Saturday, July 18, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் திருத்தமாய்ப் பேசுங்கள்! | திருத்துறைக்கிழார்

திருத்தமாய்ப் பேசுங்கள்! | திருத்துறைக்கிழார்

திருத்தமாய்ப் பேசுங்கள்!_திருத்துறைக்கிழார்
    தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. 
               
       தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம், பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர்.  அல்லாமலும், தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர்.  அதனால், தமிழ் தன் செம்மை, சீர்மை கெட்டு நின்றது.
பிறமொழிக் கலப்பு 
               
அயலார் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அவர்தம் மொழிகளையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.  அப்பொழுது அம்மொழிச் சொற்கள் தமிழில் கலக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஏன்? இன்று ஆங்கிலம் கலக்காமல் பேசுகிற அல்லது எழுதுகிற தமிழரைக் காண்பது அரிதாகி விட்டதை நாம் அறிவோம்.  எனவே, எந்தெந்த மொழிக்காரர் தமிழ்நாட்டை  ஆண்டார்களோ,  அந்தந்த  மொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்கத் தலைப்பட்டன.  சொல்வளம், பொருள்வளம்   மிக்க  தமிழுந்  தன்  கன்னிமை  கெடாது நிலைத்திருப்பதற்குக் காரணம் அதன் தனித்தியங்கும் தன்மையேயாகும்.
 
தேவையற்ற சொற்கள் 
               
இன்றைய தமிழ் மக்கள் பேசும்போது, இடையிடையே தேவையில்லாத,  பொருளற்ற சொற்களையும் சேர்த்துப் பேசும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காண்போம்.
 
1.நான் என்ன சொல்றேன்னா, நீ வந்து இப்படிச் செய்வது வந்து சரியில்லை, நீ வந்துட்டு, என்ன நான் சொல்றது?, வந்து புரியுதா?

2.அவர் வந்தாப்லே, தம்பி சொன்னாப்லே, நாலு மணியைப் போல வந்து கேட்டாப்ல.
இப்படிப் பயனில்லாத சொற்களை இடையில் இணைத்துப் பேசுவோர் இன்று மிகுதியாகி வருகின்றனர்.
இத்தகையோரை மனத்தில் கொண்டுதான் திருவள்ளுவர்,
          
“பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல்          
மக்கட் பதடி எனல்” (எண் : 196)
                                        
என்ற குறளை யாத்தாரோ?

இழிபொருளும் இன்பொருளும் 
               
ஒரு காலத்தில் இழிந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் இன்று  நல்ல  பொருளிலும்,  நல்ல  பொருளில்  வழங்கிய சொற்கள் இழிந்த பொருளிலும் வழங்குவதைக் காண்கின்றோம். களிப்பு என்னும் சொல் முன் கள்ளுண்டு மகிழ்வதைக் குறிக்கப் பயன்பட்டது.  ஆனால், இன்று மகிழ்ச்சியென்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. 
          
‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்’   (புறப்பொருள்வெண்பாமாலை)  
               
என்ற அடி இதனை விளக்குகின்றது.  நாற்றம் என்னும் சொற்கு மணம் என்பது பொருள்.  இப்பொழுது நாற்றம் என்றால் எல்லோரும் மூக்கைப் பிடிப்பர்.  கெட்ட மணம் என்று பொருள் கொள்கின்றனர்.
         
“ முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை          
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு” (எண் :1274)
               
என்ற குறளிலும், நாற்றமுரைக்கும் மலருண்மை என்று நானமணிக்கடிகையிலும், நாற்றம் என்ற சொல் நறுமணம் என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.  முன்பு, உரியவன், உடையவன் எனப் பொருள்பட்ட கிழவன் என்ற சொல் இன்று முதியவன் எனும் பொருளில் வழங்குகிறது.
 “கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்           
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்ற தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பாவிலும்,
          
“செல்லான் கிழவன் இருப்பின் நி
லம்புலந்து          
இல்லாளின் ஊடி விடும்” (எண் :1039)
என்ற திருக்குறளிலும் கிழவன் என்னும் சொல் உரியவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதறிக.

பிழையான பலுக்கல் 
               
சில தமிழ் எழுத்துகளையும், சொற்களையும் சிலர்க்குச் சரியாக பலுக்கக் கூடத் (உச்சரிக்கத்) தெரியவில்லை.  சிலர் ழகரத்தை லகரகமாகவும், யகரமாகவும்; லகரத்தை ளகரமாகவும், ளகரத்தை லகரமாகவும்; பலுக்குகின்றனர்.  பழக்கவழக்கம் என்பதைப் ‘பளக்க வளக்க’ மென்று சிலர் பலுக்குவதையும், கோழியைக் ‘கோளி’யென்றும், பள்ளத்தைப் ‘பல்லம்’ என்றும் உச்சரிப்பதையும் கேட்கின்றோம்.  சிலர் சொன்னேன் என்று சொல்வதற்குச் ‘சென்னேன்’ என்றும், கோழியை ‘கோயி’ என்றும் சொல்லுகின்றனர்.  இவற்றிற்குக் காரணம் என்ன? பொருள் உணர்ந்து  பேசாமையும், பலுக்கத் தெரியாமையுமேயாம்.

பிழையாக வழங்கும் சொற்கள்
பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் பல தமிழ்ச்சொற்களைப் பொருளறியாமல் பிழையாகப் பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்.  அத்தகைய சொற்கள் நூற்றுக்குமேல் உள்ளன.  முதலில் ஏழ்மை என்ற சொல்லைப் பார்ப்போம்.  ஏழ்மை என்றால்  ஏழு  என்றே  பொருள்.  ஏழ்  தெங்க  நாடு;  ஏழ் முன்பாலை நாடு என்னும் வழக்குகளைக் காண்க.  ஏழ் என்பதனொடு மை என்னும் பண்புப் பெயர் விகுதி சேர்த்து ஏழ்மை என்றாகிறது.  இச்சொல்லைத் தமிழறிஞர்களும், மேடைப்  பேச்சாளர்களும்    வறுமையென்னும்   பொருளில் பயன்படுத்துவது   மிகவும்   வியப்பாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது.  ஏழை என்ற சொற்கு வறியவன்.  அறிவிலான் எனப் பொருளாம். ‘ஏழை’ என்பதனுடன் ‘மை’ யைச் சேர்த்தால் ஏழைமை என்றாகும். இதன் பொருள் வறுமை, அறியாமை என்பனவாகும்.  ‘ஏழ்’ என்றாலும் ஏழ்மை என்றாலும் ஏழு என்றே பொருளாகும். 
               
அடுத்துக் கண்ட்ராவியைக் காண்போம்.  இதைக் ‘கண்ட் + ராவி’ எனப்பிரிக்கலாம்.  பார்த்து ராவுதல் எனப் பொருள்படும்.  ஆனால் அத் தொடரை எப்பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? கண்ணை அராவுவது போன்ற துன்பம் தருவது என்ற பொருளிலன்றோ?  எனவே, அதன் சரியான வடிவம் கண்ணராவி என்பதாகும்.  ‘கண் + அராவி’ எனப் பிரித்தல் வேண்டும்.  இது எப்படி கண்ட்ராவி ஆயிற்று?  நல்ல பொருள் தர கண்ணராவி எனப் பயன்படுத்தலாம்?
               
காக்கைப்  பிடித்தலைக் காண்போம்.  காக்கைப் பிடித்தல் என்பதன் பொருள் வெளிப்படை.  ஆனால், எப்பொருளில் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள்?  நயமாகப் பேசி ஒருவரைத் தன்வயமாக்கிக் காரியஞ்சாதித்தல் எனப் பொருள்பட வழங்குகின்றீர்கள்.  காக்கையைப் பிடிப்பதற்கும், இதற்கும் என்ன தொடர்பு? ஆகையால், அத்தொடர்பு கால் கைப்  பிடித்தல்  என்றே  இருத்தல்  வேண்டும்.   இதனைப் பலுக்கத் தெரியாமலோ என்னவோ காக்கைப் பிடித்தலாக்கிவிட்டீர்கள்?  ‘எப்பொருள் யார் யார் வாய்க்; கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ (எண்:423) என்ற வள்ளுவன் வாய்மொழியின் பொருளுக்கேற்ப நடந்தால், பொருள் புரிந்திருக்கும்.
               
காலைப் பிடித்தாவது, கையைப் பிடித்துக் கெஞ்சியாவது தன்  காரியத்தை  நிறைவு  செய்து  கொள்ள முயல்வதையே கால்கைப் பிடித்தல் என்கிறோம்.  இப்பொழுது சொல்லுங்கள்.  சரியான வடிவம் காக்கைப் பிடித்தலா?  கால் கைப் பிடித்தலா?
               
அடுத்து அருகாமைக்கு வருவோம்.  அருகாமையைப் பகுத்தால் அருகு+ஆ+மை எனவரும் .  அருகு முதனிலை. மை இறுதி நிலை. ஆ எதிர்மறை இடைநிலைப் பொருள். அருகில் இல்லாதது.  அதாவது சேய்மையிலுள்ளது என்பதாம்.  ஆனால், நீங்கள் அருகில், அண்மையில் என்ற பொருளில் பயன்படுத்தும் அருகாமை என்ற சொல், அப்பொருளுக்கு எதிரான பொருளைத் தருகின்றது. ஆகையால் அருகமை, அருகில் என்றே பயன்படுத்துவீர்களாக. 
               
அடுத்து இருப்பது மானாவாரி. மானா என்ற சொல்லுக்கு, அகர முதலி தரும் பொருள் பாட்டன் என்பது.  வாரி என்பதற்கு நீர், வருவாய், கடல் எனப்பொருள்.  எனவே மானாவாரி யின் திரண்ட பொருள் பாட்டன் நீர் என்பதும், பிறவுமாம்.  ஆனால், நீங்கள் மானாவாரியை வறண்ட நிலம், நீர்ப்பாய்ச்சல் இல்லாத நிலம் என்னும் பொருளில் பயன்படுத்துகின்றீர்கள்.  பொருந்துமா? அதன் உண்மையான உருவம் வானவாரி என்பதே வானம் – மழை, வாரி- நீர்,  இதன் திரள் பொருளாவது  மழை நீரால்  விளையும் பொருள்,  நீர்ப்பாய்ச்சலில்லாத நிலப்பகுதி என்பதாம்.  ஆகவே. மானாவாரிக்கு மாற்றாக இனிமேல் வானவாரியைக் கையாளுவீர்!
இறுதியாக இருப்பவர் வாத்தியார்.  இச்சொல் தமிழில் ஆசிரியரைக்   குறிப்பதாகும்.   ஆனால்,  அது  தமிழுமன்று. வடமொழியுமன்று.  வடமொழியில் உபாத்தியாயர் என்று ஒரு சொல்லுளது.  அது வாத்தியார் என மருவியிருக்கலாம்.
               
வாத்தியாரைப் பிரித்தெழுதினால் வாய்-தீ-ஆர் என்றாகும்.  தமிழில் வாயில் தீயுடையவர் என்றே பொருள்படும்.  ஆனால், ஆசிரியர் என்றோ, கற்றுச் சொல்லி என்றோ பொருள் தராது.  எனவே, கணக்காயர், ஆசான், ஆசிரியர் என்னும் இனிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பொருத்தமில்லாத வாத்தியார் ஏன்? ஆதலின், வாத்தியாரை விரட்டி ஆசிரியரை அழைப்பீர்களாக.
                இங்ஙனம் பல நல்ல தமிழ்ச்சொற்களை இழிபொருள் தருஞ்சொற்களாக்கித் தமிழில் இழிந்த கொச்சை வழக்கை உருவாக்காமல், பொருளறிந்து யாவரும் பயன்படுத்தச் செய்வதில் தமிழறிஞர் அனைவரும் கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டியது  கடமையும், உரிமையுமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
புனைபெயர் : திருத்துறைக்கிழார்.
முதனிலைத் தமிழாசிரியர் (பணி நிறைவு).
திருத்துறைப்பூண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »