Saturday, April 4, 2026
Home Blog Page 16

அயல்மொழிப் பெயர்ச் சொற்கள்

அயல்மொழிப் பெயர்ச் சொற்கள்
    ஆங்கிலத்தில் ஒரே எழுத்து பல்வேறு ஒலிப்புகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதை ஆங்கிலம் கற்றோர் அறிவோம். எ.கா. ‘c’ எனும் எழுத்து ‘case’ எனும் சொல்லில் வல்லின ‘க’ ஒலிக்கும் ‘center’ எனும் சொல்லில் மெல்லின ‘ச’ ஒலிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த எழுத்தைப் பொறுத்து ஒலிப்பு மாறுகிறது. சில உயிரெழுத்துகள் ஒவ்வொன்றும் எட்டு அல்லது ஒன்பது வெவ்வேறு ஒலிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன! அதற்கென ஆங்கிலேயர்கள் பிற மொழி எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கவில்லை. சரியான பலுக்கலை விளக்குவதற்கு இலக்கண விதிகள் உள்ளன. (நிறைய விதி விலக்குகளும் உள்ளன! எ.கா. machine, machination என்பவற்றில் ‘ch’-இன் ஒலிப்பு மாறுதல்.) இவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புகள்.
               
பிற மொழிப் பெயர்ச் சொற்களைத் தம் மொழி இலக்கணத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுவதும் பலுக்குவதும் அனைத்து மொழிகளிலும் வழக்கமானதொன்று. போதிய எழுத்துகள் இல்லாதது மட்டும் இதற்குக் காரணமன்று; ஒரு மொழியில் வழங்கும் ஒலியன்கள், பெயர்ச் சொற்கள் முதலியன வேறொரு மொழியில் இயல்பாக இல்லாதபோது அந்தச் சொற்களின் உரு, ஒலி ஆகியன மாறும். ஆங்கிலத்தில் இதைச் செய்கையில் நமக்கு வேடிக்கையாகத் தெரிவதில்லை; பழகிவிட்டோம்.
               
அயல்மொழிப் பெயர்ச் சொல்லை எழுதுவதற்கு ஆங்கிலத்தில் எழுத்து இல்லாததால் சொல்லை மாற்றி எழுதுவதற்குப் பின்வருவன எடுத்துக்காட்டுகள்:

1. ‘L’ எனும் ஆங்கில எழுத்து ல, ள, ழ ஆகிய தமிழ் எழுத்துகளைக் குறிப்பதற்கும்,

2.’t’ என்பது த ட ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
               
எ.கா. villupuram (வில்லுப்புரம்?, விளுப்புரம்?, விழுப்புரம்?), tamil (டமில், தமில், தமிள், …, தமிழ்?), tirupur (டிருப்புர், டிருப்பூர், …, திருப்புர், திருப்பூர்?).
               
எழுத்து இருந்தாலும் பேச்சு வழக்குக்கு ஏற்பப் பிற மொழிப் பெயர்ச் சொற்களை மாற்றிக்கொள்வதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

1.chepauk (சேப்பாக் = சேப்பாக்கம்),

2.chetput (ச்செட்புட் = சேத்துப்பட்டு),

3.tanjore (டேன்ஜோர் = தஞ்சாவூர்),

4.mulligawtawny (மல்லிகாட்டானி = மிளகுத் தண்ணீர்)
5.ஜப்பான் நாட்டை அந்நாட்டு மக்கள் நிப்போன் அல்லது நிஹோன் என்றுதான் அழைக்கின்றனர். இதற்கு வரலாற்றுக் காரணங்களும் மொழியியல் காரணங்களும் உள்ளன1,2 சப்பானியர்கள் இந்தியாவை இந்தோ என்கின்றனர். தெலுங்கர்கள் தமிழை அரவம் என்கின்றனர். இந்நிலையில் ஜப்பான் என்பதைத் தமிழில் சப்பான் எனவும் தெலுகு என்பதைத் தெலுங்கு என்றும் எழுதினால் என்ன கெட்டுவிடும்?!

அ. இது அனைத்து மொழிகளுக்கும் பொதுவான பண்புதான்.
 
ஆ. மொழிப் பற்றுக் குறித்து வாய் கிழியப் பேசும் சில தமிழர்களைவிட அமைதியாகச் செயல்பட்ட மலையாளிகள் மேலானவர்கள்: திருவனந்தபுரம் என்பதை ஆங்கிலத்தில் trivandrum (ட்ரிவேன்ட்ரமீ) என்று தவறாக எழுதிய மரபை மாற்றி thiruvananthapuram என்றும், கோழிக்கோடு என்பதை calicut எனத் தவறாக எழுதிவந்ததை kozhikode என்றும் ஓரளவு சரியான பலுக்கல் வரும் வகையில் திருத்திக்கொண்டனர்.

6.மழைநாடு என்பதன் கன்னட வடிவம் மளேநாடு. இது திரிந்து ஆங்கிலத்தில் malnad என்று எழுதப்பட்டுத் தமிழில் மல்நாடு எனப்படுகிறது! (கன்னடக்காரர்கள் இதை எப்படிச் சொல்கிறார்களோ தெரியவில்லை.)
 
     இந்தியில் f என்பதற்கு ஓர் எழுத்து உள்ளது. எனவே, february (பிப்ரவரி) என்பதை அவர்கள் ஆங்கிலப் பலுக்கலுடன் பெருமளவு பொருந்துமாறு பெப்ருரி என்றே எழுதலாம். ஆனால் பர்வரி என்று எழுதுகின்றனர். அதுபோலவே, காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) என்ற பொருள்படும் insurance எனும் ஆங்கிலச் சொல்லையும் சரியான பலுக்கல் வருமாறு இந்தி எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். அல்லது, அதற்கு இணையான இந்திச் சொல்லைப் பயன்படுத்தலாம்; அப்படிச் செய்யாதபோது இன்ஷியோரேன்சு என்று எழுதுகின்றனர். இது அவர்களுடைய இலக்கண மரபின்பாற்பட்டதாக இருக்கலாம். ஒவ்வொரு மொழியிலும் அயல்மொழிச் சொற்களை எழுதுவதற்கு அம்மொழியின் இலக்கணத்துக்கு ஏற்பச் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதைப் பார்த்து நகைப்பது அறியாமை.
               
birendranath datta gupta என்ற வங்காளிப் பெயரை பீரேந்த்ரநாத் தத்தா குப்தா என்பதற்கு மாறாக வீரேந்திரநாத தத்தா குப்தா என்று தமிழர் பலுக்குவதைக் கேட்டு (ஆரோவில்-புகழ்) அரவிந்தர் விழுந்து விழுந்து சிரித்ததாக பாரதியார் குறிப்பிடுகிறார் (அதற்கு பாரதியார் என்ன எதிர்வினையாற்றினார் என்பது தெரியவில்லை)3 மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பிய கதைதான்! வங்க மொழியில் ‘வ’ ஓசை இல்லை; மெல்லின ‘ப-வாக மாறுகிறது. எ.கா. ரவீந்த்ரநாத் என்பது ரபீந்த்ரநாத் என்றும் வீர் என்பது பீர் என்றும் மாறுகிறது. இந்தியில் வீரேந்திரநாத் என்பதை வங்காளத்தில் பீரேந்திரநாத் என்றும், அர்விந் எனும் இந்திப் பெயரை வங்க மொழி வழக்குக்கு ஏற்ப அரோபிந்தோ aurobindo என்றும் மாற்றி வைத்திருப்பதைப் பார்த்து இந்திக்காரர் சிரிக்கமாட்டாரோ?’

  இந்நூலில் உள்ள அயல்மொழிப் பெயர்ச் சொற்களில் வரும் மெல்லின ஒலிகளுக்குத் தமிழ் வல்லின எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளேன். ‘க’ என்பதை ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் உள்ள k, g ஆகிய ஒலிகளுக்கும், ‘ச’-வை ch, s, sh, j ஆகிய ஒலிகளுக்கும், ‘ட’ என்பதை t, d ஆகிய ஒலிகளுக்கும், ‘த’ என்பதை th, dh ஆகியவற்றுக்கும், ‘ப’-வை p, b, f ஆகியவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளேன். எ.கா. ‘கார்ல் மார்க்ச்” (பல தமிழ் நூல்களில் ‘காரல் மார்க்ஸ்’!).
               
பின்வருவம் வேடிக்கையான நுணுக்கங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் மேற்படித் “தனித்தமிழ்” எழுத்து முறையையும் ஏற்றுக் கொண்டால் என்ன? ஏற்காமல் இருப்பது தான் முரணானது!

1.ஆங்கிலத்தில் சில எழுத்துகள் ஒலிக்கப்படாமல் இருத்தல். (எ.கா. island என்பதில் இரண்டாவது எழுத்து; madam என்பதில் நடு எழுத்து; பலர் இந்த ஆங்கிலச் சொல்லைத் தவறாக மேடம் என்றே பலுக்குகின்றனர்!)

2.corps போன்ற ப்ரென்ச் சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துகையில் அவற்றின் பலுக்கல் எழுத்து வடிவத்தில் இருந்தும் corpse எனும் ஆங்கிலச் சொல்லின் பலுக்கலில் இருந்தும் வேறுபடுதல் (குழப்பத்தைச் சற்று அதிகரிக்கும் வகையில் இந்தச் சொல் ஒருமை பன்மை இரண்டுக்கும் corps என்கிற இதே வடிவில் பயன்படுத்தப்படுகிறது; ஆனால், பலுக்கல் வேறுபடும்!)

      தமிழ் மொழியில் இல்லாத (‘வடமொழி’ ஒலிகளுக்கான கிரந்த) எழுத்துகளைக் ‘கடன்’ வாங்கிப் பயன்படுத்துவதைக் காட்டிலும் இது சிறந்தது. எந்தவொரு மொழியிலும் அனைத்து ஒலிகளுக்கும் தனித்தனி எழுத்து வடிவம் இருக்கமுடியாது, அப்படி எதிர்பார்ப்பதும் தேவையற்றது என்பதைச் சிந்தித்துணர்ந்தால் இதன் அடிப்படை புரியும். நம் மொழியில் எந்தக் குறையும் இல்லை; குறை வேறு தளங்களில் தான் உள்ளது! ஆங்கிலம் வெறும் 26 எழுத்துகளைப் பயன்படுத்தி இன்றைய உலக மொழியாக இருப்பது இதற்கு மிகச் சிறந்த சான்று.
               
        jean dreze என்பவர் மாந்தநேயமிக்க ப்ரென்ச்-இந்தியப் பொருளியலாளர். அவருடைய பெயரை ழான் டராஸ்(z) என்பது போலப் பலுக்கவேண்டும். ஆனால், அது ப்ரென்ச் மொழிப் பெயர் என்பது தெரியாதவர்கள் ஜீன் ட்ரீஸ்(z) என்றுதானே படிப்பர்? (சரியான பலுக்கலைத் தெரிந்தவர்கள் இப்படிப் பலுக்கக்கூடாது.) ஆனால் அதை ஆங்கிலத்தில் ழா daraz என்று (பலுக்குவதைப் போலவே) எழுதவேண்டும் என ஆங்கிலேயர்களோ ப்ரெஞ்சுக்காரர்களோ நினைப்பதில்லை. தன்மானங் குறைந்த நாம் முதன்மையானவற்றில் கவனஞ் செலுத்தாமல் நம் மொழியைக் குறை கூறிக்கொண்டும் “சீர்திருத்திக்”கொண்டும் நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறோம்.
   ஒரு மொழியில் மற்ற மொழிச் சொற்கள் யாவும் ஒலி பிசகாமல் ஒலிக்கப்படுவதும் இல்லை. david என்ற பெயரை ஆங்கிலேயர் ‘டேவிட்’ என்று ஒலிக்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘தவித்’ என்றழைக்கிறார். தமிழர் ‘தாவீது’ என்கிறார். jesus christ என்ற பெயரை ஆங்கிலேயர் ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறார். பிரெஞ்சுக்காரர் ‘ழெசுய் க்ரீஸ்த்’ என்கிறார். தமிழர் ‘ஏசு கிறித்து’ என்கிறார். ஒரே வகையாக ஒலிக்கப்படுவது எங்கே?
               
        அதுபோலவே, கிருச்ணன் என்பது ஓர் இந்துக் கடவுளின் வடமொழிப் பெயர் என்பதை அறிந்தவர் அதைக் கிருஷ்ணன் என்று பலுக்கட்டும்! பிறர் தவறாகப் பலுக்கட்டும். தமிழர் வடமொழிப் பெயர் வைப்பதற்குச் சரியானதொரு தண்டனை இது” (இதைக் கிருட்டிணன் என்று தமிழில் எழுதுவது மரபு. அதை ஆங்கிலத்தில் kiruttinan என்று மொழிபெயர்ப்பது வேடிக்கையானது!)  (மேலும், கிருஷ்ணன் என்பது இந்தி அல்லது வடமொழியில் க்ருஷ்ண் என்றுதான் இருக்கும்.) மற்றுமொரு எடுத்துக்காட்டு: இந்தியில் ஹரிஷ்ச்சந்தர் என்பது தமிழில் அரிச்சந்திரன் (அல்லது, “படித்தவர்கள்” என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் ஹரிச்சந்திரன்) என்றும் தெலுங்கில் ஹரிஷ்ச்சந்துருடு என்றும் மாறுகின்றன. தேவையில்லாமல் வடமொழிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்தித் தவறாகப் பலுக்கும் நாம் அவர்களுடைய பகடிக்கு ஆளாகிறோம்! அடிப்படையில் இது தான் இங்கு சிக்கல்!
               
       இது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு 2011-இல் வெளியான ஒரு சிறு கையேடு பயன்படும்4. அது தேவைப்படுவோர் இந்நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளவும்.
               
      இணையத்தில் தகவல் தேடுவதற்கு ஏதுவாக அயல்மொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவத்தைத் தந்துள்ளேன்.

1 . https://en.wikipedia.org/wiki/Names of Japan

2.”Nippon or Nihon? No  consensus on Japanese pronunciation of Japan”, Japan Today, 2014 feb 16, https://www.japantoday.com/category/arts-culture/view/nippon-or-nihon-no-consensus-on-japanese-pronunciation-of-japan

3.திருமுருகன், “மொழிப் புலங்கள்”, 1999, பக்கங்கள் 22-48.

4.”ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்”, தி. ராமகிருச்ணன், தொகுப்பாசிரியர், தாளாண்மை உழவர் இயக்கம், 2011.

தடம்மாறும் தமிழ்ப்பெயர்கள்|முனைவர். த. தினேஷ்

தடம் மாறும் தமிழ்ப் பெயர்கள் முனைவர். த. தினேஷ்
னிதனானவன் தன் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு நிகழ்வுகளையும் பருவங்களையும் கடந்து வாழும் ஒரு கூட்டமைப்பைச் சார்ந்த விலங்காவான். அவனுள் ஏற்படும் பருவ மாற்றங்கள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அவனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

Dineshஆரம்பக் காலத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதன் நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து தன் பகுத்தறிவால் மாற்றம், முன்னேற்றம், நவீனத்துவம் முதலானவற்றை அடைந்தவன். இவ்வகைப்பட்டப் பயணங்களில் அவன் பல்வேறுபட்ட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஆன்மீகம் – நம்பிக்கை என்ற இரண்டின் துணை கொண்டு நெறிப்படுத்தப்பட்டான். எஃப்.சி லாரன்ஸ்  என்ற மேனாட்டு ஆய்வாளர்கள் பொதுவாக இத்தகைய சடங்கு நிகழ்ச்சிகளை ஆண்டு பட்டியலில் அமைந்த சடங்கு நிகழ்ச்சிகள்,  ஆண்டு பட்டியலில் அமையா சடங்கு நிகழ்ச்சிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம் என்கிறார்.  இவ்வகைச் சடங்கு முறைகளில் பெயர் சூட்டுதல் என்பது ஒருவகையாகும்.

பெயர்சூட்டும் மரபு என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரும் விழாவாகவே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றது. பெயரிடுதல் என்பது ஒரு கலை. ஏனெனில் அவன் அதனை தன் பிறப்பு முதல் இறப்பு வரை சுமந்துச் செல்ல வேண்டும். சிலசமயம் இறப்புக்குப் பின்னும் இப்பெயர்கள் ஒருவனது வாழ்வைப் பிரதிபலிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
பழந்தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்ட  பெயர்சூட்டும் முறைகள்
தமிழ் மரபுப் பெயர்களைப் பெரும்பாலும் இடம், வம்சம் தொடர்பான பொதுப்பெயர்கள், கற்பனைப் பெயர்கள், பட்டங்களால் வரும் பெயர்கள், கடவுள் சார்ந்த பெயர்கள் என வகைப்படுத்தலாம்.  பழந்தமிழர் மரபுப்படி தந்தை மற்றும் பாட்டனார், தாய் மற்றும் பாட்டியார் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ என்ற நற்றிணை வரியின் வாயிலாகவும், ‘எந்தைப் பெயரனை யாங்கொள்வோம்’ என்ற கலித்தொகைப் பாடல் வாயிலாகவும் அறியலாம்.

பெயர் சூட்டுதல் என்பது குழந்தைப் பிறந்த மூன்றாம் மாதத்தில் நடைபெறும் ஒரு சடங்கு நிகழ்வு. இவை கோவில்களிலும்  இல்லங்களிலும் பொது இடங்களிலும் நடைபெறும் ஒரு விழா ஆகும்.  குலதெய்வப் பெயரைச் சூட்டும் மரபுகளைச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த குழந்தையான  மணிமேகலைக்கு தங்கள் குலதெய்வத்தின் பெயரான ‘மணிமேகலை’ என்ற பெயரினை  வைத்தனர் எனச் சிலப்பதிகாரம் உரைக்கின்றது. (சிலப்பதிகாரம் கதை 15, 25 -37)

இப்பெயர் சூட்டு விழாவினை ‘’நாம நல்லுரை நாட்டுதும்’’ எனச் சிலப்பதிகாரமும் – 15:26.  நாமஞ்செய்த நன்னாள் என மணிமேகலையும் – 7:35,  நாமம் தரித்தார் என சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பெயர் சூட்டும் விழா குழந்தை பிறந்த பன்னிரெண்டாம் நாள் நடைபெற்றதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

“…………… தொகுத்தநாட்சச்சந் தண்ணே  சுதஞ்சணணே தரணி கந்துக் கடன்விசயன்
தத்தன் பரதன் கோவிந்த னென்று நாமந்தரித்தாரே (சிந்தாமணி 2705)

என திருத்தக்கதேவர் குறிப்பிடுவார்.

“இத்தொடரில் ஈண்டுத் தொகுத்த நாள்’ என்பதற்கு 12 என்ற எண்ணாகத் தொகுத்த  நாளிலே அப்புதல்வர்கள் பெயர்களைச் சுமந்தார் என்க என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார் (சிலப்பதிகாரம் 2705 நச்சர் உரை)
 இதனை

“பத்து நாளும் கடந்த விரண்டா நாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானஞ் செய் துகந்தன ராயரே”’
என வரும் திருமொழி பாசுரம் (1:2:8)  மூலம்  அறிந்து கொள்ள முடிகிறது.
பரிமேலழகர் (13 ஆம் நூற்றாண்டு) செவ்வியல் கால மரபினை அடியொட்டி தன் விளக்கத்தைத் தருகின்றார். யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற சரியான பெயருக்கு கோசீமாறன் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை என்ற பெயரைக் குறிப்பிடுகிறார். கோ என்றால் மன்னன் என்ற அலுவலகப்பெயரைக் குறிக்கும், சேரமான் என்பது வம்சத்தைக் குறிக்கும், யானைக்கண் என்பது வித்தியாசமான குணத்தைக் குறிக்கும். சேய் என்பது இயற்பெயர் அல்லது பொதுப்பெயராகும். இரும்பொறை என்பது இணைப்பாகும். இவ்வாறு குடிப்பெயர்  மற்றும் தொழிற்பெயரை மாற்றாது பெயர் சூட்டும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
.
“நாட்டுப்புறங்களில் நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பதில்லை முதல் பிள்ளைக்கு பாட்டன் பெயரும் அடுத்த பிள்ளைக்கு கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயரும் அதை அடுத்தவனுக்கு முருகக்கடவுள் பெயர்களில் ஒன்றையும் வைப்பார்கள் அல்லது தமிழ் பொது பெயர்களாகவே இருக்கும் வைணவம் சைவம் சார்ந்த பெயர்களாகவும் திருத்தல பெயர்களும் வைப்பர் என கூறுவார். (எங்கள் நாட்டுப்புறம் (1951) பக்கம் 115 -116.)

பெயரிடல் முறையில் காணலாகும் நம்பிக்கைகள்
குலதெய்வ பெயர்களையும் தம் முன்னோர்களின் பெயர்களையும் தன் குழந்தைகளுக்குச் சூட்டும் பொழுது அவர்கள் எப்போதும் நம்முடன் இருப்பது போலவும் குழந்தைகள் அவர்களின் ஆசியால் நோய்நொடியின்றி இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வகை  பெயர் வைக்கும் சடங்கு முறைகள் அன்று முதல் இன்றுவரை தமிழகத்தில் பரவலாக  காணப்பட்டு வருகின்றது
.
பெயரிடல் முறைகளில் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் பெயர்களும் இறப்புக்குப் பயந்து வைக்கப்பட்ட பெயர்களுமே அதிக அளவில் காணப்படுகின்றன. முந்தைய காலகட்டங்களில் தொடர்ந்து குழந்தைகள் இறப்பது மற்றவர்களின் கண் பட்டு விட்டதாலும் பில்லி சூனியம், நோய்கள், தெய்வ குற்றம் முதலானவற்றால் குழந்தைகள் இறக்கின்றனர் என மக்கள் நம்பினர். எனவே கடவுளிடம் வேண்டிக் கொண்டு அவர்களுக்கு மூக்கு குத்தி மேற்குறிப்பிட்ட பல்வேறு வகைச் சடங்கு முறைகளில் ஏதேனும் ஒரு பெயரினை வைப்பதன் மூலம் தொடர்ந்து குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கை இன்றும் பெரும்பாலான கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு வலது பக்கத்தில் தான் காது குத்தப் படுகிறது.  ஏனெனில் மனிதனின் உடலானது இரு கூறாகச் சமமாகப் பிரித்தால் வலதுபுறம்  அதிகச் சக்தியை உடையது.  எனவே நீண்ட ஆயுளைப் பெற வலதுபுறம் அதிக அளவில் மூக்கு குத்தப்படுகின்றது என்பது நம்பிக்கை
தமிழ்ப் பெயர்களின் மாற்றுப்பாதை
குடி, தொழில் அடிப்படையில் பெயரிடும் முறைமை மாறி குழந்தைகளுக்குப் பிறந்த நாள் நட்சத்திரம் பார்த்துப் பெயர் வைக்கும் முறைகள் பிற்காலத்தில் உருவாயின. எனவே சோதிடத்தின் வளர்ச்சியால் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்சூட்டும் வழக்கம் தமிழ் நிலத்தில் பரவத்தொடங்கியது.
 
இவற்றில் அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலான நட்சத்திரங்களின் அடிப்படையில்  கணித்துப் பெயரிடும் வழக்கம் இன்று அதிக அளவில் பின்பற்றப்படுகின்றன. அதுவரை பல்வேறு அழகியத் தமிழ்ப் பெயர்களைத் தாங்கி வந்த தமிழ் நிலம் நீண்ட நெடிய பிறமொழிச் சொற்கள் அடங்கிய பெயர்களுக்கு  இம்முறை வழிவகுத்தது என்றே கூறலாம். இதனால் கிரந்த எழுத்துக்களின் புழக்கம் அதிகமாயின. இதன் விளைவாகத் தமிழ்ப் பெயர்களில்  ஸ். ஷ், ஹ, ஜ, ஜீ முதலான உச்சரிப்புகள் அடங்கிய பெயர்களின் வரத்து அதிகமாயின..  மனிதனின் பெயரே அவனது குடி அடையாளமாகும் பிறமொழி பேசும் மக்களின் வரவால் தமிழ்ப்பெயர்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. பல நீண்ட சீர்களைக் கொண்ட பெயர்களின் வரவும் உருவாயின.

உலகின்  பலநாடுகளில் நெடிய சீர்களைக் கொண்ட ஒரு பெயர், இருபெயர், மூன்று, நான்கு, பெயர்கள் அடங்கிய கூட்டுப் பெயர்களாக வைக்கும் முறை இருந்து வந்துள்ளது. இதில் குடிப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் கூட சிலசமயங்களில் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.  இரு பெயர்கள் என நாம் கூறும்போது SURNAME, FIRST NAME, MIDDLE NAME, LAST NAME   என    இணையும்.  SURNAME என்பது தலைமுறை தலைமுறையாக வந்த தொழிற் பெயர் (Smith, Carpenter), ஊர்ப்பெயர் (பழனி, திருமலை) என்று பலவிதங்களாக இருப்பதை அறியலாம்.

இவ்வாறு காலத்தைக் கடந்து தமிழ்ப் பெயர்களின் வளர்ச்சிமுறை பயணித்து வந்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறிய முடிகின்றது. எனவே இழந்த நம் மொழியைச் சிதைந்த நம் மொழியைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்., ஆக தமிழ் மக்களைத் தமிழில் பெயர்களைச் சூட்ட   நெறிப்படுத்துவதில் இன்றைய சூழலில் தமிழாசிரியர்களைக் காட்டிலும் சோதிடர்களுக்கே பெரும்பங்கு உள்ளது. தாய்மொழியைத் தவிர்ப்பது என்பது  பெற்றெடுத்த தாயைத் தவிர்ப்பதற்குச் சமம். கடந்தது கடந்துப் போகட்டும்,  இனி வரும் தலைமுறைக்காவது விழித்துக் கொண்டு தம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரினைச் சூட்டுவோம் என அகமனதால் உறுதிமொழி ஏற்போம்.  வாழ்க  தமிழ், வளர்க அன்னைத் தமிழின் புகழ்., நன்றி

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். த. தினேஷ்
தமிழ் உதவிப் பேராசிரியர்

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

ஈரோடு.

 

நூல் விமர்சனம்|ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு|வீ.பூமிநாதன்

நூல் விமர்சனம் ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு பூமிநாதன்
கல்விப் புலத்திலிருந்து ஒரு கவிதைத் துடிப்பு : முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ கவிதைத் தொகுதியை முன்வைத்து.
 முன்னுரை
     மிழக இலக்கியக் கல்விப் புலத்தில், இலக்கியப் படைப்புகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெரிதும் இலக்கியத்தின் நுட்பங்களை உள்வாங்கி, அதனை எளியமுறையில், மாணவர்களின் மனம் கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லும் வலிமை பெற்றவர்களாகவே இருக்கின்றனர். ஒருவகையில் இவ்விரிவுரைகள் என்பவை திறனாய்வுரைகளாகவும் வருவித்துக்கொள்ளும் வல்லமை உடையவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. அவ்வகையில் எவ்வாறு பண்டைய இலக்கிய, இலக்கய உரையாசிரியர்கள், திறனாய்வாளர்களாக வரவுவைக்கப்பட வேண்டுமோ, அதேபோல, தமிழ் இலக்கியக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் திறனாய்வாளர்களாக வரவு வைக்கப்படின் அது தவறாகாது.
    இலக்கியத்தை விவரித்துரைக்கும் ஆசிரியர்களிடையே இலக்கியப் படைப்பாளிகள் முகிழ்ப்பது அரிதினும் அரிதான செயல்பாடுகளாகவே இருக்கின்றது. ஏனெனில், இலக்கியம் என்பது அனுபவங்களை அகவயமாக நோக்கி, அதனைக் கொண்டு செரித்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கி, அதிலிருந்து படைப்பு நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதனை வெளிப்பாட்டு மொழிக்கு மடைமாற்றம் செய்து, மொழியின் துணைகொண்டு வெளிப்படுத்தும் மிகப்பெரிய செயல்பாடாகிறது. அச்செயல்பாட்டுக்கான அவகாசம் அன்றாடம் இலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அமைவது பெரிதும் இல்லை எனலாம்.
    தமிழ்க் கல்விப் புலத்தில் படைப்பு மனத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது பெரும் சவால். முனைவர் வீ.பூமிநாதன், ஒரு கவிதைப் படைப்பாளியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்  என்பது தனித்துவமாகக் கருதத் தக்கது. முனைவர் வீ.பூமிநாதனின் ‘ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு’ என்ற கவிதைத் தொகுப்பு, தற்காலக் கவிதைப் படைப்புத் துறையில் புதிய நோக்குகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை வகைதொகைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொகுப்பின் தலைப்பு
           முனைவர் வீ.பூமிநாதன் தனது கவிதை வெளியெங்கும் மனிதாயப் பண்புகளின் சிக்கல்களையும் அதன் வெளிப்பாடுகளில் ஏற்படும் முரண்களையும் அவை உள்வாங்கப்படுவதில் ஏற்படும் பண்பு மாற்றங்களையும் நுட்பமாகப் பேசுகின்றார். தமிழ் இலக்கியக் கல்விப் புலத்தில் தொடர்ந்து இயங்கும் ஓர் ஆசிரியரே கவிதைப் படைப்பாளியாக இருப்பதால், அவர் தமிழின் நீண்ட நெடிய மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கிறார். குறிப்பாக தமிழ்ச் சமூகம், தாய்வழிச் சமூகமாக இருந்தது என்ற வரலாற்று நிலையில் அவர் அழுத்தமான பிடிப்பும் தொடர்பும் கொண்டிருக்கிறார். இச் சமூகம், மனிதப் பெருவெளி ஒரு முதாயிலிருந்து கிளைத்தது என்பது அவருடைய கவிதை வெளிப்படுத்தும் நம்பிக்கையாகும். எனவே கவிஞர், மனிதர்களின் தொப்புள்கொடியைப் பற்றிக் கொண்டு, காலவெளியின் பின்னோக்கிச் செல்லும்போது, அவரால் ஓர் ‘ஆதித்தாய்’ கண்டடையப்படுகிறாள்.
        ஆதித்தாய் என்பது கவிஞரால் முன்வைக்கப்படும் கனதிமிக்க குறியீடு. இது தாய்வழிச் சமூகத்தின் அழுத்தமான வெளிப்பாடு. தாய்வெளிச் சமூகத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள், அசைவியக்கங்கள் பிற்காலத்தில் தந்தைவழிச் சமூகத்தால் வீழ்த்தப்பட்ட வலிமிகுந்த வரலாற்றைத் தாங்கி நிற்கிறது இக்குறியீடு.
    ஒரு மனிதனின் இதயத் துடிப்பை இடதுபக்க மார்பின் வழியாகவே உணருவது என்பது வழமை. ஆனால், ஆதித்தாயின் முதுகில் இந்தத் துடிப்பை உணருவதாகக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு பேசுகிறது. அதிலும் அந்தத் துடிப்பு என்பது முதுகைத் தாண்டி ஒலி எழுப்புகிறது என்ற தொனிப்பொருளில் ‘கேட்கும் துடிப்பு’ என்கிறார் கவிஞர். எனவே ஆதித்தாயின் இதயத் துடிப்பு என்பது இயல்புக்கு மாறான துடிப்பு என்பது இதன்வழியாகப் பெறப்படுகிறது. எனில், எதன் பொருட்டு ஆதித்தாயின் இதயம் இயல்புக்கு மாறாக, அதிக ஒலி எழுப்பியபடி – பதற்றமுற்றபடி – ஒலிக்கிறது என்ற வினாவெழுகிறது.
   இச்சமூகத்தில் – எல்லாம் இயல்பாக இருந்த, மனிதனை நேசித்த, அன்புக்கு முதன்மை இருந்த, தாய்வழிச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் வலியால் ஏற்படும் துடிப்பு இது என்பதாக இத்தொகுப்பின் கவிதைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். எனவே இத்தலைப்பு, தொகுப்பில் உள்ள கவிதைகளின் வரலாற்று, பண்பாட்டு, உளவியல் பின்புலத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
    தொகுப்பில் மனதைப் பிடித்து நிறுத்துகிற… மறுபடியும் வாசித்து இரசிக்கத் தூண்டுகிற… சில வரிகளில் முன்னும் பின்னுமாய் மீண்டும் ஊர்ந்து திரிய வைக்கிற… திகைப்படைய வைக்கிற… குழப்பமடைய வைக்கிற… தெளிவுக்காக மீண்டும் வாசிக்கத் தூண்டுகிற பல வரிகள் கிடக்கின்றன.
தலைப்புகள் இல்லாக் கவிதைகள்
         கவிதைக்கான தலைப்புகள் என்பவை முகவரி அட்டைகளைப் போன்றவை. அவை ஒருவகையில் கவிதைக்கான திறவுகோல்களாகவும் வாசல்களாகவும் அமைகின்றன. ஆனால் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைத் தொகுப்பில் எக்கவிதைக்கும் தலைப்பு இடப்படவில்லை. கவிதை வாசகனோடு உரையாடுவதற்கு முகப்புரை தேவையில்லை என்பது கவிஞர் வீ.பூமிநாதனின் கருத்தாக இருக்கலாம். கவிதையே வாசகனோடு நேரடியாக உறவாடும்போது, தலைப்புகள், ‘இடைமறிச்சான்’களாக எதற்கு என்று அவர் கருதியிருக்கக்கூடும். தலைப்புகள் அற்ற இக்கவிதைகள் வாசகனோடு நேரடியாகப் பேசத் தொடங்குகின்றன.
மாற்றம் ஒன்றே மாறாதது
     இப்பிரபஞ்சத்தில் நிலையானது என்று எதுவும் இல்லை; எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது என்பது இயங்கியல் . இயற்கையின் இயக்க இயலில் சிலவற்றிற்குப் பொருள் கற்பிப்பதுதான் மனித வாழ்க்கை. வளைந்து கொடுப்பதும் நிமிர்ந்து நிற்பதும் எவற்றின் அடையாளங்கள்? வளைதல் என்பது பணிதலையும், நிமிர்தல் என்பது செருக்குறுதலையும் குறிக்கும் குறியீடு. இக்குறியீடுகளின் பின் தொக்கிநிற்கும் சமூதாய எள்ளல் நோக்கையும் பொதுப்புத்தி சார் தன்மையையும் கவிஞர் வீ.பூமிநாதன் வினாவெழுப்பி, அதனை மறுத்துரைக்கிறார்.
“வளைவதால் வாழை
கோழை அல்ல
நிமிர்வதால் பனை
செருக்கல்ல
வளைதல் நிமிர்தல்
வேறு வேறு அல்ல
காலத்தால்
பனியும் உருகும்
நீரும் இறுகும்” (ப.80)
   வாசிப்பாளனைப்  பிடித்து நிறுத்தி, அவனைக் குறித்து வைத்துக்கொள் என்று இக்கவிதை வாசகனோடு பேசத் தொடங்குகிறது. இந்தக் கவிதைகளைப் போல, நேரடியாகத் தொனிப்பொருளை வாசகனுக்குக் கடத்த நினைக்கும் கவிதைகள், சிறப்பாகவே வந்துள்ளன.
இருண்மையும் கவிதையும்
      கவிஞர் வீ.பூமிநாதனின் பெரும்பாலான கவிதைகள்,  மெல்லிய இருண்மையை பூசிக் கொண்டுள்ளன. இருண்மையும் ஓர் அழகே என்பதுதான்  கவிதை பற்றிய ஆழமான புரிதல். அப்படியான ஓர் அழகியல் தன்மை வீ.பூமிநாதனின் தொகுப்பில் உள்ள இருண்மைக் கவிதைகளில் தொக்கி நிற்பதை  உணர முடிகிறது.  கவிதையின் போக்கில், கவிஞரின் கைத்திறனில் வந்து விழும் இருண்மைக்கும், மொழியைக் கையாளுவதில் உள்ள சிக்கல்களால் வரும் கூடார்த்தத்திற்கும் வேறுபாடு உண்டு. இத்தொகுப்பில் அப்படிச் சில கூடார்த்தக் கவிதைகளையும் நான் அடையாளம் காணமுடிகிறது . இக்கவிதைகள் என்னவோ உள்ளே இருப்பதைப் போன்ற பாவனைகளைக்காட்ட உதவுமேயன்றி, வாசகனுக்கு அனுபவத்தைக் கடத்தத் துணை நிற்காது என்பதும் தொடர் வாசிப்புத் தந்த அனுபவம் ஆகும்.. எனவே எப்போதும் இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய வாசகனுக்குமான தொடர்பாடல் ( Communication ) அவசியமானது. அவ்வாறு தொடர்பாடல் செய்வதில் வஞ்சகம் செய்ய வேண்டுமென்று கருதாத இலக்கியப் படைப்புகளில் வெளிப்படும் வெளிப்படைத் தன்மையும் எளிமையும் பேரழகைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனலாம்.
காட்சிச் சித்தரிப்பும் கவிதை வலுவும்
     கவிதைகளில் காட்சிகளைச் சித்தரிக்கிறபோது, குறைந்த சொற்களில் மேலான அனுபவத்தைக் கடத்தும் வல்லமை உங்களிடம் இருக்கிறது என்பதற்கான பல சான்றுகள் இக்கவிதைத் தொகுப்பில் உள்ளன. வாசகன், இலக்கியப் படைப்பில் வெளிப்படும் காட்சிச் சித்தரிப்பை வாசிக்கிறபோது, தானே அவற்றைக் காணும் அனுபவத்தைப் பெறுகிறான். இலக்கியப் பனுவலுக்கும் வாசகனுக்குமிடையில் ஸ்தூலமாக நின்கும் படைப்பாளி மறைந்துபோகும் பேரனுபவத்தை இக்காட்சிப் படிமங்கள் வழங்குவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், மொழி என்ற ஒன்றும் மறைந்து அனுபவம் என்ற முழுப்பொருளை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் தன்மையையும் ஒரு படைப்பாளி உருவாக்கிவிட முடியும் என்பதற்கு முனைவர் வீ.பூமிநாதனின் பல கவிதைகள் சான்று பகர்கின்றன.
         “ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு“ என்னும் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள், இவ்வாறான காட்சி அனுபவத்தை வாசிப்பாளனுக்குக் கடத்துவதில் சிறப்புப் பெறுகின்றன.  எடுத்துக்காட்டாக,
“ஓடிக் கொண்டிருக்கும்
எனது பாதத்தை
ஒரு நொடி
தாமதாக்குகிறது
தனது முட்டையைத்
தனது வாயிலேயே
கவ்விக்கொண்டு,
ஊர்ந்து செல்லும்
பாம்பு ஒன்று” (ப.13)
          இக்கவிதை, குறைந்த சொற்களில் ஒரு காட்சிப் படிமத்தை வாசிப்பாளனுள் எழுப்புகிறது.இக்காட்சி அனுபவம் ஏற்படுத்திய பேரதிர்ச்சியில் வாசகனைச் சில நிமிடங்கள் உறைந்துபோக வைக்கும். காட்சிப் படிமங்களாகவே மனதில் தங்கிவிடும் பல சொற்பதங்கள் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் கிடக்கின்றன.
நகம் என்னும் குறியீடு
   ஒரு படைப்பாளியின் இலக்கியப் படைப்பில் ஒரு குறியீடு மீள மீள முன்வைக்கப்படும்போது, அக்குறியீடு தனித்துவக் கவனத்தைக் கோருகிறது என்றே கொள்ள வேண்டியதிருக்கிறது. முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைகளில் ‘நகம்’ என்பது பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறது. வேறு வேறு இடங்களில், வேறு வேறு தொனிப்பொருளில் இக்குறியீடு முன்வைக்கப்படுவதைக் காணமுடிகிறது. ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது குறித்துப் பேசும் கவிஞர் வீ.பூமிநாதன், அவ்வரிசையில் ‘நகத்தை’க் குறிக்கிறார்.
‘எனது இருப்பை / நான் எப்படி / அடையாளப்படுத்துவது?
எடை, உயரம் / நகம், கூந்தலின் வளர்ச்சி,
பார்வை, சொல், / பயணம், ஈரம், / உண்மை, கல்வி
பணி, குடும்பம், / எழுத்து…’ (ப.7)
‘கழுகின் கடினமான / நகங்களை விட
வலிமையான ஒரு கோழியின் இறகுகள்’ (ப.16)
‘நம் நகங்களை நாமே உண்போம்’ (ப.26)
‘எண்ணற்ற கழுகின் / நகங்களை உண்ட’ (ப.29)
‘உலர்ந்துபோன் நகங்களைச் சுமக்கும் / வெட்டுக்கிளி’ (ப.35)
        இவ்வாறு இக்கவிதைத் தொகுப்பெங்கும் நகங்கள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. இவை மிகவும் ஆழமான குறியீடாகப் பயின்றுவருவதை அவதானிக்க முடிகிறது.  அவ்வந்தக் கவிதைகளில் அக்கவிதைகளுக்குரிய தனித்துவத்தை முன்னிறுத்திப் படைக்கப்பட்டிருப்பினும் மறைபொருளாக ஏதோ ஒன்றைக் கவிஞர் சுட்டிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
     அதாவது நகம் என்பது வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மையுடையது. எனவே தரிக்கத் தரிக்க மீண்டும் வளரும் ‘வளமையும், எதிரியைத் தாக்க ஆயுதங்கள் அற்ற நிலையில், பெண்களுக்கு நகமே ஆயுதமாகும் தன்மையும், நாணத்தில் நகம் கடிக்கும் வெளிப்பாட்டுணர்வும், நகம் கடித்தல் என்னும் தவிப்பின் நிலையையும் குறியீடாகப் பல இடங்களில் கவிஞர் வீ.பூமிநாதன் பயன்படுத்துகிறார். இவ்வாறான தனித்துக் குறிப்பிடத்தக்க குறியீடுகள் இவரது கவிதை வெளிகளில் ஊடாடுவதைக் காணமுடிகிறது. இவற்றைக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளும் பொருள்கோள் முறையையும் வாசிப்பாளனிடன் இக்கவிதைப் பனுவல்கள் கோருவதை உணரமுடிகிறது.
முடிவுரை
                தமிழ்க் கல்விப்புலங்களில் இருந்து வெளிவரும் இலக்கியப் படைப்புகளில் , அப்படைப்பாளியின் வாசிப்பின் ஆழமும், அனுபவ வெளிப்பாடும் பொதிந்திருப்பதைப் பொதுவில் காணமுடிகிறது. பேராசிரியராகவும் தொழிற்படும் முனைவர் வீ.பூமிநாதனின் கவிதைப் படைப்பில், தொன்மை மனத்தின் விழைவுகளும் நவீன நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணமுடிகிறது. நிலவுகிற சமூகத்தில் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பல்வேறு அம்சங்களைக் கேள்விக்குட்படுத்தும் விமர்சன நோக்கும் பூமிநாதனின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. காட்சிப் படிமங்களைச் சித்தரிப்பதில் கவிஞர் தனித்துவம் உடையவராகத் திகழ்கிறார் என்பதற்கான சான்றுகள் பல இவருடைய கவிதைத் தொகுப்பில் உள்ளன. குறியீடுகளை மிகவும் காத்திரமாகக் கையாளும் திறனையும் பூமிநாதனின் கவிதைகளில் காணமுடிகிறது. தன் கவிதைப் பரப்பில் ஒரு பொதுக்குறியீட்டைப் பல இடங்களில் பொதிந்து வைத்துப் பல்வேறு பொருள்களை வாசகனுக்குக் கடத்துவதை ஓர் இலக்கிய உத்தியாகவும் பூமிநாதன் பயன்படுத்துகிறார் என்பதையும் காணமுடிகிறது.
தோழமையுடன்,

முனைவர் கி பார்த்திபராஜா

உதவிப்பேராசிரியர் (ம) தலைவர்,

தமிழ் முதுகலை மற்றும் ஆய்வியல் துறை,

தூய நெஞ்சக் கல்லூரி,

திருப்பத்தூர்.


 

மண்மகள் |கவிதை| முனைவர் நா.சுபலட்சுமி

மண்மகள் கவிதை ந.சுபலட்சுமி

📜  மண்மகள் உறங்கும்


கண்ணயர்வில் எங்கும்
 

பச்சைப் புல்வெளி


போர்த்திய போர்வை


பசும்புல்வெளியில்


பைந்நுனிகளிலே


பனித்துளியின் பரவசம்..!


 

📜 கொட்டும் அருவிகளில்


திக்கெட்டும் ஆளும்


இறைவனின் எல்லையில்லா


ஆனந்தத் தாண்டவம்..!


 

📜 ஆர்ப்பரிக்கும் கடல்களில்


இயற்கையின் இதயத்துடிப்பு


பொழியும் மழைத்துளிகளில்


இயற்கையின் சுவாசம்..!


 

📜 பறந்து விரிந்த


வெண்குடையாய் உலாவும்


வான் பரப்பில் வைரத்


துண்டுகளாய்  நட்சத்திரங்கள்..!


 

📜 மஞ்சள் வெயிலாய்  


மக்கள் வாழ்வில்


இருள்நீக்கும் சிவப்பு


கம்பள விரிப்புகள் ..!


 

📜 வானில் சிறகடித்து
 

பறந்து இரைதேடி


சுற்றித்திரியும் பறவைகள்


இயற்கையின்


சாகசப்பிறவிகள்..!

 

📜 பறவைகளின் இருப்பிடமாய்


பூக்களின் கூடாரமாய்


மணத்தைப் பரப்பி


அடிமனதை வருடிடும்..!


 

📜 வண்ண  மலர்கள்


இயற்கையின் கொடைகள்


காடுகளைப் பிரசவிக்கும்


கருவறைகளாய் மரங்கள்


இயற்கை மகளின்


இறவா வரங்கள்..!


 

📜 எட்டா உயரமாய்  


ஏற்றத்தைப் போதிக்கும்
 – மலைகள்

பூமிப்பந்தின்
கர்வ கிரீடங்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் நா.சுபலட்சுமி,


தமிழ்த்துறை,


உதவிப் பேராசிரியர்,


டிரினிடி மகளிர் கல்லூரி,


நாமக்கல் மாவட்டம்.

 

கேட்காத காதுகள்!|சிறுகதை|ச. வினிதா

கேட்காத காதுகள்! ச. வினிதா

“கேட்காத காது சொல்லும் கதை”


மலையடிவார நகரத்தில் இருந்த அந்தச் சிறு நகைக்கடை, ஒரு நாளில் பெரிய அற்புதத்தைக் கண்டது. அந்த நகைக்கடையின் உரிமையாளர் கோபாலன், அவருக்கு உறுதுணையாக இருந்த வேலைக்காரன் இராமு.. இராமுவிற்கு சரியாககாது கேட்காது. ஆனால், அவன் செயல்களில் எப்போதும் ஒரு நேர்மை இருந்தது.


ஒரு நாள், கடை உரிமையாளர் கோபாலன் அவனை அழைத்தார்.
“இராமு, நமதுகடையில் வெகுகாலமாக இந்த ஒரு தங்க நகை மட்டும் விற்காமல் இருக்கிறது. அதனால், அந்த நகையின் விலையை பாதியாகக் குறைத்து, ஒரு தகடு எழுதி அதற்கு அருகே ஒட்டி வை” என்றார்.


இராமுவும் சிரித்துக் கொண்டே, தலை அசைத்து ஒப்புக்கொண்டான். ஆனால் அவனுக்கு உரிமையாளர் கோபால் கூறிய செய்தி அவனுக்கு சரியாகக் கேட்கவில்லை. “பாதி விலை”என்றதை அவன் “இரண்டு மடங்கு விலை” என்று தவறாகப் புரிந்து கொண்டான். அதே நேரத்தில், அவனுடைய மனசு அது சரி என்றுதான்  சொல்லியது,
“இந்த நகை  விலைமதிப்பற்றது, பாரம்பரியம்மிக்கது  இதன் மதிப்பு உயர்த்தினால் தான் யாராவது கவனிப்பார்கள் !” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு செயல்பட்டான்.


பின்னர் இரண்டு மடங்கு விலையை எழுதி, ஒரு அழகிய அட்டையில் அந்த நகையுடன்  சேர்த்து வைத்தான்.


மறுநாள், வாடிக்கையாளராக ஒரு பெரிய தொழிலதிபர் அந்த நகைக் கடைக்கு வருகை தந்தார். கடை முழுவதையும் பார்த்துவிட்டு, இறுதியாக அவரது கண்கள் ராமு எழுதி வைத்த அந்த தாங்க நகையின் மீது  கவனம் சென்றது. இந்த நகை ஏன் இவ்வளவு விலையுயர்ந்தது?


இதில் என்ன சிறப்பு ?” என அந்த வாடிக்கையாளர் வினவினார்.
 

“இது சாதாரண தங்க நகைதாங்க எங்கள் முன்னோர்கள் செய்தது பாரம்பரியமானது ” என்று சொல்லி முடிப்பதற்குள், சரிசரி நான் புரிந்துக்கொண்டேன் “இதற்கு மற்றதைக் காட்டிலும் அப்போ தனித்தன்மை இருக்கு, ரொம்ப நல்லது, அப்போ இது எங்கள் வீட்டில் இருந்தா தான் இன்னும் சிறப்படையும்  இதை என் மனைவிக்கு  பெரிய பரிசாக நானே வாங்கிக் கொள்கின்றேன்!” இந்தாங்க அதற்கான முழுப்பணம் என  விலை அட்டையில் சேர்க்கப்படிருந்த முழுத்தொகையினையும் எடுத்து நீட்டினார்.


அந்த நகை விற்ற  மகிழ்ச்சியில், நகைக் கடையின் உரிமையாளரான கோபாலன் தனது ஊழியரான இராமுவை அழைத்தார்.


“இராமு, நான் சொன்னதை யெல்லாம் நீ மாறாக ஏன் செய்தாய்?


நான் பாதி விலை குறைக்க சொன்னேன்.


ஆனால், நீ எதற்கு இரண்டு மடங்கு அதிகம் எழுதினாய்?”
என ராமூவிடம் வினவினார்.


இராமு தன் தலையை சொறிந்துகொண்டே மெல்ல திரும்பி பார்த்தான், முதலாளி என்னை மன்னிசுடுங்க ஒரு உண்மையை நான் உங்க கிட்ட சொல்லாம மறைத்துவிட்டேன்,
 

உங்களிடம் நான் ஒரு உண்மை சொல்ல வேண்டும். எனக்கு காது அவ்வளவாக சரிவர கேட்காது.  நீங்க அன்னிக்கு சொன்ன வார்த்தை எனக்கு சரியா புரியல. ஆனால் நான் என்னுடைய மனசை கேட்டு, இந்த நகைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டும் என்று எண்ணினேன். அதையே முயற்சி செய்தேன்.”


கோபாலன் சற்று நேரம்  உட்கார்ந்தார். அன்போடு இராமுவின்தோளைத் தொட்டு, மெல்லச் சிரித்தார்.

“இராமு, நீ செய்தது அற்புதம்! கேட்காத காதே இன்றைய என் மகிழ்ச்சிக்கும் லாபத்திற்கும் காரணம். சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் காரியம் கூட நல்லதொரு முடிவாக முடியகூடும் என எண்ணி ராமுவை அன்போடு கட்டி அனைத்தான்.


“விலையால் அளவிடும் மனிதர்கள்,


விதியால் உயர்ந்தார் ஒருவன்.


சிறு தவறுகள் கூட,


சில நேரங்களில் பேருணர்ச்சி தரும்!”
  

சிறுகதையின் ஆசிரியர்

ச. வினிதா


இளநிலை இரண்டாம் ஆண்டு


கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்


வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


திண்டல், ஈரோடு.

 

தன்னலமற்ற சேவை மனப்பான்மை | E.கோவிந்தசாமி

iniyavaikatral

“பிறந்த நாடே சிறந்த கோவில்

பேசும் மொழியே தெய்வம்

இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்

கோபுரம் ஆகும் கொள்கை

பிறந்த இடத்திற்கும்

பேசும் மொழிக்கும்

பெருமை தேடித்தரும்படி

வாழ்ந்திடல் வேண்டும்”

    E.கோவிந்தசாமிவணக்கம். என் பெயர் கோவிந்தசாமி, நான் தமிழகத்தில் திருவண்ணாமலையில் பிறந்தேன். பள்ளி இறுதி வகுப்பாகப் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். என்னுடைய அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டேன்.  எனக்கு ஒரு மகன் இருக்கின்றான். நான் எனது குடும்பத்தில் ஒருசில கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து  1995 ஆம் ஆண்டில் ஆந்திர  மாநிலத்திற்கு வந்தேன். தன்னந்தனி ஆளாக Care of Platform ஆக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். இன்று (2024 ஆம் ஆண்டு) ஆந்திர மாநிலத்தில் பாபட்லா மாவட்டத்தில் சின்ன காஞ்சம் என்ற ஊரில் ஒரு குறிப்பிடத்தக்க சமூக சேவகர்களில் நானும் ஒருவராவேன். தற்போது சில பொறுப்புகளிலும் உள்ளேன். பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நற்சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். இந்த நிலையினை அடைந்திட உண்மை நேர்மை தன்னலமற்ற சேவை மனப்பான்மை போன்ற அடிப்படை  காரணிகளாக என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். என்னுடைய வாழ்க்கையானது ஊனமுற்றோர்களுக்கு முன்மாதிரியாக என்னை வளர்த்தெடுத்துள்ளேன்.  தாய்மொழியாம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து வருகின்றேன்.

சமூக ஆர்வலர்


திரு E.கோவிந்தசாமி


சின்னகாஞ்சம் கிராமம்


சுண்டு பஜார், பாபட்லா மாவட்டம்,


ஆந்திர மாநிலம்

பாட்டியின்ஆசை|சிறுகதை|முனைவர்.இரா.செல்வராணி

பாட்டியின் ஆசை - முனைவர்.இரா.செல்வராணி
பாசனூர் என்ற கிராமத்தில் அழகி என்ற 70 வயதுடைய  பாட்டி வசித்து வந்துள்ளாள்,  அவளுக்கு ஒரு மகன் வழி பேத்தி இருந்தாள். அவளின் பெயர் கஸ்தூரி. பாட்டிக்குப் பேத்தி என்றால் கொள்ளைப் பிரியம். தன் பேத்திக்குக் கேட்பது எல்லாம் வாங்கிக்  கொடுத்து மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளாள். அவளும் வளர்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறாள். பாட்டி ரொம்ப  மகிழ்ச்சியாக இருந்தாள். தன் பேத்தியிடம் நீ நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் அமர வேண்டும் என்கிறாள். அதற்கு கஸ்தூரி கண்டிப்பாக உன் ஆசையை நிறைவேற்றுவேன் என்கிறாள்.  பாட்டியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  காலங்கள் கடந்து சென்றன.
               
கஸ்தூரி பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச்  செல்கிறாள். பாட்டி தினமும்  தன் பேத்தி கல்லூரிக்கு சென்று வருவதற்குள் அவளுக்குப்  பிடித்த  உணவை சமைத்து வைத்து விட்டு மாலை நேரம் அந்த ஊருக்குள் வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருப்பாள். பேருந்தும் வந்து நின்றதும் அதிலிருந்து பேத்தி இறங்கியதும் அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்து சமைத்த உணவை உண்ணச் செய்வாள். இப்படியே மூன்றாண்டுகள் ஓடி விட்டது. கஸ்தூரியும் இளங்கலை படிப்பை முடித்து விட்டு முதுகலை  படிப்பு படிப்பதற்கு மீண்டும் கல்லூரியில் சேருகிறாள். ஆறுமாத காலம் சென்றது. பாட்டிக்கு வரவர உடல் நலம் குறையத் தொடங்குகிறது. படுத்த படுக்கையில் இருக்கிறாள். கஸ்தூரிக்குப் பாட்டியை இப்படி பார்ப்பது வருத்தமாக இருந்தது.
               
ஒருநாள் காலை பாட்டிக்குத் திடீரென்று மயக்கம் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியிலேயே இறந்து விடுகிறாள். கஸ்தூரி மிகவும் வருந்துகிறாள், இப்படியே ஒரு வருடம் முடிகிறது ,அவளின் முதுகலைப் படிப்பும் முடிந்து விடுகிறது. வரன் வருகிறது. திருமணமும் நன்றாக முடிந்து இரு குழந்தைகளும் பிறந்தன. அவளின் கணவன் அவளை மீண்டும் முனைவர் பட்டப் படிப்பு படிக்க வைக்கிறான், அவளும் நன்றாகப் படித்து பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்கிறாள். அப்போது நினைக்கிறாள் பாட்டியின் ஆசைப்படி எல்லாம் நடந்து விட்டது. ஆனால் அதனைக் காண அழகி பாட்டி நம்முடன் இல்லை சற்று வருத்தமாக உள்ளது. ஆனாலும் பாட்டி தெய்வமாக என்னை வாழ்த்தி கொண்டிருப்பார் என நம்பி பாட்டியை வணங்குகிறாள் கஸ்தூரி.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர்.இரா.செல்வராணி
                                                                                          
உதவிப் பேராசிரியர்
                                                                                            
தமிழ்த்துறை
                                                                                             
J.H.A.அகர்சன் கல்லூரி
                                                                                           
மாதவரம், சென்னை -60

வறுமை என்பது சிறுமையா?|கவிதை|முனைவர் அ. அன்னமேரி

வறுமை என்பது சிறுமையா- முனைவர் அ. அன்னமேரி

📜 வறுமை என்பது சிறுமை அல்ல


வறுமைதான் வாழ்வின் பெருமை


வறுமையில் பிறப்பது தவறல்ல


வறுமையிலே வாழ்வது தவறு


வறுமையைப் பார்த்து பாவம் என்போர்


வளமையை பார்த்து வாழ்த்துவதில்லை


 

📜  நீ தாழ்ந்தால் சிரிக்கின்ற உலகம்


நீ உயர்ந்தால் படுத்தும் கலகம்


மூட மனிதர்கள் பார்வையிலே

முடங்கி கிடக்காதே மானிடா…

📜  உலக மனிதர்கள் பலவாகும்


உன்ன மனிதர்கள் சிலவாகும்


உலகப் போக்கில் வாழாதே


உன்னை புரிந்து வாழ்ந்திடு


உயர்க்கல்வி அறிவைப் பெற்றிடு


உழைப்பில் மேன்மை கண்டிடு


 

📜  உயர் லட்சியம் நோக்கிப் புறப்படு


உயர் வின்னையும் நீயும் தொட்டிடு


உலகம் திரும்பிப் பார்த்திடும்


உன் பிறப்பின் மகத்துவம் புரிந்திடும்..!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் அ. அன்னமேரி
உதவிப்பேராசிரியர்
புனித வளனார் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மஞ்சக்குப்பம், கடலூர்

 

நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள்|முனைவர் சு. பால்பாண்டி

நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள் - முனைவர் சு. பால்பாண்டி
ஆய்வுச்சுருக்கம்
               
சிறுதெய்வங்களாக விளங்கும் நாட்டார் தெய்வங்கள் அனைத்தும், காட்சியுரு தந்து தோன்றி மறைந்தனவேயாகும். இதற்கு அடுத்தநிலையில் ‘கொலை, கொள்ளை, சத்தியம் காத்தல்’ என்ற  நிலைகளிலும் மனிதர்கள் தெய்வங்களாக வழிபடப் படுகின்றனர். மனிதர்கள் தெய்வங்களாக விளங்கும்போது.

1) தெய்வத்திற்குக் கட்டுப்பட்டு இருத்தல்
2) தெய்வத்தை விட்டு தனியே இருத்தல்
என்ற நிலைகளில் காணப்படுகின்றனர். நாளடைவில் பெருந்தெய்வ வழிபாட்டிற்கு வழி வகுக்கின்றது. இதை மக்களின் புராணக் கதைகளும், வாய்மொழிக் கதைகளும் உணர்த்துகின்றன.

முன்னுரை
               
நாட்டார் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் எல்லாம் பெருந்தெய்வ, சிறுதெய்வ நோக்கில் அமைந்தாலும், இரண்டுக்கும் ஒரே நிலையில் தோற்றமும் அமைகின்றது. தெய்வங்கள் மக்களின் கனவு, எதிர்பாராத சம்பவம் என்ற செயல்களின் மூலம் தோன்றி மறைந்து விடுகின்றன. இவற்றை,  மெய்மைப்படுத்தும் காரணமாக ஆவி ஒன்றினை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அச்செயலே, ஆவியின் மேல் அச்சமுற்று தனக்குத் தீங்கு நிகழாமல் இருக்க வழிபடத் தொடங்கியது எனில், ஓர் இடத்தில் தெய்வ வழிபாடு தொடங்குவதற்கு முன், அங்கு ஆவியானது தோன்றி மனிதர்களுக்கு ஏதாவதொரு வடிவில் (குரலாகவோ, உருவமாகவோ) காட்சி அளித்து மறைந்துவிடும். அந்த இடத்தில் அங்கு வாழும் மக்கள் வழிபடத் தொடங்கினர் என்பது, விருதுநகர் நாட்டுப்புற மக்களின்  வாய்மொழிக் கதைகளினால் தெய்வ வரலாறுகளை அறிதல் ஆய்வின் கருதுகோளாக அமைகிறது.

கருத்திறச் சொற்கள்
நாட்டார்கள், நாட்டுப்புறம், தெய்வங்கள், வழிபாடுகள், கதைகள், தோற்றம், ஆவி, அச்சம் என்பன ஆய்வின் கருத்துச் சொற்களாக அமைந்துள்ளது.

ஆய்வின் பயன்கள்
நாட்டார்கள் உறவுமுறை போன்று தெய்வங்களும் தங்களுக்குள் உறவுமுறைகளை வைத்திருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நாட்டுப்புறக் கதைகளில் வழிபாட்டுத் தெய்வங்கள்
சக்தி மாரியம்மா
               
சிவயோக ஞானசித்தர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய சதுரகிரி மகாலிங்கம் மலையில் கடுந்தவம் மேற்கொண்டு அன்னை பராசக்தியிடம் ‘நான் யோக நிஷ்டையடையும் இடத்தில் என் அன்னை பராசக்தி – சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்ட, அதற்கு அன்னை ஐந்து நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் நான் ஐக்கியம் ‘ஆவேன்’ என்று பதில் கூறியது. அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து ஐந்து நதிகள் சங்கமம் ஆகின்ற ‘இருக்கன்குடி’ என்ற இடத்தைக் தேர்வு செய்தது. அந்த இடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஞானசித்தர்.

                இந்த நிலையில், நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெருவெள்ளத்தால் இழுத்து வரப்பட்ட அன்னை பராசக்தியின் உருவச்சிலை ‘சித்தர் ஐக்கியமாகிய இடத்தை அடைந்ததும் வெள்ளத்திலிருந்து விடுபட்டு சுழலெடுத்து  பூமிக்குள் புதைந்துக் கொண்டது”1 எனப்  புராணச் செய்தி கூறுகின்றது.

இன்னொரு புராணக்கதை பின்வருமாறு
               
அர்ச்சுனா நதியின் கரையில் இருக்கும் இருக்கன்குடி கிராமப் பெண்கள் சாணம் சேகரித்துவிட்டு சாணக்கூடையை மட்டும் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. சாணத்தையெல்லாம் அகற்றிய பிறகும் எடுக்க முடியவில்லை. எனவே, பெண்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவ்வழியே வந்த ‘சக்காபுக்க’ என்ற அரிசன சாதியைச் சார்ந்த முதியவர் பெண்களிடம் காரியத்தை வினவ பெண்கள் விசயத்தை முதியவரிடம் கூறுகின்றனர். அவர், அவ்வூரின் இல்லத்துபிள்ளைமாரிடம் விசயத்தை எடுத்துக்கூறுகின்றார். அதைத் தொடர்ந்து வந்து மண்வெட்டியால் அந்த இடத்தைத் தோண்டுகின்றனர். அவ்பொழுது திடீரென ‘ ரத்தக் கசிவு’ ஏற்பட்டதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி உற்றார்கள்.
இதைக் கண்ட எல்லோரும் பயந்து நிலைதவறிய போது, இல்லத்துபிள்ளை என்பவர் ‘இதை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்கின்றார்.  ஒருநாள் இல்லத்து பிள்ளையிடம் ரத்தக் கசிவு ஏற்பட்ட இடத்தில் தனக்கு ரத்தப்பலி தந்தால் உங்கள் குலத்தையும் தன்னை நாடிவரும் மக்களையும் வளமாக்கி வாழவைப்பேன் என்று இல்லத்து பிள்ளையிடம் அசரீரி ஒலி கேட்டது. இதைக் கேட்ட இல்லத்து பிள்ளை கருவுற்ற தன் மனைவியையே பலிகொடுத்து விடுகின்றார். பின் தன் மனைவியின் நினைவில் சக்தியை வளரச் செய்து சிறு பீடம் அமைத்து வழிபட்டார்”2 எனச் சுட்டுகின்றார்.
பல ஆண்டுகள் ஆனபோது பீடத்தின்மேல் சக்தியாக மாரியம்மனின் உருவச்சிலை அமைத்து தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆபரணங்களை அணிவித்து  பூசைகள் செய்கின்றார். இத்தெய்வம் இன்றும் கருவுற்ற பெண்ணின் கோலத்துடன் காட்சியளிக்கின்றது. இத்தெய்வம் பெண்களுக்குப் பிள்ளை வரம் கொடுப்பதாக மக்கள் நம்புகின்றனர். இத்தெய்வம் குறித்த இன்னொரு கதை பின்வருமாறு காணப்படுகின்றது.
               
ஒரு நாள் அக்கோயில் பூசாரி அம்மனுக்குப் பூசை செய்வதற்காகப் பூசைப்பொருட்களைக் கொண்டு செல்கையில், ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அவர் அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பூசைப் பொருட்களை நினைத்து மூன்று நாட்களாக உணவருந்தாமல் கவலையுடன் இருக்கின்றபோது, அம்மன் ஆவியாக பூசாரியின் மனக்கண்ணில் தோன்றி கவலைப்படாமல் இரு; எல்லாப் பொருள்களும் பாதுகாப்பாக உள்ளன”17 என்று கூறியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நம்புகின்றனர். இக்கோயிலை இருக்கன்குடி மாரியம்மன்  அல்லது சக்தி மாரி அல்லது  பராசக்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கின்றனர்.

சங்கிலிக் கருப்பசாமி
பல வருடங்களுக்கு முன்பு அழகாபுரி என்ற ஊர்க்குக் கிழக்குத் திசையில் ஒரு கிராமம் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் கிராமத்தின் காவல்தெய்வம் சங்கிலிக் கருப்பன் ஆகும்.  அத்தெய்வத்திற்கு ‘ஆடு, மாடு, பன்றி’களைப் பலியிட வேண்டுமென்று, அத்தெய்வம் பூசாரியிடம் (வந்து) கேட்டது. இச்செய்திகளை அறிந்த கிராமத்திலுள்ள மக்கள் அதற்கு முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து பஞ்சம் ஏற்படுகின்றது. எனவே, அவ்வூரிலுள்ள மக்கள் பஞ்சம் பிழைக்க வேறொரு இடத்திற்குச் செல்கின்றனர்.  ஆனால் அந்தக் கிராமத்தில் எங்கும் செல்லாமல் சில பள்ளர் இன மக்கள் வாழ்கின்றனர். அவ்வினத்தின் ஒரு குடும்பத்தில் தன்னை வழிபட வேண்டி சங்கிலி  கருப்பசாமி வேண்டுகின்றது. மேலும் குழந்தையில்லாத அக்குடும்பத்திற்குக் குழந்தை வரமும், அக்குடும்பம் வளம்பெற தேவையான பிறவரங்களையும் அத்தெய்வம் அளிக்கின்றது.
குழந்தைகள் பெரியவர்கள் ஆனபோது, தெய்வத்திற்கு வழிபாடு நடத்திய தந்தை இறந்துவிடுகின்றார். எனவே, அத்தெய்வத்தை வழிபடாது விட்டுவிட்டு அவர்கள் வேறுறொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து சங்கிலி கருப்பன், ஆசாரி இனத்தைச் சார்ந்த ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வழிபடுமாறு வேண்டி மறைகின்றது. வழிபட்ட ஆசாரியும் இறந்துவிடுகின்றார். இதன் பின்னர் ஆசாரியின் வாரிசிடம் முன் (கனவு அல்லது நேரில்) தோன்றி தன்னை வழிபடுமாறு கேட்கின்றது.  அதற்கு ஆசாரி மகன் நீ எனக்கு என்ன தருவாய்?என்று கேட்க அதற்கு நீ கேட்டதைத்தருவேன்”3 என்று கூறிவிட்டு மறைகின்றது. பின்னர் தெய்வத்தின் அருள்பெற்று வழிபாடு நடத்தி வருகின்றனர் என்று வெள்ளையம்மாள் குறிப்பிடுகின்றார்.
நொண்டி முத்தையா
முத்தையா என்பவர் மதுரை மாவட்டத்திலுள்ள சுருளி என்ற ஊரில் குடியிருந்திருக்கின்றார். இவர் தேவர் சாதியைச் சோந்தவர். இவர் அவ்வூரைச் சார்ந்த ஆசாரி இனப்பெண்ணுடன் காதல் கொள்கிறார். அந்தப் பெண்ணிற்கு  ஐந்து சகோதரர்கள் இருந்தனர். இருகுடும்பத்தாரும்  இவ்விருவரின் காதலை விரும்பவில்லை. எனவே, பெண்ணின் குடும்பத்தார் இவர்களது காதலைப் பிரிக்க எண்ணினர். முத்தையா தன் காதலியை அழைத்துக் கொண்டு கூமாப்பட்டிக்கு வந்து சேர்கின்றார். ஆனால் ஊர் மக்கள் இருவரையும் அந்த ஊருக்குள் வாழ அனுமதிக்கவில்லை. எனவே, முத்தையா அவ்வூருக்கு அடுத்துள்ள கண்மாயில் வந்து ஒரு குடிசை அமைத்து; அங்கு வாழ்கின்றார். இக்குடிசையைச் சுற்றி ஒருவர் மட்டுமே வந்துபோகும் அளவிற்கு இடைவெளிவிட்டு, சங்கம்முள், இலந்தைமுள் ஆகியவற்றைச் சுற்றிலுமாக வைத்து அடைத்துவிடுகின்றார். முத்தையாவின் மனைவியின் உடன் பிறந்தவர் ஐவரும் தங்கள் தங்கை இவ்வாறு இழிவான செயலைச் செய்து விட்டாளே என வருத்தப்பட்டு, அவளை எவ்வாறெனும் கொலை  செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தேடுகின்றனர்.
இறுதியாகக் கூமாப்பட்டியில் இருவரும் தங்கியிருப்பதாகச் செய்தி கிடைக்கவே, ஐவரும் கூமாப்பட்டி வந்தடைகின்றனர். முத்தையாவின் வீட்டிற்குள் ஐவரும் செல்ல இயலாத நிலையில் ஒவ்வொருவராகச் செல்லவேண்டும் என்ற முடிவின்படி, முதலில் மூத்த அண்ணன் அரிவாளுடன் வீட்டிற்குள்ளே செல்கின்றான். குடிசைக்குள் முத்தையாவும் தன் தங்கையும் அயர்ந்து  தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரிவாளால் தங்கையை வெட்டிக் கொலை செய்து விடுகின்றான்.
கண்விழித்த முத்தையாவிற்குத் தன் மனைவி வெட்டப்பட்டதைப் பார்த்ததும், தன் அரிவாளால் அவனை வெட்டிச் சாய்த்து விடுகின்றான். பின் ஒவ்வொருவராகக் குடிசைக்குள் வர நான்கு நபர்களையும், முத்தையா வெட்டி வீழ்த்துகின்றான். ஐந்தாவதாக வந்தவன்  திடீரென முத்தையாவின் காலை வெட்டிவிடுகின்றான். கால்வெட்டுப்பட்ட நிலையிலும முத்தையா ஐந்தாவது நபரையும் வெட்டிக் கொலை செய்து விடுகின்றான். இறுதியில் அங்கிருந்து  தப்பிச் செல்வது தான் நல்லது என எண்ணி குடிசையை விட்டு வெளியே வர  முயற்சிக்கிறான்.
அவனால் நடக்க முடியாத நிலையில் தடுமாறி சங்கம்முள்ளிற்குள் விழுந்து விடுகின்றான். அம்முள்ளிற்குள்ளிருந்து அவனால் வெளியே வர இயலவில்லை. இந்நிலையில் சிவகாசியிலிருந்து நாடார் இன மக்கள் மாட்டு வண்டியில் கூமாப்பட்டிக்கு வியாபாரத்திற்காக வருகின்றனர்.
வியாபாரம் முடிந்து திரும்புகையில், மாடுகள் கண்மாய் அருகே வந்ததும் நடக்க மறுத்து விடுகின்றன. அனைவரும் வண்டியை விட்டு இறங்கியபொழுது குடிசைக்குள்ளிருந்து முனங்கல் சத்தம் கேட்க அங்குச் சென்று பார்க்கின்றனர்.
இந்நிலைக்கான காரணத்தை; கேட்டபொழுது, முத்தையா தனது முழு வரலாற்றையும் அவர்களிடம் விளக்கியிருக்கிறான். மேலும், தன் காலில் செருப்பு இல்லாததால் தன்னால் தப்பிச் செல்ல இயலவில்லை என்றும் நான் இனி வாழ முடியாது, நான் இறந்துவிட்டால் என்னைத் தெய்வமாக வணங்குகள்; உங்களை காப்பாற்றுகிறேன் எனக் கூறிவிட்டு முத்தையா இறந்துவிடுகின்றான். அங்கு வந்த நாடார்கள் அவ்விடத்திலேயே முத்தையாவைப் புதைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று வைத்து வழிபட ஆரம்பிக்கின்றனர். நாளடைவில் சிவகாசி நாடார்கள் ஒன்றிணைந்து முத்தையாவை தெய்வமாக வழிபட்டனர்”4 என்பர்.
இன்றும், சிவகாசி நாடார்களின் குலதெய்வமாக முத்தையா விளங்குகின்றார். முத்தையா நாடார் மக்களின் மனதில் அல்லது கனவில் தோன்றி துன்பங்களை நீக்கி விடுவேன் என கூறி மறைந்துவிடுவதாகவும் இன்றும் மக்கள் நம்புகின்றனர்.
ஆலடிக் கருப்பசாமி
               
கேரளப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்கள் சுமார்  நான்கு தலைமுறைக்கு முன்னர் பஞ்சத்தின் காரணமாக கிழக்கு நோக்கி சென்றனர். சென்றவர்கள் ‘பாப்பனம்’ என்ற கிராமத்தின் வனப்பகுதியை அடைந்தனர். அவர்கள் அங்குள்ள பனைமரத்தின் அடியில் குடிசை அமைத்து வாழத்தொடங்கினர். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள், அவ்வனத்தில் அச்சத்தைத் தரக்கூடிய தோற்றத்தில் கையில் அரிவாளுடன் ஒளிவடிவில் ஓர்ஆவி தோன்றி மறைந்தது. பின்னர் அந்த ஆவி அம்மக்களின் கனவில் தோன்றி தன்னை வணங்குமாறு வேண்டியது.  எனவே அவ்வூர்மக்கள் முன்னர் கேரளத்தில் அவர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்று கருப்பசாமி கோயிலிருந்து மண் எடுத்து வந்து பீடம்  அமைத்து வழிபடத்தொடங்கினர். அதைத் தொடர்ந்து அத்தெய்வத்தை அவர்களுடைய வாரிசுகளும் வணங்கத் தொடங்கினர். நாளவிடைவில் அத்தெய்வம் அவர்களின் குலதெய்வம் ஆனது”5 என்று சல்லிமுத்து குறிப்பிடுகின்றார்.

மானூர் கருப்பசாமி
               
சுப்புலாபுரத்திற்குத் தெற்குப் பகுதி பெரிய காடாக இருந்தது. சுமார் பத்து தலைமுறைக்கு முன்னர் ஒருவர் விறகு வெட்டும் பொருட்டு அக்காட்டிற்குச் சென்றார். அங்கே, ‘குரண்டி முள்’ செடியின் அடியில் திடீரென இரத்தம் பீறிட்டு வெளியே வர, அதைக் கண்ட அவர் பயத்தினால் நடுங்கினார். அந்நேரம் ஓர் அருவுருவமான ஆவி நிலையில் ‘கிருஷ்ணன்’ அங்கே தோன்றினார். அவர் தோன்றவே குரண்டி முள் செடியின் வேரானது பாறையாக மாறி வளர்ந்தது.  அதற்குள்ளே கிருஷ்ணன்  மறைந்துவிட்டார். அந்தப் பாறையானது தொடர்ந்து  வளர்ந்து கொண்டே இருந்தது.  அந்தப் பாறை வளர வளர மக்கள் பயபக்தியுடன் அப்பாறையை வழிபடத் தொடங்கினர். இது நாளடைவில் கிருஷ்ணன் கோயிலாக மாறியது.
               
மேலும், அவ்வனத்திற்கு அருகே தெற்காக மானூர் என்ற ஊர் இருந்ததாகக் கருதப்படுகிறது. அவ்வூர்க்குக் கிழக்கில் வாழ்ந்தவர்கள் மறவர்கள். கிழக்கில் வரக்கூடிய மக்களைக் கீகாட்டுக்காரர்கள் என்பர். இவர்கள் பல இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள், முத்தையா என்ற ஆவியை பச்சைக் குடத்தில் இட்டு மானூர் வனப்பகுதியில் கொண்டுவர, ஆவியானது திடீரென  குடத்தை வெடிக்கச் செய்து; அவ்வனத்தினுள் சென்று அலைந்து திரிந்தது. இது கிருஷ்ணன் இருக்கும் கோயில் எல்லையில் நுழைந்த போது, கிருஷ்ணன் அதனைத் துன்பம் செய்யவிடாமல் மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதனைத் தனக்கு நேரே உள்ள எல்லையில் இருந்துக்கொள் என்று கட்டளை இடுகின்றார். மீண்டும், உன்னை வழிபட நினைப்பவர்களுக்கு நீ அவர்கள் குலத்தைக் காத்துவர வேண்டும் என்றும் கட்டளை இட்டார். எனவே, மக்கள் முத்தையாவிற்கு மானூர் வனத்தில் பீடம் அமைத்து வழிபடத் தொடங்குகின்றனர்”6 என்று சுப்பையா சுட்டுகின்றார். பின்னர் அத்தெய்வத்தை வழிபட்ட  மக்களுக்கு கல தெய்வமாகவும்  காவல் தெய்வமாகவும்  முத்தையா காணப்படுகின்றார். நாளடைவில் கருப்பன் முன்னோடியாக அமைகின்றார்.

குருசாமி
சுமார் ஏழு தலைமுறைக்கு முன்னர் கோட்டையூர் என்ற கிராமத்தின் அருகே குளக்கரை ஒன்று இருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில்’குரு’ என்றழைக்கப்படும் தவயோகி ஒருவர் வாழ்ந்து வந்தார். குருவின் சீடராகக் காசிக்கார செட்டியார் இனத்தைச் சார்ந்த சடைச்சாமி என்பவர் இருந்தார். இவர் குருவின் சொற்படி தன் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டார். ‘கருவுறா சித்தரின் மறுபிறவியே குரு’  என்று அனைவரும் நம்புகின்றனர். குருவை முதன்மை ஸ்தானத்தில் வைத்துச் செட்டியாரும் மற்றவர்களும் வழிபட்டனர்.
குருவின் மறைவிற்குப்பின் சடைச்சாமி குருவின் பூசைகளைச் செய்து முடித்த பின்னர் ஆசி வழங்கும்போது ‘ குருசாமியே காப்பார்’  என்று கூறுவது வழக்கம். முதுமையடைந்த சடைச்சாமி தன் சகோதரர்களிடம் குருவின் சன்னிதானத்தில் உள்ள ஒளி வடிவினை வணங்குமாறு வேண்டினார். குருவே தம் குலத்தைக் காப்பார் என்றும், சடைச்சாமி கூறுகின்றார். இதைத் தொடர்ந்து மக்களும் தம்  குலத்தைக் காப்பார் என நம்புகின்றனர். இதன் நிலையின் போது செட்டியார் மக்கள் குருசாமி என்ற பெயரில் விளக்கு கம்பத்தை அமைத்து பூசை செய்து தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
அவ்வாறு வழிபட்டு வரும் இடத்தில், “குருவே இரவில் வந்து தவம் செய்து விட்டு மறைந்து விடுகின்றார்”7 என்று சண்முகநாதன் செட்டியார் குறிப்பிடுகின்றார்.

கூடலிங்க அய்யனார்
பண்டைக்காலத்தில் அர்ச்சுனா நதியும் சரஸ்வதி நதியும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இவ் இரு நதிகளும் சதுரகிரி மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. அர்ச்சுனா நதி, சரஸ்வதி நதி ஆகிய இரண்டு  நதிகளும் காளையார்குறிச்சியின்  தென்மேற்காக ஒன்று சேர்கின்றன.
 
               காளையார்குறிச்சி மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டுமானால் இரு நதிகளைக் கடந்தே செல்ல வேண்டும். இருநதி கூடும் இடத்தில்ஆலமரம் இருந்தது. பயணம் செய்யும் மக்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கிச் செல்வது வழக்கம். இம்மரத்தின் வேர்கள் பாதையில்  படர்ந்து காணப்பட்டன. இவ்வூர் மக்கள் இந்த வழியேதான் சிவகாசிக்கு பால்கொண்டு செல்வர். அவ்வாறு  செல்லும்போது, மக்கள் இந்த ஆலவிழுதினைத்  தாண்டியே செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் தாண்டும் போது விழுந்தாலும் பால் கீழே சிந்துவது இல்லை என்பது நம்பிக்கை. ஆனால் அந்த ஆல விழுதினை ஒருவர் வெட்டியெடுக்க ‘ரத்த கசிவு’ ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமுற்ற மக்கள் அவ்விடத்தை வழிபடத் தொடங்கினர் என்கின்றனர். அந்த இடத்தில் லிங்கம் சுயம்பாக வளர்ந்தது என மக்கள் நம்புகின்றனர். நதியின் கரையில் அய்யனார் இருக்கின்றார். இவர் காவல் தெய்வமாக காட்சியளிக்கின்றார். ஆதலால் அந்த இடத்தில் கூடலிங்க அய்யனார் அல்லது கூடமுடைய அய்யனார் என்றும் அழைக்கப்படுகின்றது.
               
முத்தையா என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர், சேத்தூர் அரண்மனையில் செல்லப்பிள்ளையாக விளங்கினார். இவர் சேத்தூர் ராணி மீது மோகம் கொள்ளவே  ராஜா தன்னுடைய படையினர்  மூலமாக முத்தையாவைப் பிடித்து, சதுரகிரி மலைக்குக் கொண்டு சென்றதுடன் அங்கேயே அவரைச்சுட்டுக் கொல்லவும் செய்கின்றார்.
அதைத் தொடர்ந்து முத்தையா, ஆவியாக வந்து இராணியை இரவு நேரங்களில்  மலைக்கு அழைத்து செல்வது வழக்கம். பொழுது விடியும் வேளையில் திரும்ப அரண்மனையில் கொண்டு விடுவதும் வழக்கம். இதனால் கவலையடைந்த ராஜா, யார் இந்த ஆவியைப் பிடித்துப் போவார்களோ அவர்களுக்கு முந்நூறு  பொன் பரிசாகத் தரப்படும் என்று அறிவிக்கின்றார்.
வியாபாரத்திற்காகச் சேத்தூருக்குச் சென்றிருந்த முத்துக் கருப்பன் செட்டியார், ராஜாவின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, மன்னரிடம் சென்று முத்தையாவின் ஆவியை தான் கூட்டிச் செல்கின்றேன் என்றார். பின்னர், செட்டியார் சேத்தூரின் மேற்கு எல்லைக்குச் சென்று முத்தையா என்ற ஆவியை அழைத்து ‘முத்தையா என்னுடைய கோயிலில் நடக்கும் கடைசிப் பூசையை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்துவிடு’ என்று வேண்ட அதற்கு அந்த ஆவி கட்டுப்பட்டு செட்டியாரின் பின்னால் சென்றது அந்த ஆவியைக் கொண்டு வந்து கூடமுடையார் கோயிலின் வாசலில் முத்துக்கருப்பன்  நிறுத்தினார்.
தொடர்ந்து மன்னர் அறிவித்த முந்நூறு பொன்னை வாங்க சேத்தூர் அரண்மனைக்குச்  சென்றார். தான் அறிவித்த படியே செட்டியார்ககு முந்நூறு பொன்னைக் கொடுத்தளிக்கின்றார். ராஜா,  செட்டியார் தம்மூர்க்குச் செல்லும் வழியிலேயே  அதைத் தட்டிப் பறிக்க ஆட்களையும்  அனுப்பி வைத்தார். மந்திர வித்தைகளை முறையாகக் கற்றிருந்த செட்டியார், தன்னை வழிமறித்த ராஜாவின் ஆட்களிடம் ‘உங்களில் ஐந்து பேர் இங்கு இருக்கும் செடிகொடிகளைப் பறித்து போட்டப்படி இருங்கள், ஒருவன் மட்டும் ராஜாவிடம் சென்று இந்தச் சேதியைக் கூறுங்கள் என்று சொல்லி அவர்களை  தன் வயப்படுத்தினார். ராஜாவின்  ஆட்களும் செட்டியார்  கூறியபடியே செய்தனர்.
தகவலறிந்த ராஜா குதிரையில் விரைந்து வந்து செட்டியாரின் காலில் விழுந்த தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினார். அதைத் தொடர்ந்து இந்நாள் வரையிலும், சிவராத்திரி தினத்தன்று கூடமுடையார் கோயிலில், சேத்தூர் அரண்மனை பெயரில்தான் முதல் பூசை நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் செட்டியார் கொடுத்த வாக்குப்படியே இன்றும் சேத்தூர் முத்தையாவுக்குத் தான் கடைசி பூசை நடக்கினற்து”8 எனக் குறிப்பிடுகின்றார். இக்கோயில், சேத்தூர் அரண்மனை குடும்பத்தார்க்கு மட்டுமின்றி நாட்டார் மக்களுக்கும் குலதெய்வமாக விளங்குகின்றது.

சுடலை மாடன்
ஞானப் பழத்தைத் தன் தமையனான ஐங்கரனுக்கு அம்மையப்பர் அளித்ததால், கோபம் கொண்ட முருகப்பெருமான், அம்மையப்பனைப் பிரிந்து குன்றின் மீதேறி நின்றார். ஐங்கரனான விநாயகர் தன் தாயைப் போலவே, தனக்கும் பெண் வேண்டும் என்று ஊர் ஊராய்ச் சென்று குளத்தங்கரையில் காத்துக்கிடந்தார். இதனால் உமையவளுக்குப் புத்திரசோகம் ஏற்பட்டது.  உடனே  அவள் தன் பதியான சிவனாரிடம் தனக்கு இன்னொரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினாள் அவளது வேண்டுதலுக்குச் செவி சாய்த்த ஈசனார்; உமையே!  கயிலையில் உள்ள முப்பத்திரண்டாம் மரகத்தூணில் ஒரு  தூண்டா மணிவிளக்கு உள்ளது.  அம்மணி விளக்கில் தீபம் ஏற்றி, நீ தவமியற்றினால் உன் வேண்டுதல் பலிக்கும் என்றருளினார்.
அதன்படி, சிவனை மனத்தில் துதித்து,  தூண்டா மணிவிளக்கை ஏற்றி உமையவள் கடுந்தவமியற்றினாள். ஒரு கட்டத்தில் விளக்கின் பிரகாசம் குறைந்தது. அப்போது சிவன் வந்து விளக்கின் திரியைத்  தூண்டினார்.
அவ்விளக்கிலிருந்து மூன்று சுடர்கள் அன்னை உமையவளின்  மடியில் விழுந்தன. கண் விழித்த  பார்வதி ஒழுங்கற்ற முண்டமாக உருவமற்ற குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு வருந்தினாள். அதற்குரிய நல்ல உருவத்தை தந்தருளுமாறு வேண்டினாள். அவரும் அவ்வாறே செய்து, அதற்கு உயிரையும் அளித்தருளினார். விளக்கின் சுடரிலிருந்து உருவானதால் அக்குழந்தைக்குச் ‘சுடலை’ என்ற பெயரிட்டு பின்னர் அன்னை அக்குழந்தையை வளர்த்து வந்தாள்.
மூன்று வயதான சுடலைக்கு அடக்க இயலாத பசியுண்டாகி அலைந்தான். தாய்ப்பாலால் பசி அடங்காத சுடலை, சாமத்தில் பூலோகத்திற்கு வந்து தில்லைவனத்துச் சுடுகாட்டில் எரியும் பிணங்களைக் கண்டு பசியாறினான். பின் தாயான  உமையவள் அறியாதபடி அவன் தொட்டிலில் படுத்துக் கொள்வான். ஒரு நாள் குழந்தையை அன்னை எடுத்துக் கொஞ்சினாள். அப்போது, குழந்தையின் மீது பிணவாடை வீசவே, தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை உணர்ந்தாள். இதனால் திடுக்கிட்ட அன்னை, சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி வருந்தினாள்.
அப்போது சிவபெருமான் உமையவளே! நரமாமிசம் உண்ணத் தொடங்கிய சுடலை இனி கயிலையில் இருக்கத் தகுதியற்றவனாவான். அதனால் உடனே அவனைப் பூவுலக்கு அனுப்பிவை என்று கட்டளையிட்டார்.
சிவனாரின் கட்டளைக்கு இணங்கி உமையவள் உயரமான பீடமொன்றில் கலசம் அமைத்து, அதில் சுடலையை அமரவைத்து, உண்பதற்கு  ஒரு கோட்டை அரிசிச் சாதமும், முருங்கைக்காய் சேர்த்து வைத்த குழம்பும் வைத்தாள். கூடவே வழித்துணைக்கு வனப்பேச்சியையும், (சொல்லியனுப்பி) சேர்த்து கண்ணீர் மல்க பூவுலகுக்கு அவனை அனுப்பி வைத்தாள்.
பூவுலகுக்கு வந்த சுடலைக்குத் தாமிரபரணி, கோதாண்ட நதி உள்ளிட்ட ஆறுகள் சங்கமாகும் சீவலப்பேரி கிராமம் பிடித்துப்போக அவர் அங்கு குடி அமர்கின்றார். ஆனால், அவருக்குப் பசி அதிகமாகவே; அவ்வழியே ஆடு மேய்த்து வந்த ‘மாசானம்’ என்ற சிறுவனிடம் அவனது ஆடுகளில் ஒன்றைக்காட்டி பாலைக்கறந்து தருமாறு வேண்டுகின்றார். அதைக் கேட்டு சிரித்த மாசானம், ஐயா! அது குட்டி போடாத மலட்டுஆடு. அதில் எப்படி நான் பாலைக் கறக்க முடியும்? என்ற வினாவினை எழுப்புகின்றான்.
               
சிறுவனின் பதிலைக்கேட்டுச் சிரித்த சுடலை, சிறுவனே நீ அந்த ஆட்டின் மடியில் உன் கைகளை வைத்துப்பாலைக் கறந்துபார் என்றார். அதன்படியே சிறுவன் பனை ஓலை ஒன்றை மடித்துப் பிடித்தவாறு அந்த ஆட்டின் மடியில் கை வைத்ததும், ஆட்டின் மடியிலிருந்து பால் சுரந்து வழிந்தோடியது. அதனைக் கண்ட சிறுவன் பிரமித்து போனான். அவன் கையிலிருந்த பாலை வாங்கிக் குடித்த சுடலை, ஏப்பம் விட்டதுடன். மாசானத்தின் நாக்கை நீட்டக் கூறி அதில் தன் கையால் சக்கரம் ஒன்றையும் வரைந்தார்.
மேலும், அவர் மாசானத்திடம், ‘மாசானமே நீ தினமும் இந்த இடத்தில் எனக்காக இருவேளை பூசை செய்ய வேண்டும்; நீ எங்கிருந்து அழைத்தாலும் உன் கஷ்டங்களைத் தீர்க்க நான் விரைந்து வருவேன் என்று கூறியருளி மறைந்தார். சுடலையின் சக்தியை உணர்ந்த மாசானம், அதன்பின் சிவகிரிக்குச் சென்றார். அங்குத் தவம் பெற்று வந்த ஞானிகளிடம் சாஸ்திரங்களைக் கற்றதுடன் பல ஆண்டுகளுக்குப் பின், தாடியும் மீசையுமாக சந்நியாசி கோலம் கொண்டு சீவலப்பேரிக்குத் திரும்பிவந்தார்.
இதற்குள், சிறுவன் மாசானத்திற்குச் சுடலை காட்சியளித்த இடத்தில் சுயம்பாக லிங்கம் ஒன்று முளைத்தது. அதனைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அதனை வழிபட்டு வரலாயினர். என்பது புராணச் செய்தி. இது சம்மந்தமான நாட்டார் மக்களின் வாய்மொழிக்கதை பின்வருமாறு,
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு குடும்பர் இனத்தைச் சார்ந்தவர்கள் பஞ்சம் காரணமாக பிழைப்புத்தேடி மேற்கு நோக்கி செல்ல எண்ணினர். எனவே,  தங்களது காவல் தெய்வமாக விளங்கிய சுடலைமாடனிடம் தங்கள் எண்ணத்தைக் கூறி வேண்டுகின்றனர். அதற்குச் சுடலைமாடன் நீங்கள் முன்பு செல்லுங்கள், நான் பின்தொடர்ந்து  வருகிறேன் என்றது.  அவ்வாறே,  அவர்கள் அழகிய பனஞ்சோலையைச் சென்றடைந்து அங்குத்தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் மறுநாள் அவர்கள் கீழப்பொட்டல்பட்டி என்ற ஊரை வந்தடைந்தனர்.
பயணத்தின் போது தங்களைக் காத்த தெய்வத்தை வணங்க எண்ணியபோது, பனை மரங்கள் நிறைந்திருந்த இடுகாட்டையே தேர்வு செய்தனர். மேலும், அவர்கள், சுடலை மாடனை வழிபட எண்ணியபோது சுடலை மாடன், நான் எனக்கு பிடித்த பனை மரத்தில்தான் இருப்பேன் என்று ஒருவித அசரீய ஒலியால் அவர்களுக்குத் தெரிவிக்க அவர்கள் பனை மரத்தின் அடியில் சுத்தம் செய்து வழிபடத்தொடங்கினர் எனக் குறிப்பிடுகின்றார்”9 பால்ராஜ் என்பவர். “காவல் தெய்வமாக வழிபடப்படும்  சுடலைமாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலே அமைந்திருக்கும்”10 என்ற முத்தையாவின் கருத்து இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இராமலிங்க சௌடாம்பிகா
தேவல முனிவரின் வம்ச வழியான தேவதாசமைய்யன் வேண்டுதலுக்கு இணங்கி, இறைவன் ஊருக்கு வெளியே ஓர் இடத்தைப் புனிதப்படுத்தினால் அங்குச் சௌடாம்பிகை தோன்றுவாள் என்று என்றும், பின்னர் அம்மனைக் கோயிலுக்கு  அழைத்துச் செல்லுமாறும் உரைக்கின்றார்.
               
அதற்கு இணங்கி தேவதாசமைய்யன் ‘ஆமோத நகரம்’ என்னுமிடத்தில் ஒரு கோயிலைக் கட்டி முடிக்கின்றார். அங்கு அம்மன் சௌடாம்பிகையும் அருட்காட்சியளிக்கின்றார். தொடர்ந்து சௌடாம்பிகை, தேவாங்க குல மக்கள் அனைவரையும் முன்னே செல்லுமாறும், தான் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதாகவும்  கூறுகின்றான். ஆனால், முன்னே செல்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கலாகாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்துவிட்டால் தான் அவ்விடத்திலேயே நிலைகொண்டு விடுவதாகவும் அம்மன் தெரிவிக்கின்றது.
               
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் முன்னே செல்ல, அன்னை சௌடாம்பிகை பின் தொடர்கின்றாள். அம்மனின் பாதச்சிலம்பின் ஒலியை கேட்டவண்ணமே மக்கள் பின் நடக்கின்றனர். அவர்கள், அம்மன் தங்களைப் பின் தொடர்ந்து வருவதாக எண்ணி முன்னே சென்று கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது ஓர்  ஆற்றங்கரையை சென்றடைகின்றனர்.
               
அங்கு ஆற்றுமணலில் அம்மனின் பாதங்கள் பதிந்ததால், சிலம்பொலியின் ஓசை கேட்காமல் ஆகின்றது. எனவே, அம்மன் தங்களைத் தொடர்ந்து வரவில்லையோ என்று ஐயுற்ற மக்கள் திரும்பிப் பார்க்க, அம்மன் அங்கேயே, ஓர் ஆவாரஞ்செடிக்கு அருகில் நிலைகொண்டு விடுகின்றாள். இதைக் கண்ட தேவாங்க குல மக்கள் வேண்டியும், மன்றாடியும்,  அம்மன் அங்கிருந்து எழவில்லை. அம்மன் நிலைகொண்ட இடம் ‘நந்தவரம்’ என்னும் ஊராகும்.
               
வழிபாட்டின்போது மக்கள் ஆவாரஞ்செடிக்கு அருகில் திருமஞ்சன குடத்தில் ‘பாகு’ உடைவாளை வைத்துக், காப்புக் கட்டி, அம்மனை அழைத்து வழிபட்டனர். ஆனால் பாகு உள்ள திருமஞ்சனக் குடத்தை ஒரே நாளில் ஆமோத நகரக் கோயிலுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பது அம்மனின் கட்டளை. மேலும், அம்மன் பின்வருமாறு உரைக்கவும் செய்கின்றாள்.
               
நான் உங்களது முன்னோனும் குலமுதல்வனுமாகிய தேவலனுக்கு அளித்த கத்தி இது. இதனை பகைவர் மீது பயன்படுத்தினால் அவர்களை அழிக்கும். ஆனால், தனக்குத்தானே பயன்படுத்தினால் எவ்வித துன்பமும் விளைவிக்காது. திருமஞ்சனக் குடத்தை எடுத்து கோயிலுக்குச் செல்கையிலும், உங்கள் கைகளில் உள்ள கத்திகளை உங்கள் மீது பயன்படுத்தினாலும் அதனால் உங்களுக்கு எந்தவித கெடுதலும் வராது. காரணம்  நான்தான் உங்களோடு இருந்து உங்கள் எல்லோரையும் பாதுகாத்து வருகிறேன் என்று அம்மன் அருளியதாக மக்கள் நம்புகின்றனர்.
               
இதன் அடிப்படையில் தேவாங்க குலமக்கள் நல்லநாளில் குறிப்பிட்ட இடத்திலிருந்து முறைப்படித் திருமஞ்சனக் குடத்தில் பாகு வைத்து ஆவாரஞ்செடிக்கருகில் காப்புக்கட்டி, கலசம் அலங்கரித்து, அம்மனைக் கோயிலுக்கு அழைத்து வருகின்றனர். கூடவே, அம்மன் புகழ்மாலை, மற்றும் தாண்டகப் பாடல்களையும் பாடுகின்றனர். இவ்வாறு பாடி வணங்கும்போது இவர்கள் தங்களிடமுள்ள  கத்திகளால் மார்பிலும் தோளிலும் அலகு போட்டுக் கொள்கின்றனர். இவர்களது உடலிருந்து ரத்தம் வழிந்தாலும் சிறிதும் வேதனை ஏற்படுவதில்லை என இவர்கள் நம்புகின்றனர். இதற்குக்காரணம், அத்துன்பத்தையெல்லாம் அம்மனே தாங்கிக் கொள்கின்றாள் என மக்கள் நம்புவதே காரணம்”11 என்று வீரராஜன் சுட்டுகின்றார். இவ்வழிபாடு  ஆவி வழிபாட்டிற்கு  இட்டுச் செல்கின்றது.
பொங்கும்மாரியம்மன்
               
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடார் இனத்தைச் சார்ந்த சூரியன், சின்னு என்பவர்கள், பொதி மாட்டு வண்டியில் கருப்பட்டியைப் பொதியாக  ஏற்றிக் கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்றுவர ஒரு நாள், சில நாட்களுக்குத் தேவையான கட்டுச்சாதத்தையும் கருப்பட்டியையும்  வண்டியில் ஏற்றி வியாபாரதிற்குச்  சென்றனர்.
               
அவ்வாறு செல்லும்போது அவர்கள் இரவுக் காலங்களில் கிராமங்களில் தங்கி  வியாபாரத்தை நடத்தினர். ஒரு நாள் வழக்கம் போல்; சூரியனும், சின்னனும் வியாபாரம் செய்ய இலுப்பை ஊரிலிருந்து புறப்பட்டு வியாபாரம் செய்து கொண்டே விருதுநகரை கடந்து விட்டனர். கொண்டு வந்த கருப்பட்டியும் சரியாக அன்று விற்பனை ஆகவில்லை. அதனால் கவலையடைந்த அவர்கள் தாங்கள் எங்கே செல்கின்றோம் என்ற ஞாபகமில்லாமல் பயணம் செய்து கொண்டே இருந்தனர். இரவான போது மழை வந்து விட்டது. மாடுகளுக்கு கண்கள் தெரியவில்லை. இந்த நிலையில் சின்னு நாடார்க்குப் பசி ஏற்பட்டது அவர் சூரிய நாடாரிடம் பசிக்கிறது. சாப்பிடுவோமா! என்று கேட்கிறார். சூரிய நாடார்க்குத் தர்ம சங்கடமான நிலை, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் வேளையில் சற்று தொலைவில் கண்ணுக்கெட்டிய  தூரத்தில், ஒரு சிறிய  வெளிச்சம் தென்படுகிறது. முதலில் மின்மினிப் பூச்சியாக இருக்கலாம் என நினைத்த சூரிய நாடார்க்குச் சந்தேகம் தெளிகின்றது. சிறிது தொலைவில் ஒரு வீட்டைக் காண்கின்றார்.  இரவில் அங்குத் தங்கி உணவருந்தி, பின் காலையில் செல்லாம் என முடிவு செய்கின்றார். உடனே இருவரும் அங்குச் செல்வோம்  என முடிவு செய்கின்றனர். நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு மாட்டையும் அழைத்துக் கொண்டு  அந்த வெளிச்சம் தெரிந்த வீட்டை அடைகின்றனர்.
               
அந்த வீட்டில் நடுத்தர வயதுடைய ஓர் அம்மையார் கையில் விளக்கேந்திக் நிற்பதனைக் காண்கின்றனர். உடனே!  சூரிய நாடார் ‘அம்மா தாயே, நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். இருட்டானதால் சரியான பாதையைத் தவறவிட்டோம், மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கின்றோம். இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டின் தாழ்வாரத்தில் தங்கி உணவு அருந்திச் செல்ல வசதி செய்து தர  வேண்டும் என வேண்டி நிற்கின்றனர். அதற்கு அம்மையாரும் ஒத்துக் கொள்கின்றார்.
               
மேலும்,  அவர்கள்  ஓட்டி வந்த மாடுகளை அந்த வீட்டிலே வேலைக்காரர்களான முனியனிடமும், முருகனிடமும் ஒரு கல்தூணில் மாடுகளை கட்டிப்போடுமாறு பணிக்கின்றார். பின், உணவருந்துகின்றனர். தொடர்ந்து வீட்டுத் தாழ்வாரத்தில் தூங்குகின்றனர். தூக்கத்திலிருந்து எழுந்தபோது கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்திற்குள் ஆக்கியது.
               
அவர்கள் படுத்திருந்த இடம் ஒரு கோயிலாக காட்சி அளித்தது. அதன் தாழ்வாரத்தில்தான் அவர்கள் இரவு உண்டு உறங்கியது. அவர்களுக்குத்  தண்ணீர் தந்த தாய்தான் அங்கு அம்மனாக கையில் தீபம் ஏந்தி நின்றது. இந்தக் காட்சியைக் கண்ட சூரிய நாடார்க்கு உள்ளம் நடுங்கியது. அவர்தன் தம்பி சின்னு நாடாரை எழுப்பினார். அவரும் தடுமாற்றம் அடைந்தார். பின் இருவரும் ஒருநிலைப்பட்டு தங்கள் மாடுகள் இரண்டினையும் கல்தூணிலே கட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தனர். அந்த மாடுகள் கட்டப்பட்டிருந்த கல்தூண்கள் இரண்டும் முருகன், முனியாண்டி என்று வணங்கும் தெய்வங்கள் என்று கண்டனர்.
               
நிலைமையை ஒருவாறு உணர்ந்த அவர்கள் அந்தத் தெய்வத்தை வணங்கி தரையில் மண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, பழையபடி மாட்டையும் ஓட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த சிறிய கிராமமாகிய எல்லிங்க நாயக்கன்பட்டியை வந்தடைந்தனர். முதல் நாள் நடந்த விபரங்களை அங்கு உள்ளோரிடம் கூறினார்கள். விபரத்தைக் கேட்ட அந்த ஊர் மக்கள் அந்தத் தாய் அன்னை காமாட்சிதான் என்று உறுதியாகக் கூறினார்கள்.
               
விபரம் அறிந்த இருவரும் மனதார போற்றி வணங்கினர். இரவில்  திசை தெரியாமல் தவித்த எங்களுக்குத் திசைகாட்டி தங்க இருப்பிடமும் தந்து, உணவும் தண்ணீரும் தந்து காப்பாற்றிய அந்தத் தாயிடம் எங்களையும் எங்கள் வம்சத்தினரையும் நிலம் உள்ளவரை, நீர் உள்ளவரை உன் நினைவு நீங்காதிருக்க அருள் செய்ய வேண்டும் என வேண்டினர்”12 என்று சாமி குறிப்பிடுகின்றார். இந்தக் கோயில் காமாட்சி அம்மன் கோயில் என்றும் பொங்கும் மாரியம்மன் கோயில் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

கப்பல் உடைத்த முனியாண்டி
               
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கடல் வணிகத்தின் பொருட்டு அகமுடையார் இனத்தைச் சார்ந்த ஒருவர் இலங்கைச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்திலுள்ள கிராம மக்கள் முனியாண்டி என்ற தெய்வத்தைக் கோயில்கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். நாளடைவில் அக்கோயிலில் வழிபாடு முடங்கியது. எனவே, மக்கள் அத்தெய்வத்தை மறக்கலாயினர். ஆனால் அகமுடையான் மட்டும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.
               
நாளடைவில் அக்கிராமம் அழிவுக்குட்பட்டபோது, அங்குள்ள மக்கள் வெளியேறி வேறு ஊர்களுக்குச் சென்றனர். அகமுடையானும் தனது சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்பும் போது, முனியாண்டித் தெய்வம் அவர் முன் உருவமற்றநிலையில் தோன்றி தன்னையும அழைத்துப் போகும்படி வேண்டியது. அதற்கு அவன் சம்மதித்து முனியாண்டித் தெய்வத்தின் சிலையைப் பெட்டியில் வைத்து கப்பலில் பயணம் ஆனான்.
               
கடலில் பயணம் செய்யும் போது கூட, பிரிட்டிஷ் மாலுமியரும் இருந்தனர். அவர்கள் அகமுடையானிடம் இருந்த பெட்டியைக் கண்டு அதனைக் கொடுக்கும்படி அவனிடம் வேண்டினர். அவன் தரமறுக்கவே அவர்கள் அதனைப் பறிமுதல் செய்தனர்.
அகமுடையான் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும்போது முனியன் தெய்வம் கப்பலின் அடிப்பகுதியில் துளையிட, கடல்நீர்கப்பலின் உள்ளே நிரம்பி, கப்பல் மூழ்கத் தொடங்கியது. மாலுமிகள் அறியாத வண்ணம் முனியன் தெய்வம் கப்பலை இரண்டாக உடைத்து அகமுடையானுடன் கடலின் கரையை வந்தடைந்தது. அகமுடையான், தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே வந்து முனியனுக்குக் கோயில்கட்டி வழிபடத்தொடங்கினான்.அவன் முனியனை வழிபட்டு வர அவனுடைய குடும்பம் பல்கிப் பெருகியது. நாளடைவில் ஓர் குழுவினராக முனியனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்”13 என்கிறார் ஜீவானந்தம்.

தொகுப்புரை
               
தெய்வத்தின் கதைகள் எல்லாம் வெவ்வேறு  காலச் சூழலினால் தெய்வநிலைக்கு ஏற்றப்பட்டதைக் காணலாம்.  இத்தெய்வங்கள்  இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் ஏற்ப தெய்வநிலை எய்திய காரணத்தை அறியமுடிகின்றது.
               
இத்தெய்வங்கள், முதலில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய பின்னர் சாந்தநிலைக்கு மாறியவை. இந்நிலையே தெய்வ வழிபாட்டிற்கு வழிகோலியது எனலாம். இத்தெய்வ வழிபாடு முதலில் மனதில் சிந்தனை ஏற்படுத்திய உருவமற்ற வழிபாடாகவே காணப்பட்டன. நாளடைவில் அவற்றை ஆவியின் தோற்றம் என்று மக்கள் நம்பினர்.
               
இத்தொன்மைக் கதைகள் வாயிலாக சமயத்தை நிறுவனம் செய்யும் மனிதர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், செயற்பாடானது வழிபாட்டு நோக்கில் எவ்வாறு பிரிந்து செல்கிறது என்பதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
               
ஒவ்வொரு தெய்வத்தோற்றமும் எவ்வாறு மக்களிடையே நிலவி வருகிறது என்பதையும் அறியமுடிகிறது. நாட்டார் தெய்வங்களின்  இத்தோற்றம், உலக சமயங்களின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.  கடவுள்களை  உருவங்களையும்  இச்சமயங்களே நிர்ணயம் செய்வதாக அமைந்துள்ளன.
 
               சமயங்களை எல்லாம் கிராம தெய்வங்கள்தான் தோற்றுவிக்கின்றன எனலாம்.  ஒவ்வொரு தெய்வ தோற்றத்திற்கும் காரணம் தெய்வங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் காணமுடிகின்றது. ஆசைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுவதுபோன்று, தெய்வங்களுக்கும் ஆசைகள் மாறுபடுவதை இந்த வாய்மொழிக் கதைகள் மூலம் அறியமுடிகின்றது.
தெய்வங்களின் ஆசைகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1)             நன்மை மட்டும்  செய்தல்

2)            நன்மையும் தீமையும் செய்தல்

3)            காலம் கருதி செய்தல்
      மேற்கூறிய மூன்று நிலைகளும் தெய்வங்கள் மனிதர்களுக்கு நன்மையே அல்லது தீமையோ செய்வதன் அடிப்படையில் உருவானதாகக் காணமுடிகின்றது.
 இவற்றின் மூலம் வழிபாட்டுநிலைகளும் அமைந்துவிடுகின்றன. அம்மூன்று நிலைக்கூறுகளும் நாட்டார் மக்களின் தெய்வங்களிடமும் மட்டுமன்றி உலக சமய தெய்வங்களிடமும் காணப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆடிப்பெருவிழா அழைப்பிதழ் 13.8.2010.

2.குருவம்மாள், இருக்கன்குடி.

3.மேலது.
4.வெள்ளையம்மாள், அழகாபுரி.

5.கண்ணன், திருச்செந்தூர்.

6.சல்லிமுத்து, புதுக்கோட்டை,

7.சுப்பையா, புதுக்கோட்டை.

8.சண்முகநாதன், கோட்டையூர்.

9.தர்மர், கிருஷ்ணமநாயக்கன்பட்டி.

10.பால்ராஜ், கீழப்பொட்டல்பட்டி.

11.ஓ.முத்தையா, பண்பாட்டு பதிவுகள், ப. 134.

12.வீரராஜன், சங்கரலிங்காபுரம்.

13.எஸ்.பி.சாமி, விருதுநகர்.

14.கே. ஜீவானந்தம், உடையனாம்பட்டி

பார்வை
1.சு. பால்பாண்டி, விருதுநகர் மாவட்டக் குலதெய்வ வழிபாடு, முனைவர் பட்ட ஆய்வேடு-2012, கேரளப் பல்கலைக்கழகம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பால்பாண்டி
உதவிப் பேராசிரியர்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
வடபழனி வளாகம், 
சென்னை – 600026.

 

 

சங்கஇலக்கியம் கூறும் பசி கட்டமைத்த வாழ்வியல் அறம் |முனைவர்ஆ.சாஜிதாபேகம்

சங்கஇலக்கியம் கூறும் பசி கட்டமைத்த வாழ்வியல் அறம்

ஆய்வுச்சுருக்கம்
                            

லக உயிர்கள் அனைத்திற்கும் பொதுப்பண்பாக அமைவது பசி. பசிக்கான தேவை உணவைப் புசிப்பதில் மட்டுமே நிறைவடையும்.வேறு எதைக்கொண்டும் பசியை நிறைவு செய்ய இயலாது என்பது உலகியல் உண்மை.உலகத்தோற்றம் முதலாக ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலும் இரை தேடிப் பெறுவதே தொடர் பணியாகின்றது.உயிர்களிடம் இயற்கையாகவே அமைந்த இயல்பூக்கத்தின் அடிப்படையில் இம்முயற்சி தன் சார்ந்த உயிர்களுக்கு இரை தேடவும் கற்பித்திருக்கின்றது.சங்கிலித் தொடர் போன்ற இந்த அறமே இன்றும் நாளையும் உயிர்களைக் காக்கின்றது. ஆறறிவு கொண்ட மனித உயிரும் இதற்கு விதிவிலக்கல்ல.உயிரிலும் உடலிலும் பிணிக்கப்பட்ட பசியிலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு மனிதனும் உணவைத் தேடி அலைந்திருக்கின்றான். அவனது சிந்திக்கின்ற அறிவு உணவுசேகரிப்பையும் சேமிப்பையும் கற்றுத் தந்துள்ளது.இந்த விலக்க முடியாத வாழ்வியல் தேவையானது மனிதகுலப்பெருக்கத்தில் நடத்தை நெறிமுறைகள் உருவாக்கத்திற்கான அடித்தளமாகியிருக்கின்றது.அத்தகைய நெறிமுறைகள் அறமாக நம் முன்னோர்களால் வகுத்தளிக்கப்பட்டதன் காரணம் பசி என்பதை சங்க இலக்கியங்கள் வழி நிறுவுவதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முன்னுரை          
                  

பசி உடலின் இயக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடாகும்.உலகின் அனைத்து உயிர்களின் தேவையும் தேடுதலும் பசியைக் கொண்டே அமைகின்றது.மானுடச் சமூகத்தின் அறவியல் சிந்தனைகளைக் கட்டமைக்க பசி என்னும் உணர்வு காரணமாகியிருந்துள்ளதனை பழந்தமிழ் இலக்கியங்கள் வழி அறியலாகின்றது.பசி எனும் உயிர்த்தேவை உலக இயக்கத்திற்கான ஆதாரமாக இருந்துள்ளது. வேட்டைச்சமூக காலத்தில் மானுடத்தின் தேவை உடலையும் உயிரையும்   பசியே காரணமாகியுள்ளது. இன்று நாம் பின்பற்றி வாழும் அறங்களும் அது சார்ந்த நடத்தைகளும் பசியால் வடிவமைக்கப்பட்டவை என்ற உண்மையை சங்க இலக்கியங்கள் எடுத்துணர்த்துகின்றன. பகிர்ந்துண்ணும் உயிரினமாகிய மனிதனுக்கும் பசி என்பது பொதுமைப்பண்பாகியுள்ளது. தனிமனிதனுக்கான பசி தன்னைப் போன்று பிற உயிர்களின் பசியை உணரச்செய்து மனிதநேயத்தைக் கட்டமைத்திருக்கின்றது. ஓரறிவு முதலாக ஆறறிவு மனிதன் வரையிலும் அன்பு, தாய்மை, காதல், வீரம், அச்சம், போராடிப்பெறும் குணம் போன்ற நடத்தை வடிவங்கள் அந்தந்த புலனுணர்விற்கு ஏற்பப் புலப்படுகின்றன.
                இத்தகைய நடத்தை வடிவங்கள் பசி உண்டாகும் போது பல மாற்றங்களை அடைகின்றன. பசியை பிணியாகக் கூறி அப்பிணிக்கான மருந்தாக உணவைக் கூறியுள்ள நம் முன்னோரின் சிந்தனைகளை இன்றைய சமூகம் அறிந்துணரத் தலைப்பட வேண்டும்.உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழுவதற்கும் நம் முன்னோர்களால் அறங்கள் வகுக்கப்பட்டமைக்கும் பசி எனும் உணர்வு காரணியாகியிருந்துள்ளதனைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பசியும் மனித நடத்தை வடிவங்களும்
                         

தனிமனிதனுக்கான பசி எனும் உணர்வு உணவுத்தேடலில் தொடங்கி அடுத்து என்ன என்ற தொடர் சிந்தனையை தோற்றுவித்துள்ளது.அதன் வெளிப்பாடே அடுத்த வேளை உணவுத்தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்ற தேவையின் உருவாக்கமாகும். பசி போராடிப் பெறும் குணத்தை அவனுக்குக் கற்பித்தது.விலங்குகளைப் போல தேவை நிறைவடைந்துடன் உணவை விட்டுச் செல்லாமல் சேகரித்துப் பயன்படுத்தும் ஆற்றலே நாகரீக வளர்ச்சியின் அடித்தளமாக இருந்திருப்பதனைக் காணமுடிகின்றது.
 
“உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே”   (புறம்-18-21)
என்று உணவையும் நீரையும் தேடி  அலைந்த மனிதன் இயற்கையை உற்று  நோக்கினான் .தேடுதல் மிக்க அறிவு நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது.உணவு உற்பத்தியும் சேமித்தலும் அன்றாடத் தேவையாக மாற்றம் பெறத்துவங்கின.மனிதக் கூட்டம் பெருகிய பின் மலை, காடு, விளைநிலம், கடல், மணற்பாங்கான பாலை நிலம் என்ற ஐவகை நிலங்களில் பரவி தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். குறிஞ்சிப்பகுதியில் வாழும் மக்கள் தினை, தேன், மலைநெல் முதலானவற்றையும், முல்லை நிலத்தில் வரகு,சாமை,முதிரை போன்றவற்றையும், மருதநில வயல்களில் செந்நெல்லரிசி, வெண்ணெல்லரிசி,போன்ற அரிசிவகைகளையும் கடல்புறவாழ் மக்கள்  மீன், உணக்கல், உப்பு முதலானவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.        மேலும் ஒருவனின் பசி உணர்வு உடலை இயக்குவதற்கான மருந்தாக உணவைக் காண வைத்துள்ளது. உணவின் மீது பெருமதிப்பை உண்டாக்கியுள்ளது.
                          
“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றைவேந்தனில் ஔவையும் ,“உணவே மருந்து மருந்தே உணவு” என்று திருமூலரும் பசிக்கான மருந்தாகவே உணவைக் கண்டுள்ளனர்.பசித்தவர்க்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே சிறப்பாகும்.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”(குறள்-227)

என்று கூறுகிறது தமிழ்மறையாகிய திருக்குறள் .பசி என்பது பொது நோய்.இது அனைத்துயிர்களையும் பற்றியிருப்பது.உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.

“பெரும்பசி” (திரிகடுகம் பாடல் 60)        
“வயிற்றுத்தீ”(புறம் 74)         
“யானைத் தீ”
என்று மணிமேகலையிலும் தீராப்பசி தொடர்பான நோய்களாகக் கூறப்படுகின்றன. இயல்பாக மனிதனுக்கு எழும் பசிக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது நோயாக மாறுகின்றது.தணியாத பசி தீ போல வயிற்றில் எரிந்து துன்பப்படுத்தியிருக்கும் போது,மூளை சரியாக சிந்திக்காது.இதற்குத் தீர்வு உணவு மட்டுமே என்பது இயற்கை.
“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின்”(புற-173)
என்று உணவு தருபவரை தேடிச் சென்று பசியை ஆற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பை இப்பாடல் உணர்த்துகிறது. மேலும், உணவு தன்னிறைவு அடையாத காலத்தையும் அடையாளப்படுத்துகிறது.
 

தேவையும் தூண்டுதலும்
          

உணவு வகைகளைப் பாதுகாத்து சேமித்து வைக்க வேண்டிய அவசியத்தை பசித்துன்பத்தின் வழியாகப் பெற்ற அனுபவமே உருவாக்கியது.இதனை எட்டுத்தொகை நூல்களில் பாடப்பட்டுள்ள தினைப்புனம் காக்கும் பாடல்கள் பதிவு செய்கின்றன.

“சிறுகிளி கடிதல் தேற்றாள் இவளென” (அகம்)
“நறுகோட் சிறுதினைப் படுபுள் ஓப்பி” (குறிஞ்சி-38)
“தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும் கிளிகடி மரபின”  (குறிஞ்சி-43-44)
என்ற பாடல்களில் காணமுடிகின்றது.  விளைந்த நெல் தானியவகைகளை பருவங்காலங்களுக்கேற்ப சேமித்து வைத்துக் கொண்டனர்.வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உருவெடுத்தமையால் அதற்குத் துணையாக பல தொழில்கள் காலப்போக்கில் தோன்றின.தானியங்களைச்  சேமிப்பதற்கான பானைகள் கிடங்குகள் மரப்பொருட்கள் கண்டறியப்பட்டன.
 கணிப்பும் கவனமும்                      
                      
தன் பசியை உணர்ந்ததன் விளைவு தன்னைப்போல் பிறரின் பசியையும் உணர்த்தியது.அது பகிர்ந்துண்ணும் பண்பை மானுடகுலத்தில் பொதுமைப்படுத்தியுள்ளது. இதனை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.

“படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்”(புற-188)
“உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும்”(புற-95)
“சோறு ஆக்கிய கொழுங்கஞ்சிஆறு போலப் பரந்தொழுகி”(பட்-45-46)
என்ற பட்டினப்பாலைப் பாடலில் அனைத்து மக்களும் பசியாறும் வண்ணம் சோறு வடிக்கப்பட்டதைக் கூறுகின்றது.
             உணவு உற்பத்தியும் பகிரலும் பொதுவுடைமைச் சமூகத்தைக் கட்டமைத்தன. உணவைத் தேடி காடு மேடுகளில் திரிந்த மனிதன் தனக்கான நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொள்வதற்கு வேளாண்மை காரணமாகியுள்ளது.நிலையாக வாழத் தொடங்கிய பின் பகிர்ந்துண்ணும் சிந்தை விருந்தோம்பல் பண்பாடாகவும் கொடைத்தன்மையாகவும் மாற்றம் பெற்றிருக்க வேண்டும்.இதற்கு ஆற்றுப்படைநூல்கள்  சான்று பகர்கின்றன.

“ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் குட்டிப்  
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றிப் பல்நாள்  
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவீர்”  (பெரும்-341-345)
என்ற பாடலில் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் தான் வயிறார உண்ட உணவைக் குறித்து பரிசில் பெற விழைகின்ற  பாணனுக்குக் கூறுவதால் நெடுநாள் நிறைவடையாத உணவின் ஏக்கமும் அதைப் புரிதலோடு உணர்ந்து கொண்ட மன்னனின் கொடைத் தன்மையும்  வெளிப்பட்டமைக்குப் பசி என்னும் தனிமனித உணர்வு காரணமாகியிருப்பதனை  உணரமுடிகின்றது.

                மேலும் கொடைத்தன்மையில் முதன்மையானதாக நாடி வருவோருக்கு  மனமும் வயிறும் நிறைய உணவளித்துப் பசியைப் போக்குதல் என்பது தலைமைப்பண்பின் அடையாளமாகியுள்ளது. பசியைப் போக்குவதன் மூலமே புலமையும் கலையும் நிலைத்து வாழும் என்ற உண்மையை உணர்ந்திருந்தனர்.


பகிர்தலும் புரிதலும் 
               

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்ற புலவர் மோசிகீரனார் நீண்ட தூரம் நடந்த களைப்பின் மிகுதியால் முரசுக்கட்டிலில் படுத்துறங்கினார்.அரசனுக்கான கட்டிலில் அரசனைத் தவிர  வேறு யாரும் அமர்வது தண்டனைக்குரியது.இருப்பினும் அரசனின் புரிதல் மோசிகீரனாரை தண்டிக்காமல் அவரது உறக்கத்தைக் கலைத்து விடாமல் கவரி எடுத்து விசிரிவிடச் செய்துள்ளது.கண் விழித்து பார்த்து அதிர்ந்தெழுந்த மோசிகீரனார்
“அறியாது ஏறிய என்னைத் தெறுவர  
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுது அறிதல்”  (புறம்-50-8-10)
என்ற அடிகளில் நற்றமிழ் முழுதறிந்த தன்மையுடையவன் இரும்பொறை என்று விதந்து கூறியிருப்பதன் மூலம் வறுமையுற்றோரிடம் வளமையாக இருந்த புலமையை மதிப்பளித்துப் பேணுவது என்பது காலம் கடந்தும் தமிழர் மரபை அழியாமல் நிலைபெற்றிருக்கச் செய்வதற்கான அறமாகக் காணலாம்.
பசி இந்த அறத்தைக் கொன்றுவிடும் என்பதாலேயே மன்னர்கள் பாணர்களையும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றியுள்ளனர்.பசியால் புலமை அழிந்து விடாது என்பதற்கும் அவர்தம் பாடல்களே சான்றாகும். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனை வாழ்த்திப் பாடிய நல்லூர் நத்தத்தனாரின் உயிர்த் தேவையாகிய உணவுத்தேவையை முதலில் நல்லியக்கோடன் நிறைவு செய்திருக்கிறான். பிறகு வாழ்வியல் தேவைக்கான பொன்னும் பொருளும் வழங்கியிருக்கிறான். சிறுபாணாற்றுப்படையில் புலவர்களின் வறுமையைக் கூறுமிடத்து அண்மையில் குட்டிகளை ஈன்ற நாய் அவைகளுக்குப் பாலூட்ட முடியாத வறுமுலை நாய் என்பதனால் அவ்வீட்டில் நிலவிய வறுமையை உணர வைத்தார் ஆசிரியர்.
                            
இதனை ஐம்பொறிகளும் தளர்தற்குக் காரணமாகிய “ஒல்குபசி”(சிறுபாண்-135) என்றும் “அழிபசி வருத்தம்” (சிறுபாண்-140)என்று பசி அனைத்து அறங்களையும் அழித்துவிடக்கூடியது என்று உண்மையைப் பாடலாகப் பாடியிருக்கிறார். மேலும்,ஒருவர் இறந்த பிறகும் அவ்வுயிர் பசியால் வாடக் கூடாது என்பதும் அவ்வுயிருக்குப் படையலாய் உணவு படைத்தலையும் ,அது இறந்த உயிரின் பசியை நிறைவு பெறச் செய்யும் என்பது இன்று வரை சமூகத்தில் நிகழ்ந்து வரும் நம்பிக்கையாகும்.அன்று களச்சாவு அடைந்த வீரர்களுக்கு நடுகல் வழிபாட்டில் கள் படைத்து இறந்த வீரனுடைய தாகத்தைத் தணிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை புறநானூற்றில் காணலாம்.

“இல்அடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி”(புற-329-1-2)
என்று பாடியிருப்பது பசியின் தொடர்நிலையையும்,இறப்பிற்குப் பின்னும் உணவளிக்க வேண்டிய மரபை உருவாக்கியிருப்பது  என்பது சகமனிதனுக்குப் பகிர்ந்துண்ணும் நெறியைக் கைவிடாதிருக்க வேண்டும் என்ற நற்சிந்தனையின் அடிப்படையாகக் காணலாம்.
 

அறங்களை அழித்து விடக்கூடிய பசி
        

பிற்காலத்தில் எழுந்த ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலை பசியைப் போக்குதலை அறமாகப் பாடியது.நிறைவடையாத பசி தனிமனித வாழ்வில் எத்தகைய இழிவுகளைத் தேடித்தரும் என்பதை,

“குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
புண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது”  (மணிமேகலை-11-9)
என்று சீத்தலைச்சாத்தனார் பாடியிருப்பதன் மூலம் மானுடத் தன்மையை சீர்குலைக்கும் பசியையும் அதற்கான தீர்வு மனிதர்களிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். உணவுத்தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை மலரச் செய்ய சகமனிதர்கள் முன்வர வேண்டும் என்று அவர் பாடியிருப்பதன் பொருண்மை புலனாகின்றது.
நல்வழி நூலில் ஔவை உணவு கிடைக்காத பசி எத்தகைய இழிவை நோக்கி மனிதர்களை வீழச் செய்யும் என்பதனை,
  
“மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை தேனின்    
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்    
பசி வந்திடப் பறந்து போம்” (நல்வழி-26)

இவ்வடிகளில் இயம்பியுள்ளதன் வழியாக அறியமுடிகின்றது. இதனாலேயே தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் உரைத்துள்ளனர். பாரதியார் ”தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”என்று பாடினார்.மனிதப்பண்புகளையும் நல்லறங்களையும் வீழ்த்தி,மனிதனை விலங்கினும் கீழாக மாற்றிடும் ஆற்றல் கொண்டது பசி.பசியை ஒழிக்க முடியாது.ஆனால் பசிக்கான தீர்வைப் படைக்க மனிதனால் இயலும் என்பதையே நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

பகுத்துண்டு பல்லுயிர் காத்தல் மானுடக் கடமை
                      

காலந்தோறும் உயிர்களைப் பிணித்திருந்ததனால் பசிப்பிணி என்று இலக்கியங்கள் கூறுகின்றன.“உள் நின்று உடற்றும் பசி”(திருக்குறள்-2-13) என்று வள்ளுவம் உரைக்கின்றது.இத்துன்பம் தரும் பசியிலிருந்து விடுபட அனைத்து மக்களுக்கும் உணவு என்ற சமூகநிறைவை அடைய வள்ளுவர் பகுத்துண்ணும் சங்க காலமரபை வழிமொழிந்து அறமாகப் பாடியிருக்கின்றார். இதனை,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”  (திருக்குறள்-322)
என்று எல்லா உயாகளும் வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் சமநிலைக் கொள்கை தெள்ளிதின் புலனாகின்றது.  இதன்வழி ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டிய கடமை மனிதனுக்கானது என்பதையே “பல்லுயிர் ஓம்புதல்”என்ற சொற்களால் வள்ளுவர் தெளிவுறுத்துகின்றார்.


கூட்டுணவும் பெருஞ்சோற்று நிலையும்
                

மனிதர்கள் குழுவினமாக வாழ்ந்த  காலத்தில் ஒருவர் பசியை மற்றவர் புரிந்து கொண்டு பகிர்ந்து உண்ணுதல் என்பது கற்பிக்கப்பட்டதாக இருந்திருக்க முடியாது. பசியை இயல்பூக்கமாகவே அறிஞர்கள் சுட்டுகின்றனர்.
                “மனிதனுக்குப் பதினான்கு வகையான இயல்பூக்கங்கள் உண்டென்றும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்ளக்கிளர்ச்சிகளோடு இணைந்துள்ளன என்றும் மக்டூகல் கூறினார். (எ-டு) பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகின்றோம்.பிறகு உணவு உண்ண வேண்டுமென்ற உணர்ச்சி உண்டாகின்றது.பசியைப் போக்கிக் கொள்ள உணவுப் பொருளை எடுத்து உண்ணுகின்றோம்.இயல்பூக்கம் இவ்வாறு செயல்படுங்கால் அறிவு, உணர்ச்சி,முயற்சி என்ற முக்கூறுகள் காணப்பெறுகின்றன.இந்த மூன்று கூறுகளுள் உணர்ச்சிக்கூறே முக்கியமானது” என்று மக்டூகல் உரைத்திருப்பதாக பேரா.கி.நாகராஜன் தனது நூலில்(பக் 159)  குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆயுமிடத்து,மக்டூகல் கூறியுள்ள உணர்ச்சிக்கூற்றின் அடிப்படையில் தன் பசியைப் போல மாற்றான் பசியையும்  உணர்ந்து கொள்ளுதல் மனிதநேய அறத்தின்பாற்பட்டதாகும்.இப்படி பசிக்குச் சோறிடுதல் என்பது சமூகக் கடமையாக மட்டுமே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு சங்கப்பாடல்களில் பயிலப்பட்ட “கூட்டுணவு” என்ற சொல்லே சான்றாகும்.

“வலி கூட்டுணவின் வாள்குடிப் பிறந்த”   (பெரும்-137)
என்றும்,

“நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்அரும் சுரம்”(பெரும்-115-117)
என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.இப்பாடல்கள் பசுமையான புதர்களில் மறைந்திருக்கும் முயல்களை வளையில் மாட்டச் செய்து பிறகு அனைவரும் கூடியிருந்து உண்பர் என்று உரைத்திருப்பதன் வாயிலாகக் கூடியுண்ணும் தன்மையில் புரிதலையும் பகிர்தலையும் பசி என்னும் தனிமனித உணர்ச்சியானது கட்டமைத்திருக்கின்றது.இக்கூட்டுண்ணுதல் இனக்குழுவின் பண்பாட்டு எச்சம் என்பதை,அனைவரும் கூடியுண்ணும் பெருஞ்சோறு என்று,

“பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன்”(புற.235-4)
“வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்”  ( புற-261-3)
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் வஞ்சித் திணையில் “பெருஞ்சோற்றுநிலை”எனும் துறையாகப் பாடியுள்ளார்.

“பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலை” (தொல்-1013-9)
என்ற தொல்காப்பிய  அடிகளிலும், “பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
கடுஞ்சின  வேந்தேநின் தழங்குகுரல் முரசே” (பதிற்-30-43-44)என்று பதிற்றுப்பத்திலும்,வேந்தன் தன் படைஞருக்கு  உணவு கொடுத்த செய்தியைக் காணமுடிகின்றது.மேலும்,சேரமன்னன் உதியன் சேரலாதன் இருபெரும் படைகளுக்கும் சோறிட்டமையால் “பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”(புற-2-16)என்று பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று இன்றளவும் வரலாற்றில் அம்மன்னன் அழைக்கப்படக் காரணம் பசியை உணரும் தலைமைப்பண்பே ஆகும்.தனியொரு மனிதனை மக்கள் தமது தலைவனாக ஏற்பதற்கு அடிப்படைக் காரணம் பகையிலிருந்து மட்டுமல்லாது பசியிலிருந்தும் தம்மைக் காக்க வேண்டும் என்பதேயாகும்.இதனை வள்ளுவர் வழிநின்று அறியலாம்.

“படைகுடி  கூழ்அமைச்சு  நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு” (திருக்குறள்-381)

இக்குறட்பாவில்  நாடாளும் மன்னன்  மாமன்னனாகத் திகழ வேண்டுமெனில்  மக்களின் உணவுத் தேவையையும் தன்னிறைவு அடையச் செய்ய வேண்டுமென வள்ளுவர் உரைக்கின்றார்.ஆக,பெருஞ்சோறு எனும் சொல் பழந்தமிழரின் மனவலிமைக்கும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பிற்கும் சான்றாக அமைவதைக் காணலாம்.இல்லாமைச் சூழலிலும் மக்களாயினும் தலைவனாயினும் தம்மை நாடி வந்தவரின் பசியைப் போக்கியுள்ளனர்.
                 “இல்லாமை உருவான போது சீறூர் தலைவர் கடன்பெறல்,பொருட்களைப் பணயம் வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.வேந்துவிடு தொழிலில் ஈடுபடல் என்பது மூன்றாவது செயல்பாடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேந்துவிடு தொழில் பரிசுப்பொருட்களையும் நெல் போன்ற உணவுப் பொருட்களையும் சீறூர் மன்னர் பெறக் காரணமானது .இத்தொழில் வழி பெற்றவை சீறூர் மன்னர் சமுதாயப் பொதுத் துய்ப்புக்கு உரியவையாகக் கொள்ளப்பட்டுப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.”என்று பெ.மாதையன் தனது நூலில் (ப.174) குறிப்பிட்டுள்ளார்.     வளமையான நால்வகை நிலத்தில் வாழ்ந்த மக்களைக்காட்டிலும் வறண்ட பாலை நிலத்தில் வாழும் எயினர்கள் ஒன்றாகக் கூடி உணவு சேகரித்ததையும் பாடல்களில் காணமுடிகின்றது.


தொகுப்புரை
              

பசி என்பது மானுட அறம் கட்டமைத்தலுக்கான காரணியாகியுள்ளது. உயிர்களின் உந்து சக்தியாக உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் பசி விளங்குகிறது. உயிர்களுள் மனிதப் பெருக்கமும் உணவுத்தேவை அதிகரிப்பும் மனிதக்கூட்டத்தை தன்னிறைவு பெற இயலாத வண்ணம் போராடிக்கொண்டே இருக்கச் செய்கிறது.இன்றளவும் உலகில் உணவின் தேவையும் தேடுதலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. உணவைத் தேடி பசியைப் போக்கிக் கொள்ள எத்தகைய போராட்டங்களை எதிர் கொண்டனர் என்பதற்குப் புலவர்களின் வாழ்வியலே சான்று.
           
வறுமையும் பசித்துன்பமும் தம்மை அணுகிய போதும் தம் புலமையைக் காத்து அறம் பாடிய புலவர்களின் தன்மான உணர்ச்சிக்கும் இப்பசியே வித்திட்டுள்ளது. பொறுமையும், சகிப்புத்தன்மையும், தன்னம்பிக்கையும், துணிவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும், புரிதலும், பகிர்தலும் ஆகிய அனைத்தும் நம் முன்னோர்கள் சங்கப்பாடல்களின் வழியே நமக்குக் கற்பித்துள்ள வாழ்வியல் அறங்களாகும்.வேட்டைச்சமூகம் முதலாக பசியும் உணவுத் தேடலும் பிணிக்கப்பட்டுள்ள மனிதன் சார்ந்து வாழும் பண்பினால் இப் பரந்த நிலவுலகை அழியாமல் நிலைபெறச் செய்கின்றான் என்பதற்குப் பாடல்களே சான்று.
            
மூவாயிரம் ஆண்டுகாலப் பழமையான இலக்கியங்கள் மனித குலம் தழைப்பதற்கான அறத்தை காலங்கள் கடந்தும் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன. சமூக்கட்டமைப்பிற்கும் அறச்சிந்தனைகளின் தோற்றத்திற்கும் பசி எனும் உணர்வு தலையாய காரணியாகியுள்ளது என்பதே மேற்கண்ட ஆய்வின் வழி கண்டறிந்த மெய்மையாகும்.
                           

முதன்மை நூல்கள்

1.எட்டுத்தொகை,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007

2.பத்துப்பாட்டு,கு.வெ.பாலசுப்பிரமணியன்,அ.மா.பரிமணம்(ப.ஆ),நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2007


துணைமை நூல்கள்

1.தொல்காப்பியம்,தமிழண்ணல்(உ.ஆ), செல்லப்பா பதிப்பகம்,மதுரை,ஆறாம் பதிப்பு 2021

2.திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ், கரு.பேச்சிமுத்து, (தொ.ஆ), அகரூர் கல்வி அறக்கட்டளை வெளியீடு, திருச்சி,
ஐந்தாம் பதிப்பு, 2012

3.சிலப்பதிகாரம் மூலமும் உரையும், ந.மு.வேங்கடசாமி நாட்டார், (உ.ஆ), ராமையா பதிப்பகம், சென்னை,  ஐந்தாம் பதிப்பு,2011

4.மணிகேலை மூலமும் உரையும்,
ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), சாரதா  பதிப்பகம், சென்னை,  இரண்டாம் பதிப்பு, 2009

5.கல்வி உளவியல், பேரா.கி.நாகராஜன், ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை,2022

6. சங்ககாலம் உணவும் சமுதாய மாற்றமும், பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2019

7.ஔவை, இன்குலாப், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், மூன்றாம் பதிப்பு, 2006

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஆ.சாஜிதா பேகம்,

இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,

காங்கேயம் வணிகவியல் கல்லூரி,
 
EBET அறிவுப்பூங்கா,நத்தக்காடையூர்,

காங்கேயம், திருப்பூர் மாவட்டம்.

 

எழுத்து|கவிதை|ச.கார்த்திக்

எழுத்து-கவிதை-ச.கார்த்திக்

📜 பத்து பேனா வாங்கினேன்

நான் ஒரு பேனா ஆகவில்லை

பத்து மயிலோடு பயணித்தேன்

நான் ஒரு மயில் ஆக வில்லை

பத்துப் புத்தகத்தைப் படித்தேன்

நான் ஒரு புத்தகத்தை எழுதினேன்!

📜 ஒவ்வொரு புல்லும்


ஒவ்வொரு கதை சொல்லும்

ஒவ்வொரு மழைத்துளியும்

வெவ்வேறு கதை சொல்லும்

நம் கதை யார் சொல்லுவார்!

📜 எழுதிய பக்கங்கள்


எழுதாத பக்கங்கள்

ஏதோஒரு கதை

மாந்தரை விட்டுச் செல்கிறது!

📜 நாள்தோறும்


கிழித்து போட்ட பேப்பர்

இழந்து கொண்டு செல்கிறது

என் வாழ்க்கையும்!

கவிதையின் ஆசிரியர்

ச.கார்த்திக்
முதுகலைத் தமிழ் முதலாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)  திருப்பத்தூர்

 

தாய்மை|கவிதை|வெ. கெளதம்

தாய்மை-கவிதை-வெ. கெளதம்

அ) தாய்மை  
 

📜 தன்னுள் உயிர் கொண்டு  
 

பிறப்பெடுக்க

மீண்டும் பிறக்கிறாள் 
 

 

📜 உடலை வீடாக்கி 
 

கருவறையை கவசமாக்கி
 

ரத்தத்தை நீராக்கி 
 

சதையை உணவாக்கி
 

என்னுயிர் காக்க

தன்னுயிரை 
 அரனாக வைத்து

காக்கும் தெய்வம் தாய்மை 


 

ஆ)
 என்னவள் 
 

📜 யார் என்று அறியாது 
 

ஒற்றை சொல்லை வைத்து 
 

பாசக் கயிற்றால்

முடிச்சு போட்டு

நம்பி வந்தவள்
 

 

📜 இனி எல்லாம்

அவனே என

முதல் அடி

எடுத்து வைத்து வந்தவள்

 


📜 எதுவாயினும் அவனே என்று

அனைத்தையும் இழந்தவள்  


புதிய உறவுவாக அல்ல

புதிய வரவாக வந்தவள் 


இளமையை கொடுத்து

முதுமை வரை உயிர்

எனக் கொண்டவள் 


என்னவள் !!!

 

கவிதையின் ஆசிரியர்
திரு. வெ. கெளதம் 
உதவிப் பேராசிரியர் & தமிழ்த் துறை தலைவர் 
சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 
விஜயமங்கலம் -638056
திருப்பூர் மாவட்டம்.
 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »