Monday, July 21, 2025
Home Blog Page 18

Sorry|சிறுகதை|பிரபுவ

Sorry சிறுகதை
‘சும்மா இருங்க. உங்களுக்குப் புரியாது’. நான் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறேன். அங்கே என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? ஒரு சாரி கேட்டு மெசேஜ் அனுப்புறது ஒண்ணும் பெரிய தப்பில்லை. வேலை பார்க்கும் இடத்தில் இதையெல்லாம் ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டுதான் வேலை பார்க்கணும்’. இவ்வாறு நீது தன் கணவன் வேதாவிடம் கூறினாள்.
நீது ஒரு தனியார் பள்ளியில் கடந்த சில வருடங்களாக படித்த படிப்பிற்கிணங்க, மாத ஊதியத்திற்கு வேலை பார்த்து வந்தாள். அன்று பள்ளி விடுமுறை தினம். அதாவது பள்ளி விடுமுறை தினத்தில் விடுப்பு அளித்து இருந்தது. பொதுவாக பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து விட்டு ஆசிரியர்களுக்கு ஏதாவது அலுவலக பணி செய்யும் விதமாக வரச்சொல்லி விடுவார்கள்.
அன்று விடுமுறையை முன்னிட்டு உறவினர்கள் சிலர் நீதுவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதனால் எப்போதும் போல் இல்லாமல் அன்று நாள் முழுவதும் கொஞ்சம் பிஸியாக தான் இருந்தாள். அதிலும் குறிப்பாக மாலை நேரம் வந்தவுடன் சொல்லவே தேவையில்லை. பிஸியோ பிஸி.
வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உபசரனை செய்யும் பொருட்டும், சிறுபிள்ளைகளுக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டு இருந்ததன் பொருட்டும் கடந்த சில மணி நேரங்களாக நீது கைபேசியை சற்றும் கவனிக்கவில்லை.
இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு புறம் பிள்ளைகள் உணவு உண்ட மயக்கத்தில் தூங்க ஆரம்பித்தனர். அதே சமயம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களையும் உபசரித்து வழியனுப்பியும் முடிந்தது. இப்போதுதான் நீது தன் கைபேசியை எடுத்துப் பார்த்தார்.
பள்ளியில் அவர்களுக்கு என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்று உள்ளது. அது பள்ளியின் ஏதேனும் அலுவல் சம்பந்தமான தகவல்களை பதிவிடப்படும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் உயர்திரு அட்மின் அவர்கள் அனுப்பிய செய்தி பின்வருமாறு.
“ஆசிரியர்கள் கவனத்திற்கு, கோடை விடுமுறை தினங்களில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டி இருக்கும்”. ‘Please acknowledge and confirm by phone or message me’ என்று மாலை 6.30 மணியளவில் வாட்ஸ் அப் குழுவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்தக் குழுவில் இருந்த பலரும் ‘ok’, ‘yes mam’… என்று தங்கள் வெறுப்பை மறைத்து விருப்பத்தைத் தெரிவித்து இருந்தனர்.
நீது வீட்டின் அலுவலில் முழுவதும் மூழ்கியிருந்தபடியால் இது ஏதும் தெரியாமல் இருந்தாள். அவள் மட்டும் அதில் பதில் அளிக்காது இருந்திருந்தாள். அதனால் அட்மின் அவர்கள் ‘Neethu, what about you?’ என்று வினா கேட்கப்பட்டு அப்போது இரண்டு மணி நேரம் முடிந்தே போயிருந்தது.
இதை பார்த்தவுடன் நீதுவுக்கு, அவள் யாரும் செய்திடாத பெரிய தவறை இழைத்து விட்டதாக எண்ணி வருந்தினாள். ஒரு வேளை அடிமைகளில் சிறந்த அடிமையாக இருக்க தவறிவிட்டோமோ என்று கருதி துவண்டு போனாள்.
உடனே அவளுடைய பதிலை, ‘ok mam’ என்று எழுதினாள். அதே சமயம் அருகில் இருந்த கணவனிடம், ஏங்க வேதா, ‘sorry for the delay response’ அல்லது ‘sorry for the delay’ இவற்றில் ‘எது சரியாக இருக்கும்’ என்று கேட்டாள். திரு வேதா அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரது புராணத்தை பேச ஆரம்பித்தார்.
போனை கையில் வாங்கி மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்து படித்துவிட்டு வேதா, இந்த இடத்தில் ‘sorry’ ஒன்றும் கேட்க தேவையில்லை. ஆறு நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு செயலுக்கு விருப்பு அளிக்கும் படியாகதானே இருக்கிறது. எப்படியும் ஒருவரும் மறுத்து பதில் சொல்லப்போவது இல்லையல்லவா?
அதனால் சொல்றத கேளு, ‘ok mam, Noted’. அல்லது ‘Sure. Will do’ என்று மட்டும் அனுப்பு போதும்; ‘sorry’ கேட்கக்கூடிய அளவுக்கு ‘இது அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை’ என்றான் வேதா.
உங்களிடம் ‘sorry’ கேட்கலாமா? வேண்டாமா? என்று நான் கேட்கவே இல்லையே. அந்த வாக்கியத்தில் எது சரி? எது தவறு? என்று மட்டும் தானே கேட்டேன் என்று சற்று கோபத்துடன் நீது சொன்னாள்.
இந்த நேரத்தில்தான் நீது தன் கணவனிடம், ‘உங்களுக்கு அங்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா? ஒரு இடத்துல வேலை பார்க்குறதுன்னா சும்மாயில்லை…’என்று கடுகடுத்த குரலில் ஆரம்பத்தில் மேலே சொல்லியது போல கூறினாள்.
இதைக் கேட்ட வேதாவின் கோபம் தலைக்கு ஏறியது. கண்கள் சிவந்தது; துக்கம் மார்பை அடைத்தது. எதற்கும் அஞ்சாத கலங்காத ஆண்மகன், ஏதோ பொறி தட்டியது போல் அப்படியே திகைத்து நின்றான். மறுவார்த்தை ஒன்றும் மறுத்து சொல்லாமல், அவ்விடம் விட்டு நகர்ந்தான். அன்று இரவு உணவு உண்ணாமல் நோன்போடு படுக்கை அறைக்குச் சென்று படுத்தான். அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. படுத்துக் கொண்டு தான் இருந்தான்; ஆனால் அவனுடைய பக்கத்தில் கூட தூக்கம் வந்து படுக்கவில்லை.
பலபல சிந்தனைகள் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. அப்போது அவனுடைய வாழ்க்கையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துப் பதினான்கு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை நினைவுகூர்ந்தான்.
வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கின்ற வேதாவுக்கு இது போன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக தெரியவில்லையோ’. ஒருவேளை இப்படி செய்து இருந்தால் செய்த வேலையை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வீட்டில் வேலை இல்லாமல் இருந்திருக்க மாட்டேனோ? என்று நினைத்து வருந்தினான்.
“இறுதியாக வேலை செய்த பெரிய நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலையையும் இழுத்துப் போட்டு ஓடி ஓடி செய்தோமே! எனக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கொஞ்சம்கூட கிடைக்கவில்லையே! ‘பொறுத்து இருங்கள்’ என்று நிர்வாகம் கூறியதற்கு எதிர்த்துக் கேள்விக் கேட்டதற்கு தண்டனையாக மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்;  ‘இல்லையேல் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள். நீங்கள் வேலையில் இருந்து நீக்கியதாக இருக்கக் கூடாது, மாறாக நான் வேலையை விட்டு போனதாக இருக்க வேண்டும்.” என்று வேலையை விட்டு வந்த காரணத்தையும் சற்றுத் தியானித்துப் பார்த்தான். 
ஒரு வேளை ஏதாவது பணியில் இருந்து சொல்லி இருந்தால், சொல்லியதை உதாசினப்படுத்தாமல் கண்டிப்பாக நீது கேட்டு இருப்பாளோ என்னவோ? என்று நினைத்து வருந்தினான்.
வேலை ஒன்றுக்கும் போகாமல் வீட்டில் இருக்கும் கணவனை ‘*த்துடைத்தக் கல்லாகக் கருதி விட்டாளோ’ என்று நினைத்து வருந்தினான். அப்படி அவன் நினைத்து வருந்துவது சரியா? தவறா? என்று தெரியாமல் வேதனையில் மூழ்கினான். இது உள்ளூர உண்மையில்லை என்று தேற்றினாலும் வருந்தவே செய்தான். வேதாவின் ‘உயிர் உடலை வெறுத்து ஒதுக்கி சென்றது’ போல் வெறுக்க ஆரம்பித்தான். அப்போது படுக்கை அறையின் கதவை திறந்து மெல்ல நளினமாக உள்ளே வந்தாள் நீது. 
’ஏங்க, சாப்பிடாம உங்களுக்கு தூக்கம் வராது! ஒழுங்கா எழுந்து வாங்க! சேர்ந்து சாப்பிடலாம்’, என்று நீது கொஞ்சும் கிளியின் குரலில் கெஞ்சினாள்.
‘Sorry’ங்க, sorry, sorry என்று சொல்லி வீண் வீம்பு பிடித்த வேதாவின் கையை இறுகப்பிடித்துச் சாப்பிட வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள். ‘உயிர் உடலை வெறுக்க நினைத்தாலும், உடல் உயிரை ஒருபோதும் வெறுத்து ஒதுக்காது’ என்பதை மெய்யாக்கிடுவது போல.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

எழுத்தாளர் பிரபுவ – வின் படைப்புகளைப் படிக்க…

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

7.அம்மாயும் சிறு குழந்தைதான்

திருஞானசம்பந்தர் பக்தி நெறி |ஆய்வுக்கட்டுரை|ர.அரவிந்த்

திருஞானசம்பந்தர் பக்தி நெறி
முன்னுரை
                சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்புடையது சைவமாகும். இச்சொல்லானது செம்மை என்னும் அடிச்சொல்லில் இருந்து தோன்றியதாகும். மேலும் சிவப்பு, நன்மை, மங்கலம் என்னும் பொருள்களையும் குறிந்துவருகிறது.  ‘சமையம்;’ என்ற சொல் காலப்போக்கில் ‘சமயம்’ என்று மருவியதுமன்றி சமயம் என்னும் சொல் நெறி என்னும் பொருண்மையிலும் வழங்கிவருதல் வழக்கு. எனவே, ‘சைவ சமயம்’ என்பது செம்மை +  நெறி ஸ்ரீ செந்நெறி  என்ற பொருளைத்தருகிறது. இச்சமயமே காலத்தாலும் முற்பட்டதாக இன்றளவிலும் வழக்கத்தில் காணப்படு; சமயமாகவும் காணப்படுகின்றது. கால வளர்ச்சியின் காரணத்தினாலும், பிறச் சமயத்தின் தோற்றத்தினாலும் சைவ சமயத்தில் பின்னடைவு ஏற்பட்டது மக்களின் வாழ்க்கையில் பக்தி, முக்தியும் இன்றி சைவ சமயம் பெருமளவில் குறைந்து காணப்பட்டது. சைவம் மீண்டும் மறுமலர்ச்சி அடையவும், உயிர்கள் சிவானந்தத்தை பெற்றவும் இறைவனால் அருளப் பெற்றவர்களே நாயன்மார்கள் ஆவார்கள்.
                திருநாவுக்கரசர் சரியை நெறியிலும், திருஞானசம்பந்தர் கிரியை நெறியிலும், சுந்தரர் யோக நெறியிலும், மாணிக்கவாசகர் குருவின் அருள் பெற்று ஞான மார்க்கத்திலும் நின்று இறைவனை சென்று அடையும் வழியாகிய நான்கு மார்க்கத்தினை பின்பற்றி இறைத்தன்மையினை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டவே நால்வர் பெருமக்களின் திருஅவதாரம் இறைவனால் செய்தருளப்பட்டது. திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியில் நின்று எவ்வாறு திருவடிப்பேற்றினை அடைந்த விதத்தையும், மேலும் உலக மக்களை நல்வழி படுத்தினார் என்பதையும்,  அவர் அருளிச்செய்த தேவார பதிகங்கள் வழி எடுத்துரைப்பதே இவ்வாய்குக் கட்டுரையின் நோக்கமாகும் அமைகின்றது.
இறை மார்க்கம்
                சைவ சமயம் இறைவனுடைய திருவடிப்பேற்றினை அடைவதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்கங்கள் (வழி) வகுக்கப்பட்டுள்ளது. அந்நான்கு வழியில் நின்று சிவப்பேற்றினை அடைந்தவர்களே நால்வர் பெருமக்களாவார்கள். இவ்வவதாரத்தின் பெருமையினை பிற்காலத்து மக்கள் அறிந்து பயன் பெரும்  பொருட்டே பெரிய புராணம் இறைவனின் அருளால் சேக்கிழார் வழி செய்தருளப்பட்டது.  உலக மக்கள் அனைவரும்; எல்லா நிலையில் இருந்தும் இறைநிலையினை  அடைவதார்கான வழியே சைவ நன்நெறிகளாகும். பிற எந்த சமயத்திலும் காணப்படாத தத்துவங்களை தன்னகத்தே கொண்டதாக  சைவ சமயம் விளங்குகின்றது.
திருஞானசம்பந்தர்
                திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீர்காழிப் பதியில், அந்தணர் மரபில், கவுணியர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தை சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையாரின்; விண்ணப்பத்தின்படி சமணம், பௌத்தம் வீழ்ச்சிப்பெற்று சைவம் மீண்டும் இப்பூவுலகில் மேலோங்கும் பொருட்டு திருத்தோணிப்புரத்து இறைவனால் அருளப் பெற்றவரே திருஞானசம்பந்தராவார். இவர் அன்னை உமாதேவியின் திருமுலைப்பாலாகிய ஞானாமிர்தத்தை உண்டவர். ஆதலால் பெரியோர்கள் ஞானக்குழந்தையாரை முருகனின் திரு அவதாரமாகவே காண்கின்றார்கள். இப்பூவுலகில் திருஞானசம்பந்தர்  அவதாரமானது,
“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சிதவன வயற்புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”
               (பெரிய புராணம், பாடல்.1256)
“தொண்டர் மனம் களிசிறப்பத் தூய
மாதவத்தோர் செயல் வாய்ப்ப”
                                                               (பெரிய புராணம், பாடல்.1921)
“திசை அனைத்தின் பெரும எலாம்…
இசை முழுதும்  மெய் அறிவும் இடம் கொள்ளும் நலை பெறுக”
(பெரிய புராணம்.பா.1922)
“தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற…..
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக”
(பெரிய புராணம்,பா.1923)
“அவம் பெருகும் புல அறிவின் அமண் முதலாம் பரசமயம்….
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரம் செய்தார்”
(பெரிய புராணம். பாடல்.1924)
                என்னும் பாடல்களின் வழி, புறச்சமயங்களாகிய சமணம், பௌத்தம் செல்வாக்கு ஒழிந்து சைவம் தலைத்தோங்கவும், சிவனடியார்கள் உள்ளம் களிப்படையவும், திருநீற்றின் புகழ் எட்டுத்திக்கும் பரவுதல் பொருட்டும், ஏழுலகத்தவரும் களிப்படையவும், தமிழ் செய்த தவம் நிலைபெறவும்,  இசைத்தமிழ் நிலைபெறவும், தென்திசை பெருமை பெறவும், சராசரி உயிர்கள் எல்லாம் சிவமாம் தன்மைப் பெறவும், மேலும் மக்களின் நல்லொழுக்கம் நிலைபெறவும், சீர்காழிப் பதி வாழவும், நிகழ் காலத்தும், எதிர்வரும் காலத்தும் வரும் குற்றங்கள் நீங்கவும், திருத்தோணியப்பர் அருள் உலகம் முழுவதும் பரவவும் அவதாரம் செய்தவர் திருஞானசம்சந்தர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலம் அறியலாம்.
                பன்னிருதிருமுறையில் திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளை அருளியுள்ளார் அவை மொத்தம் 16,000 பதிகங்களாகும். ஒவ்வொரு பதிகத்திற்கும் 11 பாடல் வீதம் மொத்தம் 1,76,000 பாடல்களை எழுதியுள்ளதாக தகவல்கள் இருந்தாலும் நமக்கு கிடைக்கப்பெற்ற பாடல்கள் எண்ணிக்கை 4158 பாடல்கள் மட்டுமேயாகும். இப்பதிகங்கள் ஞானத்தன்மையில் இருந்து பாடப்பெற்றதால் இயல்பாகவே இப்பாடல்களுக்கு மந்திர ஆற்றல் கொண்டதாக  அமைகின்றன. ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பதிகத்திற்கான பயனை எடுத்துரைக்கின்றார். இப்பதிகங்களை இன்றனவும் பண்ணொடு பாடினால் அப்பதிகத்தின் பயனை இன்றும் பெறலாம்.
                திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியினை பின்பற்றி இறைநிலையினை அடையும் வழியினை வகுத்து, அவற்றுக்கான ஆற்றலையும், அவர்தம் பண்முறையில்  அமைந்த பதிகத்தின் வழி உலகத்தவருக்கும் சென்று சேறும் வண்ணம் அருளியுள்ளார். இறைவனை அடையும்  பெரு விருப்பத்துடன் அன்பு கொண்டு ஓதுவார்க்கு திருவடிப்பேறு நிச்சயம் கிட்டும் என்பது பதிகத்தின் உயர்ந்த பயனாகும்.
                கிரியை என்பது மந்திர தந்திரங்களை குருவின் மூலமாக அறிந்து சமய, விஷேட, நீர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் இறைவழிபாட்டு முறை கிரியையாகும். தம்பொருட்டு இறைவனிடத்து செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யும் பாராத்த பூசையும் இந்நெறியில் அடங்கும்.
                கிரியை மார்கத்துடன் ஒவ்வொரு மார்க்கமும் பக்தனின் பக்குவத்திற்கு ஏற்றாறர் போல,
கிரியையில் சரியை – பூசைப் பொருட்களை   சேகரித்தல்
கிரியையில் கிரியை – இறைவனை புறத்தில்  பூசித்தல்
கிரியையில் யோகம் – இறைவனை அகத்தில்  வைத்து  பூசித்தில்
கிரியையில் ஞானம் – மேற்சொன்ன  மார்க்கங்களின் தத்துவத்தினை  அறிதல்.
                ஆனைந்து, திருமலர்கள், திருமஞ்சனம், பால், தயிர், நெய், விபூதி, கரும்புச்சாறு, எலுமிச்சம் சாறு, இளநீர், பஞ்சாமிருதம், தேன் போன்றவற்றை இறைவனின் திருமேனிக்கு அமிசேகம் செய்து, அலங்கரித்தல், புகைக்காட்டுதல், தீபம் காட்டுதல், அவிபடைத்தல், உபசாரம் செய்தல், மந்திரம் ஓதுதல், பதிகம் பாடுதல், ஆடுதல் போன்றரவை கிரியையின் அங்கங்களாகும்.
                மனிதனின் உடலுக்கு எது நன்மை பயக்குமோ, எதை அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றார்களோ, அதை இறைவனுக்கு படைத்து மகிழ்கின்றான். ஒவ்வொரு பொருட்களுக்கும் உருவ நிலை, உருவங்களை கடந்த சுக்கும நிலை என இரண்டு உருவ அமைப்புகள் உண்டு. பக்தி நிலையில் இருந்து புறமாக கொடுக்கப்படும் பூசைப்பொருட்கள், இறைவனுக்கு சுக்குமமாக சென்று சேர்கின்றது என்பது முன்னோர்களின் நம்பிக்கை. கோயில்கள் உலகில் சக்தியின் சேமிப்புக் கலமாக காணப்படுகின்றது. அபிசேகப் பொருட்கள் கோயிலில் பயன்படுத்தப் படுவதால் அங்கு பிரபஞ்சத்தில் இருந்து கலசத்தின் மூலம் வரும் காஸ்மிக் கதிர்கள் கருவரையில் வைக்கப்பட்டிருக்கும் இறைவனின் உருவத்திருமேனியின் மிது பட்டு அலையாக கோயில் முழுவதும் பரவுகின்றன. அவ்வாறு பரவும் இறை சக்தியானது அங்கு பூசைக்கு பணப்படுத்தப்படும் பொருட்களின் தன்மைகளை தன்னகத்தே ஈர்த்து அங்கு வரும் பத்தர்களுக்கு நேரட்டியாக உணவாகவும், தீர்த்தமாகவும், காற்றின் துணைக்கொண்டு அங்கு நுகரப்படும் பொருட்களான வாசனை திரவியங்கள், காதில் கேட்கும் மந்திரங்கள், கண்ணுக்கு நன்மையளிக்கக் கூடியதாக தீபாராதனை வழியாகவும், மலர் தூவியும், அலங்காரம் செய்வதின் மூலம் இறைவனின் திருஉருவம் மனதில் நீங்காமல் இருந்து மனம் ஒன்றையே தியானிக்கும் பயிற்றி முறையினையும், தருவதாக அமைகின்றன. மேலும்,  நேர்த்திகடன் என்று செய்யப்படும் உடல் பயிற்சிகள் எல்லாம் பஞ்ச பூதத்தின் வழியாக  மனிதனையும், மனித மனங்களையும் வழுப்படுத்தி இறைநிலையினை பெறச்செய்வதே இவ்வழிபாட்டின் நோக்கமாக காணப்படுகின்றது. 
                அவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்தில் பல தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து இறைவனின் புகழ் பாடி பல பதிகங்களை பாடியுள்ளார். இவ்வாறு பாடப்பெற்ற பாதிகத்தின் வாயிலாக பக்தி நிலையில் இறைவனுக்கு செய்யப்பட்ட கிரியை அங்கங்களாக செய்யப்பட்டி பொருள்களை சிறப்பித்து பாடும் இடத்து இறைவழிபாட்டு முறையினையும், இறைவழிபாட்டின் மேன்மையினை அறிய முடிகின்றது.
கிரியை அங்கங்களும், பயனும்
தூய நீர்
                இறைவனுக்கு தூயநீர் கொண்டு அபிசேகம் செய்தல் என்பது மனிதன் உடலை தூய்மை செய்தல் போன்றதாகும். இது உருவத்திருமேயில் இருக்கும் இறைவனை சுத்திகரித்தல் நிலையாகும்.  மேலும் இறைவன் கங்கையினை தலையில் அணிந்துக் கொண்டு நித்தியமாக தூயநீர் அபிசேகம்  செய்தபடியாக இருக்கின்றார் அதன் விழைவாக கங்கையாகிய தூயநீரை அபிசேகமாக செய்யப்படுகின்றன.
கங்கையினை தன் சடாமுடியில் தாங்கியுள்ளதை திருஞானசம்பந்தர்,
“…… …… மாசறு திங்கள் கங்கை முடிமேல்…”
(திருமுறை 2:85:1:3)
“நீர்கரந்த நீமிர்புன் சடைமேலோர்…….”
(திருமுறை 1:1:2:1)
                பெரும்பான்மையாக அனைத்து பாடல்களிலும் சிவபெருமான் தன்னுடைய வலப்பக்கத்தில் கங்கையை வைத்துள்ளதையும், அவற்றின் சிறப்பினையும் திருஞானசம்பந்தர் பல இடங்களில் பாடியுள்ளார்.
வெண்ணெய்
                வெண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிசேகம் செய்வதினால் உடல் ஆராக்கியம் பெறும். வெண்ணெய் பயன்படுத்தியதை திருஞானசம்பந்தர்,
“நல்வெண்ணெய் விழுதுபெய்து ஆடுதிர் நான்தொறும்
நெல்வெண்ணைய் மேவிய நிரே…”
(திமுறை 3:96:1:1)
என்னும் பதிகம் மூலம், வெண்யெண் அபிசேகத்திற்குத் தினந்தோறும் பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.
நெய்
                இறைவனுக்கு பொதுவாக அபிசேகத்தின் போது நெய் அபிசேகமாகவும், காப்பாகவும் செய்வது வழக்கம். இச்செய்தியினை,
‘ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே’ (திருமுறை 1:15:1:1)
என்னும் பாடல் வரியின் மூலம் அறியலாம். நெய் கொண்டு அபிசேகம் செய்வதினால் செல்வ கடாச்சம் பெற்று, எதிர்வினைகளில் இருந்து விடுதலை பெற்று புத்துணர்ச்சியுடன் வாழலாம்.
பசும் பால், தயிர்
                இறைவனுக்கு பால், தயிர் கொண்டு அபிசேகம் செய்தல் வழக்கமாக இருந்துள்ளதை திருஞானசம்பந்தர்,
“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தில் பூசை செய்யல் உற்றார்”
  (திருமுறை 7:5:1:1)
‘ஆடினாய் நறுநெய்யோடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘பாலோடு நெய் தயிர்பலவும் ஆடுவர்’
(திருமுறை 3:15:3:1)
என்னும் பதிகம் வழி பாலும், தயிரும் அபிசேகத்திற்கு பயன்படுத்தியுள்ளதை காணலாம். இவை சகல நன்மைகளை தருவனவாகவும், உடலுக்கு பூரண ஆராக்கியம் தருவதாகவும், நீண்ட ஆயுளையும் தருவதாக அமைகின்றது.
தேன், இளநீர், கருப்பஞ்சாறு
                திருஞானசம்பந்தர் பதிகத்தில் தேன், இளநீர், கருப்பஞ்சாறு போன்றவை பூசைக்கு பயன்படுத்தியுள்ளதை,
“தேன்நெய்பால் தயிர் தெங்கிளநீர் கரும்பிண்தெளி”
“தேன்நெய் பால் தயிர் ஆட்டுகந் தானே”  
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
என்னும் பதிகம் மூலம் அறியலாம்.
ஆனைந்து (பஞ்ச கவ்வியம்)
                பசுவிடமிருந்து பெறப்படுகின்ற பால், தயிர், நெய், கோமயம், கோசலம் இவை ஐந்தையும் மந்திரப்பூர்வமாகப் பூசித்து ஒன்று சேர்க்கப்பட்ட கலவை ‘ஆனைந்து’ (பஞ்ச கவ்வியம்) ஆகும். ஆனைந்து இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுவதும், அவற்றை பக்தர்களுக்கு கொடுப்பதால் உடல்சார்ந்த ஆராக்கியத்தினையும், மனதுக்கு சாந்திக்காவும் கொடுப்பதாக அமைகின்றது. இவை உடலுக்கு சென்று அசுத்த கழிவுகளை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியினை மிகச்செய்து உடலுக்கு எந்தவிதமான நோயும் அனுகாமல் காத்து இறைவழிபாட்டுக்கு ஏற்ற உடல் தகுதியினை தந்துதவுகின்றது. இவ்வானைந்து திருஞானசம்பந்தர் காலத்தில் அபிசேகத்திற்க்கு பயன்பாட்டில் இருந்துள்ளதை,
“ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கடமர சிலியே”  
(திருமுறை2:122:5:4)
“ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்”
(திருமுறை 5:100:4:1)
என வரும்  ஞானசம்பந்தர் பாடல் வழி அறியலாம்.
மலர் தூவுதல்
                சிவனுக்கு உகந்த மலர்களாகிய கொன்றை பூ, ஆத்தி பூ, செவ்வரளி பூ, ஊமத்தம் பூ, பாரிசாதம் பூ, எருக்கம் பூ, வில்வம் மற்றும் வெள்ளை நிறமுடைய பூக்கள் மாலைகளாகவோ, உதிரிப் பூக்களாகவோ இறை வழிபாட்டிற்க்கு பயன்படுத்துதல் நன்மை பயக்கும். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணாதிசம் உண்டு. சில பூக்கம் மனதுக்கு அமைதி கொடுப்பதாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும், கண்களுக்கு நல்ல காட்சியினையும் (மங்கலம்) தருவதாகவும் காணப்படுகின்றன. முக்கியமாக சைவ வழிபாட்டில் வில்வம் உயிர் சக்தியாகிய வித்துவை கெட்டிப்படுத்தும் தன்மையுடையதாகவும், வைணவத்தில் துளசிக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
“தொட ஆர் மாமலர் கொண்டு”
“மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட” 
(திருமுறை 3:488:6:1)
“கைகாள் கூப்பித்’ தொழீர் கடிமாமலர் தூவிநின்று
            பூக்கையால் அடிப் போற்றி
      என்னாத இவ்வாக்கையால் பயனென்”
 (திருமுறை 4:9:7:1-2)
“யாவருககுமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை”
(திருமந்திரம் 252:1)
தீப வழிபாடு
                இறைவனுக்கான அபிசேகங்கள் முடிவுற்ற நிலையில் தீபாராதனை செய்வது வழக்கம். தீபாராதனை மூலம் மங்களமான தோற்றத்துடன் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனின் திருமேனி அழகு மனதுக்கு மகிழ்வை தருவதாகவும், மேலும் யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இறைவனை தியானிப்பதற்கான ஒற்றை பொருளாகவும் தீபாராதனை மூலம் நமக்கு கிடைக்கின்றது. நெருப்பு பொதுவாக இறைச்சக்தியினை கடத்துபவையாக காணப்படுகின்றது. இதனால் கண்களில் வழியாகவும் மற்றும் வெற்று உடலுடன் கோயிலுக்கு செல்லும் போது இறைசக்தியை நன்மை அனைவரும் எளிமையாக பெரும் பொருட்டே இவ்வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கின்றன. மேலும் வீடுகளில் பயன்படுத்துவதனால் வீட்டில் உள்ள தீவினைகள் விலகி இறைநிலை பரவி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்கின்றது.
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே”
  (திருமுறை 4:113:8:1-4)
என்னும் திருநாவுக்கரசர் பாடலில் மூலம் விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் நன்மையினை அறியலாம்.
இறைநாமம் கேட்டலும், திருக்கூத்தும்
                உலகியலில் கிடைக்கும் மேற்சொல்லப்பட்ட பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிசேகத்தை விடவும் குருவிடம் இருந்தும், சிவ அருளாளர்களிடமிருந்தும் சிவ நாமத்தினையும், இறைவனுடைய அற்புதங்களையும் கோட்பது சிறந்த வழிபாடாகும். அவ்வாறு சிறப்பிற்குரிய மந்திரமாகிய ‘நமச்சிவாய’ என்னும் மந்திரத்தின் பெருமையினையும், பயனையும், 
“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நர்கினும் மெய்கொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே..
நந்தி நாமம்ம நமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானச்சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.”
                                                (திருமுறை 3:49:520-530)
“துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
அற்றமிழ் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லார் உம்பராவரே”
                                    (திருமுறை 3:22:231-241)
“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
ஏத்துவார் தமக்கு இடுக்கண் இல்லையே”  
                                (திருமுறை 4:113:170-179)
                நமச்சிவாய என்னும் மந்திரமானது சாதரன கீழ்நிலை மனிதர்களையும் நல்வழி படுத்தி வாழ்வில் ஏற்படும் நரகம் புகும் தீமைகளையே கொண்டிருந்தாலும் நமச்சிவாய என்னுமு; திருமந்திரத்தினை ஓதுவார்கள் என்றால் அவர்களின் மனதினை பக்குவப்படுத்தியும், முன்வினைகளை போக்கியும், பின் வினைகளை தடுத்தும், என்றும் அழியா பொருளாகிய தன்னுடைய சுய சோதியினை காட்டி பிறவா இன்பமாகிய திருவடிப்பேற்றினை வாழ்வில் தந்தருளும் மந்திரம் ஐந்தொழுத்து மந்திரமாகும்.
மேலும் மந்திரங்களையும், பதிகங்களையும், பாடி ஆடி மகிழ்தல் அடியார்களின் மரபாக இருந்துள்ளதை,
“தொண்டர்கள் பாடியாடிக் தொழுகழல் பரமனார்”
(திருமுறை 4:36:3:2)
“தலையாரக் கும்மிட்டுச் கூத்துமாடி”
(திருநாவுகரசர்)
என வரும் பதிக வரிகளின் மூலம் பக்தர்களின் களி (ஆனந்தம்) நடனத்தினை அறியலாம்.
கூட்டு விழிபாடு
                தனி நபராக நீன்று வழிபாட்டினை செய்து பலன் பெறுவதைக் காட்டிலும் பலர் ஒன்று கூடி இறைவன் மீது அன்புடன் பூசை செய்தால் அதிக பயனை அடையலாம். பொதுவாக மந்திரங்கள் செய்யும் செயல்கள் எண்ண அலைகள் மூலமாகவே பரவுகின்றன. அவ்வாறு மந்திர ஆற்றல் கொண்ட சப்தத்தினை கோயில்களில் ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இறையாற்றல் எப்போதும் நிலையுடையதாக இருக்கின்றது. தமிழில் அவ்வாறு அருளாளர்களின் மூலம் பாடப்பெற்றவையே தேவாரமாகும். இப்பதிகங்களை கூட்டு வழிபாட்டில் பண்ணொடு பாடி வழிபட்டால் அதிக பயனை பெறலாம்.
கூடிக்கூடித் தொண்டர்தங்கள் கொண்டபணி குறைபதாமே
ஆடிப்பாடிஅழுது நெக்கங்கு அன்டை யவர்க்குஇன்பம்”
என்னும் திருநாவுக்கரசர் பதிக வரிகளின் மூலம் கூட்டு வழிபாட்டினை அறியலாம். பொதுவாக பக்தி என்பது தனிநபர் சார்ந்ததாக அல்லாமல், சமுதாயத்துடன் இணைந்தால் அனைவரும் நற்சிந்தனை பெற்று வாழ்வில் உயர்நிலைய அடைய வழிவகுக்கும்.
முடிவுரை
                ஒற்றைச் சொல் ஒரு பொருளை மட்டும் குறிக்கப்பட்டால் அதன் மகத்துவம் சாதாரண சொல்லாகவே காலம் முழுவதும் இருந்துவிடுகின்றது. அதே சொல் குருவின் மூலமாகவோ அல்லது அருளாளர்களின் மூலமாக பெறப்படும் பொது அவ்வாக்கியத்திற்கான பொருளின் தன்மையிலும் அவற்றில் செய்படும் ஆற்றல் நிலையிலும் மாற்றங்கள் நிகழும். அவற்றின் பயன் பயன்படுத்தும் தன்மையினை பொறுத்ததாக அமையும். அவ்வாறாக அம்மை உமாதேவியின் ஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தர் வாக்கும் உயர்ந்த வாக்காகவே காணப்படுகின்றன. அவ்வாக்கில் இருந்து பிறந்தவையே முதல் மூன்று திருமுறைகளாகும்.  திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கு தலயாத்திரை செய்து இறைவனை தரிசித்து தமிழிசையால் பல பாடல்களை பாடி சைவ தழைத்தோங்கும் படியாகவும், மக்கள் இறைத்தன்மையினை பெறுதல் பொறுட்டாகவும் பல பதிகங்களை பாடி அருளியுள்ளார். அப்பதிகங்கள் ஒவ்வொன்றும் பயன்தரும் பதிகங்களாக அமைந்துள்ளது திருஞானசம்பந்தர் பதிகத்தின் சிறப்பாகும். அவ்வாறு பதிகத்தினை மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். திருமுறைகளை அன்புக் கொண்டு பாடி பக்தி செலுத்துபவர்களுக்கு இறைவன் அருள் கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தி மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றினை ஓடுக்கி பேரின்பமாகிய திருவடிப்பேற்றினை தந்தருளுவார்.
                உலக மக்கள் அனைவரும் இறைவனின் திருவடிப்பேற்றினை அடைவதற்காக இறைவன் கருணைக்கொண்டு நிகழ்திய திருவிளையாடலே திருஞானசம்பந்தர் அவதாரமாகும். மேலும் கூட்டு வழிபாட்டினை உபதேசித்த திருஞானசம்பந்தரே தன் வாக்கின் படி நின்று தன்னுடைன திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இறைவனின் அருளால் முக்தியினை பெற்றுத்தந்தார் என்பது உலகறிந்த உண்மை. மேலும் திருஞானசம்பந்தர் பதிகங்களை துணைக்கொண்டும், கள்ளமில்லா அன்பு கொண்டும், பக்தி நெறியில் நின்று இறைவனை தியானிப்பவருக்கு இறைவனின் கருணையால் எளிய முறையில் சிவத்தன்மையினை அடையலாம் என்பதை திருஞானசம்பந்தர் பதிகங்கள் கொண்டு அறியமுடிகின்றது.
துணைநுற் பட்டியல்
1.சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை
 கருமுதல் திரு வரை,   பவாணி – 638 301.
2.திருவாவடுதுறை ஆதினம்  -சைவ அநுட்டான
  விதி, திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
3.பக்தவச்சலம்.ஆ-திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிச் செய்த  முதல் மூன்று திருமுறைகள்,
குடியாத்தம் – 632 602. 
4.பக்தவச்சலம்.ஆ-திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச் செய்த நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள், குடியாத்தம் – 632 602.
5.பக்தவச்சலம்.ஆ-சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம், குடியாத்தம் – 632 602.
6.மாணிக்கவாசகன்.ஞா.திருமூலர் – திருமந்திரம்,
உமா பதிப்பகம், சென்னை – 600 001.
7.வைத்தியநாதன் -சைவ சமய வரலாறும்,
பன்னிரு திருமுறை வரலாறும்,
திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
8.வெள்ளைவாரணார்.க -சைவ சிந்தாந்த சாத்திர வரலாறு, ராமையா பதிப்பகம்,
சென்னை – 600 014.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

