும் அவர்கள் தூக்கி இன்பத்தையும் நிறைவடையும் நிறைவையும் புலப்படுத்தும். விண்ணுலகில் காற்றும் காற்றும்  கலப்பது போல இவர்கள் இருவரும் இரண்டல்ல முழுமையாக ஒன்றிணைந்து கலவி இன்பம் சுவைக்கும் இன்பத்தை இழந்து  நிறைவேறா ஆசையில்  துன்புற்றி தவிப்பதைக் காணமுடியும்.  ஆதாமும் ஏவாளும் மாறுபடுவதை கண்டு,

  ” பொறுமையான காட்சி! வேதனை தரும் ஆட்சி

   விளைந்து தழுவும் சுவர்க்க போக  மாட்சி

   தன்னையே விஞ்சும் இன்பத்துக்கு சாட்சி

   இன்று அழுக்காருடன் பேசுகிறான் ” (கம்ப.ஆரண்ய.அகத்திய.பா.57)

            வீழ்ச்சி வரும் வரை ஆதாமும் ஏவாளும் பாலுறவு உடைய  தம்பதியாக  வாழ்ந்தார் என்று மில்டன் காட்டுகிறார்.  இன்பத்தைப் பெருக்குமாறு  இறைவன்  அவர்களுக்கு  ஆணை  விட்டதாகப் பைபிள் கூறுகிறது.  அதனால் அவர்களிடம் இருந்து  குற்றமற்ற  அவர்களுடைய பால் இன்பத்தை  மில்டன்  ஊடல் ஆடி விட்டுள்ளான்.  சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததும் இருள் கடலை பாற்கடலாக மாற்றும் வெண்மதி தோன்றும். அப்போது  ஆதாமும் ஏவாளும் வானத்தின் கீழ் நின்று இறைவனை வணங்கி விட்டு பள்ளியறைக்குள் செல்வார்கள் என்று  மில்டன் கூறுகிறார்.  மனித குலத்தின் முதல்வர் இருவரது இல்லற வாழ்வின் விருப்பத்தையும் இன்பத்தையும் காமரசம் கனியைப் போற்றி பாடுகிறார். வீரன் தோட்டம்  மண்ணகத்து உறக்கம்  வாழ்வின்  வர்ணனைக்கு  மணிமகுடம் ஆகிறது

கம்பனின் பஞ்சவாடி

              இயற்கையோடு இணைந்த இன்பம் அந்த இன்பத்தோடு   இயைந்த  வாழ்வு என்னும் கொள்கையும் கற்பனையும் கவர்ந்தது. ஈடனும் பஞ்சவாடியும் குறிப்பிடத்தக்க ஒப்புமை உடையன.   பஞ்சவாடியில் இயற்கை காட்சிகள் வழங்கிய இன்பத்தில்  உச்சியில் சீதையும் ராமனும் நடத்திய வாழ்வின்  சொல்லோவியம்  ஈடனை நினைவுபடுத்தும். மில்டனின்  சோலை  சுவர்க்கம். ஒரு மலையின் அகன்ற முடிவில் அமைந்தது. மலைச்சிறுவில் நெடிதுயர்ந்த நிழல் தரும் மரங்களை விட ஈடன் சோலையில் எல்லை காப்பான மரங்கள் ஓங்கி உயர்ந்தவை அவற்றை மிஞ்சியவை  சோலை மரங்களின் உயரம். இந்த வர்ணனை ராமனுக்கும் அகத்திய முனிவர் வழங்கியது  பஞ்சவாடி சித்தரத்தை நினைவூட்டும் பஞ்சவடியைக் கம்பன் காட்டும் போது

                       “ஓங்கும் மான் ஓங்கிய மலை ஓங்கிய மலை ஓங்கிய

                        பூங்குளை குலவும் குளிர்  சேலை புடை விம்மி  

                        தூங்கு குதிரை  ஆறு  தவல்  சூழலாது ஓர் குன்றின் 

                        பங்கர் உளதால் உரையுள் பஞ்சவாடி “

      என்பார்.  உண்பதற்கு கனியும் அருந்துவதற்கு அமுதமும் ஈடன் சோலையை விட மிகுதியாக கிடைத்தன.  பஞ்சவாடியில் நீராட ஆறும் உணவுக்கு வாழையும் செந்நெல்லும் உள.  அங்கே சிங்கமும் யானையும் அவர்களை விளையாட்டுக்கு காட்டி மகிழ்வித்தன .  இங்கே சீதையுடன் விளையாட  நாரைகளும் அன்னமும்  உள்ளன. ஈடன் சோலை வடிவில் மில்டன் ஆதாம் ஏவாளின் குற்றமில்லாத பாலுணர்வை காட்ட,  இங்கே  கம்பன் ராமன் சீதையின் இடையே  அளவிலான   அன்பை சொல்லி செல்வதைப் பார்க்க முடியும்.

            தாமரை மலர்கள் தங்கிய சக்கர வியூக பறவைகளைக் கண்ட தலைவன் மங்கையின் கொங்கைகளை  நோக்குகிறான்.  அவன் பார்வையைக் கண்டு நாணிய சீதையின் பார்வை மணிகளை  நிறைந்த  மனக்கொன்றுகளின்  பதிகிறது.  அக்கொன்றுக்கு நிகரான ராமன் தோள்களைக்  கண்ணால் காண, அவன் அழகை  நினைத்து மகிழ்கிறாள்.  சீதையின் நடை தோற்றத்தை போல் ஒதுங்கி நடக்கும் அன்னத்தைக் கண்ட ராமன்  சீதையின் நடையழகை மீண்டும் நோக்கி குறுநகை புரிகிறான். அதைப் பார்த்த நீரூண்டு வந்த யானை இராமன் நடையழகை கண்டு விலகி  நடப்பதைக் கண்ட சீதை அதன் நடையிலும் செம்மார்ந்த ராம நடையினை நினைத்து புதியதோர் புன்முறுவல் செய்கிறாள்   நதிக்கரையில் மண்டிய கொடிகளைக் கண்ட நாயகன்  கொடியைப்போல்  வளையும் சீதையின்  இடையை காண்கிறான்.  அது  கன்னங்கரிய குவளை  மலர் கட்டுகளுக்கிடையே செந்தாமரை மலர்களைப்போல அவள் இடை சிவந்து காணப்படுகிறது.  இதைக் கண்ட சீதையும் நாண உணர்வை கடந்து கரியனும் கரிய கமலக்கண்ணனை நேரே நோக்குகிறாள்.

முடிவுரை

            மொழிகள் வேறாயினும் கவிஞர்கள் மனதளவில் ஒன்றுபட்டு இருப்பதைக் காணலாம். இயற்கையாய் இணைந்த காதலர்கள் வாழ்வில் இன்புற்று இருப்பதை கம்பரும் மில்டனும் ஒரே மாதிரியான கருத்துக்களோடு அழகுநயம்பட கூறியிருப்பது போற்றுதலுக்குரியது ஆகும். இவ்வாறு இயற்கையோடும் இசைந்த இன்ப வாழ்வை இரு பெரும் கவிஞர்களும் ஒத்த நிலையில் படைத்துள்ளனர்.  ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் அமைந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நிலைக்கவில்லை.  அது சாத்தான் சதியில் ஈடன் வாழ்வு அழுகிறது.  அதேபோல ராமன் சீதைக்கும் பஞ்சவாடி இன்பமாக இருக்கிறது.  அந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நீடிக்க வில்லை.  இங்கே சூர்ப்பனகையின்  சூழ்ச்சியால் சீதையின்  ராமனின் பஞ்சவாடி வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனாலும் இருவர்களுடைய வாழ்க்கையும் இன்பமுடையதாகவும் உலகம் உள்ளவரை மக்கள் இன்னும் அவர்களைப் பற்றி பேசுவதையும் கதைப்பதையும் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் காணலாம்.

பார்வை நூல்கள்

1.கம்பராமாயணம், ரா.சீனிவாசன், செல்லம்மாள் தெரு, சென்னை – 30, மூன்றாம் பதிப்பு – 2000

2.கிறுத்துவமரபு, ஜான் மில்டன், மொழிபெயர்ப்பு, சாமுவேல் சிமன்ஸ் வெளியீடு, 1667

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சு.கலைச்செல்வன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130

மின்னஞ்சல் : mskalai28590@gmail.com

மலையதிகாரம் |கவிதை |ச. குமரேசன்

மலையதிகாரம்

மலையதிகாரம்

 

வைகறையில்

வியாழன் உறங்கி

வெள்ளி உதிக்கும்..

எங்கள் மலை மன்னருக்கு

அது சியமந்தகமணி…! 

 

கிழக்கு வெளுக்கும்,

பின் சிவக்கும்

மலை முகடுகளுக்கிடையே

வெய்யோன் வெட்டொளி வீசும்..

தங்க கிரீடத்தை

தலையில் கவிழ்த்தவாறு

தகதகக்கும்…

மகாராசராய்

மரகத வண்ண மலை வீற்றிருக்கும்…! 

 

தொலைவிலிருந்தால்

நீலவான நீட்சியாய்

நீலநிறமாகும்…

பக்கத்திலிருந்தால்

பச்சை நிறத்தில் பளபளக்கும்…! 

 

அது மலையல்ல

மன்னர்களின் கருவூலம்.. 

அழகு கொஞ்சும்

அட்சய பாத்திரம்.. 

கர்ணனின் கருணை கைகள்.. 

கடையெழு வள்ளல்களின்

கரும்பச்சை பிம்பம்…! 

 

உயிர்களின் உன்னத உறைவிடம்.. 

ஊராரின் ஒட்டுமொத்த தேவை.. 

சிற்றோடைகளில்

சிலுசிலுத்து ஓயாமல் ஓடிவரும்

 ஊற்றுகளின் உற்பத்தி கூடம்…! 

 

தந்தை மேய்த்த ஆடுகள்.. 

மந்தை மந்தையாய் மாடுகள்.. 

குதித்தோடும் குரங்குகள்… 

மருண்டு நோக்கும் மான்கள்.. 

பள்ளம் தோண்டும் பன்றிகள்.. 

கடகடக்கும் காட்டெருமைகள்.. 

முந்தியோடும் முயலினங்கள்.. 

முள் தெறிக்கும் முள்ளம்பன்றிகள்.. 

சிலுசிலுக்கும் சில்வண்டுகள்… 

பளபளக்கும் பொன்வண்டுகள்.. 

அனைத்துக்கும்

அருள் சுரந்து உணவூட்டும்

இது என் அமுத சுரபி…! 

 

விக்க வைக்கும் விளாங்காய்கள்.. 

திகட்டச்செய்யும் தெரட்டிப்பழங்கள்..

எச்சிலூறும் இலந்தைப் பழங்கள்.. 

கருப்பு திராட்சையாய் கலாப்பழங்கள்..

புத்துணர்வளிக்கும் புளியம்பழங்கள்.. 

அருமையான அன்னம் பழங்கள்.. 

ஆகாரமாகும் ஆனாப்பழங்கள்.. 

சட்டையில் முள்ளேறும் சப்பாத்தி பழங்கள்.. 

சத்தான சர்க்கரை பழங்கள்.. 

பல்லுயிர்க்கும் பகிர்ந்தளிக்கும்

இது என் பழமுதிர்சோலை…!

 

முடையும் கூடைக்கும்

மோட்டு வளைக்கும் மூங்கில்கள்.. 

நெடுங்கால்களுக்கு நெக்கினி.. 

பூட்டுக்கைக்கு புரசு.. 

பக்கவளைக்கு பரம்பை.. 

கட்டைக்காலுக்கு கருங்காலி.. 

வளைச்சு குச்சிக்கு தெரணி.. 

வளைத்துக்கட்ட கட்டுக்கொடி.. 

கூரைவேய கிணாங்கு புல்.. 

கம்பங் கொள்ளைக்கு உண்டி வில்.. 

வரைமுறையின்றி வாரி வழங்கும்

வீடுகட்ட வித்திடும்

இது என் விஸ்வகர்மா…! 

 

பாறைக்குழியில் இருந்தால் பாழி.. 

ஓடையில் ஊறி வந்தால் ஊற்று..

குடிக்குமளவு தேங்கினால் குட்டை.. 

ஒவ்வொரு உயிரும் இளைப்பாறும்

நீரும் அதன் பேரும்

இடம் தோறும் மாறும்…

தேவர்களும் பருக

எண்ணும் இது என் தேவாமிர்தம்…! 

 

மழைக்கால மண்புழுக்கள்.. 

மலையட்டைகள்.. 

மரப்பள்ளிகள்.. 

மலைப்பாம்புகள்.. 

கல் ஆமைகள்.. 

கருந்தேள்கள்.. 

உடும்புகள்.. 

ஊர்ந்து வரும்

இவை யாவும்

வாழ்வில் ஊர்ந்து வர

கற்றுக் கொடுத்த

எனது தட்சணை இல்லா

 தாராள குருக்கள்…! 

 

காடைகள்..கவுதாரிகள்..

காட்டுக்கோழிகள்… 

காக்கைகள்.. கழுகுகள்.. 

கரிச்சான் குருவிகள்… 

மயில்கள்.. மைனாக்கள்..

மணிப்புறாக்கள்…

பருந்துகள்.. பச்சைக்கிளிகள்.. 

சிட்டுக்குருவிகள்..

செம்போத்துகள்..

கூகைகள்.. குயிலினங்கள்.. 

ஆந்தைகள்.. ஆட்காட்டி குருவிகள்… 

ஆயிரமாயிரம் பறவைகள்

ஆசையாய் பறந்து வரும்

இது என் வேடந்தாங்கல்…!

 

கண்ணைப் பறிக்கும் செங்காந்தள்.. 

கமகமக்கும் காட்டுமல்லி.. 

கார்காலத்து காரிண்டம்பூ.. 

கொத்துக் கொத்தாய் கொரக்கம்பூ.. 

கற்களுக்கிடையே கள்ளிப்பூ..

இது பூவின் புதையலை

புறம் வைக்க புறப்படும்..

இசைபாடும் தேனீக்களின்

இன்பமான இருப்பிடம்…!

 

உச்சி மரக்கிளையில்

ஒய்யாரமாய் கொம்புத்தேன்..

உயர்ந்த பாறைகளில்

ஒட்டியிருக்கும் மலைத்தேன்.. 

கல்லிடுக்கில் கட்டிவைக்கும்..

மரப்பொந்தில் மறைத்து வைக்கும்..

புற்றுகளில் புதைந்திருக்கும்..

அடுக்கடுக்காய் அள்ளித்தரும்

அடுக்குத் தேன்.. 

அது அவ்வளவும்

அசுவினி குமாரர்களின் ஒளடதம்…! 

 

ஊறுகாய்க்கு உன்னதம்

மகத்துவமான

மாவிலியங் கிழங்கு.. 

அரவம் அடக்கி அருமருந்தாகும்

ஆகாச கருடன் கிழங்கு.. 

இன்னல் இருளகற்றி

இன்பம் தரும் இருளங்கிழங்கு.. 

நிலை மாற்ற நீண்டிருக்கும்

நிலப்பனைங் கிழங்கு.. 

மண்ணுக்குள்ளே மறைந்திருக்கும்

இது என் புனித புதையல்கள்…! 

 

இவை

என் எண்ணத்துள் எழுந்தவை அல்ல.. 

என்னில் இரண்டறக் கலந்து

உணர்வோடு ஊறியவை.. 

மலையை மலைத்து பார்ப்பேன்.. 

ஒன்றல்ல இரண்டல்ல

ஓராயிரம் எண்ணங்கள் உதிக்கும்..

அதில் ஒரு சில ஓடிவந்து

இப்படி உட்கார்ந்து கொள்ளும்..! 

 

மாமலைப் போற்றுதும்.. 

மாமலைப் போற்றுதும்.. 

இது என் மலையதிகாரம்…!

 

கவிதையின் ஆசிரியர்

கவிஞர் பேரா ச. குமரேசன். 

தமிழ் உதவிப் பேராசிரியர், 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம். 

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

மணம் வீசும் மனம்|கவிதை|ச. குமரேசன்

மணம் வீசும் மனம்

மணம் வீசும் மனம்

தனிமை என்னை வாட்டியதில்லை… 

தாய் தவறிய பின் 

நான் தள்ளாடியபோதும்… 

தகப்பன் சாமியோடு

தந்தை சேர்ந்த நாளில்

தத்தளித்தபோதும்..!

 

துக்கம் தொண்டையை

கவ்விய வேளையில் – அதை

துச்சமாக தூக்கியெறி

இல்லையேல் – நீ

தூக்கியெறியப்படுவாய்..  

துவண்டு விடாமல்

தூணாகிவிடு என்றது அது… 

துடைத்தேன் கண்ணீரை

துள்ளியெழுந்தேன்..! 

 

எண்ணங்களை ஏணியிலேற்று!

ஏகாந்தத்தில் இலயித்துவிடு!

படைப்பின் இரகசியமறி!

பத்தரைமாத்து தங்கமாகு! 

ஆத்மாவின் ஆனந்தம் உணர்! 

ஆழ்மனதுள் ஊடுருவு! என்றது அது…. 

அழுகையை அப்புறப்படுத்தி

அழுக்கை அழகாக்கினேன்..! 

 

ஏன் நொறுங்கி போகிறாய்?

இது ஆப்கன் இல்லை

அதிர்ந்து விட.. 

ஈழம் இல்லை

இழந்து வாட..

சோமாலியா இல்லை

சோர்ந்து போக.. 

இரும்பாய் இரு –  நீ

இந்தியன் என்றது அது… 

இன்னல்களை விட்டெறிந்து

இனிமையானேன்..! 

 

நொடிப்பொழுதும்

நொடிந்துவிடாமல் – என்னை

பாதுகாக்கும் அது…. 

அது எது? 

 

அது

மட்டற்ற மணம் வீசும் என் மனம்…! 

மல்லிகையாய் மலரும் அது தினம்…!

 

-கவிஞர் பேரா. ச. குமரேசன், தமிழ்த்துறை, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

களத்துமேடு|கவிதை|ச.குமரேசன்

களத்துமேடு - குமரேசன்

களத்துமேடு

கள்ளம் கபடமும்

மேடு பள்ளமும் இல்லா

குட்டி மைதானம்..!

 

குழந்தை பருவத்தில் – அது

இரு கைகளைப்

பின்னோக்கி இழுத்துப்

புருவங்களை உயர்த்துமளவு பெரியது..!

 

அதிர்கட்டை கொண்டு

தனது வலிமை முழுவதும்

களத்தில் இறக்கி

காரையாக்கி

வைத்திருப்பார் அப்பா..!

 

தானியங்களோடு

கல், மண் சேர்ந்து

கலப்படம் ஆகுமென்று

மாட்டுச்சாணத்தால் மெழுகி

பளிங்காய் மாற்றியிருப்பார் அம்மா..!

 

கோடை முடிந்தால்

கடலையும், எள்ளும்

களம் புகும்..!

 

கார் முடிந்தால்

நெற்கட்டுகள்

ஆளுயர அடுக்கி நிற்கும்..!

 

பக்கத்து தோட்டத்துக்

காளைகளோடு தாத்தா – தன்

காளைகளையும்

கிருஷ்ணன் தேரோட்டும் 

குதிரைகள் கணக்காய் 

பிணைத்து களம் புகுவார்..!

 

நெற்கட்டுகளைப் பரப்பி 

எப்பிடி புனையோட்றம் பாரு?

பில்லுல ஒரு  நெல்லிருக்காது என்பார் !

 நெல்லடித்த வைக்கோல்

தாம்பு ஒரு

வட்டப்பாய்  வடிவம் பெறும்..!

 

களம் புகுந்த தாத்தா

இப்போது  போரிடத் துவங்குவார்.

 உயரத்தில் நின்று

 வைக்கோல் கொண்டு

களத்தின் ஓரமாய்..!

 

நாங்கள் குண்டுகளை

எறிந்து கொண்டிருப்போம் – களத்தில்

அம்மாவின் சத்தம் கேட்கும்

கோலிகுண்டு விளையாடாதடா

படிப்பு வராது..!

 

மூங்கில் முறத்தில்

நெல்லை அள்ளி

 காற்றுள்ளபோதே

தூற்றிக் கொண்டிருப்பார் அப்பா..!

 

 பதர் நீங்கிய நெல்லனைத்தும்

போரிட்ட தாத்தா மேல்

சமாதிகட்டியது போல் காட்சி தரும்..!

 

பகலில் பத்து மூட்டை

நெல்லானுலும் ஒரு சேர காயும்..!

 

இரவில் ராந்தல் வெளிச்சத்தில்

தாத்தாவோடு நானும் பாயும்..!

 

என்னைத் துணையாகக் கொண்டு

விண்வெளி ஆராய்ச்சி

செய்வார் தாத்தா !

 முடிவில் நட்சத்திரங்களுக்குப்

பெயர் சூட்டப்படும்…

 

இதமான தென்றல் வீசும்

தாத்தாவின் குறட்டை ஒலியோடு..!

நிலவின் ஒளவையை

மேகம் மூடியதும்

என் போர்வை என்னை மூடும்..!

 

மூட்டைகள் வீடு புகும்

களத்தில் ஆடுகள் கட்டப்படும்

கொடாப்பை விட்டு குட்டிகள் குதித்தோடும்..!

 

மாடுகள் தன் சாடியைத் தேடும்

பசுங்கன்றுகள் பாய்ந்தோடும்

தைத்திருநாள் பூசையும்

நீண்ட நாள் வைத்திருந்த ஆசையும்

களத்தில் நிறைவேறும்..!

 

ஆம்!  எங்கள் களமும்

போரும் பூசலும் நிறைந்ததுதான்..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

உதவிப்பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

 

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

 

மாட்டு வண்டி| கவிதை | ச.குமரேசன்

மாட்டுவண்டி

மாட்டு வண்டி

 

கண்களுக்கு

கையை குடையாய் கொடுத்து

எட்டிப்பார்ப்பார் தாத்தா

காளைகளின் சலங்கையோசை

காதில் விழும்..!

 

வண்டிக்காரன் வருவான்

அவனோட பள்ளிக்கூடம் போ..

என் பல்லெல்லாம் பகலாய் மாறும்.

கால்கள் இரண்டும் காற்றில் மிதக்கும்..!

 

புத்தகப்பையை

கோதாணியில் தூக்கிப்போட்டு

சக்கர சட்டங்களில்

சரசரத்து ஏறி

முளைக்குச்சியை

இறுகப் பற்றி – உச்சியில்

 உட்கார்ந்து கொள்வேன்..!

 

கம்பு மூட்டைகளும்,

கடலை மூட்டைகளும்

எனது சிம்மாசனம்.

காளைகள்

கடந்து செல்கையில்

பாதையோர மரங்கள்

பின்னோக்கி ஓடும்..!

 

மேலிருந்து – நான்

ஊரைச் சுற்றி பார்ப்பேன்.

ஊரே என்னைப் பார்ப்பதாய் உணர்வேன்..!

 

வண்டிக்காரர்

கயிற்றை இழுத்து

பள்ளிக்கூடம் வந்துவிட்டதென்பார்.

கூட்டாளிகள் கூட்டம் கூடி விடுவர்..!

 

நான் இறங்குவேன்

என் அரியணையிலிருந்து..

அருகில் வந்து கேட்பான் – நண்பன்

என்னையும் ஒருநாள் ஏத்திக்கடா..!

 

வாழ்வில் பல

போர்கள் புரிந்து

பேரரசுகளை கைப்பற்றி

இன்று திரும்பி பார்க்கிறேன்

என் அரியணை அரவமற்று போயிற்று

நான் யாருடன் போரிடுவேன்?

மேலும் பார்க்க..

1.களவாணி ( கவிதை)

களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி- குமரேசன்

களவாணி

கதிரொளி வீசும்

 கதிரவன் அழகு..!

 குளிரொளி கொடுக்கும்

திங்களும் அழகு..!

 

வெம்மையின் கதகதப்பு

இதமான உணர்வோடு..!

குளிரின் தன்மை

குதூகல உணர்வோடு..!

அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்

தன்மையையும் உணர்ந்து

அனுபவிக்கிறேன்..!

 

அவற்றோடு – நான்

தனிமையில் உரையாடுகிறேன் !

அவை  தொட முடியாத 

தொலைவில் அல்லவா உள்ளன !

அதனால் பல வண்ணங்களிட்டு

தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !

அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

 

இங்கும் ஒருத்தி – அப்படித்தான்

பார்வையாலே சுட்டெரிப்பாள் !

 

சிலசமயங்களில்

குதூகல குளிர்ச்சியாய்

வெட்கப் புன்னகை பூப்பாள் !

 

இவள் தொட முடியா

தூரம் ஒன்றும் இல்லை

அருகேதான் இருப்பாள்

அழகாய் அகத்தை

ஊடுருவி  – என்

உள்ளேயும் இருப்பாள் !

 

இவளோடு உரையாட

முடிவதில்லை..!

தனிமையின் தவிப்பிலும்,

தள்ளி நிற்கும் வேலையிலும்..!

 

இணைப்பு கம்பிகளால்

இணைத்தது போல 

அவளோடு இருக்கும் என் மனம்..!

 

எதிரே நின்றால்

யாரோ யாருடனோ

பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

 

யாரவள் திங்களா? தினகரனா?

கற்பனையிலும், கனவிலும் மட்டுமே

என்னோடு சிலாகிக்கும்

களவாணி..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »