கனவு காணுங்கள் | முனைவர் நா.சாரதாமணி

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

       உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கனவுகள் உண்டு. சிலர் அந்தக் கனவுகளைப் பகல்கனவாகவே வைத்திருப்பர். ஆனால் சிலர் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்வர். அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று கூறினார். அவர் கூறியது இளைஞர்களின் இலட்சியக்கனவு. “உறங்கும்போது வருவது கனவல்ல. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு” என்றார்.  விவேகானந்தர் கூறினார் “நீ மீண்டும் மீண்டும் எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்றார். இலக்கின் நன்மையைக் கனவு காணுங்கள். வெற்றி அடைந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியை உணர்ந்து பாருங்கள்.

           ஒருவரின் ஆழ்மனதில் இலட்சிய விதை விழுந்து விட்டால், அது வளர்ந்து மரமாகி பலன் தருவதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. மாற்ற முடியாது. உங்களின் வெற்றியைக் கனவு காணுங்கள். மகிழுங்கள். அது நாளடைவில் உங்களின் உறுப்புகள் அதை நனவாக்கும்.

கனவின் பலன்

             பழங்காலத்தில் ஆடைகள் தைப்பது என்றால் ஊசியை எடுத்து அதை நூலில் கோர்த்து ஆடையின் ஒருபுறம் ஒருவர் பிடித்துக்கொள்ள மறுபுறம் ஒருவர் துணியைத் தைப்பார் ஊசி முழுமையாக உள்ளே சென்று மறுபக்கம் வெளியே வரும். அதன் அடிப்பகுதியில் துவாரம் ஒன்று இருக்கும். இவ்வாறுதான் பழங்கால ஆடை தைப்பது நடைபெற்றது. சிலகாலம் சென்றது. ஒருவர் தன்மனைவிக்கு தையல் இயந்திரம் ஒன்றை தயார் செய்தார். ஆனால் அதற்கு ஊசியைக் கண்டறியவில்லை. பல மாதங்களாக அதைப்பற்றிய சிந்தனையாகவே இருந்தார். ஊசி முழுமையாக உள்ளே செல்லாமல் எப்படி தைப்பது? அவருக்கு உறக்கமே வரவில்லை. ஊசி எவ்வாறு அமைப்பது என்று விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் அதே யோசனையாக இருந்தார். இரவெல்லாம் கண்விழித்திருந்த அவர் அதிகாலையில் உறங்கி விட்டார். அப்போது அவருக்கு கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் ஒரு தேவதை ஈட்டி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு “என்ன உறங்கிக் கொண்டு இருக்கிறாய். இன்னும் ஊசியைக் கண்டு பிடிக்காமல் என்ன செய்கிராய். கண்டு பிடிக்கவில்லை என்றால் இந்த ஈட்டியால் உன்னை குத்தி கொன்று விடுவேன்” என்று நெஞ்சை பிளக்க வந்தது. அப்போது அந்த ஈட்டியின் குத்தும் முனையில் ஒரு துவாரம் இருந்தது. இதைப்பார்த்த அவர் பயந்து உறக்கம் களைந்து எழுந்து விட்டார். எழுந்த அவர் அந்தப் பயம் சென்றதும் நிதானமாக அந்த கனவை நினைவுக்கு கொண்டு வந்தார். அவ்வேளையில் அவரின் மூளையில் ஒன்று தோன்றியது. தையல் இயந்திர ஊசியைக் கண்டுபிடித்து விட்டார். எவ்வாறு இது சாத்தியம். அவர் கனவில் கண்ட அந்தத் தேவதையின் கையில் இருந்த ஈட்டியின் முனைப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரம் ஊசியின் முனையில் அமைக்கப்பட்டது. அதனாலே இயந்திர ஊசி கிடைத்து விட்டது.

     கவனியுங்கள்! அவருடைய யோசனை சிந்தனை கனவு மூலமாக ஒரு வெற்றியை தந்தது. அவரின் இலக்கை அடையும் வெற்றி கனவாகவே வந்து விட்டது.

 கட்டிட நிபுணர்களைப் போன்று செயல்படுங்கள்

     கட்டிட நிபுணர்களைக் கவனியுங்கள். அவர்கள் ஒரு அரண்மனை அந்தப்புரம் அரசவை என்றாலும் ஒரு பெரிய வீடு பங்களா எதுவாக இருந்தாலும் முதலில் திட்டமிட்டு அவற்றை தெர்மாகோல் போன்றவற்றால் அமைத்து கண்முன்னே வைத்துவிடுவார்கள். மற்றவர்கள் கனவு காணுவார்கள். ஆனால் இவர்கள் அதனையும் கண்முன்னே வைப்பார்கள். அவற்றைச் சுற்றிப் பூங்காக்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதனுள்ளே தண்ணீர்க்குழாய்கள் செல்லும் வழி மின்சாரம் செல்லும் வழி கழிவுநீர் மழை நீர் எனச் செல்லும் வழி இவ்வாறு எத்தனை அறைகள்? தரை எந்தக் கற்களால் அமைக்க வேண்டும்.  எந்த இடத்தில் சோபா வைப்பது? சுவர்களுக்கு என்ன வண்ணம் பூச வேண்டும் போன்ற அனைத்தையும் செய்து முடித்து கண்முன்னே வைத்திருப்பார்கள். இவ்வாறு வெற்றியடையப் போகும் நீங்களும் உங்களின் எதிர்கால வாழ்வை  வசந்தமான சமூகத்தை அகக்கண்களில் காணுங்கள். கற்பனையாக உருவத்தை செய்து கொள்ளுங்கள். உங்களின் இலக்கை அடைய நீங்கள்தான் செயல்பட வேண்டும். உழைக்க வேண்டும். உங்களின் உழைப்பு மட்டுமே உங்கள் கனவை நனவாக்க முடியும். எளிமையாக எந்த வெற்றியும் கிட்டாது. அவ்வாறு கிட்டும் என்று நீங்கள் நம்பினால் அது அழிவையே கொடுக்கும்.

இலவசம் – எளிமையாகக் கிடைப்பவை ஆபத்தானவை

             இலவசமாக கிடைக்கிறது என்று எவற்றையும் பெறவேண்டாம். படித்த கதை ஒன்று, ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தனது நிலத்தை உழுது பயிர் செய்து தன்குடும்பத்தை காத்து வந்தார். அறுவடை முடிந்து விட்டது. சிலமாதங்கள் ஆகும் மீண்டும் பயிர் செய்வதற்கு. அந்த இடைப்பட்ட காலத்தில் நிலம் உழுது போட்டிருக்கும். அந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள மண்புழுக்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு சந்தையில் விற்பதற்காக சென்றார். செல்லும் ஒரு காட்டு வழியில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. அந்த மரத்தில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அது இந்த உழவரிடம் கேட்டது “எங்கு செல்கிறாய்? கூடையில் என்ன? என்றுது. அவர் “கூடையில் மண்புழுக்கள் உள்ளன. அவற்றை விற்பதற்காகச் சந்தைக்குச் செல்கிறேன்” என்றார். அந்தப் பறவை “எனக்கு மண்புழுக்களைத் தருகிறாயா? அதற்குப் பதிலாக என் மென்மையான இறகுகளைத் தருகிறேன்” என்று கூறியது. அந்த உழவரும் சரி என்று புழுக்களைக் கொடுத்து விட்டு இறகுகளைப் பெற்றுக்கொண்டு சந்தையை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். இதேபோன்று ஒவ்வொரு வாரமும் அந்தப் பறவை உழவனிடம் புழுக்களைப் பெற்றுக்கொண்டதால்  வேறு எங்கும் பறந்து செல்லவில்லை. மரத்தின் கூட்டிலேயே இருந்தது. ஏனென்றால் விவசாயி புழுக்களைக் கொடுத்ததால் உழைக்க வேண்டிய தேவை இல்லை.

    விலங்கினம் என்றால் நடக்க வேண்டும். பறவை என்றால் பறக்க வேண்டும். மனிதன் என்றால் உழைக்க வேண்டும் இவையே அவற்றின் ஆரோக்கியம். இது மனிதனுக்கும் விளங்கவில்லை. இதை அறியாத அந்த பறவை மிகவும் சந்தோஷப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு அதன் உடலும் பறக்க மறுத்தது. அந்தப் பறவை ஒவ்வொரு முறையும் அதன் இறகுகளை பிடுங்கி கொடுத்துக்கொண்டே இருந்தது. நாளடைவில் அதன் உடலில் பறப்பதற்கு இறக்கைகளில் இறகுகளே இல்லை. உழவருக்கு புழுக்களுக்குg பதிலாக கொடுப்பதற்கும் இறகுகள் இல்லை. இனி பறக்கவும் முடியாது, பறவைக்கு இனி உணவும் கிடைக்காது. எளிமையாக கிடைக்கிறது என்று எண்ணி செய்த இந்தச்செயல் அந்த பறவையின் உயிரையும் இழக்கச் செய்தது.

           பறந்து சென்று தானே இரையைத் தேடிச்சென்று உண்டு நீர்நிலையைக் கண்டறிந்து நீரை பருகிவிட்டு சுதந்திரமாக வானத்தில் பறந்து தென்றல் காற்றை நுகர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்த பறவையானது  எளிமை இலவசம் என்று நம்பி உழைப்பைக் கைவிட்டதால் உயிர் விட்டது. எனவே எளிமையும் வேண்டாம் இலவசமும் வேண்டாம் உழைப்பே நிரந்தரமானது. உன்னதமானது. மற்றவையெல்லாம் எப்படி வந்ததோ அப்படியே சென்று விடும். நீங்கள் இதனை உணர்ந்து செயல் படுங்கள்.

மாறுபட்ட கருத்துக்களையும் பரிசீலனை செய்யலாம்

        உங்களுக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறதா? ஒன்றும் தவறில்லை. நீங்கள் அவருடன் இன்னும் நெருங்கிப் பழகுங்கள். உங்கள் மீது அல்லது உங்களின் செயல்மீது நம்பிக்கை கொண்டவரால் மட்டுமே உங்களிடம் மாறுபட்ட கருத்துக்களைக் கூற முடியும். அவர்கள் கூறும் கருத்துக்களைச் செவிமடுத்து எந்த காரணத்தால் அவ்வாறு கூறினார்கள் என்பதை அவரின் கண்ணோட்டத்திலிருந்தே கவனியுங்கள். அப்போதுதான் கருத்தின் உண்மைநிலை விளங்கும். யாரிடமும் எதிர்மறையான கருத்துக்களையோ சொற்களையோ முன்வைக்காதீர்கள். அது வாதத்தில் கொண்டு விட்டுவிடும். பொதுவான ஒன்றைப்பற்றி கருத்துக்களைக் கூறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. எனவே அனைவரின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து கொள்ளுங்கள். எத்தனை பேர் எவ்வளவு முக்கியமான நபர்கள் கருத்துக்களைக் கூறியிருந்தாலும் உங்களின் மூளை எவ்வாறு கூறுகிறதோ அதுவே தீர்க்கமான முடிவு என்பதை உணருங்கள். ஆதலால் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்.

பலவீனம், வெளிக்காட்டலாகாது

          ஒருவர் உங்களிடம் ஒரு கருத்தைக் கூற முன்வருகிறார் என்றால் முதலில் நீங்கள் பேசாதீர்கள். அவருக்கு வாய்ப்பளியுங்கள். அவர் முழுவதுமாகப் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்து கவனியுங்கள். அவரின் கண்களையே கவனித்தீர்கள் என்றால் அவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாரா? என்பதை உங்களால் கணிக்க இயலும். சிலர் உங்களிடம் அவரின் காரியங்களை நடத்திக்கொள்ள நடிப்பாகப் பேசலாம். எப்பொழுதும் உங்களின் பலவீனத்தை வெளிக்காட்டலாகாது. மற்றவர்க்கு அது தெரிந்தால் உங்களை செல்லாக்காசாக மாற்றிவிடுவார்கள். பலவீனத்தைக் கொண்டே வீழ்த்தி விடுவார்கள்.

பலவீனத்தால் மாண்ட நந்திவர்மன்

        நந்திவர்மபல்லவ அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் மாபெரும் ஆற்றல் மிக்கவர். அவருடன் யார் போர் செய்தாலும் தோற்றுவிடுவர். இவர் எந்த நாட்டிற்கு போர்தொடுத்துச் சென்றாலும் வாகை சூடிக்கொள்வார். போர்முனையில் நேருக்கு நேராக நின்று இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அந்த அளவிற்கு ஆட்சி செய்து மக்களைக் காக்கும் மன்னர் இவர்.

      இந்த மாமன்னருக்கு அறம் பற்றிய பாடல்களைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் அதிகம். இந்த நந்திவர்ம பல்லவனை வீழ்த்தவே முடியவில்லையே! வேறுவழியில் இவனை தோற்கடிக்க நினைத்தனர். மன்னனின் உறவின சகோதரர்கள். எனவே நந்திவர்மனின் பலத்தை தெரிந்து கொண்ட அவர்கள் அவனுடைய பலவீனம் என்ன? என்பதை ஆராய்ந்தனர். மன்னன் அறம் பற்றிய பாடல்களைக் கேட்கும் ஆர்வத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். முதலில் அறம் பற்றிய நூறு பாடல்களைப் புலவர்களைக் கொண்டு எழுதச் செய்தனர். பின்னர் அதனை வாசித்துக்காட்ட ஒரு புலவனை அனுப்பி வைத்தனர். அப்புலவன் நந்திவர்மனை வணங்கி தான் அறப்பாடல்களை எழுதியுள்ளதாகக் கூறினான். நந்திவர்மனும் அவற்றை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், புலவனை வாசிக்குமாறு கேட்டார். அதற்கு அப்புலவன் ஒரு நிபந்தனை விதித்தான் “நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலையும் இந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும். அடுத்த பாடலுக்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்” என்றான். அதற்கும் நந்திவர்மன் ஒத்துக்கொண்டான். முதலாவது பந்தல் அரண்மனை வாயிலில் அமைக்கப்பட்டு நூறாவது பந்தல் மயானத்தில் முடிக்கப்பட்டிருந்தது. புலவரும் பாடல்களை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினான். மன்னனும் ஒவ்வொரு பந்தலின் கீழும் அமர்ந்து அந்தப் பாடல்களைக் கேட்டான், அவர் இறங்கிச்சென்றதும் பந்தலானது தீப்பற்றி எரிந்தது. இவ்வாறே அனைத்துப் பந்தல்களும் எரிந்தன. மன்னர் நூறாவது பாடலைக் கேட்க, நூறாவதாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழாக அமர்ந்து பாடலை கேட்டார். பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே பந்தல் தீப்பற்றி எரிந்தது. அதில் மன்னனும் எரிந்து இறந்துவிட்டான் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கவனியுங்கள் நந்திவர்மனைப் பலத்தால் வெல்ல முடியாத அவர்கள் அவரின் பலவீனத்தை அறிந்து கொண்டு அதன்மூலம் வீழ்த்தி விட்டனர். எனவே உங்கள் பலத்தை வெளியே காட்டுங்கள். பலவீனத்தை அல்ல. கனவு காணுங்கள். கனவு மெய்ப்பட உழையுங்கள். வெற்றி நிச்சயம்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

14.உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here