மேலும் பார்க்க…

1.திருமந்திரத்தில் ஞானம் 

2.திருக்குறளில் ஊழ் 

அம்மாயும் சிறு குழந்தைதான் |சிறுகதை|பிரபுவ

அம்மாயும் சிறு குழந்தைதான்
“உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இன்னொரு முறை இதை செஞ்சுடாதீங்க. பிறகு நான் என்ன சொல்வேன்? என்ன செய்வேன்? என்று எனக்கே தெரியாது”.
“இந்த அரிசி எத்தனை பேருங்க உழைச்சு உற்பத்தி செஞ்சு இங்க வந்திருக்குதுன்னு” உங்களுக்குத் தெரியாதா?
அரிசியையும் படியையும் யாராவது எங்கயாவது இப்படி விளையாட எடுத்துக் கொடுத்துட்டு வேடிக்கைப் பார்ப்பாங்களா? அவன் கேட்டால் எது? என்னான்னு? கொஞ்சம் கூட யோசிக்காம, கேட்டவுடனே அப்படியே கேக்குறதை எடுத்து கொடுத்துவிடுவீங்களா? உங்களுக்கு தெரிய வேண்டாமா? நல்லது கெட்டது ஏதும் சொல்லி தர மாட்டீங்களா?
அவன் அதுதான் வேணும்னு அடம்பிடித்தால் அரிசி, பருப்பு, சர்க்கரை, உளுந்துன்னு எல்லாத்தையும் எடுத்து கொடுப்பீங்களா? கொஞ்சமாவது வரைமுறை வேணாமா?” என்று அப்பா பிள்ளைகளின் அம்மாயியை கடிந்து ஏசுகிறார். எதனால் இப்படி வாயில வந்ததெல்லாம் சொல்லி திட்டி தீர்த்தார்.
ஒரு பேடு தன் குஞ்சுகள் முட்டையில் இருக்கும் வரை மட்டும் அடைக்காப்பதில்லை; ஒரு கோழிக்குஞ்சு வளர்ந்து, எதிரி உயிரிகளிடம் இருந்து எதிர்த்து தன்னைத்தானே காத்துக்கொள்ளும் வரையிலும் அடைக்காக்கும் அல்லவா! இதுபோல பெற்றெடுத்த மூன்று விலை மதிப்புமிக்க பொன்களை (பெண்களை), அரும்பாடுபட்டு வளர்த்து, ஆளாக்கி, ஆளுக்கொரு திசையில் திருமணமும் செய்து வைத்தார் பசுபதி அம்மாயி. அவர் மூன்று பெண்களையும், திருமணம் செய்து வைத்து, பேரன் பேத்திகள் என்று ஆன பின்னரும் கூட அடைக்காப்பது போலவேக் காத்து வாழ்ந்து வந்தார்.
பசுபதி அம்மாயி பார்ப்பதற்கு மிகவும் சாதுவானவர்; அசாத்தியமான பொறுமை குணம் உடையவர். அக்கம் பக்கம் இருப்போரிடம் அளவான அன்போடு பழகி குடும்ப வாழ்வை செம்மையாகவே கழித்து வந்தார்.
தன்னுடைய பேத்தி மற்றும் பேரன்களுக்கு மிகவும் பிடித்தமானவர். எப்போதும் அவர்களுடன் இருப்பதை மிகவும் விரும்புவார்; சில வேளைகளில், பிள்ளைகளுடன் ஈன்ற தாய் தந்தை இல்லாது இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் பிள்ளைகள் ஒருபோதும் அம்மாயி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
பிள்ளைகளும் இவரோடு இருப்பதையே அதிகமாக பிரயாசப்படுவார்கள். பிள்ளைகள் காலையில் எழுந்தது முதல் இரவில் உறங்கும் வரையில் ஒவ்வொரு பிள்ளையும் கேட்கும் விளையாட்டு சாமான்களையும் சலிக்காமல் எடுத்துக் கொடுப்பது தான் அவரது முதல் கடமையாகும். அது மட்டும் அல்ல. மீண்டும் அந்த விளையாட்டு பொருள்கள் அனைத்தையும் அதனதன் பைகளில் அசராமல் நாளும் எடுத்து அடுக்கி வைத்து விடுவார்.
பிள்ளைகள் சில நேரங்களில் சமையலறையின் உள்ளே புகுந்து சட்டி, குண்டான், இட்லித்தட்டு, டம்ளர் போன்று இருக்கும் சாமான்களை எல்லாம் எடுத்து வந்து வறாண்டாவில் வைத்து கொஞ்ச நேரத்திற்கு விளையாடுவார்கள். பிறகு அங்கு உள்ள சாமான்களையெல்லாம் அப்படியே போட்டுட்டு மீண்டும் உள்ளே சென்று, வேறு ஏதேனும் சாமான்களை எடுத்து வந்து வீட்டின் வேறொரு பகுதியில் வைத்து சிறிது நேரம் விளையாடுவார்கள்.
முன்பு வறாண்டாவில் வைத்து விளையாடிய சாமான்களை எடுத்து வைக்க அம்மாயி சென்றால், ‘பிள்ளைகள் எடுக்கக் கூடாது’ என்று கத்தி அழுது அடம் பிடிப்பார்கள். இப்படி வீடு முழுவதுமாக பொருள்களை பரப்பி வைத்து பிள்ளைகள் விளையாடி ஓய்ந்து உறங்கிய பின்புதான், அந்த பொருள்களை எல்லாம் எடுத்து வைத்து வீட்டை சுத்தம் செய்ய முடியும்.
இப்படி அம்மாயி வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அங்கும் இங்குமாக உள்ள சாமான்களை ஒவ்வொரு நாளும் எடுத்து வைப்பதில் மிகவும் அதிகமான நேரத்தைச் செலவிட்டு வந்தார்.
ஓரிரு நாட்கள் என்றால் ‘சரி போகட்டும்’ என்று விடலாம். ஒவ்வொரு நாளும் அரங்கேறும் இந்த செய்கைகளுக்கு அம்மாயி ஒரு போதும் பிள்ளைகளிடம் மறுப்பு தெரிவித்ததே கிடையாது. இதனால்தானோ என்னவோ? பிள்ளைகளும் இதை தொடர்ந்து ஒரு நாளும் தவறாமல் செய்து கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறாக சிறு பிள்ளைகள் விளையாட்டு பொருள்களான பொம்மைகள், கார், ஜீப், வேன், ரயில் போன்ற சில பொருட்களோடு, சிறிது நேரம் விளையாடுவார்கள். பின்னர், வீட்டின் சமையலறையில் இருந்து எடுக்கும் சாமான்களோடு சில மணித்துளிகள் விளையாடுவார்கள். பிள்ளைகள் கேட்பதைக், கேட்டப்படியே எடுத்து கொடுக்கதான் அம்மாயி இருக்காங்களே! என்ன கவலை?
ஒரு முறை அம்மாயி சமையலறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சிறு பிள்ளைகள் கத்தரிக்கோல் மற்றும் ஏதேனும் தாள் வேண்டும் என்று அடம் பிடித்தனர். கேட்டதைக் கேட்ட மாத்திரத்திலே, “இந்தா! பிடி! இனி இங்கே வந்து என்னை தொந்தரவு செய்யாதீங்க!” என்று எடுத்துக் கொடுத்து அனுப்பினார்.
வாங்கிய கத்தரிக்கோல் மற்றும் பேப்பரை வைத்து சிறப்பான சம்பவம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்; பேப்பரை எவ்வளவு சிறிய துகளாக நறுக்க முடியுமோ! அவ்வளவு சிறியதாகப் பிஞ்சு விரல்கள் கொண்டு நறுக்கி தீர்த்தனர். குழந்தைகளுக்கு நல்ல நேரம் இருந்ததால் கத்தறிக்கோல் பிள்ளைகளைப் பதம் பார்க்கவில்லை. அப்போது மின் விசிறியில் இருந்து சர்ற்…. என்று வந்து கொண்டிருந்த காற்று, அந்த மெல்லிய பேப்பர் துகள்களை வெட்ட வெட்ட வீடு முழுவதும் பரப்புவதற்கு வெகு உதவியாக இருந்தது.
சமையல் வேலையை முடித்து விட்டு, வெளியில் வந்து பார்த்த அம்மாயிக்கு வீடு முழுவதும் பேப்பர் இருப்பதைக் கண்டு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி “வீடு முழுவதும் பேப்பரை வெட்டி நறுக்கி குப்பையாக்கிட்டாங்களே!” என்று புலம்பிக்கொண்டு கூட்டித் துடைத்து சுத்தம் செய்தார். அப்போது பிள்ளைகள் மத்தியில் கடுகளவும் கோபத்தை வெளிபடுத்தாது இருந்தார். இதன் பொருட்டு ஓரிரு நாள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் பிள்ளைகள் இதே போன்று விளையாடி மகிழ்ந்தனர்.
ஒரு நாள் பிள்ளைகள் தலையணை மற்றும் பாய் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கினர். அதை கட்டிலின் மேலே வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஒழுங்கா கீழே இறங்கி விளையாடுங்கள்’ என்று அலுவலகத்திற்கு செல்லும் முனைப்புடன் அப்பா கண்டிப்பான குரலுடன் திட்டி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கச் சென்றார்.
சிறார்கள் ஆசையோடு விளையாடிக்கொண்டு இருக்கையில், ஒருவன் தரையில் விளையாடிக்கொண்டு இருப்பது போல நினைத்து கட்டிலில் இருந்து இறங்குவதற்கு பதிலாக கட்டிலில் இருந்து பக்கவாட்டில் ஓட ஆரம்பித்து விட்டான். அப்போது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ‘டொம்’ என்று ஒரு பெரிய சத்தம் வீடே அதிர்ந்தது. என்ன ஆச்ச பிள்ளைக்கு? என்று குளிக்கச் சென்ற அப்பா ஒருபுறம் ஓடிவர, அதற்குள் சமையலறையில் இருந்த அம்மா மற்றும் அம்மாயி இருவரும் வந்து பிள்ளையை தூக்கினர்.
பிறகு எங்கு அடிபட்டது? என்று தெரியாமல் அடிப்பட்ட இடத்தை விட்டுவிட்டு வேறு ஏதேதோ இடத்தில் தேய்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அப்பா, எங்கே அடி விழுந்தது? என்று கேட்காமல், அதோடு பிள்ளையை அடி அடி என்று கோபம் தணிய அடித்து துவைத்துவிட்டார். அந்த பிள்ளை கீழே விழுந்ததால் மண்டையில் அடிபட்டு ஏற்பட்ட வலியை விட, அப்பா அடித்த அடிதான் அதிகமாக வலித்தது.
அம்மா, அம்மாயி இருவரும் எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போனது. ‘எங்கிருந்து தான் வந்தது’ என்றே தெரியவில்லை, அவ்வளவு கோபம். பிள்ளைக்கு பேச்சு மூச்சு சுத்தமாக இல்லை. தண்ணீர் எடுத்து வந்து முகத்திலே அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கண்கள் விழித்து பார்த்தான். கொஞ்ச நேரத்துல அங்கிருந்தவர்களின் உயிர் உடலை பிரிந்து சென்று திரும்பி பின் வந்தது. உங்கள் ரெண்டு பேரையும் கீழே இறங்கிதானே விளையாடச் சொன்னேன். இனிமேலாவது இப்படி விளையாண்டு தொலைக்காதீங்க! ஏண்டா இப்படி ஏங்கிட்ட அடிவாங்கி சாகுறிங்க” என்று கூறி வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார் அப்பா.
ஒரு வாரத்திற்கு பிறகு இது போலவே மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அன்று சிறு பிள்ளைகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு முறம், அரிசி மற்றும் அரிசியை அளக்கும் படி, இவற்றை எடுத்துக் கொண்டு விளையாடினர். அழுது அடம்பிடித்து பாசக்கார அம்மாயிடம் உரிமையோடு ஏமாற்றி வாங்கி விளையாடினர். அப்போது அம்மாயி அருகில் இருந்த கடைக்குச் சென்று இருந்தார். சிறு பிள்ளைகள், வழக்கம் போலவே விளையாட ஆரம்பித்து முடிவில் வீடு முழுவதும் அரிசியை சிதறிவிட்டனர்.
வீட்டில் கால்களே வைக்க முடியாத நிலையில் இருந்தது. கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்த அம்மாயி, வீடு முழுதும் சிதற வைத்துள்ள அரிசியை பார்த்து உறைந்து போய் நின்றார். கால் வைக்கும் இடமெல்லாம் அரிசி, உள்ளே கால் வைத்தால் பாதங்களுக்கு அடியில் இருந்து அரிசிகள் “ஐயோ! என்னை மிதிக்காதே!” என்று கெஞ்சுவது போல தோன்றியது.
அம்மாயி அரிசியை எடுத்து கொடுத்தது ‘என் தப்புதான்’ என்று முணுமுணுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டு, பின்னர் வழக்கம் போலவே வீடு முழுவதும் பரப்பி சிதறிக்கிடந்த அரிசியை கூட்டிப் பெருக்க ஆரம்பித்தார். எப்போதும் போலவே இப்போதும் தனது கோபத்தைப் பிள்ளைகளிடம் காட்டாது சுத்தம் செய்யும் வேலையை தொடர்ந்தார்.
இந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த அப்பா, வீடு முழுவதும் சிதறிக்கடந்த அரிசிகளைக் கண்டு கடுங்கோபத்தில் என்ன செய்வது? என்று தெரியாமல் “உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இனி ஒரு முறை நீங்கள் இப்படி செய்தால் அப்பறம் நான் என்ன செய்வேனே எனக்கே தெரியாது? நீங்க சின்ன பிள்ளையா இருந்தப்ப இப்படிதான் உங்கள விளையாட விட்டாங்களா?”…. என்று என்னென்னவோ சொல்லி திட்டி தீர்த்து விட்டார்.
கோபத்தில் வெளிவந்த வார்த்தைகளை கேட்டு பசுபதி அம்மாயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அவர் பச்ச குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதார். ஆனால் என்ன? அந்த அழுகை அப்போது மட்டும் தான். பொழுது விடிந்தது; அப்பாவும் வீட்டில் இல்லை. குழந்தைகள் அரிசியை கேட்டு அடம் பிடித்தனர். அம்மாயி எப்போதும் போலவே மறுப்பு ஏதும் சொல்லாமல், எடுத்துக் கொடுக்கிறார். இது நித்தமும் தவறாமல் அரங்கேறியது. ஒரு மாதத்திற்கு பிறகு அப்பாவின் பார்வையில் தென்படுகிறது. இதனை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார்.
‘பிள்ளைகள் செய்தது தவறு’ என்று அவர்களுக்கு ஒருபோதும் புரியப் போவது இல்லை. ‘கேட்டதையெல்லாம் எடுத்து கொடுப்பதும் தவறு’ என்று அம்மாயி உணர்வதாகவும் இல்லை. அம்மாயி பிள்ளைகள் மீது கோபம் கொள்ளாததற்கும், தேம்பி அழுததற்கும் காரணம் தெரிய வேண்டின், ஒன்று நாம் சிறு பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது நமக்கு இந்த அம்மாயி போல வயதாகி இருக்க வேண்டும்! வயதான பின்பு பெரியவர்களும், வயதுக்கு வராத முன்பு உள்ள பிள்ளைகளும் சிறு குழந்தைகள் தான்!அவ்வகையில் பசுபதி அம்மாயும் ஒரு குழந்தைதானோ! என்று நினைத்து சமாதானம் அடைகிறார்.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

தாத்தாவின் பழைய வீடு|முனைவர் ஈ.யுவராணி |வாழ்வியல் கட்டுரை

தாத்தாவின் பழைய வீடு
     பள்ளிகூடம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் மலர். அங்கே அப்பா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். ‘அப்பா எனக்கு நிறைய அட்டை, கலர்பேப்பர், கலர்பேனா எல்லாம் வேணுப்பா’ “எதுக்கம்மா பள்ளிக்கூடத்துல ஏதாவது போட்டியா” போட்டியெல்லாம் இல்லப்பா, அந்தகாலத்துல வாழ்ந்த மக்களோட வீடுகள், அரண்மனை மாதிரி செய்து காட்டனும்ப்பா, அதுக்கு மார்க் உண்டுப்பா” ‘அப்படியா, சரிம்மா. அப்பா நாளைக்கு வாங்கி தாறேன்’. மறுநாள் எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்தார் அப்பா.
    பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய வீட்டு பாடங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு நேரங்களில் அப்பா வாங்கி தந்த பொருட்களைப் பயன்படுத்தி, அந்தக் காலத்து வீடுகள், அரண்மனை, கோவில், கிணறு என ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தாள் மலர். ஒருவாரம் கழித்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள். அதில் ஒரு அரண்மனை, சில வீடுகள், கிணறு, கோவில், தோட்டம் அமைந்திருந்தாள்.
        பின் தனது அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து, தான் செய்தவற்றை காட்டினாள். அதை பார்த்த அவர் ஆச்சரியப்பட்டு, மலரைத் தூக்கி முத்தமிட்டு, “ரொம்ப நல்லா செய்திருக்க, அப்படியே தத்ரூபமா இருக்கு” என்று பாராட்டினார். 
   மறுநாள், மலர் செய்து வைத்திருந்த மாதிரிகளைப் பள்ளியில் காண்பிக்க எடுக்க சென்றாள்.  அங்கே ஒரு மாதிரி வீடு உடைந்திருந்தது. அதை பார்த்த அவள் “அப்பா ஒரு மாதிரி வீடு உடைச்சிருப்பா மார்க் எல்லாம் போச்சு” என்று அழ ஆரம்பித்தாள்.  மலரை தூக்கி வைத்து “அழாதம்மா” என்று சமாதானப்படுத்தினார் அப்பா.  ‘அப்பா இதெல்லாம் நான் எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு, செய்தேன் தெரியுமா. அதுவுமில்லாம ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் கண் முழிச்சி இருந்து கஷ்டப்பட்டுச் செய்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சே’ என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தாள்.  மலரின் அப்பா, அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.  இதைப்பார்த்த பக்கத்து வீட்டு, தாத்தா மலரை கூப்பிட்டு, அந்த உடைந்த வீட்டை கொண்டுவரச் சொன்னார்.  ‘பாப்பா, அழக்ககூடாது, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அப்படி செய்றியா..?’
‘ம்ம்.. சரிதாத்தா சொல்லுங்க” ‘உடைஞ்ச வீடு பக்கத்துல தாத்தாவின் பழைய வீடுன்னு எழுதி வைச்சிடு. யாராவது கேட்டால்,, அது அந்த காலத்துல எங்க தாத்தா வீடா இருந்துச்சு. பெரிய மழையை பெய்தப்ப இடிச்சிருச்சுன்னு சொல்லிடு, மார்க்கெல்லாம் குறைக்க மாட்டங்க சரியா பாப்பா” என்றார் தாத்தா.  கண்களைத் துடைத்துவிட்டு, ஒரு அட்டையில் தாத்தாவின் பழைய வீடு என்று எழுதி, உடைந்திருந்த வீட்டில் ஒட்டிவைத்து. விட்டு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்றாள்.  ‘ஹலோ குட்டிப்பாப்பா ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அதை எப்படி சரி பண்ணலாம்னுதான் பார்க்கனும், அதை விட்டுட்டு அழதுக்கிட்டே இருந்தால் எந்தப் பயனும் இல்ல சரியா  என்று சொல்ல. ‘மம் சரி தாத்தா இனி அழமாட்டேன். பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன். ; டாட்டா தாத்தா” என பள்ளிக்கு உற்சாகமாகக் கிளம்பினாள் மலர்.
            செல்வம் என்பது நிறைய பணமும் பொருளும் வைத்திருப்பது அல்ல. இருப்பது போதும் என்ற மனநிலையில் இருப்பதே மகிழ்ச்சி தரும். எந்த ஒரு செயலை செய்யும் போதும், உடல் மனம் இரண்டும் இணைந்து முழு ஈடுபாட்டுடன், விருப்பத்துடன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.  ஆனந்தமாக இருப்பது மிகப் பெரிய பாக்கியம், சோகமாக இருப்பது, நமக்கு நாமே இழைத்து கொள்ளும் துரோகம். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தினால், மற்றவர்களைக் குறைகூற நேரம் இருக்காது.  பிறரிடம் இருந்து எதிர் பார்ப்பதுதான் ஏமாற்றம் வரக்காரணம்.  உங்கள் தேவைகள் அனைத்தையும் நீங்களே பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.  எதைப் பற்றியும் அளவிற்கு அதிகமாக யோசிக்கிற வியாதியே மிக பயங்கரமானது. நம்மையும் சந்தோஷமாக இருக்கவிடாது. சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடாது.  பொய் சொல்லி பிறரைக் கவர்வது வாழ்க்கை அல்ல. எவரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே வாழ்க்கை. சோர்ந்து போகும் மனதை, உற்சாகமூட்டும் வண்ணம் செயல்படுபவர்கள் இச்சமூகத்திற்கு மிகவும் தேவை.
     நாம் செய்யும் செயலில் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அந்தச் செயல் நமக்குப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பம் இல்லாமல் செய்தால் அது கடமைக்குச் செய்யும் செயலாகி விடும்.
சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். தன்னம்பிக்கை மனதில் இருக்கும் ஒரு மாபெரும் சக்தி. தன்னம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் பேச்சு, செயல், நடை உடை பாவனை மூலம் அறிந்து கொள்ளலாம்.  யாரெல்லாம் தமது தவறுக்கு அடுத்தவர் மீது பழி போடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவு வராது.  துரோகங்களை ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும் தருணங்களால், பேச்சின் வீச்சு குறைந்து மனம் ஆழ்கடலில் நிலவும் அமைதி ஞான நிலைக்குச் செல்கிறது.
            நல்ல நாளும், நல்ல நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. நம் செயல்களால் நாம் தான் உருவாக்க வேண்டும்.  உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது. ஆனால் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் அதை சிக்கல்களாக உருவாக்கி விடுகின்றன.  நமது கைபேசி  உலகத்தையே உள்ளங்கையில் காட்டுகிறது. ஆனால் உலகத்தை விட்டு நம்மை தனியே பிரித்து விடுகிறது. நாம் நம்மால் முடிந்த வேலையைக் கூட செய்யாமல், பிறர் உதவியை நாடுவதே பிரச்சினை வரக் காரணம். தவறாக செய்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பவருக்கு, நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே ,ல்லை.
            ஒரு பணியைச் செய்யத் தொடங்கிய பின் தோல்வி குறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.  இரண்டு வகையான மனிதர்களைக் காணலாம். எதையுமே சிறப்புற குறைவு இன்றி செய்யும் மனிதர்கள் ஒரு வகை. செய்தாக வேண்டுமே என்பதற்காக ஏனோ தானோவென செய்யும் மனிதர்கள் மறு வகை.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்.

ஈரோடு மாவட்டம் – 638 476

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

 

திருக்குறளில் ஊழ்|ர. அரவிந்த்|ஆய்வுக்கட்டுரை

திருக்குறளில் ஊழ்
முன்னுரை
                தமிழ் இலக்கியங்கள் நமக்கு கிடைக்கப்பெற்ற மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அதற்கு, பிறகு தோன்றிய இலக்கண, இலக்கியங்களில் வினைப்பற்றிய செய்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வினை என்பதற்கு ஒரு செயல் அல்லது தொழில் என பொருள். இவ்வினையை நல்வினை, தீவினை என வகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பது செயலின் விளைவாகவும், தொழிலின் பயன் எனவும் பொருள் கொள்ளலாம். இதனை, நற்பயன், தீப்பயன் என்றும் வகைப்படுத்தலாம்.
                மனிதன் நல்ல செயல்களை செய்தால் பயனாக நன்மையையும், தீய செயல்கள் செய்தால் தீமையான விளைவுகளை பெறுவான். இவ்வினையின் வினைப்பயனை நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும் என்ற கருத்தினை அனைத்து சமயங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. கிமு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை நம்பிக்கைகள் சமயத்தின் துணைக்கொண்டு பரிமாண வளர்ச்சி பெற்று கருத்தாக்கம் அடைந்திருக்கிறது. மேலும் தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினைப் பற்றியும், திருக்குறளில் ஊழ் பற்றியும் செய்திகளையும் விளக்கமாகவும் பின்வறுமாறு காண்போம்.
ஊழ்வினை – விளக்கம்
                ஊழ்வினை என்ற சொல்லை ஒரு வினைத்தொகை என்று எடுத்துக் கொண்டால் இச்சொல் ஊழ்ந்த வினை, ஊழ்கின்ற வினை, ஊழும் வினை என்று முக்காலத்தினையும் உணர்த்தும்.        
             ஊழ்  வினை ஸ்ரீ ஊழ்வினை
                அகராதியில் ஊழ் என்ற பகுதிச் சொல்லுக்கு முதிர்வு என்ற பொருளும் வினை என்பதற்கு செய்யும் செயல் என பொருள் தருகின்றது. எனவே ஊழ்வினை என்பது வினை முதிர்வு என்ற பொருளையே குறிக்கிறது. மேலும்,  பழைமை, பழவினைப்பயன், முறைமை, தடைவ, முடிவு, பகை, மலர்ச்சி, சூரியன் என்றும் பொருள் அகராதியில் கூறப்பட்டுள்ளது.
                ஊழ் என்ற பகுதிச் சொல்லுடன் முறை, விதி, வினை என்ற சொற்கள் சேர்ந்து ஊழ்முறை, ஊழ்விதி, ஊழ்வினை, ஊழ்வினைப்பயன், ஊழி என்ற சொற்களுக்கு முறையே வினைப்பயன்முறை, பழவினைப்பயன், பழவினை, கருமபலன், விதி என்றும் அகராதிகள் பொருள் கூறுகின்றன.
தொல்காப்பியத்தில் ஊழ்
                தொல்காப்பியம் இன்று தமிழ் நூல்களில் காலத்தால் பழைமையானது. தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துக் கொள்ள பெரிதும் துணைப்புரிவதோடு மட்டுமல்லாமல் ஊழ்வினை பற்றிய கருத்துகளையும் அறிந்துக் கொள்ள துணைபுரிகிறது.
ஊழ் என்ற சொல்லை ஓர் இடத்தில் மட்டும் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும்  இச்சொல் வினைபயனை குறிக்கப்பெறவில்லை, அதற்கு மற்று சொல்லாக பால் என்ற சொல்லாச்சியை பயன்படுத்தியுள்ளார்.
                தலைவனும் தலைவியும் இல்லறத்தில் வாழ்ந்து மறுப்பிறவியில் சேர்வதற்கும், பிரிவதற்கும் வினைப்பயனே காரணம் என்றும், தலைவன் தலைவி இருவருக்கும் கண்ட உடனேயே புணர்ச்சி வேட்கை தோன்றாது அவையும் வினையின் ஆணையின் படியாகவே நடக்கும் என அனைத்திற்கும் ஊழையே முன்நிறுத்துகின்றார்.
     “…பால தாணையின்…” எனும் 1037 – ஆம் நூற்பாவில் பால் என்ற சொல் ஊழ்வினை பொருளையே குறிக்கப்பயன்படுத்தியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் ஊழ்
                பதினென் மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் உற்றுநோக்கும் போது சங்க மக்களின் வாழ்க்கை, இறைகோட்பாடு, ஊழ்வினை போன்ற பண்பாட்டு கூறுகளை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
          எட்டுத்தொகையில் 83 இடங்களில் ஊழ் சொல்லையும் இதன் திரிபு சொற்களையும் காணமுடிகிறது. பத்துப்பாட்டில் 12 இடங்களில் வினைபற்றியும் 95 இடங்களில் ஊழ் என்ற சொல் பிற பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஊழ்வினையை குறிக்க அச்சொல்லிற்கு மாறாக உதிர்தல், மலர்தல், அலர்தல், முதிர்தல், சொரிதல், முறையே, பலமுறை, காரணம், பொருந்துதல், நிறம் வெளுத்தல், மாறி மாறி, முளைத்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
     ‘மக்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்து மரபைக் காப்பது ஊழே’ என்ற நம்பிக்கையிக் அடிப்படையிலேயே ஊழ்வினை பேசப்பட்டதே தவிர இறையியல் அடிப்படையில் பேசப்படவில்லை. இருப்பினும் இம்மை, மறுமை சிந்தனை சங்க மக்களிடம் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியே ஊழ்வினை நம்பிக்கை வளர தொடங்கியது எனலாம். சங்க காலத்தில் அகப்புற வாழ்க்கையின் அனுபவத்தின் அடிப்படையிலேயே ஊழ்வினை கேட்பாடு தோன்றியுள்ளதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது.
கம்பராமாயணத்தில் ஊழ்
                கம்பர் ஊழ் என்ற சொல்லையும் அதற்கு நிகரான விதி என்ற சொல்லாட்சியையும் 338 இடங்களில் வினையினைப்பற்றி பேசுகின்றார். மேலும் வினையை குறிக்க அருவினை, ஆய்வினை, இருவினை, ஊழ்வினை, ஏய்வினை, கருவினை, சூழ்வினை, தீவினை, தொல்வினை, மாயவினை,  மெய்வினை, வல்வினை, வெவ்வினை என்ற சொல்லாட்சியையும் கையாண்டுள்ளார். விதி வினை என்ற சொல் விதியில் வினை என்னும் சொல்லைத் தாங்கி நின்றாலும், ஊழ் விதிவசம் என்ற பொருளையே தருகின்றது.
பகவத்கீதையில் ஊழ்
                  பகவத்கீதையில் கர்மபந்தத்தை நல்லகர்மா, கெட்டகர்மா என்று இரு வகைப்படுத்தலாம். பொதுநலத்தில் இடுபாடுகொண்டுள்ளவர்கள் நல்லகர்மாவையும், சுயநலம் கொண்டவர்கள் கெட்டகர்மாவையும் உடையவர்கள் என் குறிப்பிடுகின்றது. மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் வேள்வியாக செய்தால் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறலாம் என்று பகவத்கீதையின் கருத்தாகும் இதனை, பதஞ்சலி முனிவர் ‘கைவல்யநிலை’ என பெயரிடுகின்றார்.
அயல்நாடுகளில் ஊழ்
                 கர்மாவைக் கிரேக்கர்கள் ‘விதி’ என்றும், சீனர்கள் (tao) என்றும் ஏ என்றும், பாலி மொழியில் ‘கம்மா’ என்றும், திபெத்தில் லாஸ் (Las) என்றும், ஜப்பானில் கோ அல்லது இங்கா (Go or Inga) என்றும் ஊழ்வினையினை குறிக்க பயன்படுத்தியுள்ளார்கள். எனவே வினையையும் வினையின் பயனையும் பிற நாட்டவர்களிடமும் இருந்திருக்கின்றது.
சமயக் காப்பியங்களில் ஊழ்
     காப்பியங்கள் ஒவ்வொன்றும் சமயங்களை தாங்கி நின்று அச்சமயத்தின் பண்பாட்டினை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிருகாப்பியங்களும் ஊழ்வினைப் பற்றியும், மறுபிறப்பு பற்றியும், ஊழ்வினையில் இருந்து விடுபடும் வழியையும் இதனால் பெறும் பயன்களையும் காப்பியங்கள் உணர்த்துகின்றது.
சைவத் திருமுறைகளில் ஊழ்
     கி.பி 2-ஆம் நூற்றாண்டிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் மக்களின் ஊழ்வினை நம்பிக்கை பற்றிய சிறந்த தெளிவான கருத்துக்களை காட்டுகின்றது. இறைவனை தொழுவதன் மூலமாக வினைப்பயளில் இருந்து விலகமுடியும் என் திருமுறைகள் உணர்த்துகின்றது.
பதினென் கீழ்கணக்கில் திருக்குறள்
                 பதினென் கீழக்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் தனக்கென தனியிடம் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் பண்பாடு, வாழ்கைமுறை, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துகளை தாங்கி நிற்கிறது.
                  திருவள்ளுவர் காலத்தினைப் பற்றி பல்வேறு கருத்துக்களள் இருந்தாலும் கிமு.31 – இல் பிறந்தார் என திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. சான்றாதரங்கள் வழி ஆராயும் பொழுது கிமு. 2-ஆம் நுற்றாண்டு முதல் கிபி. 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் திருக்குறள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிட முடிகிறது.
திருக்குறள் சமயம்
     திருக்குறள் அனைத்து சமயக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, எனவே திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் எனறும் உலக மக்களுக்கொள்ளாம் பொதுவான நூலாக திகழ்கின்றது.
திருவள்ளுவர் கூறும் ஊழ்
      திருவள்ளுவர் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் ஊழ் கேட்பாட்டை படைத்துள்ளார். ஊழ்வினை தொடர்பான செய்திகளையும் தம் குறள்வழி எடுத்துரைக்கின்றார். ஆனால் உரை எழுதியவர்கள் சிலர் உழிவினை கருத்தை ஏற்றும் சிலர் மறுத்தும் உரை எழுதியுள்ளார்கள். வள்ளுவர் ஊழ் அதிகாரத்தில் வினையைக் குறிக்க ஆகூழ், இழவூழ், உண்மை, தெய்வம், பால், போகூழ் என்ற சொற்களை தம் குறளில் பயன்படுத்தியுள்ளார்.
      வள்ளுவர் முன்வினை, பழவினை, கொள்கையுடையவர் என்பதற்கு 5இ 10இ 38இ 62இ 98இ 107இ 126இ 319இ 339இ 345இ 349இ 351இ 356இ 357இ 358இ 361இ 362இ 398இ 459இ 538இ 835இ 972இ 1002இ 1042இ 1318 ஆகிய குறள்கள் சான்றாக திகழ்கின்றது. வள்ளுவர் ஊழ்  நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதோடு மட்டுமின்றி ஊழ் பற்றிய நம்பிக்கை அவர் காலத்து மக்களிடம் இருந்தமையையும் காணமுடிகிறது.
ஊழ் அதிகாரம் கூறும் ஊழ்
    ஊழ் என்ற அதிகாரத்தில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை என்ற கருத்துக்களை தொடபுபடுத்தி ஊழ்வினையினை வள்ளுவர் தம் குறள் வழி விளக்குகிள்றார்.
     முதல் இரு குறளில் செல்வம், முயற்சி பற்றியும், மூன்றாவது குறளில் அறிவைப் பற்றியும், நான்காவது குறளில் செல்வத்திற்கும் அறிவிற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், ஐந்தாவது குறளில் நன்மை, தீமை பற்றியும், ஆறாவது குறளில் செல்வம் நிலையாமை பற்றியும், ஏழாவது குறளில் செல்வ நுகர்ச்சி பற்றியும், எட்டாவது குறளில் துறவு பற்றியும், ஓன்பாதவது குறளில் இன்ப, துன்ப துகர்;ச்சி பற்றியும், பத்தாவது குறளில் ஊழின் வலிமை பற்றியும், விளக்கி ஆள்வினை உடைமையில் முயற்சியால் ஊழயும் நீக்க முடியும் என்ற தன்நம்பிக்கையையும் விளக்குகின்றார்.
ஆகூழ், போகூழ்
“ஆகூழால் தொன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகூழ் தோன்றும் மடி” (குறள்: 371)
எனும் குறளில், ஊழில் நன்மை செய்வதை ஆகூழ் என்றும், தீமை செய்வதை போகூழ் என இருவகைபடுத்துகின்றார்.
      ஆகூழ்  ஸ்ரீ ஆகும் ஊழ் , ஆகல் ூ ஊழ், நல்வினைபயன். (முயற்சி, அறிவு, உண்மை, விளைவித்தல், பொருள் சேர்தல், அனுபவித்தல்)
     போகூழ் ஸ்ரீ போகும் ஊழ், இழக்கச் செய்யும் ஊழ், தீவினைபயன். (சோம்பல், பேதைமை, உண்மையின்மை, தீவினை, பொருள் அழிதல், அனுபவித்தலுக்கு இடையூறு)
அறிவு
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவு மிகும்” (குறள்: 373)
எனும் குறளில், மனிதனுக்கு இயல்பாக இரண்டு குணங்கள் அவை நற்குணம், தீயகுணம் இவை அடிப்படையிலேயே காணப்படுவது. அறிவு என்பதும் கல்வியால் அமையும் என்பார்கள், ஆனால் வள்ளுவர் கல்விகற்றாலும் இயல்பாக அமையப் பெற்ற அறிவே செயல்களில் மேலோங்கி நிற்கும் அதுவே உண்மையானஅறிவு என் கூறுகின்றார்.
செல்வம், அறிவு வேறுபாடு;
     மனிதனுடைய செல்வத்திற்கும், அறிவிற்கும் தொடர்பில்லை. இவை இரண்டையும் தேடுகின்ற முயற்சி வேறுவேறாக இருந்தாலும் இரண்டையும் நல்லூழால் மட்டுமே பெற முடியும். இவற்றை,
“இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தௌ;ளியர் ஆதலும் வேறு” (குறள்: 374)
எனும் குறளில், இல்லறத்தார் தேடுவது பொருள், துறவறத்தில் இருப்பவர் விரும்பி முயன்று பெறுவது தெளிவான அறிவாகும் எனவே இரண்டும் வேறுபாடு கொண்டவை என்கிறார்.
நன்மை, தீமை
     செல்வம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற பொழுது ஏற்படுகின்ற இடையூறுகள் கூட அவனுக்கு நல்லூழ் இருந்தால் நன்மையாகமாறும், தீயூழ் இருந்தால் செயலில் பாதகமாக முடீயும் என்று,
“நல்லவை எல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு” (குறள்: 375)
எனும் குறளில் குறிப்பிடுகின்றார்.
செல்வம் நிலையாமை
“பரினும் ஆகாவாம் பாலல்ல்  உய்த்துச்
சொரியினும் போகா தம” (குறள்: 376)
எனும் குறளில், மனிதன் பெற்றுள்ள அனைத்து செல்வங்களும் ஊழின் அடிப்படையிலேயே நிலைத்து நிற்பதும், நிலைக்காமல் போவதும். ஊழே என காரணம்காட்டுகின்றார்.
செல்வ நுகர்ச்சி
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
 தொகுத்தார்க்கும் துய்ந்தல் அரிது” (குறள்: 377)
எனும் குறளில், ஒருவன் கோடிக்கணக்கான செல்வத்தை பெற்றவனாக இருந்தாலும் கூட அவன் செய்த ஊழ் வினையின் அடிப்படையிலேயே செல்வத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்.
துறவு
“துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்” (குறள்: 378)
எனும் குறளில், “உலகில் உறவுக்கும், துறவுக்கும் ஊழ் வேண்டும்” அனைத்து பொருள்களை விழைந்து போற்றாமல் யாவற்றையும் துறப்பதே துறவாகும். உயிருக்கு உய்தி தருகிற துறவு யாருக்கும் எளிதில் கிட்டுவதில்லை, நல்லூழ் உடையவனுக்கே நலமாய்க் துறவு கூடிவரும்.
இன்பம், துன்பம் நுகர்ச்சி
“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?” (குறள்: 379)
எனும் குறளில், ஒருவன் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என எண்ணிவிட்டல் துன்பங்கள் பெரியதாக தோன்றாது. ஊழ் வகுத்தபடி வரும் இன்பத்தையும், துன்பத்தையும் அனைவரும் நுகர்ந்தே ஆக வேண்டும். வேறுவழியில்லை அதை மாற்றி அமைக்கவும் முடியாது என் கூறுகின்றார்.
ஊழ்வினை வலிமை
“ஊழிற் பெருவழி யாவுள மற்றொன்று
சூழனும் தான்முந் துறும்” (குறள்: 380)
என்ற குறளில், ஊழைவிட வலிமையானது எதுவுமில்லை. அப்படிபட்ட ஊழை வெல்ல நினைத்தால் அவனுக்கு முன்நின்று அவனது முயற்சியை முந்தி நிற்கும் ஆற்றல் கொண்ட ஊழ் என வலிமையை குறிபிட்டுள்ளார்.
     ஊழின் வலிமையை கூறிய வள்ளுவர் பொருட்பால், ஆள்வினை உடைமையில்,
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” (குறள்: 620)
எனும் குறளில், ஒருவன் இடைவிடாது  முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிடலாம். இக்கருத்தை மேம்போக்காக பார்த்தால் முன்னுக்கு பின் முறணாகவும் தோன்றும். ‘உப்பக்கம்’ என்றால் முதுகுப்பக்கம் ஊழை புறமுதுகிட்டு ஓடச் செய்தல் என பொருள் படுகிறது.
      இப்பிறப்பில் மேற்கொள்ளும் நல்லூழ் முயற்சியால் அடுத்த பிறவியில் நலமாய் வாழ வள்ளுவர் ஊழை விலக்குவதற்கும், அதனை அகற்றுவதற்கும், மாற்றுவதற்கும் மனிதன் முயற்சி செய்தால் ஊழ் அவன் முயற்சியை வென்றுவிடும். இந்த உண்மையை உணர்ந்தால் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தீவினைபயனான துன்பத்தை அனபவித்து விடமுயற்சியால்  நல்லூழ் செய்து ஊழை இப்பிறவியில் அல்லாது மறுபிறப்பிலாவது குறைத்து வீடுபேற்றை பெறவும், அனைவருக்கும் விடமுயற்சியை முன்நிறுத்துகின்ற வகையிலேயே இக்குறள் அமைந்துள்ளது.
முடிவுரை
     தமிழ் இலக்கியத்தில் பல நூல்களில் ஊழ்வினை கருத்துக்களை கூறியிருப்பினும் திருக்குறளில், அனைத்து சமயங்களும் எற்றுக்கொள்ளும் வகையில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை போன்ற கருத்துக்களுடன் தொடபுபடுத்தியும், நல்வினைப்பயனையும், தீவினைப்பயனையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல். நல்லூழ் துணைக்கொண்டு இவ்வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை அனுபவித்து கடமைகளை உணர்ந்து,  அச்சத்தின் விளைவாக புதிய குற்றங்களை செய்யாமல் இடைவிடாத முயற்சியால் நல்லூழை செய்து இப்பிறவியில் இல்லையெற்றாலும் மறுபிறவியில் நல்வினையின் பயனால் சிறுக சிறுக ஊழை குறைத்து வீடுபேற்றை அடையும் வழியினையும், சமூகத்தில் தீய செயல்களை தடுக்கும் வகையிலும் ஊழ்வினை கருத்துக்களை விளக்கியும். விடமுயற்சியால் இருந்தால் ஊழ்வினையை புற முதுகு காட்டி ஓடவைக்க முடியும் என்று முயற்சியை வழிவுருத்தும் வகையில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

கிருகபதி – கிருகிணி |கவிதை|பிரபுவ

கிருகபதி - கிருகிணி

கிருகபதி – கிருகிணி

இரவெல்லாம் ஜொலித்த

விண்மீன்களை மறைத்து

காரிருளை விளக்கிட

கீழ்திசையில் சுடர்மிகும்

பொலிவுடன் ஒளிர்ந்தே

புதுப்பிறவி எடுத்து

பிறந்தது ஆதவன்!

 

எங்கோ பிறந்து

எங்கோ வளர்ந்து

நிலையில்லா உலகிலே

நிலையில்லாத ஒன்றைத்தேடி

நித்தம் நித்தம்

நிலையில்லாது அலைந்து

அநாதையாய் இறுதியில்

ஆதரவில்லாது  இறந்திட்டார்

அங்கே ஒருவர்.

 

இழவுவீட்டில் ஒலித்ததே!

தாரை தப்பட்டைகளின் சத்தம்

மெல்லிய கீதமாக இசைத்ததே

எங்கோ தூரத்திலிருந்து.

 

பத்துவீடுகள் தள்ளியிருக்கும்

பெரியதொரு மழைமரத்தின்

கிளையிலே குடியிருந்த

உயிரினங்கள் யாவுமே

பொழுது விடிந்தது;

பொழப்பை பாருங்களென்றே

ஆர்பரித்து கூச்சலிட்டது.

 

பக்கத்து வீட்டு நீர்க்குழாயில்

வைத்த குடம் தண்ணிர்

வழிந்து ஜோவென்று

அழுது கொண்டிருக்க,

 

வீட்டின் உள்ளே உள்ள

மின்விசிறியானது

இளந்தென்றல் காற்றை

நுழையவிடாது

ட்டட, ட்டட என்றே

தடைபோட்டே தாளமிட்டது.

 

கடந்துசெல்லும் நேரத்தை

காணமுடியாது போயினும்

காதுகளால் உணர்த்திடவே

டிக், டிக், டிக் என்று

கடிகார முள் ஓசை

செவிகளை செவிடாக்காமல்

ஓசை எழுப்பியது.

 

சமையலறையில் மிக்சி

ஒருபுறம் உய்ய்ய்ய்ய்…

என்று எரிச்சலூட்டிட

குக்கர் மறுபுறம்

உச்ஷ்ஷ்ஷ்…

என்று கடுப்பேத்தியது.

 

இப்படி அனைத்தையும்

கேட்டு கொண்டே

படுக்கையிலே இருந்து

பாதி துயில் தெளிந்து

மீதி துயில் தெளியாது

கிரக்கத்தில் இருந்தார்

கிருகபதி என்னும்

மாண்புமிகு தலைவன்!

 

அப்போது கிருகிணி என்னும்

மானமிகு தலைவி

பக்கம்வந்து பக்குவமாய்

படுக்கையிலே அமர்ந்து

இதமாக உரசினாள்!

இனிதே காலை

ஸ்பரிசத்தை அனுபவித்திட.

 

பட்டென்று கோபம்

பத்திக்கொண்டு வந்திடவே!

எழு, தூரம் சொல்!

தூக்கம் கலைக்காதே!

தொலைந்துபோ, சனியனே!

என்று அப்போது

சிடுசிடுத்தான் கிருகபதி.

 

என்னது? எங்க? கொஞ்சம்

இன்னொருமுறை

சொல்லுங்க? பார்க்கலாம். 

உம்பல்லை உடைத்து

உம்கையில் கொடுத்திடுவேன்!

 

மாலைநேர மயக்கத்துக்கு

மதுவாகிய நான்!

காலைநேரம் வந்ததும்

சனியனாகி விட்டனோ!

 

மாலைமாயமாய் போனதும்

காலை பொழுதில்

காரியமொன்றும் இல்லாதுபோமோ!

காரியம் ஆகும் வரை

கண்ணே! கண்மணியே!

கலைமகளே! கட்டிக்கரும்பே!

என்றே என்னை வர்ணித்து

புகழ்பாடி கால்களை

பிடித்து அமுக்கி

காரியம் சாதித்திட்டீர்!

 

காரியம் முடிந்ததும்

ஏனோ இப்போது

கண்ணால் பார்க்கவும்

கதியில்லாத கலையிழந்த

மகளாகி போனேனோ!

 

நீர்! நல்லா ஞாபகம்

வைத்துக் கொள்ளும்!

மாலைநேரம் மீண்டுவரும் – உமக்கு

மதி மயங்கும் மயக்கமும் வரும்

எனக்கு நல்ல தூக்கமும் வரும்.

 

அப்போது உம்மைப்

பார்த்துக் கொள்கிறேன்.

எட்டியுதைக்கும் கழுதையா மாறியே

எட்டி எட்டி உம்மை உதைக்கிறேன்.

வாருங்கள் பார்க்கலாம் என்றே

மணம்புரிந்த மணவாளனிடம்

மல்லுக்கு நிற்கபோவதில்லை.

 

மனதில் தோன்றியதை

மனதோடு புதைத்துச்

சொன்னாள்.

 

ஆசையாய் அருகில் வந்தால்

ஆசையை காட்டும். அல்லவே!

அமைதியாய் இருந்திடும்.

 

வன்சொல் தவிர்த்து

இன்சொல் பேசிடுவீர்!

இன்சொல்லே மீண்டும்

உம்மை தேடி வரும்.

 

காரண காரியம் ஏதுமின்றியே

வாழ்வதாகவே உறுதிக்க்கொண்டு

கரம்பிடித்தீர்; கண்அவனாக.

பிரபஞ்சம் முழுவதுமுள்ள

இன்சொல் யாவும்

இனிதே வந்து சேரும் உம்மையே!

என்றாள் கிருகிணி!

 

 குறிப்பு

கிருகபதி – இல்லறத்தான்; குடும்பத்தலைவன்

கிருகிணி – இல்லாள்;

குடும்பத்தலைவி

மழைமரம் – தூங்கமுஞ்சி மரம்

ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

 

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

 

சந்திரப்பூவா | திருமதி நித்யா லெனின்| சிறுகதை

சந்திரப்பூவா - நித்யா லெனின்

  சந்திரப்பூவா

       கிழக்குப் பாத்த வாசப்படி. காலையில வெயில் அடிச்சுதுன்னா நேரா வீட்டுக்குள்ளே சுள்ளுன்னு அடிக்கும். தென்னங்கீற்றால் பின்னப்பட்ட குடிசை வீடுதான் சந்திரப்பூவாவின் வீடு. வீட்டுக்கு முன்னால் சின்னதாய் களம். இடதுப்பக்கம் தண்ணீர் தொட்டியும் குளிக்க சின்னதாய் மறைவு இடமும் உண்டு. அந்தத் தண்ணீர் வீணாவதைத் தடுக்க வாழை மரங்கள்,  செம்பருத்தி செடி, மருதாணி செடிகளின் வேர்களில் பாய்ந்து செல்லும். வலதுபக்கம் கூடாரகூடாரமாய் சாணங்கள் கொட்டிக்கிடக்கும்.  இடப்பக்கம் வீட்டின் வாசற்படி குறுகியபடிதான் இருக்கும். வாசற்படியை அடுத்து வலதுபக்க சுவர் முழுவதும் சாணத்தால் தட்டிய வரட்டி குண்டாலம் குண்டாலமாக வட்டமாய் பதிந்து இருக்கும். அந்த வீட்டின் சுவரானது எப்போதும் வரட்டியைச் சுமந்த அமாவாசையாகவே காட்சி அளிக்கும்.
     இப்போது கூட சந்தரப்பூவா சாணியைத்தான் தட்டிக்கொண்டிருக்கிறாள். சின்ன கூடையில் ஒரு அளவாகச் சாணத்தை எடுத்துக் கொள்வாள். லேசான தண்ணீர் தெளித்துக் கோதுமை மாவு பிசைவதுபோல் நன்றாகப் பிசைந்து கொள்ளுவாள். பிறகு சமநிலையாக ஒவ்வொரு உருண்டையாகப் பிடித்துக் கொள்வாள். ஒரு கூடையில் சுமார் இருபதிலிருந்து இருப்பத்தைந்து வரையிலான உருண்டைகள் வரும் அளவிற்கு பிடித்துக்கொள்கிறாள்.
      பிடித்து வைத்திருந்த உருண்டைகளைச் சுவற்றின் ஒரு ஓரத்திலிருந்து தட்டிக்கொண்டே வர வேண்டும். சந்திரப்பூவாவும் உருண்டை சாணத்தை எடுத்து செவுத்திலே அறைந்து நன்றாகத் தட்டி சாணத்தை விரித்துக் கொள்வாள். அதன்பிறகு தட்டிய சாணத்தை எடுத்து வரிசையாகச் செவுத்திலே காயவைத்து விடுவாள். இன்றைக்கு என்னவோ தெரியவில்லை சந்திரப்பூவாவின் எண்ண ஓட்டங்கள் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்க கைகள் மட்டும் தானாக வரட்டி தட்டிக்கொண்டிருந்தது.
“சந்திரப்பூவா என்ன பன்ற” பக்கத்து வீட்டுக் கிழவி ஆராயிதான் நலம் விசாரித்தாள். ஆராயி ரெண்டு மூனு கூப்பாடுக்குப் பிறகே நினைவு திரும்பியவளாய்,
“ஏய் கிழவி! நான் என்ன பன்றன்னு உனக்கு தெரியல” என்றாள்.
“தெரியுது.. தெரியுது… ஆனா உடம்பு இங்கிட்டுதான் இருக்கு. மனசுதான் எங்க இருக்குன்னு தெரியல. உருண்ட புடிக்கிற கை நோவப்போவுது பாத்துப் பதுமானமா புடி புள்ள” ஆராயி கிளவியின் பேச்சில் விஷமம் இருந்தது.
“கிழவி.. அதெல்லாம் ஒன்னுமில்ல. நீ ஏதோ அதுஇதுன்னு சொல்லியிட்டு திரியாத..”
“உங்க அம்மாவுக்கு பிரசவம் பாத்ததே நான்தான். எனக்கு தெரியாதா உன்னபத்தி. நீ பொறந்ததுல இருந்தே நான் உன்ன பாக்குறன்.  உனக்கு என்ன புடிக்கும். புடிக்காதுன்னு.. உன் மூஞ்ச பாத்தாலே தெரியும். என்னான்னு சொல்லு புள்ள?” என்றாள் ஆராயி கிழவி.
“நான் என்ன நினைக்கப் போறான். எல்லாம் என்னோட பையன் செல்வத்தப் பத்திதான். அவன நல்லா படிக்க வைக்கனும். நல்லா வளக்கனும். அதான் நினைச்சன். மனசெல்லாம் இருக்கமா ஆயிடுச்சி. எப்படின்னுதான் தெரியில” சந்திரப்பூவாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கரைய பேசினாள்.
“கவல படாத சந்திரப்பூவா… உனக்கும் உம்பிள்ளைக்கும் ஒரு குறையும் வராது. கடவுள் இருக்கிறாரு..”
“ஆமா! பொல்லாத கடவுள். என்னப்பாரு இருபத்தாறுலேயே தாலிய அறுத்திட்டு ஒத்தையில நிக்குற..”
சந்திரப்பூவா கருப்பும் செவப்பும் கலந்த மாநிறம். நல்ல அழகான தோற்றம். யாரையும் தன் பக்கம் இழுக்கும் பார்வை. நல்ல மனசுக்காரி. சந்திரப்பூவா அம்மா தன்னுடைய தம்பிக்குத்தான் கல்யாணம் பண்ணி வச்சா. அவனும் அவளும் நல்லாதான் வாழ்ந்தாங்க. கல்யாணம் ஆகி ஆறு மாசத்துல ஒரு சொந்தகாரங்க கல்யாணத்துக்குப் போயிட்டு வரப்ப அம்மாவும் புருசனும் விபத்துல இறந்துட்டாங்க. சந்தரப்பூவா மட்டும் ஒத்தையா தனியா இருந்தா. அப்ப அவளுக்குத் தெரியாது வயித்துல குழந்தை வளந்திட்டு வருதுன்னு.. சின்ன வயசுக்காரி.  குழந்தைய பெத்து எடுத்தா.. குழந்தைதா எல்லாமுமேன்னு நினைச்சா..
பலதடவை நான் சொல்லிட்டேன். நீ வேறவொரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்பெல்லாம் இது சகஜம்ன்னு. ஆனா புடிவாதமா மறுத்துட்டா சந்திரப்பூவா… தன்னுடைய குழந்தைய நல்லா வளக்கனுமுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பா.. நானும் சந்திரப்பூவாவை அப்பப்ப அவளுடைய வயச ஞாபகப்படுத்திற மாதிரி ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டேதான் இருப்பேன். ஆனா அவ பிடிக்கொடுத்துப் பேசுற மாதிரி தெரியில…  சந்திரப்பூவாவுக்கு அப்படி என்ன வயசாயிடுச்சி. ஒரு முப்பதுதான் இருக்கும். இந்தக்காலத்துல இன்னும் முப்பது வயசாகியும் கல்யாணமே பண்ணிக்காத எத்தனையோ பொண்ணுங்க இருக்கத்தானே செய்யுறாங்க.. இவுளுக்கு மட்டும் என்னவாம்! ஒரு மாதிரியாய் சந்திரப்பூவாவைப் பார்த்துக் கொண்டு அனுதாப்பட்டாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி! என்ன பாத்து ரசிச்சது போதும். உனக்கு என்ன வேணுமுன்னு சொல்லு. அதுக்குதான என்ன தேடி வருவ” என்றாள் சந்திரப்பூவா
”அடியே அமுக்கு கள்ளி! ஏதோ பேத்திக்கிட்ட ரசம் கொஞ்சம் வாங்கிட்டு போகலாமேன்னு வந்தேன். நீ என்னான்னா ரொம்பத்தா பீத்தீக்கிற.. போடி இவளே..” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு போகத்தயாரானாள் ஆராயி கிழவி.
“ஏய் கிழவி நில்லு. ரொம்பத்தான் பன்ற. நான் உன்ன திட்டாம வேற யாரு திட்டுவா. நீ செத்தா நான்தான் உன்ன தூக்கிப்போடனும். தெரிச்சிக்கோ.. உம் பசங்களா வரப்போறாங்க.. சரி.. சரி… கத்திரிக்காயைச் சின்ன வெங்காயம் போட்டுக் குழம்பு வச்சிருக்கேன். எடுத்துட்டுப் போ… என்றாள் சந்திரப்பூவா.
ஆராயி கிழவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் அப்பதான் மகனைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். செல்வம்… செல்வம்… என்று கத்தினாள். சாணிக்கூடையில் உட்காந்து கொண்டு சாணத்தை மேலும் கீழும் தன்னுடைய உடம்பிலே அப்பியபடி அம்மாவைப் போன்று தானும் பிஞ்சுக் கைகளினால் சாணத்தை உருண்டைப் பிடித்துக் கொண்டிருந்தான் மூன்று வயதே ஆன செல்வம்.
சந்திரப்பூவாவுக்கு மகனைப் பார்த்தமாத்திரத்தில் கோவம் ஒன்றும் வரவில்லை. ஆனால் அவனை எப்படி குளிப்பாட்டி சாணத்தின் வாசனையைப் போக்குவது என்பது பெரும்பாடாய் இருந்தது. அன்னபேஷன் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அதன் உள்ளே செல்வத்தை ஒரு அமுக்கு அமுக்கினாள். செல்வத்தின் உடம்பில் ஒட்டியிருந்த  சாணம் முழுவதும் தண்ணீரோடு கலந்தது. மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு மீண்டும் தண்ணீர் தொட்டியிலிருந்து அன்னபேஷன் நிறைய தண்ணீர் எடுத்து வந்து மகனை அதனுள் உட்கார வைத்தாள். செல்வம் தண்ணீரை அடித்துக் கொண்டு விளையாடினான்.
சந்திரப்பூவா இப்பல்லாம் தனிமையா இருக்குறதா கொஞ்சம் கூட நினைக்கிறதே இல்ல. ஏன்னா அவக்கூட செல்வம் எப்பவும் ம்மா.. ம்மா… ன்னு உடம்போட ஒட்டிக்கிட்டே இருப்பான். கணவனும் அம்மாவும் செத்துப் போனப்ப உலகமே இருண்டதா நினைச்சவ. தனக்கு யாரும் இல்லன்னு அநாதையா உணர்ந்தவளுக்குத் தன் வயித்துல குழந்த இருக்கிறத தெரிஞ்சவுடனே ஒரு புதுதெம்பு வந்து வாழனுமுன்னு ஆசையும் வந்துடுச்சி.  அந்த ஊருல கிடைச்ச வேலைக்குப் போவா.. கொடுக்கிற காச வாங்கிட்டு வந்து பொங்கி திம்பா… அவ்வளுவுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்கை.
சந்திரப்பூவாவின் வீட்டு முன்னால இருக்குற சாலையில் ஆடு மாடுகள்ன்னு வந்து போகும். அதுங்க போடுற சாணத்த எடுத்துட்டு வந்து வரட்டியா தட்டி காய வைப்பா. அப்படி காயவச்ச வரட்டிய அடுப்புக்கு விறகா பயன்படுத்திக்குவா.. அடுப்புக்கான விறகுக்கு எங்கு போவா சந்தரப்பூவா.. அதான் இப்படி கிடைக்கிறத வச்சி வாழ பழகிட்டா.
சந்திரப்பூவாவைப் பார்த்த மற்ற பெண்களும் சாணத்தில வரட்டி தட்டி காய வச்சாங்க. அத அடுப்புக்கும் பயன் படுத்திக்கிட்டாங்க.. ஆனா இது எது வரையில்? கொஞ்ச நாளைக்கு மட்டும்தான். ஏன்னா சாணம் நாத்தம்.. அழுக்கு.. தொடும்போது ஒருவகையான முகசுளிப்பு. இதனால வரட்டி தட்டுன ஒவ்வொரு பெண்களும் அத நிறுத்த ஆரமிச்சாங்க. ஆனா சந்தரப்பூவாவுக்கு அப்படியில்ல. இதுதான் வாழ்க்கை. சாணத்த அழுக்கா நினைக்கல. நாத்தமா நினைக்கல.. முகம் சுளிக்கல.. தனக்கு கிடைச்ச தொழிலா பாத்தா சந்திரப்பூவா…
ஒவ்வொரு ஆடு, மாடுகள் இருக்கிற வீடா சென்று சாணத்த காசுக்கு வாங்கின. வாங்கிய சாணத்த தவிட்டுடன் சேர்த்து வரட்டி தட்டுனா… நல்லா காய்ஞ்சு போன வரட்டியை ஐஞ்சு ரூபாய்க்கு ஒன்னுன்னு வித்தா.. கிராமத்துல கொஞ்சம் கம்மியாப் போனாலும், நகரத்திற்குக் கூடையில் கொண்டு வந்து வித்திட்டுப் போனா சந்திரப்பூவா. ஒருநாளும் வரட்டிய விக்காம மட்டும் வரமாட்டா. சந்தரப்பூவா கெட்டிக்காரி. நல்லா சத்தம் போட்டுக் கூவிகூவி விப்பா. நகரத்துக்காரங்க அடுப்பெரிக்க விறகுக்கு எங்க போவாங்க.. பால் காய்ச்சனுமின்னா ஒரு வரட்டி இருந்தா போதும். பால் காய்ச்சிடலாம். சோறு பொங்க மூணு, குழம்பு வைக்க மூணுன்னு கணக்குப் பண்ணிடலாம். அதனால சாண வரட்டியும் மலிவு விலையில விக்கிறதுனால பெரும்பாலும் மக்கள் வாங்க ஆரமிச்சாங்க. இந்த வரட்டி அவங்களுக்கு ரொம்ப உதவிக்கரமா இருந்துச்சு. அப்பெல்லாம் ஆராயி கிழவிதான் செல்வத்தப் பாத்துப்பா..
அடுப்பெரிக்க மட்டுமில்லாது செடி கொடிகளுக்கு உரமாகப் போடுவதற்கும் இந்த வகையான வரட்டிகள் மக்களிடத்தில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. அதிலையும் சந்திரப்பூவாவினுடைய வரட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. சாணத்தைத் தவிட்டிலே உருட்டி வரட்டியாக உருப்பெறும்போது நெருப்பிலே போட்டால் இன்னும் வேகமாக எரியும். அந்த வரட்டி தட்டுன தொழில்ல கொஞ்சகொஞ்சமாய் காசு சேர ஆரமிச்சது சந்திரப்பூவாவுக்கு. மகனை பள்ளிக்கூடத்துல சேர்த்துப் படிக்க வச்சா. தன்னோட வாழ்க்கை இப்படியே நல்லா போகனுமுன்னு கடவுள வேண்டிக்கிட்டா. மனுஷ வாழ்க்கையிங்கிறது இன்பமும் துன்பமும் நிறைந்ததுதானே.. அவளோட வாழ்க்கையும் அப்படித்தான் ஆச்சு.
காலச்சக்கரம் சுழல ஆரமிச்சது. கொஞ்ச நாள்ளயே மக்களிடத்திலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் அடுப்புக்குப் பதிலா கேஸ்ஸிற்குப் போக ஆரமித்தார்கள். பெண்கள் அடுப்பின் முன்னால் உட்கார தேவையில்லை. விறகையோ சாணத்திலான வரட்டியையோ அடுப்பிலிட்டு ஊதுகுழலினால் ஊத வேண்டியதில்லை. கண்களில் புகை அடித்து யாரும் அழ வேண்டியதில்லை. புகை சேராமல் இருமலுக்கு மாத்திரைகள் வாங்க வேண்டியதில்லை. சிவப்பு நிறத்திலான உருண்டை வடிவிலான குழலினைக் கண்ணைக் கவரும் சில்வரில் உள்ள இரண்டு அடுப்புள்ளதோடு இணைத்துவிட்டால் போதும். சிலிண்டரின் மேல் இருக்கக்கூடிய திருகியை மேலே தூக்கிவிட்டால் அடுப்பு எரியும். கீழே இறக்கி விட்டால் அடுப்பு அணைந்து போகும். சிலிண்டர் வந்த நேரங்களில் மக்களிடத்தில் எங்கே சிலிண்டர் வெடித்து இறந்து விடுவோமோ என்று கொஞ்சம் பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் காலப்போக்கில் எல்லாம் மறைந்து அனைவரும் சிலிண்டர் அடுப்பையே விரும்பி சமையலுக்குப் பயன்படுத்த ஆரமித்தனர்.
சந்திரப்பூவாவின் தொழில் முன்னே மாதிரி இப்போது இல்லை. அன்னபேஷனில் வரட்டியை எடுத்துக் கொண்டு எங்கும் விற்பனை செய்வதில்லை. ஆங்காங்கு யாரோ சிலர் மட்டும் சந்திரப்பூவாவிடம் வந்து வரட்டியை வாங்கி செல்கிறார்கள். அதுவும், வீட்டிற்கு முன்னால் குளிப்பதற்கென வைத்திருந்த அடுப்பில் வரட்டியைப் போட்டு எரிப்பார்கள். கரும்பு ஆலைகளிலும் வரட்டியைப் பயன்படுத்தி வந்தனர். சந்திரப்பூவா கையில் இருந்த காசும் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைய ஆரமித்தது. கிராமத்தில் கிடைத்த வேலைக்குச் செல்ல ஆரமித்தாள். பயிர் நடுவாள், களை பறிப்பாள், மண்ணு சுமப்பாள், எருவு அள்ளுவாள், வாய்க்காலுக்குத் தண்ணீர் கட்டுவாள். இந்த வேலைக்குத்தான் போகனுமின்னு இல்ல. எல்லா வேலைக்கும் சந்திரப்பூவா போனாள். ஏன்னா அவளும் அவளுடைய மகனும் சாப்பிடனும்மில்ல. சரி வேலையும் தினமும் இருக்குமா என்ன? வேலைக்குப் போனாலும் கூலிய உடனேவா கொடுத்திருவாங்க.. இப்படி அப்படின்னுதான் சந்திரப்பூவாவின் வாழ்க்க ஓடிச்சி.
“அம்மா பென்சில் வாங்கனும்” – என்றான் மகன் செல்வம்
“அதான் போனவாரம் வாங்கிக்கொடுத்தேனே” சந்திரப்பூவா
“நீ வாங்கி கொடுத்த பென்சில் கூறு உடைஞ்சி உடைஞ்சி போயுடுது. அதான் சீக்கிரம் தீர்ந்திடுச்சி. இதோ பாரு“ என்று கையில் இருந்த குட்டீயூண்டு பென்சிலை அம்மாவின் முன்பு நீட்டினான் செல்வம்.
“அதெப்படிடா உடையும் நீ கூறு சீவிசீவி உடைச்சிருப்ப.. மூஞ்சப்பாரு.. வாங்கி தரவளுக்குத்தான கஷ்டம் தெரியும். உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்?” கோவத்தோடு செல்வத்தைப் பார்த்துக் கண்களை உருட்டி கத்தினாள்.
உண்மையாலுமே பையன் கொஞ்சம் பயந்துட்டான். செல்வத்தின் கண்களில் கொஞ்சமாய் கண்ணீர் துளிகள் நிரம்ப ஆரமித்தது. அப்போதுதான் ஆராயி கிழவி வீட்டினுள்ளே நுழைந்தாள்.
“ஏண்டி சந்திரப்பூவா ஒத்த மகன வச்சிகிட்டு அவன் அழுவுற மாதிரி திட்டிக்கிட்டு இருக்கிற. அவன் படிக்கிறதுக்குத்தான கேட்குறான். மத்த புள்ளையங்க மாதிரி எனக்கு இது வேணும். அது வேணும்முன்னா கேட்குறான். நீ கொடுக்கிறத சாப்பிட்டுக்கிட்டு உன்ன கட்டுப்புடிச்சிக்கிட்டே தூங்கிடுறான். அவன போயி திட்டுறியே.. உனக்கு அறிவு இருக்கா புள்ள” என்றாள் ஆராயி கிழவி.
சந்திரப்பூவா தன்னுடைய சேலை தலைப்பை வாயில் வைத்துக் கொண்டு அழ ஆரமித்தாள். “கிழவி நான் என்ன பண்ணுவேன் சொல்லு. இருந்தாதானே அவனுக்கு வாங்கித்தர முடியும். இந்த வேள சோத்துக்கு வீட்டுல தண்ணிய தவிர வேற ஒன்னுமில்ல. வயித்துப் பசியில வயிறு கிள்ளுது. நானும் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க கிட்டலாம் கடனா வாங்கிட்டேன். இனிமேலும் அவுங்க கிட்ட என்னான்னு கேட்குறது. அவனோட அப்பனும் பாட்டியாளும் எனக்கு இந்த வீட்ட தவற என்ன சொத்துச் சேர்த்து வச்சிட்டு போனாங்க.. நீயே சொல்லு கிழவி…” பொறுமினாள்.. ஆதங்கப்பட்டாள்.. வேதனைப்பட்டாள் சந்திரப்பூவா.
செல்வத்தைத் தன்னுடைய மடிமீது வைத்துக் கொண்டிருந்த ஆராயி கிழவியால் அழ முடியுமே தவிர வேறென்ன பண்ண முடியும் சந்திரப்பூவாவுக்கு. தலையை மட்டும் ஆட்டினாள். கிழவிக்குத் தெரியாதா சந்திரப்பூவாவின் வாழ்க்கைய பத்தி.
“இந்தாக் கிழவி என்னுடைய கையப் பாறேன். நீ எத்தன தடவ என்னுடைய கைகளுக்கு மருதாணி வச்சி விட்டுருப்ப.. இப்படியா இருந்தது. இந்தச் சாணிய அள்ளி அள்ளி பிசைந்து பிசைந்து என்னோட கை எப்படி ஆயிடுச்சிப் பாரு” என்று ஆராயி கிழவி முன்பு தன்னுடையக் கைகளை நீட்டினாள்.
சிவந்து பஞ்சு போன்ற கைகள் இப்போது தடித்து ஆங்காங்கு வெடித்துக் கை நகங்கள் செத்துக் கோணலும் மாணலுமாய் இருந்தது.  ஆராயி கிழவி அப்படியே சந்திரப்பூவாவின் முகத்தையும் ஒருமுறை பார்த்தாள். எப்படியிருந்த முகம். இப்போது இப்படி வாடிப்போய் இருக்கிறதே. புருஷன புடிக்குதோ புடிக்கலயோ சும்மாவாவது வீட்டுல இருக்கட்டுமேன்னு ஒரு ஆண்துணை வேண்டும். அப்பவாவது பூவும் பொட்டும் வச்சிட்டு நல்லா இருப்பாள்ள.. இப்ப பாரு எப்படி இருக்குன்னு மூஞ்சு… என்று ஆராயி கிழவி சந்திரப்பூவாவைப் பற்றி மனதிலே எண்ண ஓட்டங்களை ஓடவிட்டாள்.
“என்ன கிழவி என்னுடைய கைகளைப் பாத்து எதுவும் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்குற”
“ஆமா! உன்ன என்ன பொண்ணு பாக்க வராங்களாக்கும். சும்மா கிடப்பியா.. இதுக்கு மேல கைய பாத்த என்ன புரோஜனம் சொல்லு. ஆமாம்! நான் வந்த விஷியத்தையே மறந்துட்டேன். நம்ம ஊருல வடக்குக் காட்டுல இருக்குற நடேசன் செத்துப் போயிட்டாரு.. உனக்கு தெரியுமா சந்திரப்பூவா”
“ஆமாம் கேள்விபட்டன். வெளிநாட்டுக்குப் போயிட்டு இப்பதான வந்தாரு. எப்படி செத்துப் போனாரு..”
“ஏதோ உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க. அதில்லாம அந்த எலவுக்கு அழுவுறதுக்குக் கூப்பிடுறாங்க.. நீயும் வரியா சந்திரப்பூவா… போகலாம். போயிட்டு வந்தோம்மின்னா ஒரு ஐநூறு ரூபாய் கிடைக்கும்”
கூலிக்கு மாரடிக்க கூப்பிடுறியா கிழவி”
“ஆமாம்! இல்லாததுக்கு என்ன பன்றது. நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மூக்க தொடச்சியே… அதையே அங்கேயும் வந்து பண்ணு. அதுபோதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்குறன்”
“ சரி நானும் வரேன். யாருயாரு போறோம்”
“நீ, நான், நடுபாத்தி பாஞ்சாலை மூணு பேரும் போறோம். அவ்வளவுதான்”
“செல்வத்த என்ன பன்றது கிழவி”
“பக்கத்து வீட்டுக் கோமதிக்கிட்ட உட்டுட்டு வா… நானும் அவகிட்ட சொல்லுறன். சாயந்திரம் மூணு மணிக்குள்ள பொணத்த தூக்கிருவாங்க. நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடலாம்”
சந்திரப்பூவாவிற்கு வேறு வழியில்லை. மாரடிக்க போனால் ஐநூறு ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்த வச்சி ஒரு மாசமாவது ஓட்டிடலாம். மனதிற்குள் சரி என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டாள்.
 சாவு மேளச்சத்தத்துடன் அழுகை சத்தமும் கொஞ்சம் தூரம் இருந்து வருகையிலேயே கேட்டது. நெருங்கிய உறவினர்கள் கதறி துடித்து விழுந்தடித்துப் போனார்கள். தூரத்து உறவினர்கள் மாலையோடு வந்து பிணத்தைத் தொட்டு வணங்கினார்கள். பெண்கள் அனைவரும் மாராப்பு சேலை நழுவ கட்டிப்பித்து அழுவினார்கள். ஒருபக்கம் கூட்டமாய் வட்டமாய் சுழன்று ஒப்பாரி வைத்தார்கள். ஆண்கள் அழக்கூடாதென நினைத்து நெஞ்சை இறுக்கிக் கொண்டு மூக்கிலே அழுகையைக் கொண்டு வந்தார்கள்.
நடேசனின் மனைவிதான் பாவம் அழுதுஅழுது கண்கள் சோர்ந்து சுவற்றில் ஒட்டிய பல்லியாய் ஏதோ வாயில் முணுமுணுத்தபடியே சொல்லிக் கொண்டிருந்தாள். நடேசனின் பிள்ளைகள் இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் அழுது கொண்டிருந்தனர். நடேசனின் மச்சினன்தான் அனைத்துச் செலவுகளையும் கவனித்து வந்தான். எங்க மாமா எப்படி பொறந்தாரோ… அப்படியே சுடுகாட்டுக்கும் போகனும். மாலை மரியாதையோட பட்டாசு சத்தம் காதை பிளக்க மேளச்சத்தம் இடிபோல வீழ பெண்களின் ஒப்பாரி என் மாமனை வாழ்த்த சங்கொலியோடு பூந்தேரில் செல்ல வேண்டும் என்று எண்ணினான்.
சாவு வீட்டில் நடப்பது சந்திரப்பூவாவுக்குப் புதியதாகவே இருந்தது. பணக்காரர்கள் இறப்பில் என்னவெல்லாம் புதுமை கொண்டிருக்கிறதோ தெரியவில்லை என்று எண்ணினாள். ஆராயி கிழவி, பாஞ்சாலையுடன் தானும் சென்று பெண்களோடு பெண்களாக அழுத கண்ணீரோடு ஒட்டிக்கொண்டாள். சாவு வீட்டில் அழும் பெண்களில் எத்தனை பேர் அங்கு இறந்து போயிருக்கும் நபருக்காக அழுகிறார்கள். இல்லைவே இல்லை. அவரவர் இரத்தச் சொந்த பந்தகளை நினைத்துதான் பெரும்பாலும் அழுகிறார்கள். இல்லையென்றால், அங்கே அழும் பிறரைப் பார்த்து இவர்களும் அழத் தொடங்குகிறார்கள். அப்படித்தான் சந்திரப்பூவாவுக்கும் முதலில் கண்களில் இருந்து கண்ணிர் வர மறுத்தது. பிறப் பெண்களைப் பார்த்தவுடனே அழ ஆரமித்து விட்டாள். மேலும், தன்னுடைய கணவனையும் தாயையும் வேறு நினைத்துக் கொண்டாள். சொல்லவே வேண்டாம். கண்ணீர் மல்க பூத்துத் பூத்தென்று அழத்தொடங்கினாள் சந்திரப்பூவா.
சடங்குகள் ஒவ்வொன்றாய் நடந்தேறின. ஒப்பாரி சத்தம் மைக்கில் ஊரையெல்லாம் கூட்டியது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிணத்தினை வைத்தார்கள். தேரின் முன்பு பூக்களைத் தூவினார்கள். அழும் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு வேகமாக அழ ஆரமித்தார்கள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும் இரண்டு கைகளையும் தன்னுடைய நெஞ்சிலே அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். சந்திரப்பூவா இப்போது நீண்டு அழ தொடங்கினாள். கத்தினாள். ஓலமிட்டாள். ஆட்டமும் ஆட தொடங்கினாள்.
கருநிறமுள்ள தன்னுடைய நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டாள். கூந்தல் இடுப்புவரை வந்து வீழ்ந்தது. சேலை முந்தானையை இடுப்பிலே சுற்றி அவிழாதபடி கட்டிக்கொண்டாள். இடுப்பில் கட்டியிருந்த கொசவ மடிப்பை கொஞ்சம் ஏற்றிக்கொண்டாள். அப்போதுதான் சேலை காலில் மாட்டாமல் இருக்கும்.
நின்ற இடத்திலிருந்து எகிறினாள். எகிறியபோதே தலை குனிந்தாள். தலை குனிந்ததால் பின்னால் உள்ள கூந்தல் முன்னால் வந்து விழுந்தது. குனிந்து நிமிரும்போது தன்னுடைய இரண்டு கைகளினாலும் நெஞ்சிலே ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள். பட்தட்.. பட்தட்… என்று சத்தம் கேட்டது. மேல் மூச்சி வாங்கியது. வாயிலிருந்து ஒவ்வொரு முறையும் ராசா… அப்பனே.. தெய்வமே.. நடராசா… அப்பனே.. தெய்வமே.. என்று வந்து கொண்டே இருந்தது. சந்திரப்பூவாவினுடைய ஒப்பாரி ஆட்டம் அங்கிருந்தவர்களை எல்லாம் ஒருநொடி திகைக்க வைத்தது. எகிறி குதித்துத் குதித்து ஆடினாள். ஆட்டத்திற்கேற்ப ஒப்பாரியும் உஸ்ஸ்ஸ்… உஸ்ஸ்ஸ்… என்ற மூச்சுக்காற்றும் ஓருங்கே வந்து விழுந்தது.  சாவு வீட்டிற்கு வந்தவர்கள் பலர் சந்திரப்பூவாவின் ஒப்பாரி ஆட்டத்தினைத்தான் பார்த்தார்கள். அந்தளவிற்கு மாங்குமாங்கென்று ஆடினாள். ஆராயி கிழவியும் பாஞ்சாலையும்கூட சந்திரப்பூவாவின் ஆட்டத்தைப் பார்த்து அசந்து விட்டார்கள்.
தேர் கொஞ்ச கொஞ்சமாய் நகர்த்தப்பட்டுச் சுடுகாட்டை நோக்கிச் சென்றது. ஆண்கள் தலை குனிந்தபடியே மெதுவாக தேருக்குப் பின்னால் நடந்து சென்றனர்.  வீதியின் முடிவிலே பெண்கள் அனைவரும் நிறுத்தப்பட்டார்கள். ஒப்பாரி ஓய்ந்து போனது. சந்திரப்பூவா மெதுவாக மண்ணிலே சாய்ந்தாள். ஆராயி கிழிவிதான் ஓடி வந்து சந்திரப்பூவாவைத் தூக்கி உட்காரவைத்துப் பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சம் குடிக்க தண்ணீர் வாங்கி குடிக்க வைத்தாள்.
சாவு வீடு சுத்தமானது. நெருங்கிய உறவுகளைத் தவிர அங்கு யாருமில்லை. தண்ணீர் தெளித்து வாசல் சுத்தம் செய்யப்பட்டது. வாசலின் ஒரு ஓரத்தில் சுடுகாட்டுக்குச் சென்று வருகின்ற ஆண்கள் கால் அலசுவதற்காக அன்னபேஷனில் தண்ணீர் வைக்கப்பட்டது. அந்தத் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஆராயி கிழவி, சந்திரப்பூவா, பாஞ்சாலை ஆகிய மூவரும் குத்துக்காலிட்டு வரிசையாய் அமர்ந்திருந்தனர்.
சுடுகாட்டிற்குச் சென்று வந்த ஆண்கள் ஒவ்வொருவராய் காலில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவர்,
“யாரும்மா நீங்க… இங்க உட்காந்திருக்கீங்க.. என்ன வேணும்” என்றார்.
“அண்ணே! நாங்க கூலிக்கு மாரடிக்க வந்தோம்மண்ணே. கூலிய கொடுத்தீங்கின்னா போயிடுவோம்” என்றாள் பாஞ்சாலை.
அப்பத்தான் அவரு சந்திரப்பூவாவ பாக்குறாரு. சந்திரப்பூவா ஆடிய ஆட்டத்தையும் ஒப்பாரியையும் நினைவுக்கு வந்தவராய் வீட்டினுள்ளே செல்கிறார். வெளியே வரும்போது மூவருக்கும் சேர்த்து மூன்று ஐநூறு ரூபாய்களைச் சந்திரப்பூவாவிடம் கொடுக்கின்றார்.
இரண்டு ஐநூறு ரூபாய்களை ஆராயி கிழவியிடமும், பாஞ்சாலையிடமும் கொடுத்துவிட்டு வேகவேகமாக நடக்க ஆரம்மிக்கிறாள் சந்திரப்பூவா.
“எங்கடி எங்கள விட்டுட்டு நீ மட்டும் போற… இருடி நாங்களும் வந்திடுறோம்” என்றாள் ஆராயி கிழவி.
“நீங்க பொறுமையா வாங்க… நான் எம்புள்ளைய பாக்க போகனும். அவன் காலையிலயிருந்து எதுவும் சாப்பிடல. எப்படி இருக்கானோ? என்ன நினைச்சி மனசு வலிச்சுதோ தெரியல… இப்பவரை பசியை எப்படி பொறுத்துக்கிட்டு இருக்கான்… எனக்கு ஒன்னும் இல்ல.. பையனுக்குப் பசியே தெரியாத மாதிரி இனிவே வேண்டியதை கொடுக்கனும். அதுக்கு அந்த மாரியாத்தாதான் துணை நிக்கனும்” என்றபடி வேகவேகமாய் இன்னும் நடையைக் கூட்டினாள்.
சந்திரப்பூவா வாங்கின ஐநூறு ரூபாய்க்கும் அரிசி பருப்பு காய்கறிகள் என வாங்கிக் கொண்டாள். போன உடனே சமைத்துச் செல்வத்திற்குச் சுடசுட கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

திருமதி நித்யா லெனின்,

ஓசூர் – 635 130.

மொழிப்போர் தியாகிகள்|பேரா. ச. குமரேசன்|கவிதை

மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள்

 

1. தமிழினி..!

கைகளில் பதாகை ஏந்தி…

கடுமையான குரலொலிகள்..

வேற்று மொழி திணிப்பை எதிர்த்து..

வேகமான போராட்டம்..

பதாகை மேல் பதற்றமான வாசகம்..

“இந்தி  ஒ லி க! “

 

2. அறிவான மொழி

வெளி நாட்டுக்காரரோடு

வெளுத்து வாங்கும் ஆங்கிலம்..

மூன்றாம் வகுப்பு தாண்டாத

முத்துசாமியண்ணன்..

அவரின் முகவரியை

ஆங்கிலத்தில் எழுதி கேட்டேன்..

எனக்கு தெரியாது தம்பி

 “ஏ பி சி டி”

 

3. தியாகி

மத்திய அரசின் போட்டித் தேர்வு..

மொழியெதிர்ப்பு போராட்டத்தில்

முந்தி நின்ற முகேசோடு..

அரசுப் பள்ளியில் பயின்ற

அறிவொளியும் போனாள்

அரைகுறை ஆங்கிலத்தோடு…

தேர்வு முடிவில் தோல்வியுற்ற

அறிவொளி..

முன்னே சென்ற

முகேசிடம் கேட்டாள்..

“நீ எப்படி பாஸான? “

முகம் பார்க்காமல் சொன்னான்

முனகியவாறு..

“இந்தியில் எழுதினேன்”

 

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மாணவனின் சபதம்! |ஜெ.புவனேஸ்வரி| கவிதை

மாணவனின் சபதம்! - கவிதை

மாணவனின் சபதம்!

அச்ச்சோ!
நான் படித்த கொஞ்சத்தில்
மிச்சமும் இல்லாமல்
மொத்தமும் மறந்து போச்சே!
 
பத்துமுறை படித்தும் பார்த்தேன்
படித்ததை பக்குவமா எழுதியும் பார்த்தேன்
பரிச்சை என்று வந்ததும், ஏனோ!
படித்ததில் பாதிக்குமேல்
ஞாபகம் வரவில்லை.
 
ஒவ்வொரு தேர்விலும்
முதல் மதிப்பெண் பெற்று
மூக்குமேல் விரல் வைத்து பார்க்க
வைக்க வேண்டும் மற்றவரை என்று
எண்ணியே படித்து வந்தேன் பரிச்சைக்கு!
 
பாவம்! படிப்பது யாவும் நினைவில்
இருந்து விட்டால் பாமரனான நான்
பைத்தியமாகிடுவேன் என்றோ!
 
விடைத்தாள் கையில் வாங்கியதும்
விடைகொடுங்கள்,பாசானால்
போதுமென்றே பதுங்க செய்கிறது
இந்த பாழா போன மனம்.
 
இரவு முழுதும் படித்தோம் என்பது
ஞாபகம் இருக்கிறது!
ஆயின் என்ன படித்தோம்!
எதற்கு படித்தோம்? என்பது மட்டும்
நினைவுக்குவரலையே!
 
மூணு பேரும் முப்பொழுதும்
ஒண்ணாதான் ஒத்துமையாக
எல்லா இடங்களுக்கும்
அலைந்து திரிந்தோம்.
 
படிக்கும் வகுப்பு ஒன்றுதான்!  பாடமும்
ஒன்றுதான்! வினாத்தாளும் ஒன்றுதான்
அவனும் படித்தான்; நானும் படித்தேன்
என்னால் ஏன் எழுதமுடியல?என்று
கேட்க வேண்டிய கேள்விக்கு பதிலாக!
இறைவனிடம்,
அவன் படித்தது நினைவில் வந்து
அவனால் மட்டும் எப்படி படித்ததை
எழுத முடிகிறதோ? கடவுளே!
என்றே கேட்டு தவித்தான் அவன்.
தன்னம்பிக்கையில்லாதவன்.
 
அங்கே ஒரு அசரிரீ!
“எத்தனை முறை சொல்கிறேன்
மனப்பாடம் செய்யாதே!
மனனம் செய்யாதே!
மனப்படம் செய்து படி என்று.
அன்று நடத்தியதை அன்றே படி,
அதுவும் நன்றே விளங்க படி”
என்றே கூறி ஒலித்து மறைந்தது.
 
ஆகாசத்தை பார்த்திருந்த அவனருகில்
ஆசிரியர் வந்து நிற்கிறார்.
அவனுடைய விடைத்தாளை
வாங்கி புரட்டி பார்க்கிறார்;
 
பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
அவனோ பாதி பக்கம் கூட
எழுதி முடிக்கவில்லை.
 
ஆசிரியர் சொல்கிறார்
“பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
பாதி பக்கம் கூட எழுதவில்லை.
பின் எதற்குதான் பரிச்சைக்கு
வந்தீயோ! இந்த வயசுல
படிப்பதைக்காட்டிலும்
என்னடா வேலை உனக்கு?
பக்கத்தில் இருப்பவரை
பார்த்து எழிதியாவது தொள!”
என்று பாவபட்டு ஆசிரியர்
சொல்வாரென்று பரிதாபமாக
நோக்கினான்.
 
“ஓங்கி விட்டால் அப்படியே
ஒரு காது செவிடாகி போய்விடும்.
ஒழுங்காய் படிக்கிற நேரத்தில்
படி என்றால் படிக்காமல் இருந்துட்டு
இப்போ விட்டத்தைப் பார்த்து
கொட்டாவி விடத் துடிக்கிறாயோ!
ஒழுங்காக தெரிந்ததை எழுதி
கொடுத்திட்டு சென்றிடு!
இன்றில் இருந்தாவது ஒருநாளும்
தவறாமல் படி! படி! படி!”
என்று ஆசிரியர் கூறினார்.
 
“படிக்கச் சொன்னீரே படித்தேன் பாவம்!
பக்கத்தில் கூட இந்த படிப்பு வந்து
அமர்ந்திடவில்லை. என்கிரகம்
உங்ககிட்டபேச்சு கேட்க வேண்டியே
உள்ள அந்த விதியை ஒருபோதும்
இனி எவரும் மாற்ற இயலுமோ
பட்டது பட்டது தான்
கெட்டது கெட்டது தான்
கோட்டை விட்டது விட்டது தான்!
 
அடுத்த முறை தேர்வு எழுதிவிட்டு
பேசிகொள்வோம் இவரை,
என்றெண்ணி மவுனாமாகவே
இருந்துவிட்டான்.
எல்லா தேர்விலும் செய்யும் சபதம் போலவே!
இதுவும் ஒரு பொய்யான
சபதமோ? இல்லை! இல்லை!
 
ஆயிரங்கோடி ஆண்டுகளாயினும்
ஆதவன் அவன் தொழில்
மறப்பதில்லை. அதுபோல் என்றும்
மாண்புமிகு மாணாக்கரே, நீவிர்!
உந்தன் தொழிலை மறந்திடாதீர்! இந்த
உண்மையை உணர்ந்து உறக்கம்
தவிர்த்து என்றும் படி! படி! படி
 
ஆசிரியர்
கவிஞர் ஜெ. புவனேஸ்வரி
இயற்பியல் துறை

திருமந்திரத்தில் ஞானம்

திருமந்திரத்தில் ஞானம்

முன்னுரை

            எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!!! தன்னுள் விளையும் எல்லா கேள்விகளுக்கும் தானே பதிலாகி நின்ற நிலை யாரொருவர் அடைகிறாரோ அவரே ஞானவான். அதுவே திருவடி அடைந்த நிலை, முக்தி, பிறவா நிலை, மரணமில்லா பெருவாழ்வு என பலராலும் பலவாறாக பேசப்படுகின்ற ஞானத்தன்மையாகும்.  திருமூலர் அடைந்த நிலையினை இவ்வுலகியல் மக்கள் பெறவேண்டி எழுதப்பெற்றதே திருமந்திரமாகும். அவ்வாறு, இறைவனை அடையும் தன்மையினை திருமூலர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். அவற்றுள் பெறுவதற்கு அறிய வழி ஞானமாகும். அவ்வாறு திருமந்திரம்வழி திருமூலர் கூறும் ஞானத்தன்மை, ஞானத்தின் பண்பு நலன்கள், ஞானவேடதாரிகள் நிலை ஆகியவற்றை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஞானம் – விளக்கம்

            அறிவின் முதிர்ந்த நிலை ஞானமாகும். ஏனென்றால், பெருவெடிப்பு கொள்கையின் படி இவ்வுலகில் எல்லாப் பொருளும் ஒற்றை பொருளில் இருந்து வந்தவையே. என்பது அறிவியலாளர்கள் கருத்துப்படி எல்லாப் பொருளுள்ளும் தன்னையும், தன்னுள் எல்லா பொருட்களையும் பார்த்து, எந்த பொருளிடத்தும் அன்னியம் இல்லாமல் நின்ற நிலையினை உணரும் தன்மை ஞானத்தன்மையாகும். ஞானம் அடைபவர் தன்னடக்கம் உள்ளவராகவும், மனத்தினை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்பவராகவும் இருக்க வேண்டும். மேலும், உண்மையானது – உண்மையற்றது எது என்று பொருள்களை பிரித்தறியும் திறத்திக் கொண்டவர்களேத் தன்னிலை உணர்வதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். 

            இந்த உலகில் பிறந்து ஞானத்திற்கு தடையாக இருக்கும் அனைத்து பந்த பாசம், இன்பங்கள், துன்பங்கள், தன்னுடைய மனதின் ஆசைகள் அனைத்தையும் அனுபவித்து அவற்றில் நிலையாமைத் தன்மையினை உணர்ந்து நிலைத்தன்மையுடையப் பேரறிவாளனாகிய இறைவன் மீது பற்றுக்கொண்டு, அவற்றின் பால் ஒன்றுதலே இறைத்தன்மை பெறுதலாகும். ஞானம் என்பது புத்தகத்திலிருந்து பெறப்படுவதன்று. இது  குருவின் ஞான மொழிவழி பயணமாகும். மன இருளினை வென்று ஆன்மாவில் பேரமைதியினைக் காணும் நிலையாகும். உபநிஷதங்கள் இரண்டு வகையான ஞானத்தினை நமக்கு கூறுகின்றது. அவை, அபரஞானம், பரஞானம் என இருவகையாகும்.

            அபரஞானம் என்பது கீழ்நிலை ஞானமாகும். இவை ஒருவன் புறக்கருவிகளாகிய ஞான இந்திரியங்கள், கன்ம இயந்திரங்களின் வாயிலாக உணரப்படுவது அபராஞானமாகும். படித்தலின் மூலமாகவும், மற்றும் உலகியல் பொருள்களின் மூலம் அனுபவிக்கும் உணர்வுகள் இவையாவும் நிலையற்ற தன்மைக் கொண்டது என்று உணரும் உணர்வு கீழ்நிலை ஞானம் என ஞானியர்கள் கூறுகின்றனர்.

            பரஞானம் உயர்ந்த நிலை ஞானமாகும். இரு ஞானியர்களுக்கும் இறைவனின் அருள் பெற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற ஞான நிலையாகும். குருவின் அருளினால் இறைவனின் திருவடிப் பேற்றினைப் பெற்ற மனிதர்கள் அதைப் பற்றி சிந்தித்து அவற்றையே தியானித்து அவற்றுடனே ஒன்றி இருக்கின்ற நிலை பரஞானமாகும். ஞானத்தின் முழுமையான  நோக்கம் என்பது தன்னிலை உணர்ந்து இறைநிலைச் சார்ந்து என்றும் பிறவா பெருநிலையினை அடைதலேயாகும்.

ஞானமும் – குருவும்

            உயிர்களைப் படைத்து அருளிய இறைவன் அவ்வுயிர்களுக்கு இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கி அருளும் பொருட்டு மாயையினையும், கன்மத்தினையும் சேர்த்து பக்குவத்திற்காக உலகத்தில் பிறப்பெடுக்க வைத்துள்ளார். உயிரானது இறைவனாகிய குருவின் திருவருளால் திருவடிகாட்டப்பெற்று இன்ப – துன்ப நிலையினைக் கடந்து தன்னுடைய மாயைத் தன்மையினையும், போகப்பொருள்கள் மீதான தாகம் விட்டொழிந்து பிறவா யாக்கையானாகிய இறைவனின் திருவடியினை பெறத்துடிக்கும் ஆன்ம மனிதர்களுக்கு குருவே வழிகாட்டுவார். இதுவே கலியுக தர்மமாகும்.

            குருவானவர் சீடனின் உயிர் பக்குவத்திற்குத் தகுந்தார் போல மாயைச் சூழ்நிலையினைக் கொடுத்து அவற்றின் மூலம் உயிருக்கும் மெய்பொருளை அறிவித்து பொய்யான மாயைத்தன்மைக் கொண்ட பொருட்களை அறிவித்து இறைத்தன்மையை அறியச் செய்பவர் குருவேயாகும். உண்மையான ஞானத்தினை அடைந்த குருவால் மட்டுமே அவ்வழியில் வரும் சாதகனுக்கு வழியினைக் காட்டி அருளிட முடியும். அதுவன்றி இவ்வுலக வாழ்வில் பணத்திற்காகவும் பதவிக்காகவும் தோன்றியுள்ள குருமார்களின் பொய்மொழி சிந்தித்தால் ஞானம் வராது மீண்டும் பிறப்பதற்கான நிலையினையே மேலும் ஏற்படுத்திக் கொள்ளுபடியாகிவிடும். பொய் குருவினை நாடிச்செல்லும் ஆன்ம சாதகனுக்கு திருமூலர்,

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும்  குழிவீழுமாறே”  திருமந்திரம் (பாடல்.1680)

மாயைத் தன்மையினை நீக்கியருளும் குருவினைக் கொள்ள வேண்டும் என்றும், அறியாமையினை நீக்கா குருவினைக் கொள்வாரேயானால் பொய் குருவுடன் அவரும் குழி வீழ்வார் என்று திருமூலர் தம்மந்திர பாடலில்; சிறந்த குருவினுக்கான இலக்கணத்தையும், குரு இல்லா தன்மை கொண்டவர் அடையும் நிலையினையும் எடுத்துரைக்கின்றார். ஒரு சிறந்த குருவானவர் ஆன்ம சாதகனுக்கு ஏற்படும் அறியாமை என்னும் மாயையினை நீக்கி நிலைத்தன்மைக் கொண்ட அறிவதற்கான இறைவனின் திருவடியினைக் காட்டுவார்.

            இறைவன் மீது பக்தி கொண்டெழுகச் செய்து, இறைவனுடைய திருவடியினைக் காட்டி, பிரணவ மந்திரத்தின் உபதேசம் செய்து உயிர்களின் மனமாயையாகிய அழுக்கினைப் போக்கி, பசு, பாதி, பாசம் என்னும் முப்பொருளின் இயல்புகளை அறிவித்து, ஆன்மாவை ஆட்கொள்ள உள்ளத்துள்ளே எழுந்தருளி இருப்பவரே உண்மையான ஞான குரு ஆவார். தூயவனான பரம்பொருள் சிவபெருமானே ஆவார். ஞானமே குரு வடிவாக வந்து மன அழுக்கினை நீக்கி, பரிசுத்தம் செய்து தன்னுடைய ஞானத் தன்மையினை இறைவனே அவருடைய அளப்பெருங் கருணையினால் உயிர்களுக்கு தருகின்றார். அவற்றை அறியாமலே இவ்வுயிர்கள் மாயையில் கட்டுண்டு கிடக்கின்றன.        சிவப் பரம் பொருள்தான் ஞான குருநாதன் என்பதை,

“குருவே சிவம்எனக் கூறினான் நந்தி

குருவே சிவம்என்பது குறித்து ஓரார்

குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்

குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே” திருமந்திரம் (பாடல்.1581)

எனும் பாடல், இறைவனே குருவடிவாகி வந்துள்ளதை தமக்கு நந்தியாகிய குரு சொன்னதாகத் தம் குருவின் மொழியினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார். பரம்பொருளிடத்துப் பொருளிடத்து பக்தி செலுத்திப் பிறவிப் பயன் அடைய வேண்டும் என்கின்ற திடமான மனம் கொண்டு முயலுபவருக்கு ஞானமாகிய பேரின்ப வாழ்வு அருட்சக்தியின் திருவாருளால் எளிதில் கிட்டும்.

ஞான வேடம்

            ஞானத்தன்மை பெற்ற இறையடியார்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று திருமூலர்,

“ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவர்

தான்உற்ற வேடமும் தற்சிவ யோகமே

ஆன அவ்வேடம் அருள்ஞான நாதனம்

ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாதவனுக்கே”

எனும் திருமந்திர பாடல், சிவப் பரம்பொருளுக்கு அடிமைப்பட்டு, அவனருள் பெற்றவர்களே அடியவர் ஆவார்கள். மற்றவர்கள் ருத்ராச்சம் அணிந்து, திருநீறு  பூசியும், காவி உடை உடுத்தியும், தண்டம், சடாமுடி வைத்திருந்தாலும் இறைவனின் அருள் பெறாதவர்கள் அடியார் அல்ல என்றும், இறைவனின் அருள் பெற்றவர்கள் சிவவேடத்தில் இல்லாத போதிலும் அவரே உண்மையான அடியாகளாவார்கள்.

            தவத்தால் உயர்ந்த பற்றற்ற ஞானியர்களுக்கு காதனி குண்டலம் தான் ஏற்றிருக்கும் தவக்கோலம், தன்னைச்சிவனோடு பொருந்தச் செய்யும். தவவேடமே இறைவன் அருளைப் பெற்றுத்தர செய்யும் சாதனமாகும். சிவஞானம் பெற்றிராதவருக்கு இந்த வேடம் வெறும் சுமையேயாகும் என ஞானிகளின் வேட நிலையினைத் திருமூலர் எடுத்துரைக்கின்றார்.

தனிமனித வாழ்வியலில் ஞானம்

            இறைவனை அடைவதற்கு சைவ சான்றோர்கள் அமைத்துள்ள மார்கங்கள்  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்காகும். அவற்றையே திருமூலர் தம் பாடல்களிலும் விளக்கியருளியுள்ளார்.

அவையே,

சரியை                     –           இறைவனுக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு புரிதல்.

கிரியை                   –           பக்தி நிலையில் நின்று இறைவனுக்கு பூசை செய்தல்.

யோகம்                   –           ஆசனங்கள் செய்து மனம், உடல் தகுதி படுத்துதல்.

ஞானம்                    –           தியானத்திலே இறைவனை சிந்தித்திருத்தல்.

என்னும் நான்கு நிலையாகும்.

            இவற்றின் முறையே இந்நான்கினையும் அவரவர் பக்குவ நிலைக்கேற்ற வகையில் நான்கு நிலைகளும் முறையே; ஒன்றுடன் ஒன்று கூடி நின்று பதினாறு நிலையில் பிரிந்து வருகின்றன. அவை, சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரிiயியில் ஞானம்            என சரியையினை மூலமாகவும் மற்றவற்றைத் துணைக்கொண்டுத் தொண்டு நிலையில் இருந்தும் ஞானத்தை பெறுதல் சைவத்தில் சாத்தியமாகும். திருநாவுக்கரசர் கொண்ட மார்கம் சரியையாகும்.

            மேலும், திருஞானசம்பந்தர் கொண்ட கிரியையினை மூலமாகவும் மற்ற மார்கத்தினை துணையாகக் கொண்டு செயல்படுவது கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம் என மேற்சொன்ன மார்க்கத்தினைக் கொண்டும் இறைவனை அடையலாம். மேலும், யோகத்தை மூலமாகவும் மற்றவற்றை துணையாகவும் கொண்டு யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம் கொண்டும் இறைவனை அடையலாம். அவ்வாறு சுந்தரர் கொண்ட மார்க்கம் சரியையாகும்.

            மேலும், ஞான வழியாகிய இறைநிலையை குருவின் உபதேசமொழிவழி நின்று அவற்றை சிந்தித்து, தியானித்து பயிற்சியால் மேற்கொண்டு வருபவர்களும், பக்தி நிலையிலும், ஆசனங்கள், தொண்டு போன்றவற்றை செய்வது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு நிலையாகும். இங்கு கூறப்பட்ட மார்க்கத்திலேயே ஞான நிலையில் வரும் மார்கங்களே மிகவும் உயர்ந்த மார்கங்களாகும். மாணிக்கவாசர் மேற்கொண்ட மார்க்கம் ஞானமார்கமாகும். இங்கு ஞானத்தில் ஞானம் அடைபவர்கள் வெகு சிலரேயாவார்கள். பிறர் யோக மார்க்கத்திலும், பக்தி மார்க்கத்திலும், நின்று இறைநிலையினை வேண்டி நிற்கின்றனர்.

            இவ்வாறாக,  இறைத்தன்மையினை உணர்ந்த மெய்ஞானிகள் சைவ சமயத்தின் வழி நின்று சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வகையான மார்க்கத்தில் உண்மையினை உணர்ந்த ஞானிகள் பயன்படுத்திய அவ்வழியினையே இங்கு அருளியுள்ளார்கள். மேலும், திருமூலர் சொல்லும் ஞான மார்க்கத்தினை விளக்கமாக காண்போம்.

திருமந்திரத்தில் – ஞானம்

            உலகப் பிறவியில் பிறந்த பிறவியிலேயே மிகவும் உயர்ந்த பிறவி மனிதப்பிறவியாகும். ஏனென்றால், தன்னிலை உணர்ந்து இறைநிலையினை சாரும் பாக்கியம் மனிதனுக்கன்றி வேறு பிறவிகளுக்கு இல்லை. தேவாதி தேவர்களும் வேண்டும் பிறவியாக இருக்கின்றது இந்த மானுட பிறவியேயாகும். உண்மைப் பொருளை அறியும் மெய்ஞானத்தை அறிவதை விட மேலான அறம் இந்த உலகத்தில் வேறு இல்லை. ஞான மார்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த மார்கம் வேறில்லை.

            நாதமும், நாதவடிவான மனமும், மனம் பெற்ற உணர்வும், உணர்வு உணர்த்துகின்ற ஆணவமும் ஆகிய மூன்றையும் செயல்படுத்தி, சிந்தனை செயல் செய்து மனதை வென்று அடக்கித் தன் வசப்படுத்தியவர்களே உயர்ந்த தவஞானியர்களாவார்கள். என்பதை,

            “சத்தமும் சத்த மனனும் தகுமனம்

            உய்ந்த உயர்வும் அகந்தையும்

            சித்தஎன்று இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்

            சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்கமே” திருமந்திரம் (பாடல்.1468)

என்னும், திருமந்திரப்பாடல் இறைநிலைப் பெற்ற ஞானியர்கள் பற்றி கூறுகின்றது. அவ்வாறு ஞானமடைந்தவர்கள் ஏற்படுத்திய மார்க்கமே சன்மார்க்கம் அதாவது ஞான மார்கமாகும். சிவஞானம் என்பது உயிர்கள் தம்மிடமே நினைப்பால் உண்டாக்கிக் கொண்டிருக்கின்ற உலகங்களைத் தன்னைச் சுற்றியுள்ள இன்னும் பல உலகங்களை எல்லாம் நமக்கு சிவனருளால் அருளப்பெற்றவை இந்த சிவ நல்லறிவே பின்னர் சிவனருள் என்ற மேலான பெரும் பேற்றை பெற்றுத் தரும். சிவன் அருள் அறிபவனும், அறியும் பொருளும் என்று இரண்டாக இல்லாமல் அறிபவனே அறியப்படும் பொருளாக ஒன்றிக் கலந்துவிடுவதே சிவலோகமாகும்.

            இவ்வாறான இறைத்தன்மை கொண்ட ஞானம் நமக்கு ஆசாரம் எல்லாம் தருவனவாக அமைகின்றது. அதாவது, அசைவதும், அசைவற்றிருப்பதுமாகிய பல்வேறு நிலைகளைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகம் மேன்மையான பல நல்ல உயர்வுகளைப் பெறச் செய்யும். பேரறிவு நிறைந்து பெருகும் இடம் சிந்தையாகும். அதாவது சிந்தை ஞானத்தின் விளைநிலமாகும். யோகம் முதலான சாதனங்களின் வழியாக மூலாதாரத்தில் இருந்து மேலே சென்று உயிர் ஆற்றலானது ஆஞ்ஞா சக்கரத்தில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும். அமுத நீரை அருந்தி உயிருக்குக் கேடு விளைவிப்பதான பந்த பாச மலங்களை வேரறுத்துச் சிவப்பரஞ்சுடரோடுக் கூடுவதே ஞானமாகும். இதுவே, உயர்ந்த ஞான நிலையாகும். இது குருவின் துணையின்றி நிகழாது. இங்கு உலகியல் உணவில் இருந்து தற்சார்ப்பு உணவாகிய ஞான அமுதத்தினை சுவைத்து உயிர் வாழலாம்.

            உண்மையில் சைவம் என்பது காய்கறி உணவு வகை சார்ந்தது கிடையாது. அசையாத தன்மையில் இருந்து பெறப்படும் உணவே சைவமாகும். அதுவே ஞான அமிர்தமாகும். அந்த ஞானமிர்தமே உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் கொடுக்கவல்லது. அசைவம்; என்பது அசையாத தன்மைக்கு எதிர் தன்மையில் அசைத்து பிற உயிர் தன்மையினை எதிர்பார்த்து பிறச்சார்ப்பு உணவு முறையினைக் கைக்கொள்வது அசைவமாகும். சைவத்தில் ஞானத்தையே உணவாக உட்கொள்வதால் இங்கு பாவ புண்ணியம் கணக்கு இருப்பதில்லை. ஞானம் விசேடம் என்பது நாடும் பரம்பொருளைக் கண்டறிவதாகும். ஞான நிர்வாணம் என்பது மெய்ப்பொருளை அறிந்துணரும் அருள் வயமாதலாகும்.  ஞான ஆபிடேகம் என்பது ஞான குருவின் பாதம் பணியும் சிவயோக சித்தியாகும்.  ஞான சமயம் என்பது ஆத்ம தரிசனம், சிவதரிசனம், சிவபோகம், சிவயோகம் என்னும் நான்கு நிலையாகும். அவ்வாறு, ஒவ்வொரு ஞானிகளுக்கும் மேற்சொன்ன நான்கு உயர்குணங்களை பெற்றிருக்க வேண்டும்  என்கிறார் திருமூலர்.

“ஞானிக்கு உடன்குணம் ஞானத்தில் நான்கும்

மோனிக்கு இலைஒன்றும் கூடாமுன் மோகித்து

மேல்நிற்றலாம் சக்திவித்தை விளைந்திடும்

தான் குலத்தோர் சரியை கிரியையே” திருமந்திரம் (1473)

என்னும் திருமந்திரப் பாடலில், ஞானநிலையில் இருக்கும் தவ யோகிகள் மாயையின் சூழ்ச்சியில் சிக்கி மீண்டும் கீழ்நிலைக்கு  வரக்கூடும். எனவே,  ஞான நிலையில் இருப்பவரும் மௌன சமாதியில் இருக்கும்போது ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் (மறைஞானம்) என்னும் நான்கு மார்க்கத்தினை எண்ணங்களினால் செய்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இது சுத்த ஞானிகளுக்கு தேவையில்லை. எனவே, ஆதார நிலையில் இருந்து யோகம் செய்வோருக்கு ஏற்றது சரியையும் கிரியையேயாகும்.

            ஞானத்தில் சரியையாகிய அருள் தொண்டும், ஞானத்தில் கிரியையாகிய அகமார்ந்த பக்தியும், ஞானத்தில் யோகமாவது நாதாந்த முடிவில் பர ஒளியைக் கண்டு மகிழ்ந்திருத்தலாகும். மேலும், ஞானிகள் அடைகின்ற ஞானத்தில் ஞானம் என்பது ‘நான்’, ‘எனது’ எண்ணும் அகப்பற்றும், புறப்பற்றும் இல்லாதிருப்பதாகும். இவ்வாறு, நான்கு மார்க்கத்தின் நிலையில் நின்று ஞானத்தினை பெற்றவர்களுக்கு புண்ணிய பலன்களான நன்மையும், பாவப் பயனாகிய தீமையும் இறைவனின் கருணைக்கு உட்பட்டவர்களுக்கு நெருங்காது.  ஞான மார்க்கமாகிய சமய நெறி என்பது தன்னை அறிவதும், தன்னுள் பரப்பொருளைத் தரிசித்து செயலற்று நிற்பதே பரிபுரண ஞானமாகும்.

முடிவுரை

            இந்த உலகில் பிறந்த அனைத்து உயிருமே இறைவனிடத்து இருந்து வெளிப்பட்டவையேயாகும். அவற்றில் மறைந்து கிடக்கும் மலங்கலாகிய ஆணவம் நீங்கும் பொருட்டு உயிர்களுக்கு கன்மத்தினையும், மாயைப் பொருட்களையும் கூட்டுவித்து ஆணவ மலத்தினை இறைவன் நீக்குகின்றான். அவ்வாறாக, பலப்பிறவிகள் எடுத்து பெறுவதற்கரிய மனிதப் பிறப்பினை  நாம் இங்கு எடுத்திருக்கின்றோம். வேறு எந்த பிறவி எடுத்தாலும் இறைவனை சிந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மனிதனோ இன்னும் இறைநிலையினைப் பற்றி சிந்திக்காமல் மாயை என்னும் அறியாமையில் இருக்கின்றார்கள். நிலையாமையினை உணர்ந்து நிலையான தன்மை கொண்ட இறைவனின் திருவடியினை வேண்டி அவன் அடிப்பணியவே இப்பிறவியினை நாம் அனைவரும்; பெற்று இருக்கின்றோம் என அiனைவரும் உணர வேண்டும்.

            இவ்வாறாக, உயர் நிலையாகிய இறைவனின் திருவடிப்பேற்;ற பெற்றுள்ள அருளாளர்களின் வழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நிலையினை திருமூலர் தம்முடைய மந்திர பாடல்கள் வழி நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார். ஞான மார்க்கத்தில் நின்று ஞானத்தனை அடைந்தவர்களுள் திருமூலரும் ஒருவராவார். ஆனால், அவையாவும் குருவின்றி செயல்படாது. எனவே, திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு மார்க்கத்தில் உயர்ந்த வழியாக ஞானத்தை குருவின் அருள் வேண்டி ஞானத்தை அடைவோம்! அதற்கான மார்கத்தினை பின்பற்றுவோம்! பிறப்பில்லா பெருவாழ்வினை அனைவரும் அடைவோம்! என்னும் கருத்தை இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கின்றோம்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

1.          ஞா. மாணிக்கவாசகன்                           –           திருமூலர் – திருமந்திரம்,

                                                                                                மூலமும் – விளக்க உரையும்,

                                                                                                மண்ணடி, சென்னை – 600 001,

                                                                                                உமா பதிப்பகம்,

                                                                                                பத்தாம் பதிப்பு – சனவரி – 2016.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

இ-மெயில்: omarivruom.999@gmail.com

கற்பதை கசடற கற்க |முனைவர் ஈ.யுவராணி |வாழ்வியல் கட்டுரை

கற்பதை கசடற கற்க_யுவராணி

கற்பதை கசடற கற்க

             பல வருடங்களுக்கு முன்னர், கடற்கரை ஓரமாக ஒரு நாடு இருந்தது. அதன் பெயர் ”அகத்தி நாடு” வளமிகுந்த அந்நாட்டில் ஒரு பெரிய சிற்பக்கூடமும் இருந்தது. அங்கு படித்து வந்த ஒரு மாணவனுடைய பெயர் “நந்தன்”.
    இந்த நந்தனுக்கு சிற்பக்கலையின் மீது ஓரளவு ஆர்வம் இருந்தாலும், சதா காலமும் சிற்பக் கூடத்திலேயே நேரம் செலவாவதை நினைத்து, ஒரே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. ஆனால், அவனுடைய தந்தையோ, ஏதாவது ஒரு கலையிலாவது அவன் தேற வேண்டுமென்று விளைந்து, அவனை அந்த சிற்பக்கூடத்தில் சேர்த்து விட்டிருந்தார். அதனால், வேறு வழியேதும் இல்லாமல், ஒருவிதமான சலிப்புடனேயே சிற்பக்கலையைப் பயின்று வந்தான் நந்தன். இப்படியிருக்கும்போது ஒருநாள், அவன் கடற்கரைக்குச் சென்ற வேளையில், கடற்கரை ஓரமாக ஒரு பெரிய கப்பல் நிற்பதைப் பார்த்தான். இதுவரையும் அவன் எத்தனையோ முறை அந்தக் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். ஆனால், அம்மாதிரி வித்தியாசமான ஒரு கப்பலை அவன் பார்த்ததேயில்லை. அதனால், அந்தக் கப்பலுக்குள் சென்று அதை வேடிக்கை பார்த்தான்.  அந்தக் கப்பலின் உள்ள அமைப்பும் கூட, மிகவும் வித்தியாசமாக இருந்தது.  உள்ளே, இரகசியமான சில அறைகளும் கூட இருந்தன. இப்படி எல்லா தளங்களையும் பார்த்துவிட்டு, அவன் வெளியேற முனைந்த போது, நங்கூரம் எடுக்கப்பட்டுத் தனது பயணத்திற்குத் தயாராகியிருந்தது அந்தக் கப்பல்.
“அய்யயோ!…  வெளிநபர் நான் ஒருவன் இங்கே இருக்கிறேனே! கப்பலை நிறுத்துங்களேன்”, என்று பதறினான் நந்தன். அந்த சத்தத்தைக் கேட்டு அவன் முன்னால் வந்து நின்றான் ஆஜானுபாகுவான ஒருத்தன்.
     இப்போது தான் நந்தனுக்குப் புரிந்தது. அது ஒரு சாதாரண கப்பல் கிடையாது; கடற்கொள்ளையர்களுடைய  கப்பல் என்று. அவனுக்குத் தூக்கி வாரி போட்டது. “என்னை மன்னித்து விடுங்கள்…….. நான் தெரியாமல் இந்தக் கப்பலுக்குள் வந்து விட்டேன்.  உங்களைப் பற்றி யாரிடமும் கூற மாட்டேன்…. என்னை இறக்கி விடுங்கள்!!” என்று அந்தக் கடற்கொள்ளையனிடம் கெஞ்சினான். ஆனால், அவனும் அவனது ஆட்களும் நந்தனை விடுவதாக இல்லை. அவனைத் தங்களுடைய பிணையக் கைதியாக எடுத்துக்கொள்ள, கப்பல் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.
    இப்படியாக, நந்தனும் அந்தக் கடற்கொள்ளையர்களுமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்த கப்பல், திடிரென்று ஒரு பெரிய சுழலில் சிக்கியது. அலைக்கழிக்கப்பட்டுத் தடுமாறி, கடைசியாக வேறு ஒரு நாட்டின் எல்லையில் சென்று நின்றது. அப்படி அது எல்லையில் சென்று நின்றதுதான் தாமதம்! அந்நாட்டின் காவலர்கள் அனைவரும் வேகவேகமாகக் கப்பலுக்குள் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட கடற்கொள்ளையர்கள், அவர்களோடு பயணித்த நந்தன் என்று அனைவரையும் கைது செய்து, அரசன் முன்பாகக் கொண்டு சென்றனர்.
     இந்தக் கடற்கொள்ளையர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. அதனாலேயே, அந்தக் காலத்தில் இவர்களெல்லாம் பிடிபட்டால் மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பார்கள். அந்த அரசனும் கூட அவர்களுக்கெல்லாம் மரண தண்டனையையே வழங்கினான். அவர்களுள் ஒருவனாகக் கருதப்பட்ட நந்தனுக்கும் சேர்த்துதான்.  அதனால், நந்தன் பயங்கரமாக அழ ஆரம்பித்தான். நான் ஒரு கொள்ளையனல்ல சிற்பம் பயில்பவனென்று அரசனிடம் மன்றாடினான். ஆனால், அவனருகே நின்ற கொள்ளையர்கள் அதனை முற்றிலுமாக மறுத்தனர். “அரசே அரசே! அவனை நம்பாதீர்கள் ! இவனும் எங்களுள் ஒருவன்தான்” என்றனர். “நான் உங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் அனைவருடைய  தலையும் துண்டிக்கப்படும். அதுவரை நீங்களனைவரும் சென்று சிறைச் சாலையில் இருங்கள்”, என்று சொல்லி  கடுமையான காவல் கொண்ட ஒரு சிறைச்சாலைக்கு இவர்களை அனுப்பி வைத்தான்.
       நந்தனுக்கு வேதனை அதிகரித்தது. சிறைச்சாலை அறையில் உட்கார்ந்து ஒவ்வொரு நாளும் அழுதான். இந்த நிலையில்தான் சிறைச்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு காவலருக்கு நந்தன் மீது இரக்கம் பிறந்தது. 
“ஏன் தம்பி! அரசரிடம் உன்னை நிரூபித்துக்கொள்வதற்கு உன்னிடம் ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லையா ?” என்று கேட்டார்.  “ஐயா, நான் என்ன செய்வது? நான் ஒரு சிற்பி. அதை நிரூபிப்பதற்காகக் கையிலேயே உளியையும் கல்லையும் தூக்கிக்கொண்டேயா வர முடியும்” என்று விரக்தியில் பதிலளித்தான் நந்தன்.
     அந்த காவலாளி யோசித்துப் பார்த்துவிட்டு, “சரி தம்பி…  நானே உனக்கு ஒரு உளியைக் கொண்டு வந்து தருகிறேன். நீ ஒரு சிற்பத்தைச் செதுக்கு. ஒருவேளை, உண்மையாகவே உனக்கு சிற்பம் செதுக்கத் தெரிந்தால், அரசரிடம் உன்னை நிரூபித்துக் கொள்ளலாம் அல்லவா!” என்று கூற, அவனுக்கும் அது ஒரு நல்ல யோசனையாகப்பட்டது. கூடிய விரைவில், அந்தக் காவலாளி மூலமாக ஒரு உளியை வாங்கிக்கொண்டான்.  அந்தக் காலத்துச் சிறைகளில் படுப்பதற்கு வசதியாக ஒரு திண்டு போட்டிருப்பார்களல்லவா! அந்தத் திண்டிலேயே தன்னுடைய சிற்பத்தைச் செதுக்க முடிவெடுத்தான். கல்வி கற்கும் காலத்தே முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ளாதலால், சிற்பம் செதுக்குவது கடினமாக இருந்தது. ஆயினும், தனது  தலைமைச் சிற்பி கூறிய அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகப்படுத்திப் பார்த்து, இரவு பகல் பாராமல், இமைப்பொழுதும் தூங்காமல், ஒரு நல்ல சிற்பத்தை செதுக்க முயற்சித்தான் அவன். இப்படியே நாட்கள் நகர, அவனுடைய தண்டனைக்கான நாளும் வந்தது. பொதுவாக, மரணதண்டனைக்  கைதிகளிடம் அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, “உனது கடைசி ஆசை என்ன ?” என்று கேட்பார்களே! அதுபோல நந்தனிடமும் கேட்டார்கள்.  “எனக்கு ஒரே ஒரு ஆசைதான். நான் இத்தனை நாள் வாழ்ந்த இந்தச் சிறைச்சாலையில் அரசருக்கென்று ஒரு பரிசைத் தயாராக்கி வைத்துள்ளேன். அந்தப் பரிசை என்னால் எடுத்துத் தரவியலாது என்பதால், அதை பார்வையிட அரசர் பெருமானார் இங்கு வரவேண்டும். அது போதும்” என்றான் நந்தன்.  ‘மரண தண்டனைக் கைதி’ என்பதால், அரசரும் ஒத்துக்கொண்டார். அவனது அறையைப் பார்வையிடுவதற்காகச் சிறைச்சாலைக்கு வந்தார். அரசருக்கு எதிர்புறமாகச்  சிற்பம் செதுக்கப் பெற்றிருந்த திண்டை மறைத்துக்கொண்டு நின்றான் நந்தன்.  “எனக்கு ஏதோ பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னாயே! என்ன பரிசு அது ?” என்று அரசர் கேட்க, அவன் நின்ற இடத்திலிருந்து சற்று விலகி அந்த சிற்பத்தைக் காட்டினான் நந்தன்.   அந்த சிற்பத்தில் ராஜ மாதாவின் திருமுகம் ! அரசருக்கு அப்படியே புல்லரித்து விட்டது. “அப்படியெனில், நீ கடற்கொள்ளையன் இல்லையா ? அன்று நீ சொன்னது போல, சிற்பிதானா?”, என்று வியந்து அவனை விடுவித்தார். அத்தோடு, எந்தத் தவறுமே செய்யாமல் சிறைவாசம் பெற்றதற்கு இழப்பீடாக ஒரு தொகையையும் கொடுத்து அவனை அவனுடைய நாட்டுக்கும் அனுப்பி வைத்தார்.
     இன்று இந்தக் கதையில் பார்த்தது போலத்தான் நண்பர்களே! ஆபத்தில் நமக்கு யார் உதவுகிறார்களோ, இல்லையோ, நாம் கற்ற “கல்வி” கைகொடுக்கும்.  கல்வி என்றால் பாடப்புத்தகங்களில் படிக்கும் பாடங்களும், நாம் வாங்கி வைத்திருக்கும் பட்டங்களும் மட்டுமல்ல.  நாம் கற்றுக் கொள்கிற எல்லா தொழில்களும், எல்லா கலைகளும் கல்வியில்தான் அடங்கும். நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு நாம் கற்றுக் கொள்கின்ற அந்தக் கல்வியே, ஆபத்துக் காலங்களில் நம்மைக் காப்பாற்றும்.  இதை நீங்கள் இன்று அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு கதையை எழுதிக்கொண்டு வருகிறேன். அதுவரை நன்றி.

ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்.

ஈரோடு மாவட்டம் – 638 476.

மலையதிகாரம் (பகுதி – 2) | கவிதை

மலையதிகாரம் பகுதி 2

மலையதிகாரம் (பகுதி 2)

 

கோடை வந்ததுன்னா
கொண்டாட்டம் ஓடி வரும்…!
 
உள்ள பசங்க எல்லாம்
ஊருக்கு போகையில..
உள்ளம் ஏங்காம
உற்சாகம் கொண்டிருக்கும்…!
 
நானென்ன செஞ்சிடுவேன்?
என் மலையை கொஞ்சிடுவேன்..!
 
முப்பது ஆடிருக்கும்
முந்தியோட நாயிருக்கும்..
சொரக்கா குடுவையில
சொகமான சோறிருக்கும்…!
 
எடுத்து போகையில
எட்டி எட்டி பாத்துக்கிட்டு..
எளவட்டம் நாலு வந்து 
 என்னோட சேந்திருக்கும்…!
 
கூட்டம் சேந்ததுன்னா
கும்மாளம் கூடி வரும்..
ஆட்டமும் பாட்டமுந்தான்
 ஆடோட்டி போகையில…!
 
பாதி மலையேறி
பாறையில நிக்கையில..
அசைக்கும் கையிரண்டும்..
ஆகாச பறவபோல..
அசைச்சி முடிக்கிறப்போ
அடிவாரம் கீழிருக்கும்..
ஆகாசம் மேலிருக்கும்…!
 
கல்லெடுத்து உருட்டிவிட்டா
கடகடன்னு உருண்டோடும் 
பாறையடி பள்ளத்துல
பயங்கரமா  போயி விழும்…!
 
ஆட்டுக்குட்டியெல்லாம்
ஆனந்தமா ஓடி வரும்..
பாறை ஓரத்துல
பாஞ்சி வந்து நின்னுருக்கும்..
பயத்துல ஓட்டி விட்டா
பள்ளத்துல உழுந்திடாம..
சட்டுன்னு ஓடி வந்து
சறுக்கலுல சறுக்கி வரும்…!
 
பெரண்ட ஒடிச்சி வந்து
பெசகாம ஓட்டையிட்டு..
குச்சியொன்னு கொண்டு வந்து
ஓட்டையில குத்திவிட்டு..
பொண்வண்டு புடிச்சு வந்து
பெரண்டயோரம் ஒட்ட வச்சு..
காரமுள்ளு ஒடிச்சி வந்து
காலோரம் குத்திவிட்டா..
பொன்வண்டு பறக்குறப்போ
காத்தாடி  காட்சியாவும்…!
கண்ணெல்லாம் குளிர்ச்சியாவும்…!
 
புளியமரத்த கண்டுபுட்டா..
புள்ளிமானா காலோடும்..
கல்லு கொண்டு எறிஞ்சமுன்னா..
கை மேல பழமிருக்கும்..
ஒரு பக்க ஓடொடச்சி
ஓட்ட ஒன்னு போட்டு வச்சி..
குட்டி போட்ட ஆடொன்ன 
கொண்டு வந்து பால்கறந்து..
புளிக்குள்ள பாலூத்தி
உள்ள வர ஊறவச்சி
பழத்த திங்கையில
பல்லெல்லாம் எச்சூறும்..
பாதி வயிறு பத்தலங்கும்..
மீதி வயிறு பசியாறும்…!
 
கூரான நாலு கல்ல
கூட்டமா சேத்து வச்சி..
ஓடத்தண்ணி கொண்டு வந்து
ஒவ்வொன்னா கழுவி விட்டு..
செம்மண்ணு கொண்டு வந்து
செவ செவன்னு பொட்டு வச்சி..
ஈஞ்சி மர எலயெடுத்து
எடமெல்லாம் சுத்தம் பண்ணி..
சொரக்குடுவ தண்ணிக்குள்ள 
சொகமா சோறெடுத்து..
புங்க எலமேல
புசுபுசுன்னு போட்டு வச்சி..
சாமி கும்பிட்டுட்டு
சாரியா குந்திகிட்டு
சாப்பிட்டு முடிக்கையில..
நூறு வருச மரத்துக்கு
நோகாம பேரு வெப்போம்..
சாமி வெச்சாச்சி
இதுக்கு பேரு சாமிபுளியாமரம்…!
 
பாறையோட பாழியில
பக்குவமா கைவிட்டு..
கொடம்போல குடுவைக்குள்ள
தளம்பாம  தண்ணி மொண்டு..
பூச்சாங்கொட்ட நாலு
பொறுப்பா பொறுக்கி வந்து..
குடுவைக்குள்ள போட்டு வச்சி..
குலுக்கி விட்டு பாக்கையில..
கொரகொரன்னு நொரயிருக்கும்..
குடுவை  நெறஞ்சிருக்கும்..
நெறஞ்ச குடுவைக்குள்ள
ஒடஞ்ச குச்சி வச்சி..
ஒசக்க புடிச்ச பின்னே
ஓதி விட்டாக்கா..
ஒன்னில்ல ரெண்டில்ல
ஒரு நூறு முட்ட வரும்..
ஒவ்வொரு முட்டயிலும் வானவில்லு
வண்ணம் வரும்…!
 
சின்ன சின்ன நெனவெல்லாம்
சிந்தனைக்கு வந்துடுது..
வண்ண வண்ண எண்ணமெல்லாம்
வரிசகட்டி வந்துடுது..
ஆட்சி அதிகாரமெல்லாம்
நாடு நகரத்தோட..
மலைக்குள்ள வந்த பின்னே..
மனுசனுக்கு ஒன்னுமில்ல..
மகத்தான பரிகாரம்..
மலையோட அதிகாரம்…!
 

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச.குமரேசன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

மேலும் பார்க்க…

1.களவாணி ( கவிதை)

2.மாட்டுவண்டி (கவிதை)

3.களத்துமேடு (கவிதை)

4.மணம் வீசும் மனம் (கவிதை)

5.மலையதிகாரம்

6.உழவே தலை

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »