விருட்சத்தின் விதை – வெற்றி

விருச்சத்தின்-விதை-வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

            மனித  வாழ்வில் நடக்கும் அனைத்து வகையான செயல்களுக்கும் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களில் பலர் சமுதாயத்தில் புலம்புவதைப் பார்க்கலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் மட்டுமே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றேன் என்று வேதனைபடுவார்கள். ஆனால் அந்த இடர்பாடுகளில் இருந்து, தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.

         இன்னல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர எதிர்நீச்சல் போட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றி என்ற மரத்தின் விதை என்பது அவரவர் வாழ்வில் பட்ட அவமானங்களும் தோல்விகளும் துன்பங்களும் ஆகும். தீக்குச்சி பெட்டிக்குள் இருக்கும் வரை அமைதியாக இருக்கும். அதை வெளியே எடுத்து உரசிவிட்டோம் என்றால் அதன் சக்தியை அது காட்டி விடும்.

துன்பத்திலிருந்து மீட்டெடுங்கள்

     சமுதாயத்தில் அவமானப்பட்ட இழப்பாக இருக்கலாம். கொடுக்கப்பட்ட அநீதிகள் செய்யப்பட்ட அக்கிரமங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்று பலவற்றை உரமாக்கி வெற்றியின் விருட்சம் வளர்கிறது.

        நான் அறிந்த பெண் ஒருவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அங்கு கணவன் வீட்டில் தனக்கு அன்புதான் கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அடிமைத்தனத்தைப் பரிசாக்கினார்கள். மணம் செய்து கொண்ட கணவனே நீயா? நானா? என்று போட்டிக்கு நிற்பது. மட்டம் தட்டி பேசுவது இவ்வாறு பல இன்னல்கள். அந்தச் சிறுவயதில் தான் படித்தே ஆகவேண்டும் என்று படித்தாள் அப்பெண். இதற்கிடையில் கருவுற்றிருந்தாள் அவள். இருப்பினும் வெறி கொண்டு படித்தாள்.  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வது சரியாகும் என்று தெளிவாக முடிவெடுத்தாள். மாதங்கள் சென்றன பல அரசாங்க தேர்வுகளை எழுதுவாள். குழந்தை பிறக்கும் மாதமும் பிறந்தது. ஆனாலும் இப்பெண் ஓய்வெடுக்கவில்லை. அவள் எதிர்பார்த்த தேர்வும் வந்தது. அத்தேர்வுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது குழந்தை பிறந்துவிட்டது. எனினும் அப்பெண் தேர்வு எழுத சென்று வெற்றியும் பெற்றார். அரசு அதிகாரியாகப் பணியில் அமர்த்தப்பட்டார். இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது. அப்பெண்பட்ட அவமானங்கள்தான் அவளின் மனதில் உள்ள வேகத்தையும் புத்தியில் உள்ள ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவ்வாறில்லாமல் அவரின் கணவர் வீட்டில் நன்றாகக் கவனித்திருந்தால் அவர் அந்தச் சுகத்திலேயே சுகம் கொண்ட வாசனையில் மயங்கும் வண்டு போல இருந்திருப்பாரோ என்னவோ! அவரின் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்திருக்காது. அதனால் துன்பத்தில் இருக்கீறீர்கள் என்றால் அதிலிருந்து எழுந்துவர முயற்சிக்க வேண்டும் இதுதான் விதியென்று இருக்கலாகாது.

உங்கள் உரிமை உங்கள் கையில்

           சமூகத்தில் எத்தனையோ முதலாளிகள் மக்கள் பலரை தம்நிலத்தில் வேலை செய்பவரை ஆயுள் முடியும்வரை அடிமைகளாகவே வைத்திருப்பர். அவரிடம் அதிகமான உழைப்பைப் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பது. அவர்களுக்குப் போதவில்லை என்றால் வட்டிக்கு கடன் கொடுப்பது. அந்தக் கடனை கட்டுவதற்குள் புதிதாகக் கடனை பெற்று விடுவார்கள். எனவே இறுதிவரை கடனை அடைக்கவே முடியாமல் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்துவிடுவர். இம்மாதிரியான மக்களுக்காகப் பாரதிதாசன் குரல் கொடுக்கிறார் “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” என்று அடிமைத்தனத்திலிருந்து வருவதற்கு யோசனை கூறுகிறார். ஓடப்பர் என்பவர் உழைக்கும் மக்கள். அந்த உழைப்புக்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எனவே அவர்களின் உரிமையை எதிர்த்து கேட்டால் உயரப்பராய் இருக்கும் முதலாளிகளுக்கு வேறுவழியே இல்லை. சமாதானத்திற்கு ஏழை மக்கள் கூறும் நிபந்தனைகளுக்கு வந்தே ஆகவேண்டும். எனவே தமக்கு சேரவேண்டிய ஊதியத்தைக்கூட  கேட்டுப்பெறவில்லை என்றால் யார்வந்து முன்நிற்பது? ஆதலால் அவரவர் உரிமை அவரவர் கையில் உள்ளது.

உழைத்தால்தான் மனிதன்

            மனிதர்களில் சிலர் மற்றவரின் உழைப்பை உறிஞ்சி உண்டு தன்உடலை பெருக்கிக்கொள்வார்கள். இவர்கள் மனித உருவில் பிறந்த அஃறிணை என்றே கூறலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள்தான் ஈட்ட வேண்டும். அதைவிடுத்து மற்றவர் உழைத்துச் சம்பாதித்த பொருளை தனதென்று சொந்தம் கொண்டாடி வாழ்வது என்ன வாழ்க்கை. இதில் என்பாட்டன் எனக்கு சம்பாதித்து வைத்துள்ளார் நான் உழைக்க வேண்டியதில்லை என்பார்கள். மனிதனாகப் பிறந்தவன் தனக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் என்று எல்லாவற்றையும் உழைப்பால் பெருக்கிக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று கூறுகிறது. அதாவது தலைவியானவள் தோழியிடம் கூறுகிறாள் பொருள் ஈட்ட சென்றுள்ள தலைவன் கூறுவதாக, “உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்” என்று கூறிச் சென்றுள்ளார் எனத் தலைவனை பெருமைப் படுத்துகிறாள் தலைவி. அதாவது முன்னோர்கள் சேர்த்து வைத்துச்சென்ற ஆஸ்தியை அழித்து உண்பவன் உயிருள்ள மனிதனாக்க் கருதப்படமாட்டான் என்று பொருள்படும். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவர் சேர்த்து வைத்த ஆஸ்தியை உழைக்காமலேயே இருந்து கொண்டு விற்று உண்பவன் பிணமாவான் என்று தெளிவாகச் சங்கப்பாடல் கூறுகிறது. உடலானது என்றாவது ஒருநாள் நெருப்புக்கு இறையாகிவிடும் இது உண்மை. அவ்வாறான உடலைக் கொண்டு உழைத்தால் என்ன? இவர்கள் நரகத்தில் இருக்க வேண்டியவர்கள் தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

இன்பமடைய துன்பப்படுங்கள்

        ஒரு கோவிலில் வயதான மூதாட்டி ஒருவர் தூய்மை செய்யும் பணியை ஏற்று அதை ஒரு சேவையாக செய்தாள். அவளுடன் அவர் பேத்தியும் இருந்தாள். பேத்தியும் தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள்.

இருவரும் கோவிலில் கொடுக்கும் அன்னதானத்தை உண்டு அங்கேயே வாசம் செய்தனர். இவ்வாறு சில வருடங்கள் சென்றன. அந்த மூதாட்டி படுக்கையில் இருந்து சில மாதங்களில் காலமானார். அந்த இருபது வயதான குமரிக்குத் திருமணம் நடந்தது. அவளுடைய கணவன் “நீ குப்பை பொறுக்கியவள்தானே” என்று சதா இழிவாகப் பேசி வந்தார். வருடங்கள் சில கடந்தன. இவளும் பொறுத்துப் பார்த்து இவனுடன் வாழ்வதற்குக் கோவிலில் குப்பை பொறுக்குவதே மேல் என்று புறப்பட்டுக் கோவிலுக்கு வந்துவிட்டாள். வந்தவள் கோவில் பொறுப்பாளரைப் பார்த்து உண்மையைக் கூறி தனக்கு வேலை கொடுக்குமாறு கேட்டாள். அவரும் அவளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வேலையும் கொடுத்தார். சில வருடங்கள் சென்றன. அந்தக் கோவில் நிர்வாகப் பொறுப்பு வேறு ஒருவர் கைக்கு மாறியது. அவர் பொறுப்பேற்றதும் சில நிபந்தனைகளை வைத்தார். கோவிலில் வேலை செய்பவர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேரியிருக்க வேண்டும். அவர் வைத்த நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. இதை கேட்டதும் அந்தப்பெண்ணிற்கு தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில நாட்களில் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டாள். வெளியே வந்தவள் சிறிது தூரம் நடந்தாள். வயிறு பசித்தது. இன்னும் சிறிதுதூரம் நடந்தாள் கண்கள் கலங்கி, அங்கு எட்டும் தூரத்திற்கு எந்த உணவகமும் இல்லை. என்ன செய்வது என்று ஒரு மரநிழலில் அமர்ந்து கொண்டாள். பின்னர் எழுந்து சிறிது தூரம் நடந்தாள் முடியவில்லை. அங்கு ஒரு பாறை தென்படவே அதன் மீது ஏறி சுற்றிலும் பார்வையிட்டாள் எங்கும் ஓட்டல் என்பது கிடையாது. இந்தக் கோவிலுக்குக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்தால் பசித்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தாள். அவளுக்கு அந்தப் பசியிலும் மனதில் ஒரு பொறி தட்டியது. நாம் இந்த இடத்தில் ஒரு தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்தால் என்ன? என்று சிந்தித்தாள். பணம் வேண்டுமே யாரிடம் கேட்பது. அப்போது பழைய கோவில் நிர்வாகி நினைவுக்கு வரவே அவரிடம் சென்று உதவி கேட்டாள். அவர் பாராட்டி உதவி செய்தார். ஒரே வாரத்தில் அங்கு ஒரு இட்லி கடை உருவாகிவிட்டது. ஒரே வருடத்தில் அது ஓட்டலாக மாறியது. அந்த உணவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அயராத உழைப்பால் அருகில் இருக்கும் ஊரிலும் இதன்கிளை ஒன்றும் துவக்கப்பட்டது. அம்மன் இட்லி கடை என்று துவக்கப்பட்டு அதுசில வருடங்களில் இரண்டு நான்கானது, நான்கு பத்தானது. ஓட்டல் முதலாளி ஆகிவிட்டாள் அந்த பெண்மணி.

         அந்த அளவிற்கு உயர்ந்ததுள்ள அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நீங்கள் இத்தனை ஓட்டல்களுக்கு முதலாளியாக உயர்ந்துள்ளீர். இன்னும் அதிகமாகப் படித்திருந்தால்? எங்கு சென்றீருப்பீர்கள்,  “அதிகமாகப் படித்திருந்தால் நான் கோவிலில் குப்பை பொறுக்கும் வேலையை சுத்தமாகச் செய்துகொண்டு இருந்திருப்பேன்” என்றார்.

      வரும் அவமானங்களும் துன்பங்களுமே வெற்றி விருட்சத்திற்கான விதை என்பதை உணருங்கள். ஒருவரின் வாழ்வில் நேரும் இடர்பாடுகளும் அவமானங்களும்தான் அவரை வெற்றிநிலைக்கு உந்தி தள்ளுகின்றன.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here